தோளா முத்தச் சுடரே போற்றி !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திரயம்பகேஸ்வரர் பாகம் 2
சற்குருவின் சத்ய சாதனை

சாதனை என்று உண்டெனில் அது நீயே அங்காளி... என்பார் நம் சற்குரு. பல ஆண்டுகளுக்கு முன் காயத்ரீ, பொன்னி நதி என்ற காவிரி இவை அந்தர்யாமியான சரஸ்வதி நதியுடன் இணையும் அன்பிலாந்துறை அருகில் உள்ள காயத்ரீ முக்கூடல் புனித சங்கமப் பகுதியில் ஆடி 18ம் தேதி அன்று பஞ்சகவ்யத்தால் தீபங்கள் ஏற்றி வழிபடும்படி நம் சற்குரு பணித்திருந்தார்.

ஆனால் இந்த தீப ஒளி, திரயம்பகேஸ்வர சக்திகள் ஒளிரும் ஆடி மாதம், வியாழக்கிழமை, ஜூலை 3 என்ற சக்திகளுடனும் இணையும்போதுதானே பலன்கள் பூரணமாக நம் அடியார்களுக்கு சித்திக்கும், தித்திக்கும் என்ற காரணத்தாலோ என்னவோ இந்த தீப வழிபாட்டை நாம் நிகழ்த்துவதற்கு இத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொண்டன.

இங்குள்ள வீடியோவில் பஞ்சகவ்யம், குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் தேங்காய் எண்ணெய், ஞாபக சக்தியை வளர்த்து ஸ்திரப்படுத்தும் வல்லாரை கிருதம் இவை சேர்ந்த தீபங்களை காயத்ரீ முக்கூடல் பகுதியில் அடியார்கள் மிதக்க விட்ட காட்சியை கண்டு இன்புறலாம். எந்த சஞ்சலமான மன எண்ணங்களும், எண்ண ஓட்டங்களும் இவ்வாறு மிதந்து செல்லும் தீப ஒளியைக் காணும்போது அமைதி கொள்ளும். எத்தகைய மன சஞ்சலங்கள் ஏற்பட்டு அதன் விளைவாக தலைவலி, ஒற்றைத் தலைவலி, குடற்புண் நோய்களால் வருந்தினாலும் இத்தகைய கவின்மிகு காட்சிகளை தொடர்ந்து காண்பதால் அத்தகையோர் நலம் பெறுவர்.

ஆடி 18 பதினெட்டாம் பெருக்கு என்பது மூவாற்றுப் புழா சக்திகளை சமுதாயத்தில் வர்ஷிக்கும் மகத்துவத்தை ஏற்கனவே விளக்கியுள்ளோம். இந்த சக்திகளை சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கும் விதமாக நம் அடியார்களால் நிறைவேற்றப்பட்ட “வலஞ்சுழிக்கும் சக்திகள் பெற்ற தீபங்களை” வலஞ்சுழித்த காவிரியில் மிதக்க விட்ட சேவையை நீங்கள் கண்டு இரசிக்கலாம்.

காயத்ரீ மந்திர முக்கூடலா
காயத்ரீ சங்கம முக்கூடலா?

தெற்கு திசைக்கும் மேற்கு திசைக்கும் நடுவே திகழும் தென்மேற்கு மூலையை, கன்னி மூலையை நாம் நிருத்தி மூலை என்கிறோம். இத்திசையில் அருள்வழங்கும் மூர்த்தியே கன்னி மூலை கணபதி ஆவார். ஜாதகத்தில் சர ராசி, திர ராசி என்பதை அடுத்து வருவது உபய ராசி எனப்படும். திரம் சரம் என்ற சக்திகளுக்கு இடைப்பட்ட ஒரு நிலையே உபயம் எனப்படும். உட்கார்ந்த நிலையும் அல்லாது நிற்கும் நிலையும் அல்லாது இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையே நிருத்தி கோலம் என்பதாகும். இத்தகைய மூர்த்திகளே நிருத்தி கணபதி மூர்த்திகளாக திருத்தலங்களை அலங்கரிக்கிறார்கள்.

திருவலஞ்சுழி திருத்தலத்தில் இவ்வாறு நிருதி சக்திகளை வர்ஷிக்கும் பிள்ளையார் மூர்த்திகளின் திருக்கோலத்தை இன்றும் பக்தர்கள் தரிசிக்கலாம். இத்தகைய மூர்த்திகள் வழங்கும் அனுகிரகங்களில் ஒன்றே மக்கள் மனதில் பதிந்துள்ள உபய களத்திர ஆசையை, ‘சின்ன வீடு’ என்ற கிளுகிளுப்பை வேரோடு அறுக்கும், அழிக்கும் அனுகிரகமாகும். இந்த ஆடி 18 தினத்தன்று அடியார்கள் இயற்றிய வழிபாடு சர தீபங்களின் சக்தியைக் கொண்டுள்ளதால் அது உபய களத்திர ஆசைகளை வேரறுத்து சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்தும் என்பதே இந்த தீபங்களின் தன்மையாகும்.

சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மம் என்று பிரம்மத்தின் இயல்புகளை தைத்திரீய உபநிஷத் விளக்குகிறது. ஆனால், இவ்வாறு பிரம்மத்தின் இயல்புகளை உணர்தல் என்பது கலியுக மனிதனால் இயலவே இயலாது என்பதை தெளிவாக உணர்ந்த நம் முன்னோர்கள் இறை வழிபாடுகள் மூலமாக இத்தகைய தத்துவங்களை மக்கள் தங்களை அறியாமலே தங்கள் வாழ்க்கையில் இணைத்து வளமுறும் வழி வகைகளை ஏற்படுத்தித் தந்தார்கள்.

உயர்ந்த ஒன்பது தலத்தில்
எழுந்தருளிய ஒன்பது சக்திகள்

இதில் ஒன்றே ஆதி தெய்வமான கணபதி மூர்த்தியின் வழிபாடாகும். ஒரு முறை விவேகானந்தரிடம் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். “நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் நாம் ஏற்கனவே செய்த வினைகளே காரணம் என்று கூறுகின்றனர். அப்படியானால் ஆதியில் ஒரு கர்மமும் செய்யாமல் இருந்த மனித ஆத்மா எப்போது இவ்வாறு இத்தகைய வினைகளை இயற்றியது?” நம் அனைவரின் மனதில் தொக்கி இருக்கும் கேள்வி இதுதானே?

பளிச்சென்று விவேகானந்தரிடம் இருந்து பதில் வந்தது.
“ஏன் எங்கு எப்போது என்ற கேள்விகள் அனைத்தும் காலம் தூரம் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை. இந்த கோட்பபாடுகள் அனைத்தையும் கடந்து நிற்பதே பிரம்மம், இந்த பிரம்மத்தை அடைந்தால், உணர்ந்தால் நீங்களே இந்த கேள்விகளுக்கான விடைகளை உணர்ந்து விடுவீர்கள்.”

இவ்வாறு கணபதி மூர்த்தியை வரும் 20.8.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று வழிபட்டு இந்த வழிபாட்டை தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கும் நிகழ்த்தி, ஒன்பதாம் நாள் பைரவ வழிபாட்டுடன் இதை நிறைவு செய்தால் காலம் தூரம் என்ற கோட்பாடுகளை நீங்கள் சற்குருவின் திருவருளால் நிச்சயம் கடந்து உங்கள் உள்ளேயே இன்பத்தை முழுவதுமாக அடைந்து பேரின்பம் பெறலாம். பைரவர் என்பவர் காலத்தை உணர்த்தும் தெய்வ மூர்த்தி என்பதும், பிள்ளையாரின் பெருவயிறு தேசத்தை உணர்த்தும் என்பதையும் நமக்கு தெளிவுபடுத்துபவரே நம் சற்குரு. இந்த தத்துவத்தை நாம் உணர வழி வகுப்பதே நீரின் மேல் மிதக்கும் தீபங்களாகும். மேலும் இது ஜீவாத்மா பரமாத்மா ஐக்ய தத்துவத்தையும் விளக்குவதாகும்.

ராமபிரான் தன்னுடைய வாழ்க்கைப் பாடமாக மக்களுக்கு உணர்த்திய பல தத்துவங்களில் இந்த ஜீவாத்மா பரமாத்மா ஐக்ய தத்துவமும் ஒன்றாகும்.

எப்படி?

சேதுராம பாவன பந்தனம்

ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்கு செல்வதற்காக குரங்குப் படை மூலமாக ராமேஸ்வர கடற்கரையில் சேது பாலம் அமைத்தார் என்பது நாம் அறிந்ததே. இந்த சேது பந்தனம் என்ற பாலத்தை அமைக்க லட்சக் கணக்கான குரங்குகள் இராப்பகலாக அங்கு பணி செய்ய வேண்டி நேர்ந்தது. நளன் நீலன் என்று பாறைகளை நீரில் மிதக்க வைக்கும் குரங்குகள், குஞ்சரா என்று தங்கள் வாலை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நீட்ட வல்ல குரங்குகள், மனிதர், அசுரர், தேவதை என எந்த உருவத்தை வேண்டுமானாலும் எடுக்க வல்ல இச்சாதாரி குரங்குகள் என்று எத்தனையோ விதவிதமான குரங்குகள் எல்லாம் இந்தப் படையில் இருந்தன.

வாலியின் குழந்தை அங்கதன் தொட்டில் குழந்தையாக இருந்தபோது அவனை மகிழ்விக்க பத்துத் தலை உடைய ராவணனை பிடித்து வந்து ஒரு பூச்சி போல் அந்தக் குழந்தையின் தொட்டிலின் மேல் கட்டி விளையாட்டு காட்டிய வாலியிடம் கூறியிருந்தால் போதுமே ராவணனிடம் இருந்து சீதையை எளிதில் மீட்டிருக்கலாமே?

இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் ராமர் குரங்குப் படையைக் கொண்டு இலங்கைக்கு பாலம் கட்டினார் என்றால் இதில் பதிந்துள்ள தெய்வீக இரகசியத்தை நம் சற்குரு போன்ற மகான்களே புரிந்து கொள்ள இயலும்.

கம்பீரமாய் நின்ற ஏகாம்பரன்
திருவலஞ்சுழி

பரத வர்ஷம் என்ற இந்தியா மிகப் பெரிய அளவில் பூலோகத்தில் வியாபித்து இருப்பது, பரமாத்மாவைக் குறிப்பது. இலங்கையோ அளவில் மிகச் சிறியது, ஜீவாத்மாவைக் குறிப்பது. இவ்வாறு பாரத கண்டத்திற்கும் இலங்கைக்கும் பாலம் அமைப்பது என்பது ஜீவாத்மா பரமாத்மா ஐக்யத்தைக் குறிக்கும் அற்புதச் செயல்தானே? நாம் பூலோகத்தை வானில் இருந்து பார்த்தால், நம் பூமியைத் தாண்டி பரவெளியில் பறந்து சென்றால் நாம் இறுதியாகக் கண்களில் காண்பது இந்த ராமபகவான் அமைத்த சேது பந்தனம் என்றால் இதன் மகத்துவத்தை என்னென்பது?

சேதுபந்தனம் ராமேஸ்வரம்

மனிதனின் மனத்தை குரங்கிற்கு ஒப்பிடுவார்கள் பெரியோர். இந்த குரங்கு மனத்தையும் அமைதிப் படுத்தி, சமாதானப் படுத்தி அதை இறைவன்பால் நிலைநிறுத்தும் ஒப்பற்ற அனுகிரகத்தை எதிர்கால மக்கள் அனைவருக்கும் அளிப்பதற்காக ராமபிரானால் தனுஷ்கோடியில் அமைக்கப்பட்டதே சேது பாலமாகும். தனுஷ்கோடி என்றால் ராம பிரானின் கோடிக் கணக்கான தனுசு சக்திகள், தம்பதிகளை இணைக்கும் ஆகர்ஷண சக்திகள் பெருகும் திருத்தலம், சமுதாயத்தின் எதிர்வினை சக்திகளை வேரறுத்து ஒற்றுமையைப் பலப்படுத்தும் தலம் என்றெல்லாம் பொருள்.

இவ்வாறு ஜீவாத்மா பரமாத்மா ஐக்ய தத்துவமாகத் திகழ்ந்த சேதுராம பந்தனத்தைக் கடக்கும் அடியார்கள் நிரந்தர பரமாத்ம ஐக்யத்தைப் பெறும் வண்ணமாக சீதா தேவியுடன் ராமேஸ்வர கடற்கரையில் மணலால் லிங்கம் பிடித்து வழிபடப்பட்ட இறைமூர்த்தியே ஸ்ரீராமநாத சுவாமி ஆவார். இத்தகைய பெருமையை உடையது திருவலஞ்சுழி திருத்தலமும் என்பதால் அங்கு ஆடி பதினெட்டாம் பெருக்கு வழிபாட்டைக் கொண்டாடும்படி நம் சற்குரு தெரிவித்திருந்தார். இவ்வாறு சீதை மட்டும் அல்லாமல் உத்தம பத்னியர் அனைவரும் தம் பதியை எட்டும் வழிபாடே ஆடி பதி எட்டு.

ஒரு முறை ரிஷிகேஷ் சிவானந்தா தன் ஆஸ்ரமத்திற்கு வந்திருந்த ஒரு பெண்மணி நடக்க முடியாமல் பெரிதும் அவதியுறுவதைக் கண்டார். பிராணவித்யா என்ற வைத்ய முறையில் வல்லவர் சுவாமிகள். அந்த பெண்மணிக்கு ஏதோ ஒரு சிகிச்சை அளித்தாரே தவிர தான் வழக்கமாக மேற்கொள்ளும் பிராணவித்யா சிகிச்சை முறையை சுவாமிகள் கையாளவில்லை. அந்தப் பெண் சிறுவயது உடையவளாக இருந்ததால் கால் பாதத்திலிருந்து முழங்கால் வரை கையால் தேய்த்து விடும் அந்த சிகிச்சை முறையை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.

நிருத்த வாரண சக்திகள்
பொலியும் திருவலஞ்சுழி

தெய்வீகமும் லௌகீகமும் கைகோர்த்துக் கொண்டு செல்வதே கலியுகத்தின் தர்மமாகும். அவ்வாறு இருக்கையில் எது லௌகீகம், எது தெய்வீகம் என்பதை அடியார்கள் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா? உதாரணமாக, திருஅண்ணாமலை கிரிவலப் பாதை எங்கும் எட்டு முழ வேட்டியை விரித்து அதில் கிரிவலம் வருவதற்காக சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து அந்த திருநிகழ்ச்சியை நிகழ்த்தும்போது அதில் எவர் ‘கிருஷ்ணராகப்’ பங்கேற்பது என்ற கேள்வி தோன்றுவது இயற்கையே. இது குறித்து நம் சற்குரு கூறுவதாவது...
1. இந்த திருப்பணிக்கு அதிகப்படியான பொருளுதவி, பண உதவி அளித்தவர்கள்
2. கோபால கிருஷ்ணன், மாயக் கண்ணன், நவநீத கிருஷ்ணன் என்ற பெருமாள் நாமங்களை உடையவர்கள்
3. ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்
4. 8, 17, 26 போன்ற தேதிகளில் பிறந்தவர்கள்
இவர்களில் யார் வேண்டுமானாலும் மேற்கண்ட திருப்பணியை நிறைவேற்றலாம்.

இது ஒரு குறையாகவே தோன்றியது சுவாமிகளுக்கு. மீண்டும் அந்தப் பெண்மணியின் அறைக்குச் சென்று, தான் அவள் உள்ளே திகழும் இறைவனின் சக்தி உருவத்திற்கு சேவை செய்யவே விரும்புவதாகக் கூறவே அந்தப் பெண்மணியும் சுவாமிகளின் சேவைக்கு முழு மனதுடன் ஒத்துழைப்புக் கொடுத்தாள்.

இவ்வாறு சேவையின் உச்ச நிலைக்கு சென்ற சுவாமிகள்தான் பெருமாளின் தசாவதார மகிமைகளை உணர்ந்து அதில் ராமர், கிருஷ்ணர் என்ற இரு அவதார தத்துவங்களின் சக்திகளை மட்டும் மக்கள் பெறும் வண்ணம்
            ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
           ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
என்ற ராம கிருஷ்ண தாரக மந்திரத்தை உலகிற்கு தாரை வார்த்து அளித்தார்.

பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் ஒருவனே ஆண்பிள்ளை, மற்ற அனைவரும் அவனிடம் பக்தி கொண்ட கோபியர் பெண்களே. பக்தை மீராவின் இந்தக் கருத்தை மனதில் இருத்தி கீழே வரும் சற்குருவின் திருவிளையாடலை சிந்தையில் நிறுத்தவும். பெருமாள் மூர்த்தியை நெஞ்சில் நிறுத்திய லட்சுமி தேவியின் நாமத்தைக் கொண்ட ஒரு அடியார் நம் ஆஸ்ரமத்தில் நிகழ்ந்த ஒரு நாடகத்தில் ஒரு ஜமீன்தாரருக்கு மனைவியாக நடிக்கும்படி நேர்ந்தது. அப்பாவின் முகத்தையே ஏறெடுத்துப் பார்க்காமல் அம்மாவின் சீலைக்குப் பின் ஒளிந்து அப்பாவிடம் பேசும் ‘அந்தக் காலத்து மாமி’ அந்த அடியார்.

அத்தகைய பெண் ஒருத்தி எப்படி தன் உடன் பிறந்த சகோதரனுக்கு மனைவியாக நடிக்க முடியும்? என்னதான் அது நாடகமாக இருந்தாலும் அந்த ‘தம்பதியரின்’ மனம் இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை. நம் ஆஸ்ரமத்திற்கு எதிரில் உள்ள சிவசக்தி ஐக்ய தரிசனப் பகுதியில் தொடர்ந்து வலம் வந்தவாறே இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு தங்கள் மனதை எப்படி மாற்றிக் கொள்வது என்பது குறித்து அவர்கள் சிந்தித்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு பளிச்சென்று ஒரு எண்ணம் மனதில் உருவானது. ஆம், சிவ சக்தி ஐக்ய தரிசனம் என்பது சிவனான ஆணும் சக்தியான பெண்ணும் இணைந்த கோலம்தானே. இந்த கோலம் இரவில் ஒன்றுடன் ஒன்று ஐக்யமாகி, மறைந்து, தீர்க்க தரிசனம் என்றே ஒரே தரிசனமாகத் தானே திகழ்கிறது.

இதுவே ஆண் பெண் என்ற கோலம் கடந்த இறை சக்தி... இதை தெளிவாக உணர்ந்தனர் அந்த அடியார்கள் ... அப்புறம் என்ன ? கதாபாத்திரங்கள் உருவாகி விட்டனர்...
அந்த மாமிக்கு அலங்காரம் செய்து விட தன் ஆஸ்ரமத்து அடியார்கள் அனைவரையும் அழைத்து, “நீங்கள் உங்கள் திருமணங்களில் எப்படி எல்லாம் காட்சி அளிக்க வேண்டும் என்று நினைத்திருந்தீர்களோ, அவற்றில் எத்தனையோ அலங்காரங்கள் விடுபட்டுப் போயிருக்கலாம்... அவை அனைத்தையும் இந்த மாமிக்கு நிறைவேற்றி உங்கள் அபிலாஷைகள் அனைத்தையும் தீர்த்துக் கொள்ளலாம்...” என்றார் தீர்க்கதரிசியான நம் சற்குரு.

அடியார்களின் மேக்கப் குழு அவ்வாறே செயல்பட்டது. அலங்கார நிறைவில் மாமியைக் கண்ட நம் சற்குரு, “ஆ... அறுபதில் இருபதா ...?” என்று கேட்டு வியந்து நின்றார். அப்போது நம் சற்குருவின் கண்களைக் காணும் பேறு பெற்ற அடியார்கள் உத்தமத் தாய் ஒருத்தி தன் அன்பு மகளின் மணக் கோலத்தை கண்டு களிக்கும் பேருவகை, எங்கும் விரிந்து வியாபித்து விண்ணளாவ நின்ற அதிசயத்தை அங்கே கண்டனர்.

நம் சற்குருவின் இந்த வர்ணனையைக் கேட்ட அடியார்கள் யாவரும் ‘கலீர்’ என்று சிரிக்க அந்தச் சிரிப்பின் ஆனந்த அலையில் ஆஸ்ரமமே அதிர்ந்தது எனலாம். இத்தகைய சற்குருவைப் பெற்ற நமக்கு இன்பமூட்டும் வேறொரு நிகழ்ச்சி உண்டா என்ன?

ஓட்டை கைக்கு நடந்த உத்தமர்

துவாரம்+கை = துவாரகை. துவாரகாபுரி வேந்தனான கிருஷ்ண பகவானை தரிசிப்பதற்காக நடந்தே சென்றார் குசேலர் என்ற பக்தர் என்பது நாம் அறிந்ததே. குசேலர் அவ்வாறு நடந்து செல்லும்போது சாலையின் இருமருங்கிலும் உள்ள மரங்களின் நிழலில் செல்லாது அந்த இரு நிழல்களின் நடுவே அமைந்த இடைவெளியில் உச்சந்தலையில் சூரியனின் பிரகாசமான கதிர்கள் பரவும் வண்ணம் நடந்து சென்ற உத்தமரே குசேலர் ஆவார்.

குசேலோபாக்கியானம்
திருஅண்ணாமலை

மரங்களின் நிழலில் வெயில் தாக்காது திரியும் எறும்புகள், பூச்சிகள் போன்றவற்றிற்கு இடையூறு நேரா வண்ணம் குசேலர் அவ்வாறு நடந்து சென்றார் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் எப்படி நிலாபுரந்தர வாசு மாமுனி சந்திரனின் கதிர்கள் நேரடியாக அண்ணாமலை ஈசனின் மேல் படுவதால் அவர் மாசு அடைந்து விடுவாரோ என்று பயந்து அந்த சந்திர கதிர்களை தம் தவ வலிமையால் தூய்மை செய்து அதை தூய்மையான, மாசு இல்லாத செம்பவள கதிர்களாக மாற்றி இறைவன் மேல் பொழிந்தாரோ. அது போல தம் உடலில் தோயும் கர்ம வினைகளை எல்லாம் சூரிய கதிர்களால் பஸ்மம் செய்து ஒரு தூய ஆன்மாவாக கிருஷ்ண பகவானை தரிசிக்க விழைந்த குசேலரின் முயற்சியே இது.

இது போன்ற தன்மை உடையதே அங்காரகப் பிலம் என்னும் தோசை சுடும்போது தோசையில் உண்டாகும் ஓட்டைகள். எந்த அளவிற்கு தோசை மெல்லியதாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதில் ஓட்டைகள் என்ற அங்காரகப் பிலங்கள் தோன்றும் வாய்ப்பு மிகுதி. அதனால் என்ன என்று நீங்கள் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது. எந்த அளவிற்கு இந்த அங்காரகப் பிலங்கள் தோன்றுகின்றனவோ அந்த அளவிற்கு செவ்வாய் கிரகத்தில் மனிதப் பிறவிகள் பெருகி அந்த வினைகளை அங்கு கழிக்க வேண்டும் என்பதும் கர்ம வினைப் படிவால் ஏற்படும் ஒரு விளைவே.

தோசை ஓட்டைக்கும் பிறவிக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம்...
பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோய் போன்ற காரணங்களால் பெண்களின் மார்பகத்தின் சில பகுதிகளை வெட்டி நீக்குவதாக தற்போதைய அறுவை சிகிச்சை அமைகிறது. அப்போது மார்பகத்தின் குறுக்கே அறுக்காமல் நெடுக்கில் அறுப்பது என்பது அறுவை சிகிச்சை நிபுணர்களால் மேற்கொள்ளப்படும் நிவாரண முறையாகும்.

இத்தகைய அறுவை சிகிச்சையால் பாலமுதத்தை வர்ஷிக்கும் இரத்தக் குழாய்கள் அதிக அளவில் பழுதடையாமல் ஓரிரு இரத்தக் குழாய்கள் மட்டுமே நீக்கப்படும். இவ்வாறு பிறவிகளைக் குறைக்கவே நாம் பெரிய வெங்காயத்தை குறுக்கே அரிந்து அதை திண்டு தோசையில் சட்னியாக வைத்து தானம் அளிக்கிறோம். திண்டு தோசை என்பது ஓட்டைகளே இல்லாத, அல்லது மிகக் குறைந்த அளவில் ஓட்டைகள் உடைய தோசை. மனிதர்களின் பிறவிகளைக் குறைத்து அவர்களுக்கு ஆனந்தம் அளிப்பதற்காக சற்குருமார்கள் எந்த அளவிற்கு homework செய்ய வேண்டியிருக்கிறது, பாடுபட வேண்டி வருகிறது என்பதை நாம் நினைத்தால் சற்குருவின் நிழலைத் தவிர வேறு எது புகலிடம்?

பித்ருக்களின் நாயகன் பெருமாள் என்று கூறும்போது பெருமாள்தானே இத்தகைய சந்ததிகளுக்கெல்லாம் திண்டு தோசை தானம் மூலமாக அடைக்கலம் அளிக்க வேண்டும். அதனால் இத்தகைய தோசை பிலங்கள் எல்லாம்
           திருத்தங்கல் நாராயணா
           திருமழிசை நாராயணா
           திருவாக்நேய நாராயணா
           புண்டரீக நாராயணா
           புவியளந்த நாராயணா
           புன்னாகவாளி நாராயணா
என்ற நாராயண நாமங்களைக் கொண்டிருக்கும். திண்டு தோசை வார்க்கும்போதோ பெரிய வெங்காய சட்னி அரைக்கும்போதோ மேற்கண்ட நாராயண நாமங்களை ஓதிக் கொண்டே இருப்பதால் செவ்வாய் கிரகத்தில் பிறவிகள் தொடரும் வேதனையை அடியார்கள் சந்திக்காமல் இருக்கலாம் என்பதே இந்த ஆடி மாதத்தில் இரு அமாவாசை நடுவில் திகழும் பௌர்ணமியை குறிக்கும் குசேல பாத யாத்திரையாகும்.

பிலம் என்றால் துவாரம், ஓட்டை, சிறுவழி என்றெல்லாம் பொருள். கிருஷ்ண பிலம் என்றால்...? பல்வேறு அர்த்தங்கள் இதற்கு உண்டு.
முதலாவதாக,
பல திரைப்படங்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். துரோபதையை துச்சாதனன் துகில் உரியும்போது திரையில் உள்ள ஒரு ஓட்டை வழியாக கிருஷ்ண பகவான் காட்சி அளித்து பல சீலைகளை அளிப்பார். அந்த சீலையின் பின்னால் துரோபதை சுற்றிக் கொண்டிருப்பாள். கிட்டத்தட்ட இது போன்ற ஒரு காட்சிதான் துரியோதனனின் சபையில் நடந்த துகிலுரியும் காட்சியும்.

பகவான் கிருஷ்ணர் திருஅண்ணாமலையை வலம் வந்து அனுகிரகமாகப் பெற்ற வேட்டிகள் அனைத்தையும் திருஅருணாசல ஒளிப் பிழம்பாக அளித்தார் எம்பெருமான். இந்த வேட்டிகளை எல்லாம் இணைத்து துரோபதைக்கு அளிக்க துரோபதையின் உடம்பைத் தழுவிய அந்த வேட்டிகள் அனைத்தும் வண்ண வண்ண சீலைகளாக, கொடிகள், மலர்கள், பழங்கள், பறவைகள், விலங்குகளின் உருவம் பதித்த சீலைகளாக மாறின.

இவ்வாறு எம்பெருமானின் ஒளிப் பிழம்பு, கிருஷ்ண பகவானின் கிருஷ்ண பில சக்திகள், துரோபதையின் நித்ய கன்னிகா என்ற அக்னி சக்திகள் இவை அனைத்தும் ஒன்றாய்த் திரண்டு அந்த சீலைகளை எவரும் தொட முடியாத அளவிற்கு அக்னி பிழம்பாகத் தோன்றின. இவ்வாறு கிருஷ்ண சக்திகள் வெளிப்பட்ட பிலமே கிருஷ்ண பிலமாகும்.

சூரியனும் சந்திரனும் குறுக்கே செல்லாத திருமலையே திருஅண்ணாமலை என்பதை நாம் அறிவோம். நம் ஊனக் கண்ணாலும் இந்த உத்தம நிலையைக் காண இங்குள்ள வீடியோ உங்களுக்குத் துணை புரியும். வானிலிருந்து வீசும் இடி மின்னல் ஒளி சற்றும் திருஅண்ணாமலைக்குள் புகாத அற்புதத்தை கண்டு வியக்காமல் நாம் இருக்க முடியுமா?

அடுத்ததாக,
நம் கட்டை விரலின் முதல் கணுவில் மட்டும் 300 பில துவாரங்கள் உண்டு. இந்த ஒவ்வொரு பில துவாரத்தின் மூலமாக உயிர் பிரியும்போதும் ஒவ்வொரு விதமான பலன்களை அந்த உயிர் அனுபவிக்க வேண்டி வரும். தூய வெண்ணிற ஒளியாகத் திகழ்பவையே இந்த பிலம் வழியாகப் பிரியும் உயிரின் தன்மை. ஆனால், மக்களின் கர்ம வினைகளின் விளைவாக இந்த உயிரை இருள் சூழ்ந்து அது கருநிறமாக, கிருஷ்ண பிலமாகத் தோன்றுகிறது.

இவ்வாறு கிருஷ்ண பிலம் பெயருக்கேற்ற பூர்ண பிலமாக, ஒளி நிறைந்த ஜோதியாக தோன்ற சூரிய ஒளியில் துவாரகையை அடைந்தார் குசேலர். தான் மற்ற உயிர்களுக்காக இவ்வாறு பாடுபட்டாலும் அதை கிருஷ்ண பகவான் அங்கீகரித்தால்தானே ஒரு பக்தரின் வேண்டுகோள் பூர்ணமடையும். இவ்வாறு குசேலரின் பக்தி பூர்ணமடைந்ததே இத்தகைய ஆடி மல மாதம் என்பதே குசேலரின் பாத யாத்திரை நல்கும் பரமானந்தம் ஆகும்.

கிருஷ்ண பகவான் துரோபதைக்கு ஆடை அளிப்பதற்காக திருஅண்ணாமலையை எட்டு முழ வேட்டியின் மேல் நடந்து வந்து அதை அண்ணாமலை பிரசாதமாக அளித்தார் அல்லவா? இதை நினைவு கூறும் விதமாக செவ்வாய்க் கிழமை, தேய்பிறை அஷ்டமி இணையும் நாளில் நம் அடியார்கள் இயற்றிய வழிபாட்டை இங்குள்ள வீடியோவில் நீங்கள் கண்டு மகிழலாம். இவ்வாறு கிட்டும் பிரசாதம் ஜோதி கிருஷ்ண அலங்காரம் எனப்படும். ஜோதி அலங்கார பீடாதிபதிதானே நம் சற்குரு? இவ்வாறு அருணாசல ஈசனின் அருணை ஜோதியால் பிரசாதமாக அளிக்கப்பட்டு, கிருஷ்ண பகவானால் புனிதப்படுத்தப்பட்டு, ஜோதி அலங்கார பீடாதிபதியான நம் சற்குருவால் அலங்கரிக்கப்பட்டதே இந்த ஜோதி கிருஷ்ண அலங்காரம் ஆகும்.

இத்தகைய பிரசாதங்களை வழங்கும், பெறும் அடியார்களின் எத்தகைய கடுமையான கர்ம வினைகளையும் தீர்க்கும் சக்தி பெற்றதே இந்த ஜோதி கிருஷ்ண அலங்காரம்.

ஆடிய பாதம் அபய பாதம்

திருஅண்ணாமலை தேவநந்தல் கிராமத்தில் உள்ள இரு விருத்தசீர சுமைதாங்கிகளே ஆடிய பாதம் அபய பாதம் என்ற நாமத்துடன் துலங்குகின்றன. இங்குள்ள கோசாலை என்ற பசு மாடுகள் பராமரிக்கும் கூடத்தில் நம் சற்குரு நிகழ்த்திய அற்புதம் நம்மை மெய்சிலிர்க்க வைப்பதே. சென்ற பிரதோஷ தினத்தன்று நம் அடியார்கள் இந்த கோசாலை துப்புரவு பணியில் ஈடுபட்டு அங்கு நம் சற்குரு அருளிய தீபக் கும்மி பாடலைப் பாடி தீபம் ஏற்றி கோபூஜைகள் நிறைவேற்றினர். அப்போது ஒரு பசு மாடு காளைக் கன்று ஒன்றை பிரசவிக்க அது Breech delivery ஆக அமையவே அனைவரும் செய்வதறியாது திகைத்தனர்.

தேவநந்தல் “பிரதோஷ நாயகர்”
திருஅண்ணாமலை

உலக அறுவை சிகிச்சை மருத்துவத்தில் அறுவை சிகிச்சையை இரு காரணங்களுக்காக மட்டுமே அங்கீகரிக்கின்றனர்.
1. பிறக்க இருக்கும் குழந்தையின் தலை தாயின் கர்ப்பப்பை வாயை விட பெரிதாக இருத்தல்
2. பிறக்க இருக்கும் குழந்தையின் கால் முதலில் கர்ப்பப்பைக்கு வெளியே வருதல் (Breech delivery)

பொதுவாக, இத்தகைய சூழ்நிலையில் மாடுகளுக்கு பிரசவம் பார்ப்பவர்கள் கயிறு ஒன்றைக் கன்றின் காலில் கட்டி அதை வெளியே இழுக்க முயற்சி செய்வர். இதனால் பெரும்பாலான கன்றுகளும் மாடுகளும் இறந்து விடுவது உண்டு. ஆனால், திருஅண்ணாமலை கோசாலையில் இருந்த நம் அடியார்களோ ‘குரு பக்தி’ என்ற கயிற்றைக் கட்டி அந்த கன்றை இழுத்தனர், அதாவது அண்ணாமலையானுக்கு அரோகரா என்ற கோஷத்தை எழுப்பியவாறே இருந்தனர். என்ன ஆச்சரியம், சற்று நேரத்தில் கன்று சுகமாகப் பிரசவம் அடைந்து துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது.

பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் தோன்றிய அந்தக் காளைக் கன்றை இங்குள்ள வீடியோவில் அடியார்கள் கண்டு இரசிக்கலாம். ஒரு முறை நம் சற்குரு திருச்சியில் உள்ள ஒரு கோசாலையில் உழவாரப் பணிகள் நிறைவேற்றியபோது அங்குள்ள பசுஞ் சாணத்தின் மேல், லோபி ஒருவன் தங்கக் காசு குவியலின் மேல் பாய்வதைப் போன்ற ஒரு ஆர்வத்துடன் பாய்ந்து அந்த சாணக் குவியலை தன் கைகளால் அள்ளி எடுத்தார்.

“இது உங்கள் கணக்கில் ஒரு சாதாரண சாணக் குவியல். அடியேனைப் பொறுத்தவரை இது கைலாயத்திலோ வைகுண்டத்திலோ உள்ள சாண மலை...”, என்று விளக்கம் அளித்தார். சற்குருவின் பூத உடல் இருக்கும்போதுதான் இத்தகைய திருப்பணிகள் கைலாயம், வைகுண்டம் என்ற தேவ சக்திகளை உருவாக்கும் என்று கிடையாது, சற்குருவை நம்பி அவர் கூறிய முறையில் திருப்பணிகள் இயற்றினாலும் அங்கு கைலாயமும் தோன்றும், வைகுண்டமும் மலரும் என்பதற்கு இந்த கோசாலைத் திருப்பணி ஒரு சான்றாகும்.

மனிதன் தெய்வம் ஆகலாம்

ஆப்பிரிக்காவில் தங்க ரேகைத் தவளை என்ற ஒரு வகை தவளை இனம் உண்டு. ஒரு காலத்தில் திருக்கழிப்பாலை திருத்தலத்தில் தோன்றிய கஞ்சலங்கை என்ற இனத் தவளைகளின் பரம்பரைகளே இவ்வாறு ஆப்பிரிக்காவில் இன்று தங்க ரேகைத் தவளைகள் என்று அழைக்கப்படுகின்றன. மறைந்து விடும் அபாய நிலையில் உள்ள இந்தத் தவளை இனம் பற்றி ஓரளவு நாம் புரிந்து கொள்ளும் வகையில் இதன் மகிமையை உரைக்கவல்லவரே நம் சற்குரு ஆவார்.

தங்கரேகைத் தவளை

பிறர் மீது பழி போடும் எண்ணத்தால் மனித உயிர்களில் தாழ்ந்த நிலையை அடைந்த மனிதன், மற்றவர்களுக்காக தியாகம் ஆற்றும்போது, மனிதன் என்ற சொல் மறைந்து அவன் தெய்வம் ஆகிறான். இதை உணர்த்துவதே கஞ்சலங்கை தேவதைகளின் வரலாறு ஆகும். நீங்கள் சிறுவயதில் தவளையை அறுத்து பரிசோதனைக்கு உள்ளாக்கி இருக்கலாம். உடலில் உயிர் என்பது ஓர் அணுத் துளி இருக்கும் வரை தவளையின் இதயம் துடித்துக் கொண்டே இருக்கும். அது போலவே இந்த கஞ்சலங்கை தேவதையின் உயிர் உடலில் தங்கும் அந்த கடைசி நொடி வரை அதனுடைய இதயம் துடித்துக் கொண்டே இருக்கும்.

ஆமாம், தங்க ரேகைத் தவளைகளின் அரிய பணி என்ன? உலகில் ஒரு லட்சம் மக்கள் வெளிவிடும் தீய எண்ணங்களை அவர்கள் எண்ண ரேகைகளின் மூலம் ஈர்த்து பஸ்மம் செய்வதே தங்க ரேகை தவளைகளின் தலையாயப் பணி ஆகும். இந்த பணியை அந்தத் தவளை உயிரோடு இருக்கும் வரை ஆற்றுவது என்பது பிரமாதமில்லை, அந்த தவளை உயிர் நீத்த பின்னும் ‘எண்ண அலைகளாக’ இந்த தியாக உணர்வுகள் அந்தத் தவளைகளுக்கு பரிணமிக்கும் என்பதே நாம் கனவிலும் நினைக்க முடியாத தியாக உள்ளம். ‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி...’ என்ற பரம்பரையில் வந்தவை இந்த தவளைகள்.

இந்த அரிய தவளைகளின் தியாக உணர்வை சற்றும் புரிந்து கொள்ள முடியாத மனித இனம், இதயம் துடிக்கும் நிலையில் இந்த தவளைகளை நெருப்பில் சுட்டு அந்த தவளைகளின் இதயத்தில் இருந்து பொலியும் ‘உதிராமிர்தம்’ என்பதை தங்கள் அம்பில் வைத்து மற்ற விலங்குகள் மேல் பாய்ச்ச, இறந்த பின்னும் தங்கள் அரிய சேவை என்ற விஷத்தை, விஷ எண்ணங்களை ஈர்க்கும் தன்மையால் அந்த அம்பால் தாக்கப்பட்ட விலங்குகள் உடனே மாய்ந்து விடுகின்றன. இது மனிதன் இழைத்த கொடுமையா, இல்லை இறந்த பின்னும் சேவை செய்யும் அப்பாவித் தவளைகள் மேல் மனிதனால் சுமத்தப்பட்ட பழியா?

ருத்ர தீர்த்தம் மம்மியூர்

தவளைப் படுக்கை சித்தர் என்ற ஒரு மகான் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து பன்னெடுங்காலம் தவளைகளுக்கு எல்லாம் நற்கதி வழங்கினார் என்பதை நாம் அறிவோம். தவளைகளின் உடலில் தோன்றும் ஒரு குளிர்ச்சி, ஜில் தன்மை வேறு எந்த விலங்கின் உடலிலும் காண முடியாது என்பது உண்மையே. அதனால்தான் ஒரு முறை பனாமா தீவில் வாழை மட்டையின் நடுவில் வசித்துக கொண்டிருந்த ஒரு தவளையை பிதுர் லோக வாசிகள் அழைத்தபோது, “No no, I won't come, it is very cool here...”, என்று பதிலளித்ததாம்.

நம் சற்குருவைக் காண இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த ஒரு இளம் பெண் வந்தபோது நமசிவாய என்று கூறி நம் சற்குருவை வணங்க, “ஒரு டன் ஐஸ்ஸை அடியேன் தலையில் வைத்ததுபோல் இருந்தது, சார்...”, என்றார். இதுவே இறை நாமம் அளிக்கும் குளிர்ச்சி, திருக்கைலாயத்தில் பொழியும் ஐஸ் மழையின், பனி மலையின் காரணமும் இதுவே!

இத்தகைய அமிர்த மழைப் பொழிவு தோன்றி அருளும் காலமே இந்த ஆடி மாதம் என்பதால் இதை முடிந்த மட்டும் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி அடியார்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அமிர்தம் பொழிவதும் இங்கே, விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் இங்குதான், எதற்காக?

கிருஷ்ண பரமாத்மா தான் திருஅண்ணாமலையானுடன் ஐக்யமாவதற்கு ஒரு பூலோக காரணம் இருக்க வேண்டும் என்பதற்காக ஏகலைவன் தொடுத்த அம்பில் தன்னுடைய உயிரை விடுவிப்பதாக ஒரு கிருஷ்ண லீலையை நிகழ்த்தினார் அல்லவா? பகவான் கிருஷ்ணர் இது சம்பந்தமாக எந்தவிதமான மன கிளர்ச்சியையும் கொள்ளவில்லை என்றால் அது பகவானின் பெருமை, ஆனால், மனிதப் பிறவி எடுத்த ஏகலைவனின் மனம் இந்த நிகழ்ச்சியைப் பற்றி எந்த அளவிற்கு துடித்திருக்கும். தனது சற்குருவின் மீதே அம்பைப் பாய்ச்சி சற்குருவின் புனித உயிர் மறைவதற்கான ‘அடாத’ காரியத்தைச் செய்ததற்காக ஏகலைவனின் மனம் மிகவும் பதறியது. ஏற்கனவே உணவில்லாமல் பல நாட்கள் அலைந்த அவன் இன்னும் பல நாட்கள் தன்னுடைய கொடிய செயலை நினைத்து நினைத்து வருந்தியாதால் அவன் உடல் துரும்பாய் இளைத்து மருவியது.

ஸ்ரீகோபுர விநாயகர் மம்மியூர்

அப்போது வானில் அசரீரியாய் கிருஷ்ண பகவான் குரல் எழுப்பி, “ஏகலைவா, என்னுடைய உயிர் அண்ணாமலையானுடன் இணைவதற்காக ஒரு ஒப்பற்ற தீரச் செயலைச் செய்தாய். குருவின் மீது அளவு கடந்த பக்தி உடைய உன்னைத் தவிர வேறு யாருக்கும் இது சாத்தியமல்ல... இருந்தாலும் உன்னுடைய மன சமாதானத்திற்காக நான் ஏற்கனவே இயற்றிய திருஅண்ணாமலை கிரிவலத்தை மீண்டும் உனக்காக தோற்றுவிக்கிறேன், அப்போது நீ உன்னுடைய நன்றியை உலகத்தவர்க்கு தெரிவிக்கும் வகையில் ஒரு நன்றி உடைய நாயாக என்னுடைய பின்னால் வா...”, என்று கூற ஏகலைவனும் ஒரு நாய் வடிவில் கிருஷ்ண பகவான் நடந்த அதே வேஷ்டியின் மேல் நடந்து வந்து, எந்த சிவந்த பாதங்களின் மீது தன்னுடைய அம்பைச் செலுத்தினானோ அந்த சிவந்த பாதங்கள் படிந்த திருஅண்ணாமலை மண் மீது பகவான் நடந்து செல்ல, பகவானின் பாதச் சுவடுகளின் மீது நடந்து சென்று தன்னுடைய செயலுக்கு பிராயச் சித்தம் தேடி மன அமைதி பெற்றான்...”, என்பதே நம் சற்குரு விவரிக்கும் இனிய நிகழ்ச்சியாகும்.

நம் அடியார்கள் பகவான் கிருஷ்ணரின் வேடமிட்டு திருஅண்ணாமலையை வலம் வந்தபோது ஒரு கரிய நாய் கிருஷ்ண பகவானைத் தொடர்ந்து வந்து தானும் அண்ணாமலையானுக்கு அரோகரா என்று கூவியழைத்த அரிய காட்சியை இங்குள்ள வீடியோவில் அடியார்கள் கண்டு இரசிக்கலாம்.

ஒரு முறை நம் சற்குரு திருச்சியில் உள்ள ஒரு அடியார் வீட்டிற்கு விஜயம் செய்தார். அப்போது அங்கு வாசலில் இருந்த ஒரு நாய் எழுந்து நின்று ‘லொல்’ என்று குலைத்தது. அப்போது அந்த நாயை யாரும் சட்டை செய்யவில்லை. நம் சற்குரு அந்த அடியாருடன் சுமார் அரை மணி நேரம் அளவளாவி விட்டு திரும்பும்போது மீண்டும் அந்த நாய் நம் சற்குருவைப் பார்த்து ‘லொல்’ என்றது. அங்கிருந்த அடியார்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரவே, “ஏய் போகும்போதுதான் இவரை (நம் சற்குருவை) யார் என்று தெரியாமல் குலைத்தாய்... இப்போதுதான் இவர் நமக்கு வேண்டியவர் என்று தெரிந்து விட்டதே ... பின் ஏன் மீண்டும் இவரைக் கண்டு குலைக்கிறாய்?” என்று கேட்டார்.

நியாயம்தானே...?

நாய் பாஷை என்ன அனைத்து விலங்குகள், தாவரங்களின் பாஷைகளையும் அறிய வல்ல நம் சற்குரு சிரித்துக் கொண்டே, “சார், அது அது பாஷையில் ஓம் சொல்கிறது...”, என்றார்.

“மனிதர்களாகிய உங்களுக்குத்தான் அடியேனை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது அவசியம். அனைத்தும் உணர்ந்த பைரவ மூர்த்திகளுக்கு அடியேனை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை...”, என்பது நம் சற்குரு சொல்லாமல் சொன்ன வார்த்தைகள்.

அனைத்தும் சற்குருவின் திரண்ட அருளால் அமைவதுதான் என்பதை ஸ்ரீகிருஷ்ண பகவானே உறுதி கூறும் அதிசயத்தை இங்குள்ள வீடியோவில் நீங்கள் கண்டு இரசிக்கலாம்.

திருக்கைலாயத்தில் உச்சிவழுதி, திரயம்பகம், காரம்பலம் போன்ற பல பகுதிகள் இருப்பதுபோல வைகுண்டத்திலும் யதுகுலம், கோகுலம், நவநீதம் என்ற பல பகுதிகள் உண்டு. இவற்றில் யதுகுலம் என்ற பகுதியில் பேசப்படும் மொழியே யதுகுலம் என்பதாகும். கிருஷ்ண பகவான் யதுகுல மொழியில் “திருஅண்ணாமலையானுக்கு அரோஹரா” என்று தன் சங்கு நாதத்தில் இசைக்க அதே மொழியில் இங்குள்ள பைரவரும் “திருஅண்ணாமலையானுக்கு அரோஹரா” என்று “குரைக்கும்” இனிய காட்சியை அடியார்கள் கண்டு இன்புறலாம்.

இது நாயா ?

எந்த ஒரு காரியத்தையும் ஈடுபாட்டுடன் செய்தால் அதன் சிறப்பே தனி என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியதே திருஅண்ணாமலையில் பகவான் கிருஷ்ணர் கிரிவலம் வந்த நிகழ்ச்சியாகும். ஒரு அடியார் கிருஷ்ணரைப் போல் வேடமிட்டு திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தாலும் “திருஅண்ணாமலையை கிருஷ்ணர் கிரிவலம் வந்தார்...”, என்று பல இடங்களிலும் பரவலாக திருஅண்ணாமலை எங்கும் பேசப்படும் நிகழ்ச்சிகளை பல அடியார்கள் தாங்களே கேட்டு பெருமைப்படும் அளவிற்கு வானளாவ உயர்ந்தது நம் சற்குருவின் பெருமை!

சுரேஷ் என்றால் சுர ஈசன், அதாவது இறைவனான மனிதன், அல்லது மனிதர்களில் இறைவன் அளவிற்கு உயர்ந்தவன் என்றெல்லாம் பொருள். திருஅண்ணாமலையில் பகவான் கிருஷ்ணரின் திருவடி பட்ட ஆடைகளைச் சுமந்து வருவதற்காக ஒரு காரை அடியார்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த வாகனத்தில் எழுதப்பட்ட நாமமே “S சுரேஷ்” என்பதாகும். குழந்தைகளுக்குப் பெயர் வைக்கையில் ரமேஷ், கணேஷ் என்று “ஷ்” என்று முடியுமாறு வைக்கக் கூடாது என்பது நம் சற்குருவின் பரிந்துரை. “சரி, அவ்வாறு பெயர் அமைந்தவர்கள் தங்கள் பெயர்களை மாற்றிக் கொள்ளலாமா?” என்பது உங்கள் மனதில் எழும் கேள்வி.

ஒரு குழந்தையின் பெயர் என்னதான் தவறாக இருந்தாலும் அந்தப் பெயரை வைத்த பெற்றோர்களின் அன்பு அதில் பதிந்திருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. அதனால் இவ்வாறு சரியாக அமையாத எந்தப் பெயராக இருந்தாலும் அவர்கள் தங்கள் சற்குருவிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு அமைதியாக இருந்தால் அவர் உரிய நேரத்தில் இந்த தவற்றிற்கான பிராயசித்த முறைகளை ஏதாவது ஒரு முறையில் நிறைவேற்றி விடுவார் என்ற சற்குருவின் ‘திருவிளையாடலை’ நிரூபிப்பதும் இந்த நிகழ்ச்சியாகும். S என்பது குருவைக் குறிக்கும் மூன்றிற்கு உரிய எண் கணித குறியாக இருப்பதால் இந்த வாகனத்தின் உரிமையாளர் நம் சற்குருவால் நன்னிலை அடைவார் என்பது தெளிவாகிறது அல்லவா?

குருவின் ஆணையாக விளையும் எந்த செயலையும் ஈடுபாட்டுடன், நம்பிக்கையுடன் நிறைவேற்றினால் உயிர் உள்ள, ஜடப் பொருட்கள் என்ற அனைத்துமே உயர்வடையும் என்பதற்கு சான்றே மேற்கூறிய கிரிவலமாகும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam