அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

நாககண்ட பௌர்ணமி

சிவபெருமான் உள்ளிட்ட பல தெய்வ மூர்த்திகளின் சிரசு, கழுத்து, கை, உடலெங்கும் காட்சி தரும் நாகங்கள் சாதாரண நாகங்களன்று! இறைவன் மீது வியாபிக்கின்ற நாகங்களனைத்தும் சித்தபுருஷர்களும், மகஹரிஷிகளுமாவர். இறைவனுக்குச் சேவை செய்த தபஸ்விகளை, ஆபரணங்களாக, வஸ்திரங்களாக, காப்புகளாகத் தன் உடலில் ஏற்கின்றான் இறைவன்.
இன்றைக்குக் கோயில்களில் இறைமூர்த்தியைத் தீண்டி அபிஷேக ஆராதனை செய்யும் பாக்கியத்தைப் பெற்றோர் மிகச் சிறந்த ஒழுக்கம், உன்னத இறைபக்தி, நேர்மையான வாழ்க்கை, நியம நிஷ்டை தவறாத நித்ய பூஜைகள், தர்மசிந்தனை, ஜாதி மத பேதமின்றி அனைவர்க்கும் அன்புடன் சேவை செய்தல், குடுமி வைத்து, பஞ்ச கச்சம் போன்ற முறையான ஐதீகங்களுடன் உள்ளன்போடு இறைவனைப் பூஜித்தல் இவற்றை முறையாக மேற்கொண்டால் மிக எளிதில் உன்னத இறைநிலையை அடையலாம்
பொதுவாக இறைவனைக் காண ஏங்குவோர்க்கு  அவர்களைக் கோயில் பூசாரிகளாகவும் ,அர்ச்சகர்களாகவும் சில பிறவிகளை இறைவன் அளிக்கின்றான். இவர்கள் இதை உணர்ந்து அனைத்து மக்களிடமும் அன்பு காட்டிச் சிறப்பான முறையில் இறைத் தொண்டு புரிய வேண்டும். தவறிடில் கடுஞ்சாபங்களுக்கு ஆளாவர்.
எண்ணற்ற கர்ம வினைகளுடன் பிறப்பெடுக்கும் மனிதன் நித்ய இறைவழிபாட்டினைச் சரிவரச் செய்யாது பலவித கர்மவினைகளைப் பெருக்கிப் பிறவிப் பிணிக்கு வழிகோல்கின்றான். இறை பக்தி மங்கும் போது தான தர்மங்கள்தாம் சிறந்த பரிகாரங்களாக அமைகின்றன.

துர்ஸ்வப்பனங்களினால் அவதியுறுவோர் சிவன் கோயில் நந்திக்கு நந்தியாவட்டை புஷ்பத்தால் ஆன மாலை சாற்றி வழிபட வேண்டும்.

ஒரு விதத்தில் எத்தகைய கொடிய பாவங்களுக்கும், ஏன் பசுமடியை அறுத்த கொடிய வினைக்கும் கூட சில அரிய தான தர்மங்கள் சித்த புருஷர்களால் அருளப்பட்டிருப்பதைக் கண்டு தெளிவுற வேண்டும். ஆனால் பரிகாரங்களைச் செய்தபின் அதே குற்றங்கள் தொடருமாயின் அதற்கு மிக மிகக் கொடிய தண்டனைகள் உண்டு என்பதை உணரவேண்டும்.
இறைவனைக் காண விரும்புவோர், இறைவனை திருமேனியை ஸ்பரிஸிக்க வேண்டுவோர், இறைவன் திருமேனியை அலங்கரிக்க விருப்பங் கொண்டோர் செய்ய வேண்டிய விசேஷமான பூஜைகளை ஸ்ரீவைரத்வஜ மஹரிஷி என்பார் அருளியுள்ளார். இவர் மாசி மாத “நாக கண்ட பௌர்ணமியைப் “ பல கோடி சதுர்யுகங்களில் கொண்டாடி உத்தம நிலையைப் பெற்றவர்.
முத்தான முத்தானங்கள்
எவ்விதக் கர்மவினைகளையும் போக்க வல்ல மூன்றுவித தானங்கள் உண்டு,.

  1. கோதானம் – பசுக்களைத் தானமாக அளித்தல்.
  2. பூதானம் – நிலம், வீடுகளைத் தானமாக அளித்தல்.
  3. பொன்தானம் – பொன் ஆபரணங்கள், மாங்கல்ய தானம்

இவற்றை வசதியுள்ளோர் எளிதாக அளித்து உத்தம நிலையை அடைந்து விடலாமே என எண்ணலாம். ஆனால் வசதியற்றோரும் இவ்வித மூன்று வகைத் தானங்கள் செய்வதற்கு அவர்கள் உதவி புரிதலையே ஸ்ரீவைரத்வஜ மஹரிஷி முக்கியமாக நிர்ணயித்துள்ளார்.

நடுத்தர ஏழை மக்கள் இம்மூவகைத் தானங்களை எவ்வாறு நிறைவேற்ற இயலும்? ஒரு தானத்தின் பரிபூரண பலனைப் பெறவேண்டுமெனில் அதற்குப் பல வழிமுறைகளைச் சற்குருவே அருள்கின்றார்.

  1. திருஅண்ணாமலை, காஞ்சீபுரம், காசி, திருவிடைமருதூர் போன்ற புனிதத் தலங்களில் குறித்த தான தருமங்களை நிறைவேற்றுதல்
  2. பாடல் பெற்ற ஸ்தங்களில் அவற்றிற்குரித்தான தான தருமங்களை நிக்ழ்த்துதல்.
  3. குறித்த திதி நக்ஷத்திரம், உற்சவம் ஆகிய காலங்களில் உரிய தான தருமங்களை நிறைவேற்றுதல்.
  4. சற்குரு அளிக்கின்ற முறையில் மேற்கண்ட தருமங்களைச் செயல்படுத்துதல் இவற்றின் மூலமாகவே எவ்வித தான தருமமும் முழுமையான பலன்களைத் தரும்.

ஸ்ரீவைரத்வஜ மஹரிஷி கோதானம், பூதானம், பொன் தானம் ஆகியவற்றைப் பல சத்சங்கங்கள் மூலம் நிறைவேற்றுவதையே மிகச் சிறப்பானதென அருளியுள்ளார்.
சத்சங்கமென்பது பல இறையடியார்களை ஒன்று சேர்த்து வறியோர்களுக்கென பல்வேறுவிதமான சேவைகளை ஆற்றுவதாகும்.
கோதானம்
சிறப்பாகப் பராமரிக்கப்படும் கோயில்கள், ஆசிரமங்கள், அனாதை இல்லங்களுக்குப் பசுக்களைத் தானமாக அளித்தல் மிகச் சிறந்த இறைப்பணியாகும். ஓர் ஏழைக்கு அவனுடைய ஜீவிதத்திற்குப் பசுவைப் பராமரிக்க அளித்தலும் உத்தமமானதே. பசு, கன்றினை அளிப்பதோடன்றி, அவற்றின் ஆகாரத்திற்கென வைக்கோல், புல், தீவனம், அளிப்பதற்கும் வசதிகள் செய்து தரவேண்டும்.
கறவையற்ற பசுக்களைப் பராமரிக்கும் கோசாலைகளில் சுத்தம் செய்யும் சரீர சேவை, ஆகார வகைகளையளித்தல் ஏனைய சேவைகளைப் புரிதலும் கோதானத்தின்பாற் படும்.
கோடிக்கணக்கான தேவதைகள் குடிகொண்டு அருள்பாலிக்கும் பசுக்களின் மேம்பாட்டிற்கு உதவி புரிதல் அளப்பரிய புண்ணிய சக்தியைப் பெற்றுத் தந்து பல பாவங்களைப் போக்கி துன்பங்களை நீக்கும். செல்வம் கொழிக்கும்.
பூதானம்
மிகச் சிறப்பாக நடைபெறும் ஆசிரமம், பள்ளிகள், கோயில்கள், அனாதை, முதியோர் ஆதரவு இல்லங்கள், மருத்துவ வசதிக்கான இடம் போன்றவற்றிகாக நிலம், வீடு, கட்டிடத்தை அளித்தல் பூதானமாகும். ஏழைகளுக்குக் குடிசைகள், ஓட்டு வீடுகளைச் செப்பனிடுதல், கட்டித் தருதலும் பூதானத்தில் அடங்கும்.
ஸ்வர்ணதானம்
நித்ய பூஜைகள் சிறப்பாக நடைபெறும் கோயில்களில், மூர்த்திகளுக்கு ஆபரணங்கள், வாஹனங்களை அளித்தல், ஏழைப் பெண்களின் திருமணத்திற்காகப் பட்டுப் புடவை, பொன் மாங்கல்யம், ஆபரணங்கள் அளித்தல் போன்றவை பொன் தானத்தில் அடங்கும்.
எண்ணற்ற கர்ம வினைகளைத் தீர்க்கவல்லது பொன் தானமாகும்.
நடுத்தர வர்கத்தினர், தொழிலாளிகள், மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், மத்ய குடும்பங்கள், உத்யோகஸ்தர்கள் போன்றோரை ஒன்று சேர்த்துப் பல சத்சங்க அமைப்புகளை உருவாக்கி அவற்றின் மூலம் மேற்கண்ட மூன்று தானங்களையும் செய்திடில் அவற்றின் விசேஷமான புண்ய தெய்வீக சக்தி நூற்றுக் கணக்கானோரைச் சென்றடையும் அல்லவா! இவ்வுயரிய நோக்கமே ஸ்ரீவைரத்வஜ மஹரிஷி மிகவும் வலியுறுத்திய, ஆன்மீகச் சக்தி தரும் நல்வழியாகும்.
இதனை முன்னின்று இறையருளால் நடத்துவோரே இறைவனைக் காணும் தகுதியைப் பெறுகின்றனர்.
ஸ்ரீவைரத்வஜ மஹரிஷி மாதப் பௌர்ணமியன்றுதான் உத்தம மஹரிஷிகளான ஸ்ரீபிருங்கி மஹரிஷிகளின் உத்தம சீடராய்ப பல சத்சங்கங்களுக்கு வித்திட்டார். ஜாதி மத பேதமின்றி அனைவரையும் இறைவழியில் இயக்குகின்ற ஓர் அமைப்பே சத்சங்கமாகும்.
மேற்கண்ட முறைகளில் பல சத்சங்க அமைப்புகள் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு இறைவழி காட்டிய ஸ்ரீவைரத்வஜ மஹரிஷி, மாசி பௌர்ணமியன்று நாக ஜோதியாய் ஒளி பெற்று சிவபெருமானின் திருக்கண்டத்தில் கண்ட ஜோதி நாகமாய் ஏற்கப்பட்டு இன்றும் மிளிர்கின்றார்.
அடியார்: குருவே! குருவைத் தேடுவோரும், சத்சங்கத்தைத் தேடுவோரும் உண்டு. இவர்கள் என் செய்ய வேண்டும் .
சற்குரு : “இரண்டும் ஒன்றே! நற்காரியங்களை நிறைவேற்றும் சத்சங்கத்தை ஒருவன் தன் வாழ் நாளில் பெற்றுவிட்டால் போதும், அதுவே குருவருளைத் தானாய்ப் பெற்றுத்தரும். ஆனால் அதில் தகுதி, கௌரவம் பாராது மன உறுதியுடன் நிலைத்து நிற்கவேண்டும். சத்சங்கம் வேண்டுவோர் ஸ்ரீவைரவஜ மஹரிஷியின் திரு நாமத்தைத் தினமும் தியானித்து வந்தால் அவருக்கு விரைவிலேயே சத்சங்கத் தொடர்பு கிட்டும். சத்குருவே தானாக வந்து அரணைப்பார்.
நாக பஞ்சமியன்று, அவதரித்த ஸ்ரீ வைரத்வஜ மஹரிஷி, மாசி மாதப் பௌர்ணமியன்று ஆதி சங்கரனின் திருக்கண்டத்தில் நாக ஜோதியாய் உய்வு பெற்றார்.
சொல்ல இயலா மனக் கஷ்டங்கள், புத்ர பாக்யம் இல்லாமை போன்றவற்றை நிவர்த்தி செய்ய நாக பஞ்சமி விரதமும் பூஜையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக அனுஷ்டிக்க இயலாதோர் பலர் உண்டு. மேலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நாகபஞ்சமி பூஜையைத் தவறவிட்டோர்களுக்காக முறையான மாசிமாத நாக கணட பௌர்ணமி வழிபாடு நாக பஞ்சமி பூஜைக்கு ஈடான பலன்களைத் தரவல்லது.
மாசிப் பௌர்ணமி அன்று ஸ்ரீவைரத்வஜ மஹரிஷியைத் தியானம் செய்து சிவன் கோயிலில் உல்ள நாகப் புற்றிக்குப் பூஜை செய்து

  1. மஞ்சள் இட்ட பஞ்சைத் திரித்து பஞ்சு மாலையாக நாக தேவதைக்குச் சார்த்த வேண்டும்.
  2. நாக தேவதையை ஸ்ரீவைரத்வஜ மஹரிஷியாகப் பாவித்து, சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு “ஸ்ரீவைரத்வஜ மஹரிஷியே போற்றி” என 108 முறை துதித்து தியானிக்க வேண்டும்.
  3. புற்றிற்கு எள், வெல்லம், கலந்த இனிப்பு, சர்க்கரை கலந்த பால் இவற்றைத் தூய தேங்காய் கொட்டாங்கச்சியில் புற்றின் வாயருகே வைத்து நிவேதித்து அங்கேயே ஸர்ப்ப தேவதைக்காக விட்டுவிட வேண்டும்.
பவவருட சிவராத்திரி

சிவராத்திரி பூஜைகளால் பெருநிலையடைந்தோர் பலருண்டு. அவர்களில் சந்தனு மஹாராஜாவும் ஒருவர் ஆவார். மாசி மாத மஹா சிவராத்திரியைப் போல் ஒவ்வொரு மாதத்திலும் கிருஷ்ண பக்ஷ த்ரயோதசி திதியில் வருகின்ற மாத சிவராத்திரியையும் சிறப்பாக கொண்டாடிப் பல்லாயிரக்கணக்கான மக்களையும் சிவராத்திரி பூஜையில் ஈடுபடச் செய்து உத்தம நிலையை அடைந்தான். இந்தச் சிவராத்திரி பூஜையின் பலன்களாக ஸ்ரீகங்கா தேவியை மனைவியாகப் பெறும் பாக்கியத்தைப் பெற்றான். ஆனால் வாழ்க்கை என்பது கர்ம வினைகளுக்கேற்ப இன்பமும் துன்பமும் அதில் மாறி வருவது இயல்புதானே!
ஸ்ரீகங்கா தேவி தான் பெற்ற வாக்குறுதிகளுக்கேற்ப சந்தனு மஹாராஜா மூலம் பெற்ற ஏழு குழந்தைகளையும் நதியில் இட்டுவிட, மஹாராஜா கலக்கமுற்றான்.
“என்னதான் சத்தியம் அளித்திருந்தாலும் சிசுவை இழக்கலாமா?” – சந்தனுவின் மனம் கொந்தளித்தது. ஆனால் ஸ்ரீகங்காதேவியிடம் வாய்விட்டுக் கேட்கவியலா நிலை.
ஏழு அழகிய சிசுக்களை இழந்த மன வருத்தத்தில் சந்தனு சித்தம் கலங்கி நின்றான்.
மஹாராஜாவிற்குரிய கடமைகளை அவனால் சரியாக நிறைவேற்ற இயலவில்லை. எங்கு சென்றிடினும் தான் ஒரு பேரரசன் என்பதையே மறந்து சித்தம் கலங்கி நிற்பான்.

நல்ல வாடகை வீடு வேண்டுவோர், சொந்த வீடு பெற விரும்புவோர் செவ்வாய் அன்று முருகனுக்குக் குறிப்பாக ஆறுமுருகனுக்கு செவ்வரளி சாற்றி வழிபட இடவசதி கிட்டும்.

தன்னுடைய ஏழு குழந்தைகளையும் இழ்ந்த துக்கத்தில் மூளை கலங்கியவன் போல் நடந்து கொண்டால் இராஜாங்கக் காரியங்களை யார் கவனித்துக் கொள்வது? அமைச்சர்கள் திகைத்து நின்றனர். அப்போது சந்தனு மஹாராஜாவின் நாட்டிற்குத் தீர்த்த யாத்திரை வந்த தமிழ் நாட்டைச் சார்ந்த திருநீலகண்ட பரதேசி என்னும் திருநீலகண்ட மஹரிஷியை மந்திரிகளும் மக்களும் நாடித் தங்கள் மஹாராஜாவைக் காப்பாற்றும்படி கேட்டுக்கொண்டனர்.
திருநீலகண்ட மஹரிஷி
திருநீலகண்ட மகரிஷி  தன்னுடைய தீர்க்க தரிசனத்தால் சந்தனுவின் சிவராத்திரி விரத பூஜைகள், ஸ்ரீகங்கா தேவி ஏழு சிசுக்களையும் கங்கை நதியில் விட்டது பற்றியும் உணர்ந்து அனைத்தும் இறைவனின் திருவிளையாடலே, அதனால் அஷ்ட வசுக்களுக்கப் பாப விமோசனம் கிட்டியது என்பதையும் உணர்ந்தார்.
அவன் குலத்தில் அற்புதமான வாரிசு உருவாகும் தெய்வீக அருள் உண்டாகிட அவன் ஸ்ரீஅகஸ்தியரை சந்தித்து அதற்குரித்தான இறைவழிகளைப் பெற அருணாசல சிவத்தலத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும் என்பதையும் அறிந்தார். ஆனால் சித்தர்களோ மஹரிஷிகளோ எதனையும் சூசகமாக அறிவிக்க வேண்டும். அனைத்தையும் அவரவர் கர்மவினைகளுக்கேற்ப விட்டுவிட வேண்டும் என்ற இறை நியதிக்கு ஆட்பட்டுச் செயல்படுகின்றனர்.
சந்தனு மஹாராஜாவின் சிவராத்திரித் திருப்பணிகளால் ஆனந்தமடைந்த திரு நீலகண்ட மஹரிஷி அவனுடைய பல மனத்துன்பங்களைத் தன்னிடம் ஏற்றுக் கொண்டார். சந்தனுவை பாரதத்தின் தெற்கேயுள்ள தமிழ் நாட்டின் சிவத்தலங்களில் சிவராத்திரி விரத பூஜையை செய்து வருமாறு அருளாணையிட்டார்.
அமைச்சர்களும், நாட்டு மக்களும் சந்தனு மஹாராஜாவின் சித்தம் கலங்கிய மனோநிலையில் அத்தகைய நீண்ட யாத்திரை இயலுமா என்று அஞ்சினர். அதனால் அரசருடைய மனோபீஷ்டங்களைத் தன்னகத்தே ஏற்றுத் தியாகம் புரிந்த உத்தம சிவனடியாரான உத்தமத் திரு நீலகண்டரை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர்.
ஒருவேளை தன்பூஜைகள் போதாதோ என்று ஏங்கிய சந்தனு, மாதசிவராத்திரியைப் பாரதமெங்கும் உள்ள சிவத்தலங்களில் கொண்டாடலானான். குறிப்பாகத் தமிழ் நாட்டிலும், ஆந்திரப் பகுதிகளிலும் உள்ள சிவத்தலங்கள் அவனை மிகவும் கவர்ந்தன!
கிரிவலம்
காவிரி ஆற்றங்கரையில் தவமிருந்த சந்தனுவை ஸ்ரீஅகஸ்தியர் சந்தித்துத் திருஅண்ணாமலையில் சிவராத்திரியன்று கிரிவலம் வருவதின் மஹிமையை எடுத்துரைத்து அவனுடைய மனகிலேசங்களுக்கும், மனக் குழப்பங்களுக்கும் இந்த சிவராத்திரி கிரிவலம் நல்வழி காட்டுமென அருளினார்.

காலையில் மிகுந்த மன சஞ்சலத்துடன் எழுந்தால் உடனே அன்றைய நாள், திதி,  நக்ஷத்ரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து தேவதைகளையும் பஞ்சாங்கத்தை காலண்டரைப் பார்த்து அறிந்து அந்நாமங்களை உச்சரித்தால் இறையருளால் மனசஞ்சலங்கள் நீங்கும்.
உதாரணம்  தை 20 (2.2.1995), வியாழன் நாள், திருதியை திதி, சதயம் நக்ஷத்ரம், பரிகம் யோகம் , தைதுலம் கரணம்

சந்தனு மஹாராஜா திருஅண்ணாமலையை அடைந்து, திருவாதிரை கூடிய அச்சிவராத்திரித் திரு நாளில் ஒரே நாளில் ஆறுமுறை கிரிவலம் வந்து ஸ்ரீஅண்ணாமலை வேண்டிட, “அருணை கிரிவலத்தில் அஷ்ட சிசு பிழைக்கும் குணசேகரம் தனில் குணம் பெறும் சித்தமே” – என்ற அசரீரி ஒலித்திட எட்டாவது குழந்தையேனும் தங்கித் தன் வாரிசு தழைக்கும் என்ற உள்ளுணர்வுடன் திருச்சி அருகே உள்ள குணசேகரம் என்ற  திருத்தலத்தை அவன் அடைய ..
அங்கே ஸ்ரீஅகஸ்தியர் அவனை வரவேற்றார்.
ஸ்ரீஅகஸ்திய மஹரிஷி அருளியபடி குணசேகர சிவலிங்கத்தைத் தரிசனம் செய்து மூலஸ்தானத்தைச் சுற்றி சந்தனு மஹராஜா அங்கப் பிரதட்சிணம் செய்து மகிழ்ந்திட தன் மனக்கிலேசங்களும் கொந்தளிப்புகளும் முழுமையாக அகன்றுவிட்டதை உணர்ந்து ஆனந்தித்தான் ஸ்ரீஅகஸ்தியரைப் போற்றி வணங்கினான். ஸ்ரீநீலகண்ட பரதேசியை தியானித்து நன்றி செலுத்தினான்.
“அவரும் எம் பாரம்பரியத்தைச் சேர்ந்தவரே” என்று அகஸ்தியர் அருளிட திருநீலகண்ட மஹரிஷியுன் நாமத்தை உச்சரித்தவாறே ஸ்ரீஅகஸ்திய பெருமானை அவன் தொழுது வணங்கினான்.
‘பவ’ வருட மஹாசிவாத்திரி
இவ்வாறாக “பவ”வருட மஹாசிவராத்திரியைக் கொண்டாடும் முறையாக சித்த புருஷர்கள் அருள்வதாவது :
சிவபெருமானுக்கு உரித்தான மஹாசிவராத்திரிக்கு முந்தைய திருவாதிரை அன்று (11.2.1995) திருஅண்ணாமலையில் திருநீலகண்ட மஹரிஷியை தியானித்து கிரிவலம் வந்து மஹாசிவாரத்திரியை (27.2.1995) திருச்சி அருகே குணசேகரம் சிவாலயத்தில் கொண்டாட வேண்டும்.
இங்கு சிவராத்திரிக்குரிய அபிஷேக ஆராதனைகளுடன் மூலஸ்தானத்தை சுற்றி அங்கப்ரதக்ஷிணம் செய்து வணங்கி ஏழைகளுக்குச் சர்க்கரைப் பொங்கலைத் தானமாக அளித்திட

  1. எத்தைய மனத்துன்பங்களும் அகலும்
  2. சித்தபிரமை நீங்கும்
  3. குடும்பத்திலுள்ள கொந்தளிப்புகள், பகைமை தீரும்
  4. நாட்டில் உள் நாட்டுக் கலவரங்கள் தீர்ந்து அமைதி ஏற்படும்.
பிரணவமும் ரதசப்தமியும்

உத்தராயணப் புண்ய காலம் தொடங்கும் காலமாம் தை மாதத்தில் தை அமாவாசைக்கு பின் வருகின்ற ஏழாவது தினமே ரதசப்தமி ஆகும்.
ஓம்காரத்தில் உருவானதே பிரபஞ்சத்தின் படைப்புகள் அனைத்தும், ஒவ்வொரு ஜடப்பொருளுக்கும், உயிர்ப் பொருளுக்கும் ஒவ்வொரு பீஜாட்க்ஷர ஒலி உண்டு. ஒவ்வொன்றின் தோற்றமும் முடிவும் இந்த பீஜாக்ஷரத்தில் அடங்கும்.
பிரபஞ்சத்தில் அனைத்து பீஜாக்ஷரங்களும் தொடங்கி அடங்குவது ஒம்காரத்தில் தான், ஓம்காரம் என்பது “ஓம்” எனும் பிரணவத்தின் ஸப்த வியாபகம் ஆகும். பிரணவத்திற்கு உருவமோ, ஒலியோ கிடையாது. இறைவனைப் போல் பிரணவமும் அநாதியானது .
பிரணவத்தை உணர்ந்தால் பிறப்பின் அதாவது படைப்பின் இரகஸியம் தெரியவரும். இதையே, “நான் யார்”? என்ற ஆத்மவிசாரமாக அருள்கின்றனர்.
பிரணவம் தன்னைத்தானே விளக்கும் பொருட்டு வியஷ்டிப் பிரணவம், சமஷ்டிப் பிரணவம் என்று இரண்டாகப் பிரிந்தது, ஒன்று தத்வார்த்தமாக யோக, ஞான நிலைகள் மூலமாகப் பிரணவத்தை விளக்கும்.
ஸ்ரீரமண மஹரிஷி ஸ்ரீயாக்ஞவல்கியர். ஸ்ரீராம்சூரத்குமார் ஸ்வாமிகள் (விசிறி சித்தர்) போன்றோர் ஞான பூர்வமாக பிரணவத்தை உய்த்து உணர்ந்தோர்கள் ஆவர்.
மற்றொன்று பிரணவத்தை இல்லறத்தார்க்கு உரிய, எளிய முறையில் பிரணவத்தை விளக்குவதாகும்.
“உ” – பிள்ளையார் சுழி விளக்கம்
வியஷ்டி, சமஷ்டி பிரணவ தத்துவங்களைக் கலியுக மக்கட்குப் புரியவைப்பது சிரமம் என்பதால் தன்னுடைய யோக நிலையில் ஸ்ரீ அகமர்ஷ்ண மஹரிஷி என்பார் இவ்விரண்டு பிரணவ ரூபங்களை இணைத்து அதன் நடுவே யோக சமாதி பூண்டு “உ” என்ற பிள்ளையார் சுழியை உருவாக்கினார்.
இந்த யோக சமாதி நிலையைப் பெற்றிட ஸ்ரீவிநாயகப் பெருமானை, ஓம்கார ரூப நாயகரை சங்கடஹர சதுர்த்தி தோறும் முறையாக சிறப்புற வழிபட்டு வந்தார்.
எனவே “உ” எனும் பிள்ளையார் சுழியை இடும்போது அகமர்ஷண மஹரிஷியை தியானிக்க வேண்டும். அகமர்ஷண மஹரிஷியே பிரபஞ்சமெங்கும் ஓம்காரத்தின் பகுதிகளாய்ப் பரவெளியில் நிறைந்திருக்கும் ஸரிகமபதநி என்ற ஸ்ப்த ஸ்வரங்களின் ஒலியை உலகினுக்கு எடுத்துரைத்தார்.

ஸப்தஸ்வரங்கள்
சூரியோதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை ஒலியின் ஒவ்வொரு ஸ்வரமும் ஒவ்வொரு நாளில் பிரபஞ்சத்தை ஆட்சி செலுத்துகிறது. இவையே ஞாயிறு முதல் சனி வரை ஏழு நாட்களாக உருப்பெற்றன. ஒவ்வொரு ஸ்வரத்தின் பகுதிகளே நாள், திதி, நட்சத்திரம், யோகம், காரணம் என்ற ஐந்துமாகும். ஒரு நாளில் எந்த ஸ்வரம் ஆட்சி செலுத்துகிறதோ அந்த ஸ்வரம் மிகுந்துள்ள வேதமந்திரங்கள், பீஜாக்ஷரங்கள், கீர்த்தனைகளை ஒலித்திட, பாராயணம் செய்திட அந்த ஸ்வர தேவதையின் பரிபூர்ண அநுகிரகத்தைப் பெறலாம். இவ்வாறாக, ஸ்பத ஸ்வரங்களே காலத்தை நிர்ணயம் செய்கின்றன. இசையில் தன்வயம் இழக்கும் மனிதர்கள் காலத்தை மறப்பதற்குக் காரணம் இதுவே.
இசைக் கலைஞர்கள் கூட இந்த ஸப்த ஸவர தேவதா மூர்த்திகளை முறையாக வழிபடுவதில்லை பொதுவாக உயிர் பிரிவதை “ஸப்த நாடிகளும் ஒடுங்கின” என்று சொல்வதுண்டு. நம் உடலில் உள்ள முப்பதாயிரம் நாடி நரம்புகளையும் ஏழு ஸ்வரங்களே ஆள்கின்ற்ன. இதனையே ஸப்த நாடிகள் என்று கூறுகின்றனர்.
வைத்தியத் துறையில் சப்த ஸ்வரங்களின் ஒலிகளே மணிக்கட்டு நாடி, இதய நாடிகளாகப் பரிசீலிக்கப்பட்டு நோய்காணும் வழிமுறைகளாக அமைந்திருக்கின்றன. சப்த ஸ்வர தேவிகளை ஒருவன் தினந்தோறும் வழிபடுவானாயின், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுவதோடு பிரணவத்தையும் உணரத் தன்னைப் புனிதப்படுத்திக் கொள்கின்றான். தியானம் என்பது சப்த ஸ்வரங்களில் மனதை வயப்படுத்துவதாகும். ஏனைய சப்தங்கள் இந்தச் சப்த ஸ்வரங்களில் அடங்குவதால் உண்மையான தியானத்தில் வேறு சப்த ஒலிகள் காதில் விழா.
சப்தஸ்வர வேத மூர்த்திகளை எவ்வாறு வழிபடுவது? பாமர மக்களும் ஓங்காரத்தின் ஏழு அம்ஸங்களான ச, ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு வித தெய்வீக ஒலிகளை வழிபடுவது இயலுமா? இத்தகைய எளிய வழிபாட்டையே ரத சப்தமி எனச் சித்தபுருஷர்கள் அருள்கின்றனர்.
ரதசப்தமி
ரதசப்தமி பற்றித் தம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் அருளியுள்ளதை சாதாரண மக்களும் கடைப்பிடிக்கும் வண்ணம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் “ரத சப்தமி” என்னும் நூலில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
எண்ணங்களின் ஒலி வடிவம்தான் சப்தம். எண்ணங்களைச் சுமந்து செல்லும் ரதமே மனம். எண்ணங்கள் சப்த ஸ்வரங்களாக வெளிவரும். பலவித எண்ணங்கள் கூடிடில் வேறுவித சப்தங்களே ஏற்படும். இந்தப் பலவித சப்தங்களை சப்த ஸ்வரங்களாக மாற்றிட எண்ணங்களை முறைப்படுத்த வேண்டும். இதற்குரித்தான வழிபாடே ரதசப்தமியாம்.

சங்கடஹர சதுர்த்தி

சங்கடங்களை அறுக்கும் சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி என அறிவோம். இதனுடைய ஆன்மீக இரகசியங்களை நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் சித்தர்களின் அருள் மொழிகளான ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களிலிருந்து தொகுத்துத் தம் சீடரான, குருமங்கள கந்தர்வாவாகிய ஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கு அருளினார்.

துர்வாஸ மஹரிஷி பற்றி நாம் அறிவோம். கோபத்தின் சிகரமாய்த்  திகழ்ந்திடினும் அவர்தம் கனல் மொழிகள் வேதவாக்காய் மஹேசன் சேவையாம் மக்கள் சேவைக்கே வித்தாய் அமைகின்றன. நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதுபோல துர்வாஸரின் கோபம் துக்க நிவர்த்தியாக மலர்ந்து அருள்பாலிக்கின்றது.
கோபக் கனலாய் ஜொலித்தாலும் அவருடைய ஈடு இணையற்ற தவத்தின் சிறப்பையுணர்ந்து அவர்தம் குருகுலத்தில் ஆயிரமாயிரம் சீடர்கள் கற்றனர். ஆனால், அவருக்குப் பணிவிடை செய்ய மனோதைரியத்துடன் முன்வந்தவர்கள் ஒரு சிலரே. சொன்னதைச் செய்யாவிடில் பிடிசாபங்கள். சிறு மறுமொழி கூறிடினும் சினத்தின் சீற்றங்கள். அமைதியாய் நின்றாலோ ”செய் அல்லது செல் வனத்திற்கு” என்றும் ஆர்ப்பரிக்கும் அருள்மொழிகள்!
இந்நிலையில் எவர்தாம் அம்மஹரிஷிக்குப் பணிவிடை செய்ய முன்வருவர்.........?
............அதோ! ஒரு சிறுமி பளிச்சென்று மஹரிஷிக்குப் பணிவிடை செய்கின்றாளே, யாரவள்? செய் என்று சொல்லும் முன் செய்து முடித்து நிற்கும் சிறுமி! எண்ணும் முன் எண்ணித் துணிந்து கர்மம் முடிக்கும் பாலகி! தவப்பெரும் சீலரின் உள்ளக்கிடக்கையை உணர்ந்து செயலாக்கும் வல்லமை பெற்ற அச்சிறுமி யார்?
எரிமலையெனச் சிதறும் அம்மஹானால் அச்சிறுமியிடம் எக்குறையையும் காண இயல்வில்லை இந்த பூஜைக்கு இந்த மலர்கள், அந்தந்த ஹோமத்திற்குரித்தான சமித்துக்கள், எந்த வேள்விக்கு எந்த ஆஹுதிகள், எத்தகைய யாகத்திற்கு எவ்வித தானங்கள், அனைத்தையும் அம்மாமுனி அறிவிக்கும் முன்னரே அவர்தம் சிஷ்ய கோடிகளை வனமெங்கும் குறித்த இடங்களுக்கு அனுப்பி திரவியங்களைக் கொணர்ந்து பர்ணசாலையை நிறைவு பெறச் செய்வாள்.
சினந்தே சிவந்த துர்வாஸர் புன்னகை பூத்தார்.
“என்ன தெய்வீக சக்தி இவளுக்கு! இதனை இவள் எவ்வாறு பெற்றாள்?”
சிறுவயது என்று கூடப் பாராது பலருக்கு சாபமிட்ட துர்வாஸ மஹரிஷி இச்சிறுமியிடம் எக்குற்றமும் காணவில்லை மாறாக, தம் குருகுலவாசம் வேத, மந்த்ர, யந்த்ர, தந்த்ர, வேள்வி, யாக, பூஜைகளுடன் பரிபூரணமாய் நடைபெறுவது கண்டு உளம் மகிழ்ந்தார்.
சிறுமியைச் சோதிக்கும் வண்ணம் ஒருப் புதுவித ஹோமத்திற்கு கிடைப்பதற்கரிதான கஸ்தூரி, அகில், குறுஞ்சி மலர், 36 முகருத்திராக்ஷம் இவை கொண்டு ஹோம யாகங்களை நிகழ்த்த அவர் எண்ணிட மறுநாள் காலை, அச்சிறுமியின் ஆலோசனையின்படி எங்கெங்கோ சென்ற சீடர்கள் அனைத்தையும் கொணர்ந்து சேர்த்தனர்!
துர்வாஸர் உளம் மகிழ்ந்தார். ஏனெனில் கோடிக்கணக்கான ஜீவன்களின் நல்வாழ்விற்காக இத்தகைய அரிய மூலிகை, வஸ்துக்களினால், ஹோம யாகம் புரிந்திடும் அவர்தம் மகத்தான மக்கள் பணிக்கு அச்சிறுமி மூலம் மஹேசன் எத்தகைய கருணை புரிகிறான்! துர்வாஸர் இறைவனுக்கு மனமார நன்றி செலுத்தினார்.
மற்றொரு முறை முனிவரின் ஆணைப்படி அரிதான “அக்ஷய பாத்திர  மூலிகையைப்” பெறச் சென்ற சீடனை சர்ப்பம் ஒன்று தீண்டிட அவன் சாகாது பிறிதொரு உருவம் பெற்று அலைந்தான். நெடுநேரம் ஆகியும் அவன் திரும்பாததால், அவர் சினமுற்றார்.
அவனைச் சபிக்குமுன், சிறுமி அவரிடம், “சுவாமி! தங்களுடைய அந்த சிஷ்யன் இன்று உருமாறிப் பூச்சியாக இங்கு உலவிக் கொண்டுள்ளான்” என்று கூறிட, அவளுடைய சமயோசிதத்தை மெச்சிய துர்வாஸர், சினத்தின் சாபத்தை “நீ சுயரூபம் பெறக்கடவாய்” என்று மாற்றி அந்த சிஷ்யனை சபித்திட அவன் பழைய உருப்பெற்றான்.
துர்வாஸர் வியந்தார்!
“அரவந் தீண்டி அவன் உருமாறித் திரிவதை, இச்சிறுமி எப்படித் தெரிந்து கொண்டாள். நாமே ஞானதிருஷ்டியில் அறிவோம்! இவள் எப்படி அறியலானாள்?
துர்வாஸர் அச்சிறுமிக்குக் கடும் சோதனைகள் அளிக்க விழைந்தார். பிறிதொருமுறை பல்குணன். விசுவலகுவன் என்ற இரு சீடர்களை அழைத்துக் குறித்த இடத்தில் நாழிகையில், லக்னத்தில் ஒரு யாகத்திற்கான ஏற்பாடு செய்ய அனுப்பிட, அவர்கள் அந்த அடர்த்தியான வனத்தில் திக்குதிசை தெரியாமல் குறித்த இடத்திற்குச் செல்லவில்லை.
விலைமதிப்பற்ற திரவியங்களை முனிவர் அந்த ஹோமத்திற்குத் திரட்ட எண்ணிட, அச்சிறுமியோ, “சுவாமி! அச்சீடர்களோ திசை தெரியாது அலைகின்றனர். தாங்கள் வார சூலை கணிக்காது அவர்களை அனுப்பியதால் அந்த யாகம் நடைபெறாது போலுள்ளதே” என்று பணிவுடன் கூறிட துர்வாஸர், தம் சாதுர்மாஸ்ய உபவாச நிஷ்டையினூடே வாரசூலையைக் கணிக்காததையுணர்ந்து அச்சிறுமியின் தெளிந்த பேராற்றலை எண்ணி மகிழ்ந்தார்.
மஹரிஷிகள் கால நேரங்களில் தவறுவார்களா என்ன? இவையனைத்தையும் இறைவனின் திருவிளையாடல் என்பதை அவர்கள் அறியாரா என்ன?
அக்காலத்தில் மஹரிஷிகள் வர்ண ஜபம் என்ற ஒன்றை விமரிசையாக நடத்துவர். பஞ்சம், வறட்சி, வற்கடம் போன்ற இயற்கை சீற்றங்களினால் நீர் அற்றுப் போகும் போது மக்களின் நன்மைக்காக இந்த “வர்ண ஜபம்” நடத்தப்படும். எந்த தேவலோகத்து நதி தேவதையின் சீற்றத்தால் சாபத்தால் பஞ்சம் ஏற்பட்டதோ அதற்குப் ப்ரீதி செய்து குறித்த நிலப்பகுதியில் ஒரு தர்ப்பையை ஊன்றி வர்ண ஜபத்தை முறையாகச் செய்தால் தேவலோக நதியே  பீறிட்டு எழும், மழை பொழியும்.
இவ்வாறாக , துர்வாஸர் போன்ற மாமுனிவர்களின் தவப் பயனாய் விளைந்ததே இன்று நாம் காணும் பல ஜீவ நதிகள்!

குந்தி தேவியின் அற்புத பூஜை
அச்சிறுமியின் அபாரமான தெய்வீகக் குணங்களைக் கண்டு அதிசயித்த துர்வாஸர் அச்சிறுமியை அன்புடன் அரவணைத்து, “அம்மா குழந்தாய்! போஜராஜனின் அன்பு மகளான குந்தி தேவியே! உன் அடக்கம், பொறுமை,பக்தி,பணிவு, அன்பு, ஆற்றல், மனோதைர்யம் இவையனைத்தையும் இச்சிறு வயதிலேயே நீ எவ்வாறு பெற்றாய் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காகவே!”- என்று பாராட்டித் தன் தபோபலத்தின் ஒரு சீரிய பங்கை அச்சிறுமியாம் குந்தி தேவிக்கு அளித்து ஆசிர்வதித்தார்.
இத்தகைய உத்தம தெய்வ குணங்களைக் குந்தி தேவி எவ்வாறு பெற்றாள்?
..... அதோ ஒரு மாமுனியர் சேஷ்த்திராடனம் செய்தவாறே நான்கு நாய்களுடன் போஜராஜனின் திருநாட்டை அடைகின்றார். தேஜஸ்வியாய்ப் பரிணமிக்கும் அவர்தம் திருப்பாதங்களுக்குப் பாத பூஜை செய்து அவரை வரவேற்றான் போஜராஜன்.
அரண்மனையே கோலாகலமாய் விளங்கிட அம்முனிவர் தம் யோக, யாக, வேள்விப் பூஜைகளைத் துவங்கினார்.
ஆனால் போஜராஜனின் வளர்ப்பு மகள் குந்தி தேவி எங்கே சென்றாளோ!
அம்மாமுனியின் கூட வந்த நாய்களை எவரும் சரியாகப் பராமரிக்கவில்லை! அசூயையான ஜீவன்களாகக் கருதி அந்நாய்களை ஒதுக்கி வைத்துவிட்டனர். முனிவரும் இதனை அறிந்தும் அறியாதவராகக் கண்டும் காணாதவராகத் தன் பூஜைகளை நடத்துவராயினார்.
சிறுமி குந்தி தேவி என் செய்தாள் தெரியுமா?  அந்நாய்களுக்கு மஞ்சள் நீராட்டிக் குங்குமமிட்டு ‘பைரவ பூஜையைச் சிறப்பாக நடத்தினாள்.
ஒருபுறம் முனிவரின் பெரும் யாகம்! மறுபுறம் சிறுமியின் ‘பைரவ பூஜை’! அதுமட்டோ! அந்நாய்களை ‘பைரவ’ அம்சமாகப் பாவித்துப் புனுகுச் சட்டம்’ இட்டு முந்திரிப் பருப்பினால் ஆகிய மாலைகளை அணிவித்துப் பைரவாஷ்டகம், பைரவத் துதிகளை ஓதிப் பூஜையினை நிறைவு செய்தாள். இதைக் கண்டு அனைவரும் அதிசயத்தனர்.
விண்ணுலகத்தோரே திரண்டு வந்து இந்த அபூர்வமான பைரவ பூஜையினைக் கண்டு களித்தனர்.
முனிவரின் யாகமும் நிறைவு பெற்றது!
குந்தி தேவியும் ‘கலகலா’ என்றழைக்கப்படும் (சிறு முக்கோண வடிவ ஸ்வீட்) இனிப்பினை  நைவேத்யமிட்டு நாய்களுக்கும் படைத்துப் பைரவ பூஜையை நிறைவு செய்தாள்!
போஜராஜனின் திகைத்து நின்றாள்! முனிவர் ஏதேனும் சபித்துவிட்டால்............
முனிவர் சாந்தமாக எழுந்தார். ஹோமப் ப்ரஸாதத்தை எடுத்து..................
முதல் பிரசாதம் மஹாராஜாவிற்கல்லவா! அனைவரும் போஜராஜனை நோக்கி நிற்க........
“அம்மா, குழ்ந்தாய், குந்தி தேவி! இந்தா, ஹோம பஸ்ம ப்ரஸாதத்தைப் பெற்றுக்கொள்”- அம்மாமுனி அன்புடன் அழைத்து அரவணைத்துப் போற்றினார்.
அனைவரும் வியந்து நின்றனர்.
இதுவரையில் அம்மஹரிஷி  நிகழ்த்திய யாகங்களில் எவருக்கும் தம் கைப்பட ப்ரஸாதத்தை அளித்தது கிடையாது.
சிறுமி ஏன் நாய்க்கு பூஜை செய்தாள்? அம்மஹரிஷியின் திருக்கரங்களால் ப்ரசாதம் கிட்டியதெனில், அம்முனிவர் தம்முடன் கூட்டிவரும் நாய்களின் ஜீவ ரகசியம் யாதோ? எவரும் அறியார்!
எத்தகைய பேறு பெற்றவள் அச்சிறுமி! இம்முனிவரின் திருக்கரங்களால் ஹோம ப்ரஸாதத்தைப் பெறும் அருளைப் பெற்றவள் எனில் அவள்தம் பக்தி நிலையை என்னென்று கூறுவது!
ஆமாம், அம்முனிவர் யாரோ! அவர்தாம் .......................

கோயம்பேடு திருத்தலம்

சுற்றினால் கிட்டும் சுந்தரானந்தம்
நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளுடன் நூற்றுக்கணக்கான கோயில்களில் உழவாரத் திருப்பணிகள். மூர்த்தி, தீர்த்த தல யாத்திரைகள் போன்றவற்றில் பங்கேற்று எண்ணிறந்த இறையனுபூதிகளைக் குருவருளாக நம் சபை அடியார்கள் பெற்றுள்ளனர்.
சற்குரு பின்னால் சுற்றிக் கிட்டும் சந்தரானந்தத்தை இங்கு யாவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இச்சுந்தரானந்தத்தின் அருட்பலனாகப் பல இறைத் தலங்களின் ஆன்மீக ரகசியங்கள், கோயில் தூண்களிலுள்ள சித்தபுருஷர்களின் மகிமைகள், பல முக்கியமான வாழ்க்கைப் பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தரும் பல் விசேஷப் பரிகாரங்கள் போன்றவற்றை குருஅருள்மொழிகளாக அளிக்கின்றோம்.

ஸ்ரீராமரைச் சுமக்கும்
ஆஞ்சநேயர் கோயம்பேடு

கோயம்பேடு ஸ்ரீகுறுங்காளீஸ்வரர் ஆலயம்
ஸ்ரீ நந்தீஸ்வரர்களில் பல வகை உண்டு. சிவபெருமானுடய ஒவ்வொரு வித நடனத்திலும் விதவிதமான நந்தீஸ்வரர்கள் வாகனமாக அமைகின்றனர். திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆறு தமிழ் மாத அபிஷேகங்கள் போன்று ஒவ்வொரு விசேஷ தினத்திற்கும் ஒவ்வொரு நந்தீஸ்வரர் இறைவனைத் தாங்கும் பேறு பெறுகிறார்.
ஸ்ரீஅதிகார நந்தி எழுந்தருளியுள்ள தலங்கள் மிகச் சிலவே. பிரதோஷ காலம் உருவான போது திருக்கயிலாயத்தில் அவர் ஈசுவரனுடைய திருமேனியைத் தாங்கினார். எனவே ஸ்ரீஅதிகார நந்தியுள்ள திருத்தலங்களில் பிரதோஷ காலத்தைக் கொண்டாடுவது மிக விசேஷமானதாகும்.
இவ்வகையில் கோயம்பேடு திருத்தலத்தில் தான் பிரபஞ்சத்தின் முதல் பிரதோஷ பூஜை கொண்டாடப் பெற்றது என்பதை முன்னரே அறிந்துள்ளோம் அல்லவா? இங்கு எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஅதிகார நந்தியே பிரதோஷ காலத்தில் அனைத்து லோகங்களிலும் நடைபெறும் பிரதோஷ பூஜையைக் கொண்டாடினால் ஆயிரம் சிவத்தலங்களில் பிரதோஷம் கொண்டாடிய புண்ணியத்தைப் பெறலாம்.
இந்த ஸ்ரீஅதிகார நந்தியே பிரபஞ்சம் எங்கிலுமுள்ள நந்தீஸ்வரர்களுக்கு அதிபதி, நந்தி முகத்துடன் பூரண தெய்வாம்ச மூர்த்தியாய்த் தோற்றம் கொண்டு அருள்பாலிப்பவரே ஸ்ரீஅதிகார நந்தி. பிரதோஷம் என்பது பட்சத்திற்கு (15 நாட்கள்) ஒரு முறை மட்டும் வருவதல்ல, நித்திய பிரதோஷ வழிபாடு பூஜையும் உண்டு. தினந்தோறும் மாலை 4.30 முதல் 6 வரை நித்திய பிரதோஷ பூஜை வழிபாடு நேரமாகும். ஆனால் வழக்கில் இது மறைந்து விட்டது. நித்திய பிரதோஷ பூஜையை அனுஷ்டிக்க விரும்புவோர், ஸ்ரீஅதிகார நந்திக்கு பிரதோஷ நேரத்தில் அருகம்புல் மாலையிட்டு காப்பரிசியிட்டு, பசுநெய் விளக்கிட்டு, கோலமிட்டு, எண்ணெய்க் காப்பிட்டு வழிபட்டு, தானதர்மங்கள் செய்து வாகன நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவலிங்கத்தைத் தரிசனம் செய்தல் உத்தமமான நித்ய பிரதோஷத்தின் பலன்களைத் தரும்.
கோயம்பேடு சிவன் கோயிலில் மிகச் சாதாரணமாக எழுந்தருளியிருக்கும் அதிகார நந்தி மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தியாவார். பட்சப் பிரதோஷம் மட்டுமின்றி நித்திய பிரதோஷ பூஜைக்கு அருள்பாலிக்கும் உத்தம நந்தீஸ்வர மூர்த்தியாய் அமர்ந்துள்ளார்.

ஸ்ரீ ரிஷி சுமந்தான் ரிஷி – சுருசோதன மஹரிஷி
ஒரு ரிஷியை மற்றொருவர் தன்முதுகில் சுமந்து நிற்கும் அற்புதக் காட்சி இக்கோயில் முகப்பு விநாயகர் அருகே அடித் தூணில் காணப்படுகிறது.
நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் “பிரதோஷ மகிமை” என்னும் நூலில் கோயம்பேடு திருத்தலத்தைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோயில்களில் முறையாக பிரதோஷ பூஜையைக் கொண்டாடிய ஓர் உத்தம மஹரிஷியைத் தன் முதுகில் தாங்கி வரும் நற்பணியை மற்றொரு மஹரிஷி ஏற்கும் காட்சியே இது.
தன் பெற்றோரை மதிக்காது கடமை தவறியவர்கள், இழிவாக நடத்தியவர்கள், வயதான பெரியோர்களைத் துன்புறுத்தியவர்கள், மாமனார், மாமியாரை அவமதித்தவர்கள் – போன்றோர் தங்கள் தவறுகளுக்குப் பிராயச் சித்தம் வேண்டிடில் அவர்கள் இந்த ரிஷி சுமந்தான் ரிஷியைத் தரிசனம் செய்து தன்னால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமளித்து, வயதான ஏழை மக்களுக்குப் பாய், படுக்கைகள்., மருந்துகள் ஆகியவற்றையும் அளித்து பிராயச்சித்தம் பெறலாம்.

ஸ்ரீஆபத்சகாய ஆஞ்சநேயர்
கோயம்பேடு

இத்திருக் கோயிலில் முறையாக பிரதோஷ பூஜை நிகழ்த்திட ஆயிரம் பிரதோஷ பூஜைகளைக் கொண்டாடிய புண்ணிய சக்தி வந்து சேரும்.
நம் சபையின் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன் மாதரை, துந்துபி போன்ற வாத்யங்களுடனும் சோமாசூக்தப் பிரதட்சிணம் போன்ற அபூர்வமான பிரதோஷ முறைகளுடன் இக்கோயம்பேடு திருத்தலத்தில் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் முன்னிலையில் மிகச் சிறப்பான முறையில் பிரதோஷ பூஜை கொண்டாடப்பட்டது.
பலன்கள் :-  அதிகார துஷ்பிரயோகத்தால் அதர்ம முறையில் செல்வத்தைச் சேர்த்தோர், பிறருக்குத் தீங்கு இழைத்தோர், பதவி உயர்வு பெற நாணயமற்ற முறைகளைக் கையாண்டோர்  போன்றோர் தங்களால் பாதிக்கப்பட்டவர்கட்குப் பரிகாரங்கள் செய்து கோயம்பேடு திருக்கோயிலில் ஸ்ரீஅதிகார நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அனாதைகட்குப் பாயசம் அளித்திட – இவையே சிறந்த பரிகாரமாக அமையும்.
இங்கிருக்கும் ஸ்ரீஅதிகார  நந்திக்கு ஒரு சிறு சன்னதி நன்முறையில் எழுந்திட உரிய இறைத்திருப்பணிகளைச் செய்திடல் வேண்டும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஸ்ரீஅதிகார நந்தீஸ்வரர் அளப்பரிய சித்தியை நல்க வல்லவர். இவர்தம் மகத்தான சக்தியை இனியாவது உணர்ந்து மக்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு நல்வழி பெறுவார்களாக!

ருத்ர துவார பாலகர்கள்
துவார பாலகர்களின் அருள்திறன் இதுவரையில் ஓர் ஆன்மீக இரகசியகமாகவே இலங்கி வந்துள்ளது. எத்தனையோ தெய்வ மூர்த்திகள் எழுந்தருளியிருப்பது ஏன்?
உணவு, உடை, வாகனம், செல்வம், குழந்தைகள், வீடு, நிலம், பதவி, திருமணம், கல்வி, வியாபாரம், கணவன், மனைவி, ஆரோக்கியம்  போன்ற வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி ஆயிரமாயிரம் ஆசைகளை மனிதன் வளர்த்துக் கொண்டு வருகின்றான். இவற்றில் முறையான, முறையற்ற தார்மீக , அதர்மமான, லௌகீக, தெய்வீக எண்ணங்கள், ஆசாபாசங்களும் அடங்கும்.

சற்குருவை அடைதல் இறை தரிசனம் என்பது மட்டுமே ஒரு மனிதனுடைய பிரார்த்தனையாக இருந்தால் அவனுக்கு ஏக தெய்வ வழிபாடே உகந்தது . ஆனால் , ஆயிரமாயிரம் விருப்பு, வெறுப்புகளிடையே உழலும் மனிதனுக்கு வேண்டியவற்றைத் தரவும், முறையற்றவற்றை விலக்கவும் பல  தெய்வ மூர்த்திகள் (ஒரே சிவபொருளின் தத்துவமாய்) எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
இவ்வகையில் துவாரபால மூர்த்திகளின் விசேஷார்த்தங்கள் யாவை? லௌகீகமான காம்ய சுயநலமான விருப்பங்கள் எனில் துவாரபாலகர்களிடம் நின்றவாறே மூலவரைப் பிரார்த்திக்க வேண்டும். பிறருக்காகப் பிரார்த்தித்தல், இறைப்பணி, மக்கள் சேவைக்காக வேண்டுதல் – இவ்வாறான சுயநலமற்றப் பிரார்த்தனைகட்காக ஸ்ரீதுவாரபாலரை வேண்டி உட்சென்று அர்த்த மண்டபத்தில் இருந்து கொண்டு மூலவரிடம் பிரார்த்திக்கலாம்.

ஆனால் நடைமுறையில் கோயில்களில் பிரார்த்தனைகள் இவ்வாறு நடைபெறுவதில்லையே என்ற கேள்வி ஏழலாம்.
சுயநலமாகப் பிரார்த்திப்பது தவறா? தன் பெண்ணின் திருமணம், நோய் நிவாரணம், முறையான சொத்துக்களைப் பெறுதல் ஆகியவை சுயநலம் ஆகுமா? இவையெல்லாம் பெற்றோர்களின் கடைமையல்லவா?
பிரார்த்தனைகளை முறைப்படுத்தினால் அவை இறையருளால் எளிமையாக நிறைவேறும், இவ்வழிமுறைகளை அருள்வோர் சித்த புருஷர்களே! திருமணத் தடங்கல்களுக்கென சில பரிகாரப் பிரார்த்தனை இரகசியங்களும், பல தெய்வ மூர்த்திகளின் அவதார இரகசியங்களும் புரியலாகும்..
வாழ்க்கையின் ஒவ்வொரு துன்பத்திற்கும் காரணம் நம்முடைய பலவித கர்ம வினைகளே!
திருமணத் தடங்கல்கட்குக் காரணமான கர்மவினைகளை முந்தைய ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் விவரித்து உள்ளோம்.. இவ்வாறாக ஒவ்வொரு துன்பத்திற்கான கர்மவினைகளை சித்த புருஷர்கள் பகுத்து அளித்துள்ளனர். அந்தந்தக் கர்மவினைகள் தீருவதற்கானப் பரிகாரங்களைகச் செய்திடில் அந்தந்த தோஷங்கள் நீங்கி, தடங்கலாகி நின்ற நற்காரியங்கள் நன்கு நடைபெறும்.
சித்தர்களின் அருளாசிபெற்ற சற்குருமார்களே ஒவ்வொரு துன்பத்திற்கான வினைகளையும், அதை நிவாரணம் செய்யும் பரிகாரங்களையும் அருள வல்லவர்கள்.
பரிகார முறைகளுள் நேர்த்திக் கடன்களும், தான, தர்மங்கள் உண்டு.
இவ்விதப் பிரார்த்தனைகளை முறைப்படுத்துவதே ஸ்ரீதுவார பால மூர்த்திகளின் தெய்வீக சக்தியாகும். இம்மூர்த்திகளில் ஏகாதச துவார பாலகர், துவாதச துவார பாலகர், ருத்ர துவாரபாலகர் என பலவகை மூர்த்திகள் உண்டு.
ருத்ர கபால துவார பாலகர்
கோயம்பேடு சிவத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இருதுவார பாலகர்கள் “ருத்ர கபால துவாரபாலக மூர்த்திகள்” ஆவர். கைலாயத் திருவழியில் இறையடியார்களை இட்டுச் செல்லும் தெய்வ மூர்த்திகள் இவர்களே.
சிவபெருமானின் திருமேனியை அலங்கரிக்கும் திருக்கபால மாலைகளைத் தாங்கும் பேறு பெற்றவர்கள்!
உத்தம சித்தபுருஷர்களும் மஹான்களும் தங்களுடைய வெவ்வேறு பிறவிகளில் சரீரங்களை உகுக்கும்போது கபால வாயுமூலமாக ஜோதியாய் வெளிப்பட்டுச் சிவனடி சேருவர். அவர்களுடைய கபால வாயுவைத் தாங்கிய புனிதமான கபாலங்கள் அக்னியாலோ, வாயுவாலோ எரிக்கப்பட, அழிக்கப்பட இயலாதவை, கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவை புரிந்து அரிய இறைப்பணியாற்றிய அத்திருக் கபாலங்களை ஸ்ரீஅக்னி பகவானே தம் திருக் கரங்களில் தாங்கித் திருக்கயிலாயத்தில் சமப்பிக்கின்றார் . அவற்றைத் தம் கபால மாலையில் சேர்த்துத் தன் இறைத் திருமேனியில் தாங்குகின்றார் ஆதிசிவன்.
இதுவே சிவனடி அல்லது சிவபதவி அடைதலாகும்.. இத்தகைய தியாகம் புரிந்தோருக்கு இறைவனே பலகோடி ஜீவன்களை உய்விப்பதற்காக மீண்டும் பிறவிகள் அளித்துப் பல லோகங்கட்கும் அனுப்புவதுண்டு. இதனால் தான் இக்கலியுலகில் மஹான்கள், யோகியர், ஞானியர். சித்தர்கள் போன்றோர் பல்வேறு ரூபங்களில் அவதாரம் பெற்று  நம்மைக் கரையேற்றுகின்றனர்.
ஸ்ரீகுறுங்காளீஸ்வரரின் ஆலய ருத்ரகபால துவார பாலகர்கள் காணற்கரிய கபால மாலைகளை அணிந்து தரிசனம் தருகின்றனர். இம்மாலைகளின் தரிசனமே பல மஹான்களின், சித்தர்களின் தரிசனத்திற்கீடானது ஆகும். கபால மாலைகளுடன் கூடிய ஸ்ரீதுவார பாலகர்களின் தரிசனம் அரியதாம்.
பிரார்த்தனை முறை : குழந்தைகளுக்கான தோஷங்கள், நோய்கள், சாபங்கள், பாலாரிஷ்ட துன்பங்கள், சந்தான பாக்யமின்மை போன்ற துன்பங்களைத் தீர்க்கும் மூலவரே ஸ்ரீகுறுங்காளீஸ்வரர் ஆவார். ஆனால் மேற்சொன்னபடி சுயநலமான பிரார்த்தனைகள் எனில் இத்துவார பாலக மூர்த்திகளிடம்  நின்றவாறே அல்லவா உள்ளிருக்கும் மூர்த்தியை தொழவேண்டும் என்பது நியதியாகிறது. உண்மையே! இங்கு எவ்வாறு பிரார்த்திப்பது?
“ஸ்ரீ ருத்ர கபால பாலகமூர்த்தியே போற்றி! என்னுடையது சுயநலமான பிரார்த்தனை என்பதை உணர்கின்றேன். இருப்பினும் என்னுடைய வாழ்க்கை சீர்பெற வேண்டி இதனைத் தங்களிடம் சமர்ப்பிக்கின்றேன் .மூலவராம் ஸ்ரீகுறுங்காளீஸ்வரரின் அனுக்ரஹத்தைப் பெற்றுத் தருவீர்களாக!” என்று பிரார்த்தனைகளை சமர்ப்பிக்க வேண்டும். பின் உட்சென்று மூலவரை தரிசிக்க வேண்டும்.
யார் பெயரில் அபிஷேக ஆராதனை செய்வது?
“இறைவா! என் பிரார்த்தனைகளை உன்னுடைய ருத்ர கபால துவார பாலமூர்த்தியிடம் சமர்ப்பித்து விட்டேன்”, என்று கூறி இறைவன் பெயரிலேயே அபிஷேக ஆராதனையைச் செய்ய வேண்டும். இதன்பின் சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு, பழங்கள், இனிப்பு வகைகளை சிறு குழந்தைகளுக்கு அளிப்பது ஸ்ரீகுறுங்காளீஸ்வரருக்குப் ப்ரீதியானதாகும்.
இதுவே இக்கோயிலில் பிரார்த்தனை செய்ய வேண்டிய முறையாகும். மேற்கண்டவை தவிர ஏனைய வாழ்க்கை துன்பங்களுக்கும் இம்முறையே சிறப்பானதாகும்.
அடியார் : குருவே! அறியாமையினால் மக்கள் மூலவரிடம் இதுகாறும் பிரார்த்தனைகளை செலுத்தியிருப்பின்.............. ?
சற்குரு : அறிந்தோ, அறியாமலோ எத்தகையப் பிரார்த்தனைகள் இருப்பினும் லௌகீக, காம்ய, சுயநலமாக அவை இருப்பின் அவற்றை இறைவன் ஸ்ரீதுவார பாலக மூர்த்தியிடம் அனுப்புகின்றான். அபிஷேக ஆராதனைகளுடன் இயன்ற தான தருமங்கள் சேர்ந்திடில் ஸ்ரீதுவார பாலக மூர்த்தி பிராத்தனைகளை ஏற்று கர்ம நியதிக்கேற்ப அருள்பாலிக்குமாறு மூலவரை வேண்டுகிறார்.
எனவே முறையாக ஸ்ரீதுவாரபாலக மூர்த்தியை வேண்டிடில் அத்தெய்வ மூர்த்தியே  நமக்காக மூலவரிடம் பிரார்த்திப்பதுண்டு. எத்தகைய பேறு பார்த்தீர்களா? ஒரு தெய்வாவதாரமே நமக்காகப் பிரார்த்திக்கும் அற்புதத்தை!! முறையான பிரார்த்தனைக்கு எத்தகைய விசேஷமான பலன்கள் கூடுகின்றன என்பதை உணர்வீர்களாக!
அடியார்: இதுவரையில் இம்முறையை அறியாது மூலவரிடம் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அவற்றின் ஆன்மீக விளைவுகள் எப்படியோ குருதேவா?
சற்குரு : மூலவரிடம் பிரார்த்தனைகள் செலுத்தப்பட்டிருந்தாலும் ஸ்ரீதுவாரபாலக மூர்த்திக்கே அவை அனுப்பப் பெறுவதால் அவரவருடைய தான, தருமங்களின் புண்ணியத்திற்கேற்ப சில பிரார்த்தனைகளை துவாரபாலக மூர்த்தி அங்கீகரிப்பதுண்டு. ஏனையவற்றை அத்திருக்கோயிலை உருவமாகவும் அருவமாகவும் வலம் வரும் மஹான்கள், சித்புருஷர்களின் தெய்வீக சக்தி கொண்டு அங்கீகரிக்குமாறு ஸ்ரீதுவார பாலக மூர்த்தியே இறைவனை வேண்டுவதும் உண்டு.
எனவே, எந்தக் கோயிலில் தரிசனம் செய்யச் சென்றாலும், குறைந்த அளவிலாவது தான, தருமங்கள் செய்வது (தேங்காய், வாழைப்பழம், கற்கண்டு) வினியோகம் செய்வது, அபரிமிதமான புண்யசக்தியைத் தரும். இவற்றின் மூலமாகவே துவார பாலக மூர்த்தி, மூலவரின் அனுக்ரகத்தால் காம்ய வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றார்.
மப்பேடு துவாதச ருத்ர துவார பாலகர்கள்
சென்னை அருகே மப்பேடு என்னும் சிவ தலத்தை அபூர்வமான துவார பாலகர்கள் அருகில் லிங்கத்துடன் காட்சி தருகின்றனர். பிரபஞ்சத்திலேயே அனைத்துப் பிரார்த்தனைகளையும் முறைப்படுத்தும் அற்புத துவார பாலகர்கள். இங்கு துவார பாலகர்களிடம் வேண்டிட அவை அங்கிருக்கும் ஏக ருத்ர லிங்கமூர்த்தி மூலமாக மூலவரை அடைகின்றது. எனவே இத்திருகோயிலின் விசேஷ அம்சம் எதுவெனில் துவார பாலகர்களிடமிருந்து சிவலிங்கத்தை தரிசிப்பது முறையான லௌகீக பிரார்த்தனைகளை எளிதில் நிறைவேற்ற வழிவகை செய்யும்.
பொதுவாக துவார பாலகர்கள் அருகே ஆவுடை லிங்கம் அமைந்திருப்பின் அவர்கள் மிகவும் விசேஷமான மூர்த்திகள் ஆவர். அங்கிருந்தவாறே மூலவரைப் பிரார்த்தித்தல் மிகவும் உத்தமமானதாகும்.
ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சரத்தை ஜபித்தவாறு புதுத் துணியால் நன்றால் துவாரக பாலகர்களை சுத்தஞ்  செய்து எண்ணெய்க் காப்பிடுவது மிகச் சிறந்த இறைத்திருப்பணியாகும். பொதுவாக துவார பாலகர்களின் அருமை தெரியாததால் அம்மூர்த்திகள் பெரும்பாலான கோயில்களில் கவனிப்பாரற்று உள்ளனர். இனியேனும் அடியார்கள் அம்மூர்த்திகளின் மஹிமையை அறிந்து ஆவன செய்ய வேண்டும். பக்தர்களுக்காகப் பிரார்த்தனை செய்யும் தெய்வ மூர்த்திகளுக்கு இறைப் பணி செய்தல் மிகவும் அரியதொன்றல்லவா!

விஷ்ணுபதி தங்கச்சிமடம்

வருடத்திற்கு நான்கு முறை வருகின்ற ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய கால வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீவிஷ்ணு பூஜையாகும். பிரதோஷ பூஜையைப் போல் அளப்பரிய புண்ய சக்தியைத் தரவல்ல பூஜைகளில் ஸ்ரீவிஷ்ணுபதி பூஜையும் ஒன்றாகும்.
பெரும்பாலும் தமிழ் மாதப் பிறப்பை ஒட்டி வரும் நான்கு விஷ்ணுபதி பூஜைகளை ஒருவன் முறையாக நிறைவேற்றுவானாயின் எத்தனையோ தர்ப்பண பூஜைகள், நித்ய வழிபாடுகள், முறையான ஹோமங்களை நிறைவேற்றுவதனால் கிட்டும் அதிஅற்புதப் புண்ய சக்தியை அவன் எளிதில் பெற்றுவிடுகிறான்! எத்தகைய மாபெரும் கருணை உள்ளம் கொண்டவன் இறைவன்!
நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் “ஸ்ரீபிரதோஷ மகிமை” என்னும் அற்புதமான புத்தகம் மூலமாகவும் ஆன்மீக உரைகள் மூலமாகவும் பிரதோஷ மஹிமையைப் பரப்பி வருதல் போல், வழக்கிலிருந்து மறைந்து விட்ட ஸ்ரீவிஷ்ணுபதி பூஜையைப் பற்றியும் மக்களிடையே புத்துணர்வை எழுப்பி அனைத்து வைணவத் தலங்களிலும் ஸ்ரீவிஷ்ணுபதி விடியற்காலை வழிபாட்டினை நிகழ்த்திட அரும்பாடுபட்டு வருகின்றார்கள். வைணவப் பெரியோர்களும் அனைத்து பக்தகோடி மக்களும் இதனை நடைமுறைப் படுத்தி அனைவரும் ஸ்ரீவிஷ்ணுவின் பாதார விந்தங்களைச் சேவித்து நல்வாழ்வைப் பெற வேண்டுகிறோம்.

தங்கச்சிமடம்

வரும் ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்யகாலம்
வரும் 13.2.1995 அன்று விடியற்காலை சுமார் 1½ மணி முதல் 10½ மணிவரை ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ய காலம் அமைகின்றது.
இப்புனிதமான ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ய காலத்தில் ஆராதனை, அபிஷேகம், பூஜைகள், ஜபம், தியானம், தர்ப்பணம், ஹோமம், தானதர்மங்கள் போன்ற நற்காரியங்களை நிகழ்த்திட அவை பன்மடங்காய்ப் பலன்களை வர்ஷிக்கும்.
குறிப்பாக 13.2.1995 அன்று விஷ்ணுபதிப் புண்ய காலத்தை இராமேஸ்வரம் தங்கச்சிமடம் அருகேயுள்ள ஏகாந்த இராமர் கோயிலில் கொண்டாடுவது மிகச் சிறப்புடையது என நம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் தம் அற்புத சிஷ்யனான ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளிடம் எடுத்துரைத்துள்ளதின் எழுத்து வடிவே இங்கு நாம் காண்பதாகும்.
ஸ்ரீவிஷ்ணுபதியின் மஹிமை, இப்புண்ய கால வழிபாட்டின் பலன்கள் யாவும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குச் சென்றடையும் வண்ணம் அருட்பணியாற்றி வரும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
ஸ்ரீகிருஷ்ணன் ஜாம்பவானிடமிருந்து சியமகந்தமணியைப் பெற்ற மகாபாரதக் கதையை நாம் அறிவோம்.
ஸத்ராஜிதன் என்னும் அரசன் ‘ஸ்யமகந்தமணி’ என்னும் ஓர் அற்புதமான இரத்தினக் கல்லைத் தன் கடுமையான தபஸின் பலனாக ஸ்ரீசூர்ய நாராயண ஸ்வாமியிடமிருந்து பெற்றான்.
தினமும் எட்டுபாரம் பொன்னைப் பொழியும் தெய்வீக சக்தியுடையது! ஆனால் உடல்சுத்தியுடன் தரிக்க வேண்டும். மாசுபடின் அணிபவரையே அழித்து விடும்.
ஸ்ரீகிருஷ்ணனுக்கு அந்த ஸ்யமகந்த மணியின் மேல் ஆசை ஏற்பட்டது! பகவானுக்கு ஆசையா?
அல்ல, அல்ல! பல திருவிளையாடல்களை நிகழ்த்தும்  பொருட்டு மாயக் கண்ணன் தன் விளையாட்டைத் துவங்கினான்!
“பகவானாயிற்றே! கேட்டால் கொடுத்தாக வேண்டுமே!” என்ற சுயநலமான எண்ணத்தில் அஞ்சிய ஸத்ராஜிதன் அதனைத் தன் தம்பி பிரசேனனிடம் அளித்து விட்டுக் கிருஷ்ணனை தரிசிக்கச் சென்றான்!

ஸ்ரீகாளிதேவி தங்கச்சிமடம்

கழுத்தில் சியமகந்த மணியுடன் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற பிரசேனன் ஒரு சிங்கத்தால் தாக்கப்பட்டு இறந்தான். ஸ்யமகந்த மணியைக் கவ்விச் சென்ற சிங்கத்துடன் போராடி ஜாம்பவான் அந்த மணியை மீட்டுத் தன் குகையில் பாதுகாத்து வைத்தார்.
காட்டில் சிங்கத்தால் மாண்ட பிரசேனன் பற்றிய தகவல் எதுவும் தெரியவில்லையாதலின் சியமகந்தமணிக்காக ஸ்ரீகிருஷ்ணனே பிரசேனனைக் கொன்றிருக்க வேண்டும் என்ற அபகீர்த்தியை ஸ்ரீகிருஷ்ணன் தாங்க வேண்டியதாயிற்று!
தனக்கு ஏற்பட்ட அவப் பெயரை நீக்கி உண்மையை உணர்த்த வேண்டிய நிர்பந்தத்தில்  வனம் புகுந்த ஸ்ரீகிருஷ்ணன் அங்க அடையாளங்களை, தடயங்களைக் கொண்டு பிரசேனன் சிங்கத்தால் தாக்கப்பட்டான் என்பதை அறிந்து சிங்கத்தின் கால்சுவடுகளைத் தொடர்ந்திட......
குகையில் ஜாம்பவானுக்கும், ஸ்ரீகிருஷ்ணனுக்கும் இடையே 21 நாட்கள் தொடர்ந்து யுத்தம் நடந்தது. ஸ்ரீகிருஷ்ணன்  “இராமனும் நானே, கிருஷ்ணனும் நானே!” என்று ஸ்ரீராமனாகக் காட்சி தந்திட ஜாம்பவான் பேரானந்தமுற்றார்.
இதுவரையான புராணத்தை யாவருமறிவர்! சித்தர்களின் “இருடிகள் மஹாபாரதம்” மேற்கொண்டு நிகழ்ந்தவற்றை விளக்குகிறது. சித்தர்களுக்கே உரித்தான இறை பொக்கிஷம் இது! ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் இவ்வாறான மகாபாரத, இராமாயண, பாகவத நிகழ்ச்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. தக்க சற்குருமார்களின் மூலமாக இவை அருளப் பெறுகின்றன.
நம் சிவகுரு மங்களா கந்தர்பா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளிடமிருந்து தம் குருகுலவாசத்தில் பெற்ற “இராமாயண, மஹாபாரத” நிகழ்ச்சிகளின் விளக்கங்களை ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் நமக்கென எடுத்துரைக்கின்றார்.
ஸ்ரீராம பக்தரான ஜாம்பவான் திரேதாயுகத்திற்குப் பின் துவாபரயுகத்தில் ஸ்ரீராம சந்திரமூர்த்தியின் தரிசனம் கிட்டியது குறித்து ஆனந்தமடைந்தார்.
பேரிபைப் பரவசத்தில் ஏது செய்வதென்று அறியாது திகைத்து நின்றார்.
“பல இலட்சம் ஆண்டுகள் கழித்து எம் பெருமான் ஸ்ரீராமனை தரிசிக்கும் பாக்கியம் கிட்டியுள்ளதே! எவ்வாறு பூஜிப்பேன் எம் ஸ்ரீராமனை!” ஜாம்பவான் பக்திப் பரவசத்தில் திளைத்து நாட்டியமாடினார்!
அந்த சியமந்தக மணி தினந்தோறும் 8 பாரம் எடை பொன்னைப் பொழியுமல்லவா? அவரிடம் சியமந்தகமணி வந்த நாள் முதல் குவிந்த பெருமளவு தங்கத்தை அள்ளி ஏந்தி ஸ்ரீராமனின் திருமேனிக்குக் “கனகதாரையாகப்” பொன் மழையென அபிஷேகித்தார். எவருக்கும் கிட்டாத பாக்யம்!  இங்குதான் ஸ்ரீகிருஷ்ணன் தன் திருவிளையாடலை மாற்றி ஆடினான்! ஆம்! ஸ்ரீராமனாகக் “கனகதாரை” (தங்க அபிஷேகம்) அபிஷேகத்தை ஏற்றபின் க்ஷண நேரத்தில் ஸ்ரீகிருஷ்ணனாகக் காட்சியளித்திட ஜாம்பவான் திகைத்தார்!
அடுத்த அவதாரத்திற்கு என்ன பூஜை செய்வது? கனக தானத்திற்குப் பின்?

தங்கச்சி மடம்

கன்னிகா தானம்!
ஆம்! தம் மகள் ஜாம்பவதியை ஸ்ரீகிருஷ்ணனுக்கு மணம் செய்வித்து ஸ்யமகந்த மணியையும் சீதனமாக அளித்து உவந்தார்.
“ஸ்வாமி! இதுவரையில் இந்த சியமகந்தமணி எனக்கு தினமும் அளித்து வந்த (சிறுகுன்றென உயர்ந்தளிக்கும்) பொன்னையும் ஏற்பீர்களாக!” என்று ஜாம்பவான் வேண்டிட,
ஸ்ரீகிருஷ்ணனின் முக்கியமான திருவிளையாடலே இதுதானே!”
ஸ்ரீராம பக்த ஜாம்பவரூபா! நீ ஏற்கெனவே இந்தப் பொன்னால் ஸ்ரீராமனுக்குக் கனக தாரையாக அபிஷேகம் செய்து விட்டாய்! எனவே இது ஸ்ரீராமனுக்கு நைவேத்யம் செய்யப்பட்டது! ஸ்ரீராமனுக்கே உரித்தானது! எனவே இப்பொன்னைத் தாங்கி க்ஷேத்ராடனம் செய்து ஸ்ரீராமனின் திருத் தலங்களை தரிசித்து வருவாயாக! தக்க இடத்தில் ஸ்ரீராமனே ஸ்ரீவிஷ்ணுவாக இதை ஏற்பான்!”
ஸ்ரீஜாம்பவான் மகிழ்ச்சி, திகைப்பு, ஆனந்தங்களிடையே சிக்கி ஸ்ரீராமாமிர்தத்தில் முகிழ்த்தெழுந்தார்.
 இதோ! இராமேஸ்வரம் அருகே....
ஸ்ரீ ஜாம்பவான் தம் பரிவாரங்களுடன்  ஸ்யமகந்தமணி வழங்கிய பெருமளவு பொன்னைப் பல தேர்களிலும் வண்டிகளிலும் ஏற்றி இராம நாமம் ஒதியவாறே பல திருதலங்களைத் தரிசித்துப் பேரானந்தம் அடைந்த அதிபரவச யோக நிலையில் அமர்ந்திருக்கின்றார்!
அந்த யோக சமாதியில் அவ்விடத்தில் ஸ்ரீராமனின் திருப்பாத தரிசனங்கள்!
அவ்விடத்தில் ஸ்ரீராமனின் தெய்வக் குரல் ஒலித்திட ஜாமபவான் தமக்கிடப்பட்ட தெய்வக் கட்டளையை நிறைவேற்றத் தொடங்கினார்! ஆம்! ஸ்ரீராமனின் திருமேனியை அலங்கரித்த ‘ஸ்யமகந்த மணியின்” பொன்னைக் கொண்டு அவ்விடத்தில் ஸ்ரீராமனுக்கு ஒரு திருக்கோயில்!
ஸ்ரீராமனின் திருவதனத்தைத் தீண்டிய பொன்னிற்கு ஈடாகக் கற்களும், தூண்களும் ஏனைய பொருட்களும் வந்து குவிந்தன.
இத்திருத்தலம் தான்... இங்குதான்.. ஸ்ரீராமர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
எனவே 13.2.1995 அன்று அமையும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலத்தை விடியற்காலை 1.30 மணி முதல் காலை 10.30 மணி வரையான புனித காலத்தை அபிஷேக, ஆராதனைகளுடன் கொண்டாடுவது அளப்பரிய தெய்வானுக்ரஹத்தைப் பெற்றுத்தரும்.

ஸ்ரீஏகாந்த ராமர்
தங்கச்சி மடம்

துவாபர யுக ஒரு பவ வருடத் திருநாளில் ஸ்ரீராமருக்கான இத்திருக் கோயிலை அவருக்கே அர்ப்பணித்த பொழுது ஜாம்பவானுக்கு ஸ்ரீவைகுண்டத்தின் தரிசனம் கிட்டி ஸ்ரீவிஷ்ணுபதியை அடைந்தார்.
ஸ்ரீஜாம்பவான் விஷ்ணுபதியை அடைந்த விசேஷ தினமே இந்த பவ வருடத் திருநாள்!

ஸ்ரீஜாம்பவானின் தியானத்துடன் ஸ்ரீராமனுக்கு அன்று விஷ்ணுபதித் திரு நாளில் முறையான பூஜைகளை நிகழ்த்தி, ஏழை எளியோருக்கு நாவற் பழம், கீரை வகைகளுடன் அன்னதானம், சர்க்கரைப் பொங்கல் தானம் பெற்றிட

  1. கணவன்மார்கள் உன்னத தெய்வ பக்தியைப் பெற்றுச் சிறந்த ஒழுக்கத்துடன் வாழ்வர்.
  2. இழந்த பொருட்கள், சொத்துக்கள் ஆகியவை நியாயமாயிருப்பின் மீண்டும் கிட்டும்.
  3. (ஜாதி, மத பேதமின்றி) ஓர் ஏழை பெண்ணிற்கு இந்த விஷ்ணுபதித் திருநாளில் இயன்ற அளவு தங்கத்தாலான (குண்டு மணியளவு கூடப் போதுமானது) மாங்கல்யத்தை மஞ்சள், குங்குமம். தாலிச் சரடு, வளையல், கண்ணாடி, மருதாணி போன்ற மங்கலப் பொருட்களுடன் தானம் அளித்திட இதனால் கிட்டும் புண்யத்தால் பலன்கள் பன்மடங்காகத் திரும்பி வருமென நம் சிவகுரு மங்கள கந்தர்வா அருள்கின்றார்.

திருமணத் தடங்கல் தீர விஷ்ணுபதி காட்டும் மார்க்கம்

எத்தனையோ திருமண தோஷ நிவர்த்திப் பரிஹார முறைகளை நிறைவேற்றியும் தம் பெண்ணிற்கும், பையனுக்கும் திருமணம் ஆகவில்லையே என்று எண்ணுவோர் பலருண்டு. பரிஹாரங்கள் என்றாலே சலிப்படைவோரும் உண்டு!
இவர்கள் இவ்வருட பவ வருட விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் இராமேஸ்வரம் தங்கச்சி மடம் அருகேயுள்ள ஏகாந்த இராமர் திருத்தலத்தில் ஜாதி, மத பேதம் பாராது ஏதேனும் ஓர் ஏழைச் சுமங்கலிப் பெண்ணிற்கு மாங்கல்ய தானம் அளிக்க வேண்டும் இயன்றால் அப்பெண்ணின் குல வழ்க்கிற்கேற்ப (கூம்பு வடிவு, அரை வட்டம், நீற்றுப் பட்டை, நாமக் கோலம் போன்ற மாங்கல்ய வகைகள்) பொன்னாலான மாங்கல்யத்தை அளித்தல் சிறப்பானது .அவரவர் வசதிக்கேற்ப மாங்கல்யத்தை அளித்தால் போதுமானது! குண்டு மணி தங்கம் கூட ஏற்றதே! ஆனால் மனமார ஜாதி, மதம் பாராது நிறைந்த உள்ளத்துடன் அளித்து மகிழவேண்டும்.

ஸ்ரீஅமிர்தவாவி லிங்க மூர்த்தி
தங்கச்சி மடம்

இதனால்.

  1. ஸ்ரீராமனின் திருவருளால் தம் பிள்ளை, பெண்ணின் திருமணத் தடங்கல்களுக்கான பூர்வ ஜன்ம கர்மவினைகளின் தன்மை உணர்த்தப் பெற்று இவற்றைத் தீர்க்கும் நல்வழிகளையும் அறியப் பெறுவர்.
  2. பரிஹாரங்களைச் செய்து சலிப்படைந்தோர்க்கு இது மன ஆறுதலை அளிக்கும். அது வெறும் பரிஹார முறையன்று! மாறாக மற்றொரு ஏழைப் பெண்ணிற்கு அவளால் அடைய இயலாத சிறுஅளவு தங்கத்தை, வெறும் சரடுன் இருந்த அவள் கழுத்தை, சிறு பொன் மாங்கல்யத்தால் அலங்கரிக்கும் போது அவ்வேழையின் புனித உள்ளத்தில் பீறிட்டெழும் ஆசிர்வாதமே ஸ்ரீராமனின் ஆசிர்வாதமாக மாறி ஒரு புத்துணர்ச்சியைத் தரும்.
  3. இந்த விஷ்ணுபதி புண்ய காலத்தில் அளிக்கப்படும் பொன் மாங்கல்ய தானத்தால் கிட்டும் பலன்களை பேரானந்தப் பெருநிலையை அனுபவம் மூலமாக உள்ளத்தால் தான் உணர இயலும்.

வரும் விஷ்ணுபதி அனைவராலும் இராமேஸ்வரம் தங்கச்சி மடம் அருகேயுள்ள ஏகாந்த இராமர் திருத்தலத்துக்குச் செல்ல இயலாதே! என்ன செய்வது ?
உண்மையான முயற்சியுடன் செயல்படும் பல சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இக்கோயிலுக்குச் செல்ல இயலாவிடில், அருகிலுள்ள பாடல் பெற்ற, மங்களா சாஸனம் செய்யப்பட்ட பெருமாள் கோயிலில் மேற்குறித்தவாறு பொன் மாங்கல்ய தானத்துடன் ஸ்ரீவிஷ்ணுபதி பூஜையைக் கொண்டாடிலாம். தனித்து பொன் மாங்கல்ய தானம் செய்வதைவிடப் பலர் ஒன்று கூடி தான தர்மங்கள் செய்திடில் பல ஏழைப்பெண்களுக்கு பொன் மாங்கல்யங்களை அளித்து பலருடைய சிறப்பான மனவாழ்விற்கு உதவிடலாம். கூட்டாகச் செய்யப்படும் பொன் மாங்கல்ய தானத்தின் அளப்பரிய பலன்கள், புண்ய சக்திகள் பல குடும்பங்களைச் சென்றடையும்.

பொதுவாக, லிங்க மூர்த்திகள் கல்லினால் அமைந்தாலும் மண், உலோகங்கள், பனிக்கட்டி, பசுஞ்சாணம், தான்யமணிகள், அரிசி சோறு போன்ற பலவகை பொருட்களாலும் லிங்கங்களைப் பெரியோர்கள் நிர்மாணிப்பது உண்டு. இவ்வகையில் ராமேஸ்வரம் கடற்கரையில் ஸ்ரீராமபிரானால் அமைக்கப்பட்ட சிவலிங்கம் அவர்தம் திருக்கரங்களால் கடல் மண்ணால் உருவான பிருத்வி லிங்கம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பிருத்வி லிங்கத்திற்கு முந்தைய புராண வரலாற்றை உடையதே தங்கச்சி மடத்தில் அமைந்துள்ள ஸ்படிக லிங்கமாகும். உலகிலேயே மிகப் பெரிய பிள்ளையார் மூர்த்தியாக திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் மூர்த்தி விளங்குவதைப் போல ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் அமைந்துள்ள ஸ்படிக சிவ லிங்க மூர்த்தி விளங்குகிறார். இவருடைய திருநாமமோ ஸ்ரீஅமிர்தவாவி லிங்க மூர்த்தி என்பதாகும். இம்மூர்த்தியின் திருநாமத்திலேயே இத்தல தீர்த்தமும் அமிர்தவாவி என்றே அழைக்கப்படுகிறது.

அப்பு குட்டி அணில்
தங்கச்சி மடம்

அண்ணலும் நோக்கினான் … அவளும் நோக்கினாள் …
மிதிலை மாநகரில் சீதையின் சுயம்வரத்திற்காக விஸ்வாமித்திர மகரிஷியுடன் சென்ற ராமர் ராஜவீதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது அரண்மனையின் மாடத்தில் நின்று கொண்டிருந்த சீதாப் பிராட்டியை நோக்க, சீதாப் பிராட்டியும் ஸ்ரீராம பிரானை நோக்கினாள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த அற்புத புராண வைபவத்தை கம்பர் விளக்கும்போது, “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் …,” என்று வர்ணிக்கிறார். ராமர் நோக்கினார் என்பதற்குப் பதிலாக “ராமரும்” நோக்கினான் என்ற வார்த்தையின் பிரயோகத்திற்குப் பலவிதமான பொருள்கள் கூற முடியும் என்றாலும் சித்தர்கள் கூறும் சுவையே தனிச் சுவைதானே ?
இதனால்,
ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாவது வீடு களத்திர தானம் என்னும் கணவன் அல்லது மனைவியைக் குறிக்கும் ஸ்தானமாகும். எல்லா கிரகங்களுக்கும் இந்த ஏழாமிடத்துப் பார்வை உண்டு. ராமருக்கு முன் எத்தனையோ ஆண்களும் பெண்களும், ராமர் காலத்திலும் அதற்குப் பின்னும் எத்தனையோ ஆண்களும் பெண்களும் உரிய வரனைத் தேடி வழிபாடுகள் இயற்றி வந்தனர். இவர்கள் பிரார்த்தனைகளை எல்லாம் ஏற்றுக் கொண்ட ராமபிரான் தன்னுடைய ஒரே பார்வையில் இத்தகைய காதல் பறவைகளின் ஏக்கங்களைத் தீர்த்து அவர்கள் சரியான தாம்பத்ய வாழ்வைப் பெற துணை புரிந்தார் என்பதே இந்த லீலையின் பின்னணியில் அமைந்த ஒரு சுவையாகும். இவ்வாறு ஒரே ஒரு நொடியில் நிகழ்ந்த ஒரு புராண சம்பவத்தினால் எத்தனையோ கோடி நல்ல உள்ளங்களின் பிரார்த்தனைகளை, ஏக்கங்கள், கனவுகளை ஸ்ரீராம பிரான் தீர்த்து வைத்தார் என்றால் ராமபிரானின் வாழ்க்கை முழுவதும் எத்தனை உள்ளங்களுக்கு ஆறுதல் அளித்திருக்கும்.

அனுவாவிமலை கோவை

இவ்வாறு வெறுமனே உயிருக்குயிரான ஒரு தாம்பத்ய உறவு இறையருளால் கிடைத்தால் மட்டும் போதுமா அதற்குப் பின் நன்முறையில் வாழ்க்கையை நடத்தி இறையருளுக்குப் பாத்திரமாவதுதானே மனித வாழ்வின் குறிக்கோள் ? இதற்கு வழிகாட்டுவதே தங்கச்சிமடத்தில் ஸ்ரீஅமிர்தவாவி லிங்க மூர்த்தியை ஸ்ரீராமர் காட்டிய முறையில் வழிபடுவதாகும். அமிர்தவாவி என்பதை தொடர்வதுதான் அனுவாவி. வாவி என்றால் நீர் நிலை. சந்ததிகள் தொடர்வது நீர் நிலையின் மகத்துவத்தால்தானே ? அதனால்தான் எல்லா மூதாதையர்களின் வழிபாட்டிலும் எள் நீர் வார்க்கும் வழிபாடு முறையாக அனுஷ்டிக்கப்படுகிறது. தங்கச்சிமடம் ஸ்ரீஅமிர்தவாவி வழிபாட்டிலும் தீர்த்த அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது.

‘வ’ வரிசையில் அமைந்த தீர்த்தங்கள் குறைந்தது மூன்று தீர்த்தங்களை இத்தல இறைவனுக்கு அபிஷேகிப்பது சிறப்பான வழிபாடாகும். அனுவாவி என்ற சொல்லில் இரண்டு ‘வ’ வரிசை அட்சரங்கள் அமைந்துள்ளதால் அனுவாவி மலை அமைந்துள்ள கோயம்புத்தூர் நகர சிறுவாணி தீர்த்தம், ராமேஸ்வர வில்லூண்டி தீர்த்தம், இத்தல அமிர்தவாவி தீர்த்தத்துடன் காவிரி, வேதாரண்யம், வைகை போன்ற ‘வ’ வரிசை அட்சர தீர்த்தங்களையும் கலந்து அபிஷேகிப்பதால் கிட்டும் பலன்கள் அபரிமிதம், அமோகம். ஸ்ரீஅமிர்தவாவி ஈசனுக்கு இவ்வாறு தீர்த்த அபிஷேகங்களை நிறைவேற்றிய பின்னர் நிறைவாக சுத்தமான பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்பட்ட விபூதியால் அபிஷேகித்தல் நலமே.
ஸ்ரீராம பிரானின் வனவாசத்தின்போது ஸ்ரீராமரை சந்தித்த பரதன் ராமருடைய பாதுகையைப் பெற்றுக் கொண்டு அயோத்திக்குச் சென்று அப்பாதுகைகளை அரியணையில் அமர்த்தினான் என்பது மேலோட்டமான ஒரு காரியமே. உண்மையில் வெறுங்காலுடன் ராம பிரான் திகழ்ந்தால்தான் ஸ்ரீராமருடைய பாதம் அகலிகை மேல் பட்டு அவள் சாபவிமோசனம் அடைவாள் என்று நகைச் சுவையுடன் ஸ்ரீராமரிடம் பாதுகையைப் பெறும் சம்பவத்தை சத்யசாய்பாபா வர்ணிப்பார். அது போல் நடக்க இருக்கும் எத்தனையோ புராண சம்பவங்களுக்கு வித்திட்டது பரதனின் “பாதுகா பகிஷ்காரம்.”

தங்க கருடன்
தங்கச்சி மடம்

ஆண்களின் சாமுத்ரிகா லட்சணப்படி ஆண்களின் கால்பாதங்கள் வில் போல் வளைந்திருக்க வேண்டும். இதற்கு இணையாக அமைவதே பெண்களின் வேல் விழி. மேலே நோக்க வேண்டிய ஆணின் பார்வையும் கீழே நோக்க வேண்டிய பெண்ணின் பார்வையும் இணையாக படிந்ததே சீதாராம வைபோக நோக்கு. இது பற்றியே பெண்கள் ஆண்களின் complementary sex, not opposite sex என்று சொல்வதுண்டு. இத்தகைய சாமுத்ரிகா லட்சணங்களின் படி அமைந்தவர்களே ஸ்ரீராமரும் சீதாப்பிராட்டியும் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால், இத்தனை கோடி மனித சாம்ராஜ்யத்தில் சாமுத்ரிகா லட்சணங்கள் இருவரிடத்தில் மட்டுமே நிலை கொண்டால் போதுமா ? இதை நிவர்த்தி செய்வதற்காகவும் ஸ்ரீராம பிரான் கால்களில் பாதுகா இன்றி பாரதம் முழுவதும் வலம் வந்தார். சிறப்பாக, புல் வெளிகளிலும், மணல் பாங்கான ஆற்றுப்படுகைகளிலும், சமுத்திர தீரங்களிலும் ஸ்ரீராம பிரான் வெறுங் காலுடன் வலம் வந்தபோது ராமபிரானின் வளைந்த பாதங்கள் மணல் வெளியில் பதிந்த போது அவை வில் போன்ற தோற்றம் கொண்டு பொலிந்தன. எத்தனை ஆண்டுகளுக்கு ? அதை இறைவனே அறிவார், ராமரே கூற இயலும். இத்தகைய வில் போன்ற பாதச் சுவட்டைப் பார்த்துதான் அதிலிருந்து சில மண் துகள்களைப் பெற்று அதைப் பக்தி சிரத்தையுடன் எடுத்து பாதுகாத்து திரிவேணி சங்கமத்தில் கரைக்கும் திருவிளையாடலைப் புரிந்தார் நம் கோவணாண்டிப் பெரியவர் என்பதை ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களிலிருந்து நீங்கள் அறிந்து கொண்டிருக்கலாம். நாம் அனைவரும் ராமர் வாழ்ந்த அந்தப் புனித யுகத்தில் வாழ்ந்தோமா இல்லையா என்பதை அறிய முடியா விட்டாலும் மேற்கூறிய ஸ்ரீஅமிர்தவாவி லிங்க மூர்த்தியை பக்தியுடன் வழிபட்டு உரிய தீர்த்த அபிஷேகங்களை நிறைவேற்றுவதால் நாமும் ஸ்ரீராமபிரானின் “வேல்” பாதங்கள் பதிந்த திருமண்ணைத் தீண்டும் பாக்கியத்தை நிச்சயமாகப் பெறுவோம். எங்கு ? இராமேஸ்வர புனித பூமியில்தான்.

வளைந்த பாதங்கள், நெளிந்த புருவங்களுக்கு இணையாகும். இந்த இரண்டு கோட்பாடுகளைக் கொண்டு மட்டுமே ஆயிரம் கிரந்தங்கள் எழுதலாம், காம சூத்திரங்களைப் படைக்கலாம். தாம்பத்ய உறவில் குறைபாடுகள் இருப்பதாக எண்ணும் கணவனும் மனைவியும் இந்தத் தத்துவங்களைக் குறித்து ஆத்ம விசாரம் செய்து வந்தாலே போதும். அவர்கள் அனைத்தையும் அறிவர், குடும்ப ஒற்றுமை ஓங்கும். வேலும் வில்லும் இணைந்தால் அங்கு மிஞ்சுவது ஒன்றுமில்லை என்னும் தத்துவத்தை உணர்த்தவே ஸ்ரீராமபிரான் வெறுமனே வில்லை வளைக்கவில்லை, அதை முறித்தார், உடைத்தார்.

அக்கா என்றால் மூத்த திருமகளான மூதேவியைக் குறிக்கும், தங்கச்சி என்றால் இளைய திருமகளான லட்சுமியைக் குறிக்கும். தங்கச்சிமடம் என்றால் லட்சுமி தேவி நிரந்தரமாகத் தங்கி அருள்புரியும் திருத்தலம் என்று பொருள். இத்தகைய அபூர்வ சக்திகளை ஸ்ரீராமபிரான் இத்தலத்தில் உறையும் ஸ்ரீஅமிர்தவாவி ஸ்படிக லிங்க மூர்த்தியை வழிபட்டு அதன் பலாபலன்களை உலகத்தவர்க்கெல்லாம் தாரை வார்த்து அளித்தார். ஸ்ரீராமபிரானின் வழிபாட்டு முறையையே தாயினும் சாலப் பரிந்து சித்தர்கள் நமக்கு அளித்துள்ளார்கள் என்றால் அவர்தம் கருணாதான் என்னே, என்னே ?!

அண்ணலும் நோக்கினான் … என்ற தெய்வீக லீலையின் பின்னணியில் சாட்சியாக நின்றது விஸ்வாமித்திர மகரிஷி அல்லவா ? விஸ்வம் என்றால் உலகம், மித்திரம் என்றால் நட்பு. இந்த உலகத்து உயிர்கள் அனைத்தையும் தன் ஆருயிர் நட்பில் இணைத்த மகரிஷி என்பது மேலோட்டமான பொருள். ஒரு நொடியில் நிகழ்ந்த இந்த தெய்வீக இணைப்பிற்கு சாட்சியாக நின்று அந்த இணைப்பில் விளைந்த இறை சக்தியை உலகத்தவர் அனைவருக்கும், மனிதர்கள் மட்டும் என்றல்லாது புழு, பூச்சிகள், தாவரங்கள் என ஆண், பெண் நிலையில் திகழக் கூடிய அனைத்து ஜீவ ராசிகளுக்கும் பகிர்ந்தளித்தார் விஸ்வாமித்திர சற்குரு நாதர். இத்தகைய ஒரு தெய்வீக பங்கீட்டை நீங்களும் நம் சற்குருவின் துணையுடன் தங்கச்சி மடத்தில் நிகழ்த்த முடியுமே ?

ராமேஸ்வரம் மட்டும் அல்லாது உத்தரகோசமங்கை, சிதம்பரம் போன்ற பல திருத்தலங்களில் ஸ்படிக லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நிறைவேற்றப்படுகின்றன. ஒளியானது பாறைபோல் மிகவும் இறுகிய நிலையில் உள்ள பொருட்கள் வழியாகவும், அவை தூய்மையாக இருந்தால், ஊடுருவிப் பரவும் என்பதை நிரூபிப்பதே ஸ்படிகம் ஆகும். இதன் பொருட்டே பல திருத்தலங்களில் ஸ்படிக லிங்க அபிஷேகங்களை நிகழ்த்தி மனித மனம் மனிதன் என்ற குறுகிய வட்டத்தைத் தாண்டி அனைத்து உயிர்களையும் சென்றடையும் வழிமுறையை வகுத்துக் காட்டினார்கள் நம் முன்னோர்கள். அரவிந்த அன்னை உணர்த்தும், அசையாத, தெளிவான உணர்வே, தாணுவாவியே இறைவன் என்பதை நடைமுறையில் மக்கள் உணர உறுதுணையாக இருப்பதே மேற்கூறிய ஸ்படிக லிங்க அபிஷேகமாகும். அத்வைத தியானத்திற்கு ஆரம்ப கட்ட பாடமாக அமைவதும் ஸ்படிக லிங்க வழிபாடே. அமிர்தானந்தா அன்னை உணர்த்தும் பேதமில்லாப் பெருமையை நாம் பெற உதவுவதும் ஸ்படிக லிங்க வழிபாடே.

ஸ்ரீராமபிரான் பட்டாபிஷேகத்திற்குப் பின் சீதாபிராட்டியுடன் பல திருத்தலங்களுக்கும் யாத்திரையாகச் சென்று இறை மூர்த்திகளுக்கெல்லாம் நன்றியைத் தெரிவித்து வழிபாடுகள் நிறைவேற்றினார் என்பது மேலோட்டமாக நாம் கொள்ளும் பொருளாக இருந்தாலும் இதன் மூலம் உலகத்தவர்க்கெல்லாம் இறை அனுகிரகத்தைச் சக்கரவர்த்தி என்ற முறையில் வாரி வாரி வழங்கினார் என்பதே இதன் பின்னணியில் அமைந்த அரிய செயலாகும். பொதுவாக, திங்கள் ரோகிணி நட்சத்திரம் இணையும் நாட்களில் வலம்புரிச் சங்கினால் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நிறைவேற்றினால் மனத் தெளிவு கிட்டும் என்பது ஸ்ரீஅகத்திய பிரான் ராமபிரானுக்கு உபதேசித்த சித்த இரகசியம். வளர்பிறையாக இருந்தாலும் தேய்பிறையாக இருந்தாலும் ஸ்படிக லிங்க வலம்புரிச் சங்கு அபிஷேகம் மனக் குழப்பங்களை தீர்க்கும் என்பது தெளிவே. சீதையைப் பிரிந்ததால் ராமபிரான் அனுபவித்த சோகத்திற்கு மாமருந்தாக, மனக் குழப்பத்திற்குத் தெளிவாக மேற்கூறிய வலம்புரிச் சங்கு அபிஷேகத்தை உலகின் மிகப் பெரிய ஸ்படிக லிங்க மூர்த்தியாக விளங்கும் ஸ்ரீஅமிர்தவாவி லிங்க மூர்த்திக்கு நிறைவேற்றி மனக் கொந்தளிப்பில் தவித்த மக்களுக்கெல்லாம் மன அமைதி, ஆறுதல் வழங்கினார் ஸ்ரீராமபிரான்.

அமிர்தவாவி
தங்கச்சி மடம்

ஸ்ரீராமபிரான் தன்னுடைன் வந்த வீரர்களுக்கும் சீதாப்பிராட்டிக்கும் ஏற்பட்ட தாகத்தைத் தீர்க்கவே ராமபிரான் தன்னுடைய வில்லை தங்கச்சிமடக் கடற்கரையில் ஊன்ற உப்புக் கரிக்கும் கடல் நடுவே அற்புத சுவை மிகுந்த குடி நீர் பொங்கி வழிந்தது என்பது பொதுவாக மக்கள் அறிந்த விஷயமாக இருந்தாலும் சித்தர்களே இதன் உண்மைப் பொருளை விளக்கவல்லவர்கள். தங்கச்சிமடத்தில் சுத்தமான குடிநீரை உண்டாக்கி அந்த தீர்த்தத்தால் ஸ்ரீஅமிர்தவாவி ஸ்படிக லிங்க மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் இயற்றி அந்த அனுகிரகத்தை இறைப் பிரசாதமாக அனைவருக்கம் பகிர்ந்தளித்தார் ஸ்ரீராமபிரான் என்பதே ஒரு சக்கரவர்த்தியின் மகிமையைப் பறை சாற்றும் தெய்வீகக் காரியம். வில்லூண்டி தீர்த்தத்தால் ஸ்ரீராமபிரான் இத்தகைய வலம்புரிச் சங்கு அபிஷேகம் நிறைவேற்றிய நாள் அந்த யுகத்தில் ரோகிணி திரிதினமாக அமைந்தது. அதே போல் வரும் 30.11.2020 திங்கட் கிழமை (கார்த்திகை 15) அன்று ரோகிணி நட்சத்திர திரிதினமாக அமைவதும், திருக்கார்த்திகை தீபத்தின் மறுநாளாக அமைவதும் கலியுக மக்கள் பெற்ற மாபெரும் பேறே. குருவிற்கு உகந்த மூன்றாம் எண்ணிற்கு குசாவாக தமிழ் தேதி அமைவது இத்தகைய சிறப்பிற்கெல்லாம் அணி கூட்டுவதாக அமைகிறது. தற்போது மருத்துவர்கள் மேற்கொள்ளும் வியாதிகளைக் கண்டுபிடிக்கும் முறையில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டு நோயாளிகள் சொல்லொணாத் தொல்லைகள் அனுபவித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதற்கு ஒரு இறைப் பிரசாதமாக அமைவதே வரும் 30.11.2020 அன்று அமையும் தங்கச்சிமட ஸ்ரீஅமிர்தவாவி லிங்க மூர்த்தி வழிபாடாகும். இதன் பலனாக எத்தகைய குழப்பமான சூழ்நிலையிலும் நோயின் காரணத்தை, தன்மையை தெளிவாக கண்டறியும் திறமையை மருத்துவர்கள் பெறுவர். மேலும், மக்களும் இத்தகைய குழப்பமான நோய் கண்டறியும் முறைகளால் தாங்கள் வேதனை அடையாமல் தற்காப்பைப் பெறவும் மேற்கூறிய வழிபாடு தக்க பாதுகாப்பை அளிக்கும்.

தங்கச்சி மடத்தின் புராதனத் தன்மையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. பக்தர்கள் இத்தலத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதால் மட்டுமே இவற்றை அறிந்து கொள்ள முடியும் என்பதும் இத்தலத்தில் தனிச் சிறப்பாகும். உதாரணமாக, எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீராமர் சீதையைத் தேடி இலங்கைக்குச் செல்ல பாலம் கட்டியபோது ஒரு அணில் ஏகாதசி அன்று விடிய விடிய கண் விழித்து பாலம் கட்ட சேவை செய்தது அல்லவா ? அதை கௌரவிப்பதற்காக ஸ்ரீராம பிரான் அந்த அணிலின் முதுகில் அன்புடன் தடவிக் கொடுக்க அங்கு குருவின் அனுகிரகத்தைக் குறிக்கும் மூன்று கோடுகள் திருநாமங்களாக அணிலில் முதுகில் தோன்றியதை நீங்கள் அறிவீர்கள். தங்கச்சிமடத்திற்குச் சென்றால் இத்தகைய அணிலின் வம்சாவளிகளை நீங்கள் இன்றும் கண்டு வழிபடலாம் என்பதையே நீங்கள் இங்கு காணும் அப்பு குட்டி அணில் சித்திரம் தெரிவிக்கிறது. அது மட்டும் அல்ல இங்கு நீங்கள் காணும் கருட பகவான்களின் காட்சியும் இந்தக் கூற்றை உறுதி செய்வதாக அமைகின்றது. எத்தனையோ தெய்வீக உருவங்கள் இருந்தாலும் காக்கையின் உருவத்தைத்தானே சித்தர்களின் நாயகனான ஸ்ரீகாகபுஜண்டர் ஏற்றுக் கொண்டார். அது போலவே ஸ்ரீராமபிரானின் ஸ்பரிச தீட்சையைப் பெற்ற அப்பு குட்டி அணிலும், ஜடாயு கருடனும் முக்திப் பேற்றை அடைந்தாலும் அவர்கள் தங்கள் சுய உருவங்களிலேயே தங்கி பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றனர் என்பதும் தங்கச்சிமடத்தில் நீங்கள் காணும் அணில், கருட மூர்த்திகளின் வழிபாட்டின் பெருமையாகும்.

சகஸ்ரலிங்கம்
உத்தரகோசமங்கை

ஏகாந்தம் என்றால் தனித்திருத்தல் என்று பொருள், அதாவது தன்னில் தானாய் இருத்தலே ஏகாந்தம் ஆகும். ஸ்ரீராமபிரான் சீதை லட்சுமணன், படை வீரர்கள், குடிமக்கள், வானரப் படைகள் என எத்தனையோ லட்சம் மக்களுடன் இருந்தாலும் ராமபிரானின் மனமோ இறைவனுடன் ஒன்றிய நிலையிலேயே இருந்தது. இந்த அமைதியை, அனுகிரகத்தை நீங்களும் உணர உதவுவதே தங்கச்சி மட ஏகாந்த வழிபாடாகும். நடைமுறையில் இந்த அமைதியை இன்றும் நீங்கள் ஸ்ரீஅமிர்தா அன்னையின் சந்நிதானத்தில் உணரலாம், கண்டு இரசிக்கலாம். ‘வ’ வரிசையில் வரும் தீர்த்தங்களால் தங்கச்சிமட ஸ்படிக மூர்த்திக்கு அபிஷேகம் நிறைவேற்றுவதன் பின்னணியை விளக்க முடியுமா என்று ஒரு அன்பர் வினவியுள்ளார். இது சித்தர்களால் மட்டுமே உணரக் கூடிய அட்சர இரகசியம் என்றாலும் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் நிலையில் இதை விளக்குவதாக இருந்தால் ராம பாணம் பிரபஞ்சத்தில் சாதிக்காதது, சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை எனலாம். அதற்கு காரணம் ராம பாணம் புறப்பட்ட இடத்தின் மகிமையும் ஒன்றாகும். அதாவது ஒரு வில்லை எப்படி வளைத்தாலும் அதன் நடுவான நாணில், ஆரத்தில் அம்பைப் பொறுத்தும்போதுதான் அது தன் இலக்கைச் சரியாக அடையும். அம்பு முறையாகப் பொறுத்தப்பட்டபோது அந்த நாணை இழுத்தால் அது ‘V’ என்ற எழுத்தாகத்தானே அமையும். V for Victory ! Perfect V brings perfect victory ! குறிக்கோள் தெளிவாக இருந்தால்தான் நாம் நிறைவேற்றும் காரியங்கள் அனைத்தும் தெளிவாக அமையும். ஆனால், இந்த மனத் தெளிவை குருவருள் இன்றி நிச்சயமாக அடைய முடியாது என்பதால்தான் மூன்று “வெற்றி” தீர்த்தங்களால் படிக லிங்க மூர்த்தியை அபிஷேகிக்கும்படி சித்தர்கள் வழிகாட்டுகிறார்கள்.

உத்தரகோசமங்கை

வக்ரபேத வரகுண சித்தி
பொதுவாக நவகிரகங்கள் மேஷ ராசியிலிருந்து மீன ராசிக்கு இயற்கையாக சஞ்சாரம் கொள்வதற்குப் பதிலாக மீன ராசியிலிருந்து மேஷ ராசியை நோக்கி சஞ்சாரம் கொள்வது உண்டு. இயற்கைக்கு முரணான இந்த நவகிரகங்களின் சஞ்சராரத்தை வக்ரகதி என்று அழைப்பதுண்டு. வக்ரகதியின் போது மேற்கொள்ளும் வழிபாடுகள் மனிதர்களின் வக்ரமான எண்ணங்களை மட்டுமல்லாமல் பல வக்ர செயல்களை மாற்றி அமைத்து அருள்பாலிப்பது உண்டு. கடந்த காலத்தில் நிகழ்ந்த பல வக்ரமான எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் அவை தவறாக இருந்தால் அவற்றிற்கு பிராயசித்தம் அளிப்பதும் உண்டு. வக்ர கதி என்றாலே தீமை பயப்பது என்று கிடையாது. சுப கிரகங்கள் வக்ர கதியை அடையும்போது மிகவும் பலமடைகின்றன. உதாரணமாக, தனுர் ராசியில் ஆட்சி பெற்று இருக்கும் குரு பகவான் அடுத்த ராசியான மகர ராசிக்கு செல்லும்போது மகர ராசி குரு பகவானின் நீச வீடாக அமைவதால் அவர் நீச பலன்களை அருள்கின்றார். அதே சமயம் அவர் மீண்டும் தனுசு ராசிக்கு வக்ர கதியாக செல்லும்போது தன் ஆட்சி வீடான தனுசு ராசியில் பல நற்பலன்களை வர்ஷிக்கிறார். குரு பகவான் இயற்கையாகவே சுப கிரகமாக இருப்பதால் அவர் வர்ஷிக்கும் வக்ர சஞ்சார பலன்கள் மிகவும் பலமுடையதாகவே இருக்கும். ஆனால், இத்தகைய நுணுக்கமான ஜோதிட விஷயங்களை சாதாரண பக்தர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா ? இதை உணர்ந்த சித்தப் பெருமக்கள் உத்தரகோசமங்கையில் அருளும் சகஸ்ரலிங்க சிவலிங்க மூர்த்தியை பல்லாண்டு காலம் வழிபட்டு அதன் பலாபலன்களை இவ்வாறு வக்ரபேத வரகுண சித்தியாக பக்தர்களுக்கு அருள்கின்றனர். பொதுவாக, வக்ரபேத வரகுண சித்தி பலன்கள் ரோகிணி திரிதினமாக அமையும் 30.11.2020 அன்று பெருகும் என்றாலும் இதன் பலாபலன்கள் ஜோதிட ரீதியாக கற்பனைக்கு எட்டாத அளவிற்கு பல்கிப் பெருகுவதே சிறப்பாகும். 30.11.2020 அன்று கோசார ரீதியாக பஞ்ச அங்கங்களும் சிறப்பு பலன்களைப் பெறுகின்றன. தமிழ் தேதி, ஆங்கில தேதி, நாள், கிழமை, திதி என ஏற்கனவே விவரித்த இவற்றுடன் சிவ யோகமும், பாலவ கரணமும், முழு நாள் 60 நாழிகையும் பூரித்து நிற்கும் அமிர்த யோகமும் இணைவது என்பது பூலோக மக்களின் அருந்தவப் பேறு அல்லவா ?

தங்கச்சிமடத் தரணிபாடம்

வக்ரயோக வரகுண சித்தி அல்லது வக்ரபேத வரகுண சித்தி என்ற அனுகிரகத்தில் 5, 4, 3 என்ற இறங்கு வரிசையாக (வக்ர கதியில்) அட்சரங்கள் அமைந்திருப்பதே சித்தர்களின் விரல் அசைந்தால் அதில் ஆயிரம் காரணம் இருக்கும் என்பதைப் புலப்படுத்தும் அட்சர இரகசியமாகும். வில்லூண்டி தீர்த்தம், வில் உண்டி தீர்த்தம், உண்டிவில் தீர்த்தக் கடற்கரையில் மட்டுமே பயனாகும் உண்டி வில் என்பது பழங்காலத்தில் பறவைகளை வேட்டையாடப் பயன்படுத்திய ஒரு ஆயுதமாகும். தற்காலத்தில் இந்த உண்டி வில்லை ஏதோ ஒரு பிறவியில் செய்த தவறுகளுக்குப் பிராயசித்தமாக நாமோ, நம் பரம்பரையைச் சேர்ந்தவர்களோ நன்னிலை அடைய பயன்படுத்த உதவுவதே தங்கச்சிமட வழிபாடாகும். வில்லூண்டி தீர்த்தக் கடற்கரையில் இத்தகைய உண்டிவில்களில் இனிப்புச் சீடைகளை வைத்து கடலில் மீன்களுக்குத் தீனியாக எறிவதால் பல பிறவிகளில் இயற்றிய தவறுகளுக்கு இவை பிராயசித்தமாக அமையும். குறிக்கோள் இல்லாமல் பல பிறவிகளைக் கழித்த தோஷங்களை நீக்கவும் இந்த உண்டி வில் யக்ஞம் ஒரு பிராயசித்தமாக சித்தர்களால் அளிக்கப்படுகிறது. ரோகிணி திரிதினத்தில் இயற்றப்படும் இந்த யக்ஞத்திற்கு அளிப்பரிய தெய்வீக சக்திகள் குவியுமே. அணுகுண்டையும் அன்பு உருண்டையாக, அன்ன உண்டையாக மாற்ற வல்லவர்களே சித்தர்கள். கவண்கல் சுழற்றுதல் என்பதான இந்தத் திருப்பணியில் பஞ்சாட்சரம் ஜபித்த கூழாங்கற்களைப் பயன்படுத்தி நன்னிலை அடைந்த பல உத்தமர்களும் உண்டு. உதாரணம், வம்சோதர நந்தி மூர்த்தி, தஞ்சை பெரிய கோயில். தங்கச்சிமட வில்லூண்டி தீர்த்தக் கடற்கரையில் எந்நாளும் நிறைவேற்றக் கூடிய ஓர் இனிய வழிபாட்டைப் பற்றி சித்தர்கள் எடுத்துரைக்கிறார்கள். தம்பதிகளுக்கிடையே மனக் கசப்பு, சந்ததிக் குறைபாடுகள், சந்ததியின்மை போன்ற குறைபாடுகள் நிகழ்வதுண்டு. இவற்றைக் களையும் முறைகளை கண்ட களிமண் உண்டை என்னும் சாஸ்திரத்தில் குறித்து வைத்துள்ளனர். அது தற்போது முற்றிலும் மறைந்து விட்டது என்றே கூறலாம். முற்காலத்தில் களிமண் தூய்மையானதாக இருந்ததால் இந்த களிமண் உருண்டையில் படியும் தம்பதிகளின் உள்ளங்கை ரேகைகளை வைத்தே அவர்களுக்கிடையே நிலவும் உறவுப் பிரச்னைகளை அறிந்து அவற்றைக் களையும் வழிமுறைகளை எடுத்துரைத்து வந்தனர் நம் பெரியோர்கள்.

ஸ்ரீஅகத்தியபிரான்
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

மனைவியின் இடது உள்ளங்கை, கணவனின் வலது உள்ளங்கை இடையே ஒரு களிமண் உருண்டையை வைத்து நன்றாக உருட்டி அதை நிழலில் காய வைத்து அந்த உருண்டைக்கு நமசிவாய, ராம ராம போன்ற இறை நாமங்களை ஓதி எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு உருண்டைக்கும் குறைந்தது 108 நாமங்களை ஓத வேண்டும். இந்த உருண்டைகளை வில்லூண்டி தீர்த்தக் கரையில் உண்டிவில் கொண்டு தம்பதிகள் வீசி வந்தால் அவர்களிடையே ஒற்றுமை மலரும், குறைபாடுகள் மறையும். ஆடி வெள்ளி, புரட்டாசி சனிக்கிழமை என்பதாக கார்த்திகை சோமவாரம் என்னும் திங்கட் கிழமையும் சிறப்புப் பெற்று விளங்குகிறது அல்லவா ? திங்கட் கிழமைக்கு உரித்தான சந்திர பகவான் கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசியில் சஞ்சாரம் கொண்டால் அது நீச சக்திகளுடன் துலங்கும் அல்லவா ? அவ்வாறிருக்க கார்த்திகை சோமவாரம் எப்படி சிறப்பைப் பெற முடியும் என்று உங்கள் மனம் எண்ணுவது சரியே. ஆனால், கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ஸ்திர ராசியில் சஞ்சரிக்கும் மாதமாக இருப்பதால் அம்மாதப் பௌர்ணமியின்போது ரிஷப ராசியில் சஞ்சாரம் கொள்ளும் சந்திர பகவான் உச்ச பலனைப் பெறுவார் என்பதால்தான் கார்த்திகை சோமவாரம் இத்தகைய சிறப்பைப் பெறுகிறது. உச்ச சந்திர மூர்த்தியே இத்தகைய சிறப்பான பலாபலன்களை வர்ஷிக்க வல்லவர் என்றால் அந்த ரோகிணி நட்சத்திர சஞ்சாரமும் திரிதினமாக அமைய, யோகமும் அமிர்த சக்திகள் முழுநாளும் நிரவும் அமிர்த யோக நாளாகவும் கூடி வரும் என்றால் அக்காலத்தில் பெருகும் அமிர்த யோக சக்திகளை எப்படி வார்த்தைகளால் வர்ணிக்க இயலும் ? இதனுடன் அமிர்தவாவி தீர்த்த அபிஷேகமும் இணைவது என்றால் அப்பப்பா என்னே சுவை, இந்த அமிர்தச் சுவை ?! எப்போதும் அடியார்களுடன் தொடர்ந்து பேசி அளவளாவி அவர்கள் துன்பங்களுக்கு மாமருந்து அளிக்கும் நம் சற்குரு ஒரு முறை எதுவுமே பேசாமல் பல நிமிடங்கள் அமைதியாக இருந்து விட்டு பின்னர் பேசத் தொடங்கினார். “இன்றைய கம்ப்யூட்டரின் செயல்பாட்டை நினைத்தால் எதிர்காலத்தில் அதனால் விளையும் கேடுகளை நினைத்து மனம் அஞ்சுகிறது. உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இங்கு கம்ப்யூட்டரைப் பார்க்கும் ஒருவன் மேல் சக்தி வாய்ந்த கிரணங்களைப் பாய்ச்சி அவன் உயிரை மாய்க்கும் அளவுக்கு விஞ்ஞானம் வளரும் என்று சித்த கிரந்தங்கள் அறிவிக்கின்றன. நம்மை இன்று சற்குருவாக ஏற்றுள்ள சீடர்களின் சந்ததிகளைக் காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளதால் இன்னும் 50 வருடங்கள் கழித்து நடக்க இருக்கும் அந்த துர்மரண சம்பவத்திலிருந்து நம் மக்களை எப்படிக் காப்பது என்றுதான் அடியேன் இவ்வளவு நேரமும் சிந்தித்துக் கொண்டு இருந்தேன் ...”, என்று தன் அமைதிக்கான காரணத்தை விளக்கினார்கள் நம் சற்குரு. இதுவே ரோகிணி நட்சத்திரத்தில் தோன்றிய நம் சற்குருவின் மாண்பு. நாம் நாளைக்குச் செல்லும் ஒரு ஊருக்குப் போக இன்றே துணி மணிகளை தயார் செய்து வைத்துக் கொள்வதைப் போல 50 வருடங்களுக்குப் பின் நடைபெறக் கூடிய சம்பவங்களுக்கு இன்றே தீர்வு அளிக்கவல்லவரே நம் சற்குரு.

சகஸ்ரலிங்கம்
ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்

சுட்டாலும் சங்கு வெண்மை தரும் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ...
இது ஆன்றோர் மொழி. இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்ததே நம் சற்குருவின் வாழ்க்கை. ஒரு முறை அவர் சந்தடியில்லாத ஒரு தெரு வழியாக செல்ல வேண்டி வந்தது. திருஅண்ணாமலை அன்னதானத்திற்காக பிரமுகர் ஒருவரைப் பார்க்கச் சென்றதால் அவர் வெகுநேரம் நம் சற்குருவைக் காக்க வைத்து விட்டதால் இவ்வாறு எதிர்பாராத வகையில் நள்ளிரவைக் கடந்தும் பயணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு ஒரு ரௌடி ஐந்தாறு அடியாட்களுடன் குட்டிச் சுவர் ஒன்றின் மேல் அமர்ந்திருந்தான். அவன் அமர்ந்திருந்த தோரணையே அவனுடைய ரௌடித்தனத்தை பறை சாற்றியது. நம் சற்குரு அருகில் சென்றவுடன் அவரைப் பார்த்து, “டேய் நில்லுடா ... இங்கே வாடா ...,” என்று அதட்டவே நம் சற்குருவோ கையைக் கட்டிக் கொண்டு அவன் அருகில் சென்று, “அண்ணே, கூப்பிட்டீங்களா ...”, என்ற கேட்கவே இதைப் பார்த்த அந்த ரௌடியின் கையாள் ஒருவன், “அண்ணே, இவன் ரொம்ப பயந்துட்டான் போல இருக்கே ...,” என்று கூறவே அந்த ரௌடிக்கு ஒரே சந்தோஷம். மேலும் தோரணையாக அமர்ந்து கொண்டு தன் மீசையை முறுக்கி விட்டவாறே நம் சற்குருவைப் பார்த்து, “ஏண்டா, பணம் எவ்வளவு வச்சிருக்கே ?” என்று கேட்கவே நம் சற்குரு தன் பாக்கெட்டைக் காட்டி, “இது காலி பாக்கெட் அண்ணே, இதில் ஒன்றுமில்லை...”, என்று காட்டினார். அவனும் சற்று நேரம் நம் சற்குருவை முறைத்துப் பார்த்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தபோது நம் சற்குருவின் கழுத்தில் அவருடைய துணைவியார் திருமண நாள் பரிசாகக் கொடுத்த ஒரு டாக்கெட் தங்கச் செயின் கண்ணில் பட்டு விட்டது. “டேய், செயின் எல்லாம் போட்டு இருக்கியே .. அந்த செயினை கழட்டிக் கொடு ...,” என்ற கேட்கவே நம் சற்குருவும் மறுபேச்சு பேசாமல் அமைதியாக செயினைக் கழற்றி தன் இருகைகளாலும் அந்த ரௌடியிடம் அளித்தார். செயினைப் பெற்ற ரௌடி அதன் டாக்கெட்டைப் பிரித்து பார்த்தவுடன், அதில் நம் சற்குரு, அவர் மனைவியின் போட்டோக்கள் இரு பக்கமும் இருப்பதைக் கண்ட அவன் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டான். “அண்ணே (கவனிக்கவும், இப்போது ரௌடியே நம் சற்குருவை எப்படி அழைக்கிறான் ?!) இது உன் பெண்டாட்டி போல் தெரிகிறது. இப்படித்தான் நானும் ஒருத்திய உயிருக்குயிரா காதலித்தேன், அவளோ எனக்கு டாடா காட்டி விட்டு வேறு ஒரு பையனை கல்யாணம் கட்டிக் கிட்டு போய்ட்டா ... நீயாவது நல்ல இரு ...”, என்று மனதார வாழ்த்தவே நம் சற்குரு அந்த ரௌடியின் கைகளிலிருந்து அந்த செயினை லாவமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு அதை தன் கழுத்தில் அணிந்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இதுவே மேன்மக்களுக்கும் மேன்மையான நம் சற்குருவின் உயர்ந்த செய்கை. எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் தங்கள் நிலையிலிருந்து தவறுவது இல்லை. இத்தகைய உயர்ந்த நிலையை அளிக்கவல்லதே ரோகிணி திரிதினத்தில் தங்கச்சி மடத்தில் நாம் மேற்கொள்ளும் படிக லிங்க வழிபாடு.

ஸ்ரீசட்டைநாதர் பந்தனைநல்லூர்

மகாபாரதத்தில் ஒரு லட்சம் சுலோகங்கள் உள்ளன. இவற்றின் சாரமாகத் திகழ்வது பகவான் கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை. பகவத் கீதையின் சாரம் என்றால் அது, “பரித்ராணாய ...”, என்று ஆரம்பிக்கும் சுலோகம். இதன் சாரமே ஸ்ரீகிருஷ்ணர். இந்த சாரமாகப் பூவுலகில் தோற்றம் கொண்டவரே நம் சற்குரு என்றால் அது மிகையாகாது. கடவுளை உணர்ந்து விட்டால் மற்ற எதுவுமே தேவையில்லை, மானத்தைக் காக்கும் ஆடை கூட. சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பிஏ பட்டம் பெற்றவர் நம் சற்குரு. அந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது காலையில் கல்லூரி ஆரம்பிக்கும் வேளையில் கல்லூரி எதிரே உள்ள சாலையில் நிர்வாணமாகச் செல்ல முடியுமா என்று சகமாணவர்கள் அவரிடம் ஒரு சவால் விடுத்தனர். மெரீனா கடற்கரையின் எதிரே அமைந்த கல்லூரி சாலையில் காலை ஒன்பது மணி சுமாருக்கு எத்தனை ஆயிரம் மக்கள் செல்வர் என்பதை நீங்கள் எண்ணிப் பாருங்கள். இந்தச் சவாலை நம் சற்குரு ஏற்று கல்லூரிச் சாலையின் ஒரு ஓரத்திலிருந்து மறு ஓரத்திற்கு உடம்பில் துளியும் ஆடையின்றி நிர்வாணமாக, அவதூது கோலத்தில் நடைபயின்று கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அன்று அங்கு சாலையில் சென்று கொண்டிருந்த அனைவருக்கும் ஒரு உத்தம சித்தர் பிரானின் அவதூது கோல தரிசனப் பலன்களை அருளினார் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைப் பாடம். “சவால் விடுத்த மாணவனிடம் 100 ரூபாய் பெற்று அதை அன்னதானமாக அளித்து விட்டேன். இனிமேல் அடியேனிடம் எந்தவிதமான சவாலையும் வைத்துக் கொள்ளாதே ... என்றும் அடியேன் அவர்களிடம் எச்சரிக்கை விடுத்தேன்,” என்றார் நம் சற்குரு. இவ்வாறு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கீதை போதித்தார் நம் சற்குரு என்றல்லாது சற்றே ஊன்றிக் கவனித்தால் தன்னை அண்டிய அனைவருக்கும் கீதா உபதேசம் திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்ய சொரூப தரிசனத்தில் நல்கினார் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் சித்த சுவையாகும். அது சரி, திருஅண்ணாமலையைப் பற்றியே அறியாத பாமரர்களுக்கும், எழுத்தறிவில்லாத முரடர்களுக்கும் நம் சற்குரு என்ன அருளினார் ? நள்ளிரவில் குட்டிச் சுவரில் அமர்ந்திருந்த ஒரு திருடனுக்கும் கீதை உபதேசம் நல்கியது நம் சற்குருவின் பெருமை அன்றோ ?! கீதையை வெறுமனே படித்தால் மட்டும் போதாது, அதைப் படித்து முழுமையாக அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது சுவைக்கும், மகான்களின் உபதேசம் இனிக்கும் !

Victory for Venkataraman !

வில்லூண்டி தீர்த்தத்தில் உண்டிவில் கொண்டு இனிப்புச் சீடைகளையோ அல்லது களிமண் உருண்டைகளையோ கடலில் சேர்த்த பின் அந்த உண்டிவில்களை என்ன செய்வது ? V for Victory ! V for Venkataraman ! Victory for Venkataraman ! ஸ்ரீராமஜெயம் என்பதன் கருத்துதான் உண்டிவில். இதை தம்பதிகள் இல்லத்தில் வைத்திருந்து அதற்கு வெள்ளிக் கிழமைகளில் சந்தனம் குங்கும் இட்டு பூஜை செய்து வருவதால் அது ஸ்ரீராம பிரானின் பிரசாதமாக அமைந்து குடும்ப ஒற்றுமையை வளர்த்து எடுத்த காரியங்களில் வெற்றியைத் தேடித் தரும். மணமான பெண்கள் தினமும் தன் கணவருக்குப் பாத பூஜை செய்து வர வேண்டும் என்பது நம் பெரியோர்கள் காட்டிய அற்புத பூஜை முறை. கௌரவம், படிப்பு, அந்தஸ்து போன்ற போலி காரணங்களால் பல குடும்பங்களில் இந்த பூஜை முறை கைவிடப்பட்டு விட்டது. ஆனால் குடும்பம் ஒற்றுமையுடன் அன்யோன்ய பந்தத்துடன் திகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் இன்னும் பல குடும்பங்களில் நிலவுகிறதே. அத்தகையோர் இந்த உண்டிவில்லை கணவனின் பாதமாக வைத்து, அல்லது கணவன் வெளியூரில் இருக்கும் காரணங்களால் இந்த உண்டி வில்லுக்கு பூஜைகள் நிறைவேற்றுவதால் குடும்பத்தில் ஒற்றுமை மலரும். கணவரும் மனைவியும் இந்த உண்டிவில்லுக்கு பூஜை செய்து அதாவது அபிராமி அந்தாதி, அங்காள பரமேஸ்வரி அந்தாதி போன்ற தோத்திரங்களை ஓதி தங்கசிமடக் கடற்கரையில் மணல் தோண்டி புதைத்து விடுவதும் ஏற்புடையதே. முற்காலத்தில் இவ்வாறு உண்டிவில்லை புதைத்த இடத்தின் மேல் மணல் கோபுரம் கட்டி அதைச் சுற்றி வந்து தம்பதிகள் வழிபடுவார்கள். தற்போதும் இந்த வழிபாட்டு முறையைத் தொடர்வதால் தவறு கிடையாது. இத்தகைய கோபுரங்களின் மேல் காற்று, மழை, கடல் அலை வீசி கோபுரம் கரைந்தால் அது நல்ல சகுனமே.

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வாவின் பாலபருவ குருகுலவாச அனுபூதிகள்)
சிறுவன் திருவான்மியூர்ச் சிவன் கோயிலில் நிகழ்ந்த அந்த இனிய சம்பவத்தை அவ்வப்போது நினைவு கூர்வான். அங்கே அந்தச் சித்த புருஷர் என்ன சொன்னார்? “இந்த ஒரு வருஷத்தில குறைஞ்சது ரெண்டாயிரம் பேருக்கு இந்த காசை வைச்சு சேவை செய்யணும்! ஒரு வருஷத்துக்குள்ளாற இந்தக் காசும் சுத்தமா தேஞ்சி போய்டணும் புரியுதா?”
“ஆமாம்! இந்த காசு சுத்தமா தேஞ்சு போச்சுனா அப்புறம் எப்படி வைத்தியம் செய்யறதாம்?” சிறுவன் கேட்க நினைத்தானே தவிர கேட்க முடியவில்லை. இரண்டு சித்த மகா புருஷர்கள் முன்னிலையில் எதைக் கேட்க முடியும், எதை விடமுடியும்? எதையும் நினைக்கக் கூட முடியவில்லையே, எல்லாவற்றையும் காந்தம் போல் இழுத்து விடுகிறார்களே!”

ஸ்ரீதன்வந்திரி மாத்தூர்

பிறகு சிறுவனிடம் ஏதேதோ கூறிவிட்டுக் கோவணாண்டிப் பெரியவரிடம் சங்கேத பாஷையில் எதையோ பேசிவிட்டு அங்கிருக்கும் நூற்றிஎட்டு சிவலிங்களுள் ஒன்றில் ஜோதியாய் மறைந்த அந்தச் சித்த புருஷர் யார்?
மிகவும் சக்தி வாய்ந்த இந்த நூற்றியெட்டு லிங்கங்களை முறையாகத் தரிசித்து விஷேமான பலன்களைப் பலர் பெற்று ஆனந்தம் அடைந்துள்ளனர். இந்த லிங்கங்களின் மகிமைகளை அறிய வேண்டுமேனில் சற்குரு பின்னால் சுற்றுங்கள். சுற்றினால் கிட்டுவது தானே சுந்தரானந்தம்!
அந்தச் செப்புக் காசை வைத்துக்கொண்டு பெரியவரின் குருவருளால் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோருக்கு இலவச வைத்திய உதவியைச் செய்து வந்தான் அச்சிறுவன். அவ்வவ்போது பெரியவரும் திருவான்மியூர்ச் சித்தர் தரிசன நிகழ்ச்சியை நினைவூட்டி  அவர் மகிமைகளை விவரித்துச் சிறுவனை நன்கு ஊக்குவிப்பார்.
“சாதாரண குருட்டுக் கிழவந்தானேன்னு நினைச்சே .... பெரிய படா சித்தருடா அவரு! அவர் கண்ணைப் பார்த்தியே! பளபளன்னு கோடி சூரியன்கள் ஒண்ணாச் சேர்ந்து உதிக்கிற மாதிரி, அப்படி ஒரு பிரகாசம்! அவரா குருடர்! லட்சக்கணக்கான குருடர்களுக்குப் பார்வையைத் தரவல்ல அற்புதச் சித்த புருஷர்!”
“அவர் தரிசனமே மகாவிசேஷம், போன வருஷம் முழுக்க நீ தெனமும் குருடர்களுக்குச் சேவை செஞ்சதுனால உனக்கு இந்த பாக்கியம் கிடைச்சது.”

கொடுத்த கடன்கள் மீளாவிடில் திருச்சி திருநெடுங்களத்தில் உள்ள இடர்களையும்நாதர் திருக்கோயிலில் இயன்ற தானங்களைச் செய்து தீவிரமாக பிரார்த்தித்து வந்தால் கடன்தொகை மீளும். அவ்வாறு மீள்கின்ற தொகையில் கணிசமான பங்கினைக் கொண்டு இக்கோவிலில் திருப்பணிகள், தானதர்மங்களைச் செய்ய வேண்டும். இந்த எளிய பிரார்த்தனைகள் பலருடைய வாழ்வில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

“இந்த மாதிரி குருடு, ஊமை, நொண்டி, குஷ்ட ரோகிங்க, இவங்களுக்கெல்லாம் மனபூர்வமா, உண்மையான உள்ளத்தோட சேவையைச் செஞ்சா இந்த சித்தரே நேரே வந்து தரிசனம் தருவார். அன்னிக்கு உனக்கு அடிச்சது யோகம்!”
செப்புக் காசை வைத்துக் கொண்டு 1958-59 வாக்கில் சென்னையில் புறநகரில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் தெய்வீகப் பிரச்சாரம் செய்து, இலவச வைத்திய சேவை அளிப்பதற்காக அச்சிறுவன் அலைந்த போது முதலில் அவனை ஒருவரும் நம்பவில்லை! என்னென்ன கடுமையான சோதனைகள்!
நெற்றியில் இந்தக் காதிலிருந்து அந்தக் காது வரை நீண்டு வளைந்திருந்த ஒரு பெரிய சந்தனக் கீற்று! நடுவில் சகஸ்ராரத்தைத் தீண்ட எத்தனிப்பது போல் ஒரு திலக வடிவ குங்குமம்! கழுத்தில் பெரிய ருத்திராட்சம்! இத்தகைய தெய்வீக களையுடன் சிறுவன் பிரகாசித்தாலும், “ராயபுரம் கல் மண்டபம் அங்காளி கோயில் கோவணாண்டிச் சாமியாரின் சிஷ்யப்பிள்ளை’ என்பதாலும் சிறுவனிடம் ஏழை மக்கள் அலாதியான அன்பு கொண்டு அவன்மேல் நம்பிக்கையும் கொண்டு மூட்டு வலி, முதுகு வலி, என அவனைத்தேடி வரலாயினர்.
பத்துப் பதினோரு மாதங்களிலேயே அந்தக் காசில் ஒரு சிறு வட்டமே மிஞ்சியது அரைக்காசு தேய்ந்த உடனேயே அது சிறுவனின் சிறுவிரல்களுக்குக் கூட பிடிபடவில்லை! அதனை ஒரு சந்தனக் கட்டையில் பதித்து சந்தனத்துடன் அறைத்தவாரே தன் இறைப் பணியைத் தொடர்ந்தான் அச்சிறுவன். ஆயிரமாயிரம் “நமசிவாய” பஞ்சாட்சர நாமங்கள், அங்காளியின் திருநாமம் இவற்றுடன் தன்வந்திரி லோக நாணயத்தின் தெய்வீக சக்தியும் இணைந்து புனிதமாய்ப் பொலிந்த சந்தனம் எத்துணை ஆயிரம் ஏழை மக்களைச் சென்றடைந்தது! யாரறிவார் இறைவனின் இத்திருவிளையாடலை!

ஸ்ரீஅகத்திய பிரான் மாத்தூர்

அன்று அங்காளி கோயிலில் நல்ல கூட்டம், ஏதோ பொங்கல் படையல்!
சிறுவன் தன் வைத்தியப் பணியை இறையருளால் செய்து கொண்டிருந்தான்.
“வா நைனா வா! நம்ப புள்ளையாண்டானை மறுபடியும் ஆசிர்வாதம் பண்ண வந்துட்டியே” ... பெரியவர் குரல் கொடுத்ததும் சிறுவன் சுதாகரித்துக் கொண்டான்.
எதிரில்............  அதே கிழவர்.. அதே மின்னலடிக்கும் கண்கள்... அழுக்குத் துணியால் முகத்தை மூடியவாறு! “போறும்டா கண்ணா! அந்தத் தேய்ந்து போன காசை கொடுத்திடு! அது போக வேண்டிய இடத்துக்குப் போய்டும் ..........” கிழவர் கடகடவென்று சிரித்தார்.
சிறுவன் பெரியவரை பார்த்தான்!... அவர் அனுமதி வேண்டுமே.!
“ஆமாண்டா! கொடுத்தவர்தானே கேட்கிறாரு... அவர் என்ன தானமா கொடுத்தாரு? அது அதுக்குரித்தான கர்மம் முடிஞ்சதுன்னா அதற்குரித்தானவங்க அதை வாங்கிண்டு போய்டுவாங்க...... நம்ப எதுக்கும் உரிமை கொண்டாடக் கூடாது. உலகத்துல எதுக்குமே நமக்கு பாக்யதை கிடையாது. எல்லாம் இறைவனின் சொத்து!”

ஸ்ரீஅனுவாவி மூர்த்தி தங்கச்சிமடம்

பெரியவர் விளக்கமளித்திட...
சிறுவன் அமைதியுடன் சந்தனக்கட்டையில் ஒட்டியிருந்த தேய்ந்து போன சிறு வட்டக் காசினைத் தயக்கத்துடன் கிழவரிடம் நீட்டினான்..
“இது சிவன் சொத்து கண்ணு!” என்றவாறே அதனைப் பத்திரமாகத்தன் கந்தல் துணியில் வைத்து முடிந்துகொண்டு கிழவர் புறப்பட.....
“என்ன நைனா ஆசிர்வாதம் பண்ணாம போறியே! நம்ப பையன் இந்த பத்து மாசமா சும்மா சொல்லக் கூடாது அந்த காசை தேயோ தேய்னு தேச்சி ஒரு குட்டி வைத்தியனாகவே மாறிட்டான். எதிர்காலத்துல ஆயிரமாயிரம் பேருக்கு இலவச வைத்திய உதவி செய்றதுக்கு அனுகிரகம் பண்ணக் கூடாதா?”
“ஆங் .....அப்படியா....” என்றவாறே அந்தக் கிழவர் தன் மடியில் இருந்து எதையோ  நெடு நேரம் தேடி எடுக்க.........
...........அகப்பட்டதோ ஒரு சிறு திருநீற்றுச் சுருக்குப் பை! அதுவும் ஏகப்பட்ட கந்தல், ஓட்டைகளுடன்! அதிலிருந்து ஒரு சிறு துளியை சிறுவனின் நெற்றியில் கீறி, வாயிலும் போட்டு ஆசிர்வதித்து மறைந்தார்.
சிறுவனின் கண்களில் நீர்த் திவலைகள் நிரம்பின... எதையோ இழந்ததாலா...... ஏதையோ பெற்றதாலா.................! யாரறிவார் சிவ ரகசியத்தை?
கோவணாண்டிப் பெரியவரோ அதனைக் கண்டும் காணாதவராய் கிராமத்தானிடம் எதையோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் சொல்லிக் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
அனைத்து அற்புதங்களையும் புரிந்து, எதையும் அறிந்தும் அறியாதவராய், தெரிந்தும் தெரியாதவராய் எப்படித்தான் இவர்களால் இயங்க முடிகிறது!
பின்பு ஒரு முறை கோவணாண்டிப் பெரியவர் இருமலால் அவஸ்தைப் பட்ட பொழுது,
“வாத்தியாரே ஏதாச்சும் இருமல் மருந்து கொண்டு வரட்டுமா?” என்று சிறுவன் கேட்க,
“ஏண்டா நீதான் துளியூண்டு திரு நீறு கொடுத்தாப் போதுமே, இருமல் பறந்துடுமே” அர்த்தம் பொதிந்த சிரிப்பைப் பெரியவர் உதிர்த்தார்!
“ஏன் வாத்யாரே? எனக்கு நெஜமாவே அந்தச் சக்தி வந்துடுச்சா?” சிறுவன் அப்பாவித்தனமாய்க் கேட்டான்.
“அதுதாண்டா சிதம்பர ரகசியம்! எது இருக்கோ, அது இல்லாத மாதிரி இருக்கும்! புரியுதா? அதுதான் சிதம்பர ரகசியத்தின் விளக்கம்!”
உங்களுக்குப் புரிகின்றதா...!

போதாயன அமாவாசை

அமாவாசைத் திதி இரண்டு நாட்களுக்குச் சேர்ந்து வந்து அதில் முன்மாலைப் பொழுதும் அமாவாசைத் திதியில் சேருமாயின் முதல்நாள் போதாயன அமாவாசை என்றும், மறுநாள் அமாவாசை என்றும் அழைக்கப்படுகின்றது.
வழக்கத்தில் போதாயன அமாவாசையை ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களே அனுசரிக்கின்றனர். ஆனால் போதாயன அமாவாசை, அமாவாசை ஆகிய இரண்டு நாட்களிலும் அனைவரும் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளித்தே ஆகவேண்டும்.
போதாயன அமாவாசை அன்று அரிசியைப் பரப்பி அதன்மேல் தர்ப்பை, கூர்ச்சம் வைத்துத் தர்ப்பணம் அளிக்க வேண்டும், மறுநாள் அமாவாசையன்று நீரினால் ஒரு வட்டம் வரைந்து (நீர் வட்டம்) அதன்மேல் தர்ப்பையைப் பரப்பித் தர்ப்பணங்களைச் செய்ய வேண்டும்.
போதாயன அமாவாசை பிறந்த முறை மகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

சித்த பிரமை, மனக் கோளாறுகள் போன்றவற்றிற்கு நிவாரணமளிக்கும் மூர்த்திகளே கோயம்பேடு சிவத்தல ருத்ர கபால துவார பாலகர்கள். பிரதோஷத்தன்று இம்மூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகள், எண்ணெய்க் காப்பிட்டு ஏழைகளுக்கு புதிய கால்சட்டை, பாண்ட் போன்ற ஆடைகளைத் தானமாக அளித்திட மனோ வியாதிகளுக்கு நல்ல குணமேற்படும்.

பாரதப் போரைத் தொடங்குவதற்கான பூஜைக்குரிய நாளைக் கேட்டு கௌரவர்கள் ஜோதிடத்தில் சிறந்த சகாதேவனை நாடினர். பகைவருக்கும் அருள்புரியும் மாண்பு கொண்ட சகாதேவன் அடுத்துவரும் அமாவாசைத் திதியை கௌரவர்களுக்கு நிர்ணயித்துக் கொடுத்தான்.
“அந்நாளில் கௌரவர்கள் பூஜை செய்தால் அவர்கள் வென்று விடுவார்களே!” – கண்ணன் தீவிர ஆலோசனை செய்தான்.
அமாவாசைக்கு முதல் நாள் ............ ஸ்ரீகிருஷ்ணன் தன் திருவிளையாடலைத் தொடங்கினான். சதுர்த்தசி திதியிலேயே மிக அவசரமாகத் தர்ப்பணத்தை அளிக்கத் தொடங்கினான். பித்ரு தேவர்கள் திகைத்தனர். தர்ப்பண சக்திகளைத் தாங்கிச் செல்லும் ஸ்வதா தேவியும் வியப்படைந்தாள்.
“என்ன இது, அமாவாசைத் திதியே இன்னும் பிறக்கவில்லையே, அதற்குள் ஸ்ரீகிருஷ்ணன் தர்ப்பணத்தை அளிக்கத் துவங்கிவிட்டாரே!”
ஸ்ரீசூரிய பகவான், ஸ்ரீசந்திர பகவான் இருவருமே அதிர்ச்சியுற்று, பூலோகத்திற்கு வந்து ஸ்ரீகிருஷணரைத் தொழுது, “மகாபிரபோ! நாளைதானே அமாவாசைத் திதி” என்று பகவானுக்கே காலத்தை நினைவூட்டினர்.
எதையும் கண்டு கொள்ளாது ஸ்ரீகிருஷ்ணன் தன் தர்ப்பண நியதிகளை நிறைவேற்றி முடித்தான்.
கௌரவர்கள் “ஸ்ரீ கிருஷ்ணனே தர்ப்பணம் செய்கின்றான் என்றால் இன்றைக்குத்தானே அமாவாசை! நாமோ நாளைதானே அமாவாசை என்று நினைத்திருக்கிறோம்’ என்று எண்ணி அவசர அவசரமாக அன்றே யுத்தத்திற்கான ஆரம்பப் பூஜைகளைச் செய்ய துவங்கிவிட்டனர்.
இதைத் தானே ஸ்ரீகிருஷ்ணன் எதிர்பார்த்து இருந்தான்! சகாதேவன் நிர்ணயித்த நாளில், நேரத்தில் கௌரவர்கள் பூஜை செய்யக்கூடாது என்பது தானே அவனது எண்ணம்! அதற்காகத்தானே இந்தத் திருவிளையாடலை நிகழ்த்தினான்!
அவன் எதிர்பார்த்த்து நடந்துவிட்ட்து. “இனி பாண்டவர்களைச் சகாதேவன் குறித்த சரியான நேரத்தில் (மறு நாள்)  பூஜையை நிகழ்த்தச் செய்ய வேண்டும்!” – கிருஷ்ணன் தீவிரமான யோசனையிலாழ்ந்தான்.
எதிரில் நிற்கும் சூரிய சந்திரர்களைக் பார்த்துப் புன்னகை செய்தான் ஸ்ரீகிருஷ்ணன்.
“அமாவாசை என்றால்  நீங்களிருவரும் சேர்ந்திருப்பது தானே! இதோ என் முன்னர் சூர்ய, சந்திர சங்கமம் நிகழ்ந்திருக்கின்றதே! இந்நேரம் அமாவாசை அன்றோ! சரிதானே?”
ஸ்ரீகிருஷ்ணன் மந்தகாசமாய்ச் சிரித்திட்டான். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே தர்ப்பணம் இட்டார் எனக் கேள்வியுற்றுப் பலரும் “பரமாத்மா எவ்வழி, நாமும் அவ்வழி” என்ற தீவிர பக்தியில் அவரைப் பின்பற்றிப் பித்ரு தர்ப்பண பூஜையை நிகழ்த்தினர்.

குரு உதயம் ? தங்கச்சிமடம்

அவ்வாறு ஸ்ரீகிருஷ்ணனுடன் சதுர்த்தசி திதியிலேயே தர்ப்பணமிட்டோர்களின் வழித்தோன்றல்களே இன்றைக்கும் போதாயன அமாவாசை கொண்டாடுகின்றனர்.
இதைப் பற்றிச் சித்த புருஷர்கள் அருள்வதென்ன?
முதல் நாள் மாலை அமாவாசைத் திதியாக அமைந்து, மறுநாளும் அது தொடர்கின்றபோது, முதல் நாள் போதாயன அமாவாசையாகவும், மறுநாள் அமாவாசையாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது. அனைவருமே இவ்விரண்டு நாட்களிலும் தர்ப்பண பூஜைகளைச் செய்தல் வேண்டும். போதாயன அமாவாசையன்று அரிசியைப் பரப்பி அதன் மேல் தர்ப்பை, கூர்ச்சத்தை வைத்துத் தர்ப்பணமிடுதல் வேண்டும். மறுநாள் நீர்வட்டம் இட்டு அதன்மேல் தர்ப்பை, கூர்ச்சத்தை வைத்துத் தர்ப்பணமிடுதல் வேண்டும். இதனால் பித்ருக்கள் இரட்டிப்பாக ஆனந்தமடைந்து ஆசியளிக்கின்றனர்.
போதாயன அமாவாசையன்று இடும் தர்ப்பணங்கள் ஸ்வதாதேவி தாங்கிச் சென்று ஸ்ரீகிருஷ்ணன் உறையும் கிருஷ்ண லோகத்தில் சமர்ப்பிக்கின்றாள். அங்கிருந்து பித்ரு தேவர்கள் இதன் ஸாரத்தைப் பெறுகின்றனர். எனவே இதிலிருந்து போதாயன அமாவாசை அனைவருக்கும் உரித்தானது எனத் தெளிவாகின்றது அல்லவா?
நீர் வட்ட மண்டலம் – பித்ருக்கள் வசிக்கும் ஒளி மண்டலமான (வர்த்துல மண்டலம்) வட்ட வடிவில் நீர் நிறைந்து இருக்கும். எனவேதான் விநாயக சதுர்த்தி அன்று பிள்ளையாரின் நாபியில் வட்டக் காசு வைக்கப்படுகின்றது. இதில் பித்ருக்கள் உறைந்து விநாயக சதுர்த்தியன்று நம்மை ஆசீர்வதிக்கின்றனர். போதாயன அமாவாசையன்று அரிசியைப் பரப்பி அதில் தர்ப்பைப் கூர்ச்சம் வைத்து தர்ப்பணம் இட்டால், மறுநாள் அவர்கள் செய்கின்ற நீர் வட்ட மண்டல தர்ப்பைப் பூஜையின் சக்தி பல்கிப் பெருகுகின்றது. பரிபூரணமான முழு ச்ரார்த்தத்தின் பலன்கள் இவ்வர்த்துல மண்டல (நீர்வட்ட) தர்ப்பண பூஜை அளிக்கின்றது.
எனவே போதாயன அமாவாசை, அடுத்த நாள் வரும் அமாவாசை இரண்டு நாட்களிலுமே அனைவரும் பித்ரு தர்ப்பண பூஜைகளைச் செய்ய வேண்டும்.

ரத சப்தமி

இதைப் பற்றிய விளக்கங்களை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் ‘ரதசப்தமி’ என்னும் நூலில் காணலாம்.
தீட்சையின், குடுமியின் விசேஷ சக்தி சூர்ய பகவானின் சக்தி மிகுந்த ஒளிக் கிரணங்களைத் தாங்கும் சக்தி சாதாரண மனிதனுக்கில்லை, ஆனால் அதைப் பெறுகின்ற ஆன்மீக வழிமுறைகளைச் சித்த புருஷர்கள் அளிக்கின்றனர். தீட்சை (குடுமி) வைத்திருப்பதன் தாத்பர்யம் என்னவெனில் முன் நெற்றியில் விழும் சூர்ய ஒளிக் கிரணங்களை அரைவட்ட சிகை அமைப்பு பக்குவப்படுத்தி மூளையினுள் செலுத்துகின்றது. தீட்சை (குடுமி)யை இறுக்கி முடியும்போது அதன் அழுத்தத்தால் கபால விரிவு ஏற்பட்டு மூளை சீதளநிலையைப் பெறுகின்றது.
இதனால் மூளையின் கோடிக்கணக்கான செல்களில் பலவும் உத்வேகம் பெற்று ஞானம் பெறும் பக்குவத்தை அடைகின்றன. இதுவே குடுமி வைத்திருப்பதின் முக்கியத்துவமாகும். ஜாதி, மத பேதமின்றி அனைவரும் முன் சிகையை (குடுமி) வைத்துக் கொள்ளலாம்.
தற்காலத்தில் தீக்ஷை (குடுமி) வைப்பது அரிதாகி விட்டதால் குடுமிக்கு உண்டான ஆன்மீகச் சக்திகளை அளிக்கவல்ல எருக்கன் இலைகளைப் பயன்படுத்துகின்றோம். கபால வாயுவைச் சீர்செய்ய சூரியகிரணங்களின் தெய்வீகச் சக்திகளை வடிகட்டி மூளைக்குள் செலுத்துகின்ற சக்தியைப் பெற்றவையே எருக்கன் இலைகள்.
மிகப் புனிதமான உத்தராயணப் புண்யகாலத்தில் ஸ்ரீசூர்யன் உச்சநிலை பெற்று ஆசீர்வதிக்கின்றார். தை அமாவாசையன்று ஸ்ரீசூர்ய பகவான் தம் உத்தமச் சக்திகளுடன் ஸ்ரீசந்திர பகவானின் சீதள, ஆன்மீகச் சக்திகளையும் திரட்டி அவற்றுடன் தை அமாவாசையில் இருந்து ஏழாம் நாளில் அதாவது இரத சப்தமியன்று ஏழு ஸ்வரங்கள் கூடிய திருத்தேரில் பவனி வந்து தம் அவதார சக்திகளை யாங்கணும் பரப்புகின்றார்.
எனவே தான் வருடத்திற்கு ஒருமுறை அமையும் இந்நாளில் தலையில் எருக்கன் இலைகளை வைத்து நீராடும் வழக்கத்தைச் சித்த புருஷர்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஞானத்தைக் கூட்டும் ஞான ஸ்நானம் இது.
படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகளுக்கு இரத சப்தமியன்று தலையில் இலைகளை வைத்து நீராட்டிட கல்வியறிவு விருத்தியாகும்.
ரதசப்தமி ஸ்நான வரலாறு
தேவையான பொருட்கள் :

  1. சஷ்டியப்த பூர்த்தி , சதாபிஷேகம் நிறைவேறிய பழுத்த தம்பதிகளால் இறை நாம ஜெபத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட முழு அரிசிமணிகளால் ஆன நுனி முறியாத அட்சதைகள்
  2. பெரியோர்களால் இறை தியானத்திடன் பொறுக்கி எடுக்கப்பட்ட முழுப் புழுங்கலரிசி மணிகள், கார் அரிசி மணிகள், கைகுத்தல் அரிசி மணிகள்.
  3. ஸ்ரீத்ரிவிக்கரமப் பெருமாளின் நாமத்தை ஜபித்து எடுக்கப்பட்ட முக்கால் அரிசிமணிகள்,
  4. சிறிது வாசனைப் புஷ்பம், துளசி , வில்வம்
  5. மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளில் ஒன்று
  6. புதிய எருக்கன் இலைகள்

ரத சப்தமியன்று ஸ்ரீசூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனிவந்து அருள்பாலிக்கின்றார். ஏழு ஸ்வரங்களின் பிரதிபலிப்புக்களே இவை, வேத பீஜாக்ஷரங்களே ஏழு ஸ்வரங்களாக மலர்ந்து மலர்ந்து ஸ்ருஷ்டிக்கப்பட்ட பொருட்களை இரக்ஷிக்கின்றன. இவ்வாறாகவே தினமும் ஸ்ரீசூர்ய பகவான் ஜீவன்களின் கர்ம் பரிபாலனத்திற்கு ஆசி அளிக்கின்றார்.
ரதசப்தமியன்று இந்த ஒவ்வொரு குதிரையையும் பல மகரிஷிகள் பலவித அட்சதைகள், வாசனை புஷ்பம், துளசி, வில்வம், முக்கனி கொண்டு பூஜிக்கின்றனர்.

அதிகக் கடன்களினால் மனஅமைதியின்றி தவிப்போர் இலுப்பை எண்ணெயினால் பாடல் பெற்ற சிவத்தலங்களில் விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லைகள் குறையும்.

இதனையே மஹரிஷிகளைப் போல் சாதாரண மனிதர்களும் ரதசப்தமியைக் கொண்டாடும் எளிய பூஜையாகச் சித்த புருஷர்கள் கீழ்க்கண்டவாறு அருள்கின்றனர்.
அர்க்கதள சக்கரம் (எருக்க இலை வியூகம்)
“அர்க்கதள சக்கரம்” எனப்படும் இம்முறையில் ஸ்ரீசூர்யனின் ஏழு குதிரைக்கான ஏழு விதமான எருக்க இலை அமைப்புகள் வடிவமைக்கப் பெற்று ஒன்றன்மேல் ஒன்றாக ஏழு வடிவுகளும் அடுக்கப்பட்டு அதே நிலையில் சிரசில் வைத்து நீராடுதல் ஸ்ரீசூர்யபகவானின் ஒளிக் கிரணங்களின் பரிபூரண சக்தி கபாலம் மூலமாக மூளையைச் சென்றடைந்து அற்புத ஞானமும் அளப்பரிய பலன்களும் வந்தடையும்.
சூரியனைப் பார்க்கும் முறை
சூரிய ஒளியில் ULTRA VIOLET RAYS இருப்பதாகவும், இக்கதிர்களைப் பார்த்தால் அவை கண்களை பாதிக்கும் என அறிவியல் கூறுகின்றது.
ஆன்மீகத்தில் சூரிய யோக முறையில் வருணபாசம் என்னும் கைவிரல்களின் முத்திரை மூலமாகச் சூரியனைத் தரிசித்தால் கண்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாது. இவ்வருண பாச முத்திரையின் மூலமாக சூரியனைக் கண்டு வணங்கிடத் தீர்க்கமான பார்வை ஏற்படும். கண்பார்வை மங்குதல், காடராக்ட் மாலைக்கண், க்ளொகோமா போன்ற கண் வியாதிகள் ஏற்படாது.
வருணபாச முத்திரையில் சூரிய பகவான் (மோதிர விரல்) தன் புத்திரன் சனீஸ்வரனுடன் (நடுவிரல்) சேர்ந்து உள்ளங் கையிலிலுள்ள சூரிய, சந்திர மேடுகளின் வியாபகத்தின் ஊடே ஆயுள் ரேகை இருதய ரேகை வழியாக உட்புகுந்து கண்களுக்கு வலுவூட்டுகின்றன.  இந்த வருணபாச முத்திரையின் பின் பல ஆன்மீக இரகசியங்கள் பல உண்டு. இவற்றைச் சூரிய நமஸ்கார மந்திரங்கள், சூரியபூஜை முதலியவற்றுடன் தக்க சற்குரு மூலம் அறிதல் வேண்டும்.
எருக்கன் இலை அமைப்பு முறை

  1. வடக்கு நோக்கிய எருக்க இலை – அதன் மேல் 3 அட்சதைகள்
  2. வடக்கு நோக்கிய இலை – அதன் மேல் 4 அட்சதைகள்
  3. வடக்கு நோக்கிய இலை – அதன் மேல் 2 அட்சதைகள்
  4. கிழக்கு நோக்கிய 3 இலைகளின் மேல் மேற்கு நோக்கிய ஒரு இலையை வைத்து இவற்றின் மேல் -1 புழுங்கல் அரிசிமணி , 1 கார் அரிசி (சிவப்பு புழுங்கல்) , 1 பச்சரிசி மணி,
  5. வடக்கு நோக்கிய இலையின் மேல் – 3 முக்காலரிசி மணிகள்
  6. தெற்கு நோக்கிய எருக்கன் இலை மேல் – 3 கைக்குத்தல் அரிசி மணிகள்
  7. வடகிழக்கு நோக்கிய இலையின் மேல் சிறிது வாசனைப் புஷ்பம், துளசி அல்லது வில்வம் முக்கனிகளுள் ஒன்றின் சிறுதுண்டு ஆகியவற்றை வைக்க வேண்டும்.

இவையனைத்தையும் ஒன்றன் மேல் ஒன்றாக மேற்கண்ட வரிசையில் அடுக்காகச் சிரஸில் வைத்து சூரியோதயத்திற்குச் சற்று முன் நீராட வேண்டும். பின் உலர்ந்த ஆடை தரித்து சூரிய நமஸ்கார தோத்திரங்கள், கோளறு பதிகம், ஆதித்ய ஹ்ருதயம் அல்லது ‘ஸ்ரீ சூரியா போற்றி’, ‘பாஸ்கரா போற்றி’ போன்ற எளிய நாம ஜபத்துடன் சூரிய உதயத்தின் போது இயன்ற  நைவேத்யம், தானம் செய்து வணங்க வேண்டும்.

கணவனுக்கான பாத பூஜை

(ஒவ்வொரு குடும்பப் பெண்ணும் தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய நித்ய பாத பூஜையைப் பற்றி முந்தைய ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ் ஒன்றில் விளக்கியுள்ளோம்)
வினா : கணவனுக்கு ஆற்றவேண்டிய பாத பூஜையைப் பற்றித் தங்களுடைய விளக்கங்களைக் கண்டோம். ஆனால், உண்மையைச் சொல்வதானால் என்னுடைய கணவருக்குப் பாதபூஜை செய்ய என் மனம் பரிபூரணமாக உடன்படவில்லை! இந்நிலையில் அரைகுறை மனதுடன் பாதபூஜையைச் செய்யலாமா? அல்லது மனது முழுதும் ஒத்துழைக்கும் வரை சற்றுப் பொறுக்கலாமா? அரைகுறை மனதுடன் பாதபூஜை செய்தால் பலனுண்டா?
சற்குரு: இதற்குப் பல காரணங்கள் உண்டு. ‘பூஜைக்குரிய முழுத் தகுதியை கணவன் பெறவில்லையே’ என்ற எண்ணம் ஏற்படுவதுண்டு கணவனுடைய அந்தரங்கங்களை அறிகின்ற போதும் அவனுடைய கோபம், பலவீனம், பழக்க வழக்கங்கள், கடந்த கால வாழ்க்கை, தகாத சகவாசங்கள் போன்றவற்றைப் பொறுத்தும் இது ஏற்படக்கூடும்.
பொதுவாகப் பயம் கலந்த மரியாதை காரணமாகத்தான் மனைவியர் கணவன்மார்களை மதிக்கின்றனர். உண்மையான அன்பு நிலவும் போது பயமோ, விரக்தியோ ஏற்படாது.
எனவே இத்தகைய நிலை ஏற்பட்டால் கணவன் மனைவியரிடையே பரஸ்பர அன்பு ஏற்படவில்லை என்பதே பொருளாகும். எனவே அன்பைப் பெருக்கும் நடைமுறை வழிகளைத் தம்பதியர் மேற்கொள்ள வேண்டும். இருவரும் இணைந்து அநாதைக் குழந்தைகள் பராமரிப்பு மூலம் உதாரணமாக அவர்களுக்கு தலைவாரி விடுதல், தலைக்கு எண்ணெய் அளித்தல், சிறு குழந்தைகளுக்கு குளிப்பாட்டி விடுதல் போன்ற சேவைகளால் மிகுந்த அன்பைப் பெறலாம்.
கணவனும் பாத பூஜைக்கு ஏற்ற அளவில் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் வழிமுறைகளில் ஈடுபட வேண்டும். மனைவியிடம் தன் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் பரிமாறிக் கொள்வதால் மன அழுக்கு ஓரளவு நீங்கும். தினசரிக் கூட்டுப் பிரார்த்தனை, ஏழை தம்பதிகளுக்குரித்தான சேவைகளைச் செய்தல். பெரியோர்களுக்கு உதவிபுரிந்து அவர்தம் ஆசிகளைப் பெறுதல் இவற்றால் பரஸ்பர அன்பு பெருகும்.
ஒரு கல்லில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டு அதனை முருகன், துர்க்கை என தெய்வங்களாகப் பூஜிக்கும் ஒரு பெண்மணி தன் கண்வன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவன் பாத பூஜைக்கு ஏற்றவனே என்று ஒரு தீவிரமான வைராக்கிய மனதுடன் பாத பூஜை செய்து வந்தால் அவள் வாழ்வில் பல அற்புதங்கள் மலர்வதைக் கண்கூடாகக் காணலாம். குரு வார்த்தையின் மேல் கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையே அதற்கு அடிப்படைக் காரணம் ஆகும்.
ஸ்ரீஅனுசுயா தேவி தினமும் தன் கணவனுக்குச் செய்த பாத பூஜையின் தீர்த்தத்தைச் சேர்த்து வைத்து அதன் மகத்தான சக்தியால் பல கொடிய துன்பங்களை வென்று சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றாள் என்பது நாம் அறிந்ததே!
ஆரம்பத்தில் பாத பூஜை என்பது அரைகுறை மனதுடன் செய்வதாகவும், செயற்கைத்தனம் கூடியதாகவும் தோன்றும், எதையும் சோதித்துப் பார்த்தால் தானே அதன் பலாபலன்கள் புரியும்!

சற்குரு : மாங்கல்யத்தை ஏற்றுள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் அவள்தம் கணவனே கண்கண்ட தெய்வம். இதனைக் கணவண்மார்களும் நன்கு உணர்ந்து சிறந்து ஒழுக்கத்துடன், இறைபக்தியுடன் வாழ்ந்து மனைவியிடம் பரிபூரணமான அன்பை செலுத்த வேண்டும். இது சாத்யமானதா?

வாகன வசதி வேண்டுவோர் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஹோரை நேரத்தில் காலை (6 மணி முதல் 7 மணி வரை), மதியம் (1 மணி முதல் 2 மணி வரை), இரவு (8 மணி முதல் 9 மணி வரை), மறுநாள் விடியற் காலை (3 மணி முதல் 4 மணி வரை) செவ்வாய் பகவானுக்கு அர்ச்சனை செய்து, பருப்பு சாம்பார் சாதத்தை தானம் செய்திட முறையான வாகன வசதிகள் கிட்டும்.

கணவனுடைய சில பழக்கவழக்கங்கள், நடவடிக்கைகள் இவற்றால் மனைவிக்கு ஒரு வெறுப்பு, அலட்சியம், நம்பிக்கையின்மை ஏற்படுவது இயற்கையே! பாத பூஜை செய்கின்ற அளவிற்குப் புனிதமானவரா நம் கணவர் என்ற எண்ணம் கூடத் தோன்றிடும்.
ஒரு வேளை நம் பாதபூஜையினால் நாம் மிகவும் பணிந்து போவது போல் தோன்றினால் அவருடைய முரட்டுத்தனம் அதிகமாகி விடுமே என்றும் எண்ணிடலாம்.
கணவனுடைய பழைய வாழ்க்கை முறை குணம், இயல்புகளைப் பார்த்தால் பாத பூஜையே தேவைதானா என்று கூடத் தோன்றும்.
ஆனால் எதையும் தீர்க்க தரிசனமாக அறிந்த சித்த புருஷர்கள் கலியுகத்தில் பெண்களுக்கு இத்தகைய எண்ணங்கள் ஏற்படும் என்பதை அறியாமலா இருப்பர்? பின் ஏன் இந்த பாதபூஜையை வலியுறுத்துகின்றனர். சற்குருவின் வார்த்தைகளில் பரிபூரண நம்பிக்கை கொண்டோர் எதைப் பற்றியும் கவலைப்படாது தன் கணவனுக்கு நிச்சயமாக பாத பூஜையைச் செய்வர். இந்த அழுத்தமான நம்பிக்கையின் பலனாய் எத்தகைய கணவனும் மனம் திருந்தி மனிதருள் மாணிக்கமாய் நிச்சயமாக மலர்வான்!

ஆனால் சற்குருவின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை தான் அத்தகைய அற்புதங்களைப் புரியவல்லதாம்.

  1. தன் கணவனைப் பற்றிய எண்ணங்கள், அவனுடைய நடைமுறைக்கு ஒவ்வாத சில பழக்க வழக்கங்கள், குண நலன்கள் காரணமாக, மனைவியினால் பரிபூரண மனதுடன் பாத பூஜையை நிறைவேற்ற இயலவில்லை எனினும் கணவனுடைய புண்ய சக்தியில் பாதி மனைவிக்குச் சேரும் என்பது இறை நியதி. இதன் விளக்கங்களை ஸ்ரீஆயுர்தேவி என்னும் நூலில் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தெளிவாக அளித்துள்ளார். இந்நிலையில் கணவனுக்குச் செய்ய வேண்டிய பாத பூஜை மூலமாகத்தான் ஒரு மனைவி தன் புண்ய சக்தியின் ஒரு பங்கைத் தன் கணவனுக்குகாகத் தியாகம் புரிந்து அளிக்க முடியும்! அதன் பயனாகத்தான் கணவனுடைய இறைபக்தியை மெருகூட்டி வளர்த்து உத்தம புருஷனாக அவனை உருவாக்க முடியும்!
  2.  சிலர் அரைகுறை மனதுடனோ, பயபக்தியுடனோ பாத பூஜை செய்யக் கூடும்! ஒரு கல்லை ஸ்ரீமுருகனாகச் செதுக்கி அதை ஸ்ரீமுருகனாக அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட, குமரப் பெருமாள் அருள் மழை பொழிவதில்லையா? கல், கடவுளானது கனிந்த மனதினால் தானே! கல் மனம் குணம் பூண்ட கணவனுக்குப் பாத பூஜையே அபிஷேக ஆராதனைகள்! அரைகுறை உள்ளத்தோடு  செய்தாலும் பரவாயில்லை! நாளடைவில் பாத பூஜையில் ஒரு லயிப்பு ஏற்படும்.

மனம்  ஒப்பவில்லையென்றால் மானஸீகமாகப் பாத பூஜை செய்து பழகவேண்டும். இவ்வாறு செய்கையில் தன் மனோ நிலையின் பாகுபாடுகள் புரியும். இதையும் மனம் ஏற்காவிடில் கணவனுக்குப் பாத பூஜை செய்து நற்கதி பெற்ற ஸ்ரீஅனுசூயாதேவி, சத்யவான் சாவித்ரி, திருவள்ளுவரின் மனைவி வாசுகி, சப்த கன்னிகளின் புராணங்கள், ஸ்ரீலோபா மாதா அகஸ்தியர் திருவரலாறு ஆகியவற்றைத் தினந்தோறும் பாராயணம் செய்தல் வேண்டும். கணவனும் நிதமும் அபிராமி அந்தாதி, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் போன்ற ஸ்ரீசக்தியம்ச வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒவ்வொரு மனைவியும், தன் கணவனுக்குப் பரிபூரணமான உள்ளத்துடன் பூஜை செய்கின்ற அளவிற்குத் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தீவிர வைராக்யத்துடன் செயல்பட்டால் அவள் தன் கணவன் உத்தமப் புருஷனாக விளங்குவான்.
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”

அழற்பிழம்பு திருஅண்ணாமலை

திருஅண்ணாமலை என்று சொல்லாது அழற்பிழம்பு திருஅண்ணாமலை என்றே சொல்ல வேண்டும் என்று சித்த புருஷர்கள் விதிக்கின்றனர். அழற்பிழம்பு மலை என்றால் என்ன? பஞ்சபூத லிங்கங்களாய்ச் சிவபெருமான் ஐந்து திருத்தவங்களில் அருள்பாலிக்கின்றார் . ப்ருத்வி (நிலம்), அப்பு (நீர்), வாயு (காற்று), அக்னி, ஆகாசம் ஆகிய பஞ்சபூதங்களுள் அக்னியே ஐந்திற்கும் முதன்மையானதாகும். அக்னித் தலமான திருஅண்ணாமலையில் தான் இறைவன் பிரபஞ்சத்தின் முதல் அக்னியை உருவாக்கி இன்றும் உட்ஜோதிப் பிழம்பாய், மலையாய்க் காட்சியளிக்கின்றான்.
இவ்வாறாகச் சதாசிவப் பரப்பிரும்மமான சிவபெருமான் தன்னை அறிய வைக்கும் பொருட்டு ஜோதியாய் உருவகித்து. அழற்பிழம்புத் திருஅண்ணாமலையாகி நின்று அருள்பாலிக்கின்றான்.
கோடிக்கணக்கான தேவதைகள் உறையும் புனிதப் பசுவின் அளப்பரிய தெய்வீகத் தன்மையை உணர முடிகின்றதா? அது வெறும் பால் தரும் பசுவாகத்தான் தோன்றுகின்றது. இது பசுவின் குற்றமன்று. பார்ப்பவருடைய உள்ளம் பசுவின் உருவை தேவதைகளின் உறைவிடமாகக் காணுமளவு இன்னும் கனியவில்லை என்பதே அதன் பொருள். ஒருவன் தான் எத்தகைய தெய்வீக நிலையில் இருக்கின்றான் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ளவே பசு, வில்வம், துளசி போன்ற புனிதமான ஜீவன்கள் படைக்கப்பட்டுள்ளன. பசுவின் தேகத்தில் உறையும் கோடிக் கணக்கான தேவதைகளை, வில்வம், துளசி, ருத்ராட்சம், ஸ்படிகம், சாளக்கிராமம் போன்றவற்றின் தெய்வீகச் சக்தியை ஒரு சிறிதேனும் ஒருவனால் உணர இயலாவிடில் ‘நாம் தெய்வீகத்தில் இன்னும் முன்னேற வேண்டும்’ என்று எண்ணி அவன் நற்பணிகளைத் தொடர வேண்டும்.

வீதிகளில் நாய்கள் புணரும் காட்சியைக் கண்டால் அன்று காமக்குற்றங்கள் மனக்கிலேசங்கள் ஏற்படும் என்பதை உணரவேண்டும். உடனடியாக பழைய துணியையோ அல்லது கைக்குட்டையையோ வஸ்திர தானமாக அளித்தல் வேண்டும். இது பலரும் அறியாத ஆன்மீக இரகசியமாகும். நாய்ப் பிறவி கூட, வரும் தீங்கினை மனிதர்களுக்கு எடுத்துரைத்து நற்பணி ஆற்றுகிறது என்றால் மனிதன் எந்த அளவிற்குப் பிறருக்கு சேவை செய்யும் மனப்பான்மையைப் பெறவேண்டும் என்பதை உணரவேண்டும் அல்லவா!

என்றைக்குப் பசுவின் புனித தேகம் தெய்வீகமாய்க் காட்சியளிக்கின்றதோ அன்று முதல் திருஅண்ணாமலையும் அழற்பிழம்பு மலையாய் நமக்குக் காட்சி அளிக்கும். அன்றே வில்வமரத்தில் ஆதி சிவனைக் காணலாம். துளசியில் திருமகள் தோன்றுவாள்.
இந்த அழற்பிழம்பே முதன் முதலில் தோன்றிய அக்னியாகும். இதிலிருந்து தான் ஏனைய சூரிய, சந்திர பிரகாசங்கள், தீப ஒளிகள், நட்சத்திர ஜோதிகள், கனல் போன்ற அனைத்து வகையான (விளக்கொளி , நெருப்பு) அக்னிகளும் தோன்றின. மின்விளக்கு கூட மின்சாரத்தால் ஏற்படுவது போலத் தோன்றினாலும் அம்மின்சாரமும் அழற்பிழம்பின் அம்சமான மின்னல் எனப்படும் ஒளியாம் ஆகாச வர்ஷ ஜோதியின் ஒருவகையாகும்.
அழற் பிழம்பின் தோற்றம்
திருஅண்ணாமலையே அக்னிப் பிழம்பாய் ஒளிர்வதை நம் கண்களால் காணமுடியவில்லையாதலின் சித்த புருஷர்களும், மஹரிஷிகளும் இறைவனை வேண்டி “சாதாரண ஜீவனும் காண்கின்ற ரூபத்தில் தீ காட்சியளிக்க வேண்டும். சர்வேஸ்வரா” , என்று வேண்டிப் பலகோடி யுகங்கள் கடுந்தவம் மேற்கொண்டனர்.
கலியுக மக்களின் நல்வ்வாழ்விற்கான அவர்களுடைய கடுந் தவத்தை மெச்சிய இறைவன், கார்த்திகைத் தீபமாகக் காட்சியளிக்கக் கருணை புரிந்தான். எனவே வருடந்தோறும் திருஅண்ணாமலைக் கார்த்திகைத் தீபமானது எண்ணெய்த் திரி கொண்டு மனிதர்களே ஏற்றுவது போல் தோன்றினாலும் உண்மையில் இறைவனே சயஞ் ஜோதியாகத் தோன்றித் தன்னையே உணர்த்துகின்றான்.

பாம்பைக் கண்டால் “ஸ்ரீஅஸ்தீகா அபயம்” என்று வேண்டிட எந்த நாகமும் வழிவிட்டு ஒதுங்கும். இந்த அற்புதத் தாரக மந்திரம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சுவாமிகள் நம் குருமங்கள கந்தர்வாவிற்கு அருளிய அற்புத மந்திரமாகும். ஏனெனில் குருமங்கள கந்தர்வா சித்தர்களின் பாரம்பரியத்தில் ஒளிரும் ஸ்ரீஅஸ்தீக சித்தர் விண்ணுலக நாகலோகங்கட்கு அதிபதியாவார். தட்சனை வதம் செய்ய ஜனமேயஜன மஹாராஜா நிகழ்த்திய வேள்வித் தீயில் மாண்ட பலகோடி நாகங்கட்கு ஜீவகாருண்யம் அளித்தவரே ஸ்ரீஅஸ்தீக சித்தர் ஆவார். இதற்கு நன்றிக் கடனாக பிரபஞ்சத்தின் அனைத்து நாகங்களும் “ஸ்ரீ அஸ்தீகா அபயம்” என்று ஸ்ரீஅஸ்தீக சித்தரை தியானிப்போரைத் தீண்டாது. ஆனால் அவ்வாறு ஒதுங்கி மறைகின்ற பாம்பினை எக்காரணம் கொண்டும் துன்புறுத்துதல் ஆகாது. ஸ்ரீஅஸ்தீகா அபயம் என்ற சித்த புருஷர்கள் அருளிய தாரக மந்திரம் பல்லாயிரக் கணக்கானோரைக் காப்பாற்றியுள்ளது. “பாம்பினால் மரணம்” என்று விதியிருப்பின் அத்தகையோருக்கு அந்த சமயத்தில் இம்மந்திரம் நினைவிற்கு வராது.

தீபத்தின் பல  தோற்றங்கள்
தீபத்தன்று சித்தர்கள், மஹரிஷிகள், ஞானிகள், யோகிகளோடு தேவர்கள், மனிதர்கள், தாவரங்கள் , விலங்கினங்கள், பறவைகள் – ஒவ்வொரு வகையினருக்கும் அண்ணாமலை ஜோதி ஒவ்வொரு விதமாகத் தோற்றமளிக்கும். திருஅண்ணாமலையில் எழுகின்ற இந்த விந்தை ஒரு அற்புதமான ஆன்மீக இரகசியமாகும்.
சூரிய பகவான் இன்றைக்கும் திருஅண்ணாமலையைக் குறுக்கே கடக்காது. அதனைச் சுற்றிச் செல்கின்றார். நம் கண்களுக்குச் சாதாரண மலையாகத் தோன்றினாலும் நட்சத்திரங்களோ, சூரியன் உள்ளிட்ட கிரகங்களோ எதுவுமே கடந்து செல்ல இயலாத அளவிற்கு வானை விஞ்சிய உயரத்தில், திருஅண்ணாமலை விண்ணுயர்ந்து நிற்பதாகச் சித்த புருஷர்கள் அருளியுள்ளனர். கிரஹங்களுக்கு ஒரு விதத்தில், நட்சத்திரங்களுக்கு வேறு வடிவில், கோளங்களுக்குப் பிறிதொரு ரூபத்தில் இவ்வாறாக அழற் பிழம்பாம் திருஅண்ணாமலை எத்தனையோ தோற்றங்களில் அருள்புரிகின்றது.
எனவே உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனும், இறைவனிடமிருந்து எழுந்த பஞ்ச பூதங்களின் வெவ்வேறு விகிதாச்சார ரூபங்களே ஆகும். பஞ்சபூதத் தத்துவங்களால் ஆன மனிதன், வள்ளலார் சுவாமிகளைப் போல் பஞ்ச சக்திகளையும் பிரிக்கின்ற ஆன்மீகச் சக்தியைப் பெறுவானாகில் அவனே மகான், ஞானி, யோகி.....!
பஞ்சபூதங்களில் முதலில் தோன்றியது அக்னியே, சிவபெருமான், பிரபஞ்சங்களில் அக்னி மூலமாக அழற்பிழம்பாய் திருஅண்ணாமலைத் தலத்தில் தோன்றினார். இதன்பிறகே காஞ்சிபுரத்தில்  ஸ்ரீஏகாம்பரேஸ்வரரின் லிங்கரூபம்  தோன்றியது. ஏனைய நான்கு லிங்க மூர்த்திகளும், லிங்க சொரூபத்தில் அமைந்திருக்க இங்கோ சதாசிவன் அழற்பிழம்பாய் ஜ்வாலிக்கின்றார்.
ஒருயுகத்தில் அனைத்து ஜீவன்களும் சிவபெருமானை வேண்டி “ஏனைய நான்கு பஞ்சபூதங்களையும் லிங்க ரூபத்தில் கண்டு ஆனந்திக்கும் போது பஞ்சபூதங்களில் முதன்மையான அக்னித் தலமான திருஅண்ணாமலையில் அழற்பிழம்பாய், ஜோதி ரூபமாய்த் தரிசனம் செய்ய எங்களால் இயலவில்லை. அதற்குரிய தவம், ஞானம், யோகம், சேவைகளைப் புரிய வேண்டுமென இறை நியதி அமைந்துள்ளது. இது மிகவும் கடினம்! எனவே தாங்கள் சிலாரூபத்தில் காட்சி தர வேண்டுகிறோம்.” என்று வேண்டி நின்றார்.
“யாம் கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்களில் ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு ரூபத்தில் திருஅண்ணாமலையில் சிலாரூப மலையாகக் காட்சி அளிப்பேன்” , எனச் சிவபெருமான் அருளினார். அவருடைய அருளானையின்படி அழற்பிழம்பு ஜோதி மலை சிலாரூபத்தில் காட்சியளிக்கிறது. பூவுலகிலேயே மிகப் பெரிய சிவலிங்கம் அண்ணாமலையே, கலியுக மக்கள் மாயையில் ஆழ்ந்து இந்த அரிய ஆன்மீக இரகசியத்தை உணராது அவரைத் தொழாது பல துன்பங்களை அடைகின்றனர். இதற்காக ஸ்ரீஅகத்திய மஹரிஷி, சிவபெருமானை நோக்கித் தவமிருந்தார். எத்தகைய தவம்?
ஸ்ரீஅகஸ்தியரின் கிரிவல இறைப்பணி
பல யுகங்கள் தொடர்ந்து நாள்தோறும் சிவபஞ்சாட்சர நாமங்களை ஜபித்தவாறே திருஅண்ணாமலையை கிரிவல வந்தார்! எவரும் புரிந்திடா மாதவம்! திருக்கைலாயத்தில் சர்வ நேரமும் மகேசுவரருடன் உறையும் பாக்கியத்தைப் பெற்ற சித்த புருஷர்களின் நாயகராம் ஸ்ரீஅகத்திய மஹரிஷி பிரபஞ்சத்திற்கு எடுத்துக் காட்டாய் அமையும் வண்ணம், (தன்னுடைய கிரிவலம் உலக ஜீவன்களுக்குரித்தான மகத்தான பணி என்றாலும் கூட) தாம் இறையருளால், பார்வதி பரமேசுவரருடன் கைலாயத்தில் எப்போதும் உறையும் திருவருள் பெற்றிருந்தாலும் நல்வரம் பெற்றுத்தரும் மஹரிஷிக்குரித்தான தவ முறைகளையே மேற்கொண்டார்.
ஸ்ரீஅகத்தியர் அருளிய அண்ணாமலைத் தரிசன முறைகள் இலட்சக்கணக்கான தரிசனங்கள், அவற்றின் பலன்கள் ஆகியவற்றைத் தொகுத்துக் கலியுக மக்களுக்கென சித்தர்கள் அருளியுள்ளனர். சற்குருவை நாடி முறையாக கிரிவலம் மேற்கொண்டு, கிரிவலத்தில் குறிப்பிட்ட சில தரிசனங்களைக் காணும் பாக்கியம் பெற்றால் சந்ததியின்மை, கடுமையான திருமண தோஷங்கள், கான்சர், மாரடைப்பு, எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்கள், பலவகை வாழ்க்கைத் துன்பங்கள் போன்றவற்றிற்கு அற்புதமான முறையில் நிவாரணம கிட்டும்.
ஸ்ரீஅகத்தியரின் மாதவத்தால் மனமுவந்த சிவபெருமான். ஒவொரு வருடமும் கார்த்திகைத் தீபத்தன்று யாம் அழற்பிழம்புத் தீபமாய் எம்முடைய ஆதிமூலத்தோற்றத்தில் தரிசனம் அளிப்போம். இத்தகைய தரிசனம் பூலோகத்தில் மட்டுமின்றி கோடிக்கணக்கான விண்ணுலக லோகங்களில் வாழும் கோடி கோடியான ஜீவன்களுக்கும் உரித்தானவையாகும்” என்று அருளினார். இவ்வாறு நாம், ஒவ்வொரு ஆண்டும் பெறுகின்ற கார்த்திகைத் தீப தரிசனமே அழற்பிழம்பு தீப தரிசனமாகும்.

தூங்கும் முறைகள்

ஆண், பெண் இருபாலரும் மேற்கொள்ள வேண்டிய முறையான யோக சயன நிலைகளை தம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகள் அருளியதை நமக்கு எடுத்துரைத்து நமக்கு நல்வழி காட்டி அருள்பவர் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்.

  1. படுக்கும் போது சரியான சயன நிலையை மேற்கொண்டு பெற்றோர், குலதெய்வம், இஷ்டதெய்வம், சற்குருநாதர் ஆகியோரை நினைத்து வழிபட்டுக் குறித்த சில இரவு நேர வழிபாடுகளை மேற்கொண்டால் சுகமான நித்திரை. நல்ல கனவு அல்லது கனவற்ற நிலை, தெளிந்த மனம் போன்றவற்றை நற்பலன்களாகப் பெறலாம்.
  2. பெற்றோர்கள், இஷ்டதெய்வம், குல தெய்வம், குருநாதர்களை மானசீகமாக வலம் வந்து வணங்குதல்
  3. திருஅண்ணாமலையை மானசீகமாக கிரிவலம் வருதல், இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் ஒரு வருடத்திற்குள்ளேயே திருஅண்ணாமலையின் முக்கியமான தீர்த்தங்கள், லிங்க மூர்த்திகள், தீர்க்க தரிசனங்கள் ஆகியவை மனதில் நிறைந்து விடும்.
  4. இறைப்பணியாக மக்கள் சேவையில் ஈடுப்பட்டிருப்போர், சத்சங்க அடியார்கள் போன்றோருக்கு ஏதேனும் நோய், பிரச்சனைகள், துன்பங்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யுமாறு இறைவனைப் பிராத்தித்தல்.
  5. அன்றைய தினத்தில் இறைப்பணிகளை நினைவு கூர்தல் .

போன்ற பிரார்த்தனை முறைகளுடன் உறங்குதல் வேண்டும். இன்னும் பல உண்டு.  நன் முறையில் உறக்கம் அமைய மேற்கண்ட வழிபாட்டு முறைகள் உதவுவதுடன் உறக்க நிலையில் பலவித கர்மங்களைக் கழிப்பதற்கும் இவை பெருமளவில் உதவிபுரியும்.

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam