உருவமில்லா இறைவன் உருவத்தைக் காட்டினால் அது சற்குரு !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அனைத்தும் அவரே

ஆன்மீகப் புதையல்
ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள், ஸ்ரீரமணர், ஸ்ரீராமானுஜர் போன்ற உத்தம இறையடியார்களின் வாழ்க்கையில் நடைபெற்றுள்ள ஆயிரக்கணக்கான இறையனுபவங்களில் [miracles] ஒரு சிலவே வெளிவந்துள்ளன. ஏனையவை அவ்வப்போது யுகாந்திர நியதிகளுக்கு ஏற்ப வெவ்வேறு சற்குருமார்களால் அடியார்களுக்கு அறிவிக்கப் பெறும். காஞ்சி காமகோடி பீட ஸ்ரீபரமாச்சார்யாள் ஸ்வாமிகள் நூற்றுக்கணக்கான புராதன கோயில்களின் தலபுராணங்கள், மஹான்கள், சித்த புருஷர்களின் அவதார மஹிமைகள், விசேஷ தெய்வ மூர்த்திகள் போன்ற அறிதற்கரிய ஆன்மீகப் பொக்கிஷங்களை வெளிக் கொணர்ந்தருளினார்.
இவ்வகையில் ஸ்ரீஅகஸ்திய விஜயம், சிவகுரு மங்களகந்தர்வாவாகிய ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்தர் ஸ்வாமிகள், குரு மங்களகந்தர்வாவாகிய ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சித்தர் ஸ்வாமிகளின் அருளுரைகள் மூலம் பெறற்கரிய ஆன்மீக ரகசியங்களை, பொக்கிஷங்களை, எல்லாம் வல்ல சற்குருவின் அருளால் அள்ளி வழங்குகின்றது. சித்த புருஷர்கள் வாரி வழங்கும் திருவருட்செல்வத்தை அனைத்து அடியார்களும் அனைவருடன் பகிர்ந்து குருவருளுடன் திளைத்துய்ய வேண்டும்..

அழகுக்கு மறுபெயர்
சோழீஸ்வரர் !

சற்குருவைத் தேடி...........
மனிதனால் கிஞ்சித்தும் நினைத்துக் கூடப் பார்க்க இயலாத அளவிற்குக் கோடி கோடியான ஆன்மீக ரகசியங்கள் விரவியுள்ளன. தன் அறிவுக்கெட்டிய தூரம் உணர்ந்ததை மட்டும் விஞ்ஞானம் என்று பகுத்துக் கொண்டு கிணற்றுத் தவளை போல்தான் சாதாரண மனிதன் வாழ்கின்றான். எனவே ஆன்மீகத்தில் வாழத் துடிக்கின்ற சாதகனாவது தான் கற்றது கைம்மண் அளவே ; சற்குருவே அனைத்தும் அறிந்த மெய்ஞ்ஞான விஞ்ஞானி ; அவரே கோடிகோடியாம் ஆன்மீக ரகசியங்களை உணர்த்த வல்லவர் ; நினைத்தற்கரிய ஆன்மீக நற்காரியங்களை நிறைவேற்ற வல்லவர் என்பதை அறிந்து சற்குருவைத் தேடித் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
சிருஷ்டியின் ரகசியம் முதல் பிரளயம் வரை அனைத்து ஞானத்தையும் ஒரு சாதகன் பெற்றாக வேண்டும். அப்போதுதான் தான் பிறந்ததின் காரணத்தையும் அவன் அறிகின்றான். ‘நான் ஏன் பிறந்தேன்‘ என்பது புரிந்து விட்டால் பிரச்சனைகளே இராது அல்லவா? இவ்வகைத் துன்பங்களையும் இன்பங்களையும் ஏற்று இத்தகைய காரியங்களை, கர்மங்களை நிறைவேற்றவே பிறந்தோம் என்பது தெரிந்து விட்டால் நடப்பது, நடக்கவிருப்பது, அனைத்தும் தெரியவரும். அப்போது எதையுமே இறைவனின் நியதியாக ஏற்கும் மனப்பக்குவம் கிட்டும். இதுவே ... ஒவ்வொரு மனிதனின் லட்சியமாகும். ஏனைய லட்சியங்கள் நிலையற்றவை.. எனவே சற்குருவைத் தேடுங்கள் – வாழ்நாள் முழுதும் தேடிக்கொண்டே இருங்கள்.
சற்குரு கிட்டும் வரை காஞ்சி ஸ்ரீபரமாச்சார்யாள் போன்ற ஜகத்குருமார்களை, ஜகத்குருவாக ஏற்றுக் கொள்ளலாம். ஜகத்குருவின் தலையாய பணி என்னவென்றால் தன்னை நாடும் அடியார்களை அவரவர்க்குரித்தான சற்குருமார்களிடம் அவரவரை ஒப்படைப்பதாகும். ஆனால் சற்குருவோ தானே குரு என்று காட்டிக் கொள்ளாது, தான் ஒரு கைகாட்டும் மரம்போல் ஒரு வழிகாட்டியே என்று கூறிக்கொண்டே அடியாரின் வாழ்க்கையில் நிழலாய் அமைந்து கவசமாய்க் காப்பார். ஜகத்குருவும் அன்னவரை, ‘இவரே உன் சற்குரு!’ என்று சுட்டிக் காட்டுவதில்லை. ‘சற்குருவை நீயே உணர்வாயாக!’ என்பதே இதன் பொருளாகும்.
ஜகத்குருவைத் தியானிக்கும் சாதகனுக்குக் காலப்போக்கில் ஜகத்குருவின் அருளால், நற்காரியங்களை நிறைவேற்றும் சத்சங்கப் பிணைப்புக் கிட்டுகிறது. நற்காரியங்களில் ஈடுபடும்போது அந்தச் சாதகன் தன் மனம் சத்சங்கத்தை நடத்தும் நற்பெரியவரின்பால் லயிப்பதை உணர்கிறான். இந்த லயிப்பே நாளடைவில் குருபக்தியாக வளர்கிறது. ஜகத்குருவிற்கு அந்தச் சாதகனுக்குரித்தான சற்குருவைச் சுட்டிக் காட்டுவதோடு அவர் பணி நிறைவு பெறுகிறது.
ஜகத்குரு போன்று, ஷீரடி சாயிபாபா, பூண்டி சற்குரு, ஸ்ரீரமண மஹரிஷி, ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீஅரவிந்த மாதா, ஸ்ரீசத்யசாயி பாபா, ஸ்ரீஇராமலிங்க சுவாமிகள் போன்ற மஹான்களை/சித்த புருஷர்களை வழிபடுவோர்க்கும் சற்குரு பரிபாலனம் மேற்கண்ட முறையிலேயே கிட்டுகின்றது. சற்குரு கிட்டியவுடன் அவரைச் சிக்கெனப் பற்றிக் கொள்ள வேண்டும். பல மஹான்களும், சித்த புருஷர்களும் தன்னுடைய சற்குருவின் ரூபத்திலேயே ஒன்றியிருப்பதை உணர வேண்டும்.
சற்குரு ஒருவரை நம்பி வாழ்க்கையை அர்ப்பணித்த பின் மனதை இங்கும், அங்குமாக அலைபாய விடக்கூடாது. எவரை நமஸ்கரித்தாலும், அவரைத் தன் சற்குரு ரூபமாகவே காணப் பயில வேண்டும், குருவில்லா வாழ்க்கை குருட்டு வாழ்க்கை குருவருள் இன்றேல் திருவருள் இல்லை!

பிரளயங்கள் பலவிதம்

மஹாப் பிரளயமே சிருஷ்டியின் முடிவைக் குறிக்கும், ஜல பிரளயம், வாயு பிரளயம், அக்னி பிரளயம், பூகம்ப பிரளயம் என்றவாறு ஜலபிரவாகம், வாயுபிரவாகம், அக்னி பிரவாகம், லோகங்கள் வெடித்துச் சிதறுதல் – இவ்வாறாகச் சிருஷ்டி முடிவு பெறுகிறது. இவையெல்லாம் நாம் அறிந்ததே.
 இவையன்றி நம் பூமியில் ஆங்காங்கே சிறுசிறு பகுதிகளில் கூட சிருஷ்டி முடிவு ஏற்படுவதுண்டு. இந்த ஆன்மீக ரகசியங்களைச் சித்த புருஷர்களே அறிவர். தனுஷ்கோடியில் ஜல பிரவாகம் ஏற்பட்டு அங்கு சிருஷ்டி முடிவுற்றது. விஞ்ஞானிகளுக்கு இது கடல் ஆட்கொண்டதாகத் தோன்றலாம். ஆனால் ‘தனுஷ்கோடி சித்தர்’ என்பவர் இதனை அப்பகுதியின் சிருஷ்டி முடிவென அருள்கின்றார். இவர் இன்றைக்கும் கடலில் அமிழ்ந்ததாகக் கருதப்படும் தனுஷ்கோடி சிவன் கோயிலில் அருள்புரிந்து வருகிறார். உண்மையில் தேவர்களும், மற்றைய விண்ணுலகத்தினரும் தனுஷ்கோடி சிவன் கோயிலில் நித்ய பூஜைகள் செய்து வருகின்றனர்.
பட்சியால் வரும் பிரளயம்

 

கௌதம புத்தரிடம் வருணஜீவி என்ற அபூர்வமான பட்சிகள் சில இருந்தன. அவற்றைத் தம் அடியார்கள் சிலரிடம் மிகவும்  ரகசியமாகப் பாதுகாத்து வரும்படி ஆணையிட்டிருந்தார். ஜீவன்களை ரக்ஷிப்பதில் கௌதம புத்தர் ஒரு உத்தமலரல்லவா? அவரருளால்தான் அந்த வருணஜீவி பட்சி திபெத்திலும், சீனாவிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது. விலங்கின விஞ்ஞானம் (Zoology) அறியாத ஆன்மீக ரகசியமிது. பிரளயத்திற்கும், இந்த வருணபட்சிக்கும் நிறையத் தொடர்புகள் உண்டு. இதைப் பற்றிய குறிப்புகள் திபெத் நாட்டின் ஏட்டுச் சுவடிகளிலும், நம் நாட்டு சித்த புருஷர்களின் கிரந்தங்களிலும் காணப்படுகின்றன. வருண ஜீவி என்ற இந்தப் பட்சியின் இனப்பெருக்கம் நம் மனதிற்கெட்டாத ஆன்மீக விந்தை. சிறிது நீரை இதன் தலையில் தெளித்தால் போதும், உடனே பல வருண ஜீவிப் பட்சிகள் இதன் உடலிலிருந்து தோன்றும். எவ்வளவு முறை நீர் தெளிக்கின்றோமோ அவ்வளவு முறைகள் இதன் இனப்பெருக்கம் விரியும். இது கருதியே கௌதமபுத்தர் இதனை ரகசியமாகப் பாதுகாத்து வந்தார். எப்போது இவ்வினத்தின் க்டைசிப் பட்சி இறக்க நேரிடுகிறதோ அச்சமயம் புத்தர் அப்பட்சியின் தலையில் சிறிது நீரைத் தெளிப்பார். உடனே பல வருண ஜீவிப் பட்சிகள் தோன்றும், தாய்ப் பறவை இறந்துவிடும். கௌதம புத்தரின் ஆத்யந்த சிஷ்யர்கள் தாங்கள் கடவுள் எனப் போற்றும் கௌதம புத்தரின் அருளாணைப்படி இதனை ரக்சியமாகப் பேணி வந்தனர். காரணம் விளையாட்டெனக் கருதி சிலர் இப்பறவையின் மேல் நீர் தெளிப்பார்களேயானால் அது விபரீதமான இனப்பெருக்கத்திற்கு வழி வகுக்குமல்லவா? தப்பித் தவறி ஏதேனும் ஒரு வருண ஜீவிப் பறவை கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ, ஏதேனும் நீர் நிலைகளிலோ இறங்குமாயின் கோடிக்கணக்கான வருண ஜீவிகள் தோன்றும்.
இதனை மற்ற பட்சிகள் போல அடித்தோ, தீயிலிட்டோ மாய்க்க இயலாது. அணுகுண்டின் கொடிய விளைவையும் தாங்கி ஜீவிக்கும் சக்தி வாய்ந்தது. இப்பறவை சிறிய மண் முதல் பெரிய மலை போன்று எதையும் உண்டு ஜீரணிக்கும் ஆற்றல் வாய்ந்தது. இந்த வருணஜீவி என்ற பறவை படைக்கப்பட்டதன் காரணமென்ன? இப்பறவை எங்கு வாசம் செய்கிறதோ, அங்கு தெய்வீகப் பேரமைதி நிலவும். அடங்கா மனமும் அடங்கும். இப்பறவையைப் பேணிக் காப்போர்களுக்கு அற்புதமான தியான நிலைகளும், தெய்வீகப் பேரருளும், யோக நிலைகளும் கைகூடும், எனவே, தக்க நல் ஆத்மாக்களிடம் இருந்தாலல்லவா இப்பறவையின் வாசத்தால் கிட்டும் ஆன்மீக சக்தி உலகோரை அடையும்! தகுதியற்றோர் கையில் சிக்கினால், இதன் இனப்பெருக்கமே பிரளயமாக மாறி உலகை அழித்துவிடும். இப்பிரளயத்திற்கு வருண ஜீவிப் பிரளயம் என்று பெயர். திபெத்திலும், சீனாவிலும் உத்தம புத்தமதப் பெரியோர்களிடம் வருண ஜீவிப் பட்சி ஒப்படைக்கப்பட்டுள்ளதன் தாத்பர்யம் என்ன? இவர்கள் இதை ஜீவகாருண்யம் செய்வதன் அவசியம் என்ன என்ற கேள்விகள் எழலாம்.
இறைவன் பல அற்புத ஜீவன்களைச் சிருஷ்டித்து அவற்றைப் பேணும் பாக்யத்திற்காகப் பௌத்த மதப் பெரியோர்களைப் படைத்தான். இந்து மதத்தின் ஓர் அற்புத அங்கமான பௌத்தமதம் ஜீவசம்ரக்ஷையை, ஜீவகாருண்யத்தை, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலைப் புகட்டுகிறது. பெறற்கரிய இவ்வான்மீக சக்திகளை, யோக நிலைகளைக் கொண்டு வருண ஜீவப் பட்சிகளைப் பேணுகின்ற புனிதத் துறவிகள் உலக அமைதிக்காகப் பிரார்த்திக்கின்றார். ஒருபுறம் உலக அமைதி மறுபுறம் வருண ஜீவபட்சி பிறரிடம் சிக்காவண்ணம் பாதுகாத்து, அப்பட்சியின் இனத்தையும் காக்க வேண்டிய ஜீவித கடமை.
இவற்றிற்கிடையே ஓர் ஆன்மீக ரகசிய வாழ்க்கை வாழ வேண்டிய சூழ்நிலை. இதை அறிஅற்புதமாக அவர்கள் நிறைவேற்றுகின்றனர். தங்கள் கடவுளாம், கௌதமபுத்தரின் அருளாணைப்படி வருண ஜீவிப் பட்சியின் ஆயுளின் கடை நேரத்தில் மட்டும் அதன் தலையில் சிறிதளவு நீர் தெளித்து இப்பறவையின் வம்சத்தைப் பேணுகின்றனர். இவ்வாறாக ஒரு வருணஜீவிப் பட்சியின் சிரசில் நீர் தெளிப்பதற்கு ஒரு முறை உள்ளது. இதற்கு ‘வருண ஜீவி முத்திரை’ என்று பெயர். குருவிரலாம் ஆள்காட்டி விரலை நீரில் நனைத்துச் சுக்கிர விரலாம் கட்டை விரலுடன் சேர்த்துச் ‘சின்மய முத்திரையாக்கி’ ஆள்காட்டி  விரலால் தெளிக்கக் கண்ணுக்குத் தெரியாத நீர்த் திவலைகள் வருண ஜீவிப் பறவையின் மேல் விழுகின்றன. இவையே போதும், பல வருண ஜீவிகள் உயிர்ப்பெடுக்க! இம்மாதிரியாக அத்யாவசியமான சமயங்களில் மட்டுமே துறவிகள் வருண ஜீவியைப் பெருக்குகின்றனர். எனவே தக்கவர்களிடத்து மட்டும் வருண ஜீவி இருப்பது சாலப் பொருத்தம்தானே!
ஆன்மிகப் பேரமைதியை அருளவல்ல வருணஜீவியே தம் இனப்பெருக்கத்தால் உலகையே மாய்க்க வல்லது ! ஏன் இந்த மாறுபாடான படைப்பு! நல்லன, தீயன இரண்டும் இறைவனின் படைப்பே! இறைவனுக்கு நல்லவை, தீயவை என்ற வேறுபாடே கிடையாது. இவ்விரண்டையும் கற்பித்தவர்கள் மனிதர்களே! இரண்டையும் கடந்த நிலையை மனிதன் எய்தினால்தான் முழு மனிதனாகிறான்! இதுவே பிரளயங் கற்பிக்கும் பாடம்!

வெற்றிலையின் இரகசியங்கள்

சுபத்தைப் பெருக்கித் தரும் மங்கலப் பொருட்களின் வெற்றிலையும் ஒன்றாகும். பல தோஷங்களைக் குறிப்பாக பாலாரிஷ்டங்களைத் தீர்க்க வல்லது. மந்திரங்களைக் கிரஹிக்கும் அற்புத ஆகர்ஷண சக்தி கொண்டது. சக்தி உபாஸனையில் பெரும்பங்கு வகிக்கும் வெற்றிலைக்கெனக் குறித்த “தாம்பூல தேவதைகளும்“ உண்டு.
வெற்றிலையைப் பற்றிப் பல்லாயிரம் பாடல்களில் “தாம்பூல மஹிமை“ என்னும் கிரந்தத்தைப் படைத்துள்ளார் ஸ்ரீஅகஸ்தியர். கொடி வகை மூலிகையைச் சார்ந்த வெற்றிலை பல நோய்களைத் தீர்க்கும் சஞ்சீவி மூலிகையாகும். வெற்றிலை போடுவதற்கென “தாம்பூல தர்மமுறை” பற்றிச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர். ஒவ்வொரு வெற்றிலையும் சிவ-சக்தி ஐக்ய அனுபவத்தைக் குறிக்கின்றது. ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலை என்று விதவிதமான வெற்றிலைகள் உண்டு. தாம்பூலம், சீர், அர்ச்சனை, வைத்யம் என்றவாறாகப் பலவற்றிற்கும் வெற்றிலையை வைக்கும்போது ஒவ்வொரு வெற்றிலையையும் கையிலெடுத்து அந்தந்த தெய்வ மூர்த்தியை எண்ணித் துதித்துத் தியானித்துப் பின்பே பயன்படுத்த வேண்டும்.

உபயோகம் தியானிக்க வேண்டிய தெய்வமூர்த்தி
தாம்பூலம் தாம்பூல தேவதை
அர்ச்சனை ஸ்ரீபார்வதி/ ஸ்ரீலட்சுமி
வைத்யம் ஸ்ரீஆஞ்சநேயர்
சீர்/வழியனுப்புதல் ஸ்ரீவிஷ்ணு

வெற்றிலைகள் எண்ணிக்கையில் ஒற்றைப்படையாக இருத்தல் விசேஷமானது. துகள் பாக்குகளை விட கொட்டைப் பாக்குகளே (முழுமையாகவோ, அரை வடிவத்திலோ) சிறந்ததாகும். பாக்குகள் இரட்டைப் படையிலிருக்க வேண்டும். தாம்பூலத்திற்கு மட்டும் கொட்டைப் பாக்குகளோடு சீவலைப் பயன்படுத்தலாம். தாம்பூல தேவதைகட்கு ஆயிரமாயிரம் கண்கள் உண்டு. பாக்குகள் தாம்பூல தேவதையின் கண்களாகும்.
தாம்பூலம் இட்டபின்பு இறை நாமாவையோ இறைத் துதியையோ வாயாரப் பாட வேண்டும். அக்காலத்தில் பெரியோர்கள் தாம்பூலக் கிருதிகள் என்று சில இறை கீதங்களைத் தந்துள்ளனர். வெறும் மெல்லின அட்சரங்களுடன் இரு உதடுகளின் சிறிய விரிவிற்குள் பற்கள் கடிபடாமல் மோகனம் போன்ற இளகிய ராகங்களில் பாடுமாறு பல அற்புதமான தாம்பூலக் கிருதிகள் அமைந்துள்ளன. இவற்றால் தாம்பூலதேவதையின் பரிபூரண அருளைப் பெறலாம்.

திருக்கோஷ்டியூர் வைகுண்ட வாசல்

வெற்றிலைக் காம்பு பாசத்தையும், காம, குரோத எண்ணங்களையும் குறிக்கின்றது.
வெற்றிலையின் ஆன்மீக அமைப்பு
காம்பு – கர்வம், ஆணவம்
பக்க நரம்புகள் – காமம், குரோதம்
நுனிக் காம்பு – பாசம்
நடுக்காம்பின் இரு பகுதிகள் – சிவ, சக்தி அம்சங்கள்
பாக்கு – போதை, வீரியத்தை கட்டுப்படுத்த
வெற்றிலையைத் தாம்பூல தேவதையைத் தியானித்து இரண்டாக மடித்து நடுநரம்பை நுனியிலிருந்து அடிவரைக் கிள்ளியெடுத்து விடவேண்டும். வெற்றிலை நுனியைக் கிள்ளுகையில் ‘ஸ்ரீராமானுஜாய நம: (ஸ்ரீராமானுஜா போற்றி) என்று ஸ்ரீராமானுஜரை தியானிக்க அந்த வெற்றிலை ஜீவனுக்கு மோட்சம் கிட்டுகிறது. இதனால் வெற்றிலை, சிவ, சக்தி பாகங்களாக இரண்டாகப் பிரியும். இரண்டையும் ஒன்று சேர்த்து, பின்புறம் சுண்ணாம்பு தடவுதல் வேண்டும்.  அழகாகச் சுருட்டி வலது கையில் சுண்டுவிரல் [புதன்விரல்], மோதிர விரல்களிடையே [சூரிய விரல்] வைத்து கொள்ள வேண்டும். அடுத்த வெற்றிலையையும் இம்முறையில் மடித்து இதனை வலது நடுவிரல் [சனிவிரல்], மோதிர விரல் [சூரிய விரல்]களிடையே வைக்க வேண்டும். பாக்கை வலது கையினால் எடுத்து மென்று இரண்டு வெற்றிலைச் சுருள்களைக் கொண்டு தாம்பூலத் தரிக்க வேண்டும்.
பொதுவாக இரண்டு அல்லது நான்கு தாம்பூலங்கள் போதுமானதாகும். எப்போது தாம்பூலந் தரித்தாலும் சித்தர்கள் அருள்கின்ற இம்முறையையே மேற்கொள்ள வேண்டும். இதன்கண் அமைந்துள்ள ஆன்மீக ரகசியங்களை விரித்தால் பல நூல்களாகப் பெருகும்.அவை சற்குருவை அணுகி உணர்ந்து அனுபவிக்க வேண்டிய பேரானந்த அனுபூதிகளாகும்.
வெற்றிலை இவ்வுலகிற்கு எப்படி வந்தது என்று அறிய ஆவல் வருகிறது அல்லவா!
ஒரு வெற்றிலைக்கு மோட்சம் தாரீர்....
ஸ்ரீராமானுஜர் திருவாழ்க்கையில் நடந்த, புவியில் எவருமறிந்திராத, ஓர் அற்புதமான ஸ்ரீமன்நாராயண மூர்த்தியின் திருவிளையாடல்.....
ஸ்ரீராமானுஜர் திருக்கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, “உலகோரே! ஓதுவீர் ஓம் நமோ நாராயணாய! புகுவீர் வைகுண்ட லோகம்! என்று அருளாணையிட, ஆயிரக்கணக்கானோர், “ஓம் நமோ நாராயணாய” என்று பக்திப் பெருக்கில் “ஆழ்ந்த நம்பிக்கையுடன்“ இறைநாமம் ஓத, ஓதினோர் அடைந்தனர் ஓம்கார வைகுண்ட லோகம். இது யாவருமறிந்ததே!
இதன் பின்னர்.........

வைகுண்டம் சென்றடைந்த ஆயிரக்கணக்கானோரும் பாற்கடலின் தரிசனம் பெற்றவுடன் அவர்கட்குத் தெளிவு கிட்டியது. ஆம், ஞானம் பிறந்துவிட்டது.
“ஆஹா! ஸ்ரீராமானுஜர் போன்ற மஹான்கள் மக்களுக்கு உத்தம சேவை செய்து அடைகின்ற பாக்யமல்லவா இந்த வைகுண்ட லோகம்! நாமோ நிறைய கர்மவினைகளைச் சுமந்து மக்கள் சேவை சிறிதும் ஆற்றாமல் வெறும் வாயால் ஓம் நமோ நாராயணாய என்று ஒரே ஒரு முறை சொல்லி விட்டு இங்கு வந்துவிட்டோமே’‘. இது ஸ்ரீராமானுஜரின் பெருங்கருணையல்லவா! நாம் இதற்கு அருகதையில்லாதவர்களாயிற்றே” என அனைவரும் திகைத்து நின்றனர் வெட்கித் தலைகுனிந்தனர்.
ஆங்கே.... பூலோகத்தில்... ஸ்ரீராமானுஜர் தம் குருநாதரைச் சரணடைந்தார், “ஸ்வாமி! வேறு யாருக்கும் உபதேசித்தலாகாது என்ற சத்யவாக்குடன் குருமொழியாகத் தாங்கள் அடியேனுக்கு உபதேசித்த “ஓம் நமோ நாராயணாய“ என்ற திருமந்திரத்தை ஆயிரக்கணக்கானோருக்கு உபதேசித்து இறைமொழியாம் தங்கள் திருமொழியை மீறி விட்டேன். இந்தக் குரு துரோகத்திற்கு ஏதேனும் தண்டனையுள்ளதா? அதை அனுபவிக்கச் சித்தமாயுள்ளேன்“ என்றார்.
ஸ்ரீதிருக்கச்சி நம்பிகளின் கண்கள் பனித்தன. “ராமானுஜா! நீ குருவை மிஞ்சிய சிஷ்யனாகி விட்டாய். மக்கள் சேவையே மஹேசன் சேவை என்பதற்கு உன் வாழ்க்கையே ஓர் இலக்கணமாக அமையட்டும். “ஓம் நமோ நாராயணாய“ என்று ஓதினால் வைகுண்டம் அடையலாம் என்று நான் உனக்கு உபதேசித்தேன்., நீயோ நான் மட்டும் முக்தியடைந்து என்ன பயன்? என்னுடன் ஜாதி, சமய வேறுபாடின்றி ஆயிரக்கணக்கானோர் முக்தியடையட்டும் என வழிவகுத்தாய்! எனவே குருவை விஞ்சிய சிஷ்யனாகிவிட்டாய்! உனக்கு ஏதப்பா தண்டனை!” என்று மொழிந்தார்.
ஆனால் ஸ்ரீராமானுஜர் தம் குருவிடம் மன்றாடிக் கதறி அழுது தனக்கு தண்டனை தர வேண்டி மிகவும் வற்புறுத்திட, குருவும் “ராமானுஜா! இதற்குப் பிராயசித்தம் அதாவது குரு உபதேசித்ததைப் பிறர்க்கு உபதேசித்ததற்கான பிராயச்சித்தம் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் உனக்கு அதைச் செய்ய வேண்டிய நிர்பந்தமில்லை, உன்னுடைய மஹத்தான மக்கள் சேவைக்கு அதிலிருந்து விதிவிலக்கு உண்டு.எனினும் குருபாரம்பரியத்தைக் கட்டுக் கோப்புடன் வைத்திருக்க நீ வற்புறுத்திக் கேட்பதால்  கூறுகிறேன்”
ஸ்ரீராமானுஜர் பெற்ற தண்டனை என்ன?

அடிமை கண்ட ஆனந்தம்

“வாடா! இன்னிக்கி ஒரு பெரிய கோயில்ல திருப்பணி செய்யலாம்“ என்று, பெரியவர் சிறுவனைக் கூட்டிக் கொண்டு பிராட்வே பஸ் ஸ்டாண்டில் திருஅண்ணாமலை செல்லும் பஸ்ஸில் ஏறினார்..
“திருப்பணின்னா துடைப்பம், வாளி வேண்டாமா வாத்தியாரே?”
“அதுக்குதான் நேத்தி ஒரு முழத்துண்டு வாங்கச் சொன்னேனே வாங்கலியா?“ என்று கேட்டார் பெரியர்.
“இதோ இருக்கே” சிறுவன் ஆவலுடன் தன் கால்சட்டைப் பையிலிருந்து வேகமாக ஒரு துண்டை உருவ பையிலிருந்து நெல்லிக்காயளவு பெரிதாய் இருந்த இரண்டு மூன்று முசுண்டு மிட்டாய்கள் சிதறி ஓட, அவற்றை இரண்டு நாய்கள் கவ்விச் சென்றன.
சிறுவன் பரிதாபமாய்ப் பார்த்தான்... “அந்த நாய்களுக்குப் பாக்கி“ உனக்குப் பிராப்தம் இல்லை .” என்ற் பெரியவரிடம் ... “வாத்யாரே! ரொம்பக் கஷ்டப்பட்டு அங்காளம்மன் கோயில்ல நிறைய காயத்ரி சொல்லி அந்த மிட்டாயை வச்சிப் பூஜை பண்ணினேன் வாத்யாரே!”
“ஆமாண்டா! உன் கண்ணுக்கு அவை நாய்கள் தான்! காயத்ரி தேவி சுவாசிச்ச அந்த சுண்டு மிட்டாய் எந்தத் தேவனுக்குப் போய்ச் சேருமோ அது எங்கங்களுத்தான் தெரியும். ஒண்ணு தெரிஞ்சுக்கோ! தினம் நிறைய காயத்ரி ஜபிச்சா தேவ தரிசனம் எப்படியும் கிட்டும். இதை எதிர்காலத்துல நம்ம பசங்களுகுச் சொல்லு!” என்றார்.
திருஅண்ணாமலை பஸ் (122) புறப்பட்டது, கண்டக்டர் வந்தார்.
“ஒரு திருஅண்ணாமலை ஒன்றரை ஸ்ரீபெரும்புதூர்”, பெரியவர் குரல் கொடுத்தார். சிறுவன் திரும்பினான். பெரியவரின் டிக்கெட் கணக்கு அவனுக்குப் புரியவில்லை. மூன்றுபேர் எப்படி? அவரோ லாவண்யமாக பின்புறக் கோவணத்திலிருந்து அனாயசமாக ஒரு பத்து ரூபாய்த் தாளை உருவி கண்டக்டரிடம் நீட்டினார்.
“அந்தக் கோவணத்தில் தான் என்ன பொக்கிஷமோ! அதிலிருந்து எத்துணை நவரத்தினங்கள், பொற்காசுகள், ரூபாய் நோட்டுக்கள் வெளிவந்துள்ளன. வருவதும் போவதும் தெரியாது... 10 பைசாவிற்கு வேர்க்கடலை கேட்டால் காசு இல்லை என்று கையை விரிப்பார். யாருக்கு அந்தத் திருஅண்ணாமலை டிக்கட்? ஒருவேளை அவர் மட்டும் சென்றுவிட்டு நம்மை ஸ்ரீபெரும்புதூரில் விட்டு விடுவாரா? சிறுவனுக்குக் கிலி பிடித்துக் கொண்டது, இவர் செய்தாலும் செய்வார்.”
இந்த எண்ணம் வந்ததுதான் தாமதம். சிறுவன் ஓடுகின்ற பஸ் என்றுகூடப் பார்க்காமல் சரேலென்று எழுந்து பெரியவரின் கைகளைப் பற்றிக் கொண்டான்.. “வாத்யாரே! என்னை விட்டுட்டு திருஅண்ணாமலை போய்விடாதே!” பெரியவரோ, “என்னா நைனா! நம்ப நடுத் தெருவுல பிள்ளையார் கோயில் எப்படி இருக்கு ? உற்சவம் நடக்குதா?” என்று மிகவும் பழக்கப்பட்டவர்போல் பக்கத்து சீட்டு ஆளிடம் பேச ஆரம்பித்துவிட்டார்.
அவர் சிறுவனைக் கண்டு கொள்ளவேயில்லை. எங்கு இறக்கி விடப் போகிறோரோ என்ற பயத்தில் அவர் அருகிலேயே உட்கார்ந்து விட்டான் சிறுவன். பஸ் பூந்தமல்லி தாண்டியதும் Checking Inspector வந்ததால் வண்டி நின்றது. பெரியவரின் பக்கத்தில் இருந்தவர் டிக்கட் வாங்கவில்லை பையில் பர்ஸைத் தேடுகிறார். அல்லது தேடுவது போல் பாவனையா? புரியவில்லை. மொத்தத்தில் டிக்கட் இல்லா பயணம். அபராதம் கட்ட வேண்டுமே! பெரியவர் தூக்கத்திலிருந்து எழுவது போல் எழுந்து “இந்தா சாரே! இவருக்கு டிக்கட்”, என்று திருஅண்ணாமலை டிக்கெட்டை நீட்டினார். சிறுவன் அமைதியாய்ப் பார்த்தான். “இது போன்ற எத்தனையோ சம்பவங்களைப் பார்த்திருக்கிறோமே, ஆனால் நம் கணக்குத் தப்பாகிவிட்டதே! நல்லவேளை நம்மை எங்கும் இறக்கி விடமாட்டார்” எனச் சிறுவன் தெம்பாக நிமிர்ந்து நன்கு அமர்ந்து கொண்டான்..
ஸ்ரீபெரும்புதூர் வந்தது. பெரியவர் பக்கத்து சீட்டு ஆளிடம்,, “நைனா! திருஅண்ணாமலைல 10 பேருக்குச் சாப்பாடு போடு, ஒரு ரவுண்டு கிரிவலம் வந்துடு.. பிரிஞ்சு போன உன் குடும்பம் ஒண்ணா சேரும். இந்தா வைச்சுக்க செலவுக்கு 50 ரூபா.”
பக்கத்து சீட்டுக்காரர் வேர்த்து விறுவிறுத்தவாறு பெரியவரின் கால்களில் விழுந்து “சாமி! தெரியாம தப்பு பண்ணிட்டேன். பிள்ளையார் கோயில் உண்டியல்ல 50 ரூபா தெரியாமத் திருடிட்டேன். அதைக் கொண்டு போய் சேர்த்துடறேன்”..... அவர் அடுக்கிக் கொண்டே சென்றார். அவர் என்ன சொல்கிறார் என்று கேட்க பெரியவர் அங்கு நின்றால் தானே!
விறுவிறு என்று சிறுவனை அழைத்துக் கொண்டு ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு வந்துவிட்டார். “இதாண்டா இராமானுஜர் பிறந்த இடம்” என ஓர் அழகிய மண்டபத்தைக் காட்டினார். “இங்கு குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு வந்து பாயசம், பட்சணம் தானம் பண்ணினா பாலாரிஷ்டம், திருஷ்டி போன்ற எல்லா தோஷங்களும் போகும்” என்றார். இருவரும் கோயிலுக்குள் சென்றனர். எவ்வளவு பெரிய கோயில். சிறுவன் மலைத்து நின்றான். இத்திருக்கோயிலில்தான் சிறுவனாகிய நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராமன் ஸ்வாமிகள் தம் சற்குருவிடமிருந்து இப்பூவுலகம் இதுவரை அறிந்திடாத அதியற்புத ஆன்மீக ரகசியங்களைக் கேட்டு மகிழ்ந்தார்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வகையகம் என்று வாரி வழங்குகிறார். கோயிலில் ஆண்டாள் சன்னதி எதிரே பெரியவர் அமர்ந்தார். “டேய்! அந்தத் துண்டை எடு”. சிறுவன் துண்டையே மறந்து விட்டான். இம்முறை மிகவும் ஜாக்கிரதையாக அதை எடுக்க.....
“அந்தச் சாம்பலைத் துண்டில் கட்டிக்கோ” பெரியவர் அங்கிருந்த ஒரு பழைய மண் அடுப்பைச் சுட்டிக் காண்பித்தார். “கோயிலுக்குள் அடுப்பா”! சிறுவன் வியந்தான். பெரியவர், பவ்யமாக அந்த மண் அடுப்பைத் தொட்டு வணங்கி அதனுள் இருந்த சாம்பலை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டார். தனக்கும் இட்டுவிட வேண்டும் என்பது போல் சிறுவன் தன் நெற்றியைக் காட்டினான்..
“இந்த சாம்பலை ஒரு நூறு பேருக்குக் கொடுக்கணும், அந்த dutyயை முடிச்ச அப்புறம் உனக்கு இட்டு விடறேன்” என்று பெரியவர் அழுத்தமாய்ப் பேசினார்.சிறுவன் வருத்தத்துடன் தன் பணியைத் தொடர்ந்தான். “சோதித்தத் திருவடி” என்னும் வைணவப் பெரியாருக்கும், இந்த அடுப்பிற்கும் ஆன்மீகப் பிணைப்புண்டு .இன்றைக்கும் இந்த அடுப்பு ஸ்ரீஆதிகேசவர் ஆலயத்தில் ஸ்ரீஆண்டாள் சன்னதி எதிரில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த சாம்பலைக் கொண்டது.
இதைப் பற்றிய விளக்கங்களைப் பின்னர் காண்போம். தக்க சற்குருவை நாடியே இவற்றைப் பெற இயலும். பெரியவரும், சிறுவனும் அந்த அடுப்பை நன்கு சுத்தப்படுத்தினர். “சரி எந்திரிடா! நம்மோட பெரிய திருப்பணி முடிஞ்சது”, என்று கிளம்பித் தொடங்கிய பெரியவரைச் சிறுவன் மிகவும் ஆச்சரியத்துடன், அதிசயமாகப் பார்த்தான்.. “நீ பெரியவன் ஆனப்புறம் மூலம் நட்சத்திரத்துல பல அடியார்களோட இந்தக் கோயில்ல திருப்பணி செய்யும் பாக்யம் கிட்டும். அப்ப “சோதித்த திருவடிச் சித்தர்” காட்சி கொடுப்பார். அன்னிக்கி இந்த சாம்பலை நீ விபூதியாய் இட்டுக்கோ!” எனப்பெரியவர் அருளினார்.
பெரியவரின் தீர்க்க தரிசனம் கடந்த 6.3.1994 (ஞாயிறு) அன்று பரிணமித்தது. அன்று நம் சபை அடியார்கள் இத்திருக்கோயிலில் உழவாரப் பணி செய்யும் பெரும்பேறு பெற்றனர். அற்புத சக்தி வாய்ந்த இந்த அடுப்பினையும் சுத்தமாக்கும் பெறற்கரிய தெய்வீகத் திருத்தொண்டு நம் அடியார்களுக்குக் கிட்டியது.
“சோதித்த திருவடிதம் தாள் வாழ்க”.... சிறுவன் கண் விழித்தான். எதிரே கோயில் கோபுர தரிசனம். “ஏழு கொண்டலவாடா” என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.. ‘ஆஹா! நாம் திருப்பதியில் அல்லவா இருக்கிறோம்”. சிறுவன் குஷி அடைந்தான்.. ‘ஆமாம் , நாம் ஸ்ரீபெரும்புதூரில் அல்லவா திருப்பணி செய்தோம். இங்கு எப்படி வந்தோம்! அப்படியானால் அங்கு செய்த திருப்பணி வெறுங் கனவா? சிறுவன் எண்ணி முடிப்பதற்குள், கோவணாண்டிப் பெரியவர் சிறுவனின் கால்சட்டைப் பையைத் தட்டிக் காண்பித்தார். அதனுள் சாம்பல் மூட்டை பெருத்து நின்றது.
சிறுவன் வழக்கம்போல் தலையைச் சொறிந்து கொண்டான்... “வாடா! புஷ்கரணியில் முழுகலாம்”.. பெரியவர் சிறுவனுக்காக காத்திருக்காமல் கோவணத்துடன் குளத்தில் இறங்கி விட்டார். “மாற்று டிராயர் இல்லை” எனச்சிறுவன் தயங்கிக் கரையில் நின்றான். சொன்னவுடன் தான் முழுகாததற்காகத் தன்னை விட்டுவிட்டுச் சென்றால் என்ன செய்வது என்ற பயம் வந்தவுடன், சிறுவன் நீருக்குள் பாய்ந்தான்... பெரியவர், தம் கரங்களில் ஏந்தி அவனைக் கரை சேர்த்தார். என்ன சுகமான அணைப்பு! நீரின் குளுமை தெரியாதபடி ஒரு தெய்வீக அணைப்பு! சிறுவன் தன்னையே மறந்தான்..
திடீரென்று அடுப்புச் சாம்பல் நினைவு வந்துவிட்டது. ‘அடடா! சாம்பல் நனைந்து இருக்குமே! சிறுவன் பதட்டமடைந்தான்... “பரவாயில்லடா ராஜா! இந்தத் தீர்த்தத்துல அந்த சாம்பல் நனைஞ்சு பல லட்சம் பேருக்கு அந்தச் சக்தி போகனும். இப்ப எதுக்கு முழுகச் சொன்னேன்னு தெரியுதா? உனக்கு டிரஸ் முக்கியமா? பல லட்சம் பேருக்குச் சேவை செய்வது முக்கியமா என்று யோசிச்சுக்கோ” என்றார் பெரியவர்.
இருவரும் திருப்பதி கோயிலினுள் சென்றனர். இங்குதான் ஸ்ரீவெங்கடாஜலபதியைத் தரிசிக்கும் முறையைப் பெரியவர் சிறுவனுக்குக் கற்பித்தார். சித்தரின் ஆன்மீக ரகசியமிது. சற்குரு மனங்கனிந்தால் இது, தானே கிட்டும். திடீரென்று மூலஸ்தானத்திலிருந்து வெளியே வந்த ஒரு காவி வேஷ்டிக்காரர் சிறுவன் கையில் ஒரு பெரிய லட்டுவைத் திணித்தார். சிறுவனோ, பெரியவரை நோக்க அவரும் கண்ணை அசைத்து ஆமோதித்தார், “லட்டு வெளியில் தானே தருவார்கள்., மூலஸ்தானத்திலோ தருவார்கள்’ என்று யோசித்தபடி அந்த லட்டுவில் பதிந்த முந்திரிப் பருப்புகளைப் பார்த்தவண்ணம் பெரியவருடன் வேகமாக கோயிலைப் பிரதட்சிணம் வந்தான். பெரியவர் வெளியில் வந்து ஒரு திண்ணையில் அமர்ந்தார். சிறுவன் லட்டுவைக் கையில் வைத்துக் கொண்டு பெரியவரின் பர்மிஷனுக்காக அவரை நோக்கினான்.. அவரோ வழக்கம் போல் யாரையோ அக்கூட்டத்தில் தேடிக் கொண்டிருந்தார். “யாரைப் பாக்குற வாத்யாரே” சிறுவன் அமைதியின்றி தவித்தான்.
“ஆங் அதோ வந்துட்டார்” என்று பெரியவர் வேகமாக எழுந்தார். அவர் கைகாட்டிய திசையில் மூலஸ்தானத்திலிருந்து வெளிவந்து லட்டு தந்த அதே சன்னியாசி விரைவாக வந்து கொண்டிருந்தார். வந்தவர் க்ஷண நேரம் பெரியவரிடம் நின்று ஏதோ சில வார்த்தைகள் பேசிவிட்டுத் தம் கைகளை நீட்ட, “டேய் அந்த லட்டுவை அவர்கிட்ட கொடுத்துடு” என்றார் பெரியவர். லட்டு வாங்கிக் கொண்ட சந்நியாசி குளத்தினுள் சென்று மறைந்தார். சிறுவன் அழுத கண்களுடன் பெரியவரைப் பார்க்க..... அவரோ “ஆமாண்ட நேத்தி நீ ஸ்ரீபெரும்புதூர்ல திருப்பணி இன்னிக்கு திருப்பதி தரிசனம் நீ பண்ணின திருப்பணிக்கு ஸ்ரீராமானுஜனே வந்துட்டாரே! அப்புறம் எதுக்கு லட்டு” என்றார். “ஸ்ரீராமனுஜரா” சிறுவன் அந்தச் சன்னியாசி சென்ற திசையையே பார்த்து நின்றான்...
ஸ்ரீபெரும்புதூர்ல சற்குருவோட சேர்ந்து திருப்பணி செஞ்சு, குறிப்பா அந்தச் சோதித்த திருவடி அடுப்பைச் சுத்தம் செய்யணும். இப்படி அங்கே சற்குருவோட உழவாரத் திருப்பணி செஞ்சவங்க எப்பெல்லாம் திருப்பதி வர்றாங்களோ அத்தனை முறையும் ஸ்ரீராமானுஜர் அவங்களுக்குக் காட்சி தருவார். இதை எடுத்து சொல்ற குருவோட சுத்தணும்’ என்று அருளினார் கோவணாண்டிப் பெரியவர்.

டெலிபதி TELEPATHY

(அயல் நாட்டில் வசிக்கும் ஓர் அடியார்க்கு நம் குருமங்கள கந்தர்வா அருளியது)
“நாம் நம்மை அறியாமல் ஒருவரைப் பற்றி நினைத்திருப்போம்,, அவர் நம் வீடுதேடி நம்மைப் பார்க்க வருகிறார். இது போன்ற நிகழ்ச்சி நம் அனைவருக்கும் நடக்கிறது. ஏன் இப்படி நடக்கிறது.. நம்மை அறியாமலேயே நாம் மனோரீதியாக telepathy  மூலமாக இன்னொருவரை contact  செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் உணர்ந்து மனோரீதியாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தாலோ இது வேலை செய்வதில்லை! ஏன்? Conscious  ஆக இதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது பல Disturbances வந்து விடுகின்றன., ஆனால் நம்மை அறியாமலே செய்யும்போது – When we are not conscious of it அந்த exact  சமயத்தில் disturbance இல்லாமல் நம்முடைய மனம் வேலை செய்து விடுகிறது., அப்படி வேலை செய்யும் போது அது destinationல் சேர்ந்து விடுகிறது, அதாவது அந்த message மனோரீதியாகச் சரியாக அனுப்படுகிறது. ஆனல்  Consciousஆக முறன்றால் இந்த மனோ நிலை அமையாததால் நம்மால் message ஐ சரியாக அனுப்ப முடிவதில்லை.
இந்த நிலையில்  telepathy ல் தேர்ச்சி பெறுவது எப்படி? இதற்குத் தான் சற்குரு “YOU SHOULD PRACTISE IT WITHOUT BEING CONSCIOUS OF IT ”, என்று கூறுகிறார். இது புதிர் போல் உள்ளது. ஆகவே இதனை எளிமைப்படுத்தி  “YOU SHOULD BE ABLE TO DO TWO THINGS AT THE SAME TIME”, என்று கூறுகிறார். இது புதிர் போல் இல்லாவிட்டாலும் கஷ்டம் என்பது தெரிகிறது. ஆனால் நாம் இதை நடைமுறையில் தினமும் செய்து கொண்டுதான் இருக்கிறோம்..
உதாரணமாக ஆண்கள் shave பண்ணும் போதும் பெண்கள் காய்கறி நறுக்கும் போதும் தங்கள் மனதில் பற்பல விஷயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இதனால் “Shave” பண்ணுவது “கோணாமாணா” வாகவா போகிறது? இல்லை! அதுவும் சரியாக நடக்கிறது, மனதால் எண்ணும் வேலையும் சரியாகத்தான் நடக்கிறது. இதற்கிடையில் மனைவி உணவு படைத்திருப்பதாகக் கூறுகிறாள் . அதற்கும் நம்மை அறியாமல் “சரி” என்று நம் வாய்தான் கூறியது. நம் வாய் அதற்குப் பயன்பட்டதே ஓழிய பதில் கொடுத்தது நம்மை அறியாமல் ஒரு அனிச்சை செயல் போல் நடந்தது. இதைத் தான் சற்குரு telepathy மூலமாகக் கொடுத்த பதில் என்று விளக்குகிறார்.
இது போல நம்மை அறியாமலே பல விஷயங்களை நாம் ஒரே சமயத்தில் செய்து கொண்டிருக்கிறோம். இதை நடைமுறையில் நிலைப்படுத்தத் தான் Tibet தேசத்து லாமாக்கள். பத்மாஸனம் போட்டார்கள். பத்மாஸனத்தில் அமர்ந்து நற்சிந்தனையில் ஈடுபடுவார்கள். பத்மாஸனத்தால் வருகின்ற உடம்பு pain உடன் thoughts! இப்படி  pain, thoughts இரண்டும் சேர்ந்து வருவதைப் பயிற்சி செய்தார்கள். கடுமையான வலியின் ஊடே மனம் வேலை செய்யும், இதன் மூலம் telepathyல் தேர்ச்சி பெற்றார்கள். இதுவே ஆரம்ப நிலை.
தஞ்சைப் பெருநந்தி மண்டப சித்தர்கள் -1
தாமரைப்பூ சாவடிக் கண் சித்தர் : வம்சோதர நந்தீஸ்வரர் என்ற சித்தரின் தியாகம் பல மஹரிஷிகளைக் கவர்ந்தது. அதில் ஒரு மஹரிஷி இவருடைய தியாகத்தை நினைத்து நினைத்து உருகினார். ‘என்ன அற்புதமாக இறைவன்மீது அன்பு செலுத்தினார். இந்த மாதிரி ஒரு குருவிடம் அமர்ந்து சேவை செய்து அவருடைய அனுக்கிரஹத்தைப் பெற வேண்டும்’ என்று தீர்மானித்தார். வம்சோதரனாகிய தஞ்சை பெருநந்தி அருகிலேயே அமர்ந்து அவரிடம் பிரார்த்தனை செய்வதும் அவரைக் குறித்தே தியானம் செய்வதுமாக இருந்தார். தினந்தோறும் அவருடைய பீடத்தை அலம்பி சுத்தப்படுத்தி பூஜை புனஸ்காரங்கள் செய்து கடுமையாக சேவை புரிந்தார். இவ்வாறு நந்தீஸ்வரரைப் பூஜித்து வருகையில் ஒரு நாள் ‘யோக மாயைதேவி’‘ நந்தீஸ்வரரைக் கண்ணுக்குத் தெரியாதவாறு மறைத்து விட்டாள்...
அடுத்த நாள் அங்கு வந்த ரிஷி நந்தீஸ்வரரைக் காணாது திகைத்து நின்றார். என்ன செய்வதென்று புரியாத நிலை. அவர் பீடத்தருகிலேயே அமர்ந்து கடுமையாகத் தபஸ் செய்யத் தொடங்கினார்.. அப்போதிருந்த மக்கள் இவருடைய ஈடுஇணையற்ற கடுமையான சேவையை நன்கு அறிந்திருந்தனர். அந்த ரிஷியைச் சுற்றி அபிஷேக ஆராதனைகள் செய்து அவருக்குச் சேவைகள் செய்தனர். யோக மாயை பார்த்தாள். ‘இனியும் இந்நிலை தொடர்ந்தால் இவர் பிராணனை விட்டு விடுவார்’ என்று நினைத்து ‘நந்தீஸ்வரருக்கு சேவை செய்பவர்களுக்கெல்லாம் பூரண அனுக்கிரகத்தைத் தரவேண்டியவனே நீ” என்று அவருக்கு அனுக்கிரகம் செய்தாள் யோக மாயை. அன்று முதல் சுவாமி நந்தீஸ்வர ஸ்வாமியை அலம்பும் பணியை எடுத்துக் கொண்டார் அந்த ரிஷி..
‘நந்தீஸ்வர ஸ்வாமியை யார் தூய்மை செய்தாலும் அவர்கள் உடலில் புகுந்து கொண்டு யான் இந்தத் திருப்பணியைச் செய்து அவர்களுக்கு அருள் புரிவேன். என்று பிரதிக்ஞை எடுத்துக் கொண்டார். அந்தச் சித்தர் தான் தாமரைப்பூ சாவடிக் கண் சித்தர். அவர் நந்தீஸ்வரருக்கு திருப்பணி செய்யும் அடியார்கள் உடலில் புகுந்து பெருநந்தியாகிய வம்சோதரனுக்குத் தான் செய்ய வேண்டிய திருப்பணியை ஒவ்வொரு தரமும் நிறைவேற்றிக் கொள்கிறார். அதற்காக அங்கேயே நந்தீஸ்வரனின் வலப்புறத்தில் அமர்ந்தார். அவர் சூஷ்ம மாயைகள் அறிந்தவர். சூஷ்ம பிரவேச ரகசியங்களைச் செய்யும் விதங்களையும் தெரிந்தவர். அதற்கான அனுக்கிரகத்தைச் செய்பவர் அவர். எனவே தஞ்சை பெரிய கோயில் நந்தியின் பீடத்தின் குப்பையைப் பொறுக்குவது கூட நல்ல திருப்பணி. இத்திருப்பணிகளால் நந்தி மண்டப வலபுறத் தூணில் உறையும் இந்தச் சித்த புருஷரின் அனுக்கிரகத்தைப் பெறலாம்.

ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்

(ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகளைப் பற்றி 1980ஆம் ஆண்டு March Easter Sunday அன்று சென்னை ரமண கேந்திராவில் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு)
இரும்பு காந்தத்தை இழுப்பது போல அருணாசலம் தன்னை நாடி வரும் உத்தமர்களை அழைக்கும். இதற்குக் “காஷ்ட சித்தி” என்று பெயர். காஷ்ட சித்தி கிடைப்பது ரொம்ப கஷ்டம். காஷ்ட சித்திகள் சேர்வதற்கு அகஸ்தியர் ரொம்ப அற்புதமாய்ச் சொல்கிறார்,
“குறித்த ஓர் ஊனை குறித்தவன் உண்ணும் முன்னே
குறிக்கும் ஊனது தானே பசியடங்கி தாகம் பெருகும் பாரேன்.”
“ஊனுக்கு ஊனே உண்ணும் அந்நிலை கொண்டவனே ஓதவல்லான்
காஷ்ட சமாதி நிலை கொண்டவனே” என்றார்
அந்தக் காஷ்ட சமாதி நிலை அவ்வளவு கடினம். காஷ்ட சமாதி நிலை கிடைப்பதற்குப் பல முயற்சிகள், பல தவங்கள் வேண்டும். அதைச் சுலபமாய் கொடுத்து விடுகிறதாம் அருணாசல சிவம். அதுதான் காஷ்ட சமாதியின் பூரண நிலை.. அந்த மாதிரி பூரண காஷ்ட சமாதி நிலையைப் பெற்றவர் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளைப் பற்றி ஏராளமாகச் சொல்கிறார் ஸ்ரீஅகஸ்தியர் மகாபிரபு.
சில பேர் ஒரே இடத்தில் இருந்து கொண்டு தெய்வ நாமத்தைப் பிரசாரம் செய்வார்கள். இருக்கும் இடம்தனில் தேடி இறைவனை ஈசன் என்றும் அன்றியே தான் போடும் வண்ணம் இருந்திடாமல் அன்னவர் தேடி வரவைப்பான் பாரேன், இருக்கிற இடத்திலேயே எல்லாரையும் வரவழைக்கும் சக்தி பெற்றவர் ரமண மகரிஷி. இருக்கும் இடமெல்லாம் பிரம்மம் என திரிந்தே எங்கெங்கும் ப்ரம்மம் உண்டோ அங்கெல்லாம் அன்னவர் சேஷாத்திரி அலைவான் பாரேன், என்றார் அகஸ்தியர். அந்த மாதிரி ஒரு திவ்ய புருஷர். அவரை மகான் என்றும் சொல்ல முடியாது. ஜீவன் முக்தரென்றும் சொல்ல இயலாது.. அதற்கு அப்பாற்ப்பட்ட மகாஞான சித்த முக்திகள் எல்லாம் உண்டு. முக்தர்களிலேயே பல varieties வைத்திருக்கிறார்கள். ஜீவன் முக்தா, தேவமுக்தா, அஷ்ட முக்தா, காலமுக்தா, கருத்து முக்தா, மகா முக்தா, ஞானமுக்தா, சர்வேஸ்வர முக்தா.
இத்தனையையும் முக்தாக்களின் பரம்பரைகள் ஈசன் எம்பெருமான் திருவருளால் ஏராளமாக எடுக்கிறார்கள். அந்த ஜீவன்  முக்தா நிலைகளிலே பூரண கலைகள் கொண்ட நிலைகள் உண்டு, ஆரம்ப நிலைகள். உண்டு.. இதிலே பல planes வச்சிருக்கா ஈசன் அருளாலே., அந்தப் பூரண நிலைகளை அடைந்தவர்கள் தான், “தன் உடல் மறந்து தானே உடல் நிலை போய் அந்நிலை செய்யும் காரணம் எல்லாம் ஈசன் அருளால் ஆனது பாரேன்”
தன்னுடைய உடலை மறந்து விடுவார்கள், அவர்கள் செய்யும் காரணம் எல்லாம் ஈசன் செய்ததாகவே கருதக் கூடும்.. ஏனென்றால் அவர்களுக்குத் தெரியாது தான் என்ன செய்கிறோம் என்ற நிலை. காமகோடி சாஸ்திரிகள் என்பவருக்கு பூர்வீக அநுக்கிரகத்தாலே இந்த ஸ்ரீசக்ர மந்திரங்கள் பூரணமாய்த் தெரிந்து அவருக்கு உண்மையான தபஸின் வலிமையால், எம்பெருமான் அருளால் ஒரு மகவு கிடைத்தது. அந்த மகவுதான் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள்

ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜாதகம்

இந்த மாதிரி அவருடைய ஜாதகம் அமைந்திருக்கிறது, ஜாதங்களுக்குப் பல விளக்கங்கள் இருக்கின்றன, வராஹமிஹிரர் கொடுத்திருக்கிறார், ப்ருஹத் ஜாதகங்கள் கொடுத்திருக்கிறார், இந்த ஜாதகங்களில் பல விசேஷங்களில் பல யோகங்கள் உண்டு. அஷ்டயோகம், தனுர்யோகம், வேத யோகம், பவித்திர யோகம், நானாவித யோகம், மகாபாக்ய யோகம், தினமங்கள யோகம், கதிகேஸ்கர யோகம், மகா தீர்க்க யோகம் என்று யோகங்களில் பல variety இருக்கிறது.
அதிலே சன்யாசி யோகம் என்பது ரொம்ப விசேஷம், சன்யாசியிலே பல variety வைத்திருக்கிறார்கள், எங்கே 4 கிரகங்கள் ஒன்றாய் கூடி அதில் ஒரு கிரகம் உச்ச நிலை அடைகிறதோ அவன் சன்னியாசி ஆவான், சாஸ்திரம் சொல்கிறது, ஜோதிடம் சொல்கிறது.. அதுமட்டுமல்லாமல், குரு ஐந்தாம் வீட்டிலோ ஒன்பதாம் வீட்டிலோ உட்கார்ந்து யாருடைய தொந்தரவுகளும் பார்வைகளும் வேகங்களும் இல்லாதிருந்தால் அவர்கள் சன்னியாசி ஆகிவிடுவார்கள்,
இல்லாவிட்டால், சனீஸ்வரன் லக்கினாதிபதியாய் இருந்து தனித்து ஏகராசியில் இருந்து மற்றவர்களுடைய சம்மந்தம் இல்லாமல் இருந்தால் அவர்களும் சன்னியாசி ஆகிவிடுவார்கள், இவருடைய ஜாதகப் பிரகாரம் அகஸ்திய நாடி சொல்கிறது.
“நிலை பிரண்டு இன்னவன் கலை கூட்டியே
அங்கு அங்காரகன் உச்சம் பெற்று மகரத்தில் பிறந்தான்
மகர புத்திரன் ஞான யோகியே
அத்திரி சோணாத்திரி சென்றவனே 
என்றார் சோணாத்திரி சென்ற அத்திரி சேஷாத்திரி, அந்நிலை ஓதவே இன்னவன் சேஷாத்திரி.....
சேஷாத்திரி என்ற நாமத்திற்கே ஒரு விசேஷம் உண்டு “சேஷ” என்றால் ‘மீதி’ என்ற ஒரு அர்த்தம் உண்டு. இறைவனுக்கு ‘நேதி, நேதி’ என்று நிவேதனம் பண்ணிவிட்டு  எஞ்சிய சத்துப் பொருளை கொள்ளலாம். அத்திரி என்றால் மலை என்று ஒரு பொருள் உண்டு. மலை என்றால் சாதாரண மலை அல்ல..., இன்னவன் அத்திரி சோணாத்திரி சுற்றி வலம் வந்து பல பிரம்மத்தை அறிந்தவன் பார்.
அந்த சோணாத்திரி சித்தாய் இருக்கின்ற அருட்பெரும் குழம்பு. அதில் சித்தாய் இருக்கின்ற அத்தி என்ற மலையாய், யாராலும் அறிந்து கொள்ள முடியாத ஒரு பிரம்மாண்டமான சொரூபமாய் இருக்கின்றார் என்பதைக் காட்டுவதற்கே அத்திரி என்ற பெயர் வந்தது., ‘ஸ்வாமி’ என்றால் ஞானப் பிரகாசம் தான்தோன்றி ஆகையினால் சேஷாத்திரி என்றால் சத்து, சித்து, ஆனந்தமாய் இருப்பவர் என்று ஒரு பொருளும் ஆகும்.அதுமட்டுமல்ல,
அன்னவர் அமரும் விதம் கண்டாய் பெரியவர்கள் எல்லாம் ஒரு postureல் உட்காருவார்கள்.. உட்காருகிற  postureஐ வைத்து ஒரு legendஏ எழுதி விடலாம். இவர் உட்கார்ந்து இருப்பதை வைத்துப் பல விஷயம் எழுதியிருக்கிறார்கள் பெரியவர்கள், எதற்காக இவர் இந்த மாதிரி உட்கார்ந்திருக்கிறார் என்று
“அத்திரி இன்னவன் அமரும் ஆசனம்
ஸ்வஸ்திகா ஆசனம் பாரேன்”
யோக ஆசனம் தெரிந்தவர்கள் இருப்பார்கள். பல ஆசனங்கள் உண்டு. அதில் ஸ்வஸ்திகா ஆசனம் என்பது ஒரு விசேஷமான ஆசனம், அந்த ஸ்வஸ்திகா ஆசனத்திற்கு மறு பெயர் உண்டு. பரிபாஷையிலே ‘கணேச ஆசனம்‘ என்று ரகசியமாக சொல்லித் தருவார்கள் குருக்கள் சீடர்களுக்கு, அந்த ஸ்வஸ்திகா ஆசனத்தில் ஒருவர் அமர்கிறார் என்றால்,,
மூலாதார சூட்டை மூண்டெழு கனலை அடக்கிய
ஆறாதாரத்தை அனைத்து எழுப்பும் அக்கணம் அங்கண்
கணேசனே வாலைத் திறந்து வழி விடவே
மூலாதார ஸ்வஸ்திகா ஆசனம் இட்டான் பாரேன்.  - என்றார் அகஸ்தியர்
ஸ்வஸ்திகா ஆசனம் இட்டால் மூலாதார சூட்டை ஒரு secondல எழுப்பிடலாம். அவ்வளவு ஒரு திவ்யமான ஆசனம் அந்த ஸ்வஸ்திகா ஆசனம். அது கணேச நிலை, அப்போ, சேஷாத்திரி சுவாமிகள் உட்காருகிற நிலையிலிருந்து தானும் கணேசனும் வேறு ஒருவருமில்லை என்பதை prove  பண்ணுகிறார்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam