|  |  | 
 ஓம் ஸ்ரீவல்லப  கணபதி துணை 
 ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை 
ஓம் ஸ்ரீகுருவே  சரணம்
| தலவிருட்ச மகிமை | 
மனிதன் அடையக்  கூடிய ஞான நிலைகளில் இரண்டாவதாக குறிப்பிடப்படுவது ஆணையும் பெண்ணையும் ஒன்றாகப் பார்த்தல் என்பதாகும்.
மர நிழலையும் குறிப்பாக  ஆலமர நிழலையும், கிணற்று நீரையும், பெண்களின் தனத்தையும் புரிந்து கொண்டால்தான் ஆண்  பெண் தத்துவத்தை ஓரளவாவது புரிந்து கொள்ள முடியும். மேற் கூறிய மூன்றுமே வெயில் காலத்தில்  குளிர்ச்சியாகவும், பனிக் காலத்தில் கதகதப்பாகவும் இருக்கும் தன்மையைக் கொண்டிருக்கும்.
இந்த தத்துவ விளக்கங்களை  இறை அவதாரங்களும், அடியார்களும் தங்கள் உபதேசங்களின் மூலமாக மக்களுக்கு அவ்வப்போது  அளித்து வருகின்றனர் என்பதும் உண்மையே.
ஆலமர நிழலில் தட்சிணா  மூர்த்தி எழுந்தருளி இறை தத்துவத்தின் விளக்கமாய் காட்சி அளிக்கிறார். திருஅண்ணாமலையில்  சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களுக்கு இத்தத்துவ விளக்கத்தை மௌனமாக  உபதேசக்கிறார் அல்லவா? இதன் மெய்ப் பொருள் விளக்கமே நாம் திருக்கோயிலில் காணும் தட்சிணா  மூர்த்தி கோலமாகும். 
உண்மை எப்படி கடவுளைக்  காட்டும் என்னும் தத்துவத்தையே மர நிழல் விளக்குகின்றது. இந்த உண்மையை அடிப்படையாகக்  கொண்டு எம்பெருமான் அமர்ந்திருக்கும் கல்லால மரத்தின் நிழல் எப்படி இருக்கும் என்று  ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்.  கல்லால மரத்திற்கு  நிழல் உண்டா? நிச்சயமாகக் கிடையாது. நிழல் என்பது என்ன? மனிதர்களின் வினைத் தொகுதியே  அவர்களின் நிழலாகக் காட்சி அளிக்கிறது. அதனால்தான் கர்ம வினைகள் சிறிதும் சாராத வள்ளலார்  சுவாமிகள் போன்றோருக்கு அவர்கள் நிழல் தரையில் விழுவதில்லை. 
அதே வண்ணம் ஆத்ம  விசாரம் செய்து பார்த்தால் எம்பெருமான் அமர்ந்திருக்கும் கல்லால மரத்திற்கும் நிழல்  கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். 
திருஅண்ணாமலையில்  உள்ள கல்லால மரம் மட்டும் அல்லாது பூமியில் உள்ள ஆலமரம், அரச மரம், துளசிச் செடியும்  கர்ம வினைகள் அற்றவையே. ஆனால், அவைகளின் நிழல் பூமியில் விழுவதை நாம் பார்க்க முடிகிறதே  என்ற கேள்வி எழலாம். உண்மையில் அவைகளுக்கும் நிழல்கள் கிடையாது. அந்த மரங்களின் நிழல்கள்  என்று பார்ப்பது காண்பவர்களின் கர்ம வினை பிரதிபலிப்பே. 
 
 முள் இல்லா வில்வமரம் செழிக்கும் 
 நகர் திருத்தலம்
எந்த அளவிற்கு  இந்த நிழல் பிம்பங்களை நோக்கி ஆத்ம விசாரம் செய்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களைச் சார்ந்த  கர்ம வினைகளை அறிந்து உங்களை நீங்களே தூய்மைப் படுத்திக் கொண்டு கர்ம வினைகளிலிருந்து  முழுவதுமாக விடுதலை பெறுவீர்கள்.
கர்ம வினைகளிலிருந்து  முழுவதுமாக நீங்கள் விடுபட்ட அடுத்த விநாடியே உங்களுக்கு எம்பெருமான் தரிசனம் கிட்டி  விடும். இதுவே உண்மை எப்படி கடவுளைக் காட்டும் என்பதன் தத்துவ விளக்கம். 
நகர் திருத்தலத்தில் 
பாஞ்சசன்ய சங்கு நாதம்!
இன்றைய உலகில்  சினிமா, டீவி திரைகளில் தோன்றும் நிழல் பிம்பங்களையும் நிகழ்ச்சிகளையும் நிஜம் என்று  நம்பி தங்கள் வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்வோர் ஏராளம். இதனால்தான் சித்தர்கள், 
“ நாங்கள் நிழல்களை  நிஜங்களாகப் பார்க்கிறோம்
  நிஜங்களை நிழல்களாகப் பார்க்கிறோம் ” என்று  சித்த தத்துவ விளக்கத்தை நமக்கு அருளி உள்ளார்கள். 
மனிதர்கள் நிழல்  படங்களை நிஜம் என்று நினைத்து ஏமாந்து போகிறார்கள், ஆனால், சித்தர்களோ நிழல்களின் நிஜத்தை  உணர்ந்து ஆத்ம ஞானம் பெறுகிறார்கள். இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? நன்கு ஆத்ம விசாரம்  செய்தால்தான் இதன் உண்மைப் பொருள் விளங்கும். 
உதாரணமாக, ஒரு  மனிதனின் உருவம் உண்மை. அவனுடைய நிழல் ஒரு பிம்பம், அதாவது ஒரு மாயத் தோற்றமே. ஒரு  மனிதனுடைய கர்ம வினைகளே நிழலாகத் தோற்றமளிக்கிறது என்று கூறினோம் அல்லவா? சித்தர்கள்  மனிதனின் நிழல் என்ற மாயைக்குப் பின்னால் உள்ள கர்ம வினை என்ற உண்மையைப் பார்க்கிறார்கள்.  இது நிழலை நிஜமாகப் பார்ப்பதாகும்.
அடுத்தபடியாக மனிதன்  என்ற உண்மையும் இறைவனின் நிழல்தானே? இறைவனின் பிரதிபலிப்புதானே மனிதனின் ஆன்மா? இதுவே  மனிதன் என்ற நிஜத்தை இறைவனின் பிரதிபலிப்பு என்ற நிழலாகப் பார்ப்பது. இதுவே சித்தர்களின்  நிலை. 
| கிணற்று நீரின் ஆன்மீகப் பண்பு | 
கிணற்று  நீரை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் கர்ம வினைகளிலிருந்து எப்படி விடுபட முடியும்  என்பதை சமீப காலத்தில் நடைமுறைபடுத்திக் காட்டியவரே காஞ்சி பரமாச்சார்யாள் ஆவார்கள்.  கிணற்று நீரை ராட்டினம் அல்லது சக்கரம் கொண்டு இறைக்காமல் கயிற்றின் மூலம் இறைத்து  உபயோகிப்பதால் நம் கர்ம வினைகள் களைய ஏதுவாகும் என்பதை இவரின் வாழ்க்கைச் சரிதம் நமக்கு  அழகாக உணர்த்துகிறது. 
ஒவ்வொரு சந்தியா  வந்தன வழிபாட்டையும் கிணற்று நீரைக் கொண்டு முறையாக இயற்றிய இப்பெருமான் புனித பாரத  தேசம் எங்கும் நடந்தே சென்று பூமியடி தீர்த்தங்களைச் சீர்படுத்தித் தந்து அற்புத ஆன்மீக  சேவை ஆற்றினார். இவரின் உன்னத சேவையைப் பாராட்டியே சித்தர்கள் இவரை கனிந்த கனி என்று  அன்புடன் போற்றினர். 
பழங்காலத்தில்  எவரும் சக்கரம், ராட்டினம் கொண்டு கிணற்றிலிருந்து நீரை இறைப்பது கிடையாது. மாடுகளைக்  கொண்டோ அல்லது மனிதர்கள் சேர்ந்தோ ஏற்றம் மூலம் நீர் இறைத்து விவசாயத்தை மேற்கொண்டனர்.  அதனால் நெல் மணிகளும் மற்ற பயிர்களும் எந்த வித தோஷமுமின்றி வளர்ந்து மக்களுக்கு ஆரோக்கியத்தை  அளித்தன. 
இன்றும் கிணற்று  நீரை முறையாகப் பயன்படுத்த விரும்புவோர் ராட்டினம் உபயோகிக்காமல் வெறும் தேங்காய் நார்  கயிற்றால் நீர் இறைத்து,
மூங்கில்  இலை மேலே தூங்கும் பனி நீரே 
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே
ஜெய ஜெய ஜெய சங்கர
ஹரஹர ஹர சங்கர
என்னும் மந்திரத்தை  ஓதி கிணற்று நீரை பயன்படுத்தி வந்தால் தீர்த்த தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.  ஊறல், தேமல் நீரிழிவு நோய் போன்ற பல நோய்களுக்கு தீர்த்த தோஷங்களே அடிப்படை காரணம்  என்பதை நினைவில் கொள்ளவும். 
 
 யுகங்கள் கடந்து நிற்கும்  
 திருப்பைஞ்ஞீலி தலவிருட்சம்
மேலும் வாஸ்து  இலக்கணப்படி கிணறுகள் அமைக்கும்போது அகலத்தைப் போல் மூன்று மடங்கு கிணற்றின் ஆழம் இருக்க  வேண்டும். அதாவது, கிணற்றின் விட்டம் ஆறு அடி இருந்தால் அதன் ஆழம் 18 அடிக்கு மேல்  இருக்கக் கூடாது என்பது வாஸ்து நியதி.
இந்த நியதிப்படி  கிணறுகள் அமைத்தால்தான் நாம் அக்கிணற்றிலிருந்து பெறும் நீர் ஆரோக்கியம் அளிப்பதாகவும்  தோஷங்கள் அற்றதாகவும் இருக்கும். மேலும் சூரிய ஒளி கிணற்று நீரில் சிறிது நேரமாவது  பாய்ந்தால்தான் தீர்த்தத்தில் பூத தோஷங்கள் விலகும். அக்காலத்தில் கட்டிடங்களை கட்டுவதற்கு  முன்னால் முதலில் ஈசான்ய திக்கில் கிணறுகள் அமைத்து அக்கிணற்றில் நீர் ஊறியவுடன் தீர்த்த  பூஜைகளை நிறைவேற்றி அதன் பின்னர்தான் மற்ற கட்டுமான வேலைகளை மேற்கொண்டனர். ‘
அதனால்தான் அக்காலங்களில்  எழுந்த கட்டிடங்கள் எத்தகைய வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களையும் எதிர் கொள்ளும்  வல்லமை பெற்றிருந்தன. 
இவ்வாறு மர நிழலையும்  கிணற்று நீரையும் முறையாகப் பயன்படுத்தி அதைப் பற்றி ஆத்ம விசாரம் செய்து வந்தால் இரண்டாம்  ஞான நிலையை மனிதன் அடைகிறான். 
தகரத்தையும் தங்கத்தையும்  ஒன்றாய்ப் பார்க்கும் நிலை ஐம்புலன்களால் பெறும் இன்ப நிலையைக் கடந்த ஞான நிலையைக்  குறிக்கிறது. அடுத்த கட்டமாக ஆண் பெண் பேதத்தைக் கடந்தால் கிட்டும் ஞானநிலை மனதைக்  கடந்து புத்தி நிலையில் பெறும் ஞான நிலையைக் குறிக்கிறது.
இவ்விரு நிலைகளையும்  எளிதில் பெற்றுத் தருவதே தல விருட்ச வழிபாடாகும். 
கோயில் பிரகாரத்தில்  முளைத்திருந்த புல் பூண்டுகளை தன் உழவாரப் படையால் அகற்றி அற்புதத் தொண்டாற்றிய திருநாவுக்கரசு  மூர்த்தி நாயனார் ரம்பை, ஊர்வசி போன்ற அற்புத தேவ நாட்டிய மங்கையர் அவர் அருகே நாட்டியமாடி  முத்து, வைர, மாணிக்கப் பரல்களை திருக்கோயில் பிரகாரங்களில் வாரி இறைத்தபோது அவற்றை  கூழாங் கற்களாகப் பாவித்து தன் உழவாரப் படையால் அகற்றி திருக்குளத்தில் வீசிய பெருந்தகையாவார். 
அப்பர் பெருமான்  இத்தகைய உயர் ஆன்மீக நிலைகளை அடைவதற்கு உறுதுணை புரிந்தது திருப்பூந்துருத்தியில் அவர்  இயற்றிய தல விருட்ச வழிபாடே என்று சித்த கிரந்தங்கள் பறைசாற்றுகின்றன. அப்பெருமான்  போற்றி வளர்த்த பாரிஜாத விருட்சத்தை இன்றும் தரிசித்து மகிழலாம்.
(அப்பர் பெருமான்  வித்திட்டு வளர்த்து விருட்ச பூஜைகள் நிறைவேற்றிய பவளமல்லி மரம் அதாவது தேவலோக பாரிஜாதம்  தற்போது திருப்பூந்துருத்தி நாராயண தீர்த்தர் ஜீவாலயத்தில் அமைந்துள்ளது,)
இத்தகைய ஞான நிலையால்  மக்களின் நடைமுறை வாழ்க்கைப் பிரச்னைகள் எப்படி தீரும் என்ற சந்தேகம் உங்களுக்குத்  தோன்றலாம் அல்லவா? இது குறித்த ஒரு சம்பவத்தை இங்கு விளக்குவதால் உங்களுடைய சந்தேகத்திற்கு  உரிய விடை கிட்டும்.
 
ஒரு முறை நமது  கோவாணாண்டிப் பெரியவரும் சிறுவனும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்த  பின்னர் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வழக்கம் போல் நடைப் பயணமாக வந்து கொண்டிருந்தனர்.  வழியில் துவரங்குறிச்சியில் உள்ள ஸ்ரீபூத நாயகி அம்மன் கோயிலில் தங்கி ஓய்வெடுத்துக்  கொண்டிருந்தனர். 
கடுமையான கோடைக்  காலமானதால் வெயில் தகித்துக் கொண்டிருந்தது. 
ஒரு வேப்பமர நிழலில்  பெரியவர் சிறுவனை அமர வைத்து அருகிலிருந்த ஒளியுல்லா சுவாமிகளைப் பற்றிய தெய்வீக ரகசியங்களை  சிறுவனுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். 
(பெரியவர் அளித்த  ஒளியுல்லா சுவாமிகள் ஜீவாலய மகிமைகளை கண்களைப் பாதுகாப்பது எப்படி? என்னும் எமது ஆஸ்ரம  நூலில் காணலாம்,)
அப்போது நடுவயதுள்ள  ஒரு தம்பதியரும் அவர்களுடைய பெண்ணும் மர நிழலுக்காக கோவணாண்டிப் பெரியவர் அமர்ந்திருந்த  வேப்ப மரம் அருகில்கு வந்தனர். பெரியவரைப் பார்த்ததும் அவர்களையும் அறியாமல் ஒரு மரியாதை  ஏற்படவே அவருடைய காலில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினர்.
பெரியவரும், “அடடே,  ஆத்தாளை மட்டும்தான் வணங்கனும், அடியேன் ஒரு பொடியன் என்னை எல்லாம் வணங்கக் கூடாது,  ஐயா,” என்று அன்புடன் கூறினார். 
வந்தவர்களோ, “சுவாமி,  உங்களைப் பார்த்தாலே ரொம்ப நல்லவர் மாதிரி தோன்றியது. அதனால்தான் உங்களை வணங்கினோம்,”  என்று சமாதானம் கூறினர்.
பெரியவர் தொடர்ந்து,  “இந்த உலகில் இறைவன் ஒருவன்தான் நல்லவன். ஆத்தா ஒருத்திதான் நல்லவள். எனவே, வெளித் தோற்றத்தைப்  பார்த்து யாரையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.,” என்று எச்சரிக்கை செய்தார். 
 
 திருமண தோஷங்கள் களையும் தீர்த்தம்  
 ஸ்ரீபூதநாயகி அம்மன் திருக்கோயில், துவரங்குறிச்சி
சிறிது நேர அமைதிக்குப்  பின், அவர்களைப் பற்றி நலம் விசாரித்தார். அப்போது அவர்கள் பெண்ணைப் பற்றிய பேச்சு  வந்தது. அதிலிருந்து அந்தப் பெண்ணிற்கு கல்யாண வயதைக் கடந்தும் பல வருடமாக திருமணமாகவில்லை  என்பது தெரிய வந்தது.
அப்பெண்ணின் தந்தை  பெரியவரிடம், “சுவாமி, இந்தப் பெண் பிறந்ததுமே இவள் பெயரில் பத்தாயிரம் ரூபாய் வங்கியில்  போட்டு வைத்தேன். இப்போது வட்டி நிறைய சேர்ந்து பல லட்சம் ரூபாய் ஆகி விட்டது. ஆனால்,  கல்யாணம் மட்டும் நிறைவேறாமல் உள்ளது, நாங்களும் நூற்றுக் கணக்கான வரன்களைப் பார்த்து  விட்டோம். ஆனால், யாருக்குமே எங்கள் பெண்ணைப் பிடிக்கவில்லை, அதனால் மிகவும் மன வருத்தம்  அடைந்து தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற முடிவுக்கு கூட அடிக்கடி நாங்கள் வந்து விடுவதுண்டு,”  என்று வருத்தத்துடன் கூறினார்.
அந்தப் பெண்ணை  பெரியவர் அன்புடன் பார்த்தார். அந்தப் பெண்ணைப் பார்த்த எவருமே கல்யாணம் செய்து கொள்ள  முன் வரமாட்டார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. காரணம் அந்தப் பெண் குழந்தைக்கு  ஒரு பெண்ணிற்கு உரித்தான எந்த உடல் வளர்ச்சியுமே இல்லாமல் இருந்ததுதான். நடை உடை பாவனையும்  ஒரு ஆணை ஒத்திருந்தது. இந்நிலையில் அவளை யார்தான் கல்யாணம் செய்து கொள்ள முன் வருவார்கள்?
பெரியவர், “பொண்ணுக்கு  சேர்த்து வைக்க வேண்டியது பணம் மட்டும் இல்லை, ஐயா. ஒரு பெண்ணிற்கு முக்கியமானது தெய்வ  சகாயம்தான். நிறைய பூஜைகள் செய்து ஒரு பெண் சேர்த்து வைக்கும் புண்ணிய சக்திதான் அவளுக்கு  நல்ல குணமுள்ள கணவனைத் தேடித் தரும். நீ சேர்த்து வைத்த பணத்தால் நகையை மட்டும்தான்  வாங்கலாம். குணமுள்ள மாப்பிள்ளையை வாங்க முடியுமா?” என்று கேட்டார்.
வந்தவர் பெரியவருடைய  கேள்விக் கணைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தலையைக் குனிந்து கொண்டார். 
“சரி, சரி, பரவாயில்லை.  ஆத்தாளை நம்பி வந்த எவரும் வெறுங் கையுடன் திரும்புவது கிடையாது. அடியேன் கூறும் பூஜையை  நம்பிக்கையுடன் ஒரு மண்டல காலத்திற்கு நிறைவேற்றி வாருங்கள். அம்பாள் உங்களுக்கு கருணை  புரிவாள். ”

ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்
மணப்பாறை
பின்னர் எதிரே  உள்ள தீர்த்தத்தை சுட்டிக் காட்டி ……
“இது அற்புதமான  பித்ரு சாப நிவர்த்தி தீர்த்தம். இத்தீர்த்தத்திலிருந்து ஒரு குடத்தில் நீரை எடுத்துக்  கொண்டு, அதை தலையில் சுமந்து சென்று பாத யாத்திரையாக மணப்பாறையிலுள்ள ஸ்ரீஅகத்தீஸ்வரர்  திருக்கோயிலுக்கு சென்று அங்குள்ள கொன்றை மரத்திற்கு அபிஷேகம் செய்து வாருங்கள். உங்கள்  பெண்ணிற்கு நல்ல வரன் அமைய அடியேனும் ஆத்தாளை வேண்டிக் கொள்கிறேன்,” என்று கூறி அவர்களுக்கு  விடை கொடுத்தனுப்பினார்.
அவர்கள் சென்றதும்  சிறுவன் பெரியவரிடம் கேள்விமேல் கேள்வியாக கேட்க ஆரம்பித்து விட்டான். “எப்படி வாத்யாரே,  உன்னைப் பத்தி முன்னபின்ன தெரியாம அவங்க பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து தரும்படிக்  கேட்கிறார்களே. நீயும் எந்த மறுப்பும் சொல்லாமல் அவர்களுக்கு வரன் அமைய பூஜை எல்லாம்  விவரமாக சொல்கிறாயே. என்னுடைய நண்பர்கள் யாரையாவது உன்னிடம் அழைத்து வரலாமா என்று கேட்டால்,  ஆயிரம் தடவை திருஅண்ணாமலையாரை கிரிவலம் வந்தால்தான் அவனை பார்ப்பேன் என்று அடம் பிடிக்கிறாய்.  இப்போது இங்கு வந்து போனவர்களைப் பார்த்தால் அவர்கள் அண்ணாமலையைப் பற்றிக் கேள்விப்பட்டது  கூட கிடையாது போல் தெரிகிறது. அப்படி இருக்கும்போது அவர்களுக்கு நீ அற்புதமான அறிவுரை  எல்லாம் தருகிறாயே? இது உனக்கே நியாயமா?” என்று பொரிந்து தள்ளினான். சிறுவன் மனதில்  நீண்ட நாட்களாக பெரியவர்பால் இருந்த குறையை இப்போது கொட்டித் தீர்த்து விட்டான். 
பெரியவர் ஒரு குறும்புப்  பார்வையை அவன் மேல் வீசி விட்டு, “எல்லாம் கேட்டு விட்டாயா? இன்னும் ஏதாவது பாக்கி இருக்கிறதா?  என்னைக்குத்தான் இந்தக் கிழவனை முழுசா புரிஞ்சுக்க போறியோ தெரியலையே,” என்று இழுத்தவாறே  கூறினார். 
சற்று நேரம் கழித்து,  பெரியவர் தொடர்ந்தார். “உன்னுடைய ஊகம்  ரொம்ப சரிதாண்டா, இங்கு வந்தவர்கள் திருஅண்ணாலையைப் பற்றி கேள்விப்பட்டது கூட கிடையாதுதான்.  ஆனால், ஒரு மகானுக்கு அவர்களுடைய தாத்தா அற்புதமான சேவை செய்திருக்கிறார் தெரியுமா? ”
சிறுவன், மகான்  என்ற வார்த்தையைக் கேட்டதும் ஒரு புறம் சந்தோஷமும், மறுபுறம் திகிலும் அடைந்தான். காரணம்,  மகான் என்று பெரியவர் சொன்னால் கூடவே ஒரு கதை இருக்கும். ஆனால், அதே சமயம் அவர்களைப்  பற்றி தெரியாமல் அவர்கள் அடியார்களைப் பற்றி இகழ்ந்து விட்டால் கூடவே சாபமும் தொற்றிக்  கொண்டு விடுமே. 
பெரியவர் நீண்ட  நேரம் சிறுவனைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல் தொடர்ந்து, “அந்த மகான் வேறு யாருமல்ல. ஏற்கனவே  உனக்குத் தெரிந்த பாஸ்கரராயர்தான். அற்புதமான அம்பாள் பக்தர். அந்த பாஸ்கரராயரிடம்  இவருடைய தாத்தா முப்பது வருடமா சேவை செய்தான். பாஸ்கர ராயர் அடிக்கடி அம்பாளிடம் பேசுவார்  பலரும் தங்களைப் புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு பாஸ்கரராயரிடம் பல அசட்டுத்தனமான  கேள்விகளைக் கேட்பதுண்டு. பாஸ்கரராயருக்கு அந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியாவிட்டாலும்  அம்பாள் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி விடுவாள். “
 
 ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த  
 ஸ்ரீசக்கரம், சிதம்பரம்
“இவ்வாறு அம்பாள்  பாஸ்கர ராயரிடம் சொல்லிய விஷயங்கள் கோடி கோடியாகும். உதாரணத்திற்கு சொன்னால். ஒரு பக்தர்  பாஸ்கர ராயரிடம், சுவாமி, முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்கிறார்களே, உண்மையில்  அத்தனை தேவர்கள் இருக்கிறார்களா? என்று கேட்க பாஸ்கரராயரும் ஆமாம், அதில் என்ன சந்தேகம்  என்று கேட்டார். ”
“அப்படியானால் அவர்களின்  பெயர்களைச் சொன்னால் நான் எழுதிக் கொள்வேன் என்று பேப்பர் பேனாவுடன் தயாரானார் அங்கு  வந்த பக்தர். உடனே பாஸ்கர ராயர் அம்பாளை அழைக்க அம்பாள் பாஸ்கர ராயரின் இடது தோளில்  அமர்ந்து கொண்டு, முப்பத்து முக்கோடி தேவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றையும் பாஸ்கரராயரின்  காதில் சொல்ல அவரும் அந்த தேவர்களின் பெயர் ஒவ்வொன்றையும் வாய்விட்டுச் சொல்லலானார். ”
“நூறு, ஆயிரம்,  லட்சம் என்று தேவர்களின் பெயர்களை பாஸ்கரராயர் சொல்லிக் கொண்டே வந்தார். வந்தவரும்  வேகம் வேகமாக அந்தப் பெயர்களை எழுதிக் கொண்டே வந்தார். ஒரு கால கட்டத்தில் அவரால் தொட,ர்ந்து  எழுத முடியாமல் மிக்க வேதனை அடைந்து பாஸ்கரராயரின் கால்களில் விழுந்து மன்னிப்புக்  கேட்டுக் கொண்டார். ”
“அன்றிலிருந்து  அந்த பக்தர் பாஸ்கரராயரின் உத்தம பக்தர் ஆனார். பாஸ்கர ராயர் எங்கு சென்றாலும் அவருடன்  சென்று அவர் கூறும் விஷயங்களை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டார்.  ஒரு நாளில் சூரியன்  காலையில் உதிப்பது முதல் மாலையில் மறையும் வரை சூரியனுடைய கதிர்களில் ஏழு நிமிடத்திற்கு  ஒரு முறை அருண கதிர் மாற்றம் ஏற்படும். அவ்வாறு ஏழு நிமிடங்களுக்கு ஒரு முறை மாறும்  அருண கதிர்களுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. இது தொன்று தொட்டு நடக்கும் ஒரு அற்புதம்.  ஒரு முறை ரத சப்தமி அன்று சூரியன் வெளியிட்ட அனைத்து அருண கதிர்களின் திருநாமத்தையும்  பாஸ்கர ராயர் சுற்றி இருந்தவர்களுக்குத் தெரிவித்தார். இதுவும் அம்பாள் அவரது இடது  தோளில் அமர்ந்து கூறிய இரகசியங்களுள் ஒன்று.”
  “அதே போல ஸ்ரீ சக்ரத்தில்  உள்ள 43 கோணங்களில் 43 கோடி யட்சணிகளும் தேவதைகளும் உறைகின்றனர். அவர்கள் அனைவருடைய  திருநாமத்தையும் அம்பாளிடம் கேட்டு பாஸ்கர ராயர் வெளியிட்டார். இவ்வாறு பல அற்புதமான  விஷயங்களை எல்லாம் உலகத்தவர் அறிய இங்கு வந்தவருடைய தாத்தா ஒரு கருவியாக இருந்ததால்தான்  அவருடைய பேத்திக்கு வரன் பார்க்கும் ஒரு சிறிய பொறுப்பை ஆத்தா இந்த கடையவனிடம் (கோவணாண்டிப்  பெரியவர்) கொடுத்தாள்,” என்று நா தழுதழுக்க பெரியவர் கூறியதைக் கேட்டதும் சிறுவனுக்கும்  கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. 
  பெரியவர் தொடர்ந்தார்,  “ஸ்ரீசக்ர உபாசகர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலம் என்பதால்தான்  பாஸ்கரராயரின் அன்புக்குப் பாத்திரமான அவர்களை அங்கு அனுப்பி வைத்தேன்.”
  கோவணாண்டிப் பெரியவர்  அருளிய வண்ணம் அந்தப் பெண்ணும் தினம் ஒரு குடத்தில் தீர்த்தத்தைத் தலையில் சுமந்து  சென்று மணப்பாறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கொன்றை மரத்திற்கு அபிஷேகம்  செய்து வந்தாள். 
  கடுமையான கோடைக்  காலமாக இருந்ததால் உள்ளங்கால் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு மிகவும் துன்பத்தை அளித்தன.  இருப்பினும் கோவணாண்டிப் பெரியவரின் அன்பு வார்த்தைகளில் இருந்த கனிவு எத்தகைய உடல்,  மன துன்பத்தையும் தாங்கும் வல்லமையை அளித்ததால் அப்பெண் தொடர்ந்து தல விருட்ச வழிபாட்டை  இயற்றி வந்தாள்.
  சரியாக ஒரு மண்டல  கால தலவிருட்ச பூஜை நிறைவேறியவுடன் புதுக்கோட்டை அருகே உள்ள திருவேங்கைவாசல் என்னும்  ஊரிலிருந்த ஜமீன்தார் ஒருவருடைய மகன் அப்பெண்ணிற்கு மணாளனாக வந்தமைந்தான்.
| ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருத்தலம் | 
திருச்சி அருகே உள்ள மணப்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீவடிவுடைநாயகி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். மதுரை மீனாட்சி அம்மன் திருத்தலத்திற்கு முன் தோன்றிய பெருமையை உடையது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்குப் பின் அத்தம்பதிகள் வெகுநாட்களாக குழந்தை பேறில்லாமல் இருந்தார்கள் அல்லவா? பின்னர் ஐயர்மலை ஈசனருளால் அந்தத் தெய்வீக தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. ஆனாலும், கர்ப்பத்தில் இருந்த குழந்தைக்கு போதிய உடல் வளர்ச்சி இல்லாததை அறிந்த அரண்மனை ராஜ வைத்தியர்கள் மீனாட்சி அம்மனை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலத்திற்கு சென்று வருமாறு வேண்டினர்.
 
 தனபீட ஸ்ரீசக்கரம் பொலியும் 
 ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருத்தலம், மணப்பாறை
அக்காலத்தில் ஸ்ரீஅகத்தீஸ்வரர்  திருத்தலத்தில் தாயுமான சுக சித்தர் என்று திருநாமம் தாங்கிய ஓர் அற்புத சித்த பிரான்  அங்கு தவம் இயற்றி வந்தார். அவருடைய தவம் என்னவென்றால் யாருடைய கர்ப்பத்தில் குழந்தை  போதுமான வளர்ச்சி இன்றி இருக்கிறதோ அவர்கள் இப்பெருமானை வேண்டினால் அவர்களுடைய கர்ப்பத்தில்  உள்ள சிசுவை இவர் தன்னுடைய வயிற்றுக்கு மாற்றிக் கொண்டு விடுவார். சரியாக 54 நாட்கள்  கழிந்ததும் மீண்டும் அக்குழந்தைக்கு உரிய தாய்க்குக் குழந்தையை மாற்றி விடுவார்.
தற்காலத்தில் டெஸ்ட்  டியூப் பேபி என்று சொல்லும் விஞ்ஞான லீலையை அக்காலத்தில் எந்த வித விஞ்ஞான உபகரணமும்  இன்றி செயலாற்றிய அற்புத மகானே தாயுமான சுக சித்தர். இடுசுரை கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின்  கர்ப்பப்பை அல்லாது வேறு இடத்தில் கர்ப்பம் தாங்கும் முறையைக் குறிக்கும் சித்த மொழியாகும். 
ஔர்வரின் தாய்  தன் குழந்தையைக் காக்க கர்ப்பத்திலிருந்த சிசுவை இந்த சித்தியின் மூலம்தான் தன்னுடைய  தொடைக்கு மாற்றிக் கொண்டு எதிரிகளிடமிருந்து தப்பித்தார்கள்.
இந்த இடுசுரை சித்தியை  பிரயோகம் செய்ய உதவும் மூலிகைகளும் உண்டு. இந்த அற்புதமான மூலிகைகள் வெள்ளியங்கிரிப்  பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. குள்ளகா, மப்புகா என்ற மலை வாழ் இன மக்கள் மட்டுமே  இந்த மூலிகைகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். தங்களின் அன்புக் காணிக்கையாக இத்தகைய  மூலிகைகளை தாயுமான சுக சித்தருக்கு அவ்வப்போது அவர்கள் அளித்து வந்தனர்.
அந்த மூலிகைகளிலிருந்து  அஞ்சனா கூறு ரகசிய முறையில் அஞ்சனம் செய்து அதை உள்ளங்கைகளில் தடவி இடுசுரை கர்ப்ப  பிரயோகத்தை மேற்கொண்டார் தாயுமான சுக சித்தர்.  
அவ்வாறு தாயுமான  சுக சித்தரால் கர்ப்பம் தாங்கப்பட்ட குழந்தைகள் நல்லவிதமாக பிரசவம் அடைந்ததோடு மட்டும்  அல்லாமல் வளரும் பருவத்தில் நல்ல இறை பக்தியுடனும் நற்குணங்களுடனும் சிறந்து விளங்கினர்.
அத்தகைய அற்புத  மகானை ஸ்ரீசுந்தர பெருமானும் மீனாட்சி தேவியும் வணங்கி தங்கள் குறையைத் தெரிவிக்கவே  சித்தபிரானும் அவர்கள் வேண்டுகோளை ஏற்று மீனாட்சி தேவிக்காக 54 நாட்கள் கர்ப்பம் தாங்கி  உக்கிர வழுதி பாண்டியனைப் பெற்றெடுக்க அற்புத சேவை புரிந்தார்.
ஸ்ரீரெங்க பஞ்சமி அன்று
 நகர் திருத்தலத்தில் ஒலித்த
பாஞ்சசன்ய சங்கு நாதம்!
தாயுமான சுக சித்தரின்  திருஉருவச் சிலையை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலத்தில் இன்றும் தரிசித்து பயன்பெறலாம்.  குழந்தைப் பேறு இல்லாதவர்களும், கர்ப்பம் தாங்கிய பின் போதுமான வளர்ச்சி அடையாத குழந்தைப்  பேறால் வருந்துவோரும், கர்ப்பம் தாங்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு பலம்  இழந்தோரும் நற்சந்ததி பெற இப்பெருமானை வணங்கி இளநீர் தானம் அளித்து வந்தால் தங்கள்  குறைபாடுகள் நீங்கப் பெறுவர். 
தற்காலத்தில் போதுமான  வளர்ச்சி அடையாத குழந்தைப் பேறு உடையவர்கள் அதை அழித்து விடுவதைக் காண்கிறோம். இது  தெய்வீகத்திற்கு முற்றிலும் ஏற்புடையது அன்று. எந்தச் சூழ்நிலையிலும் கருச் சிதைவு  ஏற்புடையது அன்று என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். 
ஸ்ரீவித்யா இரகஸ்யத்தில்  அனைத்து ஜீவன்களின் சிருஷ்டி ரகஸ்யமும் ஒரு அங்கமே. இதன் ஒரு பகுதியாக உள்ளது மனிதர்களின்  சிருஷ்டி ரகஸ்யம். மனிதர்களின் சிருஷ்டி ரகஸ்யத்தில் ஒரு பகுதியாகத் திகழ்வதே ஸ்ரீதன  சிருஷ்டி ரகஸ்யமாகும். சக்தி வாய்ந்த இந்த அற்புத ஸ்ரீதன சிருஷ்டி ரகஸ்யத்தை ஸ்ரீஅகத்திய  பெருமானுக்கு அம்பாள் புகட்டிய திருத்தலமே மணப்பாறை ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருத்தலமாகும்.
எனவே இத்திருத்தலம்  பெண்களின் மார்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் குறிப்பாக மார்பு புற்று நோய்களுக்கு  நிவாரணம் அளிக்கும் ஸ்ரீதன சக்திகள் பொலியும் தலமாகும். இத்தல அம்பிகைக்கு உருண்டை  மஞ்சள், கொம்பு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என்ற மூன்று வித மஞ்சளை கையால் அரைத்து அபிஷேகம்  நிறைவேற்றி வந்தால் பெண்களுக்கு வரக் கூடிய அனைத்து நோய்களுக்கும், சிறப்பாக மார்பு  சம்பந்தமான நோய்களுக்கு எளிதில் நிவாரணம் கிட்டும். தாய்மைப் பேறு அடைந்தவர்கள் தங்கள்  குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் ஏங்கினால் அவர்களுக்கு  இத்தகைய வழிபாடு உறுதுணை புரியும். 
| ஸ்ரீதன சக்ர பீடம் | 
ஸ்ரீலலிதா பரமேஸ்வரி  உறையும் ஸ்ரீசக்கரத்தை பலரும் பற்பல யந்திர வடிவில் வழிபட்டு வருகின்றனர். ஸ்ரீஆதிசங்கரர்  உள்ளிட்ட பல மகான்கள் ஸ்ரீசக்கரத்தை கல், உலோகங்கள் போன்றவற்றில் பொறித்து பல திருத்தலங்களிலும்  நிர்மாணித்துள்ளனர். திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம், திருவல்லிக்கேணி (சென்னை)  ஸ்ரீபாரத்தசாரதி பெருமாள் ஆலயம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயம் போன்ற திருத்தலங்களில்  ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை பக்தர்களின் வழிபாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது. 
திருச்சி திருவானைக்  கோவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஸ்ரீசக்கரம் பொறித்த தாடங்கம் அணிந்து பக்தர்களுக்கு ஸ்ரீவித்யா  சக்திகளை வாரி வழங்குகிறாள்.
இவ்வாறு ஸ்ரீசக்கரங்கள்  பல வடிவங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் இவற்றில் சிறப்பான முறையில் ஸ்ரீதன ஸ்ரீசக்கர  பீடம் அமைக்கப்பட்ட மிகவும் அபூர்வமான திருத்தலமே திருச்சி மணப்பாறையில் அமைந்துள்ள  ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலமாகும். 

மணப்பாறை ஸ்ரீஅகத்தீஸ்வரர்
இவ்வுலகில் மிகவும்  பவித்திரமான, புனிதமான, தூய்மையான, தெய்வீகமான, அன்பான, சிறப்பான, நலமான, கனிவான, உண்மையான  ஒரு பொருளைக் கூற வேண்டுமென்றால் அதுவே பெண்களின் தனமாகும். இக்காரணம் பற்றியே அகிலாண்டநாயகியும்  ஸ்ரீஉண்ணாமுலை அம்மன் என்ற திருநாமம் கொண்டு அருளாட்சி செய்து வருகிறாள். ஆனால், இத்தகைய  மதிப்பு வாய்ந்த, தெய்வீகப் பொக்கிஷமானது எதிர்காலத்தில் ஒரு வியாபாரப் பொருளாக அவமதிக்கப்படும்  என்பதை தனது ஞான திருஷ்டியால் உணர்ந்த ஸ்ரீஅகத்தியப் பெருமான் மனித குலத்தை எதிர் வரும்  துன்பத்திலிருந்த மீட்பதற்காக ஸ்ரீதன ஸ்ரீசக்ர சூட்சும பீடத்தை ஸ்ரீஅகத்தீஸ்வர திருத்தலத்தில்  நிர்மாணித்து இறைவனின் நிரந்தர அன்பிற்குப் பாத்திரமானார்.
ஸ்ரீதனம் என்பது  மக்களின் நற்சந்ததி விருத்திக்காக இறைவன் பெண்களுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம். மருமகள்  என்னும் ஸ்ரீதனம் ஒரு இல்லத்தில் குடியேறாவிட்டால் அந்த இல்லத்தில் எப்படி சந்ததி தழைக்கும்?  எனவேதான் அக்காலத்தில் திருமணம் என்பது பெண்கள் கொண்டு வரும் ஸ்ரீதனம் என்று போற்றினார்கள்.  இதை வருங்கால மாமியார்கள் உணர்ந்தால் மாமியார் மருமகள் தகராறு என்பது ஒரு கடந்த கால  சம்பவம் என்று ஆகி விடும் அல்லவா? 
அதே போல ஸ்ரீதனத்தைக்  கொண்டு மருமகளாய் வரும் பெண்களும் வெறும் பணம், ஆடம்பரம், ஏட்டுப் படிப்பு, உடல் அழகு  என்பது ஸ்ரீதனம் அல்ல, கடவுள் பக்தி, பணிவு, நற்குணம், தயை என்பதே பெண்களின் ஸ்ரீதனம்  என்று உணர்ந்தால் அதை விட அமைதி நிலவும் சிறந்த குடும்பம் வேறேது?
எனவே, மணப்பாறை  ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருத்தலம் பெண்களுக்கான ஒரு வரப்பிரசாத தலம் என்றே கூறலாம். பெண்களுக்கு  வேண்டிய உடலழகு, நற்பண்புகள் அனைத்தையும் அருள வல்லதே இத்திருத்தலமாகும். கிளியோபாட்ரா  என்ற கிரேக்க பேரழகி பூர்வ பிறவிகளில் வழிபட்ட தலமே இத்திருத்தலமாகும். பொங்குதனமாலினி  என்று அழைக்கப்பட்ட கிளியோபாட்ரா ஆறு பிறவிகளில் இத்தல இறைவனுக்குத் தொண்டு செய்தே  சக்கரவர்த்திகளும் கண்டு வியக்கும் அழகு ராணியாகத் திகழந்தாள் என்பது இதுவரை நீங்கள்  அறியாத ரகசியமாகும். 
தெரிந்தோ தெரியாமலோ  தங்கள் உடலழகைத் தவறாகப் பயன்படுத்திய பெண்களும் ஆண்களும் மீண்டும் அத்தகைய தவறுகளைச்  செய்வதில்லை என்ற உறுதி பூண்டு இத்தல இறைவனை வேண்டி வழிபட்டால் தக்க பிராயசித்த வழிமுறைகளை  பெற அருள்புரியும் தலம்.
இத்திருத்தலத்தின்  தலவிருட்சமான கொன்றை மரம் தற்போது மறைந்து விட்டாலும் இங்குள்ள வில்வ மரத்திற்கோ, அரச  மரத்திற்கோ துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் திருக்குள தீர்த்த நீரை அபிஷேகம் செய்து  வழிபடுதலால் அற்புத பலன்களைப் பெறலாம். 
இத்திருத்தலம்  மட்டும் அல்லாது எங்கெல்லாம் தலவிருட்சங்கள் மறைந்துள்ளனவோ அங்கெல்லாம் இத்தகைய தேவ  விருட்ச வழிபாடுகளை மேற்கொள்தலால் தலவிருட்சங்களை வழிபட்ட பலன்களைப் பெறலாம். இறைவன்  இல்லாத ஆலயம் உண்டா, அது போல தலவிருட்சம் இல்லாத திருக்கோயில்கள் கிடையாது. சில திருத்தலங்களில்  அவை சூட்சுமமாகவும் மற்ற தலங்களில் அவை அனைவரின் கண்களுக்குத் தெரியும் வண்ணத்திலும்  எழுந்தருளி இருப்பது உண்டு. 
எனவே, தல விருட்சங்களை  அறிய முடியாத திருத்தலங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள ஆல், அரசு, புரசு, வில்வம்,  துளசி, வன்னி, வேம்பு, தென்னை, கொன்றை, பனை, மணமுள்ள மலர்ச் செடிகள், அருகம்புல் இவற்றிற்கு  தீர்த்தம் வார்த்து வழிபட்டால் அதுவே தலவிருட்ச வழிபாட்டை பூரணமாக அளிக்கும் என்பதை  நினைவில் கொள்ளவும். 
அது மட்டுமல்லாமல்  தலவிருட்சம் மறைந்த திருத்தலங்களில் மீண்டும் அத்தல விருட்ச கன்றுகளை உரிய முறையில்,  தகுந்த அனுமதியுடன் பெற்று அத்திருக்கோயில்களில் வளர்த்து, பேணி, பராமரித்து வருதல்  பக்தர்களின் கடமையாகும். ஒரு தலவிருட்சத்தை பராமரித்தல் என்பது ஒரு கோயில் கட்டி கும்பாபிஷேகம்  நிறைவேற்றிய பலனைத் தரும் என்பது பெரியோர்களின் உறுதி மொழி.
| மூன்றாவது ஞான நிலை | 
  மூன்றாவது ஞான  நிலையாக சித்தர்கள் அருள்வது என்னவென்றால் பூ, காய், பழம் இவற்றை ஒன்றாகக் காண்பதாகும். 
  
  இந்நிலையை சற்று  விளக்குவோம். ஒரு பூ எப்போது, அதாவது இத்தனை மணி, இத்தனை நிமிடம், இத்தனை விநாடி நேரத்தில்  காயாக மாறுகிறது என்று உறுதியாகக் கூற முடியுமா? அதே போல் காய் ஒன்று குறிப்பிட்ட மணி,  நிமிடம், விநாடியில் கனியாக மாறி விட்டது என்று திட்டவட்டமாகக் கூற முடியுமா?
  
  ஆனால், அதே சமயத்தில்  கனி முன்பு ஒரு சமயம் காயாக இருந்தது என்றும், காய் ஒரு கால கட்டத்தில் பூவாக இருந்தது  என்பதை உறுதியாகக் கூற முடியும். எனவே கனி என்பது காய், காய் என்பது பூ, அதாவது கனி  என்பது காயையும் குறிக்கும், பூவையும் குறிக்கும் என்பதுதானே உண்மை. 
  
  இத்தகைய தத்துவ  விளக்கத்தை ஒரு உண்மை நிகழ்ச்சி மூலம் விளக்கினால் அது மேலும் சுவை உடையதாக இருக்கும்.
  
  ஒரு முறை கீர்த்தி  வாசன் என்னும் ஒரு அன்பர் நமது ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் குருநாதரான கோவணாண்டிப்  பெரியவரைக் காண வந்தார். அப்போது அவருக்கு வயது 30. அவருடைய மனைவியின் பெயர் அலமேலு,  அவருக்கு வயது 25. ஐந்து வருடங்களுக்கு முன் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்திருந்தது.  ஆனால், இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. அவர்களும் தங்களுக்குத் தெரிந்த இறை வழிபாடுகளை,  தீர்த்த நீராடல்களை மேற்கொண்டும் எந்த வித பலனும் இல்லாததால் ஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளைத்  தரிசனம் செய்து தங்கள் பிரச்னைக்கு ஒரு தீர்வு வேண்டி நின்றனர்.
  
  பெரியவரும் அவர்கள்  கூற்றைப் பொறுமையாகக் கேட்டு விட்டு,  உங்களுடைய,  (அதாவது கீர்த்திவாசனுடைய) காலஞ் சென்ற தகப்பனார் உங்கள் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்.  உங்களுக்குக் குழந்தையாக பிறப்பதற்காக அவர் இறைவனிடம் மிகவு மனமுருகி பிரார்த்தனை செய்து  கொண்டிருக்கிறார். உரிய காலம் வரும்போது உங்களுக்குக் குழந்தையாகத் தோன்றுவார். அதுவரை  நீங்கள் சந்தான கோபால மந்திரத்தை ஜபித்து, காய்ச்சிய பசும் பாலை பெருமாளுக்கு நைவேத்தியம்  வைத்து அந்த பால் பிரசாதத்தை ஐந்து வயதிற்குக் குறைந்த குழந்தைகளுக்குத் தானமாகக் கொடுத்து  வாருங்கள்,” என்று கூறினார்.
 
 சூரிய பகவான் பூஜிக்கும் 
 திருஆனைக்கா ஸ்ரீகுபேர லிங்க மூர்த்தி
 அந்த தம்பதியினரும்  பெரியவர் கூறிய வண்ணமே தொடர்ந்து சந்தான கோபால கிருஷ்ணனை பிரார்த்தித்து பசும் பால்  தானம் அளித்து வந்தனர். அவர்களுடைய வழிபாடு 30 வருடங்களுக்கு மேல் தொடர்ந்தது. கீர்த்திவாசனுக்கு  62 வயது பூர்த்தி அடைந்தபோது அவருடைய மனைவி தன்னுடைய 57வது வயதில் ஒரு அழகிய பெண் குழந்தையைப்  பெற்றெடுத்தாள். தம்பதிகள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. ஸ்ரீமகா லட்சுமியே  தங்களுக்குக் குழந்தையாக வந்த பிறந்ததாக எண்ணி பூரிப்படைந்தனர். அவ்வளவு அழகுடன் ஜொலித்தது  குழந்தை.
  
  அந்தத் தெய்வக்  குழந்தையை எடுத்துக் கொண்டு நேரே ராயபுரம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலை அடைந்தனர் பெரியவரிடம்  நன்றி சொல்வதற்காக. ஆனால், இதற்கிடையில் பெரியவர் தன்னுடைய பூத உடலை மறைத்துக் கொண்டு  விட்டதால் அத்தம்பதிகள் என்ன செய்வதென்று தெரியாமல் அங்காளிக்கு நன்றியைத் தெரிவித்து  விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அப்பெண் குழந்தைக்கு ஸ்ரீவித்யா என்று பெயரிட்டு  அன்புடன் வளர்த்து வந்தனர். 
  
  அதே சமயம் கோவாணண்டிப்  பெரியவரைப் பற்றி தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். ஓராண்டிற்குப்  பிறகு நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் இருப்பிடம் அறிந்து அவரை அணுகினர். தங்களுடைய  அந்திமக் காலத்தில் கிடைத்த சந்தானப் பாக்கியத்தைப் பற்றி அவரிடம் தெரியப் படுத்தி  எப்படி அந்தக் குழந்தையை வளர்ப்பது என்று அவரிடம் ஆலோசனை கேட்டனர்.
  
  நமது சுவாமிகள்,  “முப்பது வருடங்களுக்கு மேல் ஆழ்ந்த நம்பிக்கையுடன் நீங்கள் மேற்கொண்ட பூஜைக்காக அருணாசலேஸ்வரர்  உங்களுக்கு அளித்தது அல்லவா இந்த இறைப் பிரசாதம். அதனால் இந்தக் குழந்தையின் எதிர்காலத்தைப்  பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உரிய காலத்தில் நடக்க வேண்டிய விஷயங்கள் தானாக நடக்கும்.  இக்குழந்தைக்கு வேண்டிய கல்விச் செல்வத்தை அளிப்பதற்கான ஏற்பாடுகளை தாராளமாக மேற்கொள்ளலாம்,  ”, என்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார்.
  
  சுவாமிகள் தொடர்ந்து,  ” இக்குழந்தையின் எதிர்காலத்தை வளமாக ஆக்குவது இனி அதன் பொறுப்பில்தான் உள்ளது. அதைப்  பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்,” என்று கூறி அக்குழந்தை பள்ளியில் சேர்ந்தவுடன்  துளசி மாதாவுக்கு தினந்தோறும் நீர் வார்த்து அதை வழிபடுமாறு அத்தம்பதிகளுக்கு நல்வார்த்தைகள்  கூறி அனுப்பினார் நமது சுவாமிகள்.
  

ஸ்ரீதீர்த்த நாராயணர் ஜீவசமாதி
திருப்பூந்துருத்தி
  சுவாமிகள் அருளிய  வண்ணம் கீர்த்தி வாசன் தம்பதிகள் ஸ்ரீவித்யா ஐந்து வயது நிறைந்தவுடன் அதை பள்ளிக் கூடத்தில்  சேர்த்து அதற்கு உரிய கல்வி ஞானத்தை அளிக்கத் தொடங்கினர். மேலும் தங்கள் வீட்டுக் கூடத்தில்  இரண்டு கிருஷ்ண துளசிச் செடிகளை வைத்து தினமும் அக்குழந்தை மூலம் அதற்கு தீர்த்தம்  வார்த்து விருட்ச பூஜை நிறைவேற்றும் முறையையும் அக்குழந்தைக்குப் புகட்டினர். 
  
  ஸ்ரீவித்யாவும்  பெற்றோர்கள் அருளிய வண்ணம் துளசி பூஜையை முறையாக நிறைவேற்றி வந்தாள். பள்ளியில் எல்லாப்  பாடங்களிலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று பள்ளி ஆசிரியைகளிடமும் சக மாணவிகளிடமும் நல்ல  குணவதி என்ற பெயரையும் பெற்றாள். 
  
  அன்பும் அழகும்  ஒன்று சேர்ந்து அனைவரின் அன்புக்குப் பாத்திரமான ஸ்ரீவித்யா 12ம் வகுப்பு படித்து முடிந்ததும்  மேற்கொண்டு அதன் வாழ்க்கை நிலை குறித்து அறிய மீண்டும் கீர்த்திவாசன் தம்பதியர் நமது  சுவாமிகளைத் தரிசனம் செய்ய சென்னைக்கு வந்தனர்.
  
  ஸ்ரீவித்யாவுக்கு  ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து முடித்து விட்டால் தங்களுடைய பொறுப்பை சிறப்பான  முறையில் நிறைவேற்றி விடலாம் என்ற தங்கள் எண்ணத்தை சுவாமிகளிடம் தெரிவித்தனர். 
  
  சுவாமிகளும் அவர்களுடைய  நியாயமான எண்ணத்தை ஏற்றுக் கொண்டார். இருப்பினும் ஸ்ரீவித்யாவின் விருப்பத்தையும் இவ்விஷயத்தில்  தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அக்குழந்தையிடம் இதுபற்றி கேட்டார்., ஆனால், ஸ்ரீவித்யாவின்  பதில் யாரும் எதிர்பாராத வகையில் அமைந்தது. 
  
  அவள், ” என்னுடய  பெற்றோர் அவர்களுடைய அந்திமக் காலத்தில் என்னைப் பெற்றெடுத்து மிகவும் சிரமப்பட்டு  என்னை வளர்த்து வந்தனர். எவ்வளவோ கஷ்டமான சூழ்நிலையில்தான் என்னைப் பள்ளியில் சேர்த்து  நான் படிக்க வழி செய்தனர். அப்படி இருக்கும்போது நான் திருமணம் செய்து கொண்டு தள்ளாத  வயதில் இருக்கும் அவர்களை தன்னந் தனியாக விட்டு விட்டு செல்வது நான் அவர்களுக்கு செய்யும்  நன்றிக் கடனாக இருக்குமா? எனவே என்னுடைய தாயும் தந்தையும் உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு  சேவை செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம், இதற்கு நீங்கள் அனுமதி அளிக்க  வேண்டும். அவர்களுடைய காலத்திற்குப் பின் எனக்குத் திருமணம் என்பது அத்தியாவசியம் என்று  நீங்கள் கூறினால் அப்போது உங்கள் விருப்பப்படி நான் நடந்து கொள்கிறேன்”, என்று இருகரம்  கூப்பி சுவாமிகளிடம் தன்னுடைய எண்ணத்தைத் தெரிவித்தாள்.
 சுவாமிகள் ஸ்ரீவித்யாவின்  வார்த்தைகளைக் கேட்டு புன்முறுவல் பூத்தார். அவர் எதிர்பார்த்ததுதானே இந்த பதில். ஆனால்,  கீர்த்திவாசன் தம்பதிகள் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தச் சின்ன வயதில் இவ்வளவு  அன்பைப் பொழியும் தங்கள் செல்லக் குழந்தையின் பெருந்தன்மையை எண்ணி வியப்படைந்து ஆனந்தக்  கண்ணீர் உகுத்தனர். 
  ஸ்ரீவித்யாவின்  வார்த்தைகளில் இருந்த உண்மை சுற்றி இருந்த அடியார்களை ஒரு உலுக்கு உலுக்கியது. அனைவரும்  அந்தக் குழந்தைக்கு பெற்றோர்களிடம் இருந்த அன்பைக் கண்டு பேராச்சர்யம் அடைந்தனர். 
  
  
சுவாமிகள் ஸ்ரீவித்யாவின்  விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்., அதன் பின்னர்  அங்கிருந்த அடியார்களிடம் இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய அற்புத  கருத்துக்களை விவரித்தார். 
| நான்காவது ஞான நிலை | 
பூலோக  கலியுக மக்களின் நான்காவது ஞான நிலையாக சித்தர்கள் அருள்வது ஏணியும் கோணியும் ஒன்றெனக்  காண்பதாகும். இந்த ஞான நிலையை சற்று விரிவாகக் காண்போமா?
  ஞானத்தின்  முதல் நிலையான தங்கத்தையும் தகரத்தையும் ஒன்றாகக் காண்பது என்றால் இரண்டும் உலோகம்  என்ற ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டாவது ஞான நிலையில் ஆணையும் பெண்ணையும் ஒன்றாகக் காண்பதில்  இருவரும் மனிதர்கள் என்ற ஒரு ஒற்றுமையைக் காணலாம். பழம், காய், பூ இவற்றை ஒன்றாகக்  காணும் மூன்றாம் ஞான நிலையில் இம்மூன்றும் ஒரே மரத்தின் அங்கங்கள் என்ற ஒற்றுமையைக்  காணலாம்.
  ஆனால்,  ஏணியும் கோணியும் எவ்வித சம்பந்தமும் இல்லாத வெவ்வேறு பொருட்கள். இவற்றை எப்படி ஒன்றாகக்  காண முடியும்? இந்த ஞான நிலையை விளக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், இத்தகைய ஞான நிலையை  அடைந்தவர்களின் வரலாற்றை விளக்குவதன் மூலம் இந்த ஞான நிலையைப் பற்றி நீங்கள் அறிந்து  கொள்வது எளிதாகும்.
  மகாபாரதத்தில்  ஒரு நிகழ்ச்சி….

மணப்பாறை ஸ்ரீவடிவுடை நாயகி அம்மன்
 ஓர்  அடர்ந்த வனம். சுற்றிலும் விலங்குகள், பறவைகளின் சஞ்சாரம் நிறைந்திருந்தது. அந்த ரம்மியமான  சூழ்நிலையில் பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் துரோணாச்சாரியார் வில்வித்தையைக்  கற்பித்துக் கொண்டிருந்தார். ஆச்சாரியாரின் சீடர்களில் தலை சிறந்த மாணவனாக அர்ச்சுனன்  திகழ்ந்தான். அவனின் வில்வித்தை கண்டு உலகமே அதிசயித்தது. 
  மாணவர்கள்  அனைவரும் விளையாட்டாக தங்களுக்குத் தெரிந்த வித்தைகளைப் பற்றி பெருமை பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது எங்கிருந்தோ ஒரு நாய் குரைத்துக் கொண்டே வந்தது. அதைக் கண்ட துரியோதனன் அர்ச்சுனனைக்  கிண்டல் செய்யும் பாணியில், “அர்ச்சுனா, நீ பெரிய வில்வித்தை நிபுணண் என்று உலகமே உன்னை  பாராட்டுகிறது. இந்த நாயிடம் உன்னுடைய திறமையைக் காட்டு பார்க்கலாம்,” என்று சவால் விட்டான்.
  அர்ச்சுனனும்  துரியோதனனின் சவாலை ஏற்றுக் கொண்டு நாயின் மேல் ஓர் அம்பை எய்தான். என்ன ஆச்சரியம்,  அர்ச்சுனன் விட்ட ஓர் அம்பு பத்து அம்புகளாய்ப் பிரிந்து, பெருகி அந்த நாயை வீழ்த்தியது.  பாண்டவர்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். அவர்கள் ஆரவாரம் அடங்குவதற்குள் அவர்கள்  முன் வேறொரு நாய் ஓடி வந்தது. அதன் உடம்பில் ஆயிரம் ஓட்டைகள் தென்பட்டன. அத்தனை ஓட்டைகளும்  அம்பால் துளைக்கப்பட்டது போல் தோன்றியது. 
  ஆனால்,  அந்த நாய் எந்த வித வேதனையும் அடையாமல் அவர்கள் எதிரே ஓடிக் கொண்டிருந்தது. அனைவருக்கும்  ஒரே ஆச்சரியம். அர்ச்சுனன்தான் உலகிலேயே சிறந்த வில்வீரன் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது  அவன் விட்ட அம்பைப் போல் நூறு மடங்கு சக்தி உள்ள அம்புகளால் தாக்கப்பட்ட ஒரு நாய் எப்படி  உயிருடன் உலவ முடியும் என்ற அதிசயத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
  அனைவரும்  தங்கள் ஆச்சாரியாரிடம் அப்படிப்பட்ட ஒரு திறமை வாய்ந்த வில்லாளி யாராக இருக்க முடியும்  என்று தெரிவிக்கும்படி வேண்டினர். உண்மையில் துரோணாச்சாரியாருக்கே யார் அந்த விசித்திர  அம்பை எய்த திறமைசாலி என்று தெரியாது. இருந்தாலும் அவர் தனுர் வேதத்தில் ஒப்பற்ற மேதை  அல்லவா? உடனே சோரி அஸ்திரம் என்ற அம்பை நாணேற்றி கிழக்கு திக்கை நோக்கி எய்தார்.
  சோரி  அஸ்திரம் என்பது எந்த திசையிலிருந்து யார் அம்பை எய்திருந்தாலும் அவர்களின் பெயர்,  குலம், கோத்திரம், ஆச்சாரியார் போன்ற அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொண்டு வந்து  விடும் ஓர் அஸ்திரமாகும்.
  அடுத்த  விநாடியே அனைத்து விவரங்களையும் சேகரித்துக் கொண்டு சோரி அஸ்திரம் துரோணாச்சாரியர்  முன் வந்து பணிந்து நின்றது. அனைவரும் ஆவலுடன் அந்த திறமைசாலி யார் என்று எல்லையில்லா  ஆர்வத்துடன் பார்த்தனர்.
| ஏகலைவனின் குரு பக்தி | 
  அங்கு  வந்த நாயின் மேல் அஸ்திரம் எய்தவனின் பெயர் ஏகலைவன் என்பதாகும். அவனுடைய தனுர் வேத  ஆசான் துரோணாச்சாரியார் என்ற விவரம் சோரி அஸ்திரம் மூலம் தெரிய வந்தது. துரோணாச்சாரியர்  உள்பட அனைவரும் திடுக்கிட்டனர். அது நாள் வரை துரோணாச்சாரியார் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்  மட்டும்தான் ஆச்சாரியார் அதாவது ராஜகுமாரர்களுக்கு மட்டும்தான் குரு என்று நினைத்துக்  கொண்டிருக்க எங்கிருந்து இந்த புது எதிரி முளைத்தான் என்ற கேள்விக் குறியுடன் ஒருவர்  முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 
  அனைவரையும்  விட துரோணாச்சாரியாரின் நிலையோ மிகவும் தர்ம சங்கடமாக ஆகி விட்டது. அவர் உடனே மற்றொரு  அஸ்திரத்தை எய்து சோரி அஸ்திரம் குறிப்பிட்ட வில்லாளி அங்கு வந்து சேர வேண்டும் என்ற  நிபந்தனையை விதித்தார். அந்த நிபந்தனையை உடனே ஏற்றுக் கொண்டு அவர்கள் முன் ஏகலைவன்  தோன்றினான்.
 
 ஸ்ரீதோணியப்பர் சிவாலயம் சீர்காழி
 அனைவரும்  ஏகலைவனைக் கண்டு அதிசயித்தனர். அவன் கூறிய செய்தி அவர்களை மேலும் அதிசயத்தில் ஆழ்த்தியது.  அதாவது துரோணாச்சாரியாரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு அவன் அனைத்து வில்வித்தைகளையும்  கற்றுத் தேர்ந்தான் என்பதுதான் அவன் தெரிவித்த செய்தியாகும். அதை யாராலும் நம்ப முடியவில்லை. 
  அப்போது  ஓர் அற்புதம் நிகழ்ந்தது. வானத்தில் ஓர் ஒளிக் கீற்று தோன்றியது. அந்த ஒளிக் கீற்றைத்  தொடர்ந்து அவ்விடத்தில் கால பைரவர் பிரசன்னமானார். அனைவரும் கால பைரவரை மண்டியிட்டு  வணங்கினர். அனைவருக்கும் தன்னுடைய ஆசியை வழங்கி விட்டு கால பைரவர் பேசத் தொடங்கினார்.
  “நீங்கள்  இங்கு காணும் ஏகலைவன் தனுர் வேதம் மட்டும் அல்லாது பக்தியிலும் தலை சிறந்தவன். குரு  பக்தியிலும் தனுர் சாஸ்திரத்திலும் ஈரேழு உலகத்திலும் அவனுக்கு நிகர் யாருமே கிடையாது.  உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காக அவனுடைய தனுர் சாஸ்திர தேர்ச்சியை  உங்கள் முன் பரிசோதித்துக் காட்டுகிறேன்,” என்று கூறி, “ஏகலைவா, குரு பக்தியில் சிறந்தோனே,  உனக்கு மங்களம் உண்டாகட்டும். இங்குள்ளோர் நம்பும்படியாக அர்ச்சுனன் அஸ்திரத்தால் மாண்டுபோன  நாயை உன்னுடைய திறமையால் மீண்டும் உயிர் பெற்று எழச் செய்வாயாக,” என்று ஆணை இட்டார்.
  கால  பைரவரின் ஆணையை சிரமேற்கொண்டு உடனே ஏகலைவன் ஓர் அஸ்திரத்தை இறந்துபோன நாயை நோக்கி எய்தான்.  அனைவரும் கண் சிமிட்டாமல் அங்கு நிகழ்ந்த அற்புதத்தை அதிசயத்துடன் நோக்கினர். ஏகலைவனின்  ஒரே அஸ்திரம் 8000 அஸ்திரங்களாக பிரிந்து எட்டு திக்குகளிலும் பறந்தன. அடுத்த நொடி  எட்டு திக்குகளிலிருந்தும் உயிரை மீட்டுத் தரும் மூலிகைகளை அந்த 8000 அஸ்திரங்கள் கொண்டு  வந்து இறந்த நாயின் மேல் தூவியதும் இமைப் பொழுதில் நாயின் உடலில் இருந்த பத்து ஓட்டைகளும்  மறைந்து விட்டன. இறந்த நாயும் தூக்கம் களைந்ததுபோல் எழுந்து வாலை ஆட்டிக் கொண்டு அங்கிருந்து  ஓடி மறைந்து விட்டது. 
  கால  பைரவர் புன்னகை பூத்தார். “ஏகலைவனின் ஈடு இணையற்ற குரு பக்தியால் விளைந்த அற்புதத்தைப்  பார்த்தீர்களா? குரு பக்தியின் மகிமையை உணர்த்தவே எம்பெருமான் நீலகண்டன் என்னை பூலோகத்திற்கு  அனுப்பி வைத்தார். இத்தகைய குரு பக்தியைப் பெறுவதற்கு ஏகலைவன் என்ன தவத்தை மேற்கொண்டான்  என்பதை உங்கள் ஆச்சாரியரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்,” என்று கூறி அங்கிருந்து  மறைந்து விட்டார். 
  இந்நிகழ்ச்சிக்குப்  பின்னர் ஏகலைவனின் கட்டை விரலை துரோணாச்சாரியார் குரு தட்சணையாகப் பெற்ற வரலாறு நீங்கள்  அறிந்ததே. ஆனால், இச்சம்பவம் குறித்த மற்ற அற்புத விஷயங்கள் இருடிகள் மகாபாரதத்தில்  மட்டுமே காணப்படுகின்றன. 
  ஏகலைவனின்  கட்டை விரலை குரு தட்சணையாகப் பெற்ற துரோணாச்சாரியார் அதை ஒரு விலை உயர்ந்த பொக்கிஷமாகப்  போற்றினார். நம்முடைய விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை எங்கு வைத்துக் காப்போம். இதயத்தில்தானே?  அதைத்தான் துரோணாச்சாரியரும் செய்தார். 
  ஏகலைவனின்  கட்டை விரலை ஒரு தாயத்தில் மறைத்து அந்த தாயத்தை தன்னுடைய கழுத்தில் கட்டிக் கொண்டார்.  இதன் பின்னால் உள்ள தேவ ரகசியம் எவருக்கும் தெரியாது. அதாவது குரு தட்சணையாகப் பெற்ற  பொருள் குருவின் உயிரைக் காக்கும். இந்த தெய்வீக ரகசியத்தை உணர்ந்தவர் ஒரே ஒரு உத்தமர்தான்.  ஆம், இந்த உயிர் காக்கும் தாயத்தைப் பற்றி அறிந்தவர் கிருஷ்ண பரமாத்மா ஒருவர்தான். 
  குருக்ஷேத்திர  யுத்தத்தில் துரோணாச்சாரியார் கௌரவர்கள் பக்கம் சேர்ந்து போரிட்டார் அல்லவா? தர்மத்தைக்  காக்க வேண்டும் என்றால் துரோணாச்சாரியாரை மாய்க்க வேண்டும். ஆனால், அவரோ குரு தட்சணை  என்ற தர்ம கவசத்தை தன்னுடைய கழுத்தில் சதா சர்வ காலமும் அணிந்து கொண்டிருக்கிறார்.  இந்நிலையில் அவரை யாராலும் வெல்ல முடியாது. 
  ஆனால்,  தர்மத்தை நிலை நாட்ட ஒருவர் முயன்றால் தர்மம் அவரை எப்படியும் காப்பாற்றும் என்ற வேத  வாக்கின்படி கிருஷ்ணருக்கு தர்ம தேவதையே துரோணாச்சாரியாரை வீழ்த்தும் உபாயத்தை அவர்  காதில் சொன்னது. அதன்படி ஒரு வயோதிகர் வேடத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா துரோணரிடம் சென்றார்.
  “சுவாமி, என்னுடைய ஒரே பெண்ணிற்கு திருமணம் இன்னும் ஆகவில்லை. இப்போதுதான் ஏதோ ஓரு வரன்  அமைந்திருக்கிறான். ஆனால், மாங்கல்யம் வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. நீங்கள்தான்  பெருங் கருணை கூர்ந்து ஏதாவது உதவி செய்ய வேண்டும். உங்களால் அது முடியாது என்று சொல்லிவிட்டால்  நான் உயிரை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை,” என்று சொல்லி விட்டு துரோணாசாரியாரின் கழுத்தில்  தொங்கிய தாயத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
  துரோணாச்சாரியார்  இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார். கடுமையான யுத்தம் நடக்கும் போர்க் களத்தில்  தங்கத்தைத் தேடி எங்கே போவது? ஆனால், இந்த வயோதிகரின் யாசகத்தையும் நிராகரிக்க முடியாது. வேறு  வழியின்றி மிகவும் மன வேதனையுடன் தன் கழுத்தில் இருந்த தாயத்தை கழற்றி அந்த வயோதிகரின்  இரு கரங்களிலும் அளித்து. “ஐயா, பெரியவரே, இது மிகவும் மதிப்பு வாய்ந்த, விலை உயர்ந்த  தங்க தாயத்து. இதை அப்படியே உங்கள் மகளுக்கு மாங்யல்யமாக அளித்து திருமணத்தை நடத்தி  விடுங்கள்,” என்று கூறி மானசீகமாக அந்த தம்பதிகளையும் போர் முனையில் இருந்தே ஆசீர்வாதம்  செய்தார்.
  வந்த  வேலை முடிந்த திருப்தியில் கிருஷ்ண பரமாத்மா துரோணாச்சாரியாருக்கு பணிந்து வணக்கம்  செலுத்தி விட்டு அவரிடம் உத்தரவு பெற்றுத் திரும்பினார். துரோணாச்சாரியரிடமிருந்து  பெற்றது ஒப்பற்ற மாணிக்கம் அல்லவா? குருவை விட உயர்ந்த பொருள் உலகில் ஏது? குரு பக்திக்கு  இணையானது எங்கும், எவ்விடத்திலும் இல்லையே. பரமானந்தத்துடன் ஏகலைவனின் கட்டை விரலை  தன்னுடைய புல்லாங்குழலில் பதித்து வைத்து விட்டார் கிருஷ்ண பரமாத்மா !! குரு பக்திக்கு  உரிய மரியாதையை இதன் மூலம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அர்ப்பணித்து உலகத்தவர் அனைவருக்கும்  குருவைப் போற்றும் ஒரு உத்தம சீடனின் நிலையையும் உணர்த்தினார்.
  ஒரு  பூரண அவதாரத்தின் மதுரமான அதரங்களில் தவழும் உத்தமமான, மிக உயர்ந்த தெய்வீக நிலையை  அடையும் அளவிற்கு ஏகலைவன் செய்த தவம்தான் என்ன என்பதை அறிய உங்கள் மனம் துடிக்கிறது  அல்லவா?

பிறர் கர்ப்பத்தைத் தாங்கும்
தாயுமான சுக சித்தர்
  இதற்கு  விடை தருபவர் துரோணாச்சாரியார்தான். கால பைரவரின் உத்தரவுப்படி துரோணாச்சாரியார் பாண்டவர்கள்  கௌரவர்களின் முன்னிலையில் சவிதா அஸ்திரம் என்ற ஒரு அஸ்திரத்தை வானை நோக்கி எய்தார்.  சவிதா அஸ்திரம் என்பது ஒரு ஜீவனின் முந்தைய ஜன்ம நிகழ்ச்சிகளை கிரகித்துத் தரும் சக்தியை  உடையது. 
  ஏகலைவன்  முற்பிறவியில் என்ன தவத்தை இயற்றி இந்த ஒப்பற்ற குரு பக்தியைப் பெற்றான் என்ற தேவ விளக்கத்தை  சவிதா அஸ்திரம் ஏந்தியிருந்தது.
  ஸ்ரீதோணியப்பர்  அருளாட்சி செலுத்தும் சீர்காழி திருத்தலத்தில் பல்லாண்டுகள் முற்பிறவியில் சேவை செய்து  வந்தவரே ஏகலைவன் ஆவார். அத்திருத்தல மூங்கில் விருட்சத்திற்கு தினமும் திருக்குளத்திலிருந்து  நீர் கொண்டு வந்து வார்த்து பக்தியுடன் வார்த்து அற்புத சேவை ஆற்றி வந்தார் ஏகலைவன்.  அச்சமயம் இந்திர வர்மன் என்ற சோழ மன்னன் அரசாட்சி செய்து வந்தான். 
  மன்னனின்  பல்லக்கு பழுதடைந்து விட்டதால் புதிய பல்லக்கு செய்வதற்காக மன்னனின் காவலாளிகள் நல்ல  மூங்கிலைப் பெற நாட்டின் பல பாகங்களிலும் தேடிச் சென்றனர். ஆனால், எதிர்பார்த்த சிறந்த  மூங்கில்கள் எங்கும் கிட்டவில்லை. இறுதியில் சீர்காழி திருத்தலத்தை அடைந்தபோது அங்கிருந்த  தலவிருட்ச மூங்கில்கள் அவர்கள் எதிர்பார்த்ததை விட நல்ல குணாதிசயத்தைப் பெற்றிருந்தன. 
  மன்னன்  சிறந்த சிவ பக்தன் என்பதால் அவனுக்குத் தெரிந்தால் அம்மரத்தை வெட்ட அனுமதிக்க மாட்டான்.  எனவே இந்த சிறந்த மூங்கில்களை எப்படியாவது வெட்டிக் கொண்டு சென்று மன்னனின் பாராட்டைப்  பெற வேண்டும் என்ற குறுகிய நோக்கம் கொண்ட சில காவலாளிகள் அந்த மூங்கில்களை வெட்டத்  துணிந்தனர்.
  அச்சமயம்  வழக்கம்போல் திருத்தல விருட்ச சேவைக்காக அங்கு வந்த ஏகலைவன் காவலாளிகளின் அடாத செயலைத்  தடுத்த நிறுத்த முற்பட்டார். எவ்வளவோ அறிவுரைகள் கூறியும், பணிவான பிரார்த்தனைகளாலும்  அவர்கள் மனதை மாற்ற முடியாத நிலையில் அம்மூங்கில்களை கட்டிப் பிடித்துக் கொண்டு பஞ்சாட்சரத்தை  வாயினால் ஓதிக் கொண்டே இருந்தார்.
  காவலாளிகள்  ஏகலைவனை அங்கிருந்து அகற்ற முயன்றனர். அது முடியாமல் போகவே இறுதியில் ஒரு காவலாளி தன்னுடைய  வாளால் ஏகலைவனின் தலையை வெட்டி வீழ்த்தி விட்டான். ஏகலைவனின் தலை வீழ்ந்த மறு கணம்  அங்கு ஒரு மின்னல் தோன்றியது, பேரிடி முழங்கியது, காவலாளிகள் பயந்து அலறிக் கொண்டு  அவ்விடத்தை விட்டு ஓடி விட்டனர். ஆனால், இதில் அதிசயம் என்னவென்றால் ஏகலைவனின் தலை  வெட்டுண்டு தரையில் கிடந்தாலும் அவனுடைய இரு கைகளும் மூங்கில் விருட்சங்களை இறுக்கிப்  பிடித்த வண்ணமே இருந்தன. 
  அங்கு  கூடிய மக்கள் அனைவரும் ஏகலைவனின் வானளாவிய பக்தியைக் கண்டு வியந்தனர். தேவர்கள் பூமாரி  பொழிந்தனர்.
  மன்னன்  விரைந்து வந்து ஏகலைவனின் இறுதிக் காரியங்களை நிறைவேற்றினான். வேணு என்றால் மூங்கில்.  வேணுவைக் காத்த ஏகலைவன் வேணுகோபாலன் திருஅதரங்களின் நிரந்தர வாசம் கொண்டார்.
  “வளைந்த  மூங்கில் பல்லக்காகும், நிமிர்ந்த மூங்கில் பாடையாகும்”, என்ற மூதுரைக்கு ஏற்ப ஏகலைவனின்  பணிவு பக்தியைத் தந்தது. பக்தி என்றும் அழியா ஞானத்தைத் தந்தது.
  எனவே குரு  பக்தி ஒன்றே மனிதன் அடையக் கூடிய இறுதி ஞான நிலையை அளிக்கக் கூடிய சாதனமாகும் என்பதே  சித்தர்களின் அமுத உரையாகும். அத்தகைய குரு பக்தியை வளர்க்கக் கூடிய உபாயங்களில் தலை  சிறந்தது திருக்கோயில் திருத்தல விருட்ச பூஜையாகும். 
ஓம் குருவே சரணம்