ராமபாணம் மாய்ப்பது எதை ?

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீராமபாணம் மகத்துவம்

ஸ்ரீராமபிரான் பிரயோகம் செய்த ராம பாணங்கள் எத்தனையோ உயிர்கள் நன்னெறி அடைய உதவின. எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ராமபாணத்தால் இன்றைய மக்களுக்கு விளையும் நன்மைகள் யாதோ என்று உங்களுடைய மனம் அறியத் துடிக்கலாம். காலையோ மாலையோ சூரிய ஒளி நீர்த் திவலைகளில் பட்டுப் பிரகாசிப்பதே வானவில் என்று அனைவரும் அழைக்கும் ராம பாணமாகும். ராமபாணம் என்னும் வானவில்லைப் பார்த்தால் பல விஷயங்கள் மறந்து விடும் என்று பெரியோர்கள் கூறக் கேட்டிருக்கலாம்.இது உண்மையே. உலகப் பொருட்களின் மேல் உள்ள பற்று மறைந்து இறைப் பற்று அதிகரிப்பதையே இந்தக் கூற்று தெளிவுபடுத்துகிறது. இங்கு நீங்கள் காணும் வீடியோ படத்தில் காணும் ராமபாணம் அரிதிலும் அரிதாக ஆடி அமாவாசை அன்று திங்கட் கிழமை அதிகாலையில் தோன்றியதாகும். அமாவாசை என்பது பித்ரு நாயகர்களுக்கு உரியதே. அதிலும் சிறப்பாக இத்தகைய ஞாயிற்றுக் கிழமையும் திங்கட் கிழமையும் இணையும் சங்கமத்தில் திகழும் அமாவாசை சோமாதித்யம் என்னும் பித்ரு மண்டலத்தில் உறையும் பித்ருக்களுக்கு அதீதமான சக்திகளை அளிப்பதாகும்.

சோமாதித்யம் என்றால் திங்களும் ஞாயிறும், சந்திரன் சூரிய சக்திகள் சங்கமிக்கும் தினம் என்றுதானே பொருள். இத்தகைய சங்கமத்துடன் ராம பாணமும் இணைவது என்றால் இந்த தரிசன பாக்கியத்தை அளிக்கும் உங்கள் பித்ரு தேவர்கள் சோமாதித்ய மண்டலத்தில் குடி கொண்டுள்ளார்கள் என்பதே இதன் மேலோட்டமாக பொருள். உங்களுடைய பித்ருக்கள் இத்தகைய ஒரு சிறந்த பித்ரு மண்டலத்தில் திகழ்ந்தாலும் அந்த பித்ருக்களின் ஆசியை எப்படிப் பெறுவது என்பதை நீங்கள் உணர்ந்து செயல்பட்டால்தான் அவர்களுடைய பிதுர் மண்டல வாசம் உங்களுக்குப் பயனுடையதாக இருக்கும். ஒருவருடைய தந்தையோ சகோதரரோ ஒரு வங்கியல் பணிபுரிவதால் மட்டும் ஒருவருக்கு இலவசமாகப் பணம் கிடைக்குமா என்ன ? ஆனால், அவர் வைத்திருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புது நோட்டுகளை, நாணயங்களை அவர் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்பதே அவருக்கு கிடைக்கக் கூடிய ஒரு சலுகை. அதுபோல மற்றவர்களைவிட ராமர், ராமநாதன், ராமகிருஷ்ணன் என்ற ராம நாமம் உடைய பித்ருக்கள் இத்தகைய சோமாதித்ய பித்ரு மண்டல சக்திகளை எளிதில் பெற அவர்களுக்குத் துணை நிற்பதே நீங்கள் இங்கு காணும் வீடியோ படமாகும். ஒரு முறை ராமச்சந்திர லோகத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. தசரதர் என்ற நாமம் உயர்ந்ததா இல்லை தாசரதன் என்ற நாமம் உயர்ந்ததா என்பதே அந்த விவாதத்திற்குரிய பொருள். தசரத சக்கரவர்த்தியின் திருமகன் என்பதே தாசரதன் என்ற நாமத்தின் பொருள். அவ்வாறிருக்க இந்த இரண்டு நாமங்களில் எது உயர்ந்தது என்று எப்படிச் சொல்வது ? இது பற்றி வேதநாயகனான பரம்பொருளை அணுகலாம் என்றால் பரம்பொருளோ ராம நாமமே அனைத்திலும் உயர்ந்தது என்று சொல்லக் கூடியவர். முடிவில் அவர்கள் அனைவரும் எல்லா தெய்வீக வினாக்களுக்கும் விடை அளிக்கும் நவநாத சித்தர்களை அணுகினர். தசரத குழுவின் வாதங்களையும், தாசரத குழுவின் பிரதிவாதங்களையும் கவனமாகக் கேட்ட நவநாத சித்தர்களோ ... ... ... என்ற நாமமே உயர்ந்தது என்று தெளிவுபடுத்தினர். நவநாத சித்தர்களின் இந்த அற்புதமான பதிலைக் கேட்டு அனைவரும் பிரமிப்பு அடைந்தனர். நவநாத சித்தர்கள் அளித்த தீர்ப்பு எவராலும் அங்கீகரிக்கக் கூடிய இறுதி தீர்ப்பே என்றாலும் உங்கள் மனது இந்த தீர்ப்பிற்கான விளக்கங்களை அறிந்து கொண்டால்தானே சிறப்பாக இருக்கும் ? அதற்கு வழிகோலுவதே இத்தகைய சோமாதித்ய மண்டல தரிசன நாள் அன்று நீங்கள் இயற்றும் வழிபாடுகளாகும்.

சிகண்டிபூர்ணம் சிதம்பரம்

ஒரு அடியார் சிகண்டிபூர்ணம் என்றால் என்ன என்று விளக்க முடியுமா என்று கேட்டுள்ளார். சிகண்டிபூர்ணம் என்பது சிதம்பர ஆலய மணிக்கு சித்தர்கள் வழங்கியுள்ள நாமம் என்பது நீங்கள் அறிந்ததே. இது சம்பந்தமாக பல வருடங்களுக்கு முன் நம் சற்குரு அருளிய பதிலை இங்கு அளிக்கிறோம். “சிகண்டிபூர்ணம் என்ற வித்தியாசமான ஒரு பெயரை ஏன் சிதம்பர ஆலய மணி பூண்டுள்ளது என்பது பலரின் இதயத்தில் ஒலிக்கும் கேள்வி என்றாலும் இது பற்றி எதுவும் தெரிவிக்க சித்தர்கள் முன்வரவில்லை. காரணம் இந்தப் பெயர் விளக்கம் மனித அறிவிற்கு அப்பாற்பட்டு ‘ஒலிப்பதே’ ஆகும். ஆனால், கேள்வி என்று அடியேனிடம் வந்து விட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டியது குரு என்ற முறையில் அடியேனுடைய கடமை ஆகிவிடுகின்றது அல்லவா ? சிகண்டி என்றால் குரு கிரகம் என்று பொருள், சுருக்கமாக குரு என்று கூறுலாம். குரு என்று ஒருவர் இருந்து விட்டால் நிச்சயம் அவருக்கு சீடன் என்ற ஒருவன் இருக்க வேண்டியது அவசியம் அல்லவா ? இந்த குரு சீடன் என்று தத்துவத்தையே சிதம்பரம் ஆலயத்திலுள்ள ஆலயமணி குறிக்கின்றது. சற்குருவானவர் தன்னலமற்ற தியாகத்தின் பிரதிபலிப்பு. திருக்கோயில்களில் நாம் இறைவனுக்கு நைவேத்யம் செய்யும்போது ஆலயமணி ஓசையை எழுப்புகிறோம். இறைவனுக்கு நைவேத்யம் அளித்தல் என்ற தன்னலமற்ற செய்கையால் இறைவன் பரமானந்தம் கொள்கிறான். இந்த பரமானந்த சக்திகள் உலகம் முழுவதும் வியாபித்து கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் கருப்பையில் இருக்கும் உயிர்க்கும் ஆனந்தம் என்னும் சக்தியை ஊட்ட வேண்டும் என்பதே ஆலய மணியின் நோக்கம். இத்தகைய சக்தி வாய்ந்த ஒலியை எழுப்பக் கூடியது ஒரு ஆலய மணி என்றால் அந்த ஆலயமணி எத்தகைய தெய்வீக சக்திகளுடன் துலங்க வேண்டும். பூரணம் என்றால் இறைவன் ஒருவனே. பூரணமான இறைவன் உறையும் தலங்களுள் முதன்மையானது சிதம்பரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சித் அம்பரம் என்றால் அறிவை உடைய ஆத்மாக்கள் அனைத்தும் உறையும் திருத்தலம் என்று பொருள். அதாவது சிதம்பர ஆலய மணி ஓசையானது வெறும் மனிதர்களுக்கு மட்டுமோ, விலங்குகளுக்கு மட்டுமோ, தாவரங்களுக்கு மட்டுமோ கேட்கும் ஒலி என்று பொருள் அல்ல. அசைவன அசையாதவன, உயிர் உள்ளன, உயிர் பிரகாசம் இல்லாது துலங்குவன அனைத்திற்கும் ஆனந்தம் அளிப்பதே சிகண்டி பூர்ணம் என்ற ஆலயமணி ஓசை. சிகண்டி என்றால் மயில் என்ற ஓர் அர்த்தமும் உண்டல்லவா ? இதன் பொருளை நீங்களே விரைவில் அறிந்து கொள்ள முடியுமே ? ஆம், சிவபெருமானுக்கு உண்மையான சீடனாகத் திகழும் தகுதியுள்ளவன் மயில் வாகனன் முருகப் பெருமான் ஒருவனே. இந்த குரு சீட தத்துவத்தை முருகப் பெருமானும் சிவபெருமானும் உலகிற்கு உணர்த்திய திருவிளையாடலே அலாதி சுவை வாய்ந்ததாகும். முருகப் பெருமான் ஓர் உயர்ந்த ஆசனத்தின் மேல் அமர்ந்திருக்க சுவாமிநாதனின் திருவடிகளில் பிரம்மாண்ட நாயகனான சிவபெருமான் கை கட்டி வாய் மூடி மண்டியிட்டு அமர்ந்தவாறு ஓங்காரத்தின் பொருளை வினவுகின்றார். ஓங்காரத்தின் பொருளை ஞானபண்டிதன் கீதோபதேசமாக அருள்கின்றான். எப்படி ? “அப்பா, அப்பா, அப்பா,” என்று மும்முறை அழைத்து குரு தத்துவத்தை உலகில் நிலைநாட்டினானே ஞானப்பழம் என்று நவநாத சித்தர்கள் ஓங்கார உபசேதத்தின் அழகை வர்ணிக்கிறார்கள். ”

பேரூர் ஜெயவில்

ராமபாணமோ ஒளியின் மகிமையை விளக்குவது, சிகண்டிபூர்ணமோ ஒலியின் பெருமையை உணர்த்துவது, இரண்டும் இணையும் அம்பலம் யாதோ என்பதே உங்கள் வினா அல்லவா ? ஒலியின் மூலமாக ஒளியின் மகிமையை உணர வைக்கவோ அல்லது ஒளி பிரகாசத்தின் மூலம் ஒலியை இரசிக்கவோ உங்களுக்கு உதவ சித்தர்கள் என்ற பிரபஞ்சத்திலேயே மிகவும் உயர்ந்த இறை ஆத்மாக்கள் இருக்கும்போது நீங்கள் எதை குறித்து கவலை கொள்ள வேண்டும் ? மேற்கூறிய பேரூர் சிவாலயத்தில் திகழ்ந்த வானவில்லோ சில நிமிடங்களே நிலைத்திருக்கக் கூடியது, சிதம்பர ஆலய மணி ஓசையோ நீங்கள் நினைக்கும்போது எல்லாம் கேட்க முடியாதது. ஆனால், ஒளியும் ஒலியும் இணையும் அமாவாசை தினங்களில் இவ்வாறு ஒலி ஒளி இரகசியங்களை உணர முயற்சி செய்பவர்கள் ஆற்ற வேண்டிய வழிபாடே இத்தகைய அனுகிரகத்தை அளிக்க வல்ல சோமாதித்ய பித்ரு மூர்த்திகளை வழிபடும் தர்ப்பணமாகும். புனித நதிக்கரைகளில், திருத்தலங்களில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் ஏற்புடையவை என்றாலும் அவரவர் வசதி வாய்ப்பைப் பொறுத்து தூய்மையான எந்த இடத்திலும் மனத் தூய்மையுடன் எவரும் இத்தகைய தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றலாம். இங்கு மனத் தூய்மை என்பது நம் முன்னோர்கள் இடத்தில், நம் சற்குருவின்பால் நமக்கு உள்ள நம்பிக்கையே ஆகும். ஒரு பித்தளை அல்லது மரத் தாம்பாளத்தில் 12 செவ்வாழை பழங்களுக்குக் குறையாமல் வைத்து அதன் மேல் தர்ப்பை சட்டத்தை அமைத்து நம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளித்தலே சோமாதித்ய பித்ரு மூர்த்திகளின் ஆசிகளை பெற்றுத் தரும் வழிபாடாக மலரும் என்பதே சித்தர்களின் அருள் வாக்கு. தர்ப்பணத்திற்குப் பின் இந்த வாழைப்பழங்களை பசுக்களுக்கு அளித்தல் வேண்டும். உலகம் முழுவதும் சிவபெருமான் எழுந்தருளி இருந்தாலும் காசி விஸ்வநாதருக்கு என வாரணாசியில் எழுந்தருளி உள்ள சிவசக்திக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கத்தானே செய்கிறது ? அதுபோல உலகம் முழுவதும் வானவில் தோன்றினாலும் பேரூரில் தோன்றும் ஸ்ரீராமபாணத்திற்கு ஒரு தனிப்பட்ட முக்கியத்துவம் இருக்கத்தான் இருக்கிறது. அதுவே ஆடக மின்னல் என்ற பொன் சக்தியாகும்.

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயம்
முசிறி

ஆடக மின்னல் என்ற பதம் ராமபாணத்தில் அதிலும் சிறப்பாக பேரூர் திருத்தலத்தில் துலங்கும் ஏழு வண்ண நிறமாலையில் மிளிரும் பீஜாட்சர சக்திகளுடன் திகழ்வது. தங்கங்களில் எத்தனையோ வகைகள் உண்டு என்பதை நாம் அறிவோம். இதில் ஆடக தங்கம் என்ற ஒருவகை தங்க சக்திகள் துலங்கும் இடமே பேரூர் திருத்தலம் ஆகும். நீங்கள் தரிசிக்கும் மேற்கண்ட ஸ்ரீராமபாணத்தில் மட்டுமே இத்தகைய ஆடக சக்திகள் மிளிர்கின்றன என்பதே வேறு எங்கும் தரிசிக்க முடியாத ஆடகச் சிறப்பாகும். இதை அறியாதவர்களா சித்தர்கள் ? சித்தர்கள் இந்த ஆடக சக்திகளை பயன்படுத்தும் விதமே அலாதியானதுதானே ? ஆடக தங்க சக்திகள் பெருகும் பேரூரில் சுமார் 3000 மாங்கல்யங்களை நம் அடியார்கள் மூலம் தயார் செய்து அதை ஆடக நாயகன் எழுந்தருளி உள்ள திருஅண்ணாமலையில் ஆடக தங்க சக்திகள் துலங்கும் ஒரு முகூர்த்த நாளில் ஹோமம் இயற்றி இந்த மாங்கல்யங்களை வைத்து திருஅண்ணாமலையாரின் அனுகிரகத்துடன் தமிழ்நாடு முழுவதும் உள்ள தம்பதிகளுக்கு இந்த அரிதிலும் அரிய ஆடக தங்க சக்திகளை விநியோகித்ததே நம் சற்குருவின் பெருமை ஆகும். இந்த 3000 மாங்கல்யங்களில் 1000 மாங்கல்யங்கள் தங்க முலாம் பூசிய வெள்ளி மாங்கல்யங்களாகும். ஸ்ரீராமர் ஜாதகத்தில் குரு சந்திர யோகம் பலம் அடைந்துள்ளதைப் போல் வேறு எந்த மானிடனின் ஜாதகத்திலும் இத்தகைய சக்தி வாய்ந்த கஜகேசரி யோக அமைப்பு கிடையாது எனலாம். குருவின் அனுகிரகத்தைப் பெற்றுத் தருவது தங்கம், வெள்ளியின் வெண்மை நிறம் சந்திர பகவானுக்கு உரியது. இப்போது சொல்லுங்கள் பேரூர் திருத்தலத்திற்கு இணையான ஆடக சக்திகள் பொலியும் தலம் ஒன்று உண்டா ? இங்கு பொலியும் ராமபாணத்திற்கு இணையான ஒரு அஸ்திரம் ஏதாவது உண்டா ?

ஸ்ரீகாலபைரவர் மங்களம்

பேரூரில் பொலியும் ஆடக சக்திகளை மக்களுக்கு விநியோகம் செய்யும் எளிய முறையே இவ்வாறு தங்க முலாம் பூசிய மாங்கல்யங்களை தானம் அளிப்பதே என்பது இப்போது புலனாகின்றது அல்லவா ? ஆனால், மண் தாலியைப் போல் இந்த வெள்ளி மாங்கல்யங்களையும் பராமரித்தல் கடினமே. எப்படி மண் தாலியை சுமங்கலி சக்திகள் குறையாமல் கவனமாகக் கையாள வேண்டுமோ அவ்வாறு இந்த ராம பாண ஆடக சக்திகள் மிளிரும் மாங்கல்யங்களையும் சுமங்கலித்துவ சக்திகள் குறையாமல், பழுதுபடாமல் காக்க வேண்டும் என்பது முக்கியம். நடைமுறையில் இது எத்தனை பேருக்கு சாத்தியம் என்பதால் இந்த வெள்ளி மாங்கல்யத்தை அளிக்கும் முன் இது தங்க முலாம் பூசிய வெள்ளி மாங்கல்யம்தான் என்பதை அந்த மாங்கல்ய தானத்தை வாங்கும் தம்பதிகளிடம் தெளிவாக எடுத்துக் கூற வேண்டியது தானம் அளிப்பவர்களின் கடமை ஆகும். பேரூர் திருத்தலம் மட்டும் அல்லாது நவமி திதி, புனர்பூசம் நட்சத்திர நாட்களிலும் இத்தகைய மாங்கல்ய தானங்களை எந்த திருத்தலத்திலும் நிறைவேற்றலாம். இத்தகைய தானங்களுக்கு சுவை கூட்டுவதே அப்பளப்பூ சேர்ந்த புளியோதரை தானமாகும். அந்த அப்பளப்பூவில் சீரகம், பிரண்டை சாற்றைக் கலந்து தயாரித்தல் சிறப்பாகும். இதுவே ஆடக வற்றல் என்றும் அழைக்கப்படும். இதன் பின்னணியின் மகத்துவத்தை அறிந்து கொள்ளுதல் சற்றே கடினமாகும். ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலையில் 45 பாடல்களை அருளியிருந்தாலும் பச்சை மாமலை போல் மேனி என்ற பாடல்தானே அனைவர் அதரங்களிலும் தவழ்கிறது. இதுவே ராமபாணத்தின் நடுவில் திகழும் பச்சை நிறத்தின் மகிமையுமாகும். பேரூர் திருத்தலத்தில் அருளும் ஸ்ரீவரதராஜ பெருமாளை தரிசனம் செய்து பச்சை மாமலை போல் மேனி என்ற பாடலை குறைந்தது 108 முறை ஓதி ஆலயத்தை வலம் வந்து வணங்குதலால் அரிதிலும் அரிய ஆடக மின்னல் பீஜாட்சர சக்திகளை பக்தர்கள் பெருமாள் அனுகிரக சக்திகளாகப் பெற்று மகிழலாம். எப்படி நீல வானம் ஒரு வானவில்லால் சிறப்பு பெறுகிறதோ அவ்விதமே மனைவி என்ற வானவில் பக்தர்கள் வாழ்வில் சிறப்பை ஊட்டும் என்பதே இந்த வழிபாடு உணர்த்தும் மகிமையாகும்.

நவகிரக தாரை
சந்திர தரிசனம்

சென்ற 22.7.2020 புதன் கிழமை அன்று முசிறி ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் அனுகிரகமாக கனிந்த மங்கைபாக சந்திரமௌலீஸ்வர தரிசனத்தையே இங்கு அடியார்கள் தரிசனம் செய்கிறீர்கள். இது நவகிரக தாரை சந்திர தரிசனம் என்றும் வழங்கப்படும். ஆடிப் பிறையைத் தேடிப் பார் என்ற ஒரு பழமொழி உண்டு. பொதுவாக, சந்திர தரிசனம் என்பது சாதி, மத, இன பேதமின்றி அனைவரும் பெற வேண்டிய சுப சக்திகள் பூரிக்கும் ஒரு தரிசனம் என்றாலும் ஆடி மாதத்தில் பெறும் சந்திர தரிசனம், அதுவும் இந்த சார்வரி வருடத்தில் முசிறி ஸ்ரீசந்திமௌலீஸ்வரர் ஆலயத்தில் பெறும் சந்திர தரினத்தின் மகிமையை விளக்க யுகங்கள் போதாது என்பர் சித்தர். நவகிரகங்கள் அனைத்தின் சக்தியுமே பொங்கிப் பொலிவதே இந்த தரிசனத்தின் கற்பனைக்கு எட்டாத மகிமையாகும். ஆடி மாதம் என்பது சந்திரனுக்குரிய கடக ராசியில் சூரிய பகவான் பிரகாசிக்கும் மாதம்தானே. மூன்றாம் பிறை என்பது குருவின் அனுகிரகத்தை அளிப்பது.

ஸ்ரீமங்கைபாகர் மங்களம்

ஸ்ரீமரகதாம்பிகை மங்களம்

குருவின் ஆட்சி வீடான மீனராசியில் செவ்வாய் எழுந்தருளி உள்ளார். தரிசனம் பெறும் தினம் புதன் கிழமை. தரிசனம் பெறும் தினம் (2+2+7+2+0+2+0 = 6) ஆட்சி பெற்ற சுக்ர பகவானின் எண் கணித சக்திகளுடன், சுக்ர ஹோரை நேரத்தில் திகழ்கிறது. ஆட்சி பெற்ற சனீஸ்வரபகவானோ லக்னாதிபதியுடன் சேர்ந்து மகர ராசியிலிருந்து இந்த தரிசனத்தைப் பெரும் பாக்யமாகவே பெறுகிறார். இந்த வருடம் மட்டுமல்லாது நாளும் ராகு பகவானுக்கு உகந்ததாகவே மலர்ந்துள்ளது. சுவாமிநாதனான முருகப் பெருமானோ ஏதோ ஒரு யுகத்தில் இறைவனுக்கே பிரணவத்தின் பொருளை விளக்கும் திருவிளையாடலைப் புனைந்தார் என்று அல்லாது யுகங்கள் தோறும், கணங்கள் தோறுமே இவ்வாறு இறைவனின் திருவிளையாடலில் பங்கு கொண்டு பிரணவ சக்திகளை உலகிற்கு அளித்து வருகிறார் என்று உறுதி செய்வதே இங்கு சந்திர பிறை காணும் மயிலின் தரிசனமும் தொடரும் மயிலின் அகவலுமாகும். சுவாமிநாதன் என்ற நாமத்திற்கே ஒரு அலாதி மகிமை உண்டு. கனிந்த கனியான பரமாச்சாரியார் சுவாமிநாதன் என்ற நாமத்தை இயற்பெயராக பெற்றிருந்தார் என்று மட்டுமல்லாது அவர் ஸ்ரீசந்திரசேகரானந்த சரஸ்வதியாகக் கனிந்ததும் முசிறி ஸ்ரீசந்திரமௌலீஸ்வர மூன்றாம் பிறை தரிசனத்தை அலங்கரிக்கிறது எனலாம். பரமாச்சாரியார் இத்தலத்தை தரிசனம் செய்ததும் ஒரு சுவையான வரலாறே. முசிறி அருகே உள்ள மங்களம் சிவத்தலம் மிகவும் புராதன சிவத்தலமாகும். இறைவன் ஸ்ரீமங்கைபாகர் இறைவி ஸ்ரீமரகதாம்பாள். கிழக்கு நோக்கிய திருத்தலம். அம்பாள் தெற்கு நோக்கி குரு தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளிய அபூர்வ தலம். இந்த திவ்ய தலத்திற்கு எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீபரமாச்சாரியார் நடந்தே மங்களம் திருத்தலத்திலிருந்து முசிறிக்கு வருகை தந்து ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரரை காவிரிக் கரையிலிருந்தே தரிசித்து சந்தியாவந்தன பூஜைகளை காவிரிக் கரையில் நிறைவேற்றிய பின்னர் மூன்றாம் பிறை தரிசனத்தை ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் பெற்றார் என்பதே சித்தர்கள் அறிவிக்கும் சித்த சுவை. ஸ்ரீபரமாச்சாரியார் சுவாமிகள் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரரை உண்மையில் பிறை சூடிய நாயகனாகவே தரிசனம் செய்தார் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும். காரணம் அப்போது சுவாமிக்கு ராஜகோபுரமே எழுந்தருளவில்லை. இதே முறையில் ஸ்ரீமரகதவல்லி சமேத ஸ்ரீமங்கைபாகரை தரிசித்த பின்னர் கிடைத்த ஸ்ரீசந்திரமௌலீஸ்வர தரிசனத்தையே இங்கு நீங்கள் பெறுகிறீர்கள் என்றால் இதைவிட ஒரு சிறந்த பாக்கியத்தை உங்கள் மூதாதையர்கள் உங்களுக்கு அளிக்க முடியுமா என்ன ? இத்தகைய சிறப்பிற்கு எல்லாம் மேலும் மெருகூட்டுவதாக ஆயில்யம், மகம் நட்சத்திரங்களின் சங்கமத்தில் சிம்மாயன புனித நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு இந்த சந்திரமௌலீஸ்வர தரிசனம் அருளை வாரி வழங்கியது என்பதே சித்தர்கள் வழங்கும் அனுகிரக சோலையாகும்.

மங்களம் மங்கலம்

மங்கலம் என்பது தெய்வீகம், சுபம், மங்களம் என்பது இறுதி, முடிவு என்று பொருள். ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் இரண்டும் ஒன்றே என்று விளக்குவதே மங்களம் திருத்தலத்தின் மகாத்மியமாகும். பிரம்மசர்யம் என்பது முடிந்து திருமணம் என்ற ஒளி வீசும் பாதையில் தொடர்வதுதானே மனித வாழ்க்கை. அந்த வாழ்க்கை மங்கலமாக பிரகாசிக்க அருள் வழங்கும் தலமே மங்களமாகும். எட்டு மங்கலப் பொருட்களை நம் முன்னோர்கள் தெரிவித்தார்கள்.

ஸ்ரீசகஸ்ரலிங்கம் மங்களம்

1. சாமரம்
2. நிறைகுடம்
3. கண்ணாடி
4. அங்குசம்
5. முரசு
6. ஒளி விளக்கு
7. கொடி
8. இணை கயல்
சற்றே ஆத்ம விசாரம் செய்து பார்த்தாலும் கோயில்களில் சுவாமியின் ஆராதனையாக நடக்கும் உபசாரங்கள் யாவுமே இந்த மங்கல சக்திகளை உலகிற்கு அளிப்பதற்காகவே ஏற்பட்டுள்ளன என்ற உண்மை புரிய வரும். எனவே மேற்கூறிய எட்டு உபசாரங்களை இறை மூர்த்திகளுக்கு இயற்றி வந்தாலே நம்முடைய சமுதாயம் அமைதி நிறைந்த பூஞ்சோலையாக பூத்துக் குலுங்கும் என்பதில் ஐயமில்லை. வசதி படைத்தோர் இத்தகைய உபசாரங்கள் திருக்கோயில்களில் நிறைவேறுவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்யலாம். பொருள் வசதி குறைவாக உள்ளவர்கள் இறைமூர்த்திகளுக்கு இத்தகைய உபசாரங்கள் நிறைவேறுவதை கண்ணாரக் கண்டு களிக்கலாம் அல்லவா ? இறை தரிசனத்தைப் பெற முடியாத சமயங்களில் இத்தகைய உபசாரங்களை கண் முன் கொண்டு வந்து தரிசிப்பதும் ஒரு அற்புத வழிபாடாக அமையும். இதுவே visualisation என்னும் அனைவரும் நிறைவேற்றக் கூடிய தியான முறையாகும். உங்கள் தியானத்தின் சக்தியைப் பொறுத்து இறைவனுக்கு உபசாரங்களே நடைபெறாத கோயில்களில் கூட இத்தகைய ஷோடச உபசாரங்கள் நிச்சயமாக நிறைவேறும். அவரவர் வசதியைப் பொறுத்து மேற்கண்ட உபசாரப் பொருட்களை திருத்தலங்களுக்கு அளித்தலும் திருமணத் தடங்கல்களை நிவர்த்தி செய்யும் தான முறையாகும். இத்தகைய உபசாரங்கள் அனைத்தையுமே தன் வாழ்நாள் முழுவதும் நம் சற்குரு நிறைவேற்றி அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார் என்றாலும் நிறைகுடம், ஒளி விளக்கு என்ற இரண்டு மங்கலப் பொருட்களில் விளைந்த மூன்று பொருட்களின் தானமே நம் சற்குருவை என்றென்றும் திருஅண்ணாமலையாரின் உள்ளத்தில் நிறைத்தது எனலாம். பிரசாதம், சுவையான நீர், தீபம் என்ற இந்த மூன்று சக்திகளை குரு அனுகிரகமாக அளித்துக் கொண்டிருந்தவரே, இன்றும் உலகெங்கும் நிறைத்துக் கொண்டிருப்பவரே நம் சற்குரு.

பிரிவினை அறியா நிழலது போல ...
சாக்கோட்டை

இல்லறமே நல்லறம் எனும்போது இறைவனுக்கு அளிக்கும் உபசாரங்களில் இத்தகைய மங்கல சக்திகள் பெருகும் என்றாலும் உத்தம மனைவிமார்கள் தங்கள் கணவனுக்கு இயற்றும் உபசாரங்களிலும் மேற்கூறிய மங்கல சக்திகள் நிச்சயமாகப் பரிணமிக்கும், சமுதாயத்தில் அமைதி தவழும். இன்றைய சமுதாயம் தறிகெட்டு அலைந்து எங்கும் துன்பமும் குழப்பமும் தோன்றி மாய்ப்பதற்கு இத்தகைய சாந்த சக்திகளின் குறைபாடே முக்கிய காரணமாகும். ஒன்றிரண்டு உபசாரங்களின் மகிமையை இங்கு விளக்குகிறோம். சாமரம் என்பது மற்றொருவருக்கு விசிறி விடுவது என்பது மேலோட்டமான பொருள். தனக்குத்தானே விசிறிக் கொள்வது அல்ல. ஆனால், இத்தகைய சாமர உபசாரத்தை ஏற்றுக் கொள்ளும் தகுதியை ஒருவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியம். சாமரம் என்பது பொதுவாக மயில் தோகையால் பின்னப்பட்டிருக்கும். கவரிமானின் ரோமத்தால் அமைப்பதும் உண்டு. இத்தகைய உபசாரங்கள் எல்லாம் ஒருவர் மற்றொருவருக்காக அளிக்கும் தெய்வீக சக்திகளை, ஆற்றல்களை பெருக்கி அளிக்கும் சாதனங்களாகவே திகழும். ராமானுஜர் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு கவரி வீசிக் கொண்டே அவருடன் உரையாடுவது வழக்கம். மேலோட்டமாகப் பார்த்தால் இது உபசாரம் போல் தோன்றினாலும் ஸ்ரீவரதராஜ பெருமாளின் வேத சக்திகளை தன்னுடைய சாமரத்தின் மூலம் ஈர்த்து அதை உலகிற்குப் பயன்படும் விதத்தில் அளித்துக் கொண்டிருந்ததே ராமானுஜரின் சாமர உபசார மகிமையாகும். எப்படி 30000 வோல்ட் சக்தி உடைய மின்சாரத்தை 200 வோல்ட்டாக குறைத்து வீடுகளுக்கு அளிக்கிறோமோ அதுபோல் ராமானுஜர் பயன்படுத்திய டிரான்ஸ்பார்மரே கவரியாகும். ஒரு மனைவி கணவனுக்கு விசிறி கொண்டு வீசுகிறாள் என்றால் நாள் முழுவதும் வேதம் ஓதி, இறை மூர்த்திகளை தரிசனம் செய்து, அன்னதானம் போன்ற நற்காரியங்களை நிறைவேற்றிக் கொண்டே இருந்தால்தான் இத்தகைய நற்காரியங்களில் திகழும் புண்ணிய சக்திகள் எல்லாம் காரிய சித்தி கதிர்களாக உலகில் நிறையும், சமுதாயம் அமைதி கொள்ளும். சமீப காலம் வரை முசிறியில் ஓடும் காவிரியில் பெண்கள் விடியற்காலையில் குளித்து, பித்தளை அல்லது வெண்கல குடங்களை, செம்புகளை காவிரி மண்ணால் தூய்மை செய்து அதில் சுத்தமான நீரை நிரப்பி தங்கள் இல்லங்களில் கொண்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

மௌல்விகலை தரிசனம்
முசிறி

குத்து விளக்காக, நிறைகுடமாகத் திகழ வேண்டியவள் குடும்பத் தலைவி என்ற தத்துவத்தை நிறைவேற்றுவதாக, உலகிற்கு அறிவிப்பதாக அமைந்தது இந்த நிறைகுட வழிபாடு. இந்த வழிபாட்டிற்கு புத்துயிர் அளித்தவரே கனிந்த கனி ஆவார். ஸ்ரீபரமாச்சாரியார் சுவாமிகள் காவிரியில் நீராடி சந்தியாவந்தனங்களை நிறைவேற்றினார் என்று மேலோட்டமாகத் தோன்றினாலும் ஸ்ரீமரகதாம்பாள் சமேத ஸ்ரீமங்கைபாகர் அளித்த மங்கல சக்திகளை ஸ்ரீஇரத்தினகிரி ஈசனின் மௌல்விகலை தரிசனம் பெற்று இந்த சுக்ர சக்திகளை எல்லாம் தான் பெற்ற மூன்றாம் பிறை தரிசனத்தில் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரருக்கு தாரை வார்த்து அளித்தார் என்பதே கனிந்த கனியின் வழிபாட்டின் பின்னணியில் அமைந்த ஒரு தூசி அளவு இரகசியமாகும். சூரிய உதயத்திற்கு முன் பிரம்ம முகூர்த்தத்தில் முசிறியில் காவிரிநதி தீரத்தில் கனியும் இரத்தினகிரி தரிசனமே மௌல்விகலை தரிசனம் ஆகும். குறைந்தது 30 வருட காலத்திற்கு இந்த மௌல்விகலை தரிசனத்தை தொடர்ந்து பெற்றவர்கள் மறுபிறவி இல்லாத முக்தி நிலையை அடைவார்கள் என்பதே மௌல்விகலை தரிசனத்தின் சிறப்பாகும். கும்பராசியில் சுக்ர பகவானைப் பெற்ற ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் வம்சாவளியில் தோன்றிய கனிந்த கனி நிறைகுட சக்திகளை தாரை வார்த்து அளித்ததில் என்ன வியப்பு ? கயல் என்றால் கருமை நிறமுடைய கெளுத்தி மீன். பெண்களின் மருளும் கண்களுக்கு இத்தகைய கயல்களை உவமையாகக் கூறினாலும் சம்பந்த நாயனார் குறிப்பிடுவது போல குடும்ப ஒற்றுமையைக் குறிப்பவையே இணை கயல்கள். எத்தகைய கொடுமையான சூழ்நிலையையும் சமாளித்து வாழக் கூடியவையே கெளுத்தி மீன்கள். ஏரி முழுவதும் நீரில்லாமல் வற்றி விட்டாலும் கணவன் மனைவி என்ற பந்தம் ஒன்றே நம்மை வாழ வைக்குமே என்ற நம்பிக்கை ஒளியை வீசுவதாகப் பாடியதும் ஒரு தமிழ்த் திரைப்பட பாடல்தானே. கோயில்களில் விளங்கும் துவியாம்ச சக்கரம் என்பவை இத்தகைய இணைகயல் வடிவங்களை குறிப்பதால் இந்த இணைகயல் சக்கரங்களுக்கு தாமே அரைத்த சந்தனத்தால் அலங்கரித்து குங்குமப் பொட்டிட்டு வணங்குதலால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். கால்மாடு தலைமாடு என்பதாக கணவன் பாதத்தில் தலையை வைத்து மனைவியின் பாதம் கணவனின் தலையில் படுமாறு வைத்து உறங்கிய தம்பதிகளைப் பற்றி நம் சற்குருவிடம் வினவியபோது சற்குரு சிரித்துக் கொண்டே, “இதுதான் சார், பிராக்டிக்கல் துவியாம்சு சக்கர வழிபாடு ...,” என்றார். சுவையான புதிர்தானே இது ? புதிரை விடுவித்தால் ஒற்றுமை ஓங்குமே.

ஸ்ரீராகுகேது மூர்த்திகள்
மங்களம்

ஒரு அடியார் அப்பளம், அப்பளப்பூ இரண்டும் ஒன்றா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்யும்படிக் கேட்டுள்ளார். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இரண்டிலும் உளுந்து என்ற ஒன்று முக்கிய அம்சமாகத் தெரிந்தாலும் இரண்டின் தயாரிப்பு முறை முற்றிலும் வேறானவையே. தற்காலத்தில் அப்பளம் என்பது இயந்திரத்தின் மூலமாகவும் அப்பளப்பூ கையில் தயாரிக்கப்படுவதாகவும் உள்ளது. அப்பளப்பூவின் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானதே. உளுந்தை மாவாக தயாரித்துக் கொண்டு ஒரு பலகையில் கட்டைவிரல் அளவு உள்ள மாவைத் தேய்த்து பெறப்படுவதே அப்பளப்பூ ஆகும். குடும்ப ஒற்றுமைக்கு சுக்கிர பகவானின் அனுகிரகம் இன்றியமையாததே. சுக்கிர விரலால் தேய்த்து பெறப்படும் அப்பளப்பூ குடும்ப ஒற்றுமையை விருத்தி செய்யும் என்பதில் சந்தேகமில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு தின்பண்டம்தானே என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். உண்மையில் கட்டைவிரல் அளவே ஆத்மா திகழ்வதால் புளியோதரையுடன் சேர்த்து அளிக்கப்படும் அப்பளப்பூ தானம் நாளடைவில் அவரவர் இதயத்தில் குடிகொண்ட ஆத்மாவப் பற்றிய பேரறிவையும் பெற்றுத் தரும். இவ்வாறு புளியோதரை அப்பளப்பூ தானத்தை கிரிவல அடியார்களுக்கு டன் கணக்கில் அளித்து சிவசக்தி ஐக்ய சொரூப தரிசனத்தில் அன்னதான சேவை புரிந்தார் நம் சற்குரு என்றால் தம்பதிகளின் ஒற்றுமை வளரவும் அடியார்கள் அனைவரும் தங்கள் இதயத்தில் ஒளிரும் ஆன்மாவின் தரிசனம் காணவும் விழைந்த நம் சற்குரு மேற்கொண்ட பணி எவ்வளவு உயர்ந்தது ? பொதுவாக, அப்பளப்பூ கட்டை மா, பலா, கொய்யா போன்ற மரங்களில் தயாரித்தலால் அப்பளப்பூ தானம் எத்தகைய இடர் வரினும், பொருளாதார நெருக்கடி தோன்றினாலும் இந்த தான சக்திகள் நம்மைக் காக்கும். மேடு பள்ளம் என்ற தெய்வீக இணைப்பின் மகத்துவமாகத் திகழ்வதே திருமணம் என்ற பந்தம். இதைக் குறிக்கும் வகையில் அப்பளப்பூ கட்டையில் சிறுசிறு பள்ளங்கள் அமைக்கப்பட்டிருக்கும். என்னே நம் மூதாதையர் அறிவுத் திறன். சீதாப் பிராட்டிக்கு அனுசுயா தேவி ஒரு உத்தம மனைவி கணவனுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது அப்பளப்பூவின் மகத்துவத்தை விவரிக்கிறாள். சீதா பிராட்டி வால்மீகி ஆஸ்ரமத்தில் லவனைப் பெற்றெடுத்தபோது லவனுக்குத் துணையாக இன்னொரு குழந்தையை, குசனை தர்ப்பை கொண்டு உருவாக்கினார் என்பது நீங்கள் அறிந்ததே. மாமுனியின் இந்த செய்கைக்கு உறுதுணையாக நின்றதே சீதாபிராட்டி ராமபிரானுக்கு தானே அப்பளப்பூ தயாரித்து உணவில் சேர்த்து வழங்கினாள் என்ற சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். விவாகரத்து வரை சென்று விட்ட திருமண பந்தங்கள் கூட புதன் சனிக் கிழமைகளில் அளிக்கும் புளியோதோரை அப்பளப்பூ தானத்தால் சீர்பெறும். ஒரு ஜாதகத்தில் லட்சுமி கடாட்சம் என்பது ஆறில் ராகு இருக்க சுக்கிர பகவான் உச்சம் பெற்று திகழ்வதுதானே. இத்தயை லட்சுமி கடாட்ச சக்திகளை உடைய ஜாதகங்களை அடியார்கள் பெறவில்லை என்றாலும் அவர்களுக்கும் லட்சுமி கடாட்ச சக்திகளை அளிப்பதே மங்களம் திருத்தலத்தில் ராகு கேது மூர்த்திகள் இணைந்து அளிக்கும் தரிசனம் ஆகும். மங்களம் திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றிய பின்னர் கனிந்த கனி பெருமான் பாதயாத்திரையாகவே முசிறி சென்று மௌல்விகலை தரிசனத்தைப் பெற்றார் என்று விவரித்துள்ளோம்.

ஸ்ரீரங்கம்

இன்றும் இத்தகைய தரிசனத்தைப் பெறுதலால் களத்திர தானமான ஏழாமிடத்தில் பாவ கிரகங்கள் இருத்தல், ஏழாம் இடத்தை பாவிகள் பார்த்தல், ஏழில் சுக்ர பகவான் நிலைகொள்தல், ஏழாமிட அதிபதியை அல்லது சுக்ர பகவானை தீய கிரகங்கள் பார்த்தல் போன்ற அனைத்து விதமான திருமண தோஷங்களும் சீர்பெறும். மங்களம் திருத்தலத்திலிருந்து முசிறி செல்லும்போது ஐயர்மலை தரிசனம் பல இடங்களில் கிட்டும். இந்த தரிசனத்தை எல்லாம் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்குதால் எத்தகைய களத்திர தோஷங்களும் தீர்வு பெறும் என்பதில் ஐயமில்லை. ஒருமுறை நம் அடியாரின் நண்பர் ஒருவர் தான் cleaning technique பயில்வதாக கூறவே, அதைப் பற்றி நம் சற்குருவிடம் கேட்டுத் தெளிவுபெற முயன்றார் அந்த அடியார். எந்த விஷயத்திலும் இறுதி முடிவு, தெளிவு என்பது சித்தர்கள் அளிப்பதுதானே. “அப்படியா ...” என்று கேட்ட நம் சற்குரு தொடர்ந்து, “Cleaning technique என்றால் என்ன என்று தெரிந்து அதை வாழ்நாள் முழுவதும் தம் நித்திய வழிபாட்டின் ஒரு அம்சமாக ஏற்று நடைமுறைப்படுத்தி வந்தவரே நம் கனிந்த கனி ஆவார். அவர் (அடியாரின் நண்பர்) ஸ்ரீரங்கத்தில் இருந்தும் கோயிலுக்கே செல்வது கிடையாது என்று கூறினாய். இதுவே அவர் எந்த அளவிற்கு cleaning technique-ஐப் பற்றி தெரிந்து வைத்துள்ளார் என்பதை தெளிவுபடுத்துகிறது. முதலில் அவர் சூத்தை ஒழுங்காக கழுவச் சொல்லு ... ஸ்ரீரங்கம் பெருமாளை தினம் ஒரு முறையாவது சென்று தரிசிக்கச் சொல்லு. கனிந்த கனி காலையில் மலஜலம் கழித்த பின் கொள்ளிடம் மணலால் சுத்தி செய்து கொண்டு அதன் பின்னர் நீரால் சுத்தி செய்து கொள்வார். (கொள்ளிடம் மணலில் தங்கம் இருப்பதால் எந்தக் காரியத்திலும் தன் சற்குருவின் அனுகிரகத்தை இணைத்துக் கொள்வதாக அமைந்ததே இந்த சுத்திகரிப்பு முறை) இதைத் தொடர்ந்து ஓதும் ஆசமன மந்திரங்கள் வேறு. இதுவே உண்மையான cleaning technique.” இந்த பதிலைக் கேட்ட அந்த அடியார் நம் சற்குரு சூத்து என்ற சொல்லை கூறியதை ஆமோதிக்கவில்லை என்பதை அவருடைய கண் பார்வையே உணர்த்தியது. இதை அறியாதவரா நம் சற்குரு ? “என்னய்யா, சூத்து என்று கொச்சையாக அடியேன் பேசுவது போல் உனக்குத் தோன்றுகிறதா ? அப்படி ஒரு வேளை அது கொச்சையாக உனக்குத் தோன்றினால் சுத்தமான தமிழ் வார்த்தையையும் அடியேனால் கூற முடியும் ... ” என்று சொல்லிக் கொண்டே 20 தூய தமிழ் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனார். “இவை அனைத்தும் சூத்து என்ற சொல்லை குறிக்கும் அகத்திய கால தமிழ் வார்த்தைகளே ... இந்த வார்த்தைகளில் ஒன்றையாது நீ கேள்விப்பட்டு இருக்கிறாயா ? புரியாத வார்த்தை ஜாலத்தைக் கையாள நாங்கள் இங்கு வரவில்லை. கல்வி அறிவே இல்லாத, ஞான சூன்யமாக இருக்கும் மக்களுக்கும் புரியும்படி பேசி அவர்களையும் கரையேற்ற முயற்சி செய்வதே அடியேன் குருநாதன் அடியேனுக்கு இட்ட திருப்பணி ... ”

மங்களம்

நம் சற்குரு கூறிய 20 வார்த்தைகளில் ஒன்றைக் கூட நாம் கேள்விப்பட்டதே இல்லை என்பது ஒரு புறம் இருக்க அந்த 20 வார்த்தைகளில் ஒரு வார்த்தையைக் கூட அங்கிருந்த அடியார்கள் தற்போது ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதே அகத்திய யுகத்தில் ஒளிர்ந்த தமிழ் வார்த்தைகளின் மாண்பு. நம் சற்குரு அப்போது அளித்த பதிலின் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் தற்போது ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதப் பெருமாளின் மகத்துவம் புரிகின்றது அல்லவா ? பெருமாள் சங்கு சக்கரம் என்ற இரு ஆயுதங்களை ஏந்தி அருள்கின்றார். சக்கரம் என்பது எதிரிகளை அழிக்க உதவும் ஆயுதம் என்று நாம் எண்ணினாலும் சங்கின் பணி யாதோ ? அதுவே மர்ம தானங்களில் பெருகும் கர்மங்களைக் களைவதாகும். சிறப்பாக இவ்வருடம் இருள் சூழும் வருடமாக இருப்பதால் இந்த இருளில்தான் எண்ணற்ற காமக் குற்றங்கள் பெருகுகின்றன. பல வருடங்களுக்கு முன்னரே கிரக சஞ்சார விளைவுகளால் குறிப்பாக சந்திர பகவானின் சஞ்சாரத்தால் மனதில் அனைவருக்கும் அச்சம் தோன்றும் என்று நம் சற்குரு தெரிவித்திருந்தார். இத்தகைய அச்சத்தைக் களையக் கூடியதே சந்திர தலமான ஸ்ரீரங்கத்தில் நாம் கொள்ளும் பெருமாளின் சங்கு தரிசனமாகும். எந்த அளவிற்கு அடியார்கள் ஒன்றாய்ச் சேர்ந்து திங்கட் கிழமைகளிலும், திருவோண நட்சத்திர நாட்களிலும், பௌர்ணமி நாட்களிலும் ஸ்ரீரங்கம் போன்ற பெருமாள் தலங்களிலும் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலும் சங்கு ஒலியைத் தொடர்ந்து எழுப்புகிறார்களோ அந்த அளவிற்கு நம் அடியார்கள் குடும்பத்தினர் மட்டும் மனோ தைரியத்தை பெறுவது கிடையாது. இது ஒரு அற்புத சமுதாய சேவையே. மாதா அமிர்தானந்தாவும் கொரோனாவுக்கு எதிரான ஒரு மருந்து தைரியமே என்றுதானே அழகுபட உரைத்துள்ளார்கள். ராகு மூர்த்தி பிறர் அறியாமல் செய்யும் காரியங்களுக்கு, மறைவிற்கு, இருட்டிற்கு அதிபதி. அமிர்த விநியோக திருவிளையாடலில் ராகு, கேது மூர்த்திகள் அசுரர்களாக இருந்தாலும் தேவர்களைப் போல் மாறி, மறைந்து அமிர்தம் பெற வந்தனர். இதை அறியாதவரா மோகினி அவதார மூர்த்தி ?

ஸ்ரீசனீஸ்வர பகவான் மங்களம்

இதை மட்டுமா பிரபஞ்ச நாயகன் அறிந்திருந்தார் ? அவர்கள் அசுரர்களாக இருந்தாலும் தேவர்களுக்கு இணையான தவங்களை நன்முறையில் நிறைவேற்றி இருந்ததால் அவர்கள் இருவரையும் அமிர்த கரண்டியால் தொட்டு அவர்களுக்கு அருள்புரிந்தார். அதனால் இந்த இருட்டு வருடத்தில் எந்த அளவிற்கு பெருமாள் ஆயுதங்களான சங்கு சக்கரங்களை தரிசனம் செய்கிறோமா அந்த அளவிற்கு இருள் கர்மங்களிலிருந்து நாம் விடுபடுவோம். காய்ச்சல் போன்ற வியாதிகளால் துன்புறுவோர் தங்கள் மர்ம உறுப்புகளில் பெருத்த மாற்றத்தைக் காணலாம். இது உடலை தீய சக்திகளிலிருந்து விடுவித்து இறை சிந்தனையைக் கூட்டுவதில் மர்ம உறுப்புகள் மேற்கொள்ளும் அரிய பணியைக் குறிக்கின்றது. இதுவரை எப்படி இருந்தாலும் இந்த ராகவேந்திர வருடம் தொடங்கியாவது அவரவர் மர்ம உறுப்புகளை நல்ல முறையில் சுத்தம் செய்து மலை போல் குவியும் கர்ம வினைகளின் தாக்கத்திலிருந்து விமோசனம் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். நம் சற்குரு சென்னை மாநகரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியபோது கூட சுத்தமான நீரை அதிக விலை கொடுத்து வாங்கி தன்னுடைய மர்ம உறுப்புகளைத் தூய்மை செய்து இத்தகைய வசதிகள் இல்லாதோரும் நற்கதி அடைய வழிவகுத்தார் என்பது ஒரு சிலரே அறிந்த இரகசியம் ஆகும். இது குறித்து சற்குரு அளித்த பதிலே நம்மை வியக்க வைப்பதாகும். “சார், குளிக்க எந்த தண்ணியை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், மர்ம உறுப்புகளைத் தூய்மை செய்ய தூய்மையான நீரால் மட்டுமே முடியும் ...”. இதுவே நாம் “மட்டமாக” நினைத்து ஒதுக்கும் மர்ம உறுப்புகளின் மகாத்மியமாகும். அமிர்தம் பெறுவதற்காக தோன்றிய ராகு கேது மூர்த்திகளின் தரிசனத்தையே மங்களம் திருத்தலத்தில் பெறுகிறீர்கள். இம்மூர்த்திகளைத் தரிசனம் செய்து கனிந்த கனி வழிகாட்டிய முறையில் பாதயாத்திரையாக முசிறி சென்று மௌல்விகலை தரிசனத்தைப் பெறுதலால் சந்திர தரிசனம் பூரணம் அடையும் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும். எந்த கலையிலும் தேர்ச்சி பெற குரு தேவை என்பது உண்மையே. அதிலும் கலைகளில் எல்லாம் சிறப்பாக விளங்கும் கடவுளை உணர்தல் என்ற கலைக்கு நிச்சயம் ஒரு சற்குரு தேவை அல்லவா ? ஆனால், சற்குரு அமையாதவர்கள் நம் சற்குருவைப் போன்ற உத்தமர்களின் சீடர்கள் சொல்லும் தெய்வீக வழிமுறைகளைக் கடைபிடித்து வந்தால் அவர்கள் நிச்சயமாக இறைவனின் வழிகாட்டுதலைப் பெறுவார்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை. இத்தகைய சீடர்கள் அளிக்கும் விளக்கங்களே ஒன்றுக்கொன்று முரணாக இருந்தால் என் செய்வது ? இத்தகைய குழப்பங்களை அறியாதவரா நம் சற்குரு ? இத்தகைய குழப்பங்களை எல்லாம் தம் தொலைநோக்குப் பார்வையால் சுமார் 40 வருடங்களுக்கு முன்பே சீர்தூக்கிப் பார்த்து விடையளித்தவரே நம் சற்குரு ஆவார். நம் சற்குருவின் அரவணைப்பில் ஞாபக சக்தியின் இமயமாக நின்ற ஒருவரும் ஞாபக மறதி பேராசியராக விளங்கிய ஒருவரும் சீடர்களாக விளங்கினர். ஒரு சீடனிடம் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் அதைக் களைவதுதானே குருவின் மாண்பு.

ஸ்ரீமுருகப் பெருமான் வாலிகண்டபுரம்

அதனால் நம் சற்குரு அந்த ஞாபக சக்தி வேந்தனை அழைத்து எதை எடுத்தாலும் மறந்து போகும் கலையில் வல்லவரான அந்த சீடருக்கு ஹயக்ரீவ சுலோகத்தை எழுதிக் கொடுக்குமாறு கூறினார். அந்த சீடரும் அவ்வாறே செய்தார். ஆனால், அந்த ஞாபக மறதிப் பேராசிரியரோ அந்த சுலோகத்தையும் தவறாக மனதில் பதித்துக் கொண்டார். எப்படி ?
ஞானானந்த மயம் தேவம் நிர்மலம்
ஸ்படிகாக்ருதம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே
என்பது அந்த அடியார் மனதில் வைத்துக் கொண்டு இடைவிடாது சொல்லிக் கொண்டிருந்த ஹயக்ரீவ துதி. அவருக்கு எழுதிக் கொடுக்கப்பட்டதோ
ஞானானந்த மயம் தேவம் நிர்மலம்
ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே.
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அந்த அடியார் ஹயக்ரீவ சுலோகத்தை தவறாக சொல்லிக் கொண்டிருந்தார் என்பதை நம் சற்குரு கண்டு கொள்ளவே இல்லை. ஒரு நாள் திடீரென அந்த அடியாரை அழைத்து, “என்னப்பா, ஹயக்ரீவ மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறாய் போலிருக்கிறதே. எங்கே அதைச் சொல்லு அடியேனும் கேட்டுப் பார்க்கிறேன் ...”, என்று சொல்லவே அந்த அடியாரும் தான் சொல்லிக் கொண்டிருந்த மந்திரத்தை சற்குருவிடம் வாய்விட்டுக் கூறினார். அதைக் கேட்ட நம் சற்குரு, “க்ருதம் என்று சொல்லக் கூடாது, க்ருதிம் என்றுதான் சொல்ல வேண்டும்,” என்று அந்த அடியார் ஹயக்ரீவ சுலோகத்தை அட்சர சுத்தமாக சொல்ல வேண்டிய முறையை குரு உபதேசமாக அருளினார். எல்லாக் கலைகளுக்கும் வித்யைகளுக்கும் ஆதாரமாக விளங்கும் தெய்வமே, ஞானம், ஆனந்த மயமாக விளங்குபவனே, உயர்ந்தோனே, மாசில்லா பளிங்கு போன்று என்னுடைய ஆத்மாவை தூய்மைப்படுத்துவோனே, ஹயக்ரீவ பெருமானே உன்னை வணங்குகிறேன் என்பதே இந்த சுலோகத்தின் மேலோட்டமான பொருளாகும். தெய்வீக முன்னேற்றத்திற்கு அவசியம் தேவைப்படுவது நம்பிக்கையும் விடாமுயற்சியுமே. அந்த அடியாரும் சுமார் 20 வருடங்களுக்கு மேல் தன் சற்குரு அளித்த ஹயக்ரீவ சுலோகத்தை தொடர்ந்து ஓதிக் கொண்டிருந்தாலும், ஞாபக சக்தி அளிக்கும் வல்லாரை லேகியத்தை தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்தாலும் ஞாபக மறதி என்பது மட்டும் அவரை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அவர் கடைக்கு லேகியம் வாங்குவதற்காக செல்லும்போது ஞாபக சக்தி அளிக்கும் அந்த லேகியத்தின் பெயரையே பல முறை அவர் மறந்து விட்டிருக்கிறார்.

நெருஞ்சிகனி தரிசனம்
ராவத்தநல்லூர்

ஒரு முறை நம் ஆஸ்ரமத்தில் அவருடைய ஞாபக மறதியால் ஒரு பெருங்குழப்பமே உருவாகி விட்டது. தன்னுடைய நிலையை தெளிவுபடுத்துவதற்காக அவர் நம் சற்குருவை அணுகியபோது நம் சற்குருவோ வழக்கம்போல் ஒரு தெய்வீகப் புன்னகையுடன் வரவேற்று, “அதெல்லாம் ஒண்ணுமில்லே ராஜா. காஸ் சிலிண்டர் கதைதான் உனக்கு தெரியுமே. நீ அடியேனுடைய இடத்தில் இருந்திருந்தால் அந்த அடியார் சிலிண்டரை ரிடர்ன் செய்த விஷயத்தையே மறக்கச் செய்து ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பேன் அல்லவா ? அதனால் நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உனக்கு எது எப்போது ஞாபகத்திற்கு வர வேண்டுமோ அதை உன்னுடைய ஞாபகத்திற்கு கொண்டு வர வேண்டியது எங்கள் கடமை, நீ கவலைப்பட வேண்டாம் ...”, என்ற ஆறுதல் வார்த்தைகளை அளித்தார். சற்குரு அளித்த ஞானப் பொக்கிஷம் இன்று வரை அடியார்களுக்கு ஞானத்தை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறது அல்லவா ? மேற்கூறிய ஹயக்ரீவர் சுலோகம் ஒரே ஒரு அடியாரின் ஞாபக மறதியைப் போக்குவதற்காக அளிக்கப்பட்டதா ? நிச்சயமாக கிடையாது. சற்குருவை நம்பும் அனைவருக்கும், தெய்வீகத்தில் நாட்டம் கொள்ள விரும்பும் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமே சற்குருவால் உபதேசிக்கப்பட்ட ஹயக்ரீவ சுலோகமாகும். ஆஹா, காஸ் சிலிண்டர் விஷயம் மறந்து விட்டதல்லவா ? ஒரு முறை ஒரு அடியார் பௌர்ணமி அன்னதான சேவையில் பங்கெடுத்துவிட்டு ஊருக்குப் புறப்பட வேண்டிய தயார் நிலையில் நம் சற்குருவைக் காண வந்தார். அவரைக் கண்ட உடனேயே சற்குரு, “ஏம்பா, போன மாசம் கொடுத்த காஸ் சிலிண்டர் என்ன ஆயிற்று ... நீ அதைத் திருப்பிக் கொடுக்கவே இல்லையா ?” என்று கேட்டார். அந்த அடியார் அதிர்ந்து போய், “வாத்யாரே, உடனேயே அடியேன் சிலிண்டரை ...லிடம் திருப்பிக் கொடுத்து விட்டேனே ?” என்றார். நம் சற்குருவோ, “இதில் என்ன குழப்பம் என்று தெரியவில்லை. இப்பதான் காஸ் கம்பெனியிலிருந்து போன் பண்ணினார்கள், ஒரு சிலிண்டர் குறைவதாகச் சொன்னார்கள். அதை சரி செய்யாவிட்டால் அடுத்த மாதம் அன்னதானத்திற்கு சிலிண்டர் கிடைக்காது என்பதுதான் உனக்கு தெரியுமே ? ஏதோ எவன் எவன் கையிலோ காலிலோ விழுந்துதானே அன்னதானத்தை பண்றோம். இப்ப பணம் இருந்தாலும் காஸ் கிடைப்பது கஷ்டம் அல்லவா ? நீ முதலில் ...லைப் பார்த்து இந்த சிலிண்டர் விஷயத்தை செட்டில் பண்ணி விட்டு ஊருக்குப் போ ...”, என்று தெளிவாகக் கூறிவிட்டார். அந்த அடியாரும் குழப்பத்துடன் ...லைத் தேடி ஆஸ்ரமம் எங்கும் அலைந்தார். மாடிக்குச் சென்றால் இப்போதுதான் அவர் (புக்) ஸ்டாலுக்கு சென்றார் என்றார்கள். ஸ்டாலுக்கு சென்று பார்த்தால் அவர் வாஷிங் செக்ஷனுக்கு சென்று விட்டதாகக் கூறினார்கள்.

திருஅண்ணாமலை ஞானப்பழ
தரிசனம் ராவத்தநல்லூர்

அலைந்து திரிந்து களைத்து விட்டார் அந்த அடியார். முடிவில் நம் சற்குருவிடம் திரும்பி வந்து, “வாத்யாரே, அடியேன் அவசரமாக ஊருக்குத் திரும்ப வேண்டும். ...லைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஊருக்கு சென்ற உடனேயே இந்த சிலிண்டர் விஷயத்தை செட்டில் செய்து விடுகிறேன். இப்போது அடியேன் உத்தரவு வாங்கிக் கொள்கிறேன்,” என்று கூறி விடைபெற்றுத் திரும்பி விட்டார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ...லை ஒரு ஆஸ்ரம வேலையாக வெளியே அனுப்பியவரே நம் சற்குருதான். அந்த அடியார் சென்ற சில நிமிடங்களில் எல்லாம் திரும்பி வந்த ...ல் சிலிண்டர் விஷயம் பற்றி கேள்விப்பட்டு நம் சற்குருவிடம் விஷயத்தை தெளிவுபடுத்துவதற்காக சென்றார். நம் சற்குரு, “என்னய்யா, போன காரியம் நல்லபடியாக முடிந்ததா ?” என்று கேட்டார். “அனைத்தும் நல்லபடியாக நிகழ்ந்தது ...”, என்று கூறி விட்டு, “வாத்யாரே, ...ர் சிலிண்டரைத் திருப்பித் தரவில்லை என்று நீங்கள் கூறியதாக அடியேன் கேள்விப்பட்டேன். அவர் அப்போதே சிலிண்டரை ரிடர்ன் செய்து விட்டார் ...”, என்று கூறவே நம் சற்குரு ஒரு பொய்க் கோபத்தை வெளிப்படுத்தி, “ஆமாய்யா, ஒரு சிலிண்டர் எப்போ வந்துச்சு எப்போ போச்சுனு கூடத் தெரியாமலா அடியேன் இந்த சீட்ல (சற்குரு என்னும் பதவியில்) உக்காந்திருக்கேன். அவன் பிஸினெஸ் சரியில்லை என்று சொல்லி ஏகப்பட்ட பணம் கடன் வாங்கியிருக்கான். சரி ஏதோ தெய்வீகத்துல இருந்துகிட்டு சில நல்ல காரியம் செய்வான்னு எதிர்பார்த்துதான் இவ்வளவு பணமும் அவனுக்கு கொடுத்தேன். ஆனால், வாங்கிய பணத்திற்கு பதில் சொல்லாமல் புதிதாக பணம் கடன் வாங்கலாம்னு எதிர்பார்த்துதான் அடியேனிடம் வந்தான். அடியேனிடம் நன்கொடையாக வரும் பணம் ஆயிரமாக இருந்தாலும் ஒரு நூறு ரூபாயாக இருந்தாலும் அடியேன் அதை நல்ல முறையில் அன்னதானத்திற்கு பயன்படுத்துவேன் என்ற நம்பிக்கையில்தான் அடியார்கள் அளிக்கிறார்கள். அவ்வாறு வந்த பணத்தை எப்படி சார் நான் சரியில்லாத காரியங்களுக்கு வாரி வழங்க முடியும். அதே சமயத்தில் இக்கட்டான இந்த சூழ்நிலையிலிருந்து நம்மை நம் சற்குரு விடுவிப்பார் என்ற நம்பிக்கையுடன்தான் அவன் அடியேனை அணுகினான்.

ஸ்ரீஆதித்ய பிள்ளையார்
ராவத்தநல்லூர்

இதுவும் மறுக்க முடியாத ஒன்று. அப்படியானால் குரு அந்தஸ்தில் இருக்கும் அடியேன் இத்தகைய ஒரு நாடகம் ஆடுவதைத் தவிர வேறு வழியில்லை அல்லவா ?” ஆயிரமாயிரம் ஆன்மீக வினாக்களுக்கு விடையளிப்பதே சற்குருவின் இந்த திருஅண்ணாமலை திருவிளையாடலாம். இந்தத் திருவிளையாடல்கள் அனைத்தும் படிக்கும் நமக்கு சுவை அளிப்பதாக இருந்தாலும் மகான்கள் திருவிளையாடல் மூலம் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள், ஏராளம், ஏராளம். திருச்சியிலிருந்து திருஅண்ணாமலை செல்வதற்கு கள்ளக்குறிச்சி, மடப்பட்டு, விழுப்புரம் போன்ற ஏகப்பட்ட மார்க்கங்கள் உள்ளன அல்லவா ? பஸ்சில் வருபவர்கள் விழுப்புரம் மார்கம் வழியாக வரும்படியும், கார் போன்ற வாகனங்களில் வருபவர்கள் திண்டிவனம் வழியாக வருமாறும் நம் சற்குருவின் வழிகாட்டுதல் அமையும். மகான்கள் மேற்கொள்ளும் தெய்வீகக் காரியங்களின் தன்மையைப் பொறுத்தே இத்தகைய பாதைகள் அமையும். தனக்கென வாழாது பிறருக்காகவே தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து வாழும் கனிந்தகனி திருஅண்ணாமலை செல்வதற்கு தேர்ந்தெடுத்த பாதையே கள்ளக்குறிச்சி திருக்கோயிலூர் மார்க்கமாகும். ஆனால், நம் கனிந்த கனி திருக்கோயிலூரைத் தாண்டிச் செல்லாமல் திருஅண்ணாமலை தரிசனத்தை திருக்கோயிலூரில் இருந்தே நிறைவு செய்து கொண்டார் என்று நாம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். பாதயாத்திரையாகவே செல்லும் நம் கனிந்தகனி கள்ளக்குறிச்சியிலிருந்து வரும்போது ராவத்தநல்லூர் என்னுமிடத்தில் ஒரு நெருஞ்சிகனியின் மீது அவர் பாதங்கள் படவே அந்த முள் குத்தியதால் அவர் மிகுந்த வேதனையுற்று அங்கேயே பல மணி நேரங்களுக்கு அமர்ந்து விட்டார். நெருஞ்சி முள்ளை எடுத்து விட்டாலும் முள் குத்திய இடத்திலிருந்து தொடர்ந்து இரத்தம் கசிந்து கொண்டேதான் இருந்தது. பரமாச்சார்யாள் நிலத்தில் ஒரு குழியைத் தோண்டி அதில்தான் மலஜலம் கழிப்பார். பின்னர் அக்குழியை மூடி விட வேண்டும் என்பது சுவாமிகளின் உத்தரவு. அதேபோல் பிற்காலத்தில் அவர் நோயுற்று வருந்தியபோது கபத்தால் தொந்தரவு ஏற்பட்டபோது ஒரு குவளையில் சளி, உமிழ்நீரை துப்புவது வழக்கம். அந்தக் “கழிவுகளையும்” அவ்வாறு மண்ணைத் தோண்டி புதைத்து விடுவது வழக்கம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கனிந்தகனியின் இந்தக் “கழிவுகளை” பிரசாதமாகப் பெற்றுச் செல்ல ஆதிசங்கர லோகத்திலிருந்து ஆயிரக் கணக்கான தேவதைகள் எழுந்தருளி காத்துக் கிடக்குமாம். இத்தகைய அற்புத ஞானியின் திருப்பாதங்களில் அவர் அறியாமல் முள் குத்திவிடுமா, இரத்தம் சிந்தி விடுமா என்ன ? ராவுத்தநல்லூர் திருத்தலத்திற்கு வடக்கில் அமைந்துள்ளதே திருஅண்ணாமலையாகும். வடக்கு திசை குபேர திக்காக அமைவதால் ஸ்ரீகனிந்தகனி ராவத்தநல்லூரிலிருந்து பெற்ற தரிசனம் சுக்ர சக்தியை பெற்றுத் தருவதாக அமைந்தது. இத்தகைய அற்புத தரிசனத்திற்கு அருள் கூட்டிய ராவத்தநல்லூர் திருத்தலத்திற்கு மேலும் புனிதம் ஊட்டவே, கூட்டவே கனிந்த கனி புண்ணிய சக்தியின் திரட்சியாக விளைந்த இரத்தப் புனிதத்தை இங்கு சேர்த்து பெருங்கருணை புரிந்தார்.

ராவத்தநல்லூர்

கனிந்தகனி பாலமுருகனின் அவதாரம் என்று புகழப்படுவதால் வாலிகண்டபுரத்தில் அபூர்வமாக வடக்கு நோக்கி எழுந்தருளி உள்ள முருகப் பெருமாளை வணங்கி தியானித்து வந்தாலே கனிந்தகனியின் அனுகிரகத் திருவிளையாடல்களை நீங்களே உணர்ந்து அருள் பெறலாம். முள்ளும் மலராகும் என்பது சற்குருமார்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்புடன்தான் பல கயவர்களையும், முரடர்களையும் கூட தங்கள் சத்சங்கத்தில் இணைத்து அவர்களுக்கு இறை உணர்வை ஊட்டுகிறார்கள். குரு மலரும் முள்ளாக மாறி மக்களுக்கு உடல் பிணிகளைத் தீர்த்து அதன் மூலம் இறை உணர்வை ஊட்டும் என்பதே மஞ்சள் நிறம் கொண்ட நெருஞ்சி முள்ளிற்கும் தெய்வீக மகத்துவம் அளித்த நம் கனிந்தகனியின் கனிவான செய்கை. பூமித் தாய்க்கு இரத்தப் புனிதம் சேர்க்கும் மகத்தான திருப்பணியை நம் சற்குரு எப்படி நிறைவேற்றினார் என்பதையும் பார்ப்போமா ? அஸ்ஸாம் மாநில கௌஹத்தி காட்டுப் பகுதியிலும், திருச்சி திருப்பராய்த்துறை காவிரிக் கரையிலும், சென்னை மாநகரிலும் நம் சற்குரு இரத்தப் புனிதம் சேர்த்து அளப்பரிய புண்ணிய சக்தியை, சித்த மாபொக்கிஷத்தை தாரை வார்த்தளித்த பெருங்கருணையை ஏற்கனவே விளக்கியுள்ளோம். இவ்வாறு ஒரு சாதாரண மனிதனாகவே ஸ்ரீராமபிரானைப் போல் வாழ்ந்த நம் சற்குரு இறுதியாக திருச்சியில்தான் மனிதச் சட்டையைக் கழற்றி விட்டு குருமங்கள கந்தர்வ லோகம் சென்றடைந்தார். செத்தும் கொடுத்தான் சீதக் காதி என்ற வள்ளல் பராம்பரியம் மிக்க தமிழ்நாட்டில் பிறவி எடுத்த நம் சற்குரு இந்த மனித உடலை விடுத்த பின்னும் பூமா தேவிக்கு இரத்தப் புனிதம் சேர்த்த வரலாறே நம்மை பிரமிக்க வைப்பதாகும். பூத உடலை விடுத்த சற்குருவை ஒரு ஆம்புலன்சில் வைத்து திருஅண்ணாமலைக்கு கொண்டு சென்றனர். அந்த ஆம்புலன்ஸ் சென்ற பாதையும் கிட்டத்தட்ட கனிந்தகனி மேற்கொண்ட பாதயாத்திரைப் பாதையை ஒட்டியே அமைந்திருந்தது என்பதே நம்மை வியக்க வைக்கும் செய்தியாகும். அவ்வாறு செல்லும் வழியெல்லாம் நம் சற்குருவின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் கசிந்த வண்ணமாகவே இருந்தது. ஒரு வெள்ளைத் துணி கொண்டு அவ்வாறு வழிந்த இரத்தத்தை எல்லாம் துடைத்துக் கொண்டே வந்தார் சற்குருவின் அருமை மனைவி. திருஅண்ணாமலை துர்கா தரிசனப் பகுதிக்கு வந்தபோது அந்த இரத்தப் புனித துணியை, “திருஅண்ணாமலை ஈசனின் பாலகனை உண்ணாமுலைத் தாயே ஏற்றுக் கொள்ளட்டும் !”, என்று கூறி திருஅண்ணாமலை புனித பூமியில் சேர்த்து விட்டார். தன்னுடைய உயிர் மறைந்த பின்னும் பூலோக மக்கள் அனைவரும் மாயையைக் களைந்து திருஅண்ணாமலையாரின் திருவடிகளை அடைய திருவுள்ளம் கொண்ட நம் சற்குரு மாயக் குழிவடு தரிசனத்தில் தம் இரத்தப் புனிதத்தை சேர்த்த இந்த புனித செயலுக்கு ஈடான ஒன்றை எவராலும் கூறத்தான் முடியுமா ? ஜெய், சற்குரு மகராஜ் கீ ஜெய் !!!

ராவத்தநல்லூர்

நம் சற்குருவின் சீடராக விளங்கிய ஒரு அடியார் கனிந்த கனியை தன் இஷ்டதெய்வமாக வைத்து பூஜித்துக் கொண்டிருந்தார். அவருடைய வாழ்க்கைப் பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்க விரும்பினார் நம் சற்குரு. இதற்காக நம் சற்குரு கையாண்ட திருவிளையாடல்களில் ஒன்றே வஸ்திர தானமாகும். ஆம், ஒரு கார்த்திகை நன்னாளில் அந்த அடியாருக்கு ஒரு பேண்ட், ஒரு சட்டை, ஒரு ஜட்டி இவற்றை அளித்து ராவுத்தநல்லூர் தண்டபாணி ஆலயத்தில் தானமாக அளிக்கும்படிக் கூறினார். அந்த அடியாரும் ராவுத்தநல்லூரைத் தேடி வருவதற்குள் நண்பகல் ஆகிவிட்டது. திருத்தலத்தின் மலைப் படிக்கட்டுகள் வழியாக மேலேறிச் சென்று பார்த்தால் அங்கு ஒருவரையும் காணவில்லை. மலை உச்சியில் ஸ்ரீபாலதண்டாயுதபாணியைத் தரிசனம் செய்து விட்டு கீழிறங்கி வந்து பார்த்தபோது அங்கு ஒரு இளைஞன் அங்குள்ள சுனை தீர்த்தத்தில் தன்னுடைய ஒரே பொக்கிஷமான பாண்ட், சட்டையை அலசி அவற்றை அங்குள்ள ஒரு பாறையின் மேல் காய வைத்து விட்டு வெறும் ஜட்டியை மட்டும் அணிந்த கோலத்தில் ஒரு பாறையின் மேல் அமர்ந்திருந்தான். அந்த காட்சியைக் கண்ட நம் அடியார் பிரமித்து விட்டார். வஸ்திர தானம் தருவது பிரமாதமில்லை. இவ்வாறு மாற்றிக் கொள்ளக் கூட டிராயர், சட்டை இல்லாமல் எங்கோ ஒரு அத்துவானக் காட்டில் இருக்கும் ஒருவரைத் தேடிக் கண்டுபிடித்து அவருக்கு விலை உயர்ந்த பாண்ட், சட்டை அளிப்பதென்றால் இந்த இமாலய சாதனையை நம் சற்குருவைத் தவிர வேறு யாரால் சாதிக்க இயலும் ? ராவுத்தநல்லூரை அடைந்த உடனேயே அங்கிருந்து பார்த்தால் திருஅண்ணாமலை நன்றாக தரிசனம் அளிப்பதைக் கண்ட அவர் திருஅண்ணாமலை வழியாக வந்து எளிதில் அந்த திருத்தலத்தை அடைந்திருக்கலாமே என்று எண்ணியது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால், கனிந்த கனியை இஷ்ட தெய்வமாக வைத்து வழிபடுபவர் கனிந்தகனி பாதயாத்திரையாக சென்ற கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் மார்க்கத்தில்தானே பயணத்தை மேற்கொள்ள வேண்டும் ? இதின் பின்னணியில் அமைந்துள்ள மற்றோர் சுவையான விஷயம் என்னவென்றால் காஞ்சிபுரம் அருகில் உள்ளது ஓரிகை திருத்தலம். ஓர் இருக்கை என்பதே ஓரிகையாக மாறி விட்டது.

பவசாகர சுனை தீர்த்தம்
ராவத்தநல்லூர்

அத்வைதம் என்ற தத்துவத்தில் அதாவது பிரிக்க முடியாத, என்றும் விளங்கும் ஆனந்த ஒளி வெள்ளமே இறைவன் என்ற கொள்கையின் அடிப்படையில் நம் காஞ்சி பரமாச்சார்யாள் விளங்குவதால் ஓரிகை திருத்தலத்திற்கு அடிக்கடி சென்று தியானம், வழிபாடுகள் இயற்றுவது வழக்கம். ஓரிகை என்பதால் காஞ்சி மடத்தில் அப்போது மூன்று ஆச்சார்ய மூர்த்திகள் விளங்கியபோதும் யாராவது ஒரு சங்கராச்சாரியார் மட்டுமே துணைக்கு ஒரு வேலையாளும் இன்றி, மாற்றிக் கொள்ள வேறு காஷாய வஸ்திர ஆடைகள் இன்றி ஓரிகையில் எழுந்தருள்வது வழக்கம். இப்போது சொல்லுங்கள், ராவுத்தநல்லூரில் நம் அடியார் வஸ்திர தானம் அளித்தது தன் இஷ்ட தெய்வ சங்கராசாரியருக்கா, ஆதிசங்கர பகவத்பாதருக்கா, பாலதண்டாயுதபாணிக்கா, அதைக் கூற வல்லவர் தரணி போற்றும் நம் சற்குரு ஒருவரே, ஓரிகை வேந்தனே ! இந்த வஸ்திர தானம் அளித்தபோது நம் அடியாரின் வீட்டில் அந்த அளவு தூய்மையான தண்ணீர் கிட்டவில்லை. ராவுத்தநல்லூர் சுனை தீர்த்தத்தை நம்பி இருந்த ஒருவருக்கு ஆடை தானம் அளித்ததன் மூலம் ஒரு அடியாரின் தண்ணீர் பிரச்னையே தீர்ந்தது என்றால் அந்த தானத்தின் மகிமை எவ்வளவு பிரம்மாண்டமானதாக இருக்கும். அந்த அடியார் தான் இருந்த இடத்தை விற்று விட்டு வேறு ஒரு வீட்டை வாங்கிக் கொண்டு சென்று விட்டார். தற்போது இருக்கும் வீடோ ஒரு பெரிய ஏரியின் அருகில் அமைந்துள்ளதால் கடுமையான வறட்சி நிலவும் காலத்தில் கூட அவர் நீர் பஞ்சத்தையே அறியாதிருந்தார். இது மட்டுமல்லாமல் இன்னும் பல அந்தரங்கமான குடும்ப விஷயங்களுக்கும் ஒரு தீர்வாக இந்த வஸ்திர தானம் அமைந்தது என்பதே சித்தர்களின் கர்ம பரிபாலன பின்னணியில் அமைந்த மகத்துவம் ஆகும். எப்போதோ, ஏதோ ஒரு அடியாரின் நீர் பிரச்னையைத் தீர்த்தார் ராவுத்தநல்லூர் முருகப் பெருமான் என்றல்லாது இன்றும் மக்களின் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கும் வள்ளலே அவர் என்பதை உணர்த்துவதே இங்கு நீங்கும் தரிசிக்கும் வருண பகவான் ராவுத்தநல்லூர் முருகப் பெருமானுக்கு இயற்றும் அமிர்த வருண அபிஷேகமாகும்.

இன்றும் தங்கள் இல்லங்களில் உள்ள கிணறுகள் வற்றி விட்டாலோ அல்லது நிலத்தில் நீர் பாசன வசதி குறைந்து போவதாலோ அவதியுறும் அடியார்கள் ராவுத்தநல்லூர் முருகப் பெருமானை நேர்த்தி வைத்து வணங்கி வழிபட்டு வருதலால் நீர் வளங்களை தொடர்ந்து பெறுவார்கள் என்பது உறுதி. ஆனால், இவ்வாறு கிட்டும் வருமானத்தில் நான்கில் ஒரு பகுதியையாவது ஏழை எளியோர்க்கு அன்னதானமாக, பானகம், நீர் மோர், பழரசம் போன்ற தானமாக அளித்தல் சிறப்பு. இதனால் அவர்கள் மட்டுமல்லாது அவர்கள் சந்ததியினரும் நீர்ப் பஞ்சத்தால் அவதியுறமாட்டார்கள். அடியார்களின் சந்ததிகள் இந்த அமிர்த மழையில் ஆனந்தமாக குதித்து விளையாடும் குதூகல காட்சியையும் இந்த வீடியோ படத்தில் நீங்கள் கண்டு இரசிக்கலாமே. நீர் பிரச்னை என்றால் நிலத்தில் வீட்டில் அனுபவிக்கும் தட்டுப்பாடு, உப்பு, உவர்ப்பு என்ற பிரச்னைகள் மட்டுமல்லாமல் வியாதியின் கொடுமையால் நீரே அருந்த முடியாமல் போகும் நிலையையும் இது குறிக்கும். நம் ஆஸ்ரம அடியார் ஒருவர் பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தபோதும் அவருடைய நாக்கு உள்ளே சென்று மறைந்து கொண்டதால் ஒரு சொட்டு நீரைக் கூட அருந்த முடியாத துன்பத்திற்கு அவர் உள்ளானார். இத்தகைய வறட்சி நோய்களும் நம்மைத் தாக்காது பாதுகாப்பு அளிப்பதே ராவத்தநல்லூர் முருகப் பெருமான் வழிபாடு அளிக்கும் நோய் நிவாரணம் ஆகும்.

ஓங்கார உபதேசம்
ராவத்தநல்லூர்

நம் சற்குரு அளித்துள்ள 51 காயத்ரீ முத்திரைகளை ஒருவர் முறையாக பயின்று வந்தால் போதும் அவர் வானத்தையே வில்லாக வளைத்து விடலாம் என்பார் நம் சற்குரு. அப்படியானால் அந்த காயத்ரீ முத்திரைகளை பிரபஞ்சத்திற்கு தாரை வார்த்து அளித்த சற்குருமார்கள் எதைத்தான் சாதிக்க இயலாது ? ஆனால், அவர்கள் எந்த இறை சக்தியிலும் குறுக்கே செல்லாது தெய்வ சங்கல்பத்திற்கே அனைத்தையும் அளித்து விடுகின்றனர் என்பதற்கு ஒரு உதாரணமாகத் திகழ்வதும் ராவுத்தநல்லூர் திருத்தலத்தில் நீங்கள் தரிசனம் செய்த அமுத மழைக் காட்சி ஆகும். நம் சற்குரு தன் சீடர் ஒருவரை ராவுத்தநல்லூர் திருத்தலத்தில் வஸ்திர தானத்தை அளிக்கச் செய்து அவர் அனுபவிக்க இருந்த நீர்ப்பஞ்சத்தை களைந்தார் என்றாலும் இதை நிறைவேற்ற நம் சற்குரு முழுக்க முழுக்க இறை சக்தியையே நம்பியிருந்தார் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும். ராவுத்தநல்லூர் ஸ்ரீமுருகப் பெருமான் மேற்கு திசை நோக்கி எழுந்தருளி உள்ளார். மேற்கு திசை என்பது வருண பகவானுக்கு உரியதுதானே, சனி பகவானுக்கும் உகந்ததுதானே. சனி நீராடு என்ற வழக்கும் இதிலிருந்து தோன்றியதுதான். இவ்வாறு வருண பகவானுக்கு உகந்த மேற்கு திசையை நோக்கி வலது பக்கம் தன் தந்தை சிவபெருமானை அருணாசல ஈசன் அரவணைப்பில் திகழும் முருகப் பெருமான் எத்தகைய நீர்ப் பஞ்சத்தையும் போக்கும் அனுகிரகத்தை அளிப்பதில் வியப்பென்ன ? ஆனால், நாம்தான் சுவாமியின் அனுகிரக சக்திகளை அறியாமல், புரியாமல் இருந்து கொண்டு வாடுகின்றோம், வதங்குகின்றோம். சனி, ராகு மூர்த்திகள் இருளைக் குறித்தாலும் இந்த இருளிலும் இறை சக்தியை ஸ்பாட் லைட் போன்று வெளிச்சம் போட்டுக் காட்டுவதைப் போல் அருண ஒளி மறைந்த தருவாயில் அருணை ஒளியாக வீசும் முருகப் பெருமானின் பேரருட் கடாட்சமாக ஒளி வீசுவதை இங்கு பக்தர்கள் தரிசித்து மகிழலாம்.

நித்திய ராமபாணத் தலம்

சூரிய பகவான் தினமும் 3000 கோடி அணுகுண்டுகளுக்கு இணையான ஆதித்ய சக்திளை சூரிய கிரணங்கள் வடிவில் பூமியில் செலுத்திக் கொண்டிருக்கிறார் என்பது நீங்கள் அறிந்ததே. இது ஏதோ சூரிய பகவானின் தனித்தன்மையான சக்தி என்று கிடையாது. ஈ எறும்பு முதல் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுமே இத்தகைய கற்பனைக்கு எட்டாத அதீத சக்தியை வெளிவிடக் கூடியவைதாம். ஆனால், இத்தகைய அதீத சக்தி தான் யார் என்று தன்னைத் தானே அறிவதால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய இறை கருணை. இது இவ்வாறிருக்க சூரிய பகவானின் ஆதித்ய குலத்தில் தோன்றிய ராமபிரான் தன்னுடைய ராமபாணத்தில் ஆதித்ய சக்திகளை சதாசர்வமும் வெளியிடுவதில் வியப்பென்ன ? ராமாவதாரம் நம் பூலோகத்தைப் பொறுத்தவரை நிறைவேறி விட்டாலும் ராமபாண சக்திகளை புதுப்பிக்கும் பல திருத்தலங்கள் நம் பூலோகத்தில் புத்துயிர் பெற்று விளங்குகின்றன. இவற்றில் முதன்மையானதே ராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதய துதிகளை உபதேசித்த ஸ்ரீஅகத்திய மகாபிரபு தினமும் வழிபடும் ஈங்கோய்மலை திருத்தலமாகும்.

சிவமலை, சக்திமலை, சிவசக்தி மலை என்றெல்லாம் புகழப்படும் ஈங்கோய்மலை தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையை வளர்ப்பதில் முதன்மையாகத் திகழ்வதில் வியப்பில்லைதான். இதன் மூல காரணம் அம்பாள் சுவாமியின் இடப்பாகத்தில் எழுந்தருள தவமியற்றிய முதன்மையான தலம் இதுவே ஆகும். பல யுகங்கள் இத்திருத்தலத்தை வலம் வந்து வணங்கி உலக மக்களுக்கெல்லாம் ஒற்றுமை என்ற அருட்பிரசாதத்தை வழங்கிய தலம் இதுவே.

ஸ்ரீபாலதண்டாயுதபாணி
ஈங்கோய்மலை

இந்த சிறப்பையே அகத்திய கிரந்தங்கள்
இடையில் இடையாய்
இடையில் இடையாய்
இடையில் இடையாய்
துலங்கும் சிவசக்தி
என்று சிறப்பித்துப் பாடுகின்றன. அதாவது இரத்தினகிரி, ஈங்கோய்மலை, கடம்பமலை என்று மும்மலைகளின் இடைச் சக்தியாய், சூரிய பாணத்தின் இடைச்சக்தியான மரகத ஒளிச் சக்தியாய், சிவ சக்தி ஒளி வெள்ளத்தின் இடையே ஒளி வீசும் தமிழ் வேதக் குமரனாய் துலங்கும் சிவசக்தி என்பதே ஈங்கோய்மலையில் பொலியும் இறை சக்தியின் விளக்கமாகும். அம்மையின் இந்த அருந்தவச் சிறப்பை உலகத்தவர்க்கு உணர்த்தும் முகமாக ஒவ்வொரு சிவராத்திரி தினத்தன்றும் ஸ்ரீஈங்கோய்நாதரின் எழில் மேனியைத் தன் பொற்கிரணங்களால் தழுவி அபிஷேகம் இயற்றி மகிழ்கிறார் சூரிய பகவான். இவ்வாறு சூரிய பகவானின் கிரணங்களால் அபிஷேகிக்கப்பட்ட மரகதத் திருமேனியை தரிசித்து அந்த பலன்களை எல்லாம் உலகத்தவர்க்கு தன் அருட்பிரசாதமாக ஸ்ரீஅகத்திய மகாபிரபு அளித்து வருவதால் எங்கெல்லாம் ஸ்ரீஅகத்திய முனியின் திருவுருவங்கள் எழுந்தருளி உள்ளனவோ அங்கெல்லாம் மறுநாள் விடியற்காலையில் அதாவது அமாவாசை அன்று விடியற்காலையில் பஞ்சாமிர்த அபிஷேகம் அத்தல இறைவனுக்கும் அதன் பின்னர் ஸ்ரீஅகத்தியருக்கும் நிறைவேற்றுதலால் இது மிகச் சிறந்த சமுதாய பூஜையாக மலரும் என்பதில் ஐயமில்லை. சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்தும் இத்தகைய அரிய பூஜையை நிறைவேற்ற விரும்புவோர்கள் அவரவர் வசதிக்கு ஏற்றபடி சம்பங்கி மலர்களால் மாலை கட்டி அந்த பூமாலைப் பந்துகள் நிரம்பிய மூங்கில் கூடைகளை தலையில் அல்லது தோளில் சுமந்து ஈங்கோய்மலையை சிவராத்திரி நாட்களில் வலம் வந்து இந்த பூக்களை சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்தல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே. வெகுநாட்கள் திருமணம் ஆகாத பெண்களும், ஆண்களும் நலமடைவர். அமாவாசை தினங்களில் காலையில் ஈங்கோய்மலையை கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு இத்தகைய தானங்களை இயற்றுவதும் ஏற்புடையதே. ஒரு அணுகுண்டு செய்வதற்கான செய்திகள் அனைத்துமே தற்கால இண்டர்நெட் தளத்தில் உள்ளன என்பதே விஞ்ஞானிகள் தெரிவிக்கும் செய்தி. ஆனால், அந்த செய்திகளை எல்லாம் கோர்வையாக இணைத்துப் பெறுவதற்கான பொறுமையோ, நம்பிக்கையோ மக்களிடம் இருப்பதில்லை என்பதே குறைபாடு. உண்மையில் இந்தக் குறைபாட்டை மங்காமல் பாதுகாத்து வரும் தேவதைகளே காவல் தெய்வங்கள், எல்லை தெய்வங்கள் என்ற இறை சக்திகளாகும். அதேபோல ஈங்கோய்மலை தலவிருட்சம் ஒன்றில் மிளிரும் சக்தியைக் கொண்டே உலகை வில்லாய் வளைக்கலாம் என்பதே நாயன்மார்கள் அளிக்கும் அத்தாட்சி ஆகும். ஆனால், இந்த விருட்ச சக்திகளைப் பெறும் முறைகளைப் பெறும் சிரத்தையைப் பக்தர்கள் பெற முயலவில்லை என்பதே கலியுகத்தின் யுகக் கோட்பாடாகும். இவ்வாறு ஈங்கோய்மலையில் பதிந்துள்ள, மறைந்துள்ள தெய்வீக சக்திகளை, திண்டிரினி வேத சக்திகளை, தேவ சக்திகளை வெளிக் கொணர்ந்து பயன்பெற நினைக்கும் பக்தர்கள் சிவராத்திரி அன்று கிரிவலம் வந்து உப்பில்லா பத்தியம் ஏற்று புளித்த தயிரில் ஊறிய மசால்வடைகளைத் தானம் அளித்தலால் சிறிது சிறிதாக ஈங்கோய்மலையில் மாயமாகி உள்ள திண்டிரினி சக்திகளைப் பெறலாம் என்பது சித்தர்கள் அளிக்கும் உறுதி.

ஸ்ரீஅகத்தியர் ஈங்கோய்மலை

அள்ள அள்ளக் குறையாத அருள் பொக்கிஷமே இத்தலத்தில் மறைந்துள்ள திண்டிரினி சக்திகளாகும். குண்டலினி சக்திக்கு முன்னோடியாகத் திகழ்வது இந்த திண்டிரினி சக்திகளாகும். நம் உடலில் மூலாதாரத்தில் மூண்டெழு கனைலை காலால் எழுப்பி அதை சகஸ்ராரத்தில் ஒன்றச் செய்தால் இறைவனைப் பற்றிய அனைத்து இரகசியங்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும் என்பது சித்தர்கள் தெளிவுரை. மாதா அமிர்தானந்தா ஒரு முறை, “நீங்கள் அனைவரும் ஓம் ஸ்ரீஅமிர்தேஸ்வர்யை நமஹ ஓம் ஸ்ரீஅமிர்தேஸ்வர்யை நமஹ என்று ஓதிக் கொண்டிருக்கிறீர்களே, (தன்னைச் சுட்டிக் காட்டி) இது வெறும் இந்த ஐந்தடியில் உலவும் ஓர் உயிரையா சுட்டிக் காட்டுகிறது, அல்ல, அல்ல. நம் உடலில் ஆயிரம் இதழ்கள் கொண்ட சகஸ்ரார சக்கரத்தில் மறைந்திருக்கும் இறைவன் என்ற அமிர்த சக்தியையே இது சுட்டிக் காட்டுகிறது ...” என்றார். நாம் சகஸ்ரார சக்கரம் என்று சொல்லும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை என்பது ஒரு உதாரணத்திற்காகக் கூறப்பட்டதே தவிர உண்மையில் சஹஸ்ரார சக்கரம் என்பது ஆயிரமாயிரம் இதழ்கள் மலரும் இறை உணர்வைக் குறிப்பதே. இதில் மலரும் இறை சக்திகயைப் பற்றிக் கூறும்போது, “அடியேன் இறைவனை உணர்ந்த அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது ... அடியேன் மட்டும் கிடையாது, இறைவனை உணர்ந்த எவருமே தங்கள் இறை அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. சற்றே ஆத்ம விசாரம் செய்து பார்த்தாலும் இது உண்மைதான் என்பது தெளிவாக புரிய வரும். கேவலம் மனித வார்த்தைகளின் வர்ணனைகளில் கட்டுப்படும் ஒரு சக்தி எப்படி இறை சக்தியாக இருக்க முடியும் ? ஆனால், இறை உணர்விற்குப் பின் பல படித்தரங்கள், ... பல படித்தரங்கள் இறங்கி கீழே வந்த பின் நடந்த நிகழ்ச்சிகளை ஓரளவு அடியேனால் வர்ணிக்க முடியும் ... அடியேன் தரைக்கு கீழே இருக்கும் அனைத்துப் பொருட்களும், தங்கம், வைரம் போன்ற அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன, மக்கள் மட்டும் அல்ல பறவைகள், விலங்குகள், புழு, பூச்சி என அனைத்து உயிரினங்களும், தாவரங்களும் பேசும் அனைத்து மொழிகளின் அர்த்தமும் தெளிவாகத் தெரிந்தன. ” இதுவே இறை அனுபவம் பெற்ற ஒரு அடியாரின் அனுபவம். இந்த இறை அனுபவம் நம் சற்குரு ஒருவர் மட்டுமே பெற்றார் என்பது நிச்சயமாகக் கிடையாது. நம் சற்குருவை குருவாக ஏற்றுக் கொண்ட, ஏற்றுக் கொள்ளும் அனைவரும் பெறக் கூடிய அனுபவமே, ஆனந்தமே இது. தேவை நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கையே.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam