ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
ஆரோக்கிய வாழ்விற்கு அருமருந்து |
சனி நீராடு என்பதில், பெருமாளுக்கான தைலக் காப்பு நாள், (புண்ணியத்) தீர்த்த நீராடல், எண்ணெய் தேய்த்து நீராடுதல் போன்றவற்றைக் குறிப்பதாகவும். ஆன்மீக ரீதியாகவும் பல தெய்வீக அர்த்தங்கள் பதிந்து உள்ளன. நம் கால் பாதத்தின் அடியில் உள்ள பாத ரேகையில் இருந்து உச்சித் தலையில் உள்ள சுழி வரை, பல்வகை நரம்பு ஓட்டங்கள், நீரோட்டங்கள், தீர்த்த வாரிகள் நிறைய உண்டு. இதில் சனி நீர் என்பது உடலில் உள்ள 96 வகை நீரோட்டங்களுள் ஒன்றாகும்.
அர்க்ய சக்தி, தர்ப்பண சக்தி என்பன உடலில் உள்ள நீரோட்டங்களுக்கு வான்வெளி நீரோட்ட சக்திகளை ஊட்டி அளிப்பதாகும். இதனால்தான் ஆண்டில் 96 நாட்களை தர்ப்பண நாட்களாக (மாதப் பிறப்பு, விஷ்ணுபதி, வியதீபாத யோக நாட்கள், 14 மனு நாட்கள், அமாவாசைகள் போன்ற 96 ஷண்ணாவதித் தர்ப்பண நாட்கள்) அளித்துள்ளனர்.
இதற்காகத்தான் மாதம் மும்மாரி பெய்த தர்மமிகு தமிழகத்தில், அக்காலத்தில், மாதம் ஒருமுறை சனிக் கிழமை அன்று சுழிப்பாத (தலைச் சுழியில் இருந்து கால் பாதம் வரையிலான) நீரோட்டமாக, தலைச் சுழியும், கால் பாத ரேகையும், நன்கு நீரில் நனையும் வண்ணம், மழையிலும், ஆற்று, குளத்து, நீர்வீழ்ச்சிகளிலும் நீராடுவதை மிகவும் விசேஷமானதாகக் கொண்டனர்.
பிரசாதம், மலர், போன்று ஆண்டவனுக்கு முதலில் அளித்துப் பிறகு, அதன் சக்திகளைப் பெறுகின்ற வகையில் முதலில் ஆலயங்களில் சிறிது எண்ணெய், தைலம் அளித்துப் பிறகு பயன்படுத்துவதே சிறப்புடையது.
சில ஆலயங்களில் சுவாமிக்குத் தைலக் காப்புப் பிரார்த்தனையாய், சனிக் கிழமையில் தைலக் காப்பு இடத் தொடங்கி, ஒரு வாரம், ஒரு பட்சம் (15 நாட்கள்), ஒரு மாதம், ஒரு மண்டலம் (48 நாட்கள்) வைத்திருந்து, சனிக் கிழமையிலேயே தைலக் காப்பைக் களைவர் அல்லது சனிக் கிழமையில் நிறைவு செய்வதும் உண்டு. இதற்கு சனித்த சனி உற்சவம் என்று பெயர். பல பெருமாள் ஆலயங்களில் இன்றும் நிகழும் தைலக் காப்பு உற்சவம் இது.
தைலப் பத்து எனப் பத்து நாட்களுக்குத் தைலம் இடுவதும் உண்டு. ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியே தைலக் காப்பிட்டுப் பெருமாளை வழிபடுகின்றார் என்பது ஐதீகம். மேலும் இதில் வளர்பிறையான, சுக்ல பட்சச் சனிக் கிழமையில் பெருமாளுக்கு சிரசிலிருந்து பாதம் வரையிலும், தேய்பிறைச் சனியில் பாதத்திலிருந்து சிரசு வரையிலும் தைலக் காப்பு இடும் முறையும் உண்டு.
தைலம் என்பது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் மருதாணித் தைலம், செம்பருத்தித் தைலம், கரிசலாங்கண்ணித் தைலம், பொன்னங்கண்ணித் தைலம் போன்றவற்றை முறையாகச் சேர்ப்பதாகும். சாம்பிராணித் தைலத்தையும் காப்பாக இடுவதும் உண்டு.
ஆண்கள் எண்ணெய் தேய்த்து நீராடுகையில் தலையில் சிறிது தலைக்கு எண்ணெய் வைத்துக் கொண்டு சுக்ல பட்சச் சனியில் தலைச் சுழியில் இருந்து சிறிது சிறிதாக கால் ரேகைக்கும், தேய்பிறைச் சனிக் கிழøயில் பாத ரேகையில் இருந்து சிறிது சிறிதாகத் தலைக்கும் தைலம் தேய்த்து நீராடுவர். இதனால் தைலச் சார்புடைய உடல் நாளங்கள் நல்ல ஆன்மீக சக்தி பெறும். நரம்புகள் வலுவடையும். இதனை அடிப்படையாகக் கொண்டதே பண்டைய தமிழகத்து வர்ம மருத்துவ முறையாகும். இவ்வாறு சனி நீராடு என்பதில் எண்ணற்ற ஆன்மீக விளக்கங்கள் நிறைந்துள்ளன.
நத்தம் பெருமாள் தலம்
சனி நீராடுதல் (உடலில் உள்ள நிண, குண, கண நீர் - முக்குண ஜலநாளங்கள்) என்பது நடனமாடுதல் போல, யோகப் பூர்வமாக யோகப் பூர்வமான ஜலத்வீப சக்திகளை உடலில் ஆக்கப்படுத்துவதாகும். பெண்களுக்கு உரிய எண்ணெய் நீராடல் முறைகள் வேறானவை.
தைலக் காப்பு சார்த்தப் பெறுகின்ற ஆலயங்களில் சனிக் கிழமைகளில் மூலவருக்குத் தைலம் சார்த்தி வழிபடுதல் விசேஷமானது. மூலவருக்குத் தைலம் சார்த்திப் பூஜிக்கும் முறை இல்லையெனில், பிறகு மற்ற நாட்களில் சார்த்திட தைலம் அளித்திடவும்.
மாதம் ஒரு முறையாவது சனிக் கிழமை அன்று குறைந்தது மூன்று ஏழைக் குடும்பங்களுக்குத் தைலம் தேய்த்து நீராடிடத் தேவையான தைலம், சீயக்காய்ப் பொடி, தேவையானால் தண்ணீரும் (ஆம், தண்ணீரும்தான்!) அளித்துத் தைல தானச் சக்திகளைப் பெற்றிடவும். ஏழைகள் நன்கு நீராடிட, இயன்றால் தைலத்துடன் ஒரு டாங்க் நீரைக் கூடத் தானமாக அளித்துப் பெரும் புண்யத்தைப் பெற்றிடலாம்.
தான்ய தர்மம், வஸ்திர தானம், அன்னதானம், புத்தக தானம் போன்ற பல்வகை தான தர்ம சக்திகள்தாம் நம்மை வாழ்விக்கின்றன. இவற்றில் தைல தான சக்திகளைப் பெற இயலாது பல குடும்பங்கள் வாடுகின்றன. இதனால் வட்டி, பணக் கடன்கள் பெருகும். தைலக் காப்பு வழிபாடு, தைல தானம் கடன் சுமைகளைத் தணிக்க உதவும்.
தலைக் காப்பு ஆராதனை, தைல தானம் செய்து தலைமுறைகளில் நரம்பு, அங்கங்கள் செயல் இழத்தல் போன்றவை வராது தற்காத்துக் கொள்ளவும்.
மன ஸ்தாபங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற தம்பதியர், பெற்றோர், பிள்ளைகள், வியாபாரக் கூட்டாளிகள் இடையே நல்ல சுமுகம் ஏற்பட வழி பிறக்க மாதாந்திர தைலக் காப்பு வழிபாடு, தைல தானப் புண்ய சக்தி உதவும்.
சனிக் கிழமை தோறும், கும்பகோணம் - கஞ்சனூர் மார்கத்தில் துகிலி பிரிவுப் பாதையில் உள்ள திரைலோக்கி ஸ்ரீரங்கநாதருக்குச் சாம்பிராணித் தைலம் சார்த்துவது குடும்பத்தில் நல்ல ஒற்றுமையைத் தரும்.
திருச்சி - லால்குடி அருகே நத்தம் ஸ்ரீரங்கநாதருக்குத் தைலம் சார்த்தி வழிபடுவது, எந்த முடிவு எடுப்பது என வழிவகை தெரியாது தவிப்போர்க்கு நல்ல தீர்ப்பு கிட்டிட, நல்வழியைப் பெற்றுத் தரும்.
கண் சக்தி பெருக... |
தினமும் காலையில் எழுந்தவுடன் முதலில் கர்ம சிரத்தையாகச் செய்தித் தாளைப் படிக்கின்ற வழக்கம் கலியுகத்தில், உலகெங்கும் நன்கு ஊறி விட்டது. அரசியல், சினிமா, விளையாட்டு, மனதைக் கெடுக்கும் படங்கள், சினிமா இவற்றில் காட்டுகின்ற ஆர்வத்தைப் பலரும் தெய்வீகச் செய்திகளில் காட்டுவது கிடையாது. செய்தித் தாளிலும், நமக்கு உயிர் மூச்சாக இருக்க வேண்டிய தெய்வீகத்தை, எங்கோ ஒரு மூலையில், ஒரே ஒரு பத்தியாக மட்டும் போட்டு விட்டு, - கொள்ளை, திருட்டு, நாணயமற்ற அரசியல் போன்ற உபயோகமற்ற விஷயங்களுக்கு முதல் பக்கத்தில் முக்கியத்துவம் அளிக்கின்றார்கள். எனவே காலையில் எழுந்தவுடன் நல்ல விஷயங்களைச் செய்தித் தாளில் படிக்கத்தான் முடிகின்றதா? இல்லையே! காலையில் இவற்றைப் படித்தா மனதை அசுத்தப்படுத்திக் கொள்வது? காலைக் கடன்களில் உடல் அசுத்தம் தீரும். ஆனால் காலைச் செய்தித் தாள் வாசிப்பில் மனக் கடன்சுமைகள் சேர அனுமதிக்கலாகுமா?
இவ்வாறு நேத்ர சக்திகள் வீணாகமல் இருக்க நேத்ர சக்திகள் தரும் வழிபாடுகளை மேற்கொள்தல் நலம்.
ரேவதி நட்சத்திர தேவியே, நல்ல விஷயங்களை நம் உடலின் 72000 நாளங்களிலும், தேவ நட்சத்திரப் பிரகாச நீரோட்டங்கள் மூலமாக நிரவிட அருள்பாலிப்பவள். கண்களுக்கு நல்ல தீர்க நேத்ர சக்திகளைப் பெற அருள்பவளும் ரேவதி தேவியே! ரேவதி நட்சத்திரம் ஒரு நாளில் 60 நாழிகையும் நிரவி வரும் நாட்களிலும் ரேவதியும் ஞாயிறும் இணையும் நாட்களிலும் இயற்றப்படும் வ்ழிபாடுகள் கண்களுக்கு அற்புத ஆரோக்கியத்தை அளிக்கின்றன.
சூரிய மூர்த்திதாமே கண்களைப் பாதுகாக்கும் ஆதித்ய சக்திகளை அளிப்பவர். ஞாயிறும் ரேவதியுடன் சேர்வது கண்களுக்கான நற்சக்திகளை அளிக்க வல்லதாகும். இதனால்தான் காலையில் எழுந்தவுடன், கர தரிசனமாக உள்ளங்கை ரேகைகளைத் தரிசிக்கையில்,
ரேவதி புவ அஸ்வினி, நட்சத்திர சுதபாக்யம்
என்று ஓதி,
ரேவதி முதல் அஸ்வினி ஈறான, 27 நட்சத்திர ஒளிகள் பூரிப்பதாக!
என்று ரேவதிக்கு முதலிடம் கொடுத்து வேண்டுகின்றோம்.
ரேவதி நட்சத்திர தலம்
காருகுடி முசிறி
கண்களில் 27 வகையான ரேவஸ்விநாத சுப நாளங்கள் உண்டு (ரேவதி +அஸ்வினி). சூரிய கிரணம், சந்திர கிரணம் போல நட்சத்திரக் கிரணங்களும் உண்டு. இதில் ரேவதி, அஸ்வினி நட்சத்திர சங்கமக் காலம் மிகவும் சக்தி வாய்ந்தது.
நாம் இரவு உறங்கும் போது, பல விண்ணுலகங்களுக்கும் சென்று, பலவிதமான தெய்வீகக் காட்சிகளைக் கண்டும், அரிய அனுபூதிகளைப் பெற்றும், கர்ம வினைகளைக் கழித்தும்தான் உறக்கம் நீங்கி எழுகின்றோம். இவ்வாறு, காலையில் எழும்போது, இரவில் சென்று வந்த பல நல்ல லோகக் காட்சிகள், கண் நாளங்களுக்குள் நிறைந்திருக்கும். உண்மையில் நாம் உறங்குவது என்பது நம் பூமியைப் போன்று உள்ள, பல்வேறு பூமிகளில் நம்டைய ஒன்பது சரீரங்களில், ஒன்றில் அல்லது பலவற்றில் வாழ்கின்ற வாழ்க்கையே உறக்கம் ஆகும்.
கனவு என்பதும் பிற பூமியில், நம் ஒன்பது சரீரங்களில் ஒன்றில் அல்லது பலவற்றில் வாழும் வாழ்க்கையே! இதில் ஓரிரண்டு நிகழ்ச்சிகளை மட்டும்தான் நாம் கனவுகளாகக் காண்கின்றோம். ஏனைய பலவும் இந்த சரீரத்தால் அறியப் பட இயலாதவையே! இவ்வகையில் நம்முடைய இந்த பூமி வாழ்க்கை, பிறிதொரு பூமியின் கனவுலக சம்பவமாகவும் அமையக் கூடும். காலையில் எழுந்தவுடன் பல நல்ல லோகங்களில் கண்ட காட்சிகள், நமக்கு நினைவில் இல்லா விட்டாலும், நம்முடைய மன உடலால் அந்த லோகங்களுக்குச் சென்று வந்தமையால், அவற்றின் நற்சக்திகள் நம் உடலில் நிறைந்து இருக்கும். இவற்றை நன்கு நம் உடலில் நன்கு நிலை நிறுத்திடவே, காலையில் ஆற்ற வேண்டிய கோபுர தரிசனம், புனித விருட்ச தரிசனம், தாய் தரிசனம், மனைவி தரிசனம், குழந்தைகள் தரிசனம், நித்யக் கடமைகள் பலவும் உண்டு.
இவற்றை ஒவ்வொன்றாக ஆற்றும் போது, இத்தகைய நற்சக்திகள் உடலில் நன்கு துய்த்திட உதவும்.
காலையில் எழுந்ததும் பல் கூடத் தேய்க்காது, தினசரித் தாளை வைத்துக் கொண்டு கொலை, கொள்ளை, வன்முறை என்ற உபயோகமற்ற செய்திகளைப் படிக்கின்றபோது, கண்களில் திரள்கின்ற நற்சக்திகள் எல்லாம் விரயமாகி, வீணாகி விடுகின்றன.
இவ்வாறு நம்மிடம் இறைவனே உறக்க யோக சக்திகள் மூலம் அளிக்கின்ற பல நல்சக்திகளை மனித குலம் தானாக விரயமாக்கிக் கொண்டு வருகின்றது.
எனவே, காலையில் குறைந்தது, இரண்டு மணி நேரமாவது நல்ல காட்சியைப் பார்ப்பது - கோயில் கோபுர தரிசனங்கள், பசுமையான வயல்வெளிகள், பசு தரிசனம், துளசி, அரசு, ஆல், வேம்பு, புரசு, தென்னை, பனை போன்ற புனிதமான தாவரங்களின் தரிசனங்கள் இவ்வாறு பச்சைப் பசேல் என்றிருக்கின்ற மனதிற்குக் குளுமையாய் இருக்கின்ற தரிசனங்களையும், ஆலயத் தரிசனங்களையும் பெற்று, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு செய்தித் தாளை வாசிக்கின்ற வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காகத்தான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் துயில் எழுதலால், காலையில் எழுந்தவுடன் தீய விஷயங்களைப் பார்க்கின்ற தன்மைகளைக் குறைத்திடலாம்.
தேவையில்லாத செய்திகள் என்றால் அவற்றைப் படிக்காது விட்டு விடவும். நாலைந்து செய்தித் தாள்களில் அதே செய்திகளையே மீண்டும், மீண்டும் படித்து, புனிதமான காலத்தை விரயம் செய்யாதீர்கள்! தற்காலத்தில், உலகோடு ஒட்டி வாழ வேண்டியிருப்பதால், பல செய்திகளை அறிய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருந்தாலும், வன்முறை, பயனற்ற நிகழ்ச்சிச் செய்திகளை அறவே ஒதுக்கிட வேண்டும்.
சூரிய பகவான் தனித்து அருள்கின்ற சந்நதிகளிலும், ஸ்ரீசூரிய பகவான் பூஜித்தத் தலங்களிலும் ஞாயிறுதோறும் தேனால் அபிஷேகம் செய்து, அந்தத் தேன் ஒழுகும் காட்சியைக் கண்ணாரக் காணுங்கள். இது கண்களில் உள்ள நாளங்களுக்கு ஆக்கப் பூர்வமான சக்திகளைத் தரும். இதனால் தேவையற்ற கெட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கண்களில் சேர்ந்துள்ள பாவத் தோயல்களும் நீங்கி, கண்கள் நற்சக்தி பெற இது உதவும்.
வசதியுள்ளோர் ஏழைகளுக்குக் கண்ணாடிகள் வாங்கித் தருதல், ஏழைகளின் கண் சிகிச்சைகளுக்கு உதவி செய்தல், குருடர்களுக்கு உதவி செய்தலால் மனைவி வகைக் குடும்ப உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் விலகிட உதவும்.
புது வீடு, புது வியாபாரம் தொடங்கி கண் திருஷ்டிகளினால் அடிக்கடி சிறு துன்பங்களைச் சந்திப்போர், ஞாயிறுதோறும் சித்தலவாய் (கிருஷ்ணராயபுரம்) ஸ்ரீதிருக்கண்மாலீஸ்வரர், சென்னை ஞாயிறு, முசிறி அருகே காருகுடி, கும்பகோணம் அருகே பயரி, தேவகோட்டை அருகே நாட்டரசங்கோட்டை ஸ்ரீகண்ணாத்தாள், வேதாரண்யம் போன்ற சூரிய, கண் சக்தி மற்றும் ரேவதி நட்சத்திரத் தலங்களில் வழிபட்டு வருதல் வேண்டும்.
பிரதட்சிண அமாவாசை |
திங்கட் கிழமையும் அமாவாசையும் கூடும் நாள் பிரதட்சிண அமாவாசை எனப்படும். இது மௌன விரதத்திற்கு உரித்தான நாள். அரச மரப் பிரதட்சிணம் வருவதால் பல அரிய மன யோக சக்திகளைப் பெற்றிடலாம். துன்பங்கள் பெருகி வருகின்ற கலியுகத்தில், துன்பத்தின் சுமைகளைத் தாங்க இயலாவிடில், மனிதன் எதை வேண்டுமானாலும் செய்யத் துவங்கிடுவான்.
எனவே, மன ஒழுக்கம் இருந்தால்தான் மனிதன், மனிதனுக்கே உரித்தானதாக உள்ள, இறைவன் படைத்து அளித்துள்ள, ஆறாம் நிலைப் பகுத்தறிவுடன் நன்கு வாழ முடியும். இதற்கு உதவுவதே சோம வாரப் பிரதட்சிண அமாவாசை நாளாகும்.
அரசமரம், நெல்லி மரங்கள் விஷ்ணு அம்சங்களைத் தாங்கியவையாகும். இதனால் அரச மரம், நெல்லி மர தரிசனம் மிகவும் விசேஷமானது. சூரிய, சந்திர கிரகங்களின் சங்கமம்தானே அமாவாசை! திங்கட் கிழமை, சந்திர மூர்த்தி அருட் பிரகாசத்துடன் துலங்குகின்ற திங்களன்றுதாம் ஆதிசிவன் (மூன்றாம்) சந்திரப் பிறையைச் சிரசில் சூடி அருள்பாலித்தமையால், சந்திர சக்திகள் நிறைந்த திருநாளே திங்களில் அமாவாசை கூடுவதாகும்.
அஸ்வதம் என்பது சூரிய, சந்திர கிரகங்கள் இணைகையில் உருவாகும் அரிய ஒளிச் சுடர்கள் ஆகும். ஸ்ரீமகாவிஷ்ணு, தெய்வாதி தேவ மூர்த்திகளை அமர வைத்து, தம் வலது கண் (சூரிய சக்தி), இடது கண் (சந்திர சக்தி) யோகப் பார்வையை ஒருமித்துப் பரிசுத யோக சக்திகளை தேவாதி தேவ மூர்த்திகளுக்குப் பயிற்றுவித்த நாளே அமாவாசை கூடிய திங்கட் கிழமை ஆகும்.
ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் ஸ்ரீசுத யோக சக்திகளை கிரகித்து, சூரிய, சந்திர கிரணங்கள், அமாவாசையன்று ஐக்யமாவதால் இதில் அஸ்வத யோக சக்திகள் கிளைக்கின்றன. இத்தகைய அஸ்வத சக்திகளில் இருந்து தோன்றியவற்றுள் அரச மரமும் ஒன்றாகும்.
திருக்கோளக்குடி
எனவேதாம், திங்கள் கூடும் அமாவாசையில், அரச மரப் பிரதட்சணமும், ஆலயப் பிரதட்சிணமும் சிறப்படைகின்றன.
தர்ப்பணம் அளிக்கும்போது தர்பைச் சட்டம் நடுவில் அரச மர சமித்துக் குச்சியை வைத்து, 24 முறை பிரதட்சிணமாக வலம் வந்து, தர்ப்பணம் அளித்துப் பிறகு, மீண்டும் 24 முறை பிரதட்சிணமாக வலம் வந்து தர்ப்பணப் பூஜையை நிறைவு செய்தல் வேண்டும்.
சூரிய சக்தி நிறைந்தது கடம் வாத்யமாகும். சந்திர சக்தி நிறைந்தது மிருதங்கம். எனவே, கச்சேரி செய்பவர்கள் வலதுபுறம் கட வாத்யமும், இடது புறம் மிருதங்க வாத்யமும் வைத்துக் கொள்வது சிறப்பானது. திங்கட் கிழமைகளிலும் பிரதட்சிண அமாவாசை நாட்களிலும், சப்தமி திதிகளிலும் கடம், மிருதங்க வித்வான்களை, ஆலயங்களில் வாத்ய தாளக் கச்சேரி செய்ய வைப்பதால், பரவெளியில் பரிசுத சப்தக் கிரணங்களை நிரவ வைத்து, இவற்றின் நல்வரங்களைப் பெற்றிடலாம்.
பல்வகை தாள இசைக் கலைஞர்களும் அவரவர் வாத்யத்தை நன்கு இசைத்தவாறே, அரச மரத்தையும் ஆலயப் பிரகாரங்களையும் நன்கு வலம் வர வைத்தலால் பரவெளியில் பரிசுத சப்த சக்திப் பரிமாணங்களைப் பரந்த வகையில் உலகெங்கும் விண்வெளியில் பரவும் வகையில் பெற்றிடலாம். இதனால் வாத்யக் கலைஞர்களுக்கும் தொழிலில் நல்ல வளம் ஏற்படும். சமுதாயத்திலும் சாந்த சக்தி நிலவ அருள் பூரிக்கும்.
வாழ்க்கையில், அலுவலகத்தில், தொழிலில் நிகழ்ந்த ஒரு சிறு சம்பவமே பெரிதுபடுத்தப்பட்டு பலத்த நஷ்டம், உறவு முறிவு, வியாபார முடக்கம், சுப காரியத் தடங்கல்கள் ஏற்பட்டிருப்பின், இத்தகைய சப்த வழிபாடுகளின் பலன்களாக, இதற்குச் சுமுகமாகத் தீர்வு பெற உதவும்.
ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்
திங்கட் கிழமை மௌன விரத நாள் ஆயிற்றே, வாத்ய ஒலிகளை எழுப்பலாமா என்று கேட்டிடத் தோன்றும். நல்ல வகையில் அமையும் கச்சேரியில், மனம் லயித்து வாய் பேசாது பலரும் மௌனமாக அமர்ந்து, இன்னிசையைக் கேட்பதைப் பார்த்திருக்கின்றீர்கள் அல்லவா!
சப்தத்தைச் சப்தமே சரப்படுத்தும் என்பது (இசைச்) சரமொழி வாக்கியம்.
காலை சூரிய உதயம், அபிஜித் முகூர்த்தம் எனப்படும் உச்சிப்பொழுது சூரிய அஸ்தமன நேரங்களில்,
ஓம் பத்ரி நாராயண பாகவத பாக்ய சுதம்
பிரம்ம கபால ப்ரசூர்ண சக்தி மே ஆத்மாலயப் பாஹிமாம்
ஆத்மப் பிரதட்சிண இலந்தை அரித் தலம்
அம்மை அப்பப் பரமூல வளமோங்க
அடியை அடியேனாய் அடிவைத்தோமே ஆ தளமாய்!
(இலந்தை அரித் தலம் = பத்ரிநாத்)
என்று ஓதியவாறே ஆத்மப் பிரதட்சிணம் எனப்படுவதான தன்னைத் தானே சுற்றி வலம் வந்து, 21 முறை ஆத்மப் பிரதட்சிணம் ஆக்கி, பித்ரு மூர்த்திகளான மூதாதையர்களை வழிபட வேண்டும். ஸ்ரீபூமா தேவி எப்போதும் ஆத்மப் பிரதட்சிணம் செய்து ஸ்ரீமன் சூரியன் நாராயணப் பெருமாளையும் எந்நேரமும் வலம் வந்து துதிக்கின்றாள்! இதற்கான நல்வரங்களை, ஸ்ரீபூமாதேவி திருப்பத்தூர், அருகே வானம், அந்தரம், சுந்தரமாகிய பூமியைக் குறிக்கும் திருக்கோளக்குடியில் தவமிருந்து பெற்று பதரிநாதத் (பத்ரிநாத்) தலத்தில் பிரம்ம கபால வளாகத்தில் அருள் மழையாய்ப் பொழிகின்றாள்.
மருத்துவர்கள் சிறப்படைய ... |
செவ்வாய்க் கிழமை, அஸ்வினி, ஆயில்யம், பிரதமை போன்ற நாட்கள் மருத்துவ குண சக்திகளைக் கொண்டவை. இதிலும், தேய்பிறைச் செவ்வாய் அற்புதமான மருத்துவ குண சக்திகளைக் கொண்டது. அஸ்வினி, மருத்துவ தேவர்கள் பூலோகத்தில் ஸ்கந்த மூர்த்தியைப் (முருகனைப்) பூஜிக்கும் திருநாள்!
அமாவாசையை அடுத்து வரும் தேய்பிறைச் செவ்வாயில், மருத்துவரைப் பார்ப்பது, மருந்துகளை உட்கொள்ளத் துவங்குவது மிகவும் சிறந்த பலன்களைத் தரும்.
மனசுத்தியைத் தர வல்ல வைசாக சுத்த சித்சக்திகள் நிரம்பிய செவ்வாய்க் கிழமை அன்று செவ்வாய் மூர்த்தி, வைசாகத் தீர்த்தத் தலங்களில் நீராடி, ஸ்ரீவைத்யநாத சுவாமி , ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி, திருவள்ளூர் ஸ்ரீவைத்யவீரராகவப் பெருமாளைப் பூஜித்து விண்ணிலும், மண்ணிலும், நீரிலும், நெருப்பிலும், காற்றிலும் வைத்ய சக்திகளை, தீர்த்தப் பூர்வமாக நிரவுகின்றார்.
ஸ்ரீசெவ்வாய் பகவான்
செருகுடி
எனவே செவ்வாய் மூர்த்திக்குச் சிகப்பு வேஷ்டி, சிகப்பு அங்க வஸ்திரம், சிகப்பு கிரீடம் மூன்றும் சார்த்தி, நன்கு நின்று இரு கண்களையும் விரித்து, செவ்வாய் மூர்த்தியைக் கண்களுக்குள் நிறைய வைத்துத் தரிசித்து, செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீமுருகனின் திருவருளைப் பெற உதவும்படி செவ்வாய் மூர்த்தியிடமே கண்ணீர் மல்க வேண்டிடுக!
மருத்துவர்கள் நன்கு சிரத்தையுடன் அரசு, வேம்பு, வில்வ மரங்களுக்குச் சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், செந்தூரம் இட்டுப் பூஜித்து, மருத்துவ குண சக்திகளை மேம்படுத்திக் கொள்ளவும். நோய்களில் இருந்து நிவாரணம் பெற ஆரோக்ய சக்திகளைப் பெறவும் உதவும் மிகவும் விசேஷமான தினமே செவ்வாயாகும்.
நெடுங்காலமாக நோய்களால் அவதியுறுவோர் குறைந்தது 300 ஆண்டுகள் பழமையான அரசு, ஆல், புரசு, வேம்பு, வன்னி, வில்வம் போன்ற புண்ணிய விருட்சங்களைப் பன்முறை வலம் வந்து வணங்குதல் வேண்டும். அஸ்வினி, செவ்வாய் ஹோரை, தேய்பிறைச் செவ்வாய், பிரதமைத் திதி போன்றவை நோய் நிவர்த்திச் சக்திகளைக் கொண்ட கால அளவீடுகளாகும். எனவே, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைத்யநாத சுவாமி, சென்னை பூந்தமல்லி ஸ்ரீவைத்யநாதர், சென்னை திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர், சென்னை - திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள், கும்பகோணம் அருகே திருக்கற்குடி ஸ்ரீஅருமருந்து நாயகி, திருத்துறைப்பூண்டி ஸ்ரீஔஷதபுரீஸ்வரர், வைதீஸ்வரன் கோயில் போன்ற தலங்களில் பூஜிப்பது நோய் நிவாரண சக்திகளைப் பெற்றுத் தருவதாகும்.
மேலும், சற்குருமார்கள் மூலமாக, நாம் இத்தகைய அபூர்வமான, அரிதான, அற்புதமான ஆன்மீக விஷயங்களைப் பெறுகையில், பலருக்கும் இவற்றை எடுத்து உரைத்து கடைபிடிக்கச் செய்தலும் மிகச் சிறந்த இறைச்சேவைப் பணிகளாக மலர்கின்றன.
*ஏழ்மையாக, நடுத்தர வருமானத்துடன் உள்ள சித்த வைத்ய, ஆயுர்வேத, இயற்கை முறை வைத்யர்களுக்குத் தேவையான திரவியங்கள், மூலிகைகளைப் பெறவும், உரலில் மருந்து இடித்துத் தருதல் போன்ற வகையிலும் உதவுவதும் மிகவும் சிறப்புடையதாகும்.
* மழை, உரமின்றி நலிந்திருக்கும் ஆலய (மூலிகை) விருட்சங்கள், தென்னை, பனை, வேம்பு, அரசு போன்ற மரங்களுக்கு உரமிட்டு, நல்மண் சார்த்தி, நீர் ஊற்றி, நில சக்திகளைப் பெருக்குதலும் ஒரு சமுதாய வைத்ய சேவையே.
* அடைபட்டிருக்கும் பறவைகளை, குரங்கு போன்றவற்றை விலைக்கு வாங்கி, அவற்றிற்கு விடுதலை அளித்து, வெட்ட வெளியில், வனங்களில், தோட்டங்களில் சுதந்திரமாக விடுதலால் காணமல் போனவர்கள் பற்றி நற்செய்திகளும், காணாமல் போன பொருட்கள், பத்திரங்கள், ரெகார்டுகள் பற்றி நல்ல தகவலும், விரைவில் கிட்ட இத்தகைய அறப்பணிப் புண்ய சக்திகள் உதவும்.
மூன்றாம் பிறை தரிசன மகிமை |
மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் தரும் தரிசன நல்வரங்கள், தேவ தரிசன சக்திகள் நிறைய உண்டு. ஆசிரியர்கள், கம்ப்யூடர் துறையினர், ஜோதிடர்கள், மருத்துவர்கள் அறிவுப் பூர்வமாகப் பணிகளை ஆற்ற வேண்டியதிருப்பதால், மதிமயக்கம் இல்லாது அறிவுப் பிரகாசத்துடன் துலங்க மூன்றாம் பிறைச் சந்திர தரிசனப் பலன்கள் நன்கு உதவும்.
ஒவ்வொரு மூன்றாம் பிறையும் அந்தந்த நாளின் நட்சத்திர, யோக, கரண கால நிலைகளுக்கு ஏற்ப, பல அற்புதமான நல்வரங்களைத் தருகின்றது. “வெறும் மூன்றாம் பிறைத் தரிசனம்தானே அப்படி என்ன அது விசேஷமான சக்திகளைத் தந்து விடப் போகின்றது?” என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.
ஸ்ரீசோமநாதேஸ்வரர்
மானாமதுரை
முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவாதி தெய்வ மூர்த்தியரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தை
* ஸ்ரீசந்திர சூட சிவ தரிசனமாக,
* ஸ்ரீசந்திர மௌலீஸ்வர தரிசனமாக,
* ஸ்ரீசந்திர சேகர தரிசனமாகவும்
போற்றி வழிபடுவதால், நாம் தேவாதி, தேவ, தெய்வாதியருடன் இணைந்து, மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெறுகின்றோம் என்ற உத்தம பாக்ய நிலையின் மகத்துவத்தை இனியேனும் உணர்ந்திடுங்கள்.
* மனதால் செய்த பாவங்களுக்கு நல்ல விமோசனம் தரும் தரிசனம்.
*குறிப்பாக, வாயால் பேசிய தீய வார்த்தைகளுக்கும், மனதால் பேசிய கொடிய வார்த்தைகளுக்கும், மனதில் உருவாகும், விகாரமான கேவலமான எண்ணங்களுக்கும் தக்க பிராயச் சித்தத்தைத் தரக் கூடிய தரிசனம்.
* சிறுவர்களுக்கு நல்ல ஒழுக்கமான நற்குணத்தைத் தர வல்ல தரிசனம்.
*வேத மந்திரங்களை ஓத முடியவில்லையே என்று ஏங்கி வருந்துவோர்க்கு வேத மந்திரப் பலாபலன்களைத் தர வல்ல தரிசனம்.
*வெளியில் சொல்ல இயலாதபடி விகாரமான எண்ணங்களில் உழல்வோருக்கு, மனசுத்தியைப் பெற உதவும் பரிகாரங்களைத் தரும் தரிசனம்.
இவ்வாறாக, வானில் சில நிமிடங்களே தோன்றும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம், மனவளப் பலன்களை அபரிமிதமாகத் தர வல்லதாம்.
உண்மையில் மனம் அமுத ஒளி நதியில் புண்ணியமயமாகப் புனித நீராடுவதாகவே, சித்தர்கள், மூன்றாம் பிறைச் சந்திர தரிசனப் பாங்கினைக் குறிக்கின்றனர்.
மூன்றாம் பிறைச் சந்திர தரிசனப் பலன்களை அபரிமிதமாகப் பெற்றுத் தருகின்ற விசேஷமான தலங்களும் சில உண்டு. சேலம் அருகே தாராமங்கலம், கும்பகோணம் அருகே தாழமங்கை, திருவக்கரை, பட்டீஸ்வரம் அருகே பழையாறை, சந்திரசேகரபுரம், மானாமதுரை, மதுரை, முசிறி, திங்களூர் போன்ற இத்தகைய மூன்றாம் பிறைச் சந்திர தரிசன முக்தித் தலங்களில்,
* ஆலயப் பிரகாரத்தில், ஒரு பெரிய பாத்திரம் நிறையக் காய்ச்சிய பசும் பாலை வைத்து, நன்கு வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு இட்டு, வானில் மூன்றாம் பிறை தோன்றுகையில்,
“சந்த்ர சேகர, சந்த்ர சேகர, சந்த்ர சேகர பாஹிமாம்
சந்த்ர சேகர, சந்த்ர சேகர, சந்த்ர சேகர ரட்சமாம்!”
“அமுதா! ஆதவசகாயா! ஆலஅரைவட்ட அரமேற் சிகர தேவா!
குமுதாய நற்குணம், நற்செல்வம், நற்சந்தம் தோய, ஓதுவேன் அரிஹரப் பதம் வாழி!”
என்று சத்சங்கமாகப் பலரும் கூட்டாக ஓதி வழிபடுக!
இவ்வாறு புனிதமான மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெற்று வழிபட்டுப் பாலை நைவேத்யம் செய்து, ஏழைகளுக்குத் தானமாக அளிப்பதால்
* மதி மயக்கம், மன மயக்கம், மனப்பித்தம், மனவேதனைக் கழல் போன்றவற்றால் வாடுவோர் நன்னிலை பெற வழி பிறக்கும்.
எந்த முடிவை எடுப்பதற்கும் பிறரை அண்டி நிற்போர், சுயநம்பிக்கையுடன் தெளிவான முடிவுகளை எடுக்க இச்சந்திர தரிசனப் பலன்கள் பெரிதும் உதவும்.
* சித்தர்களின் ஜீவசமாதியில் இருந்து மேற்கண்ட வகையில் சந்திர தரிசனம் பெறுதலும், சித்தர்களின் தரிசனம் பெற நல்வழி காட்டுவதாகும்.
அட்சய திரிதியை |
அட்சய திருதியைத் திதியில்தாம், நடராஜப் பெருமான், அட்சய தாரண நாட்டியத்தை நடத்தினார். இதன் தரிசனத்தைத்தாம் பதஞ்சலி முனிவரும், காரைக்கால் அம்மையாரும் பெற்றனர். ஆலமரத்தின் கீழ், அட்சய வடத்தின் கீழ் நடைபெறும் இந்தத் திருநடனத்திற்கு அட்சயவடவாலம் என்று பெயர். இத்தகைய தரிசனத்தைப் பெற்ற அம்பிகையே ஸ்ரீவாலாம்பாள் ஆக அருள்புரிகின்றாள்.
எனவே அட்சய திரிதியை அன்று ஸ்ரீவாலாம்பாள் தரிசனம் மனவீட்டைப் புனிதப்படுத்தும். மானசீகமாக மனக் கோயிலுக்கான இறைத் திருப்பணிகளைத் தொடங்கி, தினமும் ஆற்றி வந்து, சென்னை திருநின்றவூர் ஸ்ரீஹிருதயாலீஸ்வரர் ஆலயத்தில் வழிபட்டு, மனக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்து தினமும் மானசீகமாகப் பூஜித்து வாருங்கள். மனசுத்தியைப் பெற வழிவகை தரும் அற்புத வழிபாடு.
சுப மங்கள சக்தி வாய்ந்த நாட்களுள் வளர்பிறைத் திரிதியை நாளும் ஒன்றாகும். திரிதியைத் திதியில் நடத்தும் பூஜைகள் மாசில்லா, குறைவில்லா அட்சய வளங்களைப் பொழிய வல்லவையாகும். திதி என்பது சூரிய, சந்திர கிரகங்களின் இருப்பிட நிலைகளைப் பற்றி உணர்விப்பவை.
ஏதோ வானில் சூரிய, சந்திர நவகிரஹங்கள் சுற்றிச் சுற்றி வருவதாக மட்டும் எண்ணாதீர்கள்! உண்மையில் ஒவ்வொரு ஜீவனின் உள்ளும் உள்ள ஜீவகேந்திர மையமானது, வானில் கிரக மையங்களுடன் எவ்வகையில் தொடர்பு கொண்டுள்ளன என்பதை உணர்விப்பதே திதிக் கால அம்சமாகும்.
ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் நவகிரகக் கிரந்திகள் உள்ளமையால், மனிதனின் தினசரி வாழ்வின் ஒவ்வொரு விநாடிப் பாங்கும், சூரிய சக்திகளைப் பொறுத்தும், மதிகாரகரான சந்திர மூர்த்தியின் சஞ்சார நிலைகளைப் பொறுத்தும் அமைகின்றன.
சூரிய சக்திகள் அங்கங்களின் செயல்பாடுகளுக்கும், சந்திர சக்திகள் மன ஓட்டங்களுக்கும் மூலமாகின்றன. இதனால்தான் காலையில் சூரிய வழிபாட்டிற்கு நம் மூதாதையர்கள் முக்கியத்வம் கொடுத்து வந்துள்ளனர்.
மனவளம் இருந்தால்தானே எத்தகைய உடல் ஆரோக்யம் இருந்தாலும் நிம்மதியாக வாழ முடியும். அட்சய சக்தி என்பது தேகவளம், மனவளம், உள்ள (இருதய) வளம், சாந்த வளம், ஆனந்த வளம் ஆகிய ஐந்தையும் குறிப்பதாகும். இவற்றின் சங்கமமே அட்சய வ(ட)ளமாகும். ஆலமரத்திற்கு இவ்வைந்தையும் அளிக்க வல்ல வேத சக்திகள் உண்டு. இதனால்தான் தொன்மையாகவே, யுகக் கணக்காக, ஆண்டாண்டுகளாக ஆண்டு (இருந்து) வரும் ஆலமரத்தை, அட்சய வடம் எனக் குறிக்கின்றனர்.
கயை, வாரணாசி, பிரயாக் (அலாகாபாத்) ஆகிய மூன்று இடங்களிலும் உள்ள அட்சய வட ஆலமரத்தைத் தரிசிப்பது விசேஷமானதாகும். இவை தெய்வீகக் கல்லால ஆலமரத்தின் அடி, மத்ய, நுனிப் பகுதிகளைக் குறிப்பதாகும். குருவருள் திரண்டோருக்குத் திருஅண்ணாமலையில் தெய்வானுகிரகத்துடன், இம்மூன்றும் கூடிய முழுமையான கல்லால மர தரிசனமாகக் கிட்டுவதாகும். இதன் ஓர் இலையையே பகவான் ஸ்ரீரமண மஹரிஷி தரிசித்து இதன் பலாபலன்களை உலகிற்கு நல்கினார்.
அட்சய திரிதியை அன்று, குறைந்தது 300 ஆண்டுகள் வயதுடைய ஆலமர தரிசனம் மிகவும் விசேஷமானதாகும். கும்பகோணம் அருகே முழையூர், பட்டுக்கோட்டை அருகே விளங்குளம் போன்று, ஸ்ரீஅட்சயபுரீஸ்வரராக இறைவன் அருளும் தலங்களில் வழிபடுவது ஆண், பெண் இரு வகைகளிலும் சந்ததி தழைக்க உதவுவதாகும்.
கும்பகோணம் - சாக்கோட்டை - சிவபுரம் மார்கத்தில் சாக்கோட்டை அடுத்து மிகவும் தொன்மையான ஆலமர விழுதுகளுக்குள், ஆலமரப் பொந்தினுள் ஸ்ரீஆகாச விநாயகர் அருள்கின்றார். பல நூறு ஆண்டுகள் வயதுடைய ஆலமரத்தையும், ஸ்ரீஆகாச விநாயகரையும் இங்கு தரிசித்திடுவீர்களாக!
கடுவெளித் தலம் போல ஆகாச வாஸ்து சக்திகள் நிறைந்த சன்னிதி! அட்சய திரிதியை நாட்களிலும் வாஸ்து நாட்களிலும், செவ்வாய்க் கிழமைகளிலும் வழிபட்டு, வாஸ்து நியதி மீறல் தோஷ விளைவுகளுக்குத் தீர்வுகளைப் பெறுவீர்களாக!
அட்சய திரிதியை அன்றுதான் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் அருள்கின்ற அட்சய லோகத்தில் இருந்து, அட்சய சக்திகள், அட்சய வடமான ஆலமரத்தின் விழுதுகள் மூலமாகப் பூமியை அடைகின்றன. எனவே, குறைந்தது 21 விழுதுகளை உடைய ஆலமரத்திற்கு மஞ்சள், குங்குமம் சார்த்தி,
அட்சய அட்சய அட்சய அட்சய அட்சய அட்சய அட்சய பாதம்
அட்சய அட்சய அட்சய அட்சய அட்சய அட்சய ஆனந்த மாயி!
என்று 21 முறை ஓதி மரத்தை வலம் வந்து வணங்குதலால் சந்ததி தோஷங்கள் வராது காக்கப் பெறுவர்.
அட்சயத் திரிதியை நாளில் வரும் வாஸ்து நாளுக்கு அட்சர அட்சய பூம்யம் என்று பெயர். நகை வாங்குபவர்கள் நாக மூர்த்திக்குத் தங்க வண்ண வஸ்திரம் சார்த்தி, நகைகள் வாங்கி, நகையில் ஒரு சிறிதாவது ஆலய உண்டியலிலோ, ஏழைகளுக்குத் தானமாகவோ அளிப்பதால், தங்கத்தில், அணிந்துள்ள மாங்கல்யத்தில் அறியாமல் சேர்ந்துள்ள பத்து மாற்றுத் தோஷங்கள் அகல வழி பிறக்கும்.
திருப்பத்தூர் அருகே திருக்கோளக்குடியில் உள்ள நாகநாதருக்குத் தங்க நகை அணிவித்து வழிபடுதலும், இங்கு திருக்கோளக்குடியில் கிரிவலம் வருதலாலும் வீடு சம்பந்தமான வாஸ்து நியதி மீறல் தோஷங்களும், நில தோஷங்களும் தீர வழி பிறக்கும்.
தென்னை, பனை போன்ற உயரமான விருட்சங்களின் அடியில் மேனியில், அடியில் விபூதி, குங்குமம், செந்தூரம், நாமக் காட்டியால் மூன்று நாமங்கள் இட்டு, பெருமாள் பக்தர்களாக அவற்றைப் போற்றி வழிபடுதலால், வீடு சம்பந்தமாகப் பிறர் தரும் பிரச்னைகளுக்குத் தீர்வு கிட்டும்.
வித்யா சக்திகள் பெருகட்டும் |
வித்யை என்பதான கல்வியில், கற்றது கையளவு என ஒரு வாக்கியம் உண்டு. (கலைமகள் கற்ற தெய்வீக ஞானக்) கல்வியே கையளவு என்று தேவபூர்வமாக (அர்த்தம்) உரைத்து, இன்றளவும் கலைமகளாம் ஸ்ரீசரஸ்வதி தேவி, தம் சற்குருவாம் ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாளிடம் கல்வி கற்கின்ற பாங்கினை இவ்வாக்கியப் பூர்வமாக நன்கு உரைக்கின்றனர். அப்படியானால் மானுடர்கள் நாம் எவ்வளவு கற்றாக வேண்டும்? எவ்வளவு ஞானம் பெற்றாக வேண்டும் என்று சிந்தித்திடுக!
கல்வி கற்றல் என்றால் வெறும் புத்தகப் படிப்பு மட்டுமல்ல! ஞானம் என்பது அடையப் பெறுதல். ஞானத்தை அடைய உதவுவதே உண்மையான கல்வி! இதையே அக்கால குருகுல வாசங்கள் அளித்தன. தற்போதைய பள்ளி, கல்லூரிக் கல்வித் திட்டங்கள் வெறும் ஏட்டளவே!
(இறைப்) பகுத்தறிவை மலர வைப்பதே கல்வி! இதனையே, கலைமகள் கற்றது கை(வல்ய) அலகு என்றும் உரைப்பதும் உண்டு. அதாவது கைவல்யம் எனப்படும் - குருவிடம் பெறப்படும் முழுமையான பகுத்தறிவே - ஞானம்.
ஸ்ரீஞானசரஸ்வதி வேதாரண்யம்
ஞானத்தில் முதலும் முடிவுமாகிய கைவல்ய நவலோக மண்டபம் என்ற ஞான மண்டபம் ஒன்று திருக்கயிலாயத்தில் உண்டு. ஒன்பது கலசங்கள், ஒன்பது கோபுர அடுக்குகள், ஒன்பது தூண்கள் கூடிய யோக ஞான மண்டபம் இது! இங்குதாம் நவமித் திதியன்று ஸ்ரீசரஸ்வதி தேவி அவதார உற்பத்தி நிகழ்ந்தது. இதனால்தாம் தேர்கள், மண்டபங்கள் ஒன்பது கால்கள், ஒன்பது கோபுரங்களுடன் அமைவது நல்ல ஞான சக்தி விருத்தியைத் தருவதாகும்.
கல்விச் செல்வத்தைக் குறிக்கும் பல திரவியங்கள் உண்டு. அவற்றை முறையாக அறிந்து பயன்படுத்துவதாலும் கல்வி ஞானம் நன்கு விருத்தியாகும். உதாரணமாக, உங்கள் பிள்ளைகள், (புத்தகப்) பையில் எப்போதும் அரசு, ஆல், வேமபு போன்ற சமித்துக் குச்சி ஒன்றைக் கொண்டிருத்தல் மிகவும் நல்லது.
ஸ்ரீபிரம்மா தாங்கி இருக்கும் கழிக்குப் பிரம்ம சடாட்சரக் கழி என்று பெயர். இது அரசு, ஆல், மா பலா போன்ற பலவகைப் பால்வகை விருட்சங்களால் ஆனது. பால்வகை விருட்சங்கள் நல்ல வளத்தை, குறிப்பாக சந்ததி விருத்தியை அளிக்க வல்லவை! இதனால்தான் குழந்தை வேண்டி, நேர்த்தித் தொட்டிலை, மஞ்சளைப் பால் விருட்சங்களில் கட்டுவர். கால்நடைகள் கன்றை ஈன்ற பிறகு, வெளித் தள்ளும் தரிஞ்சிக் கொடியும், பனை ஓலையில் சுற்றப் பெற்றுப் பால் மரங்களில்தான் கட்டுவார்கள்.
பிரம்ம சடாட்சரக் கழியில் இதில் வெள்ளிப் பூண் இடப்பட்டு இருக்கும். இதனால்தாம் ஞான வழிகாட்டிகளாக இருக்கும் துறவிகள், ஞான சடாட்சரக் கழியாக எப்போதும் ஒரு புனிதமான கோலைத் தாங்கி இருப்பர். ஸ்ரீகிருஷ்ணர் பசுக்களைக் காத்த போது ஹரிசுதாட்சரக் கழியைத் தாங்கி இருந்தார். கல்விக் கடவுளாம், உலகின் அனைத்து மொழிக் கடவுளாம் ஸ்ரீசரஸ்வதி தேவி வேம்புக் குச்சியினால் ஆன வித்யாம்பரக் கழியைத் தாங்கி இருப்பாள்.
எனவே வேப்ப மர தரிசனம், வெள்ளை வேம்பு மாரியம்மன் வழிபாடு, வேப்பெண்ணெய் விளக்கு வழிபாடு வித்யா சக்திகளை அபரிமிதமாக வழங்கும். வேப்பம் பூச்சரம், வேப்பம் பூப்பச்சடி போன்றவை வித்யா சக்திகளை அளிக்க வல்லவை! இவற்றை எவ்வகையிலேனும் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.
நாட்டு மருந்துக் கடையில் வேப்பம் பூ கிடைக்கும். இதனை வாங்கி நன்கு இடித்து புனுகு, அத்தர், ஜவ்வாது, சந்தனம், குங்கிலியம் சேர்த்து சாம்பிராணியில் சிறிதாக, சிறிதாக இட்டு மணமுள்ள சாம்பிராணி தூபத்தை ஸ்ரீஹயக்ரீவருக்கு, ஸ்ரீசரஸ்வதிக்கு இடுவதால், பிள்ளைகளின் கல்வி அறிவு விருத்தியாக நல்வழிகள் கிட்டும்.
வேப்பம்பூ வெல்லப் பச்சடி, வேப்பம் பூ ரசம் சாதம் தானம் அளித்தல் விசேஷமானது. நல்ல மூளை இருந்தும், நல்ல படிப்பு நல்ல ஒழுக்கம் இருந்தும் சமுதாயத்தில் நன்கு பயனாகாதவர்களுக்கு, அவரவர் துறையில் நல்வாய்ப்பு கிட்ட வழி பிறக்கும்.
தன் பிள்ளை மிகவும் சாதாரணமாகப் படிக்கின்றானே என்றும் உள்ளூற வருந்தும் பெற்றோர்கள், (வீணை ஏந்திடாது அருளும்) ஸ்ரீஞான சரஸ்வதி, ஸ்ரீஹயக்ரீவ மூர்த்திக்கு மேற்கண்ட வகையில் சாம்பிராணி தூபம் நிறைய இட்டு வணங்கி வர வேண்டும்.
கால தோஷங்களுக்கு நிவர்த்தி |
பல குடும்பங்களில், தினமும் பெண்களுக்கு ஏற்படுகின்ற முதல் சந்தேகமே, இன்று நல்ல நாளா இல்லையா என்பதுதான்! காரணம், எதையாவது வாங்க வேண்டும், செய்ய வேண்டும் என்றால்தான் நல்ல நாளா, இல்லையா என்ற சந்தேகம் வலுத்து விடும்! அக்காலத்தில் இல்லறப் பெண்டிர்கள், வருடாந்திர மளிகைச் சாமான்கள் என்று அந்தந்தத் திரவியங்கள் உற்பத்தி ஆகும் பருவக் காலத்தில் வாங்கி வைத்துச் சிக்கனமாக, கட்டுக் கோப்பாக வாழ்ந்தமையால், உடனடியாக, நினைத்தவுடன் எதையும் வாங்குதல் என்ற அவசர நிலை, அவ்வளவாக ஏற்படவில்லை.
பலரும் அவரவர் குடும்ப வசதியைப் பொறுத்து வாராந்திர, மாதாந்திர, வருடாந்திரச் சாமான்களை முன் கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வர். காய்கறிகள் போன்று அன்றன்று வாங்குதலையும் முறைப்படுத்திக் கொண்டனர்.
ஆனால் இக்காலத்திலோ வீதிக்கு வீதி கடைகள் உள்ளமையால் எதையும், எப்போதும் நேரம், காலம் பாராமல் வாங்குவது என்ற மனப்பான்மை கலியுகத்தில் ஏற்பட்டு விட்டமையால், எதற்குமே நேரம் காலம் பார்ப்பதில்லை! நேரம் பார்ப்பதற்குள் நிறைய சந்தேகங்கள் வந்து விடும்.
பண்டிகை, திருமணம் போன்ற புனிதமான காரியங்களுக்கு மட்டுமே நாள் பார்த்து வாங்குதல் என்ற எண்ணமும் ஏற்பட்டு விட்டது. உலகில் பல நாடுகளிலும் மக்கள், நாள், கிழமை பார்த்தா வாங்குகின்றார்கள், அவர்கள் நன்கு வாழவில்லையா என்று எண்ணும் பகுத்தறிவற்ற நிலையும் வளர்ந்து வருகின்றது.
ஆனால் இவ்வாறு நேரம், காலம் பாராமல் தானியங்கள், ஆடைகள், காய்கறிகள், எண்ணெய், சீயக்காய் ... என இவ்வாறு பல பொருட்களை நினைத்த நேரத்தில் வாங்குவதால்தான், அடிக்கடி ஒன்று மாற்றி ஒன்றாகப் பல துன்பங்கள், இல்லத்தில், பல கோணங்களிலும், பல திசைகளிலுமாக வந்து கொண்டே இருக்கின்றன. உதாரணமாக, ராகு காலம், எமகண்டத்தில் தலைமுடி வெட்டுதல் ஷேவிங் செய்தல் அல்லது பிளேடு போன்று கத்தி, பிளேடு, ஷேவிங் சாமான்கள் வாங்குதலால், ரத்தக் காயங்கள், கட்டிகள், சிறு விபத்துகள் ஏற்படுதல், தோல் எரிச்சல், மனதினுள் எரிச்சல் மனப்பான்மை போன்றவை ஏற்படுகின்றன.
இதே போல ஆறு மணிக்குமேல் விளக்கு வைத்த பிறகு, பிறருக்குப் பணம் அளித்தலாலும் ஏற்படும் பணதோஷங்களினாலும், லக்ஷ்மி கடாட்சமும், பணவரவும் பாதிக்கப்படும் என்பதும் உண்மையே. இவ்வகை தோஷங்களே காலக் கழி வினைகள், கால விரய வினைகள், காலக் கசிவுகள், கால வினைப் பொறுக்குகள் ஆகும்.
நாம் அறிந்தோ அறியாமலோ நேரம், காலம் பாராது செய்யும் காரியங்களில் வரும் இவ்வகைக் காலக் கழி வினைகள், கால விரய வினைகள், காலக் கசிவுகள், கால வினைப் பொறுக்குகளே மாமலை போல் வாழ்வில் பெருகி விட்டனவே, இவற்றை எவ்வாறு களைவது? இதற்கும் ஆன்மீக ரீதியாகத் தீர்வுகள் உண்டு!
இத்தகைய கால தோஷங்களால் மனிதன் தன்னுடைய ஆயுள் சக்திகளுக்குத் தனக்குத் தானே பாதிப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றான். எனவே ஆயுள்காரகரான ஸ்ரீசனீஸ்வரருக்கு உரிய சனிக்கிழமையில் ஸ்ரீகாலபைரவருக்கு பைரவ தீபம் ஏற்றி, ஸ்ரீகாலபைரவரை வழிபட்டுப் பிறகு, ஸ்ரீசனீஸ்வரரை வழிபட்டு வர, சிறிது சிறிதாகக் காலக் கழி வினைகள், கால விரய வினைகள், காலக் கசிவுகள், கால வினைப் பொறுக்குத் தோஷங்களுக்குத் தீர்வுகளைப் பெற்றிடலாம்.
அனைத்துச் சிவ ஆலயங்களிலும், இரவு நேரக் கால பைரவ பூஜையோடு தான் அர்த்த ஜாம பூஜை நிறைவுறும். விடியற்காலையில் ஸ்ரீபைரவ பூஜையோடுதான் ஆலய பூஜை தொடங்கும். மேலும் சனிக்கிழமை அன்று மாந்தி எனப்படும் குளிகை மூர்த்தி (ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியின் புதல்வர்) தோன்றிய காலமே குளிகைக் காலமாக, சனிக் கிழமை அன்று காலையில் முதலில் தொடங்குகின்றது.
ஸ்ரீநந்தி மூர்த்தியே, ஸ்ரீகாலபைரவரை வழிபடும் புனித நேரமிது. மனித குலம் செய்யும் காலதோஷ வினைகளுக்குப் பரிகாரங்களைப் பெற்றுத் தர, ஸ்ரீமாந்தி மூர்த்தியே ஸ்ரீகாலபைரவரைப் பூஜிக்கின்ற தருணமிது! இந்த நேரத்தோடு சனி ஹோரையும் சேர்ந்து வருவது மிகவும் விசேஷமானதாகும்.
பலரும் மது, கேளிக்கை, புகை பிடித்தல் போன்ற பயனற்ற, எண்ணற்ற, கேளிக்கைகளில், சினிமா போன்ற நிகழ்ச்சிகளில் காலத்தை விரயம் செய்தல் எனப் பல வகைகளில் தீவினைகளுக்கு ஆளாகின்றனர். குளிகை நேரமும், சனி ஹோரையும் சேரும் நேரம் மிகவும் சக்தி வாய்ந்தது ஆதலின், இந்நேரத்தில் வழிபடுவது மேற்கண்ட காலவினை வகைத் தோஷங்களை நீக்க உதவும். மேலும் பாதம் சம்பந்தப்பட்ட தொழிலை உடைய ஏழைத் தொழிலாளிகளுக்கு (ரிக்ஷா ஓட்டுனர்கள், காலணி தைப்போர், ஏழை டிரைவர்கள்) உதவி வர, காலத்தை வீணடித்த சாபங்கள் தீர்வதுடன், சோம்பித் திரியும் பிள்ளைகள் சுறுசுறுப்புடன் காரியங்களை ஆற்றிட உதவிடும்.
ஸ்ரீஆதித்ய ஹ்ருதய மகிமை |
ஞாயிறு என்றாலே விடுமுறை நாள், உறங்கி மெதுவாக எழுந்திடலாம், சோம்பித் திரியலாம் என்ற எண்ணமே உலகெங்கும் நிலவி உள்ளது. ஒவ்வொரு விநாடியும் கோடானு கோடி ஜீவன்களுக்கு ஜீவசக்தி அளித்து, புத்திப் பிரகாசத் திலகமாக விளங்கும் சூரிய மூர்த்தி ஆதிக்கம் செலுத்தும் நாளன்றோ ஞாயிற்றுக் கிழமை!
கண் பார்வையும், மூளையின் பரிகுணச் செல்களும் கூர்மையானதாக ஒளிப் பிரகாசத்துடன் விளங்கி, நன்கு புத்தி துலங்கிட, சூரிய சக்திகள் தாமே தேவைப்படுகின்றன. இத்தகைய சூரியப் பிரகாச சக்திகள் பரிமளிக்கும் ஞாயிறன்று, ஓய்வு என்ற பெயரில் சோம்பிக் கிடந்தால் எப்படி?
ஞாயிறு என்ற பெயரில் சூரிய மூர்த்தி அன்றும், இன்றுமாய்ச் சிவபூஜை செய்கின்ற தலமே சென்னை அருகே ஞாயிறு என்ற பெயரில் சிவத் தலமாக உள்ளதே!
ஸ்ரீஞாயிற்றம்பல சித்தர் ஜீவாலயம் கொச்சி
ஞாயிற்றம்பலச் சித்தர் என்ற சூரிய யோகப் பிரகாசச் சக்திகளில் வல்லவரான அருட்பெருஞ் சித்தரும், சூரிய வழிபாட்டுத் தலங்களில் (மூலவரின் திருமேனியில் சூரிய கிரணங்கள் படியும் தலங்களில்) ஞாயிறு தோறும் வழிபடுகின்றார் அன்றோ! எனவே இந்நாளிலா சோம்பி இருப்பது?
ஏழு கிழமைகளும் ஏதோ ஒரு சுற்றுக் கணக்கில் 24 மணி நேரத்திற்கு ஒன்றாக, வெறுமனே வந்து செல்வதாக மட்டும் எண்ணி விடாதீர்கள்! ஒவ்வொரு நொடியும் மகத்தான இறையருளால் வாழ்கின்றோம், ஒவ்வொரு விநாடி மனித வாழ்வும் மிக மிகப் புனிதமானது என்பது புரியாமல்தான் கலியுக மனித குலம் காலத்தை விரயம் செய்கின்றது. உண்மையில் கால சக்திகளின் தன்மைகளைப் பொறுத்துத் தாம் கிழமைகள் அமைகின்றன. ஒரு நாளுக்குச் சரியாக 24 மணி நேரம் என்ற ஆங்கில விஞ்ஞானக் கணக்கும் தவறான கணக்கே! அந்தந்த நாளில் உலக ஜீவன்கள் அனைத்துடைய நித்தியக் கர்ம வினை விளைவுகளுக்கு ஏற்பவே இரவு, பகல் நேரம் அமைகின்றது.
தினசரி பூமிக்கு வரும் சூரிய கிரணங்களும் ஒரே மாதிரியாய் ஏழு நாட்களிலும் அமைந்து பெய்வதில்லை. ஒவ்வொரு ஏழு நிமிடத்திலும் சூரிய கிரணங்களின் தன்மைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. .உண்மையில், பூமிக்கு வருகின்ற சூரிய கிரணங்களின் சக்தியில் ஆயிரங் கோடியில் ஓரணு அளவுக் கதிர்களைக் கூட உலக ஜீவன்கள் பயன்படுத்துவது கிடையாது. பிரபஞ்ச ஜீவன்களால், வஸ்துக்களால் பயன்படுத்தப்படாத சூரிய கிரண சக்திகள் யாவையும் ஸ்ரீபூமா தேவியே ஈர்த்து, கிரகித்து, ஸ்ரீமன் சூரிய நாராயண ஸ்வாமியின் திருவடிகளில் ஒரு கண்ணாடியில் வைத்து அளிக்கின்றாள். இதனால் தான் கேரள வருடப் பிறப்பின் அன்று விடியற்காலையில் கண்ணாடி முன் புஷ்பங்கள், பழங்களை அடுக்கி, புத்தாண்டுக் காலையில் கண்ணாடி (ஆடி தரிசனம்) என்பதாக விசேஷமானதாகக் கடைபிடிக்கப் படுகின்றது.
ஸ்ரீபாஸ்கரராயர் திருவள்ளூர்
ஸ்ரீமஹா விஷ்ணுவின் திருவடிகளில் உள்ள இந்த தேவ கண்ணாடியில் எழும் ஒளிக்கு ஆடித்தளி என்று பெயர். ஒவ்வொரு ஏழு நிமிடத்திலும் உற்பவிக்கும் சூரியக் கிரணங்களுக்குக் கொத்துக் கொத்தாக ஒவ்வொரு பெயர் உண்டு.
கலியுக உத்தம மஹரிஷி யோகிகளுள் ஒருவராகிய பாஸ்கரராயர், ஒரு முறை ரத சப்தமி பூஜை நாளில், காலை சூரிய உதயத்திற்கு முன் கடலில் அடிவானந் தொடும் நேரத்திலிருந்து மறுநாள் வரை ஒவ்வொரு ஏழு நிமிட சூரியக் கிரணத்திற்கும் உள்ள சூரிய நாமங்களை வரிசையாக உரைத்திட்டார். இவ்வாறு சூரிய சக்திப் பாங்கினை ஸ்ரீபாஸ்கரராயர் போன்ற சூரிய லோக மாமுனி யோகிகளால்தான் உணர இயலும். ஒவ்வொரு சூரியக் கொத்திற்கும் விதவிதமான பலன்கள் உண்டு. இவற்றை நன்கு அறிந்திட்டால் எத்தனையோ பலாபலன்களைப் பெற்றிடலாம். பலவிதமான நோய் நிவாரணங்கள், குடும்ப நலன்கள், ஆரோக்ய சக்திகள், நல்வரங்கள், தோஷ நிவர்த்திகளைத் தர வல்லவையாகும்.
ஞாயிறு தோன்றும் சூரிய சக்திகள் மிக மிக விசேஷமானவை. எந்த ஹோரை நேரத்தில் எத்தகைய சூரியக் கிரண சக்திகள் உற்பவிக்கும் என்பதை அறியும் சூரியப் பிரகாச ஞானகிரந்த விதி வழிமுறைகளும் உண்டு. சூரிய வம்சத்தைச் சார்ந்த ஸ்ரீராமபிரான் மனம் சோர்ந்து நின்ற போது, ஸ்ரீஅகஸ்திய மகரிஷியே, ஸ்ரீஆதித்ய ஹிருதயம் எனும் சக்தி வாய்ந்த சூரியத் துதிகளை ஓதி, அவருக்கு மனோபலம் பெற்றுத் தந்தார்.
உலகத்தை உய்விக்க வந்த ஸ்ரீராமர் தம் அவதார மேன்மைகளை வெளிக்காட்டாது, மிகவும் சாதாரண மானுடராகவே வாழ்ந்து பல மகரிஷிகள், சித்தர்கள் மூலமாக, ஜீவன்களுக்கு வழிகாட்டி உள்ளார். சித்தர்களின் தலைமைப் பீடமான ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீராமருக்கு ஓதித் தந்த ஸ்ரீஆதித்ய ஹ்ருதய மந்திரங்களின் மகத்துவம் யாதெனில், இதனை ஓத இயலாத பாமரரும், இம்மந்திர ஒலிகளைக் கேட்டாலே மந்திரம் ஓதியப் பலன்களைத் தருவதாகும்.
ஸ்ரீஆதித்ய ஹ்ருதய மந்திரம் ஒவ்வொன்றையும், ஸ்ரீஅகஸ்தியர் ஸ்ரீராமருக்கு ஓதி உரைத்த தலங்கள் பல உண்டு. இதன் ஒவ்வொரு அட்சரமும், பூலோகமெங்கும் ஞாயிறு தோறும் குறித்த சூரிய கிரணங்களில் பரிணமித்து பூலோகமெங்கும் நிரவுகின்றது. வானியல் நீரோட்டங்கள், பூமியடி நீரோட்டங்கள், காற்றுவெளி நீரோட்டங்கள், வேம்பு, அரசு இலை நடனங்கள், அசைவுகள் இவ்வாறாகப் பலவகைகளிலும் ஆதித்ய ஹ்ருதய சக்திகள் பூலோகமெங்கும் நிரவுகின்றன.
ஒவ்வொரு ஜீவனின் உள்ளும் ஒளிரும் ஆத்மப் பிரகாசமாகும். ஆத்மப் பிரகாசம் என்பது பல்வகை ஒளிப் பூரணங்களால் ஆவது. இதைத்தாம் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் மூலமாகப் பெறுகின்றோம். இது ஞாயிற்றுக் கிழமையன்று சூரிய கிரணங்களில் புவனச் சுடராக ஒளிர்கின்றது. இவ்வாறாக ஞாயிற்றுக் கிழமை பல அரிய சூரிய சக்திகளைப் பூண்டிருப்பதால் ஞாயிறன்று சூரிய வழிபாடுகளை நன்கு மேற்கொண்டு புத்திப் பிரகாசம் அடைய வேண்டும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் வீடடில், ஒரு கண்ணாடியில் சூரிய ஒளியைப் பிரதிபலிக்க வைத்து, பிரதிபலிக்கும் சூரிய ஒளியானது, வீட்டில் உள்ள சிவலிங்கம் /சங்கு சக்கரத்தின் மேல் அல்லது மாவு, களி மண், சுதை வடிவ சிவலிங்கம் / சங்கு, சக்கரத்தின் மேல், அல்லது சிலேட்டு, பேப்பரில் வரையப் பெற்ற சிவலிங்கம் அல்லது சங்கு சக்கரத்தின் மீதும் சூரியப் பிரகாசம் தோயும்படி வைத்து, சூரிய பூஜை நிகழ்வதாக பாவனை செய்து, இதனைப் பூஜித்து, இயன்ற வரை ஸ்ரீஆதித்ய ஹ்ருதய மந்திரங்களையோ, அல்லது,
ஆதித்யா ஞாயிறப்பா! ஆதியாய் அந்தமாய் ஆனாய்!
பாஸ்கரா பரிதியப்பா! பரமானந்தப் பரிதி வாலம்
ஆதவா சூர்ய மூர்த்தி! அச்சுடர் ஆலவாயர்
கதிரவா காலவண்ணா கதியாகிக் கதித்ததானோம்!
என ஓதி வணங்கி வழிபட, இருக்கும் இடம் பற்றிக் கவலைப்படுவோர் துயர் தீர வழி பிறக்கும்.
தாயின் வேதனை நீக்கும் வழி |
கங்கை என்றால் கங்கோத்ரியில் மட்டும் உற்பத்தி ஆவது அல்ல. கங்கோத்ரியில் மட்டும் அல்லாது, பூவுலகின் பல இடங்களிலும் கங்கை உற்பத்தியான புராண சம்பவங்கள் நிறைய உண்டு. இன்றும் நிகழ்கின்றது. மேலும், அவதார மூர்த்திகளும், அர்ஜுனன் போன்ற தெய்வீக சக்திகள் நிறைந்தோறும் கங்கையைப் பல இடங்களில் பிரவகிக்கச் செய்துள்ளனர்.
திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் இல்லத்துக் கிணறு, திருக்கோகர்ணம் மலைச் சுனை, அழகர் கோயில் நூபுர கங்கை, கும்பகோணம் மகாமகத் தீர்த்தக் குளம் போன்ற பல இடங்களில் கங்கோத்பத்தி (கங்கை நீர் தோன்றுதல்) பல நாட்களில் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு, பூவுலகிற்கு கங்கை வந்த வைபவத்தை உற்சவாதிகளாகக் கொண்டாடி மகிழ்கின்றோம்.
சிவகங்கை லால்குடி
பகீரதன் தவத்தால் பூவுலகிற்குக் கங்கையைப் பெற்றுத் தந்தது போல, தவத்தால், பூஜையால், யோகத்தால், ஞானத்தால் இறையருளால் குருவருளுடன் கங்கையை எங்கும் உற்பவிக்கச் செய்திடலாம். ஆனால், இதற்குரிய தவ, யோக, ஞான சக்திகளைப் பெறும் வகையில், கங்கோத்பத்தித் தலங்களில், கங்கோத்பத்தி சக்திகள் பூரிக்கும் விசேஷமான நாட்களில் வழிபட்டு வருதல் வேண்டும்.
பூவுலகில் கங்கையின் நீரோட்டம் பரவிடாத இடமே கிடையாது. ஸ்ரீகங்காதரர், கங்கையம்மன் (திருஅண்ணாமலை, சென்னை வடபழனி), கங்காதீஸ்வரர் (கங்கை கொண்ட கோழபுரம்), அழகர் கோயில், நூபுர கங்கை, கங்கா விசர்ஜனர், சிவகங்கைத் தீர்த்தம் (திருஅண்ணாமலை, லால்குடி) போன்ற தலங்களில் கங்கோத்பத்தி நாட்களில் பூஜைகள் இயற்றுதல் நலம்.
சென்னை திருவள்ளூர் இடையே உள்ள தக்கோலம் சிவாலயத்திற்குப் பின்புறம் உள்ள நந்தியின் திருவாயில் பல்லாண்டுகளுக்கு முன் எப்போதும் நீர் வழிந்து கொண்டிருந்தது. இவ்வாறு நந்தி வாய்த் தீர்த்தங்களை (ராமகிரி ஆந்திரா) கங்கோத்பத்தி தினங்களில் தரிசித்தலால் பன்னெடுங்காலம் பகைமை கொண்டிருப்போர் சாந்தமுடன் முன் வந்து நல்ல முறையில் நட்பு ஏற்படும்.
நீர்த் துறையோரம், நீரில்லாத அல்லது நீர் குறைவாக உள்ள ஆறு, ஏரி, குளங்களில், கங்கோத்பத்தி தினத்தன்று புதுச் செங்கற்களால் சிறிய ஒரு தீர்த்தக் குழியைக் கிணறாக பாவனை செய்து வைத்து, நடுவில் அரசங் குச்சியை ஊன்றிட வேண்டும் 108 புதுப் பானைகளில் நீர் சுமந்து வந்து இதில் ஊற்றி, கங்கோத்பத்தித் தீர்த்தக் கிணறாகப் பூசித்து, கங்கை உற்பத்தி ஆகின்ற பாவனையாக வழிபட்டு, ஏழைக் குயவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடுதலால், நோயால் சிந்தனை பாதிப்படைந்தோர் நிவாரணம் பெற வழி பிறக்கும். மறதியால் ஏற்பட்டுள்ள பெரும் பிரச்னைகளுக்கும் தீர்வு கிட்டும்.
மேலும் அஷ்ட வசுக்கள் பூஜித்தத் தலங்களில் (திருமயம்) பூஜிப்பது மிகவும் விசேஷமானது. இதனால் பெரிய குடும்பங்களில் நிர்வகிப்பதில் உள்ள உறவு சமூகப் பிரச்னைகள் அமைதியாகத் தீர்வு பெற வழி பிறக்கும். தொடர்ந்து செய்து வர வேண்டும்.
குறைந்தது 48 பிள்ளையார் மூர்த்திகளுக்குப் புதுப் பூணூல் சார்த்தி வழிபடுதலால், தாயின் மனம் நோகும்படி நடந்திருப்பின் அதற்குப் பிராயசித்தம் பெற உதவும்.
தாயைச் சரியாகப் பராமரிக்காது (மரணமடைய) விட்டு விட்டவர்கள், ஓரளவேனும் பரிகாரம் பெற, அழுகையுடன், கண்களில் நீர் மல்க இருக்கும் ஒரு ஏழைக்கேனும் கங்கோத்பத்தி தினத்தன்று தேவையானதை வாங்கிக் கொடுத்திட, மன வேதனைகளுடன் உயிர் நீத்தத் தாயின் உள்ளம் நிவாரணம் பெற ஸ்ரீகங்கா தேவியே உதவிடுவாள்.
அதே போல மனைவி கண்ணீர் விடுவதற்குக் காரணமாக நடந்து கொண்ட கணவன், ஒரு ஏழைக் குடும்பத்திற்காவது ஒரு வாரத்திற்கான நல்ல நீரைப் புதுப் பானை, பாத்திரங்களில் நிறைத்துத் தந்திட, கண்ணீர் தோஷங்கள் அகலப் பரிகாரம் கிட்டும்.
ஓம் குருவே சரணம்