2. சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது |
(கபால நோய்கள் அனைத்தும் விலக அருள் புரிவது இப்பதிகம். மூளையில் உண்டாகும் கட்டி, புற்று நோய், cerebral thrombosis. meningitis (மூளைக் காய்ச்சல்) போன்ற நோய்கள் வராது தற்காத்துக் கொள்ள உதவும் அற்புதமான பதிகம். தெளிந்த அறிவு கிட்டும்.)
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.
நாயேன் பலநாளும் நினைப்பின்றி மனத்துன்னைப்
பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகா அருள்பெற்றேன்
வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.
மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னைப்
பொன்னே மணிதானே வயிரம்மே பொருதுந்தி
மின்னார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அன்னே உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.
முடியேன் இனிப் பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தி
கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிகொள்நீ
செடியார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அடிகேள் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.
பாதம் பணிவார்கள் பெறுபண்டம்மது பணியாய்
ஆதன் பொருளானேன் அறிவில்லேன் அருளாளா
தாதார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட் துறையுள்
ஆதி உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.
தண்ணார் மதிசூடீ தழல் போலுந் திருமேனி
எண்ணார் புரமூன்றும் எரி உண்ண நகை செய்தாய்
மண்ணார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் துறையுள்
அண்ணா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.
ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய்
வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய்
தேனார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட் துறையுள்
ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.
ஏற்றார் புரமூன்றும் எரி உண்ணச் சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித் திரிவேனோ செக்கர்வானீர்
ஏற்றாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் துறையுள்
ஆற்றாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.
மழுவாள் வலன் ஏந்தி மறை ஓதி மங்கை பங்கா
தொழுவார் அவர் துயராயின தீர்த்தல் உனதொழிலே
செழுவார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட் துறையுள்
அழகா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே.
காரூர் புனலெய்திக் கரை கல்லித் திரைக் கையால்
பாரூர் புகழெய்தித் திகழ் பன்மாமணி உந்திச்
சீரூர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட் துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்காள் அல்லேன் எனலாமே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
3. திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகம் |
(ஏவல், பில்லி, சூன்யம், காற்று சேஷ்டை போன்ற துன்பங்கள் விலகும். எதிரிகளின் பொறாமை, கண் திருஷ்டி தோஷங்கள் விலகும். கன்னிப் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கூடிய பதிகம். திருநீற்றை நீரில் குழைத்து கை, கால்களில் 36 இடங்களில் காப்பாகப் பூசி இப்பதிகத்தை ஓதி வருதல் சிறப்பு. காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் நீராடி முறையாக திருநீறணிந்து இப்பதிகத்தை ஓதி வந்தால் தியானம் எளிதில் கை கூடும். முழுமையான ஆரோக்யம் கிட்டும்)
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந் தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே.
அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவமாவது நீறு
அரா வணங்குத் திருமேனி ஆலவாயான் திருநீறே.
மாலொடு அயனறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலமதுண்ட மிடற்றெம் ஆலவாயான் திருநீறே.
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்தேத்தும் ஆலவாயான் திருநீறே.
ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
4. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது |
(எம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக அருள் புரியும் பதிகம். அவரவர் பிறந்த தினங்களிலும், திருமண ஆண்டு நிறைவு நாட்களிலும், குறிப்பாக 60, 80 ஆண்டு வயது நிறைவு நாட்களிலும் இப்பதிகத்தை ஓதி உரிய தான தர்மங்கள் அளித்து வந்தால் அகால மரணம் ஒருக்காலும் அண்டாது தற்காத்துக் கொள்ளலாம். நீண்ட ஆயுள் கிட்டும்).
பண் : காந்தாரபஞ்சமம்
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே.
மந்திர நான்மறையாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே.
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து
ஏனை வழிதிறந்து ஏத்துவார்க் கிடர்
ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே.
நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச் சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே.
கொங்கலர் மன்மதன் வாளி ஐந்தகத்து
அங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்
தங்கரவின் படம் அஞ்சும் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே.
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மைவினை அடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையிலுந் துணை அஞ்செழுத்துமே.
வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள்தொறு
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செழுத்துமே.
வண்டமரோதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே.
கார்வணன் நான்முகன் காணுதற் கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வணம் ஆவன அஞ்செழுத்துமே.
புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்துதேறின
வித்தக நீறணிவார் வினைப்பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே.
நற்றமிழ் ஞான சம்பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும்அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவரே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
5. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது |
(காரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல் செயல்படுத்த உதவும் பதிகம். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், எளிதில் வேலை வாய்ப்புப் பெறவும் உதவும் பதிகம்).
பண் : காந்தாரபஞ்சமம்
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
நம்புவா ரவர் நாவினவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொனார் திலகம் உலகுக் கெலாம்
நம்பன் நாமம் நமச்சிவாயவே.
பல வருடங்கள் கஷ்டப்பட்டு இறைவனைப் பூஜித்து பெற்ற புண்ணிய சக்தியை ஓரிரு வினாடிகளில் ஏற்படும் கடுமையான கோபத்தில் இழந்து விடுபவர்கள் உண்டு. செல்வம், பதவி, நண்பர்கள், சுற்றம் இவற்றைக் கோபத்தால் வெளிவரும் சூடான வார்த்தைகளால் இழந்தோர் எத்தனையோ பேர். இவ்வாறு கோபத்தால் ஏற்படும் தீய விளைவுகளிலிருந்து ஓரளவேனும் தங்களைப் பாதுகாகத்துக் கொள்ள விரும்புவோர்கள் கும்பகோணம் திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் சிவாலயத்தில் உள்ள கோபுரம் தாங்கித் தூண்களை வணங்கி வலம் வருதல் நலம். சித்திரை, ஐப்பசி மாதங்களில் வரும் ஞாயிற்றுக் கிழமைகள் இத்தகைய வழிபாட்டிற்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியவை.
நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து
அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார்
தக்க வானவராய்த் தகுவிப்பது
நக்கன் நாமம் நமச்சிவாயவே.
இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்
நயம் வந்தோத வல்லார் தமை நண்ணினால்
நியமந்தான் நினைவார்க்கினியான் நெற்றி
நயனன் நாமம் நமச்சிவாயவே.
கொல்வாரேனுங் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சிவாயவே.
மந்தரம்மன்ன பாவங்கள் மேவிய
பந்தனையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாமம் நமச்சிவாயவே.
நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும்
உரைசெய் வாயினர் ஆயின் உருத்திரர்
விரவியே புகுவித்திடும் என்பரால்
வரதன் நாமம் நமச்சிவாயவே.
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கன் மேல்
தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும்
மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை
நலங் கொள் நாமம் நமச்சிவாயவே.
போதன் போதன கண்ணனும் அண்ணல்தன்
பாதந்தான் முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரிதாகி அலந்தவர்
ஓதும் நாமம் நமச்சிவாயவே.
கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள்
வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால்
விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய்
நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே.
நந்தி நாமம் நமச்சிவாய வெனும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்தவல்லார் எல்லாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
6 திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது |
(திக்கு வாய், தெளிவாக வார்த்தைகளை உச்சரிக்க இயலாதோர் பாடி பயன்பெற உதவும் பதிகம். வக்கீல்கள், ஆசிரியர்கள், முகவர்கள் போன்று பேச்சு, வாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதிகம். மனமும் வாக்கும் ஒன்றுபட்டு தெளிந்த சிந்தனை பெற, தெளிவான முடிவெடுக்க சிவனருள் கிட்டும்.)
பண் : காந்தாரபஞ்சமம்
;சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே.
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே.
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே.
இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கில் பிரானென்று வினவுவோம் அல்லோம்
அடுக்கல் கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே.
வெந்த நீறருங்கலம் விரதிகட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம் நமச்சிவாயவே.
சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க் கல்லால்
நலமிலன் நாடொறும் நல்குவான் நலன்
குலமில ராகினுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே.
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச் சென்று உருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங்கு அடைந்தவர்க்கெலாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே.
மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்தும்
ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
7. சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது |
(ஒருவர் நமக்கு செய்த நன்மை எல்லாவற்றையும் மறந்து விட்டு அவர் செய்த ஏதாவது ஒன்றிரண்டு தீமையை மட்டுமே மனதில் வைத்திருப்பவர் மனம் தெளிவு பெற இப்பதிகம் உதவும். நன்றி மறப்பது நன்றன்று. செய் நன்றி மறவாத உத்தம குணத்தையும், சற்குரு நமக்கு அளித்த வரப் பிரசாதங்களை நினைவு கூர்ந்து குரு சேவையில் உன்னதம் பெறவும் பக்தியை வளர்ப்பது இப்பதிகம். மேலும், ஒருவரிடம் பல நற்குணங்கள் மிகுந்திருக்கும், ஆனால் அவரிடம் ஏதாவது ஒன்றிரண்டு தீய குணங்கள் இருக்கலாம். ஆனால், பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னப் பறவையைப் போல நாம் ஒருவரிடம் உள்ள தீய குணத்தை விடுத்து நற்குணத்தை மட்டுமே பாராட்டும் பண்பை வளர்க்க அருள் புரிவது இப்பதிகம். மரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓதுவதால் அவர் மனச் சாந்தி பெற்று இறைவனடி சேரவும் இறை பக்தி மிகுந்த அடுத்த பிறவிகளை அடையவும் வழி ஏற்படும்.)
பண் : பழம்பஞ்சுரம்
மற்றுப்பற் றெனக்கின்றி நின்திருப் பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன்இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்துஞ் சீர்க்கறை ஊரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
இட்டன் நும்மடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்
கெட்ட நாள் இவையென்றலால் கருதேன் கிளர்புனற் காவிரி
வட்ட வாசிகைகொண்டடி தொழுதேத்து பாண்டிக் கொடுமுடி
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
ஓவு நாள் உணர்வழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல்
காவு நாள் இவை என்றலால் கருதேன் கிளர் புனற்காவிரிப்
பாவு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடி
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
எல்லையில் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என்பொன் மாமணி
கல்லை உந்தி வளம்பொழிந்திழி காவிரி அதன் வாய்க்கரை
நல்லவர் தொழுதேத்துஞ் சீர்க்கரை ஊரிற் பாண்டிக் கொடுமுடி
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
அஞ்சினார்க்கரண் ஆதியென்றடி யேனும் நான் மிக அஞ்சினேன்
அஞ்சல் என்றடித் தொண்டனேற் கருள் நல்கினாய்க் கழிகின்றதென்
பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
நஞ்சணி கண்டம் நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
திருபாண்டி கொடுமுடி
ஏடு வான் இளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின் மேல்
ஆடு பாம்பதரைக் கசைத்த அழகனே அந்தண் காவிரிப்
பாடு தண் புனல் வந்திழி பரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
விரும்பி நின்மலர்ப் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன்
நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெழில் பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்
குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
செம்பொனேர் சடையாய்த் திரிபுரம் தீயெழச் சிலை கோலினாய்
வம்புலாங் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரி கோட்டிடை
கொம்பின்மேல் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மாமணியென்று
பேரெணாயிரங் கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நாரணன் பிரமன் தொழுங்கறை ஊரிற் பாண்டிக் கொடுமுடி
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
கோணிய பிறை சூடியைக் கறை ஊரிற் பாண்டிக் கொடுமுடி
பேணிய பெருமானைப் பிஞ்ஞகப் பித்தனைப் பிறப்பில்லியைப்
பாணுலா வரிவண்டறை கொன்றைத் தாரனைப் படப் பாம்பரை
நாணனைத் தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லுவார்க் கில்லை துன்பமே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
8. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷேத்திரக்கோவை |
(கடல் கடந்து வியாபாரம் செய்கின்றவர்கள், கடல் கடந்து இல்லத்தைப் பிரிந்து அயல் நாடுகளில் வேலை செய்பவர்கள் பத்திரமாக இல்லம் வந்து சேர இப்பதிகம் உதவும். காதல் திருமணங்கள், சாதி, மத, இன வேறுபாடுடைய திருமண சம்பந்தங்களால் பல குடும்பங்களில் மனக் கொந்தளிப்புகள் ஏற்படும். இத்தகைய மனக் குழப்பங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்பட, குடும்பத்தில் அமைதி நிலவ இப்பதிகப் பாடல்கள் உறுதுணையாக நிற்கும்.)
பண் : இந்தளம்
ஆரூர் தில்லை அம்பலம் வல்லந் நல்லம் வடகச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி கடல்சூழ் கழிப் பாலை தென்கோடி பீடார்
நீரூர் வயல் நின்றியூர் குன்றியூருங் குருகா வையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர் நன்னீள் வயல் நெய்த்தானமும் பிதற்றாய் பிறைசூடிதன் பேரிடமே.
அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும்
கண்ணார் கழுக்குன்றம் கயிலை கோணம் பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண்ணார் மொழி மங்கையோர் பங்குடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே
எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக் கடல் நீந்தலாங் காரணமே.
அட்டானம் என்றோதிய நாலிரண்டும் அழகன் உறைகா அனைத்துந் துறைகள்
எட்டாந் திருமூர்த்தியின் காடொன்பதுங் குளமூன்றும் களம் அஞ்சும் பாடி நான்கும்
மட்டார் குழலாள் மலை மங்கை பங்கன் மதிக்கும் இடமாகிய பாழி மூன்றும்
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய் அரும்பாவங்கள் ஆயின தேய்ந்தறவே.
அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளைப் பொடிப் பூசி ஆறணிவான் அமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி திருநனி பள்ளி சீர்மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளி வெள்ளச் சடையான் விரும்பும் மிடைப் பள்ளி வண்சக்கர மால்
உறைப்பாலடிபோற்றக் கொடுத்த பள்ளி உணராய் மடநெஞ்சமே உன்னி நின்றே.
ஆறை வடமாகறல் அம்பர் ஐயாறு அணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்
சேறை துலை புகலூர் அகலாதிவை காதலித்தான் அவன்சேர் பதியே
·· ··
மனவஞ்சர் மற்றோட முன்மாதராரும் மதிகூர் திருக்கூடலில் ஆலவாயும்
இன வஞ்சொல் இலா இடைமாமருதும் இரும்பைப் பதி மாகாளம் வெற்றியூரும்
கனமஞ்சின மால் விடையான் விரும்புங் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தனமென் சொலிற்றஞ்சம் என்றே நினைமின் தவமாம் மலமாயின தான் அறுமே.
திருஆரூர் மூலட்டானம்
மாட்டூர் மடப்பாச்சிலாச் சிராமம் முண்டீச்சரம் வாதவூர் வாரணாசி
காட்டூர் கடம்பூர் படம்பக்கங் கொட்டுங் கடல் ஒற்றியூர் மற்று உறையூர் அவையும்
கோட்டூர் திருவாமாத்தூர் கோழம்பமுங் கொடுங்கோவலூர் திருக்குணவாயில்
··
·· குலாவு திங்கட் சடையான் குளிரும் பரிதி நியமம்
போற்றூர் அடியார் வழிபாடு ஒழியாத் தென்புறம்பயம் பூவணம் பூழியூரும்
காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள் நெரித்தான் உறைகோயில் என்று நீ கருதே.
நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல் நெடுவாயில் குறும்பலா நீடுதிரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம் நளிர்சோலையுஞ் சேனை மாகாளம் வாய்மூர்
கற்குன்றம் ஒன்றேந்தி மழைதடுத்த கடல்வண்ணனும் மாமலரோனுங் காணாச்
சொற்கென்றுந் தொலைவிலாதான் உறையும் குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே.
குத்தங்குடி வேதிகுடி புனல்சூழ் குருந்தங்குடி தேவன்குடி மருவும்
அத்தங்குடி தண்டிரு வண்குடியும் அலம்புஞ் சலந்தன் சடை வைத்துகந்த
நித்தன் நிமலன் உமையோடுங்கூட நெடுங்காலம் உறைவிடம் என்று சொல்லாப்
புத்தர் புறங்கூறிய புன்சமணர் நெடும்பொய்களை விட்டு நினைந்துய்ம்மினே.
அம்மானை அருந்தவமாகி நின்ற அமரர் பெருமான் பதியான உன்னிக்
கொய்ம்மா மலர்ச் சோலை குலாவு கொச்சைக் கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன
இம்மாலை ஈரைந்தும் இருநிலத்தில் இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று
விம்மா வெருவா விரும்பும் அடியார் விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்