நான் இறைவன் என்று ஒரு மனிதன் கூறினால் இறைவன் தன்னைப் பற்றி என்ன கூறுவது?

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

விருத்தசீர மாமேரு பாகம் 1
விருத்தசீர மாமேரு பிரதிஷ்டை

சமீபத்தில் குணசீலம் அருகே உள்ள ஆமூர் சிவாலயத்தில் விருத்திசீர மாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த பிரதிஷ்டையின் போது நிகழ்ந்த நிகழ்ச்சி நம்மை பிரமிக்க வைப்பதாகும். சூரியனிடமிருந்து தோன்றும் கதிர்களில் ஒரே ஒரு கதிர் மட்டுமே பூமியை வந்தடைகின்றது என்பது நம் சற்குரு சூரிய கதிர் பற்றி அளிக்கும் விளக்கம். இந்த சூரியக் கதிர் ஆம் என்ற பீஜாட்சர சக்தியுடன் துலங்கி ஆமூர் என்ற திருத்தலத்தில் ஸ்ரீரவீஸ்வர லிங்கமாக நிலைகொண்டுள்ளது.

விருத்தசீர மாமேரு ஆமூர்

ஆனால், இந்த ஆம் என்ற பீஜாட்சர சக்திகளை மனிதர்கள் நேரிடையாக கிரகிக்கும் சக்தி பெறாததால் ஆமூர் சிவாலய பைரவ மூர்த்தி இந்த ஆம் என்ற பீஜாட்சர சக்திகளை ஐம் என்ற பீஜாட்சர சக்திகளுடன் இணைத்து மக்கள் பயன்படுத்தும் வண்ணம் அளிக்கிறார். இவ்வாறு ஆம் என்ற சூரிய சக்திகளை நேரிடையாக ஏற்கக் கூடிய ஒரே மூர்த்தி ஆமூர் திருத்தல பைரவர் என்பதால்தான் இத்தலத்தில் திகழ்ந்த விருத்தசீர மாமேரு பிரதிஷ்டையின்போது ஒரு பைரவர் வெண்மை நிறமுள்ள நாய் வடிவில் தோன்றி இறை பிரசாதமான சர்க்கரைப் பொங்கலை ‘ருசி’ பார்த்தார். இதன் பின்னணியில் அமைந்த ஒரு இனிய சுவையையும் இங்கு அளிக்கிறோம்.

பத்து கோடி மனிதர்களின் ஒருவரே இறைவனை அடையும் தகுதி பெறுகிறார். அவ்வாறு தகுதி பெற்ற ஒருவர் கைலாயத்தை அடைந்தபின் அவரிடம் கேட்கப்படும் கேள்வி, “நீ இறைவனை அடையும் தகுதி பெற்று விட்டாய், இப்போது நீ சிவ லோகம் சென்று சிவனை தரிசிக்க விரும்புகிறாயா, அல்லது சக்தி லோகம் சென்று தேவியை தரிசிக்க விரும்புகிறாயா?,” என்பதாகும். பெரும்பாலும், நாம் ஏதாவது ஒரு லோகத்தைப் பற்றிக் கூறுவோம். அந்நிலையில் அங்கிருக்கும் வாயில் காப்பாளான், “இத்தகைய உயர்ந்த நிலையை அடைந்த பின்னும் நீ சிவலோகம், சக்தி லோகம் என்ற பாகுபாட்டை, வேறுபாட்டைக் கொண்டிருக்கிறாயே, இந்த பாகுபாடு ஒரு பக்தனுக்கு உரித்தானது அல்ல, எனவே நீ மீண்டும் பிறப்பெடுத்து இத்தகைய பேதங்களைக் கடந்து வருவாயாக,” என்று கூறி திருப்பி அனுப்பி விடுவாராம்.

இத்தகைய விளக்கத்தை அளித்த நம் சற்குரு சிரித்துக் கொண்டே, “சிவ தரிசனத்திற்கு முன் உங்களிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி இப்போது ‘out’ ஆகி விட்டதால், இந்த கேள்வியைக் கேட்க மாட்டார்கள், வேறு கேள்வியைத்தான் கேட்பார்கள்...”, என்றார். அதே போல் இறைவனுக்கு படைக்கப்படும் ஒரு பிரசாதத்தை ஒரு நாய் சாப்பிட்டால் அது பைரவராகத்தான் இருக்கும் என்னும் கேள்வியும் இப்போது ‘out’ ஆகி விட்டதால் பைரவ பிரசாதமும் ஒரு வேளை உங்களுக்குப் பயன் அளிக்காமல் போகலாம்.

இத்தகைய விளக்கங்களை நம் முன்னோர்கள் அறிந்து தம் நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தி வந்தனர் என்பதே நமது மூதாதையர்களின் மேதா விலாசத்திற்கு சான்றாகும்.

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி ஆமூர்

இன்றும் பல கிராமங்களில் வயிற்றுவலியால் துடிக்கும் பெண்களுக்கு அளிக்கப்படும் ஒரு சிகிச்சை முறை பற்றி விளக்குவோம். மாதவிலக்காக இருக்கும் பெண்கள் அந்நிலையில் விலங்குகளுக்கு தாங்கள் உண்ட உணவின் பாக்கியை அளித்தால் அது வயிற்று வலியைத் தோற்றுவிக்கும் என்பது நமது மூதாதையர்கள் கருத்து, இது ஓரளவிற்கு உண்மையே.

அதனால் வீட்டில் இருப்பவர்கள் குளித்து விட்டு சுத்தமாக சூரிய நாராயண மூர்த்திக்கு வடை, பாயசம், பொரியல் சாதத்துடன் ஒரு பெரிய வாழை இலையில் பிரசாதம் படைப்பார்கள். சூரிய நாராயண சுவாமி அந்தப் படையலை ஏற்றபின் ஒரு நாயை வரவழைத்து அந்த அன்னத்தை உண்ணும்படிக் கூறுவார்கள். அந்த நாய் அந்த பிரசாதத்தை ஏற்ற பின் வயிற்று வலியால் வாடும் பெண்களை அந்த நாய் உண்ட பிரசாதத்தின் ஒரு பகுதியை அந்தப் பெண் உண்ணும்படியாக அந்த பெண்ணுக்கு அளித்து விடுவார்கள். இதில் கலந்திருக்கும் கலியுக மாயை என்னவென்றால் அது நாய் உண்ட பைரவர் பிரசாதம் என்பதை அந்தப் பெண்ணுக்குத் தெரியாதபடி மறைத்து விடுவார்கள். உண்மையில் அந்த பெண்ணுக்குத் தெரிந்தே அந்த பிரசாதத்தை ஏற்றால் அந்தப் பெண் நிச்சயம் ஒரு சற்குருவை அடைந்து இறைவனை அடைந்து விடுவாள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

பேதம் கடந்தாய் போற்றி என்ற முதல் விருத்தசீர அர்ச்சனை எத்தகைய மகிமைகளை தன்னுள் அடக்கிப் பிரகாசிக்கின்றது என்பதற்கு ஆமூர் விருத்தசீர மகா மேருவே சாட்சியாகும். இன்று உலக மக்கள் அனைவரையும் மயக்கும் பேதம் ஆண் பெண் என்பதுதானே, இங்கு ஆணும் பெண்ணுமாக உலா வரும் பைரவ சக்திகள் இத்தகைய மாயையைக் கடக்கவும் அருள்புரியும்!

அரிதிலும் அரிய ஆம் என்ற ஆதித்ய கிரணங்களை ஆமூர் திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விருத்தசீர மகாமேருவின் மேல் சூரிய பகவான் வர்ஷிக்கும் இனிய காட்சியை இங்குள்ள வீடியோவில் கண்டு மகிழலாம்.

முசிறி துறையூர் போன்ற ஊர்களிலிருந்து சென்றடையக் கூடிய பண்டைய சிவத்தலமே திருத்தியமலை என்பதாகும். இறைவன் ஸ்ரீஏகபுஷ்ப பிரிய நாதர், அம்பாள் ஸ்ரீதாயினும் நல்லாள். இறைவி என்பவள் தாயினும் சாலப் பரிந்து குழந்தைகளுக்கு ஊட்டுபவள்தானே, அவ்வாறு இருக்கையில் இத்தல அம்பிகை தாயினும் நல்லாள் என்ற ஒரு சிறந்த நாமத்தால் புகழப்படுவது ஏனோ என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். ஒவ்வொரு முறையும் ஒரு தவறைச் செய்து விட்டு தாயிடம் சென்றால், “நான் எத்தனை முறை உனக்குச் சொல்வது, அதனால் உனக்கு சோறு போட மாட்டேன், ஆடை கிடையாது...,” என்று எந்தத் தாயாவது தன்னுடைய பெற்ற குழந்தையை விரட்டுவாளா என்ன? ஒருவேளை பூமியில் பிறந்த ஒரு தாய் தன்னுடைய பூர்வ ஜன்ம வினையால் குழந்தையை விரட்டினாலும் திருத்தியமலை தாயோ எந்தக் குழந்தையையுமே பூர்வ ஜன்ம வினையைக் காரணம் காட்டிக் கூட விரட்டியடிக்க மாட்டாள் என்பதே இந்த திருத்தியமலை தாயின் சீரிய குணமாகும்.

இதுவே அன்பின் இலக்கணம். எத்தனை முறை ஒரு தவறை மன்னிப்பது என்று பலரும் பல விளக்கங்களை அளிப்பார்கள். Seventy times seven ... என்று சிலர் கூறுவர், அதாவது 70 x 7 = 490 முறை ஒரு தவறை மன்னிப்பது சிலரின் உயர்ந்த குணம், பகவான் கிருஷ்ணரும் நூறு முறை சிசுபாலனுடைய ஏசுதலை மன்னித்ததாக கிருஷ்ண லீலை சுட்டிக் காட்டும். ஆனால் இந்த எண்ணிக்கை அனைத்தையும் மீறி மன்னிப்பதற்கு ஒரு எல்லையே இல்லை என்பதற்கு சான்றாக இருக்கும் அன்னையே திருத்தியமலை தாயினும் நல்லாள் தாய் ஆவாள்.

திருதிய என்றால் மூன்றாவது என்று அர்த்தம். தாய், தந்தை என்றவாறு ஒரு குழந்தைக்கு அன்பு காட்டும் தெய்வங்களுக்கு மூன்றாவது அன்னையாகத் திகழ்பவளே திருதியமலை தாய் ஆவாள். இந்த அன்னையின் சக்தியை நேரிடையாக உணர்வதற்கு உங்களுக்கு உறுதுணை செய்வதே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விருத்தசீர மகா மேரு எந்திரமாகும். இவ்வாறு ஒருவர், இருவர் என்று கிடையாது, திருத்தியமலை தாயின் அன்பால் திருத்தப்பட்டு நற்கதி அடைந்த ஜீவன்கள் கோடி கோடியே. அதனால் இந்த அன்பு மலை பலரையும் திருத்தியமலை என்ற காரணப் பெயரால் அழைக்கப்படுகிறது.

திருதிய என்றால் மூன்றாம், மூன்றாம் கண் சக்தியையும் குறிக்கும். ஆடி மாதம் என்ற திரயம்பகேஸ்வர வியாபகத்தினுள் அமையும், மங்கள ஆமலக ஹஸ்தம் என்ற உட்சுழற்சி காலத்தில் இயற்றும் திருதிய மலை வழிபாட்டால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்கத்தான் இயலுமா?!

விருத்தசீர மாமேரு கொட்டாங்குறிச்சி

சோபகிருது வருட மாளய பட்ச வழிபாடுகள் நிறைவேற்ற உகந்த திருத்தலமாக அத்தாழநல்லூர் நம் சற்குருவால் அளிக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த இந்த அற்புத திருத்தலத்திலும் அருகிலுள்ள திருப்புடைமருதூர் சிவாலயத்திலும் மாளய பட்ச வழிபாடுகள், அன்னதான கைங்கர்யங்கள் நம் அடியார்களால் நிறைவேற்றப்பட்டன. இந்த தெய்வீக சூழ்நிலையில் அத்தாழநல்லூர் அருகில் உள்ள கொட்டாங்குறிச்சி என்னும் கிராமத்தில் விருத்தசீர மகாமேரு நம் அடியார்களால் சிறப்பாக நிறுவப்பட்டது. ஒவ்வொரு விருத்தசீர மகாமேருவிற்கும் ஒரு சிறப்பு இருப்பதுபோல் இந்த விருத்தசீர சுமைதாங்கிக்கும் ஒரு சிறப்பு உண்டு, அதுவே ஒலி சக்திகளையும் ஒளி சக்திகளையும் இணைக்கும் தெய்வீக தாத்பர்யமாகும்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இந்த தெய்வீக சக்திகளை இங்குள்ள மயில்கள் தங்கள் அகவலின் மூலமாக நிலைநிறுத்துகின்றன. இந்த தெய்வீக ஒலிகள் தாமிரபரணி ஆற்றின் சலசலவென்ற வேத ஒலிகளால் ஈர்க்கப்பட்டு அத்தாழநல்லூர் நரசிம்ம தம்பத்திற்கு குறித்த முகூர்த்த வேளையில் அபிஷேகமாக இந்த நரசிம்ம தம்பத்தின் படிகளில் கொலுவிருக்கும் ஆழ்வார் பெருமக்களால் நிறைவேற்றப்படுகின்றது என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் மகாத்மியமாகும். நம் அடியார்கள் நரசிம்ம தம்பத்திற்கு இயற்றிய அபிஷேக ஆராதனைகள் எல்லாம் அவர்கள் அறியாமலேயே இந்த ஆழ்வார் பெருமக்கள் குறித்த முகூர்த்த வேளையில் அமைந்தது என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் குருவருளாகும்.

இந்த தர்ப்பண சக்திகளையும் வேதசக்திகளையும் அடியார்கள் நிலைநிறுத்திக் கொள்ள முடிந்தால் அடுத்து வரும் எத்தனையோ பிறவிகளுக்கும், பல தலைமுறைகளுக்கும் இது நல்லருள் புரியும் என்பதே இந்த வழிபாடுகளின் மகத்துவமாகும்.

கும்பகோணம் அருகே குரு தலமான ஆலங்குடியிலிருந்து மூன்று கிமீ தொலைவில் உள்ள நரிக்குடி ஸ்ரீஎமனேஸ்வரர் சிவாலயத்தில் நம் அடியார்களால் விருத்த சீர மாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்ட மங்கள நிகழ்ச்சியை இங்குள்ள வீடியோவில் அடியார்கள் கண்டு இரசிக்கலாம். நாக சக்தி தலமான நரிக்குடியில் மங்கள வாத்ய இசையுடன் விருத்தசீர மாமேரு பிரதிட்டை செய்யப்பட்டது. பைரவ சக்திகளும் நாக சக்திகளும் இந்த மங்கள இசையுடன் ஒன்று சேர்ந்து சுமார் 300 ஆண்டுகளுக்கு இங்கு அடியார்களின் அகால மரணங்களைத் தடுக்கும் வல்லமையுடன் விளங்கும் என்பதே நம் சற்குரு நமக்காக பரிந்தளிக்கும் மிருத்யுஞ்சய இரகசியங்களில் ஒன்றாகும்.

விருத்தசீர மாமேரு நரிக்குடி

நரிக்குடியில் விருத்தசீர மாமேரு பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக ஒரு அடியார் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் சென்ற காரில் உள்ள டயர் ஒன்று வெடிக்கவே வேகமாக சென்று கொண்டிருந்த அந்த கார் நடுரோட்டில் திடீரென நின்று போய் சுழல ஆரம்பித்தது. நம் சற்குருவின் அருளால் அந்தக் காருக்கு முன்னோ பின்னோ வண்டிகள் ஏதும் வராததால் அந்த அடியார் ஒரு சில சிராய்ப்புகளுடன் அந்த கோர விபத்திலிருந்து தப்பித்துக் கொண்டார். அதன் பின்னர் அங்குள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தனர்.

காரணம் என்ன?

அந்த அடியார் காரின் டயர் வெடித்த அதே இடத்தில் இதுவரை பல கார்கள் விபத்துக்குள்ளாகி இருந்தன. இந்த விபத்திலிருந்து உயிர் மீண்ட ஒரே நபர் நம் அடியார் என்பதே அவர்களின் ஆச்சரியத்திற்குக் காரணம். ஸ்ரீஎமனேஸ்வரி உடனாய ஸ்ரீஎமனேஸ்வரர் இங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பது இவ்வாறு நல்லவர்களைக் காக்கவே என்ற கீதை நாயகனின் கூற்று மெய்ப்பிக்கப்படுகிறது அல்லவா?

நரிக்குடி திருத்தலத்தில் அவ்வப்போது பைரவ சக்திகளும் மிருத்யுஞ்சய சக்திகளும் நாக சக்திகளும் குறித்த முகூர்த்தத்தில் புனருத்தாரணம் செய்யப்படுகின்றன என்பதற்கு நீங்கள் இங்குள்ள படத்தில் காணும் பைரவ மூர்த்தியும் ஒரு சாட்சியே. நரிக்குடி திருத்தலத்தில் விருத்தசீர மாமேரு பிரதிஷ்டையான காலம் முதலாக இந்த பைரவர் அருகில் எங்காவது சென்று உணவேற்று விட்டு இந்த மாமேருவின் அருகிலேயே எஞ்சிய பொழுதைக் கழிக்கிறது என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் ஆன்மீகச் செய்தியாகும்.

நம் அடியார் ஒருவர் திருஅண்ணாமலையிலிருந்து இரவு நேரத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார், அப்போது ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கியபோது அவர் காரின் கிளச் ஒயர் அறுந்து கார் அத்துவானக் காட்டில் நின்று விட்டது. குழந்தைகள், பெண்கள் கொண்ட அந்த குடும்பம் அடுத்த என்ன செய்வது என்று நினைத்த மறுநொடியே அவர்கள் அருகில் மூன்று இரண்டு சக்கர வாகனங்களில் வந்த ஆறு இளைஞர்கள் அவர்கள் பிரச்னையைக் கேட்டு அறிந்து கொண்டு கேளாமலேயே அவர்களுக்கு உதவ முன் வந்தனர். காரைத் தள்ளிக் கொண்டு சென்று அருகில் இருந்த ஒரு மின்விளக்கு வெளிச்சத்தில் காரை நிறுத்தி ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த கேபிளை உருவி அந்தக் காரில் பொருத்தி எப்படியோ கார் ஓடும் அளவிற்கு அதை சரி செய்து கொடுத்தனர்.

ஓடும் காரை நிறுத்தி அதில் இருப்பவர்களைத் தாக்கி நகை நட்டுகளை கொள்ளை அடித்துக் கொண்டு செல்லும் இத்தகைய கலியுகத்திலும் தங்கள் வண்டியிலிருந்த கேபிளைப் பிடுங்கி முன் பின் தெரியாத ஒரு நபருக்கு, ஒரு ரூபாய் கூலி கூட பெற்றுக் கொள்ளாது உதவி செய்கிறார்கள் என்றால் இது அண்ணாமலையான் கருணையா இல்லை நம் சற்குருவின் பெருங்கருணையா?!

கடவுளை நம்பினோர் கைவிடப்படார், சற்குருவை நம்புவோர் கனவிலும் கைவிடப்படார் என்ற மூதுரைக்கு இது போன்ற எத்தனையோ நிகழ்ச்சிகளை உதாரணமாகக் கூறலாம் என்றாலும் இந்த நிகழ்ச்சிகளை முன்மாதிரியாகக் கொண்டு நாம் குரு நம்பிக்கையை மேலும் மேலும் இன்னும் ஆழமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

விருத்தசீர மாமேரு பெருமகளூர்

பட்டுக்கோட்டை பேராவூரணி அருகில் உள்ள ஸ்ரீசுந்தரவல்லி சமேத ஸ்ரீசோமநாதர் சிவாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விருத்தசீர மாமேருவை அடியார்கள் இங்குள்ள வீடியோவில் கண்டு இரசிக்கலாம். 21ந் தேதியும் ரோகிணி நட்சத்திர நாளும் இணைந்த அற்புத முகூர்த்த நேரத்தில் மேற்கண்ட பிரதிஷ்டை நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

பெருமகளூர் என்பதற்கு ஆயிரமாயிரம் புனித அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்றே இறைவனின் பெருமகளான ஜேஷ்டாதேவி எழுந்தருளிய திருத்தலம் என்ற பொருள் ஆகும். இறைவனின் திருத்தலத்திற்கு இணையான பரப்பளவை உடைய திருக்குளங்கள் அமைந்த திருத்தலங்கள் உண்டு. உதாரணமாக, திருவாரூர் சிவாலயம். திருக்குளமான கமலாலயத்தின் அளவை உடையதே ஸ்ரீபுற்றிடங்கொண்டான் எழுந்தருளிய திருத்தலத்தின் பரப்பளவும்.

பெருமகளூர் திருத்தலத்தின் கமல ஜோதி தீர்த்தம் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் எழுந்தருளி இருக்க திருத்தலமோ ஒரு ஏக்கர் நிலப்பரப்பை கூட கொண்டது கிடையாது என்பதை நாம் அறிவோம். ஆனால், வெறும் நிலப்பரப்பைக் கொண்டு இறைவனின் பேராற்றலை எடை போட முடியாது என்பதற்கு கமல ஜோதி தீர்த்த மகிமையும், இறைவன் ஸ்ரீசோமநாதரின் மகிமையும் எடுத்துக்காட்டு ஆகும்.

ஸ்ரீமுருகப் பெருமான் பெருமகளூர்

கங்கையின் நோய் எதிர்ப்பு சக்தியை எந்த விஞ்ஞானத்தாலும் எடை போட முடியாது என்பதே அதன் சிறப்பாகும். உதாரணமாக, ஒரு கன மில்லி மீட்டர் கங்கை தீர்த்தத்தில் ஒரு லட்சம் நோய் எதிர்ப்பு அணு சக்திகள் இருப்பதாகக் கொள்வோம். திடீரென நோய் கிருமிகளின் சக்தி அதிகமாகி ஒரு கன மில்லி மீட்டர் கங்கை தீர்த்தத்தில் ஒரு கோடி நோய் கிருமிகள் கலந்து விட்டால் அந்த நோய் கிருமிகளை எதிர்கொள்வதற்காக கங்கை நீரில் ஒரு கன மில்லி மீட்டர் தீர்த்தத்தில் ஒரு கோடி எதிர்ப்பு அணு சக்திகள் உருவாகும் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் கங்கை தீர்த்தத்தில் பொலியும் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.

வெறும் நோய் எதிர்ப்பு சக்திகளை மட்டும் தருவது கங்கை தீர்த்தத்தின் சிறப்பு கிடையாது. பல யுகங்கள், ஆண்டுகள் ஆற்றிய கடுமையான வினைகளின் தாக்குதல்களையும் களையக் கூடியதே கங்கை தீர்த்தம், இது எந்த விஞ்ஞானத்தாலும் பகுத்து, புரிந்து கொள்ள முடியாத, பகுத்தறிவால் பகுத்தறிய முடியாத, மெய்ஞ்ஞானத்தால் மட்டுமே உணரக் கூடிய ஒரு இறை அனுகிரகம். அது போன்றதே பெருமகளூர் கமல ஜோதி தீர்த்தத்தின் மகிமையும்.

குண்டலினி யோகத்தில் இலயித்திருக்கும் ஒரு யோகியின் உடல் வெப்பநிலை 30000 டிகிரியைத் தாண்டும் என்பதை நாம் அறிவோம். ராமகிருஷ்ண பரமஹம்சரின் தவ நிலைகளின் போது அவர் உடலைத் தொடக் கூட முடியாத அளவிற்கு தகித்ததால் ஒரு கனமான போர்வையை அவர் உடல் மேல் போர்த்தி அவரை எங்கும் அழைத்துச் சென்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவே பெருமகளூர் கமல ஜோதி தீர்த்தத்தின் சிறப்பாகும். தெய்வீகத்தில் ஒரு பக்தன் முன்னேறும் அளவிற்கு அவன் மேற்கொள்ளும் யோக சாதனைகளின் பலனாக அந்தப் பக்தனின் உடலில் வெப்பம் மிகுவது இயற்கையே.

ஆனால், எந்த அளவிற்கு ஒரு சாதகனின் உடல் வெப்பம் மிகுந்தாலும் அதைச் சரி செய்வதே, சமன் செய்வதே கமல சந்திர ஜோதி தீர்த்த மகிமை. அது மட்டுமல்ல நடைமுறை வாழ்க்கையில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளால் மனம் சூடேறுகிறது அல்லவா? இதனால் உடலும் தகிக்கும். அதனால் பலவிதமான உடல் உஷ்ண நோய்கள் மக்களைத் தாக்கும். இத்தகைய உடல் வெப்ப நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பதே பெருமகளூர் கமலச் சந்திர ஜோதி தீர்த்தமாகும்.

நோய்களால், சூழ்நிலை சந்தர்ப்பங்களால் உடலில் சூடேறுவது ஒருபுறம் இருக்க, பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாது தவிக்கும்போது மனம் மிகவும் சோர்வடைந்து விடுகிறது அல்லவா? இதனால் தோன்றும் வேதனை சூட்டைத் தணிக்கவே ஸ்ரீஜேஷ்டாதேவி இத்திருத்தலத்தில் எழுந்தருளி பக்தர்களைக் காக்கிறாள் என்பதே நாம் அறியா, நம் சற்குரு நமக்காக பரிந்தளிக்கும் ஆன்மீக இரகசியம்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam