பூஜ்யம் என்பது நேர்கோடு !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கோள்கள் வணங்கும் ஈசன்

திருவாரூர் அருகே உள்ள பாடல் பெற்ற தலமே திருக்கோளிலி என்பதாகும். சக்தி வாய்ந்த இத்தலம் தற்போது திருக்குவளை என்ற பெயரில் பிரசித்தி பெற்றுள்ளது. சப்த விடங்கத் தலங்களில் ஒன்று. விடங்கம் என்றால் ஆண்மை, அழகு, பேரெழில் என்றெல்லாம் பொருளுண்டு. விடங்கர் என்றால் சிறு வழி, துவாரம் என்று பொருள். எல்லையற்ற இறைவனின் பேரருள் சுயம்பு புற்று லிங்க வடிவில் மனிதர்களுக்கு அருள் புரியும் பாங்கை வர்ணிப்பதே சப்த விடங்கத் தலங்களில் ஒன்றான திருக்குவளை ஆகும்.

மனித ஆன்மா என்ற சிறிய சக்தியானது பரம்பொருளான இறைவனுடன் ஐக்யம் பெறும் முறையை சுட்டிக் காட்டுவதாக உள்ளதே திருக்குவளை திருத்தலமாகும். கோள் என்றால் வளைந்து செல்லுதல் என்று பொருள். நவகிரகங்கள் எப்போதும் சூரிய பகவானைச் சுற்றியே வருவதால் கிரகங்கள் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவ்வாறு வளைந்து செல்லும் இயல்புடைய கிரகங்கள் தங்கள் குறைகள் நீங்கி இறைவனின் அருள் பெற்ற தலமாதலால் இது கோளிலி, அதாவது கிரகங்களின் குறைகள் நீங்கிய கோள் இலி தலம் என்று அழைக்கப்படுகின்றது.

ஐம்முக குசா தீபம்
திருக்குவளை

உண்மையில் கிரகங்களின் சக்தியில் எந்த மாறுதலும் ஏற்படுவது கிடையாது, மனிதர்கள் உயிரினங்கள் தங்களின் கர்ம விளைவுகளுக்கேற்ப அவர்களுக்கு தேவையான சக்திகளை சற்றும் தவறாமல் அளிப்பவையே கிரகங்கள் அல்லது கிரக மூர்த்திகள் ஆவர். இதைக் குறிப்பதாக அமைந்ததே, அமைவதே பூஜ்யம் என்பது நேர்கோடு என்று கோவணாண்டி குறிப்பிடும் தத்துவமாகும். யுகங்கள் மாறினாலும் இந்த சித்த தத்துவம் என்றும் மாறாது, மறையாது.

திருவாரூரைச் சுற்றியுள்ள தலங்கள் அனைத்தும் தியாகராஜர் அருள் புரியும் திருத்தலங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இதில் திருக்குவளையில் அருள்புரியும் பெருமான் அவனி விடங்க நாட்டியம் என்னும் அற்புத நாட்டியத்தை உயிரினங்களின் நலத்திற்காக அருள்கின்றார். அவனி விடங்கம் என்றால் உலகமே அழகு பெறும், ஆண்மையில் பூரிக்கும் நாட்டியம் என்று பொருள். இந்த அனுகிரகத்தை மக்கள் பெற உதவுவதே வரும் 22.4.2023 சனிக் கிழமை அதிகாலையில் ஐந்து கிரகங்களும் மேஷ ராசியில் பிரகாசிக்கும் நேரமாகும்.

இந்த அவனி விடங்க பஞ்சமகா முகூர்த்தத்தில் எம்பெருமானின் திருநடனத்தைக் கண்டு களிக்கும் முகமாக திருக்குவளை திருத்தலத்தில் எழுந்தருளும் நவகிரகங்கள் மட்டுமல்லாது ஸ்ரீஅகத்திய பெருமான், கற்பக விருட்ச தேவதை, காரண மகரிஷி போன்ற எண்ணற்றோர் அருளும் ஆசியுமே நம்மை பிரமிக்க வைப்பதாகும். இந்த அனுகிரக சக்திகளை எல்லாம் நாம் முறையாகப் பெறும் பூஜை பத்ததிகளை நம் சற்குரு எடுத்துரைக்கிறார்.

நம்முடைய பாரதமே மற்ற அனைத்து உலக நாடுகளுக்கெல்லாம் மூத்த புனித பாரதம் என்று கூறுவது வெறும் பெருமைக்காக அல்ல, இதன் பின்னணியில் ஆழ்ந்த வரலாறும் தெய்வீக கருத்துக்களும் நிறைந்து செறிந்துள்ளன என்று விளக்குவதே திருக்குவளை திருத்தலத்தில் நவகோள்கள் எழுந்தருளி இருக்கும் கோலமாகும்.

ஸ்ரீதியாகராஜ பெருமான்
திருக்குவளை

N2023 வருடம் முழுவதும் காமேஸ்வரத்தில் பொலியும் சந்திர நதி மணலால் விளக்குகளை சுத்தம் செய்து, அதன் பின்னர் எலுமிச்சை தோல், சீயக்காய் சேர்த்து சுத்தம் செய்து சுத்தமான நீர் விட்டு அலம்பி அந்த விளக்கில் ஐந்து முக தீபங்களை குறைந்தது ஒரு மணி நேரமாவது ஏற்றி வியாழன், வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும். திருக்குவளை திருத்தலத்திலும், காமேஸ்வர திருத்தலத்தில் கடலில் சங்கமமாகும் இடத்திலும் பொலியும் சந்திர நதி தற்போது வெள்ளாறு அல்லது வெள்ளையாறு என்றும் அழைக்கப்படுகிறது.

   சூரியன்
   சந்திரன்
   செவ்வாய்
   புதன்
   குரு
   சுக்கிரன்
   சனி
   ராகு
   கேது
என்ற வரிசையில்தானே உலகத்தில் உள்ள நாடுகளில் கிழமைகளின் பெயர்கள், ஞாயிறு, திங்கள்... சனி என்றவாறு அமைந்துள்ளன. இந்த கிரக சங்கமத்தில் சூரியன், சந்திரன், புதன், குரு, ராகு என்ற ஐந்து கிரகங்கள் அமையும்போது அதைப் பார்க்கும் ஆறாவது கிரகமாக கேது அமைவதும், இதைக் குறிப்பதாக வெள்ளியும் சனியும் சந்திக்கும் அதிகாலை எத்தகைய தெய்வீக மகத்துவத்துடன் பிரகாசிக்கும். மேலும் ஒன்பது கிரகங்கள் மேஷ ராசி ஆதியாக ஐந்து ராசிகளில் பிரகாசிக்கும்போது அது பஞ்சாட்சர பரம லட்சணம் என்ற தெய்வீக மகத்துவத்துடன் பொலிகின்றது.

22.4.2023 அன்று பொலியும் பஞ்சாட்சர பரம லட்சணம் என்ற தெய்வீக மகத்துவத்தை அடியார்கள், சமுதாயம் அனைவரும் பெறக் கூடிய ஒரு வழிபாட்டு முறையை நம் சற்குரு அருள்கின்றார். இதன்படி அகத்திய லிங்கத்திற்கு பஞ்சாமிர்தம், ஐந்து உலர்கனிகள் (உதாரணம் திராட்சை, அத்தி, பேரீட்சை), பஞ்சகவ்யம், மருதாணி, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி போன்ற ஐந்துவகை தைலங்களால் அபிஷேகம் நிறைவேற்றி, நிறைவாக Night Queen B, Champak, Chariot, Krishna Musk, Confidence போன்ற ஐந்து வகை தைலங்களை ஒவ்வொரு குட நீருக்கும் ஒரு நறுமணம் என்ற வகையில் சக்தி தீர்த்தத்தில் கலந்து அபிஷேகம் நிறைவேற்றி, பஞ்ச கச்சம் என்ற முறையில் ஸ்ரீஅகத்தீசனுக்கு வஸ்திரம் சார்த்தி வழிபடுதல் சிறப்பே. குவளை என்பது வெள்ளிக் குடத்தையும் குறிப்பதால் வெள்ளிக் குடத்தில், தோண்டியில் இத்தகைய அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றுதல் நலம்.

இந்த அற்புத முகூர்த்த நேரத்தில் ஸ்ரீஅகத்திய பெருமானுக்கு அலங்கரிக்க வேண்டிய ஒரு மலர்க் கிரீடம் உண்டு. ஸ்ரீஅகத்திய லிங்கம் உச்சியில் நாகாபரணமாக நாகலிங்க மலரை வைத்து, இதைச் சுற்றிலும் வெண்தாமரை, செந்தாமரை, நீலோத்பலம், வெள்ளை செம்பருத்தி, சிவப்பு செம்பருத்தி என்ற ஐந்து மலர்களால் கிரீடம் அமைத்து இந்த நாகலிங்க மலரைச் சுற்றி அமைக்க வேண்டும்.

அகத்திய லிங்கத்திற்கு இயற்றும் வழிபாட்டின் ஒரு அங்கமாகவே ஐம்முக குத்து விளக்கில் பொலியும் தீபங்கள் அமைவதால் அந்த வழிபாட்டையும் நாம் ஸ்ரீதியாகராஜர் சன்னதியில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியம்.

திருக்குவளை திருத்தலத்தில் பொலியும் சக்தி வாய்ந்த தீர்த்தமே சக்தி தீர்த்தமாகும். ஸ்ரீநீலோத்பல அம்பாளின் திருச்சன்னிதி எதிரே உள்ள இத்தீர்த்தம் அம்பாள் இத்தலத்தில் தோன்றியபோதே பொலிந்த சக்தி தீர்த்தம் என்றால் இதன் பெருமையை விளக்க வார்த்தைகள்தான் உண்டோ? இதன் மகத்துவத்தை இன்றும் பறைசாற்றுவதாக இத்திருத்தலத்தில் உள்ள அனைத்து மூர்த்திகளின் அபிஷேகம், ஆராதனை போன்ற அனைத்து வழிபாடுகளுக்கும் இந்த சக்தி தீர்த்தமே பயனாகின்றது. பிரம்ம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சந்திர தீர்த்தம் போன்ற பல தீர்த்தங்கள் திருக்குவளை திருத்தலத்தைச் சுற்றி இருந்தாலும் இறை வழிபாட்டிற்கு உரியதாக இன்றும் பொலிவதாக அமைவதே சக்தி தீர்த்தமாகும்.

ஸ்ரீநீலோத்பல அம்பாள்
திருக்குவளை

புள்ளிகள் இல்லாத எலுமிச்சை கனிகளின் தோல்களை காய வைத்து, அத்துடன் சீயக்காய் பொடி, சிறிதளவு காமேஸ்வரம் திருமண் சேர்த்து இங்குள்ள பஞ்சமுக தீபத்தை தேய்த்து அலம்ப வேண்டும். காமேஸ்வர திருத்தல மகிமை பின்னர் விளக்கப்படும். இவ்வாறு பழுத்த சுமங்கலிகளால் சுத்தம் செய்யப்பட்ட குசா விளக்கிற்கு தாமே அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் இவற்றால் அலங்கரித்து இந்த விளக்கின் நடுவில் சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி, மற்ற நான்கு முகங்களிலும் இலுப்பெண்ணெய், பசு நெய், விளக்கெண்ணெய் போன்ற எண்ணெய்களை ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடுகள் நிகழ்த்த வேண்டும். பஞ்சு திரி அல்லது தாமரைத் தண்டுகளைப் பயன்படுத்துவது சிறப்பு.

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய இடர்களையும் பதிகம், சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய மற்று பற்றெனக்கு என்று தொடங்கும் பதிகங்களை ஓதுதல் சிறப்பாகும். தியாகராஜப் பெருமான் சந்நதியிலோ அல்லது அம்பாள் சந்நதியிலோ வழிபாடுகளை நிகழ்த்தலாம்.

திருக்குவளை அருகில் உள்ளதே குண்டையூர் என்னும் கிராமம் ஆகும். ஒரு முறை மக்கள் பஞ்சத்தினால் அவதியுறுவதைக் கண்டு சுந்தர மூர்த்தி நாயனார் வாடியபோது சுந்தரர் மீது அன்பும் மரியாதையும் கொண்ட குண்டையூர் கிழார் என்னும் பக்தர் அவருக்கு நூற்றுக் கணக்கான நெல் மூட்டைகளை அன்னதானத்திற்காக அளித்தார். இப்போது சுந்தர மூர்த்தி நாயனாருக்கு மற்றோர் பயம் தோன்றி விட்டது. மலை மலையாய் அந்த பக்தர் அளித்த நெல் மணிகளை எப்படி திருவாரூருக்கு எடுத்துச் செல்வது? எல்லாக் காரியங்களுக்கும் சிறு குழந்தையைப் போல் தன்னுடைய தந்தையான ஈசனிடம் வேண்டும் நாயனாரும் திருக்குவளை ஈசனின் திருத்தாள் பணிய அவர் மலையாய்க் குவிந்த நெல் மணிகைளை எல்லாம் சாக்குப் பைகளில் கட்டி அதை பத்திரமாக அதே ஆட்கள் மூலம் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல கருணை புரிந்தார் என்ற வரலாற்றை நீங்கள் அறிந்திருக்கலாம்.

நந்தனாரைப் போல் ஈசனிடமே நேரடியாக வேண்டியிருந்தால் தேவையான நெல்மணிகளை திருவாரூர் திருத்தலத்திலேயே அளித்திருப்பாரே எம்பெருமான் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். அடியார்களின் செயல்கள் எல்லாம் ஆண்டவனின் பெருமையையும் புகழையும் நிலைநிறுத்துவதற்காகத்தான். இந்தப் புகழும் பெருமையும் அடுத்தடுத்து வரும் மக்களின் நன்மைக்காகத்தானே, பக்தர்களின் துயர் துடைக்கத்தானே?

ஆவுடைமேல் அருளும்
ஸ்ரீதியாக விநாயகர் திருக்குவளை

தற்போது எங்கு பார்த்தாலும் பாடுபட்டு சம்பாதித்த பணம், நகை எல்லாம் திருடு போகிறது என்பதைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். இதைத் தடுப்பதற்காக அவைகளை வங்கி லாக்கர்களில் வைக்கலாமே என்று நீங்கள் எண்ணினாலும் வங்கி லாக்கர்களில் வைப்பதற்காகவும், லாக்கர்களிலிருந்து எடுப்பதற்காகவும் ஏற்படும் பயணங்களில் அந்த விலை மதிப்புள்ள பொருட்களை யார் காக்க முடியும்? இதுவே சுந்தர மூர்த்தி நாயனார் போன்ற சிவனருட் செல்வர்கள் அளித்த வழிகாட்டுதலாகும்.

எனவே நகை, பணம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை பாதுகாக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்போர் நாயனார் காட்டிய வழியில் திருக்குவளை திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீதியாக விநாயகரைத் தொழுது 21 பூரண கொழுக்கட்டைகளைப் படைத்து பிரார்த்தித்து வந்தால் தங்களுடைய உடைமைகள் நல்ல முறையில் பாதுகாக்கப்படும். நெல், சோளம் போன்ற தான்யங்கள் மட்டும் அல்லாது அனைத்து பயிர்களுமே பூச்சிகளிலிருந்தும், வெள்ளம், காலம் தவறிய மழை, மழையின்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்படாமல் காக்கப்படும்.

தற்போது எங்கு பார்த்தாலும் நிறைய வேலை மாற்றங்கள், இட மாற்றங்கள், மாநிலம் விட்டு மாநிலம் என்றல்லாது பல நாடுகளுக்கும் கூட மக்கள் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்கள். இத்தகையோர் தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய, வாட வேண்டிய சூழ்நிலை உண்டாவதால் இத்தகையோர் மேற்கூறிய வழிபாடுகளால் நல்லருள் பெறுவார்கள். அது மட்டுமல்லாமல் இன்று பிரபலமாக இருக்கும் ஒரு வியாபாரத் தலமோ, ஒரு பொருளோ திடீரென்று சந்தையிலிருந்தே மறைந்து விடுவதைக் காண்கிறோம். இதுவும் ஒரு விதமான ‘transfer magic’ தான். இந்த எதிர்பாராத வாடிக்கையாளர்களின் ‘மாற்றத்தால்’ பாதிக்கப்படும் வியாபாரத் துறைகள் பல உண்டு. அத்தகையோரும் மேற்கண்ட வழிபாடுகளால் நலமடைவர். இது அரிதாக எப்போதாவது கிட்டும் சந்தர்ப்பம் என்பதை நினைவில் கொள்ளவும்.

திருவாரூரைச் சுற்றி ஏழு தியாகராஜ மூர்த்திகள் எழுந்தருளி இருந்தாலும் திருக்குவளை திருத்தலத்தில் மட்டுமே ஸ்ரீதியாகவிநாயகர் எழுந்தருளி உள்ளார் என்பதே இந்த விநாயக மூர்த்தியின் தனிச் சிறப்பாகும்.

ஸ்ரீகுண்டையூர் கிழார்
திருக்குவளை

சுந்தர மூர்த்தி நாயனார் வாழ்ந்த காலத்தில் இருந்தோர் மட்டும்தான் இறையடியார்களால் பாதுகாக்கப்பட்டார்கள் என்று கிடையாது. இன்றும் இறைவனின் கருணை மழை பொழிந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு நிரூபணமாக திருக்குவளை திருத்தலத்தில் உள்ள மரகத லிங்கம் சில வருடங்களுக்கு முன்னால் திருடு போய் விட்டது, பின்னர் இந்த மரகத லிங்கம் மீட்கப்பட்டு விட்டது என்ற செய்தி அனைவருக்கும் இறைவனின் கருணையை விளக்கும் அற்புதமே.

திருக்குவளை ஈசன் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் வெண் மணலாலான சுயம்பு மூர்த்தி. அதனால் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது. எப்போதும் வெள்ளிக் குவளை சார்த்தி வழிபடப்படுவதாலும் இத்தலத்திற்கு திருக்குவளை என்பது ஒரு காரணப் பெயராக அமைந்தது. அமாவாசை தினத்தன்று மட்டும் திருக்குவளை சுயம்பு மூர்த்திக்கு அருகம்புல்லின் ஒரு துளி நீர் மட்டும் அபிஷேகமாக அளிக்கப்படுகிறது.

சுயம்பு திருமேனியின் ஒளிப் பிரகாசமே எல்லையில்லா சக்தியாய் மாறி ஒளி வீசிய அந்த அற்புத காட்சியை நேரில் கண்டு இரசிக்கும் பாக்கியம் பெற்றவரே நம் குருமங்கள கந்தர்வா ஆவார். ஒரு அமாவாசை நாளன்று இவ்வாறு தம் சற்குரு கோவணாண்டியின் திருவருட் கடாட்சத்தால் திருக்குவளை நாதனின் சுயம்பு திருமேனியின் ஒளிப் பிரகாசத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்ற நம் சற்குரு அடுத்த அமாவாசை வரை உறங்காமல் இறைவனின் திருமேனிக் காட்சியிலேயே இலயித்து உலகை மறந்திருந்தார் என்றால் திருக்குவளை நாதனின் பெருமைதான் என்னே, என்னே!

பாக்கியம் உள்ளோருக்கு இத்தகைய சுயம்பு திருமேனி தரிசனம் கிட்டும் வாய்ப்பு உள்ளது என்பதே 22 ஏப்ரல் 2023 அன்று நிறைவேற்றும் வழிபாட்டின் மகத்துவமாகும். உண்மையில் இறைவனின் எல்லையில்லா ஒளி பிரகாசமே இவ்வாறு வெண் மணல் சக்தியாக உருவெடுத்துள்ளது என்பதே நாம் அறிந்து தெளிய வேண்டிய ஆன்மீக இரசியமாகும். நம்மால் இறைத் திருமேனியின் ஒளிப் பிரகாசத்தை தரிசிக்கும் அளவிற்கு உயர முடியாவிட்டாலும் வெண் மணல் திருமேனியைத் தரிசிக்கும் பாக்கியத்தையாவது பெறலாமே.

வெண் மணல் சுயம்பு லிங்கத் திருமேனிமேல் தெளிக்கும் ஒரு துளி அருகம்புல் தீர்த்தத்தின் மகிமையை நாம் அறிந்து கொள்வோமா?

வலிவலம் மேவிய வடிவழகன்

ஒரு முறை சிரஞ்சீவி சக்திகளை அளிக்கவல்ல ஒரு மாங்கனியுடன் ஔவை பிராட்டி கைலாயத்திற்கு எழுந்தருளினார். தனக்கு சன்மானமாகக் கிடைத்த அந்த மாங்கனியை தான் உண்டு ஆயுளை வளர்த்துக் கொள்வதை விட உலகை ஆளும் ஈசனுக்கு அதை அர்ப்பணிப்பதுதானே முறை என்ற பரந்த நோக்குடன் ஔவைப் பிராட்டி கைலையை அடைந்தாள் என்பது நீங்கள் அறிந்ததே. ஔவைப் பிராட்டியின் தியாக உணர்வால் மகிழ்ந்த ஈசன் மாங்கனியை தன்னுடைய அருங்குழந்தைகளுக்கு அளிக்க சித்தமாகி தன்னுடைய செல்வங்களான கணபதி மூர்த்திக்கும் முருக வேளுக்கும் ஒரு போட்டியை வைத்தான். யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே அந்த மாங்கனி அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

ஸ்ரீவலஞ்சுழி விநாயகர்
வலிவலம்

நொடியில் பல லோகங்களைக் கடக்கவல்ல தன்னுடைய மயில் வாகனத்தில் ஏறி முருகப் பெருமான் உலகை வரம் வர ஆரம்பித்தார். புத்திசாலி கணபதியோ உலகிற்கெல்லாம் அம்மையப்பராய் விளங்கும் தன்னுடைய தாய் தந்தையரை வலம் வந்து வணங்கி போட்டியின் வெற்றிப் பரிசான மாங்கனியைப் பெற்றுக் கொண்டார். இவ்வாறு கணபதிக்கு சிரஞ்சீவித்துவம் பொருந்திய மாங்கனியை எம்பெருமான் அருளினார் என்றாலும் இந்த சிவக் குடும்பத்தின் திருவிளையாடலை அருகிலிருந்து நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற மானிடர்கள் எவரும் இல்லை என்பதால் நம் சற்குரு போன்ற சித்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாங்கனி பிள்ளையார் முதலில் வலிவலம் திருத்தலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கெல்லாம் அருள்புரிந்தார் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் சித்தர்கள் உணர்த்தும் மாங்கனி வரலாறாகும்.

தேவாரம் பாடும் அன்பர்கள் அனைவரும்
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே
என்று கணபதியைத் துதித்தே தங்கள் வழிபாட்டைத் துவங்குதல் நலம் என்ற முறை இங்குதான் தோன்றியது. உண்மையில் இந்த ஆதிகணபதி மூர்த்தியே மனிதத் தோற்றத்திற்கே முதன்மையானவர் என்று திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் உணர்த்தும் தெய்வீக உண்மையை நாம் நேரில் தரிசனம் செய்ய உதவும் தலமே வலிவலம். ஓங்கார நாதமான இறைப் பரம்பொருள் இவ்வாறு மனிதத் தோற்றம் கொண்டபோது அந்த ஜீவனின் நாதமாக தோன்றியதே மனித உள்ளங்கையின் அளவு கொண்ட ‘பிடி’, உமையவளின் பிடி.

இதையே அருணகிரி நாதரும் நாத விந்து கலாதீதா என்று இறைவனின் துதியாகப் பாடினார்.

உமையவளின் ‘பிடி’ என்ற சக்தியே இறைவனுடன் ஐக்கியமாக, அருகம்புல் தீர்த்தத்துளி லிங்க வடிவத்தின் மேல் பொழிய, இந்த சிவ சக்தி ஐக்ய தரிசனத்தையே நாம் திருக்குவளை திருத்தலத்தில் ஸ்ரீபிரம்மபுரீஸ்வர லிங்க சொரூபமாக, வெண் மணல் ஈசனாக தரிசிக்கிறோம். உமையவளின் ஒரு பிடி அருகம்புல் வழி பொழியும் ஒரு துளி தீர்த்தமே சிவசக்தி ஐக்ய சொரூப சக்திகளை அடியார்களுக்கு அருளவல்லது என்றால் திருக்குவளை திருத்தலத்தில் ஸ்ரீஅங்கயற்கண்ணி அம்பிகை, ஸ்ரீஅகத்திய பெருமான், கோளிலி நவகிரகங்கள் இவர்களை சக்தி தீர்த்தத்தால் அபிஷேகித்து வழிபடுவதால் கிட்டும் பலன்களை வர்ணிக்கத்தான் இயலுமா?

வலிவலம் திருத்தலத்தின் ஈசன் ஸ்ரீஇதயகமல நாதேஸ்வரர் என்று அமைந்திருப்பதிலிருந்தே இத்தலத்தில் நாம் இயற்ற வேண்டிய வழிபாடுகள் பற்றி நம் சற்குருவின் வழிகாட்டுதலை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

ஸ்ரீஇதயகமலநாதேஸ்வரர்
வலிவலம்

ஆம், இதய கமல கோலத்தை நாம் வரைந்து வழிபட வேண்டிய தலமே ஸ்ரீஇதயகமல நாதேஸ்வரர் உறையும் வலிவலம் திருத்தலமாகும். வலிவலம் திருத்தலத்தில் ஆரம்பித்து தொடர்ந்து அவரவர் இல்லத்தில் இயற்ற வேண்டிய ஒரு வழிபாடு குறித்து நம் சற்குரு அருள்கின்றார். நம் இதயத்தில் நான்கு அறைகள் இருப்பதாக நாம் அறிவோம். இதைக் குறிப்பதாக படத்தில் காட்டியுள்ளது போல் நான்கு இதயக் கமல கோலங்களை வரைந்து கொள்ள வேண்டும்.

இதயத்தில் அமைய வேண்டிய
இதய கோலம்

இந்த நான்கு கோலங்கள் நடுவே நாம் அமர்ந்து கொண்டு தியானம் பயில வேண்டும், அல்லது 4 x 8 = 32 என்ற தத்துவத்தைக் குறிப்பதாக அமையும் 32 நலம் தரும் தேவாரப் பதிகங்களையும் ஓதலாம். ‘இருதய ஆகாச ஈரெட்டு நாளம் புடைக்கழிய...’ என்ற வரிகளை நினைவு கூர்ந்தால் வலிவலம் திருத்தலத்தில் அமையும் இந்த வழிபாட்டின் மகிமை நம்மை பிரமிக்க வைக்கும்.

பீதாம்பர ஐயர் ஜால வித்தை என்பதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். நான்கு தூண்களுக்கு இடையே அந்தரத்தில் அமர்ந்து தியானம் பயின்று பல காலங்கள் மக்களுக்கு சேவை செய்த அற்புத மகான். தியானம் பயிலும்போது தரையில் அமராது இவ்வாறு அந்தரத்தில் அமர்ந்து தியானம் செய்வதால் பூமியில் இயல்பாய் எழும் எதிர்மறை சக்திகள் தங்கள் சக்தியை இழந்து விடுவதால் தியானம் எளிதாகக் கை கூடும்.

அவர் காலத்தில் இவரைப் பற்றி அவதூறு கிளப்பியவர்களே அதிகம். இவருக்குப் பின் மந்திரம், தந்திரம் என்ற ஜால வித்தைகள் யாவும் பணம் ஈட்டும் ஒரே குறிக்கோளையே கொண்டவையாக பிற்காலத்தில் மாறி விட்டன. இன்றும் இத்தகைய ஜால வித்தைகளை மக்களின் சேவைக்காக மட்டும் ஆற்ற விரும்புபவர்கள் இவ்வாறு நான்கு இதய கமலக் கோலங்களுக்கு நடுவில் தியானம் இயற்றி வந்தால் அடுத்து வரும் தெய்வீக நிலைகளுக்கு இவை உறுதுணையாக அமையும்.

உலகிலேயே மிகவும் தூய்மையான உணவு தாய்ப்பால் ஒன்றே. தூய்மை மட்டும் அல்லது தாய்ப்பாலில் செறிந்துள்ள நோய் எதிர்ப்பு சக்திகளோ அதை விட அதிகம். அதனால்தான் தாய்ப்பால் கிட்டாத போது மட்டுமே பசும் பால், ஆட்டுப் பால் போன்றவற்றை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே தாய்ப்பாலில் நான்கு சதவீதம் பூச்சி மருந்து கலந்து இருந்தது என்றால் தற்போதைய விஞ்ஞானத்தில் தோன்றும் பூச்சி மருந்துகளால் தாய்ப்பால் எந்த அளவிற்கு ‘தூய்மை’ உடையதாக இருக்கும் என்பதை நீங்களே உறுதி செய்து கொள்ளலாம்.

மேற்கூறிய வகையில் நான்கு இதய கமல கோலங்களை தினமும் வரைந்து அதன் நடுவில் அமர்ந்து கொண்டு தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலமுது ஊட்டி வந்தால் எதிர்கால சந்ததிகள் கலப்படமற்ற சுகாதாரமான தெய்வீக உணவை உண்டு வாழ்ந்து நோய் எதிர்ப்பு சக்திகளுடன் திகழ்வார்கள் என்றால் சித்தர்களுக்கும் மகான்களுக்கும் எதிர்கால சந்ததிகள் மேல் உள்ள அபிமானத்தை எடைபோட முடியுமா என்ன?

சங்கர தீர்த்தம் வலிவலம்

இதில் மற்றோர் அதிசயம் என்னவென்றால் தாய்மார்கள் இவ்வாறு தினமும் இதயக் கமல கோலத்தை வரைந்து அதன் நடுவில் பாலமுது ஊட்டி வந்தால் அது வெறும் உணவு பரிமாறும் சம்பவமாக மட்டும் அல்லாது தாய்மார்களின் தியானத்திற்கும் வழிவகுப்பதால் சிறிது சிறிதாக திசைமாணி (compass) இன்றியே அடிப்படை திசைகளை உணரும் சக்தியைப் பெறுவார்கள். அனைவருக்குமே, சிறப்பாக பெண்களுக்கு இந்த அடிப்படை திசைகளை உணர்ந்து கொள்ளும் திறன் அவசியமே. இந்த அடிப்படை சக்திகள்தான் நம்மைச் சுற்றி உண்டாகும் நிகழ்ச்சிகளைப் பற்றி முன்கூட்டியே அறிவிக்கும் வல்லமையைப் பெருக்கும்.

ஸ்ரீஆதிமூல கணபதி வலிவலம்

நாம் சாதாரணமாக நினைக்கும் இந்த அடிப்படை திசை அறிவைக் கொண்டுதான் அக்கால கோயில் ஸ்தபதிகள் கோயில் மண்டபங்களை அமைத்தார்கள். அதனால்தான் எங்கும் கிட்டாத அமைதியை, கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் கிட்டாத பேரமைதியை இன்றும் நாம் திருத்தலங்களில் அனுபவிக்க முடிகிறது. மேலும் ஒவ்வொரு திசையிலும் அமர்ந்து அருளும் தேவதா மூர்த்திகளின் அனுகிரகமும் இத்துடன் சேர்ந்து பொலிகின்றது.

இந்த திசை அறியும் திறனே குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தரும். கொலம்பஸ், நெப்போலியன், சத்ரபதி சிவாஜி போன்றோர் கொண்டிருந்த மன உறுதிக்கு இந்த அடிப்படை திசைகள் பற்றிய அறிவே காரணம் என்று தெரிவிப்பவரே நம் சற்குரு. லக்னத்திலிருந்து நான்காம் இடத்தில், அதாவது இதயத்தில் குருவைக் கொண்டிருக்கும் நம் சற்குருவின் ஜனன ஜாதகமும் இதை உறுதி செய்கின்றதே.

தாய்ப்பாலிற்கு அடுத்ததாக தூய்மையுடன் திகழ வேண்டிய திரவமே நம் இதயத்தைச் சுற்றியுள்ள திரவமாகும். திரவம் என்று இங்கு குறிப்பிடப்படுவது காற்றிற்கும் நீருக்கும் இடைப்பட்ட ஒரு நிலை என்பதை அன்பர்கள் கவனத்தில் கொண்டால்தான் இதயம் பற்றிய உண்மை அறிவைப் பெற முடியும். தற்போதைய விஞ்ஞானம் இந்த திரவத்திற்குரிய பெயரை அளிக்க முடியாததால் தோன்றும் குழப்பங்களில் இதுவும் ஒன்று. அதனால்தான் நம்முடைய ஒவ்வொரு சுவாசத்திலும் கிட்டும் தூய்மையான மூச்சுக் காற்று இந்த ‘திரவத்திற்கு’ பரிமாறப்படுகின்றது. வலிவலம் திருத்தலத்தில் திகழும் சங்கர தீர்த்தமே நம்முடைய இதயத்தைச் சுற்றியுள்ள தீர்த்தத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது என்பது நேரில் சென்று தரிசனம் செய்பவர்களுக்கே புரிய வரும். இவ்வாறு இதயத்தைச் சுற்றியுள்ள திரவம் போல் சங்கர தீர்த்தமும் திருத்தலத்தின் மூன்று திசைகளிலும் அமைந்திருப்பதைக் கண்டு பிரமிப்பு அடையாத மனிதரே இல்லை எனலாம். சித்தர்கள் கூறுவதைப் போல் சங்கர நாமமும், சங்கர தீர்த்தமும், சங்கர திருத்தலமும் சாதிக்காதது உலகில் எதுவுமே இல்லை எனலாம்.

ஸ்ரீஅந்தமிலா கணபதி வலிவலம்

ஸ்ரீவலம்புரி விநாயகர் மட்டும் அல்லாது ஸ்ரீஆதிமூல கணபதி, ஸ்ரீஅந்தமில்லா கணபதி என்ற கணபதி மூர்த்திகளும் சேர்ந்து மூன்று கணபதி மூர்த்திகளும் ஒரே திசையில் அமர்ந்துள்ளதால் எத்தகைய இதயக் கோளாறுகளுக்கும் நிவர்த்தி வழி காட்டும் மூர்த்திகளாக இவர்கள் துலங்குகிறார்கள். கலியுகத்தில் தெய்வ மூர்த்திகளின் அருட்பாங்கு வெறும் வியாதிகளைத் தீர்ப்பதற்காக மட்டும் இல்லை என்றாலும் நம் சற்குரு போன்றோர் மக்களின் துயர் தீர்க்க இம்மூர்த்திகளின் அருளை நாடுவதால் வழிகாட்டுதலை மட்டும் இம்மூர்த்திகள் அளிக்கின்றனர். ஆனால், இவ்வழிகாட்டுதலைத் தொடர்ந்து சென்றால் அனைத்து நலன்களையும் அடியார்கள் அடைவர் என்பது திண்ணம்.

சாரல் சங்கமம் திருநல்லூர்

நம் சற்குரு அடிக்கடி வலியுறுத்துவது போல் மனித உடலில் மிகவும் புனிதமான இடமே இதயம் என்பதாகும். அதனால்தான் அந்த இதயக் கோவிலில் ஈசன் உறைகிறான். இறைவன் உறையும் புனிதமான இடத்தில் heart attack என்ற நெஞ்சுவலி ஏற்பட முடியுமா? வலிவலம் திருத்தலத்தின் அமைப்பைப் பற்றி ஆத்ம விசாரம் செய்து வந்தால் நாம் இதயத்தின் புனிதத்தையும், புனிதமான இதயக் கோவிலில் உறையும் ஈசனின் மகிமை பற்றியும் சிறிது சிறிதாக உணர்ந்து கொள்ளலாம்.

திருநல்லூர், வலிவலம் போன்ற பல திருத்தலங்களிலும் அபிஷேக நீர்த்தாரை பொலியும் கோமுகம் சற்றே உயரத்தில் இருக்கும். இதிலிருந்து வெளியேறும் அபிஷேக தீர்த்தத்தை தரிசிப்பதே சாரல் சங்கமம் என்ற வழிபாடாக அமைந்து இதய நோய்களுக்கு நிவாரணத்தை அளிக்கும். குறிப்பாக, தேன், இளநீர், தாமே அரைத்த சந்தனம் இவற்றை சுவாமியின் அபிஷேகத்திற்காக அளித்து இந்த அபிஷேகம் சுவாமிக்கு நிறைவேறும்போது அதை இந்த சாரல் சங்கமம் கோமுகம் வழியாக தரிசித்து அந்த தேன், இளநீர், சந்தனம் போன்ற பிரசாதம் முகத்தில் தெளிக்குமாறு கோமுகம் அருகே முகத்தை அமைத்துக் கொள்வது சிறப்பு. இவ்வாறு முகத்தில் தெளிக்கும் இறை பிரசாதத்தை துடைத்து விடாது முகத்திலேயே அந்த பிரசாதங்கள் அமையுமாறு நாள் முழுவதும் வைத்துக் கொள்வதால், இது அனைத்து விதமான இதய நோய்களுக்கும் ஒரு நிவாரணமாக அமையும்.

நமக்குள் ஏற்படும் எண்ணச் சிந்தனைகளோ, சிதறல்களோ, அல்லது நம்மைச் சுற்றி உண்டாகும் எண்ண அலைகளோ முதலில் இதயத்தைச் சுற்றியுள்ள ‘சங்கர தீர்த்தத்தால்’ சுத்திகரிக்கப்படுகின்றன. பின்னர் இந்த எண்ண அலைகள் வலிவலம் என்று வலமாக நாம் இறைவனை திருத்தலங்களில் சுற்றி சுற்றி வருவதால் ஏற்படும் தூய்மையான சக்தியால் மேலும் தூய்மைப்படுத்தப் படுகின்றன. இவ்வாறு தூய்மைப்படுத்தப்பட்ட எண்ண அலைகள், பீதாம்பர ஜால வித்தை போன்று தரையில் இருந்து மேலே எழுவதால் பூமியின் ஆகர்ஷண சக்திகளிலிருந்து விடுபட்டு நம் இதயத்தில் உறையும் ஈசனை அடைகின்றன என்பதே வலிவலம் திருத்தலத்தில் நாம் மேற்கொள்ளும் வழிபாடுகளின் மகத்துவமாகும்.

தியானத்தில் விரைவாக உன்னத நிலையை அடைய விரும்புவோர்கள் இதய கமல கோலத்தைப் பற்றி தியானித்தாலே போதும். தியானம் மேற்கொள்ளும்போது ஆரம்ப கட்டத்தில் நாம் தியானிக்கும் உருவமோ தத்துவமோ நம் இதயத்திலிருந்து அடிக்கடி மறைந்து விடுவதுண்டு. இவ்வாறு தைல தாரை போல் உருவம் இதயத்திலிருந்து மறையாமல் நிலைத்து இருப்பதே தியானத்தின் ஆரம்ப கட்டத்தில் நிகழ வேண்டியதாகும். இதய கமல கோலத்தைப் பார்த்தால் இந்த உண்மை பளிச்சிடும்.

தாரண திருவோடு மரம் வலிவலம்

கோலம் தோன்றிய புள்ளியிலிருந்து கோலம் முடிவுறும் வரை ஒரே தொடர்ச்சியான கோடாக, கோலமாக அமைவதே இதய கமல கோலம். இங்கு நீங்கள் கேட்கும் இதய கமல இசையானது 16 நிமிடங்களுக்கு தொடர்ந்து நம் அடியார்களால் இசைக்கப்பட்டது ஆகும். இதனால் இதயத்தைச் சுற்றியுள்ள 16 இரத்த நாளங்களிலும் எந்த வித ஆரோக்கிய குறைவும் ஏற்படாமல் இரத்த ஓட்டம் சீர்பெறும். இந்த சீரான இரத்த ஓட்டமே சீரான எண்ண அலைகளுக்கு ஆதாரமாக அமையும். ஆரம்பத்தில் கோலத்தைப் பார்த்து கண்களை ஓட்டி, இதய கமல கோலத்தைப் பார்த்து பார்த்து, தியானித்து வருவோர்கள் சிறிது சிறிதாக கோலத்தின் காட்சி இன்றியே இதய கமல கோலத்தை கண் முன் கொண்டு வந்து எண்ண ஓட்டத்தில் நிலைத்திருக்க முடியும். இந்த நிலையை அடைந்தவர்களுக்கு அடுத்தடுத்த நிலைகள் சற்குருவின் அருளால் தானாகவே புலப்படும் என்பதே இதய கமலத்தின் உள்ளுறையும் இறைவனின், சற்குருவின் வழிகாட்டுதலாகும்.

சீரான நாளவளம்
திகைப்பில்லா எண்ண அலை!

சிந்தூர விரஜ தியானம் என்ற ஒரு சிறப்பான தியான முறையை வலிவலம் தலத்தில் ஆரம்பித்து அவரவர் இல்லங்களில் திருத்தலங்களில் தொடர்ந்து நிறைவேற்றும் முறை பற்றி எடுத்துரைக்கிறார் நம் சற்குரு. நான்கு இதய கமல கோலங்களை வரைந்து அதன் நடுவில் தியானம் பயிலும்படி விளக்கியுள்ளோம் அல்லவா? தியானம் பயில்வதற்கு மான் தோல் அல்லது புலித்தோல் மேல் அமர்ந்து தியானம் பயில்வது சிறப்பு. இதன் சிறப்பைப் பற்றி பகவத் கீதையும் விளக்குகிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய முறைகள் மக்களுக்கு சிரமம் என்பதால் மற்றோர் சிறந்த சித்த முறையை நம் சற்குரு உபதேசிக்கிறார்.

மாம்பட்டாடை சித்தர் என்ற அற்புதமான மகான் திருக்கோயிலூர் அருகே மாம்பழப்பட்டு திருத்தலத்தில் உலவி வந்ததை நாம் அறிவோம். மக்கள் சாப்பிட்ட பின்னர் மீந்த மாம்பழத் தோல்களால் ஆடை தயாரித்து அதை அணிந்து வந்த மகான். பிள்ளையார் மூர்த்திக்கு அளிக்கப்பட்டதால் மாம்பழத்திற்கு சிந்தூர விரஜ கனி என்ற பெயரும் தோன்றியது. இதை நினைவுறுத்தும் வகையில் அமைந்ததே சிந்தூர விரஜ தியானம் ஆகும். இதன்படி நாம் காமேஸ்வர திருத்தலத்தில் சிந்தூர மாம்பழங்களை வாங்கி அதன் தோல் பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதைக் காய வைத்து, சதுர வடிவில் தைத்து, மான் தோலுக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இந்த சிந்தூர விரஜ பட்டாடையை இறை மூர்த்திகளுக்கு சார்த்தி, குறிப்பாக ஸ்ரீவலிவல கணபதி அல்லது ஸ்ரீஇதயகமல நாதேஸ்வரருக்கு அர்ப்பணித்து பின்னர் அவரவர் தங்கள் இல்லங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மாம்பழத்தின் சதைப் பகுதியுடன் பசும்பால் சேர்த்து அடியார்களுக்கு தானமாக வழங்குதல் சிறப்பு, அல்லது குடும்ப அங்கத்தினர்களும் இந்த ‘சிந்தூர விரஜ பிரசாதத்தை’ ஏற்று மகிழலாம்.

ஸ்ரீஅங்கயற்கண்ணி அம்பாள்
வலிவலம்

ஏன் எச்சில் பட்ட மாங்கனிகளை மாம்பட்டாடை சித்தர் பயன்படுத்தினார் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். மாம்பழம் பிடிக்காத மனிதர்களே இல்லை எனலாம். அதுபோல் ஆசை இல்லாத மனிதர்களும் இல்லைதானே. மனிதர்களின் ஆசை வலுக்கும் இடமே உணவுக் கூடம்தான், அதே சமயம் மனிதர்கள் எளிதில் விடக் கூடிய ஆசையும் உணவில் மேல் உள்ள பற்றுதான். இவ்வாறு மனித குலத்தின் பற்றைக் களைந்து அவர்களை நன்னிலைப்படுத்தவே மாம்பட்டாடை சித்தர் மாம்பழப்பட்டு திருத்தலத்தில் உலவி வந்தார், அதனால்தான் எச்சில் பட்ட தோல் அவருக்கு பிள்ளையாரின் பிரசாதமான மாம்பழப் பட்டாகத் தோன்றியது!

தாரணம் என்றால் தாங்குதல் என்று பொருள். அனைத்தையும் தாங்குவதால் பூமா தேவி தரணி என்று அழைக்கப்படுகிறாள். தாரண ஆண்டு என்பது மக்கள் துயரங்களையும், துன்பங்களையும், வேதனைகளையும் தாங்க இறைவன் அருள் சக்திகளைத் தரும் ஆண்டு. 63 நாயன்மார்களுள் முதன்மையாகத் திகழும் திருநீலகண்ட நாயனாரிடம் இறைவன் ஒரு சந்நியாசி வடிவில் தோன்றி தான் வடக்கே தீர்த்த யாத்திரை செல்வதால், தான் திரும்பி வரும் வரை தன்னுடைய திருவோட்டைப் பத்திரமாக வைத்திருக்கும்படி நாயனாரிடம் கொடுத்தார் என்பதை அறிவோம். அந்த திருவோடே தாரண திருவோடு என்பதாகும்.

பொதுவாக, சன்னியாசிகள் பிறரிடம் பிச்சை எடுத்து அதில் கிட்டும் உணவை உண்டு தங்கள் காலத்தைக் கழிப்பதாக நாம் சாதாரணமாக நினைத்தாலும் அவர்கள் தியாகத்தை நாம் உணர்ந்து கொள்ள வழி வகுப்பதே தாரண திருவோட்டின் மகிமையாகும். திருவோடுகளில் எத்தனையோ விதங்கள் உண்டு. அதில் தாரண திருவோடு என்பது மக்களின் துன்பங்களை, துயரங்களை பூமா தேவி போல் தாங்கி அவர்களுக்கு அருள் புரிவதாகும். திருநீலகண்ட நாயனார் தன்னுடைய மனைவியைத் தீண்ட மாட்டேன், பெண் குலத்தையே கனவிலும் நினைக்க மாட்டேன் என்று வாக்களித்து வாழ்க்கை நடத்திய போது அவர் அடைந்த மன வேதனைகளை உணர்ந்த சிவபெருமான் இந்த மனவேதனைகளைத் தாங்கும் கருவியாக அவருக்கு தாரண திருவோட்டை அளித்து அதை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாத்து வைத்திருக்கும்படிச் செய்தார்.

இதோ என்றோ நடந்த திருவிளையாடல் கிடையாது, இன்றும் இத்தகைய திருவிளையாடல் நம் சற்குரு மூலமாக நிறைவேறியது என்பதை உணர்ந்தோர் ஒரு சிலரே. நம் சற்குரு ஸ்ரீஅகஸ்திய விஜயம், சங்குகள், இறை திருவுருவப் படங்கள் போன்ற பல ஆன்மீகப் பொருட்களையும் பக்தர்களுக்கு விற்பனை செய்தபோது அதனால் கிட்டிய பணத்தை எல்லாம் முதலில் இந்த தாரண பெட்டகத்தில்தான் சில நாட்கள் வைத்திருந்து தாரண பூஜைகள் இயற்றி அதன் பின்னரே அந்த பணம் மற்ற காரியங்களுக்கு நம் சற்குரு மூலம் விநியோகிக்கப்பட்டது.

பூமா தேவிக்கு உரித்தான எண் ஒன்பது என்பதால் முதலில் ஒன்பது முறை பிரகாரத்தை வலம் வந்து வணங்கி, குறிப்பாக தாரண திருவோடு மரத்தையும், விஷ்ணு மூர்த்தியையும் வணங்கி பின்னர் படிகள் ஏறிச் சென்று ஸ்ரீஇதயகமல நாதேஸ்வரரை வணங்கி வழிபடுதலால் எதையும் தாங்கும் இதயத்தைப் பெறலாம். இவ்வாறு ஒன்பது முறை தாரண திருவோடு மரத்தை வணங்கி, பின்னர் ஈசனை வணங்குவது தாரண பிரதட்சிணம் எனப்படும். வியாதிகளோலோ, நிதிப் பற்றாக்குறை, உறவில் பிரிவு போன்ற பல காரணங்களால் வேதனையின் முழுகி இருப்போர் இந்த தாரண பிரதட்சிணத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம்.

தாரண பிரதட்சிணம் நிறைவேற்றும்போது திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய இடர்களையும் பதிகத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் ஓதி பயன் பெறலாம்.

காரணம் காரியம் வலியன்

ஒரு முறை நம் அடியார் ஒருவர் நம் ஆஸ்ரமத்திற்கு ஒரு இடத்தை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது அந்த இடத்தின் சொந்தக்காரர் ஒரு காரில் வந்து சாலையில் நின்று கொண்டு காரை விட்டு இறங்காமலே அந்த அடியாரிடம் சில விஷயங்களை சொல்லுவதற்காக தன் கார் டிரைவர் மூலம் அவரை அழைத்தார். அந்த அடியாருக்கோ மகா கோபம், ‘தான் பணக்காரன் என்பதற்காக ‘இந்த ஆள்’ இப்படி காரை விட்டு இறங்காமல் நம்மை அழைக்கிறானே?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அந்த நபரிடம் சென்று, பேசிக் கொண்டிருந்து விட்டு வந்து விட்டார்.

அர்த்தநாரீஸ்வரக் கோலம் காட்டும்
ஆன்ம தத்துவம் திருக்குவளை

சில மாதங்கள் கடந்த பின்னரே அந்த பணக்காரர் சர்க்கரை மிகுதியால் ஏற்பட்ட பாதிப்பால் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இரண்டு காலையும் இழந்து விட்டார் என்பது தெரிய வந்தது. ஒருவேளை அந்த பணக்காரரிடம் கோபித்துக் கொண்டிருந்தால் அதன் விளைவு எவ்வளவு கேவலமாக இருந்திருக்கும் என்று நினைத்து தன்னை அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்றிய சற்குருவிற்கு மானசீகமாக நன்றி தெரிவித்தார் அந்த முன்கோபி அடியார்.

இதுவே காரணத்தால் காரியம் மாயம் ஆகும் இரகசியம். ஒருவன் முடவன் என்ற காரணம் தெரிய வந்ததால் கோபம் என்ற காரியம் நொடியில் மறைந்து போயிற்று அல்லவா? ஆனால், நாம் நினைப்பதுபோல் ஒவ்வொரு காரியத்திற்கான காரியத்தையும் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல, மகான்களைத் தவிர, மற்றவர்களுக்கு இது சாத்தியமும் அல்ல.

மனிதர்கள் இத்தகைய பலவீனத்தால் பாதிக்கப்படாது இருக்க, இவ்வாறு காரணம் காரியம் இரண்டின் மகத்துவத்தை மக்களுக்கு புரிய வைக்க, தெளிய வைக்கவே காரண மகரிஷி என்பார் இத்தலத்தில் பல காலங்களாக வழிபட்டார். உண்மையில் உயர்நிலையில், இறை நிலையில் காரணமும் கிடையாது, காரியமும் கிடையாது, இந்த இரண்டின் இணைப்பே, சங்கமமே இறைப் பரம்பொருள் ஆவார்.

இதன் முதல் கட்டமே நம் முன்னோர்கள் ஏற்படுத்திய குடும்பம் என்ற இனிய உறவாகும். மணப் பெண்ணுக்கும் மணமகனுக்கும் பொருத்தம் பார்க்கும்போது தற்காலத்தில் இரண்டு பொருத்தங்களை மட்டும் பார்த்தால் போதும் என்று கூறுபவரே நம் சற்குரு, ரஜ்ஜுப் பொருத்தம், யோனிப் பொருத்தம் என்ற இரண்டு பொருத்தங்களைப் பார்த்தாலே போதும். இதுதான் இந்த யுகத்திற்கு ஒத்து வரக் கூடியது என்பார். “அதிலும் பல திருமணங்களில் நாங்கள் ரஜ்ஜுப் பொருத்தத்தைக் கூட இக்னோர் செய்து விடுவது உண்டு...”, என்பார் நம் சற்குரு. எப்படி காரணம் காரியம் என்ற இரண்டும் இணைந்து உயர்நிலையில் ஒன்றாக மாற வேண்டுமோ, அது போன்றதே குடும்பம் என்ற உறவும் ஆகும்.

“இது வெறும் ஏட்டுப் படிப்பால் கனிவது அன்று, புரிந்து கொள்ளக் கூடிய தத்துவமும் அல்ல. 20, 30 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தி பல பிள்ளை குட்டிகளைப் பெற்றவர்களில் கூட கணவனைப் பற்றி அறியாத மனைவியும், மனைவியின் விருப்பத்தைப் பற்றி கவலைப் படாத கணவனும் எத்தனையோ பேர் உண்டு...”. இதற்கு அடிப்படையாகத் திகழ்வதே வலிவலம் திருத்தலத்தில் அடியார்கள் இயற்றும் இதய கமல கோலம் வரைந்து வழிபடும் முறையாகும்.

நமது உள்ளங்கை, கால்களில் இருக்கும் ரேகைகளை மட்டும் இணைத்தால் அது உலகையே சுற்றி வந்து விடும். ஆனால், அந்த ரேகைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாதது போல்தான் தோன்றும். எப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாதது போல் தோன்றும் நவகிரகங்கள் அனைத்தும் ஒரு மகானின் ஜாதகத்தில் ஒன்றாக இணைந்து, லயமாகின்றதோ அது போன்றதே இந்த ரேகைகள். இவ்வாறு தங்கள் கை கால்களில் உள்ள ரேகைகளின் தன்மையை அறிந்து கொண்டு அவற்றை இணைக்கும் வித்தையை ஒருவன் எப்போது படிக்க முடிகின்றதோ அப்போதுதான் அவன் தன்னுடைய மனைவியைப் பற்றி முழுமையாக படித்துக் கொள்வான்.

வலியன் கருங்குருவி
வலிவலம்

இவ்வாறு ஒருவன் தன்னுடைய மனைவியைப் பற்றி படித்துக் கொள்வதை விட ‘எளிதாய்’ தோன்றும் வித்தை என்ன என்பதைப் பார்ப்போமா? நம் உடலில் உள்ள ஐந்து விரல்கள் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று எண்ணுவதற்கு எளிமையாக உள்ளன அல்லவா? சிறு வயதில் நாம் படிக்கும் இந்த ஆரம்பப் பாடத்தையே தொடர்ந்து படிக்க வேண்டும். அதாவது நம் உள்ளங்கையில் உள்ள ரேகைகளும் இவ்வாறு ஒன்று இரண்டு மூன்று என்ற வரிசையில்தான் இணைகின்றன. ஆனால், இந்த இணைப்பின் இரகசியம் உள்ளங்கை உள்ளங்கால் ரேகைகளில் எப்படி பொலிகின்றன என்பதை நம்மால் அறிய முடியாததால்தான் நாம் கைவிரல் கால்விரல் ரேகைகள் சுட்டிக் காட்டும் இறை இரகசியங்களை நம்மால் முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை. இந்த இரகசியங்களை அறிந்து கொள்ளும் பல மார்க்கங்கள் பலரால் உபதேசிக்கப்பட்டாலும் நம் சற்குரு விவரிக்கும் முறையே எல்லாவற்றிலும் எளிமையானது, பாதுகாப்பானது.

ஸ்ரீபிரஹஸ்பதி குரு
வலிவலம்

ஆம், அதுவே, “ஓடியிட்ட பிச்சையும் உகந்த செய்த தர்மமும் சாடி விட்ட குதிரைபோல் தர்மம் வந்து காக்குமே...”, என்னும் சித்த பொக்கிஷ வார்த்தைகள் ஆகும். எந்த அளவு நம் இரு கைகளினாலும் அள்ளி அள்ளி ஆனந்தமாய் மற்றவர்களுக்கு அளிக்கிறோமோ அப்போது கை கால் ரேகைகளை இணைக்கும் இறை இரகசியம் புலப்படலாகும். இந்த கணித இரகசியம், இறை இரசியம் தெரிந்து விட்டால் பின்னர் அனைத்து பிரபஞ்ச இரகசியங்களும் உள்ளங்கை நெல்லிக் கனியே.

காரணம் காரியம் என்ற இரண்டையும் தன்னுடைய இரண்டு இறக்கைகளாகக் கொண்டு இன்றும் திருத்தலங்கள் எங்கும் உலவி வருபவையே வலியன் என்னும் கருங்குருவிகள். தம்பதிகள் ஒற்றுமைக்கு அரும் பாடுபடும் பறவை இனமே வலியன் குருவிகளாகும். தினமும் தாங்கள் உலவி வரும் பகுதியில் உள்ள தம்பதிகளுக்கு ஏற்படும் மனக் குறைகளை அறிந்து கொண்டு அவற்றைத் தீர்க்க அந்த இடத்தில் எழுந்தருளிய இறை மூர்த்திகளிடம் மனதார வேண்டும் பறவைகளே வலியன் கருங் குருவிகளாகும். எனவே வலியன் குருவிகளைக் காணும்போதெல்லாம் அவர்கள் சேவைகளை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்து அன்று மாலைக்குள் ஜோடிப் பொருட்கள் எது வேண்டுமானாலும் தோடுகள், கொலுசுகள், மெட்டிகள், அல்லது இவை எதுவும் தங்கள் வசதிக்கு ஒத்துவராதபோது ஒரு ஜோடி வாழைப் பழங்களைக் கூட தானமாக அளித்து நலம் பெறலாம்.

இதனால் சிறிது சிறிதாக தங்கள் குடும்பம், சமுதாயம், இனம், நாடு என்றவாறு காரண காரியம் விரிந்து, நிறைவாக இரண்டும் ஒன்றாகும் இறைவனின் திருவடிகளை எளிதில் அடையலாம் என்பதே கும்பத்தில் கரியன் குடிகொண்ட திருநாள் (22.4.2023) அன்று இயற்றும் வழிபாட்டின் மகிமையாகும்.

திருத்தலங்களில் உள்ள தெய்வ மூர்த்திகள் அனைவருமே பூமிக்கு உரித்தான மானிட ரூபத்தில் எழுந்தருள்வது வழக்கம். இதற்கு விதிவிலக்காக வலிவலம் திருத்தலத்தில் ஸ்ரீபிரஹஸ்பதி குரு நவகிரக மூர்த்தி தன் லோகத்தில் துலங்கும் அதே ரிஷி வடிவத்தில் வலிவலம் திருத்தலத்திலும் எழுந்தருளி இருப்பது நாம் பெற்ற பேறே. ஒரு யுகத்தில் ஐந்து கிரகங்கள் மேஷ ராசியில் எழுந்தருளிய முகூர்த்த நேரத்தில்தான் ஸ்ரீபிரஹஸ்பதி மூர்த்தியும் வலிவலம் திருத்தலத்தில் இத்தகைய ரிஷி வடிவில் எழுந்தருளினார். எனவே இவ்வாறு மேஷ ராசிக்கு எழுந்தருளும் ஸ்ரீபிரஹஸ்பதி மூர்த்தியை அனைத்து நவகிரக மூர்த்திகளும், லக்ன தேவதை உள்பட, வணங்கி வரவேற்கும் சுப முகூர்த்த நன்னாளாக 22.4.2023 அமைவதால் வலிவலம் திருத்தலத்தில் அனைத்து நவகிரக மூர்த்திகளுக்கும் தாமே அரைத்த மஞ்சள் பொடியால் அபிஷேகித்து மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, மஞ்சள் நிற சாமந்திப்பூவால் அலங்கரித்தல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய ஒரு பேறே. குதிரைவால் அரிசியால் சாதம் சமைத்து வெல்லம் சேர்த்து அடியார்களுக்கு நைவேத்ய பிரசாதமாக அளித்தலும் நன்றே.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
வலிவலம்

திருக்கோயில்களில் ஒவ்வொரு நவகிரக மூர்த்திக்கும் ஒவ்வொரு வண்ண ஆடை அணிவித்து இருப்பதை நீங்கள் தரிசித்து இருப்பீர்கள். உதாரணமாக, சந்திரன் வெள்ளை, செவ்வாய் சிவப்பு என்றவாறாக. இவ்வாறு வியாழன் குரு பகவானுக்குரிய மஞ்சள் ஆடையை அனைத்து நவகிரக மூர்த்திகளுக்கும் அணிவிப்பது முறையா என்ற சந்தேகம் சிலருக்குத் தோன்றலாம். இது சம்பந்தமான நம் சற்ருவின் வழிகாட்டுதலை இங்கு அளிக்கிறோம்.

எதிர்காலத்தில் வண்ணம் ஒன்றைத் தவிர அனைத்து உணவுப் பொருட்களும் கலப்படம் ஆகி விடும், இது தவிர்க்க முடியாதது, எதில் எதைக் கலப்பார்கள் என்று எந்த அறிவு ஜீவியாலும் கண்டு பிடிக்க முடியாது என்பது ஒரு புறம் இருக்க அதைப் பலராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது என்பதும் இன்றைய சூழ்நிலை. இந்நிலையில் வார வண்ண ஆடைகளே அதாவது ஒவ்வொரு நாளுக்கும் உகந்த ஆடைகளை புதன் பச்சை, வியாழன் மஞ்கள் என்றவாறு அணிதலே இந்த உணவுக் கலப்படத்தால் ஏற்படும் தீய இரசாயன விளைவுகளிலிருந்து ஓரளவேனும் நிவாரணம் பெறும் மார்கமாகும்.

ஒரு சில நாட்களில் இவ்வாறு அந்தந்த நாளுக்கு ஏற்ற ஆடைகளைப் பெற முடியாதபோது நம் சற்குருவால் அளிக்கப்படும் விதி விலக்கே மஞ்சள் என்பது. அதாவது எந்த நாளில் அணிய வேண்டிய உரிய வண்ண ஆடை கிட்டாவிட்டாலும் அந்த நாளில் மஞ்சள் நிற ஆடையை அணிவதால் அது அந்த நாளுக்குரிய ஆடையாக அனைத்து நவகிரக மூர்த்திகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே பிரகஸ்பதி குருவை வரவேற்கும் முகமாகவே மஞ்சள் பொடியால் நவகிரக மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள் வண்ண ஆடைகளை நவகிரக மூர்த்திகளுக்கு அணிவிக்கும்படி நம் சற்குரு அருள்கின்றார். முடிந்தால் அடியார்களும் மஞ்சள் ஆடையில் துலங்கி மேற்கூறிய அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றுவதும் சிறப்புடையதே.

தம்பன இரகசியங்கள்

ஜல ஸ்தம்பனம், அக்னி தம்பனம், வாயு தம்பனம் போன்ற தம்பன இரகசியங்களைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். தம்பனம், ஸ்தம்பனம் என்றால் நிலை நிறுத்துதல் என்று பொருள். அதாவது அக்னி தம்பனம் என்றால் அக்னியில் உள்ள சக்திகளை நிலைநிறுத்தி அது எங்கும் பரவாதபடி, அல்லது குறிப்பிட்ட ஒரு பொருளின் மீது மட்டும் பரவும்படி செய்தல் அக்னி தம்பனம் ஆகும். இத்தகைய அக்னி தம்பனம் செய்யக் கூடியவர்கள் அக்னியின் மீது நடப்பதையோ, அக்னிமேல் பல மணி நேரம் அமர்ந்திருப்பதையோ நாம் காணலாம்.

இவ்வாறு நம் கோவணாண்டி பெரியவர் ஆற்று நீரின் மீது பத்மாசனம் இட்டு படுத்திருந்த போட்டோவைப் பற்றி நாம் பலமுறை விவரித்துள்ளோம். இது நீர் தம்பனத்திற்கு எடுத்துக் காட்டு. இது போல் முகூர்த்த தம்பனம் என்றும் உண்டு. வெள்ளிக்கிழமை, அனுஷ நட்சத்திரம், வளர்பிறை துவாதசி திதி, ரிஷப லக்னம், சுக்ர ஹோரை போன்ற ஐந்து அபூர்வ அம்சங்கள் ஒன்று சேர்ந்து விளங்கும் முகூர்த்த நேரம் லட்சுமி கடாட்ச அம்சங்கள் கூடியதாகத் திகழ்கின்றது.

ஸ்ரீமுருகப் பெருமான்
திருக்குவளை

இந்த முகூர்த்த நேரத்தையே தம்பனம் செய்து அதை இறைப் பரிசாக அகத்திய மகரிஷிக்கு எம்பெருமான் அளித்த வரலாறும் நீங்கள் அறிந்ததே. இந்த தம்பன முகூர்த்தத்தை மடிப்பால் தானம் என்பதாக 21.4.2023 வெள்ளிக் கிழமை அன்று ஸ்ரீபிரஹஸ்பதி அருள்வதால் இதை அடியார்கள் பயன்படுத்தி பலன்பெறும் விதமாக அவரவர் இல்லங்களிலோ அல்லது வலிவலம் திருத்தலத்திலோ காலை சூரிய உதய நேரத்திற்கு முன்பாக ஆரம்பித்து மாலை சூரியன் மறைந்த பின்னும் நிரவுமாறு இவ்வாறு கன்றிற்கு பால் ஊட்டுதல் என்பது கிடைத்தற்கரிய பேறே. நாட்டு மாடுகள் இத்தகைய பூஜைக்கு உகந்தவை என்பதை மறக்க வேண்டாம்.

தம்பன மகரிஷி என்ற ஓர் மகரிஷி முருகப் பெருமான் தோன்றிய சரவணப் பொய்கையில் முருகப் பெருமான் வரவிற்காகக் காத்திருந்து அங்கு தவமியற்றிக் கொண்டிருந்தார். மகரிஷி அங்கு காத்திருந்ததன் நோக்கம் என்னவோ? சிவபெருமான் சூரபத்மனை அழிப்பதற்காக தோற்றுவிக்கும் முருகப் பெருமானை தரிசிப்பதற்காகவே அங்கு கொலுவிருந்தார், அரக்க சக்தியை அழிக்கவல்ல ஒரு உத்தம குழந்தையை தரிசிப்பதற்காக அங்கு காத்திருந்தார் என்பதை விட முழுக்க முழுக்க சிவ ஜோதியாக, சிவ ஜோதியால், அக்னிப் பிழம்பாக தோன்றும் குழந்தை வடிவத்தை தரிசிக்க வேண்டும் என்பதே அம்மகரிஷியின் நோக்கம்.

எம்பெருமானும் அக்னி, நீர் என்ற இரண்டு சக்திகளையும் ஒன்றாய் தம்பனம் செய்யும் சக்தி பெற்ற ஒருவரே இந்த அரிய காரியத்தைச் செய்ய முடியும் என்பதால் இந்த அற்புத பொறுப்பை தம்பன மகரிஷிக்கு அருளி அப்பெருந்தகை இந்த பொறுப்பை வெற்றிகரமாக சாதிக்கும் நாள் வரை பொறுத்திருந்ததால்தான் தேவர்கள் எத்தனையோ யுகங்கள் எம்பெருமானை வேண்டியும் முருகப் பெருமானின் அவதாரம் தோன்றுதற்கு அத்தனை காலம் கடந்தது.

ஒரு சாதாரண குழந்தையே தாமரை மலர் மேல் தோன்றினால் அம்மலரால் ஒரு குழந்தையைத் தாங்க முடியுமா, மலர் கருகி விடாமல் முக்கண் ஈசனின் விழிச் சுடர் சக்திகளைத் தாங்க முடியுமா? அவ்வாறு குழந்தையைத் தாங்கும் ஒரு தாமரை நீரில் முழுகாமல் இருக்குமா? இவ்வாறு அக்னி நீர் என்ற இரண்டு சக்திகளையும் தம்பன மகரிஷி தம்பனம் செய்து முருகப் பெருமானைத் தாங்கியதால் வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி என்ற இரண்டு சஷ்டி திதிகளிலும் வலிவலம், திருக்குவளை திருத்தல முருகப் பெருமான்களை வணங்கி குறைந்தது 108 செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடுதலால் நற்சந்ததிகளைப் பெற இது வழிவகுக்கும்.

உலகிற்கு ஓர் உன்னதம்

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 40000 சுயம்பு லிங்கத்திற்கும் மேலாக எழுந்தருளி உள்ளன என்பார் நம் சற்குரு. இத்தனை இறை மூர்த்திகள் எழுந்தருளி இருக்கும்போது நாம் எந்த இறை மூர்த்தியை வணங்குவது என்று கேட்கத் தோன்றலாம். எப்படி அனைத்து குழந்தைகளும் அன்பான தாய் தந்தை மூலம் இவ்வுலகில் தோன்றினார்களோ, அந்த தாய் தந்தையர்களை முறையாக வணங்குவதால் மட்டுமே அவர்கள் அனைத்து நலன்களையும் பெறுவார்கள் என்று சுட்டிக் காட்டுவதே வலிவலம் திருத்தல மகிமை.

இவ்வாறு தாய் தந்தையர்களைப் பற்றி அறிய முடியாது இருப்பவர்கள் உத்தம பெரியோர்களை, தன் குல குரு, ஆன்மீக வழிகாட்டியை தாய் தந்தையாக ஏற்று அவர்களைத் தொடர்ந்து வழிபடுவதாலும் உயர் நிலைகளை அடையலாம் என்பது உறுதி.

வலியன் வலம் வரும்
ஸ்ரீபிடாரி அம்மன் வலிவலம்

தாயின் மீதுள்ள அன்பின் காரணமாகவே கோச்செங்கட்சோழன் சுக்ர சக்திகள் என்னும் தனாகர்ஷண சக்திகளை தம்பனம் செய்து அந்த அருந்தவத்தால் கிட்டிய மாபெரும் பொக்கிஷங்களைக் கொண்டே முன்னூற்றுக்கும் மேற்பட்ட சிவத்தலங்களைக் கட்டினான். கோச்செங்கட்சோழனின் தாய் கமலவதி சற்று நேரத்தில் ஒரு அருமையான தெய்வீக முகூர்த்தம் தோன்றப் போவதால் அந்த அரிய நேரத்திலேயே கோச்செங்கட் சோழனை பெற்றெடுக்க வேண்டி தலை கீழாகத் தொங்கி குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்ற வரலாற்றை அறிவோம்.

மிகுந்த வேதனையைப் பொறுத்துக் கொண்டு கமலவதி தலைகீழாய்த் தொங்கினாள் என்று நாம் நினைத்தாலும் நம் சற்குருவே இதன் உண்மை நிலையை உரைக்க வல்லவர். குழந்தை பிறக்கும் சமயத்தில் கோச்செங்கட் சோழன் முற்பிறவி ஒன்றில் இதய கமல நாதேஸ்வரர் திருத்தலத்தில் தாரண பிரதட்சணம் என்ற அரிய பிரதட்சிணத்தை இயற்றி பல காலம் வழிபட்டிருந்ததால் இந்த பிரதட்சிண சக்திகள் ஒரு சிவபக்தி மிகுந்த குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு தாய்க்கே உதவின என்றால் என்னே தாரண பிரதட்சிணத்தின் மகிமை. இதுவே ‘தாயைக் காத்த தனயன்’ ஒருவரின் நற்செயல்.

கமலம் என்றால் தாமரை, கமலவதி என்றால் தாமரை சக்திகளைப் பெற்றவள் என்று பொருள் அல்லவா? தாமரை தாரணம் செய்த தாமரையே கோச்செங்கட் சோழன்.

வானுயரும் வலிவலம்
ராயபுரம் சென்னை

ஜனன வழி, மரண வழி என்ற இரு வழிப்பாதைகள் வழியாகவும் பூலோகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் பயணம் செய்துதான் ஆக வேண்டும். இந்த இரு வழிப்பாதைகளும் மனிதனுக்கு எல்லையில்லா ஆனந்தத்தை அளிப்பவையே. மனிதர்கள் கருதுவது போல் இவை வேதனையான பாதைகள் அல்ல. இந்த இரு வழிப்பாதைகள் பற்றிய பூரண அறிவைப் பெற்ற ஒரு மனிதனே இறை தரிசனத்திற்கு தகுதி உடையவன் ஆகிறான். இந்த உண்மையை தெளிவாக உணர்த்துவதே இதய கமல நாதேஸ்வரரின் வழிபாடு.

சிலந்தியை எட்டுக் கால் பூச்சி என்றும் கூறுவர். எட்டுக் கால்களுடன் கூடிய சிலந்தியே கோச்செங்கட் சோழனாக பிறப்பதற்கு ஆயத்த வழிபாடுகளை இதய கமல நாதேஸ்வர திருத்தலத்தில் மேற்கொண்டது என்றால் இதன் பின்னணியில் அமைந்த இரகசியம் என்னவோ? உலகில் சக்தி வாய்ந்த எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்பில் உள்ள லென்சுகளை ஒட்டுவதற்கு சிலந்தி வலையே பிசின் என்ற ஒட்டுப் பொருளாகப் பயன்படுகிறது. ஆனால், இந்த சக்தி வாய்ந்த பசையில் சிலந்தியின் கால்கள் ஒட்டிக் கொள்வதில்லை. இதற்கு உதவுவதே சதாசர்வ காலமும் சிலந்தி அதன் பரிணாமத்தில் ஜபிக்கும் ஓம் நமோநாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரம் ஆகும்.

ஓம் நமோநாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை எட்டுக் கோடி முறை ஜபித்தவர்களே இவ்வாறு தாமரை இலைத் தண்ணீராகவும், பந்தத்தில் சிக்காத பரம சிலந்தியாகயும் வாழ்க்கை நடத்தவல்லவர்கள் என்று உணர்த்துவதே வலிவலத்தில் நிறைவேற்றும் வலிய வழிபாடு.

ஒன்பது வயதில் நம் சற்குருவை கோவணாண்டி பெரியவர் ஆட்கொள்ள அன்று முதல் அங்காளி பரமேஸ்வரி தேவியின் திருவடிகளை தினமும் வலம் வந்த பெருமையை உடையவரே நம் சற்குரு. ஒரு முறை வடஇந்திய யாத்திரை சென்றிருந்தபோது பெரியவர் சிறுவனான நம் சற்குருவிடம், “ஏண்டா, இன்னிக்கி ஆத்தாவை காலையில் வலம் வந்தாயா?” என்று கேட்கவே சிறுவன் தனக்கே உரிய துடிப்புடன், “ஏன் வாத்யாரே, உனக்கு என்ன ஆச்சு, நாம்தான் யாத்திரையில் ரயிலில் இருக்கிறோமே, நாம் எப்படி சென்னை ராயபுரத்தில் இருக்கும் அங்காளியை வலம் வருவதாக்கும்?” என்று கேட்டான். கோவணாண்டியோ, “ஆமாண்டா, நானும்தானே உன்னோட ரயிலிலேயே வர்றேன், நான் மட்டும் ஆத்தாவை மறந்துட்டேனா என்ன?” என்று கூறி தன் உள்ளங்கை டீவியை சிறுவனிடம் காட்ட அதைக் கண்ட சிறுவன் மிரண்டு போய் விட்டான்...

ஸ்ரீபைரவ காலபைரவ மூர்த்திகள்
வலிவலம்

அப்படி என்ன ஒரு மிரட்டும் காட்சியை சிறுவன் பெரியவரின் உள்ளங்கை டீவியில் கண்டான் ... ?

பெரியவர் வேகவேகமாக ராயபுரம் அங்காள பரமேஸ்வரி தேவியை வலம் வரும் அற்புத காட்சிதான் பெரியவரின் உள்ளங்கையில் சிறுவன் கண்ட காட்சி. பெரியவர் தொடர்ந்தார், “நல்லா தெரிஞ்சுக்கோடா, நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, ஆத்தாவை மறந்துடக் கூடாதுடா, கண்ணு...”, என்ற பெரியவரின் தழுதழுத்த குரல் சிறுவனைத் தழுவியது. அப்புறம் என்ன ... சிறுவன் குருமங்கள கந்தர்வாவாக உயர்ந்து மனித உடல் என்னும் சட்டையைக் கழற்றும் கடைசி நாள் வரை அங்காளி பரமேஸ்வரி தேவியை தினமும் தனக்கு விதிக்கப்பட்ட ஆயிரம் முறைக்குக் குறையாமல் வலம் வந்தார் என்பதே.

தன்னுடைய உடலை மறைத்துக் கொள்ளும் தருணம் வரும்போது அந்தப் பிரிவைச் சிறுவனால் தாங்கிக் கொள்ள முடியாது என்ற காரணத்தால் பெரியவர் பல நாட்கள் சிறுவனைப் பார்க்காமலே இருந்தார். அப்போது மிகவும் வதங்கிய முகத்துடன் கோயிலைச் சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருந்தான் சிறுவன். அவ்வாறு மிகவும் மனம் வருந்தி ஆயிரம் பிரதட்சிணங்களை நிறைவேற்றி விட்டு கோயிலுக்கு வெளியே வந்த போது அந்த கோயிலுக்கு எதிரில் உள்ள கடைக்காரன், “ஏம்பா, தினமும் உன்னைத் தொடர்ந்து அங்காளியை வலம் வரும் பெரியவர் ஒரு நாள் கூட ஏன் உனக்கு முன்னால் செல்லாமல் இருக்கிறார்?” என்றும் ஏதும் புரியாதவனாய் கேட்டான்.

திடுக்கிட்டான் சிறுவன்... “ஆஹா ... என்ன ஒரு சரியான முட்டாளாய் இத்தனை நாள் இருந்து விட்டேன்... நாம் வலம் வரும் ஒவ்வொரு நாளும் பெரியவரும் நம்முடன் வலம் வருகிறார் என்றால்... இதை விடச் சிறந்த ஒரு பெரிய ‘கொடுப்பினை’ எதுவாக இருக்க முடியும்?” என்று நினைத்து கதறி அழாத குறையாக தன் வீட்டை அடைந்தான் சிறுவன்.

ஆம்... பெரியவர் மட்டும்தான் சிறுவனைத் தொடர்ந்து வலம் வருகிறாரா என்ன ? நம் சற்குரு இதுவரை 51 முறை பூமியில் மனிதனாய்த் தோன்றி உள்ளார் அல்லவா? இத்தனை மனித அவதாரங்களும் அந்தந்த மனித உருவில் ராயபுரம் அங்காளி பரமேஸ்வரி தேவியை தினமும் வலம் வர அந்த மனித ‘சிறுவர்களை’ தொடர்ந்து நம் கோவணாண்டியின் திருஉருவமும் வலம் வந்து கொண்டுதானே இருக்கிறது? இந்த ஒரு திருக்காட்சியை மட்டும் நாம் கண் முன் கொண்டு வந்து தியானிக்க முடிந்தால் இதை விடச் சிறந்த ஒரு தியானம் நமக்கு சித்திக்குமா, தித்திக்குமா?!

இவ்வாறு நம் பெற்றோரை, பெரியோரை, சற்குருவை தினமும் வலம் வரும் உறுதி மொழியை எடுத்து செயல்பட வேண்டிய திருத்தலமே வலிவலம்.

பாரு பாரு நல்லா பாரு!

“எங்க பெரிய ஐய்யா (கோவணாண்டி) இதை அடிக்கடி சொல்வாரு, பாரு பாரு நல்லா பாரு, என்று...அவர் இந்தப் பொன் மொழியை சொல்லிக் கொடுத்த நாளிலிருந்து தினமும் அடியேன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த மகா வாக்கியத்தில் எத்தனை எத்தனை வேதப் பரல்கள்தான் எல்லையில்லாமல் தோன்றிக் கொண்டே இருக்கின்றன...”, என்று கூறி அதில் ஒரு வேதப் பரலை மட்டும் எடுத்து விளக்கினார் நம் சற்குரு. வலிவலம் திருத்தலத்துடன் தொடர்புடைய அந்த வேத மகா பொக்கிஷத்தை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அனைத்தும் பிரம்மமே!
வலிவலம்

நம் சற்குரு ஒவ்வொரு பௌர்ணமி தோறும் அடியார்களைப் பார்க்கும்போது முதலில் அவர்களை நேருக்கு நேர் பார்க்க மாட்டார். அவர்களைச் சுற்றித் தன் பார்வையை ஒட விட்டு அடுத்த நாள்தான் அடியார்களைப் பார்ப்பார். “நீங்கள் அடியேனைப் பிரிந்த ஒரு மாத காலத்திற்குள் சும்மாவாகவா இருக்கிறீர்கள், எல்லா ‘குபார்’ வேலையும் (தவறான செயல்கள்) பார்த்து விட்டுத்தானே இங்கு வந்து நிற்கிறீர்கள். அவை எல்லாம் நிழல் வடிவில் உங்கள் சூட்சும சரீரத்தைச் சூழ்ந்து நிற்கும். அதை முதலில் அடியேன் சரி செய்ய வேண்டும்...”, என்பார்.

தற்போது நம் சற்குருவைப் பார்க்க முடியாததால் இந்த ‘குபார்’ வேலையில் சூழும் கறைகளை எப்படி சரி செய்வது? இதற்கு உதவும் ஒரு தியான முறையை இங்கு விவரிக்கிறோம். நாம் ஒரு மலரைப் பார்க்கும்போது அந்த மலருக்கும் நமக்கும் உள்ள இடைவெளி வெற்றிடம் போல் தோன்றும் அல்லவா? உண்மையில் அது வெற்றிடம் அல்ல, பிரம்மமே. பிரம்மம் என்பதற்கு மாறுபாடு இல்லாதது, என்றும் நிலைத்திருப்பது, பிரிவினை இல்லாதது என்றெல்லாம் பொருள் உண்டு அல்லவா?

இதை நாம் உணர்வது எப்படி? ஒரு ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது நமக்கு நடைபாதையில் (platform) உள்ளவர் நமக்கு எதிர்த்திசையில் நகர்வதாகத் தோன்றும், நமக்கு தூரத்தில் உள்ள மரங்கள் நம்முடன் நகர்வது போல் தோன்றும். இந்த இரண்டு பொருட்களுக்கும் இடையில் உள்ள ஒரு புள்ளி நகராமல் இருக்கும். இதைத் தியானிப்பதே நாம் அசையாமல் உள்ள வெற்றிடத்தை, பிரம்மத்தை, தியானிப்பதாகும். இந்த நகராத புள்ளியை உங்களால் ‘காண’ முடிந்தால் அடுத்து நீங்கள் தெய்வீகத்தில் சாதிக்க வேண்டியது எதுவுமே இல்லை, ஆம், உங்களால் பிரம்மத்தைத் தெளிவாகக் காண முடிகிறது, உணர முடிகிறது என்றால் இதை விடச் சிறந்த தெய்வீக நிலை ஒன்று உண்டா என்ன?

அது மட்டுமல்ல, நீங்கள் அசையாத இந்த பிரம்ம புள்ளியை ‘பார்க்க’ முடிந்தால் சிறிது சிறிதாக (உண்மையில் சிறிது சிறிது என்பது நம்முடைய புரிந்து கொள்ளும் நிலைக்காக) நீங்கள் பிரம்மம் முழுவதையுமே, கடவுள் தத்துவத்தையே புரிந்து கொண்டவர் ஆகி விடுவீர்களே. இதற்கு உதவும் ஒப்பற்ற தலமே வலிவலம் மேவிய வடிவழகன் உறையும் தலம். முன்னேறுங்கள், வெற்றி பெறுங்கள் ! அசையாத இந்த பிரம்ம புள்ளி பிரகாசம் பெற்று உங்கள் தெய்வீக கேள்விகள் அனைத்திற்கும் விடையளிக்கவல்லது என்றாலும் பிரம்மத்தை தரிசிக்கும் ஒருவர் மனதில் கேள்விகள் முளைக்குமா, முளைக்க முடியுமா, கேள்வியும் பதிலும் ஒன்றாக இணையும் நிலைதானே பிரம்ம நிலை?!

பிரம்மஞானத்தைப் பெற்ற ஒருவரால்தான் மற்றோர் பிரம்மஞானியை இனங் கண்டு கொள்ள முடியும். அதனால்தான் வசிஷ்டரிடம் பிரம்மஞானி பட்டத்தைப் பெறுவதற்காக பல காலம் முயன்றார் விஸ்வாமித்திரர். இது என்றோ நடந்த வைபவம் அல்ல, இன்றும் ரமண மகரிஷியின் பிரம்ம நிலையை உறுதி செய்தவரே நாம் அறிந்த பிரம்ம ஞானியான நம் சற்குரு. ஒரு முறை ரமணாஸ்ரமத்தில் பகவான் அமர்வதற்காக ஒரு சோபாவை கொண்டு வந்து போட்டு அதில் பகவானை அமரச் சொன்னபோது அதில் அவர் அமராமலே பல நிமிடங்கள் அதைப் பார்த்துக் கொண்டே இருந்தாராம். “பிரம்மம் என்பது கல்லிலும் புல்லிலும் நிரவி இருப்பதுதானே, அப்படியானால் ‘அது’ பகவான் அமரும் சோபாவில் இல்லாமல் போகுமா, அந்த பிரம்ம ஞானத்தில் இலயித்து தன்னை மறந்து நின்றதால்தான் ரமணரால் சட்டென்று அந்த இனிய அனுபவத்திலிருந்து மீண்டு தன்னிலைக்கு வந்து அந்த சோபாவில் அமர அவ்வளவு கால தாமதம் ஆயிற்று...”, என்றார் பிரம்ம ரிஷியான நம் சற்குரு.

காமேஸ்வரமா ராமேஸ்வரமா?

திருக்குவளை திருத்தலத்தின் தீர்த்தமான சந்திர தீர்த்தம் மேற்கு நோக்கிப் பாய்ந்து கடலில் சங்கமமாகும் திருத்தலமே காமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. முதன் முதலில் திருக்குவளை செல்வோர் அங்கிருந்து காமேஸ்வரத்திற்கு செல்லும் வழி விசாரிக்கையில் பலரும் ராமேஸ்வரத்திற்கே வழி கூறுவதைக் கண்டு குழப்பமடைவர். இது உண்மையில் ராமேஸ்வரத்திற்கும் காமேஸ்வரத்திற்கும் உள்ள நெருக்கத்தைக் குறிக்கும் ஒரு இறை அனுபவமே. சந்திர தீர்த்தம் தற்போது வெள்ளையாறு, வெள்ளாறு என்று அழைக்கப்டுகிறது.

வானும் கடலும் முத்தமிட்டால்...
காமேஸ்வரம்

ராம பிரான் சூரிய குலத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ண பகவானோ சந்திர குலத்தைச் சேர்ந்தவர். ராம பிரான் பல திருத்தலங்களிலும் திலதைப்பத்து, ராமேஸ்வரம், வைத்தீஸ்வரன் கோயில் போன்ற திருத்தலங்களிலும் தன் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளித்துக் கொண்டு வந்தபோது காமேஸ்வரம் திருத்தலத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் அளிக்கையில் தம் மூதாதையர்கள் அனைவரையும் வானில் தரிசிக்கும் பேறு பெற்றார். இவ்வாறு 22 ஏப்ரல் 2023 சனிக் கிழமை அன்று காமேஸ்வரம் திருத்தலத்தில் தம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிப்பவர்களுக்கு அவரவர் மூதாதையர்களை வானில் தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.

இவ்வாறு மூதாதையர்களின் தரிசனத்தைப் பெறுவதால் என்ன சிறப்பு? என்று நம் மூதாதையர்கள் நாம் அளிக்கும் தர்ப்பணத்தை நேரில் பெறுகிறார்களோ அன்று முதல் நாம் அவர்களுக்கு எள் தீர்த்தம் கொண்டு தர்ப்பணம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே நம் சற்குரு அளிக்கும் உத்திரவாதம்.

நம் சற்குரு மட்டும் அல்லாது இறை தரிசனம் பெற்ற அனைத்து மகான்களுமே இவ்வாறு தங்கள் மூதாதையர்களை நேரில் கண்டு தரிசித்தவர்கள்தாம். எனவே நம் சற்குருவின் கூற்று உண்மைதான் என்பதை நாம் அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிட்டும் தலமும் காமேஸ்வரமே. அப்படி என்ன இத்தனை சிறப்பு காமேஸ்வரத்தில் பொலிகின்றது? மகாகவி பாரதியார் வானமும் கடலும் முத்தமிட்டால் அந்தக் காட்சி எப்படி இருக்கும் என்று வர்ணித்தார் அல்லவா? வானமும் கடலும் இணையும்போது அதை சிவ சக்தி ஐக்யமாக கண்டு தரிசித்தவரே மகாகவி.

அதுபோல் வானும் கடலும் முத்தமிடும் சிவசக்தி ஐக்ய தரிசனம் மட்டும் அல்லாது சந்திர நதியும் சமுத்திரமும் முத்தமிடும் மற்றோர் சிவசக்தி ஐக்ய தரிசனத்தை அடியார்கள் பெறும் திருத்தலமே காமேஸ்வரமாகும்.

நதியும் கடலும் முத்தமிட்டால்...
காமேஸ்வரம்

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதாக ராமபிரான் தான் கண்ட மூதாதையர்களின் காட்சி தம்முடைய குலம் விளங்க அமைந்தால் போதும் என்றா நினைத்தார், இல்லையே? அந்த திவ்ய தரிசனத்தை மற்றவர்களும், இந்த மண்ணின் மைந்தர்களும் பெற வேண்டும் என்று காமேஸ்வர கடற்கரை மணலில் மண்டியிட்டு இறைப் பரம்பொருளை வேண்டி நின்றார்.

ராம பிரான் மட்டும் அல்லாது சீதை, லட்சுமணன், அனுமார், ஜாம்பவான், அங்கதன் போன்றவர்களும், படை வீரர்கள் அனைவரும் காமேஸ்வர கடற்கரையில் மண்டியிட்டு இறைவனை வேண்டினர். இத்தகைய அபூர்வ அனுகிரகத்தைப் பெறும் முகமாக நாமும் 22.4.2023 அன்று இரு விதமான தர்ப்பண வழிபாடுகளை காமேஸ்வரத்தில் இயற்றுதல் சிறப்பு.

முதலில் கடற்கரை ஓரத்தில் தர்ப்பை சட்டங்களை அமைத்து இந்த தர்ப்பை சட்டங்களைச் சுற்றி குறைந்தது 12 நீலோத்பல மலர்கள், 12 செந்தாமரை மலர்களை வைத்து இந்த தர்ப்பை சட்டங்கள் மேல் தர்ப்பணத்தை அளிக்க வேண்டும். நீலோத்பல மலர்களும் செந்தாமரை மலர்களும் இணைந்த காட்சி வானும் கடலும் முத்தமிடும் தெய்வீக அனுகிரகத்தை அளிக்கவல்லவை. இந்த தர்ப்பைகளை கடலில் விசர்ஜனம் செய்த பின்னர் சந்திர நதிக் கரையில் இதே போல் மீண்டும் தர்ப்பை சட்டங்களை அமைத்து தர்ப்பைகளைச் சுற்றி 12 வெண் தாமரைகளையும் 12 செந்தாமரைகளையும் வைத்து தர்ப்பண பூஜைகளை நிகழ்த்த வேண்டும். வெண் தாமரைகளும் செந்தாமரைகளும் நதியும் கடலும் முத்தமிடும் தெய்வீக அனுகிரகத்தை அளிக்க வல்லவை. இந்த தர்ப்பைகளை மலர்களுடன் சந்திர நதியில் விசர்ஜனம் செய்து விடலாம்.

ஸ்ரீகாமநவநாதேஸ்வரர்
காமேஸ்வரம்

ஸ்ரீதிரிபுவன நாயகி
காமேஸ்வரம்

தர்பைச் சட்டத்தின் மேல் தாமரை மலர்களை வைக்கும்போது தாமரை மலர்களின் இதழ்களைப் பிரித்து வைக்க வேண்டும். இது சம்பந்தமான ஒரு அடிமை கண்ட ஆனந்த நிகழ்ச்சி. நம் சற்குரு திருச்சியில் உள்ள பூஜை வீட்டிற்கு வருகை தந்திருந்தபோது அங்குள்ள இறை மூர்த்திகளை அலங்கரிக்க தாமரை மலர்களின் இதழ்களை ஒவ்வொன்றாகப் பிரித்து பிரித்து இறை மூர்த்திகளுக்கு சூட்டினார். அந்த இனிய காட்சியை காணும் பெரும்பேறு ஒரு சில அடியார்களுக்கு கிடைத்தது என்றாலும் காமேஸ்வரத்தில் நாம் தர்ப்பணம் அளிக்கும்போது இவ்வாறு தாமரை மலர்களின் இதழ்களைப் பிரித்து தர்பைச் சட்டத்தின் மேல் வைப்பதால் நம் மூதாதையர்களின் அனுகிரகம் மட்டும் அல்லாது அரிதிலும் அரிய காமேஸ்வர பித்ரு மூர்த்திகளின் கனிந்த அனுகிரகமும் இதில் பொலியும்.

இந்த அரிய அனுகிரகம் தானாகக் கனிவதில்லை. சுக்கிர விரல் என்ற கட்டை விரலாலும், சூரிய விரல் என்ற மோதிர விரலாலும் நாம் தாமரை இதழ்களைப் பிரிக்கும்போது உண்டாகும் அரவிந்த சக்திகளே இவை. நம் சற்குருவின் ஜனன ஜாதகத்தைக் கூர்ந்து நோக்கினால் நான்காம் இடத்திலிருந்து குரு தன் நேர் பார்வையால் செவ்வாய் பகவானும் சுக்ர பகவானும் இணைந்த இணைப்பை நோக்கும் அதிசயத்தைக் காணலாம். அரவிந்த நோக்கு என்ற இந்த ஒரு ஜாதக அமைப்பை மட்டும் நாம் ஆராய்ந்து தெளிவு பெற குறைந்தது நூறு வருடங்கள் ஆகும் என்பதே இந்த இணைப்பின் இரகசியம் ஆகும். இந்த குரு மங்கள (செவ்வாய்) கந்தர்வ (சுக்கிரன்) அமைப்பு தாமரை மலர்கள் மூலம் அவதார சக்திகளை, குறிப்பாக ராமர் கிருஷ்ண பகவானின் அனுகிரக சக்திகளைப் பெற்றுத் தருவதாகும்.

தர்ப்பணம் அளிக்கும் முன் கடற்கரை ஓரத்தில் மணலின் மேல் ஓம் ஸ்ரீஅகத்தீஸ்வராய நமஹ என்று தங்கள் வலது மோதிர விரலால் எழுதி அதன் மேல் கடல் நீர் தழுவி செல்லும் வரை காத்திருந்து பின்னர் தர்ப்பண வழிபாடுகளை இயற்றுதல் வேண்டும். அகத்திய பிரான் ஏழு கடலையும் ஒரு துளி நீராக்கி தன் உள்ளங்கையில் வைத்து அருந்தியதால் சித்த நாயகனின் வயிற்றுக்குள் செல்லும் பாக்கியம் கிடைத்ததால் ஏழு கடல் தீர்த்தங்களும் தூய்மை அடைந்தன. இவ்வாறு கடல்களில் சேரும் கர்மங்களை தூய்மை செய்ய ஒவ்வொரு முறை கடலில் நீராடும்போதும் அல்லது தர்ப்பண வழிபாடுகள் போன்ற வழிபாடுகள் இயற்றும் முன்னும் இவ்வாறு கடற்கரை பூமியை புனிதப்படுத்துவது நன்று, மேலும் ஸ்ரீஅகத்தீசனுக்கும் காமேஸ்வர பித்ரு மூர்த்திகளுக்கும் நாம் அளிக்கக் கூடிய Red carpet welcome இதுவே.

இரண்டு திதிகள் ஒரே நாளில் இணையும் நாட்களைத் தவிர ஒரே நாளில் இரண்டு தர்ப்பணம் அளிப்பது கிடையாது. இங்கு நாம் அளிக்கும் கடற்கரை, சந்திரநதி சங்கமம் என்ற இரு புனித தீர்த்தக் கரைகளில் அளிக்கும் தர்ப்பணம் உண்மையில் இரண்டு புனித லோகங்களில் அளிக்கப்படுகின்றன என்பதே நம் சற்குரு பரிந்தளிக்கும் தெய்வீக இரகசியமாகும். அதை விவரிக்க ஆரம்பித்தால் இக்கட்டுரை எங்கோ நீளும் என்பதால் அதைப் பற்றி இங்கு விவரிக்கவில்லை. இந்த இரு தர்ப்பணங்களின் பின்னணியில் அமைந்த ஆன்மீக விந்தைகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் என்றாலும் இதை ஒரு அடிமை கண்ட ஆனந்த நிகழ்ச்சி மூலம் இங்கு விவரிக்கிறோம்.

ஸ்ரீகாமநவதீஸ்வரர் சிவாலயம்
காமேஸ்வரம்

ஒரு முறை நம் சற்குரு ஞானப்பால் அனுகிரகம் பொலியும் திருத்தலத்தில் உழவாரப் பணிகள் ஆற்றினார். உழவாரப் பணி நிறைவில் அங்குள்ள அடியார் வீட்டில் விருந்து பரிமாறப்பட்டது. அப்போது அந்த ஊரில் பிரசித்தி பெற்ற சிந்தூரா மாங்கனிகள் நம் அடியார்களுக்கு அளிக்கப்பட்டன. அந்த மாங்கனிகள் இரண்டை கேட்டு வாங்கிக் கொண்டார் நம் சற்குரு. அந்த மாங்கனிகளை தன்னுடைய சட்டை மேல் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

அப்போதெல்லாம் அடியார்கள் இரண்டு மேல் பாக்கெட்டுகள் கொண்ட சட்டைகளை தைத்துக் கொள்வார்கள். சிவ சக்தி ஐக்ய தத்துவத்தை விளக்குவதாக இந்த பாக்கெட்டுகள் அமையும். இவ்வாறு அர்த்தநாரீஸ்வர தத்துவத்தில் அமைந்த பாக்கெட்டுகளில் ‘குடியிருந்த’ மாங்கனிகளை பின்னர் அங்குள்ள அடியார்களுக்கு குரு பிரசாதமாக அளித்து விட்டார்.

இந்த தத்துவத்தை பின்பற்றி நாமும் வரும் சோபகிருது வருடம் முழுவதும் வியாழக் கிழமை அல்லது ரேவதி நட்சத்திர தினத்தன்று காமேஸ்வர திருத்தலத்திலிருந்து பெறும் மாங்கனிகளை ஒரு அடியாருக்கு இரண்டு மாங்கனிகள் என்ற விதத்தில் தானமாக அளித்தல் நலம்.

காமேஸ்வர திருத்தலத்தில் இரு தர்ப்பண வழிபாடுகளையும் நிறைவேற்றிய பின்னர் ராமபிரானை பின்பற்றி நாமும் நம் இடப்புறம் கடலை நோக்கி இருக்கும் வண்ணம் கடற்கரை மணலில் மண்டியிட்டு நின்று கொண்டு கைகள் கூப்பிய நிலையில் கண்களைத் திறந்து வானத்தை நோக்கி நம் மூதாதையர்களின் அனுகிரகம் நம்மீது வர்ஷிப்பதாக தியானித்துக் கொண்டு இருத்தல் சிறப்பு.

ஸ்கந்த பலா ஷீர பலா அகஸ்திய பலா என்ற மந்திரத்தை வாய் விட்டு குறைந்தது ஒரு நாழிகை நேரத்திற்கு, 24 நிமிடங்களுக்கு ஓதுதல் நலம். நம் மூதாதையர்கள் நம் கண்ணிற்கு தெரிகிறார்களோ இல்லையோ, நிச்சயம் அவர்கள் கண்ணிற்கு நாம் தெரிவோம், அவர்களின் அனுகிரகம் நமது மேலும், நமது சந்ததிகள் மேலும் பொழியும்.

காமேஸ்வர திருத்தலத்தில் நிகழ்த்தும் தர்ப்பண வழிபாடுகளின் மகிமையை விவரிக்க வார்த்தைகள் போதாது எனினும் இதன் ஒரு அனுகிரகமாக அடியார்களுடைய குழந்தைகள் தவறான வழியில் செல்லாது நல்ல வழியில் முன்னேறுவர். அவர்களுடைய தீய பழக்க வழக்கங்கள் மாறும், அனைத்திற்கும் மேலாக அவர்கள் நன்றியுடையவர்களாக மாறுவர். இதுதானே அனைத்து தாய் தந்தையர்களின் எதிர்பார்ப்பும்.

வேளாங்கன்னி தேவாலயம்

காமேஸ்வரம் அருகிலுள்ள வேளாங்கன்னி திருத்தலத்தில் இவ்வாறு பக்தர்கள் மண்டியிட்டு முழந்தாளில் பிரார்த்திப்பதற்கான காரணம் இப்போது விளங்கி விட்டது அல்லவா? குடும்ப அங்கத்தினர் ஒருவருக்கு 12 என்ற கணக்கில் மெழுகுவர்த்திகளை வாங்கி இத்தலத்தில் ஏற்றி வைத்த பின்னர், இத்தலத்தில் முழந்தாளிட்டு அன்னையிடம் பிரார்த்தித்தல் அவசியம். பின்னர் இங்கு கிட்டும் தென்னம்பிள்ளைகளை வாங்கி பாதியை அன்னை தலத்தில் அளித்து விட்டு, பாதியை தங்கள் ஊரில் சொந்த நிலத்தில் நட்டு வளர்த்து வருதல் நலம். பூச்சி அரிப்புகளால் பயிர்கள் பாதிக்கப்படாததோடு மட்டும் அல்லாமல் மழையின்மை, எதிர்பாராத காற்று போன்ற இயற்கைச் சீற்றங்களின் வேகமும் தணியும். நன்றியுள்ள பிள்ளைகள் மட்டும் அல்லாது நன்றியுள்ள வேலைக்காரர்களும், உறவினர்களும் நண்பர்களும் அமைவர். சொந்த நிலம் அமையாதவர்கள் இங்கு பெறும் தென்னம்பிள்ளைகளை தானமாக அளித்தலும் ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பே.

உச்சரிப்பு உதவியாளர்!

பிறப்பு இறப்பு இரகசியங்கள் நம் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டவை. உத்தம சற்குரு ஒருவர் மூலம் மட்டுமே இந்த இரகசியங்களைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடியும். காமேஸ்வரத்தில் தர்ப்பணம் அளிப்பவர்களுக்கு மட்டும் இங்குள்ள இரகசியங்களை தெரிவிக்கலாம் என்பது ஆன்மீகச் சட்டம். இந்த கட்டுரையை படிக்கும் அனைத்து அடியார்களும் காமேஸ்வரத்தில் தர்ப்பணம் அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் நம் சற்குரு அளித்த சித்த இரகசியங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறோம்.

கணவன் மனைவி இருவரின் சங்கமத்தில் உருவாகுவதே மனிதக் குழந்தை என்பதை நாம் அறிவோம். வெறும் ஆண் பெண் உறவோ, cloning technology போன்ற ஆராய்ச்சியின் விளைவால் தோன்றும் குழந்தைகளோ இந்த விதிக்குப் பொருந்தாது. ஆனால், இந்த விதிக்கு அப்பாற்பட்டு தோன்றிய மனிதக் குழந்தைகளே ராம பிரான், ஏசுநாதர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற அவதார மூர்த்திகள். அதே போல் மரணத்திற்குப் பின் மனித உடல் முற்றிலுமாக தகனம் ஆக வேண்டும். ஏதாவது அறுவை சிகிச்சை காரணமாக மனித உடலின் ஒரு உறுப்பு வெட்டி எடுக்கப்பட்டு விட்டாலும் அந்த உறுப்பு தகனம் ஆகாமல் எங்காவது மறைந்து இருந்தால் அந்த உறுப்பு தகனம் ஆனால்தான் அந்த உறுப்பிற்கு உரிய மனிதனின் சாயை சரீரம் மேல்நிலை பெறும், இல்லாவிட்டால் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அந்த மனித உடலுக்கு விமோசனம் கிட்டாது.

ஸ்ரீபிரம்மபுரீசர் திருக்குவளை

மனித உடலை பூலோகத்தில் விட்டு விட்டு பல்வேறு லோகங்களுக்கு எழுந்தருளிய மகான்கள் பலருண்டு. உதாரணமாக, ஸ்ரீடுட்டக்காமேன் என்ற நாமத்துடன் எகிப்திய பிரமிட்டில் விளங்கிய மகான், இன்றும் ஸ்ரீரங்கத்தில் உடலுடன் காட்சி தரும் ஸ்ரீராமானுஜர், கோவா தேவாலயத்தில் உள்ள புனித சேவியர் போன்றோர் உடலுடன் திகழும்போது அவர்கள் மேல் நிலை அடையவில்லையா என்ற கேள்வி எழலாம்.

அதே போல் திபெத்தின் பல குகைகளிலும், இமயமலை பனிச் சிகரங்களில் புதையுண்டு ஆயிரக் கணக்கான வருடங்களாக கிடக்கும் உடல்களும் உண்டு. இவர்களின் கதி என்ன? இவர்கள் உடலுடன் இருந்தாலும் இவர்களின் சாயைச் சரீரம் மட்டும் மேல் நிலைக்கு உயர்ந்து அந்தந்த லோகங்களை அடைந்து விடும் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியம். பூத உடல், சாயைச் சரீரம் இந்த இரண்டு சரீரங்களும் மேல் நிலை பெறவே நாம் காமேஸ்வர திருத்தலத்தில் இரண்டு விதமான தர்ப்பண வழிபாடுகளை நம் சற்குரு அருளால் நிறைவேற்றுகிறோம்.

இவ்வாறு பூத உடல் மறையாமலே உயர் நிலையை அடையும் பித்ரு மூர்த்திகள் காமேஸ்வர பித்ரு மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். இத்தகைய பித்ரு மூர்த்திகள் அபூர்வமாக தர்ப்பண வழிபாடுகளை ஏற்கும் திருத்தலமே காமேஸ்வர கடற்கரை திருத்தலமாகும். சந்திர நதி கடலுடன் சங்கமாகும் பகுதியே இத்தகைய சிறப்புகளுடன் பொலிகின்றது.

பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் மறைந்து போனவர்களைப் பற்றி செய்திகள் அறியாதோர் இங்குள்ள ஸ்ரீகாமநவநீதேஸ்வரர் சிவாலயத்தில் ஒவ்வொரு அமாவாசை நாளன்றும் வழிபாடுகள் நிறைவேற்றி வந்தால் விரைவில் அவர்களைப் பற்றி செய்தி கிட்டும்.

வரும் 26.4.2023 புதனன்று அமையும் திரிதின ராமநவமி உற்சவமானது இவ்வாறு இயற்கைச் சீற்றங்களால் மறைந்து போனவர்களுக்கும், சமீபத்தில் தோன்றிய தொற்று நோய் பாதிப்பால் தங்கள் வேலை, வியாபாரம், சொத்து போன்றவற்றை இழந்து அல்லல்படுவோருக்கும் நல்வழி காட்டக் கூடிய திருநாளாகும். இதை முறையாகக் கொண்டாடி தங்கள் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு பெறுமாறு அடியார்களை கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்கந்தபலா க்ஷீரபலா அகஸ்தியபலா

திருக்குவளை திருத்தலத்தில் ஸ்ரீஅகத்திய லிங்கம் இறைவன் இறைவிகளுக்கு இடையே சோமாஸ்கந்த நிலையில் திகழ்கின்றது. இது பற்றி சித்தர்கள் கூறும் சுவையான வரலாறு இதே. எம்பெருமான், கணேச மூர்த்திக்கும் முருகப் பெருமானுக்கும் இடையே உலகைச் சுற்றி வரும் போட்டியை வைத்துபோது அந்தப் போட்டியில் வென்ற வலிவல கணபதி மூர்த்திக்கு எம்பெருமான் மாங்கனி அளித்த வரலாற்றை ஏற்கனவே விளக்கியிருந்தோம். இதனால் பெரிதும் மனம் கலங்கிய முருகப் பெருமான் கோபித்துக் கொண்டு கயிலையை விட்டே புறப்பட்டு விட்டார். ஔவை பிராட்டி, அன்னை பார்வதி, பரமேஸ்வரன் போன்ற முழுமுதற் தெய்வங்களே ஆறுதலை அளித்தாலும் அதனால் எல்லாம் சற்றும் ஆறுதல் பெறாத முருகப் பெருமான் கோபக் கனலில் கொதித்துக் கொண்டே இருந்தார்.

ஸ்ரீஅகத்தீசன் திருக்குவளை

ஸ்ரீசுந்தர வடிவேலன் திருக்குவளை

முருகப் பெருமானின் பெருங்கோபம் தாங்காத பல லோகங்களும் வெந்து சாம்பலாகி மறைந்தன. இந்நிலையில் தேவர்கள் எல்லாம் ஒன்று கூடி அகத்திய பெருமானை பொதிய மலையில் வணங்கி முருகப் பெருமானின் கோபக் கனலைத் தணிக்க வழி கூறுமாறு வேண்டினர். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முருகப் பெருமானை வணங்கி ஒன்றுமறியாக் குழந்தை போல் முருகப் பெருமானின் கோபத்திற்கான காரணத்தை வினவினார் அகத்திய மாமுனி. நம் சற்குரு அடிக்கடி கூறுவதைப் போல் பெருங்கோபம் மனதில் பொங்கி எழுந்தால் அதைத் தணிக்கும் ஒரே வழி நம்முடைய சிறுவயது போட்டோவைப் பார்ப்பது ஒன்றுதான். இதே முறையைத்தான் கையாண்டார் அகத்திய பெருமானும். முருகனும் அவனின் ‘குழந்தை போட்டோவுமாக’ அமைவதுதானே ஓங்காரம். இந்த ஓங்காரத்தின் ஒலி வடிவைத்தான் அகத்தியர் தியானிக்க ஆரம்பித்தார். முருகப் பெருமான் தன்னுடைய ‘சிறு வயது போட்டோவைப்’ பார்த்தார்.

அகத்திய பெருமானுக்கும் வீணை கானத்தில் சிறந்த ராவணனுக்கும் போட்டி ஏற்பட்டபோது அருகே இருந்த பொதிய மலை என்ற மாமலைக் குன்றையே தன்னுடைய கானத்தால் உருக வைத்த அகத்தீசனின் குழந்தை முகத்தால் கரையாதா என்ன குழந்தை வேலனின் பிஞ்சு முகம்...

ஆம், அங்கே கரைந்தது குழந்தை வேலனின் கோபம்... கோபம் கரைந்து மறைந்தபோது அகத்திய பெருமானுக்கு ஏதாவது ஒரு பரிசுப் பொருளை அளிக்க விழைந்தான் வேலன். பொன்னையும் பொருளையும் விரும்புபவரா அகத்தீசன், அவருக்கு இறைவனின் உள்ளத்தைத் தவிர வேறு எதைப் பரிசாக அளிக்க முடியும் ...?

காமேஸ்வர மாங்கனிகள்

எனவே தன்னுடைய சொந்த இடமான சோமாஸ்கந்த இருப்பிடத்தை தன்னுடைய அன்பு முருகப் பரிசாக அகத்தீசனுக்கு அளித்து விட்டு தான் சற்றே பின்னணியில் அமர்ந்து கொண்டான். இந்த வரலாறு நிகழ்ந்த திருத்தலமே திருக்குவளை ஆகும். இறைவன் இறைவிக்கும் இடையே அகத்தீசன் சோமாஸ்கந்தனாய் அமர்ந்திருக்க முருகப் பெருமான் ஸ்ரீசுந்தர வடிவேலராய் இங்கு எழுந்தருளி உள்ளான். முருகப் பெருமானின் திருநாமமான சுந்தர வடிவேல் என்ற நாமமே முருகப் பெருமானின் கோபத்தையும், கோபம் தீர்ந்த இறை உருவம் எப்படி சுந்தர அழகுடன் பிரகாசிக்கும் என்பதையும் பறைசாற்றுகிறது.

இவ்வாறு முருகப் பெருமானுக்கு ஏற்பட்ட பெருங்கோபத்தையும் அடியார்களுக்கு கிட்டும் ஒரு இனிய சந்தர்ப்பமாக மாற்றும் வல்லமை மாங்கனிக்கு உண்டு என்பதால் இவ்வருடம் முழுவதும் ஒருவருக்கு இரண்டு மாங்கனிகள் என்ற கணக்கில் காமேஸ்வர திருத்தலத்தில் கிட்டும் மாங்கனிகளை அளிக்குமாறு நம் சற்குரு தெரிவித்துள்ளார். இனி வரும் மாங்கனி வழிபாடும் இந்த உண்மையை உணர்த்தும். காமேஸ்வர திருத்தலத்தில் தர்ப்பண வழிபாடுகள் நிறைவேற்றிய பின்னர் சந்திர நதியில் ஏதாவது ஆழமில்லாத ஒரு இடத்திலிருந்து மண்ணை எடுத்து அதில் இரண்டு மாங்கனிகளை உருவாக்க வேண்டும். நிழலில் காய வைத்த இந்த மாங்கனிகளுக்கு சிவப்பு மஞ்சள் போன்ற வண்ணக் கலவைகளைப் பூசி அடியார்கள் தங்கள் பூஜை அறையில் வழிபாட்டில் வைத்துக் கொள்வது சிறப்பு. சோபகிருது வருட இறுதியில் அல்லது மாங்கனியில் விரிசல்கள் ஏற்பட்டு விட்டால் இந்த மாங்கனிகளை அருகில் உள்ள ஆறுகளில், நீர்நிலைகளில் விட்டு விடலாம். அடியார்கள் மனதில் எழும் கோபக் கனலை தணித்து குடும்ப ஒற்றுமையை பெருக்கும் வல்லமை இந்த மாங்கனிகளுக்கு உண்டு.

திருக்குவளை, வலிவலம், காமேஸ்வரம் என்ற மூன்று திருத்தலங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து வழிபாடுகளை இயற்ற முடியாதவர்கள் முதலில் திருக்குவளை திருத்தலத்தை தரிசனம் செய்து வழிபாடுகள் இயற்றி பின்னர் அடுத்த அமாவாசைக்குள் மற்ற தலங்களில் வழிபாடுகள் இயற்றி பயன் பெறலாம்.

ஸ்ரீமுருகப் பெருமான் கோடியக்கரை

ஸ்ரீகோளிலிநாதர்கள் கோடியக்கரை

சமீபத்தில் நம் அடியார்கள் காமேஸ்வரம் திருத்தலத்தில் செந்தாமரை, வெண்தாமரை, நீலோத்பல மலர்களை வைத்து தம் மூதாதையர்களுக்கு தர்ப்பண வழிபாடுகளை இயற்றி அரிதிலும் அரிதான காமேஸ்வர பித்ரு மூர்த்திகளின் அனுகிரகத்தைப் பெற்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு சில அடியார்கள் நீலோத்பல மலர்களைப் பெற இயலாததால் அவர்கள் வெண்தாமரை மலர்களின் மேல் தர்ப்பணம் அளிக்கும்படி நேர்ந்தது அல்லவா? இதை அறியாதவரா நம் சற்குரு? நம் சற்குருவின் ஒவ்வொரு செயலின் பின்னணியிலும் ஆயிரமாயிரம் தத்துவங்கள் நிறைந்திருக்கும் என்பதை நாம் ஆயிரத்தோராவது முறையாக உணர்ந்து கொள்ள வழி செய்வதே காமேஸ்வர திருத்தலத்தில் நாம் அளித்த தர்ப்பண வழிபாடாகும்.

பித்ருக்கள் வழிபாடு என்பது நமக்கு எல்லாச் செல்வத்தையும் அளிக்கவல்லது என்பதை நாம் அறிவோம். இந்த செல்வங்களுள் முதன்மையானது லட்சுமி கடாட்சம் என்பது முக்கியமாக இந்த கலியுகத்தில் தேவைப்படும் ஒன்றாக இருப்பதால் அதையும் காமேஸ்வர பித்ரு மூர்த்திகள் அருள்கின்றனர். இந்த தர்ப்பண வழிபாட்டின் பலன்களை விருத்தி செய்வதாகவும், இந்த தர்ப்பணத்தை தவற விட்டவர்களுக்கு ஒரளவு பிராயசித்தம் நல்குவதாகவும் அமைவதே கோடியக்கரை குழகர் ஆலய வழிபாடாகும்.

இங்கு கோடி குழகர் என்ற புகழப்படும் ஸ்ரீஅமுதகடேஸ்வரர் ஆலயத்தில் அருளும் முருகப் பெருமான் அபூர்வமாக ஒரு முகம், ஆறு கரங்களுடன் அருள் வழங்குகிறார். இந்த ஆறு கரங்களில் செந்தாமரை, நீலோத்பலம் என்ற மலர்களையும் சுவாமி தாங்கி அருள்கின்றார். எதற்காக...? இதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். சுவாமியின் திருக்கரங்கள் மட்டும் ஆறு என்ற லட்சுமி கடாட்ச சக்திகளுடன் பொலிவதில்லை, சுவாமியின் மயில் வாகனமும் லட்சுமி கடாட்ச சக்திகள் நிலைகொண்ட வடக்கு திசை பார்த்த வண்ணம் திகழ்கின்றது என்பதே முருகப் பெருமான் வழங்கும் விசேஷ அனுகிரகம்.

கோடி குழகர் என்றால் கோடி கோடியாக லட்சுமி கடாட்ச சக்திகள் மட்டுமல்லாது கோடி கோடியான நற்குணங்களையும் குறிப்பதால் தங்களுக்கு எதிர்காலத்தில் வந்தமையும் மனைவியோ, கணவனோ நல்ல குண நலன்களுடன் அமைய வேண்டும் என்று விரும்புவோர் கோடி குழகர் ஆலயத்தை வணங்கி வழிபாடுகள் இயற்ற வேண்டும் என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்க முடியுமா என்ன?

ஸ்ரீகணபதி லிங்க மூர்த்தி கோடியக்கரை

இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீகணபதி லிங்க மூர்த்திக்கு ஒரு சுவையான வரலாறு உண்டு. பார்வதி தேவி ஒரு இளவேனில் தடாகத்தில் நீராடுவதற்காக கணபதியை காவலுக்கு வைத்து விட்டுச் சென்றாள். அப்போது ஓர் அவசர காரியமாக சிவபெருமான் அங்கு வந்தபோது தேவியை சந்திக்க ஈசனைத் தடுத்ததால் ஈசன் கோபமடைந்து மழு ஆயுதத்தால் கணபதியின் தலையைத் துண்டித்து விட்டார். செய்தி அறிந்து வருந்திய பார்வதி தேவியை தேற்றும் பொருட்டு ஈசன் ஒரு யானையின் தலையை கணபதி மூர்த்திக்குப் பொருத்த அன்றிலிருந்து கணபதி மூர்த்தி யானைத் தலையுடன் விளங்கிய வரலாற்றை நாம் அறிவோம்.

ஒரு நாட்டின் தலைவர் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் நாடு தலைவர் இல்லாத பாதுகாப்பற்ற நிலையை அடையக் கூடாது என்பதால் அடுத்து ஒருவர் தலைவர் பதவியை ஏற்பார். ஒரு சாதாரண நாட்டின் நிலையே இவ்வாறு என்றால் அண்டசராசரத்தை இயக்கும் ஈசனின் சாம்ராஜ்யம் எப்படித் துலங்கும்! இவ்வாறு கணபதி மூர்த்தி தன் தலையை இழந்தபோது அந்த இடைவெளியில் கணபதி மூர்த்தியின் சக்தி அம்சங்களே ஸ்ரீகணபதி லிங்க மூர்த்தியாய் கைலாயத்தில் தோன்றின.

இந்த லிங்க வடிவ சக்திகளையே பூலோகத்தில் ஸ்ரீகணபதி லிங்க மூர்த்தியாக ஸ்ரீஅகத்திய பிரான் கோடியக்கரை சிவாலயத்தில் பிரதிஷ்டை செய்தார் என்பதே நம் சற்குரு அளிக்கும் ஆன்மீக இரகசியமாகும்.

கணபதி “அணிந்திருக்கும்” தலை வடக்குப் பார்த்த “தலை” என்பதை நாம் அறிவோம் அல்லவா? எனவே கோடியக்கரை சிவாலயத்தில் விளங்கும் முருகப் பெருமான், கணபதி மூர்த்தி அனைவருமே இவ்வாறு லட்சுமி கடாட்ச சக்திகளுடன் துலங்குகின்றனர் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் செய்தியாகும்.

உயர்ந்த தத்துவம் உணர்த்தும்
உன்னதம் கோடியக்கரை

ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோடியக்கரை

எனவே தற்காலிகமாக பதவி இழந்த அனைவருமே (suspended employees) கோடியக்கரை ஸ்ரீகணபதி மூர்த்தியை வணங்கி அபிஷேக ஆராதனைகள் இயற்றி பட்டாடை சார்த்தி வழிபடுவதால் நற்பலன் பெறுவார்கள். பதவி இழந்த அரசியல் தலைவர்களுக்கும், பதவி ஓய்வு பெற்ற அனவைருக்குமே தகுந்த மன சாந்தியை அளிப்பவரே கோடியக்கரை ஸ்ரீகணபதி லிங்க மூர்த்தியாவார். கொண்டராங்கி, கோடியக்கரை என்ற திருத்தலங்கள் ஆறெழுத்து திருத்தலங்களாக அமைவது மட்டுமல்ல, இத்தகைய தலங்கள் அதிக உஷ்ணத்தால் ஏற்படும் விளைவுகளை தணிக்க வவ்லவை.

செவ்வாய் பகவானின் வக்ர கதி சஞ்சாரத்தால் உலகில் பல இடங்களிலும் தீ விபத்துக்கள், மின்சார கோளாறுகள் அதிக அளவில் ஏற்படும் என்பதை நம் சற்குரு இவ்வருடப் பிறப்பு எச்சரிக்கையாக தெரிவித்திருந்தார் அல்லவா? இதை உறுதி செய்யும் விதமாக நாள்தோறும் வெளியாகும் நிகழ்ச்சிகளை நீங்கள் அறிவீர்கள். கோடியக்கரை திருத்தலத்திலும் இடியின் தாக்குதலால் மூன்று கோபுரக் கலசங்கள் சரிந்து விழுந்து விட்டன என்று நாம் அறிகிறோம். ஒரு கோயில் கோபுரக் கலசம் ஆயிரக் கணக்கான டன் எடையுள்ள ஜீவ ராசிகளைத் தாங்க வல்லது. அவ்வாறு இருக்க ஒரு சாதாரண இடியின் சக்தி ஒரு கோபுர கலசத்தை சாய்த்து விட முடியமா? நிச்சயம் முடியாது, சமுதாயத்தில் தோன்றும் தீ வினை சக்திகளின் ஆதிக்கத்தையே இத்தகைய செயல்பாடுகள் குறிப்பதால் சற்குருவின் சீடர்களாகிய நாம் இத்தகைய தீவினை சக்திகளிலிருந்து நம்மையும், குடும்பத்தையும், சமுதாயத்தையும் காக்கும் வழிபாடாக கொண்டராங்கி மலையை வெண்ணெயில் உருவாக்கி வழிபாடுகள் இயற்றி, வழிபாட்டின் நிறைவில் ஜீனி சர்க்கரை சேர்த்து இந்த வெண்ணெயை தானமாக அளிப்பதால் ஓரளவு இத்தகைய தீவினைகளுக்கு பாதுகாப்பை பெறலாம்.

செவ்வாய்க் கிழமை, சஷ்டி திதி நாட்களில், இவை இரண்டும் கூடும் நாட்களில் இத்தகைய வழிபாடுகளை இயற்றுதல் நலம்.

ஸ்ரீஅகத்திய பிரான் வேதாரண்யம்

ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மன் கோடியக்கரை

கோடியக்கரை ஸ்ரீகணபதி லிங்க மூர்த்திக்கு மற்றோர் அற்புத தத்துவ விளக்கமும் உண்டு. கணபதி மூர்த்தி திருமணம் ஆகாதவர், அதனால் கன்னி மூலையில் எழுந்தருளி திருமணம் ஆகாத அனைவருக்கும் திருமணத்தை கூட்டி வைத்து மகிழ்கிறார் என்பதால் திருமணம் ஆகாத அனைத்து கன்னிப் பெண்களும் ஆண்களும் கன்னி மூலை கணபதி மூர்த்தியை வணங்கி அருள் பெற்று வருகின்றனர். உண்மையில் கன்னி மூலை கணபதி மூர்த்தி திருமணம் ஆகாதவர் என்பதைவிட ஆண் பெண் இருவரின் ஒருங்கிணைந்த அன்பு பரிமாற்றத்தை ஒரே மூர்த்தியாக அருள்வதால்தான் ஆண் பெண் இருபாலருமே கணபதி மூர்த்தியை வணங்கி அருள் பெற ஏதுவாகிறது.

அதே போல் லிங்க மூர்த்திகள் என்பவர்கள் இறைவனின் அருஉருவ தரிசனத்தை அளிக்கிறார்கள் என்று நாம் அறிவோம். அரு உருவம் என்பது உருவத்திற்கு அப்பாற்பட்ட அரூப நிலை அனுகிரகத்தை அருளும் மூர்த்தி என்ற பொருளும் உண்டு. ஒரு மனிதன் உயிரை விட்டபின் அவன் மீண்டும் ஏதாவது பிறவியை எடுக்கும் இடைபட்ட காலத்தில் இவ்வாறு அரூப நிலையில்தான் உலவுகின்றான். இது எல்லையில்லா ஆனந்தத்தை அளிக்கக் கூடிய ஒரு நிலையே. அதனால்தான் எகிப்திய பிரமிடுகளில் இறந்த ஒரு மனிதனின் உடலிலிருந்து பறவை ஒன்று தோன்றி ஆனந்தமாக உலா வருவதைப் போன்ற சித்திரத்தைத் தீட்டியுள்ளார்கள். இவ்வாறு ஆண் தத்துவமும் பெண் தத்துவமும் இணைந்த ஒரு தத்துவமாக கோடியக்கரை ஸ்ரீகணபதி லிங்க மூர்த்தி அருள்கின்றார் என்பதால் மரணத்தைப் பற்றி அஞ்சுவோர்கள் இந்த கணபதி மூர்த்தியை வணங்கி அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றி வந்தால் மரண பயம் அவர்களை அண்டவே அண்டாது.

அத்தகையோர் முகத்தில் எப்போதும் சாந்தமும் அமைதியும் தவழும். மகான்கள் அளிக்கும் இத்தகைய சாந்தமும் அமைதியும் கலந்த அனுகிரகத்திற்கு காரணம் அவர்கள் ஆண் பெண் என்ற பேதத்தை கடந்து இருப்பதுதான் என்பது இப்போது புலனாகின்றது அல்லவா?

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam