மகேந்திரப்பள்ளி, சிதம்பரம் அருகே
யாரும் கவனிக்காமல் இவ்வாறு வெட்டவெளியில் இருக்கும் கல் விக்ரஹங்களுக்கு நல்லெண்ணெய் காப்பிட்டு வழிபடுதலால் நீண்ட நாள் வசூலாகாத கடன்கள் வசூலாகும். பஞ்ச எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல் நலமாகும். பொதுவாக, குளக்கரையில் இருக்கும் பிள்ளையார் மூர்த்திகள் காணாமல் போன பொருட்களைத் திருப்பிப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாழக் கிழமைகளில் இம்மூர்த்திகளுக்கு குறைந்தது 12 குடம் நீரை குளத்திலிருந்து எடுத்து அபிஷேகம் செய்வதால் ஆளரவம் அற்று தனியாக வீடு கட்டிக் கொண்டு வாழ்பவர்களுக்கு தக்க பாதுகாப்பாக யானை முகத்தோனே வருவார் என்பது உறுதி.
ஸ்ரீமயேந்திரப்பள்ளி திருத்தலம்
அரிதாக இரண்டு தலவிருட்சங்களுடன் விளங்குவதே மகேந்திரப்பள்ளி ஆகும். இத்தலத்தில் உள்ள இறை மூர்த்திகளுக்கு மூன்று, ஐந்து வில்வ தளங்கள், செந்தாமரை வெண்தாமரை, வெள்ளை அல்லி, நீலோத்பலம் போன்ற இருகூறான ஒரே வகை மலர்களை மாலையாக கட்டி வழிபடுதலால் அற்புத பலன்களை பெறலாம். IAS, IPS போன்ற உயர் அதிகாரிகளும் நீதிபதிகளும் இத்தகைய வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள். அக்காவை மணந்த மாப்பிள்ளை தங்கையையும் மணம்புரிய துடிக்கும் சூழ்நிலைகள் அமைவதுண்டு. அத்தகைய குடும்ப சூறாவளிகளையும் களையக் கூடியதே இத்தல விருட்ச வழிபாடு.
பித்ரு முக்தி தீர்த்தம், மகேந்திரப்பள்ளி
பலரும் இறை வழிபாடுகளை ஆரம்பித்த சில நாட்கள், வருடங்களிலேயே தாங்கள் தெய்வீகத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்து விட்டதாக எண்ணிக் கொண்டு தர்ப்பணம், விக்ரஹ பூஜை போன்ற நித்ய கடமைகளை நிறுத்தி விடுகிறார்கள். எப்போது ஒருவருடைய மூதாதையர்கள் நேரிடையாக மனித உருவில் வந்து தங்கள் உணவை பெற்றுக் கொள்வதை இந்த ஊனக் கண்ணால் காண முடிகிறதோ அன்றுதான் ஒருவர் பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிக்க வேண்டிய நித்திய கடமையிலிருந்து விலக்கு பெறுகிறார். அவ்வாறு பித்ருக்கள் நேரே வரக் கூடிய திருத்தலங்களில் ஒன்றே மகேந்திரப்பள்ளி ஆகும்.
ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி, மகேந்திரப்பள்ளி்
மனிதர்களின் உடல் அங்கங்கள் சரியான அளவு முறையில் அமைவதுதான் உண்மையான அழகு. உடல் உறுப்புகளில் ஒன்று நீண்டோ அல்லது குட்டையாகவோ இருந்தால் அது அவலட்சணத்தைத்தானே குறிக்கும். மகேந்திரப்பள்ளி திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீதிருமேனி அழகரின் அன்புக் குழந்தையே அழகுசுந்தரம் என்ற திருநாமத்துடன் அருளும் நந்தீஸ்வர மூர்த்தி ஆவார். தாமே அரைத்த சந்தனத்தால் அழகு சுந்தர நந்தீஸ்வர மூர்த்திக்கு காப்பிட்டு வணங்கி வருவதால் அழகான சந்ததிகள் அற்புதமாய் அமைவர்.
தற்காலத்தில் பல குழந்தைகளுக்கு உடம்பில் போதுமான எதிர்ப்பு சக்திகள் இல்லாமல் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு உடலும் மெலிந்து விடுகின்றன. இத்தகைய பிரச்னைகள் தீர கோயில்களில் உள்ள யானைகளின் வழிபாடு பெரிதும் உதவுகின்றது. ஆப்பிள், மாதுளை, சப்போட்டா போன்ற பழங்களை அப்பர் பெருமானின் திருத்தாண்டக துதியை எட்டு முறை ஓதி கோயில் யானைகளுக்கு அளித்து வந்தால் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் திகழ்வர். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அதிக ரத்த போக்கு இதனால் சீர்பெறும்.
ஆராக்கீரையின் ஒவ்வொரு இதழுக்கும் ஒரு ராம மந்திரத்தை ஓதி கோயில் மாடுகளுக்கு அளித்து வந்தால் சர்க்கரை வியாதியின் கொடுமை தீரும். ஒரு கைப்பிடி அளவே உள்ள ஆராக்கீரையை வெல்லத்துடன் சேர்த்து மாடுகளுக்கு அளித்து வந்தால் கூட அதனால் கிட்டும் பலன்களோ அமோகம். பொதுவாக, நீண்ட நாள் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு இத்தகைய வழிபாடு ஒரு அற்புத வரப்பிரசாதமாகும். பசுவின் குளம்புகளில் உள்ள அழுக்கை நீக்கி சுத்தம் செய்வதால் காலாணி வேதனைகள் தணியும்.
மன்னார்குடி திருத்தலம்
ஒன்பது அல்லது அதற்கு மேல் கலசங்கள் அமைந்த வானுயர்ந்த கோபுர கலசங்களைப் பார்த்தவாறே திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய, ”வேயுறு தோளி பங்கன் ...” என்று தொடங்கும் கோளறு பதிகத்தை கலசங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஓதுவதால் பித்ரு தேவதைகளுடன் மனோ ரீதியான தொடர்பு கிட்டும். ஜோதிடர்கள், அருள் வாக்கு சொல்வோர், நாடி படிப்பவர்கள், நீரோட்டம் பார்ப்பவர்களுக்கு இத்தகைய வழிபாடு பெரிதும் உதவி புரியும். தரையில் தர்பை பாய், கெட்டியான போர்வை விரித்து அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து இத்தகைய வழிபாட்டை நிறைவேற்றினால பலன் பன்மடங்காகப் பெருகும்.
ஹரித்ரா நதி, மன்னார்குடி
நதியின் பெயரில் அமைந்துள்ள இத்திருக்குளத்தில் நீராடி மூன்று சுமங்கலிகளுக்கு ஒன்பது கஜ நூல் புடவைகளை தானமாக அளித்தலால் தீர்க சுமங்கலித்துவம் கிட்டும். மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் கூட இத்தகைய வழிபாடுகளால் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். வசதியற்றோர் மூன்று முழ ரவிக்கைத் துணியைக் கூட அளித்து நற்பலன் பெறலாம்.
மன்னார்குடி திருத்தலம்
திருக்கோயில்களில் நடக்கும் தேர்த் திருவிழா உற்சவத்தில் பங்கேற்பதற்காக வரும் பித்ரு மூர்த்திகள் அமரும் புனிதமான இடமே இத்தகைய நீரூற்றாகும். ஒரே ஒரு நீர்த் துளியில் மட்டும் 300 கோடி பித்ரு தேவதைகள் அமர்கின்றனர் என்றால் இத்திருவிழாவின் மகத்துவம் எப்படி இருக்கும். அதனால்தான் தேர்த் திருவிழாவில் தானம் அளிக்கப்படும் நீர், மோர் பானகம் போன்ற நீர் சம்பந்தப்பட்ட தானங்கள் அற்பத பலன்களை வர்ஷிப்பதாக போற்றப்படுகின்றன. எதற்காக இத்தனை தேவதைகள் என்று நினைப்பது மனித மனம், ஆனால், ஈ எறும்புக்கும் பித்ருக்கள் உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மன்னார்குடி திருத்தலம்
திருக்கோயில் கோபுரங்களைப் பார்த்தவாறு அமைந்துள்ள சமித்து விருட்சங்கள், பாலுள்ள விருட்சங்கள் கீழ் அமர்ந்து தியானம் புரிவதால் அற்புத பலன்களைப் பெறலாம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர முடியாதவர்கள் இத்தகைய விருட்ச நிழல்களில் வலம் வருவதும் சுயம்பு மூர்த்தி வழிபாட்டிற்கு இணையான அற்புத பலன்களை அளிக்கும். தம்பதிகள் இத்தகைய மரங்களின் கீழ் உறங்கினால் அதுவும் ஒரு யோகமே.
அரிசி சாதத்தில் உள்ள இரண்டு சோற்றுப் பருக்கைகளில் நிறைந்துள்ள உஷ்ண சக்தியை நாம் முழுவதுமாக கிரகிக்க முடிந்தாலே போதும் அந்த உஷ்ண சக்தியே ஒரு நாள் முழுவதும் நம் உடல் இயங்குவதற்கு தேவையான சக்தியைத் தந்து விடும். இவ்வாறு உணவில் உள்ள ஜீவ சக்தியை பூரணமாக கிரகிப்பதற்காகவே நவகிரக துதிகளையும் அன்னபூரணி ஸ்லோகங்களையும் ஓதி வருமாறு நம் முன்னோர்கள் வலியுறுத்தி வந்தார்கள். தினமும் பலி பீடங்களை வணங்கி நல்லெண்ணெய் காப்பிட்டு வழிபடுவதால் குறைந்த அளவு உணவின் மூலமாகவே முழுமையான ஆரோக்யத்தை எளிதில் பெற்று விடலாம் என்று சித்தர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
இறைவனின் ஒவ்வொரு விரல் நக அசைவிற்கும் கோடி கோடி அர்த்தங்கள் உண்டு. இவ்வகையில் இறை மூர்த்திகள் பல்லக்குகளில் ஏறி வருவதற்கும் தேரில் பவனி வருவதற்கும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு. பல்லக்கு என்பது முன் பின் இயக்கங்கள் உடையது, தேர் என்பது நான்கு சக்கரங்கள் உருளும் விசையை நேர்கோட்டு விசையாக மாற்றித் தருவது. இந்த இரண்டு வித இயக்கங்களால் பிரபஞ்சத்தில் உண்டாகும் வினைகளுக்கு நிவாரணம் அளிக்கவும் அந்த விசைகளால் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை அளிக்கவுமே இறை மூர்த்திகள் பல்லக்குகளிலும் திருத்தேர்களிலும் பவனி வருகிறார்கள். இதுவே இறைவனின் பெருங்கருணை !!
அதிராம்பட்டினம் திருத்தலம்
சூரியனை நவாம்ச அதிபதியாக உடைய மரங்கள் வன்னி, வேம்பு, வில்வம் போன்றவை. அரசு, நாவல், பலா போன்ற பால் விருட்சங்கள் சந்திரனை நவாம்ச அதிபதியாக உடையவை. சூரிய விருட்சங்கள் உள்ள திருத்தலங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் தேங்காய்ப்பூ கலந்த கோதுமை புட்டு, பால் விருட்சங்கள் உள்ள திருத்தலங்களில் திங்கட் கிழமைகளில் எலுமிச்சை ஊறுகாயுடன் தயிர் சாதம் அன்னதானம் அளித்தலால் தந்தை தாய் வழி சொத்து பிரச்னைகள், வழக்குகள் நல்ல முறையில் தீர்வு பெறும்.
மெய்ஞானபுரி. காரைக்குடி அருகே
ஒவ்வொரு மரத்தினுடைய நிழலுக்கும் பலவிதமான நோய் நிவாரண சக்திகள் உண்டு. இதை முழுமையாக அறிந்தவர்கள் சித்தர்களே. இவ்வகையில் மகிழ மரத்திற்கு இரத்த சோகையை நிவர்த்தி செய்யும் சக்திகளும், இரத்தத்தை சுத்தி செய்யும் சக்திகளும் உண்டு. செவ்வாய்க் கிழமைகளிலும் அனுஷ நட்சத்திர தினங்களிலும் மகிழ மரத்தை 18 முறை வலம் வந்து குரங்குகளுக்கு பேரீச்சம் பழங்களை தானமாக அளித்தலால் இரத்த சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் கிட்டும். கர்ப்பிணிகளுக்கு ஒரு வர பிரசாதம் மகிழ மரம்.
கடுமையான வியாதிகளால் அவதியுறுவோர் குளித்த ஈர உடையுடன் இத்தலத்தில் அங்க பிரதட்சிணம் செய்து, வேறு உடையை மாற்றிக் கொண்டு இறை மூர்த்திகளை தரிசனம் செய்து, பின்னர் தங்கள் சொந்த ஊரில் உள்ள திருக்கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களில் அந்த உடைகளை அலசி காய வைத்து காய்ந்த பின் அந்த உடைகளை ஏழைகளுக்கு தானமாக அளித்தால் கான்சர், இதய நோய்கள் உட்பட அனைத்து கடுமையான நோய்களும் அற்புதமான முறையில் நிவாரணம் பெறும். கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ரத்த சம்பந்தமுடைய உறவினர்கள் மூலம் இந்த பிரதட்சிண வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
ஸ்ரீதட்சிணா மூர்த்தி, மெய்ஞானபுரி, காரைக்குடி அருகே
தங்கம் விலை திடீரென ஏறி இறங்குவதால் எத்தனையோ தங்க வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். கடுமையான விளைவுகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்து விடுகிறார்கள். இவ்வாறு எதிர்பாராத பாதிப்புகளுக்கு உள்ளானோர் மெய்ஞானபுரி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கி சுவாமிக்கு தங்க பூநூல் அணிவித்து வணங்குதலால் நற்பலன் அடைவார்கள். தங்கப் பூநூலை பிரசாதமாகப் பெற்று திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு தானமாக அளித்து விடுதல் நலம்.
ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி, மெய்ஞானபுரி
தம்பதிகளுக்குள் மன வேற்றுமை ஏற்பட்டு அது விவாகரத்து நிலைக்கு சென்று விட்டால் கூட அத்தகைய கசந்த உறவுகளையும் சீர்படுத்துவதே மெய்ஞானபுரி திருத்தலமாகும். இத்தலத்தில் மன ஒற்றுமை பெற முடியாத தம்பதிகள் உலகில் வேறெங்கும் அதைப் பெற முடியாது என்று உறுதியாக தெளிவுபடுத்துகிறார்கள் குருமங்கள கந்தர்வா அவர்கள். தம்பதிகள் சித்தர்களின் ஆலோசனையை ஏற்று இந்த அற்புதமான திருத்தலத்தில் அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றி அனைத்து சௌபாக்கியங்களுடன் வாழும்படி கேட்டுக் கொள்கிறோம்.
மெய்ஞானபுரி, காரைக்குடி அருகே
எப்போதெல்லாம் குருவின் மீது அவநம்பிக்கை தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஞானகுருவின் இந்த அபய முத்திரையை தியானித்து தங்கள் அருகில் உள்ள திருத்தலங்களில் அடிப்பிரதட்சிணம் வந்து தட்சிணாமூர்த்தியை வணங்குவதால் குருவின் மேல் தோன்றும் அவநம்பிக்கை உடனே மறையும். இறைவனை அடையும் அந்த கடைசி விநாடி வரை நம்முடைய நிழலாக தொடர்வதே இந்த இறை அவநம்பிக்கை, குரு அவநம்பிக்கை, எனவே எப்போதும் கவனம் தேவை, கவனம் தேவை.
பத்மகிரி, திண்டுக்கல்
மூலாதாரத்தில் இருந்து எழும் குண்டலினி சக்தி ஆயிரம் இதழ்கள் உடைய தாமரையை ஒத்த சஹஸ்ரார சக்கரத்தைச் சென்றடைகின்றது அல்லவா ? சஹஸ்ரார சக்கரத்தின் தூல வடிவாக எழுந்தருளி இருப்பதே திண்டுக்கல் பத்மகிரி ஆகும். ஞாயிற்றுக் கிழமைகளில் இம்மலையை 18 முறை (3x6=18) கிரிவலமாக வந்து வணங்குதலால் குண்டலினி யோகத்தில் உன்னத நிலை அடையலாம். குருவின் வழிகாட்டுதல் இதற்கு மிகவும் முக்கியமே.
பத்மகிரி ஸ்ரீஅகத்தியர் ஆலயம்
பாம்புகள் நெளிந்து நெளிந்து செல்வதை நாம் ஒரு சாதாரண அசைவாக எண்ணி விடுகிறோம். உண்மையில் நாகங்கள் இடமாக வளையும்போது சந்திர கலை சுவாசத்தையும் வலப் புறமாக வளையும்போது சூரிய கலை சுவாசத்தையும் உருவாக்கி திரிகரண சர்ப்ப யோகம் என்ற ஒரு வகை யோகத்தில் நிலை கொள்கின்றன. மனிதர்கள் இந்த குண்டலினி யோகத்தை அறிய ஒரு சற்குருவின் கீழ் 60 ஆண்டுகள் பயில வேண்டும். பத்மகிரி ஸ்ரீஅகத்தியர் ஆலயத்தில் முழந்தாளிட்டு பிரதட்சிணமாக வந்து வணங்கினால் ஓரளவு இந்த சர்ப்ப யோக சக்திகளை சாதாரண மனிதனும் பெற இறைவன் அருள்புரிவார்.
அகத்தியர் பொய்கை, பத்மகிரி திண்டுக்கல்
பொய் கூறியதால் கருமை நிறம் அடைந்த காக்கைகள் இத்திருக்குளத்தில் நீராடி ஸ்ரீஅகத்தியர் அருளால் மீண்டும் வெண்மை நிறம் பெற்றன. அத்தகைய பித்ரு லோக காக்கைகளே இன்று நாம் அபூர்வமாக காணும் வெள்ளை நிற காக்கைகளாகும். நிறம் குறைவு காரணமாக திருமணத் தடங்கல்களால் வருந்தும் ஆண்களும் பெண்களும் இந்தப் பொய்கையில் நீராடி சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து வழிடுதலால் அற்புத பலன் பெறுவார்கள்.
பத்மகிரி ஸ்ரீஅகத்தியர் ஆலயம்
இந்தியாவில் மட்டும் நான்கு ஜீவ சமாதிகள் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீகுழந்தையானந்தா சுவாமிகள் அடிக்கடி கிரிவலம் வந்து சந்தான சௌபாக்கிய சக்திகளை நிரவும் திருத்தலமே பத்மகிரி ஆகும். எனவே பத்மகிரியை புதன் கிழமைகளில் 14 முறை கிரிவலம் வந்து திசைக்கு 16 சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் வழிபடுவதால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ஆலயம், திருவல்லிக்கேணி, சென்னை
கீதையின் 18 அத்தியாயங்களும் ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய பிரச்னைகளுக்கு உரிய நிவாரணங்களை அளிப்பதே. இதை இம்முறையில் உணர்ந்து கொள்ள உதவுவதற்காகவே ஸ்ரீஆதிசங்கரர் அவர்கள் இத்திருத்தலத்தில் அற்புத ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். கீதையின் உண்மையான சாரத்தை உணர விரும்புவோருக்கு இத்தல பெருமாளின் தரிசனம் பெரிதும் துணை புரியும். ஆச்சார்யார்களின் சங்கமமே திருஅல்லிக்கேணி.
ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ஆலயம், சென்னை
நம்முடைய தலை எழுத்து நல்லபடியாக அமைவதற்காக நாம் பிரம்ம தேவரை வழிபடுகிறோம். பிரம்ம தேவர்கள் தங்கள் பணியை சிறப்பாக நிறைவேற்றி இறைமையில் நிலைபெற்று சிறக்க அவர்கள் வழிபடும் மூர்த்தியே திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ஆவார். எத்தனையோ பூலோகங்களில் உள்ள பிரம்ம மூர்த்திகளே இங்கு தாமரை மலர்களாய் பூத்துள்ளனர். இவ்வாறு ஆயிரமாயிரம் பிரம்ம மூர்த்திகளை ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் சென்னைவாசிகள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் ? அது சரி, அல்லி குளத்தில்தானே பூக்கும், கேணியிலா பூக்கும் ? அப்படியானால் திருவல்லிக்கேணி என்றால் அது அல்லிக் கேணியா இல்லை அல்லிக்கு ஏணியா ?
ஸ்ரீஆபத்சாய ஆஞ்சநேயர் கோயம்பேடு சென்னை
இந்தப் பூலோகத்தில் உள்ள அனைத்து வாகனங்களைக் கண்காணிக்கும் போக்குவரத்து துறை மூர்த்தி இவரே. ”ஸ்ரீஆபத் சகாய ஆஞ்சநேயா போற்றி” என்று கூறி வாகனங்களை ஓட்டுவதால் பயணம் பாதுகாப்பாக அமையும். இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள், க்ரேன், JCB, இரயில், கப்பல் போன்ற அனைத்து வாகன ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் வழிபட வேண்டிய மூர்த்தி இவரே. இருட்டில், அடர்ந்த காடுகளில், வாழ்க்கைப் பிரச்னைகளில் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல் தவிக்கும் சிறுவர்கள் பெரியவர்கள் அனைவருக்கும் வழிகாட்டி அவர்களைக் காப்பாற்றும் கலியுக GPS (Gurumangala Protection System) இவரே என்று நம் குருமங்கள கந்தவர்வா தெளிவுபடுத்துகிறார்கள்.
இணையடி திருவடி மலரடி நினதடி பெருமானே !!
ஸ்ரீஞானசரஸ்வதி, கோயம்பேடு, சென்னை
ஸ்ரீஞானசரஸ்வதி கையில் வீணை இல்லாமல் இருப்பதற்கு ஆயிரமாயிரம் இறைப் பின்னணி இரகசியங்கள் உண்டு. ஆணவம் கொண்ட பிரம்ம தேவரின் ஐந்தாவது தலையை எம்பெருமான் கிள்ளி எறிய அது பல கோடி அண்டங்களுக்கும் பறந்து சென்றது. அப்போது அந்தந்த லோகங்களில் உள்ள ஜீவராசிகள் பிரம்ம கபாலத்தின் அதிஉஷ்ணத்தை தாங்க முடியாமல் வேதனை அடைந்தார்கள். அதை உணர்ந்த ஸ்ரீசரஸ்வதி உடனே தன் கையில் உள்ள ஸ்வேத குஞ்சரம் என்ற வீணையை வானில் எறிய அது பிரம்ம மூர்த்தியின் தலையோடு சேர்ந்து பயணம் செய்யத் தொடங்கியது. ஸ்ரீசரஸ்வதி தேவி தன்னுடைய தபோ பலனால் இருந்த இடத்திலிருந்தே அந்த வீணையின் கம்பிகளை மீட்ட ஆரம்பித்தாள். அதனால் பிரம்ம கபாலத்தால் ஏற்பட்ட அதிஉஷ்ண நிலை தணிந்தது. இவ்வாறு தன் பதி என்ன நிலையை அடைந்தாலும் அதற்கு உறுதுணையாக நின்று பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக சரஸ்வதி செயல்பட்டதால் சரஸ்வதி ஞானசரஸ்வதி என எம்பெருமானாலேயே புகழப்பட்டாள். பதிவிரதை என்னும் சொல்லிற்கு இலக்கணம் படைத்தவளே ஞானசரஸ்வதி ஆவாள். இன்றும் செல்போன் கதிர்களிலிருந்து எழும் அதிஉஷ்ண சக்திகளுக்கு மாற்றாக அமைவது வீணை நாதம் ஒன்றேயாகும். ஸ்வேத குஞ்சரம் என்றால் வெண்மையான யானை என்று பொருள். வெண்ணிற யானையின் வடிவத்தில் அமைந்திருந்தது சரஸ்வதி தேவியின் வீணை. வெண்மைக்கு, தாமரை, கடம்பு போன்ற வெண்ணிற மலர்களுக்கு அபரிமிதமான உஷ்ணத்தை கிரகிக்கும் சக்தி உண்டு.
ஸ்ரீகுறுங்காலீஸ்வரர் சிவாலயம், கோயம்பேடு, சென்னை
ஸ்ரீஅகத்தியர் அருளிய நவரத்ன மாலையின் பல்லவியான மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே (4) என்பதை அவரவர் நட்சத்திர துதியுடன் இணைத்து உரத்த குரலில் ஓதி வருதலால் அமைதியான, சாந்தமான வாழ்வு அமையும். ஆண்கள், பெண்கள் இருபாலரும் கோயில் பிரகாரங்களை அடிபிரதட்ணமாக வலம் வந்தோ அல்லது குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் கைகோர்த்துக் கொண்டு அமர்ந்தோ இத்தகைய வழிபாடுகளை இயற்றுதலால் குடும்ப ஒற்றுமை பெருகுவதை விரைவில் உணரலாம். கூட்டு வழிபாட்டிற்கு அன்றைய நட்சத்திரத்திற்கு உரிய துதியை எடுத்துக் கொள்ளலாம்.
லவகுச தீர்த்தம், கோயம்பேடு, சென்னை
தற்காலத்தில் செல்போன்களை உபயோகிப்பதால் பலவிதமான உடல் நோய்களுக்கும், மன வேதனைகளுக்கும் பலரும் ஆளாகிறார்கள். தங்கள் குழந்தைகள் இத்தகைய பாதிப்புகளை அடையக் கூடாது என்று உளமார நினைக்கும் பெற்றோர்களும் உண்டு. அத்தகையோர் கோயம்பேடு லவகுச தீர்த்தத்தில் வெள்ளை அல்லி மலர்களின் மேல் தர்பை சட்டம் அமைத்து தர்ப்பணம் அளித்தலால் நற்பலன் பெறுவார்கள். பின்னர் அல்லி மலர்களை யானைகளுக்கு அல்லது பசுக்களுக்கு உணவாக அளித்திடல் வேண்டும்.
ஸ்ரீபரத்வாஜர் விஸ்தார ஜீவ ஒடுக்கம் தவசிமடை
இந்த ஜீவ ஒடுக்கத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து குறைந்தது ஒரு மணி நேரம் பிராணாயாமம் பயில்வதால் அற்புத யோக சித்திகள் மலரும். அருகிலுள்ள சஞ்சீவி மலையிலிருந்து வீசும் மூலிகைக் காற்று இவ்வாறு பெறும் பிராணாயாம சக்திகளை முறையாக உடலின் செல்களில் பதிக்கும். இந்த அற்புத சஞ்சீவி சக்திகளை உலகில் வேறு எங்குமே பெற முடியாது என்பது உண்மையே. தேனில் ஊறிய பலாச்சுளை தானம் சிறப்பு.
ஸ்ரீமகாலிங்கப் பெருமான், தவசிமடை
தவசிமடையில் இறைவனின் சக்திகள் ஸ்ரீமரகதவள்ளி ஸ்ரீமாணிக்கவள்ளி இருவருமே நேரே தரிசிக்கும் கோலத்தில் இல்லாமல் மறைவாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். இதுவும் ஒரு சிவசக்தி லீலையே. இத்தரிசனத்தால் பெண்களின் மர்மஸ்தானங்களில் ஏற்படும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். தாமே தொடுத்த சண்பக மாலைகளை இறை மூர்த்திகளுக்கு அணிவித்து வழிபடுதலால் அற்புத பலன்களைப் பெறலாம்.
ஓங்கார உபதேசம் சுவாமிமலை
சுவாமிலையில் ஞானபண்டிதனான முருகப் பெருமான் தந்தையான சிவபெருமானுக்கே உபதேசம் அளிக்கும் காட்சியை கண்டு ரசிக்கலாம். இது பற்றி சித்தர்கள் விளக்குவது என்ன ? ஒரு குழந்தைக்கு முன் தோன்றியவன் அவன் தந்தை. எனவே எந்த குழந்தையுமே தன் தந்தைக்கு தெரியாத ஒரு இரகசியத்தை உரைக்கவே முடியாது. ஆனால், தற்காலத்தில் பல குழந்தைகளும் குலக் கல்வி என்பதை மறந்து ஏதோ சில பட்டங்களைப் பெற்று விடுவதால் தாங்கள் தாய் தந்தையருக்கு மிஞ்சிய அறிவைப் பெற்று விட்டதாக எண்ணிக் கொண்டு எதற்கும் பிரயோசனப்படாத ஏட்டுச் சுரைக்காயை வைத்துக் கொண்டு திரியும் அலங்கோலக் காட்சிக்கு இறைவன் அளிக்கும் பிராயசித்தத்தையே இது சித்தரிக்கிறது. இத்தகைய ஓங்கார உபதேசக் காட்சியை ஸ்வாமிமலையில் மக்களின் நன்மைக்காகவே இறைவன் இங்கு வகுத்துள்ளார் . என்னதான் குமரேசன் ஈசனுக்குச் சொன்னான் என்பதை போகர் தம் சற்குருநாதரைப் பணிந்து கேட்கும்போது ஸ்ரீஅகத்திய பெருமானோ, “அப்பா, அப்பா, அப்பா! என்று மும்முறை தன் அன்புத் தந்தையை அழைத்தான் ஞானபண்டிதனே,” என்றாராம். சிவபெருமானை மிஞ்சிய ஒரு ஞானமோ, அறிவோ எந்த உலகத்திலும் லோகத்திலும் இல்லை, இருக்கவும் முடியாது என்று “கர்ஜிப்பார்” நம் சற்குரு. மனிதர்களைப் பொறுத்தவரை இந்த உபதேசக் காட்சி தந்தை மகனுக்கு இடையில் உள்ள உறவைப் புதுப்பிப்பது மட்டும் கிடையாது கணவன், மனைவி இடையே உள்ள அதீத உஷ்ணத்தையும் தணித்து நல்லுறவை நாட்டுவதே இந்த ஓங்காரக் காட்சியாகும். பெரும்பாலான திருமண சம்பந்தங்களில் ரஜ்ஜுப் பொருத்தம் என்ற முக்கியமான பொருத்தத்தை பலரும் சரியாகப் பார்ப்பது கிடையாது. இதனால் சந்ததி குறைகள், குற்றங்கள் ஏற்படுவதுடன் இதுவே தம்பதிகளிடையே தோன்றும் பலவித குடும்பப் பிரச்னைகளுக்கு ஆணி வேராக அமைந்து குடும்ப ஒற்றுமையையே சிதைத்து விடுகிறது. அப்பா அப்பா அப்பா என்று ஒலிக்கும்போது இந்த ஒன்பது எழுத்துக்களும் செவ்வாய் பகவானுக்கு உரித்தான மங்கள வெப்பக் கதிர்களாக மலர்ந்து அது எம்பெருமானின் திருச்செவிகளில் ஒலிக்கும்போது அது எத்தகைய தகாத உஷ்ண சக்திகளையும், உஷ்ணத்தால் தோன்றும் மன வேறுபாடுகளையும் மாய்க்கின்றது என்றால் இத்தகைய ஒற்றுமையை வளர்க்கப் பாடுபடும் இந்த சிவக்குடும்பத்திற்கு பக்தர்கள் என்னதான் கைம்மாறு செய்ய முடியும், அவர்களை வணங்கி வழிபடுவதைத் தவிர ?!
ஸ்ரீகபர்தீஸ்வரர் சுவாமிமலை
திருவலஞ்சுழியில் அபூர்வமாக வலஞ்சுழித்துப் பாயும் காவிரி நதியில் தம்பதிகள் நீராடி மாற்று உடை தரித்து சுவாமிமலை ஈசனை வழிபடுவதால் எத்தகைய குடும்ப வேற்றுமைகளும் மறைந்து நற்பலன் பெறுவர். குடும்ப அங்கத்தினர்களுக்கு மத்தியில் நல்லுறவு ஏற்படுவதுடன் சரியாக ஜாதகம் கணிக்கப்படாததால் ஏற்பட்ட சந்ததிக் குறைபாடுகளும் நன்முறையில் தீர்வுடையும். இறை தரிசனத்திற்குப் பின் ஈர உடைகளை காய வைத்து நன்முறையில் அவற்றுடன் தங்களால் இயன்ற அளவு தங்க ஆபரணங்கள் சேர்த்து தானம் அளித்தல் நலம். இதனால் தங்கள் சொற்பேச்சைக் கேட்காத பிள்ளைகளும் கணவன் மனைவிமார்களும் திருந்தி நன்னிலை அடைவர். இதைவிடச் சிறந்த “நல்ல” செய்தியை யார் உங்களுக்கு அளிக்க முடியும் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரரைத் தவிர ?
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi