அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

புத்தாண்டு அருளுரை

நம் குருமங்கள கந்தர்வா திருஅண்ணாமலை ஜோதி அலங்காரப் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அளிக்கின்ற புத்தாண்டு 1996 அருளுரை :
1. இவ்வாண்டிலேனும் நல்ல ஆன்மீக வழிகாட்டியை (spiritual guide) அடையப் பார்.
2. ஆன்மீக வழிகாட்டியை அடையப் பெற்றவர்கள் அவர்தம் அற்நெறிமுறைகளைப் பரிபூர்ணமாக அனுஷ்டித்துக் கடைபிடிக்க வேண்டும். பெறற்கரிய இறைப் பிரசாதமான ஆன்மீக வழி காட்டியை எக்காரணம் கொண்டும் இழந்து விடக்கூடாது. எத்தகைய துன்பங்கள், இடையூறுகள், மனத்துயர்கள் ஏற்படினும் நம்பிக்கையைக் கைவிடாது மனந்தளராது  அவர் காட்டிய நற்பணிகளைச் செவ்வனே செய்தல் வேண்டும். இறையடியார்கள் கடுமையான சோதனைகளுக்கு ஆட்படும் அண்டு இது. எனினும் சோதனைகளை இறைவனின் திருவிளையாடல்களாக இயல்பாக ஏற்றுச் செயல்படுவோர் ஆன்மீகத்தில் ஸ்புடம் போட்ட பொன்னாய்ப் பிரகாசிப்பர்.
3. வாதநோய் உள்ளவர்களுக்கு இவ்வாண்டு வேண்டிய உதவிகளை நிறையச் செய்திடல் வேண்டும்.
4. எவருக்கும் பெரிய தொகையைக் கடனாக அளிக்காதீர்கள். சிறுகடன்களிலும் மிகுந்த கவனம், பொறுமை, தேவை.
5. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளிடம் மிகுந்த பாசத்துடனிருக்க வேண்டும்.
6. காமத்தால் தவறுகள் செய்ய வாய்ப்புண்டு, மன உறுதி தேவை.
7. எவருக்கும் ஜாமீன் பொறுப்பு (guarantee) ஏற்க வேண்டாம்.
8. சம்பாதிக்கும் பெண் பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்கவும்.
9. சிவப்பு நிற ஆடை அணிந்தோரிடம் கவனம் தேவை.
10. எக்காரணம் கொண்டும் கோபம் காரணமாக உணவு உண்ணாமலிருத்தல் கூடாது.
11. புதிய பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை.
12. மாதம் ஒரு முறையேனும் மௌனமாக இருக்கவும். இதனால் பல நாட்களின் பிரச்சனைகள் தாமாகவே எளிதில் தீரும்.

துச்சாதனன்

துச்சாதனனின் வரலாறு புகட்டும் பாடம்
துரியோதனனின் அவையில், துச்சாதனனிடமிருந்து தன்னைக் காப்பதற்காக, ஸ்ரீகிருஷ்ணனை வேண்டி திரௌபதி பெற்ற பெருமளவு வஸ்திரத்தை எவராலும் தீண்ட இயலவில்லை. காரணம் அது அக்னியென தகித்ததுவேயாம். பத்தினித் தெய்வமாம் திரௌபதியின் திருமேனியைத் தீண்டிய , ஸ்ரீகிருஷ்ணனின் அருள் தாங்கிய புனிதமான வஸ்திரமல்லவா! அக்னிப் ப்ரவாகமாய் பூமியில் கிடந்தது!
ஸ்ரீகவேர மஹரிஷி, இறையருளால், இவ்வஸ்திரத்தை, சிறுபுலியூரின் புனித மண்ணிற்கு அர்ப்பணம் செய்த திருவரலாற்றை முன்னரே கண்டோம். துரியோதனனின் துர் எண்ணங்களின்படி அதர்ம காரியத்தைச் செய்யத் துணிந்த துச்சாதனனை மட்டும் அவ்வஸ்திரம் ஒன்றும் செய்யவில்லையே, ஏன்? இதற்குச் சித்த புருஷர்கள் தக்க விளக்கங்களை அளிக்கின்றனர்.
.... இதோ பலதீபதரணன் என்ற மானுடன் ஸ்ரீதுர்கையை வலம் வருகின்றான். பல தவறுகளைச் செய்தவன், செய்தும் வருபவன். ஆனால் துர்கை வழிபாட்டில் நாட்டமுள்ளவன். பல ஆண்டுகளாக ஒரு நாள் கூடவிடாது ஸ்ரீதுர்கையைப் பூஜித்து வந்தான். இப்படித்தானே மனித குலத்தில் பெரும்பாலோர் வாழ்கின்றனர். ஒரு புறம் மனம், வாக்கு, தேகத்தால் தீவினைகளைச் செய்தல்; மறுபுறம் தான தர்மங்கள்,  அளவிறந்த இறை வழிபாடுகள்! ஆனால் இறைவனோ பாவ, புண்ணியங்களைப் பொதுவாக ஒன்றுக்கொன்று சரிப்படுத்துவதில்லை. இரண்டையும் தனித்தனியாகவே அனுபவிக்கச் செய்கிறான்.
இதனால் தான் கலியுலகில் பல அக்ரமச் செயல்களைப் புரிபவர்கள் புண்ய வசத்தால் செல்வச் செழிப்போடு வளமாக இருக்கின்றனர். எனவே ‘இவ்வளவு அக்ரமம் செய்து பணம் காசோடு சந்தோஷமாக இருக்கிறார்கள்’ என்று எண்ணுதல் தவறு. அவரவருடைய பூர்வ ஜன்ம புண்ய சக்தி, மூதாதையர்களின் ஆசி, தான தர்மங்களின் பலன்களாகவே செல்வம், புகழ், பதவி, குடும்பம், சந்ததி அனைத்தும் அமைகின்றன. இதை உணர்ந்தால் தான் மனம் அமைதியடையும். ஆனால் செய்கின்ற தீவினைகளின் பலனை அனைவரும் அனுபவித்தே ஆக வேண்டும். நம் கண் முன்னால் அவர்கள் அவற்றை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுவது மிகவும் தவறாகும். தக்க காலம் வருகையில் அவரவர் தம் தவறுகளை இப்பிறவியிலோ, இறந்த பின்போ உணர்ந்து திருந்தியே ஆக வேண்டும்.
ஆசார அனுஷ்டானங்கள்
உண்மையிலேயே நியம, நிஷ்டைகளுடன் துர்கை பூஜையைச் செய்து வந்தான் பலதீபதரணன். ஆனால் அவன் உள்ளம் ஒன்றவில்லை! காரணம், ஆசார அனுஷ்டானங்கள் போன்றவை தேகத்தின் பரிசுத்தத்திற்கேயாகும். வெளிச் சூழ்நிலைகளால் மனம் மாசுபடுவதை ஆசார அனுஷ்டானங்கள் ஓரளவு தணிக்கும். ஆனால் ஆசார அனுஷ்டானங்களிலேயே வெறியாக இருந்தால் உள்ளம் பக்குவமடையாது.
நியம் நிஷ்டைகள் போன்றவை தன்னளவில் சுயநலத்திற்காக சுத்தப்படுத்திக் கொள்வதற்காக மட்டும் அல்ல! சுயநலமின்றித் தன்னைப் பிறருடைய சேவைக்காக ஈடுபத்திக் கொள்ளும் மனப் பான்மையைப் பெறுவதற்காகவே தேக சுத்தி விதிகளாம் நியம, நிஷ்டைகள்!
இவ்வாறாகப் பிற ஜீவன்களின் சேவைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் போதுதான்  ஒருவன் சித்தனாகிறான்! மஹானாக, யோகியாக, ஞானியாக, மிளிர்கின்றான். ஆசார, அனுஷ்டான நியம, நிஷ்டைகளைக் கடந்த நிலையது! குப்பைச் சித்தர் குப்பையிலும், மலப்புழுச் சித்தர் மலத்திலும் அமர்ந்து பிரபஞ்சத்தில் எங்கும் கிட்டாத நறுமணத்துடன் அன்றும் இன்றும் எங்கும் என்றும் அருள்புரிந்து வருகின்றனர்.
ஒரு நாள் ... வழக்கம் போல் பலதீபதரணன் கோயிலுக்கு வந்தான். அங்கே.... யாரோ ஒரு அடியார் அகல் விளக்கையேற்றி அதனை ஸ்ரீதுர்கையின் திருவடிகளில் வைத்துவிட்டுச் செல்ல... காற்றில் அசைந்த ஜோதியின் அக்னி நாக்குகள் ஸ்ரீதுர்கையின் வஸ்திரத்தைத் தீண்டிட, ஸ்ரீஅம்பிகை தைலக் காப்பு கொண்டிருந்தமையால் எண்ணெயுடன் சேர்ந்து ஸ்ரீதுர்கையின் வஸ்திரம், அகல் விளக்கு ஜோதியில் நன்றாகப் பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்தது. அவன் பதைபதைத்தான், என்ன செய்வதென்று புரியவில்லை..., ‘வருவது வரட்டும்‘ என்ற வைராக்யத்துடன், துடிப்புடன் பாய்ந்து தீப்பற்றிய ஸ்ரீதுர்கையின் வஸ்திரத்தை வெறுங்கைகளால் வேகவேகமாக இழுத்து, மறுகையால் தட்டித் தட்டி அக்னியை அணைக்க முயன்றான். தீப்புண்களால் அவனுடைய கைகள் ரணமாயின. இருப்பினும் அவன் மனம் தளரவில்லை. கைகளில் தீக்கொப்புளங்கள் ஏற்பட்டும் உடலில் ஆங்காங்கே தீப் பொறிக்காயங்கள் பட்டும் அயராமல் அவன் ஸ்ரீதுர்காதேவியின் சிலாரூபத்தைக் காப்பாற்றினான்.
பிறவி மாயை
இந்தப் பலதீபதரணனே பிறிதோரு யுகத்தில் துச்சாதனனாகப் பிறப்பெடுத்தான்! திரௌபதி துர்கையின் அம்சம்தானே! முற்பிறவியொன்றில் ஸ்ரீதுர்கா தேவியின் வஸ்திரத்தைத் தீயிலிருந்து அகற்றிச் சிறந்த இறைப்பணி ஆற்றினானாதலின் அதன் பலனாய்த் திரௌபதிக்கு ஸ்ரீகிருஷ்ணனளித்த வஸ்திரத்தைக் கையில் தாங்கிய போதும் அவனை அந்த வஸ்த்ராக்னி ஒன்றும் செய்யவில்லை. ஆனால் இந்த அனுக்ரஹத்தை அவன் நல்ல முறையில் பயன்படுத்தியிருந்தால் உன்னதமான ஆன்மீக நிலைக்கு உயர்ந்திருக்கலாம் அல்லவா!
ஆனால் விதியிட்ட கதி வேறாயிற்றே! இதிலிருந்து என்ன நீதி கிட்டுகின்றது? செய்கின்ற செயல்களின் விளைவுகளுக்கேற்பப் பாவ புண்ய சக்திகள் அமைந்தாலும் அவற்றின் விளைவுகளை, ஆனந்தமோ, சுகமோ, துக்கமோ, எதுவாயினும் சரி, அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும். மிக உயர்ந்த தர்மத்தைச் செய்கின்ற ஒருவன் அதற்குரிய உன்னத ஆன்ம சக்தியைப் பெற்றாலும், பிற தீவினைகளின் தன்மையைத் தணிக்கும் பெரியோர்களின் சகவாசம், சத்சங்கப் பிணைப்பு, தானதர்மங்கள், இறைப்பணிகள் ஆகியவற்றையும் தொடர்ந்து செய்து வந்திடில் அந்த ஆன்ம சக்தியே நற்கதியைக் காட்டும்.
ஆனால் ‘நாம் தான் சிறந்த தர்ம காரியங்களைச் செய்து வருகின்றோமே, அவற்றின் அபரிமிதமான புண்ய சக்தி நம்மைக் காக்கும்” என்ற மமதையில் மீண்டும் மீண்டும் தீவினைகள் உழலலாகாது! ஏனெனில் நல்லொழுக்கம் இல்லாவிடில் உத்தம நற்காரியங்களினால் கிட்டும் அற்புத ஆன்மீக சக்தியனது, துச்சாதனன் அதனை வீணே விரயமாக்கியது போல், எளிதாகக் கரைந்து விடும். ஆனால் உத்தம சற்குரு வாய்த்தாலோ அவரே பாவ, புண்ய பாங்கினையும் வகுத்துத் தருகின்றார். உத்தம தர்மதான கார்யங்களின் புண்ய சக்தியைச் சேர்த்து வைத்து அவ்வப்போது நற்பயனாய் மாற்றித் தருகின்றார். சற்குரு கிட்டினால் என்னே பாக்யம்!

பண்டிகைகள் ஏன்?

இந்திய தெய்வீகப் பண்பாட்டின் மகத்துவத்தைப் பல வழிகளில் அறிந்து கொள்ளலாம். கோயில்கள், ஆஸ்ரமங்கள், சாந்தம் தவழும் இமயமலை, பொதியமலை, திருஅண்ணாமலை, சிருங்கேரி, மந்திராலயம் போன்ற புனிதமான இடங்கள் நம் தெய்வீகக் கலாசாரத்தைப் பறைசாற்றுகின்றன.
பஞ்சாங்கத்தைப் பாத்தோமானால் தினந்தோறும் ஏதேனும் ஒரு பண்டிகை குறிக்கப்பட்டிருக்கும். யுகம் யுகமாக வந்து கொண்டிருக்கும் நம் மூதாதையர்களின் அறவழிப் பண்பாட்டையே இது குறிக்கின்றது.
அடியார் : குருதேவா! பஞ்சாங்கத்தில் தினந்தோறும் ஏதேனும் ஒரு விசேஷ தினம் இருந்து கொண்டுதான் வருகிறது. கலியுகத்தில் தினந்தோறும் இல்லத்தில் ஒரு பண்டிகையினைக் கொண்டாட முடியுமா?
சற்குரு : தினந்தோறும் மனிதனுக்குத் தேவைகள் அதிகமாத்தானே ஆகிக் கொண்டிருக்கின்றன! கிடைத்ததைக் கொண்டு திருப்தியோடு இறையருளால் வருவதை ஏற்போம் என்ற மனப்பான்மையை மனிதன் பெறும் வரையில் அவனுடைய வாழ்வு ஆசாபாசங்களிடையே தினசரிப் போராட்டமாகத்தானிருக்கும்.
முறையற்ற ஆசைகள், ஏற்றத்தாழ்வுகளுக்கிடையில் அவனுடைய தினசரி பூஜை, ஜபம், தியானம், கோயில் தரிசனம் போன்றவை அவனுடைய நித்ய வாழ்க்கைக்காகவே அமையும். ஆசைகள், விதவிதமானவையன்றோ! எனவே அவற்றைப் பெற்றுத் தரும் தினந்தோறும் திதி, நாள், நட்சத்திரம், கரணம், யோகத்திற்கு ஏற்பப் பண்டிகைகளும் வேறுபடுகின்றன! பண்டிகை என்பது இறையருளைப் பெறும் ஒரு வழிபாட்டு முறையே! தனியொரு மனிதனால் இவற்றை நிதமும் நிறைவேற்ற இயலாது என்பதால் தான் சமுதாயத்தின் சார்பாக நிதமும் பலவித விசேஷ அம்சங்களுடன் கோயில்களில் அபிஷேக, ஆராதனை, தான வகைகளை நிகழ்த்துகின்றனர். ‘பிரதோஷ பூஜை, பௌர்ணமி, சிவராத்திரி போன்றவை அனைத்தும் சமுதாயத்திற்கு இறையருளைப் பெற்றுத் தரும் பூஜைகளாகும். பிரதோஷ பூஜையைத் தரிசிக்கக் கோயிலுக்கு வருகின்றவர்கள் பிறர்க்காக ஏதேனும் பிராத்தனையையோ, தான தர்மங்களையோ செய்கின்றார்களா என்ன ? வருகின்ற ஆயிரமாயிரம் பேர்களும் தங்கள் பிரார்த்தனைகளை இறைவன் முன்வைத்துச் செல்கின்றனர். கோயிலில் ஆறுகால பூஜைகள் நிகழ்த்தப்படுகின்றன. எனவே இப்போது தெரிகின்றதா, ஏன் பஞ்சாங்கத்தில் தினம் ஒரு பண்டிகையைக் குறிக்கின்றார்களென்று! அக்காலத்தில் கோயில்களில் மட்டுமல்லாது பலர் ஒன்று கூடிப் பல இல்லங்களில் இவற்றைக் கொண்டாடி வந்தார்கள். எனவே அவர்கள் ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்க்கையை நடத்தினர்.
எனவே தினசரி கோயிலுக்குச் சென்று,
அங்கு அன்பர்கள் அறியாமையால் கீழே எறிகின்ற இலைகள், கற்பூரக் காகிதக் குப்பைகள், எரிந்த தீக்குச்சிக்கள், தேங்காய் நார் போன்றவற்றைப் பொறுக்கித் தூய்மை செய்தல் .
 தேங்காய், பழம், பூ, வெற்றிலை, பாக்குடன் அர்ச்சனை செய்து பூ, பழங்களை ஏழைகளுக்களித்து அத்தேங்காயை வீட்டில் உணவுடன் சேர்த்து அன்னதானமாக அளித்து இறைதரிசனப் புண்ய சக்தியைப் பலரும் பெறும்படி செய்தல்.
ஸ்ரீகாயத்ரீ மந்திரம், ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாயா, ஓம் முருகா, ஓம் ஸ்ரீராம் ஜெயராம்  ஜெய ஜெயராம், ஸ்ரீஆஞ்சநேயா போற்றி போன்ற அந்தந்த தினத்திற்குரிய திதி, நட்சத்திரங்களுக்குரிய இறை நாமங்களைக் குறைந்தது 1008 முறையேனும் ஓதிக் கோயிலை வலம் வருதல்.
அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் அடிப்பிரதட்சிணம் செய்திடல்...
இவ்வாறு செய்து இயன்ற காணிக்கையைக் கோயில் உண்டியலில் செலுத்திவிட்டால் அன்றைய தினம் பஞ்சாங்கத்தில் தரப்பட்டுள்ள விசேஷ தினத்தை, பண்டிகையை அவரவர் வீட்டிலும் கொண்டாடியதின் பலனைச் சிறிதேனும் பெறலாம். உதாரணமாக ஏகாதசி விரதம், மாத சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி, ரத சப்தமி, ஸ்ரீராம நவமி, பிரதோஷம், அட்சய திரிதியை, கௌரி விரதம் போன்றவற்றை அனுஷ்டிக்க இயலாதவர்கள் மேற்கண்ட முறையில் நியதிகளைக் கடைபிடித்துக் குறித்த தான தர்மங்களையும் நிறைவேற்றிட கோயில்கள் மூலமாகவாவது இவற்றைக் கொண்டாடும் பாக்யத்தைப் பெற்றிடலாம். ஆனால் இல்லத்தில் இயன்ற வரை பண்டிகைகளைக் கடைபிடிக்கப் பெருமுயறசி செய்தால் தான் குடும்பத்தினரையும் தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு கொள்ளச் செய்ய முடியும்.

நித்ரா முக்தி

நித்ரா (யோகாசனம்) முக்தி
ஸ்ரீரமண மகரிஷி பால பருவத்திலேயே தம் மூச்சு அடங்கிவிட்டதாகப் பாவித்துத் தம் மரணத்தை ஓர் ஆத்ம விசாரமாக ஒத்திகை பார்த்துக் கொண்டார். நித்திரையைக் கூட மரணத்திற்கான ஒத்திகை என்று பல மகான்கள் கூறியுள்ளனர்.
இதனையே ஆத்மவிசாரத்தில் சற்று விரிவுபடுத்தி மரணத்தையே இரு பிறவிகளுக்கிடையே உள்ள ஒரு உறக்க நிலை என்ற அழகாகத் தெளிவுபடுத்துகின்றனர். ஒவ்வொரு மனிதனும் தூங்கும் போது அவனுடைய நாபிலிருந்து (தொப்புள்) silver cord என்ற பிறவி இழைக் கம்பியின் மூலம் அவனுடைய ஆன்மா பல லோகங்களுக்குச் சென்று வருகின்றது. அவனுக்குரித்தான கனவு லோகத்தில் அந்தக் கனவுக்குரிய ஸ்வப்ன தேகத்துடன் பல காரியங்களில் பங்கு பெறுகின்றான். அவனவன் கர்ம வினைப்படி. இந்த ஸ்வப்ன உலகக் காரியங்களின் தொகுப்பே கனவு ஆகும். உறக்கம் முடியும்போது அதே பிறவி இழைக் கம்பியின் மூலமாக ஆன்மா இப்புவி உலகிற்கு உரிய அதே தேகத்தில் மீண்டும் புகுகின்றது.
இதனால் தான் தூங்குபவர்களைப் பரபரவென்று எழுப்புதல் கூடாது என்று கூறுவர். ஏனெனில் பிறவி இழைக் கம்பி வழியே அவ்வான்மா உள்ளே புகுவது இமைப்பொழுதினும் குறுகிய நேரத்தில் நம் கண்ணுக்குத் தெரியாவண்ணம் நிகழும் விந்தையாகும். பரபரக்க எழுந்தால் silver cord இழை விட்டு விடுதலோ அல்லது அதன் மூலமாக ஆன்மா உள்வருதிலோ தடை ஏற்படக்கூடும். அதற்குள் வேறு எந்த ஆவியும் புகுந்திடலாம் அல்லது மனநிலை பாதிக்கப்படும்.  இதற்குக் கவசமாகவே பூணூல், நவரத்தினக் கற்கள், மாங்கல்யம், கறுப்புக் கயிறு  போன்ற  இரட்டைசள், கால் மெட்டிகள், கை வளையல்கள் போன்ற மங்கலப் பொருட்கள், மருதாணி, கண் மை போன்ற மூலிகை சாரத்தை இடுதல், நெற்றிக்கு விபூதி, திருமண், குங்குமம் தரித்தல் போன்றவற்றைப் பெரியோர்கள் அருளியுள்ளார்கள். நாம் ஜெபிக்கும் மந்திரங்கள் இவற்றில் எளிதாகப் படிவதால் எவ்விதத் தீவினைகளிலிருந்தும் இவை இரட்சை போல் எப்போதும் உறங்கும் போதும் நம்மைக் காக்கின்றன.
துயில் எழுதல் என்பது, அதாவது உறக்கத்திலிருந்து எழுவதற்கு நித்ரா முக்தி என்று பெயர். இறை நினைவுடன் எழலாம். இதற்குப் பொருள் அன்றைய நித்திரை பரிபூரணமடைந்தது என்பதாகும். ஆனால் ஆயிரத்தெட்டு எண்ணங்களுடன் உறங்கச்  சென்றால் நித்திரைக்கு முக்தி ஏது? நரக வேதனைகளே கனவுகளாக வரும். நாய் துரத்தும், பாம்பு கடிக்கும், மேலிருந்து கீழே விழுவோம்!
தினசரி நித்திரையின் போது சொல்ல வேண்டிய ராத்திரி ஸுக்த மந்திரங்கள உண்டு. இரவு செய்ய வேண்டிய வைஸ்வதேவ அக்னி ஹோமங்கள் உண்டு. இரவு தியான முறையும் உண்டு. இம்முறைகளைத் தக்க ஆன்மீக வழிகாட்டிகளிடமிருந்து தான் பெற இயலும். இதையெல்லாம் படிக்கின்றபோது நம்மால் முடியுமா என்ற பெரிய கேள்விக்குறி எழும். தக்க சற்குரு அமைந்திருந்தால் அவரே இவற்றை எளிமையாகத் தந்திடுவார் அல்லது பரிகாரங்களையும் எடுத்துரைப்பார்.
நித்திரை விதிகளைச் செய்ய மறந்த மனிதனுக்கு நித்ய வாழ்க்கையே சோதனையாய் தான் இருக்கும்.. எனவே தான் மாத சிவராத்திரி, ஏகாதசி, பௌர்ணமி பூஜை, அமாவாசைக் கிரியைகள், மகாசிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்றவை விதிக்கப்பட்டுள்ளன. இவை தவிர தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழும்போது செய்யவேண்டிய நித்ரா முக்தி யோகாசன முறையும் உண்டு. மிகமிக எளிமையான பயிற்சி இது!
காலையில் விழிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தவுடன் கண்களைத் திறவாமல் இடது பக்கம் ஒருக்களித்துப் படுத்து, அதே நிலையில் இடது கையை மட்டும் மெதுவாகக் கீழே ஊன்றி இடப்பக்க நிலையிலேயே எழுந்து அமர்தல் வேண்டும். (கண்களை மூடியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது). இடதுகையை மெதுவாக எடுத்து விட்டுப் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து இருகைகளையும் அகல விரித்து மெதுவாகக் கண்களைத் திறந்து கரதர்சனம் செய்ய வேண்டும்.
காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் செய்ய வேண்டிய எளிய இறைவழிபாடுகள் உண்டு. சித்த புருஷர்கள் அருள்கின்ற இவ்வெளிய இறைவணக்க முறைகளைப் பின்பற்றினால் நித்ய வாழ்க்கை சாந்தமாக, சீராக அமையும். காரணம், இறையருளின்றி நம் விரலை ஒரு முறை கூட அசைக்க முடியாஅது என்பதை உணர உணர “எல்லாம் அவன் செயல், அனைத்தும் நம் கர்ம வினைப்படியே நடக்கின்றது, அவன் ஆட்டுவிக்க நாம் ஆடுகின்றோம்” என்ற பேருண்மை புலப்படத் துவங்கும். இதற்காகவே நம் தினசரி வாழ்க்கை துவங்கும் ஒவ்வொரு நாள் காலையிலும் படுக்கையில் எழும் போது பிராதப் பிங்களாசனம் என்ற எளிய ஆசனத்தையும், சங்கர நாராயண கர தரிசனத்தையும் சித்த புருஷர்கள் அளித்துள்ளனர்.
இறை நினைவோடு எழுந்தால் அதுவே உத்தமமானது திடுக்கிட்டு எழுதல் கூடாது. தானாகவே சாந்தமாகத் துயிலெழுகின்ற தன்மையைப் பெற வேண்டும். இதற்குச் சில சயன யோகப் பயிற்சி முறைகள் உண்டு. இதைத் தக்க குருவை நாடி அறிதல் வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் இரு கரங்களையும் விரித்து அகமலர்ந்து தரிசிக்க வேண்டும். இரு கைகளையும் ஒன்றாகச் சேர்த்துப் பரந்து விரித்து இரு உள்ளங்கைகளையும் முழு விஸ்தாரமாகக் கண்களை நன்றாக விரித்து தரிசிக்க வேண்டும் .
கோமதி சங்கர – நாராயண தரிசனம்
விடியற் காலையில் எழுவதே சிறந்தது. விழிப்பு நிலையை உணர்ந்தவுடன் கண்களைத் திறவாது இரு கரங்களையும் ஒன்று சேர்த்து, உள்ளங்கைகளைப் பரந்து விரித்து இரு கண்களால் இரு உள்ளங்கைகளையும் தரிசிக்க வேண்டும். அவ்வாறு தரிசிக்கின்ற போது வலது உள்ளங்கைப் பகுதியில் ;
சுக்கிர விரல் (கட்டை விரல்) குருவிரல் (ஆள்காட்டி விரல்), சனி விரல் (நடு விரல்)களின் கீழ்ப் பகுதிகளில் சிவ லிங்கம் தரிசனம் தருவதாக பாவித்து
புத விரல் (சுண்டு விரல்) , சூர்ய விரல் (மோதிர விரல்)களின் கீழ்ப் பகுதிகளில் சங்கு,சக்கர, நாமதாரியாக ஸ்ரீநாராயணப் பெருமாள் வீற்றிருந்து தரிசனம் தருவதாகவும் பாவித்து
உள்ளங்கையின் கீழ்ப்பகுதியில் ஸ்ரீகோமதி அம்பாள் தரிசனம் தருவதாகவும் பாவித்துத் துதிக்க வேண்டும்.
இடது கை பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. வலது கையில் இருப்பதே இடது கையிலுமுள்ளது. எனவே பிரபஞ்சமாயும், பிரபஞ்சத்தினுள்ளும், பிரபஞ்சத்திற்கு அப்பாலுமாய் விளங்கும் ஹரி ஹர சக்தி ரூபம், பரப்பிரம்மம், பிறகு கை கூப்பி ஸ்ரீஉத்தாதலகர் வந்தனம் என்று வணங்கி மீண்டும் உள்ளங்கைகளை விரித்து ஸ்ரீஉத்தாதலகர் மஹரிஷியே போற்றி, ஸ்ரீஉத்தாதலகராய நம: என்று ஸ்ரீஉத்தாதலகர் மஹரிஷியைப் போற்றி வணங்க வேண்டும். காரணம் என்ன?
பாற்கடலில் ஸ்ரீஜேஷ்டா தேவி (நாம் வழக்கில் ‘மூதேவி’ என்று அழைப்போம்) அவதரித்த போது எவரும் தம்மை ஏற்காமையால் சினமுற்ற தேவி சிவபெருமானிடம் முறையிட, திருக்கயிலாயத்தில் உறையும் பேறு பெற்ற ஸ்ரீஉத்தாதலகர் தியாகச் செம்மலாய் ஸ்ரீஜேஷ்டா தேவியை அங்கீரித்துப் பத்னியாக ஏற்றார். இதனால் மனமகிழ்ந்த ஸ்ரீஜேஷ்டா தேவி எவரொருவர் காலையில் எழுந்தவுடன் ஸ்ரீஉத்தாதலகரைத் தியானிக்கின்றார்களோ அவர்களை எக்காலத்திலும் தரித்திரம் அண்டாது என்ற வரத்தை ஆதிசிவனிடமிருந்து பெற்றுத் தந்தாள். பிறகு ஸ்ரீஜேஷ்டா தேவி சமேத உத்தாலகரைத் தம் சிரசில் ஜக்யம் பெறச் செய்தார் சிவபெருமான்! பெறற்கரிய பேறு இது!
எனவே சித்தர்கள் அருள்கின்ற காலை இறை வழிபாட்டில் ;
1. ஸ்ரீகோமதி சங்கர நாராயண தரிசனமும்
2. ஸ்ரீஉத்தாதலகர் தியானமும் இடம் பெறுகின்றன.
இவ்வளவு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டாலும் இவ்விரண்டையும் நிறைவேற்றிட பத்து விநாடிகள் நேரங்கூட ஆகாது! என்னே எளிய வழிபாடு! ஆனால் பெறுகின்ற பலன்களோ அபரிமிதம்.
ப்ராதப் பிங்களாசனம்
விழிப்புணர்ச்சி வந்தவுடன் இடது புறம் ஒருக்களித்து அந்நிலையிலேயே இடது கையைத் தரையில் (அல்லது கட்டிலில்) ஊன்றி சாய்ந்த நிலையிலேயே எழுந்து உட்கார வேண்டும்.
இம்முறையினால் வலதுபுற நாசியில் சூரியகலையில் சுவாசம் சீராக ஓடி மனத்தினைச் சாந்தப்படுத்தும்.
1. இதனால் இரத்த அழுத்த நோய்கள் தணியும்.
2. எண்ண ஓட்டங்கள் குறைந்து சீர்ப்படும்.
3. ஆழ்ந்த மூச்சு சுவாசம் ஏற்படும். இது உடல் ஆரோக்யத்திற்கு மிகவும் முக்யமானது.
இவ்வகை எளிமையான ஆசனத்தைப் பயில்வதற்கு 10 வினாடிகள் நேரங்க கூட ஆகாதெனில் எத்தகைய எளிய ஆனால் சக்தி வாய்ந்த ஆசனம்! இதன் பின் குலதெய்வம், இஷ்ட தெய்வம், பெற்றோர்கள், குலகுரு ஆகியோரை மானசீகமாக நமஸகரிக்க வேண்டும். இவ்வெளிய முறைகளையே ப்ராத பூஜை (காலை பூஜை) எனச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர்.
உள்ளங்கை தரிசனமே நவகிரகங்களின் தரிசனமாக மலர்ந்து நம் நித்ய வாழ்வின் கர்மங்களைப் பகுத்து வகுக்கின்ற ஸ்ரீநவகிரக மூர்த்திகளின் அருளையும் பெற்றுத் தருகின்றது, எவ்வாறு?
1. கட்டை விரல் – சுக்கிரன்
2. ஆள்காட்டி விரல்  - குரு
3. நடு விரல் – சனி
4. மோதிர விரல் – சூரியன்
5. சுண்டு விரல் – புதன்
உள்ளங்கை மேடுகள் --- சந்திர மேடு, செவ்வாய் மேடு
ராகுவும் (Moon’s Ascending Node) ; கேதுவும் (Moon’s Descending Node) , பழங்கால வானவியல் கணிதப்படி சனி, செவ்வாய்க் கிரகங்களின் பாற்படும். இதன் பிறகு பெற்றோர்களை நமஸ்கரித்தல் அல்லது மானசீகமாகவேனும் நமஸ்கரித்தல், குலதெய்வ, இஷ்ட தெய்வ மூர்த்திகளைத் தியானித்தல் ; குரு தியானம் இவற்றுடன் காலை வழிபாட்டின் முதல் அம்சம் நிறைவு பெறுகிறது.

பித்ரு தர்ப்பணம்

தற்பொழுது தர்ப்பை, எள், நீர் கொண்டு மட்டும் தர்ப்பணம் கொடுக்கின்ற வழக்கம் நிலவுகின்றது. இதில் பல ஆன்மீக ரகஸ்யங்கள் உண்டு. தர்ப்பணம் கொடுக்க வேண்டிய இடம், எதன் மேல் தர்ப்பணம் வார்க்க வேண்டும்? எந்த ஹோரைகளில் தர்ப்பணம் அளிக்க வேண்டும் போன்ற நியதிகளை எல்லாம் கடைபிடித்தால் தர்ப்பணத்தின் முழுப் பலன்களையும் பெறலாம்.
மரணத்தின் வகைகளும் தர்ப்பணமும்
எல்லோருக்கும் இயற்கையான முறையில் மரணம் ஏற்படுவது இல்லையே! இது தவிர விபத்து, தற்கொலை, கொலை, வைத்தியரின் தவறுகள், விஷப் பொருட்களினால் மரணம், மாரடைப்பு என்று எண்ணற்ற வகைகளில் மரணங்கள் ஏற்படுகின்றன. பலவித நோய்களினாலும் விதவிதமான நிலைகளில் மரணங்கள் ஏற்படுகின்றன. தர்ப்பண விதிகளில் மரணத்தின் வகை, மரணத்திற்குக் காரணமான நோய், மரணத்தின் இயல்பு – இயற்கை, கொலை, தற்கொலை etc. மரணமடைந்தவரின் வயது – இளநடுத்தர , முதிய பருவ மரணம்..போன்றவற்றைப் பொறுத்துத் தர்ப்பண முறைகள் மாறுபடும். இது மட்டுமல்லாது மரணமடைந்தவர் எவ்விதத் தொழிலைச் செய்து வந்தாரோ, எவ்விதப் பணியைச் செய்து வந்தாரோ இதைப் பொறுத்துத் தர்ப்பணம் முறைகள் மாறும்.
தோல் துறைக்கான விசேஷ தர்ப்பணம்
தோல் துறையில் துரதிருஷ்ட வசமாக நிறைய கர்ம வினைகள் சேர்வதற்கு வாய்ப்பு உண்டு. தோல் துறை முதலாளிகள், நிர்வாகிகள், பணிபுரியும் அலுவலர்கள், விற்பனையாளர்கள் ஆக தோல் துறை சம்பந்தப்பட்ட அனைவரையும் இக்கர்மவினைகள் சூழும். தோல் பொருட்களை வாங்குவோர்க்கும் இத்தீயக் கர்மவினைகள் தொடர்ந்து பற்றும். எனவே தான் தோல் துறையைக் கூடியமட்டும் தேர்ந்தெடுக்காது இருப்பது நல்லதாகும்.
இதற்குக் காரணம் பசு, மான், பாம்புகள் குறிப்பாக நல்ல பாம்பு, எருமை போன்ற சாதுவான ஜீவன்களை அவை கதறக் கதற பரிதாபகரமான நிலைகளில் கொன்று அவற்றின் தோலைப் பயன்படுத்துதல் ஆகும். இத்தகைய சாதுவான ஜீவன்களைக் கொல்கின்றவர் முதல், இறுதியில் அத்தோலை காலணி, பர்ஸ், தோல்பை போன்ற தோல் பொருட்களாகப் பயன்படுத்துவோர் வரை இடையில் உள்ள, சம்பந்தப்பட்ட அனைவருக்கும், இம்மாபாதகக் கொலைக்குரியக் (ஜீவ ஹிம்ஸை) கொடிய கர்ம வினைகளின் விளைவுகள் பின்பற்றித் தொடரும். அதுவும் அறிந்தோ அறியாமலோ பசுவின் தோலால் ஆன பொருளைப் பயன்படுத்திடில் அதனால் ஏற்படும் சொல்லாவொணாப் பாவங்களையும், பசுஹத்தி, பிரம்மஹத்தி தோஷங்களையும் எழுதி மாளாது.
பரிகாரத் தர்ப்பணம் – தோல்துறை சம்பந்தப்பட்டோர்க்கு
இயன்றவரை முன்னரே கூறியிருப்பது போல் தோல் தொழிலில் ஈடுபடுவது, வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். மற்ற துறைக்குச் செல்வது சிறந்தது. தோல் துறையில் இதற்கு முன்னர் இருந்தோரும் மாதப்பிறப்பு, அமாவாசை, உத்தராயண, தட்சிணாயனப் புண்ணிய காலங்கள், மஹாளய  அமாவாசை, விஷ்ணுபதி  ஷடசீதிப் புண்ணிய காலங்கள், சூரிய சந்திர கிரஹண புண்ணிய காலங்கள், மூதாதையர் இறந்த திதிகள் ஆகிய விசேஷ தினங்களில் கீழ்க்கண்ட முறையில் தர்ப்பணங்களைச் செய்தால் தான் பித்ருக்களின் பரிபூரண ஆசியைப் பெற்று அதன் மூலம் தோலால் விளைந்த கர்மவினைகளைத் தீர்க்க முடியும். இது மட்டுமல்லாது இறந்தவர்கள் தோல் துறையோடு சம்பந்தபட்டிருந்தாலும், தோல் தொழிற்சாலையில் விபத்து மற்றும், இயற்கையாக மரணமுற்றிருந்தாலும் அவர்களுக்கும் கீழ்க்கண்ட முறையில் தர்ப்பணங்களை அளித்தால் அவர்களுக்குத் தங்கள் வாழ்நாளில் தோல் தொழிலில் ஏற்பட்ட தீவினைக் கர்மங்களுக்குத் தக்க பிராயச்சித்தங்கள் கிட்டி அவர்கள் நன்னிலை பெறுவர்.
தர்ப்பண முறை
பசுவை நீராட்டி மஞ்சள், குங்குமம் வைத்து அதன் குளம்புகளில் தர்ப்பை, எள்ளுடன் கங்கை, காவிரி போன்ற புண்ணிய தீர்த்தங்களினால் தர்ப்பணம் அளிக்க வேண்டும். மிகச் சிறந்த தர்ப்பண பூஜைகளில் இதுவும் ஒன்றாகும். அதாவது பசுவின் வலது முன் குளம்பு அல்லது வலது பின் குளம்பில் தர்ப்பையை வைத்துத் தர்ப்பண மந்திரங்களைச் சொல்லியோ அல்லது தர்ப்பண மந்திரங்களை அறியாவிடில், “பித்ரு தேவர்களே! இப்புனிதமான பசுவின் தேகத்தில் வசிக்கும் கோடிக்கணக்கான தெய்வ மூர்த்திகளே! தேவதைகளே! இப்புனிதமான பசுவின் பாத தூளி மூலமாக யாம் அளிக்கும் பித்ரு தர்ப்பணங்கள் எம்முடைய மூதாதையர் தோல் தொழில் மூலமாகப் பெற்ற தீவினைக் கர்மங்களுக்குப் பரிகாரமாக அமைவதற்கு அருள்புரிய வேண்டுகிறோம்!” என்று கூறி தர்ப்பணங்களை வார்க்க வேண்டும்.
பசுவின் பாத தூளிக்கு அற்புதமான தெய்வீக சக்திகள் உண்டு. பசுவின் குளம்படிகள் பட்ட இடத்திலிருந்து மண்ணை எடுத்துச் சிரசில் தெளித்துக் கொள்வதுண்டு. இதற்குக்  “கோதூளி ஸ்நானம்” என்று பெயர். இதனால் பல கொடிய கர்ம வினைகளுக்கு நிவாரணம் கிட்டும். இதைவிட, பசு நடந்து செல்கையில் அதன் குளம்புகளிலிருந்து தெளிக்கின்ற மண் துகள்களை மீண்டும் பூமியில் படுவதற்குமுன் அதைக் கையில் தாங்கி அப்படியே சிரசில் தேய்த்துக் கொள்வர் இது மேலும் சிறப்புடையதாகும்.
கோதூளி ஸ்நானத்துக்குப் பின்னர் தர்ப்பணத்துடன் கோ பூஜையைக் செய்வது மிகவும் விசேஷமானது.

லாட்டரி சீட்டு

பணத்தைச் சம்பாதிப்பதற்கும், செலவழிப்பதற்கும் சில தெய்வீக நியதிகள் உண்டு. ஆனால் இவற்றைக் கலியுலகில் முழுவதுமாகக் கடைபிடிப்பது இயலாத ஒன்றாகும். எனவே சித்த புருஷர்கள் கலியுகத்தின் சூழ்நிலைகளுக்கேற்ப, சம்பாதிக்கின்ற பணத்தின் ஆன்மீக குணங்களை முறைப்படுத்துவதற்கான எளிய ஆன்மீக வழிமுறைகளைத் தந்துள்ளனர். லாட்டரி, குதிரைப் பந்தயம், சீட்டாட்டம், சூது போன்றவற்றில் சம்பாதிக்கும் பணம் முறையற்றது என்பதை நாம் அறிவோம். லாட்டரி டிக்கட்டில் கிட்டும் வருமானம் எவ்வாறு தீவினைகளைத் தரமுடியும்? குதிரைப் பந்தயத்திலாவது குதிரைகள் இம்சிக்கப்படுகின்றன. ஆனால் லாட்டரி டிக்கட் வாங்குவதில் எவரையும் ஏமாற்றவில்லையே?  நம் அறிவுப்பூர்வமான நம்பர்-கணக்கு போட்டு லாட்டரி டிக்கட் வாங்குவது எவ்வாறு தீயதாகும்? – இந்த வினாக்கள் எழுவது இயல்பே!
லட்சக்கணக்கான மனிதர்கள் தங்களுடைய சம்பாத்யம், கடன், ஏமாற்றி அல்லது மறைத்துப் பெற்ற பணம், திருடிய தொகை, மனைவி குடும்பச் செலவிற்கு அளித்ததைத் தவறாகப் பயன்படுத்துதல், கோயிலுக்குரிய உண்டியல் பணம், பாத்திரச் சீட்டுப் பணம் – இவ்வாறு விதவிதமான வழிகளில் வரும் தொகையே லாட்டரி டிக்கட் பரிசுத் தொகையாக மாறுகிறது.
எத்துணை லட்சம் குடும்பங்களின் எதிர்பார்ப்புகள், மனக்குமுறல்கள், மன வேதனைகள், ஏழைகளின் நிராசையான ஆசைகள் போன்ற எண்ணற்றத் துன்பத் சூழல்களின் மொத்த உருவே லாட்டரி பரிசுத்தொகை! அப்படியானால் அந்தப் பரிசுத் தொகை எத்தகைய சோகமான கர்மவினைகளைச் சுமந்து வரும்! இதனைச் செலவழித்துச் சிறுசிறு ஆசைகளையா பூர்த்தி செய்ய முடியும். மாறாக அப்பரிசுத் தொகையைச் செலவழித்திடில் எத்துணை லட்சம் மக்களின் மன வேதனைகள், பரிசாகத் திரும்பி வரும்?
ஒவ்வொரு லாட்டரி டிக்கட்டை வாங்குபவரும் பரிசு விழும் என்ற எதிர்பார்ப்புடன் தானே வாங்குகின்றார்? அந்த எதிர்பார்ப்பு, ஏமாற்றம்  அடைகையில் அந்த பரிசுத் தொகையில் தானே சோக நிழலாகப் ப(தி)டியும்!
செலவும் ஒரு கடமையே :
ஒவ்வொரு ரூபாயையும் எவ்வாறு முறையாக உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற நியதி மனித குலத்திற்கு உள்ளதோ அதேபோல் ஒவ்வொரு ரூபாயையும் முறையாகப் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் என்ற ஆன்மீக நியதியும் உண்டு. தேவையற்ற வழிகளில் செலவழிக்கும் பணத்திற்கு அந்தந்த மனிதனே பொறுப்பு. மது, புகை, அதர்மமான போகங்கள், முறையற்ற கேளிக்கை போன்ற தீய வழிகளில் பணம் செலவழிக்கப்பட்டால், கிடைத்த லட்சுமிகரமான செல்வத்தைப் பாழாக்கியதற்கான சாபங்கள் ஏற்படுவதுடன், தீய செயல்களின் தீவினை எண்ணங்களும் அவ்வாறு செலவழிக்கப்பட்ட பணத்தில் படிந்து அது செல்லும் இடங்களில் எல்லாம் அதைப் பெறுவோரையும் பாதிக்கும். இதற்கும் அதனைச் செலவழித்தவரே பொறுப்பாகின்றார். தீவினைகள் இதனால் பெருகின்றனவே! இது தேவையா?
ஜோதிடத்தில் நியுமராலஜி
தற்காலத்து ஜோதிடம், பலன்களில் அதிர்ஷ்ட எண்களைக் குறித்துத் தருகின்றனர். குதிரைப் பந்தயத்திற்கு, லாட்டரி டிக்கடிற்காக என்று அதிர்ஷ்ட எண்களைக் குறித்துக் கொடுத்தால் அதை நம்பி அத்தகைய சூதாட்டங்களில் ஈடுபடுவோரின் தீவினைகளுக்கும், மனவருத்தங்களுக்கும், ஆழ்ந்த கவலைகளுக்கும் அந்த ஜோதிடரே பொறுப்பாகின்றார். பாருங்கள், ஒரு புனிதமான ஜோதிடக் கலையை, அதைக் கட்டிக் காக்கின்ற ஜோதிடர்களே நியாயமற்ற நிலைக்கு அதனை ஆட்படுத்துகின்ற பரிதாபத்தை!
அதிர்ஷ்ட எண்கள் என்று மட்டும் குறிப்பிடுவதில் தவறில்லை. வங்கிசேமிப்புக் கணக்கு எண், மோட்டார். ஸ்கூட்டர் போன்ற வாகன நம்பர், வீட்டு, இலக்கம், தொலைபேசி எண், திருமணநாள், தொழில் துவக்கம் போன்ற நற்காரியங்களுக்காக அவரவர் பிறந்த நாள், ராசி நட்சத்திரத்திற்கேற்ப அதிர்ஷ்ட எண்ணைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் சூதாட்டங்களுக்காக அதிர்ஷ்ட எண்களைக் குறித்துத் தரலாகாது! ஒவ்வொரு எண்ணுக்கும் உரிய கிரஹ தேவதை உண்டு. எவர் எந்த எண்ணைத் தவறாகச் சூதாட்டம் போன்ற தீய செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனரோ அதனால் அந்தக் கிரஹ மூர்த்தியின், தேவதையின் சாபங்களுக்கு அவர் உள்ளாவர். இதன் வினைப்பயனால்  அந்தக் கிரஹ தேவதைக்குரிய நாளில் அந்த எண் சம்பந்தப்பட்ட காரியங்களில் தடங்கல் ஏற்படும்.
திடீர் தனப்பராப்தி
லாட்டரி என்பது புதையல் யோகம், தனப்ராப்திதானே இதில் என்ன தவறு? – என்ற வினாவும் எழும். லாட்டரி, குதிரை ரேஸ், சீட்டாட்டம் ஆகிய சூதாட்டங்களில் கிட்டுவது சம்பாத்யமோ அல்லது திடீர் தனப்ராப்தியோ ஆகாது. மேலும் திடீர் தனப்ராப்தியில் கூட நன்மைகளே ஏற்படும் என்று சொல்லவும் முடியாது. திடீர் தனப்ராப்தி ஏற்பட்டால் தக்க சற்குருவை நாடி அதனைப் பயன்படுத்தும் முறையை அறிதல் வேண்டும். புராணத்தில் கூட சியமகந்த மணியால் ஏற்பட்ட பல பிரச்னைகளையும், மஹாபாரதத்தில் சூதாட்டத்தால் விளைந்த கேடுகளையும் நாம் அறிவோம். பூமிக்கடியிலிருந்து கிட்டுவது புதையல் யோகம், லாட்டரி, புதையல் யோகமாகாது.  ஜோதிடத்தை நன்கு அறிந்த சகுனியே அதிர்ஷ்ட எண் தத்துவத்தைச் சூதாட்டதிற்குத் தவறாகப் பயன்படுத்தி அதனால் கிட்டிய செல்வம் எவருக்கேனும் பயன்பட்டதா? விடையை எவர்தான் அறியார்?
பரிகாரங்கள்
இதுகாறும் சூதாட்டத்தில் பணத்தைச் செலவழிக்கப்பட்டதற்கான பரிகாரத்தைச் சித்த புருஷர்கள் அருள்கின்றனர்.
1. முதலில் தன்னுடைய செயல்களுக்கு மனமார வருந்தி இனிமேல் வாழ்க்கையில் லாட்டரி டிக்கட், சீட்டாட்டம், குதிரைப் பந்தயம் போன்ற சூதாட்டங்களில் ஈடுபட மாட்டேன் என்று குலதெய்வத்திடம் ப்ரதிக்ஞை எடுத்துக்கொள்ள வேண்டும். இதை மீறிடில் அது கடும் தோஷங்களாகக் குடும்பத்தைப் பாதிக்கும்.
2. சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றங்களுக்காகத் திங்கட்கிழமைகளில் குறிப்பாக, சந்திர ஹோரை அமைந்த நேரத்தில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதல் வேண்டும். (காலை 6-7 , மதியம் 1-2 , இரவு 8-9)
3. திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில், செங்கம் சாலையிலிருந்து பிரிந்து அடி அண்ணாமலை செல்லும் உட்பாதையில் சிவராஜ சிங்க தீர்த்தம் உள்ளது! விநாயகர் சன்னிதியின் முன் உள்ள இது மிகவும் சக்தி வாய்ந்த தீர்த்தம். இந்தத் தீர்த்தத்தில் அர்க்கியம் அளித்து, “நான் செய்த சூதாட்டச் செயல்களுக்கு மனமார வருந்துகிறேன். இனி இத்தகைய சூதாட்டங்களில் என்றும் ஈடுபடேன். இது சத்தியம்” என்று ப்ரதிக்ஞை எடுத்துக் கொண்டு, நீர் வார்த்து (அர்க்கியம்) விடுதல் வேண்டும்.
4. இந்தச் சிவராஜ சிங்க தீர்த்தத்தில் தன் வாழ்நாளில் நிகழ்ந்த எத்தகைய தவறுக்கும் குருவருள் கூடிடின் ப்ராயச்சித்தத்தினை முறையோடு பெறலாம். இதற்கும் தக்க சற்குருவின் நல்வழி இன்றியமையாததாகும். ஆனால் ப்ராயச்சித்தம் என்பது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே. அதை மீறிடில் கடும் துன்பங்களைத் தண்டனையாக ஏற்கநேரிடும் . ஆனால் உண்மையான உள்ளத்துடன் இங்கு ப்ராயச்சித்தம் வேண்டிடில் அது நிச்சயமாக இறை அருளால் கிட்டிடும். இதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
5. இவ்வாறு உள்ளன்புடன் எத்தகைய தீவினைக்கும் பரிகாரம் காண விழைந்திடும் பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றிட இத்தீர்த்தக் கரையில் மஹான்களும், யோகிகளும், சித்த புருஷர்களும் எந்நேரமும் காத்துக் கிடக்கின்றனர். தீவினையழித்து நல்வழி நாடும் பண்பைத்தான் மனித குலம் இழந்து வருகிறது. என் செய்வது? எடுத்துச் சொல்வார் இருப்பினும் மனம் ஏற்பதில்லை!
6. வசதியுள்ளோரும், தாம் இதுவரை சூதாட்டங்களில் இழந்த தொகையைத் தோராயமாகவேனும் நிர்ணயித்து அத்தொகைக்குரிய குறிப்பிட்ட தான தர்மங்களைச் செய்துவர வேண்டும்.  ஏனையோர்  தம்முடைய தவறுகளுக்குத் தாமே நியாயமாக ஒரு தொகையை நிர்ணயித்து அதற்குரிய தான தர்மங்களைச் செய்திட வேண்டும்.
பணத்தை பூஜை செய்யும் முறை
வருகின்ற பணத்தைப் பூஜை செய்து இறைவனிடம் சமர்ப்பித்து ஒரு பங்கை அர்ப்பணித்துப் பின்னரே குடும்பத்திற்குப் பயன்படுத்துகின்ற நற்பாங்கு நம் பெரியோர்களிடத்து இருந்தமையால் தான் குறைந்த வருவாய் எனினும் “நமக்காக ஆண்டவன் படியளந்தது போதும்“ என்ற ஆத்ம திருப்தியுடன் வாழ்ந்தனர். ஆனால் தான் எவ்வளவு பெரிய குடும்பமாய் இருப்பினும் கல்யாணக் காட்சிகளை நன்முறையில் நிறைவேற்றி ஆனந்தமாக வாழ்ந்து மறைந்தனர். ஆனால் கலியுகத்தில் வறியவர் முதல் கோடீஸ்வரர் வரை எவரிடத்தும் மன நிறைவை, சந்தோஷத்தைக் காண முடியவில்லையே ஏன்? பணத்தை சம்பாதிப்பது மட்டுமின்றி அதனைச் செலவு செய்வதற்கும் பல நியதிகள் உண்டு. வருமானம் முறையான வழிகள் மூலம் வராவிடினும், நல்ல முறையில் செலவழிக்கப்படாமல் தீய செலவினங்கள் மூலமாகவும் பல கொடிய, வல்வினை மிகுந்த கடுமையான தீவினைகள் வந்து சேர்கின்றன. இந்த இருபுறத் தீவினை சேர்வினால் தான் கலியுக மனிதனால் நிம்மதியாக வாழ முடியவில்லை.
செலவை முறைப்படுத்துக :
ஒவ்வொரு மனிதனும் தான் ஈட்டுகின்ற பணத்தின் ஒவ்வொரு நயா பைசாவையும் முறையோடு செலவழிக்கின்ற அல்லது பயன்படுத்துகின்ற கடமையைத் தாங்கி வாழ்கின்றான். முறையற்ற செலவுகளினால் வரும் தீவினைகளுக்கும் அவனே பொறுப்பு ஏற்க வேண்டும். சம்பளம் வாங்குவதோடு அல்லது வியாபாரத்தில் பொருளை ஈட்டுவதோடு ஒருவனுடைய கடமை முடிவதில்லை. மாறாக அவன் ஈட்டுகின்ற ஒவ்வொரு பைசாவையும் முறையாகச் செலவிட வேண்டும். எதிர்கால வாழ்க்கைக்காகச் சேமிப்பதில் தவறில்லை. ஆனால் சேமிப்பு என்ற பெயரில் எவருக்கும் பயனில்லாமல் பணத்தை முடக்கி வைக்கக் கூடாது. எவருக்கும் உபயோகமின்றி பணத்தைக் குவித்தாலும் அதற்கும் சில சாபங்கள் உண்டு.
பணம் செலவாவது எப்படி?
ஈட்டுகின்ற பணம் நம்முடைய தேவைகளுக்கு  ஏற்பவும், சேமிப்பைப் பொறுத்தும் மட்டுமே செலவாகின்றது என எண்ண வேண்டாம். காரணம் என்னவெனில்,
1. ரூபாய் நோட்டிலோ, நாணயத்திலோ ஆயிரக்கணக்கான நல்ல, தீய எண்ணங்கள் படிந்திருக்கும். அது எத்தனை கைகளில் படிந்திருக்கும். அது எத்தனை கைகளில் மாறியதோ, அதில் ஒவ்வொருவருடைய உடல், மனதில் உள்ள எண்ணங்கள் அப்படியே படிந்து விடும்.
2. எந்தக் காரியத்திற்காக விற்றல், வாங்கலில் பெறப்பட்டதோ அந்தக் காரியத்தின் தன்மை, விளைவுகளைப் பொறுத்தும் அக்காரிய வினைகள் அதில் பதிந்து இருக்கும். (உதாரணம்) திருடிய பொருளை வாங்கினால் அத்திருட்டின் தீய வினைகள் வாங்குபவரையும் பாதிக்கும்.
3. பெறப்பட்ட பணமானது கல்லாப் பெட்டி, பர்ஸ், சட்டைப்பை அல்லது பாண்ட்பை, முந்தானை, தோல் பை இவ்வகையில் எதில் வைத்துத் தாங்கி வரப்பட்டதோ அப்பொருளின் /அவ்விடத்தின் கர்மவினைகளும் அதில் சேரும்.
4. எக்காரணங் கொண்டும் தோல் பர்ஸைப் பயன்படுத்துதல் கூடாது. தோலினால் விளையும் கர்மங்கள் ஏராளம், ஏராளம், அறிந்தோ அறியாமையாலோ பசுவின் தோலால் ஆகிய பர்ஸைப் பயன்படுத்தினால் கொடிய பாவச் சுமைகள் சேர்ந்து குடும்பத்தையே நாசம் செய்து விடும்.
இயற்கையாக இறந்த விலங்குகளின் தோலை நன்முறையில், நற்காரியத்திற்காகப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் தோல் பர்ஸ் எங்கிருந்து வந்தது என்பது அறியவா முடியும்?
5. வதைக்கப்பட்ட ஜீவன்களின் தோலில் அந்த ஜீவன்களின் வேதனைகள் குவிந்து இருக்கும். இதற்கு முறையான நிவாரணம் பெறுவது என்பது இயலாத ஒன்று. சுற்றுப்புற சூழ்நிலைகளைப் பொறுத்து பலவிதமான எண்ணங்கள் பணத்தாளில் பதிவது உண்டு.
6. மது, புகையிலை, பீடி, சிகரெட் போன்ற தீய பொருட்களை வாங்குவதால், சுவைப்பதால் கொடிய தீவினைகள் பணத்தாளில் சேர்ந்துவிடும்.
7. நற்காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் பணத்தில் நல்லருள் கூடிய எண்ணங்கள் பதிவதுண்டு. ஆனால் அப்பணத்தில் ஏற்கனவே பல தீய தோஷங்கள் கூடியிருக்குமாயின் அந்த நல்ல எண்ணங்கள் வலிமையற்றதாகி விடுகின்றன.
8. கடன் வாங்குதல், கீழே விழுந்த பணத்தை எடுத்தல், அன்பளிப்பு, லஞ்சம், தீயசெயல்களுக்கான கைக்கூலி போன்றவற்றினாலும் பலவித கர்மவினைகள் பணத் தாளில் சேர்ந்துவிடும்.
இவை போன்று எத்தனையோ விதமான காரண காரியங்களினால் தான் செலவின் முறைகள் மாறுபடுகின்றன. இவற்றோடு நம் குடும்பத்தினரின் விருப்பு, வெறுப்புகளும் பணத்தாளில் கூடும்.  பார்த்தீர்களா! ஏதோ நாலணா, எட்டணா, ஒரு ரூபாய், பத்து ரூபாய் என்று எண்ணுகின்றோமே, ஒவ்வொரு நாணயத்தின், ரூபாய் நோட்டின் பின்னணியில் எத்தனை விதமான செயல்பாடுகள் நிறைவேறுகின்றன. இவையனைத்தையுமா ஒரு சாதாரண மனிதனால் எடைபோட முடியும்? அனைத்தையும் அறிந்த சற்குருவைச் சரணடைவோமானால் அவரே நம்முடைய வருமானத்தின் மூல நிலைகள், பெறுகின்ற பணத் தாள்களில் நிறைந்துள்ள தோஷங்கள், எங்கு, எவ்வளவு, எந்தப்பணம், எவ்வகையில் செலவாக வேண்டும் என்பதை நிர்ணயித்து அவற்றை அதன்படி செலவழியச் செய்து, குறித்த தானதர்மங்களின் மூலம் பணத்தாள்களில் உள்ள தோஷங்களை நீக்கும் நல்வழிமுறைகளை மறைமுகமாக அளிக்கின்றார். ஆனால் நம்பிக்கை, சரணாகதி இவற்றோடு ஆன்மீக வழிகாட்டியை நாட வேண்டும்.
திருமுக பூஜை முறை
கலியுக மக்களின் நல்வாழ்விற்கென நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் பணத்தில் உள்ள தோஷங்களைக் களையும் பூஜை முறையாகக் கடைபிடித்து நாம் ஈட்டுகின்ற பணத்தின் தோஷங்களைக் களைந்து, செலவினங்களை முறைப்படுத்தி, கர்ம வினைகளைக்களையும் எளிய நல்வழியைக் காண்போமாக!
1. இத்திருமுக பூஜைமுறையில் செப்பு/ வெள்ளி/ தங்கமுலாம்/ தங்கத்தினாலான நந்தி, சிவலிங்கம் கூடிய பூஜைத் தட்டு அல்லது
2. சங்கு/சக்கரத்துடன் கூடிய பெருமாள் உருவம் பதித்த தட்டு அல்லது
3. கருடாழ்வார்/ ஆஞ்சநேயருடன் கூடிய பெருமாள் தட்டு
இம்மூன்றில் ஏதேனும் ஒன்றைத் திருமுகப் பூஜையில் வைத்துக் கொள்ள வேண்டும். இதில் தான் சம்பளப் பணத்தையோ, வியாபாரத்தில் கிட்டிய பணத்தையோ வைத்துப் பூஜிக்க வேண்டும். அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் இத்திருமுக பூஜையைச் செய்வதே சிறந்ததாகும். இப்பூஜைக்கு அருகம்புல் மிகவும் இன்றியமையாததாகும். தானே சென்று அருகம்புல்லைப் பறித்து வருவது உத்தமமானது. அருகம்புல்லிற்குரிய பிராணப் பிரதிஷ்டை மந்திரங்களை ஜெபித்து அருகம்புல்லைப் பறிக்க வேண்டும். இயலாதோர் அருகம்புல்லை விலைக்கு வாங்கி கங்கை, காவிரி போன்ற புண்ணிய நீரால் நன்றாகக் கழுவி, ப்ராணப் பிரதிஷ்டை மந்திரங்களை முறையாக ஜெபித்து, ஸ்ரீதுர்வாச முனிவரைத் (தூர் என்னும் அருகம்புல்லை மட்டும் உண்டு வாழ்கின்ற மகரிஷி) தியானித்து “ஸ்ரீதூர்வா ஸுக்தம்” என்ற எளிய ஸுக்த மந்திரத்தை 12 முறை ஜெபித்து அருகம்புல்லைத் திருமுக பூஜைக்குத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றதோ, அனைத்தையும் பூஜைக்காக எடுத்து வைத்திடல் வேண்டும். வியாபாரத்தில் உள்ளோர் இத்திருமுக பூஜையைச் செய்வதற்கு முன்னர் கடையிலுள்ள கல்லாபெட்டியில் எவ்வளவு பணம் உள்ளதோ அனைத்தையும் திருமுக பூஜைக்கு வைத்திட வேண்டும்.
பிள்ளையார் பூஜை :
திருமுக பூஜைக்கு முன்னால் மஞ்சளால் செய்த பிள்ளையாரை வைத்து முழுமுதற் கடவுளை ஸ்ரீலக்ஷ்மி விநாயகராகப் பாவித்து
ஓம் சுமுகாய நம:
ஓம் கபிலாய நம :
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம :
ஓம் விகடாய நம :
ஓம் விக்னராஜாய நம :
ஓம் கணாதிபாய நம :
ஓம் தூமகேதுவே நம :
ஓம் கணாத்யக்ஷாய நம :
ஓம் பாலசந்த்ராய நம :
ஓம் கஜாநநாய நம :
ஓம் வக்ரதுண்டாய நம :
ஓம் சூர்ப்பகர்ணாய நம :
ஓம் ஹேரம்பாய நம :
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம :
போன்ற பதினாறு நாமங்களால் துதித்து  ஸ்ரீலக்ஷ்மி விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சிக்க வேண்டும். அருகம்புல்லைக் கிள்ளிப் பூஜிக்கக் கூடாது. அப்படியே கணுக்களுடன் அர்ச்சிக்க வேண்டும். அருகம்புல் கணுக்கள் போல் சந்ததியும், செல்வமும் விருத்தி அடைவதற்கே ஸ்ரீதூர்வா ஸுக்த மந்திரங்களால் ஜெபிக்கப் பெற்ற அருகம்புல் அர்ச்சனை!
ஸ்ரீமுக பூஜை
மஞ்சள் பிள்ளையாரைப் பூஜித்த பின் திருமுக பூஜை தொடங்குகிறது. ஒரு பஞ்ச பாத்திரத்தில் (செப்பு/வெண்கலம்/வெள்ளி/தங்கம்/) கங்கை, காவிரி போன்ற புண்ய தீர்த்தம் கலந்த நீரை ஊற்றி ஒரு தர்பையின் ஒரு நுனி பஞ்ச பாத்திரத்தில் உள்ள நீரிலும் மறுநுனி பூஜைத் தட்டில் உள்ள பணத்திலும் இருக்குமாறு வைக்க வேண்டும். மற்றொரு தர்பையை மனைவியிடம் அளித்துத் திருமுக பூஜைக்கு  (ஸ்ரீமுக பூஜை) மனைவியின் அனுமதியைப் பெற வேண்டும். இல்லத்து லட்சுமியன்றோ! இது மிகவும் முக்கியமாக அனுஷ்டிக்கப்பட வேண்டிய நியதியாகும். அங்கவஸ்திரம் அல்லது துண்டினை பூணூல் போல் இடதுதோள், வலது இடுப்புப் பகுதியில் “யோக வேஷ்டி” என்னும் முறையில் துண்டை அணிந்து மனைவியளித்த தர்பையின்  ஒரு நுனியை வலது கையில் பிடித்து மறுநுனியை பஞ்சபாத்திரத்தையும், பணத்தையும் இணைக்கும் வகையில் தர்ப்பையின் நடுவில் தொடுமாறு வைத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
ஸ்ரீலக்ஷ்மி ஸ்தோத்திரம், ஸ்ரீலக்ஷ்மி ஸஹஸ்ரநாமம், ஸ்ரீஅகஸ்தியர் அருளிய ஸ்ரீலக்ஷ்மி ஸ்தோத்திரம் போன்ற ஸ்ரீலக்ஷ்மி ஸ்தோத்திரங்களைத் துதித்துப் பூஜிக்க வேண்டும். இந்த ஸ்ரீமுக பூஜையின் ஆன்மீக பலன்களாக நாம் சம்பாதித்த பணத்தில் படிந்துள்ள தோஷங்கள், பாவச்சுமைகள், கொடிய வினைப் பூச்சுகள் போன்ற தீவினைகளின் கதிர்கள் நிவர்த்தியாகி பலவிதமான தீயகர்மங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றது. சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியத்துடன் பூஜையை நிறைவு செய்து பஞ்ச பாத்திரத்தில் உள்ள நீரை ஒரு துளி கூட கீழே சிந்தாமல் எடுத்துச் சென்று முச்சந்தியின் ஓரத்தில் ஊற்றிக் கழித்துவிட வேண்டும்.
பணத்தில் உள்ள மேற்கண்ட தோஷங்கள் தர்ப்பை மூலமாக பஞ்சபாத்திரத்தில் உள்ள நீரை அடைகின்றது. பொதுவாக முச்சந்தியில் அப்பகுதியின் எல்லை தெய்வம், ஸ்ரீஜேஷ்டா தேவி (ஸ்ரீலெட்சுமிக்கு மூத்தவள்)  ஆகிய தெய்வ மூர்த்திகளும் இணைந்து அருளாட்சி புரிவதால் இம் மூர்த்திகளே பஞ்சபாத்திரத்தில் உள்ள நீரில் படிந்துள்ள தோஷ சாபங்களை ஏற்று நம்மையும் ஆசீர்வதிக்கின்றனர். இந்த ஸ்ரீமுக பூஜையை மாதந்தோறும் அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் செய்வதே சிறப்புடையதாகும். இந்நாளில் நம்மிடம் எவ்வளவு பணமிருக்கின்றதோ, வியாபாரிகளெனில் கல்லாப் பெட்டியில் எவ்வளவு பணமிருக்கின்றதோ அதை வைத்து ஸ்ரீமுக பூஜையை நடத்த வேண்டும். இந்த ஸ்ரீமுக பூஜையே ஐஸ்வர்ய கடாக்ஷத்திற்கான ஆரம்ப நிலைப் பிரிவுகளில் ஒன்றாகும். நம் இல்லத்தில் ஸ்ரீலெட்சுமிதேவி வாசம் செய்ய வேண்டுமெனில் அதற்காக நம்மையும் நம் இல்லத்தையும் புனிதமாக்க வேண்டியது நம் கடமையல்லவா! அதற்கு வழிவகுப்பதே இந்த ஸ்ரீமுக பூஜையாகும்.

மார்கழியும் உத்தராயணமும்

தை முதல் ஆனி வரை உள்ள ஆறுமாதமுள்ள உத்தராயணப் புண்ய காலமானது தேவர்கள் போன்ற விண் உலகத்தாருக்குரிய பகல் வேளையாகும். ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயனப்புண்ய காலமே அவர்களுடைய இரவுப் பொழுதாம். இரவு முடிந்து பகல் துவங்குவதற்கு முன் உள்ள விடியற்காலைப் பொழுதே மிகச் சிறந்த பிரம்ம முகூர்த்த நேரமெனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாறாக இரவு (தட்சிணாயனம்) முடிந்து உத்ராணயம் (பகல்) பிறப்பதற்கு முந்திய பிரம்ம முகூர்த்த நேரமே மார்கழி மாதமாகும். விண் உலகோருக்கு உரித்தான பிரம்ம முகூர்த்த நேரமாக மார்கழி மாதம் விளங்குவதால் தான் மார்கழியில் விடியற்காலைப் பூஜை அபரிமிதமான சக்தியைப் பெற்றுத் தருகிறது.
வரும் 15.1.1996 அன்று (தை மாதம் முதல் தேதி) உத்தராயணப் புண்ய காலம் தொடங்குகின்றது. எனவே இந்நாளில் சூரிய பூஜை, சூரிய நமஸ்காரம், பித்ரு தர்ப்பணம், வேதபாராயணம், அன்னதானம் மற்றும் ஏனைய தானங்களுடன் (குறிப்பாக கம்பளி ஆடைதானம்) கொண்டாடுவது மிக விசேஷமானதாகும்..
பித்ரு தர்ப்பண பூஜை
இத்தகைய திவ்யமான உத்தராயணப் புண்ய காலம் தொடங்கும் நாளில் அனைவரும் குறிப்பாக சூரியன், செவ்வாய், குரு கிரஹங்களுக்குரித்தான ஒன்பது நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட பூஜை விதிகளைக் கடைபிடிப்பது விசேஷமானதோடன்றி அளப்பரிய புண்ய சக்தியையும் பெற்றுத் தந்து பல விதமான தோஷங்களையும் நிவர்த்தி செய்யும்.
சூரிய கிரஹ நட்சத்திரங்கள்
இவர்கள் இந்நாளில் சாதாரண முறையில் ஆன பித்ரு தர்ப்பணத்திற்குப் பின்னர் தந்தை வர்க்கத்திற்கும் மாமனார், மாமியார், சித்தப்பா, பெரியப்பா வகையினருக்கும் காருண்ய பித்ரு முறையிலேனும் (அவர்களுக்குரிய வம்சாவளியினர் இருந்த போதிலும்) விசேஷமான பொன் நிற  (அல்லது மஞ்சள் நிற பார்டர்) ஆடை அணிந்து கோதுமை தானியத்தைப் பரப்பி (குறைந்தது ஒரு படி) அதன் மேல் தர்பைகளைப் பரப்பி தர்ப்பணம் அளிக்க வேண்டும். மஞ்சள் நிற ஆடையையும், கோதுமையையும் முழு தானியமாகவோ அல்லது உணவாகவோ தானம் அளிக்க வேண்டும்.
செவ்வாய் கிரஹத்திற்குரிய நட்சத்திரக்காரர்கள்
இவர்கள் இந்நாளில் சகோதர, சகோதரி வர்க்கத்தினருக்குத் தர்ப்பணம் அளிப்பது சிறப்பானதாகும். சிவப்பு நிற பார்டர் ஆடை அணிந்து ( தானியத்தைப்) பரப்பி அதன்மேல் தர்ப்பைகளை வைத்துத் தர்ப்பணம் செய்தல் வேண்டும். சிவப்பு நிற ஆடையையும், தானியத்தையும் தானம் அளிக்க வேண்டும்.
குரு கிரஹத்திற்குரிய நட்சத்திரக்காரர்கள்
இவர்கள் இந்நாளில் தாய் வர்க்கத்தினருக்குச் சிறப்பான முறையில் தர்ப்பணம் அளித்திட இதனால் பெற்றோர்கள், பெரியோர்கள் ஆசி கிட்டுவதுடன், பலவிதமான (தினசரி) வாழ்க்கைத் துன்பங்களையும் நிவர்த்தி செய்யும். இவர்கள் நார்ப்பட்டை அணிந்து உரித்த பச்சை நிலக்கடலைகயைப் பரப்பி (குறைந்தது ஒரு படி) அதன் மேல் தர்ப்பைகளைப் பரப்பி தர்ப்பணம் அளித்தல் வேண்டும்.
ஏனைய நட்சத்திரக்காரர்கள்

கிரஹம்

உரிய நட்சத்திரங்கள்

தானம்

சூரியன்

கிருத்திகை, உத்திரம், உத்திராடம்

கட்டுரையில் உள்ளபடி

செவ்வாய்

மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம்

கட்டுரையில் உள்ளபடி

குரு

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

கட்டுரையில் உள்ளபடி

சந்திரன்

ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்,

பால் தானம், பசு தானம் மிகவும் விசேஷமானது.

புதன்

ஆயில்யம், கேட்டை, ரேவதி

சுவர்ண (பொன்) தானம், வசதிக்கேற்ப குணடு் மணி எடையுள்ள தங்கத்தையும் தானம் செய்யலாம்.

சுக்ரன்

பரணி, பூரம், பூராடம்

சாயம் தோய்க்கும் தொழிலாளர்களுக்குத் தான தருமங்கள்

சனி

பூசம், அனுஷம், உத்திரட்டாதி

யானைக்கு உணவிடல்

ராகு

திருவாதிரை, சுவாதி, சதயம்

கார், டூவீலர், சைக்கிள் ரிப்பேர் செய்யும் ஏழை மெக்கானிக்களுக்கு உபகரணங்கள் அளித்தல்

கேது

மகம், மூலம், அஸ்வினி

கருமான் பட்டறை, இரும்புப் பட்டறைத் தொழிலாளர்களுக்கு உணவு, உடை ஏனைய தான தர்மங்கள்

தை அமாவாசை

யுவ வருட தை அமாவாசையன்று (20.1.1996) இரண்டு/மூன்று/நான்கு குழந்தைகள் பெற்ற சுமங்கலிகளுக்குப் பாத பூஜையுடன் 51 முறை நமஸ்காரம் செய்து அவர்களுடைய பாதங்களைத் தம் தலையில் வைத்து ஆசிபெறுதல் மிகவும் விசேஷமானதாகும். இதற்குப் பாததூளி ஸ்பர்ச பூஜை என்று பெயர். எளிய பாத பூஜை முறைப்பற்றிய விளக்கங்களை “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழில் காணலாம். ஆறு குழந்தைகளைப் பெற்ற ஒரு சுமங்கலிக்கு இத்தகைய பாதபூஜை செய்வது மிகவும் பெறற்கரிய பாக்யமாகும்.
யுவ வருட தை அமாவாசைக்கு நம் சிவகுரு மங்களகந்தர்வா இரண்டு விதமான பூஜைகளை எடுத்துரைத்துள்ளார்கள். முதலாவதான பாததூளி ஸ்பர்ச பூஜையை மேற்கண்டவாறு செய்திடல் வேண்டும்.
பித்ரு தீபஜோதி பூஜை : இரண்டாவது பூஜையான இம்முறையில் ஒரு விளக்கினைத் தந்தையாகவோ தாயாகவோ பாவித்து அதற்கு வேட்டி அங்கவஸ்திரம் அல்லது புடவை, இரவிக்கைத் துணி சார்த்தி மஞ்சள , சந்தனம், குங்குமமிட்டு புஷ்பம் சார்த்தி அலங்கரித்து குறைந்தது ஐந்து, சுமங்கலிகளைக் கொண்டு ஐந்து முகங்களையும் ஏற்றி லலிதா சஹஸ்ரநாமம், திரிசதி, அபிராமி அந்தாதி போன்ற சக்தித் துதிகளைப் பாராயணம் செய்து தீபத்தை வலம் வந்து சுமங்கலிகளுக்குப் பழம், பூ, குங்குமம் போன்ற மங்களப் பொருட்களையும் குறிப்பாக மஞ்சள் நிற ஆடைகளையும் தானமாக அளிக்க வேண்டும்.
ஜாதி, குல வேறுபாடில்லாது ஏழை சுமங்கலிகளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். தாய், தந்தை சுற்றங்களில் ஏழைச் சுமங்கலிகள்  இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்கலாம். மற்றபடி சுற்றத்திற்குள் சுமங்கலிப் பூஜை நடத்துவது ஏற்புடையதல்ல! தை அமாவாசையன்று குறித்த பித்ரு தர்ப்பணத்திற்குப் பிற்கு இத்தகைய இரண்டு பூஜைகளுள் ஏதேனும் ஒன்றையோ அல்லது வசதிக்கேற்ப இரண்டையுமே ஏற்று நடத்தலாம். சுமங்கலி பூஜையில் சுற்றத்தாரை சுமங்கலிகளாக வரிக்கும் குடும்பப் பழக்கமிருப்பின் அவர்கள் (சுற்றத்துச் சுமங்கலிகள்) அதற்கு ஈடான தான தர்மங்களைச் செய்தால் தான் சுமங்கலி பூஜையின் பரிபூர்ண பலனைப் பெறலாம்.
வசந்த பஞ்சமி
வசந்த ஸ்ரீபஞ்சமியன்று இந்திரன் ஸ்ரீமஹாலட்சுமியை பூஜித்துப் பெரும் ஐஸ்வர்யங்களைப் பெற்றான். இத்திருநாளில் ஸ்ரீபாலா, ஸ்ரீமதி, ஸ்ரீப்ரியா மற்றும் லட்சுமியின் நாமங்களை உடையவர்கள் கையால் தானதர்மங்கள் செய்வது அளப்பரிய புண்யத்தைப் பெற்றுத் தரும். எத்தனையோ கோடி இந்திரர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களுள் உத்தம நிலை பெற்று தெய்வீக நிலையடைந்தோர் பலர். அத்தகைய அனைவர்க்கும் உகந்த இந்த வசந்த ஸ்ரீபஞ்சமியன்று லட்சுமியின் நாமத்தையுடைய 51 ஏழை சுமங்கலிகளைக் கொண்டு ஸ்ரீலட்சுமி அஷ்டோத்திரம், சஹஸ்ரநாமம், ஸ்ரீஸுக்தம் போன்ற துதிகளைப் பாடி, நைவேத்யங்களை (இயன்ற அளவு உணவுப் பிரசாத வகைகள், முந்திரி, கல்கண்டு, திராட்சை, தேங்காய்)  படைத்து ஸ்ரீலட்சுமியை வணங்குவதால் தரித்திர நிலை, பணத்தட்டுபாடு நீங்கும் நல்வழி காணலாம். இதனைப் பலர் ஒன்று சேர்ந்த கூட்டு வழிபாடாகச் செய்வது சிறப்புடையதாகும்.
ஸ்வர்ண அர்ச்சனை : மிகுந்த வசதியுடையோர் மேற்கண்ட பூஜையை 108 பொன் நாணய அர்ச்சனையுடன் சிறப்புறச் செய்திட செல்வம் விருத்தியாகும்.
பீஷ்ம தர்ப்பணம்
இவ்வருட பீஷ்ம தர்ப்பணம் (27.1.1996) அன்று அமைகிறது. இந்த யுக வருட பீஷ்ம தர்ப்பணத்திற்கு ஸ்தூல ஸ்தான பீஷ்ம தர்ப்பணம் என்று பெயர். நைஷ்டிக பிரம்மச்சாரியான பீஷ்மர் தன்னுடைய பிரம்மச்சர்யத்தைக் காப்பதற்காகப் பலவித ஹோம, யாகங்கள், தவம், பூஜை, விரதாதி அனுஷ்டானங்களை மேற்கொண்டார். தற்காலத்தில் இளவயதுடைய ஆண், பெண்கள் தவறான காம உணர்ச்சிகளின்பால் வயப்படுகின்றனர். ஆனால் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபத்தைத் தினந்தோறும் முறையாகச் செய்து வந்தால் முறையற்ற காம உணர்வுகளை அறவே தவிர்க்கலாம். சந்தியா வந்தனம், சூர்ய நமஸ்காரம், ஸ்ரீகாயத்ரீ ஜபம் போன்ற நித்ய பூஜைகளை முறையாகச் செய்து வருவது அருகி விட்டமையால் இப்போதைய இளைஞர் சமுதாயம் காமப்பிடியில் சிக்கி ஒழுக்கம் தவறுகின்றனர். பெற்றோர்களே நித்ய பூஜைகளைக் கைவிட்டிருக்க யாரை நாம் நொந்து கொள்ள முடியும் ?
எனவே தங்கள் ஆண்/பெண் சந்ததியினர் ஒழுக்கத்துடன் கற்புநெறியுடனும் வாழப் பெற்றோர்கள் பீஷ்ம பஞ்சகம், பீஷ்ம தர்ப்பண பூஜைகளையேனும் முறையாகச் செய்திடல் வேண்டும்.
1. வஞ்சித தோஷம் : நிர்வாணப் படங்கள், காம வெறியூட்டும் காட்சிகளைப் பார்க்கையில் உடலில் ஒருவித சூடு உண்டாகி, பித்த நாடிகளைப் பாதித்து உடலில் பலவித விளைவுகளை ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு முறையும் இத்தகைய முறையற்ற காம உணர்ச்சி ஏற்படுகையில் இச்சூட்டுத் தன்மையின் உஷ்ணம் பல்கிப் பெருகி உடல், மனம் இரண்டையுமே பாதித்து உடல் நலம், குணம், மனோ நலம், சாந்தம் அனைத்தையுமே பாதிக்கும். இதற்கு “வஞ்சித தோஷம்” என்று பெயர்.
2. பந்த தோஷம் : தன்னிடம் அன்பு காட்டி நேசமுடன் பழகியவர்களுக்குத் துரோகம் இழைத்தல் அல்லது அவர்கள் மனம் நோகும்படி நடந்து கொள்ளுதல் அல்லது தன்னை நேசித்தவர்கள், தன்னிடம் அன்புடன் காதல் கொண்டிருந்தவர்களை சூழ்நிலை, சந்தர்ப்ப வசத்தால் வாழ்க்கை மாற்றங்களை ஏற்க வேண்டி வந்திடில் அவர்களிடம் குரோதம் கொண்டு பழிவாங்குதல். இதுவே பந்த தோஷமாகும்.
3. கல்பித தோஷம் : பிறர் தன்னை நேசிப்பதாக எண்ணிக் கொண்டு அவர்களிடம் முறை தவறிப் பழகுதல், பெண்களை/ஆண்களை வஞ்சித்து ஏமாற்றுதல்., இதனால் ஏற்படுவது கல்பித தோஷம்.
4. வந்தூலக தோஷம் : தன்னைவிட வயது கூடிய பெண்ணை மணத்தல், நீண்ட வயது வித்யாசமுள்ள ஆணை/பெண்ணை மணத்தல் – இதனால் சுவாசக் கோளாறுகள் , நரம்பு வியாதிகள் , வாழ்க்கையில் ஒரு வெறுப்புணர்ச்சி (frustration) ஏற்படும். இதற்கு வந்தூலக தோஷம் என்று பெயர்.
5. ப்ரணகால தோஷம் : திருமணப் பொருத்தங்கள் பாராது, அன்பு, பாசமுமின்றி பணம், புகழ், அந்தஸ்து, பதவிக்காக ஒருவரை மணத்தல். இதனால் வாழ்க்கையில் பற்றில்லாமல் ஏனோ தானோவென்று வாழ்கின்ற நிலை ஏற்படும்.
பீஷ்மர் மேற்கண்ட தோஷங்களையுடையப் பலருக்கு நல்வழி புகட்டிப் பல பிராயச்சித்த முறைகளைத் தந்து தான தர்மங்களிலும் பங்கேற்றார். அவற்றை நாமும் கடைபிடித்து, பலருக்கும் நல்லுரை தந்து அறவழி காட்டிடில் முறையற்ற காம உணர்ச்சிகளை அறவே தடுத்திடலாம். பீஷ்மாச்சார்யாரை தியானித்து அவருக்கு இந்நாளில் தர்ப்பணமளித்து மேற்கண்ட அறநெறிகளைத் தொடர வேண்டும்.

தோஷம்

தோஷ நிவர்த்தி

வஞ்சித தோஷம்

சகோதரிகளை நமஸ்கரித்து அவர்களுக்கு உதவி – சகோதரியல்லாதோர் ஏழைப் பெண்களுக்குத் தானமளித்தல்

பந்த தோஷம்

தந்தை, தாய், சகோதர, சகோதரி வர்கங்களில் மாமா, அத்தை, சிற்றப்பா, பெரியப்பா – ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள்.

கல்பித தோஷம்

தன்னைவிட மூத்த வயதுள்ள பெண்களுக்கு உதவி.

வந்தூலக தோஷம்

அதிக வயதுடைய பெண்களை மணந்த கணவன், அதிக வயது வித்யாசமுடைய (10 வருடங்களுக்கு மேல்) தம்பதிகள் ஆகியோருக்கு தானதர்மங்கள். பழமுதிர் சோலைத் திருத்தலத்தில் ஏழை தம்பதிகளுக்கு தான தர்மங்கள்.,

ப்ரணகால தோஷம்

தன் தவறுக்கு உளமாற வருந்தி மன்னிப்புக்கோரி அநாதை ஆஸ்ரமங்களில் பெண்களுக்குத் தான தர்மங்கள்.

மேற்கண்ட நல்கர்மங்களைப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து நிறைவேற்றிட ஒழுக்கந்தவறி வாழும் தங்கள் பிள்ளைகள் சீர்பெற்று நல்வாழ்வு வாழ பீஷ்மரின் அருளாசி கிட்டும்.
தைபூசம் :- இவ்வருடத் தைப்பூசத்தன்று (4.2.1996)- கணவனே கதியென்று வாழ்வோர், கணவனை விட்டு ஒரு கணமும் பிரியாது வாழ்வோர், கணவன் செய்வது நல்லதோ, கெட்டதோ, எதுவாயினும் சரி, கணவனே தனக்கு ஒரே ஆதரவு என்று கணவனை நம்பியே வாழ்வோர், கணவனுடைய இறுதி மூச்சுவரை அவருக்குத் தான் பணிவிடை செய்தல் வேண்டும் என்று வாழ்வோர். இத்தகைய உத்தமப் பெண்மணிகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சேவை செய்து இயன்ற உதவியை அளித்திட வேண்டும். வெள்ளைப் புடவையணிந்து வாழும் விதவைப் பெண்மணிகளுக்கு உதவிபுரிதல் மிகவும் விசேஷமானதாகும். இதனால் பூச நட்சத்திர தேவியின் கருணைக் கடாட்சம் கிட்டும். இத்தகைய இறைப்பணி கணவனுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல தேக ஆரோக்யத்தையும், மனைவிக்கு சாந்த குணத்தையும் தந்து பூசல்களின்றிக் குடும்ப வாழ்க்கை அமைதியான முறையில் நடைபெற அருள்புரியும்.

ஆத்ம விசார வினா விடை

வினா : சில படங்களில் காளியின் காலடியில் சிவபெருமான் இருப்பது போலக் காணப்படுகிறதே, இதற்கான விளக்கம் யாது? (திருச்சி அடியார்)
விடை : ருத்ரம், கௌரி போன்ற பல கடுமையான தாண்டவங்களை ஏற்று சக்தி அம்சத்தில் துஷ்டர்களையும், அசுரர்களையும் தீய சக்திகளையும் அழிப்பதற்காக அத்தகைய கொடூர ரூபங்களே அஞ்சி நடுங்கும் வண்ணம் சிவசக்தி அம்சமே காளி வடிவில் அவதாரம் பெற்றுள்ளது. சிவத்தில் இருந்து பிரிந்து வந்த சக்தி ஆதலின் மகிஷாசுரன் போன்ற அசுரர்களை வதம் செய்த பின்னர் அத்தீய சக்திகளைத் தன்னுள் ஏற்றுப் ப்ரபஞ்சமெங்கும் காளி வலம் வந்தனள். காளி அவதாரம் பரிபூரணமான சிவ-சக்தி கூடிய மிக மிகப் புனிதமான சிவமய தேஹத்தைக் கொண்டதாகும். எனவே காளி தேவி, தன் ரூபத்தைத் தாங்கி நிற்கும் இடத்தைத் தேடி ப்ரபஞ்சமெங்கும் யாத்திரை செய்தனள்.
கோடிக்கணக்கான லோகங்களில் எவ்விடத்திலும் எவராலும் காளிதேவியின் உக்ரஹத்தையோ, புனிதத் தன்மையையோ ஏற்க முடியவில்லை. ஹிரண்யனை வதம் செய்த பின்னர் ஸ்ரீநரசிம்ஹ மூர்த்தியின் உக்ரஹத்தை எவராலும் தணிக்க இயலவில்லையல்லவா? சிவ பெருமானே ஸ்ரீசரபேஸ்வரராக அவதாரம் பூண்டு ஸ்ரீநரசிம்மாவதாரத்தின் அதிகமான உக்ரஹ சக்தியைத் தன்னுள் ஏற்று ஸ்ரீநரசிம்ஹரை சாந்தப்படுத்தினார். இதேபோல் மிகப் புனிதமான சக்தியைத் தாங்கி மிகக் கொடிய தீய சக்திகளை அழித்து அவற்றைத் தன்னுள் ஏற்ற காளிதேவியின் உக்ரஹமும் தணிக்கப்பட வேண்டுமல்லவா? ஆனால் காளி தேவி எங்கேனும் ஒரு க்ஷணமாவது நிலை கொண்டால் அல்லவா அவ்வாறு செய்ய முடியும். காளிதேவியின் புனிதமான சிவசக்தியானது தீய சக்திகளை சம்ஹாரம் செய்து, அவற்றைத் தன்னுள் ஏற்றமையால் பெருகிய உக்ரஹத்தன்மையுடன் கூடி ருத்ராக்னியாய் பல்கிப் பெருகியது. இவற்றைக் கருத்தில் கொண்டால் எந்த லோகத்தில் ஸ்ரீகாளியை நிலைபெறச் செய்ய இயலும் ? காளி தேவியே இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து சிவபெருமானைத் தஞ்சம் அடைந்தனள்.   
“தேவி! பரிசுத்தமான உன் திருமேனியை எம்மையன்றி எவராலும் தாங்க இயலாது. மேலும் கொடிய, தீய சக்திகளையும் அழித்து அவற்றை நின் திருமேனியில் ஏற்றிருப்பதால் உன்னுடைய இந்த காளி தேவி அவதார ரூபத்தை என் உடலிலேயே நான் ஏற்கின்றேன். ஏனெனில் யாம் உண்ட ஆலகால விஷசக்தியானது நீ ஏற்றிருக்கும் தீயசக்திகளின் விஷத்தன்மைக்கும் மாற்றாக அமையும்!“  என்று அருள்பாலித்த சிவபெருமான் தன் திருமேனியைத் தரையில் கிடத்திட்டு அதன்மேல் ஸ்ரீகாளிதேவியை நிற்கச் செய்தார். இதனால் உக்ரஹத்தின் உச்சியில் இருந்த காளிதேவி சாந்தம் அடைந்தனள். ஆதலால் காளி தேவி சிவனை மிதித்தவாறு கோலம் பூண்டுள்ளாள் என்று எண்ணலாகாது.
வினா : ஸ்ரீவாஸ்து புருஷன் பற்றிய விளக்கமறிந்தேன். ஆனி,புரட்டாசி மாதங்களில் ஸ்ரீவாஸ்து புருஷன் நித்திரை விழிப்பதில்லையாதலின் இம்மாதங்களில் கட்டிட வேலைகளைத் துவங்கக் கூடாது என்பது வாஸ்து நியதி. ஆனால் ஏற்கனவே தொடங்கப்படுள்ள கட்டிட வேலைகளை என் செய்வது?
விடை : ஸ்ரீவாஸ்து புருஷன் சயனிக்கும் மாதங்களில் பூமி பூஜை கூடாது. ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள கட்டிட வேலைகளாயின் இம்மாதங்களில் கட்டிட வேலைகளைச் சற்றே நிறுத்தி விட்டுக் கட்டிடத்திற்கான மற்ற ஆயத்தப் பணிகளைத் (சிமெண்ட், கம்பிவாங்குதல் etc) தொடரலாம். இதற்குக் கூட அருகிலுள்ள சித்தபுருஷர்களின் / மஹான்களின் ஜீவசமாதியில் வழிபாடு, தான, தர்மங்களை நிகழ்த்தியே மற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் பூமியில் புதையுண்டு, எரியுண்டு ஜீவசமாதி ஏற்கின்ற சித்த புருஷர்கள்/மஹான்களே அந்தந்த பூமியின் நிலதேவதைகளின் அருளாட்சி பரிபாலனத்தையும் மேற்கொள்கின்றனர். இவ்வாறாக ஜீவசமாதி வழிபாட்டினால் கஜபூஜையினாலும் ஸ்ரீபூமாதேவியும் ஸ்ரீவாஸ்து புருஷனும் ப்ரீதி அடைகின்றனர்.
1. மேலூர் மதுரை – ஸ்ரீகுழந்தையானந்த சுவாமிகள் (அரசரடி), ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள்.
2. கரூர் – சதாசிவ பிரமேந்திராள் (நெரூர்)
3. காஞ்சீபுரம் – ஸ்ரீபோடா (நாகநாத சிவசாமி) சுவாமிகள், ஸ்ரீபரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
4. பாண்டிச்சேரி – ஸ்ரீபடேஸாஹிப் ஸ்வாமி (சின்னபாபா சமுத்திரம்)
5. சென்னை – கரபாத்திர சுவாமி (வியாஸர்பாடி)
6. பழனி – ஸ்ரீபோகர்
அடியார் : பணம் என்பதற்கு ஆன்மீகப் பொருள் யாதோ?
சற்குரு : பணம் என்பது புண்ணியத்தின் வட்டியென சித்தபுருஷர்கள் அருள்கின்றனர்.
அடியார் : கஷ்டம், அல்லது துன்பம் என்பது என்ன?
சற்குரு : பாவத்தின் வட்டியே கஷ்டம் அல்லது துன்பம், பரிகாரம் செய்யப்படாத பாவத்தின் வட்டி இதர துன்பமாக/நோயாக மாறுகின்றது.
அடியார் : பரிகாரம் செய்யப்பட்ட பாவத்தின் நிலை?
சற்குரு : பசு, கோயில் கோபுரம், தீர்த்தம், தலம் போன்றவையும் சித்தர், மஹான் யோகி போன்றோரும் ஏற்றுக் கொள்ளுதலும் உண்டு.
அடியார் : புண்யத்தை அதிகமாக சேர்த்தலால் பாதிப்பு உண்டோ ?
சற்குரு : ஆம்! அதிக புண்யமும் நல்லதல்ல! பூர்வஜென்ம புண்ய வசத்தால் லட்சாதிபதிகளாக, கோடீஸ்வரர்களாக இருப்போரும், உயர்பதவி, அந்தஸ்து உள்ளோரும் ஒழுக்கந் தவறி வாழ்வதைக் கண்கூடாகக் காண்கிறோமே!
அடியார் : அபரிமிதமான புண்யம், அல்லது புண்ய சக்தி விரயமாவதுண்டா?
 சற்குரு : உண்டு, அதே போல் அளவு கடந்த பாவத்தால் விளையும் புண்ய சக்தியும் விரயமாவதுண்டு! உதாரணமாகப் பிறரிடம் பிடுங்கிப் பெற்ற லஞ்சப் பணத்தால் தான தர்மங்கள் செய்திடில் அதிலும் புண்யம் பெருகும். ஆனால் அது நற்காரியங்களுக்குப் பயன்படாமல் எங்கேனும் விரயமாகும்.
அடியார் : பல நாடுகளில் பொருளாதார ரீதியாக மத்ய வங்கிகளில் (like reserve bank of india) கோடிக் கணக்கான கரன்ஸி நோட்டுக்கள் Reserve ஆக வைக்கப்படுகின்றனவே, இதற்கும் ஆன்மீக விளக்கமுண்டா குருதேவா?
சற்குரு : (சிரித்துக் கொண்டே) பிரபஞ்சத்தில் எதுவும் காரண காரியமில்லாமல் நடப்பதில்லை அப்பனே! ஒரு சிறு நெஞ்சில் முள் காலில் குத்துவதற்குக் கூட காரணங்களுண்டு, ஆனால் மனித மனம் இவற்றை ஏற்பதில்லை! அத்தகைய Reserve பணத்திற்குப் “பரிவற்ற பணம்” என்று பரிபாஷையில் பெயருண்டு. நாடெங்கும் வன்முறை, அதிகாரம், லஞ்சம், அரசியல்  துஷ்பிரயோகம், சட்டம், அநீதி, மிரட்டல் போன்றவை காரணமாகப் பலர் பணத்தை இழக்கின்றார்கள் அல்லவா! அத்தகைய எண்ண அலைகளே RESERVE  ஆக மாறுகின்றன!
எனவே வீட்டில் கூட நெடுநாட்கள் பணத்தை வெறுமனே முடக்கி/ முடிச்சுப் போட்டு வைக்கக் கூடாது. அவற்றில் Negative Vibrations எளிதில் குடி கொள்ளும்.
அடியார் : பூஜ்யம் என்பது என்ன?
சற்குரு : பூஜ்யம் என்பது நேர்கோடு என என்னுடைய குருநாதர் கூறியிருக்கின்றார். சற்று ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் இது உண்மை என்பது புரியும். பூஜ்யத்தை வரைந்து மேலிருந்து பார்த்தால் வட்டம் என்ற உணர்வு ஏற்படும். ஆனால் மிகமிகப் பெரிய வட்டத்தை வரைந்து அதன்மேல் எறும்பு போல் ஊர்ந்து நடந்து சென்றால் வட்டம் என்ற உணர்வா ஏற்படும்? நேரே செல்வது போலத்தானே தோன்றும்! மேலும் இதை ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் அநேக ஆன்மீக இரகசியங்கள் புலப்படும்.
அடியார் : ஒரு நற்காரியம் செய்கையில் புண்யம் உருவாகிறதா? கர்ம வினை கழிகின்றதா?
சற்குரு : சற்குரு போன்ற ஆன்மீக வழிகாட்டிதான் அதைத் துல்லியமாகக் கூற முடியும். அன்னதானம், வஸ்திர தானம் போன்ற தான தர்மங்களை நடத்துகையில் சற்குருவானவர் அதில் சேவை செய்பவருடைய பூர்வ ஜன்ம பாக்கி, தற்கால வாழ்க்கை, எதிர்காலத் துன்பங்களைக் கருத்தில் கொண்டு கர்மவினை கழிப்பு, புண்ய சக்தி ஈட்டல் இரண்டையும் குறித்த விகிதாச்சாரத்தில் அவர் தந்தருள்கின்றார். ஒரேயடியாகக் கர்மங்களைக் கழித்து விட்டால் வாழ்க்கையில் பிடிப்பு இராது, பின் குடும்பம் என்னாவது? அதேபோல் அபரிமிதமாகப் புண்யம் குவிந்தாலும் அதிகாரம், மமதை, செருக்கு உண்டாகிச் சின்றின்பத்தில் இழந்து விடுவார்கள்.  எவராயினும் சரி, அவரவர் உடல், மனப் பக்குவத்திற்கு ஏற்ப ஓரளவு புண்ய சக்தியையே ஏற்க முடியும்! ஆனால் ஜபம், தியானம், பிராணாயாமம், யோகம், கோயில் திருப்பணி, ஆழ்ந்த குரு நம்பிக்கை இவற்றை முறையாகக் கடைபிடித்தால் நிறைந்த புண்ய சக்தியை உடலில் ஏற்கலாம்.
வெறும் புண்ய சக்தியை ஏற்றுப் பயனில்லை. ஆனால் அதை நற்காரியத்திற்குச் செலவிடும் பாங்கை அறிய வேண்டும்.
அடியார் : புண்ய சக்தி நல்லதை மட்டும் செய்யாதா?
சற்குரு : அதற்கு சற்குரு தேவை! தனிப்பட்ட முறையில் செய்கின்ற நற்காரியங்களினால் கிட்டும் புண்ய சக்தி நல்லதையே செய்யப் பயன்படும் என்று சொல்ல முடியாது. சில தவறுகளிலிருந்து மனிதன் அலுவலகத்திலோ அல்லது சமுதாயத்தில் வேறு எங்குமோ தண்டனையின்றியோ அல்லது “மெமோ” போன்ற சாதாரணமான எளிய தண்டனையுடன் தப்புவதற்கு அவனுடைய புண்ய சக்தியே செலவழிகின்றது. புண்ய சக்தி இருப்பதால் தான் அதிகாரம், பதவி, அந்தஸ்து காரணமாகப் பலரை மிரட்டிக் காரியத்தைச் சாதிக்கின்றனர். எனவே புண்ய சக்தி கொண்டு நல்லதையோ தீயதையோ மனிதன் எதை வேண்டுமானாலும் செய்திடலாம். ஒரு மனிதன் தனிப்பட்ட முறையில் அன்னதானம் செய்கையிலும், ஒரு சற்குருவின் கீழ் இயங்கும் சத்சங்க சார்பான அன்னதானத்திலும் கிட்டும் புண்யசக்திகள், ஒரேவிதமான அன்னதானமாகவிருப்பினும், ஆன்மீக ரீதியாக வித்யாசமானவையே! சத்சங்கக் கூட்டுக் காரியங்கள் பன்மடங்குப் புண்ய சக்தியைத் தரவல்லவை! எனவே இல்லறத்திலிருந்தவாறே சத்சங்கத்தில் இருந்து ஆற்றும் ஆன்மீகப் பணிகள் தாம் நம்முடைய வாழ்நாளில் அரிய இறை தரிசனங்களை எளிதில் பெற்றுத் தந்து நற்கதியையும் தரும்.

மார்கழி மகிமை

மார்கழி என்பதன் பொருள் என்ன? வேதத்திற்கு மார்க்கம் காட்டிய கோல் என்று பொருள். பிரபஞ்சத்தில் உள்ள ஜீவன்களுக்கே நல்வழி காட்டும் வேதத்திற்கே வழிகாட்டும் கோல் எனில் என்னே அதன் மகிமை! வேதங்கள் என்று நாம் பன்மையில் அழைக்கின்ற வேதமானது ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு பகுதிகளாக ஸ்ரீவியாஸர் பகுத்துத் தருமுன்னரே வேதப் பரம்பொருளாய் ஒன்றாய் அது ஒளிர்விட்டுப் பிரகாசித்தது. ஆதிசிவன் தன்னுடைய உடுக்கையில் தெய்வீக ஒலியை எழுப்பி பீஜாட்சரங்களைப் படைக்கு முன்னரே நால்வேதம் தனை  யாங்கனும் அணுமயமாய்ப் பிரபஞ்சமெங்கும் நிரவச் செய்தார்.
இன்றைக்கு ஆகாயமெங்கும் வேதப் பொருள் பரவிக் கிடக்கின்றது. இலட்சக்கணக்கான யுகங்களில் உத்தம மகரிஷிகள் அருந்தவம் பூண்டு விண்ணிலிருந்து வேதத்தைக் கிரஹித்து அதனை மந்திரங்களாக, அட்சராப்யாசங்களை வடித்துத் தந்தனர். ஆதிசிவன் உடுக்கையிலிருந்து எழுந்த வேத ஒலிப் பிரவாகத்தில் அணுவினும் சிறிய அளவைக் கூட நாம் இன்னும் பெறவில்லை. வேதம் கரை கடந்தது. எந்தெந்த இடத்திற்கு எத்தகைய, எவ்வளவு வேத மந்திரங்கள் (பல லோகங்களுக்கும்) தேவையோ அவற்றையே மகரிஷிகள், ஆகாயத்திலிருந்து கிரஹித்து நமக்குத் தந்துள்ளனர். ஆனால் வேதத்தை நன்கு போற்றிப் பாதுகாக்காமையால், பல்லாயிரக்கணக்கான சக்திவாய்ந்த அபூர்வமான வேத மந்திரங்களை மனித குலம் இழந்து வாடுகின்றது.
ஆதிமூல வேதமூர்த்தி நான்கு சிரசுகளுடன் பிரபஞ்சத்தில் பவனிவர, கிருதயுகத்தில் அனைவரும்  வேதத்தை நன்கு போஷித்தனர். எனவேதான் கிருதயுகத்தில் ஜீவன்களோடு ஜீவன்களாக தெய்வமூர்த்திகளே இணைந்து நடமாடி அருள்பாலித்தனர்.  யுக நியதிகளின்படி வேதத்தால் பெற்ற அற்புதமான சக்தியை ரிஷிகள், தேவகள், அசுரர்கள், மனிதர்கள் போன்றோர் தவறான முறையில் சுயநலம், கௌரவம், ஆதிக்கம் போன்றவற்றிற்காகப் பயன்படுத்தத் தொடங்கிடவே ஆதிமூல வேதமூர்த்தி ஆதிசிவனிடம் முறையிட்டு. “சுவாமி ஜீவன்களுக்கு நற்கதியளிக்க வேண்டி தாங்கள் என்னைப் படைத்திட, என்னை உபாசிப்பவர்கள் வேதசாராம்ச சக்தியைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டு அஞ்சுகிறேன். தாங்களே எனக்கு மார்க்கம் காட்ட வேண்டும்” என்று பிராத்தித்தார். பரப்பிரும்ம சதாசிவமான வேதகிரீஸ்வர ஸர்வேசுரன் வேதத்தைப் பிரபஞ்சமெங்கும் பவனி வருமாறு அருளாணையிட்டார். ஆதிமூல வேத மூர்த்திக்கு வழி காட்டும் வண்ணம் “ஞான சடாட்சரக் கழி”  என்ற ஒரு தேஜோமயமான் ஜோதியைத் தன் உள்ளங்கை ரேகையிலிருந்து சிருஷ்டித்து, “யாங்கணும் சுழலும் தன்மையுடைய இந்த ஞானசடாட்சரக் கழியானது எங்கு நிலை கொள்கின்றதோ அங்கு அந்நாளில் வேத மார்க்கம் (இக்) கழிமூலம் கிட்டும்” என்று அருள்பாலித்தார்...
சர்வேஸ்வரனின் திருக்கரத்தில் உருவான ஞான சடாட்சரக் கழியைத் தொடர்ந்த ஆதிவேத மூர்த்தி பிரபஞ்சமெங்கும் பவனி வந்தார். யாங்கணும் “ஞான சடாட்சரக் கழி” ஜோதிச் சுழலாய் துரித கதியில் சுழண்று செல்வது கண்டு வியப்படைந்தார். ஞானசடாட்சரக் கழி இறுதியில் அருணாசலமாம் திருஅண்ணாமலையை அடைந்தது. பிரபஞ்சமெங்கும் வியட்டிப் பிரணவச் சுழி, சமட்டிப் பிரணவச் சுழி என்ற இரண்டு ஓங்காரப் பிரணவச் சுழிகளைப் போல் சுழன்று, சுழன்று வந்த ஞான சடாட்சரக்கழி, திருஅருணாசலத்தை அடைந்தவுடன் நிலை பெற்று நின்று மேலும் தேஜோமயமாய் ஒளிர்விட்டுப் பிரகாசித்தது. அது மட்டுமா, அது திருஅருணாசலத்தையே  கிரிவலம் வந்தது. ஆதிமூல வேதமூர்த்தியும் ஞான சடாட்சரக் கழியைத் தொடர்ந்து கிரிவலத்தைப் பூர்த்தி செய்தார்.
 கிரிவலப் பகுதியில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் மண்டபத்தருகில் சதுர்முக வேத தரிசனம் என்ற விசேஷமான தரிசனம் ஒன்றுண்டு. நான்கு முகங்களாய் மலை விரிந்து காட்சி தரும். இவ்விடத்தில் ஞானசடாட்சரக்கழி திருஅண்ணாமலையுடன் ஒன்றியது. திருஅருணாசலேசுவரர் அங்கு ஜோதியாய்க் காட்சி தந்து “ஸ்ரீமன்நாராயணனே ஸ்ரீவியாச பகவானாக அவதாரம் கொண்டு வேதத்தை ரட்சிக்க விருக்கின்றார். அவர் நான்கு மகரிஷிகளுக்கு வேதத்தைக் கட்டிக் காக்கும் வழி முறைகளைத் தந்தருள்வார்”, என்று அருள்பாலித்து ஸ்ரீஆதிவேத மூர்த்தியை ஞானசடாட்சரக் கழி காட்டும் ஒளிப் பாதையில் பீஜங்களாக, மந்திரங்களாக சூத்திரங்களாக, பீஜாட்சரங்களாக வேதத்தை விரித்து எழுதாக் கிளவியாய் ஸ்ரவண அப்யாசங்களாக விரித்துரைத்தார். இவ்வாறாக சர்வேசுவரனின் வலக்கை ரேகையிலிருந்து உதித்த ஞானசடாட்சரக் கழியே வேத பரிபாலனத்திற்கு வழி வகுத்தது. அந்த ஞான சடாட்சரக் கழி திருஅண்ணாமலையில் ஐக்கியமடைந்து அதிலிருந்து நான்கு வேத மூர்த்திகள் அவதரித்த திருநாளே மார்கழி முதல் தேதியாகும்.
இன்றைக்கும் புனித உள்ளத்துடன், வடமறை, தமிழ்மறை வேதங்களை ஓதிய வண்ணம் மார்கழி மாதத்தில் கிரிவலம் வருவோர்க்குச் சதுர்முகவேத தரிசனப் பகுதியில் குருவருளைப் பரிபூரணமாகப் பெற்றோர்க்கு மகரஜோதி போன்று ஞானசடாட்சரக் கழியின் தரிசனம் கிட்டும். மகா திவ்ய தரிசனமிது! மார்கழி மாத முதல் நாளில்தான் ஆதிமூல வேதமூர்த்தி ஞானசடாட்சரக் கழியில் பரிபூர்ணமடைந்து நான்கு வேத மூர்த்திகளாய்ப் புது அவதாரங்களை ஏற்றார். எனவே மார்கழியின் 30 நாட்களிலும், இன்றைக்கும் ஞான சடாட்சரக் கழி முன் செல்ல, ருக், யஜுர், சாம, அதர்வண வேதமூர்த்திகள் அதனைப் பின் தொடர்ந்து ஆன்ந்தமயமாக திருஅருணாசலத்தைக் கிரிவலம் வருகின்றனர்.
கார்த்திகை தீபமும் மார்கழியும்
கார்த்திகை மாதத்தில் திருஅண்ணாமலையில் ஏற்றப்படும் தீப தரிசனத்தோடு அன்னதானக் கைங்கர்யங்களோடு மார்கழியிலும் ஜோதி தரிசனம் கிட்டும் பாக்கியத்தால் பெறும் இறையருளோ அளப்பரியது. கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் தீபம் மார்கழியிலும் தரிசனம் தருவது மிகவும் அபூர்வமான, கிடைத்தற்கரிய பேறாகும்.1995-ம் ஆண்டில் 5.12.1995-ல் ஏற்றப்பட்ட ஜோதி, இறைப் பெருங்கருணையால் , மார்கழி முதல் தேதியன்றும் சேர்த்து 11 நாட்களுக்குத் தரிசனம் தந்தது. 16.12.1995 மார்கழி மாதப் பிறப்பன்று பிரம்ம முகூர்த்த விடியற்காலை நேரம் முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எறும்பு ஊர்வது போல் சாரை சாரையாகத் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். வாழ்க்கையில் பெறற்கரிய பாக்யம்!
திருஅண்ணாமலைக் கார்த்திகை தீப தரிசனத்தைப் பெற இயலாதவர்கள் கார்த்திகை தீப நாளுக்குப் பிறகு ஏனைய தினங்களிலேனும் தீபதரிசனத்தைப் பெற வேண்டும். இதுவும் இயலாவிடில் மார்கழியிலாவது திருஅண்ணாமலையை கிரிவலம் வருதல் வேண்டும். மார்கழி மாதம் முப்பது நாட்களிலும் ஞானசடாட்சரக் கழியானது எப்போதும் எந்நேரமும் சுவாமியை, திருஅருணாசலேஸ்வரரை, திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்தவாறு இருக்கும். இந்த ஞானசடாட்சரக் கழியின் மேல் பட்டகாற்றில், ஓர் அணு அளவாவது நம்மீது பட்டால் போதும் நாம் நற்கதியடைந்து விடுவோம். எனவே மார்கழி முதல் தேதியன்று கிரிவலம் வர இயலாதோர், திருஅண்ணாமலை ஜோதி தரிசனத்தைத் தவற விட்டோர், மார்கழி மாதத்தில் எந்நாளிலேனும் திருஅருணாசலத்தைக் கிரிவலம் வந்து ஞானசடாட்சரக் கழியின் அனுக்ரஹத்தைப் பெற ஆவன செய்தல் வேண்டும்.
தேவாரம், திருவாசகம், திருப்புகழ், வள்ளலார் பாடல்கள் போன்ற தமிழ் மறைகளையும் அறிந்தோர் வடமொழி மறைகளையும் அல்லது நான்கு வேதங்களுக்கு ஈடான ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தையும் முறையாகப் பாராயணம் செய்தும்/ஜபித்தும், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற மறைப்பண்களை ஓதியும் மார்கழியில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருதல் வேண்டும்.
ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம், திருஅண்ணாமலை
திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில், தசமுக தரிசனமருகே, காஞ்சி சாலையில், ஆடையூரில், அதிகார நந்தி எழுந்தருளியிருக்கும் எழுத்து மண்டபமருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நம் ஸ்ரீ-ல-ஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் கார்த்திகை தீபப் பெருவிழாவில் 27.11.1995 முதல் 6.12.1995 வரையிலும்  16.12.1995 மார்கழி மாதப்பிறப்பு அன்றும் இறைப் பெருங்கருணையால்  பெருமளவில் ஈஸ்வர கிருபையால் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் அருளாசியுடன், அவர்கள் தம் மேற்பார்வையில், ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளே சரீர சேவையுடன் முன்னின்று நடத்திய அன்னதானம் சிறப்புடன் நிறைவு பெற்றது. மூட்டைகளை ஏற்றி இறக்குதல், விறகு அடுப்புப் பணிகள், காய்கறிகள் நறுக்குதல், சாதம் களைதல், கஞ்சி வடித்தல், அன்னமிடுதல் மட்டுமின்றித் துப்புறவு, கழிவறை சுத்தம் செய்தல் போன்ற அனைத்து ஆஸ்ரமப் பணிகளையும் ஆஸ்ரம அடியார்களே உவப்புடன் நிறைந்த உள்ளத்துடன் இறையருளால் குருவருளுடன் செவ்வனே ஆற்றும் பாக்கியத்தைப் பெற்றனர். வெவ்வேறு தலைப்புகளிலான ஆன்மீகப் புத்தகங்கள், ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழ் மூலமாக ஆயிரக் கணக்கானோருக்கு, பித்ரு தர்ப்பண முக்யத்வம், தான தர்ம மஹிமை போன்ற ஆன்மீக விளக்கங்களும் அளிக்கப்பட்டன. மொத்தத்தில் திருஅண்ணாமலையாரே ஊக்குவித்து, உடலில் புகுந்து சரீர சேவை ஆற்றி ஈஸ்வரனே, குருஸ்வரூபராய்த் தாமே ஆக்கித் தந்த அருட்பணியே இவ்வரிய திருப்பணியாகும்.

சிவராத்திரி வைகுண்ட ஏகாதசி

ஒருவனே இறைவன் – சிவ-விஷ்ணு பேதங்களையகற்றும் விசேஷமான பண்டிகைகளுள் மஹா சிவராத்திரியும் - வைகுண்ட ஏகாதசியும் மிகவும் பெருமை வாய்ந்ததாகும். கலியுகத்தில் தற்போதுங் கூடச் சிலர் தீவிர சைவர் என்றும் தீவிர வைணவர் என்றும் பறைசாற்றிக் கொண்டு “நான் சிவன் கோயிலையே மிதித்தது கிடையாது” என்றும் “நான் பெருமாள் கோயில் பக்கமே செல்வது கிடையாது “ – என்றும் பேசுவது மிகவும் வேதனைக்குரியது. இஷ்ட தெய்வ வழிபாட்டின் நியதிகளைச் சரிவர உணராததினால் தான் சிவ,விஷ்ணு துவேஷ எண்ணங்கள் உருவாகின்றன.
 உண்மையான வைஷ்ணவருக்கு சிவன், முருகன், பிள்ளையார், ஆஞ்சனேயர் போன்ற அனைத்து  மூர்த்திகளும் பெருமாள் ஸ்வரூபத்திலேயே காட்சி தருவார். இதுவே உத்தமமான வைஷ்ணவருக்குரிய உன்னத நிலை. இந்நிலையை அடையும்வரை அனைத்து தெய்வ மூர்த்திகளையும் ஒன்றென மானசீகமாகவேனும் பாவித்து சகல வழிபாட்டையும் ஏற்க வேண்டும். ஸர்வம் விஷ்ணுமயம் என்பது உன்னத பக்தியில் வருவதே தவிர சிவ துவேஷம் கூடவே கூடாது. சிவ துவேஷம் பூண்டால், விஷ்ணுவின் கடைப் பார்வை கடாட்சம் கூடக் கிட்டாது. அதேபோல் உத்தம சைவருக்கு விஷ்ணு, கிருஷ்ணன், ஸ்ரீரங்கநாதர் போன்ற அனைத்து தெய்வ மூர்த்திகளும் சிவ ரூபத்திலேயே காட்சி தருவர். இத்தகைய உத்தம பக்திநிலைக் கிட்டும் வரை ஸர்வம் சிவமயம் என்ற பேருவகை நிலையை அடையும் வரை, விஷ்ணு துவேஷமின்றி சகல தெய்வ மூர்த்திகளின் வழிபாட்டையும் ஏற்க வேண்டும். விஷ்ணு துவேஷம் பூண்டால் அது தீரும்வரை பிறவிகள் தொடரும்.
முறையான சற்குருவைப் பெற்று முறையற்ற காமம், பேராசை, கோபம், குரோதம் இவை அழிந்தால் தான் ஸர்வம் விஷ்ணுமயம், ஸர்வம் சிவமயம் என்ற பேரின்ப நிலையின் அரிச்சுவடியையே காணலாம்! என்று சகல தெய்வ மூர்த்திகளின் ரூபங்களிலும் உன் சற்குருவின் உருவம் தென்படுகிறதோ அன்றே குருவருள் கூடிவருகிறது என்பதை உய்த்துணர்வாயாக! அதாவது சிவனும், விஷ்ணுவும் இவ்வாறே சற்குரு ரூபத்தில் நடமாடி உன்னை அரவணைத்து ஆட்கொள்கின்றனர்.
சிவ துவேஷமோ, விஷ்ணு துவேஷமோ கொள்வோர்க்குப் பல நரக வேதனைகளே தண்டனையாகக் கூடி வரும். எனவே இப்போதே அத்தகைய அதர்மமான எண்ணங்களுக்குத் தக்க பிராயச்சித்தங்களைச் செய்து தெய்வ நிந்தனைச் சாபங்களிலிருந்து மீண்டு ஏக மூர்த்தியாம் பரம்பொருளை உண்ணி வாழ்வீர்களாக! ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரண மனிதனின் இல்லற வாழ்க்கையில், இல்லறக் கடமைகளையும் தர்மங்களையும் நிறைவேற்றுவதற்கு அப்பரம்பொருளின் அம்சங்களான பல தெய்வமூர்த்திகளையும் வழிபடுதலே சாந்தத்தையும் மன அமைதியையும் தரும். இல்லற அனுபவங்களின் முதிர்ச்சியில் சத்சங்க நற்காரியங்களின் பலன்களாய் வாழ்க்கை அனுபவமும் தெய்வானுபவமும் ஒன்று சேர்ந்து தியான, யோக நிலைகளை அளித்துத் திரண்ட குருவருள் மூலம் இறையருளைக் கூட்டும்.
பிறவி நியதிகள் :-
சகல தெய்வ வழிபாட்டை ஏற்போர் கூட தெய்வம் விதிக்கும் ஜன்ம விதிகளைச் சரிவரப் புரிந்து கொள்வதில்லை!
1. எதில் மிகுந்த ஆசையுள்ளதோ அந்த ஆசைகள் மறையும் வரை பிறவிகள் (அதே ஆசைகளுடன்) தொடரும்.
2. எந்த ஜாதியை/குலத்தை/இனத்தை மதத்தை ஒருவன் வெறுக்கின்றானோ, அதே ஜாதியில்/குலத்தில்/இனத்தில்/மதத்தில் அவன் மீண்டும் பிறக்கின்றான்! முன்பிறவியில் அவனுடைய தூஷணைகள் அனைத்தும் அடுத்த பிறவியில் அவன் மீதே மீண்டும் பாய்கின்றன!
எந்த தெய்வ மூர்த்தியை துவேஷிக்கின்றானோ அந்த துவேஷ்த்திற்குரிய பரிகாரங்களைத் தேடும் வரை அவனுடைய பிறவிகள் தொடரும். உதாரணமாக வைஷ்ணவர் ஒருவர் எத்தகைய உத்தம குணங்களைப் பூண்டிருந்தாலும் ஒரு சிறிது “சிவ துவேஷம்” கொண்டிருந்தால் கூடப் போதும், அவர் அடுத்து வரும் பிறவிகளில் உரிய சிவ பூஜைகளை நிறைவேற்றி சிவதுவேஷத்திற்கு நிவர்த்தி கண்டால் தான், அவருடைய உத்தம குணங்களின் பரிபூரண பலன்களைப் பெறமுடியும்! இதேபோல் சிவபக்தர் எத்தகைய உத்தம குணங்களைப் பூண்டிருந்தாலும் ஒரு சிறிது “விஷ்ணு துவேஷம்” கொண்டிருந்தால் கூடப் போதும், அடுத்து வரும் பிறவிகளில் விஷ்ணு பூஜைகளை நிறைவேற்றினால் தான் அவருடைய உத்தம குணங்களுக்கான பரிபூரண பலன்களைப் பெற முடியும். ஆனால் அடுத்தடுத்த பிறவிகள் மனிதப் பிறவி என்று நிச்சயித்து கூற முடியுமா? இன்னும் புரியும்படி விளக்க வேண்டுமெனில் குஷ்டரோகியைக் கண்டால் வெறுக்காதே! இந்த வெறுப்புணர்ச்சியே பல பிறவிகளுக்கு அடிகோலும். இதனைப் போக்கிட, அந்த குஷ்டரோகிக்கு உன்னால் இயன்ற ஆடைதானம், காலணி தானம், மருந்துகள், அன்னதானம் செய்திடு! அதுவும் இயலாவிடில் சிவபுராணம், காயத்ரீ மந்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்று நீயறிந்த இறைநாமமோ/துதிகளை ஜபித்து அதன் பலனை மானசீகமாக அந்த குஷ்டரோகியின் நல்வாழ்விற்காக உன் இஷ்ட  தெய்வத்திடம் சமர்ப்பணம் செய்!
இவ்வகையில் தான் நீ வெறுக்கின்ற ஜாதி/இன/குல/மதத்திற்குப் பரிகாரம் தேடி அதிலேயே மீண்டும் பிறக்கின்ற நிலைக்குப் பிராயச்சித்தம் காணமுடியும். ஆன்மீகத்தில் தான் இத்தகைய வெறுப்பிற்குத் தக்க மருந்துண்டு. இவ்வாறாக உன் வாழ்க்கையில் நீ கொண்டுள்ள விருப்பு, வெறுப்புகளைப் பட்டியல் போட்டு வெறுப்புகளை அகற்றும் ஆன்மீக நற்காரியங்களைச் செய்து, விருப்புகளை முறைப்படுத்தி வாழ்வதே உண்மையான வாழ்க்கை! இதற்குத் துணைபுரிபவரே சற்குரு!  ஒரு சாதாரண மனிதனை, பலருக்கும் பயன்படும் வாழும் முழு மனிதனாக்கி, உத்தம தெய்வீக நிலையைத் தந்தருள்பவரே சற்குரு!
மேற்கண்ட அனைத்து விளக்கங்களும் வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்திரி பண்டிகைகளுக்கு முன்னர் யாவரும் எண்ணி உணர வேண்டிய ஆன்மீக விளக்கங்கள். மஹாசிவராத்திரியும், வைகுண்ட ஏகாதசியும் பூலோகத்திற்கு மட்டும் உரித்தானவையல்ல! விஞ்ஞானத்தின் கண்களுக்கு அப்பாற்பட்ட, இந்த ஒரு பூமியைத் தவிர கோடிக்கணக்கான பூலோகங்கள் மற்றும் ஏனைய லோகங்கள் உண்டு! ஸ்ரீவித்யா பூஜைக்ரமத்தில் கோடிக்கணக்கான தேவதைகள், லோகங்கள், பீடங்கள் பற்றிய விளக்கங்களைக் காணலாம். மஹா சிவராத்திரியன்று வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயண மூர்த்தி ஸ்ரீரங்க லிங்க மூர்த்தியாக அனைத்து வைகுண்டவாசிகளுக்கும் காட்சி தருகின்றார். வைகுண்ட ஏகாதசியன்று திருக்கயிலாயத்தில் சிவபெருமான் பள்ளி கொண்ட நாதராக அனந்த சயன ரூபத்தில் காட்சி தருகின்றார். இதுவே மேலோகங்களில் நிகழ்கின்ற அற்புத விந்தைகள்.
அறிவீர், உணர்வீர், தெளிவீர்.

காயத்ரி தபஸ்

துரிதாதிக தியானம் :-
பத்மாசனம் போடுவது இப்போது எளிதாகப் பழகி இருக்கும். இதில் முதுகு தானாகவே நிமிர்ந்து விடும். இந்நிலையில் தலையைச் சாய்க்காமல் அமர்ந்து நிதானமாக மூச்சியினை இழுத்து உள்ளுக்குள் நிறுத்திப் பிறகு மெதுவாக வெளியே விடவேண்டும். இவ்வாறு இரண்டு, மூன்று நிமிடங்கள் செய்த பின்னர் நீங்கள் துரிதாதிக தியானத்திற்குத் தயார் ஆகின்றீர்கள். வலது கையை உயர்த்தி (படத்தில் உள்ளபடி) மணிக் கட்டிலிருந்து விரல்கள் வரை முழுவதுமாக மடக்கித் தட்டையாகக் கைவிரல்களை வைத்துக் கொள்ள வேண்டும். கைவிரல்கள் சீராக கைக்குச் செங்குத்தாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முகத்தை வலப்புறம், திருப்பி வலது தோளை ஒட்டிக் கண்களை நிறுத்தித் தலையை அசைக்காமல் மெதுவாகப் பார்வையை மட்டும் வலது தோளின் கீழிருந்து மேலேற்றி முழங்கை, மணிக்கட்டு விரல்கள் வழியே கட்டை விரல் நுனிவரை செலுத்திப் பின்னர் அதே போல் சுண்டு விரல் வழியே வலதுகை ஓரமாக , ஓரமாக வலது தோளின் அடுத்தபகுதியை அடைய வேண்டும்.

துரிதாதிக முத்திரை

மனதினுள் காயத்ரீ மந்திரத்தை ஜபித்துக் கொண்டே பார்வையை மட்டும் மேலும் கீழுமாக வலது கைமேல் ஓட்டி இந்த தியானத்தைப் பயில வேண்டும். கைகளிலோ கண்களிலோ கழுத்திலோ வலி ஏற்படின் உடனே தியானத்தை நிறுத்தி விட்டுச் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் தியானம் பயில  வேண்டும். இடதுகை தளர்த்தப்பட்டு சாதாரணமாக இருக்க வேண்டும். மூச்சை இழுத்து நிறுத்தி விடுவது சாதாரணமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மூச்சை இழுத்து நிறுத்தி அடக்கிச் சிரமப்பட வேண்டாம். இலகுவாக தியானத்தைப் பயில வேண்டும்.
பலன்கள் : சுவாசம் சந்திர கலையில் ஓடுவதற்கு இத்தியானம் உதவுகிறது. இதனால் சுத்தமான காற்றை சுவாசிக்கும் உறுதி நுரையீரலுக்குக் கிட்டுகிறது. மன உறுதி வளர்வதற்கும் தற்போதைய வாழ்க்கை முறையில் மிகவும் அவசியமான தூய மனக் கட்டுப்பாடு வளர துரிதாதிக தியானம் பெருமளவில் உதவிகிறது. முரட்டுத் தனம் உடலிலிருந்து அகலுவதற்கும் சாந்தமும் முயற்சியுடைமையும் அதிகரிக்கவும் இந்தத் தியானமே சிறந்த எளிய மருந்து.  எப்பிரச்னையும் எதிர்கொள்ள சுயமனக் கட்டுப்பாடும், மன உறுதிப்பாடும் மிகவும் தேவை. துரிதாதிக தியானம் மூலம் வைராக்கியம் வளர்வதால் இக்கலியுகத்தில் இத்தியான முறை மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இதனைத் தொடர்ந்து 5 அல்லது பத்து நிமிடங்களுக்கு மேல் பயில்தல் வேண்டாம்.

எறும்புகளுக்கு உணவு

எறும்புகளுக்கு உணவிடுவது ஏன்?
ஒவ்வொரு எறும்பும் தனக்கு உணவு இட்டவர்களுக்காக ஒரு நிமிடம் தவம் செய்கிறது. குறிப்பாகக் கோயில், கோயிலைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள எறும்புகள் கோயிலுக்கு வரும் பக்தர்களையே நம்பி வாழ்கின்றன. எனவே, ஒவ்வொருவரும் தினந்தோறும் கோயிலுக்குச் செல்லும்போது சிறிதளவு ரவை, கோதுமை/ அரிசிக் குருணையுடன் சர்க்கரை கலந்து அங்குள்ள எறும்புகளுக்கு உணவிட வேண்டும். அன்றையப் பொழுதிற்கு உணவு கிடைக்கப் பெற்ற எறும்புகள் மனநிறைவுடன் நமக்காக ஒரு நிமிடம் தவம் செய்து அந்தத்தவப் பலனை நமக்கு அளிக்கின்றன. அதனால் நம் குடும்பத்தில் என்றுமே உணவுக்குப் பஞ்சம் ஏற்படாது.; ஒற்றுமை அதிகரித்து அமைதி நிலவும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த தானியம் உண்டு. குறிப்பிட்ட தெய்வத்தின் அருளைப் பெற அதற்குரித்தான தானிய ரவையையே கோயில் எறும்புகளுக்கு உணவாக இட வேண்டும்....

தெய்வம்

 தான்யம்

அன்னபூரணி

அரிசி

முருகன்

கேழ்வரகு

பிரகஸ்பதி

கோதுமை

சந்திரன்

உளுந்து

சூரியன்

கடலைப்பருப்பு

ராகு

கம்பு

செவ்வாய்

துவரை

குரு

கடலை

சனி

 எள்

முழு தானியங்களாகப் போடாமல் ரவை/குருணையாக மாற்றித்தான் போட வேண்டும். அவ்வாறு இடுகையில் சர்க்கரை/ஜீனி கலந்து இடுதல் சிறப்பானது. சர்க்கரை பித்ருக்களுக்கு ப்ரீதியானது.

அங்க பிரதட்சணம்

திருஅண்ணாமலை கிரிவலம் – அங்கப் ப்ரதக்ஷ்ணம்
மஹான்களும் பெரியோர்களும் தங்கள் யோக சக்திகளையும் அனுக்ரஹங்களையும் இங்கு கிரிவலப் பாதையில் சிலவற்றை விட்டுச் செல்கின்றனர். இப்பெரியோர்களின் பாத தூளிகள் இங்கு காத்திருக்கின்றன. இவை தாம் கிரிவலம் வருவோரின் பிரார்த்தனைகளையும் வேண்டுதல்களையும் அவரவர் பக்திக்கு ஏற்ப நிறைவேற்றுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் உடல் அங்கங்களால் செய்யும் தவறுகள் பல, அவற்றுக்கு மனிதன் தன் வாழ்நாளில் பரிகாரங்களைத் தேடியே ஆகவேண்டும். மேலும் ஆண்டவன் கொடுத்த இவ்வுடல் கொண்டு இறைத் தொண்டுகளில் ஈடுபடாமல், மிக்க சுயநலத்தோடு வாழ்ந்து பல நிலையற்ற பொருட்களை அடைய மனிதன் விழைகின்றான். இது போன்ற தவறுகளுக்குப் பரிகாரமாகவும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அங்க ப்ரதக்ஷ்ணத்தைப் பெரியோர்கள் வகுத்தனர். ஆகவே நாம் உடலால் ஆற்றிய தீவினைகளுக்கு உடலாலேயே தீர்வு காண ஓர் எளிமையான வழி இதுவே. மேலும் “நாம் எதுவும் செய்யவில்லை எல்லாம் இறைவன் செயல்” எனும் நிலையை உணர்வதற்கு  இந்த அங்க ப்ரதக்ஷ்ணம் உதவுகிறது. தீயசக்திகளை எளிதில் ஒழித்து ஒரு மனிதனை நல்வழிப்படுத்திச் சிறப்புறச் செய்கிறது.      
பல வகையான மனிதர்கள் கிரிவலப் பாதையில்  செல்கின்றனர். அவர்களின் தீய எண்ண சக்திகளும் தீயவினைகளும் ஆங்கே படிந்து விடுகின்றன. அங்கப்ரதக்ஷ்ணம் செய்யும் ஒருவரின் உடலில் இவை அனைத்தும் படுகின்றன. ஆனால் ஏதோ ஒரு இடத்தில் இருக்கும் ஓர் மகானின் பாத தூளி கிரிவலம் வருவோரின் உடலில் படும்போது மற்ற அனைத்துத் தீவினைகளும் கழிந்து விடுகின்றன. ஆகவே பிறருடைய பாத தூளியை தன்னுடைய உடலில் தாங்கி, அதன் மூலமாக அவர்களுடைய துன்பங்களையும் கழித்து, தன் உடலால் செய்த பாவங்களுக்கும் பரிகாரம் தேட இவ்வுடலை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதே அங்க ப்ரதக்ஷ்ணம் ஆகும். தியாகம் நிறைந்த இறைப்பணி!

பிரம்ம லிங்க சன்னதி
திருஅண்ணாமலையார் ஆலயம்

திருஅண்ணாமலையைச் சுற்றி அருவங்களாகவும் உருவங்களாகவும் மகான்கள் மற்றும் யோகிகள், சித்தர்களின் சஞ்சாரங்கள் எப்போதும் உண்டு. ஆகவே கிரிவலப் பாதையில் நடக்கும்பொழுது அதிகமாகக் கை, கால்களை வீசி நடக்கக் கூடாது. கைகளைக் கட்டிக்கொண்டோ அல்லது கூப்பிய கைகளோடோ, அதிக அசைவுகள் இல்லாது நடப்பது நலம். அடிப்ரதக்ஷணம் செய்வதால் பொறுமைக் குணம் வளர்கிறது. மேலும் நாம் தெய்வீக வாழ்க்கையில் கடக்க வேண்டிய தூரம் அதிகம். அவற்றில் நாம் கடந்துள்ளது வெகு சிறிதே எனும் எண்ணமும் தெளிவும் ஒரு மனிதனுக்கு இவ்வகை ப்ரதக்ஷணத்தால் கிட்டுகிறது. நாம் அடிமேல் அடி வைத்து நடக்கும்போது இடைவெளி விடாமல் நடக்கிறோம். அதனால் எங்கும் புண்ணிய சக்தி நிறைந்த கிரிவலப் பாதையை ஒரு அங்குலம் கூட விடாமல் உரசி நடப்பது பெரும் பாக்கியம் அல்லவா!
அங்கப்ரதக்ஷணத்திலும் அடி ப்ரதக்ஷணத்திலும் தான் கிரிவலப் பாதையை முழுவதுமாக நாம் நடந்து உருண்டு கடக்கின்றோம். இதனால் எத்தனையோ கோடி சித்தர்களும் மகான்களும் யோகியரும் தம் திருப்பாதங்களைப் புனிதப்படுத்திய பூமியை நம் தேகமும் தீண்டுவதற்கு என்னே பாக்கியம் செய்திருக்க வேண்டும்! மகான்களின் பாததூளி படுவதால் அவர்களுடைய அருட்சக்தி நம் உடலில் பாய்கிறதென்றால் இங்கு வரும் எத்தனையோ தீயவர்கள், கொடியவர்கள், கள்வர்களின் தேகங்களிலிருந்து தீய சக்திகளும் நம் உடலில் சேருமே என்ற அச்சம் ஏற்படலாம், உண்மையே! பிறருடைய தீய சக்திகள் நம் உடலில் பட்டாலும், அங்க ப்ரதக்ஷணமோ, அடி ப்ரதக்ஷணமோ செய்து அவற்றையும் உடல் வருத்தத்திற்கு இடையிலும் தாங்குகின்ற தியாகத்தைப் புரிவதால் மகான்களே முன்வந்து இத்தகைய அடியார்களைத் தம் தபோ பலத்தினால் காப்பாற்றி அருள்பாலிக்கின்றனர். ஆனால் இதுவும் ஒருவகை இறைப்பணி அன்றோ! இவ்வாறாக அங்கப்ரதக்ஷணமும் அடிப்ரதக்ஷணமும் தியாகம் நிறைந்த மிக்ச் சிறந்த சேவையாகும்.
தலைமுதல் கால்வரை எத்தனை எத்தனை பாவங்களைச் செய்து மனிதன் கர்மவினைகளைச் சுமக்கின்றான். இப்பாவச் செயல்களின் மூலம் தீய சக்திகள் அவயங்களை ஆக்ரமிக்கின்றன. அந்த அடி ப்ரதக்ஷணங்களினால் அந்தந்த அவயவங்கள் துன்பமுற புண்ணிய சக்தி உடலில் ஏற ஏற தீயசக்திகள் அவற்றில் தங்க இயலாமல் போகிறது. ஏனெனில் தீயசக்திகள் தீவினைக் கர்மங்கள் நிறைந்த பகுதியில்தான் தங்கமுடியும். இவ்வாறு வெளியேறும் தீயசக்திகளை மகான்கள் தங்கள் தேகங்களில் ஏற்று அடியார்கள் அனுபவிக்க வேண்டியவற்றை அவர்களே புற்றுநோய், மூட்டுநோய், ரத்த நோய்களாக அனுபவிக்கின்றனர். சில கொடிய கர்மவினைகளுக்குச் சிறந்த பரிகாரமாக அங்கப்ரதக்ஷணம், அடிப்ரதக்ஷணம் அமைகின்றன. முறையற்ற காமத்தினால் கட்டுப்பாடில்லா காம இச்சைகளினால் பல பெண்களுடைய/ஆண்களுடைய வாழ்க்கை பாழானதற்குக் காரணமானோர் மனதார வருந்தி அங்கப்ரதக்ஷ்ணம் செய்து ஏழைகளுக்குத் துணிமணிகளைத் தானமாகத் தந்து தம்மால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் அளித்தால் இதுவே சிறந்த பரிகாரமாகும்.
இல்லையெனில் முறையற்ற காமத்தால் ஏற்படும் தீவினைக்கு மீண்டும் ஆணாகவோ, பெண்ணாகவோ விலங்காகவோ பிறந்து சீரழிந்த வாழ்க்கையைப் பெற நேரிடும். இது தேவையா?

ஸ்ரீபூதநாராயணர் சன்னதி
திருஅண்ணாமலை

பதினான்கு கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள திருஅண்ணாமலையை அங்க ப்ரதக்ஷணமாக வருவது எளிதல்லவே, என்ன செய்வது? கையில் சிறு துண்டு/ மாற்று வேட்டி/ சேலையை வைத்துக்கொண்டு முதலில் குறித்த சில இடங்களில் மட்டும் குறைந்தது முப்பது அடி தூரத்திற்காவது செய்து பயில வேண்டும். செங்கம் சாலையில் இருந்து கிரிவலப் பாதைக்காக வலப்புறம் திரும்பிய பின்னர் சற்று அடர்த்தியான காமக்காடு என்ற இடம் உண்டு. இப்பகுதியிலும், ஸ்ரீஉண்ணாமுலை அம்மன் மண்டபம், அடி அண்ணாமலைப் பகுதி, ஸ்ரீ-ல-ஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் அமைந்துள்ள சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனம் (தசமுக தரிசனப் பகுதி), குபேர லிங்கம், ஸ்ரீதுர்கை அம்மன் ஆலயம் போன்ற இடங்களில் அங்கப்ரதக்ஷணம் செய்வது சாலச் சிறந்தது.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட தூரம் வரை அங்கப்ரதக்ஷ்ணம் செய்வது என்று நிர்ணயித்து பல முறைகளில் அங்க ப்ரதக்ஷ்ணத்தை நிறைவு செய்யலாம். திருப்பதியைப் போல் ஒரே முறையில் செய்ய வேண்டும் என்பது இல்லை. இதேபோல் அடிப்ரதக்ஷ்ணத்தையும் பல தவணைகளில் நிறைவு செய்யலாம். எனினும் தக்க சற்குருவை நாடி விளக்கம் பெறவேண்டும்.
தவழ் பிரதட்சிணம் : முட்டிக்காலில் ஊர்ந்து (குழந்தை போல்) தவழ்ந்து செல்வதே தவழ் பிரதட்சிணம்! அற்புதமான சித்திகளையும் பலன்களையும் தரவல்லது. ஊத்துக்கோட்டை – திருப்பதி சாலையில் சுருட்டப்பள்ளி என்ற ஊரில் சயனக் கோலத்தில் பள்ளிகொண்டேஸ்வரராக அருள்பாலிக்கின்றார் சிவபெருமான்! பிரதோஷ நேரத்திலோ அல்லது மற்ற நாட்களில் உச்சிப்பொழுதிலோ இங்கு முட்டியிட்டுத் தவழ் பிரதட்சிண முறையில் பிரதட்சிணம் வருவதால் நல்ல ஆரோக்யம், தீர்க ஆயுள் பெறலாம். திருஅண்ணாமலையை தவழ் பிரதக்ஷ்ணம் முறையில் கிரிவலம் வருவதால்
1. மாற்றான் தாய்க் குழந்தைகளை வதைத்துத் துன்புறுத்திய பாவம்
2. தம் குழந்தைகளை (குடிபோதை) மயக்கத்தில் அடித்துத் துன்புறுத்திய பாவம்
3. நாய், பூனை, பசு, குதிரை போன்ற சாத்வீகப் பிராணிகளை அடித்த பாவம்
போன்றவற்றிற்குத் தவழ் பிரதக்ஷ்ணம் மிகச் சிறந்த பரிஹாரமாக விளங்குகிறது.
ஸர்வாங்க ஸரீரப் பிரதட்சிணம்

சிவராஜ சிங்க தீர்த்தம்
திருஅண்ணாமலை

சற்றுக் கடினமான பிரதட்சிணமிது! இன்றைக்கும் இமாலயப் பகுதியில் கைலாச மலையைச் சுற்றி (இரத்தம் உறையும் குளிரிலும் கூட) ஸர்வாங்க ஸரீரப் பிரதட்சிண முறையிலேயே கைலாயத்தைக் கிரிவலம் வருகின்றனர் லாமா என்பவர்கள். ஒருமுறை கீழே வீழ்ந்து நமஸ்கரித்து எழுந்து திருஅண்ணாமலையானை தரிசித்துப் பின் முதல் நமஸ்காரத்தில் சிரசு இருந்த இடத்தில் பாதங்களை வைத்து நின்று மீண்டும் கீழ் வீழ்ந்து நமஸ்கரிக்க வேண்டும். அடிப்பிரதட்சிணத்தில் முதல் அடியின் நுணியிலிருந்து அடுத்த அடி துவங்குவது போல் ஸர்வாங்க ஸரீரப் பிரதட்சிணத்தில் முதல் நமஸ்காரத்தின் (சிரசு) நுனியிலிருந்து அடுத்த நமஸ்காரம் தொடங்கும். திருஅண்ணாமலை கிரிவலம் முழுவதுமே ஆங்காங்கே அங்க ப்ரதக்ஷ்ணம் அடிப்பிரதட்சிண முறையில் ஸர்வாங்க ஸரீரப் பிரதட்சிணம் செய்வது அபரிமிதமான தெய்வானுகரஹத்தையும், திரண்ட புண்ய சக்தியையும் உயர்ந்த ஆன்மீக நிலைமைகளையும் தரவல்லது. ஆனால் கால, தேச, சம்சார சூழ்நிலைப் பரிமாணங்களை நோக்குகையில் உறுதியான மனோ வைராக்யம் உள்ளவர்களுக்கே இது சாத்யமாகும்.
எனினும் ஸர்வாங்க ஸரீர பிரதட்சிணம் செய்யப்பட வேண்டிய முக்யமான (கிரிவலப்) பகுதிகளை மட்டும் இங்கு குறிக்கின்றோம்.
1. குறைந்தது 90 அடி தூரமேனும் ஸர்வாங்க ஸரீரப் பிரதட்சிணம் செய்யவேண்டும். ஓய்வெடுத்து மெதுவாகச் செய்வதில் தவறில்லை.
2. ஸர்வ அங்கங்களும் பூமியில் படவேண்டும்.

ஸ்ரீஉண்ணாமுலையம்மன் மண்டபம்
திருஅண்ணாமலை

3. பெண்கள் ஸர்வாங்க நமஸ்காரம் அல்லது பஞ்சாங்க (பஞ்ச+அங்கம்) நமஸ்காரமோ செய்யலாம்.
4. அக்னி தீர்த்தம் (சேஷாத்ரி ஆஸ்ரமம் அருகில்) உள்ள திரிபுராந்தக தரிசனம் (ரமணாஸ்ரம் தாண்டிய பின்னர், பெரிய மயானப் பகுதி). எமலிங்கம், உண்ணாமலையம்மன் மண்டபம், சிவராஜ சிங்க தீர்த்தம், அடிஅண்ணாமலை (கோயில் பிரஹாரத்தில்), இடுக்குப் பிள்ளையார் ஆகிய பகுதிகளில் ஸர்வாங்க ஸரீர பிரதட்சிணம் விசேஷமானதாகும்.
பலன்கள் :
1. பெரியோர்களை, மஹான்களை அறிந்தோ அறியாமலோ, நிந்தித்த பாவம், இறைவன் மேல் நம்பிக்கையற்று நாஸ்திகனாக வாழ்ந்த பாவம்
2. யாருக்கும் அடிபணியாது இளமை, செல்வம், ஆரோக்யம், வலிமை காரணமாக செருக்கில் பிறருக்கு இழைத்த துன்பங்கள்
3. பெற்றோர்கள் , பெரியோர்களுக்கும் மனைவி கணவனுக்கும் தினசரியோ அல்லது விசேஷ தினங்களிலோ பாத பூஜை செய்யாத பாவம் போன்றவற்றிற்குப் பரிஹாரமாக அமைவதே ஸர்வாங்க ஸரீர பிரதட்சிணம்.
மாத சிவராத்திரியில் கிரிவலம்
திருஅண்ணாமலையை எந்நாளிலும் எந்நேரத்திலும் கிரிவலம் வரலாம். அந்தந்த நாள், கிழமை, நட்சத்திரம், திதி, யோகம், கரண காலத்திற்கேற்ப பலாபலன்கள் உண்டு. பொதுவாக கிருஷ்ண பட்ச சதுர்த்தசிக்கு மாத சிவராத்திரி என்று பெயர். மாசி மாத சிவாத்திரி “மஹா சிவராத்திரி” ஆகும். அதாவது ஆதிபராசக்தி இரவு முழுவதும் கைலாயத்தில் இறைவனைப் பூஜித்த திருநாளே மஹா சிவராத்திரி. ஆனால் இந்த பாக்கியத்தை அம்பிகை பெறுவதற்கு முன்னர் பல யுகங்களில் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் பல ஸ்வயம்பு லிங்கங்களைப் பூலோகத்தில் பூஜித்து வந்தனள். பௌர்ணமி, பிரதோஷம், மாத சிவராத்திரி, சிவனுக்குரிய திருவாதிரை நட்சத்திரம், திங்கட்கிழமை போன்ற விசேஷ தினங்களில் கிரிவலம் வந்திட அவற்றிற்கு விதவிதமான (பன்மடங்குப்) பலன்கள் உண்டு. இவற்றைத் தக்க சற்குருவை நாடியே அறிதல் வேண்டும்.
மாத சிவராத்திரியில் கிரிவலம் வரும் முறையாக சித்த புருஷர்கள் அருள்வதாவது :

ஸ்ரீஇடுக்கு பிள்ளையார் சன்னதி
திருஅண்ணாமலை

1 மாத சிவராத்திரியன்று (பௌர்ணமிக்கு அடுத்த கிருஷ்ணபட்ச சதுர்த்தை அதாவது அமாவாசைக்கு முந்தைய சதுர்த்தசி) மாலை ஆறு மணி முதல் மறுநாள் காலை ஆறு மணி வரை தொடர்ந்து கிரிவலம் வருதல் வேண்டும். ஒரே ஒரு கிரிவலமாகவோ அல்லது இயன்றால் இரண்டு ,மூன்று தொடர் கிரிவலங்களாகவோ இருக்கலாம்.
2. மாத சிவராத்திரியில் மாலை 6 மணி - காலை 6 மணி வரை எத்தனை முறை  கிரிவலம் வருகின்றார்களோ அந்த அளவிற்குப் பன்மடங்கு பலன்கள் கிடைக்கும்.
3. கார்ய சித்தியைத் தரவல்லது மாதசிவராத்திரி கிரிவலம். நற்காரியங்கள் உடனே நிறைவேறும்.
4. பிரம்ம தீர்த்தமருகே பிரம்ம லிங்கத்தில் தொடங்கி பூதநாராயணன் சந்நதியில் கிரிவலம் நிறைவுற வேண்டும்.
5. காலை 6 மணிக்குப் பின் கிரிவலம் நிறைவடைந்த பிறகு கோயிலுக்குச் சென்று தரிசித்து இல்லத்திற்குச் செல்லலாம்.
6. வீட்டிற்கு வந்த பின்னர் தனக்கு யார் உணவு அளிக்கின்றார்களோ அவர்களுக்குப் பாத பூஜை செய்து நமஸ்கரிக்க வேண்டும். கிரிவலம் வந்தவர்களுக்குப் பெரியோர்கள் உணவிட வேண்டும்.
7. பாத பூஜை என்றால் அவர்கள் பாதங்களைச் சுத்தமான நீரால் கழுவி, மஞ்சள், சந்தனம், குங்குமம், பூ இட்டுத் தொட்டு வணங்க வேண்டும். மனத்தினாலாவது பாதவணக்கம் செலுத்த வேண்டும்.
8. உணவிடுபவர் வயதில் குறைந்தவராயினும் அவர்களைப் பித்ருக்களின் ஆவாஹன ரூபமாகக்  கருதிப் பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.
9. உணவிடுபவர் மனைவி, குழந்தையாயினும் இவ்வாறே செய்தல் நலம். ஆனால் மனைவியால் இதனை ஏற்க முடியாதெனில் மனைவியிடம் தர்பை/மோதிரம், சங்கிலி வாங்கி அதற்கு மேற்கண்டவாறு மஞ்சள், சந்தனம், குங்குமம், பூ இட்டு வலம் வந்து வணங்க வேண்டும். எனவே முன்னரே பூஜை முறையை வகுத்துத் தாய், தந்தை அல்லது பெரியோரை, பாத பூஜைக்காக அழைத்து அவர்களை உணவிடச் செய்தல் நலம்.
10. இதன் பிறகு அன்று மாலை 6 மணிவரை சிவத் தியானம்/சிவ ஸ்மரணத்தில் ஈடுபட வேண்டும்.
11. இத்தகைய மாத சிவாத்திரி பூஜையில் தான் சிவன், பலன் முழுவதையும் தருகின்றார். கைலாயத்தில் சிறப்பிடத்தைத் தரும் வல்லமை வாய்ந்தது மாத சிவராத்திரி கிரிவலம்.
மாதசிவராத்திரி கிரிவலப் பலன்கள்
1, வியாபாரத்தில் நெருக்கடி உள்ளவர்கள் மேற்கண்ட முறையில் மாத சிவராத்திரி கிரிவலம், பாத பூஜையை மேற்கொண்டு யானைக்கு கரும்பு, குறைந்தது 12 கவள உணவு, இலை, தழைகளை அளிக்க, நெருக்கடிகள் சுமுகமாகத் தீரும்.
2. சதுர்த்தி விரதத்தை நிறைவேற்ற முடியாதோர், சதுர்த்தி, சதுர்த்தசி விரதங்களைத் தவற விட்டவர்களுக்கு மாதசிவராத்திரி கிரிவலம் வந்து பால் தானம் தருவது தக்க பிராயச்சித்தமாகும்.
3. தேய்பிறையில் திருமணம், சீமந்தம், உபநயனம், அஸ்திவார பூஜை போன்ற சுபகாரியங்களைச் செய்தலாகாது. அறிந்தோ அறியாமலோ இவ்வாறு செய்து விட்டவர்கள் மாத சிவராத்திரியில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஸ்ரீவிநாயகருக்கு 1008 கொழுக்கட்டை/மோதகம் நைவேத்யம் செய்து ஏழைகளுக்கு அளித்திட தேய்பிறை தோஷங்கள் தீரும்.
4. இதேபோல் வளர்பிறையில் அறுவை சிகிச்சைகள் செய்ய/செய்து கொள்ளக் கூடாது. செய்ய வேணடிய நிர்பந்தம் ஏற்படில் சிகிச்சைக்கு முன்னோ, பின்னோ குறிப்பிட்ட நோயாளியோ, அவரது குடும்பத்தினரோ அல்லது மருத்துவரோ தம் குலதெய்வம், இஷ்ட தெய்வத்தை வேண்டி, மாத சிவராத்திரியில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து, ஏழை நோயாளிகளுக்கு உணவு, மருந்து, டானிக்குகளைத் தானமாக  வழங்கிட, அறுவை சிகிச்சை நன்முறையில் முடியும்.

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வாவின் குருகுலவாச அனுபூதிகள்
இராயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வாசலில் வழக்கம் போல் அமர்ந்திருந்தார் கோவணாண்டிப் பெரியவர். அருகில் அரை டிராயர் சிறுவன். அவரைப் பார்ப்பதும், வெளியில் வேடிக்கை பார்ப்பதுமாக  சிறுவன் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். பார்ப்பவர்களுக்கு இவ்வாறு தெரிந்தாலும் அச்சிறுவனின் செய்கை – பெரியவரைப் பார்க்கும் போது மேல் உலகைக் கவனிப்பதாகவும் வெளி உலகைப் பார்க்கும் போது பூவுலகைக் கவனிப்பதாகவும் இருந்தது! இதுவே உண்மையுங்கூட!

ஆஸ்ரிக் ஸ்வஸ்திக்

பெரியவர் , சிறுவனைப் பார்த்து, “டேய், உன்னை ஓரிடத்திற்கு (என்றுமே எங்கு என்று சொன்னதேயில்லை, சென்று அடைந்த பின்னர்தான் அந்த இடமே தெரியவரும்) அழைத்துப் போகச் சொல்லி அங்காளி ஆத்தா ஆணை! கிளம்பு!” என்றார். சிறுவனும் ரெடி. இருவரும் எங்கெங்கோ நடந்தார்கள். இரவும் வந்து விட்டது. ஆனால் அப்போதும் பெரியவரின் நடை நிற்கவில்லை., அவ்வப்போது வயிற்றுப் பசியை ஆற்றிவிட்டு உடனே நடை. காலை வெளிச்சமும் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தது. அப்போதுதான் இரவு முழுவதும் நடந்த நினைவே வருகிறது சிறுவனுக்கு.. ‘நடக்காமல் நடக்க வைப்பதும், தூங்காமல் தூங்க வைப்பதும் இவருக்கு தண்ணீர் பட்ட பாடு’‘ என்று மனதில் பெரியவருடைய லீலைகளை அசை போட்டுக் கொண்டே அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான்..
 வேளா வேளைக்கு, கேட்கும் முன்பே, டிபன், காபி, பலகாரம் ரெடியாக வாங்கிக் கொடுத்துக் கொண்டே நடந்தார் பெரியவர். களைப்பு என்பதே தெரியாமல் சிறுவனும் பின் தொடர்ந்தான். அப்பாடா, ஏதோ ஒரு மலையின் அடிவாரத்திற்கு வந்தாயிற்று. சிறுவன் “அடுத்து மலை ஏறணுமா?” என்று பீதியுடன் குரல் கொடுக்கும்போதே செங்குத்தாக (திருப்பதியில் முதல் மலை ஏறுவது போல) இருந்த மலைமேல், ஏறும் பாதையைத் துரிதமாகத் கண்டுபிடித்து அதில் ஏறுவதற்குத் தயாரானார் பெரியவர்.
சிறுவன் தயங்கி நின்றான்.
“நைனா! முடியாது போல் தெரிஞ்சா சொல்லு! நான் உன்னை தூக்கிண்டு போறேன்!”
“அடடா! இந்த வயதில் இவரே போகும்போது நாம் அவரை மேலும் துன்புறுத்துவதா! கூடாது’‘ – என்று எண்ணிய சிறுவன் “சரி! வாத்தியாரே ! நான் நடந்தே வர்றேன் . நீ இருக்கும்போது எனக்கென்ன பயம்?“

தைவிக் ஸ்வஸ்திக்

“அப்படியா! சரி, வா!“ என்று பெரியவர் கிடுகிடுவென்று ஏறலானார். சிறுவனும் பின் தொடர்ந்தான். செடி கொடிகளுக்கு நடுவில் நடந்து செல்லும்போது பகல் பொழுது தெரியவில்லை. நேரத்தையும் கணிக்க முடியவில்லை. அங்குமிங்குமாக மாறிமாறி ஏறி ஓரிடம் வந்தார்கள்., அங்கே ஒரு சிவலிங்கம்! கேட்பாரின்றி, வணங்குவாரின்றித் தனிமையிலா! “டேய், இந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய் ”!
சிறுவனுக்கு குஷி! ஏனென்றால் ‘பல நாட்கள் பூஜை செய்யப்படாத சுவாமிக்கு ஒருவேளை பூஜை செய்தாலும் விட்டுப் போன பல நாட்களின் பூஜை செய்த பலன் கிடைத்துவிடும்‘ என்ற பெரியவரின் உபதேசம் நினைவிற்கு வந்ததே காரணம். உடனே சிட்டாய்ப் பறந்து அருகில் ஏதேனும் சுனை இருக்கிறதா என்று தேடினான். சிறிது தேடியவுடனே கிடைத்தது சுனையின் தரிசனம்! அடுத்து மொண்டு செல்ல பாத்திரம், சுனைக்கு நல்ல வழி, என் செய்வது?
அருகில் கிடந்த ஒரு பானையின் அடிப்பாகம் பாத்திரமாக மாற, நீரைக் கொணர்ந்து சிவபெருமான் மேல் அபிஷேக நீராய் ஊற்றலானான். “நமச்சிவாய’“ என்ற ஐந்தெழுத்தை ஓதி சிவனின் முன் பவ்யமாக நின்று “உனக்கு அபிஷேகம் செய்கிறேன்., ஏற்றுக் கொள் சிவபெருமானே!“ என்று கூறி அபிஷேகித்தான். ஊற்றிய நீர் அப்படியே உறிஞ்சப்பட்டது. மீண்டும் மீண்டும் ஊற்றிக் கொண்டே இருந்தான். தண்ணீர் சிவலிங்கத்தின் மேல் மீண்டும் அப்படியே உறியப்பட்டது. சளைக்காமல் மீண்டும் ஊற்றினான். அப்பப்பா.. எத்தனை முறை ஊற்றுவது ? மெல்ல மெல்ல இருளத் தொடங்கியது. சிறுவனின் கண்களுக்கு அதெல்லாம் தெரியவில்லை.! சுனையில் நீர், சிவலிங்கம் – இவ்வளவு தான் தெரிந்தது, தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்தான். ‘ஊற்றிய நீர் எப்போது அவ்வளவும் வெளியில் வழிகின்றதோ அப்போதுதான் அபிஷேகம் பூர்த்தி ஆகிறது‘ என்று தன் குரு சொன்னதை நினைவில் கொண்டு ஊற்றிக் கொண்டே இருந்தான்., சிறுது சிறிதாக தண்ணீர் சிவலிங்கத்திலிருந்து வழிந்து கொண்டிருந்தது.அப்பப்பா..! ஒரு வழியாய் பல மணி நேரங்களுக்குப் பின் முழு நீரும் வெளியில் விழ ஆரம்பித்தது. 
“அப்பாடா! அபிஷேகம் முடிந்தது, வாத்யாரே!” என்று திரும்பினான் சிறுவன். அங்கு வாத்தியாரைக் காணவில்லை! எப்போது அவர் மறைந்தார் என்றும் தெரியவில்லை. சுற்றிலும் இருட்டாக இருந்தது. மாலை முடிந்து இரவு வந்ததையும் அவன் கவனிக்கவில்லை!
இவ்வாறு சுற்றமும் சூழ்நிலையும் பாராது அபிஷேகம் செய்ததை நினைத்து மனம் மகிழ்ச்சி அடைந்தாலும் அச்சிறுவனுக்கு, ‘இப்போது எப்படி மலையிலிருந்து இறங்குவது?  இது எந்த ஊர்? ஒன்றும் புரியவில்லை’ என்ற பயம் ஏற்படத் தொடங்கியது! பல சமயங்களில் இதேபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன, அதனை நினைவில் கொண்டு, தன்னுடைய பெரியவரை எப்படித் தேடுவது என்று யோசித்தான். மனதில் பயம் வந்து விட்டதால் யோசிக்க முடியவில்லை. செடிகளின் சலசலப்பும், மிருகங்களின் ஓசையும் மேலும் உடல் நடுக்கத்தை அதிகரித்தது போதாகுறைக்கு பசியும் சேர்ந்து கொண்டது!  அழலாம் என்று தோன்றினாலும் வாயிலிருந்து சப்தம் வரவில்லை. சப்தம் வந்துவிட்டால், தான் இருப்பது மிருகங்களுக்கு தெரிந்து விடுமே!
அந்த பீதி வேறு. ஒரே வழி – மார்கண்டேயன் போல் சிவலிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டே இரவைக் கழிப்பது தான் என்ற முடிவுக்கு வந்து சிவலிங்கத்தைச் சற்று உந்தி அதனைக் கெட்டியாக பிடித்துக் கொண்டான் கண்களை இறுக்க மூடிக் கொண்டான். காதில் மிருகங்களின் பசிக் குரலும், செடி மரங்களின் ஓசையும் ஒலித்துக் கொண்டே இருந்தது. எவ்வளவு நேரம் என்று நினைக்க முடியவில்லை அவனால். ஆனால் தன்மேல் ஒரு கை படுவதையும், “ராஜா!’‘ என்ற குரலையும் கேட்டவுடன் தான் தைரியமாக மெதுவாகத் திரும்பினான். இருட்டில் உற்றுப் பார்த்தான். தன்னுடைய வாத்யார்தான் என்று தெரிந்து கொண்டு அழ ஆரம்பித்தான்.
“அசடே! எத்தனை தடவை நான் சொல்லியிருக்கேன். என் பெயரைச் சொல்லி கூப்பிடு! வர்றேன்னு, ஏன் கூப்பிடலை?“ என்று சிறுவனைத் திட்டிக் கொண்டே கட்டிக் அணைத்துக் கொண்டார். என்ன ஆச்சரியமென்றால், திரும்பும் போது ஒரு சில செடிகளை மட்டுமே விலக்கி இறங்கி ஐந்தே நிமிடத்தில் மலையடிவாரம் வந்து விட்டார்கள். இது எப்படி? இ(து)தினம் புரியாத புதிர்தான்!
கீழே ஏதோ ஒரு கடையில் வயிறு நிரம்பச் சாப்பிட்டான். இரயிலில் ஏறிப் படுத்ததுதான் தெரியும். விடிந்தால் சென்னை வந்துவிட்டது!
“வீட்டிற்குப் போ! சாயங்காலம் பார்க்கலாம்!“ – பெரியவரின் ஆணை இது! வீடு என்றவுடன்தான் நினைவுக்கு வந்தது. இரண்டு நாட்களாக அவன் பள்ளியிலிருந்து வீட்டிற்குப் போகாதது! வீட்டில் என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து நுழைந்தால், “ஏண்டா! இவ்வளவு லேட்டாக எழுந்திருக்கிறே! சீக்கிரம் பல் தேய் போ!“ என்ற தாயின் குரல் ஆச்சரியத்தை அளித்தது, “அப்போ ! இவங்களுக்கு என்னுடைய இரண்டு நாட்கள் மறைவு தெரியவில்லை.., ஓகே! வாத்யார் ஒரு பெரிய சித்தர்தான் தன்னைப் போலவே இங்கு ஒருவனை செட் பண்ணிட்டார் போலிருக்கு! என்று நினைக்கலானான். மீண்டும் தாயின் குரல் கேட்டவுடன் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் இறங்கினான் அச்சிறுவன்.
மாலையானவுடன் பள்ளியிலிருந்து பறந்தான் இராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு! அங்கே பெரியவர் காத்திருந்தார்!
வாடா! நைனா! உனக்காகத்தான் காத்திருக்கிறேன்!
“வாத்யாரே!“ என்று அவன் ஆரம்பிப்பதற்குள்., “உட்கார், உட்கார்!” என்று கூறி அவன் நெற்றியை விபூதியால் நிரப்பி விட்டு கைகளிலும் கால்களிலும் நீரூற்றிய விபூதியைத் தடவி, சிவப்பழம் போல் அவனைக் காட்சி கொடுக்கச் செய்தார்! பொம்மைக்கு அலங்காரம் செய்வது போல அத்தனையையும் குருவின் லீலைகளாக ஏற்றுக் கொண்டான் சிறுவன். மீறினால் அவரளிக்கும் தண்டனைகள் நினைவிற்கு வந்ததால் அமைதியாக இருந்தான். யாரையோ எதிர்ப்பார்ப்பது போல் அடிக்கடி வெளியில் கவனிப்பதும் திரும்புவதுமாக இருந்தார் பெரியவர்!
 சிறிது நேரமானவுடன் பொறுமையை மீறி, “வாத்யாரே! யாருக்காக இதெல்லாம்!“ என்றான் சிறுவன் “ஸ்...... சத்தம் செய்யாதே! அதோ பார் அந்த கோச் வண்டியை!”
சிறுவனுக்குப் பளிச்சென நினைவு வந்தது.!

பூஜா நியமங்கள்

1996ஆம் ஆண்டு புத்தாண்டு அருளுரையின் தொடர்ச்சியாக இவ்வாண்டு எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய குறைந்த பட்சம் பூஜா நியமங்களாக ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருள்வதாவது : சந்தியா வந்தனம், சூர்ய நமஸ்காரம், குல தெய்வ பூஜை, இஷ்ட தெய்வ பூஜை, அக்னி சந்தானம், ஸ்ரீகாயத்ரீ ஜபம், பிரம்ம யக்ஞம், ஔபாஸனம், ஏகாதசி விரதம், அமாவாசைத் தர்ப்பணம், பௌர்ணமி பூஜை போன்ற பூஜை, விரதங்களைப் பெரும்பாலோர் செய்யத் தவறுவதால் தான் பலவிதமான பிரச்சனைகளால் மனித சமுதாயமே அவதிப்படுகின்றது. நம் ஆன்றோர்கள் விதித்துள்ள நியமங்களை முறையாகச் செய்வதே உத்தமமானது.
1. தினமும், காலை, மதியம் மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளிலும் விநாயக அஷ்டோத்திரம் துதிக்க வேண்டும்.
2. வாரமொரு முறை வடக்கு நோக்கி ஒற்றைக் காலில் நின்று ஸ்ரீதுர்கை அஷ்டோத்திரத்தைத் துதித்திடுக!
3. அமாவாசையன்று தாய்/தந்தையின் திருவடிகள் பதிந்த பாதரட்சையினைச் சிரசிற்கு மேல் தாங்கி “ஹரி ஓம் நமோ நாராயணாய” “ என்று 108 முறை துதிக்க வேண்டும்.
குறிப்பு : தாய், தந்தையின் வாழ்நாளிலேயே அவர்களுடைய பாதரட்சகளைப் பெற்று பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியவர்கள் தக்க சற்குருவை நாடினால் அவரே எந்த சித்தபுருஷரின்/மஹானின் ஜீவசமாதியிலிருந்தோ அல்லது கோயிலிருந்தோ இறையருளுடன் பித்ருக்களின் ஆசியும் கூடிய பாதரட்சைகளைப் பெறும் ஆன்மீக விளக்கத்தை அளித்திடுவார். தக்க சற்குருவின் விளக்கம் கிட்டும் வரைப் பெற்றோர்கள் பயன்படுத்திய ஆடை, கைத்தடி போன்றவற்றிற்கு மஞ்சள், குங்குமம், சந்தனமிட்டு மேற்கண்டவாறு, பூஜிக்க வேண்டும். மாதத்திற்கொரு முறை தான் இருக்குமிடத்திலிருந்து ஏதேனும் பாடல் பெற்ற/மங்களாசாஸனம் செய்யப்பட்ட ஆலயத்திற்கு நடந்தே சென்று அவ்வாலயத்தில் அடிப்பிரதட்சிண நமஸ்காரம் செய்து தரிசித்திட வேண்டும். இவையே 1996-ம் ஆண்டிற்குரிய நித்ய, வார, பட்ச, மாதத்திற்குரிய கூடுதல் பூஜைகளாம். ஆன்றோர்கள் விதித்துள்ள ஏனைய வழிபாடுகளையும் உத்தமமாகக் கடைபிடித்திட வேண்டும்.

தீப வழிபாடு

எரியும் விளக்கை தூண்டும் முறை : - விளக்கு எரியத் தொடங்கியவுடன், அந்த தீபத்திற்குரிய தேவதை ஆவாஹனமாகிவிடுவதால் , எரியும் விளக்குத் திரியின் கசடைத் தட்டுவதோ, திரியை நிமிண்டுவதோ கூடாது. இதனால் வீண் சாபங்களும், தோஷங்களும் ஏற்படுகின்றன. பதிலாக திரியைப் பெரிதாக்கி ஒளியைக் கூட்டலாம். நேரம் ஆக ஆக விளக்கின் ஒளி மங்கிக் கொண்டே வந்தால், எரிந்து கொண்டிருக்கும் திரியின் அருகே புதுத் திரி ஒன்றை ஏற்றிப் பின்னர் பழைய திரியை எடுத்துவிட வேண்டும். இதுவே உத்தமமான முறை.
தீபத்தைக் குளிரவைக்கும் முறை : பொதுவாக மக்கள் தீபமேற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து தீபம் தானாகவே அணையும் வரை விட்டுவிடுகின்றனர். இது தவறு, தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தைக் குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்துகொண்டே இருக்க வேண்டும். தீபத்தைக் குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெயில் மிதந்திருக்கும் நுனியை) “ஓம் சாந்தஸ்வரூபிணே நம:“ என்று சொல்லிப் பின்புறமாக இழுக்க வேண்டும், அப்போது தீச்சுடர் சிறிது சிறிதாகக் குறைந்து, திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.
விளக்கு துலக்க வேண்டிய நாட்கள் : வார தினங்களில் ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் தான் விளக்கு துலக்கலாம். மற்ற நாட்களில் விளக்கைத் துலக்கக் கூடாது.
ஒவ்வொரு கிழமையிலும் விளக்கு துலக்கி விளக்கேற்றுவதால் கிட்டும் பலன்கள்.
ஞாயிறு – கண் சம்பந்தமான நோய்கள் தீரும்.
திங்கள் – அலைபாயும் மனம் அடங்கி அமைதியுறும்.
வியாழன் – ‘குரு பார்க்க கோடி நன்மை‘. மனக்கவலை தீரும்.
சனி – வாகன விபத்துக்கள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.
சுத்தமான நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்தது. குறிப்பிட்ட காரியங்களுக்குக் குறிப்பிட்ட எண்ணெயால் தீபம் ஏற்றுவது என்றிருந்தாலும் பொதுவாக, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல் அனைத்து நலன்களையும் நல்கும். கடலை எண்ணெயால் தீபமேற்றுதல் அறவே கூடாது. அதனால் பல தோஷங்களும், சாபங்களுமே வந்து சேரும்.

விநாயக சக்கரம்

“ஸ்வஸ்திக்” என்றழைக்கப்படும் விநாயகச் சக்கரத்தில் இரண்டு வகைகள் உண்டு.
வலச்சுற்று விநாயக்ச் சக்கரம் – தைவிக் ஸ்வஸ்திக்
இடச்சுற்று விநாயக்ச் சக்கரம் – ஆஸிரிக் ஸ்வஸ்திக்
வலச்சுற்று விநாயகச் சக்கரம் படிப்படியாக நன்மைகள் செய்து , இறுதிவரையில் நல்ல நிலைமைகளில் வைத்திருக்கும் . இடச்சுற்று விநாயகச் சக்காமோ, முதலில் வெற்றி அளித்தாலும் இறுதியில் தோல்வியையே தரும்.  இரண்டாம் உலக யுத்தத்தின் போது, ஹிட்லர் தனது சின்னமாய்ப் பயன்படுத்தியது இந்த ‘ஸ்வஸ்திக்’ சின்னமே! எனவே, கோமிடுகையிலும், இல்லங்களில் கதவு, ஜன்னல்களில்  இரும்பு/மர/பெயிண்ட டிசைன்களிலும் வலச்சுற்று விநாயகச் சக்கரத்தையே பயன்படுத்த வேண்டும்.

நித்ய கர்ம நிவாரணம்

ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை செய்ய வேண்டிய தானம் 
1.1.1996 மார்கழி 17 திங்கள் சர்க்கரைப் பொங்கல், மஞ்சள் நிற ஆடைதானம் செய்திட உறவினர்களின் தொல்லைகள் தீரும்.

2.1.1996

18

செவ்வாய்

பெருமாள் கோயிலில் வெண்பொங்கல் தானம் – பங்காளிகள் தேடிவருவர்.

3.1.1996

19

புதன்

மசால் வடை தானம் – இனிய செய்தி வரும்.

4.1.1996

20

வியாழன்

பால்பேணி தானம் – அடுத்த வீட்டுக்காரரின் தொல்லைகள் குறையும்

5.1.1996

21

வெள்ளி

வன்னி இலைகளால் கணபதியை அர்ச்சித்திடுக – பண வரவைத் தரும்.

6.1.1996

22

சனி

புதிய ஆடைகளுடன் புண்ய நதியில் நீராடி அவ்வாடைகளைத் தானமாக அளித்திடுக – எதிர்பாராத இடமாற்றம் வந்திடும்.

7.1.1996

23

ஞாயிறு

இடியாப்பம் தானம் – பணச் சிக்கல்கள் தீரும்.

8.1.1996

24

திங்கள்

ஆயில்ய நட்சத்திரமுடையோர் தேங்காய் எண்ணெயைத் தானம் செய்திட காரியத் தெளிவுண்டாகும், குழப்பமிராது.

9.1.1996

25

செவ்வாய்

ஆழத்துப் பிள்ளையாருக்கு (விருத்தாசலம்) மோதகம்/கொழுக்கட்டை நைவேத்யம் தானம் – வியாபார விருத்தி

10.1.1996

26

புதன்

ஆனந்த பைரவி, கல்யாணி ராகங்களில் 21 கீர்த்தனைகளைப் பாடி/பாடவைத்து ஏழைச் சுமங்கலிகளுக்கு வெள்ளி மெட்டி தானம் – மாங்கல்ய பலம் தரும் அற்புத நற்காரியமிது.

11.1.1996

27

வியாழன்

 ஆடு மேய்ப்போர்க்கு ஆடை, அன்னதானம் - அண்ணன்மார்களைப் பகைத்துக்கொண்ட தோஷங்கள் ஓரளவு தீரும்.

12.1.1996

28

வெள்ளி

மூதாதையர்களின் படத்திற்கு மஞ்சள், குங்குமம், சந்தனமிட்டு, அவர்களுக்குப் பிடித்தமான உணவுப் படையல், தானம் – வேலையில் தொந்தரவுகள் தணியும்.

13.1.1996

29

சனி

காவி உடை அணிந்தோர்க்கு உணவு, திருநீறு தானம் - தந்தைக்குத் தேவையான பணம் அளிக்காததால் விளையும் தோஷங்களுக்கு ஓரளவு நிவர்த்தி – இதன் பிறகு தந்தைக்குத் தக்க பொருளுதவியை முறையாக அளிக்க வேண்டும்.

14.1.1996

30

ஞாயிறு

நாய், பூனை, பட்சிகளின் காப்பகங்களில் அத்தகைய ஜீவன்களுக்கு மருத்துவ வசதியளித்தல் – மேலதிகாரிகளின் தொல்லைகள் தீரும்.

15.1.1996

தை
1ம்தேதி

திங்கள்

அக்கா, தங்கை, அண்ணி, பாட்டிக்கு போஜனம், வஸ்திரம், வளையல்கள் அளித்திடல் – போட்டிகளில் வெற்றி கிட்டும்.

16.1.1996

2

செவ்வாய்

திருக்குறளில் அறத்துப் பால் பாராயணம் – மூன்று பசுக்களைப் பன்னிரெண்டு முறை வலம் வந்து அகத்திக் கீரையளித்திட தன் ஊழியர்களைச் சாடிய/துன்புறுத்திய பாவம் ஓரளவு நீங்கும்.

17.1.1996

3

புதன்

80 வயது நிறைந்த வைணவப் பெரியோர்க்குப் பாதபூஜை – அவருக்கு வஸ்திர தானம் (10 x 6 வேட்டி) அளித்திடல் பிராணநாதனின் (கணவனின்) துன்பங்கள் குறையும் .

18.1.1996

4

வியாழன்

குழந்தையில்லாதோர் சந்தான கோபால கிருஷ்ணன் கோயிலில் தரிசனத்துடன் ஏழைகளுக்குப் பால் விநியோகம் செய்திட சந்தான பாக்யம் கைகூடும், யோனி நிஷேக ப்ராப்தம் முறையாகக் கூடியிருப்பின்.

19.1.1996

5

வெள்ளி

மூன்று கடாப் பற்களை இழந்தவர்க்குப் புட்டுதானம் – பல் டாக்டர்கள் தம் துறையில் முன்னேற்றமடைவர்.

20.1.1996

 6

சனி

 சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் இறந்தோருக்குப் பிடித்த உணவைப் படைத்து தானமளித்தல் – மூன்று மாணவர்களுக்கு உதவி.

21.1.1996

7

ஞாயிறு

கங்கை, காவிரி நீரை வெள்ளிக் குடத்தில் இட்டுத் தலையில் ஸ்வர்ணம் (தங்கம்) வைத்து நீராட வங்கியில் உயரதிகாரிகளால் வரும் துன்பம் தணியும்.

22.1.1996

8

திங்கள்

ஏழைகளுக்குப் புதுப்பானை, அரிசி, காய்கறிகள், மளிகைச் சாமான்களைத் தானமாக அளித்திட – கர்ப்ப சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.

23.1.1996

9

செவ்வாய்

நல்லெண்ணெய், தேங்காயெண்ணெய், இலுப்பை எண்ணெய் கலந்த முக்கூட்டு எண்ணெயால் விநாயகருக்குக் காப்பு இட்டு வறியவர்க்கு உணவிட தவறு செய்யாதவர்களை வசைபாடிய துன்பங்கள் நீங்கும்.

24.1.1996

10

புதன்

ஏழை விதவைகளுக்குரிய ஆடை தானம் – பெரியோர்களின் பாதங்களைப் பற்றி நமஸ்கரித்தல்.

25.1.1996

11

வியாழன்

முருகன் பெயரை உடையோருக்கு மூன்று படி அரிசி, தேவையான மளிகைச் சாமான்கள் அளித்து அவர்களை அன்னதானம் செய்ய வைத்தால்  ஊதிய உயர்வுப் பிரச்னைகள் நீங்கும்.

26.1.1996

12

வெள்ளி

கட்டிடத் தொழிலாளர்கள்/கலைஞர்களுக்குத் தாம்பூல தட்சிணைகள், நிலபுலன் சம்பந்தமான தகராறுகள் தீரும்.

27.1.1996

13

சனி

பீஷ்ம தர்ப்பணம்.

28.1.1996

14

ஞாயிறு

டூரிஸ்ட் கார் தொழில் செய்வோர்  (cars) நரசிம்ம மூர்த்திக்குப் பானக நைவேத்யம் செய்து அதனைத் தானமாக அளித்திட – சிறு வியாபாரத் தடங்கல்கள் நீங்கும் .

29.1.1996

15

திங்கள்

 பெருமாளின் விஸ்வரூப தரிசன மூர்த்திக்கு/படத்திற்கு 8 முறை விஷ்ணு சஹஸ்ரநாமம் ஓதி அர்ச்சித்துப் புளியோதரை நைவேத்யம், தானம் – புதிய தொழிலைத் துவக்கலாம்.

30.1.1996

16

செவ்வாய்

இறைவனுக்காகவே தங்களைத் தியாகம் செய்தோரின் சமாதியில் அன்னதானம் செய்திட குடும்ப ஒற்றுமை பெருகும்.

31.1.1996

17

புதன்

 நரிக்குறவ இனப் பெருமக்களுக்குத் தைல (எண்ணெய்) தானம் – குழந்தைகளை அடித்த சாபம் ஓரளவு தீரும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam