ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
வக்ரமும் அமிர்த குணமே |
விழுப்புரம் பாண்டிச்சேரி இடையே அமைந்துள்ளதே திருவக்கரை திருத்தலம். ஸ்ரீவடிவாம்பிகை சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் அருளும் தலமே திண்டிவனம் அருகே சங்கராபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளி உள்ள திருவக்கரை திருத்தலம். பொதுவாக, ஸ்ரீஅமிர்தகடேஸ்வரராக இறைவன் கலயநல்லூர், திருத்தவத்துறை, திருக்கடவூர் போன்ற தலங்களில் எழுந்தருளி இருந்தாலும் ஸ்ரீஅமிர்தேஸ்வரி என்ற நாமத்துடன் அம்பிகை எழுந்தருளி உள்ள தலமே திருவக்கரை. வராகநதி என்று அழைக்கப்படும் சங்கராபரணி ஆறு மட்டுமல்லாது சூரிய தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் பொலியும் அற்புத திருத்தலமே திருவக்கரை. பெரும்பாலான சிவத்தலங்களில் வட்ட ஆவுடையுடனோ சதுர ஆவுடையுடனோ லிங்க மூர்த்திகள் எழுந்தருளி இருப்பதை நாம் காண முடியும். இத்தலத்திலோ சதுர ஆவுடைமேல் வட்ட ஆவுடை அமைந்திருக்க அதன் மேல் வட்ட வடிவில் மூன்று முகங்களுடன் ஸ்ரீசந்திர மௌலீஸ்வரரின் லிங்க திருவடிவம் எழுந்தருளி இருக்கும் அற்புத திருக்கோலத்தைக் காணலாம்.
பிரபஞ்சம் எங்குமே காண முடியாத அற்புத திருக்கோலம் இதுவாகும். மிகவும் புராதனமான குரு சக்தித் தலமிது. எப்போதும் வானில் சஞ்சரிக்கும் தாமிர, வெள்ளி, இரும்புக் கோட்டைகள் வடிவில் திகழும் அசுரர்களை சம்ஹாரம் செய்ய இறைவன் மூன்று முகத்துடன் திருவக்கரை திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். எத்தனையோ தலங்களில் அமிர்த சக்திகள் நிறைந்திருந்தாலும் திருவக்கரையில் பொழியும் அமிர்தசக்திகள் தனித்தன்மை வாய்ந்தவையே. இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். நம் சற்குருவின் அடியார் ஒருவர் தன் மனைவி தலை சுற்றல், வாந்தி போன்ற துன்பங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் பல வைத்தியர்களைச் சந்தித்து எத்தனையோ மருந்துகளை ஏற்றாலும் குணம் என்பதையே அறிய முடியவில்லை. இதை அறிந்த நம் சற்குரு அந்த அடியாரை திருவக்கரை திருத்தலம் சென்று இறை தரிசனம் பெற்று பின்னர் அங்கிருந்த பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் தானம் அளித்து வருமாறு கூறவே அந்த அடியாரும் அவ்வண்ணமே நிறைவேற்றி நம் சற்குருவிடம் இது பற்றித் தெரிவித்தார்.
சந்திர தீர்த்தம் திருவக்கரை
அப்போதுதான் நம் சற்குரு செய்வினை என்பது பற்றிய இரகசியங்களைத் தெரிவித்தார். செய்வினை என்பது உண்மையே. இது ஒரு எதிர்மறை சக்தியாகும். ஒருவருக்கு மற்றொருவர் ஒரு செய்வினை செய்தால் அதனால் அவர் பாதிக்கப்படுவார் என்பது உண்மையே என்றாலும் அவ்வாறு அந்த வினையை அனுபவிக்க வேண்டியவர் ஏற்கனவே தன்னுடைய ஏதாவது ஒரு செய்கையால் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால்தான் அந்த செய்வினை பிரச்னையை ஏற்படுத்தும். எனவே நற்காரியங்களையே செய்து வரும் நல்லவர்கள் எந்த செய்வினையாலும் பாதிக்கப்படுவதில்லை. இது குறித்து அவர்கள் அஞ்சவேண்டிய அவசியமே இல்லை. செய்வினைகளில் பலவிதங்கள் உண்டு. இவற்றைப் பற்றி விவரமாக எடுத்துரைத்தால் தேவையில்லாத பீதியும் அச்சமுமே பக்தர்கள் மனதில் தோன்றும் என்பதால் அதைப் பற்றிய விளக்கங்கள் நம் சற்குருவால் அளிக்கப்படவில்லை. என்றாலும் அந்த அடியாரின் மனைவி செய்வினையின் பாதிப்பால் ஆடையின்றித் திரிய வேண்டும் என்பதே அவர் மேல் ஏவப்பட்ட வினையின் தன்மையாகும். தம் அடியாரின் மனைவி இத்தகைய வேதனையை அனுபவிப்பதை ஏற்றுக்கொள்வாரா நம் சற்குரு. இதற்காகவே மேற்கூறிய பரிகாரத்தைக் கூறி அந்த அடியார் இன்றளவும் நலமுடன் திகழ அருள்புரிந்தவரே நம் சற்குரு. ஆனால், தன்னுடைய பூர்வ ஜன்ம வினைகளின் அழுத்தத்தால் அந்த அடியார் சில உடல் உபாதைகளை மட்டும் மேற்கொண்டு துன்பப்பட வேண்டும் என்ற விதியை மட்டும் நம் சற்குரு மாற்றவில்லை என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை.
ஸ்ரீநந்தி மூர்த்தி திருவக்கரை
திருவக்கரையில் உள்ள சந்திர தீர்த்தத்தின் மகிமையைப் பற்றி அறிந்து கொள்ள 200 பிறவிகள் தேவைப்படும் என்பதே நம் சற்குருவின் திருவாய்மொழி. எனினும் ஓரளவு இந்த தீர்த்தத்தின் பாதுகாப்பு சக்திகளைப் பற்றி மட்டும் இங்கு விளக்குகிறோம். சந்திர தீர்த்தம் தற்போது தவிட்டுக்குளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயரில் விசாரித்தால்தான் சந்திர தீர்த்தத்தை நாம் கண்டு கொள்ள முடியும். சூரியனின் ஒளியை பிரதிபலிப்பதால், சூரிய ஒளியை பிரதானமாகக் கொண்டு அதைச் சார்ந்து இருப்பதால் மட்டும் சந்திரனுக்கு உரிய எண் இரண்டாக அமையவில்லை. இதன் பின்னணியில் அநேக அமிர்த இரகசியங்கள் மறைந்துள்ளன. பாதுகாப்பு பெட்டகமாகத் துலங்குவதே அமிர்த தீர்த்தமாகும். பெரிய தலைவர்களை, முக்கியஸ்தர்களைக் காக்கும் பொறுப்பில் உள்ள மெய்க்காவல் படையினர் மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகள் பற்றி ஏற்கனவே ஆவூர் திருத்தல மகிமையில் விளக்கி இருந்தோம். பெரும்பாலும் இத்தகைய காவல் படை பல அடுக்குகளில் அமைந்திருப்பதால் இரண்டாவது காவல் அடுக்கு சந்திரனுக்கு உரித்தானதாக அமைவதால் இந்த சந்திர அடுக்கில் அமைந்தவர்கள் மட்டும் திருவக்கரை திருத்தலத்தில் சந்திர தீர்த்தத்தில் நீராடி, வழிபட்டு தங்கள் மெய்க்காவல் சக்திகளை பெருக்கிக் கொண்டால் போதுமானது. ஆனால், தாங்கள் எந்த அடுக்கில் உள்ளோம் என்பதே இந்த மெய்க்காவல் படைக்கு தெரியாது. இதுவே உண்மையான மெய்க்காவல் பாதுகாப்பு இரகசியம். எனவே தாங்கள் எந்தப் பாதுகாப்பு அடுக்கில் இருந்தாலும் அனைவருமே திருவக்கரை சந்திர தீர்த்தத்தில் நீராடி வழிபாடுகளை இயற்றுதல் நலமே. மேலும் இந்த மெய்க்காவல் படையினர் அளிக்கும் பாதுகாப்பு மெய்யாகத் துலங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் தலைவர்களும் திருவக்கரை திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுதல் சிறப்பே. எல்லாம் இறைவன் செயல் என்ற பெரியோர் கூற்று எக்காலத்தும் உண்மையே என்பதும் சந்திர தீர்த்தத்திற்கு தற்போது அமைந்த நாம இரகசியம் ஆகும். தவிடு என்றால் நெல்லைப் பாதுகாக்கும் உமி நொய் என்றாகும். எனவே தவிட்டுக் குளம் என்பது மெய்க்காவல் சக்தியைக் குறிப்பதாக அமைவதே இதன் சிறப்பாகும். இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் சந்திர தீர்த்தமே ஒரு பகுதி உஷ்ணமாகவும் ஒரு பகுதி குளிர்ச்சி உள்ளதாகவும், வெண்ணிறம் படிந்து தோன்றுகிறது அல்லவா ? இதுவே சந்திர தீர்த்தத்தின் வக்ர அம்சமாகும். நுனி முறியாத அரிசியில் அல்லது பாசுமதி அரிசியில் சர்க்கரைப் பொங்கல் செய்து அதை வளர்பிறையில் எந்நாளும் திருவக்கரை திருத்தலத்தில் தானமாக அளித்தலால் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளோர் தக்க பாதுகாப்பு பெறுவர். பல குடும்பங்களில் அண்ணி, அத்தை, மாமியார் போன்ற பெண் உறவுகளுடன் தவறான பழக்கங்களும், உறவுகளும் ஏற்படுகின்றன. இத்தகைய உறவுகள் வெளியில் தெரியாது என்றாலும் குடும்பத்தில் ஏற்படும் சச்சரவுகளும் குழப்பங்களும் பலப்பல. இத்தகைய வெளியில் தெரியாத, அம்பலத்திற்கு வராத பல தகாத உறவுகளுக்கும் திருவக்கரையில் மேற்கொள்ளும் நீராடலும் நுனி முறியாத அரிசி கொண்டு நிறைவேற்றப்படும் சர்க்கரைப் பொங்கல் தானமும் நலம் அளிக்கும். இத்தகைய உறவுகள் வக்ர எண்ணத்தால்தான் தோன்றின என்று அவரவரே உணர்ந்து தெளிவதே திருவக்கரை சந்திர தீர்த்தத்தில் மேற்கொள்ளும் நீராடலின் மகிமையாகும். ஜனன ஜாதகத்தில் சந்திர பகவானை தீய கிரகங்கள் பார்ப்பதாலும், தீய கிரகங்களுடன், பாவிகளுடன் சந்திர பகவான் கொள்ளும் இணைப்பாலும் தோன்றும் வக்ர எண்ணங்களும், உறவுகளும் இத்தகைய வழிபாட்டால் படிபடியாகக் குறையும் என்பதே திருவக்கரையின் பக்தர்கள் மேற்கொள்ளும் வழிபாட்டின் சிறப்பாகும்.
மழைநீர் நிரம்பிய திருவக்கரை
வக்ரம் என்றால் தீமை பயப்பது, இயற்கைக்கு முரணானது என்ற கருத்தே சமுதாயத்தில் நிலவுகிறது. பொதுவாக, வக்ரம் என்பது நடைமுறைக்கு மாறுபட்டது என்று மட்டுமே பொருள், அது தவறானதாகவோ, தீமை பயப்பதாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை என்பதே நாம் திருவக்கரை திருத்தலத்தல் மேற்கொள்ளும் வழிபாடுகள் உணர்த்தும் உண்மையாகும். ஒரு திருத்தலத்தில் மூலவரும், கொடிமரமும், நந்தி மூர்த்தியும் நேர்கோட்டில் அமைய வேண்டும் என்பதே விதி. நமது பாரதத்தில் பெரும்பாலான கோயில்கள் இம்முறையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அமைப்பிற்கு வக்ரமாக, மாறுபட்டு அமைந்துள்ளதே திருவக்கரை திருத்தலமாகும். இந்த “வக்ர” அம்சங்கள் மூலவரிடமிருந்தே தோற்றம் கொள்கின்றன என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் அம்சமாகும். லிங்க மூர்த்திகள் ஒரே முகத்துடன் காட்சி அளிப்பதே வழக்கம் என்றாலும் திருவக்கரையில் லிங்க மூர்த்தி மூன்று முகங்களுடன் காட்சி அளிக்கிறார். நாம் நினைக்கும் இந்த “வக்ர” முகத் தோற்றம் முப்புரங்களாய்த் தோன்றிய அரக்கர்களை வெல்லவே என்று நாம் தெளியும்போது இந்த வக்ரத் தோற்றம் மறைகிறது. அங்கு தெளிவு பிறக்கிறது. இவ்வாறு திருவக்கரை திருத்தலத்தில் தோன்றும் ஒவ்வொரு வக்ர தோற்றத்தையும் ஆராய்ந்து பார்த்தால் நாம் இறைவனைப் பற்றிய தெளிந்த ஞானத்தை அடைவோம் என்பதே திருவக்கரை திருத்தலம் அளிக்கும் பெருமையாகும்.
திருவக்கரை திருத்தலம் எப்போதும் வறண்டு, பாலைவனமாகவே காட்சி அளிக்கும். அருகில் ஓடும் வராகநதியும் காய்ந்துதான் கிடக்கும். ஆனால், திருவக்கரை திருத்தலமே நீரில் மூழ்கி காட்சி அளிக்கின்றது என்றால் இந்த வக்ர மழைப் பொழிவும் மக்களை, ஆடு மாடுகளை, பயிர்களைக் காப்பதற்காகத்தானே ? அனைத்து வக்ர நீர் சக்திகளையும் ஏற்றுக் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரியும் ஈசனே ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர். ரோகிணி தேவி மேல் கொண்ட மோகத்தால் சந்திரன் மதி இழந்ததால் மற்ற தட்ச கன்னிகள் தந்தையிடம் முறையிட தட்சனின் சாபத்தால் தேயத் தொடங்கினான் சந்திர பகவான். சந்திர பகவானின் இந்த வக்ர எண்ணத்தை மாய்த்து முழுவதுமாக மறைந்து போக வேண்டிய சூழ்நிலையில் தாய் வக்ர காளி தேவியின் பெருங் கருணையால் ஈசன் சந்திரனை தன் தலையில் சூடி பிறை சூடிய பெருமானாய், ஸ்ரீசந்திரமௌலீஸ்வரராய் அனைவருக்கும் திருக்காட்சி நல்கிய தலமே திருவக்கரை ஆகும். சந்திர பகவானின் வக்ர எண்ணத்தால் பிறந்த பிறை சூடிய பெம்மான் தரிசனம் வக்ரமா ? சிந்திப்பீர், தெளிவு பெறுவீர். நீளம், அகலம், உயரம் என்ற மூன்று பரிமாணங்களுடன் துலங்குவதே நாம் வாழும் பூமி. இந்த மூன்று பரிமாணங்களிலுமே ஏற்படும் வக்ர குணங்களை நிவர்த்தி செய்வதே திருவக்கரை திருத்தலமாகும். இதைக் குறிப்பதாக உள்ள சில அம்சங்களை இங்கு விவரிக்கிறோம்.
1. ஸ்ரீசந்திரமௌலீஸ்வரரின் மூன்று முகங்கள்
2. ஸ்ரீவக்ர காளியின் எட்டு இடங்களில் வளைந்த தோற்றங்கள்
3. கொடி மரம், நந்தி, மூலவர் நேர் கோட்டில் அமையாதது
4. சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், வராகநதி என்ற மூன்று தீர்த்தங்கள்
5. வலப்புறம், இடப்புறங்களில் சக்தி அம்சங்களுடன் கொண்ட மூலவரின் தோற்றம்
6. வட்டம், சதுரம், முக்கோணம் என்ற அம்சங்களுடன் துலங்கும் மூலவர்
7. ஸ்ரீசனீஸ்வர பகவானின் காக்கை இடப்புறத்தை நோக்கி உள்ளது
8. ஸ்ரீவக்ர காளி எதிரில் வக்ர லிங்கம் எழுந்தருளி உள்ளார்
9. ஸ்ரீநடராஜர் வலக்காலை தூக்கி ஆடும் வக்ர தாண்டவம்
இத்தனை அம்சங்களையும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்பதால் ஸ்ரீசக்கரமாக, வட்டம், சதுரம், முக்கோணங்களில் அமைந்த இயந்திரத்தை வருங்கால சந்ததியினருக்காக ஸ்ரீவக்ர காளியின் பாதத்தில் அமைத்து அருளியவரே ஸ்ரீஆதிசங்கரர் ஆவார்.
திரு வக்கரை திருவக் கரை |
திருவக்கரை ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர், ஸ்ரீவடிவாம்பிகை ஸ்ரீவக்ர காளி என்ற இரு சக்தி அம்சங்களுடன் எழுந்தருளி உள்ளார். பெண்களின் உடலழகுக்கு லட்சணம் மிகவும் முக்கியமானது. அழகு என்பது அவரவர் மனதைப் பொறுத்து அமைவதே, லட்சணம் என்பதோ குறித்த விகிதங்கள் கூடிய அளவுடன் அமைவது. அதனால்தான் பிற பெண்களைப் பற்றிக் கூறும்போது, “அந்தப் பெண் இலட்சணமாக இருக்கிறாள்,” என்றுதான் நம் சற்குரு கூறுவாரே தவிர, “அவள் அழகாக இருக்கிறாள்,” என்று ஒரு போதும் கூறியதே கிடையாது. ஒரு பெண்ணின் அழகை ரசிக்கும் தகுதி பெற்ற அவளுடைய கணவன் மட்டுமே அவள் அழகாக இருக்கிறாள் என்று கூற முடியும். மற்ற அனைவருமே அவள் இலட்சணமாக இருக்கிறாள் என்றுதான் கூற வேண்டும். இதுவே காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று கூறுவதன் அர்த்தமாகும். எனவே ஒரு பெண் தேவையான அங்க லட்சணங்களுடன் அமைவதே அவளுடைய பெற்றோர்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டியது.
சூரிய தீர்த்தம் திருவக்கரை
இறைவன் என்னவோ அனைவரையும் முறையான அங்க லட்சணங்களுடன்தான் படைக்கின்றான். ஆனால், அவரவர் முற்பிறவிகளில் செய்த வினைகளின் தன்மையால் இந்த அங்க லட்சணங்கள் சிறிது சிறிதாக மாற்றம் கொள்கின்றன என்பதே நாம் உணர வேண்டிய பாடமாகும். ஸ்ரீவடிவாம்பிகை தேவி உணர்த்தும் உண்மை இதுவே. ஒருவர் எத்தகைய குறைபாடுள்ள அங்க லட்சணங்களுடன் பிறந்திருந்தாலும் ஸ்ரீவடிவாம்பிகையைத் தொடர்ந்து வேண்டி வழிபாடுகள் இயற்றி வந்தால் நிச்சயம் அவருடைய குண நலன்கள் மாறும். அதன் பயனாக நிச்சயம் அவருடைய அங்க லட்சணங்களும் மாறும். பூரணமான அங்க லட்சணங்களுடன் பூமியில் தோன்றியவரே ஸ்ரீராமர் ஆவார். இதை அவருடைய ஜனன ஜாதகமும் உறுதி செய்யும். ஒரு ஜாதகத்தில் லக்கினம் எவ்வளவுக்கு எவ்வளவு சிறப்பாக அமைகிறதோ அந்த அளவிற்கு அந்த ஜாதகருடைய உடல் லட்சணங்கள் சிறப்பாக அமையும். ராமபிரானைப் போல் அங்க லட்சணங்கள் கூடியவர்கள் இதுவரை பிறந்ததில்லை, இனி பிறக்கப் போவதுமில்லை என்பார் நம் சற்குரு. அந்த அளவிற்கு சிறப்புடையது ஸ்ரீராமர் ஜாதகம். அதனால்தான் பெண்கள் தங்களுக்கு உரிய மணாளன் ஸ்ரீராமரைப் போன்ற உடல் அழகுடன், அங்க லட்சணங்களுடன் திகழ வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கும்படி நம் பெரியோர்கள் வழிகாட்டி வந்தார்கள். விதி வசத்தால் இத்தகைய அங்க லட்சணங்கள் முறையாக அமையாத பெண்களும் ஆண்களும் வட்டம், சதுரம், முக்கோணம் அல்லது இரண்டு முக்கோணங்கள் சேர்ந்த டைமண்ட் வடிவ முந்திரி கேக், மைதா கேக் போன்ற இனிப்பு பதார்த்தங்களை திருவக்கரை திருத்தலத்தில் ஸ்ரீவடிவாம்பிகையை வேண்டி பக்தர்களுக்கு தானமாக அளித்து வருவதால் நல்லருள் பெறுவர். தாங்கள் எந்நிலையில் இருந்தாலும் தங்களுக்கு அமையும் மனைவியோ கணவனோ நல்ல அங்க லட்சணங்களுடன் அமையவும் இத்தகைய வழிபாடு அவர்களுக்கு துணை நிற்கும்.
ஸ்ரீசந்திரமௌலீஸ்வரருக்கு இடப் புறத்தில் சர்வ அங்க லட்சணங்களுன் கூடிய ஸ்ரீவடிவாம்பிகை எழுந்தருளி இருக்க சுவாமியின் வலப்புறத்தில் ஸ்ரீவக்ர காளி எழுந்தருளி உள்ளாள். அஷ்ட கோணல் எனும்படியான எட்டு இடங்களில் உடல் வளைந்திருக்கும் அபூர்வ அனுகிரக கோலத்தில் எழுந்தருளி இருக்கும் அன்னையே வக்ர காளி ஆவாள். பெரிய தனங்களுடன் பொலியும் அன்னையே இவள். பெண்களுக்கு கவர்ச்சி, செல்வம் என்பது அவர்களுடைய தனங்களே. தனலட்சுமி என்ற சொல் பொதுவாக மூன்று தனங்களைக் குறிக்கும். தங்களுடைய கணவனுக்கு கவர்ச்சியைத் தரும் அழகுவாய்ந்த தனங்கள், தங்கள் குழந்தைகளுக்கு உண்மையான உணவான, அவர்கள் பெறும் முதல் செல்வமான தாய்ப் பாலை வற்றாது அளிக்கும் செழுமை கொண்ட தனங்கள், இவ்வுலக மக்கள் அனைவரையும் அரவணைத்துக் காக்க அருளும் பொருள் செல்வம் வர்ஷிக்கும் தனங்கள் என்ற மூன்று அனுகிரகம் பெற்றவர்களே தன லட்சுமி ஆவார்கள். இத்தகைய வளத்தில் எந்த வளம் குறைவாக இருந்தாலும் அதை கருணை கொண்டு அளிப்பவளே வக்ர காளி தாய் ஆவாள். காளி தோற்றம் பயங்கர பீதியை உண்டாக்குவது என்பது மக்களின் பொதுவான அபிப்ராயமாக இருந்தாலும் பக்தர்களுக்கு அவள் அன்னையாய்த் தோன்றுவதால் ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்று இறை பக்தியில் திளைக்கும் உத்தமர்கள் அவளை அன்புள்ள தாயாக நினைத்து பாராட்டுகிறார்கள். மழை நீர் ஏதாவது ஒரு இடத்தில் பெருகினாலும் அது எல்லா இடங்களிலும் பரவி வீணாவதோடு மட்டுமல்லாமல் அதிக நீர் பெருக்கு ஆபத்தையும் சேதத்தையும் அல்லவா விளைவிக்கும். இதை முறைப்படுத்தவே ஆறுகள் வெட்டப்பட்டு அந்த மழை நீர் பாசனத்திற்காகவும், குடி நீர், நீராடல் போன்ற பல பயன்களை விளைவிக்கும் செல்வமாக மாற்றப்படுகிறது. இவ்வாறு திரு வக்கரை, திருவக் கரையாக மாறுவதற்கு அருள் வழங்கும் சக்தி மூர்த்திகளே ஸ்ரீவடிவாம்பிகையும் ஸ்ரீவக்ர காளியும் என்பது இப்போது புலனாகின்றது அல்லவா ?
திருவக்கரை
அது மட்டுமா ? திருவக்கரை திருத்தலத்தில் வராகநதி பாய்கிறது. இதன் மற்றோர் நாமம் சங்கராபரணி என்பதாகும். அம்பிகையின் நாமம் இது, ஈசனின் பாகம் பெற்றவள் என்றும் பொருள். இவ்வாறு சகோரதரனும், சகோதரியும் வராகநதி, சங்கராபரணி என்ற திருநாமத்தில் பொலியும் ஒரே திருத்தலம் என்பதும் திருவக்கரையின் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும். ஸ்ரீவடிவாம்பிகையின் அருகிலும் ஸ்ரீவக்ரகாளிக்கு எதிரிலும் எழுந்தருளி இருக்கும் வக்ர லிங்கமானது கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும், பனி காலத்தில் அரும்பும் முத்துக்களுடன் திகழ்வது போல வராகநதி தீர்த்தமும் உத்தராயண, தட்சிணாயன புண்ணிய காலங்களில் குளிர்ச்சியாகவும், இளஞ்சூட்டுடனும் திகழ்வதே இதன் அரிய சிறப்பாகும். உத்தராயண தட்சிணாயனம் பிறக்கும் காலங்களில் வராகநதியில் நீராடி திருவக்கரை திருத்தலத்தில் இறை மூர்த்திகளை தரிசனம் செய்வதால் பித்ரு மூர்த்திகளின் கனிந்த அனுகிரகம் கிட்டுவதோடு உடல் உஷ்ணத்தால் தோன்றும் அனைத்து வியாதிகளும் நயம் பெறும். இத்தகைய நீராடலுக்குப் பின் வராகநதி தீரம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம் என்ற இந்த முத்தான தீர்த்தங்களில் எங்கு வேண்டுமானலும் தர்ப்பண வழிபாடுகளை மேற்கொள்ளலாம். இதன் பலன்களை அனுபவித்தால்தான் உணர முடியும். தற்காலத்தில் பலரும் மார்பு புற்றுநோயால் வருந்துகின்றனர். இதற்கு சித்தர்கள் வெளிப்படுத்த விரும்பாத பல காரணங்கள் இருந்தாலும் ஸ்ரீவக்ர காளியை முறையாக வணங்கி வருவதால் வரும் முன் காப்பாக பெண்கள் இத்தகைய பெருநோயிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். ஏற்கனவே இத்தகைய நோயால் வருந்துவோர்களும் நிவாரணம் பெறுவார்கள் என்பதும் அன்னையின் அனுகிரகமாகும். மைத்ரேயி, கார்க்கி போன்ற பெண் ரிஷிகள் முற்காலத்தில் பூணூல் அணிந்து முறையாக காயத்ரீ ஜபம் இயற்றி வந்தனர். வருங்காலத்தில் இத்தகைய வழிபாடுகள் மங்கி மறைந்து விடும் என்பதால்தான் தலை மாலையை பூணூலாக அணிந்து பக்தர்களுக்கு அருள்சுரக்கும் அன்னையின் வழிபாட்டை பக்தர்களுக்கு வழங்கி உள்ளனர் சித்தப் பெருமக்கள். என்றாலும் திருமணம் நிறைவேறும் வரை பெண்கள் பூணூல் அணிந்து காயத்ரீ மந்திரம் ஜபித்து வருதல் சிறப்பாகும். திருமணத்தின்போது மணாளள் அணிவிக்கும் மாங்கல்யமே பெண்களுக்கு பூணூலாய் அமைந்து விடுவதால் கணவன்மார்களுக்கு இயற்றும் பாதபூஜை, முதுகைத் தேய்த்து குளித்து விடுதல் போன்ற சேவைகளே காயத்ரீ ஜபித்த பலன்களை மனைவிமார்களுக்கு அளித்து விடுகின்றன. எனவே கணவன்மார்களுக்கு செய்யும் சேவை அடிமைத்தனத்தை பறைசாற்றுவது அல்ல, பெண்கள் ஆரோக்யமும் நல்வாழ்வும் பெற நம் பெரியோர்களால் வழங்கப்பட்ட உத்தரவாதமே இது. கடலுக்கு முந்நீர் தீர்த்தம் என்ற பெயர் உண்டு, திருவக்கரையில் பொலியும் மூன்று தீர்த்தங்களும் இத்தகைய முந்நீர் சக்திகளை உடையதே. ஆனால், திருவக்கரை முந்நீர் பிறவிப் பெருங்கடலையும் தாண்டி இறையருள் பெற வழிவகுக்கும் என்று வழிகாட்டிய உத்தமர்களே சம்பந்த மூர்த்தி நாயனார் போன்றோர் ஆவர். பல்வேறு உடல் உபாதைகளால் இத்தகைய முந்நீர் சக்திகளைப் பெற இயலாதோரும் கணவனின் வெளிநாட்டு வாசம் போன்ற காரணங்களால் கணவனுக்குத்தேவையான உடல் சேவைகளை செய்ய இயலாதோரும் திருவக்கரை திருத்தலத்தில் பௌர்ணமி, அமாவாசை, மூன்றாம் பிறை என்ற இந்த மூன்று நாட்களில் குசா தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் இந்த முந்நீர் குரு சக்திகளைப் பெற்று நல்வாழ்வு வாழ்வர்.
நவகிரகங்கள் திருவக்கரை
திருக்கோயில்களில், திருஅண்ணாமலை போன்ற மலைத் தலங்களை வலம் வருகையில் இறைவனுக்கு வலப்புறத்தில் தொடங்கி இடப்புறத்தில் முடித்தலையே பிரதட்சிண வலம் என்று கூறுகிறோம். இதற்கு எதிர்மறையாக நமக்கு வலப்புறத்தில் ஆரம்பித்து இடப்புறத்தில் முடித்தலை அப்பிரதட்சிண வலம் என்று கூறுகிறோம். பொதுவாக, நவகிரக மூர்த்திகளை வலம் வருகையில் ஒன்பது முறை வலம் வருவதாக பல பக்தர்கள் இன்று இதை கடைபிடிக்கின்றனர். நம் சற்குரு அருள்வதோ ஏழு முறை பிரதட்சிணமாகவும், ராகு கேது மூர்த்திகளின் வலத்தை ஒட்டி இரு முறை அப்பிரதட்சிணமாக வலம் வருவது சிறப்பு என்று தெளிவுபடுத்தி உள்ளார்கள். சோம சூக்த பிரதட்சிணம் என்பது வலமாகவும் இடமாகவும் பிரதோஷ வேளையில் மட்டும் சிவத்தலங்களில் நிறைவேற்றும் ஒரு பிரத்யேகமான வல முறையாகும். இவ்வாறு ஒரு முறை இயற்றும் சோம சூக்த வலமானது சாதாரண பிரதட்சண வலங்களைப் போல் ஆயிரம் மடங்கு பலன் தரவல்லதாகும். திருவக்கரை திருத்தலத்தில் இவ்வாறு இயற்றும் ஒரு சோமசூக்த வலமானது மற்ற திருத்தலங்களில் இயற்றும் சோமசூக்த வலங்களைப் போல் ஆயிரம் மடங்கு பலன் தர வல்லதே என்பதே இத்தலத்தில் இயற்றும் பிரதட்சிணங்களின் சிறப்பாகும். இது ஒரு புறம் இருக்க, திருத்தலங்களில் பிரதட்சிணமாக வலம் வரலாமா அல்லது திருவக்கரை, திருஅண்ணாமலை, படேசாகிப் சுவாமிகளின் ஜீவ சமாதிகளில் அப்பிரதட்சிணமாக வலம் வரலாமா என்பது பற்றி தொடர்ந்து பக்தர்கள் ஐயம் எழுப்பி வருவதால் இது சம்பந்தமாக மீண்டும் இத்தகைய வலத்தைப் பற்றிய சந்தேகங்களுக்கு சித்தர்களின் விளக்கத்தை அளிக்கிறோம். எத்தகைய திருத்தலமாக இருந்தாலும் எத்தகைய பக்தர்களாக இருந்தாலும் எத்தகைய சூழ்நிலையிலும் பிரதட்சிணமாக வலம் வருதலே சித்தர்களால் அங்கீகரிக்கப்பட்ட வல முறையாகும்.
அப்பிரதட்சிண வல முறை என்பது மிக மிக பிரத்யேகமான வல முறையே. பல யுகங்கள் பஞ்ச அக்னி நடுவே தவமியற்றிய சூரபத்மன் ஒருவனே புராண காலம் முதல் இறைவனை அப்பிரதட்சிணமாக வலம் வரும் அளவிற்கு புண்ணிய சக்தி நிரம்பியவன் என்பதே சித்தர்கள் அளிக்கும் விளக்கமாகும். நம் சற்குருவிடம் ஆயிரக் கணக்கான சீடர்கள் இருந்தாலும் இத்தகைய சீடர்களில் ஒரே ஒருவரைத்தான் ஒரு முறையே திருஅண்ணாமலையை அப்பிரதட்சிணமாக வலம் வருமாறு பணித்தார்கள் என்னும் கூற்றே அப்பிரதட்சிண வலம் எத்தகைய கவனத்துடன் கையாளப்பட வேண்டிய சக்தி மிகுந்த ஆயுதம் என்பதை புலப்படுத்தும். உண்மையிலேயே அப்பிரதட்சிணமாக வலம் வர வேண்டிய திருத்தலத்திலோ அல்லது சூழ்நிலையிலோ நாம் பிரதட்சிணமாக வலம் வந்தாலும் நம் சற்குருவின் வழிகாட்டுதல் நிச்சயம் நம்மைக் கரை சேர்க்கும் என்பதே இந்த வீடியோவில் நீங்கள் காணும் காக்கை வடிவில் எழுந்தருளிய பித்ரு மூர்த்தியின் வழிகாட்டுதலாகும்.
திருவக்கரை
சாதாரணமாக சனீஸ்வர பகவானின் வலது புறத்தை நோக்கி அருளும் காக்கை வாகனமானது பகவானின் இடது புறத்தை நோக்குவதாக அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். ஒருவருடைய ஜாதகத்தில் இயற்கையாகவே குரு, புதன், சுக்கிரன், வளர் பிறைச் சந்திரன் என்பவை சுப கிரகங்கள் ஆகும். ஆதிபத்யம் போன்ற காரணங்களால் சுபமான கிரகங்களும் அசுப பலன்களை அளிப்பது உண்டு. பொதுவாக, இயற்கையிலேயே சுபமான பலன்களைத் தரக் கூடிய கிரகங்கள் வக்ர கதியை அடைந்தால் அந்த கிரகங்கள் அளிக்கும் பலன்கள் பலம் பெறும். அசுப கிரகங்கள் வக்ர கதியை அடைந்தால் அதனால் அசுப பலன்களே பெருகும் என்பது ஜோதிட விதி. இத்தகைய நுணுக்கமான ஜோதிட அம்சங்களை சாதாரண பக்தர்கள் பகுத்துணர்ந்து பயன்பெற முடியாது என்பதால் தங்கள் ஜாதங்களில் எத்தகைய வக்ரம் பெற்ற கிரக அமைப்புகள் இருந்தாலும் அத்தகையோர் திருவக்கரையில் நவகிரகங்களை வலம் வந்து வணங்குவதால் நற்பலன் பெறுவார்கள். மிதி பாகற்காய் என்ற சிறிய பாகற்காய் அல்லாமல் நீள வடிவில் திகழும் பாகற்காய்கள் உண்டு. இத்தகைய பாகற்காய் வறுவலுடன் தயிர்சாதம் சேர்த்து திருவக்கரை திருத்தலத்தில் தானம் அளித்தலால் வக்ர கதி பெற்ற தீய கிரகங்களால் ஏற்படும் ஜனன கால தோஷங்கள் நிவர்த்தியாகும், கோசர பலன்களும் நன்மையைத் தரும், குருவருளால். பலம் பெறும் சுப கிரகங்கள் அளிக்கும் நன்மையும் பெருகும். ஆடு மாடுகளின் மேல் காக்கை, குருவி, மைனா போன்ற பறவைகள் பயணம் செய்வதைக் கண்டிருப்பீர்கள். இது குறித்து அந்த ஆடுகளோ மாடுகளோ சற்றும் கண்டு கொள்ளாது அந்தப் பறவைகளை விரட்ட எம்முயற்சியும் செய்வதாகவே தோன்றாது. இது ஏதோ விலங்குகளின் ஒரு விளையாட்டு என்றே நாம் நினைப்போம். உண்மையில் கூட்டுறவே நல்லுறவு என்னும் உறவு முறையைத் தெரிவிப்பதாக அமிர்த லோக தன்வந்த்ரீ பித்ரு மூர்த்திகளின் செயல்பாடே இத்தகைய காட்சிகளாகும். ஒரு பசுவின் மேலோ, காளையின் மேலோ பயணம் செய்யும் காக்கை, மைனா, சிட்டுக்குருவி போன்ற பறவைகள் சந்தான பாக்கியம், காமக் கிளர்ச்சி, குடும்ப ஒற்றுமை போன்ற அனுகிரகங்களை அளிக்கவல்லவையாகும்.
காக்கை போன்ற பறவைகள் வடிவில் வரும் பித்ரு மூர்த்திகள் பலவிதமான நோய்களைக் குணப்படுத்தும் மூலிகைகளை அறிந்தவர்கள் ஆயினும் இத்தகைய மூலிகைகளை அவர்கள் காக்கை, குருவி வடிவில் அந்த மூலிகைகளை உண்ண முடியாது அல்லவா ? அதனால் இத்தகைய பித்ரு மூர்த்திகள் இந்த மூலிகைகளை உட்கொள்ளும் ஆடு, மாடுகள் மேல் அமர்ந்து அந்த மூலிகை சக்திகளை கிரகித்து தங்கள் வம்சாவளியினருக்கு அளித்து வருகின்றனர் என்பதே இத்தகைய காட்சிகளின் பின்னணியில் அமைந்த தெய்வீக இரகசியமாகும். இதுவரை இத்தகைய காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காவிட்டாலும் இனியாவது இத்தகைய காட்சிகளைக் கண்டால்
ஓம் தத் புருஷாய வித்மஹே அமிர்த ஔஷத ரூபாய தீமஹி
தந்நோ தன்வந்த்ரி ப்ரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை ஓதி முடிந்தால் அந்த ஆடு, மாடுகளை மானசீகமாகவோ, நேரிடையாகவோ தொட்டு வணங்குவதால் மேற்கூறிய அனுகிரகங்கள் நமக்கும் நம் சந்ததியினருக்கும் பரிணமிக்கும்.
பிரயோகமா? பிற யோகமா ? |
சக்கராயுதத்தை தாங்கி அருளும் பெருமாள் மூர்த்தியை தரிசித்திருப்பீர்கள். திருவக்கரை திருத்தலத்தில் மட்டுமே சுவாமி பிரயோக சக்கரத்தைத் தாங்கி காட்சி அளிப்பதை பக்தர்கள் தரிசிக்க முடியும். பக்தர்களின் தீனக் குரலுக்கு செவி சாய்க்கும் மூர்த்தி, துரோபதையின் அவல குரல் கேட்ட மறுகணமே அங்கு தோன்றி அவள் மானத்தைக் காத்தவன்தானே நம்பெருமாள். பெருமாளின் இத்தகைய துரித அனுகிரக சக்திக்கு சான்றாகத் திகழ்வதே பிரயோக சக்கரமாகும். பிரயோகம் என்றால் ஒரு மந்திரத்தை அல்லது தந்திரத்தை மற்றவர்களுக்கு பலனளிக்கும்படி அர்ப்பணித்தல் ஆகும். இந்த பிரயோகத்தை யார் வேண்டுமானலும் நிறைவேற்ற முடியாது என்பதை பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம் சற்குருவிடம் எத்தனையோ ஆயிரம் சீடர்கள் இருந்தாலும் குறித்த சிலருக்கே இத்தகைய பிரயோக சக்கரம் ஒன்றை அளித்து அதை பல முறை வழிபட்டு அந்த பிரயோக சக்கர பலன்களை மற்றவர்களுக்கு அர்ப்பணிக்கும் வழிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், இன்று எத்தனை அடியார்களிடம் அந்த பிரயோகச் சக்கரம் இருக்கிறது என்பதே கேள்விக்குறியான விஷயம்.
ஸ்ரீவரதராஜ பெருமாள்
பேரூர்
ஸ்ரீவரதராஜ பெருமாள்
திருவக்கரை
பிரயோக மந்திரத்திற்கும் மற்ற மந்திரத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன ? பிரயோக மந்திரம் இந்த மந்திர சக்திகளை அளிப்பவருக்கு எந்த விதமான நற்பலனையோ அல்லது தீமையையோ அளிக்காது. மனிதனாய் பிறந்தவர்கள் அனைவருமே ஏதாவது ஒரு மந்திரத்தின் சக்தியை மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே நம் சற்குருவின் எதிர்பார்ப்பு. இவ்வாறு ஒரு மந்திரத்தின் சக்தியை மற்றவர்களுக்கு பிரயோகம் செய்யும் யோசிக்கும் இறை அடியார்கள் இருக்க பல கோடி ஜீவன்களுக்கு மந்திரங்களின் பிரயோக சக்தியை அளிப்பதையே தம் கடமையாகக் கொண்டிருக்கிறார் திருவக்கரை பெருமாள் மூர்த்தி என்றால் இத்தகைய ஒரு தெய்வ மூர்த்தியை தரிசிப்பதற்கே நாமோ, நம் மூதாதையர்களோ எத்தகைய புண்ணியம் இயற்றி இருக்க வேண்டும். காஞ்சிபுரம் ஸ்ரீஅத்தி வரதர் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அமிர்தசரஸ் குளத்திலிருந்து வெளிவந்து பக்தர்களுக்கு திருக்காட்சி நல்கி அனுகிரகம் அளிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. சுவாமி அமிர்தசரஸ் குளத்தில் மூழ்கி இருக்கும்போது மனித சக்தியால் புரிந்து கொள்ள முடியாத பல தெய்வீகத் திருப்பணிகளை இயற்றி வருகிறார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் மனிதர்களால் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு இரகசியம். பேரூர் ஸ்ரீவரதராஜப் பெருமாள், உறையூர் நாச்சியார் கோயில் ஸ்ரீவரதராஜப் பெருமாள் மூர்த்திகளுடன் ஒன்று கூடி வேணுககோள சக்திகளை அளிக்க அந்த சக்திகளை திருவக்கரை ஸ்ரீவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு தன் பிரயோக சக்கர பிரவாகத்தின் மூலம் அனுகிரகமாக அளிக்கின்றார். இந்த அனுகிரக சக்திகளைப் புரிந்து கொள்வது கடினமே என்றாலும் ஓரளவு மனித அறிவிற்கு எட்டக் கூடிய விஷயங்களை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறோம். ஒரே ஒரு தலைமுடி நம் உணவில் கலந்து வயிற்றிற்குள் சென்று விட்டால் அது நமக்கு வாந்தியைத் தந்து அந்தத் தலை முடி வெளியே வந்து விடுகிறது. அவ்வாறிருக்க தலையில் கொத்தாக முடியை வைத்துக் கொண்டு குழந்தை தன் தாயின் வயிற்றில் பத்து மாதம் அடைக்கலம் கொள்கிறது. இதுவே இறைவன் கருணை. அதோடு மட்டுமல்லாமல் தற்காலத்தில் pace maker போன்ற கருவிகளை எல்லாம் உடலினுள் பொருத்தி வைத்து விடுகிறார்கள். இதை உடல் ஏற்பதற்காக பல்வேறு மாத்திரை, மருந்துகளையும் மனிதன் உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இருப்பினும் இந்த “வக்ர” மாற்றங்களை ஏற்றக் கொண்டு நாம் உயிர் வாழ உதவி செய்வதே திருவக்கரை பெருமாளின் பிரயோகச் சக்கர மகிமைகளில் ஒன்று. இவ்வாறு செயற்கை உறுப்புகள், அறுவை சிகிச்சை போன்றவற்றில் உடலினுள் பொருத்தப்பட்ட கருவிகள் இவற்றைச் சுமந்தே வாழ வேண்டிய நிலையில் உள்ளவர்கள் திருவக்கரை பெருமாளை வணங்கி முந்திரி பருப்பு பக்கோடா தானம் அளித்தலால் தங்கள் வேதனைகள் தணிந்து தங்கள் வாழ்வில் புத்துணர்ச்சி காண்பார்கள். சக்கர நாற்காலிகள், செயற்கை பல்செட், விக், டெஸ்ட்யூப் குழந்தைகள் போன்ற எத்தனையோ செயற்கை முறை மருத்துவங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடியதே பெருமாளின் பிரயோக சக்கர அனுகிரகமாகும்.
ஸ்ரீஆயுர்தேவி
ஸ்ரீசகஸ்ரலிங்கம் திருவக்கரை
ஸ்ரீஆயுர்தேவி தன் நான்காவது வலக்கரத்தில் தாங்கிய சித்தர் பிரானே ஸ்ரீகுண்டலினி மகரிஷி ஆவார். ஸ்ரீகுண்டலினி மகரிஷியின் ஜீவ சமாதி ஸ்ரீவக்ர காளியின் திருப்பாதங்களின் கீழ் அமைந்துள்ளதாக நம் சற்குரு அறிவிக்கிறார். அதனால் ஸ்ரீவக்ரகாளியை தரிசிக்கும் பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீகுண்டலினி மகரிஷியின் அனுகிரகமும் சேர்ந்தே பொழியும். திருவக்கரை திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்க வடிவமாகவும் ஸ்ரீகுண்டலினி மகரிஷி எழுந்தருளி உள்ளார். இதுவும் ஒரு வக்ர அனுகிரகமே. எப்படி இயற்கையாக நற்சக்திகளுடன் திகழும் குரு போன்ற சுப கிரகங்கள் வக்ர கதி கொள்ளும்போது மேலும் சக்தியை, பலத்தை பெருக்கிக் கொள்கின்றார்களோ அதுபோல் பக்தர்கள் ஸ்ரீவக்ர காளியை வணங்கும்போதும் ஸ்ரீகுண்டலினி மகரிஷியின் லிங்க ரூபத்தை தரிசனம் செய்யும்போதும் சித்த அனுகிரகங்களைப் பெருக்கிக் கொள்ளலாம். எத்தகைய வைப்பு, தீவினை, செய்வினை, மாந்த்ரீக சக்திகளால் பாதிக்கப்பட்டோரும் இத்தலத்தில் அருளும் ஸ்ரீகுண்டலினி மகரிஷியை வழிபட்டு தான தர்மங்களை நிறைவேற்றுதலால் நலம் அடைவார்கள். ஆனால், மாந்த்ரீகம், பில்லி, சூன்யம், ஏவல் செய்வோர் இத்தல எல்லையைக் கூட மிதிக்க முடியாது என்பதே ஸ்ரீகுண்டலினி மகரிஷி வர்ஷிக்கும் காப்பு சக்திகளின் தன்மையாகும். இரட்டை பிள்ளையார் மூர்த்திகளைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இரட்டை சகஸ்ரலிங்கங்கள் என்ற அபூர்வ லிங்கங்களே திருவாசியிலும் திருவக்கரையிலும் எழுந்தருளி உள்ள சகஸ்ர லிங்கங்களாகும். முதன் முதல் நம் சற்குரு திருச்சி திருவாசியில் திருப்பணி நிறைவேற்றியபோது இங்குள்ள சகஸ்ரலிங்கத்திற்கு உழவாரத் திருப்பணிகள் நிறைவேற்றிய பின் தனியாக அடியார்களுடன் அமர்ந்து நாம சங்கீர்த்தனம் இசைத்து சகஸ்ர லிங்க ஈசனை மகிழ்வித்தார்கள். அப்போதுதான் உலகில் முதன் முதலில் தோன்றிய சகஸ்ரலிங்கம் இவர் என்பதையும் அத்துடன் பூமியடித் தொடர்புடையதாக விளங்கியதே திருவக்கரை சகஸ்ரலிங்கமும் என்ற இரகசியத்தை தெரிவித்தார்கள். திருவாசியைப் போல் திருவக்கரை சகஸ்ரலிங்கமும் வடதிசையான குபேர திசையில் எழுந்தருளி உள்ளதே இதன் சிறப்பம்சமாகும். இலுப்பெண்ணெய் தேங்காய் எண்ணெய் கலந்த தீபத்தை சுவாமிக்கு ஏற்றி புருஷ சூக்தம் அல்லது அப்பர் பிரான் இயற்றிய வேற்றாக விண்ணாகி என்ற திருத்தாண்டக துதியை ஓதுதல் சிறப்பாகும். சாதாரணமாக ஒரு சகஸ்ரலிங்கத்தை வலம் வந்து வணங்கினால் ஆயிரம் முறை லிங்க மூர்த்திகளை வலம் வந்த பலன்கள் பல்கிப் பெருகும். அதே போல் ஒரு சகஸ்ரலிங்கத்தின் முன் ஒரே ஒரு முறை நமசிவாய என்று கூறினால் ஆயிரம் முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் நமக்கு கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே. இத்தகைய சகஸ்ரலிங்க வழிபாட்டு பலன்களே ஆயிரம் முறை பெருகும் என்றால் அது திருவாசி சகஸ்ரலிங்கத்திற்கும் திருவக்கரை சகஸ்ரலிங்கத்திற்கும் உள்ள தனிச் சிறப்பாகும். இத்தகைய சிறப்புகளால் அமிர்த சக்திகள் பல்கிப் பெருகுவதால் பக்தர்கள் நோய் என்பதையே அறியாதவர்களாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழும் பெருமையைப் பெறுவார்கள். இந்த அமிர்த சக்தியின் சான்றாகவே இந்த திருத்தலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாழிகள் என்ற மூதாதையர்களை பூமியடியில் புதைத்து வைத்த மண் பானைகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து ஸ்ரீசந்திரமௌலீஸ்வர அனுகிரகத்தை உலகறியச் செய்துள்ளனர்.
வக்ரம் மாறுமே வராக நதியால் |
சூரியனைச் சுற்றி வரும் நவகிரக மூர்த்திகள் சில சமயம் வக்ர கதியை அடைவதுண்டு. அதாவது தாங்கள் செல்லும் எதிர்த்திசையில் கொள்ளும் சஞ்சாரமே கிரகங்களின் வக்ர சஞ்சாரம் எனப்படும். உண்மையில் ஆயிரக் கணக்கான மைல் வேகத்தில் சுழலும் கிரகங்கள் எதிர்த்திசையில் மாறி சுழலுதல் என்றால் சாத்தியமா ? ஒருவேளை அவ்வாறு கிரகங்கள் சுழல ஆரம்பித்தால் அதில் உள்ள ஜீவ ராசிகள் நொடிப் பொழுதில் மாய்ந்து, மறைந்து விடுமே. எனவே வக்ர கதி என்பது நம் கண்ணுக்குத் தெரியும் ஒரு தோற்றமே தவிர எந்த கிரகங்களும் தங்கள் போகும் திசையை மாற்றிக் கொள்வது கிடையாது, சுழல்வது கிடையாது. இதை அறியாதவர்களா நம் முன்னோர்கள். ஆனால், இத்தகைய கண்ணுக்குத் தெரியும் மாற்றத்தாலும் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் இந்த வக்ர கதியை ஒட்டி வளரும் ஜோதிட சித்தாந்தங்களையும், அந்த சித்தாந்தங்களை நாம் நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படுத்தி பயன்பெறும் முறைகளையும் வகுத்துத் தந்துள்ளவர்களே நம் முன்னோர்கள்.
ஸ்ரீசக்கரம் கரிவலம்வந்தநல்லூர்
உதாரணமாக, வட்டம், சதுரம், முக்கோணம் என்பவை வெவ்வேறு வடிவத்தில் இருப்பதாகத்தானே தோன்றும் ? ஆனால், இவை அனைத்துமே ஒரே அளவில் உள்ளதாகத்தானே விஞ்ஞானம் உறுதி செய்யும். வட்டம், சதுரம், முக்கோணம் என்று மூன்று வேறுபட்ட, மாறுபட்ட வடிவங்களில் உள்ள கோண அளவுகள் ஒன்றாகத்தானே அமைகிறது, அதாவது சதுரம் = 90 x 4 = 360 டிகிரி, வட்டம் = 360 டிகிரி, முக்கோணம் 90 + 45 + 45 = 180 டிகிரி = 9. இவ்வாறு வட்டம், சதுரம், முக்கோணம் அனைத்தும் வேறு வேறு என்ற நம் அறியாமையைக் களைவதாக எழுந்தருளி உள்ளவர்தானே வட்டம், சதுரம், முக்கோணம் என்ற ஆவுடைத் தோற்றம் கொண்ட ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர். எப்படி இதுவரை வட்டமும் சதுரமும் வேறு வேறு என்று எண்ணி வந்துள்ளோமோ அது போல் சிவனும் அரியும் வேறு வேறு என்று எண்ணி வந்துள்ளோரும் அநேகர் உண்டே. இந்த வேறுபாட்டைக் களைவதே திருவக்கரையில் பாயும் வராகநதி ஆகும். எப்படி நேராக ஒரு செல்லும் ஒரு கிரகமானது வக்ர தோற்றத்தைத் தருகிறதோ அது போல் நாம் காணும் பல சம்பவங்களை நம் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிச் சொல்கிறோம். இதுவே நடைமுறை வழக்கில் “பொய்” என்று சொல்லப்படுகிறது. இன்றைய உலகில் பொய் கூறுதல் என்பது எவராலும் தவிக்க முடியாத ஒரு நடைமுறைப் பழக்கமாகி விட்டது என்றே கூறலாம். ஒருவர் உத்தமராகவே இருந்தாலும் அவரிடம் வரும் ஒருவன் சாராயம் குடிக்க பணம் கேட்டால் ஒரு நற்காரியத்திற்காக பணம் வைத்திருக்கும் அந்த உத்தமர் தன்னிடம் பணமே இல்லை என்று பொய் கூறினால்தானே அந்தப் பணம் ஒரு தவறான செய்கைக்கு பயன்படுத்துவதிலிருந்து தான் தப்பிப்பது என்றல்லாது அந்தத் தவறைச் செய்ய முனைபவரையும் தடுக்க முடியும், தவிர்க்க முடியும் ? பொய் என்பது தவிர்க்க முடியாத ஒரு வாழ்க்கை அம்சமாக இன்று கருதப்பட்டாலும் நாள் முழுவதும் பொய்யையே கூறி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலையில் இருக்கும் வக்கீல்கள், முனைவர்கள், தரகர்கள் போன்ற பலரும் வராக நதியில் நீராடி திருவக்கரை இறைமூர்த்திகளை வரிபடுவதால் இதுவரையில் தாங்கள் கூறிய பொய்களுக்கு ஓரளவு பிராயசித்தம் பெறுவதுடன் எதிர்காலத்தில் தாங்கள் திருந்தி நன்னெறியில் செல்ல இந்த வழிபாடு அவர்களுக்கு துணையாய் அமையும்.
ஈசனின் அடிமுடி காணும் படலத்தில் பெருமாளும் பிரம்மாவும் பன்றியாய், அன்னமாய் மாறிச் செல்ல, பாதாளம் வரை வராக அவதாரம் எடுத்துச் சென்ற பெருமாள் மூர்த்தி தன்னால் ஈசனின் திருவடிகளைக் காண முடியவில்லை என்று தன் தவற்றை ஒத்துக் கொண்டு சிவபெருமானிடம் சரணடைந்த வரலாற்றை அறிவீர்கள். இருவரும் இறை மூர்த்திகளாக இருந்தாலும் எப்படி பிரம்மாவிற்கு தோன்றாத ஒரு பக்தி நிலை பெருமாளுக்கு கனிந்தது என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? இதுவே சித்தர்கள் கூறும், “பணிந்தவனே பக்தன்,” என்ற கொள்கையாகும். பணிவின் சொரூபமாக திருவடிகளை தேடிச் சென்ற பெருமாளுக்கு பக்தி கனிந்ததும் எம்பெருமானின் திருவருளால்தான் என்பதை உணர்த்துவதும் இந்த அடிமுடி தேடிய மகாத்மியாகும். இவ்வாறு பக்திக் கனியை சுவைத்த பெருமாள் மூர்த்தி தான் மட்டும் இந்தச் சுவையை பெற்றால் போதுமா, தான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்று சிவபெருமானை இறைஞ்சிய போது சுவாமி பெருமாளை தன் அனுகிரகத்தை வர்ஷிக்கும் வராகநதியாக தன் தமக்கையுடன் திருவக்கரை திருத்தலத்தில் தோன்றுமாறு அருளினார் என்பதே வராகநதியின் இனிய வரலாறாகும்.
திருவக்கரை
எனவே வராகநதியில் பக்தர்கள் பெறமுடியாத பணிவையும், பக்தியையும், ஞானத்தையும் வேறு எங்குமே பெற முடியாது. மேலும் தற்காலத்தில் வீடுகள், வணிக வளாகங்கள் கட்டும் பலரும் தாங்கள் வாங்கும் மனைகள் பற்றிய தெளிந்த அறிவைப் பெற முடியவில்லை. பலவிதமான தோஷங்கள் உடைய மனைகளே “நல்ல” மனைகள் என்ற பெயரில் விற்கப்படுவதால் அத்தகைய தோஷம் நிறைந்த இடங்களில் வீடுகளைக் கட்டி லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து கட்டிய பின்னரே அத்தகைய மனைகளில் மறைந்துள்ள தோஷங்கள் தெரிய வருகின்றன. இத்தகைய தோஷங்களிலிருந்து ஓரளவு விடுபடுவதற்கு உதவுவதே வராகநதி தீர்த்த வழிபாடாகும். செவ்வாய் அல்லது சனிக் கிழமைகளில் இந்த வராக நதியில் நீராடி இத்தீர்த்தத்தை எடுத்து வந்து தங்கள் இல்லங்களில், வணிக வளாகங்களில், அலுவலகம், தொழிற்சாலைகளில் தெளித்து வருவதால் இத்தகைய மனைகளில் மறைந்துள்ள தோஷங்களுக்கு இவை ஓரளவு நிவர்த்தி தரும். செம்பு, வெண்கலம், வெள்ளி பாத்திரங்களில் குறித்த மனைக்கு பாத்தியப்பட்டவர்கள் தங்கள் இரு கைகளாலும் தீர்த்தத்தை அள்ளி இந்த செம்பில் ஒரு முறை இட்டு அந்த செம்பின் மேல் ஐந்து மாவிலைகள், தேங்காய் வைத்து கலசமாக்கி அந்த கலசத்திற்கு குறைந்தது 108 முறை ஸ்ரீஆயுர்தேவி மூல மந்திரங்கள், காயத்ரீ ஜபித்து அந்த தீர்த்தத்தை மனைகளில், வீடுகளில் தெளித்தலால் நலம் பெறுவர். பெரும்பாலும் வீடு கட்டுவதற்கு முன் இத்தகைய வழிபாடுகளை இயற்றுதல் நலம் என்றாலும் வீடு, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் கட்டியவர்கள் பின்னர் வருடத்திற்கு எட்டு முறை வரும் வாஸ்து நாட்களில் இத்தகைய வழிபாடுகளை இயற்றுதலாலும் ஓரளவு நில தோஷங்களுக்கு பிராயசித்தத்தைப் பெறலாம். ஏற்கனவே குறித்த உடல்கூறு நோய்களால், செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்ட காரணங்களால் தங்கள் திருமணம் குறித்த காலத்தில் நிறைவேறாமல் அவதியுறுவோர்கள் வராகநதியில் மேற்கொள்ளும் வழிபாடுகளால் நலமடைவர். முக்கோணம் என்பதே அடிப்படை வடிவம், இந்த முக்கோணத்திலிருந்து தோன்றியதே சதுரம் என்பதை நடைமுறை வாஸ்து சாஸ்திரமாக பிரயோகம் செய்து நைல் நதி பிரவாகத்தால் விளைந்த நிலதோஷங்களைக் களைந்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அவதார கிருத்தியங்களை ஏற்கனவே விவரித்துள்ளோம். இவ்வாறு முக்கோண வடிவில் அமைந்த மூக்கை உடைய வராக அவதாரமோ, வராக நதியோ வாஸ்து தோஷங்களை நிவாரணம் செய்வதில் வியப்பில்லையே. திருமணத் தடங்களால் வருந்தும் பெண்களும் ஆண்களும் இத்தலத்தில் அத்தி பழங்களை சுத்தமான தேனில் ஊறவைத்து பக்தர்களுக்கு தானம் அளித்தல் நலம். அத்திப் பழமும் ஒரு வகை “வக்ர” கனியே. அதனால்தான் ஏன் காஞ்சி ஸ்ரீஅத்தி வரதரும் தன்னுடைய சக்திகளை வராகநதி சூடிய, பிரயோக சக்கரம் தாங்கிய திருவக்கரை பெருமாளுக்கு பகிர்ந்தளிக்கிறார் என்ற இரகசியம் இப்போது உங்களுக்குத் தெளிவாகிறது அல்லவா ? ஸ்ரீசக்கரத்தில் பொலியும் 43 கோண தேவதைகளைக் குறிப்பதாக அமைந்துள்ளதே பேரூர் நொய்யல் நதியில் இணையும் ஏழு நதிகள். இந்த ஏழு நதிகளே ஏழேழ் பிறவிகளில் மக்கள் செய்த கர்மங்களையும் களைந்து நல்வாழ்வு பெற துணை புரிகின்றன. இவ்வாறு சாதாரணமாக நாம் நினைக்கும் “கூட்டுறவில்” இணையும் சுவை எவ்வளவு பெருமை உடையதாகத் திகழ்கிறது ? ஒன்பது என்பது எண்களின் எல்லையைக் குறிப்பது என்றாலும் பூரணத்தைக் குறிக்கும் எண்ணாகவும் இது இருப்பதே இதன் சிறப்பாகும். அதனால்தான் நம் பூலோகத்தில் தோன்றிய எல்லா உயிரினங்களையும் குறிக்கும் ஸ்ரீசக்கரம் ஒன்பது முக்கோணங்களுடன் திகழ்கின்றது என்பதும் வட்டம், சதுரம், முக்கோணங்களின் கோண அளவுகள் ஒன்பதைக் குறிப்பதாகவே அமைந்துள்ளன என்பதும் நாம் ஆத்ம விசாரம் செய்து தெளிய வேண்டிய சிருஷ்டி இரகசியங்களாகும். இவ்வாறு பிறப்பு, இறப்பு என்ற இரகசியங்களைப் பற்றிய தெளிந்த அறிவைப் பெற உதவும் “ஞானத் தலமும்” திருவக்கரையே.
வராக நதி திருவக்கரை
ஸ்ரீலட்சுமி வராகர் சிங்கவரம்
வராகநதியின் மற்றோர் நாமம் சங்கராபரணி என்பதாகும். இது சங்கர் ஆபரணி, சங்கு அரா பரணி என்றெல்லாம் பிரிந்து வெவ்வேறு அனுகிரக சக்திகளை அள்ளித் தரும். இத்தயை அனுகிரகங்களில் ஒன்றுதான் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதம் விளங்கும் நேரத்தில் திருவக்கரை திருத்தலத்தில் தேங்காய் சாதமும் உருளைக் கிழங்கு வறுவலும் தானம் அளித்தலாகும். கணவன் மனைவியின் எத்தகைய பிரிந்த உறவுகளையும், விவாகரத்து வரை சென்ற உறவுப் பகைகளையும் நீக்க வல்லதே இந்த வழிபாடாகும். இதன் பின்னணியில் அமைந்த சித்த பொக்கிஷங்கள் பிரமிப்பாய் அமைவதால் அவற்றை அடியார்களே ஆத்ம விசாரம் புரிந்து பயன்பெறும்படிக் கேட்டுக் கொள்கிறோம். ஸ்ரீபெருமாள் வராக அவதாரம் புனைந்து பூமியைத் தோண்டிச் செல்கையில் பூமியின் அடியில் இருந்த பொருட்கள் எல்லாம் சிறப்பாக பூமா தேவியே புனிதம் அடைந்தாள். இவ்வாறு வராக அவதாரத்தில் விளைந்த பலன்களில் ஒன்றே இத்தகைய வக்ர பூமியில் கிடைக்கும் தாழிகள் ஆகும். இவை மனிதனின் ஆயுளை நீட்டித் தரும் வராகப் பெருமாளின் அனுகிரகத்தை விளக்குவது மட்டுமன்றி இந்த ஆயுள் வளர்ச்சி என்பது தம்பதி சகிதமாக அருளப்படும் என்பதையும் நாம் உணர வைப்பதே திருஅண்ணாமலை அருகிலுள்ள சிங்காவரத்தில் ஸ்ரீலட்சுமி தேவியுடன் அருளும் வராகப் பெருமாளின் எழிலார்ந்த தரிசனமாகும். திருவக்கரை ஆலயத்தின் அருகில் கல்லாக மாறிய மரங்களின் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. உண்மையில் இவை எல்லாம் பல சதுர்யகங்கள் முன் விளைந்த வராகப் பெருமாளின் திருவிளையாடலில் பூத்த கல் பூக்கள் அல்லது கல் மரங்களாகும். பலருக்கும் தாங்கள் தெய்வீகத்தில் நிலையான ஏதாவது ஒரு நற்காரியத்தைச் செய்ய வேண்டும் அல்லது மிகுந்த புகழ் தரும் ஒரு நற்காரியத்தில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் தொடர்ந்து தங்கள் இதயத்தில் பெருகிக் கொண்டே இருக்கும். ஆனால், அது பற்றிய தெளிவான குறிக்கோள் அமையாததால் அவர்களுக்கு பெருகும் எண்ணங்கள் எல்லாம் ஒரு “வக்ர” குறிக்கோளாகவே மற்றவர்களுக்குத் தோன்றும். இத்தகையோர் வராகநதியில் நீராடி திருவக்கரை மூர்த்திகளை தரிசனம் செய்த பின்னர் இங்குள்ள கல்மரப் பூங்காவில் அமர்ந்து அல்லது இங்கு சுற்றி வந்தவாறே தியானித்தலால் தங்கள் எதிர்காலம் பற்றிய தெளிந்த வழிகாட்டுதலைப் பெறுவார்கள். பொதுவாக, எத்தகைய எதிர்கால குறிக்கோள்களுக்கும் தெளிவான, நிரந்தரமான வடிவை அளிக்கவல்லதே இந்த கல்மரங்களிடையே நிறைவேற்றும் தியானமாகும்.
ஸ்ரீபட்டைலிங்கம் ஸ்ரீஅகோரவீரபத்திரர்
திருவக்கரை
திருவக்கரையில் அருள்புரியும் ஒவ்வொரு மூர்த்தியுமே மனிதர்களின் ஜீவராசிகளின் எத்தனையோ வக்ர குணங்களை களைய வல்லவர்களே. இந்த மூர்த்திகளைத் தொடர்ந்து தரிசனம் செய்து வழிபடுதலால்தான் இத்தகைய மூர்த்திகள் அருளும் வக்ர குண நிவர்த்திகளை அறிய முடியும் என்றாலும் அவரவருக்கு பூர்வ ஜன்ம வினைகளால் எத்தகைய கர்மங்கள் களையப்பட வேண்டுமோ அந்த அனுகிரக சக்திகளை அளிக்கவல்லவரே சற்குரு ஆவார். உதாரணமாக, ஒரு பட்டை லிங்கத்தில் உள்ள ஒரு பட்டையைப் பற்றி அறிய மட்டுமே ஒருவருக்கு எத்தனையோ கோடி ஆண்டுகள் இறைப் பணியும் ஆத்ம விசாரமும் தேவைப்படும் என்றால் திருவக்கரையில் அருளும் மற்ற மூர்த்திகளின் அனுகிரக சக்திகளை என்றுதான் அறிந்து கொள்வது ? சற்குருவைப் பெறாதவர்களும் இத்தகைய அனுகிரகங்களை பெற வழிகாட்டுபவரே துவார பாலகர்களின் அருகே சுவாமிக்கு இடது பக்கம் அருளும் ஸ்ரீஅகோரவீரபத்திர மூர்த்தி ஆவார். பொதுவாக, வீரபத்திர மூர்த்திகள் காணாமல் போன எந்தப் பொருள் பற்றிய தடயத்தை அளிப்பார்கள் என்றாலும் தம்மைத் தொலைத்தவர்களே அதிகம், அதாவது தன்னைப் பற்றி அறியாதவர்களே எங்கும் நிறைந்திருப்பதால் இந்த தன்னைத் தானே அறியும் அபூர்வ இறை சக்தியையும் அளிக்கக் கூடிய வள்ளலே திருவக்கரை ஸ்ரீஅகோர வீரபத்திரர் ஆவார். பொதுவாக, வலப்புறம் என்பது உடலையும் இடப்புறம் என்பது மனதையும் குறிப்பதால் சுவாமியின் இடது பக்கம் அமைந்துள்ள ஸ்ரீவீரபத்திரரின் திருப்பாதங்கள் இடது பக்கம் திரும்பி பக்தர்களுக்கு மனோ பலத்தை ஊட்டுவதாக அமைந்துள்ளன. இது வக்ர கோணமா அல்லது அறிவு கோணமா என்பதை அவரவர் இயற்றும் வழிபாடே உறுதி செய்யும். இது எந்த திருத்தலத்திலும் அமையாத வீரபத்திரரின் திருக்கோலம் என்பதே திருவக்கரை ஸ்ரீஅகோர வீரபத்திரரின் சிறப்பாகும். இராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவரே ஒரு யுகத் தொடக்கத்தில் இந்த ஸ்ரீவீரபத்திர சுவாமியின் அனுகிரகத்தைப் பெற்றுதான் மரா மரா என்ற மந்திரத்தையும், பின்னர் ராமாயண காவியத்தையே இயற்றும் பெரும் பேறு பெற்றார் என்பதே சித்ர்கள் உணர்த்தும் “வக்ர” சுவை அல்லது வால்மீக சுவை. வால்மீகம் என்றால் அள்ள அள்ளக் குறையாத தெய்வீகம் என்ற பொருளும் உண்டு. இந்தச் சுவையை ஸ்ரீவால்மீகி முனிவர் உணர்ந்த திருத்தலம் மட்டும் அல்ல இறுதியில் அவர் வால்மீகியாகவே மலர்ந்தார் என்பதே திருவக்கரை திருத்தலத்தின் மகாத்மியமாகும். திருவக்கரை திருத்தலத்தில் மற்றோர் சிறப்பம்சம் என்னவென்றால் ஒருவர் என்னதான் சர்வ ஜாக்கிரதையாக அனைத்து மூர்த்திகளையும் தரிசனம் செய்தாலும் அவர் நிச்சயம் ஏதாவது ஒன்றிரண்டு மூர்த்திகளின் தரிசனத்தை மறந்து விடுவார் அல்லது இழந்து விடுவார். இதுவும் “வக்ர” குணங்களின் அல்லது திருவக்கரையில் நிலவும் வக்ர சக்திகளின் மகாத்மியாகும்.
திருவக்கரை
போதி மரம் என்னும் அரச மரத்தினடியில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார் கௌதம புத்தர். அவ்வாறு தியானத்தில் ஆழ்ந்தவுடன் புத்தர் பெற்ற முதல் ஞானமே திசைகள் பற்றிய ஞானமாகும். இவ்வாறு கௌதம புத்தர் பெற்ற ஞானத்தை பக்தர்கள் பெற வழிகோலுவதே திருவக்கரையில் அமைந்துள்ள 16 திசைகள் பற்றிய ஞானத்தை உணர்த்தும் பட்டை லிங்க வழிபாடாகும். ஒருவருடைய ஜாதகத்திலிருந்து முதலில் ஒருவர் பெற வேண்டிய திசை ஞான விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றாலும் இவ்வாறு ஜனன ஜாதகங்களே இல்லாதவர்களுக்கும் அருள்புரிவதே திருவக்கரை பட்டை லிங்க வழிபாடாகும். இவ்வாறு ஏதோ ஒரு பிறவியில் பட்டை லிங்க வழிபாட்டை தொடர்ந்து இயற்றி இறை அனுகிரகத்தைப் பெற்றவர்களே இந்த பிறவியில் சிறந்த ஜோதிடர்களாகவோ, கட்டிடக் கலை வல்லுனர்களாகவோ, வாஸ்து நிபுணர்களாகவோ, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களாகவோ மலர்வர் என்பதே பட்டை லிங்க வழிபாட்டு மகிமைகளில் ஒன்றாகும். தியானத்தில் அமரும் முன், இறை வழிபாடுகளை ஆரம்பிக்கும் முன் இவ்வாறு கிழக்கு, வடக்கு என்ற அடிப்படை திசைகளை நோக்கியவாறு, சற்றும் திசை கோணங்கள் மாறாமல் அமர வேண்டும் என்பது முக்கியம். இவ்வாறு திசை கோணங்கள் பற்றிய தெளிந்த அறிவு ஆரம்பத்தில் பலருக்கும் இருக்காது என்பதால்தான் சரியான கோண அளவுகளுடன், திசை சுத்தமாக திருத்தலங்களில் அமைந்த தட்சிணா மூர்த்திகள், துர்கா மூர்த்திகள், மூல மூர்த்திகள் இவர்களைப் பார்த்தவாறு தியானத்தை மேற்கொள்ளும்படி நம் முன்னோர்கள் வழிகாட்டி வந்தனர். முதலில் கிழக்கு, மேற்கு என்ற அடிப்படை திசைகளில் ஆரம்பித்து பின்னர் தென்கிழக்கு, வடமேற்கு என்ற எட்டு திசை தியானமாக ஆரம்பித்து பின்னர், 16 திசை வழிபாடாக மாற்ற அருள்புரிவதே திருவக்கரையில் துலங்கும் 16 பட்டை லிங்க மூர்த்தியாவார். இவ்வாறு திசை பற்றிய ஞானத்தைப் பெற்ற பின்னரே மனிதனுக்கு எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்ற இரகசியமும் அவ்வாறு வந்த எண்ணங்களை எப்படி முறைப்படுத்துவது என்ற இரகசியங்களும் தெரிய வரும். அது மட்டுமல்லாமல் இந்த எண்ணங்கள் எல்லாம் நம்முடைய எண்ணங்களா அல்லது பிறரிடமிருந்து தோன்றி வந்த எண்ணங்களா என்ற இரகசியமும் தெரிய வரும். ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியே இந்த இரகசியத்தை உணர ஒரு லட்சம் திருத்தலங்களில் வழிபாடுகளை இயற்ற வேண்டி வந்தது என்றால் மனிதர்கள் எத்தனை பிறவிகள் இந்த இரகசியத்தை உணரக் காத்திருக்க வேண்டும். ஆனால், கருணை வள்ளலான நம் சற்குருவோ நாம் ஒரே பிறவியில் ஒரே திருத்தலத்தில் இந்த இரகசியங்களை அறிவிக்கத் தயாராக இருக்கும்போது அதை முறையாகப் பயன்படுத்தவில்லை என்றால் ... ? திருவக்கரை திருத்தலத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் தியானத்தில் அமர்ந்து மாங்கல்யம், வாசனை மலர்கள், மெட்டிகள், பழம், இனிப்பு, கண் மை, சாந்து போன்ற குறைந்தது 16 விதமான மங்கலப் பொருட்களை தானமாக அளித்து வருதலால் திசை பற்றிய ஞானத்தை படிப்படியாகப் பெறலாம். இந்த தானங்கள் திசைகள் பற்றிய ஞானத்தை, எண் கணித இரகசியங்களை, எண்ண ஓட்ட இயல்புகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல் ஒரு மனிதன் வாழ்வில் பெற வேண்டிய அனைத்து சுகபோகங்களையும் அளிக்கும் வளம் உடையதாகும்.
ஓம் குருவே சரணம்