ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
குழந்தை பாக்யம் அற்றோர்க்கு நல்வழி |
துவியைத் திதியும் மூல நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாள் மிகவும் விசேஷமான திருநாள்! சத்யமூலர், சத்யபூரணர், சத்யவேதா ஆகிய மூன்று மகரிஷிகளும், மூன்று குழந்தைகளாக ஒன்றாய்ப் பிறந்தவர்கள். பிறந்த உடனேயே, உடலிலேயே இவர்கள் மூவரையும் ஒன்றாக இணைத்திருந்தது வலது கை மோதிர விரலில் பிணைத்திருந்த தர்பைப் பவித்ரக் காப்பு ஆகும். பிறக்கும் போதே தர்பைப் பவித்ரத்துடன் பிறந்தமையால் பவித்ரத் துவிதியர்கள் என்ற பெயரைப் பெற்றார்கள்.
பல ஆலயத் தூண்களிலும், மூன்று தலைகளுடன் மூன்று வகை யோகம் பூண்ட மாமுனிகளின் உருவம் தென்படும். இதுவே பவித்ரத் துவிதீய யோகமாகும். இவர்களுக்கு கர்ப வாசத்திலேயே சுவாசத்தை உள்ளிழுத்தல், தேக்குதல், வெளி விடுதல் ஆகிய மூன்றும் சுவாச பந்தன சூரியாதிக்க யோகநிலையாக, இயற்கையாகவே தாமாகவே அமைந்தன. எனவே வாயு பகவானின் பேரருளையும் கர்பத்தில் இருந்தே பெற்ற மகரிஷிகளும் ஆயினர்.
ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம்
திருப்பூவனூர்
இம்மூவரும் மகத்தான ஸ்ரீஆஞ்சநேயர் உபாசகர்களும் ஆவர். ஸ்ரீஆஞ்சநேயர் அருளும் சிவாலங்களில் இம்மூவரும் மானுட வடிவில் ஆராதிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. (உ-ம் ஆந்திர மாநிலத்தில் சுரட்டப் பள்ளி அருகில் உள்ள ராமகிரி) மூல நட்சத்திர முப்பொழில் தெய்வம் தாமே ஸ்ரீஆஞ்சநேயர்!
பொதுவாக, ஆஞ்சநேயருக்குத் திருக்கோல ஆழ்வார் என்ற பெயரும் உண்டு. நின்று, இருந்து, கிடந்த, நடந்த எந்த நிலைகளிலும், எப்போதும் ராம நாமப் பெருமாள் தியானத்துடன் துலங்குவதால், திருக்கோல ஆழ்வார் எனச் சித்தர்களால் போற்றப்படும் மூர்த்தியே ஸ்ரீஆஞ்சநேயர் ஆவார்.
சாலை ஓரங்களில் சாக்பீஸ், வண்ணச் சுண்ணத்தால் ஸ்ரீஆஞ்சநேயருடைய படத்தை வரைகின்ற ஏழை ஓவியருக்கு இத்தகைய நாளில் வயிறு நிறைய உணவும், ஆடைகளும் அளித்து, அவருடைய புனிதமான தொழிலுக்கான உபகரணங்களையும் வாங்கி அளித்திடுதல் உத்தம தான தர்மமாகும். இதனால் கணவன் தன் மனதில் எந்தத் திட்டம், என்ன காரியம் பற்றி முடிவு எடுத்திருக்கின்றார் என்று அறிய இயலாது திகைப்புடன், திகிலுடன் வாழ்கின்ற இல்லறப் பெண்களுக்கு, மனம் விட்டுப் பேசும்படியான நல்வாய்ப்புகள் நிறைய கிட்டும். மனத் திகில் அகலும்.
நன்றாகப் படம் வரைபவர்கள், ஆஞ்சநேயர் படத்தை வரைந்து, நல்ல இடங்களுக்கு, நல்லோர்க்கு, ஆலயங்களுக்கு அளித்திட வேண்டும். அல்லது இவர்களை வரைய வைத்து அளிக்க வேண்டும். இதனால் தந்தை - பெண் பிள்ளை, தந்தை - ஆண் பிள்ளை இடையே அடிக்கடி ஏற்படும் வாக்குவாதம் பற்றி அஞ்சுகின்ற தாய்மார்கள் மனசாந்தி பெற உதவும்.
பூஜைக்காக நல்ல ஆஞ்சநேயர் படம் வரைந்துள்ள நல்ல ஓவியர் இல்லத்திற்குச் சென்று இன்று வெற்றிலை, பாக்கு, பழங்கள், வேட்டி, துண்டுகளுடன் மரியாதை செய்வது மிகவும் விசேஷமானதாகும். இதனால் பிள்ளை பாக்யம் இல்லாதோர் எதிர்காலம் பற்றிக் கொள்ளும் அச்சங்களுக்குத் தக்க மாற்று நிவர்த்திகள் கிட்டும். இதற்காக, மேற்கண்ட பூஜைகளைத் தொடர்ந்து ஆற்றி வர வேண்டும்.
குலதெய்வ வழிபாட்டின் குறை களைய ... |
பஞ்சாங்கத்தில் நேத்திரம், ஜீவன் என்ற இரண்டு கால நீரோட்ட அம்சங்கள் குறிக்கப்பட்டிருக்கும். பலரும் இத்தகைய அபூர்வமான கால அம்சங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதும் கிடையாது. நேத்திரம், ஜீவன் என்ற இந்த இரண்டு கால நீரோட்ட அளவைகளுமே, திதியை அனுசரித்து வருவதாகவும். முறையே 0, 1, 2 என்றும் 0, அரை, 1 என்ற அளவீடுகளிலும் வரும்.
நேத்திரம், ஜீவன் இரண்டுமே ஆன்ம நிலைகளில் யோக, தியான சக்திகளை மேம்படுத்துவதில் பெரிதும் துணை புரிகின்றன. லௌகீகமான, அதாவது பூலோக மக்களின் தினசரி வாழ்க்கைக்கு, இவை இரண்டையும், இதர கால அம்சங்களான, யோகம், கரணம், திதி போன்றவற்றோடு சேர்த்துப் பலா பலன்களை அறிதலே சிறப்புடையதாம்.
அனைத்து தெய்வ மூர்த்திகளின் நேத்திரம் அதாவது, வலது, இடது என்ற இரண்டு கண்களுமே, சூரிய, சந்திர மூர்த்திகளின் பரிபூரணமான அம்சங்களைத் தங்கி இருப்பதைக் குறிப்பதாகும். ஜீவ நேத்ரம், நேத்ர ஜீவன் என்ற இரண்டு வார்த்தைகளுக்குமே பல அர்த்தங்கள் உண்டு. ஜீவன் என்பதற்கு உயிரைத் தாங்கி இருப்பது, வாழ்வது என்பதோடு, இறைவனை நோக்கிச் செல்லும் இனிய ஆத்மப் பாதை என்ற பொருளும் உண்டு. எனவே ஜீவநேத்திரப் பாதை இறைவனை நோக்கிச் சீர்நடை போடுவதாகும். எனவே நேத்திரமும் ஜீவனும் முழுமையான நாட்களில் இயன்ற வரை, குறைந்தது மூன்று மைல் தூரத்திற்கு, ஆலயத்தினுள் 36, 108 பிரதட்சிணங்கள், நடைப் பிரதட்சிணம் கொள்வது ஜீவநடையை மேம்படுத்தும்.
பல்குனி நதி பூவாளூர்
உண்மையில் நேத்திரம், ஜீவன் என்பது பகீரதன் பூமிக்குக் கொண்டு வந்த கங்கை போல, விண்ணுக்கும் பூமிக்கும் இடையே உள்ள கண்ணுக்குத் தெரியாத சூக்கும ஒளியாலான ஒளிக் கற்றையாகும். இதைத்தான் ஒளிரும் நதி, ஜோதிப்ரவாக ஆறு என்றும் குறிப்பிடுவர். இதன் இரு கரைகள்தாம் நேத்திரப் படித் துறை, ஜீவப் படித்துறை என்று பெயர்களைக் கொள்கின்றன. இவ்வகைகளுள் ஒரு வகையே கும்பகோணம் சக்கரப் படித் துறை, பூவாளூர் பல்குனி நதிப் படித் துறை, (மதுரை) அருகே திருப்பூவணத் தலப் படித் துறைகள் ஆகும். இங்கெல்லாம் இறந்தவர்களின் அஸ்திகள், மலர்களாகப் புஷ்பிக்கும் மகத்தான பித்ரு சக்திகளைப் பூண்டவையாம்.
நேத்ரம், ஜீவன் இவை இரண்டிற்கும் இடையே செல்வதுதான் கால நீரோட்டமாகும். ஜீவ நேத்ரக் கால அம்சங்கள் இரண்டும், 2, 1 என முழுமையுடன் பிரகாசிக்கும்போது வம்சாவளியாக பரம்பரை, பரம்பரையாக ஆற்றி வரும் குல தீப பூஜை, விளக்குப் பூஜை, பித்ருக்களுக்கான படையல் வழிபாடு, மாவிளக்கு பூஜை, விட்டுப் போன முடி இறக்குதல் போன்ற நேர்த்திகளை நிறைவேற்றுவது மிகவும் சிறப்பு.
பலரும் குல தெய்வப் பூஜையை ஆண்டுதோறுமேனும் முறையாகச் செய்வதில்லை. பலரும், வருடத்திற்கு ஒரு முறை மட்டும், அதுவும் குல தெய்வம் உள்ள ஊரில், தெரிந்தவர்களை, இருப்பவர்களை வைத்து அபிஷேக ஆராதனைகளை நடைபெறச் செய்து, குடும்பத்தோடு ஒரு முறை இயந்திர கதியாக ஒரு விசிட் செய்வது போல சென்று வருகின்றனர். ஏதோ போனோம். வந்தோம் என்ற மனநிலை இந்தக் குலதெய்வ வழிபாட்டில் தொக்குவதால்தான், இவற்றில் சிரத்தை, பக்தி சற்றும் படிவதே கிடையாது. குலதெய்வ வழிபாட்டை இவ்வாறு கடனே என்று செய்தால் எவ்வாறு நற்குலம் தழைக்கும்? குலதெய்வ வழிபாட்டில் உள்ள இத்தகைய குறைகளைச் சீர்மை செய்ய ஜீவ நேத்திரப் பரிபலநாள் உதவும்.
இந்நாட்களில் தென்னங் கன்றை, ஏழை விவசாயிகளுக்கு தானமாக அளித்தல், வாழை மரம் பயிரிடுவோர்க்குத் தேவையான உதவிகளைச் செய்தல் போன்றவை சந்ததிக் குற்றங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
திருப்பைஞ்ஞீலி
வாழை மரம் (திருப்பைஞ்ஞீலி, திருக்கழுக்குன்றம்), தென்னை, ஆலமரம் (திருவாலங்காடு) போன்றவற்றைத் தல விருட்சமாகக் கொண்டுள்ள ஆலயத்தில் வழிபடுவது குல தெய்வப் ப்ரீதியைத் தரும்.
இறந்தவர்களுடைய அஸ்தியை நதியில் கரைப்பதற்கு என எடுத்து வைத்து நெடுங்காலம் வீட்டில் வைத்திருந்தாலும், மூதாதையர்கள் நன்னிலை அடைவதை இது தாமதப் படுத்தும். எனவே, இத்தகைய பழையான அஸ்திகளை ஒரு புது செப்புச் செம்பில் மல்லிகைப் புஷ்பங்களோடு சேர்த்து வைத்து, புனிதமான நதியில், புனிதமான கடற்கரையில் செம்போடு விட்டுக் கரைத்தலுக்கு இத்தகைய ஜீவ நேத்திர சக்திகள் பெரிதும் பயன்படும்.
பெற்றோர்களின் அஸ்திகளைப் புனித நதிகளில் கரைக்கும் வாய்ப்பை நழுவ விட்டவர்கள், இத்தகைய ஜீவநேத்திர பூரண நாட்களில் ஒரு வாழை இலையில் வாழைக்காய், உடைத்த தேங்காய், புடலங்காய் ஆகிய மூன்றையும் வைத்து,
குலதேவர் பூமழையாய் நற்புனலை நல்லிடுக!,
குலவளியார் கவினுறவே நற்கதியும் ஆகிடுக!
(வளி-மூதாதையர் வழிப்படலம்)
குலத்தாரும் நல்லாகி அறவழியில் ஓங்கிடுக!
- என 24 முறைகள் ஓதி ஏழ்மையில் வாடும் மயானச் சிதைக் காப்பாளர்களுக்கு (பெரு மதிப்பிற்குரிய வெட்டியான்கள்) உணவு, உடைகளைத் தானமாக அளித்து, அவர்களுடைய குடும்பத்திற்குமான ஒரு வார மளிகைச் சாமான்களை அளித்திடுதல் மகத்தான தான தர்மமாக, உங்கள் மூதாதையர்கள் நல்வழியை அடைய உதவும். குலதெய்வ வழிபாடும் சீர்மை பெற உதவும்.
பறவைகள் தரும் பரமானந்தம் |
நாம் வாழ்க்கையில் தினந்தோறும் காணும் பறவைகளுக்கும், நமக்கும் நிறைய ஆன்மீகத் தொடர்புகள் உண்டு. தினமும், நம் வீட்டில் உணவெடுத்துச் சென்று நன்கு பழகுகின்ற காக்கைக்கும் நமக்கும் கூட, பூர்வ ஜன்மத் தொடர்புகள் நிறைய உண்டு.
மேலும், நாம் தினமும் பல இடங்களிலும் காண்கின்ற பட்சிகள், நமக்கு விண்ணுலக லோகங்கள் பலவற்றிலிருந்து வரும் செய்திகளைக் கொணர்கின்றன. ஆனால், நாம்தாம் இவற்றைப் புரிந்து கொள்ளும் பரிபக்குவத்தைப் பெறுவதில்லை. இவற்றை உணர்த்த வல்ல ஆறாம் பகுத்தறிவை, இறைவன் மனிதர்களுக்கென விசேஷமாக அளித்திருந்தும், இதனை மனித குலம் தெய்வீகப் பூர்வமாகப் பயன்படுத்தத் தவறி விட்டது.
மேலும் இத்தகைய கால ஞானத்தை உணர்த்த வல்ல சற்குருமார்களையும் மனித குலம் மதித்துப் போற்றுவதில்லை ஆதலின், பூவுலகில் உள்ள பல சற்குருமார்களும், தத்தம் குரு மண்டல லோகங்களுக்குத் திரும்பிச் சென்று கொண்டு இருக்கின்றார்கள். இதனால் உலக மனித சமுதாயத்திற்கே பேரிழப்பு கூடி உள்ளது! என்னே இழிநிலை மனித குலத்திற்கு!
சுமார் 40 கிராம் எடையே உள்ள சிட்டுக் குருவி மற்றும் சிறிய பட்சி வகைகள், தமக்கென்று இறைவன் அளித்துள்ள ஓரறிவு முதல் மூன்றறிவுத் திறத்திற்குள் வாழ்ந்து நம்முடன் மானசீகமாகப் பேசுகின்ற சக்தியைப் பெற்றுள்ளது என்றால் என்னே இறைவனின் படைப்பு!
ஸ்ரீபாண்டவ தூதர்கள் காஞ்சிபுரம்
நாம் காணும் ஒவ்வொரு குருவியும் க்கீ, க்கீ என்று ஒரே மாதிரியாக ஒலிகளை எழுப்பிக் கொண்டு இருப்பது போல் வெளிப்படையாக நமக்குத் தோன்றினாலும், ஒவ்வொன்றுக்கும் பல விதமான அர்த்தங்கள் உண்டு. இவற்றுள் பலவும் பிற லோகத்துச் செய்திகள், புவியில் அடுத்து நடக்க இருப்பவை, நாமறியா வேத மந்திரங்கள், பித்ருக்கள் அனுப்பும் செய்திகள் போன்ற பலவும் ஆகும்.
உதாரணமாக, ஞாயிற்றுக் கிழமை அன்று சிட்டுக் குருவிகள் பல லோகங்களிலிருந்து வரும் வேத சக்திகளை ஈர்த்து நமக்கு அளிக்கின்றன. மிகவும் சுறுசுறுப்பான பறவைகளுள் ஒன்றான சிட்டுக் குருவியின் ஜீவ சக்தி, தேவ பரிமளிப்பு நிறைந்தது. இதன் தேவ சக்திகள் மனித குலத்திற்குப் பலவிதங்களில் நன்மையைத் தருவதாகும். வைத்திய மருந்துகளுக்காகப் பலரும் சிட்டுக் குருவியை வதைத்துக் கொல்கின்றனர். இது பாபகரமானது.
சில குறித்த ராஜ வைத்தியர்கள், தக்க பழமையான வைத்திய முறை மூலம் தக்க பிராயசித்த ஹோமங்கள், பூஜைகளை நிகழ்த்தி, குறைந்தது ஒரு மாதத்திற்கு தாம் தேர்ந்தெடுத்த குறித்த சில புறா மற்றும் குருவிகளுக்கு மிகவும் தெய்வீகமான உணவு வகைகளை அளித்து, மூலிகைச் சத்துப் பூர்வமாகவே அவைகளை வளர்த்து வருவர். பிறகு இவை தாமாகவே ஹோம குண்டத்தில் இயற்கையாகவே குறித்த செவ்வாய் ஹோரை நேரத்தில் வந்து விழும். இவைதாம் சில வகைப் பண்டைய வைத்தியங்களில் குறிப்பிடப்படுபவை.
இவ்வாறு மூலிகைப் பூர்வமாக உணவு, திரவியங்களை உண்டு, ஒரு மண்டல காலத்திற்கு மேல் மூலிகா சக்திகள் செறிந்தவையாக விளங்குகின்ற சிட்டுக் குருவி, புறா, காட்டு மைனா போன்றவையே மனித குல நோய்களைத் தீர்ப்பதற்கு உதவுபவை! இதற்காகச் சில வகைக் குருவிகள் தம் உயிரை அர்ப்பணிப்பதாக ஆன்மப் பூர்வமாகச் சங்கல்பம் செய்து கொள்கின்றன. இத்தகைய சிட்டுக் குருவி, ஆமை, புறா போன்றவற்றிற்கு உரித்தான ஆத்ம தியாக பூஜைகள், ஆத்மார்ப்பண ஹோமம் போன்றவை நிகழப் பெற்ற பின்புதான் இவற்றின் உடல் பாகங்கள் மருத்துவ பூர்வமாகப் பயன்படுத்தப் பெறும். கொன்று பெறுவதால் கொடிய பாவமே மிஞ்சும்.
பறவை இனங்கள் அனைத்துமே, ஆறாம் இறைப் பகுத்தறிவைப் பூண்டிருக்கும் மனித குலத்தின் மேல் அபரிமிதமான பெரும் மதிப்பைக் கொண்டிருப்பதால், மனித குலமும் பட்சிகளிடம் மிகுந்த தெய்வீகப் பண்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் நடைமுறையில் இவ்வாறு மனித சமுதாயம் பட்சிகளுக்கு உரித்தான சேவைகளை ஆற்றுவதும் கிடையாது. இதனால் தற்போதைய கலியுக மனித சமுதாயமே பட்சிகளின் பலவிதமான சாபங்களுக்கு ஆளாகி உள்ளது. இதற்கு ஓரளவு நிவர்த்தி தரும் நன்னாட்கள் வருடத்தில் சில அமைவது உண்டு.
இத்தகைய பட்சி சாந்தி பரிபாலன ஆதி வாரமாக, ஞாயிற்றுக் கிழமை விளங்குகின்றது. ஆனந்தமான பறவைகள் ஒலிகள் உங்களுடைய குடும்பத்தாருடைய காதுகளில் விழுவது நல்ல சந்ததி விருத்தி சந்ததிகளைத் தரும். எனவே, இந்நாளை பட்சி சாந்தி பரிபாலன நாளாகக் கொண்டு, குறைந்தது எட்டு கருடாழ்வார் மூர்த்திகளையும் தரிசித்து, நந்தி வாகனம், யானை வாகனம், சிம்ம வாகனம், வேங்கை வாகனம், மயில் வாகனம் போன்று எட்டு விதமான தெய்வ வாகன மூர்த்திகளுக்கு நெய்க் காப்பு இட்டு, பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபடுவதால்,
- வேலையா திருமணமா, பதவி உயர்வு வேண்டுமா இல்லையா, கல்யாணத்திற்கு இந்த வரன் ஏற்புடையதா, இல்லையா -
- வேலை மாற்றம் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் மாற்றம் தேவையா இல்லையா
போன்ற - இதுவா, அதுவா என்பதான - முக்கியமான குழப்பங்களில் - தெளிவான விடை கிட்டிட, முகுந்த கீர்த்திப் பித்ருக்கள் துணை புரிவார்கள்.
சென்னை செங்கல்பட்டு அருகே மாமண்டூர்த் தலத்தில் ஸ்ரீபட்சீஸ்வரச் சிவலிங்க மூர்த்தி அருள்கின்றார். இங்கு சுவாமிக்கு குறைந்தது 5 கிலோ எள் தான்யம் ஊறிய நீரால் எள்ளோடு சேர்த்து திலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
இந்த ஆலயத்தில் பட்சிகளுக்கு நிறைய தான்ய மணிகளை இடுவதால் காடை, கோழி, சேவல், கௌதாரி, மைனா போன்ற பறவை இறைச்சிகளை உண்டோர்க்கு ஏற்பட்டிருக்கும் பல வகையான பட்சி சாபங்கள் சந்ததிகளைத் தாக்காது காத்திட நல்வழி பிறக்கும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து விதமான பறவைகளுக்கும் உணவு, தான்ய மணிகள், பறவைகளுக்கு மிகவும் அபூர்வமாக உண்ணக் கிடைக்கும் முந்திரி, பாதாம் பருப்பு போன்ற தான்யங்களை உடைத்து பறவைகள் உண்ணும் அளவில் வைத்திடல் நலம்..
முடிந்தால் அவரவர் வீட்டு மாடியில் அல்லது அலுவலகத்தில் நிறைய பறவைகள் வந்து தம் மேல் நீர் தெளித்துக் கொண்டு, நீராடி ஆனந்திக்கும் வகையில் ஒரு பெரிய ட்ரே நிறைய பறவைகள் நின்று நீராடும் அளவிற்கு நீரை நிறைத்து வைக்க வேண்டும். இவற்றில் காக்கை, குருவி, கிளிகள் ஆனந்தமாக நீராடி எழுப்புகின்ற சந்தோஷ ஒலிகள் உங்களுடைய குடும்பத்தாருடைய காதுகளில் விழுவது நல்ல அமைதியைக் குடும்பத்தில் பரிமளிக்கச் செய்யும்.
நட்சத்திர விரத நாட்கள் |
விரதங்களில் அந்தந்த நட்சத்திர வகை விரதம் பல அரிய பலன்களைத் தருவதாகும். கிருத்திகை விரதம், சிராவணம் எனப்படும் திருவோண நட்சத்திர விரதம் போன்றவை மட்டும்தாம் தற்போதைய கலியுகத்தில் ஓரளவு நிரவி வருகின்றன.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய விரத முறைகள் உண்டு.
சிராவண விரதம் என்பது, திருவோண நட்சத்திரம் தொடங்கி, முடியும் வரையில் உண்ணா நோன்பிருந்து அல்லது துளசி தீர்த்தம் மட்டும் சில துளிகள் அருந்தி இரண்டு கைகளிலுமே தீனக் காப்பு, மணிகங்கண், காசிக் கயிறு போன்ற பலவிதமான ஆன்மீகச் சாதனங்களை அணிந்தவாறும் விரதம் பூணுதலாகும்.
மரண பயம் போக்கும்
திருவையாறு திருத்தலம்
பெருமாளை, சங்கர நாராயண வடிவில் அதாவது சிவன், பெருமாள் ஐக்ய வடிவிலும், சிவபெருமானைப் பெருமாள் ஆராதித்தத் தலங்களில் பூஜைகளுடனும் நிறைவு செய்வதும் திருவோண விரத பலன்களைப் பெருக்குவதாகும்.
பொதுவாக, ஒவ்வொரு மிருகமும், பறவையும், ஒவ்வொரு நட்சத்திர நாளில் விசேஷமான விரதத்தைப் பூணுகின்றன. திருவோண நட்சத்திரமானது சிவன், பெருமாள் இரண்டு மூர்த்திகளுக்குமே உரித்தானதால், திருவோண நட்சத்திர தேவி, இந்நாளில் விஸ்தாரமான பூஜைகளை நிகழ்த்தி, இதன் பலாபலன்களைத் திருவோண நட்சத்திர நாளில், குறித்த அமிர்தக் கடிகை நேரத்தில் பதித்துத் தருகின்றாள்.
பொதுவாக, திருமாங்கல்யத்திற்குப் பொன் உருக்குவதற்குத் திருவோண நட்சத்திரம் மிகவும் சிறப்புடையது. ஆலயத்தில், மூல மூர்த்திக்கு அபிஷேகம் செய்யும் போது, அபிஷேகச் செம்பில் பக்தர்கள் அளிக்கின்ற பொன் நகைகளை வைத்துத் தீர்த்தத்தை அபிஷேகம் செய்த பிறகு, நகைகளை மீண்டும் பக்தர்களுக்கு அளித்து, நகைகளில் ஸ்வர்ணாகர்ஷண நல்வரங்களைப் பதித்துத் தரும் தெய்வீக வழிபாட்டு முறை இன்றும் பல ஆலயங்களில் நடந்து வருகின்றது நாம் அறிந்ததே! பாதுகாப்பு காரணமாக அனைத்து ஆலயங்களிலும் இதனைக் கடைபிடிப்பது கிடையாது.
பொதுவாக மனிதன் அணிந்த எதையும் இறைவனுக்குச் சார்த்துவது கிடையாது. ஆனால், இயற்கையிலேயே தோஷங்கள் அற்ற தெய்வீகப் பொருளாகப் பொன் விளங்குவதால்தான், ஒருவரால் எத்தனையோ ஆண்டுகளாக அணிந்து வந்திருக்கும் நகைகளைக் கூட, அபிஷேகச் செம்புத் தீர்த்தத்தில் வைத்து, அந்நீரால் ஆலயத்தில் இறைவனை அபிஷேகித்து ஆராதிக்கும் அளவிற்குத் தங்கமானது உத்தம தெய்வீகப் பொருளாக விளங்குகின்றது.
திருவோண நட்சத்திர தினங்களில் இல்லறப் பெண்களும், ஆடவரும் தம்முடைய நகைகளை, ஒரு செம்பில் பத்திரமாகப் பாதுகாப்புடன் வைத்து, அதில் துளசி, வில்வ இலைகளையும் சேர்த்து, இவ்வாறு பொன் ஸ்பரிசித்த நீரை மட்டும் அருந்தி, திருவோண விரதம் விரதம் பூண்டு, விரத முடிவில் சிவ, விஷ்ணு ஆலயங்களில் இறைவனுக்கான அபிஷேகச் செம்பில் தம்முடைய நகைகளைக் கொடுத்து வைத்திட வேண்டும். அபிஷேகமான பின் அபிஷேகத் தீர்த்தத்தைக் கோமுகம் வழியாகப் பெற்று, பிரசாதத் தீர்த்தத்தை அருந்தி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். நகைகளை பத்திரமாக மீண்டும் பெற்றுக் கொள்ளவும்.
பொதுவாக, திருவோண விரதத்தில் துளசி, வில்வம் கலந்த நீரை அருந்தி விரதம் இருப்பதால் மனத் தெளிவு கிட்டுவதை நன்கு உணர்ந்திடலாம். இதற்கு மூலமுதல் காரணம் திருவோண நட்சத்திர மண்டலத்திலிருந்து பூமிக்கு வருகின்ற விசேஷமான ஹரிசிவபுலக் கிரணங்களாகும்.
திருவோண நட்சத்திர தினத்தன்று ஸ்ரீசூரிய நாராயண மூர்த்தி, சூரிய மண்டலத்தில் தரிசனம் அளிப்பதால், சூரிய கிரணங்களிலும், ச்ரவணாங்க்ருத சக்திகளும் நிறைந்திருக்கும். சூரிய மூர்த்திக்குப் பசு நெய் தீபம் ஏற்றுவதால், தந்தை வழிப் பித்ருக்கள் நலம் பெறுவர். வருடத்திற்கு 5 முறையேனும் முறையாக இத்தகைய திருவோண நட்சத்திர விரதம் இருத்தலால், பெண் வகை சந்ததிகள் நல்ஒழுக்கத்துடன் சௌபாக்கிய சுமங்கலி சக்திகளுடன் திகழ்வதற்கான நல்வரங்களும் விருத்தியாகும்.
இனிய கனவுகளை உருவாக்குங்கள் |
ஒவ்வொருவரும், ஒரு வருடத்தில், 96 தினங்களில் தம் மூதாதையருக்குத் தர்ப்பணம், படையல், திதி, திவசம் அளித்தாக வேண்டும். தர்ப்பைச் சட்டம் விரித்து, எள்ளைத் தெளித்து, நீர் வார்க்கின்ற, செலவே இல்லாத, மிகவும் எளிமையான தர்ப்பண பூஜையை, ஒருவர் ஓராண்டின் 96 நாட்களிலும் செய்து வந்தால், குடும்ப வாழ்க்கை நிம்மதியாக அமைவதற்குப் பித்ருக்களின் ஆசி நன்கு பொழியும்.
இவ்வளவு எளிமையான ஒரு பூஜையைக் கலியுகத்திற்கெனச் சித்தர்களும் மகரிஷிகளும் தந்திட்டாலும், ஒரு கோடி மக்களில் ஒருவர் கூட இதனை, பன்னீரெட்டுப் படையல் (12 x 8 = 96 நாட்களுக்கான) (ஷண்ணாவதித்) தர்ப்பணங்களை ஏன் கடைபிடித்தல் கிடையாது என்பது வியப்பிற்கும், வேதனைக்கும் உரியதாகும்.
நல்ல கடவுள் சிந்தனையுடன் அரிய சத்சங்க இறைப் பணிகளை ஆற்றி வருவோர் கூட இதனைக் கடைபிடிப்பது கிடையாது. ஆனால், ஒரு ஊரில் உள்ள அனைத்து மக்களின் ஜீவன்களின் நலனுக்காக, அந்த ஊரில் ஒரே ஒருவராவது, இந்த 96 நாட்கள் தர்ப்பணத்தை மிகவும் எளிமையாக, அமைதியாக, பணிவோடு ஆற்றிடில் அனைத்து மக்களும் தர்ப்பண பூஜை ஆற்றிய பலா பலன்களை மிக எளிதில் பெற்றிடலாம் அல்லவா! இது மகத்தான கலியுகத் தபஸ் ஆகவும் சிறக்கின்றது. இதை ஏன் எவரும் நன்முறையில் உணர்ந்து கடைபிடிப்பது கிடையாது.
12 அமாவாசைகளோடு மட்டும் தர்ப்பண பூஜை நின்று விடுவது கிடையாது. 12 மாதப் பிறப்புகள், 14 மனு தினத் தர்ப்பணங்கள், வைதிருதி, வ்யதீபாத யோக நாட்கள், 4 யுகாதி தினங்கள், மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய 4 மாதங்களில் அமையும் அஷ்டகப் படையல் நாட்கள், 12 அமாவாசை நாட்கள் என்பதாக- 96 தினங்கள் தர்ப்பண நாட்களாக நமக்குக் கிடைத்துள்ளன
இதில் வைதிருதி யோகத்தின் தத்வார்த்தம் என்னவென்றால், இது அமைகின்ற நாளில், மரண யோகம், ராகு காலம், அர்த்தப் பிரகரணன் நேரம், சூன்ய திதி, எமகண்டம், காலன் நேரம் ஆகியவை தம் சக்திகளை மறைத்துக் கொண்டு, வைதிருதி யோக சக்திகளுக்கு முதன்மை இடம் அளிக்கின்றன. மரண யோகம், எமகண்டம், ராகு கால நேர தோஷங்கள் யாவையும் தம்முள் ஏற்று, கரைத்து அருள் பாலிக்கின்ற யோக நாள் என்றால் என்னே வைதிருதி யோகத்தின் மகிமை!
உறவினர்கள், நண்பர்கள், உற்றம், சுற்றம், பிடித்த தலைவர்கள், நடிகர்கள், ஆசையுடன் வளர்த்த நாய், பூனை போன்ற மிருகங்கள் என இறந்தவர் எவருக்கெல்லாம் தர்ப்பணம் அளிக்கத் தோன்றுகிறதோ, அவர் பெயர், கோத்திரம் சொல்லி அல்லது பெயரையாவது அவருடைய நினைவோடு, சொல்லி எள்ளும் நீரும் வார்த்தல் மகத்தான காருண்ய தர்ப்பணம் ஆகின்றது. உலகில், எங்கேனும் விபத்துகளில் (பூகம்பம், புயல், வாகன விபத்து போன்றவற்றில்) நீங்கள் பார்க்காதவர்கள் இறந்திருந்தால் கூட, அவர்களுக்கும் சக தோழ காருண்ய தர்ப்பணமாக அவர்களை எண்ணித் தர்ப்பணம் அளித்திடலாம்.
கலியுகத்தில் தர்ப்பணம், தர்ப்பணம் என்று அடிக்கடி சொல்லக் காரணமே, மிக எளிமையான இந்தப் பூஜையால் கடுமையான பூஜைகளில் கூட பெற இயலாத பித்ருக்களின் நல்லாசிகளைப் பெற முடிவதுதான். இந்தத் தர்ப்பணத்தை உங்களோடு நிறுத்திக் கொள்ளாது, தர்ப்பணத்தின் மகிமையே அறியாதவர்களையும் அமர வைத்து, அவர்களுக்கும் தர்ப்பண பூஜையை சொல்லிக் கொடுத்துச் செய்ய வைத்தலாகும்.
தர்ப்பண நாட்களில் இயன்ற வரையில் துண்டு அல்லது பருத்தித் துணியை விரித்து, தலையணை இல்லாது உறங்குதலால், நல்ல மன அமைதி கிட்ட வழி பிறக்கும். கனவிலும் பல சுப மாற்றங்களையும் கண்டிடலாம்.
மகான்களைப் பழித்ததற்கும் பரிகாரம் உண்டே |
தினமும் வருகின்ற 27 நட்சத்திரங்கள், 27 தின யோகங்களைப் போல, சித்த யோகம், அமிர்த யோகம், மரண யோகம், பிரபலாரிஷ்ட யோகம் ஆகிய நான்கு வகை யோக நிலைகளும் உண்டுதாமே! யோக சந்திகள் எனப்படுவதாக, ஞாயிறில் சித்தயோகமும், அமிர்தயோகமும் சந்திக்கும் யோகசங்கமம், திங்களன்று அமிர்தயோகமும், சித்தயோகமும் சந்திக்கும் யோக சந்திப்பு என இவ்வகையில் 1008 வகைகளுக்கும் மேற்பட்ட யோக, தாரண சந்தி(ப்பு) யோக வகைகள் உண்டு. ஒவ்வொன்றும் விதவிதமான பலன்களைத் தருவதுடன் வெவ்வேறு விதமான கர்ம வினைகளையும் தீர்க்க வல்லவை!
ஸ்ரீதீர்த்த நாராயணர் ஜீவாலயம்
திருப்பூந்துருத்தி
ஒவ்வொரு அமிர்த யோகமும், சித்த யோகமும் இணையும் காலச் சங்கையில், ஒரு சில நிமிடங்கள் யோகேஸ்வரக் கால நிலை நன்கு பூ(ரி)த்து இருக்கும். உதாரணமாக சித்த யோகமும், அமிர்த யோகமும் புதனில், சப்தமித் திதியில் ஒருங்கிணையும் யோக சந்தி நேரத்தில், சித்தகூபாமிர்தம் எனும் அமிர்த யோக நீரோட்டம் ஏற்படுகின்றது. இவை திருஅண்ணாமலை போன்ற அக்னி மலைத் தலங்கள், பட்டறியாத் திருமேனியாக லிங்க மூர்த்திகள் சிறக்கும் சென்னை அருகே கூவம், தக்கோலம் போன்ற தலங்கள், ஸ்ரீஅக்னீஸ்வரர் மற்றும் அக்னி பகவான் எழுந்தருளும் தலங்களில் இவை இன்று நன்கு பூரித்தருளும்.
பொதுவாக, சித்த யோகத்தின் கடை நிலையிலும், அமிர்த யோகத்தின் முதல் நிலையிலும் அமையும் ஒரு நாழிகை நேரத்தில், அந்தந்தத் தலத்தின் பூமி மற்றும் வான நீரோட்டத் தன்மைக்கு ஏற்ப, இந்தச் சித்தாமிர்த யோக நீரோட்டம், வானிலும் பூமியிலும் தோன்றிடும். இவை பூக்கள், துளசி, வில்வம் வழியாகப் புவியில் அமிர்த சக்திகளாக நிரவும். லலாடங்க யோகம் எனும் முறையில், தலையில், சகஸ்ராரத்திலிருந்து அமிர்தத் தேனானது, யோக நீரோட்டப் பூர்வமாக, தொண்டைக்குள் ஒரு சிறு துளியாக இறங்கி, சாசுவதமாக இனித்து இறங்கிடும்.
இத்தகைய யோக சக்திகள் நிறைந்த நேரத்தில், தனது நாக்கினை மிகவும் கவனமாகத் தொண்டைக் குழிக்குள் வைத்திருந்து முறையாக யோகம் பயில்வோர்க்கும், தனக்கென அல்லாது பிறர்க்கென சேவை ஆற்றுகின்ற மனப்பாங்கோடு சுயநலமற்ற சேவைகளை ஆற்றுகின்றோர்க்கும், உடலில், நாளங்களில் தாமாகவே இயற்கையாகச் செறிந்துள்ள, ஆங்காங்கே இருக்கின்ற யோக சக்திகள் திரண்டு, உருண்டு ஒரே யோக நிலையில் செறிவு பெறும்.
லலாடங்க யோகமாகிய நாக்கினை மிகவும் கவனமாகத் தொண்டைக் குழிக்குள் வைத்திருத்தல் என்பது ஒரே நாளில் வந்து விடாது. தினமும் இதனைப் பயின்று வர வேண்டும்.
யோக நிலைகள் நெறிப்பட புத்தி, மிக, மிகத் தெளிவாக இருக்க வேண்டும். ஆனால் புத்தித் தெளிவு தானாகவே அமைதல் மிகவும் கடினம். ஆனால் இதனைச் செறிய வைக்கும் அளவில் இத்தகைய யோக நாட்களில் பூவுலகில் சில அரிய யோக சந்திகள் தோன்றுவது மிகவும் பெறுதற்கரிய பாக்கியமாகும். இதற்காக, புத்திகாரகராகிய புத முர்த்திக்கு உரித்தான நாட்களில் பூலோக ஜீவன்களுக்கு யோக நிலைகளைத் தருபவர்களாய், ஏழு மாமுனிகளாகிய சப்தரிஷிகளே துணை புரிவதால், சப்தமி திதியும் புதன் கிழமையும் கூடும் நாட்களில் சப்த ரிஷிகளுக்கும் ஏழு விதமான வண்ண ஆடைகளைச் சார்த்தி வழிபடுதலால் சந்ததி, சந்ததியாக வரும் வாக்கு தோஷங்கள் ஓரளவு தணிய நல்வழிகள் பிறக்கும்.
ஸ்ரீசப்தரிஷிகள் லால்குடி
லலாடங்க யோக சக்திகள் நிறைந்த புத சப்தமி நாட்களில் நாக்கால் அருந்தும் உணவு வகை முறைகளைத் தானமாக (ஐஸ்க்ரீம், தேன், மிட்டாய் வகைகள், பஞ்சு மிட்டாய் போன்றவை), அளித்தலால், இதன் புண்ய சக்திகளால் மூதாதையர்களில், உணவு உடலில் உட்செல்ல இயலாது கஷ்டப்பட்டு, வருந்தி இறந்தோர் நன்னிலை பெற உதவும்.
இந்த யோக நாட்களில் அமர்ந்த கோலத்தில் இறைவன் அருளும் தலங்களில் அல்லது, யோக நிலையில் பூரித்திருக்கும் வகையில் சித்தர்கள், மகரிஷிகள் அமர்ந்துள்ள தலங்களில், பக்தர்கள் அமர்ந்து தரிசிக்கும் வண்ணம் தரையை நீர் விட்டு நன்கு கழுவி, சுத்திகரித்து, ஆலயப் பிரகாரத்தில் கோலம், செங்காவி இட்டு அலங்கரித்து, இறைப் பணியாற்றுதலால் நல்லவர்களைப் பற்றித் தவறாக எண்ணியமைக்கு ஓரளவு பரிகாரங்கள் கிட்டும்.
வாழ்க்கையில் அறிந்தோ, அறியாமலோ சித்தர்கள், சற்குருமார்கள் சான்றோர்களை இகழ்ந்து எண்ணி அல்லது அவதூறாகப் பேசி இருந்தால், மனதார இதற்காக வருந்துவோர்க்கு, இதன் கடுமையான விளைவுகள் ஓரளவேனும் தணிந்திட இத்தகைய பூஜைகள் உதவும். ஆனால் குருவிற்குத் துரோகம் இழைத்திருந்தால் இதற்கு பரிகாரம் என்பது அறவே கிடையாது.
மூன்றாம் கண் ரகசியம் |
கயல் விழி என்பது மீன் போன்ற அழகிய கண்கள் இருப்பதைக் குறிப்பதாகும். தண்ணீருக்குள்ளும் நன்கு தெளிவாகப் பார்க்கக் கூடிய கண் பார்வையைக் கொண்டவையே மீன்கள். தெய்வ முர்த்திகளின் வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாக இருப்பதும் நாம் அறிந்ததே.
ஜீவன்களுக்கு, சந்திரன் மதிகாரகராக இருக்கின்றார். மனிதர்கள், விலங்குகளுக்குக் கூட வலது கண் மற்றும் வலது நாசியில் சூரிய சக்திகளும், இடது கண் மற்றும் இடது நாசியில் சந்திர சக்திகளும் நிறைந்துள்ளன. மதிகாரகராக, மன நிலைகளை இயக்குபவராகச் சந்திர முர்த்தி விளங்குவதால், ஒரு நாளில் சந்திரன் எந்த ராசியில், நட்சத்திரத்தில், எந்தப் பாதத்தில் சந்திர கிரக மூர்த்தி இருக்கின்றாரோ அதைப் பொறுத்து, அவரவருடைய மன நிலைகளில் அனைவருக்கும் பல மாற்றங்கள் ஏற்படும்.
ஒருவர் பிறக்கும்போது எந்தந்த ராசியில் கிரகங்கள் அமைகின்றனவோ அதுவே அவருடைய ஜாதகச் சக்கர வடிவாகும். இதே ஜாதகச் சக்கர வடிவமாகவே அவருடைய உடலிலும் நவகிரக சக்தி அம்சங்கள் நிறைந்திருக்கும். அவரவர் உடலில் பிறந்த நேர ஜாதகப் பூர்வமாக, எங்கு சந்திர சக்தி மிகுந்துள்ளதோ அதுவே மதிகாரகப்பதி நிலையாகும். ஆனால், கோசாரம் எனப்படுவதான அந்தந்த நாளின் கிரக மாற்றங்களில், குறித்த நாளில், சந்திர மூர்த்தி எங்கிருக்கின்றாரோ, அந்நிலை சந்திர கதி நிலை எனப்படும்.
முக்கண் சக்திகள் பொலியும்
காருகுடி திருத்தலம்
சந்திரமதி, சந்திரப்பதி என்ற இந்த இரண்டையும் வைத்துத்தான் ஒவ்வொருவருடைய தினசரி மன நிலை அமையும். இதற்காகத்தான் விரதம், கடுமையான உணவு நியதி முறை, யோகாசனம், தியானம், ஆலய வழிபாடு போன்றவற்றால் உடலில் உள்ள சந்திரப்பதி நிலையை, வானத்தில் சந்திர கதி நிலை ஒட்டி, நல்லபடியாக மன நிலையை அமைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு சந்திர மூர்த்திக்கு மட்டுமல்லாமல், நவகிரக மூர்த்தி அம்சங்களுக்கான சுக்கிரகதி, சுக்கிரபதி போன்ற நிலைகளையும் அறிந்து, வழிபட்டு, உடலை நன்கு இயக்கக் கூடிய முறைகளும் உண்டு.
நவகிரகங்களைத் தினமும் சுற்றி வரும்போது, அவரவர் உடலில் உள்ள நவகிரக சக்திகளின் பீடங்களும் அவரவர் பூர்வ ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப மாறுபாடு அடையும். வலது கண் சூரிய சக்தி, இடது கண் சந்திர சக்தி போல, மூன்றாவது கண்ணும் தெய்வ மூர்த்திகளுக்கு உண்டு அல்லவா! இதே போல அனைத்து ஜீவன்களுக்குமே மூன்றாவது கண் உண்டு.
தெய்வ மூர்த்திகளுடைய முக்கண்ணை மட்டுமே மூன்றாம் நேத்திரம் என்று சொல்கின்றோம். ஜீவன்களுடையதை மூன்றாம் கண் என்று கூறுவது சொல்வது கிடையாது. இதனைப் பட்டிக் கண் என்று பொதுவாகச் சொல்வார்கள்.
திருமணச் சடங்குகளில் மாப்பிள்ளை, பெண்ணிற்கு நெற்றியில் பட்டி அணிவித்து, பட்டிக் கண்ணை மறைப்பார்கள். இதன் தாத்பர்யம்தான் என்ன?
தெய்வ மூர்த்திகள் மூன்றாம் நேத்திரத்திலிருந்து நேரடியாக ஒளிச் சுடராய் அருள்கின்றார்கள். எனவே, அருள்பாலிக்கும் தன்மை கொண்டதே தெய்வ மூர்த்திகளின் மூன்றாம் நேத்திரம். ஆனால் ஜீவன்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பட்டிக் கண்ணானது அனைவருக்குமே மறை பொருளாய் இருப்பதால், யோக சக்தி மூலமாகவே உணர்வதாக இருப்பதால், மறைத்த பொருளில்தான் ஒளியை உணர முடியும்.
அதாவது, இருட்டான அறையில் விளக்கொளி பிரகாசிப்பது போல, பட்டிக் கண்ணுக்கு முன் உள்ள திரையை மறைத்தால்தான் நெற்றிச் சுடர் உள்பூர்வமாய், ஆத்ம ஒளியாய்ப் பரிணமாகும். இதற்காகவும்தான் விபூதி, குங்குமம், சந்தனம்தனை நெற்றியில் இடுகின்றோம்.
இதையேதான் ஸ்ரீலங்காவில் உள்ள கதிர்காமம் முருகன் ஆலயத்தில் உள்ள திரைச் சீலையும், கடலூர் அருகே திருமாணிக் குழி ஸ்ரீவாமனபுரீஸ்வரர் ஆலய மூலத்தானத்தின் முன் உள்ள பீமருத்ரத் திரைச் சீலையும் உணர்விப்பதாகும்.
கதிர்காமத்தில் எப்போதும் மூல ஸ்தானத்தில் திரை இடப்பட்டிருக்கும். உள்ளே பூஜை செய்கின்றவர் அடிக்கின்ற மணி ஒலி தான் வெளியில் கேட்கும். யாரும் திறந்து பார்த்திடாத திருவளப் பெட்டி ஒன்று உள்ளே உள்ளது.
கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழியும் இத்தகைய உட்சுடர் ஒளிர்விப்புத் தலமாகும்.
மதுரையில் ஸ்ரீமீனாட்சி தேவி, மீன லோசனியாக மூன்று தனங்கள், மூன்று கண்களுடன் ஆட்சி புரிந்தவள். சிவபெருமானே தன் மணவாளனாக வர வேண்டும் என்பதற்காகப் பன்னெடுங்காலம் த்ரிலோசனி விரதத்தை முறையாகப் பூண்டு, மூன்றாம் நேத்ரதாரியாக வந்த ஈஸ்வரனின் மூன்றாம் நேத்ரப் பார்வையால் தன் மூன்றாம் தனம் மறையப் பெற்று இறைவனை மணந்தனள்.
எனவே த்ரிலோசனி விரதம் என்னும் விரத நாட்களில் முக்கண்ணப் பெருமானைத் தியானித்து விரதமிருந்து, யாவரும் தமக்கு நெற்றியில் மறைபொருளாக உள்ள பட்டிக் கண் பற்றி ஆத்ம விசாரம் செய்திடுதல் வேண்டும். விரத தினத்தன்று சிவபெருமான் த்ரிநேத்ர தாரியாக, முக்கண் பெருமானாக சிலா வடிவிலும் நடராஜராகவும் எழுந்தருளியுள்ள தலங்களிலும் வழிபடுதல் மிகவும் விசேஷமானது.
தேங்காய்க்கும் கண்கள் உண்டு. அதனால் தேங்காய், இளநீர், நுங்கு போன்ற கண் வகைக் காய்களை, கனிகளை இறைவனுக்குப் படைத்து தானமாக அளித்தல் விசேஷமானது. பல்கண் பாயசம் எனப்படும் ஜவ்வரிசிப் பாயசத்தை, முக்கண்ணாருக்கு (சிவனுக்குப்) படைத்துத் தானமளித்தலால், கண் திருஷ்டிகளால் ஏற்படும் சூட்டு வகை நோய்கள் தணியும்.
மேலும் எங்கெல்லாம் ஆலயத்தில் மூன்று அல்லது நான்கு கோபுரங்கள் உள்ளனவோ, அங்கு மூன்று வாயில்கள் வழியாகவும் சென்று, அடிப் பிரதட்சணமாக வந்து வழிபடுதலால், காணாமல் போன, தொலைந்து போன உறவினர், பத்திரங்கள், பொருட்கள் பற்றி அறிவதற்குச் சில நல்ல வாய்ப்புகள் ஏற்படும்.
தம்முடைய தீர்க தரிசன சக்தியை விருத்தி செய்து கொள்ள விரும்பும் ஜோதிடர்கள் திரிலோசன விரதம் இயற்றி ஆலயத்தின் மூன்று வாயில்களிலும் சென்று வந்து நடராஜர் தரிசனம் பெறுதல் விசேஷமானது.
மனச் சலனம் அகற்றும் சூரியவழிபாடு |
ஒவ்வொரு கிரகமுமே, அனைத்து நட்சத்திரக் கால்களிலும் சூக்குமமாகத் துலங்குகின்றன. நாம் தினமும் சந்திர மூர்த்தி உறையும் நட்சத்திரத்தையே அன்றைய நட்சத்திரமாகக் கொள்கின்றோம். சந்திர பகவான், ஒரு நட்சத்திரப் பாதத்தில் சுமார் ஆறு மணி நேரம் இருக்கின்றார்.
இவ்வாறு சூரிய மூர்த்தி ஒவ்வொரு நட்சத்திர பாதத்தில் அமரும்போதும் அற்புதமான பலாபலன்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக, சூரிய பகவான் மிருகசீரிஷ நட்சத்திர பாதங்களில் உறையும்போது விசேஷமான வஸ்த்ராக்னி, க்ருதாக்னி சக்திகள் பூரிக்கின்றன. மிருகசீரிஷ நட்சத்திர நாளில் ஆற்றப்படும் ஹோம குண்டத்தில் ஆஹூதியாக அளிக்கப்படுகின்ற பட்டு வஸ்திரம், பலவிதமான தைலங்கள், மூலிகைப் புல், நேத்திராங் கொட்டை போன்றவற்றைப் பஸ்மம் செய்யாமல் அப்படியே திருப்பி அளிக்கின்ற மென்மையான அக்னியையும் கொண்டதாகும்.
இதனால்தாம் மிருகண்டு மகரிஷி தமக்குத் தானமாக அளிக்கப்படுகின்ற பட்டு வஸ்திரங்களைப் பசு நெய்யில் தோய்த்து, மிருகசீரிஷ நாளில் ஆற்றுகின்ற ஹோமத்தில் ஆஹூதியாக அளித்துப் பலரும் வியக்கும் வண்ணம் அற்புதமாகப் பல சுயம்பு லிங்க மூர்த்திகளின் மேல் பெற்றுத் தர வல்லவராவார். இப்பட்டு வஸ்திரங்கள் யாவும் முழுமையாகப் படர்ந்து காட்சி அளிக்கும் வண்ணம் இறை தரிசனத்தைப் பெற்றுத் தர வல்லவர்.
வில்லேந்திய வேலவர், திருவையாறு
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோடி ஜீவன்களின் ஒவ்வொரு விநாடிக் காரியங்களையும் சூரிய, சந்திர மூர்த்திகள் இருவருமே சாட்சியாகப் பார்ப்பதால், அவர்களுடைய ஒளிக் கிரணங்களில் சிலவிதமான மாசுகள் படிந்து விடுகின்றன. இவற்றை அவர்கள் எவ்வாறு நிவர்த்தி செய்வது? பல இடங்களிலும் சூரிய மூர்த்தி, வருடத்தில் சில நாட்கள் சுயம்பு மூர்த்திகளின் மேல் தம் கிரணங்களைப் பெய்து, மாசகற்றிப் புனிதம் பெறுகின்றார். மேலும், மிருகசீரிஷ நட்சத்திர தேவி, தம் உத்தமக் கணவராம் சந்திர மூர்த்தி இழந்த பதினாறு கலைகளில், பலவற்றை மீண்டும் பெற்றிட, பட்டு வஸ்திரங்களை யாகங்களில் ஆஹூதியாக அளித்து, அதியற்புதமான ஹோம பூஜை பலன்களைப் பெற்று அர்ப்பணித்தாள். இதனால்தாம் யாகம் மற்றும் ஹோமம் நடத்துவதற்கு, மிருகசீரிஷ நட்சத்திர தினம் மகத்தானதான நட்சத்திரமாகத் துலங்குகின்றது.
இதனால்தாம் சூரிய மூர்த்தி, மிருகசீரிஷ நட்சத்திரத்தின் நான்கு பாதங்களிலும் உறையும் போது, எண்ணற்றத் திருத்தலங்களில் ஹோம பூஜைகளை ஆற்றி, பட்டு வஸ்திரங்களை ஆஹூதியாக அளித்து, தம் சூரியக் கதிர்களைச் சுத்திகரித்துக் கொள்கின்றார். எனவே, சூரிய பகவான் மிருக நட்சத்திர பாதங்களில் உறையும் நாட்களில் ஹோமம் நடத்தி, புதுப் பட்டு வஸ்திரங்களை ஆஹூதியாக அளித்தலும், ஹோமம் மற்றும் யாகம் நடக்கும் இடங்களில் ஆஹூதியாக அளிப்பதற்குப் பட்டு வஸ்திரங்களை அளித்தலும் மிகவும் விசேஷமான பலன்களைத் தரும்.
உற்றம், சுற்றம், தொழில், அலுவலகத்தில் தேவையில்லாத வகையில், பிறருடைய வஞ்சகத்தால், கோள் மூட்டுதலால் ஏற்பட்டுள்ள களங்கம் நீங்கிட இத்தகைய வழிபாட்டுப் பலன்கள் உதவும். மேலும் சூரிய மூர்த்தியை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வண்ணப் பட்டாடைகளால் அலங்கரித்து வழிபடுதலானது மனச் சலனங்களை அகற்ற உதவும்.
எம பயத்தையும் வெல்லலாம் |
ஸ்ரீசனீஸ்வரரின் சகோதரர்தாமே ஸ்ரீஎமமூர்த்தி! இருவருமே ஸ்ரீசூரிய மூர்த்தியின் புத்திரர்களும் அன்றோ! ஸ்ரீஎமமூர்த்தி, தர்ம ராஜாவாக, தசமி திதியில்தான் அவதாரம் கொண்டார்.
ஆயுள்காரகராக ஸ்ரீசனீஸ்வரரும், ஆயுள் பரிமாற்றத்திற்கு உரியவராக ஸ்ரீஎமதர்ம மூர்த்தியும், தசமி திதி அன்று பூவுலகில் தசாவதார மூர்த்திகளைத் தொழுது, இதன் பலாபலன்களைத் தசபூர்ண, தசமூலத் திரவியங்களிலும், பொருட்களிலும் பதிக்கின்றனர். அதாவது, தசமூலம், பத்துப் பதிகங்கள், பத்து கனிகள், பத்துப் புஷ்பங்கள் என்றவாறாக தசமி திதி அன்று பத்து என்ற எண் சம்பந்தமான வாழ்க்கைப் பொருட்களில், ஸ்ரீசனீஸ்வரர் மற்றும் ஸ்ரீஎமதர்ம மூர்த்தியின் பூஜா பலன்கள் திரள்கின்றன.
நவகிரக படிகள் திருப்பைஞ்ஞீலி
தசமூல ஹோம திரவியங்களினால் ஹோமம், அபிஷேகம், பூஜை, தசாவதார மூர்த்திகள் அருள்கின்ற தலங்களில் வழிபாடு, ஏழை நோயாளிகளின் உடல் நலனுக்காக தக்க ஆயுர்வேத மருத்துவரிடம் அழைத்துச் சென்று தசமூலாரிஷ்டம் போன்ற மருந்துகளை வாங்கித் தானமாக அளித்துச் சேவை புரிதல், பஞ்சாமிர்தம் போல, தசாமிர்த அபிஷேக ஆராதனைகள், இராவணன் வழிபட்ட தலங்களில் பூஜித்தல், திருஅண்ணாமலையில் அபய மண்டபத்திலிருந்து கிட்டும் தசமுக தரிசனப் பகுதியில் (அருணாசலத்தின் பத்து முகடுகளும் சேர்ந்து தெரியும் இடம்) தரிசித்து, பத்து வகை தான தர்மங்களை இயன்ற வரையில் ஆற்றுதல், பத்து வகை நறுமணப் புஷ்பங்கள், பத்து வகைக் கனிகள், பத்து வகைக் காய்கறிகள் கலந்த உணவு போன்றவற்றை தானமாக அளித்தல் போன்ற பலவும் தான தர்ம பலன்களைப் ப(தி)ன்மடங்காக்கும்.
பத்துப் பாக்களை உடைய தேவாரப் பதிகங்கள் நிறைய உண்டு. திருநெடுங்களத் தல இடர்களையும் பதிகம், கோளறு பதிகம், ஸ்ரீமாணிக்க வாசகப் பெருமான் அருளிய பிடித்த பத்து போன்ற பத்துப் பாடல் பதிகங்களை, ஆலயங்களில் ஓதுதல், மரண பயத்தையும், ம்ருத்யு தோஷங்களையும் தீர்க்க வல்லதாகும்.
ஸ்ரீஎமமூர்த்தி நாகப்பட்டிணம்
ஸ்ரீஎமமுர்த்தி எழுந்தருளும் தலங்களில் (ஸ்ரீ வாஞ்சியம், திருவாலங்காடு, சென்னை - வேளச்சேரி ஸ்ரீதண்டீஸ்வரர், சைதாப்பேட்டை ஸ்ரீதர்மராஜர் ஆலயம், திருக்கடவூர், திருக்கோடிக்கா, விரிஞ்சிபுரம், திருப்பைஞ்ஞீலி) போன்ற தலங்களில், ஸ்ரீதிருநாவுக்கரச மூர்த்தி நாயனார் அருளிய கால பாராயணப் பதிகம் ஓதுதலால், மரண அபயம் தீர்க்கும் நல்வழிஅறியலாகும்.
“ஒன்று கொலாம் ..... ” எனத் தொடங்கும் விடந் தீர்த்த பதிகம் மற்றும்
“கண்டு கொள் அரியானைக் கனிவித்து
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்
கொண்ட பாணிக் கொடுகொட்டித் தாளங்கைக்
கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே!”
போன்ற சக்தி வாய்ந்த மரண தோஷ நிவர்த்தி பதிகங்கள் பாடுதல் மிகவும் விசேஷமானது.
திருப்பைஞ்ஞீலி சிவாலயத்தில், ஸ்ரீஎமபகவான் தன் குடும்பப் பரிவாரத்துடன் எழுந்தருள்வது பலரும் அறியாததாகும். மரண பயம், மரண தோஷங்களை நீக்கும் மிகவும் விசேஷமான சந்நிதி! இராவணன், தன் மரண பயத்தை நீக்கிக் கொண்டு, இராவண வாயில் ராஜ கோபுரத்தைத் தோற்றுவித்தத் தலமிது.
எனவே மக நட்சத்திர நாளில் இங்கு 21 தீபங்கள் ஏற்றி வழிபடுதலால் இயற்கையாக அல்லாது வேறு வகையில் மரணம் அடைந்தவர்கள் பெறுகின்ற சாயாசரீரத் துன்பங்கள் அகல உதவும் தலம். இன்று, முதலில், ஸ்ரீஎமமூர்த்தியை வழிபட்டுப் பிறகு ஸ்ரீசனீஸ்வரரை வழிபடுதல், இரு மூர்த்திகளின் கூடிய அருளைப் பெற்றுத் தரும்.
திசைகள் சொல்லும் இரகசியங்கள் |
பஞ்சாங்கத்தில் யோகினித் திசை என்று குறித்திருப்பார்கள். யோகினித் திசைகள், திதி வகையைப் பொறுத்து வருவதாகும். ஆகாசம், பூமி, வலம், இடம் என பல திசைகள் இதில் குறிக்கப்பட்டு வரும். இவை ஒவ்வொன்றும் பல திசை இரகசியங்களை உணர்த்தி, பல திசைகளில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் நம்மைக் காத்திட நமக்குப் பல விதங்களில் தினமும் துணை புரிபவை ஆகும். பொதுவாக, வழக்கில், பிரயாணத்திற்காக இந்த யோகினித் திசை அம்சத்தைப் பயன்படுத்தினாலும், இதில் பல காலசக்தி அம்சங்கள் மறைந்து பொதிந்துள்ளன.
இவற்றின் தாத்பர்யங்களை ஒருவர் நன்கு அறிந்துகொண்டால், எந்நாள் எந்தத் திசையில் இருந்து எத்தகைய துன்பங்கள் வரும், அவற்றை எவ்வகையில் தணித்து வெற்றி பெறலாம் என்றறியும் தீர்க்க தரிசனமும் கிட்டும். ஜோதிடர்கள் யோகினித் திசை ரகசியங்களில் வல்லமை பெற வேண்டும். இதற்கு யோயோம்பினி தேவி வழிபாடு துணை புரியும்.
நம்முடைய பூலோகம் போலான சில பூமிகளில் 11 திசைகள், காணாபத்ய லோகங்களில் 16 திசைகள் என்றெல்லாம் உண்டு.
ஸ்ரீஇரட்டை பிள்ளையார் மூர்த்திகள்
திருவீழிமிழலை
ஒரு யுகத்தில் எட்டுத் திக்கு யோகினி மூர்த்திகளும் சேர்ந்து தாங்கள் ஆலயங்களிலும் பலிப் பூட பூஜைகளில் தினமும் பங்கேற்கும் பாக்யம் பெற வேண்டினர். இதற்காக அவர்கள் பூண்ட விரதமே சர்வ யோகினி ஏகாதசி விரதமாகும்
அடிக்கடிப் பயணங்களை மேற்கொள்வோர், ஏகாதசி திதிகளில் அஷ்ட திக்குப் பாலகர்கள், அஷ்ட மங்கள ரிஷிகள், சப்த கன்னியர், பஞ்ச பைரவர்கள், இரட்டைப் பிள்ளையார், சதுர்முக சண்டேஸ்வரர் போன்ற எட்டு வகையான - பல்வகை மூர்த்திகளை தரிசித்தல் மிகவும் விசேஷமானது. தினந்தோறும் யோகினி தேவிகள் வழிபடுகின்ற தசா மூர்த்தித் தலங்களும் உண்டு. எந்த ஆலயத்தில், நான்கு அல்லது எட்டுத் திக்குகளிலும் பலி பீடங்கள், கொடி மரங்கள் உள்ளனவோ அங்கு யோகினி மூர்த்திகள் குடிகொண்டு அருள்கின்றார்கள் என்று பொருள்.
நடப்பு ஜன்மத்தில், கடந்த பிறவிகளுள் நல்ல நினைவாற்றலுடன் அறியவல்ல சக்திகளைப் பெற்றிட, ஏகாதசியில் தொடங்கி அரசு, ஆல், வேம்பு, புரசு, வன்னி, வில்வம் போன்ற 11 விருட்சங்களுக்குப் பிரசாதம் வைத்துப் படைத்து வணங்கி வருதல் வேண்டும். ஏகாதசி அன்று விரதம் இருந்து, பால் வகை விருட்சங்கள் போன்ற நட்சத்திரங்களுக்கு உரிய மரங்கள் உள்ள சிவன், பெருமாள் ஆலயத்தில் விருட்ச பூஜை, பலி பீட பூஜை, கொடி மர பூஜை போன்றவற்றை முறையாக ஆற்றி வந்தால் நல்ல நினைவாற்றல் பெருகும்.
தற்போது பஞ்சாங்கத்தில் உரைக்கப்பட்டுள்ள பலவகை விரதங்களையும் பலரும் கடைபிடிப்பதில்லை. இதனால் சந்ததிகளுக்கு முறையான விரத சக்திகள் சேராது போய் விடும். எனவே, ஏகாதசி அன்று மட்டுமாவது இயற்றி சந்ததியில் விடுபட்டுப் போன நல்ல விரதங்களை, பூஜைகளைத் தொடர்ந்து ஆற்றிடச் சங்கல்பம் செய்து, இயன்றால் குலதெய்வத்தை வழிபடுவதும் அல்லது குலதெய்வக் கோயில் நெடுந் தொலைவில் இருந்தால். அருகில் உள்ள பச்சை அம்மன், மாரியம்மன் போன்ற சுதை மூர்த்திகளுக்கு நிறைய விளக்குகள் ஏற்றி வழிபட்டும், பிறகு விரைவில் குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும்.
தென்னங் கன்றுகளை, ஏழை விவசாயிகளுக்குத் தானமாக அளித்தல், வாழை மரம் பயிரிடுவோர்க்குத் தேவையான உதவிகளைச் செய்தல் போன்றவை சந்ததிக் குற்றங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
வாழை மரம் (திருப்பைஞ்ஞீலி, திருக்கழுக்குன்றம்), தென்னை, ஆலமரம் (திருவாலங்காடு) போன்றவற்றைத் தல விருட்சமாகக் கொண்டுள்ள ஆலயத்தில் வழிபடுவது குல தெய்வப் ப்ரீதியைத் தரும்.
இறந்தவர்களுடைய அஸ்தியை நதியில் கரைப்பதற்கு என எடுத்து வைத்து நெடுங்காலம் வீட்டில் வெறுமனே வைத்திருந்தாலும், மூதாதையர்கள் நன்னிலை அடைவதை இது தாமதப்படுத்தும். இதற்கென சில நாட்கள் விசேஷமானதாக அமையும். எனவே, இத்தகைய அஸ்திகளை ஒரு புது செப்புச் செம்பில் மல்லிகைப் புஷ்பங்களோடு சேர்த்து வைத்து, புனிதமான நதியில், புனிதமான கடற்கரையில் செம்போடு விட்டுக் கரைத்தலுக்கு உரிய நாளும் வளர் பிறை ஏகாதசி திதிகளாம். இது மூதாதையர்களுக்கு நலம் பயத்து அவர்களுடைய ஆசிகளைப் பெறவும் மிகவும் உதவும்.
எண்ணும் எழுத்தும்
கண்ணெனத் தகும் கஞ்சநாகரம்
எண் சக்திகளை எவ்வாறு பெருக்குவது ?
அனைவருமே பஞ்சாங்கத்தைத் தினசரியுமே பார்த்திடப் பழகிட வேண்டும். இதுவும் ஒரு வகைக் காலயோகப் பயிற்சியே! நாள், கிழமை, நட்சத்திரம், கரணம், யோகம், யோகினி எனப் பல்வகைக் காலநாமங்களைத் தினந்தோறும் படிப்பதால் கண், வாக்கு, மன சுத்திக்கு வழி வகை ஆகின்றது. கெட்ட எண்ணங்கள் தணியவும் தினசரிப் பஞ்சாங்க படனம் உதவும்.
மனித ஆயுள் என்பது நமக்குப் புரியும் வகையில், காலப் பூர்வமாக இன்ன ஆண்டு, இந்த மாதம், இன்ன தேதி, இன்ன கிழமையில் பிறப்பு, இறப்பு என எண் பூர்வமாக அளிக்கப்படுகின்றது. இவ்வாறாக, 2000, 2001, 2002 என ஆண்டுகள், வெறும் எண் பூர்வமாக இருப்பது ஒரு வகையில் நமக்கு மிகவும் எளிமையாகத் தோன்றுகின்றது அல்லவா! ஆனால், அக்காலத்தில் அந்தந்தத் தமிழ் வருடத்தின் பெயரை வைத்தே பத்திரங்கள், குறிப்புகள் அமைந்தன. இதனால் நம் முன்னோர்கள் எண்ணையும், எழுத்தையும் கண்ணெனப் போற்றி, வாழ்வின் அனைத்துக் காரியங்களிலும் தக்க அட்சர சக்திகளையும், எண் சக்திகளையும் பெற்றனர். ஆனால் இது மறைந்து போய், 14.6.2004 என்றவாறாக எண் வகை முறை மட்டுமே வழக்கிற்கு வந்து விட்டதால், ஒவ்வொரு வருடத்திற்கும் உரிய அட்சர சக்திகளை நாம் கடந்த பல்லாண்டுகளாக இழந்து வருகின்றோம்.
இப்போது நாம் பெறும் வெறும் வருட எண் முறையும், தாரண, சுபானு என்று ஆண்டின் பெயரையும் குறிப்பிடாததாக, அட்சர சக்தி சற்றும் இல்லாததாகவே இருக்கின்றது. இதற்கு ஓரளவேனும் ஈடு செய்யும் பொருட்டுத்தான் பஞ்சாங்கத்தைத் தினமும் எடுத்துப் பார்த்து இன்ன வருடம், தாரண வருடம், வர்ஷ ருது .... என்று கால, ருது வகைகளைப் படித்து வழிபடுகையில், வருடத்தின் அட்சர சக்திகளை நாம் நன்கு பெறுகின்றோம். எனவே இனியேனும் பத்திரங்கள், கணக்குகளை எழுதும் போது, ...... தாரணத் தமிழ் ஆண்டு, 14.6.2004 தேதியில் என்று தமிழ் ஆண்டையும் சேர்த்து எழுதுவதே விசேஷமானது.
எழுத்தில்தான் எண் பிறந்தது. அட்சரத்திற்குச் சூரிய சக்தியும், எண்ணிற்குச் சந்திர சக்தியும் உண்டு. இதனால்தான் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுவது ஆயிற்று. ஆலயத்தில் அருளும் துவாரபாலகர்களும் எழுத்து, எண் சம்பந்தமான வேண்டுதல்களைச் சீரமைப்பவர்களே ஆவர். எனவே, முதலில் பஞ்சாங்கத்தைப் படிப்பதற்குக் காரணமே, அந்தந்த வருடத்தின் அட்சர சக்திகளாகிய எழுத்துச் சக்திகளைப் பெறுவதற்கே ஆகும்.
பொதுவாக துவாதசி திதி அன்று எண், எழுத்து சக்திகள் பீறிட்டு எழும். எண்ணும், எழுத்தும் சக்திப் பூர்வமாகப் பரிபாலிக்கும் பூலோகத் திரவியங்களுள் நிறைய விதைகள் கூடிய கனிகள், காய்கறிகளும் அடங்கும். சாத்துக்குடி, ஆரஞ்சு, அத்திப் பழம் போன்றும், கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்றதுமான விதை-நிறைக் காய்கறி உணவு வகைகளையும் சூரிய பகவானுக்குப் படைத்து,
“பித்ருக்களின் பெருந் தெய்வ மூர்த்தியாம் சூரிய நாராயணப் ப்ரபோ!
சரணம், சரணம், சரணம், சரணம், சரணம்!”
என்று ஓதி, சிறிது நேரம் மண்டியிட்டு அமர்ந்து, ஒரு நாழிகை நேரம் அனைத்துப் பித்ருக்களையும் நினைந்து வணங்குதலால், பிள்ளைகள் நல்வழி பெற உதவும். பிள்ளைகளின் போக்கு பற்றி வருந்தும் பெற்றோர்கள் இந்நாளில் மனம் உருகி வழிபடுதல் வேண்டும்.
தான்ய விருத்தி தரும் பிரதோஷ வழிபாடு |
ரீதி கௌள என்பது தன சக்தி நிறைந்த ராகங்களுள் ஒன்று. ரிஷப ராசியில் சந்திரன் இருக்கும்போது ரீதி கௌள ராகத்தில் இசைப்பது அபூர்வமான மன அமைதியைத் தருவதாகும். மனசாந்தியையே தனமாகத் தருவதே ரீதி கௌள ராக கானமாகும்.
சந்திர மூர்த்தி ஒவ்வொரு ராசியிலும் இரண்டே கால் நாட்கள் உறைகின்றார். இதில் முதல் பங்கு வாசம் ரீதிதம் என்றும், கடைப் பங்கு கௌளம் என்றும், மத்திமப் பாங்கு ராகதனம் என்றும் பெயர் பெறுகின்றது. சந்திர மூர்த்தி ரிஷபத்தில் இருக்கும்போது அமையும் பிரதோஷத்தில் ரீதி கௌள ராகத்தில் கலைஞர்களை இசைக்கச் செய்வது இல்லத்தில் தான்ய, பசு விருத்தியைத் தருவதாகும்.
ஒரு யுகத்தில் ரிஷபச் சந்திர காலத்தில் ஏற்பட்ட பிரதோஷத்தில்தாம், ரதி, மன்மதன் தம்பதியர்க்கு, (கும்பகோணம் - கஞ்சனூர் மார்கத்தில் துகிலி அருகே) திரைலோகித் திருத்தலத்தில் (கீழ்சூரிய மூலை அருகே), ரிஷபாரூடராக, நந்தி வாகனத்தின் மேல் சிவபெருமான் காட்சி தந்தார். சுவாமியின் ரிஷபாரூடக் காட்சி கிடைத்தற்கரிய பாக்யமாகும். இதனால்தான், நந்தி வாகனப் புறப்பாடு கூடிய பிரதோஷம் மிகவும் சக்தி வாய்ந்த பூஜை ஆகின்றது.
ரிஷபாரூட தரிசனம்
திருகோகர்ணம் புதுக்கோட்டை
ரிஷபாரூட தரிசனம்
திருலோகி
பிரதோஷப் புறப்பாடு உற்சவாதி நிகழும் ஆலயங்களில் சந்திரன் உச்சம் பெறும் நாட்களிலும், மூன்றாம் பிறை தரிசன நாட்களிலும் தம்பதி சகிதம் இறைவனைத் தரிசிப்பது மிக மிக விசேஷமானது. இத்தகைய நாட்களில் சந்திர மூர்த்தி தம் 27 நட்சத்திரப் பத்னிகளுடன் அனைத்து ஆலயங்களிலும் நடக்கும் பூஜைகளில் தூல சூக்கும வடிவுகளில் பங்கு கொள்கின்றார்.
மன அமைதி கொழிக்கும் திவ்யமான நாட்களில் ரிஷபச் சந்திரப் பிரதோஷமும் ஒன்றாகும். நிறைய நந்தி மூர்த்திகள் உள்ள சிவத் தலங்களில் பிரதோஷப் பூஜையில் தம்பதி சகிதம் கலந்து கொண்டு வழிபடுவதால் தம்பதியர் இடையே மன ஒற்றுமை பெருகும்.
வியாபாரக் கூட்டாளிகள், சக அலுவலகர்கள் இடையே உள்ள பலத்த மன வேறுபாடுகளை அகற்றவும் ரிஷபச் சந்திர பிரதோஷ பூஜை பலன்கள் பெரிதும் துணை புரியும். மன்மதன், ரதி தம்பதி தேவதா மூர்த்திகளை (மானசீகமாகவேனும்) வணங்கி, அவர்களுடைய நல்லாசிகளுடனும், சந்திர மூர்த்தி மற்றும் 27 நட்சத்திர தேவியரின் பரிபூரண அருளுடனும் பிரதோஷ பூஜையில் பங்கு கொள்வது மிகவும் விசேஷமானது.
திரைலோகித் தலத்தில் ரிஷப சந்திர பிரதோஷ வழிபாடு செய்வது சகஸ்ர ரிஷபச் சந்திரப் பிரதோஷமாய் மலர்ந்து, ஆயிரம் மலர்களால் அர்ச்சிக்கப் பெறும் பிரதோஷ பூஜைகளின் அனுகிரகத்தைப் பெற்றுத் தரும்.
சத்திய பாலித ரோகிணித் திரிதினம் |
ரோஹிணி நட்சத்திரம் திரிதினமாக மூன்று நாட்களுக்கு நிரவி வரும்போது அது சத்திய சக்திகள் நிறைந்த, மாங்கல்ய வழிபாட்டிற்கு உகந்த குருமங்கள நட்சத்திரமாக பிரகாசிக்கின்றது. இந்நாட்களில் மாங்கல்யச் சரடு, பொன்மாங்கல்ய தானம் ஆகியவை இல்லத்தில் ஆனந்த சக்திகளை உருவாக்கிடும்.
புதன் கிழமை கூடிய ரோகிணியில்தாம், ஸ்ரீகிருஷ்ணனைத் தரிசிக்க லட்சக் கணக்கானோர் துவாரகையில், துவாபர யுகத்தில் திரள்வர். இந்நாளில், சத்யபுஷ்பங்களால் ஆன அரிய பூச்செண்டை, விண்ணில் உயர்த்திக் காட்டியவாறு, ஸ்ரீகிருஷ்ணர் துவாரகை மாளிகையில் தரிசனம் தருவார். சத்யப் புஷ்பத்தின் முழு தரிசனம், ஒரு சில மலர்களின் தரிசனம் என்றவாறாக, அவரவர் வாழும் சத்ய நெறிப்படி சத்யப் புஷ்ப தரிசனம் கிட்டும். இதன் மூலம் அவரவர் முன்னேற வேண்டிய வாழ்க்கை நிலைகளை அறிந்து கொள்வர். இன்றும் ஸ்ரீகிருஷ்ண லோகத்தில் இந்தத் தரிசன உற்சவம் நிகழ்கின்றது
ஒவ்வொருவருக்கும் சத்யப் பிரகாசம் என்ற உள்ளுறை ஆத்ம ஜோதிப் பிரகாசப் பிரதிபலிப்பு உண்டு. அவரவர் எந்த அளவிற்குச் சத்ய நெறிகளுடன் வாழ்க்கையில் துய்த்து விளங்குகின்றாரோ, அந்த அளவிற்குச் சத்யப்ரகாசம் அவர்களிடம் பரிணமிக்கும். இந்த நியதி கலியுகத்திற்கும் பொருந்தும். எனவேதான் ரோஹிணி திரிதின நாட்களை சத்திய வல்லப நாளாகச் சித்தர்கள் இதனைப் போற்றுகின்றனர்.
ஸ்ரீகிருஷ்ணன் திருஅண்ணாமலை
பொதுவாக துண்டைத் தரையில் போட்டுத் தாண்டி வாய்மையை வெளிக் காட்டும் பண்டைய வழக்கம் உண்டு. மூன்று புது வேட்டி, அல்லது துண்டுகளை நெடுங்குடி, ராமேஸ்வரம், திருவிடைமருதூர் போன்ற நீள்ஆலயப் பிரகாரத்தில் விரித்து, 12 முறை நமஸ்கரித்து இவற்றைத் தானமாக அளிப்பதால், பொய் சொல்லிச் சேர்த்த பணக் கர்ம வினைகள் கழிய வழி பிறக்கும். ஆனால் இதனைத் தொடர்ந்து நீள்பிரகார ஆலயங்களில் செய்வதுடன், தன்னால் பாதிக்கப்பட்டவருக்கும் தக்க நிவாரணம் அளிக்க வேண்டும்.
திருக்கோளக்குடி
திருஅண்ணாமலை, பொதிய மலை, சத்யகிரி போன்ற தலங்களில், சத்ய நெறியுடன் துலங்குவோர்க்கு மட்டும், சத்யபுஷ்பச் செடியின் தரிசனம் கிட்டும். இன்றும் துவாரகையில், சௌம்ய தினத்தில், (அதாவது புத வார) ரோகிணி நாளில், ஸ்ரீகிருஷ்ண தரிசனம் பெறுவோர்க்கு, அவரவரிடம் உள்ள சத்யப்ரகாச சக்தியின்படி, சத்யப் புஷ்பத்தின் பல வடிவ தரிசனம் கிட்டும்.
எனவே சௌம்ய பூஷண ரோகிணி நாட்களில் ஒரு சிறு பொய்யைக் கூடச் சொல்வதில்லை என்று சங்கல்ப சத்யம் பூண்டு, உறுதியுடன் நடந்து கொள்வதன் மூலம், வாழ்வில் பல தர்ம நெறிகளைச் சாரும் பாங்கு முறைப்பட வழியுண்டு.
விழுப்புரம் அருகே திருவாமாத்தூர், சென்னை அருகே திருவொற்றியூர் மற்றும் திருக்கோளக்குடி போன்ற தலங்களில், வட்டப் பாறை, சத்தியப் பாறை என்ற வகையில் சத்திய சக்தி நிறைந்த கற்கள், படிகள், பாதங்கள் இருக்கும். திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலும் சத்தியப் பாத தரிசனம் ஒரு சிறு பாறையில் காணப்படும். இங்கு கிரிவலம் வந்து, சத்தியப் பாதத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் செய்வோர்க்குப் பொய்மையால் சேர்ந்த பாவங்கள் தணிய வழி பிறக்கும். நெடுங்காலம் மறைத்த உண்மையை விளக்கிப் பரிகாரம் பெறவும், நெடுங்காலம் பொய் சொல்லி ஏமாற்றிய தீவினைகளைக் கழிக்கவும் பிராயச்சித்தம் தேடவும், இந்நாளின் அருணாசல கிரிவலம் உதவும்.
சத்திய சக்தி நிறைந்த கற்கள், படிகள், பாதங்கள் இவற்றிற்கு சந்தனம், மஞ்சள், செங்காவிக் கோலம் இட்டு வழிபடுதலால், பொய்மையால் பெருகிய துன்பங்கள் கரைய நல்வழிகளைப் பெறுவர். ரோஹிணி திரிதின நாட்களில் ஜாதி, சமய, வேறுபாடின்றிப் பலரும் சத்சங்கமாக ஒன்று கூடி, ஆலயங்களில் படிகளில் கோலமிட்டு, செங்காவி இட்டு வழிபடுவதால், சமுதாயத்தில் சத்திய சக்திகள் பரிணமித்து, மழை பெய்ய மிகவும் உதவும்.
நாக தோஷங்கள் அகல ... |
பொதுவாக மரண யோகம் நற்காரியங்களுக்குத் தவிர்க்கப்பட்டாலும், காலன் மூர்த்தி, அர்த்தப் பிரகரண மூர்த்தி, தர்மராஜ மூர்த்தி பூஜைக்கு உகந்ததாக விளங்குகின்றது. பொதுவாக, மரண யோக நேரத்தில் சுவாச பந்தனமாக, பிராணாயாம கும்பக (மூச்சை உள் நிறுத்துதல்) விகிதத்தைக் கூட்டி யோகித்து இருப்பதால் மரண பயத்தைச் சிறிது சிறிதாக அகற்ற உதவும். இளனமயும், ஊக்கமும், வலிவும் இருக்கும் போது மரணபயம் தோன்றாது. ஆனால் வாழ்க்கை விதியாக, வயது ஆக, ஆக, உடல் வலிமை தளரத் தளர, மரண பயம் வலுக்கும்.
எனவே, மரண யோகமும், ராகு கால ஸ்ரீதுர்க்கை பூஜை போல, காலன் மூர்த்தி, யம மூர்த்திக்கான மகத்தான பூஜை நேரங்களே ஆகும். மிருக சீரிஷம் நட்சத்திரம், மரண யோகத்துடன் சேர்ந்து வரும் நாட்களில் அசைவ உணவு உண்போர், தயாரிப்போர், இறைச்சிக் கடை நடத்துவோர், மிருகங்களை வதைத்துக் கொன்ற பாவ வினைகள் தீர, மனம் உருகிப் பிரார்த்தித்து
* பட்சிகளுக்கு உணவளித்தல், நீர்க் கிண்ணம் வைத்தல்
* பசு, எருமை, ஆடு போன்றவற்றிற்குப் புல், வைக்கோல் அளித்தல்
* யானை, ஒட்டகம் போன்றவற்றிற்குத் தக்க உணவளித்தல்
* மீன்களுக்குப் பொரி இடுதல்
- போன்ற ஜீவ காருண்ய நற்காரியங்களை ஆற்றுதல் வேண்டும்.
நாகங்களுக்கான சர்வத்ரப் பீடாதிபதியான ஸ்ரீஆதிசேஷன் மூர்த்தி, திருமாலின் சயன சாதனமாக (பாம்புப் படுக்கை) ஆகுதற்குத் தேவையான ஈஸ்வரானுக்ரகம் பெறுவதற்காக, மிருகசீரிஷம், அமாவாசை கூடி வருகின்ற நாட்களில் தாரகா சேஷேஸ்வர விரதத்தை, நான்கு கோடி யுகங்கள் கடைபிடித்து அடைதற்கரிய பெரும் பாக்யத்தை அடைந்திட்டார்.
இத்திருநாளில் ஆதிசேஷன் அளித்த நல்வரங்கள் காரணமாக மிருகசீரிஷம், அமாவாசை கூடும் நாட்களில் சூரியோதயம் முதல் சூரிய மறைவு வரை பிராணாயாமம்தனைத் தொடர்ந்து கடைபிடித்து இருந்து, அதாவது சுவாசத்தில் பிராணாயாம நிலைகளை
மூச்சை மெதுவாக உள் இழுத்தல்
மூச்சை உள்ளே நிறுத்துதல்
மூச்சை மெதுவாக வெளியே விடுதல்
ஆகிய மூன்று நிலைகளுடன் சுவாசித்து இருத்தல் நன்று.
ஸ்ரீரதி மன்மதன்
திருலோகி
மேலும் நாகத் துதிதிகள், சூரியத் துதிகள், சந்திரத் துதிகள் மூன்றையும் ஓதி பிராணாயாமம் ஆற்றுதல் நன்று. பிராணாயாமம் நல்ல பசியைத் தரும். எனவே, அவ்வப்போது மூன்று உத்தரிணி (சிறிய செப்பு ஸ்பூன்) பசும் பால் மட்டும் அருந்திடலாம்.
பீட்ரூட் அல்வா, நாவல் பழம், மாம்பழம் சாலட் போன்றவற்றை தானமளிப்பதும் நன்றே. பெண்களின் திருமணத் தோஷங்கள், திருமண வாழ்வுத் துன்பங்களுக்குக் காரணமான நாக தோஷங்கள் விலக, இத்தகைய வழிபாட்டால் வழி பிறக்கும். இதனைத் தொடர்ந்து கடைபிடித்து வருதல் துரிதமான பலன்களைத் தரும்.
ஸ்ரீநாகேஸ்வரர், நாகலிங்கம், நாகங்களுடன் கூடிய லிங்க வழிபாடும் சிறப்புடையது. மூன்று முழுப் புடலங்காய்களின் மேல் தர்பைச் சட்டம் அமைத்துத் தர்ப்பணம் அளிப்பது விசேஷமானதாகக் குறிக்கப்படுகின்றது. கோபக் கனலாக இருக்கும் உயரதிகாரிகள், கணவன், மனைவி மூலம் வரும் துன்பங்கள் அகல இது உதவும்.
பிள்ளைகள் செய்யும் பாவமான செய்கைகள் அவர்களை எதிர்காலத்தில் தாக்காது இருக்கவும் இந்த விரதம் உதவும்.
நாக தோஷங்களால் பீடிக்கப்பட்டோர், திருமணங்கள் பாதிக்கப்பட்டோர், சந்ததி இல்லாதோர் இந்த விரதத்தை நன்கு அனுஷ்டித்து வர வேண்டும். மிருகசீரிஷம், அமாவாசை சேரும் நாளில் இதனை அனுஷ்டித்தல் மிகவும் விசேஷமானது. ஆனால், இது பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவதாகக் கூட சமயங்களில் அமைந்து விடும் என்பது குறிப்பிடத் தக்கது.
நாக லிங்கங்கள், நாகேஸ்வரர் போன்ற மூர்த்திகளை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு நான்கு திசைகளிலும் அமர்ந்து, நின்று பிராணாயாம உரு ஏற்றிடல் வேண்டும். இதனுடன் மந்திர உரு ஏற்றுதல் உரு சகாய உரு எனப்படுவதாகும். இதனை நிறைவேற்றுவதற்கு மிகச் சிறந்த தலமே சூரிய நாராயண ஆலயம் அருகில் உள்ள திருமங்கலம் ஸ்ரீமங்கள நாயகி சமேத ஸ்ரீபிராண நாதேஸ்வரர் ஆலயமாகும். இங்குள்ள தீர்த்தம் அங்காரகத் தீர்த்தம் என்றும் பிராண சக்தித் தீர்த்தம் என்றும் போற்றப்படும். இதில் நீராடி அல்லது சிரசில் தெளித்து, வாயில் சிறிது தீர்த்தம் வைத்த நிலையில் மிகவும் கவனமாக எட்டுத் திசை, பூமி, அந்தரம் ஆகிய பத்து திசைகளிலும் பிராணாயாமம் ஆற்றுவதால் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டோர்க்கு ஆயுள் ஸ்திரமாகும்.
கர்ப்பப் பை நோய்களுக்கு நிவாரணம் |
பெண்கள், ஆண்களை விட ஏழு மடங்கு மனோசக்திகளை உடையவர்கள். உதாரணமாக, கணவனும் மனைவியும் இணைந்து பூஜை செய்திடில், இதில் விளையும் புண்ய சக்திக் கணக்கில், கணவனை விட மனைவி, ஏழு மடங்கு அதிகமாகப் புண்ய சக்தியைப் பெறுகின்றாள். இதிலும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், இயற்கைப் பூர்வ இறைநியதியாகவே, பெண்கள் ஆற்றும் பூஜைகளுக்குப் பலாபலன்களும் அதிகமாகக் கிட்டுகின்றன. இதனால்தான் பெண்களாய்ப் பிறத்தல் அரிதிலும் அரிதான தெய்வ கடாட்சத்தால் வருவது ஆகும் எனப் போற்றப்படுகின்றது.
ஏழு மடங்கு மனோசக்தி, சுக்ரவார, மங்களவாரப் பூஜா பலன்கள் இவ்விரண்டு சக்திகளும் பெண்களுக்குத் திரளக் காரணங்களுள் ஒன்றே, பெண்களின் விசேஷமான உடலமைப்பில், சுழிபத்ரம் எனும் விசேஷமான நாள ஓட்டம் இருப்பதே ஆகும். இது கர்பப் பையில் தொடங்கி பல நாளங்களில் சுழித்து ஓடி, கர்பப் பையிலேயே அடங்குவது. கர்பப் பையில் நோய்கள், புண், கட்டி இருப்பின் இவ்விரத பலன்கள் நல்ல குணம் பெற உதவிடும்.
ஸ்ரீமங்களாம்பிகை
பிராண சக்தி தீர்த்தம் திருமங்கலக்குடி
ஸ்ரீபிராணநாதேஸ்வரர்
திருமங்கலக்குடி
கர்பப் பையில் நோய் உள்ளவர்கள் கும்பகோணம் - மருதாநல்லூர் அருகில் உள்ள கருவளர்ச்சேரி அம்பிகை ஆலயத்தில் படிக்குப் பசு நெய் மெழுகி வழிபட்டு வந்திடில், அறுவை சிகிச்சை இன்றி நல்லபடியாகக் குணமடையும். இங்கு அம்பிகை கர்பத்தை, கர்ப நாளங்களைக் காப்பவளாகப் பிரகாசித்து அருள்வதால், அம்பிகையின் திருமேனி வஸ்திரத்தால் மறைக்கப் பெற்று, சிரசு மட்டுமே தரிசனம் ஆகும், வருடத்தில் சிவராத்திரி போன்ற ஒரு சில நாட்களில்தாம் முழுத் திருமேனி தரிசனம் கிட்டும் அபூர்வமான தலம். அகஸ்தியர் தம் பத்னியுடன் தினமும் வழிபடும் அருட்தலம்.
மாதவிலக்கு சமயங்களில் சுழிபத்ர ஓட்டம் மந்தமாகும். மாதவிலக்கு அல்லாது உடல் சுத்தியாக இருக்கின்ற பெண்கள் மட்டும் வெள்ளிக் கிழமை அன்று அதிகாலையில் கிழக்கு நோக்கி நின்று, மஞ்சள் பூசி நீராடி, விளக்கிற்கு 12 இடங்களில் குங்குமப் பொட்டு இட்டு, பசு நெய் விளக்கேற்றி, தீபத்தின் முன் நன்கு பத்மாசனம் அல்லது சுகாசனம் இட்டு அமர்தல் வேண்டும். 12 சிறு வெண் காகிதங்களில் கட்டைவிரல், மோதிர விரல்களால் ஆறு சிட்டிகைக் குங்குமம் எடுத்து, “ஓம் அம்” என 12 முறை ஓதி, அம்பாள் பாதத்தில் வைத்துக் குமரகுருபரருடைய சகலகலா வல்லி மாலையை மூன்று முறை ஓதி வழிபடுதல் வேண்டும். பிறகு, குங்குமத்தைச் சிறுமிகள், கன்னிப் பெண்களுக்கு இயன்ற மங்களப் பொருட்களைச் சேர்த்து தானமளித்தலே சுழிபத்ர வெள்ளி விரதமாகும். நாள் முழுதும் துளசித் தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருத்தலும், வெண் பொங்கல், தேங்காய் சாத நைவேத்யமும், தானம் அளித்தலும் விசேஷமானது.
திருமணமாகிச் சென்றுள்ள பிள்ளைகளின், பெண்களின் துன்பங்களைப் பற்றி வேதனையுறும் தாய்மார்கள் இந்த விரதம் மூலம் நல்ல மன அமைதி பெறும்படி நல்ல காரியங்கள் நிகழும்.
ஓம் குருவே சரணம்