குருவருள் வியக்க வைக்கும் பிரம்மாண்டம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஆன்மீக அணிகலன்கள்

உடல், உள்ளம், மனதுக்குப் பாதுகாப்பு தருகின்ற ஆன்மீக அணிகலன்கள்!

தீய சக்திகள், தீய எண்ணங்கள், தீவினைகளைத் தடுக்கும் அரணாக விளங்குகின்ற ஆன்மீக அணிகலன்கள்!

ருத்ராட்சம், ஸ்படிகம், காசிக் கயிறு, வைரம், நவரத்தினங்கள், பொன், வெள்ளி ஆபரணங்கள் போன்றவை ஆன்மீக சக்திகளைப் பேணுபவை. சுப மங்கள, சுபசகுன சக்திகளை ஈர்த்து நிலை பெறச் செய்து அபரஞ்சித சக்தி, ஸ்வர்ணாங்க்ருத சக்திகளை அளிப்பவை என்பதால் தான் இவற்றை அணிகலன்களாக அணியும் ஆன்மீக வழிமுறைகளை நம் பெரியோர்கள் ஆக்கித் தந்துள்ளனர். ஆனால் மனித சமுதாயமோ இவற்றின் ஆத்ம சக்திகளை உணராது, பேராசையால், இவற்றை வெறும் கௌரம், அந்தஸ்து, செல்வத் தன்மை கொண்டதாக ஆக்கி விட்டார்கள்!

கொள்ளை, ஏமாற்றுதல், வன்முறை, திருட்டு மலிந்து வரும் தற்காலத்தில், பாதுகாப்பு மற்றும் சங்கோஜம், அறியாமை காரணமாக மெட்டிகள், மாங்கல்யம், தோடுகள், மூக்குத்தி, வளையல்கள், கடுக்கன்களை அணிவது மிகவும் குறைந்து விட்டது. எவருக்கும் பயனில்லாது அணிகலன்கள் பெட்டிகளிலும், வங்கி லாக்கர்களிலும் த(தூ)ங்கி விடுகின்றன. மேலும் வறுமை, நடுத்தர வருமானம் காரணமாகப் பலராலும் நவரத்தினங்கள், தங்கம், வெள்ளியின் ஆன்ம சக்திகளையும் பெற இயலாமல் போகின்றது. இதற்காகவே எளியோரும் ஆன்மீக சக்திகளைப் பெறுதல் வேண்டும். எளிதில் அடைய இயலாத மேற்கண்ட "அபரஞ்ஜித சக்தி, ஸ்வர்ணாங்க்ருத சக்தி" மற்றும் வேத, ஹோம, பூஜை, தல, தீர்த்த, யோக சக்திகளை ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் பெறும் வண்ணமே காசிக் கயிறு, ருத்ராட்சம், ஸ்படிகம், தாமரை, துளசி மணிகள், ம்ருதுள மணி கங்கண் எனப்படும் மணிக்கட்டு மாலை, மெட்டிகள், பூணூல், ஸ்திர கங்கண், ரட்சா பந்தன், அரைஞாண் கயிறு போன்றவை மிகவும் எளிமையான ஆன்ம அணிகலன்களாக அணியப் பெறுகின்றன! மேலும் இறைவனும் இறைவியுமே ஸ்ரீஸ்வர்ணவல்லி, ஸ்ரீஸ்வர்ணேஸ்வரர் போன்ற திருநாமங்களைத் தாங்கி அருளும் தலங்களில் எளியோரும் முறையாக விரதமிருந்து வழிபட்டிட யாவரும் அவரவர்களுக்குத் தேவையான ஸ்வர்ண சக்திகளைப் பெறுகின்றனர்.

ஸ்ரீபெருமாள் ஆலயம் ஸ்ரீபுரந்தான்

ம்ருதுள மணி கங்கண்

தெய்வ சக்தி வாந்தவைகளுள் ஒன்றாக சித்தர்களால் பெரிதும் போற்றப்படுகின்ற, ம்ருதுள மணிகங்கண், ஸ்திர கங்கண் எனப்படும் கை மணிக்கட்டு மாலைகள், உடலில் உள்ள 72000 நாடிகளையும் ஆன்ம ரீதியாகப் பரிபாலிக்கின்றன!  இவை ஆன்மீகக் கருவி போல அனைத்து வகை நாடிகளையும் அறிந்து, உணர்ந்து கண்காணிக்க வல்லவை!  நாடிகளை அறியும் எட்டு வகை முறைகள் "அஷ்ட லட்சண கிரந்திகள்" எனச் சித்தர்களால் போற்றப்படுகின்றன.  இவை உடலில் துலங்கும் இடங்கள் எட்டு ஆகும். ஆனால் இவற்றில் நெஞ்சு, கை மணிக்கட்டு இரண்டுமே மருத்துவ ரீதியாக நாடி அளவைக்குப் பயனாகின்றன. ஏனைய ஆறும் ஆன்மீக ரீதியாக குருகுலப் பூர்வமாக உரைக்க, உணரப் பெறத் தக்கவை!

இவற்றில் ஒரு வகையான "கர்ண நாடி" என்பது உறங்கு நிலையிலும் கூட காது மூலமாக உணர்ந்து அறியக் கூடியதாம். இதற்காகவே, ஆண்களுக்கு வலது காதும், பெண்களுக்கு இடது காதும் சோமேந்த்ர நாடி க்ரந்திகளாக, உறக்க நிலையிலும் நாடிகளை அறிவதாக ஆன்மீக நாடி குணப்பாட்டில் அமைத்து இருக்கின்றார்கள்.

உறக்க நிலை நியதி

இதனால் தான் பெண்கள் உறங்கும் போது வலது காதைக் கீழே வைத்தும், வலது பக்கம் ஒருக்களித்தும் படுத்து உறங்குதல் வேண்டும். ஆண்கள் இடது காதைக் கீழே வைத்தும், இடது பக்கம் ஒருக்களித்தும் படுத்து உறங்குதல் வேண்டும் என்றவாறாக உறக்க நிலைக்கான யோக நியதிகளும் உண்டு.

வலது, இடது சார மணிக்கட்டுகளில் கட்டப்படுகின்ற ம்ருதுள மணிகங்கண் எனப்படும் மணிக்கட்டு மணி மாலை, காசிக் கயிறு, வெள்ளி, தங்கம் மற்றும் சில உலோகங்கள் கூடிய த்ரயஞ்சன, பஞ்சலோக வளையங்கள், உடல் நாடிகளை உறக்க நிலையிலும் சீர்படுத்தி மனதைச் சாந்தப் படுத்துகின்றன. இளம் வயதில் இருந்தே இவற்றை அணிந்து வந்திட்டால் நல்ல ஒழுக்கம், பண்பாடு, பக்தி உள்ளவர்களாகப் பெண்களும், ஆண்களும் பிரகாசிப்பார்கள்.

அண்ட சராசர வேத சக்திகளை ஈர்க்கும் சாதனங்கள்!

கடுக்கன்களைக் காதுகளில் அணிவதால் உடலில் ஓங்கார சக்திகள் ஒளிரும் காதுப் பகுதியில் உள்ள மெல்லிய நாளங்களின் மூலம் ஞானாகர்ஷணக் கிரணங்கள் பரவெளியில் இருந்து கிரகிக்கப்பட்டு உடலில் சேர்கின்றன. எனவே கடுக்கன் அணிதலானது சப்த வடிவில் உள்ள வேத சக்திகளைக் கிரகிக்கப் பெரிதும் துணை புரியும். ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் பூணூலை, கடுக்கன் போல் ஓர் ஆன்மீக அணிகலனாக அணிந்திடலாம். பஞ்ச பூத சக்திகள் நிறைந்த பருத்தியாலான பூணூலில் பொதிந்திருக்கும் பூஜ்ய சக்தி வடிவால் (ஆரம்பமும் முடிவும் இல்லாததே பூஜ்ய சக்தி) உடலோடு உராய்ந்து, பல கோடி வேத மண்டலங்களில் இருந்து திரளும் வேத சக்திகளை, பஞ்ச பூத‌ இறைசாதனமாக பூணூல் மூலம் திரட்டி முதுகு வடம், மார்பு, வயிற்றுப் பகுதிகளுக்கு அச்சக்திகளை நிரவுகின்றது.

ஆடை, அணிகலன்களாவது அவ்வப்போது கழற்றப்படும். ஆனால் பூணூல் ஒன்றே எப்போதும் இறப்பிற்குப் பின்னும் கழட்டப்படாமல் இருக்கும் பஞ்சபூத சக்தி நிறைந்த இறைச் சாதனமாக விளங்குகின்றது!  தற்போதும் ஆப்பிரிக்கக் காட்டுவாசிகள் மும்பாஸம் என்ற ஒரு காட்டுக் கொடியை இட வலமாக எப்போதும் உடலில் அணிந்திருப்பதானது தொன்று தொட்டுப் பூணூல் அணியும் வழக்கம் நிலவி வருகின்றதையே குறிக்கின்றது. எனவே இவ்வாறான ஆன்மீக சாதனங்களை எப்போதும் அணிந்திருந்து ஆன்ம சக்திகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள்!

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்)

கங்கை பிறக்கும் கோமுகி -கங்கோத்ரியில் இருந்து, நெடுந்தூரம் கங்கை வரும் வழியிலேயே சிறுவனைக் கூட்டிக் கொண்டு வந்தார் பெரியவர். அக்காலத்தில் மிகவும் கடினமான பாதையது! நடுங்க வைக்கும் பனியின் ஊடே, அடர்ந்த மர, செடி, கொடிகள்! ஆங்காங்கே மகரிஷிகள் போலப் பொலிந்த பலர், புராண கால மரபுப்படி ஜடாமுடி, கமண்டலத்துடன் தேஜோமயமாய்ப் பிரகாசித்து, கற்சிலை போல் ஆடாது, அசங்காது பத்மாசனத்தில் அமர்ந்து நெடிய யோகம்தனைப் பூண்டிருந்தனர். அவர்கள் அருகில் சென்று அவர்களை வேடிக்கை பார்க்க வேண்டுமெனச் சிறுவனுக்குக் கொள்ளை ஆசை எழுந்தது! ஆனால் அத்தகைய மகரிஷிகள், யோகிகள் அமர்ந்திருக்கும் இடம் வந்தாலே, பெரியவர் மிகவும் உஷாராகி, வேண்டுமென்றே வெகுதூரம் தள்ளிச் செல்வார்.

அம்மா உன் புன்னகையில்
உலகம் எல்லாம் மயங்குதே !

பாராமுகம் ஏனையா?

"....அவங்க என்ன வேடிக்கைப் பொருளா சும்மா பார்க்கறதுக்கு? நீயும் இவர் தான் அந்த மகரிஷின்னு தெரிஞ்சுக்கிட்டு Zooவுல மிருகத்தைப் பார்க்கற மாதிரி வெறுமனே வேடிக்கை பார்த்தா என்னடா பிரயோஜனம்? அவங்கவங்க வருஷக் கணக்கா சாப்பிடாம, தூங்காம யாருக்காக இவ்வளவு தபஸ் பண்றாங்க, தெரியுமா? அவ்வளவும் பூலோக ஜீவன்களோட நல்லதுக்குத் தானே!  இதையா போய் வேடிக்கை பார்க்கறது? இவங்க எல்லாம் யார் யாருன்னு தெரிஞ்சுக் கிட்டு  நீ என்னடா பண்ணப் போறே? சொல்லு பார்க்கலாம்! இவங்க எல்லாம் ராமாயண காலத்து மகரிஷிகள் தான், அதுல கொஞ்சம் கூடச் சந்தேகமே வேண்டாம்!.....அவங்க யாருன்னு தனித்தனியாத் தெரிய வந்தா....இவரா அவர்னு ரொம்ப ரொம்ப ஆச்சரியமாயிருக்கும்...!

ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஸ்ரீபுரந்தான்

தெரிஞ்சு அதிசயப்படறதை விட, தெரிஞ்சும் தெரியாமல் இருக்கறது மாதிரி வேற என்னதான் அடிமை கண்ட ஆனந்தமா இருக்க முடியும்? அப்படித் தெரிஞ்சாலும், அவங்களுக்கு உன்னால உதவத் தான் முடியுமா? அவங்களை உபத்ரவம் செய்யாமல் இருக்கணுமே, அதுவே பெரிய விஷயம்! அவங்க யாருன்னு தெரிஞ்சா நம்ப ஜனங்கள், சும்மாவா இருப்பாங்க, அது வேணும், இது வேணும்னு அவங்களைப் பிச்சுப் புடுங்கிடுவாங்களே!"

சிறுவனை கடிந்து கொண்டே வந்த பெரியவர் ஓரிடம் வந்தது....டக்கென்று நின்றார்!  அங்கு தான்....அதுவரை பாய்ந்து ஓடி வந்த கங்கை....ஏதோ ஒரு அதல பாதாளத்துக்குள் நுழைவது போல் இருந்தது! அதன் பிறகு அது செல்லும் சுவடையே காணோம்! கங்கைக்கு என்னவாயிற்று? சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை!

"இது தாண்டா பாதாள கங்கை! இங்கே பூமிக்குள்ளாற மறைஞ்சுட்டு இன்னொரு இடத்துல வெளியில மீண்டும் பூமிக்கு மேலே வரும்! நடுவுல பூலோகத்துக்கு அப்பால பல பாதாள லோகங்களுக்கும் போகிற கங்கை இது!"

மறைந்தாள் கங்கை மறையாள்!

செடி, கொடிகளைத் தள்ளிக் கொண்டு மிகவும் தட்டுத் தடுமாறி அந்த இடத்திற்குச் சென்ற பெரியவர், தன் இடுப்பில் சுற்றியிருந்த சுருக்குப் பையைப் பிரித்திட....அதில் சில புஷ்பங்கள் இருந்தன. அதைக் கையில் எடுத்துக் கொண்டு சற்று தூரம் பல செடி, கொடிகளை விலக்கிச் சென்று வந்த பெரியவர்...திரும்பி வரும் போது மேலும் பல பூக்களைக் கொண்டு வந்தார். அவற்றைப் பார்த்ததும் சிறுவனுக்குப் பழைய நினைவுகள்....மலரும் நினைவுகள் ஆயின!

“ஆம்!  செம்பருத்தி இதழ்கள் என்றால் பெரியவருக்கு விருப்பம் ஆயிற்றே! இதழ்களைப் பிய்த்து....பிய்த்து....குறைந்த பட்சம் ஒரு கால் மணி நேரமாவது வாய் புல்லாக வைத்துக் கொண்டு....குழைத்து....குழைய, குழைத்துத் தின்பாரே!"

எல்லாப் பூக்களையும் அருகில் இருந்த பாறை மேல் வைத்து...அதனைச் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார் பெரியவர்!  பிறகு அனைத்துப் பூக்களையும் கங்கை பூமியினுள் புகும் பிலத்திற்குள் இட்டு மீண்டும் வணங்கினார்!

"அப்பாடா, நாம வந்த ஜோலி முடிஞ்சதுடா பையா!  இனிமே நேரா மெட்ராஸ் ராயபுரம் அங்காளி ஆத்தா கோயிலுக்கு நடையைக் கட்ட வேண்டியது தான்!"

பெரியவரின் இந்த உரைக்குச் சிறுவன் பதிலொன்றும் பேசவில்லை! இவர் பாட்டுக்கு எதையாச்சும் சொல்லி விடுவார், கங்கோத்ரியிலிருந்து மெட்ராஸ் ராயபுரத்திற்கு நடை என்றால் அவ்வளவு எளிதானதா என்ன?

ஆங்காங்கே ....பாதைகள் மாறி....எங்கெங்கோ சுற்றிச் சுற்றி...ஏதோ ஒரு இடத்திற்கு வந்தார் பெரியவர்.

"ஏன் வாத்யாரே!  பாதை மறந்து போச்சா? சுத்துப் பாதையில் வந்துட்டியா? யாரையாவது கேட்க வேண்டியது தானே?"

"ஏதாவது கேட்கலாம்னா நமக்கு ஹிந்தி பாஷை தெரியாதேடா?!" பெரியவர் விஷமச் சிரிப்புடன் உதட்டைப் பிதுக்கினார்!

"இவரால் எப்படி இப்படி அழகாக நடிக்க முடிகிறது?" சிறுவன் ஆச்சரியப்பட்டான்!

"வயசாயிடிச்சுடா...இருபத்தோராயிரம் வருஷத்துக்கு அப்புறம் இந்தப் பக்கம் வர்றேனே! வந்த பாதை எப்படி ஞாபகம் இருக்கும்?" என்று கேட்டவாறு, பெரியவர் கண்களைச் சிமிட்டிடவே...!

சிறுவன் வாயை மூடிக் கொண்டு மௌனியானான்! காலத்தைக் கடக்கும் ஒரு சித்தரிடமா நாம் வெறும் வார்த்தைகளைக் கடத்துவது?

ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை கொட்டையூர்

வந்தாள் கங்கை தேவி!

"இங்க தாண்டா பாதாள கங்கை மீண்டும் பூமிக்கு வெளியில வருது!"

பெரியவர் சுட்டிக் காட்டிய இடத்தில் குபு குபுவென்று கங்கை பொங்கிப் பாய்ந்தது!

"எங்கெங்கேயோ எல்லாம் இந்த பிலத்துக்குள்ளாற கங்கா மாதா போய்ட்டு வராங்கற தெய்வீக ரகசியம் எங்களுக்கு மட்டும் தாண்டா தெரியும்! இது மத்தவங்களுக்குத் தெரியணும்னு அவசியமில்லை!  தெரிஞ்சு என்னதான் பண்ணப் போறாங்க? வெறும் research பண்ணி என்னடா பிரயோஜனம்?"

எங்கேயோ, பிலத்துக்குள் பாய்ந்து மறைந்த கங்கை, நடுவில் எங்கு பாய்கின்றது என்ற சுவடே தெரியாமல் மீண்டும் வெளி வருகின்றது என்றால்.....என்னதான் சொல்வது?

திடீரென்று அந்த இடத்தின் அருகே விரைந்தார் பெரியவர்!  சிறுவனையும் வேகமாக வரச் சொல்லிட....பெரியவர் அங்கு மிகவும் அழகாகப் பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு...

ஓம் ஸ்ரீகங்கா கணபதயே நம:
ஓம் ஸ்ரீகங்காநாதாய நம:
ஓம் ஸ்ரீவிரிசடை விமலாய நம:
ஓம் ஸ்ரீகங்கா தேவ்யை நம:
ஓம் ஸ்ரீநைஷ்டிக பிரம்மச்சர்ய பீஷ்ம தேவாய நம:

என பல போற்றிகளைச் சொல்லி ம்ருகி முத்திரையுடன் சாஷ்டாங்கமாக வீழ்ந்து கும்பிட்டு எழுந்த பெரியவர்,

ஓம் ஸ்ரீகங்கா பிரசாத ரூபாய நம:

என்று சொல்லியவாறே கங்கைப் பிரவாகம் அருகில் கைகளை வைத்திட,

.....ஆங்கே பல புஷ்பங்கள் மிதந்து வந்தன! அவையனைத்தும் அன்று பூத்தவை போல் பளிச்சென்று இருந்தன! ஆம் அவை அனைத்தும் பிலத்துக்குள் பெரியவர் இட்டாரே அதே புஷ்பங்கள்தாம்!

ஸ்ரீரெங்கநாதப் பெருமாள்
ஸ்ரீபுரந்தான்

சிறுவன் இந்த தெய்வீக அற்புதத்தைக் கண்டு கல்லாய்ச் சமைந்து நின்றான்!

"அதே கங்கை அங்கே மறைஞ்சு இங்கே மீண்டும் வருதுங்கறதுக்கு தெய்வீகமான புரூப் இது தாண்டா!  நடுவுல என்ன இறை லீலைகள் நடக்கறதுங்கற தேவ ரகசியங்கள்....அதெல்லாம் சித்தர்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியங்கள்!  அதெல்லாம் உனக்குத் தெரிய வந்தா நீ நிச்சயமா ஒரு பெரிய சித்தன் தான்!  இது தெரிஞ்ச நாள்லேந்து நீயும் ஒரு பெரிய சித்தரா ஆயிடுவே!  ஒருத்தர் சித்தர்தானாங்கறதுக்கு இது தான் புரூப் டெஸ்ட்!" பெரியவர் ஏதேதோ சொல்லிச் சிரித்து மகிழ்ந்தார்.

"என்ன சொல்ல வருகிறார் இவர்?"- சிறுவன் ஒன்றும் புரியாமல் விழித்தான்!

.....ஒரு வழியாய்ச் சுற்றிச் சுற்றி....ஏதேதோ பஸ்ஸில் ஏறி....இருவரும் ஹரித்வார் வந்து சேர்ந்தனர்....கங்கை சமவெளி பூமிக்குப் பாயும் இடமிது! ....

"ஏன் வாத்யாரே, பாதாள கங்கை திடீர்னு மறைஞ்சு.........இந்த இடங்களுக்கு எல்லாம் போய் வருதா? என்று ஏதேதோ நிறைய லோகங்களை குறிப்பிட்டுக் கேட்டான் சிறுவன்.

இப்போது....பெரியவர் வியப்பால் விழிகளை விரித்தார்!

"அதெப்படிடா அந்தப் பாதாள கங்கை பூமிக்குள்ளாற பாயற இடங்களை எல்லாம் இவ்வளவு கரெக்டாச் சொல்றியே!  இதை எல்லாம் நான் ஒண்ணும் உனக்கு சொல்லித் தரலையேடா! எப்படிடா கண்ணு இதெல்லாம் உனக்குத் தெரியும்?" என்று மகிழ்வுடன் சொல்லியவாறே பெரியவர் ஆனந்தத்துடன் சிறுவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

"ஏன் அதிகப் பிரசங்கித் தனமாய்க் கேட்கிறாய்?" என்று பெரியவரிடம் இருந்து வசைகளும், "பிரம்புப் பழமும்" கிடைக்கும் என்று எண்ணிய சிறுவனுக்கு ....மகத்தான ஷாக்காக "கருணாகர அரவணைப்பு" பரிசாகக் கிட்டியது! இதைத் தவிர அவனுக்கு வேறொன்றும் புரிபடவில்லை! உங்களுக்கு?

இப்படித்தானையா சித்தர்களுடைய குருகுலவாசத்தில் அரும்பெரும் அற்புதங்கள் தானாய் முளைக்கும்! கிளைக்கும்! தழைக்கும்!

நவராத்திரி மகிமை

நடப்புக் கலியுகத்தின், சித்ரபானு ஆண்டின் சாரதா நவராத்திரி நாட்களில் அம்பிகை பூலோகத்தில் சோபனஸ்ரீயாக சிறுமியாகவும், சோபன கோமளியாய்க் கன்னிப் பெண்ணாகவும், ஈஸ்வரனின் இறைவியாக, சோபன வல்லியாகவும் வந்து பூஜிக்கின்றாள். நவராத்திரி மாலைக் காலத்தில் எங்கு ஆத்மார்த்தமாக நவராத்திரி விளக்கு ஏற்றப்பட்டு, எம்மொழியில் எவரும் ஆத்மார்த்தமாக இறைவனைப் பூஜித்தாலும் சரி அது ஏழையின் குடிசையோ, நடுத்தர வர்கத்தின் ஒண்டுக் குடித்தனமோ, பல மாடி பங்களாவோ எவ்விடமாயினும் சரி, பக்திக்குக் கட்டுப்பட்டு, மானுட வடிவிலே அம்பிகையே நவராத்திரி கொண்டாடப்படும் இல்லங்களுக்கு வந்து அருள்பாலிக்கின்றாள்.

எனவே அவரவர் வசதிக்கு ஏற்ப நவராத்திரியின் ஒன்பது தினங்களிலும் சிறிய அளவிலாவது குறைந்தது ஐந்து பொம்மைகளையேனும் கொண்டு கொலு வைத்து, ஏழைக் குடுபங்களுக்கும் பொம்மைகளை வாங்கிக் கொடுத்து அவர்களையும் கொலு வைக்கச் செய்து, எளிய அம்பிகை பூஜைகளையும், தினசரி ஆலய தரிசனமும் செய்வதோடு, ஏழைச் சுமங்கலிகட்கு இயன்ற அளவில் மங்களப் பொருட்களையும் தானமாகவும் தினமும் அளித்து வர வேண்டும்.

குங்குமம், வளையல், மஞ்சள், மூக்குத்தி, தோடு, மெட்டி, கண் மை, மருதாணி எனக் குறைந்தது ஒன்பது மங்களப் பொருட்களை நவராத்திரிப் பண்டிகையில் தினந்தோறும் தானமாக அளித்து வாருங்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப எளிமையாக வெற்றிலை, பாக்கு, மஞ்சளை மங்களகரமாக வைத்து அளிப்பதும் சிறப்புடையதே! மாளய அமாவாசையை அடுத்து சாரதா நவராத்திரி பிறக்கின்ற பண்டிகைக் காலத்தில்தாம் துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி தேவி மும்மூர்த்திகள் நவவித்யா கலாம்ருதத் தவம் புரிய பூவுலகிற்கு வருகின்றனர்.

ஆவூர் சிவாலயம்

பிரதமை :‍- அம்பிகை ஐந்து வயதுப் பெண்ணாய் பூஜிக்கும் நாளிது!  பத்து முழமேனும் மல்லிகைப் பூக்களைத் தானே தொடுத்து, அமர்ந்த கோலத்தில் உள்ள அம்பிகைக்கு (காஞ்சீபுரம், சமயபுரம், திருவாரூர், திலதைப்பதி) இன்று சார்த்தி வழிபட வேண்டும். அம்பிகையின் வாகனத்திற்குத் தேங்காய் எண்ணெய்க் காப்பு இட்டு, தல விருட்சத்திற்கு மஞ்சள், செந்தூரம், குங்குமம் இட்டு 18 முறை வலம் வந்திடுக! நீண்ட தலைமுடியை உடைய சிறுமிகளுக்குத் தேவையானவற்றைத் தானமாக அளித்தலால் சிறு குழந்தைகள் அடிக்கடி நோய்ப்படுவதற்குக் காரணமான சத்ரு தோஷங்கள் நிவர்த்தியாக உதவும்.

நெடுநாள் தடங்கலுடன் இருக்கும் நற்காரியம் நிறைவேறிட, பெருமாள் தலங்கள் உட்பட, இன்று இரண்டு அம்பிகையர் உள்ள தலங்களில் (ஆவூர், இன்னம்பூர், திருப்பைஞ்ஞீலி) நவராத்திரி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். கருக மணியோடு மாங்கல்யம் அணியும் வழக்கம் உள்ளவர்களுக்குத் தாம்பூலம், அளித்து அவர்கள் கரங்களால் சுண்டல் விநியோகம் செய்திட, தம்பதிகளிடையே உள்ள மனஸ்தாபம் தீரும். இன்று காலையில் பிரதமை பூஜை, மாலையில் துவிதியை பூஜை.

ஸ்ரீஅம்பாள் நந்தி
திருநரையூர்சித்தீச்சரம்

துவிதியை :- அம்பிகை பழுத்த சுமங்கலி வடிவில் பூஜிக்கும் திருநாள்! தாழம்பூச் சரடை, அம்பிகைக்கும், அஷ்ட புஜ (எட்டுக் கரங்கள்) துர்க்கைக்குச் சார்த்தி (உதாரணம் கும்பகோணம் அருகே கொட்டையூர் சிவாலயம்) வழிபட வேண்டும். அம்பிகையின் வாகனத்திற்கு நல்லெண்ணெயில் ஜவ்வாது சேர்த்துக் காப்பு இடுக! அம்பிகை சந்நிதியின் கோமுகத்தைச் சுத்திகரித்துக் கோலமிட்டு, துர்க்கைத் தூபம் ஏற்றி வர, கணவனுடைய கோப குணம் தணிய வழி பிறக்கும். இன்று துர்வாசர் மகரிஷி (திருஅண்ணாமலை) உள்ள ஆலயத்தில் நவராத்திரி பூஜை தரிசனங்களை மேற்கொண்டு, மெட்டி இல்லாதோர்க்கும், காலில் ஒரு விரலில் மட்டும் மெட்டி அணிந்திருப்போர்க்கும் மூன்று, ஐந்து விரல்களில் மெட்டி அணியும் படி மெட்டிகளைத் தானமாக அளித்து வர நல்ல வீடு அமைய நல்வழிகள் பிறக்கும்.

திரிதியை :- எட்டு வயது கன்யாச் சிறுமியாய் அம்பிகை பூஜிக்கும் நாள்! இறைவனுக்கு வலப்புறமாக சந்நிதி கொண்டு, கல்யாணக் கோலத்தில் உள்ள ஆலயத்தில் (திரைலோக்கி) மாக்கோலமிட்டு, அம்பிகைக்கு ரோஜாப் பூ மாலை சார்த்தி, அம்பிகையின் வாகனத்திற்கு பசு நெய்க் காப்பிட்டு வணங்கிடுக! கொடி மரத்தைச் சுற்றி வட்டமாகக் கோலம் இட்டு வழிபட்டு, கொடி மரத்திற்கு மஞ்சள் பட்டுப் புடவை சார்த்தி வழிபட்டுப் புடவையை ஏழைகளுக்குத் தானமாக அளித்திடுக! இல்லத்தில் உள்ள பட்டுப் புடவைகள் அனைத்தையும் தானமாக அளித்து "கோட்டும தோஷங்களில்" இருந்து விடுபட வேண்டிய நாள்!  இதனால் குடும்பத்தைப் பிரிந்து அலுவலகம், வியாபாரம் காரணமாக எங்கோ வாழும் கணவன் குடும்பத்துடன் ஒன்று சேர உதவும் அரிய பூஜை இது!

மூலவரை நோக்கிய வண்ணம் மூலத்தானத்திற்கு முன் அம்பிகை அருளும் தலங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானது. இன்று தலை வாழை இலையில் முந்திரிப் பருப்பு, சிறு திராட்சை நிறைய உள்ள சர்க்கரைப் பொங்கல் வைத்துத் தானம் அளிக்கவும். காராம் பசுவிற்கு ஐந்து வகைக் கீரைகளை அளித்திடக் காரிய சித்தியாகும்.

சதுர்த்தி :- ருதுக் கன்னியாய் அம்பிகை வழிபடும் காலம்!  ஸ்ரீஅம்பிகை, துர்க்கை, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதி நான்கு மூர்த்திகளுக்கும் கனிகளால் மாலை சார்த்தி வழிபாடு! அம்பிகைக்கு குங்குமப் பூக்காப்பு, அம்பிகையின் வாகனத்திற்கு சிவப்பு வஸ்திரம் சார்த்துதல் விசேஷமானது. சிவந்த ஆப்பிள், மாங்கனி, மாதுளை முத்து போன்ற ஒன்பது கனி வகைகளால் ஸ்ரீதுர்க்கைக்கு அலங்கார வழிபாடுகள் சிறப்பானவை!

பணத் தட்டுப்பாடு, வீடு கிடைக்காமை, ஆபீஸ், குடும்பப் பிரச்னைகள் எனப் பல திசைகளிலும் ஏற்படும் துன்பங்கள் தணிந்திட இன்று உறுதியான வைராக்யத்துடன் நெடு நேரம் பூஜிக்க வேண்டும். அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டு நாள் முழுதும் பூஜித்தல் சிறப்பானது!  அம்பிகையின் வாகனத்திற்கு அருகம்புல் மாலை இடுக!

வேதாரண்யம் சிவாலயம்

பஞ்சமி :- மணப் பெண்ணாய் அம்பிகை வழிபடும் நாள்!  ஸ்ரீஅகஸ்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி தந்த ஆலயங்களில் (திருவேற்காடு, திருநல்லூர், காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர், வேதாரண்யம்) வழிபடுதல் மிகவும் விசேஷமானது. தங்களுடைய பெண்களுக்குத் திருமணம் ஆகவில்லையே என்று வருந்தும் பெற்றோர்கள் இன்று இத்தகைய திருமணத் திருத்தலங்களில் அம்பிகைக்கு நிறைய வளையல் காப்பு இட்டு ஏழைகளுக்கும் நிறைய வளையல்களைத் தானம் செய்தல் வேண்டும். அம்பிகையின் வாகனத்தை இன்று சம்பங்கி மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்.

சஷ்டி :‍- இன்று அம்பிகை மூதாட்டி வடிவில் தோன்றி அடிப் பிரதட்சிணம் செய்து வலம் வரும் நாள்! விருத்தாசலம் சிவாலயத்தில் அனைத்து விதமான தானங்களையும் நிகழ்த்துதலால் சித்தர்களின், மகான்களின் ஆசி கிட்டும். இன்று மிகவும் பழமையான ஆலயங்களில் பூஜித்தல் சிறப்புடையது. இங்கு தாம் சக்தி தர நீரோட்ட சக்திகள் பிரகார பூமி மேல் வந்து பரிணமிக்கும்!  நவீன மயமாக இல்லாத அக்காலத்துக் கருங்கல் கட்டடத்துடன் உள்ள ஆலயங்களில் அம்பிகையைப் பூஜித்தலால் வேண்டும் நல்பிரார்த்தனைகள் பலிக்கும்.

ரிஷபாயன கோமுகம் ரிஷிவந்தியம்

ஸ்ரீமகாவிஷ்ணு ரிஷிவந்தியம்

சப்தமி :- நந்தியை வாகனமாகக் கொண்ட அம்பிகைத் தலங்களில் நந்திக்கு வெண்ணெய்க் காப்பிட்டுப் பூஜிக்க வேண்டும். வயதான பெற்றோர்கள், மாமியார், மாமனாரால் ஏற்படும் துன்பங்கள் தீர உதவும். மாவு சம்பந்தப்பட்ட உணவு வகை தானம், சப்த கன்னியர் உள்ள ஆலயங்களில் வழிபாடு மிகவும் விசேஷமானது. ஏழு வகை நறுமணப் பூக்களைத் தாமே தொடுத்து அம்பிகைக்கு சிரசு முதல் பாதம் வரை சார்த்திட வேண்டும். சப்த கன்னியர்க்கு முழுப் பூமாலைகளைச் சார்த்தி வழிபட்டு வர, விட்டுப் போன உறவுகள், நட்பு நன்முறையில் தொடர உதவும் பூஜை!

அஷ்டமி :- இன்று அம்பிகை, பல்லாயிரம் மகரிஷிகளுடன் இறைவனைப் பூஜிக்கும் நாள். வியாசர், துர்வாசர், அகஸ்தியர், பரத்வாஜர் போன்ற சித்தர்கள், மகரிஷிகள் உள்ள ஆலயங்களிலும், ரிஷிவந்தியம், திருக்கோடிக்கா தலங்களிலும் வழிபடுதலால் கணவனுடைய, பிள்ளைகளுடைய தீய வழக்கங்கள் மறைவதற்கான பரிகார வழிகள் கிட்டும். அம்பிகைக்குத் தாழம்பூ மாலை சார்த்தி வழிபட்டு வர, துக்ககரமான சம்பவங்களால் வாடும் குடும்பங்களுக்குச் சாந்தம் கிட்டும்.

நவமி :- துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மூவரும் ஒன்றாய் வழிபடும் நாள்! மூவரும் உள்ள ஆலய வழிபாடு விசேஷமானது. (உதாரணம் திருத்தவத்துறை லால்குடி சிவத்தலம்). இன்று 9 ஆலயங்களில் துர்க்கையை வணங்கி பூஜித்திட உறவினர்களால் வரும் கௌரவப் பிரச்னைகள் தீரும்.

அஷ்டபூஜித மாளயம்

இன்று பல குடும்பங்களிலும் நிலவுகின்ற பெரும்பாலான பிரச்னைகளுக்கு மூல காரணமே பித்ருக்களுக்கு முறையாகத் தர்ப்பணம் அளிக்காமைதான்!

மாளய பட்சத்தின் பதினைந்து தினங்களிலும் குருவருளுடன் தினசரித் தர்ப்பணம் அளித்தலானது, பல்லாயிர அமாவாசைத் தர்ப்பணப் பலன்களைத் திரட்டித் தருகின்றது. ஆனால் இதன் பிறகேனும் பட்சம் அல்லது மாதந்தோறும் முறையாகத் தர்ப்பணம் அளித்து வர வேண்டும்.

ஒவ்வொருவருடைய மனசாட்சிக்கு மிகவும் நன்றாகத் தெரியும். அவரவர் ஒழுங்காகத் தர்ப்பண பூஜைகளை, சிரார்த்த, திவச, படையல் காரியங்களை முறையாகக் கடைபிடிக்கின்றாரா, இல்லையா என்று!  எனவே இனியேனும் காலம் கடத்தாது, ஏனோ தானோவென்று கடனே என்று செய்யாது, அவநம்பிக்கை கொள்ளாது, தர்ப்பணப் பூஜைகளை பட்சம் தோறுமோ (15 நாட்களுக்கு ஒரு முறையான திதித் தர்ப்பணம்) அல்லது மாதாந்திரத் தர்ப்பணமாகவோ முறையாகக் கடைபிடித்திட வேண்டும். தினசரிப் பூஜை போல தினமும் தர்ப்பணம் அளிக்கின்ற உத்தமர்களும் இன்றும் உண்டு. தினமும் மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் அளித்து வந்தால் தேஜசும், தேக காந்த சக்திகளும், அபரிமிதமான நற்பலன்களும், ஆயுள் சக்தியும், நல்வரங்களும் கிட்டிடும்.

தற்காலத்தில் பல குடும்பங்களிலும் சந்ததியின்மை, ஆண் அல்லது பெண் வாரிசு இல்லாமை, பணக் கஷ்டம், விபத்தால் பாதிப்புகள், எதிர்பாராத நஷ்டங்கள் போன்றவை தொடர்ந்து ஏற்படக் காரணமே தர்ப்பண சக்தி இல்லாமையும், பித்ரு சாபங்கள் பெருகி இருப்பதும் தாம். இதற்கு ஓரளவு பரிகாரம் தருவதே அஷ்ட பூஜித மாளய விரதமாகும்.

"அஷ்ட பூஜித மாளய விரதம்" கடைபிடிப்பதற்குச் சற்றே கடினமான விரதம் போல் தோன்றினாலும் ஜன்மாதி ஜன்மாக, எண்ணற்ற பிறவிகளாக, காலம் காலமாக முறையாகத் தர்ப்பணக் காரியங்களைச் சிரத்தையாகச் செய்யாதோர்க்கு மிகச் சிறந்த பரிகாரமாக அமைகின்றது என்றால் இந்த அஷ்ட (எட்டு) பூஜித மாளய விரத மகிமைதான் என்னே!

நீராடல், உடை, உணவு, தர்ப்பணம், இறை சாதனங்களை ஆக்கப்படுத்திக் கொள்ளுதல், அதிதி போஜனம் (அறியாதோர்க்கு உணவிடுதல்), பூஜைகள், மேதினியாத் தர்ப்பணம் ஆகியவையான எட்டு நியதிகள் நிறைந்ததே இந்த அஷ்டபூஜித மாளய விரதம், மாளய பட்சத்தில் இதனைக் கடைபிடித்தல் சிறப்புடையது என்றாலும் ஆடி, தை அமாவாசைக்கு முன்னும் இதனைக் கடைபிடித்திடலாம் இரண்டு அமாவாசைக்கு இடையிலும் இவ்விரதம் பூண்டிடலாம்.

நீராடல், சூரிய பூஜை நியதிகள்!

மாளய பட்ச அமாவாசைக்கு ஒரு மண்டலத்திற்கு முன்னரேயே (48 நாட்கள்) இந்த மாளய விரதத்தைத் தொடங்கிட வேண்டும். இக்காலக் கணக்கைத் தவற விட்டவர்கள். ஒரு அமாவாசை முதல் மறு அமாவாசை வரையேனும் கடைபிடித்திட வேண்டும். 48 நாட்களும் தூய பிரம்மச்சரியம் பூண வேண்டும். இந்த அஷ்ட பூஜித மாளய விரதத்தில் 48 நாட்களிலும் இரு வேளை நீராடல் உண்டு.

தினமும் ஸ்ரீஆதித்ய ஹிருதயம் அல்லது அவரவர் அறிந்த சூரிய மந்திரங்களை ஓதி, காலையில் சூரிய நமஸ்காரப் பூஜைகளைச் செய்திட வேண்டும். காலையில் சூரிய உதயம், மாலையில் சூரிய அஸ்தமனம் மற்றும் சந்திர தரிசனம், துருவம் மற்றும் அருந்ததி நட்சத்திரங்களின் தரிசனங்களைத் தினமும் மாலையில் சரியான நேரத்தில் பெற்றிட வேண்டும்.

ஆடை நியதிகள்

விரத காலத்தில் இரண்டு செட் உடைகளை மட்டும் வைத்துக் கொண்டு தினமும் துவைத்து அணிதல் வேண்டும். தன் ஆடைகளைத் தானே தோய்த்தலும், தன் உணவைத் தானே சமைத்தலும் அஷ்ட பூஜித மாளய விரதப் பலாபலன்களை நன்கு விருத்தி செய்யும். இல்லறத்தில் இருப்போர் காவியை ஒரு போதும் அணிதல் கூடாது! அணிந்திடில் பலத்த காஷாயபட தோஷங்களுக்கு ஆளாகி சந்ததிகள் பாதிக்கப்படுவர். பருத்தியிலான ஆடைகளையே தரிக்க வேண்டும். பாலியஸ்டர், நைலான், டெரிக்காட்டன் போன்றவை விரத காலத்தில் கூடவே கூடாது. பித்ரு சூக்த மந்திரங்களை அறிந்தோர் தினமும் ஓதி வருதல் வேண்டும். இதனை அறியாதோர் திருஞான சம்பந்தப் பெருமானின் திருநீற்றுப் பதிகம், அப்பர் சுவாமிகள் திருஅங்கமாலையைத் தினமும் ஓதி வருக!

உணவு முறை நியதிகள்

ஒரு நாளைக்கு எட்டுக் கவள உணவு மட்டுமே ஏற்க வேண்டும். இந்த எட்டுக் கவள உணவை (பலகாரமானாலும் எட்டுக் கவள அளவே) ஒரு நாள் முழுதும் மூன்று வேளைகளாகவும் வி(பி)ரித்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு நாளைக்கு எட்டுக் கவளத்திற்கு மேல் உணவு கூடாது என்பதே நியதி. எவ்வளவு வேண்டுமானாலும் நீர் அருந்திடலாம்.

வாழையிலை அல்லது மந்தாரை இலையில் தான் உண்ண வேண்டும். தட்டு கூடாது. எட்டுக் கவள உணவு எனில் கனிகள், சோறு, தானியங்கள், பால் என எதுவாயினும் ஒரு நாளைக்கு ஒரு வகை உணவே எட்டுப் பிடி உண்ண வேண்டும். உதாரணமாக, கனிகள் என்றால் நாள் முழுதும் எட்டுப் பிடியளவு கனிகள்! பால் என்றால் எண் முறை வாய் நிறையப் பால் மட்டுமே அருந்திட வேண்டும்.

அதிதிகளுக்கு அன்னமிடல்

அதிதி என்றால் (அறியா, அழையா) விருந்தினர் என்று பொருள்! தினமும் குறைந்தது 12 பேருக்காவது அன்னதானம் இடுதல் வேண்டும் அல்லது 12 பசுக்களுக்காவது உணவு அளித்திடுக! தினமும் 12 அதிதிகள் உணவு உண்ட பிறகே தான் உண்ண வேண்டும். உணவுப் பொட்டலங்களாக அளித்திடுதலும் அதிதி போஜன முறையே!  சாதாரணமாக ஒருவர் 48 நாட்களில் எவ்வளவு உணவை ஏற்பாரோ, அந்த அளவு அரிசி, எண்ணெய், காய்கறிகள் போன்றவற்றை இந்த 48 நாட்களிலும் அன்னதானமாக அளித்தலானது பல்லாண்டு காலமாக உள்ள பித்ரு கடன்களைக் கழிக்கத் துணை புரியும்.

பூஜைகள், தரிசன நியதிகள்!

48 நாட்களிலும் காலணிகள் இன்றி நடத்தல் சிறப்பானது. தினமும் ஆலயத்தில் மூன்று முறையேனும் அடிப்பிரதட்சிணம் செய்து, குறைந்தது 24 ஆலய கோபுரக் கலசங்களைத் தரிசிக்க வேண்டும். சிற்றூர்களில் வாழ்வோர் தினமும் 24 கோபுரக் கலசங்களைத் தரிசிக்க இயலாவிடில் வில்வம், அரசு, ஆல், வேம்பு போன்ற 24 சமித்து விருட்ச மரங்களுக்குச் சந்தனம், குங்குமம் இட்டுத் தினமும் வலம் வருதல் வேண்டும்.

48 நாட்களிலும் குறைந்தது 12 சித்தர்கள், மகான்கள், யோகியரின் ஜீவாலயங்களைச் சுத்திகரித்து, கோலமிட்டு, அன்னதானம் செய்து வருதல் வேண்டும்.

ஸ்ரீபுரந்தான் பெருமாள் ஆலயம்

இறை சாதனங்களை அணிதல்

பூணூல், மணிக்கட்டு மாலைகள், ருத்ராட்சம், ஸ்படிகம், காசிக் கயிறுகளை எப்போதும் விரத காலத்தில் அணிதல் சிறப்புடையதாகும். காலில் திருவெண்டயம் அணிதல் விரதப் பலா பலன்களைப் பெருக்கும். ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, போற்றித் திருஅகவல் போன்றவற்றைத் தினமும் பாராயணம் செய்து வர வேண்டும். பூணூல் அறிந்திருப்போர் 48 நாட்களிலும் தினமும் புதுப் பூணூல் அணிதல் சிறப்பானதாம். தரையில் வெறுமனே அமர்வதைத் தவிர்த்து தர்பைப் பாய், பலகைகளில் அமர வேண்டும். கூடிய மட்டும் நாற்காலி, சோபா போன்ற இரும்பு வகை அமர்வுகளைத் தவிர்த்திடுக! மர வகைகளில் அமர்தலே சிறப்புடையதாகும். இலவசமாக எவர் வண்டியிலும் பயணம் செய்வதைத் தவிர்க்கவும்!

தர்ப்பண நியதிகள்

48 நாட்களிலும் தினசரித் தர்ப்பணம் கட்டாயமாகச் செய்திடல் வேண்டும். இந்த மண்டல விரதத்தில் ஜாதி, மத பேதமில்லாது குறைந்தது 108 பேருக்குத் தர்ப்பண மகிமையை உணர்த்தி அவர்களும் தர்ப்பணம் செய்திட உதவுதல் வேண்டும். 48 நாட்களில் ஏதேனும் ஒரு நாளிலாவது மண்ணைத் தோண்டி வரும் ஊற்று நீரால் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.

மேதினியாத் தர்ப்பணம்

மேதினியாத் தர்ப்பணம் என்ற விசேஷமான மாளயத் தர்ப்பண முறை ஒன்றுண்டு!  விரதத்தில் 33 நாட்கள் முடிந்த பிறகு மாளய பட்சத்தின் பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான 14 நாட்களில் மேதினியாத் தர்ப்பணமும் குறித்த சில தான தர்மங்களும் செய்திட வேண்டும்.

மேதினியாத் தர்ப்பண முறையில் ஏழு நதித் தீரங்களிலும் இருந்து ஏழு பிடி மண்ணும், புனித நீரும் மரக் கலங்களில் எடுத்து வந்து துளசி, வில்வம், எள்ளுடன் சேர்த்து, குறைந்தது நான்கு அடி நீளமுள்ள முழு வாழை இலையில் மல்லிகை மலர்களின் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்து இத்தீர்த்தத்தால் தினமும் தர்ப்பணம் அளிக்க வேண்டும். பெயர் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் மானசீகமாக மூதாதையர்களை எண்ணி, தந்தை வழியில் 24 பேர்கள், தாய் வழியில் 24 பேர்கள் ஆகிய 48 பேர்களுக்கு விசேஷமான மேதினித் தர்ப்பணத்தை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களிலும் அளிக்க வேண்டும். மாளய பட்ச அமாவாசைக்கான விசேஷமான தர்ப்பண முறைகள் சிலவும் தனிப்பட உண்டு. இவற்றால் கூடுதல் பலன்கள் கிட்டும்.

இம்மேதினியாத் தர்பைச் சட்டத்தில் நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன என அனைத்துக் கோடி ஜீவன்களுக்கும் தாவரங்களுக்கும் காருண்யத் தர்ப்பணம் அளித்திடுக! நீங்கள் பிறந்ததிலிருந்து எத்தனை கோடி அரிசி, கோதுமை, பருப்பு மணிகளை, இலை, தழை, காய், கனி, விதைகளை உண்டு கழித்திருப்பீர்கள். இவை அனைத்திற்கும் 15 நாட்களிலும் காருண்யத் தர்ப்பணம் அளித்திட வேண்டும்.

மேதங்க பதனம்

ஸ்ரீமஹாவிஷ்ணுவின் காதில் தோன்றிய மது, கைடப அரக்கர்கள் உலகெங்கும் மேதங்கக் கொழுப்பு எனும் கொழுப்புத் திரளை உலகெங்கும் உருவாக்கி ஜீவன்களைப் பலவிதமான மாயைகளுக்கு ஆட்படுத்தினர். இதனால் தோன்றிய நோய்களுள் ஒன்றே காடராக்ட் எனும் கண்புரை நோயாகும். திருமாலின் திருமேனியில், திருக்காதுகளில் தோன்றியவர்களே இந்த அரக்கர்கள் ஆதலின், பரந்தாமராம் பெருமாளே 5000 தேவ ஆண்டுகள் போராடி இவ்வசுரர்களை வென்றிட்டார். இந்த அர்க்கர்களும், தாம் செய்த சில நன்மைகளுக்காக, அரிய பூஜைகளுக்காக, சில அபூர்வமான சக்திகளையும் பெற்றார்கள். பெறுதற்கரிய அனைத்து மானுட உடல்களிலும், தாங்களும் ஒரு கொழுப்பு வகை தசை அங்கமாக ஆகிட வேண்டும் என்பதும் அவர்கள் வேண்டிய வரமாகும். எனவே இன்றும் மனித உடலின் ஒரு சில தசைக் கொழுப்பு அம்சங்கள் மது, கைடபர் தோற்றுவித்த மேதங்கப் பதனக் கொழுப்புச் செல்களே ஆகும்.

மேலும் மனிதர்கள் வசிக்கும் மனிதக் கொழுப்பு உடல் கூட்டிற்குப் பலவிதமான தர்ப்பண சக்திகளின் பலன்கள் சென்றடைய வேண்டும் என்பதும் இவர்கள் கோரிய மற்றொரு வரமாகும். இவ்வகையில் தான் அதிரசம், அப்பம் போன்ற கொழுப்பு சார்ந்த உணவு வகைகளும், பிண்டங்களும் திவசக் காரியங்களில் சேர்ந்தன.

மாளய அமாவாசைத் தர்ப்பணம்

இவ்வாறாக, 48 நாள் மாளய பட்ச மண்டலத்தின் நிறைவு நாளான மாளய பட்ச அமாவாசை அன்று ஏழு தீர்த்தங்களில் இருந்து கொணர்ந்த ஏழு பிடி மண்ணை நீண்ட வாழை இலையில் நிரவி, மல்லிகை மலர்களையும் பரப்பி இலையின் வலது, இடது, நடுப் பகுதிகளில் மூன்று தர்ப்பைச் சட்டங்கள் வைத்துத் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.

வலது புறத் தர்ப்பைச் சட்டத்தில் 48 வலம்புரிக் காய்களை வைத்து 48 தாய் வழியினருக்குத் தர்ப்பணம் அளித்திடுக!  இடது புறத் தர்ப்பைச் சட்டத்தில் 48 இடம்புரிக் காய்களை வைத்து, 48 தந்தை வழியினருக்கு ஒவ்வொன்றிலும் 48 ஆக மொத்தம் 96 மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் அளிக்க வேண்டும். (வலம்புரி, இடம்புரி மூலிகைக் காய்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)

நடுவில் உள்ள தர்ப்பைச் சட்டம் தேவ தர்பைச் சட்டம் ஆகும்.

இதில்

வசுதேவ பித்ரு மூர்த்திம் தர்ப்பயாமி
ருத்ர தேவ பித்ரு மூர்த்திம் தர்ப்பயாமி
ஆதித்ய தேவ பித்ரு மூர்த்திம் தர்ப்பயாமி

- என்று வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு மூர்த்திகளுக்கு மும்மூன்று முறைத் தர்ப்பணம் அளிக்க வேண்டும். இன்று பித்ரு ஹோமம் செய்து சாதப்பிண்டம் (சோற்று உருண்டையில் எள், பசு நெய் சேர்த்தல்), அப்பம், ஜாங்கிரி, அதிரசம், பிரண்டை போன்ற பித்ரு திரவியங்களை அக்னியில் ஆஹூதியாக அளித்தல் மிகவும் சிறப்பானதாம்.

பல தலைமுறைகளாக, முறையாகத் தர்ப்பணம் அளிக்காமையே தற்காலத்தில் பலரையும் துன்பச் சுழல்களுக்குள் புரட்டி மாய்க்கின்றது. இதனால் அந்தந்தக் குடும்ப மூதாதையருக்கு, பித்ருக்களுக்கு "ஜலவற்கடம்" எனும் நீர்ப் பசி உண்டாகித் தலைகீழாகத் தொங்கும் நிலைமை ஏற்பட்டு, பித்ரு சாபங்கள் மிகுந்து சொல்லொணாத் துன்பங்கள் மிகுகின்றன. இவற்றிலிருந்து மீளவே "அஷ்ட பூஜித மாளய விரதம்" என்ற அற்புதமான மாளய பட்ச விரத முறையைச் சித்தர்கள் அளித்துள்ளனர். இதனைக் கடைபிடித்து, பிறருக்கும் அறிவித்துக் கடைபிடிக்கச் செய்து அரிய பலன்களை உய்த்திடுவீர்களாக!

ஸ்ரீகொன்றையடி விநாயகர்

நிறைய மூலிகா விருட்சங்கள் நிறைந்ததாய் விளங்குவதே அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயகர் தலமாம்! காணுதற்கரிய குருந்த மரத்தை இங்கு தரிசிக்கலாம்!

பித்ருக்களுக்கும் முக்தி அளிக்கும் அரிய காணாபத்ய பித்ரு முக்தித் தலம்! குருந்தை மரத்தடியில் தர்ப்பணம் அளிப்பதைப் பித்ருக்களே போற்றி நேரில் வந்து தர்ப்பண, அர்க்யத்தை ஏற்கும் பித்ரு சக்தித் தலம்!

இரட்டைப் பனை மரங்களின் அடியில் அருகம்புல் விளைந்து பலவிதமான திருஷ்டி, பகைமை தோஷங்களை நிவர்த்திக்கும் அதியற்புதத் தலம்!

ஒரு யுகத்தில், பலவிதமான கிடைத்தற்கரிய மூலிகா விருட்சமாலிகா வனமாகப் பொலிந்ததே குருந்தம் பாளையம் என்ற பெயர் பெற்ற அரண்மனைப்பட்டியாகும். அ(ஹ)ரனாகிய சிவபெருமான், வேதமா மறை சக்திகளை, கொன்றை, குருந்தை, வேலம் போன்ற பல அரிய மூலிகை விருட்சங்கள் மூலமாகப் பொங்கி எழச் செய்த வேத பூமியே, "அரன் (சிவன்) மறைப் (வேதம்) பட்டி" யாகிய தற்போதைய அரண்மனைப் பட்டியாகும். வேத சக்திகள் இங்கு திரண்டு, அரணாக நின்று பிரபஞ்சத்தைக் காக்கின்றமையால் அரண்மனைப் பட்டியாகவும் ஆயிற்று!

ஸ்ரீகொன்றையடி விநாயகர்

பட்டி என்பது கிராமம் எனப் பொருள் தந்தாலும், தெய்வப் பசு மூர்த்தியாம் காமதேனுவின் புத்திரியாகிய "பட்டி தேவி", சுயம்பு லிங்க மூர்த்திகளைப் பூஜித்த இடங்களும், கோ (பசுவிற்கான) பூஜைகள் சிறந்து விளங்கிய இடங்களும் "பட்டி" ஆயின! இவ்வகையில், அரண்மனைப் பட்டியில், ஸ்ரீகொன்றையடி விநாயகர் தலத்தில் வெட்ட வெளியில், வெயில், மழை, பனியில் நனைந்து "பூப்ரஸ்தவான" சஞ்சாரம் கொண்டுள்ள மிகவும் அபூர்வமான "வியாக்ர பாத லிங்கத்தைப்" பட்டி தேவி தரிசித்துப் பால் சொரிந்து பூஜித்தனள். எண்ணற்ற சித்தர்களும், மகரிஷிகளும் பூஜித்த சுயம்பு லிங்கமே இங்குள்ள "வியாக்ர பாத லிங்கம்"!

குருந்தை விருட்சத்தின் அருந்தவ சக்திகள்!

ஏகாதச ருத்ர பூமி லோகத்தைச் சார்ந்த "அரன் (சிவன்) மறைப் பிரகாசச் சித்தர்கள்" வாசம் செய்கின்ற புனிதமான பூமியுமே இந்தக் குருந்தைத் தல வேத பூமியாம். காணக் கிடைக்காத குருந்தை விருட்சங்கள் இங்கு கூடி இருப்பது இவ்வேத பூமியின் வேதப் பிரவாள சக்தியைக் குறிக்கின்றது. பொதுவாக குருந்தை மரமானது இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து, "த்ரயம்பக யோகப் புஷ்பமாகப்" பூத்து இருக்கின்ற பூமியில் தான் தோன்றும், குருந்த மரத்தின் அடியில் அமர்ந்து மந்திர, யோக, தந்திர உபதேசங்களைத் தக்க சற்குரு மூலமாகப் பெறுதலைப் பெரும் பேறாகச் சித்தர்களும், மகரிஷிகளும் போற்றுகின்றனர். பல அரிய மந்திர சத்திகளைப் பெற குருந்த மூலிகா விருட்சத்தின் அடியில் அமர்ந்து சிவ வழிபாடு, சிவயோகம், சிவஹோமம், சிவகிரந்தாத்மப் பூஜைகளைச் சிரத்தையுடன் ஆற்றி வர வேண்டும்.

இச்சா, கிரியா, ஞான சக்தி அம்சங்கள் ஒவ்வொன்றையும் பல்லாண்டுகள் குரு மூலமாகப் பயில வேண்டும். உதாரணமாக, இச்சா சக்தியில் ஒருவர் வல்லமை பெற, எண்பது ஆண்டுகளுக்கு மேலாக, குருந்த மரத்தடியில் வழிபாட்டை குருவாய் மொழி உபதேசப்படி கடைபிடித்து வருதல் வேண்டும். இதனால் தேவாதி தேவ லோகங்களில் உத்தம உயர் நிலைகளும், இச்சா சக்திக் கிரமமாகக் கூடிக் கிட்டுவதால், இந்த யோகத்தைப் பயின்றவருக்குத் தன்னுடைய ஆயுளைத் தானே விருத்தி செய்கின்ற பிரும்ம சக்தியும் இறையருளால் கிட்டும். ஸ்ரீஆயுர்தேவி அருளும் பல நல்வரங்களும் ஞானப் பூர்வமாகக் கிட்டிடும்.

ஆனால் சித்திகளைத் தவறான வழிகளில் பயன்படுத்தினால், கிட்டிய நல்வரங்கள் மறைவதுடன், சாபங்களே வந்து சேரும். இவற்றிலிருந்து மீள்தல் மிக மிகக் கடினமே!

குருந்த மர வழிபாட்டிற்கான விரதங்கள், மூல மந்திரங்கள், பூஜைகள் நிறைய உண்டு. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று இறை நிலைகளிலும் உத்தம நிலை பெற்ற பிரம்ம ரிஹிகளும், சித்தர்களும், யோகியரும், ஞானியரும் வாழ்ந்த புனித பூமியில் தாம் குருந்தை மரம் தோன்றும். எனவே குருந்தை மரம் தோன்றுகின்ற பூமியின் மண்ணிற்கு (மிருத்திகைக்கு) இதில் இச்சா, கிரியா, ஞான சக்திகள் ஒரு சேர நிரவுவதால் "த்ரயம்பக சிவசாரம்" என்று பெயர்.

சிலாவாசச் சீர்மை தரும் குருந்தை பூமி!

ஜிலாந்தரணி குருந்தை
அரண்மனைப்பட்டி

மேலும் புது தெய்வ விக்ரகங்களுக்கான நெல் வாசம், எண்ணெய் வாசம், தான்ய வாசம் போன்ற பல வாசங்களுக்காக (திரவியத் திரு உறைவு) குருந்த மருத்தடியில் நெல், தைலம், தான்யம், வெண்ணெய், நெய் போன்றவற்றிற்குள் விக்ரகங்களை ஒவ்வொரு மண்டல காலத்திற்கு வைத்துப் பூஜிப்பார்கள்.

ஒவ்வொரு மரச் சிலையும், விக்ரகமும் அது பிரதிஷ்டை ஆகும் முன், ஆயிரத்தெட்டு விதமான தேவ திரவியங்களில் குறைந்தது மூன்று வருடங்களுக்காவது வாசங் கொண்டிருக்கும் நிலையில் பூஜிக்கப்பட வேண்டும். ஆனால் கலியுகத்திலோ, ஒரு மண்டலமாகிய 48 நாட்களுக்குள்ளேயே, 11 அல்லது 21 வாசங்களிலேயே விக்ரக வாசகங்களை மிகவும் குறுக்கி முடித்து விடுகின்றார்கள். ஆயிரத்தெட்டு விதமான தெய்வீக திரவியங்களின் வாசங்களை ஒரு விக்ரகம் பெற வேண்டுமென்றால் தற்போதைய கலியுகத்தில், குருந்தை மரத்தின் அடியில் கற்சிலைகளை, மரச்சிலைகளை, விக்ரகங்களை குறித்த பல மூலிகா திரவியங்களில் ஒரு மண்டலம் வைத்து, குருவாக்யப் பூர்வ முறைகளால் வழிபடுதலானது ஆயிரத்தெட்டு வாசங்களுக்கு நிகரான பலாபலன்களைத் தந்திடும் என்பது வேத நியதி!

ஜிலாந்தரணி ஜோதி பூக்கும் குருந்தைக் காய்!

குருந்த மரங்களிலும் மிருத குருந்தம், ரித குருந்தம், ச்ருத குருந்தம், க்ருத குருந்தம், சோனித குருந்தம், மத்ஸ்ய குருந்தம், நுணாதரக் குருந்தம், மூலாதாரக் குருந்தம் என்று பலவகைகள் உண்டு. இத்தகைய குருந்த ஜோதிகளுள் ம்ருத ஜோதி கிரணங்கள் படுகின்ற இடங்களில் தான் பூலோகத்திற்கான மிருத வடிவக் குருந்தை மரம் தோன்றும், குருந்தை மரத்தின் இலைகளிலும், காய்களிலும், அதன் அனைத்து அங்கங்களிலும் "ஜிலாந்தரணி" என்ற ஜோதி வட்டம் பூமியையும், வானையும் இணைக்கின்ற ஒளிப்படலமாகத் தோன்றும். இது நிரந்தரமானது, சாசுவதமானது! நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களின் தீர்க்க தரிசன சக்தியைத் தர வல்லது. எனவே குருந்த மரத்தின் ஒவ்வொரு காயிலும் பலவிதமான ஜோதி வட்டப் புள்ளிகளைக் கண்டிடலாம். ஒவ்வொரு ஜோதி வட்டப் புள்ளியிலிருந்தும் எண்ணற்ற மகர ஜோதிக் கிரணங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. சபரிமலையில் காந்த மலையில் ஜோதி தோன்றுவதும் குருந்த வனக் காட்டின் விண்வெளிப் பகுதியில் தாம்.

இரட்டைப்பனை அரண்மனைப்பட்டி

எனவே ஜோதிடர்கள் தீர்க தரிசனம் பெற வழிபட வேண்டிய குருந்தை விருட்ச பூமியே அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் தலமாகும்.  ஆனால் தெய்வீக ஜோதிடக் கலை கொண்டு சமுதாய இறைப் பணிகளை ஆற்ற வேண்டுமே தவிர இதனை வியாபாரமாக்கி விட்டால் சாபங்கள் பெருகி சந்ததிகள் பாதிக்கப்படும்.

சூரிய பகவானுக்கு ஜோதி தரும் குருந்தாக்னி!

சூரிய பகவானும் தம்முடைய பலவிதமான சூரிய தரிசனங்களுக்குத் தேவையான பாஸ்கர சக்திகளைப் பெறுகின்ற கண்வ ஜோதிப் பரலியே குருந்தை மரத்தின் காய் ஆகும். குருந்தை மிகவும் சக்தி வாய்ந்த சித்த மூலிகையாம். வயிற்றுப் புண் ஆற்றும் மகா மூலிகையிதுவே! கண்வ மகரிஷி இன்றளவும் தினமும் ஒரே ஒரு குருந்த மரக் காயை உண்டே தேவ மகரிஷியாய்ப் பொலிகின்றார்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தியும் குருந்தை மரத்தின் அடியிலிருந்து தான் எண்ணற்ற சித்தர்களுக்கும், மஹரிஷிகளுக்கும் குறிப்பாக ஆவுடையார் கோயிலில் மாணிக்கவாசகருக்கும் அருட்காட்சி தந்து ஆட்கொண்டார். இத்தகைய சிவசாரக் குருந்தமரங்கள் உள்ள தலமே அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் தலம் ஆகும்.

மூலிகை விருட்சக் கொடிச் சக்கரம் பொலியும் கொன்றையடி விநாயகத் தலம்!

இங்கு நான்கு கொன்றை மரங்களும் ஒரு குருந்தை மரமும், இரட்டைப் பனை மரங்களும், அடியில் அருகம்புல் வளமும், வேல மரமும் அருகருகே அமைந்து மூலிகா ஜோதி நீரோட்டங்களை இணைத்துப் பரிணமித்து ஸ்ரீவித்யா சக்கர பாணியில் மூலிகை விருட்சப் பரலிச் சக்கரம் அமைத்து ஜோதி விருட்ச சக்திகளைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. இம்மரங்களின் வேர்ப் பகுதிகளை சூட்சுமமாக இணைத்தால் ஓர் அற்புத வித்யைச் சக்கரம், மூலிகை விருட்சக் கொடிச் சக்கரமாக உருவாகின்ற அற்புதத்தைக் காணலாம்.

கொன்றையடி விநாயகருடைய மூலாதாரத்திலிருந்து இரண்டு பனை மரங்களுக்கும், வேல மரத்திற்கும், குருந்தை மரத்திற்கும், நான்கு கொன்றை மரங்களுக்கும் பாய்கின்ற வேத நீரோட்ட ஆகர்ஷ்ண சக்திகள் தாம் இப்பூவுலகிற்குத் தேவையான ஜீவித வேத சக்திகளை இன்றும் பொழிந்து கொண்டிருக்கின்றன. கொன்றை மரம் என்றாலே வேத வடிவு கொண்டதுதானே! மாப்பிள்ளைக் கொன்றை, அரசங் கொன்றை, சரபக் கொன்றை, சிவக் கொன்றை, பர்வதக் கொன்றை என்றும், பசும்பனை, பதிப்பனை, பசுபதிப் பனை போன்ற பலவிதமான தேவ விருட்சங்களும் நிறைந்த புனித பூமியே அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயகர் தலம் ஆகும்.

கொறுக்கை

நந்தி மண்டபத்தில் அருகருகே இரு நந்திகள் உள்ள கொறுக்கை ஆலய சனிப் பிரதோஷ பூஜை மகிமை!

பலத்த கருத்து வேறுபாடுகளுடன், மனக் கனிவின்றி வாழும் பெற்றோர்கள்-பிள்ளைகள், கணவன்-மனைவி மற்றும் உறவினர்கள்-பங்காளிகள், வியாபாரக் கூட்டாளிகள் இடையே பெருகி உள்ள பிரச்னைகளை அகற்றிச் சாந்தமாக இணைய வைக்கும் கொறுக்கை சிவாலயப் பிரதோஷ பூஜை பலன்கள்!

சரியான வருமானம் இல்லாது திணறுகின்றோர்க்கு, வேலை கிட்டாது அவதியுறும் இளைய தலைமுறைக்கு, நல்ல ஒழுக்கம் தந்து, நல்ல பணிகளுடன், நிலையான நல்வாழ்வைப் பெற்றுத் தந்திடும் கொறுக்கை சிவத்தலப் பிரதோஷ பூஜை!

வெளியில் சொல்ல முடியாத பல காரணங்களால், ரகசியங்களால், சம்பவங்களால், தவறுகளால், நிகழ்ச்சிகளால், வாழ்க்கையில் மன நிம்மதியின்றி வாழ்வோர், கொறுக்கைத் தலத்தில் வழிபட்டு முழு நிலக்கடலை, முழு முந்திரி மாலைகளை இரு நந்திகளுக்கும் சார்த்தி வழிபட்டு, சிவலிங்க நந்தியின் வலக் காதிலும், அம்பிகைக்கான நந்தியின் இடக் காதிலும் அனைத்தையும் ஒப்புவித்து வர வேண்டும். பலவிதமான தவறுகளுக்கும் நற்பிராயச்சித்தம் கிட்டி, நல்ல சாந்தமான மனநிலைகளைப் பெற உதவும். கொறுக்கை சிவத் தலப் பிரதோஷ பூஜை!

கொறுக்கை

தன் பிள்ளைகள் நன்கு படிக்கவில்லையே, கல்வியில் சராசரியாக, மந்தமாக இருக்கின்றார்களே என்று கவலைப்படுகின்ற பெற்றோர்களின் துயர் தீரும்படி பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தைத் தரவல்லதே கொறுக்கைச் சிவாலய பிரதோஷ பூஜையாம்!

கொறுக்கைச் சிவாலயத்தின் பெருஞ் சிறப்பு யாதெனில், மூலவராம் ஸ்ரீபிரம்மபுரீஸ்வர சிவலிங்கத்திற்கு உரித்தான நந்தியும், ஸ்ரீபுஷ்பவ‌ல்லி அம்பிகைக்கான நந்தியும், ஒரே நந்தி மண்டபத்தில் அருகருகே வீற்றிருப்பதாகும்.

பிரதோஷ பூஜையின் விதவிதமான தேவ பலன்கள்!

ஒவ்வொரு சிவத்தலத்தின் பிரதோஷ பூஜா பலாபலன்களும், சிவாயம், சக்தியம், நந்தியம், தேவாயம், ஈஸ்வர்யம் எனப் பலவகைப்படும். மேலும் வேதமத்ஸ்ய நந்தியம் (புதுச்சேரி ஸ்ரீவேதபுரீஸ்வரர்), சிவதர நந்தியம் (திருமுருகன் பூண்டி), லலித நந்தியம் (தஞ்சாவூர்-பூந்தோட்டம் அருகே உள்ள திலதைப்பதி எனும் கோயில்பத்து), மகாபுருட நந்தியம் (கோவை-பேரூர்), விராட நந்தியம் (திருத்துறைப் பூண்டி அருகே பேரளம்), தத்பவ நந்தியம் (சென்னை-கோயம்பேடு), சாந்தம்பர நந்தியம் (சுரட்டப்பள்ளி) எனப் பலவாறான பிரதோஷ நந்தியம்பதித் திவ்ய குணத் தலங்களில், சிவநந்தியக் கலம்பகத் தலமாகக் கொறுக்கைச் சிவத்தலத்தைச் சித்தர்கள் பெரிதும் போற்றுகின்றனர்.

பிரதோஷ பூஜா பலன்களைப் பன்மடங்காக்கும் கோயம்பேடு, கொறுக்கை, பேரூர், புதுச்சேரி வேதபுரீஸ்வரர் போன்ற அரிய சிவத் தலங்கள் பலவும் உண்டு! இவை தவிர அருண சிவாயம், சகஸ்ர சிவாயம், விச்வாம்பர சிவாயம், விகிர்த சிவாயம் என பலவிதமான சிவசக்திகளை நல்வரங்களாக அளிக்கும் பல பிரதோஷத் தலங்களும் உண்டு!

எனவே ஒவ்வொரு சிவத் தலத்தின் பிரதோஷ வழிபாட்டின் பலாபலன்களை முறையாக அறிந்து ஆங்காங்கே பிரதோஷ வழிபாடுகளை சத்சங்க சமுதாயப் பிரதோஷ வழிபாடுகளை சத்சங்க சமுதாயப் பூஜையாக நிகழ்த்திட்டால், போர் அபாயம், நில நடுக்கச் சேதங்கள், சமுதாய வன்முறைகள், பஞ்சம், வறட்சி, வெள்ளச் சேதங்கள் போன்றவற்றை அண்ட விடாது அறவே தவிர்த்திடலாம்.

கொறுக்கை சிவாலயம்

கொறுக்கை பிரதோஷ நந்தியங் கலம்பகத் தலம்!

பல வகைப் பிரதோஷத் தலங்களுள் சிவநந்தியங் கலம்பகத் தலமாக விளங்குவதே கும்பகோணம்-முழையூர் அருகே உள்ள கொறுக்கைச் சிவன் கோயிலாம். அனைத்துப் பிரதோஷ பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் யாவைக்குமாய், குறிப்பாக சனிப்பிரதோஷ பூஜைக்கு உரித்தான மிகச் சிறந்த சிவத் தலமாக விளங்குவதே கொறுக்கை ஸ்ரீபுஷ்பவல்லி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயமாகும்.

அருகருகே, ஒரே நந்தி மண்டபத்தில், இரு நந்தி மூர்த்திகளும் எழுந்தருளிய தலத்தில் பிரதோஷ பூஜையைக் கொண்டாடுவது, கலியுகத்தில் கிடைத்தற்கு அரிய மிகப் பெரும் பாக்யம் என்பதால் தான் ஸ்ரீபிரம்ம மூர்த்தியே தம் பத்னியாம் சரஸ்வதி தேவியுடன் தம்பதி சகிதமாய் இத்தலத்திற்கு ஓடோடி வந்து இன்றும், என்றுமாக, சனிப் பிரதோஷ பூஜை நடத்தி வழிபடுகின்ற சிறப்புடைய தலமே கொறுக்கையாம்!

அறியாமை, அஞ்ஞானம், படிப்பின்மைக் குறை போக்கும் கொறுக்கைப் பிரதோஷ பூஜை!

அறியாமையால், அஞ்ஞானத்தால் இறைநெறிகளில் இருந்து தடம் புரண்டு தீயொழுக்கம், தீயப் பழக்கங்களுக்கு ஆட்பட்டு அழிவை நாடிச் செல்லும் மனித குலத்தைத் திருத்த வல்ல பிரம்ம ஞான சக்திகள் பொங்கித் ததும்பும் பொங்கித் ததும்பும் திருத்தலம்!

பாற்கடலில் பொங்கிய ஆலகால விடத்தை ஸ்ரீநீலகண்டேஸ்வரராகத் தாங்கிய சிவபெருமான் நந்தியம்பெருமானின் இரு கொம்புகளுக்கு இடையே பிரம்ம ஞான சாகர நடனமாடி மாயையால் வெலவெலத்து நின்ற தேவர்களை நன்னிலை அடையச் செய்திட்ட காலமே சனிக்கிழமைப் பிரதோஷ நேரமாகும்! இதுவன்றியும், நாமறியாத வகையில் சனிப் பிரதோஷத்திற்கு மேலும் பல எண்ணற்ற மகத்துவங்கள் உண்டு என்பதையும் உணர்ந்திடுக!

விராட நந்தியம் பேரளம்

சாகம்பரியின் சிருஷ்டி ஸ்திதிக்கு உதவிய சிவப் பிரதோஷத் தலம்!

சிருஷ்டியின் போது, உலகில் பல வகையான புஷ்பங்களையும் படைப்பதற்காக அவதரித்த பராச‌க்தி அவதாரமே ஸ்ரீசாகம்பரி தேவியாகும்! கும்பேஸ்வரத் தலத்தில் (கும்பகோணம்) படைப்பிற்கான சிவ அவதாரமான ஸ்ரீகிராத மூர்த்தியின் அருளைப் பெறும் முன், அந்த யுகத்தின் ஒரு சனிப் பிரதோஷ தினத்தில் ஸ்ரீசாகம்பரி தேவி இங்கு வந்து அம்பிகையை வழிபட்டனள்!

மகாப் பிரளயத்திற்குப் பின், எந்தப் புஷ்பங்களை ஸ்ரீசாகம்பரி தேவி பூமியில் படைக்க வேண்டிப் பூலோகத்தில் ஸ்ரீகிராத மூர்த்தியை வேண்டி வழிபட்டாளோ, அம்மலர்களையே அம்பிகை தன் திருமேனியில் பூண்டு, சனிப் பிரதோஷ நாளில் இங்கு ஸ்ரீபுஷ்பவல்லியாகத் தரிசனம் தந்தது கண்டு ஸ்ரீசாகம்பரி தேவி ஆனந்தித்தனள்!

ஸ்ரீசாகம்பரி தேவியும், (பூவனூர்) ஸ்ரீபுஷ்பவனேஸ்வர மூர்த்தியிடம் அள்ள அள்ளக் குறையாது அளப்பரிய புஷ்பங்களைத் தரும் "அட்சயப் புஷ்பக் கலசத்தை" நல்வரமாகப் பெற்றுப் புஷ்பத் தாவரங்களைப் படைக்கலாயினள். இக்கலசத்தில் இருந்து பெற்ற அபரிமிதமான ஐந்து விதமான திருக்கயிலாய நறுமணப் புஷ்பங்களால் ஸ்ரீபுஷ்பவல்லி அம்பிகையை அலங்கரித்து, இங்கு கொறுக்கையில் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை வழிபட்டு, பிரதோஷ நாள்தோறும் பிரபஞ்சத்தில் புஷ்பங்களைப் படைக்கின்ற தேவ சக்தியைப் பெற்றிட்டாள்.

எனவே சனிப் பிரதோஷ தினத்தில் இங்கு ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரையும், ஸ்ரீபுஷ்பவல்லி அம்பிகையையும் நிறையப் புஷ்பங்களால் அலங்கரித்து ஒரே மண்டபத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்ற இரு நந்தி மூர்த்திகளுக்கும் காப்பரிசி இட்டு, அருகம்புல் மாலைகளைத் திருக்கொம்பில் சார்த்தி, நந்திகளின் திருமேனியெங்கும் புஷ்பங்களால் முழுவதுமாக அலங்கரித்து, சனிப் பிரதோஷத்தைப் புஷ்ப சாகரப் பிரதோஷப் பூஜையாகக் கொண்டாடுதலால் நற்காரிய சித்திகளுடன் மகத்தான பலா பலன்களைப் பெற்றிடலாம்.

பணக் கஷ்டங்கள், நஷ்டங்கள் தீர்க்கும் சிவத் தலம்!

குறிப்பாக பண முடக்கத்தால் பங்காளி, தாயாதி உறவு முறைப் பிரச்னைகளால், சொத்துப் பிரிவு, பரிமாற்றங்களால் நஷ்டங்களை அடைந்து, நிம்மதியின்றி, மன அமைதியின்றி தனித்தோ, பிரிந்தோ பலத்த மன வேறுபாடுகளுடன் வாழுகின்ற தம்பதிகளும், உறவினர்களும், பெற்றோர்-பிள்ளைகளும் ஒன்று சேர்ந்து வாழ்ந்திட இங்கு வழிபட வேண்டும். இங்கு "ஜீவப் பிறைச் சங்கிலிப் புஷ்பச் சாரமாக", தன்னுள் பூரிக்கும் சுமங்கலித்வ சக்தியால் தம்பதியரை இணைக்கும் சக்தி கொண்ட மல்லிகைப் புஷ்பத்தை வாழை நாரில் தொடுத்து வெகு நீளமான பூச்சரங்களாக்கி இரு நந்தியெம்பிரான்களின் திருமேனியெங்கும் சேர்த்துச் சார்த்தி, கொறுக்கைச் சிவாலய பிரதோஷ வழிபாடு ஆற்றிடுக! பிறகு மல்லிகைச் சரங்களைக் குறைந்தது 51 ஏழைச் சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்து வர வேண்டும். இவ்வாறு குடும்ப ஒற்றுமைக்குப் பெரிதும் துணை புரியும் அற்புதப் பிரதோஷ பூஜைத் தலமிது!

ஒரு காலத்தில் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான மூலிகை வனமாகப் பொலிந்த அலவந்திபுரத்தில் இருந்து தினமும் மூலிகைகளைக் கொணர்ந்து கொறுக்கைச் சிவலிங்கத்தை வழிபட்டு வந்தவரே அலவந்திச் சித்தர் ஆவார். எனவே கொறுக்கை ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் இப்பூவுலகின் அனைத்து மூலிகை ரசங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்ட மிகவும் அபூர்வமான மூலிகா பந்தன லிங்கமாகும்!

பிள்ளைகளின் அறிவு, பிரகாசம் பெற உதவும் கொறுக்கைப் பிரதோஷ பூஜை!

ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கே, ஞானம் அளித்த ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆதலால் இங்கு கொறுக்கைச் சிவாலயத்தில் ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் தங்கள் குழந்தைகளுடன் ஆலயத்தை வலம் வந்து ஞானப் பூர்வமான சக்திகளைத் தரவல்ல வெண்டைக்காய், முந்திரி, பாதாம் பருப்பு போன்ற உணவு வகைகளைத் தானமாக அளித்து வந்தால் பிள்ளைகள் நன்முறையில் கல்வியில் சிறப்புப் பெறுவார்கள். தொடர்ந்து ஐந்து பிரதோஷ பூஜைகளிலாவது பங்கு கொள்வது சிறப்புடையது. இதில் சனிப் பிரதோஷமும் சேர்ந்து வருமேயானால் காரிய சித்திகளும், பலன்களும் துரிதமாகக் கிட்டும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டு வருதல் வேண்டும்.

பிஞ்சிலம் திருக்கடவூர்

சனிப் பிரதோஷ தினத்திலும், மற்ற பிரதோஷ நாட்களிலும் இங்கு நந்தீஸ்வர மூர்த்திக்குத் தங்கள் கையால் தொடுத்த அருகம்புல் மாலையைச் சார்த்தி, சிவலிங்கத்திற்கும், புஷ்பவல்லி அம்பாளுக்கும் மலர்களால் பூச்சொரியல் இட்டு அலங்கரித்து வழிபடுவதுடன், குறைந்தது 12, 21, 108 என்ற வகையில் ஏழைச் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், புஷ்பங்கள் போன்ற எளிமையான சுப மங்கள திரவியங்களையும் வசதியுள்ளோர், புடவை, ரவிக்கையுடனும் சேர்த்து அளித்து வருதலால் குழந்தைகள் நன்முறையில் படிப்பதுடன், தம்பதியர்களும் பெற்றோர்களும், பிள்ளைகளும் தங்களுடைய பிரச்னைகளில் இருந்து விடுபட்டு, நன்முறையிலே சாந்தத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்திடுவார்கள்.

பிஞ்சில மலர் வழிபாடு தரும் பேரருள்!

இங்கு பூச்சொரியல் வழிபாடாக, பலவகைப் பூக்களுடன் சனிப் பிரதோஷ வழிபாடு நடத்துதல் மிகவும் சிறப்புடையதாம். குறிப்பாக, பிரம்ம மூர்த்தி, சரஸ்வதி தேவி, சனீஸ்வரர், கேது பகவான் போன்றோர் பூஜித்த பிஞ்சிலம் எனும் புஷ்பத்தால் வழிபடுவதால் கடன் தொல்லைகளுக்கு நிவாரணம் கிட்டும். வராதக் கடன்கள் முறையாக வரும். நெடுநாள் வழக்குகள் தீர்வு பெறும். அற்புதமான நிதிசாரப் பலன்களைத் தருவதே பிஞ்சிலம் மலர் வழிபாடு! இம்மலர் தற்போதும் பல இடங்களில் கிடைக்கின்றது.

தங்களுடைய கோர்ட் வழக்குகளுக்கும், சொத்துப் பிரச்னைகளுக்கும் நல்ல நியாயமான, தார்மீகமான முறையில் தீர்வு பெற வேண்டுவோர், இங்கு சங்குப் பூக்களைச் சார்த்தி பிரதோஷ வழிபாடுகளை முறையாகச் செய்து வர வேண்டும். திருக்கடவூர் சிவத்தலத்தின் தலவிருட்சம் காசி பிஞ்சிலம் என்பதாகும். காசி என்றால் தூய, இறைவனுக்குரிய என்றெல்லாம் பொருளுண்டு. காசி பிஞ்சிலம் என்ற மல்லிகை மலர் இத்தகைய தூய வெண் சக்திகளுடன் திகழ்ந்ததால் ஸ்ரீஅபிராமி தேவி ஸ்ரீஅபிராம பட்டருக்கு நிலவாய் காட்சி அளித்தபோது தன்னுடைய தாடங்கத்தையே கழற்றி வானில் வீசி லீலை புரிந்தாள் அல்லவா ? அப்போது பொலிந்த சக்தி சுடரே காசி பிஞ்சிலம் என்பதாகும். இந்த காசி பிஞ்சில ஜோதி தரிசனத்தைக் குறிப்பதாகவே அபிராமி அந்தாதியை “உதிக்கின்ற திங்கள் ...”, என்றவாறாக அமைத்துப் பாடினார் பட்டர் என்பதே சித்தர்களின் தெளிவுரை.

ஆண் பிள்ளைகள் துடிப்பாக, சுறுசுறுப்பாக இல்லையே, படிப்பில் சுமாராக இருக்கின்றார்களே, இவர்கள் எதிர்காலம் எப்படி அமையுமோ என்று அஞ்சும் பெற்றோர்களுக்கு, மன சாந்தத்தையும், மன வலிமையையும், துன்பங்களை எதிர்நோக்கும் பைரவ சக்திகளையும், நல்லபடியான எதிர்கால வாழ்வையும் அளிப்பவையே கொறுக்கை சிவாலயப் பிரதோஷ பூஜைப் பலன்களாம்!

பிரம்ம ஞானம் என்பது பக்தி, சத்தியம், தர்மம், நேர்மை, ஐஸ்வர்ய கடாட்சம் அனைத்தையும் ஒரு சேரப் பெற்றுத் தர வல்லது!  இறந்தாலோ, வயதானாலோ, மறதியாலோ, மூளைக் கோளாறாலோ மறையும் பூலோகத்தின் ஏட்டுப் படிப்பு போல் அல்லாது ஐஸ்வர்ய பிரம்ம ஞானம் என்பது முப்பத்து முக்கோடி லோகங்களிலும் என்றும் நிரந்தரமாகப் பயன்படுவதாம்! அவதார மூர்த்திகளிடம் உரையாடும் சக்தியைத் தருவதாம்! ஆதலால் வேறு எங்கும் கிட்டாத ஐஸ்வர்ய பிரம்ம ஞானத்தைப் பெற்றுத் தருவதாக கொறுக்கைச் சிவாலய பிரதோஷ பூஜை மகத்தவம் பொலிகின்றது. எனவே இனியேனும் பிரதோஷம் தோறும் இத்தலத்திற்கு வந்து பூஜித்து அனைத்து நலன்களையும் பெறுவீர்களாக!

மாளய அமாவாசை

தர்ப்பணம் என்பதும் ஒரு வகைப் பித்ரு பூஜையை!

தர்ப்பண சக்தி உலகெங்கும் நிரவி உங்களுடைய முன்னோர்கள் பிறவி கொண்டுள்ள இடங்களுக்கெல்லாம் சென்று இப்பிறவியில் அவர்களுக்கு உள்ள பலவிதமான கஷ்டங்களை நீக்கும் நல்வரங்களாக மாறி அருள்கின்றது!

உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் அளிக்கும் தர்ப்பணத்தில் கிட்டும் நல்வர சக்தியில் ஒரு பங்கானது, அவருடைய பூர்வ ஜன்மத் தொடர்பு உடையவராக நீங்கள் இருந்தால், உங்களுக்கே நல்வரமாக வந்து சேரும்!

தெய்வீக வாழ்வை அமைத்திட உதவும் மகத்தான தர்ப்பண சக்திகள்!

புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய 15 திதிகள் தாம் பூலோகத்தின் மாளய பட்ச நாட்களாகும். இவைதாம் பித்ரு லோகங்களின் பிரம்மோற்சவ விசேஷ நாட்களாகவும் அமைகின்றன!  ஸ்ரீமகா விஷ்ணுவிற்கு பித்ரு லோகங்களில் உற்சவங்கள் நிகழும் விசேஷ நாட்களே இவையாம்!

ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் சந்ததிகளை ஆளாக்கிக் காக்கின்ற பொறுப்பைப் பெற்றிருப்பது போல, ஒவ்வொரு பித்ருவிற்கும் தன்னுடைய தலைமுறைகளை உத்தம இறைவழியில் நிலைநிறுத்த வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் உண்டு. பித்ரு நிலைகளிலும் வசு, ருத்ரர், ஆதித்யர், தரணி பந்து, ஜெயக்ஷீராஸ், மார்கவிதானர், காச்யப தரணர் என்று பல உத்தம பித்ரு தேவ மூர்த்தி நிலைகள் உண்டு! இவர்களுள் 2400 தலைமுறைகளைக் கடையேற்றும் பொறுப்பைக் கொண்டோரே ஜெய மார்த்தாண்டப் பித்ருக்கள்! 24000 தலைமுறைகளை கடைத்தேற்றுகின்ற பொறுப்பை உடையோரே தரணி பந்துக்கள்! 240000 தலைமுறைகளைக் கடைத்தேற்றுகின்ற கடமைகளைக் கொண்டோரே ஜெயக்ஷீராஸ் பித்ருக்கள்! ஒரு தலைமுறை என்றால் மனிதர், விலங்கு, தாவரம் என அந்த முன்னோர் வழியில் எத்தனையோ பிறவிகளை எடுத்துவர்களும் கணக்கில் அடங்குகின்றனர்.

துவாதசத் தலைமுறை

முக்தி நிலைப் பேறுகள், புண்யவாச மாற்றம், வினைக் கழித் தீர்வை, தர்ப்பணம், சொத்துப் பரிமாற்றம் என்றவாறாகத் தலைமுறை நிர்ணயக் கணக்கிலும் பல முறைகள் உண்டு. இதில் பித்ரு மார்கத்தில் தந்தை வழி அறுவர், தாய் வழி அறுவர் ஆக பன்னிரெண்டு வம்சாவளிக் குடும்பங்கள் ஒரு தலைமுறை ஆகின்றது. இவ்வாறு 12 x 12 தலைமுறைகள் துவாதசத் தலைமுறை ஆகும். அதாவது ஒரு துவாதசத் தலைமுறையில் ஒரு மூதாதையராவது நல்ல பித்ரு நிலையை அடைந்தால் தான், இவ்வம்சாவளியின் 12 x 12 தலைமுறைக் குழுமங்களும் பிறவித் தளைகளில் இருந்து விடுபட்டுக் கரையேற முடியும்.

பூலோகத்தில் அசத்யம், அக்கிரமங்கள், அதர்மங்கள், பொய்மை, வன்முறை, முறையற்ற காமக் குற்றங்கள் பெருத்து வருவதாலும், சித்தர்களை, மகான்களை, சற்குருமார்களை மதிக்கின்ற இறைப் பண்பாடும் கலியுலகில் பெரிதும் மறைந்து வருவதாலும், தூல வடிவில், அதாவது அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் மானுட வடிவில் இறைத் தூதுவர்கள் பூவுலகிற்கு வருவது மிகவும் குறைந்து விட்டது. எனினும் கண்ணுக்குத் தெரியாத சூக்கும, காரண, காரிய, அரூவ வடிவுகளில், தங்களை வெளிக்காட்டிக் கொள்ளா மானுட வடிவங்களில் அவர்களுடைய தேவ நடமாட்டம், பக்திப் பூர்வமாக உணர்வதாகவே அமைந்து இப்பூவுலகில் இறையருளால் இன்றளவும் கலியுகத்தில் நன்கு நடைபெற்று வருகின்றது.

பித்ருக்களின் தெய்வீகத் தன்மைகளை உணர, பித்ருக்களின் உத்தமமான ஆசிகளைப் பெற, இதுவரையில் நீத்தார் நினைவுத் தர்ப்பணங்களை, சிரார்த்த, திவச, படையல்களை முறையாகச் செய்யாமைக்கான பரிகாரங்களைப் பெற மாளய அமாவாசை உள்ளிட்ட மாளய பட்சத்தின் பதினைந்து நாட்களிலாவது திவசம், தர்ப்பணம், சிரார்த்தம், படையலாகிய பித்ரு தேவ மூர்த்திகளுக்கான வழிபாடுகளை முறையாகச் செய்து வர வேண்டும்.

மாளயப் பிறைத் தர்ப்பணங்கள்

22.9.2002 முதல் 6.10.2002 வரை சித்ரபானு ஆண்டின் மாளய பட்சப் புனிதக் காலம் அமைகின்றது. இதில் ஒவ்வொரு திதியிலும், குறித்த வகையில் இறந்தோர்க்கான விசேஷத் தர்ப்பண வகைகள் இங்கு அளிக்கப்பட்டுள்ளன. நம் குடும்பத்தில் இத்தகைய நிலைகள் எவருக்கும் அமையவில்லையே என்று எண்ணாதீர்கள்! நீங்கள் அறியாத வகையில் உங்களுடைய முந்தைய சந்ததிகளில் இந்நிலை ஏற்பட்டிருக்கக் கூடும் அல்லவா! மேலும் இந்நிலைகள் எதிர் காலத்திலும் நமக்கு வராதிருக்கத் தேவையான பித்ரு சக்திகளை நல்வரங்களாகத் தரும் மாளய பட்ச வழிபாடுகள் இவை என உணர்ந்திடுக! சமுதாயத்தில் பிற குடும்பங்களில் இந்நிலைகள் ஏற்பட்டு இருந்தால், அவற்றின் விளைவுகளில் இருந்து தற்காத்து சக மக்களுக்கும் நல்தீர்வுகளைப் பெறுவதற்கான சமுதாய இறைப் பணிகளாகவும், ஒரு மகத்தான தேவ கடமையாக நீங்கள் ஆற்றிடலாம் அல்லவா!

22.9.2002 பிரதமை:- அமிர்த யோகப் பிரதமை நாளிது! கன்னி ராசி மண்டலத்தில் சூரிய பகவான் சஞ்சரிப்பதால், அமிர்த சக்தியானது, கன்யா சக்தி நிறைந்த வாசனை மலர்கள், இளந்தளிர் இலைகள், வாழைப் பூ போன்றவற்றில் திரளும். மிகவும் விருப்பமான இனிப்பு வகைகளை உண்ண இயலாது சர்க்கரை நோயுடன் இறந்தோர்க்கும், மூன்று வயதுக்குள் இறந்தவர்க்கும் விசேஷமாகத் தர்ப்பணம் அளிக்க வேண்டிய நாள் இதுவே!

ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் நாகத்தி

வல ஆவுடைத் தீர்த்தத் தர்ப்பணம்

லிங்கத்திற்கு வலப்புறம் ஆவுடை உள்ள ‍ மூலத்தானத்தின் வலப்புறம் அமைந்த கோமுகத்தில் (உ-ம் மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர், நாகத்தி ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர். லால்குடி சிவத்தலம்) இருந்து அபிஷேக நீரை மரக்குவளையில் ஏந்தி வந்து, வேத சக்திகள் நிறைந்த மந்தாரை இலை மேல் தர்ப்பணச் சட்டம் அமைத்து, இத்தீர்த்தத்தால் தர்ப்பணம் அளித்திட, மேற்கண்ட வகையில் இறைந்தோருடைய "மைத் தூல" சரீரம் தூய்மை பெறும். தேங்காய், நிலக்கடலை, விளாம்பழம், வாதாங் கொட்டை போன்ற ஓட்டு வகை உணவுப் பண்டங்களை இன்று தானம் அளித்தலால், மனம் வளர்ச்சி குன்றியோர்க்குப் பந்து தரணிப் பித்ருக்களின் ஆசி கிட்ட நல்வழிகள் பிறக்கும். பேச இயலாது இறந்தோர்க்கும் இன்று விசேஷ தர்ப்பணம். திருச்செந்தூர் நாழிக் கிணற்று நீரினால் அங்கு கடற்கரையில் தர்ப்பணம் செய்து அன்னதானம் அளித்திட, வாக்கினால் ஏற்பட்ட பகைமை தீர உதவும் நாள்.

23.9.2002 துவிதியை:- வக்கீலாக, பேச்சாளராக, ஆசிரியராக, உபந்யாசகராக வாழ்ந்து இறந்தோர்க்கு இன்று விசேஷத் தர்ப்பணம். விஷம் அருந்தி இறந்தோர், நினைவு வராது இறந்தோர் நன்னிலை அடைய உதவும் திதித் தர்ப்பணமும் இதுவே! இவர்கட்கு இளநீரால் தர்ப்பணம் அளித்து வர, தக்க நன்னிலைகள் கிட்டும். ஆவியுரிமமும் (பிறவி பெற இயலாது ஆவி உடலில் அலைதல்) கழியும். இன்று கோயில் கோபுர கலசங்களைப் பார்த்தவாறு தர்ப்பணம் அளித்தல் சிறப்பானது. தேனில் ஊறிய அத்தி, மாம்பழம், நெல்லிக்காய் தானம் மிகவும் விசேஷமானது. சர்க்கரை சம்பந்தமான நோய்கள் பாரம்பரியமாக வாராதிருக்க திருவிடைமருதூர் குளக்கரையில் இன்று தர்ப்பணம் இட்டு ஏழைகளுக்கு இனிப்புகளைத் தானமாக அளித்து வர வேண்டும். கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு நின்று போன நற்காரியங்கள் தொடரும் நாள்.

திருமயேந்திரப்பள்ளி பித்ரு முக்தி தீர்த்தம்

24.9.2002 திரிதியை:- அருகில் எவரும் இல்லாது, எவருடனும் பேச இயலாதபடி தனித்தோ, விபத்திலோ இறந்தோருக்கு இன்று விசேஷமான தர்ப்பணம். இதனால் விபத்தில், மயக்கத்தில் ஏற்பட்ட பயங்கரமான, துர்மரண ஆவி நிலைகள் தீர்வடைய நல்வழிகள் கிட்டும். குங்குமம், குங்குமப் பூ, செந்தூரம் கலந்த தீர்த்தத்தில் தர்ப்பணம். சிகப்பு நிற ஆடைகள், உணவு வகைகளைத் தானமாக அளித்து, கூடவே வாய் சிவக்கத் தரிக்கும் வண்ணம் தாம்பூலங்களை (நிறைய வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மட்டுமே, புகையிலை கூடாது) ஏழைகட்குத் தானமாக அளித்தலால் அதிதி போஜன புண்ய சக்தி அபரிமிதமாகக் கிடைக்கும். சிதம்பரம் அருகே திருமகேந்திரப் பள்ளித் தீர்த்தக் கரையில் ஆலயத்தின் முன் மேல் மதிலில் உள்ள சூரிய, சந்திர மூர்த்திகளை தரிசித்தவாறு, அவர்கள் சாட்சியாகத் தர்ப்பணம் அளித்திட ரகசியமாகச் செய்த தவறுகளுக்குத் தக்க பரிகாரங்கள் கிடைக்க வழி பிறக்கும் அரிய மாளய பட்ச நாள்!

25.9.2002 சதுர்த்தி:- புகை பிடித்தல், லாகிரி வஸ்துக்கள், புகையிலை, மதுப் பழக்கங்களால் பாதிக்கப்பட்டு இறந்தோர்க்கும், பணக் கஷ்டங்களால் வாடி இறந்தோர்க்கும் இன்று விசேஷத் தர்ப்பணம், அவரவரிடம் இருக்கின்ற மோதிரம் போன்ற தங்க ஆபரணத்தைத் திருமகள் உறையும் தளமான தாமரை அல்லது வில்வ இலையில் வைத்து அதன் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம், தாமரை இலையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து அன்னதானம், பணக் கஷ்டம் தீர உதவும் சதுர்த்தித் திதி நாள்.

தீயத்தூர் ஸ்ரீசகஸ்ரலட்சுமி ஈஸ்வரர்

மார்க விதானப் பித்ருக்கள் அருளும் தலம்

ஆவுடையார் கோயில் - திருப்புனவாசல் மார்கத்தில் உள்ள தீயத்தூர் ஸ்ரீசகஸ்ரஸ்மீஸ்வரர் (சகஸ்ர லக்ஷ்மீஸ்வரர்) ஆலயத்தில் அன்னதானத்துடன் தர்ப்பணம் அளித்திட பணக் கஷ்டங்கள் தீர, கர்ம பரிபாலனப் பூர்வமாக மார்கவிதானப் பித்ருக்கள் பூஜிக்கும் தலம்! பணக் கஷ்டங்கள், நஷ்டங்கள் வடிய அமாவாசை தோறும் புரச இலையில் தர்ப்பணச் சட்டம் வைத்து வில்வம் ஊறிய நீரால் தர்ப்பணம் அளித்து வழிபட வேண்டிய பித்ரு முக்தித் தலம்! தசரதர் கோசல நாட்டில் வர இருந்த கடுமையான வற்கடப் பஞ்சம் தீர வழிபட்ட தலம்!

26.9.2002 பஞ்சமி:- முருகனை இஷ்ட தெய்வமாக வழிபட்டோர்க்கு விசேஷத் தர்ப்பணம், மூச்சுத் திணறியும், இருதயம் மற்றும் நுரையீரல் வியாதிகளாலும் இறந்தோர்க்கும் விசேஷத் தர்ப்பணம்.

இட ஆவுடைத் தீர்த்தத் தர்ப்பணம்

லிங்கத்திற்கு இடப்புறம் ஆவுடை உள்ள ஆலய மூலத்தான இடபுறக் கோமுகத் தீர்த்தத்தை மரக் கலயத்தில் எடுத்து வந்து, இதை வைத்து அரளி இலைகளைப் பரப்பி இதன் மேல் தர்ப்பணம், பெருங்காயம், புதினா, கருவேப்பிலை போன்ற வாசனை நிறைந்த உணவுப் பண்டங்கள் தானம், உறவு, நட்புச் சண்டைகள் தீர உதவும் திதி!  வேதாரண்யம் அருகே கோடிக்கரையில் எள்ளுடன் பச்சைக் கற்பூரம் சேர்ந்த தீர்த்தத்தால் தர்ப்பணம் அளித்து வர, வியாபாரம், உறவு, அலுவலக வட்டங்களில் ஏற்பட்ட அவப் பெயர் நீங்க உதவும் திதி நாள்.

27.9.2002 சஷ்டி:- ஆன்மீக ரீதியாக ஆண், பெண் குழந்தைகள் இருவகையிலும் ஒருவருக்கு இருப்பதே சிறப்புடையது. இல்லையேல் சமசோதக தோஷங்கள் ஏற்படும். எனவே ஆண் அல்லது பெண் குழந்தைகளை மட்டும் உடையோர் தக்க பரிகாரங்களைச் செய்து வந்தால் தான் சமசோதக தோஷங்கள் தீரும். இரட்டையராய் வாழ்ந்து இறந்தோர், இரு மனைவிகளைக் கொண்டோர், ஆண் அல்லது பெண் குழந்தைகள் மட்டும் பெற்று இறந்தோருக்கு இன்று விசேஷத் தர்ப்பணம். துன்பங்களையும், அடுக்கடுக்காகப் பெரிய பிரச்னைகளையும் வாழ்நாள் முழுதும் சந்தித்து இறந்தோர்க்கும் இன்று பிரத்யேகத் தர்ப்பணம்.

கோளிலித் தலத் தர்ப்பணம்

நவதான்யங்களை ஒன்பது விதமான கிணறு, ஆறு, ஊற்றுத் தீர்த்தங்களோடு சேர்த்துத் தாமரை இலையில் பசு நெய் தடவி வைத்துத் தர்ப்பணம். நவகிரகங்கள் ஒரு சேர, ஒரே பக்கம் பார்த்துள்ள தலங்களில் (கோளிலித் தலம் - வைதீஸ்வரன் கோயில், பந்தணை நல்லூர், திருத்தெங்கூர், திருக்குவளை போன்றவை) தர்ப்பணம் செய்தல் விசேஷமானது. இன்று, தனக்கு எது பிடிக்கவில்லையோ (உதாரணமாக சுண்டைக்காய், கத்தரிக்காய், சோம்பு, மசாலா, பாகற்காய்), அவற்றை இன்று உணவாக்கித் தானமாக அளித்துத் தானும் உண்ண வேண்டும். ஏனெனில் விருப்பு, வெறுப்புகளை இப்பிறவியிலேயே களைந்தால்தான் தெய்வீகத்தில் உத்தம நிலைகளை அடைய முடியும். இதே போல அரசியல், ஆபீஸ், உறவு, சுற்றம், சினிமா, பிற நாட்டினர் என எத்துறையிலும் எவரையும், எப்போதும் வெறுத்திடாதீர்கள்! இப்படிப் பலரிடமும் வெறுப்புகள் இருப்பின் இப்பூவுலக வாழ்க்கை முடியும் முன்னாவது விருப்பு, வெறுப்புகளைக் களைந்திட வேண்டும். இதற்கு இந்நாளின் தர்ப்பண சக்திகள் பெரிதும் துணைபுரியும்.

28.9.2002 சப்தமி:- பசுக்கள், ஆடுகள், மாடுகள், கோழிகளை வளர்த்துப் பராமரித்து இறந்தோருக்கும், இயற்கையாக இல்லாது அடிபட்டு, கீழே விழுந்து பாதிக்கப்பட்டு இறந்தோருக்கும் இன்று விசேஷத் தர்ப்பணம். நிலைத்து இருக்கும் ஊற்று நீரையும், வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் நீர்வீழ்ச்சி நீரையும் மஞ்சளில் கலந்து, குறைந்தது ஆறடி உயரத்தில் அமர்ந்தவாறு (மலை, பாறை, மேஜை, திண்ணை) தர்ப்பணம் அளித்தல் விசேஷமானது. ஆற்றி அளிக்கும் வகையில் சூடான பால், பாயசம், ரசம், கீர் போன்றவை தானம். உயரதிகாரிகளால் வரும் துன்பங்கள் தணிய உதவும் நாள். குற்றால அருவியில் ஸ்ரீகுற்றாலநாதர் ஆலயக் கோபுரக் கலசத்தைத் தரிசித்தவாறு தர்ப்பணம் அளித்து வர நோய், ஆடம்பரம், வியாபாரக் கூட்டு, கேளிக்கைகளில் பணம் விரயமாவது தடுக்கப்படும்.

29.9.2002 அஷ்டமி:- பெரும் பணக்காரர்களாக இருந்து இறந்தோர்க்கும், லாட்டரி, பெரும் பரிசு, பதக்கங்கள் பரிசு பெற்று இறந்தோருக்கும், பெரும் பதவிகளை வகித்து இறந்தோர்க்கும் இன்று விசேஷத் தர்ப்பணம். நீண்ட (தஞ்சாவூர்) வாழை இலையில் தர்பைச் சட்டம் வைத்து வில்வம், துளசி கலந்த தீர்த்தத் தர்ப்பணம். முழு வாழை இலையில் அறுசுவை உண்டிகள் தானம். மனக் குழப்பங்கள் தீர்ந்து நல்முடிவுகளை எடுக்க உதவும் நன்னாள். வெள்ளியங்கிரி மலைத் தலத்தில் எள்ளுடன் மாசிக்காய்ப் பொடி மற்றும் புண்ய நதித் தீர்த்தம் சேர்த்து நான்கு திசைகளிலும் தர்ப்பணம் அளித்து வர தடைபட்டுள்ள நற்காரியங்கள் நன்கு முடிந்திடும்.

பரிதிநியமம்

30.9.2002 நவமி:- கைக் குழந்தைகளை விட்டு இறந்தோருக்கும், தல யாத்திரையில், அல்லது யாத்திரைக்குப் பின் இறந்தோர்க்கும் இன்று விசேஷத் தர்ப்பணம். கோதுமை மாவை வட்டச் சப்பாத்தியாக இட்டு (பச்சையாகவே) இதன் மேல் தர்ப்பணம். பிறகு சப்பாத்தியைக் காக்கை, குருவிகளுக்கு இட்டு அவை எடுத்து உண்பதைக் கை கூப்பி வணங்கித் தரிசித்த பின் ஏனைய காரியங்களைத் தொடரவும். மூலத் தானத்திற்கு முன் இருபுறங்களிலும் சூரிய, சந்திரர்கள் உள்ள தலங்களில் தர்ப்பணம் அளிப்பது விசேஷமானது. கோதுமைச் சப்பாத்தி தானம். நெடுநாள் பகைமை, நோய்க் கொடுமை, வழக்குகள் தீர உதவும் திருநாள். சென்னை ஞாயிறு, பட்டுக்கோட்டை அருகே பரிதிநியமம் போன்ற சூரியத் தலங்களில் சூரியோதய நேரத்தில் சூரியக் கிரணங்கள் இடது காதில் படும் வண்ணம் தெற்கு நோக்கி அமர்ந்து தர்ப்பணம் அளித்து வர சொத்து, உயில், பாகப் பிரிவினைகளால் ஏற்பட்ட துன்பங்கள், மனஸ்தாபங்கள் தீர வழி பிறக்கும்.

1.10.2002 தசமி:- இன்று முழுப் பலாப் பழம், ஜாடி நிறைய நல்ல தேன் (ப்ளாஸ்டிக்கிலோ, பாட்டிலிலோ அல்ல) இரண்டையும் ஒரு ஏழைக் குடும்பத்திற்குத் தானமளித்த பின் தர்ப்பணம் செய்க! ஆண் அல்லது பெண் சந்ததி இன்றி இறந்தோர்க்கு இன்று விசேஷத் தர்ப்பணம். செம்பருத்தி மலர்கள் மேல் தர்ப்பைச் சட்டம் வைத்து ஏலக்காய், பச்சைக் கற்பூரம், ஜாதிக்காய் ஊறிய தீர்த்தத்தால், தர்ப்பணம், ஆலயத் தல விருட்சத்தைத் தரிசித்தவாறே தர்ப்பணம் அளித்தல் சிறப்பானது. பக்கத்து வீடு, பக்கத்துக் கடை, பக்கத்து நிலப் பகைமை தீர உதவும் நாள். மதுரை - கொடை ரோடு அருகே உள்ள அம்மைய நாயக்கனூரில் சிவ லிங்கமும், பெருமாளும் இணைந்துள்ள அற்புதமான ஸ்ரீகதலி நரசிங்கப் பெருமாள் ஆலயத் தீர்த்தக் கரையில் தர்ப்பணம் அளித்து வர, குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பேசாத மனஸ்தாப நிலை மாறி இல்லறம், குடும்ப நிலை சுமூகமாக உதவும் திதி நாள்!

பல ஆலயக் குளங்களிலும் பார்ப்பதற்கு நீர் வற்றியது போல் தோன்றினாலும், அனைத்திலும் தீர்த்த வளம் சூக்கும ரீதியாகத் துலங்குவதால் புதிய மண் கலயத்தில், மன சுத்தியுடன் நீரெடுத்துச் சென்று, தர்ப்பணம் அளிக்கவும். நிறையப் புஷ்பங்களையும், பூஜிக்க, அமர்வதற்கான நல்ல மரப் பலகைகளையும் ஏழைகளுக்குத் தானமாக அளித்திடுக!

2.10.2002 ஏகாதசி:-  குறைந்த ஆயுளிலேயே இறந்தோருக்கு இன்று விசேஷத் தர்ப்பணம். நவதான்யங்களைப் பரப்பி இதன் மேல் தர்ப்பைச் சட்டம் வைத்து, அருவி நீரில் எள், ஜவ்வாது கலந்த தீர்த்தத்தால் தர்ப்பணம், ஏழைகளுக்கு எண்ணெய், சீயக்காய்த் தூள், சோப்பு, மரச் சீப்பு, தலைக்கான தைலம் போன்றவற்றைத் தானம் செய்க!  மன சுத்திக்கு உதவும் நாள். மௌன விரதம் இருப்பது சிறப்புடையது. ராமேஸ்வரத்தில் அக்னித் தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்து, உடனே மௌனமாக தனுஷ்கோடி சென்று, அடுத்த தர்ப்பணம் செய்வதால், பிள்ளைகள், பெண்களின் கல்வி, திருமணம், சம்பந்திகள் பற்றிய பல பிரச்னைகளுக்குத் தீர்வுகள் கிட்டும். புது ஆடைகளைத் தானமாக அளித்தல் விசேஷமானது.

3.10.2002 துவாதசி:-  சித்தர்கள், மகான்கள், ஞானிகளாகத் தூல உடலில் வாழ்ந்து, தூல உடலைத் துறந்தோர்க்கு இன்று அர்க்யம் (இவர்களுக்குத் தர்ப்பணமல்ல). இல்லறத்தில் இருந்து துறவு வாழ்க்கை கொண்டோருக்குத் தர்ப்பணம். மாலை நேரத்தில் இறந்தோருக்கும், ஆஸ்பத்திரியில் இறந்தோருக்கும் விசேஷத் தர்ப்பணம். வெள்ளித் தட்டில் தர்ப்பணம் செய்க! வசதி இல்லாதோர் அல்லி அல்லது தாமரை இலையில் நீர் தெளித்திடில் தோன்றும் வெள்ளிப் பனித் துளிகளை வீழ்ந்து வணங்கி, தரிசித்து அவற்றின் மேல் தர்ப்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம், இட்லி, தேங்காய் சாதம் போன்ற வெண்ணிற உணவு வகைகள் தானம். செய்யாத தவறுகளுக்காக ஏற்பட்ட களங்கம் தீர உதவும் நாள். தேனி மலை மேல் தீர்த்தக் கரையில் தர்ப்பணம் அளித்தல் செவ்வாய் லோகப் பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும்.

கும்பகோணம் சக்கரப் படித் துறைக்குச் சுரைக் குடுவையில் புனிதமான கிணற்று நீர் கொண்டு சென்று, காவிரி நீரைச் சேர்த்து மயானக் கரையில் உள்ள பெருமாள் ஆலயத்தைத் தரிசித்த நிலையில் தர்ப்பணம் செய்து வர, குடும்பத்தில் தொடர்ந்து சோக நிகழ்ச்சிகள், அதிர்ச்சிகள் வந்திடக் காரணம் அறியப் பெற்றுப் பரிகார நிலைகளும் கிட்டும். இங்கு சர்க்கரைப் பொங்கலை மந்தாரை இலையில் வைத்துத் தானம் அளித்தலால் சில்லறைக் கடன்கள் தீர வழி பிறக்கும்.

4.10.2002 திரயோதசி:- மாமிசம் உண்ணும் பழக்கம் கொண்டு இறந்தோர்க்கு இன்று விசேஷத் தர்ப்பணம். பல வகை தான்ய வகைகளை மா, பலா மரப் பலகை மேல் தர்ப்பைச் சட்டம் வைத்துத் தர்ப்பணம். பலகைகளைத் தானம் செய்திடுக! மீன்களுக்குப் பொரி, மயில், கோழி, சேவல், புறாக்களுக்குத் தான்யங்கள், பசு, ஆடு, காளை, நாய், பறவைகளுக்கு உணவு இட்ட பின் உண்க! சென்னை அருகே திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் ஆலய ஹ்ருத்த பாபநாசினித் தீர்த்தத்தில் முதலில் சாலிஹோத்ர மகரிஷிக்கு அர்க்யம் அளித்துப் பின் அனைத்து ஜீவன்களுக்கும் காருண்யத் தர்ப்பணம் செய்தல் பலவிதமான தீய கர்ம வினைகளைப் போக்க உதவும்.

5.10.2002 சதுர்த்தசி:- தீ, ஆயுதம், வெடிகுண்டு ஆகியவற்றாலும், விபத்து, ராணுவப் போரிலும் இறந்தோர்க்கு இன்று மண் தரையில் தாமே பசுஞ்சாணியால் தரையை மெழுகி, (சிமெண்ட், மொஸைக், டைல்ஸ் தரை கூடாது) பச்சரிசி மாவால் சூரிய, சந்திரக் கோலமிட்டு இதன் மேல் உத்தராணி மரத் தாம்பாளம் வைத்து சூரிய, சந்திர சாட்சியாக இளநீரால் தர்ப்பணம். தேங்காயில் சர்க்கரை கலந்து தானம். மனோதைர்யம் பெருக உதவும் நாள். கன்யாகுமரியில் மூன்று சமுத்திரங்களும் இணையுமிடத்தில், மீன்களுக்குப் பொரி இட்டு, இக்கடற்கரையில் வாழை இலையில் மாதுளை முத்துக்களைப் பரப்பி, ஸ்ரீகன்யாகுமரி அம்மன் ஆலயத்தைத் தரிசித்தவாறு, மாதுளை முத்துக்களின் மேல் தர்ப்பணம், குறைந்தது 21 மாதுளம் பழங்களை ஏழைகளுக்குத் தானமளித்திட, ஒரே பையன், ஒரே பெண் என்றுள்ள குடும்பங்களில் மனக் குழப்பங்கள் தணிந்து குடும்ப நிலை நன்கு ஸ்திரமாக உதவும் திதி நாள்!

சமுதாயத் தர்ப்பணத் திருநாள்

6.10.2002 மாளய அமாவாசை:- வாழ்நாளில் தின்று தீர்த்த தாவர வகைகள், உண்டு களித்த கோழி, ஆடு, மீன் போன்ற மிருக வகைகள், சுவாசித்து அழிந்த வாயுக் கிருமிகள் போன்று சகல ஜீவன்களுக்கும் அனைவரும் தர்ப்பணம் அளிக்க வேண்டிய சமுதாயத் தர்ப்பணத் திருநாள்!

ஜாதி, மத, பேதமின்றி அறிந்தோர், அறியாதோர், பிடித்த நடிகர்கள், அரசியலில் இருந்தவர்கள், கூட வேலை பார்த்தவர்கள், தன் கீழ் பணி புரிந்தவர்கள், விபத்துகள், போர், பூகம்பம், தீ விபத்து போன்றவற்றில் இறந்தவர்கள் என யாவருக்குமான காருண்யத் தர்ப்பணத்தை மிகச் சிறந்த சமுதாய இறைப் பணியாக ஆற்ற வேண்டிய நாள்!

செவ்வாழை அல்லது கல்வாழை இலையின் நுனி தெற்கு நோக்கி வருமாறு வைத்து இதன் மேல் தர்ப்பைச் சட்டம் வைத்து இதன் மேல் மந்தாரை இலையில் மற்றொரு தர்ப்பைச் சட்டம் அமைத்து இதன் மேல் தாமரை இலை வைத்து மூன்றாவதாக ஒரு தர்ப்பைச் சட்டம் வைத்து, மூன்று இலைகளின் நடுவில் வசு, ருத்ர, ஆதித்யப் பித்ருக்களுக்கான நீர்த் தாரைகளாக மூன்று துவாரங்கள் இட்டு மேல் தாமரைத் தட்டில் தர்ப்பணம் அளித்திடுக! மூன்றிலும் தீர்த்தம் வடிந்து கீழே வரும் வகையில் துவாரங்களை அமைத்திடுக! இதுவே த்ரிதளத் தர்ப்பண முறை! இதோடு மேதினியாத் தர்ப்பணம், கபிலத் தர்ப்பணம், பரலி ஜலச் சாயைத் தர்ப்பணம் என விசேஷமான சில முறைகளும் உண்டு. இன்று மட்டும் எந்நேரமும், எப்போதும், எத்தனை தடவை வேண்டுமானாலும் தர்ப்பணங்கள் அளிக்கலாம்.

சர்ப்ப ஆறு நெடுங்குடி

அறந்தாங்கி - கீழாநெல்லிக் கோட்டை அருகில் உள்ள நெடுங்குடி நாக தீர்த்தம், சர்ப்ப ஆறு, மதுரை அருகே திருப்பூவன ஆலயத் தீர்த்தம் ஆகியவற்றில் தர்ப்பணம் செய்து வர வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் தணியும். கதிராமங்கலம் ஸ்ரீதுர்க்கை ஆலயம் அருகே உள்ள கட்கத் தீர்த்தத்தில் தர்ப்பணம் அளித்து வர பெண்களுக்குக் கர்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். அறுவை சிகிச்சையில் கர்ப்பப் பையை நீக்கிய சாபங்கள் தீர இது உதவும். மனைவி அருகில் இருக்க, இங்கு மனைவியின் அனுமதி பெற்றுத் தர்ப்பணம் அளித்தல் விசேஷமானதாம்.

சென்னை அருகே திருவள்ளூர், திருவிடைமருதூர், நெடுங்குடி, திருச்சி அருகே பூவாளூர், ராமேஸ்வரம், காசி, கேதார்நாத், பத்ரிநாத், அலகாபாத், ருத்ரப் பிரயாகை, அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் தலம், திலதைப்பதி (கோயில்பத்து), இடும்பாவனம் போன்ற பித்ரு முக்தித் தலங்கள் மிகவும் சிறப்புடைய மாளய பட்ச அமாவாசைத் தர்ப்பணத் தலங்களாகும்.

தெற்கு நோக்கி ஸ்ரீராமர் அருளும் (கும்பகோணம் - நன்னிலம் மார்கத்தில் உள்ள) கண்டிரமாணிக்கம் திருத்தலத்தைப் பித்ருக்கள் மாளய பிரம்மோற்சவத் தலங்களுள் ஒன்றாகக் கொண்டிருத்தல் நம் பாக்யமே! பித்ருக்களுக்கு உரிய திசை தென்புலத்தைச் சுட்டும் வண்ணம் தெற்கு நோக்கி இங்கு ஸ்ரீராமர் நின்று தரிசனம் தருவதால், இங்கு மாளய பட்ச அமாவாசை அன்று ஜாதி, மத, இன, குல பேதமின்றி ஏழைகளும் நற்பலன்களை அடையும் வண்ணம் தர்ப்பணங்களைச் செய்திட உதவுதலானது பித்ரு சாபங்களை நிவர்த்தி செய்வதுடன் அவர்களுடைய திரண்ட ஆசிகளையும் பெற்றுத் தருவதாகும்.

ஸ்ரீபுரந்தான்

பெயர்ச் சிறப்புத் தலங்கள் தொடர்

லக்ஷ்மி, மகாலக்ஷ்மி, வரலட்சுமி, சீதாலக்ஷ்மி, நாகலட்சுமி, திருப்பதி, லட்சுமி நரசிம்மன், ஸ்ரீகாந்த், திருவாழி, திருவேங்கடம், ஸ்ரீவத்ஸன், ஸ்ரீஹரி, ஸ்ரீதர், ராஜ்யஸ்ரீ, ஸ்ரீனிவாசன், ஸ்ரீப்ரியா, சீனு, சீனிவாசன், ஜெயலக்ஷ்மி, சீனிவாசராகவன், வேதலட்சுமி, பாக்யலட்சுமி, விஜயலட்சுமி, லக்ஷ்மிபதி, ராஜலக்ஷ்மி, ஸ்ரீவதனா, ஆதிலக்ஷ்மி, தனலக்ஷ்மி, நித்யஸ்ரீ, வாணிஸ்ரீ, ஸ்ரீகவி, ஸ்ரீபதி, லட்சுமிநாராயணன்,.....போன்ற "ஸ்ரீ, லட்சுமி, திரு" போன்ற திருமகளின் பெயரைக் கொண்டவர்களுக்கான ஆயுட்கால வழிபாட்டுத் திருத்தலம்

ஸ்ரீபுரந்தான் ஸ்ரீபிரதட்சிணேஸ்வரர் சிவாலயம். தற்போது இறைவன் ஸ்ரீபிரகதீஸ்வரர் என்றும் இறைவி ஸ்ரீபிரகன்நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
ஸ்ரீபுரந்தான் ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் ஆலயம்

ஸ்ரீபுரந்தான் சிவாலயம்

ஒரு யுகத்தில் பிரம்மாண்டமானதாக விரிந்து பொலிந்த, ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள ஸ்ரீபிரதட்சிணேஸ்வரர் ஆலயம், ஸ்ரீவேதநாராயண பெருமாள் ஆலயம் இரண்டுமே தற்போது மிகவும் சிதிலமடைந்து, நித்ய பூஜைக்கும் வசதியின்றி, வழிபாடின்றி இருப்பதால் இவற்றில் தினசரி வழிபாடுகள் சிறக்குமாறு செய்ய வேண்டியது, பக்த கோடிகளின், குறிப்பாக, லக்ஷ்மி, திரு, ஸ்ரீ போன்ற திருமகளின் அட்சரப் பெயர்களை உடையோரின் பெருங்கடமையாகும்.

ஸ்ரீபுரந்தானின் இந்த இரு சிவ-விஷ்ணு ஆலயங்களும் பக்தர்களின் வழிபாட்டிற்கென மீண்டும் நன்கு உருவாகிப் பொலிந்து வருங்காலத்தில் சிறந்திட்டால், இப்பூவுலகின் ஆன்மீக மையமாம் பாரதத் திருநாட்டில் பொதிந்துள்ள பாரம்பரிய லட்சுமி கடாட்சப் பிரவாளம் இத்தலத்திலிருந்து பூரித்துப் பெருகிப் பொங்கித் திரளும் அன்றோ! பிரபஞ்சத்திற்கே ஐஸ்வர்ய சக்திகளைப் பொழியவல்ல அதியற்புத லட்சுமி கடாட்சத் தலமே ஸ்ரீபுரந்தான் ஆகும்.

ஸ்ரீ, திரு, லட்சுமி போன்ற அட்சரங்கள் "திருமகளைக்" குறிக்கும் தானே! இதில் "ஸ்ரீ" என்பது கலியுகத்தில் மக்களின் துயர் துடைக்கும். அட்சர வழிபாட்டிற்காகத் தோன்றிய லட்சுமி கடாட்ச பீஜாட்சர சக்தியாகும். ஒவ்வொருவரிடமும் ஆத்ம லக்ஷ்மி உறைவதால் தாம் பெயருக்கு முன் "ஸ்ரீ" அல்லது "திரு" என்று கூறி விளிக்கின்றோம்! இத்தகைய லக்ஷ்மி நாமாட்சரப் பெயரை உடையோர், தம் ஆயுள் முழுதும் வழிபட வேண்டிய முக்கியமான இரு கோயில்களாக ஸ்ரீபுரந்தான் ஸ்ரீபிரதட்சிணேஸ்வரர் ஆலயம், ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் ஆலயங்கள் பிரகாசிக்கின்றன.

முந்தைய யுகங்களில் குபேரன் பூஜித்து, "வற்கடப் பசி அண்டா பொற்பட வசித் தலமாகப்" பொன்னாய் பொலிந்த ஸ்ரீபுரந்தானில், தற்போது பல்லாயிரம் ஆண்டுப் பழமையான இவ்விரண்டு ஆலயங்களும் சிதிலமாகி, பூஜிக்கும் வசதிகளும் இல்லாதிருக்கின்ற வேதனையான நிலை இனியும் தொடராது, இக்கோயில்களை முறையான சமுதாய வழிபாட்டிற்குக் கொணர வேண்டிய மகத்தான இறைப் பணிகளைத் திருமகளின் பெயர் பூண்டோரும், ஏனையோரும், தம் வாழ்வின் இறைலட்சியமாக ஏற்றுச் செயல்பட வேண்டும். ஒரு யுகத்தில் தங்கக் கனிமம் பரிமளித்த பூமி!

ஸ்ரீமுருகப் பெருமான்
ஸ்ரீபுரந்தான் சிவாலயம்

லட்சுமி கடாட்சம் எனில்....

ஸ்ரீலக்ஷ்மி தேவியைக் குறிக்கின்ற, திருமகளின் நாமாட்சரப் பெயர்களைக் கொண்டோரெல்லாம், பூர்வ ஜென்மத்தில் திருமகளை உபாசித்தவர்களும், திருமகளின் லோகவாசிகளும், பெருமாள் ஆலயங்களில் மகத்தான இறைச்சேவை புரிந்தவர்களும், மிகச் சிறந்த முறையில் தான, தர்மங்களை நிகழ்த்தியவர்களும் ஆவர். இவர்களில் பலரும் பூர்வ ஜன்மங்களில் நிலைத்த செல்வத்துடனும் வாழ்ந்திருப்பர். ஆனால் மாயையால், கர்ம வினைகளால் தற்போது தம் லட்சுமி பூஜா சக்திகளை மறந்து, இழந்து வாழ்கின்றனர். காரண, காரியங்களுடனேயே எப்பெயரும் ஒருவருக்கு அமையும் என்பதை இனியேனும் உணர்க!

திருமகளின் அனுகிரகத்தைத் தர வல்ல பெயர்களைச் சூட்டிக் கொண்டு விட்டால் மட்டும் போதுமா? அந்த அனுகிரகப் பொழிவினை இறையனுபூதிகளாகச் சமைத்திட வேண்டுமன்றோ! இதற்கு உதவுவதே ஸ்ரீபுரந்தான் ஆலயத் திருப்பணிகள்!

திருமகளின் அனுகிரகம் என்றால் பணப் பொழிவு, நகைகள், சொத்து, செல்வம் சேர்தல் மட்டுமே என்றே பலரும் எண்ணுகின்றனர். சிறு அவல் பிடியில் குசேலனுக்கு, ஸ்ரீகிருஷ்ணர், லட்சுமி கடாட்சத்தைக் காட்டினார் அன்றோ! செல்வம் கொண்டோரும் தான, தர்மங்களில் பெரு நாட்டம் கொண்டால் தான் திருமகளின் கடாட்சம் பரிபூரணம் பெறும்.

தான தர்மங்கள் செய்யச் செய்யத்தான் செல்வம் நிலைத்து நிற்கும். சம்பாதித்துச் சேர்ப்பது, வியாபார வளத்தில் வருவதெல்லாம் நிலைத்த செல்வமாகாது. மகாலக்ஷ்மிக்கு உரித்தான நாமங்களில் லக்ஷ்மி, ஸ்ரீ, திரு என்பது நிலையான செல்வத்தைக் குறிக்கும். நிலையற்ற செல்வத்தை அல்ல! நிலையற்றது செல்வமாகாது! மேலும் நிலையான செல்வம் என்பது வெறும் பணம், சொத்து நிலபுலன்கள் ஆபரணங்களை மட்டுமே குறிப்பதல்ல, மக்கட் செல்வமும் ஒரு செல்வமே! எனவே தான் திருமகள் ஆதிலட்சுமி, கஜலட்சுமி, தனலட்சுமி, தான்யலட்சுமி, சந்தானலட்சுமி, வித்யாலட்சுமி, வீரலட்சுமி, மகாலட்சுமி, வரலட்சுமி, தைர்யலட்சுமி என வாழ்க்கைக்குத் தேவையான பல செல்வங்களை அளிக்கப் பல அவதாரங்களை மேற்கொண்டு அருள்பாலிக்கின்றாள்.

சீர் தரும் ஸ்ரீபுரம்

நரசிம்மப் பெருமாளின் உக்ரம் தணித்திடத் திருமகளாம் ஸ்ரீலக்ஷ்மி தேவி, ஸ்ரீபுரா எனும் அரிய பறவை வடிவந் தாங்கிப் பல யுகங்கள் தொடர்ந்து பறந்து, உக்ரத்தில் திளைத்த ஸ்ரீநரசிம்ம மூர்த்திக்கு ஆங்காங்கே நிழல் தந்து, தம் பங்கிற்கு ஸ்ரீநரசிம்மரின் உக்ரம் தணிய பூஜித்த அதியற்புதத் தலம்! அவருடைய சாந்த யோக நிலைக்கு ஸ்ரீலக்ஷ்மி தேவியே தம் திருக்கரங்களால் சந்தனக் காப்பிட்டுத் துதித்த திருத்தலமும் ஸ்ரீபுரந்தான் புனித பூமியே ஆகும்!

ஸ்ரீபிரகன் நாயகி
ஸ்ரீபுரந்தான் சிவாலயம்

அதிவிரைவாக உக்ரத்துடன் பிரபஞ்சமெங்கும் நடனமாடிய நரசிம்மரை, சாந்த யோகத்தில் அமரச் செய்யும் வண்ணம் அஷ்ட லக்ஷ்மீ தேவியரும் ஒருங்கே ஒன்றாகத் தோன்றி ஸ்ரீநரசிம்மரை வழிபட்ட திருத்தலமும் இதுவே! ஒரு யுகத்தில் அஷ்டலக்ஷ்மி தேவியரும் இத்தலத்தில் எழுந்தருளி, எண்மரும் ஒன்றாய்க் காட்சி அளித்தமையால், எங்கு நோக்கினும் நவரத்தினங்களும், பசுக்களும், பொன்னும், பொருளும் விண்ணுக்கும், மண்ணுக்கும் நிறைந்து இப்புனித பூமியே ஐஸ்வர்ய லட்சுமி லோகம் போல் காட்சி அளித்தமையால் "ஸ்ரீபுரம்" (ஸ்ரீ=லக்ஷ்மி) என ஸ்ரீஅகஸ்தியரால் போற்றப்பட்ட அற்புதத் திருத்தலம்!

மற்றொரு யுகத்தில் பூலோகம் முழுதும் வற்கடப் பஞ்சம் ஏற்பட்ட போது, அனைவரும் நிதிக் குறை தீர, திருமகளைத் தேடி இங்கு வந்து பூஜித்திட விழைகையில், இத்திருநகரமாம் ஸ்ரீபுரந்தான் மட்டும் வற்கடப் பஞ்சத்திற்கு ஆட்படாமல், லட்சுமி கடாட்சம் பொங்கித் தழையப் பொலிவது கண்டு முக்கோடி மகரிஷிகளும், தேவர்களும் அதிசயித்து நின்றனர்.

திருமாலின் திருமார்பில் உறையும் பாக்யம் பெற்றமையால் திருமகளுக்கே ஸ்ரீபுரத்தாள் என்ற பெயரும் நிலைத்தது! ஸ்ரீலக்ஷ்மி தேவி இருக்கும் இடம் தானே ஸ்ரீமகாவிஷ்ணு இருக்கும் இடமுமாகின்றது. எனவே திருமாலும் "ஸ்ரீபுரத்தான்" ஆகின்றாரன்றோ! என்னே ஸ்ரீபுரம் மகிமை!

மயில் கழுத்து வண்ண ஆடைகளை அணிந்து, இங்கு மருதாணி இட்ட பாதங்களுடன், கரங்களுடன், கைகளில் பெரிய அகல் விளக்கில் மூன்று திரி இட்ட தீபங்களைச் சுமந்து ஸ்ரீபிரதட்சிணேஸ்வரர் ஆலயத்தில் அடிப் பிரதட்சிணம் செய்து, ஸ்ரீவேதநாராயணப் பெருமாளையும் வழிபட்டு, வெள்ளி மாங்கல்யம், மாங்கல்ய சரடுகளை ஏழைச் சுமங்கலிக்குத் தானமாக அளித்து வர, பணக் கஷ்டங்கள் நியாயமான முறையில் தீரும். இங்கு இரண்டு ஆலயங்களிலும் வழிபட்டால் தான் பூஜா பலன்கள் பரிபூரணமாகும்.

முதலில் ஆலயத்தில் நுழைவாயிற் கதவுகளைச் சீர்படுத்துவது முதல் எளிமையான பிரதோஷ பூஜைகள், தினசரி முறையாக பூஜைகள் நிகழ்வது வரை இவ்வாலயத்தில் ஆற்ற வேண்டிய இறைப் பணிகள் நிறைய உண்டு. பக்தி பூர்வமாக ஏற்று நடத்துவோர் எவராயினும் பரிபூரண லட்சுமி கடாட்சம் பெறுவர்!

"ஸ்ரீ" நாமாவளி தந்த ஸ்ரீகார்ஜினி மகரிஷியே போற்றி!

ஸ்ரீகார்ஜினி மகரிஷி என்பார் தாம் இறைவனுடைய சகஸ்ரநாமங்களின் (1000 போற்றி நாமங்கள்) பீஜாட்சரத் தரிசனங்களை மானுடக் கண்களால் கண்டு துய்க்கும் பெரும் பாக்யம் பெற்றவராவார். ஒரு முறை, ஸ்ரீமகாலக்ஷ்மிக்கு உரிய "ஸ்ரீ" எனும் அட்சர தரிசனத்தைக் காண வேண்டித் திருமாலைப் பிரார்த்திட, திருமாலும், பூலோகத்தில் லட்சுமி கடாட்சம் பொங்கும் இடங்களில் உள்ள 1008 சுயம்புச் சிவலிங்க மூர்த்திகளை வழிபட்டு வருமாறு மகரிஷியைப் பணித்தார்.

இவ்வாறு கார்ஜினி மகரிஷி வழிபட்ட 1008வது சுயம்பு லிங்க மூர்த்தியே ஸ்ரீபுரம் ஸ்ரீபிரதட்சிணேஸ்வர சிவலிங்க மூர்த்தியாம். இத்தலத்தில் இருந்து தாம் அனைத்து மூர்த்திகளின் திருநாமங்களிலும் லட்சுமி கடாட்சம் பொலிவதை உணர்ந்த கார்ஜினி மகரிஷி, சிவபெருமானை வேண்டி, "அனைத்து தெய்வ மூர்த்திகளின் அர்ச்சனை நாமாக்களின் முன் "ஸ்ரீ" பீஜாட்சரம் சேர்த்து ஸ்ரீலிங்காய நம: ஸ்ரீநாராயணாய நம:" என்றவாறாகப் போற்றும் ஸ்ரீபுர பீஜாட்சரப் போற்றி வழிபாட்டை நல்வரமாகப் பூலோக மக்களுக்குப் பெற்றுத் தந்தார்! இவ்வற்புத புராண வைபவம் நிகழ்ந்த தலமே ஸ்ரீபுரந்தான் திருத்தலம் ஆகும்!

ஸ்ரீபிரதட்சிணேஸ்வரர்
ஸ்ரீபுரந்தான் சிவாலயம்

கார்ஜினி மகரிஷியுடன் சித்தர்களும், மகரிஷிகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் "ஸ்ரீ" அட்சரத்தின் பீஜாட்சர வடிவை, அட்சர ரூபத்தை தரிசித்து முதன்முதலாகப் பிரபஞ்சத்திலேயே"ஸ்ரீயுடன் கூடிய சகஸ்ரநாமத் துதிகளால் சிவனையும், பெருமாளையும் அர்ச்சித்து வழிபட்ட அற்புதத் தலமே ஸ்ரீபுரந்தான் ஆகும்.

அக்னி பகவானுக்கு அருளிய ஸ்ரீபுர "ஸ்ரீ" சக்தி!

சிவனுக்கு வேள்வியில் ஆஹுதி தர மறுத்த தட்சனுடைய யாகத்தில் பங்கு கொண்டமையால், அக்னி மூர்த்திக்குப் பல வகையான அக்னிச் சக்தி இழப்புகள் ஏற்பட்டன. இதனால் பலவகை திரவியங்களை அக்னியால் பஸ்மம் செய்ய இயலாமலும், புனிதமான கற்பின் தேஜாக்னியைத் தாங்க இயலாமலும் அக்னி பகவான் அவதியுற்றார். இவற்றிற்கெல்லாம் பிராயச்சித்தங்கள் தேடி அக்னி மூர்த்தி பல தலங்களிலும் தவம் புரிந்து இறுதியில் ஸ்ரீபலாச அக்னித் தீர்த்தம் உள்ள ஸ்ரீபுரந்தான் தலத்தை வந்தடைந்தார். இங்கு ஸ்ரீஆங்கிரஸ மகரிஷி அருளியபடி சந்தனக் குழம்பின் நடுவே அக்னி ஹோமம் வளர்த்து பல கோடி அக்னி யாகங்கள் நிகழ்த்தி, ஸ்ரீலக்ஷ்மி தேவி நரசிம்மருக்குச் சார்த்திய சந்தனக் காப்புத் தரிசனம் கண்டு தாமிழந்த பல அக்னிச் சக்திகளை அவரிடமிருந்து சிவனருளால் மீண்டும் பெற்றார். அக்னி பகவான் பூலோகத்தில் விளக்கு வழிபாட்டிற்காக விசேஷமான ஸ்ரீகணாக்னி சக்தியைப் பெற்ற திருத்தலமும் இதுவேயாம்!

ஸ்ரீஅகஸ்தியர்பிரான் அருளியபடி, திருமகள் இங்கு சந்தன லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு, இந்த சந்தன ஹ்ருதயாக்னி பூஜா பலன்களால் நரசிம்மரின் சாந்த யோக நிலைக்குச் சந்தனக் காப்பு இட்டுப் பூஜிக்கும் பாக்யம் பெற்றதுடன் திருமாலின் மார்பில் சந்தனம் துலங்கும் இடத்தில் நிலைபெறும் பாக்யத்தையும் பெற்றாள். ஸ்ரீபுரந்தான் பெருமாள் தலம் பற்றி மேலும் விளக்கங்களை இந்த வெப்தளத்தில் பிறிதோரிடத்தில் காணலாம்.

தனக்கு மிஞ்சி தானம் - ஓர் ஆன்மீக விளக்கம்!

திருமகள் பெயர்களை உடையோர் மட்டுமன்றி பெருங்கடன்கள், பணக் கஷ்டம், வறுமையில் வாடுவோர் யாவரும் இங்கு அடிக்கடி வழிபடுவதுடன் "தனக்கு மிஞ்சிய" அளவில் தானம் செய்து பார்த்தால்தான் இத்தலத்தின் அற்புத சக்திகளைத் தாமே உணரப் பெறுவர்.  தனக்குப் போக மிஞ்சியதைத் தானம் என்பது ஒரு வகை தானம்! தனக்கு மிஞ்சுகிறதோ இல்லையோ என பேதலித்து எண்ணாது உளமாற, குசேலன் போல் இருப்பதைத் தானமளிப்பதே உத்தம தானம். இதுவே பல்கிப் பெருகும் பரிபூரண லட்சுமிகடாட்சத்தைத் தரும்.

புனர்பூச நட்சத்திரம்

நட்சத்திரச் சிறப்பு ஆலயத் தொடர்

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுள் காலத்தில் வழிபட வேண்டிய
வாணியம்பாடி ஸ்ரீஅதிதீஸ்வரர் ஆலயம் அமாவாசைத் தர்ப்பண வழிபாட்டிற்கான பித்ரு முக்தித் தலம்

அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுள் காலம் முழுதும் வழிபட வேண்டிய சிறப்பான ஆலயங்கள் பற்றிய விளக்கங்களையும், சிறப்புகளையும் இத்தொடரில் அளித்து வருகின்றோம். இதுவரையில் ரேவதி, அனுஷம், ஆயில்யம், கார்த்திகை, திருவாதிரை, அவிட்டம், பரணி, சதயம், ரோஹிணி ஆகிய ஒன்பது நட்சத்திர ஆலயங்கள் அளிக்கப்பட்டுள்ளன (வாணியம்பாடி பஸ் தடம்: வேலூர்-ஆம்பூர்-வாணியம்பாடி - திருப்பத்தூர்)

வாணி, வாக்சக்தி பெற்றுப் பாடிய தலமே வாணியம்படி!

பிரம்மாவின் வேள்வியைத் தடுக்க முயன்றமையால், வாக்சக்தியை இழக்கும்படியான கலைவாணியாம் ஸ்ரீசரஸ்வதி தேவி, கடுந்தவம் புரிந்து அனைத்து வித்யா தத்துவங்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில், ஸ்ரீஹயக்ரீவர் மூலமாக, சிவனருளால் அறியப் பெற்ற அதியற்புதத் தலமே வாணியம்பாடி ஆகும். வித்யாக் கிரணங்கள் பரிபூரணமாகப் பரிணமிக்கும் பூமி!  ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியை மணந்திட, ஸ்ரீவித்யாலக்ஷ்மி தவம் புரிந்து அருள் பெற்ற தலம்!

"வாணி! உன் திருவாயால் எம்மைப் பாடிடுக!" என்று இறைவனே ஆணையிட்டு, ஊமையாயிருந்த கலைவாணியை இசைக்கப் பணித்து அருளிய திருத்தலமே "வாணியம்பாடி" அருட் திருமறையூராம் வேதாரண்யத்தில் யாழைப் பழித்த மொழியாளாம் பார்வதி தேவியிடம், இசைக்க வந்து வெட்கி, வீணையை மூடி வைத்த சரஸ்வதி தேவிக்கு, ஸ்ரீஹயக்ரீவர் முன்னிலையில் ஈஸ்வரியே, தம் வீணையை மீட்டுத் தந்து பாடச் செய்து வித்யா சக்திகளை நிரவிய தலமாதலால் வாணியம்பாடி ஆயிற்று!

ஸ்ரீகாலபைரவர்
ஸ்ரீபுரந்தான் சிவாலயம்

அதிதிக்கும் அன்னம்பாலித்தல் ஆத்ம சக்தியைத் தரும்

அதிதி என்றால் (அழையா, அறிந்திரா) விருந்தினர் என்று பொருள். அக்காலத்தில் அதிதி போஜனம் என எவருக்கேனும் உணவிட்ட பின்னரே நிதமும், மூன்று வேளைகளிலும் உணவு ஏற்கும் நற்பழக்கத்தை நம் பெரியோர்கள் கொண்டிருந்தனர். இரவில் கூட வீட்டிற்கு வெளியே வந்து, "இரவு உணவிற்காக அதிதிகளாக வருக, வருக!" எனக் கூவி அழைத்து நம் பெரியோர்கள் மனங்கனிய உணவிட்ட புண்ணிய பூமியே நம் பாரத நாடாகும்.

இதே போல் வீட்டு வாசலில் திண்ணை அமைத்து, யாத்ரீகர்களுக்குத் தங்க இடமும், உணவும் அளித்து, அதிதி வாசப் புண்ய சக்திகளை முன்னோர்கள் பெருக்கிக் கொண்டமையால்தான் நற்சந்ததியர்களாக இன்று வீடு, வாசலுடன் நாம் நன்னிலையில் வாழ்கின்றோம் என்பதை உணர்ந்திடுக! பிதுரார்ஜிதமாக, வழிவழியாக வந்த சொத்தல்ல, தான் கடுமையாக உழைத்துச் சம்பாதித்துப் பெற்றது என்ற எண்ணம் வந்திடினும், இதற்கும் மூதாதையரின் பித்ரு சக்தியினருள் தேவை என உணர்ந்திடுக. ஆனால் இப்பிறவியில் இதே போல் ஏழை, எளியோர்க்குரிய தான, தர்மக் கைங்கர்யங்களை நாமும் செய்து வந்தால்தாமே, வரும் தலைமுறையினர் இதே போல, நல்ல வேலை, நல்வியாபாரம், வீடு, வயல்கள், நல்ல சந்ததிகளுடன் செம்மையாக வாழ்வர் என்று தெளிந்திடுக!  இல்லையேல் குடும்பப் பிரச்னைகள் படிப்பின்மை, அறிவு மங்குதல், சொத்துத் தகராறுகள், தீயொழுக்கம், வேலையின்மை போன்ற துன்பங்களே பெருகும்.

காச்யப மகரிஷியின் பத்னியாம் அதிதி தேவியே தேவாதி தேவர்களைப் பெற்ற உத்தமி! புனர்பூச நட்சத்திரம் தோறும் கடும் விரதமிருந்து, இங்கு வாணியம்பாடிப் புனித பூமியில் வழிபட்டு உத்தம தேவ நிலைகளைக் கொண்ட தேவர்களைப் பெற்றாள். அதிதியும், காச்யப மகரிஷியும் தினமும் மூன்று வேளைகளிலும் அதிதியாக வந்தோர்க்கு உணவிட்ட பின்னரே தாம் உணவேற்பார்கள். அதிதிகளை இன்முகத்துடன் உபசரித்து அன்னம் பாலிப்பைத் திறம்பட ஆக்கிப் பெரும் பேறு பெற்றனர்.

புனர்பூசத்தாரிடம் விருத்தியாகும் அரிய அன்னசார சக்தி!

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தோர், தினமும் ஒருவருடைய பசியையாவது ஆற்றும் (ஒரு உணவுப் பொட்டலமாவது அளிக்கும்) நற்பழக்கத்தைக் கைக் கொள்ள வேண்டும். அன்னதான தர்மக் கைங்கர்யங்களை ஆற்றி, சேவை செய்து பிறரையும் நிறைய ஈடுபடச் செய்ய வேண்டும். தினமும் ஸ்ரீஅன்னபூரணி தேவியைப் பூஜித்து வர வேண்டும். வாணியம்பாடித் திவ்யத் திருத்தலத்தில்தாம் ஸ்ரீசரஸ்வதியாம் கலைவாணி, தானே மானுடப் பெண் வடிவில் உணவு சமைத்து, அதிதியாக வந்த சிவபெருமானுக்கு அன்னம்பாலித்து அரிய வித்யாவதார சக்திகளைப் பெற்றார். புனர்பூச நட்சத்திரம் மற்றும் மாதப் பௌர்ணமி தோறும் இங்கு சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகமும், ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு வெண்ணிற நறுமணப் பூக்களால் பூச்சொரியலும் நிகழ்த்துதல் சிறப்பானதாம்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
ஸ்ரீபுரந்தான் சிவாலயம்

மாதாந்திர மளிகைச் சாமான்களை, குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற தானியங்களை, புனர்பூச நட்சத்திர நாளில் வாங்குவது தான்ய விருத்தி சக்தியை அளிக்கும். பால் காய்ச்சிப் புது வீடு புக, மாற்று வாடகை வீடு செல்ல, புனர்பூசம் சிறந்த நாளாகும். விருத்தியாகும் சக்திகளைக் கொண்ட நாளாதலால் இந்நட்சத்திர நாளில் முடி வெட்டுதல், ஷேவ் செய்தல், எதையும் விற்றல், கடன் வாங்குதல், ஒட்டடை நீக்குதல் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

ஆசிரியர்களுக்கான அற்புத நட்சத்திர நாள்!

புனர்பூச நட்சத்திரத்தார் தம் ஆயுள் முழுவதும் வழிபட வேண்டிய தலங்களுள் வாணியம்பாடியும் ஒன்றாக விளங்குவதால், மாதாந்திரப் புனர்பூச நட்சத்திர நாளில், இங்கு அடிப் பிரதட்சிணம் செய்து வழிபட்டு வர வேண்டும். பொங்கி விருத்தி அடையும் திரவியங்களான நீர்வீழ்ச்சி மற்றும் நதி நீர், புஷ்பம், பால், தேன், அரிசிச் சாதம் (அன்னாபிஷேகம்) போன்றவற்றால், இங்கு ஸ்ரீஅதிதீஸ்வரரையும், ஸ்ரீசரஸ்வதியையும் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டு வருதல் சிறப்புடையது. மிகவும் புனிதமான ஆசிரியப் பணியில் இருப்போர் தம் வித்யா சக்திகளை விருத்தி செய்து கொள்ள வழிபட வேண்டிய தலமிதுமே!

ஹோட்டல் துறையில் அன்ன தோஷங்கள் நீங்கிட....

ஹோட்டல், சிற்றுண்டிக் கடை வைத்திருப்போர் மாதம் ஒரு முறையேனும் இங்கு ஸ்ரீஅதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு வாழை இலை நிறைய உணவளித்து அதிதி போஜனப் புண்ய சக்திகளைப் பெற்றாக வேண்டும். அறிந்தோ, அறியாமலோ சுத்தமற்ற உணவால் குவியும் மலையளவு தோஷங்களுக்கு ஓரளவேனும் இப்போதிருந்தே பிராயச்சித்தம் பெற இத்தலத்தில் அன்னதானம் செய்து வருதலால், இங்கு எப்போதும் பிரசன்னமாய் இருக்கும் அதிதி தேவ மூர்த்திகள் துணைபுரிவர். சூரிய சந்திர மூர்த்திகள் இருவரும் ஒன்றாக வந்து வழிபடும் போதாயனப் புண்ய பூமிகளில் இதுவும் ஒன்றாதலாலும், மாதந்தோறும் அமாவாசையன்று, இங்கு அதிதி லோகப் பித்ருக்கள் இறைவனை வழிபடுவதாலும் இது சிறப்பான தர்ப்பண, பித்ரு முக்தித் தலங்களில் ஒன்றாகவும் பொலிகின்றது. எனவே புனர்பூசத்தவர்கள் தம் ஆயுள் காலம் முழுதும் அடிக்கடி இங்கு வழிபட்டு நட்சத்திர தேவதா ப்ரீதிகளை நிறைத்துக் கொண்டு சிறப்பான வாழ்வைப் பெற்றிடுவீர்களாக!

மாத சிவராத்திரி

திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்

கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர்

பல ஆண்டுகளுக்கு முன் திருஅண்ணாமலையில் மானுட ரூபத்தில் நடமாடி, மக்களோடு மக்களாய் வாழ்ந்து, மறைந்து, ஜீவாலயம், ஜீவசமாதி பூண்டு, என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாகப் பரிமளிக்கும் எண்ணற்ற அருணாசலச் சித்தர்களைத் தரிசித்திட, இத்தொடரின் மூலம், அனைவரையும், பல தலைமுறைகளுக்கு முன்னதான அருணாசலப் புனித பூமிக்கு அழைத்துச் செல்கின்றோம்

கும்பமுனியாம் ஸ்ரீஅகஸ்தியர்!

கும்பமுனி என்று போற்றப்படும் அகஸ்தியர் சித்தர்பிரான், உத்தம சித்தர்களின் தலைமைப் பீடாதிபதியாகவும், மகரிஷிகளின் உத்தமப் பீடமாகவும் போற்றப்படுகின்ற சித்த மாமுனி! கருவிலே தோன்றிடாத, தான் தோன்றிப் பிரபுத் தத்துவராக, சர்வேஸ்வரன் அருளால் இறைப் பேரொளி பொங்கும் பெருங் கலசக் கும்பத்தில் சுயம் பிரகாசமாய்த் தோன்றியவரே அகஸ்தியர் ஆவார். இதுகாறும் எத்தனையோ சதுர்யுகங்களில் எத்தனையோ கோடானு கோடி கும்ப முனிகளும், அகஸ்தியரும் பிரபஞ்சத்தின் பல கோடி லோகங்களிலும் தோன்றி, மறைந்து தோன்றிக் கொண்டே, சிரஞ்சீவியாய்த் துலங்கிச் சிறக்கின்றனர்.

ஸ்ரீபூண்டிமகான் ஜீவசமாதி
கலகபாக்கம்

ஸ்ரீஅகஸ்தியரைத் தோற்றுவித்திட, ஸ்ரீமங்களநாயகி சமேத ஸ்ரீகும்பேஸ்வரராய் மஹேஸ்வரன் தோன்றி, ஸ்ரீமகாகணபதியைப் போற்றி ஓர் அற்புதக் கும்பக் கலசத்தைத் தோற்றுவித்தார். பிரபஞ்சத்தின் அனைத்து மண் வகைகள், புனித நதிகள், அருவிகள், கடல் ஊற்றுகள், கிணறுகள் போன்ற பல கோடித் தீர்த்தங்கள், அனைத்துப் பல்லாயிரங் கோடி மூலிகைத் திரவியங்கள் கூடிய மிருத்திகைகள், மூலிகைகளின் சாராம்சத்தைத் தாங்கி, குருந்த வாசம் கொன்றை வாசம், வேம்பு வாசம் என 10008 மூலிகா விருட்சங்களின் அடியில் மாமறைக் குயவச்சரம் பெற்று, பிரபஞ்சத்தின் அனைத்து விதமான ஹோம அக்னி குண்ட வகைகளிலும் பரிமளம் பெற்று வந்திட்ட தெய்வீகக் கும்பக் கலசமிது!

ஸ்ரீசாமவேதீஸ்வரராய், இறைவன் அனைத்து வேதங்களையும் கும்பகலசத்திற்கென ஓதி, ஸ்ரீதீர்த்தபுரீஸ்வரராய்ச் சிறந்து, தன் விரிசடை ஜடாமுடிக் கங்கையின் ஒளிக் கீற்றில் தோன்றிய ஒரு துளி கங்கை தீர்த்தத்தை ஏந்தி, ஸ்ரீகங்காதர‌ராய்ப் பொலிந்து தம் சிரசில் பரிணமிக்கும் சிவகங்கை நீரைக் கும்பக் கலசத்தில் வார்த்திட்டார். ஸ்ரீசூர்ய கோடிப் பிரகாச மூர்த்தியாய் பல்லாயிரங் கோடி சூர்யப் பிரகாசத்தைக் கலசத்திற்கு ஊட்டிய சர்வேஸ்வரனே, ஸ்ரீவேதபுரீஸ்வரராய் தம் திருக்கரங்களால் கும்பக் கலசத்திற்குக் கும்பாபிஷேகம் செய்து, ஸ்ரீவிருட்சபாலீஸ்வரராயத் தாம் திருக்கயிலையில் தோற்றுவித்த தம்பீரிப்ரியா விருட்சத்தாலான தொட்டிலைக் கலசக் கும்பத்தினுள் பொருத்திட்டார்.

அனைத்து தெய்வ மூர்த்திகளும், அம்பிகையரும், சித்தர்களும், மகரிஷிகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் ஒன்று சேர்ந்து ஸ்ரீநாகேஸ்வரராய் ரூபம் ஏற்று வந்த சிவனாருடன் விண்ணளாவ நாகலிங்க புஷ்பங்களைத் தூவி நிற்க, ஸ்ரீஅருணாசலேஸ்வராய்த் தோன்றிய இறைவன், இந்த அவதாரப் பிரகாசத்தில் தம்மிடம் தோன்றிய அகஸ்தியரை, ஸ்ரீஉமா மஹேஸ்வரராய்ச் சிறந்து வந்து ஸ்ரீபால அகஸ்தியரை பேரானந்தத்துடன் தொட்டிலினுள் இட்டார். ஸ்ரீபிரம்மபுரீஸ்வரராய், கும்பக் கலசத்திற்கு பிரம்ம சக்தியை விதானமாக (மூடி) இட்டு, ஸ்ரீசர்வலோக நாதராய்ப் பரிணமித்து அகஸ்திய மகரிஷியை, அருட்பெருஞ் சித்தர்பிரானாய்ப் பிரபஞ்ச இறைச் சேவைக்கென ஈஸ்வரன் அர்ப்பணித்தார். அக்கும்பமானது ஸ்ரீஅகஸ்தியரின் ஆக்ஞைப்படி பூலோகத்தில் எவ்விடத்திலும் தரையிறங்கவும் ஈஸ்வரனும் மகாலிங்க மூர்த்தியாய்த் தோன்றிப் பணித்தார்!

செய்யாறில் செறிந்த சிவக்கலசம்!

சிவ ஆக்ஞையால் திருக்கயிலாயத்தில் இருந்து புறப்பட்ட அக்கும்பக் கலசமானது, இறையருளால், ஸ்ரீஅகஸ்தியரின் சிவ சித்தப்படி தற்போதைய செய்யாற்றுப் பகுதியில் அந்த யுகத்தில் வந்திறங்கியது! சேயாகிய ஸ்ரீஅகஸ்தியர் உற்பவ ஆற்றுப் பரிமளத் தோற்றம் கொண்டதே சேயாறாகிப் பின் வழக்கில் செய்யாறாயிற்று! திருக்கயிலாய வாசத்திலிருந்து பூலோக வாசங்கொண்ட ஸ்ரீஅகஸ்தியரை, அனைத்து தேவ மூர்த்திகளும் மீண்டும் ஆசிர்வதித்துப் போற்றினர்.

செய்யாறு ஆறு கலசபாக்கம்

ஸ்ரீபால அகஸ்தியருக்கு, ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளே ஆய கலைகள் அனைத்தையும் ஞான வித்யைகளாக அருளிட, தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் தண்டமிழை ஊட்டிட, பிரம்ம ஞானமாகவே ஸ்ரீஅகஸ்தியர் அனைத்தையும் ஞானப் பிரகாசமாகத் தம்முள் ஏற்றிட்டார். ஸ்ரீஅகஸ்தியருக்கான பூலோக முதல் அன்னச்சார விருந்து திருமுருகனால் செய்யாறருகே படைக்கப்பட்டதே ஆகும்!

சிவபெருமான் அரிய பிரம்ம சக்தியால் கும்பக் கலசத்திற்கு இட்ட பிரம்ம சக்தி கூடிய மூடியாகிய விதா(மா)னத்தைத் திறக்கவல்ல யோக சக்திகளைப் பூண்டவரே ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி ஆவார். தம் பத்னியாம் ஸ்ரீபகுளாதேவியின் துணையுடன், ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷியே கும்பக் கலசத்தின் பிரம்ம விதானத்தைத் திறந்து ஸ்ரீஅகஸ்தியரைத் தரிசித்து அவருடைய மகிமைகளை யாவர்க்கும் உணர்த்தினார்.

கோடி கோடி அகஸ்தியர்களும், கும்ப முனிகளும்!

செய்யாற்றுப் பகுதியில் ஸ்ரீஅகஸ்திய கும்ப கலசம் தங்கிய இடமே கலசப்பாக்கம் ஆயிற்று. எத்தனையோ கோடி அகஸ்தியர்கள் தோன்றித் தோன்றாமலும், தோன்றாமல் தோன்றியும் இக்கும்பக் கலசத்தில் இருந்து உற்பவித்துள்ளனர் என்ற சிவரகசியத் தாத்பர்யத் தத்துவங்களைத் தென்னாடுடைய சிவனே அறிவார்.

இவ்வாறாக ஸ்ரீஅகஸ்தியர் பூமியிற் தோன்றிய பல சதுர் கோடி யுகங்களுக்குப் பின்....எத்தனையோ கோடி யுகங்களுக்கு ஒளிப் பிரகாசம் தந்து ஜோதிப் பிரவாகமாய் ஒளிர்ந்திட்டதே ஸ்ரீஅகஸ்திய கலசமாம்!

......பல கோடி சதுர்கோடி யுகங்களுக்குப் பிறகு....இத் தேவகலசம் பொலிந்த இடத்தில் சோலைகள் தோன்றி மறைந்தன!  ஆற்று வெள்ளமும் நிரவியது.

ஒரு கடுங் கோடையில்....செய்யாற்றில் ஆற்றில் நீர் வற்றிட....ஆற்றினுள்...குங்கிலியம் இட்டது போல் ஓரிடத்தில் நறுமணச் சாம்பிராணி மணம் கமழ்ந்திட....மக்கள் திரண்டு அவ்விடத்தை அகழ்ந்து பார்த்திட....

ஆற்றுப் புறத்தில் அற்புதச் சித்தர்!

அங்கு அற்புத யோகியின் விரிசடை பரந்திருப்பது தெரிந்தது! அவர்கள் மிகவும் கவனமாய் மேலும் மண்ணைத் தோண்டித் திரட்டிட.....ஆங்கே ஆழப் பரிதியில்....ஒரு சித்தர், சிலை போல் அசைவற்று, யோக தீர்கமாய் அமர்ந்திருந்தார். கற்சிலை போல் வஜ்ரமகாதேவ யோகம் பூண்டிருந்த அவரை, அதே யோக நிலையில் மக்கள் தினமும் அவரை வணங்கி வர....நாளடைவில் பூஜைகள் விருத்தியாகி, அங்கு சங்கு, ஜயங்கொண்டம், பஞ்ச வாத்யம், பூஜை மணி ஒலிகள் நன்கு முழங்களாயின!

அவர் சற்றே தம் திருக்கண்களைத் திறந்திட....அவருடைய இந்த நேத்ர பாவன யோக நிலையிலேயே (கண் மூடாது விழித்த நிலை) பக்தர்கள் வழிபாடும் சிறிது காலம் தொடர்ந்தது!  இருந்த இடம் விட்டு அகலாது 30 வருடங்களாக இவ்வாறு இருந்தார் இச்சித்தர்பிரான்! சிறுநீர், மலக் கழிவுகளும் அனைத்தும் இருந்த இடத்தில் தாம் பெய்யப் பெற்றன! ஆனால்....என்ன அற்புதம்! மலமும், கழிநீரும் நாறிடாது, வாசனை திரவியங்களான ஜவ்வாது, புனுகு, அத்தர், சாம்பிராணி, பச்சைக் கற்பூரம் இட்டாற்போல் ஊரெங்கும் நறுமணங் கமழ்ந்தது!

மும்முலத்தை நீக்கவல்ல சிவதரிசனத்தைப் பெற்றுத் தரவல்ல சித்த யோகி அமர்ந்த இடத்தைச் சுற்றிலும் திருநீற்று நறுமணமும் திரண்டது. வருடங்களும் கடந்தன!

அவரும் மலப்பீடான் சித்தராக போற்றப்பட்டார். மும்மலங்களைக் களைந்து முக்தி நிலைகளைத் தரவல்ல அரும்பெருஞ் சித்தரென மக்கள் உணர்ந்து ஆனந்தம் கொண்டனர். ஆற்றில் எந்நேரமும் நீர் பெருகி விடும் என அஞ்சி, பக்தர்கள் மாசில்லா அன்புடன் அவரிடம் கெஞ்சி, அழுது....கூத்தாடி அவரைத் தம் ஊருக்குள் வந்து குடி கொண்டு அருளுமாறு அழைத்திட....அவரும் சற்றே நகர்ந்து...மெல்ல மெல்ல நடந்து பக்தர்களை ஆட்கொண்டார். பிறகென்ன? ஆயிரக் கணக்கானோரை அழைத்துக் கொண்டு கலசபாக்கம், வெங்கிக்கால் வழியே அருணாசலத்தை அடைந்து அருணாசல கிரிவலமும் வருவதாக அவருடைய காருண்யச் சித்தமும் கனிந்தது. கிரிவலம் முடிந்த பிறகு கலசப்பாக்கம் திரும்பிடுவார்.

ஆனால் சித்தர் போக்கு சிவன் போக்கன்றோ! பக்தர்கள் தொடர....அவர் அருணாசலத்தைக் கிரிவலம் வருவதற்கு மூன்று மணி நேரமும் ஆகும். மூன்று மாதங்களும் ஆகும். சித்தர்கள் கணக்கை என்னென்று சொல்வது? இவ்வாறாகப் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மும்மலம் நீக்கிட அருள்வழி காட்டிய சித்தரே மலப்பீடான் சித்தர்! இவ்வாறாகவும் ஆண்டுகள் பல கடந்தன.

பூண்டி மஹானான மலப் பீடான் சித்தர்!

மலப் பீடான் சித்தரே பூண்டி மகானாக, பூண்டி ஆற்று சுவாமிகளாக, பூண்டிச் சித்தராகப் போற்றப்பட்டு அன்றும் இன்றும், என்றும் வாழும் ஏகாந்த ஜோதித்வச் சித்தராய்ப் பிரகாசிக்கின்றார். போளூர் கலசப்பாக்கம் அருகே பூண்டி கிராமத்தில் ஜீவசமாதி பூண்டு பக்தர்களுக்கு என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் அருள்கின்றார். பூண்டி மகானாகிய மலப் பீடான் சித்தரே ஸ்ரீஅகஸ்தியக் கும்பக் கலசத்தில் தான் தோன்றிப் பிரபுவாக, ஜனித்து ஸ்ரீஅகஸ்திய அம்சங்களுடன் என்றும் வாழும் ஏகாந்த ஜோதிச் சித்தராய்ப் பரிமளிப்பவர்.

அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை....ஏதேனும் ஒரு தூல வடிவில் பக்தர்களே பரிபூரணமாக நன்கு உணரும் வகையில் மலப்பீடான் சித்தர் மாத சிவராத்திரி அன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்றார். இப்பொன்னாளானது நடப்பு சித்ரபானு ஆண்டில், புரட்டாசி மாதத்தின் அமாவாசைக்கு முதல் நாள், மாத சிவராத்திரி நாளில் வருகின்றது.

பெருங்குற்ற வினைகள் கழிக்கும் அரும்பெரும் சிவராத்திரி!

பலவிதமான பெருந் தவறுகளைச் செய்து விட்டு மனைவி, பெற்றோர்கள், பிள்ளைகளிடமும் சொல்ல இயலாமல், மனதினுள் மலப்பாணமாக, விஷங்களாக விளைவுகளைத் தேக்கி வைத்துள்ளோர் இவற்றை களைந்து, மனமும், உள்ளமும் தூய்மை அடைவதற்காக பிராயச்சித்த வழிகளைத் தரும் மாத சிவராத்திரி நன்னாள் இது! உடல் தூய்மையும், உள்ளத் தூய்மையும் இன்றி தெய்வ நன்னிலை கிட்டாது. வெளியில் எத்தகைய இறை வழிபாடுகளை மேற்கொண்டாலும், உடலால், உள்ளத்தால் செய்த தவறுகளுக்கு முழுமையான பிராயச்சித்தம் பெற்றால் தானே பூஜா சக்திகள் முழுமையாகப் பலன்களைத் தரும். தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தக்க நிவாரணம் அளித்தால் தான் எவ்வித மன, உள்ள மலங்களும் கழியும்.

ஸ்ரீசுதரின் சுடர்
உய்யக்கொண்டான்மலை திருச்சி

நல்ல வீடு அமைந்திட, வீட்டு தோஷங்கள் நீங்கிட....

வாடகைக்கும், வாங்குவதற்கும் நல்ல வீடு கிடைக்காது அலைவோர் நல்ல வீட்டைப் பெற்றிட இச்சிவராத்திரி நாளில், ஆழ்ந்த நம்பிக்கையுடன் கிரிவலம் வருவதுடன், தினமும் தன் கையாலேயே மூன்று உருண்டைகள் சந்தனம் அரைத்து, அவரவர் ஊர் ஆலயத் தல விருட்சத்திற்கு இட்டு வழிபட்டு வர வேண்டும். மூன்று சந்தன உருண்டைகளையும் ஆயுத எழுத்தைப் போல் தல விருட்சத்திற்கு இட்டுக் குங்குமம் பதித்து வணங்கி வர வேண்டும். இது வெறும் ஆயுத எழுத்தன்று! ஆயுள் சுத அட்சர எழுத்தே ஆயுத எழுத்தாயிற்று! ஸ்ரீகாயத்ரீ மண்டலத்தில் தோன்றிய சித்புருஷரான சுதர் என்பார் சுதபுத மகரிஷியின் சற்குரு ஆவார். கலியுகத்திற்குத் தேவையான பலவிதமான ஸ்ரீகாயத்ரீ முத்திரைகளை, ஆயுத எழுத்தைத் தமிழுக்கு அளித்த மகாசித்புருஷர்!

இன்றைய மாத சிவராத்திரி நாளில் அவரவர் நட்சத்திர, ராசிக்கு உரிய சக்கரம், மோதிரம், யந்திரங்களை அணிந்து, சுமந்து கிரிவலம் வருதல் விசேஷமானதாகும்.  இன்று அவரவர் தம் ஜாதகம், திருமணத் தடங்கலால் வாடும் பெண்கள், பிள்ளைகளின் ஜாதகங்களை நல்ல பழுத்த சுமங்கலியின் கரங்களால் நல்ல சுப ஹோரையில் பச்சை அல்லது நீல மையில் எழுதி மஞ்சள் நிறக் கவர் அல்லது பையில் வைத்து இன்று அருணாசலத்தைக் கிரிவலம் வருதல் வேண்டும். ஜாதகத்தை ஒரு போதும் சிகப்பு அல்லது கறுப்பு மையில் எழுதக் கூடாது. ஜெராக்ஸ் காபி எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்திடுக!

ஜாதகத்துடன் சிவராத்திரி கிரிவலம்!

இந்த சிவராத்திரி நாளில் எந்தெந்த கிரகம் எந்த ராசியில் உள்ளது என அறிந்து இந்த நாளுக்குரிய (கோசார கிரக நாள்) சக்கரத்தையும், தம் ஜாதகச் சக்கரத்துடன் சேர்த்து, ஒரு சந்தனப் பெட்டியிலோ மஞ்சள் பையிலோ அல்லது பனை ஓலை வரைவிலோ எடுத்து வர வேண்டும். குறிப்பாக திருமண தோஷங்கள் நல்ல வேலை இல்லாதவர்கள், வேலை இல்லாது வாடுவோர் தம் ஜாதகத்தையும், இந்த சிவராத்திரி நாளின் கோசார கிரகச் சக்கரத்தையும் சேர்த்து வைத்துக் கிரிவலம் வருதல் வேண்டும்.

தாங்கள் பிறந்த நாள், நட்சத்திரம், ராசி அறியாதோர் இந்நாளுக்கு உரிய கோசார கிரகச் சக்கரத்தை மட்டுமாவது தாங்கி கிரிவலம் வந்திடில் தங்களுக்கு உரிய நட்சத்திரம் அறியும் நல்மார்க்கம் உரிய நட்சத்திரம் அறியும் நல்மார்க்கம் என்றேனும் எவ்வழியிலும் கிட்டிடும் அல்லது பிறந்த நேரம் நாள், அறிந்தும் இதுவரையிலும் ஜாதகம் கணித்திடாதோர் இன்று பிறந்த தேதி, நேரத்தைப் பனை ஓலையில் எழுதி, கோசார கிரகச் சக்கரத்தையும் சேர்த்து வைத்து, கிரிவலம் வந்து, வரும் அமாவாசை அன்றோ, வரும் வளர் பிறையிலோ திருக்கணித முறையில் ஜாதகம் கணித்துக் கொள்தல் சிறப்புடையதாகும்.

ஸ்ரீமகாவிஷ்ணு ஸ்ரீபுரந்தான் சிவாலயம்

கோர்ட் பிரச்னைகள், பண முடக்கம் போன்றவற்றால் அடைபட்டுள்ள நற்காரியங்கள் சிறப்புடன் தொடர்ந்திட இன்றைய சிவராத்திரி கிரிவலம் பெரிதும் துணைபுரியும்.

பௌர்ணமி திதி நேரம்: 20.10.2002 ஞாயிற்றுக் கிழமை காலை 10.19 மணி முதல் 21.10.2002 திங்கள் கிழமை பகல் 12.50 மணி வரை திருக்கணித பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.

கிரிவல நாள்: 20.10.2002 ஞாயிற்றுக் கிழமை இரவு.

4.10.2002 வெள்ளிக் கிழமை நள்ளிரவு 12.24 மணி முதல் 5.10.2002 சனிக்கிழமை இரவு 8.40 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி அக்டோபர் மாத சிவராத்திரித் திதி நேரம் அமைகின்றது.

அக்டோபர் மாத சிவராத்திரி கிரிவலம் நாள்: 4.10.2002 வெள்ளிக்கிழமை இரவு

பல அரிய சிவசார மூலிகைத் திரவியங்கள் கூடிய சிவராத்திரி தூபத்தை ஏற்றிக் கையில் தாங்கியவாறு கிரிவலம் வருதல் சுதாம்பர அக்னிக் காவடி சுமந்த பலா பலன்களைத் தருவதாகும்.

அமுத தாரைகள்

அட்சய வடம் விருட்சம் - கல்லாலமரம் பளி வடிவு

இந்த இதழில் மூன்று அபூர்வமான தெய்வீக ஆலமரங்களின் (அட்சய வட விருட்சம்) படங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அட்சய வட விருட்சம் என்பது "கல்லால மரத்தின் பளிக் கோலம்" என்று சித்தர்கள் போற்றுகின்றனர். கல்லால் மரத்தின் ஆதி வடிவு இன்றும் திருஅண்ணாமலையில் உள்ளது. ஸ்ரீரமண மகரிஷி இதன் இலை வடிவை தரிசித்த பரம ஞானியாவார்! கல்லால மரம் இன்று சில தெய்வீக வடிவுகளில் பூலோகத்தில் பரிமளிக்கின்றது. திருவக்கரை அருகே மண்சுடர்மேனியில் சூட்சுமமாகவும், தூல வடிவிலும் இது பொலிகின்றது. குருவருள் மூலமாகவே இதன் தெய்வீக ரகசியங்களை உணர்ந்திட முடியும். சொல்லிப் புரிவதில்லை, அட்சய வட விருட்ச ரகசியங்கள்! அவநம்பிக்கை கொண்டு அணுகுவோர்க்கு இருக்கின்ற அறிவும் குறைப்பட்டு விடும். எனவேதாம் குருமூலமாக உணர்வதாகவே இவற்றை இன்றும் இறைவன் வைத்துள்ளான்.

சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள், தம் சிஷ்யகோடியாம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுக்கு அரிய அட்சய வட விருட்ச தரிசனங்களை, கல்லால மர தரிசனங்களை, அருணாசலப் புனித பூமியாம் திருஅண்ணாமலை, பிரயாக் (அலகாபாத்), கயை, வாரணாசியாகிய காசி, அன்னபூர்ணா சிகரம் (இமயமலை) பொதிய மலை, மேரு மலை (ஆல்ப்ஸின் ஒரு பகுதி), துவாரகையில் சமுத்திரத்தில் அமிழ்ந்துள்ள ஸ்ரீகிருஷ்ண பிருந்தாவன லோகம் போன்ற இடங்களில் குருநேத்ர சக்தி மூலமாகப் பெற வைத்துள்ளார். கலியுகத்தில், அட்சய வட விருட்சத்தின் மூன்று பகுதிகள் மட்டும் தரிசனம் பெறத் தகுந்ததாக சித்தர்களும், மகரிஷிகளும் நிர்ணயித்துள்ளார்கள். அட்சய வட விருட்சத்தின் (ஆலமரத்தின்) நுனிப் பகுதி கயா ஸ்ரீவிஷ்ணுபாத ஆலயத்திலும், மத்தியப் பகுதி காசியில் ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்திலும், அடிப்பகுதி பிரயாக் எனப்படும் அலகாபாத் திரிவேணி சங்கமக் கரையிலும் தரிசிக்கத் தக்கதாகும்.

ஸ்ரீசுதபுத மகரிஷி
மப்பேடு சிவாலயம்

மாளய பட்சத்தின் பதினைந்து தினங்களில் இம்மூன்று அட்சய வடத் தலங்களில் தர்ப்பணம் செய்யும் பாக்யமானது பித்ரு லோகத்தையே அடிப்பிரதட்சிணமாக வலம் வந்த அபரிமிதமான புண்ய சக்தியைத் தருவதாகும். இங்கு செல்ல இயலாதவர்கள் இப்படங்களை வைத்து இவற்றின் முன் தர்ப்பணம் அளித்தல் விசேஷமானதாம்.

மனதினுள் அலைபாயும் ரகசியங்களுக்கு நிவர்த்தி பெற.....

குடும்பத்தினரிடம் கூடப் பகிர்ந்து கொள்ள முடியாத வகையில், பலரிடமும் எடுத்துக் கூற முடியாத வகையில் பலரும் பல காரியங்களைச் செய்திருக்கக் கூடும். பல சம்பவங்களால், தவறுகளால், ரகசியமாகச் செய்த குற்றங்களால், நிகழ்ச்சிகளால், பலரும் பல வருடங்களாக மனதுக்குள்ளேயே சோக வலைகளால் பின்னப்பட்டு நிம்மதியின்றி வாழ்வர். இவ்வாறு மன நிம்மதியின்றி இருப்போர், முழு நிலக்கடலை, முழு முந்திரியாலான மாலைகளைக் கொறுக்கை சிவத்தல இரு நந்திகளுக்கும் சேர்த்துச் சார்த்தி, நந்திகளின் காதுகளில் அனைத்தையும் ஒப்புவித்துப் பிராயச்சித்தம் நாடி வழிபட்டு, நிலக்கடலைப் பாயசத்தை ஏழைகளுக்குத் தானமளித்து வர, நல்ல சாந்தமான மனநிலைகளைப் பெற்றிடும் நல்வழிகளை வாழ்வில் பெறுவர். தன் செய்கைகளால் பாதிக்கப்பட்டோர்க்கு நிவர்த்தி அளித்தால் தான் மனக் கவலைகளுக்கு மாற்று கிட்டும் என்பது நந்தி நீதி சதகப் பாடமாகும்!

பிள்ளைகள் பிரகாசமான அறிவு பெற உதவும் கொறுக்கை சிவத்தலப் பிரதோஷ பூஜை!

ஆதி பிரம்மாவிற்கு ஐந்து சிரசுகள் உண்டு. ஆனால் அகங்காரத்தால் தம் ஐந்தாம் சிரசை இழந்திட்ட ஸ்ரீபிரம்மா, சிருஷ்டிக் காரியங்களை நிறைவேற்றத் தேவையான பிரம்ம ஞானம் இன்றி மந்தமாகித் தவித்திட்டார். ஏனென்றால் பிரம்ம ஞானம் ஐந்தாம் சிரசில் அல்லவா பதிந்திருந்தது! ஈஸ்வரனை வேண்டிய பிரம்ம மூர்த்திக்கு ஐந்து சிரசுகளில் பொலியும் அதியற்புத அவதாரிக பிரம்ம ஞானத்தை நான்கு சிரசுகளில் பதித்து அருளிய சிவாவதாரமே கொறுக்கை ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆவார்! இன்றைக்கு அறிவு ஜீவிகளாக, தலை சிறந்த விஞ்ஞானிகளாக, அறிவுப் பிரகாசம் நிறைந்த உயரதிகாரிகளாகத் திகழ்வோர் யாவரும் ஒரு யுகத்தில் கொறுக்கை ஸ்ரீபிரம்ம ஞான புரீஸ்வரரை உபாசித்தவர்களும், தினமும் இங்கு வழிபட்ட பூர்வ ஜன்மக் கொறுக்கை வாசிகளும் ஆவர்.

எனவே பிள்ளைகள் நன்கு படித்திட, சந்தனக் கட்டை, சந்தனக்கல் சகிதம் இத்தலத்திற்கு வந்து நவமி, புதன்கிழமை, புனர்பூசம், பிரதோஷ நாட்களில் பிள்ளைகளை அவர்தம் கரங்களாலேயே சந்தனம் அரைக்கச் செய்து சந்தனத்தை அரைத்த ஒரு நாழிகைக்குள் (24 நிமிடங்கள்) சுவாமி, அம்பாள், நந்திக்கு சந்தனக் காப்பாக இடுவது மிகவும் விசேஷமான பலன்களை நல்கிடும். சிறுவர்கள் நல்லறிவு பெறுவதற்கான கபாலச் செல்களும் விருத்தியாகி மேம்படும். இதனால் பிரம்ம கபாலத்தில் பொலியும் வித்யா சக்திகள் ஆக்கம் பெற்று, பிரம்மாவிற்கே ஞானம் தந்த ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரின் திருவருளால் பிள்ளைகள் நன்கு படிப்பர்!

படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகள், நல்ல ஞானம் பெற உதவும், கேதுகாரக கொறுக்கைச் சிவ பூமி!

"தங்களுடைய குழந்தைகள் நன்கு படிக்கவில்லையே, 60/70 மார்க்குகள் வாங்க வேண்டும் என்று கூட நாம் எண்ணவில்லையே, குறைந்தது 45 மதிப்பெண் வாங்கிப் பாஸ் செய்தால் போதுமே" என்ற நிலையிலும் "இன்னமும் பிள்ளைகள் நன்றாகப் படித்து முன்னுக்கு வர வேண்டுமே" என்றுமாகப் பல பெற்றோர்கள் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுடைய கவலைகள் தீர்ந்து, குழந்தைகளுக்கு நல்ல அறிவு உண்டாகிட, ஞானம் தருபவராகிய கேது மூர்த்திக்கான நட்சத்திர நாட்களில் (அஸ்வினி, மகம், மூலம்) நந்திகளுக்கும், சுவாமிக்கும், அம்பிகைக்கும் கூடை நிறைய புஷ்பங்களைச் சார்த்தி வழிபட்டு வர வேண்டும். ஏழைச் சுமங்கலிகளுக்குப் புஷ்பங்களைத் தானமாக அளித்திடுக!

பெற்றோர்களே!  உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பெருங் கவலைகள் தீர கொறுக்கை சிவப் பிரதோஷமே மாமருந்தாம்!

பல குடும்பங்களிலும் பிள்ளைகள் படிப்பு, விளையாட்டு, பொது அறிவு, கம்ப்யூட்டர் போன்ற துறைகள் எதிலுமே நாட்டம் கொள்ளாது சராசரியாக, ஏனோதானோ என்று இருப்பதைக் கண்டு பெற்றோர்கள் வேதனை அடைவதுண்டு. இப்படி சராசரியாகவே காலத்தைக் கடத்தினால் எதிர்காலத்தில் இவர்கள் எப்படி, எதை, என்ன சாதிக்க முடியும்? என்று வருத்தம் பொங்கிட வாழும் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் நல்ல எதிர்காலத்தைப் பெற இப்போதிருந்தே சில வழிபாடுகளை மேற்கொண்டு வர வேண்டும். இவ்வாறு பிள்ளைகள் சிறு பிராயத்தில் இருந்து தொடங்கி, ஐந்து, பத்து வருட பூஜா பலன்களை ஆன்மீகச் செல்வமாகத் திரட்டினால்தான். வருங்காலத்தில் பிள்ளைகளுக்கு, பெண் பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்புகளைத் தந்து நல்ல எதிர்காலம், நல்ல திருமண வாழ்வைப் பெற துணை புரியும். இதற்குப் பெருந் துணையாகத் திகழ்வதே கொறுக்கை ஸ்ரீபிரம்மஞானபுரீஸ்வரர் சிவாலயப் பிரதோஷ பூஜையாகும். இவ்வாலயப் பிரதோஷ பூஜையில் திறம்படப் பங்கேற்று வந்தால், பிள்ளைகளுக்கு நல்ல ஞானமும், நல்லொழுக்கம் நிறைந்த பிரகாசமான எதிர்காலமும் கிட்டும். இங்கு செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்திலும், பிரதோஷ நேரத்திலும் ஞானகாரகராகிய கேது பகவானுக்குப் ப்ரீதியான பல நிறக் காய்கறிகள் கலந்த உணவைத் தானமாக அளித்தல் பூஜா பலன்களைப் பெருக்கும்.

கொறுக்கையில் பிரதோஷ நேரத்தில் பிரம்மா இயற்றும் ஞான வேள்வி!

ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி, ஈஸ்வரப் பட்டத்தைப் பெறுவதற்கான தகுதிகளைப் பெறத் துணை புரிந்தத் தலங்களில், கொறுக்கைச் சிவாலய நித்யப் பிரதோஷம் மற்றும் சனிப் பிரதோஷ வழிபாடுகளும் பெரும் முக்யத்துவம் பெறுகின்றன! கரிநாள், பிரதோஷம், சனிக்கிழமை மூன்றும் சேர்ந்து வருகின்ற மிகவும் அபூர்வமான நாளானது த்ரயஸ்த்ர சனிவாரமாகப் போற்றப்பட்டு, சகஸ்ர சனிவாரப் பூஜா பலன்களைத் (1000 சனிக் கிழமைகளில் ஸ்ரீசனிபகவானை பூஜித்த பலன்களை) தருவதாகும்! சனி பகவான் ஆயுள்காரக கிரக சக்தியைப் பெறுவதற்காக சனிப் பிரதோஷ நாளில் வழிபட்ட தலமிது!

ஜீவன்களுக்கு நல் ஆயுள் விருத்தியைத் தருகின்ற ஆயுஷ்ய ஹோமம் மற்றும் ஞான வேள்வியை, ஸ்ரீபிரம்ம மூர்த்தி, அரூவ, தூல, சூக்கும வடிவுகளில் பிரதோஷ காலம் தோறும் நிகழ்த்துகின்ற திருத்தலமும் கொறுக்கைச் சிவாலயமேயாம்!  கேது மூர்த்தி, தாம் கிரக மூர்த்தி ஸ்தானத்தைப் பெறுவதற்கான ஞானத்தை ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரிடம் அடைந்த தலமும் இதுவே! எனவே இங்கு பிரதோஷ வழிபாடு செய்கின்ற பிள்ளைகள், சனீஸ்வர சக்தியால் தீர்க ஆயுள் சக்தியுடன் பிரம்மாவின் ஞான வேள்வியின், கேதுகாரக ஞான கிரணங்களை ஈர்த்து நற்கல்வி ஞானம் பெறுகின்றனர்.

மேலும் ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கும், ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும் பிரம்ம ஞானத்தைத் தந்த தலமும், முப்பத்து முக்கோடி தேவர்களும் மானுட ரூபத்தில் தினமும் ஒருவராக நித்யப் பிரதோஷ பூஜைகளை "பார்த்திப மன்வந்திரக் காலத்தில்", சிவதரக் கலியுகத்தில் நிகழ்த்திய விசேஷமான தலமுமே கொறுக்கை ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருத்தலமாகும்.

மின்சாரத் தற்காப்பிற்கு மாதுளையால் ஸ்ரீஅக்னி பகவான் வழிபாடு!

ஆன்மீகப் பூர்வமாக விளக்கிட, மின்சாரம் என்பது சூட்சும அக்னி சக்தியின் ஒரு வகையே ஆகும். தாவர சிருஷ்டியின் போது சாகம்பரி தேவியின் நெற்றிக் கண்ணில் இருந்து முத்துக்களாய் வெளி வந்த அமிர்தாக்னிக் கிரணத் துளிகளே மாதுளை முத்துக்கள் ஆகும்! மாதுளையில் இருந்தே ஆன்ம மின்சார சக்தி எழுகின்றது!  எனவே மின்சாரத்திற்கும், மாதுளைக்கும் நெருங்கிய ஆன்மீகப் பிணைப்பு உண்டு!  காய்ந்த மாதுளந் தோல் மின்சார ரணப் புண்களை ஆற்ற வல்லதாம்! உணவு, உடை, வீட்டிற்கு அடுத்ததாக மின்சாரமே மனித குல வாழ்விற்கு மிகவும் முக்கியமான அம்சமாக ஆகி விட்டது. மின்சாரம் ஒரு அரை மணி நேரம் இல்லை என்றாலும் வாழ்க்கையே ஸ்தம்பித்தது போல் ஆகி விடுகின்றது. தற்காலத்தில் மின்சாரத்தால் அனைத்துமே இயங்குகின்றன! இதில் கவனமில்லையேல், நெருப்பு போலப் பல ஆபத்துக்கள் நம்மைச் சூழுமே! ஆனால் என்றேனும், எவரேனும் மின்சார சக்தியை நமக்குத் தந்த அக்னி மூர்த்திக்கு நன்றி தெரிவித்து வழிபட்டுள்ளோமா?

மின்சாரத்தால் ஆபத்து வராமல் தற்காத்துக்கொள்ளவும், உற்பத்தி, வியாபாரம் போன்றவற்றில் விபத்துகள், இழப்புகள் ஏற்படாதிருக்கவும், ஏனைய வழிகளிலும் மின்வெட்டு போன்று எவ்விதத் தடங்கல்கள் பாதிக்காது இருக்கவும், அக்னி பகவானுக்கு உரிய செவ்வாய்க் கிழமை, செவ்வாய் ஹோரை நேரங்களிலும், மின்சக்தி வழிபாட்டிற்கான அக்னி நட்சத்திரமான கார்த்திகை நாளிலும், ஸ்ரீஅக்னி பகவான் அருள்பாலிக்கின்ற தலங்களில் ஸ்ரீஅக்னி பகவானுக்கு (திருப்புகலூர், திருக்கழுக்குன்றம்) சந்தனக் காப்பு அல்லது வெண்ணெய்க் காப்பிட்டு அதில் மாதுளை முத்துக்களைப் பதித்து அலங்கரித்து வழிபட்டு வருதல் வேண்டும்!  ஸ்ரீஅக்னி பகவான் எழுந்தருளியுள்ள தலங்கள் மிகச் சிலவே! ஸ்ரீஅக்னீஸ்வரராகச் சிவமூர்த்தி உள்ள தலங்கள் யாவும் அக்னி பகவான் வழிபடுகின்ற சிறப்பான தலங்களே ஆகும்.

மன ஏக்கங்களை நிவர்த்தி செய்யும் உத்தமதானபுரம் (மாளாபுரம்) மும்மூர்த்தி விநாயகர்

தான் அழகாக இல்லையே என்று ஏங்குகின்ற ஆண்கள், பெண்கள் நிறைய உண்டு. தம் பிள்ளைகளும் நல்ல நிறத்துடன் அழகாக இல்லையே, இது திருமணத்தைப் பாதிக்குமே என்று வருந்துகின்ற பெற்றோர்கள் உண்டு. முந்தைய பிறவிகளில் இறைவனுக்கு நிறைய அலங்காரப் பூஜைகளைச் செய்து வழிபட்டவர்களே இப்பிறவியில் அழகாகப் பிறக்கின்றார்கள். ஆனால் கலியுகத்தில் அழகு இருந்தால் ஆபத்தும் கூடவே வருகின்றது என்பதைப் பலரும் உணர்வதில்லை. பக்தியால் வருவது அகஅழகு! இதுவே நிரந்தரமானது! உடல் அழகு காலத்தால் மாறக் கூடியது! ஆனால் முதலில் இது எவர்க்கும் தத்வார்த்தமாகவே தோன்றும். எந்த வடிவை இறைவன் அளித்துள்ளானோ அதைத் தன்னுடைய பூர்வ ஜன்மப் பலன்களாக மனதார ஏற்று மனத் திருப்தியுடன் வாழ உதவும் ஆலயங்களும் உண்டு. இங்கு முறையாக வழிபட்டு வந்தால் தேவையில்லாத பல ஏக்கங்களும், நிராசைகளும், பேராசைகளும் தணிக்கப்பட்டு, மனத் திருப்தியை அடைந்து நல்ல மண வாழ்வைப் பெற நல்வழிகள் காட்டப் பெறும்.

கும்பகோணம்-திருநல்லூர் அருகே உள்ள உத்தமதானபுரம் சிவாலயத்தில் மூன்று விநாயக மூர்த்திகள் சேர்ந்து மும்மூர்த்தி விநாயகர்களாக அருள்பாலிக்கின்றார்கள். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களைத் தீர்க்கும் அரிய, அற்புத சக்தி வாய்ந்த விநாயகர்! புதன், சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் 12, 21, 30 என்ற மூன்று கூட்டு எண்ணிக்கையில் வருமாறு சிதறு தேங்காய்களை நேர்த்தியாக அளித்து வர, பலவிதமான துன்பங்களும் தீர்வு பெறும். குறிப்பாக அழகின்மையால் ஏங்குவோர்க்கு நல்விதமான திருமண வாழ்வு அமையும்.

உங்கள் பித்ருக்கள் பூலோகத்திற்கு வரும் நாட்களே மாளய பட்ச தினங்களாம்!

கலியுகத்தில் உலகில் மூன்று கோடி மனிதர்களுள் ஒரே ஒருவர் மட்டுமே வருடந்தோறும் பித்ரு நிலையை அடையும் தெய்வீக வாய்ப்பைப் பெறுகின்றார். எனவே இறப்பிற்குப் பின் அனைவருமே பித்ருக்களாக, (நல் இறை) நீத்தார்களாக ஆவது இல்லை! அவரவர் கர்ம வினைகளின்படியே பலரும் நாயாய், பேயாய், கணங்களாய், புல்லாய், புழுவாய், மனிதராய் ஆவதும் உண்டு! இப்பிறவிச் சுழலில் இருந்து மீண்டிட, மாளய பட்ச விரத, தர்ப்பண, அன்னதான, தர்மக் கைங்கர்யங்கள் பெரிதும் துணை புரிகின்றன. பித்ருக்களுடைய உத்தம தேவ நிலைகளும் நிர்ணயிக்கப்படுகின்ற இத்தகைய புனிதமான மாளய பட்ச நாட்களைத்தாம், "மூத்தோர் முக்திக் களிதம்" என்று சித்தர்கள் அழைக்கின்றனர். அதாவது நீத்தாராகிய, மூத்தோராகிய பித்ருக்கள், "முக்திக் களி" எனப்படும் பித்ரு முக்தி நிலையில் வரமானந்தப் பரமானந்தப் பேரருளைத் துய்த்துக் களிக்கின்ற காலமாகவும், தம் சந்ததியர்களுக்கு அபரிமிதமான நல்வரங்களை அளிக்கின்ற காலமாகவும் மாளய பட்ச அமாவாசைக் காலம் துலங்குகின்றது.

அனைத்துத் திதிகளிலும் எவர்சில்வர் தம்ளர் அல்லது தட்டு அல்லாது, மரத் தட்டு, உத்தராணி மரத் தாம்பாளம், மூங்கில் குவளை, பசுமடிக் காம்புச் சங்கு, புனிதத் தீர்த்தம் போன்றவற்றால் தர்ப்பணம் அளிப்பதால், தர்ப்பண சக்தி இழப்பின்றி, பல்கிப் பெருகும் மகத்தான பலன்களைப் பெற்றிடலாம்.

அர்க்ய முறை!

அர்க்யம் என்பது விரல் நுனிகளின் வழியே தீர்த்தத்தை பூமியில் வார்த்தலாகும். இதிலும் ஒவ்வொரு விரல் நுனி வழியாகவும் அர்க்யம் அளிப்பதற்கான தேவ விளக்கங்கள் உண்டு. உதாரணமாக தேவ மகரிஷிகளுக்கு சுண்டு விரல் மூலமாக அர்க்யம் அளித்திட வேண்டும். ம்ருகீ லோக மகரிஷிகளுக்கு ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரல் மூலமாக அர்க்யம் அளித்திடல் வேண்டும். இதில் பொதிந்துள்ள தாத்பர்யங்களைத் தக்க சற்குரு மூலமாய் மட்டுமே அறிய முடியும். சாலி ஹோத்ர மகரிஷியே இத்தகைய தர்ப்பண மகிமைகளில் சிறந்தவராவார். இவரை திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் ஆலயத்தில் தரிசித்திடலாம்.

ஸ்ரீபுரந்தான் ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டு நாட்டிற்கே, உலகிற்கே லக்ஷ்மி கடாட்சம் சேர்ப்பீர்களாக!

"ஸ்ரீ, லட்சுமி, திரு" என்ற திருமகளின் அட்சரப் பெயர்களை உடையோர் தம் பிறந்த நட்சத்திரம், பிறந்த நாள், திருமண நாள் மற்றும் அனுஷம், வெள்ளி, துவாதசி நாட்களில் ஸ்ரீபுரந்தானில் முதலில் ஸ்ரீபிரதட்சிணேஸ்வரரையும் அடுத்து ஸ்ரீவேதநாராயணப் பெருமாளையும் முறையாக வழிபட்டு வர வேண்டும். பூஜைக்கு வசதி இல்லாத நிலையில், இங்கு வழிபாடுகளை ஆக்கப்படுத்துவது பக்தர்களுடைய கடமையாகும். இறைப் பணிகள் முதல் தொடக்கமாக, தற்போது மிஞ்சியுள்ள ஆலய வளாகத்திலாவது, சர்க்கரைப் பொங்கல் படைத்து, வழிபட்டு, ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருதல் வேண்டும். 21 முழுத் தாமரை மலர்களால் சிவனை, பெருமாளை அர்ச்சித்தல் வறுமையைப் போக்கும், பணக் கஷ்டங்களை நியாயமான முறையில் தீர்க்கும்.

ஸ்ரீபுரந்தானில் பொங்கும் ஸ்ரீலட்சுமி கடாட்சப் பிரவாகம்!

லட்சுமி கடாட்சம் வேண்டி, பக்தர்கள் திருமகளைத் தொழுதிட, ஸ்ரீமகா லக்ஷ்மியோ என்றும் லட்சுமிகரமாகத் திருமாலின் திருமார்பில் உறைந்திடுவதான சாசுவதமான லட்சுமி கடாட்சத்தைப் பெற, ஸ்ரீவரலட்சுமியாக ஸ்ரீபுரந்தான் ஸ்ரீபிரதட்சிணேஸ்வர சிவபெருமானை, மானுட வடிவில், நெடுங்காலம் மருதாணி பூசிய திருப்பாதங்களால் வலம் வந்து வணங்கிட்டாள். இதன் பலன்களாக, ஸ்ரீவேத நாராயணப் பெருமாளை மணக்கும் பாக்யத்தையும், திருமாலின் நெஞ்சிற் குடி கொள்ளும் பாக்யத்தையும் திருமகளுக்கு அருளிய திவ்யத் தலமே ஸ்ரீபுரந்தான் புண்ணிய பூமியாகும்.

புனர்பூச நட்சத்திர நாளில் வாணியம்பாடி சரஸ்வதி தேவிக்கு சாமந்திப் பூக்களால் (ஜவ்வந்திப் பூ கூடாது) ஆன திண்டுமாலை சார்த்தி வழிபடுவதுடன் ஏழைகளுக்கு வாழை இலை நிறைய உணவு வகைகளைத் தானமாக அளித்து வருவதால் பிள்ளைகள் நன்கு படிப்பார்கள். ஊமை, திக்கு வாய், பேச்சு சரிவர வராதோரை இத்தலத்திற்கு அழைத்து வந்து வித்யா சக்தி நிறைந்த நாட்களான நவமி, புனர்பூசம், புதன் நாட்களில் இங்கு சரஸ்வதியின் முன்னிலையில் அமர வைத்து சரஸ்வதிக்குத் தேனாபிஷேகம் செய்வதைக் கண்குளிரக் காண வைத்திட வேண்டும். "வெண்தாமரைக்கன்றி" எனத் தொடங்கும் குமரகுருபர சுவாமிகளின் சக்தி வாய்ந்த பாடல்களை ஓதி வருதலால் வாக்சக்திகளைத் தரவல்ல ஆரோஹண, அவரோஹண தேவதா மூர்த்திகள், சப்த நாள தேவதா மூத்திகளின் அனுகிரகத்தைப் பெறும் நல்வழிகள் கிட்டும்.

ஸ்ரீமும்மூர்த்தி விநாயக மூர்த்திகள் உத்தமதானபுரம்

வேதம், கல்வி அறிவு, தண்ணீர், புஷ்பம் ஆகியவற்றை விற்றலாகாது!

புனிதமான கல்வியை வியாபாரமாக்கி ஆரம்பப் பள்ளி, உயர்நிலைக் கல்வி நிலைகளில் கூடப் பலரும் ஏழை, நடுத்தரக் குடும்பங்களை வருத்தித் தற்காலத்தில் டியூஷன் என்ற பெயரில் பெருமளவில் பணம் சம்பாதிப்பதானது அதர்மமானதாகும். நியாயமான தொகையை விட அதிகத் தொகையைப் பெறுவதற்காகப் பேராசையுடன் டியூஷன் என்ற பெயரில் வரம்பிற்கு மீறி அதிகமாகச் சம்பாதிப்பதானது வித்யா தேவியின் சாபத்திற்கு உள்ளாக்கி, சந்ததியினர் மனக் கோளாறுகளுடன் பிறக்க வழி வகுத்துவிடும். வேதம், கல்வி, மருத்துவத் துறையில் இருப்போர் தினசரி ஏழைகளுக்கு இலவசச் சேவை புரிந்தால் தான், தாங்கள் அதர்மமான முறையில் சேர்த்த பாவங்களுக்கு ஓரளவேனும் பிராயச்சித்தம் பெற முடியும். வேதம், தண்ணீர், கல்வி, புஷ்பம் நான்கையும் ஒரு போதும் விற்றல் கூடாது! கல்வி அறிவை அதர்மமாக விற்றுப் பெரும் பணம் சம்பாதிப்பது முறையான செல்வமாகாது. நிலைத்தும் நிற்காது. இதனால் வரும் சொத்துக்களிலும், பணம் அளித்துத் துன்பப்பட்டோரின் வேதனைகள் சுழலுமாதலால் காலம் காலமாக இதன் தீய விளைவுகள் சுற்றிச் சுற்றி வந்து சந்ததியினரை வெகுவாகப் பாதிக்கும். வேதம், கல்வி, மருத்துவத் துறையில் அதர்மமாகச் சம்பாதித்தது அனைத்தையும் இறைப் பணிகளுக்கு அர்ப்பணித்திடுவதே உத்தமமானது!

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

இதே போல, பலரும் தொழிற்கல்விக் கல்லூரிகளை நிறுவி, நியாயமான தொகையை விட பன்மடங்கினை, லட்சக்கணக்கில் அதர்மமான முறையில் சம்பாதிப்பதானது வித்யா அவதார மூர்த்திகளான ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீவித்யா லக்ஷ்மி, ஸ்ரீசரஸ்வதி மூர்த்திகளை நிந்திப்பதாகும். இதனால் இவ்வாறு செய்பவருடைய 24 தலைமுறைகளும் கடுமையாக‌ பாதிக்கப்படும். இத்தகைய பெரும் பாவங்களில் இருந்து மீண்டிடுவதற்கான பிராயச்சித்தங்களைப் பெற வாணியம்பாடி சிவாலயத்தில் பிரதோஷம், மாத சிவராத்திரி, ஸ்ரீசரஸ்வதி தேவிக்கான புதன், நவமி, புனர்பூச நாள் பூஜைகளை நன்முறையில் கொண்டாடி, அதிதித் தலமாகையால் தாராளமாக அன்னதானம் செய்வதோடு பல இடங்களில் ஏழைகளுக்கான இலவசக் கல்வி, இலவச மருத்துவ உதவிகளையும் ஆற்றித் தக்கப் பரிகார வழிகளை இப்போதே நாடத் தொடங்கிட வேண்டும். இறையருளால் மேற்கண்ட அதர்மக் காரியங்களுக்குப் பரிகாரம் பெறவும் திருஅண்ணாமலை, வாணியம்பாடி போல் தக்க திருத்தலங்கள் அமைவதும் இறைப் பெருங் கருணையே!அருணாசலமாம் திருஅண்ணாமலையில் காகபுஜண்டர், அகஸ்தியர், வசிஷ்டர், பரத்வாஜர், ஆங்கிரஸர் போன்ற பிரசித்தி பெற்ற சித்தர்களும், மகரிஷிகளும் பௌர்ணமி மாத சிவராத்திரி தோறும், ஏனைய நாட்களிலும் அருணாசல கிரிவலம் வந்திடினும், அவர்கள் பெரும்பாலும் மிகவும் எளிமையாகவே, ஏதேனும் தூல வடிவில், மானுட ரூபத்தில், எவரும் அறியா வண்ணம் வந்து செல்லவே விரும்புகின்றனர். இறைவனே எடுத்துரைக்க விரும்புகின்ற நிலையில்தாம், அந்தந்த நாளில் அருணாசல கிரிவலம் வருகின்ற தேவாதி தேவ தெய்வ மூர்த்திகள், சித்தர்கள், மகரிஷிகள், யோகிகள் பற்றிய விளக்கங்கள், சற்குருமார்கள் மூலமாகவே பூவுலகிற்கு அளிக்கப்படுகின்றன. ஏனைய நாட்களில் அவர்கள் வந்து வழிபட்டுச் செல்வது தேவ ரகசியமாகவே பொலியும்.

நித்ய கர்ம நிவாரணி

1.10.2002 = முருகன் கோவிலில் உள்ள நவகிரஹங்களுக்கு எண்ணெய்க் காப்பிட்டு வஸ்திரம் சார்த்தி அன்னதானம் செய்திடில் ஆசிரியர்களுக்கு வரும் ஆபத்து விலகும்.

2.10.2002 = ஏழைகளுக்குப் பச்சை நிற ஆடை தானமும், அன்னதானமும் செய்திடில் 5, 14, 23 வீட்டு எண்ணை உடையோருக்கு வரும் மறைமுக எதிர்ப்பு விலகும்.

3.10.2002 = ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் வட்ட ஓடம் (பரிசல்) ஓட்டுபவர்களுக்கு உணவு மற்றும் ஆடை தானம் செய்திடில் வேலையில் வரும் இடமாற்றம் நலமாய் முடியும்.

4.10.2002 = யானைகளுக்கு உணவளித்து, யானை நிழலை நமஸ்கரித்து, யானை நிழல் பட்ட மணலை எடுத்துப் பூஜித்து, புனித நதியிலோ, குளத்திலோ, அம்மணலைச் சேர்த்திட வேண்டும். இன்று இலை நிறைய அன்னதானம் செய்திடில் மலையாகத் திரண்டு வந்த ஆபத்து குறைந்து விலகிடச் செய்யும்.

5.10.2002 = காடுகளில் குச்சி, விறகுகளை எடுத்து வியாபாரம் செய்யும் ஏழைகளுக்கு ஆடை, அன்னதானம் செய்து உதவிடில் சஸ்த்ர ஹத மாளயத் தர்ப்பணம் அளிக்கத் தகுதி பெறலாம்.

6.10.2002 = ஹஸ்த நட்சத்திரக்காரர்கள் இன்று சிவன் கோயில்களில் அன்னதானம் செய்திடில் 2, 11, 20 வீட்டு எண் உடையோருக்கு வரும் நல்ல சேதி தபால்களை எதிரிகள் திருடமாட்டார்கள்.

7.10.2002 = இன்று சந்திர தரிசனம் செய்து ஏழை சுமங்கலிகளுக்கு மாங்கல்ய தானம் செய்திடில் பூர்ண வசுந்தரா தேவியின் ஆசியைப் பெற்று வாழ்க்கையில் நல்ல மாற்றம் காணலாம்.

8.10.2002 = சுவாதி நட்சத்திரத்தில் ஏழை கன்னிப் பெண்களுக்கு ஜிமிக்கி தானத்தோடு அன்னதானமும் செய்திடில் காது, மூக்கு, தொண்டை சம்பந்தமான நோய்கள் சாந்தமடைய வழி செய்யும்.

9.10.2002 = விநாயகருக்கு உரித்தான தூபம் ஏற்றி எல்லையில் இருக்கும் முருகன் கோயிலில் அன்னதானம் செய்திடில் சந்தி தோஷத்தால் வரும் துன்பம் விலகும்.

10.10.2002 = முப்பது பெருமாள் கோயிலில் ஸ்ரீமன் நாராயண தூபம் ஏற்றி வலம் வந்து அன்னதானம் செய்திடில் உபாங்க லலிதா விரதம் நற்பலன் அளிக்கும்.

11.10.2002 = ஸ்ரீஹயக்ரீவர் தூபம் ஏற்றி ஏழைக் குழந்தைகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுதுகோல் தானம் செய்திடில் ஆசிரியர்கள் நலம் பெறுவர்.

12.10.2002 = மூல நட்சத்திரத்தில் சுதர்சன மந்திரம் ஜெபித்து முறுக்கு, ஜாங்கிரி தானம் செய்திடில் வாழ்க்கையில் ஸ்திரமில்லாமல் அலையும் நபர்கள் நல்ல இடத்தில் நிலை கொள்வர்.

13.10.2002 = அஷ்ட பைரவர் தூபம் ஏற்றி சிவன் கோயில்களில் அன்னதானம் செய்திடில் 13, 31, 22 வீட்டு எண் உடையோருக்கு வேலையில் வரும் துன்பங்கள் விலகும்.

14.10.2002 = இன்று கொன்றை மரத்தடி வினாயகருக்குத் தேனும் மாதுளையும் கலந்து அபிஷேகம் செய்து, நற்கனிகளை தானம் செய்து கொன்றையடி வினாயக தூபம் ஏற்றி வழிபட்டிடில் வாழ்க்கையில் ஸ்திரமான முடிவுகள் எடுக்க வழி பிறக்கும்.

15.10.2002 = இன்று வன்னி மரத்தடி வினாயக தூபம் ஏற்றி வன்னி மரத்தடி கணபதியை 21, 42, 63 முறைக்கு குறையாமல் வலம் வந்து வந்த எண்ணிக்கைப்படி தானம் செய்திடில், ஆரம்பக் கணக்குகள் நல்லோர்க்குச் சாதகமாய் முடியும்.

16.10.2002 = முப்பது பெருமாள் கோயிலில் ஸ்ரீமன் நாராயண தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் பாச வயப்பட்டு தீயோர்களுக்கு எழுதி கொடுத்த சொத்தால் வரும் துன்பம் குறைய ஸர்வ பாசாங்குச ஏகாதசி விரதம் அருள் வழி செய்யும்.

17.10.2002 = 6, 12, 21 வகைகள் நிறைந்த காய்கறிகளை அனாதை இல்லங்களுக்கு தானம் அளித்திடில் கணவனை இழந்தோர்க்கு வருகின்ற துன்பம் விலகும்.

18.10.2002 = புனித நதி தீர்த்தங்களை சேகரித்து 3, 6, 9 நதி தீர்த்தங்களால் பூஜை விக்கிரஹங்களை அபிஷேகித்து அத்தீர்த்தங்களை துளசி, வில்வம், தென்னை, மல்லிகை போன்ற செடிகளில் தெளித்தால் தீய மாமியார், தீய மாமனார்களால் ஏற்படும் துன்பம் விலகும்.

19.10.2002 = வேப்ப மரத்தடி வினாயகருக்கு வேப்ப மரத்தடி வினாயக தூபம் ஏற்றி ஏழைகளுக்கு அன்னதானம் செய்திடில் சனீஸ்வர பாதிப்பால் வரும் துன்பங்கள் குறையும்.

20.10.2002 = இன்று பெண்கள் கோஜாகரீ விரதம் இருந்து கன்றோடு கூடிய பசுவை பூஜித்து கோதானம் செய்திடில் பெரிய வேலையில் இருக்கிறேன் என்று பொய் சொல்லி திருமணம் செய்ய முயலும் மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து தப்பிக்கலாம் (குட்டு வெளியாகும் நாள் இது)

21.10.2002 = காவேரியில் நீராடுவதாலும், கரையில் அன்னதானம் செய்தலாலும், கண் சம்பந்தமான நோய்கள் குறைய வழியுண்டு.

22.10.2002 = இன்று சூன்யத் திதிக்காரர்களும், சந்திராஷ்டமக்காரர்களும் கருப்பண்ண சுவாமிக்கு அல்லது அவரவர் குலதெய்வங்களுக்குப் பொங்கல் படைத்துத் தானம் செய்திடில் உயரதிகாரிகளின் ரகசிய ஆசைகளுக்குப் பலியாகாமல் தப்பிக்கலாம்.

23.10.2002 = பரணி நட்சத்திரக்காரர்களுக்கு மனம் நிலை கொள்ளாமல் தடுமாறும் நாளிது. ஸ்ரீதன்வந்த்ரீ காயத்ரீ மந்திரம் ஜபித்து ஸ்ரீதன்வந்த்ரீ தூபம் ஏற்றி ஆடை தானம் செய்திடில் நலம் பெறுவர்.

24.10.2002 = கிருத்திகை நட்சத்திரத்தில் பால் தானம் செய்திடில் பொய் சொல்லி ஏமாற்ற நினைக்கும் காதலனிடமிருந்து தப்பிக்க வழி பிறக்கும்.

25.10.2002 = அரசரடி விநாயகருக்கு அரச மரத்தடி விநாயக தூபத்தை ஏற்றி அன்னதானத்துடன் இன்று வழிபட்டிடில் திரைப்பட நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படும் அவமானம் தவிர்க்கப்படும்.

26.10.2002 = அம்மன் கோயிலில் அன்னதானம் செய்திடில் தொழிலில் மாற்றம் ஏற்படும்.

27.10.2002 = நிலம், வீடு, கட்டிடம் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபட நலம் உண்டாகும்.

28.10.2002 = வாத்தியக் கருவிகளை இறைவன் முன் வாசித்து சுவாமிக்கு நாத அர்ப்பணம் செய்திடில் திறமைக்கு ஏற்ற புகழ் கிட்டும்.

29.10.2002 = பைரவர் சன்னிதிகளில் ஸ்ரீஅஷ்டபைரவ தூபம் ஏற்றி அன்னதானம் செய்திடில் நீதித் துறையினருக்கு ஏற்படும் துன்பம் விலகும்.

30.10.2002 = சுதர்சன தூபம் ஏற்றிப் பெருமாள் கோயிலில் அன்னதானம் செய்திடில் இரவு நேரப் பணிக்குச் செல்கின்றவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறையும்.

31.10.2002 = எருமைகளுக்கு அகத்திக் கீரை அளித்து எமலிங்கத்திற்கு மக நட்சத்திர தூபம் ஏற்றி வழிபட்டிடில் தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போகும்.

!!! ஜோதி அலங்கார பீடாதிபதி !!!

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam