நடப்பதெல்லாம் நாராயணன் செயல் சுவைப்பதெல்லாம் குரு பிரசாதமே !!

ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சிறுகமணி திருத்தல மகிமை

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை குருமூலமாகத் தெரிந்து கொண்டால்தான் அந்த விஷயம் பூரணம் அடையும் என்பது ஆன்றோர்கள் விதித்த விதி. இந்த விதி முறையை அனுசரித்துதான் ராமர், கிருஷ்ணர் போன்ற அவதார மூர்த்திகளே வசிஷ்டர், விஸ்வாமித்திரர், சாந்தீபணி போன்ற முனி புங்கவர்களை தங்கள் குருநாதராக ஏற்று தெய்வங்களும் குருமார்களின் உபதேச நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களே, அவர்கள் கட்டளைக்கு அடிபணிபவர்களே என்று உலகத்தவர்க்கு பணிவின் பெருமையை பறைசாற்றினர்.

இந்த குரு சிஷ்ய பாரம்பரியத்தில் சில சமயம் குருவை மிஞ்சிய சீடர்கள் தோன்றுவது போல் பல வரலாற்று நிகழ்ச்சிகளும் குறிப்பிடப்படுகின்றன என்பதும் உண்மையே. உதாரணமாக, அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் என்று முருகப் பெருமான் சிவபெருமானுக்கு பிரணவத்தின் பொருளை ஞான ஆசானாக உபதேசம் செய்ததாகவும், ராமானுஜ ஆசாரியார் தன்னுடைய குருவையும் விஞ்சிய தெய்வீக நிலைகளை அடைந்ததாகவும் பல புராண வைபவங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம்.

ஸ்ரீஅகத்தியர் திருமணக் காட்சிபெற்ற
ஸ்ரீபவஔஷதீஸ்வரர் சிவாலயம்
திருத்துறைப்பூண்டி

ஆனால், மேலோட்டமாக இத்தகைய புராண வைபவங்களை நோக்குவதை விட ஒவ்வொரு தெய்வீக லீலையிலும் மறைந்துள்ள ஆன்மீக இரகசியங்களை ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் அது மிகவும் பயனுள்ளதாகவும், ருசிகரமானதாகவும். நினைக்க நினைக்க தெவிட்டாத திவ்ய அமிர்தமாகவும் இருக்கும்.

உதாரணமாக, தந்தைக்குத் தனயன் குமரகுருபரன் உபதேசம் செய்த நிகழ்ச்சியை அகஸ்தியர் போகர் உரையாடலின் மூலம் அறிவோம்.

போகர் : அனைத்தையும் அறிந்த ஆசானே, நீண்ட நாட்களாகத் தங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டிருக்கிறேன். பரம்பொருளைப் பற்றிய கருத்தாக இருப்பதால் அதில் ஏதேனும் தவறும் நேர்ந்து விடுமோ என்று ஐயமும் மனதில் உறுத்துவதால், தங்களிடம் கேட்பதற்கே அச்சமாக இருக்கிறது. இருந்தாலும், யாரிடமும் எந்த விஷயத்தையும் மறைக்கலாம், ஆனால், உத்தம குருவின் சன்னிதானத்தில் எதையுமே மறைக்கக் கூடாது என்பதால் தங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.

அகத்தியர் : அருமைச் சீடனே, போகா, நீ இதுநாள் வரைக்கும் எவருடைய மனமும் நோகும்படியான எந்த வார்த்தையையும் பேசியது கிடையாது. அதோடு மட்டுமல்லாமல் நீ கேட்கும் எந்த கேள்வியும் உலக மக்களின் நன்மைக்காகத்தான் இருக்கும் என்பதில் அடியேனுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. நீ கேட்க வந்ததை தயங்காமல் கேள். எம்பெருமான் அருளால் அடியேன் எனக்குத் தெரிந்த பதிலைக் கூறுகிறேன்.

ஸ்ரீஅகத்திய பெருமான் இலக்கண
உபதேசம் பெற்ற இன்னம்பர் திருத்தலம்

போகர் : மிக்க நன்றி, ஐயனே. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. குருவை மிஞ்சிய சீடன் இல்லை என்று தாங்கள் அடிக்கடி கூறுவீர்கள். அப்படி இருக்க ஓங்காரத்தின் உட்பொருளை முருகப் பெருமான் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார் என்று கூறுகிறார்களே. இது எப்படி சாத்தியமாகும். பரம்பொருள் அறியாத பிரணவ விளக்கம் ஒன்று உண்டா? இதன் விளக்கத்தை தாங்கள் கருணை கூர்ந்து அளிக்க வேண்டும்.

அகத்தியர் : அருமையான கேள்வி, எனதருமைச் சீடனே. உலக மக்களுக்கும், ரிஷிகளுக்கும், முனிவர்களுக்குமே பல யுகங்களாக புரிந்து கொள்ள முடியாத ஒரு தெய்வீகப் புதிர் இது. இன்று உன்னுடைய கேள்வியால் நெடுநாள் எவராலும் விடைகாண முடியாத இந்த ரகசியம் இன்று உன் பொருட்டு வெளிப்படுத்தப்படுகிறது.

நடந்தவையே, நடப்பனவாக, நடந்து கொண்டிருக்கிறது என்பதே என்றும் அழியாத வேத வாக்கியம் அல்லவா? நீ என்றாவது ஒரு நாள் இந்தக் கேள்வியைக் கேட்பாய் என்பது அடியேனுக்குத் தெரிந்ததுதானே. இது பரம்பொருளைப் பற்றிய கேள்வியாக இருப்பதால் அந்த பரம்பொருளுடன் நெருங்கி உறவாடும், அன்பே உருவான நவநாத சித்தர்களிடம் இந்தக் கேள்வியை நான்கு யுகங்களுக்கு முன்புதான் கேட்டேன். அவர்கள் கூறிய பதிலை அப்படியே உனக்கு அளிக்கிறேன்.

ஞானப் பழமான முருகன் அன்பின் மேலீட்டால் தன் தந்தையான சிவபெருமானை அப்பா, அப்பா, அப்பா என்று மும்முறை அழைத்தான். அவ்வளவே. இதுதான் முருகன் எம்பெருமானுக்கு அளித்த பிரணவ விளக்க இரகசியம்.

சற்றே யோசித்துப் பார். வேதநாதன் ஈசனுக்குத் தெரியாத ஒரு விஷயம் எந்த லோகத்திலும், எக்காலத்திலும் இருக்க முடியுமா? பிரணவத்தின் மகிமையை உலகுக்கு உணர்த்த குகனே குருவாய் எழுந்தருளி நிகழ்த்திய திருவிளையாடலே இந்த பிரணவ உபதேச நாடகமாகும்.

தேவரும், மூவரும், யாவரும் அறியாத இந்த தேவ ரகசியம் இன்று உன்னால் உலகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து உலகங்களும் கடமைப்பட்டுள்ளன

ஆனால், இந்தப் பிரணவ நாடகத்தில் கோடிக் கணக்கான தெய்வீகப் பாடங்கள் தேவர்களுக்கும் மக்களுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன.

 அவைகளில் ஒன்றிரண்டை மட்டும் விளக்கிக் கூறுகிறேன்.

தமிழ் மொழியின் தனிச் சிறப்பு

தேவ மொழி, தமிழ் மொழி என்ற இரண்டுமே இறைவனின் இரண்டு கண்களாக இருந்தாலும் முருகப் பெருமான் அப்பா என்ற தமிழ்ச் சொல்லால்தான் தன் தந்தையை அழைத்தான். முருகன் தமிழ்க் கடவுள் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு குழந்தை அதன் தாய் மொழியில்தான் தன்னுடைய தாய், தந்தையரை அழைக்க வேண்டும் என்ற அடிப்படை பாடத்தை இதன் மூலம் தமிழ்க் கடவுள் உலகிற்கு அளித்துள்ளார். முருகனின் தூலமான அதாவது மனிதக் கண்ணால் காணக் கூடிய உடல்தான் தமிழ் மொழியாக உலகில் உருவெடுத்துள்ளது.

ஸ்ரீராமானுஜ ஆச்சாரியார்

அதனால்தான் எல்லா மகான்களும் தங்கள் தாய் மொழியிலேயே உரையாடுகின்றனர். ஞானிகளுக்கும், மகான்களுக்கும் உலகில் உள்ள எல்லா மொழிகளும் தெரிந்திருந்தாலும் தாங்கள் எந்த இடத்தில் மனிதனாகப் பிறப்பெடுத்துள்ளார்களோ அந்த மொழியில்தான் பேசுவார்கள், உரையாற்றுவார்கள்.

தாயும், தந்தையும், தாய் மொழியும், இறைவனும் ஒன்று என்று தத்துவத்தின் விளக்கமாகவே குகன் தமிழ் மொழியிலேயே இறைவனை அழைத்தான்.

மேலும் தமிழ் மொழிதான் எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழி என்பது சித்தர்களின் வாக்கு. விருப்பு வெறுப்பைக் கடந்த தேவர்களும், கந்தவர்களும், யோகிகளும், ஞானிகளும் கூட தமிழ் மொழியில் உரையாடுவதில்தான் விருப்பம் கொள்கின்றனர். மற்ற மொழியைப் பேசுபவர்கள் கூட இறைவனிடம் நெருங்கி உரையாட நினைத்தால் தமிழ் மொழிச் சொற்களைத்தான் கையாளுகின்றனர். மக்களின் துயர் துடைக்க பூவுலகில் தோன்றிய ஏசுபிரான் கெத்சமனி தோட்டத்தில் இறைவனை நோக்கி, “எங்களுடைய அப்பா!” என்றுதானே அழைத்துப் பிரார்த்தித்தார்.

அப்பா என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார். அற்புதமான, ஆச்சரியமான ரகசியங்கள் உனக்குத் தெரிய வரும். அப்பா என்பது சாதராண வார்த்தை அன்று. தமிழ் மொழி அனைத்தையும் சுருக்கி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அது அப்பா என்ற வார்த்தையாகத்தான் இருக்கும்.

உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து இம்மூன்றின் மொத்த உருதானே தமிழ் மொழி. அப்பா என்ற சொல் அ என்ற உயிர் எழுத்து, ப் என்ற மெய் எழுத்து, பா என்ற உயிர்மெய் எழுத்தின் தொகுப்பாக அமைந்த வேதக் களஞ்சியமாகும்.

ரிக் வேதமும், சாம வேதமும் அ என்ற அகார எழுத்தில்தான் ஆரம்பிக்கின்றன. ப என்ற எழுத்து முழுமையான வீரியத்தை, சக்தியை வெளிப்படுத்தும் எழுத்தாக அமைக்கப்பட்டுள்ளது. நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் யஜுர் வேதத்தின் இதயமாக விளங்குவதைப் போல ப என்ற தமிழ் அட்சரம் தமிழ் மொழியின் வல்லின ஐந்தாவது ருத்ர சக்தி அட்சரமாக விளங்குகிறது.

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தும் முன் இறைவனுக்கு நைவேத்யம் செய்ய வேண்டும் என்பதுதானே நியதி. முருகப் பெருமானும் இந்த இறை நியதிக்கேற்ப சிவபெருமானுக்கு அப்பா என்ற வார்த்தையால் மொழி நைவேத்யம் படைத்தார்.

போகர் : மொழி நைவேத்யமா? அதைச் சற்று விளக்கமாகக் கூறுங்கள், ஐயனே.

மொழி நைவேத்யம்

அகத்தியர் : சாதாரணமாக உணவு சமைத்தவுடன் அதை உண்ணும் முன் உணவை நமக்கு அளித்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் பூஜைதானே நைவேத்யம் என்பது. அதே போல தமிழ் மொழியைப் படைத்த முருகப் பெருமான் அதை உலக மக்களுக்கு அர்ப்பணிக்க வேண்டிய பொன்னான நேரம் வந்தபோது முதன் முதலில் தன்னுடைய தந்தையான சிவபிரானுக்கு நைவேத்யம் செய்ய நினைத்தார். உணவின் ஒரு பகுதியை மட்டும் இறைவனிடம் நைவேத்யமாக சமர்ப்பிப்பதுபோல தமிழ் மொழியின் கருவாக அமைந்த அப்பா என்ற அன்பு வார்த்தையால் இறைவனை அழைத்து அதன் மூலம் தமிழ் மொழியையே இறைவனுக்கு நிவேதனம் செய்தார்.

போகர் : சற்குருவே, அற்புதம், அற்புதம். தமிழ் மொழியை நைவேத்யமாக ஏற்க வேண்டும் என்பதற்காக அதை அளித்த குகனின் முன் இறைவனே இருகரம் குவித்து, குகனை வணங்கி, மண்டியிட்டுப் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்கிறான் என்றால் தமிழ் மொழியை விட உயர்ந்த ஒரு மொழியை எந்த லோகத்திலும் எக்காலத்திலும் அறிய முடியுமா? இறை மூர்த்திகளின் இந்த அற்புத லீலைகளைக் கேட்டு மெய் சிலிர்க்கிறதே, குருதேவா.

இவ்வாறு அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை இறைவனுக்கு நைவேத்யமாகப் படைத்த பின் தமிழ் மொழியிலுள்ள 12 உயிரெழுத்துக்களை முருகப் பெருமான் உலகிற்கு அளித்த திருத்தலமே சிறுகமணி திருத்தலமாகும்.

பல யுகங்களுக்கு முன் முருகப் பெருமான் தமிழ் மொழியில் உள்ள உயிரெழுத்துக்களை கீழ்க் கண்ட பிரணவ ஜீவ சக்தி சாளரம் என்னும் யந்திரம் மூலமாக அளித்தார். அந்த யந்திரமே பக்தர்களின் வழிபாட்டிற்காக சிறுகமணி திருத்தலத்தில் தெற்குப் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

 அ 

 ஆ 

 ஐ 

 இ 

 ஈ 

 ஒ 

 உ 

 ஊ 

 ஓ 

 எ 

 ஏ 

 ஔ 

முருகப் பெருமான் இறைவனுக்கு அர்ப்பணித்த அதே பலகணி தத்துவத்தைப் பயன்படுத்தி மேற்கூறிய முறையில் இறைவனை வழிபடுவதால் அற்புதமான பலன்களைப் பெறலாம்.

பிரணவ ஜீவ சாளர வழிபாடு

தமிழ் மொழியை முறையாகக் கற்றுக் கொள்ள விரும்புவோர்களும், தமிழில் ஆராய்ச்சி, ஆய்வுகள் மேற்கொள்வோரும், தமிழ்ப் பத்திரிகைத் துறையினரும், பேராசிரியர்களும், வித்வான்களும், புலவர்களும், கவிஞர்களும், நாவலாசியர்களும், தமிழ் நாட்டில் பிறந்தவர்களும், தமிழைத் தாய் மொழியைக் கொண்டுள்ள உள் நாட்டு அயல் நாட்டு வாசிகளும் முருகப் பெருமானின் மேற்கண்ட பிரணவ ஜீவ சக்தி பலகணி யந்திரத்தை அவசியம் வழிபட வேண்டும்.

குழந்தைகளுக்கு முதலில் உணவு ஊட்டும் வைபவத்தைப் போலவே அவர்களுக்கு முதலில் கல்வி ஊட்டும் வைபவமும் புனிதமானதே. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முன் இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பிரணவ நாதனை வழிபடச் செய்து அவர்களுக்கு தெய்வீகமான அட்சர அறிவு என்னும் மொழிப் பாடத்தை இத்திருத்தலத்தில் ஆரம்பித்து வைப்பது சிறப்பாகும்.

தெற்குப் பிரகாரத்தில் உள்ள முருகப் பெருமானின் முன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பலகணிச் சக்கரத்தின் எதிரே அமர்ந்து கொள்ளவும். குழந்தைகளைப் பெற்றோர்கள் தங்கள் மடியில் அமர்த்திக் கொள்ளவும். குழந்தையின் தகப்பனார் பஞ்ச கச்ச முறையிலும், தாயார் மடிசாரும் உடுத்தி இருப்பது நலம். ஒரு வாழை இலை, மரத் தாம்பாளம், பித்தளைத் தாம்பாளம் அல்லது வெள்ளித் தாம்பாளத்தில் புது நெல் மணிகளைப் பரப்பி அதன் மேல் மேற்கண்ட எந்திரத்தை வரைந்து கொண்டு குழந்தைகளின் கையைப் பிடித்துக் கொண்டு எந்திரத்தில் உள்ள 12 கட்டங்களில் அ முதல் ஔ வரையிலான 12 உயிரெழுத்துக்களையும் எழுதவும். செண்பகம் அல்லது வாசமுள்ள மலர்களால் நெல்லில் அமைந்த ஜீவ சக்கரத்தையும், பலகணி சக்கரத்தையும் அலங்கரிக்கவும். அதன் பின்னர் அருணகிரி நாதர் அருளிய கீழ்க் கண்ட அருள்ஞானத் தமிழ்த் துதியை 12 முறை ஓதவும்.

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர் செய்                           குருநாத

சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம்                        நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென                 வரவேணும்

அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது                   புரிவாயே

இவ்வாறு வழிபாட்டை நிறைவேற்றிய பின் குழந்தையின் தலையிலோ அல்லது பெற்றோர்கள் தங்கள் தலையிலோ நெல்மணிகள் நிறைந்த தாம்பாளத்தை வைத்துக் கொண்டு பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து ஸ்ரீபக்தவத்சலேஸ்வரரை வழிபடவும். இந்த நெல்மணிகளை காவிரி, கங்கை போன்ற புனித தீர்த்தங்களில் சேர்த்து விடவும்.

தமிழ் மொழி மட்டும் அல்லாது வேறு உள்நாட்டு, அயல் நாட்டு மொழியைக் கற்க விரும்புவோர்களும் மேற்கண்ட முறையில் வழிபாடுகளை மேற்கொள்வதால் அந்தந்த மொழிகளை எளிதில் கிரகித்து அதில் உன்னத நிலையை அடையலாம்.

எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் துறையில் கோரல் ஷார்ப், கோரல் ப்ளஸ் போன்ற புது மொழிகள் தோன்ற இருப்பதாக சித்தர்களின் கிரந்தங்கள் உரைக்கின்றன. இத்தகைய புது மொழிகளை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இவ்வாறு கடினமான மொழிகளையும் விரைவில் கற்றுக் கொள்ள மேற்கூறிய பிரணவ சக்கர வழிபாடு உதவி செய்யும். 

ரோகிணி, உத்திரம், திருவோணம் போன்ற நட்சத்திர தினங்களிலும் சஷ்டி, சப்தமி, தசமி போன்ற திதிகளிலும் இத்தகைய வழிபாடுகளை இயற்றுதல் நலம் பயக்கும்.

ராமானுஜரின் குரு பக்தி

குரு பக்திக்கு ஓர் இலக்கணமாகத் திகழ்ந்தவரே ராமானுஜ ஆச்சாரியார் ஆவார். அவரை உடையவர் என்றும் அன்புடன் அழைப்பதுண்டு. ராமானுஜரின் சொந்த ஊர் ஸ்ரீபெரும்புதூர் என்னும் திருத்தலமாகும். ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்த நம்பி அடிகளைத் தன்னுடைய குருவாக ஏற்றுக் கொண்டு அவரைக் காணும் ஏக்கத்துடன் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு நடந்தே வந்தார். ஸ்ரீரங்கம் எல்லையை அடைந்தவுடன் நமஸ்கார பிரதட்சணமாகவே தன்னுடைய குருநாதரின் குடிலுக்கு வந்தார். குடில் வாசலில் உள்ள அடியாரிடம் சென்று, “நான் ராமானுஜன், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வருகிறேன். குருநாதரைக் காண வேண்டும். எனக்கு அனுமதி உண்டா என்று கேட்டுச் சொல்லுங்கள்...,” என்று சொல்லி பணிவுடன் காத்திருந்தார்.

அந்த அடியாரும் நம்பி அடிகளிடம், “சுவாமி, ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ராமானுஜர் என்பவர் தங்களைக் காண வந்திருக்கிறார்,” என்று சொன்னார். நம்பி அடிகள், “ராமானுஜன் செல்லட்டும்,” என்று பதிலுரைத்தார். அடியாரும் அதை அப்படியே ராமானுஜரிடம் சொல்ல அவரும், “குருநாதரிடம் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்து விடுங்கள்...” என்று சொல்லிவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்றார். அதே போல ஸ்ரீரங்கத்தின் எல்லை வரை நமஸ்கார பிரதட்சணமாக வந்து, அதன் பின் ஸ்ரீபெரும்புதூருக்கு நடந்தே திரும்பிச் சென்றார்.

அட்டாட்சர உபதேச பலகணி
திருக்கோஷ்டியூர்

சில மாதங்கள் கழித்து மீண்டும் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு நடந்தே வந்தார். முன்பு போலவே ஸ்ரீரங்கம் எல்லை வந்தவுடன் நமஸ்கார பிரதட்சணமாக தன்னுடைய குருநாதரின் குடில் வரை சென்று அவரை தரிசிக்க விரும்பினார். ஒவ்வொரு முறையும், “நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்...,” என்று சொல்வார். நம்பி அடிகளும், “ராமானுஜன் செல்லட்டும்...”, என்று சொல்லி திருப்பி அனுப்பி விடுவார். ராமானுஜரும் மறுமொழி கூறாது, பணிவுடன் தனது நமஸ்காரத்தை தெரிவித்து விட்டு நமஸ்கார பிரதட்சணத்துடன் ஸ்ரீரங்கம் எல்லை வரை வந்து தன் ஊருக்கு நடந்து சென்றே திரும்பி விடுவார்.

இவ்வாறு பதினெட்டு முறை ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு நடந்து வந்தார் ராமானுஜர். பதினெட்டாவது முறையாக வந்தபோதுதான், “நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக, “அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்,” என்று தன்னையும் அறியாமல் கூறினார். பணிவான அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன்தான் நம்பியடிகள், “அவனை வரச் சொல்...,” என்று சொல்லி ராமானுஜர் தன்னைக் காண அனுமதி அளித்தார்.

ராமானுஜர் கண்ணீர் மல்க குருநாதரின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். “ராமானுஜன் செல்லட்டும்...” என்ற குருவார்த்தைகளில் இருந்த அர்த்தத்தின் ஆழத்தையும் அன்பையும் அப்போதுதான் ராமானுஜர் உணர்ந்தார். தான் 18 முறை ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை நடந்து, நமஸ்கார பிரதட்சிணத்துடன் குருவைத் தேடி வந்ததால் மட்டும் தான் என்ற அகம்பாவம் தன்னை விட்டு நீங்கி விட வில்லை. “ராமானுஜன் செல்லட்டும்...” என்று ஒவ்வொரு முறையும் குருநாதர் கூறிய வார்த்தைகளில் இருந்த எல்லையில்லா அன்புதான் “நான் ராமானுஜன்” என்ற அகந்தையை நீக்கியது என்பதை முழுமையாக உணர்ந்தார்.

தான் என்ற அகந்தை நீங்கினால்தான் மற்றவர்களின் சேவைக்கு ஒருவன் தன்னைத் தயார்படுத்த முடியும் அல்லவா? தன்னுடைய சீடன் அந்நிலையை அடைந்து விட்டான் என்பதை அறிந்த நம்பி அடிகள் ராமானுஜருக்கு மந்திர உபசேதம் செய்ய நினைத்தார்.

தென்திசை நோக்கும் ஸ்ரீமுருகன்
லால்குடி

சகஜ வாஸ்து சாஸ்திரம் என்று மற்றவர்களுக்காக ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திர முறைகள் இருப்பதைப்போல சகஜ மந்திரங்களும் உண்டு. இவ்வகையைச் சேர்ந்ததே நம்பி அடிகள் ராமானுஜருக்கு உபதேசம் செய்த ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரமாகும். நாராயணா என்ற நாலெழுத்து மந்திரமே மோட்சத்தை நல்க வல்லது. அப்படியானால் ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை ஏன் நம்பி அடிகள் ராமானுஜருக்கு உபதேசம் செய்தார். மற்றவர்களும் இறைவனின் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய வேண்டும் என்ற தூய எண்ணம் நம்பி அடிகளிடம் மேலோங்கி நின்றதால் அந்த எண்ணம் நிறைவேறுவதற்கு உரிய பாத்திரமான ராமானுஜரைத் தேர்ந்தெடுத்து மற்றவர்களுக்கும் மோட்சத்தை அளிக்கக் கூடிய சகஜ மந்திரத்தை உபதேசம் செய்தார். எனவே, ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் உச்சியின் மேல் நின்று மக்கள் அனைவரையும் கூவி அழைத்து அனைவருக்கும் நாராயண மந்திரத்தை தெரிவித்தது குருவின் எண்ணப்படியேதான். அது குருவின் ஆணையை மீறி நடந்த செயல் அல்ல என்பதே சித்தர்கள் தரும் விளக்கமாகும்.

எக்காலத்திலும் குருவை மிஞ்சிய சீடன் கிடையாது. நாராயணா என்னும் திருமந்திரத்தை உலகெங்கிலும் நிலவச் செய்து அனைவரும் இறைவனின் பாதக் கமலங்களைச் சேர்வதற்காக குருவும் சிஷ்யனும் சேர்ந்து நடத்திய நாடகத்தின் ஒரு அங்கமே திருக்கோஷ்டியூர் வரலாறாகும்.

இவ்வாறு சகஜ மந்திர சக்திகளை உலகிற்கு நிரவச் செய்ய விரும்பும் ஒருவர் எங்கு வழிபட வேண்டும்? சகஜ சக்திகள் நிறைந்த திருத்தலத்தில் வழிபட்டால்தானே மற்றவர்களும் சொர்க்கபுரியை அடைய வழிகாட்ட முடியும்? எனவே, குருநாதரின் உத்தரவுப்படி சிறுகமணி திருத்தலத்தில் தங்கி ஸ்ரீபக்தவத்சலேஸ்வரரை வழிபட்டார் ராமானுஜர்.

ஒவ்வொரு மாதமும் ராமானுஜரின் ஜன்ம நட்சத்திரமான மூல நட்சத்திர தினத்தன்று காவிரி நதியின் தென்கரையில் நீராடி நடந்தே வந்து சிறுகமணி திருத்தலத்தில் நமஸ்கார பிரதட்சணம் செய்து இறைவனை வழிபட்டு வந்தார். இவ்வாறு வழிபாடு செய்து கொண்டு வரும்போது ஒரு ஜமீன்தார் ராமானுஜரைப் பார்த்தார்.

ஸ்ரீசகஸ்ர லிங்கம் திருவாசி

ராமானுஜரின் கம்பீரமும் அவர் முகத்தில் பளிச்சிட்ட தெய்வீக கலையும் அவரை ஈர்க்கவே ராமானுஜரின் பாதங்களில் விழுந்து வணங்கினார். ராமானுஜர் அவருடைய கவலை தோய்ந்த முகத்தைக் கண்டு, “ஐயா, உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களைப் பார்த்தால் மிக்க வசதி படைத்தவர்போல் தோன்றுகிறதே?” என்று கேட்டார். ஜமீன்தாரும், “ஆம், சுவாமி. நான் ஒரு ஜமீன்தார். 300 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரன்தான். ஆனால், இந்த சொத்துக்களைப் பராமரிக்க எனக்குப் பின் யாரும் இல்லை. நானும் பல இடங்களில் அலைந்து திரிந்து விட்டேன். எனக்கு குழந்தை பாக்கியம் கிட்ட யாரும் வழி கூற முன் வரவில்லை,” என்று கூறி துக்கம் தொண்டையை அடைக்க தழுதழுத்த குரலில் கூறினார்.

ராமானுஜர் தன்னுடைய ஞான திருஷ்டியில் அவரைப் பார்த்தார். அவருடைய நிலைக்குக் காரணத்தை நொடியில் அறிந்து கொண்டார். வந்தவர் பொற்கொல்லர் பரம்பரையைச் சேர்ந்தவர். அவருடைய மூதாதையர்கள் மாங்கல்யம் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் திருமாங்கல்யம் செய்யும்போது ஒவ்வொரு மாங்கல்யத்திலும் கொஞ்சம் தங்கத்தைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதுவே பிற்காலத்தில் அந்த ஜமீன்தார் சந்ததியின்றி வருந்தும் நிலைக்குக் காரணம் என்பதை ராமானுஜர் அறிந்தார். தங்கத்தைத் திருடினால் அல்லது மாற்றுக் குறைத்து விற்றால் திருமண தோஷங்களும் சந்ததிக் குற்றங்களும் ஏற்படும் என்பது இறைநியதி.

பிரணவ ஜீவ சாளரம்
சிறுகமணி

தோஷங்கள் ஏற்பட்ட காரணத்தை அறிந்தால் மட்டும் போதுமா? அத்தோஷங்களை நீக்கும் வழிபாட்டு முறையை உணர்த்துவதும் குருமார்களின் கடமை அல்லவா? ராமானுஜர் ஸ்ரீபக்தவத்சலேஸ்வரரை பிரார்த்தனை செய்து இத்தகைய தங்கக் குற்றங்களுக்கான பிராயசித்தங்களை எப்படி நிறைவேற்றுவது என்பதை உணர்ந்தார். அதன்படி, அந்த ஜமீன்தாரிடம், “அப்பா, உன்னுடைய மூதாதையர்கள் செய்த சில தவறுகளால் உனக்கு இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் தவறுகளிலிருந்து நிவாரணம் பெறக் கூடிய வழிமுறையை இறைவன் உனக்கு அளித்துள்ளார். எங்கு இரண்டு குரு மூர்த்தங்கள் அருளாட்சி செலுத்துகிறார்களோ அத்திருத்தலத்தில் நீ மாங்கல்ய தானம் செய்தால் உனக்கு ஈசன் நல்வழி காட்டுவார்...”, என்று கூறி விட்டு அமைதியாக இருந்தார்.

ஜமீன்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன்னுடைய நீண்ட நாள் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்து விட்டது குறித்து அளவிலா சந்தோஷம் அடைந்தார். அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய மூதாதையர்களுக்கும் ராமானுஜ சுவாமிகள் கருணை கொண்டு நிவாரணம் அளித்ததும் அவர்களுடைய பெரிய பேறுதான் என்பதையும் அறிந்து கொண்டார்.

அடுத்து இரண்டு குரு மூர்த்திகள் எத்தலத்தில் அருளுவார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை. பொதுவாக, எல்லாத் திருத்தலங்களிலும் தட்சிணா மூர்த்தியின் திருஉருவம் மட்டும்தான் துலங்கும். அவரை குரு மூர்த்தியாகக் கொண்டால் இன்னொரு குரு மூர்த்தியை எப்படிக் கண்டு பிடிப்பது என்று மனதினுள் குழம்பிக் கொண்டிருந்தபோது ராமானுஜர் அவரைப் பார்த்து புன்னகை செய்தார்.

“ஏனப்பா கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்காக அலைகிறாய்? இத்தலத்தில் அருள்புரியும் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானும் தெற்கு திசையில் எழுந்தருளி குரு மூர்த்தியாக விளங்குவதால் உன்னுடைய திருமாங்கல்ய தான வைபவத்தை இத்தலத்திலேயே நிறைவேற்றலாம்,” என்று அருளினார். அந்த ஜமீன்தாரும் ராமானுஜர் கூறிய வண்ணம் வழிபாடுகளை இயற்றி மாங்கல்ய தானங்களை நிகழ்த்தி ஒரு அழகான ஆண் குழந்தையையும் வரப் பிரசாதமாகப் பெற்றார்.

அன்று முதல் தங்கம் சம்பந்தமான தவறுகளுக்கு ஒரு பிராய சித்த தலமாக சிறுகமணி திருத்தலம் விளங்குகிறது.

முருகப் பெருமான் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பதில் இன்னொரு தெய்வீக தாத்பர்யமும் உண்டு. பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவத்தின் போது அனைவரும் திருக்கல்யாணத்திற்காக கைலாயம் வந்து விட்டால் தென் திசை பாரம் குறைந்து விடும் என்பதற்காக எம்பெருமான் அகஸ்தியரை அனுப்பி வைத்தார் அல்லவா? அப்போது சர்வேஸ்வரனின் திருக்கல்யாணத்தைத் தரிசிக்க முடியாத அகஸ்திய பெருமானுக்காக எம்பெருமான் பின்னாளில் பல இடங்களில் திருமணக் காட்சி தந்து அருளினார்.

அதன் பின்னால் உள்ள இன்னும் ஒரு தேவ ரகசியம் யாதெனில் ஒவ்வொரு முறை அகஸ்தியர் தென் திசையிலிருந்து எம்பெருமானைக் கண்டு வணங்கும் போதெல்லாம் எம்பெருமான் வட திசையிலிருந்து தென் திசையை நோக்கி அருளும் தரிசனமாக அமைவதால் அது நிரந்தர தட்சிணா மூர்த்தி தரிசனமாக அமையும் அல்லவா? இது அகஸ்தியர் பல யுகங்கள் தவம் செய்து பெற்ற பேறாகும். அகிலாண்ட கோடி நாயகனின் 64 மூர்த்தங்களில் தட்சிணா மூர்த்தி தோற்றம் அனைவராலும் விரும்பி ஆராதிக்கப்படும் அற்புத குரு மூர்த்தமாகும். இக்காரணம் பற்றியே ஆதி மூல பகவானும் திருஅண்ணாமலையில் கல்லால மரத்தின் கீழ் தட்சிணா மூர்த்தியாகத்தானே எழுந்தருளியுள்ளார். அகஸ்திய பெருமானுக்கு இறைவன் மீது எத்தகைய ஆழமான அன்பு பெருகி இருந்தால் இத்தகைய ஒரு வரத்தை வேண்டிப் பெற்றிருப்பார் என்றே சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

தென் திசையைக் காத்த பெருமான்

இதே முறையில் தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்திய பெருமான் தமிழ் வண்ணமாய்த் திகழும் முருகப் பெருமானை தென்திசை நோக்கும் குரு மூர்த்தியாய் வணங்க விழைந்தபோது அவருடைய அன்பு வேண்டுகோளை ஏற்று முருகப் பெருமான் சிறுகமணி திருத்தலத்தில் அவருக்கு தமிழ்க் குரு மூர்த்தியாய், இலக்கணப் பெருந்தகையாய் காட்சி தந்து தந்தருளினார்.

இரண்டு குரு மூர்த்திகள் அருளும் இந்த அபூர்வமான திருத்தலத்தில் வியாழன் தோறும் இரு மூர்த்திகளுக்கும் செம்பருத்தி தைலம் அபிஷேகம் செய்து, செம்பருத்தி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தொலை துரக் கல்வி (correpondence courses) பயில்வோரும், தொலைதொடர்பு துறை (electronic, wireless communications) கல்வி பயில்வோரும் நலமடைவர்.

சத்சங்கமாக கூட்டு வழிபாடுகள் இயற்றுவோர் கீழ்க் கண்ட பாடலை ஓதி வழிபடுதல் நலம்.

யாரய்யா வடிவேலய்யா

நல்ல துணை இங்கெனக்கு யாரய்யா - அதைச்
சொல்லிவிடு சொல்லிவிடு வேலய்யா
அந்தத் துணை இங்கெனக்கு யாரய்யா - அதைச்
சொல்லிவிடு சொல்லிவிடு வேலய்யா

  1. அந்தத் துணை இந்தத் துணை சொந்தம் துணை சுற்றம் துணை
    வந்த துணை அத்தனையும் வேதனை - முருகா
    மனதினிலே அதனால் வேதனை
    (நல்ல துணை ….)

  2. பட்டம் துணை பதவி துணை பாடுபட்ட செல்வம் துணை
    சட்டம் துணை என்று சொல்வார் உலகிலே - துடுப்பைத்
    தட்டி விட்டே ஏற்றி வைப்பார் படகிலே
    (நல்ல துணை …. )

  3. இருபதிலே தழுவிய கை அறுபதிலே கழுவிய கை
    அருமை அருமை மனைவி நல்ல துணை என்பார் – கொஞ்சம்
    அனுபவித்தோர் ராமபாணக் கணை என்பார்
    (நல்ல துணை …)

  4. கீரிப்பிள்ளை அணில்பிள்ளை கிளிப்பிள்ளை தென்னம் பிள்ளை
    ஊரினிலே எத்தனையோ பிள்ளைகள் – நமக்கோ
    உதவாத பிள்ளை எல்லாம் சள்ளைகள்
    (நல்ல துணை ….)

  5. நாய்விரட்டும் இருளினுலும் பேய் விரட்டும் மருளினிலும்
    நோய் விரட்டும் முதுமையிலும் யார் துணை – முருகா
    நொடியில் வந்து காக்கும் உனது பேர் துணை
    (நல்ல துணை ….)

  6. விழிக்குத் துணை பாதங்கள் மொழிக்குத் துணை நாமங்கள்
    வழிக்குத் துணை உனையன்றி யாரய்யா – முருகா
    வாடிவிட்டேன் ஓடி வந்து சேரய்யா
நல்ல துணை இங்கெனக்கு நீயய்யா – முருகா
அல்லலெல்லாம் தீர்த்து வைப்பாய் இந்நாளய்யா.

தென் திசை பாரம் சீர் செய்ய வந்த பெருமானாய் அகஸ்தியர் விளங்குவதால் அரிசி, பருப்பு, சர்க்கரை, புளி, உப்பு, காய் கறிகள் போன்ற பொருட்களை எடை குறைத்து விற்ற தோஷங்களுக்குப் பரிகாரத் தலமாகவும் இத்திருத்தலம் விளங்குகிறது. ஆனால், சில குறித்த பொருட்களுக்கே பிராய சித்த வழிமுறைகள் பெரியோர்களால் அளிக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளவும்.

பெட்ரோல், மண்ணெண்ணெய், எரிவாயு போன்ற பொருட்களை அளவு குறைத்து, கலப்படம் செய்து விற்றால் வரும் துன்பங்களுக்குப் பொதுவாக திருமறைகளிலும், கிரந்தங்களிலும் எவ்வித பிராயசித்த முறைகளும் அளிக்கப்படவில்லை என்பது உண்மையே. தக்க குருமார்களை நாடித்தான் இத்தகைய கடுமையான தோஷங்களுக்கு பரிகாரங்கள் பெற இயலும்.

ஸ்ரீமுருகப் பெருமான் இலஞ்சி

தன்னுடைய தினசரி பூஜையின் ஒரு அங்கமாக ஸ்ரீஅகஸ்திய பெருமான் பொதிய மலையில் இருந்தவாறே சாஷ்டாடங்கமாக முருகப் பெருமான் குருமூர்த்தியாய் அருள் புரியும் இத்தலத்தை நோக்கி நமஸ்காரம் செய்கிறார் என்பது நீங்கள் இதுவரை அறியாத ஒரு தேவ இரகசியமாகும்.

எனவே,

  1. இதுவரை தனக்கென்று ஒரு சற்குருவைப் பெறாதோர் இத்தலத்தில் தொடர்ந்து நமஸ்காரப் பிரதட்சணம் செய்து இறைவனை வேண்டுவதால் தனக்குரிய சற்குருவை அடைய இறைவனின் வழிகாட்டுதல் கிடைக்கும்.

  2. சற்குருவைப் பெற்றோர் குரு நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுதல் அவசியமாகும். ஒரு மனிதன் பெறக் கூடிய மிகப் பெரிய பொக்கிஷம் இறை நம்பிக்கையாகும். குருவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையே இறை நம்பிக்கையை வளர்க்கும். இறை வழிபாடுதான் குரு நம்பிக்கையை வலுப்படுத்தும். குரு நம்பிக்கையும், இறை நம்பிக்கையும் என்றும் வளர்ந்தோங்க உதவும் தலங்களுள் சிறுகமணி திருத்தலமும் ஒன்றாகும்.

  3. இறைவனை மறுப்பவனைக் கூட கடவுள் மன்னித்து விடுவார். ஆனால், நான்தான் கடவுள் என்று சொல்பவனை இறைவன் ஒருபோதும் மன்னிப்பது கிடையாது. இவ்வாறு தான் என்ற அகம்பாவம் தம்மைப் பீடிக்காது இருக்க அனைவரும் இத்தல இறைவனை வழிபடுவது அவசியம்.

  4. பொதுவாக, மந்திரங்களை உபதேசமாக ஏற்று ஜபித்து வருவோர் தாங்கள் சொல்ல வேண்டிய குறித்த அளவு மந்திரங்களை கட்டாயம் ஜபிக்க வேண்டியது அவசியமாகும். இல்லையேல் ஜபிக்கப்படாத மீதி மந்திரத்தை அவர்களுக்கு உபதேசம் அளித்தவர்கள் ஜெபிக்க வேண்டும். உதாரணமாக, குருநாதர் ஒருவர் ஒரு சீடனுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசமாக அருளி அதை ஒரு நாளைக்கு 1000 முறை ஜபிக்க வேண்டும் என்று விதித்திருந்தால் அந்தச் சீடர் தினமும் 1000 முறை பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தே ஆக வேண்டும். அப்படி ஒருவேளை அவரால் குறிப்பிட்ட அளவு மந்திரத்தை ஜெபிக்க முடியாமல் போய் ஒரு நாள் 500 முறைதான் மந்திரம் ஓதியிருந்தால் அன்றைய பொழுதிற்குள் மீதம் 500 முறை அவருடைய குருநாதர் ஓதியே ஆக வேண்டும்.

    இந்த இறை நியதியிலிருந்து யாருக்கும் விலக்கு கிடையாது. எனவே மந்திரம் உபதேசம் செய்பவர்களும், ஒரு மந்திரத்தை உபதேசமாக ஏற்றுக் கொண்டவர்களும் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியது அவசியமாகும். ஆனால், தற்காலத்தில் மந்திர உபதேசம் செய்யும் அனைவரும் இவ்வாறு தங்கள் சீடர்களின் பாக்கிக் கணக்கை உணரக் கூடிய அளவிற்கு சக்தி பெற்றவர்களாய் இருப்பது கிடையாது. அத்தகையோர் இரண்டு குரு மூர்த்திகள் அருளும் இத்தலத்தில் இறைவனை வேண்டினால் தங்கள் பாக்கியை நேர் செய்து கொள்ள இறைவன் தக்க வழியைக் காட்டி அருள்வார்.

வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்

மற்ற எந்த உயிரினத்திற்கும் இல்லாத ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் சிரிப்பு. மனம் விட்டு சிரிக்கக் கூடிய மனிதர்களாகிய நாம் எந்த அளவிற்கு சிரிப்பின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டிருக்கிறோம்? அதே சமயம் சிரிக்கக் கூடாத இடத்தில், பொருத்தமற்ற சூழ்நிலையில் சிரிக்கும் சிரிப்பு மிகப் பெரிய ஆபத்தை விளைவித்து விடும் என்பதும் உண்மையே.

மகாபாரதத்தில் துரோபதை துரியோதனனைப் பார்த்து கேலியாக சிரித்ததால் எத்தனை கோடி வீரர்கள் உயிரிழந்தார்கள், எத்தனை இளம் பெண்கள் தங்கள் கணவன்மார்களை இழந்தார்கள், எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இழந்து வருந்தினார்கள் என்பது நீங்கள் அறிந்ததே.

வருவதை ஏற்றுக் கொள் இதுவே கலியில் மிகப் பெரிய தவமாகும் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால், கேட்பதற்கு மிகவும் எளிமையான இந்தத் தவத்தை தற்காலத்தில் இயற்றுவது என்பது அவ்வளவு எளிதல்லவே. மகான்களும் பெரியோர்களும் அவ்வப்போது மனிதர்களைப் போல் வாழ்ந்து நமக்கு இத்தவத்தை எப்படி இயற்றுவது என்பதை தங்கள் வாழ்க்கை மூலம் அனுபவப் பாடங்களாக புகட்டி வருகின்றனர். அவற்றுள் ஒன்றே வியாச பகவானின் காசி வைபவமாகும்.

நினைத்தாலே முக்தி தரும் தலமான திருஅண்ணாமலையைப் போல முக்தி தரும் தலங்களுள் ஒன்றே காசியாகும். இத்தகைய சிறப்பு பெற்ற காசிக்கு நிகரான சிவத்தலம் ஒன்றை நிர்மாணிக்க எண்ணினார் வியாச மகரிஷி. ஆனால், இவ்விஷயத்தில் எவருக்கும் உடன்பாடு கிடையாது. காசி விஸ்வநாதர் திருத்தலம் இறைவனே சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள திருத்தலம். உலகிலுள்ள அனைத்து லிங்க மூர்த்திகளும் காசி லிங்கத்தையே ஆதாரமாகக் கொண்டு அருள் மழை பொழிகின்றன. அவ்வாறு இருக்கும்போது என்னதான் ஒப்பற்ற மகரிஷியாக வியாசர் இருந்தாலும் ஈசன் நிர்மாணித்த தலத்திற்கு இணையான ஒரு சிவத்தலத்தை எவராலும் நிர்மாணிக்க முடியாது அல்லவா? அதனால் வியாசரின் எண்ணத்தை எவரும் அங்கீகரிக்கவில்லை. அதே சமயம் இச்செயலைப் பற்றி அவரிடம் எடுத்துரைக்கவும் எவரும் முன் வரவில்லை. ஏனென்றால், வியாசருக்கு இணையான ஒரு மகரிஷியை எவ்வுலகிலும் காண இயலாதே. வியாசரின் ரூபத்தில் வந்த பெருமாளாகத்தானே புராணங்களும் அவரின் மகத்துவத்தைப் பற்றி பறைசாற்றுகின்றன.

ஸ்ரீமுருகப் பெருமான்
சிறுகமணி

கங்கையின் மறுகரையில் வியாச காசியின் கட்டுமான பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. வியாச பகவானின் தாய்க்கு இச்செய்தி எட்டியது. வியாசர் தன் தாயைத்தான் குருவாக ஏற்றிருந்தார். அவள் வியாசரை அழைத்து அவரின் செய்கைக்கு உரிய விளக்கத்தைக் கேட்டார். “எனதருமை வியாசனே, புனிதமான கங்கைக் கரையில் ஈசனால் நிர்மாணிக்கப்பட்ட திருத்தலம் ஏற்கனவே இருக்கிறதே. நாடி வருவோருக்கெல்லாம் முக்தியைத் தரக் கூடிய இந்தத் திவ்ய தலம் காசியில் இருக்கும்போது நீ ஏன் இன்னும் ஒரு தலத்தைக் கட்டுகிறாய். உன்னுடைய தபோ பலத்தை வேறு ஏதாவது நற்காரியத்திற்காக பயன்படுத்தலாமே?” என்று கேட்டாள்.

“அம்மா, நீங்கள் கூறுவது உண்மையே. ஆனால், காசிக்கு நிகரான ஒரு திருத்தலத்தைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் எப்படியோ என் மனதில் வேரூன்றி விட்டது. இனி என்னால் இதை மாற்ற முடியாது. நீங்கள் எக்காரணம் கொண்டும் இதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்,” என்று வியாசர் பதில் அளித்தார்.

இனி என்ன சொன்னாலும் வியாசர் கேட்க மாட்டார் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்ட மாதா, “சரி, உன் விருப்பப்படியே ஆகட்டும். ஆனால், இதற்கு கைமாறாக எனக்கு ஒரு வாக்குறுதி கொடு. நீ எந்தச் சூழ்நிலையிலும் எதற்கும் கலங்கக் கூடாது. தன்னிலை இழக்கக் கூடாது. என்ன நடந்தாலும் நீ சிரித்த முகத்துடனே இருக்க வேண்டும்,” என்று வியாசரிடம் சத்திய பிரமாணத்தை வாங்கிக் கொண்டாள். வியாசரும் தன் தாயின் வேண்டுகோளைச் சாதாரணமாக நினைத்து அவள் கேட்ட வாக்குறுதியை உடனே அளித்து விட்டார்.

வியாச காசியில் கட்டுமானப் பணிகள் செவ்வனே நிறைவேறின. கும்பாபிஷேகத்திற்கு நாளும் குறித்து விட்டார் வியாசர். தேவ லோகத்தில் ஒரே குழப்பம்.

காசியில் இறப்போர்க்கெல்லாம் ஈசனே அவர்கள் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி அவர்களுக்கு முக்தி அளிக்கிறான் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட இறை நியதி. அவ்வாறு இருக்கும்போது வியாசரும் காசிக்கு நிகரான ஒரு தலத்தை நிறுவி விட்டால் இதில் எந்தக் காசியில் இறப்போர்க்கு முக்தி கிடைக்கும் என்பதை எப்படித் தீர்மானிப்பது? இதுவே குழப்பத்திற்குக் காரணம். இந்திரன், பிரம்மா, எமதர்மன் உள்ளிட்ட தேவாதி தேவர்கள் அனைவரும் சிந்தாமணி விநாயகரைச் சரணடைந்தனர்.

சிந்தாமணி விநாயகரும் தேவர்கள் கூறிய அனைத்து விஷங்களையும் கேட்டு, “நீங்கள் அனைவரும் கவலையின்றிச் செல்லுங்கள். இந்தக் குழப்பத்தை எம்பெருமானே தீர்த்து வைப்பார்...”, என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டார். பின்னர் சிந்தாமணி விநாயகரே கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வியாச காசிக்குச் சென்றார். ஒரு ஒன்பது வயதுள்ள குழந்தை வடிவத்தை எடுத்துக் கொண்டு உடல் முழுவதும் திருநீறு தரித்தவராய் நேரே கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார்.

சிந்தாமணி விநாயகர்

அக்காலத்தில் கும்பாபிஷேகம் நடக்கும் திருத்தலங்களில் முதல் நாளே கும்பாபிஷேகம் நிறைவேற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் அத்தலத்திற்கு வந்திருந்து ,அத்திருத்தல மகிமைகளைப் பற்றி எடுத்துரைப்பார்கள். அத்திருத்திலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன், இறைவி, பிற பிரகார தேவதைகள் பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறுவதுண்டு. எவருக்காவது அந்த விஷயங்களில் சந்தேகம் ஏற்பட்டால் அதை நீக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு.

இந்த வழக்கத்தை ஒட்டி வியாச முனிவரும் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த இடத்தில் அமர்ந்திருந்தார். ஆனால், அவரிடம் எந்த விதமான விளக்கங்களையும், சந்தேகங்களையும் கேட்க எவருமே முன் வரவில்லை. அவரிடம் அவ்வளவு பய பக்தியையும் மரியாதையையும் தேவர்கள் உள்ளிட்ட அனைவருமே கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணம். அத்தருணத்தில்தான் ஒன்பது வயது பாலகன் வடிவில் சிந்தாமணி விநாயகர் எழுந்தருளி அனைவருக்கும் கேட்கும் வண்ணம் உரத்த குரலில், “இக்கோயிலைக் கட்டும்  பெருந்தகையாளர் யார் ?” என்று ஒன்றும் அறியாதவர் போல் கேட்டார். வியாசர் ஓடோடி வந்து, “பாலகனே, நான்தான் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளேன். நாளை விடியற் காலை கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. உனக்கு என்ன வேண்டும்?” என்று வினவினார்.

“நீ எதற்காக இந்தக் கோயிலைக் கட்டுகிறாய்?” என பிள்ளையர் கேட்டார்.

வியாசருக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது. ஒரு சிறுவன் இப்படி மரியாதை இல்லாமல் கேள்வி கேட்கிறானே என்று ஒரு கணம் நினைத்தார். இருந்தாலும் கும்பாபிஷேக விதி முறைகளைக் கருத்தில் கொண்டு அமைதியாக, “சிறுவனே, மக்கள் அனைவரும் இறைவனை வணங்கிப் பயன் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தக் கோயிலைக் கட்டுகிறேன்,” என்றார்.

“ஏற்கனவே எம்பெருமானே கட்டிய திருக்கோயில் காசியில் இருக்கும்போது யாரைக் கேட்டுக் கொண்டு இந்தக் கோயிலைக் கட்டுகிறாய்?”

“நான் யாரையும் கேட்க வேண்டியதில்லை. நான் வியாச பகவான். எந்த இடத்திலும் கோயில் கட்டும் அதிகாரம் எனக்கு இருக்கிறது. ”

“நீ யாரையும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது என்று எப்படிச் சொல்லலாம். எந்த நற்காரியமாக இருந்தாலும் குருவைக் கேட்டு, அவர் சொற்படிதான் செய்ய வேண்டும் என்பது இறைவன் விதித்த விதி, இந்த விதியிலிருந்து யாருக்கும் விலக்கு கிடையாது. அப்படி இருக்கும்போது நீ எப்படி உன்னுடைய குருநாதரைக் கேட்காமல் இந்தக் கோயிலைக் கட்டினாய்? ”

“எனக்குக் குருநாதர் என்னுடைய தாய்தான். அவள் சொல்லியபடிதான் இந்தக் கோயிலைக் கட்டினேன்.”

“ஒவ்வொரு பெண்ணிற்கும் அவளுடைய கணவன்தான் தெய்வம். அப்படி உன்னுடைய தாயின் விருப்பப்படி நீ இந்தக் கோயிலை கட்டியதாகக் கூறினால் அது சுத்தப் பொய். உன்னுடைய தாய் அவளுடைய தந்தையான உன் அப்பாவிற்குத்தானே கோயிலைக் கட்டச் சொல்லியிருப்பாள். சிவபெருமானுக்கு கோயில் கட்டும்படி அவள் சொல்லியிருக்க மாட்டாளே...”

“எப்படியோ கட்டினேன்... நீ இனி நடக்க வேண்டியதைப் பற்றிக் கேள்.”

“ஒரு கோயிலைக் கட்டுவதாக இருந்தால் அதில் அக்னி மூலை, நிருத்தி மூலை, ஈசான்ய மூலை என்று பல கோண நிலைகள் உண்டு. அந்த ஒவ்வொரு திக்கிலும், கோணத்திலும் இருந்து ஆசீர்வதிக்க வேண்டிய தெய்வ மூர்த்திகள், தேவதைகள் உண்டு. அந்தந்த திசைகளில் எழுந்தருளி மக்களுடைய பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வதற்கு அவர்கள் அனுமதியை நீ கேட்டுப் பெற்றாயா?”

”நான் நான்கு வேதங்களிலும் கரை கண்ட வியாச முனி. நான் யாருடைய அனுமதியையும் கேட்டுப் பெற வேண்டிய அவசியம் கிடையாது. நான் ஒரு கோயிலைக் கட்டி விட்டால் அதில் கோணங்களை, திசைகளை நிர்ணயித்து விட்டால் அந்தந்த கோணங்களில் எழுந்தருள வேண்டியது அந்தந்த தேவதை, தெய்வங்களின் தலை விதி. அது இறைவனின் விதித்த விதியும் கூட. ”

“ஆகா, அப்படியா? இறை மூர்த்திகளையே ஏவும் அளவுக்கு நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா?”

“ஆமாம், சிறுவனே, என்னுடைய மகிமையைப் பற்றி உனக்குத் தெரியாது. நான் மகாபாரதம் விரைவாகச் சொல்லச் சொல்ல அதன் பொருள் தெரிந்து, புரிந்துதான் எழுத வேண்டும் என்று நான் கூறியிருந்ததால் பிள்ளையாரே பல முறை திகைத்து எழுதுவதை நிறுத்தி விட்டார் என்றால் என்னுடைய திறமை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்.”

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக வியாச பகவானுக்குத் தான் என்ற எண்ணம் தலைக்கு ஏறியது. சிறுவன் வடிவில் வந்த பிள்ளையார் மேலும், மேலும் கேள்விகளைக் கேட்டு வியாசரின் கோபத்தை உச்சிக்குக் கொண்டு வந்து விட்டார். இறுதியாக...,

“வியாசரே, இறுதியாக உம்மிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். இதற்கு மட்டும் சரியாக பதில் சொன்னால் போதும், நீ கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடத்தி விடலாம். எம்பெருமான் கட்டிய காசியைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு முக்தி கிடைக்கும், நீ கட்டிய காசியைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு என்ன கிடைக்கும், வியாசா?” என்று புன்முறுவலுடன் ஏளனமாகக் கேட்டார் பிள்ளையார்.

வியாசரின் கண்கள் கோபத்தால் கொவ்வைப் பழம் போல் சிவந்தன. உடல் முழுவதும் நடுங்கியது. தன்னை மறந்தார் வியாசர், தன்னுடைய தாய்க்குக் கொடுத்த வாக்குறுதியையும் மறந்து விட்டார். எல்லையில்லா கோபத்துடன், “கழுதைப் பிறவிதான் கிடைக்கும்,” என்று கூறி விட்டார்.

“அப்படியா ...,” என்று சிரித்துக் கொண்டே, சிந்தாமணி விநாயகர் அவ்விடத்தை விட்டு மறைந்தார்.

வியாசர் சில நொடிகளில் தன்னிலை அடைந்தார். நடந்தது அனைத்தையும் நினைத்து வெட்கத்தால் கூனி குறுகிப் போனார். எவ்வளவு பெரிய தவறு இழைத்து விட்டோம், என்று வாய் விட்டு அழுதார். முனிவனின் சொல் பொய்க்காதே, “நான் கட்டிய காசியைத் தரிசித்தால் கழுதைப் பிறவிதான் கிடைக்கும் என்று நானே என்னுடைய அகந்தையால் சாபம் கொடுத்து விட்டேனே. மக்களுக்குக் கழுதைப் பிறவியை வாங்கித் தருவதற்காகவா நான் இவ்வளவு காலம் அரும்பாடு பட்டு இந்தக் கோயிலைக் கட்டினேன்,” என்று கண்ணீர் கரை புரள அழுது புலம்பினார். தன் தாயிடம் சென்று நடந்தை எல்லாம் கூறினார். அவருடைய தாயும், “குழந்தாய், இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் முன்பே அறிந்துதான் உன்னை எச்சரித்தேன். இருந்தாலும் விதியின் கரங்களிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதை உணர உன்னுடைய வரலாறு ஒரு பாடமாக இருக்கட்டும். நடந்ததை நினைத்து வருந்துவதால் எந்தப் பலனும் இல்லை. ”

“நீ உடனே சென்று எம்பெருமானிடம் முறையிடு. அவர் ஒருவர்தான் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து உன்னை விடுவிக்க முடியும்,” என்று கூறினார்.

தாய் என்னும் தெய்வம்

வியாசர் தன் தாயின் வாக்கிற்கிணங்க எம்பெருமானிடம் தன் தவற்றை மன்னிக்கும்படி வேண்டினார். இறைவனும் அவருக்குக் காட்சி கொடுத்து, “வியாசரே, அகம்பாவம் எத்தகைய வல்லமை உடையவரையும் நிலை தடுமாறச் செய்து விடும் என்பதை நிரூபணம் செய்ய நீ ஒரு கருவியாக செயல்பட்டாய் அவ்வளவே. இந்தச் சூழ்நிலையிலிருந்து உன்னைக் காப்பாற்ற வல்லவன் சிந்தாமணி விநாயகன் ஒருவனே. அவனைச் சரணடைந்து அவனிடம் முறையிடு,” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

வியாசர் இறைவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு சிந்தாமணி விநாயகரை நோக்கித் தவமியற்றினார். பல யுகங்கள் கழிந்த பின் சிந்தாமணி விநாயகரின் தரிசனம் கிடைத்தது. வியாசர் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, “சுவாமி, அறியாமையால் அடியேன் செய்த தவறைத் தாங்கள் மன்னித்து அருள வேண்டும்,” என்று வேண்டினார்.

“வியாச பகவானே, உன்னுடைய தாய் உனக்கு அளித்த உபதேசம் என்ன? என்ன நடந்தாலும் நீ எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதானே. அன்னையின் வேண்டுகோளை ஒரே ஒரு கணம் நீ நிராகரித்ததால்தான் இப்படிப்பட்ட துன்பங்களை எல்லாம் நீ சந்திக்க வேண்டிய நிலை வந்து விட்டது. இனி வரும் காலங்களில் மக்கள் தாயின் அருமையை புரிந்து கொள்ளாமல் போகலாம். அத்தகையவர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமையும். ”

பிள்ளையார் தொடர்ந்து, “தவறு செய்வது யாருக்கும் இயற்கையே. செய்த தவறை உணர்ந்து விட்டால் அதற்குரிய பிராய சித்தத்தை அளிக்க வேண்டியது இறைவனின் கடமைதானே. ”

“சரி, இப்போது உன்னுடைய தவறால் என்னென்ன விளைவுகள் நடந்தன என்று சற்றே எண்ணிப் பார்.”

  1. உன் தாயின் வார்த்தையை மீறி கோயில் கட்டியதால் குரு வார்த்தையை மீறிய தவறைச் செய்தவன் ஆகிறாய்.

  2. உன்னுடைய தபோ பலத்தை மக்களுக்காகவும் பிற உயிர்களின் மேன்மைக்காகவும் செலவிட வேண்டியது ரிஷிகளின் கடமை அல்லவா? நீ கட்டிய கோயிலை தரிசித்தால் மக்களுக்குக் கழுதைப் பிறவிதான் கிடைக்கும் என்று வாக்குக் கொடுத்த காரணத்தால் இறை தரிசனம் பெறும் பக்தர்களுக்கெல்லாம் ஒரு தாழ்ந்த நிலையை இறைப் பிரசாதமாகப் பெற்றுத் தரும் அவநிலைக்கு நீ தள்ளப்படுகிறாய்.

  3. மனிதர்கள், விலங்குகள், புழு, பூச்சிகள் என எந்தப் பிறவியும் இழிந்த பிறவி கிடையாது. அனைத்தும் எம்பெருமானின் திருவுள்ளப்படி தோன்றியவையே. இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது. அப்படி இருக்கும்போது கழுதைப் பிறவியைக் குறைத்து மதிப்பிட்ட காரணத்தால் கழுதை வர்கத்தின் சாபத்திற்கும் நீ உள்ளாக வேண்டியுள்ளது,”

“இத்தகைய தோஷங்களுக்கெல்லாம் சாப நிவர்த்தி தரக் கூடிய தலமே சிறுகமணி ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் திருத்தலமாகும். தினமும் பூவாளூர் திருத்தலத்தில் பாயும் பல்குணி நதியிலிருந்து தீர்த்தம் எடுத்து ஸ்ரீபக்தவத்சலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தால் நாளடைவில் உன்னுடைய கோபத்தால் வந்த விளைவுகளுக்குத் தக்க பரிகாரம் கிட்டும்,” என்று சிந்தாமணி விநாயகர் அருள் வழங்கினார்.

பித்ரு முக்தித் தலமான பூவாளூர்
திருத்தல தீர்த்தம்

வியாச முனிவரும் சிந்தாமணி கணபதி அருளிய முறையில் பூவாளூர் திருத்தலத்தில் பொழியும் பல்குனி நதியில் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி மண் குடத்தில் தீர்த்தம் எடுத்து அதைத் தன் தலை மேல் சுமந்து சிறுகமணி திருத்தலத்திற்கு நடந்து சென்று ஸ்ரீபக்தவத்சலேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வந்தார். இவ்வாறு பன்னெடுங் காலம் வியாச பகவான் இயற்றிய அபிஷேக ஆராதனைகளால் மகிழ்ந்த இறைவன் அவர் முன் தோன்றி, “உன்னுடைய சேவையால் யாம் மகிழ்ந்தோம். நீ கட்டிய திருக்கோயில் இனி வியாச காசி என்றே வழங்கப்படும். இனி காசிக்கு வரும் பக்தர்கள் நீ கட்டிய காசித் திருத்தலத்தில் வழிபாடு இயற்றிய பின் எம்மைத் தரிசித்தால்தான் வழிபாடு பூரணம் அடையும்...”, என்று கூறி காசி யாத்திரையில் ஒரு புதிய அத்தியாயத்தை இறைவன் அன்று முதல் ஆரம்பித்து வைத்தான்.

பல்குனி தீர்த்தம்

எனவே, கழுதைகளுக்கு முக்தி அளிக்கும் ஸ்ரீருத்ர பல்குனி சித்தர் உறையும் பூவாளூர் பல்குனி நதி தீர்த்தத்தால் ஸ்ரீபக்தவத்சலேஸ்வரரை அபிஷேகம் செய்து வழிபடுவதால்

  1. தாய், தந்தையரை நிராதரவான நிலையில் கைவிட்டு அவர்கள் இறந்திருந்தால் அதனால் வரக் கூடிய தோஷங்களுக்கு பிராய சித்த வழி முறைகள் கிட்டும்.

  2. சிலர் சிறு சிறு விஷயங்களைக் கூட பெரிது படுத்தி அதனால் கோபம் அடைவதுண்டு. மற்றவர்களின் சிறு தவறைக் கூட தாங்க முடியாமல் அவர்களைச் சபிப்பதுண்டு. இத்தகையோர் சிறுகமணி திருத்தலத்தில் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நடப்பதெல்லாம் இறைவன் செயலே என்ற எண்ணம் மேலோங்கி மனம் அமைதி கொள்ளும்.

  3. குடும்பத்திலும் அலுவலகங்களிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறை தெரியாததால்தான் குடும்பம், சமூகம் போன்ற உறவு முறைகளில் குழப்பங்களும், கருத்து வேறுபாடுகளும் தோன்றுகின்றன. எந்த இடத்தில் வளைந்து எந்த இடத்தில் நெளிந்து கொடுக்க வேண்டும் என்ற கலையைத் தெரிந்தவர்கள்தான் இன்றைய உலகில் எதையும் சாதிக்க முடியும். எனவே அத்தகைய திறமையை வளர்த்து நல்ல முறையில் காரியங்களை சாதிக்க இத்தல வழிபாடு உதவும்.

நமது அன்றாட வாழ்க்கை நலமாய் அமைய மனிதர்கள் மட்டும் அல்லாது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிர்களுமே நமது நலனுக்காகப் பாடுபடுகின்றன. எனவே, நாம் சிற்றுயிர்கள் அனைத்தையுமே வழிபட வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கை பூரணத்துவம் பெறும். சிற்றுயிர்களை வழிபடுவதால் ஏற்படும் உங்களுக்குத் தெரிந்த, தெரியாத பலன்களை இங்கே அளித்துள்ளோம்.

  1. திருக்கோயிலில் உள்ள எறும்புகளுக்கு உணவிடுவதால் கடன் தொல்லைகள் தீரும். திருச்சி திருநெடுங்களம் திருக்கோயிலில் இயற்றப்படும் இத்தகைய வழிபாடு ஒருவருக்கு வர வேண்டிய நியாயமான சொத்தைத் திரும்ப பெற்றுத் தரும்.

  2. நாய்களுக்கு ரொட்டி, பிஸ்கட், கடலை மிட்டாய் போன்றவற்றை உணவாக வழங்குவதால் கால தோஷங்களிலிருந்து நிவாரணம் கிட்டும். நன்றி மறவா நன்னிலையை அடைவோம்.

  3. கழுதைகளுக்கு காரட், பச்சை பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவாக வழங்கி வந்தால் நியாயமான வழியில் செல்வம் பெருகும். கடுமையான தோல் வியாதிகளின் வேகம் குறையும்.

  4. திருவெறும்பூர்

  5. உண்மையைப் பேசு, நல்லதைச் செய் என்று எல்லோரும் எவ்விடத்திலும் சொல்லி வருகிறோம். ஆனால், இதை நடைமுறையில் செயல்படுத்துவது லட்சம், கோடியில் ஒருவரே. உண்மையைப் பேசி வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் ஹரிச்சந்திர மகாராஜா. அண்மைக் காலத்தில் நம் மனம் கவர்ந்தவர் அண்ணால் காந்தியடிகள். இவ்வாறு நன்றாகத் தெரிந்த ஒரு நல்ல விஷயத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள உதவுவதே கரடி வழிபாடாகும். குருவை, பெரியோரை, மகான்களை, இறைவனை, நல்ல கொள்கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள விரும்புவோர் திருவாசி திருத்தலத்தில் இயன்றபோதெல்லாம் சிறப்பாக வியாழன் தோறும் வழிபட்டு வந்தால் அத்தலத்தில் தினமும் அரூபமாக வழிபடும் கரடி சித்தர் அருள்புரிவார்.

  6. பல்லிகளுக்கு தலைமை குருவாக இருப்பவர் சுத்தோதக மகரிஷி. இவர் உறையும் வந்தவாசி திருத்தலத்தில் இறைவனை வழிபட்டு வந்தால் வீடுகளில் உலவும் நற்சக்திகளை செய்வினை, ஏவல்கள் மூலம் கட்டி வைத்திருந்தால் அத்தகைய குறைபாடுகள் நீங்கும். வாசிக் கலையில் தேர்ச்சி கிட்டும்.

  7. முதலைகளுக்கு உணவிட்டு வந்தால் நல்ல மழைப் பொழிவு ஏற்படும்.

  8. பசு மாடுகளுக்கு கோதுமை தவிடு, அரிசி கழுநீர், கீரை வகைகளை அளித்து வந்தால் சந்ததிகள் பெருகும்.

  9. எருமை மாடுகளுக்கு மக நட்சத்திரத்தன்று கீரை அளித்து வந்தால் எம பயம் அகலும்.

  10. குரங்குகளுக்கு வேர்க்கடலையை உணவாக அளித்து வந்தால் குருவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை வளரும்.

  11. மயில்களுக்குத் தான்ய உணவுகளை வழங்கி வந்தால் காமக் குற்றங்களிலிருந்து விடுபடலாம்.

  12. மைனாக்களுக்கு நெல் மணிகளை அளித்து வந்தால் குடும்பத்தில் தம்பதிகளுக்கிடையே ஏற்படும் மன வேற்றுமை அகலும்.

  13. அணில்களுக்கு துவாதசி அன்று வாதாங் கொட்டை, முந்திரிப் பருப்பு அளித்து வந்தால் முறையான காதல் வெற்றி பெறும்.

  14. வில்வமரத்தடி புற்று
    திண்ணியம் லால்குடி

  15. பச்சைக் கிளிகளுக்கு கொவ்வைப் பழங்களை அளித்து வந்தால் தேவதைகள், தெய்வங்களின் தரிசனம் கிட்டும்.

  16. கருடன், பருந்துகளுக்கு உணவிட்டு வந்தால் இறுதிக் காலத்தில் பாயில் கிடந்து நோயில் வாடும் நிலை ஏற்படாது.

  17. பாம்புப் புற்றுகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வணங்கி பால் வார்த்து வந்தால் திருமண தோஷங்களுக்கு பரிகார முறைகள் கிட்டும்.

  18. யானைகளுக்கு கேழ்வரகு களி, கரும்பு, வாழைப் பழம் போன்ற உணவுகளை குறைந்தது இரண்டு டன் அளித்து வழிபடுதலால் சிறப்பான புத்திக் கூர்மை ஏற்படும்.

  19. புறாக்களுக்கு கோதுமை, கம்பு போன்ற தானியங்களை அளித்து வந்தால் அயல் நாடுகளில் வசிக்கும் நமது உறவினர் நலம் பெறுவர்.

  20. ஆஸ்திரேலிய கடலோரப் பகுதிகளில் காணப்படும் பெலிகன் பறவைகளுக்கு மீன்களை ஊட்டி விடுவதால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இவர்களை இழந்ததால் ஏற்படும் துக்கத்திற்கு ஓரளவிற்கு மன ஆறுதல் கிட்டும். கிளி, நாய்களைப் போல மனிதர்களிடம் அன்புடன் பழகும் பறவை இனமே பெலிகன் பறவையாகும்.

  21. வெண்ணிற குதிரைகளுக்கு அவித்த கொள் அளித்து வந்தால் குழந்தைகள் படிப்பில் முன்னேறுவர். மந்த புத்தி அகலும்.

இவ்வாறு சிற்றுயிர்கள் அனைத்தையும் வழிபட இயலாதோர் சிறுகமணி ஈசனை வழிபடுவதால் சிற்றுயிர்களை வழிபடாத தோஷங்களிலிருந்து ஓரளவு நிவாரணம் பெறலாம்.

ஓம் குருவே சரணம்

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam