சிவசக்தி யோக சந்தானமே ஓங்காரம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்




ஸ்ரீயோக பைரவ மூர்த்தி, திருப்பத்தூர்
முதன் முதலில் இறைவன் லிங்க வடிவில்தானே தன்னுடைய சக்தியை வெளிப்படுத்தினான். அதன் பின்னர் சக்தியுடன் சேர்ந்து ஜீவ சிருஷ்டியை தொடங்கிட விழைந்தபோது அன்னை பார்வதி தேவி இறைவனை மானுட வடிவில் தரிசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை வெளியிட்டாள். இறைவிக்கும் ஆசையா ?
பார்வதி தேவியின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கே இறைவன் திருப்பத்தூர் சிவத்தலத்தில் யோக பைரவ மூர்த்தியாக எழுந்தருளி அம்பிகையின் விருப்பத்தை நிறைவேற்றினான். ஆனால், மனம், வாக்கு, சொல், எண்ணம் அனைத்திற்கும் அப்பாற்பட்ட இறைவனின் அந்த அழகு சொரூபத்தை, பேரெழில் கோலத்தை தரிசனம் செய்த பார்வதி தேவி அந்த சுந்தர வதன பேரழகில் மயங்கி அதனுள் ஐக்கியமானளாள். அந்த சிவ சக்தி ஐக்கிய யோகத்தில் தோன்றியதே ஓங்கார சக்தியாகும். இதைத்தான் சித்தர்கள் ஓங்கார சக்தியை சிவ சக்தி ஐக்ய ஓங்கார சந்தானம் என்று மிகவும் அழகாக வர்ணிக்கிறார்கள். இந்த அற்புதம் எத்தனையோ கோடி கோடி யுகங்களுக்கு முன் நிகழ்ந்த திருத்தலமே திருப்பத்தூர் ஆகும். சிவ சக்தி யோக ஓங்கார சந்தான சக்தியைத் தாங்கும் வல்லமை உடையதே கொன்றை மரமாகும். வேறு எவராலும், வேறு எந்த மூலிகையாலும் இந்த ஓங்கார சந்தான சக்தியை தாங்க முடியாது. எனவே இன்று திருப்பத்தூர் திருத்தலத்தில் நாம் பெறும் ஸ்ரீயோக பைரவர் தரிசனம் என்பது சிவ சக்தி மூர்த்திகளின் அர்த்தநாரீஸ்வர யோக தத்துவ தரிசனம் ஆகும் என்ற இதுவரை எவரும் அறியாத தெய்வீக இரகசியத்தை சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் அருட் கருணை கடாட்சத்தால் நாம் அறிந்து கொண்டுள்ளோம்.
குடும்ப ஒற்றுமையை பெருக்கி ஒழுக்கமுள்ள சந்தான சௌபாக்கியத்தை அருளும் அர்த்த நாரீஸ்வர யோக தரிசனம். மண் அகல்களில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது பசு நெய் தீபம் குறைந்தது 1008 ஏற்றி வழிபடுதலால் கிட்டும் பலன்கள் அமோகம்.



திருக்கோளக்குடி, செவலூர் அருகே, புதுக்கோட்டை
திருகோளகுடி திருத்தலத்தில் வாஸ்து தோஷங்களை களையும் அற்புத சக்திகள் பெருகியுள்ளன. இத்திருத்தல குன்றின் மேல் ஏகாந்தமாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி சன்னதி ஞறாஇசைதேனி என்ற குலத்தைச் சேர்ந்த அற்புத தேனீக்கள் தினமும் சஞ்சாரம் செய்யும் சித்தர்களின் மையமாக உள்ளது என்பது பலரும் அறியாத சுவையான இரகசியமாகும்.
எம்பெருமான் பிரணவத்தின் தெய்வீக இரகசியங்களை ஓமாம்புலியூர் திருத்தலத்தில் உமாதேவிக்கு உபதேசமாக அருளினார். அந்த இரகசியங்களை எல்லாம் தேவி மயில் வடிவில் மயிலாம்பிகையாக மயிலாப்பூர், மயிலாடுதுறை போன்ற திருத்தலங்களில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும் ஞறாஇசை என்னும் ஒலி ரூபத்தில் அருளியவாறே உள்ளாள். ஞறா என்றால் மயிலின் அகவல் என்று பொருள். பிரணவ சக்திகளின் ஒரு கூறே ஞறாஇசை என்னும் சக்தியாகும். இது பொதுவாக மக்களுக்கும் ஈ, தேனி போன்ற ஆறு கால் உயிர்களுக்கும் நன்மை பயப்பதாகும். அதனால் ஞறாஇசைதேனி என்னும் குலத்தைச் சேர்ந்த சித்தர்கள் தேனி வடிவில் அம்பிகையிடமிருந்து இந்த ஞறாஇசை சக்திகளைப் பெற்று அதை பல திருத்தலங்களிலும் தேனீக்களின் ரீங்கார இசையாக பரப்பி வருகிறார்கள்.



கர்நாடக இசையில் ரிஷபம் ஸ்வரம் மயிலின் குரலைத்தானே குறிக்கின்றது. ஞறாஇசை தேனீக்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்கோளக்குடி திருத்தலத்திற்கு அருகில் உள்ள தேனி மலையை தங்கள் தவ பீடமாக கொண்டு தினமும் அங்கிருந்து பல முருகத் தலங்களுக்கும் பறந்து சென்று தங்கள் ரீங்கார இசையால் இறை மூர்த்திகளை வழிபட்டு பூலோக ஜீவன்களுக்கு அருந்தொண்டாற்றி வருகின்றனர். திருக்கோளக்குடியில் சுனை மேல் உள்ள பூமி அந்தர வாஸ்து சுந்தர தேன் கூடு இவர்களால் நிர்மாணிக்கப்பட்டதே ஆகும். இந்த தேன் கூட்டின் தரிசனமே எத்தனையோ வாஸ்து தோஷங்களையும், மிருத்யு தோஷங்களையும் களையும் வல்லமை பெற்றதாகும். செவ்வாய் கிழமை, வாஸ்து நாள், சஷ்டி திதி, புனர்பூச நான்காம் பாத காலங்களில் திருக்கோளக்குடியில் இறை மூர்த்திகளுக்கு சுத்தமான தேன் அபிஷேகம் நிறைவேற்றுவதாலும், இறை அடியார்களுக்கு தேன் கலந்த பாலை பிரசாதமாக அளிப்பதாலும் அடிப்படை வசதிகளே இல்லாதவர்களும், நில மனை தோஷங்களால் வருந்துவோரும், எவர் துணையும் இன்றி தனிமையில் வாடுவோரும் நலம் அடைவர். ஸ்ரீஅகத்திய பெருமான் தேனீ வடிவில் ஈங்கோய்மலை போன்ற திருத்தலங்களில் வலம்வந்து வழிபாடுகளை நிறைவேற்றுகின்றார் என்பது நீங்கள் அறிந்ததே. சித்தர்களின் வழிபாட்டின் பின்னணியில் அமைந்த இரகசியங்களை எழுத்தில் வடிக்க இயலாது.


ஸ்ரீஅகத்தியர் தேனீ வடிவில் பல திருத்தலங்களுக்கு சஞ்சாரம் செய்து தன்னுடைய ஆறு கால்களிலும் சரவணபவ என்ற முருக பீஜாட்சர சக்திகளை அத்தலங்களில் எல்லாம் பதித்துச் செல்கிறார். இதனால் விளையும் பலன்களில் ஒன்று அத்தகைய பழநி, தேனிமலை, அனுவாவிமலை, பர்வதமலை, ஐயர்மலை போன்ற திருத்தலங்களில் ஏற்படும் மரக்கால் மழை என்னும் சுக்ரவர்ஷ மழைப் பொழிவாகும். மரக்கால் என்பது ஆறு நெல் மணிகளை ஒன்றன்பின் ஒன்றாக வைப்பதால் ஏற்படும் அளவாகும். இந்த அளவு விட்டம் உடைய மழைத் துளிகள் பூமியை அடையும்போது அந்த மழைத் துளிகள் பூமியின் மேற்பரப்பில் மோதும்போது உண்டாவதே மரக்கால் சோதி என்னும் ஜீவ ஜோதி ஆகும். இது சகல சௌபாக்கியங்களையும் தரவல்லது. இந்த சுக்ர வர்ஷ மழையில் நீராடுவதாலும், அந்த மழைத் துளிகளை தென்னம்பாளையில் சேகரித்து சுயம்பு லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்வதாலும் அற்புத சந்தான சௌபாக்கியங்களை அனுகிரகமாகப் பெறலாம். சுவாதி நட்சத்திர தினத்தன்று ஏற்படும் மழைப் பொழிவில் இத்தகைய மரக்கால் சோதி செறிந்துள்ளதால் இந்த மழைத் துளிகள் வாய் திறந்திருக்கும் சிப்பிகளை அடைந்தவுடன் அவைகள் கடலின் அடிமட்டத்திற்குச் சென்று முத்துக்களை உருவாக்குகின்றன. சுவாதி நட்சத்திரத்தன்று உருவாகும் மழைத் துளியில் ருத்ர சீதளம் என்ற குளிர் சக்தியும் அது சிப்பியை மோதும்போது ஏற்படும் மரக்கால் சக்திகளும் ஒன்று சேரும்போது தோன்றும் முத்திற்கு இணையான சிவசக்தி ஐக்கிய பிரசாதத்தை வேறு எந்த பூஜைகளாலும் பெற முடியாது. அதே போல தம்பதிகளின் முறையான சங்கமத்தில் இத்தகைய மரக்கால் சோதி தோன்றும் என்பது உண்மையே. அதனால்தான் சுவாதி போன்ற முழு நட்சத்திர தினங்களில் மட்டுமே தம்பதிகள் இணைந்து உத்தம சந்ததிகளைப் பெறும் முறையை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். திருமண சடங்குகளில் லாஜ ஹோமம் என்ற ஒரு ஹோமத்தை நிகழ்த்துவார்கள். அப்போது கூறப்படும் மந்திரங்கள் இந்த சுவாதி சோதி சக்தியை தம்பதிகள் பெறுமளவிற்கு அவர்களின் உடல் அங்கங்களை தூய்மை அடையச் செய்கின்றன. ஆனால், தற்காலத்தில் லாஜ ஹோமம் மூலம் மரக்கால் சோதி சக்தியை அளிக்கும் தெய்வீக ஆற்றல் உடைய பெரியோர்கள் அருகி விட்டதால் இறைச் சன்னதிகளில் மாங்கல்ய தாரண வைபவத்தை நிகழ்த்துவதால் இந்த மரக்கால் சோதியை தம்பதிகள் இயற்கையாகவே பெறுமளவிற்கு இறையருள் துணை நிற்கும். இவ்வாறு திருமணத்தை திருத்தலங்களில் நடத்த முடியாத சூழ்நிலையில்
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்தென்னை முன்னே நிறுத்தி
அறிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து
பொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன் தோழீ
என்ற ஆண்டாள் பாசுரப் பாடலை குறைந்தது 12 முறை ஓதுதல் நலம். இவ்வாறு எவ்விதத்திலும் மரக்கால் சோதியை பெறாத தம்பதிகள் சுவாதி நட்சத்திர தலமான சென்னை சித்துக்காடு ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் திருத்தலத்தில் குறைந்தது 18 பசு நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருதலால் உத்தம சௌபாக்கிய சந்தானங்களைப் பெறலாம். ஆறு கால்களை உடைய எறும்பு, ஈ, கொசு போன்ற சரவணபவ ஜீவிகள் தங்கள் அவயவங்களை அசைக்கும் விதத்தை வைத்து நடக்கவிருக்கும் சம்பவங்களை கணிக்கும் ஜோதிட முறையும் ஒன்று உண்டு. சரவண சாஸ்திரம் என்ற சாஸ்திரத்தின்படி ஈ, கொசு போன்றவை தங்கள் கால்களை ஒன்றாக சேர்ப்பது, பிரிப்பது, இறக்கைகளைத் தடவுவது போன்ற இயக்கங்களை வைத்து எதிர்கால நிகழ்ச்சிகளைப் பற்றி குறிப்பாக புயல், வெள்ளம், நிலநடுக்கம், மழைப் பொழிவின் அம்சங்கள் போன்றவற்றை மிகவும் துல்லியமாக கணித்து விடலாம்.



தளி தீர்த்தம், திருப்பத்தூர்
பலருக்கும் தங்களுக்கு ஒரு சிறு வீடாவது சொந்தமாக கட்டிக் கொண்டு வாழ வேண்டும் என்று நெடுங்காலமாக ஏக்கத்துடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறு மனிதனின் அடிப்படை தேவையான சொந்த இருப்பிடத்தை ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும் என்று சதாசர்வ காலமும் இறைவனை வேண்டி அருந்தொண்டாற்றிய பெருந்தகையே திருமாளிகை தேவர் ஆவார். திருவாவடுதுறை திருத்தலத்தில் ஜீவ சமாதி கொண்டு அருள்புரியும் இப்பெருமான் யார் வந்து தன்னிடம் வீடு இல்லாத தங்கள் குறையை தெரிவித்தாலும், “நைனா, உனக்கு வீடு போதுமா, என் அப்பனை வேண்டி உனக்கு மாளிகையே கட்டித் தருகிறேன்,” என்று அன்பு வார்த்தைகள் கூறி ஆறுதல் அளித்து வந்தார். திருவாவடுதுறை ஈசனும் யார் திருமாளிகை தேவரை நாடினாலும் அவர்களுக்கு நிச்சயமாக ஒரு மாளிகையையே கட்டும் வசதியை ஏற்படுத்தி தன் உத்தம பக்தனுடைய வார்த்தைகளை சத்திய வாக்காக மாற்றி மக்களுக்கு இறை நம்பிக்கையை ஊட்டி வந்தார். இவ்வாறு ஏற்பட்டதே அம்மகானுக்கு “திருமாளிகை தேவர்” என்ற பெயர். என்றும் வற்றாத திருப்பத்தூர் தளி தீர்த்தமும் ஒரு முறை தற்போது உள்ளது போல் சிறிதும் நீரின்றி வறண்டு போய் விட்டது. திருவாவடுதுறையில் வழிபாடுகளை இயற்றிக் கொண்டிருந்த திருமாளிகை தேவரிடம் இவ்வாறு தளி தீர்த்தமே வற்றி விட்டது என்று அனைவரும் வருத்தத்துடன் தெரிவிக்கவே அவர் மிகவும் அமைதியாக, “கங்கையை தலையில் சூடிய பெருமானின் தலத்தில் என்றாவது வறட்சி ஏற்படுமா ? நீங்கள் இறை சக்தியை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை,” என்று கூறி உடனே திருப்பத்தூர் திருத்தலத்திற்கு வந்து வறண்டு போன தளி தீர்த்தத்தில் யாரெல்லாம் சொந்த வீடு கட்டிக் கொள்ள விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் நான்கு மூங்கில் குச்சிகளை வறண்ட குளத்தில் நட்டு வைத்து அதன்மேல் தென்னம் கீற்றால் பந்தலிட்டு திருக்குளத்தை ஒன்பது முறைகள் வலம் வந்து வணங்குமாறு கூறினார். ஆயிரக் கணக்கில் மக்கள் அத்திருக்குளத்தை வலம் வந்து சிறிது காலத்திலேயே சொந்த வீடுகளை அதாவது மாளிகை வீடுகளையே அமைத்து பெரும்பயன் பெற்றனர். அப்போது தோன்றியதே இந்த திருமாளிகை வழிபாடு. இவ்வாறு எப்போதெல்லாம் திருப்பத்தூர் திருத்தலத்தில் தளி தீர்த்தம் வறண்டு போய் விடுகிறதோ அப்போது திருமாளிகை தேவர் அருளிய முறையில் நான்கு மூங்கில் குச்சிகளை நட்டு வைத்து மேற்கூரையிட்டு திருக்குளத்தை ஒன்பது முறை வலம் வந்து வணங்குவதால் மாளிகை போன்ற சொந்த வீடுகள் அமையப் பெறுவார்கள். சொந்த வீடுகள், வாடகை வீடுகளில் உள்ள வாஸ்து தோஷங்கள் தீரும். மனக் குழப்பத்தை தீர்க்கக் கூடியதும் திருமாளிகை வழிபாடாகும்.
தற்போது ஒயிட் ஹவுஸ் என்றழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மாளிகையில் உள்ள உயர்அதிகாரிகள் தங்கள் மனக் குழப்பங்களை தீர்த்துக் கொள்ள கொள்ளிடம் மணலில் ஒரு சிட்டிகை தளி தீர்த்த மண்ணை சேர்த்து அதில் தங்கள் கைகளை அளாவி வந்தால் அது எத்தகைய மனக் குழப்பங்களையும் தீர்த்து வைக்கும் என்ற அற்புத வழிகாட்டுதலை அளித்தவரே திருமாளிகை தேவர் என்பது ஒரு சிலரே அறிந்த ஆன்மீக இரகசியமாகும். தாங்க முடியாத மன வேதனைகளுடன், மனக் குழப்பங்களால் பீடிக்கப்பட்டவர்கள் கொள்ளிடம் மணலில் சிறிதளவு தளி தீர்த்த மண்ணைச் சேர்த்து அதில் தங்கள் கைகளை அளாவி வந்தால் எத்தகைய குழப்பங்களுக்கும் விடை கிடைக்கும். ஆனால், கோயிலில் உரிய காணிக்கையை செலுத்திய பின்னரே தளி தீர்த்த மண்ணையோ கொள்ளிட மண்ணையோ எடுக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. சிவன் சொத்து என்பதால் இதை கவனமாக கையாளவும்.



ஸ்ரீதளி தீர்த்தம், திருப்பத்தூர்

மேலே உள்ள தளி தீர்த்தம் நீர் இல்லாமல் வறண்டு போய் கிடக்கும் காட்சியைக் காணும் நம் சற்குரு அடியார்கள் லட்சுமி கடாட்ச சக்தியைப் பெற முடியாமல் வாடுவதை பொறுப்பாரா என்ன ? நம் சற்குருவின் அருந்தவப் பயனால் இந்த தளி தீர்த்தம் ஸ்ரீதளி தீர்த்தமாய் மாறிய விந்தையையும் இங்குள்ள வீடியோவில் அடியார்கள் கண்டு இரசிக்கலாம்.



அனுஷம் நட்சத்திர நாட்களிலும், வியாழக் கிழமைகளிலும் இத்தீர்த்தத்தில் நீராடி இங்குள்ள ஸ்ரீபத்மராக லட்சுமியை வணங்கி வருவதால் வாழ்க்கை வெறுத்து வாடும் அபலைகளும், வேலை கிட்டாமல் அலையும் பட்டதாரி இளைஞர்களும் நல்லருள் பெறுவார்கள். தளி தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம் என்றும் அழைக்கப்படும். திருப்பத்தூர் சிவத்தலத்தில் கொன்றை மரமும் ஸ்ரீதளி தீர்த்தமும் ஒரே காலத்தில் தோன்றியவை என்றால் இவற்றின் தொன்மையை எப்படி விவரிக்க முடியும் ? திரு பதி ஊர் என்று, அதாவது லட்சுமி தேவியும், தேவியின் பதியான பெருமாள் மூர்த்தியும் இணைந்து அனுகிரகம் வழங்கும் ஊரே திருப்பத்தூர் என்று அழைக்கப்படுவதன் இரகசியம் இப்போது புரிகின்றது அல்லவா ?



திருவீழிமிழலை
பொதுவாக ‘ழ’ என்ற அட்சரம் நேத்ர சக்திகளை அருளவல்லது. அரிதிலும் அரிதாக திருவீழிமிழலை என்ற திருத்தல நாமமே வலது இடது கண் என்ற இரண்டு நேத்ர சக்திகளுடன் விளங்குவது மக்களுடைய பெரும் பேறாகும். கோதுமை ரவையுடன் சர்க்கரை சேர்த்து இத்தலத்தில் மதில் சுவரை சுற்றி எறும்புகளுக்கு இட்டு வருவதால் கண் நோய்கள் விலகும், வறுமை தீரும், கடன் சுமை குறையும்.
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலை மேல் தாழும் மொழிகளே
என்ற தேவார துதியை தொடர்ந்து வாய் திறந்து ஓதி வந்தால் தங்க வியாபார துறையில் உள்ளவர்கள் வேறு துறைகளுக்கு மாறுவதற்குத் தேவையான மன உறுதியைப் பெறுவார்கள். மேலும் சந்திரனும் சனிபகவானும் இணைந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கு விளையும் மனக் குற்றங்கள் இத்தகைய வழிபாட்டால் நாளடைவில் சீர்பெறும்.



ஸ்ரீதாமிரகோட்ட விநாயகர், அம்மன் சன்னதி, திருப்பத்தூர்
திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார், பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் போன்ற சுயம்பு பிள்ளையார் மூர்த்திகள், திருக்கோயில் பிரகாரங்களில் எழுந்தருளிய பிள்ளையார் மூர்த்திகள், கோஷ்ட கணபதி மூர்த்தங்கள், தூண்களில் அருள் புரியும் பிள்ளையார் மூர்த்திகள், தனிச் சன்னதி கொண்டு அருளும் விநாயக மூர்த்திகள் என்று எத்தனையோ விதவிதமான ரூப லாவண்யத்துடன் பிள்ளையார் மூர்த்திகள் எழுந்தருளி ஜீவன்களுக்கு கருணை கடாட்சத்தை பரப்பி வருகின்றனர்.
இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் ஸ்ரீதாமிரகோட்ட விநாயக மூர்த்தி திரிபுர சம்ஹாரத்திற்கு முன் தோன்றிய புராதன மூர்த்தி ஆவார். தூணில் எழுந்தருளி இருந்தாலும் இவருடைய தொன்மை சொற்பதம் கடந்தது. எம்பெருமான் தாமிரகோட்டை, இரும்புக் கோட்டை, வெள்ளிக் கோட்டை என மூன்று கோட்டைகளாக விளங்கிய அசுரர்களை சம்ஹாரம் செய்ய விரைந்தபோது எம்பெருமானின் ரதத்தின் அச்சை உடைத்து எக்காரியத்தை தொடங்குவதற்கு முன்னும் ஸ்ரீவிநாயக மூர்த்தியை வணங்கியே ஆரம்பிக்க வேண்டும் என்ற தத்துவத்தை உலகிற்கு இத்திருவிளையாடல் மூலம் பிள்ளையார் உணர்த்தியதை நாம் அறிவோம். அப்போது ஒவ்வொரு முப்புர கோட்டையையும் சம்ஹாரம் செய்வதற்காக எம்பெருமான் ஒவ்வொரு விநாயக மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவ்வாறு தாமிர கோட்டை வடிவில் இருந்த அசுர சக்தியை சம்ஹாரம் செய்வதற்காக எம்பெருமான் திருப்பத்தூர் திருத்தலத்தில் வழிபட்ட மூர்த்தியே ஸ்ரீதாமிரகோட்ட விநாயக மூர்த்தி ஆவார். அவ்வாறு எம்பெருமான் ஸ்ரீதாமிரகோட்ட மூர்த்தியை அர்ச்சித்து வழிபட்டபோது பிள்ளையார் மூர்த்தி தன்னுடைய இறைஅவதார அனுகிரக சக்தியாக எம்பெருமானின் தலையில் சூடி இருந்த கங்கா தேவிக்கு தாமிர சக்தியை அளித்தாராம். அன்று முதல் கங்கை நீரில் தாமிர சக்திகள் பொங்கிப் பெருகி கங்கை தீர்த்தத்தில் என்றும் வற்றாத குளிர்ச்சி ஏற்பட்டதாம். எனவே கங்கை நீரை எவ்வளவு கொதிக்க வைத்தாலும் அதன் சீதளத் தன்மை குறையாது என்ற தெய்வீக அனுகிரகத்தை வாரி வழங்கியவரே ஸ்ரீதாமிரகோட்ட விநாயகர் ஆவார்.
தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதனைப் போல் தந்தைக்கும் அருள்புரிந்த தனயனே ஸ்ரீதாமிர கோட்ட விநாயகர்.
எக்காரியத்தை தொடங்குவதற்கு முன்னும் விநாயக மூர்த்தியை சிறப்பாக திருப்பத்தூர் ஸ்ரீதாமிரகோட்ட விநாயக மூர்த்தியை வழிபடுவதால் காரியத் தடங்கல்கள் நீங்கி சிறப்பான பலன்களைப் பெறலாம். குறிப்பாக பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்கு படிப்பு, திருமணம் போன்ற நற்காரியங்களை நிறைவேற்ற முடியாமல் திணறும்போது அவர்களுடைய நியாயமான விருப்பத்தை நிறைவேற்றுபவரே இந்த விநாயக மூர்த்தி ஆவார். வளர்பிறை சதுர்த்தி திதிகளில் 108 பூரண கொழுக்கட்டைகளை ஸ்ரீதாமிரகோட்ட கணபதிக்குப் படைத்து இறை அடியார்களுக்கு தானமாக அளித்து வருதலால் நினைத்த காரியம் கை கூடுவதுடன், பெண் பிள்ளைகள் நலம் அடையவும் கணபதியின் பேரருள் பூரித்து நிற்கும்.
தாமிர உலோக வியாபாரிகள், தாமிர பாத்திர வியாபாரிகள், வெண்கலம், பித்தளை போன்ற தாமிரம் கலந்த உலோக வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் இத்தல பிள்ளையார் மூர்த்தியை வழிபட்டு நற்பலன் பெறலாம். அதிக உடல் உஷ்ணத்தால் மூலம், உடல் எரிச்சல், கண் நோய் போன்ற உபாதைகளால் வருந்துவோருக்கு அருளும் குளிர்ச்சி வேந்தனே ஸ்ரீதாமிரகோட்ட கணபதி மூர்த்தி.

ஸ்ரீவிநாயக மூர்த்தி பூலோகத்தில் தோன்றிய தினமே ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதி என்பது நீங்கள் அறிந்ததே. இதன் அடிப்படையில் அமைந்த ஜோதிட நுணுக்கங்கள் நம்மை பிரமிக்க வைக்கும். ஆவணி மாதம் என்றால் சூரிய பகவான் சிம்ம ராசியில் எழுந்தருள்வார். அது சூரிய பகவானுடைய ஆட்சி வீடு, ஆண் ராசி. வளர்பிறை சதுர்த்தி திதி அன்று சந்திர பகவான் சிம்ம ராசிக்கு இரண்டாம் ராசியான கன்னி ராசியில் எழுந்தருள்வார். அது பெண் ராசி. இந்த யோக அமைப்பால் பூலோக ஜீவன்களுக்கு ஏற்படும் பலன்கள் ஏராளம். அதனால்தான் விநாயக சதுர்த்தி அன்று பிள்ளையாரை வழிபட்டு அந்த பூஜா பலன்களை பிள்ளையாரப்பனைப் பற்றி தெரியாதோரும் பெறுவதற்காக ஞாயிறு அல்லது திங்கட் கிழமை அன்று அமையும் ஒற்றைப் படை நாளில் பிள்ளையாரை ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் விட்டு விசர்ஜனம் செய்கின்றோம். இது தொடர்பான ஒரு அற்புத இறை அனுபூதியை இங்கு அளிக்கிறோம். ஒரு முறை சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தான் விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்த களிமண் பிள்ளையாரை திருச்சி காவிரி நதியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் விசர்ஜனம் செய்வதற்காக எடுத்து வந்தார்கள். அந்தி மயங்கிய மாலை வேளையில் ஒரு சில அடியார்களுடன் ஸ்ரீவாத்யார் அவர்கள் அம்மா மண்டபம் காவிரிப் படித்துறையில் நின்று கொண்டு புருஷ சூக்தம் ஓதி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசனம் செய்தவாறே ஓடும் காவிரி தீர்த்தத்தில் பிள்ளையாரை வழி அனுப்பி வைத்தார்கள். விநாயகரின் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன். அதனால் வலது கண்ணைக் குறிக்கும் ஞாயிற்றுக் கிழமையிலோ அல்லது இடது கண்ணைக் குறிக்கும் திங்கட் கிழமை அன்றோ பிள்ளையாரை நதியில் விடுகிறோம். பிள்ளையாருக்குப் பூஜை செய்யும்போது அவரை கிழக்கு நோக்கி வைத்து அர்ச்சிக்கிறோம். அப்படியானால் அவரை எந்த திக்கை நோக்கி விசர்ஜனம் செய்ய வேண்டும். இதற்கு ஸ்ரீவாத்யார் அவர்கள் சொல்லாமல் சொல்லிய பதிலே நதி ஓடும் திசையே பிள்ளையாரை விசர்ஜனம் செய்யும் திசையாகும். ஆனால், உச்சிப் பிள்ளையாரை நோக்கி புருஷ சூக்தம் ஓதி விநாயக விசர்ஜனம் செய்தால் அங்கு திசைகளே மறைந்து விடுகின்றன. காரணம், திசைகள் யோகத்தில் அடங்கும், யோகம் ஆன்மாவில் அடங்கும், ஸ்ரீவாத்யார் அவர்களின் உத்தம ஆன்மாவோ கணபதி மூர்த்தியின் தேவ ஜோதியில் ஒன்றி விடும் அல்லவா ? இதை விட ஒரு அற்புத விசர்ஜன வைபவத்தை எவராவது நிகழ்த்த முடியுமா ? ஆனால், வரலாறு காணாத இந்த தெய்வீக வைபவத்தை நீங்கள் அறிவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டன ?
இறைவா !
அந்த விநாயக விசர்ஜன வைபவத்தில் மற்றோர் தெய்வீக அனுபவமும் அடியார்களுக்குக் கிடைத்தது. சற்குரு அவர்கள் அம்மா மண்டப படித்துறையில் நின்று கொண்டு புருஷ சூக்த துதியை ஓத ஆரம்பித்த மறுகணமே இந்த நிகழ்ச்சிக்காகவே காத்திருந்தது போல் ஒரு பெண்மணி எங்கிருந்தோ வந்து ஸ்ரீவாத்யார் நின்று கொண்டிருந்த படிக்கருகில் தன்னுடைய அழுக்குத் துணிகளை எல்லாம் நனைத்து சோப்பு போட்டு துவைக்க ஆரம்பித்து விட்டாள். அந்த அழுக்கு நீர் அனைத்தும் ஸ்ரீவாத்யார் புதிதாக அணிந்திருந்த பஞ்ச கச்ச வேஷ்டியின் மேல் தெளித்துக் கொண்டே இருந்தன. சுற்றி இருந்த அடியார்களுக்கோ தாங்க முடியாத கோபம். ஆனால், ஸ்ரீவாத்யார் அவர்கள் இந்த உலகை மறந்த நிலையில், உச்சிப் பிள்ளையாருடன் ஒன்றிய நிலையில் புருஷ சூக்தத்தை ஓதிக் கொண்டே இருந்தார்கள். புருஷ சூக்த துதி முழுவதும் ஓதி பிள்ளையாரை விசர்ஜனம் செய்து பூரணம் செய்யும் வரை அந்த பெண்ணும் அந்த இடத்தை விட்டு நகருவதாக இல்லை. விசர்ஜன வைபவத்திற்குப் பின் ஸ்ரீவாத்யார் அவர்கள் தன் இல்லம் திரும்பியவுடன் அந்த பெண் அழுக்குத் துணிகளை துவைத்து பூஜைக்கு இடையூறு செய்ததைப் பற்றி அடியார்கள் கோபத்துடன் விவரித்தபோது சற்குரு அவர்கள் சிரித்துக் கொண்டே, “என்ன சார் செய்வது ? அம்மா மண்டபம் என்றால் காவிரி அன்னை தினமும் ஸ்ரீரங்கநாதரை வழிபடும் திருமண்டபம் என்று அர்த்தம். வழக்கமாக சூரிய உதயத்திற்கு முன் ஸ்ரீரங்கநாதருக்கு பாத பூஜை செய்யும் காவிரித் தாய் அடியேனுக்கு அருள்புரிய வேண்டும் என்பதற்காகவோ என்னவோ மாலையில் வந்து ஸ்ரீரங்கநாதருக்குப் பாத பூஜை செய்து கொண்டிருந்தாள்,” என்றார்.
அடியார்கள் அதிர்ந்தனர்.
(இந்தக் கட்டுரையை இரண்டாம் முறையாகப் படிக்கும்போது கிட்டும் ஆன்மீக அனுபவத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்)



குருமங்கள கந்தர்வ சிவராஜ யோகத் திருநாள்
ஒரே ராசியில் சூரியனும் குருவும் இணைந்து இருந்தால் அதை சிவராஜ யோகம் என்று அழைப்பர். கிருஷ்ண பரமாத்மா, உடுக்கை சிவ சித்தர் போன்ற உத்தமர்கள் இத்தகைய சிவராஜ யோகத்தில் தோன்றியவர்களே. நிகழும் ஹேவிளம்பி வருடத்தில் இத்தகைய சிவராஜ யோகம் அமைவது நம் பூலோக மக்களின் பெரும் பாக்கியமே. இவ்வருட புரட்டாசி மாதம் 31ந் தேதி செவ்வாய்க் கிழமை கிருஷ்ண பட்ச திரயோதசியில் இத்தகைய சிவராஜ யோகம் அமைவது அரிதிலும் அரிதாகும். ஸ்ரீரெங்கநாதர் சயனக் கோலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீரங்க திருத்தலத்தில் 17.10.2017 அன்று சரியாக நண்பகல் 12 மணி 27 நிமிடத்திற்கு சூரிய பகவான் திருக்கணித ஜோதிட ரீதியாக கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு எழுந்தருளி இந்த அற்புத சிவராஜ யோக சங்கமத்தை தோற்றுவிக்கிறார். இந்த சிவராஜ யோகம் செவ்வாய்க் கிழமை குரு ஹோரையில் அமைவதால் இது குரு மங்கள சிவராஜ யோகம் எனப் புகழப்படுகிறது. இத்துடன் விஷு புண்ய காலம் அமைந்து இந்த யோகத்தின் பலனை மேலும் புனிதமாக்குகிறது. இந்த யோகத்திற்கு உடுக்கை சிவ ராஜ யோகமும் அணி சேர்ப்பது விந்தையிலும் விந்தையாகும். அதாவது சிவராஜ யோகம் அமையும் துலா ராசியின் அதிபதியான சுக்ர பகவான் கன்னி ராசியில் எழுந்தருளி இருக்க கன்னி ராசியின் அதிபதியான புத பகவான் சூரியன் குருவுடன் துலாவில் எழுந்தருளி இருப்பதே உடுக்கை சிவராஜ யோகமாகும். இந்த யோக அமைப்பே அற்புத குருமங்கள கந்தர்வ உடுக்கை சிவராஜ யோக அமைப்பாகும். துலா ராசியில் சிவராஜ யோக அமைப்பு மகாமகத்தைப் போல பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறையே நிகழக் கூடும் என்றால் இத்தனை சிறப்புகளுடைய குருமங்கள கந்தர்வ சிவராஜ யோகம் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பவிக்கும் என்று சற்றே நினைத்துப் பார்த்தால் இந்த யோகத்தை அனுபவிக்கும் நம்மை விட கொடுத்து வைத்தவர்கள் யார் ? துலா ஸ்நானத்திற்கு அதிபதியான சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியில் எழுந்தருளி சுக்ரன், செவ்வாய் (மங்கள கந்தர்வ) கிரக மூர்த்திகளுடன் ராஜாதி ராஜாக்களுக்கும் வெற்றியைத் தரும் வேசி யோகத்தை தோற்றுவித்துள்ளது எல்லா சிறப்புகளுக்கும் ராஜகிரீடமே வைத்ததுபோல் அமைந்து விடுகிறது.
இந்த குழப்பமான ஜோதிட நுணுக்கங்கள் எல்லாம் வேண்டாம். ஒரு சாதாரண இறை அடியாருக்கு இந்த குருமங்கள கந்தர்வ சிவராஜ யோகத்தால் என்ன பலன் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? துலா ராசியில் ஏற்படும் சிவராஜ யோகம் ஒரு மனிதன் செய்யக் கூடிய மனித கற்பனைக்கும் எட்டாத தவறுகளுக்குக் கூட பிராயசித்தத்தை அளிக்கவல்லதாகும். ஊனமுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், வறுமை நிலையில் உள்ளவர்களுக்கும் நன்னிலை அளிப்பதாகும். கொடுமையான தவறு என்பது இறைவனையே நிந்தித்தல்தானே. அந்த கொடுமையான தவறையும் காயத்ரீ மந்திரத்தை உலகிற்கு அளித்த விஸ்வாமித்திரர் செய்ய வேண்டி வந்தது. மாயையால் அம்மகரிஷி மகாவிஷ்ணுவையே தன் காலால் எட்டி உதைத்து பெரும் சாபத்தை தேடிக் கொண்டது நீங்கள் அறிந்ததே. அந்த சாபத்தால் நாயினும் கேவலமான நிலையை அவர் அடைந்த போது ஸ்ரீஅகத்திய பெருமானின் பெருங்கருணையால் விஸ்வாமித்திரர் துலாராசியில் சிவராஜ யோகம் அமைந்த ஒரு விஷ்ணுபதி தினத்தில் காரப்பங்காடு பெருமாளை ஆராதனை செய்து தன் தவற்றிற்கான விமோசனம் பெற்றார். எனவே மேற்கூறிய குருமங்கள கந்தவர்வ சிவராஜ யோக தினத்தை காரப்பங்காடு பெருமாள் தலம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், காவிரிக் கரையில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலங்களில், மங்கள சாசனம் பெற்ற பெருமாள் தலங்களில் கொண்டாடி அனைத்து தவறுகளிலிருந்தும் விமோசனம் பெற்று இறையருளுக்கும் குரு அருளுக்கும் பாத்திரமாகும்படி இறையன்பர்களை கேட்டுக் கொள்கிறோம். அக்னியில் சுட்ட கல்தோசை, ப்ரெட், பரோட்டா, சப்பாத்தி போன்ற உணவு வகைகளுடன் ஆறு சுற்று கை முறுக்கு, பெரிய லட்டு இவைகளை தானமாக அளித்தலால் அதியற்புத பலன்களைப் பெறலாம். முதியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் அளிக்கப்படும் இத்தகைய தானம் நிரந்தர லட்சுமி கடாட்சத்தை அளித்து முக்திப் பேற்றையுமே அளிக்க வல்லதாகும். உடுக்கை சிவ சித்தர் தினமும் வழிபடும் திருச்சி அருகே உள்ள பெருகமணி பழையூர் சிவத்தலத்தில் இறைவனுக்கு உரிய அபிஷேக ஆராதனைகளுடன் நிறைய சாம்பிராணி தூபம் இட்டு வழிபடுவதும் சிறப்பானதே.
வராஹமிஹிரரின் சூத்திரப்படி சனீஸ்வரன் விருச்சிகத்தில் இருக்கும்போது பிறந்தவர்கள் சிறைவாசம், பிறரால் மரணம் போன்ற வேதனையை அடைய நேரிடும். அதன்படி விருச்சிகத்தில் சனீஸ்வரன் இருக்கும்போது பிறந்த கிருஷ்ண பரமாத்மா சிறை வாசத்தில் பிறந்து வேடன் கையால் மரணம் எய்தினார். மேலும் விருச்சிகத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானின் நேர்ப் பார்வை ரிஷப ராசியில் இருக்கும் மாத்ருகாரகரான சந்திர பகவானின் மீதும், சனீஸ்வர பகவானின் பத்தாமிட விசேஷ பார்வை சிம்ம ராசியில் இருந்த பித்ருகாரகரான சூரிய பகவானின் மீதும் விழுந்ததால் கிருஷ்ண பகவானின் தாயான வாசுகியும் தந்தை வசுதேவருமே சிறை வாசத்தை மேற்கொள்ளும்படி ஆயிற்று. இதனால் பெரிதும் மன வேதனை அடைந்த சனீஸ்வர பகவான் தன் குலகுருவான சனிபரணி சித்தரை சரணடைந்து ஒரு பூரண அவதாரத்திற்கும் அவருடைய தாய் தந்தையருக்குமே தான் வேதனை அளிக்க வேண்டிய நிலை வந்தது குறித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார். சனிபரணி சித்தர், “சனீஸ்வரரே, இறைவன் உனக்கு இட்ட பொறுப்பை நீ சரியாக நிறைவேற்றினாய். அதனால் விளையும் நல்வினை தீவினை எதற்கும் நீ பொறுப்பாக மாட்டாய். இருந்தாலும் திருஅண்ணாலையை கிரிவலம் வா. அதனால் மேலும் சில உத்தம விளக்கங்களை இறை அருளால் பெறுவாய். அருணையை வலம் வரும்போது நாய் வடிவில் அதாவது ஊனமடைந்த நாய் வடிவில் கிரிவலத்தை மேற்கொள்வாயாக. பிறர் இடும் கடலை உருண்டையைத் தவிர நீ வேறு எதையும் உண்ணக் கூடாது என்ற உனக்கு பிரத்யேகமாக அளிக்கப்பட்ட நியதியை கைக்கொள்,” என்று கூறி சனீஸ்வர பகவானுக்கு ஆசி வழங்கினார் சனிபரணி சித்தர் பிரான்.
சித்த பிரானின் அன்பு வார்த்தைகளால் ஓரளவு மன அமைதி பெற்ற சனீஸ்வர பகவான் ஊனமடைந்த நாய் உருவம் எடுத்து திருஅண்ணாமலையை கிரிவலம் வரத் தொடங்கினார். ஆனால், அவருக்கு உணவு மட்டும் சரியாக கிடைக்கவில்லை. கிரிவலம் வரும் ஒருவரோ இருவரோதான் கடலை உருண்டை அளிப்பது உண்டு. அதுவும் பல நாட்களுக்கு கிடைக்காமல் போய் விடும். இருந்தாலும் தன் குருநாதரின் வார்த்தைகளைச் சிரமேற்கொண்டு தொடர்ந்து காய்ந்த வயிற்றுடன், ஊனமுற்ற கால்களுடன் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து கொண்டிருந்தார் சனீஸ்வர பகவான். நாட்கள் செல்லச் செல்ல சனீஸ்வர பகவானுக்கு கிடைக்கும் கடலை உருண்டைகள் குறைந்து போய் இறுதியில் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஒரு சிறு கடலை கூட கிடைக்காமல் போனதால் பசியால் வாடி இளைத்து ஆங்காங்கே தேங்கிய மழை நீரை மட்டும் அருந்தி தன்னுடைய கிரிவலத்தை தொடர்ந்தார். தொடர்ந்து கிரிவலம் வந்த சனீஸ்வர பகவான் குபர லிங்கம் தாண்டி சித்தர்கள் பரிபாஷையில் எட்டெடி எண்சாண் என்ற தூரத்தைக் கடந்ததும் பசியால் மயங்கி விழுந்து விட்டார். அந்த தரிசனப் பகுதிக்கு காக்கை வருடி பள்ளம் என்று பெயர். எத்தகைய சனி தோஷங்களையும், நாக தோஷங்களையும், திருமண தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடிய அற்புத அருணை தரிசனம் இது. அருணாசல ஈசன் அங்கு வெண்தாடி வேந்தனாய் சனீஸ்வரருக்கு காட்சி அளித்து, ”சனீஸ்வரா, உன்னுடைய தவம் பூர்த்தி அடைந்து விட்டது. ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டு அருள்புரியும் ஸ்ரீரெங்கநாதப் பெருமாளை, எந்த ராசியில் நீ எழுந்தருளியதால் பெருமாள் கிருஷ்ணாவதரத்தில் சிறை வாச ஜனனம் கொண்டாரோ அந்த ராசியில் நீ எழுந்தருளும்போது அது குரு நவாம்சமாக அமையும் நாளில் நீ அம்மாமண்டபத்தில் துலா ஸ்நானம் நிறைவேற்றி தரிசனம் செய்தால் உனக்கு அமைதி கிட்டும்,“ என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
பேருவகையுடன் ஸ்ரீரங்கம் திருத்தலத்தை அடைந்தார் சனீஸ்வரர். துலா மாதத்தில் விருச்சிக ராசியில் குரு நவாம்சத்தில் சனீஸ்வர சஞ்சாரம் அமையும் நாள் வரை தினமும் அம்மாமண்டபத்தில் நீராடி ஸ்ரீரங்கநாதரை வழிபட்டு வந்தார். திருஅருணாசல ஈசன் குறித்த அந்த தெய்வீக முகூர்த்த அமிர்த நேரத்தில் பொங்கி வரும் காவிரி நதியில் நீராடிய சனீஸ்வர பகவானுக்கு ஸ்ரீரெங்கநாதப் பெருமான் ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேதராய்க் காட்சி அளித்து, “சனீஸ்வரா, நீ கிருஷ்ண பகவானுக்கும் அவருடைய பெற்றோர்களுக்கும் துன்பம் விளைவித்து விட்டதாக எண்ணுகிறாய். உண்மையில் உன்னுடைய தியாகத்தால்தான் கிருஷ்ண அவதாரத்திற்கே கீர்த்தி ஏற்பட்டது,” என்று அருளினார். சனீஸ்வர பகவானுக்கு பெருமாளின் வார்த்தைகள் தெவிட்டாத தேனாகப் பாய்ந்தன. சனி பகவான், “சுவாமி, நீங்கள் சொல்வது ஒன்றும் விளங்கவில்லையே. சிறைவாசத்தில் எவ்வளவோ துன்பம் கொடுத்த சனி தசை பெருமாளுக்கு கீர்த்தியை அளித்தது என்றால் அதை அடியேனால் சிறிதும் நம்ப முடியவில்லை. தாங்கள் தயவு செய்து மேலும் விளக்க வேண்டும்,” என்று பிரார்த்தித்திடவே பெருமாள் தொடர்ந்தார், “ஒரு சாதாரண குழந்தை பூலோகத்தில் பிறக்க வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ ஜன்மங்கள் அதன் பெற்றோர்கள் தவம் இயற்ற வேண்டும் என்ற இறை நியதி உள்ளது. அப்படி இருக்கும்போது ஒரு பூரண அவதாரமே இப்பூவுலகில் தோன்ற வேண்டும் என்றால் அதன் பெற்றோர்கள் எந்த அளவிற்கு உத்தம தவ சீலர்களாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எத்தகைய தவ சீலம் பூண்டவர்களாக இருந்தாலும் அமைதியாக ஓரிடத்தில் தவம் இயற்ற வேண்டும் என்றால் அத்தகைய ஒரு சிறப்பான இடத்தை எப்படி தேர்ந்தெடுக்க முடியும். அதற்கு ஏற்றதே இந்த பாதாள காராகிரகம். ஒரே அம்பில் இரண்டு மாங்காய் என்பது போல் இதில் ஒரே சமயத்தில் இரண்டு விதமான அனுகிரகங்கள் கிட்டி விடுகின்றன. முதலாவதாக, பூமிக்கு அடியில் பாதாளத்தில் நிறைவேற்றும் தவம் அதிக சக்தி உடையது. (திருஅண்ணாமலை பாதாள லிங்கத்தில் தவமியற்றி அற்புத சித்திகள் பெற்ற ரமண மகரிஷியைப் பற்றி நாம் நன்கறிவோம்) இரண்டாவதாக, என்னுடைய வாமன அவதார வைபவத்தில் மகாபலியை பாதாள லோகத்தில் அழுத்தியதால் அதனால் எத்தனையோ அவதார நோக்கங்கள் நிறைவேறினாலும் தானம் அளித்தவனை பூமிக்கு அடியில் பந்தப்படுத்தியதால் என்னுடைய ஒரு அவதாரம் பாதாளத்தில் தோற்றம் கொள்ள வேண்டிய விதி ஏற்பட்டது. இதற்கு சனீஸ்வரன் என்ற விதியின் வேந்தனாக நீ நிறைவேற்றிய பாரபட்சமற்ற நவகிரக சேவை உதவிற்று அல்லவா? கிருஷ்ணன் என்றால் கருமை நிறம் கொண்டவன் என்று பொருள். நீ எனது அவதாரத்திற்கு நிறைவேற்றிய சேவையை பாராட்டி கிருஷ்ண அவதாரத்தையே உனக்கு ப்ரீதியான கருமை நிறத்தில் ஏற்றுக் கொண்டுள்ளேன். அப்படியானால் உன்னுடைய சேவை எவ்வளவு மேன்மை பெற்றது பார்த்தாயா ?”
பெருமாளின் வார்த்தைகளால் உள்ளம் பூரித்தார் சனீஸ்வர பகவான். பேரானந்தத்தில் திளைத்த அவருடைய வாயிலிருந்து வார்த்தைகள் வர மறுத்தன. பெருமாள் தொடர்ந்தார், “எனவே இன்று முதல் யாரெல்லாம் துலா மாதத்தில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நீராடி என்னை வழிபடுகிறார்களோ அவர்கள் எல்லாம் விருச்சிக ராசியில் மட்டும் அன்றி எந்த ராசியில் நீ இருக்கும்போது பிறந்தாலும் அவர்களுடைய பந்தனம் தெய்வீக பந்தனமாக, இறை வாசமாக அமையும் என்ற வரத்தை மனம் உவந்து அளிக்கிறேன். சற்குரு ஒருவரே அவதாரங்களுக்கே வழிகாட்டக் கூடியவர் என்பது சத்திய வாக்காக இருப்பதால் நீ குரு நவாம்ச சஞ்சாரம் கொண்டபோது நிறைவேற்றிய பூஜை உனக்கு பூரண குருவருளை பெற்றுத் தருவதாக அமைந்தது,” என்ற தெய்வீக மறை வாக்கியங்களை அளித்தார் ஸ்ரீரெங்கநாதப் பெருமான்.
வரும் 17.10.2017 அன்று சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியில் எழுந்தருளி இருக்க அவரின் நவாம்ச சஞ்சாரம் குருவிற்கு உரித்தான மீன ராசியில் துலா ராசியின் அதிபதியான சுக்ர பகவானுடன் உச்ச பலத்துடன் அமைகிறது. இத்தகைய அற்புதமான சுப முகூர்த்த நேரத்தில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நீராடி ஸ்ரீரெங்க நாதரை தரிசனம் செய்வதாலும் லட்டு, முறுக்கு தானங்களை அளிப்பதாலும் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
உள்ளங்கை லட்டும் ஒரு சாண் முறுக்கும்
வல்வினை போக்கும் வராக மருந்தாகுமே
உள்ளம் கை நெல்லிக் கனியென
நன்று நீ உணர நலமுடன் உனைக் காக்குமே
என்று அகத்திய கிரந்தம் ஸ்ரீரங்கத்தில் அளிக்கப்படும் உள்ளங்கையில் கொள்ளாத பெரிய லட்டு அவரவர் கையால் ஒரு சாண் அளவுள்ள முறுக்கு தானத்தின் மகிமை பற்றி விளக்குகிறது. இந்த தானம் வெறும் வறுமையைத் தீர்ப்பது மட்டுமல்லாமல் மக்களை மிக உயர்ந்த ஞான நிலைக்கே இட்டுச் செல்லக் கூடியதாகும். நாம் காணும் இந்த உலகம் பஞ்ச பூதங்களாலான மனதால் உருவாக்கப்பட்ட மாயை என்பதே உண்மையாகும். இதுவே உள்ளம் கை. நெல்லிக் கனி என்பது மிக உயர்ந்த ஞான நிலையைக் குறிக்கும். இவ்வாறு கண்ணெதிரில் காணும் இந்த உலகை மனதால் ஏற்பட்ட மாயை என்று உணர்ந்ததால்தான் ஸ்ரீகாஞ்சி பரமாச்சார்யாள் கனிந்த கனி என சித்தர்களால் பாராட்டப்பட்டார்கள்.



திருக்கானூர் திருத்தலம், திருக்காட்டுப்பள்ளி அருகே
ருத்ராக்னி, ஸ்கந்தாக்னி, பாஸ்கராக்னி, சோமாக்னி என்ற அக்னிகளில் பல வகை உண்டு. ஒவ்வொரு அக்னியும் ஒவ்வொரு விதமான அனுகிரகத்தை அளிக்கக் கூடியது. இதில் மங்களாக்னி என்பது செவ்வாய் பகவானால் அளிக்கப்படுவதாகும். செவ்வாய் பகவான் இந்த மங்களாக்னி சக்தியை பெற்ற இடமே திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள திருக்கானூர் திருத்தலமாகும். இறைவன் ஸ்ரீசெம்மேனி நாதர், ஸ்ரீகரும்பேஸ்வரர் என்ற திருநாமங்களுடனும் இறைவி ஸ்ரீசிவலோகநாயகி, ஸ்ரீசௌந்தர நாயகி என்ற திருநாமங்களுடனும் அருள்புரிகின்றார்கள்.
செவ்வாய் வெறும் வாய் என்பது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள வழக்கு. தவறான இந்த சொல் வழக்கால் மனம் வருந்திய செவ்வாய் பகவான் ஸ்ரீஅகத்திய முனியைச் சரணடைந்து மக்களுக்கு தானும் நல்வர சக்திகளை அளித்து புகழ்பெற விழைந்தபோது ஸ்ரீஅகத்திய முனி, “செவ்வாய் பகவானே, உன்னுடைய மங்கள சக்திகளின் பெருமையை உணராமல் மக்கள் இந்த வழக்கைக் கொண்டுள்ளார்கள். உண்மையில் உன்னுடைய சக்தி உனக்கே தெரியாது என்பதே உண்மை. இந்த பூலோகத்தில் எவர் மனிதனாக பிறப்பு எடுத்தாலும் அவர்கள் வினையை களையும் வல்லமை உன்னுடைய அக்னி சக்திக்கு மட்டுமே உண்டு. இதை உலகம் உணர வேண்டுமானால் அடியேன் கூறும் எளிய தவத்தை இயற்றினால் போதும்.
சூலத்தில் ஏழடங்க
குமரன் கோளத்தில் நீயடங்க
சக்தி சாளத்தில் நின்னுரு அடங்க
ஞாலத்தில் நின் புகழ் விளங்குமே
என்று செவ்வாய் பகவான் இயற்ற வேண்டிய தவமுறையைப் பற்றி விளக்கினார். செவ்வாய் பகவானுக்கு சித்தர்பிரானின் பரிபாஷை வார்த்தைகள் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அவர் முனிபுங்கவரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு திருக்குற்றாலம் அடைந்து குற்றால நீர் வீர்ழ்ச்சியில் பத்மாசனம் இட்டு அமர்ந்து விட்டார். எந்த அக்னியும் குளிரும் இடம் அல்லவா குளு குளு குற்றால நாதனின் அமுத தாரை. குற்றால நீர் வீழ்ச்சியின் மகிமையால் அகத்திய முனியின் அமுத வாக்கியங்களின் பொருளை உணர்ந்தார் செவ்வாய் பகவான்.
மூன்று ராசிகளில் ஏழு கிரகங்களும் அடங்கும் சூல யோக நாளில், முருகனுக்கு உரிய உத்திர நட்சத்திரத்தில் செவ்வாய் எழுந்தருள அது செவ்வாய்க்கு உரிய உச்ச நவாம்சமாகவும் அமைய அந்நாளில் சாள கிராம தோற்றம் கொண்ட அம்பாளின் பிரார்த்தனையில் செவ்வாய் முழுவதுமாக ஈடுபட, அம்பாள் அருளும் தலம் செம்மணல் குன்றாகவும் அமைய, அந்த முகூர்த்தத்தில் இயற்றும் பார்கவ துலா ஸ்நானம் மங்கள அக்னியை செவ்வாய்க்கு அளிக்கும் என்பதே செவ்வாய் பகவான் உணர்ந்த தவ முறையாகும். சாளம் என்றால் சாளகிராமம், மணல் என்று பொருள்.

  
திருக்கானூர் திருத்தல இறைமூர்த்திகள்

சூரியன் துலா ராசியில் இருக்கும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவதே துலா ஸ்நானம் எனப்படும். இந்த துலா நீராடல் குருவும் சூரியனும் சேர்ந்து இருக்கும்போது அமைந்தால் அது பார்கவ துலா நீராடல் என்று அழைக்கப்படும். பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறையே இத்தகைய பார்கவ துலா நீராடல் அமையும். சூரியன், குரு, செவ்வாய் மூன்றுமே அக்னி கிரகங்களாகும். உத்திர நட்சத்திரமோ செவ்வாய் பகவானின் அதிபதியான முருகப் பெருமானுக்கு உகந்த அக்னி நட்சத்திரம். இத்தகைய அற்புத கிரகங்களின் சங்கம முகூர்த்த நேரத்தில் பார்கவ துலா நீராடலை முறையாக இயற்றி சாளக் கிராம உருவில் எழுந்தருளிய திருக்கானூர் அம்பிகையை வழிபட்டார் செவ்வாய் பகவான். இறைவனுக்கு ஸ்ரீசெம்மேனி நாதர் என்ற திருநாமமும் உண்டு. செவ்வாய் பகவான் அம்பிகையை வழிபட்டபோது இறைவன் தன்னுடைய செம்மேனி சக்தியை, மங்கள அக்னி சக்தியை செவ்வாய் பகவானுக்கு இறைப் பிரசாதமாக அளித்தார். இத்திருத்தலம் செம்மணல் என்ற அற்புத அக்னி சக்திகளை உள்ளடக்கிய மணற் குன்றின் மேல் அமைந்துள்ளது. மக்கள் வழக்கில் இத்திருத்தலம் மணல்மேடு என்றே அழைக்கப்படுகிறது. இதன் அக்னி தன்மையை விவரித்தால் அது வியாபாரப் பொருளாக ஆகி விடும் என்பதால் சித்தர்களும் மகான்களும் இதன் மகிமையை அவ்வளவாக வெளிப்படுத்துவது கிடையாது. எத்தகைய அக்னி குற்றங்களையும், கர்ம வினைகளையும், செவ்வாய் தோஷங்களையும் தீர்க்கக் கூடியதே இத்தல வழிபாடு என்பதை மட்டும் சித்தர்கள் உலகிற்கு உணர்த்த விரும்புகின்றனர். மிருகசீர்ஷ நட்சத்திரத்திற்கு உகந்த மரம் கருங்காலி. மிருகசீர்ஷ நட்சத்திரம் செவ்வாய் பகவானின் பாதமாக அமைவதால் இத்தல ஈசனுக்கு கருங்காலி மர அக்னியில் சமைத்த உணவை நைவேத்தியம் அளிக்கும் பாரம்பரியம் உள்ளது.
எத்தனையோ யுகங்களுக்கு முன் செவ்வாய் பகவான் பெற்ற அந்த புனிதமான பார்கவ துலா ஸ்நான நன்னாள் வரும் 17.10.2017 அன்று அமைவதால் பக்தர்கள் இந்த சந்தர்ப்பத்தை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார்கள். திருக்கானூர் திருத்தல நாதன் ஸ்ரீகரும்பேஸ்வரர் என்ற நாமத்துடன் திகழ்வதால் கரும்புச் சாறு அபிஷேகமும் கரும்புச் சாறு அல்லது வெல்லம் கலந்த கருங்காலி அக்னியில் சமைத்த அன்ன தானம் அளப்பரிய பலன்களைத் தரவல்லது. அதிஉஷ்ணத்தால் ஏற்படும் எத்தகைய நோய்களையும் தீர்க்கவல்லது.
வாய் என்றால் சிறப்பு என்று பொருள். செவ்வாய் என்றால் செம்மையான, அதீதமான சிறப்பாகும். எனவே ஒருவர் இவ்வுலக வாழ்விலோ மறுஉலக வாழ்விலோ சிறப்பைப் பெற வேண்டுமானால் அவர் நிச்சயமாக செவ்வாய் பகவானின் அனுகிரகத்தை பூரணமாகப் பெற்றுத்தான் தீர வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எந்த மகானுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் நிச்சயமாக செவ்வாய் பகவானின் அனுகிரகம் பூரணமாக இருக்கும். உதாரணமாக, ஸ்ரீராமர், சேஷாத்ரி சுவாமிகளின் ஜாதகங்களில் செவ்வாய் உச்சம். விவேகானந்தர், குருமங்கள கந்தவர்வாவின் ஜாதகங்களில் ஆட்சி பலம் பெற்ற செவ்வாய்.
இவ்வாறு பார்கவ துலா ஸ்நான நன்னாளுடன் மகரத்தில் உச்சம் பெறும் செவ்வாய் நாளாகவும் வரும் 17.10.2017 நாள் அமைவதால் காவிரிக் கரையில் உள்ள எந்த பெருமாள், சிவத்தலங்களிலும் தீர்த்த நீராடலை மேற்கொண்டு அக்னியில் சமைத்த உணவுகளை தானமாக அளித்து அற்புத பலன்களை, சிறப்புகளைப் பெறலாம்.
திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும், திருச்சி லால்குடி செங்கரை மார்கமாக வந்து கொள்ளிடம் பாலத்தை தாண்டி இடது பக்கம் திரும்பி சுமார் மூன்று கி.மீ. தொலைவிலும் உள்ளது திருக்கானூர் திருத்தலம்.



!! எங்கும் எப்போதும் விரிந்து பரந்து நிற்கும் குருவின் கருணை !!
இந்த வீடியோவை நீங்கள் 12 விநாடிகள் பார்த்த பின்னர் உங்கள் கண்களை மூடினால் உங்கள் சூக்கும விழித்திரையில் நீங்கள் தரிசனம் செய்வதே மங்களாக்னி ஜோதி பிம்பமாகும். முறையாக வளர்த்த ஹோமாக்னியில் “சிவயசிவ சிவசிவ நமசிவாய சிவாயநம“ என்று ஓதி ஆஹூதி அளித்து அந்த அக்னியை 12 விநாடிகள் பார்த்து விட்டு உங்கள் கண்களை மூடிட அப்போது சூக்கும விழித் திரையில் கிட்டும் தரிசனமும் மங்களாக்னி ஜோதி பிம்பமே ஆகும். இதுவே சோதி கூறும் சோதிடமாகும். இது குருபகவான் சோதி என்னும் சுவாதி நட்சத்திரத்தில் எழுந்தருள்வதால் விளையும் அனுகிரக சக்தியாகும். இத்தகைய சோதி அனுகிரக சக்தியையே துலா ஸ்நானம் நிறைவேற்றும் அடியார்களுக்கு எல்லாம் 17.10.2017 அன்று குரு பகவான் சுவாதி நட்சத்திரத்தில் எழுந்தருளி குரு சோதி பிரசாதமாக அளிக்கிறார் என்பது சித்தர்கள் கூறும் இரகசியமாகும்.
இதன் தொடர்பான ஒரு சுவையான நிகழ்ச்சியை இங்கு அளிக்கிறோம். சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் திருக்கயிலாய பொதிய முனிப்பரம்பரையைச் சார்ந்த குருமார்களின் மேன்மையைப் பற்றி விளக்கும்போது, “ஒரு அடியார் அடியேனை முதன் முதலில் சந்திக்கும்போதே அவர் எவ்வளவு நாள் அடியேனுடைய சத்சங்கத்தில் இருந்து விட்டு என்ன தேதியில் என்ன நேரத்தில் அடியேனை விட்டு விலகிப் போய் விடுவார் என்று தெரிந்து விடும். ஆனால், நாங்கள் அந்த அடியாரின் முதல் சந்திப்பிலேயே அடியேன் இனி அவரை சந்திக்க மாட்டேன் என்று பாவித்து அவர் இனி எடுக்கும் அனைத்துப் பிறவிகளுக்கும் தேவையான அனைத்து அனுகிரகங்களையும் வழிகாட்டுதல்களையும் அளித்து விடுவோம். கடவுளருளால் அவர் மீண்டும் எங்களை சந்திக்கும்போது நாங்கள் முதல் சந்திப்பிலேயே அவருக்குத் தேவையான அனைத்தையும் அளித்து விட்டதால் இரண்டாம் சந்திப்பில் நாங்கள் எதையும் புதிதாக அவருக்கு அளிப்பதில்லை. மாறாக முதல் சந்திப்பில் அவருக்கு அளித்த விஷயங்களை மேலும் விவரித்து பொழிப்புரை, பதவுரை என்ற கூடுதல் விளக்கங்களைத்தான் அளிப்போம். இது அந்த அடியார் எங்கள் சத்சங்கத்தில் இருக்கும் கடைசி விநாடி வரை நடக்கும் அருணாசல கூத்து ஆகும்,” என்று குருபாரம்பரிய தத்துவத்தை அழகாக விவரித்தார்கள்.
அதுபோல செவ்வாய் பகவான் ஸ்ரீஅகத்திய பெருமானை தரிசனம் செய்த அந்த முதல் சந்திப்பிலேயே செவ்வாய் பகவான் விரும்பிய மங்களாக்னி சக்திகளை அகத்திய பிரான் அவருக்கு அளித்து விட்டார். மேற்கூறிய பரிபாஷைப் பாடலை கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை விளங்கும். “சூலத்தில் ...” என்று தொடங்கும் பாடலில் ல, ள, ழ என்ற 11 அட்சரங்கள் அடங்கியுள்ளன. வேறு எந்த மொழிக்கும் இல்லாமல் இத்தகைய மூன்று அண்ண அட்சரங்கள் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என்பது நீங்கள் அறிந்ததே. ல, ள, ழ என்று சொல்லும்போது நாக்கு அண்ணத்தைத் தொடுவதால் இவை அண்ண அட்சரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அண்ண அட்சரங்கள் உயர்ந்த எண்ணத்தைக் கொடுக்கும், பார்வை தீட்சண்யம் பெறும். உயர்ந்த எண்ணங்களே பார்வைக்கு தீட்சண்யத்தைக் கொடுக்கும். அதனால்தான் உயர்ந்த எண்ணங்களை உடைய மகான்களின் நேத்ர தீட்சண்யம் மிகவும் சக்தி உடையதாக இருக்கிறது. உத்தம மகான்கள் ஒரே ஒருமுறை உற்றுப் பார்த்தாலே போதும் அவர்களின் பார்வையில் உள்ள தீட்சண்ய சக்தியால் ஒரு மனிதன் எத்தனையோ ஆயிரம் பிறவிகளில் செய்த கர்மங்கள் ஒரு நொடியில் பஸ்மமாகி விடும். இதையே குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்கிறோம். சூலம் என்பது குரு சக்தியைக் குறிக்கும் மூன்று எழுத்தாக அமைய ருத்ராக்னி சக்திகள் பதினொன்றையும் பதினோரு அண்ண அட்சரங்களில் பதித்து ஸ்ரீஅகத்திய பெருமான் செவ்வாய் பகவானுக்கு ருத்ராக்னி பிரசாதமாக அளித்தார். ருத்ராக்னியின் ஒரு துளி அம்சமே மங்களாக்னி ஆகும். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச் செய்த,
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல் தாழும் மொழிகளே
என்ற தேவார வரிகளும் மங்களாக்னி சக்தி பொதிந்தவையாக இருப்பதால் இந்த நவஅட்சர, ஏகாதச அட்சர அக்னி துதிகளை ஓதி வந்தால் நேத்ர சக்திகள் பெருகி உயர்ந்த எண்ணங்களும் உருவெடுக்கும்.
இவ்வாறு முதல் சந்திப்பில் குருவின் அனுகிரகத்தை உணர்ந்த நாம் இறுதி சந்திப்பிலும் அவரின் மேன்மையை உணர வேண்டும் அல்லவா ? அப்போதுதானே சுவை முழுமை பெறும். சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களிடம் ஒரு அடியார் அற்புதமாக சேவை செய்து வந்தார். துடிப்புள்ள இளைஞர். அவர் கூட்டி வந்த இளம் அடியார்களோ பம்பரமாய்ச் சுழன்று காரியங்களை கச்சிதமாக நிறைவேற்றி அனைவரிடமும் நற்பெயரை சம்பாதித்தனர். ஓரிரு வருடங்களிலேயே அவர்களின் நற்காரியங்கள் பன்மடங்காய்ப் பெருக அவர்களுக்கு வழிகாட்டிய அடியாரும் பன்மடங்கு புண்ணிய சக்தியைப் பெற அது அகம்பாவமாக உருவெடுக்கவே அந்த அகம்பாவத்திற்கு பலியான அந்த அடியார் ஸ்ரீவாத்யாரை விட்டு விலகி விடத் தயாரானார். அவர் தான் சத்சங்கத்தை விட்டு வெளியேறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் தன்னுடைய பேச்சைக் கேட்க தயாராக இருந்த பலரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு சத்சங்கத்தை விட்டு விலகி விட்டார். திருக்கார்த்திகை தீப அன்னதான வேலைகள் உச்ச கட்டத்தில் நடந்து கொண்டிருந்த சமயம். ஸ்ரீவாத்யார் மனம் என்ன வேதனையை அனுபவித்திருக்கும் என்று சற்றே எண்ணிப் பாருங்கள். ஆனால், அவரோ எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் பொறுமையின் சிகரமாக, கருணையின் இமயமாக உயர்ந்து நின்றார். அந்த அடியார் உத்தரவு பெறுவதற்காக ஸ்ரீவாத்யாரிடம் வந்தார். அந்த இறுதி நொடிகளில் ஸ்ரீவாத்யார் அவரிடம் கூறிய வார்த்தைகள், “ராஜா, ஒன்னோட நல்ல மனசுக்கு நீ எங்கிருந்தாலும் நல்லா இருப்பாய், போய் வா,” தாயினும் சாலப் பரிந்து ஸ்ரீவாத்யார் கூறிய வார்த்தைகளை ஒரே ஒரு நொடி அந்த அடியார் தன் இதயத்தில் நிறுத்தி பார்த்திருந்தால் போதும். தான் எத்தனையோ பாதகச் செயல்களை செய்திருந்தாலும், அவை அனைத்தையும் மன்னித்து ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் இந்த குரு அன்பு எங்காவது கிடைக்குமா, என்று ஒரு துளியேனும் அவர் நினைக்கவில்லை. விதி வலியது என்பதை நிரூபனம் செய்யும் வகையில் அவர் சத்சங்கத்தை விட்டுச் சென்றே விட்டார்.
மகான்களின் விரல் அசைந்தால் அதில் ஆயிரம் என்ன கோடி காரணங்கள் இருக்கும் என்பார்கள் பெரியோர்கள். அதுபோல நம் சற்குரு அவர்கள் கூறிய கடைசி இரண்டு வார்த்தைகள், “போய் வா”. இது குரு தத்துவத்தைக் குறிக்கும் மூன்று அட்சரங்கள் உடையது. போய் என்ற வார்த்தை இரண்டு அட்சரங்களுடன் மனதிற்கு அதிபதியான சந்திரனைக் குறிக்கிறது. ஸ்ரீவாத்யார் இங்கு என்ன கூற வருகிறார்? சந்திர பகவானின் ஆதிக்கத்தால் நீ அகம்பாவம் பெருகி சத்சங்கத்தை விட்டு விலகுகிறாய். ஆனால், இறைவன் என்னும் சத்தியம் ஒன்றே (அது ‘வா’ என்ற ஓர் எழுத்து). எனவே இறுதியில் அலைந்து திரிந்து இந்த சத்தியத்தை நாடித்தான் வந்தாக வேண்டும். அதுவரையில் சற்குரு உனக்காக இறைவனை வேண்டி காத்திருப்பார்,” என்பதே சற்குருவின் பூரண வார்த்தைகளில் பொதிந்துள்ள தெய்வீகம்.
சற்குருவின் அன்பின் ஆழத்தை விளக்கும் மற்றோர் அனுபவம். ஸ்ரீவாத்யார் அவர்கள் இறைவனை நம்பி வந்த பல அடியார்களின் கர்ம வினையை தாமே ஏற்று அனுபவித்ததால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓர் அடியெடுத்து வைக்கவும் முடியாத துன்பமான நிலையில் சில நாட்களைக் கழிக்க வேண்டி வந்தது. அவர் உடல் முழுவதும் இரணங்கள். ஆடையைக் கூட அணிய முடியாத வேதனையான சூழ்நிலை. அந்த துன்பமயமான சூழலிலும் தன்னை காண வந்த அடியார்களின் நலனை விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளையும் வழிகாட்டுதலையும் அளித்து வந்தார். தரையில் காலெடுத்து வைக்கவும் முடியாத நிலையில் ஒரு அடியாரை அருகே அழைத்து அவர் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க முயன்றார். அப்போது அந்த அடியார் ஸ்ரீவாத்யார் கையை பிடிக்க முயன்றபோது ஸ்ரீவாத்யார் அவர் கையை உதறி விட்டு தாம் அந்த அடியாரின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார். அதற்கு ஸ்ரீவாத்யார் சொன்ன காரணம், “நீ என் கையை பிடிக்க நான் அந்த சப்போர்ட்டில் நடந்து வந்தால் நீ எப்போது வேண்டுமானாலும் என் கையை விட்டு விடும் நிலை ஏற்படலாம். அப்போது அடியேன் நிலை என்னாவது ? ஆனால், அடியேன் உன் கையை இவ்வாறு கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டதால் அடியேனுக்கு பயமில்லை. அடியேன் நினைத்தால்தான் உன் கையை விடுவேன். எந்த வித பயமும் இல்லாமல் அடியேன் நடக்கலாம்,”.
மேலோட்டமாகப் பார்ப்பதற்கு பிறர் தயவில் வாழும் ஒரு மனிதன் எந்த அளவிற்கு ஜாக்கிரதையாக வாழ வேண்டும் என்பதை குறிக்கும் சற்குருவின் பாடமாக இது தோன்றும். ஆழ்ந்து சிந்தித்தால் சற்குரு தன் அடியார்கள் மேல் உள்ள அன்பின் ஆழம் நம்மை நெகிழ வைக்கும். சற்குரு இந்த நிகழ்ச்சி மூலம் உணர்த்தும் பாடம், சீடன் குருவைப் பிடித்தால் அவன் எப்போது வேண்டுமானாலும் சத்சங்கத்தை விட்டு விடுவான், ஆனால் சற்குரு சீடனை உறுதியாகப் பிடித்துக் கொண்டால் சீடன் எக்காலத்தும் இறை நெறியிலிருந்து வழுவி சத்சங்கத்திலிருந்து விலக மாட்டான்.
இதுவன்றோ குருவின் மாண்பு !!



மனவெளிப் பயணத்திற்கு உகந்த கவின்மிகு தலம்
சுந்தர மூர்த்தி நாயனார் திருக்கானூர் ஈசனை, “கானூர் கட்டியே,” என்று புகழ்ந்து பாடுகின்றார். கரும்புச் சாறு கட்டியானால் அது கல்கண்டாகத்தானே தித்திக்கும். கானூர் ஈசன் இறையடியார்களுக்கு அத்தகைய வெல்லப் பாகாய் இனிக்கிறான் என்று பொருள் கொள்ளலாம். வள்ளலார் சுவாமிகளோ திருக்கானூர் ஈசனை, “தங்கக் கட்டி,” என்று வர்ணிக்கிறார். தங்கம் உயர்வானதே, ஆனால் அது சுவைக்காதே. அப்படியானால் கானூர் ஈசனைக் கட்டி என்று மகான்கள் வர்ணிப்பதில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கிறது அல்லவா ? ஆம், இதுவே இந்த பிரபஞ்சத்தில் வேறு எங்கும் பெற இயலாத குமிழ்கட்டி இரகசியம் என்னும் அனுகிரக சக்தியாகும். திருஞானசம்பந்தப் பெருமான் இதை, “குமிழின் மேனி,” என்று வர்ணிக்கிறார். குமிழ் என்பது நொடியில் மறையும் மாயை உடல் என்பது மேலோட்டமான பொருள். இதை ஆழ்ந்து சிந்தித்தால் இறைவன் இத்தலத்தில் அருளும் குமிழ்கட்டி இரகசியம் புலப்படும். இதை சற்றே விளக்குவோம். லேசர் ஒளியைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒளி நேர்கோட்டில் சென்றாலும் அதன் சக்தி பரிமாணம் மாறிக் கொண்டே இருக்கும். இந்த மாற்றத்தை ஒரு அலை வடிவில் கற்பனை செய்து கொண்டால் அலைகளை நெருக்கி நெருக்கி ஏற்படுத்துவதே லேசர் ஒளியின் எளிமையான விளக்கம். அதுபோல ஒளியின் இணை பிரியா சக்தியான உஷ்ண சக்தி அலைகளை இணைத்து பெருக்குவதே குமிழ்கட்டி இரகசியமாகும். சாளக்கிராமம் எத்தகைய உஷ்ண சக்திகளையும் தன்னுள் உள்ளடக்கும் சக்தி பெற்றது. இத்தல ஈசனோ ஸ்ரீசெம்மேனி நாதர். எனவே இந்த இரு இறை மூர்த்திகளின் சக்திகளே ஒருங்கிணைந்து இந்த குமிழ்கட்டி இரகசியத்தை உருவாக்குகின்றன. இந்த குமிழ்கட்டி இரகசியத்தால் மக்களுக்கு என்ன பயன் என்பதுதானே நம்முன் நிற்கும் கேள்வி. மனவெளிப் பயணம் என்னும் ஆஸ்ட்ரல் உலாவை ஒருவர் மேற்கொள்ளும்போது செவ்வாய் கிரகம் போன்ற அதிஉஷ்ணம் உள்ள கிரகங்களையோ கோள்களையோ இன்னும் நாம் அறியாத எத்தனையோ அக்னிக் கோளங்களை வான வெளியில் கடந்து செல்ல நேரிடும். அவ்வாறு செல்லும்போது இந்த குமிழ்கட்டி சக்திகளைப் பெற்றிருந்தால் எதிர்பாராத அதிஉஷ்ணத்தின் தாக்குதலிலிருந்து அவர் காக்கப்படுவார். மெர்சிடஸ் போன்ற விலை உயர்ந்த கார்கள் விபத்துக்குள்ளாகும்போது அதில் உள்ள பலூன்கள் உடனே விரிவடைந்து அதில் பயணம் செய்பவர்களைச் சூழ்ந்து அவர்களைக் காப்பாற்றி விடுகிறது அல்லவா ? அதுபோல இந்த குமிழ்கட்டி இரகசியத்தை உணர்ந்தவர்கள் எவ்வளவு உஷ்ணம் உள்ள கோள்களையும் எவ்வித ஆபத்தும் இல்லாமல் எளிதில் கடந்து விடலாம். மேலும், சற்குருவை ஒருவர் பெறும்போது அவர் தன்னை நாடி வந்த சீடர் எதிர்வரும் பல பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய வேதனைகளை நடக்கும் பிறவிலேயே அனுபவித்துக் கழித்து விடும்படியான அனுகிரகத்தை அளிக்கிறார். ஆனால் கர்மவினைகளின் தாக்கம் உஷ்ணமாகத்தானே நம் உடலில் உருவெடுக்கும். இத்தகைய அதிகப்படியான உஷ்ணத்தை சாதாரண மனித உடல் தாங்க முடியாது. திருக்கானூர் திருத்தல குமிழ்கட்டி சக்திகளால் எத்தகைய உஷ்ணத்தையும் ஏற்கும் அளவிற்கு நம் உடலும் மனமும் பலம் அடைகின்றன. அணுஉலை, பாய்லர்கள், லேசர் உபகரணங்களில் வேலை செய்பவர்களுக்கு இத்தகைய அனுகிரகம் அவர்களைப் பேராபத்திலிருந்து காக்கிறது.

 
ஸ்ரீசெம்மேனி நாதர் ஸ்ரீசௌந்தரநாயகி
இந்த குமிழ்கட்டி இரகசியத்தை இயற்கையாகவே பெற்றவரே வள்ளலார் சுவாமிகள் ஆவார்கள். முருகப் பெருமானின் பூரண அனுகிரகத்தைப் பெற்ற வள்ளலார் சுவாமிகள் பவளக்கட்டி என்ற குமிழ் உடலைப் பெற்றிருந்தார்கள். குமிழ்கட்டி இரகசியத்தை விடவும் உயர்வான ஒரு நிலையே பவளக்கட்டி மேனி இரகசியமாகும். அந்த அற்புத இரகசிய மேனியில் அவர் உலாவியதால்தான் அவர் நிழல் தரையில் விழவில்லை. தன்னுடைய பூத உடலை உகுத்து அருணை சோதியில் அவர் கலந்த போது இந்த பவளக்கட்டி சோதியில்தான் தன்னுடைய மேனியை மறைத்துக் கொண்டார். வள்ளலார் சுவாமிகள் மேல் பூரண நம்பிக்கை உடையவர்கள் இன்றும் சுவாமிகளின் பவளக்கட்டி சோதி தரிசனத்தைப் பெறலாம்.
திருக்கானூர் திருத்தலத்தில் இந்த குமிழ்கட்டி இரகசியத்தைப் பெறும் விசேஷ நாட்களும் உண்டு. இதை அறிய மிகுந்த பணிவுடன் போகர் அகத்திய பெருமானைக் கேட்கிறார்.

குமிழ்கட்டும் இரகசியம் முகிழ்கட்டும் திருத்தலம்
முனிந்தறியும் நாள் எந்நாளோ தாலேலோ

அன்புச் சீடனின் அற்புத கேள்விக்கு பதிலளிக்கிறார் ஸ்ரீஅகத்தியர்.
சிலை கட்டும் ஈசனும் மலை கட்டும் மாமகளும்
கலை கொட்டும் நாள் அந்நாளே என நீ அறிவாய் தாலேலோ



அண்டம் புகழும் இந்த அற்புத குரு சிஷ்ய உரையாடலை விளக்க ஆரம்பித்தால் அது பல காண்டங்களுக்கு விரியும் என்பதால் இதன் எளிமையான விளக்கத்தை அளிக்கிறோம். கிருஷ்ண பட்ச திரயோதசி திதி அன்று சூரிய பகவான், குரு பகவான், செவ்வாய் பகவான், அக்னி பகவான், அக்னி புராந்தக மகரிஷி போன்ற அக்னி சம்பந்தப்பட்ட அனைத்து நவகிரக அதிபதிகளும் ரிஷிகளும் திருக்கானூரில் வழிபட்டு குமிழ்கட்டி இரகசியத்தை பிரசாதமாகப் பெற்றனர். எனவே யாரெல்லாம் தேய்பிறை பிரதோஷ தினத்தில் இத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுகிறார்களோ அவர்கள் குமிழ்கட்டி இரகசிய அனுகிரகத்தைப் பெறுவார்கள் என்பது சித்தர்கள் கூறும் எளிய விளக்கம்.



“தாலேலோ“ என்பது திருக்கானூர் தலத்திற்கான சித்த அனுமதி பதம் (login entry password). எனவே இத்தலத்தைப் பற்றி மேலும் விளக்கங்கள் பெற விரும்பும் இறையன்பர்கள் இந்த இறை பதத்தை சிந்தித்து, தியானித்து அற்புத பலன் பெறலாம். இதுவே சித்தர்களின் பெருங்கருணை.



மனவெளி குணப்பரிமாண பைரவ மூர்த்தி
மனவெளி மார்கமாக பிற லோகங்களுக்கு பயணம் செய்பவர்கள் தாம் நினைக்கும் அளவிற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தம் உடலை விட்டுச் சென்று உலவ முடியாது. பொதுவாக, பூலோக கணக்கில் ஒரு நாழிகை நேரத்திற்கு மேல் உடலை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. அப்படி ஒரு வேளை பிற லோகங்களுக்குச் சென்று ஒரு நாழிகைக்குள் திரும்ப முடியாவிட்டால், மனித உடலை அந்த ஆன்மா விட்டு விட வேண்டிய நிலை ஏற்பட்டு ஆவியாகவே எஞ்சிய நாட்களைக் கழிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விடும். இதற்காகத்தான் மனவெளிப் பயணத்தை தகுதி பெற்ற சற்குருவின் மேற்பார்வையில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும என்ற இறை நியதி உள்ளது. ஆனால், பெரும்பாலான லோகங்களில் உள்ள காலப் பரிமாணம் நம் பூலோகக் கணக்கை விட அதிகமாகவே இருக்கும். அதாவது நமது பூலோகத்தில் உள்ள ஒரு வருட காலம் என்பது குறித்த ஒரு லோகத்திற்கு ஒரு மணி நேரமாகக் கூட இருக்கலாம். அந்நிலையில் அந்த லோகத்திற்கு மன வெளிப் பயணமாகச் சென்று விட்டு ஒரு நாழிகை நேரத்திற்குள் திரும்புவது என்பது இயலாத காரியம் அல்லவா ? இவ்வாறு மன வெளிப் பயணத்தில் தேவையான கால பரிமாணத்தைப் பெற உதவும் மூர்த்தியே திருக்கானூர் மனவெளி குணப் பரிமாண பைரவ மூர்த்தி ஆவார். சற்குருவின் வழிகாட்டுதலின் பேரில் ஒருவர் மன வெளிப் பயணத்தை மேற்கொள்ளும்போது அவரே திருக்கானூர் பைரவ மூர்த்தியை எப்படி வழிபட்டு எத்தகைய கால குண பரிமாணத்தைப் பெற வேண்டும் என்ற இரகசியத்தை தெளிவுபடுத்துவார். அப்படியானால் சாதாரண மக்களுக்கு திருக்கானூர் பைரவ மூர்த்தி அருளும் அனுகிரகம் யாது ?
இதை ஒரு உதாரண நிகழ்ச்சி மூலம் விளக்குவோம். ஒருமுறை சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களிடம் ஒரு அன்பர் வந்தார். “சுவாமி, எனக்கு ரொம்ப நாளாக அயல்நாட்டு விஷ்கி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக உள்ளது. ஆனால், ஆன்மீக குருவாக இருக்கும் உங்களிடம் இதை எப்படி தெரியப்படுத்துவது என்று தெரியவில்லை. அதே சமயம் குரு என்பவர் தந்தையை விடவும் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பதால் அவரிடம் எதையும் மறைக்காமல் மனதில் உள்ளதை அப்படியே கொட்டிவிட வேண்டும் என்றும் தோன்றுகிறது. இந்த குழப்பத்திலிருந்து நீங்கள்தான் என்னை மீட்க வேண்டும்,” என்று மிகவும் பணிவுடன் தெரிவித்துக் கொண்டார். சற்குரு, “நீங்கள் மனம் திறந்து பேசியது குறித்து மிகவும் சந்தோஷம். இதனால் எத்தனையோ குழப்பங்களைத் தீர்த்து விடலாம். இந்த அயல்நாட்டு மது ஆசை விட்ட குறை தொட்ட குறையாக உங்களைத் தொடர்ந்து வருவதுதான். ஒரு முறை அந்த மதுவை நீங்கள் அருந்தி விட்டால் உங்களுடைய பாக்கி தீர்ந்து விடும். அதற்காக நீங்கள் வருந்த வேண்டாம். என்னுடைய நண்பர் ஒருவர் அடுத்த வாரம் லண்டனிலிருந்து வருகிறார் அவரிடம் உங்களுக்காக வாட்69 ஸ்காட்ச் விஸ்கியை கொண்டு வரச் சொல்கிறேன். அடுத்த வியாழக்கிழமை அடியேனை வந்து பாருங்கள்,” என்று சொல்லி அனுப்பி விட்டார். மறுவாரம் வழிபாட்டிற்காக வந்திருந்த அடியார்கள் எல்லாம் ஸ்ரீவாத்யார் என்ன அயல்நாட்டு விஸ்கியை வாங்கி வைத்திருக்கிறார் என்று அறியும் ஆவலில் ஸ்ரீவாத்யாரை ஓரக் கண்ணால் கவனித்துக் கொண்டே இருந்தார்கள். சற்று நேரத்தில் அந்த அடியாரும் வந்தார். வந்தவர் தடாலென சற்குருவின் திருப்பாதங்களில் விழுந்து, “வாத்யாரே, என்னை மன்னித்து விடுங்கள். இனி கனவிலும் சாராயம் குடிக்க வேண்டும் என்ற எண்ணமே ஏற்படாது,” என்று கூறி ஸ்ரீவாத்யாரின் திருப்பாதங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். ஸ்ரீவாத்யார் மெதுவாக அவரிடமிருந்து தன்னுடைய பாதங்களை விடுவித்துக் கொண்டு, “என்ன சார், என்ன ஆச்சு, ஏன் திடீரென்று உங்களுக்கு விஷ்கி பிடிக்க வில்லையா ? அதனால் என்ன, உங்களுக்கு வேறு ஒரு அயல்நாட்டு மது வகையை வாங்கித் தருகிறேன்,” என்றார். அதற்கு அந்த அடியார், “சுவாமி, விஷயம் அதுவல்ல. நேற்று இரவு ஒரு கனவு கண்டேன். அந்த கனவில் நான் நன்றாக குடித்து விட்டு முற்றிலும் நிதானத்தை இழந்து ஆடைகளை எல்லாம் துறந்து விட்டு அலைகிறேன். என்னுடைய நண்பர்களும் உறவினர்களும் என்னைப் பார்த்து விட்டு இப்படி அப்படி என்று சொல்ல முடியாத அளவிற்கு கிண்டல் கேலியுமாக பரிகசித்து என்னை ஏளனம் செய்வதை தத்ரூபமாகக் கண்டேன். என்னால் அந்த வேதனையை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கனவிலிருந்து நனவுலகிற்கு நான் மீண்ட பல மணி நேரம் கழித்து கூட என்னை எல்லோரும் கிண்டல் பேசி சிரிப்பது போலவே தோன்றுகிறது. இந்த கனவு நிலையையே என்னால் தாங்க முடியவில்லை என்றால் உண்மையில் அந்த கேவலமான உண்மை நிலையை நான் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்.” அவர் உடல் எல்லாம் வேர்த்துக் கொட்டி கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன. வெகுநேரம் கழித்துதான் அவர் சகஜ நிலைக்கு மீண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் அவர் மதுவைப் பற்றி எண்ணவே இல்லை என்று சொல்லவும் வேண்டுமோ. பின்னர் இந்த சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள ஆன்மீக இரசியத்தை விவரித்தார் சற்குரு. அந்த அடியார் பெற்ற அவமானம் கனவும் அல்ல, கற்பனையும் அல்ல. அது மனவெளி குணப் பரிமாண கால பைரவ லோகத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சியே. பூலோகத்தில் நடக்க வேண்டிய ஒரு சம்பவத்தை சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் கால பைரவ லோகத்தில் நிகழ்த்தி அந்த அடியாரை பூலோக வேதனைகளிலிருந்து மீட்டார். இதை நிகழ்த்தக் கூடியவர் சற்குரு ஒருவரே. ஆம், சற்குரு ஒருவரே எந்த அவமானத்திலிருந்தும் தம் அடியார்களைக் காக்கும் காவல் தெய்வம் ! கலங்கரை விளக்கம் !!
திருக்கானூர் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் நந்தியெம்பெருமான் ஸ்ரீமின்னலாம்பட்டு நந்தீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். மிகவும் அபூர்வமான அனுகிரக மூர்த்தி. திருக்கோயில்களில் குடிகொண்டிருக்கும் இறை மூர்த்திகளுக்கு தினமுமே அபிஷேகம் ஆராதனைகளுடன் நைவேத்தியமும் நிறைவேற்றப்பட வேண்டும். இது மக்களுக்கு மட்டும் அல்லாமல் இந்த பூலோகத்தில் உள்ள விலங்குகள் தாவரங்கள் என அனைத்து உயிர்களுக்கும் நன்மை அளிப்பதாகும். ஆனால், மலைக் கோட்டை திருஅண்ணாமலை, பர்வதமலை போன்ற இறை மூர்த்திகளே மலை வடிவில் எழுந்தருளி பிரம்மாண்ட தோற்றம் கொண்டிருந்தால் அவர்களுக்கு எப்படி அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்ற இயலும் ? இந்திரன், வருணன் போன்ற தேவ மூர்த்திகளே குறித்த முகூர்த்த நேரங்களில் மழை, இடி, மின்னல் வடிவாக இத்தகைய மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றி மகிழ்கின்றனர். திருக்கானூர் திருத்தலம் மங்களாக்னி சக்திகள் பொலியும் சிறப்பான அக்னி தலமாக பொலிவதால் இங்கு இந்திர பகவானோ வருண பகவானோ இடி மின்னல் மழை சக்திகளை நேரடியாக இறை மூர்த்திகளுக்கு அளிக்க இயலாது. இத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீமின்னலாம் பட்டு நந்தி மூர்த்தியே தேவர்களுடைய இடி பூஜைகளை ஏற்று இறை மூர்த்திகளுக்கு அளிக்கிறார் என்பது இத்தல நந்தி மூர்த்தியின் மகிமையாகும். மின்னலையே தனக்குரிய பட்டாடையாக இத்தல நந்தி மூர்த்தி ஏற்பதால் இவர் மின்னல் ஆம் பட்டு மூர்த்தியாகக் கொண்டாடப்படுகிறார். அக்னி மூர்த்தியான சரபேஸ்வர மூர்த்தியைப் போல திருக்கானூர் நந்தி மூர்த்திக்கும் வெண் பட்டு வஸ்திரங்களை சார்த்தி பசு வெண்ணெய் சாற்றி வழிபடுதலால் அற்புத பலன்களைப் பெறலாம். எத்தகைய கடுமையான வினைகளையும் அதனால் விளையும் துன்பங்களையும் களையும் கருணை தெய்வம் இவரே. நவராத்திரி பஞ்சமி திதி அன்று இந்திரபகவான் லலிதா பரமேஸ்வரி தேவிக்கு நிறைவேற்றிய இடி பூஜையை கீழே காணும் வீடியோவில் ரசித்து மகிழலாம்.



ஸ்ரீகரும்பு விநாயகர், திருக்கானூர் திருத்தலம்
பொதுவாக கன்னி மூலையில் எழுந்தருளி இருக்கும் கணபதி மூர்த்திகள் திருமண தோஷங்களை நிவர்த்தி செய்யும் அருட்தன்மைகளுடன் விளங்குவார்கள். இத்துடன் திருக்கானூர் திருத்தலத்தில் அருள்புரியும் கன்னிமூலை கணபதி ஸ்ரீகரும்பு விநாயகர் என திருநாமம் பூண்டு நற்காரிய சித்திகளை நல்கும் சித்தி விநாயகராகவும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கிறார். அர்க்யம் அளிக்கும்போது நீர் சக்திகள் ஒளி சக்தியாக மாறி சூரிய லோகத்தை அடைவது போல சூரிய லோக ஒளி சக்திகள் கரும்புச் சாற்றில் பதிந்து இறை மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றும்போது சூரிய சக்திகளை அளிக்கின்றன. இதனால் உத்தியோக உயர்வு, இடமாற்றம், பணி நிரந்தரம் போன்ற உத்தியோகம் சம்பந்தப்பட்ட காரியங்களில் நற்பலன்கள் பொங்கிப் பெருகுகின்றன. சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் அருளிய, “கரும்பு வில்லும் ...” என்ற அங்காளி துதியை ஒன்பது முறை ஓதி ஸ்ரீகரும்பு விநாயகருக்கு கரும்புச் சாறு அபிஷேகம் நிறைவேற்றி வழிபடுதலால் உத்தியோகம் சம்பந்தப்பட்ட அனைத்துத் துன்பங்களும் நீங்கும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு உரிய உத்தியோகங்கள் அமையும் வாய்ப்பு ஏற்படும்.



ருத்ராட்சம் என்னும் சொல் ருத்ரம் அட்சம் என்று பிரியும். அட்சம் என்றால் கண், யோனிக் கண் என்ற அர்த்தங்கள் விளையும். எனவே ருத்ராட்சம் என்றால் சிவனும் சக்தியும் சேர்ந்த முழுமையான இறை சின்னம் என்று பொருளாகும். சிவ பூஜையை சீடர்களுக்கு உபதேசமாக அளிக்கும் சிவாச்சாரிய மூர்த்திகள் முதலில் அவர்களை ருத்ராட்சத்தையே சிவலிங்கமாகப் பாவித்து சிவபூஜை செய்து வரும்படி உபதேசிப்பார்கள். இயற்கையிலேயே துளை உடைய ஒரே தாவரம் ருத்ராட்சம் ஆகும். வில்வம், துளசி போன்றவை சக்தி அம்சங்களுடன் திகழ, அரிசி, கரும்பு போன்ற தாவரங்கள் சிவ அம்சமாகப் பொலிய ருத்ராட்சம் மட்டுமே சிவ சக்தி அம்சங்கள் பூரணம் பெற்ற சிவச் சின்னமாகத் திகழ்கின்றது. அப்படியானால் ஒருவர் ருத்ராட்சத்தை அணியும்போது அவர் கைக்கொள்ள வேண்டிய விரத முறைகள் யாது என்று அறிய வேண்டும் அல்லவா ? ருத்ராட்சம் அணிபவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நடைமுறையில் பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். சுத்தம் என்பது புலாலைத் தவிர்த்து, உடல் சுத்தியுடன், சம்சார வாழ்விலிருந்து ஒதுங்கி இருத்தலே என்று பலரும் பொருள் கொள்கின்றனர். உண்மையில் சித்தர்கள் கூறும் அர்த்தமே வேறு. ருத்ராட்சம் என்பது பூரணத்தைக் குறிப்பதால் ருத்ராட்சம் அணிந்த ஆண் ஒரு பெண்ணைக் காணும்போது அவளை முழுமையாகப் பார்க்கிறான். அதாவது அவள் தன்னைப் போலவே சிவ அம்சம் கொண்ட ஆண்மகனே என்றோ அல்லது அவள் சிவனே என்றோ உணர்கின்றான். ஒரு நாயையோ எறும்பையோ அவன் காணும்போதும் அவனுடைய உணர்வு இவ்வாறாகவே இருக்க வேண்டும். அது போல ருத்ராட்சம் அணிந்த ஒரு பெண் ஒரு ஆணைக் காணும்போது அவனைப் பூரணமான சிவ அம்சமாகவே காண வேண்டும். இதுவே சிவ பூஜையில் ஆரம்பப் பாடம். ஆனால், இந்த ஆரம்பப் பாடம் படித்தவர்கள் எத்தனை பேர் என்று அவரவரே தங்கள் மனதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம். இந்த ஆரம்ப பாடத்திற்கு அரிச் சுவடியாக அமைவதே திருக்கானூர் திருத்தலத்தில் அருள்புரியும் முருகப் பெருமானின் வழிபாடாகும். ஜீவ பேதத்தைக் கடந்த சிவபோதத்தை அளிப்பதே இத்தல ஞானகுருவின் வழிபாடாகும்.



Blue Value Remedies for Blue Whale Tragedies !
வான நீல வண்ணம் சுக்ர பகவானுக்குரியது, கருநீல வண்ணம் சனீஸ்வர பகவானுக்குரியது. பொதுவாக, நீல வண்ணம் ஜீவ சக்தியை அளிப்பதாகும். எனவே கருநீல வண்ணம் ஆயுளை நீட்டிப்பதாகவும் சனீஸ்வர பகவான் ஆயுள்காரகராகவும் விளங்குகிறார். ஆனால், ultra violet rays என்னும் புற ஊதாக் கதிர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகத்தானே உள்ளது. இதன் காரணம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதுதான். கம்ப்யூட்டர் என்பது ஒரு அத்தியாவசியமாக தேவையாக தற்போது ஆகிவிட்டதால் முடிந்த மட்டும் கம்ப்யயூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பதைத் தவிர்க்கவும். அவ்வாறு பார்க்கும்போது பகல் இரவு எந்நேரமும் பார்ப்பவரின் இடது தோள் வழியாக மின் விளக்கு வெளிச்சம் கம்ப்யூட்டர் திரையில் படும்படி அமைத்துக் கொள்வதாலும் புதன் சனிக் கிழமைகளில் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாலும் தினமுமே மருதாணித் தைலம், கரிசலாங் கண்ணி தைலம், சந்தனத் தைலம் போன்ற தைலங்களை தலைக்கு தேய்த்து குளித்து வருவதாலும் கண்களுக்கும் மூளைக்கும் ஊறு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களின் விளைவுகளிலிருந்து ஓரளவு தற்காத்துக் கொள்ளலாம்.
திமிங்கலங்கள் மனிதனுக்கு நற்பலன் விளைவிப்பதில் முதலிடம் வகிக்கின்றன. ஆனால், Blue whale போன்ற நற்பெயரில் அமைந்த பல கம்ப்யூட்டர் விளையாட்டுக்களே பல இளவயது மாணவர்களைப் பலி வாங்கியுள்ளதை நாம் அறியும்போது பசுத் தோல் புலியாக சமுதாயத்தில் நிலவும் தீய சக்திகளிலிடமிருந்து நம்முடைய குழந்தைகளைக் காப்பாற்ற நாம் எந்த அளவிற்கு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று தெரிகிறது அல்லவா ? இவ்வாறு குழந்தைகளுக்கு நல்ல ஆயுள் விருத்தியை அளித்து அவர்களை நன்னெறியில் நடத்த உதவுவதே மீன் வளர்ப்பாகும். மீன்களின் கண்கள் கருநீலம் உடையது என்பதை நாம் அறிவோம். இந்த கருநீல சக்தி குழந்தைகளுக்குத் தேவையான உடல், மன ஆரோக்கியத்தை அளிப்பதுடன் அவர்கள் தீய வழியில் சென்று விடாதபடி ஒரு கவசமாகவும் அவர்களைக் காக்கிறது. பராசர முனிவரும் மச்சகந்தியும் மீன்கள் கண்களை மூடாமல் நீரில் நீந்தி காட்சி பெற வேண்டும் என்று கடுந்த தவம் புரிந்தது நீங்கள் அறிந்ததே. இதற்குக் காரணம் இவ்வாறு மீன்கள் கண்களை மூடாமல் இரவு பகலாக இருப்பதால் நீர்நிலைகள் எப்போதும் நற்சக்திகளுடனே விளங்குகின்றன. பிறப்பாக இருந்தாலும் இறப்பாக இருந்தாலும் தண்ணீர் அவசியமான ஒன்றாக அமைந்து விட்டதற்கு நீரின் அடிப்படையான பரிசுத்த தன்மையே காரணம் ஆகும். அதை எப்போதும் பரிசுத்தமாக வைத்திருப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்கு மீன்களின் சேவையே முதன்மை வகிக்கிறது. இது தொடர்பான எத்தனையோ புராண இதிகாச நிகழ்ச்சிகள் உண்டு. “குகனோடு ஐவரானோம்,“ என்று குகனைத் தன் சகோதரனாக பாவித்து ராமபிரான் உரிமை கொண்டாடினார் அல்லவா ? அந்த அளவிற்கு ராமர் குகனிடம் அன்பு பாராட்டக் காரணம் என்ன ? ஒரு சமஸ்தானத்தின் மன்னனாக இருந்தாலும் குகன் தன்னுடைய பிரஜைகளை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தான். அவன் குடிமக்களைக் காக்கும் சேவையில் ஒரு போதும் உறங்கியதே கிடையாது. அவ்வாறு குடிமக்களின் மேல் குகனுககு இருந்த அன்பைப் பாராட்டியே ராமபிரான் குகனைத் தன்னுடைய சகோதரனாக ஏற்றுக் கொண்டார். அதோடு மட்டுமல்லாமல் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து அவர் தன்னுடைய ஆட்சியின் கீழ் இருந்த எல்லா நாடுகளுக்கும் சென்றபோது குகனையும் தன்னுடன் கூட்டிக் கொண்டு செல்லவே குகனும் இந்த பூலோகத்தில் உள்ள அமேசான், நைல், மிசௌரி மிஸ்ஸிசிப்பி, மஞ்சள் நதி போன்ற எல்லா ஆறுகளிலும் ராம பிரானையும் சீதையையும் படகில் அமர்த்தி உலா வந்தான். மேலோட்டமாகப் பார்த்தால் ராமரும் சீதையும் எல்லா நாடுகளுக்கும் தேனிலவிற்காக உல்லாசப் பயணம் சென்று வந்ததுபோல் தோன்றும். உண்மையில் இந்த பூமண்டலத்தில் உள்ள அனைத்து நீர் நிலையில் உள்ள மீன்களும் ராமரின் கண் அழைகைக் காண வேண்டும், அவை எல்லாம் ராம பிரானின் ஜீவசக்தியை கண்கள் மூலமாகப் பெற்று அதை வரும் தலைமுறைகளுக்கெல்லாம் பெருமாள் பிரசாதமாக அளிக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடே ஆகும். குகனின் அற்புத சேவையால் மகிழ்ந்த ராம பிரான் யுகங்கள் தோறும் தன்னுடைய நேத்ர சக்தியை உலகிற்கு அளிக்கும் அற்புத ராம சேவைக்கு குகனை ஒரு ராம கருவியாக அமைத்துக் கொண்டார். திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் பிடிக்கும் பெரிய திமிங்கல மீனாக பெருமாள் வந்தபோது அவரைப் பிடிக்க குகனைத்தான் ஈசன் வலையாக வீசினார். பெருமாளை யாராலும் அடக்க, ஒடுக்க முடியாது. குகனின் அன்பெனும் வலையில் அகப்பட்ட மீன் ஆனார் பெருமாள். ஸ்ரீகுகேஸ்வரர் என்னும் திருநாமத்துடன் ஈசன் அருள்புரியும் லால்குடி அருகே உள்ள கூகூர் திருத்தலமே இத்தகைய புராண வரலாறு நிகழ்ந்த திருத்தலம் ஆகும்.



ஸ்ரீநந்தீஸ்வரர், கூகூர், லால்குடி
அதேபோல ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் சேவை செய்து கொண்டிருந்தபோது உறங்காமல் தன் மக்களைக் காப்பாற்றிய குகனே உறங்காவில்லியாக ராமானுஜரின் சீடராக அமைந்தார். மக்களைக் காக்க என்றும் உறங்காத வில்லைத் தாங்கிய குகன் உறங்காவில்லியாக ராமானுஜரால் பாராட்டப் பெற்றார். அப்போதும் ஸ்ரீரெங்கநாதரின் கண் அழகைத் தன் கண்களின் நிரப்பி பெருமாள் நேத்ர சக்திகளை உலகிற்கெல்லாம் அளித்த உத்தமரானார் உறங்காவில்லி என்ற திருநாமத்துடன் திகழ்ந்த குகன் என்பது சித்தர்கள் கூறும் இரகசியமாகும். இவ்வாறு ப்ளூ பிலிம், ப்ளூ வேல் போன்ற ப்ளூ என்ற வார்த்தையால் விளையும் வேதனைகளிலிருந்து மக்களைக் காக்க சித்தர்கள் அளிக்கும் வழிபாடே தளிர் தாமரை வழிபாடாகும். வெள்ளிக் கிழமைகளில் வரும் சனி ஹோரை நேரத்திலும் சனிக் கிழமைகளில் வரும் சுக்ர ஹோரை நேரத்திலும், சனி சுக்ர நவகிரக மூர்த்திகள் ராசியிலோ நவாம்சத்திலோ ஒரே ராசியில் அமையும் காலங்களிலும் பெருமாள் மூர்த்திகளுக்கு நீலோத்பல மலர்களை மாலையாகக் கட்டி அளித்து வழிபடுதலால் குழந்தைகள் கம்ப்யூட்டர் விளையாட்டுகளால் வேதனை அடையாமல் தங்கள் கல்வியில் சிறக்க இந்த வழிபாடு பெரிதும் உதவும். மது, புகை போன்ற தீய வழக்கங்களுக்கு ஆட்பட்டுள்ள தங்கள் கணவன்மார்களைத் திருத்த இத்தகைய வழிபாடு துணை புரியும். திருமணத் தடங்கல்கள் நீங்கும். சனி பகவானுக்குரிய எட்டு எண்ணின் கூட்டாக அமையும் வரும் 17.10.2017 அன்று பெருமாள் தலங்களில் இத்தகைய வழிபாடுகளை இயற்றுவதால் கம்ப்யூர்ட்டர் துறையில் நிலையில்லாமையை நினைத்து வருந்தும் பணியாளர்கள் நற்பலன் பெறுவார்கள். 17.10.2017 அன்று மிகவும் அபூர்வமாக சனி பகவானும் சுக்ர பகவானும் குருவுக்கு உரித்தான மீன நவாம்ச ராசியில் எழுந்தருள்கிறார்கள் என்பதால் இந்த நன்னாளை நன்முறையில் பயன்படுத்தி நுண்துறையில் நற்பலன் பெற வேண்டுகிறோம்.



ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஓமாம்புலியூர்
”பாரு பாரு நல்லா பாரு” என்பது நம் சிவகுருமங்கள கந்தர்வா அவர்கள் சிறுவனான வெங்கடராமனுக்கு இறுதிய அளித்த உபதேச குருவாய் மொழி. இந்த சித்த குரு வாக்கியத்தில் பொதிந்துள்ள ஆன்மீகப் பொக்கிஷங்கள் கோடி கோடி. யுகங்கள் தோறும் ஏன் ஒவ்வொரு நொடியும் கூடி இது சுட்டிக் காட்டும் தெய்வீக இரகசியங்கள் ஏராளம், ஏராளம். உதாரணமாக, வரும் 17.10.2017 வரும் பார்கவ துலா ஸ்நான திருநாள் அன்று இந்த வாக்கியம் சுட்டிக் காட்டும் மறைபொருளைப் பற்றி சற்று ஆராய்வோம். ஐப்பசி மாதத்தில் சூரியன் நீசமாக இருப்பதால் அம்மாதத்தில் பிறந்தவர்கள் கண் நோய்களால் அவதியுறுவதும், வறுமையில் வாடுவதும் இயற்கை. ஆனால், குரு நினைத்தால் விதியையும் மாற்ற முடியும் என்ற பெரியோர்களின் வாக்கிற்கிணங்க வரும் 17.10.2017 துலா நீராடல் எத்தனையோ கண் நோய்களை தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் நிரந்தர செல்வ கடாட்ச சக்திகளையும் அளிக்க வல்லதாகும். காரணம் அன்று சூரியனின் பலம் கோசார ரீதியாக ஆயிரமாயிர மடங்கு விருத்தி ஆவதே ஆகும். இதன் பின்னணியில் அமைந்துள்ள ஜோதிட நுணுக்கங்களை விட குருவின் அனுகிரக சக்திகள் மிகவும் சுவையாக இருப்பதால் அதை மட்டும் இங்கு விளக்குகிறோம். “பாரு பாரு நல்லா பாரு“ என்றால் எந்த அளவிற்கு ஒரு பொருளை நன்றாகப் பார்க்க முடியும் ? நம்மிடம் உள்ள அதிகப்பட்ச சக்தியுள்ள ஒரு மின் விளக்கின் உதவியால் பார்ப்பதே அப்பொருளை நன்றாக பார்ப்பதற்கான மனித முயற்சி ஆகும். ஆனால், தெய்வீக முயற்சி என்பது ஒரு மனிதன் எந்த அளவிற்கு சூரிய சக்தியைப் பெற முடிகிறதோ அந்த அளவு சூரிய சக்திகளைக் கொண்டு பார்த்தால் அது “நன்றாக“ பார்த்தாக ஆகி விடும் அல்லவா ? அப்படியானால் ஒரு மனிதன் எந்த அளவிற்கு சூரிய சக்தியுடன் ஒரு பொருளைப் பார்க்க முடியும். இதற்கு கடவுள் மனிதனுக்கு அளித்துள்ள சக்தியின் அளவு என்ன தெரியுமா ? சித்தர்கள் கணக்கில் சரபேஸ்வர மூர்த்தியினுடைய கால் விரல் நகத்தின் ஒரு கீரலில் 400000 கோடி சூரியன்களின் பிரகாசம் அடங்கி உள்ளது. அப்படியானால் சரபேஸ்வர மூர்த்தியின் பூரண அவதார வடிவத்தில் எத்தனை கோடி கோடி சூரியன்களின் பிரகாச சக்தி மறைந்திருக்கும். அதே போல கணக்கிட்டுப் பார்த்தால் சரபேஸ்வர மூர்த்தியின் பூரண வியாபகமான பரம்பொருளில், பரபிரம்ம தத்துவத்தில், எம்பெருமானின் பூரண ஜோதி வியாபகம் எத்தனை கோடி கோடி சூரிய பிரகாசத்தைக் கொண்டிருக்கும் !! கடவுள் என்பவர் கருணை வெள்ளம். ஒருவரை கருணை உடையவர், வள்ளல் என்று எப்போது சொல்ல முடியும். தன்னிடம் உள்ள அனைத்தையும் ஒருவர் அளிப்பதுதான் வள்ளல் தன்மையின் எல்லை, கருணையின் எல்லை. அதைத்தான் பரம்பொருளும் அருளியுள்ளது. எல்லையில்லா பரம்பொருள் எல்லையில்லா சக்தி பெற்ற ஆன்மாவாகத்தான் ஒவ்வொரு ஜீவனையும் சிருஷ்டி செய்துள்ளது. அப்படியானால் பரம்பொருளின் சொரூபமான சாதாரண மனிதனும் கோடி கோடி சூரிய பிரகாசத்தைத் தன்னுள் கொண்டவன்தானே. ஆனால், அவனோ கண்ணாடி போட்டுக் கொண்டு ஒரு பொருளை பார்க்க வேண்டி இருக்கிறதே என்றால் இது யாருடைய குறை ? மனிதனுடைய குறையா இல்லை அவனைப் படைத்தவனுடைய குறையா ? சிந்தியுங்கள், சிந்தியுங்கள். இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் உள்ள கோடி கோடி சூரிய பிரகாச சக்தியை அறிந்து கொள்ளத்தான் ஒவ்வொரு குருநாதரும் தன்னிடம் வரும் சீடர்களை அரும்பாடு பட்டு இந்த மறைபொருளின் தத்துவத்தை உணர தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து தெய்வீக நெறியில் அவர்களை முனனேற்றி வருகிறார்கள்.
இடியாப்ப சித்தர், “பாரு பாரு நல்லா பாரு,” என்று வார்த்தைகளால் கூறியதை நம் குருமங்கள கந்தர்வா செயல் மூலமாக நிரூபித்துக் காட்டினார். தன்னுடன் நெருங்கி சேவை செய்த ஒரு சில அடியார்களுக்கு, கண் கண்ணாடியை பரிசாக அளித்தார். மேலோட்டமாக,“சிறிய எழுத்துக்ளை உன்னுடைய குறைந்த கண் பார்வையால் காண இயலாது என்பதால் இந்த கண் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு எல்லாவற்றையும் நன்றாகப் பார்,” என்று பொருள் கொண்டாலும், இந்த உலகத்தைப் பார்ப்தற்கு இந்த கண்ணாடி பயன்பட்டாலும் இந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டால் நீ உன்னுடைய ஆன்மாவையும் அதனுள் உறையும் இறைவனையும் பார்க்கும்போது நீ பூரணம் அடைவாய்,” என்பது அவர் குரு வாக்காய் மறை வாக்காய் சுட்டிக் காட்டிய மாமறை. சற்குரு என்பவர் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலருக்கு மட்டும்தான் கோடி சூரிய பிரகாசத்தைப் பெறும் வழியைக் காட்டுவாரா ? குருவின் கருணை என்பது இந்த நாடு, உலகம் என்றில்லாது அனைத்துக் கோடி லோகங்களுக்கும் அருள் வழி காட்டக் கூடியதுதானே. இவ்வாறு சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களை நம்பி வரும் எவரும் கோடி கோடி சூரியனை ஒத்த பிரகாச தெய்வீக சக்தியை பெற அவர்களுக்கு அருள்வழி காட்டுவதே வரும் 17.10.2017 அன்று அமையும் பார்கவ துலா நீராடல் ஆகும். குருவின் பெருங்கருணையை அனைவரும் பெற்று வாழ திருஅண்ணாமலையாரின் பாதங்களைப் பணிகின்றோம்.



ஸ்ரீசெந்தாமரைக் கண்ணன் திருத்தலம், திருவெள்ளரை
கண்புரை அறுவை சிகிச்சை (Cataract operation)
சித்தர்கள் என்பவர்கள் எக்காலத்தும் மனிதர்களின் எல்லாக் காரியங்களிலும் ஏற்படும் குறைகளை ஆன்மீக ரீதியாக நிறைவேற்றுவதற்கு வழிகாட்டி வருகிறார்கள். தற்காலத்தில் பெருகி வரும் கண்புரை அறுவை சிகிச்சை என்னும் Cataract Surgery குறித்து இறையன்பர்களுக்கு தோன்றும் சந்தேகங்களுக்கு இங்கு நிவர்த்தி அளிக்கிறோம். நம் முன்னோர்கள் வலியுறுத்தியபடி நாள் இரண்டு, வாரம் இரண்டு, மாதம் இரண்டு, வருடம் இரண்டு என்ற முறைப்படி வாழ்ந்து வருபவர்களுக்கு நிச்சயமாக கண் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும் அண்டாது என்பது உண்மையே. அதாவது தினமும் இருறை மலம் கழித்தல், வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல், மாதம் இருமுறை சங்கமம், வருடம் இருமுறை பேதி, சூரிய நமஸ்காரம், கீரை, காய் கறிகள் கூடிய ஆரோக்கியமான உணவு என்ற முறையைக் கடைபிடித்தால் நிச்சயம் இறுதி நாள் வரை கண்களில் எந்தவித கோளாறுகளும் தோன்றாது. ஆனால், நடைமுறையில் பல்வேறு காரணங்களால் இதை நிறைவேற்ற முடியாத நிலையில் கண்களில் பலவிதமான நோய்களில் ஏற்படுகின்றன. இதில் ஒன்றே கண்களில் உள்ள குவிஆடி (lens) ஒளியை ஊடுருவ முடியாத நிலையை அடைந்து அதனால் கண் பார்வை குறைவதாகும். இதையே காட்ராக்ட், கண்ணில் சதை வளர்தல் என்று கூறுகிறோம். ஆரம்ப நிலையில் உள்ள காட்ராக்ட் சரியான பழக்க வழக்கங்களால் ஓரளவு நிவர்த்தி ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், நன்றாக முற்றிய நிலையில் உள்ள காட்ராக்ட்டை அறுவை சிகிச்சையின் மூலமே சரி செய்ய முடியும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். வருவதை ஏற்றுக் கொள்வதே ஆன்மீகத்தில் அடிப்படை பாடமாகும். “இனி எனக்கு வெளி பார்வை தேவையில்லை, மனதை உள்முகமாக திருப்பி இறைவனிடம் பெறும் சுகத்தால் என் எஞ்சிய வாழ்க்கையை கழித்து விட சித்தமாக இருக்கிறேன்“, என்ற திடமான மனது உடையவர்களுக்கு காட்ராக்ட் ஆபரேஷன் தேவையில்லைதான். ஆனால், இந்த மனநிலையைப் பெறுவது என்பது அனைவருக்கும் சாத்தியமான ஒன்று கிடையாது. மேலும் பெரும்பாலானோர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு அதனால் பார்வை குறையை சரி செய்து கொண்டு தங்களுடய சமுதாய பணியை, இறைப் பணியை தொடர விரும்புவது உண்டு. இதுவும் ஏற்புடையதே. அவ்வாறு ஏதோ ஒரு நிலையில் காட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை சித்தர்கள் அளிக்கிறார்கள்.
தற்போது காட்ராக்ட் அறுவை சிகிச்சையில் பொதுவான மூன்று முறைகள் உள்ளன.
Manual small incision cataract surgery (MSICS)
Phacoemulsification procedure
Laser assisted cataract surgery
தகுதி வாய்ந்த கண் மருத்துவர் தன் கைகளால் அறுவை சிகிச்சை செய்யும் முதல் முறையே (MSICS) ஏற்புடையது என்று சித்தர்கள் தெரிவிக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் Phaco, Laser surgery மிகவும் குறுகிய காலத்தில் நல்ல பலனை அளிப்பதுபோல் தோன்றினாலும் இப்பிறவியுடன் நம்முடைய வாழ்க்கை முடிவதில்லை. இந்த மனிதப் பிறவியானது அடுத்த பிறவிக்கான ஆரம்பமே என்று உணர்ந்தால்தான் இப்போது நாம் செய்யும் அறுவைச் சிகிச்சையால் விளையும் வேதனைகள் அடுத்த பிறவிகளுக்கும் தொடராமல் நம்மைக் காத்துக் கொள்ள முடியும். காலத்தை உணர்த்துவதற்கு நம்முடைய உடம்பில் ஒரு அமைப்பு உண்டு. விஞ்ஞான ரீதியாக சிறு மூளையிலிருந்து வரும் கட்டளையை வைத்தே நம்முடைய இதயம் துடிக்கிறது. அது ஒரு இயந்திரமே. அதற்கு தானாக கால நேரத்தை கணித்து செயல்பட முடியாது. அப்படியானால் சிறுமூளைக்கு காலத்தை கற்பித்தவர் யார் என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தால் பதில் அளிக்க முடியாது. மனிதனுடைய உடலில் உள்ள தச வாயுக்களில் ஒன்றான பிராணன் என்பதே சிறுமூளைக்கும் காலத்தைக் கற்பிக்கும் கருவியாகும். கேஸ் அடுப்பு, விறகு அடுப்பு, பசு வரட்டி இவை அனைத்துமே அக்னியை அளிக்கும் தன்மையை உடையது என்றாலும் பசு வராட்டி உருவாக்கும் அக்னி மட்டுமே மனிதனுடைய பூத உடலை முறையாக பஸ்மாக்கி இந்த சமுதாயத்தை கொடிய நோய்களிலிருந்து காத்து மனிதனின் தசவாயுக்களையும் முறைப்படுத்தி நன்முறையில் மீண்டும் பிரபஞ்சத்திலுள்ள பஞ்சபூத சக்திகளில் முறையாக நிலைப்படுத்துகிறது. அதுபோல கண்களுக்குத் தேவையான சக்தியையும், இயக்கங்களையும் முறைப்படுத்துவதே தச வாயுக்களில் ஒன்றான கிருபரன் என்ற வாயுவாகும். இது மனித முகத்தில் வியாபித்துள்ளது.
முற்காலத்தில் விளங்கிய சித்த, ஆயுர்வேத வைத்தியர்கள் வாதம், பித்தம், கபம் என்ற முக்குணங்களின் தன்மையைப் பற்றியும் தசவாயுக்களின் இயக்க இரகசியங்களைப் பற்றியும் தெளிவாக உணர்ந்திருந்தனர். ஆயுர்வேத முறைப்படி கண் காட்ராக்ட் கபம் என்னும் குணமிகுதியால் விளைவதால் ஒரு கூரிய ஆயுதத்தால் இந்த காட்ராக்ட்டைச் சுரண்டி மூக்கை வேகமாகச் சிந்தி காட்ராக்டை மூக்கின் மூலமாகவே வெளியே எடுத்து விடும் அற்புத கலையைக் கற்றிருந்தனர். கிருபரன் வாயு இயக்க இரகசியங்களை முழுமையாக உணர்ந்தவர்களே இவ்வாறு காட்ராக்ட்டை மூக்கின் வழியாக வெளியே கொண்டு வந்து கண் குறைபாட்டைச் சரி செய்ய இயலும். ஆனால், Phaco, laser போன்ற நுண் அதிர்வு அலைகளால் இந்த கிருபரன் வாயு மாசடைவதால் அது பிறவியை வளர்க்கிறது என்பது சித்தர்களின் தெளிவுரையாகும். கண் சிகிச்சையால் பிறவியை வளர்ப்பது அறிவுடைய செயலாகுமா என்பதை நன்றாக ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். கண்களில் அழகுக்காகப் பொருத்தப்படும் contact lens போன்றவையும் இவ்வாறு கிருபரன் வாயுவை மாசடையச் செய்யும் என்பதால் அதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றே என்பது சித்தர்களின் அறிவுரை.
சித்தர்களின் வழிகாட்டுதல் எவ்வளவுதான் தெளிவாக இருந்தாலும் அழகு, அஸ்தஸ்து, கௌரவம் போன்றவை குறுக்கிடும்போது குருவின் வார்த்தைகளை மீறி பலரும் தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வது உண்டு. நாளடைவில் தங்கள் தவறுகளை உணர்ந்து கொண்டு பிராயசித்தம் செய்ய விழையும்போது விளைந்த வேதனைகளை சரிப்படுத்த முடியாது என்றாலும் இனி இவ்வாறு விதியின் பிடியில் சிக்கி குரு வார்த்தையை மீறும் அபசாரத்தை செய்யாதிருக்க
ஓம் தத் புருஷாய வித்மஹே பீதாம்பரதரி சமேதாய தீமஹி
தந்நோ சம்பூர்ணேஸ்வர ப்ரசோதயாத்
என்ற சனீஸ்வர துதியை ஓதி குருவருளைப் பூர்ணமாகப் பெற அவர் பாதங்களில் சரணடைந்து செவ்வாழை, ஆப்பிள், செர்ரி போன்ற செந்நிற பழ வகைகளை தானம் அளித்தல் நலம். மதி மயக்கத்தால் குரு வார்த்தைகளை மீறாதிருக்க, விதி தேவதையான சனீஸ்வர பகவானின் அருளைப் பெற இந்த வழிபாடு பெரிதும் உதவும்.



சப்த ரிஷிகள் தவப்பாசறை, திருவெள்ளறை
திருச்சி திருவெள்ளறையில் மார்கண்டேயர், லட்சுமி தேவி மட்டுமல்லாது அகஸ்திய மாமுனிவரும் சப்த ரிஷிகளும் நீண்ட காலமாக தவமியற்றிய புண்டரீக தவ பீடம் இன்றும் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் நன்னிலையில் உள்ளது. இந்த தவப் பீடத்தில் இயற்றப்படும் வேதபாராயணம், காயத்ரீமந்திர ஜபம், பித்ரு தர்ப்பணம் போன்ற பூஜைகளின் பலன்கள் ஆயிரமாயிரமாய் பல்கிப் பெருகும். சப்தரிஷிகள் போன்றோர் இங்கு எதற்காக தவம் இயற்றினார்கள் ? திருவெள்ளறை தலம் நீண்ட ஆயுளை அளிப்பதுடன் அற்புதமான கண் பார்வையையும் அளிப்பதாகும். எத்தனையோ கண் நோய்களுக்கு நிவாரண சக்திகளையும் அளிப்பதே இங்குள்ள ஆலமர தரிசனம் என்பது பலரும் அறியாத இரகசியமாகும். திருஅண்ணாமலையில் திகழும் கல்லால மரத்தின் ஓர் அம்சமாக விளங்குவதே திருவெள்ளறையில் உள்ள புண்டரீக கடாட்ச ஆலமரமாகும். பக்தர்கள் விரும்பும் லட்சுமி கடாட்ச சக்திகளைஅளிப்பதற்காக லட்சுமி தேவி பல யுகங்கள் தவமியற்றிய அற்புத ஆலமரம் இதுவாகும். சூரிய ஒளியில் ஏழு வண்ணங்கள் இருக்கின்றன. இந்த ஏழு வண்ணங்களின் ஒருமித்த சக்தியே கண் பார்வைக்கு அத்தியாவசியமாக இருப்பதால் சப்த ரிஷிகளும் இத்தலத்தில் தவமியற்றி நேத்ர சக்திகளை விருத்தி செய்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பிரபஞ்சத்திற்கு அளித்து வருகிறார்கள்.
இத்தகைய ஏழு வண்ணங்களுடன் தொடர்புடையதே சப்த ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும் திருவையாறு, திருவிடைமருதூர், சென்னை மைலாப்பூர் போன்ற தலங்களில் நிகழும் சப்த ஸ்தான வழிபாடாகும். ஒரு முறை அடியார் ஒருவர் சிறுவனான வெங்கடராமன் தன் குருநாதர் இடியாப்ப சித்தருடன் நடைப் பயணமாக சென்று திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்ததுபோல தற்போது உள்ள அடியார்களும் ஏழுமலையானை தரிசிக்க இயலுமா என்று கேட்டபோது அதற்கு சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் அருளிய திருப்பதி யாத்திரை முறையை இங்கு அளிக்கிறோம். திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது உண்மையே. அவ்வாறு திருஅண்ணாமலை, சபரிமலை, கைலாயம், காசி, கயா, கேதார்நாத், ராமேஸ்வரம் போன்ற திருத்தல யாத்திரைகளும் நிச்சயமாக மனிதர்கள் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியவையே. ஆனால், அத்திருத்தல யாத்திரைகள் சற்குரு ஒருவரின் அனுமதியின் பேரில் நிகழ்த்தப்பட வேண்டும் என்பது முக்கியம். ஒவ்வொரு ஊரிலிருந்தும் திருப்பதிக்கு செல்லும் பாத யாத்திரையின் முறைகள் சற்றே மாறுபடும். இங்கு சென்னையிலிருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறையை விளக்குகிறோம். முதலில் ராயபுரம் கல்மண்டபத்தில் இருக்கும் அங்காளி பரமேஸ்வரியை தரிசனம் செய்து பாத யாத்திரைக்கு அனுமதி பெற வேண்டும். பாத யாத்திரைக்கான சங்கல்பத்தையும் இத்திருக்கோயிலிலேயே எடுத்துக் கொள்ளவும். அன்றோ அடுத்த நாளோ மைலாப்பூரிலுள்ள ஏழு சிவ தலங்களையும் காலில் செருப்பில்லாமல் நடந்தே தரிசனம் செய்ய வேண்டும். சப்த ஸ்தானங்களை தரிசனம் செய்த மூன்று தினங்களுக்குள் திருப்பதிக்கு பாத யாத்திரையை மேற்கொள்ள வேண்டும். காலில் கட்டாயமாக செருப்பு அணியக் கூடாது. அவரவர் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி, பஞ்சகச்சம் அணிந்து கொள்ளலாம். அரை குறை ஆடைகளைத் தவிர்க்கவும். நெற்றிக்கு இறை சின்னங்கள், ருத்திராட்சம் பூணூல், அரைஞாண் கயிறு போன்றவை நல்ல பாதுகாப்பை அளிக்கும். விடியற்காலை மூன்று மணியிலிருந்து காலை ஒன்பது மணி வரையிலும் பாத யாத்திரையை மேற்கொண்டு பின்னர் திருக்கோயில்கள், சத்திரங்கள், பால் விருட்சங்கள், யாத்திரை மண்டபங்களில் தங்கி ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மாலை ஆறு மணிக்கு யாத்திரையைத் தொடர்ந்து இரவு பத்து மணிவரை யாத்திரையை மேற்கொள்ளலாம். உணவு அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. முடிந்து மட்டும் காலை, மாலை தலைக்கு குளித்தல் நலம். இரவில் பாதுகாப்பான இடத்தில் தங்கி ஓய்வெடுத்துக் கொள்ளவும். படுக்கச் செல்லும் முன் கால்களை நன்றாக சுத்தம் செய்து கொண்டு தேங்காய் எண்ணெயை உள்ளங்கால்களில் தடவிக் கொள்ளவும். இதனால் அடுத்த நாள் பாத யாத்திரையில் எந்தவிதமான தொந்தரவும் ஏற்படாது. இந்த முறையில் திருப்பதி மட்டும் அன்றி சபரிமலை, ராமேஸ்வரம், காசி, கயை, கேதார்நாத் போன்ற எத்தகைய தூர தேசங்களுக்கும் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் பாத யாத்திரையை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டே இருக்கலாம். கீழ் திருப்பதியை அடைந்தவுடன் அலமேலு மங்கையை தரிசனம் செய்து படிகள் வழியாக ஏழு மலைகளைக் கடந்து திருமலையை அடைய வேண்டும். திருமலையில் வராக புஷ்கரணியில் நீராடிய பின்னர் ஏழுமலையானை பாதாதி கேசமாக அதாவது திருப்பாதங்களிலிருந்து கிரீடம் வரை தரிசனம் செய்து மகிழ வேண்டும். திரும்பி சென்னையை அடைந்தவுடன் திருக்கோயில்களில் அல்லது பள்ளிகளில் குறைந்தது 10,000 பெரிய லட்டுகளைத் தானம் செய்து திருப்பதி வெங்டாஜலபதிக்கு தங்களுக்கு இந்த மாபெரும் இறை பிரசாதத்தை வழங்கியதற்காக நன்றி செலுத்த வேண்டும். இவ்வாறு 10,000 பெரிய லட்டுகளை தானம் செய்ய முடியாதவர்கள் அங்காளம்மன், சப்த ஸ்தானங்கள் தரிசனத்திற்குப் பின் பஸ்ஸிலோ ரயிலிலோ திருப்பதியை அடைந்து அலமேலு மங்கை தரிசனத்திற்குப் பின் படிகளில் ஏறிச் சென்று வராக தீர்த்தத்தில் நீராடி எம்பெருமானை தரிசனம் செய்தும் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றலாம். அத்தகைய பிரார்த்தனைகளுக்குப் பின் மயிலை சப்தஸ்தானத்தில் ஒவ்வொன்றிலும் ஏழு பெரிய லட்டுகளை தானம் அளித்தால் போதுமானது. இதுவும் சித்தர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதே. குருமங்கள கந்தர்வா முப்பது ஆண்டு காலத்திற்கும் மேலாக மைலாப்பூர் சப்த ஸ்தான வழிபாட்டை தன்னுடைய நித்ய தினசரி பூஜைகளில் ஒன்றாக ஏற்று திருப்பதி, திருமலை தீர்த்தங்களை முறையாக முப்பது முறைக்கு மேலாக தரிசனம் செய்து அவ்வாறு கிடைத்த ஸ்ரீ ஏழுமலையான் லட்சுமி கடாட்ச சக்திகளை எல்லாம் ஒன்று திரட்டியே திருஅண்ணாமலையில் லட்சக் கணக்கான லட்டுகளை கிரிவலம் வரும் அடியார்களுக்கு எல்லாம் அளித்து அவர்கள் பிறவிப் பிணியைத் தீர்த்தார் என்பது ஒரு சிலரே அறிந்த ஆன்மீக இரகசியமாகும். மேற்கூறிய முறையில் ஒரு முறை ஏழுமலை ஈசனைத் தரிசனம் செய்தாலே குறைந்தது 30 லட்சம் பிறவிகள் மாயமாகும் என்றால் திருப்பதி ஈசனின் பெருமையை நவிலவும் இயலுமோ ? திருப்பதி பாதயாத்திரை, திருமலை பாத யாத்திரை, திருப்பதி திருமலை தீர்த்த யாத்திரை என்ற ஒவ்வொரு திருத்தல யாத்திரையிலும் லட்சக் கணக்கான முறைகள் உண்டு. இங்கு சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களால் அருளப்பட்ட இரு யாத்திரை முறைகள் அனைவராலும் எக்காலத்தும் நிறைவேற்றக் கூடிய எளிய யாத்திரை முறையாகும்.


ஸ்ரீசத்யசாய்பாபா

பகவான் ஸ்ரீசத்யசாய்பாபாவின் இடது கன்னத்தில் ஒரு மச்சம் இருக்கும். இந்த மச்சத்தைப் பற்றிய தெய்வீக விளக்கத்தை நம் சற்குருவிடம் வினவியபோது நம் அடியார்கள் பெற்ற பதிலை இங்கு அளிக்கிறோம். மகான்களுக்கு உடல் என்ற ஒன்று இல்லை என்பதே உண்மை. இருந்தாலும் இந்த பூமியில் தோன்றிவிட்டால் அதுவும் மக்களை இறை பக்தர்கள் ஆக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் சதாசர்வ காலமும் பாடுபடும் உத்தம ஞானிகள் ஏதாவது ஒரு உடல் தோற்றத்தைக் காண்பித்தே ஆக வேண்டும் என்ற காரணத்தால் ஒவ்வொரு மகானும் ஏதாவது ஒரு தத்துவத்தைக் குறிக்கும் ஒரு உடலுடன் நம் பூமியில் உலவி வருகிறார்கள் என்பதே தெய்வங்களாய் நடமாடிய காஞ்சி பரமாச்சாரியார், இராமலிங்க அடிகளார் போன்ற மகான்களின் உடல் இரகசியமாகும். இம்முறையில் பூமியில் நடமாடும் மகான்களுடன் அவர்கள் மேல் அன்பைப் பொழியும் பல அடியார்களும் உடன் வருவதுண்டு. கன்யாகுமரியில் மாயம்மா என்ற உத்தம மகரிஷி உடலெடுத்து வந்தபோது அவரைச் சுற்றி தேவர்கள் நாய்கள் வடிவில் தொடர்ந்ததும், போடா சுவாமிகள் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அமர்ந்திருந்தபோது விண்ணுலக தேவர்கள் எல்லாம் எங்கோ தொலை தூரத்தில் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு, மிகவும் பணிவுடன் ஈக்கள் வடிவம் கொண்டு அவரைச் சுற்றி சுற்றி பவனி வந்து வணங்கியதையும் நம் சற்குரு விவரிக்கக் கேட்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்துள்ளோம் அல்லவா ? அதே போல ஸ்ரீசத்ய சாய்பாபாவுடன் பல முற்பிறவிகளில் அவருடைய சீடராகத் துலங்கிய ஒரு பெண்மணி இப்பிறவியில் அவருடன் நெருங்கித் தொடர்வதற்காக ஸ்ரீபாபா அவருக்கு அளித்ததே மச்சம் என்ற அணிகலனாகும். எனவே திருமணமாகாத பெண்கள், திருமணமான பெண்கள், தாய் தந்தைகளை இழந்து அநாதையாக இருக்கும் பெண்கள், தாய் தந்தையர், கணவன் இருந்தும் பாதுகாப்பு இல்லாமல் தனியே வாழும் பெண்கள் போன்ற அனைவருக்கும் உரிய பாதுகாப்பை அளிப்பதே மச்ச வடிவில் ஸ்ரீசத்யசாய்பாபாவின் இடது கன்னத்தை அலங்கரிக்கும் மச்ச வடிவ சத்ய சாயினி என்ற பெண் அடியார் ஆவார். இவ்வாறு மச்சத்துடன் துலங்கும் படத்தின் மேல் மச்சத்தில் ஒவ்வொரு மூன்றாம் வளர்பிறை நாள் அன்று தங்கள் கையால் அரைத்த சந்தனம், சுத்தமான குங்குமப் பொட்டிட்டு வணங்கி வந்தால் பெண்கள் எங்கிருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உரிய பாதுகாப்பைப் பெறுவார்கள் என்பது உறுதி. வளர் பிறை மூன்றாம் திதி நாள் முதல் பௌர்ணமி வரை தொடர்ந்த வழிபாடு காலையிலோ மாலையிலோ நிறைவேற்ற வேண்டும் என்பது அவசியம். இவ்வாறு இடது கன்னத்தில் மச்சம் உடைய ஸ்ரீசத்யசாய் பாபாவின் படம் கிட்டாமல் போனால் தங்கள் இஷ்ட தெய்வமான எந்த படத்திற்கும் அல்லது விக்ரஹத்திற்கும் இடது கன்னத்தில் இவ்வாறு அரைத்த சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரித்தலும் சிறப்பே.
ஆண்கள் இயற்றும் இத்தகைய வழிபாட்டால் குடும்ப ஒற்றுமை பெருகும். பிற பெண்களை சகோதரிகளாய் மதிக்கும் பண்பு சிறிது சிறிதாக மலரும், வளரும். ஆண் பெண் யாராக இருந்தாலும் தொடர்ந்த வழிபாட்டால் பால் உணர்வு மறைந்து இறை பக்தி தலை தூக்கும். வழிபாட்டின் போது ஸ்ரீசம்பந்தர் இயற்றிய பந்து சேர் விரலாள் என்று தொடங்கும் தேவாரப் பாடலை இசைத்தல் நலம். கீழ்க்கண்ட இருவரி துதியை ஓதி வழிபடுதலும் நலமே.
ஹரஹர மங்களம் சத்யசாயினி
ஹரஹர மங்களம் சத்யசாயினி

 

திருத்தல யாத்திரை தொடரும் ...

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam