ஆரணம் மையமா மாயமா ? !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பரியா மருதுபட்டி

வரும் 22.2.2022 செவ்வாய்க் கிழமை பக்தர்கள் வழிபட்டுப் பயனடைய வேண்டிய திருத்தலங்களுள் ஒன்றே பொன்னமராவதி அருகில் உள்ள பரியா மருதுபட்டி சிவாலயம் ஆகும். 22.2.2022 என்ற தேதி கொண்ட நாளில் ஆறு இரண்டுகள் இணைந்து குருவிற்கு உரிய பிலவ வருட எண்ணான மூன்று எண் சக்தியுடன் துலங்குகின்றது. இது ஆங்கில ஆண்டின் எண் கணிதமான ஆறிற்கு குசாவாகத் திகழ்வது. இவ்வாறு ஒன்றிற்கொன்று குசா சக்தியுடன் பொலியும் 3, 6 என்ற எண்கள் இணைவது தெனாலி குசா சக்தி நாள் என்று சித்தர்களால் புகழப்படுகிறது. இத்தகைய தெனாலி குசா நாளில் பரியா மருதுபட்டி என்ற நாமமும் இவ்வாறு தெனாலி சக்திகளுடன் திகழ்வதே இந்த சிறப்பிற்கு மேலும் அணி சேர்ப்பதாகும். பரி ஆ மருது பட்டி என்ற வார்த்தைகள் இணைந்து பரியா மருதுபட்டி ஆயின. அதாவது குதிரை, பசு, மருத மரம் இவற்றின் சக்திகள் பாதுகாப்பாக ஒன்று சேர்ந்த திருத்தலமே பரியா மருதுபட்டி என்பதாகும். அர்த்தநாரீஸ்வர சக்திகள் மிளிரும் அருந்தலம்.

தலவிருட்சம் மருதம்
பரியாமருதுபட்டி

இது குறித்த இத்தல வரலாறு ஒன்றைப் பார்ப்போம். வெகு நாட்களாக ஒரு இளைஞன் ஸ்ரீபரியா மருதீஸ்வர ஈசனுக்கு அபிஷேகத்திற்காக அருகிலுள்ள தீர்த்தக் குளத்திலிருந்து ஒரு குடத்தில் நீர் எடுத்து வந்து ஒரு தொட்டியில் நிரப்பிக் கொண்டிருந்தான். சுவாமிக்கு அபிஷேகம் இயற்றிய பின் அந்தத் தொட்டியில் உள்ள நீரை மாடுகளும் குடிப்பது வழக்கம். அவன் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன். திடீரென ஒரு நாள் அக்கோயில் பூசாரி தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் கொண்டு வரும் நீரால் சுவாமிக்கு அபிஷேகம் இயற்ற முடியாது என்று கூறி அவன் செய்யும் திருப்பணியைத் தடுத்து விட்டார். அவனோ தன்னுடைய சேவைக்கு எந்த விதமான பண உதவியையோ, பொருள் உதவியையோ எதிர்பார்க்கவில்லை என்றாலும் அந்த கோயில் குருக்கள் அளித்த ‘தண்டனையை’ அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடுமையாக யோசித்து யோசித்து அந்த திருக்குளத்தையே வலம் வந்து கொண்டிருந்தான் அந்த இளைஞன். நள தீர்த்தம் என்று நள சக்கரவர்த்தி தன் முந்தைய பிறவிகள் ஒன்றில் இத்தீர்த்தத்தில் நீராடி இறை பக்தியையும், எத்தகைய துயர் வரினும் இறைவனை விட்டு நீங்காக மனத் தின்மையையும் பெற்ற தலம், தீர்த்தம். திடீரென அவனுக்கு ஒரு எண்ணம் பளிச்சிட்டது. நிறைய மாடுகள்தான் தொட்டியில் உள்ள நீரைக் குடிக்க வருகின்றனவே அந்த மாடுகளோடு மாடாகப் பதுங்கி சென்று அந்த தொட்டியில் நீர் வார்த்தால் என்ன என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றவே வானுக்கும் பூமிக்குமாக குதித்து பேருவகை கொண்டான். அடுத்த நாளிலிருந்து அக்கோயிலுக்கு வரும் மாடுகளோடு மாடாய்ப் பதுங்கி, பதுங்கி சென்று அந்த தொட்டியை நீரால் நிரப்ப ஆரம்பித்தான். இறைவனின் திருவிளையாடலை யார் அறிவார் ? அந்த இளைஞனின் அன்பான சேவையை சாதியின் பெயரால் தடுத்து நிறுத்திய அந்த குருக்களுக்கு தினமும் எப்படி தொட்டியில் நீர் நிறைகிறது என்ற எண்ணம் அவர் மூளையில் எழவே இல்லை என்பதே ஈசனின் கூத்து.

நாட்கள் கடந்தன ...
ஒரு நாள் அந்த இளைஞன் தொட்டியில் நீர் நிரப்பி விட்டு மாடுகளோடு பதுங்கி வருவதை அந்த கோயில் பூசாரி பார்த்து விட்டார். அவர் பெரும் கூக்குரல் போட்டு, “யார்றா அவன் மாடுகளோடு போவது ?” என்று கேட்கவே அந்த இளைஞன் இறைவனிடம் மனதார வேண்டினான், “சுவாமி, இந்த பூசாரியிடமிருந்து நான் தப்பிக்க வேண்டுமானால் நான் மாடாக மாறி விடுவதுதான் ஒரே வழி... அதனால் எப்படியாவது என்னை ஒரு மாடாக மாற்றி விடு,” என்றான். ஆபத்பாந்தவன் அல்லவா நம் ஈசன், அந்த இளைஞனின் வேண்டுகோளை ஏற்று உடனே அவனை ஒரு அழகிய மாடாக மாற்றி விட்டான். அவ்வாறு மாடாக மாறிய அந்த இளைஞனே இன்றும் ஸ்ரீபரியா மருதீசருக்கு நந்தி வாகனமாக அலங்கரிக்கிறார். தேவர்கள் அனைவரும் அங்கு கூடி அந்த நந்தி மூர்த்தியை மலர்களால் அர்ச்சித்து ஆனந்தமடைந்தனர். ஈசனும் நவநீதன் என்ற அற்புதமான ஐந்தெழுத்து நாமத்தை அந்த நந்திக்கு அளித்து கௌரவித்தான்.

ஸ்ரீநவநீத நந்தி மூர்த்தி
பரியா மருதுபட்டி

மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளின் பெற்றோர்களும், வேலை வாய்ப்பு கிட்டாத இளைஞர்களும் வெள்ளிக் கிழமைகளில் நவநீத நந்தி மூர்த்திக்கு பசு நெய் காப்பிட்டு வணங்கி வருதலால் நற்பலன் அடைவார்கள். குருவின் மேல், இறைவனின் மேல், ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் தோன்ற அருள்புரியும் நந்தி மூர்த்தியே நவநீதன் ஆவார். பரியா மருதுபட்டி திருத்தலத்துடன் தொடர்புடைய ஆறு திருத்தலங்களை இந்த சுக்ர ஆண்டில் சித்தர்கள் அருள்கின்றனர்.

ஸ்ரீபரியா மருதீசர்
பரியா மருதுபட்டி

1. செவலூர்
2. நயினார்பட்டி
3. பட்டமங்கலம்
4. பரியாமருதுபட்டி
5. நெற்குப்பை
6. மெய்ஞானபுரி எனும் T. வைரவன்பட்டி
இந்த ஆறு திருத்தலங்களையும் ரோகிணி மருது என்ற கால சுழற்சியில் வழிபடுவது மிகவும் சிறப்பாகும். ஒரு ரோகிணி நட்சத்திரம் திகழும் நாளிலிருந்து அடுத்து ரோஹிணியில் சந்திர பகவான் பிரகாசிக்கும் நாளிற்கு இடைப்பட்ட காலமான சுமார் 27 நாட்களையே ஒரு ரோகிணி மருது என்று சித்தர்கள் பரிபாஷையில் அழைக்கின்றனர். இந்த ஆறு திருத்தலங்களையும் மேற்கண்ட வரிசையில்தான் தரிசிக்க வேண்டும் என்ற நியதி கிடையாது. அவரவர் வசதிக்கேற்ற வகையில் எந்த திருத்தலத்தில் வேண்டுமானாலும் ஆரம்பித்து எந்த திருத்தலத்தில் வேண்டுமானாலும் நிறைவு செய்யலாம். இடையில் ஒரே தலத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் தரிசித்து பயன்பெறலாம். என்றாலும் மேற்கூறிய 22.2.2022 நாள் அன்று அடியார்கள் அவரவரால் முடிந்த தலங்களை தரிசிப்பது சிறப்பாகும். இதனால் அரிதிலும் அரிதான தெனாலி நோய் நிவர்த்தி சக்திகளை அனைவரும் பெற ஏதுவாகும். இந்த தரிசனத்தால் கிட்டும் நோய் நிவாரண சக்திகள் பல ஆண்டுகளுக்கும், ஏன் பல தலைமுறைகளுக்குமே நிரவி நிற்கும் என்பதே இந்த தெனாலி முகூர்த்த வழிபாட்டின் சிறப்பாகும்.

தெனாலி பரஞ்சோதி சூரணம்

மருதீஸ்வர ஈசன் மருந்தீசனுமாக பரியாமருதுபட்டி தலத்தில் அருள்வதால் தெனாலி பரஞ்சோதி என்ற ஒரு அரிய சூரணத்தை சித்தர்கள் அருள்கின்றனர். பரியா மருதுபட்டி, அருகில் உள்ள நெற்குப்பை இடையே எந்த இடத்தில் வேண்டுமானாலும் கருக்காய் நெல்லை அல்லது நெல் உமியை பெற்று, அதை மண் இல்லாமல் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தாமரை இலையில் பெறப்பட்ட பசுஞ்சாணத்தை காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் தனித் தனியாக நெருப்பில் இட்டு சாம்பலாக்கி உமியின் பாதியளவு பசுஞ் சாண சாம்பலைச் சேர்த்து அத்துடன் சிறிது சாம்பிராணி பொடியைச் சேர்த்து தயார் செய்வதே தெனாலி பரஞ்சோதி சூரணம் ஆகும்.

ஸ்ரீபரஞ்சோதி அம்மன்
பரியா மருதுபட்டி

இந்த சூரணத்தால் இத்தல ஸ்ரீபரஞ்சோதி அம்பிகைக்கு அர்ச்சனை செய்து கிடைத்த பிரசாத விபூதியை ஒரு தங்கம், வெள்ளி அல்லது அவரவர் வசதிக்கு ஏற்ப குங்குமச் சிமிழில் வைத்து சுமங்கலிகளுக்கு, ஏழைகளுக்கு, பக்தர்களுக்கு தானமாக அளிப்பதே மிகச் சிறந்த ஆரோக்கிய தான வழிபாடாகும். ஸ்ரீபரஞ்சோதி அம்மனுக்கு மேற்கூறிய முறையில் அர்ச்சிக்க முடியாதவர்கள் அவரவர் இல்லத்தில் ஸ்ரீஅமிர்த மிருத்யுஞ்சய மூர்த்திக்கு அர்ச்சித்தும் பிரசாதமாக மற்றவர்களுக்கு அளிக்கலாம். இந்தச் சூரணத்தை மருந்தாக, நெற்றிச் சின்னமாக, காப்பு ரட்சையாக, எதிர்வினைகளை முறியடிக்கும் ஆயுதமாக என எவ்விதத்தில் வேண்டுமானாலும் அடியார்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே இந்த சூரணத்தின் சிறப்பாகும். வெளியூர் பயணம் செல்பவர்களும், பரீட்சை எழுதும் மாணவர்களும், நேர்முகத் தேர்வுகளுக்கு செல்பவர்களும் தங்கள் பையில் ஒரு சிறு பொட்டலம் தெனாலி பரஞ்சோதி சூரணத்தை வைத்துக் கொண்டு செல்வதால் அவர்கள் சிரமப்பட்டு மனனம் செய்த பாடங்கள் மறக்காமல் அவர்களுக்கு கை கொடுக்கும். காலையும் மாலையும் நடுவிரல் கொண்டு இந்த சூரணத்தால் பற்களையும் ஈறையும் தேய்த்துக் கொப்பளித்தலால் அற்புத நோய் நிவாரண சக்திகளைப் பெறலாம்.

ஸ்ரீகிருஷ்ண பகவான் தன்னுடைய வில்லை ஊன்றி உருவாக்கிய சர்வானந்த தீர்த்தம் எத்தனையோ கொடுமையான நோய்களைத் தீர்க்கவல்லது. ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் ஸ்ரீராமபிரான் தன்னுடைய வில்லை ஊன்றி ஒரு அற்புத தீர்த்தத்தை உருவாக்கினார் அல்லவா ? சீதையின் தாகத்தையும், தன்னுடைய படை வீரர்களின் தாகத்தையும் தீர்க்க ராமபிரான் உப்புக் கடல் கொப்பளிக்கும் கடல் பரப்பின் நடுவே சுத்த நீர் பொங்கும் தீர்த்தத்தை உருவாக்கினார். எத்தகைய கொடுமையான, கொடூரமான சூழ்நிலையில், அசோகவனத்தில் அரக்கிகள் நடுவே தவித்த சீதையைப் போல் துன்பமடையும் நிலையைப் பெற்றவர்களுக்கும் ஆறுதல் அளிப்பதாக இந்த ராமேஸ்வர வில்லூண்டி தீர்த்தம் அமைந்தது போல் எத்தகைய கொடிய வியாதிகளால், அது உடல் வியாதியாக இருந்தாலும் சரி, மனோ வியாதியாக இருந்தாலும் அந்த நோய்த் துன்பத்தை நீக்கி ஆனந்தம் அளிப்பதே சர்வானந்த தீர்த்தத்தின் மகிமையாகும். முந்திய பிறவி ஒன்றில் இந்த சர்வானந்த தீர்த்தத்தில் நீராடியே ஏகலைவன் அற்புத வில் ஆற்றலையும் பகவான் கிருஷ்ணர் மீது மாறா அன்பையும் பக்தியையும் பெற்றான் என்பதே இந்த தீர்த்தத்தின் மகிமைகளுள் ஒன்றாகும்.

சர்வானந்த தீர்த்தம்
பரியா மருதுபட்டி

பகவான் கிருஷ்ணரின் வில் பட்ட தீர்த்தம் என்பதால் பக்தர்களின் பாதங்கள் இந்த தீர்த்தத்தில் படாமல் அவர்கள் தள்ளி இருந்து தரிசிப்பதே சிறப்பாகும். இந்த சர்வானந்த தீர்த்தத்தை ஒரு நாழிகை தரிசித்து பின்னர் பரியாமருதுபட்டி திருத்தல வளாகத்தில், அல்லது இங்குள்ள திருக்குளக் கரையில் அமர்ந்து தியானம் மேற்கொள்வதால் அற்புத தியான சக்திகள் மலரும். இமயமலை, திருஅண்ணாமலை போன்ற அற்புத தலங்களில் மட்டுமே சித்திக்கக் கூடிய visualisation சித்திகள் எளிதில் கை கூடும்.

ஷண்ணவதி தர்ப்பண நாட்களில் தர்ப்பணம் அளிப்பவர்கள் மட்டும் இந்த சர்வானந்த தீர்த்தத்தில் நீர் எடுத்து தர்ப்பணம் அளிக்கலாம் என்பதே சித்தர்கள் அளிக்கும் விதி விலக்கு. பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஷண்ணவதி தர்ப்பணம் அளிப்பவர்கள் உடலில் தோன்றும் ஒளியே பரஞ்சோதி என்பதாகும். அடியார்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காக சோதி, உடல் என்று இங்கு குறிப்பிடுகிறோமே தவிர உண்மையில் சூக்கும சரீரம், தூல சரீரம் என்ற இரண்டையும் கடந்து நிற்பதே ‘பரஞ்சோதி’ என்னும் தத்துவம். இந்த தத்துவத்தின் ஒளிப் பிழம்பாய் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும் தெய்வமே பரியா மருதுபட்டி ஸ்ரீபரஞ்சோதி அம்மன். பரஞ்சோதி ஒளி தரிசனம் பெற்றவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் கடமையிலிருந்து விலக்கு பெறுகிறார்கள். மகான்கள் அனைவருமே இத்தகைய பரஞ்சோதி விலக்கு, பரஞ்சோதி விளக்கு, பரஞ்சோதி அம்சம் கூடியவர்களே. பரஞ்சோதி அனுகிரகம் பெற்றவர்கள் தங்கள் மூதாதையர்கள் எங்கு, எந்த உருவத்தில் இருந்தாலும் அவர்களுக்கு வேண்டிய அனுகிரகங்களை நேரிடையாகவே அளிக்கவல்லவர்கள் ஆவார்கள். மேற்கூறிய பரஞ்சோதி சூரணத்தை தானமாக அளித்து வருபவர்களும் சிறிது சிறிதாக கடினமான இந்த பரஞ்சோதி தரிசனத்தையும் எளிதில் பெறலாம் என்பதே நம் சற்குரு நமக்காக பரிந்தளிக்கும் ‘பரியா மருந்து’.

ஸ்ரீபார்வதி தேவி
பரியா மருதுபட்டி

தெனாலி முகூர்த்த நாளான 22.2.2022 அன்று தேவையான அளவு தெனாலி பரஞ்சோதி சூரணத்தை தயாரிக்க முடியாவிட்டாலும் 22.2.2022 அன்று மேற்கூறிய ஆறு திருத்தலங்களில் முடிந்தவற்றை தரிசனம் செய்து 2022 சுக்ர வருடத்திற்குள் சூரணத்தை தானம் அளித்தலும் ஏற்புடையதாகும். மிகவும் அபூர்வமாக ஒரு சில தலங்களில் மட்டுமே ஈசன் பார்வதி தேவியுடன் அருளும் காட்சியைக் காண முடியும். உதாரணமாக, சுவாமிமலை அருகிலுள்ள கூனஞ்சேரி திருத்தலம் இத்தகைய சிறப்புகளை உடையதாகும். இந்த திருத்தலங்கள் எல்லாம் மிகவும் தொன்மையானவை. பரியா மருதுபட்டி திருத்தலத்தில் ஈசன் ஸ்ரீபரஞ்சோதி, ஸ்ரீபார்வதி தேவி என்ற இரு தேவியர்களுடன் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறான். ஸ்ரீபரஞ்சோதி ஈசனுக்கு வலப்புறத்திலும் ஸ்ரீபார்வதி தேவி ஈசனுக்கு இடப் புறத்திலும் அருளாட்சி செய்கிறார்கள். மனிதர்கள் நினைப்பது போல் இறைவனின் தேவிகள் ஆண் பெண் என்ற தத்துவத்தை மட்டும் குறிப்பவர்கள் அல்லர். இறைவனின் தேவிகள் அனைவரும் சக்திப் பிழம்புகளே. பரியா என்பது பரி என்றும் ஆ என்றும் பிரியக் கூடியது என்று அறிவோம், அதாவது குதிரை என்ற சக்தி தத்துவமாகவும், ஆ என்ற சக்தி தத்துவமாகவும் இணைவதே பரியா என்ற ஔஷதக் கூறு. இந்த இரண்டு சக்திகளும் இணைந்ததே பரியா மருது என்ற மருத மர சக்திகளாகும். மருத மரத்தில் மொத்தம் 96 வகைகள் உண்டு. இதில் பரியா மருதுபட்டியில் காட்சி அளிக்கும் பரியா மருது என்ற அர்த்தநாரீஸ்வர இறை கோலமே மரமாக பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறது. இதைக் குறிக்கும் விதமாகவே, இத்தகைய அபூர்வ மருத மரத்தின் சக்திகளைப் பெறுவதற்காகவே பக்தர்கள் இத்தலத்தில் ஷண்ணவதி என்ற தர்ப்பணத்தை இயற்றுமாறு நம் சற்குரு அருள்கின்றார். ‘நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை மாய்ப்பதற்கும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்,’ என்று பகவான் கிருஷ்ணர் கூறுவதுபோல் ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் ஏற்கும் கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய அவதார கிருத்தியத்தின் நடுவில் பரியா மருதுபட்டியில் விளங்கும் சர்வானந்த தீர்த்தத்தில் உலகத்தவர் நன்மைக்காக, சிறப்பாக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ தர்ப்பணத்தை அளிக்கிறார் என்பதே பரியா மருதுபட்டியின் மகாத்மியமாகும். ஸ்ரீகிருஷ்ண பகவானே உலகத்தவர் நன்மைக்காக தர்ப்பண வழிபாடுகளை மேற்கொள்கிறார் என்றால் நம்முடைய கடமை என்ன என்பதைக் கூறவும் வேண்டுமா என்ன ? பிரதோஷ நாட்களில் சோமசூக்தப் பிரதட்சிணம் என்ற முறையில் ஆலயத்தை வலம் வருகிறோம் அல்லவா ? இதே போல ஏகாதசி நாட்களிலும் துவாதசி நாட்களிலும் இத்தலத்தில் உள்ள மருத மரத்தையும் நெல்லி மரத்தையும் குறைந்தது 24 தடவை வலம் வந்து வணங்குதலால் அற்புத பலன்களைப் பெறலாம். திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்கள் வயதிற்கேற்ற, வசதிக்கேற்ற தக்க துணையைப் பெறுவதுடன், திருமணமான பெண்களும் தங்களை தணவன்மார்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற ஏக்கம் தீர இத்தகைய வழிபாடுகள் துணைபுரியும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இத்தகைய பிரதட்சிணங்களை மேற்கொள்வதால் குழந்தைகளின் முரட்டுத் தனம் நீங்கும், பிடிவாத குணம் மாயமாகும்.

மருது புடை அமர்ந்த
ஸ்ரீதட்சிணா மூர்த்தி
பரியா மருதுபட்டி

பரியா மருதுபட்டி திருத்தலத்தில் பார்வதி தேவி, பரஞ்சோதி என்ற இரு அம்பிகைகள் மட்டும் அல்ல, இங்குள்ள தெய்வீக அம்சங்கள் அனைத்துமே இரண்டு இரண்டாய் பொலிவதே நாம் பெற்ற பேரும் பேறாகும். திருக்கோயில் அருகில் உள்ள தீர்த்தம் நள தீர்த்தம் ஆகும். இங்குள்ள மருத மரம் அர்ச்சுன மருது எனப்படும். அர்ச்சுனன் இந்த மருத மரத்தின் அடியில் தர்ப்பண வழிபாடுகளை இயற்றியதால் இது அர்ச்சுன மருத மரம் என்று அழைக்கப்படும். இது ஒரு காரணமே. இதன் பின்னணியில் ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு. திருக்கோயிலினுள் உள்ளே உள்ள மருத மரம் தலவிருட்சமாக அமைகிறது. இது பரியா மருது என்று அழைக்கப்படும். தூல உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள வித்தியாசங்களை தெளிவாக உணர்ந்து கொண்டால்தான் இந்த மரங்களின் தெய்வீக அம்சங்களை ஓரளவு உணர்ந்து தெளியலாம். பரி ஆ என்று பரியா மருதுபட்டி அழைக்கப்டுவதன் தெய்வீக தாத்பர்யத்தை ஏற்கனவே விளக்கியுள்ளோம். குதிரை என்ற ஆண் அம்சமும், பசு என்ற பெண் அம்சமும் சேர்ந்ததே பரியா என்ற சொல்லாகும். தைரியம் என்பது வீரம் என்ற ஆண் அம்சம், கோழைத்தனம் என்பது பயம் என்ற பெண் அம்சம். மாவீரனான அர்ச்சுனன் மகாபாரத யுத்தத்தில் கௌரவர்களின் படையைக் கண்டு அஞ்சி நடுங்கியபோது ஸ்ரீகிருஷ்ண பகவான்தானே அவனுக்கு தைரியம் ஊட்டி யுத்தத்தில் பங்கு பெறச் செய்தார். ஆனால், இந்த தைரியத்தை அர்ச்சுனன் பெற பகவான் காட்டிய வழிமுறைகள் எத்தனை, எத்தனையோ. அவற்றில் ஒன்றே பரியா மருதுபட்டி திருத்தலத்தில் நள தீர்த்தம் கரையில் அமர்ந்துள்ள அர்ச்சுன மருத மரத்தின் அடியில் தர்ப்பணம் வழிபாடுகளை இயற்றும்படி பணித்தது.

கிருஷ்ண பகவான் மகாபாரத யுத்த பூமியில் மாவீரனான அர்ச்சுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. கோடிக் கணக்கான வீரர்கள் பங்கேற்கும் இந்த யுத்தத்திற்கு முன்பு, அஸ்திரங்கள், அக்னிக் கனைகள் தலைக்கு மேல், உடலைச் சுற்றி பறக்கும் இந்த நேரத்திலா உத்தம குருவும் உத்தம சீடனும் சாவகாசமாக அமர்ந்து மணிக் கணக்கில் தெய்வீக விஷயங்களை பரிமாறிக் கொள்ள முடியும் ?

“மரங்களில் நான் அஸ்வதம்”
ஸ்ரீகிருஷ்ண பகவான்
பரியா மருதுபட்டி

ஆனால், இந்த அனல் தெறிக்கும் போர்க் காலத்தில்தான் பகவான் கீதையை மூன்றே நொடிகளில் உபதேசித்தார், அதை ஒன்றரை நிமிட நேரத்தில் அர்ச்சுனன் மனதில், உள்ளத்தில் பதித்துக் கொண்டான் என்பதே கீதை மகாத்மியம் குறித்து சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். இது என்றோ நடந்த மகாத்மியம் என்றாலும் இந்த தெய்வீக இரகசியங்களை நாம் உணர்ந்து பயன் பெற உதவுவதே பரியா மருதுபட்டியில் நாம் இன்று நிகழ்த்தும் வழிபாடுகளாகும். இந்த ஒன்றரை நிமிட ‘அர்ச்சுன முகூர்த்தமே’ பிலவ 2022 என்ற தெனாலி இணைப்பில் பொலிகிறது என்பதும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் முகூர்த்த நேரமாகும்.

தன் காலடியில் தன் நிழல் தங்கும் உச்சி வேளையில் எவரும் வெளி செல்லக் கூடாது என்பது சாஸ்திரம். இதனை உணர்ந்து கடை பிடிப்போர் எத்தனை பேர் ? மலையளவு குவிந்த இந்த கர்ம வினைகளை களையவல்லதே நள தீர்த்தத்தில் நிழல் உள்ள பகுதியில் நீராடி மருத மர நிழலில் தர்ப்பணம் அளித்தலாகும். ஒவ்வொரு மனிதனிடமும் ஆண் பெண் அம்சங்கள் நிழலாய் மறைந்திருக்கும். இந்த அம்சங்களை களைந்து முழுமையாக ஆணாகவோ, பெண்ணாகவோ மாறினால்தான் அவர்கள் தெய்வீகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பது உண்மை. உதாரணமாக, ஆண்களுக்கும் மார்பில் தனங்கள் இருப்பது இத்தகைய அர்த்தநாரீஸ்வர அம்சங்களைக் குறிப்பதாகும். இத்தகைய நிழல் அம்சங்களைக் களைந்து தெய்வீகத்தில் உயர உதவுவதே நள தீர்த்தக் கரையில் நள நிழல் தீர்த்தம் கொண்டு தர்ப்பண வழிபாடுகளை இயற்றுதலாகும்.

நிழல் கூடிய நளதீர்த்தம்
பரியா மருதுபட்டி

பஞ்சபாண்டவர்களின் அக்ஞாத வாசத்திலும் அதற்கு முன்னரே கிருஷ்ண பகவானின் சகோதரி சுபத்திரையை மணக்கும் நிகழ்ச்சிகளிலும் அர்ச்சுனன் பெண் வடிவம் தாங்கியதை நாம் அறிவோம். பெண் வடிவத்திற்குரிய பயம், கோழைத்தனம் போன்ற குணங்கள் தலை தூக்கி நின்றதே மகாபாரத யுத்தத்தில் அர்ச்சுனனின் நிலையாகும். இவை அனைத்தையும் களைய உதவியதே பரியா மருதுபட்டியில் நள தீர்த்தக் கரையில் அர்ச்சுனன் மேற்கொண்ட வழிபாடாகும். இது என்றோ ஸ்ரீகிருஷ்ண பகவான் தன் ஆருயிர் சீடன், நண்பனுக்கு மட்டும் அருளிய அனுகிரகம் அல்ல. இன்றும் பரியா மருதுபட்டியில் தர்ப்பண வழிபாடுகளை கிருஷ்ண தீர்த்தத்திலும், நள தீர்த்தத்திலும் இயற்றும் அனைவருக்கும் பகவானால் அளிக்கப்படும் அனுகிரக சக்திகளே இவை. இந்த சுக்ர வருடமும், தெனாலி முகூர்த்த நாளும் பகவானின் அனுகிரக சக்திகளோடு இணையும்போது அதனால் கிட்டும் பலன்களை வர்ணிக்க வார்த்தைகள்தான் உண்டோ ?

2 அம்பாள் மூர்த்திகள் + 2 தீர்த்தங்கள் + 2 மருத மரங்கள் = 2022 = தெனாலி சக்திகள்
என்றவாறு பொலிவதே பரியா மருதுபட்டியில் இறைவனின் பெருங்கருணை சக்திகள். இவற்றோடு மாடாக மாறிய மனித நந்தியும் நவநீதமாகப் பொலிவது எத்தகைய சிறப்பு ? வெண்ணெய் என்பது கிருஷ்ண பகவானுக்கு உரியது என்பதால் இது ஹர ஹரி சக்தி தலமாகவும் விளங்குகிறது. வெண்ணெய் என்ற நவநீதத்திற்கும் கிருஷ்ண பகவானுக்கும் உள்ள தொடர்பே பகவான் தனங்களற்ற தூய ஆண் என்ற தத்துவத்தில் விளங்கும் சிறப்பைக் குறிப்பதாகும்.

ஸ்ரீதூலசூட்சும மூர்த்தி
பரியா மருதுபட்டி

பரியா மருதுபட்டி திருத்தல பிரகாரத்தில் இடது பக்க தூணில் அருள் வழங்குபவரே ஸ்ரீதூலசூட்சும மூர்த்தி ஆவார். தூல சூட்சும சரீரங்களுக்கு இடையே அமர்ந்து அருள்புரிவதால் இம்மூர்த்தி இவ்வாறு அழைக்கப்படுகிறார். மனித மனம் ஏதாவது ஒரு உருவத்தில் இலயிப்பதே இயற்கை என்பதால் இம்மூர்த்தியை அஸ்வத்த பத்ர விநாயகர் என்று போற்றி வழிபடுவதும் தவறு கிடையாது. பெரும்பாலும் அஸ்வத்தம் என்னும் அரச மரம் கோயில் வாசல்களில் எழுந்தருளி உள்ள திருத்தலங்களில் இம்மூர்த்திகள் தூண்களில் எழுந்தருளி இருப்பர். சில தலங்களில் இவர்கள் சூட்சுமமாக எழுந்தருளி இருப்பதும் உண்டு. கிட்டத்தட்ட இத்தகைய உருவ அமைப்பு உள்ள பல மூர்த்திகளையும் நீங்கள் தரிசனம் செய்திருக்கலாம். இவர்கள் அனைவருடைய பொதுவான பலனே இவ்வாறு மனிதனின் சூட்சும சரீரத்தையும் தூல சரீரத்தையும் இணைப்பதுதான். கலியுக நியதியாக சூட்சும சரீர சக்திகள் பெருகும் அளவிற்கு மனிதன் தூல உடலையோ, தூல உடல் பலத்தையோ பெருக்குவது இல்லை. இந்த இரண்டு சரீரங்களின் பெருக்கத்திற்கு இடையே உள்ள இடைவெளியே பெரும்பாலான மனோ வியாதிகளுக்கு காரணமாக அமைகின்றது. நம் சற்குரு போன்ற மகான்கள் நிரவியுள்ள ஆஸ்ரமங்கள் அனைத்திலுமே உடல் உழைப்பு முக்கியத்துவம் வகிப்பது இக்காரணம் பற்றியேதான். தியானம், அமர்ந்த நிலை பூஜை போன்ற பல இறை காரியங்கள் இரண்டாம் இடத்தையே இத்தகைய ஆஸ்ரமங்களில் வகிக்கின்றன. தூல சரீரத்திற்கும் சூட்சும சரீரத்திற்கும் உள்ள இடைவெளி பெருகும் மனிதன் ‘பைத்தியம்’ என்ற நிலையை அடைகின்றான். அதனால் பல பைத்தியக்கார ஆஸ்பத்திரிகளிலும், மன நோயாளிகளின் காப்பகங்களிலும் தொடர்ந்த உடல் உழைப்பே இங்குள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. எனவே தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அடியார்கள் எந்த அளவிற்கு இவ்வாறு அரச மரம் வாயிலில் உள்ள திருத்தலங்களையோ அல்லது இத்தகைய ஸ்ரீதூலசூட்சும மூர்த்திகள் எழுந்தருளி உள்ள திருத்தலங்களையோ தரிசித்து அங்குள்ள அரச மரங்களை முடிந்த அளவு பிரதட்சிணம் செய்து வழிபடுதலால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும். சிறப்பாக பரியா மருதுபட்டி தலத்தின் பூமியே ஔஷத பூமியாக இருப்பதால் இங்கு அடியார்கள் இந்த புனித பூமியில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியுமே அவர்களுக்கும் அவர்கள் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஸ்ரீநடராஜப் பெருமான்
நெற்குப்பை

மின்சார பல்பை போடும்போது (switching on the lights)
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே
என்று கூறியே, பாடியே விளக்கேற்றும்படி கூறுவார்கள். இதனால் பல்புகள் எளிதில் பழுதடையாது நீண்ட நாட்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்பது சித்தர்களின் அறவுரை, இதன் பின்னணியில் ஒவ்வொரு அடியாரும் தன்னுடைய தூல சரீரத்தையும் சூட்சும சரீரத்தையும் இணைக்கும் ஒரு தபசை அவர்களையும் அறியாது மேற்கொள்கிறார்கள் என்பதே இந்த சாதாரண செயலுக்குப் பின்னால் அமையும் குரு கருணையாகும். இதிலிருந்து என்ன தெரிகிறது ? ஒரு துரும்பளவு விஷயத்தில் நம் சற்குருவின் வழிகாட்டுதலைப் பின் பற்றினால் கூட போதும் நம் வாழ்க்கை ஒளி பெறும். பல்ப் தூலம், மின்சாரம் சூட்சுமம், இரண்டையும் இணைக்கும் குரு கருணையே பிரகாசம், இரண்டின் இணைப்பால் தோன்றுவதே ஒளி வெள்ளம். பொதுவாக நடராஜ மூர்த்தியின் கண்கொள்ளா பின்னழகு காட்சியை எத்தலத்திலும் காண முடியாது. இதற்கு விதிவிலக்காகத் தோன்றுவதே லால்குடி திருத்தலமாகும். சுவாமியின் பின்னழகை இரசித்தவாறே இங்கு நடராஜப் பெருமானை வலம் வந்து வணங்கலாம். சுவாமியின் பின்னழகு எந்த அளவிற்கு ஒளி வீசும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்வதே இங்குள்ள நடராஜப் பெருமானின் புகைப்படமாகும். பின்னழகிற்கு ஏன் இத்தகைய ஒரு சிறப்பு? நீரின் சக்திகள் மேற்புறத்திலும், கோலத்தின் சக்திகள் அடிப்புறத்திலும், இறைவனின் சக்திகள் பின்புறத்திலும் படியும் என்பதே சுவாமியின் பின்னழகு சிறப்பாகும்.

ஸ்ரீமுருகப் பெருமான்
நெற்குப்பை

வயல்களில் அறுவடையான பின் நெல்மணிகளை குவியல் குவியல்களாக குவித்து வைத்திருப்பார்கள். பின்னர் அறுவடை காரியங்கள் எல்லாம் முடிந்த பின் அந்த நெல்மணிகளை கோணிப்பைகளில் கட்டி தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வார்கள். அறுவடை நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென மழை பெய்தால் நெல் குவியல்களில் உள்ள சில நெல் மணிகளே மழை நீரால் பாதிக்கப்படும், மற்ற நெல் மணிகள் காப்பாற்றப்படும் என்பதே நம் மூதாதையர்களின் அறிவுத் திறன். அதே போல் தூய ஆண் தத்துவத்தில் தோன்றிய முருகப் பெருமான் தமிழுக்குரிய தெய்வம் அல்லவா? மருது என்ற மெல்லினம், இடையினம், வல்லின அட்சரங்கள் அதே வரிசையில் இடம் பெற்றிருப்பதே மருது என்ற இனிய தமிழ்ச் சொல். திருநாவுக்கரசரோ, “நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்...”, என்றல்லவா முருகப் பெருமானைப் புகழ்கிறார். எம்பெருமானின் முக்கண் ஜோதியில் தூய ஆண் தத்துவத்தில் தோன்றிய முருகப் பெருமானை பார்வதி பெற்றெடுத்த தவப் புதல்வன் என்று நாவுக்கரசர் பாடுவதன் பின்னணி யாதோ ? இவை அனைத்தும் பரியா மருதுபட்டியை விளக்கும் தகைமை சான்ற தமிழ் வர்ணனையே. இவ்வாறு நெற்குப்பையும் பரியா மருதுபட்டியும் இணையும் தத்துவமே நம் வாழ்வை சீராக்கும், மழை வெயில் போன்ற இயற்கை தாக்குதல்களிலிருந்து காப்பாற்றும் “மருது” குடையாகும். உலகில் எந்த தான்யத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு நெல்லுக்கு உண்டு. நெல்லையும் உமியையும் சேர்க்கும் அல்லது இணைக்கும் பசையை எந்த விஞ்ஞான சக்தியாலும் உருவாக்க முடியாது. அரிசி சோறு சாப்பிட்டால்தான் உணவு உண்ட திருப்தியே வரும் என்று பலரும் நினைப்பதன் பின்னணியில் திகழும் ஆன்மீக காரணமும் இந்த “பசை” அளிக்கும் திருப்தியே. நம் ஆஸ்ரம அன்னதானத்தில் அரிசி உணவே பிரதானமாக வழங்கப்படுவதன் காரணமும் இந்த “அன்னபூரணி” சுவையே. அன்னத்தைப் பூரணமாக்குவது நெல் என்ற அரிசி உணவே, நெற்குப்பை நெற்குப்பையே அனைத்து நோய்களுக்கும் நிவர்த்தி தரும் மருந்தாகும்.

இந்த நெல் பசை சக்திகளை ஓரளவு விஞ்ஞான ரீதியாகவும் விளக்க முடியும். நெல் மணியில் உள்ள பசை என்பது செவ்வாய் கிரக சக்திகளால் உருவானது. செவ்வாய் கிரகத்தின் சாதாரண உஷ்ண நிலை 5000 டிகிரி செல்சியஸ் ஆகும். அதனால்தான் இரண்டே இரண்டு நெல் மணிகள் கிரகிக்கும் உஷ்ணத்தை நம் உடல் பூரணமாக ஏற்க முடிந்தால் சாதாரண மனிதனின் ஒரு நாளைக்குத் தேவைப்படும் அனைத்து செயல்பாடுகளுக்கும் தேவையான வெப்ப சக்திளை இந்த இரு நெல் மணிகளே அளித்துவிடும் வல்லமை உடையன. இந்த வெப்ப சக்திகளை நாம் பூரணமாகப் பெறவே இறை மூர்த்திகளுக்கு உணவை நைவேத்யமாக அளித்து, இறை நினைவுடன் அன்னபூரணி சுலோகம் போன்ற இறை கீர்த்தனைகளுடன் உணவை ஏற்கும்படி நம் முன்னோர்கள் வலியுறுத்துகிறார்கள். உணவே மருந்து என்று நம் பெரியோர்கள் கூறிய ஆரோக்கிய இரகசியத்தை நாம் உணர்ந்து கொள்ள உதவி செய்வதே நெற்குப்பை வழிபாடாகும். செவ்வாய் கிரகம் அளிக்கும் வெப்ப சக்திகளால் பஸ்மம் ஆகாத, அழிந்து மடியாத நோய்க் கிருமிகளே இல்லை எனலாம்.

ஸ்ரீமரகதவல்லி அம்மன்
நெற்குப்பை

ஸ்ரீமனமொத்த கண்டீஸ்வரர்
நெற்குப்பை

முகர்ந்தாலே வாடி விடும் அனிச்ச மலரை விடவும் மென்மையானதே ஆண்களின் உடலில் தோன்றும் விந்து சக்தியாகும். இவ்வளவு மென்மை வாய்ந்த விந்து சக்தியிலிருந்து தோன்றும் பற்களோ இரும்பை விடவும் உறுதியானவை, வைரத்தை விடவும் கடினமானவை. ஆனால், இந்த கடினத் தன்மையை பற்கள் பெறுவதற்கு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அது போல் பரியா மருதுபட்டி போன்ற திருத்தலங்களில் நிறைவேற்றும் தொடர்ந்த வழிபாடுகள் நம் உடலையும் மனதையும் உள்ளத்தையும் செம்மைப்படுத்துகின்றன. தொடர்ந்து இத்திருத்தலத்தில் கிட்டும் நெற்குப்பையை பயன்படுத்துவதாலோ, இந்த ஔஷத சக்திகளை பற்பொடி வடிவில் பிறருக்கு தானமாக அளித்து வருதலாலோ சிறிது சிறிதாக இறை பக்தியில் முன்னேறிச் செல்ல முடியும்.

பல்லு போனால் சொல்லு போச்சு ... என்பார்கள் நம் முன்னோர். வெறும் வார்த்தையை மட்டும் குறிப்பதல்ல இந்த சொல். ஆன்மீகம் என்ற கோட்டையே பற்களின் பலத்தின் மேல்தான் அமைந்துள்ளது. பல பரம்பரையாகத் தொடரும் குணாதிசயங்களையும் ஒரு மனிதனின் பற்களைக் கொண்டே வர்ணித்து விடுவார் நம் சற்குரு. நல்ல பாரம்பர்யத்தில் தங்கள் குழந்தைகள் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் ஏழு வயதிலிருந்தே தங்கள் குழந்தைகளுக்கு பரியா மருதுபட்டி பற்பொடியால் பல்துலக்கும் நற்பழக்கத்தை சொல்லித் தர வேண்டும். கூடவே 32 பற்களைக் குறிக்கும் 32 அறங்களைப் பற்றி அவர்கள் உணர்ந்து கொள்ள நலம்தரும் தேவாரப் பதிகப் பாடல்களையும் அவர்களை மனனம் செய்து பாடுவதற்கு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

ஸ்ரீகாலபைரவ மூர்த்தி
நெற்குப்பை

நெற்குப்பையில் ஸ்ரீகாலபைரவ மூர்த்தி குரு அம்சங்களுடன் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். குருவைக் குறிக்கும் புள்ளியில்லாத தூய எலுமிச்சை கனிகளைத் தாங்கிய எலுமிச்சை மரமும் பைரவ சன்னதிக்கு எதிரில் தோன்றுவதும் கலியுக மக்களின் அருந்தவப் பேறே. உரிய காணிக்கையை செலுத்தி குறைந்தது மூன்று எலுமிச்சை கனிகளை பைரவ மூர்த்திக்கு அர்ப்பணித்து, இவைகளைப் பிரசாதமாகப் பெற்று பைரவ பந்து ஆடும் வைபவத்தை இந்த தலத்தில் நிறைவேற்றுவது சிறப்பாகும். காலையில் இத்தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு பூஜ்யஹரம் முகூர்த்த நேரத்தில் தொடங்கி குறைந்தது 24 நிமிடங்கள் கொண்ட ஒரு முகூர்த்த நேரத்திற்கு இந்த மூன்று எலுமிச்சைக் கனிகளையும் தொடர்ந்து வானத்தில் வீசி விளையாடுவதே பைரவ பந்து ஆடல் என்பதாகும். ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றும் இந்த ‘விளையாட்டு’ நாட்கள் செல்ல செல்ல எளிமையாகி விடும். நம் சற்குருவோ ஆரம்பித்திலேயே இந்த பந்து ஆட்டத்தை ஆடி நம் அனைவருக்கும் கூரிய கண் பார்வையையும் பெற்றுத் தந்தார் என்பதே இத்தல பந்து விளையாட்டின் மகத்துவமாகும். கடுமையான கண் நோய்களால் வருந்துவோரும், கண் திருஷ்டி, பில்லி சூன்ய ஏவல்களால் பாதிக்கப்பட்டோரும் இத்தகைய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். தொடர்ந்து இத்தலத்தில் பந்து விளையாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள் எலுமிச்சை பழ பிரசாதத்தைப் பெற்று தங்கள் சொந்த ஊரில் ஏதாவது ஒரு திருத்தலத்தில் இத்தகைய விளையாடலை மேற்கொண்டு வருதலும் நலமே. தற்காலத்தில் சரியாக துப்பாக்கி சுடும் விளையாட்டு, அம்பு எய்யும் போட்டிகளில் உலக சாதனையை படைத்தோர் அனைவரும் தங்கள் முந்தைய பிறவிகள் ஏதாவது ஒன்றில் நெற்குப்பை பைரவர் முன் பந்து விளையாடியவர்களே என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியமாகும்.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் வழக்கம் உள்ள குழந்தைகளும், இருட்டைக் கண்டு பயந்து நடுங்கும் குழந்தைகளும் பெரியோர்களும் இத்தகைய வழிபாடுகளால் நலம் பெறுவர். இருளில் சில சமயம் ஜல் ஜல் என்ற சலங்கை ஒலி பலருக்கும் கேட்பதுண்டு. இது பிரமை கிடையாது. இதன் பின்னணியில் பற்பல ஆன்மீக இரகசியங்கள் உள்ளன. இவைகளை இனம் கண்டு கொண்டு பயனடையவும் மற்றவர்களுக்கு வழிகாட்டவும் இந்த பைரவ பந்து விளையாட்டு துணை புரியும். பல வீடுகளில் ஏதாவது ஒரு மூலையில் இருள் சூழ்ந்து இருப்பது போன்று தோன்றும், இதுவும் பிரமை அல்ல, உண்மையே. இது ஒரு வகையான வாஸ்து தோஷமாகும். இத்தகைய இருள் மண்டும் வாஸ்து தோஷங்களுக்கும் நிவாரணம் அளிப்பதே இந்த பந்து விளையாட்டு. மேலோட்டமாக பார்ப்பதற்கு இது ஒரு விளையாடல் போல் தோன்றினாலும் காலம் செல்லச் செல்ல இந்த விளையாட்டு மனித சூட்சும சரீரத்தையும் தூல சரீரத்தையும் எளிதில் சேர்க்கும் ஒரு கருவியாக மாறி நம்மை ஆன்மீகத்தில் உயர்த்தும் வல்லமை பெற்ற தியான சாதனமாகவும் மாறும், மலரும். மனம் ஒத்த ஈசன் என்ற ஒரு நாமமே எத்தகைய விந்தைகளை எல்லாம் நிகழ்த்துகிறது பார்த்தீர்களா ?

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
நெற்குப்பை

செக்கர் வான் ஒளியாக இறைவனைப் பெரியோர்கள் வர்ணிப்பது உண்டு. பொன்னார் மேனியனே என்றும் இறைவனை நாயன்மார்கள் புகழ்கிறார்கள், எது உண்மை ? இரண்டும் உண்மையே. இறைவனை தூல, சூக்கும சரீரத்தின் மூலம் காணும் போது தோன்றும் வடிவங்களே இவை. கண்ணா ! கருமை நிறக் கண்ணா என்றும் பரம் பொருள் கண்ண பிரானை அழைக்கிறார்களே. இதுவே வண்ணங்கள் கடந்த மாயமாக, மாயையாக உருவாகும் பரியா மருதுபட்டி திருத்தல நெற்குப்பையில் உருவாகும் பற்பொடி, மருந்து பொடியின் மகிமையாகும். அனிச்சம் மலர் ஆரஞ்சு வண்ணத்தில் திகழும் மென்மை உடையதாக இருந்தாலும் அந்த மென்மையான சக்திகள் முதிர்ச்சி அடையும்போது வெண்ணிற, முத்துப் போன்ற பற்களாகத்தானே பிரகாசிக்கின்றன. இவ்வாறு மலர்களுக்கு மட்டும் வண்ணங்கள் இறைவனால் அளிக்கப்படவில்லை, ஒவ்வொரு வேதமும் குறித்த வண்ணத்தில் திகழ்பவையே, ஒவ்வொரு மந்திரத்திற்கும், ஒவ்வொரு மந்திர அட்சரத்திற்குமே தனித்தனியான வண்ணங்கள் உண்டு. நெற்குப்பையில் உருவாகும் பற்பொடி கொண்டு பல், ஈறுகளைத் தேய்த்து வந்தால் இந்த வண்ணங்கள் கண் முன் பளிச்சிடும் என்பது உண்மையே. இதனால் என்ன பயன் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றலாம். முதலில் இந்த வண்ண தேவதைகளின் தரிசனம் பெற்ற பின்னரே காலம் தேசம் கடந்த இறைவனின் தரிசனம் நமக்கு சித்தியாகும் என்பதே இறை தரிசனம் பற்றி மகான்கள் உரைக்கும் இரகசியமாகும். அதனால்தான் எல்லா உணவுப் பொருட்களுமே கலப்படமாகி விட்டாலும் அந்த உணவுப் பொருட்களின் வண்ணம் சுட்டும் இறை சக்திகள் என்றும் மாறாது, மறையாது என்பதே நம் சற்குரு உரைப்பதாகும். அதனால்தான் பல வண்ண உணவுகளையும், வண்ண ஆடைகளையும் நாமும் பயன்படுத்தி இறை மூர்த்திகளுக்கும் அணிவித்து சமுதாயத்திற்கு ஆரோக்யத்தை அளிக்கும் சேவையை நிறைவேற்றும்படி நம் சற்குரு அருள் வழி காட்டுகின்றார்.

நெற்குப்பை திருத்தலத்தில் ஸ்ரீதட்சிணா மூர்த்தி எதிரே 21 அகல் தீபங்களை இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் கலந்து ஏற்றி அந்த தீப ஜோதிகளை உற்று நோக்கி வழிபடுவதே நெற்குப்பை திருத்தலத்திற்கு உரித்தான வண்ண க்ஷீர வழிபாடாகும். இந்த தீபங்களில் பொலியும் மஞ்சள் நிறமே இறைவனின் “ஒரிஜினல்” மஞ்சள் நிறமாகும். இந்த அற்புத தரிசனத்தைப் பெற்ற ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தன் ஆடைகளில் அந்த தட்சிணா மூர்த்தி அனுகிரகத்தை பீதாம்பரம் என்ற மஞ்சள் வண்ணமாக நிரவியதே ஒரு 2022 போன்ற சுக்ர சக்திகள் நிறைந்த வருடமாகும். குருவருளையும் திருவருளையும் ஒருங்கே வர்ஷிக்கக் கூடியதே இந்த வண்ண க்ஷீர வழிபாடாகும். பீதாம்பரம் என்றால் சூட்சுமமாக பிரகாசிக்கும் மஞ்சள் வண்ணம் என்ற பொருளும் உண்டு.

கரும்பலா நெற்குப்பை

பலா மரங்களில் பல வகை உண்டு. திருக்குற்றால சிவத்தலத்தில் பொலிவது குறும்பலா. கொல்லிமலையில் திகழ்வது தேன் பலா. லால்குடி திருமங்கலத்தில் மலர்வது ஆயுஷ்பலா. நெற்குப்பை திருத்தலத்தில் பொலிவதே கரும்பலா என்பதாகும். இதன் பின்னணியில் அமைந்த தியாக வரலாறு நம்மை மெய்சிலிர்க்க வைப்பதாகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது முதலில் தோன்றியது ஆலகால விஷம். தியாகராஜனான ஈசன் அந்தக் கொடிய விஷத்தை அருந்தி பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் அனைத்தையும் காப்பாற்றினான் என்பது நீங்கள் அறிந்ததே. அவ்வாறு ஆலகால விஷம் சுவாமியின் தொண்டைப் பகுதியில், கண்டத்தில் இறங்கியபோது சுவாமியின் உள்ளுறுப்புகளிலும் உள்ள கோடி கோடி அண்டங்களில் உறையும் ஜீவன்களைக் காப்பதற்காக இறைவி சுவாமியின் திருக்கண்டத்தைப் பற்ற, ஏற்கனவே ஆலகால விஷத்தின் பெரும் உஷ்ணம் தாங்காமல் தன் கண்டத்தைப் பற்றிக் கொண்டிருந்த சுவாமியின் கரங்களின் மேல் அம்பிகையின் கரங்களும் பற்றவே அப்போது தோன்றிய இணைப்பையே “திருக்கண்ட முகூர்த்தம்” என்று சித்தர்கள் புகழ்கின்றனர். இதுவே ஈடு இணையற்ற பிரதோஷ முகூர்த்தம். அதனால்தான் பிரதோஷம் என்ற திருக்கண்ட முகூர்த்த நேரத்திற்கு இணையான ஒரு முகூர்த்தம் இதுவரை தோன்றியது இல்லை, இனி தோன்றப் போவதும் இல்லை என்று ஆணித்தரமாக உரைப்பார் நம் சற்குரு. மனமொத்த கண்டீஸ்வரர், கண்டவள நாயகி (நீர்ப்பழநி) போன்ற இறைவன், இறைவியின் திருநாமங்களை உடைய பல திருத்தலங்கள் திருக்கண்ட முகூர்த்த நேரத்தில் நம் புனித பாரதமெங்கும் தோன்றின. இவை எல்லாம் கண்ட தோஷங்களைப் போக்கும் திருத்தலங்களாக சிறப்பிக்கப்படுகின்றன. நெற்குப்பை திருத்தலத்தில் இறைவனுக்கு எட்டு முழ வெண்பட்டு வேஷ்டி அங்கவஸ்திரம், இறைவிக்கு ஒன்பது கஜ மரகத பச்சை பட்டுப் புடவை சார்த்தி வழிபட்டு, இது போன்ற வேட்டி புடவைகளைத் தாங்கியவாறு இத்தல கரும்பலாவை அல்லது திருத்தலத்தை நித்திய பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6.30 வரை வலம் வந்து வழிபடுதல் சிறப்பு. கணவன் மனைவி ஒற்றுமையைப் பெருக்குவதுடன் தம்பதிகளுக்கு ஏற்படும் எத்தகைய கண்ட தோஷத்தையும் நீக்கி, பாதுகாப்பை அளிக்கவல்லவை இத்தகைய வழிபாடுகளாகும். கழுத்து வரை நிறைந்துள்ள கடன் பிரச்னைகள், உயிரைப் போக்க வல்ல மானப் பிரச்னைகள், நித்ய கண்டம் பூர்ண ஆயுசு என்றவாறாக தடுமாறும் அனைவருக்குமே நல்வழி காட்ட வல்லதே நெற்குப்பை சிவத்தலத்தில் நிறைவேற்றும் பிரதோஷ வழிபாடுகளாகும்.

எண்ணங்களும் வண்ணங்களும்
நெற்குப்பை

பட்டு வஸ்திரங்கள் ஏந்தி கரும்பலா மரத்தை அல்லது திருத்தலத்தை வலம் வந்த பின் இந்த ஆடைகளை ஏதாவது ஒரு தலத்தில் தம்பதிகளுக்கு தானம் அளித்து விடலாம். வசதி படைத்தோர் இத்துடன் மரகதப் பச்சை கடுக்கன்களையோ, அல்லது பச்சை நிறக் கடுக்கன்களையோ, அல்லது மரகத ஆபரணங்களையோ சுமங்கலி தானத்துடன் நிறைவு செய்து விடலாம்.

கருமை நிறம் என்பது எத்தகைய ஆபத்துக்களும் நம்மை நெருங்காதவாறு பாதுகாப்பாக நின்று நம்மைக் காக்க வல்லதாகும். அதனால்தான் வீட்டின் உட்புறம், சுவர்களுக்கு அவரவருக்கு ஒத்துவரக் கூடிய வண்ணம் உடைய பெயிண்ட்டுகளைப் பூசினாலும் வாசல் கதவுகளுக்கு கருப்பு வண்ணத்தை தீட்டுமாறு நம் சற்குரு வழிகாட்டுகிறார். குறிப்பாக பிரதோஷ நேரத்தில் கரும்பலாவை வலம் வந்து வணங்குதலால் எத்தகைய எதிர்பாராத விபத்துகளுக்கும், ஆபத்துகளுக்கும் இது இரட்சையாக அமையும். நெற்குப்பை நெல்லில் தோன்றும் கருமை நிறம் இத்தகைய பாதுகாப்பை அளிக்கும் திறன் பெறுவதற்கான காரணம் இப்போது உள்ளங்கை நெல்லிக் கனிதானே ?

கருமை என்ற நிற சக்தியைப் பற்றி சாதாரண மக்கள் புரிந்து கொள்ள 30 ஆண்டுகள் ஆகும் என்றாலும், நம் சற்குரு தெளிவுபடுத்தும் இந்த விஷயங்களை தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தால் அவரவர் முயற்சியைப் பொறுத்து விரையில் வெற்றி பெறலாம். நெற்குப்பை திருத்தலத்தில் அருளும் ஸ்ரீதட்சிணா மூர்த்தி இந்த வண்ண இரகசியங்களை தெளிவுபடுத்தும் மூர்த்தி ஆவார். ஆல மர நிழல் வெயில் காலத்தில் குளிர்ச்சி உள்ளதாகவும், மழை காலத்தில் கதகதப்பான வெப்ப சக்தியுடனும் திகழும். அப்படியானால் இந்த வெப்ப, குளிர் சக்திகளுக்கு ஆதாரம் என்ன ? ஆல மர இலைகளா, ஆல மர நிழலா அல்லது இவை இரண்டையும் இணைக்கும் இறை சக்தியா ? மரத்தையும் நிழலையும் இணைக்கும் இறை சக்திதான் ஆதாரம் என்றால் ஏன் அந்த இறை சக்தி மற்ற மரங்களையும் நிழலையும் இணைக்கவில்லை ? இதையெல்லாம் நீங்கள் தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தால் நீங்கள் நிறம் பற்றிய இரகசியங்களையும், நிழல் பற்றிய நுணுக்கங்களையும், மனிதனுக்குத் தோன்றும் கர்மா என்ற விளைவுகளைப் பற்றியும் சிறிது சிறிதாக புரிந்து கொள்ளலாம். கர்ம வினைகள்தானே மனிதர்களின் உடல் நிழலாகத் தோற்றம் கொள்கின்றன ?

சீமந்தம் என்ற ஒரு நிகழ்ச்சி நம் பாரதப் பண்பாட்டில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். வளைகாப்பு என்றும் இதைக் கூறுவதண்டு. உச்சி வகிடு எடுத்தல் என்றும் இந்த நிகழ்ச்சி புகழப்படும். பெண்கள் கர்ப்பம் அடைந்த ஆறு, எட்டு என்றவாறான இரட்டைப் படை மாதங்களில் நிறைவேற்றப்படும் இந்த சுபநிகழ்ச்சிகளின்போது மூத்த சுமங்கலிகள் கர்ப்பமுற்ற பெண்ணிற்கு மஞ்சள் பூசி நீராட்டி, பெண்ணிற்கு வகிடு பிரித்து ஒரு விழாவாகக் கொண்டாடுவர். இவ்வாறு முதலில் பிறக்கும் குழந்தையே சீமந்தப் புத்திரன் என்று தன் தாய்க்கு இறுதிக் கடமைகளை நிறைவேற்றும் தகுதி பெற்ற “ஸ்ரீ” என்று திருமகள் சக்திகளைப் பெற்ற புதல்வனாகச் சிறப்பு பெறுகிறான்.

சீமந்த திருக்குளம்
நெற்குப்பை

முதலில் தோன்றும் குழந்தை இத்தகைய ஸ்ரீ, திரு சக்திகளுடன் திகழ்வதால்தான் ஒரு மன்னனின் முதல் குழந்தையே ராஜகுமாரனாக, மன்னனாக முடி சூட்டிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான். ஸ்ரீ சக்தியை உடைய ஒரு மன்னனே தன் பிரஜைகளுக்கு தன சக்திகளை அளிக்க முடியும் என்பதே நம் முன்னோர்களின் அறிவுத் திறன். இவ்வாறு திருமணமான தம்பதிகள் நெற்குப்பை திருத்தலத்தில் சீமந்த திருக்குளத்தில் நீராடி இறை மூர்த்திகளை தரிசிப்பதால் தங்கள் வம்சத்தை விளங்க வைக்கும் உத்தம புத்திரர்களைப் பெறுவது உறுதி. இந்த சீமந்த திருக்குளத்தில் இரட்டைப் படை வாத்துக்களை தரிசிப்பது ஒரு சுப சுகுனமே. இப்போது மேலே உள்ள வீடியோ படத்தைப் பாருங்கள் ! இந்த சுக்ர ஆண்டும் மூன்று இரண்டுகளை உடைய இரட்டைப்பட வருடம்தானே.

மருது என்ற மூவின அட்சரங்கள் மற்ற எந்த மொழியிலும் இல்லாதது போல, சீமந்தம் என்ற வார்த்தையும் தமிழின் மேன்மையை உணர்த்துகிறது. ஸ்ரீ என்றால் திருமகள் சக்தியைக் குறிப்பது. நாம் ஸ்ரீமந்தம் என்று எழுதுவற்குப் பதிலாக, ஸ்ரீ மந்தம் என்று பிரித்து விட்டால், அது ஸ்ரீ மந்தமான, தனம் குறைந்த வறுமை நிலையைக் குறிப்பதாக ஆகி விடும். அதனால்தான் நம் சற்குரு முடிந்த மட்டும் ஸ்ரீஅகத்தியர் என்று ஸ்ரீயை பிரிக்காமல் இருக்குமாறு எழுதும்படி வழிகாட்டுவதார். எவரும் “சீ மந்தம்” என்று பிரித்து எழுதுவதில்லை, இதுவே தமிழ் மொழியின் பல சிறப்புகளில் ஒன்று. விதி வசத்தால் ஸ்ரீ மந்த புத்திரர்களாக மாறியவர்கள், அதாவது தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள், அநாதை குழந்தைகள், தங்களின் உண்மையான பெற்றோர்கள் யார் என்று அறியாதவர்கள் சீமந்த திருக்குளத்தில் நீராடி ஸ்ரீதட்சிணா மூர்த்தியை தரிசித்தலால் தாங்கள் “ஸ்ரீ” சக்தி குறையாத நிலையை அடைய இறைவன் அருள்புரிவார்.

ஸ்ரீசிவலை விநாயகர்
நெற்குப்பை

பெண்கள் உச்சி வகிடு எடுத்து, ஒரு பக்கத்தில் இறை பிரசாத மலர்களை வைக்காமல் வகிட்டின் முடிவில், கூந்தல் நடுவே பூச்சூடுவதற்கு ஆழ்ந்த ஆன்மீகக் காரணங்கள் உண்டு. இவற்றில் ஒன்றே உத்தம சந்தானங்களை “உருவகித்து” பெறும் தன்மையாகும். இதை பெண்கள், குறிப்பாக மணமான பெண்கள் நன்கு சிந்தித்து செயல்படும்படி கேட்டுக் கொள்கிறோம்.

சீமந்த குளக்கரையில் வீற்றிருப்பவரே ஸ்ரீசிவலை விநாயகர் ஆவார். உண்ண உணவு, உடுக்க உடை, படுக்க பாய் இல்லாத அநாதைகளுக்கும் அருள் வழங்கும் தெய்வ மூர்த்தியே ஸ்ரீசிவலை விநாயகர் ஆவார். எத்தகைய வறுமை நிலையில் உள்ள ஏழைகளும் சீமந்த திருக்குளத்தில் நீராடி வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீசிவலை விநாயகரைத் தரிசித்து வந்தால் சிறிது சிறிதாக தங்கள் வறுமை நிலை மாறி நன்னிலை பெற இச்சிவ மூர்த்தி அருள்புரிவார். வறுமை என்பது செல்வ வறுமை என்றல்லாது சந்தான வறுமை, அறிவு வறுமை, ஆள் பல வறுமை, உடல் பல வறுமை என்ற பல வறுமை நிலைகளையும் குறிக்கும். சற்குருவின் அடியார்கள் மாதம் ஒரு முறையாவது இரண்டு வறுமை நிலையில் உள்ள ஏழைகளை அழைத்துக் கொண்டு வந்து அவர்களை சீமந்த திருக்குளத்தில் நீராட வைத்து ஸ்ரீசிவலை விநாயகரை தரிசனம் செய்ய உதவி புரிவதால் என்றும் மறையாத செல்வத்திற்கு அதிபதிகள் ஆவர். அவ்வாறு மற்றவர்கள் உதவியால் ஸ்ரீசிவலை விநாயகரை தரிசனம் செய்யும் ஏழைகளும் நாளடைவில் தாங்களே இந்த விநாயக மூர்த்தியை தங்கள் பொருள் உதவியால் இத்தலத்திற்கு வந்து தரிசனம் செய்யும் நன்னிலையை அடைவர் என்பதும் நெற்குப்பை திருத்தலத்தின் சிறப்பாகும். குப்பையில் கிடக்கும் மாணிக்கம் என்பது போல ‘நெற்குப்பையில் துலங்கும் மாணிக்கமே ஸ்ரீசிவலை விநாயகர்’ என்பது பயனடைந்தவர்கள் போற்றும் துதி. சிவலை என்றால் முருகனுக்கு மூத்த சிவ அம்சம் என்று பொருள். ஆறுக்கு மூத்தது, ஆறின் குசா மூன்று என்பதுதானே தெனாலி. சிவலை என்றால் சிவ அலை என்று பிரியும். சிவ அலையில் மூத்தது கணபதி, கணபதிக்கும் மூத்த சிவ அலை எம்பெருமான். பார்வதி தேவியின் சீமந்தப் புத்திரனான சிவலை கணபதி சீமந்த புஷ்கரணியில் பொலிவதுதானே சிறப்பு.

அபூர்வ ஆவுடை நந்தி
நெற்குப்பை

தெனாலி என்பது தென் ஆலி என்று பிரியும். கல்லால மரத்தின் நிழலில் அமர்ந்த தட்சிணா மூர்த்தி இறைவன் என்பது இதன் பொருள். ஆறிற்கு மூன்று குசா என்ற ரீதியில் குசா சக்திகள் பொலிவதால் 2022 வருடம், பிலவ வருடம் என்ற இணைப்பு தெனாலி சக்திகள் பொலியும் வருடமாக சித்தர்களால் புகழப்படுகிறது.

ஒரு முறை ஒரு அடியார் சற்குருவிடம், “வாத்யாரே, அடியேன் கோயிலுக்குப் போயிருந்தேன். அங்குள்ள பட்டாச்சாரியார் கை நிறைய பொங்கலை அளித்து விட்டார், என்ன செய்வது, பெருமாள் பிரசாதம்தானே அது என்று நினைத்து அனைத்தையும் நானே சாப்பிட்டு விட்டேன் ...,” என்று கூறவே நம் சற்குரு எதுவும் பதிலுரைக்காமல் மௌனமாக இருந்து விட்டார். அந்த அடியாரும் சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். அவர் சென்ற தோரணை, “நாம் குருவிடம் நடந்ததைச் சொல்லி விட்டோம், அது போதும் ...” என்பதாக இருந்தது. சற்று நேரம் கழித்து அங்கிருந்த அடியார்களிடம் சற்குரு, “ஏம்பா, பட்டாச்சாரியார் பொங்கல் கொடுத்தால் அதை பெருமாள் பிரசாதம் என்று நினைத்து உண்டு விட்டேன் என்ற சொல்லி அடியேனுக்கே காது குத்துகிறான்,” என்று கூறி ஒரு சிரிப்பை உதிர்த்தார். பின்னர், “சரி, பெருமாள் பிரசாதம்தானே அது என்று அவன் மனமார நினைத்திருந்தால் அந்த பொங்கலில் ஒரு கரப்பான்பூச்சி கிடந்தால் அதையும் பெருமாள் பிரசாதம் என்று நினைத்து சாப்பிட்டு விடுவானா என்ன ?” என்று ஒரு அர்த்தமுள்ள கேள்வியைக் கேட்டார். உண்மைதானே ?

இது பலரும் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்னையே. ஆனால், இதை ஒரு பிரச்னை என்று கருதாது அனைத்தும் ஈசன் செயல் என்று ஏற்றுக் கொண்டால் நாம் பல உத்தம காரியங்களை நிறைவேற்ற முடியும். மேலே விவரித்த அடியார் பொங்கல் பிரசாதத்தை ஏற்றுக் கொண்டு எத்தனையோ பட்டினியால் வாடும் பிச்சைக்காரர்களுக்கு அளித்திருக்கலாம். அல்லது கோயில் பசுமாடுகளுக்கு வைத்திருக்கலாம். பிரசாதமாக மற்றவர்களுக்கு அளிக்க முடியாத மூலிகை பட்டைகள் போன்றவற்றை கோயில் குருக்கள் பிரசாதமாக அளித்தால் அந்த பட்டைகளை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் மருந்துப் பொருளாக மாற்றி தானம் அளிப்பதால் அளவில்லாத ஆரோக்கிய சக்திகளைப் பெறலாம். கோயில் விருட்சங்களிலிருந்து பட்டைகளையோ, இலைகளையோ பெறும் உரிமை பக்தர்களுக்கு இல்லை என்றாலும் இவ்வாறு பிரசாதமாக அளிக்கப்பட்ட மூலிகைகளை உரிய முறையில் தானமாக அளித்தலால் அளப்பரிய பலன்களை கைமேல் பெறலாமே.

என்றும் நான் உன் நிழலே
நெற்குப்பை

சிவ பிரசாதத்தின் மகிமையை நம்மால் உணர முடியாது, சிவ பிரசாதத்தின் மதிப்பை சாதாரண மனிதனால் அளவிடவும் முடியாது. உதாரணமாக, சென்னை கோவூர் சிவாலய மகா வில்வ பிரசாதம் எத்தகைய குஷ்ட ரோகத்தையும் நிவாரணம் செய்யக் கூடியது. ஒரு முறை நம் அடியார்கள் குஷ்ட ரோகிகளுக்கு நம் சற்குருவின் வழிகாட்டுதலின் பேரில் இத்தகைய பிரசாதத்தை வழங்க முடிவு செய்த போது இந்த மகா வில்வ பிரசாதத்தை சிவாலயத்திலிருந்து பெற்று நம் சற்குரு அளித்தார். மகா வில்வத்தின் கடுகளவு பிரசாதமே குஷ்டரோகத்தை உண்டாக்கும் 600 வருட கர்மவினையைக் களைய முடியும் என்றால் கையளவு பெறும் சிவபிரசாதத்தின் மகிமையை எப்படி அளவிட முடியும், மதிப்பிட முடியும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் நாம் பெற்ற கோவூர் சிவாலய மகா வில்வத்தின் மதிப்பு அன்றைய தேதியில் அதிக பட்சம் ஐந்து ரூபாய் இருக்கும். அந்த வில்வ பிரசாதத்தைப் பெறுவதற்கே 500 ரூபாய் உண்டியலில் சேர்த்து விடுமாறு நம் சற்குரு நம் அடியார்களிடம் கூறினார். குஷ்ட ரோகம் என்ற கொடிய வியாதியின் காலம் 600 ஆண்டுகள். இதை ஒரு மனிதன் நிவர்த்தி செய்வதற்கு எத்தனை மனிதப் பிறவிகள் தேவைப்படும் என்று கூற முடியாது. 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள், 50 ஆண்டுகள் என்று ஒரு மனிதன் வாழ்ந்தாலும் இரு மனிதப் பிறவிகள் இடையே கழியும் காலம் எத்தனையோ நூறு, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இருப்பதால், ஒரு சாதாரண குஷ்ட ரோக கர்ம விளைவை கழிப்பதற்கு ஒரு மனிதனுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகள் தேவைப்படுகின்றன அல்லவா ? அப்படியானால் இந்த கடுமையான கர்ம வினையைக் கழிக்க வல்ல சிவ பிரசாதத்தின் மகிமையை குருவன்றி வேறு யார் கணிக்க இயலும் ?

வடக்கு நோக்கும் ஸ்ரீமுருகன்
வாலிகண்டபுரம்

இதற்காகத்தான் நாம் கோயிலில் பெறும் சிவ பிரசாதமான மூலிகை பட்டைகள் போன்றவற்றிற்கு குறைந்தது மூன்று மடங்கு மதிப்பை உடைய பொருட்களை அந்தப் பட்டையுடன் சேர்த்து தானம் அளிக்கும்படிக் கூறுகிறோம். குருவின் எண் கணிதம் மூன்று என்று துலங்குவதால் சீடர்கள், அடியார்கள் இந்த மூன்றில் அடைக்கலம் தேடுவது தவறு அல்லவே.

ஒரு முறை நம் சற்குரு ஆஸ்ரம வாசலில் நின்று கொண்டு இருந்தபோது நம் சற்குருவை அடையாளம் கண்டு கொண்ட ஒருவர், “சுவாமி, நாங்கள் ஒரு கோயிலை கட்டிக் கொண்டு இருக்கிறோம். அந்தக் கோயில் திருப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தக் கோயில் வழிபாடு சிறப்பாக அமைய தாங்கள் ஏதாவது அறிவுரை கூற முடியுமா?” என்று கேட்டார். ஆஸ்ரமத்திற்கு எதிரே உள்ள சிவசக்தி ஐக்ய தரிசனத்தை சற்று நேரம் உற்று நோக்கி விட்டு நம் சற்குரு, “சுமார் 12 அங்குலம் அதாவது ஒரு அடி உயரம் உள்ள ஒரு வெண்கல மணியை ஆலய முகப்பில் கட்டி விடுங்கள். ஒவ்வொரு கால பூஜையின்போதும் கோவணம் கட்டிய ஒருவர் அந்த மணியை ஒலிக்கும்படி செய்து விடுங்கள் போதும்,” என்றார். கேட்ட அன்பருக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த சந்தேகம் கண்களில் மிளிர அவர் சற்குருவை நோக்கினார். சற்குரு சிரித்துக் கொண்டே, “அதுவா, மணியின் நடுவில் உள்ள ஒலி பெருக்கும் தண்டு மணியின் நாக்கு எனப்படும். கோயில் மணி அடிக்கும்போது ஒரு நாக்குதான் ஆட வேண்டும் ...”, என்றார். சற்று நேரத்திற்குப் பின் அந்த அடியார் சற்குருவின் வார்த்தைகளின் உள்ளர்த்தம் புரிந்து எல்லையில்லா ஆனந்தம் அடைந்து, நம் சற்குருவிடம் விடை பெற்றுச் சென்றார். ஆமாம், ஆவுடை நந்திக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? நெற்குப்பை ஆவுடை நந்திக்கு தேன், பசும்பால், கங்கா ஜலம் என்ற வரிசையில் வியாழன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் அபிஷேகம் இயற்றி வணங்கி வந்தால் இந்த “ஆலயமணி” இரகசியம் புரிவதுடன் தாம்பத்ய ஒற்றுமை பெருகும், சந்தான பாக்கியம் கை கூடும். நம் சற்குரு ஆறு அங்குலம் அகலம் உடைய பருத்தியாலான வெண்ணிற கோவண ஆடையைத்தான் அணிந்து வந்தார் என்பது ஒரு சிலரே அறிந்த இரகசியமாகும்.

முக்கூட்டு குசா சக்தி

சில குழந்தைகள் உறங்கும்போது பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு இருப்பார்கள். சில பெரியவர்கள் கூட இத்தகைய பழக்கங்களால் பாதிக்கப்படுவது உண்டு. குடலில் குடி கொள்ளும் பூச்சிகள், புழுக்களால்தான் இத்தகைய தொந்தரவுகள் ஏற்படுகின்றன. பற்களுக்கும் குடல் புழுக்களுக்கும் உள்ள தொடர்பை அறிந்த நம் முன்னோர்கள் பேதி, விளக்கெண்ணெய் போன்றவற்றைக் கொடுத்து இத்தகைய குறைபாடுகளைக் களைந்து வந்தார்கள். எனவே உடல் ஆரோக்யம் முழுமை பெற்றால்தான் மன ஆரோக்யம் வலுவடையும், மனமும் உடலும் முறையாக இணைந்தால்தான் உள்ளத்தில் இறைவனின் உருவம் பதியும். இதற்காகவே உடலும் மனமும் உறுதி பெறும் பரியா மருதுபட்டி திருத்தலத்தில் தெனாலி முகூர்த்த நாளில் பற்பொடி தானத்தை அளிக்கும்படி நம் சற்குரு வழிகாட்டுகிறார்.

ஸ்ரீபூமிநாதர் செவலூர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவலூர் திருத்தலம் எத்தனை கோடி மனிதப் பிறவிகள் எடுத்தாலும் புரிந்து கொள்ள முடியாத ஆன்மீகப் பெருமை உடையது. செவலூர் திருத்தல ஈசனின் திருநாமம் ஸ்ரீபூமிநாதர், இறைவி ஸ்ரீஆரணவல்லி. பட்டை லிங்கம் மூலவராக எழுந்தருளிய அற்புத தலம். பொதுவாக பட்டை லிங்கத்தின் ஒரு பட்டையைப் பற்றி சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ள ஒரு சதுர்யுக தவம் தேவைப்படும் என்பார் நம் சற்குரு. அப்படியால் செவலூர் திருத்தல 16 பட்டைகள் உடைய மூலவரைப் பற்றி நாம் புரிந்து கொள்ள எத்தனை கோடி பிறவிகள் தேவைப்படும். இறைவன் எல்லையற்றவன் என்பது மட்டும் அல்ல, இறைவனின் கருணையும் எல்லையற்றதே என்பதை நாம் புரிந்து கொள்ள புவியில் எழுந்தருளிய மூர்த்தியே செவலூர் ஈசன் ஆவார். சிவ அலை ஊர் என்பதே சிவலூர், செவலூர் என்று காலப் போக்கில் மருவி ஒலிக்கிறது. ஒரு பட்டையின் மகிமை புரிய நான்கு யுகங்கள் கொண்ட ஒரு சதுர்யுகம் தேவைப்படும் என்றால் 16 பட்டைக்கு (16 x 4 =) 64 யுகங்கள் தேவைப்படும் அல்லவா ? இந்த 64 யுகங்களையே 64 சிவ மூர்த்தங்களாகவும், மதுரை திருத்தலத்தில் 64 திருவிளையாடல்களாகவும் எம்பெருமான் நிறைவேற்றி மக்களுக்கு எளியவர்க்கு எளியவனாய் அருள்புரிந்தான் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் சிவ அலை. இத்தகைய சிவ அலைகள் நிலைகொண்டு ஊராக அருள் புரிகிறது என்றால் இந்த செவலூரைப் பற்றி நாம் கேள்விப்படவே எத்தனைய புண்ணிய காரியங்களை நிறைவேற்றி இருக்க வேண்டும் ?

மூன்று, ஐந்து, ஏழு என்ற ஒற்றைப்படை பொருட்கள், சக்திகள் நடுவே திகழும் ஒரு பொருள் குசா சக்தியுடன், எப்போதும் நல்ல பலன்களையே அளிக்கும் சக்தியுடன் திகழும் என்பது விதி. 16 பட்டை லிங்கம் எனும்போது இந்த (1+6) ஏழின் நடுநாயகமாக திகழும் குசா சக்திகளே செவலூர் ஈச சக்திகளாக, பூமிநாதரின் அனுகிரக அலைகளாக இந்த ஊரை மட்டுமல்ல, நம் பூமியை மட்டும் அல்ல, இந்த பிரபஞ்சம் அனைத்தையுமே வியாபிக்கின்றன என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். இது பற்றியே சப்தரிஷிகளில் நடுநாயகமாக விளங்கும் ஸ்ரீவசிஷ்ட மகரிஷி, ஸ்ரீஅருந்ததியுடன் எழுந்தருளி தன்னுடைய தபோ பலன்கள் அனைத்திலும் குசா சக்தியை நிரவி மக்களுக்கு அளிக்கிறார் என்று கூறுகிறோம். சப்தபதி என்னும் மனைவியுடன் அடியெடுத்து வைக்கும் ஏழு அடிகளின் அடுத்த நிகழ்ச்சியாக ஸ்ரீஅருந்ததியைக் காணும் வைபவமும் பெருமை பெறுகிறது. நமசிவாய என்ற மந்திரம் பஞ்சாட்சரம் அதாவது ஐந்து எழுத்துக்கள் உடைய மாமந்திரம் என்றே அனைவராலும் புகழப்பட்டாலும் ஐந்தெழுத்தின் சக்திகளை நான்கு விரல்கள் கொண்டு சுருக்கி வழிபடும் ஒரு முறையை சித்தர்கள் நமசிவாய யந்திரத்தில் பதித்து அளிக்கிறார்கள் அல்லவா ? இதை உணர்ந்தால் நாம் சிவ அலை ஊர் என்பது செவலூராக மாறிய இரகசியமும் புரிய வரும்.

ஸ்ரீஆரணவல்லி அம்மன் செவலூர்

மூன்று மையங்கள் மைய சக்திகள் உண்டு. நடு மையம், மைய மையம், ஆரண மையம் என்பதே அந்த மூன்று மையங்கள். இவ்வாறு பூமிக்கு ஆரண மையமாக எழுந்தருளி ஆரண சக்திகளை உலகிற்கு அருளும் அன்னையே ஸ்ரீஆரணவல்லி அம்பிகை ஆவாள். ஆரண வல்லி தாயின் ஆரண சக்திகளை குரு பிரசாதமாக உலகிற்கு அளித்த குரு கருணையின் ஒரு தூசியின் தூசியை அடியார்கள் உணர முடிந்தால் அவர்கள் கனவிலும் குருவருள் என்னும் நிழலை விட்டு, திருவடிகளை விட்டு நீங்க மாட்டார்கள், அகல மாட்டார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் பூமியின் மையம் செவலூர் திருத்தலம் என்று கொண்டாலும் இந்த ஆரண மைய திருத்தலத்தில் தொடர்ந்து வழிபாடுகளை மேற்கொண்டு வந்தால், இத்தலத்தில் வாஸ்து பூஜைகளை இயற்றி வந்தால் அவர்கள் ஒவ்வொரு மனித உடலின் உள்ள ஆரண சக்திகளை அறிந்து இறைவனின் திருவடி நிழலை அடையும் மனிதக் குறிக்கோளை வெற்றிகரமாக நிறைவேற்றுவார்கள். இதுவே நம் சற்குருவின் கனிந்த கனியான எதிர்பார்ப்பு, அவா.

பூமியின், பிரபஞ்சத்தின் ஆரண மையம் செவலூர் திருத்தலம் என்றால் மனித உடலின் ஆரண மையம் எங்கே உள்ளது ? இந்த ஆரண மையத்திலிருந்துதான் ஒவ்வொரு மனிதனின் பிறவி அமைகிறது. ஆம், தாயின் கருப்பையே ஒவ்வொரு மனிதனின் ஆரண மையமாகும். இந்த புனிதத்திலும் புனிதமான, சிவ அலை கூடிய கர்ப்பப் பையில் தோன்றிய ஒரு மனிதப் பிறவியை விட ஒரு புனிதமான பிறவி உலகில் ஏதாவது உண்டா ? அதனால்தான் மனிதப் பிறவியின் மாண்பை, புனிதத்தை உணர்ந்த பெரியோர்கள அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்று கூறினார்கள்.

ஆனால், ஆறறிவு பெற்ற மனிதன் மட்டுமே தனக்கு அரிதிலும் அரிதாக கிட்டிய ஆரண மைய தோற்றத்தைப் பாராட்டி, முறையாகப் பயன்படுத்தி இறைவனின் திருவடிகளை குருவளால் சேர முடியும். மற்ற எந்தப் பிறவியாலும் இறைவனை அடைய முடியாது. இன்று பெரும்பாலான மக்கள் ஒன்றரை அறிவு, இரண்டு அறிவுடன் திகழ்வதால் இறை வழிபாட்டின் மகத்துவம் குறைந்து வருகிறது. முந்தைய யுகங்களில், மான், மயில், யானை, சிலந்தி போன்ற ஆறறிவு குறைந்த உயிர்கள் கூட இறைவனை அடைந்து விட்டதாக நாம் புராணங்களின் மூலமாக, தல வரலாறுகள் மூலமாக அறிகின்றோமே என்று நீங்கள் நினைக்கலாம்.

ஸ்ரீமுருகப் பெருமான்
செவலூர்

இத்தகைய உயிரினங்கள் எல்லாம் ஏதாவது ஒரு முற்பிறவியில் ஆரண மையத்தில் தோன்றி, மனித பிறவியைப் பெற்று இறைவனின் திருத்தாள்களை அடைய பெருமுயற்சிகளை எடுத்து அந்த முயற்சியில் சில தவறுகளைப் புரிந்து அதன் விளைவாக தாழ்ந்த இனப் பிறவிகளாகத் தோன்றியவையே. இருந்தாலும் இறைவனின் பெருங்கருணையால் மனிதப் பிறவியின் உத்தமத் தன்மையால் இறைவனை அடையும் குறிக்கோள் மங்காது திகழ மீண்டும் தவமியற்றி இறைவன் திருவடிகளை சேர்கின்றன என்பதே உண்மை, இதுவே சித்தர்கள் தெளிவுபடுத்தும் பிறவி இரகசியங்கள் ஆகும்.

ஆரணமையத்தின் தோற்றத்தை எப்படி பாராட்டுவது, பயன்படுத்துவது ? எந்த உயர்ந்த விஷயத்தையும் மிக மிக எளிமைப்படுத்தி அளிப்பவர்களே சித்தர்கள்.
பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவள வாயில் புன்னகை சிந்தி
என்ற பழைய திரைப்பட பாடல் ஆரணமையத்தை பாராட்டும் முதல் படியை விவரிக்கிறது. பால், பழம், பவள வாயில் புன்னகை என்ற மூன்று சுவைகளும் ஆரண மையத்தில் மட்டும் தோன்றும் சுவைகளே. அதனால்தான் இறைவனுக்கு உகந்த நைவேத்யமாக அம்ருத சக்திகள் நிறைந்த பாலையும், பூவன் பழத்தையும் வைத்து உளம் மலர்ந்த புன்னகையால் அவரை மகிழ்விக்கிறோம். பவள வாய் என்பது முழுமையான ஆரோக்யத்தைக் குறிப்பது. முழுமையான ஆரோக்யம் செறிந்தால் மட்டுமே பவள வாயும் அதில் சிந்தும் புன்னகையும் அமையும். பால் சிந்துகிறது என்றால் ஒரு டம்ளரில் அதிகப்படியாக உள்ள பாலில் ஒரு சிறிதளவே கீழே விழுகிறது என்றுதானே பொருள்.

இதைத்தான் நாயன்மார்கள்
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
என்று இறைவனின் குணங்களை விவரிப்பதாகக் கூறுகிறார்கள்.

அபூர்வ பாடி தர்ப்பைகள்
திருமழபாடி

இந்த இறை எண்ணங்கள் தெய்வீகத்தில் மட்டுமே பூரிக்கும் என்பதால்தான் இறைவனின் மேல் ஆறாக் காதலை உடைய நாயன்மார்கள் அனைவரும் தங்கள் மனைவியை குழந்தைகளை உயிருக்குயிராக காதலித்தார்கள். ஆனால், அதை விடவும் அதிகமாக இருந்தது அவர்கள் இறைவன் மேல் கொண்ட அன்பு. இவ்வாறு இறைவன் மேல் கொண்ட அன்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றிய உறவே மனைவி, குழந்தைகளைக் கொண்ட குடும்பம். இந்தக் குடும்பம் என்ற சோலை பூத்துக் குலுங்க ஆதாரமாக அமைவதே திருமணம் என்பதாகும்.

சாந்தி முகூர்த்தம் என்ற வைபவத்தின் போது அந்த அறையில் ஐந்து முகக் குத்துவிளக்கை ஏற்றி ஐந்து தீபங்களை ஏற்றி வைப்பார்கள். பஞ்ச பூதங்களின் தொகுதியாய் அமைந்த உடல் இறைவனைச் சேர்வதே மனிதனின் குறிக்கோள் என்ற கருத்தை இது வலியுறுத்துவதுபோல் தோன்றினாலும் இதில் இன்னும் பல ‘ஆரணமைய’ இரகசியங்கள் உள்ளன. அதே போல் பிரசவ அறையிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி அதை கணவன் மனைவிக்கு உரித்தான திசைகளில், மூலைகளில், தேக்கு பலா போன்ற இருக்கைகளில் வைக்கும் பழக்கம் முற்காலத்தில் இருந்து வந்தது. ஆழ்ந்த அர்த்தங்கள் உடைய இவை எல்லாம் தற்போது மறைந்து விட்டதால்தான், மக்களால் மறக்கப்பட்டு விட்டதால்தான் குழந்தை பிறப்பு என்ற ஒரு அன்றாட வைபவம் ஒரு பெரிய ‘கலாட்டாவாக’ தற்போது அமைந்து விட்டது.

தம்பதிகள் இடையே தோன்றும் ஆரண மைய சக்திகளை வேறொரு கண்ணோட்டத்தில் இங்கு காண்போம். ஒரு முறை ஆஸ்ரமத்தில் நம் சற்குரு எண்ணெய் குளியல் மேற்கொள்ளும்போது ஒரு அடியாரை அழைத்து தனக்கு எண்ணெய் தேய்த்து விடுமாறு கூறினார்.

உலகின் உடலின் ஆரண
மையம் செவலூர்

அந்த அடியார் சாதாரணமாக உடலில் எண்ணெய் தேய்க்க ஆரம்பித்ததும் சற்குரு, “அப்படி இல்லை, ஐயா, நன்றாக அழுத்தி எண்ணெயை தேய்க்க வேண்டும்...”, என்று கூறவே அந்த அடியாரும் நன்றாக அழுத்தி எண்ணெய் தேய்த்தார். சில நிமிடங்கள் சென்றன, “என்னய்யா இது, ஏதோ பூச்சி பிடிப்பது போல் தேய்க்கிறாயே ... நன்றாக அழுத்து தேய்த்து விடு,” என்று கூறவே அந்த அடியாரும் தன் முழு பலத்தையும் பிரயோகித்து தன் சட்டை, வேட்டி எல்லாம் வியர்வையில் நனையும் அளவிற்கு வேகத்துடன் அழுத்தமாக நம் சற்குருவிற்கு எண்ணெய் தேய்த்து விட்டார். இதுவே தன் ஆரணமையத்தில் தோன்றும் சிவ அலை சக்திகளை தன் அடியார்களுக்கு அளித்து அவர்கள் உடலில் பாறையாய்ப் படிந்து கிடக்கும் கர்ம வினைகளைக் களைய நம் சற்குரு மேற்கொண்ட உத்தம திருவிளையாடலாகும்.

தற்காலத்தில் பலரும் குழந்தை பாக்கியத்தை தடை செய்வதற்காக பல செயற்கை உபகரணங்களை, செயல்பாடுகளை மேற்கொள்வதால் தம்பதிகள் இடையே அமைய வேண்டிய ஒற்றுமை மறைந்து அவர்கள் விவாகரத்து பெற கோர்ட்டுகளுக்கு படை எடுக்கும் அவல நிலை பெருகி விட்டதைக் காண்கிறோம்.

ரிஷிகேஷ் சிவானந்தா அனைவரையும் ஓம் என்று ஓதி வணங்குவார். அதற்கு சுவாமிகள் கூறும் காரணம், “நான் ஒருவரை வணங்குகிறேன் என்றால் அவர் என்னை விட ஆன்மீகத்தில் உயர்ந்தவராக இருக்க வேண்டும், அல்லது அவர் என்னை விட ஆன்மீகத்தில் தாழ்ந்த நிலையில் இருக்க வேண்டும். அவர் என்னை விட உயர்ந்தவராக இருந்தால் அவரை மரியாதை நிமித்தம் வணங்குவதுதானே சிறப்பு, உயர்ந்தவரை வணங்குவதால் அவருடைய புண்ணிய சக்தியைப் பெற்று நான் தூய்மை அடைவேன், ஒரு வேளை அவர் என்னை விட தாழ்ந்த நிலையில் இருந்தால் என்னுடைய வணக்கத்தால் அவருடைய கர்மங்கள் களையப்படும், எனவே எப்படியிருந்தாலும் என்னுடைய வணக்கம் பலனளிப்பதுதானே?” என்று கேட்பார்.

அனைத்தும் குரு கருணையே!
செவலூர்

செவலூர் திருத்தல மகாத்மியங்கள் பலவும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாததுபோல் தோன்றும். காரணம் தெய்வீகத்தின், மனித உடலின் அந்தரங்கங்களை விளக்கும் தன்மையில் இவை இருப்பதால் அதிகப்படியான விளக்கங்கள் சித்தர்களால் அளிக்கப்படவில்லை. அடியார்கள் பலமுறை இந்த விளக்கங்களைப் படித்து திரும்ப திரும்ப சிந்தித்துக் கொண்டே இருந்தால் செவலூர் திருத்தலம் ஒன்று மட்டுமே அவர்கள் இருள் சூழ்ந்த வாழ்க்கையை ஒளிமயமாக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. ஆரணமையம் என்ற ஒரு வார்த்தையின் பொருள் அறியவே சற்குருவின் வழிகாட்டுதல் பூரணமாக அமைந்தால் சுமார் 18 வருடங்கள் எடுத்துக் கொள்ளும் என்பது சித்தர்களின் கணிப்பு. அதனால்தான் என்னவோ 18 யோகங்களாக பகவான் கிருஷ்ணர் கீதையைக் கூறினாரோ ?

ஆரணமையத்திலிருந்து இரண்டு விதமான சக்திகள் தோன்றுகின்றன. இவற்றை குதூகலம், கோலாகலம் என்று அழைக்கிறோம். ஆரணமையத்தில் அது குதூகல சக்திகளுடன் குழந்தையாகத் தோன்றுவதாகவும், அந்த குழந்தையால் உருவாவது குடும்பத்தில் ஏற்படும் கோலாகலம் என்பது ஒரு எளிமையான விளக்கமாகும். திருஅண்ணாமலையில் ஈசனுக்கு வாகனமாக அமைந்தவர் ஸ்ரீகுதூகல நந்தீஸ்வரர், செவலூர் திருத்தலத்தில் நந்தி மூர்த்தியாக விளங்குபவர் ஸ்ரீகோலாகல நந்தீஸ்வரர்.

இந்த இருவிதமான சக்திகளைப் பற்றி தெரிந்து கொள்ள, இந்த தெய்வீக சக்திகளை வாழ்க்கைக்கு பயனுள்ள முறையில் பெற உதவுவதே திருமழபாடி திருத்தலத்தில் மட்டுமே கிட்டும் பாடி தர்ப்பைகள் கொண்டு செவலூர் திருத்தல பிருத்வி தீர்த்தத்தில் அளிக்கும் க்ஷீர கோடி தர்ப்பணம் ஆகும். இந்த தர்ப்பைகளால் உருவாகும் படுக்கைவச, நெடுநிலை தர்ப்பைகள் குதூகல, கோலாகல சக்திகளை உருவாக்கும் என்பதே சித்தர்கள் அளிக்கும் தெளிவு. க்ஷீர கோடி தர்ப்பணம் அமாவாசையுடன் வாஸ்துநாள் சேரும் புனித நேரத்தில் அளிக்கப்படுவது என்றாலும் திருமழபாடி திருத்தலத்தில் திகழும் பாடி தர்ப்பைகள் கொண்டு இந்த பிலவ 2022 என்ற சங்கமத்தில் அளிக்கப்படும் தர்ப்பணங்கள் யாவும் இத்தகைய க்ஷீர கோடி தர்ப்பண சக்திகளை அளிக்கவல்லது என்பதே சித்தர்களின் கனிந்த அனுகிரகமாகும். க்ஷீர கோடித் தர்ப்பணத்தில் ரஜத சந்திர என்ற விரல் அமைப்பை உருவாக்குகிறோம். தட்சிணா மூர்த்தியின் சின் முத்திரையைப் போன்ற அமைப்பை உடையதாக இந்த குரு விரலையும் சுக்கிர விரலையும் (ஆள் காட்டி விரல், கட்டை விரல்) இணைக்கும் முத்திரை போல் இது தோன்றும். தட்சிணா மூர்த்தி உயிர்களின் அனுகிரகத்திற்காக அளிக்கும் சின்முத்திரையை சாதாரண மனிதர்கள் உபயோகிக்கக் கூடாது என்பது நம் சற்குருவின் வழிகாட்டுதல். அவ்வாறு இருக்கும்போது எப்படி மக்கள் இந்த ரஜத சந்திர முத்திரையை உபயோகித்து தர்ப்பணம் அளிக்கலாம் என்று நீங்கள் கேட்கலாம்.

ஸ்ரீகுதூகல நந்தீஸ்வரர்
திருஅண்ணாமலை

ஸ்ரீகோலாகல நந்தீஸ்வரர்
செவலூர்

நாம் அனைத்து நற்காரியங்களையும் வலது கையைக் கொண்டே நிகழ்த்த வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், தர்ப்பணத்தில் வலது கையில் எள் மணிகளை வைத்து இடது கையால் தீர்த்தம் ஊற்றி நம் மூதாதையர்கள் என்ற உயர்ந்த குல ஜீவன்களுக்கு வழிபாடுகள் செய்கிறோம் அல்லவா ? இங்கு இடது கை, வலது கை என்ற இரண்டும் சேர்ந்த இருகை வணக்கம் போன்ற வழிபாட்டை இது உருவாக்குகிறது. இரு கை சேரும் வணக்கமே மற்றவர்களை மகிழ்விப்பது, நம் பாரத பண்பாட்டில் தழைத்தோங்குவது. இந்த கண்ணோட்டத்தில் நீங்கள் பார்த்தால்தான் ரஜத சந்திர முத்திரைக்கும், சின் முத்திரைக்கும் உள்ள ‘வித்தியாசம்’ உங்களுக்குப் புரிய வரும். ரஜத என்றால் வெள்ளி என்று பொருள். வெள்ளிக்குரிய எண் கணிதம் ஆறு. க்ஷீர கோடித் தர்ப்பணத்தில் மூன்றும் ஆறும் (குரு விரல், சுக்ர விரல்) சேர்வதால் இந்த இணைப்பு தெனாலி சக்திகள் கூடும் இந்த வருடத்தில் சிறப்பு பெறுவதில் ஆச்சரியம் என்னவோ ? அடியார்கள் இந்த அபூர்வ இணைப்பை நன்முறையில் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம். பல வருடங்களாக வானம் பார்த்த பூமியாய் இருந்த செவலூர் பிருத்வி தீர்த்தம் இன்றுதான் கோடி கோடி பித்ரு தீர்த்தங்கள் சேர்ந்த குணக் குன்றாய்ப் பொலிகின்றது, காற்று இருக்கும்போதே தூற்றிக் கொள்ளுங்கள், நீர் இருக்கும்போதே (தர்ப்பைகள் மேல்) வார்த்துக் கொள்ளுங்கள்.

வராக கிரியோன் தரிசனம்
திருஅண்ணாமலை

திருஅண்ணாமலையில் தற்போது ஸ்ரீபன்றிமலை சுவாமிகளின் தியான மண்டபம் எதிரே அமைந்துள்ள தரிசனமே வராக கிரியோன் தரிசனமாகும். பெரும்பாலான சித்திரங்களில் ஸ்ரீபன்றிமலை சுவாமிகள் தன்னுடைய வலது கையில் சின்முத்திரையைத் தாங்கியவாறே காட்சி அளிப்பார். நம் சற்குரு பன்றிலை சுவாமிகளை முதல் முதலில் தரிசனம் செய்தபோது சுவாமிகள் இத்தகைய சின்முத்திரை கோலத்தில் காட்சி அளித்து நம் சற்குருவின் இறைக் காரியங்கள் மென்மேலும் வளர வாழ்த்தி ஆசி வழங்கினார் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியம் ஆகும். இத்தகைய சின்முத்திரை தாங்கிய சுவாமிகளின் புகைப்படத்தை இன்றும் அடியார்கள் நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் தரிசித்து பலன் பெறலாம். இந்த தெனாலி சுக்ர ஆண்டில் கீழ்நோக்கு நாளில் அடியார்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து வராக கிரியோன் தரிசனத்தைப் பெற்று மாடுகள், குதிரைகள், பன்றிகளுக்கு கேரட் பச்சை பட்டாணி நூக்கல் போன்ற காய்கறி தானங்களை அளித்தலால் வறண்டு போன வீட்டுக் கிணறுகளில் நீர் சுரக்கும் வாய்ப்புகள் அமையும், பால் வறண்டு போன பசுக்களை காப்பகங்களில் சேர்த்த கர்ம வினைகள் தீர்வு பெறும், கறவை நின்று போன மாடுகளை விற்ற தவறுகளுக்கு ஓரளவு பிராயசித்தங்கள் கிட்டும். கீழ்நோக்கு நாளிலும் கிருத்திகை என்ற ஆறு நட்சத்திரங்கள் கூடும் நாள் சிறப்பானதாக, வெள்ளிமூக்கு சிங்க நாளாக ஸ்ரீபன்றிமலை சுவாமிகளால் பாராட்டப்படுகிறது. வராக கிரியோன் தரிசனம் அளிக்கும் பலன்கள் இன்னும் ‘க்ஷீர கோடி, க்ஷீரகோடி’ என்று முறையில் ஏராளமாய் உண்டு. தொடர்ந்து கிரிவலம் வந்து இந்த தரிசனத்தைப் பெறுதலால் அடியார்கள் தாங்களாகவே அவற்றை அறிந்து கொள்தலே சிறப்பாகும்.

ஸ்ரீஇரட்டை வாகன பிள்ளையார்
செவலூர்

தற்காலத்தில் அழகு, இளமை என்ற நொடியில் மறையும் மாயைகளால் ஏமாறும் பல தாய்மார்கள் செயற்கை முறையில் ஊசி, மூலிகைகளால் தாய்ப்பாலை வற்றச் செய்து பால் குடிக்கும் பருவத்தில் உள்ள தங்கள் குழந்தைகளுக்கு பாலை மறுத்து விடுகிறார்கள். இதனால் விளையும் கர்ம வினைகள் ஏராளம். அவற்றையெல்லாம் நம் சற்குரு குறிப்பிடாமல் திருஅண்ணாமலையில் கிட்டும் இருமுலை கூம்பு தரிசனம், வராக கிரியோன் தரிசனம் போன்ற தரிசனங்கள் இத்தகைய கொடிய கர்மங்களுக்கும் நிவாரணம் அளிக்கவல்லவை என்பதையே தாயினும் சாலப்பரிந்து குறிப்பிடுகிறார்கள்.

க்ஷீர கோடி தர்ப்பணத்தில் திகழும் ரஜத சந்திர முத்திரையில் குரு விரலும் சுக்ர விரலும் இணைகின்றன அல்லவா ? குரு விரல் அக்னிக்குரியது, வெப்பத்தை தோற்றுவிப்பது, சுக்ர விரல் நீருக்குரியது, குளிர் சக்தியைத் தோற்றுவிப்பது, சூரிய நாடி வலது இயக்கம் உடையது, சந்திர நாடி இடது இயக்கம் உரியது, இத்தகைய குளிர் வெப்ப அம்சங்களே தாம்பத்யத்திலும் முக்கிய இடம் பெறுகின்றன. மனைவி என்பவள் கணவனின் நிறைவு சக்தியே அல்லாது கணவனுக்கு எதிரானவள் அல்ல. சூரிய நாடி சுவாசமும் சந்திர நாடி சுவாசமும் இணையும்போது, அந்த சுவாசங்கள் ஒன்றில் ஒன்று இலயமாகிட, குண்டலினி என்னும் இறை சக்தி மேல் எழுகிறது. இதுவே தெய்வீகத்தின் உச்சகட்டம். இதைக் குறிப்பதாக அமைவதே தேவபாண்டலம் திருத்தலத்தில் அமையும் ஒன்றுக்கொன்று செங்கோணத்தில் அமையும் இரு பல்லிகளின் உருவமாகும். சம நோக்கு நாளில் க்ஷீர கோடி தர்ப்பணம் அளித்து, கீழ்நோக்கு நாளில் திருஅண்ணாமலையில் வராககிரியோன் தரிசனம் பெற்று, மேல்நோக்கு நாளில் தேவபாண்டலம் திருத்தலத்தில் இரு பல்லிகளின் தரிசனம் பெறுவதால் குண்டலினி யோகத்தில் உயர்வைப் பெற இந்த வழிபாடு பெரிதும் உதவும். இந்த மூன்று தரிசனங்களையும் ஒரு ரோகிணி மருது மண்டலமான 27 நாட்களில் பெறுவது சிறப்பாகும்.

ஆரண மையம் என்பது இந்த பூலோகத்தின் பிரபஞ்சத்தின் மையம் என்று கூறினோம் அல்லவா ? அடுத்து ஆரண மைய சக்திகள் தாயின் கருப்பையில் உருவாகின்றன என்று கூறுனோம். அடுத்து சித்தர்கள் ஆரண மையம் என்பது இறைவனே என்பதை தெளிவுபடுத்துகிறார்கள். இந்த ஆரண மையத்தை அடியார்கள் அடைய வழிவகுப்பதே அப்பழுக்கற்ற இல்லற வாழ்வு. இத்தகைய அப்பழுக்கற்ற இல்லற வாழ்க்கை மூலம் இறைவன் என்ற உண்மைப் பொருளை உலகத்தவர் எல்லாம் அறிந்து, உணர்ந்து பூரணம் பெற வழிகாட்டியவர்களே ஸ்ரீலோபாமாதா அகஸ்தியர், ஸ்ரீஅருந்ததி வசிஸ்டர், ஸ்ரீசீதை ராமபிரான், நம் சற்குரு போன்ற ஏராளம் ஏராளமான சித்தர்கள் மகான்கள் இறை அவதார மூர்த்திகள் ஆவர்.

ஸ்ரீஒளியுல்லா சுவாமிகள்
ஜீவாலயம் துவரங்குறிச்சி

ஆரண மையத்தில் இருவிதமான சக்திகள் தோன்றுகின்றன. உண்மையில் இவைகளை இரண்டு சக்திகள் என்று கூறுவதே தவறு ஆகும். எப்படி சிவ சக்தி என்பது இரண்டா ஒன்றா என்று பிரிப்பது போல்தான் இதுவாகும். இதை குறிப்பதே சிவ பாலகனான ஸ்ரீபிள்ளையார் முன்னுள்ள இரு வாகனங்களின் தத்துவமுமாகும்.

க்ஷீர கோடி தர்ப்பணத்தில் ஆட்டு நெய், ஒட்டக நெய், நல்லெண்ணெய் இவை மூன்றும் சேர்ந்த முக்கூட்டு எண்ணெயால் துளசியின் வடக்கு வேர் கொண்டு திரித்த திரியால் செவலூர் திருத்தலத்தில் தீப மேற்றி அதன் பின்னரே தர்ப்பண வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்த முக்கூட்டு எண்ணெய்க்கு அபரிமிதான அக்னி சக்திகள் உண்டு. இறந்தவர்கள் அனைவரும் ஒளி லோகம், மத்திம லோகம், இருண்ட லோகம் என்ற மூன்று லோகங்களில் ஏதாவது ஒன்றை அடைந்துதான் தீர வேண்டும். இந்த லோகங்களில் வாழும் நம் முன்னோர்களை அனைவராலும் தொடர்பு கொள்ள முடியாது. ஒளி உலக முன்னோர்களை அனைத்து மகான்களும், தர்ப்பண வழிபாடுகள் மூலம் அந்த ஜீவன்களின் வாரிசுகளும் தொடர்பு கொள்ளலாம். மத்திம லோக ஜீவன்களை அதற்கென பிரத்யேகமான சக்தி உடைய மகான்கள், பித்ரு தேவதைகள் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். இருண்ட லோக வாசிகளை எவராலும் தொடர்பு கொள்ள முடியாது. அப்படி ஒரு வேளை மந்திரங்கள், telepathy போன்ற தொலை தொடர்பு முறைகளால் தொடர்பு கொண்டால் அவர்கள் உயிருடன், சுயநினைவுடன் திரும்ப முடியாது.

இந்த இருண்ட லோக வாசிகளையும் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தர்ப்பண வழிபாட்டுப் பலன்களை அளிக்கக் கூடிய அற்புத மகானே துவரங்குறிச்சியில் அருள்புரியும் ஸ்ரீஒளியுல்லா சுவாமிகள் ஆவார். இந்த இருண்ட லோகவாசிகளையும் அடையக் கூடிய தர்ப்பண வழிபாடே செவலூர் திருத்தலத்தில் அளிக்கும் க்ஷீர கோடி தர்ப்பணம் ஆகும்.

இருளில் தோன்றும் விடிவெள்ளி
சற்குருவே ! உத்தமதானபுரம்

இந்த இருண்ட லோகத்தையும் அடையக் கூடிய அக்னி சக்தியை உருவாக்குவதே ஆட்டு நெய், ஒட்டக நெய், நல்லெண்ணெய் என்ற முக்கூட்டு நெய்யாகும். துளசி என்பது பித்ருக்களின் நாயகனான பெருமாளுக்கு உரியது. வடக்கு திசை என்பது சற்குருவிற்கு உரியது. முக்கூட்டு குசா சக்திகள் பெருகும் திருத்தலமே செவலூர். இந்த அனைத்து சக்திகளுமே ஒன்றாக இணையும் க்ஷீர கோடி தர்ப்பணத்தை நமக்கு அளித்த நம் சற்குருவிற்கு ஆயிரமாயிரம் பிறவிகள் அடிமையாய் சேவை செய்தாலும் நன்றிக் கடன் அளிக்க முடியுமா ?

கோடி என்றால் ஆயிரம் ஆயிரம் என்ற எண்ணிக்கையில், எல்லா மூலைகளிலும், எல்லா திசைகளிலும் நிரவுவது என்று பொருள். க்ஷீர கோடி என்றால் அமிர்த சக்திகள், ஜீவ சக்திகள், அக்னி சக்திகள் கோடி கோடியாய்ப் பெருகுவதே க்ஷீர கோடி தர்ப்பணம். மேலோட்டமாகப் பார்த்தால் விபத்தில் அகால மரணமடைந்தவர்களுக்கு, பூகம்பம், ஆழிப் பேரலை போன்ற காரணங்களால் எதிர்பாராத முடிவு ஏற்பட்டவர்களுக்கு, உயிரைக் குடிக்கும் தொற்றுநோய்களால் கொள்ளை கொண்டவர்களின் துர்மரணங்களுக்கு தீர்வாக, இயற்கையான வரப் பிரசாதமாக அமைவதே க்ஷீர கோடி தர்ப்பணமாகும். திருக் திருஷ்ய விவேகம் என்பதாக பார்ப்பவரும் பார்க்கப்படும் பொருளும் பார்வையும் ஒன்றே என்ற தத்துவத்தின் வெளிப்பாடாக, அனைத்து துன்பங்களுக்கும் விடிவெள்ளியாக, நள்ளிருளில் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக அமைவதே க்ஷீர கோடி தர்ப்பணமாகும், செவலூர் திருத்தல வழிபாடுகளாகும்.

ஸ்ரீஆதிபிரம்மனின் அதிசய
தோற்றம் திருவெள்ளறை

தொப்புள் கொடி என்பது மனிதனின் புனித தோற்றத்திற்கு ஆதார இடமான ஆரண மையத்தையும் மனிதனையும் இணைக்கும் ஒரு சாதனமாகும். மனிதனை வாழ வைக்கும் பெருமாள் மூர்த்தியின் கருணையால் இந்த தொப்புள் கொடி என்ற இணைப்பை “துண்டிக்கும்” முறையே க்ஷீர கோடி தர்ப்பணமாகும். இதுவே இரு பிறப்பாளன் என்ற வகையில் பூணூல் அணிந்து காயத்ரீ மந்திரம் ஜபிக்கும் தவ முறையாகும். காயத்ரீ தேவி அபூர்வமாக உருவத்துடன் திகழும் திருவெள்ளறை திருத்தலத்தில்தான் சிவபெருமான் இவ்வாறு தன் தொப்புள் கொடியிலிருந்து தோன்றிய ஆதி சிருஷ்டி கர்த்தாவான பிரம்ம தேவரைப் பிரித்து தன் உள்ளங்கையில் வைத்திருக்கும் அபூர்வ காட்சியைக் காணலாம். தொப்புளின் புனிதத் தன்மை கருதியே பெண்கள் தொப்புள் தெரியுமாறு புடவையை, ஆடையை அணியும் கோலத்தை நம் முன்னோர்கள் அங்கீகரிப்பதில்லை. இதனால் ஆரண புனித சக்திகள் பாதிக்கப்படும். தற்போது கர்ப்பப்பை சம்பந்தமான கோளாறுகள் பெருகி வருவதற்கு இந்த அலங்கோலமான ஆடை அணியும் முறையும் முக்கிய காரணமே. அறிந்தோ அறியாமலோ இத்தகைய தவறுகளுக்கு பொறுப்பானவர்கள் செவலூர் திருத்தல அம்பிகை முன் மூன்று ஆறு ஒன்பது என்ற கணக்கில் மூன்று வரிசையாக நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி வழிபடுவதால் ஆரண அம்பிகையின் அருளால் ஆரண தோஷங்கள் மாயமாகும்.

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்
செவலூர்

எப்படி தூய ஆண் சக்தியாக, மார்பில் தனங்கள் இல்லாத கோலத்தில் கிருஷ்ண பகவான் தோன்றினாரோ அது போல் தானே ஆதியும் அந்தமாயும் நிற்கும் சிவபெருமான் தொப்புள் இல்லாத கோலத்தில் திகழ்வதே திருவெள்ளறை திருத்தலத்தில் ஆதிபகவானாகத் தோன்றும் திருக்கோலமாகும். பிறந்த குழந்தைகளின் தொப்புள்களில் நீர் கசிதல், தொப்புள் வீங்கி குழந்தைகள் இடைவிடாது அழுதல், தொப்புள்கள் அழுகி புண்ணாகுதல் போன்ற துன்பங்களால் வாடுவோர் இங்கு “கங்காதரன்” என்ற நாமம் கொண்ட சிவபெருமான் மூர்த்தியை வணங்கி வறுத்த முழுமுந்திரி கலந்த புளியோதரை தானம் அளித்தலால் நற்பலன் பெறுவார்கள். தற்போது எவ்வளவோ படிப்புகள், திறமை இருந்தாலும் தங்கள் திறமைக்கு ஏற்ற உத்தியோகம், அந்தஸ்திற்கு ஏற்ற வரன் அமையாதவர்கள் திருவெள்ளறையில் திகழும் சிவன், பெருமாள் தலங்களை வணங்கி மேற்கூறிய தானத்துடன் நிறைவு செய்தலால் நற்பலன்களை கைமேல் பெறுவார்கள்.

க்ஷீர கோடி தர்ப்பணம் என்றால் அமிர்த சக்திகள் கோடி கோடியாய்ப் பெருகும் தர்ப்பணம் என்றும் பொருள் உண்டு அல்லவா ? அப்படியானால் ஒரே ஒரு முறை இந்த தர்ப்பணத்தை நம் பரம்பரையில் யாராவது ஒருவர் இயற்றினால் போதுமே என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். ஆனால், மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் சேர்த்துக் கொள்ளும் கர்ம வினைகள் பற்றி யாருமே தெரிந்து கொள்வதில்லை, தெரிந்து கொள்ள முயற்சி எடுப்பதும் இல்லை. உதாரணமாக, தலைக்கு மேல் நீரை உயர்த்தக் கூடாது என்பது சாஸ்திர விதிகளில் ஒன்று. அதனால்தான் கனிந்த கனி பரமாச்சாரியார் இராட்டினம் கொண்டு கிணற்றில் நீர் இறைக்காது, கையினால் கயிற்றைக் கொண்டு நீர் இறைத்து அந்த நீரில் நீராடினார்கள். தற்போதோ 10, 20, 100 அடுக்கு மாடிகள் எல்லாம் வந்து விட்டதால் அந்த மாடியில் வசிக்கும் மக்கள் எந்த அளவிற்கு நீரை உயர்த்துவார்கள், இதனால் பெருகும் கர்ம வினைகளின் தாக்கம் எவ்வளவு கொடியதாக இருக்கும் ? இன்றைய சூழ்நிலையில் இதைப்பற்றி நாம் விளக்கவே முடியாது என்பதால்தான் நம் சற்குரு போன்ற மகான்கள் மக்களின் “தலை மேல் குவியும்” கர்ம வினைகளைப் பற்றி குறிப்பிடாமல் அந்த “மலைபோல் குவிந்த கர்ம வினைகளை” களையும் அற்புத மார்க்கங்களையே குறிப்பிடுகிறார்கள்.

கரும்பு தின்னக் கூலியா ?

இன்றைய மக்களின் மனோநிலையை அழகாக சித்தரிப்பதே நம் மூதாதையர்களின் அறிவுத் திறன் ஆகும். காரைக்குடி பட்டமங்கலம் அருகில் உள்ள ஸ்ரீஇக்ஷுவனேஸ்வரர், ஸ்ரீகரும்பீசர் என்று அழைக்கப்படும் இறைவன் அருளும் தலமே நயினார்பட்டி ஆகும். 80 வயது நிரம்பியவர்கள் சதாபிஷேகம் கொண்டாடும்போது நயினார்பட்டி திருத்தலத்தில் இருந்து பெறப்பட்ட கரும்பின் ஒரு நுனியை கணவரும் மறுநுனியை மனைவியும் கடித்து சுவைக்க, அந்த கரும்பை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அந்த தம்பதிகளின் வாரிசுகள் அனைவரும் சுவைத்து மகிழ்வர். மண வாழ்வு என்பது கரும்பைப் போல் என்றும் சுவை தரக் கூடிய அனுபவமே என்று பறை சாற்றுவதே இந்த வைபவம். எஞ்சிய கரும்பு துண்டுகளை, விரும்பும் மற்ற உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அளித்து யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முறையில் இந்த சதாபிஷேகம் நிகழ்ச்சி அமைந்தது.

ஸ்ரீகரும்பீசர் நைனார்பட்டி

ஸ்ரீமங்களேஸ்வரி நயினார்பட்டி

ஏன் நயினார்பட்டி திருத்தலம் இந்த சதாபிஷேகம் நிகழ்ச்சிக்கு உரியதாக நம் சற்குருவால் பரிந்துரைக்கப்படுகிறது என்று நீங்கள் கேட்கலாம். இதன் பல காரணங்களுள் ஒன்றே புண்ணிய விருட்சம் என்ற அபூர்வ விருட்சம் இத்தலத்தில் செழித்து வளர்ந்திருப்பதுதான். 80 வயது நிறைவு அடைந்தவர்களும், மற்றவர்களும் இந்த புண்ணிய விருட்சத்தை 17, 80 என்றவாறு ஆயுள்விருத்தி தரும் எண் கணித சக்திகள் பெருகும் முறையில் வலம் வந்து இந்த புண்ணிய விருட்சத்திற்கு மஞ்சள், குங்குமம் பொட்டுகள் வைத்து வணங்குவது சிறப்பாகும். நீண்ட ஆயுளுடன் ஆட்டுக்கல், அம்மி போல் ஏதோ ஒரு மூலையில் வெறுமனே கிடக்காது சுவாமிக்கு மஞ்சள் அரைக்கும் திருப்பணிக்கு பயன்படும் ஒரு கருவி போல் நம்மையும் இறைவன் நற்சேவைகளுக்கு பயன்படுத்தும் வாய்ப்பை இப்பிறவியிலோ, எப்பிறவியிலோ தொடர்ந்து நல்கும் அனுகிரகத்தை அளிக்கக் கூடியதே ஸ்ரீகரும்பீசர் ஆலயத்தில் நாம் மேற்கொள்ளும் வழிபாடுகளாகும்.

நயினார்பட்டி திருத்தல தீர்த்தம் செங்கதிரோன் தீர்த்தம், பாஸ்கர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய பகவானின் கதிர்கள் காலையில் உதிக்கும்போதும், மாலையில் மறையும்போதும் செக்கர்வான் ஒளிப் பிழம்புகள் என்ற அபூர்வமான நோய் நிவாரண சக்திகளை வெளிவிடுகின்றன. அதனால்தான் நம் முன்னோர்கள் மாலை வெயில் மனிதனுக்கு என்று பாமரர்களும் அறியும் வண்ணம் சூரிய சக்திகளை மக்கள் பெறும் ஒரு எளிய வழிபாட்டு முறையைப் பெற்றுத் தந்தனர். பக்தர்கள் இந்த செங்கதிரோன் தீர்த்தத்தில் சூரியன் உதிக்கும் முன்னும், சூரியன் அஸ்தமன நேரத்திலும் நீராடி இங்குள்ள அபூர்வமான புண்ணிய தல விருட்சத்தை வலம் வந்து வணங்குதலால் அற்புத நோய் நிவாரண சக்திகளையும், சிறப்பாக வயதான காலத்திலும் மங்காத கண் பார்வையையும் பெறுவார்கள். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பது போல், செங்கதிரோன் தீர்த்தம் கண் பார்வைக்கு உறுதி என்று சொல்வது மிகையாகாது.

ஸ்ரீநந்தி மூர்த்திகள் நைனார்பட்டி

ஆண் குழந்தை சிறந்ததா, பெண் குழந்தை பாராட்டுக்குரியதா என்பது தொன்று தொட்டு வரும் ஒரு கேள்வி என்றாலும், பல தம்பதிகள் ஆண் குழந்தைகள் மட்டுமோ அல்லது பெண் குழந்தை மட்டுமோ பெற்றிருப்பதால் அவர்கள் மனதில் ஒரு ஏக்கம் மறைந்திருப்பது இயற்கையே. அத்தகையோர் இத்தலத்தில் அருள்புரியும் இரட்டை நந்திகளை தரிசனம் செய்து இந்த நந்திகளுக்கும் இறை மூர்த்திகளுக்கும் வெள்ளை சிவப்பு வஸ்திரங்கள் சாற்றி வழிபடுதலால் நற்பலன் பெறுவார்கள். ஆண் பெண் என்ற இரண்டு குழந்தைகளுமே தங்கள் வம்சத்தை விளங்க வைக்கும் விடிவெள்ளிகளாக இருக்க வேண்டும் என்று எண்ணுவோர்கள் இங்குள்ள புண்ணிய விருட்சத்தின் கீழ் 24 தர்பைகளை வட்டமாக பரப்பி அதன் மேல் ஆறு தர்பைகளை வழக்கம்போல் வைத்து தர்ப்பணம் அளித்தல் சிறப்பாகும்.

கரும்பு கரும்பு மங்கள கரும்பு
அரும்பு அரும்பு இறைவன் அரும்பு
குறும்பு குறும்பு குழந்தை குறும்பு
விரும்பு விரும்பு தாயே நீயே விரும்பு
என்ற 16 எழுத்து மங்கள கீதத்தை அவரவருக்குத் தெரிந்த மெட்டில் பாடி இத்தல மூர்த்திகளை வழிபடுவது, தர்ப்பண நிறைவில் ஓதுவது சிறப்பாகும். சினிமா பாடல் மெட்டுதான் தங்களுக்குத் தெரியும் என்று நினைப்பவர்களும் அந்த ராகத்திலும் பாடி இறைவனை வணங்கலாம் என்பது சித்தர்கள் இத்தலத்தில் மட்டும் அளிக்கும் கரும்பு சுவையாகும்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
நயினார்பட்டி

நயினார்பட்டி திருத்தலத்தில் சூரிய பகவான் தினமும் பாஸ்கர தீர்த்தத்தை தரிசனம் செய்து அதில் கிட்டும் பாஸ்கர சக்திகளால் ஸ்ரீகரும்பீசர் எதிரே உள்ள நந்தி மூர்த்தி கொம்புகள் வழியாக தரிசித்து, அபிஷேக ஆராதனைகள் இயற்றி, அதன் பின்னர் இத்தகைய மங்கள சக்திகளால் ஸ்ரீமங்களேஸ்வரி எதிரே உள்ள நந்தி மூர்த்தியின் கொம்புகள் வழியாகவும் அன்னையை தரிசித்து தன் வழிபாட்டை பூரணம் செய்கிறார். சூரிய பகவானின் இந்த அபூர்வ வழிபாடு நம்மைப் போல் சாதாரண மக்களும் கண்டு களிக்கும் வகையில் அமைந்துள்ளதே இங்கு நீங்கள் காணும் புகைப்படங்களாகும், இவை புகைப்படங்களா இல்லை பாஸ்கர ஒளியில் ஒளி வீசும் முத்துக்களா ?

தம்பதிகள் தங்கள் சதாபிஷேக வைபவத்தின்போது கரும்பீசர் திருத்தலத்தில் கிட்டும் கரும்புகளை சுவைப்பது பற்பல தெய்வீக சக்திகளை அளிப்பது என்றாலும் இது எல்லா காலத்திலும் ஒத்து வரக்கூடியது அல்ல என்பதால் இதற்கு மாற்று வழிமுறை ஒன்றையும் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். இது கரும்பு கிட்டாத சந்தர்ப்பங்களில் மட்டுமே அடியார்கள் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியம்.

செங்கதிரோன் தீர்த்தம்
நயினார்பட்டி

முழு முந்திரி, பாதம்பருப்பு, டைமண்ட் கல்கண்டு என்ற இந்த மூன்றையும் நயினார்பட்டி இறை மூர்த்திகளுக்கு படைத்து 60, 70, 80 வயது நிறைவில் இந்த “அமிர்த” பிரசாதத்தை அனைவருக்கும் விநியோகித்து அடியார்கள் பலன் பெறலாம். அது மட்டுமல்லாது அவரவர் பிறந்த நாளிலும் வயது வித்தியாசம் பாராது இவ்வாறு முக்குண அமுத, அமிர்த சுவைகளை நயினார்பட்டி இறை மூர்த்திகளுக்குப் படைத்து எத்திருத்தலத்திலும், படிக்கும் குழந்தைகளுக்கு தானமாக அளித்தல் சிறப்பாகும். உத்தம சந்தான பாக்கியத்தை உருவகித்து அளிக்கும் ஒரு அற்புத தான முறை இதுவாகும்.

மனிதர்களே தற்காலத்தில் உரம், பூச்சி மருந்துகள் கலப்படம் இல்லாத தான்ய உணவுகளையோ, காய் கறிகளையோ பயன்படுத்த முடியாது என்ற நிலை வந்து விட்டபோது மாடுகளுக்கு எப்படி இயற்கை உணவையோ, நீரையோ அளிக்க முடியும் ? மனிதர்கள் நீரைக் காய்ச்சி அதில் உள்ள இரசாயண விளைவுகளை ஓரளவு குறைத்துக் கொள்ளலாம், வாயில்லா ஜீவன்கள் என்ன செய்ய முடியும் ? இந்தக் குறையை தீர்க்கும் இறைவனே நயினார்பட்டி கரும்பீசன் ஆவார். கரும்பு கிட்டும் காலத்தில் நிறைய கரும்புகளை வாங்கி ஸ்ரீகரும்பீசருக்கு நைவேத்யமாகப் படைத்து அந்த கரும்புகளை பொடி பொடியாக நறுக்கி மாட்டுத் தீவனத்துடன் கலந்து வைப்பதால் மாடுகள் நல்ல தெய்வீக சக்தியுள்ள உணவை உண்பதற்கு வழிசெய்வதற்கும், அமிர்த சக்திகள் நிறைந்த பசும்பாலை மனித சமுதாயம் பெறுவதற்கு வழிசெய்யும் வழிபாடாகவும் இது அமையும்.

கோமாதா நயினார்பட்டி

முற்காலத்தில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் போன்றவை பாகு பதத்தில் இருக்கும்போது பசுஞ்சாணத்தை கரைத்து ஊற்றி கரும்புச் சாற்றை தூய்மை செய்தனர். தற்காலத்தில் பசுஞ்சாணமே இரசாயணக் கழிவு பொருளாக மாறி விட்டதால் என்றைக்கும் கலப்படம் ஆகாத இறை சக்தியையே அடியார்கள் நம்பி, நாட்டம் கொள்ள வேண்டி உள்ளது. ஜீனி சர்க்கரையை கரும்பீசனுக்குப் படைத்து அதில் அரிசி, கோதுமை போன்ற தான்யக் குருணைகளைக் கலந்து கோயில்களில் பிரகாரங்கள் ஓரமாக எறும்புகளுக்குத் தீனியாக அளித்து வருவதால் எத்தகைய நச்சுக் கலப்பட உணவு விளைவுகளிலிருந்தும் நம்மைக் காத்துக் கொள்ளலாம் என்பதே சித்தர்கள் அளிக்கும் ‘கரும்பு’ சுவை.

கரும்பு சுவை என்பது நாக்கிற்கு மட்டும் உரமளிப்பது அல்லது அல்ல, முறையான ஆரோக்யத்திற்கும் வழிவகுப்பதாகும். ஆரோக்யம் என்பது உடலும் மனமும் வினைகள் தீர்ந்த கொள்கலனாய் இருப்பதுதானே ? இதைக் குறிப்பதாக அமைவதே கரும்பீசர் திருத்தலத்தில் அமையும் கோமாதா இறைவனுக்கு பால் சொரியும் வண்ணம் அமைந்துள்ள சித்திரக் காட்சிகளாகும். அக்னி மூலை என்ற தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள காட்சிகள் மனிதனின் பலதரப்பட்ட கர்மவினைகளையும் எளிதில் களையும் இயல்புடையவையே. அவரவர் தங்கள் கையால் அரைத்த மஞ்சள் பொட்டுகளை இந்த கோமாதா மூர்த்திகளுக்கு இட்டு, குங்குமப் பொட்டுகளால் அலங்கரித்து, தாங்கள் இல்லம் திரும்பியவுடன், புண்ணிய விருட்சத்திற்கும், இந்த இரண்டு கோமாதா மூர்த்திகளுக்கும் பொட்டிட்டு அலங்கரித்த காட்சியைக் கண் முன் கொண்டு வந்து ஆத்மவிசாரம் செய்து வந்தால் பல அற்புதமான தியானக் காட்சிகள் அவர்களுக்கு சித்திக்கும். இதை அவரவர் உணர்ந்து அனுபவித்தலே சுவை அளிக்கும்.

புண்ணிய விருட்சம்
நயினார்பட்டி

எப்படி பட்டை லிங்க மூர்த்திகள் தனிப்பட்ட அனுகிரக சக்திகளுடன் துலங்குகின்றனவோ அதே போல் வலது பக்கம் ஆவுடை உடைய லிங்க மூர்த்திகளுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கத்தான் செய்கிறது, இவ்வாறு வலது பக்க ஆவுடை உடைய சிவலிங்க மூர்த்தியை அபிஷேகம் இயற்றும் நிலையில் நயினார்பட்டி கோமாதா துலங்குவதால் இந்த சித்திர தரிசனமே ஆண்களுக்கு வரும் பல இரகசிய நோய்களைக் களையும் தன்மை உடையதாகும். தொடர்ந்த ஆத்ம விசார பத்ததி தொடரும் பல தவறுகளை நிவர்த்தி செய்யும் தன்மை உடையது.

துளசி வனம், பசு மடம், புண்ணிய நதி தீரங்கள், புண்ணிய விருட்சங்கள், தல விருட்சங்கள், குரு சன்னிதானம் போன்றவாறு பக்தர்கள் அமரும் இடங்களைப் பொறுத்து அவர்கள் இயற்றும் காயத்ரீ போன்ற ஜபத்தின் பலா பலன்களும் விருத்தி அடையும் என்பது நீங்கள் அறிந்ததே. அப்படி என்றால் அனைவரும் சற்குருவின் திருவடி நிழலில் அமர்ந்து அதிகப்படியான புண்ணிய சக்திகளைப் பெறலாமே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், எத்தனை மடங்கு புண்ணியம் உங்கள் ஜபத்தில் விளைகின்றதோ அத்தனை மடங்கு தீய சக்திகளும் உங்கள் தவறான நினைவில், எண்ணத்தில் மலரும் என்பதை நினைவில் கொள்க. அதனால்தான் நம் சற்குரு திருஅண்ணாமலையைப் பற்றிக் குறிப்பிடுகையில், “நீங்கள் இங்கு நிறைவேற்றும் தான தர்மங்களின் பலன்கள் ஆயிரமாயிரமாகப் பெருகும் என்பது உண்மையே என்றாலும் உங்கள் தவறான எண்ணங்களின் விளைவுகளும் ஆயிரமாயிரம் பாவ வினைகளைப் பெருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்...”, என்பார். கோமாதா என்பவள் தாய்க்கு நிகரானவளாக மன்னிக்கும் கருணை உள்ளம் நிரம்பியவளாய் இருப்பதால் பசு மடத்தில் ஜபம் இயற்றுவதையே பெரும்பேறாகக் கருதினர் அக்கால மகரிஷிகள், இதைக் குறிப்பதே இங்கு பசுமடத்தில் தவம், ஜபம் இயற்றி அந்த பலன்கள் யாவற்றையும் மக்கள் சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கும் ஸ்ரீகண்வ மகரிஷியின் திருக்கோலமாகும்.

ஸ்ரீமுருகப் பெருமான்
நயினார்பட்டி

ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மனிதப் பரம்பரை செழிக்க வேண்டும் என்பதே நம் முன்னோர்கள் வழங்கும் ஆசியின் தன்மை ஆகும். ஆழ்ந்த பொருள் பொதிந்த ஆசியுரை இது. இத்தகைய ஆசிகளை வழங்கும் தகுதி உடைய பெரியோர்கள் தற்போது உள்ளார்களா என்பது கேள்விக் குறியாக இருந்தாலும், இத்தகைய தகுதி படைத்த இறை மூர்த்திகள் அருளும் தலங்கள் நம் பாரதமெங்கும் பெருகி உள்ளதே இந்நாட்டின் பிரஜைகளான நாம் பெருமை படக் கூடிய விஷயமாகும். தழைத்து, வேரோடும் தகுதிகளை இயற்கையாகவே பெற்றதே நயினார்பட்டி திருத்தலத்தில் விளங்கும் புண்ணிய விருட்சமாகும். நைனா, நயினா என்று நம் கோவணாண்டி தம் சீடனை அழைக்கும் அன்புச் சொல்லின் மகிமையை உணர்த்தும் அற்புத தலங்களுள் ஒன்றே நயினார்பட்டி ஆகும். இத்தகைய குரு அம்சங்கள், குரு ஆசீர்வாத சக்திகள் பொங்கிப் பெருகும் தலமாக அமைவதும் நயினார்பட்டி ஆகும். இக்காரணம் பற்றியே இத்தல தட்சிணா மூர்த்தி நயினா தட்சிணா மூர்த்தி என்று அன்புடன் சித்தர்களால் அழைக்கப்படுகிறார். நயினா தட்சிணா மூர்த்திக்கு தலையில் பொன்னிற மஞ்சள் கிரீடம் அல்லது தலைப்பாகை, உடலுக்கு பொன்னிற பார்டர் அமைந்த வெண் பட்டு வேட்டியை சார்த்தி, அதன் மேல் மரகத பச்சை நிற அங்கவஸ்திரத்தை சார்த்தி அலங்கரித்தலால் ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் நற்கதி அடைவர், ஆண் சந்ததிகளை ஏன் பெற்றோம் என்ற வேதனை, அவச்சொல் மாறி, மறைந்து இத்தகைய செல்வங்களைப் பெற நாம் என்ன தவம் செய்தோம் என்ற உயர்ந்த நிலை மலரும் அனுகிரகத்தை அளிப்பவரே “நயினா” தட்சிணா மூர்த்தி ஆவார்.

ஸ்ரீபட்டினத்தார்
திருவிடைமருதூர்

ஒரு அருகம்புல்லில் ஒரு கணுவில் திகழும் பாரம்பரிய சக்திகளை மனிதன் பகுத்தறிய ஒரு யுக காலம் கூட போதாது. இத்தகைய “கணு” சக்திகள் அபூர்வமாக தோன்றும் தலவிருட்சமே நயினார்பட்டி புண்ணிய விருட்சமாகும். இத்தகைய கணு சக்திகளை பக்தர்களுக்கு இறை பிரசாதமாக வழங்கும் மூர்த்தியே நயினார்பட்டி ஸ்ரீகரும்பீசர் என்றால் இறைவனின் “கணு” சக்திகளைப் பகுத்துணர எத்தனை யுகங்கள் தேவைப்படும். கரும்பு தாவரமும் கணு சக்திகளைக் கொண்டு பெருகுவது என்பதோடு நாம் பெற்ற விஞ்ஞான “கணு” அறிவு முடிந்து விடுகிறது. இதற்கு மேல் செல்ல வேண்டுமானால் நமக்கு சித்தர்கள் கூறும் மெய்ஞ்ஞான அறிவு தேவைப்படும். அதை அளிக்கவல்லதும் கரும்பீசரின் அனுகிரகங்களில் ஒன்றாகும். இதை உணர்ந்தவர்களே பாரம்பரிய வியாதிகளுக்கு தீர்வை அளிக்க முடியும். அவ்வாறு தீர்வை அறிய முடியாவிட்டாலும் பரம்பரை வியாதிகளால் அவதியுறுவோர் ஸ்ரீகரும்பீசரை தொடர்ந்து வழிபடுதலால் அற்புத பலன்களைப் பெறுவர். Genetic engineering, Microbiology பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் தங்கள் அறிவை விருத்தி செய்து கொள்ள உதவும் அற்புத தலம் இதுவே. Mutation துறையில் உள்ளவர்களும் ஆழ்ந்த அறிவைப் பெற இத்தல வழிபாடு பெரிதும் உதவி செய்யும்.

கைலாயவாசியான பட்டினத்தடிகள் வான மார்கமாக சென்றபோது காவிரிபூம்பட்டினத்தில் காவிரி ஆறு கடலில் சேரும் அழகைக் கண்டு ஒரு நொடி மெய்மறந்தார், அவ்வளவுதான். அடுத்த நொடி அவரை அங்கு பிறவி எடுத்து வருமாறு பணித்தார் சிவன். அவ்வாறு மனிதப் பிறவி எடுத்த பட்டினத்தடிகள் தன்னுடைய பூத உடலை உகுத்து கையலாயத்திற்கு திரும்பும் தருணத்தை, சிவனுடன் ஒன்றாய் குதூகலிக்கும் அந்த இனிய வைபவத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தது இயற்கையே. இதற்காக இறைவனிடம் பிரார்த்தித்தபோது, “என்று அடிக்கரும்பு கசக்குமோ அன்று நீ கயிலை திரும்பலாம்,” என்று உத்தரவு இட்டார் எம்பெருமான். இனிக்க வேண்டிய கரும்பு கசந்தால் ஒரு மனிதனுடைய பூலோக வாழ்வு முடிந்து விட்டது என்பது பொருள். இதில் எந்தவித சித்தியும் சித்திப்பதில்லை. இவ்வாறு இறைவனுடன் ஒன்றும் மகான்கள் எந்த வித சித்தியின் பாலும் ஈர்க்கப்படுவது கிடையாது. இவ்வாறு தான் கயிலை திரும்பும் காலம் கனிந்து விட்டதா என்று தெரிந்து கொள்ளவே அடிக்கடி ஒரு கரும்பைக் கடித்து சுவைத்து வந்தார் பட்டினத்தடிகள்.

ஸ்ரீபைரவ மூர்த்தி
நயினார்பட்டி

சுவாமிகள் திருவொற்றியூர் வந்தபோது அங்கு அவர் பெற்ற கரும்பு கசந்தது. அப்போது அவர் தான் கயிலை திரும்பும் தருணம் வந்து விட்டது என்று உணர்ந்தார். ஆனால், தூசி அளவான சிறு ஆசையே பூலோகப் பிறப்பை அளித்து விடக் கூடியது என்பதே அவர் தன் அனுபவத்தால் உணர்ந்திருந்ததால் தன்னிடம் எஞ்சியிருந்த சிறு சிறு புண்ணிய சக்திகளையும் மற்றவர்களுக்கு, சிறப்பாக குழந்தைகளுக்கு பகிர்ந்தளித்தால்தான் தன்னுடைய பூலோக வாசம் முழுமை பெறும் என்பதால் திருவொற்றியூர் கடற்கரையில் கிடந்த மணலை சிறிது எடுத்து மிட்டாய்களாக மாற்றி அங்கிருந்த குழந்தைகளுக்கு அளித்து தன்னை ஒரு கூடையில் மூடிப் பார்க்குமாறு கூறினார்.

கூடையை மூடி விட்டு மீண்டும் திறந்து பார்த்தால் சுவாமிகள் கூடையிலிருந்து மறைந்து வேறோரு இடத்தில் தோன்றுவார். அப்போது மீண்டும் சிறிது மிட்டாய்களை சிறுவர்களுக்கு அளித்து மீண்டும் கூடையால் மூடச் சொல்வார். இவ்வாறு மூன்றாவது முறை சிறுவர்கள் கூடையால் அடிகளை மூடி விட்டு அவர் வெகுநேரம் திரும்பாமல் போகவே அவர்கள் ஆச்சரியத்துடன் கூடையைத் திறந்து பார்க்க அக்கூடையில் சிவலிங்கத்தை, பட்டினத்தடிகளின் தூல உருவம் மறைந்து ஒரு மனிதனின் உண்மை உருவைக் கண்டனர்.

திருக்கயிலையிலிருந்து பல லோகங்கள் கடந்து நின்ற நம் சற்குரு இத்தகைய சூழ்நிலையில் எப்படி செயல்பட்டார் என்று அறிந்து கொள்வோமா ? பூமியில் பிறப்பபெடுக்க வேண்டுமானால் ஏதாவது ஒரு கர்மம், பாக்கி இருக்க வேண்டும். இதற்காக நம் சற்குரு தன் உடலில் ஒரு சாண் அளவிற்கு மலத்தை வைத்திருந்தார்கள். தான் பரபிரம்மத்துடன் கலக்கும் நேரம் வந்தபோது இந்த ஒரு சாண் மலத்தையும் வெளியேற்றி விட்டார்கள். இதற்கு சாட்சியாக அமைந்ததே குரு தத்துவமாகும். ஆம், ஒரு டாக்டர் உட்பட மூன்று அடியார்களின் சாட்சியாகவே நம் சற்குரு இந்தக் காரியத்தை நிறைவேற்றினார்கள் என்பது மட்டுமல்லாமல் அந்த அடியார்களை அழைத்து அவர்கள் தங்களுடைய கண்களால் இந்த சித்தி அல்லாத சித்தப் பொக்கிஷத்தை தரிசிக்கும் பாக்கியத்தை அளித்தார்கள் என்பதே நாம் நம் சற்குருவைப் பற்றி என்றும் பெருமைபடக் கூடிய சித்த மகாத்மியமாகும்.

மெய் ஞான புரி

காரைக்குடி அருகில் உள்ள T.வைரவன்பட்டி என்ற ஊரில் மெய்ஞானபுரி என்ற திருத்தலத்தில் எழுந்தருளிய தெய்வமே ஸ்ரீமெய்ஞானபுரீஸ்வரர் ஆவார். அம்பிகை ஸ்ரீபாகம்பிரியாள். மெய்ஞானபுரியில் விளங்கும் தெய்வம் மட்டுமே மெய்ஞானத்தை அளிக்கவல்லவர், மற்ற தெய்வங்கள் யாரும் மெய்ஞானத்தை அளிப்பதில்லையா என்று உங்கள் மனதில் தோன்றும் சந்தேகம் நியாயமானதே. ஒரு பெரிய ஹோட்டலில் வரிசை வரிசையாக மேஜைகள் அமைத்து உணவு பரிமாறப்படும்போது முதல் வரிசையில் அமர்ந்து கொண்டு கடைசி வரிசையில் உள்ள பணியாளரிடம் உணவு கேட்டால் அது எந்த அளவிற்கு பொது அறிவைக் குறிக்காதோ அது போன்றதே தெய்வீகத்தில் எந்த அனுகிரகத்தையும் எந்த மூர்த்தியிடமும் பெறலாம் என்றாலும் அந்தந்த சக்திகளை அருளும் மூர்த்திகளை அவரவரிடம் பிரார்த்தித்துப் பெறுவதே முறையாகும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
மெய்ஞானபுரி

சற்குருவின் அமிர்த ஓங்காரம்

இந்தப் பொது அறிவு உடனே ஒரு நொடியில் சித்தித்து விடாது. இளமையில் கல் என்பது போல நாம் சிறுவயதிலிருந்தே பெற்றோர்களை மதித்து, போற்றி, தாய் தந்தையருக்கு சேவை செய்து, பிற உயிர்களை கௌரவத்துடன் நடத்தி, ஜடப் பொருட்களும் நம்முடன் சமமான உறவு கொண்டவையே என்பதை உணர்ந்து செயல்பட்டால்தான் மெய்ஞானம் என்றால் என்ன என்பது ஓரளவு புரிய வரும்.

உத்தம சற்குருவைப் பெற்ற மனிதன் ஒருவனே மெய்ஞானத்தைப் பெற முடியும் என்ற முதல் கட்ட அறிவை, ஞானத்தை அளிப்பதும் மெய்ஞானபுரியில் அடியார்கள் இயற்றும் வழிபாட்டின் முக்கியத்துவம் ஆகும். ப்ஞ்ச பூதங்களில் பிருத்வி, அப்பு, வாயு, அக்னி என்ற நான்கு பூதங்களே மாறும் தன்மையுடன் இருப்பதால் இந்த நான்கு பூதங்களுக்கும் நான்கு அக்னி குண்டங்களை அமைத்து மெய்ஞானபுரியில் அற்புத ஹோம வழிபாடுகளை தம் அடியார்கள் மூலம் இயற்றி பல்லாண்டுகளுக்கு முன்னரே இந்த மெய்ஞானத்தை பஞ்சபூத சக்திகளில் நிரவி அதை பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கச் செய்த பெருமை உடையவரே மெய்ஞானி நம் சற்குரு ஆவார். தட்சிணாமூர்த்தி, பாகம்பிரியாள், காலபைரவர் என்று தெற்கு நோக்கி குரு மூர்த்தங்களாய் எழுந்தருளிய தெய்வங்களின் சக்திகளை எல்லாம் ஹோம நிறைவில் குரு பிரசாதமாக நம் சற்குரு அளித்த அந்த தெய்வீக நிகழ்ச்சியை இன்றும் பல அடியார்கள் நினைவு கூர்வர்.

நம் சற்குரு ஒரு நாற்காலியில் தெற்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஒரு செப்பு உத்தரணியில் தீர்த்தம் அளித்துக் கொண்டே இருந்தார். அந்த தீர்த்தப் பிரசாதத்தை வரிசையில் நின்று அனைத்து அடியார்களும் பெற்று அருந்தினர். இதில் அதிசயமான அதிசயம் என்னவென்றால் சுமார் பத்து, பதினைந்து அடியார்களுக்கு மட்டுமே அளிக்கக் கூடிய அளவில் இருந்த அந்த தீர்த்தப் பிரசாதம் நூற்றுக் கணக்கான அடியார்களுக்கு அளிக்கப்பட்ட பின்னரும் நிறைவோடு இருந்ததுதான். நம் சற்குரு இவ்வாறு தீர்ததப் பிரசாதம் அளித்தது மெய்ஞானபுரி திருத்தலத்தில் மட்டுமே என்பதும் நம்மை ‘மெய்’ மறக்கச் செய்வதே.

மெய்ஞானபுரியை மெய் ஞான புரி என்று பிரித்துப் பார்த்து ஆத்ம விசாரம் செய்து வருதல் என்ற ஒரு தவமே தெய்வீகத்தில் நாம் பெற வேண்டிய ஞானம் அனைத்தையும் பூரணமாய் அளித்து விடும். எப்படி சிவன் ஒருவனே அனைத்துமாய் துலங்கினாலும் மக்களின் இயலாமை குறித்து சக்தியுடன் தோன்றி அவர்களுக்கு அருள்புரிகிறனோ அது போல பாகம்பிரியாள் என்ற அம்பிகையின் நாமத்தை மெய் ஞான புரி என்ற முச்சுடர் சிவ ஜோதியில் இணைத்தும் நாம் மெய்ஞானத்தைப் பெறலாம். மெய் என்பது உடலையும் குறிக்கும், உண்மை என்ற பொருளையும் குறிக்கும். உடலோ பொய் என்று கூறுகிறோம். பொய்யான உடல் மூலம் மெய்யான இறை சக்தியை உணர உதவி செய்வதே மனைவி என்ற மெய். இதை உணர்வதே மெய்ஞானத்தின் முதல் படி. இந்த முதல் படியில் திடமாக, தெளிவாக நிற்க பக்தர்களுக்கு அருள்புரிவதும் மெய்ஞானபுரியில் நாம் இயற்றும் வழிபாடுகளாகும்.

ஸ்ரீமெய்ஞானபுரீஸ்வரர்
மெய்ஞானபுரி

ஸ்ரீபாகம்பிரியாள்
மெய்ஞானபுரி

மல்லிகை, முல்லை, ரோஜா போன்ற மலர்கள் மனதை மயக்கும் இனிய நறுமணத்துடன் திகழ்ந்தாலும் ஓரிரு நாட்களிலேயே தங்கள் மணத்தை இழந்து விடும் அல்லவா ? ஆனால், மகிழம் பூக்களோ ஒரு வருடத்திற்கு கூட மணம் வீசிக் கொண்டே இருக்கும் இயல்பு கொண்டவை. அத்தகைய பெருமை பெற்றதே இறைவன் ஒருவனே உண்மை என்ற மெய்ஞானமாகும். நூறு கோடி மனிதர்களில் ஒருவருக்குக் கூட சித்திக்காத இந்த மெய்ஞானத்தை பெறுதல் என்பது எத்தகைய ஒரு கடினமான சாதனை. இருப்பினும் இது ஒன்றே நிலையான செல்வம் என்பதால் இந்த அழியாச் செல்வத்தைப் பெற அழியும் உடல், அழியும் உறவுகள் மூலம் முயற்சி செய்வது தவறு அல்லவே. நம் சற்குரு அருளிய நலம்தரும் தேவாரப் பதிகங்களை ஓதியவாறே மெய்ஞானபுரி தல விருட்சமான மகிழ மரத்தையோ, திருத்தலத்தையோ பிரதட்சிணம் நிறைவேற்றி வருதலே நம் “மெய்ஞானி” அளிக்கும் ஒரு வழிபாட்டு முறை ஆகும். மகிழம்பூ நறுமணத்தை கங்கை, காவிரி, பொன்னிநதி தீர்த்தங்களில் கலந்து வியாழக் கிழமைகளில் இங்குள்ள இறை மூர்த்திகளுக்கு அபிஷேகம் இயற்றி வழிபடுவதும் ஒரு அற்புத வழிபாட்டு முறையே.

மெய்ஞானபுரி மூர்த்திகளுக்கான ஒரு பாகம்பிரியாள் அபிஷேக முறையை சித்தர்கள் இங்கு அறிவிக்கிறார்கள். குறைந்தது 120 புள்ளியில்லாத எலுமிச்சை கனிகளை இரு துண்டுகளாக நறுக்கி பிழிந்து அத்துடன் நீர், நாட்டுச் சர்க்கரை, சுக்குப் பொடி கலந்து பானகம் தயாரித்து ஏதாவது திருத்தலத்தில் மதியம் தானமாக அளித்து விட வேண்டும்.

பாகம்பிரியாள் ஆராதனை

இந்த 120 எலுமிச்சை கனி தோல்களையும் வெயிலில் காய வைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எலுமிச்சை தோல்களைப் பரப்பி அந்த மேடை மேல் ஒரு செம்பு பாத்திரத்தில் கங்கை, காவிரி அல்லது பொன்னிநதி என்ற ஸ்ரீரங்கம் கொள்ளிட தீர்த்தத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும். அவ்வாறு தீர்த்தம் நிரம்பிய செப்பு பாத்திரத்தை ஒரு நீண்ட தர்பையால் சுற்றி அதன் இரு நுனிகளை படத்தில் காட்டியதுபோல் கணவனும் மனைவியும் பிடித்துக் கொள்ள வேண்டும். லலிதா சஹஸ்ர நாமம், சர்வ மங்கல மாங்கல்யே என்ற மந்திரத்தை குறைந்தது 108 முறை அல்லது அதற்கு மேலும் 1008 முறைகள் அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து ஓதி அந்த “பாகம்பிரியாள்” தீர்த்தத்தால் மெய்ஞானபுரி இறை மூர்த்திகளுக்கு அபிஷேகம் இயற்றுதலே பாகம்பிரியாள் அபிஷேகம் ஆகும். இவ்வாறு தம்பதி சகிதமாக பூஜையை நிறைவேற்ற முடியாதவர்கள் தங்கள் பெற்றோரின் அனுமதியுடனோ அல்லது நம் சற்குரு பாதரட்சைகள் முன்போ, இது எதுவுமே சாத்தியம் இல்லை என்றால் ஸ்ரீஆயுர்தேவி படத்தின் முன்போ மேற்கண்ட பாகம்பிரியாள் தீர்த்த பூஜையை மேள்கொள்ளலாம்.

ஸ்ரீகாலபைரவர் மெய்ஞானபுரி

தீர்த்தம் உள்ள செப்புப் பாத்திரத்தில் ஒன்று என்று அல்லாது 3, 5, 7 என்றவாறு ஒற்றைப்படை எண்ணிக்கையில் எத்தனை தர்பைகளை வேண்டுமானாலும் சுற்றலாம். பூஜை நிறைவில் அந்த தர்ப்பைகளை பிரித்து தாங்கள் வழக்கமாக அமரும் ஆசனங்களின் மேலோ அல்லது தலையணைக்கு அடியிலோ வைத்துக் கொள்வதால் மனம் அமைதி பெறும், மனக் குழப்பங்கள் அகலும்.

குடும்ப ஒற்றுமைக்கு இதைவிடச் சிறந்த ஒரு பாகம்பிரியாள் பூஜை இருக்க முடியாது என்ற அளவிற்கு சிறப்புப் பெற்றது இந்த பூஜை முறையாகும். அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதி இத்தகைய பூஜை முறையை 12 ஆண்டுகள் இடைவிடாது இயற்றினாள் என்பதே இந்த அன்யோன்யத்தை வளர்க்கும் பூஜையின் சிறப்பாகும். இந்த பாகம்பிரியாள் பூஜையின் பலனாகவே சந்திரமதியின் மாங்கல்யம் தன் கணவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் மறைந்து பொலிந்தது.

மகிழ மரம் மெய்ஞானபுரி

பாகம்பிரியாள் பூஜையில் வைத்த எலுமிச்சை தோல்களை சீயக்காயுடன் சிறிதளவு ஆவாரம் பூக்களை சேர்த்து அரைத்து இந்த “சிரஞ்சீவி” பொடியால் ஆண்களும் பெண்களும் தேய்த்து குளித்து வருதலால் தோல் வியாதிகள் குணமாகும். குடும்ப ஓற்றுமை ஓங்கும். இந்தப் பொடியால் குத்துவிளக்குகளை தேய்த்து அலம்புதலும் நலமே. இத்தகைய விளக்கில் தோன்றும் “சிலாவர்ணம்” என்ற ஜோதி எத்தகைய வியாதிகளையும் குணமாக்கும் மருத்துவ குணங்களைக் கொண்டு விளங்கும். பெண்கள் எதிர்காலத்தைப் பற்றிய பல தெய்வீக செய்திகளை இந்த சிவாலவர்ண ஜோதியின் மூலமாக அறிந்து கொள்ளலாம். மண்டோதரி தன்னுடைய கணவன் ஸ்ரீராமரின் கரங்களால் மரணம் எய்தும் நிலையை இந்த சிலாவர்ண ஜோதியின் மூலமாக அறிந்து தன் கணவரை எச்சரித்தாள். விதி வலியது என்பதாக ராவணன் தன் அன்பு மனைவியின் சொல்லை நிராகரித்தாலும் மண்டோதரி சுமங்கலித் தெய்வங்களுள் ஒருத்தியாக அமையும் அழியா நிலையைப் பெற்றது இந்த சிலாவர்ண ஜோதியின் மகிமையால்தான் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம் ஆகும்.

தென்னங்கீற்றுகளை தரையில் பரப்பி அதில் உதிரும் மகிழ மலர்களை நிழலில் காய வைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உலர்ந்த மகிழ மலர்களை சாம்பிராணி பொடியுடன் கலந்து கோயில்களில் பைரவ மூர்த்திகளுக்கு அடர்த்தியாக சாம்பிராணி தூபம் இட்டு வணங்குவதால் அற்புத நோய் நிவாரண சக்திகளைப் பெறலாம், காற்று, கருப்பு, பில்லி சூன்ய ஏவல்களையும் நிவர்த்தி செய்யலாம். அற்புத அருள் வழங்கும் சமுதாய பூஜை முறைகளுள் இதுவும் ஒன்று.

பெருமாளுக்கு அமைந்த திருநாமங்களுள் ஒன்று வகுளாபரணன் என்பதாகும். வகுளம் என்னும் மகிழ மலர்களை சூடியவன் என்பதன் இதன் மேலோட்டமான பொருள். “நிலைத்த ஆவரண சக்தி” என்ற ஒரு சக்தியை பெருமாள் மகிழ மலர்களில் பதித்து வைத்து அதை உரிய பக்தர்களுக்கு பெருமாள் பிரசாதமாக மகிழ மரத்தை தல விருட்சமாக உடைய மெய்ஞானபுரி, காஞ்சிபுரம் ஸ்ரீஅத்தி வரதர் ஆலயம் போன்ற திருத்தலங்களில் அருள்கின்றார் என்பதும் வகுளம் குறிக்கும் அனுகிரகங்களில் ஒன்று. இந்த வகுள மணத்தை நேரிடையாக பெறும் தகுதி பக்தர்களுக்கு இல்லை என்றாலும் மெய்ஞானபுரி திருத்தலத்தை குறைந்தது ஒரு மணி நேரம் பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குதலால் இந்த வகுளாபரண பெருமாளின் கனிந்த அனுகிரக சக்திகளை சாதாரண மக்களும் பெற்று திருமாலின் திருமார்பில் உறையும் லட்சுமி தேவியின் ஆசீர்வாத சக்திகளை, நிலைத்த லட்சுமி கடாட்ச சக்திகளைப் பெறலாம்.

ஸ்ரீமுருகப் பெருமான்
மெய்ஞானபுரி

இமயமலையில் உள்ள மானசரோவர் ஏரியில் 250 அடிக்குக் கீழே உள்ள ஒரு கூழாங்கல்லை தெளிவாகப் பார்க்கலாம், அந்த அளவிற்கு மானசரோவர் ஏரியின் நீர் தூய்மையாக இருக்கும் என்பார் நம் சற்குரு. அதே போல் ஒரு இருண்ட குகையில் ஆயிரக் கணக்கான பூச்சிகளின் முட்டைகள் இருந்தாலும் அதில் ஒரே ஒரு ஒளிக்கற்றை புகுந்தாலும் போதும் அந்த முட்டைகள் அனைத்தும் பொரிந்து அதிலிருந்து புழுக்கள் உண்டாகி விடும். இதுவே சூரிய சந்திர கதிர்களின் தன்மை. ஒரே ஒரு சூரிய கிரணமோ, சந்திர ஒளிக் கதிரோ நம் மனதில் பலதரப்பட்ட எண்ணங்களை உருவாக்கும் இயல்புடையது. சூரிய சந்திர ஒளிகளே பிரகாசிக்காத வள்ளிமலை குமரி தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் பளிங்கு போல் தூய்மையாக இருப்பதால் இத்தகைய ஒளிபடா தீர்த்தங்களை ஒரு நொடி பார்த்தாலும் போதும் மனக் குழப்பங்கள் அனைத்தும் மறைந்து மனம் மானசரோவர் ஏரியைப் போல் தூய்மை அடைந்து விடும். இதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனால், எப்படி கங்கை தீர்த்தத்தில் முழுகி எழும் ஒருவர் தன் கர்மவினைகள் அனைத்தும் மாயமாக மறைந்து அவர் தூய்மை பெற்றாலும் அவர் நீரிலிருந்து எழுந்து மீண்டும் கரைக்கு வந்த பின் அவருடைய பழைய கர்மங்கள் அனைத்தும் மீண்டும் அவரிடம் குடி கொண்டு விடுகின்றனவோ அதே போல் இத்தகைய ஒளி படா தீர்த்தங்களின் தரிசனம் பெற்றாலும் மீண்டும் நம்மிடம் பழைய கர்ம வினைகள் திரும்பி வந்து விடுகின்றன. மெய்ஞானம் பெற்ற ஒருவரே இத்தகைய கர்ம வினைகள் மீண்டும் தம்மிடம் குடி கொள்ளாமல் காப்பாற்றிக் கொள்ள முடியும். இதுவே மெய்ஞானபுரியில் பக்தர்கள் பெறும் மெய்ஞானத்தின் சக்தி. இந்த மெய்ஞான சக்தியையே தீர்த்த பிரசாதமாக நம் சற்குரு அடியார்களுக்கு அளித்தார் என்பதே கோடி பிறவிகள் எடுத்தாலும் கண்டெடுக்க முடியாத ஒரு மாணிக்கத்தை, மரகத மலையை நாம் சற்குருவாக பெற்றுள்ளோம் என்பதாகும். இது நம் மூதாதையர்கள் கருணையா, இறைவன் கருணையா, சற்குருவின் மாபெருங் கருணையா ?

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam