9. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியது |
(ஒரு கொள்கையில் முடிவெடுக்கவும், ஒரு காரியத்தில் முடிவெடுக்கவும், குடும்பப் பிரச்னையில் முடிவெடுக்கவும் இப்பதிகம் அருள் செய்யும். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் சற்குருவின் ஆணைப்படி, அவர் காட்டிய வழியில் செல்வதே சாலச் சிறந்தது. சற்குரு அமையப் பெறாதோர் சிவனருள் காட்டும் வழியில் செல்ல விரும்பும்போது அவர்களுக்கு இப்பதிகம் சாட்சியாக அமையும். ஆனால், இப்பதிகத்தைச் சாட்சியாக வைத்து எடுத்த முடிவை எக்காரணம் முன்னிட்டும் மாற்றுதல் கூடாது என்பது இறை ஆணை. இப்பதிகத்தைச் சாட்சியாக வைத்து எடுக்கும் எந்தக் காரியமும் தவறாகப் போகாது என்பது சித்தர்கள் வாக்கு.சித்தர்கள் அளித்துள்ள இந்த அற்புத வரப்பிரசாதத்தை நன்முறையில் கவனமாகக் கையாளவும்.)
தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடிகாவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றம்
கல்லில் திகழ் சீரார் காளத்தியும் கயிலாய நாதனையே காணலாமே.
ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கை வீரட்டானமும் கோட்டூர் குடமூக்குக் கோழம்பமும்
காரார் கழுக்குன்றும் கானப் பேருங் கயிலாய நாதனையே காணலாமே.
இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேரூர்
சடைமுடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர் கோத்திட்டைகோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாய நாதனையே காணலாமே.
எச்சில் இளமர் ஏமநல்லூர் இலம்பை யங்கோட்டூர் இறையான் சேரி
அச்சிறு பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடு தண்டுறை அழுந்தூர் ஆறை
கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம்பத்துங் கயிலாய நாதனையே காணலாமே.
பழமண்ணிப்படிக்கரை
கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏராரும் ஏமகூடம்
கடம்பை இளங்கோயில் தன்னின் உள்ளுங் கயிலாய நாதனையே காணலாமே.
மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும்
வெண்ணை அருட்டுறை தண்பெண்ணாடகம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங்
கண்ணை களர்க்காறை கழிப்பாலையுங் கயிலாய நாதனையே காணலாமே.
வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர்
ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப் பெரும்
பாழி பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண்
காழி கடல் நாகைக் காரோணத்துங் கயிலாய நாதனையே காணலாமே.
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திர கோடி மறைகாட்டுள்ளும்
மஞ்சார் பொதியின் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக் கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் விவீசுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங் கயிலாய நாதனையே காணலாமே.
திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம் ஐயாறசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர் வீரட்டங் கருகாவூருங் கயிலாய நாதனையே காணலாமே.
நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சரம்
உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூருங் கயிலாய நாதனையே காணலாமே.
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலி நெய்த்தானத்தோ டெத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர்
கலிவலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற கயிலாய நாதனையே காணலாமே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
10. சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது |
பண் : கொல்லிக் கௌவாணம்
காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே காணப் பேரூராய்
கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூர் அரசே கொழுநற் கொல்லேறே
பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங் காட்டூரானே
மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே.
கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா
மல்குல் திரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா
சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக்
கங்குல் புறங் காட்டாடீ அடியார் கவலை களையாயே.
நிறை காட்டானே நெஞ்சத்தானே நின்றியூரானே
மிறைக் காட்டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
மறைக் காட்டானே திருமாந்துறையாய் மாகோணத்தானே
இறைக் காட்டாயே எங்கட்குன்னை எம்மான் தம்மானே.
ஆரூரத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவில் கருகாவூரானே
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூர் அம்மானே.
மருகல் உறைவாய் மாகாளத்தாய் மதியஞ் சடையானே
அருகற் பிணி நின்னடியார் மேல அகல அருளாயே
கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியே
பருகப் பணியாய் அடியார்க்குன்னைப் பவளப் படியானே.
தாங்கூர் பிணி நின்னடியார் மேல அகல அருளாயே
வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே
பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே.
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய்
வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
ஆனைக் காவில் அரனே பரனே அண்ணாமலையானே
ஊனைக் காவல் கைவிட்டுன்னை உகப்பார் உணர்வாரே.
துருத்திச் சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா
பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய்
திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா
அருத்தித் துன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே.
புலியூர் சிற்றம்பலத்தாய் புகலூர்ப் போதா மூதூரா
பொலிசேர் புரமூன்றெரியச் செற்ற புரிபுன் சடையானே
வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கடர்த்த மதிசூடி
கலிசேர் புறவிற் கடவூராளீ காண அருளாயே.
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னி
மைம்மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச்சிங்கடி
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ்மாலை
செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
11. சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது |
பண் : காந்தாரம்
வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி
எரிய மதில்கள் எய்தார் எறிய முசல முடையார்
கரிய மிடறு முடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலன் ஒன்றேந்திக்
கங்கை சடையிற் கரந்தார் கடவூர் மயானம் அமர்ந்தார்
செங்கண் வெள்ளேறேறிச் செல்வஞ் செய்யா வருவார்
அங்கை யேறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே.
ஈட லிடபம் இசைய ஏறி மழு ஒன்றேந்திக்
காடதிடமா வுடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பாடல் இசை கொள் கருவி படுதம் பலவும் பயில்வார்
ஆடல் அரவம் முடையார் அவர் எம்பெருமான் அடிகளே.
இறை நின்றிலங்கு வளையாள் இளையாள் ஒருபால் உடையார்
மறை நின்றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார்
கறை நின்றிலங்கு பொழில் சூழ் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிறை நின்றிலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே.
வெள்ளை எருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத்
துள்ளும் இளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துலங்கக்
கள்ள நகுவெண் தலையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பிள்ளை மதியம் உடையார் அவர்எம் பெருமான் அடிகளே.
பொன்றாது திருமணங் கொள் புனைபூங்கொன்றை புனைந்தார்
ஒன்றா வெள்ளே றுயர்த்த துடையார் அதுவே ஊர்வார்
கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார்
பின்தாழ் சடையார் ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே.
பாசமான களைவார் பரிவார்க் கமுதம் அனையார்
ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார்
காசை மலர்போல் மிடற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
பேச வருவார் ஒருவர் அவர்எம் பெருமான் அடிகளே.
செற்ற அரக்கன் அலறத் திகழ் சேவடிமேல் விரலால்
கற்குன்றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்
மற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல்
பெற்றொன்றேறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
வருமா கரியின் உரியார் வளர்புன் சடையார் விடையார்
கருமான் உரிதோல் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்
திருமாலொடு நான்முகனுந் தேர்ந்துங் காணமுன் ஒண்ணாப்
பெருமான் எனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே.
தூய விடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள்
காய வேவச் செற்றார் கடவூர் மயானம் அமர்ந்தார்
தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமரர்
பேய் பேயென்ன வருவார் அவர்எம் பெருமான் அடிகளே.
மரவம் பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த
அரவம் அசைத்த பெருமான் அகலம் அறியலாகப்
பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
12. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய சமக கவசம் |
வடிவேறு திரிசூலந் தோன்றும் தோன்றும் வளர் சடைமேல் இளமதியந் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ் கொன்றை கண்ணி தோன்றும் காதில் வெண்குழை தோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும் எழில் திகழுந் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத் தெம்புனிதனார்க்கே.
ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும் அடியவர்கட் காரமுதமாகித் தோன்றும்
ஊணாகி ஊர்திரிவான் ஆகித் தோன்றும் ஒற்றைவெண் பிறை தோன்றும் பற்றார் தம்மேல்
சேணாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்தம் எலும்பினாற் செறியச் செய்த
பூணாணும் அரைஞாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.
கல்லாலின் நீழல் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கு நெறிகள் அன்று
சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றும் சூழரவும் மான்மறியுந் தோன்றும் தோன்றும்
அல்லாத காலனைமுன் அடர்த்தல் தோன்றும் ஐவகையால் நினைவார்பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலால் எலும்பு பூணாய்த் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.
படைமலிந்த மழுவாளும் மானுந் தோன்றும் பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்
நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்றும் நான்மறையின் ஒலிதோன்றும் நயனந் தோன்றும்
உடைமலிந்த கோவணமுங் கீளுந் தோன்றும் மூரல்வெண் சிரமாலை உலாவித் தோன்றும்
புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.
மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்றும் மாசிலாப் புன்சடைமேல் மதியந் தோன்றும்
இயல்பாக இடுபிச்சை ஏற்றல் தோன்றும் இருங்கடல் நஞ்சுண்டிருண்ட கண்டந் தோன்றும்
கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை ஆயிரமா முகத்தினொடு வானில் தோன்றும்
புயல்பாய சடை விரித்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.
பாராழி வட்டத்தார் பரவியிட்ட பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும்
சீராழித் தாமரையின் மலர்களன்ன திருந்தியமா நிறத்தசே வடிகள் தோன்றும்
ஓராழித் தேருடைய இலங்கை வேந்தன் உடல் துணித்த இடர்பாவங் கெடுப்பித் தன்று
போராழி முன்னீந்த பொற்புத் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.
தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றும் சதுர் முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும் வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தல் தோன்றும்
துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந் தூயமா மதியுடனே வைத்தல் தோன்றும்
பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.
செறிகழலுந் திருவடியுந் தோன்றும் தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையுந் தோன்றும்
நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்றும் நெற்றிமேல் கண்தோன்றும் பெற்றந் தோன்றும்
மறுபிறவி அறுத்தருளும் வகையுந் தோன்றும் மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறியரவும் இளமதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.
அருப்போட்டு முலைமடவாள் பாகந்தோன்றும் அணிகிளரும் உருமென்ன அடர்க்குங் கேழல்
மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்றும் மணமலிந்த நடந்தோன்றும் மணியார் வைகைத்
திருக்கோட்டில் நின்றதோர் திறமுந் தோன்றும் செக்கர் வானொளி மிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.
ஆங்கணைந்த சண்டிக்கும் அருளியன்று தன்முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளியன்று பலபிறவி அறுத்தருளும் பரிசுந் தோன்றும்
கோங்கணைந்த கூவிளமும் மதமத்தமும் குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்
பூங்கணை வேல் உருவழித்த பொற்புந் தோன்றும் பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.
ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்
வாருருவப் பூண்முலைநன் மங்கைதன்னை மகிழ்ந்தொருபால் வைத்துகந்த வடிவுந் தோன்றும்
நீருருவக் கடலிலங்கை அரக்கர்கோனை நெறுநெறன்ன அடர்த்திட்ட நிலையுந் தோன்றும்
போருருவக் கூற்றுதைத்த பொற்புந் தோன்றும் பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
13. திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது |
பண் : தக்கராகம்
பொடியுடை மார்பினர் போர்விடையேறிப் பூதகணம் புடைசூழக்
கொடியுடை ஊர்திரிந் தையங் கொண்டு பலபல கூறி
வடிவுடை வாணெடுங் கண்ணுமைபாக மாயவன் வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமலரிட்டுக் கறைமிடற் றானடி காண்போம்.
அரைகெழு கோவண ஆடையின் மேலோர் ஆடரவம் அசைத்தையம்
புரைகெழு வெண்டலை யேந்திப் போர்விடை ஏறிப் புகழ
வரைகெழு மங்கைய தாகமோர்பாக மாயவன் வாழ்கொளி புத்தூர்
விரைகமழ் மாமலர் தூவி விரிசடை யான்அடி சேர்வோம்.
பூணொடு நாகமசைத் தனலாடிப் புன்றலை அங்கையில் ஏந்தி
ஊணிடு பிச்சையூர் ஐயம் உண்டியென்று பலகூறி
வாணெடுங் கண்ணுமை மங்கையோர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்
தாணெடு மாமலரிட்டுத் தலைவன தாள்நிழல் சார்வோம்.
தாரிடு கொன்றையோர் வெண்மதி கங்கை தாழ்சடை மேலவை சூடி
ஊரிடு பிச்சைகொள் செல்வம் உண்டியென்று பலகூறி
வாரிடு மென்முலை மாதொரு பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்
காரிடு மாமலர் தூவிக் கறைமிடற் றானடி காண்போம்.
கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் காதிலோர் வெண்குழையோடு
புனமலர்மாலை புனைந்தூர் புகுதியென் றேபல கூறி
வனமுலை மாமலை மங்கையோர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்
இனமலர் ஏய்ந்தன தூவி எம்பெருமானடி சேர்வோம்.
அளைவளர் நாகமசைத்தனலாடி அலர்மிசை அந்தணன் உச்சிக்
களைதலை யிற்பலி கொள்ளுங் கருத்தனே கள்வனே என்னா
வளையொலி முன்கை மடந்தையோர் பாக மாயவன் வாழ்கொளி புத்தூர்த்
தளையவிழ் மாமலர் தூவித் தலைவன தாளிணை சார்வோம்.
அடர்செவி வேழத்தின் ஈருரிபோர்த்து அழிதலை அங்கையில் ஏந்தி
உடலிடு பிச்சையோ டையம் உண்டியென்று பலகூறி
மடனெடு மாமலர்க் கண்ணியோர் பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்
தடமலர் ஆயின தூவித் தலைவன தாள்நிழல் சார்வோம்.
உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர்கட கக்கை அடர்த்து
அயலிடு பிச்சையோ டையம் ஆர்தலை என்றடி போற்றி
வயல்விரி நீல நெடுங்கணி பாகம் ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்
சயவிரி மாமலர் தூவித் தாழ்சடை யானடி சார்வோம்.
கரியவன் நான்முகன் கைதொழு தேத்தக் காணலுஞ் சாரலு மாகா
எரியுரு வாகியூ ரையம் இடுபலி உண்ணி என்றேத்தி
வரியர வல்குல் மடந்தையோர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
விரிமலராயின தூவி விகிர்தன சேவடி சேர்வோம்.
குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யிற் கொள்கையினார் புறங் கூற
வெண்டலையிற் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி
வண்டமர் பூங்குழல் மங்கையோர்பாக மாயவன் வாழ்கொளிபுத்தூர்த்
தொண்டர்கள் மாமலர் தூவத் தோன்றநின் றானடி சேர்வோம்.
கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங் கரைபொரு காழிய மூதூர்
நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம் பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும் வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர்கெடுதல் எளிதாமே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
14. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய திருவதிகை வீரட்டானப் பதிகம் |
அரவணையான் சிந்தித் தரற்றும் மடி அருமறையான் சென்னிக் கணியா மடி
சரவணத்தான் கைதொழுது சாரும் மடி சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணா மடி
பரவுவார் பாவம் பறைக்கும் மடி பதினெண் கணங்களும் பாடும் மடி
விரவுநீர்த் தென்கெடில நாடன் னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி
கொடுவினையார் என்றுங் குறுகா வடி குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும் மடி
படு முழவம் பாணி பயிற்றும் மடி பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்த வடி
கடுமுரணேறூர்ந்தான் கழற்சே வடி கடல்வையங் காப்பான் கருதும் மடி
நெடுமதியங் கண்ணி அணிந்தா னடி நிறைகெடில வீரட்டம் நீங்கா வடி
வைதெழுவார் காமம்பொய் போகா வடி வஞ்சவலைப் பாடொன் றில்லா வடி
கைதொழுது நாமேத்திக் காணும் மடி கணக்கு வழக்கைக் கடந்த வடி
நெய்தொழுது நாமேத்தி ஆட்டும் மடி நீள்விசும்பை ஊடறுத்து நின்ற வடி
தெய்வப் புனற்கெடில நாடன் னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி
அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும் மடி அழகெழுத லாகா அருட்சே வடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்த வடி சோமனையும் காலனையுங் காய்ந்த வடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும் மடி பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
திருந்து நீர்த் தென்கெடில நாடன்னடி திருவீரட்ட டானத்தெஞ் செல்வன்னடி
ஒருகாலத் தொன்றாகி நின்ற வடி ஊழிதோறூழி உயர்ந்த வடி
பொரு கழலும் பல்சிலம்பும் ஆர்க்கும் மடி புகழ்வார் புகழ்தகைய வல்ல வடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி இன்புற்றார் இட்டபூ ஏறும் மடி
திருவதிகைத் தென்கெடில நாடன் னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி
திருமகட்குச் செந்தா மரையா மடி சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும் மடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்ற வடி புகழ்வார் புகழ்தகைய வல்ல வடி
உருவிரண்டும் ஒன்றோடொன் றொவ்வா வடி உருவென் றுணரப் படாத வடி
திருவதிகைத் தென்கெடில நாடன் னடி திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி.
உரைமாலை எல்லாம் உடைய வடி உரையால் உணரப் படாத வடி
வரைமாதை வாடாமை வைக்கும் மடி வானவர்கள் தாம் வணங்கி வாழ்த்தும் மடி
அரைமாத் திரையில் அடங்கும் மடி அகலம் அளக்கிற்பார் இல்லா வடி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி கமழ் வீரட் டானக் காபாலி யடி.
நறுமல ராய்நாறு மலர்ச்சே வடி நடுவா யுலகநாடாய வடி
செறிகதிருந் திங்களுமாய் நின்ற வடி தீத்திரளாய் உள்ளே திகழ்ந்த வடி
மறுமதியை மாசு கழுவும் மடி மந்திரமும் தந்திரமும் ஆய வடி
செறிகெடில நாடர் பெருமானடி திருவீரட் டானத்தெஞ் செல்வன் னடி.
அணியனவுஞ் சேயனவும் அல்லா வடி அடியார்கட் காரமுத மாய வடி
பணிபவர்க்குப் பாங்காக வல்ல வடி பற்றற்றார் பற்றும் பவள வடி
மணியடி பொன்னடி மாண்பா மடி மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்ல வடி
தணிபாடு தண்கெடில நாடன் னடி தகைசார் வீரட்டந் தலைவன் னடி.
அந்தாமரைப் போதலர்ந்த வடி அரக்கனையும் ஆற்றல் அழித்த வடி
முந்தாகி முன்னே முளைத்த அடி முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தி வடி
பந்தாடு மெல்விரலாள் பாகன் னடி பவளத் தடவரையே போல்வா னடி
வெந்தார் சுடலைநீ றாடும் மடி வீரட்டங் காதல் விமல்லன் னடி.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்