முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

தலை நோய்களுக்கு நிவாரணம்

“ஷம்” என்பது பெண்களுக்கு உரித்தான அற்புதமான பீஜாட்சரமாகும். யோகம், தியானம் பயில்பவர்கள் “ஷம்” எனப் பீஜாட்சரத்தை ஓதுகையில்தான் “ஷம்” பீஜாட்சரப் பலன்கள் நன்கு புலனாகும். ஆனால், சாதாரண இல்லறப் பெண்களும், இதனைக் கடைபிடித்து, “ஷம்” பீஜாட்சர சக்திகளைப் பெறுதற்காகவே, த்ரிஜடை சக்திகளாக, மூன்று வகை “ஷம்” சக்திகளைத் தருவதாக தலை ஜடையை, மூன்றாகப் பின்னிப் பிணைந்(த்)து, த்ரிஜடைக் கூந்தலுடன் கூடிய ஆன்ம சாதன வழிபாட்டு முறையை, கார்கி, மைத்ரேயி போன்ற பெண் மகரிஷிகள் நமக்கு அளித்துள்ளனர்.

பொதுவாக த்ரிஜடை என்பதாக பெண்கள் தங்கள் கூந்தலை மூன்று பின்னல்களாகப் பிரித்து வைத்துப் பின்னும் தலை ஜடையைக் காலையிலும் மாலையிலும் இடுதலே சிறப்பாகும்.
முத்தூர ஷம் சாம்பவீம்
இரட்டுற ஷம் சாதனாம்
மூன்றன் மேற்புல மூகாம்பிதம்
என்பது பெண்கள் கூந்தல் பின்னும் போது ஓத வேண்டிய மந்திரம்.

சங்கு சக்கரம் தாங்கிய
ஸ்ரீசௌந்தர நாயகி அழகாபுத்தூர்

இவ்வாறாக, யோகம், தியானம் மூலமாகப் பெண்களுக்குக் கிட்டும் “ஷம்” பீஜாட்சர சக்திகளை,
*மூன்று பின்னல்கள்
* நெற்றி வகிடு, நெற்றி, மாங்கல்யம் ஆகிய மூன்று இடங்களில் குங்குமப் பொட்டுகள்
* கழுத்தில் மாங்கல்யம், மணிக் கட்டில் காசிக் கயிறு, இடுப்பில் அரைஞாண் கயிறு
* காதில் தோடு, மூக்கில் மூக்குத்தி, பாதத்தில் கொலுசு
- ஆகிய மும்மூன்று ஷமகார பீஜ சக்திகளாக, எளிமையாகப் பெறும் வகையில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஷம் என்பதில், “ஷ” என்று ஒலிக்கையில். வெளிப்புறமாக பீஜ சக்திகள் நிரவுவதும், “ம்” என்று ஓதிட, உட்புறமாக ஷம்கார பீஜங்கள் நிறைவதும் நிகழ்கின்றது.
ஷம் மே ஷம் மே ஷம் மேசம்
ஷம் மேத ஷம் வேத ஷம் சோபிதம்
ஷம் மாத்ரய ஷம் மாத்ரு பூதேஸ்வர:
என்பது “ஷம்” பீஜாட்சரத் துதி. ஸ்ரீமாத்ரு பூதேஸ்வர சிவ பீஜாட்சரங்களில் “ஷம்”மும் ஒன்று.
எனவே, அடிக்கடி ஸ்ரீமாத்ருபூதேஸ்வரர் (திருச்சி அருகே வாளாடி) என்ற நாமம் பூண்டு, இறைவன் அருளும் ஆலயங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானது. இதனால், திருஷ்டி, பகைமை, பொறாமையால் பாதிக்கப்பட்டுள்ளோர் நிவாரணம் பெற வழி பிறக்கும்.
ஷம்+ஷம்+ஷம் என்பதே மூன்றளவு “ஷம்” மாக, த்ரிஷ(ம்) ஆகின்றது. மூன்று “ம்” காரங்கள் சேர்வது மிகவும் அபூர்வமான மறை பொருளாகும்.

சங்கு சக்கரம் ஏந்திய
முருகப் பெருமான் அளகாபுத்தூர்

ஷம்கார பீஜ சக்திகள் சிறு பெண்களிடம் நிறைய லயித்து இருப்பதால், சிறப்பாக ஒன்பது வயதிற்கு உட்பட்ட சிறுமிகளிடம் தெய்வீகமாகப் பிரகாசிப்பதால், வெள்ளிக் கிழமைகள், வளர்பிறை நவமி திதிகளில் ஒன்பது வயதிற்கு உட்பட்ட சிறுமிகளுக்குப் பட்டு பாவாடை அணிவித்து, மூன்று ஜடைப் பின்னி விட்டு, தலை வாரி, பூச்சூட்டி, கன்னிகா தேவியராகப் பாவனை செய்து அவர்களுடன் பெரியோர்களை நமஸ்கரித்து ஆலய தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானது. சிறுமிகளை, தேவி அம்சமாக பாவனை செய்வதால் அவர்களுக்கு பட்டு அணிவிக்கலாம். இறைவன், இறைவிக்குப் பட்டு வஸ்திரங்களை அணிவிப்பது நன்றே! மனிதர்கள் அணிவதுதான் நன்றன்று. மேலும் வெள்ளி வகை சாதனங்களைச் சிறுமியர்க்குத் தானமாக அளித்தல் மிகவும் விசேஷமானது.
1. தலைக் குடைச்சல், கபால நோய்கள், ஒற்றைத் தலைவலி நிவாரணத்திற்கு இத்தகைய ஷம்கார வழிபாடு மிகவும் உதவும்.
2. தலை வெடிக்கும் அளவிற்குத் தினமும் பிரச்னைகள் தோன்றுகிறது என்று எண்ணுவோர் இந்த பூஜையை அடிக்கடி மேற்கொண்டு வர தக்க மனசாந்தி கிட்டும்.
3. பெண் குழந்தைகள் தக்க வயதில் பருவம் அடையவில்லை, தக்க வளர்ச்சி அடைய வில்லை, தக்க மனப் பக்குவம் அடையாது, குழந்தையாக மனத்தளவில் இருக்கிறார்கள் என்று வருந்தும் தாய்மார்களின் மனக் கிலேசம் அகல உதவும்.

தம் பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகவில்லையே என்று ஏங்குபவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோரை இழந்து, தனக்குப் பொறுப்புடன் திருமணத்தை நடத்தித் தர வல்லவர் யாரும் இல்லையே என்று ஏங்குவோர் இத்தகைய வழிபாடுகளால் திருமண தோஷங்கள் நீங்க நல்ல வழிகள் புலனாகும்.
திருவாதிரையும் சனியும் சேரும் நாளுக்கு நாகதோஷம், பித்ரு தோஷம், மாரக தோஷம் ஆகிய மூன்றையும் நிவர்த்தி செய்யும் சக்திகள் உண்டு. திருவாதிரை தேவி இந்த விரதத்தைப் பூண்டு, க்ஷய நோயால் பீடிக்கப் பட்டிருந்த சந்திர மூர்த்திக்கு ஆரோக்யம் மீண்டிட உதவி புரிந்தாள். இத்தகைய நாட்களை குறித்து வைத்துக் கொண்டு சனி, திருவாதிரை வரும் நாளில் தக்க பூஜைகளை மேற்கொண்டு சமுதாய பூஜையாகக் கைக் கொண்டு திருமண நலவாழ்வு பெற இயலாது தவிக்கும் திக்கற்ற, ஆதரவற்ற பெண்கள் ஆன்மீக ரீதியாக நல்வழி காட்டிடப் பெருந்தொண்டு ஆற்றிடுங்கள்.

ரத யாத்ரா

சூரிய ரதத்தை ஓட்டி வருபவரே அருணன் மூர்த்தி. பல கோடி யுகங்கள் திருஅண்ணாமலையில் அருணாசல மூர்த்தியைத் தோளில் சுமந்து கிரிவலம் வரும் பாக்யம் பெற்றமையால், இடுப்புக்குக் கீழ் அபராஜிதத் தங்கம் எனும் தெய்வலோகத் தங்கத்தாலான பொன்மனை தேகத்தை இறையருளால் பெற்றார். ஆனால் அனைவருக்கும் அபராஜிதத் தங்கம் தென்படாது.
மேலும், அருண மூர்த்தி, பரசுராம பூமி எனப்படும் கேரளத்தில், பெருமாளுடன் துணை நின்று, சித்தர்கள், மகரிஷிகளுக்காக அரிய பர்ணசாலைகளை நிர்மாணித்து அருஞ்சேவை ஆற்றியும், மற்றும், பிறிதொரு புராண அனுபூதி மூலமாகவும், அருணமூர்த்தி இடுப்பு வரையிலான அர்த்த காரண ஸ்வர்ண தேகத்தைப் பெற்றார். ராகு மூர்த்தி மனித முகம், நாக உடல், கேது மூர்த்தி நாக முகம், மனித தேகத்துடன் துலங்குவதுபோல அருண மூர்த்தி பாதி மனித தேகம், பாதி ஸ்வர்ண மயமான அர்த்த தேகத்தைப் பெற்றிட்டார்.

சூரிய ரதத்தை ஓட்டுதல் என்பது எளிதல்ல. சூரிய வெப்பத்தைத் தாங்கிய நிலையில், கோடிக் கணக்கான (பிரபஞ்சத்தில் மிதக்கும்) பொருட்களில் சற்றும் உரசாது, சூரியச் சக்கரப் பிரவாகத்தைச் செலுத்துதல் என்பது கடுமையான தவக் காரியம் அல்லவா! இம்மட்டோ, சூரிய ரதம் செல்கையில், கோடிக் கணக்கான தேவாதி, தெய்வ மூர்த்திகளும், கோடிக் கணக்கான நட்சத்திரங்களும், சித்தர்களும், மகரிஷிகளும், பிரபஞ்சத்தில் உலா வருகையில், சூரியத் தேரோடும் வழியில், அவரவருக்கு உரிய உபாசனைகளை, வழிபாட்டுப் பாங்கினை நிறைவேற்றுதல் என ஒவ்வொரு விநாடியும், அருணமூர்த்தி மிகுந்த கவனத்துடன் சூரிய ரதத்தைச் செலுத்துதல் வேண்டும் என்பது புலனாகின்றது அல்லவா!

ஸ்ரீஅரிச்சந்திரா ஆலயம் திருஅண்ணாமலை

அருணமூர்த்தி சூரிய ரத சாரதி மூர்த்தியாக அமைந்த  நாளே ரத யாத்ரா தினமாகும். தினமும் ஞாயிற்றம்பலச் சித்தர் என்பார் இந்த சூரிய ரதத்தையும் அருண மூர்த்தியின் முழுத் திருமேனியையும் தரிசிக்கும் தெய்வீகத் தபோ பலத்தைப் பெற்றவர்.
அருணமூர்த்தியின் திருமகனே பிழிஞாலச் சக்கர தேவர். சுதர்சனச் சக்கர உபாசனையில் பிரசித்தி பெற்றவர். பூவுலகில் உள்ள மேரு சக்கரம், ஸ்ரீவித்யா சக்கரம், வேல் சக்கரம், கட்கச் சக்கரம் என அனைத்துச் சக்கர பூஜைகளிலும் வல்லமை பெற்றவர்.
பிழிஞாலச் சக்கர தேவர் அருண மூர்த்தியுடன் சேர்ந்து சூரிய ரத யாத்திரையை மேற்கொள்ளும் தினமே அவருடைய அவதார நாளும் ஆகும். அனைத்து யுகங்களிலும் பிள்ளைகளின் நல்ஒழுக்கத்திற்குத் துணை புரிபவராக விளங்குபவரும், எங்கு தெய்வீக ரதயாத்ரா, தேரோட்டம் நிகழ்ந்திடனும் உடனடியாகத் தோன்றித் துணை புரிபவரும் பிழிஞாலச் சக்கர தேவர் ஆவார். இதனால்தான் தங்க ரதங்களில் சூரியத் தேரோட்டம் பொறிக்கப்பட்டிருக்கும். ரத யாத்ரா நாட்களில் தங்கரத உற்சவம் நிகழ்வதற்குச் சேவை ஆற்றுதலால் திருமண வாழ்வில் சாந்தம் பெற உதவும்.

பிரயோக சக்கரம் தாங்கிய
ஸ்ரீபெருமாள் மூர்த்தி திருவக்கரை

தான்தோன்றித் தனமாக வளருகின்ற பிள்ளைகளைப் பற்றிப் பெரியோர்கள் பெரிதும் துயர் கொள்கின்றனர். இவர்களுடைய கவலைகள் தீர, பெற்றோர்கள் கும்பகோணம் பாபநாசம் அருகே சக்கரப்பள்ளித் திருத்தலத்தில் (திருமால் சக்ராயுதம் பெற்ற தலம்) வழிபட்டுத் தேன் குழல், சீடை, முள்முறுக்கு, முறுக்கு, அதிரசம், வடை போன்ற சக்கர வடிவில் உள்ள பண்டங்களைப் படைத்துத் தானமாக அளித்து வர வேண்டும்.  
கைவிரல் ரேகைகளில், உள்ளங்கைகளில் நிறையச் சக்கரங்கள் இருக்கும். இவை வலுப் பெறும் நாட்களுள் ரதயாத்ரா நாளும் ஒன்று. இந்நாளில் மருதாணி இட்டுக் கொள்வதால், மனதில் சக்கரவாளம் எனும் பகுதி சுத்தி அடையும். அரைத்த மருதாணி தானம், மருதாணித் தைல தானம் மிகவும் விசேஷமானது. இதனால் நெடுங்காலமாக வீட்டை, வியாபாரத்தைச் சுற்றி வரும் பகைவர்கள் அகல வழி பிறக்கும். கூட இருந்தே துரோகம் செய்கின்றவர்களுடைய தன்மை வெளிப்பட்டு, நிவாரணம் கிடைக்கும்.

சுதர்சனச் சக்கரத்தாழ்வார் சன்னிதி
சக்கர வடிவில் உள்ள சன்னிதிகள்
பிரயோகச் சக்கர நிலையில் உள்ள மூர்த்திகள்
சங்குச் சக்கரம் தாங்கிய மூர்த்திகள்
சங்குச் சக்கரம் தாங்கிய முருகர்
சக்கரம் தாங்கிய கருடாழ்வார்
போன்ற மூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகளும் ஆற்றி வழிபட்டு வருதலும், தவறான வழிச் செல்வோரைத் திருத்த உதவிடும். அரைத்த சந்தனம் சார்த்தி, அக்கார வடிசல் (விசேஷ வகைச் சர்க்கரைப் பொங்கல்), சக்கர வகை மூர்த்திகளை வழிபடுவது மிகவும் விசேஷமானது.
ஒரே வயது நிலையில் உள்ளவர்கள், படிப்பு, வேலை, திருமணம் எனப் பல நிலைகளை அடையும் போது பலருக்கும் பொறாமை, மனச் சங்கடங்கள், ஏக்கங்கள் ஏற்படும். இவை பெரிதானால் நற்குணங்கள் பலவும் பாழ்பட்டு விடும். இவற்றை அகற்றவும் ரத யாத்ரா தின சக்கர மூர்த்தி வழிபாடு மிகவும் உதவும்.

பிழிஞாலச் சக்கர தேவர் தோன்றிய இந்நாளில், அவரவர் தம்மைத் தாமே ஆத்ம பிரதட்சிணமாகச் சுற்றி வலம் வந்து, ஒவ்வொரு சுற்றுக்கும், சூரியன் இருக்கும் திக்கு நோக்கி சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்குவதுடன், கீழே அமராது ஒரு ரதத்தில் சாரதியாக அமர்வது போன்ற பாவனையில், காற்றில் அமர்ந்த நிலையில், சில நிமிடங்கள் இருந்து தியானித்தல் மூலம் மனக் குவியல் ஏற்படுவதை நன்கு உணர்ந்திடலாம். தினமும் சூரிய ஹோரையில் இதனைச் செய்வது வர்மக் கலை யோகத்தில் வருவதாகும். முதுகு வலி வராது தடுக்கும். இதனால் அடுத்து ஏற்பட இருக்கின்ற நிகழ்ச்சியினை அறியலாகும் யோகப் பாங்கு சிறிது, சிறிதாக ஏற்படும்.
ஜாங்கிரி, ஜிலேபிகளைச் செய்கின்ற ஏழைச் சமையல்காரர்களுக்கு ஆர்டர் தந்து, அவர்களுக்கும் ஒரு வருமானம் ஏற்படும்படி நல்ல வாய்ப்பு அளித்து, சக்கர வடிவு வகையிலான இவற்றைத் தானமாக அளிப்பதால், வீட்டில் பிள்ளைகள், பெண் பிள்ளைகளிடம் மனதாரப் பேசாத குறை தீர வழி பிறக்கும். பெற்றோர்கள், உயரதிகாரிகளிடம், சொல்ல முடியாத செய்திகளின் வேதனைகள் தணியவும் வழி பிறக்கும்.

நல்ஒழுக்கம் பேணும் நல்வழி

சத்யாதீஸ மகரிஷி என்பார்தாம், அரிச்சந்திர மகாராஜா கருவில் இருக்கும்போதே அவருக்கு சத்தியத்தின் தெய்வீகத் தன்மைகளைப் போதித்தவர். சத்யாதீஸ்வரரின் தர்ம பத்னியே த்ரயாம்பா ஆவார். இவர் எப்போதும் தம் வலது கையின் மூன்று விரல்களிலும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் மூன்று பதங்களையும் ஜபித்துக் கொண்டே இருப்பார்.
உறக்கத்திலும், தியானத்திலும், யோகத்திலும் கூட, த்ரயாம்பாவின் த்ரய (மூன்று) விரல்களிலும் ஜபம் பூண்டிருக்கும் யோகநிலை கை கூடுவதை நன்கு காணும் அளவிற்கு ஸ்ரீகாயத்ரீ தவத்தில் தலைசிறந்து விளங்கினார்.

ஸ்ரீஞாயிற்றம்பல சித்தர் ஜீவாலயம் கொச்சி

இதனால்தான் அரிசி, நெய், தானியங்களைப் படியளந்து போடும்போது ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணாது, அருணாசலா /பிள்ளையாரப்பா
குல தெய்வம்,
இஷ்ட தெய்வம் மூன்றின் பெயர்களையும், அல்லது ஏகாம்பரம்,
தோதாத்ரீ (பெருமாள்),
த்ரயாம்பா
- என்று சொல்லியும், தான்யங்களைப் பண்டைய காலத்தில் அளக்கும் முறை நடைமுறையில் இருந்து வந்தமையால், தான்யவளம் நிறைந்து மாதம் மும்மாரி பெய்தது.
த்ரயாம்பா சத்யாதீஸ்வரத் தம்பதியினர், அனைத்து யுகங்களிலும் குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற வாழ்க்கைத் தத்துவ முறையைப் போதித்துள்ளார்கள். தற்காலத்தில் குழந்தைகள் எதைக் கேட்டாலும், “சரி செய்கிறேன், வாங்கித் தருகிறேன்” என்று சொல்லிச் சொல்லியே, பொய்மையைக் கலந்து பெற்றோர்கள் பேசுவதால், குழந்தைகள் அடம் பிடித்து வளர்கின்றனர். இப்படித் தவறான வாக்குறுதிகளை அளிப்பது குழந்தைகளின் மனநிலைக்கு நன்றன்று. அளவுக்கு மிஞ்சிச் செல்லம் அளித்து வளர்க்காது, நன்கு பண்பாட்டுடன் வளர்க்க வேண்டும். ஆதி முதலில் குழந்தைகளுக்குப் புராணக் கதைகளைச் சொல்லி நல்ல தெய்வீகப் பண்பாட்டை பொழிந்தவர்களே இந்தத் தம்பதியினர் ஆவர்.

இந்திரன் வழிபட்ட திருத்தலம்
திருமுல்லைவாயில் சீர்காழி

ஒரு முறை இவர்களுடைய குழந்தையாகிய ஜாபாலன், இந்திர மூர்த்தியைத் தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்பிடவே, பூஜை மும்முரத்தில் இருந்த சத்யாதீச மாமுனியும் சரி என்று சொல்லி விட்டார். ஆனால், இந்திர தரிசனம் அவ்வளவு எளிதல்லவே! தம்பதியரின் தபோபலத்திற்கு இந்திர மூர்த்தியே வந்து நிற்க வேண்டும் என்ற தர்ம நியதி இருந்தாலும், சுயநலமாகத் தன் பிள்ளைக்காக இந்திர மூர்த்தியை வரவழைப்பது சரியாகுமா என்று மாமுனி எண்ணி வருந்தினார் இதுவும் இறைச்சித்தம் எனத் தெளிந்து, அரிச்சந்திரனின் ஆலோசனையை நாடினார்.
அரிச்சந்திர மகாராஜாவும், முப்பத்து முக்கோடி தேவர்களின் தலைவரான இந்திர மூர்த்தியை வரவழைப்பது மக்களுக்கு நலம் பயக்கும் மாமுனியின் தவசக்தியைக் கரைக்காது, இந்திர ப்ரீதி வரும்படி நல்ல பல ஹோமங்கள், தான தர்மங்கள், பூஜைகளை நிகழ்த்துவதுதான் சிறப்புடையது என்று எண்ணினார். பிறகு, ராஜ்யத்தில் அனைவரும் யோசித்து, சதுர்த்தி நாயகரான விநாயகப் பெருமானிடம் வேண்டினர். 24 மாம்பழங்களை, பக்கத்திற்கு 12 ஆக, இந்திரச் சக்கர வடிவமான (கணபதியின்) காது வடிவில், ஓங்கார வடிவில் வைத்து, இரண்டு புறம் பழக் காதுகளைப் போல் அமைத்து, நன்கு உரக்க வேதமறைகளை இடைவிடாது ஓதினர். இவரே செவி சாய்த்த விநாயகர், வேதப் பிள்ளையாராகப் பல இடங்களில் அருள்கின்றார்.

ஸ்ரீசெவிசாய்த்த விநாயகர்
அன்பில் சிவாலயம்

மானுடர் ஓதும் வேதத்திற்குச் செவி சாய்த்தவரும் மற்றும் இந்திர மூர்த்தி வணங்கியதுமான இத்தகைய (திருச்சி அருகே அன்பில்) விநாயக மூர்த்திகளை சதுர்த்தி திதிகளில் வணங்குதல் மிகவும் விசேஷமானது. நல்ல மனஅமைதியைத் தரும். பெற்றோருக்குச் சேவை செய்யாத குற்றத்திற்குப் பிராயச்சித்தங்களைத் தேடித் தருவதாகும்.
இதனைக் காது கொடுத்துக் கேட்ட விநாயகப் பெருமானின் அருளால், இந்திர மூர்த்தியும் பிரசன்னமாகி, நாட்டு மக்களை ஆசீர்வதித்து, “ஜாபாலனுக்காக மட்டும் அடியேன் வரவில்லை! திங்கள், பூசம், சதுர்த்தி, அர்த்த ஜீவ, நேத்திர சக்திகள் ஆகிய ஐந்தும் இணையும் நாளில் கரணாம்ருத பூஜை எங்கெல்லாம் நிகழ்கின்றதோ, அங்கு பிரசன்னமாக வேண்டும் என்பது அடியேனுக்கான இறைக் கட்டளை!  . இந்த ஐந்தும் கூடும் நாளில்தான் அருணாசலத்தில் அடியேன் சுயம்பு லிங்க வழிபாடு ஆற்றினேன்,” என்றார். பிறகு இன்று கடுக்கன் அணிவது நல்லது என்று கூறி தம் கைப் படவே ஜாபாலனுக்கு கடுக்கன் அணி வித்தார். கடுக்கன் அணிதல் குழந்தைகளின் நல்ஒழுக்கத்தைப் பேணும்.
இந்திரன் இத்தகைய நாளில் பூஜித்ததே அருணாசலத்தின் இந்திர லிங்கம் ஆகும். எனவே இத்தகைய அற்புத நாட்களில் ஜாபாலன் போன்ற சிறுவர் சிறுமியர்க்குக் காதுக் கடுக்கன்களை அணிவித்து, இந்திர லிங்கத்தில் அருணாசல கிரிவலம் தொடங்கி, இந்திர லிங்கத்தில் நிறைவு செய்வோருக்கும், ஊர் மக்கள் யாவரும் காதால் கேட்டுப் பயன்பெறும் வண்ணம் வேத மறைகளை ஓதி சேவை செய்வோர்க்கும், எதிர்பார்க்கின்ற நல்லவை நடப்பதற்கு இந்திர மூர்த்தியின் நல்ஆசிகள் கிட்டும். எனவே சதுர்த்தி திதி தினங்களில்
*. புதுக் கடுக்கன்களை அணிதல்
* ஏழைகளுக்குக் கடுக்கன் தானம்
* இந்திரன் வழிபட்ட தலங்களில் வழிபாடு
*அருணாசல கிரிவலம்
* அரிச்சந்திரருக்கு மஞ்சள் அரளி மாலை சார்த்துதல்
- போன்றவற்றால் குழந்தைகளுக்கு அநாவசிய வாக்குக் கொடுத்தல், குழந்தைகளை வைதல், அடித்தல் போன்ற குற்ற வினைகள் தீரப் பரிகாரங்கள் கிட்டும்.

இல்லறத்தில் ஒற்றுமை ஓங்க ...

ஸ்ரீசூரிய நாராயணப் பெருமாள்தாம் சகல சூரிய மூர்த்திகளையும் தோற்றுவிப்பவர். இவருடைய திருவடிகளில் உற்பவிக்கும் அனைத்துச் சூரிய மூர்த்திகளுக்கும் மூலகர்த்தாவே ஸ்ரீஆதிசூரிய மூர்த்தி ஆவார். இவ்வாறு கிரஹ வகைகளே கோடி கோடியாக உள்ளன.  
ஆன்மீக விஞ்ஞானமாகிய மெய்ஞானம் பகர்வதைக் கலியுக விஞ்ஞானத்தால் ஏற்க இயலாது திகைத்து, விஞ்ஞான உலகம் பல விண்வெளி அதிசயங்களுக்குமான வழிவகையும் அறியாது, விழிக்கின்றது. ஆகையால்தான், நம்பிக்கைப் பூர்வமாகவே, அனைத்தையும் பெற வல்லதாக, பல தெய்வீக விளக்கங்கள், ரகசியங்கள் கலியுகத்தில் அமைந்துள்ளன. சூரிய சக்தி மிகுந்த யோக சாதனைகளால்தாம் வானவியல் ரகசியங்களை அறிய இயலும்.
விண்ணில் உள்ள கோடிக் கணக்கான நட்சத்திரங்கள் யாவும், விஞ்ஞானத்தின் ஆராய்ச்சி எல்லைக்கு அப்பாற்பட்டவை என விஞ்ஞானமே ஒப்புக் கொள்கின்றது. வானவியல் விஞ்ஞானிகள், வானத்தில் பார்க்க முடிவதெல்லாம், பூமியின் சுழற்சியை ஒட்டிக் கிட்டும் வானவெளிப் பரப்பு மட்டுமே. இதனால்தான் பூமியின் சுழற்சியைத் தாண்டிய அறிவுப் பூர்வத்தை, கண்ணால், தொலைக் கருவிகளால் உணர முடியாததாக, டெலஸ்கோப்புக்கு எட்ட முடியாததாக தற்போதைய அறிவியல் தவிக்கின்றது. இதனால்தான் எட்ட இருக்கும் நம் பூமி போன்றதான எண்ணற்ற பூமி வகைகள் யாவும் விஞ்ஞானத்தால் அறிய முடியாததாக, மெய்ஞானப் பூர்வமாக மட்டுமே உணரப்படக் கூடியதாக உள்ளது.

பரிதிநியமம் திருத்தலம்

ஒவ்வொரு பூமிக்கும், ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித் தனியே விசேஷமான சூரியன் உண்டெனில், எத்தனை எத்தனை சூரியக் கோளங்கள் விண்ணில் துலங்குகின்றன என்று கணக்கிடவா முடியும்! இதில் கோஜோபலோசன் என்ற பெயரை உடைய சூரிய மூர்த்திதான், ஒரு குறித்த யுகத்தில் சிம்ம ராசியில் சந்திரப் பிரவேசம் ஏற்படும் போது, நம் பூமிக்கு உரிய சூரிய மூர்த்தியாகத் துலங்குபவர்.
துவரை தானியம் சூரிய மூர்த்திக்கும் உகந்தது அல்லவா! நம் பூமியில் மட்டுமல்லாது அனைத்துச் சூரிய லோகங்களிலும் துவரை தானிய வகைகள் உண்டு. சூரிய லோகத்திலும் மானுட, தாவர, மிருக ஜீவன்கள் உண்டு. சூரிய மண்டல வாசிகளின் உடலமைப்பானது, நம் பூமிவாழ் மானுடச் சராசரி தேக வெப்பத்தை விடப் பல்லாயிரம் மடங்கு உஷ்ணம் அதிகமானதாக இருக்கும். இத்தகைய தெய்வீக உண்மைகளை சராசரிக் கலியுக மனித உள்ளத்தால் ஏற்கக் கூட இயலாது என்பதால்தான், பல தெய்வீக ரகசியங்களும் பக்குவ முதிர்ச்சியுடன், தக்க சற்குரு மூலமாகப் பெற வல்லதாக இருக்கின்றன.
ஒவ்வொரு மாதமும் சிம்ம ராசியில் சந்திரன் பிரவேசிக்கும் முன் நிகழ்த்த வேண்டிய சிம்மேந்திர பூஜைகள் நிறைய உண்டு. ஒவ்வொரு கிரக மூர்த்தியும் ஒவ்வொரு ராசியில் பிரவேசிக்கையில், ஏனைய கிரக மூர்த்திகள் அனைவரும் அவரைப் பூஜிக்க வேண்டும் என்ற இறை நியதிகள் உண்டு. நவகிரஹாதிபதிகள் அனைவருமே ஈஸ்வராம்சங்கள் பொருந்தியவர்கள் என்பதை நினைவில் கொண்டால்தான், இதன் பின்னணி நன்கு புலப்படும்.

ஸ்ரீசூரிய பகவான் துடையூர்

இவ்வாறு கோஜோபலோசன் சூரிய மூர்த்தி சிம்ம ராசியில் சந்திர மூர்த்தி பிரவேசிக்கும்போது தன் திருக்கரங்களில் பத்துப் பிடித் துவரைத் தான்யம் கொண்டு, சிம்மச் சந்திரரைப் பூஜிக்கின்றார். இதற்கு வருணபதிமதி தோயம் என்று பெயர். பதிக்குப் பக்தியுடன் துலங்க, வாழ்க்கையில் தாம்பத்யப் புனிதம் கமழ உதவும் அற்புத பூஜை !
இத்தகைய நாட்களில் கணவன், மனைவி இருவரும் பத்துக் கைப் பிடியாக, எவ்வளவு துவரைப் பருப்பைத் தானம் செய்ய முடியுமே, அவ்வளவு தானம் செய்தல் மிக மிக விசேஷமானதாகும். இதனால் கணவன், மனைவியர் இடையே நல்ல மன ஒற்றுமையைப் பேண, சூரிய சக்திகள் உதவும்.
முதலாளிகள், உயர் அதிகாரிகள், வேலைக்காரி, வேலைக்காரன், சக ஊழியர்கள் இடையே உள்ள மனவேற்றுமைகள், சண்டைகள் அகலவும் இந்த பூஜா பலன்கள் உதவும்.
துவரைத் துடைத்தாரப்பர்
அவரைத் துதித்தாராயுமானோம்!
என்றபடி, திருச்சி - திருவாசி அருகே துடையூரில், தம் பத்னிகளுடன் அருளும் சூரிய மூர்த்திக்குத் துவரைக் காப்பிட்டு, ஒரு மூட்டைத் துவரையை அர்ப்பணித்து, ஏழைகளுக்கு மூட்டைத் துவரையைத் தானமளித்து வர, குடும்ப வாழ்வில் நல்ல மனசாந்தி கிட்டிடும்.  
குறிப்பாக, கணவன் மனைவி இடையே உள்ள மன ஒற்றுமை விருத்தியாகும்.! சூரிய சக்திகளுக்கு இல்லற ஒற்றுமையைப் பேணும் சக்திகள் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஆண் சந்ததிகள் பெற ...

அபிஜித் முகூர்த்த நேரம் என்பது பகல் உச்சிப் பொழுது நேரமாகும். பிரம்ம முகூர்த்த நேரம் போல தோஷமில்லாத நேரம். ராகு காலம், எமகண்டம் பாராது செய்த காரியங்களில் உள்ள தோஷ வினைகள் தீர, அபிஜித் முகூர்த்த நேர பூஜைகளே உதவும்.
முதல் நாள் அபிஜித் முகூர்த்த நேரத்திற்கு முன்னேயே ஷஷ்டி திதி தொடங்கி, மறுநாளும் அபிஜித் முகூர்த்த நேரம் வரை தொடர்ந்து ஷஷ்டி திதி அமைவதே அபிஜிதாகம குமார விரத நாளாக மலர்கின்றது. மிக, மிக அபூர்வமாக அமைவது! மிகவும் சக்தி வாய்ந்த விரத நாள்!
இவ்வகையிலான அபிஜித் முகூர்த்த சக்தி பரிமளிக்கும் ஷஷ்டித் திதி நாளை அறிந்து, தொடர்ந்து கீழ்க்கண்ட வகையில், பிட்சா பூஜை வகை விரதம் பூண்டு வர, பெண் சந்ததி மட்டும் உள்ளோர்க்கு, ஆண் குழந்தை சந்ததி தழைக்க அல்லது தக்க துணை அமைய உதவும் நல்வரத் திதி நாள்!
இத்திருநாளில்தான், முருகப் பெருமானே, குமார விரதம் பூண்டு, விருத்தாசலத் திருத்தலத்தில் (பழமுதுகுன்றம்) ஆகமங்களைக் கற்றார். எனவே ஆகம சக்திகள் பரிபூரணிக்கும் நன்னாளும் இதுவேயாம்.

சோற்றுப் பஞ்சம் வராது

பஞ்சமி உஞ்சம்
பகுபல விருத்தி
- என்ற ஆன்மொழிக்கு ஏற்ப, பஞ்சமித் திதியில் உஞ்ச விருத்தி என்ற முறையில், வளர் பஞ்சமி திதியில் பிட்சா பூஜையுடன் அன்னதானம் நடத்துவது சிறப்புடையது. அதாவது உஞ்ச விருத்தி என்ற முறையில், உஞ்ச விருத்தியில், நன்கு பழக்கம் ஏற்பட, முதலில் அறிந்தவர்களின் இல்லங்களுக்குச் சென்று, கழுத்தில் ஒரு செம்பு அல்லது பித்தளைச் செம்பு கட்டிக் கொண்டு / அல்லது மஞ்சள் துணியில் (பிடியரிசி போல) மூன்று பிடி அரிசி பெற்று, இவ்வாறு பல இடங்களில் அரிசி மணிகளைப் பிட்சையாகப் பெற்று, இல்லத்திற்குக் கொண்டு வந்து, பூஜித்து, அன்னம் வடித்து அன்னதானம் செய்வது மிகச் சிறப்பான சமுதாய அபிவிருத்தி பூஜையாகும்.
உஞ்ச விருத்தி என்பதான அரிசியைத் தானமாக ஏற்கின்ற இடங்களில், குறைந்தது இரு தெய்வ கீர்த்தனைகளையாவது பாடுதல் வேண்டும். இவ்வாறு செய்வதால் சந்ததிகளுக்குப் பஞ்சம், பட்டினி நோய்கள், பசிப் பிணி வராது காத்திடலாம்.
உஞ்ச விருத்திப் பூஜையால் தர்ப்பணம், திவசம் முறையாகச் செய்யாத பாவமும் ஓரளவேனும் இப்பிறவியிலேயே தீரவும் நல்வழி பிறக்கும்.
உஞ்ச விருத்தி என்பதைக் கேவலமானதாக, பிச்சை எடுத்தலாக எண்ணுதல் கூடாது. ஏனெனில், உஞ்ச விருத்தியாக அரிசியைப் பெறுபவர், பொதுவாக அன்று எதையும் உண்ணாது, பால் அருந்தியும், பழம் மட்டுமே உண்டு விரதம் இருப்பர், அல்லது உஞ்ச விருத்தியில் சமைத்த உணவில் மூன்றே மூன்று கவளங்களை மட்டுமே உண்பார். மேலும் அன்றைய பிட்சை வகைத் தானியத்தை மிச்சம் வைத்திடாது, அன்றே சமைத்து, அன்றே அனைத்தையும் அன்னதானம் செய்திடல் வேண்டும் என்ற தர்மச் சட்ட நியதியும் உண்டு.

ஸ்ரீபாடகச்சேரி சுவாமிகள்
ஜீவாலயம்

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு குடும்பத் தலைவரும், வருடம் ஒரு முறையாவது உஞ்ச விருத்தி பூஜையைச் சத்சங்கமாகப் பலருடன் சேர்ந்து ஆற்றுதல் வேண்டும்.
* அன்னம் உடலில் சேராது இறத்தல்,
*பசி, பஞ்சம், பட்டினிச் சாவு போன்றவை , சந்ததிகளுக்கும், சமுதாயத்திலும் ஏற்படாமல் இருக்க இந்த உஞ்ச விருத்தி பூஜை மிகவும் உதவும்.
சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, வீதியில் இறைப் பாடல்களைப் பாடி, பஜனை மார்க்க உஞ்சவிருத்தி ஆற்றுவதும் மிகவும் விசேஷமானதே! பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், சற்குரு தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீக்ஷிதர், சியாம சாஸ்திரிகள், புரந்தர தாசர் போன்றோர் உஞ்சவிருத்தி முறை மூலம் பல அரிய தேவயாக சக்திகளைப் பெற்றனர். சென்னை - திருவொற்றியூரில் உள்ள பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகளின் ஜீவசமாதியில் அன்னதானம் செய்வது, பெற்றோர்கள் - பிள்ளைகள் / பெண்களிடையே உள்ள மனஸ்தாபங்களைத் தீர்க்க உதவும்.
எனவே, வீட்டுக்கும், நாட்டுக்கும் சோற்றுப் பஞ்சம் வராது காத்திடும் சமுதாய நற்பூஜையும் இதுவேயாம்.

ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் விளங்குளம்

பஞ்சமி மகத்தில் பகுத்து வரும் பரலரிசி
உஞ்சம் வந்த வழி உத்தமப் பதமாக்கி
கஞ்சிக் கூட்டாகக் கட்டுணவுத் தானமதில்
கிஞ்சித்தும் பஞ்சம் கிட்டவே வாராதே!
என்ற ஆன்றோர் நாட்டு மொழிக்கு ஏற்ப, ஒவ்வொரு குடும்பத்திலும் உஞ்ச விருத்தி, மடிப்பிச்சை என்பதாக, பிட்சா பூஜை நம் நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும், குறிப்பாக, புரட்டாசியில், மார்கழியில் நன்கு சிறந்து நடந்து வந்ததாகும்!
அட்ச வடம்
அட்சய வடம்
அட்சர வடம்
என்ற மூன்று முக்கியமான பட்டைகள் ஒவ்வொரு அரிசியிலும் இருக்கும். இம்மூன்றும் சமுதாயத்திற்குத் தேவையான மூன்று வகை அட்சய வளங்களைக் குறிக்கின்றன. இதன் மூலத் தொகுப்பே அட்சய வட, அட்சய திருதியை பூஜைகளாகும்! கும்பகோணம் அருகே திருமாந்துறை, கும்பகோணம் அருகே முழையூர், பேராவூரணி அருகே விளங்குளம் போன்ற தலங்களில் உள்ள ஸ்ரீஅட்ச(ய)லிங்க வழிபாடு மிகவும் விசேஷமானது. சந்ததி இன்றி இறந்தோர்க்குத் தேவையான தர்ப்பணத் தாகம் தீர இவ்வழிபாடு மிகவும் உதவும்.
தற்காலத்தில் அரிசி சாப்பிடுவதால் தான் சர்க்கரை நோய் வருவதாகத் தவறாகக் கருதுகின்றனர். ஆனால் தற்கால அரிசியில் அட்சவடம், அட்சயவடம், அட்சரவடம் ஆகிய மூன்று சக்திகளும் இல்லாததும், இயந்திர வகைப் பகுப்பினால் நெல்லில் இருந்து பிரியும் தான்ய மணியில் இந்த மூன்று சத்துக்களும் உமியில் சென்று விடுவதாலும், வெறும் அரிசிச் சக்கை மணிதான் நமக்குக் கிட்டுகின்றது. கைக்குத்தல் அரிசியில் அனைத்துச் சத்துகளும் நிறைந்துள்ளன. ஆராக் கீரை, சிறு குறிஞ்சான், காசினிக் கீரையுடன் ஆரம்பத்தில் இருந்தே கைக்குத்தல் அரியுடன் உண்டு வந்தால், நிச்சயமாக சர்க்கரை வியாதி ஏற்படாது.
குறித்த ஹோரையில் ஸ்ரீதன்வந்த்ரீ ஹோம பூஜை, சித்த வைத்யம், தகுந்த வர்ம வைத்ய முறையைத் தக்க முறையில் இணைத்து ஏற்று, ஆற்றி வந்தால், எத்தகைய முற்றிய சர்க்கரை வியாதிக்கும் பரிபூரண நிவாரணத்தைப் பெற்றிடலாம் என்பது உறுதி.
அமிர்தக் கீரை அல்லது மதுகரக் (காசினிக்) கீரை என்ற அரிய மூலிகை உண்டு. இதன் ஒரு இலையைச் சிறிது உண்டாலே திகட்டாத அமிர்த இனிப்புச் சுவை ஏற்படும். இதனைத் தக்க ஸ்ரீசாகம்பரீ மற்றும் மூலிகா தேவதா பூஜைகளுடன், குறித்த முறையில் பதனப்படுத்தி, சர்க்கரை வியாதி உள்ளோர்க்கு அளித்து வர, அற்புதமான பலன்களைக் காணலாம். ஆனால் தக்க மூலிகா தேவதா பூஜை முறை இன்றி, வியாபார ரீதியாக இந்த அமிர்தக் (காசினிக் கீரையைத்) தவறாகப் பயன்படுத்தினால், மூலிகைத் தன்மைகளும் மறையும், மூலிகை தோஷங்களும் ஏற்பட்டு சந்ததியும் பாதிக்கப்படும். இறைச் சமுதாய சேவை உணர்வுடன்தான் இதனை மருத்துவ ரீதியாகப் பயன்படுத்த வேண்டும்.
அவ்வப்போது யானைக்கு நிறையக் கரும்புகளை உண்ண அளித்து வருவதானது, சந்ததி தழைக்க, பித்ரு ஆசிகளைப் பெற்றுத் தருவதோடு, சர்க்கரை வியாதிக் கடுமையால் இறந்தோர் குடும்பங்களில் பரம்பரையாக சர்க்கரை வியாதி வருவதையும் தடுக்க உதவும்.

நல்ல வரன் கிட்ட வேண்டுமா ?

ராகு காலம், எமகண்டம் தவிர, தியாஜ்ய காலம் (விஷ நேரம்) எனப்படுவதாக
- நட்சத்திரத்தை ஒட்டிய நட்சத்திர தியாஜ்யம்
- கிழமையை ஒட்டிய வார த்யாஜ்யம்
- லக்னத்தை ஒட்டிய லக்ன த்யாஜ்யம்
என்ற சுபகாரியத்திற்குத் தவிர்க்க வேண்டிய தியாஜ்ய நேரப் பகுப்பும் உண்டு. இவற்றைப் பஞ்சாங்கம் மூலம் நன்கு அறிந்து கொண்டு நிர்ணயித்தும் தான் சுப நேரத்தைக் கணித்தல் வேண்டும்.
ஆனால் தற்காலத் திருமண முகூர்த்த நேரத்தை நட்சத்திர தியாஜ்யம், வார (கிழமை) த்யாஜ்யம், லக்ன த்யாஜ்யம் இவற்றைப் பாராது இந்த விஷ நேரத்திற்குள் நிர்ணயிப்பதால்தான் பலருக்கும் திருமண வாழ்வில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்படுகின்றன.

முழையூர் ஸ்ரீபரசுராமர் சிவாலயம்

இவ்வாறு நட்சத்திர தியாஜ்ய காலம் பார்க்காது செய்யப்படும் காரியங்களில், காரிய விளைவுகளில் உள்ள விஷ தோஷத் தன்மைகளை நீக்கிட, அபிஜித் முகூர்த்த நேர வழிபாடுதான் துணை புரியும். எனவே தாம் காலை, மாலை சந்தியா வேளைகளோடு பகல் உச்சி நேரத்திற்கான அபிஜித் முகூர்த்த சந்தியாவந்தன வழிபாடும் அமைந்துள்ளது. இவ்வாறு அபிஜித் முகூர்த்த பூஜை ரகசிய விளக்கங்கள் நிறைய உண்டு.
உச்சிப் பொழுதில் நடை சார்த்தப்படும் போது ஆலய தரிசன சக்திகள் பலவும் அவ்வாலயத் தல விருட்சத்திற்கு அளிக்கப் படுகின்றது. இதற்கு அபிஜித் தேவ விருட்ச குணத்ரயம் என்று பெயர். எனவே உச்சிப் பொழுதில் ஆலய நடை சார்த்தி இருப்பின், தேவபூஜை நிகழ்கின்றது என்பது பொருளாதலின், ஆலயத் தல விருட்சத்தைத் தரிசிப்பதும் சிறப்பான பலன்களைத் தர வல்லதாகும்.
பூணூல் கல்யாண உற்சவத்தில் குமார போஜனம் என்ற முறையில் ஏழைச் சிறுவர்களுக்கு, பகல் உச்சி அபிஜித் முகூர்த்த நேரத்தில் உணவு அளிக்கப் பெற்று, முருக சக்திகளுடன், குமார சக்திகள் பூரிப்பதாக உள்ள வழிபாடும் உண்டு.
பாலமுருகன், முத்துக்குமார், சுப்ரமணியன், சிங்காரவேலன், செங்கல்வராயன், குமாரவேல் போன்ற முருக நாமங்களை உடையவர்க்கு அபிஜித் வேளையில் உணவு, உடை மற்றும் ஆவன உதவிகளை அளித்தல் மிகவும் நன்று.
சஷ்டி திதிகளில் பத்து வயதிற்கு உட்பட்ட ஆண் பிள்ளை, குழந்தையின் கைகளால் மூன்று வேளையும் அரிசியைப் பெற்று, உணவு சமைத்து உண்ணுதலும், அவர்கள் கரங்களாலேயே அன்னதானம் செய்தலும் சிறப்புடையதாகும். இதனால் ஆண் சந்ததியினர் ஸ்திர வாழ்வு பெற, நல்வரங்கள் கிட்டும். பெண் பிள்ளைகளைக் கொண்டோர்க்கு, நல்ல மாப்பிள்ளைகள் அமைய நல்ல வழிகள் பிறக்கும். சஷ்டி தோறும் இதனைச் செய்து வருதல் வேண்டும்.
ஐந்து வயதிற்கு மேல் பள்ளியில் சேர்ப்பது தான் குழந்தையின் தெய்வீகத் தன்மைகளை நன்கு பரிமளிக்கச் செய்ய உதவும். ஐந்து வயதிற்குள் பள்ளியில் சேர்ப்பதால், குழந்தையின் தெய்வீகத் தன்மைகள் பாதிக்கப்பட்டு, கண்ட நாசன தோஷம் ஏற்படுகின்றது. இதற்கும் இத்தகைய குமார சஷ்டி விரத வழிபாடே உதவும்.
ஆண் குழந்தைகளை, சிறுவர்களைக் கொண்டு அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய் போன்றவற்றை எடுத்துத் தரச் சொல்லி அவர்கள் கைகளாலேயே, 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அன்னதானம் அளிப்பதால் சிறுவர், சிறுமியர் உரிய முறையில் பராமரிக்காத, பரிபாலனம் செய்யாத வினைகள் தீர்வதற்கான பரிகாரங்களைப் பெற உதவிடும்.

ஆனித் திருமஞ்சனம்

வைவஸ்வத சப்தமி கூடிய ஆனித் திருமஞ்சன நாளில்தான், சிவபெருமான் எண்ணற்றோர்க்குப் சிவராஜப் பூரண நாட்டிய தரிசன அருள் தந்திட்டார். அகஸ்தியர், பதஞ்சலி மஹரிஷி, காரைக்கால் அம்மையார் போன்றோர் ஆனித் திருமஞ்சன நாளில்தான் நடராஜ சிவராஜப் பூரண நாட்டிய தரிசனம் பெற்றனர். ஜல் ஜல் என ஆலயங்களில் நாட்டிய ஒலி கேட்கப் பெறுதல் மிகவும் விசேஷமானதாகும்.
வந்திப் பாட்டிக்காக, சிவபெருமான் பிட்டுக்காக மண் சுமந்த, திருவிளையாடற் புராணப் படலம் பற்றி நாமறிவோம். ஆனால் வந்திப் பாட்டிக்காக மட்டுமல்லாது, ஆயிரக் கணக்கானோருக்கு அந்நாளில் எண்ணற்ற சிவலீலைகள் நிகழ்ந்தன என்பது பலரும் அறியாததாகும். மதுரையில் ஐராவதநல்லூர்ப் பகுதியில், ஆற்றங்கரையில் உள்ள, வந்தியின் திருஉருவத்தைத் தரிசித்துப் பிட்டுத் தானம் செய்தல் சிறப்புடையது. திருமணம், வேலை, நஷ்ட ஈடு சம்பந்தமான கோர்ட் வழக்குகளில் அவதியுறுவோர், நல்ல தீர்வு பெற இங்கு தானதர்மம் செய்து வர வேண்டும்.

திருவெண்ணெய்நல்லூர்

வனிதாரணன் என்ற வணிகப் பெருமானார், ஆழ்ந்த சிவபக்தி பூண்டவர். தினசரி இயன்ற அளவு அன்னதானம் மட்டுமல்லாது, வாரம் ஒரு நாள் அன்று என்ன தொகைக்கு வியாபாரம் ஆகின்றதோ, அதை அப்படியே அன்னதானம் செய்து வந்தார். சோதனையாக, அந்நாளில் மட்டும் அவருக்குப் பன்மடங்கு வியாபாரம் நடக்கும். ஏனைய நாளில் மந்தமாக இருக்கும். ஆனால் சற்றும் மனம் தளராது, தானெடுத்த சங்கல்பப்படி வாரந்தோறும் குறித்த அன்றைய நாள் வருமானத்தை அப்படியே அன்னதானமாக ஆக்கிப் படைத்து வந்தார்.
வைகை வெள்ளத்தை அடைத்திட, மன்னன் ஆணைப்படி, வீட்டுக்கு ஒருவராக கரை மண் சார்த்த இயலாத பலருக்கும் உதவி, மண் சுமக்கும் வண்ணம் கூலியாள் வேடத்தில் வந்த சிவபெருமான், பல ஏழைக் குடும்பங்களுக்கும் அயர்வின்றித் தொண்டு புரிந்து களைத்துச் சோர்வடைவதைக் கண்டு, பரிவுடன் கண்டார் வனிதாரணன். அவருக்குத் தானே மண் வெட்டியால் மணணையும் தொடர்ந்து வெட்டிக் கொடுத்தார். சொன்னதைச் செய்ய, வணிகருக்குப் பல வேலையாட்கள் கை கட்டி நின்றுக் காத்திருப்பினும், வணிகரே பூர்வ ஜன்மப் புண்ய பலத்தால் சிவ ஸ்பரிசம் கூடிய தரிசனம் பெற்று, அவருக்கு மண் எடுத்து கொடுத்தார். இவ்வாறு மதுரை ஆலவாய்ப் புராண அனுபூதிகள் ஆயிரமாயிரம் உண்டு.
வணிகர் வெட்டிக் கொடுத்த ஒவ்வொரு மண்வெட்டி மண்ணும், ஒவ்வொரு கோடி நிரந்தர தனமாய், செல்வமாய் அவருக்குத் திரும்பி வந்தது. அனைத்தையும் அவர் தான, தர்மங்களில் ஈந்தார். ஆனால் சிவ ஸ்பரிசச் செல்வமன்றோ! மேலும் மேலும் கோடி கோடியாய்ச் செல்வம் கொழித்தது. அனைத்தையும் அவர் ஆலயத் திருப்பணிகளில் வைத்ததுடன், பிற்காலத்தில் ஆலயத் திருப்பணிச் செலவுகளுக்காக, ஆங்காங்கே ஆலயங்களில் பல சங்கேத முத்திரைகளுடன், பொற் காசுகளாகப் பதித்து வைத்தார். இவர் சிவநாட்டியங் கண்டு, சிவனடி சேர்ந்த நாளும் ஆனித் திருமஞ்சனமாகும்.
ஆனித் திருமஞ்சன நாள் சிவபெருமானின் நாட்டியத் திருத்தலங்களில் சிவதாண்டவத் திருவடித் திருமண் தெரித்துப் பூவாக மணக்கும் நன்னாள். அதாவது சிவநாட்டியப் பிருத்வி சக்தி திளைக்கும் விசேஷமான பெருநாள். இன்று, பூமியில் நன்னீர் தெளித்து, ஆலயம், இல்லங்களில் நீர்க் கோலம், செங்காவி இட்டும், திருக்கருகாவூர், திருவெண்ணெய்நல்லூர், கருவளர்ச்சேரி போன்ற தலங்களில் கருவறை அல்லது அர்த்த மண்டப வாசற்படிகளைப் பசு நெய்யால் மெழுகுதல்-போன்ற பூமி, தரை சம்பந்தமான இறைப் பணிகளை நற்காரியங்களை ஆற்றிடல் வேண்டும்.
மேலும் பொன் தானமாக ஒரு சிறு பொற்காசு அல்லது தங்க முலாம் பூசிய பொற்காசையேனும் தானமளித்தல்,
* ஆலயத் திருப்பணிகளுக்கு ஒரு மூட்டை மண்ணாவது தானமாக அளித்தல்,
* பூமிதானம், மண்தானம், தாவர வித்துகள் தானம் ஆற்றுதல், ஆலய நந்தவனச் செடிகளைப் பராமரித்தல்
- போன்றவற்றை ஒவ்வொருவரும் மேற்கொண்டால், நல்ல வீடு அமையவும் பாக்கியம் கிட்டும். சந்ததிகளும் நன்கு தழைக்கவும் உதவும்.
* வேம்பு, புன்னை மற்றும் பால் விருட்சங்களுக்கு மண்தாலி அணிவித்தல் மிகவும் விசேஷமானது. மனைவிக்கு ஏற்பட்டுள்ள கணவனை ஏசிய பாவவினைகள் தீர, இது உதவும். நிலத்தில், தரையில் செய்த சொல்லொணாப் பாவ வினைகளைத் தீரவும் பரிகாரங்களும் கிட்டப் பெறுவர்.

ஹஸ்த நட்சத்திரத்தின் சிறப்பு

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் விதவிதமான விசேஷமான அனுகிரக சக்திகள் உண்டு. ஒவ்வொரு நட்சத்திரமும் வெவ்வேறு வகையான மருத்துவ சக்திகளையும் பூண்டுள்ளன. மனித உடலில் உள்ள 72000 நாளங்களில் பலவும், கிரஹப் பீடங்கள், 27 நட்சத்திர சக்திப் பீடங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவருடைய ஜாதகமும்,
* ராசி சக்கரம் என்பதாக, பிறந்த நேரத்தில் உள்ள கிரகங்களின் சஞ்சார நிலைகளின் அமைப்பு கூடியதாகவும்,
* நவாம்சச் சக்கரம் என்பதாக, நட்சத்திரக் கால்களின் ஓட்டத்தைக் குறிக்கும் சக்கரம் என்பதாகவும் வகுத்துரைக்கப்பட்டு,
- இரண்டு ஜாதகச் சக்கரங்களைக் கொண்டு பலாபலன்கள் அறியப் படுகின்றன.
* ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய சுவாசச் சக்கரமும் உண்டு. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய நான்கு பாதங்களில் (நட்சததிரக் கால்கள்), ஒவ்வொரு பாதத்திற்குமான சஞ்சார சுவாசக் கால்கள் உண்டு.
* அதாவது ஒவ்வொரு நட்சத்திரப் பாதத்திற்கும்

ஸ்ரீசனீஸ்வரன் திருவலஞ்சுழி

பூமி பாதபூதம்
ஜல பாதபூதம்
வாயு பாதபூதம்
ஆகாச பாதபூதம்
அக்னி பாதபூதம்
என ஐந்து பூத சுவாசக் கலைகள் உண்டு. பூதம் என்றால் இங்கு பஞசபூதக் கலைகள் என்பது போலான தெய்வசத்ய சக்திகளின் திரட்சியான வடிவம் என்று பொருள். அதாவது சூரியகலை, சந்திரகலை, சுழுமுனை ஆகிய மூன்று வகை சுவாசத்தில் ஒவ்வொன்றிலும் பிருத்வி, நீர், வாயு, ஆகாசம், அக்னி ஆகிய 5 பஞ்சபூதப் பகுதிகள் உண்டு. இவைதாம் உள்நாசியில் வயலினில் ஸ்வரத்தை மீட்டுவது போல், பூநாசி சுவாச இயக்கிகளாக அமைந்துள்ளன. ஒவ்வொரு விரல் நுனியாலும் வலது, இடது நாசியின் மேல்புறத்தை சற்றே அழுத்தி பஞ்சபூத சுவாச யோக சாதனைகள் நிகழ்த்தப் பெறும்.
மூக்கின் இரண்டு துவாரங்கள் மூலம் சுவாசத்தையே அவ்வப்போது தினசரி சுத்திகரிக்கக் கூடிய பலவிதமான தைலங்கள் கூடிய “ஸ்வாஸ்த்யப் பரிபாலன நாசித் தைலம்” எனும் ஆயுர்வேத பந்தனத் தைல வகையும் உண்டு. அவ்வப்போது இரு துளிகளை நாசிக்குள் தடவி, விரல் ரேகை, வளைய சக்திகளை ஆக்கப்படுத்தி வந்திடில், சுவாச சித்சுத்தி சக்தி ஏற்படும்.
இவ்வாறு கை கால் ரேகை, வளைய சக்திகளை சுவாச பந்தனம் மூலமாக ஆக்கப்படுத்திட உதவிடும் நாளே ஹஸ்த நட்சத்திர நாளாகும்.  
புதன், சனி தோறும் ஆண்கள் உள்ளங்கை சூடேற, உச்சந் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்திட்டால், நல்ல ஆயுள் விருத்தி ஏற்படும். பெண்கள் சனிக்கிழமைகளில் ஆண் குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு உள்ளங்கை சூடு ஏறும்படி, உச்சந்தலையில் எண்ணையை வைத்து நீராட்டி விடுதல் வேண்டும். இதில் சனிக்கிழமையும், ஹஸ்த நட்சத்திரமும் கூடும் நாளில் எண்ணெய் நீராடுதல், இதிலும் ஆற்று நீர், ஊற்று நீராடுதலால் மிருத்யு தோஷங்கள் பலவும் களையப் பெற்று, ஆயுள்காரக சக்தி மேம்படுகின்றது.
ஹஸ்தம் என்பது கைகளைக் குறிப்பதால்தானே, கைகளில் தெய்வீக சக்திகள் பூரிக்கும் திருநாளை ஹஸ்த நட்சத்திர நாளாகப் பொறித்துத் தந்துள்ளனர். ஹஸ்த நட்சத்திர தேவியானவள் அர்ச்சித்தல், அலங்காரம், முத்திரைகள், அபிஷேகம், கொழுக்கட்டை, எள் உருண்டை, வடை தட்டுதல் போன்ற வகையிலான - கைகள், கைரேகைகள் நன்கு பயன்படுவதான பூஜை முறைகளில் சிறந்து விளங்குகின்றாள்.
சனிக்கிழமையன்று சேரும் ஹஸ்த நட்சத்திர நாளில்தாம், ஹஸ்த நட்சத்திர தேவி சனீஸ்வரரைப் பூஜித்து, சந்திர மூர்த்திக்கு தீர்க சக்திகளைப் பெற வேண்டித் தவம் புரிந்தனள்.
நடுவிரலுக்குச் சனி விரல் என்று பெயர். தீர்க்க ஆயுளைத் தரும் நற்காரிய முத்திரைகளில் நடுவிரலே அதிகம் பயன்படும். எனவேதாம் தினமும் காலையில் பல் தேய்க்கும் போது, நடுவிரலாகிய சனி விரலால் கொண்டு பல் தேய்ப்பதே நல்ல தீர்கமான ஆயுள் சக்தியைத் தருவதாகும். தினமும் பற்களை பிரஷினால் தேய்க்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் கூட, கடைசி எட்டு சுற்றுகளாவது நடுவிரலாகிய சனிவிரலால் தேய்த்துப் பல், ஈறுகளைச் சுத்தம் செய்வதுதான் நடுவிரலில் உள்ள ரேகைகள், வளையங்களில் ஆயுள் விருத்தி சக்திகளைப் பெற்றுத் தரும்.
ஹஸ்த நட்சத்திர நாட்களில் உங்களால் இறைவனுக்கு எவ்வளவு சேவைகளை ஆற்ற முடியுமோ அவ்வளவு ஆற்றுதல் மிகவும் நன்று. பூக்களைத் தொடுத்தல், ஆலயத்தில், இல்லங்களில் குறைந்தது 21 கோலங்கள் போடுதல், பசுக்களுக்குக் கழுத்தில் இதமாகத் தடவிக் கொடுத்தல், வயதான பெரியோர்களுக்குக் கால், பாதங்களைப் பிடித்து விடுதல் - என்றவாறான கர சக்திகள் பரிமளிக்கும் திருநாள். இதனால் ஆபத்திற்கு, தக்க சமயத்திற்கு உதவி செய்தவர்களுக்குக் கைமாறு செய்ய முடியவில்லையே என்று ஏங்குவோர்க்கு, நல்ல நல்வாய்ப்புகள் கை கூடி வரும். இதே போல, தான் உதவியவர்களும் அசிரத்தையாக இருப்பதைக் கண்டு வேதனை அடைவோர்க்கும் உதவிக்கு உதவி கை கூடி வரும்.
ஹஸ்த நாளில் அமர்ந்த நிலை சனீஸ்வரர் அல்லது, தனிச் சந்நிதி கொண்டு அருளும் ஸ்ரீசனீஸ்வரரின் முன் அமர்ந்து வலக் கையின் விரல்களை, இடது உள்ளங்கையில் வைத்து எண்ணியவாறு ஸ்ரீசனீஸ்வர காயத்ரீ மந்திரத்தை ஜபித்தல் மிகவும் விசேஷமானது.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam