சாய்பாபாவின் சக்தியால்தான் சூரியன் கிழக்கே உதிக்கிறது !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

கழுதை திருமணம்

இறைவனின் ஆற்றல் எல்லையற்றது, இறைவனின் கருணையும் எல்லையற்றது. ஆனால், இறைவனின் கருணை எல்லலையற்றது என்பதை வெறும் வார்த்தைகளால் கூறுவதைவிட அதை அனுபவமாக உணரும்போதுதான் அந்த உண்மை சுவைக்கும். இவ்வாறு இறைவனின் கருணையை நாம் சுவைப்பதற்காக மண்ணில் உலவும் மிருகங்களே கழுதைகளாகும்.
கழுதைகளின் தெய்வீகத் தன்மையை எடுத்துரைக்க யுகங்கள் போதாது. உடல் முழுவதும் என்ன நிறத்தில் இருந்தாலும், கழுதையின் மூக்கு நுனியோ வெண்ணிறமாக இருக்கும். இது சாதாரண வெண்மை நிறமன்று. பல யுகங்களாக பல்குனி நதிக் கரையில் கழுதைகள் இயற்றிய விரத பலனே சுக்ர பகவானின் அருள் சக்தி கொண்ட வெண்மை நிறமாக கழுதையின் மூக்கை அலங்கரிக்கின்றது.

தென்காசி

மிருகங்களின் ராஜாவான சிங்கம் மிகுந்த உடல் வலிமை உடையது என்பதை நாம் அறிவோம். அதற்குக் காரணம் அதன் விரத சக்தியே. சிங்கங்கள் அஷ்டமி, ஏகாதசி, சிவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை நாட்களில் உண்ணா நோன்பிருந்து இறைவனை பிரார்த்தனை செய்யும். சிங்கங்கள் மேற்கொள்ளும் விரதங்களை நாம் அறிந்து கொள்வதால் என்ன பலன் என்று நீங்கள் எண்ணலாம். உண்மையில் விரதங்களுக்குப் பின்னணியில் உள்ள மகத்துவங்கள் ஏராளம். சிங்கம் விரதம் இருக்கும் நாட்களில் நாமும் விரதம் இருந்து இறைவனை வேண்டினால் இப்பிறவியிலோ அல்லது எப்பிறவியிலோ சிங்கம் போல ராஜாவாகவோ அல்லது ராஜ யோகங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும் என்பது இதன் உட்கருத்து. இது போன்ற அற்புத உண்மைகள் வராக மிஹிரர் இயற்றிய பிருஹத் சம்ஹிதையில் மறைந்துள்ளன. அதுபோல அற்புத விரதங்களை ஆற்றிய கழுதைகளைச் சித்தர்கள் வெள்ளி மூக்கு சிங்கம் என்றே வர்ணிக்கிறார்கள்.

மூக்கு வெள்ளையாக இருக்கும் நாய்கள், கழுதைகள், கருடன்களின் தரிசனம் சுப சகுனங்களாகும். வெள்ளை என்று நாம் பொதுவாக கூறினாலும் வெண்மை நிறத்தில் ஆயிரமாயிரம் அற்புதங்கள் உண்டு. பாலின் நிறம் வெண்மைதான். ஆனால், அதில் மஞ்சள் நிறத்தின் கலப்பு உள்ளது. கொக்கு வெண்மைதான் ஆனால் அதில் வான நீலத்தின் பிரதிபலிப்பு உள்ளது. தும்பைப் பூ வெண்மைதான். ஆனால், அதில் அந்தந்த தினத்தில் ஆட்சி செலுத்தும் கிரகங்களின் நிறங்களின் பிரதிபலிப்பு உண்டே. அப்படியானால் எதுதான் உண்மையில் வெண்மை. சங்கு ஒன்றே உண்மையான வெண்மை என்பதே சித்தர்களின் பதில். அதனால்தான் பெரியோர்கள் சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்று புகழ்ந்து கூறியுள்ளனர்.

வெண்மை தூய்மை என்பதை நாம் அறிவோம். இந்திரனின் வெண்ணிற ஐராவத தரிசனம் மனதைத் தூய்மைப்படுத்தும் இயல்புடையது. ஆனால், சாதாரண மனிதர்கள் ஐராவத தரிசனம் பெறுதல் என்பது நடக்கக் கூடிய காரியமா ? ஆனால், அதற்கும் வழி செய்துள்ளான் இறைவன். திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தை இரண்டு ஐராவத வெள்ளை யானைகளுக்கு இடையே இருப்பதாக கற்பனை செய்து கொண்டு தரிசனம் செய்தால் கார்த்திகை தீப தரிசனம் புனிதம் பெறுவதோடு ஐராவதத்தை தரிசனம் செய்த பலனையும் இந்திர மூர்த்தி அருள்கின்றார்.

ஆடிய பாதமும் அபய பாதமும்

அப்படியானால் இரு வெள்ளை யானைகளுக்கு நடுவே நமக்குக் கிடைக்கும் தரிசனத்தின் பலன் என்ன ? அதைச் சொல்லவும் இயலுமோ ? இறை மூர்த்திகள் தங்கள் கைகளை உயர்த்தி ஆசி வழங்குவதைப் பார்த்திருப்பீர்கள். இது அபய ஹஸ்த தரிசனம் எனப்படும். அதைப் போல அபய பாத தரிசனமும் உண்டு. எம்பெருமான் நடராஜ மூர்த்தியின் ஆடிய பாத தரிசன மகிமையைப் பற்றி நாம் எவ்வளவோ கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், பெருமானின் அபய பாத தரிசனத்தை யாரேனும் கண்டதுண்டா ? நிச்சயமாக உண்டு.

அத்தகைய அபய பாத தரிசனம் மட்டும் அல்லாது அந்த பாத தீண்டுதலாகிய தீட்சையையும் திருநல்லூரில் பெற்ற உத்தமரே திருநாவுக்கரசு நாயனார் ஆவார். இத்தகைய அபய பாத தரிசனத்தை அடக்கிய பாத தரிசனம் என்று சித்தர்கள் அழைப்பர். அதாவது ஆணவத்தை அடக்கிய பாதமே அபய பாதமாகும். இத்தகைய அபய பாத தரிசனத்தை அளிப்பதே இரு யானைகளுக்கு இடையே நாம் காணும் திருஅண்ணாமலை ஜோதியாகும். திருஅண்ணாமலை கார்ததிகை தீப ஜோதி தரிசனம் செய்யும்போது அது இருண்ட பரவெளி மத்தியில் இரண்டு வெள்ளை யானைகளுக்கு இடையே தோன்றுவதாக பாவித்து தரிசனம் செய்வது ஜோதி தரிசன முறைகளில் ஒன்றாகும். பொதுவாக வருட எண்கள் 6 பிரபாவம் கொள்ளும்போது இத்தகைய ஜோதி தரிசனங்கள் விசேஷமான பலன்களை நல்கும். உதாரணமாக 2006, 2015, 2024 போன்ற வருடங்களில் இவ்வாறு தரிசனம் பெறுவது சிறப்பு.

சுக்ர தம்பதிகள்
பூவாளூர் திருத்தலம்

வெள்ளை யானைக்கும் சுக்ர எண் 6க்கும் என்ன தொடர்பு ? இவற்றுக்கு ஆன்மீக காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் யானையின் துதிக்கை 6 வடிவில் இருப்பது மனிதர்களால் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு காரணமாகும். இத்தகைய ஜோதியில் மிளிரும் சுக்ர சக்தியின் ஒரு அம்சமே கழுதையின் மூக்கில் இடம் பெற்றுள்ளது என்றால் கழுதையின் தெய்வீக மகத்துவத்தை அளவிட்டுக் கூற முடியுமா ?

மேலும் இத்தகைய வெண்மை நிறம் மூக்கில் அமையும்போது அது கால பைரவ தத்துவமான பகல் நேரத்தைக் குறிக்கிறது. அதை வைத்தே வெள்ளை மூக்கு கொண்ட கறுப்பு நாய்க்கு இடும் பொறை, பிஸ்கட் தானம் கால பைரவரின் அனுகிரகத்தைப் பெற்றுத் தருவதாக அமைகிறது.

கழுதையின் மூக்கில் உள்ள வெண்மை நிறம் தெய்வீகமானது என்றால் கழுதைகள் அந்த நிறத்தைப் பெற்ற வரலாறும் சுவையாகத்தானே இருக்கும் ? அதைத் தெரிந்து கொள்வோமா ?

கழுதையின் ஆரம்ப சிருஷ்டி வெண்மை நிறம் அற்றே இருந்தது. ஒரு முறை கழுதைகள் ஒன்று கூடி தங்கள் குலகுருவான ருத்ர பல்குனி சித்தரை பல்குனி ஆற்றங் கரையில் தரிசனம் செய்து பணிந்து தங்கள் குறையைக் கூறின. மனிதர்கள் எவருமே தங்களை மதிக்காதது மட்டும் அல்லாது எல்லா பயனில்லாத விஷங்களிலும் தம்மையே உதாரணமாக சுட்டிக் காட்டுவதை குறித்து வருத்தம் தெரிவித்தன. பல்குனி சித்தர் கழுதைகளின் நியாயமான குறையைக் கேட்டு அவைகளுக்கு ஆறுதல் வார்த்தைகள் அளித்தார். இறைவனருளால் விரைவில் கழுதைகள் குலம் நலமடைய தன்னாலான சேவையை நிறைவேற்றுவதாகவும் வாக்களித்தார்.

குறை ஒன்றுமில்லை கோவிந்தா

அதன்படி குறைகள் யாவும் நிவர்த்தி செய்யும் திருஅண்ணாமலைக்கு எழுந்தருளி இறைவனைத் தொழுது கழுதைகளின் துயர் குறித்து நிவாரணம் வேண்டி கிரிவலம் ஆற்றத் தொடங்கினார். அப்போது சுக்ர பகவான் பல்குனி சித்தருக்கு தரிசனம் அளித்து, "சித்தர் பெருமானே, கழுதைக்காக தாங்கள் இயற்றும் கிரிவலம் குறித்து மிகவும் மகிழ்ச்சி. கழுதைகளின் மூக்கில் அமர்ந்து யாவர்க்கும் அனுகிரக சக்தியை வழங்கும்படி இறைவன் அடியேனுக்கு அருளாணை இட்டுள்ளார். ஆனால், அந்த அனுகிரக சக்தியை வர்ஷிக்கும் புண்ணிய சக்தியை சேகரிக்கும் திறன் அடியேனிடம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியவில்லை," என்று தன்னுடைய இயலாமையைத் தெரிவித்தார்.

பல்குனி சித்தரும், "சுக்ர பகவானே, கழுதைகளுக்கு அனுகிரகம் செய்ய தங்களுக்கு எத்ததைய புண்ணிய சக்தி தேவைப்படுகிறது என்று தெரிவித்தால் அடியேன் அதற்கான முயற்சியை இறையருளால் மேற்கொள்கிறேன்," என்றார்.

சுக்ர பகவான், "சுவாமி ! இறைவன் அடியேனுக்கு அளித்த ஆணை இதுவே.

முப்பூவிற்கு அப்பாலாய்
அப்பாலுக்கு மெய்ப்பாலாய்
மெய்ப்பாலுக்கு கைப்பாலாய்
பொலிவதே அமுது

என காகபுஜண்ட நாடி சொற்றொடரை சுக்ர பகவான் அறிவித்தார். பல்குனி சித்தர் சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்து பின்னர், "சுக்ர பகவானே, அடியேனுக்கு கிடைத்த விளக்கம் இதுதான். சிவபெருமானின் தூய நெற்றிக் கண்ணின் ஒளியிலிருந்து தோன்றிய முருகப் பெருமான் முப்பூ இரகசியத்தில் அனுகிரகம் அளிக்கும் இடம் வயலூர் ஆகும். அத்தல இறைவனை ஆராதித்து பின்னர் முப்பூ இரகசியத்தின் சூக்கும சுடராக விளங்கும் திருவாலகீசரைத் தரிசனம் செய்து அதன் பின்னர் திருமலை ஈசனை தாரணையால் வழிபட்டு அப்போது கிட்டும் பிராண ஜோதியால் தென்காசி ஈசனை அபிஷேகிக்கக் கிடைப்பதே அமுது."

இதைக் கேட்ட சுக்ர பகவான் அயர்ந்து நின்றார். "தாங்கள் கூறும் இரகசியங்கள் எல்லாம் மிகவும் அற்புதமாக உள்ளன. ஆனால், அடியேனால் அதை நிறைவேற்ற இயலுமா என்று ஐயம் ஏற்படுகிறது," என்று உள்ளம் திறந்து கூறினார். பல்குனி சித்தர், "பகவானே ! கவலை வேண்டாம். கழுதைகள் அடியேனை குலகுருவாக ஏற்றுக் கொண்டுதால் கழுதைகளுக்காக தவம் இயற்ற வேண்டியது அடியேனுடைய தலையாய கடமை அல்லவா ? எனவே தாங்கள் கூறியபடி அமுதத்தினை பெற்று தங்களுக்கு அளித்த பின் அதை எம்பெருமானின் அருளாணையின்படி அதை கழுதைகளின் மூக்கில் அமர்த்தும் இறைப் பணியை தாங்கள் மேற்கொள்ளுங்கள்," என்று கூறி சுக்ர பகவானிடம் விடை பெற்றுக் கொண்டார்.

சுக்ர பகவான் பல்குனி சித்தருக்கு காட்சி அளித்த இடம் தற்போது திருஅண்ணாலை கிரிவலப் பாதையில் ரமணாசிரமத்தை அடுத்து ஆறுமுக சுவாமி கோயிலின் எதிர்ப் பகுதி ஆகும். நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் வருந்துவோரும், நியாயமான முறையில் இல்லற சுகம் விரும்புவோரும், குழந்தை பாக்கியம் அற்றோரும் தரிசனம் செய்ய வேண்டிய அற்புத கிரிவல தரிசனப் பகுதி இதுவே.

முப்பூ இரகசியம்

திருச்சி அருகே வயலூர் திருத்தலத்தில் அருளும் முருகப் பெருமான் முப்பூ இரகசியத்தில் அருள் பாலிப்பவர். முப்பூ இரகசியம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது எனினும் நிலங்கள் வைத்திருப்போர் சரவணபவ மந்திரம் ஜபித்து நெல் பயிரிட்டு அதில் மூன்று ஒரு பகுதியை வயலூர் முருகப் பெருமானுக்கும், ஒரு பகுதியை அன்னதானத்திற்கும், எஞ்சிய மூன்றில் ஒரு பங்கை தனக்குமாக வைத்துக் கொண்டு வாழ்பவர்கள் முப்பூ இரகசியத்தை உணர்ந்தவர்கள் என்பது சித்தர்கள் அருளுரை. நிலம், வயல் இல்லாதவர்கள் தங்கள் வருமானத்தை மூன்று பங்காக பிரித்துக் கொண்டு மேற்கூறிய முறையில் வாழ்க்கை நடத்தினால் அவர்களும் முப்பூ இரகசியத்தின்படி முருகப் பெருமானை வழிபட்டவர்கள் ஆவார்கள்.

ஸ்ரீமுருகப் பெருமான் வயலூர்

முப்பூ இரகசியத்தை உணர்ந்த பல்குனி சித்தர் ஒரு சாதாரண மனிதனைப் போல வயலூரில் ஒரு ஏக்கர் நிலத்தில் சீரக சம்பா நெல் பயிரிட்டு முறையாக சரவணபவ மந்திரம் பாராயணம் செய்து பங்குனி உத்திரம் திருநாளில் காவேரியிலிருந்து மண் குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து அன்னதான கைங்கர்யத்தை சிறப்பாக நிறைவேற்றினார். இவ்வாறு மூன்று பங்குனி உத்திர திருவிழாக்களை நிறைவேற்றிய பின்னர் முருகப் பெருமானின் தரிசனம் பெற்று அவர் ஆணையின்படி திருக்குற்றாலம் அருகிலுள்ள இலஞ்சி முருகத் தலத்தை அடைந்தார். ஆம், இதுவே வாலகீச பிரான் உறையும் இடம்.

இலஞ்சி முருகன் சிறப்பு

திருக்குற்றாலத்தில் பல்குனிபால் பாறை என்னும் மிகவும் இரகசியமான சஞ்சீவி பாறை பகுதி உண்டு. தேவர்களுக்கும் எட்டாத புண்ணிய பகுதி இது, பிரளய காலத்திலும் எவ்வித மாறுபாடும் அடையாத அற்புத தெய்வீகப் பாறை இது. மனிதர்கள் அர்ச்சனை, அபிஷேகம், கிரிவலம் என்று இறைவனை வணங்கும் வழி முறைகள் உள்ளது போல பிரம்ம மூர்த்திகளுக்கும் மனித அறிவுக்கு எட்டாத இறைப் பணிகள் உண்டு.

சித்தர்களுக்கும் அத்தகைய அற்புதமான இறைப் பணிகள் உண்டு. ஒரு முறை குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தான் ஒரு நிமிடத்தில் சுமார் 72 லட்சும் இறைப் பணிகள் இயற்றுவதாக குறிப்பிட்டார்கள். மனித மூளைக்கு எட்டாத இந்த எண்ணிக்கையைப் பற்றி சுவாமிகளிடம் கேட்டபோது, "எண்ணிக்கை பிரமாதம் அல்ல. நாங்கள் இயற்றும் பணியை உங்களுக்கு விவரிக்க முடியாது என்பதே எங்களுடைய சிரமம். உதாரணமாக, சற்று முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி. இது உங்களுக்கு ஓரளவிற்குப் புரியும் என்பதால் இதைப் பற்றி உங்களுக்குக் கூறுகிறேன். அடியேன் உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் அதே வேளையில் சென்னை கபாலி கோயில் கோபுரம் வழியாக ஒரு பூதம் வெளி லோகத்திலிருந்து வந்து இறங்கியதைப் பார்த்தேன்.

ஸ்ரீஇலஞ்சி முருகன்

பிரபஞ்சத்தில் எந்த லோகத்திலிருந்து பூதங்கள் வந்தாலும் அவை கபாலி கோயில் கோபுரக் கலசங்கள் வழியாகத்தான் இறங்க வேண்டும் என்பது இறை நியதி. அந்நியதியைப் பின்பற்றி பூலோகத்தை அடைந்து விட்டது பூதம். ஆனால், இறங்கிய பின் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு அந்த பூதத்தால் செல்ல முடியவில்லை. காரணம் அது தவறான விலாசத்தில் வந்து இறங்கி விட்டது. அது சற்று நேரம் கழித்தே அந்த பூதத்திற்கு விளங்கியது. இதற்கிடையில் அது பல திவ்ய தலங்களைப் பார்த்து விட்டதால் பூலோகத்திலிருந்து வெளியேற மனமில்லாமல் இங்கேயே தங்கி விட முடிவு கட்டி விட்டது."

"அடியேன் இதை அறிந்ததும் சற்றும் நேரம் தாழ்த்தாமல் அந்த பூதத்தை பூலோகத்திலிருந்து திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. எந்த ஜீவ ராசியாக இருந்தாலும் தேவை இல்லாத இடத்தில் தேவை இல்லாத நேரத்தில் பிரவேசிக்கக் கூடாது. அத்தகைய தவறான காரியம் நடந்தால் அதைத் தடுக்க வேண்டியது சித்தர்களின் கடமையாகும். ஆனால், உங்களிடம் பேசுவது போல் ராஜா, இந்த இடத்தை போய் விடு, ராஜா. நைனா, இந்த இடம் நீ வரக் கூடாத இடம். தப்பா வந்துட்ட, நைனா, என்று இதமாக சொன்னால் அந்த பூதம் கேட்காது என்று அடியேனுக்குத் தெரியும். அதனால் பூலோகக் கணக்கில் 1000 டன் எடையுள்ள அந்த பூதத்தை குண்டுக் கட்டாக அப்படியே அலாக்காக தூக்கி கோபுர கலசத்தில் வைத்து விட்டேன."

"இவ்வாறு பூலோகத்திற்கு வந்த பூதங்களை கோபுர கலசத்தில் வைத்து விட்டால் அவைகள் மீண்டும் பூலோகத்திற்குள் பிரவேசிக்கக் கூடாது என்பது தேவ சட்டம். எனவே அடுத்த ஒரு நிமிடத்திற்குள் அந்த பூதம் அங்கிருந்து வெளியேறி விடும்."

பிரமிப்பான இந்த தேவ காரியத்தைப் போல பிரம்மாக்கள் செய்ய வேண்டிய காரியங்களும் உண்டு. அவர்களுடைய பல காரியங்களுள் ஒன்று குற்றால அருவி தீர்த்த நீர் பாயும் பல்குனி பால் பாறையை தினமும் தரிசனம் செய்து தங்கள் சிருஷ்டிக் கழியால் ஒரு தட்டு தட்ட வேண்டும். இவ்வாறு தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த பல்குனிப் பாறையைத் தட்ட வேண்டும். இவ்வாறு ஒரு பிரம்மாவின் ஆயுள் முடிந்த பின் அடுத்து வரும் பிரம்ம இந்த பால் பாறை திருப்பணியைத் தொடர்வார்.

ஓங்காரம் பல விதம்

இவ்வாறு பல கோடி ஆண்டுகள் புனிதமான அருவிப் பெருக்கில் விளையும் ஓங்கார நாதத்தால் அந்தப் பால் பாறை மேலும் புனிதம் பெறுகிறது. குற்றால அருவியில் விளையும் ஓங்காரத்திற்கு கல்யாண ஓங்கார நாதம் என்று பெயர். இவ்வாறு ஒவ்வொரு இடத்தில் விளையும் ஓங்கார நாதமும் ஒவ்வொரு நாம இரகசியத்தைக் கொண்டிருக்கும். உதாரணமாக, பழநி மலையில் ஓங்கார நாதம் சுக்ர நாதம் எனப்படும். திருக்கழுக்குன்றத்தில் முழங்கும் ஓங்கார நாதம் வேத நாதமாகும். திருச்சி மலைக்கோட்டையில் பிரகாசிப்பது பிரகிருணி ஓங்கார நாதம். திருவிடைமருதூர் ஓங்கார பிரகாரத்தில் விளைவது கஜானன நாதம். இராமேஸ்வர கடல் அலைகளில் எழுவது ரகுநாத ஓங்காரம். திருச்செந்தூர் முருகத் தலத்தில் விளைவது ஸ்கந்த நாதம். ஓவியங்களிலும் ஓங்கார நாதம் விளைவது உண்டு. குற்றால சித்திர சபையிலும் கும்பகோணம் ராமசுவாமி கோயிலிலும் ஒளிர்வது வர்ண ஓங்கார நாதமாகும்.
திருவையாறு சிவத்தலத்தில் மூன்றாம் பிரகாரத்தில் ஒரு முறை "ஐயாறா" என்று குரல் கொடுத்தால்

சப்த பிரணவ தலம் திருவையாறு

அது ஏழு முறை "ஐயாறா, ஐயாறா" என்று எதிரொலிக்கும். இந்த எதிரொலியின் தன்மையை அறிய வேண்டுமானால் பத்மாசனத்தில் மூன்று மணி நேரம் அமர்ந்து ஒரு முகமாய் தியானத்தில் ஈடுபட்டால் மூன்று முதல் 30 ஆண்டு காலத்தில் ஆத்ம ஒளி கண்ணில் தெரியும். அந்த ஆத்ம ஒளியைக் கொண்டே எதிரொலியின் தன்மையை அறிந்து கொள்ள முடியும். இந்த எதிரொலியும் ஒரு ஓங்காரமே. இதற்கு சப்த ஓங்காரம் என்று பெயர்.
ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியை தசரதர், சீதா தேவி, சபரி தேவி, ஆஞ்சநேய மகா பிரபு என் எண்ணற்றோர் எண்ணற்ற விதங்களில், அற்புத வடிவங்களில் எல்லாம் தரிசனம் செய்துள்ளனர். இவை அனைத்தும் அற்புதம்தான் என்றாலும், இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியை சித்தர் ஒருவரின் ஆக்ஞா சக்கரத்தில் தரிசனம் செய்வது என்றால் அது எத்தகைய பேறு. அந்த அற்புத இறை அனுகிரகத்தைப் பெற்ற அவதார மூர்த்தி யாரோ ? அவர் வேறு யாராக இருக்க முடியும். அண்ட சராசரத்தையும் ஆட்சி செய்து எவரும் அறியாமல் இலை மறை காயாக நம்மிடையே பவனி வந்த குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகளே ஸ்ரீஇடியாப்ப சித்தரின் நெற்றியில் ஆக்ஞா சக்கர மையத்தில் ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியை ஒளி வடிவில் தரிசிக்கும் பெருமை வாய்ந்த பேறு பெற்றவர்,
இத்தகைய ஓங்கார ரகசியங்களை நீங்கள் கம்ப்யூட்டரில் ஒரு க்ளிக்கில் அறிந்து கொள்கிறீர்கள். ஆனால், ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் இத்தகைய ஓங்கார இரகசியங்களை அறிவதற்காக பன்னிரெண்டு மைல்கள் அனல் பறக்கும் ராஜஸ்தான் பாலைவனத்தில் அலைய வேண்டியதாயிற்று. அங்குள்ள ஸ்ரீஓங்காரேஸ்வரர் திருத்தலமே இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஓங்கார நாதத்திற்கெல்லாம் தலைமைப் பீடமாக அமைந்துள்ளது. கோவணாண்டிப் பெரியவர் சிறுவன் வெங்கடராமனை மண்டை பிளக்கும் உச்சி வெயில்நேரத்தில்தான் ஸ்ரீஓங்காரேஸ்வரர் தரிசனத்திற்கு அழைத்துச் சென்றார். சலவைக் கற்கள் நிறைந்த பகுதியாக அத்திருத்தலம் உள்ளதால் சிறுவன் வெங்கடராமன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அக்கற்கள் சிறுவனைப் பதம் பார்க்க ஒரு பூரி அளவிற்கு அவன் காலில் கொப்புளங்கள் எழுந்தன.

வழக்கம் போல் பெரியவர், "நைனா ஒரு அர்ஜண்ட் ஜோளி இருக்கு, நான் அதைப் பார்த்து விட்டு வருகிறேன். நீ அங்க பக்கத்துல தெரியது பாரு. அந்தக் கோயிலாண்ட போயி ஒக்காந்து இரு. வந்துடறேன்," என்று சொல்லி சிறுவன் என்ன நடந்தது என்று ஊகிப்பதற்குள் மின்னலாய் சென்று மறைந்து விட்டார். இவ்வாறு ஒவ்வொரு அடிக்கும் ஒரு கொப்புளம் எழ பிரளயமே வந்தது போன்ற வேதனையை சிறுவன் அடைந்து கோயிலை அடைந்தான். ஒரு அடிக்கு ஒரு கொப்புளம் என்றால் 12 மைல் தூரத்தில் உள்ள கோயிலை அடைவதற்குள் சிறுவன் என்ன வேதனையை அடைந்திருப்பான் என்று சற்றே யோசித்துப் பாருங்கள்.

ஆனால், சிறுவன் கோயிலினுள் காலெடுத்து வைத்ததுதான் தாமதம்.

",,, இம்மா நேரம் எங்கேடா போய்ட்டே, உனக்காக ஒக்காந்து ஒக்காந்து இடுப்பே ஒடிஞ்சி போச்சி.... " இது பெரியவரின் குரல்.

அங்கே பெரியவர் ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் ஜில்லென்ற ஐஸ் மோருடன் காத்திருந்தார். அவனுக்கு முன்னால் அங்கு எப்படி வந்தார், எதில் வந்தார் என்பதை எல்லாம் யோசிக்கும் நிலையில் அவன் இல்லை. சிறுவன் கண்களில் தெரிந்தது எல்லாம் வாத்யார் அமர்ந்திருந்த குளிர் நிழல், கையில் குளிர்ந்த பானம். அவ்வளவுதான் சிறுவன் 12 கால் பாய்ச்சலில் பெரியவர் அருகில் சென்று மோரை ஜில் பார்த்தான். வாழ்நாளில் அப்படி ஒரு இனிப்பான லஸ்ஸியை சிறுவன் சுவைத்ததே கிடையாது. ஒரு வழியாக தாகம் தீர்ந்ததும் ஒரு பொய்க் கோபத்தை வரவழைத்துக் கொண்டு, " என்ன வாத்யாரே இப்படி கொப்புளமா படையெடுக்கிற வெயிலிலே என்னை அநாதை மாதிரி விட்டுட்டு நீ வந்திட்டியே. இங்க பாரு எம்மா பெரிய கொப்புளம் ", என்று கால் பாதங்களை பெரியவரிடம் காட்ட, பெரியவர் ஒன்றும் புரியாதவர் போல கண்களை விழித்து விழித்துப் பார்த்து உதட்டைப் பிதுக்கி, "என்ன ? ..... " என்பது போல் சிறுவனிடம் சாடையில் கேட்டார்.

சிறுவன், "இது கூட இந்தப் பெரியவருக்குத் தெரியவில்லையா?" என்பது போல தன் கொப்புளத்தைக் காட்ட முனைந்தான். ஆனால், அங்கு ஏதாவது இருந்தால்தானே. சுத்தமான பளிங்குத் தரை போல் கால் பளிச்சென்று மென்மையாக இருந்தது. ஒரு பக்கம் ஆச்சரியம் கரை புரண்டெழுந்தாலும் மறு பக்கம் தாரை தாரையாக கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. இவ்வளவு கடுமையான வெயிலில் வந்ததுதான் வந்தோம். அதைப் பெரியவரிடம் காட்டக் கூட முடியாமல் இறைவன் இப்படி சோதிக்கிறாரே என்ற எண்ணம்தான் அவன் அழுகைக்கு காரணம்.

"இறைவன் யாரையும் சோதிப்பது கிடையாது, ராஜா," என்ற பதிலுடன்தான் மேற்கூறிய ஓங்கார ரகசியங்களை பெரியவர் சிறுவனுக்கு விளக்கினார்.

சப்தஒலி பிரகாரம், திருவையாறு

ஒரு பிரம்மாவின் ஆயுள் காலம் எவ்வளவு தெரியுமா ? பூலோக கணக்கில் சுமார் 365 லட்சம் கோடி ஆண்டுகளுக்கு மேல் என்பது ஒரு பிரம்மாவின் ஆயுள். இது எந்த மனித மூளையாலும் ஏற்க முடியாத கணக்கு என்றாலும் அதுவே உண்மை. இவ்வாறு 100 பிரம்மாக்கள் அந்த பால் பாறையை தங்கள் ஆயுள் காலத்தில தட்டி பூஜித்து வந்த பின் 100வது பிரம்மா அந்த பல்குனி பால் பாறையைத் தட்டும்போது அதிலிருந்து ஒரு அற்புதமான பூ வெளியாகும். கோடி சூரிய பிரகாசம் கொண்ட அந்த பூவை திருவாலகீச வெண் மணல் ஜோதி என்று சித்தர்கள் அழைக்கிறார்கள்.

இத்தகைய அற்புதமான வெண்மணல் வாலகீச மூர்த்தியே இலஞ்சி முருகப் பெருமான் ஆவார். இத்தகைய ஒரு அற்புத திவ்ய சரிதத்தை நாம் அறிய திருவுள்ளம் கொண்ட ஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சேவை செய்தாலும் நன்றி செலுத்தியது ஆகுமா ?

சாதாரண மனிதனின் ஆயுள் அதிக பட்சம் 120 ஆண்டுகள். ஆனால், நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அளிக்கும் தெய்வீக விளக்கங்களோ லட்சம், கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த புராண இதிகாச வைபவங்களாக உள்ளன. இது எப்படி மனித அறிவால் ஏற்க முடியும் என்று ஒரு முறை அவரை ஒரு அடியார் கேட்டார். அதற்கு சுவாமிகள் மிகவும் பணிவுடன், "அடியேனுக்கு எதுவும் தெரியாது, சார். நீங்கள் அடியேனிடம் ஒரு கேள்வி கேட்டால் அதை அப்படியே இமெயில் செய்வது போல் மெத்த மேலே (அருள் உலகத்திற்கு) அனுப்பி விடுவேன். அந்த மெயிலுக்கு எப்போது பதில் வரும், யார் பதில் கொண்டு வருவார் என்றெல்லாம் அடியேனுக்குத் தெரியாது. பெரும்பாலும் தேவதைகள் பதில் கொண்டு வரும். ஒரு முறை அடியேன் அனுப்பிய மெயிலுக்கு தத்தாத்ரேயரே பதில் கொண்டு வந்தார் !" என்றார்.

கமுகு பூரண அற்புதம்

கற்பனைக்கு எட்டாத புனித மூர்த்தி இலஞ்சி முருகப் பெருமானை வழிபடும் முறைகள் ஆயிரமாயிரம் இருந்தாலும் சித்தர்கள் எளிமையாக அளிப்பது ஐந்தருவியில் நீராடி முருகப் பெருமானின் நண் பகல் தரிசனமே. சித்தர்களின் பாரம்பரிய முறையை ஒட்டி பல்குனி சித்தரும் ஒரு செவ்வாய்க் கிழமை அன்று ஐந்தருவியில் நீராடி முருகப் பெருமான வணங்கினார். தன்னலம் கருதாத இச்சித்தர் பிரான் வருகையை அறிந்த திருக்குற்றால வன தேவதைகள் ஐந்தருவிக்கு மேல் 500 ஏக்கர் நிலப்பரப்பில் குற்றால தீர்த்தத்தை நிரப்பி பூஜித்து காலை ஒன்பது முதல் மதியம் ஒரு மணி வரை ஆராதனைகள் செய்து அதை சித்தர் பிரானின் திருமேனி மேல் அபிஷேகித்தார்கள்.

ஐந்தருவி குற்றாலம்

இத்தகைய ஒரு அற்புத அபிஷேகத்தை நமது குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கு 1999 ஆண்டு கார்த்திகை மாதம் திருக்குற்றால வன தேவதைகள் இயற்றி மகிழ்ந்தன என்பது இதுவரை நீங்கள் அறியாத இரகசியம். அடுத்து வரும் ஆண்டு 2000 பல திருப்பங்களை இவ்வுலகம் சந்திக்கும் என்பதால் ஸ்ரீசுவாமிகள் இலஞ்சி முருகனை வணங்கி உலக மக்களைச் சொல்லொணா வேதனையிலிருந்து காக்க திருவுள்ளம் கொண்டு அங்கு சென்றதால் இறைவன் அளித்த வரவேற்பு அது என்று சுவாமிகள் தன்னடக்கத்துடன் இந்த அபிஷேகம் இரகசியம் பற்றி பின்னாளில் தெரிவித்தார்கள். கமுகு பூரணம் என்னும் திருப் பெயர் கொண்ட இந்த திவ்ய அபிஷேகம் சித்தர்களுக்கும் ராமர், கிருஷ்ணர் போன்ற இறை அவதார மூர்த்திகளுக்கு மட்டுமே உரித்தானது.

வன தேவதைகள் மட்டுமல்லாது இறை அடியார்களும் இத்தகைய கமுகு பூர்ண சக்திகளைப் பயன்படுத்தி பயன் பெறலாம். எப்படி ? வளர்பிறை செவ்வாய்க் கிழமை அன்று ஒரு மண் கலயத்தில் அல்லது தாமிர, பித்தளை பாத்திரத்தில் கங்கை, காவிரி போன்ற புனித நீர்த் தீர்த்தங்களை நிரப்பிக் கொண்டு காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை ருத்ரம், சமகம், தேவார திருவாசகப் பாடல்கள், ஷண்முக கவசம் போன்ற கவசப் பாடல்களை தீர்த்தக் குடத்தின் முன் அமர்ந்து பாடவும். பின்னர் அந்தக் கலச தீர்த்தத்தை திருக்கோயிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்கு அளிப்பதால் அந்த தீர்த்தத்தில் கமுகு பூர்ண சக்திகள் நிரவி அடியார்களின் நியாயமான ஆசைகள் பூரணமாகும், பூர்த்தியாகும்.

வளர்பிறை செவ்வாய்க் கிழமை காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வரிசையாக புத, சந்திர, சனி, குரு பகவானின் ஹோரை நேரங்கள் அமையும். இத்தகைய புதன் குரு சங்கம ஹோரைகள் அற்புத தீர்த்த சக்திகளைக் கொண்டிருக்கும். இச்சக்திகள் பூமிக்கு அதிபதியான செவ்வாய் பகவானுக்கு உரித்தான செவ்வாய் கிழமையில் அமையும்போது தீர்த்த வாரி நில வள சக்திகள் மேம்படும், வாஸ்து தோஷங்கள் நீங்கும். மேற்கூறிய நான்கு ஹோரை அதிபதிகளும் செவ்வாய் பகவானுடன் நட்பு பாவம் கொண்டிருப்பதும் இச்சிறப்பிற்கு காரணம், சொந்த வீடுகள் இல்லாதோரும், வாடகை வீடுகளில் குடியிருப்போரும் மேற்கூறிய வழிபாட்டால் பயன் பெறுவர். புத குரு சங்கம முத்திரையாகத் திகழும் காயத்ரீ பந்து தியான முத்திரையால் (வீடியோ பார்க்கவும்) இந்த வழிபாடு பன்மடங்கு பலன்களை விருத்தி செய்யும் என்பதும் உண்மையே.

மேலும் செவ்வாய், புத கிரகங்கள் இணையும் யோக அமைப்பு அற்புதமான நோய் நிவர்த்தி சக்திகளையும், ஆரோக்கியத்தையும் அளிக்கக் கூடியது. செவ்வாய் பகவானின் உஷ்ண சக்திகள் நோய் நிவர்த்தியையும் புத பகவானின் சுவாச சக்திகள் நீண்ட ஆயுளையும் நல்கும். நான்கு நிமிடங்களுக்கு ஒரு முறை சுவாசிப்பதால் ஆமைகள் 10000 ஆண்டுகள் வரை வாழக் கூடியவை. அது மட்டுமல்லாமல் ஆமைகள் பிறந்தவுடன் தலையை ஓட்டிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு இரண்டு வருடங்களும், நடப்பதற்கு ஐந்து வருடங்களும் எடுத்துக் கொள்ளும். இந்தப் பொறுமை தீர்க சுவாசத்துடன் சேர்ந்து அதன் ஆயுளை வளர்க்கிறது.

பொதுவாக மேஷ, கடகம், துலாம், மகரம் என்ற சர ராசிகளில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். செவ்வாய் பகவானின் சொந்த வீடான மேஷ ராசியில் மேஷ லக்னத்தில் புத ஹோரையில் தோன்றியதே ராமாயண ஜடாயு. ஜடாயு ராவணனுடன் சண்டையிட்டு மரணம் எய்தியவுடன் அதற்கு ஈமக் கிரியைகள் செய்து செவ்வாய் பகவானுக்குரிய வைத்தீஸ்வரன் கோயிலில் அதற்கு மேர்ட்சம் நல்கிய ராமசசந்திர மூர்த்தி மகர ராசியில் உச்ச பலம் பெற்ற செவ்வாய் பகவானின் சப்தம பார்வை பெற்று கடக ராசியில் கடக லக்னத்தில் தோன்றியவர். எனவேதான் வைத்தீஸ்வரன் கோயிலில் ஜடாயு குண்டத்திலிருந்து பெறப்படும் விபூதி பிரசாதம் எத்தகைய கொடிய நோய்களையும் நிவர்த்தி செய்யும் அற்புத ஆற்றல் உடையதாகத் திகழ்கிறது.

திருமலை திருத்தலம்

இலஞ்சி திரு வாலகீச பெருமானை வணங்கிய பல்குனி சித்தர் அடுத்து மெய்ப் பால் அறியும் வண்ணம் திருமலை சென்றடைந்தார். அதி அற்புத மூலிகைகள் சூழ்ந்த திருத்தலமே திருமலை திருத்தலமாகும். பிராண சக்திகள் பெருகியுள்ள தலம். கபால பைரவர் அருளும் தலம் ஆதலால் கபால நோய்கள் நிவாரணத்திற்கும், நரம்பு சம்பந்தமான நோய்கள் (neurological disorders) நிவாரணத்திற்கும் வழிபட வேண்டிய தலம்.

ஐம், ஹ்ரீம், க்லீம், நமசிவாய, ஹீம் என்னும் ஐந்து தாரணையால் ஈசனை வழிபட்டார் பல்குனி சித்தர். அப்போது வானிலிருந்து ஒரு ஜோதி எழுந்து தன்னுடைய உள்ளங்கையில் நீர்த்தாரை போல் வர்ஷிப்பதை உணர்ந்தார். அந்த நீர்த்தாரையை மிகவும் பக்திப் பெருக்குடன் கையில் ஏந்தி அங்கிருந்து நடந்தே சென்று தென்காசியை அடைந்தார். தென்காசி ஈசன் மனம் குளிர்ந்து பல்குனி சித்தருக்கு தரிசனம் அளிக்க சித்தர் பிரானும் ஈசனுக்கு தன் உள்ளங்கையில் ஏந்திய அற்புத தீர்த்தத்தால் அபிஷேகம் இயற்றினார். அற்புத அந்த அபிஷேகத் திவலைகளே கழுதைகளின் மூக்கில் சுக்ர பரல்களாய் அமைந்து அன்று முதல் அவை வெள்ளி மூக்கு சிங்கங்களாக புகழ் பெற்றன.

ஸ்ரீஇடும்பன் சன்னதி திருமலை

இலஞ்சி முருகப் பெருமான் உருவாகிய திருவாலகீச வெண் மணலின் பெருமையை உணர்ந்த பராக்ரம பாண்டியன் அந்த மணலின் ஒரு துகளை தென்காசி லிங்க மூர்த்தத்தில் சேர்த்து அற்புத திருப்பணி ஆற்றினான். பணிவுடன் கை கூப்பிய நிலையில் உள்ள பராக்ரம பாண்டியனின் திருஉருவச் சிலை இன்றும் கோயிலில் பக்தர்கள் தரிசிக்கும் வண்ணம். உள்ளது.

"சேர்ந்தறியாக் கையானை ... " என்று சிவபெருமானுடன் எப்போதும் சேர்ந்திருக்கும் முருகப் பெருமான், உமையவளை பெருமைப் படுத்தும் தலமே தென்காசி சிவத்தலம். இலஞ்சி முருகப் பெருமான் வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி முக்கண் ஈசனை இடைவிடாது வழிபடுவ்து இத்தல சிறப்பு. மேலும் பல்குனிப் பால் பாறையில் நெளிந்து வரும் தீர்த்தத்தில் ஐந்து விதமான சக்திகள் உருவாகின்றன. இந்த ஐந்து விதமான சக்திகளை முருகப் பெருமானை அன்றி வேறு எந்த தெய்வ மூர்த்தியாலும் கிரகிக்க முடியாது என்பதால் அதை இலஞ்சி முருகப் பெருமான் ஏற்று தென்காசி நாதருக்கு கோபுரம் வழியாக அளிக்கிறார்.

சிறுவனாக இருந்த வெங்டராம சுவாமிகள் கோவணாண்டிப் பெரியவரிடம், "எப்படி வாத்யாரே கோபுரம் வழியாக தீர்த்தத்தை இங்கிருந்து (இலஞ்சி) சாமிக்கு (தென்காசி) அனுப்ப முடியும் ?" என்று அப்பாவித்தனமாகக் கேட்டாராம். அதற்கு கோவணாண்டியோ, "அது ஒண்ணுமில்லடா நைனா, ஒங்கிட்ட நால பக்கெட் தண்ணி குடுத்து தென்காசி கோயில்ல ஊத்திருடான்னு சொன்னா கோயிலாண்ட போய் ஊத்திற மாட்டியா? அப்படித்தாண்டா, கண்ணு. நம்ம அகத்தியரை முருகன் கூப்பிட்டு நைனா, இந்த தீர்த்தத்தை (ஐந்து சக்திகளை) எங்க அப்பாகிட்ட (தென்காசி ஈசனிடம்) குடுத்துறு, அப்படீன்னா, அகத்தியரும் சரி சாமி, அப்படீன்னு சொல்லி அவரு சீடங்க கைல குடுத்து காரியத்தை சாதிச்சிட்டார், அகத்தியர் plumber ஆயிட்டாரா, அப்புறம் சீடனுங்க pipe ஆயிட்டானுங்க, அவ்வளவுதான்," என்றாராம். சிறுவனுக்கு அப்போது ஒன்றும் விளங்கவில்லையாம், உங்களுக்கு இப்போதாவது விளங்குகிறதா ?

சில வருடங்களுக்கு முன்னரே இலஞ்சி முருகன் ஆலயத்திற்கும் தென்காசிக்கும் இடையே கோபுரம் எழுந்தருளி உள்ளதுபோல் தோன்றினாலும் முருகப் பெருமானுடைய சூக்கும வழிபாடு என்றும் விளங்கும் தெய்வீக அற்புதம். தந்தை மகன் வேறுபாடு நீக்கி குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் அற்புத தலம்.

இவ்வாறு முப்பூ முருக ஜோதியும், திருவாகீச வெண் மணல் ஜோதியும், கமுக பூரண சக்தியும், திருமலை வட்டப் பாறை இரகசியங்களும், தென்காசி ஈசாம்ருதமும், பல்குனி சித்தரின் தவ சக்தியும், சுக்ர பகவானின் அருளாசியும் ஒருங்கிணைந்ததே கழுதை மூக்கில் அமைந்த சுக்ர வெண்மை என்றால் கழுதையின் தெய்வீகத் தன்மையை வாய்விட்டு இயம்ப இயலுமோ ?

முன்னால் குதிரை பின்னால் கழுதை

ஒரு விசித்திரமான பெருமையும் கழுதைக்கு உண்டு. பௌதிகத்தில் spin-half particles என்ற பொருள் கூறுகள் உண்டு. இவைகளை கணித சூத்திரங்கள் மூலமாக எளிதில் விளக்க முடியும் என்றாலும் நாம் இவ்வுலகில் காணும் பொருட்களை உதாரணம் காட்டி விளக்க முடியாது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. ஆனால், இதற்கு உதாரணமாக கழுதையைக் கூறலாம் என்பது ஆச்சரியமான விஞ்ஞான உண்மை. அது எப்படி ? Spin-half particles என்பவை தங்கள் முதல் சுற்றில் தங்கள் நிலையில் குறைந்து அடுத்த சுற்றில் தங்கள் பழைய நிலையை அடையும் பொருள் கூறுகள். அப்படிப் பார்த்தால் கழுதையின் ஒரு பிறவி முடிந்த பின் அது எடுக்கும் அடுத்த பிறவி குதிரை. ஆம், இது சிருஷ்டி இரகசியம்.

கழுதைக்கு அதி தேவதை சுக்கிர பகவான். கழுதையின் அடுத்த பிறவியான குதிரைக்கு அதிபதி சூரிய பகவான். எனவேதான் சூரியன், சுக்கிரன் என்ற வரிசையில் நவகிரக ஹோரை வழிபாடு அமைந்துள்ளது. ஜோதிட தத்துவத்தில் மூலமாக விளங்கும் சுக்கிர பகவானும் சூரிய பகவானும் கழுதைக்கும் குதிரைக்கும் மூலமாக இருப்பதில் வியப்பென்ன ? இதையே நம் முன்னோர்கள் ஹாஸ்யம் தொணிக்க, "முன்னால் போனால் கடிக்கிறது, பின்னால் போனால் உதைக்கிறது," என்று கூறுவதுண்டு.

இவ்வாறு குதிரைக்கு முந்தியதாக இருப்பதுடன் பஞ்ச பூத சக்திகளும் கை வரப் பெற்றதே கழுதையாகும். பஞ்ச பூத லிங்கங்களைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். பஞ்ச பூதங்களுக்கு அருள்புரியும் இறைத் தலங்களும் உண்டு. இவ்வாறு பஞ்ச பூத சக்திகளை உணர்ந்த ஜீவன்களைப் பற்றி நீங்கள் அறிவீர்களா ?

எறும்புகளின் சுழல் அறிவு

பஞ்ச பூதங்களில் பூமி அல்லது நிலம் தத்துவத்திற்கு திருவாருர் ஈசனும், ஏகம்ப ஈசனும் அனுகிரக மூர்ததிகளாக விளங்குவது நீங்கள் அறிந்ததே. நில தத்துவத்தை அறிந்தவையே எறும்புகளாகும். எறும்புப் புற்றுகளைப் பார்த்தால் அவற்றில் நிறைய மண் உருண்டைகள் காணப்படும். இவை சாதாரண மண் உருண்டைகள் அல்ல. மிகவும் ஒழுங்கான முறையில் அமைக்கப்பட்ட ராஜ்ய அமைப்பை உடைய எறும்பு ராஜ்யத்தின் நினைவகமே (data base memory) இந்த மண் உருண்டைகள் ஆகும்.

ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள்
திருவையாறு

ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வர மூர்த்தி
திருவையாறு

மனித கம்ப்யூட்டர் அறிவை ஒப்பிட்டால் எறும்புகள் சுமார் 600 மடங்கு கம்ப்யூட்டர் துறையில் முன்னேறி இருப்பதால் எறும்புகளுடைய கம்ப்யூட்டர் அறிவை மனிதன் எக்காலத்தும் பெற இயலாது. சித்தர்களுக்கு மட்டுமே எறும்புகளின் அறிவு இரகசியம் தெரியும். முக்குறி சங்கேத முறையில் சுழல் (spin) அடிப்படையில் அமைந்ததே எறும்புகளின் கம்ப்யூட்டர் துறை. தற்போதைய கம்ப்யூட்டர் துறை பயன்படுத்தும் switch அடிப்படையில் அல்லாமல் சுழல் முறையில் எறும்புகள் விஷயங்களைப் பதிப்பதால் மண் உருண்டைகள் எறும்புகளின் கம்ப்யூட்டரில் ஏன் பயனாகின்றன என்பதை நீங்கள் தற்போது உணர்ந்திருப்பீர்கள். எனவே மனிதர்கள் புற்று லிங்கங்கள் அமைந்த திருவாருர் போன்ற தலங்களிலும், எறும்புகளின் தலைமைப் பீடமான திருவெறும்பூர் திருத்தலத்திலும், பிருத்வி தத்துவம் மிளிரும் திரு ஏகாம்பரேஸ்வரர் திருத்தலத்திலும் வழிபட்டு வந்தால் ஓரளவேனும் எறும்பகளின் கம்ப்யூட்டர் அறிவைப் பற்றித் தெரிந்து கொள்ள இயலும்.

மேலும் இவ்விஷயத்தில் மனிதனுக்கு உதவக் கூடியவையே கழுதைகள். கழுதைகளைப் பேணி வந்தால் spin இரகசியம் மூலம் கம்ப்யூட்டர் அறிவை எதிர்கால விஞ்ஞானிகள் வளர்த்துக் கொள்ளலாம். உலகப் புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத போஸ் கழுதைகளை அன்புடன் பராமரித்து அணு விஞ்ஞானத்தை விருத்தி செய்து கொண்டார் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. கழுதைகளுக்கு கேரட், பச்சை பட்டாணி, நூல்கோல் போன்ற காய்கறிகளை அளிப்பதால் கம்ப்பூட்டர் ஹார்டுவேர் துறையில் பணி புரிபவர்கள், கம்ப்யூட்டர் துறையில் சாதனை புரிய விரும்புவர்கள் சிறப்படைவார்கள். சற்று ஊன்றிக் கவனித்தால் இது எத்தகைய சிறப்பு வாய்ந்த நவகிரக வழிபாடு என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

ருத்ர பல்குனி சித்தர் ஜீவாலயம்
பூவாளூர்

எந்த அளவு கழுதையைப் பேணி வளர்க்கிறோமோ அந்த அளவிற்கு சுழல் இரகசியங்கள் தெரிய வரும். பன்றிகளைப் பேணி ஜோதிட இரகசியங்களை உணர்ந்த வராகமிஹிரரை நினைவு கூர்ந்தால் இந்த உண்மை எளிதில் விளங்கும். மூலிகை இரகசியம் பன்றியின் மூக்கில் மறைந்துள்ளது போல சுழல் இரகசியம் கழுதையின் உதையில் மறைந்துள்ளது !

கழுதைகளின் படத்தை கம்ப்யூட்டர் Desk Topல் அமைத்து அடிக்கடி தரிசனம் செய்து வருவதும், கழுதையின் படங்களை silver வண்ணத்தில் coating செய்து வணங்கி வருவதும், திருச்சி லால்குடி பூவாளூர் திருத்தலத்தில் பல்குனி சித்தரின் வாகனமாய்ப் பொலியும் கழுதை மூர்த்தியை ஆராதனை செய்து வருவதும் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

சிந்தையில் சிக்கா சிலந்திப் பூச்சி

நில தத்துவத்தை உணர்ந்த எறும்புகளைப் போல அப்பு என்னும் நீர்த் தத்துவத்தை உணர்ந்தவையே சிலந்திப் பூச்சிகளாகும். சிலந்தியால் பின்னப்பட்ட கூட்டில் எந்தப் பூச்சியாக இருந்தாலும் ஒட்டிக் கொள்ளும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், அந்தக் கூட்டில் சிலந்தி மட்டும் சிக்கிக் கொள்ளாது அதன்மேல் நகர்கிறது என்பது இதுவரை எந்த விஞ்ஞானிக்கும் புரியாத இரகசியம். விஞ்ஞானம் எங்கு முடிகின்றதோ அங்கேதான் மெய்ஞானம் ஆரம்பமாகும் என்ற சித்த வாக்கிற்கிணங்க சித்தர்கள் மட்டுமே இந்த இரகசியத்திற்கு பதில் கூற இயலும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே ஆதிசங்கரர் சிலந்தி கூடு இரகசியத்தைப் பற்றி விளக்கியுள்ளார். சிலந்திக் கூடு தன் சங்கல்பத்தால் வலை பின்னுவதைப் போல இறைவன் தன்னுடைய சங்கல்பத்தால் இவ்வுலகை உருவாக்கி உள்ளார் என்பதே அவ்வுண்மை. எனவே சிலந்திக் கூடு என்பது ஒரு பொருள் அல்ல. It has no mass. It is pure energy. சிலந்திக் கூடு என்பது நீர்த் தத்துவத்தின் அடிப்படையில் பின்னப்பட்ட வலையே என்று உணரும்போதுதான் சிலந்தி எப்படி தன்னுடைய மாயை வலையில் மாட்டிக் கொள்ளாமல் நகர்கின்றது என்பது பளிச்சென விளங்கும். இறைவன் என்றாவது மாயையால் பின்னப்பட்ட தன்னுடைய உலகில் சிக்கிக் கொள்வாரா ? இந்த உண்மையைத்தான் பட்டினத்தடிகள் சுவையாக இனிமையாக எளிமையாக,

ஊரும் சதமல்ல உற்றாரும் சதமல்ல உறறு பெற்ற பேரும் சதமல்ல
பெண்டிர் சதமல்ல பிள்ளைகளும் சதமல்ல
இவ்வுலகில் யாரும் சதமல்ல நின்தாள் சதம்
கச்சி ஏகம்பனே

என்று உலகின் நிலையாமையை உணர்த்தி உள்ளார். எனவே சிலந்திக் கூடு மட்டும்தான் மாயை வலை என்று கிடையாது. இவ்வுலகம் அனைத்துமே இறைவனின் மாயா விளையாட்டுதான்.

அதுபோல நீர்த் தத்துவத்தை உணர்ந்த சிலந்திப் பூச்சி நீர்த் தத்துவத்திற்கு அருள் புரியும் திருஆனைக்கா அண்ணலை பந்தலிட்டு வணங்கியதில் வியப்பென்ன ? நாம் சாதாரணமாக சிலந்தி வலை என்று நினைத்தாலும் சிலந்தியைப் பொறுத்தவரை இறைவனை மற்ற தீய சக்திகளிலிருந்து பாதுகாக்கும் கவசப் பந்தலே அதன் வலையாகும். அந்த எண்ணத்தில்தான் இறைவனுக்கு பந்தலிட்டு ஆராதித்து வந்தது சிலந்திப் பூச்சி. இறுதியில் முக்தியும் சாதித்தது. காட்டு மிருகங்களிலிருந்து இறைவனைப் பாதுகாக்க காத்து நின்ற கண்ணப்பரின் கதைதான் இது. பக்திக்கு logic கிடையாது. Logic பார்த்தால் பக்தி வளராது, நம்பிக்கை தோன்றாது.

வீடுகளில் உருவாகும் சிலந்திக் கூடுகளும் அற்புத கவச சக்திகள் கொண்டவையே. சிலந்திப் பூச்சிகள்தான் பலவிதமான தீய எண்ண சக்திகளை தங்கள் கூடுகளில் ஈர்த்து வைத்துக் கொள்கின்றன. வேறு எந்த சக்தியாலும் எண்ணங்களை ஈர்க்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீர்த் தத்துவத்தை உணர்ந்த ஜீவன்கள் மட்டுமே எண்ணத்தை ஈர்க்க முடியும். இதனால்தான் நைவேத்யம், தர்ப்பணம், அர்க்யம் போன்ற தூய சுப எண்ணங்களை ஈர்த்து விருத்தி செய்ய நீரை உபயோகிக்கிறோம்.

விட்டில் பூச்சியா விட்டல் மூர்த்தியா ?

அடுத்து அக்னி தததுவத்தை உணர்ந்த ஜீவன்களில் முக்கியமானது விட்டில் பூச்சி. ஒரு மாலைப் பொழுதில் தோன்றி மறையும் விட்டில் பூச்சி சாதிக்கும் சாதனையை ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாலும் சாதிக்க முடியாது. காரணம் விட்டில் பூச்சி அக்னி தத்துவத்தை உணர்ந்த அளவிற்கு மனிதர்கள் அதன் மகிமையை உணரவில்லை. பார்ப்பதற்கு விளக்கு தீபத்தைச் சுற்றி விளக்கில் விழுந்து மடிவதாக மனிதன் நினைப்பதற்கு காரணம் மனிதனின் அறியாமையே. இனியாவது விட்டில் பூச்சிகளின் செய்கைகளைக் கூர்ந்து கவனித்துப் பாருங்கள்.

ஓங்காரத்தின் வெளிப்பாடே இவ்வுலகம் என நாம் அறிவோம். இந்த ஓங்கார சக்தியை ஒலி ரூபமாக அளிக்கக் கூடியது சங்கு என்பது நீங்கள் அறிந்ததே. சங்கின் உட்பாகம் எப்படி ஓங்கார ஒலியை தோற்றுவிக்கும் விதத்தில் அமைந்துள்ளதோ அதே முறையில்தான் விட்டில் பூச்சிகள் அக்னியை வலம் வரும். இப்போது புரிந்ததா விட்டில் பூச்சிகளின் தியாகம். எனவே விட்டில் பூச்சிகள் வெறுமனே அக்னியைச் சுற்றி வரவில்லை. ஓங்கார ஒளியைத் தோற்றுவிக்கும் விதத்தில் அக்னியை வலம் வருகின்றன. கடல் அலைகள், இடி, மின்னலுடன் கூடிய மழை இவற்றில் negative ions அதிகம். நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே இந்த காற்றுக் கூறுகளின் பணி. சுற்றுப் புற தூய்மைக்கும் சுகாதாரமான காற்றோட்டத்திற்கும் இந்தக் கூறுகள் அவசியம். சக்தி வாய்ந்த இந்த காற்றுக் கூறுகளை சூரிய, சந்திர சுவாச கலைகள் மூலமாகவும் உருவாக்கலாம்.

விட்டில் பூச்சிகள் புனிதமான தங்கள் உடலமைப்பு மூலமாகவும், இறக்கைகளின் அசைவினாலும், சுவாச கலைகள் மூலமாகவும், குறிப்பிட்ட கோணத்தில் அக்னியைச் சுற்றி வலம் வருவதன் மூலமாகவும் மழைக் காலத்தில் அபரிமிதமாய் செறிந்துள்ள ஆரோக்கிய காற்றுக் கூறுகளை ஓங்கார சக்தியுடன் இணைத்து பரவெளியில் பரப்புகின்றன இந்த ஓர் அற்புத இறைப் பணியை எந்த மனிதனும் தன்னுடைய ஆயுட் காலத்தில் நிறைவேற்ற முடியுமா என்பதைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். மேலும் ரமணர் போன்று வெகு காலம் ஒரே இடத்தில் இருந்து தவம் இயற்றும்போது உடலில் ஏற்படும் மென்மையே விட்டில் பூச்சிகளின் உடலமைப்பில் உருவாகி உள்ளன என்பதும் எவரும் உணராத ஆன்மீக இரகசியம்.

சும்மா இருப்பது சுகமா ?

அக்னி தத்துவத்தைப் போல காற்றுத் தத்துவத்தை அறிந்த ஜீவன்கள் யாவை ? இதை நீங்கள் எளிதில் யூகித்து விடலாமே. வண்ணத்துப் பூச்சிகளே காற்றுத் தத்துவத்தை உணர்ந்த ஜீவ ராசிகளில் முதலிடத்தை வகிக்கின்றன. பட்டாம் பூச்சிகளின் ஆன்மீக இரகசியங்கள் குறித்தும் பட்டாம் பூச்சி சிறகடி சித்தர் ஆற்றிய அரும்பணி குறித்தும் ஸ்ரீஅகஸ்திய விஜய இதழ்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சும்மா இருப்பதே சுகம் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதில் ஒரு அர்த்தம் எந்த செயலும் செய்யாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டுவது. நாம் நெற்றிக்கு இடுவதும் இது போன்றதுதான். விபூதி, குங்குமம், சந்தனம், சிந்தூரம் போன்ற இறைப் பிரசாதங்களை நெற்றியில் அணிந்து செல்லும்போது அதைப் பார்ப்பவர்களுக்கு ஒரு நிமிடம் இறை நினைவு தோன்றும். எனவே ஒரு மனிதன் வெறுமனே நெற்றிக்கு இட்டு ஊரைச் சுற்றி வந்தால் கூட எத்தயோ ஆயிரம் பேருக்கு, விலங்குகள், மரம், செடி, கொடிகளுக்கு, புழு, பூச்சிகளுக்கு இறை எண்ணத்தை ஊட்டியவன் ஆகிறான் அல்லவா ? அது போல வண்ணத்துப் பூச்சிகள் தங்கள் உடலில் உள்ள பல வண்ணங்கள் மூலமாகவும் அமைப்புகள் மூலமாகவும் இவ்வுலக சிருஷ்டி தத்துவத்தைப் போதித்துக் கொண்டிருக்கின்றன. இதைத்தானே தத்துவ ஞானி சாக்ரடீஸ், Numbers and patterns make this world என்று கூறினார்.

சப்பாத்திக் கள்ளியின் சாதனை

மாற்றம் அடையாத பஞ்ச பூத சக்தியான ஆகாய தத்துவத்தை உணர்ந்தவையே கள்ளிச் செடிகளாகும். பொதுவாக, ஊர், கிராம எல்லைகளில் திகழும் இத்தகைய முட்செடிகள அந்த கிராமத்தைப் பற்றிய செய்திகளை ஆகாயத்தில் நாடி வடிவில் பதித்து வைக்கின்றன. உதாரணமாக, அந்த ஊரில் எத்தனை வீடுகள் உள்ளன, எத்தனை தென்னை மரங்கள் உள்ளன, கிராம, எல்லை தேவதைகளின் பெயர்கள், மகாத்மியங்கள், நீர் நிலை விவரங்கள், மிருகங்களின் போக்குவரத்து, தட்ப வெப்ப நிலை போன்று மனித அறிவிற்கு விளங்காத எண்ணற்ற செய்திகள் கள்ளிச் செடிகளால் சிறப்பாக சப்பாத்திக் கள்ளி என்ற கள்ளித் தாவரத்தால் நாடி வடிவில் ஆகாயத்தில் பதிக்கப்படுகின்றன.

இதனால் என்ன பயன் ? நாம் அறிந்தோ அறியாமலோ அந்த கிராமத்திற்கு வருகை புரியும் மகான்கள், ஞானிகள், யோகிகள் போன்றோர் நாடிகளைப் படிப்பதில் வல்லவர்களாக இருப்பதால் பல ஆண்டுகளுக்கு முன் அந்த ஊரில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அறிந்து கொண்டு அந்த ஊர் மக்களுக்கு தங்களால் இயன்ற திருப்பணிகளை செய்ய ஆயத்தமாகிறார்கள். இந்த விஷயங்களை அனைத்தையும் மகான்கள் தங்கள் ஞான திருஷ்டியின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றாலும் தேவை ஏற்பட்டால் ஒழிய மகான்கள், ஏன் ராமர் போன்ற அவதார மூர்த்திகளும் கூட தங்கள் புண்ணிய சக்தியை விரயம் செய்வது கிடையாது.

காற்று, மழை, புயல், அக்னி போன்ற எந்தவித இயற்கை சீற்றங்களாலும், மாறுபாடுகளாலும் பாதிக்கப்படாத தத்துவ சக்தியாக ஆகாயத் தத்துவம் விளங்குவதால் கள்ளிச் செடிகள் ஆகாயத் தத்துவத்தைப் பயன்படுத்துகின்றன என்பது ஆன்மீக விந்தையாகும். திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், அப்பர் பெருமான் போன்றோர் தாங்கள் சென்ற பல கிராமங்களில் கடும் வறட்சி, பஞ்சம் போன்றவை ஏற்படப் போகிறது என்பதை இத்தகைய நாடி இரகசியங்கள் மூலம் அறிந்து தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து அக்கிராம மக்களையும் மற்ற ஜீவ ராசிகளையும் காத்த அற்புதங்களை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

அமுத மழையை உருவாக்கலாமே

இவ்வாறு பஞ்ச பூத தத்துவங்களில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு ஜீவ ராசியும் புரிந்து அதை மக்கள் நலனுக்காக பயன்படுத்திய அற்புத விவரங்களை அறிந்தோம். ஆனால், இந்த தத்துவங்கள் அனைத்தையும் ஒரு சேர உணர்ந்து மக்கள் சேவையில் திளைக்கும் பிராணியே கழுதை என்பது உத்தமமான உண்மை.

இந்த உண்மையை எப்படி மனித மனம் ஏற்கும் ? இதற்கு எளிமையான விடையே கழுதை திருமணம். எங்கு கழுதைகளுக்கு திருமணம் நிறைவேற்றப் படுகின்றதோ அங்கு அற்புத மழைப் பொழிவு ஏற்படும். எப்போது மழை பொழியும் ? பஞ்ச பூதங்களுக்கு அதிபதியான இந்திரன் உத்திரவிட, வருண பகவான் மகிழும்போதுதான் மழை பொழியும் சாத்தியக் கூறு ஏற்படுகிறது. எனவே கழுதைகளுக்கு திருமணம் நிறைவேறியவுடன் அங்கு மழைப் பொழிவு ஏற்படுகிறது என்றால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்து விட்டனர் என்பதுதானே பொருள். மேலும் கழுதை திருமணத்திற்குப் பின் விளையும் மழைப் பொழிவில் ஆறு துளிகளுக்கு ஒரு துளி என்ற கணக்கில் அமிர்த துளிகளின் பொழிவு ஏற்படும். சாதாரணமாக, மழைப் பொழிவில் ஆயிரம் துளிகளுக்கு ஒரு மழைத் துளியே அமிர்த சக்திகளை, ஜீவ சக்திகளைப் பெற்றிருக்கும்.

கழுதையிடம் உள்ள மற்றொரு அதியற்புதம் அதன் பால். கழுதைப் பாலின் அமிர்த சக்திகளை, ஜீவ சக்திகளை, மூலிகை இரகசியங்களை, சிரஞ்சீவி தத்துவங்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. இருப்பினும் நாம் அறிந்த தெய்வீக புராண வைபவத்தின் மூலம் அதை ஓரளவு விளக்குவோம்.

மீனாட்சி கல்யாணம்

இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை நடந்த அற்புத திருமண வைபவம் எது ? அதில் என்ன சந்தேகம் ? எம்பெருமான் சோமசுந்தர ஈசனுக்கும் மீனாட்சிக்கும் நடந்த தெய்வீகத் திருமணமே இது வரை எந்த லோகமும் கண்டிராத அற்புத திருமண வைபவமாகும். அப்படி ஒரு திருமண வைபவம் இதுவரை எங்கும், எக்காலத்தும் நடந்தது இல்லை, இனி நடக்கப் போவதும் இல்லை.

அற்புதமான அந்த மீனாட்சி கல்யாண வைபவத்தில் நிகழ்ந்த அற்புதங்கள் கோடி, கோடி. அவற்றில் திருமணத்திற்குப் பின் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் எழுந்தருளிய குண்டோதரனுக்கு உணவிட்ட நிகழ்ச்சியை மட்டும் இப்போது காண்போம்.

முற்காலத்தில் திருமண வைபவத்தில் முதலில் மாப்பிள்ளை வீட்டார் விருந்து ஏற்ற பின்தான் பெண் வீட்டார் உணவேற்பார்கள். அம்முறையில் மாப்பிள்ளையாக வந்திருந்த சோம சுந்தர ஈசன் சார்பில் விருந்துண்ண எவரும் வராதது கண்டு மனம் வருந்தினார் மீனாட்சியின் தந்தை. இவ்விஷயத்தை மீனாட்சியிடம் தெரிவிக்க மீனாட்சி தேவியும் ஈசனிடம் தன் மன வருத்தத்தை மிகவும் பணிவுடன் வெளியிட்டாள். தாயினும் சாலப் பரிந்து காக்கும் ஈசன் அன்னையின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க மாட்டானா என்ன ? உடனே அருகிருந்த ஒரு சிவ கணத்தை அழைத்து மாப்பிள்ளை வீட்டார் சார்பில் அனுப்பி வைத்தார் ஈசன்.

பெரிய வாத்யார் பாணியில், "அத்திக்கா சைசுல ஒரு M-ton Bomb வந்து ஒக்காந்துச்சுடா." இது குண்டோதரனின் உருவம். ஆனால், அந்த பூதமோ முறையாக பஞ்ச கச்சம் கட்டி, 36 இடங்களில் விபூதி தரித்து யக்ஞோபவீதம் அணிந்து உச்சிக் குடுமி பிரகாசிக்க, கண்டத்தில் ருத்ராட்சம் ஜ்வலிக்க விருந்துண்ண வந்து அமர்ந்தது. குண்டோதரன் அமரும் ஆசனம் பொதிய மலையிலிருந்து விசேஷமான தேக்கு மரத்தில் செய்யப்பட்டு வந்திருந்தது. மீனாட்சி கல்யாணத்தில் தலைமை சமையல் பொறுப்பு யாருக்குத் தெரியுமா ? அது வேறு யாராக இருக்க முடியும் ? திருக்கயிலாய பொதிய முனி அகஸ்திய பரம்பரையைச் சேர்ந்த அடியார்கள்தான் சமையல் பொறுப்பை ஏற்று அனைத்து உணவுப் பதார்த்தங்களையும் தயார் செய்து கொடுத்தார்கள்.

குண்டோதரனுக்கு 3 லட்சம் பேர் பரிமாறினார்கள். அவன் உண்ட விருந்து விவரம் இதோ.

உண்டது உலகளவு

8000 கோடி லட்டுகள். ஒவ்வொன்றும் இன்றைய ஒலிம்பிக் விளையாட்டில் பயன்படுத்தப்படும் கால் பந்து அளவுடையது.
18000 கோடி ஜிலேபி
38000 கோடி ஜாங்கிரி
88 லட்சம் அண்டா அரிசி சாதம்
ஒரு லட்சம் அண்டா சாம்பார்
800000 அண்டா தேங்காய் சாதம்
நான்கு வகை மோர். ஒவ்வொரு வகையிலும் ஒரு லட்சம் அண்டா.

உதாரணத்திற்காக ஒருசில உணவுப் பதார்த்தங்களை பற்றிய அளவுகளும், விவரங்களும் அளிக்கப்பட்டன. உண்மையில் குண்டோதரனுக்கு 360 வகையான உணவுப் பதார்த்தங்களை பரிமாறினார்கள். இவை அனைத்தையும் குண்டோதரன் உண்பதற்கு எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 30 நிமிடங்களே.

கல்யாணத்திற்காக சமைத்திருந்த அனைத்து உணவுப் பொருட்களும் தீர்ந்து போன நிலையில் இறுதியில் வைகை நதியில் நீர் அருந்தி குண்டோதரன் விருந்து நிறைவேறியது என்பது அனைவரும் அறிந்ததே.

இவ்வளவு பிரம்மாண்டமான உணவு தயாரிப்பிற்கு தேவைப்படும் பொருட்கள் பற்றி சிறுவன் கோவணாண்டிப் பெரியவரிடம் கேட்டபோது, "நைனா, அந்தக் கால கணக்கெல்லாம் இப்பத்தி மனுஷனுக்குப் புரியாதுடா. மதுரை பொற்றாமரைக் குளத்தில் உள்ள தாமரையின் ஒரே ஒரு தாமரை இதழை வைத்து இந்தியாவையே விலைக்கு வாங்கிடலாம்னா பாத்துக்கோ. அது மட்டுமல்ல. செண்பக பாண்டியன் தருமிக்கு அளித்த அந்த தங்கக் காச வச்சி பெரிய பணக்கார நாடுன்னு சொல்றாங்களே அந்த அமெரிக்காவையே இப்ப விலைக்கு வாங்கிடலாம். அப்படீன்னா மத்த விஷயத்தைப் பத்தி நீயே முடிவெடுத்துக்க," என்று சிரித்துக் கொண்டே சிறுவன் வெங்கடராமனிடம் கூறினாராம்.

இலஞ்சி திருத்தலத்திலிருந்து
தென்காசி கோபுரக் காட்சி

மேற்கூறிய உணவுப் பட்டியலில் உள்ள தெய்வீக இரகசியங்கள் மலையாய்க் குவிந்திருக்க இப்போது அதில் ஒரே ஒரு அம்சத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். சாதராணமாக ஒருவர் ஐந்து கார் வைத்திருந்தால், எதற்கு இவர் ஐந்து பேர் அனுபவிக்கக் கூடிய சுகத்தை ஒருவராக அனுபவிக்கிறார். இது நியாயமற்றது, அதர்மம் என்று எண்ணுதல் இயல்பு. அவ்வாறிருக்க தர்ம வாகனம் நந்தியுடைய இறை மூர்த்தியின் முன்னிலையில் இவ்வாறு கோடிக் கணக்கான உணவுப் பதார்த்தங்களை ஒரே ஒரு பூதம் உண்டு களிப்பது அதர்மமான செயல் ஆகாதா ? இந்த தெய்வீக லீலையில் மறைந்துள்ள ரகசியம் அறிந்தால்தான் இத்தகைய மனக் குழப்பங்கள் தீரும்.

குள்ளமான உருவத்திற்கு என்று எதை வேண்டுமானாலும் உதாரணமாகக் கூறலாம். ஆனால், ஸ்ரீஇடியாப்ப சித்தர் அத்திக்காய் அளவு என்று கூற வேண்டியதன் அவசியம் என்ன ? அத்திப்பூ பூத்தாற் போல ... என்பது வழக்கம். அதாவது அத்திப்பூவைக் காண்பது அரிது. அத்திக் காயைத்தான் காண முடியுமே தவிர, பூவைக் காண முடியாது. அது போல அந்த பூதம் சாப்பிட்டது என்பது அனைவருக்கும் தெரியுமே தவிர அத்தனை உணவுப் பதார்த்தங்களும் எங்கு சென்றன என்பது எவருக்காவது தெரியுமா ? அது இறைவன் சோமசுந்தர ஈசனுக்கும் இறைவி மீனாட்சி தேவிக்கும் மட்டுமே தெரிந்த தெய்வீக இரகசியம்.

திருமணத்திற்காக வந்திருந்த அனைவரின் உணவுப் பதார்த்தங்களையும் குண்டோதரன் ஒருவனே தீர்த்து விட்டால் மற்றவர்களின் நிலை என்ன ? அவர்கள் உணவருந்தாமல் பட்டினி கிடந்தார்களா ? அதைப் பற்றி ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் திருமணத்திற்கு வந்திருந்த அத்தனை கோடி ஜீவ ராசிகளும் வெறும் 30 நிமிடங்களில் உணவருந்துவதற்காக இறைவனும் இறைவியும் நிகழ்த்திய இறை லீலையே குண்டோதரன் விருந்து என்பது புலனாகும்..

எனவே, குண்டோதரன் அருந்திய அனைத்து பதார்த்தங்களும் அத்தி மறைத்ததுபோல் இறைவியால் மறைக்கப்பட்டு மீனாட்சி தேவியின் சக்தி தத்துவத்தோடு இணைந்து அமிர்த சக்திகளாக அனைவருக்கும் பரிமாறப்பட்டன. இது தோடுடைய செவியன் அளித்த ஞானப் பால் விருந்து. என்னே அற்புதம் ! இதில் மற்றோர் இறை அற்புதமும் நிகழ்ந்தது. பீஜாட்சர ஒலிகளில் ஐகாரம் மிகவும் சக்தி வாய்ந்தது. நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகளும் தமிழில் காயத்ரீ மந்திரத்தை அளிக்கும்போது,

ஐம் ஹ்ரீம் க்லீம்
யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக !

என்று ஐங்கார பீஜாட்சர சக்தியுடன் இணைத்து அருளியுள்ளார்கள். குண்டோதரன் விருந்தின் நிறைவாக வைகை தீர்த்தத்தை அருந்தினான் அல்லவா ? வைகை என்னும் பதத்தில் இரண்டு ஐங்கார பீஜாட்சர ஒலிகளுடன் வகார இடையின அட்சரமும் இணைவதால் இது அற்புதமான அமிர்த சக்திகளை உருவாக்கும் என்பது அமிர்த கூறு இரகசியங்களில் ஒன்றாகும். அத்திக்காயில் மறைவாக பரிமாறப்பட்டது இந்த அமிர்த சக்திகளும் என்பது இப்போது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும்.

சித்தர்கள் மொழியில், ஒரு அணுகுண்டு போட்டால் அதில் ஒரு லட்சம் பேர் இறப்பது சாதனை அல்ல, ஒரு அணு குண்டு போட்டால் அதில் லட்சம் நெல் மூட்டைகள் விழ வேண்டும், அதுவே சாதனை, என்பார்கள். இங்கே M-ton bomb வடிவில் வந்த ஒரு சிறு பூதம் கோடிக் கணக்கான விருந்தினர்களுக்கு வயிறார உணவளிக்கும் அற்புத பணியை வெறும் 30 நிமிடங்களில் சிறப்பாக நிறைவேற்றியது என்றால் இது பரம்பொருளன்றி வேறு எந்த சக்தியால் சாத்தியமாகும் ?

இப்போது தொடங்கிய இடத்திற்கு வருவோம். மீனாட்சி கல்யாணத்திற்கும் கழுதைப் பாலிற்கும் என்ன சம்பந்தம் ? உண்ணாமுலைத் தாயாக அருள் சுரக்கும் பரமேஸ்வரியின் அமிர்த சக்திகள் மீனாட்சி கல்யாணத்தில் அத்திக் காயில் மறைந்து பொலிந்தன, கழுதைப் பாலிலோ அனைவரும் உணரும் வண்ணம் தெளிந்து பொலிந்தன ! அதனால்தான் உலகில் வேறு எந்த பொருளுக்கும் இல்லாத மூலிகை சக்திகள், அமிர்த சக்திகள், சிரஞ்சீவி சக்திகள் கழுதைப் பாலில் செறிந்துள்ளன. உலக அழகியாக புகழ் பெற்ற கிளியோபாட்ரா கழுதைப் பாலில் தன் உடல் அங்கங்களை தினமும் மசாஜ் செய்து வந்ததால்தான் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இளமை குன்றாது வாழ்ந்தாள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

கழுதைப் பாலைக் கறந்தவுடன் உடனே பயன்படுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் அதன் மூலிகைத் தன்மை முற்றிலும் மாறி விடும். முடிந்தால் கழுதைப் பாலை உடனே பவுடராக மாற்றி வைத்துக் கொள்ளுதல் நலம்.

கழுதைச் சுமப்பது என்ன ?

இவை எல்லாவற்றையும் விட மிகவும் அற்புதமான ஒரு ஆன்மீக குணம், சக்தி கழுதையிடம் உண்டு. அது என்ன தெரிமா ? ஞானிகளும் அஞ்சும் திருப்பணி, யோகிகளையும் மிரட்டும் பொறுப்பு. அதுவே மனிதர்களின் கர்ம மூட்டையைச் சுமக்கும் ஆன்மீகப் பணி. இதை மிக மிக அரிதாகவே அதுவும் மிக உயர்ந்த நிலையில் உள்ள ஞானிகளிடம் மட்டுமே காண இயலும். ஆனால், கழுதை என்று பிறந்து விட்டாலே அவை கர்மத்தை சுமந்து, கர்மத்தை விரட்டி மனிதர்களைக் காக்கின்றன. இதற்கு காரணம் கழுதைகளிடம் மட்டுமே இறைவனால் அளிக்கப்பட்ட கர்ம சுக்ர சக்திகளாகும். இந்த சுக்ர சக்திகளின் வலிமையால்தான் கழுதைகள் மனிதர்களின் கர்ம மூட்டைகளை எளிதில் சுமந்து கர்மத்தை விரட்டும் பணியில் ஈடுபடுகின்றன.

அழுக்கு கர்மத்தை யார் சுமந்தாலும் அது அற்புதமான இறைப் பணி என்பதில் சந்தேகமில்லை. அதனால்தான் அழுக்கு மூட்டைகளைச் சுமக்கும் சலவைத் தொழிலாளர்களின் தரிசனம் சுப சகுனமாக கருதப்படுகிறது. மேலும் பலரின் இல்லங்களில் சுப நிகழ்ச்சிகளில் சலவைத் தொழிலாளர்களுக்கு மங்கலப் பொருட்கள், தட்சிணையுடன் முதல் தாம்பூலம் அளிக்கும் வழக்கம் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதோடு மட்டுமல்லாமல் இந்த இரகசியம் தெரிந்த பல தனவந்தர்கள் தங்கள் குடும்பத்தில் திருமணங்களை நிகழ்த்தும் போது திருமணத்திற்கு முதல் நாள் ஒரு சலவைத் தொழிலாளிக்கு இலவசமாக திருமணத்தை நடத்தி வைத்து உரிய சீர்வரிசைகளையும் மண மக்களுக்கு அளித்து கௌரவிப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய திருமணங்களால் எவ்வளவோ திருமண தோஷங்கள் அகல்வதுடன் அவ்விடத்தில் நிலவும் துஷ்ட சக்திகளும் விரட்டப்படுகின்றன என்பது ஆன்மீக இரகசியமாகும்.

ஸ்ரீஆதிநாதர் வயலூர்

ஸ்ரீஆதிநாயகி வயலூர்

இப்போது ஒரு சந்தேகம் எழலாம். உலகில் நம்மைச் சுற்றி பசு, யானை, நாய், குதிரை என எவ்வளவோ மிருகங்கள் இருக்கும்போது ஏன் கழுதைக்கு திருமணம் நிகழ்த்த வேண்டும் ? கம்ப்யூட்டர் எஞ்சினியர், எலக்ட்ரிகல் எஞ்சினியர், மெக்கானிகல் எஞ்சினியர் என ஆயிரம் எஞ்சினியர்கள் நம்மைச் சுற்றி இருந்தாலும் ஒரு வீடு கட்ட வேண்டுமானால் அதற்கு ஒரு சிவில் எஞ்சினியரைத்தானே அழைக்கிறோம். அதுபோல் உலகில் எத்தனையோ மிருகங்கள் இருந்தாலும் சுக்ர சக்தியை உடைய மிருகம் கழுதை மட்டுமே. மக்களுடைய திருமண்த்திற்கு காரகராக இருப்பது சுக்ர கிரகம்தானே ? அவர்தான் களத்திர நாயகன்.

மேலும் சுக்ர சக்தியை உடைய விலங்குகள் பல இருந்தாலும் "கர்ம" சுக்ர சக்தியை உடைய ஒரே மிருகம் கழுதை மட்டுமே. கர்ம சுக்ர சக்தி உடைய மிருகம்தான் மற்றவர்களுடைய களத்திர தோஷங்களை, கர்ம வினைகளைச் சுமந்து கர்ம விளைவுகளிலிருந்து நிவாரணம் அளிக்க முடியும். மற்றவர்களின் கர்ம வினைக் கழிப்பிற்காகவே இறைவனால் படைக்கப்பட்ட மிருகமே அல்லது மிருக தேவதையே கழுதையாகும். வெறும் கர்ம வினைகள் மாயம் ஆவது மட்டுமல்லாமல் கர்ம சுக்ர சக்திகள் லட்சமி கடாட்சத்தையும் வர்ஷிக்கும் என்பது மற்றோர் அற்புத அனுகிரகமாகும். பொதுவாக, சுக்ர சக்திகளின் குறைவால் மேக நோய்கள் உருவாவதால் கழுதை திருமணங்கள் மேக நோய்களை நீக்கும் மாமருந்தாக அமைந்துள்ளது.

பெரும்பாலான மேக நோய்களுக்கு நவீன ஆங்கில வைத்திய முறையில் மருந்து கிடையாது. அவை ஆயுர்வேத வைத்தியத்திற்கு மட்டுமே கட்டுப்படும். அவ்வாறு ஆயுர்வேத, சித்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாத கொடிய மேக நோய்கள் கூட கழுதை திருமணதில் நிவாரணம் பெறும் என்றால் கழுதைகளின் தெய்வீக மகத்துவத்தை எவ்வாறு அளவிட்டுக் கூற முடியும்.

நோய் நிவாரணம் மட்டுமன்றி பல வியாபாரத் துறைகளிலும் கழுதை வழிபாடு அற்புத பலன்களை நல்குகிறது. செயற்கை பொருட்கள் வியாபாரத்திற்கு கழுதை வழிபாடு நலம் அளிக்கும். உதாரணமாக, artificial diamonds, covering jewellery, artificial limbs, பொய்ப் பல்செட் வியாபாரம் போன்றவை மேன்மை பெறும். அதேபோல substitute, replacement part industries துறையில் உள்ளோர் அதில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளும் கழுதைகளை வழிபடுவதன் மூலம் முன்னேற்றம் பெறுவர்.

எதிர்காலத்தில் வல்லரசு நாடுகளும், பெரும் பணக்காரர்களும் தங்கத்தை பதுக்கி வைத்து ஒரு போலியான விலை ஏற்றத்தை உருவாக்குவார்கள் என்பது சித்தர்களின் கணிப்பு. இதனால் நடுத்தர வியாபாரிகளும், சிறு வியாபாரிகளும் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள். அத்தகையோர் கழுதை வழிபாட்டின் மூலம்தான் எதிர் வரும் துன்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற முடியும். தங்கள் தொழிலை நிலைப்படுத்திக் கொள்ளவும் தக்க வழிகாட்டுதல் கிடைக்கப் பெறுவார்கள்.

கழுதை மாமிசம் வேண்டாமே

மனித மூளைக்கு எட்டாத அளவு அனுகிரக சக்திகளையும், கர்ம வினை சக்திகளையும் கழுதைகள் பெற்றிருந்தாலும் அவற்றை முறையாக வணங்கி நற்கதி அடையாமல் கழுதைகளை அவமதிக்கும் துர்குணமும் இக்கலியுகத்தில் விளங்குவது வேதனைக்குரிய விஷயமே. கழுதையைப் போற்றி பாதுகாக்கும் நற்குணம் இல்லாமல் போனாலும் கூட பரவாயில்லை, அதன் மாமிசத்தைத் தின்று உடல் பசியைத் தீர்க்கும் கொடிய செயலையாவது தவிர்த்து வாழலாம் அல்லவா ?

கழுதை மாமிசம் விந்து குற்றத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து கழுதை மாமிசத்தை ஏற்று வந்தால் உடல் விந்து சக்தியை இழந்து விடும். கோணல் குறி, நெடுங்குறி, வளைவு குறி போன்ற நோய்த் துன்பங்கள் உடலில் தோன்றி இல்லற வாழ்க்கை நரகமாக மாறி விடும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை மறைந்து வாழ்க்கையே ஒருபோராட்டமாக மாறி விடும் என்பது வேதனைக்குரிய விஷயம். யோனிப் புற்று, குறிப் புற்று போன்ற கொடிய நோய்களும் ஏற்படும். ஏற்கனவே குறிப்பிட்டது போல் இவை எந்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாது. இந்த நோய்களால் ஏற்படும் அவமானமும், வேதனையும் வார்த்தைகளில் அடங்காது.

சிறுவர்களும், பெரியவர்களும் அறியாமையாலும் வேடிக்கைக்காகவும் கழுதைகளைத் துன்புறுத்துவது உண்டு. தயவு செய்து இத்தகைய விபரீத விளையாட்டில் ஈடுபட்டு வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள் என்பது பெரியோர்களின் பணிவான அறிவுரை, கழுதையைத் துன்புறுத்தினால் திருமணத் தடங்கல்கள் ஏற்படும். வயதான காலத்தில் திருமணம் அமைதல், அமைதியற்ற திருமண வாழ்க்கை போன்ற துன்பங்கள் ஏற்படும்.

இதை விடக் கொடுமை என்னவென்றால் இப்பிறவியில் கழுதை மாமிசம் உண்பவர்கள் வரும் பிறவிகளில் ராட்சஸர்களாக பிறக்க வேண்டும் என்பது சிருஷ்டி நியதி. அசுரர்களில் ஒரு கொடுமையான நிலையே ராட்சச பிறவி. இது தேவைதானா ?

கவனிக்க AIDsக்கு AID கிடையாது

நாம் அறிந்த AIDS என்னும் மேக வியாதியை விட கடுமையான, கொடுமையான மேக வியாதிகள் உண்டு. AIDSஐ விடக் கொடுமையான 3000 வியாதிகள் இருப்பதாக சித்தர்கள் அறிவுறுத்துகிறார்கள். அவைகளுக்கு செம்மேக கிரந்தி என்று பெயர். கழுதைக் கறியை சாப்பிட்டு விட்டு ஊதினாலே இத்தகைய செம்மேக வியாதிகள் தோன்றும் என்றால் அதை உண்பவரின் நிலை என்ன என்பதை இறைவன் மட்டுமே அறிவார். செம்மேக வியாதிகள் AIDSஐ விட நூறு மடங்கு வேதனையை உடலில் மனதில் ஏற்படுத்தும் என்று சித்தர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். எந்த மருத்துவத்தாலும் செம்மேக வியாதியை குணமாக்க முடியாது என்பது உண்மை.

இதிலிருந்து நாம் அறியும் நீதி என்ன ? இறைவன் மனித நல்வாழ்விற்காக, உணவிற்காக எத்தனையோ காய், கனி, கீரை வகைகளை, விலங்குகளை, பறவைகளைப் படைத்துள்ளான். அதை விடுத்து தோஷ நிவர்த்திக்காக படைக்கப்பட்டுள்ள கழுதை போன்ற விலங்குகளின் மாமிசத்தை மனிதன் உண்டால் அவன் கடுமையான சாபத்திற்கு உள்ளாவான் என்று பெரியோர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே எக்காலத்தும் பசு, எருமை, கழுதை போன்ற தோஷ நிவர்ததி மிருகங்களின் மாமிசத்தை உண்பதையும், விற்பதையும், அது சம்பந்தமான தொழில்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கும்படியும் பெரியோர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் மாந்தி, குளிகன் இருந்தால் அவர்கள் புதுக் கண்டு பிடிப்புகளுக்கு அனுகிரகம் செய்வார்கள். எனவே, அத்தகையோர் தங்கள் கண்டு பிடிப்புகளால் பேரும் புகழும் அடையவும் தங்கள் கண்டுபிடிப்புகளால் மக்களுக்கு நன்மை விளையவும் விரும்பினால் அவர்கள் கழுதைகளைத் தொடர்ந்து வழிபட்டு வருவதால் நற்பலன் பெறுவார்கள். கழுதைகளின் படத்தை, உருவச் சிலையை ஆராதித்தல் நலம். படங்களுக்கும், உருவச் சிலைகளுக்கும் silver coating அமைத்தல் சிறப்பு. சிறப்பாக கம்ப்பூட்டர் ஹார்டுவேர் துறையைச் சேர்ந்தவர்கள் இத்தகைய வழிபாடுகளால் நற்பலன்களைப் பெறுவார்கள்.

குசும்நாத் நியதிகள்

கழுதையின் குலகுருவாய் பூவாளூரில் ஜீவ சமாதி கொண்டுள்ள ருத்ர பல்குனி சித்தர் விளங்குவது போல கழுதைகளின் அனுகிரக தேவதையாய் அருள்பாலிப்பவளே கந்தர்வ தேவதை குசும்நாத் தேவி ஆவாள். களத்தர தோஷங்களைக் களைந்து, திருமணத் தடங்கல்களை நீங்கி, மாங்கல்ய சக்திகளை விருத்தி செய்து, நற்சந்ததிகளுக்கு வழிவகுப்பவளே குசும்நாத்தேவி ஆவாள். குசும்நாத் நியதிகள் (Kusumnath regulations) என்ற விரத நியதிகளும் உண்டு.

1. தினமும் 3 லிட்டர் காய்ச்சி ஆறிய நீரை அருந்துதல்
2. தேய்பிறை சனிக் கிழமை தோறும் விளக்கெண்ணெய் அருந்துதல்
3. தினமும் விடியற்காலையில் குளிர்ந்த நீரில் நீராடுதல்
4. தினமும் 108 தோப்புக் கரணங்கள் (குசா முறை, வாஸ்து தோப்புக் கரணங்கள் சிறப்பு) நிறைவேற்றுதல்
5. வாரம் ஒரு முறையாவது கழுதைகளுக்கு காரட், பச்சை பட்டாணி, நூக்கல் போன்ற காய்கறிகளை அளித்தல்

ஆகிய ஐந்து நியதிகளும் குசும்நாத் நியதிகள் என்றழைக்கப்படுகின்றன. சிறந்த மனத் தூய்மையை நல்கும் அற்புத நியதிகள் இவை. எந்த இறை மூர்த்தியை வழிபடுபவர்களாக இருந்தாலும் மேற்கூறிய நெறிமுறைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் உடலும் மனமும் தூய்மை பெற்று இறை மார்கத்தில் உன்னத முன்னேற்றத்தை அடைவார்கள்.

சிறப்பாக குசும்நாத் தேவியின் அனுகிரகம் பெற விரும்புவோர்கள் மேற்கூறிய நெறி முறைகளோடு ஒவ்வொரு மாத மூல நட்சத்திரம் தோறும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ரமணாஸ்ரமம் அருகே ஏக லிங்க முக தரிசனம் பெறுவதால் தங்கள் துறையில் உன்னத நிலையை அடைவார்கள்.

திருமண வைபவம்

கழுதை திருமணத்தை எவ்வாறு நிறைவேற்றுவது? கழுதை திருமணங்களை எங்கு நிறைவேற்றினாலும் நற்பலன்கள் பெறலாம் என்றாலும், இறைவனின் திருத்தலங்கள், சன்னதிகள், ஜீவ சமாதிகள் சிறப்பாக ருத்ர பல்குனி சித்தர் அருள்புரியும் பூவாளூர் நதிதீரம் போன்ற இடங்களில் வெள்ளிக் கிழமை, பரணி நட்சத்திர திரிதினங்கள், திருவாதிரை நட்சத்திர தினங்களில் ஒரு ஆண் கழுதையையும், ஒரு பெண் கழுதையையும் ஆண் கழுதைக்கு இடப் புறமாக பெண்கழுதை அமையுமாறு கழுதைகளை கிழக்கு நோக்கி நிற்க வைத்து மஞ்சள், குங்குமம், ஜவ்வாது பொட்டிட்டு, சுத்தமான பருத்தி அல்லது பட்டு வேட்டி, புடவைகளை அணிவித்து, மணமுள்ள மலர் மாலைகளை அணிவித்து கழுதைத் தம்பதிகளை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும். இதுவே எளிய முறையிலான கழுதைத் திருமண வைபவமாகும்.

வட சுக்ர யாகம், பரவெளி சுத்தி தாரணம் போன்ற விரிவான சம்பிரதாய சடங்கு முறைகளும் உண்டு. அவற்றைத் தக்க சற்குருமார்களை அணுகி அறிந்து கொள்ளவும். திருமணத்திற்குப் பின் கழுதைத் தம்பதிகளுக்கு வயிறார உணவு அளிப்பது மிகவும் அவசியம்.

திருமணங்களை கோயிலில் இறைவன் முன் நிகழ்த்துவது சிறப்பு. அவ்வாறு திருச்சன்னதியில் மாங்கல்ய தாரணம் நிகழ்த்துகையில் தம்பதிகள் நிற்பதானால் அவர்கள் கிழக்கு நோக்கியும், அமர்ந்து மாங்கல்ய தாரணம் செய்வதாக இருந்தால் வடக்கு நோக்கி அமர்ந்தும் திருமண வைபவத்தை நிறைவேற்றுவது சிறப்பு. இதன் பின்னால் உள்ள ஆன்மீக தாத்பர்யங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருப்பதால் அவற்றை சற்குரு மூலம் மட்டுமே அறிந்து கொள்ள வேண்டும் என்பது இறை நியதி.

கழுதை திருமணம் நிறைவேறியவுடன் மழைப் பொழிவு ஏற்படும் அல்லவா ? அந்த அமுத மழைத் துளிகளை ஒரு தென்னம் பாளையில் பிடித்து இறை மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை மற்ற தம்பதிகளுக்கு ஆசீர்வாத தீர்த்தமாக தெளித்தும், ஏனையோர் அதை இறைப் பிரசாதமாக ஏற்றுக் கொள்தலும் கிடைத்தற்கரிய பாக்கியமாகும்.

இந்தத் தென்னம் பாளை அபிஷேகத்தின் பின்னணியில் உள்ளது ஓர் சுவையான இதிகாச நிகழ்ச்சி.

இராவணன் பெற்ற பரிசு

இராவணன் தான் ஒரு மனிதனுடைய கையால் மரணம் எய்தப் போகிறோம் என்று முன்னரே ஜோதிடர்கள் மூலமாகவும், ரிஷிகள் மூலமாகவும் அறிந்து கொண்டான். இது குறித்து மிகவும் வேதனை அடைந்த இராவணன் அதற்கு ஏதாவது பரிகாரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் பூலோகத்தில் உள்ள பல திருத்தலங்களுக்கும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். ஏன் ? பூலோகத்தில் மட்டுமே பிரபஞ்சத்தில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் பரிகாரம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பல தலங்களை தரிசித்து இறுதியில் திருபைஞ்ஞீலி வந்தடைந்தான் இராவணன். மிகவும் தொன்மையான சிவத்தலம். நவகிரக மூர்த்திகள் படைக்கப்படுவதற்கு முன்னரே தோன்றிய தொன்மைப் பதி.

தற்போது இராவணன் வாயில் என்று அழைக்கப்படும் வாயிலைத் தாண்டி இராவணன் திருக்கோயிலுக்குள் நுழைந்ததும். சுவாமி எழுந்து நின்று இராவணனை வரவேற்றாராம். பணிந்தவனே பக்தன் என்ற சித்தர்களின் பொன்மொழிக்கு இலக்கணமாக சித்தர் குல நாயகன்தானே வழிகாட்ட முடியும். மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான இராவணன். மரண பயம் கானல் நீராய் மறைந்தது.

சுவாமி ஆறுதல் வார்த்தைகள் அளித்தார். "இராவணா ! கேவலம் ஒரு மனிதன் கையால் இறக்க வேண்டுமே என்று நினைத்து வருந்தாதே. ராமன் நீ நினைப்பது போல் ஒரு சாதாரண மனிதன் அல்ல. ஸ்ரீமந் நாராயண மூர்த்தியே உன்னுடைய பூர்வ ஜன்ம விருப்பப்படி உன்னை பரமபதத்தில் இணைப்பதற்காக மனமிரங்கி மனிதப் பிறவி எடுத்து வருகிறார். இது எவருக்கும் கிடைத்தற்கரிய பாக்கியம். மேலும் உன்னுடைய இறுதி காலம் நெருங்குவதற்குள் நிலைத்த புகழைச் சூடுவாய். உனக்கு ஒரு அற்புத வீரன் மகனாய்ப் பிறக்க இருக்கிறான். இந்திரனையும் வெல்லும் பராக்கிரமசாலி அவன். அதனால் அவனுக்கு மேகநாதன் என்று பெயர் சூட்டி அழைப்பாய். பூவுலகில் ராமர் பெயர் உள்ளவரை உன் புகழும் நிலைத்திருக்கும்,"

இராவணன் வாயில் திருப்பைஞ்ஞீலி

இந்த மதுர மொழிகள் இராவணனுடைய உள்ளத்தைக் குளிர்வித்தன. இராவணன் போன்ற மாவீரனுக்கு ஒரு பராக்கிரமம் மிக்க வீரன் குழந்தையாகப் பிறக்கப் போகிறான் என்றால் அதைவிடச் சிறந்த இறைப் பிரசாதம் எது?

இராவணன், "பரம்பொருளே ! தங்களின் பெருங்கருணைக்கு எத்தயை கைம்மாறு செய்வது என்றே புரியவில்லை. தாங்கள் கூறும் மகனைப் பெற அடியேன் ஏதாவது தவங்கள் இயற்ற வேண்டி இருந்தால் அதை தயை கூர்ந்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்," என்று சுவாமியிடம் விண்ணப்பித்தான்.

சுவாமி, "இராவணா ! இந்திரனின் பேரழகையும் அவன் பராக்கிரமத்தை மிஞ்சும் வீரனையும் நீ குழந்தையாகப் பெற வேண்டும் என்றால் நீ இந்திரன் மகிழக் கூடிய ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் அல்லவா ? தவம் இந்த யுகத்திற்கு உரியது. ஆனால், எக்காலத்திற்கும் உரிய எளிய தவமாக நீ கழுதைகளின் திருமணத்தை நிறைவேற்றினால் அதனால் இந்திரன் மகிழ்ந்து அதன் பயனாய் இந்திர செல்வம் சந்தான வடிவில் உனக்கு கிட்டும், " என்று அருளி மறைந்தார்.

இராவணன் சுவாமியின் திருவார்த்தைகளுக்கு ஏற்ப தற்போது இராவணன் வாயில் அமைந்த இடத்தில் அற்புத திருமண மேடையை அமைத்து வேத வித்தகர்கள் மூலம் பிரம்மாண்ட யாகங்களை நிகழ்த்தி, வாழை கமுகு தோரணங்களுடன் திருமண மேடையை அலங்கரித்து ஒரு கழுதை தம்பதியருக்கு திருமண வைபவத்தை சிறப்பாக நிகழ்த்தி வைத்தான் இராவணன். திருமண வைபவத்திற்குப் பின் அந்த கழுதைத் தம்பதிகளை முத்து பல்லக்கில் ஏற்றி கோயிலை வலம் வந்தான் இராவணன். அப்போது சுவாமி் மகிழ்ச்சியடைய இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் அங்கு வந்த திருமணத் தம்பதிகளை ஆசீர்வதிக்கும்போது அங்கே அமுது மழை பொழிந்தது.

அந்த அமுத மழைத் துளிகளை ஒரு தென்னம்பாளையில் பிடித்து ஞீலி நாதருக்கு அபிஷேகம் நிறைவேற்றி அந்த அபிஷேக பிரசாதத்தை மண்டோதரிக்கு அளித்தான் இராவணன். அதன் பின் நடந்த இதிகாச நிகழ்ச்சிகள் நீங்கள் அறிந்ததே. அன்று தோன்றியதே தென்னம்பாளை அபிஷேகம்.

வாழ்வில் ஒரு முறையே மனிதனைத் தீண்டும் மரணத்தை நினைத்து தினமும் மரண பயத்தால் செத்துப் பிழைக்கும் மனிதர்கள் ஏராளம் உண்டு. இத்தகையோர் திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் கழுதை திருமணத்தை நிறைவேற்றுவதால் மரண பயம் அகல்வதுடன் இந்திரஜித் போன்ற பராக்கிரமம் மிக்க குழந்தைச் செல்வத்தையும் பெற இறைவன் அருள்புரிவார். மேகநாதன் என்ற பெயருடன் ராவணன் மகனைப் பெறுவதற்கு முன் மேகநாதன் என்ற பெயர் இப்பூவுலகில் எவருக்கும் கிடையாது.

தென்னம்பாளை அபிஷேகத்தின் சிறப்பென்ன ? தேங்காயை இப்பூவுலகிற்கு கொண்டு வந்தவர் பரசுராமர். பரசுராமரின் அவதார நோக்கங்களில் ஒன்று தன்னுடைய தபோபலனை ராமச் சந்திர மூர்த்திக்கு அளிப்பது. ஆனால், ராமச் சந்திர மூர்த்தி சர்வ லோக சக்கரவர்த்தி. தனுர் வீரன். அப்படிப்பட்ட விஜயனுக்கு தன்னுடைய தபோ பலனை யாசகமாக அளிக்க முடியுமா ? இதற்காக அவதார மூர்த்திகள் தீட்டிய திட்டமே பரசு ராமருடைய தனுசை ராமர் நாணேற்றும்படி சவால் விடுத்து, அந்த சவாலை ராமர் ஏற்று வெற்றி கொண்டு, பரசுராமர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு அடையாளமாக தன்னுடைய தபோ பலனை ராமச் சந்திர மூர்த்திக்கு அளித்தது !

இது போன்ற திட்டம்தான் இராவணன் வாழ்விலும் ஏற்பட்டது. கழுதைத் திருமணத்தை நிறைவேற்றி இந்திரனுடைய பூரண ஆசீர்வாதத்தை பெற்ற இராவணனுக்கு மேகநாதன் மகனாகப் பிறக்க தன்னுடைய ஆசீர்வாதத்தை தான் அடைந்த தோல்வியின் பரிசாக அவனுக்கு இந்திரன் அளித்து "இந்திரஜித்" அதாவது இந்திரனையும் வெற்றி கொண்டவன் மேகநாதன் என்ற பட்டத்தையும் அளித்தான். இதற்கு சாட்சியாய் நின்றதே பரசுராமரின் தென்னம்பாளை.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam