எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா அருணாசலா !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஆசானின் அனுபவ மொழிகள்

நம் சற்குரு வெங்கடராம சுவாமிகளுக்கு ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளால் அவ்வப்போது அருளப்பட்ட சித்த குருவாய் மொழி பொக்கிஷங்களை இங்கு தொகுத்து அளிக்கிறோம். இந்த பொன் மொழிகளில் ஒன்றை, இரண்டை அல்லது சிலவற்றை அடியார்கள் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வந்தாலே போதும் அவர்கள் இவ்வுலகில் நலமான வாழ்வையும் வரும் உலகங்களில், வாழ்க்கையில் பெரும் பேற்றையும் பெறுவார்கள் என்பது உறுதி.

1. அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியர் வழி நடப்போம்.
அகத்தியர் என்று நம் சற்குரு குறிப்பிடுவது வெறும் ஐந்தடியில் நடமாடும் ஒரு உருவம் அன்று. நம் உள்ளத்தில் விளங்கும் இறை தரிசனம் பெறுவதற்கு உதவி புரியும் சற்குருவின் வழிகாட்டுதலைப் பின்பற்றுதலே அகத்தியரின் வழி நடத்தல் என்பதாகும்.

2. கண் மூடி வந்தவர் மண் மூடிப் போகார்.
கண்ணை மூடிக் கொண்டு சற்குரு கூறும் உபதேசங்களை வாழ்க்கையில் நிறைவேற்றி வருபவர்கள் எக்காலத்தும் துன்பம் அடைய மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கை வெறும் மண் மேடாக மாறிப் போகாமல், உயர் கலங்கரைவிளக்கமாகவே மாற காத்தருள்பவர் சற்குருவே.

ஸ்ரீஇலஞ்சி முருகன்

3. வாங்கிய நிலத்தில் வரவு பார்த்திடாமல் தூங்கியே கழித்தாயே தும்பியப்பா.
தும்பி என்பது தட்டான் என்ற பூச்சி இனங்களுக்குத் தலைவரைக் குறிக்கும் சொல். இது ஒரு வண்டு இனம். ஒருவர் தனக்குச் சொந்தமான நிலத்தை முறையாகப் பயிரிட்டு அதில் வரும் வருவாயைக் கொண்டு தானும் தன் குடும்பமும் நல்வாழ்வு வாழ்ந்து பிறருக்கும் உதவியாக இருக்க வேண்டும். அத்தகைய உழைப்பை அளிக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் தகுதி வாய்ந்த ஆஸ்ரமங்களுக்கு இலவசமாகக் கொடுத்து அந்த நிலத்திலிருந்து ஏதாவது ஒரு வழியில் நல்ல புண்ணிய சக்தியை ஈட்டும் முயற்சியிலாவது ஈடுபட வேண்டும். தும்பியப்பன் என்பது முருகப் பெருமானையும் குறிக்கும். சதா சர்வ காலமும் துடிப்புடன், சுறுசுறுப்புடன் இருந்து தன் கடமையை ஆற்றும் தும்பிக்குத் தலைவனான முருகப் பெருமானின் வழி வந்த நீ சோம்பேறியாக இருக்கலாமா, நற்காரியம் செய்து இறைவழியில் முன்னேற வேண்டாமா என்று தன் சீடனை சற்குரு செல்லமாகக் கடிந்து கொள்வதும் இந்த வாசகத்தின் ஒரு அர்த்தம்.

4. ஒன்றை சிவனுக்குச் சூட்டு அது கொன்றையாக இருக்கட்டும்.
சிவனுக்கு உகந்தது கொன்றை மாலை என்று ஸ்ரீஅகத்தியரால் உரைக்கப்பட்டதே இந்த குரு வாக்கியம். எதையும் வார்த்தைகளாக எடுத்துக் கொள்வதை விட அந்த வார்த்தைகள் கூறும் உண்மையை தன் உயிரினும் மேலாக மதித்து காப்பாற்றுவதன் மூலமே அது “ஆசானின் அனுபவ மொழியாக” மாறும். இவ்வாறு கொன்றை மாலையை சாட்சாத் சிவபெருமானாகவே மதித்துப் போற்றியவனே பீமசேனன். மானசீக பூஜையில் சக்கரவர்த்தி. குருக்ஷேத்திர யுத்தத்தில் தன்னைத் துரத்திக் கொண்டு வந்த பீமனிடமிருந்து தப்பிக்க ஒரு கொன்றை மாலையை வழியில் வீசி விட்டு ஓடினானாம் துரியோதனன். கொன்றை மாலையை சாட்சாத் சிவபெருமானாகவே மதித்த பீமசேனனோ அதைத் தாண்டாமல் பின் வாங்கி விட்டானாம். ஆனால், தர்மம் நிச்சயமாக வெல்லும் என்பதை நிரூபணம் செய்யும் வகையில் பீமசேனனின் கதையால் துரியோதனின் கதை முடிந்த வரலாறு நீங்கள் அறிந்ததே.

ஸ்ரீவாஸ்து பகவான்

5. குழந்தையாய் இருந்து பார், கடவுள் உன் கண்ணுக்குத் தெரிவார்.
காட்டுக்குப் போக வேண்டாம், கடுந் தவம் புரிய வேண்டாம். ஒரே நொடியில் எந்த கலியுக மனிதனும் கடவுள் தரிசனம் பெறும் முறையை ஆசானின் அனுபவ மொழியாக வர்ஷித்த நம் சற்குருவிற்கு ஈடு இணை நம் சற்குருவே. இவ்வாறு குழந்தையாய் இருந்து கடவுள் தரிசனம் பெற முடியும் என்பதற்கு சாட்சி பூதமாய் இன்றும் நம்மிடையே உலவும் பெருந்தகையே மாதா அமிர்தானந்தா ஆவார்கள். சில நொடிகளில் பல காட்டெருமைகளை பரலோகத்திற்கு அனுப்பும் சக்தி பெற்ற கருநாகமும் அன்னை மடியில் சேயைப் போல் துயில் கொள்ளும் அதிசயத்தை நேரில் கண்டு அனுபவித்தவர் எண்ணற்றோர். குழந்தை மனம் கொண்டவராய் இருந்தாலும் பகுத்தறிவில், துரிதமாகச் செயலாற்றுவதில் மின்னலைப் போல் இயங்கி உயிர் காத்தவரே நம் சற்குரு.
கோவணாண்டியுடன் சிறுவனான நம் சற்குரு வெளியூர் செல்லும்போதெல்லாம் ஏதாவது ஒரு பழைய மண்டபத்தில் அல்லது திருக்கோயில் வளாகங்களில் இரவு பொழுதைக் கழிப்பதுதான் வழக்கம். அவ்வாறு இடிபாடுகள் நிறைந்த ஒரு பழைய மண்டபத்தில் சிறுவன் உறங்கிக் கொண்டிருந்தபோது யாரோ உடலைத் தொட்டு எழுப்புவதுபோல் தோன்றவே திடுக்கிட்டு கண் விழித்துப் பார்த்தான். பக்கத்தில் படுத்திருந்த பெரியவர்தான் சிறுவனைத் தட்டி எழுப்பி, “உஸ் ... அசையாதே ...”, என்று தன் வாயில் கை வைத்து எச்சரிக்கை செய்தார். சிறுவனுக்கு ஒன்றும் புரியாமல் பெரியவரைப் பார்த்தபோதுதான், உண்மை நிலையே புரிய வந்தது. அவன் உடம்பு அச்சத்தால் ஜில்லிட்டது. ஒரு பெரிய தேள் ஒன்று பெரியவரின் உடம்பிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தது. அடுத்து படுத்திருந்த சிறுவனின் உடம்பில் ஏறிச் செல்லும் எண்ணத்தில் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது. உடனே விரைந்து செயல்பட்டு அந்தத் தேளை விரட்டலாம் என்று நினைத்தாலும் பெரியவரின் எச்சரிக்கையால் அவன் மௌனமாக அடுத்து நடக்கும் நிகழ்ச்சிகளைக் கவனிக்கலானான்.

ஸ்ரீஅகத்திய பெருமான்
குற்றாலம்

தேள் வேகமாக சிறுவனின் உடல் மேல் ஏறி ஊர்ந்து சென்று அவனைத் தாண்டி சென்று சில அடிகள் இடைவெளி விட்டு படுத்துறங்கிய ஒரு வழிப்போக்கனைத் தீண்டிடவே அவன் எழுந்து குய்யோ முய்யோ என்று கதறினான். அதைக் கண்ட சிறுவனுக்கோ உடல் நடுநடுங்க ஆரம்பித்தது. அதன் பின்னர் அந்த வழிப்போக்கனுக்கு கோவணாண்டி முதலுதவி அளித்தது வேறு கதை. தனக்கு என்று வரும்போது அதை மௌனமாக, விதியின் விளையாட்டாக ஏற்றுக் கொண்ட நம் சற்குரு இதே வேதனை மற்றொருவரை நெருங்கியபோது அவர் எப்படி செயல்பட்டார் ? ஒரு முறை திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் சற்குருவின் மனைவி சற்றே கண்ணயர அப்போது அவரைத் தீண்ட விரைந்து வந்த ஒரு பெரிய தேளை “சம்ஹரித்து” பலருக்கும் வழிகாட்டிய அந்த உத்தம ஒளி விளக்கு என்ற சற்குருவின் திருவிளையாடலை ஏற்கனவே விவரித்துள்ளோம்.
ஸ்ரீவாஸ்து பகவானின் ஆதி மூல வடிவத்தை குழந்தையாக வடித்து நம் வழிபாட்டிற்கு அளித்துள்ளார் அல்லவா நம் சற்குரு. வாஸ்து என்பது நாம் வாழும் இல்லம், அலுவலகம், தொழிற்சாலை என்பதை ஆரம்ப இருப்பிடமாகக் கொண்டாலும் நம்முடைய ஆத்மாவின் செயல்களமே மனித உடல் என்றால் அது மிகையாகாது. எனவேதான் நீண்ட நேரம் மனித உடலானது உறையும் வீடு, அலுவலகம் போன்றவற்றை வாஸ்து இலக்கணங்களுடன் அமைத்து இந்த மனிதக் கூட்டை இறைவனுடன் தொடர்புடைய ஆன்மா உறையும் திருக்கோயிலாக அமைக்கும் பணியை மேற்கொள்கிறார்கள் நம் சற்குரு போன்ற மகான்கள். வாஸ்து மூர்த்தி மட்டும் அல்லாது குழந்தை கிருஷ்ணன், பிள்ளையார், முருகப் பெருமான் போன்ற குழந்தை வடிவில் தோன்றும் மூர்த்திகளும், பெரியோர்கள் அளித்த பிள்ளைத் தமிழ் பாடல்களும் இவ்வாறு இறைவனுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் இறைவனை நிரந்தரமாக நம் உள்ளக் கோயிலுக்குள் நிலைநிறுத்தும் பணியை விளக்குகின்றன.

6. பாலுணர்வைத் தாண்டினால்தான் கடவுள் உணர்வு.
ஆணாகிப் பெண்ணாய வடிவுந் தோன்றும் என்று ஈச நிலையை வர்ணிக்கின்றார் அப்பர் சுவாமிகள். ஆரம்ப நிலையில் ஆணாகவோ, பெண்ணாகவோ கடவுளைத் தரிசனம் செய்யலாம் என்பது உண்மையே என்றாலும் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் ஆரம்பத்தில் காளியை இளம் பெண்ணாக தரிசனம் செய்த அவர் எல்லையற்ற சக்தியாக அன்னையைக் காண்பதற்காக உடலில் பூநூல், கோவணம் கூட தரிக்காது தவம் இயற்றியதை நாம் அறிவோமே. தாண்டுதல் என்றால் விட்டு விடுதல் என்று பொருள் அல்ல, “முறையாக” அனுபவித்தலே தாண்டுதல்.

7. வருவதை ஏற்றுக் கொள், கலியுலகில் இதுவே பெரிய தவம்.
ஒரு பெண்ணின் மறை உறுப்புகளைக் காண நேர்ந்தால் இதுவும் இறைவியின் தெய்வீக காட்சிகளே என்று தெளிதலே “தாண்டுதல்” ஆகும். இது பரமஹம்சர் உணர்த்தும் தெய்வீக நிலை. இதுவே வருவதை ஏற்றுக் கொள்தல் என்னும் தெய்வீக நிலையாகும். தவறாகக் கிடைத்த செல்வத்தையோ, தனிமையில் கிடைத்த பெண் போகத்தையோ அனுபவித்தல் என்பது வருவதை ஏற்றுக் கொள்தல் ஆகாது. ஒரு முறை குறும்பு எண்ணம் கொண்ட சில பக்தர்கள், “ஒரு அடியார் உங்கள் தரிசனம் பெறும் ஆவலில் காத்திருக்கிறார்...”, என்று கூறி ராமகிருஷ்ண பரமஹம்சரை ஒரு விபச்சாரியின் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். அப்போது நிலவிய தனிமையை வருவதை ஏற்றுக் கொண்டேன் என்று கூறாது அந்த மாதை கை கூப்பி வணங்கி, அழுது கொண்டே வெளியே வந்தார் பரமஹம்சர். அதற்காக அந்த பக்தர்களிடமோ, அவ்வீட்டில் உள்ள மாதிடமோ சற்றும் கோபம் கொள்ளவில்லை அம்மகான். அதே போல, சாலை ஓரமாக மிகவும் ஜாக்கிரதையாக இறை கீர்த்தனைகளை கூறிக் கொண்டு சென்றாலும் எங்கிருந்தோ வந்த ஒரு வாகனம் அடியார்கள் மேல் மோதுவது என்பது சகஜமான ஒரு செயலே. இறைவனின் மேல் பாரத்தைப் போட்டு விட்டுத்தான் நான் வெளியே கிளம்பினேன். அப்படியிருந்தும் எனக்கு ஏன் இந்த வேதனை என்றெல்லாம் வருத்தப்பட்டு புலம்புவோரே ஏராளம். அத்தகைய சூழ்நிலையில் நாம் நினைவுக்குக் கொண்டு வர வேண்டியதே இந்த அனுபவ மொழி.

ஸ்ரீதியாகராஜன் திருவீழிமிழலை

8. தியாகராஜன் சிவன் ஒருவனே.
மனைவி மக்களுக்காக பொருளை இழந்தேன், இரவு பகல் கண் துஞ்சாது குழந்தைகளை வளர்த்தேன், பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக விழித்திருந்து பாடுபட்டேன் என்று பலரும் தங்கள் “தியாக” செயல்களை பட்டியல் போடுவதுண்டு. உண்மையில் தியாகத்திற்கெல்லாம் சக்கரவர்த்தியாக இருப்பவனே எம்பெருமான் ஆவார். அடுத்த முறை இவ்வாறு தங்கள் தியாகத்தைப் பட்டியல் போட ஆரம்பிக்கும் முன் தங்களுடைய தியாகம் இறைவனின் தியாகத்தை விட எம்முறையில் உயர்ந்தது என்று சீர்தூக்கிப் பார்ப்பதே தன்னைத் தானே அறிந்து கொள்ளும் ஆத்ம விசாரமாகும்.

9. சாதனையும் சோதனையும் ஒன்றெனத் தெரிந்தால் கடவுள் ஒன்றாய்த் தெரிவார்.
ஒரு ஒலிம்பிக் பந்தயத்தில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக ஓடி பரிசு பெற்ற ஒருவர் அடுத்த ஒலிம்பிக் பந்தயத்தில் முதல் பரிசு பெற முடியுமா ? பொதுவாக, முடியாது என்பதே பலரின் எண்ணமாக இருக்கலாம். அதே சமயம் அவ்வாறு முதல் பரிசு பெற்ற ஒருவர் மற்றோர் இளைஞரை நல்ல முறையில் தயார் செய்து அடுத்த ஒலிம்பிக் பந்தயத்தில் முதல் பரிசு பெற வைப்பது என்பது ஓரளவு சாத்தியமாகத் தோன்றுகிறது அல்லவா ? இதுவே சாதனையையும் சோதனையையும் ஒன்றாய்க் காணக் கூடிய சுலபமான வழி. இதுவே குரு சிஷ்ய பாரம்பரியத்தில் என்றும் தொடரும் இனிய உறவு.

10. தங்கத்தை விட உயர்ந்தது தங்கமான மனமே.
தங்க நகைகள் அணிந்தவர்களை மற்றவர்கள் கௌரவமாக நடத்துவதற்கோ, மரியாதை அளிப்பதற்கோ வாய்ப்புகள் மிகுதி. ஆனால், இத்தகைய ஆபரணங்கள் அவர்களுக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தருமா, மனப்பூர்வமான ஆதரவைப் பெற்றுத் தருமா என்பது கேள்விக் குறியே. ஆனால், தங்க மனம் உடையவராக ஒருவர் திகழ்ந்தால் அவரை இவ்வுலக மக்கள் சமுதாயம் மட்டும் அல்லாது மரம், செடி, விலங்கினங்கள் என்ற அனைத்துமே அவர்களை வாழ்த்தி வணங்கும்.

ஸ்ரீமழபாடியுள் மாணிக்கம்
திருமழபாடி

11. இறைவனை அடைவதே அனைவரின் குறிக்கோளாக அமையட்டும்.
போரடிக்கிறது, போரடிக்கிறது. சிறியவர் முதல் பெரியோர் வரை இன்றைய உலகில் இந்த வார்த்தைகளை வாய் விட்டோ, மனதிற்குள்ளோ கூறாதவர் எவருமே இல்லை எனலாம். உருப்படியான ஒரு குறிக்கோளை மனிதர்கள் பெறாததே இதற்குக் காரணம். இந்நிலைக்கு பூர்வ ஜன்ம பல காரணங்கள் இருந்தாலும் மது, மாது, கஞ்சா போன்ற போதைப் பொருட்களை அதிகப்படியான நபர்கள், அதிகப்படியாக நாடுவது இவ்வாறு நல்ல குறிக்கோள் இல்லாத வாழ்க்கையை வாழ்வதால்தான். சமுதாயத்தைப் பாழாக்கும் இத்தகைய கொடூர நோய்களிலிருந்து மீட்டு மக்களை நன்னெறிப்படுத்த உதவும் ஒரே சாதனம் இறை நம்பிக்கையே, இறை சேவையே. இறைவனை நேரில் தரிசிக்காதவரை, உணராதவரை இறைவனின் வெளிப்பாடாக விளங்கும் மக்களுக்கு, உயிரினங்களுக்கு சேவை செய்வதையே மகேசன் சேவையாக ஏற்று வாழ்க்கை நடத்துவதே என்றும் குறையாத இன்பம் நல்கும் உன்னத தவ முறையாகும்.

12. அகண்ட பரமானந்த உணர்வே சிவம்.
ஒரு முறை ரிஷிகேஷ் சிவானந்தாவைப் பார்க்க ஒரு சன்னியாசி வந்தார். அவர் அடிக்கடி சிவோஹம் சிவோஹம் என்று உரைத்துக் கொண்டே இருந்தார். நான் சிவன் என்பது அதன் பொருள். உண்மையில் அந்த சன்னியாசி அந்த உணர்வு இல்லாது மற்றவர்களைக் கவருவதற்காகவே அவ்வாறு ஜபித்து வந்தார் என்பதை உணர்ந்த சிவானந்தா ஒரு சீடரை அழைத்து அவர் கையில் தாங்கியிருந்த தண்டத்தையும், கமண்டலத்தையும் அகற்றும்படிக் கூறினார். அவ்வளவுதான் ... சன்னியாசியிடமிருந்து அவ்வாறு கமண்டலத்தைப் பிடுங்க அந்த சீடர் முயன்றபோது அந்த சன்னியாசி மறுத்து தன்னுடைய செப்புக் கமண்டலத்தை இறுகப் பற்றிக் கொண்டார். அதைக் கண்ட சுவாமி சிவானந்தா சிரித்து, “சுவாமி, இனிமேல் தாங்கள் கமண்டலோஹம் என்று அதாவது, நான் கமண்டலம் ..., என்று ஜபிப்பதுதான் முறையாகும். அந்த அளவு இந்த கமண்டலத்தின் மீது பற்று வைத்துள்ளீர்களே...”, என்று அவருடைய அறியாமையை சுட்டிக் காட்டினார். சிவ பக்தர்கள் என்று தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் அனைவரும் எப்போதும் எந்நிலையிலும் ஆனந்த உணர்வை, எல்லையில்லாத ஆனந்த உணர்வை, சற்றும் கால தூர இடைவெளியே இல்லாத ஆனந்த நிலையைப் பூரணமாகக் கொண்டிருக்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்ளவும். அவர்களே உண்மையான சிவ பக்தர்கள்.
“இதயத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தால் எவ்வளவு பலசாலியான மனிதனாலும் ஒரு வார்த்தை கூட பேச முடியாது. அவ்வாறிருக்க மிக அருகில் துப்பாக்கியின் சூட்டை இதயத்தில் தாங்கி “ஹே ராம்” என்று ஒரு மனிதர் ராம நாமத்தைக் கூறுகிறார் என்றால் அந்தப் புனிதர் எந்த அளவிற்கு ராம நாமத்திலேயே வாழ்நாள் முழுவதும் இலயித்திருக்க வேண்டும்...”, என்பார் மகாத்மா காந்தியின் இறுதிக் காலத்தை நினைவு கூறும் நம் சற்குரு. இதுவே உண்மையான சிவ பக்தன் ஒருவரின் நிலையை உறுதி செய்யும் நிகழ்ச்சி.

13. மனிதன் சுமைகளில் மிகவும் பாரமானது அகங்காரமே.
மாதா அமிர்தானந்தா அருளிய பொன்மொழி இது. குழந்தையாய் இருந்து பார் கடவுள் உன் கண்ணுக்குத் தெரிவார் என்று நம் சற்குரு கூறும் குருவாய் மொழிக்கு ஒரு விளக்கம் என்றும் இதைக் கூறலாம். தான் என்ற அகம்பாவம் சற்றும் இல்லாத ஜீவனே குழந்தை என்பதால் அதன் கண்களில் கடவுள் தெரிவது அதிசயம் ஒன்றும் இல்லைதான். கேட்பதற்கு மிகவும் சுலபமாகத் தோன்றும் இந்த பொன்மொழியை சற்றே ஆழ்ந்து சிந்தித்தால் பல ஆண்டுகள், ஏன் பல பிறவிகளையும் தாண்டிய கடினமான பயிற்சி இந்நிலையை அடைய தேவைப்படும் என்பது புரியவரும். “உன் பெண்டாட்டி குளித்து விட்டு வந்தாலே அவளை ஓரக் கண்ணால் பார்க்கிறாய் ...”, என்று ஒரு அடியாரைப் பார்த்து கூறுவார் நம் சற்குரு. தான் என்ற அகங்காரம் இருந்தால்தான் இந்த காம உணர்வே ஒரு மனிதனிடம் தலை தூக்கும். இவ்வாறு மனிதன் தன்னுடைய ஒவ்வொரு செயலையும் ஆத்ம விசாரம் செய்து பார்த்து அதில் மறைந்திருக்கும் அகங்கார எண்ணத்தை குரு அருளால் களைந்து கொண்டே வந்தால் இறுதியில் சித்திப்பதே, தித்திப்பதே கடவுள் காட்சி.

ஸ்ரீபடிக்காசு நாதர்
அளகாபுத்தூர்

14. வீட்டை வாடகைக்கு விட வேண்டாம், வாகனத்தில் ஓசிப் பயணம் செய்ய வேண்டாம்.
பல வருடங்களாக பல அடியார்களிடம் நம் சற்குரு தெரிவித்து வந்த பொன் மொழியே இது. பலரும் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி தங்கள் தவறுகளை தொடர்ந்து “வெற்றிகரமாக” நிறைவேற்றி வருவதும் வேதனைக்குரிய செயலே. ஒருமுறை பிரபலமான ஒரு மடாதிபதி நம் சற்குருவை தரிசிக்க விரும்பியதால் அவரைச் சென்று பார்த்தார் நம் சற்குரு. நம் சற்குருவின் வரவை ஒட்டி அந்த மடத்தில் சுமார் 100 சன்னியாசிகளுக்கு அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார் அந்த மடாதிபதி. அந்த சன்னியாசிகள் ஒவ்வொருவருக்கும் கை நிறைய பணமும் (காசுக் குவியல்கள்) நம் சற்குருவின் திருக்கரங்களால் அளிக்கும்படியும் அந்த மடாதிபதி கேட்டுக் கொண்டார். நம் சற்குருவும் அவ்வாறே சன்னியாசிகளுக்கு பணத்தை அளித்தார். விடைபெறும் நேரத்தில் நம் சற்குரு ஒரு காசோலையை அந்த மடாதிபதியிடம் அளித்து அவர் செய்து வரும் நல்ல காரியங்களில் தன்னுடைய சிறு நன்கொடையையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அந்த மடாதிபதியை பார்த்து விட்டு தன் இல்லத்திற்கு திரும்பிய சற்குரு தான் மடத்திற்கு நன்கொடை அளித்ததன் காரணத்தை விளக்கினார். “மடம் என்பது பொது சொத்து. அந்த சொத்தை மற்றவர்களுக்கு, அவர்கள் சன்னியாசிகளாகவே இருந்தாலும் அந்த மடத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அளிக்கும் உரிமை கிடையாது. அதனால் ஒவ்வொரு சன்னியாசிக்கும் நாணயங்களை அள்ளித் தந்தபோது அந்த நாணயங்களின் மதிப்பை மனதில் கணக்கிட்டுக் கொண்டே வந்தேன். அவ்வாறு கணக்கிட்ட தொகையையே மடத்திற்கு நன்கொடையே அளித்தேன்,” என்பதே சற்குரு அளித்த விளக்கம். உலகில் முதல் சன்னியாசி தோன்றியதே திருக்கழுக்குன்றம் சிவாலயத்தில் உள்ள வாழை மரங்கள் அடர்ந்த சோலையாகும். இவ்வாறு சன்னியாசிகள் அனைவருக்கும் இறைவனின் அனுகிரகத்தை அளிக்க அருந்தொண்டாற்றிய நம் சற்குருவே அதில் “பாக்கியை” வைக்கவில்லை என்றால் மற்றவர்கள் இவ்விஷயத்தில் எவ்வளவு கவனமாக செயல்பட வேண்டும்.
மனிதனின் உடல் என்ற வீட்டிற்கே அவனுக்கு உரிமை கிடையாது. இறைவனின் வெளிப்பாடாகத் துலங்கும் மனிதர்களுக்கும் மற்ற ஜீவன்களுக்கும் சேவை செய்யவே அவன் தன் உடலை குரு காட்டிய வழியில் ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்றால் வீட்டை வாடகைக்கு விடுவது பற்றி அடியார்கள் தாங்களே ஆத்ம விசாரம் செய்து புரிந்து கொள்ளவும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
ஓமாம்புலியூர்

15. எண்ணெய் குழந்தையா, வெண்ணெய் குழந்தையா ?
ஆண்கள் புதன், சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்ற நியதி தொன்று தொட்டு நம் பாரத மண்ணில் ஊறி இருப்பது. நல்லெண்ணெய் என்ற எள் நெய்யாக இருந்தால் வெந்நீரையும் தேங்காய் எண்ணெயாக இருந்தால் குளிர்ந்த நீரையும் அதாவது பச்சைத் தண்ணீரையும் நீராடலுக்குப் பயன்படுத்தலாம். ரமணர், சேஷாத்ரி சுவாமிகள், நம் சற்குரு போன்ற பல குருமார்கள் ஆசார அனுஷ்டானங்களுக்கு அப்பாற்பட்டு விளங்கினாலும் எண்ணெய் நீராடலை மட்டும் தங்கள் இறுதி காலம் வரை நிறைவேற்றி வந்தார்கள் என்பதே எண்ணெய் குளியலின் முக்கியத்துவத்தை விளக்குவதாகும். பொதுவாக, எண்ணெய் குளியலின்போது வலது ஆட்காட்டி விரல் என்னும் குரு விரலால் சிறிது எண்ணெயைத் தொட்டு தரையில் சுண்டி விட்டு, பின்னரே எண்ணெய் தேய்ப்பது வழக்கம். சிலர் இவ்வாறு தெளிக்கப்பட்ட எட்டு துளிகளையும் ஒன்றாக இணைத்து மகாபலி, பரசுராமர், ஆஞ்சநேயர், விபீஷணன், கிருபாச்சாரியார், அஸ்வத்தாமன், வியாசர், மார்க்கண்டேயர் என்ற எட்டு சிரஞ்சீவி மூர்த்திகளுக்கும் அர்க்யம் அளிப்பது போல் இந்த எட்டு தைலத் துளிகளையும் இணைத்து பிரார்த்தனை புரிவதுண்டு. திசைக்கு ஒன்றாக காக்கும் இந்த எட்டு சிரஞ்சீவி சக்திகளும் ஒரே நேர் கோட்டில் இணையும்போதுதான் பூஜ்யம் என்பது நேர்கோடு என்ற தத்துவத்தின் அர்த்தம் சிறிது சிறிதாக புரிய வரும்.
நம் சற்குருவோ மிகவும் எளிமைப்படுத்தி இந்த எண்ணெய் நீராடலை நமக்கு அளித்துள்ளார். அதன்படி வலது தோளிலும், இடது தோளிலும் எண்ணெயை வைத்து சக்கர சங்கு பகவான்களுக்கு அலங்காரம் செய்து, நெஞ்சுக் குழி, முன் நெற்றி, தலை உச்சி என்ற பாகங்களுக்கு எண்ணெய்த் துளிகளை வைத்து நம் சற்குரு, பரம குரு, பரமேஷ்டி குரு இவர்களை தியானிப்பதே எளிய முறை எண்ணெய் நீராடலாகும். ஸ்ரீவெங்கடராம சுவாமிகளை சற்குருவாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஸ்ரீஇடியாப்ப சித்தர் பரம குருவாகவும், ஸ்ரீஅகத்திய பிரான் பரமேஷ்டி குருவாகவும் அமைவர். உடல், மனம், உள்ளம் இம்மூன்றையும் சீரமைப்பதே எண்ணெய் நீராடலாகும். நாக்கை 360 டிகிரி வலது, இடது பக்கங்களில் சுழற்றுவது, ஸ்வஸ்தி நமஸ்காரத்தில் முன் காலை 90 டிகிரி கோணத்தில் திருப்பி வைப்பது, வாஸ்து தோப்புக் கரணத்தில் கைகளை முதுகிற்குப் பின்னால் நமஸ்கார முறையில் வைத்துக் கொள்வது போன்ற உடல் உறுப்புகளின் வியாபகங்களை நிறைவேற்ற முடியாமல் திணறுவோர் பலருண்டு. தொடர்ந்த எண்ணெய் நீராடலால் உடல் வில்லாக வளையும் என்பதில் ஐயமில்லை. பிராண சக்தி உடலில் சீராக விரவிப் பரவும். அப்போதுதான் வானத்தையே வில்லாக வளைக்க முடியும்.

ஸ்ரீவேணுகோபாலன் பெருமாள்மலை

பிராண சக்தியை விநியோகித்து அனைத்து உடல் வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்று நிரூபித்தவரே ரிஷிகேஷ் சிவானந்தா ஆவார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த பிராண சக்தி செம்மையாக அமைந்தால்தான் ஒருவர் இறைக் காட்சியைப் பெறவே முடியும், அதில் தொடர்ந்து இலயித்திருக்கவும் முடியும். இதில் எந்த அளவு சந்தேகமும் இல்லை, இந்த பிராண சக்தியை அளிக்கும் எளிய மருத்துவம், இயற்கை வைத்தியம் எண்ணெய்க் குளியலைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது என்பதே நம் சற்குரு அளிக்கும் வழிகாட்டுதல். கிரேக்க நாட்டில் எண்ணெய்க் குளியல் என்பது பிரசித்தி பெறவில்லை என்றாலும் எண்ணெய்க் குளியலுக்கு ஓரளவு இணையாக சொல்லக் கூடிய கழுதைப் பால் குளியலால் பெருகிய பிராண சக்தியே கிரேக்கப் பேரழகியாக விளங்கிய கிளியோபாட்ராவின் கவர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.
சரியான முடிவுகளை எடுக்க உதவும் “தீர்க்க நாபி” என்ற மூளையில் அமைந்த நரம்பு மண்டலப் பகுதிக்கு போதுமான “உணவை” அளிப்பதும் எண்ணெய் குளியல் ஒன்று மட்டுமே. தாயின் கருப்பையில் குழந்தை உருவான பின் அதற்கு வேண்டிய உணவை அது தொப்புள் கொடி வழியாக ஏற்கிறது என்பதை நாம் அறிவோம். தொப்புள் கொடி வழியாக செல்லும் உணவு முதன் முதலில் இந்த தீர்க்கநாபி மண்டலத்தையே அடைகிறது. அவ்வாறு அடையும் உணவு வெண்ணிற வடிவில் இருக்கும். இந்த வெண்ணிற சக்தியை உடையதே குண்டலினி என்னும் சக்தியுமாகும். தாய்மார்கள் முறையாக எண்ணெய் குளியலை மேற்கொண்டு வந்திருந்தால்தான் எண்ணெய் பிள்ளை, வெண்ணைய் பிள்ளையாக உருவெடுக்கும் என்ற இரகசியம் இப்போது புலனாகின்றது அல்லவா ?

ஸ்ரீதட்சிணாமூர்த்தி புளியரை

வீரபாண்டிய கட்டபொம்மன் பயன்படுத்திய வாளை இன்று எட்டு பேர் சேர்ந்து தூக்கினாலும் தூக்க முடியாத அளவிற்கு எடை உள்ளது. அந்த வாளை தான் ஒருவனே எடுத்து சுழற்றும்போது அந்த வேகத்தைத் தாண்டி துப்பாக்கி குண்டு கூட அவனை நெருங்க முடியாது. அத்தகைய வேகம் உடையதாக இருக்கும் அவன் சுழற்றும் வாளின் வீச்சு. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவன் தவறாது நிறைவேற்றி வந்த எண்ணெய் குளியலே ஆகும் என்பார் நம் சற்குரு.

எண்ணெய் தேய்த்து நீராடும்போது தெற்கு திசையை நோக்கி நின்று கொண்டு நீராடுதலே சிறப்பு. இது நடைமுறையில் முடியாதபோது ஒரு சில குவளை நீரையாவது தென் திசை நோக்கி நின்று கொண்டு தலையில், உடலில் ஊற்றி பின்னர் அவரவருக்கு ஒத்து வரக் கூடிய திசையை நோக்கி நின்று நீராடலாம். அவ்வாறு நீரை ஊற்றும்போது
புளியரை தட்சிணா புவியில் பூத்திட்டேன் நின்னருளால்
நெளிவுற எந்தன் வாழ்வை சீரமைப்பாய் நினதடியில் தங்கவே
என்று ஓதி நீரை வார்த்தல் சிறப்பாகும். திருக்குற்றாலம் அருகே உள்ள புளியரையில் சுயம்புமூர்த்தியாக அருளும் ஸ்ரீசதாசிவப் பெருமான் கோயிலில் அபூர்வமாக நந்திக்கும் இறைவனுக்கும் இடையே எழுந்தருளியுள்ள ஸ்ரீதட்சிணா மூர்த்தி அருளால் பிராண சக்திகள் உடலில் சேர இந்த எண்ணெய்க் குளியல் உதவி புரியும். இதுவல்லாது இன்னும் பல தெய்வீக அனுகிரகங்களும் உண்டு. அவற்றைத் தக்க சற்குரு மூலம் அறிந்து கொள்தலே சிறப்பாகும். வேறு எங்கும் காண முடியாத அபூர்வமான இக்கோயில் திருக்குளமான சடாமகுட தீர்த்தத்தில் நீராடி இங்குள்ள 27 தீர்த்த வேணிப் படிகளைக் கடந்து சென்று இறை மூர்த்திகளைத் தரிசித்தலால் கிட்டும் அரிதிலும் அரிய தீர்த்த வேணி சக்திகள் மேற்கண்ட துதியை ஓதும்போதும் பக்தர்கள் உடலில் நிறையும் என்பதே இந்தத் துதியின் மகத்துவமாகும்.

16. சிவன் பிரம்மா விஷ்ணு என்பவர்கள் இறைவனின் வெவ்வேறு வடிவங்களே.
சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்ற சர்ச்சை ஆண்டாண்டு காலமாக, தொன்று தொட்டு வரும் ஒன்றுதான். இதற்கு காரணம் சிவனையோ பெருமாளையோ எவரும் நேரில் தரிசிக்காததுதான். இது மனிதர்களின் குறையே தவிர இறைவனின் குறை சிறிதும் கிடையாது.

ஸ்ரீஐயனார்கோயில்
சிறுமலை தவசிமடை

ஒரு முறை திருப்பதி மலை மேல் இருப்பது முருகன்தான், பின்னர் வந்தவர்கள் முருகப் பெருமானின் சிலையை மாற்றி பெருமாள் சிலையை வைத்து விட்டார்கள் என்று கூறுகிறார்களே இது உண்மையா என்று நம் சற்குருவை கேட்டனர். நம் சற்குரு புன்னகையுடன், “ஆமாம், சார். நீங்கள் கூறுவது சரிதான், குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருக்கும் இடம் தானே, இதில் உங்களுக்கு என்ன சந்தேகம் ?” என்று கேட்டார். உடனே மற்றோர் அடியார், “வாத்யாரே, அது ஏழு மலையான் வீற்றிருக்கும் இடம்தான் என்பதுதானே உண்மை ...”, என்று கேட்கவே நம் சற்குரு சற்றும் சலனமில்லாமல், “ஆமாம், ஏழுகொண்டல வாடா என்று பெருமாளைத்தானே பக்தர்கள் எல்லாம் அழைத்து மகிழ்கிறார்கள் ...”, என்றாரே பார்க்கலாம். அங்கிருந்த அடியார்கள் முகத்தில் எல்லாம் ஈயாடவில்லை. இதற்கு ஒரு படி மேலே இருந்தது அடுத்து (வேறோர் சந்தர்ப்பத்தில்) சற்குரு அளித்த விளக்கம். ஒரு கிராமத்து கோயிலில் ஒரு மண் குதிரை மேல் ஐயனார் சுவாமி எழுந்தருளி இருந்தார். காலப் போக்கில் பராமரிப்பு இல்லாமையால் ஐயனார் கீழே விழுந்து மறைந்து விட்டார். இதை அறியாத ஒரு விவசாயி அது ஐயனார் கோயில் என்று கேள்விப்பட்டு அந்த குதிரைதான் ஐயனார் சுவாமி என்று நினைத்து அதை தினந்தோறும் சுற்றி வந்து வழிபட்டுக் கொண்டிருந்தான். நாளடைவில் ஐயனார் சுவாமியின் திருக்காட்சி பெற்று பின்னர் அவன் முக்தியே அடைந்து விட்டான்.

புளியரை சிவாலயம்

17. நீ நிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே.
திருமழிசை ஆழ்வாரின் இந்த பிரபந்தப் பாடல் வரி இறைவனின் மிக உயர்ந்த அத்வைத தத்துவத்தை எளிமைப்படுத்தி உரைப்பதாகும். ஆண் பெண் இணைப்பு வேறு, ஆண் பெண் தத்துவ இணைப்பு வேறு. இதை முழுமையாக உணர்ந்து கொள்ள மனிதர்களுக்கு எத்தனை ஆண்டுகள், பிறவிகள் எடுத்துக் கொள்ளும் என்று கூற முடியாது. சற்குரு ஒருவரே இதை உரைக்க வல்லவர் என்றாலும் அதை சற்குரு வெளிப்படையாக உரைப்பது கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு சிவலிங்க வடிவமே இறைவனின் தத்துவ இணைப்பு என்று நம் சற்குரு கூறியபோது அதை அங்கிருந்த எந்த அடியாரும் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையில் இல்லை, இன்று நிலவுவதும் அதே நிலைதான் என்பதே இந்த தத்துவத்தின் பிரம்மாண்டத்தை சுட்டிக் காட்டுவதாகும்.

என்னதான் பிரம்மாண்டமானதாக வானவெளி இருந்தாலும் அதில் விளங்கும் நிலவில் காலடி பதிக்க மனித மனம் ஏங்குவதைப் போன்றதே இந்த இறை பிரம்மாண்டத்தை உணர உதவும் ஆழ்வார், நால்வர் பெருமக்கள் போன்றோர் அருளிய துதிகளின் மகத்துவமும் ஆகும். சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, நம் சற்குரு போன்றோர் இலட்சக் கணக்கான முறை திருஅண்ணாமலையை, திருத்தலங்களை வலம் வந்து வழிகாட்டியாய், வளர் ஒளியாய் பக்தர்களுக்கு அருளியது இத்தகைய ஒரே ஒரு வரியின் மகத்துவத்தைத்தான். எந்த ஒரு குழந்தையையும் நடக்க வைக்க எவரும், எக்காலத்திலும் முயன்றது கிடையாது. பெற்றோரின் ஆதரவான கரங்கள், அசையாத சுவர், நடைவண்டி போன்ற உபகரணங்களை குழந்தைகளுக்கு அளித்து குழந்தைகளை நடக்க வைக்க உதவி செய்வார்களே தவிர, தாங்கள் நடை பயின்று குழந்தைகளுக்குப் பாடம் புகட்டுவது கிடையாது என்பதை உணர்ந்து கொண்டால்தான் மகான்களின், குருமார்களின் மேன்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.

சடாமுடி தீர்த்தம் புளியரை

இதே முறையில் பிலவ வருட திருக்கார்த்திகை தீபத்தை பக்தர்கள் தரிசிக்கும் முறையாக அமைவதே மேற்கண்ட ஆழ்வார் துதியாகும். ஆழ்வாரின் இந்த அரிய அற்புத கோரிக்கையை அனைவரும் நிறைவேற்றும் வண்ணம் எளிமைப்படுத்தி அளிக்கிறார் நம் சற்குரு. 18.11.2021 வியாழக் கிழமை அன்று மதியம் சரியாக 12 மணிக்கு பௌர்ணமி திதி துவங்குகிறது. மறுநாள் மாலை வெள்ளிக் கிழமை அன்று திருக்கார்த்திகை தீப தரிசனம் அமையும் நேரம் வரை பக்தர்கள் கண்ணில் காணும் உருவங்களை எல்லாம் அது ஆடாக இருந்தாலும், மாடாக இருந்தாலும், புல், பூண்டு, விலங்குகளாக, மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் இதயத்தில் ஒளிரும் திருக்கார்த்திகை தீபத்தை முடிந்த மட்டும் ஒளி ரூபத்தில் தரிசித்து வணங்குதலே சித்தர்கள் சுட்டும் பிலவ வருட திருக்கார்த்திகை தீப தரிசன மகாத்மியமாகும்.

இவ்வாறு 26 மணி நேரத்திற்கு மேலாக நிரவி நிற்கும் குரு வார பௌர்ணமி சக்திகள் திருக்கார்த்திகை தீபத்துடன் இணைவது என்பது மனித வாழ்வில் ஒரு முறையே சித்திக்கும் அனுபூதியாக இருப்பதால் பக்தர்கள் இந்த அபூர்வ தீப சக்திகளை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாம் எத்தனை இதயங்களில் மிளிரும் தீபங்களை திருஅண்ணாமலையானாக தரிசிக்கிறோமோ அத்தனை ஜோதிப் பரல்களும் கார்த்திகை தீபத்தில் ஒளிப் பரல்களாக, மின்னல் கீற்றுகளாகத் தோன்றிப் பிரகாசிப்பதை நாம் கண்டு பிரமிப்பு அடைவோம். அப்போதுதான் எல்லையில்லா நம் சற்குருவின் ஜோதிப் பிழம்பையும் இந்த ஒளிப் பிரகாசத்தின் இடையே, நடுவே கண்டு பரமானந்தம் கொள்ள முடியும். ஜோதி அலங்கார பீடாதிபதி என்று நம் சற்குரு விளங்குவதன் தத்துவப் பொருளை அடியார்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள உதவும் தக்க தருணம் இதுவே, இதுவே.

ஸ்ரீசதாசிவம் புளியரை

பௌர்ணமி திதி சரியாக 24 மணி நேரம், 60 நாழிகைகளும் நிரவி நிற்பது கிடையாது. இதில் 24 மணி நேரத்திற்குக் குறைவாகவோ, 24 மணி நேரத்திற்குக் கூடுதலாகவும் திதி நேரம் நிரவி நிற்பது உண்டு. இந்த திதி நேரங்களின் மகத்துவத்தை தம் பிரபந்த பாடல்கள் மூலம் நமக்களித்தவரே திருமழிசை ஆழ்வார் ஆவார். ராகை, அனுமதி என்ற பௌர்ணமி நேரங்களின் அம்சங்களை ஆழ்வாரின் குழந்தைகளாகவே பாவித்து மங்களசாசனம் பெற்ற பெருமாள் தலங்களில் கொண்டாடும் வழிபாட்டு முறைகளும் தொன்று தொட்டு வந்த பௌர்ணமி சம்பிரதாய முறைகளே. இவ்வாறு 24 மணி நேரத்திற்கு மேலாக, குறிப்பாக 26 மணி நேரத்திற்கு மேல் நிலவும் பௌர்ணமியே தீர்த்தவேணி பௌர்ணமி எனப்படும். இந்த தீர்த்தவேணி பௌர்ணமி சக்திகளை குரு வார சக்திகளாக திருஅண்ணாமலை தீபத்தில் வெள்ளிக் கிழமை அன்று பொலியும் சுக்ர சக்திகளுடன் இணைப்பதும் இந்த அபூர்வ தீபத்தின், குருமார்களின் சங்கம சாம்ராஜ்யத்தின் சிறப்பாகும்.

பொதுவாக, பௌர்ணமி திதி நிரவி நிற்கும் நேரம் 60 நாழிகைக்கு உட்பட்டு இருந்தால் அத்தகைய பௌர்ணமிகளை ராகை, அனுமதி பௌர்ணமிகள் என்று அழைப்பதுண்டு. ராகை என்றால் ஒளியை நாடும், அனு மதி என்றால் முழு பௌர்ணமிக்குக் குறைந்த அளவு என்றும் பொருள். பல திருமணமான பெண்களும் தங்கள் கணவர் தங்கள் மேல் போதுமான அன்பு செலுத்துவதில்லை என்றோ, மற்ற பெண்களிடம் அதிக நட்புடன் பழகுகின்றார் என்றோ கணவர் மேல் சந்தேகப்படுவதால் குடும்பத்தில் சூறாவளிகள் தோன்றுவது உண்டு. இது உண்மையாக இருந்தாலும், இல்லை பிரம்மையாக இருந்தாலும் அத்தகைய பெண்கள் இத்தகைய ராகை, அனுமதி பௌர்ணமி இரவு முழுவதும் அல்லது இரண்டு கிரிவலங்களுக்குக் குறையாமல் திருஅண்ணாமலையை வலம் வந்து வணங்குவதால் பெண்களின் மன வேதனை தீரும். தொழிலாளிகள், முதலாளிகள் இடையே, பணம் அதிகமாகப் புழங்கும் இடங்களில், ஆண்கள் பெண்கள் நெருங்கிப் பழக வேண்டிய துறைகளில் உண்டாகும் சந்தேகங்கள் தீர்வதற்கு இத்தகைய பௌர்ணமி வழிபாடுகள் துணைபுரியும்.

பிருத்வி நந்தி
திருஅண்ணாமலை

18. எதையும் எடுப்பது ராம பாணம் அன்று, கொடுப்பதே ராம பாணம்.
எந்த ஆயுதமாக இருந்தாலும், அஸ்திரமாக இருந்தாலும் உடலுக்கு வேதனையை அளிப்பதே என்பதை நாம் அறிவோம். பூர்ண அவதாரமான ராம பிரானின் ராம பாணமோ இதற்கு முற்றிலும் மாறுபட்டது. ராம பாணத்தின் சக்தியைப் பெற்றவர்கள் அவர்கள் தவளை, குரங்கு போன்ற விலங்கினத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இராவணன் போன்ற அசுர குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், கூனி போன்ற மனித குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு முக்தி என்னும் அரிய பேற்றை வழங்கியதே ராம பாணத்தின் மகத்துவம். ஒரு ஜீவன் முக்தி என்னும் அரிய நிலையைப் பெற எத்தனை பிறவிகள் கடுந்தவம் புரிய வேண்டும் என்பதை எவராலும் வரையறுத்துக் கூற முடியாது. ஆனால் ராம பாணமோ இதன் இலக்காய் அமைந்த எவரும் முக்தியைப் பெறாமல் இருந்ததே கிடையாது என்றால் இத்தகைய ஒரு முக்திப் பேற்றை அளிக்க ஸ்ரீராமர் எத்தகைய கடுந் தவ முறைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். மனிதனாக தவ நிலைகளை பூரணம் பெற தோன்றியதே ஸ்ரீராம அவதாரமாகும். ஜடாயு என்ற கழுகு வேந்தனை தன் சந்திரஹாஸ வாளால் வெட்டி வீழ்த்தினான் இராவணன் என்பதை நாமறிவோம்.

ராம பாணத்திற்கே ஒருவருக்கு முக்தி அளிக்கும் வல்லமை இருந்தது என்றால் சிவபெருமானால் வழங்கப்பட்ட சந்திரஹாஸ வாளின் சிறப்பு மட்டும் எவ்விதத்திலும் குறைந்ததா என்ன ? சந்திராஹாஸ வாளால் வெட்டுண்ட ஜடாயுவுக்கு ஈமக் கிரியைகள் நிறைவேற்றி அந்த கழுகு வேந்தனுக்கு முக்தி அளித்தவரே ஸ்ரீராம பிரான். இதுவே சிவபெருமான் அனுகிரகத்தின் வானளாவிய கருணை. எப்படி ராம பிரானின் ராம பாணம் ஒருவரைத் துளைத்த பின் கங்கையில் நீராடி தன்னை தூய்மை செய்து கொண்டு மீண்டும் ராமபிரானின் அம்பாரத்தில் பள்ளி கொள்கிறதோ அது போல் சிவப் பரிசான சந்திரஹாஸ வாளும் மீண்டும் கைலாயத்தை அடையும் தருணமே இந்த பிலவ வருட கார்த்திதை தீப வைபவமாகும். சந்திரஹாஸ வாள் என்பது வெறும் ஆயுதம் என்பதை விட அது கோடிக் கணக்கான அசுர சக்திகளை மாய்க்கும் சிவ சக்தி என்பதே உண்மை. இந்த அசுர சக்திகள் அனைத்தும் வரும் தீபத்தில் களையப்படுவதே இந்த தீபத்தின் மகத்துவங்களில் ஒன்றாகும். அனைவர் உள்ளத்தில் பொலியும் “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்சோதி” என்பதை நிதர்சனமாக காணும் வல்லமை உள்ளவர்களுக்கு இந்த சந்திரஹாஸ வாளின் சுடரும் மின்னல் கீற்றாகக் கிட்டும். இதுவே வரலாறு காணாத சந்திர கிரகணம் கார்த்திகை தீப நாளில் அளிக்கும் அனுகிரகமாகும்.

வரும் 19.11.2021 வெள்ளிக் கிழமை தோன்றும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் அதை பலரும் கண்டு கொள்வது கிடையாது. நம் சற்குருவோ சந்திர கிரகணம், சூரிய கிரகணங்கள் போன்றவை நமக்குத் தெரியாவிட்டாலும் இந்த கிரகண சக்திகள் நம் பிரபஞ்சம் முழுவதுமே வியாபிப்பதால் அனைத்துக் கிரகணங்களையும் நாம் உரிய முறையில் “கொண்டாட” வேண்டும் என்று வலியுறுத்துவார். காலை மணி 11.30 முதல் மாலை சுமார் 5.30 மணி வரை நிகழும் இந்த கிரகணம் சந்திரஹாஸ கிரகணம் என்று சித்தர்களால் அழைக்கப்படுவது எத்தகைய பொருத்தமான அனுகிரக பதக்கம். இந்த கிரகண வேளையில் திருஅருணாசலத்தை கிரிவலமாக வந்து கொண்டு இருப்பதோ அல்லது பிருத்வி நந்தி அருகே அமர்ந்தவாறு திருஅண்ணாமலையை தரிசித்துக் கொண்டிருத்தலோ பலன்கள் கூற முடியாத அளவிற்கு அனுகிரக சக்திகளை அளிக்கவல்லதாகும்.
நீ நிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே
நீ நிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே
என்ற சந்திர துதியை வாய் விட்டு ஓதுதலும் மிகச் சிறந்த வழிபாடே. திருஅண்ணாமலையை வலம் வர முடியாதவர்கள் தங்கள் ஊரில் ஆராக்கீரையுடன் அச்சுவெல்லம் சேர்த்து பசு மாடுகளுக்கு தானம் அளித்தலும் இத்தகைய அபூர்வ சந்திர ஔஷத சக்திகளை அனுகிரகமாக அளிக்கும் சித்த வழிபாடாகும். கடுமையான நீரிழிவு நோய்களையும், சங்கம பிரச்னைகளையும் களையக் கூடியதே இந்த தான தர்ம முறையாகும்.

திங்களூர் சிவாலயம்

மழிசை என்றால் சக்கரம் என்று பொருள். திருமழிசை ஆழ்வார் சக்கராயுதத்தின் அவதாரம் என்று கூறுவர். அப்படியானால் திருமழிசை ஆழ்வாரால் திருமழிசைக்கு பெருமையா இல்லை திருமழிசை என்ற திருத்தலத்தின் சிறப்பால் ஆழ்வார் அங்கு பிறவி எடுத்தாரா என்பதை எவர் நவில இயலும். எப்படி இருந்தாலும் பிறவிப் பிணிகளை சிறிதும் துன்பமில்லாமல் களையக் கூடியதே திருமழிசை ஆழ்வாரின் அவதாரக் கிருத்தியங்களில் ஒன்று என்று உரைப்பார் நம் சற்குரு. இந்த அனுகிரகத்தை பக்தர்கள் உணர வழிவகுப்பதும் மேற்கண்ட அருணை வலமாகும். மழிசை என்ற சக்கராயுதம் ஆரம்பத்தில் சிவபெருமானிடமே உறைந்திருந்தது. பெருமாள் ஆயிரம் தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்தபோது அவற்றில் ஒரு மலர் குறையவே தன் கண்ணையே தாமரை மலராக எம்பெருமானுக்கு அர்ச்சித்ததால் பெருமாளின் இந்த அரிய செயலைப் பாராட்டும் விதமாக இறைவனிடமிருந்து சக்கராயுதத்தை பரிசாகப் பெற்று செந்தாமரைக் கண்ணனாக விளங்கினார் பெருமாள். இத்தகைய நீண்ட வரலாற்றைப் பூண்ட திருமழிசை ஆழ்வார் உத்தம, உன்னத சிவபக்தராக நிலவியதில் வியப்பென்ன ?

சக்கர தீர்த்தம் விற்குடி

பிருந்தை இடமான விற்குடி

இங்கு ஒரு தெய்வீக வரலாற்றை அடியார்கள் அறிந்து கொள்தல் நலமே. சலந்தரன் என்ற அசுரன் பிரம்மாண்டமான தவங்கள் இயற்றி எம்பெருமானை மகிழ்வித்து சிவபெருமானிடமிருந்து சக்கராயுதத்தையே பரிசாகப் பெற்றான். அந்த சக்கராயுதத்தால் ஆணவம் தலைக்கேற பல தேவர்களையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான் சலந்தரன். தேவர்களின் ஓலத்தைக் கேட்ட சிவபெருமான் அவர்களைக் காப்பதற்காக திரிபுரமாக விளங்கிய அரக்கர்களை தன்னுடைய ஒரே புன்னகை மூலம் சம்ஹாரம் செய்தது போல் வில் ஒன்றை ஏந்தி அதை வெறுமனே தரிசித்த சலந்தரனை சம்ஹாரம் செய்தார் எம்பெருமான். எப்படி ? இதுவரை எவரும் அறியாத தெய்வீக இரகசியம் ஒன்றை அடியார்களின் நலம் கருதி இங்கு அதைத் தெரிவிக்கிறார் நம் சற்குரு. விற்குடி சிவாலயத்தில் சலந்தரனை ஈசன் சம்ஹாரம் செய்தார் என்பதை நாம் அறிவோம். சலம் என்றால் அசைதல் என்று பொருள். இவ்வாறு அசையும் ஒரு பொருளின், ஜீவனின் இயக்கத்தை சம்ஹாரம் செய்து அதாவது சலந்தரனை சம்ஹாரம் செய்து தனக்கு ஈடு இணை தான் ஒருவனே என்று நிரூபித்த அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாக விற்குடி விளங்குவதில் வியப்பென்ன ? இவ்வாறு அசைவை, இயக்கத்தை சம்ஹாரம் செய்த சல ஈசனும், அசல ஈசனும் எம்பெருமான் ஒருவனே என்பதே விற்குடி சுட்டிக் காட்டும் மகாத்மியமாகும். நளாயினியாலும் சூரியனின் இயக்கத்தை நிறுத்த முடிந்ததே தவிர, சம்ஹாரம் செய்யவில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

திருக்கார்த்திகை தீப தரிசனம்

உடலின் உறுப்புகளில் சிறந்தது கண் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த கண்ணையே இறைவனுக்காக ஈந்த பெருமாளுக்கு எதை அளித்து கௌரவிக்க முடியும் ? கண்ணுக்கு கண்ணான பிருந்தை என்ற துளசியை பெருமாளுக்கு அளித்து, இந்த திருமண பரிசாக சக்கராயுதத்தை பெருமாளுக்கு அளித்து அருள் வழங்கினார் ஈசன். துளசி என்பவள் சலந்தரனின் மனைவி. அடுத்தவன் மனைவியை எப்படி ஒரு இறை மூர்த்திக்கு பரிசாக அளிக்க முடியும் என்று நாம் நினைக்கலாம். கணவன் மனைவி என்ற நிலைகள் மனிதப் பிறவிக்கு மட்டுமே பொருந்தக் கூடியவை, உத்தம நிலைகளில் மனைவி என்பது இறை சக்தியையே குறிக்கும். எப்படி மனிதர்களின் திருமணத்தில் மணப் பெண்ணை திருமணத்தின்போது சூரியன், இந்திரன், அக்னி போன்ற தேவர்கள் ஏற்று அவளை தூய்மைப்படுத்துகிறார்களோ அதே போல துளசியையும் தம் வில் ஆயுதத்தின் அசையா நிலையால் தூய்மை செய்தவரே ஈசன் என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சித்த மகாத்மியமே. காலவ மகரிஷியின் புதல்விகள் 360 பேரையும் தினம் ஒருவராக மணந்து திருவிடந்தையில் சேவை சாதிக்கிறார் அல்லவா ஸ்ரீலட்சுமி வராகப் பெருமாள். திருவிடந்தை என்பது இடப் பாகத்தில் மனைவியை ஏற்றல் என்பதாகும். சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வரக் கோலம் ஒன்று மட்டுமே நாம் அறிந்த சிவ சக்தி ஐக்ய தத்துவம் என்றாலும் வராகப் பெருமாள் போன்ற இறை மூர்த்திகளும் இவ்வாறு “இட” சக்தியுடன் துலங்குகின்றனர் என்பதும் நம்மை இன்புறுத்தும் செய்தியே.

எப்படி சந்திரஹாஸ வாள், சிவ தனுசு போன்ற ஆயுதங்கள் தங்கள் அரிய பணி நிறைவேறிய பின் மீண்டும் தாங்கள் தோன்றிய இடமான இறைவனின் இருப்பிடத்தை மீண்டும் அடைகின்றனவோ அதே போல் சக்கராயுதமும் சலந்தரனின் சம்ஹாரத்திற்குப் பின் தன் “யதாஸ்தானமான” எம்பெருமானின் திருக்கரங்களை அடைந்த காட்சியை இன்றும் பக்தர்கள் விற்குடி திருத்தலத்தில் தரிசித்து மகிழலாம். ஸ்ரீதனம் என்பது திருமணமான மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் அளிக்கும் செல்வங்கள் ஆகும். விற்குடியில் துளசியை மணம் புரிந்த பெருமாளை கௌரவிக்கும் பொருட்டு சக்கராயுதம் மட்டுமன்றி இங்கு விளங்கும் சங்கின் அனுகிரக சக்திகளையும் பெருமாளுக்கு ஸ்ரீதனமாக அளித்து கௌரவித்தவரே எம்பெருமான். விற்குடியில் விளங்கும் சங்கு சக்கர தீர்த்தங்களில் ஆண்கள் புதன் சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளிலும் நீராடி இறை தரிசனம் பெறுவதால் இது வரை விட்டுப் போன் எண்ணெய் குளியலுக்கு ஓரளவு பிராய சித்தம் கிட்டும். அதிக உஷ்ணத்தால் தோன்றும் கண் நோய்கள், மூலம் போன்ற நோய்கள் குணமடையும்.

ஸ்ரீஅதிகார நந்தி தம்பதிகள்
சங்கரன்கோயில்

19. பசு படுத்தாலும் பத்தாயிரம் பொன்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கூறுவர். அது போல் பசு படுத்தாலும் பத்தாயிரம் பொன் என்பார் நம் சற்குரு. பலரும் நாங்கள் காக்கைக்கு பிரசாதம் வைத்தோம், ஆனால் காக்கை ஒன்றும் அதைச் சாப்பிடவில்லை, பின்னர் ஒரு நாய் வந்து அந்த பிரசாதத்தை சாப்பிட்டு விட்டது, யாருமே சாப்பிடவில்லை எறும்புகளே மொய்த்ததால் அந்த பிரசாதம் வீணாகி விட்டது என்று குறை கூறுவதுண்டு. உண்மையில் இறைவனுக்கு நைவேத்யம் செய்து அதை பித்ருக்களுக்குப் படைத்தால் அந்த பிரசாதத்தை நிச்சயம் நம் முன்னோர்கள் ஏற்றுக் கொள்வர், அதில் எந்தவித ஐயப்பாடும் கிடையாது. பித்ருக்கள் வடிவமோ எந்த விதத்திலும் அமையலாம் என்பதே நாம் பெற வேண்டிய ஆன்மீக அறிவு. நமது பித்ருக்களின் நிலைக்கு ஏற்ப அவர்கள் உருவம் நாயாகவோ, பூனையாகவோ இருக்கலாம். இது நாம் அளிக்கும் உணவை ஏற்பதற்காக அவர்கள் கொள்ளும் இயைந்த வடிவே தவிர, உண்மையில் இது அவர்கள் உலவும் வடிவம் அல்ல என்பதை அறிந்தால் நாம் சிறிதும் வருத்தமுற மாட்டோம் அல்லவா ?

ஆராக்கீரை

அதே போல ஆராக் கீரையுடன் அச்சு வெல்லத்தை உணவாக பசு மாடுகளுக்கு அளிக்கும்போது அதை மாடுகள் முகர்ந்து பார்த்து விட்டு நிராகரித்து விடுவதும் உண்டு. அதனால் இந்த உணவு மாடுகளுக்குப் பிடிக்கவில்லை என்று நினைத்து பலரும் இந்த வழிபாட்டையே “நிராகரித்து” விடுகிறார்கள். உண்மை அதுவல்ல. கோஷீரம் என்ற அமிர்த சக்திகள் பசு மாடுகளின் சுவாசம் மூலமாக உலகில் நிரவிக் கொண்டே இருக்கும். இந்த அமிர்த சக்தியை அளிக்கும் மாடுகளையே நாம் கோமாதா என்று அழைக்கிறோம். நாட்டு மாடுகளுக்கு மட்டுமே இத்தகைய கோமாதா சக்திகள் உண்டு, சீமைப் பசுக்கள், ஜெர்சி இனப் பசுக்களுக்கு இத்தகைய தெய்வீக ஆற்றல் கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும். நாம் ஆராக்கீரையையும் அச்சு வெல்லத்தையும் பசு மாடுகளுக்கு அளிக்கும்போது அவை இவற்றை உணவாக ஏற்காமல் வெறுமனே முகர்ந்து பார்த்து விட்டு சென்றாலும் போதும், இந்த கீரை இலைகளிலும், வெல்லத்திலும் கோக்ஷீர சக்திகள் அல்லது கோமாதா அமிர்த சக்திகள் நிரவி அவை பிருத்வி பூதம் மூலமாக பூமியை அடைந்து விடும். பாலில் இயற்கையாக கிட்டும் இந்த கோமாதா சக்திகள் பசு மாடுகள் வயதாகி பால் கறக்காத வறண்ட நிலையை அடைந்தாலும் இத்தகைய கோமாதா சக்திகள் மட்டும் எப்போதும் அந்த பசுக்களின் சுவாசத்தில் நிறைந்திருக்கும். இந்த கோமாதா சக்திகளைப் பெறுவதற்காகவே மாடுகளை ஆதரவாக தடவிக் கொடுத்தல், உணவு அளித்தல், நீர் வார்த்தல், குளிப்பாட்டி விடுதல், கோ சூக்த மந்திரங்களை ஓதி வழிபாடுகள் இயற்றுதல் போன்ற நற்காரியங்களை நாம் நிறைவேற்றி வருகிறோம்.

பசுவின் குளம்புகள் பகலவன், சுசீலன் என்ற சூரிய சந்திர அம்சங்களாகத் திகழ்பவை. இந்த அம்சங்களை சுருக்கியே நாம் பசு என்று அழைக்கிறோம். இவ்வாறு அமாவாசை பௌர்ணமி தத்துவங்களாகப் பொலியும் பசுக்களின் குளம்புகளுக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டிட்டு குறைந்தது மூன்று முறை வலம் வந்து வணங்குதல் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மட்டுமல்லாது சந்திர கிரகணம், சிறப்பாக சந்திரஹாஸ கிரகண நாளில் இயற்ற வேண்டிய அற்புத நோய் நிவாரண வழிபாடாகும். திருஅண்ணாமலை கோயிலில் நிலவும் கோசாலையில் இத்தகைய வழிபாடுகளை நிகழ்த்துதல் என்பது அரிதிலும் அரிய மகாபாக்யமே. திருஅண்ணாமலை கிரிவலப் பாதை, திருச்சி மலைக்கோட்டை, நெடுங்குடி திருத்தல கிரிவலப் பாதைகள், திருநெல்வேலி மாவட்டத்தில் புளியரை திருத்தலம், சந்திர தீர்த்தம் உள்ள திருவெண்காடு, ஸ்ரீரங்கம், சீயாத்தமங்கை, பேரூர், திங்களூர் போன்ற திருத்தலங்களில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுவதும் சிறப்பே. ஆராக் கீரையுடன் ஏன் அச்சு வெல்லத்தை சேர்க்க வேண்டும், வேறு விதமான சர்க்கரை போன்ற இனிப்பு பதார்த்தங்களை சேர்க்கக் கூடாதா என்ற சந்தேகம் சிலருக்குத் தோன்றலாம். கண் மூடி வந்தவர் மண் மூடிப் போகார் என்பது சித்த வாக்கியம் அல்லவா ? எப்படி ஆறு என்பது மூன்று என்பதன் குசாவாகப் பொலிகின்றதோ அது போல் ஆராக் கீரையில் நிறைந்த சுரவிபுலம் என்ற அமிர்த சக்தியை, வீர்ய சக்தியை குசா சக்திகளுடன் மிளிரச் செய்வதே கோபுர வடிவில் அமைந்த அச்சு வெல்லத்தின் இயல்பாகும். இது குறித்து பக்தர்கள் ஆத்ம விசாரம் செய்வதும் அமிர்த சக்திகளைப் பற்றிய அறிவை விருத்தி செய்யும் என்பது உண்மையே.

இரு வகையான ஆராக்கீரைகள் தற்போது பல இடங்களில் பிரசித்தமாக உள்ளன. நீர் ஆரை, புளியாரை என்பன. நாம் இங்கு குறிப்பிடுவது நீர் ஆராக் கீரையே. நீர் ஆராக் கீரை நீரிழிவு நோய்களை மாய்க்கவல்லது. அது மட்டுமல்லாமல் ஆண்களுக்கு ஏற்படும் பலவிதமான வீர்யக் கோளாறுகளையும் சீர்செய்யும் மருத்துவ குணங்கள் கொண்டது.

27.11.2021 மக நட்சத்திரத்துடன் இணைந்த தீர்த்த சக்திகள் கூடிய சனிக் கிழமையாகத் துலங்குவதால் இந்த அற்புத நாளில்தான் முந்தைய யுகம் ஒன்றில் புளியரை திருத்தலத்தில் உள்ள ஜடாமகுட தீர்த்தம் தோன்றியது. இந்த நன்னாளின் அனுகிரகத்தை மக்களுக்கெல்லாம் அளிக்கும் வண்ணம் வருண பகவானே அபிஷேகம் இயற்றி அந்த தீர்த்த பிரசாதத்தை, சிவபெருமானின் திருவடிகளில் வழியும் அந்த அற்புத சிவ பிரசாதத்தை சடாமகுட தீர்த்தத்தில் மழை நீராக வர்ஷிக்கிறார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். இந்த சடாமகுட அமுத மழையில் ஒரு முகூர்த்தம் பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து இந்த வினை தீர்க்கும் விடை அம்சங்களை அடியார்கள் பெற்றிருந்தால் அடுத்து அவர்களுக்கு பூமியில் பிறவியே கிடையாது என்பதே இந்த வருண அபிஷேகத்தின் முக்கியத்துவமாகும். அனைத்து வினைகளையும் களையும் சனி பகவானும், செவ்வாய் பகவானும் ஒருவருக்கொருவர் உச்சமாகும் இடத்தில் பரிவர்த்தனை அம்சங்களுடன் துலங்குவதும், மக நட்சத்திரத்தில் துலங்கும் சந்திர பகவானுடன் குரு பகவான் நேர் பார்வை கொண்டு குரு சந்திர யோக அம்சங்களுடன் பரிணமிப்பதும் நாம் புரிந்து கொள்ளக் கூடிய தீர்த்த நீராடலால் வினைகள் மாயமாகும் அம்சங்களாகும்.

வருண பகவானின் அபிஷேகப் பலன்களில் ஒன்றே எம்பெருமானின் செக்கர் வான் ஒளி சக்திகள் நிறைந்த செவ்வாரை சக்திகள் சடாமகுட தீர்த்த சக்திகளின் பிரவாகமாக பூமியில் வர்ஷிக்கும் என்பதாகும். இந்த சக்திகளை மற்ற ஜீவன்களுக்கும், குறிப்பாக பசுக்கள் மூலமே இந்த செவ்வாரை சக்திகளை சமுதாயத்தில் நிரவி சேவை செய்ய முடியும் என்பதால் செவ்வாரை சக்திகள் நிறைந்த செவ்வாரைக் கீரையை அச்சு வெல்லம் கலந்து பசு மாடுகளுக்கு அளிப்பதால் சமுதாயத்தில் அரிதிலும் அரிய இந்த செவ்வாரை சக்திகளை நிலைநிறுத்திய பெருமையை அடியார்கள் பெறுவார்கள். செவ்வாரைக் கீரையை இனம் கண்டு கொள்ள முடியாமல் போனாலும் அது பற்றிக் கவலை கொள்ளாது நீராராக் கீரையையே பசுக்களுக்கு அளித்து பயன்பெறலாம்.

சிறையில் வாடிய தன் பக்தன் ராமதாசரை விடுவிக்க ராமச் சந்திர மூர்த்தியே லட்சுமணனுடன் பாதுஷாவின் அரண்மனைக்கு எழுந்தருளினார். ராமபகவானைக் கண்ட பாதுஷா மனம் நெகிழ்ந்து, “ஹமாரா அல்லா ஆ கயா ...” (நம்முடைய இறைவன் வந்து விட்டார்) என்று கூவினான். பக்தர் ராமதாசருக்கோ ராம பகவானின் தரிசனமே கிட்டவில்லை. இது பரமனின் ஓர வஞ்சனையான நாடகம் போல் தோன்றுகிறது அல்லவா ? இந்த இறை நாடகத்தை நாம் மனதார “அனுபவிக்க” வழிவகுப்பதே வரும் திருஅண்ணாமலை கார்த்திகை தீப வைபவம் ஆகும். ராம உருவத்தில் இறைவனைக் கண்டவன் பாதுஷா, அனைவரின் உள்ளத்திலும் பிரகாசித்த சிவ ஜோதியை, அருணாசல ஜோதியைக் கண்டவர் ராமதாசர்.

வரும் திருக்கார்த்திகை தீபம் வியாழன் வெள்ளிக் கிழமைகளின் சங்கமத்தில் தோன்றுவதால் பிரகஸ்பதி, சுக்கிராச்சாரியார் என்று இரு குருமார்களின் அனுகிரக சக்திகள் இந்த தீபத் திருவிழாவில் இணைகின்றன. இந்த தீபப் பிரகாசத்தில் மிளிரும் குரு சக்திகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அன்புள்ளம் கொண்ட அடியார்கள் வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட மாங்கல்யங்களை திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் எங்கு வேண்டுமானாலும் வைத்து அந்த திருமாங்கல்யங்களில் திருஅண்ணாமலை திருக்கார்த்திகை தீப கிரணங்கள் வர்ஷிக்குமாறு பெற்று பின்னர் கார்த்திகை மாத நிறைவிற்குள் எத்தலத்தில் வேண்டுமானாலும் மாங்கல்ய தானமாக பக்தர்களுக்கு அளிக்கலாம் என்பதே நம் சற்குரு அளிக்கும் எல்லையில்லா இறை அனுகிரகம் ஆகும். இத்தகைய மாங்கல்யங்களை தானமாக அளிக்கும் முன் அவை தங்கத்தில் தோய்க்கப்பட்ட வெள்ளி மாங்கல்யங்கள்தான் என்பதை தானம் பெறுபவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பது முக்கியம். கணவன்மார்களுக்கு நீண்ட ஆயுளை அளிப்பதுடன், இத்தகைய மாங்கல்ய தானத்தால் தீராத வியாதிகளோ, துன்பங்களோ இல்லை என்பதே சற்குரு அளிக்கும் உத்தரவாதம் ஆகும்.

ஸ்ரீபார்கவ தரிசனம்
திருஅண்ணாமலை

20. காதல் போர் மற்போர் அல்ல.
காதல் என்பதை பலரும் காமம் என்பதன் இணையான பதமாகவே கொள்கின்றனர். ஒரு பொருளிடமோ, உயிரிடமோ கொள்ளும் கவர்ச்சியே காமம், காமம் என்பது பெரும்பாலும் தகுதியை அடிப்படையாகக் கொண்டு விளங்குவது. அன்போ எந்தவித தகுதிக்கும் அப்பாற்பட்டது. மனித குலத்தைப் பொறுத்தவரை தாய் குழந்தையிடம் கொள்ளும் பாசத்தையே ஓரளவிற்கு காதல் என்று உரைக்கலாம் என்றாலும் இறைவன் மீது பக்தன் கொள்ளும் தூய அன்பே காதல் என்பதாகும். இவ்வாறு அன்பை செலுத்துவதில் பக்தன் உயர்ந்தவனா, இறைவன் உயர்ந்தவனா என்ற போட்டி துவங்கும்போதே அது உண்மையான “காதல் போர்”. பெருமாள் துளசியை மணந்தபோது அங்கு கவர்ச்சி என்ற சொல்லுக்கு இடமேயில்லை. பக்தர்களுக்கு எல்லாம் அனுகிரகம் என்ற இறையன்பை வழங்குவதற்காக பெருமாளால் அங்கீகரிக்கப்பட்டதே துளசி விவாகம் ஆகும். நளாயினி தன் கணவனுடன் எந்த உடல் சுகத்தைப் பெறாமல் மறைந்தாலும் அடுத்த பிறவியில் பஞ்சபாண்டவர்களையும் கணவனாகப் பெற்று ஐவர் தீண்டும் “கனி” ஆனாள் அல்லவா ? இவ்வாறு பக்தர்களுக்கு அனுகிரகங்களை வழங்குவதற்காக ஏற்பட்டதே துளசி, ராதை, ஆண்டாள் போன்ற அவதாரங்கள் என்பதை அறிந்தால்தான், உணர்ந்தால்தான் காதலின் உண்மையான பொருள் நம் உள்ளத்தில் தித்திக்கும்.

21. விண்ணுலகம் உயர்ந்ததா, மண்ணுலகம் உயர்ந்ததா ?
நம் சற்குரு அளித்த ஆத்ம விசார கேள்விகளுள் இதுவும் ஒன்று. சகல சுக போகங்களையும் அள்ளித் தருவதே தேவர்களுக்கு எல்லாம் தலைவனாகும் இந்திர பதவி. இந்த அற்புத இந்திரப் பதவியை ஏற்பதற்காக ஸ்ரீஅகத்தியர் தலைமையில் ரிஷிகள் எல்லாம் இந்திரனை ஒரு பல்லக்கில் ஏற்றிச் செல்வர். அப்போது மற்ற ரிஷிகளை விட குள்ளமாக இருந்த ஸ்ரீஅகத்திய பிரான் மெதுவாக பல்லக்கைத் தூக்கிச் சென்றதால் இந்திரன் கோபமுற்று ஸ்ரீஅகத்திய பிரானை சர்ப்ப சர்ப்ப (வேகமாகச் செல்வாய்) என்று கூற ஸ்ரீஅகத்திய பெருமான் இந்திரனைக் கோபமுடன் பார்க்க இந்திரன் சர்ப்பமாக, பாம்பாக மாறி பூமியில் விழுந்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

செட்டிக்குளம் சிவாலயம்

உண்மையில் இன்னும் சில நொடிகளில் அந்த இந்திரன் பூர்வ ஜன்ம விளைவால் பாம்பாக மாறி பூமியில் விழப் போகிறான் என்பதை தம் ஞானதிருஷ்டியில் உணர்ந்த ஸ்ரீஅகத்திய பிரான் இந்திரனைக் காப்பாற்ற தன்னாலான முயற்சியாக வேண்டுமென்றே மெதுவாக செல்ல ஆரம்பித்தார். அந்த சோதனையான நேரத்தை இந்திரன் ஸ்ரீஅகத்திய பிரானின் தோள்மேல் ஊர்ந்து சென்று கழித்திருந்தால் அவனை எக்காலத்தும் துன்பம் சூழ்ந்திருக்காது. பதவி, செல்வாக்கு, அதிகாரம் இவற்றைக் குறிப்பது ஆண்களின் வலது காலாக இருப்பதால் இதைக் குறிக்கும் தன்னுடைய வலது காலால் அந்த இந்திரன் ஸ்ரீஅகத்திய பெருமானின் தோளை உதைத்து வேகமாகச் செல்லும்படிக் கூறி சாபத்தை தன்னுடைய தவற்றாலேயே ஏற்றுக் கொண்டான் என்பதே விதி அளித்த வேதனை. அதே சமயம் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரோ தன் தந்தையின் தோள் மேல் ஏறிச் சென்றாலும் சிவபெருமானின் திருவடிகளின் கீழ் அமர்ந்து செல்வதைப் போன்ற பணிவைக் கொண்டாராம். இதுவே நாம் மகான்களின் வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளும் பாடம்.

துறையூர் அருகே செட்டிக்குளம் சிவாலயத்தில் ஒரு தூணைச் சுமக்கும் பணியை ஒரு சாதாரண மனித அடியார் நிறைவேற்றி வருகின்றார். செட்டிக்குளம் திருத்தலத்தில் உழவாரப் பணிகள் நிறைவேற்றியபோது அவர் நிறைவேற்றும் திருப்பணியை புகழ்ந்து தம் அடியார்களுக்கு அந்த தூணையும் காட்டி அருள் புரிந்தார் நம் சற்குரு. சாதாரணமாக நாம் நினைக்கும் இந்த திருப்பணியால் அந்த அடியார் இந்திரன், பிரம்மா, விஷ்ணு போன்ற பதவிகளையும் தாண்டிப் போய் விட்டாராம். ஒவ்வொரு பதவியையும் அவர் பெறுவதற்கான தகுதியைப் பெற்றதும் அடுத்த பதவிக்குரித்தான இந்திரனோ பிரம்மாவோ வந்து அடியாரை அழைக்கும்போது அவரோ மிகவும் பணிவுடன், “சுவாமி, பெருமான் திருக்கோயிலைச் சுமக்கும் இந்த திருப்பணியிலேயே அடியேன் மிகவும் மிகுந்த திருப்தியையும் ஆனந்தத்தையும் பெறுகிறேன். இதை விடச் சிறந்த ஒரு திருப்பணி எந்த உலகத்திலும், லோகத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை...” என்று கூறி தனக்கு கிடைக்கவிருந்த பதவிகளை எல்லாம் நிராகரித்து விட்டாராம். தற்போது அந்த அடியார் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை நம் சற்குருவைத் தவிர வேறு எவராலும் உறுதியாகக் கூற முடியாது. அந்த அடியார் தற்போது தாங்கும் தூணையே நம் சற்குருவுடன் உழவாரப் பணி நிறைவேற்றிய அடியார்களால் நினைவு கூற முடியவில்லை என்பதே அந்த அடியார் நிறைவேற்றிய, இன்னும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கும் திருப்பணியின் சிறப்பாகும்.

எனவே எங்கு நாம் திருப்பணி நிறைவேற்றுகிறோம் என்பது முக்கியமே இல்லை. அத்திருப்பணி எவ்வளவு சாதாரணமான திருப்பணியாக இருந்தாலும் அதில் எந்த அளவு உண்மையுடன், ஈடுபாட்டுடன், நம்பிக்கையுடன் ஈடுபடுகிறோம் என்பதே முக்கியம்.

22. இறைவன் ஆலால விஷத்தை உண்டானா உமிழ்ந்தானா ?
நாம் நினைப்பது போல் இறைவன் ஆலால விஷத்தை உண்ணவும் இல்லை, உமிழவும் இல்லை என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். பல கோடி மைல்களுக்கு அப்பால் வீசிய விஷ ஜுவாலையின் உஷ்ணத்தையே தேவர்களாலும் அசுரர்களாலும் தாங்க முடியவில்லை என்றால் ஈசன் ஆலாலத்தை உண்டிருந்தால் பெருமானின் வயிற்றுக்குள் இருந்த கோடி கோடி அண்டங்களில் விளங்கிய உயிர்கள் எல்லாம் பஸ்மம் ஆகியிருக்கும், அது வேண்டாம் என்று வெளியே விஷத்தை உமிழ்ந்திருந்தாலும் வெளியில் உள்ள கோடிக் கணக்கான அண்டங்களும் கொழுந்து விட்டு எரிந்திருக்கும். எனவே ஈசனின் கண்டத்தில் ஆலால விஷம் தங்கி நின்றிடவே உமையம்மை எம்பெருமானின் கண்டத்தை தன் அன்புக் கரங்களால் ஆதரவாகத் தடவி விட ஆலாலத்தை ஆபரணமாக தொண்டையில் நிறுத்திக் கொண்டு நீலகண்ட சிவனாக அருட்காட்சி வழங்கினான் ஈசன் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் திருவிளையாடல்.

ஸ்ரீபார்கவ லிங்கம்
திருநாவலூர்

இன்றும் தியானத்தில் ஆழ மூழ்குபவர்களுக்கு முதலில் உமையவளின் தரிசனமும், அதைத் தொடர்ந்து ஈசனின் நீலகண்ட தரிசனமும், எம்பெருமானின் தூல வடிவ தரிசனமும், அதைத் தொடர்ந்தே அருஉருவான லிங்க தரிசனமும் கிட்டும் என்பதே இறை தரிசனத்தின் மகாத்மியமாகும். இது காலம் தேசத்திற்கு உட்பட்ட இறை தரிசன விளக்கமே. இதைத் தொடர்ந்து சென்றால் குருவருளால் இறை தரிசனத்தின் உண்மைப் பொருளை நிச்சயம் உணர்வோம்.

நாயன்மார்களில் முதன்மையான திருநீலகண்ட நாயனார் சதாசர்வ காலமும் நீலகண்டம் நீலகண்டம் என்று உச்சரித்துக் கொண்டவாறே இருப்பார், அதனால் திருநீலகண்டர் என்பது அவருடைய காரணப் பெயராகவே அமைந்தது. நாயனார் வெறுமனே நீலகண்டம் என்று உரைத்தார் என்பது அல்ல, நீலகண்டனின் ஈடுஇணையற்ற தியாகத் திருவிளையாடலை சதாசர்வ காலமும் நினைவு கூர்ந்து கொண்டே இருந்து தன்னுடைய செயல் ஒவ்வொன்றிலும் பெருமானின் தியாகத்தை இணைத்தே செம்மையான வாழ்வு நடத்தினார். இந்த தியாகம் ஒன்றே அவரை நாயன்மார்களுள் முதன்மையாக வைத்துப் பாடும் அளவிற்கு சிறப்பைத் தந்தது. எம்பெருமானின் தியாகத்தை ஒவ்வொரு காரியத்திலும் வலியுறுத்துவார் நம் சற்குரு தியாகராஜன். “நீ ஒரு வேளை சாப்பிடாமல் கிடந்து விரதம் இருப்பதால் யாருக்கு என்ன பயன் ? உணவில்லாமல் பட்டினியாகக் கிடக்கும் எத்தனை ஏழைகளின் வயிற்றை நீ உணவால் நிரப்புகின்றாய் என்பதே தியாகத்தில் பூத்த சிவத்தை வழிபடுவதாகும்,” என்பார்.

திருஅண்ணாமலை திருக்கோயிலில் உள்ள பாதாள லிங்கத்தில் சமாதியில் இலயித்திருந்தார் ரமண மகரிஷி. எறும்புகள், பூரான் போன்றவை ரமணரின் உடலைக் கடித்து உடலின் பல பகுதிகளைத் தின்றே விட்டன. சமாதியில் இலயித்திருந்த ரமணருக்கு உடல் உணர்வு ஏதுமில்லாததால் இத்தகைய ஒரு உயர்ந்த நிலையை அவர் அடைய முடிந்தது என்பது சாதாரண மனிதனின் சிந்தனை. உண்மை அதுவன்று. தூல உடலில் திகழும் உணர்வு மறைந்து சூட்சும உடலில் இறை நினைவு கூடுவது சித்தர்கள் கூறும் சமாதி நிலை அல்ல. தூல உடலிலும் சூட்சும உடலிலும் இறையுணர்வு பரிபூரணமாக நிரவி நிற்பதே சமாதி நிலையாகும்.

உடலில் எறும்புகள் கடித்தபோது அவற்றை எல்லாம் ரமணர் பொறுத்துக் கொண்டார் என்பது கிடையாது. எப்படி இறை தரிசனத்தில் கூடும் எல்லையில்லா ஆனந்தத்தை ரமணர் அனுபவித்தாரோ அதே முறையில் சற்றும் ஆனந்தம் குறையாமல் எறும்புகளுக்கு “உணவிடும்” அன்னதான திருப்பணியிலும் ஈடுபட்டார் என்று உணர்த்துவதே ரமணரின் சமாதி நிலை. எதையும் விட்டு விடுவது தெய்வீகம் அன்று, அனைத்தையும் ஏற்றுக் கொள்தலே தெய்வீகம் ஆகும். “நீ முட்டாளாக இருக்க நான் அறிவாளியாக இருக்க முடியாது, நீ பணமே இல்லாமல் கஷ்டப்படும்போது நான் சுக போகங்களில் திளைக்க முடியாது, நீ வெறும் வயிற்றுடன் சுருண்டு கிடக்க நான் உண்டு களித்திருக்க முடியாது...”. இதுதான் ஆதிசங்கரர் கூறும் அத்வைதம். இதுவே சித்தர்கள் கூறும் தெய்வீகத்தின் பூரண நிலை, பரிபூரண நிலை. இதுவே உண்ணாமல் உமிழாமல் இருக்கும் தெய்வீக சிவ நிலை.

அவிநாசி

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை

23. எண்ண விஷமே தேளின் விஷத்தை விடவும் கொடியது.
என்னதான் பெரிய கொடிய விஷமுடைய தேளாக இருந்தாலும் அதிக பட்சம் அது ஒரு மனிதனையோ, பிராணியையோதான் கடிக்க முடியும், கொட்ட முடியும். ஆனால், அணுகுண்டு போன்ற ஆயுதங்களால் லட்சக் கணக்கான, கோடிக் கணக்கான உயிரினங்களை மாய்க்க முடிகிறது என்றால் அதன் அடிப்படையாக அமைவது மனிதனிடமிருந்து தோன்றும் விஷ எண்ணம்தானே. ஒரு முறை செஞ்சியில் உள்ள குகையில் தன் உடலைக் கிடத்தி விட்டு பரகாய பிரவேசத்தில் சென்று விட்டார் கோவணாண்டி. கோவணாண்டியின் உடலைக் காப்பதற்காக அவர் உடல் மேல் ஒரு இரவு சிறுவன் படுத்திருக்கும்போது வழக்கமாக பக்கத்தில் வைத்திருக்கும் ஒரு அகல் தீபமும் காற்றின் வேகத்தால் அணைந்து விட்டது. இருட்டில் வெல வெலத்துப் போன சிறுவன் அருகில் ஏதாவது இருக்கிறதா என்று தேடியவாறு தன் கையை அசைக்க சிறுவனின் கை ஏதோ ஒரு வழவழப்பான் பொருள் மேல் படவே அது என்ன என்பதை அறிந்து கொள்ள அதை தடவிப் பார்த்தான். அது உயரமாக கொடிக் கம்பம் மேல் தோன்றவே அதை மேலும் கீழும் தடவிப் பார்த்தும் அது என்னவென்று புரியாமல் போகவே அப்படியே குழப்பத்தில் சற்று நேரம் கழித்து உறங்கிப் போய் விட்டான். விடிந்து இந்த நிகழ்ச்சியையே மறந்து விட்ட சிறுவன், அடுத்து பெரியவரின் உடல் கிடந்த பகுதியை சுத்தப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் எதிரே உள்ள குளத்திற்கு செல்ல நினைத்தபோது யதேச்சையாக அந்த குகை வாயிலைப் பார்க்கவே ‘வீல்’ என்று கத்திக் கொண்டே மீண்டும் பெரியவரின் உடல் மேல் படுத்து அவர் உடலை இறுகக் கட்டிக் கொண்டான்.
சிறுவனை அந்த அளவிற்கு பயமுறுத்திய காட்சி என்னவோ ? குகை வாயிலில் பெரிய தேள் ஒன்று flag hoisting (சற்குருவின் வார்த்தைகள்!) செய்வது போல் கொடுக்கை உயர்த்தி வைத்து நின்று கொண்டிருந்தது. தான் இரவு முழுவதும் தடவிக் கொடுத்துக் கொண்டு இருந்தது அந்த மலைவாழ் தேளின் கொடுக்கைத்தான், அந்த தேள் ஒருவேளை தன்னைக் கொட்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற எண்ணமே சிறுவன் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் அளவிற்கு பயத்தை உண்டு பண்ணி விட்டது. பின்னர் சில நாட்கள் கழித்து பெரியவர் பரகாய பிரவேசத்திலிருந்து மீண்டு, மீண்டும் சென்னை அங்காளி கோயிலை அடைந்தபோது சிறுவன் மெதுவாக இந்த “தேள் வைபவத்தை” பெரியவரிடம் கூறி ஆறுதல் பெற முயற்சித்தான். பெரியவரோ வழக்கம்போல், “ஆமாண்டா ... பெரிய சாதனை செய்து விட்டது போல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அந்த குட்டியூண்டு தேள் கதையைச் சொல்ல வந்து விட்டாயே ... அவ்வளவு தடவை தடவியும் அந்தத் தேள் உன்னைக் கொட்டவில்லை என்றால் அதற்கு காரணமே பிணம் போல் (இது நாம் உணர்ந்த பெரியவரின் நிலை) கிடந்தாலும் உன்னை எந்நேரமும் காப்பாற்றும் சித்தர்களின் கருணை என்பதை ஏன் மறந்து விட்டாய் ?” என்று திருப்பிக் கேட்டாராம். இந்தத் தேள் கண்ணாமூச்சி ஆட்டத்தில் உண்மையில் பிரபஞ்சத்தில் உள்ள மனிதர்களின் ஆயிரக் கணக்கான தீய எண்ணங்களை தன்னுடைய கொடுக்கில் விஷமாக சேமித்து வைத்திருந்த தேளின் விஷ சக்திகளை தன்னுடைய உடலில் மெதுவே மெதுவே ஈர்த்து ஏற்றி தன் தபோபலத்தால் அந்த விஷ எண்ணங்களை எல்லாம் தூய்மை செய்தார் பரம குருவின் அருளால் நம் சற்குரு.

இது என்றோ நடந்த வைபவம் அல்ல, இன்றும் நம் சற்குருவை நம்பும் அடியார்கள் மூலமாய் இத்தகைய தீய எண்ணங்களை ஈர்த்து சமுதாயத்தை சுத்திகரிக்கும் வைபவத்தை நிறைவேற்றி வருகிறார் நம் சற்குரு என்பதே மேற்கூறிய வெள்ளி மாங்கல்யத்தில் தங்க சக்திகள் பதியும் குருவருளாகும். எந்த வழிபாட்டாலும் எந்த திருத்தலத்திலும் பஸ்மம் ஆகாத தீய எண்ணங்களையும் களையவல்லதே திருஅண்ணாமலை கார்த்திகை தீப கிரணங்கள்.

கௌண்டின்ய தரிசனம்
திருஅண்ணாமலை

நம் சற்குரு கோவணாண்டியுடன் கிரிவலம் வரும்போது ஒரே ஒரு முறை மேற்கொள்ளும் திருஅண்ணாமலை கிரிவலமே பல சமயங்களில் பல நாட்களுக்கு நீடிப்பது உண்டு. அத்தகைய சமயங்களில் பெரும்பாலும் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையை ஒட்டித் திகழும் சுமைதாங்கிக் கற்களின் மீது உறங்கியே அந்நாட்களைக் கழிப்பர். ஆழ்ந்த பொருள் உடையதே இத்தகைய “உறக்க” லீலைகளாகும். ஆவுறுஞ்சுதறி என்பது 32 அறங்களில் ஒன்றாகும். அதாவது மாடு போன்ற விலங்கினங்கள் தங்கள் உடலில் தோன்றும் தினவு அல்லது அரிப்பைப் போக்கிக் கொள்வதற்காக வழிப்பாதையில் பல குச்சிகளை நட்டு வைப்பவர். இவற்றில் உராய்ந்து விலங்கினங்கள் தங்கள் அரிப்பைப் போக்கிக் கொள்ளும். இது மிகச் சிறந்த அறங்களில் ஒன்று. நம் சற்குருவான சிறுவன் சுமை தாங்கிக் கல் என்னும் அப்பர்பர்த்தில் படுத்துக் கொள்ள கோவணாண்டிப் பெரியவர் அருகில் உள்ள லோயர்பர்த்தில், கல்லில் படுத்துக் கொள்வார். மிருகங்கள் தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொள்ள இந்த சுமை தாங்கிக் கற்கள் பயன்படும் என்பது மேலோட்டமான ஒரு பொருளே என்றாலும் அந்த மிருகங்கள் பல பிறவிகளிலும் சேர்த்துக் கொண்ட ஆசைகள் என்ற “அரிப்பையே” இத்தகைய உத்தம சற்குருமார்கள் இந்த சுமை தாங்கிக் கற்களில் “தூங்கி” ஜீவன்களின் பலதரப்பட்ட “அரிப்பை” ஈர்த்து அத்தகைய தீவினைகளால் சமுதாயம் தாக்கப்படாது காத்தனர் என்பதே திருஅண்ணாமலை மட்டும் அல்லாது நம் பாரத மண்ணில் விளங்கும் எத்தனையோ சுமைதாங்கிகள் கூறும் “கதை” ஆகும்.

விருச்சிக மாதமான கார்த்திகை மாதத்தில் திருஅண்ணாமலை கிரிவலப் பாதை போன்று அனைத்து கிரிவலப் பாதைகளிலும் உள்ள சுமைதாங்கி கற்களில் மஞ்சள் குங்குமத்தால் பொட்டிட்டு அந்த சுமைதாங்கி கற்களை நம் சற்குரு, பரம குரு துலங்கும் தியாக முத்திரைகளாக எண்ணி வழிபடுதலால் கிட்டும் பலன்கள் அமோகம். கார்த்திகை மாதம் முழுவதுமே நிறைவேற்றி வரக் கூடிய வழிபாட்டு முறை இதுவாகும். சந்திரன் நீசம் அடையும் ராசி விருச்சிகம், உச்சம் அடையும் ராசி நம் சற்குரு தோன்றிய ரிஷப ராசி. இந்த ராசி அம்சங்களைக் குறிப்பதாக விளங்கியதே அப்பர் பர்த், லோயர் பர்த் ராசி அம்சங்களில் விளங்கிய இரு குருமார்களின் “உறக்க நிலை”. வரும் 20, 21ந் தேதி நவம்பர் மாதம் ரோகிணி நட்சத்திரம் அபூர்வ திரிதின அம்சங்களுடன் விளங்குவதால் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இத்தகைய வழிபாடுகளை இயற்றுதலால் அற்புத குரு அனுகிரக சக்திகளைப் பெறுவார்கள். திட ராசியான ரிஷப ராசியில் தோன்றும் இத்தகைய உச்ச வழிபாட்டு அம்சங்கள் அனைவருக்குமே மனக் குழப்பங்களை மாய்க்கும் என்றாலும் விசாகம், அனுஷம், கேட்டை நட்சத்திரக்காரர்கள் சிறந்த பலன்களைப் பெறுவார்கள். குரு பார்க்க கோடி நன்மை என்பதை அவர்கள் நிதர்சனமாக அனுபவிக்க இந்த வழிபாடு துணையாக நிற்கும்.

சாலிகோத்ர குடைநிழல்
தரிசனம் திருஅண்ணாமலை

உணவு, உடை, இருப்பிடம் என்பவை மனிதனுக்குத் தேவையே. இதை விடவும் மனிதனுக்கு அவசியமானது உறக்கம், நீர், உணவு என்பதாகும். உறங்காமல் பல ஆண்டுகளுக்கு உயிருடன் வாழும் மனிதர்களைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், உண்மையில் அவர்கள் உறக்கம் என்பதை தவிர்த்து இருந்தாலும் ஓய்வு என்பதை ஏதாவது ஒரு ரூபத்தில் அனுபவித்தால்தான் உடல் வாழ முடியும். நம்முடைய இதயம் ஓய்வே இல்லாமல் துடிப்பதாகத் தோன்றினாலும் ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே சற்று நேர ஓய்வு எடுத்துக் கொள்வதால்தான் பல வருடங்கள் மனிதன் உயிரோடிருக்க முடிகிறது. நாம் அறியாத மற்றோர் அம்சம் ஓய்வு, உணவு, நீர் என்பவை ஆத்மாவுடன் நேரடி தொடர்பு கொண்டவை. அதனால்தான் எல்லா விரதங்களிலும், எல்லா மதங்களிலும் உண்ணா நோன்பு ஏதாவது ஒரு விதத்தில் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு மனித ஆத்மாவுடன் சம்பந்தப்பட்ட உறக்கத்தை ஆழ்நிலைப்படுத்தினால்தான் நாம் இறைவனுடன் ஒன்றும் தியான முறையில் முன்னேற முடியும். கேட்பதற்கு சுலபமாகத் தோன்றும் இந்த “ஆழ்நிலை தியானம்” கை கூடுவது என்பது உத்தம சற்குரு ஒருவரால் மட்டுமே நிகழ்த்தக் கூடிய காரியமாகும். நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் பலரும் இத்தகைய ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பதை, தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே அறிய முடியாத, உறக்க நிலையில் இருப்பதை நேரில் கண்டு அனுபவித்தோர் பலர். நம் சற்குருவின் சத்சங்கத்தில் இணைந்தவர்கள் அடைந்த தெய்வீகப் பேறு இது என்றாலும் நம் சற்குருவின் அருட்குடையை பெறாதவர்களுக்கும் ஆழ்ந்த உறக்க நிலையை வர்ஷிப்பதே மேற்கூறிய சுமைதாங்கிகளுக்கு பொட்டிடும் வழிபாட்டு முறையாகும். பல வருடங்களாக கிட்டாத ஆழ்ந்த தூக்கமே இந்த வழிபாட்டின் பலன்களின் ஒன்றாகும்.

வள்ளிமணாள வாழ்வு
தரிசனம் திருஅண்ணாமலை

திருக்கணித நியதிப்படி வரும் 20ந் தேதி சனிக் கிழமை இரவு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு கிரகப் பெயர்ச்சி கொள்கிறார் குரு பகவான். எனவே சனிக் கிழமை இரவோ ஞாயிற்றுக் கிழமையோ திருஅண்ணாமலையை கிரிவலமாக வந்து தசமுக தரிசனப் பகுதியில் உள்ள பித்ரு தீர்த்தத்திற்கு எதிரில் சாஷ்டாங்கமாக திருஅண்ணாமலை நோக்கி 12 முறை தரையில் விழுந்து வணங்கி பத்து வயது குழந்தைகள் அணியக் கூடிய தொப்பிகள் அல்லது தலையில் தலைப்பாகையாக கட்டக் கூடிய ஜரிகை வைத்த பட்டுத் துண்டுகளை தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் என்று மூன்று மங்கலப் பொருட்களுக்குக் குறையாமல் வைத்து தானம் அளித்தலால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பதான பலன்களைப் பெறலாம். நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டு நலிந்திருப்பவர்களும், உடலுக்கோ உயிருக்கோ ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி நடுங்குவோரும் மேற்கண்ட வழிபாட்டு முறையால் நற்பலன் பெறுவர். சந்திர பகவான் திரிதினமாக உச்சம் கொள்ளும் ரிஷப ராசிக்கு பத்தாவது ராசியாக அமைந்த கும்ப ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்து செல்வதும், ஐந்திற்கு ஒன்று குசா என்றவாறு நற்பலன்களை இந்த வருட எண்ணிற்கு குசாவாக அமைந்த தசமுக தரிசனம் அருள்வதும் மேலோட்டமான அமைப்புகளே. நியாயமான காரணங்களால் திருஅண்ணாமலையை கிரவலமாக வர முடியாதவர்கள் தங்கள் ஊரில் உள்ள திருத்தலங்களில் மேற்கண்ட “அருட்குடை” தானத்தை மேற்கொள்வதால் நற்பலன் பெறுவார்கள்.

ஜோதிகள் மூன்றுவிதம்
திருஅண்ணாமலை

இந்த 2021 பிலவ வருடத்தில் நிகழ்ந்த திருக்கார்த்திகை தீபப் பெருவிழாவில் “பறந்த” ஒரு சித்தரைப் பற்றி பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளதால் அது பற்றி நம் சற்குரு அளிக்கும் விளக்கத்தை இங்கு அளிக்கிறோம். ஜோதிகளில், தீபங்களில் எண்ணற்ற வகைகள் உண்டு என்றாலும் இங்குள்ள படத்தில் மூன்று விதமான ஜோதி தரிசனங்களை அடியார்கள் தரிசனம் செய்யலாம். மனிதனால் படைக்கப்பட்ட மின்சார விளக்கில் எழும் ஜோதி, மனித முயற்சியால் ஏற்றப்படுவதுபோல் தோன்றினாலும் இறை சக்தியை சித்தர்கள், மகான்கள், மனிதர்கள், விலங்குகள், தாவரங்களை என்ற அனைத்து உயிரினங்களுக்கும் ஜடப் பொருட்களுக்கும் தனது அருட்பெருஞ்சோதி அம்சமாக இறைவன் வருடத்திற்கு ஒரு முறை வெளிப்படுத்தும் திருஅண்ணாமலை கார்த்திகை தீப ஜோதி, சுயம்பு மூர்த்தியான இறைவனின் தூல, மலை வடிவ தரிசன ஒளி என்ற மூன்று ஒளி வடிவங்களை நாம் காண்பதற்கு ஆதி காரணமான ஒளியையே மனிதர்கள் நிர்விகல்ப சமாதியில் இலயித்திருக்கும்போது தம் ஆக்ஞா சக்கரத்தில் தரிசிக்கிறார்கள். அப்போதுதான் “பறக்கும்” சித்தரைப் பற்றிய விளக்கங்கள் முழுமை பெறும். அதுவரையில் நம் சற்குரு இதற்கான விளக்கத்தை கூற தயாராக இருந்தாலும் அது முழுமையான தெளிவைத் தராது என்பது உண்மை. இருப்பினும் தாங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதை முழுவதுமாக நம்பி அடுத்து சற்குரு காட்டும் பாதையில் முன்னேறிச் செல்வதே இது பற்றி மேலும் பல விளக்கங்களை அளித்து உண்மை நிலையை உறுதிப்படுத்தும். முதல் படியாக இங்கு அளித்துள்ள தட்சிண சோதி டமருக பிம்பம் என்ற திருஅண்ணாமலை ஜோதி தரிசனத்தை சில நொடிகள் உற்றுப் பார்த்தாலே போதும், திருஅண்ணாமலையிலிருந்து ஒளிக் கதிர்கள் பிரகாசம் கொண்டு விண்ணை நோக்கி வீசுவதைக் காணலாம். இதைத் தொடர்ந்து தியானித்து, தியானித்து மேலும் “ஒளி விளக்கங்களை” திரப்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு முறை சிறுவனான சற்குரு கோவணாண்டியுடன் பொள்ளாச்சி செல்லும்போது பேரூர் திருத்தலத்தில் தரிசனம் நிறைவேற்றி விட்டு அங்கிருந்த சுமைதாங்கிக் கல்லில் “உறங்கி” அன்று இரவைக் கழித்தனர். பொள்ளாச்சியில் பல வருடங்களாக 21 காய்கறிகள் சேர்ந்த உணவை அன்னதானமாக அளித்து அனந்தபத்மநாப விரதம் இயற்றி வந்த லிங்கப்ப கௌண்டர் என்னும் பக்தருக்கு அனுகிரகம் அளிப்பதற்காக அங்கு தங்கிய பெரியவர் பேரூர் திருத்தல மகிமையை விளக்கவே அனைத்தையும் சுவைத்து மகிழ்ந்தான் சிறுவன். ஒன்றிற்கு இரண்டு என்பது குசாவாக அமையும்.

பித்ரு முக்தி தீர்த்தம்
திருஅண்ணாமலை

பெரியவர் கீழே உள்ள lower berth சிறுவன் மேலே உள்ள upper berth என்பதாக வழக்கம்போல் உறங்கினர் என்பது ஒரு மேலோட்டமான விளக்கம் என்றாலும் சூட்சும, தூல சரீரங்கள் இணைப்பாக விளங்கும் அனுகிரகங்களை இவ்வாறு சுமைதாங்கி கல்லில் படுத்துறங்கும் இரு குருமார்கள் அளிப்பதால் இத்தகைய ஒரு சுமைதாங்கியைப் பெற்ற பேரூர்வாசிகள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்களாக இருக்க வேண்டும் ? திருஅண்ணாமலை கிரிவலப் பாதையைச் சுற்றியுள்ள சுமைதாங்கிக் கற்கள் அனைத்தும் தற்போது அகற்றப்பட்டு விட்டதால் நம் சற்குரு பெரியவருடன் இளைப்பாறிய இத்தகைய சுமைதாங்கிக் கற்களை காண்பதே அரிதான ஒரு அனுகிரகமாக மாறிவிட்டது.

சோனா தீர்த்தம்
திருஅண்ணாமலை

கறவை நின்று போன மாடுகளை காப்பகங்களுக்கு அளிக்கும் முன்னரும், பைத்தியமாக அலைபவர்களையும் அல்லது கிட்டத்தட்ட இந்நிலையில் இருப்பவர்களையும் இத்தகைய சுமைதாங்கிகளில் முடிந்த மட்டும் இளைப்பாறுமாறு செய்தலால் அவர்கள் மெதுவே மெதுவே நன்னிலை அடைவார்கள். பேரூர் என்பது காமதேனுவின் புதல்வியான பட்டி வழிபட்ட தலமாதலால் தங்கள் தாயுடன் கொண்ட மனவேற்றுமைகளும், பொதுவாக பெண் குழந்தைகளுக்கு வரக் கூடிய ஆபத்துக்களும் இத்தகைய சுமைதாங்கிகளை வெள்ளிக் கிழமைகளில் மஞ்சள் அல்லது சந்தனம், குங்குமம் வைத்து வழிபடுதலால் மறைந்து மன அமைதி பெறுவார்கள். தூல சரீரத்திலிருந்து சூட்சும சரீரம் பிரிந்து செயல்படுவதால்தான் பைத்தியம் போன்ற பலவிதமான மன பேதலிப்பு நோய்கள் ஏற்படுகின்றன. 21 காய்கறிகள் கலந்த உணவை முழு வாழையில் இட்டு குறைந்து 21 அடியார்களுக்கு அன்னதானமாக அளிப்பதால் அத்தகையோர் நன்னிலை பெறுவார்கள், மூதாதையர்களின் அனுகிரகம் கனியும். திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள அனைத்து தீர்த்தங்களிலும் கிட்டும் நிழல் பிம்பங்களை குறைந்தது ஒரு மணி நேரம் தரிசித்து கொடிக்கவி துதியை ஓதிவந்தால் காமத் தவறுகளுக்கு இவை பிராயசித்தம் அளிப்பதுடன் வீட்டில் நிலவும் “நிழல் ஆடுதல்” போன்ற துன்பங்களும் தணியும். தொடர்ந்த வழிபாடு அவசியம். திருஅண்ணாமலை மட்டுமல்லாது அனைத்து திருத்தலங்களிலும் இத்தகைய “நிழல்” வழிபாடு நலம் அளிப்பதே.

மேலே அளித்துள்ள கௌண்டின்ய தரிசனம் பற்றி விளக்கம் வேண்டிய ஒரு அடியாரின் வேண்டுகோளை நம் சற்குருவிடம் சமர்ப்பிக்க அப்போது கிடைத்த சித்த பொக்கிஷத்தை இங்கு அளிக்கிறோம். ஒரு முறை கும்பகோணம் அருகில் தற்போது உள்ள பாஸ்கரராயபுரம் என்ற திருத்தலத்தில் உள்ள பாஸ்கரராயர் என்ற மகானிடம் ஒருவர், “சுவாமி, முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்கிறார்களே, அது உண்மையா ?” என்று கேட்க அம்மகானும், “ஆமாம் அதில் என்ன சந்தேகம்?” என்று திருப்பிக் கேட்கவே அந்த அடியாரும், “சுவாமி, அப்படியானால் அந்த ரிஷிகளின் பெயர்களை தாங்கள் கூற முடியுமா?” என்று கேட்க பாஸ்கரராயரும் சற்றும் சளைக்காமல், “ஓ ... தாராளமாக எழுதிக் கொள்...” என்று கூறி வரிசையாக அந்த தேவர்களின் பெயர்களைச் சொல்லத் தொடங்கி விட்டார்,

கௌண்டின்ய ஒளிப் பிரகாசம்
பூவாளூர்

“ஸ்ரீகௌண்டின்யர், ஸ்ரீஅப்ரதட்சர், ஸ்ரீபிரம்மதீட்சர் ... ” என்றவாறு பெயர்களை அடுக்க வந்தவரும் ஒரு காகிதத்தில் பாஸ்கரராயர் சொல்லிய பெயர்களை எழுதத் தொடங்கினார். பாஸ்கரராயரோ தேவர்களின் பெயர்களை சொல்லிக் கொண்டே போனார் ... எழுதி எழுதி அந்த அடியாருக்கு கைகள் வலி எடுக்க ஆரம்பித்தன... ஒரு வழியாக எழுதுவதை நிறுத்தி விட்டு ஸ்ரீபாஸ்கரராயரின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, “சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள், உங்கள் திறமையை சோதித்துப் பார்க்கவே இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு விட்டேன், அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது உணர்ந்து விட்டேன்...”, என்று கூறவே கருணைக் கடலான மகானும் ஒரு புன்சிரிப்புடன் தான் விவரித்த தேவர்களின் பெயர்களை நிறுத்தி விட்டார். இதுவே கௌண்டின்ய கோத்திரத்தின் தலைமைப் பீடாதிபதியான ஸ்ரீகௌண்டின்ய கோத்திராதிபதியின் சிறப்பு. சூரிய பகவானை வழிபடுபவர்களுக்கும், கோமாதா வழிபாடு செய்பவர்களுக்கும் ஸ்ரீகௌண்டின்ய மகரிஷியின் அனுகிரகம் கனியுமாதலால் திருஅண்ணாமலை கோசாலையில் கோபூஜை நிறைவேற்றியதால் விளைந்த பலன்களை எல்லாம் “குட்டையில் ஊறிய மட்டையாக” ஸ்ரீகௌண்டின்ய மகரிஷி இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதே மேற்கண்ட தரிசனத்தின் ஒரு பலனாகும். திருஅண்ணாமலையில் திகழும் கோசாலையில் பூஜைகள் இயற்றிய ஒரு அடியார் கேட்டதும் இந்த ஸ்ரீகௌண்டின்ய கோத்திராதிபதியைப் பற்றித்தான் என்பதும் இத்திருத்தலத்தில் நிகழ்த்திய கோபூஜையின் மகிமையாகும்.

கொம்பைச் சுற்றிப் படரும் கொடி

திருக்கார்த்திகை தீபத்தை ஒட்டி பல திருத்தலங்களிலும் சொக்கப்பனை கொளுத்துதல் என்ற நிகழ்ச்சி நடைபெறுவது நீங்கள் அறிந்ததே. பனை மரத்தை பசு நெய் விட்டு திருத்தலங்களில் எரித்து பூஜை செய்வதையே சொக்கப்னை கொளுத்துதல் என்கிறோம். இங்கு நீங்கள் காண்பது திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு திருத்தலத்தில் நிகழ்ந்த சொக்கப்பனை கொளுத்திய வைபவமாகும். பனை என்பது சுயம்பு தத்துவத்தையும், தென்னை என்பது நன்றி மறவாத சந்ததிகளின் தத்துவத்தையும் குறிக்கும். சற்குருவிடம் நன்றியைத் தெரிவிப்பதாகவும், இவ்வாறு நன்றி மறப்பதற்கு காரணம் சமுதாயத்தில் திகழும் தீய சக்திகளாக இருப்பதால் இந்த தீய எண்ணங்களை, சக்திகளை மாய்க்கும் முகமாகவே தென்னை மரத்தில் பருத்தி துணியைச் சுற்றி அதன் மேல் பசு நெய், தேங்காய் எண்ணெய் ஊற்றி திருத்தலங்களில் கார்த்திகை தீபம் ஏற்றும் முறையைத் தம் அடியார்களுக்கு எல்லாம் கற்பித்தார் நம் சற்குரு. இம்முறையில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபடுதலால், சொக்கப்பனை ஏற்றி வழிபடுதலால் குடும்பத்தில், சமுதாயத்தில் பெரிதும் வளர்ந்துள்ள நன்றிகெட்டத் தனம் மறைந்து உலகில் ஒற்றுமை ஓங்கும், அன்பு மலரும்.

தாடிக்கொம்பு திருத்தலத்தில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர், அகோரவீரபத்திரர் முதலான மூர்த்திகளும் எழுந்தருளி இருப்பதால் இது அற்புத சிவ வைணவ தலமாக விளங்குகிறது. இது சிவமே சுந்தரம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைவதால் இத்திருத்தல பெருமாளும் ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் என்பதாக பிரசித்தி பெற்றுள்ளார். சொக்கப்பனை என்ற சுடலை ஏற்றும் வைபவம் இத்திருத்தலத்தில் பிரசித்தி பெற்றுள்ளதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமே. தங்கள் நகை, பணம் போன்ற உடைமைகளுக்கு பாதுகாப்பு பெற வேண்டுவோர் இந்த அற்புத விஷ்ணுபதி தலத்தில் இக்கார்த்திகை மாதம் வழிபாடுகள் இயற்றி மஞ்சள் நிற டைமண்ட் வடிவ பால் இனிப்புகள் தானமாக அளித்தல் நலம். குருவிடம் அவநம்பிக்கை தோன்றும்போதும், தக்க குருவின் வழிகாட்டுதலைப் பெறாதவர்களுக்கும் இந்த தானதர்ம வழிபாட்டு முறைகள் கைகொடுக்கும். தாடிக்கொம்பு என்றால் கொம்பைச் சுற்றிப் படரும் கொடி. உலகில் உயர்ந்தது தங்கம் என்ற பொன் ஆபரணம், அதை விடவும் உயர்ந்தது சற்குருவின் வழிகாட்டுதல், இந்த வழிகாட்டுதலை நிலைநிறுத்துவதே தாடிக்கொம்பு திருத்தலத்தில் நிறைவேற்றும் வழிபாடுகளாகும். தென்னை தாவரத்தை பூலோகத்திற்கு கொண்டு வந்தவரே சிரஞ்சீவியான ஸ்ரீபரசுராமர் ஆவார். மக்கள் அனைவரும் சிரஞ்சீவித்துவத்தை பெற வேண்டும் என்பதற்காகவே தென்னை மரத்தில் பருத்தி துணியைச் சுற்றி திருக்கார்த்திகை தீபத்தை ஏற்றி வழிபாடு நிறைவேற்றுமாறு நம் சற்குரு வலியுறுத்துகிறார் என்றால் நம் சற்குருவின் வானளாவிய வழிகாட்டுதலுக்கு நாம் எப்படி நன்றிக் கடன் செலுத்த முடியும் ?

நெஞ்சை பலமாக்கும் நெருஞ்சில்
திருஅண்ணாமலை

24. மலரின் மணமும் முள்ளின் கூர்மையும் தேவலோகச் செல்வமே.
மனிதனால் எதையும் செயற்கையாக உண்டாக்க முடியாது. மிக மிகச் சாதாரணமான ஒரு ரோஜாப் பூவையோ மல்லிகை மலரையோ மனிதனால் உண்டாக்க முடியாது என்பார் நம் சற்குரு. காரணம் ரோஜாப் பூவில் நிறைந்துள்ள நறுமணம் தேவலோகத்திலிருந்து வருவதால் பூலோகத்தில் உள்ள எந்தப் பொருளாலும் ரோஜாப் பூவில் உள்ள நறுமணத்தை உண்டாக்க முடியாது. அதே போல் ஒரு நெருஞ்சி முள்ளைக் கூட நம்மால் உண்டாக்க முடியாது. காரணம் நெருஞ்சி முள் தைத்து குணமாகும் எந்த நோயையும் மனிதன் தயாரிக்கும் ஊசியால் குணப்படுத்த முடியாது.

அப்போதுதான் இரும்பு ஊசிக் கூர்மைக்கும் நெருஞ்சி முள்ளின் கூர்மைக்கும் உள்ள வித்தியாசம் நமக்கு புலப்படும். பிளாஸ்டிக்கால் செய்யப்படும் ஒரு இதய வால்விற்காக லட்சக் கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ரோஜா மலர்களை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாலும், ரோஜா மலரிலிருந்து கிட்டும் அத்தர் நறுமணத்தை தாமே அரைத்த சந்தனத்தில் கலந்த இறைவனுக்கு அர்ப்பணிப்பதாலும், நெருஞ்சி முட்களை அகற்றி திருத்தல பிரகாரங்களை தூய்மைப்படுத்துதலால் காசு செலவின்றியே இதயத்தை ஆரோக்யமாக வைத்துக் கொள்ளலாம். மல்லிகை, முல்லை, இருவாட்சி போன்ற மலர்களை இறுக்கமாகக் கட்டி அவரவர் கையால் ஒரு முழப் பூவை வெற்றிலை, பாக்கு, குண்டு மஞ்சளுடன் திருத்தலங்களில் வெள்ளிக் கிழமைகளில் சுமங்கலிகளுக்கு தானம் அளித்தலால் முரட்டுத் தனம் உள்ள குழந்தைகள் நலம் பெறுவர். குடும்ப ஒற்றுமை பெருகும். “மணம்” இருந்தால் மார்க்கம் உண்டு.

திருக்கழுக்குன்றம்

தேவலோகத்தில் மட்டுமே கிட்டும் நறுமணத்தையும் பூலோகத்தில் தங்கள் தபோபலனாக உண்டாக்க வல்லவர்களே சித்தப் பெருமக்கள். இதை ஒரு “சுவையான” நிகழ்ச்சியின் மூலம் விளக்குவோம். ஒரு முறை திருக்கழுக்குன்றம் திருத்தலத்திற்கு கோவணாண்டியுடன் வந்தான் நம் சற்குருவான சிறுவன். அப்போது மலப்புழு சித்தர் அங்கிருந்தார். அவர் மகிமையை கேள்வியுற்ற ஒரு குஷ்டரோகி அவரை அணுகி தன்னுடைய சிதைந்த உடல் அங்கங்களைக் காட்டி தனக்கு ஏதாவது அனுகிரகம் அளிக்க முடியுமா என்று மிகவும் வினயத்துடன் கேட்கவே, சித்தரும் மனமிரங்கி எங்காவது சென்று ஏதாவது வேலை தேடி ஒரு ரூபாய் சம்பாதித்து வருமாறு அவனை அனுப்பினார். புண்கள் நிறைந்த குஷ்டரோகிக்கு யார் வேலை தருவார் ? அவனோ நம்பிக்கையுடன் எல்லா இடங்களிலும் தேடித் தேடி ஒரு உலைகளத்தில் சம்மட்டி அடிக்கும் வேலையைப் பெற்றான். ஏற்கனவே புண்கள் நிறைந்த அவனுடைய தேகமெல்லாம் சம்மட்டி அடித்த வேதனையால் அங்கங்கே அந்தப் புண்களிலிருந்து சலமும் இரத்தமும் கசிய ஆரம்பித்தன.

இருந்தாலும் அந்த வேதனைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு தன்னுடைய பணியை நிறைவேற்றி அந்தப் பணிக்கு கூலியாக ஒரு ரூபாயைச் சம்பளமாகப் பெற்றான். மிகுந்த ஆனந்தத்துடன் அந்த ஒரு ரூபாயை வாங்கிக் கொண்டு வந்து மலப்புழு சித்தரின் திருவடிகளில் சமர்ப்பித்து அவரை வணங்கியபடியே இருந்தான்.

ஸ்ரீமுருகப் பெருமான்
திருக்கழுக்குன்றம்

சித்தரும் சற்று நேரம் அமைதியாக அவனைப் பார்த்து விட்டு அங்கே ஒரு ஒரமான இடத்தில் மலம் கழித்து விட்டு அந்த குஷ்டரோகி சம்பளமாகப் பெற்ற ஒரு ரூபாய் நாணயத்தை அந்த மலக் குவியலில் உச்சியில் மலர் வளையம் போல் பதித்து வைத்து விட்டு, “இந்த மலம் அனைத்தையும் நீ உண்டு விட்டால் நன்னிலை அடைவாய்...”, என்று கூறி விட்டு அங்கிருந்து மறைந்தார். சற்று தொலைவில் பெரியவருடன் இருந்த சிறுவனுக்கோ அந்த மலத்தைப் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வந்தது என்றால் அந்தக் குஷ்ட ரோகியின் நிலை எப்படி இருந்திருக்கும் ?

ஆனால், அந்த குஷ்டரோகியோ சற்றும் முகம் சுளிக்காமல் அந்த நாணயத்தையும் எப்படியோ கஷ்டப்பட்டு விழுங்கி விட்டு மலப்புழு சித்தரின் காணக் கிடைக்காத அனுகிரகமான “மலக் குவியலையும்” மெதுவாக மெதுவாகக் கஷ்டப்பட்டு உண்டு முடித்து விட்டான். அவன் அந்தத் திருப்பணியை நிறைவேற்றுவதற்குள் காலைப் பொழுதே விடிந்து விட்டது எனலாம். மலம் அனைத்தையும் உண்டு தீர்த்த களைப்பில் அப்படியே சுருண்டு அங்கேயே விழுந்து விட்டான். பல மணி நேரங்கள் கழித்தே கண் விழித்தான். அந்த இடைவெளியில் சிறுவனும் கோவணாண்டியுடன் சேர்ந்து மலையின் மற்றப் பகுதிகளில் எல்லாம் சுற்றி பல அனுபவங்களைப் பெற்றான் என்பதும் அடிமை கண்ட ஆனந்தம்தானே. அந்த குஷ்டரோகி கண் விழித்தபின் அவன் கண்ட காட்சியை சிறுவனாலேயே நம்ப முடியவில்லை என்றால் அந்த குஷ்டரோகியால் எப்படி நம்ப முடியும் ?

சங்கு தீர்த்தம்
திருக்கழுக்குன்றம்

சித்த சாம்ராஜ்யத்தில் பல அற்புதங்களை நேரில் கண்ட இரசித்த சிறுவனாலேயே 600 வருட கர்ம வினைகளை ஆறு மணி நேரத்தில் பஸ்மம் செய்த மலப்புழு சித்தர் நிகழ்த்திய அற்புதத்தை நேரில் கண்டு வியந்து நின்றான். ஆம், குஷ்டரோகியின் உடலில் ஒரு சிறு வடுவோ, காயச் சுவடோ தெரியவில்லை, மாறாக சிறுவயது இளைஞனைப் போன்ற உடல் மினுமினுப்பும் தேக வன்மையும் பெற்றுப் பிரகாசித்தான் அந்த “குஷ்டரோகி”. எங்கோ சென்று மறைந்த மலப்புழு சித்தரை தேடிக் கொண்டு வந்த அவன் பெரியவரையும் சிறுவனையும் தூரத்தில் பார்த்ததை வைத்து அவர்களை இனங் கண்டு கொண்டு அவர்கள் காலில் விழுந்து நன்றி கூறினான். இதுவும் எத்தகைய பூர்வ ஜன்ம கர்ம வினையோ. ஆனால், பெரியவரோ ஒன்றும் அறியாதவர்போல் அந்தச் சூழ்நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சிறுவனுடன் வேகமாகச் சென்று மறைந்தார்.

மனிதர்களுக்கே மலம் என்பது உண்டு, மகான்களுக்கு அதிலும் சிறப்பாக சித்தர்கள் என்பவர்கள் மலம், மூத்திராதிகளைக் கடந்தவர்கள் என்றால் அவர்களுக்கு எப்படி மலம் இருக்கும். இதுவே மலப்புழு சித்தரின் கருணை வெள்ளம். அந்த குஷ்டரோகியின் முந்தையை கர்மங்களை எல்லாம் மலமாக தன் உடலில் ஏற்று அதை வெளியே ஏற்றினார் சித்த அனுகிரகமாக. அதனால்தான் சித்தரின் உடலில் தங்கிய கர்ம வினைகள் அனைத்தும் பஸ்மமாகி அதை உண்டவன் கர்ம வினைகள் தீர்ந்ததோடு அல்லாமல் அந்த குஷ்டரோகி பிற்காலத்தில் ஒரு ஹோட்டல் ஒன்றை வைத்து தன்னுடைய ஜீவனத்தை நடத்திய போது மலப்புழு சித்தரின் அனுகிரகமாக அவனுடைய ஹோட்டலில் பரிமாறப்பட்ட உணவு வகைகள் அனைத்தும் நறுமணத்துடன் கமழவே அவன் வியாபாரம் அமோகமாகப் பெருகியது என்பதை சில ஆண்டுகள் கழித்து சிறுவனான நம் சற்குருவும் நேரில் கண்டு மகிழ்ந்தார் என்பதும் மலப்புழு சித்தரின் மகாத்மியங்களில் ஒன்றாகும்.

25. மிகவும் கொடியதே எதிர்மறை சக்திகளின் பிரபாவம்.
நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதில் எதிர்மறை சக்திகளை, எண்ணங்களை எதிர்த்து முறியடித்து விட முடியாது. அனைத்து நிலையங்களிலிருந்தும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டாலும் நாம் எந்த நிலையத்து நிகழ்ச்சிகளுக்காக நம் ரேடியோவை, டீவியை ட்யூன் செய்து திருப்பி வைத்துள்ளோமோ அந்த நிலையத்து நிகழ்ச்சிகளையே நாம் காண முடியும். அது போல நம் “ஆண்டெனா” இறைவனை நோக்கியே எப்போதும் இருந்தால்தான் நாம் எதிர்மறை சக்திகளிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

நம் சற்குருவை தரிசிப்பதற்காக ஒரு அடியார் மனைவி குழந்தையுடன் வருவது வழக்கம். அந்தப் பையனோ படிப்பில் மிகவும் சமர்த்தாக இருந்தான். அந்த அடியாரின் மனைவி குறைந்தது இரண்டு மணி நேரம் தன்னுடைய பையனின் திறமைகளை புகழ்ந்து கூறிக் கொண்டே இருப்பார், அத்துடன் தான் அவனுக்கு எப்படியெல்லாம் சாப்பாடு செய்ய, துணி துவைத்து அவனைப் பள்ளிக்கு அனுப்பி பாடுபடுகிறார் என்பதை விளாவாரியாக எடுத்துரைப்பார். அந்தத் தாய் தன் “சேவைகளை” விவரித்து முடித்வுடன் அவருடைய கணவர் தொடர்ந்து தான் எப்படி தன் பையனை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார், அவனுடைய யூனிபார்ம் ஆடைகளை எப்படி அயன் செய்து வாங்குகிறார் என்ற விஷயங்களையெல்லாம் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குக் குறையாமல் விவரிப்பார். அவர்கள் வர்ணனை அனைத்தையும் ஒன்று விடாமல் நான்கு மணி நேரத்திற்குக் கேட்டு வைப்பார் நம் சற்குரு. இந்த “நேரடி ஒலி பரப்பு” நிகழ்ச்சி ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, சுமார் 12 வருடங்கள் தொடர்ந்தது, அத்தனை வர்ணனையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் நம் சற்குரு என்பதே நம்மால் சற்றும் புரிந்து கொள்ள முடியாத குரு அனுகிரகமாகும்.

சித்திரசபை
திருக்குற்றாலம்

அந்தச் சிறுவனும் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் பருவத்தை அடைந்தான். அவனை அடுத்து எந்தப் படிப்பிற்கு அனுப்பலாம் என்று நம் சற்குருவைக் கேட்டபோது நம் சற்குரு தெளிவாக, “பையன் மிகுந்த புத்திசாலி. அதனால் அவனை வெளியூர் அனுப்பி அவன் திறமைக்கேற்ற படிப்பைப் பெற்றுத் தரலாம் என்ற எண்ணத்தை எல்லாம் கைவிட்டு விடுங்கள். திறமைசாலி எங்கிருந்தாலும் தன் திறமைக்கு ஏற்ற பெருமையையும், புகழையும் பெறுவான், அது பற்றி நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம். இங்கே ஏதாவது ஒரு நல்ல கல்லூரியில் அவனை சேர்த்து விடுங்கள்...”, என்று கூறினார். விதி வலியது அல்லவா ? அந்தப் பையனின் நண்பர்கள், சுற்றத்தார் எல்லாம், “இவ்வளவு திறமைசாலியான பையனை “லோகல் காலேஜில்” சேர்த்து அவன் திறமையை பாழடித்து விடாதீர்கள், ஒரு நல்ல அயல்நாட்டில் அவனை படிக்க வைப்பதுதான் அவனுடைய திறமைக்கு மரியாதை, உங்களுக்கும் மரியாதை ...”, என்று கூறவே அந்த “போதைக்கு” அடிமையாகி அந்தப் பையனை லண்டனில் ஒரு கல்லூரியில் சேர்த்து விட்டனர்.

அந்தப் பையனோ வெளிநாட்டிலும் நல்ல படியாக படித்து அபாரமான மதிப்பெண்களைப் பெற்றான். பையனின் பெற்றார்கள் ஆனந்தக் கடலில் மிதந்தனர். சில மாதங்கள் சென்றவுடன், சக மாணவர்களின் பொறாமை அதிகமாகவே காபியில் விஷம் கலந்து கொடுத்து அந்த மாணவனின் கணக்கை முடித்து விட்டனர். இந்தியாவில் இருந்த பெற்றோர்களுக்கு தொலைபேசி மூலமாக இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ்வளவுதான், அடுத்த விநாடி இருவரும் பைத்தியம் பிடித்து நிரந்தர மன நோயாளிகள் ஆகி விட்டனர்.

சித்திரசபை திருக்குற்றாலம்

அவர்களைக் கவனிக்க வேறு யாரும் இல்லாததால் இருவரையும் முதியோர் காப்பகத்தில் சேர்த்து விட்டனர். அவர்களுடைய தற்போதைய ஒரே ஆதரவு ஒரு “டம்மி” டெலிபோன்தான். கணவனும் மனைவியும் மாறி மாறி அந்த வேலை செய்யாத தொலைபேசியை காதில் வைத்துக் கொண்டு மணிக் கணக்கில் “தங்கள் பையனுடன்” பேசுவார்கள். கல், மண் போல ஒரு சற்குருவுடன் இருப்பது பிரமாதமில்லை, சற்குரு அளிக்கும் வார்த்தைகளை செவிமடுத்து அதை அனுஷ்டிப்பதே அனைவருக்கும் நலம். தன்னுடைய வார்த்தைகளை சற்றும் கேட்க மாட்டார் அந்த அடியார் என்று முன்னரே தெரிந்திருந்தாலும் சமுதாயத்தைக் காக்க தம்மாலான வழிகாட்டுதலை தொடர்ந்து 12 வருடம் அன்புடன் ஆற்றிய நம் சற்குருவின் சேவையை நாம் ஒரே ஒரு நொடி நினைத்துப் பார்த்தால் ...

26. ஓங்காரம் பிரகாசிக்கும் திரிகூடமலை
ஓங்காரம் என்னும் பிரணவ சக்திகளே இந்த பிரபஞ்சம் அனைத்திற்கும் ஆதாரம் என்பதை அறிவோம். நான்கு வேதங்கள் மட்டும் அல்லாது தேவார, திருவாசகம், பன்னிரு திருமுறைப் பாடல்கள் அனைத்துமே இந்த ஓங்கார சக்திகளை நாம் பெற்றுப் பயனடையும் முறையிலேயே அமைந்துள்ளன என்பதே இப்பாடல்களின் மகத்துவமாகும். திருவிடைமருதூர் ஓங்கார பிரகாரம், கொன்றை மரங்களில் பெருகும் ஓங்கார சக்திகள் என்பன போன்று திருக்குற்றாலத்தில் திகழும் பல அருவிகளும் குறிப்பாக திருக்குற்றால ஈசன் ஆலயத்திலிருந்து இங்கு நீங்கள் காணும் அருவியும் சதாசர்வ காலமும் இந்த ஓங்கார ஒலியையே வர்ஷித்துக் கொண்டிருக்கிறது என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம் ஆகும். பழைய குற்றாலம், குற்றால நாத தீர்த்தம், ஐந்தருவி என்று எந்த அருவியில் நீராடிய பின்னரும் திருக்குற்றால நாதர் ஆலயத்தில் ஏதாவது ஓரிடத்தில் அமர்ந்தவாறு திரிகூடமலையில் ஒலிக்கும் ஓங்கார ஓலியை, பிரகாசத்தை தியானித்துக் கொண்டே வந்தால் ஓங்கார இரகசியங்கள் தெளிவாகும். எத்தகைய மனக் கோளாறுகளும், பைத்தியம் பிடித்த நிலைகளும், அதீதமான காம எண்ணங்களும் ஒரு மண்டல வழிபாட்டால் தீர்வடையும். உவே சாமிநாத ஐயர் குற்றாலத்தில் கல்யாணி அருவியைத் தாண்டி செல்ல நினைத்தபோது, “போதும், இதற்கு மேல் செல்ல வேண்டாம் ...”, என்று அசரீரி ஒலிக்கவே தமிழ்த்தாத்தா அங்கிருந்து திரும்பி விட்டார் என்று சித்தர்கள் குற்றாலத்தின் மகிமையை எடுத்துரைக்கின்றனர். அதனால் சாமிநாத ஐயருக்கு கல்யாணி அருவியைத் தாண்டி செல்லக் கூடிய தகுதி இல்லை என்று நாம் கருதக் கூடாது. கல்யாணி அருவியைத் தாண்டி அவர் சென்றால் ஓங்கார நாதத்தில் இலயித்து அவர் இந்த பூமி வாழ்க்கைக்கு திரும்ப மாட்டார் என்பதாலேயே ஸ்ரீஅகத்தியர் அவ்வாறு உத்தரவு பிறப்பித்தார் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய செய்தி.

ஸ்ரீஅகத்திய பிரான் சுவாமிமலை

கனிந்த கனி பெரியவர் திருஅண்ணாமலையை திருக்கோவிலூரிலிருந்தே தரிசனம் செய்ததற்கும், நம் சற்குரு கல்யாணி அருவி, பாபநாசம் போன்ற திருத்தலங்களை தரிசனம் செய்யாததற்கும் இந்த ஓங்கார “ஈர்ப்பே” காரணமாகும். திருஅண்ணாமலை தரிசனத்திற்கும் திருக்குற்றால அருவி தரிசனத்திற்கும் என்ன வித்தியாசம் ? ஓங்கார ஒளியாகவே தோன்றுவது திருஅண்ணாமலை, ஓங்கார நாதமும் ஒளி தரிசனமும் இணைந்து துலங்குவது திரிகூடமலை அருவி தரிசனம். இந்த இரகசியத்தை உணர முடிந்தால் ஒலியை ஒளியாக்கும் வித்தை உள்ளங்கை நெல்லிக் கனியே. “அப்பா அப்பா அப்பா” என்று மும்முறை ஒலித்தானே சரவணபவ குகன் என்று முருகப் பெருமான் ஓங்கார இரகசியத்தை எம்பெருமானுக்கு உபதேசித்த அழகை அருகில் இருந்து இரசித்த ஸ்ரீஅகத்திய பெருமான் விளக்குகிறார். சித்தர்கள் அளிக்கும் இந்த ஒரே ஒரு நிகழ்ச்சியை நாம் கண் முன் கொண்டு வந்து தினமும் ஆத்ம விசாரம் செய்து வந்தாலே போதும், நாம் அனைத்து இரகசியங்களையும் உணர்ந்தோர் ஆவோம்.

27. எண் சாண் உடம்பிற்கு குருவே பிரதானம்.
ஒரு உடலுக்கு ஒரு தலைதான் என்பார் நம் சற்குரு. அந்த அளவிற்கு குரு நம்பிக்கை இருந்தால்தான் தெய்வீகத்தில் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் இங்கு காணும் செய்திகளை பதிவு செய்வதற்கு மிகவும் உதவியாய் இருக்கும் ஒரு அடியாரைப் பற்றிய அனுபவங்களை இங்கு தெரிவிக்கிறோம். அந்த அடியாருக்கு குல தெய்வம் யார் என்பது தெரியாது. இது பற்றி நம் சற்குருவிடம் அவர் கேட்கவும் இல்லை. வருடங்கள் கழிந்தன. இடையில் அவர் சற்குருவிடம் கொண்ட தொடர்பு மட்டும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக தொடர்ந்து இறுகியது. ஒரு முறை ஒரு அடியாருக்கு பெண் பார்ப்பதற்காக தன் தூரத்து உறவினரை முதன் முதலாக சந்திக்க நேர்ந்தது. உண்மையில் அந்த அடியாரின் பிறந்த ஊரே அது. பெண் சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரித்த பின்னர் அந்த அடியாரைப் பற்றிய குலதெய்வ விளக்கங்கள் அவர் கேளாமலேயே அவருக்கு அளிக்கப்பட்டன.

திருநாவலூர்

கும்பகோணத்தில் வீற்றிருக்கும் அங்காளி பரமேஸ்வரிதான் அவருடைய குல தெய்வம் என்ற இனிய செய்தியையும் அவர் அறிந்து கொண்டார். இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன ? தன்னுடைய குல தெய்வம் யார் என்று அறிந்து கொள்வதை விட ஒரு அடியாரின் எதிர்காலம் நன்கு அமைய அவருக்கு பெண் தேடுதல் என்ற படலத்தில் ஈடுபட்டதால் அந்த அனுபவமே அந்த அடியாரின் சொந்த வாழ்க்கையில் குலதெய்வத்தையே பரிசாக தேடித் தந்தது.

அந்த அடியார் தன்னிடம் பல அடியார்கள் ஆன்மீக சம்பந்தமாகவும் லௌகீகமாகவும் நிறைய வழிகாட்டுதலைக் கேட்பதால் அவர்கள் கேள்விகளுக்கு சரியான விடையை எப்படித் தருவது என்று ஒருமுறை நம் சற்குருவைக் கேட்டார். நம் சற்குருவும், “இது ஒன்றும் பிரமாதமில்லை ... கோயிலில் உள்ள ... தெய்வத்தை தினமும் பிரதட்சிணம் செய்து கொண்டே அந்த அடியார் கூறிய கேள்வியை மனதில் நிறுத்திக் கொண்டு இரு. முடிந்த வரை பிரதட்சணம் நிறைவேற்றிய பின், ஓரிடத்தில் மௌனமாக அமர்ந்து அந்த கேள்வியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் அந்த தெய்வமே உன் கேள்விக்கான விடையைத் தந்து விடும்,” என்றார். அந்த அடியாரும் நம் சற்குரு அளித்த உபதேசத்தின்படி தொடர்ந்து ஆலயத்தை கேள்வியுடன் வலம் வந்து கொண்டிருந்தார். ஆனால், ஒரு பதிலும் அவருக்குக் கிட்டவில்லை. நாட்கள் கடந்தன. பின்னர் ஒரு முறை சற்குருவைக் கண்டபோது தன்னுடைய நிலைமையை விவரிக்கவே நம் சற்குருவோ, “சரி நைனா, விடை கிடைக்கவில்லை என்பதற்காக வருத்தப்படாதே, எந்த கேள்வியாக இருந்தாலும் அடியேனிடம் கேள் ... அடியேன் உரிய விளக்கத்தை அளித்து விடுகிறேன்...” என்றார். அப்புறம் என்ன அந்த அடியார் காட்டில் மழைதான் ...

வருடங்கள் கழிந்தன ... நம் சற்குரு தன் உடலை விட்டு குருமங்களகந்தர்வ லோகத்தில் ஜோதியாய் எழுந்தருளியதால் நம் சற்குருவுடன் நேரடி தொடர்பு என்பது பழங் கனவாய், கதையாய் மாறி விட்டது. அந்த அடியாரும் வழக்கம்போல் பதில் கிடைக்கிறதோ இல்லையோ என்பதைப் பற்றி கவலைப்படாமல் அந்த ஆலயத்தை வலம் வந்து கொண்டிருந்தார். திடீரென்று ஒரு நாள் மின்னல் கீற்று போல் சற்குருவின் வார்த்தைகள் நெஞ்சில் பளபளத்தன. ஆம், பல அடியார்களின் கேள்விக்கான பதிலை அளிக்கக் கூடிய தெய்வமே தன்னுடைய இஷ்ட தெய்வம் என்பதுதான் அந்த அடியார் இத்தனை வருடங்களாக தான் தேடிய இஷ்ட தெய்வத்தின் சாட்சாத்காரம். ஒருவரின் இஷ்ட தெய்வத்தையே அறியாமல் இருந்தும் அந்த இஷ்ட தெய்வத்தை வருடக் கணக்கில் வலம் வரச் செய்ததுதான் சற்குருவின் வானுயர்ந்த வழிகாட்டுதல். பலரும் இஷ்ட தெய்வம், குல தெய்வம் என்ற விவரங்களை அறியாமலே குறிக்கோள் இன்றி வாழ்கின்றார்கள். அவர்களுக்கு திடநம்பிக்கையை ஊட்டக் கூடியதே அந்த அடியாரின் அனுபவமாகும்.

உண்டா இல்லையா ?
இந்தக் கேள்வியை வாழ்வில் ஒரு முறையோ பல முறையோ, அல்லது தினமுமே பல முறை சந்திக்காத மனிதர்களே இல்லை எனலாம். இவை எல்லாவற்றிலும் வாழ்க்கைக்கு மிகவும் பயன்தரக் கூடிய கேள்வியே கடவுள் உண்டா இல்லையா என்பதாகும். இந்தக் கேள்விக்கு கோடிக் கணக்கானவர்கள் எம்முறையில் பதில் அளித்தாலும் ஒருவர் தானாகவே தன் உள்ளத்தில் இதற்கான பதிலை உணர முடிந்தால்தானே அது பயனுள்ளதாக இருக்கும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவோம். நாம் அனைவரும் அறிந்த ஒன்று, ஏழு நிறங்கள் என்பது. சித்தர்களோ ஏழு நிறங்கள் ஒவ்வொன்றுமே ஏழாகப் பிரியக் கூடியது என்பார்கள்.

பேரூர் சுமைதாங்கி வழிபாடு

இது ஒரு புறம் இருக்க அஷ்ட மங்கள ரிஷிகள் என்ற எட்டு ரிஷிகளும் இந்த ஏழு வண்ணங்களையும் நிறமற்ற ஒரு நிறத்தையும் ஆளும் சக்தி உடையவர்களாகத் திகழ்கின்றனர். சரிகமபதநி என்று ஒலியில் திகழும் ஏழு ஸ்வரங்களைக் குறிப்பதுண்டு. சரிகமபதநிஸ் என்று எட்டாவது ஒரு ‘ச’ ஸ்வரத்தையும் மேல்ஸ்தாயியாக இணைத்து சங்கீத உலகில் கைளாளுகின்றனர். வானில் வடக்கு திசையில் சப்த ரிஷி மண்டலம் பிரகாசிப்பது நீங்கள் அறிந்ததே. இந்த சப்தரிஷிகளைக் குறிக்கும் மண்டலத்தை வணங்கும்போது இதில் வசிஷ்டர் அருகில் துலங்கும் அருந்ததி நட்சத்திரத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும் என்று சப்தரிஷி மண்டலத்தை, வழிபாட்டில் எட்டு ரிஷி மண்டலமாக கருதி வழிபடுகின்றனர்.

இது, உண்டா இல்லையா, என்ற கேள்வியை மேலும் குழப்புவதாகத் தோன்றினாலும், சித்தர்களே எதற்கும் இறுதி முடிவை அளிக்கவல்லவர்கள் என்பதால் இதற்கான குழப்பத்திற்கு அவர்கள் தரும் விடையே சப்தரிஷி மண்டல வழிபாடாகும். திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்ய தரிசனம், ஸ்ரீஅகஸ்திய விஜயம், நலம் தரும் 32 தேவாரப் பதிகங்கள், நம் சற்குரு உழவாரப் பணிகள் நிறைவேற்றிய திருத்தலங்கள், விஷ்ணுபதி தலங்கள் போன்ற இவை அனைத்துமே மக்கள் மனதில் எழும் எத்தகைய தெய்வீக குழப்பங்களையும் தீர்க்கும் சக்தி உள்ளவையே. இந்த பொக்கிஷங்களையும் அறியாதவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அவர்களுக்கும் வழிகாட்டக் கூடியதே சப்தரிஷி மண்டல வழிபாடாகும். வானத்தில் வடக்கு திசையில் பிரகாசிக்கும் சப்த ரிஷி மண்டலத்தை தரிசனம் செய்து, சப்தரிஷி மண்டலம் எது என்று அறியாதவர்கள் கூட வடக்கு திசையில் கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரங்களை எல்லாம் தரிசனம் செய்து தங்களால் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து இந்த நட்சத்திரங்களை எல்லாம் தரிசனம் செய்து வர வேண்டும். அல்லது இந்த நட்சத்திரங்களை தரிசனம் செய்த பின் வடக்கு நோக்கி அமர்ந்து குறைந்தது ஒரு மணி நேரம் இந்த நட்சத்திரங்களை பார்த்தவாறு தாங்கள் அறிந்த முறையில் பிரார்த்தனை செய்து வர வேண்டும்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
லால்குடி

சாதி மத இனம் என்ற வேறுபாடுகளைக் கடந்த இந்த வழிபாடு பலம் அடைய அடைய சப்தரிஷிகள் எங்கோ வானத்தில் இருப்பதாக கருதும் நீங்கள் அவர்கள் சக்திகளை, வழிகாட்டுதலை உங்கள் உள் மனதில் பெறலாம். அதற்குப் பின் உங்கள் வாழ்க்கை ஒரு பூஞ்சோலையே, துன்பம் என்பது இனியில்லை, இன்பமே எந்நாளுமே. இவ்வாறு கிட்டும் எல்லையில்லா இன்பத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பண்புடையோர் பல நிற உணவுகளை தானம் அளிப்பதையோ, பல நிற தேவாரப் பதிகங்களை ஓதுதலையோ நிறைவேற்றி வரலாம். இதுவே நம் சற்குரு கைக்கொண்ட ஒலியை ஒளியாக்கும் உன்னத வழிபாடு.

ஜோதி அலங்கார பீடாதிபதி என்று நம் சற்குருவை அழைப்பதுண்டு. ஜோதி அலங்காரம் என்ற சொற்றொடரின் முழு அர்த்தத்தை மனிதர்களாகிய நம்மால் கிரகிக்க முடியாது என்றாலும் நமக்கு நிச்சயம் இதில் பங்கு உண்டு, பலன் உண்டு என்பதால்தான் நம் சற்குரு இத்தகைய பொருள் பொதிந்த ஒரு பட்டத்துடன் பூலோகத்தில் உலவினார் என்பதை நாம் மறுக்க முடியாது. வண்ணங்களில் மஞ்சள், சிவப்பு, நீலம் என்பவை அடிப்படை வண்ணங்கள். இந்த அடிப்படை வண்ணங்களிலிருந்து (Red, blue, yellow) எல்லா வண்ணங்களையும் உருவாக்கி அவைகளையே நாம் டீவி நிகழ்ச்சிகளில் பார்க்கிறோம். அதே போல Cyan majenta yellow என்பதாக அச்சுத்துறையிலும் இந்த மூன்று வண்ணங்களே பிரதிபலிக்கும் அம்சங்களுடன் பொலிகின்றன. இந்த வண்ணங்களின் வெளிப்பாடாக தோன்றியவரே நம் குரு மங்கள கந்தர்வா என்ற மூவண்ண சற்குரு ஜோதி என்றால் அனைத்து உலகையும் ஆளும் இந்த நிறமாலைக்கு ஈடாக எதைச் சொல்வது ? கலர் டீவி பிரபலமாகாத அக்காலத்தில் அனைத்து அடியார்களையும் கலர் டீவி வாங்கச் சொன்னார் நம் சற்குரு. காரணம், மற்ற லோகங்களிலிருந்து வரும் தேவதைகள் வண்ண ஒளிகளில் தோன்றுவதால் அவைகளின் அனுகிரகங்களைப் பெற இது உதவும் என்பது நம் சற்குருவின் வழிகாட்டுதல் என்றாலும், டீவியில் காணும் அனைத்து நிகழ்ச்சிகளும் மூவண்ணங்களால் உருவான மாயையே என்பதை உணர்ந்து கொள்ள சற்குருவின் மேல் உள்ள நம்பிக்கை துணை புரியும் என்பதே முக்கிய காரணமாகும்.

ஸ்ரீதிரிபுர சம்ஹாரத் தாண்டவம்

எனவே டீவியில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம், ஆனால், அவை எல்லாம் மூவண்ணம் என்ற சற்குருவால் உருவாக்கப்பட்ட மாயையே என்ற நினைவுடன் பார்க்க வேண்டும் என்பதே முக்கியம் என்று வலியுறுத்துவார் நம் சற்குரு. அலங்காரம் என்றால் ஒப்பனை, அழகுபடுத்துதல் என்று பொருள், ஜோதியை எப்படி அழகுபடுத்துவது ? திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் கார்த்திகை தீபத்தை ஒட்டி விளக்கு பூஜை என்ற அற்புத நிகழ்ச்சியை நம் சற்குரு ஏற்பாடு செய்வார்கள். நடுவில் ஒரு சித்திரமும் அதை அலங்கரிப்பதாக ஆயிரமாயிரம் வடிவ விளக்குகள் அதைச் சுற்றி ஏற்றப்படும். இதுவே மேலோட்டமான ஜோதி அலங்காரம். அடிப்படை ஜோதிகள் இறைவன் ஜீவன், குரு அடியார் என்ற இரு ஜோதிகள், இவை எட்டு மடங்காக அலங்காரம் கொள்ளும்போது அதுவே ஜோதி அலங்காரம். (2, 4, 8 x 8 = 64). இதையே வள்ளுவர் இறைவனின் “எண் குணத்தான்” அம்சங்களாகக் குறிப்பிடுகிறார். இந்த 64 தத்துவங்களையே 64 திருவிளையாடல்களாக மதுரையில் நிகழ்த்தி கருணை புரிந்தான் எம்பெருமான். ஒரு அகல் விளக்கில் மூன்று ஜோதிகள் பிரகாசிப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த ஜோதிகளில் இரண்டை முதலில் இணைத்து பின்னர் மூன்றாவது ஜோதியையும் அதில் இணைத்தால் எந்த வித மாற்றமும் தெரிவதில்லை, அதிகப்பட்சம் அந்த ஜோதியின் பிரகாசம் சற்று கூடுதலாகும். இதுவே இணைந்தால் இன்பமில்லை, பிரிந்தால் துயரமில்லை என்ற சிருஷ்டி தத்துவமாகும். ஆனால், தாங்கள் இறைவனின் அருட்பெருஞ்சோதியிலிருந்து தோன்றிய தனிப் பெருங் கருணை என்பதை முழுமையாக உணர்ந்தால்தான் இது சாத்தியம்.

நம் சற்குரு நிறைவேற்றிய விளக்கு பூஜையின் தத்துவங்களை மட்டும் ஆராய்ந்தால்போதும் நாம் சிருஷ்டியை பூர்ணமாக உணர்ந்தவர்கள் ஆவோம். இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படையாக ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டுமானால் இந்த விளக்கு பூஜைகள் நடந்த ஆண்டுகளைக் குறித்து நம் ஆத்ம விசாரத்தை ஆரம்பிக்கலாம். 1993, 1994, 1995, 1996, 1997, 1998, 1999 (2000) 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007 என்ற பதினைந்து வருட விளக்கு பூஜைகள் “அலங்காரம்” என்னும் ஆவரணத்தை சுட்டுவதாகும். 2000 என்ற மூன்று பூஜ்யங்கள் கூடிய ஆண்டு இந்த ஆவரணத்தின் மையமாக விளங்குகின்றது. முன்னேறுங்கள், வெற்றி கொள்ளுங்கள்.

தேவார ஆவரண வழிபாடு

ஆவரணம் என்றால் மறைத்தல் என்று பொருள். நமக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள திரை என்ற கற்பனையான ஆவரணத்தை விலக்குவதாக அமைந்ததே மேற்கூறிய ஆத்ம விசார நெறியாகும். இது கடினம் என்று நினைப்பவர்களுக்கு உதவும் முகமாக நம் சற்குருவால் அளிக்கப்பட்டதே தேவார ஆவரண வழிபாடாகும். இம்முறையில் ஏழு வெற்றிலை பாக்கு குண்டு மஞ்சள் என்பனவற்றை வரிசையாக வைத்துக் கொள்ள வேண்டும். அத்ரி, பிருகு, புலத்தியர், வசிஷ்டர், கௌதமர், ஆங்கிரசர், மரீசி என்ற ஏழு ரிஷிகளைக் குறிப்பதாக இந்த ஏழு மஞ்சள்கள் அமையும். நடுவில் உள்ள வசிஷ்ட மகரிஷியின் முன் ஒரு மஞ்சளை அருந்ததியாக வைத்துக் கொள்ள வேண்டும். வசிஷ்டர், அருந்ததி, புலத்தியர், கௌதமர், பிருகு, ஆங்கிரசர், அத்ரி, மரீசி என்ற வரிசையில் இந்த ரிஷிகளை தியானித்து தேவார பதிகங்கள் 32யும் ஒரு ரிஷிக்கு ஒரு பதிகமாக ஓதி அர்ப்பணிக்க வேண்டும். சற்று கவனித்தால் இம்முறையில் சப்தரிஷிகளை வழிபடுவதால் இது குசா சக்திகளை அபரிமிதமாக வர்ஷிக்கும் என்பது புரிய வரும். இவ்வாறு 32 பதிகங்களை நான்கு முறை அர்ப்பணிப்பதே தேவார ஆவரண வழிபாடாகும். முதலில் தேவார வார்த்தைகள் சுட்டும் பொருள் மறைந்து அவை ஹம்ஸ்வரமாக ஒலிக்கும், பின்னர் ஹம்ஸ்வரமும் மறைந்து பீஜாட்சர சக்திகள் தேவார பதங்களில் மின்னும், இறுதியாக பீஜாட்சர சக்திகளும் மறைந்து ஆத்ம ஜோதி பிரகாசிக்கும் என்பதே இந்த தேவார நிறமாலை உணர்த்தும் தெய்வீக தத்துவமாகும். ஒவ்வொரு வாரமும் புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகளிலுமோ அல்லது இந்த மூன்றில் ஏதாவது ஒரு கிழமையிலோ மேற்கண்ட முறையில் பூசைகள் நிறைவேற்றி பூஜை நிறைவில் இந்த வெற்றிலை, பாக்கு, மஞ்சளை மற்ற மங்கலப் பொருட்களுடன் சுமங்கலிகளுக்கு தானமளித்தல் சிறப்பாகும்.

இந்த பூஜையின் பலா பலன்களை ஒரு சித்திரம் மூலமாக அடியார்களுக்கு அளித்த பெருமையும் நம் சற்குருவையே சாரும். எம்பெருமானின் திரிபுர சம்ஹாரத் தாண்டவக் கோலத்தை 2008 வருடக் காலண்டராக அருளினார் நம் சற்குரு. இந்த சித்திரத்தில் பெருமானின் இடது கால் என்பது சத்துவ குணத்தையும், வலது காலின் 180 டிகிரி தூக்கிய குஞ்சித பாத கோலம் ரஜோ குணத்தையும், தூக்கிய பாதத்தை 180 டிகிரி வலது பக்கமாக திருப்பிய கோலம் தமோ குணத்தையும் மாய்க்கும். திரிபுரத்தைக் குறிக்கும் சத்துவ ரஜோ தமோ குணங்கள் பொடிப்பொடியாகி இறை தரிசனம் சித்திக்கும் என்பதே இந்த சித்திரத்தின் மகாத்மியமாகும்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
திருநல்லம்

தான் பூத உடலோடு உலவிய காலம் வரை தன் அடியார்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்ட இந்த சத்துவ தமோ ரஜோ குணப் பெருக்கை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவரே சற்குரு ஆவார். எனவே மேற்கண்ட தேவார ஆவரண பூஜையை ஸ்ரீதிரிபுர சம்ஹார தாண்டவ மூர்த்தியின் முன்போ, திருத்தலங்களில் நடராஜப் பெருமானின் முன்னோ, சப்தரிஷி நட்சத்திர மண்டலத்தின் முன்போ, இது எதுவும் இயலாதபோது வடக்கு நோக்கி அமர்ந்தோ இந்த பூஜையை நிறைவேற்றி பலன் பெறலாம். நீலகண்டம் நீலகண்டம் என்று கூறியே முக்தி அடைந்த திருநீலகண்ட நாயனார் தன் வாழ்நாள் முழுவதும் குஞ்சிதபாதத்தையே தியானித்து நன்னிலை எய்தார் என்பதே தூக்கிய திருவடிகளின் ஏத்திய பெருமை.

இதையே பெரியோர்கள்,
குனித்த புருவமும்
கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும்
பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
என்று எம்பெருமானின் குஞ்சிதபாத அழகை வர்ணிக்கின்றனர். மனித என்பதை மனித்த என்று குறிப்பிடுவது பாடல் அழகிற்காக அமைந்த சொல்லசை என்றாலும் ‘த்’ என்ற மெய்யின், உடலின் மேன்மை இங்கு வலியுறுத்தப்படுகிறது. இதுவே குஞ்சிதபாதத்தின் சிறப்பு.

28. உதட்டில் தவழ வேண்டியது புன்னகையே.
பொன்னகையை விடவும் உயர்ந்ததே புன்னகை. இறைவனுக்கே சிறந்த அலங்காரமாகத் திகழ்வது ‘கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பு ...’ என்றால் இதன் சிறப்பை அளவிட முடியாதுதான். கொவ்வைச் செவ்வாய் என்பது ஆரோக்கியமான உதடுகளைக் குறிக்கும். மனித உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் கொவ்வைச் செவ்வாய் அமையும். உடலில் உயிர் ஒட்டிக் கொண்டு இருக்கும்போது உதடுகள் சிவப்பாக இருப்பதை பலரும் பார்த்திருக்கலாம். ஆனால், உயிர் பிரிந்த பின்னும் கொவ்வைச் செவ்வாயுடன் பலரும் அதிசயிக்கும் வண்ணம் திகழ்ந்தவரே நம் சற்குரு. அது மட்டுமல்ல அந்த கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் கடைசி வரை திகழ்ந்தது என்றால் இது தான் ஒரு ஜகத்குரு என்பதற்கு மனிதர்கள் கண்டு அனுபவிக்கக் கூடிய ஒரு இயற்கையான ‘அலங்காரமாக’ ஒளி வீசியது என்பதை நம் சற்குருவின் அருகிலிருந்தோர் இன்றும் நினைத்து நினைத்து பெருமைபடக் கூடிய ஒரு சிறப்பாகும்.

மனம் மணக்கும் புன்னகை
மாதா அமிர்தானந்தா

அடியார்கள் தரிசனம் செய்த மற்றோர் “புன்னகை” சம்பவம். திருமணமாகி புது மணப் பெண்ணுடன் நம் ஆஸ்ரம சேவையில் கலந்து கொண்ட ஒரு அடியார் தான் அடுத்த பௌர்ணமி சேவைக்கும் தன்னுடைய மனைவியை அழைத்து வரலாமா என்று உத்தரவு கேட்டார். சற்குரு உதட்டில் புன்னகையுடன், “அப்படியா சார், ரொம்ப சந்தோஷம் ... ஆமாம் அந்த அம்மா இப்போது என்ன செய்கிறார்கள் ?” என்று கேட்டார். அந்த அடியாரும் தன் மனைவி சிறு குழந்தைகளுக்கு டியூசன் சொல்லித் தருவதாகக் கூறவே சற்குரு தொடர்ந்து, ”அப்படியா, இங்கு சேவைக்கு வந்தால் சிறு குழந்தைகளின் படிப்பு பாழாகி விடுமே. அதற்கு அடியேன் ஒரு காரணமாக இருக்கலாமா ? அவர்களின் படிப்பு பாதிக்கக் கூடாது, அதனால் நீங்கள் மட்டும் சேவைக்கு வாருங்கள்,” என்று கூறி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். அவர்கள் உத்தரவு பெற்றுச் சென்ற பின், “இவனே தண்டம், இங்கு ஒரு வேலையும் செய்வதில்லை, இதில் இவன் மனைவி வேறு வந்து என்ன செய்து விடப் போகிறாள் ?” என்று கூறி விட்டு அங்கிருந்த அடியார்களைப் பார்த்து, “அடியேன் இங்கு ஒரு லட்ச ரூபாய் பிரச்னையில் மாட்டிக் கொண்டு இருக்கிறேன். இவ்வளவு டென்சனான சமயத்திலும் சற்றும் கோபம் கொள்ளாமல் அவன் மனைவியை வர வேண்டாம் என்று கூறுவதற்கு ஒரு லாஜிக்கலான காரணத்தையும் தேடிப் பிடித்து அவர்கள் மனம் கோணாமல் கூற வேண்டும். குரு போஸ்ட் என்று வந்து விட்டால் எவ்வளவு தலைவலி பாருங்கள் ...”, என்றார் சிரித்துக் கொண்டே. அந்த அடியார் அதன் பின்னர் ஆஸ்ரமம் பக்கமே தலைகாட்டவில்லை என்பது வேறு கதை.

சற்குரு ஒரு அடியாரிடம் அன்னதானத்திற்காக ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அதை ஒவ்வொரு லட்சமாக வேறு ஒரு அடியார் மூலமாக திருப்பிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். இந்த வரவு செலவில் ஒரு லட்சம் தங்களுக்கு வரவில்லை என்று அவர்கள் கூற நம் சற்குரு பணம் அனைத்தையும் இடையில் இருந்த அடியாரிடம் கொடுத்ததை உறுதி செய்தார். ஆனால் அந்த அடியாரோ தற்போது ஆஸ்ரமத்திற்கு வராததால் இந்த பிரச்னையை தீர்க்க முடியவில்லை என்பதே அப்போதைய பிரச்னையின் காரணம். இதற்கிடையில் நிகழ்ந்ததுதான் அந்த ‘புது வரவு’ பிரச்னை.

ஸ்ரீகௌதம மகரிஷி
திருஅண்ணாமலை

ஆத்மராமன் என்ற நாமத்தை பலரும் அறிந்துள்ளோம். ஆனால், அதன் மகத்துவத்தை அறிந்தோர் அவதார மூர்த்திகளும், சித்தர்கள் நிலையில் உள்ள மகான்கள் மட்டுமே. அவர்களால் மட்டுமே ‘குமிழ்’ சிரிப்பை உதிர்க்க முடியும். தன்னுடைய ஆத்மாவின் தரிசனம் பெற்ற ஒருவர் ஆத்ம தரிசனத்தில் மூழ்கி அதை மற்றவர்கள் நன்மைக்காக புன்னகை மூலம் அளிப்பதே குமிழ் சிரிப்பாகும். இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். “அவர் ஜன்னல் வழியாகத் தெரியும் மலையையே உற்றுநோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முன்னே எத்தனையோ பக்தர்கள் அவருடைய கடை விழி தரிசனத்திற்காக காத்திருப்பதை அவர் அறியவில்லையோ என்னவோ ? நானும் பல நிமிடங்கள் அந்த அமைதியான சூழ்நிலையில் அந்த மகானின் தரிசனத்திற்காக, அதாவது அவர் என்னைக் ‘காணும்’ இனிய வைபவத்திற்காகக் காத்திருந்தேன். நிமிடங்கள் மணித் துளிகளாக மாற, மணிகளும் நாட்களாக மாறுவது போல் தோன்றின ... கடைசியில் அந்த மகா பெரியவர் சட்டென திரும்பி எங்களை... அல்ல ... அல்ல ... நேராக என்னுடைய விழிகளில் ஊடுருவி என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஆயிரம் சூரிய பிரகாசத்தை உணர்ந்தேன் ... ஆனால் அதில் சூடு என்பது சற்றும் இல்லை ... ஆயிரமாயிரம் சந்திரன்களை ஒத்த குளிர்ச்சியே அந்தப் பார்வையில உறைந்திருந்தது...”. இது ரமண மகரிஷியை முதன் முதலில் நேரில் பார்த்த பால் பிராண்டனின் அனுபவம். இதுவே ‘பார்வையில்’ ஆத்ம ராமர் அளிக்கும் குமிழ் சிரிப்பின் தன்மை. மகான்களின் நோக்கில் திகழும் இந்த அதீத குளிர்ச்சி அந்த மகான்களை தரிசிப்பவர்களுக்கு மட்டுமன்றி அவர்கள் பார்வையில் படும் அனைத்திலும் நிரவி நிற்கும் என்பதே இந்தப் பார்வையில் ஆழ்ந்த பொருளாகும்.

நம் சற்குருவோடு குற்றாலம் சித்திரை சபைக்குச் செல்லும் பாக்கியம் பெற்ற அடியார்கள் ‘குமிழ்’ சிரிப்பின் தன்மையை நேரில் அனுபவிக்கும் அனுகிரகத்தைப் பெற்றார்கள். நம் சற்குரு அளித்த அனுமதியின் பேரில் அப்போது எடுத்த புகைப்படங்களில் வண்ணமே இல்லாமல் ‘காய்ந்து’ கிடந்த சித்திர சபை கோபுரத்திலிருந்து வண்ண வண்ண ஒளி வீசியதை இன்றும் அடியார்கள் தரிசித்து மகிழலாம் என்பதே இந்த குமிழ் சிரிப்பின் மகத்துவமாகும். காரணம் இந்த குமிழ் சிரிப்பு மகான்களின் ஆத்ம ஜோதி பிரகாசமே, இடம் பொருள் என்ற அனைத்தையும் கடந்து பிரகாசிப்பதே ‘குமிழ் சிரிப்பு’. ஆனந்தம் என்பது குறித்த எல்லைக்குள், குறித்த சூழ்நிலையில் விளங்குவது, பரமானந்தம் என்பது எல்லை கடந்தது, ஜோதியுடன் ஜோதி இணைவதான பரமானந்த தரிசனத்தை இங்கு அளிப்பவரே சர்ப்ப கிரீட அலங்காரத்துடன் திகழும் மாதா அமிர்தானந்தா.

29. அடியேன் ஒரு கைகாட்டி மாத்திரமே!

அல்லித்துறை சோமரசம்பேட்டை
திருச்சி

பெருமாள் ஆலயம் அல்லித்துறை

“சித்தி என்பது நீ செய்வதாக, செய்ததாக இருக்கக் கூடாது, சித்திகள் உன்னைச் சுற்றிச் சுற்றி வந்து விளையாட வேண்டும்...”, என்பதே நம் கோவணாண்டி, சிறுவனான வெங்கடராமனுக்கு அளித்த குரு உபதேசங்களில் ஒன்று. நம் சற்குருவுடன் நெருங்கிப் பழகும் பாக்யம் பெற்ற பலரும் நம் சற்குரு பல சித்திகளையும் நிகழ்த்திக் கொண்டே இருந்த அற்புதத்தை உணர்வார்கள். ஆனால், நம் சற்குருவிடம் இது பற்றிக் கேட்டாலோ, “சித்திகள் செய்யக் கூடியவன் அண்ணாமலையான் ஒருவனே, அவன் ஒருவனே எதையும் உருவாக்க வல்லவன். அடியேன் ஒரு வழிகாட்டி மட்டுமே. திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் வரும் நீ இவ்வாறு வழிகாட்டிப் பலகைகள் காட்டும் திசை நோக்கிப் பயணம் செய்துதானே இறுதியில் சென்னையை அடைகிறாய். அதுபோல் வழிகாட்டிப் பலகைகள் உன்னைச் சரியான வழியில் செலுத்துமே தவிர வழிகாட்டிப் பலகைகள் ஒரு காலும் சென்னை ஆக முடியாது. அதே போல் நீ இறைவனை அடையும் வழிமுறைகளை உனக்கு விளக்கிக் கூறுகிறேனே தவிர ஒரு காலும் அடியேன் இறைவன் ஆக முடியாது. அவ்வாறு அடியேன் கூறும் வழிமுறைகளுக்குக் கூட அடியேன் உரிமை கொண்டாட முடியாது. காரணம் அவை எதுவுமே அடியேனால் ‘கண்டு பிடிக்கப்பட்ட’ வழிமுறைகள் அல்ல. அனைத்தும் அடியேன் குருநாதனால் பிச்சையாக அளிக்கப்பட்டதே...”.

ஆணவம் அகற்றும், egoவை கண்காணாமல் விரட்டி அடிக்கும் இத்தகைய ஒரு எளிமையான விளக்கத்தை நம் சற்குருவைத் தவிர வேறு யாரால் அளிக்க முடியும்?

ரிஷிகேஷ் சிவானந்தா சுவாமிகள்

இந்த ‘பிச்சை’ அணுகுமுறைதான் ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா காட்டிய வழிமுறையும். ஒரு முறை ஒரு சீடர் அவரிடம், “சுவாமி, ஆறு வாரங்களில் சமாதி அடைய பயிற்சி அளிப்பதாக நிறைய விளம்பரங்கள் வெளிவந்துள்ளனவே. அத்தகைய குறுகிய காலத்தில் சமாதி அடைய முடியுமா?” என்று அப்பாவித்தானமாக கேட்டார்.

சிவானந்தா அவரை சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு, “சமாதி என்பது நீங்கள் நினைப்பதுபோல் உங்கள் முயற்சியால் யோகம், தவம் எல்லாம் இயற்றி புரச்சரணங்கள் நிறைவேற்றி, நீண்ட தியானத்தில் ஆழ்ந்து பயிற்சி செய்து அடையும் ஒரு சாதனை அல்ல...நீங்கள் ஆறு வாரங்கள் என்ன, ஆறு மாதங்கள் முயற்சி செய்தாலும் உங்களால் அடைய முடியாது. ஆறு வாரங்கள் என்ன, ஆறு வருங்களில் கூட உங்களால் அடைய முடியாமல் போகலாம்...”. கேள்வி கேட்ட சீடரோ ஒன்றும் கூற முடியாமல் நெளிய ஆரம்பித்தார். சிவானந்தா தொடர்ந்தார். “600 வருடங்கள் என்ன 600 பிறவிகள் எடுத்து தொடர்ந்து சமாதிக்காகப் படையெடுத்தாலும் அது உங்களுக்குக் கிட்டாமல் போகலாம் ... சமாதி என்பது கடவுள் உங்கள் மேல் கருணை கொண்டு உங்களுக்கு அளிக்கும் பிச்சை. நீங்கள் ஒரு வீட்டின் முன்னால் பிச்சைக்காக நின்றால் அந்த வீட்டு எஜமானி எப்போது பிச்சை போடுவார் என்று உங்களால் கூற முடியாது. உங்களுக்குப் பிச்சையே போடாமல் உங்களை நிராகரிக்கலாம். அடுத்து வரும் ஒரு சோம்பேறிக்கு அவர்கள் உணவளிக்கலாம். இவ்விஷயத்தில் நீங்கள் எந்த உரிமையும் கொண்டாட முடியாது. அதே போன்றதுதான் சமாதியும். இறைவன் யாருக்கு வேண்டுமானாலும் சமாதி என்ற ‘பிச்சையை’ அளிக்கலாம். எவருமே இறைவனிடம் அவர் ஏன் ஒருவருக்கு பிச்சை அளிக்கிறார், ஏன் சிலருக்கு அவர் பிச்சை அளிப்பதில்லை என்று கேட்க முடியாது. நான் தகுதி உடையவன் என்று ஒருவன் கூறவதற்கு அங்கு இடமே இல்லை...”

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam