ஒரு சுமங்கலி ஒரு கோடி சுமங்கலிகளை உருவாக்குவதே தெய்வீகம்

குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் சிவமய போற்றித் துதிகள்

இறைவனின் அனுகிரகத்தை நாம் எவ்வகையில் உடலில் ஏற்கிறோம்?

எம்பெருமானின் அனுகிரக சக்திகள் மனிதனின் உடல், மனம், உள்ளம் இவற்றில் உள்ள பல சக்தி மையங்கள் வழியாக ஏற்கப்படுகின்றன. மனித உடலில் நடு மையம், மத்ய மையம், ஆரண மையம் என்ற மூன்று சக்தி மையங்கள் இருந்தாலும், ஆரண மையம் வழியாகவே பெரும்பாலான அனுகிரக சக்திகள் ஏற்கப்படுகின்றன. சில அபூர்வமான வேத சக்திகள் தீட்சை என்னும் குடுமி வழியாக ஈர்க்கப்படுகின்றன. கடுக்கன், ருத்ராட்சம், தீனக் காப்பு, திருமாங்கல்யம், வளையல்கள், நெற்றியில் தரிக்கும் விபூதி, குங்குமம், காலில் மெட்டிகள், மருதாணி போன்றவற்றின் மூலமாகவும் சிலவிதமாக அனுகிரக சக்திகள் உடலில் விரவுகின்றன என்பதும் உண்மையே.

இவ்வாறு ஆரண மையம் வழியாகக் கிட்டும் அனுகிரக சக்திகள் மற்ற உடல் பாகங்களுக்கும் பரவி நிரவி நிற்க வேண்டும் அல்லவா? இதற்கு அருள்புரியும் மூர்த்தியே செவலூரில் வீற்றிருக்கும் ஸ்ரீபூமிநாதர் ஆவார். மேலும் இந்த ஆண்டில் வாகன விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் வாகனங்களுக்கு அதிபதியான செவ்வாய் மூர்த்தியை வேண்டி விபத்துக்களைத் தவிர்த்தல் அவசியமாகிறது. செவ்வாய் பகவான் தனிச் சன்னதி கொண்டு அருள்புரியும் வைத்தீஸ்வரன் கோயில் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவைத்யநாத சுவாமியை துதித்தலால் செவ்வாய் பகவானின் அனுகிரகத்தால் விபத்துகளிலிருந்து நாம் மீள முடியும். இவ்வாறு நாம் அனைத்து விதமான சுபமங்கள சக்திகளையும் இவ்வாண்டில் பெற்று வாழ அருள்புரியும் மூர்த்திகள், அம்பிகைகளின் பெயர்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றைத் தினந்தோறும் சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் அஷ்டோத்திர நாமாவளியாகவோ, இஷ்ட நாம ஜப மந்திரமாகவோ, எண் சக்திகளை விருத்தி செய்து கொள்ளும் பூஜையாகவோ ஆற்றி அனைவரும் அனைத்து வளங்களையும் பெற்று வாழ வேண்டுகிறோம்.

1. ஓம் ரீம் அபீதகுஜாம்பிகை சமேத அருணாசலேஸ்வராய நமஹ
2. ஓம் ரீம் கற்பகாம்பிகை சமேத கபாலீஸ்வராய நமஹ
3. ஓம் ரீம் திரிபுரசுந்தரி சமேத ஓளஷதீஸ்வராய நமஹ
4. ஓம் ரீம் அஞ்சனாக்ஷி சமேத கச்சபேஸ்வராய நமஹ
5. ஓம் ரீம் திரிபுரசுந்தரி சமேத பக்தவத்சலேஸ்வராய நமஹ
6. ஓம் ரீம் அமிர்தேஸ்வரி சமேத சந்த்ரசேகரேஸ்வராய நமஹ
7. ஓம் ரீம் ராஜராஜேஸ்வரி சமேத சந்த்ரமௌலீஸ்வராய நமஹ
8. ஓம் ரீம் அபிவிருத்திநாயகி சமேத அட்சயபுரீஸ்வராய நமஹ
9. ஓம் ரீம் அருமருந்துநாயகி சமேத கற்குடிநாதாய நமஹ
10. ஓம் ரீம் மோகனவல்லி சமேத கங்காதரேஸ்வராய நமஹ
11. ஓம் ரீம் சீதளாம்பிகை சமேத ஒத்தாண்டேஸ்வராய நமஹ
12. ஓம் ரீம் மாணிக்கவல்லி மரகதவல்லி சமேத மகாலிங்கேஸ்வராய நமஹ
13. ஓம் ரீம் கோமதி சமேத சங்கரநாராயணாய நம
14. ஓம் ரீம் அன்னபூரணி சமேத க்ருபாகூபாரேஸ்வராய நமஹ
15. ஓம் ரீம் மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வராய நமஹ
16. ஓம் ரீம் திரிபுராந்தகி சமேத திரிபுராந்தகாய நமஹ
17. ஓம் ரீம் பிரேமராம்பிகை சமேத அங்குனேஸ்வராய நமஹ
18. ஓம் ரீம் பிரசன்ன குந்தளாம்பிகை சமேத தாந்த்ரீஸ்வராய நமஹ
19. ஓம் ரீம் பவானி சமேத சங்கமேஸ்வராய நமஹ
20. ஓம் ரீம் பரஞ்சோதி சமேத பரியாமருந்தீஸ்வராய நமஹ
21. ஓம் ரீம் காமாட்சி சமேத ஆனேஸ்வராய நமஹ
22. ஓம் ரீம் மீனாட்சி சமேத சுந்தரேஸ்வராய நமஹ
23. ஓம் ரீம் நாகாம்பிகை சமேத கோடி சூரிய பிரகாசாய நமஹ
24. ஓம் ரீம் அதுல்ய சுந்தரி சமேத அப்ரதீஸ்வராய நமஹ
25. ஓம் ரீம் சிவகாம சுந்தரி சமேத கைலாசநாதாய நமஹ
26. ஓம் ரீம் பிருகந்நாயகி சமேத கைலாசநாதாய நமஹ
27. ஓம் ரீம் மங்களாம்பிகை சமேத விஷமங்களேஸ்வராய நமஹ
28. ஓம் ரீம் சிவபூரணி சமேத பைரவேஸ்வராய நமஹ
29. ஓம் ரீம் ஆத்மநாயகி சமேத ருத்ரகோடீஸ்வராய நமஹ
30. ஓம் ரீம் நிறைவளையாம்பிகை சமேத வாலீஸ்வராய நமஹ
31. ஓம் ரீம் மங்கள நாயகி சமேத மல்லீஸ்வராய நமஹ
32. ஓம் ரீம் பாலசுந்தரி சமேத பாதாள ஈஸ்வராய நமஹ
33. ஓம் ரீம் காமகோடீஸ்வரி சமேத வைத்யநாதாய நமஹ
34. ஓம் ரீம் உமையாம்பிகை சமேத வீரசேகராய நமஹ
35. ஓம் ரீம் சாந்தநாயகி சமேத ஸ்வர்ணவாரீஸ்வராய நமஹ
36. ஓம் ரீம் பிருகந்நாயகி சமேத சரணாகதரட்சகாய நமஹ
37. ஓம் ரீம் ஆரணவல்லி சமேத பூமிநாதாய நமஹ
38. ஓம் ரீம் குங்குமவல்லி சமேத சப்தரிஷீஸ்வராய நமஹ
39. ஓம் ரீம் பூலோகநாயகி சமேத பூலோகநாதாய நமஹ
40. ஓம் ரீம் ஜகத்ரட்சகி சமேத ஜகதீஸ்வராய நமஹ
41. ஓம் ரீம் அத்வைத நாயகி சமேத சற்குண லிங்கேஸ்வராய நமஹ
42. ஓம் ரீம் ஞானாம்பிகை சமேத ஹரிமுக்தீஸ்வராய நமஹ
43. ஓம் ரீம் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வராய நமஹ
44. ஓம் ரீம் அலங்காரவல்லி சமேத கீர்த்திவாகீஸ்வராய நமஹ
45. ஓம் ரீம் பால்வளநாயகி சமேத பசுபதீஸ்வராய நமஹ
46. ஓம் ரீம் சௌந்தரநாயகி சமேத பிரம்மபுரீஸ்வராய நமஹ
47. ஓம் ரீம் சுகந்தகுந்தளாம்பிகை சமேத மத்ஸ்யபுரீஸ்வராய நமஹ
48. ஓம் ரீம் குந்தளேஸ்வரி சமேத குந்தளேஸ்வராய நமஹ
49. ஓம் ரீம் கோகிலாம்பிகை சமேத கோடீஸ்வராய நமஹ
50. ஓம் ரீம் மங்களாம்பிகை சமேத ரிஷபாபுரீஸ்வராய நமஹ
51. ஓம் ரீம் ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வராய நமஹ
52. ஓம் ரீம் துங்கஸ்தனாம்பிகை சமேத கைலாசநாதாய நமஹ
53. ஓம் ரீம் கமலாம்பிகை சமேத காளீஸ்வராய நமஹ
54. ஓம் ரீம் அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வராய நமஹ
55. ஓம் ரீம் சிவகாமி சமேத சந்த்ரசேகராய நமஹ
56. ஓம் ரீம் மங்களாம்பிகை சமேத ப்ராணநாதேஸ்வராய நமஹ
57. ஓம் ரீம் கற்பகாம்பிகை சமேத அமராதீஸ்வராய நமஹ
58. ஓம் ரீம் விசாலாட்சி சமேத ராமநாதீஸ்வராய நமஹ
59. ஓம் ரீம் தையல்நாயகி சமேத வைத்யநாதாய நமஹ
60. ஓம் ரீம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வராய நமஹ
61. ஓம் ரீம் பிருகந்நாயகி சமேத மந்திரபுரீஸ்வராய நமஹ
62. ஓம் ரீம் மூலிகாரட்சாம்பிகை சமேத அரப்பளீஸ்வராய நமஹ
63. ஓம் ரீம் காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வராய நமஹ
64. ஓம் ரீம் ஜெகதாம்பிகை சமேத பூலோகநாதாய நமஹ
65. ஓம் ரீம் வாலாம்பிகை சமேத ஆம்ரவனேஸ்வராய நமஹ
66. ஓம் ரீம் அன்னபூரணி சமேத ஓதவனேஸ்வராய நமஹ
67. ஓம் ரீம் ஞானாம்பிகை சமேத பரசுநாதாய நமஹ
68. ஓம் ரீம் சுகந்த குந்தளாம்பிகை சமேத பத்ரிகாபரமேஸ்வராய நமஹ
69. ஓம் ரீம் பிரசன்ன நாயகி சமேத கைலாச நாதாய நமஹ
70. ஓம் ரீம் அஞ்சனாட்சி சமேத அமிர்தகடேஸ்வராய நமஹ
71. ஓம் ரீம் கருணாகரவல்லி சமேத கைலாயநாதாய நமஹ
72. ஓம் ரீம் அருந்தவ நாயகி சமேத கைலாசநாதாய நமஹ
73. ஓம் ரீம் மங்கள நாயகி சமேத மங்களநாதாய நமஹ
74. ஓம் ரீம் சுந்தரநாயகி சமேத அபயவரதீஸ்வராய நமஹ
75. ஓம் ரீம் ஆனந்தவல்லி சமேத ராஜராஜேஸ்வராய நமஹ
76. ஓம் ரீம் வித்யாசௌபாக்யஅம்பிகை சமேத பக்தவத்சலேஸ்வராய நமஹ
77. ஓம் ரீம் சுந்தரவல்லி சமேத சோமநாதாய நமஹ
78. ஓம் ரீம் சுரும்பார்குழலி சமேத ரத்னகிரீஸ்வராய நமஹ
79. ஓம் ரீம் ஹேமவர்ணாம்பிகை சமேத தாருகாவனேஸ்வராய நமஹ
80. ஓம் ரீம் அஞ்சனாட்சி பாலாம்பிகை சமேத உஜ்ஜீவநாதாய நமஹ
81. ஓம் ரீம் காந்திமதி சமேத பஞ்சவர்ணேஸ்வராய நமஹ
82. ஓம் ரீம் ஸ்ரீமதி சமேத சப்தரிஷீஸ்வராய நமஹ
83. ஓம் ரீம் சுகந்தகுந்தளாம்பிகை சமேத மாத்ருபூதேஸ்வராய நமஹ
84. ஓம் ரீம் சௌந்தரநாயகி சமேத எறும்பீஸ்வராய நமஹ
85. ஓம் ரீம் மங்கள நாயகி சமேத நித்ய சுந்தரேஸ்வராய நமஹ
86. ஓம் ரீம் சௌந்தர நாயகி சமேத புஷ்பவனேஸ்வராய நமஹ
87. ஓம் ரீம் மங்கள நாயகி சமேத பிரமசிரக் கண்டீஸ்வராய நமஹ
88. ஓம் ரீம் பிருகந் நாயகி சமேத கபர்தீஸ்வராய நமஹ
89. ஓம் ரீம் பிருகத் சுந்தர குஜாம்பிகை சமேத மகாலிங்கேஸ்வராய நமஹ
90. ஓம் ரீம் பவளக் கொடியம்மை சமேத ஆபத்சகாயேஸ்வராய நமஹ
91. ஓம் ரீம் அதுல்ய குஜாம்பிகை சமேத மாசிலாமணீஸ்வராய நமஹ
92. ஓம் ரீம் கந்துக கிரீடாம்பிகை சமேத கோடீஸ்வராய நமஹ
93. ஓம் ரீம் சுகந்தகுந்தளாம்பிகை நித்யகல்யாணி சமேத எழுத்தறி நாதாய நமஹ
94. ஓம் ரீம் தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதேஸ்வராய நமஹ
95. ஓம் ரீம் மேகலாம்பிகை சமேத ஆதிமூலேஸ்வராய நமஹ
96. ஓம் ரீம் விசாலாட்சி பாலாம்பிகை சமேத நீலகண்டேஸ்வராய நமஹ
97. ஓம் ரீம் பாலாம்பிகை சமேத மாற்றறிவரதாய நமஹ
98. ஓம் ரீம் பர்வதவர்த்தினி சமேத ராமநாதாய நமஹ
99. ஓம் ரீம் ஆவுடை நாயகி சமேத பரங்கிரி நாதாய நமஹ
100. ஓம் ரீம் வேணுவாக்குவாஹினி சமேத குற்றால நாதாய நமஹ
101. ஓம் ரீம் திரிபுரந்தர நாயகி சமேத மகுடேஸ்வராய நமஹ
102. ஓம் ரீம் கிருபாநாயகி சமேத பசுபதீஸ்வராய நமஹ
103. ஓம் ரீம் பிருகந்நாயகி சமேத அரங்குள நாதாய நமஹ
104. ஓம் ரீம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதாய நமஹ
105. ஓம் ரீம் ஜகதாம்பிகை சமேத வல்லீஸ்வராய நமஹ
106. ஓம் ரீம் சிவகாமி சமேத நடராஜாய நமஹ
107. ஓம் ரீம் பெரியநாயகி சமேத பிரம்மபுரீஸ்வராய நமஹ
108. ஓம் ரீம் லோபாமாதா சமேத அகஸ்தீஸ்வராய நமஹ

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

இதய நோய் அகற்றும் இறைத் துதிகள்

கலியுகத்தில் இதய நோயால் பலரும் வருந்துவர் என தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த முனிவர்கள் எம்பிரானிடம் வேண்டி பன்னெடுங்காலம் கடுந் தவம் இயற்றி இருதய நோய் அகல அற்புதமான இறைத் துதிகளைப் பெற்றுள்ளனர். நம்பிக்கையுடன் இத்துதிகளை ஓதி வருவோர்க்கு இருதயம் பலம் அடைந்து நன்னிலை அடைவர். மேலும் இவர்கள் திருச்சி திருவானைக்கோயில் பிரகாரத்தில் உள்ள எட்டுத் திக்கு கொடி மரங்களுக்குச் சுத்தமான 16 பசு நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருதலால் இதய இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகள், வீக்கம் நீங்கி சுகமடைவர்.

தேவமொழி இருதயக் காப்பு மந்திரம்

அங்காதங்கால் லோம்னோ லோம்னோ
ஜாதம் பர்வணி பர்வணி
யக்ஷ்மம் ஸர்வஸ் மாதாத் மனஸ்தமிதம்
விவ்ருஹாமி தே
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி

இதயக் கவசத் துதி தமிழில்

இருதய ஆகாசம் ஈரெட்டு நாளப் புடைக் கழிய மாதவத்து
வருதல் சிவபோதம் வந்துரைக்கப் பணித் தலையர் வார்த்த மாவரம்
மருதல மாமரத்துறை மந்தார மாமறையர் செருத்த வளித் துறையாம்
சுருதல மாமுனியும் இருதய ஈசத்தில் எழுந்த பதங் கண்டேன்.

துர்நாற்றம் அகல வாரம் ஒரு முறையாவது மாசிக்காய் ஒரு துண்டை வாயில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது வைத்திருந்து கீழ்க்கண்ட காயத்ரீ மந்திரத்தை மனதிற்குள் ஓதி வந்தால் துர்நாற்றம் விலகுவதுடன் அவர்கள் பேச்சில் தெளிவும் ஏற்படும்.
“ஓம் தத் புருஷாய வித்மஹே
மாசிக்காய் தேவாய தீமஹி
தந்நோ ஜனரஞ்சன ப்ரசோதயாத்.’

 

பிறவிப் பிணி அறுக்கும் பேரருள் மந்திரம்

பிணிகளில் கொடியது பிறவிப் பிணியாகும். இப்பிணிக்கு மருந்து சொல்வது யாரால் இயலும்? பிறவிப் பிணியையும் வேரறுக்க வல்ல ஓர் அரிய மருந்தை எளிய பாடல் மூலம் அளித்துள்ளார் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள். அவர்கள் திருவாய் மலர்ந்து அருளிய இப்பாடலை காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் நம்பிக்கையுடன் ஓதி இயன்ற தானத்தை அளித்து வந்தால் மிக விரைவில் இப்பிறவியிலேயே முக்தி நிலையை அடைந்து விடலாம் என்பது உறுதி.

மலையைப் பார்க்கும்போது மகாதேவா உன்நினைவு
மலர்களைப் பார்க்கும்போது மலருது உன்நினைவு
வில்வ இலையைக் காணும்போது பெருகுது உன்நினைவு
திருநீறு கொள்ளும்போது கூடுது உன்நினைவு

தாயினை நினைக்கும்போது நீ தந்தது நினைவாகுது
வானளாவ வளர்ந்ததை நினைக்கும்போது நீ கொடுத்தது நினைவாகுது
வந்த இடர்களை நினைக்கும்போது நீ தடுத்தது நினைவாகுது
பிறந்ததை நினைக்கும்போது உன்னை நினைப்பதே முடிவாகுது
திறந்த வெளியெல்லாம் பார்க்கும்போது அருணாசலா நீ ஒன்றே என முடிவாகுது.

ஸ்ரீஜேஷ்டா தேவி போற்றித் துதிகள்

(சனீஸ்வர பகவான் ஸ்ரீஜேஷ்டாதேவியை சுஜனி என்ற தேவமொழியில் ஓதி வணங்கிய துதியை தமிழ் மொழியில் அருளியவர் ஸ்ரீசதாதப சித்த ஈச பிரான் ஆவார்)

1. ஓம் க்லீம் ஐங்கரன் அவணியாய் போற்றி
2. ஓம் க்லீம் அடைக்கலம் அருள் அன்னையே போற்றி
3. ஓம் க்லீம் சிவனருள் இனிதருள் சியாமளா போற்றி
4. ஓம் க்லீம் ஆசை அறுப்பாய் போற்றி
5. ஓம் க்லீம் மும்மலம் நீக்கும் மூலதேவியே போற்றி

திருமகள் பூவாளுர்

6. ஓம் க்லீம் பாற்கடல் பனித்த பைந்தளிர் போற்றி
7. ஓம் க்லீம் சுயம்வர சூட்சும சுந்தரி போற்றி
8. ஓம் க்லீம் சுரபி முலைப்பால் சுவையே போற்றி
9. ஓம் க்லீம் இணைகரம் ஓர்கரம் உவந்தாய் போற்றி
10. ஓம் க்லீம் ஆதவன் செஞ்சுடர் அருட்குடை போற்றி
11. ஓம் க்லீம் நாமம் பதிக்கும் நல்லாள் போற்றி
12. ஓம் க்லீம் சந்தியா வந்தன தாரகை போற்றி
13. ஓம் க்லீம் மூலாதார முப்புரி முனிநிழல் போற்றி
14. ஓம் க்லீம் ஆறாதாரம் அமர்தீ அருளே போற்றி
15. ஓம் க்லீம் தினகரன் கனல்மேவும் வெஞ்சுடர் போற்றி
16. ஓம் க்லீம் அங்காரகனுக்கு அருள் அம்மையே போற்றி
17. ஓம் க்லீம் நீலோத்பலம் நயந்த நிர்மலா போற்றி
18. ஓம் க்லீம் முத்திக்கு வித்தே முழுமதி போற்றி
19. ஓம் க்லீம் நித்திய திருவடி நீங்காய் போற்றி
20. ஓம் க்லீம் நிலமளந்தான் நல்லுறவே போற்றி
21. ஓம் க்லீம் தீர்க சுமங்கலித் தாயே போற்றி

ஸ்ரீஜேஷ்டாதேவி பூவாளுர்

22. ஓம் க்லீம் வரம்பிலா வரமருள் வனிதா போற்றி
23. ஓம் க்லீம் உள்ளம் உவக்கும் உண்மை போற்றி
24. ஓம் க்லீம் துன்பத்திடை துணை வரும் தோணி போற்றி
25. ஓம் க்லீம் அறிதுயிலான அருமருந்தே போற்றி
26. ஓம் க்லீம் வழித் துணை நீயே தோளா மணியே போற்றி
27. ஓம் க்லீம் ஆனந்த பைரவி அமுதே போற்றி
28. ஓம் க்லீம் ஆணி பொன்னம்பலத்து அற்புதமே போற்றி
29. ஓம் க்லீம் சுந்தர வடிவழகி சூலினி போற்றி
30. ஓம் க்லீம் சாட்சியானவளே சத்தியமே போற்றி
31. ஓம் க்லீம் இந்திரன் போற்றும் சந்திர பதம் போற்றி
32. ஓம் க்லீம் தன்னிலை மறைக்கும் தயாநிதி போற்றி
33. ஓம் க்லீம் என்னிலை எனக்கருள் எந்தாய் போற்றி
34. ஓம் க்லீம் எண்ணம் வண்ணமாக்கும் ஏந்திழை போற்றி
35. ஓம் க்லீம் சித்சபையின் நர்த்தனமே சிந்தாமணி போற்றி
36. ஓம் க்லீம் குருவருள் திருவருள் நினதருள் போற்றி

நமது பூமியில் உள்ள தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போல தேவ லோகங்களிலும் சரஸ்வதியின் அருளால் தோன்றிய பல்லாயிரக் கணக்கான மொழிகள் உண்டு. அது போல சனீஸ்வர லோகத்திற்கு உரித்தான தேவமொழியே சுஜனி என்னும் மொழியாகும். யாராக இருந்தாலும் தமது தாய் மொழியிலேயே உரையாடுவதால் தங்கள் எண்ணங்களைத் தெளிவாக வெளியிடலாம் என்ற கருத்தை ஒட்டி சனீஸ்வர பகவானும் ஸ்ரீஜேஷ்டா தேவியை தன்னுடைய தேவ அன்னையாகக் கருதி அந்த மாதாவைத் தன்னுடைய லோகத்திற்கு உரித்தான சுஜனி என்ற தேவமொழியில் துதி செய்து வணங்கினார்.

சுஜனி மொழியில் அமைந்த துதியை கலியுக மக்களும் உணர்ந்து பயன்பெறுவதாற்காக திருக்கயிலாய பொதிய முனிப் பரம்பரை குரு மகா சன்னிதானம் ஸ்ரீசதா தப சித்த பிரான் அந்த சனீஸ்வர துதியின் தத்துவத்தை தமிழ் மொழியில் அருளியுள்ளார்கள். மிகவும் சக்தி வாய்ந்த இத்துதிகளின் ஆழ்ந்த உட்பொருளை உணர்ந்து கொள்ள குறைந்தது 20 ஆண்டுகள் தேவைப்படும் என்பது சித்தர்கள் கருத்து.

இருப்பினும் மூன்று துதிகளின் மேலோட்டமான பொருளை மட்டும் இங்கு அளித்துள்ளோம். இதன் மூலம் அனைத்து துதிகளின் மகத்துவத்தையும் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து ஸ்ரீஜேஷ்டாதேவியை துதித்து, வணங்கி பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஓம் க்லீம் ஐங்கரன் அவணியாய் போற்றி

ஐந்து அட்சரங்களின் சக்தியாக விளங்கும் நாதனான ஆதிசிவன் அருளால் தோன்றிய ஐந்து எழுத்து நாமம் கொண்ட சதாதபஸ் என்னும் அடியேன் ஐந்து வண்ணமாய் உலகெங்கும் விளங்கும் மக்கள் ஐந்து விதமாய் துலங்கும் அனைத்து சுக போகங்களையும் பெற்று வாழ ஐந்து கரங்களுடன் விளங்கும் விநாயகப் பெருமானை வணங்கி ஐந்து எழுத்து தேவியின் துதியை சமர்ப்பிக்கிறேன் என்பது இத்துதியின் மேலோட்டமான பொருளாகும்.

உலகத்திலுள்ள மக்கள் அனைவரையும் சிவப்பு, கருப்பு போன்ற ஐந்து வண்ணம் உடையவர்களாய்ப் பிரிக்கலாம். இவ்வாறு ஐந்து வண்ணம் உடைய மக்களுக்கும் அருள்பாலிப்பதால் திருச்சி உறையூரில் அருள்புரியும் பெருமான் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்தால் துதிக்கப்படுகிறார். உலகத்தில் எந்த வண்ணம் உடைய மனிதர்கள் எந்த இடத்திலிருந்து எந்த மொழியில் இறைவனைத் துதித்தாலும் அவர்கள் பிரார்த்தனை உறையும் இடமே உறையூர் என்பதாகும்.

மனிதப் பிறவி எடுத்த ஓர் உயிர் 32 விதமான இன்பங்களையும்  சுக போகங்களையும் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு எல்லாவித போகங்களையும் ஒரு மனிதன் அனுபவித்தால்தான் அவன் முக்தி பெற்று அடுத்த ஜீவ நிலைக்கு உயர முடியும். இவ்வாறு 32 விதமான இன்பங்களை மக்கள் அனுபவிப்பதற்காகவே நமது முன்னோர்கள் 32 விதமான அறங்களைப் போதித்து அதைத் தங்கள் வாழ்க்கையில் செயல்படுத்தியும் வந்தார்கள்.

கலியுகத்தில் அத்தகைய 32 அறங்களையும் நடைமுறையில் செயல்படுத்த முடியாது என்பதால் ஸ்ரீஅகத்திய பெருமான் பெருங்கருணை கொண்டு 32 தேவாரத் துதிகளை அருளியுள்ளார்கள். இத்துதிகளைத் தொடர்ந்து ஓதி வந்தால் இறைவன் அருளால் 32 விதமான அறங்களை ஆற்றிய பலன்களையும் நாளடைவில் பெறமுடியும். (3+2=5 என்பதால் 32 அறங்களும் ஐந்தாய் விளங்கும் என்பதன் பொருள் இதுவே,)

ஐந்து எழுத்து தேவி என்பது ஸ்ரீஜேஷ்டாதேவியைக் குறிக்கும் நாமம் ஆகும். ஸ்ரீஜேஷ்டாதேவியை மூத்த திருமகள் என்று துதித்து வணங்குவதல் மரபு. ராமரை பெருமாள் என்றும் லட்சுமண மூர்த்தியை இளைய பெருமாள் என்றும் அழைப்பது நீங்கள் அறிந்த ஒன்றுதானே.

எந்த காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் கிழக்கு திக்கு நோக்கி நின்று ஆரம்பித்தல் நலம் என்ற வழக்கத்தை ஒட்டி எண் கணித சூத்திரப்படி ”ஐங்கரன் அவணியாய்” என்ற பத்து எழுத்துக்களும் கிழக்கு திக்கைச் சுட்டுகின்றன. மேலும், எட்டு திக்குகளுடன், ஆகாயம், பாதாளம் என்ற திக்குகளும் சேர்ந்து திக்கு சக்திகள் பத்தாக அமைவதால் ஸ்ரீஜேஷ்டா தேவியின் இம்முதல் துதி திக்கு தேவதா வழிபாடாகவும் மலரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இத்துதியில் உள்ள சக்தியை மக்களுக்கு அளிப்பதற்காக ஸ்ரீசதாதப சித்த பிரான் தன்னுடைய அருந்தவ சக்திகளை ”க்லீம், போற்றி” என்ற அட்சரங்களில் பதித்து வைத்துள்ளார். மேலும், இந்த துதிகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாய் இருப்பதால் இவற்றை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தி விடாமல் இருப்பதற்காக இத்துதிகளை ”ஓம்” என்ற அட்சர பாதுகாப்புப் பெட்டகத்தில் பொலிந்து வைத்துள்ளார்.

இம்முதல் துதியில் உள்ள அட்சரங்கள் 18. அதாவது 1+8=9. 9 என்ற எண் விநாயகப் பெருமானுக்கும் ஆஞ்சநேய மூர்த்திக்கும் உரியதாக இருப்பதால் இம்முதல் துதியே மக்களுக்கு ஆதி, அந்தமாய் அனைத்து நலன்களையும் நல்க வல்ல அற்புதமான மகத்துவத்துடன் விளங்குகிறது. மேலும் எண் 9 முழுமையையும் பூர்ணத்துவத்தையும் குறிக்கும்.

ஓம் க்லீம் நாமம் பதிக்கும் நல்லாள் போற்றி

பொதுவாக, மகா விஷ்ணு நெற்றியில் திருநாமத்துடனும், சிவபெருமான் திருநீற்றுப் பட்டையுடனும் திகழ்வார்கள் அல்லவா? ஆனால், குறித்த விசேஷ தினங்களில் இருவரும் தங்கள் நெற்றித் திலகங்களை மாற்றிக் கொள்வதுண்டு.

உதாரணமாக, வைகுண்ட ஏகாதசி திருநாளன்று சிவபெருமான் நெற்றிக்கு அழகான திருமண் தரித்து நாம அலங்காரத்துடன் சென்ற விஷ்ணு மூர்த்தியை வைகுண்டத்தில் தரிசித்து மகிழ்வார். அதே போல மகா சிவராத்திரி அன்று லட்சமி தேவி பெருமாளுக்கு திருநீற்றை நீரில் குழைத்து இட அந்த அற்புதமான விபூதி அலங்காரத்துடன் திருக்கைலாயம் சென்று சிவபெருமானை தரிசித்து மகிழ்வார்.

எனவே இறை மூர்த்திகளிடம் எந்த பேதமும் கிடையாது. இதை உணர்ந்தாவது சிவ, வைஷ்ணவ பக்தர்கள் அந்தந்த மூர்த்திகளுக்கு உரித்தான விசேஷ பூஜை தினங்களில் குறித்த நெற்றித் திலகங்களை அணிந்து வழிபாடுகளை இயற்றுவதால் தங்கள் பக்தியை எளிதாக பெருக்கிக் கொள்ள முடியும்.

நெற்றித் திலகம் என்பது இறை மூர்த்திகளுக்கு மட்டும் அல்ல. மக்களுக்கும் நெற்றித் திலகம் இன்றியமையாததே. கணவன்மார்கள் தினமுமோ அல்லது வெள்ளிக் கிழமைகளிலாவது தங்கள் மனைவிமார்களுக்கு அவர்கள் நெற்றி, முன் வகிடு, திருமாங்கல்யம் இவற்றில் தூய்மையான குங்குமத்தால் பொட்டு வைத்து இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் பெண்களின் சுமங்கலித்துவ சக்திகள் விருத்தியாகி அது கணவன்மார்களுக்கு நீண்ட ஆயுளையும் லட்சுமி கடாட்ச சக்திகளையும் அளிக்கும்.

அதே போல மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்கள் வெளியே செல்லும்போது இறைவனை வேண்டி கணவன்மார்களின் நெற்றியில் குங்குமத்தால் திலகம் இட  வேண்டும். இது கணவன்மார்கள் மேற்கொள்ளும் காரியங்களில் ஏற்படும் இடர்களை, தடங்கல்களை நீக்கி அவர்களுக்கு வெற்றியை அளிக்கும். அதனால் இத்திலகம் வெற்றித் திலகம் என்றழைக்கப்படுகிறது.

சப்த ரிஷிகள் ஒரு முறை ஸ்ரீஅகத்திய பெருமானை அவருடைய காரியங்களில் ஏற்படும் தொடர்ந்த வெற்றிக்குக் காரணம் என்ன என்று கேட்டபோது அப்போது அவர், ”அடியேனுடைய தர்ம பத்தினி லோபாமாதா அடியேன் வெளியே செல்லும்போதெல்லாம் அடியேனுக்கு வெற்றித் திலகமிட்டு எம்பெருமானை பிரார்த்தித்துதான் விடை கொடுப்பாள். அதுவே அடியேன் ஆற்றும் எல்லா காரியங்களிலும் வெற்றி வாகை சூட உதவி புரிந்தது,” என்று பணிவுடன் பதிலளித்தாராம்.

எப்போதும் வெற்றியையே நல்கும் வர சக்திகளை அகத்திய மாமுனி பெற்றிருந்த காரணத்தால்தான் அவர் ஸ்ரீராமருக்கே ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உபதேசம் செய்து அவரை ஜெயராமனாக ராவணனை வெற்றி கொள்ளச் செய்தார்.

அவ்வாறு கணவன்மார்கள் மனைவிமார்களுக்கு சுமங்கலித் திலகம் இடும்போதும், மனைவிமார்கள் கணவன்மார்களுக்கு வெற்றித் திலகம் இடும்போதும்
இறை நாமம் திருநாமம்
திருநாமம் ஒரு நாமம்
ஒரு நாமம் நாமபுரீசா நின் திருநாமமே
என்று ஸ்ரீநாமபுரீசரை தியானித்து திலகம் இடுதல் நலம். ஸ்ரீநாமபுரீசர் திருத்தலம் புதுக்கோட்டை பட்டுக் கோட்டை சாலையில் ஆலங்குடியில் அமைந்துள்ளது.

ஸ்ரீநாமபுரீஸ்வரர் திருத்தலம்
ஆலங்குடி

இவ்வாறு தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஸ்ரீஜேஷ்டா தேவி தன் உத்தம கணவரான உத்தாதலக மகரிஷிக்கு நெற்றித் திலகம் இடுவது வழக்கம். நாம் காலையில் எழுந்து கரதரிசனம் செய்யும்போது உத்தாதலக மகரிஷியை தியானித்து வணங்கும்போது ஸ்ரீஜேஷ்டாதேவியின் சுமங்கலித்துவ சக்திகளும், உத்தாதலக மகரிஷியின் தபோ பல சக்திகளும், சாயா தேவி சூரிய பகவானின் பாஸ்கர சக்திகளும், நவ கிரக சக்திகளும் நமது நெற்றியில் பதிக்கப்படுகின்றன.

நீங்கள் கர தரிசனம் செய்யும்போது உங்களின் விரல் அமைப்பைக் கவனித்துப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். உங்களது இடது சூரிய விரல் (மோதிர விரல்) நுனி, இடது புத விரல் நுனி (சுண்டு விரல்), வலது புத விரல் நுனி, வலது சூரிய விரல் நுனி இவைகள் இணைந்து நாமத்தின் வடிவத்தை உருவாக்கும். இந்த நாமத்தின் வழியே வரும் பாஸ்கர கிரண சக்திகளை உங்கள் நெற்றியில் ஆக்ஞா சக்கரத்தில் பதிக்கும் தெய்வீகத் திருப்பணியை மேற்கொள்ளும் தேவியே ஸ்ரீஜேஷ்டாதேவி ஆவாள்.
அந்த அற்புத திருப்பணியையே நாம் ”நாமம் பதிக்கும் நல்லாள்” என்று துதித்து ஆராதிக்கிறோம்.

சில கணவன்மார்கள் தங்கள் மனைவியர்களை அழைக்கும்போது அவர்களின் பெயரைச் சுருக்கி அழைப்பது வழக்கம். இது மங்களகரமான பெயராக அமைவது அவசியம். உதாரணமாக, ராமலட்சுமி என்ற தெய்வீக நாமத்தை ரம்மி, லச்சு என்று அழைப்பதைத் தவிர்தது லட்சுமி என்றோ, தேவி என்றோ அழைத்தல் நலம். பொதுவாக, மனைவிமார்களை நாரிமணி, நல்லாள், தேனம்மை என்று இனிமையாக அழைப்பதால் லட்சுமி கடாட்ச சக்திகள் பெருகி குடும்பத்தில் ஒற்றுமை பெருகும்.

ஓம் க்லீம் இந்திரன் போற்றும் சந்திர பதம் போற்றி
கும்பகோணம் அருகே உள்ள தேரழுந்தூர் என்னும் ஊரில் சுந்தரன் என்ற பெயருடைய ஒரு வாலிபன் வாழ்ந்து வந்தான். பெயருக்கேற்றபடி அழகான அங்க லட்சணங்கள் வாய்க்கப் பெற்ற அவன் தன்னுடைய குலத் தொழிலான மரமேறும் வேலையைச் செய்து வந்தான் அக்காலத்தில் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்கு யாரும் பணம் தருவது கிடையாது. பணம் என்பதே புழக்கத்தில் இல்லாத காலம்.

ஒரு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொடுத்தால் ஒரு மரத்திற்கு மூன்று தேங்காய்களைக் கூலியாகத் தருவார்கள். இவ்வாறு தினந்தோறும் கூலியாகக் கிடைத்த தேங்காய்களில் ஒரு மரத்தில் கிடைத்த மூன்று தேங்காய்களை மட்டும் தன்னுடைய உணவாக எடுத்துக் கொண்டு எஞ்சிய தேங்காய்களை உடைத்து காய வைத்து அந்த காய்களிலிருந்து எண்ணெய் ஆட்டி, அவ்வாறு கிடைத்த தேங்காய் எண்ணையை வைத்து திருக்கோயில்களில் ஆயிரக் கணக்கான அகல் விளக்கு தீபங்களை ஏற்றி தீப சேவை செய்து வந்தான் சுந்தரம்.

பொதுவாக கோயில்களில் தீபம் ஏற்றி வந்தால், அதிலும் சிறப்பாக அர்த்த நாரீஸ்வர மூர்த்திக்கு பஞ்சமி திதிகளில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் குடும்ப ஒற்றுமை பெருகும். தம்பதிகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடு நீங்கும். இவ்வாறு சுந்தரன் ஏற்றி வந்த அகல் விளக்கு தீபங்களால் அவனுடைய காலத்தில் குடும்பத் தகராறு என்பதே கேள்விப்படாத ஒரு விஷயமாக இருந்து வந்தது.

திருமணம் ஏதும் செய்து கொள்ளாமல் சுந்தரம் ஆற்றிய தொண்டு அவ்வூர் மக்களை மட்டும் அல்லாது அக்கம் பக்கம் ஊர்களில் உள்ள தம்பதிகளையும் கவர்ந்தது. பல தம்பதிகளும் சுந்தரனை நாடி தங்கள் பிரச்னைக்கு தீர்வு அளிக்க வேண்டினர். அவ்வாறு தன்னிடம் அடைக்கலம் அடைந்த தம்பதிகளுக்கு இறைவனை வேண்டி மூன்று  ஆழாக்கு தேங்காய் எண்ணெயை அளித்து அவரவர் ஊரில் உள்ள திருக்கோயில்களில் தீபம் ஏற்றுமாறு பணித்தான்.

சுந்தரம் அளித்த தேங்காய் எண்ணெயால் தீபம் ஏற்றிய தம்பதிகள் தங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை உணர்ந்தது மட்டும் அல்லாமல் குழந்தைச் செல்வம் போன்ற செல்வப் பெருக்கையும், நோயற்ற ஆரோக்கிய வாழ்வையும் அடைந்தனர்.

தேங்காய் மட்டையை உரித்து அதிலிருந்து பெறும் நாரையும் சுந்தரம் பாதுகாத்து அதைக் கொண்டு கயிறு திரித்து திருக் கோயில் தேர்களை இழுக்க அற்புதமான வடக்கயிறுகளையும் தயாரித்துக் கொடுத்தான்.

திருக்கோயில்களில் தேர் இழுப்பதை திருத்தேர் வடம் பிடித்தல் என்றுதான் அக்காலத்தில் அழைப்பார்கள். அதாவது இறைவன் பவனி வரும் தேரை யாரும் இழுக்க வேண்டியது இல்லை. தேர் வடத்தைப் பிடித்தால் போதும் அதுவே இறைவன் அருளால் வீதிகளில் வலம் வரும் என்பதே இதன் பொருள்.

தேர் திருவிழாக்கள் நடக்கும்போது பக்தர்கள் குறித்த திருத்தலத்தில் கூடி தேர் வடத்தைப் பிடித்துக் கொண்டு இறை நாமங்களை, கீர்த்தனங்களை ஓதியவாறே நின்று கொண்டிருப்பார்கள். நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்யங்களையும் வாசித்துக் கொண்டிருப்பார்கள்.

யாரும் தேரை இழுக்க முயற்சி செய்வது கிடையாது. இறைவன் விரும்பிய குறித்த முகூர்த்த நேரம் வந்தவுடன் தேர் தானாக நகர ஆரம்பிக்கும். அவ்வாறு தேர் நகர்வதற்கு எத்தனை மணி நேரம் ஆனாலும் அவர்கள் தேர் வடத்தைத் தொட்டவாறு இறை நாமத்தைக் கூறியவாறே நின்று கொண்டிருப்பார்கள்.

தேர் வடம் மிகவும் தெய்வீக சக்தியை உடையது. தேரில் எழுந்தருளிய இறை மூர்த்தியை தரிசனம் செய்த அதே பலனை தேர் வடத்தை தரிசனம் செய்தாலும் பெறலாம் என்பது உண்மையே. இன்றும் பல பக்தர்கள் இந்த உண்மையை செயலில் நிறைவேற்றி நன்மை அடைகிறார்கள்.

குறிப்பாக, முதுகுத் தண்டில் ஏற்படும் நோய்களுக்கு தேர் வடக்கயிறு அருமருந்தாக அமையும். திருத்தலங்களில் தேர் வடத்தைத் தொட்டவாறு ஆதித்ய ஹ்ருதய துதியை ஓதி வந்தால் எத்தகைய கடுமையான முதுகுத் தண்டு நோய்களுக்கும் நிவாரண வழி முறைகள் கிட்டும்.

தற்காலத்தில் இறை நம்பிக்கை குறைந்து போய் மக்கள் இழுத்தால்தான் தேர் ஓடும் என்ற கருத்து பலம் பெற்று விட்டதால் பல திருக்கோயில்களில் நூற்றுக் கணக்கான மக்கள் கூடி தேரிழுப்பது மட்டும் அல்லாமல் புல்டோசர் போன்ற இயந்திரங்களையும் தேரிழுக்க பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

சுந்தரத்தின் தன்னலமற்ற சேவையால் எவரும் தேரை இழுக்காமல் இறைவன் தானே விரும்பி தேர் வலம் வந்த காட்சி அனைவரையும் பரவசப் படுத்தியது. எனவே பாரத தேசம் எங்கும் சுந்தரத்தின் புகழ் பெருகி பல தூர பிரதேசங்களில் உள்ள ஆலயங்களுக்கும் தேவையான தேர் வடத்தை சுந்தரமே செய்து தரும்படி இறை அடியார்கள் கேட்டுக் கொண்டனர்.

இவ்வாறு அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அற்புத இறை சேவை ஆற்றிய சுந்தரம் தன்னுடைய மானிட உடலை உகுக்க வேண்டிய தருணம் வந்தது. உத்தம இறை அடியார்களின் உயிரை எம தூதர்கள் தீண்டுவது கிடையாது. உயர்ந்த ஜீவன்களின் உயிரை எம தர்ம ராஜாவே நேரில் பெற்றுச் செல்ல வேண்டும் என்ற இறை நியதி இருப்பதால், அரிய ஆன்மீகத் திருப்பணி ஆற்றிய சுந்தரத்தை உரிய இடத்தில் சேர்ப்பதற்காக எம தர்ம ராஜா தேரழுந்தூர் திருத்தலத்தை அடைந்து நறுமணம் வீசும் புஷ்ப விமானத்தில்  சுந்தரத்தை ஏற்றி பிரம்ம லோகத்திற்கு அழைத்துச் சென்றார்.

பொதுவாக, நூறு கோயில்களுக்கு மேல் கும்பாபிஷேகத் திருப்பணிகளை ஆற்றியவர்களுக்கு இந்திர பதவி அளிக்க வேண்டும் என்ற நியதி உண்டு. ஆனால், சுந்தரமோ ஆயிரக் கணக்கான திருக்கோயில்களுக்கு அற்புத திருப்பணிகள் ஆற்றி விட்டதால் சுந்தரத்தின் தெய்வீகத் தகுதியை நிர்ணயிக்கும் பொருட்டு சுந்தரத்தை பிரம்ம லோகம் அழைத்து வந்தார் எம தர்ம ராஜா.

பிரம்மாவின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி பணிவுடன் நின்றார் சுந்தரம். பிரம்மா சுந்தரத்தை ஆரத் தழுவிக் கொண்டு, ”சுந்தரா, அற்புதமான தெய்வீக திருப்பணிகள் நீ ஆற்றி உள்ளதால் உன்னை இந்திர பதவியில் அமர்த்த இறைவன் திருவுள்ளம் கொண்டுள்ளார்,” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

சுந்தரம், ”ஐயனே, தங்களின் தேவ வாக்கு அடியேனை பேரானந்தத்தில் ஆழ்த்தி விட்டது. இந்த அற்புதமான பிரம்ம லோக திருச்சன்னதியில் தங்களிடம் ஒரு வரம் கேட்க விரும்புகிறேன். அடியேன் இந்திரப் பதவியில் அமர்ந்து தேவ லோகத்தை ஆட்சி செய்யும்போது அதில் எந்த வித தவறும் நேராமல் நேர்மையான நியாயமான ஆட்சியை அமைக்க விரும்புகிறேன். அதற்காக அடியேன் செய்ய வேண்டிய தவ முறையைப் பற்றி அருள வேண்டும்,” என்று பணிவுடன் கேட்டார்.
பிரம்ம தேவர் மகிழ்ந்து, ”நல்லது, குழந்தாய். பொதுவாக, இந்திர பதவி கிடைத்ததுமே அதை உடனே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமே மானிட ஜீவன்களிடம் மிகுந்திருக்கும். நீயோ அதற்கு விதி விலக்காக இருக்கிறாய். அதுவும் இறைவன் திருவுள்ளமே”, என்றார்.

”நெறி தவறாமல் தர்மம் பிறழாமல் இந்திர லோகத்தை ஆள விரும்பினால் நீ ஜேஷ்டாதேவியை நோக்கி தவம் செய். உன்னுடைய விருப்பம் நிறைவேறும்,” என்று அருளினார். சுந்தரமும் அவ்வாறு ஸ்ரீஜேஷ்டாதேவியை நோக்கி தவம் இயற்ற பிரம்ம தேவரிடமும் எமதர்ம ராஜாவிடமும் அனுமதி பெற்று பிரம்ம லோகத்திலிருந்து புறப்பட்டார்.

தொடர்ந்து ஒன்பது சதுர் யுகங்கள் தவம் ஆற்றிய பின்னர் சுந்தரத்திற்கு ஸ்ரீஜேஷ்டாதேவியின் தரிசனம் கிட்டியது. அன்னை அருளிய அமுத மொழிகளை சிரம் மேற்கொண்டு தேவ லோகம் அடைந்தார் சுந்தரம்.

மனிதனாக இருந்த சுந்தரத்திற்கு தற்போது சுந்தர வர்ம இந்திரன் என்ற பட்டத்தை சப்த ரிஷிகளின் தலைமை ரிஷியாக விளங்கிய ஸ்ரீஅகத்திய  ரிஷி அளித்து அவரை கௌரவப் படுத்தினார்.

தேவ லோகத்தில் இந்திரனுக்கு தேவ லோக சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் நிகழ்த்தும் போது சப்த ரிஷிகள் இந்திரனை ஒரு பல்லக்கில் ஏற்றி தேவ லோகத்தை பவனி வந்து பின்னர் வைரம், வைடூரியம் போன்ற தேவ லோக நவரத்தினங்கள் பதித்த அபராஞ்சித தங்கத்தாலான சிம்மாசனத்தில் அமர்த்துவது வழக்கம்.
அவ்வழக்கப்படி பல்லக்கை இந்திரன் முன் கொண்டு வந்து வைத்து சப்த ரிஷிகளும் அவர்களின் தலைலைக் குருவுமான ஸ்ரீஅகத்திய மாமுனி சுந்தர வர்ம இந்திரனை பல்லக்கில் அமரும்படி வேண்டிக் கொண்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக சுந்தர வர்ம இந்திரன் ஸ்ரீஅகத்திய மகரிஷியின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி, ”தேவரீர் அகத்திய மகா பிரபு, தங்களைக் காணவே பல ஆண்டுகள் தவம் செய்திருக்க வேண்டும். அத்தகைய மேன்மை படைத்த தங்கள் திருக்கரங்களின் ஸ்பரிசம் படுவதற்கு கூட இந்த இழியவனுக்குத் தகுதி கிடையாது. அப்படி இருக்கும்போது தாங்கள் பல்லக்கைச் சுமந்து அதில் அடியேன் ஏறி வருவது என்பதை அடியேனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. தயவு செய்து அடியேன மன்னித்து விடுங்கள்,” என்று உறுதியாகக் கூறி விட்டார்.

சப்த ரிஷிகளும் ஸ்ரீஅகத்தியரும் சுந்தர வர்ம இந்திரனின் பணிவையும் பக்தியையும் கண்டு பேருவகை எய்தினர். இந்திர லோகம் உண்மையில் பேறு பெற்றது என்று நினைத்து வியந்தனர்.

எத்தனை எத்தனையோ இந்திரர்களை பதவியில் ஏற்றி வைத்த சப்த ரிஷிகள் இப்படி ஒரு பணிவுடைய இந்திரனைப் பார்த்தது கிடையாது. ஒரு முறை ஒரு இந்திரன் ஸ்ரீஅகத்திய முனியை ”சர்ப்ப சர்ப்ப” என்று சொல்லி அவர் பல்லக்கு சுமக்கும்போது காலால் நெண்டி ஸ்ரீஅகத்திய முனியின் சாபத்தைப் பெற்றான்.
மற்றோர் இந்திரனோ கௌதம முனிவரின் உத்தம பத்தினியான அகலிகை மேல் மோகம் கொண்டு அவர் சாபத்தைப் பெற்றான். இவ்வாறு தவறுகள் பல செய்த இந்திரர்களைக் கண்ட தேவ லோகத்தில் உத்தம இந்திரன் ஒருவன் வருகை தந்தது கண்டு தேவ லோகமே பிரமிப்பில் ஆழ்ந்தது.

சப்த ரிஷிகள் தன்னுடைய பல்லக்கத்தைத் தூக்கக் கூடாது என்று உறுதியுடன் கூறியதோடு சுந்தர வர்ம இந்திரன் நின்று விடவில்லை. ஒவ்வொரு சப்த ரிஷியின் பாதங்களிலும், ஸ்ரீஅகத்திய மகரிஷியின் திருப்பாதங்களிலும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி ஒவ்வொருவரையும் பல்லக்கில் வைத்து தேவ லோகம் முழுவதும் தான் ஒருவனாகவே பல்லக்கில் அவர்கள் அனைவரையும் சுமந்து சென்று அவர்களுக்கு சேவை ஆற்றினார் சுந்தர வர்ம இந்திரன்.

இந்த அற்புதமான தெய்வீக சேவையைப் பாராட்டி மும்மூர்த்திகளுமே தங்கள் பத்தினி தெங்வங்களுடன் எழுந்தருளி சுந்தர வர்ம இந்திரனை மனமார வாழ்த்தினர்.
இப்படி இதுவரை தேவலோகம் கண்டிராத அற்புத இந்திரனாக மாறுவதற்கு உதவி செய்த தேவியே ஸ்ரீஜேஷ்டா தேவி ஆவாள். அன்னை ஜேஷ்டா தேவியின் அறிவுரைப் படிதான் இந்திரன் சப்த ரிஷிகள் பல்லக்கு சுமப்பதை அனுமதிக்காமல் தான் அவர்களைப் பல்லக்கில் சுமந்து சென்று சேவை ஆற்றினான். அதனால் இந்திர லோகத்தில் நிரந்தர பதவியையும் பெற்றான்.

எல்லா மனிதர்களுக்கும் மூலாதாரச் சக்கரத்தில் குண்டலினி என்ற ஒரு அற்புத சக்தி மறைந்துள்ளது. குண்டலினி என்ற இந்த அரும்பெரும் சக்தியை தியானத்தின் மூலம் மேலெழச் செய்தால் அளப்பரிய ஆற்றல்களைப் பெற்றலாம். இவ்வாறு பெறும் அளப்பரிய ஆற்றலை மற்ற ஜீவன்களின் நல்வாழ்விற்காகப் பயன்படுத்தியவர்களே மகான்களும் ரிஷிகளும்.

இவ்வாறு குண்டலினி சக்தி உச்சந் தலையில் சஹஸ்ரார சக்கரத்தை அடையும்போது அதை முறைப்படுத்தி உத்தம ஜீவன்கள் நிர்விகல்ப சமாதி நிலையை அடைகிறார்கள். இந்த நிர்விகல்ப சமாதி நிலையை மனித உடலில் ஏற்கும்போது உடலின் வெப்ப நிலை முச்சுடர் கத அளவிற்கு உயர்கிறது என்பது சித்தர்களின் கணக்கு. முச்சுடர் கதம் என்ற சித்த பரிபாஷை பதத்தை இன்றைய விஞ்ஞான அளவு கோல் கொண்டு கூற வேண்டுமானால் அதை 30,000 டிகிரி சென்டிகிரேட் என்று கூறலாம்.

நிர்விகல்ப சமாதியில் நிலைத்திருக்கும் ஒரு ஜீவனின் உடல் வெப்ப நிலை 30,000 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு உயரும் என்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆனால், இதுவே உண்மை. இதுவே சமாதி ரகசியம் ஆகும். ஒரு சிறிய அகல் விளக்கின் தீபம் உடலில் ப,ட்டாலே உடம்பு வெந்து போகிறது என்றால் இத்தகைய கற்பனைக்கு எட்டாத அளவு சூட்டை எப்படி மனித உடல் தாங்க முடியும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழுவது நியாயமே.

ஒரு சாதாரண மனித உடல் இந்த அபரிமிதமான வெப்பத்தை, சூட்டை ஏற்க முடியாது என்பது உண்மை. ஆனால், மனித உடல் முழுவதும் தூய்மை அடையும் போது அது ஒளி உடம்பாக மாறி எந்த அளவு உஷ்ணத்தையும் ஏற்கும் அளவிற்கு தயாராகிறது. மேலும், நிர்விகல்ப சமாதி நிலையை அடையும் அளவிற்கு ஒரு மனிதன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்போது அவன் மறைமுகமாக ஸ்ரீஜேஷ்டாதேவியின் அனுகிரகத்தைப் பெற்றவன் ஆகிறான்.

அந்நிலையில் ஸ்ரீஜேஷ்டாதேவியின் அனுகிரகத்தால் அந்த ஜீவனின் உடலில் முனிநிழல் என்ற ஒரு குளிர்ச்சி, சீதளத் தன்மை ஏற்படுகிறது. எந்த அளவிற்கு உடல் வெப்பம் அதிகரிக்கிறதோ அந்த உஷ்ண அளவிற்கு, உடல் வெப்பத்திற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் இந்த முனி நிழல் என்ற குளிர்ச்சி நிலையும் உடலில் தோன்றும்.
இறைவனின் அனுகிரகத்தை கருணை என்று அழைக்கிறோம். சற்குரு நாதனின் அனுகிரகத்தை குரு பிரசாதம் என்று அழைக்கிறோம். அதுபோல ஸ்ரீஜேஷ்டாதேவியின் அனுகிரக சக்தியை ”முனி நிழல்” என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். தியாகத்தின் சிகரமாகப் பொலிந்த உத்தாதலக மகரிஷியின் நிழலாக எங்கும் அவரைத் தொடர்ந்து அவர் திருவடிகளில் சதா சர்வ காலமும் பாத பூஜையை நிறைவேற்றி வந்ததால் ஸ்ரீஜேஷ்டா தேவி மூத்த திருமகள் என்ற பட்டம் மட்டும் அல்லாது மூத்த சுமங்கலி என்ற உயர்ந்த பட்டத்தையும் கொண்டு விளங்குகிறாள் என்பது பலரும் அறியாத ரகசியம்.

எம்பெருமான் ஈசன் அடிமுடி காணா அழற்பிழம்பு ஜோதியாக விஷ்ணு மூர்த்திக்கும் பிரம்ம தேவருக்கும் காட்சி அளித்தார் அல்லவா? பின்னர் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பூலோக மக்களும் மற்ற ஜீவன்களும் எல்லை இல்லாப் பரம்பொருளான ஈசனை தங்கள் ஊனக் கண்ணால் கண்டு வணங்கும் வண்ணம் மலையாய்க் காட்சி தர இசைந்தார்.

பரம்பொருள் அக்னி பிழம்பாக ஒளிர்ந்தால் அதை யாராலும் காண முடியுமா? எனவே பரம்பொருளின் உஷ்ண சக்தியை யாராவது ஏற்றுக் கொண்டு அக்னியை குளுமை அடையச் செய்தால்தான் தேவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியும் என்று எம்பெருமான் அருளிடவே எல்லையில்லா அண்ணாமலை உஷ்ண சக்தியை தாங்கும் வல்லமை பெற்ற அந்த உத்தமர் யார் என்று பிரபஞ்சம் எங்கும் தேடி அலைந்தனர் தேவர்கள்.

இறைவனின் ஒரு சிறு துளியாக தோன்றிய சூரியனிடமிருந்து வெளிவரும் ஒளியில் உஷ்ணம், வண்ணம், பிரகாசம், வியாப்தம் போன்ற பல்வேறு குணங்கள் உண்டு என்றால் எம்பெருமானின் அழற்பிழம்பு ஜோதியில் எத்தனை ஆயிரமாயிரம் குணாதிசயங்கள் பொதிந்திருக்கும். அந்த ஜோதியின் உஷ்ணம் அல்லது வெப்பம் என்னும் குணத்தை மட்டும் கிரகிக்கும் உத்தமரைப் பல லோகங்களில் தேவர்கள் தேடி அலைந்த பின்னர் எம்பெருமானின் அழற் பிழம்பு ஜோதியின் வெப்பத்தைத் தாங்கி குளிரச் செய்து அதை பூலோக மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கக் கூடிய தியாகேசன் உத்தாதலக மகரிஷி ஒருவரே என்று தெளிந்து அவரிடம் தஞ்சம் அடைந்தனர்.
தேவர்களின் விருப்பத்தை அறிந்த உத்தாதலக மகரிஷியும் பிரபஞ்சத்தின் நன்மையை உத்தேசித்து அண்ணாமலை ஜோதியின் வெப்ப சக்தியைத் தாங்கி அதற்கு அற்புதமான குளிர்ச்சியை ஊட்டி தியாகச் செம்மலாக மலர்ந்தார். அதனால்தான் அனல் மலையான திருஅண்ணாமலையின் உட்புறம் மிக மிக குளிர்ச்சியாக விளங்குகிறது. இது சித்தர்கள் மட்டுமே அறிந்த ரகசியம் ஆகும்.

தியாகத்தால் உன்னத நிலைபெற்ற உத்தாதலக மகரிஷியின் நிழலாக ஸ்ரீஜேஷ்டாதேவி விளங்கும் காரணத்தால் தேவி மனித உடலில் தோன்றும் குண்டலினி சக்திக்கு ஈடு செய்யத் தேவையான சீதள சக்தியை வழங்கி சீதளாம்பிகையாக அருள்பாலிக்கிறாள்.

எனவே, சுந்தர வர்ம இந்திரன் போற்றும் குளிர்ந்த நாமத்தை உடையவள் என்பது இந்த துதியின் மேலோட்டமான பொருளாகும்.
மேற் கூறிய மூன்று துதிகள் மட்டும் அல்லாது அனைத்து துதிகளையும் தினந்தோறும் ஸ்ரீஜேஷ்டாதேவியை தியானத்துடன் ஆத்த விசாரம் செய்து வந்தால்தான் அன்னையின் அருளை ஓரளவாவது அறிந்து கொள்ள முடியும்.

காயத்ரீ மந்திரம் (தமிழ் வடிவம்)

ஐம் ஹ்ரீம் க்லீம்
யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின்
மேலான ஒளியைத் தியானிப்போமாக.

நிதியே பொருள் யாவர்க்கும் முதலே
பானுவே பொன்செய் பேரொளித் திரளே
கருதி நின்னை வணங்கித் தொழுதேன்
கர்ம வினை தீர காட்டுதி வழியே.

சம்பு நடன நடராஜ துதி

நடராஜப் பெருமானின் திருக்கூத்தை எல்லா இடங்களிலும் கண்டு களிக்கும் பேற்றைப் பெற்ற வியாக்ர பாதரும் பதஞ்சலி முனியும் இந்த அனுகிரகத்தைப் பெற்ற இடமே மீமிசல் கல்யாண ராமர் திருத்தலமாகும். எம்பெருமான் எப்போதும் ராம நாம தாரக மந்திரத்திலேயே லயித்திருப்பதால் ராமர் சிறப்பாக அருளும் தலத்தில் இந்த அனுகிரகத்தை அருளியது பொருத்தம்தானே. மேலும் சீதை பிராட்டி வேண்டிக் கொண்டதன் பேரில் சம்பு நடன அஷ்டக துதியை பதஞ்சலி முனிக்கு அருளிய திருத்தலமும் மீமிசல் திருத்தலமாகும் என்பது பலரும் அறிய வேண்டிய ஆன்மீக இரகசியமாகும்.

சம்பு நடன அஷ்டகம் என்பது கால் இல்லாமல் கொம்பு இல்லாமல் விளங்கும் அற்புத துதியாக இருப்பதால் கால் இல்லாத முடவர்களுக்கு மூன்று கால் சக்கர வாகனங்களையும், கோசாலைகளுக்கு கோதுமை தவிடு, கீரை , வெல்லம் போன்ற உணவு வகைகளை அளித்து பராமரித்து வருவதும் சம்பு நடன அஷ்டக துதியை ஓதிய முழு பலனையும் அளிக்க வல்லதாகும். இதன் பின்னால் அமைந்த ஆன்மீக தாத்பர்யம் சுவையானதாகும்.

நந்தீஸ்வரரும், பிருங்கி முனிவரும் காலும் கொம்பும் இல்லாத பதஞ்சலி முனிவர் எப்படி சிவபெருமானின் நாட்டியத்தைக் கண்டும் கேட்டும் மகிழ்வார் என்று ஏளனம் செய்யவே காலும் கொம்பும் இல்லாத சம்பு நடன அஷ்டக துதியைப் பாடி நடராஜ பெருமானை மகிழ்வித்தார் அல்லவா ? அதே சமயத்தில் பிருங்கி முனியும், நந்தீஸ்வர மூர்த்தியும் சிவத் தொண்டரான பதஞ்சலி முனிவரை ஏளனம் செய்த தவறுக்குப் பிராயசித்தத்தையும் இத்துதி மூலம் பெற்றுத் தந்தார் பதஞ்சலி முனிவர். எனவே இத்துதியை தெளிவாக உச்சரித்தல் சற்றே கடினம் என்பதால் மூன்று கால் வாகனமும், பசு பராமரிப்பும் மூன்று கால்கள் உள்ள பிருங்கி முனிக்கும், நான்கு கால்களும் கொம்புகளும் உள்ள நந்தீஸ்வர மூர்த்திக்கும் அவர்கள் சிவ அபராதத்திற்கு பிராயசித்தத்தை அளிக்க வல்லது.

மகான்கள், யோகிகள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருக்கும். பிரதோஷ நேரத்தில் சிவபெருமான் நந்தி மூர்ததியின் இரண்டு கொம்புகளுக்கிடையில் நடனமாடி் அனைவருக்கும் திருக்காட்சி அளிக்கிறார் அல்லவா ? எனவே பிரதோஷ வேளையில் கால்களும் கொம்புகளும் இல்லாத சம்பு நடனத் துதியை ஓதி வந்தால் இரண்டு கொம்புகளும் நான்கு கால்களும் உடைய நந்தியின் மேல் எம்பெருமான் ஆடும் ஆனந்த தாண்டவத்தை நம் உள்ளத்திலேயே தரிசனம் செய்யும் அற்புத பாக்கியத்தைப் பெறலாம். இதுவே ஆதிசேஷ அவதாரமான பதஞ்சலி மூர்த்தியின் பிரார்த்தனையும் ஆகும். பர சிதம்பர நடன கோலத்தை உள்ளத்தில் தரிசிப்போமாக.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam