மலம், மூத்திராதிகள் இல்லாத இடமே பக்தர்களுக்கு ஃபாரின் (அயல்நாடு)

அடியார்
ஒவ்வொரு கோயிலையும் தரிசிக்க உரிய முறைகள் இருப்பது போல ஒவ்வொரு தெய்வத்தையும் தரிசனம் செய்யும் முறைகளும் இருக்கின்றனவா, குருதேவா?

சற்குரு
ஆமாம், அதில் சந்தேகம் என்ன? ஒவ்வொரு தெய்வத்தையும் உரிய முறையில், உரிய நேரத்தில் தரிசனம் செய்தால் அதனால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். ஆனால், அப்படி அபரிமிதமாகக் கிடைக்கும் பலன்களை நீ எந்தக் காரியத்திற்காகப் பயன்படுத்தப் போகிறாய் என்பதே முக்கியம். பெரும்பாலும் தன் மனைவி, குழந்தைகள், உற்றம், சுற்றத்திற்காகவே கோயில் தரிசனம் அமைவதால் இந்த இரகசியங்களை பெரியவர்கள் அவ்வளவாக வெளியிடுவது கிடையாது. பொது நலத்திற்காக, சமுதாய மேம்பாட்டிற்காக ஒருவர் இறைவழிபாட்டை மேற்கொள்ளும்போது உரிய காலமும், வழிபாட்டு முறைகளும் அவர்களை அறியாமல் மேலுலகத்தில் இருக்கும் சற்குருமார்களால் ஏற்படுத்தித் தரப்படுகின்றன என்பதும் நீங்கள் அறியாத ஒரு தெய்வீக ரகசியமாகும்.

சில குறிப்பிட்ட கோயில்களில் நிறைவேற்ற வேண்டிய தரிசன முறைகளைப் பற்றி மட்டும் தற்போது தெரிந்துகொள்ளுங்கள்.

திருப்பதி வெங்கடாஜலபதியை தம்பதி சமேதராய் வணங்குவது சிறப்பு. காலை ஆறு மணி முதல் பத்து மணிவரை ஏழுமலையானை அங்கபிரதட்சிணம் வந்து வணங்குதல் நலம்.

மது, புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமைப்பட்டோர் பெரும்பாலும் அதிலிருந்து மீளாமலேயே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம் மனதில் கற்பனையை சிறகடிக்கச் செய்து போலி சந்தோஷத்தைக் கொடுக்கும் நரம்பு மண்டலமானது நமது முன்னோர்கள் ஆதிக்கத்தில் இருப்பதுதான். கடுமையான போதைப் பழக்கத்திற்கு ஆளானோர் மூதாதையர்களுக்கு ப்ரீதி அளிக்கும் அமாவாசை, மாளய பட்ச தர்ப்பண படையல்களை விடாமல் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால்தான் தீய பழக்க வழக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியும்.சென்னை கபாலி கோயிலில் விடியற்காலை நாலு மணி முதல் எட்டு மணி வரை வழிபடுதல் நலம்.

சமயபுரம் மாரியம்மனை மதியம் 3 மணி முதல் 5 மணி வரை வழிபடுதல் நலம். ஒவ்வொரு தெய்வமும் தினமும் நகர் வலம் என்று செல்வதுண்டு. இவ்வாறு சமயபுரம் மாரியம்மன் நகர் வலம் முடித்து தன் சிம்மாசனத்தில் அமரும் நேரமே மாலை மூன்று மணி. இந்த நேரத்தில் அம்மனை தரிசித்தல் நலம்.
மிகவும் சிறப்பான சித்த பீடமே மேல்மருவத்துõர். இங்கு எந்த நேரம் வேண்டுமானாலும் அன்னையை வழிபடலாம்.
மாங்காடு அம்மனை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை தரிசனம் செய்தல் நலம். மதியம் கடும் வெயிலில் தவம் இயற்றுகிறாள். இந்த தவக் கோலத்தில் அன்னையைத் தரிசிப்பதால் நம்முடைய கடுமையான வினைகளும் களைந்தோட அன்னை அருள் புரிவாள்.
மாயவரம் அயபாம்பிகையை அங்க பிரதட்சிணம் செய்து வழிபடுதல் நலம். திருக்கோயில் தெப்பக் குளத்தில் குளித்து விட்டு அங்க பிரதட்சிணம் செய்வது நலம்.
திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் சிவராஜ சிங்க தீர்த்தம் அருகே 50 அடி வரை ஆண்கள் அங்க பிரதட்சிணம் செய்தல் நலம்.
பெண்கள் திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அங்கப் பிரதட்சிணத்தை தவிர்த்து, திருஅண்ணாமலையார் கோயிலில் அங்க பிரதட்சிணம் செய்தல் நலம்.
சபரிமலை ஐயப்பனுக்கு அபிஷேகம் நடக்கும்போது ஐயனைத் தரிசித்தல் நலம்.

அடியார்
குருதேவா, சதாபிஷேகம் எப்படிக் கொண்டாடுவது?

சற்குரு
மனிதன் பூமியில் பிறந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும், வருடமும் செல்லச் செல்ல அவனுடைய வயது அதிகரித்துக் கொண்டே போவது போல் தோன்றினாலும், உண்மையில் அவனுக்காக நிர்ணயிக்கப்பட்ட ஆயுட் காலம் குறைந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு பிறந்த நாளிலும் மனிதன் இந்த விஷயத்தைத்தான் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருடமும் நாம் இறைவனை நோக்கி முன்னேறுகிறோம் என்பதில் ஐயமில்லை. ஆனால் எந்த அளவு இறைவனை நோக்கி முன்னேறி உள்ளோம் என்பதை ஒவ்வொருவரும் தங்களுடைய பிறந்த நாளிலாவது ஆத்ம விசாரம் செய்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு 60, 80 வயதைக் கடந்தவர்கள் நாம் எந்த அளவு ஆசைகளிலிருந்து விடுபட்டோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு மனிதன் தன்னுடைய ஐம்பதாவது வயதிலிருந்து ஒவ்வொரு ஆசையாக துறந்து விட வேண்டும். ஒரே சமயத்தில் எல்லா ஆசைகளையும் யாராலும் துறந்து விட முடியாது. ஐம்புலன்கள் வழியாகவே ஆசையை மனிதன் அனுபவிப்பதால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு புலனால் அனுபவிக்கும் ஆசையை விட்டு விட முயற்சி செய்ய வேண்டும்.

60 வயதிற்குள் எல்லா ஆசைகளையும் அறவே நீக்கிய மனிதனே சஷ்டியப்த பூர்த்தி என்னும் 60வது பிறந்த நாளைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறான். இதுவே முதல் தகுதி. இந்தத் தகுதியைப் பெறாதவர்கள் சஷ்டியப்த பூர்த்தியை நிறைவேற்ற நினைத்தால் அது வெறும் சாதாரண பிறந்த நாள் கொண்டாட்டமாகத்தான் அமையும். இவ்வாறு உலகியல் விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டே ஆசையைத் துறப்பது கடினம் என்பதால்தான் அக்காலத்தில் வானபிரஸ்தம் என்று வயது முதிர்ந்த காலத்தில் காட்டிற்குச் சென்று தவம் இயற்றும் முறையை வைத்தார்கள். தற்போதைய சமுதாய சூழ்நிலையில் இது சாத்தியமாகாது என்பதால் குடும்பத்தில் இருந்தாலும் பற்றற்ற நிலையில் உலகியல் காரியங்களை நிறைவேற்றி வந்தால் அதுவே வானபிரஸ்த நிலைக்கு இணையானதாக சித்தர்கள் கொள்கிறார்கள்.

முகூர்த்த நாளைச் சரியாகக் கணிக்காமல் திருமணங்களை செவ்வாய், குரு, சுக்கிர மூட காலத்தில் நிகழ்த்துவதால் சந்ததி விருத்தியின்மை, குடும்பத்தில் சச்சரவு, தம்பதிகள் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றன. அறிந்தோ அறியாமலோ இத்தகைய மூட நாட்களில் திருமண வாழ்வைப் பெற்றவர்களுக்கு ஸ்ரீக்ஷிப்ர கணபதி வழிபாடு ஓரளவு பிராய சித்தத்தை அளிக்கிறது. அபிஷேக ஆராதானைகளுடன் முறையாக ஸ்ரீக்ஷிப்ர கணபதியை வணங்குவோரின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருமண தோஷங்கள் அகலும். மணமாகாத ஆண்களுக்கு நெடுநாள் திருமணங்கள் தடைபட்டிருந்தால் தோஷங்கள் விலகி விரைவில் திருமணம் கைகூடும். பாண்டிச்சேரி மணக்குள விநாயகரும், திருஅண்ணாமலை ஆநிறை கணபதியும், ரமணாஸ்ரமம் முன்னுள்ள ஸ்ரீமணக்குள விநாயகரும் ஷிப்ர கணபதியின் சிலா உருவ மூர்த்திகள்.

ஸ்ரீமணக்குள விநாயகர் திருஅண்ணாமலை

தன்னுடைய 60வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதிலிருந்து தான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும். தன்னுடைய மகன், மகள், சொந்த, பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து அனைவரும் தன் மக்களே, உற்றம், சுற்றமே என்ற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தியாக வேண்டும்.

தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். காமத்தை முற்றிலும் துறந்த நிலையை பீஷ்ம ரத சாந்திக்கு அடிப்படை தகுதியாகும். இந்தத் தகுதியை சிறு வயதிலேயே வாய்க்கப் பெற்றவர்களே காஞ்சி பரமாச்சார்யாள், சேஷாத்ரி சுவாமிகள் போன்ற மகான்கள் ஆவார்கள்.

70வது வயதிலிருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். அவனுக்கு சாதி, மத, இன பேதமில்லை. செடி, கொடி, மனிதன், விலங்கு, உயிருள்ளது, ஜடப் பொருள் என்ற பேதமில்லை. இவ்வாறு அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை 80 வயதில் ஒரு மனிதன் பெறும்போதுதான் அவன் 80 வயது நிறைவில் சதாபிஷேகம் ஏற்கும் தகுதி பெறுகிறான். 80 வயது நிறைந்த மனிதன் தானே தெய்வம் ஆகிறான். அதனால்தான் அந்த தெய்வத்திற்கு நாம் சதாபிஷேகம் என்னும் அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றி வணங்குகிறோம்.

இவ்வாறு சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் கொண்டாடுவதற்கு உரிய தகுதியை வளர்த்துக் கொண்டோமா என்பதை முதலில் ஆத்ம விசாரம் செய்து பார்க்க வேண்டும். இன்றைய உலகில் இத்தகைய தகுதி படைத்தோரை விரல் விட்டு எண்ணி விடலாம். இருப்பினும் அனைவருக்கும் பொருந்தக் கூடிய எளிமையான வழிபாட்டு முறைகளை உங்களுக்குக் கூறுகிறேன்.

1. 60, 70, 80 என வயது வரம்பின்றி அனைவருமே தங்கள் பிறந்த நாளன்று தங்கள் வயதிற்குச் சமமான எண்ணிக்கை உள்ள படி அரிசியைச் சமைத்து மற்ற பதார்த்தங்களுடன் தானமாக அளித்தல் சிறப்பு. உதாரணமாக 55 வயது நிறைந்த ஒருவர் தன்னுடைய பிறந்த நாள் அன்று 55 படி அரிசியைச் சமைத்து ஸ்வீட், பாயசம், காய்கறி பொரியல் என மற்ற பதார்த்தங்களுடன் திருக்கோயில் வளாகங்களிலோ, கல்லி நிலையங்களிலோ, முதியோர் இல்லங்களிலோ, வேத பாடசாலைகளிலோ அன்னதானமாக வழங்கலாம்.

2. அவரவர் சக்திக்கு ஏற்றபடி முதியவர்களுக்குத் தேவையான பாய், படுக்கை, கட்டில், மெத்தை, தலையணை, கம்பளி, கைத்தடி போன்ற பொருட்களைத் தானமாக வழங்கலாம்.

3. திருக்கடையூர் ஸ்ரீஅமிர்த நாராயணப் பெருமாள் ஆலயம், ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் எழுந்தருளியுள்ள ஆலயங்கள், திருச்சி உய்யக் கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவநாதர் ஆலயம், சென்னை சித்துக்காடு போன்று ஜீவ சக்தி பூரிக்கும் தலங்கள், திருப்பைஞ்ஞீலி சிவாலயம் போன்று எமபயம் தீர்த்த தலங்கள் இவற்றில் தம்பதிகள் பொன் மாங்கல்ய தாரண வைபவத்தை நிகழ்த்துதல் சிறப்பாகும்.

4. பொன், வெள்ளி மாங்கல்யம், மாங்கல்ய சரடு, மங்கலப் பொருட்கள் இவற்றை சுமங்கலிகளுக்குத் தானமாக வழங்கலாம்.

5. தம்பதியரின் வயதிற்கு ஏற்ப 10 வயதிற்கு ஒரு கலசம் என்ற கணக்கில் கலசங்களில் கங்கை, காவிரி போன்ற புனித நதிகளின் நீரை நிரப்பி வேத, சூக்த, தேவார, திருவாசக, திருப்புகழ், பிரபந்த மந்திரங்களை ஓதி தம்பதிகளை அப்புனித நீரால் நீராட்டுதல் நலம்.

இத்தகைய பொதுவான அன்னதான, அபிஷேக வழிபாடுகளை நிகழ்த்தி வந்தாலே தம்பதிகள் நல்ல ஆரோக்கிய நிலையுடன் பலருக்கும் பயனுற வாழ இறைவன் அருள்புரிவார்.

அடியார்
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் 20 வருடங்களாக தியானம் பழகியும் அதில் எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை என்கிறாரே. விரைவில் தியானம் சித்தியாக யாது செய்ய வேண்டும், குருதேவா?

சற்குரு
நீ தியானத்தில் எந்த அளவு முன்னேறி உள்ளாய் என்பதை உணரக் கூடிய வல்லமை உடையவர் சற்குரு ஒருவரே. சாதகன் ஒருவன் தானாகத் தன்னுடைய தெய்வீக நிலையை உணரும் நிலையைக் கைக்கொள்வது இல்லை. இருப்பினும் தியானத்தில் முன்னேறும் எளிய முறை ஒன்று உள்ளது. நீங்கள் கேளாமலேயே உங்கள் அனைவருக்கும் அந்த முறையைத்தான் தினந்தோறும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்து வருகிறோம். மகாபாரத காலத்தில் நடந்த உண்மை நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகிறேன். அதைக் கேட்டால் உனக்கு எல்லா விஷயமும் எளிதில் விளங்கும்.

வாசமுள்ள மலர்களால்தான் சுவாமியை அர்ச்சிக்க வேண்டும். அவ்வாறு அர்ச்சிக்கும்போது மலர்களை சுவாமியின் மேல் துõக்கி எறியாமல் சுவாமியின் திருப்பாதங்கள், ஆயுதங்கள், திருக்கரங்கள், திருவயிறு, மார்பு, திருமகுடம் இவற்றில் மென்மையாக மலர்களை வைத்து அலங்கரித்தலே சிறப்பாகும். ஒவ்வொரு வித வண்ண மலர்களுக்கும் உரிய மந்திரத்துடன் அர்ச்சசை செய்வதால் உங்கள் வழிபாட்டின் பலன்கள் பன்மடங்காகக் பெருகும். உதாரணமாக, செவ்வந்தி, கொன்றை, பொன்னரளி போன்ற மஞ்சள் வண்ண மலர்களால் அர்ச்சிக்கும்போது “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ” என்றும், வெண்தாமரை, மல்லிகை, வெண்ணிற அல்லி போன்ற வெள்ளை நிற மலர்களால் அர்ச்சிக்கும்போது “ஹரி ஓம் சோமாய நமஹ” என்றும், செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களால் அர்ச்சிக்கும்போது “ஓம் கார்த்திகாய நமஹ” என்றும் பவளமல்லி மலர்களால் அர்ச்சிக்கும்போது “ஓம் ஈஸ்வராய நமஹ” என்றும் அர்ச்சித்தல் சிறப்பு. அனைவரும் லட்சுமி கடாட்சம் தரும் பவளமல்லியை தங்கள் வீட்டில் வளர்த்து இறைவனுக்குச் சூடி மகிழ வேண்டும் என்பது சித்தர்களின் விருப்பம்.

உத்தம குருநாதர் ஒருவருக்கு சீடன் ஒருவன் சுமார் 20 வருட காலம் அயராது சேவை செய்து வந்தான். ஒரு சிறிய ஓலைக் குடிசையில் வாழ்ந்து வந்த அந்த குருவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான் சீடன். தினமும் சூரிய உதய நேரத்திற்கே தன் குருவைக் காண வந்து விடுவான். மாலை சூரியன் மறையும் வரை தன் குருவுக்குத் தேவையான பிச்சையை அக்கம் பக்கத்து வீடுகளில் பெற்றுக் கொடுத்து, அவருக்குத் துணி துவைத்து, சிரமப் பரிகாரம் செய்து, பசுவிற்குத் தீனி வைத்து வீட்டில் உள்ள எல்லா வேலைகளையும் செய்து வந்தான். இரவு தன் வீட்டிற்குத் திரும்பி விடுவான். தன்னுடைய சேவையில் ஒரு நாள் கூட அவன் தவறியது கிடையாது.

ஒரு நாள் நள்ளிரவு திடீரென்று அந்தக் குருநாதர் தன்னுடைய இறுதிக்காலம் நெருங்கிய விட்டதாக உணர்ந்தார். தன்னுடைய ஆருயிர் சீடனுக்காக ஏதாவது ஒரு சிறந்த பரிசை கொடுத்து விட்டுப் போக நினைத்தார். தான் விரும்பியதை ஒரு ஓலைச் சுவடியில் எழுதி அருகில் தங்கியிருந்த ஒரு கழைக் கூத்தாடியிடம் அதைக் கொடுத்து காலையில் வரும் தன்னுடைய அருமைச் சீடனிடம் எப்படியாவது சேர்த்து விடுமாறு சொல்லி விட்டு உயிர் விட்டு விட்டார் அந்த மகான். மறுநாள் காலையில் வழக்கம்போல் தன் குருவைக் காண வந்த சீடன் குருநாதர் மறைந்து விட்டது கண்டு தரையில் புரண்டு அழுது புலம்பினான்.

சீடனின் எல்லையில்லாத சோகத்தைக் கண்ணுற்ற கழைக் கூத்தாடி அவன்தான் அந்த மகான் குறிப்பிட்ட அருமைச் சீடனாக இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டான். சீடனின் அளவு கடந்த குருபக்தியைக் கண்ட கூத்தாடிக்கு அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஒரு சுயநலத் திட்டம் போட்டான். அதன்படி அவன் சீடனிடம், “குழந்தாய், உன்னுடைய குருநாதர் அவர் இறப்பதற்கு முன் என்னிடம் ஒரு ஓலைச் சுவடியைக் கொடுத்து, இதை என் ஆருயிர் சீடன் ஒருவன் காலையில் வருவான், என் மேல் உயிரையே வைத்திருக்கும் அவனிடம் இதை எப்படியாவது சேர்த்து விடு, என்று கூறி உடனே உயிரை விட்டு விட்டார். நீ கதறி அழுவதைப் பார்த்தால் அவர் கூறிய பிரியமான சீடன் நீயாகத்தான் இருப்பாய் என்று நினைக்கிறேன்,” என்று கூறி இடுப்பில் செருகி வைத்திருந்த ஒரு ஓலைச் சுவடியை எடுத்து வெளியே காட்டி விட்டு அடுத்த கணம் மீண்டும் தன் இடுப்பில் பத்திரமாக மறைத்து வைத்துக் கொண்டான். .

சீடனுக்கு ஒரே சந்தோஷம். “ஆஹா, நமது குருநாதர் நம்மை மறக்கவில்லை. மரணப் படுக்கையில் கூட என்னை நினைத்து எனக்காக ஏதோ ஒரு பொக்கிஷத்தை விட்டுச் சென்றிருக்கிறார்,” என்று கூறி ஆனந்தக் கூத்தாடினான். தன்னுடைய இரு கரங்களையும் ஏந்தி அந்தப் பரிசைத் தன்னிடம் தரும்படிக் கலைக் கூத்தாடியிடம் கேட்டான். ஆனால், கழைக் கூத்தாடியோ, “அப்பா, எனக்கு வயதாகி விட்டது. ஊர் ஊராகச் சுற்றி, உயரமான கயிற்றில் நடந்து ஒவ்வொரு நொடியும் மரணத்துடன் போராடி என்னுடைய வாழ்க்கையை நடத்தி வருகிறேன். எனக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறாள். என்னை விட்டால் அவளுக்கு வேறு கதியில்லை. அவள் பெரியவளானதும் யாருக்காவது மணம் முடித்துக் கொடுத்து விட்டால் என்னுடைய பொறுப்பு தீர்ந்து விடும். அதனால் அதுவரை நீயும் எங்களுடன் சேர்ந்து கொஞ்ச காலம் இருந்தால், உன்னுடைய குருநாதர் கொடுத்த ஒலைச் சுவடியை உன்னிடம் கொடுத்து விடுகிறேன்,” என்று சொல்லி ஓலைச் சுவடியை தர மறுத்து விடுவான்.

முன்வினையும் பின்வினையும் தீர்த்து வைப்பாய், எறும்பீசா

சீடனுக்கு என்ன செய்வதன்று தெரியவில்லை. வேறு வழியின்றி அந்த கழைக் கூத்தாடி செல்லும் இடங்களுக்கெல்லாம் தானும் சென்று அவர்களுடன் சேர்ந்து தானும் அந்தத் தொழிலைச் செய்து பிழைப்பு நடத்தி வந்தான். சிறிது காலம் சென்றதும் ஒரு நாள் உயரமான இடத்தில் கயிற்றில் நடந்து கொண்டிக்கும்போது அந்த கழைக் கூத்தாடிக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து அந்த இடத்திலேயே உயிரை விட்டு விட்டான். கழைக் கூத்தாடியுடன் சேர்ந்தே வாழ்ந்து கொண்டிருந்த அவன் மகளுக்கு அந்த ஓலைச் சுவடியின் ரகசியம் தெரிந்திருந்தது.

உடனே அவள் அந்த ஓலைச் சுவடியை எடுத்து தன் இடுப்பில் செருகிக் கொண்டு, தான் ஒருவரிடம் பாதுகாப்பாக மண வாழ்க்கையைப் பெறும் வரை அந்தச் சீடன் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்றும், பின்னர் அந்த ஓலைச் சுவடியை சீடனுக்குத் தருவதாகவும் அவள் வாக்குறுதி தந்தாள். சீடனுடைய நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது. ஏற்கனவே 20 வருடம் தன் குருநாதரிடம் அயராது சேவை செய்த அவன், கழைக் கூத்தாடியிடம் மாட்டிக் கொண்டு அவனிடம் மேலும் ஒரு 20 வருட காலம் ஊர் ஊராகச் சுற்றி அவர்களுடன் கூத்தாடி வந்தான். இப்போது “இறைவன் சோதனை இன்னும் எத்தனை வருட காலத்திற்குத் தொடரும் என்று தெரியவில்லையே” என்று மனம் நொந்தவனாக குருநாதரின் ஓலைச் சுவடி எப்படியாவது தனக்குக் கிடைக்க வேண்டும் என்று இடைவிடாது இறைவனிடம் பிரார்த்திக் கொண்டு இருந்தான்.

காலம் கடந்து கொண்டிருந்தது...

சீடனின் பரிதாபமான நிலையைப் பார்த்து மனமிறங்கிய அந்தக் கூத்தாடியின் மகள் தானாகவே ஒரு நாள் குருநாதர் தந்த ஓலைச் சுவடியை சீடனின் கரங்களில் கொடுத்து விட்டாள். சீடனுக்குத் தாங்க முடியாத சந்தோஷம். உற்சாகத்தில் உலகையே மறந்தான். இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு மிகவும் ஆவலுடன் அந்த ஓலைச் சுவடியைப் பிரித்து அதில் உள்ள மணி வாசகங்களைப் படித்துப் பார்த்தான். அதில் எழுதி இருந்ததாவது.

நீ
ஒருவருக்குத் தானம் கொடுத்து
அந்தத் தானத்தை வாங்கியவருக்கு
தானும் தானம் செய்ய வேண்டும்
என்ற எண்ணம்
எப்போது உதிக்கிறதோ
அப்போது
உன் தியானம் கை கூடும்.

இவ்வாறு அயராது சேவை செய்து, 50 வருடங்களுக்கு மேலாக உழைத்து ஓடாகத் தேய்ந்து, அரும்பாடு பட்டு அந்த சீடன் மகாபாரத காலத்தில் கற்ற மணி வாசகத்தைத்தான் உங்களுக்கு இங்கே மிக மிக எளிமையாக சொல்லித் தருகிறோம். எப்போதெல்லாம் முடியுமோ, எங்கெல்லாம் முடியுமோ, என்னவெல்லாம் கொடுக்க முடியுமோ அனைத்தையும் தானம் செய்து கொண்டே இருங்கள். உங்களிடம் தானம் பெற்றவர்கள் என்றாவது ஒரு நாள் நாமும் இந்த நற்காரியத்தைச் செய்தால் என்ன என்று நினைத்து ஒரு சோற்றுப்பருக்கை தானம் செய்தால் கூட நீங்கள் தியானத்தில் வெற்றி அடைவீர்கள். அதுவரை தியானம் செய்வதாக சொல்லி தூங்கிக் கொண்டுதான் இருப்பீர்கள். இதுவே உண்மை.

அடியார்
குருவே, அபிராம பட்டரிடம் மன்னர் இன்று என்ன திதி என்று கேட்டபோது அவரோ பூரண அமாவாசையான அன்று பௌர்ணமி என்று உரைத்ததாக மக்கள் சொல்லுகின்றார்களே ?

ஸ்ரீஅபிராம பட்டர் திருக்கடவூர்

சற்குரு
உன்னுடைய சந்தேகம் நியாயமானதே. இறையடியார் என்பவர் மறந்தும் கூட பொய் கூற மாட்டாரே ? அப்படி இருக்க அபிராம பட்டர் எப்படி இவ்வாறு கூறினார் என்பதுதானே நீ கேட்கும் கேள்வி. நாம் காணும் 27 நட்சத்திரங்கள் என்பவை உண்மையில் ஒரு தொலை தொடர்பு சாதனம்போல் செயல்படுபவையே என்று உங்களுக்குப் பலமுறை கூறியிருக்கிறேன். அது போல் சக்தி லோகங்களும் கோடி கோடியாகத் திகழ்பவையே. அபிராமி லோகம், காந்திமதி லோகம், லலிதா பரமேஸ்வரி லோகம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றில் எல்லாம் சூரிய சந்திர மூர்த்திகள் உலா வருகின்றனர் என்றாலும் அம்மூர்த்திகளின் தன்மையை சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கூறுவது கடினமே. அதனால் மன்னர் அபிராமி பட்டரைக் கேட்டபோது அபிராம பட்டர் கால தேசம் கடந்த நிலையில் இருந்ததால் அவர் அனுபவித்த அபிராமி லோகத்தின், அன்னை அபிராமியின் முக அழகை வர்ணிக்க அவரால் இயலவில்லை. அதனால் அவர் அன்னை அணிந்திருந்த தாடங்கத்தின் அழகையே மன்னருக்குப் புரியும் வகையில் பௌர்ணமி நிலவொளியாக வர்ணித்தார். ஆனால், அதையும் புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் மன்னன் இல்லாததால் அபிராம பட்டருக்குத் தண்டனை அளித்தான். அபிராம பட்டர் இது குறித்து சற்றும் கவலை கொள்ளவில்லை என்றாலும் உலகில் பக்தியின் மகிமையை, சிறப்பாக அபிராம பட்டர் போன்ற இறை அடியாரின் புகழை உலகறியச் செய்ய அன்னை விரும்பியதால் அபிராமி அன்னையின் தாடங்க அழகே அனைவரும் காணும் வண்ணம் பௌர்ணமி நிலவொளியாக எங்கும் கரை புரண்டு ஓடியது என்பதே உண்மை. மன்னர் அபிராம பட்டருக்குத் தண்டனை அளித்தது அவர் பொய் சொன்னார் என்பதை விட நாடாளும் மன்னரான தன்னை ஒரு சாதாரண குடிமகன் மதிக்கத் தவறிவிட்டானே என்ற அகந்தையே மன்னரை அத்தகைய தவற்றைச் செய்ய தூண்டியது. பக்தியின் உச்சியில் பிரகாசித்த அபிராம பட்டரோ பௌர்ணமி நிலவொளியைக் காட்டி விட்டதால், “அரசே, இன்று பௌர்ணமி என்பதை நிரூபித்து விட்டேன். அதனால் தங்களை தீ வைத்துக் கொளுத்தலாமா ?” என்று கேட்டிருக்கலாம் அல்லவா ஆனால் அவர் அவ்வாறு மனதளவில் கூட அரசரைத் தண்டிக்க நினைக்கவில்லை. இதுவே பக்திக்கும் அகம்பாவத்திற்கும் உள்ள வித்தியாசம், இதை உணர்த்தியவளும் அபிராமி அன்னையே, பட்டரின் பக்தியே.

அடியார் (கண்களில் நீர் மல்க)
சற்குருவே, என்னுடைய மனைவி கர்ப்பமுற்றிருக்கிறாள். மருத்துவர்கள் அவளைப் பரிசோதித்து விட்டு கர்ப்பத்திலிருக்கும் சிசு போதுமான வளர்ச்சி இல்லாததால் அந்தக் கருவைக் கலைத்து விடும்படிக் கூறுகிறார்கள். இந்நிலையில் என்ன செய்வது என்று புரியவில்லை ...

ஸ்ரீமகாகணபதி ஆக்கூர்

சற்குரு (கருணயுடன் நோக்கி)
மனைவி கர்ப்பம் தரித்தவுடன் என்னென்ன திருத்தலங்களுக்குச் சென்று எந்தெந்த இறைமூர்த்திகளை எல்லாம் வணங்க வேண்டும், எந்த பூஜை முறைகளை எல்லாம் கணவனும் மனைவியும் இயற்ற வேண்டும் என்று தெளிவாக நம் முன்னோர்கள் எடுத்துரைத்துள்ளார்கள். இதை விடுத்து, முதன் முதலில் பணத்திற்காக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களை அணுகி அதனால் வரும் வேதனைகளைத் தெரிவித்தால் அடியேன் என்ன செய்வது ? இருந்தாலும் வழிகாட்டி என்று வந்து விட்டால் நீ கேட்கும் கேள்விகளுக்கு விடைசொல்ல வேண்டியது அடியேனுடைய பொறுப்புதான். இந்த மனிதனப் பிறவி என்பது என்று வேண்டுமானாலும் அழியக் கூடியது. அழியக் கூடிய குழந்தைச் செல்வத்தை நினைத்து உன் கண்களில் நீர் பெருகுகிறதே ... ஆனால், என்றாவது அழியாப் பொருளான, நிரந்தர வஸ்துவான இறைவனை நினைத்து நீ ஒரு துளி கண்ணீர் சிந்தி இருந்தாலும் அது எவ்வளவு சிறப்புடையதாக இருக்கும் ? சரி, போகட்டும். உன்னுடைய பிரச்னையைக் கவனிப்போம். திருப்போரூர் திருத்தலத்தில் ஸ்ரீகுக்குடாப் ஜதரர் அருள்பாலிக்கிறார். குக்குட ஆசனம் என்ற ஒரு அற்புத ஆசனம் உண்டு. குக்குடம் என்பது கர்பப்பையையும் குறிக்கும். குக்குட ஆசனத்தை முறையாக ஒரு சற்குருவின் மேற்பார்வையில் நிறைவேற்றும்போது பூமியின் புவிஈர்ப்பு சக்தியை மிஞ்சி எவ்வளவோ அற்புதங்களை நிறைவேற்றலாம். எனவே கர்பப்பையில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் எவ்வித வேதனையையும் இந்த குக்குட ஆசனம் சீர்செய்யும். ஆனால், இந்த குக்குட ஆசனத்தைப் பயிலும் அளவிற்கு பெண்களுக்கு போதுமான உடல் வளம் இல்லை என்பது ஒரு புறம் இருக்க இந்த ஆசனத்தை முறையாகப் பயிற்றுவிக்கும் சற்குருமார்களும் அரிதாகி விட்டனர். இருந்தாலும் திருப்போரூர் சிவத்தலத்தை ஒரு நாளைக்கு ஏழு முறை என்ற கணக்கில் ஏழு நாட்கள் உரியவர் துணையோடு கர்ப்பிணிப் பெண்கள் வலம் வந்து வணங்குவதால் தங்கள் கர்ப்பம் முறையாக வளர்ச்சி பெற இத்தகைய வழிபாடு அவர்களுக்கு துணை நிற்கும். ஒரு வேளை ஒரு சில அங்கக் குறைபாடுகளுடனோ அல்லது போதுமான மனவளர்ச்சி இல்லாத குழந்தை அவர்களுக்குப் பிறந்தாலும் அதுவும் இறைவனின் விருப்பமே என்று தெளிய வேண்டும். தம்பதிகள் திருப்போரூர் ஈசனை வலம் வந்து வணங்கி இருந்தால் நிச்சயம் இந்த மன உறுதி அவர்களிடம் இருக்கும். பெண்கள் கர்ப்பம் தாங்கி இருக்கும்போது ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய வழிபாடுகளை இயற்றுவதுடன் சுவாசத்திற்கு உரிய வந்தவாசி ஈசனையும், சரியான உடலமைப்பைக் கொடுக்கும் திருப்போரூர் ஈசனையும், எந்த குறையையும் களைந்து நல்லபடியாக ஆக்கும் ஆக்கூர் ஈசனையும் ஒரு முறையாவது தரிசித்தல், அருள் பெறுதல் சிறப்பு. மூளை வளர்ச்சியே இல்லாது, அங்கக் குறைவுடன் நிச்சயமாக குழந்தை பிறக்கும் என்று மருத்துவ ரீதியாக உணர்ந்தால் கூட அதையும் குழந்தைச் செல்வமாகப் பெற்றுக் களித்தலே நம் முன்னோர்கள் மரபு என்பதை மறக்க வேண்டாம். (ஒரு நாளைக்கு ஏழு முறை என்று ஏழு நாள் திருப்போரூரை வலம் வரும்போது அது 49 என்ற கணக்கில் அமையும். இதில் 4, 9 என்ற எண்கள் ராகு பகவானுக்கும், செவ்வாய் பகவானுக்கும் உரியதாக அமைவதால் கர்ப்பத்தை பலவீனமாக்கும் எத்தகைய எதிர் சக்திகளையும் இந்த வலங்கள் முறியடிக்கும் என்பதே இந்த எண் கணித சக்திகள் உணர்த்துவதாகும்.) தற்காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மலை ஏறக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது. பிராணவாயு குறைவாக இருக்கும், முற்றிலும் வேறுபட்ட சீதோஷ்ண நிலைகளை மலைப் பகுதிகளில் சந்திக்கக் கூடாது என்றுதான் நம் முன்னோர்கள் இந்தக் கருத்தை தெரிவித்தார்களே தவிர மலை மேலுள்ள தெய்வ சக்திகளைப் பெறக் கூடாது, இறை தரிசனங்களை பெறக் கூடாது என்பது நம் முன்னோர்களின் எண்ணம் நிச்சயம் கிடையாது.

சம்வர்த்தன தாயுமான
பாண லிங்க தரிசனம் மலைக்கோட்டை

எது எப்படியிருந்தாலும் திருஅண்ணாமலை, பழநி, திருச்சி மலைக்கோட்டை, திருப்போரூர் போன்ற மலைகளை வலம் வருவது நிச்சயம் நன்மை பயப்பதே என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. திருஅண்ணாமலை, திருச்சி, பழநி போன்ற தலங்களில் கர்ப்பிணிப் பெண்கள் வலம் வர முடியாத அளவிற்கு அவர்ளின் உடல் நிலை இருந்தால் அவர்களின் கணவன், தாய், தந்தை, சகோதர சகோதரிகள் என்ற நெருங்கிய உறவினர்கள் வலம் வரலாம். ஆனால், திருப்போரூர் மலை மிகச் சிறிய மலையாக அமைந்திருப்பதாலும் இன்னும் வேறு சில தெய்வீக காரணங்களாலும் கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் தம்பதி சகிதம் வலம் வர வேண்டும். பொதுவாக, திருத்தலங்களில் பிரதட்சிணம் வரும்போது கால் பாதங்கள் மூலமாக தெய்வீக சக்திகள் உடலில் கிரகிக்கப்படும் என்பது விதியாக இருந்தாலும் திருப்போரூர் திருத்தலத்தில் 12 அங்குலத்திற்கு மேல்தான் பிரதட்சிண சக்திகள் கிரகிக்கப்படும் என்பதே திருப்போரூர் திருத்தலத்தின் மகாத்மியமாக சித்தர்கள் உரைக்கும் இரகசியமாகும். வேறு எந்த திருத்தலத்திலும் கிட்டாத அபூர்வ பாத ரேகை சக்தியாக இது அமைந்துள்ளதால்தான் கர்ப்ப காலத்தில் ஏற்படும் எத்தகைய உபாதைகளையும் தீர்ப்பதாக திருப்போரூர் கிரிவலம் அமைந்துள்ளது.
தாயுமான வெண்ணையாகி தயை கூர்ந்து உருகி
மாயமான் மழுவும் ஏந்தி மயிர்க்கூச் செறிந்து
ஏழையென் உடல்வலி தெரிந்திடாமல்
பிழை பொறுத்து மகவு ஈந்திட அருள்வாயே
என்ற துதியை ஓதியோ அல்லது

தான்தோன்றி தரணியில் தந்திடும்நின் புகழ் முன்பே
வான்தோன்றி வருமுன்னை வந்தம்மா நின்புகழ்பாட
யான்தோன்றி யென்றும் நின்னருள் பரப்பியே நினைவில்
நானெனும்நீ தோன்றியே நின்றாடுவாய் பராசக்தியே
என்ற அங்காளி பரமேஸ்வரி துதியையோ ஓதி திருப்போரூர் பிரணவ மலையை வலம் வருதல் சிறப்பே. எமது ஸ்ரீஅகஸ்திய விஜயம் ஜனவரி, மார்ச் 1997 இதழ்களில் திருப்போரூர் மகிமை குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு நம் குழந்தைகள் நம்மை பாதுகாப்புடன் வசதியாக வைத்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் தோன்றினால் அவர்கள் திருபுவனம் திருத்தலத்தில் ஸ்கந்தாக்னி வில்வமரத்தை வணங்கி வழிபடுதல் நலம்.

அடியார்
சற்குருவே, தியானத்தின் ஆரம்ப கட்டமாக மனம் குவிதல் ஏற்படுவதாக பலரும் கூறுகிறார்களே. ஆனால், தாங்கள் தியானம் பற்றிக் குறிப்பிடும் கருத்துக்கள் மாறுபட்டதாகத் தோன்றுவதால் குழப்பம் ஏற்படுகிறதே ... ?
சற்குரு
தியானம் பற்றிய கருத்துக்களை நீங்கள் சற்குருவிடம் பயில்வதற்கும் புத்தகங்கள் மூலம் பயில்வதற்கும் உள்ள வேறுபாட்டையே இது குறிக்கிறது. சற்குருவானவர் தம் சீடர்களுக்கு இறை அறிவை, உணர்வை தாயினும் சாலப் பரிந்து ஊட்டுவதால் ஒவ்வொரு சீடனின் தகுதியைக் குறித்து அவரவருக்கு ஏற்ற உணவை ஊட்டவே முயற்சிக்கிறார். உதாரணமாக, மனம் குவிதல், தியானம் என்ற இரண்டு கருத்துக்களை மட்டுமே பகவான் ரஜனீஷும் அரவிந்தமாதாவும் வெவ்வெறு விதமாக வர்ணிப்பார்கள். இருவருமே அத்வைத தத்துவத்தில் உச்சக்கட்டத்தில் பிரகாசிப்பவர்கள். இவ்விருவர் கூற்றிலுமே இத்தகைய மலையளவு வித்தியாசம் இருப்பது போல் தோன்றினால் மற்றவர்களின் கருத்துக்களை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்ள முடியும் ? தியானம், மனம் குவிதல் (meditation, concentration) போன்ற கருத்துக்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வதை விட இந்த நிலைகள் கூட்டுவிக்கும் தியாகம் பற்றிய ஒரு நிகழ்ச்சியை இங்கு விவரிக்கிறேன். நமது ஆஸ்ரமத்தில் திருஅண்ணாமலை கார்த்திகை தீபம் சமயத்தில் எவ்வளவு பரபரப்பாக மின்னல் வேகத்தில் அன்னதானத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறும் என்பது நீங்கள் அறிந்ததே. அத்தகைய ஒரு விறுவிறுப்பான சூழ்நிலையில் ஐந்தாறு வயதுடைய ஒரு குழந்தை வேகமாக ஓடிவந்து அடியேன் ஹாலிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தபோது அடியேன்மேல் மோதி விட்டது. வெகுவேகமாக அந்த குழந்தை ஓடி வந்ததால் அடியேனும் அந்த வேகம் தாங்காது கீழே விழுந்து விட்டேன். பின்னர் ஆஸ்ரம அடியார்களும் அந்த குழந்தையின் அம்மாவும் ஓடி வந்து எங்களைத் தூக்கி நிறுத்தி ஆஸ்வாசப் படுத்தினார்கள். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு ஒரு சிறு குழந்தை தன் விளையாட்டு சூழலில் ஏற்படுத்திய ஒரு தவறுபோல் தோன்றினாலும் உண்மையில் அந்த குழந்தை அன்று தன் கால் ஒடிந்து பெருத்த வேதனையை அனுபவிக்க வேண்டி இருந்தது என்பது விதி. ஒரு குழந்தை அதிலும் பெண் குழந்தை தன் கால் ஒடிந்து நின்றால் எப்படி இருக்கும் என்பதை நன்கு யோசித்துப் பார்த்தால்தான் அந்தக் கொடுமையான சூழ்நிலை புரியும். ஆனால், அந்தக் குழந்தையின் தாய் திருஅண்ணாமலை அடியார்களுக்காக அன்னம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததால் அந்தக் குழந்தை அனுபவிக்க வேண்டிய மலை அளவு வேதனையை ஒரு மிகச் சிறிய விபத்தின் மூலம் சரி செய்தான் நம் அண்ணாமலை ஈசன்.

ஸ்ரீகிருஷ்ண பகவான்
நாச்சியார்கோவில்

(Meditation, concentration என்ற இரு பதங்கள் குறிக்கும் அர்த்தங்களை பக்தர்கள் உணராவிட்டாலும் இந்த இரு பதங்கள் குறிக்கும் இறை அனுகிரகத்தை பெற்று அடியார்களுக்கு வழங்கத் தயாராக இருப்பவர்களே சற்குருமார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொண்டால் போதுமே. அதை அளிப்பதே குருவின் மேல் சீடர்கள் கொள்ளும் அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் ஆழத்தைப் பொறுத்தே விளையும் சுவையும் அமையும் என்பதே உண்மை. இங்கு நம் சற்குரு ஒரு விபத்தை ஒரு சாதாரண தடுக்கி விழும் நிகழ்ச்சியாக மாற்றுவதற்கு தன் புண்ணிய சக்தியை ஈந்த தியாகத்தை வெளியிடவில்லை என்பதே இத்தகைய தியாகசீலரை நாம் அனைவரும் சற்குருவாக பெற்றதன் பாக்கியமாகும். பகவான் ரஜனீஷ் காமம் மூலம் கடவுளைக் காணலாம் என்பதை உலகிற்கு உணர்த்த எழுந்தருளியவர். இது கலியுகம் என்பதால் காமம் செல்லுபடியாகாது என்று பலர் மறுத்துக் கூறியும் பூமியில் தோற்றம் கொண்டார். எதற்காக ? தன் தியாகம் மூலம் இதை மற்றவர்களும் நடைமுறையில் உணரவே. பகவான், மாதா இவர்கள் தியானத்தைப் பற்றி கூறும் விளக்கங்கள் அனைத்துமே பாலுணர்வைக் கடந்த நிலையில் உணரக் கூடியதே. அதாவது ஒருவன் தன்னை ஆண் என்றோ பெண் என்றோ நினைத்துக் கொண்டிருக்கும் வரையில் கடவுளைப் பற்றி துளியும் உணர முடியாது. ஆனால் இந்த உணர்வைக் கடந்து செல்தல் என்பது அவ்வளவு எளிதா என்ன ? இதை நம் முன்னோர்கள் தெளிவாக உணர்ந்திருந்ததால்தான் கோயிலுக்குச் சென்று இறை மூர்த்திகளை வழிபடுவதாக தியான முறையை எளிமைப்படுத்தித் தந்துள்ளனர். இதுவே இன்றைய கலியுக மனதிற்கு புரியக் கூடிய வழிபாட்டு முறையாகும். சாட்சாத் பெருமாள் மூர்த்தியின் தாயான யசோதா தேவிக்கும் வீராதி வீரனான அர்ச்சுனனுக்கும் தம் விஸ்வரூப தரிசனத்தை சுவாமி மனமுவந்து காட்டிய போது கூட அதை ஏற்க முடியாமல் அவர்கள் தவித்தார்கள் என்றால் சாதாரண மனிதனின் நிலை எப்படி இருக்கும் ? எனவே இறைவனின் இந்த விஸ்வரூபத்தை தரிசிக்கும் வாயிலே மனிதனின் இதயத் துடிப்பில், சுவாசத்தில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆரம்ப கட்ட முயற்சி, பயிற்சியாகும். வாயில்களே காட்சி ஆக மாட்டா என்பதை உணர்ந்தால் அனைத்தும் தெளிவாகி விடும். ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு முறை, “பலரும் எப்படி சுவாமி நீங்கள் எப்போதும் கடவுளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், அவரைப் பற்றி மட்டுமே பேசுகிறீர்கள் என்று ஆச்சரியமாக கேட்பார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. பலதரப்பட்ட மரங்கள் உண்டு. ஒரு சில மரங்கள் ஏதோ கோணல் மாணலாக வளரும். சில மரங்கள் எல்லா திசைகளிலும் பரவும் கிளைகளுடன் காட்சி அளிக்கும். நான் வானத்தை நோக்கி நேரே வளரும் மரத்தைப் போன்றவன். அதாவது என்னுடைய நினைவு, சொல், செயல் அனைத்தும் கடவுளை நோக்கியே அமைந்துள்ளன, அவ்வளவே,” என்று பணிவுடன் விடையளித்தார். திசைகாட்டும் கருவியை எந்தச் திசையில் வைத்தாலும், எந்தத் திசைக்கு நகர்த்தினாலும் அதன் முள் எப்போதும் வடக்கு திசையையே காட்டிக் கொண்டிருக்கும். அது போல் நம் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் குருவிற்கு உரித்தான வடக்கு திசையைக் காட்டும் திசைமானியைப் போல் குருவைச் சுட்டியே அமைந்தால் போதும், நாம் இதைவிட சாதிக்க வேண்டியது எதுவுமே உலகில் இல்லை. )

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam