ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
கொடிது கொடிது பார்வை கொடிது |
பொதுவாக கிரகங்களுக்கு நேர் பார்வை, விசேஷ பார்வை, பட்ச பார்வை என்ற பலவித பார்வை அம்சங்கள் உண்டு. இதில் சனி கிரகம் தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாம் பார்வையாக பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மூன்றாம் இடம், பத்தாம் இடம் என்ற விசேஷ பார்வைகளையும் பெற்றதே. இத்தகைய ஒவ்வொரு பார்வைக்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் உண்டு. ஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் இராசியைப் பொறுத்தும், அந்த ராசியில் கூடும் கிரகங்களைப் பொறுத்தும், தன்னுடைய பார்வையைக் கொண்டும் பலவித விளைவுகளை ஏற்படுத்தும். இதில் சனியின் ஏழாம் பார்வை அந்த பார்வைபடும் இடத்தை நாசம் செய்யும் தன்மை உடையது. உதாரணமாக, சனியின் ஏழாம் பார்வையை சூரிய கிரகம் பெற்றால் அது மாரகத்தை அதாவது மரணத்தை விளைவிக்கக் கூடியது.
காகத்தை எந்திய சனிபகவான்
திருப்புடைமருதூர்
இதன் பலனாகவே ராமபிரான் தன் தந்தையை இழந்தார். ராவணனும் குப்புறக் கிடந்த சனியை மல்லாக்க படுக்க வைத்த போது விளைந்த மாந்தியின் பார்வையால் உயிரை இழந்தான். இத்தகைய விளைவுகளால் பாதிக்கப்படும் ஜீவன்களைக் காக்க வைகாச பூரண மகரிஷி தன்னுடைய குருவான சனி பகவானை வேண்டினார்.
தான் என்னதான் குரு அருளால் ஈஸ்வர பட்டம் பெற்று சிறப்புடன் விளங்கினாலும் தன்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் தன்னுடைய குருநாதரை வேண்டியே அதை நிறைவேற்றினார் என்பதே வைகாச பூரண மகரிஷியின் குரு பக்தியை உணர்த்துவதாகும். தன்னுடைய உத்தம சீடனின் நியாயமான கோரிக்கையை அறிந்த சனி பகவானும், “உன்னுடைய நியாயமான விருப்பம் நிறைவேற வேண்டுமானால் ஸ்ரீநாறும்பூ ஈசன் திகழும் திருப்புடைமருதூர் திருத்தலம், அத்தாழநல்லூர், திருத்தங்கல் என்ற மூன்று தலங்களையும் தினமும் வழிபட வேண்டும்...”, என்று கூறவே தன் குருநாதர் அருளியபடி தினமும் பிரம்மமுகூர்த்தத்தில் தாமிரபரணி ஆற்றில் நீராடியபின் திருப்புடைமருதூர், அத்தாழநல்லூர், திருத்தங்கல் என்ற மூன்று தலங்களையும் வானமார்கமாக பறந்து சென்று வழிபட்டுக் கொண்டிருந்தார்.
யுகங்கள் கடந்தன...
காக வடிவில் இருந்த வைகாச பூரண மகரிஷியும் தன் வழிபாடுகளை நியமம் தவறாது நிறைவேற்றிக் கொண்டிருந்தார். இந்த மூன்று தலங்களையும் தினமும் பறந்து சென்று தரிசிப்பது என்றால் விளையாட்டு அல்லவே? நாம் நினைப்பது போல் வெறுமனே பறப்பதோடு மட்டும் ஒரு காக்கையின் அன்றைய பணி முடிந்து விடுவது அல்ல, வைகாச பூரண மகரிஷி ஈஸ்வர பட்டம் பெற்ற மகரிஷியாக இருந்ததால் அந்த ஈஸ்வரப் பட்டத்திற்கு தகுதியான காரியங்களையும் பூஜைகளையும் தன்னுடைய தவத்தின் இடையே நிறைவேற்றி வருவது என்பது மனிதர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு பிரம்மாண்டமானதாகும்.
கனிந்த கனி காயத்ரீ
ஜபிக்கும் அற்புத காட்சி
உதாரணமாக, கனிந்த கனி பரமாச்சாரியார் தன்னை தரிசனம் செய்ய வரும் அன்பர்களின் பரம்பரையைச் சேர்ந்த அனைவரும் ஒரு நாளில் ஜபிக்க வேண்டிய காயத்ரீ மந்திரம் அனைத்தையும் தான் ஒருவரே அவர்களுக்காக ஜபித்து விடுவார். சாதாரணமாக ஒருவர் ஒரு நாளைக்கு 20000 முறை பிரம்ம காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்பது விதி. ஒருவர் பரம்பரையில் சுமார் 300 பேர் இருப்பதாக வைத்துக் கொண்டால் அவர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரத்தின் எண்ணிக்கை எத்தனை லட்சம் லட்சமாக விரியும். இவ்வாறு கனிந்த கனியை ஒரு நாளைக்கு தரிசனம் செய்ய வரும் அன்பர்கள் சராசரியாக 500 பேர் என்று வைத்துக் கொண்டால் இந்த அனைவரின் பரம்பரையைச் சேர்ந்தவர்களும் ஒரு நாளைக்கு ஜபிக்க வேண்டிய காயத்ரீ மந்திரங்கள் அனைத்தையும் தான் ஒருவரே ஜபிப்பது என்றால் இது மனித கற்பனைக்கு எட்டக் கூடிய கணக்கா என்ன?
கனிந்த கனியின் இந்த பரோபகார தியாகத்திற்கு மதிப்பளித்த இறைவன் சுவாமிகள் காலையில் 36 காயத்ரி, மதியம் 24 காயத்ரி, மாலை 36 காயத்ரி ஜபித்தால் போதும் என்று அருளி இந்த அரிய தியாகத்தைப் பாராட்டுகிறார். காரணம் கனிந்த கனி தவறாது கடைபிடித்து வந்த ஆசார அனுஷ்டானங்களே.
இத்தகைய நித்ய அனுஷ்டானங்களுக்கு இடையே வைகாச பூரண மகரிஷி பல நூறு மைல்கள் தினமும் பறந்தே செல்ல வேண்டி வந்ததால் அவர் உடல் நலிவுற்று பறக்கவே சக்தி இல்லாத நிலையை அடைந்தார். ஆனாலும் தன் முயற்சியை சற்றும் கைவிடாது தொடர்ந்து வழிபாடுகள் இயற்றிக் கொண்டிருந்தார். ஒரு புரட்டாசி சனிக் கிழமை அன்று காலை சுமார் ஏழு மணி அளவில் திருப்புடைமருதூர் திருத்தலத்தின் உயரே பறந்து கொண்டிருந்த வைகாச பூரணர் அம்பாள் கோமதி அம்மனின் திருவடிகளில் மயங்கி விழுந்து விட்டார். தாய் அவரை அன்புடன் அரவணைக்கவே அவர் மயக்கம் தெளிந்து எழுந்தார். அந்நேரம் கோயில் வளாகம் முழுவதும் இனிய நறுமணம் சூழ்ந்து வீசியது. அங்கு குழுமிய பக்தர்கள் அனைவரும் இந்த இனிய நறுமணத்தை முகர்ந்து நாறும்பூ நாதா சரணம் சரணம் என்று கோஷமிட்டு மகிழ்ந்தனர்.
தன்னுடைய உத்தம சீடனுக்கு தாய் கோமதி அம்மன், நாறும்பூ நாதர், நாறும்பூ நாதரின் பக்தர்கள் அனைவரும் வழங்கிய வரவேற்பைக் கண்டு மகிழ்ந்த சனி பகவான் வைகாச பூரண மகரிஷியை தன் வலது கையில் ஏற்றுக் கொண்டார்.
அதனால் அவரவர் ஜாதக ரீதியாக சனி தசை, சனி புத்தி, சனி அந்தரம், ஏழரை நாட்டு சனி போன்ற துன்பங்களால் வாடுவோர் திருப்புடைமருதூர் சனி பகவானை நல்லெண்ணெய் காப்பிட்டு வணங்கி, சனி பகவானுக்கு சிவப்பு வண்ண ஆடை அணிவித்து வழிபடுதல் நலம். நவகிரக மூர்த்திகளை எட்டின் மடங்கில் 8, 16, 24... என்றவாறு வலம் வந்து வணங்கி சிவப்பு வண்ணமுடைய ஆப்பிள், செரி பழங்கள், ராஜ்மா சுண்டல் போன்ற உணவுப் பொருட்களை தானமாக அளித்தலும் சிறப்பே. சனிக் கிழமைகளில் சிறப்பாக புரட்டாசி சனிக்கிழமை காலை ஏழு மணி அளவில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பாகும்.
இது பற்றி குறிப்பிடும்போது நம் சற்குரு, “மீனாட்சி அம்மனின் வலது கையில் பச்சைக் கிளியாய் அருணகிரி நாதர் அமர்ந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். சம்பந்த ஆண்டானின் சதிச் செயலால் தன் உடலை இழந்த அருணகிரிநாதர் பூதஉடல் தீக்கிரையானதை அறிந்து செய்வதறியாது திகைத்தபோது மீனாட்சி தேவியே அருணகிரிநாதரை வரவேற்று தன் வலது கையில் ஏந்திக் கொண்டாள். சொக்கநாதனுக்குக் கூட கிடைக்காத சிம்மாசனம், சார், இது. இரவு பகலாக அன்னையை தரிசித்துக் கொண்டே இருக்கும் மகா பாக்கியத்தை அருணகிரி நாதர் பெற்றார் என்றால் இத்தகைய தாயின் கருணையை விஞ்சிய செயல் எதுவாக இருக்க முடியும்?” என்று கேட்டார்.
அது போல் தன் சற்குருவான சனி பகவானை இரவு பகலாக தரிசித்துக் கொண்டு இருக்கும் பாக்கியம் பெற்ற வைகாசி பூர்ண மகரிஷியின் மகிமையைப் பற்றி வார்த்தைகளால் விவரிக்க முடியுமா?
வண்ண தேவதைகளின் வருண கூபம் |
திருப்புடைமருதூர் சனி பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் சார்த்தும்படிக் கூறுவதன் தாத்பர்யம் என்ன? இத்தல சனி பகவான் ஈஸ்வர பட்டம் பெற்ற நவகிரக மூர்த்தி. சுவாமியின் கரங்களில் இருக்கும் வைகாச பூர்ண மகரிஷியே ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் என்றால் சனீஸ்வரரின் மகிமையைப் பற்றி வர்ணிக்கவும் வேண்டுமோ? இவ்வாறு ஈஸ்வரப் பட்டம் பெற்ற சனி பகவானை வழிபடுவதற்கு உரிய மந்திரமாக கீழ்க்கண்ட துதியை அருளினார் நம் சற்குரு.
ஓம் தத் புருஷாய வித்மஹே பீதாம்பரதரி சமேதாய தீமஹி
தந்நோ சம்பூர்ணேஸ்வர பிரசோதயாத்
சனி பகவானின் மனைவி என்ற சக்தியே பீதாம்பரம் என்ற பொன் வஸ்திரத்தில் ஜொலிக்கிறாள் என்றால் சனி பகவானுக்கு கர்ம வினைகள் களையும் சிவப்பு வண்ண ஆடைகளை அணிவிப்பதுதானே சிறப்பு. இந்த பொன் வஸ்திரம் என்பது சாதாரண மஞ்சள் வண்ணம் அல்ல. இதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் திருப்புடைமருதூர் திருத்தலத்தில் அடியார்கள் இந்த மாளய பட்சத்தின் போது தரிசித்த வானவில் என்ற ராமபாணத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
ராம மருதமா ராம அமிர்தமா?
திருப்புடைமருதூர்
மனிதனைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்திற்கு திருவாசி, ஆரா (aura) என்று பெயர். எந்த அளவிற்கு ஒரு மனிதன் தூய எண்ணங்களுடன் திகழ்கிறானோ அந்த அளவிற்கு இந்த திருவாசியில் உள்ள வண்ணங்கள் தூய்மை பெற்று பிரகாசிக்கும், நாமறிந்த முறையில் ‘லைட்டாக’ இருக்கும். தெய்வ மூர்த்திகள், மகான்களைச் சுற்றியுள்ள திருவாசிகள் பொன் நிறத்தில் இருக்கும். அன்னை தெரசாவின் ஆரா ஊதா நிறத்தில் இருக்கும், தன்னலமற்ற சேவையில் பிரகாசிப்பது இந்த ஊதா வண்ணம். பேராசை மிகுந்தால் ஆராவில் பச்சை வண்ணம் மிகும்.
ஒவ்வொரு பௌர்ணமி சேவைக்கும் செல்லும் நம் அடியார்கள் சற்குருவைச் சந்திக்கும்போது முதலில் அவர்களை நேரில் பார்த்தே பேசமாட்டார். “நீங்கள் ஒரு பௌர்ணமி முடிந்து இங்கிருந்து சென்று விட்டு மீண்டும் இங்கு வருவதற்குள் ஏகப்பட்ட ‘குபார்’ வேலைகள் செய்து விடுகிறீர்கள். இந்த கெட்ட செயல்கள் எல்லாம் உங்கள் ஆராவில் படிந்து விடும். உங்களின் குரு என்று சொல்லிக் கொள்ளும் அடியேன் இந்த கர்ம படிவுகளை அகற்றுவதற்கு ஒரு நாள் தேவைப்படுகிறது. அதனால்தான் அடுத்த நாள் உங்களை நேரே பார்த்து பேசுகிறேன்...”, என்பார் நம் ஆரா டாக்டர்.
வானவில்லுக்கு ஏன் ராமபாணம் என்ற பெயர் வந்தது? காமேஸ்வரம், வேதாரண்யம், ஞாயிற்றம்பலம் என்ற கடற்கரை திருத்தலங்களில் இயற்கையாகவே ராமபாணத்தை தோற்றுவிக்கும் சக்திகள் மிகுந்திருக்கும். ஆஞ்சநேயர் ராமேஸ்வரத்திலிருந்து வானமார்கமாக பறந்து இலங்கைக்கு சென்றார் அல்லவா? அப்போது அவரை எதிர்கொண்ட அவருடைய பித்ரு மூர்த்திகள் வானத்தில் தோன்றி அவருக்கு வானவில் வடிவில் ஆசி வழங்கினர். அந்த காட்சியில் மெய்மறந்த ஆஞ்சநேய பிரபு தன் உத்தரியத்திலிருந்து ராமபிரான் அளித்த கணையாழி கழன்று விழுந்ததையே கவனிக்கவில்லை. அன்றிலிருந்து வானவில்லைப் பார்த்தால் ஞாபக மறதி ஏற்படும் என்ற தவறான கருத்து மக்களிடையே பிரபலமாகி விட்டது.
இப்போது உங்களுக்குச் சொல்லாமலே விளங்குமே, திருப்புடைமருதூரில் தரிசனம் செய்த ராமபாணக் காட்சி மாளய பட்ச வழிபாட்டில் மகிழ்ந்த பித்ரு தேவதைகளின் ஆசீர்வாதம் என்று. இவ்வாறு சூரியக் கதிர்கள் என்றல்லாது பித்ரு தேவதைகளின் ஆசிகளும் ராமபாணத்தை தோற்றுவிக்க வல்லவையே. கடகராசி என்பது நீர் சூழ்ந்த ராசி, புனர்பூச நட்சத்திரத்தின் நான்காம் பாகமாக அமைவது. புனர்பூச நட்சத்திரம் நான்காம் பாதத்தில் தோன்றிய ராமபிரானின் ஆசியும் பித்ருக்களின் ஆசியும் ஒருங்கே குழுமுவதே ராம பாணம் என்ற வானவில். இதை மாளய பட்ச நாளில் தரிசனம் செய்வது என்பது அரிதிலும் அரிய பாக்கியமே.
சிம்மேந்திர சூரிய கிரகணம் |
வரும் 14.10.2023 சனிக் கிழமை அன்று இரவு சுமார் 8.30 முதல் 2.30 வரை சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இது இந்தியாவில் தெரியாது என்றாலும் உலகின் மற்ற பகுதிகளில் இது தெரிவதால் உலக மக்களின் நன்மைக்காக நாம் கிரகண வழிபாடுகள் மேற்கொள்ள வேண்டியது நமது இந்திய பிரஜைகளின் முக்கிய கடமையாகின்றது. தற்போது விஞ்ஞானத்தில் வெகுவாக முன்னேறிய நாடுகளே இன்று தான்ய மழை பொழிவதற்குப் பதிலாக குண்டு மழை பொழியத் தொடங்கி உள்ளதால் இதுவரையுமே லட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர் என்ற வேதனையான செய்தியும் நீங்கள் அறிந்ததே.
1. சூரிய கிரகண நேரத்தில் தாமிரபரணி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து நரசிம்ம தம்ப படிக்கட்டுகளில் இடைவிடாத அபிஷேகம்
2. சூரிய கிரகண நேரத்தில் திருஅண்ணாமலையை வலம் வந்து சூரிய தீர்த்தத்தால் சூரிய லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை
3. 16 முறை நாராயண நாமம் பொறித்த நரசிம்ம தம்பத்திற்கு கோதுமை குருணையால் அல்லது தேங்காய்ப் பூவால் அர்ச்சித்து வழிபட்டு கோதுமை அல்லது தேங்காய் துருவலுடன் சர்க்கரை சேர்த்து அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை திருத்தலங்களில் உள்ள எறும்புகளுக்கு தீனியாக இடுதல்
4. இரவு நேர வழிபாடு சில திருத்தலங்களில் இயலாதபோது அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை பிரம்ம முகூர்த்தத்தில் சுயம்பு லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளை இயற்றுதல்
போன்ற வழிபாடுகளில் முடிந்தவற்றை முடிந்த மட்டும் நிறைவேற்றுதலால் நம் உற்றம் சுற்றம் உறவினர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், விலங்குகள், பறவைகள் என எந்தப் பிறவியை எடுத்திருந்தாலும் அவர்கள் மேற்கண்ட போர் விளைவுகளால் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படுவார்கள்.
தற்போது இரண்டு நாடுகள் மட்டுமே நேரிடையாக இந்த சண்டை நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இதன் விளைவுகள் உலகளாவியதே என்பதை யாரும் மறுக்க முடியாது. சண்டை ஆரம்பித்த மறுகணமே சென்னையில் கிராமுக்கு 800 ரூபாய் தங்கம் விலை அதிகரித்த செய்தியை நாம் அனைவரும் அறிவோம். இது 700ம் அல்ல 900ம் அல்ல, சனி பகவானுக்கு உரிய எட்டைக் குறிப்பதால், நாம் நவகிரகங்களை முடிந்த மட்டும் ப்ரீதி செய்வதால் உலகளாவிய எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியும்.
ஒரே ஒரு நரசிம்ம தம்பத்திற்கு இயற்றும் வழிபாடு, ஒரு சுயம்பு மூர்த்திக்கு நிறைவேற்றும் அபிஷேக ஆராதனை கூட வெகுவாய் விரிந்து உலகெங்கும் உள்ள 18 நரசிம்ம தம்பங்களுக்கு பரவி மன அமைதியை ஏற்படுத்தும். போர் விளைவுகளை மட்டுப்படுத்தும்.
இது தொடர்பாக நம் அடியார்கள் திருப்புடைமருதூர் திருத்தலத்தில் சனீஸ்வர பகவானுக்கும் ஈஸ்வர பட்டம் பெற்ற காக வாகனத்திற்கும் இயற்றிய அபிஷேக ஆராதனைகளை இங்குள்ள வீடியோவில் கண்டு களிக்கலாம். இந்தப் புனித முகூர்த்த நேரத்தில் நம் சற்குரு உபதேசித்த துவாதச நாமாவளியை நாம் பெறுவதும் நம்முடைய வழிபாட்டிற்காக நம் சற்குரு அளிக்கும் அனுகிரகம் என்று நினைக்கும்போது கிட்டும் ஆனந்தத்திற்கு இணையான ஒரு ஆனந்தத்தை நாம் வாழ்வில் மீண்டும் பெற முடியுமா?
அத்தாழநல்லூர் திருத்தலத்தில் உள்ள 12 நரசிம்ம படிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் இயறறும்படிக் கூறினோ அல்லவா? இந்த 12 படிகளிலும் 12 ஆழ்வார்கள் ஆவாஹனம் ஆவதாகவும் சற்குருவின் வழிகாட்டுதலை அளித்திருந்தோம். இந்த ஆழ்வார்களின் நாமங்களும் துவாதச நாம சக்திகளும், சித்த பீஜாட்சர சக்திகளும் கீழ்க்கண்டவாறு அமையும்.
நம்மாழ்வார் | ஓம் ஸ்ரீஹரயே நமஹ | மா |
பெரியாழ்வார் | ஓம் ஸ்ரீகேசவாய நமஹ | ல் |
பேயாழ்வார் | ஓம் ஸ்ரீபத்மநாபாய நமஹ | ஆ |
தொண்டரடி பொடியாழ்வார் | ஓம் ஸ்ரீவாமனாய நமஹ | ல |
திருமங்கையாழ்வார் | ஓம் ஸ்ரீவேதகர்ப்பாய நமஹ | ய |
திருமழிசையாழ்வார் | ஓம் ஸ்ரீமதுசூதனாய நமஹ | தீ |
திருப்பாணாழ்வார் | ஓம் ஸ்ரீவாசுதேவாய நமஹ | ர் |
ஆண்டாள் | ஓம் ஸ்ரீவராஹாய நமஹ | த் |
குலசேகரர் | ஓம் ஸ்ரீபுண்டரிகாக்ஷாய நமஹ | த |
மதுரகவி | ஓம் ஸ்ரீஜனார்த்தனாய நமஹ | ப |
பொய்கையாழ்வார் | ஓம் ஸ்ரீகிருஷ்ணாய நமஹ | ட் |
பூதத்தாழ்வார் | ஓம் ஸ்ரீஸ்ரீதராய நமஹ | ச |
எனவே வரும் மாளய பட்ச அமாவாசை நாளில் சூரிய கிரகணம் அமையும் நேரத்தில் நரசிம்ம படிகளுக்கு அடியார்கள் தாமிரபரணி தீர்த்தத்தால் அபிஷேகம் நிறைவேற்றும்போது ஆழ்வார்களின் திருநாமங்களையோ, துவாதச நாமாவளிகளையோ எவ்வரிசையில் ஓதினாலும் அவர்கள் வழிபாட்டில் நம் சற்குரு அருளும் பீஜாட்சர சக்திகள் நிச்சயமாய் பொங்கி நிறையும் என்பதே நம் சற்குரு நமக்காக வர்ஷிக்கும் குருவருள்.
இவ்வாறு நம் அடியார்கள் தாமிரபரணி தீர்த்தத்தால் அத்தாழநல்லூர் ஸ்ரீநரசிம்ம தம்பத்திற்கு இயற்றிய வழிபாட்டையும் நாராயண தம்பத்திற்கு இயற்றிய வழிபாட்டையும் இங்குள்ள வீடியோவில் கண்டு இரசிக்கலாம்.
அத்தாழநல்லூர் திருத்தலம் சிலரால் அத்தாளநல்லூர் என்றும் அழைக்கப்படும். இரண்டில் எது சரி? இரண்டுமே சரிதான். அத்தாழநல்லூர் எனும்போது அது மனதில் ஆழ்ந்த பக்தியை வளர்க்கும் திருத்தலமாக அமைகிறது, அத்தாளநல்லூர் எனும்போது தாளம் இசையுடன் லயமாகும் திருத்தலம் என்ற பொருள் உடையதாகிறது. அத்தாழநல்லூர் திருத்தலத்தில் மாளய பட்சம் முழுவதும் தர்ப்பணம், அன்னதான வழிபாடுகள் இயற்றிய அடியார்கள் இந்த பேருண்மையை நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள் என்பதே இத்தலத்தில் நிறைவேற்றப்படும் வழிபாடுகளின் மகிமையாகும்.
நம் சற்குரு கோவணாண்டிப் பெரியவருடன் இத்தலத்திற்கு வந்திருந்து இங்குள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் இயற்றிய வழிபாடுகளையே நாமும் இயற்றி மகிழ்ந்தோம், பெரும் பேறு பெற்றோம் என்பதே இந்த வழிபாடுகளின் மகிமையாகும். இதை எப்படி உணர்வது? அடியார்கள் விடியற்காலையில் வழிபாடுகள் இயற்றிக் கொண்டிருக்கும்போது வெகுதூரத்தில் வேதம் ஓதும் ஒலி, பக்தி பஜனைப் பாடல்கள் போன்ற ஒலிகளை, மார்கழி மாதத்தில் ஒலிக்கும் பாடல்களைப் போல் கேட்டிருக்கலாம். இதுவே ஒலியையும் ஒளியையும் இணைக்கும் இத்தலத்தின் மகிமையாகும்.
அகத்திய மயில் அத்தாழநல்லூர்
ஒரு சிலர் சினிமாப் பாடல்களின் வரிகளைக் கூட தெளிவாகக் கேட்டிருக்கலாம். இதுவும் ஒருவித வேத பிரவாகமே. நம் சற்குரு எத்தனையோ தத்துவப் பாடல்களை பாடியதை நம் அடியார்கள் கேட்டிருக்கலாம். பண்டைய தத்துவப் பாடல்கள், டூயட் கீதங்கள், மாடர்ன் பாடல்கள் என்று நம் சற்குரு இசைத்த அனைத்து பாடல்களுமே ஆழ்ந்த தத்துவக் கருத்துக்கள் அடங்கியவையே. இந்த தத்துவங்கள் அனைத்தையும் நம் சற்குரு கேட்டு, உணர்ந்த தலம் இதுவேயாம். எனவே நம் அடியார்கள் மனதில் வேதனை தோன்றும் பொழுதெல்லாம் தங்கள் அத்தாழநல்லூர் வழிபாட்டை நினைவு கூர்ந்தால் அவர்கள் பெரும் உள்ள அமைதியை உணர முடியும், இது வெறும் மன அமைதி மட்டும் அல்ல, உணர்வு கடந்த ஆழம் காண முடியாத அருந்தவ பொக்கிஷமாம்.
உதாரணமாக, இங்கு நீங்கள் காணும் மயில் தினமும் தாமிரபரணி ஆற்றைக் கடந்து பறந்து வந்து ஸ்ரீஅகத்தியர் ஆலயத்தில் பிரசாதத்தை ஏற்று ஆலயத்தை வலம் வந்த பின்னரே நீர் அருந்தும் அதிசயக் காட்சியை இன்றும் தரிசித்து மகிழலாம். இது போன்ற ஆயிரமாயிரம் தெய்வீக திருஉலாக்கள் தினமும் அரங்கேறும் திருத்தலங்களே நம் பாரத கோயில்கள் என்றால் இந்த மண்ணில் பிறப்பதற்கும் இங்கு வழிபாடுகள் இயற்றுவதற்கும் நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்?
தர்ப்பணம், அன்னதானம் போன்ற அனைத்து காரியங்களிலும் அடியார்கள் மேள தாளத்துடன் இயற்றி இந்த ஒலி ஒளி இணைப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் உலக அமைதிக்கும் இந்த வழிபாடு வழிவகுத்தது என்பதே அவர்களையும் அறியாமல் ஆற்றிய பெருஞ்சேவையாகும். சமீபத்தில் நடந்த இஸ்ரேல் யுத்தத்தில் குண்டுமாரி பொழிந்தபோது மனித கற்பனையை மீறிய ஒலி ஒளி பிரவாகங்கள் அங்கே எழுந்தன. எங்கோ ஒரு மூலையில் நம் அடியார்கள் இயற்றிய இந்த சிறு அளவிலான ஒளி ஒலி இணைப்பு பெரும் சேவையாக மாறி உலக சமாதானத்திற்கு நம் சற்குருவின் அருளால் வழிவகுத்தது என்பதே நாம் அறியாத சித்த விந்தையாகும்.
கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் இந்த ஒலி ஒளி இணைப்பு உண்டாக்கும் சமாதான எண்ணங்களை உருவாக்கவே முடியாது. சித்த நிலைக்கும் அடுத்துள்ள மகான்களால் கூட இந்த அற்புதத்தை நிகழ்த்த முடியாது என்பதே நம் சற்குரு நிகழ்த்திய M I R A C L E.
ஓம் ஸ்ரீகுருவே சரணம்