சுக்ர தீபமா, சுக்ர ஜோதியா !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ரோகிணி தீபம்

இறைவனின் கருணைக்கு எல்லையே கிடையாது. அவன் எந்த அளவு வேண்டுமானாலும் இறங்கி வந்து ஒரு சாமானியனுக்கும் அருள் புரிவான் என்று விளக்குவதே 2018ம் ஆண்டு திருஅண்ணாமலை தீப மகாத்மியமாகும். 2018 ஆண்டு என்பது சந்திர சக்திகளைக் குறிக்கும் ஆண்டுதானே. இந்த ஆண்டு சந்திர சக்திகள் பூரிப்பதே, உச்ச கட்டத்தில் விளங்குவதே முறை என்ற பாங்கில் சந்திர சக்திகள் உச்சத்தில் விளங்கும் ரோகிணி நட்சத்திர நேரத்தில் ஏற்றப்படுவதே திருஅண்ணாமலை தீபமாகும். திருஅண்ணாமலை கார்த்திகை தீபம் ரோகிணி தீபமாக விளங்குகிறது என்றால் ரோகிணி நட்சத்திரத்தில் தோன்றிய நம் சற்குரு வெங்கடராமன் அவர்களின் பெருமையை வாய்விட்டுக் கூற முடியுமா ? மேலும் சற்குரு திருஅண்ணாமலையாருடன் ஐக்யம் பெற்ற சந்திர ஆண்டாக இந்த ஆண்டு அமைவதால் தன்னுடைய அடியாருக்காக தான் ஒளிரும் நட்சத்திரத்தையே தாரை வார்ப்பது, அளிப்பது என்றால் ஈசனுக்கு நிகர் ஈசனே !

அரிதிலும் அரிதாய் விளங்கும் இத்தகைய உச்ச சந்திர சக்திகளை எப்படிப் பெறுவது என்று திருஅண்ணாமலை தீபத்தை தரிசிக்கும் பலருக்கும் திருஅண்ணாமலையை வலம் வரும் அடியார்களுக்கும் தோன்றுவது இயல்பே. 23.11.2018 வெள்ளிக் கிழமை மாலை முதல் 24.11.2018 சனிக் கிழமை மாலை வரை இத்தகைய சந்திர சக்திகள் பெருகும் என்றாலும் பஞ்சமுக தரிசனத்தை அடுத்து வரும் சந்திர தரிசனப் பகுதியில் சாஷ்டாங்கமாக 11 முறை தரையில் விழுந்து வணங்கி எழுவதால் இத்தகைய உச்சம் பெற்ற சந்திர சக்திகளை சாதாரண பக்தர்களும் எளிய முறையில் பெறலாம். அவரவர் தங்கள் சற்குருவை வேண்டி இந்த நமஸ்காரத்தை நிறைவேற்றுவதால் குருபிரசாதமாக இத்தகைய சந்திர தரிசன சக்திகள் கனியும் என்பதே திருஅண்ணாமலை கிரிவல மகாத்மியமாகும். இங்கு அடியார்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். திருஅண்ணாமலையில் நாம் தரிசனம் செய்வது தீபமா ஜோதியா ? திருஅண்ணாமலையார், இறைவன் அனைவருக்கும் ஜோதியாகத்தான் தரிசனம் அளிக்கிறார். ஆனால் அந்த ஜோதியைத் தரிசனம் செய்பவர்களின் மனோ நிலையைப் பொறுத்து அந்த இறைப் பரம்பொருள் ஜோதியாகவோ தீபமாகவோ தோன்றுவதுண்டு. ஆனால் அவை இரண்டுமே நம் கர்ம வினையைக் களைபவையே என்பதில் ஐயமில்லை, சிறிதும் சந்தேகமில்லை. சற்குரு வெங்கடராமன் அவர்கள் திருஅண்ணாமலை ஜோதி அலங்கார பீடாதிபதியாய் தோன்றியவர்தான். ஆனால் அவரை தரிசனம் செய்பவர்கள் அவரை மனிதராக, தெய்வமாய், சற்குருவாய் இவ்வாறு எந்த நிலையில் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம் அல்லவா ? இது அவரவர் மன வளர்ச்சி, மனோ நிலையைப் பொறுத்தது. மேலும் அவரை சற்குருவாய் தரிசனம் செய்பவர் அவரை சாதாரண மனிதராகப் பார்ப்பதாகக் கூறலாம், சற்குருவை சாதாரண மனிதராகப் பார்ப்பவர் சற்குருவை சாட்சாத் அண்ணாமலையாராகப் பார்ப்பதாகக் கூட கூறலாம். அனைத்தும் அறிந்தவர் சற்குரு ஒருவரே, யார் எப்படி தன்னைப் பார்க்கிறார் என்ற இரகசியம் அறிந்தவர் சற்குரு ஒருவரே என்பதில் சந்தேகமில்லை.

சற்குரு வெங்கடராமன் அவர்களை ஜோதி அலங்கார பீடாதிபதியாய் பார்க்கும் பாக்யம் பெற்றவர்களே ஜோதிக்கும் தீபத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடியும் என்றாலும் தீபத்தை அனைவரும் தரிசனம் செய்ய முடியும் என்பதே அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். உதாரணமாக வள்ளலார் சுவாமிகள் வடலூர் சன்மார்க்க சபையில் ஒரு அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டு, “இதோ வருகிறேன்,” என்று சொல்லிச் சென்றார். ஆனால் அவர் சென்று வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததைக் கண்ட பக்தர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது அவரைக் காணாமல் திகைத்தார்கள். சற்குருவை இது பற்றிக் கேட்டபோது, “இதோ வருகிறேன் என்று கூறி அறைக்குள் சென்ற சுவாமிகள் ஜோதியாய் உடனே வெளியே வந்து விட்டார். ஜோதியை அறைக்குள் தேடினால் எப்படிக் கிடைப்பார்?” என்று திருப்பி கேட்டார் சற்குரு. இதுவே ஜோதியின் தன்மை. அதே போல திருஅண்ணாமலையை ஒரு லட்சம் முறை கிரிவலம் வந்தவர் சேஷாத்ரி சுவாமிகள். அவர் நடந்து கடந்த தூரத்தை விட திருஅண்ணாமலையை ஓடிக் கடந்ததே அதிகம் என்று வியக்கும் அளவிற்கு திருஅண்ணாமலையைச் சுற்றி சுற்றி வந்தவர். ஒரு முறை ஒரு அடியார் அவரைப் பார்த்து, “சுவாமிகளே இப்படி ஓடி ஓடி இந்த மலையைச் சுற்றுவதால் என்ன பலனோ?” என்று கேட்டாராம். அதற்கு அதிகம் பேசாத சேஷாத்ரி சுவாமிகள் அந்த அடியாருடைய மேல் துண்டால் அவருடைய முகத்தை மூடி, “இப்போது அண்ணாமலையாரைப் பார்,” என்றாராம். திருஅண்ணாமலையாரைப் பார்த்த அடியார் தான் கண்ட காட்சியைக் கண்டு பிரமித்து வாயடைத்து நின்று விட்டாராம். திருஅண்ணாமலையில் லட்சம் என்ன கோடி கோடியாய் நட்சத்திரங்கள் பிரகாசிப்பதைக் கண்ட அந்த அடியார் என்ன கூற முடியும் ? இவ்வாறு ராமலிங்க வள்ளலார், சேஷாத்ரி சுவாமிகள் போன்ற நைஷ்டிக பிரம்மச்சாரிகளே ஜோதிக்கும் தீபத்திற்கும் உள்ள வேற்றுமையை உணர்ந்து கொள்ள முடியும் என்றாலும் மற்றவர்களுக்கும் இந்த தரிசனப் பலன்களை பெற்றுத் தருவதையே தம் கடமையாகக் கொண்டுள்ள சற்குரு வெங்கடராமன் போன்ற மகான்களுக்கு இதுவும் சாத்தியம்தானே? ரோகிணி நட்சத்திரத்தின் கதிர்கள் திருஅண்ணாமலையாரை வழிபடுவதை தங்கள் ஊனக் கண்களால் தரிசனம் செய்யும் சக்தி பெற்றவர்களே இத்தகைய நைஷ்டிக பிரம்மசாரிகள். பீஷ்மர், ஆஞ்சநேயர் போன்ற பக்தர்களுக்கும் இத்தகைய காட்சிகள் சாத்தியமே. மற்றவர்கள் தங்கள் சற்குரு மூலமாகவே சந்திர தரிசனப் பகுதியில் இத்தகைய தரிசனப் பலன்களை பெற உதவி செய்வதே அபூர்வமாக இவ்வாறு ரோகிணியில் எழும் திருஅண்ணாமலை தீபமாகும்.

நம் சற்குருவான ஜோதியைத் தரித்தவரே ஜோதி ஆண்டவரான அண்ணாமலையார். ஆனால் இறைவன் மட்டும் இந்த இரகசியத்தை தம்மிடம் வைத்துக் கொள்வதைவிட இந்த உலகத்தவர் அனைவரும் அறிந்து கொள்ள உரியவர்கள் மூலமாக திருஅண்ணாமலையார் திருக்கோயில் பிரசாதமான அருள்மாலையை சற்குருவின் இறுதிச் சடங்கிற்கு அனுப்பி வைத்தார் இறைவன் என்றால் அண்ணாமலையாரின் கருணைக்கு இதை விடச் சிறந்த எடுத்துக் காட்டு ஒன்றைச் சுட்டிக் காட்ட முடியுமா ? அது மட்டுமா, சற்குரு பிறந்த ஜன்ம நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரமும் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒன்றே என்று உணர்த்தும் பொருட்டு ரோகிணி நட்சத்திரம் திகழும் நேரத்தில் திருஅண்ணாமலை தீபத்தை தோற்றுவிக்கிறார் என்றால் இறைவனின் கருணைக்கு எல்லை ஏது ? ஒரு உத்தம இறையடியாருக்காக திருஅருணாசல ஈசனே தீப உற்சவத்தை மாற்றிக் கொள்கிறான் என்றால் இனியாவது அந்த சற்குருவின் மேன்மை பற்றி இந்த உலகம் புரிந்து கொள்ளுமா ?

குருவருள் திரளும் இத்தகைய அபூர்வமான சுக்ர சக்தி நாட்களில் பால் சம்பந்தப்பட்ட அனைத்து தானங்களும் ஏற்புடையதே.

இத்தகைய வழிபாட்டால் கனியும் பல பலன்களில் ஒன்று குரு நம்பிக்கை பெருகுவது. இதை ஒரு உதாரணத்தால் விளக்குவோம். ஒரு முறை சற்குரு அவர்கள் தஞ்வாவூருக்கு ஒரு அடியார் இல்லத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள சத்ய சாய்பாபாவின் புகைப்படத்தைப் பற்றி விவரித்தார்கள். சாய்பாபா கண் மூடி அமர்ந்திருக்கும் அந்தக் கோலம் ஆனந்த தியானம் எனப்படுவது. தன்னுடைய ஆத்மாவை அணுவினும் சிறிய அளவாக ஆக்கிக் கொண்டு தன்னுடைய சூட்சும சரீரத்தை ஒரு லட்சும் மைல்களுக்கு பெருக்கிக் கொண்டு அந்த சூட்சும சரீரத்தில் பிரவேசிக்கும் உயிர்களுக்கு மன அமைதியையும் குதூகலத்தையும் அளிப்பதே ஆனந்த தியானமாகும் என்ற எளிய விளக்கத்தை அளித்தார் சற்குரு. இதைக் கேட்ட அடியார் அந்த படத்தை ஒரு பேப்பரில் வைத்துக் கட்டி சற்குருவிற்கு அளித்துவிட முடிவு செய்தார். ஆனால் இது பற்றி சற்குருவிடம் ஒன்றும் கூறவில்லை. தான் வந்த வேலை பூர்த்தி ஆன பின் சற்குரு சென்னைக்கு ரயில் ஏறும் சமயத்தில் அந்தப் படத்தை சற்குருவிடம் அளித்தார். சற்குருவும் அந்தப் படத்தைப் பெற்றுக் கொண்டு அதை தன்னுடைய துணிப் பெட்டியை எடுத்துக் கொண்டு வந்த அடியாரிடம், “இந்த படத்தை அந்த பெட்டியில் வைத்து விடு,” என்று கூறினார். படம் பெரிதாக இருந்தது. துணிமணிகள் அடங்கிய பெட்டியோ சிறிதாக இருந்தது. அதனால் அந்த அடியார் இவ்வளவு பெரிய படத்தை இந்தச் சிறிய பெட்டியில் எப்படி வைக்க முடியும் ? இருந்தாலும் குரு சொல்கிறார், முயற்சி செய்து பார்ப்போமே,” என்று நினைத்து பெட்டியைத் திறந்து அந்தப் படத்தை வைக்க முயற்சி செய்தார். அந்த அடியார் நினைத்தது போல் படத்தை பெட்டிக்குள் வைக்க முடியவில்லை. அந்த அடியாரும் அனைத்தும் அறிந்த சற்குருவிடம், “வாத்யாரே, இந்தப் படம் பெரிதாக இருக்கிறது. அதனால் பெட்டிக்குள் வைக்க முடியவில்லை. படத்தை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்,” என்று கூறவே சற்குருவும் ஒன்றும் அறியாதவர் போல்,“அப்படியா ராஜா,” என்று மட்டும் கூறினார். சற்குருவின் இந்த செயல் புரிய அந்த அடியாருக்கு எத்தனையோ ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாம். உங்கள் நிலை எப்படியோ ?

இது போன்றதொரு சம்பவத்தை சற்குரு தன் பெரிய வாத்யாரிடம் எப்படி சந்திக்கிறார் என்று பார்ப்போமா? ஒரு முறை பெரிய வாத்யாரும் நமது சிறுவன் வெங்கடராமனும் ஒரு அடியாரின் இல்லத்தில் தங்க வேண்டி வந்தது. அப்போது கோவணாண்டி, “ஏண்டா, இந்த ரூம்ல தாராளமா பத்து பேர் படுக்காலாம் போல இருக்குள்ள,” என்றாராம். அதற்கு சிறுவன், “ஆமாம், வாத்யாரே, இந்த ரூம்ல தாராளமாய் பத்து பேர் படுக்கலாம்,” என்றாராம். சற்று நேரம் கழித்து கோவணாண்டி, “இல்லடா, கொஞ்சம் யோசித்துப் பாத்தா இந்த ரூம்ல ஒரு 300 பேர் ஜாலியா தங்கலாம் போல இருக்கே,” என்றாராம். எப்படி ? சிறுவனா சளைத்தவன். “ஆமாம், வாத்யாரே, தாராளமாக 300 பேர் இங்கே தங்கலாமே”, என்று உடனே கூறினானாம். பெரியவர் சிறுவனை முறைத்துப் பார்த்து, “என்னடா, பத்து பேர் தங்கலாம் போலிருக்கிறதே என்றால், ஆமாம் வாத்யாரே பத்து பேர் தங்கலாம்னு சொல்ற, இல்லடா 300 பேர் தங்கலாம்னு சொன்னா உடனே கொஞ்சம் கூட யோசிக்காம ஆமா வாத்யாரே 300 பேர் தாராளமாத் தங்கலாம்னு சொல்லி ஜால்ரா போட்றயே, ஒன்னும் புரியலையே,” என்றாராம்.

சிறுவன், “வாத்யாரே பத்து பேர் படுக்கற இடத்த பெரிசா விரிச்சு 1000 பேரை தங்க வப்ப, 3000 பேர் தங்கற எடத்த சுருக்கி மூணு பேர் மட்டும் தங்கற மாதிரி செஞ்சுடுவ, இது மாதிரி எது வேண்டுமானாலும் செய்யக் கூடிய ஆள் (?!) நீ என்பது எனக்கு நல்லாவே தெரியும்,” என்றான்.

பெரியவர் சிறுவன் முதுகில் தட்டிக் கொடுத்து, “சபாஷ்டா ராஜா நல்லா தேறிட்டயே,” என்று கூறிச் சிரித்தாராம். ஆனால், அதுவே பெரியவர் சிரித்த, சிறுவன் வெங்கடராமன் காணும் பாக்கியம் பெற்ற கடைசி சிரிப்பு. அதன் பின்னரே கோவணாண்டி சிறுவனுக்கு நிர்விகல்ப சமாதி இரகசியங்களைப் புகட்டி திருஅண்ணாமலையில் மறைந்தது. இல்லை திருஅண்ணாமைலையாராக மலர்ந்ததோ ?

2018ம் ஆண்டு திருக்கார்த்திகை ரோகிணி தீபத்தை தரிசனம் செய்யும் சிறப்பான முறைகள் உண்டா என்பது சிலரின் வினா. காரணம் திருஅண்ணாமலையார் ஜோதியாய்த் தோன்றுவது ஒரு சிறப்பு என்றால் சற்குருவே திருஅண்ணாமலை தீபமாய், ஜோதியாய் பிரகாசிக்கிறார் என்றால் அதற்கு என்ற ஒரு தனிச் சிறப்பு இருக்கும் அல்லவா ? ஆம், சற்குரு மிகவும் விரும்புவது அன்னதானத்தைத்தானே. எனவே பஞ்சமுக தரிசனப் பகுதியில் பால் இனிப்புகளை தானமளிப்பதே சற்குரு விரும்பும் அன்னதானம் ஆகும். இதன் பின்னால் உள்ள ஆன்மீக இரகசியம் நீங்கள் உணரக் கூடியதே. வக்ர புதன், சூரியனுடன் சேர்ந்த குருவின் நேர்பார்வையில் பிரகாசிக்கும் ரோகிணி நட்சத்திரம் அமைந்த ரிஷப ராசியை நீங்கள் ஆத்ம விசாரத்திற்கு ஒரு பொருளாக எடுத்துக் கொள்ளலாம் என்பது சித்தர்களின் பரிந்துரை.

ஒருமுறை திருச்சியில் தங்கிய சற்குரு அவர்களின் நித்திய பூஜைக்காக புதிய ரோஜா மலர்களை வாங்கி வைத்திருந்தார் அந்த வீட்டு அடியார். சற்குருவின் மகள் பூஜை அறையில் இருந்த சற்குருவின் படத்திற்கு அந்த ரோஜா மலர்களை அர்ப்பணிக்க நினைத்து குறுக்கே இருந்த சற்குருவை தள்ளிக் கொண்டு சென்றாள். இந்தச் செயலை புன்னகையுடன் வரவேற்ற சற்குரு, “அந்தப் படத்திற்கு உரியவன் இங்கே இருக்கிறேன். அடியேனைத் தள்ளிக் கொண்டு சென்று என்ன சாதிக்கப் போகிறாயோ, தெரியவில்லையே?” என்று கேட்டார். இது சற்குருவின் மகள் பெற்ற பாடம் மட்டுமல்ல. நாம் அனைவருமே கிட்டத்தட்ட இந்த நிலையில்தானே உள்ளோம். லட்சக் கணக்கான மக்கள் வலம் வந்து வணங்கும் திருஅண்ணாமலை உச்சியில் ஜோதியாய்ப் பிரகாசிக்கும் சற்குருவை அந்த வார்த்தையில் அடியார்கள் தேடிக் கொண்டிருப்பதைக் காணும் சற்குருவின் நிலை என்னவோ ?


புன்னகை மன்னர்கள் ஸ்ரீராமர் ஸ்ரீஅகத்திய பிரான்

சமீப காலம் வரை பத்து நாட்களுக்குக் குறையாமல் ஒளிர்ந்த தீபம் பல்வேறு காரணங்களால் ஒரு சில தினங்களே தற்போது ஏற்றப்படுகின்றது. அதுவும் மாலையில் மட்டுமே தீபம் ஏற்றப்படுவதாக அறிகிறோம். இந்நிலையிலும் சற்குரு தோன்றிய நட்சத்திரமான ரோகிணியில் எழுந்த தீபம் ரோகிணி நட்சத்திரம் நீடிக்கும் வரையில் பக்தர்களுக்கு அருள் வழங்குவது சற்குரு சென்னை அங்காளி ஆலயம், பொன்னி அம்மன் ஆலயம், திருஅண்ணாமலை போன்ற தலங்களில் வலம் வந்த சக்தியை ஜோதியாய், சுடராய் அருள்கிறாரா ? எது எப்படி இருந்தாலும் 2018ம் ஆண்டு திருஅண்ணாமலை தீபம் பற்றி அகத்திய கிரந்தங்கள் உரைத்த, “மூன்று நான்காக நான்கு மூன்றாகுமே”, என்பது எவ்வளவு பொருத்தமாகின்றது ?
விளம்பி வருட திருஅண்ணாமலை தீபம் ஆயுளை வளர்க்கும் அற்புத தீபமாக மலர்வதும் நாம் பெற்ற பெரும் பாக்கியமே. திருஅண்ணாமலை தீபம் ஏற்றிய ரிஷப லக்னத்திற்கு எட்டில் சனி பகவான் அமர, எட்டிற்கு உரிய குரு பகவான் ஸ்திர ராசியான விருச்சிகத்தில் அமர, விருச்சிக ராசிக்கு உடைய செவ்வாய் பகவான் ஸ்திர ராசியான கும்பத்தில் அமர, கும்பத்திற்கு அதிபதி சனீஸ்வர பகவான் அல்லவா ? இவ்வாறு ஆயுள்காரகன் பாரிஜாத யோகத்தில் இணைவது அரிதிலும் அரிதாம். இவ்வளவு மகத்துவம் வாய்ந்த சனி பகவானுக்கு உரிய சனிக் கிழமையில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதென்றால் இதன் அருமை, பெருமையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா ? அறிந்து, உணர்ந்து ஆனந்தம் அடைய வேண்டிய ஒன்றல்லவா ? சற்குரு வெங்கடராமன் அவர்கள் திருஅண்ணாமலை ஜோதியுடன் ஐக்யம் பெற்ற திருமேனியை தகனம் செய்தபோது எரியும் சிதையிலிருந்து வலக்கரம் மீண்டு அங்கிருந்த அடியார்களுக்கு எல்லாம் ஆசி அளித்தது என்றோ ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி அன்று என்பதற்கு நிரூபணமாய் இன்றும் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் லட்சக் கணக்கான பக்தர்களின் மிருத்யு தோஷங்களைக் களைந்து ஆயுளை வளர்க்கிற்து என்றால் அதன் மகத்தவம்தான் என்ன ? பத்து கோடி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியது கருணை என்றால் பத்து லட்சம் மக்களின் மிருத்யு தோஷங்களை சற்குரு களைவது பெருங்கருணை அல்லவா ?


நந்தியைப் பணிவோம் நலமுடன் வாழ்வோம்

“சோதியே சுடரே சூழொளி விளக்கே ...” என்ற மாணிக்க வாசகரின் மணியான வரிகள் விளம்பி வருடத்தின் திருஅண்ணாமலை தீப மகிமையை ஓரளவு புலப்படுத்தும். “அதெந்து” என்று தன் பக்தனை சிவபெருமான் அழைப்பதாக இந்தப் பாடல் வரிகள் குறிக்கின்றன. அதெந்து என்ற நாலெழுத்தைக் குறிக்கும் நிலையிலுள்ளவரே மேற்கண்ட பிருத்வி நந்தீஸ்வர மூர்த்தியாவார். இவர் நான்கு சதுர்யுகங்கள் திருஅண்ணாமலையில் தவம் இயற்றினார். எதற்காக ? பிருத்வி நந்தி மூர்த்தி நான்கு யுகங்கள் தவம் இயற்றிய மகிமையை மனிதர்கள் நான்கு வரியில் புரிந்து கொள்ள முடியாது என்பதால் சற்குரு இந்த பிருத்வி நந்தியின் தவ மகிமையை நான்கில் (ரோகிணியில்) தீபம் பொலியும் விளம்பி வருடத்தில் அளித்துள்ளார்கள். ஒரு பொருளின் சக்தி முழுவதும் ஜோதிப் பிரகாசமாக, சக்தியாக வெளியிடும் முறையை ஐன்ஸ்டீன் அவர்கள் குழுக்குறியீடு மூலம் அளித்துள்ளார் எனினும் இந்த பரிபாஷையை சாதாரண மக்களும் அறிந்து கொள்ள வழிவகுப்பதே பிருத்வி நந்தியின் வழிபாடாகும். சிறப்பாக விளம்பி வருடம் திருஅண்ணாமலையில் ஏற்றப்படும் தீப தரிசனத்தைக் கண்டு இந்த பிருத்வி நந்தி மூர்த்தியை வணங்குவதால் அற்புத பலன்கள் கிட்டுகின்றன. மனம், வாக்கிற்கு அப்பாற்பட்ட இந்த நந்தி மூர்த்தியின் தரிசனப் பலன்களை வார்த்தைகளில் வரைய முடியாது என்றாலும் சிறப்பாக இவ்வருட தீப தரிசனத்தின் பலனை நம் உடலில், மனதில், உள்ளத்தில் சேர்க்கும் புனிதப் பணியை இவர் மேற்கொள்கிறார் என்பதை மட்டும் கிரிவலம் வரும் பக்தர்கள், அடியார்கள் புரிந்து கொண்டால் போதுமானது என்று சித்தர்கள் தெரிவிக்கிறார்கள். சுருக்கமாகக் கூறுவதானால் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண் சக்திகள் இந்த வருட தீபத்தில் பிரகாசிக்கின்றன. ஒரு எண்ணைப் பற்றி தெரிந்து கொள்ளவே சற்குரு அளிக்கும் பணிகளை 20 வருடங்கள் நிறைவேற்றியாக வேண்டும். அப்படியானால் ஒன்பது எண்களின் சக்தியைப் பெற எத்தனை ஆண்டுகள் கடுமையாக உழைத்தாக வேண்டும். அதை எளிமைப்படுத்தித் தருவதே விளம்பி வருட தீப தரிசனப் பலன்களில் ஒன்றாகும். பல வருடங்களுக்கு முன் இந்த பிருத்வி நந்திக்கு சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கி நந்தியெம்பெருமானின் மகிமையைப் பற்றி விளக்கிய சற்குரு, “சுவாமியின் (பிருத்வி நந்தி) மகிமையைப் பற்றி சிறிதளவு தெரிந்தால் கூடப் போதும், இவரை அப்படியே பெயர்த்தெடுத்துக் கொண்டு போய் அமெரிக்காவில் வைத்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், சுவாமியைத் தள்ளிக் கொண்டு போய் என்ன சாதித்து விட முடியும். சுவாமியின் சக்தி அல்லவா முக்கியம். அதைத் தெரிந்து கொள்வது தானே சாதனை. அது தெரிய வேண்டுமானால் சித்தர்கள் பின்னால் சுத்துவது ஒன்றுதான் வழி,” என்று திருஅண்ணாமலை கிரிவல மகிமையை விவரித்தார் சற்குரு. பிருத்வி நந்தியின் மகிமையைப் பற்றி சுருக்கமாகக் கூறுவதானால் திருஅண்ணாமலை தீபத்திற்கு அளிக்கப்படும் பசு நெய் சக்தி முழுவதையும் சக்தியாக மாற்றி அதை மக்களுக்கு, பூலோக ஜீவன்களுக்கு அனுகிரகமாக மாற்றித் தரும் பணியை மேற்கொள்பவரே பிருத்வி நந்தி மூர்த்தி ஆவார். இந்த ஒரே ஒரு தகவலைப் பெறுவதற்காக சற்குரு வெங்கடராமன் நிலையிலுள்ளவர்கள் திருஅண்ணாமலையை ஒரு முறை கிரிவலம் வர வேண்டி வந்தது என்றால் தூசுக்கு 300 கோடி லிங்கங்கள் உறையும் திருஅண்ணாமலையின் மகிமையைப் பற்றி தெரிந்து கொள்ள எத்தனை கோடி யுகங்கள் ஆகும்.

பூவாளூர் திருத்தலம்

இந்த வருட தீபத்தின் போது திருஅண்ணாமலையில் மழைப் பொழிவு ஏற்பட்டதல்லவா ? இந்த மழைப் பொழிவிற்கு அமர முத்து என்று பெயர். பொதுவாக மழைத் துளிகள் கோத்து முத்து, குருவி முத்து, சர்ப்ப முத்து, சலகன் முத்து என்றவாறாக பல நாமங்களுடன் பொலியும். உண்மையில் மழைத் துளிகள் அனைத்தும் முத்துக்களைப் போல ஜீவசக்தி பெற்றவையே. எப்படி ஒரு ஜீவ சக்தி உள்ள முத்தை எந்த விஞ்ஞானத்தாலும் உருவாக்க முடியாதோ அவ்வாறே ஒரே ஒரு மழைத் துளியைக் கூட எந்த விஞ்ஞானத்தாலும் எந்த விஞ்ஞானியாலும் உருவாக்க முடியாது என்பது உண்மையே. சுவாதி நட்சத்திரம் பொலியும் முகூர்த்த நேரத்தில்தான் ஜீவ சக்தி உள்ள முத்துக்கள் தோற்றம் கொள்ள முடியும் என்பதே சித்தர்கள் அளிக்கும் மெய்ஞ்ஞான விளக்கம். இவ்வாறு சுவாதி நட்சத்திரத்தில் தோன்றிய அமர முத்துக்களை நாம் இனங்கண்டு இறைவனுக்கு அத்தகைய முத்துக்களால் அபிஷேகம் நிறைவேற்ற முடியாது என்றாலும் திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் பொலியும் அமர முத்துக்களான மழைத் துளிகளை சேகரித்து அதை சுயம்பு மூர்த்திகளுக்கு அபிஷேகித்து அந்த அமர சக்திகளை எல்லாம் மகேசன் சேவையாக இன்றும் அர்ப்பணித்து வாழும் பெருந்தகையே சுரைக்காய் சித்தர் ஆவார். இவ்வாறு மழைத் துளிகளின் தன்மையை இனங்கண்டு புரிந்து கொள்ள முடியாத பக்தர்கள் இருந்தாலும் எந்த இடத்தில், எந்த நேரத்தில் நிகழும் மழைப் பொழிவையும் சுரைக்குடுவையில், தென்னம்பாளையில் அல்லது பனை ஓலையில் பிடித்து சுத்தமான துணியால் வடிகட்டி அந்த மழைத்துளிகளை சுயம்பு மூர்த்தியின் அபிஷேகத்திற்கு அளிப்பதால் கிட்டும் பலன்கள் அமோகம். பல மிருத்யு தோஷங்களைக் களையக் கூடியது இத்தகைய அபிஷேக ஆராதனைகள். நமது மூதாதையர்களான பித்ருக்கள் பல நிலைகளில் வசிப்பதுண்டு. பித்ரு என்ற நிலையும் மனிதப் பிறவியைப் போன்றதே. எப்போது இந்தப் பிறவி முடியும் என்பது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே பித்ரு நிலையும் எப்போது முடியும் என்பதை இறைவனையன்றி வேறு யாரும் அறியார். அதனால்தான் எந்த காரியம் செய்தாலும் அது ஒரு கிரிவலமாக இருந்தாலும் சரி அன்னதானமாக இருந்தாலும் சரி அந்த நற்காரியத்தால் ஏற்படும் விளைவுகளை நன்றாக ஆத்ம விசாரம் செய்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ளும்படி நமது சற்குரு ஞாபகப்படுத்துவண்டு. அப்போதுதான் நம் பித்ருக்கள் திடீரென்று வேறு உயர்ந்த நிலைக்கு சென்று விட்டாலோ அல்லது மறுபிறவி எடுத்துவிட்டாலோ அவர்களின் வழிகாட்டுதல் நமக்கு கிடைக்காமல் போய்விடும் நிலையிலும் நாம் திடமாக நிற்க முடியும்.

சிவனும் சக்தியும் ஒன்றும் நிலை

நாம் ஆத்ம விசாரம் செய்து அன்னதானம், சுவாமி தரிசனம் ஒன்றே நிலையானது என்பதை உணர்ந்து கொண்டோமேயானால் பித்ருக்கள் திடீரென்று இடம் பெயர்ந்து விட்டாலும் அவர்கள் வழிகாட்டுதலை, ஆதரவை இழந்த நாம் அதனால் பாதிக்கப்படாமல் குரு காட்டிய நல்வழியில் தொடர்ந்து முன்னேற முடியும். பொதுவாக பித்ருக்கள் மனிதர்கள், விலங்குகள் என்ற கீழ் நிலையை அடைவதும் சாகா நிலையான நிரந்தர அமர நிலையை அடைவது சகஜம் என்றாலும் இத்தகைய அமர நிலையை பித்ருக்கள் அடையும்போது அவர்களை வருண பகவான் வாழ்த்தி வரவேற்பதால் தோன்றும் மழைத் துளிகளே அமர மழைப் பொழிவு ஆகும். திருஅண்ணாமலையாரின் அருட்பிரசாதமாக கிடைப்பதே இத்தகைய அருட்பெரும் ஜோதி நிலை. இந்த அமர நிலையை அனைவரும் அடைய வழிவகுப்பதே திருஅண்ணாமலை கிரிவலம் ஆகும், சிறப்பாக கணவனும் மனைவியும் சேர்ந்து திருஅண்ணாமலையை கிரிவலமாக வந்து சிவசக்தி ஐக்ய தரிசனத்தை தரிசிப்பதால் இத்தகைய மனம் ஒருமித்த நிலையை அடையலாம் என்பது உறுதி. இங்கு நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய முக்கியமான கருத்து என்னவென்றால் நாம் நினைப்பது போல் கணவனும் மனைவியும் சேர்ந்து திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தாலும் அவர்கள் இருவரும் காணும் திருஅண்ணாமலை ஒன்று கிடையாது. அதாவது இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களும் இருளில் மறைந்து விடுகின்றன. சூரிய உதயத்தில் அனைத்துப் பொருட்களும் பார்வைக்கு புலப்படுகின்றன. ஆனால், திருஅண்ணாமலையோ சூரியனின் வரவிற்கு அப்பாற்பட்டதே, சூரிய கிரணங்கள், சந்திரன், நட்சத்திர ஒளி, பிரகாசத்திற்கு அப்பாற்பட்டதே திருஅண்ணாமலை. எல்லா ஒளிக் கோளங்களையும் விளக்குவதே திருஅண்ணாமலை, திருஅண்ணாமலையிலிருந்து விலகி நிற்பவையே இந்த ஒளிக் கோளங்கள் அனைத்துமே. உங்களுக்கு இங்கு ஒரு சந்தேகம் தோன்றலாம், இரவில் தெளிவாகத் தெரியாத திருஅண்ணாமலை பகலில் சூரிய வெளிச்சத்தில் நன்றாகத் தெரிகிறதே. உண்மையில் இது பார்ப்பவரின் ரஜோ குணத்தால் ஏற்படும் மாற்றமே தவிர திருஅண்ணாமலையாரை இத்தோற்றங்கள் எவ்விதத்திலும் அணுகாது என்பதே உண்மை. ஒருவரின் இரண்டு கண்கள் இரண்டு காட்சியைக் காண்பதில்லை. அதே போல் கணவன், மனைவி இருவரின் கண்கள் ஒரே காட்சியாக திருஅண்ணாமலையைக் காணும்போதுதான் இந்த மகத்துவத்தை, உண்மையான திருஅண்ணாமலையாரின் சக்தியை உணர்ந்து கொள்ள முடியும். அப்போது கணவன் மனைவி இருவரின் நான்கு கண்களுமே ஒரே காட்சியைக் காணும், இதை சாதிப்பதே சிவசக்தி ஐக்ய தரிசனம். இந்த தரிசனத்தைக் கண்டவர்களை நீங்கள் தேடிக் கொண்டு போவதை விட அந்த தரிசனத்தைப் பார்த்த உண்மையான ஜோடி ஏன் நீங்களாக இருக்கக் கூடாது ?

திருஅண்ணாமலையில் ரோகிணி நட்சத்திரத்தில் ஏற்றப்படும் தீபம் அமர மழையை வர்ஷிக்கும் என குறிப்பிட்டோம் அல்லவா ? இத்தகைய மழைப் பொழிவு மற்ற திருத்தலங்களிலும் உண்டாவது இறைவனின் பெருங்கருணையைக் குறிக்கும். சிறப்பாக சுயம்பு மூர்த்தி எழுந்தருளிய தலங்களில் இத்தகைய அமர மழைப் பொழிவு ஏற்படுவது இயற்கையே என்றாலும் இத்தகைய மழைப் பொழிவு அமர மழைத் துளிகளால் ஏற்பட்டதே என்பதை நாம் அந்த மழைப் பொழிவு நிகழ்ந்த பின்னர் அங்கு தோன்றும் சங்குப் பூச்சிகளின் தரிசனத்தைக் கொண்டே முடிவு செய்ய இயலும். உதாரணமாக சற்குரு வெங்கடராமன் அவர்களால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஒரு சுயம்பு மூர்த்தி திருத்தலத்தில் தோன்றிய அமர மழைப் பொழிவிற்குப் பின்னர் தோன்றிய சங்கு சஞ்சீவியின் தரிசனத்தை இங்கு அளிக்கிறோம். இத்தரிசனத்தைக் காண்பதால் உங்கள் ஆயுளில் எந்த அளவிற்கு மாற்றம் ஏற்படுகின்றது என்பது சற்குருவால் மட்டுமே உணரக் கூடிய இரகசியம் என்றாலும் தேனில் ஊறிய அத்திப் பழங்களை இத்தரிசனம் பெற்று சுயம்பு மூர்த்தி தலங்களில் தானம் அளிப்பதால் உங்கள் ஆயுள் வளமாக வளரும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இத்தகைய தரிசனங்கள் மிருத்யு தோஷங்களைக் களைவதுடன் மகாமிருத்யுவாக செயல்படும் அதாவது நான் என்னும் அகந்தையைக் களைய உதவும் என்பதும் உண்மையே. திருஅண்ணாமலையில் ரமண மகரிஷி இத்தகைய அமர மழைப் பொழிவு தோன்றும் சமயங்களில் எல்லாம் தவறாது அந்த மழைப் பொழிவில் நின்றோ, அமர்ந்தோ, நடந்தோ அந்த மழைப் பொழிவை முழுவதுமாக ஏற்று அனுபவித்தவர் ஆவார். ரமண மகரிஷிக்கு தான் என்ற எண்ணம் ஒரு துளியும் எற்பட்டதில்லை என்பது உண்மையாயினும் அம்மகரிஷியை தரிசனம் செய்ய வந்தவர்களின் பலருடைய அகம்பாவத்தை ஏற்று அவர்களுக்கு அருள்புரிந்ததால் அவ்வாறு ஏற்ற அகம்பாவ எண்ணங்களை தன் உடலில் நிலைநிறுத்தி இத்தகைய அமர மழையில் அவைகளை நீக்கும் தெய்வீகப் பணியை ஆற்றி வந்தார்கள். அருணை கிரிவலத்தின் போதும் இறை தரிசனங்களின் போதும் இத்தகைய மகாமிருத்யு சக்திகளை அளிக்கும் மணிவாசகரின் சிவபுராணத்தை ஓதுதல் சிறப்பாகும்.

எம்பெருமானின் அடிமுடியைக் காணும் வைபவத்தில் பொய் உரைத்தார் பிரம்மா. தான் இறைவனின் திருமுடியைக் கண்டதாக பொய் கூறியதால் ஆலயங்கள் அமையாத சாபத்தைப் பெற்ற பிரம்ம தேவர் திருஅண்ணமலையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பல யுகங்கள் வழிபட்டு கருணைக் கடலான சிவபெருமானின் தரிசனம் பெற்று சாபம் களையப் பெற்றார் என்பது நீங்கள் அறிந்ததே. ஒவ்வொரு வருடமும் ஒரு சுயம்புமூர்த்தியை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு அதன் பலன்களை உலகத்தவர்க்கு புதுவருட குரு பிரசாதமாக அளித்து வந்த சற்குரு வெங்கடராமன் அவர்கள் 1994ம் ஆண்டு பஞ்சாட்சர சக்திகளுடன் பொலியும் ஆண்டாக திகழ்வதால் ஆஸ்ரம சார்பில் அடிஅண்ணாமலை என்று அழைக்கப்பபடும் ஆதிஅண்ணாமலை திருத்தலத்தில் அபிஷேக ஆராதனைகளை இயற்றி உலகம் உய்ய அருள்புரிந்தார்கள் என்பது ஒரு சிலரே அறிந்த இரகசியமாகும். இது பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அற்புதம், அதிசயம் என்று இல்லாமல் தொடர்ந்து நடக்கும் இனிய வைபவமே என்று உணர்த்துவதே இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் வீடியோவாகும். வெள்ளிக் கிழமை அன்று ஏற்றப்பட்ட திருஅண்ணமலை தீபத்தை அடுத்து வரும் ஒன்பதாம் நாளில் ஐந்து கோபுர கலசங்கள் அமைந்த அடிஅண்ணாமலை திருத்தலத்தில் தரிசனம் செய்வது என்பது அற்புத யோக தரிசனமாக அமைகின்றது. அடிஅண்ணாமலையில் கிட்டும் இந்த யோக தரிசனத்தைப் பெற்ற உடனே கணவன்மார்கள் தங்கள் மனைவியின் மாங்கல்யத்திற்கு குங்குமம் இடுதல் மாங்கல்ய பலத்தை ஸ்திரமாக்கும் வழிபாடாக மலர்கிறது. இந்த சந்தர்பத்தை தவற விட்டவர்கள் உத்திர நட்சத்திரம், சனிக்கிழமை, சுக்ர ஹோரை அமையும் நேரத்தில் அடிஅண்ணாமலையில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதலும் சிறப்பே. இவ்வாறு ஐந்து, ஒன்பது என்ற யோக ஸ்தானங்கள் பலருடைய ஜாதகத்தில் சிறப்பாக அமைவது கிடையாது என்பதால் அத்தகைய அடியார்களும் இத்தரிசனத்தைப் பெற்று உரிய தான தருமங்களை திருஅண்ணாமலையிலோ அல்லது தங்கள் ஊரில் அமைந்துள்ள திருத்தலங்களிலோ நிறைவேற்றி பலனடையலாம் என்பது உண்மையே. ஸ்திர வாரமான சனிக்கிழமையில் சுக்ர ஹோரையில் கிட்டும் இத்தகைய அற்புத ஜோதி தரிசனம் செல்வத்தை, ஆரோக்கியத்தை, ஆயுளை விருத்தி செய்வது மட்டுமல்லாமல் குரு நம்பிக்கையையும் வலுப்படுத்தும் தன்மை உடையதே. குறிப்பாக 60, 80 வயது பூர்த்தியானவர்கள் இத்தகைய தரிசனத்தால் பலனடைவர் என்பது உறுதி. ஆயுளை வளர்க்கும் சனிபகவான் ஆயுள்ஸ்தானமாகிய எட்டில் அமைவது ஆயுளை வளர்க்கும் அற்புத தரிசனமாகும்.

அடிஅண்ணாமலை யோக தரிசனம்

இவ்வாறு ஐந்தாமிடமும் ஒன்பதாம் இடமும் மிகவும் பலமான யோக அம்சங்களைத் தாங்கிப் பொலிவதே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜாதகமாகும். இத்தகைய ஜாதகக்காரர்களுக்கு அசாத்திய மனோ தைரியமும் மற்றவர்களுக்கு தன்னை மிஞ்சிய தானம் அளிக்கும் மனோ பாவமும் மிகுந்திருக்கும். இதற்கு உதாரணமாகத் திகழ்வதே சற்குரு வெங்கடராமன் அவர்கள் தன் சீடர்களுக்குத் தந்த ஒரு பாடமாகும். ஒரு முறை சென்னையிலிருந்து திருச்சியில் உள்ள பஞ்சபூத தலத்திற்கு வருகை புரிந்தார் சற்குரு. சற்குரு கொண்டு வந்திருந்த உணவை உடனிருந்த அடியார்கள் பகிர்ந்து உண்ணத் தொடங்கினர். ஆனால், சற்குருவைத் தவிர மற்ற இரு அடியார்களும் அந்த உணவை உண்ணவே முடியவில்லை. அந்த உணவில் அளவுக்கு மிஞ்சி சேர்க்கப்பட்டிருந்த காரமே அந்த உணவின் சுவைக்கு “சுவை” கூட்டியது. மொத்தமாக சுடப்பட்டிருந்த அந்த ரோமாலி ரொட்டிக்கு வைக்கப்பட்டிருந்த சட்னியே அந்த அடியார்களின் கண்களில் நீரை நிரப்பி விட்டது. காரத்திற்கு பழக்கப்படாத அந்த மற்றோர் அடியார் அந்த உணவை, குரு பிரசாதமான அந்த ரொட்டியை எப்படியாவது உள்ளே தள்ளி விடலாம் என்று எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவரது கண்களிலிருந்து கண்ணீர்தான் வெளியே பெருகி ஆறாய் ஓடியதே தவிர ரொட்டி சிறிதும் உள்ளே செல்ல மறுத்தது. ஒரு வழியாக அந்த உணவுப் படலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் சற்றும் சலனமில்லாமல் இரண்டு ரொட்டியை அதாவது ஒரு சாதாரண மனிதனுக்குத் தேவையான உணவை உண்டு தன் பங்கை பூர்த்தி செய்து கொண்டார் சற்குரு. பின்னர் சாவதானமாக, “நீங்கள் ரொட்டியையும் சட்னியையும் ருசித்துப் பார்ப்பதால் அவைகள் உள்ள செல்ல மறுக்கின்றன. அடியேனோ இவ்வாறு பத்து ரொட்டிகளைத் தயார் செய்ய வேண்டுமானால் (தன் மனைவியின் பெயரைக் கூறி) அந்த அம்மா எத்தனை மணிக்கு எழுந்து இவ்வாறு ஒவ்வொரு ரொட்டியையும் அரை மணி நேரம் நெருப்பில் வாட்டி இத்தனை ரொட்டிகளையும் தயாரித்திருக்க வேண்டும் என்ற தியாகத்தை நினைவு கூர்கிறேன்,” என்றார் சற்குரு. கேவலம் நாக்கு ருசிக்கு அடிமையாக வாழும் நீங்கள் என்ன சாதித்து விடப் போகிறீர்கள் என்பதை கேட்காமல் கேட்டது சற்குருவின் செய்கை. இவ்வாறு நாக்கு ருசியைத் தாண்டி நிற்பதே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜாதகம். நாட்பட்ட, பல நாட்கள் ஆகியதால் ஊசிப்போன பழைய சாதத்தையும் அமிர்தமாக உண்டவரே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள். இத்தகைய நிலைக்கு சாதகனைத் தயார் செய்வதே மேற்கண்ட திருஅருணகிரி கிரிவலமும் தீப தரிசனமும். ஆமாம், சற்குருவின் துணைவியார் ஏன் ரோமாலி ரொட்டியைத் தயார் செய்தார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அவை உணவிற்கு சுவை கூட்டுபவை மட்டுமல்ல, எண் கணித மேம்பாட்டை உணர்த்துபவையும் அவையே.

திருவையாறு திருத்தலம்

திருஅண்ணாமலை பஞ்சமுக தரிசனம், அடிஅண்ணாமலை ராஜகோபுரம், சுவாமிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் போன்றவை மட்டும் எண் கணித சக்திகளை வலுப்படுத்துபவை அல்ல திருவையாறு போன்று எண்கள் அடிப்படையில் அமையும் அனைத்து திருத்தலங்களுமே எண் கணித சக்திகளை வலுப்படுத்துபவையே. திருஅண்ணாமலை விளம்பி வருட தீப தரிசனத்திற்குப் பின் இத்தகைய எண் சக்திகள் மிகுந்த திருத்தலங்களை தரிசனம் செய்வதால் திருஅண்ணாமலையில் பெற்ற தீப தரிசன சக்திகளைத் தக்க வைத்துக் கொள்ள அவை துணைபுரியும் என்பது உண்மையே. ஒரு முறை திருவையாறு திருத்தலத்தில் உழவாரப் பணியை நிறைவேற்ற சற்குரு சில அடியார்களுடன் அத்தலத்திற்கு வருகை புரிந்தார்கள். அப்போது காலை நேரமாதலால் ஒரு பிச்சைக்காரன் கோயில் வாசலில் கூட்டி சுத்தப்படுத்தி தான் அமரவும் பிச்சை எடுக்கும் திருவோட்டை வைத்துக் கொள்ளவும் ஒரு இடத்தை தயார் செய்து கொண்டிருந்தான். அதை அடியார்களிடம் காட்டிய சற்குரு, “இந்த பிச்சைக்காரன் பிச்சை எடுப்பதற்காக தான் அமரும் இடத்தை தயார் செய்து கொண்டு இருக்கிறான். ஆனால் மெத்தை (அருள் உலகம் என்பதற்கு சித்தர்களின் மரபுச் சொல்) மேல் இவன் ஐயாறப்பர் திருத்தலத்தை சுத்தம் செய்வதாக கணக்கெழுதி இந்த ஒரு திருப்பணிக்காக மட்டும் அவன் இப்பிறவியிலோ அடுத்த பிறவியிலோ ஒரு மாருதி 800 காரை இலவசமாகப் பெறுவான்,” என்று கூறினார். அப்படியானால் சற்குருவுடன் சேர்ந்து ஐயாறப்பர் திருத்தலத்தல உழவாரப் பணி இயற்றும் அடியார்களுக்கு ஈசன் அளிக்கும் பரிசை மதிப்பிட்டுக் கூற வல்லவர் யார் ? திருப்பணி நிறைவேறிய பின்னர் அனைவரையும் தியாகராஜ பிரம்மம் அவர்களின் ஜீவ சமாதிக்கு முன் உள்ள காவிரி படிக்கட்டில் நீராடும்படி சற்குரு பணித்தாரகள். அப்போது சற்று தொலைவில் சென்று கொண்டிருந்த அடியார்களை அழைப்பதற்காக ஓஜஸ் ஒலி (விசில் சப்தம்) எழுப்பினார்கள். ஆனால் ஐயாறா ஐயாறா என்று அழைப்பவர்களை எம தூதர்கள் தீண்டக் கூடாது என்ற விதி இருப்பதால் திருவையாறு திருத்தலத்தில் அடியார்கள் அனைவரையும் ஐயாறா ஐயாறா என்று ஒலிக்கச் சொல்லி சற்குரு அவர்கள் திருப்பணியை நிறைவேற்றினாரகள். இப்போது சொல்லுங்கள் மாருதி பெரிதா, இல்லை மரணமில்லா பெருவாழ்வு பெரிதா ? சற்குருவின் மகிமையைப் பற்றியோ ஐயறாப்பனின் கருணையைப் பற்றியோ அறியாத பாமரர்களும் ஈசனின் கருணையைப் பெற வேண்டும் அல்லவா ? அதற்காகவே ஓஜஸ் ஒலியை எழுப்பி அத்தகையோருக்கும் ஐயாறாப்பனின் கருணை மழையைப் பொழிந்தவரே நம் சற்குரு. இந்த கோபுரக் கலசங்களை கூர்ந்து கவனிக்க குழப்பங்கள் அகலும். ஏனோ ?

ஸ்ரீகஜலட்சுமி அடிஅண்ணாமலை

சப்தஒலி பிரகாரம்
திருவையாறு

“தோளா முத்தச் சுடரே போற்றி” என்று துளைகள் இல்லாத முத்திற்கு சமமாக இறைவனைப் போற்றுகிறார் மாணிக்கவாசகப் பெருமான். ஆனால் துளைகள் உள்ள ருத்ராட்ச மணி ஒன்றையே தன் குருநாதரான ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈசனுடைய பிரசாதமாகப் பெற்றவர் நம் சற்குரு அவர்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது ? துளை இருக்கிறதா இல்லையா என்பதை விட அனைத்தையும் சித்தர்களைப் போல் இறைவனாக மதிக்கத் தக்கவர்களே எதையும் சாதிக்க முடியும் என்பதே உண்மை. அதை நிறைவேற்றுவதே விளம்பி வருட தீப தரிசனமும் திருஅண்ணாமலை கிரிவலமும் ஆகும். இந்த உணர்வைப் பெற உதவுவதே அடிஅண்ணாமலையில் அருள்புரியும் ஸ்ரீகஜலட்சுமி தேவி ஆவாள். பொதுவாக தோளா முத்தச் சுடராக அருளும் ஸ்ரீகஜலட்சுமி தேவியானவள் இங்கு அனைத்தும் அரனே என்ற பாங்கில் துளைகளுடன் அருள்கின்றாள். ஐந்து இதழ்கள் உடைய வில்வ தளங்களால் தாமே தொடுத்த மாலைகளை இத்தேவிக்கு சார்த்தி ராஜ்மா பருப்பு சுண்டல் தானத்தை தேவிக்கு படைத்து தானமளித்தலால் சுகமான வாழ்வை பக்தர்கள் பெறுவார்கள். அறிந்தோ அறியாமலோ அடிஅண்ணாமலை திருத்தலத்தை ஐந்து முறையும் தலவிருட்சமான மகாவில்வத்தை ஒன்பது முறையும் வலம் வந்து வணங்கிய பின்னர் ஸ்ரீகஜலட்சுமி தேவியை இன்றும் பக்தர்கள் தரிசனம் செய்வது வியக்க வைக்கும் அற்புதமாகும். மகாவில்வம் என்பது லட்சுமி தேவி உறையும் நூபுர கோபுரம்தானே. இத்தகைய தரிசனத்திற்குப் பின்னர் சலங்கைகள் உடைய வெள்ளிக் கொலுசுகளை குழந்தைகளுக்கும் சுமங்கலிகளுக்கும் தானம் அளித்தல் சிறப்பாகும். கொஞ்சும் சலங்கையின் மகிமையோ .... ? உண்ணாமுலையம்மன் திருஅண்ணாமலையானுக்கு அரோஹரா ! இதை அறிந்தவர்களே, முழுமையை உணர்ந்தவர்கள் !!

மூலிகைத் தென்றல் பொலியும் சிறுமலை

நவ வியாகரண பண்டிதராகத் துலங்கும் ஸ்ரீஆஞ்சநேய மகாபிரபு கிரிவலம் வரும் பேறு பெற்ற நன்னாளும் ஒரு யுகத்தில் இத்தகைய நவமி திதி தினமே. நவமி திதி என்பது ஒன்பதாம் திதியாக அமைவதால் நவமி திதியில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து தசமி திதியில் திருஅண்ணாமலை தீப தரிசனம் பெற்றார். அத்தகைய தீப தரிசனத்யே இங்கு நீங்கள் பெறுகிறீர்கள். இத்தரிசன பலனாய் தன்னுடைய புஜ பராகிரமும் கால் பாதங்கள் பலமும் பெருகின. அவ்வாறு பெருகிய புஜ, பாத பராகிரமத்தால்தான் எவரும் கற்பனை செய்து பார்க்க முடியாத சஞ்சீவி மலையை கைலாயத்திலிருந்து பெயர்த்தெடுத்து வந்து ஸ்ரீராமபிரான் படை வீரர்களான வானரங்களுக்கு சஞ்சீவி சக்தியை நல்கினார். ஏதோ ஒரு சில வானர சேனைக்காக ஆஞ்சநேய பகவான் புரிந்த அருள்சேவை இது என்றல்லாமல் இன்றும் சஞ்சீவி மலையிலிருந்து சிதறிய சஞ்சீவி மூலிகைகள் மக்களுக்கு குறைவில்லா ஆனந்தத்தை அளித்துக் கொண்டுதான் இருக்கின்றன. உதாரணமாக தவசிமடை அருகிலுள்ள சஞ்சீவி மலையிலிருந்து அற்புதத் தென்றல் இன்றும் வீசிக் கொண்டுதான் உள்ளது. 1994ம் ஆண்டு அடிஅண்ணாமலை திருத்தலத்தில் அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றியபோது சிறுமலையிலிருந்து தருவித்த வாழைப்பழங்களால் பஞ்சாமிர்தம் தயார் செய்து சுவாமிக்கு அபிஷேகம் நிறைவேறியது என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியம். அன்றைய நாளும் சனிக்கிழமையே. இவ்வாறு ஐந்தையும் ஒன்பதையும் இணைக்கும் இரகசியம் அறிந்தவரே சற்குரு. அவ்வாறு சிறுமலை வாழைப்பழத்தால் பஞ்சாமிர்தம் தயார் செய்த கரங்களால்தான் நமது ஆஸ்ரமத்தில் உள்ள அன்னதான பாத்திரங்களில் துலங்கும் பெயர்கள் பொறிக்கப்பட்டன. அந்த திருப்பணியை மேற்கொண்டிருந்த அடியார் அருணகிரியை நோக்கி உயரே அமர்ந்திருக்க அவர் பாதங்கள் அருகே அமர்ந்து ஐந்தையும் ஒன்பதையும் இணைக்கும் அரும்பணியாக, பணிவின் பாதாளத்தைத் தொட்டுக் காட்டியவரே நம் சற்குரு. அன்னதானத்திற்கான பாத்திரங்களைத் தயார் செய்யவே இத்தகைய யோகக் கூறுகள் விளங்கின என்றால் அன்னதானத்தின் மகிமையைப் பற்றி விளக்கவும் வேண்டுமோ. தங்கள் குழந்தைகள் சிறப்பாக ஆண் குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் திகழ விரும்பும் பெற்றோர்கள் நவமி திதி, ஹஸ்த நட்சத்திரம், சனிக் கிழமைகள் அல்லது சிறப்பாக இவை கூடும் நாட்களில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து சர்க்கரை கலந்த வெண்ணெய்யை குழந்தைகளுக்கு தானமாய் அளித்தல் நலம். கை கால்களில் குறையுள்ள குழந்தைகள் இத்தகைய தானத்தால் பயன் பெறுவார்கள். தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாய் திகழ்ந்து சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாய் விளங்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் நவமி திதிகளில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து வணங்குதல் நலம். உடல் மன ஒருமைப்பாட்டிற்கு வழி வகுப்பதே இத்தகைய கிரிவலம். வயதானவர்கள் தாங்கள் விரும்பும் வண்ணம் செயல்பட உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் விளையாட்டு அரங்கில் புகழ் பெறவும் இத்தகைய கிரிவலம் உறுதுணையாக அமையும். நவமி திதியில் கிரிவலம் இயற்றி தசமி திதியில் தான தர்மங்களை நிறைவேற்றுவதால் எங்கும் வெற்றி, எதிலும் வெற்றியே.

ஸ்ரீவிளம்பாவிளம்பி துவார பாலக மூர்த்தி
அடிஅண்ணாமலை

ஸ்ரீஆட்கொண்ட நாயகர்
திருவையாறு

பொதுவாக துவார பாலக மூர்த்திகள் திருத்தலத்தின் வாயிற் காப்போர்களாகத் துலங்குவதால் இவர்கள் திருத்தலத்தின் வாயிலில் காட்சி தருவார்கள். ஆனால், அடிஅண்ணாமலை திருத்தலத்தில் துவார பாலக மூர்த்திகள் திருக்கோயிலின் பிற்பகுதியில் காட்சி அளிக்கின்றனர். எனவே துவாரம் என்பதற்கு வாயில் என்ற பொருள் இடத்திற்கு தக்கவாறு மாறுபடும் என்பது நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். அடிஅண்ணாமலை திருத்தலத்தில் நிலைகொண்ட துவார பாலகர்கள் சித்தர்களால் ஸ்ரீவிளம்பாவிளம்பி துவார பாலகர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். விளம்பாவிளம்பி என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் உண்டு என்றாலும் ஒரு சில தத்துவங்களைப் பற்றி மட்டும் இங்கு எடுத்துரைக்கின்றோம். சொல் பொருள் கடந்த பெருமை உடைய மூர்த்திகள் என்று ஒரு பொருள். இவர்கள் சாட்சாத் திருஅண்ணாமலையானுக்கு துவார பாலகர்களாய் துலங்கும் மூர்த்திகள். ஆனால் அண்ணாமலையாரின் அடியோ முடியோ பிரம்மா விஷ்ணு போன்ற தேவ மூர்த்திகளாலேயே தரிசனம் செய்ய முடியாத பெருமை உடையது என்றால் சாதாரண துவார பாலகர்களுக்கு திருஅண்ணாமலையாரின் தரிசனம் கிட்டுமா ? ஆனால் அத்தகைய அடி முடி காணா மூர்த்திக்கு வாயிற் காப்பாளராக இருக்கும் பெருமை உடைய மூர்த்திகளாய் இம்மூர்த்திகள் துலங்குவதே இவர்களின் பெருமையாகும். அதனால்தான் இறைவனின் தலையைக் கண்டதாக பொய் கூறிய பிரம்ம மூர்த்தி தான் நவின்ற பொய்யுரைக்கு பிராயசித்தம் பெறும் பொருட்டு இத்தலத்தில் தவம் இயற்றினார். இவ்வாறு வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொய் உரைத்து தங்களுக்கும் மற்றவர்களுக்கும் வேதனையைத் தேடிக் கொண்டவர்கள் இந்த துவார பாலக மூர்த்திகளை பிரார்த்தனை செய்து நிலக்கடலை போன்று கடித்து விழுங்கும் பருப்பு வகைகளை தானம் செய்தலால் தங்கள் பொய்யுரைக்கு ஓரளவு பிராயசித்தம் பெற முடியும். ஆனால் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை விளம்பி வருடத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய பிராய சித்தம் இது என்பதை நினைவில் கொள்ளவும். தற்காலத்தில் பல பெண்களும் ஆண்களும் திருமணத்திற்கு முன்னரே மற்ற ஆண், பெண்களுடன் தொடர்பு கொண்டு அதனால் தங்கள் இல்லற வாழ்வில் பல வேதனைகளுடன் வாழ்கின்றனர். திருமணத்திற்குப் பின் சத்சங்கம், நல்லவர்களின் தொடர்பு, திருத்தலங்களின் வழிபாட்டால் மனம் திருந்தி தங்கள் செய்கைக்கு மன்னிப்பு கோருகின்றனர். ஆனால், இவர்கள் தங்களுடைய கடந்த கால தவறுகளை பிறரிடம் சொல்ல முடியாத நிலையில் இந்த விளம்பாவிளம்பி துவார பாலகர்களிடம் தங்கள் நிலையை எடுத்துக் கூறி தங்கள் தவறுகளுக்கு பிராயசித்தம் கோரினால் நிச்சயமாக இந்த துவாரபாலகர்கள் அத்தகையோர் மீண்டும் தவறு செய்யும் நிலைக்கு ஆட்படாத மனோ திடத்தையும் சாதகமான சூழ்நிலைகளையும் உருவாக்கித் தருவார்கள். நாம் நினைப்பது போல் சுமார் 1500 அடி உயரத்தையும் சில நூறு அடிகள் பூமிக்குக் கீழ் விரவி நிற்பதும் திருஅண்ணாமலை நிச்சயம் கிடையாது. தேவர்கள், கந்தர்வர்கள், யோகிகள் என்ற உயர்ந்த நிலையையும் பேய், பிசாசு, வேதாளம் போன்ற தாழ்ந்த நிலையையும் தாண்டி, விஞ்சி நிற்பதே, நிற்பவரே திருஅண்ணாமலையார் என்ற தத்துவத்தை கண் கூடாகக் கண்டு உணர்ந்த மாணிக்கவாசகப் பெருமான்தான், “பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்,” என்று இறைவனின் பாதக் கமலங்களை புகழ்ந்து பாடுகின்றார். அவர் இந்த ஞானத்தை பெற்ற இடமே அடிஅண்ணாமலையாகும். நொடிக்கு நொடி மாறும் திருஅண்ணாமலை தரிசனத்தைப் போல இந்த விளம்பாவிளம்பி துவார பாலகர்களின் அருட்பாங்கும் விளம்பி வருடம் மட்டுமே கிடைக்கும் பரிகாரம் என்பதை நினைவில் கொள்ளவும். சிலர் காலையில் எழுந்தவுடன் லைட்டை ஆப் பண்ணு, பேனை நிறுத்து என்பதாகவும், வெளியே போகிறவர்களிடம் எங்கே போகிறாய் என்று கேட்பதும், எங்கேயாவது வைத்துத் தொலை என்று எரிச்சலுடன் கூறுதல் போன்றவையும் விளம்பா விளம்பி அதாவது சொல்லக் கூடாத வார்த்தைகளாகும். இத்தகைய பழக்கம் உள்ளவர்கள் இந்த துவாரபாலக மூர்த்திகளை வணங்கி நாய்களுக்கு பொறை, கடலை மிட்டாய் போன்றவற்றை கிரிவலத்தில் தானமாக அளிப்பதும் வீட்டில் திருத்தலங்களில் அடிக்கடி சாம்பிராணி, குங்கிலியப் புகை இட்டு வருதலாலும் நல்ல வார்த்தைகளையே பேசும் பழக்கத்திற்கு ஆளவர்.

ஸ்ரீகாரைக்கால் அம்மையார்
அடிஅண்ணாமலை

திருமணத்திற்குப் பொருத்தங்கள் பார்க்கும்போது பெண்கள் ஜாதகத்திற்கு ஏற்ற ஆண்களின் ஜாதகத்தை தேர்ந்தெடுப்பதே முறை. மூல நட்சத்திர தோஷங்களை போன்றவை எல்லாம் பெண்கள் ஜாதகத்திற்கே உரித்தானவை. அதனால்தான் பெண்கள் தங்களுக்கு ஏற்ற மணாளனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வர விழாக்கள் நடைபெற்றன. தற்போதோ ஆண்கள் ஜாதகத்தில் தோஷங்கள் இருப்பதாகக் கூறி பல திருமணங்களைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்டவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது பெண்களின் ஒவ்வொரு ராசியையும் ஒன்பது பங்காக பிரிக்கும் நவாம்ச முறைப்படி பிரித்து இவ்வாறு 12 ராசிகளில் கிட்டும் 108 பரல்களை ஆண்கள் ஜாதகத்தோடு பண்டைய காலத்தில் பொருத்திப் பார்ப்பார்கள். இவ்வாறு 108 நவாம்ச பரல்களும் ராமபிரானின் ஜாதகத்தோடு பொருந்தி இருந்ததே சீதா தேவியின் ஜாதகமாகும். அதனால்தான் திருமணப் பொருத்தங்களில் நவாம்சப் பொருத்தம் முக்கய பங்கு வகிக்கிறது. முழுமையான ஆண் மகனாகத் திகழ்ந்தவரே ராம பிரானின் அவதாரத் தோன்றலான கிருஷ்ண பகவான். ஆனால் இத்தகைய சாமுத்ரிகா லட்சணப் பொருத்தங்கள் சாதாரண மனிதர்களுக்கு அமையாது, சாதாரண பெண்களின் ஜாதகம் எத்தனையோ தோஷங்களுடன் விளங்குவதே இயற்கை என்று உணர்ந்த நம் முன்னோனர்கள் திருமணத்திற்கு முன் ராதா கல்யாணம், சீதா கல்யாணம் என்று திருமணங்களை நிகழ்த்தி பெண்களின் சாமுத்ரிகா பொருத்தங்களுக்கு பிராயசித்தம் தேடினர். காதல் திருமணங்களும் எந்நாளும் அங்கீகரிக்கப்பட்டவையே என்பதை உணர்த்துவதாக வள்ளித் திருமணமும் நிகழ்த்துவதுண்டு. ஆனால் இத்தகைய திருமணங்கள் பெரும்பாலும் மறைந்து விட்டதால் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து அடிஅண்ணாமலையில் ஸ்ரீகணபதி அருகே அருளும் காரைக்கால் அம்மையாரைத் தரிசனம் செய்து தங்கள் திருமண வாழ்வை மேற்கொள்தலால் சாமுத்ரிகா லட்சணங்கள் அமையப் பெறாத பெண்களும் நல்வாழ்வைப் பெறுவார்கள். போர்த்திய ஆடையுடன் அமர்ந்த கோலத்தில் அருளும் காரைக்கால் அம்மையார் நின்ற கோலத்தில் ஆடையின்றி இத்திருத்தலத்தில் திகழ்வதற்கும் ஆயிரம் காரணங்கள் உண்டு. சுருக்கமாகக் கூறுவதானால் சாமுத்ரிகா லட்சணங்கள் அமையப் பெறாத பெண்கள் தங்கள் கணவனால் அங்கீகரிக்கப்பட்டு குடும்ப ஒற்றுமையைத் தோற்றுவிப்பதே ஸ்ரீகாரைக்கால் அம்மையாரின் தரிசனமாகும். திருமணத்திற்குப் பின் தங்கள் மனைவி குட்டையாக இருக்கிறாள், நெட்டையாக வளர்ந்து விட்டாள், உடல் அங்கங்கள் சரியான முறையில் அமையவில்லை என்று வருத்தப்படும் ஆண்களும் அழகு என்ற மாயையிலிருந்து விடுபட்டு இல்லறம் நல்லறமாக அமைய இத்தரிசனம் உதவி செய்யும். “ஓம் க்லீம் ஐங்கரன் அவணியாய் போற்றி”, என்ற ஸ்ரீஜேஷ்டாதேவி துதியை ஓதியவாறு இத்தலத்தை வலம் வருதலால் கணவன் மனைவி ஒற்றுமை மிகும்.

நவகரத்தினளின் மங்கள தீபம்

ஒவ்வொரு வருட தீபத்திற்கும் ஒரு சிறப்பு இருப்பது போல் இவ்வருட விளம்பி தீப தரிசன சிறப்பே இங்கு நீங்கள் காணும் நவகரத்தினள் அளிக்கும் நவதீப தரிசனமாகும். உயிர்கள் அனைத்திற்கும் மங்கள சக்திகளை அளிப்பதற்கென்றே தோன்றியது நம் குருமங்கள கந்தவர்வா அவர்களின் அவதாரம். இவ்வாறு ரோகிணி நட்சத்திர நேரத்தில் ஏற்றப்பட்ட மங்கள தீபமானது நவகரத்தினளான ஸ்ரீஆயுர்தேவி லோக வாசிகளால் உத்திரம் நட்சத்திர தினத்தன்று தரிசனம் செய்யப்பட்ட காட்சியையே நீங்கள் இங்கு தரிசனம் செய்கிறீர்கள். குருமங்கள கந்தவர்வ சித்தர்களின் அடிமை என்ற ஒன்பதாவது தளத்தில் அல்லது தலத்தில் பிரகாசிப்பவரே நம் சற்குரு என்பது நீங்கள் அறிந்ததே. சற்குரு அவர்களின் ஜாதகத்தில் ராசி, நவாம்சம், துவாதசாம்சம் என்ற ஒவ்வொரு ஜாதக அம்சத்திலும் சனி பகவான் லக்னத்தில் தோன்றி சிறப்பித்தது போல் இந்த விளம்பி வருட தீபமும் சனிக்கிழமை ஒன்பதாவது நாள் மங்கள சக்திகள் பெருகும் உத்திர நட்சத்திரத்துடன் திகழ்வது சிறப்பாகும். சிவசக்தி ஐக்ய தரிசனம் தீர்க தரிசனமாகப் பொலிவதால் மங்கள சக்திகள் தீர்க்கம் பெற்று தரிசனம் செய்பவர்களுக்கு நிரந்தர மங்கள சக்திகளை அளிப்பதே இத்தரிசனத்தின் தோராயமான பலனாகும். இதனால் கணவன் மனைவி இடையே ஏற்படும் எத்தகைய மனவேறுபாடுகளும் மறைந்து சுமுகமான உறவு ஏற்படும். இத்தரிசனத்தில் சக்தி பாகம் என்ற உமை பாகம் மறைந்து தோன்றுவதால் கணவன் மனைவி இருவரும் ஒருமித்த கருத்து உடையவர்களாய் வாழ இத்தரிசனம் பெரிதும் உதவி செய்யும். இரவுப் பணிகள், வியாதி, பூச்சித் தொல்லைகள் போன்ற காரணங்களால் தூக்கமின்றி தவிப்பவர்கள் இத்தகைய தரிசனத்தால் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான ஓய்வைப் பெறுவார்கள். பல வருடங்களாய் ஜாதகம் பார்த்து சரியான வரன் அமையாதவர்கள் இத்தரிசனத்தால் பலன் அடைவார்கள். ஒன்பது இழைகள் அமைந்த பருத்தி நூலில் கோர்க்கப்பட்ட மாங்கல்யம் கொண்டுதான் மாங்கல்ய தாரணம் என்னும் தாலி கட்டும் நிகழ்ச்சியானது நிறைவேற்றப்பட வேண்டும் என்பது விதியாக இருந்தாலும் பலரும் இந்த விதியை அறிந்து கொள்ளமலோ அல்லது அறிந்தவர்கள் இதன் மகிமையை உணராமலும் இருக்கலாம். அத்தகையோர் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து சிவசக்தி ஐக்ய தரிசனத்தில் ஒன்பது இழைகள் கொண்ட மாங்கல்ய சரட்டில் மாங்கல்ய தாரணம் நிறைவேற்றிக் கொள்வதும், இத்தகைய மாங்கல்யங்களைத் தானம் அளிப்பதும் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். நீண்ட நாள் திருமணம் நிகழாமல் துன்பம் அடைபவர்களும் உரியவர்களால் இத்தகைய தானங்கள் அளித்து பலன் பெறலாம். இவ்வாறு ஒன்பது இழைகள் கூறும் இரகசியத்தை எமது வெளியீடான, “மாங்கல்ய மகிமை,” என்னும் நூலில் காணலாம்.

அடிஅண்ணாமலை திருத்தலம்

ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வரி மூரத்தி
திருவையாறு

சற்குரு வெங்கடராமன், ராமலிங்க வள்ளலார் போன்ற மகான்கள் தம்முடைய ஆத்ம ஜோதியையே பூஜிப்பதுண்டு. சாதாரண மனிதர்களும் குண்டலினி யோகம் பயின்று குண்டலினி யோக சக்தியானது ஆக்ஞா சக்கரத்தை அடையும்போது தங்கள் ஆத்மாவின் தரிசனம் கிட்டும் என்பது உண்மையே. ஆனால் கோடியில் ஒருவரே இவ்வாறு குண்டலினி சக்தியை மேலே எழுப்பி தங்கள் ஆத்மாவை தரிசனம் செய்யும் சக்தியைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். கருணைக் கடலான இறைவனோ அனைவரும் என்றாவது ஒரு நாள் தன்னுடைய ஆத்மாவை தரிசனம் செய்யும் சக்தியைப் பெறுவார்கள் என்ற எண்ணத்தில்தான் எல்லா மனிதர்களையும் ஆறு யோக சக்கரத்துடன் படைத்துள்ளான். அது மட்டுமல்லாமல் அடிஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் துவாரபாலகர்களின் பணியும் இதுவே. பொதுவாக துவார பாலகர்கள் என்போர் இறை தரிசனம் என்னும் ஆத்ம தரிசனம் ஆகி விட்டதா என்று கேட்கும் பாணியில்தான் அமைந்திருப்பார்கள். திருவானைக்கோவில் திருத்தலத்தில் சுவாமி ஸ்ரீஜம்புகேஸ்வரர் முன் வலது பக்கம் உள்ள துவார பாலகர் சுவாமி தரிசனத்திற்குப் போகிறீர்களா என்று கேட்பது போலவும் இடது பக்கம் எழுந்தருளியுள்ள துவார பாலக மூர்த்தி சுவாமியைத் தரிசித்து விட்டீர்களா என்று கேட்பது போலவும் தெளிவான தோற்றத்துடன் விளங்குகிறார்கள். எனவே மனிதர்கள் இத்தகைய ஆத்ம தரிசனத்தை ஆரம்பத்தில் பெறா விட்டாலும் என்றாவது ஒரு நாள் அவர்கள் ஆத்ம தரிசனம் என்ற இறை தரிசனத்தைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் திகழ்பவர்களே திருத்தலங்களில் விளங்கும் துவார பாலகர்கள். திருஅண்ணாமலையில் இறைவன் அழற் பிழம்பாய் தோற்றம் கொண்டிருப்பதால் சித்தர்கள் வெறுமனே அண்ணாமலை என்று அழைக்காது அகண்ட ஜோதி திருஅண்ணாமலை என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்துவது இதற்காகவேதான். அவ்வாறு இறை அடியார்களுக்கு திருஅண்ணாமலையை அழற்பிழம்பு ஜோதியாக தரிசனம் செய்ய வேண்டும் என்று ஞாபகப்படுத்துவதற்காக எழுந்தருளி உள்ள துவார பாலக மூர்த்திகளே அடிஅண்ணாமலை மூர்த்திகள் ஆவர். வருடம் முழுவதும் தினமும் திருஅண்ணாமலை ஜோதி வடிவில் பிரகாசித்தாலும் அனைவரும் இந்த அழற்பிழம்பு ஜோதி தரிசனத்தை வருடம் ஒரு முறையாவது பெறும் முகமாகத்தான் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திர தினத்தில் மனிதப் பிரயத்தனமாக திருஅண்ணாமலை ஜோதி ஏற்றப்படுகிறது என்பதே உண்மை. தங்களுடைய ஆத்ம வடிவான ஜோதியை தரிசனம் செய்தவர்களே இறைவடிவாய்ப் பிரகாசிக்கும் அகண்ட ஜோதி திருஅண்ணாமலையை தரிசனம் செய்ய இயலும்.

ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி உத்தமபாளையம்

ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள்
திருவையாறு

விளம்பி என்றால் சொல்லுதல், விளக்கிக் கூறுதல் என்று பொருள். எதை விளக்குதல் ? ஒரு உத்தம குழந்தையைப் பார்த்து, “ஆஹா இவ்வளவு நல்ல குழந்தையாக இருக்கிறதே. யார் பெற்ற பிள்ளையோ இது ?” என்று வியந்து பாராட்டும் அளவிற்கு மற்றவர்கள் புகழ்ச் சொற்களைக் கூறும் வருடமே விளம்பி வருடம். அதை நடைமுறைப்படுத்தும் தலங்களே உத்தமபாளையம் போன்ற திருத்தலங்களும் திருஅண்ணாமலை கிரிவலமும். உத்தம பாளையும் என்றால் உத்தமர்கள் ஒன்றல்ல இரண்டல்ல எண்ணிக்கை இல்லாது திகழும் தலம் என்பதே இதன் பொருள். இவ்வாறு உத்தம குழந்தைச் செல்வத்தை அருளும் தலமே உத்தமபாளையம். இத்தகைய சிறப்புகளுடன் இத்தலம் பொலிவதற்கு காரணம் இங்குள்ள சிவத்தலத்தில் அருளும் முருகன் அபூர்வமாக ஸ்ரீஞானாம்பிகை ஸ்ரீகாளத்தீஸ்வர மூர்த்திகளுக்கு இடையே சமத்தாக எழுந்தருளி இருப்பதாகும். இத்தல மூர்த்திகளை வணங்கி வழிபடுவோர்க்கும் திருஅண்ணாமலையில் கிரிவலம் இயற்றி ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி கோயில், ஸ்ரீசோமாஸ்கந்த மூர்த்தி எழுந்தருளி இருக்கும் திருஅண்ணாமலை எதிரே பொலியும் உண்ணாமுலை அம்மன் மண்டபம், சிவசக்தி ஐக்ய தரிசனம் இவற்றை குறிப்பாக வழிபடுவோர்க்கும் உத்தமக் குழந்தைகள் பிறக்க இறைவன் அருள்புரிவான். திருஅண்ணாமலையில் மேற்கூறிய தரிசனப் பகுதிகளில் குறைந்தது 12 அடி தூரமாவது அடிப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் இயற்றி தம்பதிகள் வழிபடுதல் சிறப்பு. உத்தமபாளையத்தில் வழிபடும் பக்தர்கள் சிறுமலை வாழைப்பழத்தால் பஞ்சாமிர்தம் தயார் செய்து சுவாமிக்கு அபிஷேகம் இயற்றி வழிபடுதலாலும் உத்தமக் குழந்தைகளைப் பெறலாம். அடிஅண்ணாமலை திருத்தலத்திலும் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி அம்பிகைக்கும் ஈசனுக்கும் இடையே எழுந்தருளி உத்தம குழந்தைகளைப் பெற அருள்வழி காட்டுகிறார். ஒரு முறை சற்குரு வெங்கடராமன் அவர்களிடம், “ஏன் வாத்யாரே, அயல்நாடுகளில் வசிப்பவர்கள் தாங்கள் திருமணம் புரிந்து கொள்ளும்போது ஜாதகப் பொருத்தங்கள் பார்ப்பது கிடையாதே,” என்று கூறியபோது ஸ்ரீவாத்யார் சிரித்துக் கொண்டே மனிதர்களுக்குத்தான் திருமணம் என்றால் ஜாதகப் பொருத்தம் எல்லாம் பார்க்க வேண்டும், .... களுக்கு அவை தேவை இல்லை,” என்றார். அது போல மனிதர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் உத்தம குழந்தைகள் ஆகிவிடாது. நாயன்மார்களைப் பற்றிக் கூறும்போது சற்குரு அவர்கள், “நாயன்மார்கள் என்பவர்கள் தங்கள் மனைவி, குழந்தைகளை உயிரினும் மேலாக மதித்து அன்பு செலுத்தியவர்களே, ஆனால் இவர்களை விடவும் அவர்களுக்கு இறைவன் மேல் அலாதி அன்பு இருந்தது”, என்றார். அது போல உத்தமபாளைய இறைவனை வேண்டிப் பிறக்கும் குழந்தைகளுக்கோ, சிவசக்தி ஐக்ய தரிசனத்தில் தங்கி பிரார்த்தனை செய்து பிறந்த குழந்தைகளுக்கோ ஈடு இணை இல்லைதான். இதையே ஸ்ரீகாளத்தீஸ்வரர் அருளால் பிறந்த கண்ணப்ப நாயனார் வரலாறும், திருஅண்ணாமலையார் அருளால் பிறந்த அவதூது தட்சிணாமூர்த்திகளின் சரிதையும் நமக்கு சுட்டிக் காட்டும் பாடமாகும். தேவாரச் சான்றோர்களில் திருஞானசம்பந்தராதி அடியார்களை விட உயர்ந்த நிலையில் பிரகாசிப்பவரே மாணிக்கவாசகர் ஆவார். ஆனால் அவரோ, “கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் ...”, என்று கண்ணப்ப நாயனாரின் பக்தி நிலையைப் புகழ்ந்து கூறுகின்றார் என்றால் ஸ்ரீகாளத்தீசன் அருளையோ திருஅண்ணாமலையாரின் அனுகிரகத்தையோ அளவிட்டுக் கூற முடியுமா ?

இறைவன் ஸ்ரீகாளத்தீஸ்வரர்
உத்தமபாளையம்

இறைவி ஸ்ரீஞானாம்பிகை
உத்தமபாளையம்

இவ்வருடம் தரிசனம் செய்ய வேண்டிய மூர்த்தியே ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீகாளத்தீஸ்வரர் ஆவார். திருஅண்ணாமலையில் நான்காவது நட்சத்திரமான ரோகிணியில் ஏற்றப்படும் தீபதரிசனத்திற்குப் பின் தரிசனம் செய்ய வேண்டிய மூர்த்தியே நான்கிற்கு குசா சக்தியாக அமையும் உத்தமபாளையம் திருத்தலமாகும் என்பது சித்தர்கள் கூறும் எளிய விளக்கம். காளத்தீ என்ற நான்கு எழுத்தை பிரித்தால் கால ஹத்தி என்றும் பிரியும். அதாவது காலம் கடந்து நிற்கும் இறை மூர்த்தியே காளஹஸ்தீஸ்வர மூர்த்தியாவார். அனைத்தும் காலம் என்ற பிரவாகத்தில் மறைந்தாலும் இறைவன் ஒருவரே என்றும் மாறாமல் இருக்கும் சக்தி என்ற ஞானத்தை அளிப்பதும் ஸ்ரீஞானாம்பிகை அளிக்கும் அருள் பிரசாதத்தில் ஒன்றாகும். குரு பக்தியை வளர்க்கும் உத்தம தலத்தில் ஒன்றாக விளங்குவதால் சர்க்கரை பொங்கல் தானம் இத்தலத்தில் மிகவும் விசேஷமானதாகும். சூரிய உதய நேரத்தில் வாயில் துணியைக் கட்டிக் கொண்டு மூச்சுக் காற்று பிரசாதத்தில் படாமல் தயாரித்து அதை அடியார்களுக்கு இத்தலத்தில் அளித்தலால் தகாத வார்த்தைகளைப் பேசி குடும்பத்தில், அலுவலகத்தில், சமுதாயத்தில் உண்டாக்கிய பகை உணர்வுகள் மறையும். உத்தமபாளையம் என்பது உத்தமர்களால் உருவான பெரும் குடியிருப்பு என்ற பொருள் அல்லவா ? அதை கண் கூடாக அனுபவிக்க அருள்புரிவதே இத்தகைய தான தர்மங்களாகும். வருடம் முழுவதும் சேர்த்த உணவு, உடை, இருப்பிடத்தில் சேர்ந்த கர்மவினைகளை போகிப் பண்டிகை அன்று தோன்றும் தீ பொசுக்குவது போல பல பிறவிகளில் சேர்த்த கர்மவினைகளை நொடிப் பொழுதில் நீக்குவதே காளத்தீ ஈசனின் தரிசன அனுகிரகமாகும். பலரும் தங்கள் இல்லங்களில் பாத்திரம், பழைய உடைகளை எரிக்கும் பழக்கத்தை விட்டு விட்டாலும் உத்தமபாளையம் திருத்தலத்தில் போகிப் பண்டிகையை உரிய முறையில் நிறைவேற்றுவதால் அற்புத பலன்களைப் பெறலாம். தீப்புண்களால் ஆறா வடு உள்ளவர்கள் தேன் கலந்த வெண்ணெய் தானமாக அளித்தலால் வாழ்க்கையில் நம்பிக்கையைப் பெறுவார்கள். இத்தகையோர் தக்க வழிகாட்டிகள் மூலம் தான தர்மங்கள் நிறைவேற்றுதல் நன்று.

ஸ்ரீஅதிகார நந்தி தேவர்
உத்தமபாளையம்

ஸ்ரீசாயாதேவி சமேத சூரிய பகவான்
உத்தமபாளையம்

குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் ஒப்பற்ற தலமே உத்தமபாளையும். உத்தம சந்ததியை உருவாக்குவதே உத்தம பாளையம் திருத்தலம் என்றால் கணவன் மனைவி ஒற்றுமையுடன் திகழ்ந்தால்தானே அவர்களுக்கு தோன்றும் சந்ததிகளும் உத்தமர்களாய் விளங்குவார்கள் என்பது சொல்லாமலே விளங்கும் உண்மை என்றாலும் இந்த உண்மையை நேரில் அனுபவித்தால்தானே இத்தல சிறப்பு விளங்கும். இதை “விளம்புவதும்” விளம்பி வருடத்தில் உத்தம தம்பதிகளான அதிகார நந்தி மூர்த்திகள், சூரிய பகவான் சாயா தேவி தம்பதிகளின் தரிசன சிறப்பாகும். அதிகார நந்தி மூர்த்தியானவர் தன் தேவி நந்தி ராணியுடன் விளங்க வேண்டியது சிறப்பு என்றாலும் பலரும் தற்காலத்தில் சூரிய பகவானைப் போல சாயா தேவி என்னும் நிழல் வாழ்க்கையைக் கொண்டவர்களாகத்தானே இருக்கிறார்கள். இதைச் சித்தரிப்பதே அதிகார நந்தி சூரிய பகவான் மக்களின் நல்வாழ்விற்காக எடுத்துக் கொண்ட கோலமாகும். தற்காலத்தில் பலரும் மது, மாது என்ற போகங்களில் ஈடுபட்டு, சாயா என்னும் மாயையில் உழன்று தங்கள் உண்மையான பத்தினியான ஸ்வர்ச்சலாம்பா தேவியை மறக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதே இத்தல வழிபாடு உணர்த்தும் உண்மையாகும். ஆனால் மது, பிற மாது அளிப்பவை நிரந்தர சுகம் ஆக மாட்டா என்பதை உணர்ந்து தங்கள் உண்மையான துணையை நாடும்போதே அவர்களுக்கு உத்தம சந்தான செல்வத்தை இறைவன் அளிப்பான் என்ற உண்மையை உணர்த்துவதும் உத்தமபாளையத்தில் இறை மூர்த்திகளை வழிபடும் அடியார்கள் பெறும் உத்தம பரிசாகும். சாயா தேவி என்பவள் உண்மை மனைவி அளிக்கும் சுகத்தை உணர்த்துபவளே. இவ்வாறு போதையில் உழலும் அறியாமையைக் களைந்து உண்மை நிலையை உணர்த்தும் தலமே உத்தமபாளையமாகும். இந்நிலை தொடரும்போது கணவன், மனைவி, சந்தானம், உற்றம், சுற்றம் என்ற அனைத்து உறவுகளுமே சாயை, மாயை என்று உணர்த்துபவளே ஸ்ரீஞானாம்பிகை ஆவாள். தெய்வீகத்தில் அனைத்தையும் மறந்து விட்டாலும் மேலே உள்ள இரண்டு படங்களையும் மனதில் நிறுத்தி ஆத்ம விசாரம் செய்து வந்தாலே போதும் என்ற ஞானத்தை அளிப்பளும் ஸ்ரீஞானாம்பிகை ஆவாள். தற்காலத்தில் கேமரா இல்லாத செல்போனே கிடையாது. அதை வைத்து கண்ணில் காணும் காட்சியை எல்லாம் படம் எடுக்கும் கலாசாரமும் பெருகி விட்டது. இது வெகுவாக ஆயுளைக் குறைப்பதுடன் அவர்களின் நற்சக்திகளையும் வீணடிக்கும். சற்குருவின் தாத்தாவான கேசவ சந்திரர் ஒரே ஒரு முறைதான் தன்னைப் புகைப்படம் எடுக்க அனுமத்தார். அத்தோடு அவர் மறு உலகத்திற்கு சென்று விட்டார். அந்த அளவிற்கு அவர்கள் தங்கள் அரும்பாடு பட்டு சேர்த்த புண்ணிய சக்தியை பிறருக்கு தாரை வார்த்து அளிக்கும் திருவுள்ளம் கொண்டவர்கள். தற்போது புகைப்படத்தின் அருமை தெரியாமல் அதை தவறாகப் பயன்படுத்துவதால் மாதா அமிர்தானந்தா மயி போன்ற மகான்கள் பெரும்பாலான நேரங்களில் கண் மூடி அமர்ந்த தியான நிலைக்குச் சென்று தங்கள் ஓஜஸ் ஒளியைப் பெருக்கி அதைப் புகைப்படங்கள் மூலமாய் பிறருக்கு விநியோகிக்கும் அற்புத பணியை நிறைவேற்றி வருகின்றார்கள். மகான்கள் கண்ணை மூடினால் அதற்கு ஆயிரம் உள்ளர்த்தம், அவர்கள் கண்ணைத் திறந்தாலும் அதற்கும் ஆயிரம் அர்த்தமே. ஓஜஸ் என்ற சக்தியை ஒளியாகவோ, ஒலியாகவோ மாற்றவல்லவர்களே நம் சற்குரு, அமிர்தானந்தமயி, விசிறி சுவாமிகள் போன்ற மகான்க்ள் ஆவர். இந்த மாயா விளையாட்டின் மகோன்னத நிலையை உணர்த்துவதே சாயாதேவி சூரிய பகவான் வழிபாடு.

“தில்லைவாழ் அந்தணர்தம்
அடியார்க்கும் அடியேன்”

“திருநீலகண்டத்து
குயவனார்க்கு அடியேன்”

சாதியைப் பற்றிக் குறிப்பிடும்போது உத்தமபாளையத்தில் நீங்காத சாதி வெறி வேறு எந்த திருத்தலத்திலும் போகாது என்பார் நம் சற்குரு. அந்த அளவிற்கு உத்தமர்கள் வசித்த இடமே உத்தமபாளையமாகும். சித்தர்களுக்கும் கூட சாதி வேறுபாடு உண்டு என்பதே உண்மை. அது இறைவனை அறிந்தவர்களை ஒரு சாதியாகவும், இறைவனைப் பற்றி அறியாதவர்களை மற்றோர் சாதியாகவும் கொள்வதே சித்தர்களின் சாதி பற்றிய கோட்பாடாகும். ஆனால் இந்த இரு சாதிகளுக்குள்ளும் எந்தவித வேறுபாட்டையும் அவர்கள் காண்பதில்லை. அவர்கள் இருவரும் முன்னேற பாடுபடுபவர்களே சித்த பெருமக்கள். பொதுவாக இறை தரிசனத்திற்கு முன் மண் பாண்டங்கள் செய்யும் படிப்பறிவில்லாத குயவனின் பிறவியே வாய்க்கும் என்பது சித்தர்களின் தெளிவுரை. அதைக் குறிப்பதாக சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகை அமைந்துள்ளதே அதன் சிறப்பாகும். பிருத்வி தத்துவமான மண்ணைக் குழைத்து குழைத்து உருவங்களை வடிவமைக்கும்போதுதான் இறை ஞானம் பூரணமாகின்றது என்பதே சித்தர்கள் அளிக்கும் எளிய விளக்கமாகும். இறைவனை எல்லா முறைகளிலும் வழிபட்டு உணர்ந்து கொண்ட ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்தவர்கள் அவர் ஏன் சிறுவயதில் களிமண்ணால் இறை விக்ரஹங்களைத் தயார் செய்யும் அற்புத வழிபாட்டு முறையை பின்பற்றினார் என்ற இரகசியத்தை உணர முடியும். இதிலிருந்து தோன்றியதே குழந்தைகளுக்கு களி மண்ணால் வீடு கட்டும் முறைகளைச் சொல்லித் தருவதும், இறை விக்ரஹங்களைத் தயார் செய்து வண்ணப் பூச்சுக்களை அடிப்பதும், கொலுவில் மண் விக்ரஹங்களை அமைத்து வழிபாடு இயற்றுவதும் என்பது புரியவருகின்றது அல்லவா? பெண் மோகம் மட்டுமல்ல திருநீலகண்டரைப் போல எவ்வித ஆசையும் இல்லாதவர்களையே குயவன் என்று அழைப்பதுண்டு. “அவன் சரியான குயவன்,” என்பது ஆசைகள் அற்ற மனிதனைக் குறிப்பதே. எனவே எவ்வித பொருட்பற்றையும் அற்ற மனிதனை இறையடியார்களில் முதன்மையாளராக வைத்துப் பாடுவதில் தவறு கிடையாது அல்லவா?

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam