ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டாமோ !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பேரளம் ஸ்ரீசுயம்புநாதர்

சுயம்புலிங்க மூர்த்திகள் ஆயிரம் ஆயிரமாய் எழுந்தருளி அருள்சுரக்கும் புனித பூமியே நம் பாரதத் திருநாடாகும். இதிலும் சிறப்பாக இந்த யுகத்தில் தோன்றிய சுயம்புலிங்க மூர்த்தியே காரைக்கால் அருகே பேரளம் திருத்தலத்தில் எழுந்தருளிய ஸ்ரீசுயம்புநாத மூர்த்தியாவார். அம்பாள் ஸ்ரீபவானி அம்மன், தெற்கு நோக்கி அனைவர்க்கும் குருவாய் எழுந்தருளிய அன்னை. ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு சிறப்பான நாமம் நம் சற்குருவால் அளிக்கப்படுவதுபோல் இந்த யுகத்திற்கு நம் சற்குருவால் அளிக்கப்பட்ட நாமமே வில்வ பேரளம் என்பதாகும்.

தாய் தந்தையர் தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டி, கொண்டாடுவது வழக்கம். குழந்தை தன் தாய் தந்தையர்க்கு பெயர் சூட்ட முடியுமா, முடியாது. அதனால் அப்பா, அம்மா என்று தங்கள் தாய் தந்தைக்கு ஒரு பட்டத்தை அளித்து, அழைத்து வழிபடுகின்றனர். இது போன்றதே நாம் இறைவனுக்கு அளிக்கும் பெயர்கள், இறைவனை அழைக்கும் நாமங்கள்.

ருத்ரம் நடுவே நம‘சி’வாய

இறைவனின் சக்திகளே, குணாதிசயங்களே, குண நலன்களே இறைவனின் நாமமாக பெரியோர்களால் அழைக்கப்படுகின்றன. இந்த நாமங்களையே நாம் அஷ்டோத்திரம், சகஸ்ரநாம அர்ச்சனைகளாக அதாவது இறைவனின் 108, 1008 நாம போற்றித் துதிகளாக ஆராதித்து வழிபடுகிறோம். மக்களின் மேல் உள்ள பெருங்கருணையால் இறைவனே தகுதி உடையவர்களுக்கு இந்த நாமங்களின் சக்திகளை பீஜாட்சரங்களில் பதித்து இறைத் திருமேனிகளில் காட்சியாக அளித்துள்ளான். இத்தகைய அரிய காட்சியைப் பெறும் பாக்கியம் பெற்றவரே ஸ்ரீகார்ஜனீய மகரிஷி ஆவார். இவர்தான் சிவபெருமானின் கோடி கோடியான குண நலன்கள் அனைத்தையும் பீஜாட்சர சக்திகளாக, நாம குண நலன் ரூபமாக பேரளம் சிவாலயத்தில் இறைவனின் திருமேனியில் தரிசனமாகப் பெற்றார்.

அனைவரும் ஸ்ரீகார்ஜனீய மகரிஷியைப் போல் இறை நாமத்தை சுயம்பு மேனியில் தரிசனம் பெறும் அளவிற்கு பக்தியோ, நம்பிக்கையோ பெற்றவர்கள் அல்லவே. இதை அறியாதவரா கார்ஜனீயர்? மக்களின் அசிரத்தையை, இயலாமையை கருத்தில் கொண்டு, அதுவும் கலியுக மக்களின் தகுதியை நன்கு உணர்ந்த ஸ்ரீகார்ஜனிய மகரிஷி தாம் இறைவனின் சுயம்புத் திருமேனியில் தரிசனம் செய்த திருநாமங்கள் அனைத்தின் இறை சக்தியையும் மக்கள் எளிதில் பெறும் ஒரு பூஜை முறையை வில்வதள பீதாம்பர பூஜை என்னும் நாமத்துடன் வகுத்துத் தந்துள்ளார்.

வில்வதள பீதாம்பர பூஜை

ஒரு குரு பூர்ணிமா தினத்தன்றே ஸ்ரீகார்ஜனீய மகரிஷி இத்தகைய வில்வதள பீதாம்பர பூஜை முறையை சுவாமியின் அனுகிரகமாகப் பெற்றார். வரும் 3.7.2023 திங்கட்கிழமை அன்று இத்தகைய குரு பூர்ணிமா தினம் அமைவதால் இந்த அற்புத நாளை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி அடியார்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பேரளம் சிவாலயத்தின் தலவிருட்சம் வில்வம். இறைவன் ஸ்ரீசுயம்புநாதர் எழுந்தருளிய அக்கணம் தோன்றியதே இந்த தலமரமும் ஆகும்.

காஞ்சி கனிந்த கனி லால்குடி அருகே நகர் திருத்தலத்திற்கு எழுந்தருளியபோது அங்குள்ள முள்ளில்லா வில்வ மரத்தின் இலைகளைப் பறித்து அத்தல இறைவன் ஸ்ரீஅப்பிரதட்சிண ஈசனுக்கு அர்ப்பணித்து வந்தாலே போதும், அதில் அனைத்து வழிபாடுகளும் அடங்கி விடுகிறது என்று அத்தல சிவாச்சாரியாரிடம் தெரிவித்தார். அது போல் பேரளம் சிவாலயத்தின் வில்வ தளங்களைப் பறித்து சுவாமிக்கு அர்ப்பணித்து வந்தாலே அனைத்து ஆகம நெறிமுறைகளையும் பின்பற்றியதாக மேலுலகத்தில் எழுதப்படுகிறது என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியங்களில் ஒன்றாகும்.

ஸ்ரீசுயம்புநாதர் பேரளம்

அடியார்கள் இந்த முறையைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை என்றாலும் வில்வ தளங்களால் சுயம்பு மூர்த்தியான இறைவனின், பேரள ஈசனின் அருளைப் பெற உதவுவதே இந்த பீதாம்பர பூஜையாகும்.

1. சிவபெருமானுக்கு அமைந்த சகஸ்ரநாமங்களில் தங்களுக்குப் பிடித்த ஒரு நாமத்தின் முதல் எழுத்தை மூவிதழ் கொண்ட வில்வ தளத்தின் நடு தளத்தில் அரைத்த சந்தனக் குழம்பால் எழுதிக் கொள்ள வேண்டும். இவ்வாறு எழுதப்பட்ட பல வில்வ தளங்களை தயார் செய்து ஸ்ரீசுயம்புநாத ஈசன் அர்ச்சனைக்கு அளிக்கவும்.

2. இறைவனின் ஒரு நாமத்திற்குப் பதிலாக இறைவனின் ஆயிரம் நாமங்களில் தங்களுக்குப் பிடித்த 100, 200 ... ... என்ற நாமங்களின் முதல் எழுத்தையும் சந்தனக் குழம்பால் எழுதி இறைவனின் அர்ச்சனைக்கு அளிக்கலாம்.

3. சகஸ்ரநாமத் துதிகள் என்று மட்டும் அல்லாது வேதம், தேவாரம், திருவாசகப் பாடல்களில் அமைந்த இறை நாமங்களின் முதல் எழுத்தையும் சந்தனக் குழம்பால் எழுதி இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கலாம்.

உதாரணமாக,
ம (மறையுடையாய் தோலுடையாய் தேவாரப் பாடலில் வரும் முதல் அட்சரம்)
தோ (தோடுடைய செவியன் என்று தொடங்கும் பாடல்)
நா (நாதவிந்துகலாதீதா என்ற பாடலின் முதல் அட்சரம்)
இவ்வாறு இறைவனின் குணநலன்களைப் புகழும் எந்த இறைப் புனிதரின் பாடலின் முதல் எழுத்தையும் சந்தனக் குழம்பால் எழுதி இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம்.

4. இறை நாமங்களின் குசா சக்தியைப் பெறும் விதத்தில் இறை நாமங்களின் நடுவில் துலங்கும் அட்சரத்தை வில்வ தளத்தில் எழுதி இறைவனுக்குச் சமர்ப்பிக்கலாம். இங்கு நீங்கள் படத்தில் காணும் ‘சி’ என்னும் அட்சரம் பஞ்சாட்சரம் நடுவிலும் ருத்ரத்தின் நடுவிலும் வருவதே. மேலும் இந்த வில்வ தளம் மூன்று ஜீவ சக்திகள் உடைய ஸ்ரீஉஜ்ஜீவநாத ஈசனுக்கு குசா சக்திகள் துலங்கும் சித்திரை நட்சர தினத்தன்று, குசா சக்திகள் இணையும் புதன் கிழமை அன்று சமர்ப்பிக்கப்பட்டது என்பதும் அடியார்களுக்கு சுவை அளிக்கும் செய்தியாகும்.

இதே போல நம் சற்குருவின் வெங்கடராமன் என்ற நாமத்தின் வரும் நடு அட்சரமான ‘ட’ என்பதைத் தாங்கிய வில்வ தளத்தையும் இறைவனுக்கு சமர்ப்பிக்கலாம்.

நள தீர்த்தம் திருநள்ளாறு

இவ்வாறு இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வில்வ தளங்களில் ஒன்றே ஒன்றை மட்டும் பிரசாதமாகப் பெற்று, அந்த வில்வ தளத்தை ஒரு தங்கம், வெள்ளி, செம்பு அல்லது மரத் தட்டில், தாம்பாளத்தில் ஏந்தி குரு பூர்ணிமா தினத்தன்றோ அல்லது அடியார்கள் தங்களுக்கு ஒத்து வரக் கூடிய எந்த தினத்திலும் பேரளம் சிவாலயத்தை குறைந்தது ஆயிரம் முறை வலம் வர வேண்டும்.

பெரும்பாலும் இத்தகைய ஆயிரம் வலங்கள் ஒரே முறையில் சாத்தியம் ஆகாது என்பதால் முதல் முயற்சியில் அடியார்கள் தங்களால் இயன்ற அளவு பிரதட்சிணங்களை நிறைவேற்றி விட்டு பின்னர் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எவர் மூலம் வேண்டுமானாலும் ஆயிரம் பிரதட்சிணத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு முறை பேரளம் சுயம்புநாதரை வலம் வரும்போதும் இந்த வில்வ தள பிரசாதத்தை தாம்பாளத்தில் ஏந்தி வலம் வர வேண்டும் என்பது அவசியம்.

ஆயிரம் பிரதட்சிணங்களை நிறைவேற்றா விட்டாலும் தங்களுக்குப் பிடித்த சிவநாமத்தை தேர்ந்தெடுத்த அந்தக் கணத்திலிருந்தே அந்த இறை நாமத்தை தொடர்ந்து வாய் விட்டோ, மனத்திலோ ஜபித்தல் மிகவும் நலம். யார் எந்த நாமத்தை இவ்வாறு தேர்ந்தெடுத்தாலும் அந்த நாமம் அவர்களுடன் தொடர்புடையதாகவே இருக்கும் என்பதே நம் சற்குருவின் தெளிவுரை. தினமும் இந்த வில்வ தளத்தை தங்கள் பூஜையில் வைத்து பூஜித்து வரவும். நாட்கள் செல்லச் செல்ல இந்த இதழ்கள் சுருங்கி விட்டாலோ அல்லது உதிர்ந்து விட்டாலோ அந்நிலையில் அந்த தளங்களை ஒரு சிறிய சந்தன அல்லது வெள்ளி பெட்டிக்குள் வைத்து பூஜித்து வரலாம். இந்த வில்வ தளங்களை சுருட்டி தாயத்து போல் செய்து அதைத் தங்கள் கழுத்திலோ, மணிக்கட்டிலோ கட்டிக் கொள்வதும் ஏற்புடையதே.

இவ்வாறு குடும்பத் தலைவர் அணியும் தாயத்து அந்தக் குடும்பத்திற்கே இரட்சையாக அமைந்து பாதுகாப்பை அளிப்பதால் மற்ற குடும்ப அங்கத்தினர்கள் தனியாக தாயத்துகளை கட்டிக் கொள்ள வேண்டியதில்லை என்பதும் நம் சற்குரு அளிக்கும் பாதுகாப்பு. ஆனால், அந்தக் குடும்பத் தலைவரும் மற்ற அங்கத்தினர்களும் தாங்கள் தேர்ந்தெடுத்த அந்த சிவநாமத்தை குறைந்தது ஒரு நாளைக்கு ஆயிரம் முறையாவது ஜபித்தல் என்பது அவசியம் ஆகும்.

சுவாமி விவேகானந்தர் காயத்ரீ உபதேசம் பெற்று முறையாக காயத்ரி மந்திரத்தை ஓதி வந்தாலும் பேரளம் ஸ்ரீசுயம்புநாதரை தரிசித்த பின்னரே காயத்ரீ மந்திர அட்சரங்களை பீதாம்பரம் உடுத்த கண்ணனாக, தங்க அட்சரங்களாக வானில் பிரகாசிக்கக் கண்டார். சுவாமிக்கு விஷம் கொடுத்து மாய்க்க அவருடைய எதிரிகள் துணிந்தபோது இந்த அட்சர சக்திகளே ராமகிருஷ்ண பரமஹம்சர் வடிவில் சுவாமி அருந்த இருந்த தேநீர் மேல் தோன்றி அவர் உயிரைக் காத்தன. உயிரைக் காக்கும் கவசமே பேரள அட்சர கவசம்.

உயிர் காக்கும் கவசமாக அமைவதோடு மட்டுமல்லாது தொடர்ந்து பேரள ஈசனை வலம் வந்து வணங்குவதால் பல நற்செய்திகளையும் ஈசன் அட்சர சக்திகளாக உணர்த்துவார் என்பதும் நமக்கு உற்சாகம் அளிப்பதே. நள மகராஜா தமயந்தியை மனைவியாக வரிக்கும் முன் தமயந்தி பெயரின் முதல் எழுத்தான ‘த’ என்பதை தான் நீராடும் நள தீர்த்தத் துளிகளில் கண்டான். அதன் பின்னரே தமயந்தியின் நாமத்தை அறிந்தபோது அவளை தன் மணவாட்டியாக அங்கீகரித்தான்.

விராட நந்தியம் பேரளம்

பேரளம் அருகில் திருநள்ளாறு திருத்தலத்தில் அமைந்துள்ளதே நள தீர்த்தம் ஆகும். கார்ஜனிய மகரிஷி தினமும் நள தீர்த்தத்தில் நீராடிய பின்னரே பேரள ஈசனின் தரிசனம் பெறுவார். கார்ஜனிய மகரிஷி என்பது காரணப் பெயரே. கார் என்றால் கருமை. கார் ஜனீய என்றால் கருமை எண்ணத்தால், தீய எண்ணத்தால் தோன்றும் விளைவுகளை, தீய எண்ணங்களை நசிக்கும் தீர்த்தமே கார் ஜனீய தீர்த்தம் என்று பொருள். நள மகராஜா தன் சனி பகவான் பீடிப்பு விளைவுகளை தீர்த்துக் கொண்டதால் இது பிற்காலத்தில் நள தீர்த்தம் ஆயிற்று.

நம் சற்குரு உடல்நலம் குன்றியிருந்தபோது இந்த நள தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் பெற்று சற்குருவிற்கு அளிக்க ஒரு அடியார் திருநள்ளாறு சென்றிருந்தார். அங்கு தீர்த்தத்தை அடைந்தபோது அத்தீர்த்தம் குப்பை கூளங்களால் சூழப்பட்டு மிகவும் அழுக்காக இருப்பதுபோல் அந்த அடியாருக்குத் தோன்றவே என்ன செய்வது என்று தெரியாமல் அந்த அடியார் திகைத்து நின்று கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பலமாக மழை பெய்யத் தொடங்கியது. அங்கிருந்த குப்பை கூளங்கள் எல்லாம் மறைந்து போக சுத்தமான தீர்த்தத்தை நம் சற்குருவிற்கு எடுத்து வருவதற்கு ஒரு ஆனந்த முயற்சியை அந்த அடியார் மேற்கொண்டார் என்று சொல்லவும் வேண்டுமோ?

காரைக்குடி அருகே உள்ள நெடுங்குடி சர்ப்ப நதியில் குளித்த பின்னர் தங்கள் ஈரத் துணிகளை விட்டு விடுவது போல் நள தீர்த்தத்திலும் குளித்த பின்னர் பக்தர்கள் தங்கள் ஈரத் துணிகளை இந்த தீர்த்தக் கரையிலேயே விட்டு விடுகின்றனர்.

இது தவறான வழிபாட்டு முறையாகும். தன் நிழல் தன்னோடு என்பார் நம் சற்குரு. அதே போல் நம்முடைய கர்ம வினைகளை, நாம் செய்த தீவினைகளை முறையாக களைவதுதான் முறை. அதனால் நெடுங்குடி சர்ப்ப தீர்த்தத்திலோ, திருநள்ளாறு நள தீர்த்தத்திலோ அடியார்கள் நீராடிய பின்னர் தங்கள் ஈர உடைகளை அங்கேயே விட்டு விட்டு வரக் கூடாது, அந்த ஆடைகளை தனியாக எடுத்து வந்து சுத்தம் செய்து, உலர வைத்து, அயன் செய்து ஏதாவது ஒரு தலத்தில் அல்லது முதியோர் இல்லங்களில் தானம் அளித்து விட வேண்டும்.

துணிகளுக்கு அயன் செய்வது என்பது இல்லறத்தார்களைப் பொறுத்த வரை ஒரு ஆடம்பரம் கிடையாது, கர்ம வினைகளைத் தீர்க்கும் ஒரு வழி முறைதான்.

ஒவ்வொரு திருத்தலத்திலும் உள்ள நந்தி மூர்த்திகள் ஒவ்வொரு சிறப்பைப் பெற்று இருப்பார்கள். இவ்வகையில் பேரளம் திருத்தல நந்தி மூர்த்தியே விராட நந்தியம் என்று அழைக்கப்படுகிறார். பலரும் பார்ப்பதற்கு பயில்வான்கள் போல், மல்யுத்தம் செய்பவர்கள்போல் தோன்றுவார்கள். ஆனால், கரப்பான் பூச்சிக்கெல்லாம் பயந்து நடுங்கி விடுவார்கள். எதற்கும் அஞ்சா நெஞ்சுடைய வீரமே விராட் என்பதாகும். இத்தகைய வீரம் கடவுள் பக்தியால் மட்டுமே தோன்றுவது, இத்தகைய விராட் சக்திகளை அளிக்கக் கூடிய மூர்த்தியே விராட நந்தியம்.

ஸ்ரீஏலவார் குழலி அம்மன்
ஆலங்குடி

நிழலாய்த் தொடரும்
ஸ்ரீபவானி அம்மன் பேரளம்

இறைவனின் திருநாமத்தை வில்வ தளங்களில் ஏந்தி ஸ்ரீசுயம்புநாதரை வலம் வரும்போது சுவாமியின் எதிரில் வீற்றிருக்கும் இந்த விராட நந்தியின் குறுக்கே செல்லாது நந்தியை வழக்கம்போல் சுற்றியே செல்ல வேண்டும் என்பதை அடியார்கள் கருத்தில் கொள்ளவும்.

திருமணமான பல ஆண்களும் திருமண உறவில் திருப்தி அடைவதில்லை, இதற்கு பல உடல் சம்பந்தமான காரணங்களும் அத்துடன் இணையும் அதைர்யமான மனமும் ஆகும். இதை ஓரளவு சரி செய்யக் கூடிய நந்தி மூர்த்தியே பேரள நந்தி மூர்த்தி ஆவார். திருநள்ளாறு திருத்தலத்தில் குறைந்தது 15 விதமான இனிப்பு வகைகளை தானம் அளித்த பின்னர் விராட நந்தியை வணங்கி வழிபடுவதால் நற்பலன் பெறுவார்கள். தொடர்ந்த வழிபாடு அவசியம். இனம் தெரியாத பயத்தால் தூக்கத்தில் இருந்து அலறி எழுபவர்களுக்கும், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் சிறுவர்களுக்கும் இத்தகைய வழிபாடுகள் பலன் அளிக்கும்.

அக்னி சக்திகள் என்னும் உஷ்ணத்தால் இந்த உலகில் விளையும் நன்மை தீமைகளை வரையறுக்கவே முடியாது. தம்பதிகளுக்கு இடையே அமையும் தாம்பத்யம் முதல், நல்ல சந்தானங்கள் அமைவது, குடும்பத்தில், சமுதாயத்தில் தோன்றும் அமைதி இவை அனைத்திற்கும் ஆதாரமாக அமைவதே வெப்ப சக்திகள். அக்னி சக்திகளின் விளைவுகளை முழுமையாக உணர்ந்த நம் முன்னோர்கள் இந்த வெப்ப சக்திகளை நன்முறையில் பயன்படுத்தும் பல வழிபாட்டு முறைகளை சமுதாயத்திற்கு உரிய பூஜை முறைகளாக, பலவித வழிபாடுகளாக, திருவிழா வைபவங்களாக அளித்துள்ளனர்.

ஆலங்குடி திருத்தலத்தின் தலவிருட்சமான பீளைச் செடி என்பது இத்தகைய அரிய வெப்ப சக்திகளை தன்னுள் கொண்டுள்ளது. பெண்களின் தனம், ஆல மர நிழல், கிணற்று நீர் இவை இயற்கையாகவே வெயிலில் குளுமையையும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் துலங்கும் என்பது மேலோட்டமான ஒரு தன்மையே. இதன் பின்னால் ஆயிரமாயிரம் தெய்வீக இரகசியங்கள் பொதிந்துள்ளன. இதை மக்கள் நன்முறையில் பயன்படுத்தும் விதமாகவே தை மாதம் தோன்றும் பொங்கல் பண்டிகையின்போது பீளைச் செடி மக்கள் வழிபாட்டின் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றது.

ஸ்ரீகார்ஜனீய மகரிஷி பேரளம்

நளன் தமயந்தி தம்பதிகள் இத்தகைய வெப்ப சக்திகளை முறையாகப் பெற்று அதை உலகத்திற்கு அளித்த உத்தமர்கள் ஆதலால்தான் இன்றளவும் அந்த தம்பதிகளின் பெருமை உலகளாவி நிற்கிறது. ஆலங்குடி திருத்தலத்தின் தலவிருட்சமான பீளைச் செடியை முறையாக வணங்கி வழிபட்டு வந்ததால்தான் தமயந்தியின் நாமமே திருநள்ளாறு நள தீர்த்த திவலைகளில் பிரகாசித்தது என்பதை நாம் உணர வேண்டும். ஆலமர நிழலே அதீத குளிர்ச்சியுடன் திகழ்வது என்றால் அதன் நிழலிலேயே குடிகொண்டிருக்கும் தலவிருட்சமான பீளைச் செடி எத்தகைய குளிர்ச்சியான அனுகிரக சக்திகளைத் தன்னுள் கொண்டிருக்கும். பல மணமுள்ள அழகிய மலர்களும் காலையில் மலர்ந்து மாலையில் வாடி உதிர்ந்து விடும். பீளை மலர்களோ ஒரு மாத காலம் ஆனாலும் செடிகளிலேயே ஒட்டிக் கொண்டு வாடாது இருக்கும் என்பதே இம்மலர்களின் சிறப்பாகும்.

பீளை மலர்கள் அதீத உஷ்ணத்தால் தோன்றும் மலட்டுத் தன்மையை சீர்செய்ய வல்லவை. மேலும் பீளை வெப்பம் என்ற வெப்பத்தின் முன்னால் அக்னியில் சிறந்த கற்புக் கனல் கூட வேலை செய்யாது என்பதால்தான் கண்ணகி மதுரையை எரித்தபோது அந்த கற்புக்கரசிக்கு மரியாதை தரும் பொருட்டு பீளை மலர்கள் சூடிய வீரர்கள் மதுரையை விட்டு விலகினார்கள் என்பதே பீளை அக்னியின் மகத்துவத்தைக் குறிக்கிறது.

திருவிரும்பூளை தலவிருட்சம்
ஆலங்குடி

தற்காலத்தில் ஜாதகப் பொருத்தங்களை சரியாக கணிக்காது நடைபெறும் திருமணங்களில் தம்பதிகளுக்கிடையே உஷ்ணப் பரிமாற்றம் சரியாக அமையாதபோது அத்தகையோர் ஆலங்குடியில் திகழும் பீளைச் செடியை வணங்கி வழிபட்டு திருநள்ளாறு நள தீர்த்தத்தில் நீராடி பேரளம் ஸ்ரீபவானி அம்மனை வணங்கி வந்தால் தம்பதிகளுக்கிடையே நிலவும் உடல் சூடு சம்பந்தமான பிரச்னைகள் அனைத்தும் நீங்கி நலம் பெறுவர். உடல் சம்பந்தமான பிரச்னைகள் மட்டும் அல்லாது அதிக உஷ்ணத்தால் தோன்றிய, சூடேறிய வார்த்தைகளால் முறிந்த உறவுகள் எத்தனை எத்தனை, சீற்றம் கொண்ட போர்கள் எத்தனை எத்தனை, மாய்ந்த அரிய உயிர்கள்தான் எத்தனை எத்தனை? இவை அனைத்திற்கும் ஒட்டு மொத்த தீர்வே இந்த பேரள அன்னையின் சீரிய வழிபாடு!

மூர்த்தி தீர்த்தம் தலம் முறையாய் தரிசிப்போர்க்கு சற்குரு வாய்க்கும் பராபரமே என்பது தாயுமானவர் வாக்கு. இவ்வகையில் திருத்தலங்களில் எழுந்தருளி இருக்கும் மூர்த்திகளின் நாமங்களைக் கொண்டே பெரும்பாலான திருத்தலங்கள் பிரசித்தி பெற்று இருப்பது நாம் அறிந்த ஒன்று என்றாலும் தலவிருட்சங்களைக் கொண்டும் சிறப்படைந்ததே திருவீழிமிழலை, ஆலங்குடி போன்ற திருத்தலங்களாகும்.

திருவிரும்பூளை என்பது ஆலங்குடியின் பண்டைய நாமங்களில் ஒன்றாகும். திருவிரும்பூளை சக்திகள் நாம் ஜபிக்கும் நாமத்தில் நன்கு பதிவதற்காகவே சந்தனக் குழம்பில் இறை நாமத்தை எழுதி அதை வைத்துக் கொண்டு பேரளம் திருத்தலத்தை வலம் வருமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த உஷ்ண பரிமாற்றத்தால் நிகழும் குடும்ப ஒற்றுமையும் சமுதாய ஒற்றுமையும் நம்மை பிரமிக்க வைப்பவையே.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆலங்குடி

பீளைச் செடியின் உஷ்ணமே கண்களில் தோன்றும் நோய்களைக் களையக் கூடியது. இந்த உஷ்ணத்தை கணவன்மார்கள் பெறும் பொருட்டே பெண்கள் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து நீராடி அன்று மாலை அம்பாள் மூர்த்திகளை திருத்தலங்களில் தரிசித்து வரும்படி நம் முன்னோர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆழ்ந்த பொருள் கூடியது இந்த வழிபாடு. இவ்வாறு தன் கண்களில் தோன்றிய பீளை வெப்பத்தை கொடுங்களூர் பகவதி அம்மனின் திருமேனியில் பதித்து விட்டு வானுலகம் சென்றாள் கண்ணகி கற்புக்கரசி என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கலாம்.

மா பலா வாழை என்பவை முக்கனிகளாக சிறப்புப் பெறுகின்றன. மக்களின் சீரிய வாழ்வோடு இணைந்தவையே இந்த முக்கனிகள் கூட்டும் சக்திகளாகும். இவற்றில் நடுநாயகமாக விளங்கும் பலா என்பது சாமவேத சக்திகளை எளிதில் கிரகிக்கக் கூடியது. ஸ்ரீசாமவேதீஸ்வரர் எழுந்தருளிய திருமங்கலம் திருத்தலத்தில் தலவிருட்சமாக பலா மரம் அமைந்துள்ளது என்பதை நாம் அறிவோம். இதற்கான தெய்வீக காரணங்களுள் இவ்வாறு சாம தமன சக்திகளை மேம்படுத்தும் சக்தி பலாப் பழத்திற்கும் சாம வேதத்திற்கும் உண்டு என்பதும் ஒரு காரணமாகும். தேனில் பலாப் பழத்தை நனைத்து அதை அடியார்களுக்கு தானமாக அளிக்கையில் சாம வேத சக்திகள் வெகு காலத்திற்கு உடலில் தங்கியிருந்து அருள்வழங்கும் என்பதே இதன் தெய்வீக சக்தியாகும்.

கொடுங்களூர் பகவதியின் சிலா ரூபம் பலா மரத்தால் வடிக்கப்பட்டதே. இவ்வாறு எதிர்கால சந்ததிகள் பழி வாங்கும் உணர்ச்சிகள் பெருகி உடல் நோயால் வருந்தக் கூடாது என்பதற்காகவும் கண்ணகி தன் எஞ்சிய பழி வாங்கும் உஷ்ண சக்திகளை கொடுங்களுர் பகவதியின் திருமேனியில் பதித்துச் சென்றாள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம் ஆகும். இந்த பழிவாங்கும் உணர்ச்சிகளை களைவதற்காக பக்தர்கள் அரிவாள் போன்ற ஆயுதங்களை நேர்த்திகளாக எடுத்துச் சென்று அம்மனுக்கு சமர்ப்பிப்பதை இன்றும் அடியார்கள் தரிசிக்கலாம்.

ஸ்ரீஆபத்சகாய ஈஸ்வரர்
ஆலங்குடி

ஒருவர் தன் உள்ளத்தில் பகைமை என்ற பழிவாங்கும் உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளும்போது அது உஷ்ண சக்தியாகவே உடலை வியாபிக்கும். இந்த அதீத உஷ்ணம் பலவிதங்களில் வியாதிகளாக உடலில் உருவெடுப்பதால் தற்போது புற்று நோய் மக்களிடையே அதிகமாகப் பரவி வருகிறது. அதிலும் மார்பு புற்று நோய்கள் பரவி வருவதற்கு பல காரணங்களுள் ஒன்றே இவ்வாறு பழி வாங்கும் உணர்ச்சிகள் சமூகத்தில் பரவி இருப்பதால் அதை ஓரளவு களையும் முகமாக கண்ணகி தன்னுடைய தனத்தை அறுத்து எறிந்து மதுரையை தீக்கிரையாக்கினாள் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.

கொடுங்களூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபகவதி அம்மன் எட்டுக் கரங்களுடன் பத்ர காளியாய் உருவெடுத்துள்ளாள். பத்ர காளி என்பதற்கு எதிரிகளை, எதிர்மறை சக்திகளை, எதிர்மறை எண்ணங்களை மாய்த்து பக்தர்களைக் காப்பவள் என்பது ஒரு பொருள். பத்திரமாய் தன் பக்தர்களை, குறிப்பாக பெண்களை அவர்கள் எந்தவித கற்புக்களங்கமும் ஏற்படாமல் காப்பவள் என்பதால் வாழ்வில் ஒரு முறையாவது கொடுங்களூர் ஸ்ரீபகவதி அம்மனை அனைவரும் தரிசித்து நல்லருள் பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடுகளவு உஷ்ணம் என்ற பழி வாங்கும் உணர்ச்சி கூட தம் சந்ததிகளைப் பாதிக்கக் கூடும் ஆதலால் குழந்தைகளுக்கு பாலமுதம் ஊட்டும் முன் குறைந்தது 10000 பஞ்சாட்சரம் மந்திரங்களை தாய்மார்கள் ஓதும்படி நம் சற்குரு வலியுறுத்துகிறார். பஞ்சாட்சரம் ஜபித்த பின்தான் குழந்தைகளுக்கு பாலமுதம் வர்ஷிக்க வேண்டும் என்பது நடைமுறையில் ஒத்து வராததால் பெண்கள் தாய்மை அடைந்த நாள் முதற்கொண்டே பஞ்சாட்சரம் ஜபித்தலையும், மலைத் தலங்களை பஞ்சாட்சரம் ஜபித்தவாறே வலம் வந்து வணங்குதலையும் நம் முன்னோர்கள் கர்ப்பிணிகளுக்கு உகந்த வழிபாடுகளாக அமைத்துத் தந்தார்கள்.

பூலோக மக்களின் நல்வாழ்வையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த நம் சற்குரு இந்த பீளை உஷ்ண சக்திகளை சமுதாயத்திற்கு எப்படி அர்ப்பணித்தார் என்று அறிந்து கொள்வதும் ஒரு சுவைதானே? ஆதிசங்கர பகவத்பாதாள் ஆயிரம் பாசுரங்கள் அமைந்த சௌந்தர்யலஹரி என்ற துதிப்பாடலை எம்பெருமானிடம் இருந்து கயிலையில் பெற்று அதை பூலோக மக்களுக்கு அர்ப்பணிக்க விழைந்தார். அவ்வாறு அந்தப் பாடல்களை எடுத்துக் கொண்டு பூமிக்கு திரும்பும்போது பல கைலாசவாசிகளைக் கடந்து அவர் வரவேண்டிய சூழ்நிலை உருவானபோது அதிகார நந்தி, தேவர்கள், மகரிஷிகள், கந்தவர்கள் போன்ற பலரும் அவர்கள் பங்கிற்கு ஒரு சில துதிகளை ஆதிசங்கரரிடம் வேண்டி பெற்றுக் கொண்டார்களாம். எஞ்சிய துதிகள் சிலவற்றுடன் ஆதிசங்கரர் ‘தப்பித்தோம்...பிழைத்தோம்...’ என்றவாறு பூமியை வந்தடைந்தாராம்.

பலரும் கனவுகளில் பிணத்தைப் பார்ப்பதும், இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வருவதும் உண்டு. இதனால் பெரிதும் மனம் கலங்கி இருப்பவர்கள் ஏராளம். இத்தகையோர் இருட்டு, தனிமை போன்றவைகளுக்கு மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் மம்மியூர் சிவாலயத்தில் உள்ள ருத்ர தீர்த்தத்தில் நீராடி அல்லது தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு இங்கு அருள்புரியும் ஸ்ரீபரிமள நாயகி அம்மனை தரிசனம் செய்தலால் நலம் பெறுவர். இதே போல் திருஅண்ணாமலையில் மயான பூமி ஆரம்பத்தில் திகழும் சிம்மமுக தீர்த்தத்தில் நீராடி அல்லது தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு தீர்த்தக் கரையில் உள்ள ஸ்ரீஹரிச்சந்திர மகாராஜாவை வணங்கி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து வணங்குவதால் பேய், பிசாசு, பிணக் கனவுகளிலிருந்து விடுதலை பெறுவர். தற்காலத்தில் பிணங்களை குளிரூட்ட வைக்கும் ஐஸ் பெட்டிகளில் உள்ள நீரைக் கூட லஸ்ஸி போன்ற குளிர்பானங்களில் கலந்து விற்று விடுகிறார்கள் என்பதை அறிகிறோம். இதனால் அத்தகைய பானங்களை அருந்துவோர்களுக்கும் விற்பவர்களுக்கும் விளையும் வேதனைகளை எழுத்தில் வடிக்க இயலாது என்றாலும் இத்தகையோருக்கும் நல்வழி காட்டுவதே மேற்கண்ட வழிபாடுகளாகும்.

நம் குருவி மூளையில் எட்டுவதற்காக நம் சற்குரு இவ்வாறு எளிய முறையில் சௌந்தர்ய லஹரி துதியைப் பற்றிக் கூறுகிறார். இதிலிருந்து, ஒரு தேவ வாக்யத்தை மனிதர்கள் பெறுவதற்கு சற்குருமார்கள் எத்தனை ஆண்டுகளின் தபோ பலனை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அது போல ஆதியில் இறைவன் ராமர், கிருஷ்ணர் என்றவாறாக மனித உருவத்துடன் மக்களிடையே உலவி வந்தாலும் காலம் செல்லச் செல்ல கோயில்களில் விக்ரஹங்களாக இறை மூர்த்திகள் தோற்றம் கொண்டனர். இறை சக்திகளை மந்திரம், யந்திரம், தந்திரம் மூலமாக மக்கள் பெற வேண்டி வந்தது. இவ்வாறு மந்திரங்களை சித்தி செய்யும் தகுதியையும் பூலோக மக்கள் பெற முடியாத நிலை வந்தபோது திருஞானசம்பந்தர், சுந்தரர் போன்ற மகான்கள் திருத்தலங்களுக்கு எழுந்தருளி அத்தல இறைவனைக் குறித்து பாடல்கள் பாடி அத்தல சக்திகளை குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு புனருத்தாரணம் செய்தனர்.

இவ்வாறு எது பாடல் பெற்ற தலம், எது பாடல் பெறாத தலம், அதாவது எந்த திருத்தலத்தில் இறை சக்தி பூரணமாகப் பொலிகிறது என்பதையே நாம் தெரிந்து கொள்ள முடியாத நிலை உருவாகி விட்டதால் இதையும் எளிமைப்படுத்தி நமக்காக தம் தபோ பலனை அர்ப்பணித்தவரே நம் சற்குரு. தம்முடைய 15 வருட அன்னதான, தான, தர்ம, தவ சக்திகளை ஸ்ரீஆயுர்தேவி அம்மன் பூஜையாக தாரைவார்த்து அளித்த பெருந்தகையே நம் சற்குரு ஆவார். அதனால் ஸ்ரீஆயுர்தேவி அம்மனை பிரதிஷ்டை செய்ய எந்த எந்திரமும், தந்திரமும் தேவையில்லை என்பதே நம் சற்குரு நமக்காக உவந்தளிக்கும் இறைப் பெருங்கருணை. நம் சற்குரு நம்மிடம் எதிர்பார்ப்பது ஸ்ரீஆயுர்தேவி மூல மந்திரத்தை நம்பிக்கையோடு ஜபிப்பது ஒன்றுதான். இதை முறையாக பூரண நம்பிக்கையோடு நிறைவேற்றினாலே போதும் ஆயுர்தேவி அம்பாள் அங்கே, அந்த தூய பொருளிலேயே, நைவேத்திய பிரசாதத்திலேயே, சாவிக் கொத்து போன்ற எளிய உபகரணங்களில் கூட ஆவாஹனம் ஆகி விடுவாள். தேவை நம்பிக்கை, நம்பிக்கை என்ற ஒன்று மட்டுமே!

அது மட்டுமல்லாமல், நம் ஆஸ்ரமத்தில் அமைந்த பரகாய பிரவேச கோபுரத்தில் எட்டு திசைகளிலும் பஞ்சாட்சர எந்திரங்களை பிரதிஷ்டை செய்து இனி வரும் எல்லா வழிபாடுகளுக்கும், கிரிவல பிரதட்சிணங்களும் சக்தி அளிப்பதாக தம் தபோ சக்திகளை அர்ப்பணித்துள்ளார் நம் சற்குரு என்பதே இதுவரை நீங்கள் அறியாத மெய்சிலிர்க்க வைக்கும் இரகசியம் ஆகும். பரகாய பிரவேச கோபுரம் என்ற சொல்லை ஆத்ம விசாரம் செய்து பார்த்தாலே பல அற்புத உண்மைகளை அடியார்கள் உணரலாம். ஒன்பது சூட்சும சரீரங்கள், மூன்று லோகங்கள் இவற்றின் இணைப்பே பரகாய பிரவேச கோபுரம் என்ற அருமையான சித்த வாக்கியம். இது ‘ம்’ என்ற அட்சரத்தில் பூர்ணமாகிறது, இலயமாகிறது.

ஷோடச நித்யா துளசி மாடம்

நம் சற்குருவிடம் ஒரு அடியார் தன்னுடைய நண்பர் ஒருவரை அழைத்து வந்தார். வெகுநாள் ஸ்ரீஅகஸ்திய விஜயம் படித்து அதில் உள்ள பூஜைகளை அந்த நண்பர் ஆற்றிக் கொண்டு வந்ததால் அவரும் ஒரு அடியார் என்பது நம் சற்குருவின் மறை வாக்கியம்தானே. அந்த நண்பருடைய வியாபாரத்தில் கடன்கள் நிறைய குவிந்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் திணறினார்.

தன்னுடைய வீடு ஒன்றை விற்று விட்டு கடனை அடைக்கலாம் என்று பார்த்தால் அந்த வீடும் பல வருடங்களாக விற்காமலே முடங்கிக் கிடந்தது. இந்த சூழ்நிலையில் நம்முடைய சற்குருவை அவர் காண வந்தார். நம் சற்குரு அந்த நண்பர் கூறியவற்றை எல்லாம் கவனமாகக் கேட்டு விட்டு அந்த வீட்டில் ஒவ்வொரு அறையிலும் உள்ள நிலைகளில் தரையில் தேக்கு, மா, பலா என்ற ஏதாவது ஒரு பால்விருட்சத்தால் நிலைப்படியை வைத்து பூர்ணம் செய்து விட்டால் போதும் என்று அறிவுரை கூறினார். அதன்படி அந்த நண்பரும் நிலைப்படிகளை பூர்ணம் செய்து விட உடனேயே அந்த வீடு விற்றுவிட்டது, அவருடைய கடன் சுமையும் குறைந்து விட்டது.

ஸ்ரீஜுரஹரேஸ்வரர் ஆவுடை மேல்
வராகி அம்மன் நெல்லுவாய்புரம்

ருசி கண்ட பூனையானார் அந்த நண்பர். நம் சற்குருவிடம் ஆலோசனை கேட்டு தன்னுடைய வியாபாரத்தை மேலும் அபிவிருத்தி செய்து தன் செல்வத்தை விருத்தி செய்யும் வழிமுறையை அவர் நாடினார். நம் சற்குருவோ அந்த எண்ணத்தை முற்றிலும் நிராகரித்து விட்டார். திருமணமாகி வெகுநாள் ஆகியும் அந்த நண்பருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அதனால் வெறிச்சோடிக் கிடந்த அவர் இல்லத்தில் குதூகலம் நிறைவதே அவர் முதலில் நாட வேண்டிய சுகம் என்று கூறி அவரை அனுப்பி விட்டார். அந்த அடியார் நம் சற்குரு கூறிய விஷயத்தை சற்றும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவருடைய முகபாவமே பறை சாற்றியது என்றாலும் அதைப்பற்றி நம் சற்குரு கண்டு கொள்ளவே இல்லை.

அந்த நண்பரை வழியனுப்பியபோது அவர், “நான் ஷோடசாட்சரி மந்திர உபதேசம் பெற்றிருக்கிறேன், என்னைச் சுற்றி எப்போதும் அந்த தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்குமே, அதை உங்கள் குருநாதர் பார்க்க வில்லையா? என்னை சாதாரணமாக நினைத்துக் கொண்டு பேசுகிறாரே?” என்று குறைபட்டுக் கொண்டாராம். இந்த வார்த்தைகளை கேள்விப்பட்ட நம் சற்குரு தனக்கே உரிய புன்னகையை உதிர்த்து விட்டு, “போயா, அவனருகிலேயே தேவதை மாதிரி அவன் பெண்டாட்டி இருக்கிறாள். அந்த தேவதையை வச்சு ஒரு பிள்ளை பெற்றுக் கொள்ள அவனுக்கு யோக்யதை இல்லை, ஸ்ரீவித்யா லோகத்து தேவதைகள் அவனைச் சுற்றி உலவுவதாக அடியேனிடமே கதை சொன்னால் அதை அடியேன் எப்படி நம்புவது?” என்று திருப்பிக் கேட்டார்.

காரணம், ஸ்ரீவித்யா லோகத்து தேவதைகள் யாவும் கொள்ளை அழகு மிக்கவர்கள். அவர்களைப் பார்த்தால் சாதாரண மனிதர்கள் மயங்கி விழுந்து விடுவார்கள். இந்த தேவதைகளை தரிசனம் செய்து மனம் சலனம் அடையாத நிலையை சிறிது சிறிதாக உபாசனைகள் மூலமாக அடைந்தால்தான் லலிதா பரமேஸ்வரி தேவியை தரிசனம் செய்யும் நிலையான, சலனமற்ற நிலையை பக்தர்கள் அடைவார்கள். ஆனால், எந்த அனுகிரக சக்தியையும் நம் அடியார்களுக்கு உரிய முறையில் பெற்றுத் தருபவர்தானே நம் சற்குரு. எனவே இந்த ஸ்ரீவித்யா லோகத்து தேவதைகளின் அனுகிரகத்தை சாதாரண மக்களும் பெறும் முறையே ஷோடச நித்யா துளசி மாடம் என்பதாகும்.

நம் ஆஸ்ரமம் மூலம் அடியார்கள் பெற்ற இந்த துளசி மாடம் தற்போது அருகி விட்டதால் ஸ்ரீவித்யா லோகத்து தேவதைகளின் அனுகிரகத்தை பூர்ணமாகப் உதவுவதே பேரளம் சிவாலயத்தில் நாம் பெறும் வில்வ தளங்களாகும். ஏற்கனவே கூறிய முறையில் வில்வ தளங்களை பூஜை செய்து அவற்றை எந்த துளசி மாடத்தின் அடியில் வேண்டுமானாலும் வைத்து மண் நிரப்பி அதில் துளசியை நிர்மாணித்து இதை ‘ஷோடசி நித்யா துளசி மாடமாக’ தினமும் வலம் வந்து வணங்கி பூஜிப்பதால் லலிதா பரமேஸ்வரியின் ஆசியையும் சங்கர நாராயண ஆசியையும் ஒருங்கே பெறலாம்.

இந்த துளசி மாடத்தின் முன்பு ஷோடசி காயத்ரி முத்திரையை நிறைவேற்றி வருவதும் பலன்களை பன்மடங்காய் பெருக்கும்.

ஷோடச நித்யா துளசி மாடம் என்பது சங்கர நாராயண தேவி சக்திகளை ஒருங்கிணைத்துத் தரும் உபகரணம் என்பது உங்களுக்குப் பரிச்சயம் ஆகி இருக்கும். இவ்வாறு அமிர்த சக்திகளை, நோய் எதிர்ப்பு சக்திகளை, நோய் நிவாரண சக்திகளை நிரந்தரமாக அளிக்கும் அற்புத தலமே கேரளாவில் உள்ள நெல்லுவாய்புரம் திருத்தலமாகும். இங்குள்ள அமிர்த தன்வந்த்ரி மூர்த்தியே ஆதி தன்வந்திரி மூர்த்தி ஆவார்.

கூர்ம பீடம் நெல்லுவாய்புரம்

நம் சற்குரு இந்த அமிர்த தன்வந்த்ரி மூர்த்தியை தினமும் வணங்கிய பின்னரே குருவாயூரில் இருக்கும் மம்மியூர் சிவ மூர்த்தியையும் ஸ்ரீகுருவாயூரப்பனையும் தரிசனம் செய்து குருவாயூர் திருத்தலத்தில் முன்னே இருக்கும் இரண்டு துவார சக்தி திண்ணையில் அமர்ந்து நாள் முழுவதும் தன்வந்திரி காயத்ரீ மந்திரங்களை ஜபித்துக் கொண்டே இருப்பார். மதியம் அக்காலத்தில் ஸ்ரீகுருவாயூரப்பனின் பிரசாதமான இடித்த வெல்லமும் உடைத்த தேங்கையை மட்டும் ஒரு வேளை உண்டு ஒரு மண்டல காலத்திற்கு இத்திருத்தலங்களில் வழிபாடுகளை இயற்றி அந்த வழிபாட்டின் பலன்களை எல்லாம் நமது சமுதாயத்திற்கு தாரை வார்த்து அளித்த பெருந்தகையே நம் சற்குரு ஆவார்.

ஸ்ரீதன்வந்திரி மூர்த்தி
நெல்லுவாய்புரம்

ஓம் தத் புருஷாஷ வித்மஹே அமிர்த தன்வந்த்ரி தேவாய தீமஹி
தந்நோ நெல்லுவாயூரப்ப பிரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை ஓதிய வண்ணம் நெல்லுவாய்புரம், மம்மியூர், குருவாயூர் திருத்தலங்களில் வழிபாடுகளை இயற்றுதல் நலமாகும்.

காலைக் கடம்பர், மதியம் சொக்கர், அந்தி ஈங்கோய் நாதர் என்ற சொல்வழக்கு பிரசித்தமாக உள்ளது போல் காலையில் ஸ்ரீஅமிர்த தன்வந்திரி மூர்த்தி நெல்லுவாய்புரம், மதியம் மம்மியூர் ஸ்ரீசிவன், மாலை ஸ்ரீகுருவாயூரப்பன் என்றவாறாக பக்தர்கள் தரிசனத்தை அமைத்துக் கொண்டு வழிபடுவதால் தீராத நோய்களே இல்லை எனலாம். அடியார்கள் தங்கள் வசதி வாய்ப்பைப் பொறுத்து எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் இந்த மூன்று தலங்களிலும் வழிபாடுகளைத் தொடரலாம். நோய் எதிர்ப்பு சக்திகள் மட்டுமல்லாது கலியுகத்திற்கு அவசியமான நல்ல திருமண வாழ்வு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள், லட்சுமி கடாட்ச சக்திகள் இவை அனைத்தையும் நல்குவதே மேற்கண்ட வழிபாட்டு முறைகளாகும்.

நெல்லுவாய்புரத்தில் அமைந்திருக்கும் தன்வந்திரி ஆலயமே பல அற்புத நோய் நிவர்த்தி சக்திகளை வர்ஷிப்பதாகும். நெல் அரிசிமணி தாவரம் ஸ்ரீஆஷாசுவாசினி தேவியின் அருளால் ஸ்ரீஅகஸ்திய மகாபிரபுவின் அருந்தவத்தால் உருவானதாகும். அமிர்த சக்திகளையும் நீண்ட ஆயுள்வளத்தையும் உள்ளடக்கியதே நெல் தாவரம். எவ்வளவுதான் செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் போன்றவற்றால் நெல்லின் சக்தியைக் குறைக்க முயன்றாலும் இறைவன் படைத்த நிறத்தைப் போல் நெல் தாவரம் தன்னுடைய அமிர்த சக்திகள் அளிப்பதைக் குறைக்காது என்பதால்தான் நம் ஆஸ்ரமத்தில் அரிசி உணவு நம் சற்குருவால் தொடர்ந்து அன்னதானமாக அளிக்கப்பட்டது.

நெல்லுவாய்புரம் ஸ்ரீதன்வந்திரி மூர்த்தி மேற்கு நோக்கி அருள்வதால் உடலில், மனதில் தோன்றும் வியாதிகள் சிறிது சிறிதாக சூரியனைப் போல் விரைவில் மறைந்து விடும். மேலும் இத்திருத்தலத்தில் அக்னி மூலையில் ஸ்ரீஜுரஹரேஸ்வரர் என்ற ஆவுடையின் மேல் ஸ்ரீவராகி அம்மன் எழுந்தருளி நோய் நிவாரண சக்திகளை வர்ஷிக்கும் அதிசயம் மற்ற எந்த திருத்தலத்திலும் இல்லாத ஒரு நோய் நிவாரண அம்சமாகும்.

திருஅண்ணாமலையில் இறைவனின் அடி முடியைத் தேடி தோல்வி அடைந்த மகா விஷ்ணு தான் இறைவனின் திருவடியைத் தரிசிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து சுவாமியைச் சரணடைந்தபோது திருஅண்ணாமலையார் மிகவும் மனம் மகிழ்ந்து மகாவிஷ்ணுவை நெல்லுவாய்புரம் திருத்தலத்தில் நிரந்தர நோய் நிவாரண சக்திகளை வர்ஷிக்குமாறு அருளிச் செய்தார். இவ்வாறு மகாவிஷ்ணுவின் நோய் நிவாரண சக்திகள் இன்றும் இத்திருத்தலத்திலுள்ள கச்சப பீடத்தில் பிரதிபலிப்பதை பக்தர்கள் தரிசித்து மகிழலாம்.

ஸ்ரீகணேசமூர்த்தி ஸ்ரீதுர்கை
பேரளம்

சுக்ர தீபங்கள்

ஒன்பதிற்கு மேல் எண் இல்லை, சிவத்தை மிஞ்சிய தெய்வமில்லை என்பது பெரியோர்கள் கூற்று. இவ்வாறு சிவனின் புதல்வனான கணேச மூர்த்தி துர்கா தேவியுடன் இணைந்து அருளாட்சி செய்வதே பேரளம் திருத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். இந்த இணைப்பை சக்தி ரூபமாக கணக்கில் கொண்டால் அது ஒன்பது எண்ணிற்கு உரிய கணேச மூர்த்தியும், ஒன்பதிற்கு உரிய துர்கா தேவியும் இணையும் சக்தி இணைப்பாக மிளிரும். இக்காரணம் பற்றியே நம் பூமியில் திருமணம் என்ற மனித உறவை நெருக்கப்படுத்தும் வைபவத்தில் ‘ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம், ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்’ என்ற மந்திரத்தை ஓதும்படி நம் சற்குரு வலியுறுத்துகிறார். சுக்ர சக்திகளை வலுப்படுத்தும் இந்த மந்திர கோஷம் கடவுளை நம்பும், குருவை நம்பும் நல்ல உள்ளங்களால் ஓதப்படும்போது அதனால் உலகில் விளையும் தெய்வீக சக்தியை அளவிடவே முடியாது என்பதற்கு உதாரணமாகத் திகழ்வதே இங்கு நீங்கள் கேட்கும் கீதமாகும்.

இவ்வாறு சுக்ர சக்திகளை தங்கள் திருமண பந்தத்தில் இணைத்துக் கொள்ள விரும்பும் அடியார்கள் பேரளம் திருத்தலத்தில் இங்கு விளக்கியுள்ளபடி தீபங்களை ஏற்றி வழிபடுதல் சிறப்பாகும். சுத்தமான தேங்காய் எண்ணையால் இத்தகைய தீபங்களை ஏற்றி திருத்தலத்தை குறைந்தது ஒன்பது முறை அடிப்பிரதட்சணம் செய்து வழிபடுவது சிறப்பாகும். கணவன் இல்லத்தில் இருக்கும் மாமனார், மாமியார், நாத்தனார் போன்ற உறவுகளால் பலவித கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருப்போர் இத்தகைய வழிபாடுகளால் நல்ல தீர்வைக் காண்பர். தொடர்ந்த வழிபாடு அவசியமே. அலுவலகம், சமுதாயம் போன்றவற்றில் தோன்றும் உறவு மீறல் பிரச்னைகளுக்கும் இந்த வழிபாடு ஒரு தீர்வாக அமையும் என்பதும் இந்த வழிபாட்டின் தனிச்சிறப்பாகும்.

இங்கு விவரிக்கப்பட்டுள்ள சுக்ர தீபங்களை பேரளம் திருத்தலத்தில் ஏற்றி வழிபடுவது சிறப்பு என்றாலும், பேரளம் திருத்தலத்தில் ஆரம்பித்து தங்கள் சொந்த ஊரில் உள்ள திருத்தலங்களில் ராகுகால துர்கா வழிபாடாகவும் பக்தர்கள் தொடர்ந்து நிகழ்த்தி நல்லருள் பெறலாம்.

சுக்ர சக்திகள் கணவன் மனைவி உறவில் வலிமையை ஏற்படுத்துபவை மட்டும் அல்ல, நற்காரியம், கடவுள் சேவை இவற்றில் பற்றுதலையும் ஈடுபாட்டையும் வளர்ப்பவை ஆகும். அதனால்தான் நாயன்மார்கள் யாவரும் தங்கள் மனைவி, குழந்தைகளை சிறப்பாக நேசித்தனர், ஆனால், கடவுள் மேல் அவர்களுக்கு இருந்த பக்தியும், நம்பிக்கையும் அதைவிட அதிகமாக இருந்தது. இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
பேரளம்

ஸ்ரீரங்கத்தில் நம் சபை வீடு ஒன்று இருந்தது. நம் சற்குரு உழவாரப் பணி, இலவச மருத்துவ முகாம் போன்ற காரியங்களுக்கு திருச்சிக்கு வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அங்குதான் தங்குவார். ஒரு முறை இவ்வாறு ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்தில் இறங்கிய நம் சற்குருவை வரவேற்க ஒரு திருச்சி அடியார் சென்றிருந்தார். இரயில்வே ஸ்டேஷனில் வேலை பார்க்கும் குமாஸ்தா அவருக்கு நன்கு பரிச்சயமானவர்.

ஸ்ரீபரிமளநாயகி அம்மன்
மம்மியூர்

நம் சற்குரு குடும்ப சகிதமாக இரயிலிலிருந்து இறங்கி அந்த ஸ்டேன் நுழைவாயிலை கடக்கும் முன் நம் சற்குருவை நோக்கிய அந்த குமாஸ்தா நம் சற்குரு ஸ்டேஷனைக் கடந்து தன் காட்சியிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தார். மற்ற பயணிகள் எவரையுமே, பரிச்சயமான நம் அடியாரைக் கூட, அந்த குமாஸ்தா கவனித்ததாகத் தெரியவில்லை.

ஸ்ரீரங்கம் போன்ற இரயில் நிலையங்களில் டிக்கெட் கொடுப்பவர்களே டிக்கெட் பரிசோதனை போன்ற மற்ற வேலைகளையும் கவனிப்பார்கள்.

ஆண்டுகள் கடந்தன ...
அந்த குமாஸ்தா தன் வேலையை விட்டு விட்டு இன்று இறை சேவையில் தன் குடும்ப சகிதமாக இறங்கி விட்டார் என்பதே அந்த அடியார் பின்னர் தெரிந்து கொண்ட ருசிகரமான தகவல். நம் சற்குரு அடிக்கடி கூறுவதுண்டு, “எங்களை யாரும் பார்க்க முடியாது, காரணம் மகான்களுக்கு உடல் என்பது கிடையாது, நீங்கள் அடியேனைப் பார்க்கிறீர்கள் என்றால், அது அடியேன் உங்களுக்கு உங்கள் கர்மாவைப் பொருத்து காட்டும் உடலே, அதனால்தான் அந்த உடல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகக் காட்சி அளிக்கிறது...”.

இவ்வாறு சாதாரணமாக யாரும் பார்க்க முடியாத ஒரு சித்தரின் உடலை அந்த இரயில்வே ஊழியர் எப்படி பார்க்க முடிந்தது? இப்போது உங்களுக்கு இந்த கேள்விக்கு விடை தெரிந்திருக்கும். இவ்வாறு குடும்ப சகிதமாக எதிர்காலத்தில் ‘ஊழியம்’ செய்யும் ஒரு குமாஸ்தாவுக்கு ஒரு ஸ்டேஷனைக் கடக்கும் அந்த குறுகிய கால இடைவெளியில் அந்த குமாஸ்தாவுக்கு வேண்டிய ‘குரு உபதேசத்தை, சித்த அனுகிரகத்தை’ மௌன உபதேசமாக அளித்து விட்டார் நம் சற்குரு. அந்த ஊழியரோ வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதும் இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்குமே. சாதி, இனம், மதம், ஏன் மனிதன், விலங்கு என்ற பாகுபாட்டையும் கடந்து நிற்பதுதானே சித்தர்களின் சாம்ராஜ்யம்!?

மகான்களின் விரல் அசைந்தால் அதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் என்பதற்கும் இந்த உதாரணம் பொருந்தும். மேற்கண்ட நிகழ்ச்சிக்குப் பின் திருச்சிக்கு பல முறை வந்த நம் சற்குரு ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்தில் இறங்காது நேரே திருச்சி ஜங்க்ஷனுக்கு சென்று விடுவார். ஜங்சன் என்பது ஸ்ரீரங்கத்தை தாண்டி இருக்கும் மத்திய இரயில் நிலையம்.

ஸ்ரீஅங்கப்பிரதட்சிண
அண்ணாமலை சுவாமிகள்
ஜீவாலயம்

பேரளம் திருத்தலத்தில் ஏதாவது ஒரு சகஸ்ர நாமத்தை வில்வ தளத்தில் எழுதி பூஜிக்கும்படி கூறினோம் அல்லவா? கலியுகத்தில் இத்தகைய பூஜைகளை ஆற்றி மக்களுக்கு நல்வழி காட்டியவர்களில் ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீவல்லாள வணங்கி சித்தர் போன்றோரும் அடங்குவர்.

ராஜா தேசிங்கினுடைய குதிரை பஞ்ச கல்யாணி. அவன் எப்போது செஞ்சி மலையில் தியானம் இயற்றினாலும் அந்த குதிரையும் அவன் அருகில் நின்று கொண்டே திருஅண்ணாமலையை பார்த்துக் கனைத்துக் கொண்டே இருக்குமாம், தானும் ராஜாவின் தியானத்தில் பங்கு கொள்வதற்கு இது அடையாளம். மிகவும் புத்திசாலியான குதிரை.

ஒரு முறை ஆங்கிலேயர்கள் ஆயிரக் கணக்கான படை வீரர்களை திரட்டிக் கொண்டு வந்து செஞ்சி மலையை வளைத்துக் கொண்டனர். அந்த புத்திசாலி குதிரையோ ராஜாவை ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் பறக்க ஆரம்பித்தது. வழக்கமாக குதிரை, மனிதர்கள் செல்லும் பாதையில் செல்லாது பாறைகளில் தாவித் தாவி குறுக்கு வழியில் மிகவும் கரடு முரடான பாதை வழியாக ராஜாவைக் கூட்டிக் கொண்டு வந்தது பஞ்ச கல்யாணி. இவ்வாறு கரடு முரடான பாதை வழியே செல்வதற்கு மக்களுக்கும் விலங்குகளுக்கும் உதவி செய்யும் அன்னையே மனோன்மணி தேவி ஆவாள்.

மனோன்மணி தேவியின் பூரண அனுகிரகத்தைப் பெற்ற அந்த குதிரை வெகு வேகமாக வந்து திருஅண்ணாமலை கோயிலை அடைந்தது. அங்கு கீழ கோபுர கோயில் வாசலில் வல்லாள வணங்கி சித்தர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். பூர்வ ஜன்ம வினைப் பயனாலும் தன்னுடைய தினசரி திருஅண்ணாமலை வழிபாட்டின் மகிமையாலும் வல்லாள வணங்கி சித்தரை இனங் கண்டு கொண்டான் ராஜா தேசிங்கு. குதிரையிலிருந்து வேகமாக குதித்து இறங்கி வல்லாள வணங்கி சித்தரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.

ராஜாவின் உயிரை பஞ்ச கல்யாணி குதிரையின் புத்திசாலித் தனத்தால் காப்பாற்றியவரே வல்லாள வணங்கி சித்தர் என்றாலும் தன்னுடைய அந்த அற்புத செயலின் பலன் தனக்கு உரியது அல்ல, திருஅண்ணாமலையாருக்கே அந்த செயலின் பலன் விளையட்டும் என்பதாக ராஜாவிடமிருந்து விரைவில் விலகிச் சென்று மறைந்து விட்டாராம் சித்தர்.

ஸ்ரீகாலபைரவர் பேரளம்

இத்தகைய பலனே ‘எ’ என்னும் அட்சரத்தை வில்வ தளத்தில் எழுதி பேரளத்தில் பூஜிப்பதால் கிட்டும் பலனமாகும். ‘எதுவும் என்னுடையது அல்ல ...’, என்பதைக் குறிப்பதுதானே ‘எ’ அட்சரத்தின் மகிமை.

மனோன்மணி தேவியின் பூரண ஆசியைப் பெற்றவரே நம் சற்குரு என்பதை ஒரு சிலர் உணர்ந்திருக்கலாம். எந்த ஆபத்து நிலையிலும் நம் சற்குருவை தியானித்து வணங்குவதால் அந்த ஆபத்திலிருந்து நாம் காப்பாற்றப்படுவோம் என்பதற்கு இந்த நிகழ்ச்சியை விடவும் வேறு ஒரு சான்று வேண்டுமா என்ன?

திருஅண்ணாமலை துர்கை அம்மன் கோயில் அருகே உள்ளதே 63 மூவர் மண்டபம். இந்த மண்டபத்தில் உள்ள பள்ளியில் பல வருடங்கள் திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தின் போது நம் சற்குருவால் பத்து நாட்களுக்குக் குறையாமல் அன்னதான கைங்கர்யம் சிறப்பாக நிறைவேறும். இந்த மண்டபத்தில்தான் தற்போது அங்கப்பிரதட்சண அண்ணாமலை சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் திருஅண்ணாமலையை அங்கப்பிரதட்சணம் செய்தே வலம் வந்தவர் இந்த அற்புத மகான்.

இவ்வாறு அங்கப்பிரதட்சணம் செய்து வலம் வந்து கொண்டிருக்கும்போது அடிக்கடி சேஷாத்ரி சுவாமிகளைப் பார்த்து தனக்கு எப்போது அண்ணாமலையான் வழிகாட்டுவான் என்று கேட்பார். சேஷாத்ரி சுவாமியோ வழக்கமான தன் பலமான சிரிப்பை மட்டும் உதிர்த்து விட்டு ஓடிச் சென்று மறைந்து விடுவார்.

ஒருமுறை இவ்வாறு சுவாமிகளைக் கேட்டபோது சேஷாத்ரி சுவாமியோ, “அப்படியா, இப்போது நல்ல நேரம்தானே...?” என்று கேட்டு விட்டு அங்கப்பிரதட்சண சுவாமிகளை கிரிவலப் பாதையில் மல்லாந்து படுக்கும்படிக் கூறினார். அவ்வாறு மல்லாந்து படுத்த சுவாமிகளின் நெஞ்சின் மேல் தன்னுடைய கையை வைத்து மூன்று முறை லேசாகத் தட்டிக் கொடுத்து விட்டு ஒரு முறை தரையில் புரண்டு படுக்கும்படிக் கூற அவ்வாறே சுவாமிகளும் ஒரு முறை கிரிவலப் பாதையில் சுழன்றார்... அவ்வளவுதான் ... சுவாமிகளுக்கு சமாதி கூடியது. ‘தன் வேலை’ முடிந்து விட்ட திருப்தியில் சேஷாத்ரி சுவாமிகள் அங்கிருந்து நடையைக் கட்டினார்.

அங்கப்பிரதட்சண சுவாமிகள் பல ஆண்டுகள் பாடுபட்டு திருஅண்ணாமலையை அங்கப்பிரதட்சணம் வந்து இறை தரிசனம் பெற்றார் என்றாலும் இதற்காக ‘உழைத்த’ மற்ற மகான்களின் சீரிய சேவையையும் நாம் அறிந்து கொள்ள வேண்டுமே. ஒரு முறை அபய மண்டபம் அருகே அங்கப் பிரதட்சண சுவாமிகள் ரமண மகரிஷியைப் பார்த்தார். அப்போது ரமண மகரிஷி அவருக்கு ஒரு வாழைப் பழத்தை பிரசாதமாக அளித்தார். தன்னுடைய நித்திய வழிபாடான அங்கப்பிரதட்சணத்தை மேற்கொண்டிருந்ததால் சுவாமிகள் அந்த வாழைப் பழத்தை உண்ணாது தன்னுடைய வேட்டியின் ஒரு பகுதியில் அந்த வாழைப்பழ பிரசாதத்தை முடிந்து வைத்து விட்டு தன்னுடைய அங்கப் பிரதட்சிணத்தைத் தொடர்ந்தார். என்ன ஆச்சரியம்... அங்கப் பிரதட்சிணம் நிறைவேறியவுடன் தன்னுடைய வேட்டி முடிச்சை அவிழ்த்துப் பார்த்தால் அந்த ரமண பிரசாதம் சற்றும் சிதையாமல் முழுமையாக இருந்ததாம்.

ஆச்சரியத்தின் உச்சகட்டத்தை அடைந்த அங்கப்பிரதட்சண சுவாமிகள் இந்த இரகசியத்தை, அதாவது வாழைப்பழம் இவ்வளவு உடல் சுழற்சியிலும் முழுமையாக இருந்த விந்தையை, ரமண மகரிஷியிடம் தெரிவித்தாராம். ரமண மகரியோ, “நான் எங்கே உனக்கு வாழைப்பழம் கொடுத்தேன் ...? அண்ணாமலையான் அல்லவா உனக்கு பழம் கொடுத்தவன்...” என்று ஒன்று அறியாக் குழந்தையாய் திருப்பிக் கேட்டாராம். இதுவே மகான்களின் தன்மை.

எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே
அருளாளா அருணாசலா
என்று உரைக்கும் வாசகத்தின் ‘அ’ என்ற அட்சரத்தை, அருளாளா, அருணாசலா என்று குறிக்கும் சக்திகளை வில்வ தளத்தில் எழுதி வலம் வந்து பெறுவதால் கிட்டும் பலன் இதுவாகும்.

திருத்தலங்களில் ஏற்படும் மழைப் பொழிவில் இறைவன் வர்ஷிக்கும் ஒவ்வொரு மழைப் பொழிவின்போதும் நூறு துளிகளில் ஒரு துளி என்ற கணக்கில் அமிர்த துளிகளின் வர்ஷம் ஏற்படும். இவ்வாறு சமீபத்தில் நம் அடியார்கள் வில்வ தளத்தில் சகஸ்ரநாம எழுத்துக்களை சந்தனக் குழம்பில் எழுதி பேரள ஈசனுக்கு அர்ப்பித்தபோது அற்புத மழைப் பொழிவு ஏற்பட்டது என்ற அமிர்த வைபவத்தை இந்த வீடியோவில் நீங்கள் கண்டு இரசிக்கலாம். அட்சரம் என்றால் அழிவில்லாதது என்ற பொருளும் உண்டு. இவ்வாறு அமிர்த மழைப் பொழிவின்போது சமர்ப்பிக்கப்படும் அட்சரங்களில் இந்த ‘அட்சர’ சக்திகள் பொங்கித் ததும்பும் என்பதே சித்தர்கள் அளிக்கும் ஆசி.

எண்ணும் எழுத்தும் சேர்ந்ததுதானே இறைசக்தி. இவ்வாறு அட்சர சக்திகள் எண்களையும் குறிப்பதால் பேரளம் திருத்தலத்தில் எண் சக்திகளும் மிகுதியாகவே இறைவனால் வர்ஷிக்கப்படும் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியம். எண் சக்திகளுக்கு உரித்த தலங்களை கீழ்க்கண்ட அட்டவணையில் காணலாம்.

எண்           திருத்தலம்

   0 பூஜ்ய லிங்கம் உள்ள ஆலயம், உதாரணம் ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம் மேலப்பரங்கிரி
   1 சூரியனார் கோவில்
   2 திங்களூர்
   3 ஆலங்குடி
   4 சுவாமிமலை
   5 திருவெள்ளறை
   6 சுவாமி பெயர் வெள்ளீஸ்வரர் என உள்ள ஆலயம்
   7 திருவாதவூர்
   8 திருநள்ளாறு, குச்சனூர்
   9 திருப்பரங்குன்றம்
 

மேற்கண்ட அட்டவணை மூலம்
1, 10, 19, 28 பிறந்த தேதியாக கொண்டவர்கள் எண் 1க்கு உரிய தலத்தையும்
2, 11, 20, 29 பிறந்த தேதியாக கொண்டவர்கள் எண் 2க்கு உரிய தலத்தையும்
3, 12, 21, 30 பிறந்த தேதியாக கொண்டவர்கள் எண் 3க்கு உரிய தலத்தையும்
4, 13, 22, 31 பிறந்த தேதியாக கொண்டவர்கள் எண் 4க்கு உரிய தலத்தையும்
5, 14, 23 பிறந்த தேதியாக கொண்டவர்கள் எண் 5க்கு உரிய தலத்தையும்

6, 15, 24 பிறந்த தேதியாக கொண்டவர்கள் எண் 6க்கு உரிய தலத்தையும்
7, 16, 25 பிறந்த தேதியாக கொண்டவர்கள் எண் 7க்கு உரிய தலத்தையும்
8, 17, 26 பிறந்த தேதியாக கொண்டவர்கள் எண் 8க்கு உரிய தலத்தையும்
9, 18, 27 பிறந்த தேதியாக கொண்டவர்கள் எண் 9க்கு உரிய தலத்தையும்
வணங்கி வழிபாடுகள் நிகழ்த்துவது சிறப்பு. பிறந்த தேதியின் அனைத்து எண்களையும் கூட்டி வருவதே விதி எண்ணாகும். உதாரணமாக, 21.5.1947 என்பது பிறந்த எண்ணாக இருந்தால் விதி எண் 2+1+5+1+9+4+7=29=2 என்று அமையும். இந்த விதி எண்ணுக்கு உரிய தலங்களில் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், சீமந்தம், வளைகாப்பு, பணி ஓய்வு போன்ற காரியங்களையும் நிகழ்த்தி பலன் பெறுதல் சிறப்பாகும்.

ஸ்ரீமேற்றளிநாதர் திருமேற்றளி

இவ்வாறு எண் சக்திகளையும் பெயரில் உள்ள அட்சர சக்திகளையும் இணைக்கும் ஒரு வழிபாட்டையும் நம் சற்குரு அருள்கின்றார். இதன்படி ஏதாவது ஒரு செவ்வாய்க் கிழமை அன்று பட்டீஸ்வரம் அருகில் உள்ள திருமேற்றளி சிவாலயத்தில் அல்லது பட்டை லிங்கம் மூல மூர்த்தியாக அருளும் எந்த திருத்தலத்திலும் பட்டைகளுக்கு சுத்தமான கோதுமை மாவில் கங்கை, காவிரி போன்ற புனித தீர்த்தங்களை சேர்த்துப் பிசைந்த மாவால் காப்பு போட வேண்டும். இந்த காப்பின் மேல் மாதுளை முத்துக்களை முழுவதும் பதித்து, பரப்பி வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும். வழிபாட்டின் நிறைவில் இந்த மாதுளை முத்துக்களை பக்தர்கள், மாடுகள், பறவைகளுக்கு சிவ பிரசாதமாக அளித்து விடலாம்.

அடுத்த செவ்வாய்க் கிழமை அல்லது அதற்கு அடுத்து வரும் ஏதாவது ஒரு செவ்வாய்க் கிழமை அன்று மேற்கூறிய முறையில் பேரளம் ஸ்ரீசகஸ்ர லிங்கத்திற்கு கோதுமை மாவுக் காப்பு இட்டு மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடுகள் நிகழ்த்த வேண்டும். முதலில் பட்டை லிங்கத்திற்கு சார்த்தப்பெறும் மாதுளை முத்துக்களில் எண் சக்திகள் சிவ சக்திகளாக மாற்றப்படும். இந்த எண் சக்திகள் பேரளம் சகஸ்ரலிங்கத்தில் பொழியும் சிவாட்சர சக்திகளால் ஆக்கம் பெறும். தகுதி உள்ளோர் சகஸ்ர லிங்கத்தின் மேல் பதித்துள்ள ஏதாவது ஒது மாதுளை முத்தில் இந்த நாம சக்திகளை ஒளி வடிவில், செந்நிற ஓங்கார சக்தி வடிவில் தரிசிக்க முடியும், அவ்வாறு தரிசிக்க முடியாவிட்டாலும் இந்த அட்சர சக்திகள் சகஸ்ர லிங்கத்திலிருந்து ஒளிப் பிரவாகமாய் பக்தர்களை வந்தடையும் என்றால் இதை விடச் சிறந்த சிவானுபவம் ஒன்று இருக்க முடியுமா?

மேற்றளி தலைப்பாகை

பொதுவாக ஒரு எண்ணின் சக்திகளை நாம் புரிந்து கொண்டு அதை ஆக்கப்படுத்த 20 ஆண்டுகள் தேவைப்படும் என்பது சித்தர்களின் கணிப்பு. அப்படியானால் ஒன்பது எண்களின் சக்திகளை நாம் புரிந்து கொள்ள 9 x 20 = 180 ஆண்டுகள் அல்லவா தேவைப்படும். இதில் பூஜ்ய சக்திகளைப் பற்றி புரிந்து கொள்ள மேலும் 180 ஆண்டுகள் தேவைப்படும் என்றால் இந்த அற்ப ஆயுளை வைத்துக் கொண்டு மனிதர்கள் என்ன செய்யு முடியும்? இதை உணர்ந்த நம் சற்குரு போன்ற மகான்கள் அவரவர் பிறந்த தேதிக்கு உரிய எண்ணை அல்லது அவரவருக்கு விருப்பமான ஒன்றிரண்டு எண்களின் சக்தியை மட்டுமாவது புரிந்து கொண்டு அதை மக்கள் நல்வாழ்விற்குப் பயன்படுத்தும் முறைகளை வகுத்துத் தந்துள்ளனர். இவற்றில் ஒன்றே மேற்கூறிய திருமேற்றளி, பேரளம் திருத்தலங்களில் நாம் நிகழ்த்தும் வழிபாடுகளாகும்.

நவகிரகங்கள் பேரளம்

மேற்றளி என்பது நம் தலையில் கபாலமாய், கபால சக்திகளாய் உருவெடுத்த சித் சக்திகளாகும். மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தர் போன்றோர் தாங்கள் தலைப்பாகையை அணிந்து தங்களுடைய தபோபல சக்திகளை எல்லாம் தங்கள் தலைப்பாகை மூலம் இந்த சமுதாயத்திற்கு அர்ப்பணித்து அரும்பணி ஆற்றி வந்தனர். இத்தகைய மகான்களுடைய வழியில் ஓரளவு சென்று மக்கள் சேவை செய்யும் எண்ணம் கொண்டோர் மேற்கண்ட முறையில் இரண்டு செவ்வாய்க் கிழமைகள் வழிபாடுகள் இயற்றி மூன்றாவது செவ்வாய்க் கிழமை அன்று மேற்றளி தலைப்பாகை அணிந்து திருஅண்ணாமலையை கிரிவலம் வருதல் வேண்டும்.

தலையின் வலது பக்கம் மூன்று சுற்றுகள் வரும்படியும், தலைக்கு இடது புறம் மூன்று சுற்றுகள் வருமாறும், தலைக்குப் பின் ஒரு சுற்று வருமாறும் தலைப்பாகையைக் கட்டுதல் எளிய முறை மேற்றளி தலைப்பாகையாகும். தலைப்பாகை அணியும் சம்பிரதாயம் உள்ளவர்கள் அவர்கள் சம்பிரதாயம் முறைப்படி அதிக சுற்றுகள் கொண்ட தலைப்பாகையை அணிந்து கிரிவலம் வருதலும் ஏற்புடையதே. இதனால் தங்கள் பரம்பரையில் உள்ளவர்களுக்கும் சமுதாயத்திற்கும் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள எண் சக்திகள் மனிதனின் சூட்சும சரீரத்துடன் தொடர்பு உடையவையே. இவ்வாறு சூட்சும சரீரங்களை இனம் கண்டு கொண்டு அவைகளை இணைக்கும் சக்தி உள்ள மனிதனே ஆன்மீக முன்னேற்றம் அடைகிறான். இந்த சூட்சும சக்திகளை இணைக்கும் ஒரு முயற்சியே நம் சற்குருவால் அளிக்கப்பட்டுள்ள வட்டத்திற்குள் சட்டமிடும் பயிற்சியாகும். இவ்வாறு 2000 வருடத்திற்கு அப்பாற்பட்ட வருடங்களைக் குறிக்கும்போது அந்த பூஜ்யத்திற்குள் குறுக்கே கோடு போட்டு, சட்டம் இட்டு 0 என்று அமைத்தலால் சூட்சும சரீரங்களை சாதாரண மக்களும் இணைக்கும் தகுதி பெறுகிறார்கள்.

நாம் நினைப்பது போல் மனித சூட்சும சரீரங்கள் ஒன்று, இரண்டு ... என்று வரிசைக்கிரமமாக அமைவதில்லை. மனிதர்களின் ஜாதகத்தில் ஒன்றாம் இடமான லக்ன ஸ்தானத்தில் அமையும் கிரகங்களைக் கொண்டு, லக்னத்தைப் பார்க்கும் கிரகங்களைக் கொண்டு, லக்னாதிபதியின் வலிமையைக் கொண்டு இவை அமையும். நம் சற்குரு வழிகாட்டியபடி திருமேற்றளி போன்ற திருத்தலங்களில் அமைந்துள்ள பட்டை லிங்க மூர்த்திகளை வழிபட்டு வந்தால் இந்த ஆதி சூட்சும சரீரத்தை இனங்கண்டு கொள்ளலாம். அப்போதுதான் மற்ற சூட்சும சரீரங்களை இனங் கண்டு ஆதி சரீரத்துடன் இணைக்க முடியும், ஆன்ம முன்னேற்றம் பெற முடியும்.

பேரளத்தில் உள்ள நவகிரகங்கள் அனைத்தும் முருகப் பெருமானின் நேரடிப் பார்வையில் அமைந்து அனைத்து நவகிரக மூர்த்திகளும் சூரிய பகவானைப் பார்த்தவாறு இருப்பதால் இந்த அமைப்பு சூட்சம சரீரங்களை விரைவில் இணைப்பதற்கு அனுகிரகம் அளிப்பதாகும். தமக்கு உரிய அட்சரத்தை வில்வ தளத்தில் ஏந்தி திருத்தலத்தை வலம் வரும் அன்பர்கள் இத்தல நவகிரகங்களையும் வலம் வந்து வணங்குவதால் தங்கள் நாம அட்சரத்துடன் சூட்சும சரீரங்களையும் இணைக்க முடியம் என்பதே சற்குரு நமக்காக அருளும் ‘போனஸ்’ அனுகிரகமாகும். நவகிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்ப்பது ஒன்று முதல் ஒன்பது வரையான எண்களின் சக்தியை ஒருமிக்கும் இணைப்பாகவும், ஒன்பதிற்கு உரிய முருகப் பெருமான நவகிரகங்களைப் பார்ப்பது இந்த எண் சக்திகளை இணைக்கும் பூஜ்ய இணைப்பாகத் துலங்கும் என்பதே பேரள, ‘பேரலை’ திருத்தலத்தின் மகிமையாகும்.

நிமலன் அருளும் நித்ய பிரதோஷம்

இறைவனின் கருணை எல்லையற்றது, அளவிட முடியாத பெருங்கருணையாளன் ஈசன் என்றெல்லாம் மகான்கள் இறைவனின் கருணையை புகழ்ந்து பாடுகின்றனர். ஆனால், சாதாரண மனிதர்களோ இறைப் பெருங்கருணையின் ஒரு துளியைக் கூட இரசிக்க முடியாத மிகவும் பலவீனமான பக்தி நிலையில் இருப்பதால்தான் நாம் இறைவழிபாடுகளை ஏனோ தானோ என்றே இயற்றுகிறோம். இத்தகைய வழிபாடுகளில் ஒன்றே பிரதோஷம் என்பதாகும்.

திரைலோக்கி

காலம் தேசம் என்ற இரண்டு கோட்பாடுகளையும் கடந்து நிற்பவனே இறைவன், எனவே இந்த இரண்டு தத்துவங்களையும் ஒரு மனிதன் தியான நிலையில் கடக்கும்போதுதான் இறைப் பரம்பொருளின் சக்தியில் இலயித்து எல்லையில்லா ஆனந்தத்தில் நீந்திக் களிக்கிறான். இத்தகைய நிலையை அடைய முடியாத சக்தியில்லாத குழந்தைகளை உதறித் தள்ளி விடுவானா ஈசன்? நிச்சயமாக இல்லை, இவ்வாறு கால தேசம் கடந்து நிற்கும் இறைப் பரம்பொருளின் சுவையை உணர மகான்களால் உரைக்கப்பட்ட மிக உயர்ந்த, உன்னத அமிர்த நேரமே நித்ய பிரதோஷ நேரம் என்ற மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலான நேரமாகும்.

ஒரு முறை நம் சற்குரு அடியார்களுடன் வடஇந்திய யாத்திரைக்கு சென்றிருந்தார். அப்போது இரயில் ஓரிடத்தில் நின்று விட்டது. ஏதாவது ஒரு ஸ்டேஷனில் இரயில் நின்றிருந்தால் ஒருவேளை இரயிலின் திடீர் நிறுத்தத்திற்கான காரணத்தை ஒரளவு தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், நடுகாட்டில் இரயில் நின்று போனால் என் செய்வது?

நம் சற்குருவோ இதைப் பற்றி எல்லாம் சிறிது கவலைப்படாது இரயிலிலிருந்து இறங்கி அருகில் உள்ள வயல் வெளியில் நடக்க ஆரம்பித்து விட்டார். அடியார்களும் தரையில் விரிப்பதற்குத் தேவையான போர்வை, பாய் இத்யாதிகளுடன் நம் சற்குருவைப் பின் தொடர்ந்தனர். சற்று தூரம் சென்றபின் வயல் நடுவில் ஒரு போர்வையை விரிக்குமாறு கூற அடியார்கள் அவ்வாறே போர்வையை அறுவடையான அந்த வயலில் விரித்து நம் சற்குருவுடன் அமர்ந்து விட்டனர்.

பல தெய்வீக விஷயங்களை தமக்கே உரிய ஆனந்தத்துடன் நம் சற்குரு வர்ணிக்க மகுடி இசைக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல அடியார்கள் அந்த ‘மகுடி இசையை’ கேட்டு இரசித்து மகிழ்ந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் நம் சற்குரு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் இரயிலை அடைய இதற்காகவே காத்திருந்தது போல் இரயிலும் புறப்பட்டு விட்டது.

இவ்வாறு காசி யாத்திரையின் போது கோவணாண்டி சிறுவனுக்கு அளித்த அனுபூதிகளை நினைவு கூர்ந்தால் சற்குருமார்களின் வழிகாட்டுதல் இவ்வாறு யுகயுகமாய்த் தொடர்கின்றன என்பதை நீங்கள் உணர்ந்து இன்புறலாம்.

இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக கயாவில் உள்ள பல்குனி ஆற்றில் அடியார்களின் உடல் மீது தர்ப்பண வழிபாடுகளை இயற்றி அவர்களுக்கும் அவர்கள் வழிவந்த எத்தனையோ மூதாதையர்களுக்கும் நற்கதி அளித்தவரே நம் சற்குரு. இந்த வழிபாடுகளுக்குப் பின் பல்குனி ஆற்றைக் கடந்து வந்து ஆற்றின் மறுகரையில் சில அடியார்களுடன் நம் சற்குரு அமர்ந்து கொண்டார்.

பல்குனி ஆற்றில் சிறிதளவே நீர் ஓடிக் கொண்டிருந்தாலும் அந்த சிறிதளவு தீர்த்தத்திலும் மறையும் நிலையில் இருந்த சூரியனின் ‘செம்மேனி’ கதிர்கள் பிரதிபலித்து எம்பெருமானின் செம்மேனி அம்பலக் கூத்து திருநடனத்தை நினைவூட்டின. இவ்வாறு காலம் தேசத்திற்கு அப்பாற்பட்ட பிரதோஷ நேர அம்பலக் கூத்து சக்திகளை நித்ய பிரதோஷ சக்திகளாக அடியார்களுக்கும் இந்த சமுதாயத்திற்கும் அர்ப்பணிப்பதற்காக நம் சற்குரு நடத்திய நாடகங்களே மேற்கண்ட இரயில் சம்பவங்கள், பல்குனி சம்பவங்கள் என்பது இப்போது உங்களுக்குச் சொல்லாமலே புரிந்திருக்கும் அல்லவா?

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam