கோடி ஆண்டுகள் தவம் செய்தாலும் ஒரு கோயில் தூணைப் புரிந்து கொள்ள முடியாது !!

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருக்கோயில் தூண்கள் மகிமை

நீங்கள் கடவுளைப் பார்த்ததுண்டா என்று யாராவது கேட்டால், அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்? அடியேன் கடவுளைப் பல முறை பார்த்தேன், பல முறை பார்த்து விட்டேன், கடவுள் விரும்பினால் இன்னும் பல முறை அவரை தரிசனம் செய்வேன், என்று நீங்கள் கூறலாம். எப்போது இந்த பதிலை நீங்கள் கூற முடியும்?

நீங்கள் திருஅண்ணாமலையை பல முறை தரிசனம் செய்திருந்தால், பல முறை திருஅண்ணாமலையாரை கிரிவலமாக வந்து வழிபட்டிருந்தால் நீங்கள் இந்த பதிலைக் கூற முடியும். காரணம், ஆதி மூலப் பரம்பொருளாம் இறைவன் மலை வடிவில் எழுந்தருளிய திருஅண்ணாமலையை தரிசனம் செய்த அனைவருமே கடவுளை நேரிடையாகத் தரிசனம் செய்தவர்கள்தான்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த திருஅண்ணாமலை திருத்தலத்தில் இறைவன் எந்த வடிவில் காட்சி தந்து அருளினான்? அடிமுடி காணாத அருட் பிழம்பாக, ஜோதிக் கனலாக, சுடர் பிழம்பாக, ஒளி விட்டுப் பிரகாசிக்கும், விண்ணையும் மண்ணையும், ஆகாயத்தையும் பாதாளத்தையும் இணைக்கும் தூண் வடிவில் ஓங்கி உயர்ந்து நின்றார் சுவாமி.  
எம்பெருமானின் ஒப்பற்ற, எல்லையில்லா இந்த ஒளி பிரவாகத்தைத் தன் திருக்கண்களில் பூரணமாக நிறைத்துக் கொண்ட பெருமாள் மூர்த்தியே திருச்சி அருகே மலையடிப்பட்டி என்னும் திருத்தலத்தில் (பண்டைய பெயர் திருஆலத்தூர்) ஸ்ரீரங்கநாத மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு திருஅண்ணாமலையாரின் அருளாசிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

எம்பெருமானின் எல்லையில்லாத ஜோதி சக்தியை பாமர மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் பெருங் கருணை கொண்ட விஷ்ணு மூர்த்தி தன்னுடைய திவ்ய நேத்ரங்களில் அருணாசல ஜோதியின் பேரொளியைத் தாங்கி அதை சாதாரண மனிதர்களும் பெருமளவிற்கு எளிமையான இறை சக்தியாக மாற்றி வழங்குகிறார்.

கமலக் கண்ணன் என்று பெருமாளை ஆழ்வார்கள் பாடி மகிழ்கிறார்கள், போற்றித் துதிக்கிறார்கள். செந்தாமரைக் கண்ணன், புண்டரீகாக்ஷ பெருமாள் என்று பெருமாளின் கண்கள் அத்துணை சிறப்புடன் புகழப்படுவதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரிகிறது அல்லவா? ஆம், எல்லையில்லாத இறைவனின் திருக் காட்சியைத் தன் கண்களில் நிறைத்துக் கொண்டு அழகிய மணவாளனாக விளங்கியதால்தான் பெருமாளுக்கு கண்ணன், கமலக் கண்ணன் என்ற அற்புத திருநாமங்கள் அமைந்தன.

இக்காரணம் பற்றியே திருஆலத்தூரில்அருள் புரியும் ரெங்கநாத அண்ணல் கண்ணிறைந்த பெருமாள் என்று சித்தர்களால் போற்றப்படுகிறார்.

ஒரு முறை நமது சிறுவனான வெங்கடராம சுவாமிகளை கோவணாண்டிப் பெரியவரான இடியாப்ப சித்த சுவாமிகள் இத்தலத்திற்கு அழைத்து வந்தார். ஒவ்வொரு வருடமும் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் பத்து நாட்களிலும் திருஅண்ணாமலையில் தனது குருநாதரான இடியாப்ப சித்தபிரானுடன் அன்னதான கைங்கர்யத்தை திருஅண்ணாமலையை கிரிவலம் அடியார்களுக்கு நிறைவேற்றி வந்தார் திரு வெங்கடராம சுவாமிகள். தனது ஒன்பதாவது வயதில் ஆரம்பமான இந்த அன்னதான வைபவம் பற்றி அடிக்கடி ஸ்ரீகுருமங்கள கந்தர்வா வெங்கடராம சுவாமிகள் குறிப்பிடுவது வழக்கம்.

முதன் முதலில் திருஅண்ணாமலையில் அன்னதான வைபவத்தை ஆரம்பிக்கும் முன்தான் மலையடிப்பட்டி திருத்தலத்திற்கு கோவணாண்டிப் பெரியவருடன் வருகை புரிந்தார். திருஅண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்திற்கு முதல் நாள் திருச்சி அருகே உள்ள திருஎறும்பூர் திருத்தல ஈசனை இடியாப்ப சித்தருடன் தரிசித்து விட்டு அத்திருக்கோயில் படிகளில் பெரிவரோடு சேர்ந்து அமர்ந்து கொண்டிருந்தான் சிறுவன்,

திருவெறும்பூர் திருத்தலத்தை முழங்கால் இட்டபடியே வலம் வந்து வணங்குவதால் கம்ப்யூட்டர் அறிவு விருத்தியாவது மட்டுமன்றி குரு நம்பிக்கையும் பல்கிப் பெருகும் என்பது உண்மையே. ஆனால், முழங்காலிட்டு வலம்வர முடியாத நிலையில் உடல் வியாதிகளோ, சூழ்நிலைகளோ அமைந்து விட்டால் அத்தகையோர் என் செய்வது என்று ஒரு முறை நம் சற்குருவை வினவியபோது நம் சற்குரு அளித்த பதிலோ, “உண்மையாகவே உன்னால் அவ்வாறு முழங்கால் பிரதட்சிணம் வர முடியாவிட்டால் இங்கு அளித்துள்ள பொருட்களை வறுத்து நன்றாக அரைத்து பொடி செய்து அவற்றை எறும்புகளுக்குத் தீனியாக திருவெறும்பூர் திருத்தலத்தில் இட்டு வருவதும் முழங்கால் பிரதட்சிணத்திற்கு இணையான பலனை அளிக்கக் கூடியதே,” என்று மனமுவந்து அருளினார்கள்.
1. கேழ்வரகு 2. கோதுமை 3. உளுந்தம்பருப்பு 4. துவரம்பருப்பு 5. பொட்டுக்கடலை 6. நிலக்கடலை அல்லது வேர்க்கடலை (நெய்யில் வறுத்து பொடி செய்து சேர்க்கவும்) 7. உப்பு (தேவையான அளவு) 8. சோன்பப்டி என்ற இனிப்பு வகை 9. பால்கோவா (பசும்பாலில் செய்வது சிறப்பே)
ஆனால், இவ்வாறு நம் சற்குரு அருளிய ஒரு பதிலை எழுத்தில் வடிக்கவே இத்தனை காலம் எடுத்துக் கொண்டது என்றால் இத்தலத்தின் மகிமையை வார்த்தைகளால் விளக்க முடியுமா என்ன ?

பெரியவர் திருஎறும்பூர் மலையைச் சுட்டிக் காட்டி, ”இதை ஒரு சாதராண மலை என்று சொல்லிட முடியுதுடா, இனி வரப்போகும் காலங்களில் உலகையே ஆளும் கம்ப்யூட்டர் துறைக்கு வழிகாட்டியாக அமைவது இந்த மலைதான். இதன் மகிமையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மனிதனை விட 2000 மடங்கு கம்ப்யூட்டர் துறையில் முன்னேறிய நிலையில் உள்ளவையே இங்கு உள்ள எறும்புகள். இந்த எறும்புகளின் மூளை ஆற்றலை எவராலும் புரிந்து கொள்ள முடியாது.”

” அவ்வளவு ஆற்றல் இந்த எறும்புகளுக்கு எப்படி வந்தது, வாத்யாரே?”

”எதுவுமே ஈஸியா வந்துடாது, நைனா, எந்த வித்தையும் பூர்வ ஜன்ம புண்ணியம் இருந்தால்தான் வரும். அந்த பூர்வ ஜன்ம புண்ணியத்தை சரியா ஒரு மனிதன் அடைவதற்கு அவனுக்கு வழிகாட்ட எவ்வளவோ திருத்தலங்கள் பூமியில் உண்டு. அதில் ஒரு திருத்தலம்தான் இங்கிருந்து கொஞ்ச தூரத்தில் உள்ள கண்ணாயிரமுடையார் திருத்தலம். (இத்தல ஈசனுக்கு திரு வாகீசர் என்ற நாமமும் பிரசித்தம்), இங்கே இருக்கிற எறும்புகள் எல்லாம் ஒரு காலத்தில் அந்த திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஈசனையும் பெருமாளையும் வேண்டித்தான் தங்கள் பூர்வ ஜன்ம பயனால் அற்புத மூளை ஆற்றலைப் பெற்றன.”

சிறுவனுக்கு உற்சாகம் கரை புரண்டது.

”ஒரே இடத்தில் சிவனும் பெருமாளுமே இருக்கிறார்களா?”

”ஆமாண்டா, கண்ணு. கண்ணாயிரமுடையார் என்ற திருநாமத்தைத் தாங்கி எம்பெருமான் ஈசனும். அவன் திவ்ய உருவத்தைத் தன் கண்களில் நிறைத்துக் கொண்டு அதன் காரணமாக கண்நிறைந்த பெருமாள் என்று பெயர் பெற்ற பெருமாள் மூர்த்தியும் ஒருங்கே உறையும் தலம்தான் திருஆலத்தூர் திருத்தலமாகும். (தற்போது இத்தலம் மலையடிப்பட்டி என்று அழைக்கப்படுகிறது), மிகவும் தொன்மையான திருத்தலம். இங்குள்ள பெருமாள் (திருச்சி) ஸ்ரீரங்கநாத பெருமாளுக்கே மூத்தவர் என்றால் அவருடைய பெருமை எப்படிப்பட்டது என்று பார்த்துக் கொள்.”

சிறுவனிள் கண்கள் அகலமாக விரிய பெரியவர் மேற்கொண்டு கூறிய விஷங்களை கேட்டுக் கொண்டிருந்தான். தான் காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடவில்லை என்பது கூட அவனுக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. காலையில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் காவிரி குளியில் முடித்து ஸ்ரீரெங்கநாதரின் தரிசனத்திற்குப் பின் நேரே திருவெறும்பூர் நடந்தே வந்து விட்டதால் நடுவில் உணவு ஏதும் சிறுவனுக்குக் கிடைக்கவில்லை.

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரி குளியல் நிறைவேற்றியவுடன் தினமும் நித்திய சூரிகள் என்று அழைக்கப்படும் பெருமாள் பக்தர்கள் அம்மாமண்டபம் சாலை வழியாக நடந்தே சென்று ஸ்ரீரெங்கப் பெருமாளைத் தரிசனம் செய்கிறார்கள் என்பது பெரியவர் சிறுவனுக்கு அளித்த திருவாய் மொழி. இது இன்றும் நடக்கும் ஆனந்த வைபவம். அத்தருணத்தில் அவ்வழியே செல்லும் மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் அவர்கள் காற்றுப்பட்டால் கூட எல்லையில்லா அனுகிரக சக்திகள் கிடைக்கும் என்பது உண்மை. எனவே, முடிந்த மட்டும் திருச்சி வாழ் மக்கள் இந்த தெய்வீக சந்தர்பத்தை பயன்படுத்தி நித்திய சூரிகளின் ஆசீர்வாதத்தைப் பெற்று உய்வடைய வேண்டுகிறோம்.

பெரியவர் சிறுவனை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் விரைவில் திருஆலத்தூருக்குப் புறப்பட்டார். அக்காலத்தில் தற்போது உள்ளது போல் தார் ரோடுகள் கிடையாது. கருங்கல் ஜல்லிகள் நிரவிய சாலைகளே பெரும்பாலும் இருந்ததால், சிறுவன் மிகவும் சிரமப்பட்டு கோவணாண்டிப் பெரியவருடன் நடந்து வந்தான். தற்போது வழங்கும் பெயர்களான துவாக்குடி, அசூர் என்ற ஊர்களின் வழியாக சிறுவனை அழைத்துக் கொண்டு பெரியவர் திருஆலத்தூரை அடைந்தபோது சிறுவன் மிகவும் களைப்படைந்து விட்டான். ஆனால், அந்நிலையிலும் பெரியவர் அத்திருத்தலத்தைப் பற்றி அளித்த விளக்கங்களை தன் மனதினுள் நிறைத்துக் கொண்டான்.

பெரியவர், ”ஒருவர் தன்னுடைய பூர்வ ஜன்ம புண்ணிய சக்திகளை முறையாகப் பெற வேண்டுமானால் இத்தல மூர்த்திகளை அவசியம் வழிபட்டாக வேண்டும்.

”கண்ணாயிர ஈசனை கண்களில் நிறைக்கவே எண்ணிறந்த வினைகள் எரிந்து சாம்பலாகுமே, என்று சிலக்காகித சித்தர் இத்தல ஈசனின் மகிமையை புகழ்ந்து பாடி உள்ளார். ஒரு மனிதனுடைய வினைகள் எரிந்து மறைந்தால் அவனுக்கு இறைவனுடைய காட்சி கிடைக்கும். அப்போது அவனுடைய கண்கள் இறை தரிசனத்திற்கான தகுதியைப் பெறும்,” என்று தொடர்ந்த பெரியவர் அத்தல மகிமைகளைப் பற்றி விளக்கிக் கொண்டே சென்றார்.

இருவரும் அத்திருக் கோயிலின் முன்னே ஒரு ஆலமர நிழலில் அமர்ந்து சற்று ஓய்வெடுத்தனர். பெரியவர் கூறிய இறை விளக்கங்களை கேட்டுக் கொண்டிருந்த சிறுவன் பல மைல்கள் நடந்து வந்த களைப்பில் அவர் மடியிலேயே படுத்துத் தூங்கிப் போய் விட்டான்.

திருஅண்ணாமலையில் சீரிய திருப்பணி

கண் விழித்துப் பார்த்தால் ....

திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் பெரியவர் அவன் எதிரே கையில் ஒரு பொட்டலத்துடன் மந்தகாசப் புன்னகையுடன் அமர்ந்திருந்தார். சிறுவன் ஏறக்குறைய ஐந்து நிமிடங்கள் கழித்துதான் இவ்வுலக நினைவுகளுக்கு மீண்டான். தான் எப்போது எப்படி திருஆலத்தூர் திருத்தலத்திலிருந்து திருஅண்ணாமலைக்கு வந்தோம் என்று ஒன்றும் புரியவில்லை. ஒரு வேளை திருஅண்ணாமலை என்பது கனவோ என்று தோன்றியது. ஆனால், அடுத்த நொடி அவன் வயிற்றில் எழுந்த அகோர பசி தான் முதல் நாள் முழுவதுமே ஒன்றுமே சாப்பிடவில்லை என்பதை எடுத்துக் கூறி தான் நனவுலகில்தான் இருக்கிறோம் என்பதை உறுதி செய்தது.

தன்னிலை அடைந்த சிறுவன் பெரியவர் கையில் இருந்த பொட்டலத்தைப் பார்த்தான். ஆம், இட்லிப் பொட்டலத்தைத்தான் பெரியவர் கைகளில் ஏந்தி இருந்தார். அதிலிருந்து சூடான இட்லி மணத்துடன் சட்னியின் நறுமணமும் கலந்து வீசி அவனுடைய அகோரப் பசியை பன்மடங்காக்கவே, ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அப்பொட்டலத்தை வாங்கிக் கொண்டு பிரித்துப் பார்த்தான்.
”ஆஹா, மல்லிகை பூ போன்ற அற்புதமான ஆறு இட்லிகள். தொட்டுக் கொள்ள வாய்க்கு ருசியான தேங்காய் சட்னி.!!

எறும்புகளின் தலைமைப் பீடம் திருஎறும்பூர் திருத்தலம்


சிறுவன் பரமானந்தம் அடைந்தான். இறைவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு இட்லிகளைச் சுவைத்துப் பார்த்தான். 60 இட்லிகளைச் சாப்பிட்ட மன நிறைவு. பெரியவர், ”ராஜா, இட்லி இன்னும் வேணுமா?” என்றார்.

சிறுவன், ”வாத்யார், ரொம்ப திருப்தி ஆயிடிச்சு. நீ வேண்டுமானால் சாப்பிடு,” என்று ரொம்ப தாராளமாகக் கூறினான். பெரியவர் மீண்டும் ஒரு முறை, “ராஜா, வேண்டுமானால் இன்னும் ரெண்டு இட்லி சாப்பிட்டுக்கோ, ஏனா, தீபத் திருவிழா ஆரம்பித்து விட்டால், சாப்பாடு எதுவும் கிடைக்குமோ, கிடைக்காதோ தெரியாது, இல்லையா,” என்று கூறினார். சிறுவனுக்கு இருந்த குசியில் பெரியவரின் வார்த்தைகைளின் பின்னால் இருந்த இரகசியத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இல்லாவிட்டால் இன்னும் 100 இட்லிகளை உள்ளே தள்ளி இருப்பான்.

பெரியவர் அதற்கு மேல் சிறுவனை வற்புறுத்தவில்லை. “சரி, ராஜா, உன்னிஷ்டம்...”

“சரி, சரி வந்த வேலையைக் கவனிப்போம்,” என்று கூறி ஒரு மூங்கில் கூடையையும், ஒரு தகரத்தையும் அவன் கைகளில் திணித்தார்.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கண்களை விழித்து, விழித்து பெரியவரையும், கூடையையும் மாறி மாறிப் பார்த்தான். இது ஏன், எதற்காக? என்ற கேள்விகள் அவன் பார்வையில் தொக்கி நின்றன. பெரியவர் விசாலமான புன்னகையுடன், ”சென்னையிலிருந்து புறப்படும் முன் உன்னிடம் சொன்னேனே. திருஅண்ணாமலையில் கார்த்திகை தீபத்தை ஒட்டி பத்து நாள் திருவிழா நடக்கும். அதில் அற்புதமான திருப்பணி உனக்கு காத்திருக்கிறது,” என்று ...

சிறுவன் அசடு வழிய, ”ஆமாம்… நீ சொன்னாய். வாத்யாரே, ஆனால், இதைப் பார்த்தால் ஏதோ கக்கூஸ் அள்ளுற கூடை, தகரம் மாதிரி இல்ல தெரியுது ....” என்று தயங்கி தயங்கி கூறினான்.

ஸ்ரீசக்கரம்
அம்மன் சன்னதி திருவில்லிபுத்தூர்

”கக்கூஸ் அள்ற மாதிரி இல்லேடா. கக்கூஸேதான். இந்த பத்து நாள் நமக்கு கக்கூஸ் அள்ற வேலைதான். ஏன்னா இந்த பத்து நாளும் எந்தெந்த லோகத்திலிருந்தோ சித்தர்கள் எல்லாம் திருஅண்ணமாலை தீபத்தை தரிசனம் செய்ய வருவார்கள். அந்த யோகிகள், மகான்கள், ரிஷிகள் எல்லாம் இந்த கிரிவலப் பாதையில் மலம் கழிப்பார்கள், இல்லையா? ”

“ஒரு சாதாரண மனிதனுடைய மலத்தை அள்ளுவதே பெரிய திருப்பணி என்றால் சித்தர்கள், ஞானிகளின் மலத்தை அள்ளுவது என்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம் ?” (மலம் அள்ளியே முக்தி பெற்ற மாரியின் வரலாற்றை நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம்),

“மேலும் திருஅண்ணாமலையில் ஆயிரம் மனிதர்களுக்கு அன்னதானம் செய்தால் ஆயிரத்தோராவதாக கட்டாயம் ஒரு சித்தர் அன்னதானம் பெற வேண்டும் என்பது திருஅண்ணாமலை திருத்தல தெய்வீக சட்டமாகும். இது அன்னதானத்திற்கு மட்டும்தான் ஏற்பட்ட சட்டம் என்று எண்ணாதே. இன்னும் எவ்வளவோ விஷயங்களுக்கும் இது பொருந்தும்.”

“அந்த முறையில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரும் பக்தர்களில் ஆயிரம் பேர் மலஜலம் கழித்தால் அதில் ஆயிரத்தோராவது நபராக ஒரு சித்தர் மலஜலம் கழித்து மக்களின் வினையைத் தீர்க்க திருவுள்ளம் கொள்கிறார் என்பது அருணாசல புராணம் தரும் விளக்கமாகும்.”

சிறுவனுக்கு பெரியவர் கூறும் வார்த்தைகளைக் கேட்க கேட்க ஒரு புறம் ஆனந்தமாக இருந்தாலும் மறுபுறம் “அந்த” திருப்பணியை நினைத்தாலே குமட்டிக் கொண்டு வந்தது. எப்படியாவது இதிலிருந்து விடுதலை பெற முடியுமா என்று யோசித்த சிறுவனுக்கு பளிச்சென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.

அதை வாய் விட்டு கேட்டும் விட்டான்.

”ஏன், வாத்யாரே, ஞானிகள், சித்தர்கள் எல்லாம் மல ஜலம் என்னும் உபாதிகளைக் கடந்தவர்கள். மனிதனாக இருக்கும் வரைதான் இவ்வாறு மல ஜலம் கழிக்கும் பிறவிகள் தொடரும், என்று அடிக்கடி சொல்வாயே. இப்போது ஞானிகளின் மலத்தை அள்ளு, என்று சொல்கிறாயே,” என்று ஒரு குறும்புப் புன்னகையுடன் கேட்டான்.

அதைக் கேட்ட பெரியவர் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு சிறுவனை முறைத்துப் பார்க்கவே சிறுவனுடைய சப்த நாடிகளும் அடங்கி விட்டன.

”ஏண்டா, இந்த திருப்பணி பிடிக்க வில்லை என்றால் சொல்லி விடு. தேவையில்லாமல் உன்னுடைய குருவி மூளையை வைத்துக் கொண்டு எங்களை சோதனை செய்ய நினைக்காதே. யோகிகள், ஞானிகள் எல்லாம் மல ஜலத்திற்கு அப்பாற்பட்டவர்கள்தான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர்களுக்கு நம்மைப் போல எலும்பும், சதையும் சேர்ந்த உடம்பு கிடையாது என்பதும் உண்மையே. அவர்கள் ஒளி உடம்பைப் பெற்றவர்கள். தேவ சரீரம் அவர்களுடையது. ஆனால், பூலோகத்திற்கு வரும்போது, அதிலும் திருஅண்ணாமலை கிரிவலத்திற்காக வரும்போது பூமியின் கர்ம விதிக்கு உட்பட்டு உடல் தாங்கி வர வேண்டும் என்பது எம்பெருமான் அருணாசல ஈசன் விதித்த விதி. இதில் யாருக்கும் விலக்கு கிடையாது.”

“எந்த லோகத்தைச் சேர்ந்த எந்த தேவனாக இருந்தாலும், அசுரனாக இருந்தாலும், அவதார மூர்த்திகளாகவே இருந்தாலும் இந்த நிபந்தனைக்கு உட்பட்டுதான் கிரிவலம் மேற்கொண்டாக வேண்டும். அவ்வாறு கிரிவலம் வரும்போது அவர்களும் மனிதர்கள், மிருகங்கள் போன்ற பூமி வாழ் ஜீவன்களுக்கு உரித்தான வினைகளான உணவு, நீர், உடை போன்ற வசதிகளை ஏற்று அதன் மூலம் பூமியில் உள்ள ஜீவன்கள் மேல் நிலை அடைய அனுகிரகத்தை வழங்கிச் செல்கிறார்கள். ”

”மனிதர்கள் மேற்கொள்ளும் இறைவழிபாடு சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், தெய்வங்களின், மகான்களின் வழிபாடு பொது நலத்திற்காக மேற்கொள்ளப்படுவது. இதை நன்றாக உணர்ந்து மனதில் பதிய வைத்துக் கொண்டால்தான் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படாது,” என்று தெளிவாக கூறி விட்டார்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட சிறுவன் மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல் அமைதி அடைந்து மௌனமாக பெரியரிவன் காலடியில் அமர்ந்து விட்டான்.

”உன்னால் முடியவில்லை என்றால் சொல்லி விடு, அடியேனே இந்தப் பொறுப்பை நிறைவேற்றி விடுகிறேன்,” என்று கடுமையான குரலில் சொல்லி சிறுவனின் கைகளில் இருந்த கூடையையும், தகரத்தையும் தரும்படிக் கையை நீட்டினார்.

சிறுவன் உஷாரானான். ”என்னை மன்னித்து விடு, வாத்யாரே. ஏதோ விவரம் தெரியாமல் பேசி விட்டேன்,” என்று ஒருவாறு நிலையைச் சமாளித்து பெரியவருடன் ”திருப்பணி”க்குத் தயாரானான்.

அப்போதெல்லாம் திருஅண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கிரிவல பாதையைச் சுற்றி நூற்றுக் கணக்கான கழிவறைகள் அமைக்கப்படும். மணல், சாம்பல் கொண்டு அவைகளைச் சுத்தப்படுத்தி பொது சுகாதாரக் கழிவறைகளில் சேர்க்க வேண்டும். இந்தத் திருப்பணியைத்தான் நமது சிறுவனான வெங்கடராம சுவாமிகள் நிறைவேற்றி வந்தார்.

தினமும் விடியற்காலையில் ஆரம்பிக்கும் திருப்பணி இரவு சூரியன் மறையும் வரையில் தொடர்ந்து நீடிக்கும். ஒவ்வொரு கூடையைச் சுமந்து செல்லும்போதும் அதிலிருந்து மலம், சிறுநீர் கசிந்து சிறுவனின் கண்கள், காதுகள், கை, கால்களில் எல்லாம் வழிந்தோடும். தாங்க முடியாத அந்த வாடையால் சிறுவன் பல முறை வாந்தியும் எடுத்து விடுவதுண்டு.

சிறுவன் மறுத்தாலும் பெரியவரும் அவ்வப்போது சிறுவனுடன் சேர்ந்து அந்தத் திருப்பணியில் ஈடுபட்டு அவனுக்கு உற்சாகம் ஊட்டுவார். மாலை திருப்பணி முடிந்ததும் தன் கையாலேயே சிறுவனுக்கு பெரியவர் குளிப்பாட்டி விடுவார். சந்தன மணம் கமழும் சோப்பால் சிறுவனைக் குளிக்க வைத்து புத்தாடைகள் அணிவிப்பார். தன்னுடைய கோவணத்திலிருந்து சிறுவன் அதுவரை கண்டிராத அற்புத செண்ட்டுகளை அவன் மேல் தெளித்து நறுமணத்தைப் பரப்புவார்.

ஆனால், எவ்வளவுதான் குளித்து, செண்ட்டைப் போட்டுக் கொண்டாலும் சிறுவனால் ஒரு வாய் உணவு கூட ஏற்க முடியாமல் வருந்தினான். ஒரு பிடி சாதத்தை எடுத்து வாயில் வைத்தால் கூட அது குடலை புரட்டிக் கொண்டு வந்தது. உடல் சோர்ந்து அப்படியே பெரியவரின் மடியில் படுத்து உறங்கி விடுவான்.

இரவு எந்த உணவையும் ஏற்கா முடியாமல் போனாலும் கூட அதிகாலையிலேயே எழுந்து கூடையை எடுத்துக் கொண்டு கிரிவலப் பாதைக்கு சென்று விடுவான். திருக்கார்த்திகை தீபத்தின் பத்து நாட்களும் இப்படித்தான் உணவு என்பது என்னவென்று தெரியாமல் கழிந்தன. அந்த பத்து நாட்களில் சிறுவன் ஆயிரக் கணக்கான கூடைகளில் கிரிவல அடியார்களின் மலத்தை சுமந்து சென்று அற்புத திருப்பணியை நிறைவேற்றி முடித்தான். திருக்கார்த்திகை தீப தரிசனம் நிறைவு செய்தவுடன் பெரியவர் சிறுவனை ஆரத் தழுவிக் கொண்டு, “இந்த சின்ன வயசுல வைராக்யமாக உன்னுடைய கடமையை நிறைவேற்றி விட்டாரய். அதற்காக அண்ணாமலையார் உனக்கு என்ன வெகுமதி தரக் காத்துள்ளார் என்பதை நீயே அனுபவ பூர்வமாக வரும் நாட்களில் பார்த்துத் தெரிந்து கொள்,” என்று கூறி ஒரு அர்த்தபுஷ்டியுடன் கூடிய புன்னகையை உதிர்த்தார்.

சிறுவன் பெரியவரின் வார்த்தைகளின் அர்த்தத்தை உணர்ந்தபோது அவன் இந்த உலகத்தில் இல்லை. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட பரவச நிலை அவனைத் தழுவியது. அப்படி என்ன ஆனந்த நிலையை அந்தத் திருப்பணி அவனுக்கு அளித்தது? திருஅண்ணாமலை திருப்பணிக்குப் பின் எந்தக் கோயிலுக்குச் சென்று அக்கோயிலில் உள்ள தூணைப் பார்த்தாலும் அத்தூணில் உள்ள தெய்வமோ, சித்தரோ, தேவதையோ, இயந்திரமோ தன்னுடைய சுயமான தெய்வீக ஒளி வடிவில் காட்சி கொடுத்தது. தன்னைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அதாவது அது எந்த தவம் இயற்றி அந்தக் குறிப்பிட்ட கோயிலில் அந்தக் குறிப்பிட்ட தூணில் அமர்ந்தது, அத்தூணை வழிபடுவதால் மனிதர்களுக்கும் கிடைக்கக் கூடிய நன்மை என்ன, அந்த நன்மைகளைப் பெறுவதற்கு எப்போது எத்தகைய வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும், அத்தல இறைவன், இறைவிகளின் மகிமை என்ன போன்று அத்திருத்தலம் பற்றிய அனைத்து விஷயங்களையும் தானே முன் வந்து கூறும்.

அந்த தேவதைகள் தெய்வங்கள் கூறிய ஆன்மீக விஷயங்களைத்தான் நீங்கள் திரு வெங்கடராம சுவாமிகளின் திருவார்த்தைகளாகக் கேட்கிறீர்கள்.

இத்தகைய வியத்தகு அனுபூதியைச் சிறுவன் பெறுவதற்குக் காரணம் திருஆலத்தூர் பெருமாளின் கண் நிறைந்த தரிசனமும், திருஅண்ணாமலை திருக்கார்த்திகை திருப்பணியும் அனைத்திற்கும் மேலாக இவை அனைத்தையும் குருவருளாக வர்ஷித்த இடியாப்ப சித்து ஈசரின் கருணை கடாட்சமும்தான் என்பதை உணர சிறுவனுக்கு ஆண்டுகள் பல தேவைப்பட்டன.

எனவே, இங்கு நீங்கள் படிப்பது வெறும் வார்த்தைகள் அல்ல. ஒன்பது வயது பாலகன் பத்து நாட்களுக்கு மேல் ஒரு துளி நீர் அருந்தாது, ஒரு கவளம் உணவு உண்ணாது, பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட கிரிவல அடியார்களின் மலத்தை, அவர்களின் கர்ம வினையைச் சுமந்ததால் திருஅண்ணாமலையார் அவனுக்கு அளித்த தெய்வீக அனுபூதிகள் அவை.

இந்நூலில் நீங்கள் காண்பது வெறும் மை பூசிய எழுத்துக்கள் அல்ல. அரை டிராயரை அணிந்து தன்னுடைய கோவணாண்டி பெரியவருடன் இந்தியாவில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் கால்கள் தேய, தோல் கொப்பளிக்க, வியர்வை ஆறாக ஓட, உச்சி வெயிலில் மயிர்க் கால்கள் பொசுங்க இறை மூர்த்திகளைத் தரிசித்து அத்தகைய கடினமான யாத்திரைகள் மூலம் பெற்ற மெய்ஞ் ஞான அனுபூதிகள்.

இங்கு நீங்கள் படிப்பது ஏட்டுச் சுரைக்காய் அல்ல. தியாகம் என்ற விதை ஊன்றி, பக்தி என்றால் நீரால் வளர்த்து, இரத்தம் சிந்த, கை கால் முட்டி தேய உத்தம சித்த புருஷர் சுட்டிக் காட்டிய வண்ணம் தெய்வ மூர்த்திகளை தரிசித்து அவர்களின் அனுகிரகங்களை அன்னதானம் என்னும் திகட்டாக் கனியாக கிரிவலம் வரும் எண்ணற்ற அடியார்களுக்கெல்லாம் கொடுத்து அதன் மூலம் பெற்ற ஆழ்ந்த ஞானப் பொக்கிஷமே இந்த குரு பிரசாத முத்துக்கள். 

மலையடிப்பட்டி ஸ்ரீரெங்கநாதர் திருத்தலம்

திருச்சி துவாக்குடி, அசூர், செங்களூர் வழியாக அல்லது புதுக்கோட்டை கீரனூர் வழியாக சென்றடையக் கூடிய திருஆலத்தூர் என்னும் திருத்தலமே தற்போது மலையடிப்பட்டி என்று வழங்கப்படுகிறது.

இத்தல ஈசன் திரு வாகீசர். சித்தர்களால் திருக்கண்ணாயிரமுடையார் என்று அழைக்கப்படுகிறார். பரவெளித் தத்துவத்தை வெளிப்படுத்தும் பெருமானாக இறைவன் எழுந்தருளியிருப்பதால் வாகீசர் எனவும் மக்களை கண் திருஷ்டி தோஷங்களிலிருந்தும் கண் நோய்களிலிருந்தும் காப்பதால் கண்ணாயிரம் உடையார் என்றும் இத்தல இறைவன் போற்றப்படுகிறார். கண் திருஷ்டிகளால் வாடும் பக்தர்கள் இறைவனை பிரார்த்திக்கும்போது அவர்கள் மேல் விழுந்த ”கண்களை” இத்தல ஈசன் ஏற்று அடியார்களை கண் திருஷ்டியிலிருந்தும், கண் நோய்களிலிருந்தும் காப்பதால் பெருமான் கண்ணாயிரம் உடையார் என்று போற்றப்படுகிறார்.

ஸ்ரீகண்ணாயிரமுடையார்
மலையடிப்பட்டி

எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்வதுதான் மனிதனின் குறிக்கோள். இறைவனிடமிருந்து தோன்றிய மனிதன் இறைவனைச் சென்றடைவதுதான் அவனுடைய ஒரே கடமை. இதை உணர்த்தும் தாவரமே அழிஞ்சில் என்னும் மரமாகும். அழிஞ்சில் மரமும், வில்வ மரமும் ஒருங்கே செழித்துள்ள இத்தலம் மிகவும் அரிதான செல்வ வள சக்திகளை அருளும் சிறப்புடையது.

இத்தலத்தில் உள்ள வில்வ மரத்திற்கும், அழிஞ்சில் மரத்திற்கும் நீர் வார்த்து தங்கள் கையால் அரைத்த மஞ்சள் பூசி, சுத்தமான குங்குமத்தால் பொட்டிட்டு வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும். திருமண தோஷங்கள் விலகும். கண் திருஷ்டி, கண்ணேறு, ஏவல் போன்ற தீய விளைவுகள்அகலும். குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

கண், காது போன்ற ஒன்பது உடல் துவாரங்கள் வழியாகத்தான் தீவினைகள் நம்மைத் தாக்குகின்றன. மற்றவர்களுடைய திருஷ்டி சக்திகளும் நவ துவாரங்கள் வழியாக நம் உடலில் புகுந்து துன்பம் விளைவிக்கின்றன. எனவே, இத்தல ஈசனுக்கு ஒன்பது இளநீர்களால் அபிஷேகம் நிறைவேற்றுவதால் கண்ணேறு தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறலாம். 9, 18, 27 என்ற ஒன்பதின் மடங்கில் இளநீர்களை அபிஷேகம் செய்தலால் பலன்கள் விருத்தியாகும், துரிதமாகும்.

பொதுவாக, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும்போது குழந்தைகள் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய பாத எழுத்துக்களில் பெயர் சூட்டுவதே முறையாகும். உதாரணமாக, அனுஷ நட்சத்திரத்தில் ஒரு குழந்தை பிறந்திருந்தால், அது அனுஷத்தின் முதல் பாத நேரத்தில் பிறந்திருந்தால் ’ந’ என்ற எழுத்தில் தொடங்கும்படியும், இரண்டாம் பாதம் என்றால் ’நி’ என்ற நாம எழுத்திலும், மூன்றாம் பாதம் என்றால் ’நு’ என்ற நாம எழுத்திலும், நான்காம் பாதம் என்றால் ’நே’ என்ற எழுத்திலும் தொடங்கும்படி பெயர் சூட்டுவதால் அந்த எழுத்துக்களின் ஸ்வர சக்திகள் குழந்தைகளை அடைந்து அக்குழந்தைகள் நல்ல உடல், மன வளர்ச்சியை அடைய ஏதுவாகும்.

தற்காலத்தில் பலரும் இந்த விதியைப் பின்பற்றி பெயர் வைக்காததால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஸ்வர சக்தி அனுகிரகம் கிட்டாமல் போய் விடுகிறது.  இதற்கு ஓரளவு பரிகாரம் அளிப்பதே திரு கண்ணாயிரம் உடையார் திருத்தலத்தில் அருளும் சப்த மாதர்கள் வழிபாடு. சப்த ஸ்வரங்களில் பூலோகத்துடன் தொடர்புடைய எல்லா ஸ்வரங்களும் அடங்கி விடுவதால் இங்கு சப்த மாதர்களுக்கு பசு வெண்ணெய் சார்த்தி வழிபடுவது நலம். இதனால் நாமக் குற்றங்கள் களையும் வாய்ப்புகள் கிட்டும்.

இங்கு ஒரு விஷயத்தை நீங்கள் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே நட்சத்திர ஸ்வர எழுத்துக்களை பயன்படுத்தி பெயர் வைக்காமல் போய் விட்டால் இனி தங்கள் பெயர்களை மாற்றி வைப்பது உசிதமல்ல. ஒருவருடைய தாய் தந்தையர் அன்புடன் இட்ட பெயரை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை. ஒருவேளை அது தெய்வீக சட்டத்திற்கு மாறாக இருப்பதாகத் தெரியும் சூழ்நிலையில் அதற்கான பரிகார வழிபாடுகளை மேற்கொள்வதுதான் சரியான அணுகு முறையே தவிர, அப்பெயரை மாற்ற எவ்விதத்திலும் முயற்சிக்கக் கூடாது என்பதே சித்தர்கள் கூறும் அறிவுரை.

திருமணம், சாந்தி முகூர்த்தம், கிரகப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்காக முகூர்த்த நேரம் கணிக்கையில் நேத்திர சக்திகள் மிகுந்த நாட்களைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். நேத்திர சக்தி குறைந்த நாட்களிலும், குருட்டு நாட்களிலும் பலரும் தற்காலத்தில் முகூர்த்த நேரத்தைக் கணித்து விடுகின்றனர். இதனால் பலவிதமான துன்பங்களைத் தம்பதிகள் சந்திக்க நேரிடும். அதே போல கண்களில் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் வளர்பிறை நாட்களில் அறுவை சிகிச்சையை மேற்கொள்வதாலும் பலவிதமான துன்பங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொதுவாக, அறுவை சிகிச்சைகளுக்கு குறிப்பாக கண் அறுவை சிகிச்சைகளுக்கு தேய்பிறை செவ்வாய்க் கிழமை உகந்தது.

இத்தகையோர் அறுவை சிகிச்சைக்கு முன் ஸ்ரீகண் நிறைந்த பெருமாளைத் தரிசனம் செய்வதால் அற்புதமான பலன்களைப் பெறலாம். இத்தல பெருமாளுக்கு முன்னே திகழும் இரு தூண்களும் விசேஷமான சக்திகளை உடையவை. பொதுவாக, இறை மூர்த்திகளை மறைக்கும் வண்ணம் தூண்களை ஆலயங்களில் அமைப்பதில்லை. அவ்வாறு இருக்கும்போது ஸ்ரீரங்கநாதரின் சயனக் கோலத்தை முழுமையாகக் காண முடியாத வகையில் தூண்கள் அமைக்கப்பட்டிருப்பதால் அதன் அர்த்தத்தை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீநந்தீஸ்வரர், மலையடிப்பட்டி

இத்தகைய தூண்களை ஹரி நேத்ர தூண்கள் என்று பெரியோர்கள் அழைக்கின்றனர்.  

ஸ்ரீரெங்கநாதரை இத்தலத்தில் தரிசிக்கும் சிறப்பு முறையாக அருள்வதாவது. பெருமாளுக்கு அவரவர் கைகளால் முப்பது முழம் அளவிற்கு ராமபாணம், சாமந்தி, மஞ்சள் நிற மணமுள்ள செவ்வந்தி போன்ற மலர்களால் அலங்கரித்து, முதலில் பெருமாளின் திருப்பாதங்களுக்கு நேரே உள்ள தூணை தரிசனம் செய்யவும், அதன் பின்னர் பெருமாளின் தலைக்கு எதிரே உள்ள தூணை தரிசனம் செய்யவும். அதற்குப் பிறகே பெருமாளை தரிசனம் செய்வது நலம்.

திருஅருணாசல ஜோதி ஸ்தம்ப தரிசனம் பெற்றதால் பெருமாளின் நேத்ர சக்திகளை நேரடியாகப் பெறும் அளவிற்கு இன்றைய மனிதர்களின் ஆன்ம சக்தி பலப்படவில்லை. எனவே, பெருமாளின் நேத்ர சக்திகளை நறுமணம் கமழும் ஹரி நேத்ர தூண்கள் மூலம் பெறுவதால் மனிதர்களும் அருணாசல ஜோதி தரிசனப் பலனை ஓரளவு பெற இயலும் என்பதால்தான் இத்தகைய மலர் ஸ்தம்ப வழிபாட்டை பெரியோர்கள் ஏற்படுத்தி உள்ளனர். இதனால் மணம் கமழும் வாழ்வு மலரும்.

பொருளாதாரம், கல்வி, ஆன்மீகம், அரசியல், சட்டம், வியாபாரம் என எத்துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மேற் கூறிய மலர் வழிபாட்டால் அற்புத பலன்களைப் பெறுவார்கள்.  

ஒரு மனிதன் தான் முற்பிறவிகளில் செய்த கர்ம வினைகளின் பலனைத்தான் இப்பிறவியில் அனுபவிக்கிறான் என்பது உண்மையே. இவ்வாறு நல்வினைகள் பல முற்பிறவிகளில் செய்திருந்தாலும் அவை இப்பிறவியில் பலன் கொடுக்காமல் போவதுண்டு.. அதற்குக் காரணம் சகஸ்ர ம்ருதளம் என்ற சக்திகளே. ஜாதக ரீதியாக ஒருவரின் ஒன்பதாவது அதிபதி இந்த சகஸ்ர ம்ருதுள சக்திகளை அளிப்பதால் இவ்வாறு ஒன்பதாவது அதிபதி செயலற்றுப் போகும் சூழ்நிலைகளில் அத்தகையோர் முற்பிறவியின் நற்பலன்களை இப்பிறவியில் அனுபவிக்க முடியாமல் போய்விடுகிறது.

இதற்கு பலவித ஆன்மீக காரணங்கள் உள்ளன. அவை மனித அறிவுக்கு எட்டாதவை. இருப்பினும் இத்தகைய சகஸ்ர ம்ருதள சக்திகளை விருத்தி செய்து பூர்வ ஜன்ம நற்பலன்களை இப்பிறவியில் அளிக்கக் கூடிய தலங்களும் உண்டு. அதில் முதன்மையாகத் திகழ்வதே மலையடிப்பட்டி திருத்தலமாகும். இங்குள்ள கற்பாறைகள் சகஸ்ர ம்ருதுள சக்திகளை இயற்கையாகப் பெருக்கும் சக்தி பெற்றவை. எனவே, கீழே குறிப்பிட்ட நாட்களில் இத்தலத்தை கிரிவலம் வந்து வணங்குவதால் பூர்வ ஜன்ம புண்ணிய சக்திகளை முழுமையாகப் பெற்று மங்கள வாழ்வு பெறலாம் என்று சித்தர்கள் உறுதியளிக்கின்றனர்.

ஒவ்வொருவரும் ஜாதக ரீதியாக தங்கள் ஜன்ம லக்னம் அல்லது ராசிக்கு ஒன்பதாவது அதிபதிக்கு உரித்தான நாட்களில் கிரிவலம் வருதல் சிறப்பு. அத்தகைய நுணுக்கங்களை அறியாதோரும் பயன்பெறும் வகையில் கீழ்க் கண்ட கிரிவல அட்டவணையை அளித்துள்ளோம்.

       
ராசி அல்லது லக்னம்     கிரிவலம் வரவேண்டிய நாள்
     
மேஷம் வியாழக் கிழமை
ரிஷபம், மிதுனம் சனிக் கிழமை
கடகம் வியாழக் கிழமை
சிம்மம் செவ்வாய்க் கிழமை
கன்னி  வெள்ளிக் கிழமை
துலாம் புதன் கிழமை
விருச்சிகம் திங்கட் கிழமை
தனுசு ஞாயிற்றுக் கிழமை
மகரம்  புதன் கிழமை
கும்பம் வெள்ளிக் கிழமை
மீனம்  செவ்வாய்க் கிழமை
    

 தங்கள் ஜன்ம லக்னம், ராசி போன்ற விவரம் அறியாதோர்  தாங்கள் பிறந்த தேதியைப் பொறுத்தும் கிரிவலம் வரலாம்.

     
       
பிறந்த தேதி     கிரிவலம் வரவேண்டிய நாள்
     
1, 10, 19, 28 ஞாயிற்றுக் கிழமை
2, 11, 20, 29 திங்கட் கிழமை
3, 4, 12, 13, 21, 22, 30, 31வியாழக் கிழமை
5, 7, 14, 16, 23, 25 புதன் கிழமை
6, 15, 24  வெள்ளிக் கிழமை
8, 17, 26  சனிக் கிழமை
9, 18, 27 செவ்வாய்க் கிழமை

கிரிவலம் வரும்போது தேவார திருவாசகப் பதிகங்களையோ, சகஸ்ர நாமங்களையோ ஓதியவாறே கிரிவலம் வருதல் சிறப்பு. அல்லது கீழ்க் காணும் துதியை ஓதி கிரிவலம் வருதல் நலம்.

ஜகந்நாதம் பரிபூர்ணம்
அனந்த சயனம் பரிபூர்ணம்
அருணாசலம் பரிபூர்ணம்

முடிந்த மட்டும் 9 அல்லது ஒன்பதின் மடங்கான 9, 18, 27 எண்ணிக்கையில் கிரிவலம் வருதல் சிறப்பாகும். கிரிவலப் பாதையில் கோதுமை ரவையுடன் நாட்டுச் சர்க்கரை (இடித்த வெல்லம்) சேர்த்து எறும்புகளுக்கு உணவாக இடுதல் நலம். திருவெறும்பூர் திருத்தலத்தை முழங்கால் பிரதட்சிணமாக வலம் வர முடியாதவர்கள் ஒன்பது விதமான தான்ய வகைகளை எறும்புகளுக்குத் தீனியாக இடும் முறையை ஏன் வகுத்துள்ளனர் என்ற இரகசியம் இப்போது உங்களுக்குத் தெளிவாகின்றது அல்லவா ?

ஜாதக ரீதியாக ஒன்பதாம் அதிபதி ராஜ யோகத்தைக் கொடுக்கும் வல்லமை பெற்றிருப்பதால் இத்தல கிரிவலம் ராஜ யோகத்தை அருளும் சிறப்புடையது. மேலும், இறை பக்தி, கடவுள் நம்பிக்கை. தீர்த்த யாத்திரை போன்ற நற்பலன்களும் பெருக உதவுவதே மேற்கூறிய கிரிவல வழிபாடு.

திரு வாகீஸ்வர மூர்த்தி அருளும் திருத்தலம் பரவெளி தத்துவத்தைப் போதிக்கும் சிறப்புப் பெற்றதாகும். திருஅண்ணாமலை ஈசனை கண்ணாரக் கண்டு அவருடைய திவ்ய தரிசன சக்திகளை தன்னுடைய செந்தாமரைக் கண்களில் நிறைத்துக் கொண்ட பெருமாளே இங்கு சயன மூர்த்தியாக எழுந்தருளியிருப்பதால் இத்தலத்தை இரவு பகல் எந்நேரமும் கிரிவலம் வந்து பயன் பெறலாம் என்றாலும், குறித்த சில நாட்களில் சகஸ்ர ம்ருதுள சக்திகள் பொங்கிப் பெருகுவதால் அத்தகைய நாட்களில் நிகழ்த்தும் கிரிவலம் பன்மடங்கு பலன்களை வர்ஷிக்கும் என்பதும் உண்மையே.

மிகவும் அபூர்வமான கோபுரம் தாங்கித்
தூண்கள் துலங்கும் திருபுவனம்

எனவே, செவ்வாய், புதன் கிழமைகளிலும், சப்தமி, பௌர்ணமி திதிகளிலும், ரோஹிணி, பூரம், அனுஷம், சதயம் நட்சத்திர நாட்களிலும் இங்கு கிரிவலம் வருதலால் மகத்தான பலன்களைப் பெறலாம். மேலும், இத்தகைய கால சக்திகள் இணைந்து யோகம் கொள்ளும் நாட்களும் சிறப்பானவையே. உதாரணமாக, ரோஹிணியும் புதன் கிழமையும் சேர்ந்த நாட்களிலும், பௌர்ணமி திதியும், செவ்வாய்க் கிழமையும் இணைந்த நாட்களிலும் கிரிவலம் வருதல் யோகப் பலன்களைப் பெருக்கும்.

இப்பிரபஞ்சம் அனைத்திற்கும் ஒளி கூட்டவல்ல உத்தமப் பெருந்தகை ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ரோஹிணியும் புதன் கிழமையும் சேர்ந்த புனித நாளில் இப்புவியில் அவதாரம் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எமது ஆஸ்ரமத்தில் பெறப்படும் ம்ருதுள மணி கங்கணை அணிந்து கிரிவலம் வருவதால் கிரிவலப் பலன்கள் பன்மடங்காய்ப் பெருகும்.

திருக்கோயில்களில் திகழும் தூண்கள் சிறப்பு பெற காரணம் என்ன? தூண் வடிவில் அருணாசல ஜோதியாக தோன்றிய இறைவன் தூண்களில் எழுந்தருள்வது இயல்பானதுதான் என்றாலும் தூண்களுக்கு என்று பல சிறப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

எப்போதும் நிலைத்த தன்மைக்கு தூணைத்தான் உவமையாகக் கூறுவோம். இவ்வுலகம் இயங்குவதற்கு வேதங்களே தூண்கள் போன்று நிலைத்து நின்று உலகைக் காக்கின்றன என்னும் நல்லோர்கள் கூற்றிலிருந்து தூண்கள் தர்ம சக்திகளை நிலைகொள்ளச் செய்பவை என்ற உண்மை விளங்குகிறது அல்லவா? இந்த பூமியின் வடிவமும் உலக்கை என்னும் தூணின் வடிவம்தானே?

ஸ்ரீசௌந்தர்ய நாயகி, மலையடிப்பட்டி

இவ்வுலகைக் காக்க, தீய சக்தியை எதிர்த்து சம்ஹாரம் செய்ய தோன்றிய நரசிம்ம அவதார மூர்த்தி ஆதிவாரத்தில் அந்திப் பொழுதில் தூணில் தான் எழுந்தருளினார். அவதாரங்களில் மிகவும் அழகானவர் நரசிம்ம மூர்த்தியே என்று சித்த கிரந்தங்கள் வர்ணிக்கின்றன. அத்தகைய அழகு பொருந்திய தெய்வீகச் செம்மல் எல்லையில்லா சீற்றம் கொண்டு அண்டசராசரமும் நடுங்கும் வண்ணம் பிரகலாதனின் பிரார்த்தனையை ஏற்று தூணில் எழுந்தருளினார். ஒரு அவதார மூர்த்தியை கர்ப்பம் தாங்கும் வல்லமையை ஒரு தூண் பெற்றது என்றால் தூண் வடிவத்தின் பின்னால் உள்ள தெய்வீக மாண்பை, மகத்துவத்தை, சக்தியை, வல்லமையை யார்தான் வார்த்தைகளால் விவரிக்க முடியும்.

பரம்பொருள் ஒன்றே. இறைவன் ஒருவனே. எனினும் தனது பற்பல லீலைகளுக்கு பற்பல சக்திகளை உடைய தோற்றங்களை உருவாக்குவதும் மறைப்பதும் இறைவனுக்கு ஒரு நாடகம்தானே. அதுபோல எல்லாத் தூண்களும் ஒன்று என்றாலும் மிகவும் உக்கிரஹம் வாய்ந்த அவதார மூர்த்தியான நரசிம்ம மூர்த்தியை கர்ப்பம் தாங்கிய கோலத்தில் உள்ள தூண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

பல திருக்கோயில்களிலும் நரசிம்ம மூர்த்தி எழுந்தருளியுள்ள தூண்களைக் காணலாம். உதாரணம், திருச்சி அருகே திருப்பட்டூர் சிவத்தலம். ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு கால நேரத்தில் இம்மூர்த்தியை வழிபட்டு ஸ்ரீஆதிசங்கரர் அருளிய ஸ்ரீலட்சுமி நரசிம்ம கராவலம்ப தோத்திரத்தை ஓதி வழிபடுதலால் தங்கள் பணிகளில், உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் வரும் துன்பங்களிலிருந்து மீளலாம்.

சிலர் தங்கள் நிறுவனத்திற்காக எவ்வளவுதான் உழைத்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டாமல் போவதுடன் அவப் பெயரும் அவமானமும் ஏற்படுவதுண்டு. இத்தகைய வேதனைகளை அடைவோர் மேற்கூறிய வழிபாடுகளால் நற்பலன் பெறலாம்.

நரசிம்ம பெருமாளின் உக்கிரம் எவராலும் தடுக்க முடியாமல் அனைத்து லோகங்களும் நடுங்க ஆரம்பித்தன. அதனால் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட பெருமான் சரபேஸ்வரர் என்னும் செம்புள் வடிவம் கொண்டு நரசிம்ம மூர்த்தியின் உக்கிரகத்தைச் சாந்தப்படுத்தி அருளினார்.

இவ்வாறு சரபேஸ்வர மூர்த்திகள் எழுந்தருளிய தூண்களையும் (உதாரணமாக, மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் திருக்கோயில், திருஅண்ணாமலையார் திருக்கோயில்) ஞாயிற்றுக் கிழமை ராகு கால நேரத்தில் வழிபடுவது சிறப்பு. இம்மூர்த்திகளை வழிபடும் சிறப்பான விளக்கங்களை எமது ஆஸ்ரம நூல்களின் மூலம் அறிந்து பயனடையும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

ருத்ர சமக பாராயணமும், அப்பர் பெருமானின் திருத்தாண்டக துதிகளும், சர்க்கரைப் பொங்கல் நைவேத்யமும் தானமும் சரபேஸ்வர மூர்த்திகளுக்கான பொது வழிபாட்டு முறையாகக் கொள்வதும் ஏற்புடையதே.

கோபுரம் தாங்கித் தூண்கள்

கும்பகோணம் அருகே திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் திருத்தலம் சரபேஸ்வஸ்வர மூர்த்தி அருளும் அற்புதமான திருத்தலமாகும். யுகங்கள் கடந்து நிற்கும் தொன்மையான சிவத்தலம். இங்குள்ள தூண்கள் கோபுரம் தாங்கி தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன. சாதாரணமாக ஒரு கோயில் கோபுரத்தில் லட்சக் கணக்கான தெய்வ மூர்த்திகளும், தேவதைகளும், ரிஷிகளும், திக்கு சக்திகளும், பஞ்ச பூத சக்திகளும் நிறைந்திருக்கும்.

சப்த மாதர்கள், மலையடிப்பட்டி

திருபுவனத் திருத்தலத்தில் உள்ள தூண்களில் பற்பல கோபுரங்களே வியாபித்திருப்பதை நீங்கள் உங்கள் தூலக் கண்களால் காணலாம் என்றால் இத்தூண்களின் அளப்பரிய தெய்வீக சக்தியை எப்படி வார்த்தைகளால் வர்ணிக்க இயலும்? இங்கு ஒவ்வொரு தூணிலும் பல கோபுரங்கள் எழுந்தருளி இருப்பதால் திருபுவன திருத்தலத்தை ஒரு முறை தரிசித்தாலே பல்லாயிரக் கணக்கான திருக்கோயில்களை தரிசித்த பலனை நீங்கள் பெற முடியும்.

ஆனால், இவ்வாறு பெறும் புண்ணிய சக்திகளை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் தெய்வீக புண்ணிய சக்திகளை விரயம் செய்த தோஷமே உங்களை வந்து சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இனி வரும் காலங்களில் ”தான்” என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களைத் துன்பத்திற்கு உள்ளாக்கும் மனம் படைத்தவர்களின் எண்ணிக்கைதான் உலகில் பெருகும். எனவே இத்தகையோரிடமிருந்து நல்ல மனம் படைத்தோர், இறைவனை நம்பி அமைதியாக வாழ நினைப்போர் விடுபட வேண்டுமானால் அவர்களுக்கு இந்த கோபுரம் தாங்கி தூண்கள் வழிபாடே சாலச் சிறந்ததாகும். மணம் பரப்பும் நல்ல ஊதுபத்திகளை இத்தலம் எங்கும் ஏற்றி (குறைந்தது எட்டு பத்திகள்) கோபுரம் தாங்கி தூண்களை ராகு கால நேரத்திலும், செவ்வாய் ஹோரை நேரத்திலும் வணங்கி வழிபடுதல் நலம்.

இசைத் தூண்கள்

திருச்சி அருகே செட்டிக் குளம், திருப்பட்டூர் போன்ற திருத்தலங்களிலும் இன்னும் மதுரை, திருநெல்வேலி போன்ற திருத்தலங்களிலும் இசைத் தூண்களைக் காணலாம். பலரும் இத்தூண்கள் இசையோடு மட்டுமே சம்பந்தம் உடையவை என்று கருதுகின்றனர். உண்மையில் மனிதர்கள் அனைவருமே அவசியம் இத்தூண்களை வாரம் ஒரு முறையாவது வழிபடுவது உடல், மன ஆரோக்கியத்திற்கு உகந்தது.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தினமும் நம்மைச் சுற்றிலும் ஒலி, ஒளி அலைகள் வியாபித்து நம்மைத் தாக்கிக் கொண்டே இருக்கின்றன. வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள், செல்போன் நிலையங்கள், செயற்கைக் கோள்கள் இவைகளிலிருந்து இரவு பகல் எந்நேரமும் லட்சக் கணக்கான கோடிக் கணக்கான மின் காந்த அலைகள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. இவை நம் உடலைத் தாக்குவதால் நமது உடல் அக்கதிர்களால் பாதிக்கப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இசைத் தூண்கள்
செட்டிக்குளம்

இசைத் தூண்கள்
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

தொலைக் காட்சியில் ஒரு நாடகத்தைப் பார்த்தால் மட்டும்தான் அது நம் உடலையும் மனதையும் பாதிக்கும் என்று சொல்வதிற்கில்லை. அந்த அலைகள் நம் உடல் மீது பட்டாலே அதனால் பற்பல வேதனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி வரும். நம்மை அறியாமல் ஏற்படும் படபடப்பு, அதன் காரணமாக மற்றவர்கள் மேல் தேவையில்லாமல் எரிந்து விழுதல், இரவில் தூக்கமின்மை, அச்சுறுத்தும் கனவுகள் போன்ற பல நிகழ்ச்சிகளுக்கும் இத்தகைய எதிர்மறை மின்காந்த அலைகளின் தாக்குதலே காரணமாகும்.

நாட்கள் செல்லச் செல்ல இத்தகைய அலைகளின் எண்ணிக்கை அதிகமாகும் வாய்ப்புகளே அதிகம். நீங்கள் செல்போன்களைப் பயன்படுத்தாவிட்டாலும், டீவியில் நிகழ்ச்சிகளைப் பார்க்காவிட்டாலும் நீங்கள் அவைகளால் பாதிக்கப்படுவது உறுதி. எனவே, இத்தகைய துன்பங்களிலிருந்து ஓரளவு நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இறைவன் நமக்கு அருளிய வரப்பிரசாதமே இசைத் தூண்களாகும்.


வாரம் ஒரு முறையாவது இத்தகைய இசைத் தூண்கள் பொலியும் திருத்தலங்களை தரிசித்து அந்த தூண்களின் நடுவே சம்பூர்ண ராகத்தில் அமைந்த இறைத் துதிகளை ஓதி, இசைத்து வந்தால் நமது உள்ளத்தில் மட்டும் அல்லாமல் சமுதாயத்திற்கும் இது அமைதியை ஏற்படுத்தும் வழிபாடாக மலரும். வசதி உள்ளவர்கள் ஏழை இசை வித்வான்களை இத்தலங்களுக்கு அழைத்து வந்த அங்கு இசைக் கச்சேரிகளை நிகழ்த்தி நற்கிரண சக்திகளை தோற்றுவிக்கலாம்.

மிகவும் அரிதான இத்தகைய இசைத் தூண்களைப் பராமரிப்பதும் நீங்கள் சமுதாயத்திற்கும், இறைவனுக்கும் ஆற்றும் ஓர் இறை சேவை என்பதில் ஐயமில்லை. எக்காரணம் கொண்டும் இசைத் தூண்களை கைகளாலோ, குச்சிகள், கம்பிகள் போன்ற பொருட்களாலோ தட்டிப் பார்க்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். இசைத் தூண்கள் வழிபாட்டிற்கு மட்டுமே, ஆராய்ச்சிக்காக அல்ல.

அவ்வாறு தூண்களின் தெய்வீக மகிமையை உணர்ந்து அதை மக்கள் சமுதாய நல்வாழ்விற்காக பயன்படுத்த விரும்புவோர் மலையடிப்பட்டியில் அருள்பாலிக்கும் ஸ்ரீகண்நிறைந்த பெருமாளை தரிசனம் செய்து ஞாயிற்றுக் கிழமைகளில் 18 முறை கிரிவலம் வந்து வழிபடுவதால் கோயில் தூண்களின் தெய்வீக ஆற்றலை உணரும் ஆன்ம சக்தியைப் பெருமாள் தந்தருள்வார்.  

சுழல் தூண்கள்

பல திருத்தலங்களிலும் இறைவனின் நித்திய பூஜைகளுக்காகவும், பிரம்மோற்சவம் போன்ற தெய்வீக திருவிழாக்களுக்காகவும் நிறைய நிதிகளை ஒதுக்கி வைத்திருப்பார்கள். அவ்வாறு மன்னர்களும், ஜமீன்தார்களும், வியாபாரிகளும் இறைவனுக்காக சேர்த்து வைத்த தங்க ஆபரணங்கள், மாணிக்கக் கற்கள் போன்ற பொக்கிஷங்களை உரிய காலத்தில் உரியவர்களிடம் சேர்ப்பதற்காக உதவுபவையே திருக்கோயில்களில் பொலியும் சுழல் தூண்கள். அக்கால மன்னர்கள் இத்தகைய சுழல் தூண்கள் முன் சென்று நின்றால் அவைகள் சுழலும் தன்மையை வைத்து எந்த இடத்தில் எவ்வளவு தங்கப் புதையல் இறைவனுக்காகப் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்ற இரகசியத்தை அந்தத் தூண் தெரியப்படுத்தும்.

அதே சமயம் சுய நல எண்ணத்துடன் இத்தகைய தூண்களின் முன் சென்றால் அவை தவறான ஒரு இடத்திற்குத் திசை திருப்பி விடும். அப்போது அவை மாயத் தூண்களாக செயல்படும். அதாவது உண்மை நிலையை எடுத்துரைக்காது மாயை வசம் அவர்களை ஒப்படைத்து விடும். எனவே, இத்தகைய தூண்களை சுழல் மாயை தூண்கள் என்று அழைக்கின்றனர். இத்தகைய சுழல் தூண்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் கரிகாற் சோழன் தங்கப் புதையல்களைக் கண்டறிந்து திரு ஐயாறப்பர் பெருமானுக்காக கோயில் எழுப்பி நற்பணிகள் பல புரிந்தான்.

இத்தூண்கள் நமக்குப் புகட்டும் பாடம் என்ன? நல்ல காரியம் செய்ய வேண்டும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் அதற்குப் பணம் தேவையில்லை, பொருள் வேண்டியதில்லை, நல்லது செய்யும் மனம் இருந்தாலே போதும், இறைவன் அந்த நற்காரியத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான பொருளை தந்தருள்வான் என்பதே. பணம் வேண்டாம், மனம் போதும்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சென்னகேசவப் பெருமாள் ஆலயத்தில் அத்தகைய சுழல் மாயைத் தூண்களை இன்றும் காணலாம்.

பட்டாபிஷேகத் தூண்கள்

சில திருக்கோயில் தூண்களில் இராமர் பட்டாபிஷேகக் காட்சிகள் வடிக்கப்பட்டு அல்லது செதுக்கப்பட்டு இருக்கும். அல்லது ஒரு தூணிண் நாற்புறமும் ராமர், லட்சுமணர், சீதை, ஹனுமான் மூர்த்திகள் எழுந்தருளியிருப்பர். அத்தகைய தூண்கள் பட்டாபிஷேகத் தூண்கள் எனப்படும். (உதாரணம், சென்னை ஸ்ரீகபாலீஸ்வரர், கோயம்பேடு ஸ்ரீகுறுங்காலீஸ்வரர் திருக்கோயில்கள்).

வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களாலோ, வறுமை, பொருளாதாரச் சூழ்நிலைகளாலோ, ஏழரை நாட்டுச் சனி போன்ற கிரக விளைவுகளாலோ, உத்தியோகம் காரணமாகவோ பலரும் தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாடுவதுண்டு. தாங்கள் செய்யாத தவறுக்காக பதவி இழந்து எங்கோ பரிதவிக்கும் நிலையிலும் இருப்பார்கள். இத்தகையோரருக்கு அடைக்கலம் அளித்து அவர்கள் அல்லலைக் களைவதே பட்டாபிஷேகத் தூண்கள் ஆகும்.

ஜகந்நாத தூண்கள்
திருத்தலையூர் பெருமாள் தலம்

வாரம் ஒரு முறையாவது குறிப்பாக திங்கட் கிழமைகளில் இத்தகைய தூண்களில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளைத் தரிசனம் செய்து, வலம் வந்து வணங்கி காலிபிளவர் கலந்த உணவு வகைகளைத் தானம் அளித்து வந்தால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். மாமியார், மருமகள் உறவுப் பிரச்னைகளில் தோன்றும் துன்பங்கள் குறையும்.

தூண் தியானம்
முக்திக்கும் பக்திக்கும் எத்தனையோ எளிய மார்க்கங்களை நம் முன்னோர்கள் ஏற்படுத்தித் தந்துள்ளனர். அதில் ஒன்றே தூண் தியானமாகும். முக்தியை சித்திக்கும் உன்னத வழிபாடு.

ஒரு திருக்கோயிலில் எத்தனை தூண்கள் இருக்கின்றன என்று எண்ணி வைத்துக் கொண்டு, எதற்கான அத்தனை தூண்கள் அமைந்துள்ளன என்று ஆத்ம விசாசரம் செய்து வந்தால் போதும். வேறு எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டாம். ஒவ்வொரு தூணும், வட்ட வடிவமா, அல்லது சதுர வடிவமா, அந்த தூணில் எந்த மூர்த்தி அல்லது ரிஷி எழுந்தருளியுள்ளார், அந்த மூர்த்தி எந்த திசையை நோக்கி எழுந்தருளியுள்ளார், கோயிலின் எந்த மூலையில் அந்தத் தூண் உள்ளது. அந்தத் தூணிலிருந்து பார்த்தால் எத்தனை இறை மூர்த்திகள் தென்படுகின்றனர், எத்தனை கோபுரங்கள் தென்படுகின்றன. இதுபோன்ற எந்தவிதமான கோணத்திலும் நீங்கள் சிந்திக்க வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

ஒரு திருக்கோயிலில் எத்தனை தூண்கள் உள்ளன, எதற்காக அக்கோயிலில் அத்தனை தூண்கள் அமைந்துள்ளன? இதை மட்டும் நீங்கள் சிந்தித்து வந்தாலே போதும். அற்புதமான ஆழ்ந்த தியான நிலை எளிதில் சித்திக்கும்.

இத்தகைய எளிமையான தியான நிலை மூலம் உன்னத தெய்வீகப் பதவிகளை அடைந்தவரே திருச்சி அருகே செட்டிக்குளம் சிவத்தலத்தில் தூண் ஒன்றில் எழுந்தருளி இன்றும் தன்னுடைய தியானத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி மக்கள் சமுதாயத்திற்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

சாதாரண ஒரு ஆடு மேய்ப்பவராக இத்தலத்திற்கு வந்த இவர் ஆடுகளை அருகில் உள்ள வயல் வெளிகளில் மேய விட்டு விட்டு நிழலுக்காக இத்திருத்தலத்தில் ஒதுங்கினார். அப்போது பூர்வ ஜன்ம தொடர்பாக அத்திருக்கோயில்களில் உள்ள தூண்களை எண்ணி, ஏன் இத்தனைத் தூண்கள் இந்தக் கோயில்களில் இருக்கின்றன என்று தன்னை அறியாமல் ஆத்ம விசாரம் செய்யத் தொடங்கினார். அதனால் சிறிது சிறிதான ஆத்ம விசாரத்தில் அவருடைய நாட்டம் அதிகமாகத் தொடங்கியது.

தொன்மையான இசைத் தூண்கள்
பொலியும் செட்டிக்குளம் திருத்தலம்

தினமும் இந்த ஆத்ம விசாரம் தொடர்ந்தது, நாட்கள், மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக பரிணமித்தன. தன்னுடைய எண்பதாவது வயதில் தன்னுடைய பூத உடலைத் துறந்தார். அத்திருக்கோயில் தூணிலேயே ஒரு தேவதையாக அமர்ந்தார். அப்போதும் தன்னுடைய தியானித்திலேயே இலயித்து விட்டார். ஆண்டுகள் யுகங்களாக மாறவே அந்தந்த யுக தியானத்திற்கேற்ற ஆன்மீகப் பதவிகள் அவருக்கு அளிக்கப்பட்டன- அதாவது இந்திரன், பிரம்மா, விஷ்ணு போன்ற பதவிகள் அவருக்கு எம்பெருமானால் அளிக்கப்பட்டாலும் எந்த பதவிக்கும் தான் அருகதை அற்றவன் என்று சொல்லி ஒரு தூணைத் தாங்குவதற்கு மட்டுமே தனக்கு தகுதி உண்டு என்று தன்னை ஒரு சாதாரண அடியாராக மட்டுமே ஏற்றுக் கொள்ளும்படி இறைவனை வேண்டிக் கொண்டார்.

வரலாறு காணாத இந்த பணிவை மதித்த அருணாசல ஈசனும் அவர் வேண்டுகோளை ஏற்று அவர் பணியைத் தொடர அனுமதித்துள்ளார். இன்றும் பிரபஞ்சத்தில் உள்ள பல சித்தர்களும், யோகிகளும் தங்கள் லோகங்களில் தூண்களை நிர்மாணிப்பதில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள இந்த அடியாரைத்தான் நாடி, தேடி, ஓடி வருகின்றனர் என்றால் தூண் தியானம் எத்தகைய உன்னத நிலைகளை அளிக்கக் கூடியது என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

தருமதேவ சாஸ்தா என்று சித்தர்களால் பாராட்டப்படும் இந்த தேவதா மூர்த்தி செட்டிக்குளம் சிவத்தலத்தில் முன் மண்டபத்தில் எழுந்தருளி இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் அருளாசி வழங்கி வருகிறார். இனியும் கால தாமதம் செய்யாது இவரைப் பணிந்து பலன் பெறுங்கள்.

தனக்கு என்று எந்த வித சொந்த முயற்சியும் இல்லாது தன்னை வழி நடத்தும் ஆயனின் எண்ணப்படி நடந்து கொள்ளும் ஆட்டின் மனம் கொண்டோர் எளிதில் இறைவனின் அன்புக்குப் பாத்திரம் ஆவார்கள் என்பதை இப்பெருமானின் வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

தரும சாஸ்தா தேவதையை தரிசனம் செய்து பால் கோவா நைவேத்யம் படைத்து ஏழைக் குழந்தைகளுக்கு தானமாக அளித்து வந்தால் நற்சந்ததிகளைப் பெற செட்டிக்குள ஈசன் அருள்புரிவார்.

கிருத யுகத்தில் நான்கு கால்களில் நின்ற தர்ம தேவதை கலியுகத்தில் ஒரே ஒரு காலில் அதுவும் விரல் நுனியில்தான் நிற்கிறது. இதை உணர்த்தும் வகையில் பல திருக்கோயில்களில் (உதாரணமாக திருச்சி லால்குடி ஸ்ரீசப்த ரிஷீஸ்வரர் திருத்தலம், பேலூர் சென்னகேசவப் பெருமாள் திருத்தலம்) ஒரே காலில் நிற்கும் தூண்கள் நிர்மாணிக்கப்பட்டு உள்ளன.  

இயற்கை விதிப்படி எந்த ஒரு தூணும் ஒரே காலில் நிற்க முடியாது அல்லவா? எனவே இத்தகைய தூண்கள் பார்ப்பதற்கு ஒரே காலில் நிற்பது போல் தோன்றினாலும் உண்மையில் மற்ற மூன்று கால்களுக்குத் தேவையான சக்திகளை அளிப்பவரே செட்டிக்குளத் திருத்தலத் தூணில் அருள்புரியும் தருமதேவ சாஸ்தா மூர்த்தியாவார். எனவே, தங்கள் குழந்தைகளின் ஆதரவில்லாமல் தனித்து விடப்பெற்ற பெற்றோர்களும், முதியோர்களும், மணம் புரிந்து கணவன்மார்களால் கைவிடப் பெற்றோரும், அல்லது மணமாகாமல் ஆதரவின்றி தவிப்போரும், கை, கால், கண் போன்ற உறுப்புகளால் ஊனம் அடைந்தோரும் இவ்வாறு எந்நிலையிலாவது ஆதரவற்று விளங்குபவர்கள் இத்தகைய தூண்களை வலம் வந்து வணங்கி மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வணங்குவதால் தங்கள் வாழ்க்கையில் வசந்தம் வீசும் நன்னிலையை அடைவார்கள்.

ரிஷித் தூண்கள்

திருக்கோயில்களில் பொலியும் தூண்களில் அற்புதமாக தவங்களை இயற்றிய ரிஷிகள், முனிவர்கள் எழுந்தருளி மக்களைக் காக்க முன்வருவதுண்டு. உதாரணமாக, சசபிந்து முனிவர் அருளும் திருச்சி நாகநாத சுவாமி திருக்கோயில், கருட சித்தர் அருளும் சென்னை சித்துக்காடு திருத்தலம் போன்ற பல்லாயிரக் கணக்கான திருக்கோயில் தூண்களில் ஞானிகளும், யோகிகளும் எழுந்தருளி பக்தர்களுக்கு இறைவனின் கருணை கடாட்சத்தை வாரி வழங்குகின்றனர். இத்தகைய தூண்களை இனங் கண்டு, உரிய வழிபாடுகளை இயற்றி பயன்பெற வேண்டியது மக்கள் கடமை.

ஸ்ரீராமரும் ஸ்ரீஅகத்திய முனியும்
நாச்சியார் கோயில் திருச்சி

திருச்சி நாச்சியார் கோவிலில் ராம பிரானுடன் அகத்திய மகரிஷி இணைந்து காட்சி தரும் அற்புத காட்சியைக் காணலாம். இராவணனுடன் போரிடும் முன் ராம பிரான் ஸ்ரீஅகத்திய முனியைத் தரிசித்தபோது எதிரியை வெற்றி கொள்வதற்காக அப்பெருமான் ஆதித்ய ஹ்ருதய துதியை ராம பிரானுக்கு உபதேசம் செய்தார் அல்லவா? ராவணனை சம்ஹாரம் செய்த பின் ஸ்ரீஅகத்திய பெருமானுக்கு நன்றி செலுத்திய ராமபிரானுடன் அகத்தியர் இணைந்து அடியவர்கள் அனைவருக்கும் தரிசனம் கொடுத்தார்.

இக்கோலத்தை தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எந்த பிரச்னையையும் நன்முறையில் சமாளித்து வெற்றி அடைவார்கள். நாச்சியார் கோயிலில் ஸ்ரீராமரையும் ஸ்ரீஅகத்திய மகரிஷியையும் தரிசித்து பனை ஓலையில் ஸ்ரீஆதித்ய ஹ்ருதய துதியை எழுதி அதை மாலையாக இத்தூணில் அணிவித்து வழிபட்டு வந்தால் எக்காரியத்திலும் வெற்றியையே அடைவர் என்பது உறுதி.

அமிர்த வர்ஷிணி தூண்கள்

சில சமயங்களில் திருமணத்திற்காக ஜாதகம் பொருத்தம் பார்க்கும்போது ஒருவர் பொருத்தம் இருப்பதாகத் தெரிவிப்பார், வேறொரு ஜோதிடரோ இருவருக்கும் மணப் பொருத்தம் இல்லை என்று கூறி விடுவார். சில சமயம் ஒருவருக்கு உடனடியாக இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்து விட வேண்டும், இல்லை என்றால் உயிருக்கு ஆபத்து என்று ஒரு மருத்துவர் கூறுவார். அதே நோயாளியை பரிசோதித்த மற்றோர் மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்று எச்சரிப்பார். இது போன்ற குழப்பமான சூழ்நிலைகளை ஒவ்வொரு மனிதனும் யாதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்பதுண்டு.

இத்தகைய சூழ்நிலையில் ஏற்படும் குழப்பத்தை எப்படி சமாளிப்பது? திருக்கோயில்களில் சில தூண்களில் தேன் கூடு காணப்படும். அவைகளில் தேன், தேனீக்கள் இருக்கலாம், இல்லாமல் போகலாம். இத்தகைய தூண்கள் அமிர்த வர்ஷிணி தூண்கள் என்றழைக்கப்படுகின்றன. அத்தூண்களின் அடியில் அமர்ந்து குறிப்பாக வளர்பிறை சந்திர ஹோரை நேரத்தில் தியானம் மேற்கொள்வதால் எத்தகைய குழப்பமான பிரச்னைகளுக்கும் எளிய தீர்வு கிட்டும். மனக் குழப்பத்தை நீக்குபவை இத்தகைய தூண்கள். குறைந்தது இரண்டு நாழிகை நேரமாவது, அதாவது 48 நிமிடங்களுக்குக் குறையாமல் தியானம் மேள்கொள்தல் அவசியம்.

சமாதானத் தூண்கள்

சமாதானத் தூண்கள் அல்லது அமைதி தூண்கள் என்று அழைக்கப்படும் தூண்கள் மனிதனின் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை கொடுத்து அவனை அமைதிப்படுத்துகின்றன. கேள்விகளுக்கு உரிய விடையைப் பெற்ற மனம் அமைதி கொள்வது ஒரு விதம். ஆனால், மனதில் கேள்விகளே எழா விட்டால் அப்போது ஏற்படுவதுதானே உண்மையான அமைதி. இத்தகைய அனுகிரகத்தை தரும் தூண்கள் நிலை கொண்ட இடமே திருச்சி திருவாசி சிவாலயம் ஆகும்.

இங்குள்ள திருநீற்றுத் தூண்கள் எனப்படும் அமைதித் தூண்களை வழிபடுவதால் அடிக்கடி மனதில் எழும் கேள்விகளுக்கு இத்தல இறைவன் உரிய விடையை கொடுப்பதுடன், பக்தர்களின் தீவிர வழிபாட்டைப் பொறுத்து உரிய காலத்தில் மனதில் கேள்விகளே எழாத உயர்ந்த நிலையையும் அருள்வார்.

திருவாசி சிவாலய முன் மண்டபத்தில் எழுந்தருளிய இத்தூண்களை நீர் விட்டு அலம்பி நீரில் குழைத்த திருநீற்றுப் பட்டைகள் இட்டு, சுத்தமான குங்கும திலகத்தால் அலங்கரித்து திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய இடர்களையும் பதிகத்தையும், திருநீற்றுப் பதிகத்தையும் ஓதி வந்தால் மனம் அமைதி பெறும். மனக் குழப்பம் தீரும். நிம்மதியான உறக்கம் கிட்டும்.

உயர் ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகளால் அவதிப்படுவோர் மேற்கூறிய வழிபாடுகளால் அற்புத பலன் பெறுவார்கள்.

த்விபுஜங்க தூண்கள்

திருச்சி நாச்சியார் கோவிலில் கைஉடைந்த ஆஞ்சநேய மூர்த்தி அருளும் மண்டபத்தில் உள்ள பிரம்மாண்ட தூண்களே த்விபுஜங்க தூண்கள் என்றழைக்கப்படுகின்றன. மிகவும் அற்புதமான, அபூர்வமான தூண்கள் இவை. உலகில் வேறெந்த திருக்கோயிலிலும் இது போன்ற தூண்கள் கிடையாது. Astral travel என்று அழைக்கப்படும் நுண்இழைப் பயணம் மேற்கொள்வோர் மற்ற கிரகங்களுக்கு, நட்சத்திர மண்டலங்களுக்கு, தேவ லோகம், கந்தர்வ லோகம் போன்ற லோகங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு லோகத்திற்கும் செல்ல வேண்டிய பயண நிலையங்கள் உண்டு.

த்விபுஜ தூண்கள்
நாச்சியார் கோயில் திருச்சி

உதாரணமாக, திருச்சி செல்வதற்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கும் புது டெல்லி செல்வதற்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும்தானே செல்ல வேண்டும். அது போல நாக லோகம் செல்ல வேண்டும் என்றால் திருச்சி நாகநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள தூண்கள் அல்லது கோபுரக் கலசங்கள் வழியாக அல்லது அத்திருக்கோயில் தீர்த்தம் (தெப்பக்குளம்) வழியாகச் செல்ல வேண்டும்.

ஆதிசேஷனின் லோகம் செல்ல வேண்டும் என்றால் அலமேலு மங்காபுரத்தில் உள்ள திருக்கோயில் தூண்கள் வழியாகவோ, கோபுரக் கலசங்கள் வழியாகவோ, அல்லது கும்பகோணம் அருகே உள்ள சேஷம்பாடி திருத்தல கோபுரக் கலசங்கள் வழியாகவோதான் செல்ல வேண்டும். இவ்வாறு பற்பல நிபந்தனைகள் உண்டு.

ஆனால், திருச்சி நாச்சியார் கோவிலில் உள்ள த்விபுஜங்க தூண்கள் வழியாகச் சென்றால் எந்த நேரத்தில் எந்த லோகத்திற்கு வேண்டுமானாலும் நுண்இழைப் பயணத்தை மேற்கொள்ளலாம். மேலும், மற்ற லோகங்களுக்கு hot line (நேரிடைத் தொடர்பு வசதி) போல் இத்தூண்கள் செயல்படுவதால் பயணத்தின் இடையே மற்ற ஆவிகளால் எத்தகைய துன்பமும் இடையூறும் ஏற்படாது என்பதும் ஒரு சிறப்பு.

இத்தூண்களுக்கு சாம்பிராணி தைலக் காப்பிட்டு, வலம் வந்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதால் எதிர்பாராத சாலை விபத்துகள், இயற்கை சீற்றங்களான வெள்ளம், பூகம்பம் போன்றவற்றிலிருந்து மீள இத்தல இறைவன் அருள்புரிவார். இத்தூண்களை சுற்றியோ, பிரகாரத்திலோ அங்கபிரதட்சணம் வந்து வணங்குவது அற்புத வழிபாடாகும். வைகுண்ட வாச அனுகிரகத்தைத் தரக் கூடிய அற்புத வழிபாடு இது.

இம்மைக்கும் மறுமைக்கும் மேன்மை தருவதால், நன்மை பயப்பதால் இத்தூண்கள் த்விபுஜ தூண்கள் என்று போற்றப்படுகின்றன.

ஜகந்நாத தூண்கள்

பூரி திருத்தலத்தில் உள்ள ஜகந்நாத பெருமாள் விக்ரஹம் ஜகந்நாத லோகத்தில் மட்டுமே காணப்படும் ஜகந்நாத துல்யம் என்னும் மூலிகை மரத்தால் செய்யப்பட்டதாகும். இந்த தெய்வீக மரங்கள் பூலோகத்தில் காணப்படுவதில்லை. ஆனால், இத்தகைய அற்புத மரத்தால் அமைந்த திருத்தூண்களே திருச்சி அருகே திருத்தலையூர் பெருமாள் ஆலயத்தை அலங்கரிக்கும் தூண்கள். மிகவும் தொன்மை வாய்ந்த இந்த அற்புத பெருமாள் ஆலயமும், அங்குள்ள ஜகந்நாத தூண்களும் பராமரிப்பின்றி இருப்பது வருத்தத்திற்குரியதே.

ஜகந்நாத சக்திகள் பரிணமிக்கும் இத்தூண்களை வழிபடும் முறையாக சித்தர்கள் அருளுவதாவது. சுத்தமான நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய் இவற்றை சமஅளவில் கலந்து எடுத்துக் கொள்ளவும். இந்த தைலக் கலவையில் ஒரு சிறிது எடுத்து வலது உள்ளங்கையில் இதய ரேகைக்கும் ஆயுள் ரேகைக்கும் மத்தியில் வைத்து (படம் பார்க்கவும்) அப்படியே அதை இத்தூண்களின் மேல் தடவி தூண் முழுவதும் மசாஜ் செய்வது போல் பரவச் செய்ய வேண்டும்.

பின்னர் உள்ளங்கையில் எஞ்சியுள்ள தைலத்தை ஜகந்நாத பிரசாதமாக அவரவர் உச்சந் தலையில் தேய்த்துக் கொள்ள வேண்டும். மூளைச் செல்களுக்கு ஆக்கம் தரும் அற்புத வழிபாடு இது. ஒற்றைத் தலைவலி, தலை சுற்றல், கண் பார்வைக் குறைவு போன்ற குறைகள் நிவர்த்தியாகும். படிக்கும் குழந்தைகள் நல்ல அறிவு வளர்ச்சியும், சிந்தனைத் திறனும் பெற உறுதுணை செய்யும்.

பட்சத்திற்கு ஒரு முறை (பட்சம்=15 நாட்கள்) இத்தகைய வழிபாடுகளை குழந்தைகள் மூலம் நிறைவேற்றுதல் சிறப்பு. தைலத்தை கலக்கும்போதும் தூண்களின் மீது தடவும்போதும் கீழ்க்கண்ட ம்ருதுள துதியை 1008 முறைக்குக் குறையாமல் ஓதவும்.

ஜகந்நாதம் பரிபூர்ணம்
அனந்தசயனம் பரிபூர்ணம்
அருணாசலம் பரிபூர்ணம்

சிரஞ்சீவி தூண்கள்

பல திருத்தலங்களில் ஆஞ்சநேயர் மூர்த்தி எழுந்தருளிய தூண்கள் காணப்படும். பிள்ளையாரில் ஆரம்பித்து ஆஞ்சநேயரில் முடிக்க வேண்டும் என்ற விதியைப் பின் பற்றி பலரும் ஆலய வழிபாட்டின் இறுதி அங்கமாக ஆஞ்சநேய வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.

ஆஞ்சநேய மூர்த்தி எழுந்தருளிய தூண்களை சஞ்சீவி தூண்கள் அல்லது சிரஞ்சீவி தூண்கள் என்றழைப்பதுண்டு. நோய் நோடியின்றி நீண்ட வாழ்வை அளிக்கவல்ல சக்தியை தருவதால் இவற்றை சஞ்சீவி தூண்கள் என்றும், என்றும் வாழும் ஜோதி மூர்த்தியாய் ஆஞ்சநேயர் திகழ்வதால் இத்தூண்கள் சிரஞ்சீவி தூண்கள் என்றும் அழைக்கப்படும்.

ஸ்ரீசுப்ரமண்யர், மலையடிப்பட்டி

சில திருக்கோயில்களில் தூணின் ஒரு புறத்தில் கணபதி மூர்த்தியும் மறுபுறத்தில் ஆஞ்சநேய மூர்த்தியும் எழுந்தருளி இருப்பது உண்டு. இத்தகைய தூண்களை ஆத்யந்த பிரபாவ தூண்கள் என்றழைப்பர். ஸ்ரீஆத்யந்த மூர்த்தி கணபதியும் ஆஞ்சநேயரும் சேர்ந்த கோலத்தைக் கொண்டிருப்பதால் அந்த அவதாரத்தைச் சுட்டிக் காட்டும் தன்மையில் இத்தூண்கள் ஆத்யந்த தூண்களாகக் கருதப்படுகின்றன.

கணபதி மூர்த்தியை வணங்கி ஆரம்பமாகும் இறை வழிபாடு ஆஞ்சநேய மூர்த்தி வழிபாட்டுன் நிறைவு பெறுகிறது. ஆனால், அந்த நிறைவான நிலை மீண்டும் மற்றொரு இறை நிலைக்கு ஆரம்பமாய் அமைகிறது. எனவே, தெய்வீகத்தில் எந்த நிலையும் ஆரம்ப நிலை என்றோ எந்த நிலையும் இறுதி நிலை என்றோ உறுதியாகக் கூற முடியாது. அது என்றும் விரிந்து பரந்து தொடரும் நிலையாகும்.

எனவே திருக்கோயிலில் அனைத்து மூர்த்திகளையும் தரிசனம் செய்து உரிய முறையில் வழிபாடுகளை நிறைவேற்றிய பின் அவ்வழிபாட்டினால் வரும் பலன்கள் அனைத்தையும் மூலவரின் திருவடிகளில் சமர்ப்பித்து இந்தப் பலன் எதுவும் என்னுடையது அல்ல, அனைத்தும் உன்னுடையதே, பெருமானே என்று இறைவனைச் சரணடைவதுதான் சித்தர்கள் காட்டும் இறை வழிபாட்டு முறை.
பொதுவான தூண் வழிபாடு
இவ்வாறு திருகோயில்களில் நிலவும் தூண்கள் லட்சக் கணக்கான தெய்வீக பரிமாணங்களைக் கொண்டு விளங்குகின்றன. இவை அனைத்தையும் இச்சிறு நூலில் விளக்க முடியாவிட்டாலும் அனைத்துத் தூண்களுக்குமான பொதுவான வழிபாடுகள் சில உண்டு.

  1. சுத்தமான நீர், தீர்த்தத்தால் அலம்புதல், அபிஷேகம் செய்தல்.
  2. நீரில் குழைத்து விபூதி, மஞ்சள் பூசுதல்
  3. குங்குமத்தால் திலகம், பொட்டு வைத்து அலங்கரித்தல்
  4. வாசனை மலர்ச் சரங்களை சூட்டுதல்
  5. தூண்களைச் சுற்றி பச்சரிசி மாக்கோலம் இடுதல், காவி வண்ணம் பூசுதல்
  6. வேதம், இறைத் துதிகள், தேவாரம், திருவாசகம் ஓதுதல்
  7. பசு நெய், நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபடுதல்

இதில் முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த வழிபாடுகள் அனைத்தையுமே தகுந்த அனுமதியின் பேரில் செய்ய வேண்டும் என்பது அவசியம். திருக்கோயில் மூல மூர்த்திகளுக்கு நிகரான தெய்வீகத் தன்மையுடன் தூண்கள் விளங்குவதால் அதற்குரித்தான நியமங்களுடன் வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவும்.

சில வேளைகளில் நம்முடைய வேண்டுகோளை கோயில் நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில் நம்முடைய வழிபாட்டிற்கு உகந்த காலம் இன்னும் கனியவில்லை என்று எண்ணி நம் நிகழ்த்த வேண்டிய பூஜையை மானசீகமாக உறுதிப்பாட்டுடன் நிறைவேற்றி வந்தால் உரிய காலத்தில் இறைவனே முன் வந்து நமக்குத் தேவையான சந்தர்ப்பத்தை வழங்குவான். இதில் சிறிதும் ஐயம் வேண்டாம்.

இந்த நிபந்தனைகள் தூண் வழிபாட்டிற்கு மட்டுமன்றி அனைத்து பொது வழிபாடுகளுக்கும் பொருந்தும். கோயில் வழிபாடுகளில் கீழ்க் கண்ட விதிமுறைகளை கட்டாயம் அனுசரிக்க வேண்டும்.

  1. கோயில் தூண்களில் தேவதைகளும், தெய்வங்களும், அவதார மூர்த்திகளும், ரிஷிகளும், முனிகளும் உறைவதால் எக்காரணம் கொண்டும் தூண்களில் மேல் சிறு கவனக் குறைவால் கூட நம்முடைய கால்களோ, விளக்குமாறு போன்றவையோ படக் கூடாது.

  2. கத்தி, ஆணி, உளி, ப்ளேடு போன்ற கூரிய பொருட்களால் தூண்களை, இறை விக்ரங்களை (அது அழுக்குப் படிந்த கல் விக்ரஹமாக இருந்தாலும் கூட) கீறி சுத்தம் செய்வதை தவிர்க்கவும். தெய்வீகமான முறையில் தூண்களையோ, இறை விக்ரஹங்களையோ சுத்தம் செய்ய விரும்புவோர் எமது ஆஸ்ரமத்தை அணுகி தேவையான விவரங்களைப் பெறும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

  3. எக்காலத்திலும், எந்நிலையிலும், எந்தக் கோயில் தூணிற்கும், இறை விக்ரஹத்திற்கும் SAND BLAST அதாவது மணல், எந்திரங்கள் கொண்டு தூய்மைப் பணியை மேற்கொள்ளக் கூடாது. இதனால் மிகவும் கொடுமையான ஆபத்துக்களை, அறுவை சிகிச்சைகளை சம்பந்தப்பட்டோர் சந்திக்க வேண்டி வரும் என்று திருக்கோயில் காவல் தெய்வங்கள் எச்சரிக்கிறார்கள். வரும் முன் காப்பதுதான் அறிவுள்ள செயல்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam