ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
பெண்களின் கவலை தீர ... |
மௌன விரதத்திற்கு ஏற்ற நாள் திங்கள் கிழமை என நாம் நன்கறிவோம். மதிகாரகராகிய சந்திர மூர்த்திக்கு உரித்தான தினமாதலால் மன ஒழுக்கத்தைப் பேணும் நாளாகத் திங்கள் தினம் அமைகின்றது. இவ்வாறாக ஒவ்வொரு கிழமையும்,
செவ்வாய் = நோய் நிவர்த்தி சக்தி நாள்
புதன் = ஞான சக்தி நாள்
வியாழன் = குருவருள் பாக்யத் திருநாள்
வெள்ளி = மங்கள சக்தி நாள்
சனி = ஆயுள், ஆரோக்யத் திருநாள்
ஞாயிறு = கண் சக்தி நாள்
- என்றவாறாகப் பல சக்திகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கிழமையும் தரும் பொதுவான ஆன்ம சக்திகள் இவை ஆகும். இதே போல, பகைமை, குரோதம், விரோதம், பொய்மை, மிருத்யு தோஷங்கள், முறையற்ற ஆசைகள் போன்ற ஒவ்வொன்றையும் தீர்க்க வல்ல சக்திகளையும் ஒவ்வொரு கிழமையும் கொண்டுள்ளது.
மகிழ மரம் இலஞ்சி
மௌன விரதம், உண்ணா விரதம், பாத யாத்திரை, நடைப் பிரதட்சிணம் என ஒவ்வொரு கிழமைக்கும் உரிய விரத, பிரதட்சிண வழிபாட்டு முறைகளும் உண்டு. அந்தந்த நாளில் அணிய வேண்டிய வண்ண ஆடை வகைகளும் உண்டு.
ஒவ்வொரு நாளும் கண்டிப்பாகத் தரிசிக்க வேண்டிய நட்சத்திர, கிரக தரிசனங்களும் உண்டு. தினந்தோறும் தரிசிக்க வேண்டிய மலர்களும், மர வகைகளும் உண்டு. இவை ஒவ்வொன்றும் வித விதமான பலன்களைத் தருவதுடன், பல வகைத் துன்பங்களையும் நீக்கவும் வல்லனவாகும்.
இது மட்டுமல்லாது ஒவ்வொரு கிழமையோடு சேரும் திதி, நட்சத்திர, யோக, கரண வகைகளைப் பொறுத்தும், அந்தந்த நாளில் உள்ள கிரக, சஞ்சார நிலைகளைப் பொறுத்தும், அந்தந்த நாளுக்கும் உரிய தெய்வீக அம்சங்களும் அமையும்.
இவ்வாறு ஒவ்வொரு யுகத்தின் லட்சக் கணக்கான ஆண்டுகளின் ஒவ்வொரு தினத்திற்குமான கோடிக் கணக்கான தெய்வீக விளக்கங்கள் உண்டு. இவற்றை அறிந்தவரும், உணர்விக்க வல்லவரும் சற்குருவே ஆவார்.
பொதுவாக ஒரு கிரகம் தன்னுடைய ஆட்சி வீட்டை ஏழாம் பார்வையாக பார்க்கும்போது சப்தபவீத சக்திகள் தோன்றுகின்றன. உதாரணமாக சந்திரன் தனது ஆட்சி வீடான கடக ராசியை, மகரத்தில் இருந்து நோக்குதல். இத்தகைய சப்த சக்திகள் பூரிக்கும் நாட்களில் ஏழு விதமான வண்ணக் கனிகளால் சந்திர பகவானை (மாலைகளாக, வஸ்திரங்களாக) அலங்கரித்து வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். இதனால் குடும்பத்துக்குள்ளேயே என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமல் பலரும் பல ஆலோசனைகளைத் தந்து குழப்பிக் கொண்டிருக்கின்ற நிலையில், சுமுகமான முடிவு ஏற்பட உதவும்.
ஸ்வேதம் என்றால் தெய்வீக சக்திகள் நிறைந்த வெண்மை என்று பொருள். வெண்மைக்கு உரியவர் சந்திர மூர்த்தி! பொதுவாக திங்கட் கிழமை பிரபஞ்சத்தில் வெண்மையில் உள்ள தேவ சக்திகள் பூரித்திட வழிபட வேண்டிய நாள். எனவே திங்கள் கிழமைகளில் வெண்மையான நறுமணப் புஷ்பங்களை சுவாமிக்குச் சார்த்திப் பெண்கள் அணிவது நல்ல மன அமைதியைத் தரும்.
சில சமயம் மகர ராசியிலிருந்து சந்திரன் கடக ராசியை நோக்கும்போது கடக ராசியில் கிரகங்கள் இல்லாமல் போவதுண்டு. அந்த நிலையில் உள்ள கடக ராசி வித்தக ராசி எனப்படும். இவ்வாறு கடக ராசி வித்தக ராசி நிலையை அடையும்போது நண்டு வழிபட்ட கும்பகோணம் அருகே திருந்துதேவன்குடி போன்ற தலங்களில் இறைவனுக்கு வெண் மலர்கள் சார்த்தி வழிபடுவதால் கணவன் பொறுப்புடன் இருப்பாரா, இல்லையா என்று பீதியுடன் இருக்கும் இல்லறப் பெண்களின் கவலைகள் தணிய வழி பிறக்கும். நண்டு வடிவப் பரிசுப் டெருட்களைத் தானமளிப்பதால் எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து வர வேண்டிய சகாயம் கூடி வரும்.
மூளைச் செல்களை ஆக்கப்படுத்துங்கள் |
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வகை உணவு வகையில், காரியத்தில் நாட்டம் ஏற்படுவதைப் போல, ஒவ்வொரு நாளிலும் அவரவருக்குரிய நட்சத்திர, ஜாதக கிரக அம்சங்களைப் பொறுத்து, குறித்த நேரத்தில் ஆன்மீகத்தில் நல்ல, ஆக்கப் பூர்வமான நாட்டம் ஏற்படும். இதனை அறிந்து நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கபாலத்தில் உள்ள லட்சக் கணக்கான செல்களில், ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடத்தில், ஒவ்வொரு வகையான கபாலச் செல்கள் ஒவ்வொருவருக்கும் நன்கு ஆக்கம் பெறும். இதில் ஆக்கம் பெறும் இடம் அனைத்து ஜீவன்களுக்கும் கபாலத்தில் ஒரே பகுதியில் அமைந்தாலும், ஆக்கமுறும் கபாலச் செல்கள் அவரவர் ஜாதகத் தன்மைக்கு, கர்ம வினைகளுக்கு ஏற்ப மாறும். இதனால்தான் மனித மனநிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை!
மானுட உடலே நவகிரக அமைப்புடன் துலங்குவதால், வானில் கிரக சஞ்சாரங்களுக்கு ஏற்ப, உடலிலும் அந்தந்த நவகிரகப் பகுதிக்கான இடங்களில், பல நாள ஆக்க சஞ்சாரங்கள் தோன்றுவதை நன்கு உணர்ந்திடலாம். இதனால்தான் மனம், உள்ளம், உடல் நிலை தினமும் ஒரே மாதிரியாக அமைவதில்லை! இதனை நன்கு உணரவே, ஒவ்வொருவரும் தினமுமே அந்தந்த நாளுக்கான கிரக நிலைகளை வீட்டில் பூஜையில் ஒரு காகிதத்தில், போர்டில் அந்தந்த நாளின் ஜாதகச் சக்கரமாக எழுதி, கண்டு, அறிந்து, தரிசித்து, வழிபட்டு வந்தால், நாளடைவில் வானில் கிரக நிலைகள் (மேஷத்தில் சூரியன், சிம்மத்தில் குரு என்றவாறாக) இது நன்கு மனப்பாடமாகி, நல்ல மானசீகமான கிரக பூஜைக்கு நன்கு வித்திடுவதாகும்.
நாகலிங்கமரம் இலஞ்சி
உதாரணமாக, வலது கண் சூரிய மூர்த்தியையும், இடது கண் சந்திர மூர்த்தியையும் குறிப்பதால்தான், எப்போதும் சூரிய சந்திர, சாட்சித்வத்தின் சலனமாக, கண் இமைத்தல் விநாடி தோறும் நமக்கு நிகழ்கின்றது. உண்மையில் கண் இமைக்கும் நேரம் என்று காலத்தைச் சுட்டிச் சொல்வதால் காலஞானத்தை அளிக்க வல்லதும் கண் இமைப்பே!
எனவேதான் கண்களை மூடி, காலத்தைக் கடக்கும் முகமாக தியானம் நிகழ்கின்றது. காலத்தை வென்றமையால் தேவர்களுக்குக் கண்கள் இமைப்பதில்லை! இவ்வாறு கண் இமைத்தலானது, சூரிய, சந்திரக் கோள் சலனங்களை உணர்த்துவதாக இருக்கின்றது. உறங்கும் போது கண் இமைத்தல் இல்லாது போல் தோன்றிடினும், இது சூரிய, சந்திர அஸ்தமன நிலைகளைக் குறிப்பதாகும். இதனால்தான் தேவையின்றி வீண் உறக்கம் கூடாது என்பர்.
உதாரணமாக, செவ்வாய்க் கிழமை உங்கள் சிரசில் எவ்வகைக் கபாலச் செல்கள் ஆக்கம் பெறுகின்றன என அறிதல் வேண்டுமா? கிழக்கு நோக்கி அமருங்கள். இப்போது உங்களுடைய தலையின் தென்கிழக்குத் திசை பாகம் எது என அறிந்திடுங்கள்! செவ்வாய்க் கிழமை அன்று கபாலத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கபாலச் செல்கள் ஆக்கம் பெறும். அதாவது, கபாலத்தில் வலது காதிற்குப் பின்புறப் பகுதியில் உள்ள கபால நாளங்கள் வளம் பெற்று ஆக்கமுறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளமையால், இந்த தெய்வீக விஷயத்தை நன்கு உணர்ந்து இதற்கான பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு இந்நாளை நன்கு தெய்வீகப் பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதனுடைய சில தாத்பர்யங்களும்தாம் , யோகினித் திசை வார சூலை விளக்கங்களாகவும் பஞ்சாங்கத்தில் அமைகின்றன. இவ்வாறு கபாலச் செல்கள் ஆக்கம் பெறும் பகுதியை, அந்தந்த நாளுக்கான யோகினிக் காலச் சக்கர விளக்கமாக, பஞ்சாங்கம் மூலம் அறிதல் வேண்டும்.
செவ்வாய்க் கிழமை என்பதால் பூமி சம்பந்தப்பட்ட காரியங்களாக, வீட்டைச் சுத்திகரித்தல், வீட்டில் உள்ள மிகவும் பழையனவற்றைக் கழித்தல், காணாமல் போன அல்லது மறதியால் எங்கோ வைத்தவற்றைத் தேடுதல், மின் இணைப்பு மற்றும் பழுதடைந்த சாதனங்களைச் சீராக்குதல், வீட்டில் உள்ள முதியவர்களுடைய சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றுதல், மரம், செடிகளுக்கு நன்கு பாத்தி கட்டுதல் போன்ற வகைக் காரியங்களை நிறைவேற்றிட, பழையன கழிதலுக்கு நன்கு உதவும் நாள்.
பொதுவாக, பழையன கழிதல் எனப்படுவதான குப்பைகளை அகற்றுதலுக்கு உரிய, பழவினைகளைக் கழிக்க உதவும் நாளாக விளங்குவதால், அலமாரிச் சந்து, கட்டிலடி, மாடிப்படிக் கீழ்ப் பகுதி என்று தினமும் தொட்டிடாத பல இடங்களிலும் நன்கு பெருக்கித் தூய்மை செய்து விட்டு, அப்பாடா என அமரும்போது ஒரு புது வகை உற்சாகம் மனதினுள் தோன்றுவதை உணர்ந்திடலாம். இதற்குக் காரணம், வீட்டிலிருந்து பழைய வினைகள் நன்கு கழிவதே ஆகும்.
ஆம், வினைகள் கழியக் கழியவே நல்ல மனதார உணரும்படியான ஆனந்தம் உண்டாகும். ஏனைய ஆனந்தங்கள் தற்காலிகமானவையே! ஆனால் மீண்டும் வினைகள் கூட விடாது மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அழுக்கு, குப்பை, கூளங்களும் ஒரு வகையில் கர்ம வினைப் பளுவையே குறிக்கின்றன. தெருக் குப்பையானது, சமுதாயத்தில் பொது மக்களின் ஒட்டு மொத்தக் கர்ம வினைகளின் அழுத்தத்தைக் குறிக்கின்றது.
சாம்பிராணி தூபம் இடுதல், பூச்சொரியல் உற்சவம் போன்றவை சமுதாயக் கர்ம வினைச் சுமையைத் தணிக்கும். எனவே செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சாம்பராணி தூபம் இடுதல், நிறைய ஊதுபத்தி ஏற்றுதல், குறைந்தது மூன்று மணி நேரம் விளக்கு ஏற்றி வழிபடுதலானது, கர்ம வினை அழுத்தத்தைத் தணிக்க உதவும். ஆலயத்தில் ஒரு பெரிய அகலை வைத்துப் பெரிய திரியையும் வைத்துத் தீபம் ஏற்றி, குறைந்தது 5 மணி நேரமாவது தீபம் மிளிரச் சேவை செய்வது மிகவும் சிறப்பான சமுதாய இறைப் பணி ஆகும்.
அவரவர் அனுபவிக்கும் துன்பங்கள் அவரவர் கர்ம வினைகளின் விளைவுகளே என அனைவரும் உணரத் தொடங்கிடில் பிறரை நோகும், வெறுக்கும் துர்குணங்கள் குறைந்து சமுதாயத்தில் நல்அமைதி வாய்க்கும்.
தினசரி ஆலயங்களில், இறைவழிபாட்டுத் தலங்களில், சாம்பிராணி தூபம் இட்டுப் பரவெளியைத் தூய்மைக்கான வழிபாடாக ஆற்றி வந்திடில், வன்முறையை அகற்றி, மக்களிடையே ஒற்றுமையைப் பேணி சமுதாய நலம் காத்திடலாம்.
பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டுமா ? |
பல குடும்பங்களிலும், “பிள்ளைகள் சுமாராகவே படிக்கின்றார்கள். விளையாட்டுப்புத்தி நிறையவே இருக்கின்றது!” என்பதே பெற்றோர்கள் பலருடைய பெரிய மனக் கவலை ஆகும். எந்த நாளில் எந்த சுவாமியைக் கும்பிட்டால் படிப்பு நன்றாக வரும் என்று பள்ளி, கல்லூரிப் பருவத்தில் மிகவும் தாமதமாக, நல்வழி தேடுகின்றனர்.
எதையுமே ஒரு சில பூஜைகளிலேயே உடனடியாக அடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் பேராசையே. இருந்த போதிலும், பள்ளிப் பருவம் வந்ததும் படிப்பு சரியாக வரவில்லை என வேதனை அடையாது, கல்விகாரகரான புத மூர்த்திக்கு உரிய, புதன் கிழமை, நவமி திதி, தினசரி புத ஹோரை நேர பூஜைகளை முறையாக, பெற்றோர்கள், தாமும், சின்னஞ் சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுடனும், ஆரம்பத்தில் இருந்தே கடைபிடித்து வந்திடில், எதிர்காலக் கல்வி சம்பந்தமான பிரச்னைகளை எளிதில் தணித்திடலாம்.
தினமும் பிள்ளைகளைச் சந்தனம் அரைக்கச் செய்து, பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதியின் பாதங்களுக்கு இட்டு வரச் செய்தலையும், ஆரம்பத்தில் இருந்தே கடைபிடித்து வந்தால், பிள்ளைகளின் படிப்பு பற்றிய மனக் கவலைகள் பெரிதும் குறையும்.
குறும்பலா திருக்குற்றாலம்
எந்தப் பிள்ளையும் மக்குப் பிளை என்று பட்டம் கட்டி, ஓரம் கட்டி ஒதுக்கி விடாதீர்கள். இறைவன் ஒவ்வொருவருக்குள்ளும் பல அபூர்வமான திறமைகளைப் பதித்து வைத்துள்ளார். பள்ளிப் பருவமானது, புத்தகங்களில் உள்ள வாக்கியங்களைத் திணிப்பது என்று இல்லாமல் அவரவருக்குள் மறைந்துள்ள திறனை ஆக்கப்படுத்துவதே ஆகும். இதுவும் ஒவ்வொரு ஆசிரியருடைய இறைச் சேவைகளுள் ஒன்றாகும்.
ஆசிரியப் பணி, சிவாச்சாரியார் பணி போல மிக மிகப் புனிதம் நிறைந்த பணி! ஆசிரியர்கள் யாவரும் கலைமகளின் நல்வரங்களைப் பெற்றுத் தரும்,
* தினசரி புதஹோரை நேரத்திலும்
* புதன் கிழமை தோறும்
* ஒவ்வொரு நவமி திதியிலும்
* ஒவ்வொரு வியாழனில் குரு ஹோரை நேரத்திலும்
- பல விசேஷமான பூஜைகளைத் திறம்பட ஆற்றி வருதல் வேண்டும்.
* வீணை இன்றி அருளும் ஸ்ரீஞானசரஸ்வதி, வீணையோடு அருளும் ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தி, திருமகளுடன் இணைந்து தோன்றும் ஸ்ரீஹயக்ரீவர், தலைக்கு மேல் உயரமான வால் உள்ள, வாலில் மணி கட்டியும் உள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திர நாள் வழிபாடு போன்ற கல்வித் துறைக்கான வழிபாடுகளைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து கடைபிடித்து வருதல் வேண்டும்.
பொதுவாக, சதய நட்சத்திரமானது ஆட்சித் தன்மைக்குத் தேவையான தேவ சக்திகளைத் தருவதாகும். தற்போது பல பெற்றோர்கள் விருப்பமே பிள்ளைகளும், பெண்களும் நன்கு படித்து, உயர்ந்த கல்விப் பட்டம் அடைந்து, நல்ல பெரும் பதவியில் அமர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்பதுதானே. இதற்கு உதவுவதே நவசௌம்ய சக்திகள் திரளும் புதன் கிழமையாகும். (சௌம்ய வாரம் = புதன் கிழமை)
“ சௌம்ய சௌம்யாய சம்யுக்த சௌம்யமே
சௌம்ய பூஷண சௌம்யதேவ
சௌம்யவேத சுதபுதாகரம்!”
என்றும்
புதசாகர நல்புத்தி புவிதனிலே பூத்திடவே
நித்தியக் கலைவாணி நின் அருள் நாடியே
வித்தக நாயகி! வேம்புனல் நிரவுகாள்!
என்று 108 முறை ஓதி ஒன்பது வகை நறுமணப் பூக்களால் புதன் கிழமை, நவமி திதி தோறும் பூஜித்து வருதலால், பிள்ளைகள் நன்கு படிப்பர்.
நிலையான வருமானம் பெற ... |
96 வகைத் தர்ப்பண நாட்களில், வியாகத யோக கால நாள், தந்தை வகைப் பித்ருக்களுக்கும், வைதிருதி யோக கால தினம் தாய் வகைப் பித்ருக்களுக்கும் மிகவும் ஏற்புடையவை! தேவர்களைப் போல, பித்ருக்களும் நமஸ்த ஜோதி வகை சரீரங்களைப் பூண்டவர்கள் ஆவர். தந்தை வர்க்கம், தாய் வர்க்கப் பித்ருக்கள் என்று தந்தை, தாய் வழிப் பரம்பரை மூதாதைய தேவர்களை நமது அறிவிற்கு புரியும் வகையில் எடுத்துச் சொன்னாலும், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என அனைவர்க்கும், அனைத்திற்கும் பித்ருக்கள் உண்டாதலின், பித்ருக்களிடையே ஆண், பெண், குலம், இனம் என எவ்வித பேதமும் கிடையாது.
சித்தர்கள், மகான்கள், மாமுனிகள், யோகிகள், ஞானிகள், மூம்முட்சுக்கள் என்றவாறாக, உத்தம இறைநிலைகளைக் குறிக்கின்ற அடைமொழிகள் போலவே, பித்ருக்களிலும் தரணி பந்துக்கள், ஜெயக்ஷீராஸ், ஞானப்பதிகள், புஷ்ப தோடர்கள் என்றும் குறிப்பது உண்டு. இயற்கையான மரணம் அல்லாது, கடுமையான நோய், விபத்து, அகால மரணம், வன்முறைக் கலவரம், குண்டு பாய்தல், கொலை போன்ற பல அசுபமான முறையில் குடும்பத்தில் மரணம் ஏற்பட்டிருந்தால், இத்தகைய மரண தோஷங்கள் தலைமுறையைத் தாக்காது காத்திட, தரணி பந்துக்கள், ஜெயக்ஷீராஸ், ஞானப்பதிகள், புஷ்ப தோடர்கள் போன்ற ஒவ்வொரு வகைப் பித்ருக்களும் தம் தவசக்திகளை அர்ப்பணித்து உதவுகின்றனர்.
அசோக மரம் இலஞ்சி
வைதிருதி யோக நாள் மிகச் சிறந்தச் சிரார்த்த, திவச, தர்ப்பண, படையல், மூதாதையர் வணக்க வழிபாட்டு நாளாகவும் துலங்குகின்றது. வியாழக் கிழமையும் வைதிருதி யோகமும்
கூடிவரும் நாட்களில் நாதவப் பதிதர்கள் என்ற வகைப் பித்ருக்கள் பூவுலகில் சஞ்சாரம் செய்து தம் சந்ததிகளுக்கு அருள்கின்றனர். இவர்கள் வைதிருதி யோக நாளில் பூலோகத்தில் சுவாமிக்கு அபிஷேகித்த இளநீரை (கோமுகம் மூலமாகப் பிரசாதமாகப் பெற்று) ஒரு துளி மட்டும் அருந்தித் தவம் புரிபவர்கள்.
எனவே இத்தகைய யோக நாட்களில் இளநீரால் சுவாமிக்கு, குறிப்பாக, பெருமாளுக்கு, சப்தமாதர்களுக்கு அபிஷேகம் செய்கின்ற வழிபாடு, நாதவப் பதிதப் பித்ருக்களுக்கு மிகவும் ப்ரீதியானதாகும்.
இளநீர்த் தீர்த்தம் எவருடைய கண்ணும் படா புனிதமான நாளீய பஞ்சனத் தீர்த்தம் என்பதை நாம் அறிவோம். ஏழு இளநீரைச் சுற்றி ஒரு மஞ்சள் துணி கட்டி, ஏழு (இல்லறப்) பெண்களைக் கொண்டு, இளநீர்த் தீர்த்தம் வடிவதைக் கூடக் காண இயலாது, மஞ்சள் வஸ்திரம் மூலமாக இளநீர் வடியும்படி, ஏழு சப்தமாதர்களுக்கும் ஒரே சமயத்தில் அபிஷேகம் செய்து, ஏழு விதமான வண்ணத் துணிகளை சப்தமாதர்களுக்குச் சார்த்தி வழிபட வேண்டும்.
எப்போதும் சப்தமாதர்களின் அருகில் அவர்களைக் காத்து ரட்சித்திட, ஸ்ரீகாப்பு கணபதி அருகில் வீற்றிருப்பார். ஸ்ரீகாப்புக் கணபதிக்கு, சிரசில் (தலையில்) சந்தனக் காப்பு, பாதங்களுக்குச் செந்தூரக் காப்பு, கைகளுக்கு மஞ்சள் காப்பு, திருமேனியில் வெண்ணெய்க் காப்பு, நெற்றியில் குங்குமக் காப்பு, கழுத்தில் விபூதிக் காப்பு, துதிக்கைக்கு வெண்ணைக் காப்பின் மேல் விபூதிப் பச்சிலை மற்றும் புஷ்பங்கள் வைத்து அலங்கரித்துப் பூஜித்த பின் தர்ப்பணம் இட்டிட, நாதவப் பதிதப் பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றிடலாம்.
தன் கணவனுக்கு, பிள்ளைகளுக்கு நிலையான வருமானம் இல்லையே என்று வருந்துகின்ற தாய்மார்களுக்கு இல்லறப் பெண்களுக்கு, நல்ல நிலை கிட்டிடப் பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும் பூஜை முறை இது! துரிதமான பலன்களும் கிட்டும் மிகவும் அபூர்வமான தர்ப்பண நாள்! நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நிலைத்த செல்வம் பெறும் வழி |
துவாதசித் திதியானது திருமகளாம் ஸ்ரீமகாலக்ஷ்மிக்கு உரித்தான தினமன்றோ! செல்வம் பெருக உதவும் பூஜா பலன்களை அளிக்க வல்ல நாளே துவாதசித் திதித் தினமாகும். அதிகமான கடன்களால் அவதிப்படுவோர்,
துவாதசியில் துளசித் தீர்த்தம் மட்டும் அருந்தி நோன்பிருந்து, மனதைச் சுத்திகரித்து, அமர்ந்த கோலத்தில் உள்ள திருமகளைத் தரிசித்து, விரதத்தைப் பூர்த்தி செய்து, ஏழைகளுக்கு இயன்ற அளவு வஸ்திரங்களைத் தானமாக அளித்தலால், நன்முறையில் தனபாக்யம் கிட்டும்.
பிறரால் பண நஷ்டம் ஏற்பட்டது என்று எண்ணுவதை விட, பொதுவாக உடல் ஒழுக்கக் குற்றங்கள், மன ஒழுக்கமின்மை, பெரியோர்களை மதியாமை, குடும்பப் பொறுப்பின்மை, தீய ஒழுக்கப் பாவ வினைகள் மற்றும் பூர்வ ஜன்ம வினைகள் போன்றவைதாம் நிதிப் பிரச்னைகளுக்குக் காரணமாகின்றன என்பதை நன்கு உணர்தல் வேண்டும்.
திருநின்றியூர்
தீயத்தூர்
திருவாகிய மஹாலக்ஷ்மீ நின்றவூரே திருநின்றியூர், திருநின்றவூராகின. இந்த இரண்டுமே திரு(மகள்) நின்ற தலங்களாகையால், செல்வம் நிலைத்திட உதவும் ஆலயங்களையும் கொண்டுள்ளதாகும். சீர்காழி அருகே திருநின்றியூரில் திருமகள் வழிபட்ட ஸ்ரீலக்ஷ்மீஸ்வரராகச் சிவ மூர்த்தி அருள்கின்றார். ஆவுடையார் கோயில் அருகே தீயத்தூரில், திருமகள் ஓராயிரம் பொற்றாமரைகளால் அர்ச்சித்து வழிபட்ட ஸ்ரீசகஸ்ர லக்ஷ்மீஸ்வரச் சிவ மூர்த்தி அருள்பாலிக்கின்றார். சென்னை - திருவள்ளூர் இடையில் திருநின்றவூரில் அபூர்வமான சுதை மூர்த்தி ராமருடன் ஜானகியாகவும், “என்னைப் பெற்ற தாயாரென” அமிர்தத்தினும் அமுதமான பெயர் கொண்டும், ஸ்ரீஹிருதயாலீஸ்வரரைப் பூஜித்து, திருமாலின் திருமார்பில் உறைய, திருமகள் தவம் பூண்டதாகவும் சிவ - வைணவத் தலமாகப் பொலிகின்றது.
வளர்பிறைத் துவாதசி, தேய்பிறைத் துவாதசி - இரண்டு துவாதசித் திதிப் பூஜைகளுமே நிதி வள ஆரோக்யத்திற்கு விசேஷமான பலன்களைத் தர வல்லனவாம். வளர்பிறைத் துவாதசித் திதியில் ஆற்றும் திருமகள் பூஜைகள் நன்முறையில் நிதி வரவைப் பெற்றுத் தர உதவும்.
முறையாக ஏற்பட்ட கடனடையவும், போதுமான நிதி வருமானம் பெறவும், வியாபார ஈட்டு தார்மீகமாகப் பெருகவும், வளர்பிறைத் துவாதசித் திதி பூஜை உதவும்.
தேய்பிறையில் வரும் துவாதசித் திதி பூஜையானது, புண்ய சக்தியை விரயம் செய்திடாது காத்திடவும், இருக்கின்ற வருமானமும், சேமிப்பும், செல்வமும் அநாவசியமான மருத்துவச் செலவுகள், வியாபார நஷ்டம் போன்றவற்றில் விரயமாகாமல் இருக்கவும் உதவும்.
இதற்காக ஒரே துவாதசி பூஜையிலேயே செல்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்து குதிக்க வேண்டும் என்று எண்ணுதல் கூடாது. நம்மிடம் உள்ள ஒவ்வொரு பைசாவும் நம் புண்ய சக்தியை செல்வ சக்தியாக மாற்றி வந்ததே ஆகும். ஆம், உங்களிடம் உள்ள ஒவ்வொரு பைசாவும் திருமகளின் அருட்கடாட்சமே! லட்சம், லட்சமாகப் பணம் இருந்தால் மட்டுமேதான் ஸ்ரீலக்ஷ்மீ கடாட்சம் இருப்பதாக எண்ணாதீர்கள்!
ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி
கஞ்சனூர்
இவ்வாறு நமக்கு என்று (பூர்வ ஜன்மமாக வந்துள்ள) புண்ய சக்தியைக் கொண்டுதாம் வீடு பாக்யம், குழந்தை பாக்யம், நோய் நிவர்த்தி, பண வரவு போன்றவை ஏற்படுகின்றன. நாம்தாம் எத்தகைய
பூஜைகளையும், விரதங்களையும் முறையாக, பக்தியுடன் கடைபிடிப்பதில்லையே, பின் எவ்வாறு நமக்குப் புண்ய சக்தி வந்து சேர்ந்துள்ளது என்று எண்ணிடலாம்.
நாம் பெற்றுள்ள அரிய மனிதப் பிறவியானது, பூர்வ ஜென்ம மலையளவுப் புண்ய சக்தியால் திரண்டு வருவதாகும். நம் வாழ்க்கைக் காலச் சக்கரத்தின் ஒவ்வொரு நொடியும் பூர்வ ஜென்மப் புண்ய சக்தியால்தான் ஓடுகின்றது.
அதெப்படி அவ்வளவு புண்யம் நம்மையும் அறியாமல் சேர்கின்றது?
கோபுர தரிசனம் கோடி புண்யம் என்பதாக, ஒவ்வொரு முறையும் ஆலய கோபுரத்தை, கோபுரக் கலசத் தரிசிக்கையிலும், புண்ணியத் தீர்த்தத்தில் நீராடுகையிலும் கோடியளவுப் புண்யம் சேர்கின்றது என்பது உண்மையே!
ஆனால் முறையற்ற செய்கைகள், தகாத எண்ணங்கள், பொய் பேசுதல், பிறர் மனை நோக்குதல், அதர்ம, அசத்யக் காரியங்களிலும் கோடிப் கோடிப் புண்ய சக்திகளை மனிதன் சில நிமிடங்களிலேயே கரைத்து விடுவதுடன் நல்ல செல்வமாகச் சேர்ந்துள்ள பூர்வ ஜனமப் புண்ய சக்தியும் விரயமாகி விடுகின்றன. இவ்வாறு புண்ய சக்தியை விரயம் செய்திடாது, நன்கு காத்துத் தேவையான அளவு ஆரோக்ய வளம், நிதி வரவு, குழந்தை பாக்யமாகப் பெற்றுத் தர உதவுபவைகளே பூஜை, விரத, கிரிவல வழிபாட்டு முறைகள் ஆகும்.
ஐசிங் சக்கரம் சாக்கோட்டை
புண்ய சக்திகள் பெருநிதியாகக் குவிந்து அதிக அளவில் பணம் வந்து, ஒரே வாரத்திலேயே கடன், மருத்துவச் செலவு என்று கரைந்து விட்டால், பணப் பாதுகாப்பு பற்றிய பயம் வந்து விட்டால் என்னாவது? எனவே, தேய்பிறைத் துவாதசி விரத பூஜைகள், புண்ய சக்திகளை விரயம் ஆகாது தடுப்பதுடன், இருக்கின்ற புண்ய சக்தியையும் காத்திடவும் நன்கு உதவும்.
தேய்பிறைச் சதுர்த்தி, சங்கடஹரச் சதுர்த்தியாய்ப் பிரகாசிப்பது போல, தேய்பிறைத் துவாதசியும் புண்யஸ்ரீபல விருத்தித் துவாதசியாகவும் ஒளிர்கின்றது. பெருமாள் ஆலயங்களில், சங்கடஹர சதுர்த்தி போல, தேய்பிறைத் துவாதசித் திருநாளை, புண்யஸ்ரீபல விருத்தித் துவாதசியாக, சமுதாய மக்கள் நலபூஜையாகக் கொண்டாடிட ஆவன செய்தல் வேண்டும்.
இதிலும் பெருமாளுக்கு உகந்த நாளான சனிக் கிழமையன்று கூடும் தேய்பிறைத் துவாதசியில் தாம் திருமகள், திருமாலுக்குப் பாத பூஜை செய்து, மக்களுக்கு ஏற்படும் நிதிக் குறைபாடுகளை நிவர்த்திக்கும் லக்ஷ்மீ கடாட்ச நல்வர சக்தியைப் பெற்றிட்டாள்.
எனவே துவாதசி திதியில் துளசித் தீர்த்தம் மட்டும் அருந்தி, கால்களில் பாதணிகள் அணியாது, எங்கும் இயன்றால் நடந்தே சென்று, விரதமிருந்து, அமர்ந்த கோல ஸ்ரீமகாலக்ஷ்மிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, (திருவான்மியூர் போன்ற ஆலயத் தூண்களில் காணப் பெறும் ஐசிங் எனப்படும்) லக்ஷ்மீ வாகனச் சக்கரத்திற்கு, மஞ்சள், குங்குமம் இட்டுத் துதித்து, புஷ்ப தானம் அளித்தலால், விரயச் செலவுகள் தணியும். புண்ய சக்தி விரயமாகிடாதிருக்கத் தக்கத் தற்காப்பு கிட்டும். தேய்பிறைத் துவாதசி தோறும் இதனைக் கடைபிடித்து வர, நிதி நிலைமையில் நல்ல நல்மாற்றங்களைப் பெற்றிடலாம்.
சிவமச்யுத பிரதோஷம் |
வளர்பிறைப் பிரதோஷம், தேய்பிறைப் பிரதோஷம் இரண்டிற்கும் விதவிதமான மகத்துவங்களும், நல்வரங்களும், பலன்களும் நிறையவே உண்டு. திரிதின ஸ்ப்ருக் என்பது ஒரே திதி, மூன்று தினங்களுக்கும் நிரவி வருவதாகும்.
இவ்வாறு 60 நாழிகையும் முழுமையாக மலர்ந்து வரும் தேய்பிறை திரயோதசிப் பிரதோஷத்திற்குப் பூர்வ சிவமச்யுதப் பிரதோஷம் என்ற பெயர். இவ்வாறு திரயோதசி 60 நாழிகையும் நிரவும் வண்ணமான பூர்வ சிவமச்யுதப் பிரதோஷம் நாள், நம் வாழ்வில் அமைவதும் மிகவும் அபூர்வமானதும், அற்புதமானதுமாகும்.
பலரும் பிரதோஷ நேரத்தில் சிவ ஆலயத்தில் சென்று கை கூப்பி வணங்குவதோடு பிரதோஷ வழிபாட்டை நிறுத்திக் கொண்டு விடுகின்றார்கள். இதில் விரதம், சிவநாம ஜபம், ஜபமாலை, ருத்ராட்சம், மணிகங்கண் போன்றவற்றை அணிதலான ஆன்ம சாதனப் பவித்ரக் காப்பு, அன்னதானம் மற்றும் இயன்ற தான தர்மங்களும் சேர்ந்திடில், பிரதோஷ வழிபாட்டுப் பலன்கள் பன்மடங்காகப் பெருகும்.
இந்த சிவமச்யுதப் பிரதோஷத்தின் போது,
* பருத்தி ஆடைகளை மட்டுமே அணிந்திருத்தல்
செண்பகமரம் தென்காசி
* ருத்திராட்சம், மணிகங்கண், ரட்சைக் காப்புகளைப் பிரதோஷத் திதி நேரம் முழுதும் அணிந்திருத்தல்
* ஆண்களாயின் உடலில் 18 இடங்களில் விபூதிக் காப்பு இட்டிருத்தல், பெண்களாயின் உள்ளங்கைகளில், பாதங்களில், முகத்தில் மஞ்சள் பூசி இருத்தல்
* குறைந்தது 21 சிவலிங்க மூர்த்திகளைத் தரிசித்தல்
* 12 நந்தி மூர்த்திகளின் கொம்புகளிள் வழியே ஈஸ்வரனை, ஈஸ்வரியைத் தரிசித்தல், அல்லது 12 முக்கியமான அரசு, ஆல், வேம்பு, வில்வம், துளசி போன்ற 12 விருட்சங்களைத் தரிசித்தல்
* அமரும்போது தரையில் அமர்தல் அல்லது மரப் பலகை, மர நாற்காலி போன்று மர வகைச் சாமான்களில் மட்டுமே அமர்தல். இரும்பு போன்ற உலோகம் மற்றும் பிளாஸ்டிக் இருக்கைகளில் இன்று அமராதிருத்தல்
* பிரதோஷ நேரம் முழுவதும் (மாலை 4 மணி முதல் 6.30 வரை) ஆலயத்தில் இறைவழிபாட்டிலேயே இருத்தல்
* நல்ல உடல் ஆரோக்யம் உள்ளவர்கள், ஆலயத்தில் சற்றும் அமராது, நின்று, நடந்த நிலையிலேயே ஆலயத்தில் இருத்தல்
*பிரதோஷ நேரம் முழுதும் கைகளில் ருத்ராட்சம், ஸ்படிகமாலை தாங்கி சிவய சிவ, சிவசிவ, நமசிவாயா, சிவாய நம என்று தொடர்ந்து மனதார ஓதி ஜபித்தல்
*தேவாரத் தமிழ் மறை மற்றும் தேவமொழியின் மறைகளை ஆலயத்தில் ஓதுவித்தலுக்கு உதவிடுதல்
* நந்திக்கு அழகாகப் பட்டாடை சார்த்தி அலங்காரம் செய்து பூஜித்தல்
* கும்பகோணம் அருகே பயரி போன்ற மிகவும் பிரபலமாகாத மிகவும் பண்டைய, பழமையான கிராமச் சிவாலயத்தில் பிரதோஷப் பூஜை நடத்துதல் போன்றவாறாகக் கொண்டாடுதல், பிரதோஷ பூஜைப் பலன்களைப் பன்மடங்காக்கி, காரிய சித்சக்திகளையும் பெற்றுத் தரும்.
இவற்றில் கிட்டும் பலாபலன்களில் ஒன்றாக, தெய்வீகக் காரியங்களுக்குத் தடையாக இருப்பவர்கள் மனம் மாறிட வழி பிறக்கும்.
இவ்வாறாகப் பிரதோஷ நேரம் முழுதும் ஆற்ற வேண்டிய இறைப் பணிகள் நிறைய உண்டு. இல்லறப் பெண்கள் இன்றையப் பிரதோஷ நேரம் முழுதும் பூக்களைத் தொடுத்தல், கோலமிடுதல், விளக்கேற்றுதல் போன்ற திருப்பணிகளை ஏற்று நடத்துதலால், 60 நாழிகை உள்ள பிரதோஷ நாளை நன்கு பயன்படுத்திக் கொண்டிடலாம். இதனால், பாசமற்று, விச்ராந்தியாக வளரும் ஆண் / பெண் பிள்ளைகள், குடும்பத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ள உதவும்.
சிவமச்யுத பிதோஷத்தை மூன்று நந்தி மூர்த்திகளுக்கு மேல் உள்ள ஆலயங்களில் கொண்டாடுதலால், கணவன் தன் பெற்றோர்களை, தன உறவினர்களை மதிப்பதில்லை, அனுசரித்து நடந்து கொள்வதில்லை என்று விசனப்படும் பெண்மணிகளின் மனக் கலக்கங்கள் தீர வழி பிறக்கும்.
சுக்ர மூர்த்தியின் வக்ர கதி |
ஒரு கிரகம் தான் செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் நகரும்போது அதை வக்ர கதி என்கிறோம். இவ்வாறு சுக்ர மூர்த்தி வக்ர கதியை அடையும்போது சில சுக்ர பூஜைகளை மேற்கொள்தல் நல்லது.
செல்வம், கீர்த்தி, பட்டம், திருமண தோஷ சுத்தி, கர்மவினைக் கழிப்பு போன்ற பலவற்றிற்கும் சுக்கிர சக்திகள் உதவுவதால், சுக்ர சக்திகள் நிறைந்தவற்றை வழிபடுதலும், நீல நிற வஸ்திரங்கள், ஆடைகள், பொருட்களைத் தானமாக அளித்தலும், இழந்த பண மீட்பு, நஷ்ட ஈடு பெறுதலுக்கு உதவும். நிதி சம்பந்தமானதுமான நற்பலன்களைச் சுக்ர வக்ர கதிப் பூஜை மூலமாகப் பெற்றிடலாம்
பொதுவாக, வக்ர கதியில் சுக்ர மூர்த்தி இருக்கையில் சுக்ர மூர்த்திக்கு உரிய விசேஷமான பூஜைகளுடன் வழிபடும்போது சில அரிய பிராயசித்தங்களை எளிதில் பெற்றிடலாம்.
ஸ்ரீவெண்ணீற்று உமையம்மை ஆச்சாள்புரம்
ஸ்ரீவேதஆஞ்சநேயர் ஆச்சாள்புரம்
• சரியான வழியில் பணத்தைச் சம்பாதிக்காது குறுக்கு வழியில் சம்பாதித்தல்
* லஞ்சம், ஏமாற்றுதல், சூதாட்டம் மூலமாக வந்த பணம்
* வியாபாரத்தில் பொருட்களுக்கு மிக, மிக அதிகமான விலையை வைத்து விற்று வந்த பணம்
*பிறர் பொருளை, கீழே கிடந்த பொருளை உபயோகிப்பதால் சம்பாதித்த கர்ம வினைகள்
* மாமனார், மாமியார், பெற்றோர்களின் சொத்துக்களை, வீடு, வாசலை முறையற்ற விதத்தில் பயன்படுத்திச் சேர்த்த கழிப்பு வினைகள்
* (ஓசியில் போன்கால்கள், குண்டூசி, ஆபீஸ் கவர்கள், வாகனங்கள் என்றவாறாக) கம்பெனி, அலுவலகப் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்திச் சேர்த்த கழிவினைக் கர்மங்கள்
- போன்றவற்றினால் பலத்த கர்ம வினைகள் சேர்ந்து, உடலை, நாளங்களை அழுத்தும். மூச்சுத் திணறுதல், திடீரென்று எதிர்பாராத விதமாகக் கடுமையான உடல்வலி போன்றவை ஏற்படக் காரணமே இவ்விதக் கர்ம வினைகளேயாகும்.
சுக்ர மூர்த்தி வக்ர கதியில் வருகையில், சுக்கிரப் பாதையில் ஏற்படும் அபூர்வமன வக்ர சுழற்சிக் கிரண சக்திகள், அதர்மக் கர்ம வினைகளுக்கான பாவ நிவாரணிகளைத் தர வல்ல, மிகவும் விசேஷமான ஆச்சாளக் கிரணங்களைத் தோற்றுவிக்கின்றன.
சுக்ரன் நேரே செல்கின்ற பாதைக்கு ஆச்சாளம் என்று பெயர். வக்ர கதியாகச் சுக்கிர மூர்த்தி வருகின்ற பாதைக்கு ஆச்சாளகரம் (ஆச்சாள அகரம்) என்று பெயர். பொதுவாக வக்ர கதி சக்தி நிறைந்த தலங்களுக்கு அகரம், ஆச்சாள்புரம், அகரமாங்குடி என்று அகர வகைப் பெயர் அமையும். இவை யாவும் சுக்ர சக்திகள் நிறைந்தவையாகும். அ, ஆ என்று எழுதும் போது, அட்சர (எழுத்துக்) கோடுகள் வந்த வழியே செல்வதாக அமைகின்றன அல்லவா!
இறைவழிபாட்டிற்காக, வான்வழியே பறந்து சென்ற ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி, ஓரிடத்தில் வக்ர சுழற்சி கதிக்கான நல்வர சக்திகள் நிறைந்திருப்பதைக் கண்டு, தான் வந்த வழியே அப்படியே திரும்பப் பார்த்து வந்து அத்தலத்தில் சிவலிங்ப் பிரதிஷ்டை செய்து, வழிபட்ட தலங்களுள் ஒன்றே சிதம்பரம் அருகே உள்ள ஆச்சாள்புரம் ஆகும். எனவே வக்ர கதியில் செல்லும் கோளங்கள் வழிபடும் தலங்களில் ஆச்சாள்புரமும் ஒன்றாகும். சுக்ராச்சாரியார் தினமும் வழிபடும் தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.
இங்கு ஆச்சாள்புரம் ஆலய முன் மண்டப வலப்புறத் தூணில் ஸ்ரீஆஞ்சநேயர் வழிபடும் லிங்க தரிசனத்தைப் பெற்றிடலாம். மிகவும் சக்தி வாய்ந்த தூண்! சுக்ரபாண லிங்கங்களுள் இதுவும் ஒன்று. இங்கு மூல நட்சத்திர, சனிக் கிழமை வழிபாடுகளை ஆற்றுவது நல்ல செல்வ வளத்தைத் தரக் கூடியதாகும்.
ஆச்சாள்புரம்
சுக்ர வக்ர கதி காலத்தில், சிதம்பரம் அருகில் உள்ள இந்த ஆச்சாள்புரம் சிவாலயத்தில் ஸ்ரீஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் விசேஷமானது. சுக்ர சக்திகளும் பண வரவிற்கு நல்வழி வகுப்பதால், வக்ர சக்திகள், நல்வர சக்திகளை “அ, ஆ” எழுத்துக்களைப் போலச் சுழித்துச் செல்கையில், அவற்றின் சக்திகள் பல்கிப் பெருகும்.
ஒரு யுகத்தில் இங்கு ஆச்சாள்புரத்தில் புனிதமான ஆற்றில் பல வக்ரச் சுழிகளுடன் நீர் புரண்டோடி, ஆறாறு தீர்த்தங்களாக இங்கு நன்கு பொலிந்தன. பண்டைய காலத்தில் அறுகோணத் தீர்த்தங்கள் நிரம்ப நிரவிய தலம். ஆறு என்ற எண்ணின் தலமூல சக்திகள் நிறைந்த தலம்.
சுக்ர மூர்த்தி ஒரு யுகத்தில் வக்ர கதியில் இருந்த போது, சுக்ர மூர்த்தியே வேண்டியபடி, ஸ்ரீராமரின் ஆக்ஞையின் பேரில், இங்கு ஆச்சாள்புரத்தில் ஆஞ்சநேயர் சிவலிங்க வழிபாடு ஆற்றினார். எனவே ஸ்ரீஆஞ்சநேயரும் வக்ர கதியில் பின்னே பறந்து வந்து வழிபட்ட தலமுமாவதால், சுக்ர சக்திகள் மிகுந்த தலம்.
குரு ஸ்தானம் போல சுக்ர ஸ்தான சக்திகளும் திருமண தோஷ நிவர்த்திக்கான சுழல்புனல் சக்திகளைத் தருவதாகும். சித்தர்களின், மகரிஷிகளின், தேவர்களின் புஷ்ப விமானம் போன்ற திருவிமானங்களின் சூக்குமப் போக்குவரத்து என்றும் நிலவும் தலம். சம்பந்தர் பெருமான், பெருமணமாம் திருமணம் பூண்டு, சிவலோக ஸ்வர்ண விமானத்தில் பலரையும் இட்டுச் சென்று முக்தி தந்த திருத்தலம்.
ஒரு யுகத்தில் சுக்ர மூர்த்தி தம் (வக்ர) கதிப் போக்கில், ஏழு கிரக சங்கமங்களை அடைந்து, சப்தாச்சாளத் தவம் புரிந்து, சப்தமாதர்களையும் வணங்கிய தலமே ஆச்சாள்ராமவள்ளி எனப்படும் தலமாகும். லால்குடி அருகில் ஆச்சாள்ராமவள்ளி உள்ளது.
வக்ர கதியில் கர்ம வினைக் களைவிற்கு ஆச்சா மர தரிசனம் உதவும். பண்டைய காலத்தில் ஏழு ஆச்சா மரங்கள் துலங்கிய தலமிது! திருச்சி - லால்குடி ஆச்சிராமவல்லி (ஆச்சாள்ராமவள்ளி என்றும் அழைக்கப்படும்) தலத்தில் உள்ள சப்தமாதர்களைச் சுக்ர வாரமாகிய வெள்ளியிலும், சுக்ர ஹோரையிலும், சுக்கிர மூர்த்தியின் வக்ர கதி நாளிலும் வழிபடுவது மிக மிக விசேஷமானது. செல்வம், பண வரவில் ஏற்படும் தோஷங்களைப் போக்க வல்ல தலம். வர வேண்டிய பண வரவை முறையாகப் பெற்றுத் தர வல்ல தலமும் கூட!
ஆயுள் கண்ட நிவர்த்தி |
எவ்வாறு நட்சத்திரமோ, திதியோ மூன்று தினங்களுக்கு நிரவி வந்தால் திரிதினம் எனப் பெயர் பெறுகின்றதோ, இதே போல் மிக மிக அபூர்வமாக, 27 வகை யோகங்களில் சிலவும் மிகவும் அபூர்வமாக மூன்று தினங்களுக்கும் நிரவி வந்தமையும். இவ்வாறு அதிகண்டம் என்னும் யோகம் மூன்று நாட்களுக்கு நிரவி வரும்போது அது திரிதின அதிகண்ட யோக நாளாக மிளிர்கின்றது.
புத்தாடைகள் அணிதல், ஆபரணங்கள் வாங்குதல், மருந்துண்ணல் என்று ஒவ்வொன்றிற்கும் உரிய விசேஷமான நாள், நட்சத்திரம், திதி போன்ற விளக்கங்கள் உண்டு. இதில் அதிகண்ட யோக நாள் பூஜையானது, ஜாதகத்தில் நாம் அறிந்தும், அறியாமலும் உள்ள பல கண்டங்களைச் சூக்குமமாக உணர்த்திப் பரிகாரங்களைப் பெற்றுத் தர வல்லதாகும்.
ஸ்ரீசந்திர பகவான்
மானாமதுரை
மேலும் வெளிநாடுகளில், வெளி மாநிலங்களுக்குச் சென்றிருப்போர், சில தீர்த்த வகைப் பூஜைகளை அதிகண்ட யோக நாளில் கைக் கொண்டு ஜலகண்ட தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
மேலும், கலியுகத்தில் பலரும் தற்போது ஆங்கில மருத்துவ ரசாயன வகை மருந்துகளை ஏற்பதால், மாற்று விளைவுகளைத் தரும் ரசாயன சக்திகள் உடல் நாளங்களில் சேர்ந்து ரசாயனத்திய மாற்று சக்திகளாக உடலில் சேர்ந்திருக்கும். இவற்றிற்கான தீர்வுகளை, சௌம்ய சுத்தியாகவும் பெற்றிட அதிகண்டத் திரிதின சக்தி நாளின் பூஜை உதவும். நன்னீரை நிறையப் பூச்செடிகளுக்கும் ஊற்றி, ஏழைகளுக்கும் அளித்தல் ஜலகண்ட தோஷங்களைப் போக்க உதவும்.
காரைக்குடி அருகே மானகிரிச் சிவாலயத்தில் சங்கு வடிவில் உள்ள தீர்த்தக் குளம் போன்று பண்டைய ஆலயத் தீர்த்தங்களைச் சுத்திகரிக்க உதவித் தொண்டாற்ற உதவுவதால் சந்ததிகளுக்கு கண்ட தோஷங்கள் பரவாது தடுக்கப்படும். இவை தீர்வு பெறுவதற்கான நாள சுத்திகள் பூரிக்கும் நாளாகவும் அதிகண்ட யோக நாள் துலங்குகின்றது.
கழுத்திற்குக் கண்டம் என்று பெயர். கழுத்து என்பது மிகவும் முக்கியமான அங்கமாக ஆன்மீகத்திலும் உடல் மருத்துவத்திலும் துலங்குகின்றது. மேலும் ருத்ராட்ச மணிகள், மாங்கல்யம் போன்ற சுபமங்கள ஜப சாதனங்கள் கழுத்தைச் சுற்றி அமைவதாலும் உணவு, காற்று, நீர் போன்ற வெளி உலக ஜீவனப் பொருட்கள் கழுத்து மூலமாகவே உள் உடலை அடைவதாலும் கழுத்தாகிய கண்டம் மிகவும் சிறப்பிடத்தைப் பெறுகின்றது.
அதிகண்ட நாளில் நன்கு நீராடி கழுத்தில் தொண்டையின் நடுவில் சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், செந்தூரம் ஐந்தையும் இட்டு, ருத்ராட்சம், தாமரை, துளசி மணிகளை இயன்ற அளவு ஸ்வாமிக்குச் சார்த்தித் தானும் அணிந்து பூஜித்தல் விசேஷமானது. ஸ்ரீமணிகண்டீஸ்வரர்., ஸ்ரீகண்டீஸ்வரர் என்ற நாமம் பூண்ட மூர்த்தி சுவாமியை தரிசித்தல், பூஜித்தலால் பல விதமான கண்டங்களுக்குத் தோஷ நிவர்த்தியைத் தருவதாகும்.
காரைக்குடி அருகே மானகிரியில் ஸ்ரீகண்டீஸ்வரராகச் சிவபெருமான் அருள்கின்றார். இவ்வாறு ஸ்ரீகண்டீஸ்வர வகை நாமம் பூண்ட பல மூர்த்திகள் உண்டு. பொதுவாக விடமுண்ட கண்டராக இறைவன் அருளும் தலங்களில் ஸ்ரீகண்டீஸ்வரராக நாமம் பூண்டு இருப்பார்.
மயிற்கொன்றை திருக்குற்றாலம்
கலசஸ்ய முகே விஷ்ணு
கண்டே ருத்ர சமாஸ்ரிதா:
மூலத்தரஸ்திதோ பிரம்மா .....
என்ற பூஜைக்கான கலச மந்திரத்தில் கலசத்தின் முகம் ஸ்ரீவிஷ்ணுவாகவும், கண்டமாகிய கழுத்து ருத்ர மூர்த்தியாகவும், அடிப் பகுதி பிரம்மாவாகவும் வடிக்கப்படுகின்றது.
அதிகண்ட யோக நாளில் ஆலயங்களில் அம்பிகையின் கண்டத்திற்கு (கழுத்திற்கு) மஞ்சள் காப்பு இட்டும், நிறைய மாலைகளை அணிவித்தும் வழிபடுதல் ஜாதக ரீதியாக கணவனுக்கு, குழந்தைகளுக்கு உள்ள பல ஆயுள் கண்டங்களுக்குத் தக்க பரிகாரங்களைப் பெற்றிடலாம்.
நாள் முழுதும் கழுத்தில் விபூதி, குங்குமம், சந்தனம், மஞ்சள், செந்தூரம் ஆகிய ஐந்தும் கூடிய பஞ்சவதிக் காப்பு இட்டு இருத்தல் விசேஷமானது.
பசுவிற்குக் கழுத்தைத் தடவிக் கொடுத்தல் அதனை மிகவும் சந்தோஷப் படுத்தும். இதனால் தோல் நோய்க் கடுமைக்குக் காரணமான கர்ம வினை அழுத்தங்கள் தணிய வழி பிறக்கும்.
யானை, குதிரைக்கும் இவ்வாறு கழுத்திற்குச் சந்தனம், குங்குமம், விபூதி இட்டு, கழுத்தை நீவி உதவுதல் மிகவும் விசேஷமானது. இதனால் தப்பிப் பிழைத்தோம் என்று சொல்லும் வகையில் கடுமையான நோய், விபத்துகளில் இருந்து மீண்டோர் கண்ட தோஷங்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் கிட்டும்.
கடுமையான நோய்கள், அங்க ஹீனங்கள் உள்ளோரும் அவர்களோ, குடும்பத்தினரோ, மேற்கண்டவற்றைக் கடைபிடித்தல் வேண்டும். ஜாதகத்தில் உள்ள கண்டங்கள் மூலம் விபரீதமான விளைவுகள் ஏற்படாது தணிக்க, தற்காத்துக் கொள்ள இத்தகைய திரிதின கண்ட யோக வழிபாடு மிகவும் உதவும்.
ரோஹிணிவாபர சந்திர தரிசனம் |
ரோஹிணி நட்சத்திர நாள் பெண்களுக்குப் பல அரிய வரங்களைப் பெற்றுத் தரும் நன்னாள். ஸ்ரீச்யவன மஹரிஷியின் ஹோம மந்திர உச்சாடனத்தின் பலாபலன்களால், ரோஹிணி பச்சிளங் குழந்தையாக இருக்கும் போதிருந்தே, கருவில் திருஉடைவளாய், சிவ, விஷ்ணு பூஜையில் சிறந்து விளங்கினாள்.
பொதுவாக, சமுதாயத்தில் அவ்வளவாக உலவிடாது, காடுகளில், சமுதாயத்தில் பூமியடியில், ஆரண்யத் தவசியாக, பலரும் தரிசிக்க இயலாத நீண்ட நெடுங்குகைத் தவசியாகப் பொலியும் ஸ்ரீச்யவன மஹரிஷியிடம் உபதேசம் பெற்று அரிய பல பூஜைகளை அன்றும் இன்றுமாய் ஆற்றி வருபவளே ரோஹிணி நட்சத்திர தேவியாவாள்!
ஸ்ரீசந்திர பகவான் மானாமதுரை
சிவாவதாரத்தில் நீலகண்டனையும், விஷ்ணு அவதாரத்தில், நீலமேக சியாமளனான ஸ்ரீகிருஷ்ணரையும் பூஜித்து வருகின்ற ரோஹிணி தேவி அன்றும், இன்றுமாய், மொத்தத்தில் ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீசிவம் இணைந்த அவதாரமான ஸ்ரீசங்கர நாராயண பூஜையில் வல்லவளாகத் திகழ்கின்றாள். ரோஹிணி தேவி தினமும் பல வடிவங்களில் வந்து தரிசித்துச் செல்லும் தலங்களில், காஞ்சீபுரம் ஸ்ரீசத்தியபாமா சமேத ஸ்ரீபாண்டவ தூதப் பெருமாள் ஆலயம், மானாமதுரை ஸ்ரீசோமநாதர் ஆலயம், கும்பகோணம் அருகே சந்திரசேகரபுரம், மதுரை ஸ்ரீமீனாட்சி ஆலயங்களும் ஆகும்.
குருவாகை தரிசனம் ஐயர்மலை
அமாவாசையிலிருந்து மூன்றாம் நாளாக அமையும் சந்திர தரிசன நாளில், ரோஹிணி நட்சத்திரமும் கூடி வருவது மிகவும் விசேஷமானது. ஸ்ரீசந்திர மூர்த்தி ரோஹிணி, கார்த்திகை தேவியருடனும், திருவாதிரை நட்சத்திர தேவி சமேதராக மிகவும் அபூர்வமாகச் சில தலங்களில் (மதுரை, மானாமதுரை, அய்யர்மலை) அருள்கின்றார். ரோஹிணி தேவி ஸ்ரீசந்திர மூர்த்தியுடன் அருளும் தலங்களிலும், தாழமங்கை, திருவக்கரை, கும்பகோணம் அருகே சந்திரசேகரபுரம், பழையாறை போன்ற சந்திர சக்தித் தலங்களிலும் சந்திர தரிசன, சந்திர நட்சத்திர நாட்களில் வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களைத் தருகின்றது.
பதவி, அதிகார, அந்தஸ்து, செல்வாக்கு போன்றவற்றால் தொழிலில், பணியில், இல்லத்தில் பிறருக்கு அஞ்சி, அஞ்சி வாழ்வோர், மனோதிடம் பெற, சந்திர சக்தி உள்ள தலங்களில் வழிபட்டு நல்லருளைப் பெற்றிடலாம். சந்திர தரிசனத்தின் போது வெள்ளை நிற ஆடைகள், வெள்ளை நிறப் பூக்கள், வெள்ளை நிறச் சங்கு, கிண்ணத்தில் பால் போன்ற வெண்மையான பொருட்களுடன், திரவியங்களுடன் வணங்குதல் விசேஷமானது. இதனால் மனக் கொந்தளிப்புகள் அடங்க வழி பிறக்கும்.
பூஜை எதையும் நிகழ்த்தியவுடன், கை மேல் பலன்கள் கிட்ட வேண்டும், வேண்டுவது, விரும்புவது அனைத்தும் உடனே நிகழ வேண்டும் என்று எதிர்பார்த்தல் தவறான அணுமுறை ஆகும். >
பத பாத சக்திகள் |
திருமால் நெறி வாழி
திருமால் பதம் போற்றி
என்று ஓதி இறைவனின் திருப்பாதங்களைப் போற்றிப் பாடுவர். பதம், பாதம் இரண்டு தெய்வீகச் சொற்களுமே நல்ல இறை நல்வர சக்திகளைக் கொண்டவை. பதம் என்பதற்கு எழுத்தின் த்வனி என்ற பொருள் இருப்பினும், மூலம், ஆதாரம் என்றும், பாதம் என்றால் அடி, முடிவு என்றும் பொருளும் உண்டல்லவா!
பாத பத சக்திகளைக் கொண்டதே பசுவின் கோதூளி (புனிதமான பசுவின் காலடி பட்ட மண்) ஆகும். கோதூளியை நீரில் சிறிது கரைத்து நீராடுவது கோதூளி ஸ்நானம் ஆகும். இதனால் திடீரென்று வீட்டில் இறப்பு வருவதற்குக் காரணமான மிருத்யுஞ்ஜய தோஷங்கள் தணியும்.
மூலிகைச் சக்திகள் நிறைந்த இலை, தழைகளை மட்டும் உட்கொண்டு பெரு வலிமை கொண்டதாக இருக்கும் யானை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், சாத்வீகப் பதபாத யோகம் ஆகின்றது. யானைகளுக்கு வயிறு நிறைய உணவிட்டு, ஆலயத்தைப் பிரதட்சிணமாக நடக்கச் செய்து அதன் பாதம் பட்ட இடங்களில் நடைப் பிரதட்சிணம் செய்வது விசேஷமானகும். இதனால், தன் உடலைப் பற்றிய குறைபாடுகளால் மன வேதனைகளுடன் இருப்போர் தக்க மனோதைரியம் பெற உதவும். சுற்றம், உற்றத்தார் தரும் மதிப்பும் விருத்தியாகும்.
ஆண்டாள் திருவடி ஸ்ரீவில்லிபுத்தூர்
பத பாத சக்தி என்பது பாடல் இலக்கணத்தில் எழுக்கூற்றிருக்கை என்ற வகையில் தேர் வடிவில் அட்சரங்களை அமைத்துப் பாடுவதாகும். தங்கத் தேர் பவனியில் எழுக்கூற்றிருக்கைப் பாடல்களைப் பாடுதலால் ஆண், பெண் சந்ததிக்கான கோமளப் பித்ருக்களின் ஆசி கிட்டும்.
திருஅண்ணாமலை கோபுரத்து இளையனார் சந்நதிச் சுவர் போன்று, பல ஆலயங்களில் தேர் வடிவில் எழுக்கூற்றிருக்கை என்ற வகையில் தெய்வீகப் பாக்கள் வரையப்பட்டிருக்கும். அருணகிரிநாதரும், திருமங்கை ஆழ்வாரும் இவ்வகைப் பாக்களை இயற்றி உள்ளனர்.
இவற்றைக் கண்டு படித்து இதே போல் தேர் வடிவில் ஒரு மஞ்சள் கடுதாசியில் எழுதி, அமர்ந்தும், நின்றும், நடந்தும் 21 முறை படித்து, துதித்து, வணங்குதல் வேண்டும். இதனால் தன் பெண், பிள்ளைகள் வாழ்க்கையில் சரியாக நிலை பெறாத குறை தீர நல்லருள் உண்டாகும். குருவருள் பூரிக்கும் வியாழக் கிழமைகளில் இத்தகைய வழிபாடுகளை மேற்கொள்தல் நலம்.
வைணவப் பாடல்கள் சிலவும் தேர் வடிவில் எழுக்கூற்றிருக்கையாக அமைந்துள்ளன. தேடி, நாடிக் கண்டு படித்து, அறிந்து, ஓதி இன்று பெருமாள் ஆலயத்தில் தேர் வடிவில் பல தீபங்களை ஏற்றி வழிபடவும். தேர் மாடம் உள்ள இடங்களில், இயன்றால், தேரைப் பன்னிருமுறை வலம் வருதல் வேண்டும்.
தங்கத் தேர் நிர்மாணிக்கப்பட்டுள்ள தலத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தாரின் பெயரில் தங்கத் தேர் பவனிக்குப் பணம் கட்டி, அவர்களைத் தங்கத் தேர் இழுத்து ஓட்டச் செய்வதால், வீட்டிற்கு முக்கியஸ்தராக உள்ளவர் இறந்ததால் வாடும் குடும்பங்கள் முன்னுக்கு வர வழி பிறக்கும். முக்கியமான வீட்டுப் பொறுப்பாளர் நோய்வாய்ப் பட்டு இருப்பதால் அல்லல்படும் குடும்பங்கள் நிவாரணம் பெறவும் வழி பிறக்கும்.
கடுமையான நோய்களுக்கு நிவர்த்தி |
ஸ்திர வாரம் (நிலைத்த நாள்) எனப்படும் சனிக் கிழமையில், திருவாதிரை நட்சத்திரம் பரிபூரணமாக 24 மணி நேரமும் இருப்பது மிகவும் விசேஷமானது. சனீஸ்வர மூர்த்தி, ஈஸ்வரப் பட்டம் பெறுதற்கு முன் இவ்வாறு ஒரு கோடி சனி வாரத் திரிதினத் திருவாதிரைத் திரிதினத்தில் அருணாசல கிரிவலம் வந்து வழிபட்ட தலங்களுள் ஒன்றே திருச்சி அருகே வாத்தலை ஸ்ரீபாதாளீஸ்வரர் சிவாலயம் ஆகும். சனீஸ்வரர் விசேஷமாக அருளும் தலங்களில் இதுவும் ஒன்று.
ஸ்ரீபாதாள ஈஸ்வரன்
வாத்தலை
ஆதிரைச் சனிவாரத்தில் ஆவதும் ஆகிடும்தாமே
பாதிரைச் செம்மக் கோயில் வினைகளாம் பரிபாலாகும்
காதிரைச் சப்தநாளம் கனிந்துரக் கேட்கலாகும்
ஏதிரை என்றில்லாதே என்றுமே அன்னம் பாரீர் !!!
என்பது சனிக்கிழமையன்று கூடும் திருவாதிரை வழிபாட்டு பற்றிச் சித்தர்கள் அருளும் பரிபாஷைத் துதிப் பாடல்.
அதாவது, சனிக் கிழமை கூடும் திருவாதிரை அன்று, இதிலும் 60 நாழிகையும் திருவாதிரை நட்சத்திரம் உள்ள நாளில் சிவபூஜை ஆக்குதலானது பற்பல அரிய பலன்களைத் தருவதாகும்.
1. இதுவரைத் தடங்கல்களாக உள்ள நற்காரியங்கள், நின்று போனவை, நெடுநாள் கோர்ட் வழக்குகள் தீர வழிகளைத் தருவதுடன் நற்காரியங்கள் சித்தியாகிடவும் உதவும்.
2. பாதிரி மரம் தலவிருட்சமாக உள்ள ஆலயத்தில் அல்லது நந்தவனத்தில் பாதிரி மரம் உள்ள கோயிலில் வழிபடுதலால் கடுமையான நோய்த் துன்பங்கள் தணிய வழி பிறக்கும்
3. காது சம்பந்தமான நோய்களால் வாடுவோர், நாதஸ்வரம், கிளாரினெட் போன்ற குழாய் வகைக் காற்றுக் கருவிகளால் ஆலயங்களில், கிராமங்களில் இலவச இறைப்பாடல் கச்சேரி அமைத்து அனைவரையும் கேட்டு இன்புறச் செய்தலால் காது நோய்க்கான நிவாரணம் கிட்டும்.
4. மேற்கண்ட வகையில் பூஜைகளை ஆற்றிட, என்றுமே வீட்டில் உணவுக்கு முடை ஏற்படாது. உணவு ஏற்க முடியாத வியாதியும் அண்டாது காக்கும்
மேலும் அன்னம் சாராமல், உணவு உண்ண முடியாமல், நோயில் படுத்து வாடும் நிலையும் ஏற்படாது இப்போதிருந்தே ஆன்மீக ரீதியாகத் தற்காத்துக் கொள்ளலாம்.
ஓம் குருவே சரணம்