எம்மகரிஷியை வணங்கினாலும் அது சுகப்ரம்ம ரிஷியை சென்றடையும் !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

ராச்சாண்டார் திருமலை மகிமை

திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளதே ராச்சாண்டார் திருமலைத் திருத்தலமாகும். குளித்தலை, மணப்பாறை முதலிய ஊர்களிலிருந்து தோகைமலை வழியாகவும் சென்றடையக் கூடிய சிவத்தலம். R.T. மலை என்று சோமரசம்பேட்டை வழியாக திருக்கோயில் வரை செல்லக் கூடிய நகரப் பேருந்துகளும் உள்ளன.
திருஅண்ணாமலை திருக்கோயிலுக்கு நிகரான பழைமை வாய்ந்த இத்திருத்தலம் சமீப காலம் வரை மக்களின் வழிபாட்டிற்கு மறைவாக விளங்கியது ஓர் ஆச்சரியமே. இறைவனின் ஆணையால் இத்திருத்தல வழிபாட்டு மீண்டும் புத்துயிர் பெற்று விளங்குவது கலியுக மக்களின் பெருந்தவப் பலனே.
அகத்திய கிரந்தங்கள்
பூசுரை பூண்டான் புவனியில் பூத்தான்
காய்சின மாகளிறான் கவின் மிகு நல்லாளோடு
மேய்சிரை விளங்கினாலும் காய்சிரை கவியோடும்
கலந்த நற்பெருஞ்சோதி கண்டவர் விண்டிலரே
என்று இத்தல இறைவனின் அருட் பெரும் தெய்வீக நலன்களையும் அம்மையின் அருளாசி தன்மையையும் விளக்கிக் கூறுகின்றன.
பொதுவாக, சில தலங்களில் அம்பிகையின் அருட் சக்தி பிரவாகம் சக்தியுடன் விளங்கும். உதாரணமாக, திருஆனைக்கா, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்ற திருத்தலங்களில் இறைவியே இறைவனை மிஞ்சிய புகழுடனும் பெருமையுடனும் விளங்குவது நாம் அறிந்ததே. அது போல சிதம்பரம், திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் சுவாமியின் பெருமை வானோங்கி நிற்பதைக் காண்கின்றோம். ஆனால், இதற்கு விதி விலக்காக ராச்சாண்டார் மலைத் திருத்தலத்தின் இறைவன் ஸ்ரீவிராச்சிலை ஈசுவரனின் பெருமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அன்னை ஸ்ரீபெரிய நாயகியின் பெருமையோ சொற்பதம் கடந்தது.
இவ்வாறு இத்தல மூர்த்திகளின் பெருமை மட்டுமல்லாது இச்சிவ தலத்தில் விளங்கும் புல் பூண்டு கூட ஆன்மீக சக்தியில் பூரித்து விளங்குவது நம் மனம் வியக்க வைக்கும் உண்மையாகும்.

ஜெயர் விஜயர்களின் விஜயம்

வைகுண்டத்தின் துவார பாலகர்களான ஜெய விஜயர்கள் துர்வாச முனிவரின் சாபத்தால் பூலோகத்தை அடைந்து பல திருத்தலங்களில் தவங்கள் இயற்றி மீண்டும் வைகுண்டத்தை அடைந்த வரலாறு நீங்கள் அறிந்ததே.
ஜெய விஜயர்கள் தங்களுடைய சாபம் நிவர்த்தி பெற்று வைகுண்டத்திற்கு புறப்படும் முன் அவர்கள் தவம் இயற்றிய கடைசி திருத்தலமே ராச்சாண்டார் திருமலையாகும். எத்தனையோ வழிபாடுகள் செய்து, தவங்கள் இயற்றியதன் பலனாகவே வைகுண்டப் பதவி அமையும் என்று கூறும்போது அத்தகைய வைகுண்டத்திலேயே துவார பாலகர்களாக விளங்கிய ஜெய விஜயர்கள் பல திருத்தலங்களில் தவம் இயற்ற வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம்.
ஒரு சாதாரண மனிதன் இறைவழிபாடு எப்படி செய்ய வேண்டும் ? உதாரணமாக, ஒரு சிவாலயத்திற்கு செல்லும் போது முதலில் தூரத்திலிருந்தே கோபுரத்தையும் கோபுரக் கலசங்களையும் தரிசித்த பின்னர் கோயிலில் நுழைந்து கொடி மரத்தின் முன் வணங்கி பின்னர் பலி பீடம், நந்தீஸ்வர மூர்த்தி, துவார பாலகர்கள், பிள்ளையார், பிரகார மூர்த்திகள், கோஷ்ட மூர்த்திகள், நவகிரக நாதர்கள், அம்பாள், சண்டேச மூர்த்தி, ஆஞ்சநேய மூர்த்தி, பைரவர் என்று எல்லா தெய்வ மூர்த்திகளையும் வழிபட்ட பின்னர் இறுதியாக அல்லது பூரணமாக இந்த அனைத்து மூர்த்திகளை வழிபட்டதால் விளைந்த தெய்வீக புண்ணிய சக்தியை மூல சிவ மூர்த்தியிடம் அளித்து தனக்கு இறைவழிபாட்டிற்கு அனுமதி அளித்த பெருங்கருணைக்கு நன்றி செலுத்தி விடை பெற வேண்டும் என்பதே சித்தர்கள் சுட்டிக் காட்டும் எளிமையான வழிபாட்டு முறையாகும்.

ராச்சாண்டார் திருமலை

இம்முறையில் பல திருத்தலங்களிலும் வழிபட்ட ஜெய விஜயர்கள் தாங்கள் பெற்ற அளப்பரிய புண்ணிய சக்தியில் ஒரு பகுதியை அரச மர வடிவத்தில் ராச்சாண்டார் திருமலையில் விட்டுச் சென்றார்கள் என்பது அகத்திய கிரந்தங்கள் உரைக்கும் திருத்தல இரகசியமாகும்.
எனவே இத்தலத்தில் உறையும் அற்புத தெய்வீக சக்தி வாய்ந்த அரச மரங்களை வழிபட்டால் வைகுண்டத்தில் வழிபாடுகள் செய்த பலன்களை சிரமமின்றி இப்பூவுலகிலேயே பெற்று விடலாம் என்றால் என்னே சித்தர்களின் கருணை ?
இத்தலத்தில் வழிபாடு செய்வோர்கள் இவ்விரண்டு அரச மரங்களுக்கு இடையே புகுந்து செல்வதால் அது சொர்க்க வாசலை மிதித்த பலனை ஒரு நொடியில் தந்து விடுகிறது. ஆம், சொர்க்க வாசல் என்பது என்ன ? வைகுண்டத்தில் துவார பாலகர்களைக் கடந்து வைகுண்டப் பெருமாளையும், லட்சுமி தேவியையும் தரிசிப்பதுதானே சொர்க்கம். இங்கு நீங்கள் வைகுண்ட வாச துவார பாலகர்களைக் கடந்து செல்கிறீர்கள் என்றால் அதன் பின் நீங்கள் தரிசிப்பது சொர்க்கம் தானே
இது பற்றிய மேலும் பல விளக்கங்கள் இத்தலத்தைப் பற்றிய ஆன்மீக ரகசியங்களை அறிந்து கொள்ளும் போது அவை சொல்லாமலே உங்களுக்குப் புரிய வரும்.
வழிபாடு செய்யும் பக்தர்களின் இடது பக்கம் அமைந்துள்ளவர் ஜெயர், வலது பக்கத்தில் உள்ளவர் விஜயர். அதாவது ஸ்ரீவிராசிலை ஈசனின் வலது பக்கம் உறைபவர் ஜெயர், அவரின் இடது புறம் அருள் செய்பவர் விஜயர்.

வேதம் ஆயிரம் விரிந்திடும் அற்புதம்

நாம் அறிந்தது ருக் முதலான நான்கு வேதங்களே. உண்மையில் இவை வேதத்தின் பிரிவுகளே.  அதுபோல பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருஅருட்பா, திருப்புகழ் போன்ற இறை கீதங்களும் வேதங்களே ஆகும். இறைவனைப் போல வேதத்திற்கும் காலம், எண்ணிக்கை என்ற எந்த வரையறையும் கிடையாது. வேதம் அநாதியானது, அனைத்தையும் கடந்து நிற்பது.
நாம் அறிந்த நான்கு வேதங்களில் கூட உட்பிரிவுகள் ஏராளம். அவை காலப் பிரவாகத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. உதாரணமாக, கலியுகத்தில் சாம வேதம் ஒலிக்கும் ஸ்ரீசாமவேதீஸ்வரர் திருத்தலத்தில் (திருமங்கலம், லால்குடி) பரசுராமர் தீர்க்க நேத்ரம் என்ற சாம வேதத்தின் சாகையை ஓதியே இன்றும் வழிபடுகிறார். இந்த சாம வேத சாகையை சித்தர்கள் மட்டுமே அறிந்திருந்தாலும் சாதாரண மக்களும் தீர்க்க நேத்ரம் என்னும் சாம வேத சாகையை ஓதிய பலனை அளிக்கும் வழிபாட்டு முறையை அருளியுள்ளார்கள்.

ரோஸ் வண்ணமுள்ள ரோஜா மலர் இதழ்களுடன் கல்கண்டு சேர்த்து கல் உரலில் இடித்து அத்துடன் தேன், சிறிது பச்சை கற்பூரம் கலந்து குல்கந்து தயாரித்து பரசுராமர் வழிபட்ட சிவலிங்கத்திற்குப் படைத்து ஏழைகளுக்கு தானம் அளித்தால் அது சாம வேதம் ஓதிய அற்புத பலன்களை அளிக்கும். இதனால் ரத்த சோகை நிவர்த்தியாகும். உடலில் புத்துணர்வும் தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் தோலில் மினுமினுப்பும் உண்டாகும்.
இவ்வாறு ராச்சாண்டார் மலையில் விளங்கும் அரச மரங்களில் அட்சர அஸ்வத்தம் என்ற வேதங்கள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்பது பலரும் அறியாத ஆன்மீக இரகசியமாகும். சாதாரணமாக இவை கேட்பதற்கு அரச இலைகள் ஒன்றோடொன்று உராய்வதால் ஏற்படும் ஒலி, காற்று மரக் கிளைகளில் இலைகளில் மோதும் ஒலி என்று நாம் நினைப்பதுண்டு. உண்மையில் இவை அட்சர அஸ்வத்த வேத கீதமே.
குண்டலினி யோகத்தில் அனாகத சக்கரத்தை அடைந்த நிலையில் உணரக் கூடியதே இந்த அட்சர அஸ்வத்த வேத ஒலியாகும். இந்த அஸ்வத்த அட்சர வேத ஒலிக்கு சான்றாக விளங்குவதே தற்போது அமிர்தானந்த மயி அன்னையின் வேத கீதமாகும். அன்னையை நேரில் தரிசித்தவர்கள் அனைவருமே இந்த வேத கீதத்தை அனுபவித்திருக்கலாம்.
அன்னையின் தரிசனம் பெற்றவர்கள் சற்றே பின் நோக்கி சென்று அந்த தரிசனக் காட்சியை நினைவு கூறுங்கள். அன்னை தன்னுடைய இறை கீர்த்தனையின்போது, அம்மா, அம்மா, அம்மா அல்லது கிருஷ்ணா, கிருஷ்ணா, கிருஷ்ணா என்று சில இறை நாமங்களை பாடும்போது அந்த ஒலி எங்கிருந்து வந்தது என்று தீர்க்கமாக சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக அவை அன்னையின் திருமுகத்திலிருந்தோ, திருஉதடுகள் வழியாகவோ வந்த வார்த்தைகள் அல்ல. அந்த வேதம் உங்கள் உள்ளம் முழுவதும், நீங்கள் இருக்கும் இடம் முழுவதும், இப்பூமி முழுவதும், நம் தலைக்கு மேல் உள்ள வானம் முழுமையும் வியாபித்து இருக்கும்.
இனியாவது அன்னையை தரிசிக்கும்போது அன்னையின் தெய்வீக அழைப்பை கூர்ந்து கவனியுங்கள். ஆம், அவையே அட்சர அஸ்வத்த வேத ஒலிகளாகும். விஷ்ணு வேதப் பரல்கள்.
அஸ்வத்த வேத சக்திகளை மனிதர்களும் பயன்படுத்தக் கூடிய முறையை வகுத்துத் தந்துள்ளனர் நம் பெரியோர்கள். ஆண்கள் இந்த அரச மரங்களின் கீழ் ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் பத்மாசனம் இட்டோ அல்லது வேறு ஏதாவது ஒரு சுகமான ஆசனத்தில் அமர்ந்து அரச இலைகளில் ஏற்படும் ஒலியைக் கவனித்து வந்தாலே அது நாளடைவில் வேத தியானமாக மலரும்.
ஜெயர் அரச மரத்தின் கீழ் வலவோட்டு நட்சத்திர தினங்களிலும், விஜயர் அரச மரத்தின் கீழ் இடவோட்டு நட்சத்திர தினங்களிலும் மேற்கூறிய அஸ்வத்த தியானத்தை இயற்றுதல் சிறப்பு.
அஸ்வனி, பரணி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், அஸ்தம், சித்திரை, சுவாதி, மூலம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இந்த பதினைந்து நட்சத்திரங்கள் வலவோட்டு நட்சத்திரங்களாகும்.
ரோஹிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, மகம், பூரம், உத்திரம், விசாகம், அனுஷம், கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிய 12 நட்சத்திரங்கள் இடவோட்டு நட்சத்திரங்கள்.
ஆனால், பலருக்கும் இந்த நட்சத்திர தன்மைகள் புரியாமல் இருக்கலாம். அத்தகையோர் ஞாயிறு, செவ்வாய், வியாழக் கிழமைகளில் ஜெய அரச மரத்தடியிலும் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் விஜயர் அரச மரத்தடியிலும் மேற்கூறிய தியானத்தைப் பழகலாம். சனிக் கிழமைகளில் எந்த மரத்தின் அடியில் வேண்டுமானாலும் அமரலாம்.

இந்த அஸ்வத்த தியானத்தால் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் சிரமப்படுபவர்களுக்கு அமைதியான கனவுகளற்ற தூக்கம் கிட்டும். ஆனால், அவர்கள் பகலில் கண்டிப்பாகத் தூங்குவதைத் தவிர்க்கவும். நரம்பு சம்பந்தமான நோய்களும், காக்காய் வலிப்பு போன்ற வலிப்பு நோய்களும் நிவாரணம் பெறும். 20, 30 வயதை அடைந்த ஆண்கள், பெண்கள் கூட படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கும் துன்பத்தை அடைகிறார்கள். ஆங்கில மருத்துவத்திலும், ஆயுர், சித்த வைத்தியத்திலும் இதற்கு தீர்வு கிடையாது. வெளியே சொல்ல முடியாத இந்த வேதனைக்கு ஓரளவு நிவாரணம் அளிப்பதே அஸ்வத்த தியானமாகும். தொடர்ந்த வழிபாடு அவசியம்.

குலம் விளக்கும் சிவன் சொத்து

பொதுவாக, சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். சிவன் கோயில் சொத்தை ஒரு சிறிதளவே அபகரித்தாலும் அது ஒருவருடைய வம்சத்தையே அழித்து விடும் என்பது இதன் பொருள். இதற்கு சாட்சியாக விளங்கும் தலங்களுள் ராச்சாண்டார் திருமலையும் ஒன்றாகும். இங்கு வௌவால் எச்சம் ஏராளமாக விளங்குவதைக் காணலாம். சிவன் சொத்தை அபகரித்தவர்களே இவ்வாறு வௌவாலாகப் பிறந்து வேதனையில் உழல்கின்றார்கள்.
ஒருமுறை பெரிய வாத்யாருடன் சிறுவனான நமது குருதேவர் வெங்கடராம சுவாமிகள் ஒரு சிவாலயத்திற்குச் சென்றிருந்தார்கள். அத்தலத்தில் இறைவனை தரிசனம் செய்யவே முடியவில்லை. அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் வௌவால்களின் எச்சமும், துர்நாற்றமும், நடமாட்டமும் இருந்தது. அது பற்றி பெரியவரிடம் விளக்கம் கேட்டபோது, “அது ஒன்னுமில்லடா, கண்ணு. நீ என்னதான் அடுத்தவன் சொத்த கோடி கோடியா கொள்ளையடிச்சி சேத்தாலும், சாப்படப்போறது என்னமோ இந்த ஒரு சாண் வயித்துக்கு தான். அப்படி நீ சாப்பிடுறது ஜிலேபியா இருந்தாலும் லட்டா இருந்தாலும் கடைசியா அது மலமாத்தானே வெளிய வரும். இந்த உண்மைய சிவன் சொத்த கொள்ளையடிக்கிறவன் புரிஞ்சுக்கணும் அப்படீங்கறதுக்காக சுவாமி அவன வௌவால பொறக்க வச்சி தன்னோட கோயில்லேயே தொங்கவுட்டறாரு. வௌவால் தன் வாய் வழியாவேதான் சாப்பாடும் சாப்புடும், மலமும் போவும்.”

ஜெய விஜய அரச மரங்கள்
ராச்சாண்டார் திருமலை

அதைக் கேட்ட சிறுவன் அதிர்ச்சி அடைந்தான். “இவ்வளவு கொடுமையானதா சிவன் சொத்தை அபகரிப்பது?” என்று அந்த பிஞ்சு உள்ளம் மக்களுக்காக பரிதாபப்பட்டது. ஒரு பக்கம் மக்களின் தவறுக்காக சிறுவனின் மனம் வேதனைப்பட்டாலும் பெரியவர் சொல்வது உண்மைதானா என்று சிறிதளவே, மிகச் சிறிதளவே ஐயம் சிறுவனின் மனதில் தோன்றியது. அதைக் கப்பெனப் பிடித்த பெரியவர் ஒரு புன்சிரிப்புடன், “எந்த சந்தேகமா இருந்தாலும் அதை உடனே நிவர்த்தி செஞ்டனும், கண்ணு,” என்று கூறி சிறுவனை நோக்கி கண் சிமிட்டினார். சிறுவன் வெட்கத்தால் தலை குனிந்தான்.
சற்று நேரம் கழித்து பெரியவர் தலையை நிமிர்த்தி, “விஸ்வநாதா,” என்று குரல் கொடுத்தார். அக்கோயிலில் சிறுவனையும் பெரியவரையும் தவிர யாரும் இல்லை. அப்படி இருக்க பெரியவர் யாரை அழைக்கிறார், என்று சிறுவன் யோசனையுடன் பார்த்தால், பெரியவர் அந்த வௌவால்களைப் பார்த்துதான் அழைக்கிறார் என்று தோன்றியது. சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
ஆனால், பெரியவர் அழைத்த மறுகணமே, ஒரு வௌவால் பறந்து வந்து பெரியவர் காலடியில் சொத்தென்று விழுந்து சிறகுகளை அடித்துக் கொண்டு அங்கேயே அவர் காலடியில் கிடந்தது.
பெரியவர், “இங்க பார்ருடா, இங்க கிடக்கிற விஸ்வநாதனுக்கு 100 ஏக்கருக்கு மேலே சொத்து இருந்துச்சு, ஆனா. அவன் விதி பாரு. சாமி சொத்து ஒரே ஒரு ஏக்கரை தன் சொத்தோட சேத்து வச்சுக்கிட்டான். அதுக்கு குத்தக, நெல் எதுமே குடுக்கல. இப்ப என்னாச்சு, வௌவாலா தொங்குறான்,”
இப்போது சிறுவன் வௌவாலைப் பார்த்தான். ஆனால், அவன் கண்களுக்கு ஒரு வயதான கிழ உருவமே தெரிந்த்து. அத்துடன் பெரியவர் சொல்லியது, சொல்லப் போவது அனைத்தும் வேதமான சத்தியமே என்ற உண்மையும் புரிந்தது.
ஆண்டுகள் உருண்டன ….
சிறுவன் வெங்கடராமன் திருக்கயிலாய பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மகா சந்நிதானமாக மலர்ந்தார். 1994 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் ராச்சாண்டார் திருமலையில் உழவாரப் பணியை ஏற்று நிறைவேற்றினார். அப்போது அக்கோயிலில் உள்ள வௌவால்களை சுட்டிக் காட்டி, “பார்த்தீரகளா, விஸ்வநாதன் நிலையை ?” என்று ஒரு வௌவாலைக் காட்டி கூறினார்.  அடியார்கள் யாருக்கும் எதுவும் புரியவில்லை. அதன் பின்னரே மேற்கூறிய நிகழ்ச்சியை சன்னிதானம் விவரித்தார்.
இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும். விஸ்வநாதன் வௌவாலாய்த் தொங்கியது வேறெங்கும் இல்லை. இதே ராச்சாண்டார் திருமலையில்தான். அப்போது ஒரு அடியார் கேட்டார், “வாத்யாரே, நீங்கள் பெரிய வாத்யாருடன் வந்த காலத்திலிருந்தே இவன் இங்கே தொங்குகிறான் என்பதை நினைக்கும்போது மனம் மிகவும் வேதனைப்படுகிறதே. அந்த வேதனையை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறதே,”
வாத்யார் சிரித்துக் கொண்டே, “ஆமாம், சார். காஞ்சீபுரத்தில் ஒரு அடியார் சிவன் கோயில் திருப்பணிக்கு ஒரே ஒரு செங்கல் கொடுத்தார். அதன் பலனாய் அவனுடைய மூவேழு 21 வம்சத்தைச் சேர்ந்தவர்களும் நலமுடன் இருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. அதை உங்கள் மனம் உடனே ஏற்றுக் கொள்கிறது. ஆனால், ஒருவன் சிவ சொத்தை அபகரித்தால் அந்த சொத்து திரும்பவும் சிவனுக்கு திருப்பி அளிக்கப்படும் வரை வௌவாலாய் இருப்பான் என்றால் அதை உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படித்தானே ?” என்று திருப்பக் கேட்டார். சன்னிதானத்தின் இந்த யதார்த்தமானே கேள்விக்கு யாராலும் விடை அளிக்க முடியுமா ?

ஆனால், சராசரி மனிதர்கள் அனைவரின் நிலை இதுதானே. ஒரு சிறிய கற்பூரத்தை ஏற்றி விட்டால் கூட இறைவன் நமக்கு மலையளவு செல்வத்தை அளிக்க வேண்டும் என்று விரும்பும் மனிதன் தான் செய்த ஒரு சிறு தவறுக்கான தண்டனையைக் கூட மனமுவந்து அனுபவிக்க முன் வருவதில்லை.
இத்தகைய ஆன்மீக தத்துவங்களை ஸ்ரீவாத்யார் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு அடியார், “வாத்யாரே …” என்று ஏதோ சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தி விட்டு வாத்யாரைத் தயக்கத்துடன் பார்த்துக் கொண்டே நின்றார். அதைப் பார்த்த ஸ்ரீவாத்யார், எதற்காக சார், தயங்குகிறீர்கள். தைரியமாக நினைத்ததைக் கேட்டு விடுங்கள்.” என்று தைரியம் அளிக்கவே, அந்த அடியார் தொடர்ந்து, “பெரிய வாத்யார் சாட்சாத் சிவனேதான் என்று தாங்கள் அடிக்கடி கூறுவதுண்டு. அவ்வாறிருக்க அவர் காலடியில் விழுந்த விஸ்வநாதன் ஏன் இன்னும் வௌவால் பிறவியிலிருந்து மோட்சம் பெறாமல் இன்னும் இங்கேயே தொங்கிக் கொண்டிருக்கிறான் ?” என்று கேட்டார்.
வாத்யார் பலமாய்ச் சிரித்து, “உங்கள் கேள்வி நியாயமானதே. அடியேன் குருநாதர் கோவணாண்டி சிவபெருமான்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், சிவபெருமானின் காட்சி பெற்று அவரிடம் வரம் பெற்ற இராவணனின் நிலை என்ன ? காமத்தால் தவறுகள் செய்தான். அவன் பூரண பக்தன் ஆகி விட்டானா  என்ன ? எனவே சிவபெருமானின் காலடியில் விழுந்ததற்கான பலன் நிச்சயம் உண்டு. அது வேறு கதை. அதே சமயத்தில் திருடிய சொத்தை திருப்பிக் கொடுக்காமல் இருக்கும் வரை எந்த இறை மூர்த்தியின் தரிசனமும் ஒரு திருடனுக்கு நியாயம் வழங்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.”
“கலியுகத்தில் பலரும் அவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எவ்வளவு தவறு வேண்டுமானாலும் செய்யலாம். எப்போதாவது அரை அணாவிற்கு சூடம் வாங்கி பிள்ளையாருக்கு கொளுத்தி விட்டால் நம் தவறுகள் அனைத்திற்கும் பிராயசித்தம் கிட்டிவிடும். இது மக்களின் அறியாமையே.”
“பிள்ளையாருக்கு அரை அணாவிற்கு சூடம் கொளுத்தினால் கூட அதற்கேற்ற பலன் நிச்சயமாக்க் கிடைக்கும். ஏன், சூடமே வேண்டாம். திருச்சி மாணிக்க விநாயகருக்கு நீங்கள் இடது கையால் வணக்கம் தெரிவித்தால் கூட அதையும் ஒரு வழிபாடாக ஏற்றுக் கொண்டு அருள் புரியும் கருண வள்ளல் அவர். ஆனால், அவரும் எந்த தவறையும் திருத்திக் கொள்ளாத ஒரு அடியவருக்கு பிராய சித்தம் அளிக்க முன் வருவதில்லை.”

எந்த சிவத்தலம் சிவன் சொத்து குல நாசம் என்பதற்கு சான்றாய் இருக்கிறதோ அதே சிவத்தலம்தான் குலம் விளங்க துணையாகவும் நிற்கும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் பொலிகின்றது. இங்குள்ள அரச மரத்தின் சமித்துகளை (காய்ந்து, தானாய் விழுந்த அரச மரக் குச்சிகள்) அரச மர குச்சி, கொம்புகளை முறையாகப் பயன்படுத்தி வந்தால் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கி, நல்லொழுக்கத்துடன் திகழ்ந்து குலத்தை விளங்க வைப்பார்கள். குலம் காக்கும் விளக்காய்த் திகழ்வார்கள் என்பது உண்மை.

அட்சர பிருத்வி பூஜை

இத்தல அரச மரத்திலிருந்து காய்ந்து தானாய் விழும் குச்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அக்குச்சிகள் எந்த நீள அளவில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு பித்தளை, வெண்கலம் அல்லது மரத் தாம்பாளத்தில் காவிரி, கொள்ளிடம் ஆற்று மணலைப் பரப்பிக் கொள்ள வேண்டும். அரசங் குச்சியால் அந்த மணலின் மேல் அ, இ, உ என்ற மூன்று எழுத்துக்களை மேலிருந்து கீழாக எழுத வேண்டும். பின்னர் அந்த மூன்று எழுத்துக்களையும் கையால் தடவி அழித்து விட வேண்டும்.
அடுத்து மணல் மேல் இ, அ, உ என்ற மூன்று எழுத்துக்களை மேலிருந்து கீழாக எழுத வேண்டும். பின்னர் அந்த எழுத்துக்களையும் கையால் தடவி அழித்து விடவும்.
அடுத்து மணல் மேல் உ, அ, இ என்று மேலிருந்து கீழாக எழுத வேண்டும். இவ்வாறு மூன்று முறை எழுதுவது ஒரு அட்சர சுற்று ஆகும். இவ்வாறு எத்தனை அட்சர சுற்றுக்களை வேண்டுமானாலும் எழுதலாம். குழந்தைகளின் ஆர்வத்தையும் வயதையும் பொறுத்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.
இதனால் குழந்தைகளுக்கு படிப்பில் கவனமும் ஆர்வமும் அதிகரிக்கும். நல்லொழுக்கம் மிளிரும். பெற்றோர்களுக்கு அடங்கி நடக்கும் நற்பண்பு வளரும். ஆனால், இவை எல்லாம் ஓரிரு நாட்களில் வந்து விடும் என்று நினைக்க வேண்டாம். விடாமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜித்து வந்தால் அற்புத பலன்களைக் கண் கூடாகக் காணலாம்.
இந்த பூஜையில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்.

  1. அரசங் குச்சியை எக்காரணங் கொண்டும் மரத்திலிருந்து ஒடிக்கவோ, வெட்டியோ எடுக்கக் கூடாது. காய்ந்தோ ஒடிந்தோ தானாய் விழுந்த மரக் குச்சிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  2. 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்கள் குச்சிகளை எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் பெரிய குழந்தைகள் தாங்களாக வந்து குச்சியை எடுத்துச் செல்ல வேண்டும்.
  3. அட்சர பிருத்வி பூஜையை கோயிலில், வீட்டில், பள்ளிகளில் எங்கு வேண்டுமானாலும் நிறைவேற்றலாம்.
  4. பூஜைகளை நிறைவேற்றும்போது குச்சிகள் உடைந்து விட்டால் அதை ஆற்றில் போட்டு விட வேண்டும். அவைகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் சிறப்பான பலன்கள் ஏற்படாது.
  5. ஒருவர் ஒரு முறை ஒரு குச்சியை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், எப்போது வேண்டுமானாலும் பழைய குச்சிகளை ஆற்றில் சேர்த்து விட்டு புதுக் குச்சிகளை எடுத்துப் பயன்படுத்தலாம்.
  6. தாம்பாளம், மணல், குச்சி இவை அனைத்தும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் தனியாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு குழந்தை பயன்படுத்துவதை மற்றோர் குழந்தை பயன்படுத்தக் கூடாது.
அனைவர்க்கும் ஆனதே அட்சர பூஜை

குழந்தைகள், சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் இந்த அட்சர பூஜையை நிறைவேற்றி அற்புத பலன்களைப் பெறலாம்.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறும்போதும், குழப்பமான சூழ்நிலைகளைச் சந்திக்கும்போதும் இந்த அட்சர பூஜையை இயற்றி வந்தால் தீர்க்கமான முடிவுகளை எளிதாக எடுக்க முடியும். பெரியவர்கள் இத்தகைய பூஜைகளை இயற்றும்போது தலைக்குக் குளித்து நெற்றிச் சின்னங்களுடன் நிறைவேற்ற வேண்டும். சிறியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இத்தகைய நியதிகள் கிடையாது.
ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன்னும், புதிதாக வேலைக்குச் சேரும் முன்னும் மேற்கூறிய பூஜைகளை நிறைவேற்றுதால் அற்புத பலன்களைப் பெறலாம்.
வங்கிக் காசாளர்களைப் போல பணத்தைக் கையாள்பவர்களும், கைரேகை ஜோதிடர்களும், மருத்துவர்களும் இப்பூஜைகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வநதால் தங்கள் துறையில் சிறந்து விளங்குவர். ஆனால், இவர்கள் மாதம் ஒரு முறையேனும் தாங்கள் பயன்படுத்தும் அரசங் குச்சியையும் மணலையும் மாற்றிக் கொள்வது அவசியம்.

அரசாளும் அரசங் குச்சி

வித்யா சக்திகள் நிறைந்த மூலிகைகளில் அரசங் குச்சியும் ஒன்றாகும். வித்யா என்று இங்கு நாம் குறிப்பிடுவது பள்ளிப் படிப்போ, ஏட்டுக் கல்வியோ கிடையாது. எது நிரநதரமான அறிவோ அந்த வித்யா சக்தியை அளிப்பதே அரசங் குச்சியின் தன்மையாகும். இன்றைய உலகில் இவ்வாறு தெய்வீகப் படிப்பை சொல்லித் தரும் குருக் குலங்கள் கிடையாது. பெரும்பாலும் நாம் ஏட்டுப் படிப்பை புகட்டும் பள்ளிகளையே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
இவ்வாறு ஏட்டுப் படிப்பை தொடரும் அதே சமயத்தில் ஆன்மீக நாட்டத்தையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்த உதவுவதே ராச்சாண்டார் மலை அரச மரக் குச்சிகளாகும்.
இந்த ஜெய, விஜய மரங்களின் கீழிருந்து ஏதாவது ஒரு குச்சியை எடுத்து அதற்கு சந்தனம் அல்லது மஞ்சள், குங்கும்மிட்டு, மஞ்சள் நூலாடை சார்த்தி அதை சரஸ்வதி தேவியாக பாவித்து வணங்கி, பூஜித்து வந்தால் ஏட்டுப் படிப்பை குழந்தைகள் படித்து வந்தாலும் நாளடைவில் அக்குழந்தைகளுக்கு இறை உணர்வு ஏற்பட்டு நற்பண்புகளுடன் திகழ்வார்கள்.
இடர்களையும் பதிகம், திருநீற்றுப் பதிகம், கோளறு பதிகம் இம்மூன்று பதிகங்களையும் குழந்தைகள் தினமும் ஓதி அரச சரஸ்வதி தேவியை வணங்கி வந்தால் வித்யா சக்திகள் பெருகும் என்பது சித்தர்கள் வாக்கு.

பெண்களுடையதே பெருமை

ஆண்களைப் போல பெண்கள் பூணூல் அணிந்து, தர்ப்பணங்கள், ஹோமம், வேள்வி போன்ற இறை காரியங்கள் இயற்ற முடியவில்லையே என்பது பல பெண்களின் மனக் குறை. பெண்கள் இத்தகைய காரியங்களை நிறைவேற்றுவது தெய்வீகத்தில் ஏற்புடையதா என்றும் பலருக்கு குழப்பம். உண்மையில் கார்க்கி, மைத்ரேயி போன்ற எத்தனையோ பெண் குலத் தோன்றல்கள் ஆண்கள் செய்யும் அனைத்து காரியங்களை நிறைவேற்றி பெண் குலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஆனால், சமீப காலத்தில் பூணூல் போன்றவை ஆண்களுக்கே மட்டுமே என்ற நிலை தோன்றியதற்கு காரணம் பெண்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இல்லற கடமைகளை முறையாக நிறைவேற்றி வந்தாலே அதில் அனைத்து தெய்வீக பூஜைகளும் அடங்கி விடும் என்ற காரணத்தால்தான். பெண்களின் மாங்கல்யம் பூணூலை விடச் சக்தி வாய்ந்தது. அவர்கள் பித்ரு காரியங்களுக்காக தயார் செய்யும் நைவேத்யம் பிரசாதம் அவர்கள் அளிக்கக் கூடிய தர்ப்பணத்தை விட பவித்ரமானது.

ஸ்வர்ண மேகலையில் அம்மன்
ராச்சாண்டார் திருமலை

இம்முறையில் ராச்சாண்டார் திருமலையில் விளங்கும் அரச மரங்களை பெண்கள் வழிபடும் முறை இதோ. மஞ்சளை தங்கள் கையால் அரைத்து இம்மரங்களுக்கு பூசி, குங்குமத்தால் பொட்டிட்டு மூன்று முறைக்குக் குறையாமல் ஒவ்வொரு மரத்தையும் தனித் தனியாக வலம் வந்து வணங்கினால் அனைத்து சௌபாக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள். குடும்ப ஒற்றுமை பெருகும். விவாகரத்து நிலையில் உள்ள திருமண உறவுகள் கூட சீர் பெறும்.
கன்னிப் பெண்கள் தங்கள் கையால் அரைத்த மஞ்சளை மட்டும் இம்மரங்களுக்கு பூசி ஒவ்வொரு மரத்தையும் ஒன்பது முறைக்குக் குறையாமல் வலம் வந்து வணங்குவதால் திருமணத் தடங்கல்கள், தோல் வியாதிகள் விலகும். மனதிற்கேற்ற மணாளன் வந்தமைவான்.
மஞ்சள், குங்குமம், வளையல்கள், சாந்துப் பொட்டு, மாங்கல்ய சரடு, பூ, பழம் போன்ற மாங்கல்யப் பொருட்களை வெற்றிலை கொட்டைப் பாக்குடன் சுமங்கலிகளுக்கு அளித்தல் இத்தலத்திற்கான சிறப்பான சுமங்கலி பூஜையாக சித்தர்கள் எடுத்துரைக்கிறார்கள். இது சங்கர நாராயண மூர்த்திகளின் பேரருளைப் பெற்றுத் தரும். எப்படி ?

தாந்த்ரீக சாத்திரங்களில் வெற்றிலை சிவ தத்துவத்தையும், கொட்டைப் பாக்கு நாராயண தத்துவத்தையும் குறிக்கிறது. கொட்டைப் பாக்கின் உள்வெட்டுத் தோற்றம் விஷ்ணு மூர்த்தியின் சக்கர வடிவுடன் திகழ்வதை சாதாரண மனிதர்களும் பார்த்து இன்புறலாம்.

தேவதைகளை வசியம் செய்யப் பயன்படுத்தப் படும் வெற்றிலை சிவ தத்துவத்துடன் பொலிவதில் என்ன ஆச்சரியம் ? மேலும், பெருமாளை நிந்தித்தால் சிவனிடம் சென்று பிராயசித்தம் பெறலாம் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. இம்முறையில் ஓம்நமோநாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை குரு வார்த்தையை மீறி ராமானுஜ ஆச்சாரியார் மற்றவர்களுக்கு உபதேசித்ததால், அவருடைய குருநாதர் ராமானுஜரை சிவ தத்துவமான வெற்றிலை மேல் அமரச் செய்து பிராயசித்தம் அருளிய வரலாறு நீங்கள் அறிந்ததே.

யாகமும் சமுதாயமும்

உலக மக்கள் அனைவரும் நலம் பெறவும், சமுதாயம் வளம் பெறவும், நாட்டில் அமைதி நிலவுவதற்காகத்தான் கோயில் திருப்பணிகள், குடமுழுக்குத் திருவிழாக்கள், தேரோட்டம், பிரதோஷம், சிவராத்திரி போன்ற வழிபாடுகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், இத்தகைய இறை வழிபாடுகளைக் கூட நிறைவேற்ற முடியாதபடி பல இடர்பாடுகள் தோனறி பல ஆலய குடமுழுக்குப் பணிகள் பாதியில் நின்று போய் உள்ளதைக் காண்கிறோம்.
இவ்வாறு கோயில் கும்பாபிஷேகம், தேரோட்டம் போன்ற ஆலயத் திருப்பணிகள் பாதியில் நின்று போய் விட்டால் அதைத் தொடர்வதற்காக அனுகிரகம் அருளும் மூர்த்தியே லால்குடி அருகே அருளும் திருமாந்துறை ஸ்ரீஆம்ரவனேஸ்வரர் ஆவார்.
இத்தலத்தில் வளர்பிறை சதுர்த்தி திதிகளில் இறைவனை வேண்டி ஹோமங்கள், வேள்விகள், வழிபாடுகள் இயற்றினால் பாதியில் நின்று போன இறைவழிபாடுகள் புத்துயிர் பெற்று அந்த இறை காரியங்கள் தொடர்ந்து நடை பெறும். அத்தகைய ஹோமங்கள், யாகத்தில் ராச்சாண்டார் மலை அரசு சமித்துகளை ஆஹூதியாக அளித்தலால் பலன்கள் துரிதமாகும்.
குளம் வெட்டுதல், பாலம் அமைத்தல், பள்ளிகள், பூங்கா போன்ற பொது நலத்திற்காக நிறைவேற்றப்படும் எந்த காரியத்திற்காக ஹோமங்கள், யாகங்கள் நடத்துவதாக இருந்தாலும் அங்கு ராச்சாண்டார் திருமலை சமித்துகளை பயன்படுத்துவதால் அதிஅற்புத பலன்களைப் பெறலாம. ஆனால், சுய நலத்திற்காக இந்த அரசு சமித்துகளை பயன்படுத்தினால் வீண் சாபங்களே மிஞ்சும் என்பதை நினைவில் கொள்ளவும்.

கருட தீர்த்தம்

ராச்சாண்டார் திருமலையில் அடிவாரத்தில் அமைந்துள்ள கருட தீர்த்தம் அற்புத மூலிகை சக்திகள் நிறைந்த நோய் நிவாரண தீர்த்தமாகும். இத்தீர்த்தம் தோன்றிய வரலாற்றைக் கேட்டாலே எத்தனையோ வியாதிகள் தீரும் என்றால் இத்தீர்த்த மகிமையை சொற்களால் விளக்க முடியுமா ?
தேவ லோகத்தில் இரட்சன் என்ற ஒரு தேவ கழுகு இருந்தது. பராகிரமம், பக்தி, நற்குணங்கள் நிரம்பிய கழுகு அது. நாராயண மூர்த்தியிடம் பேரன்பு கொண்டு பூஜித்து வந்த்து. அதற்கு ஒரு ஆசை, அவா. அது என்ன ?
எம்பெருமான் சிவன் அற்புதமான காளை வாகனத்தில் பவனி வருவது போல் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியும் ஒரு வாகனத்தில பவனி வந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும். அவ்வாறு அவர் பவனி வரும் வாகனமாக நாம் ஆக முடிந்தால் அது இன்னும் எவ்வளவு சிறப்பாக இருக்கும் ? இவ்வாறு எண்ணிய அந்த கழுகு நாராயண மூர்த்தியைச் சரணடைந்து தன்னுடைய விருப்பத்தை வெளியிட்டது.
ஆபத் பாந்தவனான நாராயண மூர்த்தியும், “அப்படியே ஆகட்டும்,” என்று திருவாய் மலர்ந்து அருள உத்தேசித்தார். அந்நிலையில் லட்சமி தேவி இடை மறித்து, “இரட்சனே, மிகவும் பராகிரமம் பொருந்திய நீ ஏதாவது ஒரு நற்காரியத்தை நிறைவேற்றி அதன் பரிசாக எம்பெருமானின் வாகனமாக அமர்ந்தால்தானே உனக்கும் பெருமை, என் மூர்த்திக்கும் கௌரவம் ?” என்று கூறவே அதைக் கேட்ட கழுகும், “ஆம் அன்னையே நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. அடியேன் நிறைவேற்ற வேண்டிய அந்த நற்காரியத்தையும் தாங்களே கருணை கூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன்,” என்று பிரார்த்தித்தது கழுகு.
தேவி, “சிவபெருமானின் வாகனம் தூய வெண்மையாகப் பிரகாசிக்கிறது அல்லவா? அது போல என்னுடைய மூர்த்தி அமரும் வாகனமும் வெண்மையாகப் பிரகாசிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அதை நிறைவேற்றுவாயாக,” என்று தெரிவிக்கவே கழுகும் அதை ஆமோதித்து விஷ்ணு மூர்த்தியிடமும் லட்சுமி தேவியிடமும் உத்தரவு பெற்று பூலோகத்தை அடைந்தது.
பல தீர்த்தங்களை தரிசித்து எவ்வாறு தன்னுடைய உடலைத் தூய்மை ஆக்குவது என்று சிந்தித்துக் கொண்டே இருந்தது. அப்போது ஒரு நாள் நாரதரை சந்தித்து. அவரிடம் தன்னுடைய நிலையை எடுத்துக் கூறியது. அதற்கு நாரதர், “இரட்சா, உன்னுடைய எண்ணம் நிறைவேற வேண்டுமானால் நீ துருவ சக்தி பர்வத மலைக்கு சென்று அங்கு தவம் செய்ய வேண்டும். அந்த பர்வதத்திலிருந்து ஒரு கொட்டைப் பாக்கு அளவு பாறையை உன்னுடைய அலகால் கீறி சூரிய உதயத்திற்கு முன் விழுங்கி விட வேண்டும். பின்னர் நாள் முழுவதும் அந்த மலையைப் பறந்து வலம் வர வேண்டும். மீண்டும் அடுத்த நாள் சூரிய உதயத்திற்கு முன் திரும்பவும் கொட்டைப் பாக்கு அளவு பாறையை விழுங்கி உன்னுடைய வலத்தைத் தொடர வேண்டும். இம்மலையில் உள்ள மூலிகை சக்தியால் உன்னுடைய உடல் வெண்ணிறம் அடையும். இதுதானே உன்னுடைய விருப்பமும், லட்சுமி தேவியின் இன்னுரையும் ?” என்று சொல்லி கழுகை ஆசீர்வதித்துச் சென்றார் நாரத மகரிஷி.
கழுகு பேரானந்தம் அடைந்த்து. தவம் செய்ய வேண்டிய இடத்தையும் அதன் முறையையும் விளக்கிய நாரத மகரிஷிக்கு நன்றி செலுத்தி விட்டு துருவ பர்வதத்தை நோக்கிப் பறந்த்து.
ராச்சாண்டார் மலையின் முந்தைய பெயரே துருவ சக்தி பர்வதம் என்பது. துருவ நட்சத்திரத்தைப் போல அசையாமல் ஒரே இடத்தில் சக்தி அம்சங்கள் நிரந்தரமாய் பெருகிப் பொலியும் மலை என்பது இதன் பொருள். அப்போது இறைச் சன்னதிகள் தோன்றாமல் தெய்வ சக்திகள் சூட்சுமமாக மட்டுமே நிரவிய காலம்.
துருவ சக்தி பர்வதத்தை அடைந்த கழுகு கிழக்கு நோக்கி அமர்ந்து இறைவனை வேண்டி தன்னுடைய மூக்கால் மலையைக் கொத்த ஆரம்பித்த்து. ஆனால், என்ன ஆச்சரியம் பாறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கழுகின் ஆச்சரியத்திற்கு காரணம் என்னவென்றால். அது தேவ லோக கழுகு. பூமியில் உள்ளதைப் போல தேவ லோகத்திலும் மலைகள், மரங்கள், நதிகள், பூக்கள் எல்லாம் உண்டு. தேவ லோகத்தில் உள்ள எந்த மலையை இரட்சன் கழுகு கொத்தினாலும் அந்தப் பாறைகள் தூள் தூளாகி சிதறி ஓடி விடும். அத்தனை வலிமையும் பராகிரமும் உடையது இரட்சன் கழுகு. ஆனால், இந்த பர்வதப் பாறையோ சிறிதும் அசைந்து கொடுத்த பாடில்லை.
ஆச்சரியத்துடன் மீண்டும் தன்னுடைய வலிமையைத் திரட்டி பாறையைக் கொத்தியது. ஊஹூம் … ஒன்றும் பெயரவில்லை. என்னதான் தொடர்ந்து முயற்சி செய்தாலும் அந்தப் பாறையில் ஒரு குண்டூசி அளவைக் கூட இரட்சனால் பெயர்க்க முடியவில்லை. ஆனால், தொடர்ந்த முயற்சியால் கழுகின் அலகிலிருந்து இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. இருந்தும் கழுகு தன்னுடைய முயற்சியைக் கை விடாமல் தொடர்ந்து போராடியது. இறுதியில் சோர்வடைந்து மயங்கி விழுந்து விட்டது.
மறுநாள் காலையில்தான் கண் விழித்து எழுந்தது கழுகு. மீண்டும் தன்னுடைய முயற்சியைத் தொடர்ந்தது. இவ்வாறு ஓராண்டு காலம் கழிந்தது. கழுகின் மூக்கு முழுவதுமே உடைந்து, கரைந்து போய் விட்டது. ஆனால் பாறையைச் சிறிது கூட அசைக்க முடியவில்லை கழுகால். அந்நிலையில் மீண்டும் நாரதர் தரிசனம் தந்து கழுகின் தவம் குறித்து வினவினார்.

கருட தீர்த்தம்
ராச்சாண்டார் திருமலை

கழுகின் முயற்சியை கவனமாகக் கேட்ட நாரதர், “தும்பையை நாடுவாய்,” என்ற இரு வார்த்தைகளை மட்டும் கூறி மறைந்து விட்டார். கழுகு யோசித்தது. நாரதர் சொன்ன வார்த்தைகளை மீண்டும் மீண்டும் மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டது. அப்போது தற்செயலாக சற்று தொலைவில் அம்மலையில் இருந்த ஒரு தும்பைச் செடி மீது அதன் கண் பட்டது.
உடனே விரைந்து சென்று அதன் அருகில் சென்று அமர்ந்து அந்த தும்பைச் செடியைக் கண் கொட்டாமல் பார்த்தது. தேவ லோகத்திலும் பூலோகத்திலும் எத்தனையோ தும்பைச் செடிகளை அந்தக் கழுகு பார்த்திருந்தாலும் இப்போது அதன் கண்ணில் பட்ட அந்த தும்பைச் செடியின் வெண்மை அந்தக் கழுகின் கண்களையே கூசச் செய்யும் பேரொளிப் பிரகாசத்துடன் விளங்கியது. அதை விட மற்றோர் ஆச்சரியமும் கழுகுக்காக காத்திருந்தது.
தேவ லோகத்தில் உள்ள மலைகளை எல்லாம் நொடியில் நொறுக்கக் கூடிய சக்தி உள்ள தன்னுடைய அலகால் இந்த துருவ சக்தி பறையில் ஒரு தூசைக் கூட அசைக்க முடியவில்லை. அப்படி இருக்க ஒரு குழந்தை கூட எளிதாக பிடுங்கக் கூடிய மெல்லிய தும்பைச் செடி எப்படி இந்த மலையைக் குடைந்து தன்னுடைய வேர்களைப் பதித்தது என்பதே கழுகை எதிர்கொண்ட மற்றோர் ஆச்சரியம்.
கழுகின் மன வினாவிற்கு விடை கிடைக்காமல் தும்பைச் செடியைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த்து. அப்போது எங்கிருந்தோ, “நாராயணா நாராயணா,” என்று இனிமையாக, தெளிவாக நாம ஜெபம் செய்யும் குரல் கேட்டது. கழுகு தன்னுடைய காதுகளைத் தீட்டிக் கொண்டு அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்று கவனித்துக் கேட்டது. அடுத்த ஆச்சரியம். அந்த குரல் எங்கிருந்தும் வரவில்லை. தனக்கு மிக அருகில் உள்ள தும்பைச் செடிதான் அந்த இனிமையான நாராயண ஜபத்தை ஒலித்துக் கொண்டிருந்தது.
இப்போது கழுகின் வினாவிற்கு விடை கிடைத்து விட்டது. தான் செய்கிறோம், தன்னுடைய வலிமையால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று தான் செய்த முயற்சியால்தான் எதையும் சாதிக்க முடியாமல் போய் விட்டது. இறை நாமத்தால் எதையும் சாதிக்கலாம் என்று இந்த சிறு தும்பைச் செடி நமக்கு உணர்த்தி விட்டதே என்று ஆனந்தம் அடைந்து தன்னுடைய தவம் கனிய வழி கிடைத்து மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்தது கழுகு.
மீண்டும் தான் தேர்ந்தெடுத்த இடத்திற்குச் சென்று பாறையின் மேல் தன்னுடைய அலகை வைத்து “நாராயணா, நாராயணா” என்று ஜபிக்க ஆரம்பித்தது கழுகு. சற்று நேரத்தில் பாறையில் மிகச் சிறிய பிளவு ஏற்பட்டது. கழுகின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லையே. சந்தோஷமாக நாராயண நாம ஜபத்தைத் தொடர்ந்தது. நேரம் செல்லச் செல்ல ஒரு கொட்டைப் பாக்கு அளவிற்கான பாறை மேலெழுந்து வந்தது.
கழுகு அந்த துண்டு பாறையை விழுங்கி விட்டு மேலெழுந்து பறந்து மலையை வலம் வர ஆரம்பித்தது. இவ்வாறு தினமும் நாராயண மந்திரம் ஜபித்து பாறையை விழுங்கி மலையை வலம் வந்து கொண்டிருந்தது. நாட்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்கள் ஆகின. தினமும் விழுங்கிய பாறையால் கழுகின் எடை கூடிக் கொண்டே வந்தது. நாட்கள் செல்லச் செல்ல நகர்வதற்குக் கூட சக்தியற்றதாகி விட்டது. அந்த அளவிற்கு அதன எடை கூடி விட்டது. இருந்தாலும் வைராக்கியத்தைக் கைவிடாமல் மிகவும் சிரமப்பட்டு மலையை வலம் வந்தது.
அப்போது ஒரு நாள் மீண்டும் நாரத முனியின் தரிசனம் கிடைத்த்து கழுகிற்கு. பரமானந்தம் பொங்க நாரதரை வணங்கி தன்னுடைய நிலையை விவரித்தது. நாரதர், “இரட்சா, உன்னுடைய வழிபாடு சரியான முறையில்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், உன்னுடைய எண்ணத்தில்தான் சிறு மாற்றம் தேவை,” என்றார்.
கழுகு, “சுவாமி, நீங்கள் கூறுவது அடியேனுக்கு விளங்கவில்லையே,” என்று பதிலளித்தது.
நாரதர், “இரட்சா, நீ இன்னும் மனதில் சிவன், விஷ்ணு என்ற பேதத்தைக் கொண்டிருக்கிறாயே. விஷ்ணுவே உயர்வானவர் என்ற ஒரு தலைப்பட்ச கருத்தை வளர்த்துக் கொண்டுள்ளாயே. அந்த பேதம்தான் உன்னுடைய எடையை அதிகரித்து உனக்கு வேதனையை அளித்துள்ளது. உண்மையில் இந்தப் பாறைகள் தெய்வீக சக்திப் பிழம்புகள். அவற்றால் உனக்கு சிறிதும் எடை சுமை தெரியாது,” என்று கூறி நாராயண சிவ தத்துவங்களை விளக்கினார் நாரத மகரிஷி.
அப்போதுதான் இரட்சன் கழுகிற்கு தன்னுடைய அறியாமை நீங்கி சிவ விஷ்ணு பேதம் அகன்றது. மறு கணமே அதன் கண் முன் துருவ சக்தி பர்வதம் மறைந்தது. திருக்கயிலாய பனி மலையில் சிவ பார்வதி தெய்வ மூர்த்திகளின் முன்னிலையில் அந்த கழுகு நின்றது. சுற்றிலும் பனி மலைகள் தேவ, பூத கணங்கள்.
சிவ பெருமான் இரட்சன் கழுகை அன்புடன் நோக்கி,
ஓம் தத் புருஷாய வித்மஹே ஸ்ரீமந் நாராயண பாத சேவகாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்
என்று ஆசீர்வதித்தார். இதை விடச் சிறந்த பேறு, பாக்கியம் யாருக்குக் கிட்டும். சிவபெருமான் தன் புனித அதரங்களாலேயே கழுகை நாராயண மூர்த்தியின் பாத சேவைக்கு கருடாழ்வாராக ஆட்படுத்தினார்.
தெய்வீகமான கயிலாயப் பனி மலைகளின் சிவ சக்திகளின் குளிர்ச்சியுடன் எம்பெருமானின் ஆசீர்வாதம் இணைந்து கழுகின் கழுத்தில் ஒரு வெண்ணிறப் பனி மண்டலம் உருவாயிற்று. கழுகு கருடன் ஆயிற்று. தேவர்களும் பூத கணங்களும் சிவ கணங்களும் கருடாழ்வாருக்கு பூமாரி பொழிந்தன.
ஸ்ரீமந் நாராயண மூர்த்தி ஸ்ரீதேவியுடன் எழுந்தருளி நீலகண்டன் கருணையால் வெண் கண்டம் பெற்ற கருடனை தன்னுடைய வாகனமாக ஏற்றுக் கொண்டு அனைவருக்கும் நல்லாசி வழங்கினார்.
இவ்வாறு இரட்சன் தேவகழுகு தவமியற்றி எம்பெருமானின் கருணை பெற்ற தலமே இரட்சன் ஆண்டார் திருமலையாகி பிற்காலத்தில் மருவி ராச்சாண்டார் திருமலையானது.
சிவபெருமானின் திருவாக்கால் அருளப் பெற்ற கருட காயத்ரீ மந்திரத்தை ஓதி வருவதால் எத்தகைய கடுமையான நோய்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம் என்பது உறுதி. மருத்துவர்கள் இந்த கருட காயத்ரீ மந்திரத்தை தொடர்ந்து ஓதி பெரிய திருவடியாரை வணங்கி வந்தால் கைராசியுடன் தங்கள் துறையில் மேன்மை பெறுவர்.
வியாழக் கிழமைகளில் நீர் மட்டும் அருந்தி விரதம் இருந்து மேற்கூறிய காயத்ரீ மந்திரத்தை ஓதி வந்தால் கடன் சுமைகள் தணியும்.

தியாகராஜ தவளைகள்

அற்புதமான மூலிகை சக்திகள் நிறைந்த கருட தீர்த்தத்தில் ஒரு சிறப்பான இனத்தைச் சேர்ந்த தவளைகள் வாழ்கின்றன. இந்த தவளைகளின் கீழ் இமைகள் மஞ்சள் நிறத்துடன் திகழும். அதனால் இந்த தவளைகளை ஸ்வர்ண ரேகா தவளைகள் என்று அழைக்கின்றனர்.
பொதுவாக, நாகங்கள், கோழிகள், தவளைகள், வாத்துகள், பன்றிகள் போன்ற உயிரினங்கள் மக்களை தொற்று நோய்களிலிருந்து காக்கின்றன. ஆனால், இத்தகைய தியாகமய உயிரினங்கள் பெயரில் பல தொற்று நோய்களை அழைப்பதை வேதனையான செயலாக சித்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
மனிதனுடைய மூச்சுக் காற்றில் கலந்துள்ள விஷ சக்திகளை பாம்புகளைத் தவிர வேறு எந்த சக்தியாலும் முறியடிக்க முடியாது. பல விளை நிலங்கள் அழிக்கப்படுவதால் அங்கு வாழும் பாம்புகள் அழிவதால் தற்போது பல கொடுமையான வியாதிகள் ஏற்படுகின்றன.
அதே போல நாட்டுக் கோழிகள் இனத்தை சேர்ந்த கோழிகளை சுதந்தரமாக மேய விட்டால் அவை எத்தனையோ கொடிய பூச்சிகளை உண்டு அழித்து விடும். கோழிகளை அடைத்து செயற்கை உணவுகளை அளிப்பதும் பல நோய்களுக்கு வித்திடுகிறது.

அது போல கருட தீர்த்தத்தில் வளரும் ஸ்வர்ண ரேகா தவளைகள் பல வியாதிகளிலிருந்து மக்களைக் காக்கின்றன. இவைகளின் தவம் அலாதியானது. இவை இரவு பகல் எந்நேரமும் வ்ரா, ஹ்ரா என்ற பீஜாட்சரங்களை ஓதிக் கொண்டே இருக்கும். பௌர்ணமியில் ஒரு குறிப்பிட்ட அமுத நேரத்தில் தங்கள் கண்களை அகலத் திறந்து கருட தீர்த்த பரப்பை உற்று நோக்கும். அப்போது இந்த்த் தவளைகளின் கண்களிலிருந்து ஒரு வித நோய் தீர்க்கும் சக்திகள் இந்த தீர்த்த்த்தில் மேற் பரப்பில் விரவுகின்றன.
அப்போது இந்த தீர்த்தத்தைப் பார்ப்பவர்களுக்கு தங்கத்தை உருக்கி ஊற்றியது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். சுமார் முக்கால் நாழிகை இந்த சக்திகள் கருட தீர்த்த மேற்பரப்பில் நிலவும். ராச்சாண்டார் திருமலையை வலம் வந்து எவராவது ஒரு முறை இந்த நீர்த் தாரையை தரிசனம் செய்து விட்டால் வாழ்நாளில் அவர்களை என்றுமே மஞ்சள் காமாலை நோய் அண்டாது.   
இப்பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லாக் காரியங்களும் ஏதாவது ஒரு தெய்வீக நியதியைப் பின்பற்றியே செயல்படுகின்றன என்பதற்கு மேற்கூறிய தவளை மருத்துவமும் ஒரு உதாரணமாகும். அதைச் சற்று விளக்குவோம். தவளைகளின் கண்களில் ஸ்வர்ண ரேகை பதிந்துள்ளது. ஸ்வர்ணம் என்றால் தங்கம். தங்கத்திற்கு எண்கணித எண் மூன்றாகும். அந்தத் தவளைகள் அர்ப்பணிக்கும் சக்திகள் முக்கால் நாழிகைக்கு கருடத் தீர்த்த்த்தில் விரவி இருக்கும். முக்கால் நாழிகையை எண் கணிதம் மூலம் கணக்கிட்டால் அது (.75 = 7+5 = 12 = 3) மூன்றாக வரும். இந்த சக்திகள் தீர்க்கும் வியாதி மஞ்சள் காமாலை. அந்த மஞ்சளுக்கு உரித்தான எண் 3. உடம்பில் கல்லீரலின் செயல்பாட்டில் குறைவு ஏற்படும்போதுதான் மஞ்சள் காமாலை நோய் உடம்பில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அந்த கல்லீரலுக்கு உரித்தான எண் 3.
முக்கால் நாழிகையை நவீன கால நிமிடக் கணக்கிற்கு மாற்றினால் அது 18 நிமிடங்களாக மாறும். இதை அசுர குரு சக்தியால் மாற்றி அமைக்கப்பட்டதாக கணக்கிடப்படும் (60 = 6+0 = 6). அப்போது 1+8 = 9 அதாவது நோய் நிவாரணத்திற்கு உரித்தான செவ்வாய் பகவானின் சக்திகளோடு திகழும். இதுவே திருத்தலங்கள் காட்டும் தெய்வீக மகத்துவம்.
இவ்வாறு அற்புத மூலிகை சக்திகள் நிறைந்த கருட தீர்த்தத்தை எந்த அளவிற்கு தூய்மையாக வைத்திருக்கிறோமோ அதாவது சோப், ஷாம்பூ போன்றவற்றை உபயோகிக்காமல் எச்சில், மலம், ஜலம் கழிக்காமல், கலக்காமல் வைத்திருந்தால் அந்த அளவிற்கு இந்தத் தீர்த்தத்தில் ஸ்வர்ண ரேகா தவளைகள் விருத்தியாகும். எந்த அளவிற்கு இந்த தவளைகள் பெருகுகின்றனவோ அந்த அளவிற்கு ஊரிலும், நாட்டிலும், சமுதாயத்திலும் நோய் நிவாரண சக்திகள் பெருகும், தொற்று நோய்கள் தணியும்.
மேலும் 100 ஸ்வர்ண ரேகா தவளைகளுக்கு ஒரு தவளை என்ற கணக்கில் ஆண்டு தோறும் கருட தீர்த்த தவளைகள் திருப்பட்டூர் சிவத்தலத்தில் மண்டூக நாதரின் ஜோதியில் ஐக்கியம் கொள்கின்றன. இதனால் மக்களுக்கு விளையும் பலன்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
பௌர்ணமி திதியில் மட்டுமே ஸ்வர்ண ரேகா சக்திகளை தீர்த்தத்தில் தவளைகள் விரவினாலும் எந்நேரமும் இத்தலத்தை வலம் வந்து கருட தீர்த்தத்தை தரிசனம் செய்து அளப்பரிய பலன்களைப் பெறலாம். ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடியதே இத்தீர்த்த வழிபாடு.
தவளைக் கண் என்று அழைக்கப்படும் ஜவ்வரிசி கலந்த பால் பாயசம் தயார் செய்து தானமாக அளிப்பதால் நோய் நிவாரணம் துரிதமாகும். இப்பாயசத்தில் தங்க பஸ்மம் சேர்த்து அளித்தல் சிறப்பாகும். ஆனால், தற்காலத்தில் தங்க பஸ்மம் என்பது ஒரு அரிய, விலை உயர்ந்த பொருள் ஆகி விட்டதால் சித்தர்கள் இதற்கான ஒரு மாற்றாக ஆவாரம் பூவின் ஒரு இதழை பாயசத்தில் சேர்த்து தானம் அளித்தால் அது தங்க பஸ்மத்தின் பலனை அளிக்கும் என்று அருளியுள்ளார்கள்.
எனவே அஷ்டமி, பௌர்ணமி திதி நாட்களிலும், ஆயில்யம் நட்சத்திர நாட்களிலும் இறைவனை வலம் வந்து கருட தீர்த்தத்தை தரிசனம் செய்து அதே நாளில் திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை தரிசனம் செய்து பாயசம் தானமாக அளித்தலால் ஏற்படும் பலன்களை ஏராளம். விதியையும் மாற்ற வல்ல இறை மூர்த்திகளே ராச்சாண்டார் ஈசனும் மண்டூக நாதரும் ஆவார்கள்.

விஸ்வசிலா காட்டும் விஸ்வரூபம்

ஸ்ரீவிராச்சிலை ஈசன் ஒரு சிறிய மலைக் குன்றின் மீது எழுந்தருளி இருப்பதாக தோன்றுகிறது அல்லவா ? உண்மையில் இந்த மலைக் குன்று சாதாரண பாறை போல் பார்ப்பதற்குத் தோன்றினாலும் உண்மையில் “விஸ்வ சிலா” என்ற மூலிகை தெய்வீக சக்திகளே பாறை வடிவில், கல் மலையாகத் தோற்றமளிக்கின்றது என்பதே உண்மை.
இந்த விஸ்வ சிலா பாறைகளின் பெருமை குறித்து அகத்திய கிரந்தங்கள் உரைப்பது என்ன ?
ஒடுக்கமிலா ஒளிர் சோதி ஓங்காரத்தான்
நடுக்கம் தீர்க்கும் நாயகன் நாடினரை
கடுக்கத்துள்ளும் கடிதேகும் கடுசிலையானே
அதாவது, ராச்சாண்டார் மலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிராச்சிலை ஈசன் தன்னை நம்பி வரும் அடியவர்களை மனோ வேகத்திலும் துரிதமாய்ச் சென்று அவர்கள் குறை தீர்த்து பிரளய காலத்திலும் அவர்கள் அழிந்து விடாமல் காப்பான்.
உண்மையில் பிரளய காலத்தில் எந்த ஜீவனும் எந்த பொருளும் அழிவது கிடையாது. ஜீவன்கள் பல்வேறு நிலைகளில் மாற்றம் கொண்டு ஓங்கார நாதமாய் இறைவனில் ஒடுங்குகின்றன. ஆனால், ஸ்ரீவிராச்சிலை ஈசனை நம்பியவர்கள் இத்தகைய ஒடுக்க நிலையை அடையாது ஓங்கார ஸ்வரூபிகாளகவே இருந்து அடுத்து ஜீவன்கள் சிருஷ்டிக்கப்படும்போது தன்னிலையை அடைகின்றனர் என்பது இந்த நாடிப் பாடலின் மேலோட்டமான பொருளாகும்.
இதுவே விஸ்வ சிலை பாறைகளின் மகத்துவமாகும். விஸ்வ சிலா பாறைகள் பிரளய காலத்திலும் ஒடுக்கம் அடையாது ஓங்கார நாதமாகவே திகழும். அதற்கு அழிவு என்பதே கிடையாது.
இந்த விஸ்வ சிலா பாறைகளை சித்தர்கள் வைர வெண்ணெய் பாறை என்று சித்த பரிபாஷையில் குறிப்பிடுகின்றனர். அதாவது, உலகில் மிகவும் கடினமான பொருளான வைரத்தின் கடினத் தன்மையையும் வெண்ணெயின் மிருது தன்மையையும் உடையவை விஸ்வ சிலா பாறைகள்.
தேவ லோக கழுகான ரட்சன் தன் அலகால் தகர்க்க முடியாத இந்தக் கடினமான பாறைகளை தும்பைச் செடியின் மென்மையான வேர்கள் துளைத்த அதிசயத்தை நாம் ஏற்கனவே விளக்கியுள்ளதை இப்போது ஒப்பு நோக்கினால் இந்த பாறைகளின் மகத்துவம் புரிய வரும்.
எனவே இத்திருத்தலத்தில் வைர தானமும், வெண்ணெய் தானமும் அற்புத பலன்களை வர்ஷிக்கும். வைர தானம் என்பது அனைவருக்கும் சாத்தியம் அல்லவே ? அதற்கும் வழி வகுத்துள்ளனர் சித்தர் பெருமக்கள்.
ஒரு வாழை இலையில் அல்லது தொன்னையில் பசு வெண்ணெயை வட்டமாகப் பரப்பி அதன் மேல் மாதுளை முத்துக்களை பதித்து குழந்தைகளுக்குத் தானமாய் அளித்து வந்தால் வைர வெண்ணெய் தானம் அளித்த பலன்களை இறைவன் இங்கு அளிக்கிறார்.
இத்தகைய தானங்கள் நீண்ட ஆயுளை அளிப்பதுடன் விபத்து, நோய்கள் போன்றவற்றால் அகால மரணங்கள் ஏற்படாமல் காக்கும். 60, 70, 80 வயது திருமண வைபவத்தை கொண்டாடும் தம்பதிகள் இத்தகைய தானத்தால் அற்புத பலன்கள் பெறுவார்கள்.

ஸ்ரீகருடாழ்வார்
நாச்சியார்கோவில்

வெள்ளி, சனிக் கிழமைகளில் இத்தகைய தானங்கள் நிறைவேற்றுவது சிறப்புடையதாகும்.
இந்த அற்புதமான விஸ்வ சிலாவினால் உருவாக்கப்பட்ட மூர்த்தியே நாச்சியார் கோயில் கல் கருடன் ஆவார். உண்மையில் விஸ்வ சிலாவில் உருவாக்கப்பட்ட மூர்த்தி என்று சொல்வதை விட விஸ்வ சிலாவால் உருவான மூர்த்தி என்று சொல்வதே ஏற்புடையதாகும். இரட்சன் என்ற தேவ கழுகு ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் கருட வாகனமாக அனுகிரகம் பெற்ற போது தன்னுடைய தபோ சக்திகளின் ஒரு பகுதியை கல் கருடன் வடிவில் பூலோகத்தில் விட்டுச் செல்ல அதுவே தற்போது நாச்சியார் கோயில் பெருமாள் வாகனமாய் அமைந்து மக்களுக்கு அனுகிரகங்களை வாரி வழங்குகிறது.
நாம் ஏற்கனவே தெரிவித்தது போல் விஸ்வ சிலா பாறைகள் சக்தியின் அம்சமே. அவைகளின் எடை என்பது ஒரு மாயையே. இதை நிரூபிக்கும் வண்ணம் நாச்சியார் கோயில் கல் கருடனை முதலில் நான்கு பேர் சுமந்து செல்கின்றனர். நேரம் செல்லச் செல்ல கருட மூர்த்தியின் எடை சிறிது சிறிதாக அதிகரிக்கவே நான்கு பக்தர்கள் என்ற எண்ணிக்கை 8, 16, 32 என்று மாறி இறுதியில் நான்கு பேர் சுமந்த சென்ற அதே கருடாழ்வாரை 128 பேர் சுமந்து செல்ல வேண்டிய அளவிற்கு கருட பகவானின் எடை கூடி விடுகிறது. இந்த அதிசயம் இன்றும் பக்தர்கள் நேரில் கண்டு அனுபவிக்கக் கூடிய இறை அற்புதமே.

இங்கு நான்கு பேர் 128 பேர்களாக மாற வேண்டியதன் தெய்வீக இரகசியம் என்ன ? 128 என்பது நான்கை 32ஆல் பெருக்க்க் கிடைக்கும் எண் ஆகும் அல்லவா ? அதாவது மக்களின் ஆசைகளும், ஏக்கங்களும் 32 பிரிவுகளுக்குள் அடங்கி விடும். அதாவது பணம், கல்வி, பெண், பதவி என்று 32 விதமான ஆசைகளே மனித வாழ்வில் ஆதிக்கத்தை, பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
எனவே மனிதர்களின் 32 விதமான அதாவது மனிதர்களின் அனைத்து விதமான ஆசைகளையும் ஏக்கங்களையும் தீர்க்கவே கருடாழ்வார் தன்னுடைய எடையை 32 மடங்காகப் பெருக்கி பக்தர்களின் அனைத்துப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுகிறார்.
அது போல ஸ்ரீஅகத்திய மகா பிரபுவும் மக்களின் அனைத்து விதமான துன்பங்களை நீக்குவதற்காக பொதிய மலையில் பல்லாண்டுகள் தவமியற்றி எம்பெருமானிடமிருந்து 32 திருமுறைப் பதிகங்களைப் பெற்று அதை மக்களின் நல்வாழ்விற்காக அளித்துள்ளார். இந்த 32 திருமுறைப் பதிகங்களை எங்கு ஓதினாலும் மக்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்றாலும். விஸ்வ சிலா பாறைகள் பொலியும் ராச்சாண்டார் திருத்தலத்தில் இந்த 32 பதிகங்களை ஓதுவதால் அற்புதமான பலன்களைப் பெறலாம் என்பது சித்தர்கள் வாக்கு.

மகிமைகள் தொடரும் .....

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam