ஜோதி ஜோதி சிந்து ஜோதி !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

ஒரு நாள்...

அன்று விடியற்காலை மூன்று மணிக்கே சிறுவனை அங்காளி கோயிலுக்கு வரச் சொன்ன பெரியவர், அவன் வந்து பத்து நிமிடம் கழித்தே வந்தார்., நல்ல கும்மிருட்டு!

எதற்கு முன்னரே வர வேண்டும் என்ற காரிய காரணத்தை வழக்கம் போல் அவனிடம் அப்போது சொல்லவில்லை. இருந்தாலும், அவனுக்கு “விமுக்தி இனிப்பு“ தந்த உற்சாகத்தில் அடுத்தபடியாக வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் தருணத்தை அவன் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தான். அதற்குத் தான் வரச் சொல்லி இருப்பார் என்று அவன் எண்ணினான். ஆனால் அதற்கான எந்தச் சுவடும் தெரியவில்லையே!

“ஆஹா, வெள்ளியங்கிரிப் பயணமா?“ என்று எண்ணி மகிழ்ந்தவன் நேரம் செல்லச் செல்ல நம்பிக்கையை இழந்தான். ஏனெனில் பெரியவரோ அந்தத் தூணை விட்டுச் சற்றும் நகர்ந்த பாடில்லை! அந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நெடுநேரம் அவர் செய்த யோகாசனங்களையே, முத்திரைகளையே பார்த்துத் தானும் செய்து கொண்டே இருந்ததில், காலை ஆறு மணி ஆகி விட்டது.

கலியுகம் இதுவே!

திடீரென்று திபுதிபு என்று ஒரு பெரிய கும்பலே உள்ளே வந்தது.

“சாமீ! சாமீ! உங்களை அடிச்சுப் போடறுதுக்குன்னு பின்னாடி காளிப் பயல் பட்டாக் கத்தியோட, ஒரு கூட்டத்தோட வந்துகிட்டு இருக்கான். எங்கேனாச்சும் நீங்க ஓடிப் போயிடுங்க!“ என்று கத்திக் கொண்டே அவரைச் சுற்றி, சுற்றி வந்தார்கள்.

பெரியவரோ மிகவும் அமைதியாக, “அப்படியா சேதி! நீங்க எல்லாம் என்ன பண்றீங்க! எங்களை ஓடிப் போகச் சொல்றதுக்குத்தான் வந்தீங்களா? நீங்க மீசை முளைச்ச ஆம்பிளைங்கதானே!

அப்படீன்னா எங்களைக் காப்பாத்தறதுக்கு நீங்க வரலியா? ஒருவன் பட்டாக் கத்தியோட வரான்னு சொல்றவங்க, நாங்க காப்பாத்தறோம், கவலைப்படாதீங்கன்னு சொல்ல ஏன் வாய் வரலை? இதுதாம்பா கலியுகம்!”

பெரியவர் சற்று உரத்தக் குரலில் பேசினார்.

அனைவரும், மௌனமாக வெட்கித் தலையைக் குனிந்தனர்.

“நாங்க அம்பது பேர் இருந்தாலும் அவங்களோட இருபது பேருக்குச் சமமாக மாட்டோம் சாமீ! அதுவும் அவங்க எல்லாரும் முரட்டுப் பசங்க! கத்தியினால எல்லாரையும் சீவிடுவாங்க! நாங்க அப்படி இல்லை ரொம்ப சாது! ஆனா ஒரே சாதிக்காரங்க! எங்களுக்குள்ளாற எந்தப் பிரச்னையும் வரக் கூடாது, அதனாலே தான் முன்கூட்டியே சொல்ல வந்தோம்!”

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

பெரியவர் அவர்கள் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை போல் தெரிந்தது. ஏனெனில் அவரோ மிகவும் பவ்யமாக அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு மூதாட்டியிடம்,

“ஏம்மா, உன் பெரிய பேரன் துரை ஒழுங்கா வேலைக்குப் போறானா? பேத்தி மீனா நல்லாப் படிக்கிறாளா!” என்று மிகவும் சாந்தமாகக் குசலம் விசாரித்து கொண்டிருந்தார்.

வந்தவர்களோ பொறுமையை இழந்தார்கள்.

“ஏன் சாமி! உன்னை பலமா உதைக்க ஒரு கும்பல் வந்துக் கிட்டு இருக்குன்னு நாங்க சொல்ல வந்தோம்! நீ பாட்டுக்குக் கொஞ்சம் கூட அலட்டிக்காம குசலம் விசாரிக்கிறயே, ஏதோ நாங்க எங்க டூட்டியைச் செஞ்சுட்டோம்! சரி, சரி சட்டுன்னு ஓடிப் போயிடுங்க!” என்று கூறி, அலறிப் பரிதவித்தார்கள்.

ஆனால் அதற்குள் வாசலில் பெரிய ரகளை ஏற்பட்டது போல் ஒரே கூச்சல், குழப்பம்!

“எங்கேடா அந்தப் பெரியவரு?“ என்று காளியின் குரல், உச்ச ஸ்தாயியில் கேட்டது!

உள்ளே இருந்தவர்கள், “சாமீ அப்பவே சொன்னோமே! இப்ப எப்படி ஓடறது, பேசாம இந்த குளத்துக்குள்ளாற ஒளிஞ்சுக்குங்க!“ என்று அவரை விரட்டினார்கள்.

ஆனால் பெரியவரோ, “அடப் போங்கடா, காளி நம்ம பையன்! என்னதான் சொல்றான்னு பார்க்கலாமே!” என்று சொல்லிடவே, அவர்கள் விக்கித்துப் போனார்கள்.

அதற்குள் பெரும் ரகளையோடு உள்ளே வந்த கும்பலில் பாதிப் பேர் கையில் கம்பு, கத்தி, தடிகளைத் தாங்கியவாறு பெரியவரிடம் வந்து விட்டார்கள். அவர்கள் வந்தது தான் தாமதம், உள்ளே இருந்தவர்கள் ஆளுக்கு ஒரு மூலையாகப் பதுங்கி விட்டார்கள். ஏதோ ஒரு சில பேர் மட்டும் வேடிக்கை பார்ப்பதற்காக நின்றார்கள்.

சிறுவனோ அச்சத்தில் அலறிப் போய், தாய்க்குப் பின்னால் ஒளியும் குழந்தையைப் போல, பெரியவரின் பின்னால் நின்று கொண்டான்.

சிறுவனோ கண்களை அகல விரித்துக் கொண்டு, 360 டிகிரியிலும் கண்களைச் சுழற்றிக் கொண்டே எப்போது என்ன நடக்குமோ என அச்சத்தால் பயந்து வெடவெடத்துக் கொண்டிருந்தான். அவனுடைய ஆட்டத்தால் அவன் உடல் பெரியவர் மேல் சற்றுச் சாயவே, “ஏண்டா, பஸ்ஸுல போற மாதிரி இப்படி உன் உடம்பு ஆடுது?”. என்று கேட்டிடவே, சிறுவனுக்குக் கோபம், கோபமாய்ப் பொத்துக் கொண்டு வந்தது.

“தம்பி நீயாவது ஓடிப் போயிடு!” என்று சிலரும் சைகை காட்டிட, சிறுவனுக்குக் கோபம் வந்து விட்டது! கையை ஓங்கி, சைகையிலேயே அடித்து அவர்களைப் பார்த்து முறைத்தான்!

இதற்குள் காளியும் கையில் பெரிய பட்டாக் கத்தி, கபடாவுடன் பெரியவரின் மிக அருகிலேயே வந்தும் விட்டான்!

தெய்வீகத்தில் சோதனை!

“அப்பப்பா, தெய்வீகம் என்றால் ஏதோ எளிமையானது, இனிமையானது என்றல்லவா நினைத்தோம். ஆனால் எவ்வளவு கஷ்டமப்பா, கலியுகத்தில் ஒரு சற்குருவிற்கு! மக்களுக்கு நல்வழி காட்டவேண்டியது என்றால் எவ்வளவு சோதனைகள், வேதனைகளை அனுபவிக்க வேண்டியதிருக்கிறது?”

வெள்ளியங்கிரி மலைப் பயணம் என்று குஷியுடன் இருந்த அவனுடைய மனோ நிலை மாறி, தற்போது இந்த கத்தி, கபடா கூட்டத்தில் இருந்து வாத்யாரும், தானும் தப்பிப் பிழைத்தால் போதும் என்ற மன நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டான், இல்லை, இல்லை அவனே தன்னைத் தள்ளிக் கொண்டான்! ஏனென்றால் இவன்தான் கவலைப்பட்டு வேதனை அடைகின்றானே தவிர, பெரியவரோ எதற்கும் அசைந்து கொடுக்காமல் கல்லுளிமங்கனாய் அல்லவோ மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்!

இவ்வளவு நடந்தும் பெரியவர் கண்களைத் திறக்கவே இல்லை. கண்களைச் சாதாரணமாக மூடிக் கொண்டே பேசினார். அவ்வப்போது சிறுவனைப் பார்க்க ஏதோ சிறிது கண்களைத் திறந்தார். அவ்வளவுதான்! சுற்றிலும் நின்ற கும்பலைக் கண்டு சிறுவனுக்கு அச்சத்தால் வியர்த்துக் கொட்டியது.

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

முடிவும் முடியாததும்!

“என்ன பெரியவரே! எங்கே அந்த மாரியம்மா? ஒண்ணு அவ உயிரோட இருக்கணும், இல்லாட்டி நான் போகணும்? ஒரு வாய் காப்பி கூடப் போட்டுத் தராதவளோட என்ன குடும்பம் நடத்தறது? இப்ப சொல்லு, இல்லையா! ரெண்டு நிமிஷத்துல முடிவு பண்ணிக்கோ!” என்று சொல்லியவாறே கத்தியை ஓங்கினான்.

சிறுவன் அச்சத்தில் கண்ணை மூடிக் கொண்டு விட்டான். பெரியவர் அவனைப் பார்த்துச் சிரித்தார். அதற்குள் கூட வந்தவர்களும் கம்பை ஓங்கினார்கள்.

“என்ன இது நேரம், காலம் தெரியாமல் ஏதேதோ சொல்கின்றார், எதிரிலோ பட்டாக் கத்தியுடன் காளி நிற்கின்றானே!” என்று சிறுவன் மனுதினுள்ளேயே முணுமுணுத்தான். வேறு என்னதான் அவனால் செய்ய முடியும்?

அந்த ஏரியாவிலேயே காளி என்றாலே எல்லோருக்கும் நடுக்கம்தான்! ஆனால், அவனுக்கும் பெரியவரே பல குடும்பங்களுடன் சமாதானம், பஞ்சாயத்து எல்லாம் பேசித் திருமணத்தைச் செய்து வைத்தார்.

“ஏன் பெரியவரே! பொல்லாத ரௌடிப் பயன்னு இந்தப் பேட்டையில பேர் வாங்கிட்டேனே! எனக்கு யாரும் பொண்ணு கொடுப்பாங்களா, என்ன?” என்று பலருக்கும் தெரியாமல் ஓரிரவு காளி பெரியவரிடம் வந்து கேட்டிடவே...

அவரும் அவனுடைய பங்காளிகளான கிட்டத்தட்ட முப்பது குடும்பங்களுடன் பேசிப் பேசி...

தனக்காவது திருமணம் நடப்பதாவது என்று ஏங்கிய காளியை ஓரளவு மனிதனாக்கி திருமண வாழ்க்கையைப் பரிசாகத் தந்து சமுதாயத்தில் குடும்பஸ்தனாக வாழ வைத்தவரே பெரியவர்தான்!

ஆனால் அன்று அவ்வளவு பவ்யமாகப் பேசிய காளியே இன்று நன்றி கொன்று ஆளையும் கொல்ல, பட்டாக் கத்தி, அரிவாளுடன் வந்து நிற்கிறானே! என்னே நன்றி கெட்ட உலகமடா! சிறுவன் வேதனையுற்றான்.

வெண்ணெய் வெட்டி வீரன்!

எதிரிலோ காளியோ உறுமிக் கொண்டிருந்தான்! சிறுவனின் மனமோ பொறுமிக் கொண்டிருந்தது.

“இன்னா பெரியவரே! உன்னைப் போட்டுத் தள்ளினாத்தான் என் பொஞ்சாதி மாரியம்மா திமிறு அடங்கும். உன்னைச் சும்மா விடறேனா பாரு!” என்று கத்திக் கொண்டே இன்னமும் அருகில் வந்து விட்டான்.

“ஏலே! சும்மாக் கெடடா வெண்ணெய் வெட்டி வீரா! சும்மா முசுமுசுன்னு பூனைக் குட்டியாட்டம் கத்திக்கிட்டு..!” என்று பெரியவர் அதட்டிடவே,

விக்கித்துப் போன காளியிடம் இருந்து அவனையும் அறியாமல் அவன் கையிலிருந்து பட்டாக் கத்தி கீழே விழுந்து விட்டது!

பெரியவர் மிகவும் நிதானமாகச் சிறுவனிடம், “இதை ஒழுங்காப் புடிக்கக் கூட யோக்யதை இல்லைடா இந்தக் காளிப் பயலுக்கு! சரி, சரி! இந்தக் கத்தியை எடுத்துக் காளிகிட்ட கொடுத்துடுடா.. ஏன்னா.. கையில கத்தி இல்லன்னா அவனுக்குக் கத்திப் பேச வராது!” என்று ஜோக் வேறு அடித்தார்.

சிறுவன் பயந்து கொண்டே கீழே கிடந்த பெரிய பட்டாக் கத்தியின் அருகில் சென்றிட..

டமால்...

ஆம், சிறுவனை முரட்டுத்தனமாக ஒரே முட்டாகக் கீழே தள்ளி விட்டு, காளி பட்டாக் கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டான்.

“இத பாரு பெரியவரே! இந்த வாட்டி அங்காளி அப்படி இப்படீன்னு எந்த மாய ஜாலம் எங்கிட்ட இந்த தடவை பலிக்காது! எங்கே அந்த மாரியம்மா! உங்க மூணு பேரையும் நாலு சாத்து சாத்தி வெட்டிப் போட்டாத்தான் இந்தப் பட்டாக் கத்திக்குப் பசி அடங்கும்!”

திடீரென்று எழுந்த பெரியவர் கத்தி, கபடாவுடன் இருந்த அவனைத் தர தரவென்று தள்ளிக் கொண்டு ஆலயத்தின் பின்புறம் சென்றார். சிறுவன் உட்பட அனைவருமே திகைத்துப் பின்னாலேயே ஓடினர்.

ஆங்கே நாகப் புற்று அருகே, மரத்திற்குப் பின்னால...

“அவ்வளவுதானேடா காளி! மாரியம்மா தானே வேணும்! ஏய் மாரியம்மா இங்க வா!”

திடீரென்று பெரியவர் யாரையோ கூப்பிட்டிடவே, அங்கு பலத்த அமைதி நிலவியது.

விசுவிசுக்கென்று யாரோ பொறுமி அழும் சப்தமும் கேட்டது. ‘க்லிங் க்லிங்’ என்று மெல்லிய கொலுசு சப்தமும் கேட்டது.

கையில் கைக் குழந்தையுடன்... ஒரு பட்டிக் காட்டுப் பெண் ஆலயத்தின் பின்புறத்தில் இருந்து அங்கு வந்து கொண்டிருந்தாள்!

“அடிடா அவளை! போட்டுத் தள்ளு!” காளி, காட்டுத்தனமாய்க் கூச்சல் இடவே, எல்லோரும் கும்பலாக அவள் மேல் பாய்ந்தனர்.

“ஏய் காளி! என்னடா ரொம்ப நேரமா நானும் பாத்துக் கிட்டே இருக்கேன், என்னடா நீ இன்னிக்கி அளவுக்கு மீறிப் போய்க் கிட்டே இருக்கே!”

பெரியவர் பெரிய குரலுடன் அதட்டினார்!

கும்பலாகப் பாய்ந்தவர்கள் அப்படியே நின்று விட்டார்கள். அவர்களுக்கு என்ன ஆயிற்று. அவர்களுடைய வெறித்தனம் எங்கே போனது?

காளி மேலும் கத்தினான்.

“ஏண்டா குத்துக் கல்லாட்டம் நிக்கறீங்க, நல்லா உதைங்கடா அவளை!”

“ஏலேய்!” என்று திருநெல்வேலி பாணியில் பெரியவர் மீண்டும் அதட்டிடவே...

பரிபூரண (நி)சப்தம் அங்கே நிலவியது. கத்தி, கபடா, கம்பு சக்திகள் என்ன ஆயின? அந்தத் தாமிரபரனி மண் வாசனையான “எலேயில்” கரைந்து விட்டனவா?

அன்பிற்கும் உண்டோ எல்லை!

“காளிக் கண்ணு ! இந்தா பாருடா ராஜா!”

பெரியவர் அன்பொழுக அவனைக் கூப்பிட்டிடவே,

‘ரௌடி, பொறுக்கி, திருடன், அயோக்கியன் என்ற அடைமொழிகளே பாய்ந்து வந்த தனக்கு, “ராஜா, கண்ணு” என்று உண்மையான அன்பொழுகக் கூப்பிடும் ஜன்மம் இந்த உலகில் எங்கே கிடைக்கும்?

“இந்தா பாருடா ராஜா! இங்கே நல்லாப் பாருடா கண்ணு! நல்லா கண்ணைத் தெறந்து பாருடா நயினா! சமுதாயத்திலே எல்லோரும் வெறுக்கற உன்னையே நினச்சுக்கிட்டு நேத்தி ராத்திரிலேந்து அழுதுக்கிட்டு... இங்க அங்காளியை வேண்டிக்கிட்டு.. இங்கேயே மாரியம்மா கெடக்காடா!!”

அங்கே.. மாரியம்மா கைக் குழந்தையுடன் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள். காளியைக் கண்டவுடன், குழந்தையைக் கீழே போட்டு விட்டு ஓடி வந்து காலில் விழுந்தாள்!

“இந்தாடா.. இந்தா இங்கே பாரு! உன்னை நினைச்சுக்கிட்டு ராத்திரிலேந்து இங்கேயே கிடக்காடா!” என்று கூறியவாறே ஆங்கே அழுது கொண்டு இருந்தவளிடம் அவனை விட்டு விட்டார்.

தெரியாததும் தெரிந்ததும் தெரிந்தவர்!

“இங்கே பாரு உன்னை நினச்சுக்கிட்டு ராத்திரிலேந்து இங்கே மாரியம்மா அழுது “அங்காளீ காப்பாத்து, காப்பாத்துன்னு புலம்பிக்கிட்டு இருக்கா! குடும்பம்னா ஆயிரம் இருக்கத்தான் இருக்கும்! ஒத்தருக்கொருத்தர் புரிஞ்சுக்கறது தாம்பா தாம்பத்ய வாழ்க்கை! உன்னைப் பத்தி நல்லா நினைக்கறவ இந்த உலகத்திலேயே அங்காளியும், நானும், இவளும் தானேடா!”

முதல் நாள் இரவிலிருந்தே அங்கே அங்காளி சன்னதியில் அழுது கிடக்கும் மாரியம்மா பற்றிப் பெரியவருக்கு எப்படித் தெரியும்? யாருக்கும் தெரியாமல் தன் பெற்றோர்களை விட்டு விட்டு, அங்காளியே கதி என்று வந்து விட்டமையால் அங்காளியும் தன் அடிமையாம் பெரியவர் மூலம் ஆக வேண்டிய உதவிகளைத் தக்க சமயத்தில் ஆக்கித் தந்ததில் வியப்பென்னவோ?

ஒரு நிமிடத்தில் நிலைமையே மாறி விட்டதே! வந்தவர்கள் அனைவரும் பெருமூச்சு விட்டனர்.

தடாலென்று காளி பெரியவரின் காலில் விழுந்தான்!

“இந்தக் காளி பட்டாக் கத்தியைத் தூக்கிக் கிட்டு ஓடி வரானே, என்ன, ஏது ஆகப் போகுதோ!” என்று அஞ்சி ஓடோடி வந்தவர்கள் அடுத்தடுத்து நடந்த நிகழ்ந்த நிகழ்ச்சிகளைக் கண்டு திகைத்து நின்றார்கள்.

கீழே விழுந்த காளி இன்னும் எழவில்லை! அவன் கையில் இன்னமும் பட்டாக் கத்தி பளபளத்துக் கொண்டு இருந்தது! பெரியவர் அவனை எழுப்பிக் கட்டி அணைத்துக் கொண்டார்.

நடப்பதே நடக்கும்

“ஏண்டா மாங்கா மடையா? உன் மேல உயிரை வச்சுருக்கற இந்த மாரியம்மா கிட்டயாடா சோடா பாட்டில் விடறது?”

காளி ஓவென்று அழுதான். “போடா போ, வெண்ணெய் வெட்டி! உன்னால இந்தப் பட்டாக் கத்திக்குத் தாண்டா கேவலம்! போயி இந்தப் பட்டாக் கத்திய வச்சுக்கிட்டு நல்லா வெண்ணைய வெட்டு! என்னைக் கும்பிடாதே! நானும் வெறும் ஆசாமிதான்! உள்ளே அங்காளி சுவாமிகிட்டே மனிப்புக் கேளு! போலே! போய்ட்டு வாலே” என்ற நெல்லை மணம் கமழ அவனைத் திட்டி, வாழ்த்தி விரட்டினார்.

காளி சப்தமில்லாமல் மாரியம்மாவுடன் நடந்து சென்று அங்காளியிடம் ஓவென்று அழுதான்!

“போதும், போதும் அங்காளி கிட்டேயும் ரொம்ப நடிக்காதேடா ராஜா!”

வந்த கும்பலோ விஷயம் முடிந்ததும் திரும்பி விட்டது. ஆலயத்தில் தனித்துக் கிடந்தான் சிறுவன், அங்கு இருப்பதா, போவதா என்று பெரியவரிடம் இருந்து எந்த உத்தரவும் அவனுக்கு வரவில்லையே, என் செய்வது? இப்போது சிறுவன் தனித்து விடப்பட்டான்.

நேரம் ஆயிற்று, சிறுவன் மெதுவாக அடிப்பிரதட்சிணம் வந்தான். நடந்து நடந்து களைத்து அங்காளி முன் சற்றே சாய்ந்த போது....

“ஏண்டா அடுத்தது என்ன நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டா இவ்வளவு டென்ஷன் வராதே நயினா! ஆனா அதையும் தெரிஞ்சுக்கிட்டு நடக்கறதையும் நடக்க விடறதுதாண்டா பெரிய யோகக் கலை!” எனப் பெரியவர் இவன் காதில் ஓதி விட்டு மறைந்தார்.

ஸ்ரீமனோன்மணி தேவி

சந்திரசேகரபுரம் ஸ்ரீமனோன்மணி தேவி

யோக மூலம், தவ மூலம், மந்திர மூலம், பூஜை மூலம் என இறைவியின் அவதாரங்களில் பல வகைகள் உண்டு. இவற்றுள் மனோசக்தி மூலதேவியாக அபூர்வமாகவே சில ஆலயங்களில் காணப்படுவதாகும். ஸ்ரீகல்யாணி, ஸ்ரீகுந்தளாம்பிகை, ஸ்ரீநாகாம்பிகை போன்ற அம்பிகையர் ஆலயங்களில் மட்டுமே தோன்றுவதாக எண்ணாதீர்கள். எப்போதும் எங்கும் எல்லா அம்பிகையரின் அனுகிரக சக்திகள் உண்டு. அந்தந்த ஆலயங்களில் அந்தந்த அவதார உற்பவ சக்திகள் அனுகிரக சக்திகளாக எளிமையாகப் பரிணமித்து இருக்கும்.

ஸ்ரீமனோன்மணி தேவி
சந்திரசேகரபுரம்

மனோமய யோகத்தால் மணி மந்த்ர சக்திகளால் மானசீகமாக உபாசனை செய்து யோகப் பூர்வமான இறைவனைப் பூஜித்த தேவியே ஸ்ரீமனோன்மணி தேவி ஆவாள். கிழமை, நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகிய ஐந்திலுமே யோகப் பூர்வமான நாட்கள் உண்டு. உதாரணமாக, திங்கள், திருதியை, ரோகிணி, விஷ்கம்ப யோகம் மற்றும் சதுஷ்பாதக் கரண நாட்கள், மனோமய யோகத்திற்கு மிகவும் ஏற்றவை. இவை ஐந்தும் இணையும் நாட்கள் மிகவும் அற்புதமான யோக சக்திகள் நிறைந்தவை ஆகும்.

மருத்துவ ரீதியாக, போலியோ, எதிர்ப்புச் சொட்டு மருந்து இட்டு இளம்பிள்ளை வாதத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய நியதி இருப்பது போல, சந்ததிகள் நல்ல மன, உடல், உள்ள வளத்தோடு அமைவதற்கும், தற்போதைய பிறவியில் மனவளம் பெற்று நற்பண்புகள், நல் ஒழுக்கத்தோடு நன்முறையில் வாழ்வதற்கும் ஸ்ரீமனோன்மணி தேவி வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். திங்கட் கிழமை தோறும் ஸ்ரீமனோன்மணி தேவியை வழிபட்டு வருதலால் கபால சக்திகள் நன்கு வளம் பெறும்.

ஸ்ரீமனோன்மணிக்கு முத்துக் காப்பு

எத்தகைய நற்காரியங்களை நிறைவேற்றுவதற்கும் நல்ல உறுதியான மனோநிலை, மன வைராக்யம், நல்வள மன சக்தி மிகவும் தேவைப்படுவதாகும். மனம் நொந்திடில் மனிதன் கல் மனிதனாகி, புகை பிடித்தல், மதுஅருந்துதல் மற்றும் கேளிக்கைகளை நாடிச் செல்லலாகின்றான். இவ்வாறு வெளிப்புல நுண் சுகங்களுக்கு அடிமையாவதால், மனிதன் மனசக்தியில் பலவீனம் அடைந்து விடுகின்றான். இவ்வாறு மனம் மிகவும் பலவீனம் அடைந்துள்ளோர் ஸ்ரீமனோன்மணி தேவிக்கு கீழ்க் கண்ட வகையிலான முத்து வகைக் காப்புகள் இட்டு வழிபடுதல் மிகவும் விசேஷமானது.

 வெண்ணெய்க் காப்பு இட்டு, ரோஜா இதழ்களைப் பதித்தல், சந்தனக் காப்பு இட்டு மாதுளை முத்துக்களைப் பதித்தல், கோதுமை அல்வாக் காப்பு இட்டு முந்திரி, திராட்சை, பாதாம் பருப்புகளைப் பதித்தல், மஞ்சள் காப்பு இட்டு நவதான்யங்கள் பதித்தல் – என இருவகைக் காப்புகளை இட்டு வழிபடுதலால் மன பலவீனம் தணியும்.

சந்திரசேகரபுரம்

மனோபலம் பெருகிட!

வசதியற்றோர் மஞ்சள் காப்பு இட்டு தும்பை, சங்கு புஷ்பம் பதித்து வழிபடுதல் வேண்டும். நல்புத்தியை, நிலையற்ற மனம் அழுத்துகையில் தான் மன பலவீனம் உண்டாகிறது. இவ்வகையிலான இருவகைக் காப்பு வழிபாடு மனம், புத்தியை நல்வழிப் படுத்தி மனத்தை பலம் பெறச் செய்கிறது.

நிறைய தேவமொழி, தமிழ் மாமறைகளை ஓதி, நெடுநேரம் ஸ்ரீமனோன்மணி தேவி முன் அமர்ந்து பூஜித்தலால் அற்புதமான மனோசக்தி கிட்டுவதைக் கண்கூடாகக் கண்டு மகிழ்ந்திடலாம். பொதுவாக மனதிற்கு அதிபதியான சந்திர பகவானின் 27 பத்தினி தேவ மூர்த்திகள் தினமும் வழிபடும் தேவியே கும்பகோணம் வலங்கைமான் அருகில் உள்ள சந்திரசேகபுரம் ஸ்ரீசந்திரசேகரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீமனோன்மணி தேவி ஆவாள். மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி. மிகவும் அபூர்வமாக, ஒரு சில ஆலயங்களில் தான் தரிசிக்கக் கூடிய மூர்த்தி.

மனோன்மணி வாலை யோகம் என்பது சித்தர்களால் போற்றப் பெறும் மிக மிக உத்தம நிலை யோகம். கடைபிடிப்பதற்கு மிகவும் கடினமான யோகம். ஆனால், இந்த வாலை யோகத்தில் சிறப்புற்றாலோ பல தெய்வ மூர்த்திகளின் தரிசனங்களை எளிதில் அளிக்க வல்ல மகத்தான யோக சித்திகளைத் தரவல்லது. யோக நிலைகளில் சிறக்க விரும்புவோர் ஸ்ரீமனோன்மணி தேவியை வழிபட்டு வருதல் வேண்டும்.

காரைக்கால் சித்தர்

பௌர்ணமி கிரிவத்தைப் போன்று மாத சிவராத்திரி கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

அகால மரணத்தை தருவிக்கின்ற தோஷங்களுள் மிருத்யு தோஷங்களும் உண்டு. பிறரை வதைத்தல், பிறர் மனம் வருந்தும்படி, உடல் நோகும்படி பேசுதல், துன்புறுத்துதல், பிறர் சொத்தை அபகரித்தல், தனக்கு உரிமை இல்லாததைக் கைப்பற்றுதல், கருக்கலைப்பு, கருவைச் சிதைத்தல், மாற்றார் குழந்தைகளை வருத்தி வளர்த்தல், பொதுச் சொத்தை அபகரித்தல், அதர்மமான முறையில் செல்வம் சேர்த்தல், குருவிற்குத் துரோகம் இழைத்தல் போன்றவை யாவும் கலியுகத்தில் மிருத்யு தோஷங்களைத் தருவதாகும். இவையாவும் சந்ததி சந்ததியாகத் தொடர்ந்து வந்தும் பாதிக்கும்.

காரைக்கால் சிவாலயம்

கலியுகத்தின் மிருத்யு தோஷங்களில் 72 வகைகள் உண்டு. பூஜை, மந்திரங்கள், யோகம், தியானம், தான தர்மங்கள், தவம் போன்றவற்றால் மிருத்யு தோஷங்களைக் கலியுகத்தில் ஓரளவு தணித்தும், களைந்திடவும் முடியும். இவற்றுள், யோகப் பூர்வமாக மிருத்யு தோஷங்களைத் தணிக்க வல்ல, 72 யோகங்கள் சேர்ந்த தொகுப்பிற்கு “ஜய ஸ்தூபம்” என்று பெயர்.

மனித உடலில் 72,000 நாடிகளிலும் ஜய ஸ்தூப யோகப் பரல்கள் பரிணமித்து உள்ளம், மனம் உடலைச் சீர்மை பெறச் செய்கின்றன. இந்த ஸ்தூப யோகத்தில் சிறப்புப் பெற்றவரே காரைக்கால் சித்தராவார். காரைச் செடி என்ற ஒரு வகைத் தாவரத்திற்கு பூமியின் நீரோட்டங்களில் உள்ள கசடுகளைக் கழிக்கும் அற்புத சக்தி உண்டு. சில வகைக் காரைச் செடிகளின் தண்டுகளின் வடிவு, மனிதனின் கால் போலவே இருக்கும்.

முக்கூட்டுச் சித்த யோகமாமுனி!

 காரை வகை மூலிகைகளுடன் புனிதமான பூமியடி நீரோட்டங்களைக் கொண்ட புண்ணிய பூமியே காரைக்கால் ஆகும். இப்புண்ணிய பூமியில், சகல வகையான மிருத்யு தோஷங்களையும் களைய வல்ல யோகசுவாசம், யோகவாசம், யோகப்பூசம் ஆகிய த்ரயயோக பூஷண சக்திகளைக் கொண்டவரே காரைக்கால் சித்தர் ஆவார். இறந்தவரையும் எழுப்புகின்ற மிருத்யுஞ்ஜய சஞ்சீவினி மூலிகா ரகசியங்களை நன்கு அறிந்தவர். சுக்கிரனாகிய வெள்ளி லோகத்தில் தோற்றம் கொண்டு, இறையருளால் இன்றும், என்றும் அடிக்கடி பூமியில் பல வடிவங்களில் தோன்றி, ஆற்றுவன ஆற்றியருளி மறைபவர். விடிவெள்ளி நேரத்தில் தாம் மிருத்யுஞ்ஜய சஞ்சீவினி மூலிகா ரகசிய யோகங்களைப் பயில இயலும். விடிவெள்ளி என்றால் வானில், வெள்ளியாகிய, சுக்கிர நட்சத்திரம் தோன்றுகின்ற நேரம் என்று பொருள்.

இவர் கண புத்திரனார் என்ற சித்தர் வகுப்பைச் சார்ந்தவர். இறந்தாரை இருந்தவராக்கும் அருந்தவயோக சக்திகளைப் பூண்டவர். ஆனால் அரிதாய்த்தான் எவருடைய மரண விதியையும், அதுவும் இறையாணை கூடிடில்தான் மாற்றுவார்.

“விடிவெள்ளிக் காரையார், விடிவெள்ளிக் காரையார்,
அடித்தளி ஜீவிதம், கண புத்திரன் காயாரோஹணனே!”

-என்ற பரிபாஷைப் பாடல் இவருடைய மிருத்யுஞ்ஜய யோகப் புலமையைச் சூக்குமமாகவே விளக்குவதாகும். எவ்வகையில் இறந்தவரையும், ஒரு நாழிகை நேரம் மீண்டும் உயிர்ப்பித்து, இறந்தவர் ஆற்ற வேண்டிய நற்கடமைகளை ஓரளவேனும் நிறைவேற்றிட, உத்தம ஜீவிதயோக வாய்ப்பைத் தந்தவரே காரைக்கால் சித்தர்.

மீண்ட தேகத்தில் ஈண்டு புண்ணியம் செய்தனை!

அதாவது இவரிடம் ஆழ்ந்த நம்பிக்கையைக் கொண்டவர்கள் தம் உற்றம், சுற்றத்தில் எவரேனும் இறந்திட்டால் இவரை அங்கே அழைத்துச் செல்வர். காரைச் சுடர்ச் செடியின் அமிர்தயோக சக்தியாலும், மிருத்யுஞ்ஜய சஞ்ஜீவினி மூலிகா பந்தா சக்தியாலும், இவர் இறந்தவரை ஒரு நாழிகை நேரம் உயிர்ப்பிக்கச் செய்து, அவர் காதில், “நல்லன செய்து, நல்லிடம் சேர, நல்ல தருணமிது அய்யா!” என்று ஓதி விட்டு மறைந்து உடனேயே அருணாசலமாம் திருஅண்ணாமலைக்கு ஏகிடுவார்.

இறந்தவரும் எழுந்து, அடுத்த 24 நிமிடத்திற்குள் மரணம் மீண்டும் ஏற்படும் முன் ஆற்ற வேண்டிய நற்காரியங்களை அரும்பாடுபட்டு ஆற்றி விட்டு, அமைதியாக உயிர் துறப்பார். இவ்வாறு இறப்புத் தருணத்திலாவது நற்காரியங்களை ஆற்றி, அருள் நினைவுடன் உயிர் துறக்க, காரைக்கால் சித்தர் காட்டிய நல்வழிகளுள் இதுவும் ஒன்றாகும். ஆனால் இறப்பின் முன் ஒரு நாழிகையையும் நன்முறையில் அறவழியில் பயன்படுத்துவோர்க்கு மட்டும் தான் காரைக்கால் சித்தர் நேரில் வந்து உயிர் மீட்கும் அருட்சித்திரப் படலம் நடைபெறும். இந்த உயிர்ப்புப் படலத்தைத் தவறாகப் பயன்படுத்த எண்ணுவோர்க்கு, சித்தர் இருக்கும் இடமே தென்படாது போய்விடும். இவர் மீது நம்பிக்கையில்லாத சிலரும் இவரை இழிவு செய்யும் பொருட்டு, தன் குடும்பத்தில் இருந்தவரை, இறந்தவராக நடிக்கச் செய்து, இவரை நாடியபோது, “எழாத வரை எழ வைத்தல் எம்மால் இயலாது!” என்று அவர் உரைத்தமையால், இறந்தவராக நடித்தவர் உண்மையில் இறந்தே போனார். இது நடந்ததில் இருந்து எவருமே அவருடைய யோகப் புலத்திறத்துடன் விளையாட எண்ணிடார்.

எழுப்பியதில் எழுந்த ஏற்றமிகு தான, தர்மம்!

காரைக்கால் சித்தருடைய இந்த அரிய யோகத் திறமையால் ஆயிரக்கணக்கானோர் தம்முடைய இறுதி நேரத்திலாவது மளமளவென்று எண்ணற்ற தான தர்மங்களைச் செய்து தர்ம வளத்தைப் பெருக்கினார்கள். பல செல்வந்தர்களும், தாம் உயிர் பிழைத்த ஒரு நாழிகை நேரத்தில், ஆயிரக்கணக்கான வறுமையான குடும்பங்களுக்குத் தம் செல்வத்தைப் பகிர்ந்து அளித்து, வளமை தந்து, புண்ணியம் சேர்த்து அரிய புண்ணிய லோகத்தை அடைந்தனர்.

பெரும்பாவம் செய்தோர் இறுதியில் ஒரு நாழிகை நேரத்திலாவது, உத்தம ஹோம பூஜை, கும்பாபிஷேக அறப்பணிகளைத் தொடங்கி, பாவம் களையப் பரிகாரம் தேடினர். இத்தகைய ஜய ஸ்தூப யோகத் திறனைக் கொண்ட காரைக்கால் சித்தபிரான் நடப்பு மாத சிவராத்திரியான தாரண வருட வைகாசி மாதத்தின் மாத சிவராத்திரி நாளில் திருஅண்ணாமலையில், தூல, சூக்கும, காரண, காரிய வடிவுகளில் வலம் வந்து அருள்பாலிக்கின்றார்..!

யோக சரணத்துடன் அருணை கிரிவலம்!

சுக்கிர லோகத்தில் இருந்து தோன்றிய கணபுத்திரச் சித்தர் குலத்தைச் சார்ந்தவர் ஆதலால்,

“கணபுத்திர சாதகம்
கணபுத்திர மோதகம்
கணானாம்த்வம் கணபதி, சரணம்,
சரணம், சரணம்!” – என்று ஓதியவாறு கிரிவலம் வருதல் வேண்டும்.

ஜய ஸ்தூப யோகத்தில் ஒரு வகையே “ப்ராணாக்னி முனைய தரயோகம்” ஆகும்.

“செத்தவரை எழுப்பும் சித்தன் வருவான்!
அத்தாரண வைகாச அருநாள் அறிந்து வாரும் அருணைக்கே!”

 - என்பது காரைக்கால் சித்தர் அருணாசல கிரிவலம் வருவதற்கான பரிபாஷைக் கால நி(ய)திப் பாடலாகும். “ப்ராணாக்னி முனைய தரயோகத்தைத்” தர வல்ல, எம சஞ்சீவினி மூலிகை சக்திகள் நிறைந்த தடாகமே அருணாசல எமலிங்கத் தீர்த்தமாகும். இதில், குறித்த யோக நேரத்தில் நீராடும் காரைக்கால் சித்தர், எம லிங்கத்திற்கு முன் உள்ள அருணாசல மலையில் ஒரு குகைப் பகுதியில் அமர்ந்து, ப்ராணாக்னி முனை தர யோகம் பயின்று, மீண்டும் காரைக்கால் சென்றிடுவார்.

ஒரு முறை எவரையேனும் உயிர்ப்பித்தால், இறந்தவர் எழுந்த அடுத்த நொடியில் காரைக்கால் சித்தர் திருஅண்ணாமலைக்கு வந்து கிரிவலம் புரிந்திடுவார்.

சித்தர்களின் யோக வளாகமே அருணாசல கிரிவல பூமியாம்!

“இறந்தாரை எழுப்பப் பிறந்தார், மரண கணத்தை வென்ற மாகணபுத்திரன்!” என்ற அடைமொழிகளையும் பூண்டவர். கூடு விட்டுக் கூடு பாயும் சித்த யோகத்தில் வல்லவர். வெள்ளிச் சுடரான சுக்கிர லோகத்தில் தோன்றியவர் ஆதலால் சுக்கிர தசை, சுக்கிர புத்தி, சுக்கிர அந்தரமாகிய ஜாதக காலத்தில் இருப்பவர்கள்., இன்று, அண்ணாமலையில் கிரிவலம் வந்து, எமலிங்க சந்நதியில் 21 (மூன்று வகைத் தலங்கள் சேர்ந்த) விளக்குகளை ஏற்றி வழிபடுதல் வேண்டும்.

குடும்பத்தில் எவரேனும் விபத்துக் காரணமாக இறத்தல், இளவயது மரணம், திடீர் மரணம் ஏற்படுதல் போன்ற ம்ருத்யு தோஷங்கள் குடும்பத்தைப் பற்றி இருப்பின் இவற்றை நிவர்த்தி செய்ய இந்த மாத சிவராத்திரியில் கிரிவலம் வருதல் வேண்டும்.

அறிந்தோ, அறியாமலோ குடும்பத்தில் எவருக்கேனும் மின்சாரத் தகனம் செய்திருந்தால், இறந்தவருடைய அங்கங்கள் பரிபூரணமாக அக்னியில் பஸ்மம் ஆகாது அவர்களுடைய சாயா தேகத்திற்கு பலத்த ஹீன தோஷங்கள் ஏற்படும். இதற்கு ஓரளவு பரிகாரம் காணவும் இன்று கிரிவலம் வந்து, இதன் பிறகு வருங்காலத்தில் குறைந்தது மூன்று பரம ஏழைக் குடும்பங்களில் இறந்தோரை அக்னி தகனம் செய்வதற்கான, ஈமக் கிரியைகள் நடத்துவதற்கான அனைத்துவிதமான உதவிகளையும் செய்திடல் வேண்டும்.

தாம் இறந்து விடுவோமோ என்று மரண பயத்தால் அவதிப்படுவோர், வெலவெலத்து இருப்போர் அடிக்கடி துர்மரண சம்பந்தமான துர்கனவுகளைக் காண்போர், இன்று கிரிவலம் வந்து கனவு தோஷத் தீர்வுகளைப் பெறுதல் நல்லது.

தம்முடைய வீடு, தொழிற்சாலையில் மரங்களை அனாவசியமான முறையில் வெட்டியோர், குறிப்பாக மா, பலா,வாழை, வேம்பு, தென்னை, பனை, அரசு, ஆல், புரசு, வன்னி, துளசி போன்ற புனிதமான விருட்சங்களை வெட்டுவதற்குக் காரணமானோர் தாவர தோஷ சாபங்களில் இருந்து மீள்வதற்கானப் பரிகாரங்களைப் பெறவும் இம்மாத சிவராத்திரி கிரிவலம் உதவும். நன்றாகக் கவனிக்கவும், இவையாவும் நல்வழிப் பரிகாரங்களைத் தருமே தவிர இதுவே தீர்வு ஆகிவிடாது. இவர்கள் தாம் வெட்டித் தீர்த்த தாவரங்களின் ஐந்தின் மடங்காக ஆலய நந்தவனங்களில், தோட்டங்களில், தாவரங்களை வளர்ப்பதற்கும், இயன்ற அளவில் சில ஏழை விவசாயிகளின் பயிர்ச் சாகுபடிக்கும் ஆன உதவிகளையும் ஆற்றிட உறுதுணையாக இருக்க வேண்டும்.

எங்கோ இறந்த தாய், தந்தை உறவினர்களின் உடலைக் கூடப் பார்க்க முடியாமல் எங்கோ தகனம் நடந்திருந்தால் இதற்குப் பரிகாரமாகவும் இன்று கிரிவலம் வருதல் வேண்டும். இவ்வாறு மிருத்யு தோஷங்களைத் தவிர்த்து நல்அமைதியுடன் வாழ, ஸ்ரீகாரைக்கால் சித்தர் கிரிவலம் அருளும் இம்மாத சிவராத்திரி நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில் அல்லது உற்றம் சுற்றத்தில், எவரேனும் புற்றுநோய், தொழுநோய், நுரையீரல் மற்றும் இருதய சம்பந்தமான நோய்கள், பலத்த சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருத்தல் போன்றவற்றில் நிலவும் கடுமையான மிருத்யு தோஷங்களைத் தணிக்கவும், தீர்க்கவும் இவை சந்ததிகளைப் பற்றாது தற்காத்துக் கொள்ளவும் இம்மாத சிவராத்திரியில் அருணாசலக் கிரிவலம் வந்திட வேண்டும். குடும்பத்தில், உற்றம், சுற்றத்தில், எவரேனும் சித்தர்கள், மகான்களை, சான்றோர்களை இழித்துப் பேசி இருத்தலாலும் ஏற்படுகின்ற கடுமையான பலத்த வாக்குத் தோஷங்கள் சந்ததிகளுக்குத் தீராத தோஷங்களாக மாறும் முன் இவற்றைக் களைய வழிகாணவும் இம்மாத சிவராத்திரியில் கிரிவலம் வந்திட வேண்டும்.
செத்துப் பிழைத்தவர்கள் போல, நோயில் படுத்து கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டோர் இன்று இயன்றால் அவர்களோ அல்லது அவர்கள் சார்பாக மற்றவர்களோ இம்மாத சிவராத்திரியில் கிரிவலம் வருதல் நன்மை பயக்கும்.

பயரி சிவாலயம்

சித்திரைச் சதயச் சந்தனக் காப்புத் திருத்தலம்! சித்திரைச் சதயத் திருநாளில் சீர்மிகு புராண வைபவங்கள் நிகழ்ந்த புண்ணிய பூமி! சித்திரைச் சதய நட்சத்திர உற்சவத் திருக்கோயில் பயரி கிராமத்தின் ஸ்ரீநாகாம்பிகை சமேத ஸ்ரீகோடி சூர்யப் பிரகாச ஈஸ்வரர்!

அருள் பயத்தலே அருள் பழுத்த பயரியாம்!

பயம் என்றால் அஞ்சுதல் என்று மட்டுமே பொருள் கொள்கின்றனர். இதில் “ப” எழுத்தானது, “பஸ்”என்பதில் உள்ள மெல்லிய ஒலிப்பைக் கொண்டிருக்கும். “அருளாளர்கள் திருவருளாசி பயத்தனர்!” எனில் உத்தமர்கள், திருவருளைப் பெற்றுத் தந்தனர், அருளாசி ஆகி வந்தது என்றும் பண்டையத் தமிழ் அர்த்தமாகும். இதில் “ப” எனும் அட்சரம், பள்ளி என்பதில் உள்ளது போல, அழுத்தமான “ப” ஒலியைக் கொண்டிருக்கும்.

இங்கு பயஹரி கிராமச் சிவத்தலமானது, கோடி சூரியப் பிரகாசச் சிவலிங்க ஜோதியை, ஹரியாகிய, அரிக்கு, திருமாலுக்குப் பயந்த, பயத்த (அளித்த) காரணத்தால், “(சிவனருள்) பயந்த ஹரியாய்”, ஆகி, காலப் போக்கில் பயஹரியாகி, தற்போது பயரியுமாயும் ஆயிற்று.

ஹரியாகிய பெருமாள், தாம் தரிசித்த சிவதரிசன அருளாமிர்தத்தை, (பிரபஞ்ச ஜீவன்கள்) யாவருக்கும் “பயத்தமையால்” (அளித்தமையால்) “(அருள்) பயத்த ஹரி” என ஆகி பயரி என்ற பெயராய் இவ்வூருக்குப் பயந்தது (கிட்டியது).

ஹரிதுவாரமங்கலம்

பயஹரியும் பயரியும்

ஈசனின் அடியையும், முடியையும் கண்டறிய பெருமாள் (ஹரி) வராஹ ரூபம் எடுத்து, பூமியைக் குடைந்து சென்று துவாரம் மூலமாக வெளி வந்த தலமே (பயரி பக்கத்தில் உள்ள) ஹரிதுவாரமங்கலம் ஆகும். பூமியடியில் ஈஸ்வரனைக் காண இயலாது ஏங்கிட, திருமாலுக்கு ஈஸ்வர ஜோதியைப் பயத்த (அருளிய) தலமே பயரித் தலமாகும். இங்கு கோடி சூர்யப் பிரகாசத்துடன் பெருமாளுக்கு ஈஸ்வரன் காட்சி அளித்து, ஹரியின் பயத்தைப் போக்கிய காரணத்தால் ‘பயஹரி’ என்ற சொல் மருவி பயரி என்று ஆகி விட்டது.

ஸ்ரீவராஹ மூர்த்தியாய், பூமியின் அடியில், சர்வேஸ்வர தரிசனத்தைப் பெறச் சென்ற திருமால் ஈசன் தரிசனம் கிட்டாது வெளிப் போந்து, உடல் ஆடி நின்றபோது அவருடைய திருமேனியின் பயத்தைத் தீர்த்தமையால் பயஹரி சிவத்தலமே, பயரி ஆயிற்று என்ற பொருளிலும் வரலாறு உண்டு. அரிதுவார மங்கலத்திற்கும் (திருஅரதைப் பெரும்பாழி), பயரி கோயிலுக்கும் இடையே மறைபொருளாகச் சுரங்கப் பாதை உள்ளது.

புராணங்களைப் படியுங்கள்! புராணங்களில் அனைத்திற்கும் தீர்வுகள் உள்ளன!

சிவன், விஷ்ணு, அம்பிகை என்று பரம்பொருளின் அம்சங்களையே நாம் உணரும் வண்ணம் பிரித்துக் காண்கின்றோம். ஒன்றே பரம்பொருள், ஒன்றே ஜீவன்கள் என்று வாக்கியத்தில் உரைப்பது எளிதானாலும், உணர்ந்து கடைப்பிடிப்பது கஷ்டமாகி விட்டதால் தான், உலகில் ஜாதி, மத, இன பேதங்கள் மலிந்து வருகின்றன. இறைப் புராண வைபவங்கள் யாவும் ஜீவன்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை, விளைவுகளை, இன்ப துன்பங்களைச் சுட்டி, உணர்த்தி, தகுந்த விடைகளையும் அளிக்கின்றன.

எனவே அவ்வப்போது புராணங்களைப் படித்து வர வேண்டும். புராண உபந்யாசங்களைக் கேட்டும் வர வேண்டும், இதனால் மன அமைதி கிட்டுவதோடு, மன அமைதியைப் பாதிக்கும் வகையில் உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளுக்கான தீர்வுகளை, புராணங்களில், எங்கேனும் ஓரிடத்தில் இறைவனே காட்டி அருள்வார்.

ஸ்ரீஹரி ஹரிதுவாரமங்கலம்

வெளியுடலால் உள்ஜோதி காணல்

திருமால், சிவனை வழிபடுவதும், சிவன் திருமாலைப் பூஜிப்பதும் புராணங்களில் நிறைந்து, நமக்குப் பல பாடங்களைப் போதிக்கின்றன. ஸ்ரீவராஹ மூர்த்தியாய், பெருமாளப்பர், பூமியடியில் குடைந்து சென்று, சர்வேஸ்வரனை தேடுகின்றார் என்ற புராண அநுபூதியில் பல தத்துவார்த்தங்கள் ஆத்ம விசார விளக்கங்கள் நிறைந்துள்ளன.

வெளி உடம்பு கொண்டு இறைவனை வெளியே தேடாது, உள்ளுள் உணர வல்லதே இறைப் பரம்பொருள் என்பதையும் இது சுட்டிக் காட்டுகின்றது. மேலும் ஆண், பெண், பன்றி, கழுதை, நாய் என ஜீவ பேதம் கொள்ளாது, அனைத்தும் இறைப் படைப்பே, வினைகளின் விளைவுகளே பிறவிகள் என்பதையும் இது உணர்த்துகின்றது.

மேற்கண்ட யாவும் படிப்பதற்குத் தத்துவார்த்தங்களாக உள்ளனதாமே! இவற்றையெல்லாம் விளக்கி, நடைமுறைக்கு ஏற்றவாறு, மிக மிக எளிமையாக இறைப் பொருளை தரிசன, பூஜா, தான தர்மப் பலன்களைச் சித்திரை சதய நட்சத்திர நாளில் உணர வைக்கும் தலங்களுள் ஒன்றே பயரி சிவத்தலமாகும்.

கீழ்சூரிய மூலையும் பயரியும்!

கும்பகோணம் – கஞ்சனூர் செல்லும் வழியில், துகிலி உட்பிரிவு சாலையில், திரைலோக்கியை அடுத்துள்ள கீழ் சூரிய மூலை கிராமத்தில், உலகிற்கே ஒளி வழங்கும் சூரிய மூர்த்தி தமக்கு வேண்டிய சூரிய கிரண சக்திகளைப் பெறுகின்ற சக்தி வாய்ந்த மூர்த்தியான ஸ்ரீசூரிய கோடீஸ்வர மூர்த்தியின் மஹிமையை நாம் ஏற்கனவே ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அளித்து வந்துள்ளோம்.

அடிமுடி தேடும் படலம்
கடுவெளி

இங்கோ, பயரியில் ஸ்ரீகோடி சூரியப் பிரகாச சிவலிங்க மூர்த்தியாக சர்வேஸ்வரர் அருள்கின்றார். ஆம், கோடானு கோடி சூரிய மூர்த்திகளின் பிரகாசத்தையே தாங்கி அருள்கின்ற அற்புதச் சிவ மூர்த்தி.

கோடானு, கோடி சூர்ய மூர்த்திகளின் பிரகாசத்தை, இறைவனை, இறைப் பொருளை இறைவனால் தாமே அளிக்க இயலும்.

இந்த இரண்டு தலங்களுக்கும் தெய்வீகப் பிணைப்புகள் உண்டு. சூரிய நட்சத்திர நாட்கள், சூரிய சக்தி நாட்கள், சூரிய கிரண நாட்கள், ஞாயிறு, சதயம், சப்தமி போன்ற நாட்களில் பயரி, கீழ்சூரியமூலை ஆகிய தலங்களிலும் பூஜித்தல் மகத்தான பலன்களைத் தரும்.

சூரிய சக்தி நாட்களில் இக்கோயிலில் வழிபடுதல் மிகவும் சிறப்புடையது. ஞாயிறு, சதயம், சிவராத்திரி, அஸ்வினி, ஆயில்யம், மூலம், பிரதமை நாட்களில் வழிபடுதல் நன்று.

“தன் பெண் பிள்ளை அழகாக இல்லையே, நன்கு படிக்கவில்லையே, நல்ல வேலை அமையவில்லையே, எவ்வாறு திருமண வாழ்க்கை அமையுமோ!” என்று அஞ்சுவோர், பயரியில் பிரதோஷம், மாத சிவராத்திரி, ஞாயிறு, திங்களில் இத்தலத்தில் வழிபட்டு வர வேண்டும். கடுமையான கண் நோய்களால் அவதியுறுவோர் இத்தலத்தில் ஞாயிறு சதயத்தில் வழிபட்டுப் பிறகு, கீழ்சூரிய மூலை கிராமத்தில் ஸ்ரீசூரிய கோடிப் பிரகாசச் சிவலிங்கத்தை வழிபட்டு வருதலால் அற்புதமான பலன்களைக் கண்கூடாகக் காணலாம்.

1. வாழ்வில் அமைதியின்மை, வெறுப்பு, வாழ்க்கையில் இஷ்டமில்லாமை போன்றவற்றை நீக்கி, மனிதப் பிறவியின் புனிதத்துவத்தை உணர்த்த வல்லதாம்.

2. செய்த தவறுகளை எண்ணி, எண்ணி பயந்து வாழ்வோர் தக்க நிவாரணங்களைப் பெற உதவும் தலம்.

3. வீட்டில், அலுவலகத்தில், தொழிற்சாலையில் பிறருக்கு அஞ்சி, அஞ்சித் தினமும் வாழ்வோரின் பீதிகளை அகற்ற வல்ல தலம்.

ஸ்ரீசூர்யகோடீஸ்வரர்
கீழ்சூரியமூலை

4. நிலையில்லாத வாழ்க்கையை வாழ்வோர், நன்னிலை பெற்று வாழ உதவும் தலம்.

சித்திரைச் சதயச் சந்தனக் காப்பிற்குச் சந்தனம் அரைத்துத் தந்து மனக் கவலைகளைத் தீர்ப்பீர்களாக! நாக தோஷங்களைத் தீர்த்து, திருமணத் தடங்கல்களை நீக்கும் பயரி நாகாம்பிகை! கண் நோய்களைத் தீர்க்கும் கனிந்த சிவமூர்த்தி! பயரி ஸ்ரீநாகாம்பிகை சமேத ஸ்ரீகோடி சூரியப் பிரகாச மூர்த்தி!

சித்திரைச் சதய சந்தன ஜோதி காண்பீர்!

கம்பம் என்றால் நடுக்கம் என்று பொருள். கம்பஹரேஸ்வரர் என்றால் நடுக்கத்தைத் தீர்க்கும் ஸ்ரீசரபேஸ்வரர் ஆவார். பூமியடியில் சென்று ஈஸ்வர ஜோதியைத் தரிசிக்க இயலாது ஏக்கத்தால், மனச்சோர்வுடன் நின்ற பெருமாளுக்கு, தேஜோமயமான, கோடி சூரிய மூர்த்திகளின் ஒருங்கிணைந்த ஜோதிப் பிரகாசக் காட்சி தந்து ஹரியாம் பெருமாளின் (ஈஸ்வர தரிசனம் காணா) ஏக்கநடுக்கம் (பயம்) தீர்த்து, ஹரிக்கு, ஹரனாய், சித்திரைச் சதய நாளில் காட்சி தந்தவரே பயரி ஸ்ரீகோடி சூரியப் பிரகாசர்!

எனவே இங்கு, பயரியில் சித்திரை மாதம், சதய நட்சத்திர நாளில் ஸ்ரீகோடி சூர்யப் பிரகாசச் சிவலிங்க மூர்த்திக்குச் சந்தனக் காப்பு இட்டு வழிபடுதலால், திருமால் பெற்ற ஜோதிக் கிரணங்களில் பொலியும், கலியுகத்திற்கான ஜீவப் பிரகாசச் சக்திகளைச் சந்தனம் மூலமாகக் கிரகித்துப் பூவுலகிற்குப் பெற்றுத் தரும் மகத்தான சமுதாய பூஜையுமாய் ஆகின்றது.

அனைத்து ஜோதிகளும் அருணாசல உற்பவிப்பே!

நாக ஜோதி, நாத ஜோதி, நாள ஜோதி, நாடி ஜோதி, நாம ஜோதி போன்று, கோடி வகை ஜோதிகள் உண்டு. அனைத்தும் உற்பவிக்கின்ற இடமே அருணாசலமாகிய திருஅண்ணாமலை. இந்த உலகத்திலும், பிரபஞ்சத்திலும் உள்ள உலகங்களிலும் உள்ள அனைத்து சுயம்பு லிங்கங்களும் உருவாவது திருஅண்ணாமலையில் தாமே! அருணாசலத்தில் சூரிய லிங்கம் அமைந்துள்ள பகுதியில் இருந்து கிட்டும் குறித்த ஒரு அண்ணாமலை தரிசனத்திற்குக் கோடி சூரியப் பிரகாச லிங்க தரிசனம் என்று பெயர். இங்கிருந்துதாம் சூரியக் கிரணங்கள் தோய்கின்ற சூரிய பூஜைத் தலத்திற்கான சுயம்பு லிங்கங்கள் உற்பவிக்கின்றன. இங்குதாம் சித்திரைச் சதயம் தோறும் கோடி சூரிய மூர்த்திப் பிரகாச ஜோதி லிங்க சக்திகள் உற்பவிக்கின்றன.

ஜோதி, ஜோதி, ஜோதி, ஜோதி
ஜோதி, ஜோதி, ஜோதியே!

ஈஸ்வரன், ஸ்ரீவராஹ மூர்த்தியாய் பூமியின் அடியில் உட்புகுந்த பெருமாளுக்கு கோடி சூரியப் பிரகாச ஜோதி, தரிசனங்கள் தந்து அருளினார். அனைத்து ஜோதிகளும் உற்பவிப்பது அண்ணாமலையில்தாம்! இவற்றில் நாகஜோதி, நாமஜோதி, பாஸ்கர ஜோதி போன்ற கோடி ஜோதி தரிசனங்கள் பிணைந்து கிட்டியதே பயரி ஸ்ரீகோடி சூரியப் பிரகாசச் சுயம்பு சிவலிங்கமாகும். இதனால் வராஹ மூர்த்தியின் ஈஸ்வர தரிசன ஏக்கம் தெளிந்து ஹரிஹரத் தத்துவமும் மிளிர்ந்தது. தமிழிலில் பயம் என்பதற்கு அச்சம், பீதி எனப் பொதுப் பொருள் கொண்டாலும், பயத்த அருள், பயத்த செல்வம், பயந்த அருள், பயந்த செல்வம், பயந்த காரணம் என வரும் போது “கிட்டியது, பெற்றது” என்ற வகையிலும் இதன் த்வனிகளும், அர்த்தங்களும் அமைகின்றன.

திருமால் காட்டிய சந்தன ஜோதித் தலம்!

இறைவனை ஜோதிப் பூர்வமாகத் தரிசிக்க முடியும் என்பதைப் பிரபஞ்சத்திற்கு பயத்த ஹரியாகிய பெருமாள் காட்டிய தலமே பயரி கிராமச் சிவத்தலமாகும். பிரகாசத்தில் பிரகாசமாய்த் தோன்றிய கோடி சூரியப் பிரகாசரைத் துதித்த ஹரி, தாம் பெற்ற ஈஸ்வரப் பிரகாசத்தை மக்களுக்கு, ஈஸ்வரனின் சந்தன ஜோதி சக்தித் தலமாக உணர்த்தியதே பயரி ஆகும். சர்வேஸ்வரனின் கோடி, சூரியப் பிரகாச ஜோதி தரிசனம் கண்டு வியந்த பெருமாளிடம், அம்பாளும் தன் அண்ணனாம் திருமாலிடம், “அண்ணா அண்ணலை அண்ணுவீர்!” என ஓதித் தானும் அரியுடன் சேர்ந்து தம் திருக்கரங்களால் அரைத்தச் சந்தனக் குழம்பை எடுத்து அளித்திட்டத் தலம் இதுவே!

பெருமாளும் அண்ணலுக்கு அச்சந்தனத்தை அபிஷேகித்துக் காப்பிட, ஆங்கே அருமைச் சுயம்புச் சிவலிங்கமாய்க் கோடி சூரியப் பிரகாச லிங்கம் ஜீவன்களின் வழிபாட்டிற்காகத் தோன்றியது. அதாவது திருமால் பயத்த (பெற்ற) சிவஜோதி தரிசனத்தை, பூலோக ஜீவன்களாகிய நாமும் பெற வேண்டி, தம் சந்தனாபிஷேகத்தால் ஸ்ரீமகா விஷ்ணு நமக்குச் சுயம்பு லிங்கமாகப் பெற்றுத் தந்த விசேஷ தினமே சித்திரைச் சதய நட்சத்திர திருநாளாகும்.

திருமாலும், தாம் கண்ட கோடி சூரியப் பிரகாச ஜோதியைக் கலியுகத்தவரும் பெறும் வண்ணம் அருளிட ஈசனிடம் வேண்டிடவே, சிவபெருமானும் தம் கோடி சூர்யப் பிரகாச ஜோதிக்கான சந்தன அபிஷேகத்தால் ஆனந்தமுற்று, ஹரி கண்ட ஹர ஜோதியைச் சுயம்பு லிங்கமாக்கிப் பயரியில் காட்சி தந்த தினமே சித்திரைச் சதயமாகும்.

“அரி கண்டு ஆனந்தித்த அரிஹர ஜோதியானது, பாமரரும் அறியும் வண்ணமும், சந்தனமும் இனி நறுமணம் பூண்வதாக!” என்று அருளினார். ஆம், சந்தனத்திற்கு ஹரிஹர ஜோதி சக்தியால் அற்புத நறுமணம் வாய்த்து வந்த தலமே பயரியாகும். அதாவது ஹரி பயத்த ஜோதி, பெற்றளித்த ஜோதியே, நாகாம்பிகையின் அருளும் பயத்ததாய், நறுமணம் பயந்த சந்தன ஜோதி ஆனதும் பயரியே!

நாகரத்தினச் சந்தன ஜோதியாய்...

நாகம் என்றால் பாம்பு என்ற பொருள் கொண்டாலும், நாகரத்தினம் எனும் போது ரத்தினத்தை, அணைத்துக் காக்கும் ஜோதி என்ற பொருளும் ஆகின்றது அல்லவா! எனவே கோடி சூரியப் பிரகாசத்தில் மிளிர்ந்த அம்பிகையும் கோடி ரத்னப் பிரகாசத்துடன் இங்கு பயரியில், அம்பிகையும் நாகாம்பிகை ஆனனள். இவ்வாறாக, சந்தன ரத்தின ஜோதி என்ற அபூர்வமான சிவஜோதி முதன் முதலில் பிறந்த தலமும் இதுவேயாம். ஆம், கோடிச் சூரியப் பிரகாச ஜோதியைத் திருமாலே சந்தனத்தால் அபிஷேகித்தமையால், சிவஜோதிப் பிரகாசம், சந்தன ஜோதிப் பிரகாசமாக, கோடி சூர்யப் பிரகாசச் சிவலிங்கமாக ஆயிற்று. பொற்கொல்லர்களும், நகை மற்றும் ரத்தின வியாபாரிகளும் அடிக்கடி சந்தனக் காப்பிட்டு வழிபட்டுத் தம் தொழிலும், வாழ்விலும் பிரகாசிக்க வேண்டிய அதியற்புதத் தலம்.

இவ்வாறு அபூர்வமான, அற்புதமான தெய்வீக அனுகிரகங்கள் ஹரியாகிய பெருமாளின் அனுகிரகத்தால் மக்களுக்குப் பயத்த தலமே பயரி ஆயிற்று. இந்த வைபவம் நிகழ்ந்த தினமே ஒரு யுகத்தின் தாரண வருட சித்திரைச் சதய நாளாகும்.

எனவே சித்திரைச் சதயத் திருநாளில், அனைவரும் குடும்பத்தாருடன் சந்தனம் அரைத்து, பயரி ஸ்ரீகோடி சூர்யப் பிரகாச மூர்த்திக்குச் சார்த்தி மகத்தான அருள் பெறுதல் வேண்டும். அம்பாளும், பெருமாளும் சந்தனம் அரைத்துத் திருமாலின் சந்தனக் குழம்பில் சுயம்பாகிய லிங்கம் ஆதலின், புதன் கிழமையும் சேர்ந்து வருவதால் திருமாலின் அனுகிரகமும், அபரிமிதமான திருவருளாய் சுரக்கும் நாளுமாக அமைகின்றது. திருஅண்ணாமலை ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பில் 12.5.2004 புதன் கிழமை அன்று பயரியில் ஸ்ரீநாகாம்பிகை சமேத ஸ்ரீகோடி சூர்யப் பிரகாசச் சுயம்பு லிங்க மூர்த்திக்கு உலக ஜீவன்களின் தெய்வீக நலன்களுக்காக, சந்தனக் காப்புச் சார்த்தி விசேஷமான வழிபாடு இறையருளால் நடக்க உள்ளது. சந்தனப் பௌடரைக் கரைக்காது, உடற் சேவையாக, கைகளால் சந்தனக் கல்லில், சந்தனக் கட்டையால் அரைத்துச் சார்த்துதல் வேண்டும்.

பயரி கிராமம் செல்லும் வழி:- திருவாரூர் சாலையில், அம்மாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஆவூர் வழி செல்லும் (கும்பகோணத்தில் இருந்து வரும் பேருந்து எண் 25) பஸ் மூலமாகப் பயரி ஊரில் இறங்க வேண்டும். தஞ்சாவூரில் இருந்து சுமார் 32 கி.மீ தூரம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து 25 எண் பஸ் செல்கிறது. அருகில் உள்ள சற்றுப் பெரிய ஊர்கள் ஆவூர், ஹரிதுவாரமங்கலம் ஆகும்.

“ஏழு முனி ஏற்று அருள வேண்டும் எம்சற்குருவே போற்றி!” என தமிழ் மந்திரம் ஓதிச் சந்தனத்தை அரைத்தல் சப்த ரிஷிகளுடைய ஆசிகளைப் பெற்றுத் தரும்.

சந்தனம் அரைக்கும்போது ஓத வேண்டிய மந்திரங்கள்

ஸ்ரீபுத பகவானின் புதல்வர் ஸ்ரீபுரூரவஸு அனைத்துக் கோயில்களிலும் சந்தனம் அரைத்து இறைவனுக்குச் சார்த்திட ஓதிய மாமந்திரம்.

“சந்தன கந்த தேவா அனுக்ரஹ யக்ஷயக்ஷணி
தேவஸ்ய சேவார்த்தம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி”

“சிவாய பவாய பவாத்மஜாய
சந்தான விருக்ஷாத்மாநாத்புத கந்தாய
சித்ரூப சிதானந்த சின்மயாய
சந்தோஷ ரூபாய
புதபுத்ர ஸேவார்த்தம் நமோ நமஹ”

சிந்துப்பட்டி பெருமாள்

ஓம் நமோநாராயணாய ஸ்ரீமத் ராமானுஜாய நம:
திருமால் நெறி வாழி! திருத்தொண்டர் செயல் வாழி!

குடும்ப சௌக்கியத்திற்கு உதவும் பெருமாள் தலம்! சமுதாய அமைதிக்கு உதவும் மிகவும் சக்தி வாய்ந்தத் தலம் விஷ்ணுபதிப் புண்யகால அற்புதமான (கொடிக்) கம்பாபிஷேகத் தலம்!

சிந்துப்பட்டி

சிந்துப்பட்டி ஸ்ரீவெங்கடாஜலபதிப் பெருமாள் ஆலயம் (மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி – திருமங்கலம் பஸ் மார்கத்தில், உசிலம்பட்டியில் இருந்து 13 கி.மீ தொலைவிலும், திருமங்கலத்திலிருந்து 17 கி.மீ தொலைவிலும் சிந்துப்பட்டி உள்ளது!

பாரதத் திருநாட்டின் மகத்தான விஷ்ணுபதித் தலங்களுள், சிந்துப்பட்டி ஸ்ரீவெங்கடாஜலபதிப் பெருமாள் ஆலயமும் ஒன்றாகும். வெற்றித் திருமண்ணாக, இப்புனிதபூமியின் மண்ணை நெற்றித் திலகமாக இட்டுக் கொள்ளும் முறையும், பண்டைய காலத்தில் துலங்கியது. எனவே சிந்துப்பட்டிச் செந்தூரச் திலகம் பல வெற்றியைத் தருவதால், இங்கு காரிய சித்திக்காகப் பிரார்த்தனைகளை ஏழைகளுக்கான குங்குமம், மஞ்சள், அன்னதானமாகவும், கம்பாபிஷேகமாகவும் பக்தியுடன் வேண்டி நிறைவேற்றுதல் சிறப்பான வழிபாடாகும்.

கொடிக் கம்பம் என்பது நம் தூல உடல் போல் ஆலயத் திருஉடலைக் குறிப்பதால், திருப்பதி போன்று அதியற்புதமான தெய்வீக மஹிமைகளைக் கொண்ட அங்கப் பிரதட்சிணத் தலமாகவும் இப்பெருமாள் கோயில் விளங்குகின்றது. உடல் அங்கங்களால், மனதால் ஆற்றிய பெரும் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்து வருதல் வேண்டும். கௌதம மகரிஷியின் சாபத்தால் உடலெங்கும் யோனிக் கண்களைப் பெற்ற இந்திரன், சாப நிவர்த்தி பெற, அங்கப் பிரதட்சிணம் செய்த புண்ணிய பூமிகளுள் சிந்துப்பட்டியும் ஒன்றாகும்.

விஷ்ணுபதி என்பதற்குத் தெய்வீகமாகப் பல அர்த்தங்கள் உண்டு. ஸ்ரீமஹா விஷ்ணுவிற்கு ப்ரீதியான அம்சங்கள் உற்பவிக்கும் நேரம், ஸ்ரீமன் நாராயணனின் அனுகிரக சக்திகள் அபரிமிதமாகப் பொழியும் நேரம், திருமால் பக்தர்களை ஆட்கொள்ள விரும்பும் புனிதக் காலம் என்றெல்லாம் பொருளுண்டு.

ஸ்ரீவெங்கடாஜலபதி பெருமாள்
சிந்துப்பட்டி

கொடிக் கம்பத்திற்கே அபிஷேகமாம்!

திருப்பதியில் அவதாரம் கொண்ட ஸ்ரீனிவாசப் பெருமாள், மானுட வடிவில், பல விஷ்ணுபதிப் பூஜைகளைத் தோத்தரித்து, மக்களுக்கு வழிகாட்டிட்டு, திருமாலைத் தோத்தரித்தத் தலங்களில் எல்லாம், பரமாத்மாவின் அருட் தோன்றலாக ஸ்ரீசீனிவாசப் பெருமாள், ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் போன்ற நாமங்களுடன் தோன்றி அருள்கின்ற அரிய தலங்களுள் சிந்துப்பட்டியும் அடங்கும்.

இவ்வாலயத்தின் சிறப்பம்சங்களுள் ஒன்றே, இங்கு ஸ்ரீவெங்கடாஜலபதிப் பெருமாளுடைய ஆலயக் கொடிக் கம்பத்தின் உச்சியில் இருந்து கொண்டு, துவஜஸ்தம்பமாகிய கொடிக் கம்பத்திற்கே அபிஷேகம் (கம்பாபிஷேகம் எனப்படுவதாக) நடைபெறுவதாகும். நேர்த்திக் கடனாய், பிரார்த்தனையாய், பக்தர்கள் இங்கு இப்போதும் நடத்தி வருகின்ற அபூர்வமான இத்தகைய கம்பாபிஷேகம், குடும்பத்திற்கும், தொழிலுக்கும், நாட்டிற்கும் மிகவும் சக்தி வாய்ந்த அருள்வளப் பலன்களைத் தருவதாகும். இவ்வாலயக் கம்பாபிஷேகம் மிகவும் தொன்மையான பூஜை! கோடானு கோடித் தேவர்களால் ஆகாச அபிஷேகமாய்க் கம்பாபிஷேக ஆராதனைகள் சூக்குமமாயும் நிகழும் திவ்யத் தலம். இக்கம்பாபிஷேகத்தில் கோயில் கொடிக் கம்பத்திற்குத் தூல ஸ்புடப் பரிவஸ்திரம் எனும் அபூர்வமான, அழகிய வஸ்திரம் சார்த்திப் பூஜிக்கப்படுகின்றது. இதன் தரிசனமே பித்ரு சாபங்களைத் தீர்க்க வல்லதாகும்.

ஆகாசராஜ வழிபாட்டுத் தலம்

ஒவ்வொரு மனிதனும், தன் வாழ்நாளில் ஐந்து வகைப் பஞ்ச பூதத் தலப் பூஜைகளை ஆற்றிட வேண்டும். இவற்றுள் ஆகாச ராஜ பூஜைத் தலங்களுள் ஒன்றாகச் சிந்துப்பட்டி அமைகின்றது. பொதுவாக, பூமியிலிருந்து ஆலயச் சன்னிதிகளில் ஆற்றும் பூஜைக்குப் பிருத்வி ராஜப் பூஜைகள் என்று பெயர். கும்பாபிஷேகம், கலச பூஜை போன்று, பரவெளியில், வானில் ஆற்றும் ஆகாசராஜ பூஜைகளில் ஒரு வகையே, இங்கு நிகழும் துவஜஸ்தம்பப் (கம்பாபிஷேகம்) பூஜையாகும்.

கொடிக்கம்பம்
சிந்துப்பட்டி

ஸ்ரீஆஞ்சநேயரின் நித்திய வழிபாட்டுத் தலம்.

சிந்துப்பட்டம் என்பது நெற்றியில் இடும் தங்க, வெள்ளிப் பூரணப் பட்டை, திருச்சூர்ணம், செந்தூரப் பொட்டு என்ற அர்த்தத்திலும் அமைந்து வருகின்றது. செந்தூரத் திலகாபிமானி தாமே ஸ்ரீஆஞ்சநேய மஹாபிரபு! ஸ்ரீமாருதிராயராம் அனுமாரப்பர், தினமும் ஆகாசப் பூர்வமாகக் கொடிக் கம்ப தரிசனம் பெறும் தலங்களில் இதுவும் ஒன்றாகும். ஆகாச ராஜமூர்த்தியாக விளங்குகின்ற ஸ்ரீகருடாழ்வார், ஆலயங்களில் கொடிக்கம்பம் அருகில் பெரிய திருவடியாக வீற்றிருப்பார். (திருமாலை வணங்கிய நிலையில்) எப்போதும் இறைப் பரம்பொருளின் பெரிய திருவடிகளைச் சேவித்த நிலையில் உறைவதால், திருமாலின் பெரிய திருவடி ஆழ்வாரானார். கருட மூர்த்தி, அமிர்தத்தைப் பூவுலகிற்குக் கொணர்ந்த காலை, அமிர்தமானது, இயற்கையாகவே இங்கு அபிஷேகத் தாரையாகப் பொழிந்து, ஸ்ரீவெங்கடாஜலபதி பெம்மான் கம்ப ஜோதியுடன் தோன்றவுள்ள இப்புனித பூமியில், பல யுகங்களுக்கு முன்னரேயே, தீர்க தரிசனத்துடன் அபிஷேகித்து ஆனந்தித்தார். இது நிகழ்ந்ததும் ஒரு யுக விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் தாம்!

யுகங்கள் மாறிட, கருடாழ்வாரால் அமிர்தாபிஷேகம் நிகழ்ந்த இத்திருத்தலத்தில், கொடிக்கம்பமும் உற்பவித்து, ஆதிமூல அபிஷேக ஆராதனை வடிவுமாக ஆயிற்று. இது நிகழ்ந்ததும் ஒரு யுகத்தின் விஷ்ணுபதிப் புண்ய காலமாகும். எனவே சித்தர்கள் பூவுலகக் கொடிக் கம்பங்களுக்கு எல்லாம் தேவ ராஜகொடிக் கம்பமாக, அமிர்தராஜக் கம்பமாக இதனைப் பெரிதும் போற்றுகின்றனர். எனவே, இங்கு பக்தர்களின் நேர்த்திக்கு ஏற்ப, அவ்வப்போது கொடிக் கம்பத்திற்கு அபிஷேகமும் நிகழ்ந்து வருகின்றது.

கஜபூஜைத் தலமுமாம்!

தேவலோக யானைகள் பலவும், இங்கு பல யுகங்களில் பூஜித்து, பல புராண வைபவங்களில், ஜீவநலப் போர்களிலும் தாங்கள் ஈடுபட்ட தோஷங்களுக்கான நிவர்த்திகளைப் பெற வேண்டிய போது, அந்தந்தப் புராண வைபவ தெய்வ மூர்த்திகளே இங்கு கஜபூஜைகளை ஆற்றி, யானைகட்குத் தோஷ நிவர்த்தித் தீர்வுகளை அளித்து, ஆலய இறை பூஜைகளில் முதன்மை பெறவும் நல்வரங்களையும் தந்தனர். இது நிகழ்ந்ததும் ஒரு யுகத்தின் ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ய காலத்தில்தான்!

எனவேதான், சுழுமுனை சுவாச யோக சக்திகளை இயற்கையாகவே உடைய யானைகளுக்கான கஜபூஜை சக்தித் தலங்களுள், குருவாயூர் போல சிந்துப்பட்டியும் ஒன்றாகப் பல யுகங்களாகப் பொலிருந்திருந்தது. தற்போது இதனைப் புதுப்பித்து மலரச் செய்ய வேண்டியது பக்தர்களின் கடமையாகும். யானைகளின் பாதத்திற்குச் சிந்துபாதம் என்று பெயர். யானைகளின் சாணத்தை “அதிர்ஷ்டமெனப்” போற்றி ஒற்றும் பண்டைய முறையும் உண்டு. இதனால்தான், “யானை கட்டிப் போரடித்த” யானை மலையை உடைய மாமதுரைத் தலங்களுள் ஒன்றாகவும், கஜவர(த)ப் புனித பூமியாகவும் இது ஆயிற்று.

கபியும் கம்பமும்
சிந்துப்பட்டி

எனவே, வசதி  உள்ளோரும், ஏனையோரும் சத்சங்கமாகப் பலருடன் ஒன்று சேர்ந்தும், தக்க அனுமதியுடன் பல யானைகளை இங்கு அழைத்து வந்து, இவ்வாலயத்தில் சமஷ்டி கஜ பூஜை செய்து, யானைகளைக் கொண்டு அபிஷேக, ஆராதனைப் பொருட்களை, ஆலய மேல்தளத்தில், தும்பிக்கையால் எடுத்து அளிக்குமாறு செய்து, கஜபுஜ கம்பாபிஷேகத்தை நிகழ்த்தி, இங்கு யானைகளோடு சேர்ந்து வலம் வருதல் பெருமாளுக்கு மிகவும் ப்ரீதி தருவதாகும். இதனால் குடும்ப அமைதியும், சமுதாய அமைதியும் நன்கு விருத்தியாகும்.

சிந்து பைரவி ராகத் தலம்

சிந்து பைரவி என்ற ஓர் அற்புத ராகம் உண்டு. பைரவி என்றால் தெய்வீக ரீதியாக, நல்ல இனிமையான நீரோட்டத்தைக் கொணர்தல் என்று பொருள். சிந்து பைரவி எனில் இனிமைக்கு, அமிர்த சிரஞ்சீவித்வம் கூட்டுதலாகும். மேலும், பகைமை கொண்டுள்ளோரையும் அன்பால் இணைக்கும் அற்புத ராகயோக சக்தி, சிந்து பைரவி ராகத்திற்கு உண்டு. ஆம், ராகங்களிலும் பூஜ்ய சக்தி ராகம் (தோடி), பூஜா சக்தி ராகம் (ஆனந்த பைரவி), வர சக்தி ராகம் (கல்யாணி), ஜலசக்தி ராகம் (அமிர்தவர்ஷிணி), அக்னி யோக சக்தி ராகம் (ஆரபி, காம்போதி) எனப் பல வகைகளும் உண்டு. இக்காரணங்களை மூலமாக வைத்து, எந்த ராகத்தை எப்போது பாட வேண்டும் என்ற நேர வகை முறைகளும் உண்டு.

கணவன், பிள்ளை, தாய் அல்லது தந்தை போன்றோர் காணாமல் போய் இருந்தாலும், மிக முக்கியமான தஸ்தாவேஜுகள், பத்திரங்கள், ரெகார்டுகள் தொலைந்து அவதியுறுவோரும் இங்கு முறையாக கம்பாபிஷேகம், தான, தர்மங்கள் செய்து வழிபட்டு, பைரவி, ஆனந்த பைரவி, சிந்து பைரவி ராகப் பாடலை இசைத்து வருதலும், பாடகர்களையும், இசைக் கருவி விற்பன்னர்களையும் (நாதஸ்வரம்) புல்லாங்குழல், வயலின், வீணை போன்றவை, சிந்து பைரவி மற்றும் பைரவி வகை ராகத்தில் பல இறைப் பாடல்களை, இவ்வாலயத்தில் முதலிலும் பிறகு, பலரும் அறியாத வகையில், எத்தனையோ கிராமங்களில் உள்ள மிகவும் பழமையான ஆலயங்களில் பாடுமாறும், வாசிக்குமாறும் செய்து வருதல் வேண்டும். சிந்து பைரவிக்கு இணைக்கும் சக்தி உண்டு. இதனால் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் கிட்டவும், தொலைந்து போன பத்திரங்கள் மீளவும் வழி பிறக்கும்.

தாண்டிய தூரத்திற்குத் தகைமை சார்ந்த தானம்

ஸ்ரீஅலமேலுமங்கை தாயார்
சிந்துப்பட்டி

அக்காலத்தில் மன்னர்கள் காக்கை பறக்குமளவு, ஆடு நடக்குமளவு என்ற அளவில் நில தானங்களைப் புரிந்து சிறந்தனர். இதன் வகையில் “பட்டிச் சதுரபாக தானம்” என்று ஓர் அற்புதமான தான வகை முறை அக்காலத்தில் இப்பகுதியில் நிலவி வந்தது. இதில் இரண்டு பட்டிச் சதுரம், மூன்று பட்டிச் சதுரம் என்று அவரவர் வசதிக்கேற்ப, தான தர்மங்களைச் செய்வதைக் குறிப்பதே பட்டிச் சதுர தானம் என்பதாகும். இவ்வகைத் தான, தர்மங்கள் அதியற்புதமான வகையில் தொன்மைக் காலத்தில் நிகழ்ந்த தலமே சிந்துப்பட்டி ஆகும்.

இதில், நல்விரதம் பூண்டோரை இங்கு ஒரு முறை தாண்டச் செய்து, நான்கு திசைகளிலும், அவர் தாண்டும் தூரத்திற்குச் சுற்றிலும் ஹோம குண்டம் போல ஒரு செங்கல், உயரத்திற்குச் சதுரமாக செங்கற்களை அடுக்கிச் சதுரக் கட்டம் ஆக்கி வைப்பார்கள். அவர் தாண்டிய அந்தச் சதுர அடிப் பரப்பிற்குள் ஒரு பட்டுத் துணியைப் பரப்பி, ஒரு செங்கல் உயரத்திற்கு அதனுள் புது துணிமணிகள், தானியங்கள், நாணயங்கள், காய்கறிகள், பழங்கள், புளி, மஞ்சள் போன்ற திரவியங்களை, உணவுப் பண்டங்களை நிறைத்து வைத்து அவற்றை ஏழைகளுக்குத் தானமாக அளித்தல் பட்டிச் சதுர தானம் என்று பெயர்.

இரு பட்டிச் சதுரத் தானம் என்றால், நல்விரதம் பூண்டோரை இருமுறை நான்கு புறங்களிலும் தாண்ட வைத்து, செங்கற்களால் அந்த அளவிற்குச் சதுரம் அமைத்து, அதில் தானப் பொருட்களை நிரப்பி அளிப்பதாகும். இவ்வாறு 12 சதுரங்கள் அமைத்து இத்தலத்தில் ஏழைகளுக்குப் பொன் தானம் அளித்துப் பெருமை பெற்றவரே திருமலை நாயக்கர் மாமன்னர் ஆவார். ஒரு சமயம், இந்த தான, தர்மசக்திகளே அவருடைய உயிரையும் காப்பாற்ற உதவியது. அதாவது, தான தர்மங்களைக் குறைவில்லாப் புண்ய சக்தியாக மாற்றித் தரும் புனிதமான தான, தர்ம புண்ணிய பூமியே சிந்துப்பட்டி ஆகும்.

சந்ததி விருத்திக்கு...

மேலும் சந்ததிகளும் நன்கு செழிக்கவும். இங்கு ஏகாதசி தோறும் கம்பாபிஷேகத்துடன் அன்னதானமும் ஆற்றி வருதல் வேண்டும். தொழில், விவசாயம் போன்றவை எதிர்பாராத விதத்தில் துன்பங்களுக்கு ஆளாகுகையில், குடும்பமும், தொழில் துறையும் மீண்டும் செழிப்புற்று நல்வளம் பெற்றிட, இத்தலத்தில் அமாவாசை தோறும் கம்பாபிஷேகம் செய்து வழிபட்டு வருதல் வேண்டும்.

இத்தகைய சிறப்புகளை உடைய சிந்துப்பட்டிப் பெருமாள் தலத்தில், விஷ்ணுபதிப் புண்ய கால நாளில், இங்கு முன்னிரவு 2 மணி முதல், காலை 10.30 மணி வரை ஸ்ரீவெங்கடாஜலபதிப் பெருமாளுக்கும், கொடிக் கம்பத்திற்கும் அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்திப் பெறுதற்கரிய பலன்களையும், திருமாலின் அருட்சுடரையும் பெற்று, சமுதாயத்திற்கும் பெற்றுத் தந்து பரமானந்தம் அடைவீர்களாக!

ஆகாசத் தீர்த்தங்கள்

அந்தந்த வயதில் கடைபிடிக்க வேண்டிய தீர்த்த நீராடல்கள் உண்டு! ஆகாசத் தீர்த்தத் தலங்கள்!

வெட்ட வெளியில் அமைந்து அருளும் நாமக்கல் ஆஞ்சநேயர், உப்பூர் விநாயகர், ஹரித்வார் மிருத்யுஞ்ஜயர், அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர், திருச்சி வெக்காளியம்மன் போன்ற மூர்த்திகளின் அருட்தலங்களில் ஆகாசத் தீர்த்த சக்திகள் எப்போதும் நிறைந்திருக்கும்.

பூமியடித் தீர்த்தம் – ஆலயக் கிணறுகள் மற்றும் கேதார்நாத், பத்ரிநாத், ஆந்திராவில் உள்ள ராமகிரி  நந்தி வாய்த் தீர்த்தம், வென்னீர் ஊற்றுகள் போன்றவை.

பூமித் தீர்த்தம் – கடல் , நதி, குளம்

ஆகாசத் தீர்த்தங்களும் உண்டு. – ஆகாச கங்கை, நூபுர கங்கை, மழையையும் ஆகாசத் தீர்த்தமாகவே சித்தர்கள் போற்றுகின்றனர்.

இன்றைக்கும் ஆகாச மார்க்கமாக கங்கை நீரோட்டம் வருவது பல இடங்களில் நிச்சயமாக நிகழ்கின்றன. மூன்றாம் பிறைச் சந்திர நாளில், ஸ்ரீசந்த்ர மௌளீஸ்வர லிங்கத்தின் மேல் கங்காமிர்தப் பொழிவு ஏற்படுகின்றது. எனவே மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தை ஸ்ரீசந்திரசேகர், ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் போன்ற மூர்த்திகளின் (தாழமங்கை, பழையாறை, முசிறி, திருவக்கரை) ஆலய வளாகத்தில் இருந்து தியானித்துப் பெறுவது கங்காமிர்த சக்திகளைத் தருவதாகும். இது தீய பழக்கங்களின் பால் நாட்டம் கொள்வதைத் தணிக்கவும், தீர்க்கவும் உதவும்.

ஆகாச கங்கையில் அருள்
பிரவாகம் திருவக்கரை

அபூர்வமாக, ஒரு சில இடங்களில் சூரிய, சந்திர ஒளிபடாத வகையில், எவ்வகை நிழலும் படாத வகையில் பாறைகளுக்கு ஊடே உள்ள அற்புதத் தீர்த்தங்களும், ஆகாச வகைத் தீர்த்தங்களாகும். (உதாரணமாக; காஞ்சாத்து மலை, வள்ளிமலை) மேலும் திருப்பத்தூர் அருகே திருக்கோளக்குடி, தேவர்மலை, கொல்லிமலை, பழமுதிர் சோலை போன்றவற்றில் அதிசயமானத் தீர்த்தங்களும் உள்ளன. திருவையாறு அருகே உள்ள கடுவெளி சிவாலய வளாகத் தீர்த்தங்கள் யாவுமே ஆகாசத் தீர்த்தங்களே!

தடங்கல்கள் தீர உதவும் ஆகாசத் தீர்த்த சக்திகள்!

இத்தகைய ஆகாச(நதி)த் தீர்த்தத் தலங்களில் அபிஷேக, ஆராதனைகள், தர்ப்பணம் அளித்தல், நந்தவனம் அமைத்தல், பூச்செடிகளைப் போஷித்தல், பாயாசம், பழரசம், பானகம், நீர் மோர் போன்ற நீர் வகை உணவு தானம் போன்றவற்றை ஜலாம்ச நாட்களாகிய திங்கள், சஷ்டி, ஏகாதசி, சனிக்கிழமை, புனர்பூசம், மகம் நட்சத்திர நாட்களில் ஆற்றி வருவதால், பல்லாண்டுகளாகத் தடைபட்டுள்ள நற்காரியங்களில் உள்ள தடங்கல்கள் தீர நல்வழி பிறக்கும்.

மனித ஆயுளில், ஒவ்வொரு ஆறு வருட காலப் பருவத்திற்குள், குறித்த வகைத் தீர்த்தங்களில் நீராடுதலைக் கொள்வது மிகவும் விசேஷமானது. மனிதனின் பரிபூரண ஆயுளை 120 ஆண்டுகளாகக் கொண்டாலும் 90 வயதுள்ள வாழ்க்கைப் பருவங்களை, 15 தீர்த்தப் பருவங்களாக ஜலதீபப் பித்ரு லோகத்தில் வகுத்துள்ளனர். 90 வயதுக்கு மேல் பக்திப் பூர்வமாக வாழ்வோருக்கு சற்குருவை நாடிடில் விசேஷமான ஸ்வர்ணவதிப் பித்ருக்களின் நேரடி அருள்வழி காட்டுதல் கை கூடும்.

அந்தந்தப் பருவத்தில் நீராட வேண்டிய தீர்த்தங்கள்:-

1-6 வயது :- குலதெய்வ ஆலயத் தீர்த்தம், திருப்பதி, வற்றாத ஜீவ நதிக் கரைத் தீர்த்தம், நதிக் கரையில் உள்ள ஆலயத் தீர்த்தம், ஸ்ரீஅகஸ்தியர் தவம் புரியும் தலத் தீர்த்தம்.

6-12 வயது :- கடல் தீர்த்தம், மூன்று ஜீவ நதிகள், மூன்று கடல் தீர்த்தங்கள் சேரும் முக்கூடல், ஒன்பது புனித நதித் தீர்த்தங்கள்.

12-18 வயது :- கங்கை தோன்றிய கிணறு, கங்கை தேவி ஆலயத் தீர்த்தம், பீஷ்மர் தவம் புரிந்த தலத் தீர்த்தம்

18-24 வயது :- மலைத் தலத் தீர்த்தம், காசி, ராமேஸ்வரம், பிரயாகை, கயா, இயன்றால் திருக்கயிலாய மானஸரோவர் தீர்த்தம், இமாலயத் தீர்த்தம், பிரம்மபுத்ரா!

திருக்கோளக்குடி

25-30 வயது :- இயற்கையாக பூமியிலிருந்து மேலே பீறிட்டு வரும் (ஸ்பிரிங்) தீர்த்தம், கேதார்நாத், கயா, காசி, பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, திருக்கயிலாய மானஸரோவர் தீர்த்தம், இமாலயத் தீர்த்தம்.

30- 36 வயது :- கோதாவரி, கிருஷ்ணா, நர்மதை, யமுனா, சரயு, காவிரி, காசி, கயா, பிரயாக், குறைந்தது 12 அடி ஆழமுள்ள புண்ணிய நதித் தீர்த்தம்.

36-42 வயது :- தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பிரயாக், கும்பமேளா நடக்கும் நதித் தீர்த்தங்கள், ஆலயத்திலும் அருகிலும் குறைந்தது மூன்று குளங்கள் உள்ள ஆலயத் தீர்த்தங்கள்.

42- 48 வயது :- சூரிய, சந்திர ஒளிபடா, நிழல் படாத் தீர்த்தம், நந்தி வாய்த் தீர்த்தம், கும்பாபிஷேகம் நடந்த ஒரு மண்டலத்திற்குள்ளான ஆலயத் தீர்த்தம், நீர்வீழ்ச்சித் தீர்த்தம்.

48 – 54 வயது :- மலைப் படித் தீர்த்தம் (தேனி மலை), வற்றாத ஊற்று நீர்த் தீர்த்தம், குறைந்தது 5 கிணறுகள் உள்ள ஆலயத் தீர்த்தம்.

54-60 வயது:- ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கிருஷ்ணா, காவிரி, பித்ரு தீர்த்தத் தலங்கள்!

எந்த வயதிலும் எத்தகைய தீர்த்தங்களிலும் நீராடுவது விசேஷமானதே! குறித்தப் பருவத்தில் மேற்குறித்தத் தீர்த்தங்களில் நீராடுதல் அதிவிசேஷமான பலன்களைத் தரும். அந்தந்தப் பருவத்தில் குறைந்தது ஒரு வகைத் தீர்த்த நீராடலேனும் மேற்கொள்ள வேண்டும்.

60 வயதுக்கு மேல் அவரவருடைய ஜாதகப்படியான தீர்த்த நீராடல்கள் தக்க சற்குரு மூலமாகப் பெற்று அறிதல் விசேஷமானது.

மேற்கண்ட அனைத்துத் தீர்த்தப் பலன்களையும் ஒரு சேரப் பெற்றுத் தரவல்லதே கும்பகோணம் மஹாமகத் தீர்த்த நீராடல். மாதந்தோறும் மக நட்சத்திர நாளிலும், பௌர்ணமியிலும், வருடாந்திர மாசி மக நட்சத்திர நாளிலும் தொடர்ந்து நீராடி வருதல் மேற்கண்ட பற்பல நீராடல் பலன்களைப் பெற்றுத் தருவதாகும்.

ஸ்ரீபிரம்மா திருக்கல்யாணம்

ஸ்ரீபிரம்மா ஸ்ரீசரஸ்வதி திருக்கல்யாணம் – அட்டைப் பட விளக்கம்

ஸ்ரீபார்வதி கல்யாணம், ஸ்ரீமீனாட்சி கல்யாணம், ஸ்ரீராதா கல்யாணம், ஸ்ரீவள்ளி திருமணம், ஸ்ரீனிவாசப் பெருமாள் கல்யாணம் போன்ற தெய்வ மூர்த்திகளின் கல்யாண உற்சவத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றோம் அல்லவா! இதே போல, ஸ்ரீபிரம்மா ஸ்ரீசரஸ்வதி திருக்கல்யாண உற்சவமும் உண்டு, சிருஷ்டியைக் கூட்டுவிப்பவர், காஞ்சியில் வேத வேள்வி கண்டவர், முருகப் பெருமானிடம் ஓங்கார ஞானம் பெற்றவர் என்றவாறாக, பிரம்ம மூர்த்திகளிலும், பல பிரம்ம மூர்த்திகள் உண்டு. இங்கு நாம் குறிப்பிடுவது அனைத்து பிரம்மாக்களுக்கும் மூலாதாரமான ஸ்ரீஆதி மூல பிரம்ம மூர்த்தியின் திருக்கல்யாண உற்சவம் ஆகும். ஆம், ஸ்ரீஞான பிரம்ம சரஸ்வதியை மணந்த வைபவமே, ஸ்ரீபிரம்மா ஸ்ரீசரஸ்வதி திருக்கல்யாண உற்சவமாகும்.

ஸ்ரீஞானசரஸ்வதி
வேதாரண்யம்

இத்தகைய பண்டைய ஆலய புராண வைபவ உற்சவங்கள் பலவும் தற்போது கலியுகத்தில் மறைந்துள்ளன. இவற்றை மீண்டும் மலரச் செய்வது பக்தர்களின் கடமையாகும். பெருமாளிடம், இறைவனுடைய முடியைக் கண்டதாக உரைத்த பிரம்மா, இதன் சாபத்தால் பூவுலகில் தனக்கென ஆலயம் அமையாது போகிடவே, ஸ்ரீஆதி பிரம்ம மூர்த்தியே, தம்மை தவப்பூர்வமாக மறைத்துக் கொண்டு, பிரம்ம  மூர்த்திகளுக்கெல்லாம் இன்றளவும் பிராயசித்தம் பெற்றுத் தந்து கொண்டிருக்கின்றார். இதனால்தாம் இன்றும், சிவாலயங்களில் சிருஷ்டியை உணர்விக்கும் யோனித் தத்துவத்தை உணர்த்த வல்ல கோமுகத்தின் மேல், ஸ்ரீபிரம்மா நின்ற கோல தவம் பூண்டு, கோடி கோடி யுகங்களாய்ப் புவித்தான யோகத் தவம் கொண்டு அருள்கின்றார்.

கடுவெளி

இனியேனும் பக்த கோடிகள் ஸ்ரீபிரம்ம திருக்கல்யாண உற்சவத் தெய்வீக வழி முறைகளைத் தக்க சற்குரு மூலம் அறிந்து கடைபிடித்தல் வேண்டும். பிரம்ம சக்தி நிறைந்த தலங்களும் பூமியில் உண்டு. ஸ்ரீபிரம்மாவிற்குப் பரிந்துரைத்து, பொய்யுரைத்த தாழம்பூவும் சிவபூஜையில் இருந்து ஒதுக்கப்பட்ட பின், பிரம்மாவோடு தாழம்பூ தேவதைகளும் பல தலங்களில் தவம் புரிந்து, உரிய பிராயசித்தங்களை இன்றும் பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே உள்ள தாழமங்கை, பிரம்மபுரம் எனப்படும் சீர்காழி, காஞ்சிபுரம் போன்றவை பிரம்ம சாப நிவர்த்தி, தாழம்பூ சாப நிவர்த்தித் தலங்களாகும். இத்தகைய தலங்களில் பூஜித்துக் கடுமையான தவம் கொண்ட பிறகுதான் ஓரளவு பிராயச்சித்தமாகப் பெற்று, அம்பிகைக்குப் பல பண்டிகைகளில் குறிப்பாக, ஸ்ரீவரலட்சுமி நோன்பில் தாழமடல்களைக் கொண்டு ஜடை சார்த்தும் சுபமங்கள பூஜையும், பிரம்மாவிற்கு, கோஷ்ட மூர்த்தியாகவும் அமையும் தெய்வ நிலைகளும் கிட்டின.

கால தோஷங்களற்ற பிரம்ம முகூர்த்தம்

ஸ்ரீபிரம்ம திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவதற்கான தின, ஹோரை, நேர, யோக கால நிலைக் கோட்பாடுகளைக் கொண்டு குறித்த சில தினங்களும் உண்டு. இவையாவும் தக்க சற்குரு மூலமாக அறியப் பெற வேண்டியவை. பொதுவாக, ஸ்ரீபிரம்ம திருக்கல்யாண உற்சவ மாங்கல்ய தாரணமாகிய தாலி கட்டும் தேவ வைபவம், பிரம்ம முகூர்த்த நேரத்தில் அமைவதாகும். தற்போதைய சில ஆந்திர மாநிலப் பகுதிகள், பிரம்ம திருமண உற்சவ சம்பிரதாயங்கள் பலவும் நிகழ்ந்த புண்ணிய பூமியே! பிரம்ம மாங்கல்ய தாரண பூமி என்பதால்தான் இன்றைக்கும் ஆந்திர மாநிலப் பகுதிகளில் பலவற்றில் இன்றும் பிரம்ம முகூர்த்த நேரமாகிய விடியற்காலை 3 மணி வாக்கில், தாலி கட்டுகின்ற சுப மங்கள வைபவத்தைக் கடைபிடிக்கின்றார்கள்.

தாழமங்கை சிவாலயம்

சித்தர்களுக்கும், மகரிஷிகளுக்கும் ஸ்ரீபிரம்ம திருமணக் காட்சி, புனிதமான பாரதமெங்கும் பல இடங்களில் கிட்டின. இங்கெல்லாம் ஸ்ரீபிரம்மருக்கான திருச்சன்னதிகள் தோன்றியுள்ளன. வீணை இல்லாது அருள்கின்ற ஸ்ரீஞான சரஸ்வதியாகக் கலைவாணி அருள்பாலிக்கும் தலங்களும் ஸ்ரீபிரம்மத் திருக்கல்யாண உற்சவத் திருத்தலங்களாகும்.

ஆதிசிவ மூர்த்தி கையில் வீணையைத் தாங்கி நித்ய ஸ்துதித்ய மூர்த்தியாக, ஸ்ரீவீணாதர தட்சிணா மூர்த்தியாக ஸ்ரீபிரம்ம திருமணத்தில் நேரில் தோன்றி ஆசிர்வதித்தார்.

பூவுலகெங்கும் பிரம்ம தெய்வத் திருக்கல்யாண உற்சவங்கள்!

ஸ்ரீபிரம்ம மூர்த்தியின் திருக்கல்யாணத்திற்கு மிகவும் அபூர்வமாக, அனைத்துத் தெய்வ மூர்த்திகளும் தம் தெய்வ பத்தினி மூர்த்திகளுடன் இணைந்து வந்து அருளாசி பெய்தனர். உண்மையில் ஸ்ரீபிரம்ம கல்யாண உற்சவம் ஒரே இடத்தில் நிகழவில்லை. கங்கணக் காப்பு, மாப்பிள்ளை அழைப்பு, மாங்கல்ய தாரணம் போன்ற சுபச் சடங்குகள் ஒவ்வொரு திருத்தலத்திலும் பன்னெடுங்காலம் நிகழ்ந்தன. அந்தந்தத் திருத்தலத்தின் முக்கிய தெய்வ மூர்த்தியே முன் நின்று, பிரம்ம கல்யாண உற்சவத்தை நிகழ்த்தித் தந்திட்டு அருளினர்.

வேதத்திற்கு அதிபதியான சதுர்முக பிரம்மத் தெய்வ மூர்த்திக்கான இனிய திருக்கல்யாணம் என்பதால், பிரபஞ்சத்தினும் விரிந்த அனைத்துக் கடலளவு, மலையளவினும் விரிந்த அனைத்து விதமான வேதமந்திரங்களும் ஓதப் பெற்றே பிரம்ம திருக்கல்யாணம் நிகழ்ந்தது. இதற்குப் பல காலம் ஆகுமன்றோ! பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான வேத மந்திரங்களும் முறையாக ஓதப் பெற்றதாய், ஸ்ரீபிரம்மத் திருக்கல்யாண உற்சவம் பொலிவுற்றது.

ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தி
திருப்பாற்றுரை

ஸ்ரீவீணா தட்சிணா மூர்த்தி இசைத்த மாமறைகள்!

ஒவ்வொரு மந்திரத்திற்குமான அபூர்வமான விளக்கங்கள், பிரம்ம சூத்திர பாஷ்யங்கள், ஆரண்யங்கள், உபநிஷத்துக்கள், ஸ்ருதி, ஸ்மிருதிகள், புராணங்கள், இதிகாச காவியங்களோடு பிரகாசித்ததே பிரம்ம திருக்கல்யணமாம்! இவையாவற்றையும், தம்முடைய வீணை நரம்பினால் இசைத்து, ஒலித்து அளித்தவரே ஸ்ரீவீணாதர தட்சிணா மூர்த்தியாவார்.

திருமாலுக்குரிய விஷ்ணுபதிப் புண்யகாலம் போலவும், பங்குனி உத்திரமானது பெருமாள் திருக்கல்யாணம், முருகன் திருக்கல்யாணம் போன்ற தெய்வங்களின் கல்யாண உற்சவங்களாகவும், சித்திரை உத்திரம் ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணம் ஆவது போலவும், பிரம்மத் திருக்கல்யாண உற்சவ வைபவமும் வருங்காலத்தில் பெரிதும் சிறப்படையும்.

சிவத் திருக்கல்யாண உற்சவ வைபவங்கள் நிகழ்ந்தத் தலங்கள் நிறைய உண்டு. இவற்றை ஒட்டியே, திருமண மேடு, மயில் ரங்கம், நகர், மணக்கால் போன்ற இடங்களில் அந்தந்தத் தலங்களில் பிரம்ம கல்யாண உற்சவமும் நிகழ்ந்தது.

ஆதி பிரம்ம தெய்வ மூர்த்தியின் சிறப்புகளை, மகிமைகளைப் பலரும் கலியுகத்தில் உணரவில்லை. சிவாலயங்கள், பெருமாள் ஆலயங்கள் இரண்டிலும் அருள் பொலியச் சிறப்பைக் கொண்டவரே ஸ்ரீபிரம்ம மூர்த்தியாவார். பல ஆலயங்களில், ஸ்ரீரங்கநாதரின் நாபியில் இருந்து தோன்றும் தாமரைக் கொடியில், பிரம்ம மூர்த்தி, தன் தந்தையாம் ஸ்ரீமகாவிஷ்ணுவை வழிபடும் நிலையில் அமர்ந்திருக்கும். திருக்கோலத்தை பெருமாளின் மூல ஸ்தானத்திலேயே கண்டிடலாம்.

எனவே பிரம்மாவிற்கு மூலத்தானக் கோயில் இல்லை என்று எண்ணாதீர்கள்! நூற்றுக் கணக்கான ஆலயங்களில், பெருமாளோடு மூலத்தானத்திலும், எண்ணற்ற சிவாலயங்களில் கோஷ்ட மூர்த்தியாகவும் பொலிந்து அருள்பவரே பிரம்ம மூர்த்தி ஆவார். பெரும்பான்மையான சிவாலயங்களில், மூலத்தான அபிஷேக நீர்த் தாரையான கோமுகத்தின் மேல் யோனித் தத்துவ மூர்த்தியாக கோஷ்ட மூர்த்திகளுடன் ஸ்ரீநடன விநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீலிங்க்கோத்பவரை அடுத்து பிரம்ம மூர்த்தி சிறப்புடன் பொலிவதைக் கண்டு மகிழ்ந்திடலாம்.

ஸ்ரீவராகப் பெருமாள்
நாச்சியார்கோவில்

சுப முகூர்த்த நேரம், வருடம் முழுவதும் அமைவது கிடையாது. குறித்த சில நாட்களே நாள் சுத்தி, கிரக சுத்தி, ராசி சக்கர இடசுத்தி, நல்ல தாராபலன், சந்திர பலன்களுடன் அமைகின்றன. பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே கங்காமிர்த முகூர்த்த நேரம், கோதூளி லக்னம், பிரம்மகூப நேரம் எனப் பல முகூர்த்த நேரங்கள் உண்டு. இதில் விடியற்காலையில் பசுவிடம் பால் கறக்கும் நேரமான கோதூளி லக்னத்தையும் கொண்டுள்ள பிரம்ம முகூர்த்த நேரம் தினந்தோறும் புத்தி கூர்மைக்கான சுபமுகூர்த்த கிரணங்களை, நல்வரங்களை நிரம்பவே அளிக்கின்றன.

மார்கழி மாதம் தேவர்களுக்கான பிரம்ம முகூர்த்த காலம்!

நம்முடைய உத்தராயண ஆறு மாத காலமும் தேவர்களுக்கான பகற்பொழுதாகும். எனவே, மார்கழி என்பது தேவர்களுடைய பிரம்ம முகூர்த்த நேரக் காலக் கணக்கு ஆகின்றது. மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த நேரமாக விளங்குவதால்தான், நாம் மார்கழியில், தினந்தோறும் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீராடி, தேவர்களுடைய பூஜைகளுடன் சேர்ந்து பன்மடங்கு பலன்களைப் பெறுகின்றோம்.

நடப்புக் கலியுகத்தில், பிரம்ம சக்திகள் மிகவும் மங்கி வருவதால்தான், ஜீவன்களுக்கு மிக எளிய முறையில் இறையருளைத் தரும் பிரம்மோபதேச சக்திகளும் மறைந்து வருகின்றன.

பூணூல் வைபவமும் ஒரு திருக்கல்யாணமே!

விபூதி குங்குமம், ருத்ராட்சம் போல பூணூல் என்பது ஜாதி, மத, பேதமின்றி யாவரும் அணியக் கூடிய ஆன்ம சாதனமே! உபநயனம் எனும் பூணூல் அணியும் வைபவமும் கூட, பூணூல் கல்யாணம் என்று சிறப்புடன் அழைக்கப்பட்டு, இதில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதும் படலத்திற்கு பிரம்மோபதேசம் என்ற அழகான நாமச் சிறப்பும் கூடி உள்ளது.

ஸ்ரீஞானாட்சர பிரம்மமூர்த்தி
திருக்கண்டியூர்

அதாவது, தக்க வயதில், ஜாதி, மத, பேதமின்றி, தக்க சற்குருவின் தலைமையில், தக்க சான்றோர்களின் முன்னிலையில் பக்தியுடன் நடைபெறும் பூணூல் கல்யாணத்தில், பிரம்மாவே வந்து உபதேசம் செய்வதால் இது பிரம்மோபதேசம் ஆயிற்று.

ஸ்ரீவாமன மூர்த்திக்கு வேத உபதேசம் செய்யும் பாக்யத்தைப் பெற்றவரே ஸ்ரீபிரம்ம மூர்த்தி, அதே ஸ்ரீவாமன மூர்த்தி, உலகளந்தப் பெருமாளாக, திருவிக்ரம மூர்த்தியாக முதலடியாய் வானத்தில் தம் திருப்பாதத்தை விண்ணளாவ உயர்த்திய போது, மேலுலகில் பிரம்ம லோகத்தில், ஸ்ரீபிரம்ம மூர்த்தி அவருடைய திருவடிக்கு, அர்க்ய பூஜை ஆற்றி ஆனந்தமுற்றார். இதையொட்டித் தாம் திருமணத்தில் உலக்கையின் மேல்பூண் பகுதியில், தம்பதியர் இருவரும் கைகளை வைத்து, பிரம்ம மந்திரங்களை ஓதி, பெருமாளின் அனுகிரகத்தைப் பெறும் நற்சடங்கும் உண்டு.

யாவருக்குமாம் ஸ்ரீகாயத்ரீ மந்திரம்!

யாவரும் பிரம்மப் படைப்பு ஆதலின், ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதிடலாம் என்ற நெறியைத் தருதலும், ஏனென்றால் அனைத்து ஜீவன்களையும் படைப்பவர் பிரம்ம மூர்த்தி தானே! எனவேதான் தக்க பெரியோரிடம் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை உபதேசமாகப் பெற இயலாதோர், தஞ்சாவூர் அருகே கண்டியூரில் தியானக் கோலத்தில் அமர்ந்து அபூர்வமாக அருளும் ஸ்ரீஞானாட்சர பிரம்ம மூர்த்தியின் திருச்சன்னதியில் பூணூல் அணிந்து, ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைப் பெரியோர்கள் மூலமாக ஓதப் பெறுதல் சிறப்புடையதாகும்.

மந்த புத்தி அகல உதவும் பிரம்ம சக்தி!

சரவணப் பொய்கையும்
குமரி தீர்த்தமும் வள்ளிமலை

மிகவும் மந்த புத்தி உள்ள பிள்ளைகளைப் பற்றி அவர்களுடைய பெற்றோர்கள் மிகவும் மனம் வருந்துகின்றனர். “ஒரு சின்ன விஷயத்தையும் பத்து முறை சொன்னால்தான் புரிந்து கொள்கின்றான்!” என்று தன் பிள்ளையைப் பற்றி வேதனை அடைகின்ற பெற்றோர்கள், தினந்தோறும் அதிகாலையில், ஆலயம் திறந்த உடனேயே, ஸ்ரீபிரம்ம மூர்த்தியின் தரிசனம் பெற்று வருதல் மிகவும் நன்மை பயப்பதாகும். அனைத்து ஆலயங்களிலும் இரவில் தேவ பூஜை நிகழ்வதால், விடியற்காலை தரிசனம் பெறுதற்கரிய தேவ சக்திகளைத் தருவதாகும்.

சூரியோதயத்திற்கு முன் பிரம்மாவைத் தரிசிப்பதால், முன்னிரவில் தேவர்கள் பூஜித்த பிரம்மாவிடம் நிறைந்துள்ள தேவ சக்திகளை இதனால் எளிதில் பெற முடியும். புனிதமான, ஆக்கப் பூர்வமான தேவ சக்திகள் நிறைந்த பிரம்ம விக்ரகத்தை, ஆலயம் திறந்த உடனேயே விடியற்காலையில் தரிசிப்பதால் பிரம்ம தேவ தரிசனப் பலன்களும் நன்கு கிட்டுகின்றன. பிள்ளையின் மந்த புத்தியை அகற்றுவதற்குத் துணை புரியும் எளிய பூஜைகளுள் இந்த தரிசன முறையும் ஒன்றாகும்.

மானசீகமான பூஜையில் வல்லவர்களே மனம் சுமந்தான் சித்தர், சபரி, பீஷ்மாச்சாரி , பீமன் போன்றோர் ஆவர். மானசீகப் பூஜைக்கு மூலகர்த்தாவாகவே, நாரத மகரிஷி போன்ற மானசீகப் புத்திரர்களைப் பிரம்ம மூர்த்தி தோற்றுவித்தார். இதனால் தாம் பிரம்மோமதேசமாகிய பூணூல் கல்யாணத்தில் உபதேசிக்கப் பெறும் ஸ்ரீகாயத்ரீ மந்தரமும் உதடுகள் அசையாது, மனதினுள் மானசீகமாக தியானிக்கப் பெற்றதால், பன்மடங்கு பலன்களைத் தருவதாக சிறப்பிக்கப் பெற்றுள்ளது.

ஸ்ரீபிரம்ம திருக்கல்யாண உற்சவத்தில் தாம் ஆயிரக்கணக்கான சித்த, மகரிஷிகளின் குழந்தைகளுக்கும் பிரம்மோபதேசம் செய்விக்கப்பட்டது. பிரம்மத் திருக்கல்யாண தரிசனமே குடும்ப வளத்திற்குப் பெரிதும் துணை புரிவதாகும். தெய்வ மூர்த்திகளின் தேரோட்டங்களில் சாரதியாக அமர்ந்து ஸ்ரீபிரம்மா அருள்வதும் பிரம்ம தரிசனப் பலன்களைத் தருவதாகும்.

கிராம தெய்வங்கள்

கோடை காலத்தில் அம்மை போன்ற வெப்ப நோய்கள் சமுதாயத்தைப் பாதிக்கா வண்ணம், தற்காப்பு வழிபாடாக முப்பாத்தம்மன், மாரியம்மன், முத்து மாரியம்மன் போன்ற கிராம எல்லை தெய்வ மூர்த்திகளுக்கு நோய்கள் வரும் முன்னரேயே, குடும்ப நல, சமுதாய நலப் பூஜையாகவும் செவ்வாய், வெள்ளி தோறும் (எவர் கண்படாத் தீர்த்தமான) இளநீர் அபிஷேகம் செய்து பூஜித்து வர வேண்டும். மேலும் மாதுளம்பழம், பனை நுங்கு, பலாப்பழம் போன்ற முத்துச் சுளை, முத்துக் கனிகளையும், சீடைக்காய் , எள் உருண்டை போன்ற உருண்டை வடிவான உணவுப் பண்டங்களையும் தானமாக அளித்து வருதல் மிகச் சிறந்த சமுதாய நல பூஜையாகும்.

நமக்குத்தான் இவ்வகைக் கஷ்டங்கள், நோய்கள் இல்லையே என்று எண்ணிச் சும்மா இருந்து விடாது, இவற்றால் அவதியுறும் பாமர மக்களைக் காத்திடுவாய் என வேண்டிப் பொதுநலப் பூஜையாக ஆற்றுவதில் தியாகம் மிளிர்வதால் இதில் விசேஷமான பலன்களும், புண்யமும் தற்காப்புச் சக்திகளும் நிறையக் கிட்டுகின்றன. கிராம தெய்வம், எல்லை தெய்வமெனச் சாதாரணமாக, அலட்சியமாக இருந்து விடாதீர்கள். சக்தி வாய்ந்த இறைப் பரம்பொருளே மிக மிக எளிமையான பூஜைகளை ஏற்று, மிகவும் எளிமையான முறையில், எல்லை தேடி வந்து, கிராமத்திற்கே வந்து, வீட்டு வாசலுக்கே வந்து அருளும் எளிய அருட்பாங்குகளே கிராம தெய்வ மூர்த்திகள்!

என்னதான் நகரமாக இருந்தாலும் நகரம் யாதுமே பண்டைய கிராமம் ஆதலின், நகரங்களுக்கும் எட்டுத் திக்குகளிலும் எல்லைத் தெய்வ மூர்த்திகள் உண்டு. சனிக்கிழமை அய்யனாருக்கும், வெள்ளி, செவ்வாய் அம்மன் மூர்த்திகளுக்கும், புதன் கிழமை சங்கிலிக் கருப்பருக்கும், திங்கள் முனியாண்டி, முனீஸ்வரருக்கும், வியாழன் சிவன் வகை மூர்த்திகளுக்கும் ஏற்றதாகும். குல தெய்வ மூர்த்திகளுக்கும் அந்தந்த எல்லை, கிராம தெய்வங்களுக்கும் நிறையப் பிணைப்புகள் உண்டு.

லால்குடி அருகே நகர் சிவாலயம்

உங்கள் வாகனத்தைச் செவ்வாய் தோறும் கிராம, எல்லை மூர்த்தி ஆலயங்களுக்கு எடுத்துச் சென்று, பூஜித்து வாருங்கள். நிலம், வீடு, பிளாட் வாங்கும் முன் அல்லது குடிபுகும்முன் அல்லது வாடகை வீட்டில் குடிபுகுமுன் அந்தந்த எல்லை, கிராம தெய்வ மூர்த்திக்கு மாவிலைக் கலச வழிபாடு செய்து, மாவிலையால் நிலம், வீடு, பிளாட்டில் நீரைத் தெளித்து வருதல் பல பீடைகளிலிருந்து, தோஷங்களில் இருந்து நம்மைக் காக்கும்.

அக்னி சிக்‌ஷா
http://www.agnisiksha.org
http://www.agnisiksha.com

அக்னி என்றால் உஷ்ணம், வெப்பம், தீ என்பதாகவும், குத்து விளக்கின் தீபம், விறகு அடுப்பின் தீ, மின்சார பல்பு வெளிச்சம், சூரிய ஒளி, நட்சத்திர ஒளி, சந்திர ஒளி, பாய்லர் வெப்பம், ரயிலின் கரி எஞ்சினின் வெப்பம் எனவாகவும் பல வகைகள் உண்டு தாமே! சூரிய கோளத்தின் அருகில் கூடச் செல்ல முடியாதபடி, பல லட்சம் மைல்கள் தள்ளி நின்று பார்க்க வேண்டிய சூரியனின் கிரணங்கள் நம்மீது பட்டுத்தானே நாம் வெளியிலில் உலாவி ஜீவிக்கின்றோம்! அவரவருடைய ஆத்மீக ஆற்றலைப் பொறுத்து, அவரவர் தலைக்கு மேல் halo எனப்படும் ஒளி வட்டமும், அனைத்து ஜீவன்களுக்கும் உண்டு. இவையாவும் அக்னியின் பல வகைகளே! உண்மையில் கிருத, திரேதா, துவாபர யுகங்களில் நிலவிய பலவகை வண்ண அக்னி வகைகள் தற்போது மறைந்துள்ளன. 

இதையெல்லாம் பார்க்கும் போது, அக்னியும், ஒளியும் இல்லாமல் எந்த ஜீவனும் இந்த உலகில் ஜீவிக்க முடியாது என்பது புலனாகின்றது அல்லவா! கண்களால் பார்த்துப் பார்த்து வாழ்வதாகக் கலியுக வாழ்க்கை அமைந்து வருகின்றது. இதனாலும் பல யோக, தியான சக்திகளை நாம் இழந்து விட்டோம். மின்ஒளி எனும் செயற்கை ஒளிக்கு அடிமைப்பட்டு சில நிமிடங்கள் மின்வெட்டு என்றாலே நம் உடலால் ஒரு நிமிடம் கூடத் தாங்க முடிவதில்லையே!

கண்களுக்குள்ளும் அந்தரமூலப் பிரகாசம் எனும் ஒரு விதமான உள்ஒளி இருப்பதால் தான், காணும் தன்மையே ஏற்படுகின்றது. கண் பார்வை அற்றோர்க்கும், உள்மனக் கண்கள் உண்டு. இவ்வகையில், ஒவ்வொரு ஜீவ அணுவிலும், ஜீவ வாழ்க்கையிலும், அக்னித் திறன் ஒளியாகவும், வெப்பமாகவும் பல்வகையிலும் பிணைந்திருப்பதை உணர்தல் வேண்டும்.

சிந்துப்பட்டி

ஞானாக்னி மண்டலமே சற்குரு

எல்லா ஜீவன்களிலும் மறைபொருளாய் இருக்கும் ஆத்ம ஒளிக்கும், நாம் காணும் வெளிவகை வெளிச்சத்திற்கும், அக்னிக்கும் என்ன சம்பந்தம்? ஆத்ம சக்தியிலும் அக்னியானது ஜோதி ரூபமாய்ப் பொலிகின்றது. எனினும் அக்னியைக் கொண்டே ஆத்மாக்னியாகப் பொலியும் ஆத்ம ஒளியை அறிதல் முடியும். இதற்குத் தேவையான பக்தி, யோகம், தியானம் கூடிய ஞான ஒளியாகிய ஞானாக்னியைப் பெற்றுத் தருபவரே சற்குரு ஆவார். ஆம், சற்குருவே ஒரு முழு அக்னியருள் மண்டலமே! இவ்வாறு நம்முள் ஜோதியாய்ப் பின்னிப் பிணைந்திருக்கும் அக்னியே நமக்குப் பல பாடங்களைப் போதிக்கின்றது. இதுவே “ அக்னி சிக்‌ஷா” எனப்படுவதாகும்.

அனைத்தும் வேதத் தமிழ் ஒலிகளே!

 அக்னி சிக்‌ஷா என்பதில் மொழி, அட்சர பேதங்கள் கிடையாது. “ அக்னி சிக்‌ஷா” என்பதில் அக்னி தூய தமிழ்ச் சொல்லே ஆகும். நாம் தேவமொழி சப்தத்தை உடையதாகக் கருதுகின்ற ஷ, ஸ, க்ஷ போன்றவற்றின் வடிவுகள் யாவும், சப்தங்கள் யாவும் உலகின் ஆதிமூலத் தொன்மையான தமிழ் மொழியில் இருந்து தோன்றிய சப்த வடிவுகளே ஆகும். காலப் போக்கில் தமிழ் அட்சரங்களும் வடிவில் மாறி உள்ளன.

பார்த்தாலேயே, கேட்டாலேயே உணரும் (இறைப்) பகுத்தறிவைக் கொண்டதே தமிழ் அட்சரச் (எழுத்துச்) சக்திகள் ஆகும். இதுவே தமிழுக்கு உரிய இயற்கையான தெய்வீக சக்தி. ஆம், பார்க்காமல், பகுத்தறிவுடன், பகுத்துணர வைக்கும் இறைப் பகுபதப் பகுத்தறிவுத் தன்மையையும் உடையவையே தமிழ் அட்சர சக்திகளாம். இதனால்தாம் தமிழ்ப் பீடாதிபதியாம் ஸ்ரீஅகஸ்திய மாமுனிக்கு, இறைவனே இன்னம்பூர் சிவாலயத்தில் ஸ்ரீஎழுத்தறிவித்த நாதாராய்ச் சிவபெருமான் தமிழ் இலக்கணத்தைப் புகட்டினார். எப்போதும் சாசுவதமாய் இறைப் பொருளாய் அருளும் தமிழ்க் கடவுளாம் முருகனின் மூத்த மொழியாகவும் முத்தமிழ் பொலிகின்றது.

இன்னம்பூர்

க, ச, ட, த, ப போன்ற தமிழ் எழுத்துக்களில் பல (फ,क,प,ग) வகைக் குடும்ப எழுத்துக்களைப் பிற மொழிகளில் நாம் கண்டாலும், தமிழில் க, த, ப, ச போன்றவை ஓரின அட்சரமாய்த் தாம் விளங்குகின்றன. அதாவது ஒரே வகை க, ச, த, ப எழுத்துக்களே தமிழில் உண்டு. இதற்குக் காரணமே, தமிழ் வாக்கியங்களைப் படிக்கும் போதே கண், உடல், மனம், உள்ளமானது. துரித கதியில் செயல்பட்டு உதடு, நாக்கு, வாயின் மேல் அன்னம், கீழ் அன்னம், நடு அன்னம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு, மிகவும் விரைவாக சப்த இயக்கங்கள் செயல்பட்டு, சப்தங்கள் எழுவதைத் தாம் (இறைத் தமிழ்ப்) பகுத்தறிவு என்று கூறுகின்றோம்.

உதாரணமாக, “லியுப் பலத்தில், த்தியச் செம்மலாம் கடவுள் தொட்டுத் தரும் சாந்த் தளிரே” என்பதைப் படிக்கையில் க, த, ச, டவில் அழுத்தங்கள் தானாகவே மெல்லியதாக, வல்லியதாக, மிதமாக மாறுலைக் காணலாம்! இதுவே தென்னாடுடைய சிவனுக்கு உரிய தண்மிழின் தெய்வீகச் சிறப்பு!

கலியுக பூமியில் பெரும்பான்மையான மனிதர்கள் முழுமையான ஆறு அறிவுகளுடன் செயல்படுவதில்லை. இரண்டரை அறிவு, மூன்றரை அறிவு என நான்கு அறிவுகளுக்கும் கீழ்ப்பட்டதாக, மிருகம் போல் கோபம், பகைமை, குரோதம், விரோதம், பொறாமை போன்றவற்றிற்கு ஆட்படுவதாய் இருப்பதால், ஆறு முழு அறிவுகளுடன் உலகெங்கும் பலரும் முழு மனிதராக இயங்குவது கிடையாது. அவ்வப்போது அறிவின் அளவீடு முறையும் மாறுபாடு அடைகின்றது. மதுவில் மயங்கினால், தீய ஒழுக்கங்களில் ஈடுபட்டால் இரண்டு அறிவுதான் வேலை செய்யும்.

மாமறைகள் தருவதே முழுமையான இறைப் பகுத்தறிவு!

ஸ்ரீசக்கரத்தாழ்வார்
சிந்துப்பட்டி

ஐந்து அறிவுகள் முழுமையாகச் செயல்பட்டால்தான் ஆறாவது அறிவான இறைப் பகுத்தறிவும் ஆக்கம் பெறும். ஆறு அறிவுகளையும் பரிபூரணமாக இயங்க வைக்கின்ற சக்திகளைக் கொண்டவையே தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம், திருப்புகழ், திருமந்திரம் போன்ற இறை மந்திர மாமறைகள் ஆகும். இவற்றில் பொலிருந்திருக்கின்ற இறைப் பகுத்தறிவு ஒளிச் சக்தியே “அக்னி சிக்‌ஷா” எனப்படுவதாகும்.

“அக்னி சிக்‌ஷா” என்பதும் தேவமொழி வடிவு அல்ல. தமிழ்ச் சப்த வடிவுகளைக் கொண்டதே “அக்னி சிக்‌ஷா” ஆகும். தமிழ் அட்சரமாகிய ‘ட’ குடும்பத்தைச் சார்ந்ததே ‘ஷ’ என்ற சப்தமாகும். ‘ட’,’ஷ’ ஒலிகள் சத்காரம் எனப்படுபவையாம்.  இவை தமிழில் எழுத்தாகத் தற்போது இல்லை எனினும் ஒலிப் பூர்வமாக உண்டு.

டம டம டங்காராக்னி!

கலியுகத்திற்குத் தேவையான ஆறுவிதமான அக்னி சக்திகளில் டங்காராக்னியும் ஒன்று. இது தமிழ் அட்சர மந்திரங்களில்தாம் மிகவும் நிறைந்து பொங்குபவை! இதனால் தாம் சஷ்டி மூர்த்தியாகிய ஆறுமுகப் பெருமானைத் திருப்புகழ் அமிர்தம் தந்த அருணகிரி நாதர், ‘ட’வகை அட்சரங்களால் போற்றிப் பல அரிய இறைத் துதிகளைப் புனைந்து நமக்குத் தந்துள்ளார். இவை இறைப் பகுத்தறிவைப் பேண வல்லவை! இத்தகைய பாடல்களுக்கு ‘டம்பாயக் கவிச் சூத்திரம்’ என்று பெயர்.

சத்கார வகைப் பாக்கள், அதாவது, ஷ, ட அட்சரங்களை உடைய மந்திரப் பாக்களால் எளிதில் வேத மாமறை அக்னியாகிய நெருப்பைத் தோற்றுவிக்க முடியும். ‘ட’வில் அக்னி சக்திகள் மிகுதி என்பதால்தான், இதன் வலிமையான அக்னி சக்திகளைக் கருத்தில் கொண்டே தமிழில் முதலில் “ட” வாராது. உயிர்ச் சக்திகளாகிய ஜீவாக்னி சக்திகள் நிறைந்த அ,இ,உ போன்ற உயிர் எழுத்துக்களை முதலில் வைத்து ‘ட’வகைச் சொற்கள் அமைந்துள்ளன (இடபம்).

உதடுகள் இணையா ‘எமகடப் படனம்’

“ அக்னி சிக்‌ஷா” என்று சொல்லிப் பாருங்களேன்! வாயில் உதடுகள் சேராது, அட்சர ஒலிகள் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்திடலாம். இதனைத் தீச்சுடர்த் தேயு என்று நடைத் தமிழ் நன்கு தோயச் சொல்லும்போதும், உதடு உராய்வதில்லை. இவ்வாறு உதடுகள் இணையாது ஒலித்து வரும் சொற்களுக்கும், ‘எமகடப் படனம்’ என்று பெயர். இவற்றிற்கு அக்னி வேத சக்திகள் அதிகம்.

தீ மிதித்தல், தலையில் அக்னிச் சட்டியைச் சுமந்து நேர்த்தி வைத்தல், அக்னியை நாக்கில் ஏந்துதல், கற்பூர அக்னியை நாக்கில் ஏந்துதல், கற்பூர அக்னியை விழுங்குதல் போன்ற அக்னி வகை யோகங்களுக்கு, சத்கார மந்திரச் சித்சக்திகள் உதவி புரிகின்றன. அதாவது, இத்தகைய சித்சக்திகளுக்கு “வஷட், ஔஷட்” போன்ற ‘ஷ’, ‘ட’ வகைப் பீஜாட்சர மந்திரங்கள் உதவுகின்றன. தக்க சற்குரு மூலமாக இவற்றைப் பயில வேண்டும்.

உள் ஒளிப் பாடமே ‘ அக்னி சிக்‌ஷா’!

இவ்வாறாக “அக்னி சிக்‌ஷா” என்பது அக்னி மூலமாக நமக்கு நாமே பெறுகின்ற பாடமாகும். நம்முள் உறையும் இறை ஆசானை உணர வைப்பதே ‘அக்னி சிக்‌ஷா’! அதாவது, அக்னியே ஒலியொளிப் பூர்வமாக நேர்முகமாக வந்து பாடம் சொல்லித் தருவதாகும். அதாவது, அக்னி மூர்த்தியே, அக்னி சிக்‌ஷாவாக நம் உடலில் பொலியும் அக்னி சக்திகளை ஆக்கப் படுத்துவதன் மூலமாக, நம்மைக் கடைத்தேற்றுவதற்காக உதவும் இறைப் பொருளே  அக்னி சிக்‌ஷா,  அக்னி சிக்‌ஷாவில் கிட்டும் ஒவ்வொரு விளக்கமும், வெறும் வாக்கியப் பொருள் மட்டுமல்லாது, நமக்குள் மறை பொருளாய்த் துலங்கும் அக்னி சிக்‌ஷா சக்திகளை, தீர்சுடர்த் தேயு சக்திகளை ஆக்கப் படுத்துவதாகும்.

மிகவும் மனம் நொந்த நிலையில், உலகமே வெறுத்தாற் போல், பலருடைய மனமும் பலவீனம் அடைவது உண்டு. இச்சமயங்களில் “அக்னி சிக்‌ஷா, அக்னி சிக்‌ஷா” என்பதையே சொல்லார்ந்த மந்திரமாக ஓதி, ஓதி ஓதியே வேதாக்னி சக்தியை உள்ளுக்குள் ஏற்றி வந்தால், புத்துணர்ச்சியும், புதுத் தெளிவும் உருவாவதை நீங்களே உணரலாம். ஏனென்றால் “அக்னி சிக்‌ஷா” என்று சொல்லும் போது, ‘ஆ’ எனும் கடைநிறை நிலை அட்சரச் சக்தி உள்ளேயே எதிரொலித்து, பரவெளியிலும் எதிரொலித்து, பன்மடங்காய் விரிந்து, நிறைந்து, நிரவி, பரவி ஆக்கச் சக்திகளை உள்ளுள் உறையும் பரவெளிக்கு அளிக்கின்றது.

அக்னி சிக்‌ஷாவால் வெல்ல முடியாதது, உலகில் எதுவும் இல்லை, “அக்னி சிக்‌ஷா” இல்லாமல், உலகமோ, உயிர்ப் பொருளோ, உயிரற்றதோ எதுவும் இல்லை. அக்னி சிக்‌ஷாவால் தான் உலகமே இயங்குகின்றது.

இதனால்தான் http://www.agnisiksha.org என்ற website  ஸ்ரீஅகஸ்தியர் விஜயத்தின் சார்பாகத் துவங்கப்பட்டுள்ளது. முதலில் ஆதார விளக்கங்களாக நிதமும், அந்தந்த நாட்காலத்தின், காலச் சிறப்பம்சங்கள் இதில் அளிக்கப்படுகின்றன. இதனைத் தினந்தோறும் படிக்கின்றவர்களுக்குக் காலாக்னிச் சுடர்ச் சக்திகள் நிரவுவதற்கும் இதைப் பற்றி அறிய இயலாத, அதிகமாகப் படிக்காதவர்களுக்கும், பாமரர்களுக்கும் நிரவும் வண்ணம், இதன் அக்னிதேவ சக்திகள் பரவெளியிலும் ஒளியாய் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

W.W.W என World Wide Web என்பதால் மூவுலகிலும் ஒளிரும்  அக்னி சிக்‌ஷா சக்திகளைப் பரப்ப வல்ல ஆத்ம விளக்கங்கள் இவையாவும்! தினமும் படியுங்கள், தமிழிலேயே websiteஆக வருகின்றது.

பூர தந்தாக்னி சக்தி

சித்த மூலிகைப் பல்பொடி தரும் பூர தந்தாக்னி சக்தி!

பல்பொடியைக் கொண்டு, வலது கை நடுவிரலால் (சனி விரலால்) பல் தேய்க்கும் ஆரோக்யமான நன்முறை மறைந்து, டூத் பிரஷும், டூத் பேஸ்ட்டும் நடைமுறைக்கு வந்து விட்டமையால், மனித குலம் பல தந்த யோக சக்திகளை இழந்து வருகின்றது. நம் உடலில், ஒவ்வொரு உறுப்பிலும், ஒவ்வொரு விதமான உஷ்ணம், பல காரணங்களால் ஏற்படுகின்றது. இவ்வாறு தானாகவே, இயற்கையாகவே, விண்ணில், பொருளில், உடலில் எழும் சூடு அல்லது உஷ்ணத்திற்குப் பல்குண ஜாத வேதசம் என்று பெயர். தேவமொழி மற்றும் தமிழ் மாமறைகளை ஓதும் போது வயிற்றில் ஒருவிதமான அக்னிப் பசி தோன்றும். இது சாதாரணப் பசியை விடச் சற்று வித்யாசமானதாக இருக்கும். இதற்கும் பல்குண ஜாத கும்ப வேதசம் என்று பெயர்.

இதே போல் ஒருவர் பாய்ப் படுக்கையில் உறங்கி எழுகையில் பாய்க்கும், உடலுக்கும் இடையே தோன்றும் ஒருவிதமான மென்மையான உஷ்ணத்திற்குச் சயன கள அக்னி என்று பெயர். இதைப் போலவே வலது கை நடுவிரலால், தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன் பல்பொடியைக் கொண்டு பல்லைத் தேய்க்கும் போது, நடுவிரல் எனப்படும் சனி விரலில் உள்ள வளையங்கள், பற்களில் உராயும் போது ஏற்படும் ஒருவிதமான சூட்டிற்குப் பூர தந்தாக்னி சக்தி என்று பெயர். இந்த யோக அக்னி சக்தியை நாம் தினமும் எழுப்பியாக வேண்டும். ஏனென்றால், வலது கை நடுவிரல், சனி விரல் ஆவதாலும், சனி பகவான் ஆயுள்காரகராக இருப்பதாலும், சனீஸ்வர சக்தி நம் உடலில் தினமும் அக்னி வடிவில் தோன்றி ஆகுதல் வேண்டும்.

வெளியிலிருந்துதாம் நாம் நவகிரஹ நல்வர சக்திகளை பெற வேண்டும் என்பது மட்டும் கிடையாது. அனைத்து ஆத்ம சக்திகளும் நம் உள்ளேயே பொலிந்திருப்பதால், ஆலயத் தரிசனம், ஆலய வழிபாடு, ஆலய தீர்த்த நீராடல், ஹோம வழிபாடு போன்றவை நம் உடலில் உள்ள நவகிரஹ சக்திகளையும், அக்னி சக்திகளையும் ஆக்கப்படுத்துகின்றன. எனவே நீங்கள் டூத்பிரஷ் கொண்டு, பல் தேய்த்தாலும், ஒரு பத்து சுற்றாவது உங்கள் வலது நடுவிரலை வைத்து, ஒரு சில நிமிடங்களாவது சனைச்சர விரலால் தேய்த்து, ஓரளவு, இயற்கையான அக்னி யோக சக்திகளை இயற்கையாகவே எழுப்பி பெற்றிடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் இதைப் பழக்கிக் கொடுங்கள். பல் ஈறுகள், நாக்கு இவற்றில் உள்ள பலவிதமான யோகச் சுழற்சிகள், கைவிரலால் தேய்க்கும் போதுதான் எழுச்சியுறுகின்றன.

மீன ராசியில் சந்திர பகவான் இருக்கும் போது சில விதமான யோக சக்திகள் வானத்தில் உருவாகின்றன. இவற்றை மேற்கண்ட அக்னி சக்திகள் மூலமாகத்தான் நாம் பெறமுடியும். எனவே இன்றிலிருந்தே தினந்தோறும் கைவிரலால் பல் தேய்க்கின்ற பழக்கத்தைக் கைக் கொள்ளுங்கள். பல் இல்லாதவர்கள் என்ன செய்வது? பல் ஈறுகளைத் தேய்க்கும் போது ஒருவித உஷ்ணம் உண்டாகும். இதுவும் ஒருவிதமான யோகாக்னியே ஆகும். எனவே கை விரலால் பல் தேய்ப்பதும் ஒரு அக்னி வகை யோகமே!

நாகரத்தினம்

வசுந்தரா நாக தேவதா மூர்த்தி

நாகங்களுக்கெல்லாம் தலைமையாக இருப்பது நல்ல பாம்பு எனப்படும் நாகப் பாம்பு ஆகும். சுந்தரம் என்றால் அழகு என்றுதானே அர்த்தம்! வசுந்தரா என்பது இயற்கையாக அமைந்த, சிருஷ்டிப் பூர்வமான, நிலையான அழகைக் கொண்டது என்று பொருளாகும்.

வசுந்தராச் சின்னம்

நல்ல விஷமுடைய ஒரு பாம்பை நல்ல பாம்பு என்று நிலையான அடை மொழியைத் தரும்போது, அது எப்போதும் மாறாத (வசுந்தரா எனப்படும்) நல்ல குணங்களை உடையது என்றுதானே பொருளாகின்றது. நல்ல மனிதன் கூடச் சில சமயங்களில் குண மாறுதலை அடைந்திடலாம். ஆனால், நிலையான நல்ல குணங்களைக் கொண்டது என்பதால் தான், நல்ல பாம்பானது வசுந்தராச் சின்னமாகிய நாக நாமத்தைத் தன் படமாகத் தாங்கியுள்ளது.

இதுவே எபோதும் நிரந்தரமான அழகுடைய சுந்தரச் சின்னமாக, “நாதன்முடி மேலிருக்கும் நல்ல பாம்பிற்கு” இறைவனாலேயே அளிக்கப்பட்டுள்ளது. வைணவத்தில் திருச்சூர்ணம் எனப்படும் மூன்று தெய்வீக அ(ம்ச)ங்கங்கள் உண்டு. பாற்கடல் பரந்தாமன் ஆதிசேஷன் மீதுதானே சயனிக்கின்றார். நல்ல பாம்பிற்குச் சிருஷ்டிப் பூர்வமாக இயற்கையாகவே அளிக்கப்பட்டுள்ள வசுந்தராச் சின்னத்தில் நடுவில் சூக்குமமாகத் துலங்குவது பன்னகச் சூர்ணம் எனப்படும் நாக ரத்தினப் பரலாகும். நல்ல பாம்பிற்கு உயிரை மாய்க்கும் விஷம் உண்டு என நாம் கருதினாலும், எவரைத் தீண்ட வேண்டும் என்ற விதியை அறிந்ததே நல்ல பாம்பு ஆகும். ஒருவரைத் தீண்டலாகாது என விதி இருப்பின், எந்த நல்ல பாம்பும் அவரால் தமக்கு எத்தகைய சித்ரவதைகள் ஏற்பட்டாலும் அவரைத் தீண்டிடாது. இதுவே நாக தர்மமாகும்.

தர்ம நெறியைத் தாங்கும் நாகம்!

தர்ம நெறி தவறாதது நாக குலம். எனவேதான் தர்ம ராஜாவாகிய எம மூர்த்தியே நாக வழிபாடுகளை மேற்கொள்கின்றார். நல்ல பாம்பு என்பது தர்மத்தின் சின்னமாகும். நல்ல பாம்பு தீண்டி மரணம் ஏற்படுவதைச் சித்தர்கள் மரண வகையில் சேர்ப்பது கிடையாது. இதர பாம்புகள் தீண்டி இறந்தால் அது மரணமே. ஆனால், நல்ல பாம்பு தீண்டியவரின் பிறப்பு இரகசியங்களை ஆழ்ந்து தர்ம நெறிப்படி விசாரம் செய்திட, எந்த ஜீவனுமே விதிப்  பூர்வமாகத் தமக்கு எவ்வகையில் மரணம் ஏற்பட வேண்டும் என்பதை நிர்ணயித்தே அந்த உயிர் பிறக்கின்றது. ஆனால், இந்த ஒரு அன்மீக இரகசிய விளக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு, இறப்பின் ரகசியங்களை உணர முடியாது. எமதர்ம லோக நியதிகளின்படி சிலருடைய ஜீவ வாழ்வின் முடிவு, பூர்வ ஜென்ம காரணங்களால் நாக லோகங்களில் நிர்ணயிக்கப்படுகின்றது என்பதை மட்டும் இப்போது அறிந்து கொள்ளுங்கள். தக்க சமயத்தில், நாக இரகசியங்கள் தக்கோர் மூலமாகப் புலப்படுகையில், நல்ல பாம்பு தீண்டுதல் போன்றவற்றிற்கான விளக்கங்களைத் தக்க சற்குரு மூலமாக, நீங்களே தானாகவே அறிந்து கொள்வீர்கள்.

எனவே நாக இரகசியம் அருந்தபோபலத்தால் மட்டுமே அறியக் கூடியது. இதனை மானுட வடிவில் நன்கு அறிந்தவர்களே தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய பஞ்சபாண்டவர்கள் மற்றும் அப்பராகிய திருநாவுக்கரசு சுவாமிகள், திருஞானசம்பந்த சுவாமிகள், சற்குரு தியாகராஜ சுவாமிகள் ஆவார்கள். புன்னாகவராளி எனும் ராகத்தில் பகுள பஞ்சமித் திதியில் அதிகண்டம் மற்றும் கண்ட யோக நேரத்தில், நாகவ கரண நேரத்திலும் பாடி வந்தால், நாகவிட சக்தியை முறிக்கும் மூலிகா (கான) சக்திகள் கிட்டும்.

இவ்வாறு நாக சக்திகள் பரிணமிக்கும் அதிஅற்புதத் தலங்களில் ஒன்றே பயரி ஸ்ரீநாகாம்பிகை சமேத ஸ்ரீகோடி சூர்யப் பிரகாசர் ஆலயம் ஆகும்.

இவ்வாறாக, வசுந்தராச் சின்னம் எனப்படும் நல்ல பாம்பின் படப் பகுதியில் உள்ள நாகச் சூர்ணப் பரலின் இடையில் சூக்குமமான நாகரத்தினச் சிந்து நாமப் பொட்டுப் பகுதி உள்ளது. மனிதன் விந்தை விரயம் செய்யாது விந்து சக்திகளைக் காத்து வந்திடில், சுக்ல யோக சக்திகள், முதுகுத் தண்டின் வழியே மேல் எழும்பி சகஸ்ராரமாகிய கபாலப் பகுதியை அடைகையில், தேஜோமயப் பிரகாசம் உண்டாகும். இத்தகைய நாகப் பிரகாச யோகத்தில் தலைசிறந்தவரே ஸ்ரீவிவேகானந்த சுவாமிகள் மற்றும் விடயபுரம் மகானும் ஆவர்.

நாகரத்தினம் தோன்றுதல்

இதே போல் ஒரு நாகமானது தன் விஷத்தை ஓர் அணுப் பகுதி கூடச் சிந்தாமல், விரயம் செய்யாது நாக யோகம் பூண்டு வந்தால், ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் நாக வர்தனப் பிரகாச சக்தியால் அதனுடைய ஆயுள் ஸ்ரீபிரம்ம மூர்த்தியால் நீட்டிக்கப்பட்டு, இவ்வாறு 108 வருடங்கள், விடம் சிந்தா நாக யோகம் பூணுகின்ற நாகத்தின் விஷப் பரல்கள் யாவும் ரத்தின நாக சக்திகள் ஆகின்றன. இவைதாம் அய்யர் மலை போன்ற ரத்தினகாரக இறைச் சந்நதிகளில் நாக குலத்தின் நாக ரத்தினமாக மாறுகின்றன. இவ்வாறு 1008 ஆண்டுகள் அருந்தவம் புரியும் நாகங்களே நாக யோகியராகவும் ஆகின்றனர். பாம்பு வடிவில் இருந்தாலும் இவர்கள் நாகச் சுடர் மகரிஷிகள் என்றும் நாக யோகிகள் என்றும் பெயர் பெறுகின்றனர்.

இத்தகைய நாக யோகிகள் உலவும் தலங்களில் அய்யர் மலை, பயரி போன்றவை முக்கியமானவை. நாக ரத்தின யோகியாகப் பொலியும் உத்தம நாகங்கள் தங்களிடம் உருவாகும் ரத்தினங்களை அய்யர் மலை போன்ற தலங்களில் சுயம்பு லிங்கங்களிடம் ஒப்படைத்துத் தியாகம் புரிகின்றன. இதனால்தாம் அய்யர் மலை சுவாமியைக் குலதெய்வமாகக் கொண்டோர் “ரத்தினம்” என அடைமொழியைத் தம் பெயரின் இறுதியில் கொள்வர். இன்றைக்கும் அமாவாசை இரவிலும், மாத சிவராத்திரியிலும், திருஅண்ணாமலையிலும் பல தலங்களில் சுயம்பு மூர்த்திகளிடம் காரிருளிலும் சுயம்பு பிரகாசம் தோன்றுவதற்கான காரணங்களுள் ஒன்றே இந்த நாகநாத ரத்தினப் பிரகாச சக்திகளும் ஆகும்.

உத்திரமேரூர் நாகமூர்த்தி

பொதுவாக, உத்திர நட்சத்திர நாள், கார்த்திகை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திர நாட்களிலும், தேய்பிறைச் சதுர்த்தசி (கிருஷ்ண சதுர்த்தசி), அமாவாசை நாட்களிலும் இத்தகைய நாக ரத்தினப் பரிமளிப்பு வைபவம் நடைபெறுகின்றது. அஷ்ட நாக மூர்த்திகள் எனப்படும் – எட்டு நாக தேவதா மூர்த்திகளும் இத்தகைய நாக ரத்தினத் தவங்களைப் புரிந்தவர்களே, இவ்வாறு நாகரத்தினத்தை யோகப் பூர்வமாகப் பெறும் நாகங்களின் தலைப்படப் பகுதியில், வசுந்தராச் சின்னத்தின் இடையில், நாமத்தின் நடுச் சிகப்புக் கோடு போல, மூன்றாவதாக எவர் கண்ணும் படாத சூக்கும நாகரத்தின சுடர்களின் வடிவுகள் ஏற்படும். இவையாவும் சென்னை திருவொற்றியூர் ஸ்ரீபடம்பக்க நாதரின் தரிசனம் பெற்றவையாகும். திருவொற்றியூரில் இம்மூர்த்தியை, கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் (அண்ணாமலைத் திருக்கார்த்திகைத் தீப நாள்) மட்டுமே கலசமின்றி முழுமையாகத் தரிசிக்க முடியும்.

எவ்வாறு தேங்காயில் ஒற்றைக் கண் தேங்காய் மிகவும் சக்தி வாய்ந்ததாகப் பல்லாயிரம் தேங்காய்களில் ஒன்றாக மிகவும் அபூர்வமாக அமைகின்றதோ, இதே போல, பல்லாயிரம் நாகங்களில் ஒன்றாக, வசுந்தராச் சின்னத்தின் இடையில் நாகரத்தின நாமத்துடன் துலங்கும் நாக குல நாக யோகிகள் அமைவர்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கு பரந்தாமனை இவ்வகையில் நாகரத்தின யோகியர்கள் பலரும் வழிபட்டு முக்தி நிலைகளை அடைகின்றனர். பஞ்ச பாண்டவர்களும் நாக பூஜைகளில் வல்லவர்களாகத் துலங்கியமையால் எங்கு சென்றாலும் அவர்களுக்கு நாக தேவதைகளின் அருள் சுரந்தது! நாகக் கொடியை உடையவன் துரியோதனன். ஆனால், பீமனை மாய்ப்பதற்காக நாகங்களைத் தவறாகப் பயன்படுத்தியதால், நாக சாபம் அவன் வம்சத்திற்கு வாய்க்கலாயிற்று. நாக பூஜைகளைத் தினமும் முறையாக ஆற்றியமையால் பாண்டவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்குத் துணையாக ஐந்து வகை நாகரத்தின நாகசக்திகள் காப்பாய்த் தொடர்ந்தன.

இவ்வாறு பஞ்ச பாண்டவர்கள் எந்தத் தலத்திற்கு விஜயம் செய்தாலும் அந்த ஆலயத்தில் நல்ல பாம்புகளுக்கெல்லாம் தலைமைப் பீடமான வசுந்தரா நாக தேவதா மூர்த்தியையும் வழிபட்டு அவ்வப்போது நாக குல சற்குருவான ஸ்ரீஅஸ்தீக சித்தரிடம் நாக வழிபாட்டு முறைகளையும் உபதேசமாகப் பெற்று வந்தனர்.

இவ்வாறு உத்திர நட்சத்திர நாளில் பஞ்ச பாண்டவர்கள் ஒன்பது பெருமாள் மூர்த்திகளை வழிபட்டு வசுந்தரா நாக தேவ மூர்த்தியையும் வழிபட்ட தலமே செங்கல்பட்டு அருகே உள்ள உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதப் பெருமாள் ஆலயம் ஆகும். அபூர்வமான கட்டிட அமைப்புகள் உடைய ஆலயம். விழுப்புரம் அருகே திருபுவனைத் தலம் போல மூலஸ்தானத்தை மிக மிக அருகில் பிரதட்சிணமாகச் சுற்றி வரக் கூடிய மூலப் பரஞ்சோதி சக்திகளைக் கொண்ட தலம். திருமாலின் ஸ்படிகத் திருவருள் பிரதட்சிணக் கிரண ஸ்பரிசமாக, உடலில் 72,000 நாள நாடிகளுக்கும் பெற்றுத் தரும் வண்ணம் மாடித் தள நிலை அமைப்பில் ஒன்றன் நிலை மேல் ஒன்றாக, திருக்கோஷ்டியூர் போல, தள நிலைச் சந்நதிகள் உள்ள தலம். இங்குதாம் கீழ்த்தளத்தில் மூல மூர்த்திக்கு  வலப்புறம் பிரதட்சிணப் பாதையில் கோஷ்ட மூர்த்திக்குக் கீழே வசுந்தரா நாக தேவதா மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்றிடலாம்.

கைகளால் அரைத்த நல்ல மணமுள்ள சந்தனத்தால் உத்திரமேரூர் வசுந்தரா நாக தேவதா மூர்த்திக்கு உத்திர நட்சத்திர நாளிலும் மற்றும் செவ்வாய், வெள்ளிக் கிழமை நாட்களில் சந்தனம் மஞ்சள் காப்பிட்டு வழிபட்டு வருதல் விசேஷமானது. சகலவிதமான நாக தோஷங்களும், குறிப்பாக கால சர்ப்ப தோஷங்களை நீக்க வல்ல அருந்தலம். ஆதிசேஷ மூர்த்தியும் சூக்குமமாகத் தினந்தோறும் வழிபடும் தலம். பன்னக நாக பூஷண தேவதைகளின் அருள் பரிணமிக்கும் திவ்யத் தலம். சந்ததி விருத்திக்கும் அருளும் தலம். மூதாதையர்களுக்கும் தகுந்த அமாவாசைத் திதி ப்ரீதிகள் செய்யாமையால் ஏற்படும் பித்ரு சாபங்களை நிவர்த்திக்கும் அற்புதப் பெருமாள் தலம்.

இங்கு ஒன்பது பெருமாள் மூர்த்திகளை வழிபட்டு வசுந்தரா நாகமூர்த்திக்கு மஞ்சள், சந்தனக் காப்புகள், அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் குடிசை மற்றும் வீடுகளைப் பழுது பார்த்து நன்முறையில் வாழ வைக்கின்ற தர்ம்மானது ஆண், பெண் சந்ததி இல்லாமையால் வாடுவோர்க்குத் தக்க தீர்வுகளைப் பெற்றுத் தரும்.

மற்றும் சந்ததிகள் இருந்தும் அனாதையாகக் கைவிடப்பட்டோர் இவ்வகை வழிபாட்டால் தக்க நிவாரணங்களைப் பெறுவர். இத்தகைய அரிய நாக தேவதா மூர்த்தி வழிபாடுகளை இனியேனும் அறிந்து பலருக்கும் அறிவித்துச் சமுதாய நலன்களைப் பேணி வாழ்வீர்களாக!

சங்குகளும் வாஸ்து சக்திகளும்

பொதுவாக, வாஸ்து தோஷங்கள் என்று புரிவதற்காக, நாம் பேச்சு வழக்கில் சொன்னாலும், இதுவும் தவறான வார்த்தைப் பிரயோகம் ஆகும். வாஸ்து மீறல் தோஷங்கள் அல்லது வாஸ்து சாஸ்திர மீறல் என்பவையே சரியானதாகும். இதே போலப் பித்ரு சாபங்கள் என்று நாம் உரைத்தலும் தவறானதே! தம் சந்ததியினரின் தெய்வீக முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு வினாடியும் அரும்பாடுபடும் பித்ருக்களா சாபம் அளிப்பார்கள்?

ஆனால் பித்ருக்களே சாபம் இடும் அளவிற்குச் சந்ததியினர் கடுமையான பாவ வினைகளைச் செய்யும் போது, இவற்றின் விளைவுகள், பித்ருக்களே சாபம் அளிக்கும் வகைக்கு உந்தப்பட்டு விடுகின்ற நிலைகளையும் பித்ரு சாபம் என்பது குறிக்கின்றது. மகரிஷிகள் சாபம் அளிப்பதும் கர்ம வினைகளை உடனடியாகக் களைவதற்கான பிராயச் சித்தங்களைப் பெறும் வழிவகை தாமே அன்றி, கோபத்தால் சாபம் தருவதன்று!

ஆனால் கலியுகத்தில் மகான்களை, சற்குருமார்களை, சான்றோர்களை, பெரியோர்களை நிந்திக்கின்ற கேவலமான, அவலமான செய்கைகள் அதிகம் நிகழ்ந்து, தனிப்பட்டோர்க்கும், சமுதாயத்திற்குப் பெரும் கேடுகளை விளைவித்து விடுகின்றன. ஸ்ரீவள்ளலார், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீகசவனம்பட்டிச் சித்தர் போன்ற சித்புருஷர்களையும், பெரும் பெரும் மகான்களையும் கலியுகச் சமுதாயத்தில் பலரும் நிந்தித்து, துன்புறுத்தி, தீராத தீவினைகளையே தமக்கும், தம் சந்ததியினருக்கும் தேடிக் கொண்டனர். பெரியோர்களை, சற்குருமார்களை நிந்திப்பதால் வருகின்ற சாபமும், வாஸ்து விதி மீறல் தோஷங்களில் ஒன்றாக வந்து சேர்ந்து விடுகின்றது. சற்குருவின் அருள்மயத்தில் அனைத்து வாழ்க்கை அம்சங்களுக்கும் பாடங்கள் பதிந்துள்ளனவே! இறைநிழலாய் நம்மைத் தொடர்ந்து வந்து நம்மைக் காப்பவர் தாமே சற்குரு!

ஒவ்வொரு நிலத்திலும், வீட்டிலும் ஆகாயப் பரவெளியில் ரிஷிவந்திய மாடம் என்ற பரவெளி மாடம் ஒன்று உண்டு. இதில்தாம் தர்ப்பணம், மாதப் பிறப்பு, கிரகணம், திதி நாட்களில் பித்ருக்கள் யோகப் பூர்வமாக வந்து தங்கிச் செல்வார்கள். இதற்கான ஓர் ஆன்மீக வழியாகவே அக்காலத்தில் துவைத்த துணிகளை உலர்த்துவதற்காக, அனுஷ்டான நியதிப்படி, நல்ல உயரமான இடத்தில், ஒரு மரக் கம்பைக் கொடி போல் கட்டித் தொங்க விட்டு, அதில் துவைத்தத் துணிகளை உலர்த்துவார்கள். மேலும் குறித்த திசை மூலைகளில், ஆங்காங்கே பல வண்ணங்களில் கண்ணாடிக் கூடு (விளக்கு) மாடங்கள் தொங்க விடப்பட்டு இருக்கும். பண்டைய ஆலயங்களில் (கும்பகோணம் – ஸ்ரீகும்பேஸ்வரர், சென்னை – திருநின்றவூர் ஸ்ரீஹ்ருதயாலீஸ்வரர்) இன்றும் இவற்றைக் காணலாம்.

ரிஷிவந்தியம்

இவையாவும் பூவுலகிற்கு வருகின்ற தேவதா மூர்த்திகள், சித்தர்கள், மகான்கள், பித்ருக்களின் அம்சங்கள் உறைவதற்கான ரிஷிவந்திய மாட உத்தம இறைச் சின்னங்களாகும். தேவாதி தேவ மூர்த்திகள், தேவதைகள் சூக்குமமாக வந்து தங்கும் தெய்வீக வளை(ல)யங்கள் நிறைந்த இடமே, திருஅண்ணாமலை அருகில் உள்ள ரிஷிவந்தியம் சிவத் தலப் பரவெளி மூலையாகும். இதனுடைய பூலோக அமைப்பும் இதனைப் பூலோக மூலையாக அமைந்திருப்பதைச் சித்தர்களின் ஆதிகிரந்தங்கள் இதனைப் பிரபஞ்சத்தின் பரவெளி மாடமாய்ச் சித்தர்கள் உரைத்துப் போற்றுகின்றனர். மூன்று கோடி மகரிஷிகள் ஒன்றாய்ப் பூஜித்த திருத்தலமே ரிஷிவந்தியம் சிவத்தலமாகும். ரிஷி பஞ்சமிப் பூஜைக்கும், மாதாந்திரப் பஞ்சமிப் பூஜைக்கும் ஏற்ற தலம்!

அந்தந்த வீட்டின் வாசல், கொல்லைப் புறம், ஜன்னல்களின் காற்று மற்றும் சூரிய ஒளி வரும் முறை போன்றவற்றைப் பொறுத்து, அதனதற்கான ரிஷிவந்திய மூலை அமையும். இதற்காகவே, அக்காலத்து வீடுகளில் சந்தனம், தேக்கு, பலா, மருது, வேங்கை மரப் பலகைகளில் யானை, புலி, செம்மறி ஆட்டின் தலை போன்ற வடிவங்கள் மூலைகளில் அமைக்கப்பட்டு இருக்கும். இவற்றினுள் சஞ்சீவித்வம் நிறைந்த திரவியங்களான புனுகு, அத்தர், வெட்டிவேர், பூலாங் கிழங்கு போன்றவற்றை இட்டு நிரப்பி வைத்திருப்பார்கள். இவையாவும் புண்ய சக்திகளைப் பன்மடங்காய்ப் பெருக்கும் ரிஷிவந்திய மாடங்கள் ஆகும்.

அனைத்து இல்லங்களிலும் விளக்கு ஏற்றுவதற்கான பிறைகள் சுவற்றில் இருக்க வேண்டும். இதைத் தவிர முதல் மாடியில் பறவைகள் தங்கவும், பட்சிகள் நீரருந்தவும் வழிவகை செய்தல் வேண்டும். ஆங்காங்கே, வீட்டின் ரிஷிவந்திய மூலைகளில், மரத்தாலான ஜோடி யானைகள், குறித்தத் திசைகளை நோக்கி, வைக்கப்படுவதும் உண்டு. இவ்வாறு எளிமையான முறையில் நாம் கடைபிடிக்க வேண்டிய வாஸ்து நியதிகள் நிறைய உள்ளன.

இயன்ற வரை கட்டில், பீரோ, நாற்காலி, ஜன்னல் போன்றவை இரும்பு போன்ற உலோகத்தால் இருக்கலாகாது. இவை மரத்தால் அமைவதே சிறப்புடையது. மர சக்திகள் வாஸ்து சாஸ்திர சக்திகளைப் பெருக்கி, வாஸ்து சாஸ்திர மீறல் தோஷங்களுக்கும் இயற்கையாகவே பரிகாரங்களைப் பெற்றுத் தரும். தற்காலத்தில் உலோகத்தையும், மரத்தையும் ஒதுக்கித் தள்ளி விட்டு, பிளாஸ்டிக் வகையறாக்கள் உலகை ஆக்கிரமித்து உள்ளன. மின்சார ஒளி போல, பிளாஸ்டிக்கைத் தவிர்க்க இயலாது என்ற வகையில், கலியுகத் தினசரி வாழ்க்கை முறை வெகு வேகமாக மாறி வருகின்றது. காலத்திற்கேற்ற கோலமானாலும், அனைத்திலும் தெய்வீகத்தை நிரவும் வழிமுறைகளைக் கடைபிடித்தல் மிகவும் விசேஷமானது.

பிளாஸ்டிக் இருப்புகளைப் (furniture) பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால், சூரியன், சந்திரன், மான்கள் போன்ற ஆன்மீகச் சின்னங்கள் அமையும் படியும், நான்கு கால்களுக்கும் இயற்கையான rubber boot அல்லது மரக் கால், துணிப் பந்துக்கால் வைத்தும், அவரவருக்கு ராசியான நிறத்திலும், எண்ணிக்கையிலும் அமையுமாறு கடைபிடித்தல் நன்று.

ரிஷபாயன கோமுகம் ரிஷிவந்தியம்

ஸ்ரீமகாவிஷ்ணு ரிஷிவந்தியம்

பிளாஸ்டிக் இருப்புகளின் மேல் கதர், பருத்தித் துணிகளை நிரவி வைப்பதும் நன்மை பயக்கும். இதனால் நற்சக்திகள் கிரகிக்கப்படுகின்றன. இவற்றிற்குச் சந்தனம், குங்குமம் பொட்டு இடப்பட்டிருக்க வேண்டும். ஏழைகளுக்கு வருடத்திற்கு ஒரு முறையாவது புதிதாக அல்லது நல்ல நிலையில் உள்ள இருக்கைகளைத் தானமாக அளித்தலால் மரத்தைப் பயன்படுத்தாமையால் ஏற்படும் சிலவகைத் தோஷங்கள் தீரும். கலியுகத்தில் இவ்வாறாக வாஸ்து சாஸ்திர மீறல்கள் நிறைய நடக்கும் என்பதால்  தான், சங்கு வகைப் பூஜைகளும், சங்கு வகைப் பிரயோகங்களும் வாஸ்து வகைத் தோஷங்களை நீங்குவதற்கெனச் சித்புருஷர்களால் அளிக்கப்பட்டுள்ளன.

வாஸ்து விநாயகர் சங்கு, திருஷ்டி நிவாரணச் சங்கு, அச்சுதன் பிறை வடிவச் சங்கு, கருவலரிச் சங்கு, பூனை பிச்சு வடிவச் சங்கு, பசு மடிக்காம்புச் சங்கு போன்ற 960 வகையான வாஸ்து வகைச் சங்குகள், கலியுகப் பூஜைகளுக்காக அளிக்கப்பட்டுள்ளன.

வீடு கட்ட ஆரம்பிக்கும் நிலையில் இருந்தே, வாஸ்து சங்கு பூஜைகளைத் துவங்கி, அவரவர் ஜாதகத்திற்கேற்ப வாஸ்து நிலைப்படி வீட்டு அமைப்புகள் ஏற்படுவதே சிறப்பானது. ஆனால், ஏற்கனவே அமைந்து வந்து விட்ட பழைய கட்டிடங்களில், வீடுகளில் நிலவும் வாஸ்து வகைத் தோஷங்களை முழுமையாக நீக்குவது கடினமே!

குறித்த வாஸ்து சக்திகள் நிறைந்த பொருட்களை, தக்க வகையில் வாஸ்துப் படன முறையில் பூஜிப்பதால், பயன்படுத்துவதால் வாஸ்து வகைத் தோஷங்களின் விளைவுகளை ஓரளவு தணிக்க முடியும் என்பது உண்மையே. ஆனால் உடைக்காமல், இடிக்காமல் தோஷங்களை அகற்றி விடுவது கண்டிப்பாக இயலாது.

சற்குருமார்களின் திருவடிகள் பட்ட நிலத்தில், வீட்டில், இடத்தில் எத்தகைய தோஷங்களையும், இறையருளால் தீர்த்து விடலாம். நாம சங்கீர்த்தனம், பஜனை, தான தர்மங்கள், சத்சங்கமாகக் கூட்டு விளக்கு பூஜை, சத்சங்க ஹோம பூஜை, இறை பொருள் பற்றிய ஆன்மீகச் சொற்பொழிவு, வாத்தியங்களை ஒலித்தல், தினமும் ஆறு வேளை பூஜைகள் போன்றவற்றால், மிதமிஞ்சி, விஞ்சி நிற்கும் வாஸ்து வகைத் தோஷங்களைக் கணிசமான முறையில் ஓரளவு நிவர்த்தி செய்து விடலாம். இவற்றைக் கடைபிடிக்க இயலாதோர் என் செய்வது?

சங்கு வகைப் பூஜைகளும், பலவகையான வாஸ்து வகை தோஷ விளைவுகளைத் தணிக்க வல்லவையே! ஸ்ரீபிரம்ம மூர்த்தியே அனைத்து உயிரினங்களையும் சிருஷ்டிப்பதால், தெய்வீகச் சக்திகள் நிறைந்த சங்குப் பூச்சிகளின் மேனி வடிவம் (சங்கு வடிவு), பிரம்ம சிருஷ்டியில் சங்கல்பிக்கப் பெற்றுத் தோன்றியது தானே!

ஓங்காரம் ரீங்காரம் பொழிந்து நிலவுவதே சங்கு ஆகும். சங்குப் பூச்சிகள் என்று நாம் உரைத்தாலும், தேவ புலங்கள் என்றே சங்குப் பூச்சிகளைச் சித்தர்கள் அழைக்கின்றனர். தேவ புலங்கள் நீரிலும், நிலத்திலும், பகலிலும், இரவிலும், வெயிலிலும், மழையிலும் வானில் அனைத்து நட்சத்திரங்களையும் காணும் அபூர்வ வல்லமையை இறையருளால் பெற்றவையாகும்.

பகலில் நட்சத்திரத்தைக் காண வல்லோரைப் பகலவ சஞ்சீவிகள் என யோக உலகில் போற்றுவார்கள். மேலும் பல புராண வைபவங்களிலும், கடல்களிலும் நதிகளிலும் ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீவராஹ மூர்த்தி, பாற்கடல் ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீமச்ச மூர்த்தி (ஸ்ரீமத்ஸ்ய மூர்த்தி) போன்ற தெய்வ அவதாரங்களின் திருவடி நல்வர சக்திகளைப் பெற்றவையே, தேவ புலன்களாக, சங்குகளாக உற்பவிகின்றன. ஸ்ரீவாஸ்து விநாயகர் சங்கு என்பது சிருஷ்டியின் போது சிருஷ்டிக்கானப் பீஜாட்சரங்களை, பிரம்ம மூர்த்தி ஆதி மூல விநாயக மூர்த்தியிடம் பெற்றார். பிள்ளையாரே தம்முடைய துதிக்கையில், ஒரு தாமரைப் புஷ்பத்தை எடுத்து வாஸ்து அட்சரத்தை ஸ்ரீபிரம்மருக்கு எழுதிக் காட்டினார். அப்போது ஸ்ரீவிநாயகருக்கு அமைந்த துதிக்கை அமைப்பே வாஸ்து விநாயகச் சங்காக மலர்ந்தது.

எனவே வாஸ்து விநாயகர் சங்கு, தக்க சற்குருவின் திருக்கரங்களால் பூஜிக்கப் பெற்று, ஸ்பரிசம் படப் பெற்று, தான தர்மங்கள் நிகழும் தெய்வீகக் கலாசாலையில் இருந்து வந்து வீட்டில் சேர்க்கையில் இவ்வகை வாஸ்து விநாயகச் சங்கிலிருந்து எப்போதும் வியாப்யச் சுடர்க் கதிர்கள் ஜோதிப் பூர்வமாய் எப்போதும் வீட்டில், பரவெளியில் பரிமளித்துக் கொண்டிருக்கின்றன.

ஸ்ரீவாஸ்து விநாயகச் சங்கில் இருந்து எப்போதும் வியாப்ய ஜோதிக் கிரணங்கள் தோன்றிக் கொண்டு அவ்விடத்தை வியாபிக்கும். இதனைத் தினந்தோறும் சுத்திகரித்து துளசி, வில்வம், வன்னி, புஷ்பங்களால் அர்ச்சித்தும் விபூதி, சந்தனம், மஞ்சள், குங்குமம், செந்தூரம் ஆகிய பஞ்சபூத சிந்தூரப் பொட்டுக்களை இட்டு வழிபடுவதால், இச்சங்கில் தோன்றும் கதி சுத்தக் கதிர்கள் வீட்டில் இருக்கின்ற பலவிதமான தோஷங்களைக் கரைத்து விடுகின்றன. ஸ்ரீவாஸ்து விநாயகச் சங்கையே, சதுர்த்தி, சதுர்த்தசித் திதிகளிலும், புதன் கிழமையும் ஸ்ரீவாஸ்து விநாயக மூர்த்தி அம்சங்களுடன் தோன்றும் பாவனையில் போற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானது.

செவ்வாய், சனிக் கிழமை தோறும் வாஸ்து விநாயகச் சங்கில், மஞ்சள் தீர்த்தம் வைத்து, ஆலயத் தல விருட்சங்களுக்கு வார்த்தலானது, பூமியடி நீரோட்டங்களில் உள்ள தோஷங்களை நீக்குவதாகும். தமிழ் வருடத்தில் வரும் எட்டு வாஸ்து நாட்களிலும், ஸ்ரீவாஸ்து விநாயகச் சங்கிற்கு இல்லத்திலேயே மரச் சாமன்கள், பூக்கள், நல்ல காதிதங்களால் சிறு ரதம் செய்து வீடு, நிலம், தொழிற்சாலை முழுதும் வாஸ்து ரத யாத்திரையாகக் குடும்பத்தினர் இழுத்து வந்து தேரோட்டம் போல் வழிபடுவது நிலத்தின் பால், நீரோட்டத்தின் பால், கட்டிடத்தின் பால் உள்ள வாஸ்து தோஷங்கள் தீரப் பெரிதும் துணை புரிகின்றது. அவ்வப்போது ஆலயங்களில் சங்காபிஷேகத்திற்கு ஸ்ரீவாஸ்து விநாயகச் சங்கை அளித்து இதனுள் தேவ, புண்ய சக்தியை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.

விஷ்ணுபதி

விஷ்ணுபதி புண்ய காலம் சிந்துப்பட்டி ஸ்ரீவெங்கடாஜலபதிப் பெருமாள் ஆலயம்!

மதுரை – உசிலம்பட்டி அருகிலுள்ள சிந்துப்பட்டி ஸ்ரீவெங்கடாஜலபதிப் பெருமாள் ஆலயத் தலப் பெருமை மிகவும் தொன்மையானது சொல்லவும் பெரிதாம்! சிந்து பூரயோகத் தலங்களுள் ஒன்று. ஜாதி, சமய வேறுபாடின்றி, நெற்றிக்கு யாவரும் திருச்சூர்ணம் இட்டு, கண்களை மூடிக் கொண்டு, உள்மனயோகப் பூர்வமாக, நெற்றிப் பட்டையில் (நெற்றிப் பொட்டில்) உள்ள ஆக்ஞா சக்கரமாகிய நெற்றிச் சிந்தூரத்தைத் தியானித்தல் சிந்துபூர யோகம் ஆகும். இத்தகைய அபூர்வமான யோக சக்திகள் பூரிக்கும் தலமே சிந்துப்பட்டி!

பட்டி என்றால் (நிலைத்துத்) தங்குதல் என்ற பொருளும் உண்டு. கிராமப் புறங்களில் வாத்துகள், ஆடுகள், மாடுகளை, இரவுகளில் வயலில் தங்கு வைத்து, சாணத்தை இயற்கை எருவாகப் பெறும் முறைக்குப் “பட்டி வைத்தல்” என்று பெயர். இவ்வாறு, இறை சக்திகள் உரம் பெறும் வகையில், சிந்துபூர சக்தி நிலைபெறும் (யோகபூமி) ஆன்மீக வயலே சிந்துப்பட்டி கிராமத் தலமாகும். நெற்றி நாமத்தில் யோக நிலையில் உளப்பூர்வமாக தங்கி இருத்தலே சிந்துப்பட்டி பூத்தல ஆகம யோகமாகும்.

சந்தன ஜோதி, கம்ப ஜோதி, தைல ஜோதி, தீப ஜோதி இவ்வாறாக 1008 விதமான விஷ்ணு பூரண ஜோதிகள் பல தலங்களில் பல யுகங்களில் உற்பவித்தன. இவற்றுள், ஸ்ரீவெங்கடேச (நாராயண) ஜோதிகள் பரிணமிக்கும் தலங்களில்தாம் ஸ்ரீனிவாசப் பெருமாள், ஸ்ரீவெங்கடாஜலபதிப் பெருமாள், ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் மூர்த்தங்கள், ஜீவன்களின் வழிபாட்டிற்காக, அர்ச்ச மூலமாய்த் (வடிவு கொள்தல்) தோன்றின.

கருங்குளம் பெருமாள் ஆலயம்

ஜீவன்களுக்குப் புலப்படத் தோன்றும் 1008 வகை ஸ்ரீவிஷ்ணு ஜோதிகளில், திருப்பதியில் எழுந்த சந்தன ஜோதி பூரித்த தலமே திருநெல்வேலி அருகே உள்ள கருங்குளம் மலையில் உள்ள பெருமாள் ஆலயமாகும். இங்கு திருமால் சந்தனத்தாலான பிம்பமாய் உறைகின்றார். கம்ப ஜோதியானது, ஸ்தம்பன மூலமாய் அர்ச்சம் (வடிவு) கொண்ட இடமே சிந்துப்பட்டி ஆகும். இவ்வரிய புராண வைபவம் நிகழ்ந்த காலமே விஷ்ணுபதிப் புண்ய காலமாகும். அதியற்புதமான கம்ப ஜோதிகளின் நல்வரப் பாங்குகளே தீபக் கம்பமாகவும், கொடிமரக் கம்பமாகவும், ஒவ்வொரு யுகத்திலும் ஜீவன்களுக்கென இறையருளைப் பொழியும் பாத்திரமாக இங்கு சிந்துப்பட்டியில் அருளத்தோன்றுகின்றன.

வானில் கருடாழ்வார் எடுத்து வந்த அமிர்தமானது இங்கு இயற்கையாகவே பொழிந்து இறையருளால் அமிர்தாபிஷேகம் கொண்டமையால், சித்தர்களும், மகரிஷிகளும், தேவாதி தேவியரும் இக்கொடிக் கம்பத்திற்கு அபிஷேக, ஆராதனைகளை ஆற்றி, சிந்துப்பட்டி ஸ்ரீவெங்கடாஜலபதிப் பெருமாள் ஆலயக் கம்பாபிஷேக வழிபாட்டு முறையாக நமக்குத் தந்துள்ளனர். இங்கு ஆலயத்தின் மேல் தளத்தில் இருந்து, விண்மூலப் பூர்வமாக, கொடி மர உச்சி அருகில் இருந்து, கொடிக் கம்பத்திற்கு அபிஷேகம், கம்பாபிஷேகமாக ஆற்றப்படுகின்றது. இப்பெருமாள் ஆலயத்தில் நடக்கும் கம்பாபிஷேகத்தன்று (கொடிக் கம்பத்திற்கான அபிஷேகம்) மிகவும் விசேஷமாக, விபூதிப் பிரசாதமும் அளிக்கப்படுவதும் உண்டு.

“கும்பத்துள் கம்பச் சுடராழிக் கூடல்
கம்பத்துள் திருமால் அருட்திறம் ஆடல்
எம்புயிரும் ஏற்றும் மறையாய் இறையைக் காணல்!
எம்பார் எம் வெங்கடேசா எம்பூரம் ஏற்றருள்வாய்!”

-என்பதே இத்தலத்தைப் பற்றி, சித்தர்களுடைய அபிமானத் தலப் பரிபாஷைப் பாடல் மந்திரமாகும். இங்கு நடக்கும் கம்பாபிஷேகம் ஸ்ரீவெங்கடாஜலபதிப் பெருமாளின் திருவருளால் உடல், மனம் மற்றும் உள்ளமல்லாது, சமுதாயத்தையும், பூவுலகையும், பிரபஞ்சத்தையுமே சுத்திகரிக்க வல்ல பூஜையாம்! பாவ வினைகள் மற்றும் வல்வினைகளால் மாசு படிந்துள்ள கலியுகத்தைச் சுத்திகரிக்கும் தெய்வீகக் கம்பமே சிந்துப்பட்டி ஸ்ரீவெங்கடாஜலபதிப் பெருமாள் ஆலயக் கொடிக் கம்பமாகும்.

சிந்துப்பட்டி பெருமாள் ஆலயத்தில் கருடாழ்வார் நிறைவேற்றும் கொடிக் கம்ப அமிர்த அபிஷேகத்தை அடியார்கள் தரிசிக்கும் அளவிற்கு தெய்வீக கண் பார்வையைப் பெறாமல் இருந்தாலும் தவசிமடையில் ஸ்ரீஆஞ்சநேயர் அனுகிரகமாக அளிக்கும் சஞ்சீவ அமிர்த துளிகளை தரிசிக்கலாம் என்பதே இங்குள்ள வீடியோ படம் அளிக்கும் சான்றாகும். சிந்துப்பட்டி பெருமாள் ஆலயம், தவசிமடை என்ற இரண்டு திருத்தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தலால் கருடாழ்வார், ஆஞ்சிநேயப் பெருமான் இருவர் அளிக்கும் சஞ்சீவ, சிரஞ்சீவித்துவ சக்திகளை அடியார்கள் பெறலாம் என்பதே இறைவனின் மாபெருங் கருணை கடாட்சமாகும்.

ஆலய வழிபாட்டில், கொடிக் கம்பம் நம் தூய(ல) உடலைக் குறிக்கின்றது. இறையருளால், ஜீவன்கள் கொண்ட இந்த சரீரத்தை, சுயநலமற்ற வகையில், பிற ஜீவன்களின் நலன்களைப் பேணி வாழ்ந்து, இறைவனுக்கே அர்ப்பணிப்பதற்காகவே கொடி மரத்தடியில் நாம் வீழ்ந்து வணங்குகின்றோம். என்றென்றும் கருடாழ்வாரும் திருமாலின் இறைத் திருவடியிலேயே சேவித்து நிற்பதால், இத்தலத்தில் கொடி மரத்தருகே நின்று வழிபடுவது பெறுதற்கரிய ஆகாசராஜ வழிபாடு மார்கமாகவும் விளங்குகின்றது.

கொடிக் கம்பத்தின் தெய்வீகத் தன்மைகளைப் போற்றும் ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதியானது அனைத்து ஆலயக் கொடிமர வழிபாட்டிற்கும் ஏற்புடையதாகும். எனவே விஷ்ணுபதிப் புண்ய காலத் தலங்களுள் ஒன்றாகப் பொலியும் சிந்துப்பட்டியில், மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்துவதுடன், கொடிக் கம்ப மரத்திற்கும் குறித்த அபிஷேகங்களை நடத்திப் பூஜிப்பது,

1.பரம்பொருளின் திருவடி ஜோதி காட்டும் அற்புதமான, சக்தி வாய்ந்த ஆலய வழிபாடாகவும்

2. குடும்ப நலம், தேக நல் ஆரோக்யம், தொழில் வளம், சந்ததி விருத்திக்கான நேர்த்திப் பிரார்த்தனையாகவும்

3. கடுமையான நோய்த் துன்பங்கள், கொடிய கர்ம வினைகளைத் தீர்க்கும் பரிகார, பிராயச்சித்த வழிமுறைகளைத் தரும் புனித வழிபாடாகவும் அமைகின்றது.

பித்ரு லோகங்களில், விஷ்ணுபதிப் புண்ய காலத்தில், பித்ருக்கள் ஒன்று கூடி அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற ஒன்பது வகைத் தானியங்களால் மாவுக் கம்பம் செய்து, இதில் சூரியக் கொடியை நாட்டி, ஸ்ரீமன்நாராயண மூர்த்தியை எழுந்தருளச் செய்து வழிபடுகின்றனர். எனவே, விஷ்ணுபதிப் புண்ய காலத்தில், இங்கு சிந்துப்பட்டியில் மற்றும் திருவள்ளூர் போன்ற பெருமாள் தலங்களில், விசேஷமான வகையில் கம்ப ஸ்தூபித் தர்ப்பணத்தை நிகழ்த்துதல் விசேஷமானதாகும். ஒன்பது வகைத் தானியங்களால் ஒரு பெரிய உருண்டை செய்து, நடுவில் ஒரு அரசங் குச்சியைப் பதிய வைத்து, இதன் சாட்சியாகக் தர்பைகளை வட்டமாகப் பரப்பி, இதன் மேல் மந்தார இலை அல்லது வாழை இலை வைத்து, தர்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் அளித்தலே கம்ப ஸ்தூபித் தர்ப்பணமாகும்.

பொதுவாக, இங்கு சிந்துப்பட்டியில் பாயசம், நீர்மோர், பானகம், பழரசம் போன்ற நீர் வகை உணவுகளை, பானங்களைத் தானமாக அளித்தல் விசேஷமானது. வைகாசித் திருவோண நட்சத்திரத்தில் திருவிழா கொள்ளும் இத்திருக்கோயிலில், வயதான முதியோர்களுக்குப் பிடித்த வகையிலும் அவர்கள் உண்ணும் வகையில் மெதுவடை, போண்டா போன்ற எளிமையான விரைவில் செரிக்கக் கூடிய நல்ல சுவையான உணவுப் பண்டங்களை அளித்து, அவர்களுடன் மனமாரப் பேசி இயன்ற சேவைகளைச் செய்திடுதல் விசேஷமானது, பசுவிற்கு நெற்றியில் நாமமிட்டு, பசு, கன்றுகளுக்கு வயிறு நிறைய உணவளித்து இவற்றுடன் சேர்ந்து ஆலயத்தை ஐந்து முறை வலம் வருதலால் அதிகமான குடும்ப பொறுப்புச் சுமையால் அவதியுறுவோர் மன ஆறுதலும், குடும்ப நலமும் பெற வழி பிறக்கும்.

இத்தகைய தெய்வீக மகாத்மியங்களை உடைய சிந்துப்பட்டி பெருமாள் தலத்தில், விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் விடியற்காலை 2 மணி முதல் பகல் 10.30 மணி வரை, அபிஷேக, ஆராதனைகள், ஹோமம், தர்ப்பணம், தான தர்ம வழிபாடுகளுடன் கொண்டாடுவது மிகவும் விசேஷமானது.

மே 2004 பௌர்ணமி நாள்: 4.5.2004 செவ்வாய்க் கிழமை விடியற்காலை 5.12 மணி முதல் நள்ளிரவு 2.3 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படிப் பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள்: 4.5.2004 செவ்வாய்க் கிழமை இரவு

17.5.2004 திங்கட்கிழமை காலை 6.18 மணி முதல் 18.5.2004 செவ்வாய்க் கிழமை காலை 8.11 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வைகாசி மாத சிவராத்திரி திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள்: 17.5.2004 திங்கட் கிழமை இரவு.

அமுத தாரைகள்

பாலாலயம் நடந்து பல்லாண்டுகள் கும்பாபிஷேகம் முறையாக நடந்திடாத தலங்கள் பல உண்டு. இவ்வாறு கும்பாபிஷேகம் தடைப்பட்டுள்ள ஆலயங்களில், விரைவில் நன்கு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி இங்கு சிந்துப்பட்டி ஸ்ரீவெங்கடாஜலபதிப் பெருமாள் ஆலயத்திற்குச் சமுதாயப் பிரார்த்தனையாகக் கம்பாபிஷேகம் செய்வது நல்ல பலன்களைத் தரும்.

குடும்பத்திற்கு, தொழிற்சாலைக்கு, கம்பெனிக்கு மூலத் தூணாக இருப்பவர் இறந்து விட்டாலோ அல்லது செயல் இழந்தாலோ அல்லது நஷ்டம் அல்லது உடல் பாதிப்பு அடைந்தாலோ, குடும்பமோ, கம்பெனியோ பெரிதும் பாதிப்பிற்கு ஆளாவது உண்டு. இந்நிலையில், சம்பந்தப்பட்டவர்கள், இங்கு சிந்துப்பட்டி ஸ்ரீவெங்கடாஜலபதிப் பெருமாள் ஆலயத்தில் கம்பாபிஷேக வழிபாடுகளை, துவஜாம்பர சக்திகள் மிகுந்த நாட்களான உத்திரம், சுவாதி, மூலம், உத்திராடம், சதயம் மற்றும் மேல் நோக்கு நட்சத்திர நாட்கள், துவிதியை, தசமி போன்ற நாட்களில் வழிபடுதலால் குடும்பமும், கம்பெனியும், தொழிலும் நிமிர்ந்து நின்று நன்னிலை பெற உதவும்.

சிந்துப்பட்டி பெருமாள் ஆலயத்தில் விஷ்ணுபதிப் புண்ய காலத்திலும், சனிக்கிழமை, புதன் கிழமை, திருவோணம், ஏகாதசி, அமாவாசை நாட்களிலும் அபிஷேக, ஆராதனைகளுடனும், கம்பாபிஷேகத்துடனும் பூஜிப்பதால், பண வசதி இல்லாமை, உடல் ஆரோக்கியம் இல்லாமை, தக்க தொழில், பணி அமையாமை, திறமையின்மை எனப் பல காரணங்களால் வருத்தமுற்றுள்ள கணவன், மனைவி மனத் திருப்பி அடையும்படி நன்னிலைகள் வாழ்க்கையில் அமைந்து, நற்காரியங்களை நிறைவேற்ற அறவழிகள் கிட்டும்.

அமிர்தம் சிந்தி அபிஷேகமான சிந்துப்பட்டி! கருடாழ்வார், விண்ணுலகில் இருந்து தாங்கி வந்த அமிர்தமானது, சிந்துப்பட்டி கிராம வளாகத்தில் இயற்கையாகவே நிரவி, சிந்து பிந்தாமிர்த அமிர்த நீரோட்டம் பொங்கிய யுக வரலாற்றையும் கொண்டுள்ளது.

சிந்து வகை ஆரோஹண, அவரோஹண இசை சக்திகள் பரிமளிக்கும் தலம் இது. இங்கு பிரசித்தி பெற்ற கம்பாபிஷேகத்துடன், ஏழை மற்றும் நடுத்தரப் பொருளாதார நிலையில் உள்ள பண்பட்ட இசைக் கலைஞர்களைக் கொண்டு இறைப் பாடல்களை பாடச் செய்வது, இசைக்கச் செய்வது குடும்ப, வியாபார, தொழில் கஷ்டங்களைத் தீர்த்திடப் பெருமளவில் உதவும்.

காலத்தை ஒட்டியே மனித வாழ்க்கை அமைந்துள்ளது அல்லவா! எனவே மனிதனுக்கு அவ்வவ்போது, கால நிலையை அறிவிக்கின்ற கைக் கடிகாரத்தைக் கழற்றி வைக்கையில், காசிக் கயிற்றின் மீது வைத்து வரவும். ஸ்ரீகாலபைரவரின் அருளுடன் காசிக் கயிறு தக்க ஆன்ம சாதனமாகப் பொலிவதால், காலத்தை வீணாக்காது நன்முறையில் பயன்படுத்திட இது உதவும். மேலும், கைக்கடிகாரத்தில் மணி முள், நிமிட முள், விநாடி முள் மூன்றும் உள்ளவாறு அமைவதே சிறப்பானதாம். கைக் கடிகாரத்திலும், சுவர் கடிகாரத்திலும் 1, 2, 3 முதல் 12 வரை எண்கள் உள்ளதாகவும் அவரவர் பிறந்த எண் நிறத்திற்கேற்ப அமைவதும் நல்ல காலசக்திகளைத் தரும். துர்கனவுத் துன்பங்களும் , மரணபீதியும் அகல, தேய்பிறை அஷ்டமித் திதியில் ஏழைகளுக்குக் கடிகார தானம் அளித்து வர வேண்டும்.

சதாவதானிகள் எனப்படுவோர் ஒரே சமயத்தில் பல காரியங்களை சிறந்த ஞாபக சக்தியுடன், அபாரமான நினைவாற்றலுடன் திறம்படச் செய்ய வல்லவர்கள். இவர்கள், தங்கள் பயிற்சிகளை, பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் தொடங்குவார்கள். கர்நாடக இசைக் கலைஞர்களும், பிரம்ம முகூர்த்த நேரத்தில் சாதகம் செய்து வந்தால்தான், தங்கள் குரல் வளத்தின் மெருகு காப்பாற்றப்பட்டு நன்கு விருத்தியடையும். இத்தகைய ஞானவள சக்திகளைக் கொண்டதே பிரம்ம முகூர்த்த நேரமாகும். பிள்ளைகளை பிரம்ம முகூர்த்த நேரத்தில், அதாவது விடியற்காலை நான்கு மணிக்கு எழச் செய்து, கை கால்களை சுத்திகரித்து, சுவாமி விளக்கை ஏற்றி, 12 முறை தோப்புக் கரணம் இட்டு வணங்கச் செய்து, பாடங்களைப் படிக்கப் பழக்கி வந்தால், திறம்பட மனன சக்தியும், பாடங்களை விரைவில் அறியும் சக்தியும் கிட்டுவதைக் கண்ணெதிரில் நன்கு காணலாம். கலியுகத்தில் பெரும்பாலானோர் காலையில் ஏழு மணிக்கு மேல் எழும் முறையற்ற வழக்கத்திற்கு ஆளாகி விட்டால், பிரம்ம முகூர்த்த நேரத்தில் தோன்றும் அருள்வள சக்திகளைக் கலியுகம் இழந்து வருகின்றது.

பிரம்ம திருமண மாங்கல்ய தாரண உற்சவம் நிகழ்ந்த நேரமாக, அதிகாலை நேரமான பிரம்ம முகூர்த்த நேரமும் சிறப்பிடம் பெற்றுள்ளது. எத்தகைய திதி, வார, யோக, கரண, நட்சத்திரக் கால தோஷங்களைக் கடந்ததாகவும் பிரம்ம முகூர்த்த நேரம் பிரகாசிக்கின்றது. குறைந்தது ஒரு மண்டலத்திற்குத் (48 நாட்கள்) தினந்தோறும், பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடிப் பூஜிப்பவர்களுக்கு புத்திப் பிரகாசம், அறிவுக் கூர்மை, ஞானபூஷண சக்தி உண்டாவதை மிகவும் கண்கூடாகக் கண்டிடலாம். இதனால் அபாரமான ஞாபக சக்திப் பெருகும்.

ஒவ்வொரு மாதமும் வரும் மக நட்சத்திர நாளிலும், பௌர்ணமித் திதிலும் கும்பகோணம் மஹாமகத் திருக்குளத்தை, திருஅண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் போல் 16 முறை தீர்த்த வலம் வந்து அளப்பரிய பலாபலன்களைப் பெறுவீர்களாக! பிரபஞ்சத்தில் உள்ள பல கோடி தீர்த்தங்களை வலம் வந்த பலாபலன்களைப் பெற இந்த மஹாமகத் தெப்பக் குளத் தீர்த்த வலம் துணை புரியும்.

தொடரும் ஆனந்தம் ...

சற்குரு அருளும்
பூஜ்யஹரம்

பூஜ்ய ஹரம் என்னும் புனிதமான முகூர்த்த நேரம் காலை 10.30 மணி என்ற நம் சற்குருவின் ஜனன வைபவத்துடன் இணையும் அற்புதம் பற்றிய விளக்கங்களை ஏற்கனவே அளித்துள்ளோம். குருவின் திருப்பாதங்களுக்கு இணையான ஒரு புண்ணிய சக்தி எந்த உலகத்திலும் அமைந்தது இல்லை, இனி அமையப் போவதும் இல்லை என்பதைப் பறைசாற்றும் வகையில் அமைவதே நம் சற்குருவின் ஜனன நேரமான காலை 10.30 என்பதாகும். இதைக் குறிக்கும் வகையிலான ஒரு அடிமை கண்ட ஆனந்த வைபவத்தை இங்கு அளிக்கிறோம்.

நம் சற்குருவின் அடியார்களில் ஒருவருக்கு குரு பிரசாதமாக ஒரு கடியாரத்தை நம் சற்குரு அளித்திருந்தார். குருவைக் குறிக்கும் வண்ணமாக அமைந்த ரோஸ் வண்ணத்தில் அமைந்ததே அந்த கடியாரமாகும். பல வருடங்கள் பயன்பாட்டில் இருந்த வந்த அந்த கடியாரம் ஒரு நாள் பாட்டரி பழுதடைந்து விட்டதால் அதை மாற்றுவதற்காக அந்த கடியாரத்தைப் பார்த்தபோது அந்த அடியார் அடைந்த பிரமிப்பிற்கு எல்லையே கிடையாது. காரணம், அந்த கடியாரம் நின்று போன நேரமே நம் சற்குரு அவதரித்த நேரமான காலை 10.30 மணி என்பதாகும் !

இதுவே நம் சற்குரு தம் அடியார்களைத் தொடர்ந்து வந்து அனுகிரகம் அளிக்கும் சீரிய பாங்கினை உணர்த்துகிறது.

நம் பூவுலகைக் காக்க வந்தவர்களே சற்குருமார்கள் என்றாலும் நம் சற்குருவின் கர்மபரிபாலன சக்திகள் நம்மை பிரமிக்க வைப்பதாகும். ஒரு சிவத்தலத்தில் உழவாரத் திருப்பணிகள் நிறைவேற்றி விட்டு தம் அடியார் ஒருவர் வீட்டிற்கு வருகை தந்தார் நம் சற்குரு. நம் சற்குரு அமர்வதற்காக ஒரு பழைய ஊஞ்சலை சுத்தம் செய்து அதில் மலர்களை இட்டு நம் சற்குரு அமர்வதற்காக ஏற்பாடு செய்திருந்தார் அந்த அடியார். ஆனால், அந்த இல்லத்திற்கு வருகை தந்த சற்குருவோ அந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமராது சட்டென அந்த ஊஞ்சல் அருகில் தரையில் அமர்ந்து விட்டார். நம் சற்குருவின் இந்த எதிர்பாராத செய்கையால் அனைவரும் திடுக்கிட்டு விட்டனர். காரணம் கேட்டபோது, “மலர்களின் மேல் அமரும் தகுதி அடியேனுக்கு இல்லை, சார் ... இறைவன் ஒருவனே மலர் அலங்காரத்திற்கு உரியவன்,” என்று தெரிவித்தார். அதன் பின்னர் அந்த மலர்கள் அகற்றப்பட்டு நம் சற்குரு ஊஞ்சல் சேவையை ஏற்றுக் கொண்டார் என்பதை நம் அடியார்கள் சிலர் அறிந்திருக்கலாம் என்றாலும் நம் சற்குரு தரையில் அமர்ந்தது தான் ‘தரணி பாலன்’ என்பதை பறை சாற்றும் நிகழ்ச்சியாகவே அமைந்தது என்பதே இதன் பின்னணியிலும் இங்குள்ள கடியாரத்தின் பின்னணியாகவும் அமைந்த சுவையாகும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam