ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
அங்காரகக் கரிநாள் வழிபாடு |
அங்காரகச் சதுர்த்தி என்பது, சதுர்த்தித் திதியோடு செவ்வாய் கூடுவது போல, செவ்வாயும் கரிநாளும் சேருவது அங்காரகக் கரிநாள் ஆகும். புனிதமான ஜோதிடத்தில், செவ்வாய் அம்சங்கள் தொழில், வீடு, நிலபுலன்களையும், சனி அம்சங்கள் ஆயுள் காரகத்வத்தையும் உணர்த்துவதால், - இவை இரண்டுமே வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. வாழ்க்கையில் அவ்வப்போது தடங்கல்கள் வருவது போல, வார நாட்களிலும், தினசரி நேரத்திலும், கரிநாள், மரண யோகம், ராகு காலம் போன்றவை வந்து விடுகின்றனவே என்று சலித்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில், நல்ல நாட்களில், 60 நாழிகையையும், 24 மணி நேரத்தையும் ஒரு நிமிடம் கூட இடைவெளி விடாது நன்கு பயன்படுத்திக் கொள்கின்றீர்களா என்று உங்கள் மனசாட்சியை நன்கு கேட்டுக் கொள்ளுங்கள்!
கரிநாளில் ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி தோன்றியமையால், கரிநாள் முழுமையாகவும் ஸ்ரீசனீஸ்வர வழிபாட்டிற்கு உரிய நாளாகும். நவகிரக மூர்த்திகள் யாவருமே மானுடர்களைப் போலவே அனைத்து வகையான பூஜைகளையும் மேற்கொண்டு, இவற்றின் பலாபலன்களைத் தம்மை வழிபடுவோர்க்கு அருள்கின்றனர். இதில் ஒரு முக்கியமான கேள்வி எழும். உலகில் உள்ள மக்கள் அனைவருமாக நவகிரக வழிபாடுகளை மேற்கொள்வதில்லையே, தம்மை வழிபடுவோர்க்கு அருளும் நவகிரக மூர்த்திகள், எவ்வாறு, எப்படி, அனைவர்க்குமாக, அருள்வர்?
திருஅண்ணாமலை கிரிவலப் பாதை
ஒவ்வொரு ஜீவனுக்கும் -, மானிடரோ, தாவரமோ,விலங்கென - எந்த நாட்டில் வசித்தாலும், எங்கு இருந்தாலும் அவரவருக்கு உரிய பித்ரு மூர்த்திகள் உண்டல்லவா! பித்ரு மூர்த்திகளும், பித்ரு தேவர்களும், பித்ரு தேவதா மூர்த்திகளும், பித்ரு கணங்களும், பித்ரு பத்னியரும், நவகிரக மூர்த்திகளை வழிபட்டு, தங்கள் சந்ததியர் எங்கு வசித்தாலும், பறவை, மரம், மீன் என எப்பிறவி எடுத்திருந்தாலும் அவர்கள் நன்னிலை பெற வேண்டி வழிபடுவதால், அவர்கள் எந்த நாட்டில் எந்த ஜீவ வகையைச் சேர்ந்தாலும் அவர்களுக்கு நவகிரஹ நல்வரங்கள் சென்றடையும்.
ஆதியில் சனாதன பூமியாக, சிருஷ்டியின் போது நாடுகள், அரசுகள் என எவ்வித பேதமுமின்றி ஒரே (சனாதன) நாடாகத் தாமே உலகம் விளங்கியது. எனவே உலக ஜீவன்கள் அனைவருக்குமே பாரத பூமிதான் சனாதனத் தர்மத் தாய் பூமியாகப் பொலிகின்றது. அனைத்துக் கோடி ஜீவன்களின் பித்ருக்களும், உலகெங்கும் நிரவியுள்ள தம் சந்ததியரின் நலன்களுக்காக வழிபடவே, பாரதத் திருநாட்டின் ஆலயங்களுக்கு வருகின்றனர்.
அமெரிக்காவில் வசிப்பவர், பாரதத்தில் வாழ்பவர், மற்றும் பசிபிக் பெருங்கடலில் உள்ள பெரிய மீன் - மூவருக்கும் ஒரே பித்ருவாக அமையக் கூடும். ஒரு தென்னை மரம், ஒரு மான், தமிழ் நாட்டில் வசிப்பவர், ஆப்பிரிக்க நாட்டவர், லண்டனில் குடியிருப்பவர் என அனைவருக்கும் ஒரே பித்ருவாகவும் இருக்கக் கூடும். பித்ருக்களாகிய மூதாதையர்களில், ஜாதி, மத, இன, குல பேதம் கிடையாது.
கரிநாளும் செவ்வாயும் சேர்ந்து வரும் அங்காரகக் கரிநாட்களில் ஸ்ரீமுருகன் தலங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானது. செவ்வாய்க்கு அதிபதியன்றோ முருகப் பெருமான். கரிநாளில், ஸ்ரீசனீஸ்வரர் பூலோகத்தில் மானுட வடிவில் வழிபடுகையில் ஏனைய நவகிரக மூர்த்திகளோடு இணைந்து, பல அற்புதமான வழிபாடுகளை இயற்றி ஜீவன்களுக்கு அருள்கின்றார்.
எனவே இந்நாட்களில் ஒரு செம்பில் ஒன்பது தீர்த்தங்களை (நற்கிணறு, ஊற்றுத் தீர்த்தம், நதித் தீர்த்தங்கள், ஆலயத் தீர்த்தங்கள்) ஊற்றி, மாவிலை, வில்வம், பலா இலை, வன்னி இலை, வாழை இலை, புரசு இலை, வேப்பிலை, அரசிலை போன்ற எட்டு இலைகளை ஆரமாக்கி செம்பைச் சுற்றி வைத்து அலங்கரித்து, மேலே முழுத் தேங்காய் வைத்துப் பூஜிக்கவும்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு மிரண்டுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
- என்ற தொடங்கும் திருஞானசம்பந்தரின் பாடல்களையும், அல்லது தாமறிந்த நவகிரகத் துதிகளை ஓதி, கருமையான எட்டு உணவுத் திரவியங்களை, உணவுப் பண்டங்களை, கனிகளை (திராட்சை, கருவேப்பிலை சாதம், நாவல் பழம், கொத்துக் கடலை மற்றும் ராஜ்மா தானிய சுண்டல்) நைவேத்யம் செய்து, அனைத்தையும் பசு, கன்றிற்கு அளிக்க வேண்டும்.
மேலும் பசு, கன்றோடு ஆலயத்தை வலம் வருதல் மிகவும் விசேஷமானது. இவ்வாறு வலம் வருகையில், பசு கோமியம், சாணம் இடுதல் மிகவும் சுபசகுனமான விசேஷமாகும். கோமியமும், சாணத்தை எடுத்து ஆலயத்தைச் சுத்திகரித்தும் தர வேண்டும். இதனால் சனி புக்தி, சனி தசை, சனி அந்தர காலகட்டத்தில் இருப்பவர்கள் நலம் பெறுவர். தொட்டது எதிலும் தடங்கல்கள், பகைமையைக் காண்போர், இதனால் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.
ஆறாம் அறிவைப் பெருக்கும் ஆயில்யம் |
மிகவும் உத்தமமான ஆறாம் இறைப் பகுத்தறிவைப் பெற்றிருப்பதால், பிறவிகளிலேயே, மானுடப் பிறப்பே மிகவும் சிறப்புடையது என்பது உண்மையே! ஜாதி, மத, இன, குல பேதமின்றி அனைத்து மனிதர்களும் உத்தம மானுடப் பிறவியைக் கொண்டவர்களே! இறைப் பகுத்தறிவாகிய ஆறாம் அறிவு மனிதப் பிறவியில் மட்டுமே பெறக் கூடியதாக அமைந்து இருப்பதால்தான் மானுடப் பிறவி உத்தமமானதாகப் போற்றப் படுகின்றது. ஆனால் பெறுதற்கரிய மனிதப் பிறவியைப் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தே ஆறாம் பகுத்தறிவு நிலைத் தன்மைகள் அமையும்.
இதற்காக, புல், பூண்டு, புழு, வண்டு, எருமை போன்ற ஜீவன்களை மிகவும் கேவலமான பிறவிகள் என எண்ணக் கூடாது. உலக ஜீவன்களை, மானுடர்கள், விலங்குகள், தாவரங்கள், அசையும் பிற பொருட்கள், அசையா ஜடப் பொருட்கள் என முக்கியமான நான்கு பெரும் வகைளாகப் பிரித்துள்ளார்கள். மறுபிறவியானது பொதுவாக, இந்த நான்கிற்குள் தான் அமையும் எனினும், பிறவியே இல்லாது பேயாக அலைவது மிகவும் கொடுமையான நிலை, பலத்த தீவினைக் கர்ம வினைகளால் அமைவது என்றும் அறிக! மனிதப் பிறவியைப் பாழாக்குவோர்க்கு பேய், ஆவி நிலையே கிட்டும்.
இல்லறமே மிகச் சிறந்த கலியுக நெறி. இல்லறமே, ஆறாம் மனிதப் பகுத்தறிவை, இறைப்பகுத்தறிவாக அளித்து, உணர்த்தி, பரிபூரணம் அடையச் செய்வதாகும். மேற்கண்ட நான்கு ஜீவ வகைகளிலும், ஆயிரக் கணக்கான பிறவி நிர்ணயிப்பு வகைகள் உண்டு. எனவே இவ்வாறாக, பிறப்பு, இறப்பு ரகசியம் கடலினும் பெரிதாய் விரிவதால், ஆறறிவு கூடிய பரிபூரணமான இறைப் பகுத்தறிவால் தான், அதுவும் குருவருள் மூலமாகவே பிறப்பு, இறப்பு ரகசியங்களை நன்கு அறிந்து கொள்ள முடியும்.
ஆனால் உலக சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் முழுமையான ஆறாவது அறிவான இறைப் பகுத்தறிவை நன்கு பயன்படுத்திக் கொள்வதில்லை. கேளிக்கைகள், முறையற்ற காம இச்சைகள், பேராசை, பொறாமை, பகைமை, குரோதம், விரோதம், அளவுக்கு மீறிய ஆசைகள், அடக்க முடியாத துர்எண்ணங்கள் போன்றவற்றால், மூன்று நான்கு அறிவுகளுக்குள்ளேயே பல மனிதர்களும் உலகெங்குமே வாழத் தலைப்படுகின்றனர்.
இறைத்தூதுவர்களாக வரும் சற்குருமார்களையும், தெய்வீக வழிகாட்டிகளையும் மதித்துப் போற்றும் பண்பும், கலியுகத்தில் பெரிதும் மறைந்து வருவதால், இறைப்பகுத்தறிவை ஊட்ட வல்ல தெய்வீக சாதனங்களும் குறைந்து விடுகின்றன. இதனால்தான் வன்முறை, குரோதம், மனித நேயமின்மை, பகைமை, போர்கள், கலவரங்கள் பெருகி வருகின்றன. சராசரி மனிதன் எப்போதும் ஆறறிவுடன் வாழ்வதில்லை!
நாம் கடைபிடிக்கின்ற ஆலய தரிசனங்கள் , தான தர்ம, பூஜைகளின் பலன்கள் யாவும், பல வகைகளில் நம் பிறவிச் சுமைகளைத் தணிக்கவும் பெரிதும் பயன்படுகின்றன. மேலும் இவை யாவும் நம்முடைய மானுடப் பிறப்பிற்கு உரித்தான ஆறாவது இறைப் பகுத்தறிவை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும் துணை புரியும்.
நமக்கு அளிக்கப் பட்ட ஆயுளில் பிறவித் தளைகளைப் போக்க வல்ல ஒரே தெய்வீக சாதனமாகிய குருவருளைப் பெறுவதற்கான நல்வழிகளையும் தாம் தான, தர்ம, தவ, யோக, பூஜா, தரிசனப் பலன்கள் அளிக்க வல்லன.
பூர்வ ஜென்ம புண்ணிய வசத்தால் அடைந்துள்ள இந்த மனித உடலால் மூதாதையர்களுக்கு ஆற்ற வேண்டிய வழிபாட்டுக் கடமைகளை நிகழ்த்தி, அவர்கள் உத்தம தேவ நிலைகளை அடையவும் தான, தர்ம, தவ, யோக, பூஜா, தரிசனப் பலன்கள் உதவுகின்றன.
இவ்வாறு ஒரு மனிதப் பிறவியில் எத்தனையோ ஆன்ம சாதனைகளைப் புரிந்திடலாம். ஆனால் புழு போன்றவை ஓரறிவுக்குள் உழல்வதால் அங்கு பகுத்தறிவின் ஆக்கம் கை கூடுவதில்லை. இதனால் தான் புழுப் பிறவியிலிருந்து மேல் நிலைகளை அடைய வேண்டுவது மிகவும் முக்கியமானது. அதாவது இரண்டாவது, மூன்றாவது, நான்காவது அறிவு நிலைகளில் இருந்து படிப்படியாகவே அடைந்து, ஆறாவது உத்தம இறைப் பகுத்தறிவு நிலையை அடைதல் வேண்டும். இந்த நியதிகளால்தான் என்ற மார்கத்தில்தான் மானுடப் பிறவி உத்தமமானதாகப் போற்றப் படுகின்றது.
இதற்காக புழுவைத் தாழ்ந்த இனம் என்றோ, மனிதனை உயர்ந்த இனம் என்றோ பாகுபாடு கொள்ளல் முடியாது. ஏனெனில் ஓரறிவுப் புழுவோ, ஈரறிவுப் பூச்சியோ, மூன்றறிவுத் தாவரங்களோ அவையவை தம்முடைய அறிவு நிலைகளை முழுமையாகப் பயன்படுத்துகின்றன.
ஆனால் ஆறறிவு வரை இறைப் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய மனிதன், மது மயக்கம், முறையற்ற காம இச்சைகள், கேளிக்கைகள், பேராசை, கொலை, கொள்ளை, திருட்டுச் செயல்கள், தீவினைகள் போன்றவற்றால் ஈரறிவு, மூன்றறிவுக்குள் பலரும் வாழத் தலைப்படுவதால், இவ்வாறு வாழும் மனிதர்களை முழுமையான மனிதர்கள் என்றா சொல்ல முடியும்?
அன்பு பொலிய, ஆறாம் இறைப் பகுத்தறிவு ஒளிர்ந்திட, தெய்வீகத்தில் சிறந்து, புனிதம் பொங்கி, மனித நேயம் மணக்க வாழ வேண்டிய மனித சமுதாயத்தில், 1, 1.5, 1,75, 2, 3 போன்ற குறைந்த அறிவு நிலைகளுடன் விலங்குகள், புழுக்கள் போல் வாழும் , வீசம் மனிதன், அரைக்கால் மனிதன், கால் மனிதன், அரை மனிதன் முக்கால் மனிதர்களையே நிறையக் காண்கின்றோம்!
எனவேதாம் ஆறாமறிவாம் இறைப் பகுத்தறிவோடு வாழவேண்டியதே மனிதனின் முதல் வாழ்க்கை லட்சியமாகும். இது தெய்வீக ரீதியாகமாகவே, குருவருள் மூலமாகவே சாத்தியமாகும். இதற்கான வழிபாட்டு நாட்களில் ஒன்றாகவே ஆயில்ய நட்சத்திர தினம் துலங்குகின்றது.
இறைப் பகுத்தறிவாம் ஆறாம் அறிவுடன் மனித குலம் நன்கு தெய்வீகப் பண்பாட்டுடன் பொலிய, ஆயில்ய நட்சத்திர தினங்களில் குறிப்பாக ஆயில்யம் 60 நாழிகையும் நிரவும் நாட்களிலும், ஆயில்யமும் புதன் கிழமையும் கூடும் நாட்களிலும், ஆயில்ய திரிதின நாட்களிலும் 21 வகை மூலிகைத் திரவியங்களை நன்கு பொடி செய்து சந்தனம், ஜவ்வாது, அத்தர், புனுகு, கேரோஜனை கலந்து வஸ்திர காயப் பொடியாய் வைத்துக் கொண்டு, சந்திர ஹோரை நேரத்தில் ஆலயத்தில் சாம்பிராணி தூபத்தில் சாம்பிராணி பிறகு சிறிது மூலிகைப் பொடி, பிறகு சாம்பிராணி, சிறிது மூலிகைப் பொடி இவ்வாறாக நல்மணம் கமழ, சாம்பிராணி தூபம் இட்டு வழிபட்டு வருதல் வேண்டும். இது அரிய சமுதாயப் பணியுமாக ஆகின்றது.
மேலும் சப்தமாதர்களைக் காத்து ரட்சிப்பவராய், சப்தமாதர்களின் அருகில் அருளும் பிள்ளையாருக்கு தர்பை கிரீடம், புது வஸ்திரம், பூணூல் சார்த்தி, 21 கொழுக் கட்டை படைத்துத் தானமளித்தலால் பிறருடைய கடுஞ் சொல்லால் பாதிக்கப்பட்டோர் நிவாரணம், மனத் தெளிவு, சாந்தம் பெற உதவும். ஆயில்ய நட்சத்திரத்தில் சப்தமாதர் வழிபாடு மிகவும் விசேஷமானது.
பெண்களுக்கு எது பாதுகாப்பு ? |
தூபம் என்றால் நாம் சாதாரணமாக சாம்பராணி தூபத்தைத் தான் குறிப்பிடுகின்றோம். தூப தீபம் என்பது தூப சக்தியுடன், தீபத்தின் சக்திகளையும் இணைததுத் தருவது ஆகும். தூப தீபத்தை, தூப முடிச்சு, தீப மூடிச்சு என்றும் வழக்கில் அழைப்பர். தூப தீப மூடிச்சில் பல மூலிகா பந்தனங்கள், ஹோம திரவியப் படிகங்கள், சித்தச் சூர்ணப் பரல்கள் பிணைந்து இருக்கும். இதனைப் பலவிதத் தைல எண்ணெய்க் கலவையில் தோய்த்து, வஸ்திர முடிச்சாக ஆக்கித் திரியாக வைத்து ஏற்றுவது மிகவும் விசேஷமானதாகும்.
தைலம் என்பது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட எண்ணெய் வகைகள் சேர்வதாகும். ஓர் அகலில், கூட்டுத் தைலத்தை நிறைத்து, தூப தீப முடிச்சை வைத்து, பசுநெய் வார்த்து, தீபம் ஏற்றி, வழிபடுதலே ஸ்ரீபைரவ தூபதீப வழிபாடு. இதில் குரு ஹோரையிலும், குளிகை நேரத்திலும் தூப தீப வழிபாடு ஸ்ரீபைரவருக்கு மிகவும் ப்ரீதியானதாகும்.
ஸ்ரீசுதபுத மகரிஷி
மப்பேடு சிவாலயம்
ஒவ்வொரு மூர்த்திக்கும் உரித்தான ஒவ்வொரு மூலிகா பந்தன, தான்ய, திரவியக் கூட்டுத் தூப தீப வகைகள் உண்டு. இதில் கலியுகத்தில் ஸ்ரீபைரவ மூர்த்திக்கான தூப தீப வழிபாடு பல மூலிகா சங்கியைகளுடன், பிரண்டை ஸ்புடம் கலந்ததாய் மிகவும் விசேஷமான பலன்களைத் தருகின்றன.
பெண்களை எங்கும் காத்து ரட்சிக்க வல்லதே ஸ்ரீபைரவ மூர்த்திக்கான தூப தீப வழிபாடு. எனவே அனைத்துப் பெண்டிரும், வாரம் இரு முறையாவது, குளிகை நேரத்தில் ஸ்ரீபைரவ மூர்த்திக்கான தூப தீப முடிச்சு ஏற்றி வைத்து, தம் தமக்கும், தம் பெண் பிள்ளைகளின் காப்பிற்குமாக வேண்டி வழிபட்டு வர வேண்டும்.
ஸ்ரீபைரவ தூப தீபத்தின் மூலிகா பந்தனங்கள் யாவும் கால பந்தன சக்திகளின் சம்பந்தப் பட்டவையாகும். கலியுகத்தில் மனிதனுக்கு ஏற்பட்டுள்ள பல துன்பங்கள் யாவும், காலம் சம்பந்தப்பட்டவையே! குறுகிய ஆயுள், மிருத்யு தோஷம், நாட்பட்ட நோய், திருமணத் தாமதம், முதிய வயது காலத் துன்பங்கள், காலப் போக்கில் பெருகிய பெருங்கடன் தொல்லைகள், பதவி நிலையின்மை, கோர்ட் வழக்குகள் போன்ற கஷ்டங்கள் யாவும் காலம் சம்பந்தப்பட்டது தாமே! அந்தந்தக் காலத்தில் நடக்க வேண்டியது நடக்காவிடில் கால தோஷம், கால சர்ப்ப தோஷம் கூடியுள்ளன எனப் பொருளாகும்.
கால துவம்ச தோஷம் எனும் காலத்தை வீணடிக்கும் தோஷமும் கலியுகத்தில் பெருகி வருகின்றது. தோஷம் என்றால் வினைமுள் என்று பொருள். தீவினைகள் முள்ளாய்த் தைய்ப்பதால், மனச் சுமையும், இடர்களும் கூடுதலாகப் பெருகிடும்.
கால துவம்ச தோஷம் என்பது இறைவன் அளித்துள்ள அற்புதமான வாழ்நாளை - சோம்பேறித் தனம், ஒன்றும் செய்யாது வெறுமனே சும்மா இருத்தல், கேளிக்கை, மது, புகை, பொழுது போக்கு அம்சங்களிலேயே கழித்தலாகும்.
கலியுலகில் ஒரு மனிதன் இறைவழிபாட்டில் செலுத்தும் நேரத்தை விட, டீவி, சினிமா, தேவையற்ற அரட்டைகள், முறையற்ற காம இச்சைக் கழிப்பு, பொழுது போக்கு அம்சங்களில் கழிக்கும் நேரமே அதிகமானதாகும். இவ்வாறு மனிதன் சுயநலத்தோடு காலத்தைக் கழிக்கும், விரயம் செய்யும் தோஷமே கால துவம்ச தோஷமாகும்.
இதற்கானப் பிராயசித்தங்களைப் பெறவும் பைரவ தூப தீபம் ஏற்றி வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். எவ்வளவு நேரத்திற்குத் தூப தீப ஜோதி படர்கின்றதோ அந்த அளவிற்குக் கால தோஷங்களைத் தணித்திடலாம். குளிகை நேரங்களில் ஸ்ரீபைரவ தூப தீப ஜோதிப் புண்ய சக்தி பன்மடங்காவதால், இதில் துரிதமாகக் காலவிரய தோஷங்களைத் தணித்திடலாம்.
அக்னி நட்சத்திர வழிபாடு |
அக்னி நட்சத்திர காலம் அல்லது கத்ரி என்பது குறிப்பிட்ட அக்னி ஜ்வலந்தி நட்சத்திரங்களின் அக்னி வரப் பொழிவு ஆகும். நெருப்பைப் போல் ஒளிர்ந்தாலும், அக்னி நட்சத்திர வகைகளிலும், கைகளால் தாங்குமளவு மித உஷ்ண அக்னி, சீதளாக்னி அக்னி என்பதான சுடாத அக்னி எனப் பல வகைகள் உண்டு. கேதார்நாத், பத்ரிநாத் தலங்களில் குளிர் நீரூற்றும், வெந்நீர் நீரூற்றும் அருகருகில் இருக்கின்ற தெய்வீக அற்புதமுமாக அமைவது இதனை உணர்விப்பதாகும்.
செவ்வாய்க் கிரகம் மிகவும் உஷ்ணமான கோள்களுள் ஒன்று. செவ்வாய்க் கிரகம் என்ன, அனைத்துக் கோள்களிலும் ஜீவ வாழ்க்கை நிச்சயமாக உண்டு.
இத்தகைய பிற அண்டங்களுக்கு, கோள்களுக்கு அநாவசியமாகச் சென்று வர வேண்டிய அவசியமே மனித குலத்திற்குக் கிடையாது. இவற்றிற்குச் சென்று வர -ஆபத்துகளும் அதிகச் செலவுகளும் நிறைந்த ராக்கெட்டோ, ஏவுகணைகளோ எதுவும் தேவையில்லை. உண்மையில் மனிதனால் அனுப்பப்படும் எந்த விண்கணமும் குறித்த கோளை அடைவதே கிடையாது. நடுவில் பல தேவ கணங்களால் அவை தடுத்து நிறுத்தப்பட்டு விடும். உடலாலும், பூர்வாங்க சயச் சாரீரத்தாலும் யோகப் பூர்வமாக, பல காரண, காரியங்களுடன் இவற்றை எளிதில் அடையலாம்.
நாம் காணும் கனவுகள் பலவும் பிற லோகங்களுக்குச் சென்று வருவதே ஆகும். மனித உடலின் கபாலமானது அண்ட சராசரப் பிரபஞ்சத்தின் அமைப்பை ஒத்ததாகும். இதே போல நம் உள்ளங்கை அமைப்பும் வான்வெளியைக் குறிப்பதே. கபாலம் என்றால் மூளையை மட்டும் குறிப்பது அல்ல.
விஞ்ஞானத்தில் அறிவு என்பது மூளையைச் சார்ந்ததாகவும், தலையின் பின்புறத்தில் இருப்பதாகவும் குறிக்கின்றனர். ஆன்மீக மெய்ஞானத்திலோ மூளை என்பதைப் புஷ்ப ஜோதிப் பிரபாஸம் என்பதாக, பிரம்ம ஆழியான தலைச் சுழியை மையமாக வைத்து, முக்கோணத் திருக்கோணமாய், திருஅண்ணாமலை வடிவு போல இருக்கும் எனவும் குறிக்கின்றனர். திரயம்பகம், திரிசூர்ணம், திரிகடுகம், திரயோஜாதம் போன்ற பலவும் மூன்றுறை கதித்த கணங்களாக, மூளையின் அம்சங்களைக் குறிப்பனவாகும்.
ஸ்ரீசங்கர நாராயணர் திருப்பூந்துருத்தி
கத்ரி என்றமூவெழுத்துச் சொல்லும், “க” எனும் த்ரயம், “த்” எனும் த்ரயட்சகம், “ரி” எனும் ரிபுஷம் ஆகிய மூன்று சக்திகளை அக்னிப்பூர்வமாக அளிப்பதே அக்னி நட்சத்திரமாகிய கத்ரி ஆகும். ரிபு கீதை என்பது மூளை விருத்தியைத் தருகின்ற அற்புதமான சுலோகங்களால் ஆனது.
அக்னி நட்சத்திரங்களின் தொகுப்பான கத்ரி முக்கோண வடிவில் இருக்கும். கத்ரயம் வகை இறை சுலோகத் துதிகளும் உண்டு. இவை யாவும் கத்ரி காலத்தில் தோன்றியவை. கத்ரி காலத்தில் ராகு, கேது சாயா கிரகங்கள் நற்பலன்களை அளித்திடுவதாக, ராகு, கேது மூர்த்திகள் அக்னி பகவானிடம் சத்தியமய வாக்குகளை அளித்திருப்பதால், கத்ரி காலத்தில் ராகு, கேது மூர்த்திகளை வழிபடுதல் மிகவும் விசேஷமானது. கத்ரி கால வழிபாடாக முக்கோணச் சக்கரம் வரைந்து, உச்சியில் மாந்தி மூர்த்தி, மாந்தி மூர்த்திக்கு வலக் கீழ்ப்புறம் ராகு, மாந்தி மூர்த்திக்கு இடக் கீழ்ப்புறம் கேது மூர்த்திகளை வரைந்தும், வடித்தும், வைத்துத் தினமும் மூன்று தீபங்களின் சாட்சியாக, மூன்று வண்ண, மூன்று அம்சங்கள் கூடிய முக்கூட்டுப் பொருட்களால் தினமும் பூஜித்து வர வேண்டும்.
மூன்று வகைப் பொருட்கள் என்றால்
* பலாப் பழம் போல சுளை, நார், கொட்டை
* மூன்று கடலைப் பருப்புகள் உள்ளே உள்ள வேர்க் கடலைகள்
* முத்தள வில்வம் - மூன்று தளங்கள் உள்ள வில்வம்.
இவ்வாறு தோல், விதை, சதை மூன்றும் தனித்தனித் தனியாகப் பிரிக்கும் வண்ணம் உள்ள பழங்கள், பொருட்களைக் கொண்டு அர்ச்சித்தல், பூஜித்தல், படைத்தல் மிகவும் விசேஷமானது.
* மூவர் அமர்ந்து கொண்டு ஆளுக்கொரு வகை புஷ்பம், நாணயம், தானியம் கொண்டு நவகிரகத் துதிகளை ஓதியும் பூஜித்திடலாம்.
“மாந்த்யாய மஹா வேதஸ்ய
ராகவே ரட்சாய கூபராய
கேதும் கந்தமால்ய சோபிதாம்
த்ரயாட்சர தேவபீட மங்களம் ததாது!”
கத்ரி காலத்தில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், சூரிய கிரணங்களில் பஸ்மம் ஆகாத பல கர்ம வினைக் கழிவுகள், கத்ரி நட்சத்திர வெளியில் பஸ்மம் ஆகும். எனவே இதுவும் அதியற்புத இறைலீலைதானே! எனவே இயற்கையாகவே, மனிதர்களுடைய பலவிதமான கர்ம வினைகளைக் களையவும் அக்னி நட்சத்திரக் காலமான கத்ரிக் காலம் உதவுகின்றது.
அந்தந்த வருடத்தின் செவ்வாய் அம்சங்களுக்கு ஏற்ப, நம் பூமிக்கென அருள் பாலிக்கும், பல அக்னி சக்திகள் கத்ரியான அக்னி நட்சத்திரக் காலத்தில் பூரித்திடுகின்றன. கத்ரி என்றாலே வெயில் கொளுத்தும் என்ற தவறான அபிப்பிராயமே நிலவுகின்றது. ஜீவன்களை வெப்பத்தில் வாட்டுவதற்காகவா சூரிய மூர்த்தியும், அக்னி நட்சத்திரங்களும் கிரணங்களைப் பொழிகின்றார்கள்? அல்ல, அல்ல! நமக்கு அருள் புரியவே சூரிய, சந்திர, நட்சத்திராதிகள் இராப் பகலாக தேவபூர்வமாகச் சேவைகளைப் புரிந்து, இறையருளை நிரவுகின்றனர்.
ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி
உய்யக்கொண்டான்மலை
ஒவ்வொரு ஜீவனுக்கும் உள்ள கர்ம வினைத் தொகுப்பு போல, அந்தந்த பூகோளப் பகுதிக்கும், நாட்டிற்குமான கூட்டுக் கர்ம சமுதாய வினைத் தொகுப்பு அம்சங்களும் உண்டு. இந்த வகை வெப்ப தட்ப நிலை, குளிர் தட்ப நிலை, சுற்றிலும் நீர் சூழ்ந்த தீவுப் பகுதியில், குறித்த நிலையில், இந்த நாட்டில், இத்தகையோர் பிறக்க வேண்டும் என்பதும் கர்ம வினைப் பூர்வமாக அமைவதே!
எனவே இவ்வகையில், கத்ரி நட்சத்திரக் காலம் தோன்றுவதற்கு முன்னரேயே கத்ரி நட்சத்திர உற்சவம் செவ்வாய் லோகங்களில் துவங்குவதால் கத்ரி நட்சத்திர தேவதா மூர்த்திகளின் வருகைக்கு நன்றி தெரிவித்து பூமியில் கத்ரிக்கு முந்தையதான, (ஆரம்ப) உத்ராங்க உற்சவ வழிபாடுகளை ஆற்றிட வேண்டும். எவ்வாறு?
முதலில் நேத்ராக்னியில் தோன்றியவரான ஸ்ரீவீரபத்ரருக்கு, சிரசிற்குச் சிகப்புப் பட்டாலான கிரீடம் சூட்டி அரளி, செம்பருத்தி, நாகலிங்க புஷ்பம் போன்ற மணமுள்ள சிகப்பு நிறப் புஷ்பங்களால் அலங்கரித்து, 21 தீபங்களுடன் பூஜிக்க வேண்டும்.
பொய் சொல்தல் கூடாது எனினும், பிறருக்கு எவ்விதத் தீமையும் பயக்காமல், பலருக்கும் நன்மை பயக்கும் வகையில் பொய்களைச் சொல்ல வேண்டிய நிலைகள் கலியுகத்தில் ஏற்படுதல் கூடும். இதைத்தான் வள்ளுவப் பெருந்தகையாரும் “பொய்மையும் வாய்த்த இடத்துப் புரை தீர்ந்த நன்மை பயக்குங்கால்!” என உரைத்திட்டார். தீங்கு செய்யாப் பொய்கள் எனச் சொன்னாலும் இதிலும் சில வினைகள் தொக்கியே நிற்கும். இவை தீரவும், நம்மையும் அறியாமலேயே, கத்ரி நட்சத்திர சக்திகள் உதவுகின்றன என்பது கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கும்.
மேலும் வாகனங்களில் பிரேக், டயர்களில் பிரச்னைகள் ஏற்படும்போதும், விமான விபத்து போன்றவற்றிலும் மனிதனையும் அறியாது பல்வகை உயிர் இழப்புகள், பலருக்கு அடிபடுதல் போன்றவை ஏற்படுகின்றன. இத்தகைய அறியா வகைப் பாவ வினைகளில் சேரும் கர்ம வினைகளைக் கழிக்கவும் கத்ரி நட்சத்திரக் கால பூஜை உதவுகின்றது.
சில சமயங்களில், குடும்பத்தில் முந்தைய தலைமுறையில் செய்த தவறுகளின் விளைவுகள், தற்போது பலரையும் பாதிக்கலாகும். இதிலிருந்து நிவாரணம் பெறவும், கத்ரி காலப் பூஜைகள் துணை புரியும்.
மரம் விழுதல், இடி, மின்சாரம் பாய்தல் என்றவறாகத் தன்னையும் அறியாமல், இயற்கை ரீதியாகவும், எதிர்பாராத முறையிலும் ஏற்படுகின்ற பலவும் சமுதாயத்தில் உள்ள கூட்டுக் கர்ம வினைகளின் நிலைகளைக் குறிக்கின்றன. இவற்றிற்குப் பிராயச் சித்தம் தருபவையும் கத்ரிக் கால வழிபாடுகளே!
கத்ரிக் காலத்தில் காற்று வகை பூஜைகள் சிறப்புறுகின்றன. கத்ரி கால பூஜை முறைகளைத் தக்க சற்குரு மூலம் அறிந்து கடைபிடித்தலால் குடும்பத்தை, சமுதாயத்தை நெடுங் காலமாகத் தொற்றி வரும் பழவினைகளுக்குத் தீர்வுகளைப் பெறலாம்.
மைக்ரெயின் எனும் ஒற்றைத் தலைவலி, தீராத கட்டிகள், புதிதாக, கோணலாக எலும்பு, சதை வளர்தல், மூக்கும் வாயும் சேர்தல், கோர்ட் வழக்குகள் 21 ஆண்டுகளுக்கு மேல் தொடர்தல், வீட்டில் நிறைய தீ விபத்துகள் ஏற்படுதல் போன்றவை பலவும் பழவினைகளைக் குறிக்கின்றன. இவற்றைக் கத்ரி கால பூஜைகளால் நிவர்த்தி செய்திட முடியும்.
நாதஸ்வரம், கிளாரினெட், புல்லாங்குழல் போன்ற காற்று வகை வாத்யங்களை அந்தந்த வாத்யக் கலைஞர்களைக் கொண்டு, ஆலயக் கொடி மரம் அருகே இறைப் பாடல்களைக் குறைந்தது மூன்று மணி நேரமாவது இசைக்கச் செய்து அவர்களுக்கு நல்ல சன்மானம், உதவிகளை அளித்தல் நன்மை பயக்கும். இதனால் உறவினர்களிடம் இருந்து வர வேண்டியவை வந்து சேர உதவும்.
காற்றுக் கருவிகளைப் பழுது பார்க்கும் தொழிலில் இருப்போர்க்கும் தேவையான உதவிகளை பூர்வாங்க பூஜையாக ஆற்றிடுதலும் சிறப்புடையது. இதனால் தினமும் காலையில் எழுந்தவுடன் “என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ, எது வருமோ?” என்று (பலத்த பிரச்னைகளால்) பயந்து, அஞ்சி எழுந்து வாழவோர்க்கு வாழ்வில் அமைதி கிட்ட வழி பிறக்கும்.
பற்றற்றப்பர் பரம ஏகாதசி |
மோகம் என்றால் முறையற்ற காம ஆசை என்பதோடு, பலவிதமான அநாவசியமான, தேவையற்ற, தகாத ஆசைகளையும் கொண்டிருப்பதைக் குறிப்பதாகும். மோகம் பெருகப் பெருக, மனமும், உள்ளமும் அசுத்தமும், விகாரமும் அடையலாகும். உடலின் சுத்த ரத்த நாளங்களும், கபாலச் செல்களும் பாதிக்கப்படும்.
வெளிஅழகு என நாம் நினைப்பது எல்லாம் உண்மையான அழகாகாது. அழகு என நினைத்துப் பெண்கள் புருவத்தைச் சிரைப்பதும், முன் முடியைக் கத்தரிப்பதும், புனிதமான, சுத்தமான குங்குமம் அல்லாது, ஒட்டுப் பொட்டு எனப்படும் ண்tடிஞிடுஞுணூ பொட்டு வைப்பதும் அதிபயங்கர தோஷங்களைத் தருவதாகும். கர்மச் சுழலுக்கு ஆட்பட்ட இத்தகைய வெளி அழகும் நிரந்தரமானதுமல்ல.
அழகு என்பது கலியுகத்தில் ரசிப்பது என்ற தவறான பொருளைத் தருகின்றது. பால் வடியும் குழந்தை முகம், பசுமையான வயல் போன்றவற்றின் தெய்வீக அழகே சௌந்தர்யம் எனப்படும் புனிதமான அழகு ஆகும். புனிதமான அழகில் காம விகாரம் தோன்றாது. அன்பே இதில் உற்பவிக்கும். எனவே அழகு என்பது தெய்வீக சாந்நித்யத்தை, தெய்வீகம் பொலிவதை, ஆன்ம சக்திகள் நிறைந்திருப்பதைக் குறிக்கும். இதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் என்பர்.எனவே அழகு என்பது சாசுவதமான சௌந்தர்ய வகை யோகத்தைச் சார்ந்ததாக, அழகு என்பதும் யோக சக்தியே!
ஸ்ரீமகாவிஷ்ணு திருப்பாற்றுறை
கலியுகத்தில் பெரும்பான்மையோரால் தவிர்க்க முடியாததாக இருப்பது, முறையற்ற காம எண்ணங்களாகும். பிறன் மனை நோக்குதல், பெண்களை மன விகாரத்துடன் பார்த்தல் போன்ற அதர்மமான எண்ணங்கள் எழக் காரணமே, பல பெற்றோர்களும் நல்ல வழிகாட்டிகளாகத் தெய்வீக வாழ்க்கையைப் பேணாததும், நல்ஒழுக்கம் தரும் ஆன்மீகக் கல்வி முறை அமையாததும், முறையான இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாததும் ஆகும்,
இல்லறத்தை நல்லறம் என்று போற்றக் காரணமே, இல்லறத்தில் தாம் அனைத்து விதமான நல்லொழுக்கங்களும் இயற்கையாகவே, தார்மீக ரீதியாகப் பேணப் பெறுகின்றன. தீயொழுக்கங்கள் அண்டாமல் காத்து ரட்சிக்கவும் இல்லறம்தான் உதவுகின்றது.
எனவேதான், கலியுகத்தில் இல்லற தர்மத்தைப் பேணுதலே பெரிய தவமெனப் போற்றப்படுகின்றது. ஸ்ரீவிஷ்ணு மூர்த்தியின் உத்தமமான மோஹினி அவதாரந்தனை வெறும் பெண் வகை அவதாரம் என எண்ணுதல் அறியாமையே! ஆண்,பெண் என்ற வேறுபாடு மனித நிலையில்தாம்!
உருவ வழிபாடு என்பது உருவமற்ற இறைவனை, நல்ல அய்க்யமான உள்ளத்துடன் எளிதில் உணர வைக்க வல்லது. மனித மனமானது, அனைத்துச் செயல்களிலும் உருவ மனப்பான்மைக்கு ஆட்பட்டு விட்டதால், மனயோக சக்தியே கலியுகத்தில் மறைந்து வருகின்றது. “ தெய்வம் மானுஷ ரூபேண!” என்பதாக இறைவனே, மானுட வடிவில் கருணையுடன் ஆட்கொண்டு, கருணாமூர்த்தியாக இறைமையை உணர்விப்பதே உருவ வழிபாட்டின் சிறப்பம்சமாகும்.
எவ்வாறு சபரி சாஸ்தாவிற்கு உரிய கடுமையான விரதத்தில் மனம், உள்ளம், உடல் இச்சைகளை அடக்கி, ஒடுக்கி உத்தம ஆன்மீக நிலையைத் தந்திட்டு, மிகவும் கடுமையான விரதம் மூலம் தரிசிக்க வல்லதாக ஐயப்ப அவதாரிகை மலர்ந்துள்ளதோ, இதைப் போலவே மோகங்கள் எனப்படும் அளவுக்கு மீறிய ஆசைகளை, பேராசைகளைக் களைய வல்ல மன பூஜைகளை, மனோவிரதங்களை அளித்திடவும் ஸ்ரீமோஹினி அவதாரிகை துணை புரிகின்றது.
உடலின் ஒவ்வொரு அங்கமும் பலவிதமான யோகச் சக்திகளைப் பூண்டுள்ளது. இதனை முறைப்படுத்த, ஆக்கப்படுத்தப் பயன்படுத்தும் வழிமுறைகளாகவும் தியானம்,யோகம், பூஜை முறைகள் ஆகின்றன. இதற்கு ஸ்ரீமோஹினி அவதாரிகை சக்திகள் உதவுகின்றன.
தியானம்,யோகம், பூஜை, ஹோம, தீப வழிபாட்டு சக்திகள் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டித் தர வல்லதே அருணாசலமாகிய, திருஅண்ணாமலையில் கிரிவலம் வருவதாகும். ஒரு முறை அண்ணாமலையைக் கிரிவலம் வந்திடில் ஹோமம், யாகம், வேள்வி இயற்றிய பலாபலன்கள், விளக்குப் பூஜைப் பலன்கள், ஆலய நடைப் பிரதட்சிணம், அடிப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணப் பலாபலன்கள், பல்வகைத் தான தர்மப் பலன்களும் போன்ற பலவும் குறித்த அளவில் அவரவர் பக்தி, ஆழ்ந்த நம்பிக்கை, ஆன்ம நிலைக்கேற்ப உடலில், மனதில், உள்ளத்தில் யோகப் பூர்வமாகச் செறியும்.
ஸ்ரீநின்றகோல தட்சிணாமூர்த்தி
திருவைகாவூர்
ஏகாதசியில் அருணாசலத்தை வலம் வருதலால் தேவையற்ற ஆசைகள், எண்ணங்கள் அகன்று மன சுத்தி அடைய வழி பிறக்கும். இதுவே மோஹினி அவதார மூலத் தத்துவங்களுள் ஒன்றுமாகின்றது.. எனவே பற்றற்றப்பர் பரம ஏகாதசி தினமாகிய, சர்வ மோஹினி ஏகாதசி தினத்தன்று
* முழுமையான விரதம்
* ஒரு வேளை அல்லது இரு வேளை விரதம்
* சிறிது இளநீர், மோர் அல்லது பால் மட்டும் அருந்தி விரதம்
* துளசி அல்லது வில்வ தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம்
- என்றவாறாக அவரவர் உடல் இயல்புக்கு ஏற்ப விரதம் இருந்து, தசாவதார மூர்த்திகளை வணங்கிடுவதால், அவரவரிடம் மனக் கிணற்றில் ஆழப் பதிந்துள்ள தவறான எண்ண அலைகள், எண்ணக் கசடுகள் வெளி வந்து, மனம் சிறிது, சிறிதாகச் சுத்தி அடைய மனயோக வழிமுறைகளைத் தரும்.
* உங்களுக்கு மிகவும் பிடித்தமான டிபன், இனிப்பு, எண்ணெய்ப் பதார்த்தங்களை நிறைய, ஆமாம், நிறையச் செய்து,
* இல்லத்தில் பெருமாளுக்குப் படைத்து, (செய்ய இயலாதோர் தரமான ஓட்டலில் வாங்கிடலாம்), அவற்றில் ஒரு துளியைக் கூட ருசி பார்க்க எண்ணாது, (காலில் செருப்புக் கூட அணிய இயலாது இருக்கும்) பரம ஏழைகளாகப் பார்த்துத் அன்னதானமாக அளித்து, ஒரு ஏழைக்காவது புதுக் காலணிகளை, அந்த ஏழை விரும்பும் டிசைனில் பாதணிகளை வாங்கித் தானமாக அளித்திடில் பிடிவாதம், அந்தஸ்து, வறட்டுக் கௌரவம் காரணமாக முறிந்திருக்கும், மிக நெருங்கிய உறவு, நட்பு மீண்டும் மலர்ந்து நன்மைகள் கிட்டிட, நல்வழிகள் பிறக்கும்.
சிவாலயத்தில் மூலத்தானத்திற்குப் பின்புறம் முதல் சுற்றுப் பிரகாரத்தில் (ஸ்ரீலிங்கோத்பவர் இருக்கும் இடத்தில்) பெருமாள் மூர்த்தி உள்ள ஆலயத்தில், பெருமாளுக்கு ((உதாரணம் மப்பேடு ஆலயம், திருபூந்துருத்தி, திருபாற்றுரை), அபிஷேக, ஆராதனைகளைச் செய்து வழிபடுதலால் தந்தையிடம் வாங்கிய கடன், பணம், பொருட்கள், சொத்ததுகளைத் திருப்பித் தந்து மானம் காக்க நல்ல வழி பிறக்கும்.
ஹஸ்த மால்ய பிரதோஷம் |
நித்தியப் பிரதோஷமாகத் தினமும் நாலரை மணி முதல் ஆறரை மணியிலான நேரம், புனிதமான தினசரிப் பிரதோஷமாகும். எனவே, தினமும் மாலை நாலரை மணி முதல் ஆறரை மணி வரை, சிவாலயத்திலும், இல்லத்திலும் எவ்வகையிலேனும் வழிபடுகின்ற யாவருமே, நித்யப் பிரதோஷ வழிபாட்டைக் கைக் கொண்டவர்களாக, அரிய பலாபலன்களை பன்மடங்கு நல்வரங்களாகப் பெறுகின்றார்கள். இதுவே எளிமையான இறைவழிபாட்டில் அடங்கியுள்ள, எளிமையான வரத் தத்துவமாகும்.
எந்த நட்சத்திரம், நாள், தேதி, யோகம், கரணம், நட்சத்திர நாள், யோகக் கூட்டுடன் நித்யப் பிரதோஷம் என்பதாகக் கோடிக் கணக்கான பிரதோஷ வகைகள் உண்டு. ஆனால், எவ்வாறு கோடி வகை நித்யப் பிரதோஷங்கள் வரும் என்று எண்ணி இதை மனித மனமானது ஏற்க மறுக்கும்.
உதாரணமாக, வளர்பிறை உத்தராயணம், சித்திரை மாதம், ஞாயிற்றுக் கிழமை, ஹஸ்த நட்சத்திரம், ஹர்ஷ யோகம், கௌலவ கரணம், அமிர்தயோகம், மேஷத்தில் சூரியன், ராகு, புதன் சேர்க்கை, கன்னியில் சந்திரன் என்ற பல நிலை (கோள)க் கூட்டுக்களோடு அமையும் நித்யப் பிரதோஷம் வளர்பிறையுடன் ஹஸ்தமால்ய ஸ்ரீபரதோஷமாகப் பிரகாசிக்கின்றது.
இவ்வாறு 12 மாதங்கள், 27 நட்சத்திரங்கள், 7 நாட்கள், 27 யோகங்கள், 11 கரணங்கள், அமிர்த யோகம், சித்த யோகம் போன்ற 4 தினகண யோகங்களுடன் உள்ள எண்ணற்ற வகைகளில் இந்தக் கூட்டுக் காலக் கலை அம்சங்கள் தினமும் மாறுமல்லவா! இப்படிப் பார்த்தால், கலியுகத்தில், இத்தகைய கூட்டுக் கால நிலைகளுடன் வேறு எந்தப் பரதோஷமும் எந்த ஆண்டிலும் அமைவது அபூர்வமே என்ற வகையில் ஒவ்வொரு வருடத்தின் 365 நாட்களின் நித்யப் பரதோஷமும், ஒவ்வொரு வகையிலான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன.
இன்றைக்கு உலகெங்கும் நிரவியுள்ள கோடி கோடிச் சுயம்பு லிங்கங்களும் ஒவ்வொரு நித்தியப் பிரதோஷ நாளில் உற்பவித்ததே. இதனால்தான் ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு வகையில் சிறப்பிடம் பெறுகின்றது.
ஹஸ்தமால்ய யோக பூஜை |
ஹஸ்த நட்சத்திர தினத்தன்று அமையும் பிரதோஷ நாட்களில் நாம் கைகளைச் சுத்திகரிக்கும் அற்புத பூஜைகளை நிறைவேற்றிடலாம். ஹஸ்தம் என்பது கை தானே! உள்ளங்கையில் ஆயிரம் வகை ரேகைகள், கங்கணங்கள், வளையங்கள், நட்சத்திரக் குறிகள், சதுர, சாய்சதுர, செவ்வக, வட்டச் சக்கரங்களும் நிலவுகின்றன. இவை ஒவ்வொன்றிலும் ரேகார்ஷண சக்திகள் நிறைந்துள்ளன. ஒவ்வொன்றையும் நன்கு பயன்படுத்துவதற்கான ஹஸ்தசூட வகை யோகப் பூஜைகளும் உண்டு. இதில் ஒரு வகையாக,
* சந்தனத்தில் ஜவ்வாது, கோரோஜனை, பச்சைக் கற்பூரம் சிறிது சேர்த்து சந்தனக் கட்டையில் நன்கு அரைத்து சுவாமியின் பாதஙகளுக்குச் சார்த்தி,
* பிறகு சிறிதளவு கைகளில் நன்கு மணக்கும்படி நிரவிப் பூசிக் கொண்டு,
18 கர துர்காதேவி
ஒன்பத்துவேலி
* உள்ளங்கையில் மூன்று அல்லது ஐந்து துளசி தளங்களை வைத்துக் கொண்டு
* பிரதோஷ நேரத்தில், ஆலயத்தில் கூப்பிய கரங்களுடன், உள்ளங்கை ரேகைகள், கங்கணங்கள் ஒன்றையொன்று நன்கு ஸ்பரிசிக்குமாறு வைத்துப் பதித்துக் கொண்டு,
* கைகளைச் சற்றும் பிரிக்காமல் வணங்கிய நிலையில் பிரதோஷ நேரம் முழுதும் துதித்தும்
* ஸ்ரீமகாலட்சுமி சிவனைப் பூஜிக்கின்ற திருக்காட்சியாய் பாவனை செய்து கொண்டு அறிந்த துதிகளை ஜபத்துத் துதித்து வணங்கிடவேண்டும்.
இவ்வகை வழிபாடே ஹஸ்தமால்ய யோக பூஜையாகும்.
பூஜை பலன்கள்:
* உதவி செய்தும் நன்றியை மறந்து கெடுதல் செய்பவர்கள், மனம் திருந்தி, வருந்தி, உதவி செய்ய முன் வருவர்.
* கோபம், காழ்ப்பு, பகைமை காரணமாக வெறுப்பைக் கொட்டிப் பழி வாங்குவோரும் மனம் திருந்த வழி பிறக்கும்.
* வடை, சப்பாத்தி, போண்டா, கொழுக்கட்டை, மிளகு வடை, தட்டைபோன்ற உள்ளங்கையில் நன்கு தோய்து, தட்டி, உருட்டி ஆக்கப்படும் உணவு வகைகளை
ஹஸ்தமால்ய ஹஸ்தசூட ஹஸ்தகான பாஹிமாம்
ஹஸ்தபாண ஹஸ்தசூல ஹஸ்த புஷ்ப ரட்சமாம்!
என்றும்
கரவீர கரதேவ காரணக் கார்த்திகைக் கடவுளப்பா
சரவேத சரண பாத சதுர்வேதச் சந்தமப்பா
கை கண்டேன், கை கூப்பி மனக்கை மாதவ மஹாதேவ சரணம் சரணம்!
என்று துதித்து மேற்கண்ட வகையிலான கை ரேகைகள் நன்கு படியும்படி ஆகும் உணவு வகைகளைத் தானமளித்திட கணக்குத் தவறு, எழுத்துப் பிழைகளால் விளைந்த நஷ்டங்கள் தீர வழி பிறக்கும்.
ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி |
ஒவ்வொரு மனிதனும் நல்ல தெய்வீகக் குணங்களுடன்தான் பிறக்கின்றான். காலப் போக்கில் பூர்வ ஜன்ம வினைகளும், நடப்புப் பிறப்பில் சேர்க்கின்ற வினைகளும், மனிதனின் ஆறாம் அறிவை மங்கச் செய்து, இறைப் பகுத்தறிவில் இருந்து விலக்கி, பல அசுர குணங்களைச் சேர்த்துத் தந்து விடுகின்றது.
எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு சிறு தீய எண்ணம் மனதில் இருந்தால் கூட, அந்த அளவிற்கு மனிதன் அசுர குணத்தைப் பூண்டவனே ஆவான். பொறாமை, பேராசை, பகைமை, விரோதம், குரோதம், அதர்மமான காம இச்சை, பிறரை ஏமாற்றுதல் போன்ற அதர்மங்களைக் கொண்டிருப்பவர்கள், வெளிப்பார்வைக்கு நல்லவர்களாகத் தோன்றினாலும், மனத்தளவில் அந்த அளவிற்கு அசுரர்களே ஆவர் என்பதை அவரவரே மனசாட்சிப் பூர்வமாக அறிதல் வேண்டும்.
ஆறாம் இறைப் பகுத்தறிவானது பரிபூரணமான அன்பு குணம் பூண்ட மனிதர்களிடம் மட்டுமே நன்கு பரிபூரணிக்கும். இவ்வகையிலான முற்றிலும் பரிசுத்தமான தர்மவான்களைப் பூவுலகில் காண்பதே அரிதாயிற்றே என எண்ணிடலாம். ஆம், உண்மையே!
அப்படியானால் தற்போதைய கலியுக மக்களிடம் ஆறாம் பகுத்தறிவு எவ்வகையில்தான் இருக்கின்றது? இது ஒரு முக்கியமான ஆத்ம விசாரக் கேள்வியாகும்.
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் ஆறாம் அறிவு நன்கு பொதிந்திருந்தாலும் , அதனை நன்கு பரிணமிக்கச் செய்யும் வண்ணம் ஆக்கப் பூர்வமாகப் பலரும் தார்மீக ரீதியாகச் செயல்படுவதில்லை. தங்கமானது அக்னியில் சுடச் சுடப் பிரகாசம் பெறுவது போலவே, ஆறாம் அறிவினை தார்மீக சக்தியாகப் பயன்படுத்தப் பயன்படுத்தத்தான் இறைப் பகுத்தறிவாகப் பிரகாசம் பெறும்.
ஸ்ரீநரசிம்மர் திருக்கோஷ்டியூர்
ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி என்பது ஸ்ரீநரசிம்ம விஷ்ணு அவதாரம் தோன்றிய தினமாகும். ஸ்ரீநரசிம்மர் ஹிரன்யனை சம்ஹாரம் செய்திட்டார் என்பது வெளிப்புறப் புராணம். ஆனால் அசுர சக்திகள் உலகில் பெருகி, ஆறாம் அறிவாம் இறைப் பகுத்தறிவை மங்கியபோது, பரிசுத்தமான தேவ குணங்களும், புனிதமான மனித குணங்களும் அருகிய போது, அசுர குணங்களைச் சீர்திருத்தி, ஜீவன்களைக் காத்திட, ஸ்ரீநரசிம்மர் தோன்றினார். எனவே, தீய எண்ணங்கள் யாவுமே அசுர குணங்களே!
அதாவது கலியுக மனிதன், ஆறாம் அறிவு உடையவனாக இருந்தாலும் அதனைப் (இறைப்) பகுத்தறிவாகப் பிரகாசிக்கச் செய்வதைத் தடுத்து மறைப்பவைகளே வன்முறை அதிகாரம், ஆணவம், மமதை, பகைமை, குரோதம், விரோதம், பொறாமை, லஞ்சம், வன்முறை, போர் போன்ற அதர்மமான, அசுர சக்திகளாகும். எனவே, மனிதன் மனிதனாக, ஆறாம் இறைப் பகுத்தறிவுடன் வாழ உதவுவதே ஸ்ரீநரசிம்ம வழிபாடு.
எனவே, தீய குணங்கள் அகன்று மனித குணங்கள் நன்கு விருத்தியாகி, ஆறாம் அறிவாம் பகுத்தறிவுடன் பிரகாசித்திட, ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி வழிபாடு மிகவும் உதவும்.
ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி நாட்களிலும், சனிக் கிழமைகளிலும், பிரதோஷ தினங்களிலும் குறைந்தது ஐந்து ஸ்ரீநரசிம்ம மூர்த்திகளை வழிபடுவது மிகவும் விசேஷமானது. ஐந்து விஷ்ணு மூர்த்திகளையாவது தரிசிக்க வேண்டும்.
பெருமாளின் திருவடிகளைக் கொண்ட கிரீட அமைப்பு போன்ற சடாரியால் தலை, தோள்களில் தொட்டு அருள் பெறுவதே சடாரி சார்த்துவதாகும். பெருமாள் ஆலயத்தில் 14 முறையேனும் சடாரி சார்த்தப் பெற்று அருள் பெறுதல் மிகவும் விசேஷமானது. இது கபால நாளங்களைச் சுத்திகரித்து மன சுத்திக்கு மிகவும் உதவும்.
பல ஆலயத் தூண்களில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி எழுந்தருளி இருப்பது உண்டு. இத்தூண்களை நன்கு சுத்திகரித்து, நல்ல பட்டு வஸ்திரங்களால் அலங்கரித்துப் பலரும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை நன்கு உற்சவாதிகளுடன் வழிபடும்படித் திருப்பணி ஆற்றுவது மிகவும் நன்று. இதனால் அறிந்தே செய்த தவறுகள், பாவங்களை மனசாட்சிப் பூர்வமாக உணர்ந்து, இப்பிறவியிலேயே கழிப்பதற்கான பரிகார வழிகள், கிட்ட வழி பிறக்கும்.
வக்ர நிவர்த்தி தரும் பலாபலன்கள் |
சூரியன் சந்திரன் தவிர மற்ற கிரகங்களுக்கு வக்ர கதி என்று ஒன்று உண்டு. தான் செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் ஒரு கிரகம் நகர்ந்து செல்வதையே வக்ர கதி என்று சொல்கின்றோம். உண்மையில் இது ஒரு மாயைத் தோற்றமே. இருப்பினும் இவ்வாறு கிரகங்கள் வக்ர கதியை அடையும்போதும் அந்த வக்ர கதியில் இருந்து மீண்டு பழைய நிலையை அடையும்போதும் பல விசேஷமான ஜோதிட மாற்றங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக குரு வக்ர கதியிலிருந்து நிவர்த்தியாகும்போது பல அற்புதமான சித்த சுத்தி சக்திகள் குரு மண்டலத்தில் பரிமளிக்கின்றன. வக்ர நிவர்த்தியில் உள்ள குரு மண்டலத்தில் கோளகதி வேகக் கிரணங்கள் வியக்கத் தக்க சுதபுத (அறிவு) சக்திகளைக் கொண்டிருக்கும்.
அத்தருணத்தில் மிகவும் கடினமான பாடம், கணிதம், ஆராய்ச்சியைக் கைக் கொண்டால் நல்ல அறிவு விருத்தி ஏற்படும். குரு வக்ர கதி நிவர்த்தியான புனிதமான சித்த யோக நேரத்தில்தான் சுதபுத மகரிஷி நவவியாகரண லோகத்தில் உற்பவித்தார். எனவே குரு வக்ர நிவர்த்தி நாட்களில் நல்ல அறிவு தரும் வேத பாடங்களை ஓதுதலால் நன்கு மூளை விருத்தி ஆகும்.
வக்ர கதியில் பல ஆகர்ஷண சக்திகளைக் குரு கிரகம் பெற்று அவற்றை அடுத்த ராசிக்குச் செல்லும் வரை கந்தோளினம் என்ற அனுகிரக சக்திகளாக ஜீவன்களுக்கு அளிக்கின்றார். இது புத்ர பாக்யத்திற்கு மிகவும் உதவுவதாகும். வக்ரத்திலிருந்து மீண்டு வரும் குரு கோளப் பாதையில் சேவார்த்த சக்திகள் பரிணமித்து நிறைந்திருப்பதால் குரு வக்ர நிவர்த்தி நாட்களில் சேவார்த்திகளாய் இறைப் பணிகளை ஆற்றுதல் மிகவும் விசேஷமானது. அதாவது கேட்டு உதவுதலை விட, கேளாமலேயே உதவுவதை உத்தமச் சேவையாக ஆன்றோர்கள் உணர்த்துகின்றனர். இது மகத்தான குரு வர சக்திகளை அளிப்பதாகும். இரண்டு அல்லது மூன்று தட்சிணாமூர்த்தி உள்ள ஆலயங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானது (திருமழபாடி, லால்குடி, திருக்காட்டுப்பள்ளி, நறையூர் சித்தீச்சரம், திருவைகாவூர்)
திருநறையூர் சித்தீச்சரம்
நடராஜப் பெருமானின் நாட்டியத்திற்கு நட்டுவாங்கம் சாதிக்கின்ற இறைப் பெரும்பாக்யத்தைப் பெற்றவர்களே ஸ்ரீசட, நட சிங்கீஸ்வர சித்தர்கள் ஆவர். முதுகுப் புறத்தில், கால் பாதம் வரையிலான ஜடா முடியைப் பூண்டிருக்கும் இவர்களுடைய ஆத்யந்த சித்தரே சுதபுத மகரிஷி ஆவார். குரு கிரகத்தின் ஒவ்வொரு அசைவையும், சலனத்தையும் தேவப் பூர்வமாக அறிய வல்ல புத்திப் பிரகாசத்தை உடையவர். இவருடைய வலது, இடது கர மணிக்கட்டுகளில் சுத ஸ்திர கங்கண், புத ஸ்திர கங்கண் ஆகிய இரண்டையுமே வைத்திருப்பார். சென்னை அருகே மப்பேடு சிவாலயத்தில் ராஜகோபுரத்தின் வலப்புறம் கீழே தரையில் பூமியை ஒட்டி இம்மகரிஷி உருவத்தைத் தரிசித்திடலாம்.
பிரதமை, புதன், கிரகங்களின் வக்ர நிவர்த்தித் தினங்களில் இவர் மானுட வடிவில் மப்பேடு ஆலயத்தில் ஸ்ரீஆஞ்நேயருடன் சேர்ந்து வலம் வந்து பூஜித்து, சிவாகம ஜோதி சக்திகளை அளிக்கின்றார்.
பௌர்ணமி திதி தோறும் ஸ்ரீஆஞ்சநேயரோடு வலம் வந்து புத்திப் பிரகாச சக்திகளை நல்வரமாக அளிக்கின்றனர். புதன், விசாகம், பிரதமை, குரு மூர்த்தியின் வக்ர நிவர்த்தி ஆகிய அனைத்துமே சேர்ந்து அமைகின்ற மிகவும் விசேஷமான தினமாகும்.
அடிக்கடி மனதை உறுத்தும் சிறு சிறு தீய எண்ணங்களைச் சீரமைத்திடவும், மன சுத்தி பெறவும் இந்நாள் பெரிதும் துணை புரியும். அத்திமரம் உள்ள ஆலயம் (சென்னை மப்பேடு), அறுகோண கிணறு, ஊற்று வற்றாக் கிணறு உள்ள தலங்களிலும், எந்த நிழலும் படாத வகையில் வானத்தை நோக்கி அமைந்திருக்கும் உத்தம மகான்களின் ஜீவ சமாதி (திருஅண்ணாமலை அருகே மணம்பூண்டி ஸ்ரீ ரகோத்தம்மன் சுவாமிகள் ஜீவாலயம்) போன்ற தலங்களில் வழிபடுதலால் அளவுக்கு மீறிய வார்த்தைகளால் முறிவடைந்த நல்ல நட்புகள், நல்ல உறவுகள் மீண்டும் மலர நல்வழி கிட்டிடும். எவரால் நஷ்டம் விழைந்தது என அறியாது விழிப்போர்க்கு நல்ல விடை கிட்டும்.
இவ்வாறு குரு கிரகம் மட்டுமல்லாது ஒவ்வொரு கிரகத்திற்குமே அவை வக்ர கதியை அடையும்போதும் வக்ர கதியிலிருந்து மீண்டு சுய கதியை அடையும்போதும் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும் என்பதை உணர்வதே உண்மையான பகுத்தறிவாகும்.
பார்த்திபக் கல்பாதி |
கல்பம் என்பது 25,000 கணமூல ஆண்டுகள் உடைய காலப் பகுதி ஆகும். கலியுகத்தில் கல்பம் என்ற கால வரையறையே இல்லையே என்று எண்ணாதீர்கள். 2001, 2002, 2003 என்று ஆங்கில எண் வடிவில் எளிமையான ஆண்டுக் கணக்குதானே வழக்கில் இருக்கின்றது. கல்பாதி வருட முறை எப்படி இனிமேல் அமைய முடியும் என்று கேட்கவும் தோன்றும்!
பூலோக நிர்வாகத்தைத் தெய்வீகப் பூர்வமாக ஆற்றுகின்ற ஸ்ரீகாலபைரவ லோகத்தில், எப்போதும் மனு, கல்பாதி, யுக, தேவ ஆண்டு அளவியலே கையாளப்படுகின்றது. மேலும் 1, 2, 3 போன்ற எண்களும் நாம் நினைப்பது போல, ஆங்கில முறை எண்கள் அல்ல! நம் புனிதமான பாரதத்தில் தோன்றிப் பிற நாடுகளுக்குச் சென்றவையே! உலக மொழிகளுக்கு அன்னையான கலைமகளின் அருளரசில் அமைவதே அனைத்து எண்களின் எண்ணும், எழுத்துமாம்.
உண்மையில் 2001, 2002 என்று ஆண்டினை எழுதுவதை விட, தாரண வருடம், சுபானு வருடம் என்று அந்தந்தப் பகுதியில், நாட்டில் நிலவும் வகையில் ஆண்டுப் பெயருடன் எழுதுவதே மிகவும் சக்தி வாய்ந்ததும், சிறப்புடையது ஆகும். எனினும், கலியுகச் சட்ட நியதிகளுக்கு ஏற்ப வாழ வேண்டி இருப்பதால், 2004 ஆண்டு, தாரணத் தமிழ் வருடம் என்று இரண்டையும் எழுதி ஆண்டை ஆளும் எண், எழுத்து தேவதா மூர்த்திகளின் அனுகிரகத்தைப் பெற்றிடுக.
திருக்காட்டுப்பள்ளி சிவத்தலம்
இதற்காகத்தான் பூஜை மந்திரங்களில் சங்கல்பம் செய்யும் போது,
கலியுகத்தில் ... தாரண ஆண்டில் ... சித்திரை மாதத்தில் ... வர்ஷ ருதுக் காலத்தில் ... திரிதியைத் திதியில் ... கேட்டை நட்சத்திரத்தில் ... சிவயோகத்தில் ... பத்ரை கரணத்தில் .. என்றவாறாக,
அந்தந்த நாளுக்கு உரிய காலக் குறிப்புகளை வரிசையாகச் சொல்லும் வகையில் சங்கல்ப மந்திரக் குறிப்புகள் அமையும்.
பார்த்திவம் என்பது உடலில், நெஞ்சுப் பகுதிக்கு மேல், ஆத்மம் உறைகின்ற உள்ளக் கோயிலின் முன்னே உள்ள ஜெயசங்கல்ப ஸ்தூபம் எனும் கொடி மரம் ஆகும். ஆம், பார்த்திவ ஸ்தூபம் என்பது ஆத்மப்புலத்தின் கொடிக் கம்பம் ஆகும். இதனால்தான் பூணூலும் அணிபவர்கள் பூணூலில் உள்ள பிரம்ம முடிச்சினை, நெஞ்சுக்கு நேரே உள்ள, பார்த்திவ கொடி ஸ்தம்பத்திற்கு முன்னால் வரும்படிதான் பிரம்ம முடிச்சை வைத்துப் பூணூலை அணிவார்கள்.
பூணூல் என்பது மத, சாதிச் சின்னமன்று. ஜாதி, மத, குல, இன பேதமின்றி, அனைத்து மக்கள் சமுதாயத்திற்கும் உரிய - ருத்ராட்சம், விபூதி போன்ற - தெய்வீகச் சாதனமே பூணூல் ஆகும்.
பார்த்திவக் கல்பாதி தினத்ன்று குறைந்தது, 36 தெய்வ மூர்த்திகளுக்குப் புதுப் பூணூல் சார்த்தி வழிபடுவோர்க்கு நெஞ்சைப் பிழியக் கூடிய அளவிற்கு வேதனைகள் ஓரளவு தணிய நல்வழிகள் பிறக்கும். இதனால் கைத்தறி நெசவாளர்களுக்கும் ஆதரவு கிட்டும்.
பார்த்திவக் கல்பாதி தினமானது, ஆத்மத் தர்ப்பணம் அளிப்பதற்கு மிவும் அற்புதமான நாள். குறிப்பாக, ஓடும் நீரின் நடுவில் உள்ள கற்பாறையில் நின்று, தர்ப்பணத்திற்கு முன்னும், பின்னும் 12 முறைகள் தன்னைத் தானே ஆத்மப் பிரதட்சிணமாக 12 முறை, வலம் வந்து வணங்குவது பார்த்திபாத்மத் தர்ப்பணமாகும். பத்ரிநாத்தில் உள்ள பிரம்ம கபாலப் பாறையில் ஆத்மத் தர்ப்பணம் அளிப்பதும் விசேஷமானது.
ஓடும் நீர் வசதி இல்லாத இடங்களில் என்ன செய்ய முடியும்? வேப்ப மரமும், வில்வ மரமும் இணைந்து இருக்கும் ஆலயத் தலத்தில் இவ்வகையில் ஆத்மத் தர்ப்பணம் அளிப்பது சிறப்புடையது. இதனால், தன்னால் சரியாகப் பேண இயலாது பெரும் வேதனைகளுடன் இறந்த பெற்றோர்களுடைய பாறை போன்ற சாபங்கள் தணிவதற்கான நல்ல தீர்வுகள் கிட்டும்.
கொத்துமல்லி (தனியா) தானியம் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை (ரசம், துவையல், பொடி சாதம்) ஒரு புதுப் பாத்திரத்தில் வைத்து, ஒரு குடும்பத்திற்கு முழுமையாக வரும்படியான அளவில் தானம் அளித்தலால், பெற்றெடுத்த மகன்களாலே தினமும் ஏசப்பட்டு வாழ்கின்ற கொடுமையான நிலைகள் மாற வழி பிறக்கும்.
திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரம், திருநாவலூர் போன்று யானை உருவம் உள்ள தலங்களில் யானைக்கு, நிறைய வாசமுள்ள மலர் மாலைகளை நிறையவே அணிவித்து வணங்குவதால், யானை தேவதைகள் மிகவும் சந்தோஷப்பட்டு, கூரமால்யப் பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும். இதனால் சொத்து, வீடு இருந்தும், நல்லபடியாக நல்ல வீட்டில் வாழ இயலாது இருக்கின்ற நிலை மாறி, நல்ல உறைவிடம் கிட்டும்.
திதித்வய வழிபாடு |
திதித்வயம் என்ற திதி நேரக் கணக்கு ஒன்று உண்டு. என்றேனும் மதிய நேரத்தில் ஒரு திதி முடிந்து, மறு திதிக் காலம் தொடங்குமானால் அந்நாளுக்கு உரிய திதி என்று எதைக் குறிப்பது? இவ்வாறு ஒரு நாளில் பெரும்பான்மையாக ஒரு திதி நேரம் அமையாது. பகல் வாக்கில் ஒரு திதி முடிந்து, மற்றொரு திதி தொடங்குமாயின் அந்நாளுக்குத் திதித்வயம் என்று பெயர். அபிஜித் முகூர்த்த நேரம் என்பது சரியாக உச்சிப் பொழுதில் அமையும் புனிதமான நேரமாகும் அல்லவா!
பிரம்ம முகூர்த்த நேரமும், அபிஜித் முகூர்த்த நேரமும் தோஷங்களுக்கு அப்பாற்பட்டவைதாமே! திதித்வய அபிஜித் முகூர்த்த நேரப் பூஜையானது குழப்பங்களை நீக்கி நல்ல முடிவை அளிக்கும் சக்திகளைக் கொண்டதாகும்.
ஒவ்வொரு நாளுக்கும் உரிய நேத்திரக் களை, ஜீவகளை என்ற இரு அம்சங்களையும் பஞ்சாங்கத்தில், 1/2, ஒன்று, ஒன்றரை, இரண்டு என்ற அளவீடுகளாகக் குறிப்பர். இரண்டு பங்கு முழுமையானதாக அமையும் தேய்பிறை நேத்திரக் களைக்குப் பசுந்துறைப் பாத நேத்திரம் என்று பெயர். ஒரு பங்கு முழுமையாக அமையும் தேய்பிறை ஜீவகளைக்குக் கோமுகக் கீரபலம் என்றும் பெயர்.
நேத்திரமும், ஜீவனும் ஒன்று, ஒன்றரை, இரண்டு என்ற அளவில் அமைந்து, அந்தந்த நாளின் வேறு பல அம்சங்களோடு, சுப லட்சணங்களையும் உணர்த்துவதாகும். இவ்வாறு தேதி, வாரம் (நாள்), திதி, நட்சத்திரம், யோகம், கரணம், யோகம் நேத்திரம், ஜீவன் போன்ற 18 வகைக் காலாமிர்த சாமுத்ரிகா இலட்சணங்கள் உண்டு. இவை அனைத்தையும் பரிபூரணமாகக் கொண்ட நேரம் எப்போதாவது மட்டுமே பரிபூரண அமிர்த நேரமாக அமையும்.
திருமழபாடி சிவத்தலம்
ஜீவகளையும், நேத்திரக் களையும் நிறைந்த அமிர்தக் கூட்டில் இருந்து, பஞ்சபூதப் புனலில் அமிர்தம் சொட்டி நிரவும் நேரமே அமிர்த (கடிக) நேரமாகும். பரிபூரணமான சுபாமிர்தக் கிரணங்கள் பூரிக்கும் நேரமிதுவே! அமிர்தக் கடாட்ச நேரத்தில் நடைபெறும் சுப காரியங்களில், சுப மங்களத்வம், சுமங்கலித்வம், தீர்காயுள்த்வம், தீர்க தரிசனத்வம், அமிர்தத்வம் ஆகிய ஐந்தும் பரிபூர்ண ஜீவநேத்திர அமிர்தக் களை பூண்டிருக்கும். இதனைச் சித்தர்களே நன்கு அறிவர்.
பசுந்துறைப் பாத நேத்திரமும், கோமுகக் கீரபலமும் பரிணமிக்கும் நாட்களில் ஆலய கோமுகத்தைச் சுத்தி செய்தலால், பிள்ளைகளுக்கு நல்புத்தி கிட்ட வழி பிறக்கும். தொடர்ந்து செய்து வர வேண்டும்.
தேய்பிறைச் சதுர்த்தித் திதியே சங்கட ஹரச் சதுர்த்தி நாள். தேய்பிறைப் பஞ்சமித் திதியே பசுமஞ்சள் பஞ்சமி எனப்படுவதாகும்.
சதுர்த்தியும், பஞ்சமியும் இணையும் திதித்வய சங்கமக் காலத்திற்குப் போதன பஞ்சதசி என்று பெயர், இத்தகைய சக்திகள் நிறைந்த பஞ்சவடி எனப்படும் புனிதமான அரசமரத் தளங்கள் இன்றும் பல இடங்களில் உண்டு. இந்த போத பஞ்சதசி நேரத்தில் ஐந்து விதமான புனிதக் காரியங்களை ஆற்றுதல் மிகவும் விசேஷமானது. இதில் திதித்வயமும் சேருவது மிகவும் விசேஷமானதாம். திதித்வய நாட்களில் போதன பஞ்சதசி நேரம் மிகவும் சக்தி வாய்ந்த தேவப்ரகாசம் பெறுவதால், இந்நாளில் குறிப்பாக திதித்வய திதி சங்கம முகூர்த்த நேரத்தில்,
சதுர்வேத சதுராட்சர சதுர்ஜோதி சாந்நித்யம்
பஞ்சவேத பஞ்சாட்சரப் பஞ்சாமிர்தப் பராபரம்!
என்று ஓதி விபூதி, மஞ்சள், சந்தனம், குங்குமம், செந்தூரம் ஆகிய ஐந்தையும் இறைவனின் திருப்பாதங்களுக்குப் பஞ்சாட்சரக் காப்பாக இட்டு வணங்குதலால், கூட இருக்கின்றவர்களின் துரோகத்தால் ஏற்பட்டுள்ள துர்விளைவுகளில் இருந்து காப்பாற்றப்படுவதற்கான நல்வழிகள் பிறக்கும்.
போதன பஞ்சதசி நாட்களில் சிவன் கோயிலில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்கு மேற்கண்ட பஞ்சாட்சரக் காப்பு இட்டு வணங்குவது மிகவும் விசேஷமானது. இதனால் என்ன முடிவு எடுப்பது என்று திணறுவோருக்கு நல்ல முடிவுக்கான நல்வழி தெளிவாகும்.
வண்ணங்களும் எண்ணங்களும் |
ஆரஞ்சு வண்ணம், மனித சமுதாயத்திற்குப் பல விதங்களில் ஆன்மீகப் பூர்வமாகத் துணை புரிகின்றது. ஒவ்வொரு வண்ணத்திற்கும் உரிய பல தெய்வாம்சங்கள் உண்டு. இவற்றைத்தாம் நறுமண வண்ணப் பூக்களும், கனிகளும் உலகிற்கு அளிக்கின்றன.
காவி வண்ணக் கனகாம்பரம், தீய சக்திகளை உறிஞ்சுவதால் இதனை இறைவனுக்குச் சூடுதல் கூடாது. பெண்களும் அணிதல் கூடாது. கனகாம்பரத்தை அறவே தவிர்க்க வேண்டும்.
வெண்மையான ஒரு சிறு தும்பைப் பூவில் கூட, 3000க்கும் மேற்பட்ட நுண்மையான வெண்சுடர் ஆரங்கள் உள்ளன. இவற்றின் மூலமாக ஒவ்வொரு தும்பைப் பூவும், தினமும் லட்சக் கணக்கான நட்சத்திரங்கள், கோள்களில் இருந்து ஸ்வேதாட்சரக் கதிர்களைக் கிரகித்துப் பூலோக ஜீவன்களின் நன்மைக்காகப் பரவெளியிலும், நிலத்திலும், நீரிலும் சேர்க்கின்றன.
ரெங்கநாதபுரம் சிவத்தலம்
எனவே, இறைவனின் படைப்பில் ஒவ்வொரு துரும்பும் படைப்புக்கான காரிய, காரியங்களைக் கொண்டுதாம் இருக்கின்றன. எந்தப் பொருளும் உலகில் பயன்படாமல் இல்லை. மனித உடல் கழிக்கும் மலமானது பன்றிக்கு உணவாகின்றது. பன்றி, ஆடு, பசு, கால் நடைகள் கழிக்கும் சாணம், நிலத்தில் நல்உரச் சத்தாக, தானிய சக்திகளை உருவாக்கி மனிதனுக்கு உதவுகின்றது.
தமக்கு இறைவன் அளித்துள்ள ஆறாம் பகுத்தறிவைக் கொண்டு, பிரபஞ்சத்தில் உள்ள கோடிக் கணக்கான பொருட்கள் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ளும் பக்குவம் இருந்தும், மனித குலம் (இறைப்) பகுத்தறிவை நன்கு பயன்படுத்திக் கொள்வதில்லை. ஆறாம் அறிவு நன்கு விருத்தியாக ஆரஞ்சுக் கிரணங்கள் நன்கு உதவுகின்றன.
ஆரஞ்சு வண்ணம் (காவி நிறம் அல்ல) இறைப் பகுத்தறிவை நன்கு மேம்படுத்த இல்லற தர்மத்தில் இருப்போர்க்கு நன்கு உதவுகின்றது. சூரிய உதயத்தின் போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும், ஆரஞ்சு வண்ணப் பிழம்பாகச் சூரியன் ஜ்வலிப்பதால், (இறைப்) பகுத்தறிவை மேம்படுத்திக் கொள்ள, சாந்தமான, அமைதியான ஆன்மீகச் சூழலை இளங்காலையும் அளிப்பதான சந்தியா காலமாக இளங்காலையும் இளம் மாலையும் அமைகின்றன.
எனவே, மனிதன் தினமும் இயற்கையான ஆரஞ்சு வண்ணத்தைக் கண்டு தரிசித்தல் அறிவு வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. இதற்காகத்தான் பாசாங்குலி எனும் முத்திரை மூலம் சூரிய தரிசனத்தைக் காலையிலும் மாலையிலும் பெறுவதாக நம் ஆன்றோர்கள் ஏற்படுத்தித் தந்துள்ளனர்.
ஞாயிறன்று ஆரஞ்சு வண்ண உணவு, ஆடைகள், ஆரஞ்சு வண்ணப் பேனா போன்றவற்றையே பயன்படுத்துதல் சிறப்புடையுதாம். இருவாட்சி மலரில் பல வகைகள் உண்டு. இதில் ஒரு வகையில் ஆரஞ்சு வண்ணம் நிறைய நிரவி இருக்கும். துன்பச் சுமையால் என்ன செய்வது, ஏது செய்வது என்று திகைப்பவர்கள், ஞாயிற்றுக் கிழமைகளில் இருவாட்சி மலரைச் சூரிய மூர்த்திக்குச் சார்த்தி வழிபடுதலால், நல்ல மனத் தெளிவு பெற இது உதவும்.
பல மனிதர்களாலும் வெறுக்கப் படுகின்ற கருப்பு நிறப் பன்றி, கழுதை, சொறி வியாதி உடைய நாய்கள், எருமை போன்றவற்றிற்கு ஞாயிற்றுக் கிழமைகளில் தேவையான உணவு வகைகளை அளித்து, அவை மிகவும் சந்தோஷத்துடன் உண்டு மகிழ்வதைச் சற்று நேரம் கண்டு ஆனந்திப்பதும் ஒரு வகைச் சந்தோஷ யோக வகையைச் சார்ந்ததாகும். தன்னுடைய பழக்க வழக்கங்களால், செய்கைகளால் சமுதாயத்தில், உறவினர்களிடையே நன்மதிப்பை இழந்தோர் ஓரளவு மேன்மை பெற இந்த வழிபாடு உதவும். இதற்கு உதவும் தலங்களுள் ஒன்றே கரூர் அருகே உள்ள வாங்கல் கிராம ரவீஸ்வரர் ஆலயமாகும்.
முள்ளம் பன்றிகள் உப்பிட்ட பண்டங்கள், காய்களை விரும்பித் தின்னும். இவ்வாறு வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து, அன்புடன் பேசி, பல வகைகளில் அவைகளுக்கு அளிக்கும் சந்தோஷம் உங்களுக்கு நல்ல மனத் தெளிவை அளிக்கும். ஒரு நாளில் இவ்வாறு செய்வதால் உடனே மனத் தெளிவு வந்து விடுமா என்று எண்ணாதீர்கள். ஞாயிறன்று மனத்தெளிவை அளிக்கும் ஆரஞ்சு வண்ணக் கதிர்கள் பூமியில் பூரிப்பதால் அந்நாட்களில் பரவெளியில் மேற்கண்ட வழிபடுகளின் மூலம் நிரவிடில், இவை தினமும் பல்லாயிரக் கணக்கானோருக்கும் உதவுமன்றோ! நமக்கு உதவுவதை விட, நித்யக் கர்ம நிவாரணி மூலம் பலருக்கும் உதவ உதவுதலானது, இதில் மிளிரும் தியாக மனப்பான்மையினால், நம் துன்பங்களைத் துரிதமாகத் தீர்க்கப் பெரிதும் உதவும்.
ஓம் குருவே சரணம்