நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே !! திருமழிசை ஆழ்வார்

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

குரு கர தரிசனம்

குரு கர தரிசனம் – அட்டைப்பட விளக்கம்
ஒவ்வொரு (தமிழ்) ஆண்டிற்கும் இரண்டு மாதங்களுக்கு ஒன்றாக மொத்தம் ஆறு ருதுக்கள் உண்டு. மார்கழியும் தையும் ஹேமந்த ருதுவில் வருகின்றன. அந்தந்த மாதத்தில் ஏற்படும் ஜன்ம கிருத்யங்கள் அந்தந்த ருதுவின் மேற்பார்வையில் தான் நடைபெறுகின்றன. பெண்கள் எந்த மாதத்தில் ருது ஆகின்றனரோ அந்த ருதுவைக் கொண்டு, ருதுலக்னம் கணித்து அவர்களுடைய திருமணம், தாம்பத்ய, வாழ்க்கை, சந்தானப்ராப்தி போன்றவற்றை அறியும் அற்புத ஜோதிடக் கலையொன்றுண்டு. ருதுவான பெண்ணிற்குக் கைகளில் மருதாணியிட்டு, “ருது கர தரிசனம்” கண்டு அச்சமயத்தில் அவர்கள் கைகளில் ஓடும் ரேகைகள், சங்குகள், சக்கரங்கள், வளைவுகளைக் கொண்டும் அவர்களுடைய வாழ்க்கை நிலைகளை அறியலாம். இவை சூர்ய பகவானுக்குரிய பாஸ்கர கணிதத்தில் விளக்கப்பட்டுள்ளன.
உத்தராயணம் பிறக்கும் தைமாதம் ஹேமந்த ருதுவின் அம்சங்களைக் கொண்டதோடல்லாது இம்மாதத்தில் தான் ரைவத மனுவின் ஆட்சியும் தொடங்குகிறது. ரைவத மஹரிஷியானவர் உத்தராயணத்திற்குரிய குரு கர தரிசன முறையை உலகிற்கு எடுத்துரைத்த உத்தமப் பெருமஹரிஷியாவார். தாத்ரு வருட தை மாதத்தில் குரு கிரஹம் மீண்டும் உதயமாவதால் (தை24) குரு கர தரிசனம் முக்யத்வம் பெறுகின்றது., தை முதல் தேதியாம் உத்தராயணப் புண்யகாலத்தில்  ஸ்ரீசூர்ய பகவான் தன் அயன கதிப்பாதையை மாற்றுவதால் அன்று அவருடைய புதுவிதமான ஹேமந்த பாஸ்கர கிரணங்கள் பூமியை அடைகின்றன. கண்ணால் காணக் கூடியதன்று இது! கரங்களில் தான் கண்டு உணர முடியும். உத்தராயணப் பிறப்பன்று (14.1.1997) காலையில் எழுந்தவுடன் கர தரிசனத்தை முடித்த பின் எழுந்து நீராடி ஹேமந்த பாஸ்கர குரு கர தரிசனத்திற்குத் தயாராகுங்கள்!

கூவத்தூர் பெருமாள் ஆலயம்

ஹேமந்த பாஸ்கர குரு தரிசனம் :- ஸ்ரீஸ்வர்ச்சலாம்பா தேவி, ஸ்ரீசூர்ய பகவானை மணந்த பின் அவர்தம் அக்னியைத் தாங்க இயலாது பிரிந்து மேருமலை சென்று தவமிருந்து அக்னி லிங்கமான திருஅருணாசலத்தை அடைந்து இத்திருத்தலத்தில் தான் சூர்ய மண்டலத்தில் வசிப்பதற்கான அக்னி அம்சங்களைத் திருஅருணாசல அக்னி லிங்கத்திலிருந்து கிரஹித்துக் கொண்டனள். சர்வேஸ்வரனின் திருவருளால் இந்த ரகசியத்தை ஸ்ரீஸ்வர்ச்சலாம்பா தேவிக்கு உணர்த்தியவரே ரைவத மஹரிஷி! இவர் அருளியபடி சாயாதேவியும், ஸ்வர்ச்சலாம்பா தேவியும் உத்தராயணப் பிறப்பன்று ஹேமந்த பாஸ்கர குரு தரிசனம் கண்டு ஸ்ரீசூர்யபகவானுடன் இணைந்தனர். இன்று (பொங்கல் தினம் 14.1.1997) நீராடி, விபூதி/குங்குமம்/திரிபுண்டரம் இட்டு, பஞ்சகச்சம்/மடிசார்/கச்சை முறையில் ஆடைகளைத் தரித்து காதில் கடுக்கன்களை அணிந்து கரதரிசனத்திற்கு கிழக்கு நோக்கி சுகாசனத்தில் அமர்ந்து நன்கு மருதாணியிட்டுச் சிவந்த உள்ளங்கைகளை படத்தில் உள்ளவாறு அகல விரித்துக் கொண்டிடுக!
1. முதலில் சூர்ய விரலான மோதிர விரலுக்குக் கீழேயுள்ள “சூர்ய மேடு“ தனை இருகைகளிலும் தரிசித்திடுக! ஸ்ரீசூர்ய கவசம், சூர்ய நமஸ்காரத் துதிகள், ஸ்ரீபாஸ்கர காயத்ரி, ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதுதல் வேண்டும் கண்களை மூடித் திறந்து (மந்திரங்களை ஓதியவாறே) சூர்ய மேட்டினை (அதில் உள்ள ரேகைகள் வளையங்களுடன்) மனக்கண்முன் கொணர்ந்திடுக! இதனைக் குறைந்தது ஐந்து நிமிடங்களேனும் செய்திடுக! ஆழ்ந்த தியானத்தில் மஞ்சள் நிற ஒளி மனக் கண்ணிற்குப் புலப்படக் கூடும்.
2. பாஸ்கர (சூரிய) மேடையைத் தரிசித்தபின் குருவிரலாகிய ஆட்காட்டி விரலுக்குக் கீழ் அமைந்துள்ள குரு மேடுதனை தரிசித்து குருதியானத்  துதிகளுடன் கண்களை மூடித்திறந்து குருமேட்டினை மனக் கண்முன் கொணர்ந்திடுக! இதனையும் குறைந்தது ஐந்து நிமிடங்களேனும் செய்து பாஸ்கர குரு கர தரிசனத்தின் பூர்வாங்கமாக சந்தியாவந்தன சூர்ய வழிபாட்டு முறையில் கீழ்க் கண்டவாறு  கைவிரல்களைக் கோர்த்து துவாரம் வழியே மட்டும் சூரியனை தரிசிக்கவும். சூரியனை நேருக்கு நேராக வெறும் கண்களால் தரிசிக்கக் கூடாது. பாசாங்குலி முத்திரையைக் கைவிரல்களால் அமைத்து விரல்களின் நடுவே உள்ள பாஸ்கர பில துவாரம் வழியாக மட்டுமே சூரியனை தரிசிக்க வேண்டும்.

ஸ்ரீஅஷ்டபுஜ விஷ்ணுதுர்கை
கூவத்தூர் பெருமாள் ஆலயம்

தரிசன பலன்கள் – பாஸ்கர குருகர தரிசன பலன்களோ எண்ணிலோ, ஏட்டிலோ அடங்கா! எதைச் சொல்வது எதை விடுவது! எனினும் முக்யமான சிலவற்றை மட்டும் எடுத்துரைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
1.குருவைப் பெறவில்லையே என்று ஏங்குபவர்கள் மேற்கண்ட குருகர தரிசன வழிபாட்டை மேற்கொண்டு இதனை அருளிய ரைவத மஹரிஷியையும் உள்ளன்போடு வழிபட்டு வந்திடில் தக்க சற்குருவே வந்து அருள்வழிகாட்டுவார். ஆனால் ஆழ்ந்த, உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் நம்மோடு வாழ்கின்ற உத்தமப் பெரியோர்களுள் ஒருவரையோ அல்லது ஜீவசமாதி/ ஜோதி ரூபமாக பூண்டு அருள் மழை பொழியும் ஸ்ரீபரமாச்சார்யார், ஸ்ரீவள்ளலார் சுவாமிகள், ஸ்ரீபூண்டி மஹான் போன்று எவரேனும் ஒருவரை உறுதியாக நம்பி வாழுங்கள். எத்தகைய சோதனை இடர்கள் வரினும் தான் குருவாக ஏற்றவரின் மேல் ஓர் அணு அளவு கூட நம்பிக்கை குறையலாகாது.
2. கரங்களினால் நாம் செய்கின்ற தீவினைகள், கொடிய கர்ம வினைகள் ஏராளம். “அன்னதான மிட்டு அள்ளித் தந்திடில் ஓடிடும் பாரேன் ஓயாத தீவினைகள்” என்றவாக்கின்படி  அன்னதானக் கைங்கர்யத்தில் உடலாலும் பொருளாலும் உள்ளத்தாலும் சேவை செய்து வந்திடில் கரங்களினால் செய்த தீய கர்மங்களுக்குப் பிராயச்சித்தம் காணலாம். ஆனால் பலருக்கு அன்னதான மஹிமை தெரிவதும் இல்லை. அதில் மனம் செல்வதுமில்லை – மேற்கண்ட கரதரிசன வழிபாட்டினால் அன்னதான வாய்ப்புகள் மிகுந்து வரும். ஆனால் அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
3. அனைத்து நல் கிரஹ, நட்சத்திர தேவதைகளும் உள்ளங்கைகளில் தான் உறைகின்றனர். இதனால் தான் காலையில் எழுந்தவுடன் கர தரிசன முறையைப் பெரியோர்கள் விதித்துள்ளனர். குருகர தரிசன வழிபாட்டினால் இவ்வாறாக நவகிரஹ வழிபாடும் சிறப்புறுவதுடன், இதுவரையில் நாம் நன்கு கவனித்திராத உள்ளங்கைகளில் விதவிதமான கங்கணங்கள் சக்கரங்கள், சங்குகள் , வளைவுகள், அபூர்வ ரேகைகள், நட்சத்திர அமைப்புகள் மிளிர்வதைக் காணலாம். கரதரிசனத்தை முறையாகத் தினந்தோறும் செய்து வந்திடில் ரேகைகள் அனைத்தும் நம் விதியைப் பற்றி நம்மிடமே பேசும்! எதிர்காலமறியும் தீர்க தரிசனம் கிட்டும்.

பொங்கல் பண்டிகை

தாத்ரு வருட பொங்கல் பட்டி மகரிஷிப் பொங்கல்
தமிழ் வருடங்கள் அறுபதிற்கும் விதவிதமான விசேஷமான மகத்வங்கள் உண்டு. ஒவ்வொரு (தமிழ்) வருடப் பொங்கலையும் கொண்டாட வேண்டிய முறைகளும் அதன் முக்யத்வங்களும் பல உள்ளன. சில வருடங்களில் குறித்த சில பூஜைகளின் மூலம் பல கொடிய கர்மவினைகளுக்குப் பிராயச்சித்தம் காண்பதோடு சில அரிய உத்தம தெய்வீக நிலைகளையும் எளிதில் பெற்றிடலாம்.
இசைக்கொரு தாத்ரு
உதாரணமாக நடப்பு தாத்ரு வருடம் இசைக்கு உரியதாகும். இசைத்துறையில் உன்னத நிலை பெற விரும்புவோர் தாத்ரு வருடத்திற்குள் சில குறிப்பிட்ட திருத்தலங்களில் இறைப்பணியாக இசைக் கச்சேரிகளை நிகழ்த்தி அங்கு சில அரிய தானதர்மங்களையும் செய்திடில் இசைத் துறையில் உன்னதம் பெறுவர் என்பது திண்ணம். சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேடு என்னும் அரிய சிவத்தலத்தில் உள்ள மிக அழகிய நவ வியாகரண பலி பீடம் அருகில் அமர்ந்து இசைத்து இறைவனை மகிழ்விப்போர் நிச்சயமாக இசையில் சிறப்படைவர். ஜனப்பழக்கமில்லாத கோயில் என்று இதனை எண்ணிடாதீர்கள். தினமும் சித்புருஷர்கள் வந்து செல்லும் உத்தமத் திருத்தலமிது! பலி பீடத்தின் மேல் அமர்ந்து இன்றும் ஸ்ரீஆஞ்சநேய சுவாமி ராமகானம் இசைத்து மகிழ்வதை சூட்சுமமாக உய்த்து உணரலாம். ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி, ஸ்ரீலலிதா பரமேஸ்வரியாக அவதாரங்கொண்டபின், பூலோகத்தில் முதன் முதலாக எழுந்தருளிய திருத்தலமே இது! ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை ஏனைய தேவலோகங்களில் இசைத்தபின் ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் முதன்முதலில் ஸ்ரீதேவியை, பராசக்தியைத் தரிசித்த தலம். எனவே ஒவ்வொரு தமிழ் வருடமும் எத்தகைய பல சிறப்புகளைக் கொண்டதென்பதைத் தக்க சற்குரு மூலம் உணர்ந்து பயன் பெறுவீர்களாக! வரும் ஈஸ்வர வருடம் வேதசக்திகளைத் திரட்டித் தரும் உத்தம ஆண்டாகும். வடமொழி, தமிழ் மறைகள் நிறைய உண்டு. இவற்றில் பொதிந்து கிடக்கும் வேத ஒலிகள் பீறிட்டுக் கிளம்பி, பூவுலகை நிறைக்கும் அற்புத ஆண்டே ஈஸ்வர வருடமாகும். ஏனைய விளக்கங்களை வரும் “ஸ்ரீஅகஸ்திய விஜயம்“ இதழ்களில் காண்க!

கூவத்தூர் பெருமாள் ஆலயம்

தென்னாடுடைய.....
தாத்ரு வருடப் பொங்கல் மகாத்மியத்தில் துவங்கி ஈஸ்வர வருட மஹாத்மியத்திற்குச் சென்று விட்டோமல்லவா!  அருகம்புல் போல் கணுகணுவாக, வாழையடி வாழையாக தெய்வீக மகாத்மியங்கள் பல்கிப் பெருகி, நிரவிக் கிடக்கின்ற புனித பூமியன்றோ பாரத பூமி! அதுவும் ஆயிரக்கணக்கில் கோயில்கள் நிறைந்து பிரபஞ்சத்திற்கே “ஊதுவத்தியாக“ நின்று தெய்வீக மணம் பரப்பும் தமிழ்நாட்டிற் பிறக்க நாம் என்னே பாக்யம் செய்திருக்க வேண்டும்! பிரபஞ்சத்திலேயே ஸ்தூல வடிவ பெரிய சிவலிங்கமாகத் திகழும் திருஅண்ணாமலை வீற்றிருக்கும் தெய்வத் திருபூமியன்றோ தமிழகம்! தமிழ்நாட்டில் தான் “பட்டிமுனி“ எனப் பெயர் கொண்ட பட்டி மகரிஷி அவதரித்தார். மஹரிஷிகளும் சித்புருஷர்களும் பூமியில் தோன்றி செயற்கரிய தியாகங்களையும் சமுதாயப் பணிகள், இறைப்பணிகளையும் செய்து நமக்கு வழிகாட்டி நிற்கின்றனர். பட்டி முனியின் தியாகம் யாதோ, அறிவோமா?
பட்டிமுனியின் முதியோர் பணி
பட்டிமுனி இளவதிலேயே ஒரு வைராக்யத்தைப் பூண்டார். அதுவே பெரியோர் சேவை!
1. வயதானவர்களுக்கு சரீர சேவை
2. முதியோர்க்கு நீராட்டிவிடுதல், உடல் சுத்தம் செய்தல், ஆடைகளைத் துவைத்தல், அன்னமிடுதல் போன்ற தொண்டுகள்.
3. பெரியோர்க்குப் பாதபூஜை
4. ஜாதி, சமய, குல, மதி பேதமின்றி அநாதையாகக் கைவிடப்பட்ட முதியோர்க்குத் தங்க இடமளித்து உணவு, உடை, உறையுள் அளித்து அன்னம், மருத்துவம் மற்றும் அனைத்து உதவிகளையும் அளித்தல்
5. பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெரியோர்களை அவரவர் குடும்பங்களில் ஒன்று சேர்த்தல்.
6. முதிய ஏழை விதவைகள், மனைவியை இழந்தோர்களின் குடும்பங்களுக்கு வேண்டிய நிரந்தர உதவிகள்.
7. ஊனமுற்ற வயதான கூன், குருடு, செவிடர்கட்கு ஆதரவு இல்லங்கள் அமைத்து அவர்களும் சமுதாயத்துடன் ஒன்றுபட்டு வாழ உதவுதல்.,
8. மனநிலைக் கோளாறுகளினால் பைத்தியமாகத் திரிந்த வயதானர்கட்குத் தக்க மருத்துவம் அளித்து அவரவர் குடும்பங்களில் சேர்த்தல்
9. தொழுநோய் போன்ற கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்டு சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட வயதான நோயாளிகளுக்கு சரீர சேவை, மருத்துவ உதவிகளுடன் அவர்களுக்கு மருத்துவ இல்லங்கள் அமைத்துச் சமுதாயத்துடன் ஒன்றிவாழ உதவுதல்.
10. வயதானோர்க்குப் பித்ரு தர்ப்பணம், ஹோமம், வேள்வி போன்ற வழிபாடுகளைச் செய்திட உதவுதல் போன்ற பல அரிய தொண்டுகளை ஆற்றிய பட்டிமுனி.
மேற்கண்ட எல்லாவற்றையும் விட வரும் யுகங்களில் முதியோர்கள் புறக்கணிக்கப்படுவர், பெரியோர்களின் கடைசி வாழ்க்கை துன்பமயமாக அமையும் என்பதை தீர்க தரிசனமாக உரைத்து பெரியோர் சேவையின் மகத்வத்தை யாங்கனும் பரப்பி, சற்குருமார்கள் மூலம் தம்முடைய ஒப்புற்ற முதியோர்கள் பணியையும் எதிர்காலத்தில் தொடர்வதற்குரிய பிரசார சேவையையும் ஆற்றித் தம் பூலோக வாழ்க்கையில் பரிபூரணம் பெற்றார். இவ்வாறு பெரியோர்களின்/ முதியோர்களின் நல்வாழ்விற்கான சேவையையே மஹேஸன் சேவையாக வாழ்ந்து மலர்ந்த பட்டிமுனியை, இறைவனே முன்வந்து ஐக்யப்படுத்திக் கொண்ட திருநாளே அந்த யுக தாத்ரு வருட சங்கராந்தி (பொங்கல்) தினமாகும். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்ற பட்டிமுனியே தாத்ருவருடப் பொங்கல் தினத்தை முதியோர்க்கென அர்ப்பணித்தார்.

ஸ்ரீஆண்டாள் நாச்சியார்
கூவத்தூர் பெருமாள் ஆலயம்

போகிப் பொங்கல் – பழையன கழிதல்
பழையன கழிதலெனப் பெயர் பெற்ற திருநாளிது. பழைய பாய், பழைய ஆடைகளை, ஓலைச் சுவடிகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக (நடுரோட்டில் அல்ல!) சேர்த்து அனைத்து மக்களும் ஒன்று கூடி கர்மவினைக் கழிப்பிற்குப் பித்ருக்களின் ஆசியை வேண்டிக் கூட்டுப் பிரார்த்தனை செய்து ஆடைகளை அக்னியில் சேர்ப்பர். ஆடையிலும் கர்மவினைகள் எளிதில் சேரும். எனவேதான்  ஒருவர் ஆடையை மற்றொருவர் அணிதல் கூடாது. பருத்தி ஆடையாயின் துவைத்தால் பெரும்பான்மையாக, அதில் படிந்திருக்கும் கர்ம வினைகள் தீரும். இதனால் தான் “கந்தையானாலும் கசக்கிக் கட்டு“ என்ற முதியோர் வாக்கு ஏற்பட்டது. காமக்குற்றங்களுக்கு, எந்த வயதினரும் எளிதில் ஆட்பட்டு விடுகின்றனர். முறையற்ற காமங்களினால் ஏற்படும் கர்மவினைகளைக் களைய ஆடைதானமே சிறந்த பரிஹாரமாகும். எந்த அளவிற்குப் புது ஆடைகளைத் தானம் செய்கின்றோமோ அந்த அளவிற்குக் காமக் குற்றங்கள் தணிகின்றன., ஆனால் பிராயச்சித்தம் என்பது ஒரு முறையே பலனளிக்கும். ஒரு முறை செய்த தவறினை மறுமுறை செய்தலாகாது.
தற்காலத்தில் போகி என்ற பெயரில் பழைய குப்பை, டயர், ரப்பர் போன்றவற்றைச் சாலையின் நடுவே கொளுத்தி வைத்து வேடிக்கை பார்க்கின்றனர். இதனால் சாபங்களே மிஞ்சும். ஊருக்கு ஒதுக்குப் புறமாக மேற்கண்ட முறையில் கூட்டுப் பிரார்த்தனையாக, கொடிய கர்மவினைகள் கழிய பித்ருகளின் ஆசியை வேண்டி வழிபட்டு, பழைய குப்பை, காகிதம், பழைய ஆடைகள் போன்றவற்றை மட்டுமே அக்னிக்கு இரையாக்கிட வேண்டும். போகியன்று தர்ப்பணம் செய்தலும் சிறப்புடையதே! பலர் ஒன்று சேர்ந்து கூட்டுத் தர்ப்பணமாக, புண்ய நதியோரம்/ கோயில் குளங்களில் செய்திடில் தர்ப்பணப் பலன்கள் பன்மடங்காகும். பட்டிமுனி அருளியபடி போகியன்று வசதியற்ற முதியோர்க்குப் புத்தாடைகளை அளித்திட வேண்டும். மேலும் அவர்கள் தர்ப்பணம் செய்திடத் தேவையான உதவிகளையும் செய்திடுக! இவ்வாறாக புத்தாடைகள் அளித்து, இன்று பெரியோர்களை வணங்கி ஆசி பெற்றிடில் “விரஜா தீபாக்ரம ஆசிர்வாதம்“ என்ற அரிய ஆசிர்வாத சக்தி கிட்டுகின்றது. இது முறையற்ற காமச் செயல்களினால் எண்ணங்களினால் ஏற்படும் கொடிய பாவங்களைப் போக்க வல்லது. ஆனால் போகியன்று மட்டுமே பெரியோர்க்கு இத்தகைய அபூர்வமான ஆசிர்வாத சக்தியைப் பித்ருக்கள் அளிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது! போகியன்று ஏன் பழையனவற்றைக் களைதல் வேண்டும்?

போக்யப்ரதா – சாட்சி பூத தேவதைகள்
உத்தராயணப் புண்ய நாள் பிறக்கும் நாளன்றோ பொங்கல் எனப்படும் சங்கராந்தி தேவதை ஆசிர்வதிக்கும் திருநாள்! ஒவ்வொரு வருடத்திற்குமுரிய சங்கராந்தி தேவதையொன்றுண்டு. இதன் விளக்கங்களைப் பஞ்சாங்கங்களில் காணலாம். ஒவ்வொரு சங்கராந்தி தேவதையும் சூர்யப் பிரகாசம் மூலம் பூலோகத்திற்கு வந்தாலும் நாம் படைக்கின்ற பொங்கலின் “ஆவி“ மூலமாகத்தான் அத்தேவி நம் இல்லத்தில் புனிதமாக நுழைகின்றாள், சங்கராந்தி தேவதையின் வரவை மேலும் புனிதப்படுத்தவே, முதல் நாளாம் போகியன்று வீட்டிற்கு வெள்ளையடித்து, நீரால் கழுவி இல்லத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்கின்றோம். லௌகீகமாக நாம் செய்கின்ற துப்புரவுப் பணியிது. ஆன்மீகமாக “போக்ய ப்ரதா“ தேவதைகள் எனப்படும் பித்ருலோக தேவதைகள் இன்று இல்லத்தில் குவிந்து கிடக்கும் பழைய வினைப்படிவுகளை அக்னி மூலமாக அகற்றுகின்றனர். எனவேதான் போகியன்று பழைய பொருட்களை, குறிப்பாக பழைய பாய், தலையணைகள், ஆணியில் மாட்டிக் கிழிந்த மற்றும் கிழிபட்ட பழைய ஆடைகள், செல்லரித்து படிக்க முடியாத ஓலைச் சுவடிகள், ஓலைப் பாய்கள் போன்றவற்றை ஊர் மக்கள் ஒன்றாகத் திரட்டி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக அக்னியில் கூட்டி எரிக்கின்றனர்.

இத்தகு, பழைய வினைகளைக் களைகின்ற திருப்பணிக்குச் சாட்சி பூதமாக நின்று அருள்புரிவோரே போக்யப்ரதா தேவதா மூர்த்திகள்! எனவே போகியன்று பழையனவற்றை அக்னிக்குச் சமர்பிக்கையில்..
“போக்யப் பரதா தேவதைகள் போற்றி“
“போக்யப் ப்ரதாய நம:“
என்று துதித்து வணங்குவதோடன்றி போகிப் பொங்கலின் மஹிமையைப் பரப்பிய பட்டிமுனிக்கும் நன்றியைச் செலுத்திட வேண்டும். போகியில் பழையனவற்றிற்கு அக்னியைக் கூட்டி எரிக்கும் முன் சொல்ல வேண்டிய (தமிழ்) மந்திரமாவது.
“பட்டிப் பிழை தொட்டில் பிழை
பகிர்ந்தளிக்காத எட்டிப் பிழை
கூடந்தனில் கூட்டிவைத்த குப்பைப் பிழை
கூடியே எமை கட்டித் துன்புறுத்தாது
எட்டி எறிந்த பிழை
எரிந்து சாம்பலாகுகவே “
சித்தர்களின் பரிபாஷையில் அமைந்த இச்சூத்திரத்தில் பல அரிய பீஜாட்சரங்கள் பொதிந்துள்ளன என்பதை அறிந்திடுக!
ஔவையளித்த யோக சூத்திரம்
ஔவையாருடைய “சீதர்க்களப” எனத் தொடங்கும் விநாயகர் அகவலில் ருக், யஜுர், சாம, அதர்வண வேத மந்திரங்களின் பீஜாட்சர இரகசியங்கள் பதிக்கப்பட்டுள்ளன என்பதும், இதில் யோக சக்திகளின் அட்சரங்களும் கூடியுள்ளன என்பதும் பலரும் அறியாத இரகசியமாகும். இதில் “காலால் எழுப்பி“ எனத் துவங்கும் வரியில் கால் கட்டை விரல்களில் மட்டும் எழும்பி நிற்பதால் ஏற்படும் ஆகர்ஷ்ண சக்தி மூலாதாரத்திலிருந்து எழும்பி சகஸ்ராரம் வரை செல்கின்ற வெள்ளை நரம்பின் விளக்கம் அளிக்கப்படுகின்றது. சென்னையில் பூந்தமல்லி அருகிலுள்ள சித்துக்காடு என்னும் அரிய சிவத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியின் முன், மேற்கண்ட விநாயக அகவலின் காலாலெழுப்பி என்ற வரியை தியானித்துக் கால் கட்டை விரல்களில் மட்டும் எழும்பி முறையாக நின்றால் ஓர் அபூர்வமான யோக சக்தி உடலினுள் ஊடுருவுவதைத் துய்த்துணரலாம்.
போகிப் பொங்கலன்று குறித்த சக்கரங்களையும், யந்திரங்களையும் வரைந்து, அதன் மேல் கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதி நீரினைத் தெளித்து, நாயுருவி, வேர்பலா போன்ற அறுவகை சமித்துகளை வைத்து அரணைக் கட்டையால் அக்னி எழுப்பி அதில் பழைய ஆடைகள், பாய், தலையணை போன்றவற்றை எரித்திட சில கொடிய கர்ம வினைகளை எளிதில் களைந்திடலாம், இதற்கான அக்னி வழிபாட்டு முறையை தக்க பெரியோர்கள், குலகுரு, சற்குருவிடம் கேட்டறிந்து பயனுற வேண்டும்.

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

பெரியோர்களின் சாப நிவர்த்தி
கலியுகத்தில் பெரியோர்களை மதிக்காமையாலும், அவர்தம் சொற்படி நடக்காமையால்தான் பெரும்பான்மையான வாழ்க்கைத் துன்பங்கள் ஏற்படுகின்றன. ஜாதி, மத பேதமின்றி பெரியோர்க்கு சேவை புரிதலும், வயதான சுமங்கலிகளுக்குப் பூஜை, தொண்டு செய்தலும் அநாதைகளாகக் கைவிடப்பட்டிருக்கும் முதியோருக்கு உதவி செய்தலுமே தக்க பரிஹாரமென பட்டிமுனி அருளியுள்ளார். இதுவே பித்ருக்களின் ஆசிகளையும், குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பெற்றுத்தருவதோடு, பெரியோர்களை உதாசீனம் செய்தமையால் ஏற்படும் சாபங்களுக்கும் நிவர்த்தியளிப்பதாகும்.
தேவதா அனுக்ரஹங்கள் : கோடிகோடியாகப் புண்ணிய தேவதைகளுண்டு! ஒவ்வொரு புண்ணிய காரியத்தையும், ஒவ்வொரு அறதேவதை சாட்சியாக முன் நின்று அதற்குரியப் புண்ணிய சக்தியை அளித்துச் செல்கின்றது. ஆனால் இப்புண்ணிய சக்தியை நேரடியாகப் பெறுவதற்கான புனிதத்தன்மையும் தேஜஸும், ஒளிப்பிரகாசமுடைய சூட்சும சரீரத்தையும் நாம் பெறவில்லையாதலின் இத்தேவதைகள் தங்கள் புண்ணிய சக்தியை பிரசாதம், தேங்காய், புஷ்பம், விபூதி, குங்குமம், சந்தனம், தீர்த்தம், திருமாங்கல்ய சரடு, புத்தாடைகள் போன்றவற்றில் இட்டுச் செல்கின்றனர்.
பொங்கல்
போகி தினத்திற்குரிய போக்யப்ரதா தேவதைகள், பஞ்ச, பூத சக்திகளுடன் தொடர்புடையவை! எனவேதான் பஞ்சபூத சக்திகள் நிறைந்துள்ள புது பருத்தி ஆடைகளை போகி அன்று பெரியோர்களுக்களிப்பது தாத்ரு வருடத்தில் மிக விசேஷமானதாக சித்புருஷர்கள் அருள்கின்றனர். இதனால் புத்தாடைகளில் பதியும் “விரஜா தீபாக்ரம்“ ஆசிர்வதத்தினால் பெற்றோர்கள், மாமனார், மாமியார், மற்றும் பெரியோர்கள், பித்ருக்கள் அளித்த சாபங்கள் நிவர்த்தியாவதோடு, அவர்தம் பரிபூரண ஆசியைப் பெறுவதற்கான நல்வழியும் கிட்டும். தாத்ரு வருடத்திற்கான
1. போகிப் பொங்கல்
2. பொங்கல்/ சங்கராந்தி
3. மாட்டுப் பொங்கல்
4. காணும் பொங்கல் ஆகிய நான்கைப் பற்றியும் பட்டிமுனி விசேஷமான விளக்கங்களை அருளியுள்ளார். தாத்ரு வருட மகர சங்கராந்திக்குரிய தேவியே மந்தாகினி தேவியாவாள். சித்ர  வஸ்திரம் எனப்படும் கையால் நெய்யப்படும் அழகிய ஆடைகளை அணிந்து வரும் மந்தாகினி தேவி சயனக் கோலத்திலிருந்து எழுந்து விஸ்வரூபக் காட்சியுடன் தோன்றுவதால்
1. கையால்/தறியில் நெய்த ஆடைகளிலும்
2. புதிய பாய், படுக்கை, தலையணை, போர்வை, கம்பளி போன்றவற்றிலும் தன் புண்ணிய சக்தியைத் தேக்கி அருள்பாலிக்கின்றாள். எனவே தாத்ரு வருடப் பொங்கலில் பெரியோர்களுக்குக் கையால் நெய்த ஆடைகளையும் (எம்பிராய்டரி, ஸ்வெட்டர்) புதிய பாய், படுக்கைத் தலையணை போன்றவற்றையும் தானமளித்தல் அபரிமித பலன்களையளிக்கும். இதனால், பெரியோர்களுக்குத் தக்க சேவைகளைச் செய்யாததால் உண்டாகும் படவர்த்தி தோஷம் நிவர்த்தியாகும். படவர்த்தி தோஷத்தினால் வாகனங்களுக்கோ, வாகனங்களினாலோ சேதமும், விபத்தும் உண்டாகும். பொங்கலன்று மந்தாகினி தேவிக்குப் ப்ரீதியான மகிழம்பூவினால் அர்ச்சனை, ஆராதனை செய்வதுடன் ஏழைச் சுமங்கலிகட்கு மகிழம்பூ அளிப்பதும் நித்ய வாழ்க்கையில், மன அமைதியையும், சுகத்தையும் தரும்.
மாட்டுப் பொங்கல்
இன்று கோபூஜை, எனப்படும் பசுவிற்குப் பூஜை செய்தல் மிகவும் சிறப்புடையது. வறுமையைப் போக்க வல்லது. தற்காலத்தில் மாட்டுப்பொங்கலன்று மட்டும், அனைவரும் பசுக்களைத் தேடிச் சென்று அளவிற்கு மேல் பசுவிற்கு உணவளித்து அதனைப் பல துன்பங்களுக்கு ஆளாக்குகின்றனர். தினந்தோறும் பசுவிற்கு உணவளித்து வந்தால் தான், மாட்டுப் பொங்கலன்று கோபூஜை பரிபூரணமடைகின்றது. கோபூஜை என்பது பசுவிற்குத் தன் கைளாலேயே நீராட்டி மஞ்சள், குங்குமமிட்டு, புஷ்பம் சூட்டி வலம் வந்து வணங்குவதாகும். கோடிக்கணக்கான தேவதைகள், பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, விநாயகர் முதல் அனைத்து தெய்வமூர்த்திகளும், மஹரிஷிகளும் உறைகின்ற தெய்வீகப் பசுவானது நடமாடும் தெய்வமன்றோ! பசு நடக்கையில் அதன் குளம்புகளினின்று தெரிக்கின்ற மண்ணிற்கு “கோதூளி“ என்று பெயர். இது மிகவும் புனிதம் வாய்ந்தது. பல கோடிப் புண்ணிய நதிகளின் தெய்வீக சக்திகளை ஒருமித்தே கொண்டது. இதனை எடுத்து நீரில் சேர்த்து அதில் நீராடுவதே கோதூளி ஸ்நானம் எனப்படும். இது மிகவும் பெறற்கரிய பாக்கியமாகும். சில குடும்பங்களில் குழந்தையின்றிப் பலர் இறந்திருப்பர். அவருடைய மேன்மைக்காக மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினரும் மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதோரும் கண்டிப்பாக அனுசரிக்க வேண்டிய பூஜை இது. இந்நாளில் கறவை நின்ற பசுக்களுக்கும், மலட்டுப் பசுக்களுக்கும் நீராட்டி மஞ்சள் குங்குமமிட்டு வணங்குதல் வேண்டும். இதனால் பித்ருக்களின் சாபத்தினால் வம்ச விருத்தி தடைப்பட்டிருக்குமாயின் அவை நிவர்த்தியாகும். ஸ்ரீகாமதேனுவின் புதல்வியே பட்டி ஆதலின் இத்தகு பூஜைகளினால் பட்டீஸ்வர தேவதைகள் ப்ரீதியடைந்து வம்சவிருத்திக்கும் குழந்தைகளின் ஆரோக்யத்திற்கும் அருள்பாலிக்கின்றாள்.

காணும் பொங்கல்
காணும் பொங்கலுக்குப் பல விளக்கங்களுண்டு. இன்றைக்குப் பல குடும்பங்களில் நிலவுகின்ற துன்பங்களுக்கு முதன்மையான காரணங்களாக அமைவது பெரியோர்களை அவமதித்தலும், முறையாக குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளாததுமாகும். இவ்விரண்டு குறைபாடுகளையும் தீர்த்திட்டால் சாந்தமான வாழ்வு கிட்டும் என்றுணர்ந்த பட்டிமுனி இதற்காகவே நான்குவிதமான பொங்கல் தின வழிபாடுகளை நமக்கு அளித்துள்ளார். காணும் பொங்கலன்று அவரவர் தம் சொந்த ஊரிலுள்ள குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். குலதெய்வத்திற்கு அபிஷேக ஆராதனைகள், திருமஞ்சனங்கள், ஹோமம் போன்றவற்றுவடன் வறிய ஊர் மக்களுக்கு அன்னதானம் செய்திட வேண்டும். இதனால் உறவினரல்லாத பெரியோர்களின் ஆசி நிறைந்து கிட்டும். இன்று குல தெய்வ வழிபாட்டிற்குப் பின் அவரவர், குலகுரு, சற்குரு, பெரியோர்களை, ஆன்றோர்களைத் தரிசித்தல் மிகவும் விசேஷமானதாகும். பெரியோர்களுக்குப் பாதபூஜை செய்ய வேண்டிய நாள் இது. ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோர்களுடைய பாதரட்சைகளைப் பெற்று வைக்க வேண்டிய நாள் இது. பாத இரட்சைக்குரிய தேக்கு, பலா போன்ற குறித்த மரவகைகளைத் தக்க பெரியவரிகளிடம் கேட்டுப் பெற்றிடுக.! இவ்வாறாக பட்டிமுனி அளித்த தாத்ரு வருட பொங்கல் வழிபாட்டு முறையையறிந்து பெரியோர்களின் ஆசியைப் பெற்று அவர்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளை முறையாகச் செய்து வந்திட பித்ருக்களின் ஆசி நிறைந்து பல துன்பங்கள் தானாகவே நீங்கும். இத்தகைய தியாகங்கள் நிறைந்த, பெரியோர்களின் தொண்டே தன் உயிர்மூச்சு என வாழ்ந்த பட்டிமுனி கோவை அருகே பேரூர் சிவாலயத்தில் தரிசனம் தருகின்றார். பொங்கல் நாட்களில் அவரைத் தரிசிப்பது வாழ்க்கையில் பெறற்கரிய பாக்கியங்களுள் ஒன்றாகும்.

தை அமாவாசை

தை மாத அமாவாசையானது உத்தராயண புண்யகாலத்தின் முதல் அமாவாசையாக விளங்குவதால் மிகவும் சிறப்புடையதாகிறது. அயன காலத்தில் சூர்ய பகவான் தன் பாதையை மாற்றிக் கொண்டபின் சந்திரனுடன், உத்தராயணப் பாதையில் முதன் முதலில் கூடுகையில் தான் தை அமாவாசை உண்டாகின்றது. அமாவாசையன்று சூர்ய, சந்திர கிரஹங்கள் கூடுகையில் ஆன்மீக ரீதியாக நிகழ்வதென்னவெனில் பல கோடிக்கணக்கான லோகங்களில் உள்ள நற்ஜீவன்கள் (Positive Souls) ஒளி லோக வாசிகள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பலவித லோகங்களுக்குச் செல்கின்றனர். இக்கூடுமாற்றங்களுக்கு சாயாபிரதிபங்கள் என்று பெயர். இக் கூடு மாற்றங்கள் நிகழ்வதேன்?
Astral Travel – விண்வெளிப் பயணம்
ASTRAL TRAVEL  என்ற பிரபஞ்ச அண்ட சஞ்சாரக் கலையில் ஒரு ஜீவன் பூலோகத்திலிருந்து எந்த லோகத்திற்கும் சென்றிடலாம். பித்ருலோகம், சந்திர லோகம், குரு மண்டலம், கந்தர்வ லோகம் என்று விதவிதமான லோகங்களுக்குச் செல்ல வேண்டுமெனில் அதனதற்குரிய தேகத்தைப் பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக செவ்வாய் லோக ஜீவன்கள் சிவப்புநிறத்துடன், குறைந்தது, 5000 டிகிரி சென்டிகிரேடு உஷ்ணமான உடலுடன் இருப்பர். இதே உருவத்தில் பூலோகத்திற்கு வந்தால்... சற்றே அதன் விளைவுகளை எண்ணிப் பாருங்கள்! எனவேதான் அமாவாசையன்று சூர்ய, சந்திர இணைப்பில் கிட்டும், சாயாபிரதிப நிழல் மண்டபத்தில் தான் தேகக் கூட்டு மாற்றங்கள் ஏற்படுகின்றன. நம் பித்ருக்கள் கூட இதில் தங்கி தங்கள் பித்ருலோக உடலை ஆங்கே கிடத்தி விட்டு தாம் செல்லவிருக்கின்ற லோகத்தின் உடலை ஏற்கின்றனர். எனவே ASTRAL TRAVEL எனப்படும் பிரபஞ்ச விண்வெளிப் பயணத்தில் உலக நன்மைக்காக மேற்கொள்ள விரும்புவோர்க்கு (சற்குரு துணையுடன்) அதற்கெனக் குறித்த வழிபாடுகள் செய்ய ஏற்ற தினம் அமாவாசையாகும். அதிலும் தை மாத அமாவாசை மிகவும் ஏற்புடையதாகும். காரணம் ASTRAVEL TRAVEL புரியத் தேவையான நுண்ணிய இழைக் (silver cord) கிரணங்கள் சூர்ய, சந்திர சங்கமத்தில் ஏற்படும் சாயாபிரதிப நிழல் மண்டபத்தில் தான் அரிதிப் பெருமளவில் உருவாகின்றன. பௌர்ணமி பூஜைபோல் மிகச் சிறப்புடைய அமாவாசைப் பூஜைகளும் உண்டு. இவை தக்க தருணத்தில் சித்புருஷர்களால் கலியுக மக்களுக்கு அளிக்கப் பெறும்.

நாகபிருந்தம்
கூவத்தூர் பெருமாள் ஆலயம்

தீர்த்த கண்டித் தர்ப்பணம்
ஜாடி போன்று மண்ணில் செய்யப்படுவதே தீர்த்த கண்டி யாகும் மஹரிஷிகள் தங்கள் திருக்கரங்களில் பூஜைக்காக மரம் அல்லது சுட்ட மண்ணிலான  தீர்த்த கண்டியைத் தாங்கியிருப்பர். மேலே கைப்பிடியுடன் கூடிய இதற்குப் பல ஆன்மீக சக்திகள் உண்டு. தாத்ரு வருட தை மாத அமாவாசையில் செய்ய வேண்டிய தர்ப்பணத்திற்கு “தீர்த்த கண்டித் தர்ப்பணம்“ என்று பெயர். புண்ய நதிக் கரையில் உள்ள தேவதைகளுக்குக்  “கண்டித் தேவதைகள்“ என்று பெயர். புண்ய நதியில் நீராட வருவோருடைய சில கர்ம தியாகம்  புரிந்து நீராடுவோர்க்குக் கர்மவினை கழிப்பை அளிப்பதோடு தங்களுடைய புண்ய சக்தியின் ஒரு பங்கையையும் அளிக்கின்றனர். சுட்ட மண்ணினாலான தீர்த்த கண்டியில், மேற்கண்ட கண்டித் தேவதைகள் எப்போதும் உறைகின்றனர். காரணம் என்னவோ? கண்டித் தேவதைகளின் கண்டி லோகமானது தீர்த்தக் கண்டியின் அமைப்பில் அமைந்திருப்பதேயாகும்! தை அமாவாசையன்று ஓர் வாழை இலையில் நல்ல பச்சரிசியைப் பரப்பி நடுவில் குழில் அமைத்துச் சுற்றிலும் அரிசியின் மேல், தர்ப்பையாலான விசிறியையோ அல்லது தர்பைகளையோ விசிறிபோல் பரப்பி வைத்திட வேண்டும். கங்கை, காவிரி போன்ற புண்ய நதி நீரால் தீர்த்தக் கண்டியை நிரப்பி அரிசிக் குழியில் வைத்து மூன்று முதல் 12 தர்பைகளைத் தீர்த்தக் கண்டியினுள், நீரினுள் வைக்க வேண்டும். அறிந்த (அமாவாசைக்குரிய) பித்ரு ஆவாஹன மந்திரங்களை அல்லது தமிழ் மந்திரங்களை ஓதி, பித்ருக்களை தீர்த்தக் கண்டியில் ஆவாஹனம் ஆகுமாறு வேண்டிப் பிரார்த்தனை செய்திடல் வேண்டும். தீர்த்தக் கண்டியைச் சுற்றியுள்ள தர்பைகளின் மேல் அமாவாசைத் தர்ப்பணத்தைச் செய்திட வேண்டும். வழக்கமான அமாவாசைத் தர்ப்பணத்திற்கு முன் இந்த வாழையிலையைச் சுற்றி 12 அகல் விளக்குகளை (பசுநெய்யில்) ஏற்றிட வேண்டும். தீர்த்தக் கண்டியில் ஆவாஹனமாகியிருக்கும் பித்ருக்கள் தர்ப்பணத்தை ஏற்று அருள்பாலிக்கின்றனர். தீபங்களை கொண்டு அக்னி சாட்சியாக, கண்டி தேவதைகளின் சாட்சியா , புண்ய நதி தேவதைகளின் சாட்சியாக இடும் தர்ப்பணத்தை, தை அமாவாசையன்று, தீர்த்தக் கண்டியில் ஆவாஹனமாயிருக்கும் பித்ருக்கள் உவப்புடன் ஏற்று அருள்பாலிக்கின்றனர். ஆனால் இத்தகைய அபூர்வமான ஆன்மீக இரகசியங்கள் நிறைந்த இந்த தீர்த்த கண்டி அமாவாசைத் தர்ப்பணமானது உத்திராயண, தை அமாவாசைக்கு மட்டுமே பொருந்தும். ஏனைய அமாவாசைகட்குத் தர்ப்பண முறைகள் மாறுவதால் தக்க பெரியோரை குல சற்குருவை நாடி விளக்கங்களைப் பெற்றிட வேண்டும்.
தீர்த்த கண்டித் தர்ப்பணப் பலன்கள்
1. மனிதன் சகல அங்கங்கள் மூலமாகவும் மனத்தாலும் பலவிதமான பாபங்கள் கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்வதால் அந்தந்த அங்கத்திற்குரிய முறையான பூஜைகளையோ தானதர்மங்களையோ செய்தால் தான் கர்மங்களிலிருந்து விடுதலை பெற முடியும்.
2. எந்தெந்த அங்கத்திற்குரிய கர்ம வினைகள் தீராது பல்கிப் பெருகுகின்றனவோ அவ்வங்கங்களே அடுத்த பிறவிகளில் கடும் நோய்களுக்கு உள்ளாகின்றன.
3. அன்னதானம், ஆடைதானம், ஜலதானம், (நீர்மோர் , நன்னீர், பழரசம், பால், பாயஸம் etc ) போன்றவற்றுள் நீர்தானம் செய்யாத பாவத்திற்காகவும், நீர்க்குற்றங்களுக்காகவும், நீருக்குச் செய்த துரோகங்கள் நீங்கவும் பிராயச்சித்தமாக தைஅமாவாசைத் தர்ப்பணம் அமைகின்றது.
4, புண்ய நதியில் நீராடாமை, புண்ய நதி நீரினுள் தகாத செயல்களைச் செய்தல், கழிவு, குப்பை பீடி, சிகரெட் போன்றவற்றை நீரில், எறிதல், கலத்தல், பால், மருந்துகளில் நீர்க்கலப்படம், நீரை விற்றல், நீரைக் காலால் உதைத்தல், நீரைப் பிராணிகளின் மேல் (அச்சுறுத்தலுக்காக) ஊற்றுதல், கோயில் குளங்களுக்கருகே சிறுநீர்/மலஜலங்கழித்தல், போட்டி/பொறாமை/துரோக உணர்வுகளால் நீரை அசுத்தமாக்குதல், கழிவு நீரை நதியிலோ, ஊருக்குள்ளோ செலுத்துதல் – போன்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகத் தீர்த்தகண்டித் தர்ப்பணம் அமைகின்றது.
5. இவ்வித விசேடத் தர்ப்பணத்தால், தீர்த்தப் பிரசாதம் பித்ருக்களுக்குக் கிட்டுவதோடு அவர்தம் ஆசீர்வாதமும் பல்கிப் பெருகும். பல வீடுகளில், கிணறுகளில் நன்னீர் சுரக்காமல் போதாமல், உப்பு கலந்தும் பாதிக்கப்படும் – இத்தகைய நீர்ப் பிரச்னைகள் தீரவும், நில விளைச்சல் பெருகவும் தீர்த்த கண்டித் தர்ப்பணப் பலன்கள் பெரிதும் உதவுகின்றன.
தேவ தீர்த்தத் தர்ப்பணம் .. தீர்த்த கண்டித் தர்ப்பணத்தின் பூர்வாங்கமாக முடிவில் மண்ணாலான தீர்த்த கண்டியை எடுத்து கிழக்கு/வடக்கு நோக்கி நின்று இரு கால்களையும் உயரத் தூக்கிக் கால் விரல் நுனிகளில் நின்று (ஸ்ரீகாயத்ரீ அர்க்யம் போல்) தீர்த்த கண்டியிலுள்ள நீர் அனைத்தையும் மூன்று முறையாக.....
1. வசு பித்ரு தேவேப்யோ நம :
2. ருத்ர பித்ரு தேவேப்யோ நம :
3. ஆதித்ய பித்ரு தேவேப்யோ நம :
வசு பித்ரு தேவர்களே போற்றி!
ருத்ர பித்ரு தேவர்களே போற்றி!
ஆதித்ய பித்ரு தேவர்களே போற்றி!
என்று வடமொழியிலோ, தமிழிலோ, துதித்து கண்டி நீரைப் பூமியில் அர்க்யமாக விடுதல் வேண்டும். பொதுவாகப் பித்ருக்களுக்கு அர்க்யம் அளிப்பதில்லை. ஆனால் உத்தராயணத்தில் பித்ரு தேவர்களாக உயர்நிலை பெறும் பித்ருக்களுக்காக இந்த தேவ தீர்த்தத் தர்ப்பண அர்க்யம் அளிக்கப்படுகின்றது. இது பெறற்கரிய பாக்யத்தைத் தரும் தர்ப்பணப் பூஜைகளில் மிகவும் முக்யமானது. எனவே யாவரும் இவ்வரிய வாய்ப்பை விட்டு விடாது மேற்கண்ட முறையில் வரும் தை அமாவாசைத் தர்ப்பணத்தைச் செய்து அரிய அனுக்ரஹங்களைப் பெற்று சிறப்படைய வேண்டுகிறோம்.

கூடுதல் பூஜைகள்

கூடுதல் பூஜைகளின் முக்கியத்துவம்
(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளிய விளக்கங்கள் )
அடியார் : கடந்த சில மாதங்களாக கூடுதல் பூஜைகள் பற்றி வலியுறுத்தி வருகின்றீர்களே, குருதேவா! இதைப்பற்றி மேலும் சில விளக்கங்களை அறிய வேண்டுகிறோம்.
சற்குரு : நவம்பர் 1997 வரை நம் நாட்டிலும், சமுதாயத்திலும், இல்லற வாழ்க்கையிலும், துன்பங்கள் பெருகுமாதலின் இவற்றினின்று நம்மைத் தற்காத்துக் கொள்ளவே ஒரு இரட்சையாக தினசரி பலர் ஒன்றுகூடி சத்சங்கமாகச் செய்ய வேண்டிய கூடுதல் பூஜைகளை வலியுறுத்தி வருகின்றோம்.
அடியார் : சத்சங்க அதாவது ஜாதி, மத, இன, குல வேறுபாடின்றி பலர் ஒன்று கூடும் கூட்டு வழிபாடுகள் தாம் கூடுதல் பூஜைக்கு ஏற்றதா?
சற்குரு : காலை சூரிய வழிபாடு, சந்தியாவந்தனம், காயத்ரீ ஜபம், தினசரிப் பூஜைகளை மனிதன் மறந்து வருகின்ற நிலையில் கலியுகத்தில் மிகவும் தெய்வீக சக்தி வாய்ந்த கூட்டு வழிபாடுதான்... தினசரி பூஜைகளை கைவிட்டதற்கான நஷ்டத்தையும் ஈடுசெய்து அதிக ஆன்மீக சக்தியையும் கூடுதலாகப் பெற்றுத் தருகின்றது. ஒருவர் தனித்து ஆயிரத்தெட்டுமுறை சகஸ்ரநாமம் ஒதுவதைவிட குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினருமாகப் பத்துபேர் ஒன்று சேர்ந்து ஒரு முறை ஓதினாலே ஒவ்வொருவரும் 10 முறை ஓதியதற்கான பலன்கள் கிட்டுகின்றதென்றால்.. ஏன்னே கூட்டு வழிபாட்டின் மஹிமை! எனவேதான் இதனை ஒவ்வொரு இதழிலும் வலியுறுத்தி வருகின்றோம்!
அடியார் : கூடுதல் பூஜை முறை எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டு ஸ்ரீஅகஸ்தியவிஜயம் இதழில் அளிக்கப்படுகிறது?
சற்குரு : ஒவ்வொரு நாளிலும், கிரஹ மூர்த்தி சஞ்சாரம், யோக நேரத்தின் சக்தி, அந்நாளுக்குரிய தெய்வமூர்த்தி, கிழமைக்கான தேவதா மூர்த்தி, அந்நாளுக்குரிய நட்சத்திரத்தின் பங்கு , ஹோர சக்திகள் போன்றவை கணிக்கப்பட்டு அந்நாளுக்குரிய  பூஜை முறை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அளிக்கப்படுகின்றது. உதாரணமாக செவ்வாய்க் கிழமையன்று, சஷ்டியும், விசாகமோ (or) கார்த்திகையோ சேர்ந்து செவ்வாய் ஹோரை மற்றும் பாலவகரணம் கூடிடில் அன்று ஸ்ரீசுப்ரமண்ய சகஸ்ரநாம பாராயணம் சிறப்புடையதாகிறது. இப்பூஜா இரகசியங்களைத் தக்க பெரியோர்களிடம் கேட்டறிந்திடில் பரிபூரணமான பலன்களைப் பெற்றிடலாம்! இது மட்டுமன்றி ஸ்ரீபவான , ஸ்ரீசாகம்பரி, ஸ்ரீபிரத்யங்கிரா போன்ற சக்தி வம்சத் துதிகளைத் தனியோரு மனிதன் நினைத்துக் கூடப் பார்க்க நேரமில்லாது இயந்திர கதியில் வாழ்கின்றான். நல்லசத்சங்கம் வாய்க்கும்போது கூட்டுப் பிரார்த்தனையில் இத்தகைய பல அரிய துதிகளைப் பாராயணம் செய்யும் தெய்வீக வாய்ப்பு கிட்டுகிறது. எனவே “ஸ்ரீஅகஸ்திய விஜயம்“ இதழில் அளிக்கப்படுகின்ற கூடுதல் பூஜைகளை சத்சங்க வழிபாடாக நிறைவேற்றி வந்திடில் எல்லாம் வல்ல ஸ்ரீசங்கரநாராயணப் பரம்பொருளின் கிருபையால் அனைத்துத் துன்பங்களையும் வெற்றி கொண்டு, கர்மவினைகளை எளிதில் தீர்த்து இறைமயமான நல்வாழ்க்கையைப் பெற்றிடலாம் என்பது உறுதி ! ஆழ்ந்தை நம்பிக்கை எதையும் சாதிக்க வல்லதாம்! ஜனவரி 1997க்குரிய கூடுதல் பூஜைகள்

தேதி

வழிபாடு

1.1.1997

ஸ்ரீபவானி சஹஸ்ரநாமம்

2.1.1997

ஸ்ரீதட்சிணாமூர்த்தி சஹஸ்ரநாமம்

3.1.1997

ஸ்ரீராமர் சஹஸ்ர நாமம்

4.1.1997

தசாவதாரத் துதிகள்

5.1.1997

சூர்ய கவசம்/ சூர்ய சஹஸ்ரநாமம்

6.1.1997

சிவ சஹஸ்ரநாமம்

7.`1.1997

ஸ்ரீசுபரமண்ய சஹஸ்ரநாமம்/ ஸ்ரீசுப்ரமண்ய புஜங்கம்

8.1.1997

ஸ்ரீநவக்ரஹ ஹோமம்/ சஹஸ்ரநாமம்

9.1.1997

ஸ்ரீஹனுமத் சஹஸ்ரநாமம்

10.1.1997

ஸ்ரீரங்கநாதர் சஹஸ்ரநாமம்

11.1.1997

ஸ்ரீசனீஸ்வர சஹஸ்ரநாமம்

12.1.1997

ஸ்ரீகணபதி சஹஸ்ரநாமம்

25.1.1997

ஸ்ரீராகு சஹஸ்ரநாமம் /கோளறு பதிகம்

26.1.1997

ஸ்ரீஅன்னபூரணி சஹஸ்ரநாமம்

27.1.1997

ஸ்ரீவிநாயகர்அகவல்/ஸ்ரீவிநாயகர் கவசம்

28.1.1997

சௌந்தர்யலஹரி/ அபிராமி அந்தாதி

29.1.1997

ஸ்ரீதுர்கா சஹஸ்ரநாமம்

30.1.1997

ஸ்ரீகிருஷ்ண சஹஸ்ரநாமம்

31.1.1997

ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ஹ சஹஸ்ரநாமம்

விஷ்ணுபதி

விஷ்ணுபதி புண்யகாலம்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக வருடத்திற்கு நான்கு முறை வரும் விஷ்ணுபதி புண்யகால தினமானது மிகச் சிறந்த புனித நேரங்களுள் ஒன்றாகும். பொதுவாக விஷ்ணுபதி புண்யகாலம் என்பது குறித்த நாளில் விடியற்காலை 2 மணி முதல் காலை 10.00 மணி வரை அமைவதாகும். ப்ரதோஷகாலம் போன்று விஷ்ணுபதிப் புண்யகாலத்திலும் செய்யப்படுகின்ற பூஜை, வழிபாடு, ஹோமம், அர்ச்சனை, அபிஷேக ஆராதனைகள், தான தர்மங்கள் போன்றவற்றிற்கு அபரிமிதான பலன்கள் உண்டு. எத்தனையோ அமாவாசை மற்றும் மாதப்பிறப்பு  தர்ப்பணங்களைத் தவற விட்டவர்களுக்கு விஷ்ணுபதி புண்யகாலத்தில் செய்யப்படுகின்ற தர்ப்பணமானது மிக அரிய ப்ராயசித்தங்களைத் தருகிறது. பலவிதமான புஷ்பார்ச்சனைகளில் ஒவ்வொரு புஷ்பமும் ஒவ்வொரு விதமான பலன்களைத் தரும். இதேபோல் ஒவ்வொரு விசேஷ தினமும் வெவ்வேறு விதமான அனுக்ரஹங்களைத் தருவதோடு நம்முடைய பலவிதமான கர்மவினைகளையும் தீர்க்கும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வருகின்ற இவ்விஷ்ணுபதி புண்யகால விசேஷ தினமானது ப்ரதோஷ கால பூஜைபோல் அனைத்துப் பெருமாள் கோவில்களிலும் சிறப்புடன் நடைபெறுவதற்கு வைணவப் பெரியோர்களும், இறை அன்பர்களும், பக்தர்களும் ஆவன செய்து ஸ்ரீமன்நாராயண மூர்த்தியின் அருட்கடாக்ஷத்திற்குப் பாத்திரமாகும்படி வேண்டுகின்றோம் பிரார்த்தனை செய்கின்றோம்.

மிகவும் அரிய, சித்புருஷர்களின் விளக்கங்களைக் கொண்ட “பிரதோஷ மஹிமை“ என்னும் அற்புதமான நூலை நமக்களித்துள்ள நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகள், ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகால மஹிமையினையும் யாங்கனும் பரப்பிட இறையருளால் பெருமுயற்சி எடுத்து வருகிறார்கள். நாம் ஏற்கனவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் இருடிகள் மஹாபாரதம், இருடிகள் ராமாயணம் என்ற சித்தர்களுக்கு உரித்தான புராணங்களைப் பற்றி பல கிரந்தங்கள் அமைந்துள்ளன என்பதையும் இவை குருவாய் மொழிகளாகத்தான் வெளிப்படும்... இவற்றில் நாமறியா பல அரிய இரகசியங்கள் நிறைந்துள்ளன என்பதையும் விவரித்து வருகின்றோம்.

கங்கை நதி தேவதை
கூவத்தூர்

மஹாபாரதத்தில்.....குந்தி தேவி கர்ணனும் தம் மகனே என்பதை இரகசியமாக வைத்து இருந்தமையால் ஏற்பட்ட விளைவுகளையும், இதனால் பாண்டவர்கள் அடைந்த துன்பங்களையும் நாம் அறிவோம். தர்மம் பிறழாமல் வாழ்ந்த தர்ம புத்திரர் அடைந்த கஷ்டங்களோ ஏராளம் ஏராளம்! அறத்தின் வடிவாய் வாழ்ந்த தர்மபுத்திரர் பல இடங்களில், அளவற்ற வேதனைகளின் காரணமாகத் தன் சுயநிலையையே பன்முறை இழந்து சினத்தின் வயப்பட்டார். குந்தி தேவி தன்னுள் இரகசியத்தைத் தேக்கியமையால் தான் மகாபாரதப் போரைத் தவிர்க்க இயலாமற் போயிற்றல்லவா! இதனை அறிந்த தர்மபுத்திரர் உணர்ச்சி வசப்பட்டு, “நீ மனதில் இரகசியத்தை வைத்தமையால்தான் நாட்டிற்கும் மக்களுக்கும் வேதனைகள் ஏற்பட்டன. எனவே..... இனிமேல் பெண்கள் இரகசியத்தைத் தம்முள் வைத்துக் கொள்ள இயலாமல் போவதாக!“ என்று சபித்து விட்டார்.,, தர்ம புத்திரர் அறத்தின் வழி, நின்றவர் அல்லவா ? அவர் கூட மகாபாரதப் போரில் அஸ்வத்தாமன் என்ற யானையின் இறப்பை வைத்து எதிரிகளை வெல்ல வேண்டி ஒருவகையான மாயையில் சிக்க வேண்டிய தாயிற்று.
தர்மரின் பிறழ்ந்த தர்மம்
தர்மபுத்திரர் அந்த க்ஷணம் வரை தன் வாழ்நாளிலேயே எவ்விதப் பொய்யும் கூறாது அறநெறியில் தழைத்து நின்றவர். மேற்கண்ட நீதி தவறிய சம்பவம் நிகழும்வரை அற தேவதை நான்கு கால்களில் நன்றாக நின்றது. தர்மபுத்திரர் இவ்வாறு அசத்தியத்தைத் தழுவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டவுடன் அவர் பாதங்களில் வெம்மையான இரண்டு சொட்டு நீர்த் துளிகள் விழுந்தன. தர்மர் திடுக்கிட்டுப் பார்த்தார். எதிரே அறதேவதையான பசு, கண்களில் நீர்மல்க மூன்றே கால்களில் நின்று கொண்டிருந்தது.
கண்ணீர் வடித்தவாறே நின்று கொண்டிருந்த அறதேவதை பேசலாயிற்று. “தர்ம புத்திரரே! உண்மையையே பேசி தர்மத்தை நிலைநாட்டுகின்ற ஒரே ஒரு ஜீவன் இப்பூவுலகில் இருக்கும் வரை தர்ம தேவதையாகிய நான் நான்கு காலில் பூமியில் நின்று தர்மத்தைக் காக்க வேண்டும் என்ற நியதி எனக்குண்டு ஆனால் மூன்று காலில் நிற்க வேண்டிய விபரீதமான நிலை இப்பொழுதே, இந்த துவாபர யுகத்திலேயே ஏற்படும் என்று நான் எண்ணவே இல்லை!“ – என்று கண்ணீர் வடித்தவாறே தர்மதேவதை சென்றது. அத்தகைய உயர்ந்த ஆன்மீக நிலையில் பிரகாசித்தவர் அன்றோ தர்மபுத்திரர்! அதனால்தான் அவர் “பெண்கள் இனிமேல் இரகசியத்தை காப்பாற்ற முடியாமல் போவதாக“ என்று சாபமிட்ட உடனேயே அது பலனளிக்கத் தொடங்கியது.

காவிரி நதி தேவதை
கூவத்தூர்

சாப விளைவுகள்
தர்மரின் சாபத்திற்கு ஏற்றவாறு உடனடியாக பூலோகத்தில் பெண்கள் இரகசியத்தை காக்கும் சக்தியை இழந்தனர். இதனால் எத்தனை விபரீதங்கள் ஏற்பட்டன தெரியுமா? சூழ்நிலைச் சந்தர்ப்பம், நிர்பந்தம், போன்றவற்றுக்காகப் பெண்கள் பல இரகசியங்களை வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படும் அல்லவா. ஆனால் தர்ம புத்திரரின் சாபம் காரணமாக, லட்சக்கணக்கான குடும்பங்களில் பெண்கள் தங்கள் இரகசியங்களை வெளியிட்டு விட குடும்பங்களில் ஒற்றுமை குலைந்து தாம்பத்ய உறவு, கூட்டுக் குடும்பம் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தேவாதி தேவர்களும் மகரிஷிகளும் வேதனையுற்றனர். இல்லற பூஜைகள் தடைப்பட்டன, விசேஷ தின பூஜைகளும் நின்றுபோயின. இவ்வாறாக லட்சக்கணக்கான குடும்பங்களில் மனசாந்தி, திருப்தி இல்லாமல் மனிதகுலமே வேதனைகளால் அவதியுற்றது. பூலோக மக்களும், தேவாதி தேவர்களும் ஸ்ரீதர்மபுத்திரரை நாடி விளக்கம் பெறத் துடித்தனர்.
தர்மபுத்திரரும் நிலை குலைந்து நின்றார். கடும் யோசனையில் ஆழ்ந்தார். குந்திதேவிக்கும் இன்னல்கள் ஏற்பட்டன. அவர்தன் தாயை சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி... “தாயே அறிந்தோ அறியாமலோ பெரும் பிழை செய்து விட்டேன். தாங்கள் ஸ்ரீசூர்யநாராயண சுவாமியையும் ஸ்ரீஆஞ்சநேயரையும் ஏனைய மூர்த்திகளையும் உபாசித்து பெறற்கரிய தபோபலனைப் பெற்றுள்ளீர்கள். தாங்கள் நினைத்தால் நான் அறியாமையால் அளித்த சாபத்தை மன்னித்து அதனை மாற்றிவிடக் கூட முடியும் . எனவே என் பிழையைப் பொறுத்து என்னுடைய சாபத்தை திருத்திக் கொள்ள தாங்கள்தான் தயை கூர்ந்து கருணை செய்ய வேண்டும்.
குந்தி, “தர்ம புத்திரா! நீ சாபம் அளித்ததாக நான் எண்ணவே இல்லையே! உன் மூலமாக கண்ணன் ஏதோ திருவிளையாடல் புரிய விழைகின்றான். எனவே நீ இதைப்பற்றி கவலை கொள்ள வேண்டாம்,” என்று கூறி தர்மரின் சாபத்தைத் தானே ஏற்றுக் கொண்டாள். ஏன் தெரியுமா?
விரக்தி தோஷம்
தர்மரின் சாபத்தால் லட்சக் கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன அல்லவா! இதனால் எண்ணற்ற சுமங்கலிகளின் சுமூகமான இல்லற வாழ்க்கையிலும் துன்பப் புயல் வீசியது. பதிவிரதா தேவியர் கூட பாதிக்கப்பட்டனர். சுமங்கலிகளைக் காத்தருளும் புண்ய சக்திகள் ஒன்றாய்த் திரண்டு தர்மபுத்திரரைத் தாக்கின. சுமங்கலிகள் விரக்தி தோஷம் என்ற தோஷம் அவரைத் தொடர ஆரம்பித்தது. காரணமென்ன? தாயை சபிப்பதற்கு மகனுக்கு எவ்வித உரிமையும் இல்லை. தர்மபுத்திரர் தன் கடமையிலிருந்து தவறியதால் அவருடைய சாந்தமான நிலையும் பாதிக்கப்பட்டது. கௌரவம், மரியாதை, சமூக அந்தஸ்து, பலவித ஆசைகள், ஏக்கங்கள் கணவனின் ஆணை, அச்சம் காரணமாக பல இல்லறப் பெண்கள் இரகசியங்களைத் தங்களுக்குள் வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும், வெளியானால் என்னவாகும்? பெரும் குடும்பப் பிரளயம் அல்லவா ஏற்படும். சுமங்கலிகள் விரக்தி தோஷத்தால் தர்மருக்குத் தம் புத்திரர்களை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஸ்ரீஆதிகேசவப் பெருமாள்
கூவத்தூர்

பெற்றோர்களை அநாதை ஆக்காதீர்கள்
தற்காலத்தில் பிள்ளைகள் நல்ல வசதியுடன் இருப்பினும் பிள்ளைகளைப் பிரிந்து தனி வீட்டிலோ ஆஸ்ரம/அனாதை இல்லங்களிலோ பெற்றோர்கள் வாழ வேண்டிய துர்பாக்ய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டிலுள்ள பிள்ளைகள் லட்ச லட்சமாகச் சம்பாதித்திட, தாய் நாட்டில் பெற்றோர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு தனிப்பெரும் வீட்டில் அச்சம், பீதி, கலவரத்துடன் வாழ்கின்ற பெற்றோர்கள் பலருண்டு. நேரில் பார்த்து பேசி அன்புடன் பழக வேண்டிய மகன், மகள், பேரன், பேத்திகளை தொலைபேசி மூலமாகவாவது பேசிடலாம் என்று ஏங்கித் துடிக்கின்ற தாய் தந்தையர் எத்தனை எத்தனை! மகன், மகள் எங்கெங்கோ சுகமாக வாழ்ந்திட தாய் தந்தையரோ கவனிப்பாரற்றுக் கிடக்கும் இல்லங்கள் எத்தனை எத்தனை!...
புத்திரர்களைப் பிரிந்து வாழும் தர்மபுத்திரரைப் பார்த்து குந்தி தேவி, “தர்மா உன் சோக நிலையை நான் அறிவேன் ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்! கலியுகத்தில் இத்தகைய சூழ்நிலைகள் பல குடும்பங்களில் உருவாகும். தாயைப் பழித்தோர், சபித்தோர் புத்திரர்களை விட்டு வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் எனவே அறிந்தோ அறியாமலோ கலியுக மக்கள் செய்கின்ற தவறுகளுக்கு நாமல்லவோ பிராயச்சித்தம் பெற்றுத் தர வேண்டும்.“
“எந்த ஒரு துன்பத்திற்கும் பரிகாரம் அளிக்க வேண்டுமெனில் அத்துன்பத்தை அனுபவித்தால்தான் ப்ராயச்சித்தம் தர முடியும். எனவே உன் சாபத்தால் நானும் சுமங்கலிகள் விரக்தி தோஷத்தால் நீயும் வருகின்ற துன்பங்களை மனமுவந்து ஏற்போம்”, என்று கூறி சுமங்கலிகள் விரக்தி தோஷ துன்பங்களைப் பல ஆண்டுகள் அனுபவித்து எம் பெருமான் கண்ணனைச் சரணடைந்தனர். “தர்மபுத்திரா! உன் தாயுடன் எங்கு வந்து நிற்கின்றாய்.... உன்னுடைய சாபத்தால் குந்தி மட்டுமல்லாது எண்ணற்ற பூலோகப் பெண்களும் அவதியுற்றிருக்க, நீயோ சுமங்கலிகள் விரக்தி தோஷத்தால், புத்திரர்களைப் பிரிந்து வாடித் துன்புறுகின்றாய், இவ்விரண்டிற்கும் பிராயசித்தத்தைத் தரவல்லவர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் மூர்த்தியாவார்.

ஸ்ரீமரகதவல்லி தாயார்
கூவத்தூர்

காரணம் ஆதிகேசவரே..
1. பழம்பெரும் பாவமாகிய தாயைச் சபித்த தோஷம் அகல்தல்
2. சுமங்கலிகள் விரக்தி தோஷத்தால் விளைந்த பூலோக துன்பங்களை துரிதமாகத் தீர்த்தல்....
3. ஜேஷ்டா தேவிக்கு ச்ரேஷ்டை அளித்தவராதலின் பெண்களைச் சூழ்ந்துள்ள வேதனைகளுக்கு நிவாரணம் அளித்தல். ஆகியவற்றை அருள்பாலிக்கின்றார்.
அனுமனின் (தாய்) சேவை
பெற்ற தாய்க்குச் சேவை புரிவதில் பெரும் பாக்யம் பெற்றவரே ஸ்ரீஅனுமார்! சிறு பாலகனாக, ராவணனை விட வல்லமை பெற்ற வாலியையே அச்சமுறச் செய்தவர்! தன்னுடைய பால சேஷ்டைகளையெல்லாம் பொறுத்தருளியமையால் ஆஞ்சநேயர் தன் தாய் அஞ்சனா தேவியிடம் பெரும் பக்தி பூண்டிருந்தார். ராவண வதத்தினால் ஏற்பட்ட தோஷம் தீர ஸ்ரீராமரும் சீதையும் ஒரு சிவலிங்கத்தைப் ப்ரதிஷ்டை செய்ய வேண்டி ஸ்ரீஆஞ்சநேயரைத் தக்க ஒரு சிலாக் கல்லை எடுத்து வருமாறு கூறிட ஸ்ரீஆஞ்சனேயர் தாமதமாக வந்திட சீதா தேவி மண்ணைப் பிடித்து சிவலிங்கமாக்கி பூஜித்த புராணத்தை நாம் அறிவோம்! ஆஞ்சநேயர் நினைவாற்றலினால் நிரந்தரமான காரியங்களைச் செய்பவர். தான் கொண்டு வந்த சிவலிங்கம் ராமரால் ஏற்கப்படாமையால் (என்றுமே சினத்தை அறிந்திரா ஸ்ரீ ஆஞ்சனேயர் கூட!) சற்றே சினம் கொண்டார்.

ஸ்ரீசக்கரத்தாழ்வார்
கூவத்தூர்

உடனே ஸ்ரீராமர் தீர்க தரிசனமாய் ஜகன்மாதாவாகிய சீதாதேவியிடம், “அம்மா, நம் குழந்தை ஆஞ்சனேயன் சற்றே தாமதித்து வந்து விட்டான். இல்லாவிடில் அவன் கொண்டு வந்த சிவலிங்கத்தைப் பூஜிக்கும் பாக்யத்தை நாம் பெற்றிருப்போம் அல்லவா!” என்று கூறிட ஜகன்மாதாவும், “ஆமாம் பிரபோ! நம் குழந்தை ஆஞ்சனேயனின் திருக்கரங்கள் பட்ட சிவலிங்கத்தைப் பூஜிக்கும் பாக்யம் எனக்குக் கிட்ட வில்லையே என்று ஏங்குகிறேன்“ என்றாள். ஸ்ரீஆஞ்சனேயர் அதிர்ந்து நின்றார். அவர் கண்களில் நீர்தாரை தாரையாகப் பொங்கிற்று., “என்னே இது நானே.... நான் கொணர்ந்த லிங்கத்தை ப்ரதிஷ்டை செய்ய வில்லையே என்ற மன வருத்தத்தில் சற்றே சினம் கொண்டுவிட்டேன்... என்ன அபசாரம் இது! என் ஆருயிராய் விளங்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும் ஜகன்மாதா சீதா தேவியும் ‘நம் குழந்தை’ என்றல்லவோ என் மீது அன்பைப் பொழிகின்றார்கள்.... என் தாயின் மீதா சினம் கொண்டேன்? இதற்கு நான் பரிகாரம் தேடி ஆக வேண்டுமே. ஒரு க்ஷண நேரம் கூட தாயின் மீது கோபம் கொண்டால் அது பெரும் பாவம் ஆயிற்றே. இதற்கு நான் எங்கே சென்று பரிகாரம் தேடுவேன்..?” என்றவாறாக ஆஞ்சநேயர் கண்ணீர் வடித்துப் புலம்பினார். “தாயின் மீது கோபம் கொள்வது தாயை சபிப்பதற்கு ஈடாகுமே. என்னே அபசாரம் செய்து விட்டேன். ஜகன்மாதா ஜானகிதேவி மீதா சினம் கொண்டேன், எந்நேரமும் ராமநாமத்தில் லயித்து இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தேனே. அந்த இமைக்கும் நேரத்தில் சினம் என்னை ஆட்கொண்டு விட்டதே. அந்நேரத்தில் ராமநாமத்தை விட்டுவிட்டேனோ? ப்ரபஞ்சத்திற்கே ஜகன்மாதாவான சீதையிடம் கோபம் கொண்டு விட்டேனே..?” ஸ்ரீஆஞ்சநேயர் கதறிக் கண்ணீர் உகுத்தார்.

சினம் தீர்க்கும் பலிபீடம்
கூவத்தூர்

ஸ்ரீஅனுமபக்த விஜயம்
தன் உடலில் தான் கொணர்ந்த ஏனைய சிவலிங்கங்களை சுமந்தவாறு திருவலியதாயம், திருமுல்லைவாயில் போன்ற பல இடங்களில் லிங்கத்தைப் ப்ரதிஷ்டை செய்தவாறே ஜகன்மாதாவிடம் சினம் கொண்டதற்கான பிராயச்சித்தத்தை தேடிவந்தார் ஸ்ரீஹனுமார். இவ்வாறாக அவர் ப்ரதிஷ்டை செய்த லிங்கங்களே அனுமன் பூஜித்த லிங்கங்களாக அமைந்து அருள்பாலிக்கின்றனர்.. இதோ ஆஞ்சநேயர் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டு பல திருத்தலங்களில் பல்வேறு மூர்த்திகளையும் தரிசித்து வருகிறார். அத்திருக்கோயிலின் எதிரே ஓர் அழகிய குளம்.. நீர் நிறைந்து அன்னப்பறவைகளுடன் கவினுறத் தோற்றமளித்தது. ஆஞ்சனேயர் அத்தீர்த்தத்தில் நீராடி எழுந்து, “ஆதிகேசவா! அடியேன் ஜகன் மாதாவாகிய சீதாபிராட்டியிடம் ஒரு க்ஷண நேரம் கோபம் கொண்டு விட்டேன். இதற்கு தாய்க்குச் சாபம் இட்ட தோஷ பலன்கள் அல்லவா ஏற்படும்! தாங்கள் தான் அடியேனுக்கு கருணை புரிந்துச் சாபவிமோசனம் அளிக்க வேண்டும்”.
“ராம நாம நினைவாற்றல் பூண்டவன் என்று இது வரையில் செருக்கு கொண்டிருந்தேன். அதற்குத் தண்டனையாக இமைக்கும் நேரத்தில் ராமநாம லயமும் குறைந்து சினமும் மிகுந்து.. என்னே விபரீதம்! ஸ்ரீஆதிகேசவா! என் மனக் குழப்பத்தைத் தீர்த்து அருள்புரிவாயாக”, என்று பிரார்த்தனை செய்தார்.

ஸ்ரீஅஞ்சனா மைந்தன்
கூவத்தூர்

ஆங்கே ஸ்ரீஆதிகேசவ பெருமாள் தாயாருடன் ப்ரசன்னமானார்.
ஆஞ்சநேயா இக்கூவத்தூர் திருத்தலத்தில் தான் உன் சம்பந்தப்பட்ட என்னுடைய லீலை பூர்ணமடைகின்றது. கலியுகத்தில் குழந்தைகளைவிட்டுப் பிரிந்து வாடுகின்ற குடும்பத்தினர் ஏராளமாக  இருப்பர். அவர்களுக்குப் பிராயச்சித்தம் அளிக்கும் பொருட்டு யாம் உன் மூலமாக இந்த லீலா விநோதங்களைப் புரிந்தோம். கலியுகத்தில் தாய்க்குரிய தெய்வ ஸ்தானத்தை அளிக்காது தாயைப் பழிக்கின்ற, நிந்திக்கின்றவர்களே ஏராளமாய் இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் தரும் வண்ணம் இத்தீர்த்தத்தின் மகிமையை உலகிற்கு நீ எடுத்துரைப்பாயாக. ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் இத்திருக்குளத்தில் நீராடிய ஸ்ரீஆஞ்சநேயருக்கு தீர்த்த மகிமையை விளக்கி அருள் பாலித்த நேரமே விஷ்ணுபதி புண்யகாலமாகும். அதாவது அந்த யுகத்தின் விஷ்ணுபதி புண்யகாத்தில் தான் ஸ்ரீஆஞ்சநேயருக்குப் பிரசாந்தம் கிட்டியது.
தீர்த்த மகிமை :-
கூவத்தூர் திருக்குள தீர்த்தத்தில் நீராடி பெரியோர்களுக்குப் பாதபூஜை செய்திடில்
1. தாய்க்கு சேவை செய்யாத தோஷங்களுக்கான பிராயச்சித்தம் கிட்டும்.
2. தாய் மீது எக்காரணம் கொண்டும் சினம் கொண்டு ஏவுதல் கூடாது. தாயை நிந்தித்த/ ஏசிய குற்றங்களுக்கான பிராயச்சித்தத்தைத் தரவல்லது இத்தீர்த்தமே ஆகும்.
3. நைஷ்டிக பிரம்மசர்ய மூர்த்தியான ஸ்ரீஆஞ்சநேயர் தாம் இழந்ததாகக் கருதிய தம் நினைவாற்றலைப் பன்மடங்கு சக்தியுடன் மீண்டும் பெற்ற திருத்தலமே கூவத்தூர் ஆகும். எனவே நினைவாற்றல், ஞாபகசக்தியை பெருக்கிக் கொள்ள விரும்புவர்கள் இத்தீர்த்தத்தில் நீராடி உளுந்து வடையை நைவேத்தியமும் தானமும் செய்திடில் மனம் தெளிந்து நினைவாற்றல் பெருகும்.

கூவத்தூர்

4. முறையற்ற காம உணர்வுகளால் தவறிழைத்தோர்களுக்கு இத்தீர்த்தமே ஒரு பரிஹாரமாக அமைந்து அவர்கள் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் அளிக்கிறது. அத்தகையோர் இத்தீர்த்தத்தில் நீராடி முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை இவற்றை ஏழைகளுக்குத் தானமாக அளிக்க வேண்டும். ஸ்ரீதர்மபுத்திரர், ஸ்ரீகிருஷ்ணன் அருளியபடி ஸ்ரீஆதிகேசவ பெருமாள் எழுந்தருளியுள்ள தலங்களில் பெரியோர்களுக்குப் பாதபூஜை, கோபூஜை, அன்னதானம் நிகழ்த்தியவாறாக கூவத்தூர் ஸ்ரீஆதிகேசவபெருமாள் ஆலயத்தை அடைந்தார். இங்கு தன் தாய் குந்தி தேவியுடன் இத்திருக்குளத்தில் நீராடி பலவிதமான பூஜைகளையும், ஹோமங்களையும், தானதர்மங்களையும் நிகழ்த்திப் பெருமானைத் துதித்தார். ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் காட்சி தந்து, “பெண்களுக்கு எற்படும் துன்பங்களுக்கு நிவாரணம் தருவதற்காகவே இத்தீர்த்ததைப் படைத்துள்ளோம், எனவே உங்களுடைய மனோபீஷ்டங்கள் இங்கு நிறைவேறுவதாக!” என்று அருளினார். இவ்வாறாக... தர்மபுத்திரர் சுமங்கலி ஹத்தி தோஷத்திலிருந்து நிவாரணம் பெற்ற தலமே கூவத்தூர் ஆலயமாகும். குந்தி தேவியும், தர்மபுத்திரரும் பெறற்கரிய பெரும் பேற்றைப் பெற்ற நேரமே துவாபரயுக தாத்ரு வருட விஷ்ணுபதி புண்ணிய காலமாகும்.

ஸ்ரீஅரதத்தர்

ஹரதத்தாச்சாரியார் என்னும் உத்தமர் இளவதிலேயே சிவ வைணவ பேதத்தைக் கடந்தவராய் பக்திப் பெருவாழ்க்கையைப் பெற்றிருந்தார். வீர வைணவ குலத்தில் உதித்திருப்பினும் பரம்பொருளை சங்கர நாராயண ரூபத்தில் கண்டு திளைக்கும் இறையனுபவத்தையும் பெற்றிருந்தார். தன் வாழ்க்கையில் எந்த நேரத்திலும் சினம் என்பதையே அறியாதவராய் தெய்வீக வாழ்க்கையை அடைந்திருந்தார். ஹரதத்தாச்சாரியார் தம் விஷ்ணுபதி புண்ய கால மஹிமையை யாங்கணும் பரப்பி வந்தார். பிரதோஷ காலத்தில் அவதரித்த நரசிம்ம மூர்த்திக்கு பிரதோஷ கால பூஜையை அமைத்துக் கொடுத்தவரும் இவரே. இன்றைக்கும் பல ஸ்ரீநரசிம்மரின் திருக்கோயில்களில் பிரதோஷ கால பூஜைக்கு வித்திட்ட ஹரதத்தாச்சாரியார் தாத்ரு வருடத்தில் விஷ்ணுபதி புண்ய தினத்தன்று நாராயணப் பரம்பொருளுடன் ஐக்கியமானார். அவர்தாம் கூவத்தூர் திருக்குளத்துத் தீர்த்தத்தின் மஹிமையையும், இங்கு தருமபுத்திரரும் குந்திதேவியும் மற்றும் ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமியும் கூவத்தூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாளைச் சரணடைந்து அருள் பெற்ற புராண வரலாற்றையும் கலியுக மக்களுக்கென எடுத்துரைத்தார். எனவே வரும் விஷ்ணுபதி புண்ய காலத்தில் குறைந்தது 80 வயது நிரம்பிய முதிய தம்பதியினரை ஹரதத்தாச்சாரியாராக பாவித்துப் பாத பூஜை செய்து பெறற்கரிய அனுக்கிரஹத்தைப் பெற்றிட வேண்டும். இன்று ஹரதத்தாச்சாரியாருக்கு அர்க்யம் அளித்து துதித்தலும் சிறப்புடையது.

அமுத தாரைகள்

1. இண்டர்வியூ செல்வோர் கவனத்திற்கு :-
நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்வோர் நன்றாகப் படித்துத் தயாரான நிலையில் இருந்தாலும் தேர்வு செய்யும் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. பலரும் அனுபவிக்கும் பிரச்னை இது! இக்குறையை நிவர்த்தி செய்கிறார் திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள ஸ்ரீசெவ்வந்தி விநாயகர். இவருக்கு மஞ்சள் நிற செவ்வந்திப் பூ சார்த்தி (துலுக்கசெவ்வந்தி அல்ல) உச்சித்தலை அழுந்தும் வண்ணம் குனிந்து 108 முறை வீழந்து இவரை வணங்கி முறையாக மலையை கிரிவலம் வந்து இயன்ற தானங்களைச் செய்து தேர்வுக்குச் சென்றால் சிறப்பாக கேள்விகளுக்கு விடையளிக்கலாம். வெற்றியைத் தருவார் செவ்வந்தி விநாயகர்! செவ்வந்திப் பூவிற்கு மனக் குழப்பத்தையும் நெஞ்சு படபடப்பையும் போக்கும் அற்புத மருத்துவ குணமுண்டு. துலுக்க (ஆரஞ்சு நிற) செவ்வந்தி கூடாது.!
2. குழந்தைகள் நலமாய் வாழ :-
நவீன காலத்தில் புகை பிடித்தல், மது, சூதாட்டம் போன்ற தவறுகளில் இளம் சிறுவர்கள் ஈடுவடுவதைக் கண்டு பெற்றோர்கள் மனம் வருந்துகின்றனர். தமது குழந்தைகள் ஒழுக்கத்துடன் வாழ உறுதுணையாக நிற்பது நீத்தார் கடன் தீர்த்தல் என்னும் பிதுர் தர்ப்பண பூஜை முறைகளே. நமது மூதாதையர்களின் மனம் குளிர்ந்து அளிக்கும் ஆசிகளே நம் குழந்தைகளை நல்வழியில் நடத்தித் தீய சகவாசம், தொடர்புகளிலிருந்து பாதுகாக்கும். திருவள்ளூர், திருவிடைமருதூர், கும்பகோணம் சக்கரப் படித்துறை போன்ற இடங்களில் அமாவாசை, மாதப் பிறப்பு, அயன புண்ணிய காலங்கள் இவற்றில் மூதாதையர்களை வழிபட்டு, எள் நீர் அளித்து இயன்ற தான தருமங்களை ஆற்றி மூதாதையர்களின் நல் ஆசியைப் பெறுவோமாயின் நம் குழந்தைகளும் தீய வழியில் செல்லாது.
3. இறந்த பின்பு வசதியான (ஆவிப்) பிராயணம் :-
உயிர் உடலை விட்டுப் பிரிந்த பத்தாவது நாள்தான் தனது அடுத்த பயணத்தைத் தொடர்கிறது. அப்போது பூமியில் செய்த செயல்களுக்கேற்ப நெருப்புப் பிழம்புகள் வழியே பயணம் செய்ய வேண்டிய நிலைகளும் ஏற்படும். அச்சமயங்களில் தாங்க இயலாத வேதனையை அவ்வுயிர் அனுபவிக்கும்! இறந்தவரின் உறவினர்கள் அளிக்கும் நீர் மோர், பானகம், குடை, செருப்பு போன்ற தானங்களே உயிருக்கு அருமருந்தாகும். இறந்தவர் செல்லும் பாதையைக் குளிரவைத்து சுகமளிக்கும் ஆற்றல் உடையவை இத்தகைய தானங்கள்.
4. ஆணிகால் குணமாக
ஆணிகால் வியாதியால் துன்புறுவோர்களுக்கு இதோ ஓர் அற்புத மருந்து! பாரம் சுமக்கும் காளை மாடுகளுக்கு லாடம் அடிக்க உங்களால் முடிந்த பொருளுதவியையும் சரீர சேவையையும் செய்திடுக! நடனக் கோளத்திலிருக்கும் நர்த்தன விநாயகருக்குப் பால் அபிஷேகம் செய்து ஏழைகளுக்குக் காலணிகளை தானமளித்து வர எவ்விதக் கடுமையான கால் ஆணியும் குணமாகும். திருச்சியில் காலாணிச் சித்தர் என்பார் இத்தகைய அரிய சேவகளைச் செய்து மக்களுக்கு அருட்பணியாற்றி வந்தார்.
5. தண்ணீர் எவ்வாறு பிறந்தது?
பூலோகம் முதலில் படைக்கப்பட்டபோது அதில் நீரே இல்லை. அதனால் உயிர்கள் இறக்க நேரிட்டது. மக்களின் துன்பம் தீர்க்க முன்வந்தார் சுதீக்ஷண மகரிஷி. பல யுகங்கள் கடுமையாக தவமியற்றி இறைவனிடம் வேண்டி நீரை பூமிக்குக் கொண்டு வந்தார். அனைத்து உயிர்களும் உய்வடைந்தன. எனவே ஒவ்வொரு நாளும் நாம் நீரைப் பயன்படுத்தும் போதும் ஸ்ரீசுதீக்ஷண மகரிஷியைத் தியானித்து நன்றி செலுத்த வேண்டும். அதனால் ஜல தோஷங்களும் நீங்கும்.
6. இரத்த சோகைக்கு எளிய மருந்து :-
இரும்புச் சத்து குறைவினால் இரத்த சோகை ஏற்பட்டு பலர்  பசியின்மை, சோர்வு போன்ற துன்பங்களை அடைகிறார்கள். மாதவிடாய் காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவதால் பொதுவாக பெண்களுக்கு ஆண்களைவிட இரும்புச் சத்து அதிகமாக தேவைப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கும் இரும்பு சத்து ஓர் அத்தியாவசியமான ஊட்டச் சத்தாகும். கருவேப்பிலையை பொடி செய்து உணவில் கலந்து ஏதாவதொரு கோயிலில் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால் இரத்த சோகை மறையும். உற்சாகம் ஏற்படும். வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும். இராணுவத்தில் பணியாற்றி மறைந்த மூதாதையர்களின் நினைவுகளில் இத்தகைய தானத்தைச் செய்தால் அவர்களின் ஆசியை எளிதாகப் பெறலாம்.
7. புவனேஸ்வரியின் கோபம் தணிய :-
நாம் அன்றாடம் பூமியின் மேல் மல ஜலம் கழிக்கிறோம். இதனால் பூமாதேவி அசுத்தமடைவதால் நம்மைச் சபிக்கிறாள். இச்சாபத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால் “ஓம் ஸ்ரீசோமசுந்தராய நம:” என்று தியானித்து மல ஜலம் கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற செயல்களைச் செய்ய வேண்டும். இதனால் புவனேஸ்வரியின் சாபத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். யானைக்கு உணவிட்டால் பூமாதேவி மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்கிறாள்.
8. காவி அணியலாமா?
குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள பலரும் (சம்சாரிகள்) சபரிமலை/மற்றும் ஏனைய விரதங்கள் ஏற்போரும் தற்போது காவி உடையணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். இது மிகவும் வேதனைக்குரிய விஷயம். எல்லாம் துறந்தவர்களே, அனைத்தையும் விட்டவர்களே காவி உடை அணியலாம் என்பது இறை நியதி. மற்றவர்கள் அணிந்தால் சாபமே விளையும். ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனுக்கு விருப்பமான கறுப்பு அல்லது நீல நிற உடையை அணிய வேண்டும். மேலும் விளக்கங்கள் அறிய குருவை நாடவும்.
9. குழந்தைகளின் வளர்ச்சிக்கு :-
தங்கள் குழந்தைகள் உயரமாக இல்லை, போதுமான வளர்ச்சி இல்லை என்று மனம் வருந்தும் பெற்றோர்கள் நிறைய உண்டு. இதோ அவர்களுக்கு ஓர் எளிய மருந்து. பெரிய இரட்டை பீன்ஸ் Double beans கலந்த உணவினை தானமாக அளித்து வந்தால் குழந்தைகள் சீரான வளர்ச்சி அடைவர். புரதச்சத்து குறைவை நிறைவு செய்வது Double Beans தானம்.
10. திருமணத் தடங்கல் நீங்க :-
வியாழக்கிழமை இராகு கால நேரத்தில் (மதியம் 1½ - 3) துர்கையை முறையாக தீபமேற்றி வழிபட்டு எலுமிச்சை சாதம் தானம் செய்து வந்தால் நெடுநாள் தடைபட்டிருந்த திருமணங்கள் கூடி வரும். பெண்களுக்கான திருமணத் தடங்கல்களை துரிதமாக நிவர்த்தி செய்கிறது வியாழனுக்குரிய துர்க்கை வழிபாடு.
11. தண்ணீர் அருந்தும் போது :-
காய்ச்சி ஆறிய நீரையே குடிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும். விஞ்ஞான ரீதியாக மட்டுமின்றி இதனால் உடலும் உள்ளமும் தூய்மை பெறும். அக்னியில் தீய சக்திகள் ஓரளவு பஸ்மமாகின்றன. நீர் அருந்தும்போது கங்கை, யமுனை, கோதாவரி , சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி என்ற இந்த புண்ணிய நதி தேவதைகளை தியானிக்க வேண்டும். இதனால் அருந்தும் நீர் புனிதமடைந்து நமக்கு நன்மை பயக்கும். முடிந்தவரை வெளியிடங்களில் நீர் அருந்துவதைத் தவிர்க்கவும்.
12. சிறந்த வாழ்வு :-
ஒரு குடும்பத்தில் ஆண், பெண் இருபாலாரென குழந்தைகளும் நிறைந்திருக்க வேண்டும். ஆண் குழந்தைகள் மட்டுமோ அல்லது பெண் குழந்தைகள் மட்டுமோ இருப்பது சில வித சாபங்களைத் தரும். பொருளாதார நிலைமையை ஒட்டி பிறப்பை நிர்ணயிப்பதோ, இயற்கையற்ற முறையில் பிறப்பைத் தடுப்பதையோ கருத்தடை முறைகளையோ நம் பெரியோர்கள் ஏற்பதில்லை. செயற்கையாக வாழ்வதை விட ஆழ்ந்த, பக்குவமான மன அடக்கத்துடன் வாழ்வதே சிறப்புடையது. இதனையே நாளிருமுறை, வாரமிருமுறை, மாதமிருமுறையெனப் பூடகமாக, நல்ல ஆரோக்யம் பெறும் முறையை நம் முதியோர்கள் நிர்ணயித்துள்ளனர். பெண் குழந்தையற்றோர், ஆண் குழந்தையற்றோர்க்காகச் சில விசேஷமான தரிசன முறைகள் திருஅண்ணாமலை கிரிவலத்தில் உண்டு. சற்குரு மூலம் இதனை அறிந்திடுக! மலையை தரிசித்தவாறே ஆழ்ந்த இறைநம்பிக்கையுடன் திருஅருணாசலத்தை கிரிவலம் வருவோர்க்கு, விதிப்படி இருப்பின் இத்தரிசனங்கள் கிட்டும்.
13. சாலையில் செல்கையில் இயன்றவரை தம்பதிக்கிடையே செல்லாது அவர்களைப் பிரிக்காது ஒதுங்கிச் சென்றிடுக! பசுவையும் வலமாகச் சுற்றி, பிஷ்டப் பகுதியைத் (ஸ்ரீலட்சுமி தேவி வசிக்கும் புனிதப் பகுதி) தொட்டு வணங்கிச் செல்லவும். எதிரே ஏழைகள் தென்படில் இயன்றவரை ஏதேனும் பொருளாகக் கொடுத்துவிடுக! இயலாவிடில் ஸ்ரீகாயத்ரீ, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய போன்ற மந்திரங்களைத் துதித்து அதன் பலன்களை அவர்களுக்கு அர்ப்பணித்துச் சங்கல்பம் செய்து மானசீகமாக சமர்ப்பித்திடுக!
14. பெண்கள் உத்யோகத்திற்குச் செல்லுமுன்
1. புவனசாரம் 2. மும்மூர்த்தி வாசம்  3. விண்டுபுரம் 4. கலிஜத் 5. காஞ்சி 6. லயஜித் 7. ஸகலஸித்திபுரம் 8. தபோமயம் 9. பிரம்மபுரம் 10. கன்னிக் காப்பு 11. சிவபுரம் 12. இப்புரத்தீசா சிவசிவ என்ற 12 நாமங்களையும் சொல்ல வேண்டும். அலுவலகத்தில் ஏற்படும் எவ்வித இடையூறுகளும் தீரும்.
15. வியாபாரிகள் தாங்கள் கொடுத்த கடன் தொகைகள திரும்ப பெற்றிட செவ்வாய் தோறும் ஸ்ரீசுதர்சன பஹவானை (சக்கரத்தாழ்வார்) கீழ்க்கண்ட 5 நாமாவளிகளை 21 முறைக்குக் குறையாமல் ஓதி, 21 முறையேனும் அடிப்பிரதக்ஷிணம் செய்து வந்திடில் கடன் தொகை எளிதில் வசூலாகும். ஆனால் அவ்வகையில் மீளும் தொகையில் ஒரு சிறு பங்கினையேனும் இறைப்பணிக்குச் செலவிட வேண்டும்.
1. ஓம் பாஷண்ட ஜநகண்டநாய நம :
2. ஓம் நாராயணா ஜ்ஞாநுவர்த்திநே நம :
3. ஓம் நைகமார்த்த ப்ரகாசநாய நம :
4. ஓம் பலிநந்தன தோர்தண்ட கண்டநாய நம :
5. ஓம் விஜயாக்ருதயே நம :
16. சில அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் கடுமையாக, ஈவு இரக்கமின்றி அனைவரையும் வதைத்திடுவர். இதனால் மன அமைதியின்றி படபடப்பான நெஞ்சுடன் அலுவலகத்தில் பணி புரிவோர் பலர் உண்டு. இவர்கள் திபெத் நாட்டிற்குரிய உத்தம மந்திரமாகிய “ஓம் மணிபத்மே ஹம்“ என்பதை எப்போதும் ஜபித்து வந்திடில் மேலதிகாரியின் கொடுமை தணியும்.
17. விஷத் தொல்லைகள் தீர :- வீட்டு முன் வாசலில் துளசி வைத்து அன்றாடம் வழிபட்டு வந்தால் பாம்பு, தேள் போன்றவை வீட்டை அணுகாது. துளசி மிகச் சிறந்த சகுனமாகும். வெளியில் செல்லும் முன் துளசியை வணங்கிச் சென்றால் காரியங்கள் தடையில்லாமல் சுபமாய் முடியும்.
18. பிரதமை திதியுடன் அஸ்வினி நட்சத்திரம் கூடும் நாளன்று மூதாதையர்க்குப் பித்ருத் தர்ப்பணம் இட்டிடில் பிறரால் நமக்கு ஏற்பட்ட அநியாயமான அவதூறு, அவச் சொல், பழி, நீங்கும். கோர்ட் வழக்குகள் நல்ல முறையில் முடிவுக்கு வரும்.
19. ஆவுடைமேல் அற்புதம் :- திருச்சி உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவ நாதர் திருக்கோயிலில் ஆவுடைமேல் முருகன் எழுந்தருளியிருக்கும் அற்புத கோலத்தைக் காணலாம். எங்கும் காணக் கிடைக்காத திருக்கோலம். மகன் – தந்தை இவர்களிடையே மன வருத்தம் ஏற்பட்டு தந்தை வீட்டைவிட்டு வெளியேறியிருந்தால் அத்தகையோர் இங்குள்ள முருகனை வேண்டி, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால் பிரிந்தவர் கூடுவர், குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
20. சிறு வியாபாரிகள் பல விதமான துன்பங்களுக்கு ஆளாகின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளில் தாமே அரைத்த சந்தனத்தை சரபேஸ்வரர்க்கு ராகுகாலத்தில் சாற்றி கீழ்க்கண்ட மந்திரத்தை 51 முறை ஜபித்து கோயில் வளாகம், நந்தவனம் முழுவதுமாக ஜீனி +ரவை + தானியங்கள் கலந்து அரைத்த மாவினை இட்டுவர வியாபாரம் அபரிமிதமாகப் பெருகும்.
1. ஒம் வீரசரபாய நம:  2. ஓம் சதாசிவாய நம: 3. ஓம் மஹாதேவாய நம: 4. ஓம் பசூனாம்பதயே நம: 5. ஓம் சூக்ஷமாய நம: 6. ஓம் சுலபாய நம:
21. வறிய நிலையில் இருப்போர் தங்களுடைய உபரி வருமானாத்தைப் (Part time job) பெருக்கிட துவாதசி திதி தோறும் நெல்லிக் காய் வற்றல் கலந்த குழம்பு சாதத்தினை பெருமாள் கோவிலில் ஏழைகளுக்கு அளித்து வந்திடில் முறையான பணவரவு மிகும்.

திருப்போரூர் மகிமை

திருபோரூர் தரும் திருஅருள்
(திருபோரூர் ஸ்ரீமுருகன் ஆலய மஹிமை பற்றிய தொடர் கட்டுரை)
பிரணவ மலை : (கோயில் திருக்குளத்தின் அருகிலுள்ளது)
ஓங்காரமே பிரணவமலையாக உள்ளது. இதனை வலம் வரும் விசேஷ முறையும் உண்டு. சஷ்டி திதியில் திருப்போரூர் முருகன் நாமங்களைத் துதித்துக் கொண்டே பாதணிகளை நீக்கி இந்த சிறப்பு மிக்க மலையை வலம் வர வேண்டும். இதனால் சேர்த்து வைத்த சொத்து சிதறாது சிறப்பு பெருகும். சப்தமி திதியில் வலம் வந்தால் கல்வி விருத்தியாகும். அஷ்டமியில் வலம் வந்தால் எத்தகைய கஷ்டமான காரியங்களையும் எளிதாக முருகன் அருளால் முடிக்கலாம். அடுத்து, நவமியில் பிரணவ மலையைக் கிரிவலம் வந்தால் நம்பினோர் கைவிடப்படார். தசமி திதியில் கிரிவலம் மனைவி நல்லவளாக அமைய உதவும். ஏகாதசி திதி கிரிவலம் செல்வம் சேரும்.
எனவே சஷ்டி திதியிலிருந்து தொடங்கி பிரணவ மலையை வலம் வந்து இறைவனை வேண்டினால் அனைத்து சௌபாக்கியங்களையும் அள்ளித் தருகிறார் திருப்போரூர் முருகன். மலைமேல் ஏறி இறைவனைத் தரிசிக்க வேண்டுமானால் ஓம்கார பிரணவ மலையைக் கிரிவலமாக வந்து கீழே விழுந்து வணங்கிய பின்னரே  மலைமேல் (படி) ஏற வேண்டும். இங்கு படி உற்சவமும் சிவராத்திரி பூஜையும் விசேஷமானதாகும். அம்பாளையும் ஈசனையும் தரிசனம் செய்து கீழிறங்கித் திருக்குளம் வந்து கங்கை விநாயகரைத் தரிசனம் செய்ய வேண்டும். கொடிமரம் வட்ட வடிவமாக அமைந்திருப்பது சிறப்பானது. பதவிமாற்றம், பதவி உயர்வு பெற இங்கு கொடிமர வாயிலாக கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.

திருப்போரூர்

இரண்டாவது நுழைவாயிலின் வலது புறம் ஸ்ரீநடராஜர் சந்நிதி உள்ளது கதவின் பின் சுவரில் ‘கட்டு சுமந்தான் மகரிஷி’ என்ற ரிஷி பலகாலம் ‘யுத்தபுரி’ எனப்படும் இந்த தலத்தில் தவம் புரிந்து ஜீவசமாதி அடைந்துள்ளார். இவரை வணங்குவது கட்டுக் கட்டான நம் கர்மவினைகளைத் தீர்க்கும்.
மூலவர் சுயம்பு மூர்த்தி! அபிஷேகம் உற்சவருக்குத் தான். எனவே புனுகுச் சட்டம் சாற்றுதல் மிகமிக விசேஷம். பிரகார முதலில் சுனை விநாயகர் காட்சி தருகிறார். கிணறு தோண்டுவதற்கு முன்னால் இவரிடம் உத்தரவு பெற்றபின் நீர் எடுத்தால் கிணறு வற்றாது. ஊற்று நீர் இருந்து கொண்டே இருக்கும்.  அடுத்து குக்குடாப் ஜதரர். புவியீர்ப்பு சக்தியினை பூவுலகில் நிர்மாணித்து வருபவர் இவரே! மூலவர் சந்நிதியின் வலதுபுறம் சக்கரப் பிரதிஷ்டை சந்நதி உள்ளது. சரநூல் கோர்வை படி தேவதை தெய்வங்களை ஆவாஹனம் செய்யப்பட்ட சந்நதி இது. மாலைப்பற்று, இரவுப் பற்று என்று கைகளாலேயே அரைத்த சந்தனத்தைக் காலையில் சாற்றி மாலையில் எடுத்து வைத்து தினமும் அணிந்து வந்தால் மிகவும் நல்லது. அதேபோல் மாலை அரைத்து இரவு சாற்றி காலையில் எடுத்து வைத்துக் கொண்டு அணிந்து வந்தால் நாம் நினைப்பது நமக்கு நன்மையாக இருப்பின் நிச்சயமாக நடக்கும். புண்ய காருண்ய சக்தி அம்பாளுடன் வால்மீக நாதர் தரிசனம் பெற்று தீர்த்தம், வன்னி மரம் மூன்றையும் சேர்த்து தரிசனம் பெறுவது கிடைத்தற்கரிய காட்சி. .
சிதம்பர சுவாமிகள் சமாதி :
ஸ்ரீசிதம்பரம் சுவாமிகள் மடத்திற்கு முன்னால் ஒரு புளிய மரம் உள்ளது. இதற்கு கூர் உரு புளியமரம் என்று பெயர். இந்த புளிய மரத்தில் மஞ்சளை அரைத்துப் பூசி, மஞ்சள் கொம்புடன் கூடிய நூலைக் கட்டி, வேண்டினால் எதிரிகளால் வரும் தொல்லைகள் நீங்கும். எதிரிகளால் தொல்லை என தெரிந்தவுடன் இவ்வாறு செய்வதால் எதிரியின் தொல்லை எகிறிவிடும். ஆனால் இவ்வாறு துன்பம் நீங்கப் பெற்றவர்கள் நன்றியாக, சமாதியின் பின்னால் உள்ள மாமரத்தை மஞ்சள் தடவி வணங்கி அன்னதானம் செய்து முடிக்க வேண்டும். முன்னால் புளியமரமும் பின்னால் மாமரமும் இருப்பது இங்கு விசேஷமாகும். புளியமரத்தில் இருக்கும் தேவதையின் பெயர் – சுதஹர், மாமரத்தில் இருக்கும் தேவதையின் பெயர் - சுமுஹர்.

ஸ்ரீகுக்குடாப் ஜதரர் திருப்போரூர்

ஸ்ரீசிதம்பரம் சுவாமிகளைத் தரிசனம் செய்ய வருபவர்களுக்கு சுவாமிகளின் அருளாசியைப் பெற்றுத் தரவும், வினைகளைத் தீர்க்கவும், பல தவங்கள் செய்து சமாதியின் முன்னும் பின்னுமாக இவர்கள் வீற்றிருக்கிறார்கள்.
ஸ்ரீவேம்படி விநாயகர்!
ஸ்ரீவிநாயகர் அமராத இடம் கிடையாது. ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு விசேஷம். இங்கு வேப்பமரத்தடியில் அமர்ந்துள்ளார். லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த மரம் வேப்பமரம். பௌர்ணமி திதியில் இம்மலையை கிரிவலம் வருவது உத்தம பலன்களைத் தரும். இரகசியமாகச் செய்த தீயகாரியங்களினால் சேர்ந்த கர்மங்கள் குறைந்துவிடும். ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பிலும் இப்பிரணவ மலையை கிரிவலம் வருவதால் அந்த குறிப்பிட்ட மாதம் நம்மிடமிருந்து மகிழ்ச்சியுடன் விடை பெறும்...!! ( நிம்மதியாகக் கழியும்) சிவராத்திரியன்று கிரிவலம் வருவது சித்தர்களுடைய அருளைக் கூட்டித் தரும்.
கங்கை விநாயகர் – பெயர்க் காரணம் :- கங்கை நதிக்கரையில் பலவித ஸ்நானக் கட்டங்கள் (குளிக்கும் இடங்கள்) உண்டு..... அக்கட்டங்களில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் மகான்களும் பலர் உண்டு. .. அவர்களில் ஓர் உத்தமர் தாம் மஞ்சுள பாஷ சித்தர் ஆவார். அனுதினமும் கங்கைக்கரையினிலே அமர்ந்து.. முறையாக பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளிப்பதில் அவர் தவறியதே கிடையாது.... இருப்பினும் ஈசன் அவருக்கும் ஒரு குறை வைத்திருந்தான்.. அது என்ன? ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்..... என்ற வாக்கிற்கிணங்க உத்தமனாகிய மஞ்சுளபாஷ சித்தரைப் பெற்றிருந்தாலும், அவருடைய தாய், விதியின் பயனாக முக்தியடையாமல் பித்ருலோகத்திலேயே இருந்து வந்தனள். ஒரு நாள்.... தவசிரேஷ்டராகிய மஞ்சுளபாஷசித்தர் தர்ப்பணம் இயற்றிக் கொண்டிருந்த போது.... அவருடைய தாய் அவர்முன் தோன்றி “மகனே நீ அற்புதமாக தர்ப்பண விதிகளைத் தவறாமல் செய்து வருகிறாய்.... நீ கடைப்பிடிக்கும் இத்தகைய அனுஷ்டானங்கள்... எனக்கு பித்ருலோகத்தில் பெருத்த வசதிகளை ஏற்படுத்துகின்றனவேயொழிய முக்தியைத் தரப் பயன்படவில்லை... ஆகவே நீ கால் நடையாக தென்னாடு சென்று இதற்கொரு வழிகாண்பாயாக” ..... என்று சொல்ல...மஞ்சுள பாஷ சித்தரும்... “அன்னையே... யான் தென்னாடு செய்ய வேண்டிய திருஅருட்பணி என்ன?” என்று கேட்கிறார் அப்பொழுது அவருடைய அன்னையும்... “மகனே இந்த கங்கை நதியிலிருந்து ஓர் விநாயகருடைய சிலையை எடுத்துச் சென்று தென்னாட்டுத் தலங்களில் எங்கு உத்திரவாகிறதோ அங்கு நீ இதைப் பிரதிஷ்டை செய்து மூலவரை வணங்கினால் எனக்கு முக்தி கிட்டிவிடும்!” என்று சொல்ல மஞ்சுள பாஷ சித்தரும் தென்னாடு ஏகி.. தலங்களைத் தரிசித்து வரும் வேளையிலே.... திருப்போரூர் முருகர் திருத்தலம் வருகிறார்.. அங்கு அவர் தியானத்தில் அமர்ந்திருந்த போது.... முருகப் பெருமானும் “நீ சுமந்து நிற்கும் என் அண்ணன் சிலையினை இங்கு பிரதிஷ்டை செய்வாயாக” ... என்று அசரீரீயாகக் கூறிட மஞ்சுளபாஷ சித்தரும் முறையாக விநாயகரை அக்கோயிலில் பிரதிஷ்டை செய்கிறார். இந்நிலையில் அவருடைய தாய்க்கு மட்டுமல்லாது மற்ற பித்ருகளுக்கும் திருப்போரூர் முருகன் முக்தியருளினார்..... இதுவே கங்கை விநாயகர் தோன்றிய புராணமாகும்....  தெரிந்த திருத்தலம்.... தெரியாத புராணம்... அறிந்த பின்னாவது அனுபவிப்போமா!

புனுகு மகிமை

ஈசன் ஏற்கும் புனுகுச்சட்டம் (தொடர் கட்டுரை)
பார்கவான் சுக்கிரக் களிம்பு சாற்று முறை :
சுக்கிர பகவானே அனுஷ்டித்து ஆனந்தித்த முறை இது.... இதில் முறையாகப் பெற்ற புனுகினை இடதுகை உள்ளங்கையில் ஏந்தி வலதுகை சுக்கிரவிரலால் (கட்டைவிரல்) முன்னும் பின்னுமாக சுமார் 50 முறை, அந்தப் புனுகின் மேல் சூடு பறக்கத் தேய்க்க வேண்டும். இப்பொழுது ஒரு விதச் சூட்டில் பதத்துடன் இருக்கும் புனுகினை சுக்கிரவிரலால் வழித்து கீழ்கண்ட முறையில் ஈசனுக்குச் சாற்ற வேண்டும்..... முதலில் குபேர திக்கில் ஆரம்பிக்க வேண்டும் அதாவது லிங்கத்தினுடைய வடமேற்கு நுனியிலிருந்டு சாற்றத் தொடங்கி  பின் நம் விருப்பப்படி சாற்றலாம்.. வெள்ளி நிறத்தில் மின்னும் இப்புனுகினை ஈசனுக்கு முறையாகச் சாற்றுவதால் கிடைக்கும் அளவற்ற பலன்களில் சிலவற்றைப் பார்க்கலாமா!..
பெண்களுக்கு : அனைத்துமிருந்தும் சில பெண்களுக்குத் திருமணம் நடைபெறாமலிருக்கும்.... திருமணமாகியிருந்தும் சில பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ்வர்..... சில பெண்கள் வேலைநிமித்தமாக (வெளியூரில் வேலை etc..) கணவனைப் பிரிந்து வாழ்வது.... இப்படிப் பலவிதமான பிரச்னைகளுக்குள்ளாகும் பெண்கள்.... பார்கவான் சுக்கிரக் களிம்பு சாற்று முறையில் ஈசனுக்குப் புனுகுச் சட்டம் சாற்றினால் அல்லது சாற்றச் செய்தால் அவர்களுடைய வேதனைகளை ஈசன் எளிதில் தீர்ப்பான். சுவர்ணலிங்கங்களுக்குக் கூட இம்முறையில் புனுகுச் சட்டம் சாற்றுவது அளப்பரிய பலன்களைப் பெற்றுத் தரும்.
சிவ உபாசகர்களுக்கு : இலைக்கட்டு முறைப்படி உருவாக்கிய பாதரசலிங்கத்திற்கு மேற்கண்ட முறையில் புனுகுச் சட்டம் சாற்றுவதால் ஜோதி தரிசனம் கிட்டும்.
மேற்கண்ட இரு முறைகளைத் தவிர புனுகு... சாற்றுவதில் இன்னும் பல முறைகளுண்டு... அவற்றினை குருமூலமாகத் தான் தெரிந்து கொள்ள வேண்டும்..
அடியவர் : ஈசனுக்குத்தான் புனுகுச் சட்டம் உண்டு...மற்ற தெய்வமூர்த்திகளுக்குக் கிடையாதா?”
குரு மங்கள கந்தர்வா : “ஓ ... உண்டே!”
அடியவர் : அப்படியென்றால்.... விநாயகருக்குப் புனுகு சாற்றும் முறை பற்றித் தாங்கள் கூறுவீர்களா?
குருமங்கள கந்தர்வா : கூறுகிறேன் கேளுங்கள்....
விநாயகருக்குப் புனுகுச் சட்டம்
(இம்முறை வெள்ளெருக்குப் பிள்ளையாருக்கு மட்டுமே...)
முறையாகப் பெற்ற புனுகினை இடதுகை உள்ளங்கையில் ஏந்தி வலதுகை சூரியவிரலால் (மோதிர விரல்) சுழற்றி சுழற்றி (வட்டவடிவில்...) தேய்த்து சூடேற்ற வேண்டும். பின் அதை வழித்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது மயிர்பீலி ஈர்க்கு ஒன்றை எடுத்துக் கொண்டு முதலில் (ஈர்களில் புனுகினைத் தொட்டு) வெள்ளெருக்கு விநாயகரின் வலது புருவத்தில் தொடங்கி.... இடது புருவம்... நீற்றுப்பட்டை, கழுத்து ... என்று வரிசையாகச் சாற்றிவிட்டு, அத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்ற இடங்களிலும் வரிசையைச் சாற்றி பூஜைகள் நிகழ்த்துவது பலவித அனுக்கிரகங்களைப் பெற்றுத்தரும்.
ஒவ்வொரு சதுர்த்தியன்றும் வெள்ளெருக்கு விநாயகருக்குப் புனுகுச் சட்டம் சாற்றி வழிபடுவதால்... பிரிந்த கணவன் மனைவியர் ஒன்று சேர்வர்.. தூரப் பயணம் சென்றவர் பத்திரமாகத் திரும்புவர்.... மேற்கண்ட முறையில் பூஜித்த வெள்ளெருக்கு விநாயகரை..... வீட்டு கஜானாவில் வைப்பதால் மகாலட்சுமி கடாக்ஷம் கிட்டும். மேற்கூறிய முறையில் 48 முறை சதுர்த்தி பூஜைகளை இயற்றி இராமாயண சபரி இராமரின் தரிசனத்தைப் பெற்றாள்.. என்பது சித்தர்கள் கண்ட காட்சி.... மேற்கூறிய முறையால் புனுகைச் சாற்றிய பிறகு மயிற்பீலி ஈர்க்கை வெளியே எறிந்து விடக்கூடாது. புனுகு என்பது ஈசனுக்கு உரித்தானது.... அது ஈசனுடைய சொத்து.... ஆகவே உத்தம புனுகினை பணத்திற்காக விற்கக் கூடாது.

தானதர்மங்கள்

அடியார் : குருதேவா ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் பெரும்பாலும் தான தருமங்களே வலியுறுத்தப்பட்டு வருவதாக, பல அன்பர்கள் கடிதம் எழுதி வருகின்றார்கள்.. இதற்கு விளக்கம் தர வேண்டுகிறோம்.
சற்குரு : ‘சிரித்துக் கொண்டே) கலியுலகில் நல்லவிதமான செலவு என்றாலே மனிதன் ஓடி ஒளிகின்றான்! ஆனால் பலவிதமான தீய வழியில் ஈடுபட்டுப் பல கர்மங்களைச் சேர்த்துக் கொண்டு பணம் சம்பாதிப்பதற்கு, செலவழிப்பதற்கு அவன் அஞ்சுவதில்லை. சினிமா தியேட்டர், டீவி, நாடகம் போன்ற கேளிக்கைகளுக்கும் நாக்கு ருசிக்காக ஒட்டலுக்கு செலவழிப்பதற்கு அவன் தயங்குவதில்லை. நித்யபூஜை, சந்தியாவந்தனம், தர்ப்பணம் போன்ற முக்யமான வழிபாடுகள் மற்றும் தான தருமங்களை நம் மூதாதையர்கள் முறையாக செய்து வந்ததால்தான் அவர்கள் ஆரோக்யமாக மட்டுமன்றி வறுமையிலும் கூட மனத் திருப்தியுடன், போதுமென்ற மனதுடன் மகிழ்வுடன் வாழ்ந்தனர். கலியுலகில் ஒவ்வொரு மனிதனும்....
1. தன்னைச் சூழ்ந்துள்ள பூர்வ ஜென்ம கர்மவினைகளைக் கழித்தாக வேண்டும்.
2. நடப்பு வாழ்க்கையில் தேவையில்லாமல் சேர்க்கின்ற தீய கர்மங்களையும், (புகை, சீட்டாட்டம், புகையிலை, தகாத உறவுகள் etc) அழித்தாக வேண்டும்.
3. மேற்கண்ட இரண்டும் தீர நித்ய பூஜைகள் வழிபாடுகள், விசேஷ பண்டிகைகளுக்குரித்தான ஹோமம், பூஜை போன்றவற்றை முறையாக நிறைவேற்றுதல் வேண்டும்.
நித்ய பூஜைகளுள் ஏனைய வழிபாடுகளும் சரிவர செய்யப்படாவிடில் இருக்கின்ற கர்ம படிவுகளுடன் உடலாலும் மனதாலும் அதிகமான தீவினைகளைச் செய்கின்ற நிலைதான் ஏற்படும்.
எனவே தான் தற்காலத்தில் கலியுக மனிதனுக்கு மனத்திருப்தியின்மை, வாழ்க்கையில் விரக்தி, அளவற்ற கவலைகள் ஏற்படுகின்றன. இவற்றை நிவர்த்தி செய்ய்வும் பூஜை வழிபாடுகளில் ஏற்பட்டுள்ள குறைவுகளை நிறைவு செய்யவுமே கலியுகத்திற்கென குறிப்பிட்ட தான தருமங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் தான தருமங்களே வலியுறுத்தப்படுகின்றன என்பதைவிட, நாம் செய்யத் தவறுகின்ற தினசரி பூஜைகளுக்கு ஈடு செய்வதற்காகவே விடுபட்ட பூஜைகளுக்கு நிகரான பலன்களைத் தரவல்ல தான தருமங்களே விளக்கப்படுகின்றன என்பதே உண்மை!
தானதர்மங்கள் – பூஜா பலன்கள்
அடியார் : தான தருமங்களின் பலன்கள் பூஜா பலன்களுக்கு ஈடானவைதானா?
சற்குருதேவர்:
1. சற்குருவானவார் குறித்த நாளில் அந்தந்த கிழமை, திதி, நட்சத்திரம் மற்றும் கிரஹ நிலைகளுக்கு ஏற்பவும், அவரவர் ஜாதக கோள் நிலைகளைப் பொறுத்தும் குறிப்பிட்ட தான தருமங்களை அருள்கின்றார்.
2. அன்னதானம் போன்ற சத்சங்க பூஜைகளில் அந்தந்த தினத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப குறித்த உணவுகளைத் தானமாக அளித்தும் சற்குருவே கூட்டுவினை கழிப்பு முறையில் தவறிய தர்ப்பணங்கள், பூஜைகளுக்கு நிகரான தெய்வீகப் பலன்களைப் பெற்றுத் தருகின்றார்.
3. சில குறிப்பிட்ட தினங்களில் சில குறித்த கிரஹத்தின் சக்தி மிகுந்திருக்கும், குறித்த மாதத்தில் சில திதிகளும் அதிக சக்தி பெறுவதுண்டு. (கந்த ஷஷ்டி, ராம நவமி etc ) எனவேதான் கிரஹம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் போன்ற (காலத்தின்) பஞ்ச (ஐந்து) அங்கங்களும் சக்தி மிகுந்து அருள்பாலிக்கும் நாட்களே விசேஷ தினங்களாக, பண்டிகைகளாக, பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படுகின்றன.
இவ்விசேஷ தினங்களெல்லாம் மிக மிக எளிமையாக தீய கர்மங்களை கழிக்கும் அருட்சக்தியையும் தெய்வீக ஆற்றலையும் பெற்றவையாம். உதாரணமாக உத்தராயண புண்யகாலமான பொங்கலாம், சங்கராந்தி தினத்தன்று செய்யப்படுகின்ற முறையான தை மாத தர்ப்பணத்தினால் எத்தனையோ ஆண்டுகளுக்கு செய்யாமல் விட்ட அல்லது அரைகுறையாக செய்து வந்த முறையற்ற தர்ப்பணங்களுக்குப் பிராயச்சித்தம் கிட்டும். தை மாதப் பிறப்பன்று உத்தராயண தர்ப்பணத்துடன் குறித்த தான தருமங்களையும் செய்திடில் பல ஆண்டுகளில் பல தவற விட்ட குல தெய்வ, தர்ப்பண பூஜைகளுக்கு மிக எளிமையான ப்ராயச்சித்தம் கிட்டும். எனவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் சற்குருவின் அருள்மொழிகளே அளிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்திடுக.
தான தர்மங்கள் செலவினமாகுமா?
அடியார் : ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் பொன் மாங்கல்ய தானம், வஸ்திர தானம், அன்னதானம், மாங்கல்ய சரடுதானம், பாய் தானம்... என்று விதவிதமான தானங்கள் குறிப்பிடப்படுவதால் “எனக்கு நேரமில்லை என்றோ, அதிக செலவாகிவிடும் என்றோ பலர் தயங்குகின்றார்களே!”
சற்குரு : அலுவலகத்தில் இலவசமாக டெலிபோன் கால்கள் செய்து சேர்க்கின்ற கர்மங்கள் எத்தனை எத்தனை?
1. ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் office செலவில் செய்கின்ற டெலிபோன் கால்களே லட்ச லட்சமாகப் பெருகி அதற்குரித்தான கர்மவினைகளும் பெருகுகின்றன அல்லவா!
2. செலவின்றி அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வருகின்ற பேனா, பென்சில், ஸ்டேப்லர் எத்தனை எத்தனை?
3. அழுகலான காய்கறிகள் மற்றும் சுத்தமில்லாமல் செய்யப்பட்ட உணவு வகைகளை – நாக்கு ருசிக்காக ஹோட்டலில் உண்டு வீணாக செலவழிக்கின்ற பணமே எவ்வளவு?
4. புகை, மதுவகை, கூல்டிரிங்கஸ் இவற்றுக்காக ஆகின்ற செலவு எவ்வளவோ?
5. பூஜைக்கு நேரமில்லை என்று சொல்லி... ஹோட்டலில் உணவுக்காகவும் ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் வீணாகச் செலவழிக்கின்ற நேரம் எத்தனை எத்தனை?
6. ரேஷன் கடையிலோ, தபால் அலுவலகத்திலோ, மின் கட்டணம் கட்டும் இடத்திலோ, சினிமா தியேட்டரிலோ, பால் வாங்குவதற்கோ, வங்கிகளிலோ கால் கடுக்க நிற்கின்ற நேரம் எத்தனை எத்தனை?
7. அலுவலகத்தில் காபி, டீ, சிகரெட் வெற்றிலை போன்றவற்றிற்காக வீணாகச் செலவழிக்கின்ற பணம் எத்தனை?
இவற்றிற்கெல்லாம் பணத்தையும் நேரத்தையும் செலவழிக்கத் தயாராக இருக்கின்ற மனிதன் “பூஜைக்கு நேரமில்லை, தான தருமங்களினால் செலவு அதிகமாகின்றது” என்றால் அது எத்தகைய அப்பட்டமான பொய்! ஒவ்வொரு மனிதனும் இதனை நன்கு ஆராய்ந்து சிந்திக்க வேண்டும்.
தான தருமங்களின் முக்கியத்துவம்
1. முறையற்ற வழிகளில் சேர்த்த பணத்தினால் வாழ்க்கையில் பல துன்பங்கள் ஏற்படும். இவ்வாறாகத் தவறான வழியில் சேர்த்த பணத்தை வீட்டிற்காகச் செலவழிப்பதால் கூடுதலாக தீவினைகளே சேரும்.உதாரணமாக, லஞ்சமாகப் பெற்ற பணத்தினால் குழந்தைகளுக்கு இனிப்பு ஆடை, பொம்மைகள் போன்றவற்றை வாங்கி அளித்திடில் அது நோயாக வந்து குழந்தைகளை வருத்தும், சந்ததியை பாதிக்கும்.
2. சில தான தருமங்கள் தாம் பல ஆண்டுகளாகத் தவறவிட்ட பூஜைகள், தர்ப்பண முறைகளுக்கு ப்ராயச்சித்தமாக அமைகின்றன.
3. தான தருமங்களினால் செலவு என்பதைவிட புண்ணியத்தைச் சேர்த்துத் தரும் மற்றும் முதலீடு என்பதே பொருந்தும்.
4. தான தருமங்களே நம் நடப்பு, எதிர்கால வாழ்விற்கும் நம் குழந்தைகளின் எதிர்கால வாழ்விற்கும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் பேருதவியாக நிற்கும்.
5. தான தருமங்களில் செலவழிக்கப்படுகின்ற பணம் நன்முறையில் செலவழிக்கப்படுவதால் மன அமைதியைப் பெற்றுத்தரும். தான தருமங்களைப் பெறுபவர்கள் வாழ்க்கையில், அது கூடுதலான சாந்தமான நிலையைப் பெற்றுத் தருகின்றது.
எல்லாவற்றையும் விட வெவ்வேறு விதமான வழிகைல் தினந்தோறும் நம் கர்மவினைகளைச் சேர்த்துக் கொண்டே இருப்பதால் விதவிதமான தானதருமங்களே அவற்றுக்கு ப்ராயச்சித்தத்தைப் பெற்றுத் தரும்.

தானம்

கழியும் கர்ம வினைகள்

பலன்கள்

1. அன்னதானம்

பூர்வ ஜன்ம கர்மவினைகள்

 பித்ருக்கள் ஆசிர்வாதம்

2. ஆடைதானம்

தகாத உறவு குற்றங்கள்

 கற்பிற்கு ரட்சை

3. காலணி

பெரியோர்களை நிந்தித்த பாவம்

தீர்த்த யாத்திரை பலன்கள்

4.மாங்கல்யச் சரடு

 காமக் குற்றங்கள்

 தீர்க்க மாங்கல்ய பாக்யம்

5. குடை

தவறான வழியில் சேர்த்த செல்வம்

குழந்தைகளுக்குச் சிறப்பான எதிர்காலம்

6. பாய்

பெற்றோர்களை/பெரியோர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள்

கடும் நோய்களுக்கு நிவாரணம், அமைதியான மரணம்

7. பசு

இல்லத்தின் தோஷங்கள்

பலவித பூஜா பலன்கள்

8. பழங்கள்

ஜீவங்களை வதைத்த சாபம்

ஆயுள் விருத்தி

9. காய்கறிகள்

பித்ரு சாபங்கள்

குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்

10. அரிசி

பிறருக்கு ஈயாமல் தனித்து வாழ்ந்த சாபம்

வறுமை தீரும்.

11. எண்ணை

அறிந்தோ அறியாமலோ சேர்த்த கர்ம வினைகள்

கடன்கள் குறையும்.

12. பூ

அந்தஸ்து காரணமாக பிறரை அவமத்தித்ததால் ஏற்படும் தீவினைகள்

சுகம், சாந்தமான குடும்ப வாழ்க்கை

13. பொன் மாங்கல்யம்

மாங்கல்ய தோஷங்கள்

 திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

இவ்வாறாக தான தருமங்களினால் பல கர்மவினைகள் தீர்வதோடு கூடுதலாக அபரிமிதமான பலன்களும் கிட்டுகிறது. உதாரணமாக தீபாவளி தினத்தன்று காசி, திருவிடைமருதூர், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற திருத்தலங்களில் ஏழைகளுக்கு எண்ணை, சீயக்காய், கங்கா ஜலம் அளித்தால் எத்தனையோ ஆயிரம் ஏழைகளுக்கு எண்ணை, ஸ்நானம் செய்து வைத்த புண்யம் மிக எளிதில் கிட்டும்.
தீப ஜோதி பிரகாச தானம்
இறையருளால் சென்றாண்டைப் போலவே இந்த ஆண்டும் திருச்சி-குளித்தலை அருகில் உள்ள ஐயர்மலை ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலயத்தில்... நம் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் மூலமாக, கிராமத்து மக்கள், பெரியோர்களின் பேராதரவுடனும் நிறைந்த ஆசிகளுடனும் 24.11.1996 அன்று ஐயர் மலையில் மலைதீபம் ஏற்றப்பட்டது. சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிமுள்ள லட்சக்கணக்கான மக்கள் தீப தரிசனங்களை இறைப் பெருங்கருணையால் பெற ஸ்ரீரத்னகிரீஸ்வரர் அருள்பாலித்தார். பல லட்சம் மக்கள் மட்டுமன்றி மரம், செடி, கொடி, புல் புண்டு போன்ற கோடிக்கணக்கான தாவரங்களும் விலங்குகளும் அல்ல்வா மலை தீபத்தை தரிசிக்கின்றன! திருஅண்ணாமலை, திருச்சி மலைக் கோட்டை, ஐயர்மலை சென்னை – திருக்கச்சூர் போன்ற இடங்களில் மட்டுமன்றி எத்தனையோ மலைக் கோவிலகளில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அன்பர்கள் சத்சங்கமாக ஒன்று கூடி இத்தகைய அரிய இறைப்பணியைச் செய்திட வேண்டும். இதனை மலை ஜோதிப் பிரகாச தானம் என்று அழைக்கின்றனர். அதாவது லட்சக்கணக்கான மக்களோடு கோடிக்கணக்கான இதர ஜீவன்களும் மலை தீபத்தைக் கண்டு தரிசனம் பெறுவதற்கு ஒரு கருவியாக இறையருளால் நாம் செயல்படுகின்றோம் அல்லவா. மலை தீபத்தை ஏற்றும் பெறற்கரிய திருப்பணியில் ஈடுபட்டு இறைவனின் ஜோதி பிரகாச ரூபத்தை அனைவரும் தானமாகப் பெற்று.... தரிசிக்கும் பலன்களை எழுத்தில் வடிக்க இயலாது.

மலை தீபம்

மலை தீபத்தின் மஹிமை யாதோ?
மலைமீது அமர்ந்திருக்கும் ஸ்வயம்புவான மூர்த்தியுடன், மலையில் கற்களாக, பாறைகளாக, மரத்தூண்களாக சிற்பங்களாக எத்தனை எத்தனை மகரிஷிகள் யோகிகள் சித்புருஷர்கள் வெவ்வேறு விதமான வடிவங்களில் அமர்ந்திருக்கின்றனர் தெரியுமா! மலையில் உள்ள சுனைகளில் தான் எத்தனையோ சித்புருஷர்கள் வாசம் செய்கின்றனர். மொத்தத்தில் எத்தனையோ மலைக்கோவில்கள் சித்புருஷர்களின், மகரிஷிகளின் தவச்சோலைகளாக விளங்குகின்றன. முக்கோடி தேவர்களும், ஆயிரக்கணக்கான புண்ணிய நதி தேவதைகளும் நீராடித் தங்கள் தெய்வீக சக்திகளை விட்டுச் சென்றுள்ள புண்ணிய, லோக தீர்த்தமாக அன்றோ மலைச்சுனை விளங்குகின்றது. மலையின் மேல் கோபுரங்களும், விமானங்களும், கும்பங்களும், கலசங்களும் எத்தனையோ தேவமூர்த்திகள் மற்றும் அஷ்டதிக்கு மூர்த்திகள், பஞ்சபூத சக்திகள் வந்து தங்கிச் செல்கின்ற தெய்வீக உறைவிடங்கள் அன்றோ!!
மேற்கண்ட அன்னத்தின் திரண்ட தெய்வீகச் சக்தியை ஏற்று மலர்கின்ற மலை தீபம் ஆனது இறைதரிசன தீபத்தின் பலாபலன்களை தன்னை தரிசிக்கின்ற கோடான கோடி ஜீவன்களுக்கும் அளிக்கின்றது. இத்தகைய அரும்பெரும் இறையருள் பரிபூர்ணமாக நிறைந்திருக்கும் மலைக்கோவில் தீபத்தை ஏற்றுவதற்கான அரிய திருப்பணியில் பங்கேற்றால், அதாவது “தீப ஜோதி ப்ரகாச” தானத்தில் பங்கு பெற்றிடில் அதனால் கிட்டும் பலன்கள் எத்தனை எத்தனை!! ஒரு முறையாவது ஒரு சிறிய அளவிலாவது மலைதீபம் ஏற்றும் இறை சேவையில் பங்கேற்றிடில் அதன் பலாபலன்கள் நமக்கும் நம் சந்தயினருக்கும் எத்தனையோ 100 ஆண்டுகளுக்கு கூடிவந்து அருள்பாலித்திடுமே.
தீபம் ஏற்ற உதவுவீர்!
எனவே தமிழ்நாட்டில் இன்னமும் மலைதீபம் ஏற்ற இயலாத நிலையில் எண்ணற்ற மலைக்கோவில்கள் உள்ளன. மலைதீபம் ஏற்றப்படுகின்ற இடங்களில் கூட வசதியின்மை காரணமாக சில மணி நேரங்களுக்கே தீபம் தரிசனமளிக்கின்றது. இத்தகைய இடங்களில் குறைந்தது ஒரு நாளாவது தீபதரிசனம் கிட்டும் அளவில் நல்ல கொப்பறை, அதிகளவு எண்ணெய், திரி, கற்பூரம் ஆகியவற்றை அளிப்பதோடன்றி ஜோதியை அணையாமல் அருகில் நின்று கூட்டுகின்ற உழவாரச் சேவையும் செய்திடில் உத்தமமான பலன்கள் கிட்டுமன்றோ! இதோ இம்மாத ஸ்ரீஅகஸ்திய மூலமாக எம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈஸ சித்த ஸ்வாமிகள் அருளியுள்ள “தீப ஜோதி ப்ரகாச தானம்” பற்றி அறிந்து கொண்டீர்கள் அல்லவா! இனியேனும் ஐயர் மலை, தோகை மலை, விராலி மலை, வள்ளிமலை, பர்வத மலை, சதுரகிரி மலை, வெள்ளியங்கிரி மலை, திருச்செங்கோடு மலை, பவானியைச் சுற்றியுள்ள வேதகிரியைப் போல மேலும் பல மலைகள், குன்றக்குடி, அழகர் மலை, பழமுதிர் சோலை, திருத்தனிமலை, செஞ்சி மலை போன்ற இடங்களில் மலைதீபம் ஏற்ற அடியார்கள் முன்வந்து அன்னதானம், ஆடைதானம், மாங்கல்ய தானம் போன்று தீப ஜோதி ப்ரகாச தானத்தையும் நிறைவேற்றிட பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

புகை பிடித்தல்

புகை பிடித்தல் பெரும் பாவமே
ஜீவ இம்சையைவிட, மிகவும் கொடிய பாவங்களையும், தீவினைகளையும் கூட்டித் தருகின்ற புகைபிடிக்கும் பழக்கம் மிக வேகமாகக் கலியுலகில் பரவிவருவது மிகவும் வேதனைகுரிய விஷயமாகும். தன் குழந்தைகளுக்கெதிரேயே தந்தை புகைபிடிக்கின்ற கொடுமையையும் காண்கின்றோம்.  என்னே கீழ்த்தரமான நிலையிது!! ஒழுக்கத்தை கட்டிக் காக்க வேண்டிய இல்லத்தின் தலைவனே புகை பிடிக்கும் இழிய செயலில் ஈடுபடுவதா? நவீன விஞ்ஞான உலகம் மருத்துவ ரீதியாக புகைபிடிக்கும் வழக்கத்தைப் பற்றிய கொடுமைகளை எடுத்துரைத்தும் புகைப் பிடித்தல் அந்தஸ்திற்குரிய (Fashion) தாக, நவீன உலக வழக்காகி விட்டது. சமுதாயத்தில் உலவும் ஒரு கொடிய திருடனை விட புகைப்பிடிக்கின்ற மனிதன் தான் சமுதாயத்திற்கு மிகவும் தீங்கிழைக்கின்றான்.
புகைப்பிடித்தல் ஒரு தீவினையே
புகையிலை போன்ற போதை வஸ்துக்கள் மனித மனோ நிலையைப் பாதித்து விஷ எண்ணங்களையும், விஷக் கிருமிகளையும் உள் செலுத்துகின்றன. “புகையிலையும் இறைவனின் படைப்புதானே. அதனை ஏன் ஒதுக்குதல் வேண்டும்” என்ற கேள்வி எழலாம். ஆற்றிவு கொண்டு மலத்தையும், மாமிசத்தையும், மதுவை விடமிருந்து, மகிழம்பூவையும் மரக்கறியையும் பகுத்தறிகின்ற மனிதன் இறைவனின் படைப்பு என்று மலத்தையும், மர இலைகளையும் மண்ணையுமா உண்கின்றான்? உண்மையில் உத்தம நிலையில் இறைவனின் படைப்பில் நல்லது தீயது என்பதே இல்லை. மனிதன் வெளித்தள்ளுகின்ற மலமும், சளியும், மலப்புழுவிற்கும், பன்றிக்கும், மீனுக்கும் பறவைகளுக்கும் உணவாகின்றன. எனவே அந்தந்த ஜீவன் இனத்திற்குரிய குணாதிசயங்களுடன் வாழ்க்கையை நன்முறையில் நடத்திடல் வேண்டும். புகையிலை கூட ஒருவித மூலிகையாக பல வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே விஷமன்றோ? தயிரும், பாகற்காயும், நெல்லிக்காயும் உணவு வகைகளே. ஆனால் இரவில் தயிரும், நெல்லிக்காயும் பத்திய மருந்தில் பாகற்காயை உண்பதும் உடலுக்கு கேடுதானே விளைவிக்கும். பாலையும், தயிரையும் சேர்த்தா உண்ண முடியும்?
இதுபோல புகையிலையை அக்னியுடன் சேர்த்தல் கூடாது. நாட்டு மருத்துவர்கள் கூட புகையிலையை மருந்திற்காகப் பயன்படுத்துவது உண்டு. ஆனால் இதில் கூட அவர்கள் ஒரு போதும் புகையிலையை அக்னியில் சேர்க்கமாட்டார்கள். தங்களிடம் எஞ்சியிருக்கும் புகையிலையை சுண்ணாம்புடன் சேர்த்து பூமியில் புதைத்து, பூமாதேவியை பிரார்த்தித்துப் பூஜை செய்வர். “அம்மா பூமா தேவியே! மருந்திற்காக பயன்படுத்தியது போக எஞ்சிய புகையிலையை அதன் விஷ்த் தன்மையை நீக்குவதற்காக சுண்ணாம்புடன் சேர்த்து உன்னிடமே சேர்க்கிறோம் எம்பிழையை பொருத்தருள் வாயாக,” என்று வேண்டியே புகையிலையை பூமியில் புதைத்தார்களே அன்றி ஒரு போதும் அவர்கள் அதனை அக்னியில் இட்டது கிடையாது. காரணம் என்ன? புகையிலை அக்னியுடன் சேர்ந்தால் அது மிகவும் கொடிய நச்சுப் பொருளாக மாறி காற்றில் பரவி, பரவெளியில் உள்ள காற்றையே நஞ்சாக்கிவிடும். ஆனால் தற்காலத்தில் புகையிலையை சேர்க்கக் கூடாத அக்னியுடன் சேர்த்து, பீடி, சிகரெட், சுருட்டாக புகைப்பது பொழுபோக்காகிவிட்டது. ஒரு முறை சிகரெட் புகையை வெளி இட்டாலே கிட்டத்தட்ட 70 ஆயிரம் உயிர் அணுக்கள் பாதிக்கப்படுவதாக சித்புருஷர்களின் ஆரோக்ய நாடி விளக்கம் தருகின்றது. அப்படியானால் ஒரே சிகரெட்டில் எத்துனை கோடி ஜீவ அணுக்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒரே சிகரெட்டில் எத்தனை கோடி கர்மங்கள் சேருகின்றன என்று எண்ணி பார்த்தால்தான் புகைபிடித்தல் எத்தகைய கொடிய பழக்கம் என்பது புரியும்.
ஜீவ ஹிம்சை
அதெப்படி ஒரு முறை சிகரெட் புகையை வெளிவிடுவதால் 70 ஆயிரம் ஜீவ அணுக்கள் பாதிக்கப்படும்?.... என்று கேட்கத் தோன்றும் பரவெளியில் வெளி தள்ளப்படுகின்ற சிகரெட் புகையானது...
1. காற்றில் வசிக்கும் எண்ணற்ற கண்ணுக்கு தெரியாத ஜீவன்களைக் கொன்றுவிடுகின்றது. இவற்றில் நன்மை செய்யும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களும் உண்டு. குறிப்பாக துளசி, வில்வம், பவளமல்லி, மகிழம்பூ போன்ற மூலிகைகளின் ஆரோக்யமான மணத்தை காற்றின் மூலமாக எடுத்துச் சென்று பல இடங்களைப் புனிதப்படுத்தும் “வாசஸ்பதி பத்ரவிலாச” எனப்படும் வாயு அணுக்கள் சிகரெட் புகையில் அழிந்து விடுகின்றன. உலகில் தீய சக்திகளை எதிர்த்து (Negative Forces) போராடும் நல் ஜீவ சக்திகளில் (Positive Forces) மேற்கண்ட வாசஸ்பதி பத்ரவிலாச வாயு அணுக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. பூண்டு, செடி , கொடி, மர, தாவர வகைகள் தங்களுக்குரிய உணவை காற்று நீர், கதிர் ஒளி போன்றவற்றின் மூலமாகத் தானே பெறுகின்றன. சிகரெட் புகையினாலான நச்சுக் காற்றை அவை உண்டால் தீய சக்தி தானே எங்கும் பரவும்!
2.. சிகரெட் புகையானது சூரியனிடமிருந்து நாம் பெறுகின்ற ஜீவ சக்தியின் தன்மையைக் குறைத்துவிடுகின்றது. சூரிய ஒளியின் இயக்கத்தால் தானே உலக ஜீவ வாழ்க்கையே ஆக்கம் பெறுகின்றது! ஆக்கத்தை அழிக்கும் நச்சுப் பொருள்தானே சிகரெட் புகை!
3. மனித உடலின் சிரசு முதல் பாதம் வரை எலும்பு , தசை, நரம்பு, உரோமம் போன்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவதை உண்டும். லட்சக்கணக்கான தேவதைகள் வாழ்கின்ற மனித தேகம் மிகவும் பவித்ரமானதல்லவா! இறைவன் வசிக்கின்ற தேகத்தில் நச்சை செலுத்தி விஷாமாக்கிடலாமா?
4. புகைபிடிக்கின்றவன் மூன்று விதமான கொடிய பாவங்களுக்கு உள்ளாகின்றான்.
முதலில் தன்னுடைய புனிதமான தேகத்தை தானே பாழ்படுத்திக் கொள்வது....
பரவெளியை , வாயுமண்டலத்தை நச்சுப்படுத்துவது....
இதர ஜீவன்களின் சுவாச மண்டலத்தில் நச்சினைச் சேர்ப்பது....
இம்மூன்றிற்க்கும் அவன் தன் வாழ் நாளிலோ எதிர்வரும் ஜன்மங்களிலோ பதில் சொல்லியே ஆக வேண்டும். எத்துணை கோடி ஜீவன்களுக்கு நச்சை ஊட்டினானோ அவை அனைத்தும் அவனைப் பழிவாங்குவதற்கோ பாடம் கற்பிப்பதற்கோ, தண்டனை அளிப்பதற்கோ காத்திருக்கும்.
5. ஒருவன் புகைபிடிக்கையில் புகை நாற்றம் தாங்காது மற்றவர்கள் முகம் சுளிப்பதுண்டு. சபிப்பதும் உண்டு., இவை நிச்சயமாகப் பலிக்கும். இதன் காரணமாக புகை பிடிப்பவன் குடும்பத்தில் பலவித குழப்பங்கள் ஏற்படும். புகைச் சுழல்களால் பிறருக்கு தீங்கு விளைவித்தால் பகைச் சூழ்நிலைகளே வாழ்க்கையில் படியும்.

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தம் குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளிடம் பெற்ற குருகுல வாச அனுபூதிகளின் தொகுப்பு)
சென்னை – இராயபுரம் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில்தான் சிறுவன் அக்கோவணாண்டிப் பெரியவரைச் சந்தித்தான் அங்கிருந்துதான் அவர்களுடைய அனைத்துத் திக்விஜயங்களும் தொடங்கின. நிறைவுறுவதும் அங்கு தான் என்பதைச் சொல்லிடத் தேவையில்லையே! புனித பாரதத்தின் பல நூற்றுக்கணக்கான திருத்தலங்களுக்குக் கால் நடையாத்திரை, இரவில் பயணம், பஸ் பிரயாணம்.... அதில் எத்தனையோ விதவிதமான ஆன்மீக அனுபவங்கள்! சிறுவனாயினும் உன்னத பக்தி நெறியை அல்லவா பெரியவர் ஊட்டி வந்தார்!
ஒரு முறை விதியை முன்னரே அறிய வேண்டிச் சிறுவன் துளைத்தெடுத்திட. ..அவர்களுடைய ஆன்மீகப் பிரயாணத்தில் ஒரு மலைப்பகுதி அருகே..... எதிரில் ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது...  திடீரென்று அருகிலிருந்த சிலர் பஸ்ஸைப் பிடிக்க ஓடினர்... அப்போது.... பெரியவரோ “ஏம்ப்பா இந்தப் பசுமாடு தீனி, தண்ணி இல்லாம காஞ்சு நிக்குதே! இதுக்கு ஏதாவது கொடுத்துட்டுப் போங்களேன்” என்றார்.... ஓடியவர்களில் ஒருவர் மட்டும், “என்ன பெரியவரே, வெள்ளிக்கிழமையும் அதுவுமா முணுமுணுக்குறே இந்தப் பசுதானே.... நீ சொன்னதுக்காக முடிஞ்ச தர்மம் பண்ணிட்டு அடுத்த பஸ்ஸுல போறேன்” என்று கூறியவாறே அருகிலிருந்து இலைதழைகளைப் பறித்து பசுவிற்குக் கொடுத்துவிட்டு தன் கையிலிருந்த அலுமினியப் பாத்திரத்தில் நீரையும் கொண்டுவந்து பசுவிற்கு வைத்து அதனை மூன்று முறை சுற்றி வந்து வணங்கினார்..
“ஏன் வாத்யாரே மேகம் நல்லா இருட்டிக்கிட்டு வருது, மழை வரும் போல இருக்கு..., இதுதான் கடைசி பஸ்ஸான்னு கூடத் தெரியலை, இந்தக் குளிருல அந்த ஆளு என்ன பண்ணுவான். எங்கிட்டச் சொன்னா நான் செஞ்சிருப்பேனே, ஒழுங்கா பஸ்ஸுல போற ஆளைத் தடுத்து நிறுத்திட்டியே!”
“ஏண்டான் நானா அவனைத் தடுத்தேன்! விதியில்லடா தடுக்குது! ஏதோ பசுவுக்கு நாலு பழம் கொடுத்தா அந்த தர்மம் அவன் உயிரைக் காப்பாத்துமில்ல புரியுதா!”
அதெப்படி வாத்யாரே இந்தப் பசுக்குத் தர்மம் செஞ்சாத்தான் அது அவன் உயிரைக் காக்குமா என்ன!”
“ஆமாண்டா மகனே தர்ம தேவதையே எதிர்ல வந்தாக் கூட எவனுக்குக் கண்ணு தெரியுது! பத்து பேருக்கிட்ட சொன்னா, ஒருத்தந்தான், சரியா எடுத்துக்கிறான், என்ன பண்றது... “சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை! .. அந்த ஜில்லிட்ட குளிரில், நல்ல இருளில் மலைப் பகுதியில் எங்கெங்கோ கூட்டிச் சென்று வானில் சில நட்சத்திரங்களையும் சுட்டிக் காட்டி “இன்னிக்கு இந்த நட்சத்திர ஒளியில் தான் இந்த மூலிகையைப் பறிக்குணும்டா” என்று பல இரகசியங்களைப் புகட்டினார்.
அவற்றில் ஒன்றுதான் செருப்பட்டை மூலிகை இரகசியம். AIDS எனப்படும் கொடிய நோயைத் தீர்க்க வல்லதே செருப்பட்டை மூலிகை!
...... அதன் பிறகு எங்கெங்கோ கூட்டிச் சென்று சில நட்சத்திர அமைப்பு இரகசியங்களை எடுத்துச் சொல்லி பல மூலிகைகளின் இரகசியத்தையும் போதித்தார். ..சற்றே விடிந்த நிலையில்... முதல் நாள் மலையில் வந்த வழி மீண்டும் சிறுவனுக்குத் தென்பட்டது!
“அதெப்படி வாத்யாரே, இருட்டுல எங்கெங்கோ அழைச்சுக்கிட்டுப் போய்ட்டு திருப்பி அதே வழிக்கு கூட்டிக் கிணு வந்திட்டியே” பெரியவர் புன்முறுவலுடன் கண்ணடித்தார்!
“அது எங்க தாத்தா, பாட்டியோட இங்கே அடிக்கடி வந்த பழக்கம் தாண்டா!” பெரியவர் சொல்வது பொய் என்பது சிறுவனுக்குப் புரிந்தது! எந்த ஞானியும், மஹானும், சித்தபுருஷரும் அற்புதங்களைப் பிறர் அறியா வண்ணம் செய்தே பக்தர்களைக் காக்கின்றார்கள் என்பது சிறுவனுக்கு அப்போது புரியாதிருந்தது!
“வாத்யாரே!.. திடீரென்று சிறுவன் வீறிட்டு அலறினான்! அவன் கைகாட்டிய திசையில்...... முதல் நாள் மாலையில் அவன் கண்ட பஸ் மலைச் சரிவில் விழுந்து சிதறிக்கிடந்தது! பெரியவர், படபடத்து நடுங்கிக் கொண்டிருந்த சிறுவனின் கைகளை ஆதரவாகப் பற்றியவாறே, மிக சர்வ சாதாரணமாக நடந்தார்!
விடிந்தும் விடியாத கருக்கலில் எதிரே வந்த நாலைந்து நபர்கள் பேசிக் கொண்டே வந்தனர்..”நம்ப முத்தையாவுக்கு விதி ஸ்டிராங்க இருந்திருச்சுடா! யாரோ ஒரு கிழவன் ‘பசு’க்கு ஏதாச்சும் கொடுன்னு தடங்கல் பண்ணிட்டான். இந்தப் பயலும் பஸ்ஸுல போகாம நின்னுட்டான்”
........... “டேய், டேய் இவர்தாண்டா என்னைக் காப்பாத்தினாரு,” என்று கூறியபடியே ஒருவன் வேகமாக வந்து பெரியவரைக் கட்டிப்பிடித்தான்.
“டேய் டேய் யாருடா, என்ன பண்றீங்க!” பெரியவர் திமிறினார். அப்போதுதான் சிறுவன் பெரியவரின் முகத்தைப் பார்த்தான்.. ஜடாமுடி தாடியுடன் பெரியவர் “துறவியாய்” பரிணமித்தார்.. சிறுவன் வியந்து நின்றுவிட்டான்! மன்னிக்கணும் சாமி, நேத்தி ராத்திரி ஒரு வயசான கிழவரைப் பார்த்தேன், உங்கள் மாதிரியே இருந்துச்சு! சிறுவனை தர.. தரவென்று இழுத்துக் கொண்டு பெரியவர் வேகவேகமாக ஓடினார். சற்றுத் தொலைவு சென்றதும் மூச்சு, இரைக்க, இரைக்க சிறுவன் பெரியவரின் முகத்தைப் பார்த்தான்!  அதே முன் வழுக்கையுடன் கோவணாண்டியாகப் பெரியவர் பரிணமித்தார்.
அவன் பலமுறை, பெரியவருடைய இத்தகைய பல ரூபங்களைக் கண்டுகளித்துள்ள போதிலும் “தனக்கு கோவணாண்டியாகக் காட்சியளித்து அந்த முத்தையாவைக் கண்டதும் “ஜடாதாரியாகத்” துறவி வேஷம் போடுவதேனோ!” பெரியவர் திரும்பிப் பார்த்தார்., இப்போதெல்லாம் கேள்விகளைக் கேட்கின்ற சிரமத்தைப் பெரியவர் தருவதில்லை! தாமாகவே பதில் கொடுத்து விடுகின்றார். சிறுவன் இவ்வாறு எண்ணியதாலோ என்னவோ பெரியவர் ஏதுமறியாதவராய் வெகு வேகமாக நடக்க ஆரம்பித்தார்.. நல்ல வேளை, அவரே களைப்புற்றவராய் ஒரு வேப்பமரத்தடியில் அமர்ந்தார். சிறுவனும் அவரருகில் சென்றமர்ந்தான்!
“எப்பவுமே நாம் நிழலுக்காகத் தங்கற இடம் மா, வேம்பு, ஆல், அரசு மாதிரி ஹோம சமித்துக்கான மரமாத்தான் இருக்கணும், புளியமர அடியில் தங்கக் கூடாது. தங்க வேண்டிய நிர்பந்தம் வந்தால் அன்னதானம், ஆன்மீகப் பிரசாரம் போன்ற நற்காரியங்களுக்காகத் தங்கலாம்....” என்று துவங்கிய பெரியவர், “அந்த முத்தையாவுக்காக ஏன் நான் வேஷத்தை மாத்தினேன்னா..... இவன் விதியை அறிஞ்சவன்னு யாருக்கும் தெரியக் கூடாது, இலைமறைகாய் மாதிரி கலியுகத்துச் சற்குரு அப்படித்தான் நம்மோட வாழ்ந்து வழி காட்டுவார். விதியை அறிஞ்சவன்னு மத்தவங்களுக்குத் தெரிஞ்சா அதுவே பெரிய ஆபத்தா முடியும். புரிஞ்சுதா... சற்குரு ஒரு கை காட்டி மாதிரி இங்கே போ, அங்கே போகாதேன்னு சூசகமாச் சொல்வார். அந்த பஸ் பள்ளத்துக்குள்ள விழுந்துடும்னு முன்னாடியே சொன்னா என்னாகும், கொஞ்சம் யோசிச்சுப்பாரு., இவன் நாக்கு கரிநாக்குடான்னு சொல்லி என்னை உதைப்பாங்க!”
“இவன் தான் ஏதோ பில்லி, சூன்யம் பண்ணிட்டான். இவனை நாலு சாத்து சாத்தலாம்னு சொல்வாங்க! பஸ் விழுந்ததுக்கும் இவனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு சொல்லமாட்டாங்களா! ஆனா, பசுக்குத் தர்மம் பண்ணுங்கன்னு கை காட்டினேன். பண்ணினவன் பொழைச்சான்! தர்மம் தான் அவனைக் காப்பாத்திச்சு!”
சிறுவன் ஆழ்ந்து யோசித்தான் “விதியைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டால் இவ்வளவு விபரீதங்களா?” வாத்யாரே! மத்தவங்களையும் நீ காப்பாத்தியிருக்கலாமே!”
“அது அவங்க விதி! அதையெல்லாம் மாத்தறதுக்கு எனக்கு சக்தி கிடையாது. ஏன்னா நான் சாதாரண மனுஷன்!”
“இன்னொரு கேள்வி, வாத்யாரே! அந்த ஆளு நீ சொன்னதுக்கப்புறம் தானே பசுக்கு எல்லாம் கொடுத்தான். அதெப்படி செய்யப் போற கர்மம் செய்யறதுக்கு முன்னாடியே பலன் கொடுக்கும்?”
பெரியவர் மௌனத்தில் ஆழ்ந்தார்.. அவர் நிதானமாகத் தன் வலது உள்ளங்கையை நீட்டினார்.
“ஆஹா! நம்ம டீவி...” சிறுவன் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். காரணம், அவருடைய உள்ளங்கையில் பல பூர்வ ஜன்ம நிகழ்ச்சிகளை வீடியோ போல் கண்டிருக்கிறானே!
உள்ளங்கையில்.... ஓர் அற்புதக் காட்சி தெரிந்தது! ஒரு பசு மலை முகட்டில் வந்து கொண்டிருக்க.... எதிரில் வந்த பஸ் அதன்மேல் மோதி.... பசு விழுந்து துடிதுடித்தது! இரவு நேர மாதலின் பஸ் நிற்கவில்லை! ஆனால்., பசுவின் மேல் பரிதாபப்பட்ட, ஒரு பிரயாணி வெகுவேகமாக, பஸ்ஸை நிறுத்தி அதிலிருந்து இறங்கி ஓடோடிவந்து பார்த்தார்.. பசுவிற்குக் கண்கள் பிதுங்கி நின்றன. வேகவேகமாக அருகிலிருந்து நீர் கொண்டு வந்து பசுவின் வாயில் ஊற்றி இரவெல்லாம் கடுங்குளிரில் அதனருகிலேயே இருந்து காலையில் அடுத்த ஊரிலிருந்து மாட்டு வைத்யரை அழைத்து... “
காட்சி நின்றது ! Still….. ஓ! டக்கென்று பெரியவர் கையை இழுத்துக் கொண்டார். “அதே பசுதாண்டா திருப்பிப் பசுவாப் பொறந்து அதே ஆளைக் காப்பாத்திடிச்சு!” அப்ப நீ யாராயிருந்தே வாத்யாரே!”
“நீ டீவியைப் சரியாப் பாக்கலையா! பசுமாடு கீழே கிடந்துச்சே, அதுபக்கத்துல நின்னுகிட்டு இருந்தேனே!” “பசு பக்கத்துல யாருமே இல்லையே வாத்யாரே, ஒரு வேப்பமரம் தானே இருந்துச்சு”
“ அந்த வேப்பமரம் தாண்டா இது!” கலகலவென்று சிரித்துக் கொண்டே மரத்தடியிலிருந்து பெரியவர் எழுந்தார். இதிலிருந்து சிறுவன் கற்ற பாடம் என்ன தெரியுமா?
செய்யவிருக்கும் தர்மம் முன்னரேயே பலனளிக்குமா? கலியுகத்தில் தான தர்மம் செய்ய வேண்டும் என்ற உண்மையான எண்ணம் வந்தாலே அதுவே பெரும் புண்யமாகிறது. தான தர்மத்தைச் செய்து விட்டாலோ அப்புண்யமானது, புண்ய சக்தியாக மாறுகிறது. தான தர்மத்தைச் செய்ய வைக்கின்ற சற்குரு புண்ய சக்தியை பணமாகவோ, பொருளாகவோ, ஆற்றலாகவோ மாற்றுகின்றார். அவரவருடைய (நியாயமான) கோரிக்கையின் படி சில சமயங்களில் நம்பிக்கை, அன்பு, பக்தி, பணிவு கொண்டோர்க்கு அவரே அப்புண்ய சக்தியைத் தக்க பலாபலன்களாக மாற்றியளிப்பதுமுண்டு!
ஆனால் வெறும் நல்ல எண்ணம் மட்டும் கொண்டிருப்பதை விட அதை உடனடியாக நிறைவேற்றினால் தான் அரிய பெரும் பலன்களைப் பெறலாம். ஏனெனில் நல்ல எண்ணமே மட்டும் கொண்டிருந்தால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மனம் மாறி இருக்கின்ற நல் எண்ணமும் போய்த் தீய குணமும் குடி கொண்டுவிடும்.

கோல மகிமை

கோல மஹிமை
இறைவனை வழுத்துகின்ற முறைகள் பல் உண்டு. கும்மியடித்தல், கோலாட்டம் போன்றவை பெண்களுக்குரித்தான இறை வழிபாட்டு முறையாகும். இறைவனுடைய திருப்பாதங்களைக் கோலத்தில், வண்ணத்தில் வரைந்து அதைச் சுற்றிப் பெண்கள் கும்மியடித்து, கோலாட்டத்துடன் வலம் வந்து பாடி, ஆடி வணங்குவது சிறப்பான கூட்டுப் பிரார்த்தனைகளுள் ஒன்றாகும். கோலம்/வர்ணம் கொண்டு வரையப்படும் திருப்பாத வடிவுகளில் பலவிதமான அபூர்வமான ரேகைகளைக் கோல இழைகளாகவோ, அல்லது குறிப்பிட்ட மூலிகை இலைகளாகவோ வைப்பர். இறைவனின் திருப்பாதக் கோலத்திற்கு “வாமனக் கோலம்” என்று பெயர்! நம் கைகளில் இருப்பது போல உள்ளங்கால்களிலும் பல வித ரேகைகள் உண்டு என்பதைப் பலரும் அறியார். நம்முடைய விதியின் பல அம்சங்களை நம்முடைய கால் ரேகைகளின் மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம். பொதுவாக, பலவிதமான தீய சக்திகள், நகம், நக அழுக்கு, உள்ளங்கால்கள், பிறருடைய  ஆடைகளை அணிதல், வெளியிடங்களில் நீர் அருந்துதல் மூலமாகத்தான் பெரும்பான்மையாக நம்மைச் சேர்கின்றன. கை, கால்களில் மருதாணியிடுதல், மெட்டி அணிதல், மோதிரம்/பொன், பவளம், வைரம், etc ) போன்றவற்றின் மூலம் இத்தீய சக்திகளைத் தடுத்திடலாம். கும்மியடித்தல், கோலாட்டம் இவற்றில் கோலத்தைச் சுற்றிச் சுற்றி வந்து பாடுகையில், அப்பாடல்களில் உள்ள பீஜாட்சர சக்திகள் கோலங்களில் பதிகின்றன. உண்மையில் கோலம் என்பது ஒரு வித பீஜாட்சர யந்திரமே! 21, 51 புள்ளிகள் என்றிடுகையில் ஒவ்வொன்றும் ஒரு பீஜாட்சரமாகின்றது.
நாரத சஞ்சாரம்
விடியற்காலையில் நாரத பகவான், தும்புரு மகரிஷி, துர்வாஸர் மற்றும் பாவை என்றழைக்கப்படும் தேவாதி தேவர்களுடன் பூமியின் மேல் சஞ்சரிக்கின்றார். இன்றும் தினந்தோறும் நடக்கின்ற தெய்வானுபூதி இது! நாரத, பாவை தேவதேவாதியரின் கடாட்சம் கிட்ட வேண்டும் என்பதற்காகவே நம் மூதாதையர்கள் விடியற்காலை நேரத்திலேயே வீட்டின் முன் கோலமிடுவர். ஒவ்வொரு தினத்திற்குமுரிய கோலவகையும் உண்டு. “பாவை” தேவதைகள் தாம் சுபமங்களைத்தைத் தருபவை. இவர்கள் கோலங்கள், புஷ்பம், மஞ்சள் போன்ற மங்களப் பொருட்களில் தான் தங்குவர். பாவை தேவதைகள் விடியற்காலையிலும் மாலை சந்தியா காலத்திலும் மிகுந்த சக்தியைப் பெற்று நம்மை ஆசிர்வதிக்கின்றன. எனவே தான் மாணிக்கவாசகரும் “எம்பாவாய்த்” துதியைப் பாடியருளினார். எனவே கும்மி, கோலாட்டத்தில் நடுவில் வரையப்படுகின்ற கோலத்தில்,
1. நாரத, தும்புரு, துர்வாஸ மஹரிஷிகள் மற்றும் பாவை தேவதைகளின் அருட்கடாட்சம்
2. கோலாட்டம் கும்மித் துதிகளின் பீஜாட்சர சக்திகள்
3. விண்ணில் வலம் வரும் நட்சத்திர தேவதைகள், மஹரிஷிகளின் அனுக்ரஹங்கள்
- போன்ற அனைத்தும் பதிகின்றன. எனவே கோலம் ஒருவகை யந்திரமே! அக்கோலத்தை யாரெல்லாம் தரிசிக்கின்றார்களோ  அவர்களுக்கெல்லாம் தெய்வீக சக்தி கிட்டுகின்றது. பச்சரிசி மாவினால் இடும் கோலத்திற்குத்தான் இச்சக்தி உண்டு! தற்காலத்தில் மொக்கு மாவு எனப்படும் கல்பொடியினால் கோலம் போடுவதால் சாபங்களும் அமங்கலமுமே உண்டாகும். இயற்கையிலேயே பச்சரிசி மாவு பூஜா சக்தியை கிரஹிக்கும் சக்தியைப் பெற்றிருப்பதால் தான் கோலத்திற்கும் மாவிளக்கிற்கும் அதனை பயன்படுத்துகின்றோம்., பாருங்கள் கோல விளக்கமானது எத்தகைய ஆன்மீக விளக்கங்களுக்கெல்லாம் நம்மை இட்டுச் செல்கின்றது!
ஆஸ்ரமத்தில் கிடைக்கும் புத்தகங்கள்

1.

திருஅருணாசல கிரிவல மஹிமை

2.

ஸ்ரீஆயுர்தேவி மஹிமை

3.

 ஓங்கார மஹிமை

4.

திருப்பணி தரும் திருவருள்

5.

ஆசான் அனுபவ மொழிகள்

6.

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அந்தாதி

7.

அஷ்டதிக்கு பாலகர்

8.

பெண்கள் சிந்தும் கண்ணீரால் சிறகடித்துப் பறக்கும் வாழ்வு

9.

சுமங்கலிக் காப்பு

10.

பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது எப்படி?

11.

எளிமையான தியான முறை

12.

மாங்கல்ய மஹிமை

13.

 திருமணம் ஆகவில்லையா ஏன்?

14.

எறும்பு வைராக்கியம்

15.

கோமுக நீர் மஹிமை, சிவபாத பூஜை மஹிமை

16.

சாம்பிராணி தூப மஹிமை

17.

சந்தன மஹிமை

18.

இறப்பின் இரகசியம்

19.

எளிய தர்ப்பண பூஜை முறைகள் (முதல் பகுதி)

20.

சித்தர்கள் அருளிய பெண்களுக்கான பூஜை முறைகள்

21.

அலுவலகம் செல்வோரும், தொழிலாளர்களும் செய்ய வேண்டிய நித்திய பூஜைகள் ( ஆண்களுக்கு மட்டும்)

22.

 வியாபாரிகளுக்கு உரித்தான நித்திய பூஜைகள்

23.

இல்லறப் பெண்கள் செய்ய வேண்டிய நித்திய கடமைகளும் நித்திய பூஜைகளும்.

24

அலுவலகம், தொழிற்சாலைகள் வேலைக்குச் செல்லும் பெண்கள் செய்ய வேண்டிய நித்திய பூஜைகளும் கடமைகளும் (பெண்களுக்கு மட்டும்)

25.

பிரதோஷ மகிமை

26.

ஸ்ரீஅகஸ்திய விஜயம் – அருள்வழி ஆன்மீகத் தொகுப்பு – 1.

 

ஓம்ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam