நிறமாலை கூட்டும் நிமலம் !

மாளய பட்ச வழிபாடு பாகம் 1

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

நிறம் மாறாத நீலகண்டன்

சமுதாய ஒற்றுமைக்கு, உலக சமாதானத்திற்கு மாளய பட்ச வழிபாடு உன்னத வழிமுறையாகும் என்பதே சித்தர்களின் உறுதிப்பாடு. சிவப்பு, மஞ்சள் என்ற நிறங்கள் ஒன்றிற்கு ஒன்று எந்த விதத்திலாவது ஒற்றுமையாக அமையுமா? ஆனால், இந்த நிறங்கள் சூரிய ஒளியில் அமைதியாக இணைகின்றனவே. இதுவே சூரிய நிறமாலை நமக்கு கற்றுத் தரும் பாடமாகும்.

எப்படி சூரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்கள் ஒன்றாக இணைந்து ஒரே ஒளிக்கற்றையாக வீசுகின்றன, எப்படி இந்த பச்சை, மஞ்சள் என்ற நிறங்களே மேலும் ஏழு விதமாக பிரிகின்றன என்பதை ஆத்ம விசாரத்தின் மூலம் நாம் உணர முடிந்தால் குடும்ப ஒற்றுமை, சமுதாய ஒற்றுமை, உலக சமாதானம் என்ற அனைத்துமே உடன் கைகூடி விடும்.

ஸ்ரீபைரவர் திருப்புடைமருதூர்

ஐராவத யானைக்கு முக்தி அளித்தார் மகாவிஷ்ணு என்பது நாம் அறிந்ததே. நாம் அறியாதது கஜேந்திரனின் காலைக் கவ்விய முதலையின் கதி. மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தால் முக்தி பெற்றதால் முதலை மகர குண்டலமாக மாறி சிவபெருமானின் திருக்காதுகளை அலங்கரிக்கும் பேறு பெற்றது. இந்த அனுகிரகத்தை பெற விரும்பும் அடியார்கள் முதலைப் பண்ணைகளில் உள்ள முதலைகளுக்கு மீன்களை அல்லது ஆட்டு இறைச்சியை உணவாக அளித்து வந்தால் நாட்டில் மழைப் பொழிவு ஏற்படும்.

இந்த ஒற்றுமையை உணர முடிந்ததால்தான் அமெரிக்க மக்கள் அனைவரையுமே தன்னுடைய சகோதர சகோதரிகளாக வரித்து அவர்களுடன் உறவாடினார் சுவாமி விவேகானந்தர். இது என்றோ சுவாமி சாதித்த சாதனை கிடையாது, இன்றும் மாளய பட்ச வழிபாடு ஒன்றை மட்டுமே உறுதிப்பாட்டுடன் நிகழ்த்தினால் எத்தனையோ விவேகானந்தர்கள் நாம் நாட்டிலேயே உருவாகி விடுவார்கள். தேவை நம்பிக்கை, உறுதிப்பாடு.

ஒரு கால கட்டத்தில் மகாராஷ்ட்ரா மாநிலத்தையே கலக்கிக் கொண்டிருந்தான் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு ரௌடி. பம்பாய் மாநகரில் அவன் பெயரைச் சொன்னாலே போதுமே அனைவரும் நடுங்கும் நிலையில் ஒரு பயம் அவன் பெயருக்கே இருந்தது. அந்த ரௌடியோ நம் சற்குருவை தன் இல்லத்திற்கு வருகை தருமாறு அன்பாக அழைத்திருந்தான். நம் சற்குருவும் அவன் அழைப்பை ஏற்று அந்த ரௌடியின் இல்லத்திற்குச் சென்றிருந்தார்.

அந்த ரௌடியின் இல்லமோ மிகப் பெரிய பணக்காரன் கூட கனவு காண முடியாத அளவிற்கு ‘வசதி’ வாய்ப்புகளுடன் திகழ்ந்தது என்று கூறலாம். அவன் வீட்டுவாசலில் உள்ள நிலைப்படியை தங்கத் தகடுகளால் வேய்ந்து வைத்திருந்தான். அங்கு இருந்த விருந்தினர் அறையில் உணவு உண்ணும்போது பார்த்தால் அந்த அறையைச் சுற்றி கண்ணாடியால் அமைந்த ஒரு பெரிய நீச்சல் குளத்தை கண்டு இரசித்தபடியே விருந்து உண்ணுவதாக அந்த அறை அமைக்கப்பட்டிருந்தது. நம் சற்குரு அங்கு சென்றிருந்தபோது அப்போது பிரபலமாக இருந்த ஒரு நடிகை ஆடையின்றி அந்த நீச்சல் குளத்தில் நீந்துவதற்கான ஏற்பாட்டை அந்த ரௌடி செய்திருந்தான்.

அந்த ரௌடியைப் பார்த்துவிட்டு அவன் அளித்த விருந்தையும் மனமார ஏற்றுத் திரும்பினார். ஆனால், அந்த ரௌடிக்கும் நம் சற்குருவிற்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் எதையுமே நம் சற்குரு தெரிவிக்கவில்லை என்றாலும் நாம் இப்போது நம் சற்குருவின் நடவடிக்கையில் இருந்து தெரிந்து கொள்ளும் இரகசியம் என்ன? எப்படி இறைவனுக்கு வேண்டியவன் வேண்டாதவன் என்று எந்தப் பாகுபாடுமே கிடையாது அல்லவா? அதைப் போன்றவர்கள்தான் நம் சற்குரு போன்ற மகான்கள்...

ஒரு ரௌடியையும், பிரபல சினிமா நடிகையையும், தம் நெருங்கிய சீடரையும் ஒரே மாதிரியாகப் பார்த்தவர்தான் நம் சற்குரு.

ராமகிருஷ்ணர் பரமஹம்சர் சாரதா அம்மையாரை மணந்த போது அவருக்கு வயது 23, சாரதா தேவிக்கு ஐந்தே வயது. தான் கணவன் என்ற முறையில் சாரதா அம்மையாரிடம் அவர் கணவர் ‘பழக’ முடியாது என்றாலும் ஒரு ஐந்து வயது குழந்தைக்கு தாயாக, தந்தையாக, வேலைக்காரியாக இப்படி எத்தனையோ முறைகளில் சேவை செய்து சாதிக்கலாமே.

இந்த சேவை ஒன்றே நாம் இந்த மாளய பட்சத் திருநாட்களில் மனதில் ஆழமாக கொள்ள வேண்டியது. நாம் நம்முடைய தாத்தா, பாட்டி, தாத்தாவுக்கு தாத்தா என்ற மூதாதையர்களைப் பார்த்ததில்லை என்றாலும் அவர்கள் வழியில் வந்த நாம் தர்ப்பணம் என்ற சேவை ஒன்றின் மூலமே அவர்களின் நிறைந்த அனுகிரகத்தைப் பெற முடியும்.

கோயம்புத்தூர் அருகே உள்ள பேரூர் சிவாலயம் 51 சித்தர்கள் சமாதியான இடம். மிகவும் சக்தி வாய்ந்த இந்தத் தலத்தில் உடலால் திருப்பணி செய்து, அன்னதானம் நிறைவேற்றி, அவற்றின் பலனை மருதமலை முருகப் பெருமானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இங்கு பெண்கள் மாங்கல்ய பலத்தை வேண்ட வேண்டும். மாங்கல்ய பலம் என்பது கணவன் உயிரோடு இருப்பது மட்டுமல்ல, என்றுமே மன ஒற்றுமையோடு, மகிழ்வோடு தம்பதிகள் வாழ்வதே. இத்தகைய வழிபாடுகள் மணமான பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் வராமல் காக்கும். மாத விடாய் நின்ற பெண்கள் “உன் நாமம் அல்லாமல் வேறொன்றும் வேண்டாம். எனக்கு எது நன்மையோ அதையே செய்”, என வேண்ட வேண்டும்.
அதிகார நந்தீஸ்வரரே பூத கணங்களுக்குத் தலைவர். 9,000 கோடி பூத கணங்களுக்கு ஒரு நந்தீஸ்வரர் தலைமை. பூத கணங்களில் பல வகை உண்டு. 2 அடி முதல் 9,000 அடி வரை உயரம் உள்ளவை உண்டு.

கிருஷ்ண பகவான் ஜாம்பவதியை திருமணம் முடித்த போது ஜாம்பவதி தொட்டில் குழந்தை. ஜாம்பவதி உரிய திருமண வயதை அடையும் வரை ஜாம்பவதிக்கு இவ்வாறு தாயாக, தந்தையாக, பணிப் பெண்ணாக சேவைகள் புரிந்தவரே பூர்ண அவதாரமான கிருஷ்ண பகவான். இவ்வாறு சேவைக்கு எந்த இலக்கணமும் கிடையாது, சேவை பெறுபவருக்கு எந்த தகுதியும் தேவையில்லை என்பதை நமக்கு உணர்த்துவதே நாம் அத்தாழநல்லூர் போன்ற திருத்தலங்களில் இந்த மாளய பட்சத்தில் நிகழ்த்தும் வழிபாட்டின் மகத்துவம் ஆகும்.

சூரிய நிறமாலையில் உள்ள ஏழு வண்ணங்களுக்கும் உரித்தான தேவதைகள் உண்டு. இவர்கள் வண்ண தேவதைகள் என்றழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நிறத்திற்கும் அதிதேவதை உண்டு, அந்த தேவதைகளையே ஆரஞ்சு வண்ணத்திற்கு சூரியன், வெள்ளை நிறத்திற்கு சந்திரன் என்று அழைக்கிறோம். இவ்வாறு ஏழு நிறங்களும் மேலும் ஏழு ஏழு நிறங்களாக பிரியும் போது அந்த நிறத்திற்கு உரிய தேவதைகளை நாம் தீர்க வண்ண தேவதைகள் என்று அழைக்கிறோம்.

இந்த ஆவணி மூலம் அமையும் 26.8.2023 சனிக் கிழமை முதல் மாளய பட்சம் நிறைவடையும் வரை உள்ள 49 நாட்களுக்கும் 7 x 7 = 49 என்ற கணக்கில் இந்த தீர்க வண்ண தேவதைள் திருஅண்ணாமலையை வலம் வந்து வணங்குகின்றன. பச்சையம்மன் கோவிலில் ஆரம்பமாகும் இவர்களுடைய கிரிவலம் மீண்டும் பச்சையம்மன் ஆலயத்தில் நிறைவுபெறுவதால் மாளய பட்ச வழிபாடுகள் சிறப்பாக நிறைவேறிய பின்னர் இந்த 49 தீர்க வண்ண தேவதைகளுக்கும் நன்றி கூறும் முகமாக திருஅண்ணாமலையை வலம் வருதல் சிறப்பாகும். பச்சையம்மன் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள ஏழு முனிகளும் இந்த தீர்க வண்ண தேவதைகளின் அனுகிரகங்களை நமக்கு பெற்றுத் தரும் தெய்வீக சக்தியுடன் துலங்குகிறார்கள் என்பதே நம் சற்குரு நமக்காக பரிந்தளிக்கும் சித்த இரகசியம்.

இந்த வழிபாட்டில் திரளும் பலன்களாக எத்தகைய கடுமையான நோயிலிருந்தும் நிவாரணம் பெறும் அனுகிரகமாகும். வயதான காலத்தில் ஏற்படும் கண் கோளாறுகள், இரவுப் பணி, அதிகமாக கம்ப்யூட்டர், டீவி பார்த்தலால் ஏற்படும் கண் அழற்சி நோய்கள் படிப்படியாக நீங்கும்.

தீர்க வண்ண தேவதைகள் சுட்டிக் காட்டிய முறையில் பச்சையம்மன் ஆலயத்தில் கிரிவலத்தை துவங்கி அங்கேயே கிரிவலத்தை பூர்ணமடையச் செய்தல் சிறப்பாகும். இந்த தீர்க வண்ண தேவதைகளின் அனுகிரகத்தைப் பெறும் முகமாகவே இந்த மாளயபட்ச வழிபாட்டில் ஏழு தீபங்கள் சாட்சியாக தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்றும்படி கூறுகிறோம். கெட்டித் தயிர் என்பது தண்ணீர் கலந்து கடைந்த மோரை விட உஷ்ணமாக இருக்கும். அதனால்தான் இந்த 49 வண்ணங்களை சூரிய நிறமாலையில் அடக்கும் விதமாக, இணைக்கும் விதமாக, ஏழு வண்ணங்களில் வண்ணத் தயிர் (yogurt dessert) தானம் அளிக்கும்படிக் கூறினோம்.

ஏழு முனிகள் பச்சையம்மன் கோவில்
திருஅண்ணாமலை

ஒரு வேளை இந்த வண்ணத் தயிர் தானத்தை ஏதாவது காரணத்தால் நிறைவேற்ற முடியாமல் போனவர்கள் அல்லது இந்த வண்ணத்திற்கு எண்ணம் சேர்க்கும் விருப்பம் உள்ளவர்கள் ஏழு நிறங்களில் தயிர் தயாரித்து கிரிவலப் பாதையெங்கும் தானமாக அளித்தல் சிறப்பே. வண்ணத்தில் எண்ணம் சேர்த்தல் என்பது சுயநலமான வழிபாடுகளும் நிறைவேற வழிவகுக்கும் ஈசனின் பெருங்கருணையைக் குறிப்பதாகும்.

மூல நட்சத்திரத்தில் எத்தனையோ தெய்வீக லீலைகள் நிகழ்ந்துள்ளன என்பது நீங்கள் அறிந்ததே.
1. எம்பெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி கொண்ட லீலை
2. பிள்ளையார் முருகப் பெருமானுடன் இணைந்து திருச்சி மலைக்கோட்டையை கிரிவலம் வருதல்
3. நரசிம்ம பெருமாளின் பூலோக எழுந்தருள்கள்
4. ஆஞ்சநேயப் பெருமானின் பூலோக தோற்றம்
இந்த லீலைகளுடன் அபூர்வமாக தீர்க வண்ண தேவதைகளும் ஆவணி மூல நட்சத்திரத்தில் இணைந்து தொடர்ந்து கிரிவலம் வந்து திருஅண்ணாமலையானை வணங்குகின்றன.

அவ்வாறு கிட்டும் விசேஷமான சக்திகளுடன் தீர்க வண்ண தேவதைகள் பூலோகத்தில் உள்ள 18 நரசிம்ம தம்பங்களையும் புனருத்தாரணம் செய்து வழிபாடுகள் நிகழ்த்துகின்றன. அதனால் அத்தாழநல்லூர் திருத்தலத்தில் துலங்கும் நரசிம்ம தம்பத்தை ஆவணி மூல நட்சத்திர நாளில் ஆரம்பித்து மாளய பட்சம் நிறைவுறும் வரை தினமும் தரிசிப்பதால் நரசிம்ம தம்பம் புதுப் பொலியுடன் திகழும் அதிசயத்தை நாம் காணலாம்.

நம் சற்குரு, 12 ஆழ்வார்கள் போன்ற தெய்வீக கண்கள் படைத்த உத்தமர்களுக்கே இத்தகைய அபூர்வ காட்சி கிட்டும் என்றாலும் இந்த மாளய பட்சத்தின் அனைத்து நாட்களிலும் தீர்த்த நீராடல், தர்ப்பணத்திற்குப் பின் அத்தாழநல்லூர் நரசிம்ம தம்பத்தை வணங்குதல் நம் வாழ்நாளில் ஒரே ஒரு முறையே சித்திக்கும் அனுகிரகம், நல்வரம் என்பதை நினைவில் கொள்க.

ஸ்ரீகுபேர பகவான்
திருப்புடைமருதூர்

ஐம் ஹ்ரீம் க்லீம்
யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின்
மேலான ஒளியைத் தியானிப்போமாக
என்பது பிரம்ம காயத்ரீ மந்திரத்தின் தமிழ் வடிவம். அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியின் நிறம் என்ன? இந்த பிரபஞ்சத்தில் அனைத்தையும் கடந்திருக்கும் இறைவன் வடிவத்துடனோ, நிறத்துடனோ திகழ முடியாது அல்லவா? அதே சமயம் மனிதர்கள் போன்ற சக்தியே இல்லாத ஜீவன்களுக்கும் கருணை அளிப்பவன்தானே கடவுள். இது குறித்தே பிள்ளையார், முருகன், கண்ணன் போன்ற மானுட வடிவில் இறைவன் எழுந்தருளி நம்மைக் கரை சேர்க்கிறான். இவ்வகையில் திருப்புடைமருதூர் திருத்தலத்தில் எல்லையில்லா இறைவன் அடியார்களின் மேலுள்ள கருணையால் ஒளி வடிவில் காட்சி அளித்ததை இங்குள்ள வீடியோவில் நீங்கள் கண்டு இரசிக்கலாம்.

விஷமுள்ள, விஷமற்ற அனைத்து பாம்புகளுமே நாகம் என்று அழைக்கப்படுகின்றன. செந்நாகம் (red wiper) என்ற கொடிய விஷமுள்ள நாகங்கள் உண்டு. ஆயிரம் சாதாரண விஷப் பாம்புகளின் விஷ சக்தியைக் கொண்டதே ஒரு செந்நாகம். ஒரு யுக காலத்திற்கு இவ்வாறு விஷத்தை சேர்த்து வைத்த செந்நாகங்கள் இறுதிக் காலத்தில் தங்கள் விஷத்தை ஒரு தெய்வ மூர்த்தியிடம் அர்ப்பணித்து விட்டு தங்கள் உயிரை விட்டு விடும். இவ்வாறு இந்த மாளய பட்ச காலத்தில் தங்கள் பிராண சக்திகளை அத்தாழநல்லூர் நரசிம்ம மூர்த்தியின் திருவடிகளில் அர்ப்பணித்த ‘செந்நாக அதிரூப விடம்’ என்ற சக்திகளை இத்தலத்தில் தர்ப்பணம் இயற்றும் பக்தர்களின் தர்ப்பண சட்டத்தில் திகழும் பாம்பு உருவத்தில் பதித்து நரசிம்ம சுவாமி அருள்புரிவதால் தர்ப்பணத்திற்குப் பின் இந்த பாம்பு உருவங்களின் மேல் தாமே அரைத்த சந்தனத்தை வைத்து வழிபட்டு அந்த பிரசாதத்தை பயன்படுத்துவதால் தீராத காய்ச்சல், தொற்று நோய் வியாதிகளே இல்லை எனலாம்.

தஞ்சாவூர் அருகில் உள்ள திட்டை திருத்தலத்தில் நான்கு நிமிடங்களுக்கு ஒரு முறை இறைவன் திருமேனிமேல் ஒரு துளி அமிர்த நீர் அபிஷேகமாகப் பொலியும். இது இன்றும் நிகழும் அற்புதமே. அது போல் திருப்புடைமருதூர் திருத்தலத்திலும் ஒளிமருதம் என்ற அபூர்வமான கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றின் சக்தியால் ஸ்ரீநாறும்பூ நாதனின் அனுகிரகம் நவகிரகத்தை வலம் வரும் பக்தர்களை ஒளி ரூபத்தில் அரவணைக்கும் அதிசயத்தை அடியார்கள் இன்றும் கண்டு இன்புறலாம். இத்தல சிவ சந்நிதி, விஷ்ணு வளாகம், சகஸ்ரலிங்கம் முன்னிலையிலும் இத்தகைய ஒளிக் கீற்றுகளை அடியார்கள் தரிசித்து பலன்பெறலாம்.

இத்தகைய சந்திர காந்தக் கற்கள், ஒளிமருதம் கற்கள் போன்றவற்றால் பக்தர்களுக்கு என்ன பயன்? தூக்க நிலை மனத் தெளிவு, விழிப்பு நிலை மனத் தெளிவு என்ற இரண்டு தெய்வீக நிலைகளை தெய்வீகத்தில் முன்னேறத் துடிக்கும் அடியார்கள் பெற்றே ஆக வேண்டும். Sleep awareness, Wakeful awareness or Self-conscious awareness என்று அழைக்கப்படும் இந்த இரண்டு நிலைகளையும் பக்தர்கள் சிறிது சிறிதாக பெற உதவுவதே சந்திர காந்தக் கற்கள், ஒளிமருதம் போன்ற கற்களின் அனுகிரக சக்திகளாகும்.

ஸ்ரீகஜேந்திர வரதர்
அத்தாழநல்லூர்

நம் மனதில் தோன்றும் ஒவ்வொரு எண்ணத்திற்கும் ஒரு காயத்ரி மந்திரத்தை ஜபித்தல் என்பதை கைக்கொண்டு தொடர்ந்து நாம் முன்னேறி வந்தால் விழிப்பு நிலை மனத் தெளிவைப் பெறலாம். இந்நிலை பூர்ணமடைந்தால்தான் உலகில் நடக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் உண்டு என்பதை பிறர் தெரிவிக்காமல், பிறர் உதவியை நாடாமல் நாமே உணர முடியும். இதனால் தேவையில்லாத எண்ணங்களில் விரயமாகும் மன சக்தி, உடல் சக்தி குறைவதால் மிகக் குறைந்த அளவு தூக்கமே நமக்கு தேவையான ஆரோக்கியத்தைத் தந்து விடும், ஓய்விற்கான அவசியமே தேவைப்படாமல் போகிறது. இந்த முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமைவதே தாமிரபரணி ஆற்றில் பிரம்ம முகூர்த்தத்தில் நாம் இயற்றும் வழிபாடுகள் ஆகும்.

இதனால் நம் மனதின் ஒருமைப்பாடு அதிகரிக்கும், ஞாபக சக்தி மிகுந்து, தவறே ஏற்படாமல் காரியங்களை திறம்பட இயற்ற முடியும்.

“திருப்பதி வெங்கடாஜலபதி தன்னுடைய திருமணத்திற்காக குபேர பகவானிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தருவதற்காக வட்டியைத்தான் தந்து கொண்டிருக்கிறாரே தவிர இன்னும் ‘முதலை’ திருப்பித் தர ஆரம்பிக்கவே இல்லை...” என்பார்கள். இது உண்மையே என்பார் நம் சற்குரு. இவ்வாறு வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாமல் அல்லல் படுவோர், தங்களின் கடன் நியாயமான காரியத்திற்காக என்றால், அந்தக் கடனை நிச்சயம் அடைக்க வழி செய்பவரே திருப்புடைமருதூர் தலத்தில் அருள்புரியும் குபேர பகவான் ஆவார். தாமே அரைத்த சந்தனத்தால் இவருக்கு காப்பிட்டு வணங்கி அவரைக்காய் சாம்பார் கலந்த அன்னதானம் அளித்தல் சிறப்பாகும். இதனால் புற்றுநோய் போன்ற நாள்பட்ட வியாதிகளுக்கும் நிவாரணம் கிட்டும். தொடர்ந்த வழிபாடு அவசியமே. மாளய பட்சம் சமயத்தில் குபேர பகவானுக்கு நிறைவேற்றும் வழிபாடுகள் பன்மடங்காக குபேர சக்திகளை வர்ஷிக்கும் என்பது உண்மையே. இத்தகைய வழிபாடுகளின் போது...
ஓம் தத் புருஷாய வித்மஹே தன தேவாய தீமஹி
தந்நோ குபேர நிதி ப்ரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை 36 முறை ஓதுதல் சிறப்பாகும்.

கருநெல்லி கற்பக தானம்

கருநெல்லி கற்பக தானம் என்று இந்த மாளய பட்சத்தில் அளிக்கக் கூடிய ஒரு அபூர்வ தான முறையை சித்தர்கள் அளிக்கிறார்கள். திருத்தங்கல் திருத்தலத்தில் நெல்லிக்காய்களை உள்ளங்கைகளில் ஏந்தி வலம் வந்து, தாமிரபரணி ஆற்று தீர்த்தத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீராடியவர்கள் மட்டுமே இத்தகைய தானங்களை அளிக்கும் தகுதி பெறுகிறார்கள்.

தேன், தினை மாவு இவற்றைக் கலந்து கரு நெல்லிக்காய் அளவிற்கு சிறு சிறு உருண்டைகளாக்கி, 60 உருண்டைகளுக்கு மிகாமல், மாளய பட்சத்தின் போது அளிக்கும் அன்னதான பிரசாதத்திலும், 60 உருண்டைகளை தாமிரபரணி ஆற்றின் கரையில் பறவைகளுக்கு உணவாக அளிப்பதே கருநெல்லி கற்பக தானம் ஆகும். இதன் பலாபலன்களை வாய் விட்டு விவரிக்க முடியாது என்றாலும் இத்தகைய தானங்களை அளிக்கும் சந்ததியைச் சார்ந்தோர் ‘கற்ப காலத்திற்கு நலமுடன் வாழ்வர்’ என்பது இத்தானத்தால் கிட்டும் பலன். இந்தப் பலனை மக்கள் புரிந்து கொள்ளும் முறையில் விவரிப்பதற்கே ஒரு கற்ப காலம் ஆகும் என்பதே இந்த தானத்தின் சிறப்பாகும்.

அகத்திய பிரானின் முதன்மைச் சீடரான போகர் இவ்வாறு தேனும் தினை மாவும் மட்டும் உண்டு முன்னூறு ஆண்டு காலத்திற்கு வாழ்ந்தார் என்றால் இதன் ஆயுள் விருத்தி மகிமை எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும். வெறுமனே ஆயுளை நீட்டித்தல் என்பது பிரமாதமில்லை, போகர் போன்ற ஒரு மகா சித்தராக வாழ்வதற்கு இத்தகைய தானங்கள் உறுதுணையாக நிற்கும் என்பதே மாளய பட்சத்தில் அளிக்கப்படும் இத்தகைய தானத்தின் மகிமை.

ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வரர்
திருவையாறு

சப்தஒலி பிரகாரம் திருவையாறு

நம் அடியார்களுக்காக நம் சற்குரு இயற்றும் சாதனையை நாம் நினைவு கூர்வதும் இந்த மாளய பட்ச வழிபாடுகளின் ஓர் அங்கம்தான். திருஅண்ணாமலை ஆஸ்ரம கட்டுமான பணிக்காக நிறைய சவுக்குக் கம்பங்கள் வாங்கப்பட்டன. மாடிகள் அமைப்பதற்காக மேற்கூரை கட்டியபோது இவைகள் அனைத்தும் முட்டுக் கட்டைகளாகப் பயன்படுத்தப்பட்டன. மாடிகள் தயாரான பின் உயரம் குறைந்த அறைகளைக் கட்டுவதற்காக இவைகள் பல குறைந்த உயரம் உடையவைகளாக நறுக்கப்பட்டு பயனாகின. அந்த வேலையும் மாறி, இனி இந்த சவுக்கு குச்சிகளுக்கு வேலை இல்லை என்ற நிலை உருவானபோது அவை அனைத்தையும் திருக்கார்த்திகை அன்னதான வைபவத்திற்காக எரிபொருளாக பயன்படுத்தி பிரசாதம் தயார் செய்து அந்த பிரசாதம் அனைத்தையும் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அளித்தார் நம் சற்குரு.

இந்த நற்காரியங்கள் அனைத்தையும் விளக்கிய நம் சற்குரு, “கேவலம் ஒரு சவுக்குக் கட்டை நன்னிலை அடைவதற்காக இத்தகைய பாடுபடும் அடியேன் உங்களுக்காக பாடுபட மாட்டேனா?” என்று கேட்டார் தாயினும் சாலப் பரிந்து. நீர் ஊற்றாமலே வளர்கின்ற தன்மை உடையவை சவுக்கு மரங்கள். இடியிலிருந்து வெப்பத்தையும், மின்னலிலிருந்து ஒளி சக்தியையும், நிலத்தில் இருந்து பிருத்வி சக்தியையும் சவுக்கு மரங்கள் பெற்று வாழ்கின்றன, வளர்கின்றன.

எதிர்காலத்தில் எத்தனையோ அடியார்களின் தகனம் இயற்கையான பஞ்சபூத சக்திகள் மிகுந்த பசு வரட்டியால் அமையாமல் மின்சார தகனமாக மாறும் என்பதை உணர்ந்த நம் சற்குரு அவர்களின் நல்வாழ்விற்காகவும் இவ்வாறு சவுக்கு கட்டைகளை விறகாகப் பயன்படுத்தினார் என்பதும் நம் சற்குருவின் தொலைநோக்குப் பார்வைக்கான சான்றாகும். இந்த மாளய பட்சம் அன்னதான கைங்கர்யங்களில் எந்த அளவிற்கு சவுக்குக் கட்டைகளைப் பயன்படுத்தி உணவு பதார்த்தங்களை தயார் செய்து அன்னதானமாக அளிக்கிறோமோ அந்த அளவிற்கு சமுதாயத்தில் மின்சார தகனத்தால் வேதனை அடைந்த மனித ஆன்மாக்கள், தங்கள் வேதனைகள் தணிந்து நன்னிலை அடைய இத்தகைய தான தர்மங்கள் துணை புரியும்.

ஸ்ரீதளம் பிறந்த ‘கதை’

பொதுவான வர்ணனைகள் அனைத்தையுமே நாம் கதை என்று கூறுவது வழக்கம். நம் சற்குருவோ கதை வேறு, கற்பனை வேறு, புராண நிகழ்ச்சிகள் வேறு என்று இவைகளைத் தரம் பிரித்து கூறுவார். திருமகள் உறையும் வில்வ தளங்களை நாம் ஸ்ரீதளம் என்று கூறுகிறோம். இவ்வாறு ஸ்ரீதளம் உருவான திருத்தலமே திருப்புடைமருதூர் திருத்தலமாகும்.

அந்த வரலாறு என்ன?

திருமகள் யார் திருமாலின் இதயத்தில் உறையும் தகுதியைப் பெற்றவர் என்பதை நிரூபிப்பதற்காக திருப்புடைமருதூர் திருத்தலத்தில் சகஸ்ரலிங்கத்தை வலம் வந்து வணங்கினாள் என்பது நாம் அறிந்ததே. அவ்வாறு இறைவனை வலம் வந்து வழிபாடுகள் இயற்றும்போது இத்தலத்தில் பூத்து மணம் வீசிய மல்லிகை மலர்களை எல்லாம் பறித்து தினமும் ஒரு லட்சம் பூக்களைக் கொண்டு மலர்ச் சரங்கள் தம் கையால் தொடுத்து இறைவன் ஸ்ரீநாறும்பூ நாதனுக்கு அளித்து வந்தாள்.

ஸ்ரீகவச ஜலூசர் திருவையாறு

திருமகள் இவ்வாறு சரங்கள் தொடுக்கையில் மேல் கீழ் ஒவ்வொரு மலரையும் வைத்து வாழை நார் கொண்டு தொடுக்கும்போது மலர்களின் மேல்புறம் கை போகும்போது ‘ஹ்ரீம்’ என்று ஓதியும் மீண்டும் கை கீழே வரும்போது ‘சிரீம்’ என்று ஒதியும் மலர்களைத் தொடுத்தாள். இவ்வாறு திருமகளின் மேல் கீழான இயக்கங்களே சிவ சக்தி ஐக்யமாக அமைந்து திருமகள் பெருமாளின் இதயத்திலும், நாறும்பூ நாதனின் கோஷ்டத்திலும் இடம்பெறும் தகுதியைப் பெற்றுத் தந்தன.

இவ்வாறு திருமகள் வைணவ கோட்டத்திலும் (பெருமாளின் திருமார்பு) சைவக் கோட்டத்திலும் (நாறும்பூ நாதனின் திருவடி) இடம் பெற்ற ஸ்ரீகோட்டமே திருப்புடைமருதூர்.

திருமகளும் பெருமாளும் தன்னை வணங்கி ஆசி பெறுகையில் எம்பெருமான் நாறும்பூ நாதன் அவர்களுக்கு ‘ஸ்ரீதனமாய்’ இந்த ஸ்ரீதள இதழ்களால், வில்வ தலங்களால் ஆசீர்வதித்து பெருமை கூட்டினானாம். அன்று முதல் வில்வ தளங்கள் ஸ்ரீதளங்கள் என்ற பெருமையையும், லட்சுமி ஒரு வருட காலத்திற்கு வாசம் செய்யும் தகுதி உடைய தீர்காட்சர தளங்களாகவும் மாறினவாம். ஆம், ஒரு முறை பறித்த வில்வ தளத்தை ஒரு வருட காலம் வரை நாம் இறை பூஜைகளுக்கு பயன்படுத்தலாம் என்ற நியதி பிறந்த திருத்தலமும் திருப்புடைமருதூர் ஆகும்.

பீஜம் அவ்யயம் என்று இறைவனை புகழ்கிறோம். இந்த அவ்யய சக்திகளை, என்றும் தொடரும் நிரந்தர இறை சக்திகளை நாம் உணர்ந்து கொள்ள வழி வகுப்பதே ஸ்ரீதளங்கள்.

இவ்வாறு திருமகள் தொடுத்த மல்லிகை மலர்கள் இன்று பூமியிலிருந்து மறைந்து வைகுண்டம் ஏகும் பேறு பெற்று விட்டாலும் இந்த மாளய பட்ச சமயத்திலோ அல்லது அதை அடுத்து வரும் நவராத்திரி தினங்களிலோ இவ்வாறு ஹ்ரீம் சிரீம் என்று ஓதி பூத்தொடுத்து (இங்குள்ள வீடியோவைப் பார்க்கவும்) இறைவனுக்கும், சுமங்கலிகளுக்கும் அளித்தல் என்பது கணவன் மனதில் மட்டும் அல்ல, இறைவன் திருவடிகளிலும் நிரந்தர இடத்தைப் பெற்றுத் தரும் வழிபாடாக மலரும்.

பலரும் மலர்கள் பொலிவுடன் திகழ வேண்டும் என்பதற்காக அவற்றை ஈரத் துணியில் வைத்தோ, ரெப்ரிஜேட்டரில் வைத்தோ பாதுகாக்கிறார்கள். இதனால் மலர்கள் தங்கள் ‘நாறும்’ சக்தியை, அதாவது இறைவன் அளிக்கும் அனுகிரக சக்திகளை தக்க வைத்துக் கொள்ளும் தகுதியை இழந்து விடும் என்பதை நினைவில் கொள்க. அதனால் கணவன் மனைவியரிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் தோன்றும். அதே போல் தலைக்கு சூடிய மலர்களை குப்பையில் போடாது பால் விருட்சங்கள் அடியில் சேர்ப்பதும் பூக்களுக்கு உரித்தான சரியான ‘விசர்ஜன’ முறையாகும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
அம்பாள் சன்னதி திருவையாறு

ஸ்ரீசிவபெருமானின் ஒரு மயிர்க்கால் ஆடி அசையும் நேரமே 14 மன்வந்திரங்கள் தோன்றி மறையும் காலம். தற்போது நடப்பது வைவஸ்தவ மன்வந்திரம். மனுவின் திருநாமம் ஆயுஷ்மான் க்ருபாநிதி.

மல்லிகைப் பூக்களைக் கட்டும்போது ஹ்ரீம் என்ற மங்கள சக்திகள் அளிக்கும் பீஜாட்சரங்களையும், சிரீம் என்ற சௌம்ய சக்திகள் அளிக்கும் பீஜாட்சரங்களையும் இணைத்து மலர்ச் சரங்களை தொடுத்தலால் மங்கள சக்தியும் சௌம்ய சக்தியும் இணைந்த குடும்பம் ஆனந்த பூஞ்சோலையாய் திகழ்வதில் வியப்பென்ன.

இதில் மற்றோர் தெய்வீக இணைப்பு அம்சமும் சற்குருமார்களால் உருவாக்கப்படுகின்றன. நரசிம்மர் இரண்யனின் அரண்மனையில் தோற்றம் கொண்டபோது 18 தம்பங்களில் எழுந்தருளினார் அல்லவா? அப்போது தோன்றிய மகா உஷ்ணத்தை தணிப்பதற்காக லட்சுமி தேவியால் உருவாக்கப்பட்டதே ஸ்ரீநாறும்பு நாதனின் அனுகிரகமாகப் பெற்ற ஸ்ரீதள குளிர்ச்சியாகும்.  நரசிம்மர் வானில் பறந்து சென்ற இடங்களில் எல்லாம் லட்சுமி தேவியும் அவருடன் பறந்து சென்று அவருக்கு குளிர்ச்சியை ஊட்டி பெருமாளை சாந்தப்படுத்துவதற்கு இந்த ஸ்ரீதள சக்திகளே பேருதவியாய் இருந்தன.

திருவையாறு திருத்தலத்தில் அம்பாள் சந்நதி பிரகாரத்தில் ஸ்ரீநரசிம்ம பெருமாளை மடியில் கிடத்திய கோலத்தில் சரபேஸ்வர மூர்த்தி ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார்.

ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி இங்கு இவ்வாறு எழுந்தருளியதன் காரணம் என்னவோ?

திருவையாறு திருத்தல பிரகாரத்தில் ஓரிடத்தில் நின்று கொண்டு ஐயாறா ஐயாறா என்று ஏழுமுறை கூவினால் ஐயாறா ஐயாறா என்று இந்த நாமங்கள் ஏழு முறை எதிரொலியாக ஒலிக்கும்.  நம் சற்குரு இத்திருத்தலத்தில் உழவாரப் பணிகள் இயற்றியபோது  இவ்வாறு ஐயாறா ஐயாறா என்று ஒலித்த இறைநாமத்தைக் கேட்டு அதை தாங்களும் ஒலித்து பயன்பெற்ற பல அடியார்கள் இன்றும் நம்முடன் உள்ளனர்.

ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள்
திருவையாறு

இவ்வாறு 49 முறை (7 x 7 = 49) ஐயாறா ஐயாறா என்று ஒலிக்கும்போது அது ஒலி ஒளியை இணைக்கும் சக்தி பெறும் என்பதும் திருவையாறு திருத்தலத்தில் ஒலிக்கும் ஐயாறா நாமத்தின் மகிமையாகும்.

உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசயமாக தட்சிணாமூர்த்தி திருவையாறு திருத்தலத்தில் ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வர மூர்த்திக்கு எதிரே வடக்கு திசையான குபேர திக்கு நோக்கி எழுந்தருளி இருப்பதையும் தட்சிணா மூர்த்தி எதிரே ஸ்ரீகவச ஜலூசர் இவர்களை தரிசித்த நிலையில் திகழ்வதையும் காண கண் கோடி வேண்டும்.

‘அ தி தி ட ர ங் க’ என்ற ஏழு ஒலி அட்சரங்களை ஐயாறு சிவாலயத்தில் இணைத்து மக்கள் நல்வாழ்விற்காக அளித்ததே ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியின் பெருங்கருணை என்பது இப்போது புலனாகின்றது அல்லவா?

ஸ்ரீஆட்கொண்ட நாயகன்
திருவையாறு

வரும் மாளய பட்சத்திற்கு முன் ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வர மூர்த்தியையும் ஸ்ரீகுபேர தட்சிணா மூர்த்தியையும் தரிசித்தல் லட்சுமி கடாட்ச சக்திகளையும், குடும்ப ஒற்றுமை, சமுதாய ஒற்றுமை சக்திகளையும் பன்மடங்கு பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஒலி நாடி ஒலிக்குள் புகுந்தவன் சிதம்பரத்தான் என்றும், ஒலி நாடி ஒளியாகி, ஒலிக்குள் புகுந்தவன் சிதம்பரத்தான் என்றும் பலவாறு இறை மகிமையை சித்தர்கள் உரைக்கின்றனர். இறைவனின் இந்த ஒலி ஒளி மகிமைகளை நாம் உணர வழிவகுப்பதே திருவையாறு திருத்தலமாகும்.

வெள்ளைக்காரர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் முதல் சுதந்திர வீராங்கணையாக திகழ்ந்தவளே ஜான்சி ராணி என்பதை நாம் அறிவோம். பாலருந்தும் குழந்தைக்கு அன்னையாகத் திகழ்ந்தாலும் தம் குடிமக்களுக்கும் அன்னையாகத் திகழ்ந்த ஜான்சி ராணி தன் குழந்தையை முதுகில் சுமந்தவாறே குதிரையில் விரைந்து சென்று எதிரிகளை வெட்டி வீழ்த்திய அருஞ்செயல்கள்தான் எத்தனை எத்தனை.

இந்த தீரச் செயல்களுக்கு எல்லாம் வித்தாய் திகழ்ந்ததே ஜான்சி ராணி ஒரு ஆண் மகனைப் போல் தன் காலில் அணிந்திருந்த திருவெண்டயம் ஆகும். திரு வெண்மை அயன் என்பதே திருவெண்டயம் ஆயிற்று. ஏழு வண்ண ஒலி அலைகளைத் தோற்றுவிக்கும் லட்சுமி கடாட்ச சக்திகள் நிறைந்த ஆபரணமே திருவெண்டயம்.

ஜான்சி ராணியின் காலில் திகழ்ந்த இந்த திருவெண்டயம் அவளை எதிரியின் கண்களில் இருந்து மறைத்ததால் அவள் தொடர்ந்து வெற்றிக் கொடி நாட்டி வந்தாள். ஆனால், ஒரு நாள் அவள் இந்த திருவெண்டயத்தை அணிந்து கொள்ள மறந்தபோது அவள் எதிரிகளின் கைகளில் மாட்டிக் கொள்ள நேர்ந்தது என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம்.

இக்காரணம் பற்றியே ஒலிப் பாதையில் கைலாயம் சென்ற காரைக்கால் அம்மையார், “அரவா, நீ ஆடும்போது அடியேன் உன் அடியின் கீழ் இருக்க வேண்டும், பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பு உண்டெனில் உனை என்றும் மறவாதிருக்க வேண்டும்…”, என்று பாடி மகிழ்ந்தார், மிக மகிழ்ந்தார்.

ஸ்ரீகூர்ம சம்ஹார மூர்த்தி

கூர்மம் என்றால் ஆமை. கூர்ம அவதாரம் எடுத்து உலகைக் காத்தவர் பெருமாள் என்பதை நாம் அறிவோம். அந்த கூர்மத்தையே பெருமாள் சம்ஹாரம் செய்கிறார் என்றால் அது எப்படி என்ற வினா எழலாம்.

ஆமையைப் போல் ஐம்புலன்களையும் அடக்கினால் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் நலமுடன் வாழலாம். ஆனால், ஐம்புலன்களையும் அடக்குதல் என்பது அவ்வளவு எளிதல்லவே. கூர்ம யோகம் முறையாகப் பயின்றவர்களே ஐம்புலன்களையும் எளிதில் அடக்கி ஆளலாம். இந்த கூர்ம யோகத்தில் வல்லவரே பெருமாள். எம்பெருமானிடமிருந்து இந்த கூர்ம யோகத்தை வரமாகப் பெற்றதால் கூர்ம யோகத்தில் பெருமாளுக்கு மிஞ்சியவர் எவரும் இல்லை எனலாம். ரங்கநாதர் என்று பெருமாள் புகழப்படுவதற்கு இந்த கூர்ம யோகத்தின் வல்லமையே காரணமாகும்.

ஸ்ரீசந்திரசேகரர்
திருப்புடைமருதூர்

ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியின் சுண்டு விரல் நக ஒளியில் 40 ஆயிரம் கோடி சூரிய வெளிச்சம் உள்ளது. ஸ்ரீசனீஸ்வர சரணாகதி போன்ற சரபேஸ்வர கவசங்களை ஓதுவதால் ஸ்ரீசரபேஸ்வர வழிபாட்டில் ஸ்ரீசனீஸ்வரன் அனுகிரகமும் கிட்டும்.

உலகில் வல்லவனுக்கு வல்லவன் ஆவதை விட அந்த வல்லவனைப் போல் பேரும் புகழும் பெறுவதைத்தானே பலரும் விரும்புவர். இது என்றும் தொடரும் கதையாக இருப்பதால் இதைத் தானும் கைக்கொண்டு எம்பெருமானிடம் கூர்ம யோகத்தை வரமாகப் பெற பல யுகங்கள் கடுமையாகத் தவமியற்றினார் சுக்ராச்சாரியார்.

சுக்ராச்சாரியார் நாம் நினைப்பது போல் சாதாரண அசுர குரு கிடையாது. சுக்கிலம் என்றால் ஆணின் விந்து என்று பொருள், உயிர்க் கரு. இவ்வாறு எம்பெருமானின் சுக்கிலத்திலிருந்து தோன்றியவரே சுக்கிராச்சாரியார் என்றால் அவருடைய சக்தியையோ, ஆற்றலையோ மனிதக் கண் கொண்டு ஆராய முடியுமா என்ன? இத்தகைய சுக்ராச்சாரியாரின் கடுந்தவத்தை மெச்சி அவருக்கு அருங்காட்சி கொடுத்து அவர் வேண்டும் பரிசைக் கேட்டார் எம்பெருமான்.

சுக்ராச்சாரியார் இறைவனை வணங்கி, “சுவாமி, கூர்ம யோகத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே அடியேனின் விருப்பம், இந்த கூர்ம யோகத்தை தாங்கள் அருள வேண்டும்...”, என்று பவ்யமாகக் கைகூப்பி வணங்கி தன்னுடைய கோரிக்கையை தெரிவித்தார். எம்பெருமான் பலத்த யோசனையில் ஆழ்ந்தது போல் பாவனை செய்து கொண்டு மௌனமாக இருந்தார். சூழ்நிலையைப் புரிந்து கொண்டார் சுக்கிரன். “சுவாமி, ஏதாவது அபத்தமாகக் கேட்டு விட்டேனா?” என்று ஒன்றும் புரியாதவர்போல் கேட்டார். ஈசனும் ஒரு குறும்புப் புன்னகையை உதிர்த்து, “சுக்கிரா, நீ ஏதாவது புதிதாக ஒன்றைக் கேட்டால் அதை நான் உடனே உனக்குத் தந்து விடுவேன், நீ கேட்பதோ அடுத்தவன் பெற்ற ஆற்றல், அதை நீ வரமாகக் கேட்பது பெரும் தவறல்லவா? நீ வரம் வாங்குவது ஒரு புறம் இருக்க, இவ்வாறு நீ செய்த பெருந்தவறான அடுத்தவன் சொத்திற்கு ஆசைப்படுவது என்ற பெரும்பாவத்திற்கு பிராயச்சித்தம் செய்தாக வேண்டுமே?” என்று கேட்டார்.

இப்போது சுக்கிராச்சாரியார் யோசிக்க ஆரம்பித்து விட்டார், “என்ன இது கிணறு வெட்ட பூதம் கிளம்பியதைப் போல் ஆகி விட்டதே?” எம்பெருமானிடம், “சுவாமி, அடியேனுடைய தவற்றை உணர்ந்து விட்டேன். அடியேன் செய்த தவற்றிற்கு அடியேன் தானே பிராயசித்தம் செய்தாக வேண்டும். கூர்ம வடிவில் அடியேன் இந்த கடலில் வாழ்கிறேன். பெருமாள் என்னை சம்ஹாரம் செய்யட்டும். அது அவ்வளவு எளிதான செயல் அல்லவே? கூர்ம அவதார மூர்த்தி கூர்மத்தை (ஆமையை) எப்படி சம்ஹாரம் செய்கிறார் என்பதைப் பார்க்கிறேன். அதே முறையைக் கைக்கொண்டு அடியேன் மனதில் தோன்றிய தான் என்ற அகந்தையையும் அந்த முறைப்படி வெல்கிறேன்...”, என்று கூறி அந்தக் கடலில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

ஸ்ரீஅதிகார நந்தீஸ்வரர்
திருப்புடைமருதூர்

திருஅண்ணாமலை சாதாரணமாக 2,662 அடி உயரம். அருணாசலத்தின் சுய வடிவைக் காண 1,008 முறை கிரிவலம் வர வேண்டும்.

கடலில் வாழ்வது ஒரு சாதாரண ஆமை அல்ல, அது அசுரர்களுக்கு எல்லாம் குருவான சுக்ராச்சாரியார் என்பதை மெல்ல மெல்ல உணர்ந்த திமிங்கலங்கள் எல்லாம் அந்த கடலை விட்டே ஓடி விட்டன. ஒரு திமிங்கலத்தின் வயிற்றில் நூறு யானைகள் கூட சிரமமின்றி உலாவி வரலாம். அந்த அளவிற்கு பெரிய உருவத்தைக் கொண்டவையே திமிங்கலங்கள், அத்தகைய திமிங்கலங்களே சுக்ர ஆமையைக் கண்டு ஓடி விட்டன என்றால் அசுர சக்தியின் பலம் எப்படி இருக்கும் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம்.

ஆளால், விதி வலியது அல்லவா? அந்த அசுர ஆமையை உண்ண வேண்டும் என்ற விருப்பத்தில் சுக்ர ஆமையை விழுங்கி விட்டது த்வனி சகாயம் என்ற பெயர் பெற்ற ஒரு திமிங்கலம். சுக்ராச்சாரியாரை ஒரு சாதாரண திமிங்கலம் உண்ண முடியுமா? வயிற்றினுள் சென்ற ஆமை செரிக்காமல் இருந்ததால் திமிங்கலம் மிகவும் துன்பமடைந்தது. அத்தாழநல்லூர் கஜேந்திரனைப் போல், “ஆதிமூலமே, காத்தருள்வாய்...”, என்று ஓலமிட்டது. திமிங்கலத்தின் தீனக் குரலைக் கேட்ட பெருமாள் அவ்விடத்திற்கு ஓடோடி வந்து திமிங்கலத்தின் உள்ளிருந்த சுக்ராச்சாரியாருடன் போரிட ஆரம்பித்தார்.

சுக்ராச்சாரியார் சாமானியரா என்ன, பெருமாளுக்குப் பயந்து விடுவதற்கு? அவர் தன் குரலை எழுப்பி அசுரர்களை எல்லாம் துணைக்கு அழைக்கவே திமிங்கலத்தின் வயிற்றில் இருக்கும் சுக்ராச்சாரியாரின் குரலை அடையாளம் கண்டு கொண்டு அசுரர்கள் எல்லாம் அங்கு கூடவே அசுரர்களுக்கும் பெருமாளுக்கும் போர் நடக்க ஆரம்பித்தது. வெகு நாட்கள் தொடர்ந்து நடந்த அந்த போரை முடிவுக்கு கொண்ட வர எண்ணிய பெருமாள், “இந்த ஆமையைக் கொன்றால்தான் அசுரர்கள் ஓடி விடுவார்கள் என்று தெளிந்து அந்த ஆமையை சம்ஹாரம் செய்ய எண்ணி தன் சக்ராயுதத்தை எடுக்க நினைத்தார்.

ஆனால்... என்ன அதிசயம்...
அப்போது ஆமை ஒரு மந்திரத்தைச் சொல்ல பெருமாளால் சக்கராயுதத்தை பிரயோகம் செய்ய முடியாதவாறு அவர் கை உள்ளே போய் விட்டது.

நடுங்கி விட்டார் நாராயணன் என்று சொல்லவும் வேண்டுமோ? வேறு வழியின்றி பெருமாள் எம்பெருமானை அழைக்கவே எம்பெருமான் தோன்றி, “திமிங்கலத்தின் வயிற்றில் இருப்பது சாதாரண ஆமை அல்ல, சுக்கிரன்தான் இவ்வாறு ஆமை வடிவு எடுத்து உன்னுடன் போர் புரிகிறான். கலங்காதே, பஞ்சாட்சரம் ஜபித்தால் வெற்றி கொள்வாய்...”, என்று பெருமாளுக்கு ஆறுதல் கூறி மறைந்தார்.

கலங்காதே கண்ணா!

இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்குமே “மா சுச:” என்ற கீதை நாயகனின் வார்த்தைகள் எங்கிருந்து தோன்றின என்று. சுக்ராச்சாரியாரை சம்ஹாரம் செய்வதே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரே வழி என்பதை உணர்ந்த பெருமாள் பஞ்சாட்சர மந்திரம் ஜபித்து திமிங்கலத்தின் வயிற்றிற்குள் சென்று விட்டார்.

திமிங்கலத்தின் வயிற்றிற்குள் சென்ற பெருமாள் ஆமை வடிவில் இருந்த சுக்ராச்சாரியாரைத் திருப்பிப் போட்டார். திருப்பிப் போட்ட ஆமையை திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த த்வனி சகாயம் என்ற அமிலம் சுரந்து ஆமையைத் தின்று விட்டது. அப்போது சுக்ராச்சாரியாரின் தான் என்ற அகந்தை அகல அவர் பெருமாளுக்கும் எம்பெருமானுக்கும் நன்றி கூறி விட்டு தன் அசுர லோகத்திற்குத் திரும்பினார்.

இவ்வாறு ஆமையைத் திருப்பிப் போட்டு அதைச் செயலிழக்க வைக்கும் பழக்கத்தை உலகில் முதன் முதலில் உண்டாக்கியவரே பெருமாள் ஆவார். அவ்வாறு திமிங்கலத்தின் உடலில் மறைந்த ஆமை ஓட்டை எடுத்து ஸ்ரீஉலகளந்த பிள்ளையாருக்கு கேடயமாக அளித்து விட்டார் பெருமாள்.

சர்க்கம் என்றால் தோன்றுதல் என்று பொருள்.
த்வனி சர்க்கம் என்ற கூர்ம பிரயோகத்தால் வலது கை உள்ளே போகும்.
க்ருத சர்க்கம் என்ற கூர்ம பிரயோகத்தால் வலது கால் உள்ளே போகும்.
ஸ்வேத சர்க்கம் என்ற கூர்ம பிரயோகத்தால் இடது கால் உள்ளே போகும்.
இத்தகைய கூர்ம இரகசியங்கள் எல்லாம் கற்ற பெருமாளின் வலது கையையே பயன்படுத்த முடியாமல் சுக்ராச்சாரியார் செய்து விட்டார் என்றால் அசுர சக்தி என்பது எத்தகைய பலம் வாய்ந்தது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவும் இந்த வரலாறு நமக்கு ஒரு பாடமாக அமையும்.

பாக்கி தீர்க்கும் பயணம்

கர்மா என்றால் செயலின் பயன், பாக்கி என்றால் அந்த செயலால் கழிக்கப்படாத பலன், இது ஓரளவே கர்ம பாக்கியைக் குறிக்கும் விளக்கமாகும். எத்தனை பிறவிகள் ஆனாலும் ஒருவர் கர்ம பாக்கியைத் தீர்த்தால்தான் அவர் இறைவனை நோக்கி மேற்கொள்ளும் பயணத்தில் அடுத்த நிலையை அடையலாம். இந்த விதியிலிருந்து தேவர்களுக்குக் கூட விலக்கு கிடையாது.

எந்த அளவிற்கு ஆழ்ந்த நம்பிக்கையுடன் நீங்கள் அத்தாழநல்லூர் திருத்தலத்தில் தர்ப்பண வழிபாடுகளை இயற்றுகிறீர்களோ அந்த அளவிற்கு நீங்கள் பாக்கிகளைத் தீர்ப்பதற்கான நல்வழிகளை உங்கள் மூதாதையர்கள் உங்களுக்கு உணர்த்துவார்கள்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருவையாறு

ஒரு முறை கோவணாண்டிப் பெரியவரிடம் ஒருவன் வந்தான். 70 வயதான அவன் தன்னுடன் 20 வயது நிறைந்த மங்கையை அழைத்துக் கொண்டு வந்திருந்தான். கோவணாண்டியை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, “சுவாமி, இந்தப் பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறேன்...”, என்றான்.

பெரியவருக்கு வந்ததே கோபம். தாங்கொணா கோபத்தில் பொங்கி எழுந்த பெரியவர், “ஏன்டா மடையா, உன்னுடைய பேத்தி வயதில் இருக்கும் இந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்கிறாயே, உனக்கு வெட்கமாக இல்லையா?” என்று கேட்டார். வந்தவனுக்கோ ஒன்றும் சொல்ல முடியாமல் பேந்த பேந்த விழித்தான். என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை.

அந்த பேரமைதியை பெரியவர்தான் தன்னுடைய சிம்ம கர்ஜனையால் கலைத்தார். “சரி சரி, நடந்தது நடந்து விட்டது. இந்தப் பெண்ணை அவள் வீட்டில் பத்திரமாக விட்டு விட்டு அப்புறம் வந்து என்னைப் பார்...”, என்று கூறி விட்டார்.

ஸ்ரீகருவூர் சித்தர் திருப்புடைமருதூர்

இந்த நிகழ்ச்சிக்குப் பின் பெரியவர் அந்த ஊருக்குச் செல்லவே இல்லை. அங்கு வந்த ஆளுக்கு அந்தப் பெண்ணின் நினைவுதான் பாக்கியே தவிர, அந்தப் பெண்ணுடன் வாழ வேண்டும் என்ற பாக்கி இல்லை. வாழ்க்கை என்ற கர்மாவை உண்டாக்காமல் அந்த ஆளை பெரியவர் காப்பாற்றி விட்டார். ஆனால், அந்தப் பெண்ணின் நினைவு என்ற பாக்கியை கோவணாண்டியால் கூட தீர்க்க முடியவில்லை என்பதால்தான் பெரியவர் மீண்டும் அந்த ஊருக்குச் செல்லவே இல்லை.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் நம் சற்குரு விவரித்த இந்த கர்ம பாக்கி வர்ணனையை நூறு தடவைக்கு மேல் படித்து ஆத்ம விசாரம் செய்து புரிந்து கொண்ட ஒரு அடியார் உங்களுக்காக இந்த கர்மபடலத்தை அளிக்கிறார். ஆனால், புத்திசாலியான உங்களுக்கு அத்தனை முயற்சிகள் தேவையா என்ன, அத்தாழநல்லூர் தர்ப்பணம் ஒன்று போதுமே.

இது ஒரு புறம் இருக்கட்டும்...
ஒரு முறை நம் சற்குருவிடம் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வந்தாள். தான் ஒரு பெரியவரை மணக்க விரும்புவதாகவும் அவருக்கு வயது எழுபதிற்கு மேல் இருக்கும் என்று கூறினாள். அந்தப் பெண்ணின் ஆகாசிக் ரெகார்டைப் பார்த்த நம் சற்குரு அந்தப் பெண்ணிற்கும் அந்தப் பெரியவருக்கும் சில வருடங்கள் கர்ம பாக்கி இருப்பதை உணர்ந்து கொண்டார்.

பெயருக்கு அந்தப் பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு அந்த கல்யாணத்திற்கு ஒப்புதல் அளித்தார். திருமணமான ஓரிரு ஆண்டுகளுக்கு அந்தப் பெரியவருக்கு மனமார சேவைகள் புரிந்தாள் அந்தப் பெண். பின்னர், அந்தப் பெரியவரும் இயற்கை எய்திடவே நிராதரவான அந்தப் பெண் மீண்டும் நம் சற்குருவை நாடி வந்தாள். அவள் கூறிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் பொறுமையுடன் கேட்டு விட்டு, “சரி அம்மா, நீயோ சிறு வயது, வேறு எவரும் உனக்கு ஆதரவு இல்லை என்கிறாய், நீ விரும்பினால் மீண்டும் திருமணம் செய்து கொள்வதில் எந்த தவறும் கிடையாது, சாஸ்திரம் சம்பிரதாயமும் இதற்கு உடன்பாடே...”, என்றார்.

அந்தப் பெண்ணோ, “இல்லை சுவாமி, என் கணவருக்கு இரண்டு ஆண்டுகளே சேவை செய்தேன் என்றாலும், அந்த இரண்டு வருட வாழ்க்கையில் நான் பூரணத்தைப் பெற்று விட்டதாக உணர்கிறேன். என்னுடைய மனது திருமணத்தை நாடவில்லை, இந்த சமுதாயத்திலிருந்து எனக்கு பாதுகாப்பு கிடைத்தால் அதுவே போதும்...”, என்று கூறவே சற்குருவும், “சரியம்மா, நீ நினைப்பது போல் சமுதாயம் உனக்கு துன்பம் அளிக்காமல் அங்காளி பார்த்துக் கொள்வாள், கவலைப்படாமல் போய் வா...”, என்று கூறி விடை கொடுத்து அனுப்பினார்.

மேற்கூறிய இரண்டு இளமை முதுமை ‘மோதல்களும் முடிவுகளும்’ கர்மபாக்கியைப் பற்றிய தெளிவை அடியார்களுக்குத் தரவல்லவையே. இந்த நிகழ்ச்சியில் வரும் இளம் பெண்ணைப் போன்றவர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி வெள்ளை எள் கொண்டு தர்ப்பணம் அளிப்பதற்கு இந்த மாளயபட்சம் சிறந்த பலனைத் தரும் என்பதும் இந்த மாளய பட்சத்தின் மகிமைகளுள் ஒன்றாகும்.

மார்க்கண்டேய வஸ்திரம்

ஏழு வயதான குழந்தைகளுக்கு பூணூல் அணிவிக்கும்போது மார்க்கண்டேய வஸ்திரம் என்ற ஒரு துண்டை இடுப்பில் கட்டி, சிறு குழந்தையாக இருப்பதால், அந்த துண்டு கீழே நழுவி விழுந்து விடாமல் இருப்பதற்காக முஞ்சைப் புல்லை இடுப்பில் துண்டின் மேல் கட்டுவார்கள். ஆடை நழுவி விழுதல் சரியான சகுனம் அல்ல.

மிருகண்டு முனிவரின் புதல்வனே மார்க்கண்டேயன். பிறக்கும்போதே இடுப்பில் வஸ்திரத்துடன் பிறந்தவன். இவ்வாறு பிறக்கும்போது அணிகலனுடன் தோன்றியவர்கள் திருக்கடவூர் திருத்தலத்தை அடைந்தாலே அவர்கள் சாகா நிலை என்னும் மிருத்யுஞ்சய நிலையை அடைந்து விடுவார்கள், அவர்கள் என்றும் சிரஞ்சீவிகளே. கர்ணனும் இவ்வாறு பிறப்பிலே கவச குண்டலங்களுடன் தோன்றியதால் அவன் திருக்கடவூர் திருத்தலத்தை அடைந்திருந்தால் அவன் சிரஞ்சீவி ஆகியிருப்பான்.

ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர் நல்லாடை

கடந்த செவ்வாய்க் கிழமை, சஷ்டி திதி, கிருத்திகை என்று கால சக்திகள் அபூர்வமாக இணையும் ஒரு அமைப்பைக் கண்டோம். எத்தனை அடியார்கள் இத்தகைய அரிய காலசந்தி முகூர்த்தத்தில் முருகப் பெருமானை வழிபட்டு நன்னிலை அடைந்தார்கள் என்பதை நாம் அறிய முடியாவிட்டாலும் இத்தகைய கால சந்தியில் மருதமலை முருகப் பெருமானை வலம் வந்து வழிபாடுகள் இயற்றி அந்தப் பலன்களை எல்லாம் மக்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்த தேவ லோகப் பறவைகளின் கூட்டத்தை இங்குள்ள வீடியோவில் கண்டு இரசிக்கலாம்.

இந்த இரகசியத்தை அறிந்தவர் கிருஷ்ண பரமாத்மா. கர்ணன் ஒருவேளை சிரஞ்சீவி ஆகி விட்டால் மகாபாரத யுத்தத்தில் அவனைக் கொல்ல முடியாது, தர்மத்தைக் காப்பாற்ற முடியாது என்ற ஒரே காரணத்திற்காக கிருஷ்ண பரமாத்மா கர்ணன் திருக்கடவூர் திருத்தலத்தையே நெருங்காதவாறு பார்த்துக் கொண்டார். கீதாசாரியாரின் கருணை செயல்கள்தான் எத்தனை எத்தனை?

மிருகண்டு முனிவர் அக்னி ஹோமங்கள் இயற்றுவதில் கைதேர்ந்தவர். அந்நாட்டு மன்னன் முனிவருக்கு புத்தாடைகளை அளித்து கௌரவித்தபோது அந்த ஆடைகள் அனைத்தையும் தான் நிகழ்த்திய ஹோமத்தில் ஆஹுதியாக அளித்து விட்டார். அந்த ஆடைகள் அனைத்தும் நெருப்பில் மறைந்து நல்லாடை ஸ்ரீஅக்னிபுரீஸ்வர ஈசனுக்கு புத்தாடைகளாக மலர்ந்து ஒளிர்ந்தன.

தான் அளித்த ஆடை அணிகலன்களை முனிவர் நெருப்பில் போட்டு விட்டாரே என்று நினைத்து மன்னனுக்குக் கோபம் ஏற்படவில்லையா என்று கூடியிருந்தவர்கள் கேட்டபோது மன்னன் சிரித்துக் கொண்டே, “சாதாரணமாக ஒருவருக்குத் தானமாக அளித்த பொருளை அவர் ஏற்றுக் கொள்ளாமல் இறைவனுக்கே அளித்து விட்டாலும் தானம் அளித்தவருக்கு கோபம் உண்டாவது இயற்கையே. ஆனால், இந்த நல்லாடை திருத்தலத்தின் மகிமையால் எனக்கு கோபம் என்பதே சற்றும் தோன்றவில்லை...”, என்று ஆச்சரியம் மேலிட பதிலளித்தானாம்.

எனவே எத்தகைய சினத்தால் சிவக்கும் கோபக் கனல் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் நல்லாடை ஈசனுக்கு புது வஸ்திரங்கள் அளித்து வழிபடுவதால் நற்பலன் பெறுவார்கள்.

இத்துணை சிறந்த வல்லமை உடைய மிருகண்டு முனிவர் திருக்கடவூர் ஈசனுக்கு சார்த்திய ஆடையோ கழன்று கழன்று விழுந்ததாம். காரணம் என்னவென்று அவருக்கே தெரியவில்லை. இவ்வாறு ஆடை கழன்று விழுவதை அருகில் இருந்து கவனித்துக் கொண்டு இருந்த மார்க்கண்டன், “அப்பா, அடியேன் வேண்டுமானால் அந்த ஆடையை இறைவனுக்கு அணிவிக்கவா?” என்று கேட்டானாம்.

தந்தைக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும் வேறு எதுவும் செய்ய முடியாத அந்த இக்கட்டான சூழ்நிலையில் சிறுவனுக்கு அனுமதி அளித்தாராம். சிறுவனான மார்க்கண்டன் ஆவுடை மேல் ஏறி நின்று கொண்டு பாண லிங்கத்திற்கு ஆடை அணிவித்தான். என்ன ஆச்சரியம், ஆடை சற்றும் நழுவாமல் திரமாக ஈசன் திருமேனியை அலங்கரித்த வண்ணம் பிரகாசித்தது.

ஆனால், தந்தைக்கோ சிறுவன் ஆவுடை மேல் ஏறி ஆடை சார்த்தியது சற்றும் ஏற்புடையதாகத் தோன்றவில்லை, அது சிவ அபராதமாகவே தோன்றி அவருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது.

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் நல்லாடை

அணிமா, மகிமா போன்ற அஷ்டமாசித்திகளைப் பற்றி மட்டுமே நாம் அறிவோம். சித்துகளுள் மொத்தம் 6000 கோடி சித்துகள் உண்டு. ஆனால், இந்த சித்துகள் எதுவுமே சிவனைக் காட்டாது, காட்ட முடியாது.

பிறப்பிலிருந்தே ஒற்றை ஆடையுடன் திகழ்ந்தவன் மார்க்கண்டன். அவன் ஆற்றில் நீராடி விட்டு கரையேறினால் மறுகணம் அந்த ஆடை உலர்ந்து காய்ந்து விடும், அதனால் அவன் வேறு ஆடை மாற்ற வேண்டிய அவசியமே இல்லாது போயிற்று. அதனால்தான் அவன் திருக்கடவூர் திருத்தலத்தை அடைந்தவுடன் சிரஞ்சீவி ஆகும் அருளை அத்திருத்தல மகிமையாகப் பெற்றுவிட்டான். எமனை ஈசன் உதைத்ததால் மார்க்கண்டேயன் சிரஞ்சீவியாக மாறியது கூடுதல் காரணமே.

மிருகண்டு முனிவருக்கு தன்னுடைய மகனின் ஆயுள் 16 வருடங்கள் என்பதை நன்றாக அறிந்திருந்தார். மிருத்யுஞ்சய மந்திரம் ஜபித்து அதில் சித்தி பெற்றால் ஆயுள் பங்கம் ஏற்படாது காத்துக் கொள்ளலாம் என்பதை அறியாதவரா மிருகண்டு முனிவர். ஆனால், எந்த மந்திரத்தையும் ஜபித்து சித்தி பெற வேண்டுமானால் குறைந்தது 30 வருடங்கள் ஆகும் என்பதால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார் முனிவர். தன் அன்பு மகனிடம், “சிவ அபராதம் எதுவும் நிகழாதவாறு பார்த்துக் கொள்...”, என்றார் முனிவர். இந்த சூழ்நிலையில் அவரால் நிறைவேற்ற முடிந்தது இந்த அன்புக் கட்டளை இடுவது ஒன்றுதான்.

காலனைக் காலால் காய்ந்த
காவலன் திருவையாறு

ஒரு முறை கைலாயத்தை நோக்கி பல ரிஷிகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வானில் பறந்து கொண்டிருந்தனர். அப்போது மார்க்கண்டேயன் மட்டும் வானில் இருந்து கன்யாகுமரியில் உள்ள மார்த்தாண்டம் என்ற ஊரில் இறங்கி அந்த மண்ணில் சில வழிபாடுகளை இயற்றி விட்டு மீண்டும் வானில் பறந்து சென்று மற்ற ரிஷிகளுடன் சேர்ந்து விட்டானாம். அந்த ரிஷிகளுக்கு மார்க்கண்டேய சிறுவனின் விநோத செய்கையின் காரணம் புரியாது திகைத்தபோது அவர்களில் ஒருவரான பரத்வாஜ மகரிஷிதான் இவ்வாறு மார்த்தாண்டம் திருத்தலத்தின் பெருமையைப் பற்றி விளக்கினாராம்.

மார் தாண்டம் என்றால் மரணத்தை தாண்டும் இடம், மாரகத்தை வெல்லும் தலம் என்றெல்லாம் பொருள். ஜாதகத்தில் மாரக தோஷம் உள்ளவர்கள், மரண கண்டம் உள்ளவர்கள் மார்த்தாண்ட மண்ணை மிதித்தாலே தோஷங்கள் விலகும் என்பதே இந்த மண்ணின் மகிமை ஆகும்.

எமன் சிவபெருமானின் திருவடிகளால் ‘உதை’ வாங்குவதற்கு முன் பூமியின் பல இடங்களில் அங்கப் பிரதட்சணம் செய்து மக்களுக்கு ஏற்படக் கூடிய மாரக தோஷங்களிலிருந்து நிவாரணம் பெற தன்னால் இயன்ற வழிமுறைகளை மக்களுக்கு பெற்றுத் தந்தார். அவற்றில் திருஅண்ணாமலை எமலிங்கப் பகுதியும் அடங்கும். அதனால்தான் திருஅண்ணாமலையில் எமலிங்கப் பகுதி, தசமுக தரிசனப் பகுதி, பஞ்சலிங்கப் பகுதி, சோனா நதி நாக லோக வளாகம் போன்ற இடங்களில் குறைந்தது 30 அடி தூரத்திற்கு அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டால் எத்தகைய மாரக தோஷங்களும் நிவர்த்தியாகும் என்று நம் சற்குரு அருள்கின்றார்.

எம பகவான் எம்பெருமானிடம் உதை வாங்கிய பின் உருண்ட பல இடங்களில் ஒன்று என்பதும் மார்த்தாண்டம் மண்ணின் சிறப்பாகும். எனவேதான் மார்த்தாண்டம் மண்ணில் புரண்டாலே, அந்த திருமண்ணை மிதித்தாலே அனைத்து மாரக தோஷங்களும் விலகும் என்று நம் சற்குரு அருள்கிறார்.

சங்கீத சப்த ஸ்வரங்கள்
எங்கிருந்து தோன்றின?
விடையளிக்கிறார் நம் சற்குரு!

இவ்வாறு ஈசனுக்கு ஆடை சார்த்தும் வைபவத்தை தொடர்ந்து மார்க்கண்டேய சிறுவன் நிகழ்த்திக் கொண்டிருக்க, மார்க்கண்டேயன் பதினாறு வயதை அடைந்தவுடன் அவன் உயிரைப் பறிக்க எமதர்மனே நேரில் வந்து விட்டான். எமனைக் கண்ட சிறுவன், “இது என்ன, யாரோ அன்னியன் வருவதைப் போல் தெரிகிறதே, இவன் நம் ஈசனின் ஆடையைக் கவர்ந்து விட்டால் என்ன செய்வது?” என்று நினைத்து சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு அமர்ந்து விட்டான். “சிவ அபராதம் நிகழாதவாறு பார்த்துக் கொள்...”, என்ற தந்தையின் வேத வாக்குகள் மார்க்கண்டேயன் மனதில் எதிரொலித்த வண்ணம் இருந்ததால், “எங்கே சிவன் திருமேனி மேல் உள்ள ஆடை பறிபோனால் அது சிவ அபராதம் ஆகி விடுமே...”, என்பதே சிறுவனின் அச்சத்திற்கு காரணம் ஆகும். வேறு வழியில்லாமல் எமதர்மனும் மார்க்கண்டன் மேல் பாசக்கயிற்றை வீச அது ஈசனின் திருமேனியின் மேலும் விழுந்ததால் ஈசன் கோபமுற்று எமதர்மனை காலால் எட்டி உதைத்து விட்டான்.

கோவணாண்டிப் பெரியவரின் வார்த்தைகளில், “சாமி, எமனை புட்பால் ஆடிட்டாண்டா...அவ்வளவுதான்... ஆயிரமாயிரம் மைல்கள் தாண்டி எமன் எங்கேயோ போய் விழுந்தான் தெரியுமா? அப்புறம் அவன் நிலைமையைச் சமாளித்து எழுந்து வரவே எத்தனையோ யுகங்கள் ஆயிடுச்சு என்றால் பாத்துக்கோ...”

மிருகண்டு முனிவர் இத்தகைய அருமையான ஒரு சிரஞ்சீவியை புதல்வனாகப் பெற உதவியதே அவர் லால்குடி மாந்துறை திருத்தலத்தில் நிகழ்த்திய மூன்றாம் பிறைச் சந்திர வழிபாடுகள் ஆகும். இதற்காகவே திருமணம் முடிந்து தேனிலவைக் கொண்டாடும் புது மணத்தம்பதியர் அவசியம் திருமாந்துறை மூர்த்திகளை தரிசனம் செய்ய வேண்டும் என்று நம் சற்குரு வலியுறுத்துகிறார்.

ஆவுடை என்பது ஈசனின் பெண்ணுரு, பாணம் ஈசனின் ஆணுரு. இந்த இரண்டும் ஒன்றாகத் துலங்கும் இடமாக இருக்கும் ஒரே திருத்தலம் நல்லாடை என்பதால்தான் அர்த்தநாரீஸ்வர ஈசன் இங்கு தனித்தனி வடிவமாகத் துலங்குகிறார். இத்தகைய ஈச வடிவுகளை ஒன்றாய்க் காண முடிந்ததால்தான் மார்க்கண்டேயன் ஆவுடை மேல் ஏறி நின்று ஈசனின் பாண வடிவிற்கு ஆடையைச் சார்த்த முடிந்தது, அதனால்தான் அந்த ஆடை கீழே நழுவி விழவில்லை என்பதை உணர்ந்துகொள்ள மிருகண்டு மகரிஷிக்கே அத்துணை காலம் எடுத்துக் கொண்டது என்றால் இந்த இறை லீலையைப் புரிந்து கொள்ள மனிதர்களான நமக்கு எத்தனை வருடங்கள், பிறவிகள் தேவைப்படும்?

தாயைப் புணர்தல் என்பது பாவங்களில் மிகவும் கொடியது என்பதற்கு விளக்கம் வேண்டியதில்லை. அத்தகைய கொடிய பாவங்களுக்கும் பிராயசித்தம் நல்கவல்லதே திருமாந்துறை திருத்தல வழிபாடு. இங்கு காயத்ரீ நதி வடக்கு நோக்கிப் பாய்வது அதிசயத்திலும் அதிசயம். தாய்க்கு நிகரான பெண்களை மருத்துவ மனைகளில் ஆடையின்றி நிர்வாணமாக வைத்திருப்பதும் கொடிய பாவமே. இதற்காக மருத்துவர்கள் கூறும் காரணங்கள் சற்றும் பகுத்தறிவிற்கு ஏற்புடையது அல்ல. இத்தகைய இழிச் செயலுடன் சம்பந்தப்பட்டவர்கள் அபூர்வமாக கிட்டும் இந்த மாளய பட்ச நாட்களில் அத்தாழநல்லூர் திருத்தலத்தில் தர்ப்பண வழிபாடுகள் இயற்றி வரும் பௌர்ணமி நாட்களிலோ அல்லது நவராத்திரி தினங்களிலோ சுமங்கலிகளுக்கு மங்கள பொருட்களுடன் ஒன்பதுகஜ நூல் புடவைகளை தானம் அளித்தலால் தகுந்த பரிகார முறைகள் நல்லவர்களால் சுட்டிக் காண்பிக்கப்படும்.

அநிருத்த உஷை படிக்கட்டுகள்

திருவெள்ளறை போன்ற பல பெருமாள் தலங்களிலும் உத்தராயண தட்சிணாயன படிக்கட்டுகள் என்ற படிக்கட்டுகள் அமைந்திருக்கும். உத்தராயண புண்ணிய காலத்தில் உத்தராயண படிக்கட்டுகள் வழியாகவும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் தட்சிணாயன படிக்கட்டுகள் வழியாகவும் சென்று இறை மூர்த்திகளை தரிசிப்பது வழக்கம். இது போல திருத்தங்கல் திருத்தலத்தில் அமைந்துள்ள 14 மனுக்களைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள படிக்கட்டுகளில் மனு மூர்த்திகள் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினாலும் இப்படிக்கட்டுகளை அநிருத்த உஷை படிக்கட்டுகள் என்றே சித்தர்கள் போற்றுகின்றனர்.

அநிருத்த உஷை படிக்கட்டுகள்
திருத்தங்கல்

ஆண்களும் பெண்களும் இணையாக மதித்துப் போற்றப்பட வேண்டியவர்களே என்பது சித்தர்களின் கருத்து. இவ்வகையில் அமைந்துள்ளதே அநிருத்த உஷை படிக்கட்டுகள் ஆகும். ஸ்ரீநின்ற நாராயண பெருமாளுக்கு வலது பக்கத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகள் அநிருத்த படிக்கட்டுகள் எனவும் பெருமாளுக்கு இடது பக்கத்தில் அமைந்துள்ள படிக்கட்டுகள் உஷை படிக்கட்டுகள் எனவும் வழங்கப்படும்.

பொதுவாக அநிருத்த படிக்கட்டுகள் வழியாக ஏறிச் சென்று உஷை படிக்கட்டுகள் வழியாக இறங்கி வருவதே சிறப்பாகும். திருத்தங்கல் திருத்தலம் பல பரம்பரைகளுக்கும் அனுகிரகம் அளிக்கும் தன்மை உடையதால் பக்தர்கள் முதல் படியில் தாத்தா பாட்டி, இரண்டாம் படியில் அப்பா அம்மா, மூன்றாம் படியில் மகன் மகள் என்ற வரிசையில் ஏறிச் செல்வதும் இறங்கி வருவதும் சிறப்பாகும்.

நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் உள்ளது போலவே இங்குள்ள படிக்கட்டுகளில் ஏறி இறங்குபோது சுவாமிக்கு முதுகைக் காட்டக் கூடாது என்பது நியதியாகும். ஏறும்போது இது சாத்தியமே என்றாலும் இறங்கும்போது இவ்வாறு முதுகைக் காட்டாமல் இறங்க முடியாது என்பதால் படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் ஒவ்வொரு படியாக தொட்டு வணங்கி அடுத்த அடுத்த படிகளில் ஏறி இறங்குவதால் இந்த வழிபாட்டை எந்த வித ஆபத்தும் இன்றி செம்மையாக நிறைவேற்றலாம் என்பதே நம் சற்குருவின் வழிகாட்டுதலாகும்.

மேலும் ஒவ்வொரு படியிலும் கணவன், மனைவி இணைந்தே ஏற வேண்டும், இறங்க வேண்டும் என்பதும் முக்கியம்.

முற்காலத்தில் தங்கள் கணவன் மீதுள்ள ஆழ்ந்த அன்பை சோதிக்க விரும்பும் பெண்கள் இந்தப் படிகளில் இறங்கும்போது கூட திரும்பிப் பார்க்காமல் நடந்து இறங்கினர் என்பதே இந்த படிகளின் சிறப்பாகும். அத்தகைய பெண்களின் கற்பு நிலை இன்றும் இந்தப் படிகளில் ‘தங்கி’ பிரகாசிக்கின்றது என்பதே திருத்தங்கல் தலத்தின் சிறப்பாகும்.

கணவன் மனைவி இடையே எத்தகைய கருத்து வேறுபாடுகள், உடற்கூறு பிரச்னைகள் இருந்தாலும் அவை படிப்படியாக தீர்வடைவதற்கு இந்த திருத்தங்கல் படி வழிபாடு பெரிதும் துணை புரியும். வேறுபாடுகளே தம்பதிகள் இடையே இல்லா விட்டாலும் இத்தலத்தில் பல பரம்பரையைச் சேர்ந்தவர்களும் மேற்கூறிய வகையில் இணைந்து படியேறி வழிபடுவதால் அவர்கள் பரம்பரை பரம்பரையாக பெருமாள் கண்ணபிரானின் நிலைத்த அனுகிரகத்தைப் பெறுவர் என்பது உறுதி.

இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப் படைப்பது பாலியல் பிரச்னைகளே. முதியவர் முதல் இளைஞர் வரை, பாமரன், பணக்காரன் என்ற எவருமே இதற்கு விதிவிலக்கு கிடையாது. இத்தகைய பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு என்று ஒன்றைக் கூற வேண்டுமானால் அது இந்த மாளய பட்சத்தில் நிகழ்த்தும் முறையான வழிபாடுகளே ஆகும். இவ்வளவு எளிமையான வழிபாடாக இருந்தாலும், உலகப் பிரச்னைக்கே ஒரு தீர்வாக அமைந்தாலும் இது எவ்வாறு இந்த பிரச்னைகளைத் தீர்க்கும் என்பதை எந்த மகானுமே தெளிவாகக் கூறவில்லையே என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். காரணம், இந்தப் பிரச்னைக்கு தெளிவை புகட்ட முற்பட்டால் அவர்கள் பெறுவது ‘பைத்தியம்’ என்ற பட்டம் மட்டுமே.

அதனால் எந்த அறிவுடைய மகானும் மக்களுக்கு மனத் தெளிவைத் தருவதற்காக முற்பட்டு ‘பைத்தியம்’ என்ற பட்டத்தை வாங்கத் தயாராக இல்லை. மாளய பட்ச வழிபாடு மக்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் என்று நம் சற்குரு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே உறுதியாகத் தெரிவித்திருந்தார். ஆனால், இது எப்படி ‘பாதுகாப்பை’ அளிக்கும் என்பதை அவர் இறுதி வரை வாய்விட்டு கூறவே இல்லை. உதாரணத்திற்கு, இந்த அநிருத்த உஷை படிக்கட்டுகள் ஆகும். அதனால் வெறுமனே இந்த படிக்கட்டுகளை பார்த்துக் கொண்டிருப்பதை விட இதில் ஏறி இறங்கி, ஏறி இறங்கி வழிபடுவதால் மட்டுமே மகான்களின் அருமை பெருமையை, அவர்கள் தம் சீடர்கள் மீது கொண்டுள்ள எல்லையில்லா பெருங்கருணையை உணர முடியும்.

நம்புங்கள் நாராயணனை, நலம் பெறுவீர்.

மேள தாளத்துடன் அன்னதானம்

ஒரு முறை ஒரு அடியார் நம் சற்குரு காலையில் எழும்போதே மேள தாளத்துடன் எழுப்பி திருப்பள்ளி எழுச்சி நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினார். இது குறித்து தன் ஆவலை நம் சற்குருவிடம் தெரிவித்தபோது, “அதற்கென்ன உங்கள் ஆவலை திருஅண்ணாமலையான் நிறைவேற்றுவான், சற்றே பொறுத்திருங்கள், ஐயா...”, என்று கூறினார். ஓரிரு நாட்கள் கழிந்தன... அப்போது கார்த்திகை தீப அன்னதான ஏற்பாடுகள் நம் ஆஸ்ரமத்தில் விமரிசையாக நடந்து கொண்டிருந்தன. ஒரு நாள் அந்த அடியாரை அழைத்து, “நாதஸ்வர பார்ட்டி அனைவரையும் சமையல் கூடத்திற்கு அழைத்து வாருங்கள்...”, என்றார். அந்த அடியாருக்கு ஒன்றும் புரியவில்லை, காரணம் அப்போது காலை சுமார் 11 மணி இருக்கும்.

வேறு வழியின்றி மேள தாளத்துடன் சமையல் கூடத்தை அவர் நெருங்கிய போதுதான் தெரிந்தது இந்த மேள தாள வரவேற்பு எல்லாம் அப்போது தயாராக இருந்த 20 பிரிஞ்சி அண்டாவை எடுத்துச் செல்வதற்காகத்தான் என்று. அன்னதானத்திற்கு, அன்னதான பாத்திரங்களுக்கு, அன்னதான சமையல் செய்தவர்களுக்கு நம் சற்குரு அளித்த மதிப்பு நம்மை பிரமிக்க வைப்பதுதான் என்றாலும், இவ்வாறு சமைக்கப்பட்ட பதார்த்தங்களுக்கும், அன்னதானத்தைப் பெறுபவர்களையுமே அந்த அண்ணாமலையானாக, உண்ணாமுலைத் தாயாக மதித்து இவ்வாறு மேள தாளத்துடன் வரவேற்ற செய்கை நம் அடியார்களின் கண்களில் நீரைப் பெருக்கியது என்று சொல்லவும் வேண்டுமோ?!

நம் சற்குருவின் வேண்டுகோளை ஏற்று இந்த மாளய பட்சத்தின் போது திருத்தங்கல் திருத்தலத்தில் அடியார்கள் மேள தாளத்துடன் திருத்தலத்தை வலம் வந்ததுடன் மேளதாள இசையுடனே அன்னதான பதார்த்தங்களையும் திருத்தல வலமாக எடுத்துச் சென்று அடியார்களுக்கு, பக்தர்களுக்கு விநியோகித்த காட்சியை இங்குள்ள வீடியோவில் நீங்கள் கண்டு மகிழலாம்.

நாம் கடவுளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் கடவுள் நம்மை நோக்கி பத்து அடி எடுத்து வைப்பார், குரு நம்மை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைப்பார் என்பது வேத வாக்கியம். அதுபோல் நாம் திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் ஆலயத்தில் அன்னதானம் நிகழ்த்தியபோது அங்கு முதல் பிரசாதத்தை ஒரு பள்ளிச் சிறுவன் பெற்றான். அவன் திருநாமம் ஸ்ரீஹரி என்பதாகும். ஸ்ரீ என்ற லட்சுமி உறையும் திருமாலின் திருத்தலத்தில் நம் அடியார்கள் லட்சுமி உறையும் நெல்லிக்காய் தானத்துடன் அன்னதானம் நிறைவேற்றியது எத்துணை பொருத்தமான செயல்!

அதுபோல் ஒரு முறை மாளய பட்ச அமாவாசையின்போது இவ்வாறு தயிர் சாதத்தை அன்னதானமாக பள்ளிச் சிறுவர்களுக்கு கும்பகோணம் சக்கரப் படித்துறையில் அளித்தபோது அங்கு வந்த ஒரு சிறுவனின் பெயரைக் கேட்கவே அவன் கூறிய பெயரைக் கேட்டு ஒரு அடியார் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்று விட்டாராம். காரணம் அந்த பெயர் காலம் சென்ற அவருடைய அப்பாவின் பெயராக, பழனிச்சாமி என்று இருந்ததுதான்.

ஒரு முறை கொல்லிமலையில் உள்ள கோரக்கர் குகைக்கு அடியார்கள் புடைசூழ நம் சற்குரு சென்றிருந்தார்.

கொல்லி மலை சித்தர்களின் சஞ்சாரம் பெருகி இருக்கும் சிறப்பான தலம். இங்கு எவர் சித்தர், எது மிருகம் என்று நம்மால் இனங்கண்டு கொள்ள முடியாது. நாம் ஏதோ ஒரு மரம் என்று நினைத்து அதன் மேல் காலை வைத்து சாய்ந்து நின்றால் ஒரு சித்தரின் மேல் சாய்ந்த பாவத்திற்கு ஆளாவோம் என்பதால் நம் அடியார்கள் யாரும் கொல்லிமலைக்கு செல்ல வேண்டாம் என்று சற்குரு எச்சரிக்கை செய்கிறார்.

கொல்லிமலையில் ஒரு மரம் உள்ளது. இதன் அருகில் இதன் தன்மை அறியாது ஒருவர் சென்று விட்டால் அதன் கிளைகள் அவரை கட்டிப் பிடித்து அந்த மனிதரின் இரத்தம் அனைத்தையும் உறிஞ்சி இறந்த உடலைத்தான் கீழே போடும். இத்தகைய ஆபத்துகள் நிறைந்த பகுதியாக இந்த சித்தர்களின் பாசறை இருப்பதால்தான் பல கட்டுப்பாடுகளை நம் சற்குரு விதித்துள்ளார்.

அதனால் நாம் கோரக்கர் குகைக்கு சென்றபோது ஒரு கைய்டுடன் தான் சென்றோம். அந்த கைய்டு முன் செல்ல, அவரை அடுத்து நம் சற்குரு, நம் சற்குருவை அடுத்து ஒரு ‘ஒல்லியான’ பெண் அடியார், அடுத்து ஒரு அடியார், அடுத்த அந்த பெண் அடியாரின் கணவர், அவரை அடுத்து மற்ற அடியார்கள் என்றவாறாக அடியார் குழு ஒரு அருவிப் பகுதியைக் கடந்து கொண்டிருந்தது. அந்த அருவியின் அகலம் சுமார் 15, 20 அடியே இருந்தாலும், ஆழம் முழங்கால் அளவே நீர் ஓடும் அளவிற்கே இருந்தாலும், அங்கிருந்த கற்கள் மிகுந்த வழுக்கல் தன்மை உடையதாக இருந்ததால் கைய்டு கூறியபடி ஒருவரை ஒருவர் தொடாமல் எச்சரிக்கையாக மிக மெதுவாக அந்த அருவியை அடியார்கள் கடந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த பெண் அடியார் வழுக்கி நிலை குலைந்து போனார். அவர் முன்னால் சென்று கொண்டிருந்த நம் சற்குருவோ மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்த பெண் அடியாரின் கையைக் கெட்டியாகப் பிடித்து நிலைநிறுத்தவே அந்தப் பெண் அடியார் சில நொடிகளில் தன்னிலை அடைந்தார். அப்போது நம் சற்குருவின் கண்களைப் பார்த்த அடியார்கள் அதிசயித்து விட்டனர் என்றே கூற வேண்டும். காரணம், நம் சற்குருவின் பார்வையில் இருந்த உறுதிப்பாடே. “நான் (சற்குரு) இருக்கும்போது நீ எந்த ஆபத்திற்கும் பயப்பட வேண்டாம்...”, என்பதே நம் சற்குருவின் கண் பார்வை சுட்டிக் காட்டிய உறுதிப்பாடு.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்தப் பெண் அடியாரின் பின்னாலேயே சென்று கொண்டிருந்த அடியாருக்குக் கூட நடந்தது என்னவென்று ஊகிக்க முடியாத வேகத்தில் செயல்பட்டார் நம் சற்குரு என்பதே.

ஒரு வேளை அந்த அடியாரின் கணவரோ மற்ற அடியார்களோ அந்தப் பெண் அடியாருக்கு உதவ முன் வந்திருந்தாலும் அவர்களும் சேர்ந்து அந்த அருவியில் வழுக்கி விழுந்து எங்கோ அதள பாதாளத்திற்குச் சென்றிருப்பார்கள். சில நாட்கள் கழித்து இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த அந்தப் பெண் அடியார், “வாத்யார் என் கையைப் பிடித்தபோது அது இரும்புப் பிடியாக இருந்தது, ஒரு நிமிடம் இரத்தமே நின்று விடும்போல் தோன்றியது...”, என்றார். அத்தகைய உறுதி நம் சற்குருவின் கரங்களில் திகழ்ந்ததால்தான் அந்த அடியார் கீழே விழவில்லை என்பதை நாம் தெரிந்து கொண்டோம்.

எனவே ஒரே ஒரு அடியாரை மட்டும்தான் நம் சற்குரு காப்பாற்றுவாரா என்ன? மேற்கூறிய நிகழ்ச்சியில் உள்ளதைப் போல் அடியார்கள் நம் சற்குருவின் பார்வையில் இருந்து மறைந்து திகழ்ந்தாலும் ஆபத்தான சூழ்நிலையில் நம் சற்குருவின் உறுதியான உதவிக் கரங்கள் அவர்களுக்குக் கிட்டும் என்பதை உணர வழி வகுப்பதே இந்த மாளய பட்ச நாளில் நம் மூதாதையர்களுக்கு அளிக்கும் தர்ப்பணத்தின் மகிமையாகும்.

நம்மவர் நம்மாழ்வார்

அத்தாழநல்லூர் திருத்தலத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மாளய பட்ச தர்ப்பணம் அளிக்கும்போது இங்குள்ள நரசிம்ம தம்பத்திற்கு படிகளாக அமர்ந்திருக்கும் 12 ஆழ்வார்களுக்கும் நம்மாழ்வார் முதலாக வழிபாடுகள் இயற்றும்படி நம் சற்குருவின் வழிகாட்டுதலை அளித்திருந்தோம். நம்மாழ்வார் எப்படி முதல் ஆழ்வாராக அருள்புரிவார் என்பது குறித்த சந்தேகங்களை பல அடியார்களும் எழுப்பி உள்ளதால் நம் சற்குரு தெரிவித்த தகவலை இங்கு வெளியிடுகிறோம்.

ஒருமுறை காஞ்சி கனிந்த கனியிடம், “எப்படி வெறும் எள் நீர் அளிப்பதால் மட்டும் நம் முன்னோர்கள் மகிழ்ந்து அனைத்து ஆசிகளையும் வழங்கி விடுவார்கள்?” என்று ஒரு சந்தேகத்தை எழுப்பினர். அனைவர் மனதில் தொக்கி இருக்கும் வினாவும் அதுதானே. பரமாச்சாரியாரோ ஒன்றும் கூறாமல் மற்ற விஷயங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டார். அங்கு குழுமிய அன்பர்களை விசாரித்தபோது அவர்கள் அனைவரும் தபால் இலாகாவில் பணிபுரிவதாகக் கூறவே அவர்களிடம் அப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பின்கோடு விஷயத்தைப் பற்றி தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் மிக்க ஆர்வத்துடன் பின்கோடு என்பது ஆறு இலக்கங்கள் கொண்ட ஒரு எண் என்னும் அந்த எண்ணை நம்முடைய கடிதத்தின் விலாசத்தில் சேர்த்து விட்டால் அது சரியான தபால் ஆபிசிற்கு சென்று உரியவரிடம் கடிதம் சேர்ந்து விடும் என்று விளக்கினர்.

அதைக் கேட்ட கனிந்த கனி தனக்கே உரிய குழந்தைத்தனமான தெய்வீக சிரிப்புடன், “ஒரு ஆறு நம்பரை லெட்டரில் போட்டு விட்டால் போதும் அது உரியவரைச் சென்று சேர்ந்து விடும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறீர்கள். ஆனால், நம் மூதாதையர்கள் பாடுபட்ட உருவாக்கிய தர்ப்பண வழிபாட்டில் அளிக்கும் எள்ளும் தண்ணீரும் எப்படி நம் மூதாதையர்களைச் சேரும் என்று சந்தேகிக்கிறீர்கள்...” என்று அர்த்தபுஷ்டியான ஒரு கேள்வியைக் கேட்டார்கள்.

இது போன்றதேதான் நம்மாழ்வார் நம்மவரா என்ற சந்தேகமும். மாளய பட்சத்தில் அளிக்கும் எள்ளும் தண்ணீரும் நம் மூதாதையர்களுக்கு உணவாக ஸ்வதா தேவியால் அளிக்கப்படுகின்றன என்பது ஓரளவே உண்மையானாலும் இந்த தர்ப்பணத்தில் நிகழும் விந்தையாக 12 ஆழ்வார்களும் இணைகின்றனர், அவர்களுடைய ஆசியே மாளய பட்ச தர்ப்பணத்திலும் அன்னதானத்திலும் நிறைகின்றது, பொலிகின்றது என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் விந்தையாகும். நம்பிக்கையே நலம் பயக்கும்.

இங்கு உணவு என்பது வயிறு நிறையும் பதார்த்தம் மட்டும் அல்ல, மக்களை உருவாக்கும் மகிமையையும், தளர்ந்த உடல் அங்கங்களை நிமிர வைக்கும் சக்தியும் பெற்றதே என்பதும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய மகிமை ஆகும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

தொடரும் மாளய வழிபாடு...

 

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam