முக்காலமும் உணர்ந்தவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீதிரயம்பக ஈஸ்வரர்

திருஅண்ணாமலையில் மனிதக் கண்களுக்குத் தெரியாத பல கோடி தரிசனங்கள் உண்டு. மனிதக் கண்களுக்குத் தெரியாத ஒரு தரிசனத்தால் மனிதர்களுக்கு என்ன பயன் என்று கேட்கத் தோன்றலாம். மனிதக் கண்களுக்குத் தெரியாத எத்தனையோ பொருட்களையும் சக்திகளையும் மனிதன் தினமும் பயன்படுத்திக் கொண்டு, அதனால் பலன்களை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறான். உதாரணமாக மனிதக் கண்களுக்குத் தெரியாத மின்சார சக்தியால் பயன்பெறும் ஜீவ ராசிகள் கோடி கோடியே.

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி
கண்ட்ரமாணிக்கம்

அதேபோல திருஅண்ணாமலையில் ஸ்ரீஅகத்தியர் தரிசனம் செய்த திரயம்பக ஈஸ்வர தரிசனத்தால் உலக ஜீவ ராசிகள் பெறும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. திரயம்பகேஸ்வரர் திருஅண்ணாமலை தரிசனம் என்பது ஒரு சூட்சுமமான தரிசனம் அன்று, மனிதக் கண்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தரிசனம் எனும்போது அது மனிதக் கண்களுக்கு அதீதமான ஒரு விஸ்தீரண சக்தியை உடையதாக இருப்பதே அதன் சிறப்பிற்கு முக்கிய காரணமாகும்.

திருஅண்ணாமலையில் ராவணன் பெற்ற தசமுக தரிசனம் அன்றைய கால யுகநியதியின் படி சுமார் 10,000 மைல்கள் விஸ்தீரணம் உடையது. இத்தகைய ஒரு அகண்டாகார விஸ்தீரணம் உடையதே ஸ்ரீஅகத்திய பெருமான் தரிசனம் செய்த திரயம்பக ஈஸ்வர தரிசனமும் ஆகும். ஸ்ரீஅகத்திய மகரிஷி பெற்ற திரயம்பகேஸ்வர தரிசனத்தின் பலன்களை சாதாரண மக்களும் பெற்றுப் பயனடைய நம் சற்குரு காட்டிய வழிமுறையே இந்த சோபகிருது ஆண்டில் ஆடி மாதம் முழுவதும் திருஅண்ணாமலையை வணங்கி கிரிவலம் வந்து வழிபடும் முறையாகும்.

திரயம்பகம் என்றால் மூன்று விழிகள் உடைய ஈசன், முக்கண் சக்திகள் பொலியும் தெய்வ மூர்த்தி, முக்காலமும் பொலியும் சக்தி என்றெல்லாம் கோடி கோடி பொருள் உண்டு. இறைவனின் இந்த முக்கண் சக்திகள் யுகங்கள் தோறும் மகான்கள், மகரிஷிகள், சித்தர்கள் போன்ற பெருமக்களால் மக்களுக்கு ஏதாவது ஒரு வடிவில் அளிக்கப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன. மீனாட்சி என்ற நாமத்துடன் பார்வதி தேவி பூமியில் தோன்றிய அவதாரமும் இறைவனின் முக்கண் சக்திகளை மனிதர்களுக்கு அளிக்கவே. மீனாட்சி காஞ்சனா தேவிக்கு குழந்தையாகப் பிறந்தபோது தேவியின் மார்பில் மூன்று தனங்கள் இருப்பது கண்டு பெரிதும் கவலையுற்றனர். இதனால் குழந்தைக்கு எதுவும் ஆபத்து சம்பவித்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சினர். அப்போது ஸ்ரீஅகத்திய பெருமான் அத்தம்பதிகள் கனவில் தோன்றி, “இறைவனின் முக்கண் சக்திகளே தேவியின் தனங்களாகத் தோன்றியுள்ளன என்றும், உரிய வயதில் மீனாட்சி சோமசுந்தரப் பெருமானை தரிசிக்கும்போது இந்த மூன்றாவது தனம் மறைந்து அது தேவியின் முக்கண் சக்தியாக புருவ மத்தியில் மறைந்து விடும்...”, என்று கூறி ஆறுதல் அளித்த சம்பவத்தை ஒரு சிலர் அறிந்திருக்கலாம்.

முக்கண் சக்தி என்பது தெய்வங்களுக்கு மட்டும் உரித்தானதன்று, சாதாரண மனிதர்கள் கூட உரிய வழிகாட்டியின் மூலம் இந்த முக்கண் சக்திகளை பெற முடியும் என்று வழிகாட்டுபவரே நம் சற்குரு. இதற்கு கனிந்த காலமாக கனிந்திருப்பதே வரும் ஆடி மாதமாகும். ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகளோ இரண்டு பௌர்ணமிகளோ வந்தால் அந்த மாதம் மலமாதம் என்று அழைக்கப்படும். மலம் என்றால் உபரியான, அதிகப்படியான என்று பொருள். அதனால்தான் உணவு உண்ட பின் செரித்து வெளிப்படும் உணவுப் பொருட்களையும் நாம் மலம் என்றே அழைக்கிறோம்.

சரவணபவ சக்கரம்

ஆனால், உபரியான இந்த மலம், மூத்திரம், வியர்வை என்பது பற்றி எல்லாம் மனிதர்கள் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. பசுவின் மூத்திரம் கோமேயம் என்று சிறப்பு பெற்று லட்சுமி கடாட்ச சக்திகளை அனைவருக்கும் வர்ஷிக்கிறதே. இந்த லட்சுமி கடாட்ச சக்திகளை அனைவருக்கும் வர்ஷிப்பதற்காகவே ஒரு முறை இவ்வாறு ஒரு பசு கோமேயம் தெளித்தபோது அதன் அருகில் கனிந்த கனி பெரியவர் சென்று அந்த கோமேயத்தில் ஒரு துளி கூட கீழே விழாது அனைத்தையும் தன்னுடைய சிரசில் தாங்கி அது சிறிது சிறிதாக பூமியில் விழுமாறு லட்சுமி கடாட்ச சக்திகள் பூமியில் பொலியும்படி, நிறையுமாறு செய்தார் என்பதை இந்த சம்பவத்தை நேரில் கண்ட உத்தமர்கள் அறிவர்.

இது குறித்து நம் சற்குருவிடம் வினவியபோது, “ஆமாம் சார், காமதேனுவின் லட்சுமி கடாட்ச சக்திகளை உலகத்தவர்க்கு அர்ப்பணிக்கும் அந்த அன்பான குணம் கனிந்த கனியைத் தவிர வேறு யாருக்கு இருக்கிறது?” என்று பவ்யமாகக் கேட்டார். இந்த பதிலைக் கேட்ட அடியார்கள் அனைவரும் திகைத்து நின்றனர் என்று கூறவும் வேண்டுமோ?

நாம் இவ்வாறு மல சக்திகள் என்ற அபரிமிதமான அமிர்த சக்திகளைப் பற்றி ஸ்ரீகொன்றையடி ஆலயத்தில் விவரித்துக் கொண்டிருந்தபோது அங்கு கருட பகவான் தோன்றி இந்த அமிர்த சக்திகளை தன் கூரிய விழிப் பார்வை மூலம் அங்கு குழுமிய அடியார்களுக்கு எல்லாம் வர்ஷித்தார் என்றால் திருஅண்ணாமலையில் ஸ்ரீஅகத்திய பகவான் பெற்ற ஸ்ரீதிரயம்பகேஸ்வரர் தரிசனம் எத்தகைய அமிர்த சக்திகளை, நோய் நிவாரண அனுகிரகங்களை வர்ஷிக்கும் என்பதை நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்ளலாமே. லட்சுமி கடாட்ச சக்திகளைப் பற்றி நீங்கள் அறிவீர்கள், அஷ்ட லட்சுமிகள் வர்ஷிக்கும் இத்தகைய சக்திகள் காலப் போக்கில் தவறான பிரயோகத்தால் விரயமாகி விடவும் கூடும். துரியோதனன் துரோபதையை அழைத்து தன் இடது மடியில் அமரச் சொன்னபோது மனிதனின் இடது துடையில் அமர்ந்திருக்கும் விஜய லட்சுமி அங்கிருந்து விலகி விட்டதால் துரியோதனன் பீமனின் கதையால் அடிபட்டு மறைந்த வரலாற்றை நீங்கள் அறிவீர்கள்.

ஐஸ்வர்யம் என்ற லட்சுமி கடாட்ச சக்திகளோ மேலும் மேலும் பெருகும் தன்மை கொண்டவை, இத்தகைய அரிதிலும் அரிய அஷ்ட ஐஸ்வர்ய சக்திகளை நம் சற்குரு பிரதிஷ்டை செய்த திருத்தலமே ஸ்ரீகொன்றையடி விநாயகர் ஆலயம் ஆகும்.

ஸ்ரீகொன்றையடி ஆலயம் மட்டும் அல்லாது இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் நம் சற்குரு இவ்வாறு அஷ்ட லட்சுமி சக்திகளை அவ்வப்போது தன்னுடைய அடியார்களுக்கும் அருளிய இனிய செய்தியை நாம் ஏற்கனவே அளித்துள்ளோம். இத்தகைய அஷ்ட ஐஸ்வர்ய சக்திகளை அடியார்கள் எளிதில் பெறும் மார்க்கமே வரும் மல மாதமான ஆடியில் வரும் மூன்று பட்சங்களிலும் நம் சற்குரு கூறும் முறையில் வழிபாடுகளை நிகழ்த்துவதாகும்.

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை பாகை அளவில் குறிப்பது என்பதை நாம் அறிவோம். அதனால்தான் தி தி என்ற சொல்லே வலது கண்ணான சூரியனையும் இடது கண்ணான சந்திரனையும் குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. எனவே இந்த மூன்று திதி பட்சங்களிலும் கீழ்க் கண்ட முறையில் வழிபாடுகளை இயற்றுவது உகந்தது.

சரவணபவ கொள்கலன்

1. முதல் பட்சத்தில் மனிதருள் மாணிக்கம், யாரும் கண்டிரா மாணிக்கம் என்பதாய் மலர்ந்த ராமச்சந்திர மூர்த்தியின் அவதார கிருத்தியங்கள் கண்ட்ரமாணிக்கத்தில் அமையும். கும்பகோணம் அருகே அமைந்துள்ளதே ராமபிரான் அபூர்வமாய் தெற்கு நோக்கி அருளும் இத்தலமாகும். ஆடி 1ம் தேதி முதல் (17.7.2023) ஆடி மாதம் 15ந் தேதி வரை (31.7.2023) அமைவதே முதல் பட்சம்.

2. இரண்டாம் பட்சமான ஆடி 16ந் தேதி முதல் (1.8.2023) முதல் ஆடி 30ந் தேதி (15.8.2023) வரை அமைவது இரண்டாம் பட்ச வழிபாடு. திருஅண்ணாமலையை கிரிவலமாக வந்து ஸ்ரீதிரயம்பகேஸ்வர தரிசனம் பெற்று ஈசனை வழிபடுவது.

3. மூன்றாம் பட்சமான ஆடி 30, 31, 32 தேதிகளில் (ஆகஸ்டு 15, 16, 17 தேதிகள்) குருவாயூர், மம்மியூர், நெல்லுவாய்புரம் என்ற மூன்று தலங்களில் வழிபாடுகள் இயற்றி மல மாத வழிபாட்டை பூர்ணம் செய்து கொள்தல்.

முதல் பட்ச வழிபாடு...
திரயம்பகேஸ்வர முதல் பட்ச வழிபாடு ராமபிரான் அவதரித்த புனர்பூச நட்சத்திர தினத்துடன் இணைந்து வருவது நாம் பெற்ற பாக்யமே. இத்துடன் அமிர்த யோகமும் இணைவது என்பது எத்தகைய பேறு? பொதுவாக, மனிதர்களைப் பொறுத்தவரையில் ஜீவ சக்தி ஆண்களின் உடலில் இரண்டு மாத காலமும், பெண்களின் கர்ப்பவாசத்தில் பத்து மாதமும் நிலை கொள்ளும். ராமச்சந்திர மூர்த்தி புத்ரகாமேஷ்டி ஹோமத்தில் தோன்றிய அமிர்தத்தால் பிறந்த மனிதப் பிறவி என்பதால் தசரதரின் மூன்று ராணிகளும் 12 மாதங்கள் கர்ப்பம் தாங்க வேண்டி வந்தது. இவ்வாறு பன்னிரண்டு மாதங்களிலும் சூரிய பகவான் 12 ராசிகளிலும் சஞ்சரிக்கும் காலமாக அமைவதால் சூரியன் சஞ்சரிக்கும் 12 மாதங்களுமே இத்தகைய அமிர்த சக்திகளுடன் திகழும் என்பதே ராம அவதாரம் நமக்கு அருளும் அனுகிரகங்களில் ஒன்று.

இந்த புத்ரகாமேஷ்டி யாகத்தில் விளைந்த அமிர்த சக்திகளால் ராமபிரான் தோன்றினார் என்றால் அத்துடன் அமிர்த சக்தி பிரவாகம் பூவுலகில் நின்று போய் விட்டது என்று பொருள் கிடையாது. எப்படி இறைவனின் சக்திகளை அவ்வப்போது தோன்றும் மகான்கள் அருள்கின்றார்களோ அது போல் ராம பிரானின் அவதாரத்திற்கு காரணமான அமிர்த சக்திகளை மக்கள் பெறும் முறையாக நம் சற்குரு அருள்வதே முதல் பட்ச வழிபாட்டின் முக்கியத்துவம் ஆகும்.

இறைவனின் முக்கண் சக்தியில் தோன்றியவரே முருகப் பெருமான். முருகப் பெருமானின் சக்திகள் பொலிந்துள்ளதே சரவணபவ என்று ஆறு எழுத்து இயந்திரமாகும். மூன்றிற்கு ஆறு குசா என்பதையும் நீங்கள் அறிவீர்களே. ஆறு எண் அமிர்த சக்திகளுக்கு உரித்தானது. எனவே முதல் பட்ச வழிபாடாக சரவணபவ யந்திரத்தை குறிப்பதாக அமைந்துள்ள மூங்கில் கூடைகளை வாங்கி அந்த கூடைகளில் அமைந்துள்ள சரவணபவ யந்திரத்தில் ச ர வ ண ப வ என்ற மந்திர அட்சரங்களை ஓதி, அந்த கூடையில் குறைந்தது ஆறு மாதுளம் பழங்களை நிரப்பி கண்டிரமாணிக்கம் திருத்தலத்தில் தானம் அளித்தல் மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடாகும்.

சமீபத்தில் பேரளம் திருத்தலத்தில் வழிபாடுகள் இயற்றி மேலே கூறிய சரவணபவ மூங்கில் கூடையில் வில்வ தளங்களை வைத்து இறைவனுக்கு அர்ப்பணித்தபோது அந்த மூங்கில் கூடைகளின் மேல் தட்டான் என்ற ஆறுகால் அமிர்த சக்தி தேவதை ஒன்று தோன்றி ஆசீர்வதித்த திவ்ய காட்சியை இங்கு அடியார்கள் கண்டு இரசிக்கலாம்.

பெரும்பாலும் எத்தகைய வழிபாடாக இருந்தாலும் அவற்றை நித்திய அனுஷ்டானத்துடன் சேர்த்து நிறைவேற்றுதலே சிறப்பாகும். எனவே மேற்கூறிய தானங்களுக்கு முன்னர் நீராடல், குறைந்தது 32 தோப்புக் கரணம், தர்ப்பண பூஜை இவற்றை நிறைவேற்றுதல் அவசியம். தர்ப்பண வழிபாட்டில் குறுக்கிலும் நெடுக்கிலும் மூன்று தர்ப்பைகளை வைத்து தர்ப்பண சட்டத்தை உருவாக்குவோம் அல்லவா? திரயம்பகேஸ்வர வழிபாட்டின் சிறப்பு அம்சமாக தர்ப்பண வழிபாடுகளின் போது மூன்று மூன்று தர்ப்பைகளாக, ஆக மொத்தம் 18 தர்ப்பைகளை வைத்து தர்ப்பணம் அளிப்பது சிறப்பாகும். கூர்ச்சம் வைத்து தர்ப்பணம் அளிப்பவர்கள் ஒரு கூர்ச்சம் வைத்தால் போதுமானது. பெண்கள் கணவன்மார்களுக்கு நிறைவேற்றும் பாதபூஜை, முதுகு தேய்த்து விடுதல் போன்ற சேவைகள் மூலம் எளிதாக இத்தகைய வழிபாடுகளில் திரளும் சுமங்கலி சக்திகளை பெருக்கிக் கொள்ளலாம்.

தசமுக தரிசனம் திருஅண்ணாமலை

இறைவனின் பத்து முகங்களையும் ஒரே நோக்கில் தரிசிப்பதற்காக திருஅண்ணாமலை தசமுக தரிசனப் பகுதியில் ராவணன் தவம் இயற்றினான் அல்லவா? அவ்வாறு ராவணன் திருஅண்ணாமலையில் தங்கியிருந்த காலம் முழுவதும் மண்டோதரியே ராவணன் கூடவே இருந்து தன் கணவனுக்கு அயராமல் சேவை சேய்து பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியாக நிலைக்கும் அனுகிரகத்தைப் பெற்றாள் என்பதே நீங்கள் இதுவரை அறியாத சித்த இரகசியம் ஆகும். இலங்கையில் நிகழ்ந்த யுத்தத்தின்போது ராவணனின் பத்துத் தலைகளையும் கொய்த ராமபிரான் ராவணனின் மேல் ராமபாணத்தை எய்வதற்கு தயாராகி விட்டார். ஆனால், மண்டோதரியின் உயிர் கவசமாக நின்று ராவணனைக் காப்பதை தன் தெய்வீக நோக்கில் உணர்ந்த ராமபிரான் செய்வதறியாது திகைத்து நின்று விட்டார்.

மாங்கல்யம் தந்து நானேணா... என்று ஓதி வருங்கால மனைவியின் கழுத்தில் மணமகன் மாங்கல்யத்தை அணிவிக்கும் சம்பிரதாயத்தை நீங்கள் அறிவீர்கள். “என்னுடைய உயிர் உடலில் நிலைத்திருப்பதற்காக நான் மாங்கல்யத்தை உனக்கு அணிவிக்கிறேன். நீ நூறு ஆண்டுகள் இனிமையாய் வாழ்ந்திருப்பாயாக, இவ்வாறு நூறாண்டுகள் நிலைக்கும் ஆயுள் சக்தியால் என்னுடைய ஆயுளும் பூரணம் பெறும்...”, என்பது இந்த சுலோகத்தின் பொருள்.

தற்காலத்திலோ இந்த சுலோகத்தின் அர்த்தம் புரிந்து ஓதும் நிலையில் உள்ள மணமகன்களை விரல் விட்டு எண்ணி விடலாம். திருமண சடங்குகளை நிகழ்த்தும் புரோகிதர்கள் இந்த மந்திரத்தை ஓதும்போதே மாங்கல்ய தாரணத்தை நிகழ்த்துவதால் அந்த புரோகிதர்களே தங்கள் எதிர்கால பிறவிகளில் தாங்கள் மணம் முடித்து வைக்கும் பெண்களுடன் திருமண வாழ்வை மேற்கொள்ள வேண்டி வரும். இப்போது மீண்டும் இந்த நிகழ்ச்சியை படித்துப் பாருங்கள், இதன் பொருள் விளங்கும். இத்தகைய கொடுமையான விளைவுகள், நிகழ்ச்சிகள் சமுதாயத்தில் தோன்றி ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை துன்புறுத்தக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில்தான் நம் சற்குரு “ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்” என்ற சுக்ர சக்திகள் பெருகும் ராம தாரக மந்திரத்தை ஓதியே திருமண வைபவங்களை திருக்கோயில்களில் நிகழ்த்தும்படி வலியுறுத்துகிறார்.

ஸ்ரீவரதராஜ பெருமாள் கண்டிரமாணிக்கம்

இத்தகைய சுபமங்கள சக்திகளை வர்ஷிக்கும் ராம தாரக மந்திரத்திற்கு உரிய நாயகனே ராவணனைக் கொல்வதற்குத் தயங்கி நின்று விட்டார் என்றால் காரணம் என்ன? ஒரு நொடியில் ராம பாணத்தை எய்து ராவணனின் உயிரைக் கவர்ந்திருக்கலாம் ராமபிரான். ஆனால், உத்தம சுமங்கலிகளுக்கு, மங்கல மாங்கல்ய சக்திகளுக்கு மரியாதை அளிப்பவர் அல்லவா ராமபிரான். இதை அறிந்தாள் அரண்மனையில் இருந்த மண்டோதரி, உலகம் உய்வதற்காக தோன்றிய ஓர் ஒப்பற்ற ராம அவதாரம், தன்னுடைய கணவனின் உயிர் பிரியக் கூடாது என்ற அசுரகுலத் தோன்றலின் சுய நல எண்ணத்தால் போர்க்களத்தில் திகைத்து நிற்கக் கூடாது, என்பதை நொடிப் பொழுதில் உணர்ந்து தன்னுடைய உயிரை தன் ஆருயிர் கணவனின் திருவடிகளில் அர்ப்பணித்தாள் மண்டோதரி. இந்த திவ்யமான காட்சியைக் கண்டார் ராமபிரான், மறுகணம் அவருடைய திருக்கரங்களில் இருந்து ராமபாணம் புறப்பட்டு ராவணனின் நெஞ்சைத் துளைத்தது என்று கூறவும் வேண்டுமோ?

திருத்தலங்களை, பெரியோர்களை, மகான்களை, தீர்த்தங்களை, ஹோம குண்டங்களை வலம் வரும் பிரதட்சிண முறைகள் உண்டு. இதில் நடை பிரதட்சணம், அடி பிரதட்சணம், அங்க பிரதட்சணம் என்ற மூன்று பிரதட்சணங்களை ஆடி மாதம் முழுவதும் நிகழ்த்துதல் மல மாதத்தில் திரளும் அபரிமிதமான அமிர்த சக்திகளை உடல், மனம், உள்ளத்தில் பதிக்கும் ஒரு யோகமாக நம் சற்குருவால் அருளப்படுகின்றது. இந்த மூன்று பிரதட்சிண முறைகளிலும் மிருகி முத்திரையை இணைத்துக் கொள்தல் சிறப்பாகும். இது சிரமம் என்று நினைக்கும் அடியார்கள் தங்கள் மார்பிற்கு எதிரே கைகளை குவித்து வைத்துக் கொண்டால் போதுமானது. பெண்களும் இது போலவே பிரதட்சிணங்களை நிறைவேற்றலாம்.

இங்கு அடியார்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். “நாம் திருஅண்ணாமலையாரை நோக்கி கரங்களைக் குவித்து அங்க பிரதட்சணம் வருகையில் நம் கால் பாதங்கள் நம் சற்குருவின் லிங்க ரூபத்தை நோக்கி நீளுமே, இது சரியா?” இந்த குழப்பத்திற்கு இடமே இல்லை. காரணம் திருப்பதி மலை, ஐயர்மலை போன்ற பல மலைத் தலங்களிலும் இறைவனை வழிபடும் அடியார்களின் பாதங்கள் தங்கள் மேல் பட வேண்டும் வேண்டித் தவம் கிடக்கும் மகான்கள் இருக்கும்போது அடியார்களின் பாதங்கள் தம்மை நோக்கி நீள்வதை ஒரு பெரும் பாக்யமாக ஏற்றுக் கொள்ள மாட்டாரா நம் சற்குரு.

மூன்று லோகங்களைக்
குறிக்கும் சுக்ர பீடம்

இதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்ததே நம் ஆஸ்ரமத்தில் நிறைவேறிய அன்னதான வழிபாடுகள். எண்ணெய் டின், விறகு, மந்தார இலை போன்ற பொருட்களை எடுப்பதற்கு உயரமான இடத்தில் யாராவது ஏறி அவைகளை எடுக்க வேண்டி வந்தால் அந்த அடியார்களின் கீழே இருப்பவர்களைப் பார்த்து அவர்கள் இறங்கும்போது, “அவன் சூத்தைப் பிடிங்க, சார்...”, என்று அன்புடன் கூறுவார். தானே பல சமயங்களில் இத்தகைய அடியார்களின் சூத்தை தன்னுடைய அன்புக் கரங்களால் பிடித்து அவர்களை பத்திரமாக கீழே இறக்கி விட்ட சம்பவங்கள் தான் எத்தனை எத்தனை...!

இரண்டாம் பட்ச வழிபாடு...
ஆடி மாத இரண்டாம் பட்ச வழிபாடாக அமைவது திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து திரயம்பக ஈசனின் அருளைப் பெறுவதாகும். நம்மை ஒவ்வொரு நொடியும் வழிநடத்துவது நம்முடைய பித்ரு தேவதைகளே. உதாரணமாக, நாம் அவசரமாக வெளியே சென்று கொண்டிருக்கும் நேரத்தில் மல ஜலம் கழிக்க வேண்டிய உபாதை தோன்றும். வேறு வழியில்லாமல் இதற்காக பல நிமிடங்களை செலவழித்து விட்டு நம்முடைய கடமைகளை நிறைவேற்றும்போது நாம் சந்திக்க வேண்டியவரைச் சந்திக்க முடியாமல் போவதுண்டு. இதற்காக நம்முடைய உபாதைகளைக் குறித்து நொந்து கொள்வதுண்டு. பெரும்பாலும் இத்தகைய உபாதைகள், கடைசி நேர குழப்பங்கள் நம்முடைய பித்ரு தேவர்களால் ஏற்படுத்தப்பட்டு நம்மை ஆபத்துக்களிலிருந்து, எதிர்பாராத விபத்துக்களிலிருந்து காப்பதற்காக அவர்களால் ஏற்படுத்தப்பட்ட ‘தடங்கல்களே’ இவை என்பதை நாம் உணர முடிந்தால் நம்முடைய பித்ரு தேவதைகளுக்கு, இத்தகைய தேவதைகளை வழிநடத்தும் நம் சற்குருவிற்கு எந்த அளவிற்கு நன்றி உடையவர்களாகத் திகழ்வோம்?!

திருஅண்ணாமலையை ஆடி மாதம் முழுவதும், 32 நாட்களும் வலம் வந்து வணங்குவது என்பது நம் வாழ்வில் மிகவும் அரிதாக கிடைக்கக் கூடிய ஒரு பெரிய பேறு அல்லவா? இங்கு அடியார்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். ஆடி மாதம் முழுவதும் திருஅண்ணாமலையில் இருந்து விட்டால் கண்டிரமாணிக்கத்து மாணிக்கத்தை யார் தரிசனம் செய்து பலன் பெறுவது? அந்த மாணிக்கப் பலன் நமக்குக் கிட்டாமல் போய் விடுமே...? இங்குதான் சத்சங்கம் என்ற கூட்டமைப்பின் அவசியம், புனிதத்துவம் தெளிவாகின்றது. பல அடியார்கள் ஒன்று சேர்ந்து இவ்வாறு ஒரு கூட்டமைப்பில் செயல்படும்போது சில அடியார்கள் கண்டிரமாணிக்கத்திலும், வேறு சிலர் திருஅண்ணாமலை கிரிவலத்திலும், சில அடியார்கள் கேரள புனித பூமியிலும் வழிபாடுகள் இயற்றி அவைகளின் பலன்களை ஒருங்கிணைக்கும்போது அந்தப் பலன்கள் அந்த அடியார்களின் குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு மட்டுமல்லாது இந்த பிரபஞ்சத்திற்கும் நம் சற்குருவால் பன்மடங்காய் பெருக்கி, பகிர்ந்தளிக்கப்படும்.

இரண்டாம் பட்ச வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுவது திருஅண்ணாமலையை கிரிவலம் வரும்போது அபய மண்டபத்திலிருந்து சிவசக்தி ஐக்ய தரிசனம் வரை நடை பிரதட்சிணம், அடி பிரதட்சிணம், அங்க பிரதட்சிணம் என்ற பிரதட்சிண முறைகளுடன் வழிபடுவது சிறப்பு. அபய மண்டபத்திலிருந்து சிவசக்தி ஐக்ய தரிசனம் வரை உள்ள புனித வளாகத்தில் இந்த மூன்று பிரதட்சிணங்களை ஒன்றன் பின் ஒன்றாகவோ அல்லது ஒவ்வொரு முறை கிரிவலம் வரும்போதும் ஒவ்வொரு பிரதட்சிணத்தையோ நிறைவேற்றுதல் சிறப்பாகும். தேன் கலந்த மாதுளை ரசத்தை, மாதுளம் பழ ஜூஸ் தானத்தை மேற்கூறிய அமிர்த கூடைகளில் வைத்து அளித்தல் நலம். ஐஸ், சர்க்கரை போன்ற பொருட்களை மாதுளை பழரசத்தில் சேர்ப்பதைத் தவிர்க்கவும். தேன் சுவையான குரு, சரவணபவ குக சக்திகளுடன் இணையும் விந்தையை இங்குள்ள வீடியோவில் அடியார்கள் கண்டு இரசிக்கலாம்.

அங்கப்பிரதட்சிண சுவாமிகள் திருஅண்ணாமலையை அங்கப்பிரதட்சணம் செய்தே வலம் வந்து போது அவர் அபயமண்டபத்தின் அருகே ரமண மகரிஷியை சந்தித்து வாழைப்பழம் பெற்ற நிகழ்ச்சியை ஏற்கனவே விவரித்துள்ளோம். அவ்வாறு பெற்ற வாழைப்பழம் சுவாமிகள் கிரிவலம் பூரணம் செய்யும் வரை பின்னமாகாமல் இருந்த அதிசயத்தையும் தெரிவித்திருந்தோம். இதுவே பின்னம் ஆகாத, குறைவு படாத, மாறுபாடு அடையாத பிரம்ம தத்துவம், அமிர்த சக்தி தத்துவமாகும்.

ஸ்ரீஆரணவல்லி அம்பாள் செவலூர்

இரண்டாம் பட்ச வழிபாடாக மல்லிகை, முல்லை, இருவாட்சி என்ற மலர்ச் சரங்களை பெண்கள் தங்கள் கைகளால் தொடுத்து சுமங்கலிகளுக்கு தானம் அளித்தலாகும். பெண்களும் இத்தகைய மலர்ச் சரங்களை பெருமளவில் தங்கள் தலையில் சூடி ஆறு பெண்கள் மூன்று ஜோடிகளாகச் சேர்ந்து நடுவில் ஐந்து முகம் துலங்கும் குத்து விளக்கை ஏற்றி இதைச் சுற்றி தீபக் கும்மி பாடலைப் பாடி வழிபாடுகள் நிகழ்த்துவதாகும். இல்லறப் பெண்கள் தங்கள் இல்லங்களிலேயே இத்தகைய கும்மி வழிபாடுகளை இயற்றலாம். இதயக்கமல கோலத்தின் நடுவில் இந்த ஐம்முக ஜோதியை ஏற்றுதல் சிறப்பு. வழிபாட்டின் நிறைவில் நிறைய கண்ணாடி வளையல்கள், மலர்ச் சரங்களை சுமங்கலிகளுக்கு தானம் அளித்தல் சிறப்பாகும்.

கர்ப்போட்ட நாட்கள் என்று பஞ்சாங்கத்தில் சில நாட்களை குறித்திருப்பார்கள். இத்தகைய நாட்களில் நிறைவேற்ற வேண்டிய வழிபாடுகளும், தவிர்க்க வேண்டிய பல செயல்முறைகளும் உண்டு. இந்த செயல்முறைகள் அனைத்தையும் உரிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மக்கள் மிகவும் குறைந்து விட்டதால் மகான்கள் ஆடி மாதத்தில் நிறைவேற்றும் வழிபாட்டுப் பலன்களின் ஒரு பகுதியை இத்தகைய தவறான செயல்முறைகளால் விளையும் தீய விளைவுகளை அகற்றுவதற்காக ‘மாற்றி’ அமைக்கின்றனர். இதற்கான சாத்தியக் கூறுகள் துலங்கும் மாதமே ஆடி என்பது சிறப்பாகும். ஆடி என்றால் கண்ணாடி என்ற பொருளும் உண்டு அல்லவா? சுமங்கலி தானத்தில் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடிகளை அளிப்பதன் ஒரு காரணம் இத்தகைய கர்ப்போட்ட சக்திகளை முறைப்படுத்துவதும் ஆகும்.

பல திருமணங்களிலும் பெண்களுக்கு பெரிய நிலைக் கண்ணாடிகளை சீர்வரிசையாக அளிப்பார்கள். இந்த கண்ணாடி முன்பு நின்று கொண்டு பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வது உண்டு. இத்தகைய பெரிய நிலைக் கண்ணாடிகளை சுமங்கலிகளுக்கு தானம் அளிப்பதற்கு உகந்த மாதமே இந்த ஆடி மாதமாகும். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதோர், கர்ப்பப்பை பிரச்னைகளால் வருந்துவோர் இத்தகைய தானத்தால் நலம் பெறுவர்.

மைதிலி பதே ரகு நந்தனா!

நிலைக் கண்ணாடி என்றால் பெரிய கண்ணாடி என்ற பொருள் மட்டும் கிடையாது. பெண்களின் அழகு என்ற ஐஸ்வர்ய சக்திகளை நிலை நிறுத்தும் தன்மை நிலைக் கண்ணாடிகளுக்கு உண்டு. இத்தகைய நிலைத்த தன்மைகள், சீதாதேவியின் ஜனன ஜாதகத்தை சற்றே கூர்ந்து நோக்கினாலும் இந்த நிலைக் கண்ணாடியின் நிலைத்த சுமங்கலி சக்திகள் பளிச்சிடும். நிலைத்த ராசியான ரிஷபத்தில் சுக்ர பகவான் நிலைத்திருப்பது, ஆட்சி பெற்றிருப்பது, கண்களாலேயே சுக்ர சக்திகளை உருவாக்கும், வர்ஷிக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும்.

ஆஞ்சநேயர் இலங்கை சென்று சீதாப் பிராட்யை சந்தித்து அவளுடைய அவல நிலையைக் கண்டு பெரிதும் வருந்தினார். தன்னுடைய தோளில் சீதா தேவி ஏறி அமர்ந்து கொண்டால் அவளைப் பத்திரமாக ராமபிரானின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறியபோது சீதா தேவி நகைத்து, “நான் என்னுடைய கண்களால் ஒரு சிறிதே ராவணனைப் பார்த்திருந்தால் போதும், அவன் அக்கணமே அங்கேயே சாம்பலாகி இருப்பான், ஆனால், என்னுடைய பகவானின் தோள் திறமையை அந்தச் செயல் காட்டாது...”, என்று கூறி ஒரு உத்தமியானவள் எந்த ஆபத்து நிலையிலும் தன்னுடைய கணவனையே நினைத்து வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை வெளிப்படுத்தினாள். இத்தகைய உத்தம சுமங்கலி, சுக்ர அனுகிரகமே சீதா தேவியின் ஜாதகத்தில் தெளிவாகின்றது.

ஆடி மாதம் முழுவதுமே 32 நலம் தேவாரப் பதிகங்கள் அனைத்தையும் காலையும் மாலையும் ஓதுதல் சிறப்பாகும். பல அடியார்களும் இந்த 32 பதிகங்களையும் மனனம் செய்திருப்பதால் திருஅண்ணாமலையை வலம் வரும்போது இந்த தேவாரப் பாடல்களை வாய்விட்டு ஓதி வலம் வருவதால் கிட்டும் பலன்கள் அமோகமே. ஆடி மாதத்தில் வரும் 32 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒரு பதிகத்தை குறைந்தது 108 முறை ஓதுதல் என்ற வைராக்யத்தை மேற்கொண்டு ஓதி வருவதும் ஒரு சிறந்த வழிபாடே.

ஸ்ரீபூமிநாதர் செவலூர்

12 ராசிகளில் சர, திர, உபயம் என்ற பாகுபாடு உண்டு. சர ராசிகளில் நகரும் தன்மை உடைய காரியங்களை அதாவது மருந்து உண்ணுதல், பிரயாணம் போன்ற காரியங்களை இயற்றுதல் நலம், திர ராசிகளில் திருமணம், கிரகபிரவேசம் போன்று நிலையாக அமைய வேண்டிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் உத்தமம், இந்த இரண்டு காரியங்களுக்கும் இடைப்பட்ட காரியங்களை உபய ராசிகளில் மேற்கொள்ளலாம்.

ஒருவர் லக்னம் இருக்கும் ராசியின் ஏழாம் ராசி களத்திர ஸ்தானம் எனப்படும். ஒரு ஆண் ஜாதகத்தில் உள்ள ஏழாம் ஸ்தானம் ஆண் லக்னத்தைப் போன்ற சர, திர, உபய ராசியாகவே இருக்கும். இதுவே நம் மூதாதையர்களின் மேதா விலாசம், காரணம் ஏழாம் ராசியைக் கொண்டே ஒரு ஜாதகரின் தாம்பத்ய முறைகளை நாம் அறிந்து கொள்ளலாம். அதனால்தான் தற்காலத்தில் ஏழாம் வீடு ஜாதகங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்த ஏழாம் தானத்தின் முக்கியத்துவத்தை மனிதன் அறிந்து கொள்ள எத்தனையோ ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்பது ஒரு புறம் இருக்க, இந்த ஏழாம் இடத்தைப் பற்றி நாம் இங்கு சற்றும் விவரிக்கவே முடியாது, காரணம் இது ஒரு ஆன்மீகத் தளம், இதற்கென்று உள்ள தனித் தன்மையும் நம்முடைய இயலாமைக்கு ஒரு காரணமே. அதற்காக ஏழாம் இடம் சரியாக அமையாத ஜாதகர்களை நம் சற்குரு புறக்கணித்து விடவும் முடியாது அல்லவா? இதை ஓரளவு சரிக்கட்ட உதவுவதே மூன்று பட்சங்களிலும் அடியார்கள் இயற்றும் வழிபாடு. சரம், ஸ்திரம், உபயம் என்ற மூன்று ஸ்தானங்களில் பிறவி எடுத்த ஜாதகர்களுக்கும் ஆடி மாதம் மூன்று பட்சங்களிலும் இயற்றும் வழிபாடுகள் துணை நின்று அவர்கள் குடும்பத்தில் நல்ல உறவு நிலைகளை மேம்படுத்தும்.

ஒரு நண்பரின் உறவுக்காரர் உணவருந்தி கொண்டு இருக்கையில் அவர் உணவில் மயிர் கத்தை, கத்தையாக இருப்பது போல் தோன்றவே தன் குடும்ப அங்கத்தினர்களிடம் ஏன் இவ்வாறு மயிரைப் பார்க்காமல் சமைத்தார்கள் என்ற காரணம் கேட்டார். அவர்கள் கண்களுக்கு அந்த உணவில் எந்த கேசப் பகுதியும் இருப்பதாகத் தோன்றவில்லை, தெரியவில்லை. அதனால் அவர்கள்,“சரி, சரி கவலைப்படாதே உணவு சுத்தமாகத்தான் இருக்கிறது... நீ ஏதோ நினைப்பில் இருப்பதால் இவ்வாறு தோன்றுகிறது...”, என்று கூறி அவரை சமாதானப்படுத்தினர். ஆனால், சில நிமிடங்களில் அவர் இறந்து விட்டார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? இறக்கும் தருவாயில் ஐந்து புலன்களும் தங்கள் சக்தியை சிறிது சிறிதாக இழந்து விடுகின்றன. அவ்வாறு அந்த நண்பர் தன் பார்வை சக்திகளை பெருமளவு இழந்தபோது உணவின் ஒரு பகுதியே கருப்பாகத் தெரிந்ததால் அந்த கருப்புப் பகுதியை அவர் தனக்குத் தெரிந்த தலை மயிர் என்று நினைத்து விட்டார். இது மனம் விளைவிக்கும் ஒரு மாயையே.

முதுமை காலத்தில் தோன்றும் காட்ராக்ட் என்ற கண் பார்வைக் கோளாறும் இத்தகையதே.

மூன்று பட்சங்கள் என்னும்போது நடுவில் உள்ள பட்சம், அதாவது ஆடி பௌர்ணமி முதல் துலங்கும் பட்சத்தில், செவலூர் திருத்தலத்தில் தீர்க நேத்ர வழிபாடு என்ற வழிபாட்டை மேற்கொண்டு, தொடர்ந்து நிறைவேற்றி வருவதால் நமது வாழ்க்கை முழுவதும் நல்ல கண் பார்வையுடன் திகழ இது உதவும்.

அரசமரத்தை தல விருட்சமாக உள்ள திருத்தலங்கள் அல்லது திருச்சி அருகே ராச்சாண்டார் மலை திருத்தலத்திலிருந்து ஒரு அரசங்குச்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். அரசங்குச்சியை எடுக்கும் முன் கோயில் உண்டியலில் தகுந்த காணிக்கையை செலுத்தி விடவும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தொழுநோய் காப்பகத்தில் உள்ள அங்கத்தினர்களுக்கு தானம் அளிப்பதற்காக சென்னை கோவூர் சிவாலயத்திலிருந்து மகாவில்வத்தை பிரசாதமாகப் பெறுவதற்கு நம் சற்குரு ஒரு அடியார் மூலம் ஐந்நூறு ரூபாய் காணிக்கை செலுத்தினார் என்பதை அடியார்கள் நினைவில் கொண்டால் தாங்கள் இந்த அரசங்குச்சிக்கு அவரவர் நிலையில் எவ்வளவு காணிக்கை செலுத்த வேண்டி வரும் என்பதை அவர்களே அறிந்து கொள்ளலாம்.

மரங்களில் நான் அஸ்வதம்!

தங்களுக்கு இயன்றபோது செவலூர் சிவாலயத்திற்குச் சென்று இங்கு படத்தில் காட்டியுள்ளபடி அரசங்குச்சியை ஒரு காகிதத்தின் நடுவில் வைத்து, அப்போது தோன்றும் நிழல் பிம்பத்தை குறித்துக் கொள்ளவும். செவலூர் சிவலிங்கத்தின் ரேகைகள் நீங்கள் நிலத்தில் நிலை நிறுத்தும் அரசங்குச்சியுடன் இலயமாக வேண்டும். இதற்கு திருத்தல நந்தியின் கோலம் உங்களுக்கு துணை புரியும். சிவலிங்கத்தின் மேல் வெள்ளிக் கவசம் சார்த்தப்பட்டு இருந்தால் உங்களுக்கு பட்டை லிங்கத்தின் ரேகைகள் தெரியாமல் போகலாம். அது குறித்து நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. உங்களை வழிநடத்திச் செல்பவர் நம் சற்குரு என்பதை எந்நேரமும் மனதில் கொண்டால் அரசங் குச்சி வடிவில் ஈசனை எந்நேரமும் வணங்கி அருள் பெறும் பெருமாள் மூர்த்தியின் அனுகிரகம் உங்களுக்குத் துணையாக வரும். இத்தகைய வழிபாட்டின்போது நிறையும் நேரத்தைக் குறித்துக் கொள்ளவும்.

நிழல் விழும் நேரம் காலை 10.30 என்றால் 10+(30/60x100) = 1+5 = 6 என்பது உங்களுக்கு உகந்த எண் கணித இலக்கமாகும் (favourable numerology number). இந்த நிழல் விழுந்த காகிதத்தை இறைவனின் திருவடிகளில் வைத்து இறைப் பிரசாதமாகப் பெற்று நீங்கள் இல்லத்திற்கு எடுத்துச் சென்று விடலாம். இவ்வாறு பெற்ற 6 என்ற எண்ணை உங்களுக்கு உகந்த எண்ணாக ஏற்று நீங்கள் அனைத்துக் காரியங்களிலும் உபயோகித்து வரலாம். உங்கள் இல்லத்தில் இந்த காகிதத்தை வைத்து செவலூர் திருத்தலம் வழங்கிய நேரத்தை உங்களுக்கு உகந்த சுப நேரமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.

இந்த காகிதத்தில் அரசங் குச்சியை வைத்து அரசங்குச்சியைச் சுற்றி அரிசி, கோதுமை குருணையை அணைத்து வைத்து குச்சியை நிற்க வைத்து உங்களுக்குத் தெரிந்த துதியை அல்லது சுயநாம ஜபத்தையும் இந்தக் குச்சி முன்னால் நிறைவேற்றலாம். தினமும் இவ்வாறு சேர்த்த அரிசி, கோதுமை குருணையுடன் சர்க்கரை சேர்த்து அதை திருத்தலங்கள், சிறப்பாக திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் எறும்புகளுக்குத் தீனியாக சேர்த்து விடவும்.

காகிதத்தில் விழுந்த நிழலை நீட்டி அது உங்கள் இல்லத்தில் அமையும் திசையில், இடத்தில் ஒரு மரப் பலகையை, நாற்காலியைப் போட்டு நீங்கள் ஜபம், தியானம், வழிபாடுகள் நிறைவேற்றுதலால் அற்புத தெய்வீக முன்னேற்றத்தைப் பெறலாம். சிறிது சிறிதாக திசை ஞானத்தைப் பெறும் மார்க்கம் இது. கிழக்கு திசை, மேற்கு திசை என்ன என்பதை அனைவரும் காம்பஸ் உதவி கொண்டுதானே தெளிவாக அறிய முடிகிறது. இந்த திசைகள் கூட காலப் போக்கில் மாறி விடலாம். ஆனால், செவலூர் பட்டை லிங்கத்தின் அனுகிரகத்தால் பெறும் திசை ஞானம் மாறாது, மறையாது, எத்தனை பிறவிகள் ஆனாலும், எந்த பூமியில் உங்கள் பிறவிகள் தொடர்ந்தாலும் நீங்கள் இப்போது பெறும் திசை ஞானம் உங்களை அப்போது வழிநடத்திச் செல்லும்.

Schizophrenia, split personality என்று மாறுபாடான குணாதிசயங்களால் விளையும் பைத்தியம் போன்ற நிலையில் திகழும் மனிதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உண்மையைச் சொல்லப் போனால் பூமியில் உள்ள மனிதர்கள் அனைவருமே இத்தகைய மனக் கோளாறுகளால் உந்தப்பட்டு அவதியுறுபவர்கள்தாம். பலரும், “நீ நினைப்பதுபோல் நான் சாதாரணமானவன் அல்ல, என்னைப் பற்றி உனக்குத் தெரியாது...”, என்றவாறு தங்கள் குறைபாடுகளைக் குறித்து பெருமையாக எண்ணிக் கொண்டு உலாவரும் நிலையில் இருக்கும்போது இதை எப்படி அவர்களால் சரிப்படுத்திக் கொள்ள இயலும்.

மணல் வீடு கட்டுவோம்
‘மண’ மகழ்ச்சி கொள்வோம்!

தூல சரீரத்திற்கும் சூட்சும சரீரத்திற்கும் உள்ள பாகுபாடு குறித்த அளவில் இருக்கும்போது இது மனித உறவுகளை அவ்வளவாக பாதிப்பதில்லை. இந்த வேறுபாடுகள் எல்லை மீறும்போது அது குடும்பத்தில், சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதால் சம்பந்தப்பட்டவர்கள் பலத்த பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். இதை ஒரளவு நிவர்த்தி செய்ய அமைந்துள்ளதுதான் நிலைக் கண்ணாடி முன் பெண்கள் நின்று கொண்டு தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் நிகழ்ச்சியாகும். இதை தினந்தோறும் ஒரு வழிபாடாகவே மாற்றிக் கொண்டால் அதனால் விளையும் பலன்கள் ஏராளம்.

ஆம் கிரணத்தில் அமிர்த சக்தி
பிரபாவம் ஆமூர்

கண்ணாடி தியானம் என்று வடலூர் ராமலிங்க சுவாமிகள் மக்களுக்கு அளித்த வழிபாடு இதுவே. இதை தற்கால கலியுக மக்கள் பயன்பெறும் வண்ணம் மாற்றி மூன்று பட்சங்களுக்கு நிரவும் திரயம்பகேஸ்வர வழிபாடாக நம் சற்குரு அளித்துள்ளார். ஓம் ஔம் ஹ்ரீம் க்லீம் என்ற பீஜாட்சரங்களை ஓதி கண்ணாடியில் தெரியும் தங்கள் உருவத்தை வலம் வந்து கொண்டிருந்தால் இது சூட்சும கண்ணாடி தியானமாக மாறி நம் மனதை உடலை உள்ளத்தை ஒருங்கிணைக்கும் அற்புத வழிபாடாக மாறும் என்பதே நம் சற்குரு நமக்காக பரிந்தளிக்கும் உன்னத வழிபாடு. தினமும் அரை மணி நேரமாவது இத்தகைய வழிபாட்டை நிகழ்த்துவது சிறப்பு.

தெற்குப் பார்த்த இல்லங்கள் கண்ணாடி தியானத்திற்கு உகந்தவையாகும். ஆடி மாதம் என்பது சூரியன் வடக்கு திசையிலிருந்து தெற்கு திசைக்கு வரும் சஞ்சாரத்தை மேற்கொள்ளும் காலம் அல்லவா? ஆடிக்கு ஆடி நட்பு பாவனையில் திகழ்வதில் என்ன அதிசயம்? தெற்கு திசையிலிருந்து வரும் சூரியக் கதிர்கள் முதலில் பசுஞ் சாணத்தால் மெழுகப்பட்டு அதன் மேல் பச்சரிசியால் வரையப்பட்ட மாக்கோலத்தின் மேல் பிரதிபலிக்கும். அதிக சக்தி வாய்ந்த கதிர்கள் இவ்வாறு பதனப்படுத்தப்பட்டு ராஜ நிலை என்ற முதல் வாசலில் திகழும் நிலையின் நான்கு மூலைகளிலும் உள்ள தேவதைகளால் தூய்மைப்படுத்தப்பட்டு இல்லத்திற்குள் நுழைந்தபின் வடக்கு திசையில் திகழும் லட்சுமி கடாட்ச தேவதைகளால் மேலும் புனிதப்படுத்தப்பட்டு கிழக்கு திசை நோக்கி நிற்கும் அடியார்களின் நிழல் விழும் கண்ணாடி மூலமாக அனுகிரகத்தை அளிக்கிறது, இணைக்கிறது என்பது நாம் புரிந்து கொள்ளக் கூடிய வாஸ்து சக்தி விளக்கமாகும்.

பசுஞ் சாணத்தை மறந்தோம், புற்று நோய் என்னும் கான்சரை பூசிக் கொண்டோம்.

இவ்வாறு தெற்கு திசை நோக்கி அமையாத இல்லங்களில் வசிப்பவர்கள் என் செய்வது? எந்த திசையில் அமைந்த இல்லங்களில் வசிப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் குரு வக்ரம் பெற்ற ஜாதகங்கள் அமைந்த மகான்களை கண்ணாடி தியானத்திற்கு முன்னர் பிரார்த்தித்துக் கொண்டால் அந்த கண்ணாடி தியானம் தெற்கு திசை நோக்கிய இல்லத்தில் இயற்றும் வழிபாடாகவே ஏற்றுக் கொள்ளப்படும். என்னே நம் சற்குருவின் மேதா விலாசம்? நம் சற்குருவின் ஜனன ஜாதகத்தில் குரு வக்ர கதியில் திகழ்வது நீங்கள் அறிந்த ஒன்றே.

மூன்றாம் பட்ச திரயம்பகேஸ்வர வழிபாடு...
திரயம்பகேஸ்வர வடிபாட்டின் மூன்றாம் பகுதியாக நாம் கேரள புனித பூமியில் உள்ள குருவாயூர், மம்மியூர், நெல்லுவாய்புரம் என்ற மூன்று தலங்களையும் தரிசித்து வழிபாடுகள் இயற்றுதல் சிறப்பாகும். பத்தை அல்லது கீற்று என்றவாறு மாதுளம் பழங்களை கீற்றாக, பத்தையாக கீறி மேற்கூறிய சரவணபவ கூடைகளில் ஆறு கீற்றுகளை வைத்து தானமாக அடியார்களுக்கு அளித்தல் சிறப்பாகும்.

நற்காரியங்கள் உலகத்தின் எந்த மூலையில் நிகழ்ந்தாலும் அங்கு சற்குருமார்கள் தோன்றி இந்த நற்காரியங்கள் நிகழ்த்தும் உத்தம உள்ளங்களை வாழ்த்தி அனுகிரகம் அளிப்பது என்பது தொன்றுதொட்டு வருவதுதானே? இம்முறையில் இந்த வழிபாட்டின் கடைசி அங்கத்தில் 16.9.2023 புதன் கிழமை நள்ளிரவில் அகத்திய நட்சத்திரம் தோன்றி பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது. இந்த ஆசியுடன் இணைந்து ஞாயிற்றம்பல சித்தரும் தன் அருளாசியை வழங்குவதால் ஞாயிற்றம்பல திருத்தலத்தில் அடியார்கள் வழிபாடுகளை இயற்றி நிறைந்த அளவில் மாதுளை பத்தைகளை தானம் அளித்தல் சிறப்பாகும்.

குடும்பத்துடன் செல்லும் அடியார்கள் இந்தக் கோயில் வளாகத்தில் மணல் வீடுகள் அமைத்து அதில் ஒரு பகுதியை, அதாவது குடும்பத் தலைவரின் உள்ளங்கை கொள்ளும் அளவு மட்டும், எடுத்து வந்து தங்கள் இல்லங்களில் வைத்து பூஜித்தலால் காத்து கருப்பு தோஷங்கள் அகலும். உரிய காணிக்கையை கோயில் உண்டியலில் தவறாமல் சேர்த்து விடவும். இத்தல கடற்கரையில் அடுத்த நாள் வியாழக் கிழமை தர்ப்பண வழிபாடுகளை இயற்றுதல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய மிகப் பெரிய பேறாகும். அகஸ்திய நட்சத்திர உதயம், சந்திர தரிசனம், விஷ்ணுபதி புண்ணிய காலம், திர ராசியான சிம்மத்தில் சூரியன் பிரகாசிக்கும் ஆவணி மாதப் பிறப்பு என்னும் இத்தகைய அற்புத அம்சங்கள் நம் வாழ்வில் ஒரே ஒரு முறை, ஒரு முறையே சித்திக்கும் என்பதை நினைவில் கொள்க.

ஸ்ரீஞாயிற்றம்பல சித்தர்
ஞாயிற்றம்பலம்

ஜோதிட சாஸ்திரத்தில் பலவிதமான கணிப்பு முறைகள் உண்டு. இதில் ஒன்றே சோமவாக்யம் என்பதாகும். மூன்றாம் பிறை தரிசனம் என்பது சிவபெருமான் சந்திரனின் மூன்றாம் பிறையை தன் பணித்த சடையில் சூடி காட்சி தருவதாகும். எனவே மூன்றாம் பிறையை தரிசிக்கும் பாக்யம் பெற்ற அனைவருமே இறைவனை தரிசித்தவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தகைய சிறப்பு மூன்றாம் பிறைக்கு எப்படி வந்தது? காரணம், மூன்றாம் பிறையின் இரு பிறைக் கூம்புகளிலும் மகரிஷிகளும், மகான்களும் திகழ்ந்து பக்தர்களுக்கு அனுகிரகத்தை வாரி வழங்குவதும் ஒரு காரணமே.

ஒவ்வொரு மூன்றாம் பிறையிலும் திகழும் இரு கூம்புகளிலும் அருள் சுரக்கும் சித்த பெருமக்களைப் பற்றிய இரகசியங்களை அளிக்கவல்லவர் அகத்திய மகா பிரபு ஒருவரே. அத்தகைய சிறப்பான தகுதி வாய்ந்த முனிபுங்கவரே வரும் 17.8.2023 அன்று தோன்றும் மூன்றாம் பிறையில் வலது பாகத்தை அலங்கரிக்கிறார் என்றால் இந்தப் பிறையை தரிசிக்கும் நம்மை விடக் கொடுத்து வைத்தவர் யார்? பிறையின் இடது பாகத்தை அலங்கரிக்கும் பெருமை பெற்ற மகான் யாரோ?

ஆம், உங்கள் யூகம் சரியே. ஞாயிற்றம்பல சித்தர் என்ற உத்தமரே பிறையின் இடது பாகத்தில் வீற்றிருக்கும் மகான் ஆவார். எனவே நீங்கள் வரும் 17.8.2023 அன்று தரிசிக்கும் மூன்றாம் பிறையில் கிட்டும் எம்பெருமான் தரிசனத்துடன் இரு உத்தம குருமார்களின் கனிந்த அனுகிரகமும் கிட்டும் என்றால் இதை விடச் சிறந்த பாக்கியம் வேறு எதுவாக இருக்க முடியும்?

சோமவாக்யம் என்பது ஒருவித பிரச்ன ஜோதிடமாகும். ஞாயிற்றம்பல புனித பூமியில் முதன் முதலில் தோற்றம் கொண்டதே இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இந்த சோமவாக்ய ஜோதிடமாகும். மூன்றாம் பிறையின் இரு கூம்புகளிலும் நிலை கொள்ளும் ரிஷிகளின் அனுகிரகத்தை ஆதாரமாக வைத்து அந்த மாதம் முழுவதும் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, பிரச்னங்களுக்கு உரிய விடையை அளித்து அதன் மூலம் வருவாய் ஈட்டுபவர்களே சோமவாக்ய பிரச்ன ஜோதிடர்கள். இவர்களும் அகத்திய நாடி ஜோதிட நிபுணர்களும் இந்த ஆடி மாதம் 32 நாட்களிலும் ஞாயிற்றம்பல திருத்தலத்தில் வழிபாடுகள் இயற்றி வழிபடுவது சிறப்பாகும்.

பால், தேன், மாதுளம் பழம் இந்த மூன்றை மட்டும் உணவாக ஏற்று ஆடி மாதம் முழுவதும் அவர்கள் வழிபாடுகள் இயற்றுதல் சிறப்பு.

ஆடி மாதத்தில் முதலில் 19.7.2023 புதன் கிழமை அன்று தோன்றும் மூன்றாம் பிறை ஸ்ரீதேவி அம்சங்களுடனும் இரண்டாவதாக 17.8.2023 வியாழன் அன்று தோன்றும் மூன்றாம் பிறை பூதேவி அம்சங்களுடனும் பொலிவதால் ஸ்ரீதேவி பூதேவிகளுடன் திகழும் பெருமாள் மூர்த்திகளையோ அல்லது விருத்தசீர மகாமேரு என்னும் சுமைதாங்கி சிலா ரூபங்களையோ குறைந்தது 30 முறை வலம் வந்து வணங்குதல் சிறப்பாகும். ஆடி மாதம் முழுவதுமே இத்தகைய வழிபாடுகளை மேற்கொள்வதால் மண்ணில் நிலைத்த செல்வங்களுடன் வாழ்வாங்கு வாழ்ந்து இறையருளுக்கும் பாத்திரமாகும் ஐஸ்வர்ய கடாட்ச சக்திகளை நாம் பெறுவோம்.

ஸ்ரீதன்வந்திரி மூர்த்தி
நெல்லுவாய்புரம்

நம் சற்குரு கேரள திருத்தலங்களுக்கு புனித யாத்திரை சென்றதை ஒரு சிலர் அறிவர். இந்த யாத்திரையின்போது அரங்கேறிய நாடகத்தில், நம் ஆஸ்ரமத்தைப் போன்றே இங்கும் சகுனியின் பாத்திரத்தையே ஏற்று தன் தாடியை கடவிக் கொண்டிருந்தார் என்பது நம் ஆத்ம விசாரத்திற்கு உரிய ஒரு பொருளாகும். இது ஒரு புறம் இருக்க, ஞாயிற்றம்பலம் திருத்தலத்திற்கு நம் சற்குரு சென்றிருந்தபோது அத்திருத்தலத்தில் மணல் வீடு கட்டி ‘விளையாடினார்’ என்பதும் நமக்கு சுவையளிக்கும் செய்தியே. ஆனால், இந்த மணல் வீடோ, வீடு இல்லாமல் தவிப்பவர்களுக்கு நல்ல வீடு அமையவும், அத்தகைய வீடுகளில் குடியேறுவோர் நீண்ட ஆயுளுடனும் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்ந்து நன்னிலை அடையவும் நம் சற்குரு இறைவனிடம் சமர்ப்பித்த பிரார்த்தனையின் வெளிச் சின்னமே.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
கச்சிநெறிக்கரை காஞ்சீபுரம்

சற்குருவின் உள்ளங்கையில் தனரேகை உண்டு. கங்கண ரேகை பகுதியிலிருந்து ஆரம்பித்து சூரிய மேட்டில் முடிவடைவது. சேஷாத்ரி சுவாமிகளும் இத்தகைய தன ரேகையைக் கொண்டிருந்தார். கோடியில் ஒருவருக்கே இத்தகைய ரேகைகள் அமையும். நம் சற்குரு மணல் வீடு கட்டியபோது இந்த தன ரேகை சக்திகளை ஞாயிற்றம்பல திருத்தலத்தில் பதித்து அருள் புரிந்தார் என்பதை இங்கு சொல்லவும் வேண்டுமோ? மேலும் ரோகிணியால் சந்திரன் உச்சம் பெறும் ஜாதக அம்சங்கள் கூடியிருந்ததால் சோமவாக்யம் என்று இத்தலத்தில் தோன்றிய ஜோதிட முறையையும் புனருத்தாரணம் செய்து இவ்வுலகத்திற்கு ஈந்தவரே நம் சற்குரு.

சித்திரை விஷூ என்ற வருடப் பிறப்பு பண்டிகையின்போது பழங்கள் பூக்கள் போன்ற மங்கலப் பொருட்களை பெண்கள் பெரிய கண்ணாடியின் முன் வைத்து வணங்குவது நீங்கள் அறிந்த ஒன்றே. கண்ணாடி தியானத்தின் ஒரு மாறுபட்ட வழிபாடே இது. கண்ணாடியில் தெரியும் பழம், பூக்கள், பெண்கள் உண்மை இல்லை, ஒரு மாயத் தோற்றமே, அதே போல கண்ணாடியின் எதிரில் உள்ள பழங்கள், பெண்களும் மாயத் தோற்றமே, கடவுள் என்ற உண்மையின் மாய பிம்பமே இவை அனைத்தும். இதுவே ஆதிசங்கரர் அருளிய திருக் திருஷ்டி விவேகம், நம் சற்குரு அருளும் திரயம்பகேஸ்வர வழிபாடு.

நம் ஆஸ்ரமத்தில் உள்ள அனைத்து அன்னதான பாத்திரங்களிலும் RVV என்று பொறித்திருப்பார்கள். இதன் உண்மையான அர்த்தம் இதுதான், Royal Vivacious Victor, Royal Vivacious Victory, இந்த வெற்றி மக்களை அடக்கி ஆள்வதால், ஆண்டதால் கிடைத்த வெற்றி அல்ல, அனைவரையும் அன்பால் அரவணைத்த, ஆரண வெற்றி. ஞாயிற்றம்பல திருத்தலத்தில் மணல் வீடுகள் கட்டி விளையாடுவோர் இத்தகைய எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என்ற விஜய அம்சங்களையும் பெறுவார்கள்.

குருமங்களகந்தர்வ லோகத்தைச் சேர்ந்ததால் நம் சற்குரு குருமங்களகந்தர்வா என்று அழைக்கப்படுகிறார் என்பது ஒரு ஜோதிட காரணமே. இவ்வாறு குரு, செவ்வாய், சுக்ர அம்சங்கள் மூன்று வார காலமான ஆடி மாதம் ஒன்றாம் தேதி முதல் 21ந் தேதி வரை (3 x 7 = 21) கோசார ரீதியாகவும் துலங்குகிறது என்றால் இதன் மகத்துவம்தான் என்னே? சிறப்பாக குருவின் விசேஷ பார்வையான ஐந்தாம் பார்வையை சிம்ம ராசியில் குடி கொண்டிருக்கும் செவ்வாய், சுக்ர கிரகங்கள் பெறுவதை நீங்கள் அறிந்து பயன்பெறலாம்.

தோன்றாநிலை திருஅண்ணாமலை

இந்த மூன்று வார கால விசேஷ குருமங்களகந்தர்வ சக்திகளை பெறும் முகமாக சப்தரிஷிகள் எழுந்தருளிய லால்குடி, தட்சிணாமூர்த்தி திருவடிகளில் எழுந்தருளிய காஞ்சீபுரம் கச்சிநெறிக்கரை, சப்தரிஷிகள் லிங்க வடிவில் அருள் வழங்கும் திருநாவலூர் திருத்தலங்களில் அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றி மகிழ்வது சிறப்பாகும். பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் என்ற மூன்று லோகங்களைக் குறிப்பதாக பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் வாசனை மலர்களையோ, தவனம் போன்ற இலைகளையோ மூர்த்திகளுக்கு கிரீடமாக சார்த்தி அல்லது தரையில் இந்த மூன்று லோகங்களைக் குறிக்கும் வண்ணத்தில் மலர்களைப் பரப்பி சுக்ர பீடங்களை உருவாக்கி வழிபடுதலால் இது ஒரு அற்புத வழிபாட்டு முறையாக அமைந்து இந்த மூன்று லோகங்களுக்குமே அமிர்த சக்திகள் பெருகும் என்பதே இந்த வழிபாட்டின் சிறப்பு அம்சமாகும்.

குருவாயூரில் ஸ்ரீகுருவாயூரப்பனை ஸ்ரீகிருஷ்ணரே பிரதிஷ்டை செய்தார். வாயு பகவான், வருண பகவான், பிரஹஸ்பதி ஆகிய மூவரும் சேர்ந்து செய்த விக்ரகம். பிரதிஷ்டை செய்ய இடம் கொடுத்தவர் மம்மியூர் சிவன்.

இவ்வாறு திரயம்பேகேஸ்வரர் அருள் பெருகும் ஆடி மாதத்தில் குருமங்கள கந்தர்வ சக்திகள் சுழல்வது மங்கள ஆமலக ஹஸ்தம் என்று அழைக்கப்படும். இவ்வாறு உட்சுழற்சியாக சுழலும் இந்த மங்கள ஆமலக ஹஸ்த நேரத்தில் இயற்றும் வழிபாடுகளின் லௌகீக பலனாக தங்கள் துறைகளில் புகழ் என்னும் உச்சணிக் கொம்பின் ஏறித் திகழ்வர் என்பதாகும். கலிலியோ, எடிசன் போன்ற விஞ்ஞானிகள் தங்கள் முற்பிறவிகளில் இத்தகைய வழிபாடுகளை இயற்றியவர்களே. நீங்களும் ஏன் இத்தகைய புகழைப் பெற்று புகழ் என்னும் உச்சாணிக் கொம்பின் உச்சியில் ஏறி நின்று பிரகாசிக்கக் கூடாது?

பூமி தன்னைத்தானே சுற்றி வருவது அல்லாமல் சூரியனையும் சுற்றி வருகிறது என்று கலிலியோ பிற்காலத்தில் பெற்ற ஞானத்திற்கு காரணமே இந்த உட்சுழற்சி மங்கள ஆமலக ஹஸ்த வழிபாடு என்பது இப்போது உள்ளங்கை நெல்லிக் கனிதானே.

எடிசனோ இந்த உட்சுழற்சி தத்துவத்தைப் பற்றி அறியாவிட்டாலும் அதை பயன்படுத்தி மோட்டார், விளக்கு, விசிறி போன்ற பற்பல சாதனங்களை உருவாக்கி மக்கள் பயன்பாட்டிற்கு அளித்து விட்டார் அல்லவா? அதுபோல் நாம் உட்சுழற்சி தத்துவத்தைப் பற்றி அறிய முடியாவிட்டாலும் சரவணபவ கூடைக்குள் மாதுளம் பழங்களை வைத்து தானம் அளிப்பதால் இது ஒரு உட்சுழற்சி வழிபாடாக அமையும் என்பதே நம் சற்குருவின் தெளிவு.

தொடரும் திரயம்பகம்...

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam