பட்டின் மகிமையை உணர்ந்தோர் பட்டு ஆவரே !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

பெருநகர் பஞ்சரத்னம்

சற்குரு வெங்கடராமன் தான் சென்னையை விட்டு மற்ற இடங்களுக்கு செல்லும்போதெல்லாம், சென்னைக்கு திரும்பும்போதெல்லாம் ஸ்ரீபட்டு விநாயகரைத் தரிசிக்கத் தவறியது கிடையாது. ஏதோ புதிதாக தோன்றிய விநாயகர் போல் மக்கள் நினைத்தாலும் இந்த விநாயகர் தொன்மையோ சொல் பொருள் கடந்தது. ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்தரிடம் குருகுலவாசம் பயின்ற நம் சற்குரு வெங்கடராமன் அவர்கள் சிறுவனாக இருந்தபோதிலிருந்தே தரிசித்து வந்த விநாயக மூர்த்தியே இவர். பட்டு என்ற பதம் கோடி கோடி பொருளைக் குறிக்கும். நம் சற்குரு இரசித்த பதமோ தியாகி என்பதாகும். செங்கல் தீயில் சுடுவதற்கு முன் கருப்பு நிறத்தில் இருந்தாலும் அது நெருப்பில் சுடப்பட்டு செங்கல் ஆகும்போதுதான் கட்டிட வேலைகளுக்குப் பயன்படும் அளவிற்கு பலம் உள்ளதாகிறது. இதிலிருந்து தோன்றியதே செங்கல்பட்டு.

ஸ்ரீபட்டு விநாயகர் செங்கல்பட்டு

விநாயகர் வழிபாடு எல்லா வித விக்னங்களை, தடங்கல்களைக் களையும் என்பது உண்மையாயினும் அவ்வாறு தடங்கல்கள் நீங்கி வழிபட்ட பின்னர் கிட்டும் பலனையும் அர்ப்பணிக்க உகந்தவரே செங்கல்பட்டு பட்டு விநாயகர் ஆவார். இந்த அர்ப்பணிப்பின் சுகத்தை உணர்ந்து செயல்படுத்தியவரே நம் சற்குரு வெங்கடராமன் ஆவார்கள். ஒரு முறை சென்னையிலிருந்து திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு சிறுவன் வெங்கடராமனை அழைத்து வந்தார் கோவணாண்டி. அது கால்நடை பயணம்தான் என்பது உங்களுக்குத் தெரிந்த விளக்கமே. ஸ்ரீரங்கம் எல்லையைத் தொட்டதுமே கோவணாண்டி, “சரி போதும், வாடா, நாம் திரும்பிப் போகலாம்,” என்று கூறி சிறுவன் வெங்கடராமனை அழைத்து வந்து விட்டாராம். இன்று வரை எதற்காக கால்நடையாக சுமார் 300 கிமீ தூரம் சிறுவனை நடக்க வைத்தார் கோவணாண்டி என்ற இரகசியத்திற்கு விடை தெரியாமலே இருந்தானாம் சிறுவன். ஆனால் அவனுக்கு ஆறுதல் அளித்தது இந்தப் பயணத்திற்கு முன்னும் பின்னும் கிடைத்த பட்டு விநாயகர் தரிசனமே என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும் அல்லவா ? எனவே ஒரே ஒரு வார்த்தையில் இந்தப் பட்டு விநாயகர் மகிமையைப் பற்றி சொல்வதானால் தியாகத்தின் பரிசான போதும் என்ற மன திருப்தியை அளிப்பவரே ஸ்ரீபட்டு விநாயகர் ஆவார். குரு ஆண்டில் நீங்கள் இங்கு காணும் தரிசனம் குரு நம்பிக்கையை வளர்க்கும் என்பது உண்மையே. மனிதன் அனுபவிக்கும் உறவுகள் கணவன், மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உற்றம், சுற்றம் என ஆயிரமாயிரம் இருந்தாலும் இவை அனைத்திலும் நிரந்தரமான, உண்மையான உறவு, உணர்வே குரு சீடன் என்ற உறவே, நிலையே என்ற உண்மையை உணர்த்துவதும் பட்டு விநாயகர் வழிபாடும் ஆராதனையும் ஆகும்.

சுவாமிமலை

இக்காரணம் பற்றியே முருகனுடைய ஆறு படைவீடுகளில் சுவாமிமலையில் உழவாரத் திருப்பணிகள் நிறைவேற்றி அத்திருத்தலத்தில் புனருத்தாரண வைபவத்தையும் பல வருடங்களுக்கு முன் நிகழ்த்தினார் நம் சற்குரு என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவையான நிகழ்ச்சியாகும். பிரணவ உபதேசத்தின்போது எம்பெருமான் அறியாத பிரணவ இரகசியத்தை ஞானபண்டிதன் என்ன உபதேசித்து விட முடியும் என்ற சந்தேகம் தோன்றுவது இயற்கையே. இதற்கு சித்தர்கள் அளிக்கும் விளக்கமே, “அப்பா அப்பா அப்பா என்று மூன்று முறை எம்பெருமானை அன்புடன் அழைத்தான் ஞான பண்டிதனே,” என்ற பிரணவ உபதேச இரகசியத்தை விளக்குகிறார் ஸ்ரீஅகத்திய பெருமான். ஸ்ரீஅகத்தியர் தன் நெருங்கிய சீடர்களுக்கு அளித்த விளக்கத்தை புலப்படுத்துவதாகவே இன்றும் அவருடைய உருவச் சிலை இங்கு எழுந்தருளி இருப்பது பக்தர்களுக்கு ஓர் அருவிருந்தாகும். பக்தர்கள் மட்டுமே கேட்கும் சுவை இந்த பிரணவ உபதேசம் என்றாலும் அடியார்களின் நாக்கு சுவைக்கும் விருந்து அளித்தவரே நம் சற்குரு. ஆம், திருவலஞ்சுழி சுவாமிமலை உழவாரத் திருப்பணியின் போதுதான் பக்தர்களுக்கு கண் படா தீர்த்தமான, பிரணவ பொருள் பொதிந்த இளநீர் வழங்கப்பட்டது என்பதும் ஒரு சில அடியார்கள் மட்டுமே அறிந்த சுவை இரகசியமாகும். இவ்வாறு அடியார்களின் உள்ளத்திற்கும் உடலுக்கும் சற்குரு அளித்த விருந்து எத்தனை, எத்தனையோ ? பணிவின் பாதாளத்தை அடியார்களுக்குத் தொட்டுக் காட்டிய இடமும் திருவலஞ்சுழிதான். இங்குள்ள பிரம்மாண்டமான ஆறுமுகப் பெருமானின் உருவச் சிலையை சீயக்காய் போட்டு தேங்காய் நாரால் சுத்தப்படுத்தும் திருப்பணியை சற்குரு மேற்கொண்டபோது அடியார்களில் சிலர் பெருமானின் தலை, மார்பு பகுதிகளை சுத்தப்படுத்தும் திருப்பணியை மேற்கொள்ள எத்தனித்தனர். அதைக் கண்ட சற்குரு, “சார், எல்லோரும் சுவாமியின் திருவடியைப் பற்ற முயலுங்கள். அதுதான் நமக்குக் கிடைக்காது. சுவாமி தலையில் கைவைப்பது நம் வேலை அல்ல,” என்று கூறிய போதுதான் அடியார்கள் தங்கள் தவற்றை உணர்ந்து சுவாமியின் பாதத்திலிருந்து ஆரம்பித்து சிறிது சிறிதாக முன்னேறி சிரசை அடைந்தனர். திருப்பதி வெங்கடாசலபதி தரிசனம் போன்ற இறை தரிசனங்களின்போதும் இவ்வாறு சுவாமியின் பாதத்திலிருந்து தரிசனம் செய்து படிப்படியாக சுவாமியின் தலைப்பகுதிக்கு வரவேண்டும் என்ற பொருள் பொதிந்த கருத்தை சற்குரு தொட்டுக் காட்டியதும் திருவலஞ்சுழி திருத்தலத்தில்தான்.

ஸ்ரீஅகத்தியபிரான் சுவாமிமலை

இவ்வாறு தியாகத்தின் பரிசாக அடியார்களுக்கு சற்குருவால் வழங்கப்பட்டதே காஞ்சிபுரம் அருகிலுள்ள பெருநகர் என்னும் சிவாலய திருப்பணி. பெருநகர் திருத்தலத்தில் அபூர்வமாக பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. பிரம்ம ஞானம் என்பது எளிதில் கிட்டுவதன்று. பக்தியின் இறுதிப் பயனாக விளைவதே பிரம்ம ஞானம் என்றால் அதை பிரசாதமாக அளிக்கக் கூடிய பிரம்ம தீர்த்தம் எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும். பக்தி, பிரம்ம ஞானம் அடைய அத்தியாவசியமாக இருப்பது இறை நம்பிக்கையும், குரு நம்பிக்கையும், பொறுமையும் விடாமுயற்சியுமே ஆகும். ஒரு முறை, “தானத்தில் சிறந்தது ...,” என்று கூறி ஒரு அடியார் நிறுத்தியபோது சற்குரு அவர்கள், “நிதானம்” என்று கூறி அடியாரின் உரையை முடித்தார்கள். அனைவரும் அப்போது எதிர்பார்த்தது அன்னதானம் என்ற பதிலைத்தான். ஆனால் சற்குருவோ சிரித்துக் கொண்டே, “நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை கூறுவதற்காக அடியேன் இந்த சீட்டில் இல்லை,” என்று ஒரு உத்தம குருவின் நிலையை தெளிவாக எடுத்துரைத்தார்கள். அத்தகைய நிதானத்தை அளிப்பதே பெருநகர் சிவாலயத்தில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தமாகும். ஸ்ரீஇஷ்ட சித்தேஸ்வரர் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளதே பிரம்ம தீர்த்தமாகும். இவ்வாலயத்தில் திருப்பணி நிறைவேறிக் கொண்டு இருந்தபோது ஒரு அடியார் எறும்புப் புற்றுகள் நிறைந்த இவ்வாலயத்தைப் பொறுமையாக சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அங்கிருந்த எறும்புகளோ அவ்வடியாரின் கைகளைப் பதம் பார்த்தன. ஆனால் அந்த அடியாரோ அந்த எறும்புகளுக்கு சிறிதளவும் தொந்தரவு கொடுக்காமல் ஆலயத்தைத் தூய்மை செய்வதிலேயே குறியாக இருந்தார். அதைக் கண்ட சற்குரு சிரித்துக் கொண்டே, “நாங்கள் அளிக்கும் ஒவ்வொரு திருப்பணிக்கும் பின்னால் ஆழ்ந்த கருத்துக்கள் உள்ளன என்பதையே இந்த அடியார் இப்போது நிரூபணம் செய்கின்றார்,” என்றார். காரணம் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த அந்த அடியார் அதற்கு முன்பு தான் குடியிருந்த திருவெறும்பூர் தலத்தில் தொடர்ந்து திருப்பணி செய்து கொண்டிருந்தார். அந்த காரணத்தினால்தான் மற்ற எவரும் நெருங்க முடியாத எறும்புப் புற்றுக்களை அவர் நெருங்கி திருப்பணி செய்து தன்னுடைய இறை நம்பிக்கையை, குரு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார் என்பதே சற்குரு தெரிவித்த இரகசியம். நான் என்னும் மலத்தைப் போக்குவதே இறைவனின் நிர்மால்ய தரிசனம்.

பிரம்ம தீர்த்தம் பெருநகர்

இறைவனின் நிர்மால்ய தரிசனமே களைதற்கரிய நான் என்னும் அகந்தையைப் போக்கும் என்றால் சற்குரு அளிக்கும் நிர்மால்ய தரிசனம் எத்தனை சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஆனால் சற்குரு அளித்த நிர்மால்ய தரிசனத்தைக் காணும் பேறு பெற்றோர் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே என்றாலும் குரு வருடத்தில் இங்கு நீங்கள் காணும் ஸ்ரீபட்டு விநாயகர் தரிசனமும், பெருநகர் ஈசன் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் நிர்மால்ய தரிசனமும் எம்மலத்தையும் போக்கும் அற்புத தரிசனங்களே. தற்காலத்தில் எதையும் வியாபார நோக்கில் காணும் வழக்கத்தைக் கொண்டுள்ளதால் இத்தலத்தின் பெருமையை ஓரளவே இங்கு விவரித்துள்ளோம். பக்தர்கள் இவ்வரிய திருத்தலத்தை தரிசனம் செய்து இங்குள்ள பிரம்மதீர்த்தத்தில் நீராடி சற்குரு அளிக்கும் மற்ற இரகசியங்களை நேரில் கண்டு அனுபவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் ஏறும் ஆறு படிகளும் இறை தரிசனத்திற்குப் பின் அமையும் ஆறு படிகளும் குரு தத்துவத்தைக் குறிக்கும் (6+6=12=3) படிகள் என்று மேலோட்டமாகப் பொருள் கொண்டாலும், இந்தச் சிறிய கூட்டல் கணக்குப் பாடமே அடியார்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பல கணக்குப் பிழைகளை சரி செய்து அவர்களை நல்வழிப்படுத்தும் என்பது உண்மையே.

உதாரணமாக, சென்னை மயிலையில் விளங்கிய ஸ்ரீசுந்தரராம் குருஜி இந்த பிரம்ம தீர்த்தத்தில் நீராடி பல சித்திகளைப் பெற்ற உத்தமர்களில் ஒருவர் ஆவார். குருஜி அனைவரையும் தவள சித்து அல்லது தவளை சித்தி என்ற சித்தியின் மூலமாகக் கவர்ந்தார். இது பற்றி சித்தர்கள் கூறும் விளக்கம் என்ன ? ஒரு முறை வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருத்தலத்தை கும்பாபிஷேகத்திற்காக புனரமைக்க முயன்றபோது மூலவர் சிவலிங்கத்தை எத்தனையோ பேரை வைத்து இடம் மாற்ற விரும்பினாலும் அது முடியாமல் போயிற்று.

அப்போது குருஜி அவர்கள் தனக்கு எட்டு அடியார்களை மட்டும் சேவைக்கு வைத்துக் கொண்டு அவர்களின் உதவியால் மூலவர் லிங்கத்தை இடம் பெயர்த்து வைத்து கும்பாபிஷேக அறப்பணிகள் நிறைவில் அந்தச் சிவலிங்கத்தை மீண்டும் அதே சன்னிதியில் நிலைகொள்ளச் செய்து விட்டார்கள். உண்மையில் தவளை சித்தியின் உதவியால் ஸ்ரீஜலகண்டேஸ்வர லிங்கத்தை உறங்க வைத்து, லிங்கத் திருமேனியை இடம் பெயரச் செய்து, மீண்டும் திருப்பணி நிறைவில் லிங்கத் திருமேனியை பழைய இடத்தில் வைத்து அந்தச் சிவலிங்கத்திற்கு உயிர் சக்தியை அளித்து அதாவது லிங்கத் திருமேனியை தூக்கத்திலிருந்து விழித்து எழச் செய்து பக்தர்களுக்கு அறப் பணி ஆற்றினார்கள். குருஜி புரிந்த சேவையின் மகத்துவத்தை அவையடக்கம் காரணமாக அவர் வெளியிடா விட்டாலும் சித்தர்களின், குரு நாதர்களின் மகிமையை மக்களுக்கு தெளிவுபடுத்துவதுதானே நம் சற்குரு போன்ற உத்தமர்களின் தலையாய இறைப்பணி.

குருஜி இந்த தவளை சித்தியை பெற்ற இடமே ஸ்ரீஇஷ்டசித்தி ஈஸ்வரர் திகழும் பெருநகர் திருத்தலமாகும். சுந்தரராம், இஷ்டசித்தி, ஈசனுக்கு முன் உள்ள ஆறுபடிகள் இவை அனைத்திற்கும் எண் கணித தொடர்பு உண்டு என்பது இதன் மூலம் தெளிவாகின்றது அல்லவா ? இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீஇஷ்டசித்தேஸ்வரரின் முன் அமர்ந்து சரவணபவ மந்திரத்தை மனம் ஒருமுகப்பட்டு ஓதுவது நாம் நினைத்த சித்தியைப் பெறும் எளிய முறையாகும். சரவணபவ என்ற மந்திரத்தை ஐந்து விரல்களையும் தொட்டு ஓதி ஆறாவதாக நடுவிரலால் உள்ளங்கையில் உள்ள ஆயுள் ரேகையைத் தொட்டு நிறைவு செய்வது சரவணபவ மந்திரம் ஓதும் ஒரு முறையாகும். ஒருவர் நினைத்த காரியங்களில் வெற்றி பெறவும், சித்திகளைப் பெறவும், எதிர்பாராத விபத்துகளிலிருந்து காத்துக் கொண்டு ஆயுளை விருத்தி செய்யவும் உதவுவதே இத்தகைய வழிபாடாகும். வாகனங்களை ஸ்டார்ட் செய்யும் முன் இவ்வாறு முருக தியானத்துடன் கார், லாரி போன்ற வாகனங்களை ஓட்டுவதால் வாகனங்கள் நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும். கஜதந்த மோத காயத்ரீ முத்திரையை இத்தலத்தில் பயில்வதால் அற்புத பலன்களைப் பெறலாம்.

நாகங்களும் மனிதர்களும்

நாகங்கள் மனிதர்களுக்குத் தீமை தருபவை என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. உண்மையில் நாகங்கள் இல்லாவிட்டால் மனித குலம் என்றோ தீய எண்ணங்களின் விளைவால் அழிந்திருக்கும் என்பதே சித்தர்கள் கூறும் உண்மையாகும். மனிதர்களின் தீய எண்ணங்களின் விளைவுகள் தீயை விடக் கொடியதே. இத்தகைய தீய எண்ணங்களிலிருந்து மக்களைக் காக்கவே இறைவனால் நாகங்கள் படைக்கப்பட்டன என்பதே நாகங்களின் படைப்பின் பின் அமைந்த முக்கிய இரகசியமாகும். இதை உணர்த்துவதே பெருநகர் திருத்தலத்தில் அனந்தன் ஆதியாக உள்ள நாகங்களின் கோலமாகும். இந்த நாகங்களுக்கு சுத்தமான நல்ல எண்ணெய் காப்பிட்டு வணங்குவதால் பலரும் ஜாதக ரீதியாக அனுவிக்கும் நாக தோஷம் போன்ற துன்பங்களை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் தெரிய வரும். நமது பூமியை ஆள்பவையே எட்டு திக்கு நாகங்களாகும். இந்த நாகங்களைப் பற்றி புரிந்து கொண்டால் நம் உடலில், மனதில் புகும் எண்ணங்களைப் பற்றி புரிந்து கொண்டு அவற்றைக் களையும் மார்கத்தைத் தேட முடியும். மனிதர்களைத் துரத்தும் எண்ணங்களின் தன்மையை அறிய உதவுவதே இத்தலத்தில் நிறைவேற்றும் நாக வழிபாடாகும். இங்கு எழுந்தருளி உள்ள ஒவ்வொரு நாக தேவதையின் பின்னணியிலும் கோடிக் கணக்கான நாகதேவதைகள் மறைந்துள்ளன என்பதே நாம் நாகங்களைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும். இவ்வாறு கோடிக் கணக்கான நாக தேவதைகள் அருளும் மாணிக்க ஒளிக் கற்றைகளை ஆதிசேஷன் தன் பக்தியால் தூய்மை செய்து இத்தல ஸ்ரீசக்கர விநாயகரிடம் அளிக்க அதை ஸ்ரீசக்கர விநாயகப் பெருமான் இறைவனுக்கு ஆனந்த வெண்சாமரமாக வீசுகின்றார் என்றால் அந்தக் காட்சியைக் காணும் பேறு பெற்ற சித்தர்களின் மகிமையை எப்படி வர்ணிக்க முடியும் ? இந்த அற்புத காட்சியை சாதாரண பக்தர்கள் தரிசிக்கும் பேறு பெறவில்லை என்றாலும் வளர்பிறை பஞ்சமி திதிகளில் ஸ்ரீசக்கர விநாயகருக்கு பஞ்சாமிர்த காப்பிட்டு வணங்குவதால் இந்த மாணிக்க ஒளி தரிசனப் பலன்களை சாதாரண மக்களும் எளிதில் பெற முடியும். எத்தகைய கொடுமையான வறுமை நிலையையும் போக்கக் கூடியதே இத்தகைய வழிபாடு. கணவன் மனைவி இடையே உள்ள எத்தகைய கருத்து வேற்றுமைகளையும் களைந்து குடும்பத்தில் சாந்தத்தை ஏற்படுத்துவதே இத்தகைய வழிபாடாகும். சக்கர விநாயகரின் வழிபாடு சர்க்கரையாகக் கனிவதும் இவ்வழிபாட்டில்தான்.

தேவபட்சிகள் உணவேற்கும் இடம்
திருக்கழுக்குன்றம்

ஒருமுறை ஆடல்வல்லான் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரி சற்குருவைத் தரிசனம் செய்ய வந்தார். தான் தினமும் உணவேற்கும் முன் பட்சிகளுக்கு (காக்கைகளுக்கு) பிரசாதம் அளித்த பின்னரே உணவேற்பதாகக் கூறினார். அவரைப் பொறுத்தவரை இது மிக உயர்ந்த பூஜையாக இருந்தது. அதனால் அவர் லட்சக் கணக்கான ரூபாயை சம்பாதித்து பத்திரமாக வைத்திருந்து எந்த கல்லூரியிலும் தன் இரு ஆண் குழந்தைகளுக்கும் எஞ்சினீயரிங் அல்லது மெடிக்கல் சீட் பணம் கொடுத்து வாங்கத் தயாராக இருந்தார். அதைக் கேட்ட சற்குரு அந்த அடியாரின் கருத்தை ஆமோதித்து உங்கள் எண்ணம் நிறைவேற இறைவன் அருள்வார் என்று கூறினார். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. அந்த பிரமுகரின் பையன் ஐயப்பனைப் போல் குத்துக்கால் இட்டு அமர்ந்திருந்தது ஒரு காரணம், அந்த பிரமுகர் காக்கைளுக்கு பிரசாதம் வைக்கும் இடத்தின் மேல் திருக்கழுக்குன்ற பட்சிகள் தினமும் வரும்போது அவைகளின் நிழல் விழும். அந்த நிழலால்தான் அந்த பிரமுகர் இத்தகைய மகிமைகளை எல்லாம் பெற்றார் என்று சற்குரு பின்னர் விளக்கினார். நிழலுக்கே இத்தனை மகிமை என்றால் நிஜத்திற்கு எத்தனை மகிமை இருக்கும் என்பதை யூகித்துப் பாருங்கள். இந்த நிழல் சக்திகள் நிஜமாகும் இடமே பெருநகர் சிவாலயம் ஆகும். உதாரணமாக நிழலுக்கு இரண்டு பரிமாணங்களே உண்டு. ஆனால் நிஜத்திற்கு மூன்று பரிமாணங்கள் உண்டு அல்லவா? இவ்வாறு இரண்டு பரிமாண உருவத்திலிருந்து மூன்று பரிமாண தோற்றங்களை ஊகிக்கும் சக்தி அளிப்பதே பெருநகர் இறை மூர்த்திகளின் மகிமையாகும். முந்திரிப் பருப்புகளை நான்காக உடைத்து அதை லேசாக பசு நெய்யில் வறுத்து அதை மஞ்சள் கேசரியில் சேர்த்து தானம் அளித்து வந்தால் இத்தகைய பரிமாணம் கடந்த அறிவு விருத்தி பெற இத்தல ஈசன் அருள் புரிவார். சூரிய உதயத்திற்கு முன் மலரும் பூக்களைப் பறித்து மாலையாகத் தொடுத்து இத்தல அம்பிகைக்கு சூட்டுவதும் இத்தகைய பரிமாணம் கடந்த அறிவு பெற உறுதுணையாக இருக்கும். இவ்வாறு இத்தல அம்பிகையை வழிபட்டே உயர்திரு ராமன் அவர்கள் பரிமாணங்கள் கடந்த அறிவைப் பெற்றார் என்பதே சித்தர்கள் அறிவிக்கும் இரகசியம் ஆகும். இத்தகைய அறிவைப் பெற்ற அவர் இன்று ஸ்ரீவித்யா லோகத்திலிருந்து வர விரும்பாமல் அம்பிகையின் அருளில் குளித்த வண்ணமே உள்ளார் என்பதே சித்தர்கள் கூறும் சுவையான இரகசியம். பரிமாணங்கள், கணக்கு குறித்த அறிவை விருத்தி செய்து கொள்ள விரும்புவோர்கள் அனைவரும் வழிபட வேண்டிய அம்பிகையே பெருநகர் தாய் ஆவாள். இங்கு தூணில் அருள்புரியும் ஸ்ரீவியாக்ரபாதர் தரிசனமும் வழிபாடும் இத்தகைய வழிபாடுகளுக்கு மகிமை கூட்டும் என்பது உண்மையே. பல யுகங்களாக இத்தல அம்பிகையை வழிபட்டே சூரிய உதயத்திற்கு முன் மலர்களைப் பார்க்கும் வல்லமையையும் மரங்களின் மேல் ஏறுவதற்கு ஏதுவாக புலிக்கால் நகங்களையும் அவர் பெற்றார். பலரும் அவர்களை அறியாமல் தங்கள் நகங்களைக் கடிக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பார்கள். கேட்டால் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்வார்கள். உண்மையில் இத்தகைய செயல்களுக்கு பூர்வ ஜன்ம காரியங்களே காரணமாக அமைவதால் இத்தகையோர் ஸ்ரீவியாக்ரபாதர் வழிபட்ட இத்தலத்தில் சூரிய உதயத்திற்கு முன் மலரும் மலர்களை மாலையாகக் கட்டி அம்பிகைக்கு சார்த்தி வழிபடுதலால் இத்தகைய பழக்கங்களிலிருந்து விடுபடுவார்கள். சிலருக்கு கை, கால்களில் உள்ள நகங்கள் அடிக்கடி சொத்தையாவது உண்டு. பெரும்பாலும் இத்தகைய கோளாறுகள் புற்று நோயாக மாறும் வாய்ப்பு உள்ளதால் அத்தகையோரும் மேற்கூறிய வழிபாடுகளால் பலன் பெறுவார்கள். ஆனால் இத்தகைய வழிபாடுகளுக்கு தாமே கட்டிய ஆறு முழப் பூக்களை அளித்தல் அவசியம்.

மாயக்குழிவடு தரிசனம் திருஅண்ணாமலை

பழைய புகைப்படம் ஒன்றில் சற்குரு கைவிரல்களைக் கோர்த்த வண்ணம் திருஅண்ணாமலை மாயக்குழிவடு தரிசனத்தில் காட்சி அளிப்பதுண்டு. தானும் திருஅண்ணாமலையானும் வேறு அல்ல என்பதைக் குறிக்கும் வண்ணமாகவும் இந்த அற்புத தரிசனம் அமைந்திருக்கும். சற்குரு அணிந்த சீருடை வண்ணமே குடும்ப ஒற்றுமையை வளர்க்கக் கூடியது. இந்தப் புகைப்படம் முன்பு கையில் அடங்கும் லட்டு, பொருள்விளங்காஉருண்டை, பொரி உருண்டை, ஐந்து சுற்று முறுக்கு போன்றவற்றை வைத்து நைவேத்யம் செய்து தானமாக அளித்தலால் குடும்ப ஒற்றுமை வளரும். கையில் அடங்காத லட்டிற்கு ஒரு மகிமை உண்டு என்றால் கையில் அடங்கும் லட்டு, உருண்டைகளுக்கும் ஒரு மகிமை இருக்கத்தானே செய்கிறது. இத்தகைய உருண்டைகளை பெருநகர் சிவாலயத்தில் தானமாக அளித்தலும் சிறப்பு. இதனால் குடும்ப ஒற்றுமை வளர்வதுடன் பங்காளித் தகராறுகளும் மறையும். தற்காலத்தில் உறவினர்கள் நண்பர்கள் இடையே ஏற்படும் கைகுலுக்கும் பழக்கம் பெண்கள் சமுதாயத்திலும் வேகமாகப் பரவி வருவதைப் பார்க்கிறோம். இனி இத்தகைய தவறுகளைச் செய்வதில்லை என்று நாம் உறுதியாக இருந்தாலும் ஏற்கனவே ஏற்பட்ட கைகுலுக்கல் பழக்கத்தால் விளைந்த தோஷங்களுக்கு இத்தகைய கையில் அடங்கும் தின்பண்டங்கள் தானம் ஓரளவு பிராயசித்தமாக அமையும். திருமணத்திற்கு முன் ஏற்பட்ட சுயஇன்ப விளைவுகளால் திருமணத்திற்குப் பின் துன்பங்களைச் சந்திப்போர் மேற்கூறிய தான தர்மங்களை பெருநகர் திருத்தலத்தில் தொடர்ந்து நிறைவேற்றி வருவதால் வாழ்வில் புது திருப்பத்தையும் நம்பிக்கையையும் பெறுவார்கள். இதில் இன்னும் பல விளக்கங்கள் உண்டு. அவற்றைத் தக்க சற்குருவை நாடித் தெரிந்து கொள்ளவும். சற்குருவின் இந்த முத்திரையானது அவர்களின் வாழ்க்கையைப் போன்றே ஆழ்ந்த பல கருத்துக்களை பிரதிபலிப்பதாகும். உண்மையில் பல தெய்வீக கருத்துக்களின் வெளிப்பாடாகவே, தெய்வீக விளக்கமாகவே மகான்களின் வாழ்க்கை அமைகிறது என்பதே உண்மை. சற்குரு அமைத்த முறையில் யார் வேண்டுமானாலும் முத்திரையை அமைத்துக் கொள்ளலாம் என்பது உண்மையே. ஆனால், “நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பதொன்றுதான் ...” என்ற தத்துவத்தைக் கண்களில் தேக்கி வைப்பது என்பது நம் சற்குரு ஒருவரால் மட்டுமே சாதிக்கக் கூடிய சாதனையாகும். அது சாதனை என்பதை விட நல்லது கெட்டது என்ற பதங்களுக்கு இடைப்பட்ட சிந்தனையில் வாழ்ந்தார் என்பதே நாம் கண்டு இரசிக்க வேண்டிய பேருண்மையாகும். நம் சற்குருவே அருணாசலம், அருணாசலமே சற்குரு என்பதற்கு இந்த முத்திரையும் ஒரு சான்றே. சிவ சக்தி ஐக்ய சக்திகளை இந்த முத்திரையின் மூலம் வெளியிடுவது என்பது நம் சற்குரு ஒருவரால் மட்டுமே நிகழ்த்தக் கூடிய சாதனையாகும்.

ஸ்ரீதுர்கை பெருநகர்

ஒருவருட கார்த்திகை தீப அன்னதானம் ஒரு புறம் அருணாசல சிவ கோஷமும் மறுபுறம் நாதஸ்வர மேள வாத்யத்துடன் நிகழ்ந்த பெருமை பலரும் அறிந்ததே. அதனால்தான் நம் அடியார்கள் அன்னதானத்திற்கு விறகு வாங்குவதற்காக அவ்வருடம் ஸ்ரீவிசிறி சாமியாரின் இல்லத்தைக் கடந்து போக நேர்ந்தபோது சற்குரு ராம்சூரத் குமார் நம் அடியார்களை அழைத்து ஆங்திலத்தில், “நீங்கள் ஏழைகளுக்கா அன்னதானம் அளிக்கிறீர்கள். இல்லை இல்லை நீங்கள் அளிக்கும் அன்னதானம் சாட்சாத் அந்த பரமசிவனுக்கே,” என்றராம். Are you feeding the poor, no no you are feeding my father, Lord Arunachala ! பாம்பின் கால் பாம்பறியும் என்பது உண்மைதானே. ஸ்ரீவிசிறி சாமியார் போன்ற மகான்கள் அனைவருமே அடியார்கள் எப்போதும் இறைநினைவுடன் திகழவே வழிகாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். சற்குரு அருணாசல ஈசனுக்கு உணவு படைக்கும் எண்ணத்துடன்தான் அன்னதானம் நிகழ்த்துகின்றார் என்பதை அறியாதவரா ஸ்ரீவிசிறி சாமியார் ? ஆனால் சற்குருவின் சத்சங்கத்தில் பணியாற்றும் அடியார்களும் அந்த எண்ணத்துடன் திகழ வேண்டும் என்ற சீரிய எண்ணத்தில் எழுந்ததே மேற்கண்ட உரையாடலாகும். சற்குருவின் பெருமையைப் பற்றி மற்றவர்கள் கூறினால்தானே சற்குருவுக்கு சிறப்பு ? எப்படி ஒரு காயை ஒருவர் பயிர் செய்ய, ஒருவர் அதை ஏற்றி சந்தைக்கு கொண்டு வர, ஒருவர் அதைச் சந்தையில் பெற்று வீட்டிற்கு எடுத்துச் செல்ல, யாரோ ஒருவர் அதைச் சமைத்து உணவாக்குகிறார்களோ அது போலவே ஒரு நற்காரியம் நிறைவேறுவதற்காக பல மகான்களும் ஒன்று கூடி பாடுபடுகின்றனர் என்பதே உண்மை. ஒரு முறை காவி உடையணிந்த சன்னியாசி ஒருவர் ஸ்ரீவிசிறி சாமியாரைக் காணச் சென்றபோது அவரை வரவேற்று ஸ்ரீவிசிறி சாமியார் அவர் கையை மணிக்கட்டிலிருந்து முழங்கை வரை வெகுநேரம் பிடித்து விட்டாராம். இது பற்றி அந்த சன்னியாசி சற்குருவிடம் தெரிவித்தபோது அவர் ஒன்றுறியாதவர்போல் அப்படியா என்று கூறி பேசாமல் இருந்து விட்டார். அந்த சன்னியாசி சென்ற பிறகு தன்னுடன் இருந்த நெருங்கிய அடியார்களிடம், “அவர் (ஸ்ரீவிசிறி சாமியார்) வேலை முடிந்து விட்டது, சார், இனி அடியேனுடைய வேலைதான் பாக்கி,” என்றார். அதாவது அந்த சன்னியாசி காமத் தீயில் வெந்து கொண்டிருந்தார். ஆனால் தனக்கு எவ்வளவோ வசதி வாய்ப்புகள் இருந்தும் அதைத் தவறாகப் பயன்படுத்தாமல் இறை சேவையில் தொடர்ந்து மகான்களைச் சந்தித்து தன்னுடைய வேதனைக்கு விடிவு தேடினார். இப்போது ஸ்ரீவிசிறி சாமியார் அதை அறிந்து அவரிடமிருந்த காமத் தீயை விலக்கி விட்டார். தூய்மையான மனதுடன் திகழும் அவர் தொடர்ந்து நற்காரியங்களை நிறைவேற்றப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது சற்குரு வெங்கடராமன் போன்றவர்களின் பணியாக அமைந்து விட்டது. இவ்வாறு எத்தனையோ கொடிய தவறுகளைச் செய்து விட்டு மனம் திருந்தி சற்குருவிடம் அடைக்கலம் பெற்றோர் ஏராளம், ஏராளம். ஆனால், அவர்கள் செய்த எந்தத் தவறையும் அவர் வெளியிட்டது கிடையாது. அப்படி ஏதாவது ஒருவர் செய்த ஒன்றிரண்டு தவற்றை சற்குரு சுட்டிக்காட்டுகின்றார் என்றால் அந்த தவறு தற்போது யாரிடம் சொல்கிறாரோ அவருக்கு சம்பந்தப்பட்டது என்பது மறைமுகமான பொருள். அதை அந்த அடியார் உணர்ந்து தன் தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே நாம் சற்குருவிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டிய ஆயிரமாயிரம் பாடங்களில் ஒன்றாகும். ஒருமுறை ஒரு அடியார் ஸ்ரீவிசிறி சாமியாரின் இல்லத்தை அடைந்து அதன் வாயில் கதவைத் தட்டினார். உள்ளேயிருந்து வெளிவந்த ஸ்ரீவிசிறி சாமியார் ஒரு பொய்க் கோபத்தை வரவழைத்துக் கொண்டு, “யார் (உன்னைக்) கதவைத் தட்டச் சொன்னது?” என்ற ஒரு பொருள் பொதிந்த கேள்வியைக் கேட்டார். ஆனால் மகான்களின் செயல்களின் பின்னால் உள்ள ஆழ்ந்த கருத்தை அந்த அடியார் அறியாது, “குருவே, உங்களைப் பார்ப்பதற்காகவே கதவைத் தட்டினேன்,” என்று தன் யதார்த்த நிலையை எடுத்துரைத்தார். ஸ்ரீவிசிறி சாமியார் தன் வீட்டு வாயிலில் இருந்து அருணாசல மலையைக் காட்டி, “என்னைப் பார்ப்பதால் என்ன பயன், என் அப்பன் அருணாசலத்தைப் பார். அவர்தான் எனக்கே தந்தை (உனக்கும் யாவருக்கும் தந்தை இறைவன்தானே),” என்று கூறி பொறுமையாக இருந்து விட்டார். இவ்வாறு மகான்களின் செயல்களின் பின்னணியில் அமைந்துள்ள ஆழ்ந்த கருத்துக்களை புரிந்து கொண்டு தெய்வீகத்தில் முன்னேற வழிவகுப்பதே பெருநகர் திருத்தல மகிமையாகும்.

ஸ்ரீஜேஷ்டாதேவி பெருநகர்

சில இல்லங்களில் மூத்த பெண்களுக்கோ ஆண்களுக்கோ திருமணம் ஆகாமல் அடுத்து இளையவராக இருக்கும் ஆண்களுக்கோ பெண்களுக்கோ திருமணம் நிகழ்ந்து விடுவது உண்டு. காதல் திருமணங்கள் என்றில்லாமல் வேறு சில காரணங்களாலும் இத்தகைய அமைப்புகள் ஏற்படுவதுண்டு. இதனால் சம்பந்தப்பட்ட சகோதர சகோதரிகள் மன வேற்றுமை கொண்டு குடும்பத்தில் பலவிதமான குழப்பமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவர். உண்மையில் திருமணங்கள் யாவையுமே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது வேத வாக்கியமான உண்மையாக இருப்பதால் இவ்வாறு நடந்து முடிந்த திருமணங்கள் குறித்து கவலைப்படாது இனி மற்ற திருமணங்களை குறித்தே ஆலோசனை செய்து முடிவெடுப்பதே முறையாகும். சில குடும்பங்களில் மூத்த ஆண்களோ பெண்களோ பலவிதமான களத்திர தோஷத்துடன் திகழும்போது அடுத்துள்ளவர்கள் மணம் முடிப்பதால் தவறேதும் கிடையாது. இவ்வாறு முதலில் திருமணம் நிகழ்த்தியவர்கள் மற்றவர்களுக்கு உறுதுணையாய் இருப்பதையும் பல குடும்பங்களில் காண முடிகிறது அல்லவா ? ஆனால் நமது பாரம்பரிய வழக்கப்படி மூத்த பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ விரைவில் திருமணம் நிகழ வேண்டும் என்று நியாயமான விருப்பதுடன் திகழ்பவர்கள் பெருநகர் போன்று ஸ்ரீஜேஷ்டாதேவி சிறப்பாக எழுந்தருளியுள்ள தலங்களில் தங்களால் முடிந்த மங்கள மாங்கல்ய தானங்களை நிறைவேற்றுதல் சிறப்பு. இதை சத்சங்க பூஜையாக ஏற்று இலவச திருமணங்களை இத்தலத்தில் நிகழ்த்துவதும் சிறப்புடையதே. உயர்ந்த அந்தஸ்தில், பொறுப்பில் உள்ள பலரும் பூர்வ ஜன்ம விளைவுகளால் தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடமோ, தனக்குக் கீழ் பணி புரிபவர்களிடமோ முறைகேடாக நடந்து கொள்கிறார்கள். இது சம்பந்தமாக பலரும் அறிந்திருப்பார்கள் என்றாலும் இதற்கு பிராயசித்தம் அளிக்கக்கூடிய தலங்கள் பெருநகர் போன்று விரல்விட்டு எண்ணக் கூடிய தலங்களே உள்ளன. தங்களை மீறி நடக்கும் இத்தகைய தவறுகளிலிருந்து விடுபட மனதார நினைக்கும் பெரிய மனதுள்ளவர்கள் பெருநகர் தீர்த்தத்தில் நீராடி ஈர உடை மாற்றி இறைவனை குறைந்தது ஏழு முறை வலம் வந்து வணங்கி ஈர உடைகளை சுத்தம் செய்து உலர வைத்து ஏதாவது ஒரு தலத்தில் ஏழைகளுக்கு தானமளித்தல் சிறப்பு. தன்னால் பாதிக்கப்பட்ட மூத்த சகோதர சகோதரிகள் நல்வாழ்வு பெறவும் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பு. தாய் தந்தையர் நிறைவேற்றும் வழிபாடுகளை விட இளையவர்கள் நிறைவேற்றும் இத்தகைய வழிபாடுகளுக்கு பன்மடங்கு பலன்கள் பெருகும் என்பதும் உண்மையே. இதுவும் மூத்த திருமகள் அளிக்கக் கூடிய ஒரு அனுகிரகமே. சற்குருவின் இந்த அன்பு பிரயோக முத்திரையில் மட்டுமல்லாது மாதா அமிர்தானந்த மயி போன்ற அனைத்து குருமார்களின் அரவணைப்பிலும் இந்த சுகத்தை உணரலாம். வெறுமனே விரல்களைக் கோர்த்த செய்கை அல்ல அது, ஏங்கும் உள்ளங்களைத் தாவி அரவணைக்கும் ஒரு தாய் அளிக்கும் ஆறுதலை மகான்களின் அரவணைப்பில் நிச்சயமாக உணரலாம் என்பது உண்மையே. இத்தகைய அரவணைப்பின் மகிமையை உணர வைப்பதும் மூத்த அன்னையின் தொடர்ந்த வழிபாடாகும். இந்த அரவணைப்பில் மகிழ்ந்து மயங்கிக் கிடந்த குழந்தைதான் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

பெரிய பிள்ளையார் இவரே

கைகள் மட்டுமல்ல, அன்பைப் பரிமாற உதவும் எந்த சாதனமும் உயர்ந்த சாதனமே என்று பிரகலாதனை மடியில் அமர்த்தி அவன் உடலைத் தன் நாக்கால் நக்கி அன்பைத் தெரிவித்தவரே நரசிம்ம மூர்த்தி அல்லவா ? மகான்களின் விரல் அசைவிற்கு ஆயிரம் காரணம் இருக்கும் என்றால் நரசிம்ம மூர்த்தி போன்ற அவதாரங்களின் செய்கைகள் ஆயிரமாயிரம் உண்மைகளை உணர்த்துமே ? இம்முறையில் நரசிம்ம மூர்த்தி தன் அன்பின் வெளிப்பாட்டை பிரகலாதனை நாக்கால் நக்கியதன் மூலம் உணர்த்தினார் என்றாலும் தைத்ய குலத் தோன்றலான பிரகலாதனின் உடலில், இரத்தத்தில் அந்த குலத்திற்கே உரித்தான அசுர குணம் கலந்திருக்கும் அல்லவா ? அதன் சாயை கூட அந்தச் சிறந்த பக்தனின் உடலில் மிஞ்சி இருக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில்தான் நரசிம்மப் பெருமாள் பிரகராதலனை தன் நாக்கின் மூலம் அசுர குணம் அத்தனையும் உறிஞ்சி விட்டார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். இரண்யகசிபுவின் இரத்தத்தில் உள்ள அசுர எண்ணங்களை மட்டும் உறிஞ்சி இந்த பிரபஞ்சத்தைக் காத்தவர் மட்டும் அல்ல நரசிம்மர், தன் பக்தன் உடலிலும் அந்த அசுர எண்ணங்கள் ஒரு துளியும் மிஞ்சி விடாதபடி எச்சரிக்கையுடன் செயல்பட்டவரே நரசிம்மர் என்பதால் பெருமாள் அவதாரங்களில் மிக அழகிய அவதாரமாக ஸ்ரீநரசிம்ம அவதாரம் சித்தர்களால் புகழப்படுகிறது. இந்த அவதார மகிமையை வெறும் வார்த்தைகளால் உரைப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் நரசிம்ம அவதார மகாத்மியத்தை உலகிற்கும் அர்ப்பணிக்க ஸ்ரீரங்கம் ஸ்ரீகாட்டழகிய நரசிங்கப் பெருமாள் கோயிலில் உழவாரப் பணி நிகழ்த்தி இந்த பிரபஞ்சம் எங்கும் நரசிம்ம சக்திகளை ஊட்டியவரே நம் சற்குரு ஆவார். இந்த “காட்டழகு” என்றால் என்ன என்பதை உணர்த்துபவளே பெருநகர் மூத்த திருமகள் ஆவாள்.

ஸ்ரீசக்கர விநாயகர் பெருநகர்

உலகிலேயே பெரிய பிள்ளையார் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரே என்று உணர்த்துபவர்கள் சித்தர்கள். அது போல் உலகில் பெருவயிறு படைத்த கணபதி மூர்த்தியே ஸ்ரீபெருநகர் சக்கர விநாயகர் ஆவார். இவருடைய பெருவயிறு காரணமாக இத்தல பெயரும் அமைந்தது ஒரு காரணமாகும். பிரம்ம சக்திகளை அளிப்பவர் மூலவர் என்றாலும் அவ்வாறு மூலவர் அளிக்கும் பிரம்ம சக்திகள் முதலில் இந்தப் பெருவயிறு படைத்த கணபதியின் மூலமாகவே அளிக்கப்படுவதால் கணபதி மூர்த்திக்கு இந்த சிறப்பான பெயர் அமைந்தது. காரணம் பால் என்னதான் சக்தி, சத்து மிகுந்ததாக இருந்தாலும் அனைவரும் எல்லா சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் அன்புள்ளம் கொண்ட தாயைப் போல பிரம்ம சக்தியை அவரவர் கிரகிக்கும் அளவிற்கு மென்மையாக்கித் தருபவரே ஸ்ரீசக்கர விநாயகர் ஆவார். எளிமையாகப் புரியும்படி சொன்னால் எந்த கசப்பான மருந்தைக் கொடுப்பதாக இருந்தாலும் அதை சர்க்கரையோடு சேர்த்து அளிப்பதும் மருந்து புகட்டும் ஒரு முறை அல்லவா ?

சக்கரம் என்பதற்கு அற்புதமான அர்த்தங்கள் பல உண்டு. வாழ்க்கையில் எத்தகைய தாழ்ந்த நிலையில் இருப்பவர்களும் நிச்சயமாக ஒரு நாள் சக்கரத்தைப் போல் உயர்ந்த நிலைக்கு வருவோம் என்ற தன்னம்பிக்கையை வளர்ப்பவரே இந்த சக்கர விநாயக மூர்த்தி ஆவார். அதே போல வாழ்க்கையில் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் என்றாவது ஒரு நாள் தாழ்ந்த நிலையை சந்திக்க நேரிடும் அதனால் இப்போதிருந்தே அந்த நிலைக்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை வலிமைப்படுத்துபவரும் இவரே. மகான்களோ சக்கரத்தின் அச்சு, சக்கரம் எந்த நிலையில் இருந்தாலும் மாறாததைப் போல அதனால் சற்றும் பாதிக்கப்பட மாட்டார்கள். இத்தகைய மாறாத, அசைக்க முடியாத மன உறுதியை அளித்துக் காப்பவரும் சக்கர விநாயகரே. இவ்வாறு அசைக்க முடியாத மன உறுதியை தெளிவுபடுத்துவதற்காகவே இரு புறுமும் இரு வாகன மூர்த்திகளுடன் எழுந்தருளி உள்ளார் ஸ்ரீசக்கர விநாயகர். இந்த அச்சு மாறா நிலையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவோம். ஒரு முறை நமது ஆஸ்ரமத்தில் சமையல் அறையில் சமைத்த பொருட்கள் என்னதான் கவனமாக இருந்தாலும் வீணாவது பற்றி சற்குருவிடம் ஒரு முறையீடாக அளிக்கப்பட்டபோது சற்குரு, “என்னதான் நல்லவர்களை நாம் தேடிப் பிடித்து இங்கு சேவை செய்ய அனுமதித்தாலும் அவர்களையும் அறியாமல் சில தீய எண்ணங்கள் அவர்கள் மனதில் புகுந்து விடுவதால் ஏற்படும் விபரீதமே அது. எனவே சமையல் பணிக்கு நியமிக்கப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் அங்கு பிரவேசிக்க வேண்டாம் என்று ஒரு அறிவிப்பை எழுதி அங்கு தொங்கவிடும்படிக் கூறினார்.

அப்போதுதான் மறு கூத்து ஆரம்பமாகியது. சற்குரு கூறிய முறையில், “அனுமதி பெற்று உட்செல்க,” என்ற ஒரு அறிவிப்பு தயார் செய்யப்பட்டு சமையல் அறையில் ஒட்டப்பட்டது. அதைச் பார்த்த சற்குரு சிரித்துக் கொண்டே, “சார், உட்செல்க என்பது இலக்கணப்படி தவறு, உள்ளே செல்க அல்லது உள்ளே செல்லவும், என்பதே சரியான பதமாகும்,” என்று கூறினார். ஆனால், அந்த அடியாரோ சற்குருவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இது குறித்து சற்குருவிடம் தெரிவித்தபோது, “நாங்கள் போடுவது நல்ல விதை. இதை உங்கள் மனதில் போடவில்லை. உள்ளத்தில் போடுகிறோம். என்றைக்கு இருந்தாலும் இந்த விதை முளைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு,” என்று தெரிவித்தார்கள். இதை அப்போது அடியார்கள் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் தற்போது சற்குரு தெளிவுபடுத்திய விஷயங்களைப் புரிந்து கொண்டே ஆக வேண்டும். காரணம் சற்குரு அளித்த குசா என்ற பிரயோகத்திற்கு ஒரு தவறான வார்த்தையை அளித்த அதே அடியார் தற்போது குசா தத்துவத்தைப் பரப்புவதில் அக்கறையோடு திகழ்கிறார் என்றால் சற்குருவின் வார்த்தைகளில் விளையும் மதிப்பு இப்போது புரிகின்றது அல்லவா ? இந்த மகிமையை உணர்த்துபவர் சாதாரண வயிறு உடையவரா என்ன ? நல்லவன் கடவுளைப் பற்றி பேசுவது பிரமாதமில்லை, ஆனால் கடவுளை மறுப்பவனும் கடவுளைப் பற்றி பிரசாரம் செய்ய வைத்தால் அதுவல்லவா சாதனை. இந்த சாதனையை அநாயசமாக நிகழ்த்தக் கூடியவரே நம் சற்குரு.

ஸ்ரீபட்டுவதனாம்பிகை பெருநகர்

பிரம்மம் என்றால் என்ன என்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்பார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். ஆனால் பிரம்மம் என்பதை வார்த்தைகளில் வர்ணிக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு பிரம்மத்தை விவரித்துள்ளதால் அது எச்சிலாகி விட்டது என்பார். அது போல ஸ்ரீபிரம்மபுரீஸ்வரராக விளங்கும் இத்தல ஈசனின் மகிமையை மற்றவர்கள் புரிந்து கொள்வது கடினம் என்றாலும் மனைவிக்கு கணவனின் அருமை தெரியாதா என்ன ? அண்ட சராசரமே நடுநடுங்கும் ஸ்ரீநரசிம்மரின் சிம்ம கர்ஜனை கேட்டால். ஆனால் அந்த நரசிம்ம மூர்த்தியே சத்தியத்திற்கு கட்டுப்பட்டு, அன்பிற்கு முன்னால் பணிந்து நின்றதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா ? ஒரு முறை ஒரு முனிவர் ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்ட வேடன் ஒருவன், “சுவாமி, கண்ணை மூடி அமர்ந்திருக்கிறீர்கள். என்ன காரணமோ தெரியவில்லையே ? உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள்,” என்று கூறினான். அதற்கு அந்த முனிவரோ வேடனுக்கு சத்தியத்தின் மேல் இருந்த நம்பிக்கையை அறியாது, “அப்பா, நான் ஒரு மிருகத்தைப் பார்ப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறி நரசிம்மரின் உருவத்தைப் பற்றி வர்ணித்தார். அதைக் கேட்ட வேடன் ஆச்சரியத்துடன், “சிங்கத் தலையும் மனித உடலும் கொண்ட ஒரு மிருகத்தை நான் இதுவரை இக்காட்டில் பார்த்ததில்லை. ஆனால் நீங்கள் அந்த மிருகத்தைப் பார்ப்பதற்காகவே இங்கு அமர்ந்திருக்கிறீர்கள் என்று சொல்லும்போது அது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும். இன்று மாலை சூரியன் மறைவதற்குள் அந்த மிருகத்தைக் கட்டிக் கொண்டு வந்து உங்கள் கண் முன் நிறுத்துகிறேன்,” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டு விட்டான். மாலை வரை நரசிம்மரின் உருவத்தைக் காண முடியாததால் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலையில் உயிரைத் துறப்பதே உத்தமம் என்ற முடிவிற்கு வந்து ஒரு ஓணான் கயிற்றில் சுருக்குப் போட்டு அதில் தன் கழுத்தை மாட்டி உயிரை விடத் துணிந்தான். அப்போது நரசிம்ம மூர்த்தி அவனுக்கு காட்சி அளிக்கவே அவர் கழுத்தில் அந்த ஓணான் கயிற்றைப் போட்டுக் கட்டி அந்த முனிவர் முன் இழுத்து வந்தான் வேடன். இவ்வாறு வேடனின் சத்திய வாக்கிற்கும் அன்பிற்கும் கட்டுப்பட்டு நாய்க் குட்டியைப் போல் வேடனின் பின் பரபிரம்ம நாயகன் சென்றார் என்றால் பெருநகரில் ஸ்ரீபட்டுவதனாம்பிகையின் அன்பிற்கு அவர் கட்டுப்பட மாட்டாரா என்ன ? இத்தலத்தில் அம்பிகையை அன்புடன் வணங்கி நிறைவேற்றும் வழிபாடுகள் அனைத்தும் பரபிரம்மத்தை பக்தர்கள் அறிய துணை புரியும் என்பது உண்மையே.

ஸ்ரீராமானுஜர் சன்னதி ஸ்ரீரங்கம்

சற்குரு இரு கை விரல்களைக் கோர்த்து கட்டை விரல்கள் ஒன்றுக்கொன்று தொடும் வகையில் அமைந்துள்ள சிவசக்தி ஐக்ய முத்திரையை சாதாரண அடியார்களும் பயன்படுத்தலாமா என்று பலரும் வினவியுள்ளார்கள். ஸ்ரீதட்சிணாமூர்த்தி தன் கட்டை விரல் நுனியையும் ஆட்காட்டி விரல் நுனியையும் தொட்டுக் கொண்டவாறு அமைக்கும் சின்முத்திரையை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்பார் நம் சற்குரு. காரணம் அனைத்து உயிரினங்களுக்கும் குருவாய் அமையும் தகுதி இறைவன் ஒருவனுக்கே உண்டு என்பதே அதன் காரணம். இதே விளக்கம் நம் சற்குரு அமைத்துள்ள முத்திரைக்கும் பொருந்தும். ஆண் பெண் என்று வேறுபாடு கடந்த, ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்டு, பஞ்சபூதங்களுக்கு அதீதமாய் விளங்குவதே சற்குருவின் இந்த முத்திரை. ஸ்ரீஇடியாப்ப சித்தர் சிறுவன் வெங்கடராமனுக்கு பயிற்றுவித்து அதைச் சிறுவன் தொடர்ந்து பயின்ற காயத்ரீ முத்திரைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவையே. ஆனால் தற்கால மனிதர்களின் கடவுள், சற்குருவின் மேலுள்ள நம்பிக்கையை கணக்கில் வைத்தே நம் சற்குரு 51 காயத்ரீ முத்திரைகளை அறிவித்துள்ளார்கள். இந்த முத்திரைகளைப் பயின்று வந்தாலே ஆன்மீகக் கடலில் எளிதில் மிதக்கலாம் என்றால் இதை விடப் பெரிய சாதனை ஒன்று உண்டா என்ன ? பிரம்ம ஞானத்தையே புகட்டக் கூடியவை இந்த முத்திரைகள் என்பதில் ஐயமில்லை. மகான்களின் கருணைக்கு ஓர் உதாரணமாக ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கொண்டால் அவருடைய மனைவியோ ஓர் அடங்காப் பிடாரியாக பேயைப் போல் இருந்தாள்.

ஒரு வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தையை ஒரு காமுகன் கற்பழிக்கிறான் என்றால் இது நிச்சயம் ஒரு மனிதனுடைய செய்கையாக இருக்க முடியாது, காம வெறியைத் தூண்டக் கூடிய ஒரு பேயின் வேலையாகத்தான் இது இருக்க முடியும். அத்தகைய பிசாசையே தன் மனைவியாகப் பெற்ற ஸ்ரீராமானுஜரோ தன் மனைவிக்குப் பெற்றுத் தந்தது முக்தி என்ற பரிசாகும். அன்பு மிக்க தன் தாய் முக்தி அடையவே திருஅண்ணாமலையை பத்து ஆண்டுகள் காலம் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் தொடர்ந்து கிரிவலம் வர வேண்டி வந்தது என்றால் ஸ்ரீராமானுஜர் பேய்க்கு நிகரான தன் மனைவிக்கு முக்தியைப் பெற என்ன பாடுபட்டிருக்க வேண்டும். இத்தகைய மகான்களே ஸ்ரீபட்டுவதனாம்பிகையை வேண்டியே தங்கள் பக்தி நிலையைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்றால் அன்னையின் அன்பு எத்தகைய மகிமை உடையதாக இருக்கும். பல்லாயிரக் கணக்கான பட்டுப் பூச்சிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தால்தான் ஒரு பட்டுப் புடவை உருவாகும் என்றால் அந்தப் பட்டையே உடலாகக் கொண்டு ஒரு அம்பிகை விளங்குகின்றாள் என்றால் அந்த அன்னையின் மேனி எத்தகைய தியாகச் சுடராய்ப் பிரகாசிக்கும்.

ஜோதி ஜோதி மகாஜோதியே

திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தின்போது பத்து நாட்கள் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சிகள் திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள இடங்களிலும் பள்ளிகளிலும் நடைபெறும். அதனால் அனைவரும் அடையாள அட்டையுடன் (ID card) திகழ வேண்டும் என்பது ஆஸ்ரம விதி. ஒரு அடியாரின் மனைவி அடையாள அட்டைக்கான புகைப்படத்தை எடுத்து வரவில்லை. சற்குரு தெரிவித்திருந்தால் உடனே போட்டோ ஸ்டுடியோ சென்று புகைப்படம் எடுத்து வந்திருப்பார்கள். ஆனால் சற்குரு நடத்தும் நாடகம் யாரறிவார் ? ஒரு சக்கரவர்த்திக்கு ராணியின் பெயரை அந்த அடியார் பெற்றிருந்தார். ஆனால், அந்த ராணிக்கும் ஒரு மனக்குறை இருக்கத்தான் செய்தது. தன் கணவர் தன்னைப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதே அது. லட்சக் கணக்கில் போட்டோவிற்கு மட்டும் செலவழிக்கத் தயாராக இருந்த அவர் தன்னுடைய மனைவியை போட்டோ எடுக்க முன்வருவாரா என்ன ? அதனால் இந்த சந்தர்ப்பத்தில் சற்குரு ஒரு அடியாரை அழைத்து அந்த பெண்மணியை போட்டோ எடுக்க ஏற்பாடு செய்தார். அந்த பெண்மணியின் உருவத்தை சரி பார்த்து (frame the view) அவர் கணவரிடம் காமிராவைக் கொடுக்க அவர் அதை க்ளிக் மட்டும் செய்யவே ஸ்டுடியோவில் போட்டோ தயாரானது. அத்துடன் அந்த புகைப்படத்திற்கான நெகடிவும் அந்த அடியாரிடம் கொடுக்கப்பட்டது.

உண்மையில் தன் கணவர் தன்னைப் படம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அந்த அடியார் மனதில் பல பிறவிகளில் ஊறிக் கிடந்த விருப்பமே. அடியார்களின் இதயங்களை ஊடுருவிப் பார்ப்பவர் அல்லவா நம் சற்குரு. இவ்வாறு பல பிறவிகளில் இறுகிக் கிடக்கும் ஏக்கங்களை, எண்ணப் படிவுகளைக் களைந்து அடியார்களின் துயர் தீர்த்ததால்தான் சற்குரு இன்றும் அடியார்களின் இதயத்தில் நிழல் படமாக அல்ல நிஜமாகவே நிரந்தரமாக அமர்ந்து விட்டார். இவ்வாறு அடியார்களின் சிறு சிறு ஆசைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்ய மலையளவு பிரயத்தனம் செய்யும் சற்குருவின் தரிசனம் கிட்டவில்லையே என்று வருந்தும் அன்பர்கள் பெருநகர் திருத்தலத்தில் அம்பிகைக்கும் இறைவனுக்கும், சுமங்கலிகளுக்கும் பட்டு வஸ்திரங்களைத் தானமாக அளித்தலால் பல பிறவிகளில் படிந்துள்ள எண்ணப் படிவுகளைக் களைய இத்தகைய தான தர்மங்கள் உறுதுணையாய் அமையும். சற்குருவின் வழிகாட்டுதலைப் பெறும் எளிய முறையே இது.

பெருநகர் சிவாலயம்

தாய் என்பவள் தன் குழந்தை இப்பிறவியில் கொள்ளும் விருப்பத்தை நிறைவேற்ற ஓரளவு துணை நிற்பவள். ஆனால் சற்குருவோ தன் அடியார்கள் பல பிறவிகளில் சேர்த்த வினைப் படிவுகளைக் களையத் துணை நிற்பவர். மனிதர்களின் விருப்பங்களும் நிறைவேறாத ஆசைகளும் அவர்களின் நிழல்களாக வடிவெடுப்பதால் நிழல் விழாத மனிதனைக் காண இயலவில்லை, இதே காரணத்தால்தான் ஸ்ரீவள்ளலார் சுவாமிகள் நிழல் விழாத சரீரத்தைப் பெற்றிருந்தார். நிழல் தியானம் என்பது இவ்வாறு அவரவர் நிழல்களை ஆராய்ந்து நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றுவதே ஆகும். நிறைவேற்ற முடியாத ஆசைகளை என் செய்வது ? இதற்கு உதவுவதே சற்குருவின் வழிகாட்டுதலாகும். அல்லது பெருநகர் திருத்தலத்தில் இயற்றும் வழிபாடுகளாகும். சற்குருவின் அரவணைப்பு என்பது ஆண் பெண் நிலைகளைக் கடந்த அதீத உறவு முறையாகும். இந்த சுகத்தை மற்றவர்களும் உணர உதவி புரிவதே ஸ்ரீபட்டுவதனாம்பிகையின் சன்னதியில் நிகழ்த்தும் வழிபாடுகளாகும். கற்பூர தீபம் என்பது நிழல் இல்லாமல் ஒளியை மட்டுமே அளிக்கக் கூடியது. அதனால்தான் எல்லா திருத்தலங்களிலும் இறைவனை கற்பூர ஜோதியால் ஆராதிக்கிறோம். திருக்கோயில்களில் குறிப்பாக பெருநகர் திருத்தலத்தில் எல்லாக் காலங்களிலும் கற்பூர ஜோதியை ஆராதனை செய்து வழிபடுதலால் தங்கள் நிழலில் படிந்துள்ள ஏக்கங்களை அறியும் மார்க்கம் பிரசாதமாக கிட்டும். கற்பூர புத்தி என்பது உடனே பற்றிக் கொள்ளும் அதாவது விரைவில் புரிந்து கொள்ளும் தன்மையை மட்டும் குறிப்பதன்று. ஒன்றுமே மிச்சமில்லாமல் அனைத்தும் ஜோதி பரிமாணம் கொள்வதைப் போன்று நான் என்ற எண்ணம் சிறிதும் இன்றி அனைத்தையும் மற்றவர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கும் சற்குருவின் தியாகத்தைக் குறிப்பது. கற்பூர ஜோதிக்கு நிழலும் கிடையாது, புகையும் கிடையாது. இந்த தியாக ஜோதியே பூச ஜோதி, மகா ஜோதி. பூச நட்சத்திர தினத்தன்று அன்னதானம் போன்ற வழிபாடுகளை இயற்றி இறைவனை மகிழ்விப்பதும் தங்கள் நிழலைப் பற்றி தாங்களே அறியும் ஞானம் விருத்தியாக துணை நிற்கும். ஸ்ரீரெங்கநாதரின் அரவணைப் பாயசம் உலகப் பிரசித்தம். இதன் மகிமைகளை விளக்கப் புகுந்தால் அதுவே ஒரு புராணமாகிவிடும் என்பதால் சுருக்கமாக அதை இங்கு குறிப்பிடுகிறோம். அரவம் அதாவது பாம்பு மிகவும் வேகமாகச் செயல்படக் கூடியது என்பது விஞ்ஞானம் அறிந்த ஒன்றே. ஆனால் அது தீய சக்திகளை ஈர்ப்பதிலும் அதே வேகத்துடன் இயங்கும் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாகும்.

அரவணைப் பாயசம் என்பது பாம்பைப் போல் வேகமாகச் செயல்பட்டு ஒருவரின் உடலை இறுக்கி அவரிடமுள்ள தீய சக்திகளை எல்லாம் அகற்றிய பின்னர் அவருக்கு நொடிப் பொழுதில் நற்சக்திகளை ஊட்டுதல் என்று பொருள். இவ்வாறு தாயினும் சாலப் பரிந்து நற்சக்திகளை புகட்டுவதில் ஸ்ரீரெங்கநாதருக்கு ஈடு இணை எவருமில்லை. இக்காரணம் பற்றியே ஸ்ரீரெங்கநாதரின் விக்ரஹத்தை நம் ஆஸ்ரமத்தில் அருணாசல ஈசனின் தரிசனம் பெறுமாறு அமைத்து ஸ்ரீஅருணாசல ஈசனின் அனுகிரகத்தைப் பெறுவதில் அடியார்கள் சற்றும் தாமதித்தல் கூடாது என்ற உயர்ந்த நோக்கில் நம் சற்குரு அமைத்துள்ளார்கள் என்றால் என்னே நம் சற்குருவின் கருணை மாமழை ! பெருநகர் திருத்தலத்தில் ஸ்ரீமகாவிஷ்ணுவையும் அஷ்ட நாகங்களையும் பிரார்த்தனை செய்து பாசிப்பயறு (பச்சைப் பயறு, சிறுபருப்பு), பால், நாட்டுச் சர்க்கரை கலந்த பாயசத்தை தானமாக அளித்தலால் அரவணைப் பாயச தானப் பலனை அடியார்கள் பெறுவார்கள். ஸ்ரீரெங்கநாதர், அஷ்ட நாகங்கள் எழுந்தருளிய திருத்தலங்களில் எந்நாளிலும் இத்தகைய அரவணைப் பாயச தானத்தை அளிக்கலாம் என்றாலும் அஷ்டமி திதிகளில் நிறைவேற்றப்படும் இத்தகைய தானத்திற்கு மகிமை அதிகமே. இவ்வாறு நூற்றுக் கணக்கான விதங்களில் பாயசத்தைத் தயாரித்து லட்சக் கணக்கான திருஅண்ணாமலை கிரிவல அடியார்களுக்குத் தானமாக அளித்தவரே நம் சற்குரு. காரணம் அரங்கனின் தியானமும் அரவணை தானமும் பக்தியை வளர்க்கும் சீரிய சாதனங்களே.

பெருநகர் சிவாலயம்

இறைவனுக்கு அஷ்டோத்திர அர்ச்சனை செய்வது உண்டு, சஹஸ்ர நாம அர்ச்சனைகளும் உண்டு. அதாவது இறை மூர்த்திகளின் குணாதிசயங்களைக் குறிக்கும் 108, 1001 நாமங்களைக் கூறி இறைவனைப் புகழ்வதையே இத்தகைய பதங்களால் குறிக்கிறோம். பலருக்கும் இத்தகைய அர்ச்சனைகளின் பொருளே தெரிவதில்லை. பொருள் தெரியாவிட்டாலும் இவை இறைவனின் அருமை பெருமைகளை உரைப்பவையே என்ற மன திருப்தி கொண்டாலே போதும். நாளடைவில் அவற்றின் பலன்களை இறைவன் கைமேல் பலனாக வர்ஷிப்பார். நாம் கூறும் நாமத்தின் பொருள் தெரிய வேண்டும் என்று விரும்புவோர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அத்தகையோர் இத்தலத்தில் ஆத்தி சூடி என்ற அற்புத துதியை ஒவ்வொரு இறை மூர்த்திக்கும் ஒரு துதியாக, “அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம் ...”, என்று வாய்விட்டு கூறி ஓதுவதும் அற்புத வழிபாடாக பெருநகர் ஈசனால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இத்தலத்தில் அபூர்வமாக சூரிய பகவான் மற்ற நவகிரகங்களை விட உயர்ந்து உள்ளதால் இத்தலத்தில் நவகிரக சன்னதியில் ஆத்தி சூடியை ஆரம்பித்து ஓதுதல் சிறப்பாகும். முதல் ஆத்தி சூடி பத்து எழுத்துக்களுடன் சூரிய பகவானுக்கு உகந்ததாக அமைகிறது அல்லவா ? அது மட்டுமல்லாமல் ஆத்தி சூடியின் மொத்த சூத்திரங்களும் 109ஆக அமைந்து சூரியனை அலங்கரிப்பதும் இதன் சிறப்பாகும். பெருநகர் திருத்தலத்தில் ஆரம்பிக்கும் இந்த ஆத்தி சூடி வழிபாட்டை மற்ற தலங்களிலும் இறை மூர்த்திகளின் முன்னிலையில் ஓதி வரலாம் என்பதும் ஏற்புடையதே. நாளடைவில் அடியார்கள் தங்கள் மனதில் பதியும் அல்லது தங்களுக்குப் பிடித்த ஒரே ஒரு ஆத்தி சூடியையோ அல்லது 10, 12 தொகுப்பு வரிகளையோ திரும்ப திரும்ப பாடி வருவதும் ஒரு அற்புத வழிபாடாக அமையும் என்பது உண்மையே. ஆத்தி சூடிய சிவபெருமானுக்கு மட்டுமன்றி பிள்ளையார் முருகன் என எந்த மூர்த்திக்கும் இந்த ஆத்தி சூடி வரிகளைப் பாடி, அர்ச்சித்து பயனடையலாம் என்பது உண்மையே. மற்ற மொழிகளில் திறமை பெற விரும்புபவர்களும் முதலில் ஆத்தி சூடியை ஓதி வருவது பிற மொழிகளைக் கற்கும் திறமையைப் பெருக்கும் என்பதில் ஐயமில்லை.

சரஸ்வதிதானே எல்லா மொழிகளுக்கும் குரு. சரஸ்வதியே மகிழும் துதியே ஆத்தி சூடி என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். பெருநகர் திருத்தலம் மட்டுமல்லாது சூரியன் தனிச் சன்னதி கொண்டு விளங்கும் அவிநாசி, கச்சி ஏகம்பம் போன்ற தலங்களிலும் சூரிய பூஜைகள் நடக்கும் எண்ணற்ற தலங்களிலும் ஆத்தி சூடியை ஓதுவது சிறப்புடையதே. ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்று நம் பெரியோர்கள் குறிப்பதைப் போல அனைவரும் வேதத்தை ஓத முடியாவிட்டாலும் ஆத்தி சூடியை தினமும் ஏதாவது ஒரு தலத்தில் ஓதி வந்தாலே போதும் வேதம் ஓதிய பலன் கிட்டும் என்றால் இதன் சிறப்புதான் என்னே ? முற்காலத்தில் மாணவர்கள் முதலில் ஆத்தி சூடியை ஓதியவாறே திருத்தலங்களில் இறைவனை தரிசிக்கும் பழக்கம் இருந்து வந்தமையால்தான் மாணவர் ஆசிரியர் சமுதாயத்தில் ஒற்றுமை நிலவியது. ஆத்தி சூடியை ஓதிய பின்னரே மாணவர்கள் பள்ளிக்குச் சென்று பாடம் பயில்வர். எனவே கல்வி நிறுவனங்களில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வழிபாடே ஆத்தி சூடி ஓதி வருதலாகும். சஹனாவவது என்ற வேத மந்திரத்தின், சாந்தி துதியின் தமிழ் வடிவமே ஆத்தி சூடி. ஆத்தி சூடியின் ஒன்பதாம் மகா வாக்கியமான ஐயம் இட்டு உண் என்பதை வேத வாக்கியமாகக் கொண்டு இந்த உலகை வில்லாய் வளைத்தவரே நம் சற்குரு. ஒன்பதிற்கு மிஞ்சிய எண்ணோ முருகனுக்கு மிஞ்சிய தெய்வமோ இல்லை. இந்த மகா வாக்கியம் குறிக்கும் எட்டிற்கு உரித்தான சனீஸ்வர பகவான் நம் சற்குருவின் லக்னத்தில் அமர்ந்தது ஏதோ எதேச்சையாக அமைந்தது அல்ல என்பதற்கு இதுவும் ஒரு சான்றே. சற்குருவின் சிவ சக்தி ஐக்ய முத்திரையும் இதன் விளக்கமாய் அமைந்ததே, அமைவதே.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam