ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
ஸ்ரீஆனந்தவல்லி அம்மன், பழையூர் சிவாலயம், பெருகமணி. பெண்களில் பலரும் இரத்த சோகையால் வருந்துகின்றனர். மாதம் இருமுறை மருதாணி அரைத்து கைக்கு இட்டுக் கொண்டு இத்தல அம்மனை அடிப் பிரதட்சணமாக வலம் வந்து வணங்கினால் சோகை நோய்கள் நீங்கும். உடலில் தோன்றும் வலி குறையும்.
விருந்து கண்களுக்கு மட்டும் அல்ல, காதுகளுக்கும்தான்.
ஸ்ரீஅகத்தீஸ்வரர், பழையூர், பெருகமணி, திருச்சி கரூர் சாலை. மரக் குதிர்களில் அரிசி, நெற்மணிகளை வைத்துப் பயன்படுத்துவது நலமாகும். உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் பூச்சிகள் வராமல் பாதுகாப்பதும் மரக் குதிர்களின் தெய்வீகத் தன்மையாகும். உணவுப் பஞ்சம் வராமல் காப்பது நெற்குதிர்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் இத்தல ஈசனை வணங்கி நெற்குதிர்களை அமைப்பது நலம்.
ஸ்ரீசண்டிகேஸ்வரர், ராச்சாண்டார் திருமலை, திருச்சி. தந்தையின் எதிர்பாராத மறைவால் அல்லது தந்தையின் தவறான போக்கால் பல குழந்தைகள் தங்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விடும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு பெற்றோர்களை நம்பி இருக்கும் குழந்தைகளுக்கு நல்வழி காட்டுவதற்காகவே சிவத் தலங்களில் சண்டேச மூர்த்திகள் எழுந்தருளி உள்ளார்கள். இந்த மூர்த்தியின் முன் அமைதியாக அமர்ந்து தங்கள் மனக் குறைகளை மனம் விட்டு கூறி அழுதால் எத்தகைய துன்பங்களையும் நிவர்த்தி செய்து காப்பார். கேளுங்கள் தரப்படும்.
ஸ்ரீஆதிமூல பெருமாள் திருத்தலம், நத்தம். திருச்சி லால்குடியிலிருந்தும் புள்ளம்பாடியிலிருந்தும் சென்றடையக் கூடிய திருத்தலம். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நத்தமாங்குடி என்ற ஊருக்கு செல்லும் பேருந்து மூலமாகவும் செல்லலாம். எத்தகைய கொடுமையான பாவச் செயல்களை செய்திருந்தாலும் அத்தவறுகளுக்காக மனதார வருந்தி இந்த பெருமாள் மூர்த்தியிடம் முறையிட்டால் அவர்கள் வேதனைகளுக்கு செவி சாய்க்கும் கருணை தெய்வம்.
லட்சுமி தீர்த்தம், நத்தம் பெருமாள் தலம், புள்ளம்பாடி அருகே, திருச்சி. கஜேந்திரன் என்னும் யானைக்கு மோட்சம் அளித்த தலம். குறைந்தது ஆயிரம் பிறவிகள் பெருமாளுக்கு உன்னத சேவை செய்தவர்களே இந்த லட்சுமி தீர்த்தத்தை தரிசக்க இயலும் என்றால் மூலவரின் பெருமையை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். அஷ்டமி திதிகளில் இந்த குளக் கரையில் தர்ப்பணம் அளித்து வெங்காய தோசை தானம் அளித்து வந்தால் முன்னோர்களிடமிருந்து வர வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும்.
பொதுவாக மூன்று நதிகளின் சங்கமத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறோம். இவ்வாறு நத்தம் ஸ்ரீஆதிமூலப் பெருமாள் உறையும் நத்தம் திருத்தலம் அருகே அமைந்துள்ள திரிவேணி சங்கமமே இங்கு நீங்கள் காணும் நதி முக்கூடலாகும்.
மாதப் பிறப்பு தினங்களிலும் தங்கள் மூதாதையர்களின் திவச நாட்களிலும் இங்கு தர்ப்பணம் அளித்து நூலாடைகளைத் தானமாக அளித்தலால் வர வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வசூலாகும் கடன் பாக்கியில் கால் பகுதியை நத்தம் பெருமாள் கோயிலில் அன்னதான கைகங்கர்யத்திற்கு செலவிடுவது அவசியம்.
ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயம், சிறுமயங்குடி. திருச்சி லால்குடியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் லால்குடி செம்பரை சாலையில் உள்ளது. பொதுவாக வீட்டு மனைகள், குடியிருக்கும் வீடுகள் சதுரம் அல்லது செவ்வகம் வடிவில் இருப்பதே சிறப்பு. ஆனால், தற்காலத்தில் பலரும் இந்த விதிக்கு மாறாக வசிக்கும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். அத்தகையோர் சிறுமயங்குடி ஈசனை வணங்கி உளுத்தம்பருப்பு வடை 100 வடைகளுக்கு குறையாமல் தேங்காய் சட்னி சேர்தது தானமாக அளித்தலால் வடிவங்களால் வரும் வேதனைகள் தணியும்.
ஸ்ரீகன்னி மூலை கணபதி, பின்னவாசல், லால்குடி. ஜாதகத்தில் ஒன்பதாம் இடத்தில் பிரகஸ்பதி இருந்தால் அத்தகைய பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள் என்ற ஒரு கருத்து மக்களிடையே நிலவுகிறது. இதற்கு பின்னால் ஜோதிட விளக்கங்கள் உண்டு. ஆனால், அவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்வதை விட ஒன்பதாம் இடத்தில் குரு ஜாதக அம்சம் உள்ள பெண்கள் பின்னவாசல் கன்னி மூலை கணபதியை வணங்கி பஞ்சு திரி தீபங்கள் குறைந்தது ஒன்பது ஏற்றி வழிபடுவதால் நலமடைவர்.
ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீகைலாசநாதர் திருத்தலம், பின்னவாசல், லால்குடி. மூன்றாம் பிறை தரிசன நாட்களில் இத்தல தட்சிணா மூர்ததியை வணங்கி புதுப் பூணூல் அணிந்து லிங்காஷ்டகம் ஓதி வந்தால் குருவின் மேல் அவநம்பிக்கை தோன்றாது.
ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ய சுவாமி. பின்னவாசல், லால்குடி. இடது கை பழக்கம் உள்ள குழந்தைகளை இத்தலத்திற்கு அழைத்து வந்து அவர்கள் கையால் அரைத்த சந்தனத்தை சுவாமிக்கு அளித்து வணங்கினால் இடது கைப்பழக்கம் நாளடைவில் சரியாகும்.
ஸ்ரீதுர்கை அமமன், பின்னவாசல் சிவத்தலம், லால்குடி. தயிர் சாதத்துடன் எலுமிச்சை ஊறுகாய் தானமளித்து இத்தல துர்கை தேவியை துதித்து வந்தால் உடம்பில் ஏற்படும் தடிப்புகள் மறையும். நகங்களில் அழுக்கு சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
நவகிரக மூர்த்திகள், ஸ்ரீகைலாசநாதர் திருததலம், பின்னவாசல், லால்குடி. சுத்தமான நல்லெண்ணையால் இத்தல நவகிரக மூர்த்திகளுக்கு சனிக் கிழமைகளில் காப்பிட்டு வணங்கி வந்தால் சிறுவயதில் ஏற்படும் தலை சொட்டை, இளநரை போன்ற நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம். வருமுன் காப்பதே நலம்.
திருஅண்ணாமலையில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி நரம்பு சதையுடன் கூடிய மானிட சரீரத்தில் காட்சி அளிப்பது போல சதுர கிரி மலையில் அஷ்ட பைரவ மூர்த்திகள் அவ்வப்போது பைரவ உருவில் காட்சி தருவது உண்டு. இங்கு நீங்கள் காண்பது எட்டு பைரவ மூர்த்திகளில் மூன்று பைரவ மூர்த்திகளின் மிக மிக அபூர்வமான பைரவ தேவ தரிசனம். ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் கட்டளையின் பேரில் அடியார்கள் சிலர் சதுரகிரிக்கு மேற்கொண்ட தெய்வீக யாத்திரையில் அவர்களுக்கு கிடைத்த குரு பிரசாதமே இந்த இறை மூர்த்திகளின் தரிசனம்.
ஸ்ரீகருப்பண்ண சுவாமி, சதுரகிரிமலை, மதுரை அருகே. வேதங்கள் பல யுகங்களில் பூமியில் பல்வேறு பகுதிகளில் மலை வடிவில் தோன்றியுள்ளன. அதில் ஒன்றே திருக்கழுக்குன்றமாகும். மற்றொன்று சதுரகிரி மலையாகும். பக்தர்களுக்கு வரக் கூடிய பிரச்னைகளைத் தீர்த்து அவர்கள் இடர்களைக் களையும் மலையே சதுரகிரி மலையாகும். அபூர்வமான மூலிகைகள் நிறைந்த மலை. இன்றும் பல அவதார மூர்த்திகளை மனித வடிவில் தரிசிக்கக் கூடிய அபூர்வமான தலம். தங்கள் கையால் அரைத்த சந்தனத்தால் கருப்பண்ண சுவாமிக்கு காப்பிட்டு பிரார்த்தித்தால் காணாமல் போன மனிதர்கள் பொருட்கள் பற்றிய தகவல்கள் கிட்டும்.
ஸ்ரீசுந்தர மகாலிங்க சுவாமி, சதுரகிரி, மதுரை அருகே. மிகவும் தொன்மையான சுயம்பு மூர்த்தி. அமாவாசை, மாதப் பிறப்பு, சிவராத்திரி என அனைத்து விசேஷ நாட்களிலும் யாத்திரை செய்து வழிபடக் கூடிய கண் கண்ட தெய்வம். குறிப்பாக வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டங்களை சந்திப்போர்க்கு அருளும் தெய்வம் இவர். குறைந்தது 12 படிகள் அரிசியை சமைத்து தங்கள் ஊரிலேயே உள்ள ஆலயங்களில் ஸ்ரீசுந்தர மகாலிங்க சுவாமி தியானத்துடன் அன்னதானம் நிறைவேற்றி வந்தால் வியாபாரிகள் நலம் அடைவர்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தி, திருமழபாடி சிவாலயம். வாராக் கடன்கள் வசூலாக அனுகிரகம் அருளும் மூர்த்தியே இத்தலத்தில் உறையும் தென்முகக் கடவுள் ஆவார். வெள்ளிக் கிழமைகளில் இத்தலத்தில் அம்பிகை சன்னதிக்கு எதிரே உள்ள லட்சுமி தீர்த்தத்தில் நீராடி தட்சிணா மூர்த்தியை பிரார்த்தித்து வெல்லம் கலந்த கடலை மிட்டாய்களை ஏழைக் குழந்தைகளுக்கு தானம் அளித்து வந்தால் நியாயமான கடன்கள் வசூலாகும்.
திருமழபாடி கொள்ளிடக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருத்தலம் எத்தகைய கொடிய உடல் மன வியாதிகளுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடிய அற்புத தலமாகும். நேர்த்திக் கடன்களை மறந்து விட்டால் நிச்சயம் அதற்காக ஒரு பிறவி எடுத்து அதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பது இறை நியதி. எனவே இத்தலத்தில் உள்ள பலி பீடத்தில் உப்பும் மிளகும் இட்டு சனிக் கிழமைகளில் வளர் சந்திர ஹோரையில் பிரார்த்தித்து வந்தால் மறந்த நேர்த்திகள் நினைவுக்கு வரும்.
ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீவைத்தியநாத சுவாமி சிவாலயம், திருமழபாடி. அறிந்தோ அறியாமலோ திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பட்டுப் புடவைகளை அணிந்து அதனால் பல வேதனைகளுக்கு உள்ளானவர்கள் இத்தல லட்சுமி தேவிக்கு ஒன்பது கஜ பட்டுப் புடவைகளை அளித்து முழுத் தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டால் மாங்கல்ய தோஷங்கள் விலகும்.
ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி, திருமழபாடி. சிலருக்கு யாரைப் பார்த்தாலும் எதைக் கண்டாலும் அச்சத்தால் நடுங்கி உடம்பெல்லாம் வியர்த்து விடும். இத்தகையோர் இத்தல நந்தி மூர்த்திக்கு மஞ்சள் நிறமுள்ள மணமுள்ள மலர் மாலைகளை அணிவித்து வணங்கி வந்தால் நல்ல மனோ தைரியத்தைப் பெறுவார்கள். ஆனால், தொடர்ந்த வழிபாடு அவசியம். சோழர்கள் காலத்தில் படைவீரர்கள் இந்த நந்தி மூர்த்தியை வணங்கித்தான் வீரம் பெற்றார்கள்.
ஸ்ரீஜுரஹரேஸ்வரர், திருமழபாடி. இப்பூவுலகில் முதல் முதலில் எழுந்தருளிய லிங்க வடிவ ஜுரஹரேஸ்வர மூர்த்தி இவரே. இதுவரை வந்துள்ள இனி வரப்போகும் அனைத்து கொடுமையான இனந் தெரியாத நோய்களைக் களையும் அற்புத நோய் நிவாரண மூர்த்தி. செவ்வாய்க் கிழமைகளில் அல்லது செவ்வாய் ஹோரை நேரத்தில் குறைந்தது 21 இளநீர் அபிஷேகம் நிறைவேற்றி பிரார்த்தித்து வந்தால் நலம் பெறுவர்.
ஸ்ரீசுந்தர மூர்த்தி நாயனார், திருமழபாடி சிவத்தலம். குழந்தைகள் குறும்பு செய்வது இயற்கையே. ஆனால், அதுவே தாங்க முடியாத அளவிற்கு போகும்போது பெற்றோர்கள் அதுகுறித்து கவலைப்படுவது இயற்கையே. அத்தகையோர் இத்தலத்தில் சுந்தர மூர்த்தி நாயனாரை வணங்கிப் பிரார்த்தித்து ஜீனி கலந்த வெண்ணெய் குழந்தைகளுக்கு தானமாக வழங்குவதால் குழந்தைகளின் முரட்டுத் தனமும் குறும்பும் குறையும். பெரியவர்களின் கோபமும் தணியும்.
அன்னமாம் பொய்கை, ஸ்ரீமாற்றுரை வாதீஸ்வரர் திருத்தலம், திருவாசி. ஒரு லட்சம் மக்களுக்கு அன்னதானம் அளித்த புண்ணிய சக்தியைப் போல் ஒரு லட்சம் மடங்கு புண்ணிய சக்தியால் உருவானதே அன்னமாம் பொய்கை. எத்தகைய உணவுக் குற்றங்களையும் களையக் கூடியது. ஹோட்டல் உரிமையாளர்கள், உணவு விடுதிகள் நடத்துவோர், பணியாளர்கள் அவசியம் வணங்கி வழிபட வேண்டிய தீர்த்தம். அலர்ஜி நோய்களுக்கும் நிவாரணம் பெறலாம்.
ஸ்ரீகன்னி மூலை கணபதி, திருவாசி. வாக்கு, பேச்சு சம்பந்தமான குறைபாடுகளைக் களைவதே திருவாசி திருத்தலமாகும். திக்கு வாய்க் குழந்தைகளுக்கு, பேச்சு சரிவராத குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளைக் களைய இங்குள்ள பேச்சி அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் நிறைவேற்றி வருதல் நலம். தாமே அரைத்த மஞ்சள் பொடியால் கன்னி மூலை கணபதிக்கு அபிஷேகம் இயற்றி சாமந்திப் பூ மாலை அணிவித்து வியாழக் கிழமைகளில் வழிபட்டு வந்தால் உடலில் தோல் நோய்களின் காரணத்தால் தடைபட்ட திருமணங்கள் நிறைவேறும். கரடி சித்தர் தினமும் இங்குள்ள அன்னமாம் பொய்கையில் நீராடி பாலாம்பிகையைத் தொழுது பெண்களுக்கு வரும் நோய்கள் நிவாரணம் பெறுவதற்காக பிரார்த்தித்து வருகிறார் என்று சித்தர்கள் அருளியுள்ளார்கள். பாக்கியம் உள்ளவர்களுக்கு கரடி சித்தரின் தரிசனம் ஏதாவது உருவில் கிட்டும். இத்தலம் பற்றிய எமது வீடியோவில் கரடி சித்தரின் உருவம் பதிந்துள்ளது என்பது ஒரு வியப்பான ஆன்மீக இரகசியம் ஆகும்.
பொதுவாக மேற்குப் பார்த்த அம்பிகை மூர்த்திகளுக்கு சக்தி அதிகம். எனவே திருவாசி திருத்தலத்தில் மேற்குப் பார்த்து எழுந்தருளி உள்ள ஸ்ரீபாலாம்பிகைக்கு எதிரே சக்தி கணபதியை அமர்த்தி அம்பிகையின் அருட் சக்தி பிரவாகத்தை சாதாரண மக்களும் பெறும் வகையில் நிர்மாணித்தவரே கரடி சித்தர் ஆவார். அவர் ஏற்படுத்திய சக்தி மூர்த்தமே இந்த சக்தி கணபதி ரூபமாகும். அற்புத வரசக்தி மூர்த்தி.
ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி, திருவாசி திருத்தலம். அருணகிரி நாதர் திருப்புகழ் பாடுவதற்கு முன்னர் தன்னுடைய வாசியில் உள்ள அணிமாகுறை என்ற தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக வழிபட்டமூர்த்தியே இத்தல சுப்ரமண்ய சுவாமி ஆவார். பணம், பதவி, அந்தஸ்து காரணமாக குடும்பத்தில் மன அமைதி இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு சமாதானத்தை அளிக்கக் கூடிய அனுகிரக மூர்த்தி. செவ்வாய்க் கிழமைகளில் 12 இறை அடியார்களுக்கு முழு வாழை இலையில் அன்னதானம் அளித்தல் நலம்.
ஸ்ரீபெண்டாட்டி ஆட்டி தேவி. திருவாசி ஸ்ரீபாலாம்பிகை சன்னதி பிரகாரத்தில் அருள்பாலிக்கும் இத்தேவி பெண்டாட்டி ஆட்டி என்று சித்தர்களால் புகழப்படும் பத்தினி தேவி ஆவாள். விவாகரத்து நிலையில் உள்ள குடும்பச் சீர்கேடுகளைக் கூட களைய வல்ல அற்புத அனுகிரக தேவி இவள். ஸ்ரீபாலாம்பிகையை அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து ஏழை சுமங்கலிகளுக்கு ஒன்பது கஜ புடவைகளைத் தானமாக வழங்கி வந்தால் குடும்ப ஒற்றுமை மிகும்.
திருநூற்றுத் தூண்கள், விபூதித் தூண்கள் என்று அழைக்கப்படும் இந்த அபூர்வ தூண்கள் அமைந்திருக்கும் திருவாசித் தலம் மனிதர்களின் கேள்விக் குறியான வாழ்க்கையை சீர்செய்யும் திருத்தலமாகும். உடல் பலம், பண பலம், ஆள் பலம் என்று பல பலங்களுடன் கூடி இருக்கும் பல பெரிய மனிதர்களின் வாழ்க்கையும் சில சமயம் கேள்விக் குறியாக விடுகிறது. அதையும் நிவர்த்தி செய்யக் கூடியதே திருநூற்றுத் தூண்களின் வழிபாடாகும்.
ஸ்ரீசஹஸ்ரலிங்கம், திருவாசி திருத்தலம். மிகவும் சக்தி வாய்ந்த தொன்மையான சஹஸ்ர லிங்க மூர்த்தியே திருவாசி பெருமான் ஆவார். பொதுவாக, ஒரு சகஸ்ர லிங்க மூர்த்தியை வழிபட்டால் ஆயிரம் லிங்க மூர்த்தியை வழிபட்ட பெரும் பலன் கிடைக்கும் என்று கூறுவார்கள். ஆனால், திருவாசி சஹஸ்ர லிங்க மூர்த்தியின் ஒவ்வொரு ஆரமுமே ஒரு சஹஸ்ர லிங்கத்திற்கு ஈடானது என்றால் இதன் பெருமையை எப்படி வார்த்தைகளால் விளக்க முடியும் ?
ஸ்ரீபாலாம்பிகை உடனுறை ஸ்ரீமாற்றுவாதீஸ்வரர் திருத்தலம், திருவாசி. குழந்தைகளுக்கு வரக் கூடிய பாலாரிஷ்ட நோய்களை களையக் கூடிய சிசு நோய் நிவாரணத் தலம் இது. சிறு குழந்தைகளுக்கு வரும் வலிப்பு, மாந்தம், சீதபேதி, கக்குவான், இருமல், உடல் கனை, இளைப்பு போன்ற அனைத்து நோய்களும் எளிதில் நிவாரணம் ஆகும். செவ்வாய்க் கிழமைகளில் தக்காளி பிரிஞ்சி தானம் குறைந்தது ஒன்பது பொட்டலங்கள் அளித்தல் சிறப்பு.
சிவா விஷ்ணு பிரம்மா என மும்மூர்த்திகளும் அருளும் உத்தமர் கோயில் திருத்தலம், திருச்சி. தற்காலத்தில் மிகுந்து வரும் காமக் குற்றங்களால் பாதிக்கப்பட்டு சீர்குலைந்த எத்தனையோ குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய திருத்தலம். மாங்கல்ய சரடு, வெற்றிலை பாக்கு, பழம், பூ, மஞ்சள், வளையல், தேங்காய், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களை வியாழக் கிழமைகளில் குறிப்பாக நவராத்திரி தினங்களில் தானம் அளித்தல் நலம்.
தற்காலத்தில் பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் பெரும்பாலும் மறைந்து விட்டது என்றே கூறலாம். இதனால் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய எத்தனையோ மன, உடல் வள சக்திகள் கிடைக்காது போய் விடுகின்றன. மேலும், இதனால் குடும்பத்தில் பல மன வேற்றுமைகள் உருவாகி அமைதியற்ற குடும்ப வாழ்க்கையே எங்கும் நிலவுகின்றது. இந்நிலைக்கு ஓரளவு பிராயசித்தம் அளிக்க வல்லதே உத்தமர் கோயிலில் இயற்றும் தைல தான வழிபாடாகும். கரிசலாங்கண்ணி, செம்பருத்தி, மருதாணி போன்ற தைலங்களை இங்கு கன்னிப் பெண்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் தானமாக அளித்து வந்தால் மனைவி கணவன்மார்களிடையே நிலவும் சந்தேகங்கள் விலகும். மனத் தெளிவு கிட்டும். படிக்கும் குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் செல்லும். உள்ளங்கைகள், கால்களுக்கு மருதாணி இட்டு அடிப் பிரதட்சணம் வருவதற்கு உகந்த தலமே உத்தமர் கோயிலாகும். உத்தமர் கோயில் என்றால் சிவ, விஷ்ணு, பிரம்மாவின் உத்தமமான பக்தர்கள் இன்றும் அங்கப் பிரதட்சணமாக வலம் வரும் தலம் என்று பொருள். இதை குறைந்த பட்சம் அடிப் பிரதட்சிணமாக வலம் வந்தாலே அங்கப் பிரதட்சிணமாக வலம் வந்த பலனை அளிப்பதற்காக எத்தனையோ மகான்கள் இங்கே காத்திருக்கிறார்கள்.