நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பதொன்றுதான் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

குசாவும் எண் சக்தியும்

மனிதனுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போல் எண்களும் இன்றைய மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கமாகி விட்டன. எனவே, எந்த அளவிற்கு ஒரு மனிதன் எண் சக்திகளைப் பெறுகிறானோ அந்த அளவிற்கு அவன் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களின் பண்புகளை எப்படி தெய்வீகமான முறையில் பெருக்கிக் கொள்ளலாம் என்பதை உங்களுக்கு விவரிக்கிறோம்.

எண் 1

தமிழ் அல்லது ஆங்கிலம் ஒன்றாந் தேதியில் பிறந்தவர்கள், அல்லது விதி எண்ணை ஒன்றாக கொண்டவர்கள், அதாவது 2.7.1990 (2+7+1+9+9+0 = 28 = 2+8 = 10 = 1+0 = 1) போன்ற தேதியில் பிறந்தவர்களின் வாழ்வில் ஒன்றாம் எண்ணின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

இத்தகையோர் செய்ய வேண்டிய இறைவழிபாடுகளைப் பற்றி சித்த கிரந்தங்கள் தெளிவாக உரைக்கின்றன.

1. எண் 1 தனித்த சிவ தத்துவத்தைக் குறிப்பதால் பாண லிங்க மூர்த்திகள் வழிபாடு இவர்களுக்கு தேவையான அனுகிரக சக்திகளை அளிக்கும்.

எண் ஒன்றின் அதிதேவதா நவகிரக மூர்த்தி சூரிய பகவான். சூரிய பகவானுக்கு உரித்தான செந்தாமரை மலர்களால் மாலை கட்டி ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது  திருவாதிரை, சித்திரை, சுவாதி போன்ற ஏக நட்சத்திர தினங்களில் அல்லது சதய நட்சத்திர (100 நட்சத்திரங்களின் கூட்டு) தினங்களிலும் இத்தகைய பாண லிங்க மூர்த்திகளுக்கு அணிவித்து ஆராதனை செய்து வருதல் நலம்.

ஸ்ரீபாணலிங்கம்
அரண்மனைப்பட்டி

சிறப்பாக புதுக்கோட்டை அருகே ஸ்ரீகொன்றையடி விநாயகர் திருத்தலத்தில் அருள்புரியும் வெட்டவெளி பாணலிங்க மூர்த்தி அற்புதமான வரங்களை அளிக்க வல்ல காருண்ய மூர்த்தி.

2. காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பர நாதரை மேல் நோக்கு நாள்களில் வழிபட்டு ஸ்ரீபோடா சுவாமிகள் ஜீவாலயத்தில் சர்க்கரை பொங்கல் தானம் அளித்து வருதலால் திருமணத்திற்குப் பின் அமையும் வாழ்க்கை சுவையானதாக இருக்க எண் ஒன்றின் சக்தி துணை புரியும்.

3. ஸ்ரீபட்சி மேகாந்திரர், ஸ்ரீஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, வலது அல்லது இடது காலை துõக்கி நடனமாடும் நடராஜ மூர்த்திகள், ஸ்ரீதிரிபுர சம்ஹார தாண்டவ மூர்த்தி, ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தி போன்ற ஒற்றைக் காலை ஊன்றி நடனமாடும் சிவ மூர்த்தங்கள், ஊட்டத்துõரில் அருள் புரியும் ஏக (ஒற்றை) கல் ஸ்ரீபஞ்சநதன நடராஜ சிலா மூர்த்திகளை  அவ்வப்போது தரிசித்து வருதல் நலம்.

4. சிவசூரியன் அருளும் பூவாளூர் போன்ற திருத்தலங்களில் இறைவனை வணங்கி உதிர்ந்த புட்டு தானமாக அளித்தலால் உயர்ந்த பதவிகளில் நிலவும் நிலையற்ற தன்மை நீங்க அருள் கிட்டும்.

எண் 2

1. சிவ சக்தியின் ஐக்கியத்தைக் குறிப்பது எண் 2. சக்தி அம்சம் பூரணமாகப் பொலியும் தலங்களில் வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பாகும். ஸ்ரீமீனாட்சி அம்மன், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி போன்று இறைவனைவிட இறைவியின் சான்னித்தியம் பெருகி உள்ள தலங்களில் அம்பாளையும் சிவபெருமானையும் வழிபட்டு மஞ்சள், குங்குமம், தேங்காய் போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்தல் சிறப்பு.

அர்த்தநாரீஸ்வர திருக்கோலம்
உய்யக் கொண்டான்மலை

2. அர்த்தநாரீஸ்வரர் சிறப்பாக அருள்புரியும் திருச்செங்கோடு போன்ற திருத்தலங்களிலும், கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் அருளும் லால்குடி, உய்யக்கொண்டான் மலை போன்ற திருத்தலங்களில் தேங்காய் எண்ணெய் அகல் தீபமிட்டு தீபம் குளிரும் வரை ஆலயத்தை வலம் வந்து வணங்கினால் கணவன் மனைவியரிடையே அன்பு மிகும், குடும்ப ஒற்றுமை வளரும், எண் 2ன் சக்திகள் பெருகும்.

ஸ்ரீபோடா சுவாமிகள்
காஞ்சிபுரம்

3. இறைவனுக்கு வலப்புறம் அம்பாள் அருள் புரியும் தலங்களில் மனைவியின் பெயரில் வீடு வாங்குவது நல்லது. வெண்தாமரை, சம்பங்கி, முல்லை, மல்லிகை போன்ற வெண்ணிற மலர்களால் அம்பாளுக்கு பூப்பந்தல் அமைத்து வழிபட்டு வந்தால் கணவன் அல்லது மனைவி இழந்து வாடுவோரின் வாழ்க்கையில் மணம் வீசத் தொடங்கும். வீடு, வாசல் போன்றவற்றை வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் பறிகொடுத்தோரின் வாழ்வு சீர்பெற சமுதாய பூஜையாக இத்தகைய வழிபாடுகளை இயற்றுவது நலம்.

4. சந்திர தீர்த்தம் அமைந்துள்ள திருத்தலங்களில் திருக்குளத்தில் நீராடி இறைவனுக்கும் நந்திக்கும் வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபடுதலால் உடம்பில் ஊறல், தேமல், அரிப்பு, வெண்குஷ்டம் போன்ற தோல் நோய்களால் அவதியுறுவோர் நலம் அடைவர்.

எண் 3

1. சிவா, விஷ்ணு, பிரம்மா மூர்த்திகள் ஒரு சேர அருளும் மும்மூர்த்தி தலங்களில் வழிபட்டு மா, பலா, வாழை என முக்கனிகளுடன் தேன் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு தானம் அளித்தல் நலம்.

2. நின்று, அமர்ந்து, நடந்த கோலங்களில் பெருமாள் அருள்புரியும் உத்தரமேரூர் போன்ற திருத்தலங்களிலும், இறைவன் மூன்று நிலைகளாக அருளும் சீர்காழி, உளுந்தூர்பேட்டை அருகே இளவனார்சூரக் கோட்டை, புதுக்கோட்டை அருகே திருக்கோளக்குடி போன்ற சிவத் தலங்களிலும் இறைவனை வழிபட்டு மூன்று கண் உள்ள தேங்காய் மூடியைத் துருவி அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து பள்ளி மாணவர்களுக்குத் தானம் அளித்து வந்தால் என்ன படித்தாலும் மூளையில் ஏறவில்லை என்று சொல்லும் குழந்தைகள் படிப்பில் நல்ல கவனம் செலுத்துவர்.

ஸ்ரீஒளியுலா சுவாமிகள் ஜீவாலயம்
துவரங்குறிச்சி

3. திருவாதிரை நட்சத்திரமும், வளர் மூன்றாம் பிறை சந்திரனும் இணைந்த நாட்களில் சந்திர மௌலீஸ்வரர், சந்திரசேகரர் என்ற நாமம் தாங்கியுள்ள மூர்த்திகளையும், பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரத்தில் அருளும் ஸ்ரீபடேசாகிப் சுவாமிகளின் ஜீவசமாதி, துவரங்குறிச்சியில் அருளும் ஸ்ரீஒளியுல்லா சுவாமிகளின் ஜீவசமாதி இவற்றை தரிசனம் செய்து குழந்தைகளுக்கு கல்கண்டு கலந்த பசும்பால் தானம் அளித்து வருதல் சிறப்பு.

4. வியாழக் கிழமைகளில் தனிச் சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்திகளை வணங்கி மஞ்சள் நிற ஆடைகளைத் தானமாக அளித்து வந்தால் திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

எண் 4

1. திருநெல்வேலி அருகே நான்குநேரி திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீவானமாமலை பெருமாளை புதன், சனிக் கிழமைகளில் வணங்கி ஒரு மூங்கில் முறத்தில் ஒரு படி பச்சரிசி, மூன்று உருண்டை வெல்லம், இரண்டு உருண்டை மஞ்சள், ஒரு முழுத் தேங்காய் இவற்றை ஐந்து சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்து வந்தால் நாக தோஷங்களால் தடைபட்டுள்ள திருமணங்கள் விரைவில் நிறைவேறும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறையும்.

2. நான்முகன் பிரம்மா தனிச் சன்னதி கொண்டு அருளும் திருச்சி அருகே திருப்பட்டூர் போன்ற திருத்தலங்களில் இறைவனை வழிபட்டு ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வருதலால் பிறந்தது முதல் வாழ்வில் துன்பத்தையே அனுபவித்து வரும் அடியார்களுடைய குறைகள் தீரும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவாலயம் சாத்தமங்கலம் லால்குடி

3. நான்கு வேதங்கள் வழிபட்ட திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோயிலில் இறைவனை வணங்கி, கிரிவலம் வந்து வேதம் ஓதும் மாணவர்களுக்கு தேனில் ஊறிய அத்திப் பழங்களை தானமாக அளித்து வருதலால் ஆஸ்துமா, கான்சர், தொழுநோய், சர்க்கரை வியாதி போன்ற நாள்பட்ட வியாதிகளின் வேகம் தணியும்.

4. நான்மாடக் கூடல் என்று பிரசித்தமாய் விளங்கும் மதுரை மாநகரில் அருளும் அமர்ந்த நிலை ஸ்ரீகூடல் அழகரைத் தரிசனம் செய்து செந்தாமரை மலர்களால் அர்ச்சித்தும், அடுத்த நிலையில் சயனன் கோலத்தில் அருளும் ஸ்ரீரெங்கநாதப் பெருமாளை நீலோத்பவ மலர்களால் அர்ச்சித்தும், நின்ற நிலையில் அருளும் ஸ்ரீசூரிய நாராயணப் பெருமாளுக்கு சாமந்திப் பூ திண்டு மாலை அணிவித்து வழிபடுவதால் ஊர் விட்டு ஊர் மாறி வேலை செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்களும், நிரந்தரமாய் ஒரு வேலையிலிருந்து வருவாய் பெற இயலாதர்வர்களும் நன்னிலை அடைவர்.

எண் 5

1. உலகில் உள்ள எல்லா இனத்தவரும் வழிபட வேண்டிய உத்தம மூர்த்தியான திருச்சி உறையூர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் மூர்த்தியை வழிபட்டு எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், புளி சாதம் போன்ற சித்ரான்னங்களைத் தானமாக அளித்தலால் கம்ப்யூட்டர், மைக்ரோபயாலஜி, அணு விஞ்ஞானம் போன்ற ஆராய்ச்சி துறைகளில் ஈடுபடுவோர் நலம் அடைவர்.

2. ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் திருஅருள் புரியும் திருவையாறு திருத்தலத்திலும், திருச்சி லால்குடி அருகே திருமணமேடு திருத்தலத்திலும் இறைவனை வணங்கி பொன் மாங்கல்யம் தானம் (ஒரு குண்டுமணி அளவாவது) அளித்தலால் அகால மரணம் ஏற்படாமல் இருக்க இறைவன் அருள் புரிவார். மரண பயத்தை அகற்றுவது பஞ்ச மூர்த்திகளின் தரிசனம். இக்காரணம் பற்றியே பெரும்பாலான சிவத்தலங்களில் இறைவனின் பஞ்ச மூர்த்திகளைப் பல்லக்குகளில் ஏற்றி வீதிகளில் வலம் வரும் தெய்வீக வழக்கம் இன்றும் நிலவி வருகிறது.

3. புத பகவான் தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் திருவெண்காடு திருத்தலத்தில் முக்குள தீர்த்தத்தில் நீராடி வேதம் பயிலும் மாணவர்களுக்கு பஞ்ச பாத்திரம், உத்தரணி, மணி போன்ற பூஜை பொருட்களைத் தானம் அளித்தலால், வயதான காலத்தில் தக்க துணையுடன் வாழும் வசதியையும் நிலையையும் ஈசன் அருள்வார்.

4. ஒரு மாதத்தில் வரும் ரோஹிணி, புனர்பூசம், மகம், ஹஸ்தம், விசாகம் என ஐந்து நட்சத்திரங்களிலும் ராமா சீதா லட்சுமண சகிதமாய் காட்சி அளிக்கும் தெய்வ மூர்த்திகளுக்கு பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம் போன்ற ஐந்து அமிர்த சக்திகள் கொண்ட அபிஷேகங்கள் செய்து, இறை மூர்த்திகளுக்கு வேஷ்டி, அங்கவஸ்திரம், தலைப் பாகை, சேலை, ஜாக்கெட் என்னும் ஐந்து வித ஆடைகளை அணிவித்து ஐந்து விதமான மலர்களால் அலங்கரித்து, சாதம், முறுக்கு, பணியாரம், தோசை, இட்லி போன்ற ஐந்து விதமான பதார்த்தங்களால் நைவேத்தியம் செய்து ஏழைகளுக்கு தானம் அளித்து வந்தால் என்றும் வற்றாத செல்வம் கொழிக்கும் நிலையை அடைவர்.

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மராஜர் இத்தகைய அபிஷேக ஆராதனைகளை 14 ஆண்டுகள் தொடர்ந்து பஞ்ச பர்வ நாட்களில் நிறைவேற்றி வந்ததால்தான் உயிருடன் சொர்க்க லோகம் செல்லும் உத்தம நிலையை அடைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. (பஞ்ச பர்வ நாட்களாவன தமிழ் மாதத்தில் முதல் தேதி, திங்கள், வெள்ளி, சனிக் கிழமைகள், வளர் சதுர்த்தி, சஷ்டி, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி திதிகள், கிருத்திகை நட்சத்திரம்).

எண் 6

1. சென்னை ஸ்ரீவெள்ளீஸ்வரர் திருத்தலத்தில் இறைவனை வழிபட்டு கால் மெட்டிகளை சுமங்கலிகளுக்கு தானமாக அளித்து வருதலால் கண் பார்வை மங்குதல், மாலைக் கண், புற்று நோய் போன்ற கண் நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம்.

ஸ்ரீதிருமகள் பூவாளூர் சிவாலயம்

2. கழுதையை வாகனமாக உடைய ஸ்ரீபல்குனி சித்தர் அருளும் பூவாளூர் திருத்தலத்தில் வழிபாடுகள் மேற்கொண்டு கழுதைகளுக்கு காரட், பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை அளித்து வந்தால் மாடாக உழைத்தும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க முடியாத நிலை மாறி உழைப்புக்கேற்ற ஊதியமும், பண வரவும் கிட்ட இறைவன் அருள்புரிவார். மூதாதையர்களுக்கு வழிபாடுகள் விடுபட்டிருந்தால் அதற்கு ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும்.

3. சுக்ர வார அம்மன் அருளும் தலங்களில் வெள்ளிக் கிழமைகளில் ராகு நேரத்தில் வழிபாடுகள் இயற்றி தானே அரைத்த மஞ்சளால் அம்பிகைக்கு அபிஷேகம் செய்து வழிபடுதலால் தீர்க்க சுமங்கலித்துவம் பெற அன்னையின் அருள் கிட்டும்.

4. பல யுகங்களாக முருகப் பெருமாளின் அருளை வேண்டி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த சுக்ர மூர்த்திக்கு தற்போது ரமண மகரிஷியின் ஆஸ்ரமத்தைத் தாண்டி உள்ள கிரிவலப் பகுதியில் ஏக முக தரிசனத்தை அடுத்து முருகப் பெருமானின் தரிசனம் கிட்டியது. இங்கு எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை வணங்கி சண்பக மலர்களால் மாலை தொடுத்து இறைவனுக்குச் சார்த்தி, பசு நெய் கலந்த பஞ்சாமிர்தத்தை சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைத்து கிரிவலம் வரும் அடியார்களுக்கு வழங்கி வந்தால் தங்க, நவரத்தின வியாபாரிகள் நலம் அடைவர். ஆண் துணை இல்லாத குடும்பங்களிலும், ஆண் வாரிசுகள் இல்லாத தம்பதிகளும் தக்க நிவாரணம் கிடைக்கப் பெறுவார்கள்.

5. கும்பகோணம் அருகே வெள்ளியான்குடி திருத்தலத்தில் அருளும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை தரிசனம் செய்து இங்குள்ள சுக்ர தீர்த்தத்தில் நீராடி திண்டு தோசை, பெரிய வெங்காயம் கலந்த சட்னியுடன் தானம் அளித்தலால் ஆண்கள், பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடிப் பெற முடியாத  சுக்ர சக்திகளை ஓரளவு திரும்பப் பெறலாம். கம்ப்யூட்டரில் நீண்டநேரம் வேலை செய்வதால் ஏற்படும் கண் நோய்களுக்கு நிவர்த்தி தரக் கூடிய தலம். ஆனால், மாதம் ஒரு முறையாவது இங்கு நீராடி வருதல் அவசியம்.

எண் 7

1. சப்த ரிஷிகள் அருளும் லால்குடி போன்ற சிவத்தலங்களிலும், சப்தரிஷீஸ்வரர் என்று இறைவன் நாமம் பூண்ட திருத்தலங்களிலும் சப்தமி திதிகளில் வழிபட்டு மஞ்சள் நிற ஆடைகள், உணவுகள், ஆபரணங்களைத் தானமாக அளித்தலால் இசைத் துறையில் உள்ளோர் முன்னேற்றம் அடைவர்.

ஸ்ரீசப்தரிஷிகள் லால்குடி

2. அபூர்வமாக ஏழு பிரகாரங்களுடன் காட்சி தரும் பிரம்மாண்டமான திருக்கோயில்களான ஸ்ரீரங்கம்,  திருஅண்ணாமலை, மன்னார்குடி போன்ற திருத்தலங்களில் தினம் ஒரு பிரகாரத்திலாவது வலம் வந்து வாரத்தின் ஏழு நாட்களிலும் வழிபட்டு வருவதால் வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு வழிகாட்டுதல் இன்றி தவிப்போர் தகுந்த வழிகாட்டியை அடைவர். ஆழ்ந்த நம்பிக்கை உடையோருக்கு முக்தியையே அளிக்கக் கூடியது இந்த சப்த பிரகாரங்கள் வழிபாடு. இவ்வாறு திருவரங்க சப்த பிரகாரங்களை 18 முறை நமஸ்கார பிரதட்சணத்துடன் வழிபட்ட பின்னரே ராமானுஜருக்கு அவருடைய குருநாதருடைய தரிசனம் கிட்டியது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

சப்தஒலி பிரகாரம், திருவையாறு

திருஅண்ணாமலை திருத்தலம் இறைவனே வலம் வரும் கிரிவலப் பாதையையே ஏழாவது பிரகாரமாக உடையது என்றால் இதைவிட சிறப்பான ஒரு பிரகாரம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தரிசனம் செய்ய முடியுமா? பலரும் கிரிவலப் பாதையின் மகத்துவம் அறியாததால்தான் அதைச் சாதாரண வீதி, சாலை என்று எண்ணுவதால்தான் அதில் செருப்புகள் அணிந்து நடப்பது, கிரிவலப் பாதையில் எச்சில் துப்புவது போன்ற அசுத்தமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அது சக்தி வாய்ந்த ஏழாவது பிரகாரம் என்பதை இனியாவது உணர்ந்து அங்கு முறையோடு கிரிவலம் வந்து அளப்பரிய பலன்களை அள்ளிச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

3. நமது பூலோக கணக்கில் சப்த ஸ்வரங்கள் என்ற ஏழு ஸ்வரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், மற்ற லோகங்களில் ஏழிற்கும் மேற்பட்ட ஸ்வரங்களும், ஸ்வர தேவதைகளும் உண்டு. திருச்சி அருகே செட்டிக்குளம் ஸ்ரீஏகாம்பரரேஸ்வரர் திருத்தலத்தில் காணப்படும் இசைத் துõண்களைப் போல எங்கெல்லாம் இசைத் துõண்கள் உள்ளனவோ அத்திருக்கோயில்களில் வீணை, வயலின் போன்ற வாத்ய கருவிகளை வாசிக்கும் ஏழை இசைக் கலைஞர்களைக் கொண்டு இறைவனுக்கு நாதோபசாரம் செய்து மகிழ்வித்து, அந்த வித்வான்களுக்கு தக்க சன்மானம் வழங்கி கௌரவித்தலால் நரம்பு சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவோர் நலம் அடைவர்.

4. திருத்தனி திருத்தலத்தில் அமைந்துள்ள கன்னி தீர்த்தம் என்றழைக்கப்படும் சப்தரிஷி தீர்த்தத்தில் நீராடி அல்லது வள்ளிமலையில் உள்ள குமரி தீர்த்தத்தை வழபட்டு தினைமாவு தேன் கலந்த உணவை பக்தர்களுக்குத் தானமாக அளித்து வந்தால் உடல், மன வியாதிகளால் தடைப்பட்ட திருமணங்கள் எளிதில் நிறைவேறும். திருமணத்திற்குப் பின் தஞ்சை கரந்தை திருத்தலத்தில் அருளும் ஸ்ரீஅருந்ததி சமேத வசிஷ்டரை வணங்கி நன்றி செலுத்துதல் அவசியமாகும். அப்போதுதான் பிரார்த்தனை முழுமை அடைகிறது என்பதை மனதில் கொள்ளவும்.

எண் 8

1. காலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது எண் எட்டு. அதனால்தான் எட்டை கால எண் என்றும் அழைக்கிறோம். ஒரு நாளின் பகல் பொழுதை ஒன்றரை மணி நேரம் கொண்ட எட்டு முகூர்த்தங்களாகவும் , இரவுப் பொழுதை எட்டு முகூர்த்தங்களாகவும் பிரித்து கணக்கிடுவதால், எண் எட்டிற்கு பைரவ சக்திகள் மிகுந்திருக்கும். சீர்காழி, திருஅண்ணாமலை போன்று அட்ட (எட்டு) பைரவ மூர்த்தி அருளும் தலங்களில் தேய்பிறை அஷ்டமி தினங்களில் வழிபாடுகளை இயற்றி முந்திரி பருப்பு பாயசம் தானமாக வழங்குவதால் நேரம் காலம் பார்க்காது நிகழ்த்திய திருமணம், கிருஹப் பிரவேசம் போன்ற நற்காரியங்களில் ஏற்பட்ட கால தோஷங்களுக்கு ஓரளவிற்குப் பிராயச்சித்தம் கிட்டும்.

ஸ்ரீபைரவேஸ்வரர் சோழபுரம்

2. இறைவனே பைரவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ள சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் திருத்தலம், பைரவர் தனிச் சன்னதி கொண்டு அருளும் திண்டுக்கல் அருகே தாடிக் கொம்பு, திருவாஞ்சியம், திருச்சி (பெரிய கடைவீதி ஸ்ரீபைரவர் கோயில்) போன்ற திருத்தலங்களில் இம்மூர்த்தியை வழிபட்டு நாய்களுக்கு பிஸ்கட், ரொட்டி, கடலை மிட்டாய் போன்ற உணவு வகைகளைத் தானமாக அளித்தலால் பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத ஆபத்துக்கள் நீங்கும். இரவு நேரப் பயணங்களில் ஏற்படும் கால தோஷங்களுக்கு மிகக் குறைந்த அளவில் பரிகாரம் கிட்டும். இரவு நேரத்தில் மேற்கொள்ளும் பயணங்களுக்கு பொதுவாக எவ்வித பரிகாரமும் இல்லை என்பதை உணர்ந்தால்தான் இந்த பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

3. எண் எட்டிற்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வுக்கும் நெருங்கிய தொடர்பு கொண்டது. அவதார மூர்த்திகளில் யாருக்குமே புரியாத புதிராக ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளங்குவது போல எண் எட்டின் மகிமையும், ஜாதகத்தில் எட்டாம் வீட்டின் மகத்துவமும் இன்றும் பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. கால தேசத்தைக் கடந்த நிலையில் நிற்கும் உத்தம பெருமாள் பக்தர்கள்தான் எட்டின் மகிமையைப் புரிந்து கொள்ள முடியும் என்றால் அது மிகையாகாது.

கீழிருந்து மேலாகப் பார்த்தாலும், வலமிருந்து இடமாகப் பார்த்தாலும் எட்டின் தோற்றம் மாறாது என்பதே வேறு எந்த எண்ணிற்கும் இல்லாத தனிச் சிறப்பாகும்.
மேலும், கையை எடுக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் எட்டு என்ற எண் உருவத்தை எழுதிக் கொண்டே இருக்கலாம்.

இதனால் என்ன பயன் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அலைபாயும் மனதை அடக்கி ஆள்வதே எண் எட்டு ஆகும். மகாபாரத யுத்தத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இந்த யுக்தியைத்தான் கையாண்டார். அதாவது கீதை என்ற ஒப்பற்ற தத்துவத்தை அர்ச்சுனுக்கு புகட்ட நினைத்தார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. ஆனால், மிகவும் உயரிய தத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரு முனைப்பட்ட மனதுடன் கேட்க வேண்டும் அல்லவா? இவ்வாறு ஒரு முனைப்பட்ட சக்தியைத் தருவதற்காக ஸ்ரீகிருஷ்ணர் அஷ்ட வக்ர சக்திகளைப் போர் முனையில் நிறுவினார். அஷ்ட வக்ர சக்திகளைப் பற்றி மனித மனம் புரிந்து கொள்ள முடியாது என்பதால் அதை எண் எட்டில் உருவகப்படுத்திப் பார்க்கலாம்.

மேலே ஒரு வட்டமும் கீழே ஒரு வட்டமும் இணைந்து உருவாவதுதானே எட்டு. இதில் மேல் வட்டத்தில் உள்ள நான்கு வளைவுகளும், கீழ் வட்டத்தில் உள்ள நான்கு வளைவுகளும் அஷ்ட வக்ர சக்திகளைக் குறிக்கின்றன.இந்த அஷ்ட வக்ர சக்திகள் எல்லாத் திசைகளிலும் சுழலும் தன்மை உடையது. இவ்வாறு எட்டுடன் சுழலும் மனச் சக்தியானது மெல்ல மெல்ல இரண்டு வட்டங்கள் சந்திக்கும் நடுப் புள்ளியில் வந்து சேர்ந்து விடும். அந்நிலையில் மனக் குழப்பம் நீங்கி தெளிவு பெறும். இவ்வாறு அர்ச்சுனனின் மனம் தெளிவடைந்தபோதுதான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கீதை என்னும் அரிய உபநிஷத்தை உபதேசித்தார். அன்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உபதேசித்த அஷ்ட வக்ர தத்துவமே இன்றைய விஞ்ஞானத்தில் அணு ஆராய்ச்சி, வானிலை, விண்வெளி ஆராய்ச்சி போன்ற துறைகளில் பெரிதும் பயன்படுகிறது.

ஸ்ரீகிருஷ்ண பகவானின் குழலூதும் திருஉருவத்தை வீட்டில் வைத்து முடிந்தபோதெல்லாம் அவர் திருஉருவத்தை மனக் கண் முன் கொண்டு வந்து தியானித்துக் கொண்டிருந்தால்தான் எட்டைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடியும். ஆத்ம விசாரத்திற்கு முன்னோடியாக இருப்பதுதான் குழலூதும் கிருஷ்ணனின் திருஉருவம்.

மன ஊனத்தையும் உடல் ஊனத்தையும் உண்டாக்குவது எண் எட்டின் சக்தி என்றே பலரும் கருதுகின்றனர். அவரவர் விதியின் விளையாட்டே இது என்றாலும் மக்களுக்கு உடல், மன ஊன எண்ணங்களை நிவர்த்தி செய்வதற்காகவே ஸ்ரீஅஷ்டவக்ர மகரிஷி இறைவனை வேண்டி அருள் பெற்ற தலமே சுவாமிமலை அருகில் உள்ள கூனஞ்சேரி திருத்தலமாகும். எண் எட்டில் பிறந்தவர்களின் வழிபாட்டிற்கு உரிய அற்புத தலம்.

4. ஏற்கனவே கூறியதுபோல் எட்டாம் எண்ணில் பிறந்தவர்கள் காற்றில் அகப்பட்ட பஞ்சின் நிலையில் இருப்பதால் விதியின் வலிமையான பிடியில் இருந்து ஓரளவு விடுதலை பெற உதவுவதே திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி திருத்தல வழிபாடு.

திருப்பைஞ்ஞீலி திருத்தலம்

தான் இராமபிரானின் கையால் இறக்க நேரிடும் என்ற விதியை உணர்ந்தவன் ராவணன். ராவணன் இறப்பிற்கு அஞ்சாதவன், ஆனால், ஒரு மானிடன் கையால் தனக்கு மரணம் வருவதைத்தான் அவனால் சகித்துக் கொள்ள இயலவில்லை. அதனால் அவன் திருப்பைஞ்ஞீலி இறைவனை மனம் உருகி வேண்டினான். அவன் பிரார்த்தனைக்கு செவி சாய்த்த இறைவன் அவனுக்குக் காட்சி கொடுத்து ஆறுதல் அளித்தார். இராவணன் சென்று வழிபட்ட வாயில் இன்றும் ராவணன் வாயில் என்ற பெயருடன் விளங்குகிறது.

ராவணன் வாயில்
திருப்பைஞ்ஞீலி

ராம அவதாரம் தோன்றி எத்தனை லட்சம் ஆண்டுகள் மறைந்து விட்டன. இத்தனைக் காலமாய் மரண பயத்தை நீக்கி மக்களுக்கு அருள்பாலித்து வரும் திருப்பைஞ்ஞீலி ஈசனின் தோற்றத்தை யாரால் உணர முடியும். மனிதக் கணக்கிற்கு அப்பாற்பட்டதே சுயம்பு மூர்த்திகளின் தோற்றமும் மறைவும்.

இத்தல இறைவனை வணங்கி தேனில் தோய்த்த பலாச் சுளைகளையும், எள் சேர்த்த முறுக்கு, தட்டை போன்ற உணவுப் பொருட்களை அஷ்டமி திதிகளில் தானம் அளித்து வந்தால் மரண பயம் இன்றி அமைதியான வாழ்வைப் பெறலாம்.

எண் 9

1. எண் வரிசையில் கடைசியாக வரும் 9 பூரணத்துவத்தைக் குறிக்கிறது. எந்த எண்ணின் ஒன்பது மடங்கும் ஒன்பதாகவே வரும். எனவே, ஒன்பதை கடைசி எண் என்று சொல்லாமல் முழுமையான எண், பூரணமான எண் என்று சொல்வதே சிறப்பு.

எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை நினைத்து காரியத்தை ஆரம்பித்து, அந்தக் காரியம் நிறைவேறியவுடன் ஆஞ்சநேய மூர்த்திக்கு நன்றி சொல்லி முடிப்பது வழக்கம். இந்த இரண்டு மூர்த்திகளுக்குமே உரிய எண்ணாக ஒன்பது இருப்பதே அதன் சிறப்பு.

உலகிலேயே பெரிய பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையாரை ஒன்பது முறை கிரிவலம் வந்து வணங்குவது சிறப்பான வழிபாட்டு முறையாகும். கிரிவலத்தின்போது பூரணக் கொழுக்கட்டைகளை தானமாக அளித்தலால் பாதியில் நின்று போன திருமணங்கள், வீட்டு மனை வேலைகள், கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள், குளம், கிணறு தோண்டும் வேலைகள் நிறைவு பெறும்.

2. நவகிரக வழிபாடு தோன்றுவதற்கு முன்பே நிலவிய திருமழபாடி போன்ற சிவத்தலங்களில் நவகிரக சக்திகளை மூலவரே ஏற்று அருள்பாலிப்பதால் இத்தலங்களில் ஒன்பதின் சக்திகள் அபரிமிதமாக இருக்கும். ஒன்பது குழிகள் கொண்ட பணியாரச் சட்டியில் இனிப்பு பணியாரம் சுட்டு ஆடு மாடு மேய்ப்பவர்களுக்குத் தானமாக வழங்கினால் நாற்கால் பிராணிகளால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்க்கலாம். புதிது புதிதாக வரும், இனந் தெரியாத காய்ச்சல் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். 

3. இறை மூர்த்திகள் வில், அம்பு, வேல், கத்தி போன்ற பல ஆயுதங்களைத் தாங்கி காட்சி தருகிறார்கள் அல்லவா? இந்த ஆயுதங்களால் அவர்கள் தீயவர்களைத் தண்டிக்கிறார்கள் என்று கூறுகிறோம். உண்மையில் கடவுள் யாரையும் தண்டிப்பதில்லை என்பதே சித்தர்கள் வாக்கு. அவரவர் செய்த நல்வினை தீவினை சக்திகளே மனிதர்களைத் தண்டிக்கின்றன.

ஒரு ஜீவனின் அகங்காரம் காரணமாக அத்து மீறிய கொடுமைகள் நிகழும் இறைவன் பல அவதாரங்கள் மூலம் அந்த ஜீவனின் ஆணவத்தை மட்டுமே அழிக்கிறான். இறை மூர்த்திகளின் இந்த ஆயுதங்களை நாம் எந்த அளவிற்கு வழிபடுகிறோமோ அந்த அளவிற்கு நாம் எல்லா அனுகிரகங்களையும் அந்த ஆயுதங்களின் மூலமாகவே பெறலாம்.

இம்முறையில் ஏற்பட்டதே பெருமாளின் சங்கு, சக்கர வழிபாடு. அதே போல சிவபெருமான் தாங்கி இருக்கும் மழுவானது ஒன்பதின் வடிவத்தைக் கொண்டிருப்பதால் திருக்கோயில்களில் காட்சி தரும் இந்த மழு ஆயுதத்திற்கும், மற்ற ஆயுதங்களுக்கும் சுத்தமான நல்ல எண்ணைக் காப்பிட்டு, கையால் அரைத்த சந்தனப் பொட்டிட்டு வணங்குவதால் தலைக்கு வந்த துன்பங்கள் தலைப்பாகையோடு போக ஈசன் அருள்புரிவார்.

ஸ்ரீருணம் தீர்த்த கணபதி
சீர்காழி

4. அபூர்வமாக ஒன்பது கரங்களுடன் அருள்புரியும் ஸ்ரீஆயுர்தேவியின் வழிபாடு எண் ஒன்பதின் சக்திகளை எளிதில் பெற உதவும் உத்தம வழிபாடாகும். இதிலும் விசேஷமாக ஆயுர்தேவியின் ஒன்பதாவது கரத்தில் மிளிரும் சக்கரத்தை வணங்கி வருதல் மிகவும் சிறப்பு. நாம் வாழும் பூமிக்கு மூன்று விதமான சுழற்சிகள் உண்டு. அதாவது, தன்னைத்தானே சுற்றி வருதல், சூரியனைச் சுற்றி வருதல், தனது அச்சில் சுழல்தல் என்று மூன்று விதமான சுழற்சி முறைகள் மட்டுமே இன்றைய விஞ்ஞானம் அறிந்த ஒன்று. இவை மட்டுமல்லாமல் நாம் அறியாத பல சுழற்சி முறைகள் பூமிக்கும் மற்ற கிரகங்களுக்கும் உண்டு. இந்த சுழற்சி ரகசியங்களை முழுமையாக உணர்ந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள். பொருட்களின் சுழற்சி முறைகளில் இன்றைய கலியுக மக்களுக்குத் தேவையான ஒன்பது சுழற்சி அனுகிரக சக்திகளை அளிப்பதே ஸ்ரீஆயுர்தேவியின் ஒன்பதாவது கரத்தில் பிரகாசிக்கும் சக்கரமாகும். தொடர்ந்து பல்லாண்டுகள் ஸ்ரீஆயுர்தேவி வழிபாட்டை நிறைவேற்றி வந்தால் மனிதனின் ஊனக் கண்கள் மூலமாகவே இந்த ஒன்பது விதமான சுழற்சிகளையும் தரிசனம் செய்ய முடியும். ஸ்ரீஆயுர்தேவி பூஜை முறைகளை ஸ்ரீஆயுர்தேவி மகிமை என்னும் எமது ஆஸ்ரம நூலில் காணலாம்.

ஸ்ரீஆயுர்தேவி

ஒன்பது என்றால் எண் 9ஐக் குறிக்கும், ஒன்பத்து என்றால் ஒன்பதிற்கும் பத்திற்கும் இடையே உள்ள குசா சக்தியைக் குறிக்கும். இந்த ஒன்பத்துவேலி என்ற நாமத்தில் துலங்கும் திருத்தலமே குசா சக்தியை மக்களுக்கு அருளவல்லதாகும். திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள ஒன்பத்துவேலி திருத்தலத்தை மக்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து இங்குள்ள 18 கரங்களுடன் கூடிய துர்கை அம்மனை தரிசித்து பலன் பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மனித வாழ்க்கையில் மிகவும் சக்தி வாய்ந்த பருவம் பள்ளிக்குச் செல்லும் மாணவப் பருவமாக இருப்பதால், இப்பருவத்தில் எந்த அளவிற்கு குசா போன்ற நற்சக்திகளை உடலில், மனதில், உள்ளத்தில் பதிய வைத்துப் பெருக்கிக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுடைய எதிர்காலம் ஒளிமயமாக அமையும். நல்ல இளைஞர்களைப் பெற்ற சமுதாயமும் அமைதிப் பூங்காவாக மலரும் அல்லவா? இதற்கு வழி வகுப்பதே சித்தர்கள் வகுத்துத் தந்த குசா எண் கணித முறையாகும். இளமையிலிருந்தே குசா பயிற்சிகளைப் பழகி வந்தால் நாளடைவில் இது தன்னையும் அறியாமல் இரத்தத்தில், உடல் நாளங்களில் விரவி, பரவி நற்பண்புகளை வளர்க்கும்.

நமது உடலில் உள்ள 72000 நாடி நரம்புகளையும் சீர்படுத்தி ஆரோக்கிய நிலையில் வைத்திருப்பதற்கு நம் முன்னோர்கள் ஏற்படுத்தித் தந்த பூஜை முறைகளே சந்தியா வந்தனம், கோயில் வழிபாடு, விரதங்கள், திருவிழாக்கள், கோயில் திருப்பணி போன்றவை ஆகும். அனைவராலும் சந்தியா வந்தன வழிபாடுகளை முறையாக நிறைவேற்றுவதற்கு உரிய அவகாசமோ, நேரம், காலம், உகந்த சூழ்நிலைகளோ அமைவதில்லை. இந்நிலையில் பிள்ளையார் முன்னிலையில் நாம் இயற்றும் தோப்புக் கரணங்கள் சந்தியா வந்தன வழிபாடாக மலர்ந்து பூரண உடல், மன, ஆரோக்கியத்தை இறைப் பிரசாதமாக வழங்குகிறது.

ஸ்ரீதுர்காதேவி ஒன்பத்துவேலி

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தனது வலது காலை முன் வைத்தும், சில சமயம் இடது காலை முன் வைத்தும் காட்சி தருவதுண்டு. இந்த ஒவ்வொரு கோலமும் பல்லாயிரக் கணக்கான அனுகிரக சக்திகளை வாரி வழங்குகின்றன. அவைகளில் குசா என்னும் சக்தி மிக முக்கியமானதாகும். வலது காலை முன் வைத்து தரிசனம் ஆண்களுக்கு வீரம், தைரியம், உறுதி, வைராக்கியம் போன்ற சக்திகளையும், இடது காலை முன் வைத்த தரிசனம் பெண்களுக்கு கனிவு, இரக்கம், நாணம் போன்ற மென்மையான சக்திகளையும் அளிக்கும். பொதுவாக, வலது காலை முன் வைத்த தரிசனம் ஆக்கம், ஊக்கம் போன்ற சக்திகளையும், இடது காலை முன் வைத்த தரிசனம் அமைதியையும் அன்பையும் வாரி வழங்கும்.

அதே போல் சுவாமி விவேகானந்தரின் நிற்கும் நிலையில் உள்ள படத்தைப் பார்த்திருப்பீர்கள். அவர் தனது வலது காலை முன் வைத்து நிற்பார். இவ்வாறு ஞானிகளும், யோகிகளும் குசா சக்திகளைப் பற்றி வெளிப்படையாகக் கூறாமல் அதன் பலனை மட்டும் மக்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

பெற்ற தாயினும் கருணை கொண்டு அடியார்களை அரவணைக்கும் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தனது இடது காலை முன் வைத்து சாக்த காருண்ய கிரண சக்திகளை வழங்கும் உருவப் படத்தை இன்றும் நமது ஆஸ்ரமத்தில் கண்டு அருள் பெறலாம்.

முழுமையான உருவம்

இவ்வாறு இறைவனின் அனுகிரக சக்திகளை மக்கள் பூரணமாகப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் தெய்வங்கள், மகான்களின் திருஉருவங்களை முழுமையாக வரைந்து, நிழற் படமாக எடுத்து, தரிசித்து வழிபடவேண்டும் என்ற விதியை நம் முன்னோர்கள் வகுத்துள்ளார்கள். தெய்வ மூர்த்திகளின் தலை முதல் பாதம் வரை அவர்களின் ஒவ்வொரு அங்கமும், ஆடை அணிகலன்களும், கைகளில் ஏந்தியிருக்கும் ஆயுதங்களும், அவர்கள் அமர்ந்துள்ள வாகனங்களும் மனித மனதிற்கும் வாக்கிற்கும் எட்டாத எண்ணிக்கையில் பலன்களை அளிக்கக் கூடிய வல்லமை உடையவை. எமது சற்குருநாதர் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளியுள்ள ஸ்ரீஆயுர்தேவியின் சேலை மடிப்பில் உள்ள இரகசியங்களைப் பற்றி கூறவே கோடி யுகங்கள் போதாது என்றால் தெய்வ மூர்த்திகளின் மகத்துவம்தான் எத்துணை பிரம்மாண்டமானது. எனவே, இனியேனும் பக்தர்கள் இதை உணர்ந்து இறைவனின், மகான்களின் முழுமையான உருவங்களை தரிசித்துப் பலன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சித்த தத்துவ தோப்புக் கரணம்

குசா சக்திகளை உள்ளடக்கிய தோப்புக் கரண முறையையே குசா தோப்புக் கரணம் என்று அழைக்கிறோம். இம்முறையில் தோப்புக் கரணம் போடும் போது வலது அல்லது இடது காலை முன் வைத்து படத்தில் உள்ளபடி தோப்புக் கரணம் இட வேண்டும். இதனால் அபரிமிதமான நற்சக்திகள் உடல் நாளங்களில் பெருகும். நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வழி வகுப்பதே குசா தோப்புக் கரணம். காலை, மதியம், மாலை என்ற மூன்று நேரங்களிலும் குறைந்தது 12 முறையாவது

பிள்ளையார் முன்னோ, தங்கள் பூஜை அறையிலோ அல்லது ஏதாவது மனதிற்கு உகந்த துõய்மையான இடத்தில் இறை நினைவுடன் தோப்புக் கரண பூஜைகளை நிறைவேற்றி வரலாம். மாணவர்கள் மட்டுமின்றி பூரண உடல், மன வள சக்திகளைப் பெற விழைவோர் அனைவருக்கும் உகந்த ஒப்பற்ற பூஜை முறையே குசா தோப்புக் கரணமாகும்.

வலஞ்சுழி இயக்கம்

வலஞ்சுழி இயக்கம் குசா சக்தியைத் தோற்றுவிக்கும்.
நாம் உலகில் காணும் பெரும்பாலான இயக்கங்கள் வலஞ் சுழியாகவே உள்ளன. எடுத்த காரியத்தில் எப்போதும் நன்மையே நிகழ வேண்டும் என்பதால் பெரியோர்கள் பெரும்பாலான காரியங்களில் இந்த வலஞ்சுழி இயக்கத்தை நடைமுறையில் பழகி வருகிறார்கள்.

உதாரணமாக, எக்காரியத்தையும் ஆரம்பிக்கும் முன் முதலில் வலஞ் சுழியாக அமையும் பிள்ளையார் சுழியை இட்டே காரியத்தைத் தொடங்குகின்றனர். மாணவர்களும் இம்முறையில் எந்த எழுத்து வேலையாக இருந்தாலும் முதலில் பிள்ளையார் சுழியை இட்டு ஆரம்பித்தல் நலம் பயக்கும்.

பிள்ளையார் சுழி என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ குறிக்கக் கூடிய அடையாளம் அல்ல.

ஸ்ரீவலஞ்சுழி விநாயகர்
திருவலஞ்சுழி

இந்த பிரபஞ்சத்திற்கே ஆதாரமான சிவ, சக்தி ஐக்கிய தத்துவத்தின் குறியீடே பிள்ளையார் சுழி ஆகும், அதுவே எல்லா இயக்கங்களுக்கும் மூலாதாரமாக அமைவதும் ஆகும்.

எனவே, வினாத் தாள்கள், வேலைக்காண விண்ணப்பங்களில் பிள்ளையார் சுழியிடத் தயங்குவோர் தனியாக ஒரு தாளில் பிள்ளையார் சுழியை இட்டுப் பின்னர் அப்படிவங்களில் எழுதலாம். இவ்வாறு வலஞ் சுழி இயக்கத்தை எந்த அளவிற்கு வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு குசா நற்கிரண சக்திகளும் நம் வாழ்வில் பெருகி நலம் பயக்கும்.

இக்காரணம் பற்றியே கோயில்களில் இறைவனை வலம் வரும் முறையும் பிரசித்தி பெற்றுள்ளது.

நடைமுறைப் பயிற்சிகள்

1. காலையில் எழும்போது வலது காலை முதலில் தரையில் வைத்து ஓரடியாவது நடத்தல் நன்று.

2. சட்டை, பனியன் போன்றவற்றை அணியும்போது முதலில் வலது கையை நுழைத்து பின்னர் இடது கையை நுழைத்து சட்டை அணிதல் நலம்.

3. முகம் அலம்பும்போது முதலில் முகத்தின் வலப்புறம் ஆரம்பித்து பின்னர் இடது புறப் பகுதிகளைக் கழுவுதல்.

4. முறுக்கு போன்ற சுழியுள்ள பதார்த்தங்களை இறைவனுக்குப் படைக்கும்போதும், அவற்றை தானமாக அளிக்கும்போதும் முடிந்த மட்டும் அவைகளை வலஞ்சுழி நிலையில் வைத்தல் சிறப்பாகும். பல சமயங்களில் இது நிறைவேற்ற முடியாமல் போய் விடும் என்ற காரணத்தால்தான் நமது முன்னோர்கள் எப்பொருளைக் கொடுப்பதாக இருந்தாலும் அதை இரண்டு கையினாலும் கொடுக்கும் முறையைக் கையாண்டார்கள். இதனால் வலஞ்சுழி, இடஞ்சுழி தோஷங்கள் தவிர்க்கப்படும்.

பெரியோர்களிடமிருந்து எப்பொருளை வாங்கினாலும் அதை இரண்டு கையாலும் வாங்குவதால் அவர்களுடைய ஆசீர்வாதத்தைப் பின்னப்படாமல் முழுமையாகப் பெற அது துணை புரியும்.

எலி புகட்டிய குசா தத்துவம்

ஒருவருக்கு மட்டுமே பயன்படக் கூடிய பொருளை இருவருக்கு அல்லது அதற்கு மேல் பயனடையும்படி மாற்றி அமைத்தால் அங்கு குசா சக்திகள் நிலவும்.

இந்த விதியை ஒரு குருகுலவாச அனுபவத்தின் மூலம் விளக்குகிறோம்.

ஒரு முறை நமது ஆஸ்ரமத்தில் ஒரு அடியாருக்கு இரண்டு வாழைப்பழங்கள் மாலை சிற்றுண்டிக்காகத் தரப்பட்டன. அந்த அடியார் அதைச் சாப்பிட மறந்துவிட்டார். மறுநாள் காலையில் வந்து பார்த்தால் அதில் ஒரு வாழைப் பழத்தில் மூன்று ஓட்டைகள் போட்டு எலி சாப்பிட்டு விட்டது. அந்த அடியார் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளிடம், "வாத்யாரே, ஏதோ ஒரு எலி எனக்கு வைத்திருந்த வாழைப் பழத்தை கடித்து வீணாக்கி விட்டது," என்று கூறினார். அதற்கு ஸ்ரீவாத்யார், "அது வாழைப்பழத்தை வீணாக்கவில்லை. நேற்று இரவு உனக்கு சொல்லிக் கொடுத்த குசா தத்துவத்தில் இன்னும் ஒரு தத்துவத்தை இதன் மூலம் உனக்குச் சொல்லிக் கொடுக்கிறது," என்று சிரித்துக் கொண்டே கூறினார். அடியாருக்குப் புரியவில்லை. அப்போதுதான் வாத்யார் குசாவின் இந்த ஆறாவது தத்துவத்தை விளக்கினார்.

வாத்யார் தொடர்ந்து, "எலி கடிக்காமல் இருந்தால் நீ இந்த இரண்டு பழத்தையும் சாப்பிட்டு இருப்பாய். அப்போது உன் ஒருவனுக்கு மட்டும்தான் உணவு கிடைத்திருக்கும். இப்போது ஒரு பழத்தை எலி கடித்து விட்டதால் நீ எலி கடிக்காத மற்றொரு பழத்தை எடுத்துக் கொண்டு எலி கடித்த பழத்தை ஜன்னல் வழியே வெளியே எறிந்து விட்டாய். இதை ஏதாவது ஒரு ஆடோ, மாடோ உண்ணலாம் அல்லவா? எலி நினைத்திருந்தால் ஒரு பழத்தில் மூன்று ஓட்டைகள் போடுவதற்குப் பதிலாக அதை இரண்டு பழத்திலும் போட்டிருக்கலாமே? அப்படி இரண்டு பழத்திலும் ஓட்டை போட்டிருந்தால் உனக்கு ஒரு பழமும் கிடைத்திருக்காது. ஏன் ஒரு பழத்தில் மட்டும் மூன்று ஓட்டைகள் போட்டு உண்டது? இதை நீ ஆத்ம விசாரம் செய்ய வேண்டும். உனக்குத் தெரியாத குசா தத்துவம் எலிக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் உன் ஒருவனுக்கு மட்டுமே பயன்படக் கூடிய இரண்டு வாழைப்பழத்தை தன்னுடைய கூரிய அறிவால் அதை மூன்று பேர் பயன்படுத்தும் விதத்தில் மாற்றி அமைத்துள்ளது. இதுதான் குசா தத்துவம். "

இதைக் கேட்ட அடியாருக்கு சந்தேகம் இன்னும் முழுமையாகத் தீரவில்லை.

அடியார் தொடர்ந்தார், "ஏன், வாத்யாரே, அப்படிப் பார்த்தால் அடியேனுடைய பங்கு இரண்டு பழம் அல்லவா? இந்த எலி ஒரு பழத்தைக் கடித்து விட்டதால் என்னுடைய பங்கில் பாதி குறைந்து விட்டதே. அதை எப்படிக் குசா தத்துவம் சரிக் கட்ட முடியும்? "

ஸ்ரீஞானசரஸ்வதி திருமங்கலக்குடி

வாத்யார், "உண்மைதான், மேலோட்டமாகப் பார்த்தால், உன்னுடைய பங்கு குறைந்து விட்டதாகத்தான் தோன்றும். ஆனால், உண்மையில் உனக்கு வந்த வாழைப் பழத்தில் குசா சக்திகள் நிரவி உள்ளதால் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிட்டால் என்ன சந்தோஷம், திருப்தி உண்டாகுமோ அதே திருப்தி இந்த ஒரு வாழைப் பழத்திலேயே உனக்குக் கிடைத்திருக்குமே? அதை யோசித்துப் பார்த்தாயா?" என்று கேட்க, அடியாரும் சற்று யோசித்து விட்டு, "நீங்கள் சொல்வது சரிதான், ஒரு பழம் சாப்பிட்டாலே இரண்டு பழங்கள் உண்ட திருப்தி ஏற்பட்டு விட்டது," என்றார்.

எலி புகட்டிய இந்தப் பாடம் மாணவர்களுக்கு மிகவும் பயன்தர வல்லது. அவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் பயன்படுத்தும் புத்தகங்களையும், நோட்டுகளையும் நன்முறையில் பராமரித்து தங்களுக்குப் பின்னால் வரும் வசதியில்லாத மாணவர்களுக்கு வழங்கி வந்தால் அது எவ்வளவு சிறப்பாக இருக்கும். அது மட்டுமல்லாமல் படிக்கும் காலத்தில் மற்றவர்களுக்குப் புரியாத கடினமான பாடங்களை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தால், தாங்கள் எடுக்கும் மார்க்குகள் குறைந்து விடும் என்று பல மாணவர்கள் எண்ணுவது உண்டு. இது ஒரு தவறான எண்ணமே. உண்மையில் எந்த அளவிற்கு அவர்கள் சக மாணவர்களுக்கு மனத் தெளிவைத் தருகிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுடைய நுண்ணறிவும் பாடங்களைக் கிரகிக்கும் சக்தியும் பெருகும் என்பதே உண்மை.

அழியாத செல்வம் எது ?

பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி.

காஞ்சீபுரத்தில் தற்போது ஸ்ரீசங்கர மடம் இருக்கும் இடத்திற்கு அருகே ஒருவர் வெற்றிலை பாக்குக் கடை வைத்திருந்தார். அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது, சிறு வயதில் பள்ளிக் கூடத்திற்கே சென்றதில்லை. அவர் கடைக்கு எதிரே அரசாங்கப் பள்ளி ஒன்று இருந்தது. அப்பள்ளி மாணவர்கள் இடைவேளையின் போது அக்கடைக்கு வருவார்கள். அந்த மாணவர்களுக்கு எல்லாம் இவர் இலவசமாக சோடா உடைத்துத் தருவார். கோலிக் குண்டு சோடா என்று அக்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த சோடாவைத்தான் அவர் இவ்வாறு மாணவர்களுக்குக் கொடுத்து வந்தார். அதிகமாக காஸ் இருக்கும். அதனால் மாணவர்களும் மிகவும் சந்தோஷகமாக இவர் தரும் சோடாவை வாங்கிக் குடித்து வந்தனர். பெரிய வாத்யாரும் நமது வாத்யாரும் காஞ்சீபுரம் செல்லும்போதெல்லாம் அந்த கடைக்கு எதிரே உட்கார்ந்து கொண்டு அங்கு வரும் மாணவர்கள் சோடா அருந்துவதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சில வருடங்கள் கழித்து அந்த வெற்றிலை பாக்குக் கடைக்காரர் இறைவனடி சேர்ந்தார்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
ஓமாம்புலியூர்

முப்பதாண்டுகள் கழிந்தன. அந்த அரசாங்கப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு எல்லாம் சோடா தானம் அளித்த அந்த சோடாக் கடை “முதலாளி” தான் பள்ளிக் கூடத்தில் நிழலுக்காகக் கூட ஒதுங்காதவராக இருந்தும் தன்னுடைய அடுத்த பிறவியில் அமெரிக்காவில் உள்ள வசதியான தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இளமையிலிருந்தே நல்ல கல்வி வசதிகள் அவருக்கு அமைந்தது. எல்லாப் பாடங்களிலும் முதன் மாணவனாகத் திகழ்ந்து பள்ளி, கல்லூரியிலும் முதன்மை பெற்றார். பின்னர் அமெரிக்காவிலேயே ஒரு சிறந்த விஞ்ஞானியாகப் புகழ் பெற்று விளங்கினார்.

அச்சமயத்தில் பெரிய வாத்யார் அந்த விஞ்ஞானியைச் சந்தித்தார். அதே மேல் சட்டை இல்லாத கோவணாண்டியாக அவர் முன் நின்றார். அந்த விஞ்ஞானிக்கு ஒன்றும் புரியவில்லை. பெரியவர் தமிழிலேயே, "அடியேனைத் தெரிகிறதா, நைனா?" என்று வினவினார். அந்த விஞ்ஞானிக்கோ ஒன்றும் புரியவில்லை, தமிழும் தெரியவில்லை. ஒன்றும் புரியவில்லை என்பதற்கு அறிகுறியாகத் தலையை மட்டும் ஆட்டினார்.

பெரியவர், "என்ன நைனா, அதுக்குள்ள இந்தக் கிழவனை மறந்துட்டியே," என்று சொல்லி ஒரு அட்டகாசமான சிரிப்பை உதிர்த்தார். "பின்னர், சரி சரி பரவாயில்லை. முப்பது வருஷம் ஓடிப் போச்சுல்ல, அதான் எல்லாம் மறந்துட்ட," என்று சொல்லி, அந்த விஞ்ஞானிக்கு தன்னுடைய பூர்வ ஜன்ம ஞானத்தை ஒரு விநாடி அளித்தார். உடனே அவனுக்கு பளிச்சென எல்லாம் விளங்கின. வாத்யாரைப் பார்த்து, "அடடே, பெரியவரா, நீங்கள் எங்கே இங்கே வந்தீர்கள். என்னோட கடைக்கு எதிரே அடிக்கடி வந்து நிற்பீர்களே?" என்று கேட்டான். பெரிய வாத்யார் அந்த வெற்றிலை பாக்குக் கடையின் எதிரே அடிக்கடி வந்து அமர்ந்த நினைவுகள் அவனுக்குத் தெளிவாகத் தோன்றின. பெரியவரும் சிரித்துக் கொண்டே, "ஆமாம், அந்தக் கிழவன்தான் அடியேன். ஏதோ நீ அந்த ஸ்கூல் பசங்களுக்குச் செஞ்ச சின்ன உதவி உனக்கு எம்மாம் பெரிய உத்தியோகத்தைக் குடுத்திருக்கு பாத்தியா?" என்று சொல்லிச் சிரித்து விட்டு முந்தைய ஜன்ம அறிவை அந்த விஞ்ஞானியிடமிருந்து மறைத்து விட்டார். அவனும் பழைய நிலைக்குத் திரும்பி விட்டதால் பெரியவரைப் பற்றி ஒன்றும் தெரியாதவன்போல் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.

பெரியவர், "சரி நைனா, அடியேன் வந்த வேலை முடிஞ்சது,  உத்தரவு வாங்கிக் கொள்கிறேன்," என்று சொல்லி அங்கிருந்து மறைந்து விட்டார். சில ஆண்டுகள் கழித்து அந்த விஞ்ஞானிக்கு உலகப் பிரசித்தி பெற்ற நோபள் பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்? பள்ளிக் குழந்தைகளுக்கு அளித்த ஒரு சாதாரண சோடா தானமே எழுத்தறிவில்லாத ஒரு மனிதனை நோபள் பரிசு பெறும் விஞ்ஞானியின் நிலைக்கு உயர்த்த வல்லது என்றால், மாணவர்களுக்கு செய்யும் மற்ற உதவிகள் என்னென்ன அனுகிரகத்தை எல்லாம் உங்களுக்கு வாரி வழங்கும் என்பதை ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்.

மருத்துவர்களுக்கான குசா பூஜை

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இவ்வாறு குறைவற்ற செல்வத்தைத் தரக் கூடிய உன்னதமான பணியில் ஈடுபட்டிருப்பதால் மருத்துவர்களின் சேவை மிகவும் பாராட்டுதற்குரியது. இந்த சேவையால் மக்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும்போது, அவ்வாறு பெறும் உடல் நலம் மக்களுக்கு நலமே அளிப்பதாக இருந்தால் அது இன்னும் சிறப்புடையது அல்லவா?

உதாரணமாக, ஒரு திருடனுக்கு அல்லது கள்ள நோட்டு அச்சடிப்பவனுக்கு வரும் வியாதியைத் தீர்க்கும்போது அவன் உடல் நலம் பெற்ற பின் மீண்டும் அந்த தவறான தொழிலைச் செய்துதானே தன் பிழைப்பை நடத்துவான்? இதற்கு மருத்துவர் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், அதே மருத்துவர் அந்த தவறு செய்யும் மனிதனை திருத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதைப் பயன்படுத்துவது சிறப்புதானே? அந்த மருத்துவரும் உடல் ஆரோக்கியத்துடன் மன ஆரோக்கியத்தையும் அளிக்க முடிந்தால் அது சமுதாயத்திற்கு ஒரு இரட்டிப்பான பலனை பெற்றுத் தரும். இதை கருத்தில் கொண்டுதான் மகான்கள் இந்த குசா தத்துவத்தை மருத்துவர்கள் எப்படிக் கையாளலாம் என்ற முறைகளை வகுத்துத் தந்துள்ளார்கள்.

மருத்துவர்கள் தங்களிடம் உள்ள மாத்திரைகள், ஊசிகள், டானிக்குகள் போன்றவற்றை குசா தத்துவம் ஒன்று, இரண்டைப் பயன்படுத்தி அவைகளில் குசா சக்திகளை நிரவி பயன்படுத்துவதால் அம்மருந்துகள் நோயாளிகளுக்கு நலமான ஆரோக்கியத்தை விரைவில் நல்கும்.

எதை எங்கே எப்படித் தேடுவது?

பொதுவாக, எண் 13 துரதிர்ஷ்டமானது என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த எண்களில் ஒன்றுதான் 13. நான்கில் தொடங்கி எட்டில் முடிப்பவன் எண்ணியதை எட்டிப் பிடிப்பான், என்று சித்த கிரந்தங்கள் எண் 4, 8ன் மகிமையை பறை சாற்றுகின்றன. நான்கு என்ற எண்ணை 1+3, 2+2 என்று இரு விதமாகப் பிரிக்கலாம். இதில் எண் இரண்டு சந்திர பகவானுக்கு உரித்தானதாகி தேய் பிறை, வளர் பிறை என்ற இரு மாற்றங்களை உடையதாக அமைகிறது. ஆனால், 1+3 என்று பிரிக்கப்படும்போது சூரியன், குரு என்ற கிரகங்களுக்கு உரித்தானதாகி எப்பொழுதும் பிரகாசமாயும் நல்லதையே செய்யக் கூடிய பண்பு உடையதாகவும் ஆகிறது.

நான்கின் இரட்டித்த பலனைத் தரும் எண்ணாக 8 அமைவதால் இதுவே எண்ணியதை எட்டிப் பிடிப்பதற்கு வழி செய்கிறது. அதாவது, நான்கின் குசா எண் 8 அல்லவா? (நான்கை நான்கால் பெருக்கி இரண்டால் வகுக்க கிடைப்பது எட்டு.)

இந்த தத்துவத்தை மருத்துவர்கள் அற்புதமாகக் கையாண்டு தீர்க்க முடியாத பல நோய்களையும் எளிதில் தீர்க்கலாம். மருத்துவர்கள் இதை எப்படிப் பயன்படுத்துவது?

1. கான்சர், ஆஸ்துமா, டி.பி, எய்ட்ஸ், சர்க்கரை வியாதி போன்ற நீண்ட காலம் துன்புறுத்தும் நோய்களுக்கு தொடர்ந்து பல மாதங்கள் மருந்து அளிக்க வேண்டி இருக்கும் அல்லவா? இத்தகைய ஒரு நோயாளி மருத்துவரிடம் 4.3.2010 அன்று வருவதாக வைத்துக் கொள்வோம். அந்த நோயாளிக்கு மருந்து கொடுக்கும்போது அவருக்கு ஐந்து நாட்களுக்குத் தேவையான மருந்துகளை மட்டுமே அளிக்க வேண்டும். இதனால் அவர் 4ந் தேதி மருந்து சாப்பிட ஆரம்பித்து 8ந் தேதி முடிப்பார். இவ்வாறு நான்கில் தொடங்கி எட்டில் முடியும் மருத்துவம் நோயாளியின் வியாதியை எளிதில் குணமாக்கும்.

அந்த நோயாளி திரும்பவும் மருத்துவரை வந்து பார்ப்பதாக இருந்தால் அவரை 13ந் தேதி வரச் சொல்லி அன்று மருந்து கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும்போது 17ந் தேதி வரை அவர் பயன்படுத்துமாறு மருந்தை வழங்க வேண்டும். இதுவும் (1+3=4) நான்கில் தொடங்கி (1+7=8) எட்டில் முடியும் மருத்துவமாக அமைவதால் நோய் எளிதில் குணமாகும்.

மனிதனுடைய வாழ்வில் பெரும்பாலான பகுதி ஏதாவது ஒன்றைத் தேடுவதிலேயே கழிந்து விடுகிறது. குழந்தை வயதில் விளையாட்டைத் தேடியும், சிறுவயதில் கல்வியைத் தேடியும், இள வயதில் பணம், புகழ், இன்பத்தைத் தேடியும், முதிய வயதில் ஆரோக்கியம், அமைதியைத் தேடியும் மனிதன் வாழ்க்கையை முடிக்கிறான். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் சாவி, பணம், பத்திரம், இப்படி ஏதாவது ஒன்றைத் தொலைத்து விட்டு அவதியுறும் மனிதர்கள் ஏராளம். இவ்வாறு ஒரு பொருளை கவனக் குறைவால் எங்காவது வைத்து தொலைத்து விட்டால் அந்த பொருள் இருக்கும் இடத்தை ஞாபகத்திற்குக் கொண்டு வந்து அதை எப்படி மீட்கலாம் என்பதற்கு சித்தர்கள் சில வழி முறைகளை அளித்துள்ளனர்.

பெரும்பாலும் ஏதாவது ஒரு பொருளைத் தொலைத்து விட்டால், நம்முடைய அஜாக்கிரதையை, ஞாபக மறதியைக் குறையாக எடுத்துக் கொள்வதில்லை. அதற்குப் பதிலாக, மற்றவர்கள் மீது பழி போடுவதில்தான் நம்முடைய மனம் ஈடுபடுகிறது. அல்லது அதை யாராவது எடுத்திருப்பார்கள் என்று பலரையும் நினைத்து அவர்களைத் திட்ட ஆரம்பித்து விடுகிறோம். எனவே, முதலில் ஒரு பொருள் தொலைந்தவுடன் யார் யாரெல்லாம் அந்தப் பொருளை எடுத்திருப்பார்கள் என்று சந்தேகப்பட்டு திட்டினோமோ அவர்களிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இதுவே ஒரு கர்மாவாக மாறி அந்தக் கர்மாவைத் தீர்ப்பதற்காக நாம் ஒரு பிறவி எடுத்து அவர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டிய நிலை ஏற்படும்.

இரண்டாவதாக, நாம் கடைசியாக வைத்த இடத்தை முடிந்தவரை நினைவில் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும்.

ஸ்ரீஹயக்ரீவர்
திருவஹிந்திபுரம்

பின்னர் கீழ்க் கண்ட ஸ்ரீஹயக்ரீவர் தியான மந்திரத்தை மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டோ ஜபித்துக் கொண்டடிருந்தால் நீங்கள் எந்த இடத்தில் உங்கள் பொருளை வைத்தீர்கள் என்ற ஞாபகம் உங்களுக்கு வரும்.

ஞானானந்த மயம் தேவம்
நிர்மலம் ஸ்படிகா க்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே

ஒருவேளை நீங்கள் ஞாபக மறதியாய் வைத்திருந்த பொருள் களவு போய் விட்டிருக்கலாம் அப்படி களவுபோய் மீண்டும் அந்தப் பொருள் உங்களுக்குக் கிடைத்தால் அதை முடிந்த மட்டும் பயன்படுத்தாமல் இறைவனிடம் சேர்த்து விடுவதே மேல் என்பது சித்தர்கள் வழங்கும் அறிவுரையாகும்.

இவ்வாறு எந்த ஒரு பொருளைத் தேடுவதற்கும் எண் 13 மிகவும் உகந்ததாகும்.

சிறப்பாக நிலத்தடி நீர், தொலைந்து போன நிலம் வீட்டின் பத்திரங்கள் இவைகளை 4, 13, 22, 31 தேதிகளில் தேட ஆரம்பித்தால் அதனால் நமக்குச் சாதகமான பலன்கள் கிட்டும்.

ஆடு, மாடுகள், வண்டி வாகனங்கள், குழந்தைகள், உறவினர்கள் இவர்களும் காணாமல் போய்விட்டால் மேற்கண்ட முறையில் தேடும் பணியைத் தொடங்கினால் அதனால் சாதகமான பலன்கள் ஏற்படும்.

மணி நிமிடம் எல்லாம்
குசா மயம்

இவ்வாறு 4, 13, 22, 31 தேதிகளில் வரும் நோயாளிகளுக்கு 8, 17, 26, 8 தேதிகள் வரை மருந்து கொடுத்து நோய் தீர்க்கலாம் என்பதை எளிதில் நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம். அப்படியானால் மற்ற தேதிகளில் வரும் நோயாளிகளுக்கு எப்படி குசா சக்தியைப் பெற்றுத் தருவது?

தேதிகளில் நிலவும் எண் சக்திகள் நோயாளிகளின் நோயைத் தீர்க்கும் சக்தியைப் பெறுகின்றன என்றால் தேதிகளின் உட்கூறாக விளங்கும் மணி, நிமிடங்களுக்கும் எண் சக்திகள் உண்டல்லவா? தேதியைக் கணக்கிடுவது எளிது. ஆனால், மணி நிமிடங்களின் எண் சக்தியை கணக்கிடுவதில் சற்று சிரமமும் குழப்பமும் ஏற்படுமே. ஒவ்வொருவர் கைக் கடிகாரமும், சுவர் கடிகாரமும் வெவ்வேறு நேரத்தைக் காட்டுவதால்தான் இத்தகைய குழப்பங்கள் தோன்றுகின்றன. இதில் மருத்துவருக்கு குசா சக்தியின் மேல் எந்த அளவிற்கு நம்பிக்கை ஏற்படுகிறதோ அந்த அளவிற்கு இந்த கணக்கு முறையில் வரும் குழப்பமும் தவிர்க்கப்படும்.

ஸ்ரீகாலபைரவர்
ஒழுகமங்கலம்

எவ்வாறு மணி, நிமிடத்தில் குசா சக்தியைக் கணக்கிடுவது?

இரண்டு விதமான முறைகளில் எண் சக்தியைக் கணக்கிடலாம்.

முதல் முறையில் 2 மணி 20 நிமிடம் என்றால் இதை அப்படியே கூட்டினால் வரும் (2+2+0=4) 4 என்ற எண்ணைக் கணக்கிட்டு அந்த நேரத்தில் மருத்துவத்தை ஆரம்பிக்கலாம். ஆபரேஷன் போன்ற அவசர சிகிச்சை முறைகளில் இது பெரிதும் பயன்படும். இது தோராய கணக்கீட்டு முறையாக இருந்தாலும் இம்முறையும் நோயாளிக்கு தேவையான நிவாரண சக்திகளை அளிக்கும்.

இரண்டாம் முறையில்,  2 மணி 12 நிமிடம் என்பதில் நிமிடத்தை தசம தானமாக எடுத்துக் கொண்டால் அது (12 x 100/60 = 20 = 2+0) 2 என்று வரும். இதுவே மிகவும் துல்லியமான முறை. அவசர சிகிச்சை அல்லாத சாதாரண சிகிச்சை நேரத்தில் இந்த சிறப்பான எண் கணக்கீட்டு முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திசையில் நிலவும் நோய் எதிர்ப்பு சக்திகள்

திசைகளுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை ஏற்கனவே விளக்கி உள்ளோம் அல்லவா?

நோய் தீர்க்கும் மருத்துவர்கள் இந்த திசை எண்களுக்கு உரித்தான குசா சக்தி எண்களுக்கு உரிய திசைகளில் நின்று, அமர்ந்து நோயாளிகளைப் பரிசோதிப்பது, மருத்துவம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அதனால் நோயாளிகளுக்கு அல்லது மருத்துவருக்குத் தேவையான குசா சக்திகள் அங்கு பொலியும்.

உதாரணமாக, ஒரு மருத்துவருடைய பிறந்த தேதி 3.3.1980 என்றால் அவருடைய பிறந்த எண் 3. அதற்குரித்தான குசா எண் 6. குசா எண் ஆறுக்கு உரித்தான திசை தென்மேற்கு என்னும் நிருதி திசை அந்த மருத்துவருக்கு உரித்தான குசா திசையாகும். இந்த திசையை நோக்கி மருத்துவர் அமர்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ மருத்துவம் செய்வதால் அவருடைய சிகிச்சையில் குசா சக்திகள் பெருகி எளிதில் நோய் நிவாரண சக்திகளைப் பெற்றுத் தரும்.

ஸ்ரீநைதிருதி தேவி சமேத  ஸ்ரீ நிருதி பகவானை வணங்கி வருவதால் கைராசி எனப்படும் ஔஷத சக்திகள் பல்கிப் பெருகும். மேலும் நிருதி திசைக்கு உரித்தான கன்னி மூலை கணபதியை வழிபடுவதும், அவரை உபாசனை மூர்த்தியாக ஏற்றுக் கொண்டு பிரார்த்தனை செய்து வருவதும், திருஅண்ணமலையில் நிருதி லிங்க மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து கிரிவலம் வந்து வழிபடுவதும் தீர்க்கமான ஆரோக்கியம் அளிக்கும் அமிர்த சக்திகள் மருத்துவரிடம் நிரவ துணை புரியும்.

ஒவ்வொரு திசைக்கும் உரித்தான திக்கு தேவர்கள் தம்பதி சகிதமாய் கீழ்க் கண்ட முறையில் எழுந்தருளியுள்ளார்கள்.

திக்கு தேவர் சக்தி
      
கிழக்கு இந்திரன் சசிதேவி
தென்கிழக்கு அக்னி ஸ்வாஹா
தெற்கு யமன்  யம பத்னி
தென்மேற்கு நைதிருதி யாதுதானி
மேற்கு வருணன்  வாருணி
வடமேற்கு வாயு வாயாவி
வடக்கு குபேரன் மனோரமா
வடகிழக்கு ஈசானன் கௌரி

மருத்துவர்கள் தங்கள் குசா எண்ணுக்கு உரித்தான திக்கு சக்திகளை வணங்குவதால் மருத்துவத்திலும் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் பல அனுகூலங்களைப் பெறுவார்கள்.
முத்தான மூன்றின் பயன்
ஒரே மாதிரியான மூன்று பொருட்கள் வரிசையாக இருந்தால் அதில் நடுவில் உள்ள பொருள் குசா சக்தியைப் பெறும் என்பது குசா தத்துவம் அல்லவா? இந்த குசா தத்துவத்தை மருத்துவர்கள் கையாண்டு நோய் தீர்க்கும் சக்திகளை மேம்படுத்திக் கொள்ளலாம். ஒரு அறையில் மூன்று படுக்கைகள் இருந்தால் அவசர சிசிச்சைக்காக வரும் நோயாளிகளை நடுவே உள்ள படுக்கையில் வைத்து மருத்துவம் செய்வதால் மற்ற நோயாளிகளைவிட அவருடைய நோய் எளிதில் குணமாக வாய்ப்புண்டு. நோயின் தீவிரம் ஓரளவிற்குக் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டால் நோயாளியை மற்ற படுக்கைக்கு மாற்றி விடலாம்.

இவ்வாறு மூன்று படுக்கைகளுக்கு மேல் ஒரே வரிசையில் இருந்தால், அந்த வரிசையில் உள்ள இரண்டாவது படுக்கை குசா சக்தியைப் பெற்றிருக்கும்.

குழந்தையிடம் கொஞ்சும் குசா

சிறு குழந்தைகள் இன்றும் கூட ஏதாவது சாக்லேட் போன்ற தின்பண்டங்களைச் சாப்பிடக் கொடுத்தால் முதல் சாக்லேட் கடவுளுக்கு என்று ஒதுக்கி விட்டு இரண்டாவது சாக்லேட்டை சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கும். பூர்வ ஜன்ம தொடர்பாக அவர்களையும் அறியாமல் இந்த குசா சக்திகள் அவர்களிடம் நிரவி உள்ளதே இதற்குக் காரணம்.

நான்கு மூலைகள் கொண்ட மேஜை, படுக்கை போன்ற பொருட்களில் நடுநாயகமாக இருப்பது குசா சக்தி. விநாயகச் சக்கரத்தில் இந்த குசா சக்தியை நிரவும் பூஜை முறையை ஏற்கனவே விவரித்துள்ளோம். இதே முறையில் குசா சக்தியை மருத்துவர்கள் எளிதில் பெற வேண்டுமானால் அவர்கள் தங்கள் பரிசோதனைக்கு அத்தியாவசியமான ஸ்டெதாஸ்கோப்பை தங்கள் பரிசோதனை மேஜையின் நடுவில் வைத்துக் கொள்ளவும். இதனால் அது எப்போதும் குசா சக்திகளைப் பெருக்கி வைத்துக் கொள்ளும்.

மேலும், மருத்துவர்கள் நோயாளியைப் பரிசோதிக்கும்போது நோயாளியினுடைய மார்பின் நடுப் பகுதியில் முதலில் ஸ்டெதாஸ்கோப்பை வைத்து தங்கள் பரிசோதனையை ஆரம்பிப்பதால் நோயின் தன்மையை எளிதில் துல்லியமாகக் கண்டறிய முடியும். இதய கமல கோலம் என்னும் இதயத்திற்கு வளம் அளிக்கும் கோலத்தை இவர்கள் தொடர்ந்து திருத்தலங்களில் இட்டு வந்தால் இதய நோய் சிகிச்சைகளில் பேரும் புகழும் பெறுவர்.

நடுதிசைக்கு உரிய குசா மூர்த்தி ஸ்ரீவைபவ மகா கணபதி ஆவார். இவரை வணங்கி உரிய பூஜைகளை நிறைவேற்றி வருவதால் நோயின் தன்மைகளைக் கண்டறிவதில் சிறந்த நிபுணராக பிரகாசிக்க முடியும். ஸ்ரீவைபவ மஹா கணபதி என்னும் எமது ஆஸ்ரம நுõலில் இந்த அனுகிரக மூர்த்தியைப் பற்றி மேலும் விவரங்களைத் தெரிந்து பயனடையும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

மருத்துவர்களுக்கும் மருந்து வேண்டுமே

பலவிதமான தொற்று நோய்களால் பீடிக்கப்பட்ட நோயாளிகளை அடிக்கடித் தொட்டு பரிசோதிக்கும் நிலையில் மருத்துவர்கள் இருப்பதால் அவர்கள் சிறப்பான நோய் நிவாரண சக்திகளைப் பெற்றிருப்பது அவசியம். இவ்வாறு மருத்துவர்களுக்குத் தேவையான காப்பு சக்திகளைத் தருவதே வைபவ கங்கண் என்னும் காப்பு வளையமாகும். பலவிதமான மூலிகைகளின் சக்திகளை ஒருசேரத் தர வல்ல இந்த அற்புதமான பாதுகாப்பு வளையத்தை மருத்துவர்கள் அணிந்து வருவதால் இது மருத்துவர்களுக்கு நோய் நிவாரண சக்திகளை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களிடம் வரும் நோயாளிகளுக்கும் அமிர்த சக்திகளை அளித்து அவர்கள் நோய் எளிதில் குணமாக வழி செய்யும். வைபவ கங்கண் சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவிலும், எமது திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திலும் கிடைக்கும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam