யாழமராந்தக சொல்லிசை நின்னிசையே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயம்
நான் இல்லையேல் அனைத்தும் உண்டு!

எப்போது குரு சுக்ராச்சாரியார் தன் சீடன் மகாபலியை ஏற்றுக் கொள்வார் என்ற கேள்விக்கு பல அடியார்களும் அற்புதமான பதில்களை அளித்துள்ளனர். வெற்றி தரும் விஜய விநாயகர் என்ற பெயரை உடைய ஒரு அடியார் இந்த கேள்விக்கான சரியான விடையை அளித்துள்ளதால் அவருக்கு சற்குரு ஒரு புதிய வயலினை அளிக்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த கேள்வி குறித்து சற்குரு கூறும் பதில் என்ன?
மகாபலியை எப்போது குரு சுக்ராச்சாரியார் தன் சீடனாக ஏற்றுக் கொள்வார் என்பதை அறியும் முன்னால் மகாபலி ஏன் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டான் என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஒரு மனிதன் வளர வளரத்தான் அவனுடைய தான் என்ற அகம்பாவமும் அதற்கு ஏற்ற முறையில் வளர வேண்டும். அவனுடைய உடல், மன வளர்ச்சியை விட தான் என்ற அகம்பாவ உணர்வு அதிகமாக வளர்ந்து விட்டால் அது முறையான வளர்ச்சி கிடையாது. மாதா அமிர்தானந்தாவின் சொற்பொழிவுகளில் இருந்தும் நாம் இந்த அற்புத உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.

இந்திர தீர்த்தத்திலிருந்து கிட்டும்
சகல சௌபாக்ய ஜோதி தரிசனம்

அசுர குலத்தைச் சேர்ந்த மகாபலி தன் குடிமக்கள் மீது உயிரையே வைத்து அவர்களை பேணிக் காத்தான் என்பது உண்மையே என்றாலும் அவனுடைய அகம்பாவமோ வானளாவ வளர்ந்து நின்றது. மக்கள் மீது உண்மையான அன்புள்ள இறைவனான மகாவிஷ்ணு இது குறித்து அறியாதவரா? தாயினும் சாலப்பரிந்து ஊட்டும் உத்தம குருவான சுக்ராச்சாரியார் இது பற்றி அறியவில்லையா?

இவ்வாறு உண்மை நிலையை உணர்ந்த மகாவிஷ்ணுவும் குரு சுக்ராச்சாரியாரும் மகாபலியை நன்னெறிப்படுத்துவதற்காக ஆடிய நாடகமே, மகா விஷ்ணு எடுத்த அவதாரமே வாமன அவதாரமாகும்.

பல அடியார்களும் கொண்டராங்கி தீபத்தை தரிசித்து அதனால் கிட்டும் அனுகிரகத்தால் மகாபலியை குரு ஏற்றுக் கொள்வார் என்று பதில் அளித்துள்ளனர். கொண்டராங்கி தீப தரிசனத்தால் புண்ணியம் மிக மிக அதிகமாக வளருமே தவிர இதனால் எல்லாம் எந்த பக்தனுடைய அகம்பாவமும் குறையாது என்பதை நினைவில் கொள்ளவும். இதனால்தான் நம் சற்குரு தன்னுடைய நெருங்கிய சீடர்கள் எவருக்கேனும் நற்காரியங்களால் அகம்பாவம் அதிகமாக வளர்ந்து விட்டால் அவர்கள் தொடர்ந்து நற்காரியமே செய்ய முடியாது ‘தடை’ விதித்து விடுவார்.

இவ்வாறு வானுக்கும் பூமிக்கும் பாதாள லோகத்திற்கும் பரந்து விரிந்து நின்ற மகாபலியின் தான் என்ற அகம்பாவத்தை அவனுக்கு உணர்த்துவதற்காகவே மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலியின் ஆணவ எண்ணங்களை அழிப்பதாக வானுக்கும் பாதாள லோகங்களுக்கும் தன் திருவடிகளை உயர்த்தி, அளந்து, மகாபலியை பாதாள லோகச் சிறையில் அடைத்தது மட்டுமல்லாமல் தினமும் அவனுக்கு தன்னுடைய திவ்ய தரிசனத்தையும் தவறாது அளித்து வந்தார்.

நகைகளையோ, ஒருவர் உடைமைகளையோ திருடி விட்டால் அவரை சிறையில் அடைத்து விடுகிறது அரசாங்கம். ஏன், அந்தத் திருடன் தன்னுடைய செயல் தவறானது என்று தனிமையில் சிந்தித்து தன்னைத் தானே திருத்திக் கொள்ளவே. எந்த அரசாங்கமும், எந்த கடுமையான தண்டனையும் ஒருவரைத் திருத்தவே முடியாது, தவறு செய்தவர்கள் தங்கள் தவறுகளை தாங்களே உணர்ந்து தங்களைத் தாங்களே திருத்திக் கொண்டால்தான் அது முழு மனதுடன் அமையும் திருந்திய வாழ்க்கையாக அமையும்.

இதைத்தான் நம் சற்குருவும் கோவணாண்டியின் அமுத கீதையாக, “நீ திருந்தி வாழ், பிறரைத் திருத்த முயற்சிக்காதே!” என்று அளித்துள்ளார்.

எனவே மகாபலி எப்போது தன் அகம்பாவத்தை தானாகவே உணர்கிறானோ அடுத்த நொடி தினமும் அவனுக்கு தரிசனம் நல்கும் மகா விஷ்ணுவும் அதை அறிந்து கொண்டு விடுவார், குரு சுக்ராச்சாரியாரும் திருந்திய சீடனை அரவணைக்க பாதாள லோகத்திற்கே ஓடோடி வந்து விடுவார். மனித குலத்தில் இவ்வாறு அகம்பாவத்திற்கு ஆட்படாத மனிதர்களே இல்லை எனலாம். அத்தகையோர் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைவதே மகாபலியின் வரலாறு, குரு சுக்ராச்சாரியாரின் அரவணைப்பு, மகாவிஷ்ணுவின் வாமன அவதார லீலை.

மனிதனின் அகம்பாவம் அவன் உடல், மன வளர்ச்சியைத் தாண்டக் கூடாது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவே நாச்சியார் கோயில் திருத்தல விமானத்தின் கீழ் எழுந்தருளிய வாமன அவதார சித்திரத்தை கொண்டராங்கி திருத்தல மகிமை கட்டுரையில் அளித்திருந்தோம்.

சற்குரு அருளும் தயாநிதி

குருவின் எதிர்பார்ப்பில் கோடியில் ஒரு பங்கு கூட ஒரு உத்தம சீடனால் நிறைவேற்ற முடியாது என்பதே குரு சிஷ்ய உறவு பற்றி நம் முன்னோர்கள் கூறுவதாகும். நம் சற்குரு ஆஸ்ரமத்தில் இருந்தபோது தம் சீடர்களுக்கு அவரவர் உடல், மன சக்திகள் தாங்கக் கூடிய அளவில்தான், நிறைவேற்றக் கூடிய வேலைகளை அளிப்பார் என்றாலும் அந்த வேலைகளையே நிறைவேற்ற முடியாமல் தடுமாறுபவர்களே சிஷ்ய கோடிகள் அனைவரும் என்ற உண்மையை நம் ஆஸ்ரமத்தில் பணி புரிந்தோர் உணர்ந்திருப்பர்.

நாக தோஷங்கள் களையும்
திருஅண்ணாமலை ஜோதி தரிசனம்

இதில் சீடன், மனைவி என்ற எந்த பாகுபாட்டையும் மேற்கொள்ளாமல் அனைவரும் இறை சொரூபங்கள் என்ற நிலையிலேயே அவர்களை வழிநடத்தியவரே நம் சற்குரு. எப்போது அன்னதானம் அளித்தாலும் அந்த உணவை தானத்திற்கு அளிக்கும் அடியார்கள் அந்த உணவு சரியாக உப்பு, காரம், சூடு என்ற உண்ணக் கூடிய விகிதங்கள் கலந்த நிலையில் உள்ளனவா என்று சரி பார்த்தே வழங்க வேண்டும் என்பதை நம் சற்குரு அடிக்கடி அடியார்களுக்கு உணர்த்தி வந்தார்.

ஒரு முறை ஒரு அடியார் இவ்வாறு அன்னதானத்திற்காக சமைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை ஆஸ்ரமத்திற்கு வெளியே விநியோகிப்பதற்காக எடுத்துச் சென்றார். அப்போது வழியில் அமர்ந்திருந்த நம் சற்குரு, “என்ன சார், அந்த பிரசாதத்தை சிறிது வாயில் போட்டு பார்த்தீர்களா ?” என்று வழக்கமான பாணியில் கேட்டார்.

அன்னதான பொறுப்பில் இருந்த அடியார் தன் தவறை உணர்ந்து அசடு வழியும் முகத்துடன், “இல்லை...”, என்பதற்கு அறிகுறியாக தன் தலையை ஆட்டி பதில் கூறவே, நம் சற்குருவும், “பரவாயில்லை... இப்போதாவது அதைச் சரி பாருங்கள்...”, என்று கூறவே அந்த அடியாரும் அந்த சாம்பார் சாத பிரசாதத்தை சற்று வாயில் அள்ளிப் போட்டார். அவ்வளவுதான், அவர் முகம் போன போக்கு சொல்வதற்கில்லை. “வாத்யாரே, இதில் உப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது...”, என்று கூறவே நம் சற்குருவும் சிரித்துக் கொண்டே, “சரி போனால் போகிறது... இப்படியே இந்த பிரசாதம் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? சரி சரி, பரவாயில்லை, இப்போதாவது இதை சரி செய்து அன்னதானத்திற்கு அளியுங்கள்...”, என்று கூறவே மேலும் பத்து படி அரிசி சாதம் தயார் செய்யப்பட்டு ஏற்கனவே இருந்த பிரசாதத்துடன் கலந்து சரியான ருசியுள்ள பிரசாதம் தயார் செய்யப்பட்டது.

பொதுவாக, சமையல் அறையை விட்டு வெளியில் சென்ற எந்த சாதத்தையும் சற்குருவின் மனைவி ருசி பார்க்காமல் இருந்ததே கிடையாது. ஆனால், எப்படியோ அவருடைய ‘கழுகுக் கண்களையும்’ தப்பி இந்த பிரசாதம் வெளியே வந்து விட்டது. இது அடுத்த நாளே அடியார்களுக்குத் தெரிய வந்தது என்றாலும் முதல் நாள் இரவு நடந்த ‘தவறை’ எப்படி சற்குரு தன் மனைவிக்கு சுட்டிக் காட்டினார் என்பதும் நாம் அனைவரும் படித்துக் கொள்ள வேண்டிய ஒரு சுவையான தாம்பத்ய பாடமே.

ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்திக்கு வெண்பட்டு வஸ்திரமும் ஸ்ரீஆனந்தவல்லி அம்மனுக்கு ரோஸ் வண்ண ஒன்பது கஜ புடவையும் சார்த்தி வழிபடுதல் சிறப்பு. ஆலயத்தில் உள்ள மற்ற மூர்த்திகளுக்கும் இவ்வாறு வெண்பட்டு, ரோஸ் வண்ணப் புடவைகளை சார்த்துதல் சிறப்பே. அன்னதான பிரசாதமாகவும் பானமாகவும் இவ்வாறு வெண்மை, ரோஸ் வண்ண உணவுப் பதார்த்தங்களை, பானங்களை அளித்தல் நலம்.

தன் மனைவியின் அருகில் படுத்திருந்த நம் சற்குரு மனைவியின் வலது உள்ளங்கையை நக்கிப் பார்த்து விட்டு, “என்னடி நாரிமணி, இவ்வளவு உப்பாக இருக்கிறது, உன் கையே இப்படி உப்புக் கரிக்கிறது என்றால் நீ தயார் செய்த பிரசாதம் எவ்வளவு உப்பாக இருக்கும்...”, என்று கேட்டபோதுதான் சற்குருவின் மனைவி தன் தவற்றை உணர்ந்தார். நாரிமணி என்றால் பெண்களில் உயர்ந்தவள் என்று பொருள். “பெண்களில் உயர்ந்து நிற்கும் நீ, எப்படி இந்த தவறான ஒரு காரியத்தைச் செய்தாய்...?” என்று கேட்காமல் கேட்டதே நம் சற்குருவின் உயர்ந்த செய்கை.

இங்கு நம் சற்குரு மனைவியின் உள்ளங்கையை நக்கிப் பார்த்தது ஒரு அருமையான தெய்வீக அனுகிரகமே. பிரகலாதனின் தந்தை இரண்யனை வதம் செய்த நரசிம்ம மூர்த்தியின் கோபம் தணிவதற்காக பிரகலாதனை நரசிம்ம அவதாரத்தின் முன் செல்லுமாறு பயந்து நடுங்கிய தேவர்கள் எல்லாம் அனுப்பியபோது உக்கிர பிழம்பாய் துலங்கிய சிம்ம மூர்த்தி பிரகலாதனை தன் மடிமேல் அமர்த்தி தன் நாக்கால் நக்கி தன்னுடைய அன்பை தெரிவித்தாராம். இந்த காட்சியை இன்றும் பூலோகத்தில் இரசித்த ராமகிருஷ்ண பரமஹம்சர் இந்த தெய்வீக காட்சியை, “ஆஹா, என்ன அன்பு, என்ன அன்பு?” என்று வர்ணித்த நிலையிலேயே சமாதியில் இலயித்து விட்டாராம்.

இந்த ஆண்டு முழுவதும் 80 வயது நிறைந்த தம்பதிகளுக்கு பருத்தி வேட்டி, ரோஸ் வண்ண ஒன்பது கஜ நூல் புடவை உரிய மங்கலப் பொருட்களுடன் தானம் அளித்து அவர்களின் நிறைந்த ஆசியைப் பெறுதல் வேண்டும். ஸ்ரீபோஜீஸ்வர ஆலயத்திற்கு அவர்களை வரவழைத்து அவர்கள் பயணத்திற்கான ஏற்பாட்டையும் செய்தல் சிறப்பு. இத்தகைய தானம் அளித்த பின் ஆலயத்தை அஷ்ட நமஸ்கார முறையில் வணங்குதல் சிறப்பாகும்.

மாதா அமிர்தானந்தாவும் தன் சீடர்கள் அளிக்கும் டீ, பால், காபி போன்ற பதார்த்தங்களை அருந்துவதே இல்லை, தன் நாக்கால் சிறிது நக்கி விட்டு மிச்சத்தை அமிர்த பிரசாதமாக தன் சீடர்களுக்கு அளித்து விடும் காட்சியை இன்றும் பக்தர்கள் இரசித்து மகிழலாம்.

அது ஏன்?

நுனி நாக்கு என்பது இனிப்பு சுவையை உணர்த்துவது, குருவிற்கு உரித்தானது. உள்ளங்கை என்பது குசா தத்துவத்தில் பொலிவது. நலமே நல்குவது. இந்த இரண்டு தத்துவங்களையும் மேற்கூறிய அவதார மூர்த்திகளும், சற்குருமார்களும் எப்படி இணைக்கிறார்கள் என்பதை ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் அதன் சுவைக்கு எல்லைதான் உண்டோ?!

எந்த ஒரு சாதாரண மனிதச் செயலையும் உன்னத ஆன்மீக நிலைக்கு உயர்த்தும் வழி முறையைக் கற்பிப்பவரே நம் சற்குரு. ஒரு முறை காயத்ரீ மந்திரத்தை குரு உபதேசமாக தன் சீடன் ஒருவனுக்கு அளித்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அப்போது அந்த சீடனுக்கே தெரியாது தான் உலகின் உயர்ந்த குரு மகா சன்னிதானம் ஒருவர் மூலம் காயத்ரீ மந்திர தீட்சை பெறுகிறோம் என்பது!

நம் சற்குரு அப்போது தட்சிணாமூர்த்தி சொரூபமாய் தெற்கு நோக்கி அமர்ந்திருக்க, முகமானது சூரிய பகவானின் உதய திசையான கிழக்கு நோக்கி இருக்க, தன் இடது கை நடு மூன்று விரல்களை தன் அதரங்கள் ஸ்பரிசிக்கும் வண்ணமாய் அமர்ந்திருந்தார்.

திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் அடியார்களுடன் உரையாடும்போதெல்லாம் நம் சற்குரு இவ்வாறு கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பதை பலரும் அறிவர். ராமகிருஷ்ண பரமஹம்சரும் இவ்வாறு கிழக்கு நோக்கி அமர்ந்துதான் தன் பக்தர்களுக்கு உபதேசம் அளித்து வந்தார் என்பதையும் நாம் அறிவோம்.

மதுராதிபதி என்று கிருஷ்ண பகவானைப் புகழ்கிறோம். மதுரா நகரை தலைநகராக வைத்து உலகை ஆண்டவன் என்பது மட்டும் அதன் பொருளல்ல, உடல் முழுவதும் மதுரம் என்ற அமிர்தத்தால், அமிர்தச் சுவையால் நிறைந்தவனே மாயக் கண்ணன். இதன் உச்சக் கட்டமாக திகழ்வதே அதரம் மதுரம் என்பதாகும். இந்த மதுர அமிர்த சுவையை சதா சர்வ காலமும் குரு சுவையாக, மூன்று விரல்கள் சுட்டும் குரு தத்துவமாக அனுபவித்து வந்தவரே நம் சற்குரு என்பதற்கு இதை விடச் சிறந்த சான்று எதுவும் வேண்டுமா என்ன?

எனவே நம் சற்குரு தன் மனைவியுடன் அன்யோன்யமாக இருக்கும் அந்நிலையிலும் தன் சற்குருநாதருடன்தான், குரு என்ற அமர தத்துவத்தில் இலயித்து இருந்தார் என்றால் இதை விடச் சிறந்த ஒரு பாடத்தை எந்த ஒரு சீடனும் பெற முடியுமா?!

வித்யாரண்ய விவேகம்

தேவர்களின் தலைவனான இந்திரன் அசுரர்களை எதிர்த்துப் போரிடுவதற்காக வஜ்ராயுதத்தை இந்திரனுக்கு அளித்து விட்டு இறைவனுடன் கலந்த ததீசி முனிவரின் வரலாற்றை நாம் அறிவோம். காம சுகத்தை நாடி உடல் முழுவதும் யோனிக் கண்களைப் பெற்ற இந்திரனையும், ஸ்ரீஅகத்தியரின் சாபம் பெற்று பூலோகத்தில் மலைப்பாம்பாய் விழுந்த இந்திரனைப் பற்றியும் நாம் அறிவோம்.

இவ்வாறு இந்திரனுக்கு அளவற்ற சக்தியுடைய வஜ்ராயுதத்தை அளிப்பதற்காகவும், சாபம் பெற்ற இந்திர மூர்த்திகள் தங்கள் சாபங்களிலிருந்து மீண்டு நன்னிலை அடையவும் பல திருத்தலங்களில் தோன்றிய தீர்த்தங்களே வஜ்ர தீர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. காவிரி மணலிலும் பல கோடி இந்திரர்கள் இதுவரை தோன்றி மறைந்துள்ளார்கள் என்றால் இந்த மூர்த்திகள் வழிபட்ட வஜ்ர தீர்த்தங்கள் எத்தனை கோடி இருக்கும்.

இவற்றில் குறிப்பிட்ட சில தீர்த்தங்கள் மட்டுமே இன்றளவும் மக்கள் வழிபட்டு பயனடையும் முறையில் திருத்தலங்களில் அமைந்துள்ளன. அவையே,

1. திருப்பதி
2. ஸ்ரீகாளஹஸ்தி
3. சுவாமிமலை
4. திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரம்
5. தஞ்சாவூர் அருகே வல்லம்
6. கன்றாப்பூர்
7. கைச்சினம்
8. வல்லக்கோட்டை
9. லால்குடி
போன்ற தலங்களாகும். இத்தகைய திருத்தலங்களில் அமைந்துள்ள வஜ்ர தீர்த்தங்களிலிருந்து தீர்த்தம் பெற்று தன் பட்டத்து யானையான ஐராவதத்தின் மேல் கொண்டு வந்து பல திருத்தலங்களிலும் உள்ள இறை மூர்த்திகளுக்கு அந்தந்த காலத்தில் பொறுப்பில் இருந்த இந்திர மூர்த்திகள் அபிஷேக ஆராதனை நிறைவேற்றி வழிபட்டனர் என்பதே நம் சற்குரு அருளும் வஜ்ர தீர்த்த மகாத்மியாகும்.

இரும்புச் சத்துக் குறைவினால் கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கும், இளவயது பெண்களுக்கும் பல விதமான இரத்த சோகை சம்பந்தமான பிரச்னைகள், மாதவிடாய்த் துன்பங்கள் தோன்றி வாட்டுமாதலால் இதை ஓரளவு சீர்செய்யும் முகமாக கர்ப்பிணி பெண்களுக்கு Ferrodol என்ற இரும்பு சத்து தரும் டானிக்கை 2024 வருடம் முழுவதும் வாங்கி தானமாக அளித்தல் நலம். இத்துடன் கருவேப்பிலை பொடியையும் ஒவ்வொரு வேளை உணவில் சேர்த்துக் கொள்தல் நலமே.

2024ம் ஆண்டு நிறைவேற்றும் வஜ்ர தீர்த்த அபிஷேகம் பலவிதமான அனுகிரகங்களை அளிக்கவல்லதால் இந்த வஜ்ர தீர்த்த அபிஷேகத்தை ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்திக்கு இயற்றுவது கிடைத்தற்கரிய பேறாகும். இதனால் கிட்டும் அரிய அனுகிரகமே வித்யாரண்ய விவேகம் என்பதாகும்.

வித்யா .. ஏட்டுக் கல்வியைக் குறிப்பது
ஆரண்யம் .. அடர்ந்த காடு
விவேகம் .. பெருகிய புண்ணியத்தால் கிட்டும் பேரறிவு
ஏட்டுக் கல்வியால் கிட்டும் இருள் சூழ்ந்த மாயையால் பெருகும் அறியாமையாகிய இருட்டை விவேகம் என்ற குருவருளால் கிட்டும் புண்ணிய பிரகாசத்தால் வெல்வது என்பது பொருளாகும்.

“பட்டைலிங்க மூர்த்தி”
மாதா அமிர்தானந்தா

இவ்வாறு விவேகத்தை பெருக்கும் மார்க்கமாக நம் சற்குருவால் அளிக்கப்படுவதே எட்டு யானைகளின் சாட்சியாக ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்திக்கு நிறைவேற்றும் வஜ்ர தீர்த்த அபிஷேகமாகும். இம்முறையில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு. தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு என்ற திசைகளில் அல்லது இந்த திசைகளை நோக்குமாறு யானைகளை நிற்க வைத்து அந்த யானைகளின் பிடரியின் மேல் பவனி வந்த வெள்ளி, செம்பு, பித்தனை போன்ற குடங்களில், செம்புகளில் நிரப்பப்பட்ட வஜ்ர தீர்த்தத்தால் சுவாமி போஜீஸ்வரருக்கு அபிஷேகம் நிறைவேற்ற வேண்டும்.

குடத்தின் மேல் ஐந்து மாவிலைகள், தேங்காயை வைத்து அந்த தேங்காய்க்கு லால்குடி அருகே உள்ள கூகூர் திருத்தலத்திலிருந்து பெற்ற கூர்ச்சத்தால் அலங்கரித்து 12 முறை யாழமராந்தக சொல்லிசை துதியை ஓத வேண்டும். ஒவ்வொரு கூர்ச்சமும் ஐந்து தர்ப்பைகளால் ஒருங்கிணைக்கப்பட்டு அமைவதால் இவை வானிலிருந்து அபூர்வமாக கூகூர் திருத்தலத்தில் மட்டுமே கிட்டும் மின்சார சக்திகளை ஈர்த்து அதை அமர சக்திகளாக மாற்றி அடியார்களுக்கும், சமூகத்திற்கும் அளிக்கும் என்பதே நாம் அறியா சித்த மகாத்மியமாகும்.

ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்தில் கிழக்கிலிருந்து புறப்பட்ட யானைகள் பிரகாரமாக வலம் வந்து கிழக்கு திசையை மீண்டும் அடைந்த பின்னர் இந்த தீர்த்தங்களை எடுத்து அபிஷேக ஆராதனைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

எட்டு திசைகளிலும் எட்டு யானைகளை நிற்க வைத்தலே சிறப்பு என்றாலும் இத்தனை யானைகளை ஒரு சேரப் பெற இயலாதபோது முடிந்த வரையில் யானைகளை மேற்கண்ட திசைகளில் நிற்க வைத்து மற்ற இடங்களில் நம் அடியார்கள் தங்கள் கரங்களில் மேற்கூறியபடி தீர்த்தத்தை வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு நிற்கும் அடியார்கள் தங்கள் உடலில் வஜ்ர தீர்த்தத்தால் குழைத்த விபூதியை 18+18 இடங்களில் தரித்திருக்க வேண்டும் என்பது அவசியம்.

மேற்கூறிய வஜ்ர தீர்த்த அபிஷேகத்தை மற்ற பால், பஞ்சாமிர்தம், தேன் போன்ற அபிஷேகங்கள் அனைத்தையும் நிறைவேற்றிய பின் நிறைவு அபிஷேகமாக நிறைவேற்றி அதன் பின்னர் சுமார் ஆறு அடி நீளத்திற்கு அமைந்த ஏலக்காய் மாலையை படம் எடுத்தாடும் நாக வடிவில் சுற்றி ஸ்ரீபோஜீஸ்வர சுவாமிக்கு நாக கிரீடமாக அணிவித்து விடவும். சுவாமிக்கு 16 பட்டையா, 18 பட்டையா என்பது போன்ற பல குழப்பங்கள் தோன்றுவது இயற்கையே.

இங்கு அமிர்தானந்தா அன்னை எத்தனை “பட்டை” உடைய மூர்த்தியாகத் துலங்குகிறார் என்பதை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொண்டால் “பட்டை லிங்க மூர்த்திகள்” பற்றிய உங்கள் குழப்பங்கள் தீரும். பொதுவாக பட்டை லிங்கத்தின் ஒரு பட்டையைப் பற்றி புரிந்து கொள்ளவே ஒரு கோடி ஆண்டுகள் ஆகும் என்பது சித்தர்களின் கணிப்பு. இருப்பினும் நம்முடைய பிரார்த்தனையை ஏற்று ஒரு சில விநாடிகளுக்காவது ஸ்ரீபோஜீஸ்வரரின் “அனைத்து” பட்டைகளையும் அடியார்கள் தரிசிக்க 2024ம் வருட புத்தாண்டு பரிசாக அருள முன்வந்துள்ளார் நம் சற்குரு என்பதே நீங்கள் இந்த புத்தாண்டில் பெறக் கூடிய மிகச் சிறந்த ப ரி சு !

ஸ்ரீகல்யாண சுந்தரி அம்மன்
கூகூர் லால்குடி

சாதாரணமாக பட்டை லிங்க மூர்த்திகளை தரிசிக்கும்போது நம் எதிரே உள்ள சிவ பட்டைகளே கண்ணுக்குத் தெரியும், பக்கவாட்டில் உள்ள பட்டைகள் ஓரளவிற்கும், பின்னால் உள்ள பட்டைகள் முழுவதுமாகத் தெரியாது. திருத்தலங்களில் இந்த அமைப்பை ஒட்டியே ஆறுமுகங்கள் உடைய முருகப் பெருமானின் கல் விக்ரஹங்களை வடித்திருப்பதை நீங்கள் தரிசனம் செய்திருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்து இந்த ஆண்டில் ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்தியை தரிசித்து வந்தால் உங்கள் பார்வையே மூன்று பரிமாணம் கடந்த பரிணாமமாக மாறி நீங்கள் பின்னால் உள்ள பட்டை லிங்க வடிவங்களையும் தரிசிக்க முடியும்.

ஸ்ரீபடேசாசிப் சித்தர் ஜீவாலயம்
சின்னபாபு சமுத்திரம்

ஆனால், இவ்வாறு கிட்டும் பட்டை லிங்கத்தின் தரிசனத்தை வைத்துக் கொண்டு நீங்கள் ஆன்மீகமாக என்ன நற்காரியங்களை ஆற்றுகிறீர்கள், எத்தனை ஆயிரம் பேருக்கு உங்கள் ஆன்மீக சேவை அருமருந்தாக அமையும் என்பதை பொருத்துத்தான் மற்ற “பட்டைகளின்” தரிசனமும் உங்களுக்குத் தொடர்ந்து கிட்டும். இதற்கு பசுவேஸ்வர தரிசனம் என்று பெயர். எப்படி சிவ சக்தி ஐக்ய தரிசனம் என்பதற்கு சிவனும் சக்தியும் சேர்ந்த தரிசனம் என்று கூறுகிறோமோ அது போல பசுவாகிய மக்களும் ஈஸ்வரனான சிவனும் இணைந்து அளிக்கும் தரிசனமே பசு ஈஸ்வர தரிசனமாகும். நம் உள்ளத்தில், கண்ணாடியில் உள்ளதைப் போல் கிட்டும், பிரதிபலிக்கும் சிவ சக்தி ஐக்ய தரிசனமே பசு ஈஸ்வர தரிசனமாகும். சிந்திக்க சிந்திக்க.

இவ்வாறு பசுவும் ஈஸ்வரனும், சிவனும் சக்தியும் ஒன்று சேரும் மிக மிகச் சிறிய புள்ளியே மாத்ருதேசம் என்னும் பகுதியாகும்.

ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்திக்கு கூகூர் திருத்தல தர்ப்பைகளால் அலங்கரித்த வஜ்ர தீர்த்தத்தால் அபிஷேகம் இயற்றும்படி கூறினோம் அல்லவா? கூகூரில் மட்டுமே கிட்டும் தர்ப்பைகளுக்கு திருமழபாடியில் கிட்டும் பாடி தர்ப்பைகள் போல் ஒரு அபூர்வமான சிறப்பு உண்டு. குக்கூகுக தர்ப்பைகள் என்பவையே கூகூரில் கிட்டும் வானியல் மின்சக்திகளை ஈர்க்கும் தன்மை உடைய அபூர்வ தர்ப்பைகளாகும். மேலே அளித்துள்ள கஜாரண்ய திருத்தல வீடியோவைப் பார்த்தால் அதில் ரெங்கநாதபுரத்தில் உள்ள வஜ்ர தீர்த்தத்தில் நீராடி மகிழும் யானைகளை “கஜாரண்ய தீர்த்தத்தில் கர்ண குதூகலம்” என்பதாக அளித்திருந்தோம்.

வஜ்ரம் என்றால் இடி என்று பொருள். இடியில் கண்ணைப் பறிக்கும் ஒளியும், காதுகளை செவிடாக்கும் ஒலியும் உண்டு. இந்த ஒலி நாம் நினைப்பதுபோல் வெறும் மேலோட்டமாக திகழ்வதில்லை. இடியுண்ட நாகம் போல் என்று நாம் கூறுவதுண்டு. அதாவது ஒலி சக்திகள் நம் உடலில் உணவைப் போல் சென்று பரவும், உடல் முழுவதும் வியாபிக்கும் தன்மையைக் குறிக்கிறது. இவ்வாறு குக்கூகுக என்ற கூகூர் தர்ப்பைகளை பயன்படுத்தும்போதுதான் யானைகளின் பிடரியின் மேல் கொண்டுவரப்படும் வஜ்ர தீர்த்தம் யானைகளின் காதுகள், கண்கள் மூலமாக இடி, மின்னல் சக்திகளை ஈர்க்க இவ்வாறு மின் சக்திகள் உடைய வஜ்ர தீர்த்தம் போஜீஸ்வர சிவனுக்கு அபிஷேகிக்கப்படும்போது அது இந்த உலகம் முழுவதும் விரவி உள்ள தீய சக்திகளை மாய்க்கும் அருமருந்தாக அமைகிறது.

மேலும் மழை பெய்யும் போது மட்டுமே வானில் இடி நிறைவதாக எண்ணுகிறோம். உண்மையில் ஒவ்வொரு நொடியுமே வானில் இடி மின்னல் சக்திகள் தோன்றி மறைந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த இடியில் ஒரே ஒரு இடியின் சக்தியை நாம் நேரடியாகப் பெற முடிந்தால் சென்னை போன்ற நகரங்களுக்கே தேவைப்படும் மின்சார சக்தியை அளித்து விட முடியும் என்றால் இடி மின்னல் சக்திகளை என்னென்பது?

ஸ்ரீநாகநாதசுவாமி திருச்சி

கலியுலகில், குறிப்பாக இவ்வருடம் முதற்கொண்டு வித்யாரண்ய விவேகம் என்னும் அரிய தெய்வீக சக்தி கிட்டாமையால் உயர்ந்த பதவி வகிப்பவர்கள், உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனால் அல்லல்படும் மக்கள் ஏராளம், ஏராளம், சூழும் வேதனைகள் மிகப் பல. இத்தகைய வேதனைகளுக்கு நம் அடியார்கள், இறைவனை முழுவதும் நம்புவோர் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே மேற்கூறிய வழிபாடு என்பதை நினைவில் கொள்ளவும்.

இடி மின்னலில் தோன்றும் அபரிமிதமான மின் சக்திகளை வழிபாட்டின் மூலம் மக்களும் சமுதாயமும் துரிதமாகப் பெற வழிவகுப்பதே மேற்கூறிய கூகூர் குக்கூகுக தர்ப்பைகளின் அரும்பணியாகும். நாம் வாழும் பூமியானது ஆதிசேஷனின் சக்தியால் தாங்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சூரியனையும் சுற்றி வருகிறது. இந்த இரண்டு சுழல் சக்திகளின் இடையே தோன்றுவதே நாக சக்திகள் என்பதாகும்.

இந்த நாக சக்திகள் பொதுவாக நாம் நினைக்கும் பாம்பு என்ற சக்தி கிடையாது. லால்குடி அருகே நகர் திருத்தலத்தில் மட்டுமே தோன்றும் அபூர்வ சக்திகளே நகர, நாகர, நாக என்ற சக்திகளாகும். அசல, சல என்ற இரண்டு சக்திகள் இணையும்போது தோன்றும் சக்திகளே ‘நாக’ சக்திகள். இந்த நாக சக்திகளே கூகூர் தர்ப்பையில் தோன்றி வானத்திலிருந்து மின் சக்திகளை ஸ்ரீபோஜீஸ்வரருக்கு ஆற்றும் அபிஷேக தீர்த்தங்களின் வழியே பூமியை அடைந்து மக்கள் சமுதாயத்திற்கு தேவையான நோய் நிவர்த்தி சக்திகளை அளிக்கிறது என்பதே இந்த நாக சக்திகளின் தன்மையாகும்.

இத்தகைய அபிஷேக ஆராதனைகளின் மூலமாகவே அரிதிலும் அரிய வான் மண்டலத்தில் நிரவியுள்ள மின்னல் இடியிலிருந்து நாக சக்திகளைப் பெற முடியும் என்பதே சித்தர்கள் அளிக்கும் இரகசியமாகும்.

இறைவன் எங்கோ வைகுண்டத்தில் இருக்கிறார், கைலாயத்தில் இருக்கிறார் என்று கூறினாலும், இறைவன் அவ்வாறே நிலைகொண்டாலும் பூமியில் இருக்கும் நாம், “இறைவா காப்பாற்று...”, என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் குரல் கொடுத்தால் போதும் ஓடோடி வந்து இறைவன் நம்மை அரவணைப்பான் என்பது நாம் அறிந்ததே.

இதை நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவோம். ஒரு ஒயரில் பல்பை இணைத்து அதை மின்சாரத்துடன் இணைத்தால் பல்பு எரிந்து ஒளி வீசும் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு விஞ்ஞானம் கூறும் விளக்கம் மின்சாரம் மின் அலைகளாக (electron pulse flow) பல்பை அடையும்போது அந்த மின் சக்தியால் பல்பு எரிகிறது என்று தொடர்கிறது விஞ்ஞானம். ஆனால், மின் கம்பத்திலிருந்து மின்சக்தி அலைகள் ஆரம்பம் ஆகாமல் பல்பை அடுத்துள்ள பகுதியில் மின்சாரம் எப்படிப் பாய்கிறது என்பதே விஞ்ஞானத்தால் புரிந்து கொள்ள முடியாத நிலை.

இதுவே இறைவன் எங்கும் உள்ளான் என்பதை உணர்த்தும் நாக சக்தி நிலை. நகராமல் நகரும் சக்தி நிலை. இதன் உருவகமாகவே எம்பெருமானும் உடலெங்கும் நாகங்கள் அணிந்து காட்சி தருகிறான்.

பூரணம் தரும் பட்டை லிங்கம்

ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால் ‘பூர்ணம் தரும்’ என்று கூறுவதே தவறான பிரயோகமாகும். மனிதன் எப்போது பூர்ணமாக இல்லாத நிலையில் இருந்தான், தற்போது பூரண நிலையை அடைவதற்கு? அவ்வாறு பூரணமான மனிதனாக இருந்தால் அவனுக்கு ஏன் மனக் கவலை, பயம், அச்சம், பீதி போன்ற உணர்வுகள்? இதை விளக்குவதே ஸ்ரீபோஜீஸ்வரர் பட்டை லிங்க வழிபாடாகும்.

மனிதன் என்பவன் பூரணமான இறைவனின் அம்சமாக, இறைவனின் ஒரு பகுதியாக, பூர்ணமாகத் தோன்றியவன்தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால், அறியாமை, பூர்வ ஜன்ம வினை காரணமாகவே மனிதன் இவ்வாறு அரைகுறை நிலையில் இருக்கிறான். இதை நிவர்த்தி செய்ய வல்லதே பட்டை லிங்க வழிபாடாகும். இத்தகைய பட்டை லிங்க வழிபாட்டிற்கு உரியதே இந்த 2024 ஆண்டு என்பதே இதன் சிறப்பாகும்.

சிவசக்தி ஐக்ய தரிசனம்
திருஅண்ணாமலை

ஆத்மா, உயிர், உடல் என்ற மூன்றின் இணைப்பே மனித உடல். அல்லது உடலில் ஆத்மாவின் ஒரு பகுதியும், உயிரின் ஒரு சில அம்சங்களும் இணைந்துள்ளன என்றும் கூறலாம். ஆத்மா ஒரு போதும் மாற்றம் கொள்வதில்லை, உயிர் தத்துவம் மூலமாக ஆத்மா உடலில் நிரவி இறை தத்துவத்தை விளக்குகிறது. இது பற்றியே உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன் என்பர் பெரியோர். நம் சற்குரு காட்டிய முறையில் எந்த அளவிற்கு அன்னதானம் தூய்மையாக அமைந்து அடியார்களுக்கு தூய்மையான நினைவுடன், பரிசுத்தமான மனத்துடன் பரிமாறப்படுகிறதோ அந்த அளவிற்கு மனித உள்ளமும் பரிசுத்தம் அடைந்து தூய்மையான உடல் இறைவனை அடைய ஏதுவாகிறது.

சாதாரணமாக பரிசுத்தமான மனதுடன் தயார் செய்யப்பட்ட உணவானது மனித உடலைப் பிரசாதம் என்ற வடிவில் சேரும்போது உடல் கர்மம் அற்ற நிலையை அடைய உடலும் பரிசுத்தமாகி இறைவனுடன் ஒன்ற ஏதுவாகிறது. இவ்வாறு பரிசுத்தமான உணவை எப்படி சமைப்பது, எப்படி பரிமாறுவது என்ற ஞானத்தை அடியார்களுக்கு நடைமுறையில் அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அன்னதானக் கூடமே சிவசக்தி ஐக்ய தரிசனத்தின் எதிரே அமைக்கப்பட்ட அகஸ்தியர் ஆஸ்ரமமாகும்.

நம் சற்குரு ஜீவ சமாதி அடைந்து விட்டதால் இத்தகைய அன்னதான, அன்னசார சக்திகளை நம் சற்குருவை நேரில் தரிசனம் செய்யும் பாக்யம் கிட்டாதவர்கள் என்ன செய்வது? அவர்களுக்கும் உதவக் கூடியதே சிவ சக்தி ஐக்ய தரிசனமாகும். சிவ சக்தி ஐக்ய தரிசனம் என்பது முன்னால் சக்தியும், சக்தியின் பின்னே சற்றே உயரமாய் அமைந்துள்ள இரு மலை முகடுகள் என்று மட்டுமே நாம் சாதாரணமாக பொருள் கொள்கிறோம். இதன் பின்னால் மனிதர்களால் உணரக் கூடிய ஏழு தத்துவங்கள், இந்த வருடத்திற்கு உரிய குசா சக்திகள் கூடிய தத்துவங்கள் செயல்படுவதால் இந்த வருடத்திற்கு உரிய சிறப்பான தரிசனமாக இது பொலிகின்றது.

இந்த ஏழு தத்துவங்களையும் நம் சற்குரு தம் வாழ்வின் ஒவ்வொரு நொடிப் பொழுதும் பிரயோகம் செய்து தம் அடியார்களுக்கு அளித்துக் கொண்டிருந்தார் என்பதே இதன் மகத்துவம் ஆகும். உதாரணமாக, நம் அடியார் ஒருவருக்கு காயத்ரீ மந்திரத்தை உபதேசமாக அளித்தபோது
1. ஆதி திசையான கிழக்கு திசையை நோக்கிப் பார்த்தவாறு அமர்ந்திருந்தார். சூரியனும் சற்குருவும் ஒன்றுதானே.
2. இடது கையில் மூன்று விரல்களை தன் உதட்டில் வைத்து மௌன குருவாக காட்சி அளித்தார்.
3. குரு தட்சிணா மூர்த்தியாய் தெற்கு நோக்கி அமர்ந்திருந்தார்
4. குருவிற்கு, சூரிய பகவானுக்கு உரிய ரோஸ் வண்ண சட்டை அணிந்து காட்சி அளித்தார்
5. இடது பக்கம் தலையைத் திருப்பி உடலின் வலது பாகத்தை மட்டும் தரிசிக்கும்படி அமர்ந்திருந்ததால் இது ஜெய சாந்தி விநாயக தத்துவமாக, வலப்புற விநாயக தரிசனமாக அமைந்தது.
6. காயத்ரீ மந்திரத்தை மூன்று முறை ஓதி குரு தத்துவத்தை பிரகடனம் செய்தார்.
7. மூன்று விரல்களை இரண்டு உதடுகளின் மேல் வைப்பது ஒருவரின் ஜனன ஜாதகத்தில் எண் கணித ரீதியாக அமையும் சிவசக்தி ஐக்ய சொரூப காட்சியாகும்.

“திருநீலகண்டத்து
குயவனார்க்கடியேன்...”

மேற்கூறிய சிவசக்தி ஐக்ய கோலம் ஏதோ ஒரு அடியாருக்கு நம் சற்குரு எப்போதோ அளித்த தரிசனம் கிடையாது. இன்றும் நாம் சற்றே ஆத்ம விசாரம் செய்து பார்த்தாலும் இதன் மகத்துவத்தை நாம் நம்மைச் சுற்றிலும் பார்த்து, இரசித்து, அனுபவித்து மற்றவர்களுக்கும் இதன் பலா பலன்களை குரு அனுகிரமாக அளிக்கலாம்.

அழகான பழநி ஆண்டவா!
அடியேன் உள்ளத்தில் வருவாயே!

உதாரணமாக, பாண்டிச்சேரியில் மட்டும் 51 ஜீவ சமாதிகள் உள்ளன. நம் சற்குருவின் பூலோக ஜீவ சமாதிகளும் 51 என்ற எண்ணிக்கையில் அமைவதுதானே. பாண்டிச்சேரியில் இத்தனை ஜீவ சமாதிகள் இருந்தாலும் இந்த ஜீவ சமாதிகளில் மூன்றை மட்டும் நம் சற்குரு தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

1. ஞாயிற்றுக் கிழமையில் வழிபட வேண்டிய ஸ்ரீஅரவிந்த அன்னை ஜீவாலயம்
2. செவ்வாய்க் கிழமை அன்று நோய் எதிர்ப்பு சக்திகள் பெறவேண்டிய ஸ்ரீபடே சாகிப் சித்தர் ஜீவாலயம், சின்னபாபு சமுத்திரம்
3. வியாழக் கிழமை அன்று வழிபட வேண்டிய ஸ்ரீராம்பரதேசி சுவாமிகள் ஜீவாலயம், வில்லியனூர்

பாண்டிச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீகம்பளிசித்தரின் ஜீவ சமாதியில் வட்டம், சதுரம், முக்கோணம் என்ற வடிவில் எல்லாம் ஜீவாலயங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த வடிவங்கள்தான் ஸ்ரீசக்கரத்தில் அமைந்துள்ளன. இதன் மூன்றாம் பரிமாணத்தில் துலங்குவதே திருஅண்ணாமலை சிவ சக்தி ஐக்ய தரிசனம் என்றால் நம் சற்குருவின் மேதா விலாசத்திற்கு ஈடு இணையாக எதைக் கூற முடியும்?

சிவ சக்தி ஐக்ய தரிசனத்தில் அமைந்துள்ள நம்மை பிரமிக்க வைக்கும் மற்றோர் அதிசயம், அற்புதம் கலியுக மக்களுக்கெல்லாம் இறை வழிபாட்டில், குரு பக்தியில் உன்னதம் அடையச் செய்யும் மார்க்கமாகும்.

ஸ்ரீஅஞ்சப்ப சுவாமி காளஹஸ்தி

இதை சற்றே விளக்குவோம்...

நாயன்மார்களில் முதலில் குறிக்கப்படும் திருநீலகண்டர் குயவராக இருந்தவர். மண் பாண்டங்கள் செய்யும் குயவன் என்ற பிறவியே மனிதனுக்கு கடைசியாக அமையும் பிறவி. இதைக் குறிப்பதாகவே சேக்கிழார் பெருமான், திருநீலகண்டத்து குயவனார்க்கடியேன் ... என்று பாடியுள்ளார். மற்ற நாயன்மார்களுக்கு சாதி, மதம், இனம் என்ற வர்ணனைகள் அமையாதது, அவர்கள் மனித நிலையைத் தாண்டிய உயர்ந்த நிலையில் இருப்பதைக் குறிப்பதற்காகவே. திருநீலகண்ட நாயனார் பல பெண்களுடன் தகாத உறவு கொண்டதால் அவருடைய மனைவி, “எம்மைத் தீண்டாதீர்...” என்று கூறவே அன்று முதல் பெண் குலத்தையே கனவிலும் தீண்டாத உறுதியைப் பூண்டார்.

திருநீலகண்ட நாயனாரின் மனைவிக்கு ஒரு தங்கை இருந்தாள். திருநீலகண்ட நாயனாரை காதலித்து அவரை மணப்பதற்கு சிவ பெருமானிடம் அனுமதி வேண்ட சுவாமியும் அதற்கு ஒப்புதல் அளித்து விட்டார். பல வருடங்கள் சென்ற பின் திருநீலகண்ட நாயனாரை இறைவன் மீண்டும் இளமையாக்கி உலகிற்கு அளித்தபோது நாயனார் மனைவியின் தங்கை தன்னுடைய காதலை திருநீலகண்ட நாயனாரிடம் தெரிவிக்கவே, மனைவியைத் தவிர வேறு யாரையும் மனதிலும் எண்ண முடியாத தன் நிலையை நாயனார் அவளிடம் கூற, இப்போது அந்த அபலையின் நிலை என்னவாகும்?

இதை அடியார்கள் ஆத்ம விசாரம் செய்து விடை காண முடிந்தால் அவர்கள் தெய்வீகத்தில் உன்னத நிலையை அடைய முடியும் என்பது உறுதி. இந்த ஆத்ம விசாரத்திற்கு உறுதுணையாக பகவான் கிருஷ்ணரின் ராசலீலையையும், சிவ சக்தி ஐக்ய தரிசன கோலத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த ஆத்ம விசார கேள்விக்கு விடையளிக்க பலரும் முன்வந்துள்ளனர். ஆனால், இதற்கு உரிய பதிலை அடியார்கள் உணர முடிந்தால் அவர்கள் வானுக்கும் பூமிக்கும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பதே இந்த பதில் நமக்கு அளிக்கும் ஆனந்தம், பேரானந்த நிலையாகும். இந்த பதிலை மற்றவர்களிடம் சரி பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது என்பதும் இதன் மகத்துவமாகும். காரணம், அவரவர் பிறவி நோக்கத்தை அவரவர் நிலையில் அறிய உதவுவதும் இந்த பதிலின் தன்மை என்பதால் தன் பிறவி நோக்கத்தை தெளிவாக அறிந்த ஒருவர், அவர் சமுதாயத்தில் எந்த அங்கத்தை வகிப்பவராக இருந்தாலும் சரி, அவர் பூரண நிலையை அடைந்து தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் தெய்வீகப் பணியில் ஈடுபடுவதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு வாழ்வார்.

காலம் உங்களுக்கு சாதகமே...

இன்று உலகம் முழுவதும் ‘மனப் பற்றாக்குறையே’ தலைவிரித்தாடுகிறதே தவிர, எங்குமே எவருக்குமே ‘பணப் பற்றாக்குறை’ கிடையாது என்று உறுதியாகக் கூறுபவரே நம் சற்குரு. காரணம் அளவில்லாத சக்திகளோடுதான் இறைவன் நம் ஒவ்வொருவரையுமே படைத்துள்ளார். நம் சற்குரு அடிக்கடி கூறுவதுண்டு. “உங்களில் யாராவது நற்காரியம் செய்ய வேண்டும், அதற்கான பண வசதியில்லை என்று எண்ணினால் ஒரு பெரிய கல்லை எடுத்துக் கொண்டு சென்று அம்மாவிடம் (மாதா அமிர்தானந்தா) கொடுங்கள், அதை அவர்கள் தங்கமாக ஆக்கி அளித்து விடுவார். அதை வைத்துக் கொண்டு நீங்கள் விரும்பும் நல்ல காரியத்தைச் செய்யலாமே...”, என்பார்.

அமிர்தானந்தா மயி ஒரு கல்லைத் தங்கமாக ஆக்கும் சக்தி பெற்றவர் என்றால் நம் சற்குருவால் அதைச் செய்ய முடியாதா என்ன? நிச்சயமாக அந்தக் காரியத்தை நம் சற்குருவால் நிறைவேற்ற முடியும். நம் சற்குருவால் நிறைவேற்ற முடியும் ஒரு நல்ல காரியத்தை உங்களால் செய்ய முடியாதா என்ன? நிச்சயமாக நீங்களும் ஒரு கல்லைத் தங்கமாக ஆக்க முடியும், அந்தக் கல்லை வைத்துக் கொண்டு நீங்கள் பிறருக்கு நற்காரியம் நிறைவேற்றுதாக இருந்தால்...”.

கல்லைத் தங்கமாக மாற்ற நினைக்கும் உங்கள் மனது முதலில் தங்கம் ஆனால்தான் இது சாத்தியம். இதற்கு வழிவகுப்பதே ஸ்ரீபோஜீஸ்வர வழிபாடு. கும்ப ராசியிலிருந்து வக்ர கதியாக மகர ராசிக்கு மாறிய சனீஸ்வர பகவான் மீண்டும் திர ராசியான கும்ப ராசியை அடைந்திருப்பதால் காலம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்...!

“ஊசி முனையான ஒரு அச்சில் சுழலும் காந்த ஊசியை நகர்த்த நீங்கள் உங்கள் விரல்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஒரு காந்தத்தை அந்த ஊசியின் அருகில் கொண்டு சென்றால் போதும், ஊசி மறுமுனைக்கு சுழன்று சென்று விடும். இதுபோல் நம் மனதின் திறனால் இந்த உலகத்தையை சுழற்றி விடலாம். இதுவே மனித மனத்தின் சக்தி...இந்த அதீதமான சக்தியை அளித்த இறைவனை புரிந்து கொள்ளாதது யார் குறை?”, என்று கேள்வி கேட்பவரே நம் சற்குரு.

ஸ்ரீகாளஹஸ்தி

மனிதனைப் பூரணமாக்கும் சக்தி உடையதே ஸ்ரீகாளஹஸ்தி சிவாலயமும் என்பதால் அத்திருத்தல வஜ்ர தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் எடுத்து ஸ்ரீபோஜீஸ்வர ஈசனுக்கு அபிஷேகம் நிறைவேற்றும்படி நம் சற்குரு அருள்கிறார். காளஹஸ்தி அருகிலுள்ள பனசகோண என்னும் மலைப் பகுதியில் திகழ்வதே அமிர்த சக்திகள் நிறைந்த வஜ்ர தீர்த்தமாகும். பனச கோண என்றால் தேன் சொட்டும் அமிர்த சக்திகள் உடைய பலாப் பழ சக்திகள் நிறைந்த தீர்த்தம் என்பது மேலோட்டமான பொருளாகும். பலா மரம் ஆயுள் வளர்க்கும் அற்புத சக்திகள் நிறைந்து இருப்பதால் பலா மரம் தலவிருட்சமாக உடைய ஸ்ரீசாமவேதீஸ்வர திருத்தலம் ஆயுள் வளர்க்கும் அற்புத தலமாக போற்றப்படுகிறது.

வஜ்ர தீர்த்தம்
பனசகோண காளஹஸ்தி

பல இந்திர மூர்த்திகளும் சாப விமோசனத்திற்காக பூலோகத்திற்கு வந்து வழிபாடுகள் இயற்றி மீண்டும் தேவலோகம் அடைந்த வரலாறுகளைப் பற்றி நாம் நிறையவே அறிவோம். ஒரு முறை விஸ்வாமித்திர முனிவரின் சாபத்தால் கரிய நிறமாக மாறிய ஐராவதம் பரத்வாஜ முனிவரை நாடியபோது அவர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை வணங்கி நற்கதி பெறுமாறு அறிவுரை கூறினார்.

ஸ்ரீராமரோ பனசகோண வஜ்ர தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் பெற்று அதனால் ஸ்ரீஅஞ்சப்ப இறைவனுக்கு தினமும் அபிஷேகித்து வரும்படி கூறவே அவ்வாறு பன்னெடுங் காலம் வஜ்ர தீர்த்தத்தால் இறைவனுக்கு அபிஷேகம் இயற்றி சாபம் விமோசனம் பெற்ற ஐராவத யானை வழிபட்ட சிவலிங்க மூர்த்தியே இன்று ஸ்ரீபஞ்சமுகேஸ்வரர் என்னும் திருநாமத்துடன் காளஹஸ்தியில் எழுந்தருளி உள்ளார்.

ஒருமுறை காளஹஸ்தி திருத்தலத்தில் முகாமிட்டிருந்த கனிந்த கனி பரமாச்சாரியார் திடீரென்று ஒரு நாள் நள்ளிரவில் எழுந்து செல்வதைக் கண்ட மடத்து சிப்பந்திகள் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். அருகிலிருந்த அடர்ந்த வனப் பகுதிக்கு நடந்து சென்ற அவர் ஒரு முட்புதர் பகுதியைக் காட்டி அதை மெதுவாக அகழ்ந்து பார்க்கும்படிக் கூற மடத்து சிப்பந்திகள் அவ்வாறு அந்த காட்டுப் பகுதியில் உள்ள முட்களை விலக்கிப் பார்த்தபோது அங்கே ஓர் அழகிய சிவலிங்கம் காட்சி அளித்தது.

மகான்களின் விரல் அசைந்தால் அதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் இருக்கும் என்பதற்கு கனிந்த கனியின் நள்ளிரவு ‘பிரவேசமும்’ ஒரு உதாரணமே. கரிய நிற யானைக்கு சாப விமோசனம் அளித்த ஈசனை உலகிற்கு அறிவிக்க நள்ளிரவில்தானே ‘பிரவேசம்’ மேற்கொள்ள வேண்டும்?

ஐந்து முகங்களுடைய அந்த சிவலிங்கத்தை ‘அஞ்சப்பர்’ அதாவது அனைவருக்கும், ஐந்து வண்ணமுடைய உலக மக்கள் அனைவருக்கும் தந்தையானவர் என்ற பொருளில் கனிந்த கனி அன்று அழைத்த சிவபெருமானே இன்று ஸ்ரீபஞ்சமுகேஸ்வரர் என்னும் திருநாமத்துடன் காளஹஸ்தி திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளார்.

காளஹஸ்தி திருத்தலத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரும் ஸ்ரீஅஞ்சப்ப சுவாமியை தரிசனம் செய்தால்தான் திருப்பதி காளஹஸ்தி யாத்திரை பூர்ணமாகும் என்று கனிந்த கனி வலியுறுத்தி வந்தார். எனவே பூரணத்தில் பூரணமே காளஹஸ்தி என்பது தெளிவாகிறது அல்லவா? காளஹஸ்தியில் இருந்தாலும் ஸ்ரீபஞ்சமுகேஸ்வரர் ஆலயம் என்று நன்கு விசாரித்தே அஞ்சப்ப ஈசனை தரிசிக்க முடியும் என்பதை பக்தர்கள் நினைவில் கொள்ளவும். பல அடியார்கள் முயன்றாலும் அஞ்சு அப்பர் என்றவாறு ஐந்து அட்சரங்களை தன்னுடைய தந்தையின் பெயராக உடைய ஒருவரே இங்கு நாம் அஞ்சப்ப ஈசனைப் பற்றி அறிய உதவினார் என்பதும் அஞ்சப்ப ஈசனின் மகிமைகளுள் ஒன்றாகும்.

ஆயுள் வளர்க்கும் பலா

பனச என்றால் தெலுங்கில் பலாப்பழம் என்று பொருள். கோண என்றால் இருப்பிடம் என்று பொருள். ஆனால், பனச கோண பகுதியில் நீங்கள் பலாப் பழங்களைக் காண முடியாது. அப்படியானால் இதன் பொருள் என்ன? பலா பழத்தை உரிக்காமல் உள்ளே இருக்கும் பலாச் சுளைகளின் எண்ணிக்கையை கண்டு பிடிக்கும் பழைய தமிழ் சூத்திரம் ஒன்று உண்டு. அதாவது பலா பழத்தின் மேல் இருக்கும் முட்களை எண்ணி, அதை ஆறால் பெருக்கி, ஐந்தால் வகுத்தால் வருவதே பழத்தின் உள்ளிருக்கும் சுளைகளின் எண்ணிக்கை ஆகும்.

ஸ்ரீபூதநாராயண பெருமாள்
திருஅண்ணாமலை

உதாரணமாக, ஒரு பலாப்பழத்தின் மேல் 50 முட்கள் இருப்பதாகக் கொண்டால் சுளைகளின் எண்ணிக்கை
50 x 6 = 300
300 / 5 = 60
என்பதாக வரும். சற்றே கூர்ந்து நோக்கினால் இந்த சூத்திரத்தில் 3, 5, 6 என்ற சுப எண்களே பயனாகின்றன என்பது தெரிய வரும். அதாவது குரு, புதன், சுக்கிரன் என்ற நல்ல சக்திகளே, சுப சக்திகளே பலாப் பழத்தில் நிறைந்துள்ளன என்பது தெளிவாகின்றது அல்லவா? ஆனால், இந்த சூத்திரம் இயற்கையாக விளையும் பலாப் பழங்களுக்கே பொருந்தும். கிராஸ்ப்ரீட், ஹைபிரீட் வகையில் தோன்றிய பலாப் பழங்களுக்கு இந்த சூத்திரம் சரியான கணக்கைக் காட்டாது. அதாவது இறைவனால் படைக்கப்பட்ட கனி, காய்கறிகளே ஆயுள் வளர்க்கும் அற்புத சக்திகளைப் பெற்றிருக்கும். அரை குறை அறிவு உடைய மனிதனால் உண்டாக்கப்பட்ட கனிகளுக்கோ, காய்களுக்கோ இத்தகைய ஆயுளை வளர்க்கும் அற்புத சக்திகள் இருக்காது.

இதற்காக இறைவன் மனிதர்களைக் கைவிட்டு விடுவாரா என்ன? மனிதர்களுக்கு நிறைந்த ஆயுளை அளிப்பதற்காகவே பலா மரத்தை தல விருட்மாக உடைய திருமங்கலம், நெற்குப்பை போன்ற திருத்தலங்களில் மகான்கள் வழிபட்டு அதன் ஆயுள்விருத்தி சக்திகளை மனித குலத்திற்கு அர்ப்பணித்து வருகின்றனர். பனச கோண திருமலையில் தோன்றிய வஜ்ர தீர்த்தத்தின் மற்றோர் ஆயுள் விருத்தி அம்சம் இதன் கோண சக்தியாகும். இதை சற்றே விளக்குவோம்.

வஜ்ரம் என்றால் வைரம் என்றும் பொருள் உண்டு. வைரத்தில் ஒரு பட்டைக்குள் ஒளிக் கற்றை உள்ளே புகுந்தால், அந்த வைரம் எந்த அளவிற்கு பட்டை தீட்டப்பட்டிருக்கிறதோ அந்த அளவிற்கு வைரத்தின் பட்டைகளால் பிரதிபலிக்கப்பட்டு வெளியே வரும்போது அதன் சக்தி அபரிமிதாக பெருகி இருக்கும். இதுவே வைரம் ஜொலிப்பதற்கான (total internal reflection) முக்கிய காரணமாகும்.

அதே போல் ஒரு பட்டை லிங்கத்தின் முன்னே நிற்கும்போது நம்மிடம் உள்ள ஆத்ம ஜோதியானது பட்டை லிங்கத்தால் பிரதிபலிக்கப்பட்டு மீண்டும் நம்மை வந்தடையும்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
கச்சிநெறிக்கரைக்காடு

ஆத்ம ஜோதி எத்தனை முறை பிரதிபலிக்கப்படும்? இதை அறிந்து மயங்கி விழுந்து விடாதீர்கள் ... ...

உதாரணமாக, ஸ்ரீபோஜீஸ்வரர் 16 பட்டைகளுடன் திகழ்கின்றார் என்றால் உங்கள் ஆத்ம ஜோதி
1 x 2 = 2
2 x 2 = 4
4 x 4 = 16
16 x 16 = 256
256 x = 256 = 65536
65536 x 65536 = 4294967296
4294967296 x 4294967296 = 1,84,46,74,40,73,70,95,51,616
... ...
என்ற முறையில் 16 தடவைகள் பிரதிபலிக்கப்படும் என்றால், இவ்வாறு 16 முறை பிரதிபலிக்கப்பட்டு ஆத்ம ஜோதி பெறும் அனுகிரகத்தை சொற்களால் விவரிக்க முடியுமா?

ஆனால், நாம் நினைப்பது போல் நம் எதிரில் உள்ள பட்டையில் நம் ஆத்ம ஜோதி பட்டை லிங்கத்தின் உள்ளே புகுவது கிடையாது. ஆதி பட்டை என்று ஒவ்வொரு பட்டை லிங்கத்திலும் ஒரு பட்டை இருக்கும். இந்த ஆதி பட்டையில்தான் முதலில் நம் ஆத்ம ஜோதி உள்ளே புகும். அவரவர் பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள ஆன்மீக சக்தியைப் பொறுத்து, புண்ணிய சக்தியின் திரட்சியைப் பொறுத்து, சற்குருவின் மேல் கொள்ளும் ஆழ்ந்த நம்பிக்கையைப் பொறுத்து ஆத்ம ஜோதி பல பட்டைகளிலும் பிரதிபலிக்கப்படும்.

இவ்வாறு பல பட்டைகளில் பிரதிபலிக்கப்படும் ஆத்ம ஜோதி ஒளிக் கதிர் இறுதியில் பூர்ணம் என்ற பட்டை வழியாக வெளிவரும். ஆனால், இந்த பூர்ண பட்டையில் பிரதிபலிக்கப்படுவது என்பது கோடியில் ஒரு ஆத்மாவிற்கே சாத்தியம்.

தீவிர கர்ம வினைகளைக் கொண்டவர்களின் ஆத்ம ஜோதியே இந்த பட்டை லிங்கத்தின் உள்ளே புகாமல் “சுவற்றில் அடித்த பந்து போல்...” திரும்பி வந்து விடுவதும் உண்டு.

இங்கு பனச கோண தீர்த்தத்தின் மற்றோர் அம்சமும் நம்மை பிரமிக்க வைப்பதே. துங்க ஸ்தனாம்பிகை, துங்க பால ஸ்தனாம்பிகை என்ற பெயரில் காஞ்சனாகரம், திருவீழிமிழலை போன்ற திருத்தலங்களில் அம்பிகை மூர்த்திகள் அருள்வர். “தொங்கு முலை” என்பதே இதன் உண்மைப் பொருள் என்பார் நம் சற்குரு. பெண்களின் தனங்களில் பால் தோன்றி பொழியும்போது அது நீர்வீழ்ச்சி போல் கீழிறங்கி வருவதால் அந்த அமிர்த சக்தி ஒரு தெய்வீக ஆகர்ஷண சக்தியைப் பெறுகிறது. இந்த தெய்வீக ஆகர்ஷண சக்தியை நீர்வீழ்ச்சியில் பொலியும் நீர்த்தாரைகள் பெற்றிருப்பதால்தான் நீர்வீழ்ச்சியில் நீராடும்போது கிட்டும் அமிர்த சக்திகளை வேறு எந்த மார்க்கத்தாலும் பெற முடியாது என்பார் நம் சற்குரு.

நம் பிரபஞ்சத்தில் உள்ள எந்த யோகத்தாலும், ஆசன முறைகளாலும் பைத்தியத்தை குணப்படுத்த முடியாது, காமத்தை குறைக்க முடியாது, காமத்தை அடியோடு வேரறுப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை என்பது வேறு கதை. ஆனால், குற்றால நீர்வீழ்ச்சி ஒன்று மட்டுமே எந்தப் பைத்தியத்தையும், மன பேதலிப்புகளையும் குணப்படுத்தும், காமத்தைக் களையும் என்பதே குற்றால நீர்வீழ்ச்சியில் பொலியும், பொழியும் “தொங்கு” சக்திகளின் தன்மையாகும்.

மகான்கள் அவதூது கோலம் என்றவாறு பிறந்த மேனியுடன், நிர்வாணமாக உலவி வருவதற்கு இவ்வாறு பட்டை லிங்கத்தின் மகிமைகளை உலகிற்கு வர்ஷிப்பதற்காகவே. திரைலிங்க சுவாமிகள் மூன்று லிங்கங்களின் மேல் படுத்திருக்கும் காட்சியை பல உத்தமர்களும் அவர் காலத்தில் தரிசித்து இருந்தனர். நம் சற்குருவும் இவ்வுலகை விட்டுச் செல்லும் முன் நிர்வாண கோலத்தில் சில நாட்கள் திகழ்ந்ததற்கும் இவ்வாறு பட்டை லிங்க தரிசன சக்திகளை உலகிற்கு தாரை வார்த்து அளிக்கவே என்பது இப்போது புலனாகின்றது அல்லவா?

பெண்களாய் மகான்கள் பிறந்து விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்கள் உலகிற்கு ஒரு அனுகிரக சக்தியை அளிக்க முடியாமல் போய் விடுவார்களா என்ன? இவ்வாறு பட்டை லிங்கங்கள் வர்ஷிக்கும் அபூர்வ சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் பெற்ற ஜீவன்களுக்கு அத்தகைய சக்திகளை அளித்து அந்த ஜீவன்கள் மூலம் உலகிற்கு இத்தகைய சக்திகளை தாரை வார்த்து அளிக்கிறார்கள். இதுவே நாகத்தை தலையில் தாங்கிய ‘பட்டை லிங்க மூர்த்தியான’ அமிர்தானந்தா அன்னையின் அருட்கோலம். நகர, நாகர, நாக என்ற சக்திகளில் நாக சக்திகளை உலகிற்கு வர்ஷிப்பதாக இத்தகைய நாகாபரண கோலம் பொலிகிறது.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam