முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

குடும்ப ஒற்றுமை பெருக ...

உமை ஒரு பாகனாக, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரராக, இறைவனுடைய இடப்புறத் திருமேனியில் பார்வதி ஐக்யமாகிட வேண்டிக் கொண்டு இதற்காக ஆற்றிய அற்புதமான விரத பூஜைகளுள் வளர்பிறைச் சதுர்த்திப் பூஜையும் ஒன்றாகும்.
குடும்ப ஒற்றுமைக்காக, சமுதாய, நாட்டு ஒற்றுமைக்காக, கணவன், மனைவி இருவருமே காலையில் சூரிய உதய நேரத்தில் அரச மரத்தடி விநாயகரிடம் சங்கல்பம் செய்து கொண்டு, உண்ணா நோன்பிருந்து அல்லது ஒரே தம்ளர் பாலை அல்லது மோரை அல்லது ஒரே இளநீரை மட்டும் இருவருமே அருந்தி விரதம் பூண்டு, மறுநாள் காலை உமாமஹேஸ்வர தரிசனம், அதாவது, ஸ்ரீஅர்த்த நாரீஸ்வர மூர்த்தி தரிசனம் பெற்று வன்னி மரத்தடி விநாயக தரிசனத்துடன் காரிய சங்கல்ப சித்திச் சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருப்பூந்துருத்தி

கணவன், மனைவி இருவருமே விரத நேரம் முழுவதுமாவது தாமரை மணி, துளசி மணி மாலைகளைக் கழுத்தில், கைகளில் அணிதல் விசேஷமானது. இருவரும் கைக்கு ஸ்திர கங்கண், காசிக் கயிறு போன்றவற்றை வலது மணிக் கட்டில் அணிந்து விரத சங்கல்பம் ஏற்றல் மிகவும் நன்று.
80 வயதிற்கு மேற்பட்ட பழுத்த தம்பதிகளை ஒன்றாக நிற்க / அமர வைத்து, 12 முறை வீழ்ந்து அவர்களை நமஸ்கரித்து, அவர்களுக்கு விருப்பமான ஆலய தரிசனத்திற்காக, கார், ஆட்டோவில் அழைத்துச் சென்று காண்பித்து, தரிசிக்கச் செய்தலால் பெரிய இடத்தில் இருந்து வர வேண்டிய பாக்கிகள் வர ஏதுவாகும்.
பால் மறத்துப்போன பசுவைத் தாயாகப் பாவித்து, தன் தாய்க்கு எது பிரியமான உணவோ, கனியோ, காயோ அதனைச் செய்து /வாங்கி பசுவிற்கு அளித்தல் மிகவும் விசேஷமானது. இதன் பிறகு ஸ்ரீஅர்த்த நாரீஸ்வர தரிசனத்தைப் பெறுதல் நல்ல பலன்களை அளிக்கும்.
உள்ளூரில் ஸ்ரீஅர்த்த நாரீஸ்வர மூர்த்தி, தரிசனம் கிட்டாவிடில் வேப்ப மரமும், வில்வ மரமும் இணைந்துள்ள (சென்னை கோயம்பேடு பெருமாள் ஆலயத்தில் உள்ளது போன்று) ஸ்ரீபார்வதி சுயம்வரா விருட்சத்தைச் சுற்றி வந்து விருட்ச மூர்த்திகளின் ஆசிகளைப் பெறுதல் வேண்டும். அல்லது கன்று ஈன்றுள்ள மூன்று மாதத்திற்குள் உள்ள பசு, கன்றிற்கு நல்ல வெந்நீரில் நீராட்டி மஞ்சள் பூசி, கரும்பு மாலை சார்த்தி வழிபட வேண்டும்.
இதனால் தன்னுடைய கர்ம வினைகளால், கணவனுக்குத் துன்பங்கள், நோய்கள், அலுவலகப் பிரச்னைகள் ஏற்பட்டிருக்குமோ என்று மனதார வருந்தும் இல்லறப் பெண்களின் துயரங்கள் நீங்க வழி பிறக்கும்.
அலுவல், பணி, பிணக்கு காரணமாகப் பிரிந்து வாழும் குடும்பங்களில் குடும்பத்திற்கு ரட்சை சக்திகள் கிட்டிட, கூடுதல் பூஜா பலன்கள் கிட்டும். வயதான பெற்றோர், மாமனார், மாமியாரைப் பராமரிப்பதில் ஏற்படும் மன வேற்றுமைகளும், குடும்ப வாக்குவாதப் பிரச்னைத் துன்பங்களும் தீரவும் காரிய சங்கல்ப சித்திச் சதுர்த்தி பூஜை விரதம் உதவும்.

திருமணக் குறைபாடுகள் நீங்க ...

பலருக்கும் தம்முடைய திருமண வைபவம் நல்ல நாளில், நன்முறையில், நல்ல சடங்குகளுடன் நடைபெறவில்லையே என்று ஏக்கங்கள் நிறைந்திருக்கும். இத்தகைய மனக் குறையுடன் வாழ்வோர் சுப மங்கள சக்திகள் பெருகும் யோக நாட்களில் உதாரணமாக வளர்பிறை பஞ்சமி திதியுடன் வெள்ளிக் கிழமை அல்லது புதன் கிழமைகள் கூடும் நாட்கள், சித்தி யோகம், சுபம், சித்த யோகம் கூடும் நாட்கள் போன்ற அபூர்வமான, சுபயோக யோக நாட்களை நன்கு தெய்வீக பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இத்தகைய நாட்களில் ஆலயத்தில் இறைவனுக்குத் திருமண உற்சவம் நிகழ்த்தி வைத்தல் மிகவும் விசேஷமானதாகும். மேலும் மிருக விவாகம் என்பதான விலங்கினத்தில் பசு, நாய், மயில், கழுதை போன்றவற்றிற்குத் திருமணம் நடத்தி வைக்கும் பண்டைய வழிபாட்டு முறைகளும் நிறைய உண்டு. இவையும் சக்தி வாய்ந்த பூஜைகளே! ஆனால் வெறும் விவாக பாவனை என்று எண்ணாது மிருக விவாகத்தில் பதிந்துள்ள உள்ள தாத்பர்யங்களை உணர்தல் வேண்டும்.

ஸ்ரீபவஔஷதீஸ்வரர் சிவாலயம்
திருத்துறைப்பூண்டி

1. மேற்கூறிய நாட்களில் ஆலயத்தில் இறைவனுக்குத் திருமண உற்சவம் நிகழ்த்துதல்
2. வடை, பாயசம், அப்பளத்துடன் குறைந்து நான்கு ஏழைகளுக்கு வாழை இலை நிறைய உணவு அளித்தல்
3. ஸ்ரீமங்களாம்பிகை, ஸ்ரீநித்ய கல்யாணி, திருமணஞ்சேரி, திருமணம், திருமணமேடு போன்ற கல்யாணம், திருமணப் பெயர் உள்ள மூர்த்திகளின் ஆலயங்களில் / தலங்களில் வழிபடுதல், அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்துதல்
4. கல்யாணி, கல்யாண சுந்தரம் போன்ற பெயர்களை உடையோர்களுக்குத் தேவையான உதவிகளை அளித்தல் அல்லது இவர்களுடன் மனமார ஆனந்தத்துடன் உரையாடி அவர்களுடன் சேர்ந்து ஆலய வழிபாடு ஆற்றுதல்
5. வேதாரண்யம், திருவேற்காடு, திருநல்லம் போன்ற திருமணக் கோல ஆலய வழிபாடு
6. அகஸ்தியருக்குத் திருமணக் கோலக் காட்சி கிட்டிய தலங்கள் (ஆக்கூர், திருத்துறைப்பூண்டி, அகத்தியான்பள்ளி, வேதாரண்யம், திருமறைக்காடு)
7. தம்பதி சகிதம் மகிழ மரத்தடியில் அமர்ந்து குறைந்தது இரண்டு மணிநேரம் தியானித்தல், பூஜித்தல், ஜபித்தல்
இத்தகைய எளிய பூஜைகளால் தன் திருமண வாழ்வு பற்றி பலருக்கும் இருக்கும் ஏக்கங்கள், குறைகள், குற்றங்கள் தீர, தக்க பரிகாரங்கள் கிட்டும்.

நோய் நிவர்த்தி தரும் அங்காரக சஷ்டி

தேய்பிறைச் செவ்வாய், நோய் நிவாரண சக்திகளைத் தருவதாகும். வளர்பிறைச் செவ்வாய் நோய்கள் அண்டாது காத்திடக் காப்புச் (ரட்சா) சக்திகளைத் தந்திடும். இத்துடன் சஷ்டி திதி சேர்ந்தால் அது மிகவும் சக்தி வாய்ந்த நோய் நிவர்த்தி நாளாக அமையும்.
இத்தகைய நோய் நிவர்த்தி நாளில்தான் ஸ்ரீகிருஷ்ணர் நந்தகோபச் சிறுவர்களுக்கு இடுப்பில் மூலிகைக் கொடியுடன் கூடி அரைஞாண் கயிறாகிய இடுப்புக் கயிற்றைக் கட்டி விட்டு ஆசி அளித்தார். ஆண், பெண் இருபாலரும் இத்தகைய செவ்வாய் கிழமைகளில் கருப்பு நிற இடுப்புக் கயிறு, வலது, இடது மணிக் கட்டில் கட்ட வேண்டிய காசிக் கயிறு ஆகியவற்றை முருகன் சன்னதியில் வைத்து, ஆறு முறை வலம் வந்து வழிபட்டு, வீட்டிற்கு வந்து வடக்கு நோக்கி அமர்ந்து, இடுப்பிலும் கைகளிலும் கருப்புக் கயிற்றைக் கட்டிக் கொள்ள வேண்டும்.

ஆக்கூர் சிவாலயம்

இவற்றைக் கட்டிக் கொண்டு வீட்டில் அரை மணி நேரமாவது பூஜித்து, மாலை மீண்டும் கோயிலுக்குச் சென்று ஆலயத் தல மரத்திற்கு மஞ்சள் கயிறு கட்டி, கால பைரவருக்கு நன்றி செலுத்துதல் வேண்டும்.
தாம் இடுப்புக் கயிறு அணிவது மட்டும் அல்லாது குறைந்தது 12 குழந்தைகளுக்கு, சிறுவர், சிறுமியர்களுக்கு அரைஞாண் கயிறுகளையும், பெரியோர்களுக்கு மணிக்கட்டுக் கயிறுகளையும் தானமாக அளித்தல் மிகவும் விசேஷமானது.
மேலும் மலை, காடுகளில் வாழும் ஏழைப் பெண்களுக்கும், இயற்கையை அருங் கடவுளாக நம்பி வாழும் பெருமதிப்பிற்குரிய நரிக் குறவப் பெருமக்களுக்கும் வயிறார உணவளித்து, வஸ்திரங்கள், புஷ்பங்கள் அளித்து அவர்களுடன் அன்புடன் நன்கு உரையாடி, ஆலயத்தில் வழிபட உதவுவது மகத்தான சமுதாயப் பணியாகும்.
இதனால் உடல் பருமன், மந்த புத்தி, கடுமையான நோய்கள், காது கேளாமை, கண் சரியாகத் தெரியாமை, கடுமையான நோய்கள் காரணமாக, தனித்து ஒதுக்கப் பட்டோர் குடும்பத்தில் மதிப்பு பெற உதவும்.
நல்வரங்கள் தருபவை, தோஷங்களை நீக்குபவை, பித்ரு ஆசிகளை அளிப்பவை என நம் வாழ்வில், அபூர்வமான, விசேஷமான அம்சங்களுடன் கூடிய, தெய்வீக சக்திகள் செறிந்த நாட்கள் பலவும் வந்து மறைகின்றன. நாட்கள் ஒரு போதும் கழிவதில்லை! உபயோகமற்ற வகையில் ஒருவர் செலவழித்த நாட்களும் மறு பிறப்புகளில் அமையும் வாழ்க்கைக் காலத்தில் ஒரு பகுதியாக, துன்பங்களில் துவள்வதாக வருகின்றது.
கடவுள் ஒவ்வொரு நாளிலும் கோடிக் கணக்கான நல்வரங்களைப் பதித்து அனுப்புகின்றார். இவற்றை அருள்பவைதாம் சூரிய, சந்திர, நவகிரக, நட்சத்திராதி, திதி, யோக, கரண தேவக் கால அம்சங்களாகும்.

நம்பிக்கையே நல்வழி

பிரதமை முதல் அமாவாசை, பௌர்ணமி வரை எத்தனையோ ஆயிரம் திதிகள் தினமும் வாழ்வில் வந்து செல்கின்றன. ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு மணி நேரமும், நிமிடமும் எத்தனையோ தெய்வீக மகத்துவங்களைத் தம்முள் தாங்கியுள்ளன. இவற்றின் வகை, பலன்களை, பயன்படுத்தும் வழிமுறைகளை அறிந்து, அந்தந்தக் காலத்தில் ஆற்ற வேண்டியதை ஆற்றி வந்தால் சாந்தமான வாழ்க்கையை, கலியுகக் கஷ்டங்களுக்கு இடையிலும் பெற்றிடலாம்.
இதில் சப்தமி திதி, இதிலும் வளர்பிறைச் சப்தமித் திதி, வாக்கு, சப்தம், மனம் சம்பந்தமான சக்திகளை நன்முறையில் அளித்தும் மேம்படுத்த வல்லதாகும்.
பூமிக்குச் சூரியக் கோளத்தால், தினமும் பல்வகை கிரணங்கள் அளிக்கப்படுகின்றன. பூமிக்கு வரும் சூரியக் கிரணங்கள் யாவும் ஏழு முக்கியமான சப்த தர்சனக் கதிர்களாக வகுக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுவாக விஞ்ஞானம் எண்ணுவது போல, அனைத்துச் சூரிய ஒளிச் சக்திகளும், கிரணங்களும் பூமியை அடைவதில்லை. எத்தனையோ லட்சக் கணக்கான கோளங்களுக்கும், லோகங்களுக்கும் சூரிய ஒளிக் கிரணங்கள் பரவுகின்றன. இவை சப்தமித் திதிதோறும் புதுப்பிக்கப்படுகின்றன.
உண்மையில், சூரிய, சந்திர கோள அசைவுகளைப் பொறுத்து இரவு, பகல் நேரம் அமைவதாக, விஞ்ஞானப் பூர்வமாக எண்ணினாலும், உலக ஜீவன்களின் இரவு நேரக் காரியங்களின் விளைவுகளைப் பொறுத்துப் பகல் நேரமும், பகல் நேரக் காரியங்களின் விளைவுகளைப் பொறுத்து, இரவு நேர அமைப்பும் தோன்றுகின்றன என்பதே ஆன்மீக உண்மையாகும்.

சப்த கன்னியர்கள்
நகர் திருத்தலம் லால்குடி

இவற்றில் சப்தமித் திதி தோறும் பகல் நேரத்தில், சப்த தரிசனக் கதிர்களைப் பகுத்துத் தரும் தேவ சக்திகள் ஆக்கம் பெறுகின்றன. மனிதன் மனிதனாக வாழ உதவுவது அறிவு, புத்தி, மனோ சக்திகள் ஆகும். வித்யாகாரகராக புத கிரகம் விளங்குவதால், புதனன்றுதான் வித்யா சக்திகள் ஆக்கம் பெற்று, அறிவு, புத்தி, மன சக்திகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.
புதனும், சப்தமி திதியும் சேர்கின்ற தினமானது, மனம், உள்ளம், அறிவு, புத்திக்கு மிகவும் நல்சக்திகளை அளிக்க வல்லது. இத்தகைய நாட்களில் ஏழு விதமான அகல்களில், ஏழு விதமான தீபங்களை ஏற்றி வழிபடுதலால் தேவையில்லாத பீதிகள், மன சஞ்சலங்கள், சந்தேகங்கள் அகல வழி பிறக்கும். குறிப்பாக, சந்தேகத்தால் பாதிப்புக்கு ஆளானோர் தக்க நிவர்த்திகளைப் பெறுவர்.
சூரிய தீபம் - தேங்காய் எண்ணெய் - 7 திரிகள் - சூரிய சந்நிதி
சந்திர தீபம் - பொன்னாங்கண்ணித் தைலம் - 2 திரிகள் - சந்திர சந்நிதி
புத தீபம் - நெல்லித் தைலம் (நீலிபிருங்காதி) - 5 திரிகள் - ஸ்ரீதட்சிணாமூர்த்தி / ஸ்ரீஹயக்ரீவர் / ஸ்ரீசரஸ்வதி /ஸ்ரீபுத மூர்த்தி சந்நதி
சப்த மாத தேவ தீபம் - மருதாணித் தைலம் - 7 திரிகள் - சப்தமாதர், சப்த கன்னியர் சந்நிதி
சப்தமித் திதித் தீபம் - சப்தமித் திதித் தைலம் + கரிசலாங் கண்ணித் தைலம் - 7 திரிகள் - ஸ்ரீகால பைரவர் சந்நிதி
சிம்மேந்திரத் தீபம் - செம்பருத்தித் தைலம் - 5 திரிகள் - சிம்ம வாகனம் சந்நதி
சப்த ரிஷித் தீபம் - 14 அகல்கள் (சப்த ரிஷிகள்
+ பத்னிகளுக்காக) - நல்லெண்ணெய் - 7 பருத்தி திரி + 7 தாமரைத் திரி- சப்த ரிஷிகள் சந்நிதி / தல விருட்சம் / சப்தத் தூண்கள்
இவற்றை ஆலயத்தில் ஏற்றி, ஏழு முறை வலம் வந்து வணங்குவதால், அறிவு, மனம், புத்தி சுத்தி அடைய உதவும்.

அத்துடன் ஏழு முறை சூரிய தரிசனம், ஏழு நிமிட சந்திர தரிசனத்தைப் பெறுவதால், பிறருடைய சந்தேகத்தால், தொல்லைகளால் வாடுவோர், விடிவு பெற நல்வழிகள் கிட்டும்.
ஏழு விதமான வாயுக்களைப் பரிமாணம் செய்யும் துதிக்கை நாசி நாளங்களை உடையதே யானையாகும். சப்தமித் திதி தோறும் யானை தம் பிளிறு வகை பூஜையைச் சூரிய மூர்த்திக்கு ஆற்றுவதைக் காணலாம்.
எனவே சப்தமி திதி தோறும் யானையை வாகனமாக உள்ள சந்நிதிகளிலும் (வடபழனி) கஜேந்திர மோட்சம் நிகழ்ந்த தலங்களிலும் (கும்பகோணம் அருகே கபிஸ்தலம், திருநெல்வேலி- திருப்புடைமருதூர் அருகே அத்தாழநல்லூர், திருச்சி-லால்குடி அருகே நத்தம்)
- மேற்கண்ட வகையில் விளக்கேற்றி வழிபடுதலால், கணவன் மனைவி இடையே மன நம்பிக்கை விருத்தியாகும்.

காரியத் தடங்கல்களுக்கு நிவர்த்தி

அக்னி நட்சத்திரமாகிய கத்ரி உற்சவம் நிறைவு பெறும்போது கத்ரி நட்சத்திர மண்டல ஒளிக் கிரணங்கள் உத்ராங்க சம்பத்து என்னும் நிலையைப் பெறுகின்றன. இதன் பிறகு, பிற பூமிகளில் கத்ரி அக்னி நட்சத்திர உற்சவம் தொடங்கிடும். பொதுவாக கத்ரி உற்சவம் திங்கட் கிழமைகளிலோ ரோஹிணி நட்சத்திரத்தில் சூரியன் இருக்கும்போதோ நிறைவு பெறுவது சுப சக்திகளைப் பெற்றுத் தருவதாகும். மகத்தான சுப நட்சத்திரங்களில் ஒன்றான ரோகிணி, சந்திர நட்சத்திரமாகவும் பரிமளிப்பதால், கத்ரியின் உத்தராங்கப் பருவத்தில், எட்டுக் கண்ணும் பிரகாசிக்கும் நேத்ர சக்திகள் அதிகமாகப் பரிமளிக்கின்றன. இதனால் இத்தகைய நாட்களில் ரோகிணி தேவியுடன் சேர்ந்து சந்திர மூர்த்தி அருளும் தலங்களில் வழிபடுதலால் சிலவகை உணவு அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெற நல்ல மருத்துவ வழிகள் கிட்டும்.
மனிதன் பெறுகின்ற பல விதமான செல்வங்களில் கண் பார்வையும், நல்ல சம்பத்தாக, செல்வமாகப் போற்றப்படுகின்றது. மனித வாழ்க்கையை, நல்ல கண்பார்வையுடன் கொண்டிட, கத்ர வாசஸ்புடம் என்ற வகையான புண்ய சக்திகள் நிறையத் தேவைப் படுகின்றன. இவை பரிமளிக்கும் தலங்களில் திண்டுக்கல் அருகே கதலி (கத்ரி) ஸ்ரீநரசிங்கப் பெருமாள் ஆலயம் மிகவும் முக்கியமானதாகும்.

ஸ்ரீசந்திர பகவான்
மானாமதுரை

கதலம், தவனம், த்ரிபுடம் ஆகிய மூன்று வகை உத்தராங்க அக்னி சக்திகள் கத்ரி நிறைவு நாளில் கத்ரிபூதியாய்ப் பூரணம் பெறுகின்றன. எனவே அச்சமயம் நெருப்பில் பொரிக்கும் வகை உணவுப் பொருட்களைப் படைத்துத் தானமளித்தலால், கௌரவம், அந்தஸ்து காரணமாக பிறந்த வீடு, புகுந்த வீடு பிரச்னைகளில் உழல்வோர் சமாதானச் செய்திகளைப் பெறுவர்.
ஒரு முறை, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, துரியோதனின் அரண்மனைக்கு கத்ரியின் உத்ராங்க நாளில்தான் சென்றிட்டார். கண் இருந்தும் தன் கணவனின் நிலைகளை அறிந்து சேவை செய்திடவே, காந்தாரி தன் கண்களில் துணியைக் கட்டிக் கொண்டு, கண் பார்வை இல்லா நிலையதாக வாழ்ந்திட்டாள் அல்லவா. தனக்கு இந்நிலை தன்னால் ஏற்பட்டதா, தானாகவே ஏற்பட்டதா என அறிய ஸ்ரீகிருஷ்ணனிடம் விடை காண வேண்டிட்டாள்.
அப்போது ஸ்ரீகிருஷ்ணன், கத்ரி நட்சத்திரக் காலத்தில் ஆற்ற வேண்டிய விரத பூஜை முறைகளை அவளுக்கு அளித்து, எதிர்காலத்தில் கலியுகத்தில் ஊழ்வினைப் பெருக்கத்தால் குருடர்கள் அதிகமாக சமுதாயத்தில் பிறக்க இருப்பதால், அவர்களுடைய நல்வாழ்விற்காகக் காந்தாரி, கத்ரி விரத பூஜைகளை அர்ப்பணித்தல் சிறப்புடையது, இதுவே தகுந்த ஆத்ம விசார விடைக்கு வித்திடும் என்றும் உரைத்திட்டார்.
தட்சனின் சாபத்தால் சந்திர மூர்த்தியின் கண்ணொளியும் மங்கிடவே, ரோகிணி நட்சத்திர தேவியும் கத்ரி கால பூஜைகளை ஆற்றி, சந்திர மூர்த்திக்குத் தக்க கண்ணொளியை மீட்டுப் பெற்றிட உதவினாள். காந்தாரியும், கண்வ மகரிஷியும், நேத்ரபுஷ்ப மாலர் என்ற ஞான யோகியும் கத்ரி விரதத்தை நைமிசாரண்யத்தில் தொடங்கி, காஞ்சியில் நிறைவு செய்த தலமே இன்றைய காஞ்சிபுரம் பாண்டவ தூத பெருமாள் ஆலயவளாகமாகும்.
எனவே, கத்ரி நிறைவு பூஜையாக ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில் எட்டு முறை தரிசித்தல், அஷ்டமியில் பிறந்த கண்ணபிரானின் திருவருளுடன் அரிய நேத்ர சக்திகளையும், காணுதற்கரிய தரிசனங்களையும் நற்காட்சிப் பலன்களாக பெற்றுத் தருவதாகும்.
எட்டெட்டு முறை ஸ்ரீகிருஷ்ணன் ஆலயத்தில் தரிசனம் பெறுவோர்க்கு நல்ல காட்சி, நல்ல தரிசனம் கிட்டிட, கத்ரி நட்சத்திர தேவியே துணை புரிகின்றாள்.
பொதுவாக, நெருப்பால் சுடப் பெற்று உண்ணப்படுகின்ற நிலக்கடலை, சோளம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, முந்திரிப் பருப்பு போன்றவற்றை உணவுடன் சேர்த்து கத்ரி நிறைவில் தானம் அளித்தலால், தனக்கு மிகவும் பிடித்தமான காரியமானது தடங்கல்களால் நிறைவேறாமல் இருக்கின்றது என்று எண்ணுவோர் காரிய சித்தி பெற வழி பிறக்கும். மேலும் பணிபுரியுமிடத்தில் மன விருப்பமின்றியும், வேறு பல விஷயங்களுக்காகவும், ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டிய நிலையில் இருப்போர், நல்ல முடிவெடுக்க உதவிடும்.

மனக் குழப்பம் அகலும் மார்க்கம்

ஒவ்வொரு யோக தினத்திற்கு ஒரு மகத்துவம் உண்டல்லவா? அவ்வகையில் வஜ்ரம் யோக நாளில் சூரிய, சந்திர ஒளிக் கிரணங்களில் மனோபல சக்திகள் நிறைந்திருக்கும். தாவரங்களுக்கு இவை வேர்பல சக்திகளாகவும், மிருகங்களுக்குப் பாத பல சக்திகளாகவும் பரிணமிக்கின்றன.
எனவே வஜ்ர யோக நாட்களில் ஸ்ரீவஜ்ரேஸ்வரி என்ற நாமம் தாங்கிய அம்பிகைக்கு, தேன், சந்தனக் குழம்பு, தயிர் போன்ற அடர்த்தியான திரவிய அபிஷேகம் மிகவும் விசேஷமானது. இதற்குப் பின் அம்பிகையின் திருப்பாதங்களுக்கு எட்டு மஞ்சளாலான அடர்த்தியான காப்பு இட்டு, 80 வயது நிறைந்த பெரியோர் தம்பதிகளுடன் மிகவும் கவனமாக அழைத்து வலம் வந்து வணங்குவதால், எடுத்ததெற்கெல்லாம் கோபப்படும் கணவனின் மூர்க்க குணம் திருந்திட நல்வழி பிறக்கும்.
தஞ்சாவூர் அருகே செம்பியன்கிளரி கிராமச் சிவாலயத்தில் ஸ்ரீரௌத்ர துர்க்கைக்கு வெண்ணெய்க் காப்பு வழிபாடு, குடும்பத்தில் ஒற்றுமையை உருவாக்க உதவும்.

ஸ்ரீயானைவாகன முருகன்
வடமாகறல்

வஜ்ரவேல் தாங்கிய முருகப் பெருமானுக்கு மாம்பழம், அல்லது வில்வப் பழங்களை வைத்து இரண்டிரண்டு காகித அட்டைகளுக்கு வைத்துப் பழ மாலையாக்கி அணிவித்து, பாம்பன் சுவாமிகளின் கவசப் பாக்களை ஓதி வழிபடுதலால், தான் மிகவும் நம்புகின்றவர் என்று எண்ணி இருப்பவர் நல்வழியிலிருந்து விலகிச் சென்று விடுவாரோ என்ற அச்சம் தெளிந்து, தான் நம்பிக்கை கொண்டவரிடம் நல்ல மாற்றங்களைக் கண்டிடலாம்.
யானை வாகனம் உடைய முருகனுக்கு, பஞ்சாமிர்தம் போன்று 12 வகை திரவியங்களாலான துவாதசாமிர்தக் காப்பு ஆற்றி வழிபட, மகனுடைய நன்னடத்தை பற்றிக் கவலையுறும் தாய்மார்கள் மனநிம்மதி அடையும்படி மாற்றங்கள் உண்டாகும்.
கை, கால்களில் மண், தார், சேறு, பெயிண்ட் படியுமாறு பணி புரியும் சாலைத் துறை, உழவுத் துறை, குயவுத் துறை ஏழைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பான (தோலால் ஆகாத) நல்ல கையுறைகள், காலுறைகளைத் தானமாக அளித்தலால், வீடு, அலுவலகம், வேலையில் இடமாற்றம் மாறுவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருப்போர்க்கு, நல்ல தெளிவான தீர்வு கிட்டும். வஜ்ர யோக நாளுக்கு நம்பிக்கை, பக்தி, தீர்க தரிசனம் தரும் சக்திகள் உண்டு.

காரிய சித்தியும் கரிநாளும்

சனிக் கிழமையும் கரிநாளும் கூடி வருவது சனீஸ்வரப் பூஜைகளுக்கு மிகவும் உத்தமமான நாளாகும். ஸ்ரீசனீஸ்வர லோகத்திற்குச் செல்லும் வழியில் ஹராஸ்சம் என்ற நட்சத்திரத் திட்டு உண்டு. இதில் பத்துக் கரங்கள், பத்துக் கால்களை உடைய தேவாதி தேவ நிலையினர் இங்கு உறைகின்றனர். இவர்கள் கணித ஞானத்திலும், வான சாஸ்திரத் துறையில் மிகவும் வல்லவர்கள். மனிதராக இருந்து, உத்தம பக்தியின் மூலம், உத்தம தெய்வீக நிலைகளை அடைவோரும் அடைய வேண்டிய தெய்வீக நிலைகள் பல உண்டு என்பதையே இது குறிப்பிடுகின்றது.
தம் கோசல நாட்டை, பூகோள ஜாதக ரீதியாக, சனி தசை காரணமாகப் பற்றவிருந்த வற்கடம் எனும் கொடிய பஞ்சத்தைத் தவிர்ப்பதற்காக, தசரத மஹாராஜா, சனீஸ்வரரை எதிர்த்துப் போரிட, வான் வழியே படைகளுடன் செல்கையில், ஹராஸ்ச தாராவதி எனும் இவ்விடத்தில் ஸ்ரீசனிப் பரணிச் சித்தரைத் தரிசிக்கும் பேறு பெற்றார். ஸ்ரீஅஸ்தீக சித்தர் நாககுலத்திற்கு சற்குரு ஆவது போல, காக்கை இனங்களுக்கான சற்குருவே ஸ்ரீசனிப் பரணிச் சித்தர்.

ஸ்ரீசனிபகவான் திருக்குற்றாலம்

தசரதர் இங்கு தங்கி, சந்த்யா கால பூஜைகளை ஆற்றினார். தம் படைகள் தங்க வாய்ப்பளித்தமைக்காக நன்றிக் கடனாக, ஸ்ரீசனிப் பரணிச் சித்தரின் ஆணைப்படி, தசரதர், ஹராஸ்ச தாராவதித் தலவாழ் பகவத்பாதர்களின் நலன்களுக்காக அவர்களுடைய பித்ருக்களுக்காக தம்முடைய விசேஷமான நித்யத் தர்ப்பணப் பூஜையில், கூடுதல் தில பூஜைகளை ஆற்றும் பெரும் சங்கல்பத்தைப் பூண்டார்.
தசரதச் சக்கரவர்த்தி, இதற்காக, அன்றைய தம்முடைய நித்யத் தர்ப்பணப் பூஜையில், காருண்யத் தர்பணத்தில், ஹராஸ்ச தாரவதி மண்டலத்தில் அப்போது வசித்தவர்களின் மூதாதையர்களின், பித்ருக்களின் நலன்களைப் போற்றியும் எள் தானியங்களை சங்குப் புஷ்பங்களின் மேல் நிரவி, விஷ்ணு தர்பைகளைப் பரப்பித் தர்ப்பணமளித்தார்.

ஸ்ரீவிநாயகர் சோழபுரம்

பக்தி சிரத்தையுடன் தசரதர் தர்ப்பணம் அளித்தமையால், ஹராஸ்சப் பகுதியில் உறைந்தவர்களுடைய பித்ருக்கள் யாவருமே க்ஷண நேரத்தில், உத்தம தேவாதி தேவ நிலைகளை அடைந்து ஆனந்தித்தனர். தசரதருக்கும் பூவுலகிலும் கிட்டிடா அரிய மஹா நல்வரங்களை அப்பித்ரு மூர்த்திகள் அளித்தனர். அவர்கள் அளித்த நல்வரங்களின் பலன்களாக,
*ஸ்ரீசனீஸ்வர லோகத்திற்கு மானுட வடிவிலேயே செல்லும் தேவ சக்திகளும்,
*எதிர் காலத்தில் தசரதரின் சந்ததியர் அளிக்கும் தர்ப்பணங்களை, தசரதரே மேலுலகில் இருந்து நேரடியாகவே பெறும் அரிய பாக்ய நல்வரங்களையும் தசரதர் பெற்றார்.
ஆனால் தசரதரோ, இத்தகைய மஹாநல்வரங்களைப் பெறும் தபோபலன்கள் சாதாரணமாகத் தமக்கு அமையவில்லை என்றும், தாம் இவற்றைப் பெறக் காரணமான ஹராஸ்ச தாராவதி நட்சத்திர மண்டல வாசிகளுக்கே தாம் நன்றிக் கடன்பட்டிருப்பதாகவும் பணிவுடன் உரைத்தார். மேலும், தாம் பெற்ற நல்வர பாக்யங்களைச் சனீஸ்வரனின் திருவடிகளில் அர்ப்பணித்திட்டார்.
சனீஸ்வரரும் அவருடைய உத்தமப் பணிவுடைமையைக் கண்டு மகிழ்ந்து ஆசிர்வதித்து, அவற்றின் பலாபலன்களை மென்மேலும் விருத்தி செய்து, மீண்டும் தசரதரிடமே அளித்திட்டார். இவ்வற்புதம் நிகழ்ந்த தினமே தசமித் திதியும், சனிக்கிழமையும், கரிநாளும் கூடிய நாளாகும்.
எனவே இத்தகைய நாட்களில் எந்த நற்காரியத்தையும் ஆற்றி, இதன் பலாபலன்களைச் சனீஸ்வரருக்கு அர்ப்பணித்திட, அதன் பலாபலன்கள் பன்மடங்காய்ப் பெருகி நம்மை வந்தடைய ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி அருள்கின்றார்.
கை, கால்களை இழந்த / அற்ற / செயலிழந்தவர்களுக்குத் தேவையான உதவிகளை, தான தர்மங்களை இத்தகைய நாட்களில் ஆற்றுவதால், ஓரளவு வசதிகள் இருந்தும், எப்படி நற்காரியம் நிறைவேறுமோ என்று அஞ்சுவோரின் காரிய சித்திக்கு இன்றைய தான, தர்மப் பலன்கள் உதவும். அதாவது வீடு வாங்குதல், திருமணம், மகன், மகளின் உயர் கல்வி போன்றவைக்கான அனைத்து ஏற்பாடுகளையும், செய்தாலும், இது கை கூடுமோ, நடக்காதோ என்று மனதினுள் ஏங்கித் தவிப்போரைக் கண் கலங்காது காத்து, காரிய சித்தி தரும்.
கும்பகோணம் அருகே சோழபுரம், பேராவூரணி அருகே விளங்குளம், திருச்சி அருகே வாத்தலை, திருநள்ளாறு, மதுரை அருகே கூச்சனூர், சென்னை பூந்தமல்லி போன்ற ஆலயங்களில் விசேஷமான தோற்றங்களுடன் அருளும் ஸ்ரீசனீஸ்வரரைக் கரிநாள் தோறும் வழிபடுவது மிகவும் விசேஷமானது.
சனிக் கிழமை வரும் கரிநாளானது, கரிநாள் பூஜைகளின் பலன்களை ஆயிரம் மடங்காக்கித் தரும் என்பது குறிப்பிடத் தக்கது.

அவப்பழி தீர்க்கும் அரிய பூஜை

ஸ்ரீராமரும், லக்ஷமணரும் ஒரு துளி நீர் கூட அருந்தாது, நிர்ஜல ஏகாதசி விரதமிருந்து, இதன் பலாபலன்களை தாம் வனவாசம் பூண்டிருந்த காலை, காடுவாழ் தாவரங்களுக்கும், காடுவாழ் ஜீவன்களுக்கும் அர்ப்பணித்தளித்த அற்புத ஏகாதசித் திருநாளே நீர்ப்பரி நீலாம்பரி ஏகாதசி திருநாளாகும்.
ராவணன் நவகிரகங்களையும் ஆட்படுத்தித் துன்புறுத்திய போது, ஏகாதசியோடு கூடும் கரிநாளில், சனீஸ்வர மூர்த்தி நிர்ஜல ஏகாதசி பூண்டிருந்தமையால்,
நீறு பூண்டு, நீரற்று விரதம் பூண்டாரைக் கடிந்தமையின்

தவசிமடை

வேரற்று வெண்சமரில் வீழ்வாய்! என ஓரெறும்பின் சாபத்திற்கும் ஆளாகினான்.
வேகாத வெம்பகை போக்கி
சாகாதவசி மாதவமுயர் ஓங்க -
என்றவாறாக, நிர்ஜலமாய், ஒரு துளி கூட நீரும் அருந்தாது 5 நாழிகை நேரமேனும் ஏகாதசி விரதம் இருப்போரை, மா தவசிகள் எனப் போற்றுகின்றனர் வைகுண்ட வாசிகள்!
திண்டுக்கல்-நிலக்கோட்டை மார்கத்தில் உள்ள தவசிமடையில் மிகவும் தொன்மையான ஸ்ரீமஹாலிங்கச் மூர்த்திச் சிவாலயம் உள்ளது. ஆதி காலத்தில், பரத்வாஜர் போன்ற மாமுனிகள் பர்ணசாலைகளைக் கொண்ட இடம். ஸ்ரீராமர், மாமுனியின் தவச் சாலையில் எளிய விருந்து கொண்ட இடம். ஸ்ரீகாலபைரவரே நேரில் தோன்றி இங்கு காலம் காலமாய்த் தவமிருக்கும் தவமா முனிவர்களை வாழ்த்திய தலம். இரண்டு அம்பிகையர்கள் அருளும் அற்புதத் தலம்.

நிர்ஜலமாய், ஒரு துளி நீர் கூட அருந்தாது, ஏகாதசி விரதமிருத்தல் மிகவும் நன்று. அல்லது 20, 10, 8 மணி நேரமாவது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப விரதமிருத்தல் வேண்டும். விரத ஆரம்பத்திலும், முடிவிலும் ஸ்ரீசனீஸ்வரரின் திருவடிகளில் துளசித் தீர்த்தம் வார்த்து வழிபடுதல் வேண்டும். சங்குப் புஷ்பம், நீலோத்பவ, நீல வண்ண நறுமணப் புஷ்பங்கள், நீல நிற ஆடைகளைச் சனீஸ்வரருக்குச் சார்த்தி, ஏகாதசி விரதமிருந்து, வழிபடுவோர்க்குப் பல்வகை அனுகிரகங்கள் பரிமளிக்கும் !
பல வகைகளிலும் கஷ்டங்கள் ஒன்று சேர்ந்து வந்து அழுத்துவதால் வாடுவோர்க்கு, நல்ல நிவர்த்திகள் கிட்ட வழிகாண உதவும் ஏகாதசி, கரிநாள் கூட்டு நாள்!
அபூர்வமாக, காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், திருக்கோஷ்டியூர் திருநெடுங்களம் போன்ற ஆலயங்களில் பெருமாள், சிவ மூர்த்திகள் குடி கொண்டு அருள்வர். இத்தகைய-சிவன், விஷ்ணு அருளும் ஒரே ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசனீஸ்வரரை, ஏகாதசி விரதத்தோடு ஆராதித்து வருவதால், வீட்டிலும், அக்கம் பக்கத்திலும், அலுவலகத்திலும் ஏற்பட்டுள்ள தேவையற்ற பழிச் சொல், அவப் பழி அகலும். ஏசியோரும் நாடி வந்து நல்அமைதியைக் கொடுப்பர். மிகவும் சக்தி வாய்ந்த கரிநாள், ஏகாதசி கூடும் மகத்தான விரதநாள்!
அரை நாளேனும் ஒன்றும் அருந்தாது விரதமிருந்து வழிபட்டுப் பாருங்களேன், கரிநாள் கூடும் ஏகாதசியின் மஹிமை சிறிதேனும் அறிந்திட ஆதூலப் பித்ருக்கள் அருள்வரே!

ஸ்ரீராம லட்சுமண துவாதசி

ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 24 துவாதசிகள் வந்து சென்றாலும், இந்த ஒரு துவாதசியை மட்டும் ஸ்ரீராம லக்ஷ்மண துவாதசி என உரைப்பதேன்? ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, தம்மைப் பரிபூரணமான அவதாரம் என்று எக்கணமும் காட்டிக் கொள்ளாது, திரேதா யுகத்தில் பூவுலகில் ஒரு சாதாரண மனிதனைப் போலவே, ஒரு மனிதன் எவ்வாறு செம்மையாக தெய்வப் பண்பாட்டுடன் வாழ்ந்து காட்ட வேண்டும், என்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
எனினும் தர்மம் நன்கு செழித்தோங்கிய திரேதா யுகத்திலும், ஸ்ரீராமரே எத்தனையோ இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது எனில், தர்ம தேவதை ஒற்றைக் காலில் நிற்கும் கலியுகத்தில் சித்தர்களுக்கும், மகான்களுக்கும், பகவத்பாதர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்குதான், அப்பப்பா எவ்வளவு, எவ்வளவு சோதனைகள், எதிர்ப்புகள், கொடுமைமைகள் நிகழ்கின்றன?

சித்துக்காடு பெருமாள் தலம்

இதனால் தாமே ஸ்ரீவள்ளலார் சுவாமிகள், புரவிக்காடு கோடி சுவாமிகள், கசவனப்பட்டிச் சித்தர் போன்ற எண்ணற்ற மகான்கள், தமக்குரிய பூலோக மானுடச் சரீரச் சட்டையைக் குறித்த காலத்திற்கு முன்னரேயே உதிர்த்துச் செல்வதாயிற்று. இத்தகைய தெய்வீக புருஷர்களை இனியேனும் கலியுக மனித குலம் நன்கு மதித்து, வணங்கிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
கலியுகத்தில் தர்மத்தின் பாதையின்பால் அன்னதானம், ஏழைகளுக்கான பல்வேறு சமுதாய உதவிப் பணிகள், உரைகள் (சொற்பொழிவுகள்), நூல்கள், ஹோமம், பூஜைகள் மூலமாகத் தெய்வீகத்தைப் பரப்புதல் போன்ற அருங்காரியங்களைப் புரிந்து வரும் பகவத்பாதர்களை, சத்சங்க இறை அடியார்களைக் கலியுக இன்னல்களில் இருந்து காத்திடவே, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரேயே, திரேதா யுகத்திலேயே ஸ்ரீராமர், ஸ்ரீலெக்ஷ்மணர் இருவருமே நிர்ஜல ஏதாதசியை அடுத்து வரும் புஷ்பமாலா துவாதசித் திதியன்று துவாதசி விரதமும் ஏற்று, இதன் பலாபலன்களை ஸ்ரீமஹாவிஷ்ணுவின் வடிவான நெல்லி விருட்சத்திடம் அர்ப்பணித்தனர்.
பொதுவாக ஏகாதசியன்று நிர்ஜலமாக, ஒரு துளி நீர்க் கூட அருந்தாது விரதம் இருப்போர், மறுநாள் காலை துவாதசி அன்று, துவாதசி பாராணை என்பதான நெல்லி முள்ளிப் பச்சடி, அகத்திக் கீரை மட்டும் உண்டு ஏகாதசியை நிறைவு செய்வர். பிறகு துவாதசி விரதத்தைத் துவங்குவர். ஏகாதசி, துவாதசித் திதிகள் இரண்டிலுமே இரண்டு இரவுகளுமே, தூங்காமல் விழித்திருந்து பரம் பொருளாம், திருமாலின் திருவடிகளை எண்ணி, நினைந்து போற்றுவதே பரிசுத்தமான ஏகாதசி, துவாதசி விரதமாகும்.
போர்க் களத்திலும் கூட மூன்று வேளை சந்தியா பூஜைகளையும் ஆற்றியவரே ஸ்ரீராமர். ஸ்ரீராமரின் ஒரு நிமிட ஏகாதசி, துவாதசி விரதப் பலாபலன்களே அனைத்து யுகங்களிலும் அனைத்து ஜீவன்களுக்கும் பரிபூரண க்ஷேமம் தருவதென்றால், தம் துவாதசி விரதப் பலன்களைக் கலியுக ஜீவன்களுக்கென அளித்து வரும் இன்றைய ஸ்ரீராம, லக்ஷ்மண துவாதசி விரத நாளின் மஹிமையை என்னென்று சொல்வது!
இந்த துவாதசி விரத நாளில் ஒரு நெல்லிக்காயை மட்டும் உண்டு விரதமிருத்தல் மஹா விசேஷமானது. நாள் முழுவதும்,
ராம, லக்ஷ்மண, ஜானகி
ஜெய்போலோ ஹனுமானுகீ
என்று ஓதியவாறு எவ்வளவு நெல்லி மரத் தரிசனம், நெல்லி மரத்திற்கு மஞ்சள், குங்குமம், செந்தூரம் இடுகின்றீர்களோ அந்த அளவிற்கு உடல் சுத்தி, மன சுத்தி, உள்ள(ம்) சுத்திக்கு அவரவர் விரத பக்தி நிலைகளுக்கேற்ப ஆவன விருத்தியாகிப் பெருகிடும்.
இப்பூஜா பலன்கள் நிறைய உண்டு. இவற்றுள் ஒரு சில வருமாறு:
* தாய், தந்தையரை, வளர்த்து ஆளாக்கியோரை ஏசி, நன்றி கெட்டு வாழ்ந்தமை,
*மகான்களை, சித்தர்களை, சற்குருமார்களை இகழ்ந்தமை, கேலி பேசியமை
*முறையற்ற இச்சைகளோடு, ஆசைகளோடு, பேராசை எண்ணத்தோடு, பிறரை, பிறர் சொத்தை, பொருட்களை நோக்கியமை, தவறான எண்ணங்களைக் கொண்டவை -
போன்றவற்றில் சேர்ந்துள்ள மலை போல் குவிந்துள்ள கர்ம வினைகளைத் தணித்திட, தக்க நல்லோர் மூலம் நல்வழி கிட்டும்.
கெட்டித் தயிர் சாதம் பிசைந்து சூடான, சுவையான பசும்பால் ஊற்றிக் கலந்து, பன்னீர் திராட்சை, முழு முந்திரி, மோர் மிளகாய் சேர்த்து, நெல்லிக்காய் ஊறுகாயுடன் தானம் அளித்திட, நல்லவர்களைப் பற்றித் தவறாக எண்ணிய பாவம் விலகத் துணை புரியும்.
சென்னை - பூந்தமல்லி அருகே சித்துக்காடு சுந்தர ராஜப் பெருமாள் ஆலய நெல்லிமர வழிபாடு, குறித்த வயதில் குறித்த பூஜைகளை ஆற்றாமைக்கான மாற்று வழிபாட்டு முறைகளை நல்லோர் மூலம் பெற்றுத் தரும்.
மேலும் தக்க பருவத்தில் பருவம் அடையாத தம் பெண் பிள்ளைகளைப் பற்றிக் கவலையுறும் தாய்மார்களின் கவலைகள் நீங்க நல்வழி பிறக்கும்.

பாரிஜாதபுரி பிரதோஷம்

பிரதோஷங்களில் பல வகை இருப்பது போல, பிரதோஷ நேர அமைப்புகளிலும் சில விசேஷமான வகைகள் உண்டு. இதில் நித்யப் பிரதோஷம் என்பது, தினமும் மாலையில் அமைந்து தேவாதி தேவர்களால் கொண்டாடப்படுவது என்பதை நாம் நன்கு அறிவோம். 60 இலட்சம் மக்களுக்கு மூன்று பேர்கள் மட்டுமே, கலியுகத்தில், நித்யப் பிரதோஷ வழிபாட்டைக் கொண்டாடுவதாகச் சித்தர்கள் உரைக்கின்றனர்.
பிரதோஷ நேரத்தில் கூட சில வகைகள் உண்டு.
திரயோதசித் திதி நாளில் சூரியனின் அஸ்தமன (மறைவு) நேரத்திற்கு முன்னும், பின்னுமாக ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணி),
தேய்பிறைத் திரயோதசித் திதி நாளில் நாலரை மணி முதல் ஆறரை மணி வரையும்,
வளர்பிறைத் திரயோதசி நாளில், மாலை 4 முதல் 7 மணி வரை
- என்றவாறாகச் சில பிரதோஷ நேர வகைகள் உண்டு.

திருப்பைஞ்ஞீலி

உய்யக்கொண்டான் திருமலை

கலியுகத்தில் சூரிய உதய, அஸ்தமன நேரத்திற்கு அளிக்க வேண்டிய தெய்வீக மதிப்பை அளிக்காது, விஞ்ஞானப் பூர்வமான நிரந்தர மணி அமைப்பை ஏற்பதால், நாம் அரிய பல கால பூஜை சக்திகளை இழந்து வருகின்றோம். இது சமுதாயப் பொது நேரத்திற்கு உதவுவது போல் தோன்றும். ஆனால் இதனால் பல அரிய பிரதோஷ கால பூஜை சக்திகளை நிச்சயமாகக் கலியுகம் இழந்து விட்டமையால்தான், பிரதோஷ பூஜை பலன்களால் மட்டுமே கழியக் கூடிய வேண்டிய எண்ணற்ற கர்ம வினைகள் அப்படியே பல நாடுகளில், பூவுலகில் தேங்கிக் கிடக்கின்றன.
உதாரணமாக இளம்பிள்ளை வாதம், சந்ததியின்மை போன்றவே குறித்த திரயோதசித் திரிதினம் + செவ்வாய் + ஆயில்யம் + சித்த யோகம் போன்றவை கூடும் சில நேரப் பிரதோஷ பூஜை பலன்களால், மிகவும் எளிமையாக, தெய்வீகப் பூர்வமாகத் தீர்க்கப் படக் கூடியவையே! சரியான கால முறையைக் கடைபிடிக்காததினால் விஞ்ஞானக் கணிதக் குழப்பத்தால், உலக மனித சமுதாயம் பல அரிய கால சக்திகளைத் தினமுமே இழக்கலாகின்றது.
மேலும், தற்போதைய விஞ்ஞானக் கணித முறைப்படி, உதாரணமாக, கேதார்நாத் இமயமலைப் பகுதிகளில், இரவு 8 மணி ஆனாலும் மாலை வெளிச்சம் இருக்கும். இது நேர அமைப்பு தவறாகும். கைலாச மலைப் பகுதியில் விடியற்காலை 4 மணிக்கே சூரிய உதயம் ஏற்பட்டு விடுகின்றது. இவை எல்லாம் நேர முறைத் தவறே தவிர, சூரிய உதயம், அஸ்தமன நியதிகளை அறிந்தே நம் காலமுறைகள் அமைவதே சரியானதாகும்.
இவ்வகையில் அமைவதே பாரிஜாதப் பிரதோஷம் என்ற அற்புத பிரதோஷ நேரமாகும். பாரிஜாத பிரதோஷம் என்றால் என்ன? பாரிஜாதப் பூ இரவில் மலரத் தொடங்கி, விடியற் காலையில் பூரித்து விடும். முதல் நாள் மாலை நேரத்திலேயே, அதாவது, நித்யப் பிரதோஷ நேரத்திலேயே பூப்பதற்கான ஆரம்பக் கிரணங்கள் பாரிஜாதத்தில் தோன்றிப் பரிமளிக்கத் தொடங்கிடும்.
உதாரணமாக ஒரு நாள் இரவு 8.04 மணிக்குத் வளர்பிறை திரயோதசித் திதி பிறந்து, மறுநாள் மாலை 5.01 மணி வரைக்கும் நிரவுகின்றது என்றால் அப்போது நிலவும் பிரதோஷ நேரம் பாரிஜாத பிரதோஷ என சித்தர்களால் அழைக்கப்படுகிற்து. அதாவது, சுக்ல பட்சப் பிரதோஷம் எனப்படும் பட்சப் பிரதோஷமான வளர் பிறைப் பிரதோஷம் மாலை 5.01 மணிக்கு முடிந்து விடுகின்றது. திரயோதசித் திதியில் அமைவதுதானே பட்சப் பிரதோஷம்! பல இடங்களில் முதல் நாளே துவாதசித் திதி இருக்கையிலேயே பட்சப் பிரதோஷம் என நினைத்துக் கொண்டாடி விடுவார்கள். இது துவாதசி வழிபாடாகவும், துவாதசியில் நித்யப் பிரதோஷ வழிபாடாகவும் ஆகின்றது.

எனவே திரயோதசித் திதி பூரிக்கையில் அமைவதே பிரதோஷமாகும். சில சமயங்களில் மாலை நேரத்தில் திரயோதசித் திதி நன்கு பரிமளிக்காது, முன் தினமே இரவில் தொடங்கி, மறுநாள் முன் மாலையிலேயே முடிந்து, இவ்வாறு பிரதோஷ பூஜை நேர வகையில் சந்தேகம் வருமானால், தக்க சற்குருவை நாடிப் பிரதோஷ கால பூஜை நடத்துதல் பற்றித் தக்க விளக்கங்களைப் பெறுதல் வேண்டும்.
பட்சப் பிரதோஷம், நித்யப் பிரதோஷம் இந்த இரண்டு பிரதோஷ நேரச் சங்கமத்திற்கு இடைப்பட்ட நேரமே அமிர்தப் பிரதோஷ நேரமாகச் சித்தர்களால் வெகு இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சில விநாடிகளே அமைவதாகும்.
இந்த நேரத்தில் மனித மனம், உடல், உள்ளம் மூன்றும் முப்பரிமாண சுத்திக்கான அனுகிரக சக்திகளைப் பெறுகின்றன. பிற சமயங்களில், மனம், உடல், உள்ள சித்சுத்திக்கான பூஜை முறைகள் தனித் தனியேதான் அமையும். ஆனால், இவ்வகையில் அபூர்வமாக வரும் பட்சப் பிரதோஷ, நித்யப் பிரதோஷ சங்கமத்தில், பிரதோஷ அமிர்தக் கடிகை நேரம் அமைகின்றது. மகத்தான நல்வரங்களைத் தர வல்லது. இதன் அமிர்த கடிக நேரக் கணிப்பு வகை முறைகள் தலத்திற்குத் தலம் சற்றே மாறுபடும்.
இத்தகைய 1008 அமிர்தக் கடிகை நேரத்தில் சிவப் பிரதோஷத் தவம் புரிந்தவரே சனிப்பரணிச் சித்தராவார். 1008 திரிதினச் சனிப் பிரதோஷ வழிபாடுகளை முறையாக ஆற்றியவர். சனிப் பிரதோஷ நேரத்தில் அனைத்து ஆலயங்களிலும் வழிபடுபவர். காக்கைகளின் குலகுரு. பித்ருக்கள் தினமும் பாதபூஜை செய்து பூஜிக்கும் சித்தர் பெம்மான்.
தன்னுடைய கடன் சுமை, கடுமையான நோய், இயலாமை, தான் செய்த கர்ம வினைகள் இவற்றால் தன் குடும்பம் பாதிக்கப்படுமோ என்று, அஞ்சி, அஞ்சி வாழ்வோர், இத்தகைய பாரிஜாத பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு விளக்கேற்றுதல்,
கோயிலைத் தூய்மைப்படுத்துதல், கோயில் வலம் வர வயதானோர்க்கு உதவுதல் போன்ற சரீர சேவைகளை ஆற்றிப் பிரதோஷப் பூஜையில் பங்கு கொள்ள வேண்டும்.
இரண்டு அம்பிகையர் உள்ள தலங்களில் (திருப்பைஞ்ஞீலி, உய்யக்கொண்டான்மலை, ஆவூர், திண்டுக்கல் போன்றவை) பிரதோஷ பூஜைளை ஆற்றுவதால், தன் கணவனின் உடல் நிலை பற்றி வேதனையுறும் பெண்மணிகள், தக்க நிவர்த்திகளைப் பெறுவர்.

பிரம்மா கல்யாண உற்சவம்

வைகாசி விசாகமே, சிருஷ்டி மூல மூர்த்தியான ஸ்ரீபிரம்ம மூர்த்தி, ஸ்ரீசரஸ்வதியை திருமணம் புரிந்த நன்னாளாகும்.
திருமணம் என்றாலே ஆண், பெண் என்ற வடிவு பேதங்கள் என்று எண்ணலாகாது, மனித குலத்திற்கு மட்டுமே. தாவர, மிருக குலங்களின் வாழ்க்கை தர்ம முறையே வேறு. இதே போல தேவாதி தேவ தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவம் எனில் இதன் தெய்வீகத் தாத்பர்யமே தனிப்பட்டதாகும்.
எனவே மனித குலத் திருமண வாழ்க்கை அம்சங்களைக் கருத்தில் கொண்டு, எல்லாவற்றையும் எடை போடுதல் கூடாது.
மனித குலத் திருமண வாழ்க்கையில் கூட, கலியுகத்தில், ஆண், பெண் மன, உருவ பேத வித்யாச நிலைகள், குழந்தைப் பேறு, சந்ததிகளை ஆளாக்குதல் என்றவாறாகவே, வெறுமனே இயந்திர கதியாகவே வாழ்க்கை ஓடி விடுகின்றது. சிவ சக்தி அம்சங்களை உணர்விக்க வல்லதே இல்லற வாழ்வின் உத்தம அம்சமாகும் என்பதைப் பலரும் அறிவதில்லை.
எனவே, இல்லறமாம் நல்லறம் செழிக்கவே, திருமணமாம் அருள் மணம் பிறந்தது. தெய்வத் திருமண உற்சவங்கள் யாவும், மனித குலத்திற்கு அபரிமிதமான அளவில் அருள்பாலிக்கின்ற இறை பூஜைகளே ஆகும்.
இறைத் திருமண உற்சவங்கள் யாவும் சிவ, சக்தி அம்சங்களை இணைத்து எளிமையாக அருள்வழி முறைகளை அருள்பாலித்துத் தரும் அதியற்புத வழிபாடுகளே! உண்மையில், புனிதமான உள்ளமும் புனிதமான உடலும் ஒன்றிட உதவுவதே தெய்வத் திருமண உற்சவங்கள். இவை இரண்டும் ஒன்றாவதற்கு முதலில் உடலும், மனமும் புனிதமாகுதல் வேண்டும்.
மனித உடல் என்பது ஆன்மீக ரீதியான வெளிக் காரியங்களை நிகழ்த்திடப் பயன்படுத்தி, உள்உடலை மேன்மை ஆக்கிடவே! எனவேதான் பஹிர்முக பூஜை எனப்படும், வெளி அங்கங்களால் ஆக்கம் பெறும் ஆலய தரிசனம், அபிஷேக ஆராதனைகள், திருமண உற்சவங்கள் போன்றவை, வெளி உடல் அங்கங்களைப் புனிதப்படுத்தவே முதலில் உதவுகின்றன.

ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் சிவாலயம்
திருப்பட்டூர்

எண்ணங்கள், உள்மன விருப்பங்கள், தியானம் போன்றவை அந்தர்முக அதாவது உள்முக அதாவது உள் அங்கங்களாகிய மனம், புத்தியின் காரியங்களாகும். ஆனால் மனத்தின் காரியங்கள், பெரும்பாலும் உடல் செய்கைகளைப் பொறுத்து அமைகின்றன அல்லவா! அதாவது வெளி உடல் அவயங்களைப் பொறுத்து, மனம் செயல்படுகின்றது என்பதை நாம் நன்கறிவோம். உதாரணமாக, கண்கள் எதைப் பார்க்கின்றனவோ அதை ஒட்டியே மனமும் தவறாகவோ, வேறு விதமாகவோ எண்ணத் தொடங்கிட, உடலும் அதற்கேற்றபடி செயல்பாட்டை அடைகின்றது. இதற்குக் காரணம் உலகியல் பொருட்களின் மீது மனிதனுக்கு ஆசை, காமம், இச்சை, விருப்பு, வெறுப்புகள் அளவுக்கு மீறி அதிகமாக இருப்பதுதான். இதுவே, மனம், உடல் அமைதியாக ஒத்துப் போகாததற்குக் காரணமுமாகும்.
புத்தி என்பது எவரையும் நல்வழிபடுத்துவது ஆகும். ஆனால் உள்ளத்தை மேய்ந்து விடுவதால், மனம் போன போக்கில் வாழ்க்கை ஓடி விடுகின்றது. இது சரியல்லவே! உள்ளம், மனம், புத்தி, உடல் இவற்றிற்கு இடையே பலத்த வேறுபாடுகள் இருப்பதால்தான், மனிதன் பல துன்பங்களுக்கு, குழப்பங்களுக்கு, மன அமைதியின்மைக்கு ஆளாகின்றான். இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்யும் முகமாகத்தான், இறைவனுடைய திருமண உற்சவங்கள் நிகழ்த்தப் பெறுகின்றன.
சுயம்பு லிங்கள் யுக யுகமாக அநாதியாக நிலை நின்று வருபவை. சென்னை - மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீராமரால் வழிபடப் பெற்றவர் திரேதா யுகத்திற்கு முன்னரேயே நிலை நின்று, பல கோடி யுகங்களாக நிலைத்து நிற்பவர் தாமே சுயம்பு மூர்த்தி ஸ்ரீகபாலீஸ்வரர். எனவே உலகில் சாசுவதமான பொருளே பரப்பிரம்மான இறைமூர்த்தி! இறை மூர்த்திகளுக்குத் திருமண உற்சவம் என்பது, மனம், உடலில் உள்ள விருப்பு வெறுப்புகளைச் சீர்மைப்படுத்தி, சிவசக்தி அம்சங்களை உணர்வித்து, மனித குலத்தைச் சீர்மைப் படுத்துவதற்கே!
எனவேதாம்
சித்திரை உத்திரம்- ஸ்ரீமீனாட்சி கல்யாணம்,
பங்குனி உத்திரம் முருகப் பெருமான் கல்யாண உற்சவம்,
வைகாசி விசாகம் ஸ்ரீபிரம்ம திருக் கல்யாண உற்சவம்
-போன்றவை நிகழ்த்தப் பெற்று, மனிதனைச் செம்மைப் படுத்த உதவுகின்றன.
வைகாசி விசாகத்தன்று தஞ்சை அருகே திருக்கண்டியூர், கும்பகோணம் ஸ்ரீபிரம்மர் ஆலயம், திருச்சி - சமயபுரத்தை அடுத்து திருப்பட்டூர் போன்ற விசேஷமான பிரம்ம மூர்த்தித் தலங்களில் ஸ்ரீபிரம்மர் வழிபாடும், இயன்ற ஆலயங்களில் பிரம்மா கல்யாண உற்சவம் நிகழ்த்துதலும், நல்ல ஒற்றுமையான திருமண வாழ்வைப் பெற உதவும்.
இந்நாளில் ஆலயத்தில் கோமுகங்களைச் சுத்திகரித்து, 7 வகைப் பூக்களால் அலங்கரித்து, கோமுகத்தின் மேற்பகுதியில் உள்ள ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கு வெண்பட்டு சார்த்தி அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதால், மன ஒற்றுமையைப் பேணாது வாழும் தம்பதியர் வாழ்வு நன்னிலை பெற உதவும். அவ்வப்போது ஆலய கோமுகத்தைச் சுத்திகரித்து வருவது, மனத் தூய்மைக்கு நன்கு உதவும் எளிய யோகமாகும்.

வாஸ்து நாள்

வருடத்தில் எட்டு நாட்கள் வாஸ்து நாட்களாக வருகின்றன என்பது நாம் நன்கு அறிந்ததே. பிரபஞ்சத்தில் உள்ள எண்ணற்ற பூமிகளில், கோளங்களில் பாதாளம், பூமி, சுந்தரமாகிய விண்வெளி ஆகிய மூன்றிற்குமான ரட்சா பரிபாலன மூர்த்தியான ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி, நம்முடைய பூமியான, பங்கஜ பூமி எனப்படும் பூலோகத்தில் சகல ஜீவன்களுக்கு அருள் புரிய, ஒவ்வொரு ஆண்டிலும், எட்டு வாஸ்து நாட்களில் சயன யோகத்திலிருந்து மீண்டு அருள்கின்றார்.
தெய்வ மூர்த்திகளின் சயன யோகமாகிய கிடந்த நிலையும், ஸ்ரீரங்கநாதப் பெருமாள் போல் அருள்கின்ற நிலைதாமே! ஆனால் இதில் யோக நித்திரையை சுவாமி பூண்டிருப்பதால் இவ்வரிய அனுகிரக சக்திகளை நாம் யோகப் பூர்வமாகவே பரிபூரணமாக, உணரவும், பெறவும் இயலும். ஆனால் பஹிர்முக பூஜையான வெளி வகையான இறை உருவ வழிபாட்டிற்காகவே, நம் உடலும், மனமும் நன்கு பழகி இருப்பதால், ஸ்ரீவாஸ்து மூர்த்தியும் ஜீவநலன்களுக்காக எட்டு முறை யோக சயனத்தினின்றும் மீண்டு, திருக்கண் விழித்து, நமக்காக விஸ்வ ரூப தரிசனம் அளித்து அருள்கின்றார்.

பில்வ சுந்தரம் என்பது சுயம்பு லிங்க மூர்த்தியை, வில்வ தளத்தால் அலங்கரித்து, வில்வ வேட்டி, வில்வத் துண்டு சார்த்தி நன்கு கண் குளிர தரிசித்துப் பூஜிப்பதாகும். வடக்கு முகப் பூஜா பலன்கள் விருத்தி ஆகின்ற பெருநாள். ஸ்ரீவாஸ்து மூர்த்தி யோக சயன பலமார்க யோக நித்திரையில் இருந்து வடக்கு முகமாக மீண்டு, (உத்தரம் = வடக்கு), ஸ்ரீஜகதீஸ்வரர், ஸ்ரீபூமீஸ்வரர், ஸ்ரீஜகன்னாதர், ஸ்ரீபூலோநாதர், போன்ற பூமீஸ்வர அம்சச் சுயம்பு லிங்க மூர்த்தியை, பெருமாளை, வில்வ தளங்களாலான வஸ்திரங்களைச் சார்த்திப் பூஜிக்கும் நன்னாள்.
வாஸ்து நாட்களில் சிவனையும், விஷ்ணுவையும் வாஸ்து நேரத்தில் பூஜிப்பவர்கள் ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் சிவ, விஷ்ணு பூஜையோடு இணைந்து இறைவனை ஆராதிக்கின்ற பாக்கியத்தை, நவாராத்திரி காலப் பூஜையில் அம்பிகையின் பூஜையோடு நாமும் சேர்ந்து பூஜிப்பது போல், அரும்பெரும் பாக்கியமாகப் பெறுகின்றார்கள்.

செவலூர் திருத்தலம்

சொந்த வீடு, வாடகை வீட்டில் இருப்போரும், நிலபுலம், தொழிற்சாலை வைத்திருப்போர் என அனைவருமே வாஸ்து பூஜையைக் கடைபிடித்திட வேண்டும்.
நம் உடல் என்பது ஆத்மா குடியிருக்கும் சரீர வீடு ஆவதால், பூமியில் பிறந்த அனைவருமே வாஸ்து பூஜையைக் கண்டிப்பாகக் கடைபிடித்தாக வேண்டும். பிற நாட்டுச் சகோதர மக்களின் சார்பில், ஸ்ரீவாஸ்து பூஜையைக் கடைபிடிக்க வேண்டிய கடமை, உலக ஆன்மீக மையமாக விளங்குகின்றமையால், பாரத நாட்டுப் பெருமக்களுக்கு நிறைய உண்டு.
வாஸ்து நாட்களில்  ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணி நேரம்) ஸ்ரீஆதிவாஸ்து மூர்த்தி, தம் திருக்கண்களைத் திறந்து யோகத்திலிருந்து மீண்டு, எட்டுத் திக்குகளிலும் எட்டு விதமான பஹிராராதன யோக பூஜைகளை மேற்கொண்டு தரிசனம் தருகின்றார்.
ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் நின்று, இருந்து, கிடந்து, நடந்த நிலைகள் நான்கும், பண்டு, விண்டு, கண்டு, அண்ட நிலைகள் நான்கும் ஆகும். முதல் நான்கும் பூலோக ஜீவன்களுக்கு, அடுத்த நான்கும் தேவாதி தேவ தேவோத்தம நிலைகளுக்கும் உரித்தானதாகும். இவை யாவும் சூக்குமவாஸ்துச் சாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை - பொன்னமராவதி இடையில் உள்ள செவலூர் மற்றும் திருக்கோளக்குடி, திருச்சி அருகே மணச்சநல்லூர், சென்னை அருகே மரக்காணம், நெல்லிக்குப்பம் போன்ற தலங்களில் உள்ள ஸ்ரீபூமீஸ்வர வகை நாமம் உடைய மூர்த்திகளுக்கு நிறைய சாம்பிராணி தூபம் இட்டு, அரைத்த சந்தனம், புனுகு, அத்தர், ஜவ்வாது, கஸ்தூரி, கோரோஜனை ஆகியவற்றைப் பிணைத்துக் காப்பிட்டு, முழு முந்திரிகளால் அர்ச்சித்துப் பூஜித்தல் விசேஷமானது. இதனால் வீடு, நிலம் பற்றிய பிரச்னைகள், தாவாக்கள் தீர உதவும். ஸ்ரீஜகதீஸ்வரர், ஸ்ரீஜகன்னாதப் பெருமாள் ஆலயங்களிலும் பச்சைப் பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam