ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
யம தீப வழிபாடு |
ஐப்பசி தீபாவளி என்பது ஒரு மாத சிவராத்திரித் திதித் திருநாள் என்பதைப் பலரும் மறந்து விடுகின்றார்கள். ஆம், நரகாசுரனுக்கு கிருஷ்ண பகவான் சிவ பூஜைக்குரிய மாத சிவராத்திரியில்தாம் நன்னிலை தந்தார்.
துவாதசி என்பது லட்சுமி கடாட்சத்தைப் பெற்றுத் தர வல்ல திதி என்பதை நாமறிவோம். திருமகளே ஈஸ்வரனை வில்வத்தால் அர்ச்சித்துப் பெருமாளின் மார்பில் உறையும் பாக்யத்தைப் பெற்றமையால்தாம் சிவாலயங்களில் திருமகள் சன்னதி தனிச் சிறப்பிடம் பெறுகின்றது.
திரயோதசியில் பெறுகின்ற தன கடாட்சம் நிலைத்து நிற்க, தன திரயோதசித் திதிப் பூஜைகள் துணை புரிகின்றன. தனத் திரயோதசித் திதிக்கு ஸ்ரீபுரப் பிரதோஷம் என்ற பெயரும் உண்டு. பொதுவாக, ஸ்ரீதர், ஸ்ரீஹரி, திருப்பதி, திருவாபரணன் போன்ற ஸ்ரீ மற்றும் திரு பெயரை உடையவர்கள் வழிபட வேண்டிய ஆலயம் ஸ்ரீபுரந்தான் கிராம ஆலயமாகும். தற்போது சிதிலமடைந்த, பூஜைகளற்ற நிலையில் உள்ள இந்த ஸ்ரீபுரந்தான் தலம் அரியலூர் அருகே உள்ளது.
தீப ஒளியில் பூவாளூர் திருத்தலம்
ஸ்ரீனிவாசன், ஸ்ரீப்ரியா போன்ற ஸ்ரீ மற்றும் திரு எனும் பெயர் வகைகளை உடையவர்கள் ஸ்ரீபுரந்தான் தலத்தில் தக்க இறைப் பணிகளை ஆற்றி, ஆலய முக்காலவழிபாட்டை மீண்டும் நிலை நிறுத்த உதவுதலால் சந்ததிகள் சிறப்புடன், தன பாக்யத்துடன் தழைக்க உதவும். இத்தலத்தில் பிரதோஷ பூஜை நிகழ்த்துவது பணக் கடன்களால் அல்லல்படுவோரை மீட்டு நன்னிலையில் செலுத்த மிகவும் உதவும்.
தன திரயோதசித் திதிப் பிரதோஷ பூஜையைத் திருமகள் சன்னதி இருக்கும் தலங்களில் நிகழ்த்துவதும் மகாசக்தி வாய்ந்ததாகும். பொதுவாக மஹா தன திரயோதசிப் பூஜைக்கு வரும் செல்வம், இருக்கின்ற முறையான செல்வ வளத்தை நன்கு நிலை நிறுத்தவும், விருத்தியடையச் செய்வதற்குமான நல்வரங்களைத் தருகின்றன.
மிகவும் வறுமையில் வாடுவோரும், வாழ்நாள் முழுதும் பணம் சம்பாதிப்பதற்காகப் போராடுபவர்களும் துவாதசிப் பூஜையைக் கைக் கொண்டு வந்தால் மகத்தான மாற்றங்களைக் காணலாம். பணம் சம்பாதிப்பது மட்டும் போதுமா?
லட்சுமி கடாட்சம் என்பது பணத்தை முறையாகச் சம்பாதிப்பது மட்டுமல்லாது, முறையாகப் பணத்தைச் செலவழிப்பது, முறையாகச் சேமிப்பது, நல்லவழிகளில் பணத்தை நிலை நிறுத்துவது, தேவையான போது பணத்தைப் பெறுவது, பணத்தை நிலையான சொத்துக்களாக ஆக்குவது போன்ற பல்வகைப் பணத்துறை வழிமுறைகளையும் அடைதலும் லட்சுமி கடாட்சமே!
இவ்வாறு பல்வகைப் பணத்துறை வழிகளை அடைய உதவுவதும் தன திரயோதசித் திதி பூஜைகளின் மகத்துவமும் ஆகும் . எவ்வாறு துவிதியைத் துதியானது எமபயத்தைப் போக்க வல்ல தர்மராஜா பூஜைகளுக்கு ஏற்றதாக விளங்குகின்றதோ, இதை போல, தன திரயோதசி என்பது செல்வத்தை முறையான வழிகளில் தக்க வைத்துக் கொள்ளும் சக்திகளையும் கொண்டதாகும்.
ஸ்ரீரெங்கநாதர்
ஸ்ரீபுரந்தான்
மிக, மிக அபூர்வமாக அமையும் இத்தகைய தினங்களை நன்கு குறித்து வைத்துக் கொண்டு வரும் சந்ததிகளுக்கும் நன்கு உணர்த்திட வேண்டும்.
நரக சதுர்த்தசியாகிய தீபாவளிக்கு முன் வரும் திரயோதசிப் பிரதோஷ பூஜைக்கு ஜ்வாலா தீபப் பிரதோஷம் என்று பெயர். ஜ்வாலா முகம் எனில் நன்கு ஆழமாக உள்ள பெரிய மண் அகலின் வடிவாகும். இன்று சிவாலயங்களில் நன்கு பெரிய ஜ்வாலா முக அகல் தீபங்கள் (குறைந்தது) 12 ஏற்றுதல் விசேஷமானது.
கைகளுக்கு மருதாணி இட்டு விளக்கேற்றுவது மென்மேலும் சிறப்பைத் தரும்.
எவரேனும் இறந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது. யம தீப வழிபாடாக, எட்டு அகல் விளக்குகளை ஆலயத்திலும், இல்லத்திலும், எட்டுத் திக்குகளிலும் தாமரைத் தண்டுத் திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும்.
இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் நின்று பூஜித்து, யம தீப தேவதா மூர்த்திகளை உலக ஜீவன்களுக்கு உள்ள எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணைபுரிவீர்களாக என்று வேண்டிடுக! மகத்தான சமுதாய இறைப் பூஜையே எம தீப வழிபாடாகும்.
உள்ஒளி தருவதே தீபாவளி |
தீபாவளித் திருநாள் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வாலேயே ஆசிர்வதிக்கப்பட்ட ஐப்பசி மாத சிவராத்திரி தினமாகும். சிவராத்திரி தினமானது எத்தனையோ விசேஷமான தெய்வீகத் தன்மைகளைக் கொண்டிருக்கின்றது. உண்மையில், ஒரு பட்சத்திற்கு ஒரு முறை (15 நாட்கள்), அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற விசேஷ தினங்கள் அமையக் காரணமே, அந்தந்த பட்சத்தில், ஒரு மனிதன் செய்கின்ற தவறுகளுக்கு உடனடியாகப் பிராயச்சித்தங்களைப் பெற்றுத் தருவதற்கும் ஆகும்.
ஸ்ரீநரமுக விநாயகர்
திலதைப்பதி
இவ்வாறு பட்சந் தோறும் பண்டிகைகளாக அமைவதற்கான வேறு முக்கியமான காரணங்களும் உண்டு. இனியேனும் வாழ்வில் தவறுகளை செய்யாதிருக்கத் தேவையான புண்ய சக்திகளையும்,
இதுவரையில் செய்த சஞ்சிதக் கர்ம வினைகள் தாக்கா வண்ணம் ஓரளவு காத்திட, நல்ல ரட்சா சக்திகளையும் அளிப்பதற்கும் இவை உதவுகின்றன. இவ்வகையில் ஐப்பசி மாத சிவராத்திரிக்குத் தீபஸ்ரீதரம் என்று பெயர்.
பலருமே ஸ்ரீகிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த நாள் மட்டுமே தீபாவளி வைபவ காரணமாக எண்ணுகின்றார்கள். ஒரு தெய்வ மூர்த்தியின் திருக்கரங்களால் மடிபடுதல் என்று சொல்வதை விட, தெய்வ மூர்த்தியே நேரில் வந்து தீவினைகளை மாய்த்து, நற்குண சக்திகளாக ஆக்கித் தருகின்ற அற்புத லீலை என்று உணர்தல் வேண்டும்.
ஸ்ரீலஸ்ரீ லோபாமா அகஸ்தியர்
ஆஸ்ரமம் திருஅண்ணாமலை
நரகாசுர புராணம் பல பாடங்களைப் போதிக்கின்றது. நரகாசுரன், ராவணன் போல் பல பூஜைகளையும் சிறப்புற ஆற்றி, அதே சமயத்தில் பூலோக ஜீவன்களுக்கு எண்ணற்றத் துன்பங்களையும் தந்தவன். கொடிய பாவ வினைகளை சேர்த்துக் கொண்டாலும், தாம் செய்த பூஜைகளில் திரண்ட புண்ய சக்தியானது, பாவ வினைகளின் தன்மைகளை ஓரளவு தணித்திட்டது. இதே நிலை தான் கலியுகத்திலும் மக்கள் சமுதாயத்தில் நிலவுகின்றது.
அதாவது ஒருபுறம் இறைவழிபாடுகள், மறுபுறம் பிறரை ஏமாற்றுதல், வதைத்தல், லஞ்சக் குற்றங்கள், காமத் தீவினைகள், சூதாட்டம், மது அருந்தி ஆட்டம் போடும் குற்றங்கள், உடலால் ஆக்கிய அதர்மக் குற்றங்கள் போன்ற பலவும் இணையாகவே பலருடைய வாழ்விலும் நடந்து வருகின்றன.
அதாவது கலியுலகில் ஒருவர் என்னதான் அற்புத வழிபாடு, தான தர்மங்களால் அபரிமிதமானப் புண்ய சக்திகளைப் பெற்றாலும், அவர் செய்கின்ற தீவினைகளிலிருந்து அவரை ஓரளவு காப்பாற்றவும், பல தீவினைகளைக் கழிக்கவுமே அப்புண்ய சக்திகள் தீர்ந்து விடுவதால், அவருடைய வாழ்க்கையே போராட்டமாக ஆகி விடுகின்றது.
இவ்வகையில் பல வருடங்களுக்கு நிலவி வந்து அருள வல்ல புண்ய சக்திகளை அருணாசல கிரிவலம், சபரிமலை விரதம், திருப்பதி பாத யாத்திரை, ஆயுர் தேவி பூஜை, அன்னதானம் போன்றவற்றின் மூலமாகச் சேர்த்து, புகை பிடித்து புகை பிடித்து, விஷக் காற்றைப் பிறருக்கும், காற்றுப் பரவெளியிலும் பரப்பியும், மது அருந்தி தன் ஆத்ம நிலைக்குக் களங்கம் விளைவித்தும், லஞ்சம், ஏமாற்றுதல், முறையற்ற காமம் போன்றவற்றிலுமாக, அனைத்துப் புண்ய சக்திகளையும் ஒரு வாரத்திலும், ஒரு சில தினங்களிலுமேயாகக் கழித்து விடுகின்ற நிலையே கலியுக அவல நிலை!
இறைப் பூஜைகளில் திரளும் புண்ய சக்திகளை இவ்வாறு விரயம் செய்து விட்டு, “கடவுளே! உன்னை இவ்வளவு வழிபட்டேனே, இன்னும் ஏன் எனக்குக் கஷ்டங்களைத் தருகின்றாய்!” என்று புலம்புவது சரியாகுமா?
தீபாவளியின் மகிமைகளுள் ஒன்றாக, முதலில் இறைவனுக்குப் படைத்துத் தானும் உண்டு, ஏழைகளுக்கும் தானமளிப்பதற்காக, உணவுப் பண்டங்களை, பட்சணங்களை ஆக்குவதால், அந்த அடுப்பு நெருப்பிற்கும் அற்புதத் தான தர்மப் பங்கு சக்திகள் சேர்ந்து வளந் தரும் உத்தம நிலை,
ஸ்ரீஎமதர்மராஜா திருகோடிகா
நிறைய விளக்குகளை இல்லத்தில் ஏற்றுவதால் பெறப்படும் சுந்தரபல தீப சக்திகள் கிட்டும் அரிய நிலை, ஆலயத்தில் தூல, சூக்கும, காரண சரீரங்களில் தேவர்கள் ஏற்றும் விளக்கோடு கூடுதல் தீபங்களை ஏற்றுதலால் கிட்டும் தேவசுந்தர தீபசக்திப் பெரு நிலை பட்டாசுகளில் ஏற்படுகின்ற அபூர்வமான மின்புழி ஒளி, மேலும் விண்ணில் உயரமாகச் சென்று வெடித்து, ஒளிர்ந்து பட்டாசுகள் ஏற்படுத்துகின்ற உத்தமச் சோபன தீர்க தீப ஒளி, பட்டாசுகளையும் வான வேடிக்கைகளையும் கண்டு குழந்தைகள் குதூகலத்துடன் எழுப்புகின்ற ஆனந்த ஒலியொளி,
இவ்வாறு பலவகை ஒளிப் பிரகாசங்களும் சேருகின்ற திருநாளே தீபாவளியாகும். இவை எல்லாம் நாக சதுர்த்தசி மகத்துவமாக, மனிதர்களுக்குப் புகட்டப் பெறும் ஆத்மவிசாரத் தெளிவுகளாகும்.
அதாவது பல வகை ஒளிப் பிரகாசச் சக்திகள் பூலோகமெங்கும் ஒளி, ஒலி வடிவில் தோன்றுகின்ற திருநாள். ஒலி வடிவிலும் கூட, ஒளிப் பிரகாசம் ஏற்படும். இதனையும் அளிப்பதே தீபாவளி.
இவ்வாறாக தீபாவளியின் எண்ணற்ற ஒளி மகாத்மியங்கள் உள்ளன. பராசக்தி, இறைவனின் திருக்கண்களைப் பொத்திய போது ஏற்படுத்திய கண் இமைக்கும் நேர இருளுக்குப் பலத்த பிராயச் சித்தமாக, கோடிக் கணக்கான தீபங்களை உலகெங்கும் ஏற்றி, அகண்டகார தேவாதி தேவ மார்த்தாண்ட தீபப் பிரகாச சக்தி அளித்த ஒரு யுகத்தின் திருநாளுமே தீபாவளி ஆகும்.
உண்மையில் மூன்று மஹா சிவராத்திரிகளுக்கு இடையே வருகின்ற, நான்கு வகையான மாத சிவராத்திரிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவற்றுள் ஒன்றாக, ஐப்பசி மாத நரகச் சதுர்த்தசி விளங்குகின்றது.
இந்நாளில் ஸ்ரீநரமுக விநாயகர் (சிதம்பரம், திருச்சி) என்பதாக மனித முகத்துடன் உள்ள பிள்ளையார் மூர்த்திக்கு அனைத்து விதமான இனிப்பு பண்டங்களையும் (குறைந்தது 36 வகை) படைத்து, 3 முதல் 76 வயது வரை உள்ள அனைத்து வயதினருக்கும் அளித்தல் என்பது அதிரத சுய தர்ம துவாபர யுக பூஜை ஆகும். ஸ்ரீகிருஷ்ணரால் அதிரதனாகிய கர்ணனுக்கு அளித்த உபதேசமாகும்.
இது நிகழ்ந்ததும் ஒரு யுகத்தின் ஸ்வயதர்ம சுபதாரக தீபாவளிப் பண்டிகை என்பதாகும். எனவே தீபாவளி அன்று மேற்கண்ட வகையில் நன்கு ஆத்ம விசாரம் செய்து உள்ஒளி பெற்று மன பூமியிலும், தீபாவளிப் பண்டிகையை ஸ்ரீகிருஷ்ணரின் அருளால் கொண்டாடிடுங்கள்.
கேதார கௌரீ விரதம் |
அம்பிகை மானுடப் பெண் வடிவில் பூண்ட பல்வகை விரதங்களில் கேதார கௌரீ விரதமும் ஒன்றாகும். கடைபிடிப்பதற்கு மிகவும் எளிமையானதும், மிகவும் சக்தி வாய்ந்ததும் ஆகும்.
“எங்கள் வீட்டில் இந்த விரத வழக்கம் கிடையாது!” என்று சொல்லித் தட்டிக் கழிக்காது, வரலக்ஷ்மி விரதம், கேதார கௌரீ விரதம் போன்றவற்றை, இயன்றவரை கடைபிடித்தால்தான் உங்கள் குடும்பத்திற்கும், வருங்கால சந்ததிகளுக்கும் நல்ல புண்ய சக்திகளைத் திரட்டிப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுவரை, உங்களுடைய மூதாதையர்களின் நற்காரியங்கள், தான, தர்ம சக்திகளினால்தான் உணவு, உடை, உறையுள், சந்ததி, நல்ல வேலை போன்றவற்றுடன் வாழ்கின்றீர்கள் என்பது நினைவிருக்கட்டும். வங்கி டெபாஸிட்டுக்கள் போல மூதாதையர்கள் சேர்த்துத் தந்துள்ள பூர்வ ஜன்மப் புண்யம் கரைந்து கொண்டே வந்தால் என் செய்வது? தினமும் ஏதாவது புண்ய காரியம் செய்து கொண்டே இருந்தால் தானே புண்ய டெபாஸிட் விருத்தியாகி, உங்களுக்கும், பிள்ளைகள், பெண்கள், பேரன்கள் போன்று சந்ததிகளுக்கும் வந்து சேர மிகவும் உதவும்.
புண்யம், புண்யம் என்று எதிர்பார்த்துச் செய்வது சுயநலமாகுமே என்று தாங்கள் கேட்பது காதில் விழுகின்றது. ஆனால் புண்யம் பாராது தான, தர்ம, பூஜைகளை நிகழ்த்தும் இந்த இத்தகைய உத்தம நிலையை அடைவது எளிதல்லவே! மேலும், மேலுலகில் உள்ளோரும் தங்களுடைய புண்ய சக்திகளைத் தண்ணீராய்க் கரைத்து உங்கள் நல்வாழ்விற்காக அள்ளித் தரும் போது, நீங்களும் பூஜைகள், தர்ப்பணங்கள், இயன்ற தான, தர்மங்களைச் செய்து வந்தால் தானே அவர்களுக்கும் இதில் ஒரு பங்கு சென்று அவர்களையும் உய்விக்கும். இதனை உணர்விப்பதும் இத்தகைய பூஜையாகும்.
மேலுலகப் புண்யஸ்தர்களிடமும் அவர்களுடைய தேவ புண்ய சக்தியையும், அது வேண்டும், இது வேண்டும் என்று நீஙகளே வேண்டி, வேண்டி அதையும் வெகு வேகமாகக் கரைத்து விட்டால், தேவ புண்ய சக்திகள் கரைந்தமையால், அவர்களும் இதனால் பூவுலகில் பிறப்பெடுத்து வந்து விட்டால், உங்களைக் கரையேற்ற மேலுலகில் எவர் தான் மிஞ்சுவர்? இத்தகைய ஆத்மவிசார யோக உரையையும் ஊட்டுவிப்பதும் கேதார கௌரீ விரதமாகும்.
21 என்ற எண்ணானது 2+1=3 என்ற வகையில் மூன்று ஆகிய குரு எண்ணுடன் பித்ரு, குரு சக்திகளை இணைத்துத் தருவதாகும்.பொதுவாக சத்குருமார்கள் ஆசி தருவது பித்ருக்கள் மூலமாகத்தான்!
இதனால்தான கேதார கௌரீ விரதம் அளிக்கும் பலா பலன்கள் 21 தலைமுறைகளுக்கு முன்னும் பின்னுமாகச் சென்று அருள வல்ல பூஜைகளை சித்தர்களும், மகரிஷிகளும் அளித்துள்ளனர். அந்தந்த பூஜையை அதனதற்குரிய நாளில் ஆற்றுவதால், திருஅண்ணாமலை, காஞ்சீபுரம் போன்ற சிறப்பான தலங்களில் ஆற்றும் பூஜைகளில், தான தர்மங்களில் கிட்டும் பன்மடங்குப் பலாபலன்கள் போல, இதிலும் அளப்பரிய புண்ய சக்திகள் பெருகி வந்து காக்கும். இதுவே கலியுகத்தில் நாமடையும் பெரும் பேறு அன்றோ!
ஸ்ரீபிரதட்சிணேஸ்வரர் ஸ்ரீபுரந்தான்
ஸ்ரீபிரகன் நாயகி ஸ்ரீபுரந்தான்
மானுடப் பிறவியில்தாம் இவற்றைச் சாதிக்க இயலும் என்பது நினைவிருக்கட்டும். அடுத்த பிறவி எது எப்படி அமையும் என்று தெரியாத நிலையில் பெற்றுள்ள அரிய மனிதப் பிறவியில் பிறருக்கு உதவும் சேவை மனப்பான்மையுடன் நன்கு வாழ்ந்திடுக!
பூவுலக ஜீவன்கள் அனைவருமே ஒரு மகரிஷியின் கீழ் வந்தவர்களே! ஜாதி, மத, இன, குல பேதங்களைக் கடந்த நிலையே சத்குரு நிலையாகும். எனவே சத்குரு இல்லாதவரே பூமியில் எவருமே கிடையாது. ஆனால் தனக்கு சத்குரு உண்டு என்ற நினைப்பு வர வேண்டுமே! ஆனால் கலியிலோ சத்குருவின் மஹிமைகளை உணரும் வகையில் கலியுக மனிதன் தன் வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ளாது, பல முறையற்ற பழக்க, வழக்கங்களுக்கும் ஆளாகி, உழைப்பின்றிச் சம்பாதிப்பதற்கும், எப்போதும் சுக போகங்களையுமே நாடியுமே வாழ்க்கையை நடத்திக் கொள்ள விரும்புவதால் சத்குருவை அடைதலாகிய எண்ணமே பலருக்கும் வருவதில்லை!
இந்த பூமியில் அனைத்து நாடுகளில் வசிக்கும் மனிதர்களின் இறை லட்சியமே சத்குருவைத் தேடியே, நாடியே என நன்கு உணர்தல் வேண்டும். இதற்காக ஆக்கப்படுத்தப் பட வேண்டியது கபாலத்தில் உள்ள தாராசல நல்வள நாடியாகும்.
கேதாரம் என்பது மனிதனுடைய கபாலத்தில் இருக்கின்ற (மந்த்ர) தாராசல சக்திகளாகும். இதில் 21 வகைக் கபால நாளங்கள் இருக்கும். ஒவ்வொரு மனித உடலிலும் உள்ள 72000 நாளங்களில், 21000 நாளங்கள் தலைப் பகுதியில் உள்ளவை. இதனால்தான புனித பாரதத்தின் தலைப் பகுதியே கேதார்நாத் ஆகி, இங்கு அம்பிகைக்கு சிவசக்தி தரிசனம் கேதாரீஸ்வரத் தரிசனமாகவும் கிட்டியது.
கேதார்நாத்தில் முறையாகச் சிவதரிசனம் பெறுவோர்க்கு, (மந்த்ர) தாராசல சக்திகள் நன்கு வியாபிக்கும். மந்தாக்னிச் சாப்டம் எனும் ஒரு வகை அக்னிச் சாவி மூலம்தான் சிரசில் உள்ள கபாலத்தில் கேதாராசலக் கபாலவளி திறக்கலாகும். இதிலிருந்து வருவதே ஒவ்வொருவருடைய தலைக்கு மேல் அமையும் சகஸ்ர அதாவது ஓராயிரம் கிரணங்கள் உடைய கேதார பிம்பம் எனும் ஒளி வட்டமாகும். அதனால்தான் இது சகஸ்ரார சக்கரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒளி வட்டத்துடன் தொடர்பு ஏற்படுத்துவதற்காகவே நாம் ஸ்வஸ்தி முத்திரையை தலைக்கு மேல் வைத்து நம் சற்குருமார்களின் பாரம்பர்யத்திற்கு வணக்கம் செலுத்துகிறோம். அவரவருடைய நற்பண்புகளை, கர்ம வினை, பூர்வ ஜன்ம அம்சங்களைக் கொண்டு அவரவருடைய ஒளி வட்ட வண்ணம் மாறும். ஒருவருடைய ஒளிவட்டத்தின் நிறத்தை வைத்து அவருடைய வாழ்க்கை சம்பவங்களை சற்குருமார்கள் எளிதில் அறிந்திடுவர்.
ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்
சதுரகிரி
கேதார்நாத்தில் சிவாலயம் எதிரே மந்தாகினி ஆறு உள்ளது. இதன் பூமியடி நீரோட்டம் வியாபிக்கும் தலத்தில் ஒன்றே மதுரை அருகே உள்ள சதுரகிரித் தலமான சாப்டூர் ஆகும். கபால நாள சக்திகள் பூரிக்கும் மஹாலிங்கத் தலம் இது! இங்கு முறையாக கேதாரீஸ்வர விரதம் பூணுதலானது ஸ்ரீஅகஸ்திய மாமுனியின் தரிசனத்திற்கு வழி வகுக்கும். கேதார கௌரீ விரத நாளில் ஸ்ரீலோபாமாதா சமேதராய் ஸ்ரீஅகஸ்தியர் மானுட வடிவில் இங்கு சதுரகிரியில் (சாப்டூர் பகுதி) பூஜிக்கின்றார்.
கபாலவடி சக்திகள் நிறைந்த கேதார்நாத்தில் பாயும் மந்தாக்னித் தீர்த்தத்தை (தக்க காணிக்கை செலுத்தி) எடுத்து வந்து ஒரு மண்டலத்திற்குத் தினமும் கபாலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து கோமுகத் தீர்த்தப் பிரசாதம் பெற்று கோமா நோய் மற்றும் கபாலக் கோளாறு உள்ளவர்களின் தலையில் தெளித்து, சிறிது பிரசாதமாக உண்டு வந்தால், வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காணலாம். இவை யாவும் வாலை மனான்மணி யோக வகை ரகசியங்களாகும். இதனால்தான் கேதார்நாத் செல்லும் முன் வரும் கௌரீ குண்டம் எனும் அடித் தலத்தில், மனோன்மணியாக அம்பிகை அருள்கின்றாள். அம்பிகை அமர்ந்து கேதாரீஸ்வரரின் ஆதி மூல தரிசனத்தைப் பெற்றதால் கௌரீ குண்டம் எனப் பெயர் பெற்ற தலம்.
தாராசல நாள நாடியானது ஒரு புறம் உஷ்ணமாகவும், மறுபுறம் சீதளமாகவும் (குளுமையாகவும்) இருக்கும். இதனால்தான் கேதார்நாத் செல்வதற்கு முன் பக்தர்கள் தங்கும் கௌரீ குண்டம் இடத்தில் வெந்நீர்ச் சுனை இருக்க, அருகில் உடலை உறைக்கும் குளிரில் மந்தாகினி ஆறு ஓடுகின்றது. என்னே இறை லீலை!
விரத நாள் அன்று பூஜை முடியும் வரை ஒரு சிறிதும் நீர் கூட அருந்தாது உண்ணா நோன்பு பூண்டு,
கேதார கௌரீ விரதத்தில் அம்பிகையை கேதார கௌரீயாக வந்த மானுடப் பெண்ணாக பாவித்து, கலசம் வைத்துப் பூஜிக்க வேண்டும். கலசத்தின் முன் ஒரு தாம்பாளத்தில் குறைந்தது மூன்று பெரிய படி நெல் பரப்பி,
மூன்று வயதுக்கு உட்பட்ட சிறுமியின் கரங்களால்
ஸ்ரீகேதாரப்பன் துணை
ஸ்ரீகேதாரீஸ்வர்யை நம:
ஸ்ரீகேதாரீஸ்வர கேதாரேஸ்வர கேதாரகுஹா போற்றி
என வலது மோதிர விரலால் எழுத வைத்துக் கலசத்தை இதன் மேல் வைத்துப் பூஜிக்க வேண்டும்.
வளையல்கள், புடவைகள், ரவிக்கைகள், அதிரசம், மாங்கல்யச் சரடுகள், மலை வாழைப் பழம், மஞ்சள், முழு முந்திரி, திராட்சை, 21 முழப் புஷ்பம், வெற்றிலை, பாக்கு போன்று ஒவ்வொன்றிலும் 21 என்ற எண்ணிக்கையில் வைத்து, கலச பூஜைக்குப் பின் வீட்டில், குடும்பத்தில் இருப்பவர்கள் இப்பிரசாதத்தை உண்ண வேண்டும். மிகவும் சக்தி வாய்ந்த விரதம். குடும்பத்தில் ஒற்றுமை, மன அமைதி, சாந்தத்தைக் கொழிக்க வைக்கும் பூஜை! தன் கணவனுடைய பழைய செய்கைகளை நினைத்து வருந்தும் இல்லறப் பெண்களுக்கு தக்க பரிகாரம் தர வல்லது. பூஜைக்குப் பின் நெல்லில் வெல்லம் சேர்த்துப் பிசைந்து பசுவிற்கு அளிக்கவும்.
கேதார்நாத், பத்ரிநாத்தில் தீபாவளி அன்று நடை சார்த்தப் பெற்று, அட்சயத் திரிதியை நாளில் மீண்டும் ஆலய நடை திறக்கப் பெறும். இந்த ஆறு மாதங்களிலும் கடுங் குளிர், உறைபனி காரணமாக ஆலய நடை சார்த்தப் பெறுவதாக வெளிக் காரணங்கள் இருப்பினும், தேவர்கள் பூஜிக்கும் காலம் இது என்பதே உண்மை! நம்முடைய ஆறு மாத காலம் தேவர்களுக்கு ஒரு பகல் நேரமாகும்.
தீபாவளி என்பதும் ஒரு மாத சிவராத்திரியே என்பதைப் பலரும் மறந்து விடுகின்றனர். அதாவது கேதார கௌரீ விரத நாளுக்கு முதல் நாளாக இந்த கேதார (மஹா) சிவராத்திரி எனப்படும் மகத்தான சிவராத்திரி நாள் அமைகின்றது. இதுவே சித்தர்கள், மஹரிஷிகள், தேவர்களுடன் அம்பிகை கேதார்நாத்தில் விசேஷமான சிவபூஜைகளைத் தொடங்கும் திருநாள்!
கேதார கௌரீ விரத நாளில் அம்பிகையின் பராசக்தி ரூபம், ஆலயத்தில் ஸ்ரீகற்பகாம்பிகை போன்று சிவாலய மூல அம்பிகை, ஸ்ரீகாமாட்சி போன்று அமர்ந்த கோல தனித்தச் சிறப்புக் கருவறைக் கோலம், காளி துர்க்கை, சாமுண்டீஸ்வரி, சப்தமாதர்கள் போன்று அம்பிகையின் எத்தனை வடிவுகளைத் தரிசிக்க முடியுமோ (குறைந்தது 21 வடிவுகள்) அவ்வளவு வடிவுகளைத் தரிசிப்பது சிறப்புடையது. பெற்றோர்கள் பிள்ளைகள், பெண்கள் இடையே சுமுகமான உறவைப் பெற இது உதவும். சிறு கிராமம், சிறு நகரங்களில் உள்ளோர் அரசு, ஆல், வேம்பு, வன்னி, வில்வம், துளசி, புரசு போன்று 21 புனிதமான விருட்சங்களைத் தரிசிக்க வேண்டும்.
மிருத்யு தோஷங்களை எப்படி வேரறுப்பது ? |
துவிதியைத் திதி நாளில் ஆற்றும் பூஜையானது, மிருத்யு தோஷங்களைத் தீர்க்க வேண்டுவதான எம மூர்த்திக்கான பூஜையும், மிருத்யு தோஷங்களும், மரண பயமும் அண்டாது குடும்பத்தைக் காக்கவும் உதவும் சக்தி வாய்ந்த வழிபாடும் ஆகும்.
பூவுலகில் இறப்பு என்பது மனித குலத்திற்கு மட்டுமல்ல, தாவரங்கள், பிராணிகள் என அனைத்து வகையான ஜங்கம வகைகளுக்கும் இப்பூவுலகை விட்டு உயிர் பிரிகின்ற மறைவுப் படலம் உண்டு. மரணம் என்பது இரு பிறப்புகளுக்கு இடையே உள்ள நிலை அல்லது இரு பிறப்புகளின் சங்கமமே மரணம் எனப் பொதுவாக உரைத்திடலாம்.
அனைத்து உயிரினங்களுக்கும் இறப்பு, பிறப்பு நிலைகள் உண்டு. அனைத்துக் கோடானு கோடி ஜீவன்களின் மரண அம்சங்களையும் பரிபாலிக்கும் மூர்த்திகளில் ஒருவரே தர்ம ராஜாவும், காலனுமாகிய எம மூர்த்தியே ஆவார். எம தர்ம மூர்த்தியின் அருளும் அவதாரத் தன்மைகளிலும் பலவேறு நிலைகள் உண்டு.
எம மூர்த்தியின் அருளார்ந்த பரிபாலன அம்சங்களுள் ஒன்றே மரண அம்சங்களை அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்பப் பரிபாலித்து அளிப்பதும், தர்ம ராஜாவாகத் தர்மத்தை நிலை நாட்ட உதவுவதும், காலனாக காலாதீத சக்திகளை ஜீவன்களுக்கு உணர்த்துவதும், அஷ்டதிக்குப் பாலனாகத் தெற்குத் திக்கைத் தாங்கிக் காத்து ரட்சிப்பதும் ஆகும்.
எம மூர்த்தியே துவிதியை திதிகளில் ஆகமப் பீட விரதம், கமலப் பீட விரதம், மகிஷப் பீட விரதம். ஆவுடைப் பீட விரதம், கோப்பட விரதம் போன்றவற்றைக் கடைபிடித்து, இதன் பலாபலன்களைத் துவிதியைத் திதியில் பூஜைகளை ஆக்குவோர்க்கு ஆசிர்வாதமாக அளிக்கிறார்.
அஷ்டமித் திதி, கால பைரவருக்கு ப்ரீதியானதாக விளங்குவது போல, துவிதியைத் திதிப் பூஜை எம மூர்த்திக்கு மிகவும் விசேஷமானதாகும். மிருத்யு தோஷம் எனப்படுவதான துர்மரணம், இளவயது மரணம், தொடர்ந்து குடும்பத்தில் இறப்புகள் ஏற்படுதல் என்று வகையிலாக அமையும் தோஷங்கள் மிருத்யு மற்றும் பிரேத தோஷ வகைகள் ஆகும்.
தினமும் வண்டியில் அல்லது நடந்து செல்லும் போது பிணத்தின் மீது பட்டு, சாலையில் கிடக்கும் பூக்களை மிதிப்பதால் வருவது பிணமிதித் தோஷம். இதனால் அடிக்கடி உடலைத் தூக்கிப் போடுதல், இனம் புரியாத ஓரு பீதியுடன் வாழ்தல், இரவில் உறக்கத்தில் உளறுதல், பகலில் தனக்குத் தானே பேசிக் கொள்தல் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை நிவர்த்தி செய்ய, துவிதியைத் திதியில் எள் உருண்டை, பிரண்டைத் துவையல் அன்னம், புடலை மற்றும் சேப்பங்கிழங்கு உணவு வகைகள், புதிய ஆடைகள் தானம் போன்றவற்றை நிகழ்த்தி வருவதுடன், துவிதியைத் திதி தோறும் எம மூர்த்தியை வழிபட்டு வருதல் வேண்டும்.
துவிதியை அன்று அமர்ந்த கோல அம்பிகைக்கு, குறிப்பாக, தாமரை மலர்ப் பீடத்தில் அமர்ந்திருக்கும் அம்பிகையைப் பூஜிப்பது மிகவும் விசேஷமானதாகும். அமர்ந்த கோல அம்பிகை, எம மூர்த்திக்கு முழுத் தாமரைப் பூக்களால் ஆன மாலைகளை அணிவித்து வழிபட்டிட, குடும்பத்தில் இருக்கும் வயதானவர்களைப் பற்றிய மனக் கவலைகள் தணிய மிகவும் உதவும்.
36 வகையான தாமரைகள் உண்டு. இவற்றில் ஆறு வகைகளையாவது எப்படியேனும் பெற்று எம மூர்த்தி, மிருத்யுஞ்ஜய மூர்த்தி, சண்ட பைரவ மூர்த்திக்கு சார்த்திடுக! தாமரைப் பூக்களை இறைவனின் திருவடிகளில் வைத்து, யானை, பசு, ஆடுகளுக்கு உணவாக அளிப்பதால், தாம் வசிக்கும் இடத்தில் - வாடகை வீடோ, சொந்த வீடோ, - உள்ள பகைமைப் பிரச்னைகள் தீர உதவும்.
துவிதியை அன்று ஒரு புது மூங்கில் கூடை நிறைய புல், வைக்கோலை நீங்களே சுமந்து சென்று யானைக்கும், பசுவிற்கும் அளித்திடுங்கள். மூங்கில் கூடையில் பழம், தானியம் போன்றவற்றை வைத்து ஏழைகளுக்குக் கூடையை அளித்திடுங்கள். பெரும் குடும்பச் சுமையைத் தாங்கி பெரும் வேதனைகளுடன் வாழ்பவர்கள் இதனைத் தொடர்ந்து கடைபிடித்து வர, வியப்பிற்குரிய துரிதமான நல்மாற்றங்களைக் காண உதவுவதே துவிதியைத் திதியில் ஆற்றும் எமதர்ம ராஜா வழிபாடு மற்றும் எம தீர்த்தம் உள்ள ஆலயங்களில் பூஜைகள் ஆகும்.
மிகவும் அபூர்வமாக சில தலங்களில்தான் எம தர்ம மூர்த்தி சிலா ரூபத்தில் எழுந்தருளி உள்ளார்.
நாகமும் நீராடும் |
துலா ஸ்நானம் என்பதான ஐப்பசி மாதத் தினசரிக் காவிரி நீராடல் கடைமுழுக்கு என்பதாக நிறைவடைகின்றது. முடவன் முழுக்கு உற்சவமாக கார்த்திகை முதல் நாளிலும், இறைவனுடைய விசேஷ அனுகிரகமாகத் தொடர்கின்றது.
புனிதமான காவிரி நதியில் நீராடும் புண்ணியகரமான வாய்ப்பு வாழ்வில் அனைவருக்குமா வாய்க்கின்றது? தினசரிக் காவிரி நீராடல்காரர்களும் இதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்?
தினமும் கங்கை காவிரி நதி நீராடலில் பங்கு பெறுவோரும், அவ்வப்போது காவிரியில் நீராடுவோரும், தமக்குக் கிட்டிய இந்தப் புனித நதி நீராடல் பாக்யம் பிற ஜீவன்களுக்கும் கிட்டிட அருளுமாறு காவிரி தேவியைப் பிரார்த்தனை செய்து வருதல் வேண்டும்.
தன்னுடைய காவிரி நீராடல் பலாபலன்கள் பிற ஜீவன்களையும் சென்றடையவும் காவிரி தேவதா மூர்த்தியிடம் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு சுயநலமற்ற முறையில் முதலில் பிரார்த்தனைகளை வைப்பதே உள்ளத்திற்குப் புனிதமும், உயர்வும் தரலாகும்.
காவிரியில் நீராடுகையில், நீரிலும், நீர்க் கரையிலும், முதலில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்குத் திசை முகங்களில் நின்றும், பிறகு வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்குத் திசை முகங்களில் நின்றும், பிறகு, வானை நோக்கி முகத்தை உயர்த்தியும், பூமியை நோக்கி முகத்தைத் தாழ்த்தியும் அந்தந்தத் திக்குப் பாலக மூர்த்திகளை நினைத்து வழிபடுதல் வேண்டும்.
சதுர்த்தித் தினத்தில், நாகங்களும் நீராடலுக்கு வருகின்றன. பொதுவாக, நாகங்கள் நீராடல் முடிந்தவுடன், அருகில் உள்ள அரசு, மா, வேம்பு போன்ற மரத்தடியில் வீற்றிருக்கும் நாக மூர்த்திகளிடம் தங்கள் நீராடல் பலாபலன்களை அர்ப்பணிக்கின்றன. இவர்கள்தாம் புண்ணிய நதி நீராடல் பலன்களைப் பலவகை நீரோட்டங்கள் மூலம் உலக ஜீவன்களுக்கு அளிக்கின்றனர்.
நாக தேவதா மூர்த்திகள் பூமியடி நீரோட்டம், பூமி மேல் உள்ள நீரோட்டம், வான் வெளி நீரோட்டம், வானுள் பொதியும் உள்வெளி நீரோட்டம் போன்று பல முறைகளில் பல்வகைத் தெய்வீக சக்திகளையும் பரப்ப வல்லவர்கள் ஆவர்.
ஆறுகள் இல்லாத இடங்களில் வசிப்போரும் அருகில் உள்ள ஏரி, குளங்கள் அல்லது ஊறும் கிணற்று நீரிலாவது ஐப்பசி மாதம் வரும் சதுர்த்தி திதிகளில் மாலைக்குள் நீராடி, காவிரி நீராடல் புண்ணியத்தை வர்ஷிக்க வேண்டி அருகில் உள்ள நாகமூர்த்திகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டுப் பஞ்சு மாலை சார்த்தி வழிபடுதல் வேண்டும்.
நான்கு முறை கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர், ஏரி நீர் என்ற நால்வகை நீராடல்களைப் பெறுதல் சிறப்புடையதாகும். நகரங்களில் வசிப்போர், வில்வம், வேம்பு, புரசு, வன்னி இலைகளைத் தனித் தனியே நீரில் இட்டு, நான்கு வேளைகளில் நீராடிக் கடை முழுக்குப் பலன்களைப் பெற வேண்டிடுக! நதி தேவதைகளின் தரிசனம் மிகவும் விசேஷமானது. சரஸ்வதி என்ற பெயரில் நதி துலங்குவதால், சரஸ்வதி தேவிக்கு அபிஷேகங்களை ஆற்றி வழிபடுவதும் விசேஷமானதே!
மன வேதனையை மாய்க்கும் வழிபாடு |
நவ சக்திப் பீடங்கள், நவ துவார சக்திப் பீடங்கள், சக்திப் பீடங்கள் எனப் பல உண்டு. கலியுக மனிதன் விதவிதமான கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்வதால், இவை கழிபடும் முறைகளும் யுக நியதிகளுக்கு ஏற்ப மாறுபாடு கொள்ளும். ஸ்ரீகிருஷ்ணனின் அருள் நகரமான துவாரகையும் நவ துவார சக்திப் பீடங்களில் ஒன்றாகச் சித்தர்களால் சிறப்பிக்கப்படுகின்றது. இத்தகைய நவ சக்திப் பீடங்கள், நவதுவார சக்திப் பீடங்கள், சக்திப் பீட வழிபாடாகவே அங்கந்யாசம், கரந்யாச மந்திர வழிபாடுகளாக, சந்தியாவந்தனம் மற்றும் ஏனைய பூஜை முறைகளில் குறிக்கப்படுகின்றன.
உலகின் ஆன்மீகப் பெருமையமான நம் புனிதமான பாரதத்தில், நவ துவார ஜலசக்திப் பீடங்களுக்கும் முதன்மையாக விளங்குவது, கும்பகோணத்தில் உள்ள மகாமகத் தீர்த்தக் குளம் ஆகும். துவார சக்தி என்ற பெயரிலும் தேவதா மூர்த்திகளும் அபூர்வமாகச் சில ஆலயங்களில் அருள்கின்றனர். குறித்த காலத்தில் பருவமடையாத கன்னிப் பெண்கள் தக்க பருவத்தில் பூப்படையவும், கர்பப் பை கோளாறுகள், நோய்களால் அவதியுறுவோரும், நவமித் திதி மற்றும் பூரம், ஆயில்யம், மூலம், நட்சத்திர நாட்களில் துவாரசக்தி மூர்த்திகளை வழிபட்டு வருவது நன்மைகளைத் தரும்.
பூராட நட்சத்திரமும், உத்திராட நட்சத்திரமும் சேரும் நேரமான “ஆராடமாபூதி” நேரத்தில், மனித உடலில் நவ துவார சக்திகள் ஆக்கம் பெறுகின்றன. மனிதனுடைய உடலில் உள்ள நவ துவாரங்களில் உள்ள குறை, குற்றங்களை, கர்ம அழுத்தங்களைப் போக்க வல்ல நவ துவார சக்தி வழிபாட்டினை ஆற்ற வேண்டிய ஆராடமாபூதி நேரம் இதுவே!
வேம்பு தலவிருட்சமாகப் பொலியும்
ஸ்ரீவைத்தீஸ்வரன் கோவில்
ஒவ்வொரு ஜீவனுடைய மன உடல், வெளி உடலில் பல துவார சக்திகள் உள்ளன. மனித உடலின் மூலமான ஒன்பது துவாரங்களோடு, தோல், ரோமக் குழாய் போன்ற எண்ணற்ற துவாரங்கள் உடலில் உண்டு. நாசி வழியே சுவாசம் சென்று வருவது போல, உடலின் எண்ணற்றத் துவாரங்கள் வழியே கர்மவடிச் சுவாசம் நிகழ்கின்றது. பழைய பிறவிகளும் கர்ம சொச்சங்களே! அவற்றுள் பலவும் இத்தகைய துவாரங்களின் வழியே கழிவு பெறுதல் வேண்டும். இதற்கு இறைச் சமுதாயப் பணிகள், வழிபாடுகள் நன்கு உதவுகின்றன.
ஒரு மனிதன், தான் முந்தைய பிறவிகளில் பாம்பாக, பல்லியாக இருந்த நினைவுகள் வருமேயானால், மனம் நொந்து, மன நலம் பாதிக்கப்பட்டு, இருக்கின்ற மனோ தைரியத்தையும், ஆரோக்யத்தையும் விட்டு விட்டால் நடப்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிப்புறும் அல்லவா! எனவேதான் பூர்வ ஜன்ம வரலாறுகளைத் தாமே பூர்வ நினைவாக அறிய இயலாமல், வானியல் சாத்திரம், ஜோதிடம், நாடி போன்றவை சகிதம் அதுவும் ஓரளவே அறிதலாகும் என்ற நியதிகள் உள்ளன.
அறிய வேண்டியதைத் தக்க தருணத்தில் அறியலாகும் என்ற இறைப் பகுத்தறிவு முற்றுகையில், அனைத்தும் சத்குரு மூலமாக உணர்விக்கப் பெறும். நாடியை, கிரந்தங்கள் மூலமாகப் படிக்கின்றவருடைய ஆழ்ந்த தெய்வீக நம்பிக்கை, பூஜை முறைகள் இவற்றைப் பொறுத்துத் தான் நாடிவாக்கியங்களின் பலிப்புத் தன்மைகள் அமையும்.
சத்தியமாக வகுக்கப் பெற்ற நாடிகள் உண்மையையே உரைக்கின்றன. நல்ல பரிகாரத் தன்மைகளை அளிக்கின்றன. ஆனால் தற்காலத்தில் பக்திப் பூர்வம் நிறைந்த நாடி கிரந்தம் வைத்துப் படிப்போர் மிக, மிகக் குறைவே! ஆனால் நாடி வாக்கியங்கள் அனைத்தும் பலிக்க வேண்டும் என்று எண்ணுவதும் தவறே! காரணம், நாடியை அறியும் தருணம் வரை ஒருவரைச் சூழ்ந்துள்ள கர்ம வினைகளின் அளவைக் கொண்டு, அவருக்கு அச்சமயத்தில் பரிகாரங்கள் கிட்டுகின்றன. எனினும் நாடிகளைப் படித்து அறிந்த நேரத்திலிருந்து, குறித்த மனிதரும், அவருடைய குடும்பத்தினரும், மென்மேலும் கர்ம வினைகளைச் சேர்த்துக் கொண்டாலும், மேலும் தீய வழிகளில் ஈடுபட்டாலும், இந்த கூடுதல் கர்ம வினை அழுத்தங்களால் நாடிகள் அளிக்கும் பரிகாரப் பலனளிக்கும் தன்மைகளையும் நிச்சயமாகப் பாதிக்கும். இதற்காக நாடியைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை!
பிரம்மா தனிச் சன்னதியுடன்
துலங்கும் திருப்பட்டூர்
கர்ம வினைகளை வெளிப்படையாக அறிந்தால் நடப்பு வாழ்வு பாதிக்கலாகும் என்ற நியதி இருக்கையில், அதனை மனிதன் நாடித் தேடி, நாடி, வானியல் சாஸ்திரம், ஜோதிடம் மூலமாக ஓரளவு அறிய முற்படும்போதும், அவன் தன் கர்மங்களை அறிந்து, பரிகாரம் தேடவும் நல்வழியில் நடக்க முயல்கின்றான் என்றே பொருளாகும். கர்மங்களை அறிந்து பரிகாரத்தை நிச்சயமாகக் கடைபிடிப்பான் என்ற உறுதிகளுடன்தான், மறைபொருளாக வைக்கப்பட்டுள்ள பூர்வ வினைகளில் ஒரு சிறு துளி மட்டும் நாடி வாக்கியங்களாகத் தென்படலாகின்றன.
எப்போது இறைவனால் மறைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள கர்ம வினைத் தன்மைகளை ஒரு மனிதன் அறிய முற்படுகின்றானோ, அதற்குரிய பரிகார வினை அறிதல் தொகையாக, பரிகாரங்களைக் கட்டாயமாகச் செய்தே ஆக வேண்டும். எத்தகைய பரிகாரங்கள் வந்தாலும் செய்யத் தயாராக இல்லாதவர்கள், தயவு செய்து நாடி வாக்கியத்திற்குச் செல்ல வேண்டாம். ஆனால் தற்காலத்தில் பக்திப் பூர்வமாக நாடி படிப்போர் சொற்பமே!
நாடி என்பதற்கு மூல முதல் பொருள் உடல் நாள வகைத் தன்மை என்பதாகும். எனவே முதலில் அவரவருக்கு உடலில் எந்த வகை நாடி வாத நாடி, பித்த நாடி, சிலேத்தும நாடிகளில் அமைந்துள்ளது என்பதைத் தக்க கை தேர்ந்த சித்த வைத்தியர், பெரியோர்கள் மூலம் அறிந்திடுக! இதற்கு இத்தகைய ஆராடமாபூதி நாள் மிகவும் சிறப்புடையதாகும்.
ஆராடமாபூதி நாட்களில் சுவாச சக்திகள் நிறைந்த ஸ்ரீபிட்சாடனர் அருளும் ஆலயம், பிரம்ம மூர்த்தி தனிச் சன்னதி கொண்டுள்ள தலங்கள், வேம்பு தல விருட்சங்களாக உள்ள தலங்களில் மணமுள்ள பூக்கள், சாம்பிராணி, அத்தர், கோரோஜனை, கஸ்தூரி, சந்தனக் குழம்பு, ஜவ்வாது ஆகிய கலவையைச் சார்த்தி அல்லது திருவடிகளுக்குப் பூசி வழிபடுவதால், தான் செய்த குற்றங்களின் அழற்சியால் உள்ளூர வேதனையுறுவோர் தக்க பரிகாரங்கள் பெற உதவும்.
தொண்டை நோய்களுக்கு நிவாரணம் |
திருவோணம் என்பது சிராவண நட்சத்திரம் என்றும் அழைக்கப்படும். உடலில் ஒவ்வொரு அங்கமும் சிறப்பாகப் பலன்களைப் பெறுகின்ற விசேஷமான தினங்களும் உண்டு. இதில் திருவோண நட்சத்திர நாளில் காது சம்பந்தமான நாளங்கள் நன்கு அபிவிருத்தி அடைகின்றன. இதனால்தாம் சிராவண உபவாசம் என்பதாக திருவோண நட்சத்திர நாளில் சஷ்டி திதி உண்ணா நோன்பு போல விரதம் ஏற்றுப் பெருமாளை வழிபடுகின்ற உத்தம பூஜையும் உண்டு. கேட்பதற்கு இனியது ஹரியாகிய திருமாலின் பெருமாள் மகிமை பூஜிக்கும் திருநாமங்கள் ஆகும். இதனால்தான் ஆசமனம் எனப்படும் உடல் சுத்திக்கான மந்திரங்களில் அச்யுதாய நம, அனந்தாய நம, கோவிந்தாய நம அல்லது கேசவா மாதவா நாராயணா என்பதாக 32 வகை விஷ்ணு நாமங்களை ஓதி நீரை உள்ளங் கைகளில் வைத்து அருந்தியும் அங்கந்யாசம், கரந்யாசம் என்பதாக உடலில் சிரசு, நெற்றி, கண்கள், காதுகள், நாசி, உதடு, தோள்பட்டை என உடல் அங்கங்கள் ஒவ்வொன்றையும் கரங்களால் தொட்டு விஷ்ணு நாம சக்திகளால் சுத்திகரிக்கின்ற அடிப்படை மந்திரங்கள் பெருமாள் நாமங்களை ஒட்டி அமைந்துள்ளன. இவை யாவும் ஆக்கப்பூர்மான சக்திகளைப் பெறும் நாளே திருவோண நட்சத்திர நாள் ஆகும்.
ஸ்வேதகங்கா சுவாச சக்தியில்
திளைக்கும் ஸ்ரீபிட்சாடன மூர்த்தி
திருத்தவத்துறை லால்குடி
சத்தியவான் சாவித்திரி யம மூர்த்தியின் வசம் பட்ட தன் கணவனை மீட்டிட உதவிய பத்தினி விரதங்களுள் திருஓண நட்சத்திர உண்ணா நோன்பு விரதமும் ஒன்று ஆகும். சாவித்திரி என்ற பெயருக்கு, அனைத்து விதங்களிலும் நாமம், அட்சரம், ஒலி, ஒளி, பிரகாசம் எனப் பலவகைகளிலும் புனிதம் அடைந்தது, புனிதம் அளிக்க வல்லது, நிரந்தரமான, மறைக்க முடியாத புனிதத்தை உடையது என்ற அர்த்தங்கள் உண்டு. இதனால்தான் பலவிதமான கற்ப காலங்களில் சாவித்திரி கல்பம் என்று விசேஷமான கல்ப காலமும் உண்டு. இது திருவோண நட்சத்திரத்தில்தான் பிறந்தது ஆகும்.
திருஓண நட்சத்திர உபவாச நாளில் பால், நீர், மோர், பானகம், பழரசம், துளசித் தீர்த்தம், வில்வத் தீர்த்தம் என நீர் வகை உணவு மட்டும் அருந்தி, இவற்றைத் தானமாக அளித்தல், அன்னமின்றிக் கீரை வகைகளை மட்டும் புசித்து இவற்றை அன்னத்துடன் தானமளித்தல், அன்னத்தில் நெய் மட்டும் வார்த்து உண்டு அன்னதானம் அளித்தல் என்றவாறாக - வயிற்றில் ஏதேனும் சிறிது வைத்து மட்டும் சிராவண உபவாசத்தை மேற்கொள்வார்கள். இதுவும் சிராவண நோன்பின் சிறப்பியல்புகளில் ஒன்றாகும்.
ஸ்ரீஅன்னபூரணி தேவியே திருவோணம் அன்று துளசி தீர்த்தம் அருந்தி விரதம் பூணுகின்றாள். ஸ்ரீஅன்னபூரணி தம் திருக்கரங்களில் தாங்கி இருக்கும் தங்கக் கரண்டியைப் பெருமாளிடம் பெற்ற நாளும் திருஓண நட்சத்திர நாளே. திருஓண நட்சத்திர விரதம் இருக்க இயலாதவர்கள், ஸ்ரீஅன்னபூரணி தேவியை நமஸ்கரித்து, பிறகு பெருமாள் ஆலயத்தில் நல்ல பெரிய கரண்டியால் எடுத்து தானமளிக்கின்ற வகையிலான பாயசம், காய்கறி, பொரியல் போன்ற உணவு வகைகளைத் தானமாக அளிப்பதால் விரைவில் திருஓண நட்சத்திர நோன்பு பூணுவதற்குத் தக்க பெரியோர்கள் மூலம் நல்வழி கிட்டிடும்.
வேத சிராவணம் என்பதாக, படிப்பதை விட நல்மாமறைகளை, நல்ல விஷயங்களைக் கேட்டல் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். பொதுவாக, தொண்டை வகை நோய்களால் பாதிக்கப்பட்டிருப்போர், திருவோண நட்சத்திர விரதத்தைப் பூணுதல் விசேஷமானதாகும்.
ஸ்ரீபிரம்ம மூர்த்தியின் பத்தினிக்கும் சாவித்திரி என்ற பெயர் உண்டு. (கும்பகோணத்தில் உள்ளது போல) பத்தினி சகிதம் எழுந்தருளும் ஸ்ரீபிரம்ம மூர்த்தியைத் திருவோண விரதம் பூண்டு, தரிசித்து சாவித்திரி கல்ப கால தர்ம சக்திகளைப் பூலோக ஜீவன்களுக்குத் தந்தருளுமாறு வேண்டி, சாவித்திரி என்ற பெயரைப் போன்றே மிக மிகப் புனிதமான சக்திகளை உடைய பசு நெய், தேன் கலந்த அக்கார வடிசலும், விசேஷமான அரவணைப் பாயசம் படைத்தும் வழிபடுதலால் தன்னுடைய பெண்ணின் மன நிலைகளைப் பற்றி வருந்துகின்ற பெரியோர்களின் பீதிகள் தணிய உதவும்.
செல்வம் அள்ளித் தரும் வெள்ளி |
மகத்தான சுப சக்திகளைப் பூண்ட வெள்ளிக் கிழமையானது அனைத்து மதங்களிலுமே மிகவும் மங்களகரமானதாகப் போற்றப்படுகின்றது. தற்போதைய முறையான ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமானது, 70, 80 ஆண்டு காலமாக வந்ததே ஆகும். இதன் முன் வெள்ளியே ஆன்மீக ரீதியாக யாவரும் சத்தங்கமாய் ஒன்று கூடி வழிபடுவதான விடுமுறை நாளாக இருந்தது.
நம்முடைய பாரத நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன், சமுதாயத் தொழில்கள் யாவுமே பரஸ்பர அன்புடன் ஆன்மீகத்தை முழுதுமாகச் சார்ந்து விளங்கியமையால் சமுதாயத்தில் நல்ல சாந்தம் நிலவியது. பெரியோர்களை மதிக்கின்ற பண்பாடு அக்காலத்தில் நன்கு நிலவியமையாலும், ஆன்றோர்களும் சத்தியம், நேர்மை, நாணயம், அன்பு போன்ற உத்தம குணங்களுடன் துலங்கியமையாலும் அந்தந்த ஊரில் ஏற்படுகின்ற சிறுசிறு சமுதாயப் பிரச்னைகளும் ஆன்றோர்களின் முன்னிலையிலேயே சாதி, சமய, இன, குல பேதமின்றி சத்தியம் நிறைந்த நீதியுடன் சமுதாயம் பரிமளித்தது.
தொழிலாளர்களுக்கும் அவரவர்களுடைய உடற்பாங்கு, உடல் நிலை, குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு அன்புடன், மனதாரப் பண்புடன் சம்பளமளிக்கும் நன்முறை அமைந்தமையால் விடுமுறை நாள் என்பதே கட்டாயத் தேவையாக இல்லாமல் இருந்தது. இதில் வெள்ளிக் கிழமை என்பதைப் பல இடங்களிலும் வார விடுமுறையாக இருந்தாலும் தற்போது பலரும் எண்ணுவது போல விடுமுறை நாளை வெறுமனே கழிக்க வேண்டும் என்று அக்காலத்தில் எவரும் எண்ணியது கிடையாது. சக்தி வாய்ந்த வழிபாட்டு நாளாக போற்றப் பெற்று சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினருமே தெய்வீகத்திற்கான சமுதாய இறைப்பணிகளை ஆற்றிடுவதற்காகவே வந்தமைந்த விடுமுறையாகக் கருதி இந்நன்னாளில் அரிய பல வழிபாடுகளைக் கைக் கொண்டனர்.
ஸ்ரீநரமுக விநாயகர் ஸ்ரீசதாசிவ பிரமேந்திரர்
நன்றுடையான் கோயில் திருச்சி
சுக்கிர கிரகத்திற்கு உரிய நாளாக சகல விதமான செல்வ வளத்தை அருள வல்ல பூஜை சக்திகளைக் கொண்டதே வெள்ளிக் கிழமை ஆகும். அஷ்டமி வெள்ளியில் அட்ட லக்குமியும் அருள்கின்ற அற்புதத் தினமாகும். பசு பூஜைக்கு உரித்தான நாளுமிதுவே!
வெள்ளிக் கிழமைகளில் பசு மடம் உள்ள ஆலயங்களில் உள்ள ஸ்ரீலக்ஷ்மியைத் தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபடுதல் விசேஷமானது. தாமரையில் உள்ள ஒவ்வொரு இதழும் காந்த சக்திகளைக் கொண்டவை. சிவ காந்தம், சூரிய காந்தம், சந்திர காந்தம், சுக்கிர காந்தம், சோம காந்தம், வீர்ய காந்தம், விருத்தி காந்தம் என்று தாமரையில் ஒவ்வொரு இதழுமே தெய்வீக ஈர்ப்பு சக்திகளைக் கொண்டவை ஆதலால் தாமரைப் பூவை முழுமையாகவும், தனித் தனி தாமரை இதழ்களால் அர்ச்சிக்கும் முறை ஏற்புடையதாகிறது.
ஒரு முழு வெள்ளைத் தாமரையை ஒரு சந்தனக் கல்லின் மேல் மலர்ந்த நிலையில் வைத்து ஸ்ரீலக்குமித் துதிகளை ஓதிட்டால், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே மனமுவந்து கோபியருடைய பக்தியில் பூக்கின்ற கோபி காந்தம் என்னும் நறுமலரின் நறுமணத்தை இதில் அளிக்கின்றார். இதனால்தான், கோபியர்களுக்கு மிகவும் ப்ரீதியானது வெள்ளைத் தாமரை புஷ்பமாகப் பிரகாசிக்கின்றது. ஈடு இணையற்ற கிருஷ்ண பக்தையான மீராபாய் வெள்ளைத் தாமரை புஷ்பங்களால் ஸ்ரீகிருஷ்ணனைப் பூஜிப்பதில் பேரானந்தம் கொண்டாள்.
வெள்ளிக் கிழமை அன்று ஸ்ரீவெள்ளீஸ்வரர், ஸ்ரீவெள்ளியங்கிரி நாதர், ஸ்ரீசுக்ரேஸ்வரர் போன்ற பெயர்களைப் பூண்டு இறைவன் அருளும் ஆலயங்களில், கரு நீல திராட்சைக் கனிகளால் அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.
மேலும் வெள்ளைத் தாமரை பூவில் அமர்ந்த நிலையில் உள்ள ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீகிருஷ்ணனைப் பூஜித்து, குமரகுருபரர் இயற்றிய சகலவல்லி மாலையை, மகாகவி பாரதியார் பக்தியுடன் இயற்றிய, வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்... ஆகிய வெண் தாமரை மலரும் இறைத் துதிகளை ஓதி வருதலால் எப்போதும் பலவிதமான மனத் தாங்கல்களால் அவதியுறுவோர், யாரைக் கண்டாலும் சள் சள் என்று கடிந்து விழுகின்ற கோப மனப்பான்மை தணிந்து, மனம் மென்மையாகிட அருள் சுரக்கும் திருநாள்.
சுக்கிர மூலை என்ற ஒன்று உண்டு. இது ஜோதிட ரீதியாக அல்லாது ஜாதகத்தில் மிளிரும் நீதி சக்திகளை அடிப்படையாகக் கொண்டு அமைவதாகும். அமைதியான மனநிலைக்கு விருப்பு, வெறுப்பற்ற, இன்ப, துன்பங்களைக் கடந்ததாக இருக்க வேண்டும். எப்போதும் எல்லோருடைய மனமும் பாரபட்சமும் இன்றிச் சம நிலையாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
உள்ளூர எழுகின்ற ஆசாபாசங்கள், விருப்பங்கள், உணர்ச்சிகளுக்கு ஏற்ப நீதி நிலையும் தடுமாற்றம் கொள்ளும். அசுரர்களுடைய குருவாகச் செயல்படுகின்ற சுக்ராச்சாரியார் எத்தகைய கொடுமையான தவறுகளைச் செய்த அசுரர்களையும் தம் பர்ணசாலையில் ஏற்று, திருத்தி நல்வழிப்படுத்திட முனைந்தாக வேண்டும் என்ற நியதி அசுர குருவாய் அமைந்தமையால் அவருக்கு உண்டு. இருந்த போதிலும் அசுரர்களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தேவர்களுக்கு எதிராக அவர்கள் செய்த அக்கிரமங்களையும் துணிவாக எடுத்துக் கூறி அவர்களைத் திருத்தி நல்வழிப் படுத்திட முனைந்தார். இதுவும் சுக்கிர நீதி வகைகளுள் ஒன்றாகும்.
ஆனால், வாமன மூர்த்தியாய் ஸ்ரீநாராயண மூர்த்தி தோன்றியபோது சுக்ராச்சாரியார் பல நீதிகளை மகாபலிக்கு எடுத்துக் கூறினாலும் கமண்டலத்தில் வண்டாய் நுழைந்து அர்க்யத்தை நிறுத்த முனைந்து, தானத்தைத் தடுக்க முயன்ற செயலைப் புரிந்ததால் சுக்ர நீதியிலிருந்து அவருமே சற்றே பிரண்டவர் ஆனார். இதற்காக பல இடங்களில் அவர் பரிகாரங்களை ஆற்றினார். அவைதாம் ஸ்ரீவெள்ளீஸ்வர ஆலயத் தலங்களாயின.
முந்தைய யுகங்களில் தேவர்கள், அசுரர்கள் என்ற இரு பிரிவு மட்டுமே இருந்தது. ஆனால், சமீபத்திலோ தேவ குணங்களும் அசுர குணங்களும் உலக மனிதச் சமுதாயத்தில் இருப்பதால் ஒரே மனிதனிடத்தில் இரு வகைக் குணங்களும் உள்ளன. அசுரர்களும் மஹாத் தபஸ்விகளே! ஆனால் தபோ பலன்களை விரயம் செய்தவர் ஆகின்றனர். அசுர குணங்களை மாற்றி, அதில் கனியும் தபோ பலன்களைப் பயன்படுத்திட சுக்ர ஹோரை நேரத்தில் ஆற்றுகின்ற பூஜைகள் உதவும்.
மனிதனை இறைப் பகுத்தறிவு நிறைந்த முழு மனித குணங்களுடன் வாழ வைக்க உதவுவது சுக்ர ஹோரை நேரப் பூஜை! தற்போது பூவுலகில் பெருகுகின்ற மக்கள் தொகையில் ஓரறிவு, ஈரறிவுகளுடன் கூடியவர்களே அதிகம். மனிதர்களாய் ஆறறிவுடன் நிலைத்து வாழ்வோர் மிகவும் குறைவே. வெள்ளிக் கிழமை அன்று தீவினையில் மதி மயங்காது வாழ்ந்திட நற்கதிர்கள் பரிமாணம் ஆகும். ஆதலால் சுக்ர மூர்த்தியே வழிபடும் லிங்கத் தலங்களில் வெள்ளிக் கிழமை சுக்ர ஹோரை நேரத்தில் வழிபட்டு வர, தன்னிடம் தொக்கி நிற்கும் அசுர குணங்கள் தெரியலாகும்.
ஓம் குருவே சரணம்