மூர்த்தி தீர்த்தம் தலம் முறையாக தரிசிப்போர்க்கு சற்குரு வாய்க்கும் பராபரமே !!
ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
ஸ்ரீ துர்கா தேவி. துடையூர் சிவத்தலம். ஒன்பது மண் கலசங்களில் காவிரி கங்கை நீரை நிரப்பி ஒன்பது பெண்கள் ஒன்று கூடி லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து துர்கைக்கு அபிவேஷம் செய்து வந்தால் கணவனின் தீய பழக்கங்கள் அகலும். உடல் அரிப்பு நோய்கள் விலகும்.
விருந்து கண்களுக்கு மட்டும் அல்ல, காதுகளுக்கும்தான்.
ஸ்ரீலட்சுமி நாராயண மூர்த்தி, துடையூர், திருச்சி. வெள்ளிக் கிழமைதோறும் வீட்டை பசுஞ் சாணத்தால் மெழுகி நெய் தீபங்கள் ஏற்றி அகத்தியரின் லட்சுமி துதியை ஓதி வந்தால் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாகும். பசுஞ் சாணத்தால் மெழுக முடியாத அளவிற்கு நவீன வீடுகளில் வசிப்போர் குடிசை வீடுகளில் வசிப்போருக்கு அத்தகைய வசதிகளை ஏற்படுத்தித் தருவதும் நலமே அல்லது அவர்களுக்கு ஒன்பது கஜ புடவைகளை ரவிக்கையுடன் வெள்ளிக் கிழமைகளில் தானமளித்தலும் நலமே.
ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயில், பெருவளநல்லூர், லால்குடி அருகே. இத்தல பெருமாள் மூர்த்திக்கு சம்பங்கி மாலைகள் அணிவித்து வழிபட்டு வந்தால் நிலத் தகராறுகள் அகலும். நியாயமான வழக்குகளில் வெற்றி கிட்டும். தொடர்ந்த வழிபாடு அவசியம்.
துடையூர் திருத்தல அம்மனுக்கு 21 முழம் மல்லிகைப் பூவை தங்கள் கைகளால் கட்டி அளித்து வந்தால் கூடா நாட்களில் பருவம் எய்திய பெண் குழந்தைகளைப் பற்றிய குழப்பங்கள் தணியும். உரிய மண வாழ்க்கை அமைய தேவி அருள்புரிவாள். குடும்ப ஒற்றுமையைப் பேணும் தெய்வம்.
ஸ்ரீமீனாட்சி சுந்ரேஸ்வரர், துடையூர் திருத்தலம். திருமணம் ஆகாமல் பலருடைய கேலிப் பேச்சுக்கு ஆளானோர் உதிர்ந்த புட்டு இத்தலத்தில் வியாழக் கிழமைதோறும் தானம் அளித்தல் நலம்.
ஸ்ரீசரஸ்வதி, துடையூர் திருத்தலம். பரீட்சைக்கு படிக்கும் மாணவர்கள் பரீட்சைக்குப் போகும் முன் தங்கள் பெற்றோர்களின் காலில் விழுந்து வணங்கி அவர்கள் ஆசி பெற்று சென்றால் பதில்கள் தெரிந்தும் சரியாக விடையளிக்க முடியாத சூழ்நிலை உருவாகாது. அவ்வாறு தாய் தந்தையை வணங்க முடியாத சூழ்நிலையில் உள்ள மாணவர்கள் இந்த தேவியை தியானித்தால் உரிய வழிகாட்டுதலைப் பெறுவார்கள்.
அண்டமி திருத்தலம், பட்டுக்கோட்டை. இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவையும் சிறப்பாக தாங்கள் பிறந்த நட்சத்திரத்தைப் பற்றிய அறிவையும் அளிக்க வல்ல அற்புத பழமையான தலமே அண்டமியாகும்.
ஸ்ரீதுர்கை அம்மன், அண்டமி திருத்தலம். வெள்ளிக் கிழமை ராகு கால நேரத்தில் எலுமிச்சை மாலையை இத்தேவிக்கு அளித்து வணங்கி வந்தால் கணவன் வீட்டில் வசிக்கும் ஆண்களால் ஏற்படும் வெளியில் சொல்ல முடியாத பிரச்னைகளுக்கு விமோசனம் கிட்டும். தனித்து வாழும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆம்மன்.
ஸ்ரீகணபதி மூர்த்தி, அண்டமி திருத்தலம். சிலருக்கு சளியுடன் இரத்தம் வெளியேறும் நோய் ஏற்படுவதுண்டு. பல சமயங்களில் இதற்கான காரணங்களை மருத்துவர்களாலும் உறுதியாகச் சொல்ல முடியாது. இவ்வாறு நோய் நொடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அண்டமி கணபதி மூர்த்தியை வணங்கி பூரண கொழுக்கட்டைகளை தானம் அளித்து வந்தால் காரணம் தெரியாத நோய்களிலிருந்து நிவாரணம் கிடடும்.
பட்டுக் கோட்டை அருகில் உள்ள அண்டமி சிவத்தல தெப்பக் குளம். இப்பூவுலகில் பிரம்மா எழுந்தருளும்பொதெல்லாம் இத்தல திருக்குளத்திலிருந்து தாமரை மலர்களை எடுத்து இறைவனை அர்ச்சித்த பின்னரே பிரம்மா மற்ற திருத்தலங்களுக்கு விஜயம் செய்வாராம். எனவே புதிதாக வேலைக்குச் செல்பவர்களும் புதிய தொழில்களை ஆரம்பிப்பவர்களும் இத்தல ஈசனுக்கு 51 தாமரை மலர்களை அளித்து வணங்குதல் நலம்.
ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ய சுவாமி, அண்டமி, பட்டுக்கோட்டை சிவத்தலம். விளாம்பழங்களை யானைக்கு அளித்து வந்தால் இரவில் கண் விழித்து படிக்கும் மாணவர்களும் இரவு நேரத்தில் பணி புரிபவர்களும் அனுபவிக்கும் கண்ணெரிச்சல் நோய் தணியும். குறைந்தது 12 விளாம்பழங்களை அளித்தல் நலம்.
ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி, அண்டமி, பட்டுக்கோட்டை. தற்காலத்தில் பலருக்கும் வாயில், நாக்கில் புண் ஏற்பட்டு பல மாதங்களாகியும் மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் போவதுண்டு. அத்தகையோர் கறந்த பாலை இத்தல ஈசனுக்கு ஒரு நாழிகை நேரத்திற்குள் (24 நிமிடங்கள்) அபிஷேகம் செய்து வழிபட்டால் அற்புத பலன்களைக் கண் கூடாகக் காணலாம்.
ஸ்ரீஅண்ணாமலை ஈசன், அண்டமி, பட்டுக்கோட்டை. முருகப் பெருமான் பிரம்ம மூர்த்தியை சிறையில் அடைத்து விட்டு தானே படைப்புத் தொழிலை மேற்கொண்டபோது அவருக்கு ஜீவ அணுக்கள் இரகசியங்களை சிவபெருமான் புகட்டிய இடமே தற்போதைய அண்டமி சிவத்தலமாகும். DNA defects என்னும் பாரம்பரிய நோய் பிரச்னைகளால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் இங்கு இறைவனை வேண்டி இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி வந்தால் இறைவன் அவர்களுக்கு நிவாரண முறைகளை அளித்துக் காப்பார்.
ஸ்ரீகல்யாண சுந்தரி அம்மன், கூகூர், லால்குடி. தற்காலத்தில் ஆண் குழந்தைதான் வேண்டும் என்று சிலரும், பெண் குழந்தைதான் பிடிக்கும் என்று சிலரும் விருப்பத்தைக் கொண்டுள்ளனர். அவர்களுடைய எதிர்பார்ப்பிற்கு மாறாக குழந்தைகள் பிறக்கும்போது அதனால் அவர்கள் குடும்பத்தில் பல குழப்பங்கள் ஏறப்டுவதுண்டு. வருவதை ஏற்றுக் கொள்ளும் மனோ நிலையை அளிக்கும் அன்னையே கூகூர் அம்பிகை ஆவாள். தங்கள் கையால் தொடுத்த செவ்வந்தி மாலையை அம்பிகைக்கு அளித்து வணங்கினால் நலம் பெருகும்.
ஸ்ரீதட்சிணா மூர்த்தி, கூகூர், லால்குடி. பலரும் காசி, பூரி திருத்தலங்களுக்கு யாத்திரை போவதற்காக என்னதான் ஏற்பாடுகள் செய்தாலும் அது ஏதாவது ஒரு காரணத்தினால் நிறைவேறாமல் போய்விடுகிறது. இவ்வாறு தெய்வீக காரியங்களை உறுதியுடன் நிறைவேற்ற உதவும் மூர்த்தியே கூகூர் தட்சிணா மூர்த்தி ஆவார்.
ஸ்ரீநந்தியெம்பெருமான், கூகூர் சிவாலயம், லால்குடி. மாடுகளுக்கு மூக்கணாங் கயிறு போடுவது தவறான செயலாகும். பலரும் மாடுகளை அடக்குவதற்கு அது ஒன்றுதான் வழி என்று வாதிட்டாலும் அதனால் விளையும் வேதனை அதிகம். இவ்வாறு "அடங்காத" மாடுகளை வைத்திருப்போர் இத்தல நந்தி மூர்த்தியிடம் பிரார்த்தனை செய்து வந்தால் மூக்கணாங் கயிறு இல்லாமலே அமாடுகளின் மூர்க்கத் தனம் குறையும். அடங்காப் பிள்ளைகளும் அடங்கும்.
ஸ்ரீகுஹேஸ்வர மூர்த்தி, கூகூர், லால்குடி. என்னதான் பூஜைகள் செய்தாலும், தீர்த்த யாத்திரைகள் சென்றாலும் பலருக்கும் பக்தி ஏற்படுவதாகவே தோன்றாது. அந்நிலையில் இத்தல இறைவனை வணங்கி தாமே அரைத்த சந்தனத்தை சதயம் நட்சத்திர நாட்களில் இறைவன் அபிஷேகத்திற்கு அளித்து வந்தால் நன்னிலை அடைவர்.
ஸ்ரீகணேச மூர்த்தி, நகர் சிவத்தலம், லால்குடி. இப்பூவுலகில் முதல் சந்தனக் காப்பு வளர்பிறை சதுர்த்தி திதியில் இம்மூர்த்திக்கே நிறைவேற்றப்பட்டது. அப்படியானால் இந்த பிள்ளையார் மூர்த்தியின் காலம் கடந்த மகிமையை என்னவென்று சொல்வது ? எனவே புது முயற்சிகள் வெற்றி பெற வளர்பிறை சதுர்த்தி திதிகளில் தாமே அரைத்த சந்தனக் காப்புடன் இவரை வழிபடுவது நலம்.
ஸ்ரீமகாவிஷ்ணு மூர்த்தி, நகர், லால்குடி. பொதுவாக கோஷ்டத்தில் வீற்றிருக்கும் விஷ்ணு மூர்த்திகளை வழிபடுவதால் உரிய காலத்தில் நிறைவேற வேண்டிய திருமண பாக்கியம், குழந்தைச் செல்வம், வேலை வாய்ப்பு போன்றவை முறையாக அமையும்.
ஸ்ரீஅஷ்டோத்திர சண்டேச மூர்த்தி, நகர், லால்குடி. மிகவும் அபூர்வமான சண்டேச மூர்த்தி. 108 கிரீடங்களை தரித்து இம்மூர்த்தி அருள்வதால் அஷ்டோத்திர சதக்ரீட சண்டேச மூரத்தி என்றும் இவரை அழைப்பதுண்டு. முற்றின தேங்காய்களைத் துருவி சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்குத் தானம் அளித்து வந்தால் தலைவலி, கபால நோய்கள் தீரும். பிறர் நம்முடைய காரியங்களில் தேவையில்லாமல் தலையிட்டு தொந்தரவு அளிக்க மாட்டார்கள்.
லால்குடி அருகே நகர் திருத்தலத்தில் ஸ்ரீதட்சிணா மூர்த்தி எதிரே அருள்பாலிக்கும் சப்தகன்னிமார்கள். தங்கள் கையால் அரைத்த மஞ்சளை இம்மூர்த்திகளுக்கு பூசி பிரார்த்தித்து வருதலால் தகுதிக்கு ஏற்ற மணமகனை வாழ்க்கைத் துணையாக அடைய வழி பிறக்கும். திருமணத் தோஷங்களைக் களையும் அனுகிரக தேவிகள். கன்னிப் பெண்களின் கண்கண்ட தெய்வங்கள் இவர்கள். இவர்களின் தரிசனமே மிகவும் அபூர்வமானது.
லால்குடி அருகே நகர் சிவாலயம்
முள்ளின் கூர்மை, ரோஜாவின் நறுமணம் போன்றவை பூலோகத்தில் தோன்றியவை அல்ல. இவை அனைத்தும் தேவ லோகத்தில் தோன்றி மகான்கள், சித்தர்களால் பூலோக மக்களுக்கு நல்வரங்களாக அளிக்கப்பட்டவையே. நகர் திருத்தலத்தில் உள்ள அபூர்வமான முள்ளில்லா வில்வ மரம் தேவ லோகம் தோன்றுவதற்கு முன் தோன்றியது என்றால் இதன் தொன்மையைப் பற்றி மனிதர்கள் வரையறுக்க இயலுமா ?
இத்தகைய தொன்மையான தலத்தில் திருப்பணிகள் இயற்றி இறைவனை அப்பிரதட்சிணமாக வலம் வந்து “அகர்மம்” என்னும் வினை சக்திகளை புனருத்தாரணம் இயற்றியவரே நம் சற்குரு ஆவார். அகர்ம வினை சக்திகளை புனருத்தாரணம் செய்யும் சக்தி பெற்ற ஒரே மகான் குருமங்களகந்தர்வ லோகத்திலிருந்து தோன்றிய நம் சற்குரு மாத்திரமே என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும்.
தோல் நோய்கள் தீரவும், புதுப் பணிகளில் புகழ் பெறவும் உதவும் தெய்வ மூர்த்தி. இத்தல வில்வ மரத்திற்கு மஞ்சள் பூசி மரத்திற்கு நீர் வார்த்து 21 முறைக்குக் குறையாமல் வலம் வந்து வழிபடுதல் நலம்.
திருவீழிமிழலை, திருவாரூர். கடுமையான கடன் தொல்லைகளால் வருந்துவோர் அரிசி குருணையுடன் சர்க்கரை சேர்த்து கோயில் பிரகாரத்தில் எறும்புகளுக்கு இட்டு வருதலால் அற்புத பலன்களைப் பெறலாம். வயதானவர்கள் காட்ராக்ட் நோயினால் பாதிக்கப்பட்டால் அவர்கள் பாரம்பரிய அறுவை சிகிச்சையை நாடுவதே சிறப்பாகும். தொடர்ந்து இத்தலத்தில் எறும்புகளுக்கு உணவிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தமான நோய்கள் அண்டாது என்பதும் உண்மையே.
திருக்கோளக்குடி சிவத்தலம். அடுக்கு மாடி வீடுகளில் குடியிருப்பவர்கள் சந்திக்கும் பலவிதமான பிரச்னைகளுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கக் கூடிய திருத்தலமே திருக்கோளக்குடி. உயரமான இடங்களில் பணி புரிபவர்களும், ஆபத்தான சூழ்நிலைகளில் வேலை செய்வோரும், நச்சு வாயுக்கள் இடையே வாழ்பவர்களும் கடலை மிட்டாய்களை இததலத்தில் தானமாக அளித்து வந்தால் ”உயரப் பிரச்னைகளால்” துன்பம் அடையமாட்டார்கள்.
ஸ்ரீஏகபுஷ்ப பிரிய நாதர், திருத்திய மலை, துறையூர் அருகே. அகத்திய பெருமான் தினமும் வழிபட்டுச் செல்லும் முக்கியத் தலங்களுள் இதுவும் ஒன்று. எத்தகைய கொடிய தீய பழக்க வழக்கங்கள் இருந்தாலும் தொடர்ந்து இத்தலத்தில் வழிபாடு செய்தலால் இறை நெறியில் சிறந்து விளங்க இத்தல மூர்த்திகள் அருள் செய்வர். வாரம் ஒரு முறையாவது இத்தலத்தில் அடர்த்தியாக சாம்பிராணி தூபம் இட்டு வழிபடுதல் சிறப்பாகும்.
தாயினும் நல்லாள் என்ற இனிய நாமத்துடன் தேவி அருளும் திருத்தலமே துறையூர், முசிறி இவ்விரு ஊர்களில் இருந்தும் சென்றடையக் கூடிய திருத்திய மலை சிவத்தலமாகும். இட்லியுடன் கொத்துமல்லித் துவையல் சேர்த்து தானம் அளித்து வந்தால் அதிக கொழுப்பு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் துன்பங்கள் நீங்கும். கொழுப்பு காரணமாக குழந்தைப் பேறு கிட்டாத குறையும் நிவாரணம் பெற தேவி அருள்புரிவாள். தொடர்ந்த வழிபாடு அவசியம்.
ஸ்ரீசெவி சாய்த்த விநாயகர், ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருத்தலம், அன்பில், திருச்சி. வெளியில் சொல்ல முடியாத எத்தகைய மனவேதனைகளுக்கும் ஆறுதல் அளிக்கக் கூடியவரே செவி சாய்த்த விநாயகர் ஆவார். நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு புத்தாடைகள் தானமாக வழங்குவதால் கணவன் மனைவியரிடையே ஏற்படும் சந்தேகங்களுக்கு உரிய விடை கிடைக்கும்.
ஸ்ரீகணபதி மூர்த்தி, ராச்சாண்டார் திருமலை, திருச்சி. பள்ளிக் குழந்தைகள் திருத்தமாக எழுதுவதற்கு அருள் செய்யும் மூர்த்தி இவரே. பள்ளிக்குச் செல்
ஸ்ரீ கன்னி மூலை கணபதி, ராச்சாண்டார் திருமலை, திருச்சி. பெண் குழந்தைகள் பருவம் அடையும் முன்பே பல உடல் கூறு சம்பந்தமான பிரச்னைகளை அனுபவிக்க வேண்டிய விதி சிலருக்கு ஏற்படலாம். அத்தகைய வேதனைகள் வாழ்க்கையில் தொடரும்போது இந்த கணபதி மூர்த்தியை வேண்டி கொத்துக் கடலை சுண்டல் ஒரு படி செய்து தானம் அளித்து வந்தால் வாழ்வில் பிடிப்பு ஏற்படும்.
ஸ்ரீபெரிய நாயகி அம்மன், ராச்சாண்டார் திருமலை, திருச்சி. சில பெண்கள் என்னதான் இறைவழிபாட்டில் முன்னேறி இருந்தாலும் அவர்கள் மனமோ பிற ஆண்களிடம் நாட்டம் கொண்டிருக்கும். இது தவறான எண்ணம் என்று அவர்கள் உணர்ந்தாலும் இந்த தவறான போக்கை அவர்களால் மாற்றிக் கொள்ள முடியாது. அவ்வாறு உண்மையில் மனதை இறைவழியில் நிலை நிறுத்த முயற்சி செய்யும் பெண்கள் தங்கள் கையால் தொடுத்த மணமுள்ள மலர் மாலைகளை ஒன்பது முழத்திற்கு குறையாமல் அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைகளில் அளித்து வழிபட்டு வந்தால் நலம் அடைவர். லட்சுமி கடாட்சம் பெருகும்.
ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ய சுவாமி, ராச்சாண்டார் திருமலை, திருச்சி. அரசு துறையிலோ, தனியார் நிறுவனங்களிலோ பணி புரியும் ஆண்கள் தனக்கு மேலுள்ள உயர் பெண் அதிகாரிகளால் அவமானப்படும் வேதனையில் வாழ்வது உண்டு. இந்த வேதனையை பலரால் வெளியில் சொல்லவும் முடியாது. அத்தகைய ஆண்கள் இத்தல முருகப் பெருமானை வணங்கி சஷ்டி திதிகளில் ஆறு பசு மாடுகளுக்கு அருகம்புல் அளித்து வந்தால் அவர்கள் வேதனைகளுக்கு தீர்வு கிட்டும்.
ஸ்ரீவிராச்சிலை ஈசன், ராச்சாண்டார் திருமலை, திருச்சி. இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் கடன் சுமையால் வருந்துகின்றனர். அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று ஆடம்பரமான வாழ்க்கை முறை. இதைத் தவிர்த்து உள்ளதைக் கொண்டு உவப்புடன் வாழும் மன திருப்தியை அளிக்கக் கூடிய அருந்தவ மூர்த்தியே ஸ்ரீவிராச்சிலை ஈசன் ஆவார்.
ஸ்ரீஅப்பால ரெங்கநாதர் திருத்தலம், கோவிலடி. திருச்சி கல்லணை திருக்காட்டுப்பள்ளி நெடுஞ்சாலையில் உள்ள இப்பெருமாள் தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது. அரசுப் பணியில் உள்ள அனைவரும் அவசியம் வழிபட வேண்டிய அனுகிரக மூர்த்தியே அப்பக்குடத்தான் பெருமாள் ஆவார். திருவோண நட்சத்திர தினங்களில் வெண் பொங்கல் தானம் சிறப்பு.
ஸ்ரீஅப்பக்குடத்தான் பெருமாள் தலம், கோவிலடி. ஆத்ம விசாரத்திற்கு துணை செய்யும் அற்புத தலம். தமது பெயரையே திரும்ப திரும்ப சொல்லும் சுய நாம ஜபத்துடன் இத்தல அப்பக்குட பிரகாரத்தை தொடர்ந்து வலம் வந்து வணங்கினால் அற்புத தியான சித்திகள் மலரும். பிரம்ம முகூர்த்த வழிபாட்டிற்கு உகந்த திருத்தலம்.
ஸ்ரீவிமல லிங்க மூர்த்தி, ஆதிகுடி, லால்குடி, திருச்சி. எத்தகைய உடல் ஊனம், மன ஊனம் இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை அளிக்கக் கூடிய மூர்த்தி இவர். தற்கொலை செய்து கொள்ளும் மன நிலையைக் கூட மாற்றி வாழ்வில் உற்சாகத்தை ஊட்டக் கூடிய உன்னத மூர்த்தி இவரே.
ஸ்ரீதட்சிணா மூர்த்தி. ஆதிகுடி சிவத்தலம், லால்குடி, திருச்சி. திருஅண்ணாமலையில் சிவபெருமானின் தூல தரிசனத்தை தரிசிக்கும் சக்தியை ஒருவர் பெற வேண்டுமானால் முதலில் அவர் ஆதிகுடியில் சனகாதி முனிவர்களின் தரிசனத்தைப் பெற்றாக வேண்டும். சனகாதி முனிவர்கள் இன்றும் மனித உருவில் தட்சிணா மூர்த்தி ஈசனை வழிபடும் உத்தம தலமே ஆதிகுடியாகும்.
ஸ்ரீஅங்குரேஸ்வரர் ஆதிகுடி
அங்குரம் என்றால் விதை, முளை, முனை என்றெல்லாம் பொருள் உண்டு. Genetic diseases என்பதாக நம் முன்னோர்களால் தோன்றும் வியாதிகள், பரம்பரை வியாதிகள் போன்ற பலவற்றையும் தீர்க்கும் அற்புத சிவமூர்த்தியே இவர். பலரும் தங்கள் மூதாதையர்களால் தங்களுக்கு பலவிதமான கண் நோய்கள், சர்க்கரை வியாதி போன்ற வியாதிகள் தோன்றியிருப்பதாக நினைத்து அவர்களை மனதிற்குள்ளோ, வெளிப்படையாகவோ திட்டித் தீர்த்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற பல நிரந்தர சொத்துக்களைப் பற்றி வாய் திறப்பதே கிடையாது. எனவே மூதாதையர்களால் வியாதிகள், சொத்துக்கள் என்று எது வந்தாலும் அவர்களுடைய நல்ல வழிகாட்டுதலை, வாழ்க்கையை நாம் பின்பற்றுவதற்கு பூலோகத்தில் உள்ள புனித பூமியான ஆதிகுடியில் நாம் ஈசனை வழிபடுவதற்கு அவர்கள் கருணையே காரணம் என்று உணர்விப்பவரே ஸ்ரீஅங்குரேஸ்வரர் ஆவார். இறைவனின் கருணையை ‘முளை’ என்பதாக நமக்கு இறைபக்தியை அடி எடுத்துக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அது வளர்ந்து நல்ல கனிகளை அளிப்பதற்கும் துணை புரிவதே ஆதிகுடி ஈசனின் வழிபாடாகும்.
ஸ்ரீபிரேமாம்பிகை ஆதிகுடி
அம்பு இரும்பால் செய்யப்பட்டு உறுதியாக இருந்தால் மட்டும் போதாது, அது கூர்மை உடையதாக, நேராக இருந்தால்தான் அது சரியாக இலக்கை அடையும் அல்லவா ? இவ்வாறு நம்முடைய இலக்கான இறைவனை நேராகச் சென்றடைய வழிவகுப்பவளே ஆதிகுடி ஸ்ரீபிரேமாம்பிகை ஆவாள். இறை மூர்த்திகளுடன் நாம் கொள்ளும் இணைப்பு, பிணைப்பு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு நிலையான வாரமான சனிக்கிழமையில் அருளும் இறைமூர்த்திகளின் அருளை இங்கு நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள். மன ஊனம், உடல் ஊனம், பக்தி ஊனம், நம்பிக்கை ஊனம் என்ற அனைத்து ஊனங்களையும் களையக் கூடியதே ஆதிகுடியில் அருளும் மூர்த்திகளின் தரிசனம் ஆகும். கருப்பு வண்ணமுடைய உணவு வகைகளையும், சக்கர வண்டிகள், ஊன்றுகோல் போன்ற சாதனங்களையும் முடவர்களுக்கும், ஆரோக்ய நிலையில் உள்ள வயதானவர்களுக்கும் தானமாக அளித்தல் சிறப்பாகும். ஸ்ரீஅங்குரேஸ்வரர் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளதால் தக்க பாதுகாப்பு இல்லாமல் வாடும் முதியவர்களுக்கும் அநாதைகளுக்கும் ஊன்றுகோலாய் நின்று துணை புரியும் ஈசனின் வழிகாட்டுதல் கிட்டும்.
பூவாளூர் திருத்தலம், லால்குடி, திருச்சி. கிணறு, ஆழ்கிணறு (போர் வெல்) போன்றவற்றிலிருந்து குடிக்கும் தண்ணீரைப் பெறும்போது பலருக்கும் அதில் துர்நாற்றம் ஏற்படுவதால் மேற்கொணடு என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பம் அடைகிறார்கள். இவ்வாறு தண்ணீர் தோஷங்களால் வருந்துவோர் தயிர் சாதத்துடன் நெல்லிக்காய் ஊறுகாய் தானம் அளித்து வருதலால் நற்பலன்களைப் பெறுவார்கள்.
ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ராச்சாண்டார் திருமலை, திருச்சி. என்ன படித்தாலும் நினைவில் இருப்பதில்லை என்று பல குழந்தைகளுடைய பெற்றோர்கள் வருத்தப்படுகிறார்கள். இத்தகையோர் செம்பருத்தி தைலத்தை ராச்சாண்டார் மலை திருத்தலத்தில் சனிக் கிழமைகளில் தானம் அளித்து வந்தால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தேவையான ஞாபக சக்தியை இத்தல தட்சிணா மூர்த்தி அருள்வார்.
ஸ்ரீதுர்கை அமமன், ராச்சாண்டார் திருமலை, திருச்சி. முறையாக ஜாதகப் பொருத்தம் பார்த்து நிறைவேறிய திருமணங்களில் கூட திருமணத்திற்குப் பின் தம்பதிகள் கொடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு அதனால் மண வாழ்க்கை பாழாகிப் போகும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு. அத்தகைய துன்பத்தை தங்கள் வாழ்வில சந்திக்கக் கூடாது என்று விரும்பும் பெண்களும் ஆண்களும் அவசியம் வழிபட வேண்டிய துர்கை அம்மனே ராச்சாண்டார் மலை துர்கா தேவி ஆவாள். தங்கள் கையால் இடித்த சுத்தமான குங்குமத்தை இத்தேவி அர்ச்சனைக்கு அளித்து வந்தால் சிறப்பான மண வாழ்க்கை அமைய அஷ்ட துர்கா லோகத்தைச சேர்ந்த அருட்கன்னிகள் அருள்புரிவார்கள்.