ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்
கொசுவின் ஆன்மீகப் பணி |
அடியார்
நேற்று இரவு முழுவதும் தூங்கவே முடியவில்லை. கொசு மிகவும் தொந்தரவு கொடுத்து விட்டது. இவ்வளவு தொல்லை தரும் கொசுக்களை இறைவன் ஏன் படைத்தார், சற்குருதேவா?
சற்குரு
இறைவனின் படைப்பு அற்புதமானது. மிகவும் ஆழ்ந்த அர்த்தம் உடையது. உன்னுடைய கைரேகையைப் பார்த்தாயா? உன்னுடைய கைரேகையைப் போல அதே ரேகை உடைய இன்னொரு மனிதர் இந்த உலகத்தில் இதுவரை பிறந்தது கிடையாது. இனி பிறக்கப் போவதும் இல்லை. உன்னைப் போல உருவம், அங்கங்கள் உடையவகள் எவ்வளவோ பேரை நீ பார்த்திருக்கலாம். ஆனால், உன்னுடைய கைரேகை உலகில் வேறு எவருக்கும் அமையாது.
அசுர எண்ணங்களை
ஈர்க்கும் வல்லமை பெற்ற
சரவணபவ ஜீவி
இதிலிருந்து என்ன தெரிகிறது? உலகில் ஒரே ஒரு கடவுள்தான் உண்டு. தனக்குவமை இல்லாதவனே கடவுள். அதை தன்னுடைய படைப்பு மூலமாக, உன்னுடைய பிறப்பின் மூலம் உனக்கு உணர்த்துகிறான் இறைவன். மக்கள்தான் இந்த சாதாரண உண்மையைப் புரிந்து கொள்வதில்லை. இத்தகைய அபூர்வமான உன்னை இறைவன் எதற்காகப் படைத்தான் என்பதை நீ உணர்ந்து கொண்டாயா?
(அடியார் ”இல்லை” என்று தலையாட்டுவதைப் பார்த்து புன்னகை பூத்தவாறே சற்குரு தொடர்கிறார்…)
நீ ஏன் பிறந்தாய் என்பதே உனக்குத் தெரியாத போது கொசுவை ஏன் இறைவன் படைத்தான் என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வது? நீ இந்த உலகத்தில் ஆற்ற வேண்டிய காரியங்கள் ஏராளம், ஏராளம். அதற்காகத்தான் இறைவன் பெறுதற்கரிய இந்த மானுட பிறவியை அளித்திருக்கிறான்.
உங்களைப் போன்ற அடியார்களின் பிறவி இரகசியங்களை தெரிவித்து உங்களின் ஆன்மீகப் பணிகளை உணரச் செய்யவே இறைவன் பெரும் கருணை கொண்டு சற்குருமார்களை பூமிக்கு அனுப்பி வைக்கிறார்.
மக்கள் தங்களை யார் என்று உணர்ந்து ஆன்மீகச் சாதனைகளை தொடர்வதற்கு நல்வழி காட்டுகிறான். இதைத்தான் ரமண மகரிஷி போன்ற மகான்கள் ”நான் யார்?” என்று ஆத்ம விசாரம் செய்து மனத் தெளிவு பெறுமாறு அறிவுறுத்தி வந்தார்கள். கொசுவின் படைப்பு இரகசியத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதும் ஒரு விதத்தில் உங்களுடைய ஆன்மீகச் சிந்தனையை வளப்படுத்தும்.
பொதுவாக, ஒரு கொசுவின் பூமி வாழ்வு 21 நாட்கள் என்பது சித்தர்களின் கணக்கு. இந்த 21 நாட்களில் அந்தக் கொசு பத்தாயிரம் ஜீவன்களைக் கடித்து விடும். எனவே, உங்களை ஒரு கொசு கடிக்கும்போது நீங்கள் அதை அடித்து அந்தக் கொசு இறந்து விட்டால் அந்த கொசு தன்னுடைய கணக்கை முடித்து விட்டது என்று அர்த்தம். பத்தாயிரம் பேரை தன்னுடைய குறுகிய காலத்தில் கடித்து விட வேண்டும் என்ற கடமையை எந்தக் கொசுவும் மறப்பதில்லை, தன்னுடைய கடமையை நிறைவேற்றாமல் எந்தக் கொசுவும் இறப்பதும் இல்லை.
இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மனிதன், மிருகம், தாவரம் போன்ற எந்த ஜீவன் நம்முடைய முன்னிலையில் உயிரை விட்டாலும், ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருகமிக பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் என்ற ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தை ஓதி அந்த ஜீவன் நற்கதியை அடைய இறைவனை பிரார்த்திக்க வேண்டும் என்ற கடமை மனிதனுக்கு உண்டு.
ஸ்ரீஅம்ருதம்ருத்யுஞ்ஜய மூர்த்தி
சத்ய சாய்பாபாவும், ”உங்களை ஏதாவது பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் கடிக்க வந்தால் சாய்ராம் என்று கூறி அதை அடிக்கலாம், தவறில்லை. அதனால் உங்களை எந்தத் தோஷமும் அண்டாது. அந்த பூச்சிகளும் நற்கதி அடையும்,” என்று கூறியுள்ளார்.
ஆனால், கொசுவை அடிக்கும்போது எந்த மந்திரத்தையும் ஓத வேண்டிய தேவை அங்கு ஏற்படுவதில்லை. காரணம், உங்கள் மந்திரத்தால் அந்தக் கொசுவிற்கு கிடைக்கும் அனுகிரகத்தை விட கொசுவால் உங்களுக்குக் கிடைக்கும் அனுகிரகமே அதிக வலிமை உடையது. முடிந்தால் மௌனமாக கொசுவின் ”கடியை” பொறுத்துக் கொள்ளுங்கள்.
கொசுக் கடியால் சமுதாயத்தில் வியாதிகள் பரவுகிறது என்ற கருத்து மக்கள் சமுதாயத்தில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. பலமுறை ஏற்கனவே உங்களிடம் கூறியபடி மனிதனுக்கு வரும் நோய்நொடிகள் அனைத்துமே அவனுடைய பூர்வ ஜன்ம கர்ம விளைவுகளே. ”இன்னா முற்பகல் செய்யின், இன்னா பிற்பகல் விளையும்,” என்பதே உண்மை.
மனிதக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் ஒரு கொசு பத்தாயிரம் பேரைக் கடிக்கும் என்றால் உலகில் உள்ள எல்லாக் கொசுக்களும் கடித்து வியாதி ஏற்பட்டால் ஒரே நாளில் உலகம் அழிந்து விடும் அல்லவா? கொசுவைப் போலவே ஈக்களால் வியாதி பரவுகின்றது என்ற தவறான கருத்தும் மக்களிடையே நிரவி வருகிறது. ஈ ஒரு தவறான செயலைச் செய்து மக்களுக்குத் தீமை விளைவிக்கும் என்பது உண்மையானால் தென்பூமியைத் தாங்கும் வல்லமை பெற்ற அகத்திய மகரிஷி ஈ வடிவம் எடுத்து ஈசனை வழிபட்டிருப்பாரா? அகத்திய பெருமான் ஈ வடிவில் வழிபட்ட தலமே திருச்சி அருகே உள்ள திருஈங்கோய் மலை திருத்தலமாகும்.
உணவுப் பொருட்கள் அழுகிப் போய் விட்டாலோ, மிருகங்கள் போன்றவை இறந்து விட்டாலோ அவ்விடத்தில் நோய் பரப்பும் நுண் கிருமிகள் உண்டாகி விடுகின்றன. எனவே, அத்தகைய சூழ்நிலையை நிவர்த்திப்பதற்காக இறைவன் அங்கு ஈக்களை அனுப்பி அழுகிய பொருட்களை உண்டு சுற்றுப் புறத்தைப் பாதுகாப்பதற்காக ஈக்கள் அந்த கழிவுப் பொருட்கள் உண்ணும்படி ஒரு தெய்வீக ஏற்பாட்டை வகுத்துள்ளான். எனவே ஈக்களால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்படும் என்பதை விட சுகாதார நிலை பழுதடைந்த இடத்தில் ஈக்கள் தோன்றும் என்பதே சரியான அணுகுமுறை. இதுவே தெய்வீகம் சொல்லித் தரும் பாடம்.
இவ்வாறு சமுதாயத்தில் ஏற்படும் சீர்கேட்டை ஈர்த்து உலகத்தை தூய்மைப்படுத்தும் அற்புத இறைப் பணியை ஆற்றவே அகத்திய பெருமான் ஈ வடிவில் ஈங்கோய் ஈசனை வேண்டினார்.
அசுர சக்திகளின் ஒட்டு மொத்த உருவமாக விளங்கிய சூரபத்மனை வதம் செய்வதற்காக எம்பெருமான் தன்னுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தலையுடன் விளங்கிய சுப்ரமண்ய சுவாமியைத் தோற்றுவித்தார் அல்லவா? அது போல எங்கெல்லாம் அசுர சக்திகள் தோன்றுகின்றனவோ அதைக் களைய ஆறு கால்களுடன் விளங்கும் கொசுக்களும், ஈக்களும், பிரபஞ்சத்தைத் தூய்மைப்படுத்தும் தேனீ, வண்ணத்துப் பூச்சி போன்ற ஆறு கால் பூச்சிகளும் தோன்றுவதால் இவற்றை சரவணபவ ஜீவிகள் என்ற முருக நாமத்தால் அழைக்கின்றனர்.
சரவணபவ ஜீவிகளைப் போல சரவணபவ எண்களும் உண்டு. ஏற்கனவே உங்களுக்கு குசா என்னும் அற்புதமான நற்சக்தியைப் பற்றி விளக்கியுள்ளேன். நான்காய் விரிந்து இரண்டில் அடங்குவது குசா தத்துவம். இம்முறையில் ஒரு எண்ணை நான்கால் பெருக்கி இரண்டால் வகுத்தால் கிடைப்பதே அந்த எண்ணுக்குரிய குசா எண்ணாகும். இந்த குசா எண் நன்மையை மட்டுமே தரும் இயல்புடையது.
குசா எண் கணக்கீட்டின் அடுத்த கட்டமாக குசா எண்களுக்குரிய குசா எண்களைக் கணக்கிட்டால், ஒன்றின் குசா எண் 2, இரண்டின் குசா எண் 4, நான்கின் குசா எண் 8, எட்டின் குசா எண் 7, ஏழின் குசா எண் 5, ஐந்தின் குசா எண் 1 என குசா எண்களின் குசா எண்கள் ஒரு குசா வளையமாக வரும் அல்லவா? அந்த குசா வளையத்தில் திகழும் ஆறு எண்களும், அதாவது 1, 2, 4, 5, 7, 8 என்ற ஆறு எண்களும் சரவணபவ குசா எண்கள் என்று அழைக்கப்படும்.
குழந்தைகளின் ஞாபக சக்தியை
விருத்தி செய்யும் குசா யந்திரம்
எப்படி சரவணபவ என்ற ஆறு எழுத்துக்கு உரிய முருகப் பெருமான் அசுர சக்தியை அழிப்பதற்காக எம்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டாரோ அது போல இந்த ஆறு எண்களும் உலகில் உள்ள தீய சக்திகளை, அசுர எண்ணங்களை மாய்ப்பதற்காக இறைவனால் படைக்கப்பட்டவையாகும். ஆனால், இந்த எண் சக்திகளை முறையாகப் பயன்படுத்தும் விதத்தை, வித்தையை சித்தர்கள் மட்டுமே அறிவர்.
தற்காலத்தில் பலரும் வீடுகளைக் கட்டும்போது அருகில் இருந்து காவல் காப்பது கிடையாது. கட்டிட வேலைகள் முழுவதுமாக முடிந்து கிரகப்பிரவேசம் நிறைவேற்றும் சமயத்தில்தான் பெரும்பாலோனார் தங்கள் வீட்டில் பிரவேசிக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் flat போன்று தயார் நிலையில் (readymade houses) உள்ள வீட்டை வாங்க வேண்டிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு கட்டிட வேலைகள் நடைபெறும்போது அக்கட்டிடத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளவர்கள், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், வழிப்போக்கர்கள் அங்கு மலஜலம் கழித்தல், சிறுநீர் கழித்தல், சூதாடுதல், மது பானங்கள் அருந்துதல் போன்ற பலவித தவறான செயல்களைப் புரிய வாய்ப்புண்டு அல்லவா? இத்தகைய கடுமையான தோஷங்கள் அந்த வீடுகளில் வசிப்போரை எதிர்காலத்தில் மிகவும் பாதிக்கும்.
ஆனால், இத்தகைய தோஷங்கள் தற்காலத்தில் தவிர்க்க முடியாது என்பதால் சித்தர்கள் பெருங் கருணை கொண்டு அவற்றைக் களைய இந்த சரவணபவ எண் சக்தி வழிபாட்டு முறையை அருளி கடுமையான கர்ம வினைகளையும் நீக்கும் உபாயத்தை அருளியுள்ளனர்.
இங்கு அளிக்கப்பட்டுள்ள சரவணபவ எண் சக்கரத்தை ஒரு மாம்பலகை, அல்லது தேக்கு பலகையிலோ அல்லது வாழை இலையிலோ பச்சரிசி மாவால் வரைந்து கொண்டு, மஞ்சள் பொடி, சுத்தமான குங்குமம் இவற்றால் அலங்கரித்து பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் துதியை ஓதி தேனும் தினை மாவும் கலந்து முருகப் பெருமானுக்கு படைத்து தானமாக அளித்தல் நலம்.
இவ்வழிபாட்டை செவ்வாய்க் கிழமைகளிலும், சஷ்டி திதிகளிலும், மேற்கூறிய சரவணபவ எண் நிரவும் தேதிகளிலும் அதாவது 1, 2, 4, 5, 7, 8 தேதிகளிலும் நிறைவேற்றுதல் நலம். வழிபாட்டு தினங்களில் தரமான முகம் பார்க்கும் கண்ணாடி, அழகான சீப்பு, சுத்தமான தேங்காய் எண்ணை இவற்றை பெண்களுக்கும் பள்ளிச் சிறுமிகளுக்கும் அளித்து வந்தால் கடுமையான வாஸ்து தோஷங்களிலிருந்து நிவாரணம் பெற வழி முறைகள் கிட்டும்.
ஸ்ரீஅகஸ்தியர் ஈ வடிவில் வழிபட்ட
திருஈங்கோய்மலை
பள்ளிக் குழந்தைகள் தங்கள் ஞாபக சக்தியை பெருக்கிக் கொள்ளவும், கணிதம் போன்ற பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளவும் சரவணபவ யந்திர வழிபாடு பெரிதும் துணை புரியும். மேலும், கம்யூட்டர், தொலை தொடர்பு துறையில் உள்ளவர்கள் தங்கள் துறையில் சாதனைகளைப் புரியவும் தேவையான எண் சக்திகளை அளிப்பதே இந்த யந்திர வழிபாடாகும். எண் சக்திகளை நல்ல முறையில் பயன்படுத்த உதவும் சிறப்பான வழிபாடு இதுவே.
இனி கொசுவைப் பற்றி தொடர்வோம். எல்லா ஜீவன்களைப் போல கொசுக்களும் பலவிதமான பிரிவைச் சார்ந்திருக்கின்றன. அதில் சில வகை கொசுக்களின் செயல்பாட்டைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கிறேன். மனித உடலில் 72000 நாடி நரம்புகள் உள்ளன. இவை கண்ணுக்குத் தெரியாதவை. இரத்தத்தை எடுத்துச் செல்லக் கூடிய இரத்தக் குழாய்கள் மனித உடலின் மேற்புறத்திலும் உள்புறத்திலும் ஏராளமாக உள்ளன. இவற்றை தகுந்த உபகரணங்கள் மூலமாக எளிதாகக் காண முடியும். இதயத்திற்குச் செல்லும் இரத்தம் அசுத்தமானது, இதயத்திலிருந்து வெளியாகும் இரத்தம் தூய்மையானது. இது நீங்கள் அறிந்த ஒன்றுதான்.
காற்று, நீர் மூலமாக மனித உடலில் கிருமிகள் மட்டும் அல்லாது பல்வேறு தீய எண்ணங்களும் குடியேறுகின்றன. இந்தத் தீய எண்ண சக்திகள் இரத்தத்தில் கரைந்து உடலில் பல்வேறு பாகங்களில் நிலை கொள்கின்றன. இந்த அசுத்தமான இரத்தத்தில் உள்ள நச்சு எண்ணக் கழிவுகளை கொசுக்கள் உறிஞ்சி தாங்கள் ஏற்றுக் கொள்கின்றன. எனவேதான் பெரும்பாலான கொசுக்கள் உடலின் மேல் பாகத்தில் அமைந்துள்ள இரத்த நாளங்களில் அல்லது சிரைகளில் அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
அது மட்டுமல்லாமல் நீங்கள் கொசுக்களின் செய்கைகளை உற்றுக் கவனித்தால் ஓர் உண்மை விளங்கும். உங்கள் உடல் மீது அமரும் அனைத்துக் கொசுக்களும் உங்களைக் கடிப்பதில்லை. சில கொசுக்கள் சற்று நேரம் அமர்ந்து விட்டுப் பின்னர் பறந்து சென்று விடும். உங்கள் மீது அமரும் கொசுக்கள் ஏனோ தானோ என்று அமர்வதில்லை. அவைகள் குறிப்பிட்ட நாடிகளின் மீதே அமர்கின்றன. நீங்கள் கொசுவை விரட்டி விட்டால் அது எந்த நாடியின் மீது முன்னர் அமர்ந்திருந்ததோ அதே இடத்திலேயே மீண்டும் வந்து அமர்ந்து கொள்ளும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒவ்வொரு கொசுவும் எந்த மனிதனை எந்த இடத்தில் எந்த சிரையில் கடித்து எந்த அளவு இரத்தத்தை உறிஞ்ச வேண்டும் அதன் மூலம் எத்தகைய தீய எண்ண சக்திகளை அவன் உடம்பிலிருந்து ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தெளிவான கடமையால் உந்தப்பட்டுதான் மனிதனை அடைகிறது என்பதை இதன் மூலம் நீங்கள் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்ளலாம். மனிதனின் உடலில் கரைந்துள்ள சாதாரண விஷ சக்திகளை கொசுக்கள் தங்கள் உணர்வுக் குழாய் மூலம் உறிஞ்சிக் கொள்ளும். அத்தகைய தருணங்களில் அவை மனிதனை கடிப்பதில்லை. தொடு உணர்ச்சியின் மூலமே அவை விஷசக்திகளை கிரகிக்கும் அற்புத ஆற்றலைப் பெற்றிருப்பதே இதற்குக் காரணம்.
சில வகையான மூலிகை கொசுக்கள் உண்டு. இவை குறிப்பிட்ட மூலிகைகளில் உள்ள சாற்றை குறித்த ஹோரை நேரத்தில் உறிஞ்சிக் கொண்டு வந்து மனிதர்களின் இரத்த நாளங்களில் குறித்த அமிர்த ஹோரை நேரத்தில் பாய்ச்சி அற்புத சேவை புரிகின்றன. அஸ்வினி லோகத்தில் இத்தகைய கொசுக்களின் நடமாட்டம் அதிகம். இந்த கொசுக்களுடன் தொடர்பு கொண்டு நமக்கு உள்ள நோய்களைத் தீர்ப்பதற்காக பித்ருக்கள் என்னும் நமது உத்தம முன்னோர்கள் அல்லும் பகலும் அரும்பாடு படுகின்றனர். இவ்வாறு கொசுக்கள் மூலிகைச் சாற்றை மனித உடலில் செலுத்தும்போது நாம் எந்த அளவிற்கு பித்ருக்களுக்கு தர்ப்பணாதிகள் அளித்து தீர்த்த சக்தியை பித்ரு லோகத்தில் நிரவி உள்ளோமோ அந்த அளவிற்கு நமது உடலில் உள்ள அமிர்த சக்திகள் மேம்பட்டு நோய் நிவாரண சக்திகள் பெருகும்.
மூல நட்சத்திர நேரம் நிரவியுள்ள நேரத்தில் இத்தகைய கொசுக்கள் திருஅண்ணாமலை, சதுரகிரி, தேனிமலை, திருமலை போன்ற மூலிகை சக்திகள், ரசமணி சக்திகள் பரிணமிக்கும் திருத்தலங்களில் கிரிவலம் வந்து தங்கள் மருத்துவ அமிர்த சக்திகளை பெருக்கிக் கொள்கின்றன என்பது நீங்கள் அறியாத ஆன்மீக விந்தையாகும். பொதுவாக எந்த மூலிகையாக இருந்தாலும் அதை பிராண பிரதிஷ்டை செய்தே மருத்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற நியதி உண்டு. அப்போதுதான் வைத்தியர்கள் மூலிகை தேவதைகளின் சாபத்திற்கு ஆளாகாமல் இருப்பதுடன் அவர்கள் அளிக்கும் மூலிகை மருந்துகளும் அற்புத நோய் நிவாரண சக்திகளுடன் துலங்கும்.
ஆனால், அஸ்வினி லோகத்திலிருந்து வரும் வைத்திய கொசுக்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால் கொசுக்கள் மூலம் பெறும் மூலிகைச் சாறு பூரணமான நோய் நிவாரண சக்திகளுடன் விளங்கும். தற்காலத்தில் சமயபுரம், திருஅண்ணாமலை, பழநி போன்ற திருத்தலங்களில் பக்தர்கள் இரவு முழுவதும் தங்கி இறைவனை வழிபடும்போது தீர்க்க முடியாத பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு இத்தகைய மூலிகை கொசுக்களின் சேவையும் பல ஆன்மீக காரணங்களில் ஒன்றாகும்.
மனிதர்கள் நெருங்க முடியாத பல அடர்ந்த வனங்கள் பூமியெங்கும் உண்டு. இத்தகைய அடர்ந்த காடுகளில் பல அற்புதமான சிரஞ்சீவி மூலிகைகள் இன்றும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய அடர்ந்த காடுகளில் உள்ள சிரஞ்சீவி மூலிகைகளின் சாற்றை உறிஞ்சி அவற்றை திருக்கோயில் தீர்த்தங்களில் சேர்க்கும் பணியையும் கொசுக்களே மேற்கொள்கின்றன. அசுத்த நீர் தங்கும் கழிவு நீர் தேக்கங்களிலும் சாக்கடைகளிலும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன என்று நாம் எண்ணினால் மிகவும் தூய்மையான காற்று வீசும் காடுகளில் கொசுக்களின் நடமாட்டம் மிகுதியாக உள்ளதே. இதன் காரணத்தை ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் கொசுக்களின் அற்புத ஆன்மீக சேவை புரிய வரும்.
காருண்ய கொசுக்கள் என்ற நாமம் கொண்ட அற்புதமான ஒரு கொசு வகை உண்டு. இவை நிறைவேற்றும் பணியோ மிகவும் சிறப்பு வாய்ந்தது. நம்முடைய உடலில் நல்ல இரத்தமும் அசுத்த இரத்தமும் கலந்து உடலெங்கும் வியாபித்து உள்ளது அல்லவா? ஆனால், மகான்கள், யோகிகளின் உடம்பில் நல்ல இரத்தம், அசுத்த இரத்தம் என்ற பாகுபாடு கிடையாது.
மகான்களின் உடல் உண்மையில் மாயையான ஒரு தோற்றமே. அதனால்தான் மகான்கள் பலரும் தங்கள் பக்தர்கள் விரும்பும் உருவத்தில் எல்லாம் காட்சி தருகிறார்கள். முருகனாக ஒருவருக்கும், கிருஷ்ணனாக ஒருவருக்கும், ராமராக ஒருவருக்கும் ஒரே சற்குரு பல சீடர்களுக்கும் காட்சி அளிப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இவ்வாறு பஞ்ச பூத தத்துவங்களின் திரட்சியாக விளங்கும் மகான்கள் தங்கள் உடலில் ஜீவ சக்தியை இரத்தமாகவும் சேமித்து வைத்திருப்பது உண்டு.
மகான்களின் சக்தி அனைத்தையும் மற்றவர்களுக்காகவே வைத்திருப்பதால் தங்களின் இரத்தம் என்ற ஆன்ம சக்தியையும் மற்ற ஜீவன்களுக்காக அர்ப்பணிக்கின்றனர். அத்தகைய மகான்கள் தங்கள் தெய்வீகத் திருப்பணியை கொசுக்கள் மூலமாகவே நிறைவேற்றுகின்றனர். ஆம். கேட்பதற்கு விந்தையாக, விசித்திரமாகத் தோன்றினாலும், இதுவே உண்மை. மகான்கள் திருமேனியை யாராலும் அவர்கள் விரும்பினால் அன்றி பார்க்க முடியாது. அவ்வாறிருக்க அவர்கள் உடம்பில் உள்ள இரத்தத்தை கொசுக்கள் தீண்ட முடியுமா?
எப்போது ஒரு மகான் தன்னுடைய இரத்தத்தை மக்களுக்காக அர்ப்பணிக்க திருவுள்ளம் கொள்கிறாரோ அப்போது இந்த காருண்ய கொசுக்களை அழைத்து தன்னுடையஉடம்பில் குறிப்பிட்ட பகுதியிலிருந்து குறிப்பிட்ட அளவு இரத்தத்தை உறிஞ்சிக் கொள்ள அனுமதி அளிக்கிறார். அவ்வாறு உறிஞ்சிய இரத்தத் துளிகளை அந்த மகான் குறிப்பிடும் தீர்த்தத்தில் குறிப்பிட்ட சுப முகூர்த்தத்தில் சேர்ப்பதே காருண்ய கொசுக்களின் திருப்பணி.
காருண்ய கொசுக்களுக்கு சாதாரண கொசுக்களைப் போல பத்தாயிரம் ஜீவன்களைக் கடிக்க வேண்டும் என்ற நியதி கிடையாது. ஒரு மகான் உடலில் ஒரு துளி இரத்தத்தை உறிஞ்சி திருப்பணி ஆற்றி விட்டால் போதும் அடுத்த வினாடி அவை முக்தி அடைந்து அடுத்த பிறவிக்கு ஆயத்தமாகி விடுகின்றன.
மகான்களின் ஆன்மீக நிலையைப் பொறுத்து ஒரு மகானின் உடலில் உள்ள ஒரு துளி இரத்தம் குறைந்தது ஒரு லட்சம் மக்களின் கர்ம வினையைக் களையக் கூடியது. அப்படியானால் மகான்கள் எத்தகைய புண்ணிய சக்திகளுடன் இந்த பூமியில் உலவி வருகிறார்கள் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள். இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு மகானின், உத்தமரின் ஒரு துளி இரத்தம் ஒரு லட்சம் மக்களைக் கரையேற்றும் சக்தி பெற்றது என்றால் ஒரு மகானை இம்சைப்படுத்தி அவர் உடலிலிருந்து ஒரே ஒரு துளி இரத்தம் பூமியில் சிந்தினால் கூட அது எத்தனை லட்சம் மக்களை வேதனைக்குள்ளாக்கும் என்பதையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் .
மனிதனால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு வலிமை வாய்ந்த சூறாவளிக் காற்று, பூகம்பம், இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சக்திகள் லட்சக் கணக்கான மக்களை அழிப்பதற்குக் காரணம் மகான்களின் வேதனையில் வெளியாகும் இரத்தத் துளிகளே என்பதை மக்களை இனியாவது உணர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டும். எந்த ஒரு மகானும் தான் மகான் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. அதனால் மக்கள் அனைவரையுமே தங்கள் சகோதர, சகோதரிகளாக, உத்தமர்களாக நினைத்து அன்புடன் நடத்துவதால் எந்நிலையிலும் மகான்கள் துன்புறாத அமைதி நிலை சமுதாயத்தில் உருவாகும்.
மகாமகத் திருக்குளம், கங்கை, காவிரி போன்ற தீர்த்தங்களில் எண்ணற்ற மகான்களின் இரத்தத் துளிகள் கலந்துள்ளது. அதனால்தான் கும்பமேளா, மாசி மகம் போன்ற சிறப்பான தீர்த்த வாரி தினங்களில் எத்தனை லட்சம் மக்கள் நீராடினாலும் அந்த தீர்த்தங்கள் சற்றும் மாசு பெறாமல் தெய்வீகத் தீர்த்தங்களாகவே பொலிந்து தொடர்ந்து மக்களுக்கு அனுகிரக சக்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன.
காஞ்சீபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் தேவாலயத்தில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மக்களுக்கு அருந் தொண்டாற்றி அற்புத சேவை சாதித்த கருணை வள்ளலே ஸ்ரீபோடா சித்தர் ஆவார். இவரைச் சுற்றி எப்போதும் கொசுக்கள் பறந்து கொண்டே இருக்கும். உண்மையில் இந்திரன், பிரம்மா போன்ற தேவர்களும் பற்பல ரிஷிகளும் கொசு வடிவில் ஸ்ரீபோடா சித்தரை தரிசனம் செய்வதையே நாம் கொசு பறப்பதாக எண்ணிக் கொள்கிறோம். இத்தகைய கொசுக்களை அவநந்தி கொசுக்கள் என்ற சித்த பரிபாஷையில் அழைப்பதுண்டு.
கன்னியா குமரி திருத்தலத்தில்
அருள்சுரக்கும் தேவஅன்னை மாயம்மா
மகான்களைக் கண்ணால் காண்பது அரிது. அவர்கள் அனுமதித்தால் மட்டுமே அவர்கள் திருமேனியைக் காண முடியும். அப்படி இருக்கும்போது சிவபெருமானுக்கே திருமணம் நிகழ்த்தி வைத்த போடா சித்தர் போன்ற அற்புத சித்தர்களை சாதாரண மனிதர்கள் காண்பது எப்படி? இவ்வாறு மிக உன்னத மகான்களின் அனுகிரக சக்திகளை சாதாரண மக்களும் பெறுவதற்காக சூரிய பகவான், சந்திரன், இந்திரன் போன்ற தேவர்கள் கொசு வடிவில் இத்தகைய மகான்களைச் சுற்றி பறந்து அவர்களிடமிருந்து அற்புத சக்திகளை ஈர்த்து அதை பூமியில் உள்ள சாதாரண மக்களும் கிரகிக்கும் அளவிற்கு மென்மையாக்கி அளிக்கின்றனர்‘. இறை அவதாரங்களைப் போல தேவர்கள் செயல்படுவதால் அவர்களின் உருவங்களை ”அவநந்தி” என்ற அடைமொழியால் குறிப்பிடுகின்றோம்.
திருக்கார்த்திகை தீபத்தின் போதும் திருஅண்ணாமலையில் இத்தகைய அற்புத அனுகிரக சக்தி பரிமாற்றத்தைக் காணலாம். தீபம் ஏற்றும் சில நிமிடங்களுக்கு முன்னர் அனைத்து தேவ லோகங்களிலிருந்தும் தேவர்கள் தங்கள் ஒளி பொருந்திய வாகனங்களில் வந்து திருஅண்ணாமலையாரைச் சுற்றி பவனி வருவார்கள். அது ஒரு மேகக் கூட்டம் போல் சாதாரண மக்கள் கண்களுக்குத் தோன்றும். தீபம் ஏற்றிய பின்னர் திருஅண்ணாமலை தீப சக்தியை மென்மையாக்கி பூலோக மக்களுக்கு அனுகிரக சக்திகளாக அளித்து விட்டு தங்கள் லோகங்களுக்கு திரும்பிச் சென்று விடுவார்கள்.
ஒவ்வொரு திருக்கார்த்திகை தீபத் திருவிழா அன்றும் நடக்கும் கோடிக் கணக்கான தெய்வீக அற்புதங்களில் இதுவும் ஒன்று. கன்னியா குமரி திருத்தலத்தில் குடிகொண்ட மாயம்மாவைச் சுற்றியும் இத்தகைய அவநந்தி கொசுக்கள் அடிக்கடி பறப்பதுண்டு. தூய வெண்ணிறத்துடன் பொலிவதால் இத்தகைய கொசுக்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
அடியார்
குருதேவா, தாங்கள் மாயம்மாவைச் சந்தித்ததுண்டா?
சற்குரு
ஆம், அன்னையை பலமுறை தரிசனம் செய்திருக்கிறேன். எப்போதும் மாயம்மாவைச் சுற்றி ஈக்கள், கொசு, நாய்கள் நிறைய அமர்ந்திருப்பது ஒரு சாதாரண காட்சி. சமீப காலத்தில் அசுர எண்ணங்களை மாய்ப்பதற்காக அவதரித்த மகான்களில் மாயம்மாவும் ஒருவர். பொதுவாக, உப்புக்கு தீய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. அதனால்தான் விருந்துகளில் உணவு பரிமாறும்போது முதலில் இலையில் கொஞ்சம் உப்பு வைப்பார்கள்.
அடுத்து பரிமாறும் உணவு வகைகளில் கரைந்துள்ள தீய எண்ணங்களை நச்சுக் கழிவுகளை இலையில் வைக்கும் உப்பு ஈர்த்து உணவுப் பதார்த்தங்களை சுத்திகரிக்கவே இந்த ஏற்பாடு. அதுபோல உப்பு நீர் நிறைந்துள்ள கடல் நீரானது பூமியில் உள்ள அனைத்து கழிவுகளையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு உலக மக்களை அழிவிலிருந்து காப்பாற்றுகிறது. எங்கும் காத்து வைக்க முடியாத கழிவுப் பொருட்களை கடலில் சேர்த்துதான் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
ஒருமுறை அடியேனிடம் ஒரு அயல்நாட்டு நண்பர் வந்தார். அவருடைய சில சொந்த பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டவே அடியேனும் இறைவனை வேண்டி அவருடைய பிரச்னையைத் தீர்த்து வைத்தேன். அதனால் மனம் மகிழ்ந்த அவர் விடைபெறும் போது ஒரு அன்பளிப்பை அடியேனிடம் அளித்தார், அடியேன் எந்த அன்பளிப்பையும் ஏற்றுக் கொள்வதில்லை என்று எடுத்துக் கூறியும் அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே வேறு வழியின்றி அதைப் பெற்றுக் கொண்டேன்.
அவர் விடைபெற்றுச் சென்றவுடன் அவருடைய அன்பளிப்பு என்னவென்று பார்த்தால் அது விலையுயர்ந்த ஒரு அயல்நாட்டு மது வகை. அடியேனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு எந்தப் பொருளாக இருந்தாலும் அதை யாருக்காவது தானமாக வழங்கி விடலாம். இந்த அசுர சக்தி கொண்ட அன்பளிப்பை யாருக்குக் கொடுக்க முடியும்?
வேறு வழியின்றி கடற்கரைக்குச் சென்று அந்த பாட்டிலில் உள்ள மது அனைத்தையும் கடலில் கொட்டி விட்டு வந்தேன். இவ்வாறு எத்தகைய கடுமையான தீய சக்தியையும் ஈர்க்கக் கூடிய சக்தியை கடல் நீர் பெற்றுள்ளதால் அசுர எண்ணங்களை மாய்க்க வந்த மாயம்மாவும் கடற்கரையிலேயே பன்னெடுங் காலம் வாழ்ந்து கடலில் சேரும் அசுத்தங்களை எல்லாம் தன்னுடைய தபோ சக்தியால் ஈர்த்து பஸ்மமாக்கி உலகைக் காத்து வந்தார்கள்.
அன்னை ஜீவ சமாதி ஏற்கும் ஒரு வருடத்திற்கு முன் அன்னையை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. அப்போதுதான் இப்போது உங்களிடம் கூறிய கொசுவைப் பற்றிய ஆன்மீக இரகசியங்களையும் தீய எண்ணங்களின் விளைவுகளைப் பற்றிய பல ரகசியங்களை அடியேனிடம் எடுத்துரைத்தார்கள். இறுதியாக விடைபெறும்போது, ”ஜல்தி ஆவ் பேட்டா, ஜல்தி ஆவ் (குழந்தாய், விரைவில் வந்து விடு !). என்று கூறி அடியேனுக்கு விடை கொடுத்து அனுப்பினார்கள்.
பரம்பொருளின் ஆசீர்வாதத்தை வழங்கும் அழகிய கோலத்துடன் அப்படியே கடலுக்குள் சென்று அன்னை மறைந்து விட்டார்கள். நீங்கள் இங்கு காணும் மாயம்மாவின் சித்திரம் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்வதே ஆகும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களை திருமணம் புரிய பலரும் யோசிக்கிறார்கள். இது பற்றி ஏற்கனவே பல விளக்கங்களை உங்களுக்கு அளித்துள்ளேன். பல உயர்ந்த பதவிகளை வகிக்கும் திறமை கொண்ட பெண்களே மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.
உலகை தீய சக்திகளிலிருந்து காப்பதற்காக அவதாரம் கொண்ட மாயம்மாவும் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர்களே. எனவே மூல நட்சத்திர தினத்தன்று அன்னையின் ஜீவ சமாதியில் வழிபாடுகள் இயற்றுவதால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வரும்.
மேலும் மூன்று நட்சத்திரங்கள் ஒரே நாளில் சேர்ந்து வரும் நாட்களில் மூன்று கடல் சங்கமமாகும் கன்னியாகுமரி போன்ற திருத்தலங்களிலும், மூன்று நதிகள் சங்கமமாகும் திருவேணி சங்கமம், லால்குடி அருகே நத்தம் போன்ற திருத்தலங்களிலும் வழிபாடுகள் இயற்றுதல் நலம்.
அபூர்வமாக அத்தகைய மூன்று நட்சத்திரங்களில் ஒன்று மூலமாக அமையும்போது (உதாரணமாக மார்ச் 14, 2012 கர வருடம் பங்குனி 1 புதன் கிழமை அன்று அனுஷம், கேட்டை, மூலம் நட்சத்திரங்களின் சங்கமம்) அந்த மிக மிக அரிதான நட்சத்திர சங்கம தினத்தில் கன்னியாகுமரியில் அன்னையின் ஜீவ சமாதியில் மேற்கூறிய சரவணபவ எந்திரத்தை வரைந்து வழிபாடுகள் இயற்றுதலால் அற்புதமான பலன்களைப் பெறலாம். இத்தகைய வழிபாட்டில் கிட்டும் பலன் இத்தகையது என்று அறுதியிட்டுக் கூற முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அன்னையின் வழிபாடு அசுர எண்ணங்களைக் களையும் சக்தி பெற்றுள்ளதால் செவ்வாய்க் கிழமைகளில் காய்ந்த வேப்பம்பூவை சாம்பிராணியுடன் சேர்த்து தூபம் இட்டு் பில்லி சூன்யம் போன்ற துன்பங்களிலிருந்து எளிதில் விடுதலை பெறலாம். காத்து, கருப்பு சேஷ்டைகள் நீங்கும். கொசுக் கடியிலிருந்து ஆன்மீக ரீதியாக விடுபட இந்தத் தூபக் காப்பு துணை செய்யும்.
செந்தாழம்பூ சுத்தகமாய் செந்தழல் மேனியில் நித்தியமாய்
வந்தாடிய வைகறையே மாயம் களைவாய் மாயம்மா
என்னும் துதியை ஓதி தூபம் இடுதல் சிறப்பாகும். லலிதா பரமேஸ்வரி லோகத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய அபூர்வமான செந்தாழம்பூவின் நறுமணத்தை இயற்கையிலேயே பெற்ற அன்னை மாயம்மாவே, கதிரவனின் ஒளியைக் கண்டு மறையும் காரிருளைப் போல அடியேனுடைய உள்ளத்தில் மண்டிக் கிடக்கும் மாயை என்னும் இருளை நீக்கி காத்தருள்வாய் என்பது இத்துதியின் பொருளாகும்.