முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

காரியத் தடங்கல்கள் விலக ...

சிவாலயங்களில் ஸ்ரீதட்சிணா மூர்த்தியின் திருவடிகளில் சனகர், சனாதனர், சனத்குமாரர், சன(த்)நந்தனர் ஆகிய நான்கு சனத்துறை மஹரிஷிகள் உறைந்து தவம் புரிவர். மதுரை உசிலம்பட்டிச் சாலையில் உள்ள திடியன் மலை ஸ்ரீகைலாசநாதர் சிவாலயத்தில், 14 சனத்துறை மகரிஷிகள் தட்சிணாமூர்த்தியின் திருவடிகளில் உறைகின்ற அருட்கோல அற்புதத்தை நாம் தரிசிக்கும் வண்ணம் பெற்றிருப்பது கலியுகத்தின் மஹா மகத்துவமே!
பணமுடை, மனஸ்தாபங்கள், இயற்கைச் சீற்றங்கள், தட்ப, வெப்ப நிலை, மூலப் பொருள் பற்றாக்குறை போன்ற 14 வகையான குறைபாடுகள் காலதோஷங்களால் வியாபாரத்திற்கு ஏற்படும் இன்னல்களாகும். இவற்றைக் களையும் நல்வழிகளைப் பெற்றிட, திடியன் மலையில் வியாழன், பௌர்ணமி தோறும் கிரிவலம் வருதல் வேண்டும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
திடியன்மலை

ஒவ்வொரு நட்சத்திரம், கிழமையும் தோன்றிய திருத்தலங்கள் உண்டு. பிரிட்டிஷ்காரர்கள் வருவதற்கு முன்னரேயே, நம் புனித பாரதத்தில் பழமையான பஞ்சாங்கக் கணித முறை பன்னெடுங் காலமாகவே நடைமுறையில் இருந்தன. எனவே, ஏழு கிரகங்களுக்கு உரிய வார நாள் முறையை ஆதிமுதலில் கொணர்ந்தது பாரத வானியல் சாத்திர முறையே.
இந்த ஏழு நாள் வார முறை, வருங்காலத்தில், (ராகு, கேது சேர்ந்ததாக) ஒன்பது வார நாட்களாகவும், ஒரு மாதத்திற்கு (27 நட்சத்திரங்களுக்கு உரியதாக), 27 நாட்கள் கொண்டதாகவும் மாறி அமையும். தற்போதைய ஆங்கில முறைக் காலண்டர்படி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை, பிப்ரவரியில் 29 நாட்கள் வருவது வானியல் விஞ்ஞானக் கணித பூர்வமாகச் சரியாக இருப்பது போலத் தோன்றினாலும், அந்தந்த வருடத்தில் ஏற்படும் காலக்குறை தோஷங்களை அகற்றி, தக்க காலவிருத்திப் பலன்களைத் தருவதாக இந்த லீப் வருடக் கால அமைப்பு முறை அமையவில்லை என்பது ஒரு பெருங்குறையே!

மாட்டு வண்டிச் சக்கரத்தில் ஓர் ஆரம் குறைந்தால், என்னதான் சக்கரம் உருண்டாலும் சக்கரம் பலவீனம் அடைகின்றது தானே! இதே போலத்தான் லீப் வருட முறையில், அந்தந்த காலக் குறை அந்தந்த ஆண்டிலேயே நீங்காது, காலபங்கத்துடனேயே ஒவ்வொரு ஆண்டும் கடக்கின்றது. இதனால், ஒவ்வொரு வருடத்திலும் காலக்குறை தோஷங்கள் சேர்ந்து உலகை, உலக மக்களை பாதிக்கின்றன.
பூகம்பம், வெள்ளம், விபத்து போன்றவை நிகழ்கையில் இவற்றில் நிர்மாணப் பணிக்கும், சேதங்களை அகற்றுவதிலும், புனரமைப்பிலும் நிறைய காலம் ஆகின்றது அல்லவா! இவ்வாறு வளத்தைக் குறுக்கி, நிவாரணம் தேடுவதிலும், உலகச் சமுதாயக் காலதோஷமாக, பெரும் உயிர் இழப்பும், பொருள் இழப்பும், கால இழப்பும் ஏற்படுகின்றது அல்லவா!

எனினும் இயற்கைப் பூர்வமாக சில காலச் சீர்திருத்தப் பூஜை முறைகள் நம் பாரதத்தில் அமைந்துள்ளன. இவ்வாறு, பல வழிமுறைகளில் உலக மக்கள் ஏற்படுத்தும் கால இழப்புக் குறையை, காலதோஷத்தை நிவர்த்தி செய்வதாக அமைவது, சித்திரை முதல் பங்குனி வரை, 30, 31, 32 என அமையும் தமிழ் மாத மற்றும் இந்தியப் பிராந்தியத் தேதிப் பூர்வமான பஞ்சாங்க முறையே ஆகும். இதுவே, உலக ஜீவன்கள் சார்பாக, லீப் வருடமாக நான்கு வருடங்களுக்குச் சேரும் காலக்குறை தோஷங்களை, ஓரளவேனும் நீக்க உதவுவதாகும்.
இதனால்தான், ஆங்கிலக் காலண்டர் முறைக் குறைகளை தமிழ் மறை முறைக் காலக் கணிதம் நன்கு நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளது.
எனவே, எதிர்காலத்தில் (நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து) இந்திய முறைப்படி, 27 நாட்கள் கொண்ட மாதம் நடைமுறைக்கு வரும். லீப் வருட பிப்ரவரி போலான, ஆனால் அந்தந்த மாதக் காலத்திலேயே அமைய வல்ல 28வது நாளாக அபிஜிதவாடி நட்சத்திர நாள் அமைந்து அந்தந்த ஆண்டின் காலக் குறைகளை, காலங் கடத்தாது, அவ்வப்போது நிவர்த்தி செய்து தந்திடுவதாகும். ஆனால் இதில் நிறைய வானியல் கணித முறைகள் தீர்வு பெற்றாக வேண்டும்.

ஸ்ரீசுஸ்வரூப பைரவ மூர்த்தி
ராச்சாண்டார் திருமலை

ஆங்கிலக் காலண்டர் முறையே உலகில் நடைமுறையில் இருப்பதால், இதில் கூடியுள்ள காலதோஷங்களை நிவர்த்தி செய்யவே, உலகின் தெய்வீக மையமாகத் துலங்கும் புனிதமான பாரத பூமியிற் பிறந்தமையால், நம் பாரத மக்களின் பெருங் கடமையாக, உலக சமுதாயச் சேவையாக, மாதப் பிறப்பன்று அருணாசல கிரிவலம், மாதப் பிறப்புத் தர்ப்பணம், ஷடசீதி மற்றும் விஷ்ணுபதிப் புண்ய கால பூஜைகள் போன்றவை நடைமுறையில் உள்ளன. ஆனால் இவற்றைக் கடைபிடித்தால்தானே காலதோஷங்கள் நிவர்த்தி ஆகும், மேலும், பாரதத்தில் பிறந்த காரிய, காரணமும் நிறைவு பெறும்.

ஸ்ரீபைரவேஸ்வரர் சோழபுரம்

திருமணம் மற்றும் நற்காரியங்கள் தள்ளிப் போதல் அல்லது காலதாமதம் ஆகுதல், வீடு கட்டுதல், விற்றல், வாங்குதல், நிலவிளைச்சல் போன்றவற்றில் விரயம், தாமதம், கை, கால்கள் அடிபட்டுப் பலவும் வாழ்க்கையில் தாமதமாதல், நின்று போதல் போன்ற பலவும் காலதோஷங்களால் ஆவதேயாம்.
மேற்கண்ட காலதோஷங்களின் வகைகளுக்ககு ஓரளவேனும் நிவாரணம் காண மலை மீதுள்ள ஸ்ரீகாலபைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
குறிப்பாக, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-பூலாங்குறிச்சி-பொன்னமராவதி மார்கத்தில், பூலாங்குறிச்சி அருகே உள்ள காஞ்சாத்து மலை மேல் உள்ள ஸ்ரீகாலபைரவர், திருச்சி ராச்சாண்டார்மலை ஸ்ரீசுஸ்வரூப பைரவர் போன்ற பைரவ மூர்த்திகள் மிக, மிக சக்தி வாய்ந்தவர்கள். பொதுவாக, மலை மீது தனிச் சன்னதி கொண்டருளும் பைரவரைக் காணுதல் அரிது. இவர்தாம் பூவுலகின் பலவகையான காலதோஷம், காலசர்ப்ப தோஷங்களை நீக்கி அருள்பவர்.
புகை பிடித்தல், மது, முறையற்ற கேளிக்கைகள், வீண் பேச்சு, அரட்டை, தேவையில்லா நேரத்தில் சும்மாவேனும் உறங்கிப் பொழுதைக் கழித்தல், உபயோகமில்லாத சினிமா, டீ.வி நிகழ்ச்சிகள் போன்ற வகையில் காலத்தை வீணாக்கி காலதேவதைகளை இம்சிப்போரும், பலத்த காலதோஷங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவ்வகையில் உலகில் உள்ள ஒவ்வொருவருமே ஏதேனும் ஒரு வகையில் காலதோஷத்திற்கு ஆளாகி உள்ளோரே! இதனால்தான் பல இடங்களிலும், காலகட்டத்திலும், பலருக்கும் வாழ்க்கையில் தாமதங்கள் உண்டாகின்றன. இதற்கான இயற்கை ரீதியான முறையாக, தற்போதிருந்தே காலபைரவ வழிபாடு பிராபல்யம் அடைந்து வருகின்றது.

ஸ்ரீபஞ்ச பைரவ மூர்த்திகள்
ஆவூர்

இவ்வாறு எவ்வளவு காலபைரவ மூர்த்திகளைத் தரிசிக்க முடியுமோ (28 பைரவ மூர்த்திகள் தரிசனம் மிகவும் விசேஷமானது) அந்த அளவிற்குத் தரிசித்து சந்தனம், புஷ்ப மாலை, முந்திரி மாலை போன்ற பல்வகை ஆராதனைகளுடன் காலபைரவரைப் பூஜித்து, காலதாமதக் கோளாறுகளுக்கு நிவாரண வழிகளைப் பெற்றிடுங்கள்.
சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வர வழிபாடு அனைத்து பைரவ மூர்த்திகளின் தரிசன பலாபலன்களை ஒருங்கே பெற்றுத் தரக் கூடியதாகும். கும்பகோணம் அருகே ஆவூரில் பஞ்ச பைரவர்கள் தரிசனம் (5 பைரவர்கள் ஒரு சேர இருப்பது) பல பைரவ மூர்த்திகளின் தரிசனப் பலன்களைத் தருவதாகும். தேய்பிறை அஷ்டமியில் இங்கு வழிபடுவது நற்காரியங்கள் தாமதாகும் தாமச குணக் குறைகளைப் போக்கி, நற்காரியம் நன்கு நடைபெற உதவுவதாகும்.

கண் நோய்களுக்குப் பாதுகாப்பு

ரேவதியும் அஸ்வினியும் சேரும் பௌர்ணமித் திதி நேரத்திற்கு அபிஜித ஜகதாபி என்று பெயர். ஜகம் புகழும் அம்பிகை, ஜகதாம்பிகையாக, ஜெகத்ரட்சகியாக, அருந்துணை இறைவியாக மலரும் அற்புதக் காலம் இது! வாஸ்து மூர்த்தி, ஸ்ரீஜகதீஸ்வரப் பெருமானுக்கு அன்னாபிஷேகம் ஆற்றி ஆராதிக்கும் திருநாள் இதுவேயாம்.
அறந்தாங்கி -மணமேல்குடி - ஜகதாபட்டினம் -மீமிசல் மார்கத்தில் உள்ள ஜகதாபட்டினம் கிராமத் தலமும் அம்பிகை அபிஜித் முகூர்த்த நேரத்தில் ஜகதாம்பிகையாக உற்பவித்தத் திருத்தலங்களுள் ஒன்றாகும்.
சித்தர்கள், மகரிஷிகள் அபிஜித் முகூர்த்த நேரத்தில், பகல் நேரத்திலேயே, தம் அரிய தபோ பலத்தால், நட்சத்திரங்களைத் தரிசிக்கும் தலங்களில் தாராமங்கலம், அபுதாபி, ஜகதாபட்டினம், நட்சத்திரக் கோயில் போன்றவையும் விசேஷமானவை!
சில ஆலயங்களில் ரேவதி முதல் அஸ்வினி வரையிலான 27 நட்சத்திரங்களைத் தாரா பட்டம் எனும் படியாக, கற்பலகையில், வண்ணமாகவும், ராசிக் கட்டமாகவும் கோயில்களில் மேல் விதானத்தில் பதித்திருப்பார்கள்.

ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருத்தலம் லால்குடி

இந்த நட்சத்திரக் கற்சாசனத்தில், ரேவதிக்கும், அஸ்வினிக்கும் இடையில் அபிஜிதாகரணம் எனும் நாற்சதுரப் பரலாகவும் அமைந்திருக்கும். (உ-ம் சென்னை பூந்தமல்லி ஸ்ரீவைத்யநாதர், புதுக்கோட்டை திருக்கோகர்ணம், லால்குடி ஆலயங்கள்), இதுவே அபிஜித் நட்சத்திர இடத்தைக் குறிக்கும் தரிசனமும் ஆகும்.
ரேவதியும், அஸ்வினியும் இணையும் பௌர்ணமித் திதிக் கால நேரத்திற்கு அபிஜிதப் பிரகாச நட்சத்திரப் பிப்ரவாளம் என்று பெயர்.  
அபிஜித் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. அபிஜித் முகூர்த்தம் என்பது பகலின் உச்சிப் பொழுது நேரமாகும். அபிஜிதவாள நட்சத்திரம் என்பது 27 நட்சத்திரங்களை அடுத்து வருவதாகும். இதனால்தான், பண்டைய நட்சத்திர அமைப்புகளில், 27 நட்சத்திரப் பரல்களை வைத்து, 28ஆவதை ரேவதிக்கும், அஸ்வினிக்கும் இடையில் அபிஜித் தாரா பாத்திரமாக வைப்பார்கள்.

ஸ்ரீஜகதீஸ்வரர் ஜகதாபட்டினம்

திருவோண நட்சத்திரத்தின் ஒரு குறித்த கோண தாரா மண்டலத்தையும் அபிஜித் தாரகை மண்டலமாக உரைப்போரும் உண்டு. மேலும், அபிஜித் பீஜாட்சர வாக்யமாக, எந்த வேதத்தின் 28வது வாக்கியத்தையும் அபிஜித அனுவாகமாக அனுசரித்தே ஓதுவோரும் உண்டு. இவ்வாறு அபிஜித் என்பதற்குப் பல வானியற் பூர்வமான சுதபுத விளக்கங்கள் நிறையவே உண்டு.
ரேவதி அஸ்வினி கூடும் வேளையில் 
அபஜிதாம்பர நட்சத்ராணாம்
நாததீய ஜோதீனாம்
நளகங்காதர பவதாரண சிவச்ய விஷ்ணு மேதினாம்
பவதவளாம்சுத பரிபாலய சரணாகத பாஹிமாம்!”
என்ற வகையிலான அபிஜித் சித்சக்தித் துதிகளை ஓதி, 27 நட்சத்திர தேவ மூர்த்திகளையும் அபிஜித் மண்டல சக்திக்குள் பூரிப்பதாக பாவனை செய்து வழிபட வேண்டும். இதனை ஓதியவாறே, மாலை சூரிய அஸ்தமனம் ஆன பின், நட்சத்திரங்கள் வானில் தோன்றும் முன்னரேயே நட்சத்திரத் தரிசனத்திற்குத் தயாராகி, ஒரு நாழிகை நேரமேனும் (24 நிமிடங்கள்) நட்சத்திரங்களின் தரிசனங்களைப் பெற்றிடுங்கள்.
உங்களுடைய மூதாதையர்களில், பல லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், எவரேனும் நட்சத்திர மண்டலத்தில் உத்தம நிலைகளை அடைந்திருப்பின், இதனால் அவர்களுடைய நேரடி தரிசன, ஆசிகளைப் பெறும் பாக்யவழிகள் புலனாகும்,
180 டிகிரியிலும் உங்களுடைய விரிந்த, பரந்த கண்களால் எவ்வளவு நட்சத்திரத் தரிசனங்களைப் பெறுகின்றீர்களோ, அந்த அளவிற்கு சிறப்பான நட்சத்திரத் தரிசனப் பலன்களைப் பெற்றிடலாம்.
பௌர்ணமி அன்று ரேவதியும் அஸ்வினியும் இணையும் நேரத்தில், ரேவதி நட்சத்திரம் நிறைவுறும் இறுதி 12 நிமிடங்களும், அடுத்து ஆரம்பிக்கும் அஸ்வினியின் முதல் 12 நிமிடங்களையும் குறித்துக் கொள்ளுங்கள்.
இவ்வகையில் ரேவதியின் உத்தராங்கப் பிரகாசமும், அஸ்வினியின் பூர்வாங்கப் பிரகாசமும் பதிவதே அபிஜிதாகர்ஷணப் புனித நேரமாகும்.  

அபிஜித் சக்திகள் பொலியும்
தின்னகோணம் திருத்தலம்

மகரிஷிகள் இந்த அபிஜிதாகர்ஷண நேரத்தில், பகலிலேயே பல முக்கியமான தெய்வ மண்டல நட்சத்திரங்களைத் தரிசிக்கின்றனர். அருந்தவத்தால் அடைய வல்ல தரிசனம் இது! அபுதாபி எனப்படும் மத்தியக் கிழக்கு ஆசிய நாட்டுப் நிலப் பகுதியானது, மகரிஷிகளால் பகல் நேர நட்சத்திர தரிசனத்திற்கான சந்த்ராகம பீஜப் பிரகாசக் கதிர்களைக் கொண்ட நிலப் பகுதியாகும்.
காடராக்ட் போன்ற கண் நோய்களால் அவதியுறுவோர், இந்த அபிஜிதாகர்ஷண நேரத்தில், அற்புதமான சாக்ஷுஷோ உபநிஷத் சூக்த வேத மந்திரங்களை ஓதி ஜபித்தல் மிகவும் விசேஷமானது. இந்த அரிய நேரத்தில் அகத்திக் கீரை, அத்திப் பழம், காரெட், வெண்ணெய் சம்பந்தமான உணவு வகைகளைத் தானமளித்தல், கண் நோய்களின் கடுமையைத் தணிக்க உதவும்.
ஒரே நாளில் இவற்றைச் செய்வதால் கண் நோய்கள் தணிந்திடுமா என்று எண்ணாதீர்கள். கண் நோய்கள் ஏற்படுவதற்கான கர்ம வினைகள் பெரிதும் தணிய இத்தகைய தானங்கள் துணை புரியும் என்பதால் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருளாகும். எதனையும் ஆக்கப் பூர்வமாகச் செய்து பார்த்தால்தானே ஆன்மீகத்தில் எதனையும் அனுபூதியாக, அனுபவப் பூர்வமாகவும் உணர்ந்திடலாம்.
திருஅண்ணாமாலை - போளூர் அருகே நட்சத்திரக் கோயில் என்ற சிறப்பான சிவத் திருத்தலம் ஒன்று உண்டு. இங்கிருந்து விண்ணில் நட்சத்திரத் தரிசனம் பெறுவது மிகவும் விசேஷமானது. உலகில் தாரகாதுள கைவல்ய சக்திகள் நிறைந்த அபூர்வமான தலங்களில் இதுவும் ஒன்று. பூவுலகில் வேறு எந்த இடத்திலிருந்தும் பரிபூரணமாகப் பெற இயலாத சில அரிய நட்சத்திரத் தரிசனங்களை குறித்த ஹோரை நேரத்தில் இங்குதாம் பெற முடியும்.

இவ்வாறு பூவுலகிற் பொழியும் அபூர்வமான அபிஜித் பூஜா சக்திகளைப் பெற்றிட, ரேவதி அஸ்வினி பௌர்ணமி நாளில் கனிகள், தானியங்கள், புஷ்பங்கள் போன்றவற்றில் 28 வகைகளை / 28 எண்ணிக்கையில் வாங்கி, ஒரு பங்கை (9) ஆலயத்தில் அளித்து, இரண்டாவது பங்கை (9) ஏழைகளுக்குத் தானமாக அளித்து, மூன்றாவது பங்கை (9) பிராணிகள், பறவைகளுக்கு அளித்தும், தாவரங்களின் வேர்களில், ஆறு, கடல்களில் சேர்த்தும், பிறகு 28ஆவது பங்குப் பொருளை அபிஜித ரதப் பிரசாதமாக இல்லத்திற்கு எடுத்துக் கொள்ளவும் வேண்டும். இதனால் 28ஆவது பொருளில் அபிஜித சக்திகள் நிறைந்து பல தலைமுறைகளாகப் பெற இயலாத அபிஜித் சக்திகளைப் பெற உதவும்.

பாசம் நேசம் பெறுமே

பொதுவாக பிரதமைத் திதிகளில் நிகழ்த்தப் பெறும் பூஜைகளால் சிறு பிள்ளைகளுக்கும், தக்க பராமரிப்பு இன்றி வாழ்வோர்க்கும், அநாதையாக வாழ்வோர்க்கும், வாழ்வில் நன்மைகளைத் தரும் நல்வரங்களை அருளும் சக்திகளைப் பெறலாம்.
குறிப்பாக, பெற்றோர்களின் பாசமின்றி எங்கோ விச்ராந்தியாக வளரும் பிள்ளைகளுக்கும், தம்பதியர் இருவருமே வேலைக்குச் செல்வதால், விடுதிகளிலேயே முழுமையாக அல்லது வேலைக்காரிகள் அல்லது உறவினர்களின் பராமரிப்பில் வாழும் பிள்ளைகளுக்கும், தாய் அல்லது தந்தை இல்லாதோர்க்கும் நலம் பயக்கவும் உதவும்.
ஆமாம், இப்பிள்ளைகளுக்காக யார்தான், எவ்வகையில் பூஜிப்பது?
இவ்வாறு தம் பிள்ளைகள் பிற இடங்களில், பிறரிடம் வாழ வேண்டி இருக்கிறதே என வேதனையுறும் பெற்றோர்களும், இப்பிள்ளைகளின் நலம் நாடும் உறவினர்களும், இதைப் படிக்கின்றவர்களும், இதன் மூலம் இவ்வரிய விஷயத்தை அறிய வருகின்றவர்களும், ஒரு தியாகமய சமுதாய இறைப் பணியாகவும், இங்கு அளிக்கப்படும் பிரமைத் திதிக்கான சில வகைப் பூஜைகளை முறையாக ஆற்றி வர வேண்டும்.
பூமியில் உள்ள நீரோட்டங்களும், வானியல் நீரோட்டங்களும் இணைவதும் திதியின் அம்சங்களுள் ஒன்றாகும். வியாழன் (குரு), சூரியன், சந்திரன் என வானியல் கிரக அம்சங்கள் பலவும், நம் உடலிலும், கை விரல்களிலும், கை ரேகைகளிலும் பதிந்துள்ளன என நாமறிவோம்.

ஸ்ரீஆதிமூலநாதர் திருத்தலம்
பூவாளூர் லால்குடி

உதாரணமாக,
ஆள்காட்டி விரல் = குரு கிரகம்
கட்டை விரல் = சுக்கிர கிரகம்
மோதிர விரல் = சூரிய கிரகம்
நடு விரல் = சனி கிரகம் ஆகும்.

எனவே, திதி என்பது சூரிய, சந்திர கதி தூரத்தை வைத்து அமைவதால், திதி மாறுகையில் இவற்றில் சில கிரண, ரேகை நீரோட்டங்கள் இணைந்து பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு திதியிலும், அவரவர் உடலிலும் பல மாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக, ஏகாதசி அன்று ஜீரண நீரோட்டங்களில், ஜீரணச் சுரப்பிகளில் மாற்றங்கள் ஏற்படும்.
பிரதமை அன்று நீர்வீழ்ச்சிகளில் நீராடி, புத்தாடைகள் அணிந்து, நீராடிய ஆடைகளை உடனேயே தானமளித்தலும், மலைச் சுனைத் தீர்த்தத்தில் அன்னம் வடித்துப் படைத்தலும், குலதெய்வத்தை முறையாக வழிபடா தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கான நல்வழிகளைப் பெற்றுத் தரும்.
பொங்கல் வைத்தல், காவடி, சிதறு தேங்காய் உடைத்தல் போன்ற இயற்கை வகைப் பூஜைகளை பிரதமை அன்று ஆற்றுதல் நலம். நாள் முழுதும் நைலான், பிளாஸ்டிக், செயற்கைச் செருப்பு, பிளாஸ்டிக் உறை போன்ற செயற்கை வகைப் பொருட்களைத் தவிர்த்து, மரம், துணிப் பை, காகிதப் பை, இலை, தழை போன்ற இயற்கையை ஒட்டியனவற்றில் உறைவது, பயன்படுத்துவது நன்று. கூடிய மட்டும்செயற்கையான பொருட்களை முற்றிலுமாகத் தவிர்க்கவும்.
ஒரு பௌர்ணமியில் இருந்து அடுத்த பௌர்ணமி வரை உள்ள (அமாவாசை, பௌர்ணமி தவிர) ஏனைய 28 திதிகளுமே, உலக ஜீவன்களின் நல்வாழ்விற்காக, வெப்பம், குளுமை, ஆகர்ஷண சக்தி, ஒலி, ஒளி போன்ற 28 வகையான முக்கியமான, தினசரி வாழ்க்கைக்குத் தேவையான சக்திகளைத் தருபவை ஆகும். பௌர்ணமியும், அமாவாசையும் திதிப் பீடங்களாக அமைவதால், இவை இரண்டும் பிரக்ருதித் தத்துவத்தில் திதிகளாக அல்லாது, தனித் தன்மை வாய்ந்தவையாகவே கொள்ளப்படுகின்றன.
மேலும், இவை இரண்டையும் திதி தேவதைகளின் மூலப் பீடமாகவும் கொள்வதாலும், பௌர்ணமியும் அமாவாசையும் சூரிய, சந்திர கிரகங்களின் இணைப்பாகவும், நேருக்கு நேர் வருவதாகவும் அமைவதாலும், இவை கிரக உபசாங்கியங்களைக் கொண்டவையாகவும் துலங்குகின்றன.

பிரதமை என்பது உலகில் எல்லாவற்றிற்கும் முதலாவதான மூல முதல் பீஜங்கள் தோன்றிய நாளாகவும் அமைவதால், சிருஷ்டிக் கடவுளான பிரம்ம மூர்த்திக்கு உரிய நாளாகவும் துலங்குகின்றது. மனிதர்கள், பிராணிகள் (பறவைகள் உட்பட), தாவரங்கள் ஆகிய மூன்று வகையான ஜீவன்களுக்குப் பயன்படும் வகையில் பிரதமை அன்று நற்காரியங்களை ஆற்றிட வேண்டும். குடும்பத்தில், இதுவரை சரியாக அறியாது விடுபட்டுப் போன விஷயங்கள் பலவும் அறிய இது உதவலாகும்.
ஆலய, நந்தவனச் செடிகளுக்கு நன்கு பாத்தி கட்டி, உரமிட்டு விருத்தி செய்தல், பசு மற்றும் இதர பிராணிகளை நன்கு நீராட்டி, மஞ்சள், குங்குமம் வைத்து, உணவளித்தல், பறவைகளுக்குத் தானியங்கள் இடுதல், ஏழ்மை, நடுத்தர, வசதியற்ற நிலையில் உள்ளோர்க்கு உதவுதல் போன்ற மூன்று துறைகளிலும்,
குறைந்தது, மும்மூன்று நற்காரியங்களை பிரதமை திதியில் நிறைவேற்றுதல் வேண்டும். இதன் பலாபலன்கள் பலவெனினும், காணாமற்போன மனிதர், பிராணி, பொருட்கள் பற்றிய சில தகவல்கள் அறியவும் நல்வாய்ப்புகளும் ஏற்படும்.
ஆலயத்தில் உள்ள குப்பைகளை அகற்றுதல், ஆலயக் குளத் துறைப் படிகளைச் சுத்திகரித்தல், ஆலய நந்தவனத்தைச் சுத்திகரித்தல் போன்ற கோயில் திருப்பணிகளும், சகல ஜீவன்களுக்கும் மனிதர்கள், பிராணிகள் (பறவைகள் உட்பட), தாவரங்கள் ஆகிய மூன்று வகையினருக்கும் ஆன்மீக ரீதியாகப் பலனளிப்பதால் இவையும் மூன்று வகையினருக்கும் உரித்தான நற்சேவைகளேயாகும்.
பிரதமை அன்று ஆதிமூலர், ஆதிநாதர், (திருச்சி லால்குடி அருகே) திருமூலநாதர், ஆதிஜகன்னாதர், ஆதிகுமாரர், ஆதிகௌரி, ஆதிலட்சுமி போன்ற “ஆதி” மற்றும் மூலம் சம்பந்தமான பெயர்களை உடைய சுவாமிக்கு, (பட்டுப் புழு நூல் கலவாத) நார் (மடிப்) பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபடுதலால், தாய், தந்தையர் தாம் பிறர் அறிந்தும், அறியாதும் செய்த தீவினைகள், பிழைகள், குற்றங்களால், சமுதாயம், குடும்பம், உற்றம், சுற்றத்திடையே சிக்கி, அவதியுறுவோருடைய துன்பங்கள் அகல வழி பிறக்கும்.
பெற்றோர்களின் காப்பு இன்றி, உறவினர்களின் பராமரிப்பில் நன்கு பேணப்படாது அநாதையாக வாழ்கின்றவர்களுடைய வாழ்க்கை சீர்மை பெற தக்கோர் வந்து உதவவும், நல்வழிகள் கிட்டவும் பித்ருக்களின் சகாயம் கை கூடி வரும்.

ஆயுள் விருத்தி வழிபாடு

சனீஸ்வரர் ஆயுள்காரகராக நல்ல ஆயுள் சக்தியை மட்டுமல்லாது, பயம் அறுத்தல், மனசஞ்சல நீக்கல், குற்றமில்லா சுவாசம் போன்ற எத்தனையோ விதமான நல்அனுகிரகங்களையும் நமக்குப் பெற்றுத் தருகின்றார். ஆனால், பூவுலகில் சனி தசை, சனி புக்தி என்றாலே பலரும் அஞ்சுகின்றனர். இது தேவையற்ற அச்சமே! இதனைத் தவிர்த்திட, முதலில் கிரக மூர்த்திகள் அருளும் பாங்கை நன்கு அறிதல் வேண்டும்.
சனி கிரகம் என்றால் ஏதோ வானத்திலே இருக்கின்ற கிரகமாக, விண்ணில் இருந்து கொண்டு பூலோக ஜீவன்களை வாட்டுகின்றது என்று பலரும் தவறாகவே எண்ணுகின்றார்கள்.

ஸ்ரீஆதிநாயகர்
குமாரவயலூர் திருச்சி

“விண்ணில் கோள வடிவிலும்,
ஆலயத்தில் அருள் வடிவிலும்,
சுவாசக் காற்றில் பிராணசார வடிவிலும்,
கால அம்சத்தில் கரிமள வடிவிலும்”
சனி கிரக அம்சங்கள் பலவும் உறைகின்றன. சனி அம்ச உறைவு பற்றி ஏனைய பல விளக்கங்களும் உண்டு.
மாயையால் உலகம் இயங்குகின்றது. அதாவது ஒவ்வொரு மணி, நிமிட நேரத்திலும் மட்டுமல்லாது ஒவ்வொரு கண் இமைப்பு நேரத்திற்குமே உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு மாற்றங்கள் எப்போதும் ஒவ்வொன்றிலும் ஏற்பட்டுக் கொண்டிருப்பதே மாயை ஆகும். மனித உடலிலும் ஒவ்வொரு நாளிலும் பலத்த மாற்றங்கள் ஏற்பட்டு வருவதும் மாயையால்தான். ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு விநாடியிலும் இடம் மாறிக் கொண்டே இருக்கின்றது. இதன் விளைவாக, ஒவ்வொருவர் உடலிலும் நவகிரக உறைவுச் சலன மாற்றங்களாலும், உடல், மனம், உள்ளத்தில் பல மாறுதல்கள் ஏற்படும். இதனால்தான் மனிதனுடைய தினசரி மனோ நிலை ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
இவ்வாறாக மாயையின் மாற்றங்களை உணரத் துணை புரிவதும் சனீஸ்வர சக்திகளாகும். ஒவ்வொரு சனிக் கிழமையிலும் ஒவ்வொருவரும் தன் உடலில் ஏற்படும் மாற்றங்களை நன்கு கவனித்திட வேண்டும். தலைவலி ஏற்படுதல், சளி பிடித்தல், கால் வலித்தல், திடீரென்று வெளியில் செல்ல வேண்டும் என்ற உணர்வு ஏற்படுதல், தனக்குப் பிடித்த உணவு, டிபன், உணவு வகைகளை உண்ண வேண்டும் எனத் திடீரென ஆசை கொள்தல், சட்டையில் பட்டன்களை மாற்றிப் போடுதல், வழக்கமாகச் செய்வதை மறந்து விடுதல் - போன்று சனிக் கிழமையில் யாவருமே நல்விதத்திலும், துன்பமாகவும், இன்ப, துன்பமற்ற மிச்ரமாகவும் பல மாற்றங்களை பல்வகையான நன்கு உணர்ந்திடலாம். இதற்குக் காரணங்கள் ஆன்மீக ரீதியாகவும் நிறையவே உண்டு.
அவரவர் தாம் செய்த வினையின் விளைவுகளுக்கு ஏற்ப கர்ம பலாபலன்களை அனுபவிக்க வேண்டும் என்பதுதானே தர்ம நியதி. சனீஸ்வரர் உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனுக்கும் அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப இன்ப, துன்பங்கள், ஏனைய மிச்ர காரியங்கள் வந்து விளைகின்றனவா என்று பரிபாலனம் செய்கின்றார். எப்போது பிறவி என்ற ஒன்று வந்து விட்டதோ அப்போதே தெரிந்து கொள்ளலாம் கர்ம வினைகளின் அழுத்தங்கள் இன்னமும் தீரவில்லை என்று.

மேலும் பெரும்பாலான மனிதர்கள் நிறையக் கர்மச் சுமைகளுடன் வாழ்வதால், அனைவருமே பலவகைத் துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருப்பதாலும், சனி மூர்த்தி அவரவருக்குரிய கர்ம வினைகளின் விளைவுகளைப் பரிபாலிக்க வேண்டி இருப்பதாலும், ஸ்ரீசனீஸ்வரர் துன்பங்களையே தருவார் என்ற எண்ணமே ஏற்பட்டுள்ளது. நித்யமுமே பல்வகைத் துன்பங்களுக்குமான நிவாரணமாகவே, தினமுமே, காலையும் மாலையுமே ஒன்பது முறை நவகிரகங்களையே வலம் வருதல் வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நவகிரக வலம் என்பது வெளிப்படையாகப் பார்த்தால், சுயநலமானதாக அவரவருடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்பதற்காக வருகின்ற பிரார்த்தனைச் சுற்று என்று பொருள் கொண்டாலும், உண்மையில் நவகிரக வலத்தில் எத்தனையோ ஆன்மீக ரகசியங்களும் பதிந்து கிரகச் சலன மாற்றங்களும் நிறையவே ஏற்படுகின்றன.

ஸ்ரீஆதிநாயகி
குமாரவயலூர் திருச்சி

மனிதப் பிறவி என்பது கர்ம வினைகளின் பலன்களாக அமைந்தாலும், மானுடப் பிறவி பெறுதற்கரியதே! இதில் சற்றும் ஐயமில்லை! ஆத்மத்தைச் சுற்றி இறைப் பிரகாசம் பொலிவதால் எத்தகைய கேவலமான குணங்களுடன் வாழ்கின்ற ஒருவரும் ஆத்ம சக்தியை உள்ளூரப் பெற்றிருப்பதால், நவகிரகங்களை வலம் வரும்போது, உண்மையில் நவகிரக தேவதா மூர்த்திகளும் பக்தர்களுக்கு இறையருளால் தான் அனைத்துமே நிகழ்கின்றன என்ற அனுபூதியை உணர்த்துவதில் ஆனந்தம் கொள்கின்றனர்.
எதற்காக குடும்பத்துடன் ஆலயத்திற்குச் சென்று நவகிரகங்களைத் தரிசனம் செய்ய வேண்டும்? ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கர்ம வினைப் பரிபாலனம் இருந்தாலும், குடும்பம் என்று அமையும் போது, சத்சங்கமாக பலருடைய புண்ணிய சக்திகளின் திரட்சியால் இல்லறம் நடைபெறுகின்றது. இவை அனைத்தும் பூர்வ ஜன்ம விளைவுகளே ஆகும். கடந்த பிறவியில் பெற்றோருக்கு கடமை ஆற்றத் தவறியவர்கள், இப்பிறவியில் பெற்றோராகப் பிறந்து தம் மகனை ஆளாக்கி வளர்க்கின்றார். இவ்வாறு பந்த பாசச் சுழல்களே கலியுகக் குடும்பமாக அமைகின்றது. எனவே குடும்பமாக வழிபடுவது பூர்வ ஜன்மப் பூர்வமான வினைகளுக்கு துரிதமான நிவாரணங்களைப் பெற்றுத் தரவும் உதவும்.
குடும்பத்தினர் அனைவரும் ஒருமித்துப் பூஜிக்கையில் சமஸ்த குடும்பப் புண்ணிய சக்தி திரண்டு அனைவரையும் காக்கின்றது. எனவே, குடும்பத்தோடு அருணாசல கிரிவலம் வருதலால், இறையருளால் எத்தனையோ தலைமுறைக்காகப் புண்ணிய சக்தியைப் பெற்று அளித்தலால், குடும்ப சகிதமான கிரிவலம் மிக அற்புதமான பூஜையாகச் சிறந்து பிரகாசிக்கின்றது. இத்தகைய ஆத்ம விசார அனுபூதிகளை அளிக்க வல்லதே சனிக் கிழமை அன்று ஆற்றுகின்ற நவகிரக வழிபாடு, நடைவலம், அருணாசல கிரிவலம் மற்றும் சனைச்சரப் பூஜைகளாகும்.
உண்மையில் தினசரியே தர்ப்பணம் அளித்து வந்த மனித குலமானது, காலப் போக்கில் மாதாந்திர அமாவாசைத் தர்ப்பணமாக மட்டுமேயாகத் திரிபுற்று வந்து விட்டதால் மூதாதையருக்கு அளிக்க வேண்டிய வழிபாட்டு சக்திகளும் மங்கி வந்துள்ளன. இவற்றை ஓரளவேனும் நிவர்த்தி செய்யும் பொருட்டுத்தான் சனிக் கிழமை அன்று குறைந்தது, 96 முறை நவகிரகத்தை வலம் வந்து வணங்குதல் வேண்டும். ஷண்ணாவதி எனப்படும் வருடத்தில் 96 நாட்களில் ஆற்ற வேண்டிய தர்ப்பணத்தை, அனைவருக்கும் நினைவுறுத்தும் பொருட்டாவது காலை, மதியம், மாலை வேளைகளில், 96 முறை நவகிரங்களை வலம் வந்து வணங்குவதானது வாழ்க்கையில் சிறப்பான பலன்களைத் தரும்.
எனவே, ஆயுள் வளத்தைத் தருகின்ற மூர்த்தியாக மட்டுமல்லாது பலதுறை இறைவள வரம் தரும் சனீஸ்வரராக இனியேனும் மனதாரப் போற்றி வழிபட்டிடுங்கள்.
பொதுவாக, துவிதியைத் திதி எமமூர்த்திக்கு உரியதாகும். சனீஸ்வர மூர்த்தியும், அஷ்ட திக்குப் பாலகர்களில், தெற்கு திசைக்கு அதிபதியாகவும் தர்ம ராஜாவாகவும் விளங்குகின்ற எமமூர்த்தி - இருவரும் சேர்ந்து தம் தந்தையாம் சூரிய மூர்த்திக்குப் பாத பூஜை செய்து வழிபடுகின்ற உத்தமத் திருநாளே துவிதியைத் திதி ஆகும்.
புதுக்கோட்டை அருகே பொன்னமராவதிச் சிவாலயத்தில் சூரியக் குடும்பம் என்பதாகச் சாயா ஸ்வர்ச்சலாம்பா சமேத சூரிய மூர்த்தி சனீஸ்வர மூர்த்தியுடன் சேர்ந்து அருள்கின்ற ஆலயத்தில் ஞாயிறு, சனிக் கிழமை, மக நட்சத்திரம், துவிதியைத் திதி, சதய நட்சத்திர நாட்களில் சூரிய குடும்பத்திற்கு அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுதலால், பெற்றோர்கள், பிள்ளைகள், சகோதரர்கள் இடையே உள்ள பலவிதமான குடும்பப் பிணக்குகள் தீர உதவும். சூரியக் குடும்ப மூர்த்திகளுக்கு நெல்லித் துவையல் அன்னம் படைத்துத் தானம் அளிப்பதனால் - பணம், சொத்தால் குடும்பத்தில் ஏற்படுகின்ற பிளவு நிலைகள் மாறி, குடும்பம் ஒன்றாக உதவும்.

மூளையைப் பலப்படுத்துங்கள்

பூவுலகில் உள்ள ஒவ்வொருவரும் விதவிதமான சூரிய கிரண சக்திகளைப் பெறுகின்றனர். எல்லோர் மீதும் ஒரே மாதிரியான சூரியக் கதிர்கள் படுவதில்லை என்பது பலரும் அறியாததும், மகத்தான ஆன்மீக ரகசியமும் ஆகும். இத்தகைய கோடிக் கணக்கான தேவ ரகசியங்கள் உள்ளன.
சூரிய மூர்த்தியும் தம்முள் உற்பவிக்கும் கோடிக் கணக்கான கிரணங்களில் ஏழு கிரணங்களை மட்டும் பூவுலகிற்கு அளிக்கின்றார். இந்த ஏழின் பல்வகைகள்தாம் அவரவருடைய உடலில் அவரவருக்கான கர்ம வினைகளின் தன்மையைப் பொறுத்துப் படிகின்றது. அதாவது ஒவ்வொருவர் உடலிலும் அவரவருடைய கர்மத் தன்மைகளுக்கு ஏற்ப சூரியக் கிரண ஆக்கமும் நிகழும்.
சிவனாருக்கு யாகத்தில் ஆஹூதி அளிக்க மறுத்து, தக்கன் ஆற்ற முயன்ற வேள்வியில் (சிவாஹூதி இல்லாத யாகத்தை வேள்வி, ஹோமம் என்று அழைக்கலாகாது) பங்கு கொண்டமையால் சந்திர மூர்த்திக்குப் பலவிதமான துன்பங்கள், சாபங்கள் ஏற்பட்ட போது, ஏனைய 25 நட்சத்திர தேவியரும் சந்திர மூர்த்திக்கான நலம் தேடி, யோக, வேத, தேவ, மந்த்ர, யந்த்ர, தந்த்ர, சக்ர, தவ வழிபாடுகளை மேற்கொண்டபோது, ரோஹிணி, கார்த்திகை தேவி இரு தேவியரும்தான் சந்திர மூர்த்தியின் அருகிலிருந்து சிசுருட்சை செய்து பல அற்புதமான பூஜைகளை நிகழ்த்தி, சந்திர மூர்த்தி தாம் இழந்த கலைகளை மீண்டும் பெற பெருந்துணை புரிந்தனர். இதற்காக இவர்கள் இருவரும் சூரிய மூர்த்தியை வழிபட்ட நன்னாளே ஞாயிறு ரோஹிணி கூடும் சிறப்பான நாளாகும்.

ஸ்ரீரோகிணி சந்திர பகவான்
மானாமதுரை

சூரிய பூஜை திருத்தலம் ஆமூர் முசிறி

யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ, மாந்தியுடன் ஆகிய நான்கும் ஷோடச நவீகனகண கிரகங்களாக அமைகின்றன.  
நாக்கின் வாக்சக்திக்கு மென்மையும், நளினமும், ஆக்கப் பூர்வமானத் துடிப்பும் தருகின்ற தன்மைகள் புளூட்டோவிற்கு உண்டு. தற்காலத்தில் ஜாதக கணிப்புக் கணிதத்தில் இந்த மூன்று கிரகங்களையும் சேர்த்துக் கணித்தால்தான் ஜாதகப் பலன்கள் சரியானதாக அமையும். வருங்காலத்தில் இவற்றின் மகத்துவத்தை உணர்ந்து ஷோடச கிரக ஜாதக அமைப்பும் நடைமுறைக்கு வரும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஒளியானது லிங்கத்தின் மீது படும் தலங்களில் மூலவருக்கும், சூரியனுக்கும், வெண்ணெய்க் காப்பு சார்த்தி அபிஷேகித்து, வெண்ணெய் உருகி வரும் பிரசாதத்தை கோமுகம் மூலமாகப் பெற்று அருந்துதலால் பிறரால் தேவவையில்லாது அவமானத்திற்கு ஆளானோர் மாட்சி பெற உதவும்.
எவ்வளவுதான் நன்கு பணி புரிந்து உழைத்தாலும் அலுவலகத்தில் நறுக் நறுக்கென்று உயரதிகாரிகள் மூலமாகவும், மற்றும் இல்லத்தில் மாமனார், மாமியார், நாத்தனார் மற்றும் மூத்தவர்கள் மூலமாகவும் அதர்மமான முறையில் அவமதிப்பு, அவமானம், தலைகுனிவு ஏற்படும்போது மனம் மிகவும் வேதனைப்பட்டு அல்லல்படுவோர் பலர் உண்டு. இவர்கள் தக்க நிவர்த்தி காணவும் இத்தகைய பிதாகாரக சூரிய பூஜைகள் துணை புரியும்.
இவ்வாறு பல வேதனைகளைச் சுமப்போர் நன்முறையில் நிவாரணம் பெற, ஞாயிறன்று 16 வகையான நறுமணப் புஷ்பங்களைச் சுமந்து கொண்டு, நவகிரக மூர்த்திகளை 16 முறை வலம் வந்தும்,
நவகிரக மூர்த்திகளின் திருப்பாதங்களும் புஷ்பங்களால் நன்கு நிறையும் அளவிற்கு நிறையப் புஷ்பங்களைச் சார்த்தி பல வண்ண நறுவண்ணப் புஷ்பங்களின் ஊடே கிரகங்களைத் தரிசித்தலும்,
பிறகு சூரிய மூர்த்தி தனித்திருக்கும் சன்னதியில் சிரசு முதல் பாதம் வரை நிறையுமாறு நல்ல புது வஸ்திரம் சார்த்தி அபிஷேக ஆராதனை போன்ற நிறைவான பூஜைகளுடன் வழிபட வேண்டும்.

பயணத் தடங்கல்களைக் களைவீர்

மரண யோகம் என்பது அந்தந்த நாள், நட்சத்திரத்திற்கேற்ப வந்து அமைவது என்பது பலரும் அறிந்ததே! ஆனால் மரண யோகத்தில் மட்டும் எந்த நற்காரியமும் செய்யலாகாது என்ற அளவிலேயே பலரும் நினைத்து, அந்த எண்ணத்தோடு மட்டுமே நின்று விடுகின்றனர்.
மரண யோகம், எமகண்டம், ராகு காலத்தில் எவ்வித நற்காரியத்தையும் செய்யாமல் இருப்பதுடன், காலத்தின் அருமை, பெருமை, சக்திகளை அறியாது, இதுவரை அறிந்தோ, அறியாமலோ, மரண யோகம், எமகண்டம், ராகு காலத்தில் நடத்திய செய்கைகளில் சேர்ந்துள்ள கால தோஷங்களை நிவர்த்தி செய்யவும்,

இருவாகன ஸ்ரீகாலபைரவர்
திருப்பாச்சேத்தி

எமகண்டம், மரணயோகம், ராகுகால நேரத்தில் ஆற்றுகின்ற பூஜைகளின் பலன்களும் நன்கு உதவிடும் எனவும் அறிதல் வேண்டும். ராகு கால துர்க்கை பூஜை இவ்வகைத்தே! இரவு நேர ராகு கால, எம கண்ட நேரங்களும் உண்டு.
அலுவலகப் பணிகள், பஸ், ரயில், விமானப் பயணங்கள் போன்ற பலவும் அந்தந்த நாளுக்கான பிரயாணக் காலநேர அட்டவணைப்படி மரண யோகம், எமகண்டம், ராகு காலத்தில் ஆகிய இம்மூன்றிலும் தற்காலத்தில் நிகழத்தான் செய்கின்றன. இவை மூன்று தவிரவும் அர்த்தப் பிரகணன், காலன் போன்ற வகை நேரங்களும் உண்டு.
பொதுவாக இந்த ஐந்திலுமே நற்காரியங்களை நிகழ்த்துவதில்லை. இவை அனைத்தும் எதிரிணி சக்திகளை மாய்ப்பதற்கான விசேஷமான பூஜை நேரங்களாகும். தற்போது கலியுகத்தில் மரண யோகம், எமகண்டம், ராகு காலம், அர்த்தப் பிரகணன், காலன் - இத்தகைய ஐவகைக் கால நேர விளக்கங்களைக் கலியுக மக்கள் மறந்தமையால்தான் உலகெங்கும் பல காரியங்களிலும், பல திசைகளில் இருந்தும் பல வழிகளில் நிறையத் தடங்கல்கள் ஏற்படுகின்றன.

வாகனமின்றி அருள்புரியும்
ஸ்ரீகாலஞான பைரவர் தின்னகோணம்

தடங்கலாகும் நற்காரியத்தில், நல்ல நேரம் பார்த்துத் தானே இந்தக் காரியத்தைச் செய்தோம், பின் ஏன் இதில் இவ்வளவு தடங்கல்கள் ஏற்படுகின்றன எனப் பலரும் எண்ணுவதுண்டு. ஆனால், இவ்வாறு அறிந்தோ, அறியாமலோ, நல்ல காலம் பாராமல் செய்கின்ற காரியங்களில் விளையும் கால தோஷங்களும், ஒவ்வொருவருடைய வாழ்வில் நிறையச் சேர்ந்து, நல்ல நேரம் பார்த்துச் செய்கின்ற காரியங்களிலும் ரகசியமாகவும், அவற்றின் பின்னணியிலும் பல தடங்கல்களை ஏற்படுத்தும் என்பதும் உண்மையே!
அலுவலகக் காரியங்கள், பிரயாணங்களில் எம கண்டம், ராகு காலம், மரண யோகம் பார்ப்பது இயலாததாகின்றது எனப் பலரும் எண்ணுவர். ஆனால் அறிந்தே செய்யும் இவற்றிலும் நிச்சயமாகக் காலதோஷங்கள் சேரவே செய்யும். இவ்வாறு சிறிது, சிறிதாக வாழ்க்கையில் சேரும் காலதோஷங்கள்தாம் மலை போல் பெரிதாகி, நற்காரியங்களில், நல்ல நேரத்திலும் தடங்கல்களை உருவாக்குகின்றன.  
ஆனால் ரயில், விமான, பஸ் பிரயாண நேரங்கள் சமுதாய சேவையான பொது நேரம் தானே, இவற்றை எப்படி மாற்ற முடியும் என்று எண்ணிடலாம். தவிர்க்க முடியாத ராகுகாலத்தைய, எம கண்ட நேரப் பயணங்களுக்கு முன்பாகவே ஆற்ற வேண்டிய தற்காப்பு, ரட்சா பூஜைகள் பல உண்டு. இவை வரவிருக்கும் காலதோஷங்களின் விளைவுகளை ஓரளவு தணிக்க வல்லதாகும்.
கடக்காட்டுக் குங்குமச் சிமிழ் என விசேஷமான சங்கு வகை ஒன்று உண்டு. இதில் குங்குமம் நிறைத்து வைத்துப் பூஜித்து எடுத்துச் செல்தல்.
*கையில், பையில் சுதர்சனச் சங்குச் சக்கரம் வைத்திருத்தல்
*பிரயாண நாளில் - தனிச் சந்நிதி கொண்டிருக்கும் ஸ்ரீகாலபைரவருக்கு முழு முந்திரிப் பருப்பு மாலை சார்த்தி வழிபடுதல்
* காலபைரவரின் திருவடிகளில் பூமி வடிவம் போன்று, அரைத்த சந்தன உருண்டை வைத்து, அதில் உலக நாடுகளின் அமைப்பு போன்று குங்குமப்பூ, முந்திரி, திராட்சை, சேர்த்து ஸ்ரீகாலபைரவரின் திருவடிகளில் வைத்தல் - இது உலக அளவில் மக்களுக்குச் சேரும் காலதோஷங்களைத் தணிக்க உதவும்.
*பிரயாண நாளுக்கு முன் தினம் இரவில், ஆலயத்தில் அர்த்த ஜாமக் காலபைரவ பூஜையில் பங்கேற்று, முந்திரி, குங்குமப் பூ கலந்த பால் நைவேத்யம் செய்து தானமளித்தல்
* காலசக்திகள் நிறைந்ததும், காலதோஷங்களை நிவர்த்தி செய்ய வல்ல காலகாந்த சத்திகளைக் கொண்டதுமான விளாம்பழம், முந்திரி, திராட்சை, கொப்பறைத் தேங்காய், கல்கண்டு போன்றவற்றை, இல்லத்தில் பூஜை அறையில் கன்னி மூலையில் (தென்மேற்குத் திசை) எப்போதும் ஒரு ஓலை முறத்தில் அல்லது ஓலைத் தட்டில் வைத்திருந்து அவ்வப்போது தானம் செய்தல்
இவ்வாறான நல்வழிகளில், காலதோஷங்களைப் படிப்படியாக நிவர்த்தி செய்து வர வேண்டும். இதுகாறும் வாழ்வில் அறிந்தும், அறியாமலும் மரணயோகம், எமகண்டம், ராகு காலத்தில் செய்த காரியங்களில் விளைந்து, மலை போல் பெருகி விரிந்துள்ள கால தோஷங்களுக்கு வேறு எவ்வகைகளில் எல்லாம் நிவர்த்தி காண்பது? நல்ல நேரம் பாராது அறிந்தே தவறான காலத்தில் செய்யும் காரியங்களில் தொக்கி நிற்கும் காலதோஷங்களைக் களைதல் மிகவும் கடினமானதே!
இதற்காகவே, அஷ்டமித் திதி, குறிப்பாக தேய்பிறை அஷ்டமித் திதி, குளிகை நேரம், 27 வகை யோக நேரங்களில் - சிவம் யோகத்தை அடுத்து வரும் சித்தம் யோகம் வந்தமையும் நாள் ஆகியவற்றில் ஸ்ரீகாலபைரவருக்கு உரித்தான விசேஷமான பூஜைகளை ஆற்றிட வேண்டும்.
இதுவரையில் எமகண்டம், மரண யோகம் காலங்களில் அறிந்தோ அறியாமலோ ஆற்றிய காரியங்களில் சேர்ந்துள்ள கால தோஷங்களுக்கு இரண்டு வாகனங்களை உடைய ஸ்ரீகாலபைரவர் சன்னிதியில் நிவாரணம் தேடிச் சங்கல்பப் பூஜைகளை ஆற்றிட வேண்டும்.

தனியாய் ஒளிரும் சூரியன்
காருகுடி முசிறி

வாகனம் இல்லாத நிலையில் மிகவும் அபூர்வமான கோலம் பூண்டு அருளும் பைரவர் ஸ்ரீகாலஞானபல பைரவர் ஆவார். இவ்வாறு எமகண்டம், ராகு காலம், மரணயோகம், காலன் போன்ற நேரங்களில் ஆற்றிய காரியங்களில் தோன்றும் கால தோஷங்களுக்கு ஸ்ரீகாலஞானபல பைரவர் பூஜையே தக்க நிவர்த்திகளைத் தர வல்லதாகும்.
சித்தம் என்பது 27 வகை யோக நேரங்களில் ஒன்றல்லவா! காரியம் சித்தி ஆகாத வகையில் ஏற்படும் காலதோஷ இன்னல்களை நிவர்த்தி செய்ய, சித்தம் யோக காலத்தில் முதலில் ஸ்ரீசித்தி வினாயகருக்கும், பிறகு ஸ்ரீகால பைரவருக்கும்ஆற்றும் பூஜா பலன்களும் மிகவும் உதவும்.
அபூர்வமாக, சித்தம் யோக நேரம் 60 நாழிகைக்கும் நிரவி  சித்தம் யோகபலமாக அமையும் நாளில், கால தோஷத்தை நிவர்த்திக்கும் சக்திகள் நன்கு பொழிகின்றன. பலயோக சக்திகளும், யோகபல சக்திகளும் நன்கு கனியும் நாள்.
இத்தனை நாட்கள், ஆண்டுகள் தொடர்ந்து விரதமிருந்து, பூஜிக்கின்றோமே எதுவும் மலரவில்லையே, பலன்கள் கனியல்லையே என எண்ணி ஏங்குவோர், இந்த சித்தம் யோகம் பரிபூரணமாக 24 மணி நேரமும் சாதிக்கும் நேரத்தில், காலையில் ஸ்ரீசித்தி வினாயகருக்கும், அர்த்த ஜாமத்தில் (இரவு நேரக் கடைசிக் காலப் பூஜை) ஸ்ரீகாலபைரவருக்கும், முழுத் தேங்காய்களான மாலை, முழு முந்திரிகள், சிறு திராட்சைகளாலான (கிஸ்முஸ் வகை திராட்சை) ஆன மாலைகளைச் சார்த்தி வழிபட, வாழ்வில் நல்மாற்றங்களைக் காணலாம்.

கேந்திர சஷ்டி வழிபாடு

கேந்திரம் என்பது மையமாகும். பிரபஞ்சத்தின் (தெய்வீக) மையம் அருணாசலமாம் திருஅண்ணாமலை, ஆத்மத்தின் மையம் ஆத்ம ஜோதி, உயிர் துலங்கும் உடலின் மையம் இருதயம். உள்ளத்தின் மையம் ஹிருதாயாகாசம், புத்தியின் மையம் சூக்கும அறிவு, மூளையின் மையம் கபாலத் துருவம், சுவாசத்தின் மையம் பிராண சக்தி, பூமியின் மையம் பாரதப் புண்ணிய பூமி. பாரதத்தின் மையம் தென்னாடுடைய சிவாலயம் - இவ்வாறாக ஒவ்வொன்றுக்கும் மிகவும் முக்கியமான மைய கேந்திரப் பகுதி உண்டு. ஏழு கிழமைகளில் மையமாக அமைவதும் புதவாரமே!
இவ்வாறு புதனுடன் சஷ்டி திதி இணைந்து வருவதே கேந்திர சஷ்டியாகும்.

தென்பாண்டிக் கொடுமுடி

சிவபெருமானின் நெற்றி மையச் சுடரொளியில் உற்பவித்தவரன்றோ முருகப் பெருமான்! பூவுலக நிலப்பரப்பின் மையம் மலை உச்சியாகும். எனவேதாம் தெய்வ சக்திகள் திரளும் எளிமையான மையமாக, மலையில் குடியிருக்கும் குமர மூர்த்தியாகிய முருகனின் ஆலயத்தைக் குறிக்கின்றனர் சித்தர்கள்.
கேந்திர சஷ்டி நாட்களில் மலைத் தலங்களில், குறிப்பாக முருகன் அருளும் தேனி மலை, குன்றக்குடி, பழனி, சுவாமி மலை போன்ற முருகமலைத் தலங்களில், முருகனுக்கு சிகப்பு நிற வண்ணப் பூக்களால் ஆன கிரீடம் சார்த்தி வழிபடுவது மிகவும் விசேஷமானது.  

திருமலை முருகன் திருத்தலம்

ராஜகோபுரத்தில் ஸ்ரீபிள்ளையார்
கீதாவேத சாளரத்தில்
முருக வாகனம் லால்குடி

முருக மலைத் தலங்களில் பச்சைப் பயிறு மற்றும் பச்சைப் பயிறு ரவையை, ஒரு பச்சைத் துணியில் சுமந்து, கிரிவலத்தில் பறவைகள், கோழி, சேவல்கள், எறும்புகளுக்கு இட்டவாறே கிரிவலம் வருதலால், பிறரைப் பழி வாங்க வேண்டும், தண்டிக்க வேண்டும், திட்டி, அடித்திட வேண்டும் - என்ற வகையில் எழும் துர்எண்ணங்கள் தணிந்து மனம் சீர் திருந்த உதவும்.
மலையில் உள்ள முருகன் ஆலயத்தில் சித்தி விநாயகர் என்ற பெயருடன் அருளும் பிள்ளையாருக்கு முதலில் அருகம் புல் + சிகப்பு நிற வண்ணப் பூக்களாலான கிரீடம் சார்த்தி வணங்கி, பிறகு முருகனை வழிபடுதல் அருள் சுரக்கும் ஆனந்த பூஜையாகும்.
“சித்திக்கும் சத்சித் சித்தியே சிவ புத்தி!” அதாவது தெய்வ சக்தியில் எத்தகைய உத்தம நிலைகளில் சித்திகளில் சிறந்திட்டாலும், இறைச் சீர்மையில் இருந்து சற்றும் பிறழா மாமறைச் சீலம் துலங்கிட, இத்தகைய சஷ்டி கூடும் புதனில், மலைத் தல முருகன் வழிபாடு விசேஷமானது.
மலைத் தலம் அருகில் வசியாதவர்களும், மலைத் தலத்தில் ஏறி வணங்கிட இயலாதாரும் என் செய்வது? ஏதேனும் முருக மலைத் தலத்திற்கு ஓர் ஏழைக் குடும்பமானது சென்று வழிபட்டு வருவதற்கான செலவுகளை ஏற்பதும் மிகச் சிறந்த 32 தானதர்மங்களுள் ஒன்றாகும். புத சஷ்டி அன்று இதனை ஆற்றுவதால் மகன், மகள் புத்தி பிசகாது நல்வழியில் செல்ல மாதவீயப் பித்ருக்கள் அருளுவர்.
இதற்கும் வசதி இல்லாதோர் ராஜகோபுரங்களில் உள்ள முருகன், பிள்ளையார் வடிவுகளை ஒரு நாழிகை நேரமேனும் நன்கு கண்டு தரிசித்துத் தியானித்து, ஒட்டகத்திற்குப் புல் அளிக்க வேண்டும்.

தலை நிமிர்ந்து நில்லுங்கள்

உத்தமமான சுப முகூர்த்த நட்சத்திரங்களில் ஒன்றே பூச நட்சத்திரமாகும். கலியுகத்தில் அனைத்து ஜீவன்களுமே சனி தசையைக் கடந்தாக வேண்டும். வாழ்வில் சனி தசை சற்றுத் தள்ளி வந்தாலும், ஒவ்வொரு கிரக தசையிலும் சனி புக்திக் காலத்தையாவது சந்தித்தாக வேண்டும் அல்லவா! ஆனால் சனி தசை, சனி புத்தி, சனி அந்தரக் காலம் என்றாலே பலரும் அஞ்சுகின்றனரே, என் செய்வது? இறைப் பகுத்தறிவுக்கு முரணான அஞ்சுதல் படலம் இது! அன்பால் திருத்தும் பெற்றோராகவும், சீர்திருத்தும் சகோதர, சகோதரிகளாகவும், நல்வழிப்படுத்தும் ஆசிரியராகவும், தெய்வீக வழிகாட்டியான சற்குருவாகவும், முக்தி, மோட்ச நிலைகளை அளிக்கும் சனி(ஈ)ஸ்வர மூர்த்தியாகவும் பல வழிகளிலும் கலியுகத்தில் தெய்வமாயன்றியும், பல வடிவுகளிலும் அருள் புரியும் மஹாகாருண்ய மூர்த்தியே சனீஸ்வரர் ஆவார்.

விளங்குளம்

சனி கிரகத்திற்கு உரிய தசாப் பூர்வ கேந்திர நட்சத்திரம் பூசம் ஆகும். ஒருவருடைய வாழ்வில் சனி தசை 19 ஆண்டுகளும் அதற்கு மேலும் அமையக் கூடும் அல்லவா! ஒரு நாளில் 60 நாழிகையும் பூச நட்சத்திரம் அமையும் அற்புதமான நாளில்தான் சனி தசையில் எழும் துன்பங்களைத் தணிப்பதற்கான பூசமாபன சோபன சக்திகள் பூரிக்கின்றன. இதிலும் சனிக் கிழமை அன்று பூச நட்சத்திரம் 60 நாழிகையும் வருமாயின் வாழ்வில் கிட்டும் அதியற்புத நாளாக அமையும்.
ஒரு நாளில் அமையும் கிழமை, நட்சத்திரம், யோகம், நேரம் இவற்றுள் எது, எது அதிக சக்திகளைக் கொண்டுள்ளது என்பது, அந்தந்த நாளில் உள்ள காலத் தன்மைகளைப் பொறுத்து கணிக்கப்படுவதாகும். உதாரணமாக, சனிக்கிழமை அமையும் கரிநாளில் சனி ஹோரையில், மற்ற எல்லா கால சக்திகளை விட சனி கிரக சக்திகள் அற்புதமான சக்திககைப் பூண்டிருக்கும் என அறிக!

அதே போல பூச நட்சத்திரமும் வியாழன் கூடும் நாட்களில் சனீஸ்வரரும், பூச நட்சத்திர மூர்த்தியும் குருமூர்த்தியைத் தீர்த்த வாரி உற்சவமாக வழிபடுகின்றனர். எனவே, இந்நாட்களில் ஆலயங்களில், குறிப்பாக தீர்த்தக் குளங்கள் உள்ள சனைச்சரத் தலங்களிலும் (திருநள்ளாறு, விளங்குளம்), இல்லத்திலும் குருமூர்த்திக்கு கருவேப்பிலைகள் நிறைந்த எலுமிச்சை சாதம் படைத்து,
காக்கைக்கு எலுமிச்சை அன்னம் இடுதல்,
ஊனமுற்றோர்க்கு மஞ்சள் நிற ஆடைகளை, உணவு வகைகளைத் தானமாக அளித்தல்,
எள் உருண்டைகளை மஞ்சள் பையில், மஞ்சள் நிறத் துணியில் வைத்துத் தானமளித்தலால்
- தாழ்வு மனப்பான்மைகள் அகல உதவும். பிறர் முன், தான் படிப்பின்றி, நல்ல வேலையின்றி, நகை, சொத்தின்றி தலை குனிய வேண்டியுள்ளதே எனத் தாழ்வு மனப்பான்மையுடன் ஒதுங்கி வாழ்வோர், தம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் பெற இத்தகைய வழிபாடு மிகவும் உதவும்.

சித்திக்கான புத்தி அருளும் வழிபாடு

மகாத்மா என்றால் மஹா + ஆத்மா, அதாவது ஆத்மாவின் மஹிமையை, மகத்துவத்தை நன்கு உணர்த்த வல்லமைக்கு மஹா ஆத்மா என்று பெயர். இந்த அகில உலகத்திலும், புனித பாரதத்தில் பிறந்த மஹாத்மா காந்தி மட்டுமே மஹாத்மா எனப் போற்றுகின்ற அளவிற்கு, 640 கோடி ஜீவன்களில் மஹாத்மாவாக, மஹா உத்தமராகப் போற்றப்படுகின்றார்.
மஹாத்மா காந்தியின் குரு யார்? அவர் கடைபிடித்த வாய்மையே, சத்திய மூர்த்தியாக, அவருக்குக் குருவாக நின்று வழி காட்டியது. தம் பரிசுத்தமான அன்பால் உலக ஜீவன்களை ஆண்டவர் மஹாத்மா காந்தி. ஆசாபாசங்கள் நிறைந்த சாதாரண மனிதராய் வாழ்க்கையைத் தொடங்கி மனிதனும் தம் முயற்சிகளால் மஹாத்மா ஆகலாம் என நிரூபித்தவர். தினமும் இறைவனுக்கு ஆட்டுப்பாலும், கடலையையும் படைத்து மகசோபனத் தவ சக்திகளைப் பெற்றவர். ராமநாம ஜப சக்தியால் சமுதாய இறைப் பணிகளையே யோக, தவ, ஞான மார்கமாய்ப் பூண்டு மஹாத்மா ஆனவர்.

மனிதர்களுக்குள்ளும் இத்தகைய மஹாத்தும மஹா மகத்துவங்களைப் பெற்றுத் தர வல்ல நட்சத்திர சக்திகளைக் கொண்டதே மக நட்சத்திரமாகும். இதற்காக மக நட்சத்திரத்திரத்தில் பிறந்தவர்கள் மட்டுமே மஹாத்மாவாக ஆக முடியும் என்று பொருள் கொள்ளலாகாது. மக நட்சத்திரமானது எந்த ஜீவனையும் மஹாத்மாவாக ஆக்கும் தேவசக்திகளை அளிக்க வல்லதாகும். ஒவ்வொருவரும் இப்பூவுலகில் நன்கு வாழ தனக்குரிய நட்சத்திர சக்திகள் மட்டுமல்லாது ஏனைய 26 நட்சத்திர சக்திகளும் மிகவும் தேவையானவையே!
மகத்தில் பிறந்தவர்கள் ஜகத்தை ஆள்கின்ற அளவிற்கு உன்னத மனோ சக்திகளைப் பெற்றவர்கள் ஆவர் என்பது உண்மையே! ஆனால் மக நட்சத்திரக்காரர்களிடம் மறைந்திருக்கும் இத்தகைய சக்திகளை வெளிக் கொணர வல்ல ஆன்மீக சாதனங்களைத் தம் வாழ்வில் கடைபிடித்திடில்தானே அவற்றைப் பெற்றிட முடியும். இதற்கு உதவுவதே திண்டுக்கல் அருகே உள்ள தவசி மடை ஸ்ரீமஹாலிங்க சிவாலயம் ஆகும். ஸ்ரீராமர், பரத்வாஜ மஹரிஷியைத் தரிசித்தத் திருத்தலமே தவசிமடை. இன்றும் பரத்வாஜரின் பிருத்வீ மார்கண தவ வடிவு புலனாகும் சிவத்தலம். இம்கரிஷியின் பஞ்சவடி சயன யோக மார்க வடிவை இன்றும் இங்கு காணலாம்.
பண்டைய யுகங்களில் இங்கு எண்ணற்ற மஹரிஷிகளின் பர்ண சாலைகள் பொலிந்தமையால், இப்பூவுலகில் தவ சக்திக் கிரணங்கள் மடையாய், மடையாய்ப் பெருகி, இன்றும் பூரிக்கும் அற்புதத் தவசாரண்யத் தலமாகிய தவசிமடை இதுவே! மக நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தலம். தியானம், யோகத்தில் கரை காணத் துடிப்போர்க்கு மிகவும் துணை புரியும் தலம்.
ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் எண்ணற்ற திறமைகளைக் கொண்டவர்கள் ஆவர். எந்தெந்த நட்சத்திரத்தார்க்கு எத்திறமை பதியலாகும் என தக்க சற்குரு மூலம் முதலில் அறிந்து அதில் வாழ்நாள் முழுதும் கவனம் செலுத்துதல் வேண்டும். ஜாதகப் பூர்வமாகவும் ஓரளவு இதனை அறிந்திடலாம். நட்சத்திர சக்திகளைப் பலவிதங்களிலும் பெறும் வழிமுறைகளையும் முதலில் நன்கு தெரிந்து அவற்றைக் கடைபிடிக்கும் நல்வழிகளைக் காண வேண்டும். இதன் வழிவகைகளில் ஒன்றே மகம் கூடும் நவமித் திதி வழிபாடாகும்.
நவமித் திதி என்பது எல்லாவிதமான கால அம்சங்களில் பூரித்துக் காரிய சித்தி நிரவ உதவுகின்றது. மக நட்சத்திரத்தில் தோன்றிய மூர்த்திகளே ஸ்ரீஜகதீஸ்வரரும், ஸ்ரீஉலகநாயகி, ஸ்ரீஜகதாம்பிகை அம்பிகையரும் ஆவர். ஸ்ரீஜகதீஸ்வரர், ஸ்ரீஜகதாம்பிகை, ஸ்ரீஜெயங்கொண்டான் போன்ற ஜகத், ஜெயம் சார்பான பெயர்களை உடைய மூர்த்திகளை நவமித் திதியும் மகமும் கூடும் நாளில்  பூஜித்துப் பெறும் பலன்களில் நவ அம்சக் கால சக்திகள் நன்கு பரிமளிக்கின்றன.
நவமி திதி அன்று கறுப்பு நிற குதிரைக்கு புல், (அவித்த) கொள்ளுத் தானியம் அளித்தல் மிகவும் விசேஷமானது. தினமும் தான, தர்மம் செய்வதால் தம் நிதி நிலைமை என்னாவது என எண்ணத் தோன்றுகிறதா?

பரத்வாஜர் விஸ்தார ஒடுக்கம்
தவசிமடை திண்டுக்கல்

“எவரொருவர் தன்னை நினைப்பதை விடப் பிறர் நலன்களைப் பற்றி அதிகம் எண்ணுகின்றாரோ, அவரைப் பற்றி அவருடைய சற்குரு எண்ணுகின்றார்.”
தம்மைப் பற்றி சற்குருவே எண்ணும் உத்தம இறைநிலையைத் தர வல்ல அதியற்புத ஆன்மீக சாதனமாக தான, தர்மங்கள் பொலிகையில் இதை விட வேறு ஜப, தப, யோக, வேத மார்கம் யாதுளதோ? எனவே ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் எண்ணற்ற சக்திகளைத் தர வல்லவையே காலப் பசுவிடம் இருந்து இத்தகைய சக்திகளைக் கறந்து சமுதாயத்திற்கு அளிப்பதையே இறைவனுக்கான நைவேத்யமாக அர்ப்பணிக்கும்படியான வழிமுறைகளை அறிந்து கடைபிடித்திடுங்கள்.

திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடம் சிவத் தலத்தில் மக நட்சத்திர ஹோமம் நிகழ்த்துவது மிகவும் விசேஷமானது. தினமும் யாவரும் ஓத வேண்டிய நட்சத்திர சூக்தம் என்ற வேதமாமறைத் துதி ஒன்று உண்டு. இதை அறியாதோர் 27 நட்சத்திரங்களுக்கு உரிய தமிழ்த் துதிகளை ஓதி வர வேண்டும்.(நட்சத்திர வழிபாடு பற்றிய எங்களுடைய நூலில் விளக்கங்கள் காண்க!)
தவசிமடைத் தலத்தில் பிரதி தினம் மேற்கண்ட நட்சத்திரத் துதிப் பாராயணம், அங்கப் பிரதட்சிணம், திருப்பத்தூர் - குன்றக்குடி அருகே நேமம் தலத்தில் நவதுர்க்கை, அஷ்ட லஷ்மியைத் தரிசித்தல், சனீஸ்வரர் தம் தர்ம பத்தினியுடன் அருளும் பட்டுக்கோட்டை - பேராவூரணி அருகில் உள்ள விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயத் தீர்த்த வழிபாடு, கறுப்பு நிறக் குதிரைகளுக்கு கொள் அளித்தல், ஒன்பது வகைக் குதிரைகளுக்கு உணவளித்தல் போன்ற நல்ல பூஜைகளை, நற்காரியங்களை ஆற்றுவதால் நல்ல மனோதைர்யம், மனோதிடம் உண்டாக வழி பிறக்கும்.
தினமும் பசுவிற்கு உணவளித்தல், அவரவர் நட்சத்திர சந்திராஷ்டம நாட்களில் சந்திர மூர்த்திக்கு உளுந்து வடை படைத்துப் பசுவிற்கு அளித்தல், மக நாளில் எருமைக்கு அகத்திக் கீரை அளித்தல் போன்ற 64 விதமான வைராக்கியங்களைச் சித்தர்கள் அளித்துள்ளார்கள் இவற்றுள் ஒன்றே நவமித் திதி தோறும் வெண்ணிற ஆண் குதிரைக்குக் கொள் உணவு அளித்தலாகும். இதனால் வாழ்வில் நல்ல மனோ தைர்யம் உண்டாகும்.
இத்தகைய 64 விதமான வைராக்யங்களை வாழ்நாள் முழுதும் ஆற்றி வருதலும் கலியுகத்தில் மகத்தான தவம், யோகம் எனச் சித்தர்கள் போற்றுகின்றனர். நித்திய வழிபாடுகளைச் சரியாக ஆற்றவில்லையே என ஏங்குவோர்க்கு இந்த 64 விதமான வைராக்ய வழிபாடுகள் நல்ல மன சாந்தியைத் தருவதாகும். இவற்றைத் தனித்துச் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று கூடி ஆற்றுவது மனித குலத்திற்கே ஆற்றும் பெருந் தொண்டாகும்.  

ஏமாற்றம் தவிருங்கள்

மூன்று மாதாக்கள் மனித சமுதாயத்தை உலகெங்கும் உய்விக்கின்றனர்.
பூமாதாவே மானுடர்களுக்கு மட்டுமன்றி, அனைத்து வகை ஜீவன்களுக்கும் தாயாவாள். இதனால்தான் அனைத்துப் பெருமாள் ஆலயங்களிலும் பூதேவியாக, பூமா தேவியாக, தாயார் சேவை சாதிக்கின்றாள். மேலும், திருமால் ஆலயங்களில் இறைவியை, அழகாக, கனிந்த இறைமொழியாக, தாயார் என்றே அழைப்பர். இவ்வாறு பூதேவி ஒவ்வொரு ஊரிலும் எழுந்தருளி, அந்தந்தப் புவிப் பகுதியில் பூமா தேவித் தாயாராக, புனிதமான அன்பையே பக்தி ரசமாக அருள்கின்றாள்.
கலியுகத்தில் புகை பிடித்தல், புகையிலை, முறையற்ற காமக் குற்றங்கள், வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு தீயொழுக்கங்களுக்கு ஆட்பட்டு இருப்பவர்கள், தினமும் பூமா தேவியை மனதார வழிபட்டு, செவ்வாய் தோறும் பெருமாள் ஆலயத்தில் சாம்பிராணி தூபம் இட்டு வருதலும்,
பல பெருமாள் ஆலயங்களிலும் குறைந்தது மூன்று மணி நேரமாவது தொடர்ந்து சாம்பிராணி தூபம் இட உதவிடுதலும், மகத்தான இறைப் பணிகளாக, நல்வழிப்படுத்தும் மங்கள வார (செவ்வாய் கிழமைக்கான) அறவழிபாடுகளாகத் துலங்குகின்றன.

செவ்வாய்க் கிழமை தோறும் அருணாசலமாம் திருஅண்ணாமலையில் சாம்பிராணி தூபம் இட்டவாறே கிரிவலம் வந்திடில், புகை பிடிக்கும் வழக்கம் தானாகவே நாளடைவில் கழன்று விடும். நச்சுப் புகையை உள்ளுக்குள் தள்ளி தன் ஆத்மத்தையே வதைத்த பலத்த தீவினைகள் சிகரெட் நச்சுப் புகையை வெளியே காற்றில் புகைய விட்டுப் பிறருடைய இருதயத்தையும், பரவெளியையும் மாசு படுத்திய பாவ வினைகளை என்று, எவ்வாறு எவ்வகையில்தான் கரைப்பது? இதற்காக அமைந்ததே அக்னி கிரகமான செவ்வாய்க் கிழமை வழிபாடுகளாகும்.

ஸ்ரீமுருகப் பெருமான் வயலூர்

அடுத்ததாக, தன்னைப் பெற்ற தாயார், பூவுடல் மாதா ஆகின்றாள். ஆம், என்னைப் பெற்ற தாயார் என்ற பெயரைச் சுமந்து சென்னை அருகில் திருநின்றவூர் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள் ஆலயத்தில் தாயாராம் இறைவி கனிவுடன் அருள்கின்றாள். தாயாரைச் சரியாகப் பேணாதோர் சுமந்து வரும் கழுவினைகளைக் கழுவ உதவும் உத்தமத் தலம்.
செவ்வாய்க் கிழமை அன்று திருநின்றவூர் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள் ஆலயத்தில் முதலில் வழிபட்டுப் பிறகு திருக்கழுக்குன்றத்தில் கிரிவலம் வந்து, அங்கு ஸ்ரீபக்தவத்சலேஸ்வரராக அருகாகச் சிவபெருமான் அருளும் சிவாலயம், மலை மீதுள்ள ஸ்ரீவேதபுரீஸ்வரர், சங்குத் தீர்த்தம் அருகில் ஸ்ரீருத்ரகோடீஸ்வர மூர்த்தி ஆகிய மூன்று ஈஸ்வர மூர்த்திகளையும் வழிபட்டு வருவோர்க்கு
- பெற்றோர்களைப் பேணும் விஷயத்தில் -தம்பதியர் இடையே உள்ள மனஸ்தாபஙகள் சுமுகமாகத் தீர உதவும்.
- அடிக்கடி மனவேறுபாடுகளால் தாய் வீடு செல்லும் மனைவி மனம் திருந்தி ஒன்று பட்டு வாழ மிகவும் உதவும்.
தன்னைச் சுமந்தெடுத்து ஆளாக்கிய தாயாருக்கு எவ்வளவு மனிதர்கள் இந்த உலகத்தில் முறையாக நன்றி பூஜை ஆக்குகின்றார்கள் என்பது கேள்விக் குறியே! . தனக்குத் திருமணம் ஆனவுடன் பெற்றோரை விட்டு உடனேயே பிரிகின்ற மனித வர்கமே தற்போது தலையெடுத்து வருகின்றது.
தாயார் மனம் குளிரச் சேவை ஆற்றா விடில் தன் பிள்ளைகளாலேயே புத்திர சோக தோஷங்கள் வந்து ஆட்டும்.
இவ்வாறு புத்திர சோக தோஷங்கள் வாழ்வில் அண்டாதிருக்க, செவ்வாய்க் கிழமை தோறும் தேனி மலை போன்ற - வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்து முருகன் அருளும் மலைத் தலங்களில், மூன்று அல்லது மூன்றின் மடங்கில் (6, 9, 12, 15) புடவைகள் , ரவிக்கைகள் ஏனைய வஸ்திரங்களுடன் கிரிவலம் வந்து,
1. ஒரு செட் வஸ்திரங்களை ஆலயத்திற்கும்
2. இரண்டாவதை அதே தலத்தில் நல்ல ஏழைச் சுமங்கலிகளுக்கு வஸ்திர தானமாகவும்
3. மூன்றாவதைத் தன்னைப் பெற்ற தாயாருக்கும் அளித்து, தாயாரின் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்துத் தான் செய்த பாவங்கள் தீர நல்லாசி வேண்டி நமஸ்கரிக்க வேண்டும்.
மூன்றாவதாக, நடமாடும் கோ மாதாவாகிய பசு! அனைத்து தெய்வ மூர்த்திகளையும் தன்னுள் தாங்கி, உலகெங்கும் கோடிக் கணக்கான குழந்தைகளைத் தினமும் தன் பசும் பாலால் காக்கும் தியாகமய ஜீவமாதாவே பசுவாக அமைந்தருள்கின்றது. . இதனால்தான் பசுவானாது, தயாநிதித் தாயாக, கோமாதாவாக உலகில் வலம் வந்து காட்சி தருகின்றது.

பல இறை வடிவுகளின் ஒரே பிம்பமாக அருளும் கோமாதாவாகிய பசுவை, தினமும் தொட்டு, வலம் வந்து சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்க வேண்டும்.
செவ்வாய் தோறும் ஆலய கோசாலைகளில் இயன்ற சுத்திகரிப்புப் பணிகளை ஆற்றி மங்களகரமாக மஞ்சள், குங்குமம் இட்டு செவ்வாய் கிரகத்திற்கு உரிய ஒன்பதைக் குறிக்கும் வகையில்
புல், கரும்பு, தவிடு, புண்ணாக்கு, வைக்கோல், பழங்கள், கஞ்சி நீர், கீரை வகைகள், காய்கறிகள் போன்ற ஒன்பது வகை உணவு வகைகளை வயிறு நிறைய அளித்து,
கோ சூக்தம் ஓதி, கோ பூஜை செய்திட பிள்ளைகள், பெண்கள் நல்ஒழுக்கத்துடன் வாழ மிகவும் உதவும்.
செவ்வாயும், துவாதசியும் சேரும் நாளில் வழிபட வேண்டிய ஆலயங்கள் கோசாலை உள்ள ஆலயங்கள் ஆகும். இங்கு நிறைய சாம்பிராணி தூபம் இட்டு வழிபடுதல் பிறரால் பண ரீதியாக ஏமாற்றப்படாமல் காக்க உதவும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam