இறைவனை உயர்த்த நீ உயர்வாய் !!

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருக்கோயில் படிக்கட்டுகள்

காலத்தின் அடிப்படைத் தத்துவமாக விளங்குவது சூரியனே. சூரியன் வானில் உலாவும் நிலையை வைத்துத்தான் நாள், கிழமை, திதி என அனைத்து கால அளவுகளும் கணக்கிடப்படுகின்றன. காலத்தை முறையாக பயன்படுத்துவதன் மூலமே மக்கள் இறைவனை நோக்கி முன்னேற முடியும் என்ற காரணத்தால் காலத்தை முறையாகப் பயன்படுத்தும் மார்கங்களில் ஒன்றான திருக்கோயில் படிகளின் வழிபாட்டு முறைகளைப் பற்றிய ஆன்மீக ரகசியங்களை இங்கு எடுத்துரைக்கிறோம்.

உலகில் உள்ள அனைத்து ஜீவன்களையும் படைத்து, காத்து, இரட்சிக்கும் இறைவன் எந்தவித எதிர்பார்ப்பையும் தன்னகத்தே வைத்துக் கொள்ளாவிட்டாலும் அவரின் எல்லாயில்லாக் கருணையை வாழ்த்தும் பொருட்டு இறைவனின் உருவத்தை திருக்கோயில்களில் எழுந்தருளச் செய்து அவருக்கு பலவிதமான அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி வருகிறோம். இறைவன் ஒருவனே உலகில் உயர்ந்தவன் என்னும் தத்துவத்தை வெளிப்படுத்துவதற்காகவே வானுயர்ந்த ராஜ கோபுரங்களை எழுப்பி உயர்ந்த பீடத்தில் இறைவனை அமர்த்தி வழிபடுகிறோம். பல யுகங்கள் இறைவனை நோக்கித் தவமியற்றிவர்கள் இறைவனின் தரிசனம் பெற்றவுடன் அவர்கள் விரும்பும் அனுகிரகத்தை அளிக்க இறைவன் முன் வருகிறார். பெரும்பாலான இறை அடியார்கள் எந்தவிதமான பொருள் லாபத்தையும் கடவுளிடம் கேட்டுப் பெறுவதில்லை. மனித சமுதாயத்திற்கும் மற்ற ஜீவன்களின் நலனுக்காகவுமே கடவுளைப் பிரார்த்தனை செய்து பல வரங்களைப் பெறுகின்றனர். இவ்வாறு பெறும் வரங்களில் ஒன்றே திருக்கோயில்களில் படிக்கட்டுகளாக கிடந்து இறைவனை நாடி வரும் பக்தர்கள் தங்களை மிதிக்கும்போது அவர்களுக்கு தங்களால் இயன்ற அனுகிரக சக்திகளை அளித்து மகிழ்கின்றனர்.

திருப்பதி, ஐயர்மலை, சோளிங்கர், திருப்போரூர் முதலிய பல திருத்தலங்களில் ஏராளமான சித்தர்களும், மகான்களும், ரிஷிகளும், யோகிகளும், ஞானிகளும் படிக்கட்டு ரூபத்தில் எழுந்தருளி அங்கு இறை தரிசனம் பெற வரும் அடியார்களுக்கெல்லாம் தங்கள் அனுகிரக சக்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சிறப்பான திருத்தலங்களில் படி பூஜைகளை எப்படி நிறைவேற்றி தங்கள் குறைபாடுகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற விளக்கங்களை ஐயர்மலை மகிமை, திருச்சி மலைக்கோட்டை மகிமை போன்ற எமது ஆஸ்ரம வெளியீடுகளில் அளித்துள்ளோம்.

ஒவ்வொரு திருக்கோயிலிலும் உள்ள படிகள் ஒவ்வொரு விதமான அனுகிரக சக்திகளை மக்களுக்கு வாரி வழங்குகின்றன. உதாரணமாக, திருவெள்ளறை திருக்கோயிலில் உள்ள படிகள் மக்களுக்கு அமிர்த சஞ்சீவி சக்திகளை அளிக்கின்றன. இதனால் இப்படிகளை வணங்கித் துதிக்கும் பக்தர்கள் நோய் நோடிகளின்றி நீண்ட ஆயுளுடன் வாழும் அனுகிரகத்தைப் பெறுகின்றார்கள். இத்தகைய அபூர்வ சக்திகளை பக்தர்களுக்கு இன்றும் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் மாமுனியே இத்திருக்கோயிலில் மூலக் கருவறையில் குடிகொண்டிருக்கும் மார்க்கண்டேய மகரிஷி ஆவார்.

சிரஞ்சீவியாய் வாழும் வழி

இவரைப் பற்றிய ஒரு அற்புத நிகழ்ச்சி உண்டு. சிரஞ்சீவிப் பட்டம் பெற்றவர்களில் மார்க்கண்டேயரும் ஒருவர் அல்லவா? இவர் ஒரு நாள் அடர்ந்த காடு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே திரிலோக சஞ்சாரியான நாரத மகரிஷி வந்தார். அவரைக் கண்டவுடன் மிக்க மரியாதையுடன் வணங்கி உபசரித்து நலம் விசாரித்தார். நாரத மகரிஷியும் மார்க்கண்டேயரைத் தொழுது வணங்கி அவருடன் உரையாடினார். அப்போது மார்க்கண்டேய மகரிஷி, தேவரிஷியே, தாங்கள் இந்த அடர்ந்த காட்டில் உலவக் காரணம் என்னவோ? என்று கேட்க நாரதரும், சுவாமி, அடியேன் திருக்கயிலாயத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். திருக்கயிலைக்கு செல்லும் அனைவரும் கயிலை நாதனைத் தொழும் முன் திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாக்ஷப் பெருமாளைத் தொழுது அவரிடம் அனுமதி பெற்று சென்றால்தான் திருக்கயிலை யாத்திரை பூர்ணத்துவம் பெறும் என்ற விதி இருப்பது தாங்கள் அறிந்ததுதானே.

எம்பெருமானின் உத்தரவுப்படி அடியேன் ஸ்ரீபுண்டரீகாக்ஷப் பெருமாளை தரிசித்து விட்டு திருக்கயிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன், என்று பணிவுடன் பதில் அளித்தார். அதைக் கேட்ட மார்க்கண்டேயர் மகிழ்ந்து அப்படியா மிகவும் சந்தோஷம், பெருமாளையும் பெருமானையும் ஒருசேரத் தரிசித்த பலனை உங்கள் மூலம் அடியேன் பெற்று விட்டேன், என்று பரவசமாகக் கூறினார்.

பூமியில் மீண்டும் பிறவாதிருக்க
மனிதர்கள் அனைவரும் தரிசிக்க வேண்டிய
திருவெள்ளறை திருத்தலம்

நாரதர் மார்க்கண்டேயரின் பணிவைக் கண்டு அகம் மகிழ்ந்து போனார். தங்களைப் போன்று பணிவின் சிகரமாக இருக்கும் மகரிஷிகளைக் காண்பதற்காகத்தான் பெருமாள் அடியேனை இந்த அடர்ந்த காட்டு வழியே அனுப்பி இருப்பார் போலிக்கிறது என்று பதிலுரைத்தார்.

மார்க்கண்டேயர், தேவரீர், அடியேன் இப்பூமிக்கு வந்து பல யுகங்கள் கழிந்து விட்டன. அடியேன், இன்னும் எவ்வளவு நாள் இப்புவியில் இருக்க வேண்டும் என்று எம்பெருமான் விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். தாங்கள் திருக்கயிலாய ஈசனைத் தரிசிக்கும்போது இதைப் பற்றி தெரிந்து கொண்டு வர முடியுமா? என்று கேட்டார். நாரதரும், அப்படியே ஆகட்டும், பெருந்தகையே. என்று கூறி விட்டு தன் கயிலை யாத்திரையைத் தொடர்ந்தார்.

வழி நெடுகிலும் மார்க்கண்டேய மகரிஷியின் எல்லையில்லா பக்தியையும் மற்ற ஜீவன்களிடம் அவர் கொண்டிருந்த பணிவையும் மனதில் அசை போட்ட படியே நாரத மகரிஷி சென்று கொண்டிருந்தார். ஏனென்றால், மார்க்கண்டேயர் ஒரு சாதாரண ரிஷி அல்ல. முக்காலங்களையும் உணர்ந்த பெருமான். காலத்தைக் கடந்த கருணாகர மூர்த்தி. அவர் நினைத்தால் தன்னுடைய ஆயுள் எவ்வளவு காலம், தான் எந்த லோகத்தில் எவ்வளவு நாள் இருக்க வேண்டும் என்பதை ஒரு நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் அதை எம்பெருமான் திருவாக்கால்தான் உணர வேண்டும் என்று விரும்புகிறார் என்றால் அவரிடம் எந்த அளவிற்கு பணிவு இருக்க வேண்டும். இவை எல்லாம் நாரதரின் மனதில் எழுந்த எண்ண அலைகள்.

நாகங்கள் காக்கும் நன்னிலம்
நன்னிமங்கலம் சிவாலயம்

மார்க்கண்டேயர் அருகில் உள்ள ஒரு ஆலமர நிழலில் அமர்ந்து நாரதரின் வரவுக்காகக் காத்திருந்தார். வெகுநேரமாகியும் நாரத மகரிஷியைக் காணவில்லை. அனைத்து லோகங்களையும் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து செல்லும் வல்லமை பெற்றவர் நாரத மகரிஷி. அவர் ஏன் இன்னும் இவ்வளவு கால தாமதம் செய்கிறார் என்று மார்க்கண்டேயருக்குப் புரியவில்லை. எல்லாம் இறைவன் சித்தம் என்று நினைத்தவாறே மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார் மகரிஷி. 

நண்பகல் நேரம் கடந்து மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சூரியன் மறையும் முன் மாலை சந்தியா வந்தன பூஜையை நிறைவேற்ற வேண்டும் என்பது நியதி. தொலைவில் நாரதர் வந்து கொண்டிருக்கிறாரா என்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்தார் மார்க்கண்டேயர். எந்தத் திசையிலிருந்தும் அவர் வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இனியும் கால தாமதம் செய்யாமல் சந்தியா பூஜையை நிறைவேற்றிவிட வேண்டும் என்று நினைத்த மார்க்கண்டேய மகரிஷி அக்கம் பக்கத்தில் ஏதாவது நீர் நிலைகள் தென்படுகிறதா என்று பார்த்தார். பூஜைக்கு முன்னால் நீராட வேண்டும் அல்லவா? எந்த குளமோ, கிணறோ, தீர்த்தமோ அருகில் தென்பட வில்லை.

பக்கத்தில் ஒரே ஒரு புலையன் குட்டை மட்டும்தான் தென்பட்டது. ஆடு, மாடுகளின் தோலை ஊற வைத்து பதப்படுத்துவதற்காக ஏற்படுத்திய குட்டை அது. மார்க்கண்டேயர் சற்றும் யோசிக்கவில்லை. அவருக்கு நேரம்தான் முக்கியம். அந்தக் குட்டையில் முழுகி எழுந்தார். பின்னர் அந்தக் குட்டையின் கரையிலேயே அமர்ந்து தன்னுடைய சந்தியா வந்தன பூஜைகளை முழுமையாக நிறைவேற்றினார். அருகில் சென்றாலே குடலைப் புரட்டும் துர்நாற்றம் வீசும் அந்தக் குட்டையில் மார்க்கண்டேயர் முழுகிய நேரத்தில்தான் நாரதர் அங்கு வந்து சேர்ந்தார். மார்க்கண்டேயரின் சந்தியா வந்தான பூஜையில் குறுக்கிடக் கூடாது என்று நினைத்து சற்று தூரத்தில் நின்று கொண்டு மார்க்கண்டேயர் பக்தி சிரத்தையுடன் நிறைவேற்றும் பூஜைகளை மிகவும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

மார்க்கண்டேயர் பூஜை நிறைவடைந்தவுடன் நாரதரைப் பார்த்து மிக்க மகிழ்ச்சியுடன் வணங்கி வரவேற்றார். நாரதரும் மகரிஷியைக் கை கூப்பி தொழுது தன்னுடைய வணக்கத்தைத் தெரிவித்தார். சுவாமி, கயிலை நாதனிடம் என்னுடைய வேண்டுகோளைத் தெரிவித்தீர்களா? என்று பணிவுடன் கேட்கவே, நாரதரும், ஆம், சுவாமி, ஈசனிடம் தங்களுடைய வேண்டுகோளைத் தெரிவித்தேன். எம்பெருமானும், மார்க்கண்டேய மகரிஷி இடம், சூழ்நிலை எதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய கடமையையே கண்ணாகக் கருதி சந்தியா வந்தன பூஜைகளை நிறைவேற்றி வருகிறார். அதனால் அவர் எவ்வளவு காலம் சந்தியா வந்தன பூஜைகளை நிறைவேற்றி வருகிறாரோ, அவ்வளவு காலம் இந்த பூமியில் நிலைபெற்று இருப்பார் என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

தாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் சந்தியா வந்தன பூஜையை தவறாமல் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று கடமை தவறாத கண்ணியவானாக இருக்கிறீர்கள். உரிய நேரத்தில் பூஜையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தாங்கள் செயல்படுவதால் ஒரு புலையன் குட்டை என்பதைக் கூட பொருட்படுத்தாது அதில் நீராடி சந்தியா வந்தன பூஜைகளை நிறைவேற்றுவதை சற்று முன்தான் கண்டு மகிழ்ந்தேன். எனவே, எம்பெருமான் கூறிய படி தாங்கள் எக்காலத்திலும் சந்தியா வந்தன பூஜையை கைவிடப் போவதில்லை. அதனால் எக்காலத்திலும் இப்புவியை விட்டு நீங்காமல் சிரஞ்சீவியாகவே வாழ்வீர்கள் என்று கூறி மார்க்கண்டேய மகரிஷியை ஆசீர்வதித்து அவ்விடத்தை விட்டு நாரதர் மறைந்தார்.

சித்தர்கள் வாக்குப்படி, எவர் ஒருவர் காணாமல் கோணாமல் கண்டு சந்தியா வந்தன பூஜைகளை நிறைவேற்றுகிறார்களோ அவர்கள் சிரஞ்சீவியாக சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள். சந்தியா வந்தன பூஜைகளில் மிக மிக முக்கியமானது நேரம் காலம் தவறாமல் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். நேரம் தவறிச் செய்யும் பூஜைகள் அசுர சக்திகளையே பெருக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. சந்தியா வந்தனத்திற்கு உரிய சரியான நேரத்தையே சித்தர்கள் பரிபாஷையில் காணாமல், கோணாமல், கண்டு என்ற மூன்று பதங்களில் குறிக்கிறார்கள்.

அதாவது, காலை சந்தியா வந்தன பூஜையை சூரியனைக் காண்பதற்கு முன், சூரிய உதயத்திற்கு முன் நிறைவேற்ற வேண்டும். நண்பகல் பூஜையை கோணாமல், அதாவது சூரியன் தலைக்கு மேல் கோணாமல் பிரகாசிக்கும் நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். கோணாமல் என்றால் பகல் 12 மணி என்ற கணக்கு கிடையாது. ஒரு நாளின் பகல் பொழுதில் நடுவே உள்ள நேரம் என்று பொருள். உதாரணமாக, ஒரு குறித்த நாளில் சூரிய உதயம் காலை 6.30, சூரிய அஸ்தமனம் 6 மணி என்றால் அன்றைய பகல் பொழுது 11 மணி 30 நிமிடங்களுக்கு தானே நிரவி இருக்கும். இதில் பாதியான 5 மணி 45 நிமிடத்தை சூரிய உதயத்துடன் கூட்டி வரும் 12 மணி 15 நிமிடமே அன்றைய தின பகல் சந்தியா வந்தன பூஜைக்கான நேரமாகும். மாலையில் சூரியன் மறைவதைக் கண்டவாறே சந்தியா வந்தன பூஜைகளை நிறைவேற்ற வேண்டும். அதாவது, சூரியன் மறைவதற்குள் பூஜைகைளை ஆரம்பித்துவிட வேண்டும்.

வளரும் செல்வம் வளர்க்கும்
வில்வம், சாத்தமங்கலம்

இவ்வாறு நாள்தோறும் மூன்று வேளை சந்தியா வந்தன பூஜைகளை நிறைவேற்றி வந்தால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். எந்த விதமான உடல், மன நோய்களும் மனிதனை அண்டாது. சாதி, மத, இன பேதமில்லாமல் அனைவரும் நிறைவேற்ற வேண்டிய பூஜையே சந்தியா வந்தன வழிபாடாகும்.

மார்க்கண்டேய மகரிஷி நீராடிய அந்தப் புலையன் குட்டை திருவெள்ளறை பெருமாள் கோயில் அருகிலேயே அமைந்துள்ளது. இன்றும் சந்தியா வேளைகளில் இக்குளத்தில் மார்க்கண்டேய மகரிஷி நீராடி தன்னுடைய பூஜைகளை நிறைவேற்றி வருகிறார். அப்பெருமான் இயற்றும் பூஜா பலன்களின் ஒரு பகுதியை திருவெள்ளறை திருக்கோயில் படிகளில் நிரவி வருதால் இப்படிகளைத் தொட்டு வணங்கும் அடியார்களுக்கு சஞ்சீவ அமிர்த சக்திகள் வரப் பிரசாதமாகக் கிட்டுகின்றன.

மார்க்கண்டேய மகரிஷி நீராடிய அத்திருக்குளம் சித்தர்களால் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பாக்கியம் உள்ளோருக்கு மட்டுமே அத்திருக் குளத்தில் நீராடும் வாய்ப்பு கிட்டும். சந்திரன் ரோஹிணி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிரகாசிக்கும் நேரத்தில் இத்திருக் குளத்தில் நீராடும் பாக்கியம் பெற்றோர் எத்தகைய கொடிய நோய்களிலிருந்தும் நிவாரணம் பெற்று நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வார்கள் என்பது உறுதி.

துருவ நட்சத்திரம் போல் ஆன்மீக வானில் என்றும் நிரந்தரமாகப் பிரகாசிக்கும் ஸ்ரீஆதி சங்கர பகவத்பாதாள் அவர்கள் தன்னுடைய பதினாறாம் வயதில் தரிசனம் செய்து முக்தி பெற்ற தலமே திருவெள்ளறை திருத்தலமாகும். எம்பெருமான் திருவருளால் ஆதிசங்கருக்கு பதினாறு வருடமே ஆயுளாக விதிக்கப்பட்டிருந்தது. சரியாக பதினாறு வயது முடியும் தினத்தன்று வியாச பகவான் ஆதிசங்கரர் முன் தோன்றி, சங்கரா, உன்னுடைய ஆயுள் இன்றுடன் முடிவடைகிறதே, அதை நீ அறிவாயா? என்று வினவினார். சிவபெருமானின் அம்சமாகத் தோன்றியவர் அல்லவா ஆதிசங்கரர். அவர் தன்னுடைய எதிர்காலம் பற்றி அறியாதவரா? இருந்தாலும் ஒன்றும் அறியாதவர் போல் அவரும், ஆம் சுவாமி இன்றுடன் அடியேனின் பூவுலக வாசம் நிறைவு பெறுகிறது, என்று பதிலளித்தார்.

வேதவியாசர் தொடர்ந்து, இந்தப் பிறவி நிறைவேறியவுடன் மீண்டும் இந்தக் கர்ம பூமியில் பிறப்பெடுக்க எண்ணம் கொண்டுள்ளாயா? என்று கேட்டார். ஆதிசங்கரர், சிவ சிவ, மல ஜலத்துடன் வாழ வேண்டிய இவ்வுலகில் எவரேனும் தாங்களே விரும்பி பிறப்பெடுப்பது இல்லையே. அடியேனும் இதற்கு விதி விலக்கு கிடையாது. இறைவனின் ஆணையின்றி இனியொரு மனிதப் பிறவி எடுக்கும் எண்ணம் அடியேனுக்குக் கிடையாது, என்றார். வியாசர், அப்படியானால் நீ திருவெள்ளறைப் பெருமானைத் தரிசனம் செய்து விட்டாயா? என்று கேட்டார். திருவெள்ளறை மூர்த்தியை அடியேன் தரிசனம் செய்ததில்லையே, என்று ஆதிசங்கரர் ஆச்சரியத்துடன் கூறினார்.

வியாசர் தொடர்ந்தார், மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் திருவெள்ளறைத் திருத்தலத்தில் உறையும் ஸ்ரீபுண்டரீகாக்ஷ பெருமாளை ஒருமுறையாவது வழிபட்டால்தான் மீண்டும் பிறவாத நிலை ஏற்படும். என்னதான் உத்தம நிலையை இப்பூமியில் ஒருவன் அடைந்திருந்தாலும் திருவெள்ளறையை அடையாத மனிதனுக்கு மனிதப் பிறவியிலிருந்து விடுதலை இல்லை என்பது இறைவன் விதித்த விதி. எனவே, நீ மீண்டும் பூமியில் மனிதப் பிறவி எடுக்காத நிலையை அடைய வேண்டும் என்றால் உடனே சென்று திருவெள்ளறை நாதனை தரிசனம் செய்து விடு, என்று அருளி மறைந்தார்.

ஆதி சங்கரர் ஒரு கணம் திகைத்து விட்டார். வியாச பகவானின் தரிசனம் பெற்ற சமயம் அவர் திருவெள்ளறையிலிருந்து பல மைல்கள் தூரத்தில் இருந்தார். அன்று சூரியன் மறைவதற்குள் பெருமாளைத் தரிசனம் செய்வது என்பது மிகவும் சிரமமான காரியம் ஆயிற்றே என்று மனதிற்குள் எண்ணிக் குழம்பினார். நினைத்த இடத்திற்கு நொடியில் ஆகாய மார்கமாக பறந்து செல்லும் சித்தி பெற்ற மகான்தான் ஆதிசங்கரர். இருப்பினும் இறைவன் ஆணை இல்லாமலோ, சுய நலத்திற்காகவோ எந்த சித்தியையும் அவர் பயன்படுத்தியது கிடையாது.

எப்படி இருந்தாலும் மனித முயற்சியைத் தொடர்வோம் என்ற மன உறுதியுடன் திருவெள்ளறையை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார். அவர் திருவெள்ளறையை அடையும் நேரம் வானில் சூரியன் மேற்கில் மறையத் தொடங்கியது. அதையொட்டி அவருடைய ஆயுள் முடியும் நேரமும் வந்து விட்டதால் அவருக்கு மூச்சு முட்டத் தொடங்கியது. மிகவும் சிரமப்பட்டு திருவெள்ளறை ஊரின் எல்லையை அடைந்தார். அக்கணமே ஒரு புத்துணர்ச்சி அவர் உடலில் பாய்வதை உணர்ந்தார். வேகமாக திருக்கோயிலை நோக்கி விரைந்தார். ஆனால், அவருடைய கால்கள் நடக்க மறுத்தன. கண்கள் சுழன்றன, கைகள் நடுங்கின, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது, இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. வாழ்வின் இறுதிக் காலம் நெருங்கி விட்டதாகவே எண்ணத் தொடங்கினார். இருப்பினும் முயற்சியைக் கை விடாமல் தொட.ர்ந்து கோயில் வாயிலை நோக்கி முன்னேறிச் சென்றார். மிகவும் வேதனையுடன் திருக்கோயிலின் முதல் படிக்கட்டை அவர் கைகள் தொட்ட மறுகணமே அவர் உடலில் புதிய உற்சாகம் ஏற்பட்டது.

ஒரு புதிய பிறவி எடுத்தது போன்ற புத்துணர்ச்சியை அடைந்தார். உடனே ஒவ்வொரு படிக்கட்டையும் தன் இரு கைகளாலும் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார். இவ்வாறு ஒவ்வொரு படியையும் தொடத் தொட அவர் உடலில் சக்தி அதிகரிப்பதை உணர்ந்தார். இறைவனுக்கு நன்றி செலுத்திய வண்ணம் ஒவ்வொரு படியாகத் தரிசித்தவாறே இறுதியில் உத்தராயண படிக்கட்டுகளையும் தரிசித்து மகிழ்ந்தார். அந்நிலையில் அவருக்கு பூரண ஆரோக்கியம் வரப் பெற்றவர் ஆனார். இவ்வாறு ஒவ்வொரு படியையும் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டே எல்லாப் படிகளையும் தரிசித்து பின்னர் திரு செந்தாமரைக் கண்ணன் திருச் சன்னதியை அடைந்தார். பெருமாளைக் கண்ணாரக் கண்டு எல்லையில்லாப் பரவசம் அடைந்தார். பெருமாள், லட்சுமி, ஆதிசேஷன், மார்க்கண்டேயர், வியாசர் முதலான பல தெய்வ தேவர்களின் தரிசனத்தையும் பெற்றார். அனைத்து மூர்த்திகளும் ஆதிசங்கரரை ஆசீர்வதித்து அவருடைய இறை சேவை மேன்மேலும் பெருக அனுகிரகம் அளித்தனர். திருவெள்ளறை திருத்தலத்தில்தான் எம்பெருமான் அனுமதியுடன் பிரம்மா ஆதிசங்கரரின் ஆயுளை இரண்டு மடங்காக விருத்தி செய்தார். அதாவது 16 வயது வரை சங்கரர் பூமியில் வாழலாம் என்ற விதியை எம்பெருமானே 32 வருடமாகத் திருத்தி அமைத்து அருள் புரிந்தார்.

இவ்வாறு ஆதிசங்கரர் ஸ்ரீபுண்டரீகாக்ஷப் பெருமாளை வழிபட்ட முறையில் படிக்கட்டு வழிபாடு செய்பவர்கள் அனைத்து விதமான கால தோஷங்கள், சர்ப்ப தோஷங்கள், மிருத்யு தோஷங்களிலிருந்து நிவாரணம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள் என்பது ஆன்றோர் வாக்கு. 

உத்தராயண படிக்கட்டுகள் மகிமை

குறித்த சில திருத்தலங்களில் மட்டுமே உத்தராயண தட்சிணாயன படிக்கட்டுகள் அமைந்திருக்கும். உதாரணமாக, திருநெல்வேலி அருகே ஆழ்வார் திருநகரி, கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி திருத்தலம், திருவெள்ளறை ஸ்ரீ செந்தாமரைக் கண்ணன் திருத்தலம் போன்ற திருத்தலங்களில் உத்தராயண தட்சிணாயன படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் ஏறிச் சென்று மூலவரைத் தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் உத்தராயண புண்ணிய காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் உத்தராயண படிக்கட்டுகளும், தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையில் தட்சிணாயன படிக்கட்டுகளும் வழிபாட்டிற்காகப் பக்தர்களால் பயன்படுத்தும் வகையிலும் உள்ளன.

பொதுவாக, உத்தராயணம், தட்சிணாயனம் என்பது சூரிய சஞ்சாரத்தின் காலத்தைக் குறிப்பதாகக் கொண்டாலும் இது மனித உடலில் உள்ள சூரிய, சந்திர சக்திகளை முறைப்படுத்தும் மார்கமாகவும் செயல்படும். உத்தராயண காலத்தில் திருமணம், உபநயனம், கும்பாபிஷேகம் போன்ற சுப நிகழ்ச்சிகளையும் தட்சிணாயனத்தில் பித்ரு பூஜைகள், தீர்த்த நீராடல் போன்ற பூஜைகளையும் நிறைவேற்றுவதால் மனித சமுதாயம் முழுமையான உடல் மன வளத்துடன் திகழும். மேலும், உத்தராயண பூஜைகள் மனிதனின் உடலையும், தட்சிணாயன பூஜைகள் மனிதனின் மனம், உள்ளத்தையும் ஆக்கப்படுத்துகின்றன. உடலும் மனமும் ஒன்றுபட்டால்தான் முழுமையான ஆரோக்கியம் கிட்டும் என்பதே உண்மை. மேலும் உத்தராயண பூஜைகள்  தூல சரீரத்தையும் தட்சிணாயன பூஜைகள் மனிதனின் சூக்கும சரீரத்தையும் வளப்படுத்தும். இந்த இரண்டு சரீரங்களுக்கும் இடையே உள்ள இணைப்பில் பழுது ஏற்படும்போதுதான் அது மன உளைச்சல், பைத்தியம், தூக்கமின்மை போன்ற மனக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

ஆழ்வார் திருநகரி

எமது ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமத்திலும் ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் பெருங் கருணையால் உத்தராயண தட்சிணாயன படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்படிக்கட்டுகளை முறையாக பூஜை செய்து, மூலவராக அருள்புரியும் ஸ்ரீரெங்கநாத சுவாமியையும் தரிசனம் செய்வதால் கிட்டும் பலன்களோ அளப்பரியவை.

பொதுவாக, திருக்கோயில்களில் மூலவராக அருள்புரியும் இறை மூர்த்தியை நோக்கியவாறுதான் நந்தீஸ்வர மூர்த்திகள் அமர்ந்திருப்பார்கள். சில திருத்தலங்களில் மட்டும் மூலவர் பார்க்கும் திசையைப் பார்த்தவாறு நந்தீஸ்வர மூர்த்திகள் அமர்ந்திருப்பார்கள். இந்த நந்தீஸ்வர மூர்த்திகளை உத்தியோக நந்தீஸ்வர மூர்த்திகள், உத்வேக நந்திகள் என்று அழைப்பதுண்டு. பக்தர்கள் இறைவனை அழைத்தால் உடனேயே அவர்கள் கூப்பிட்டு குரலுக்கு ஓடோடிச் சென்று அருள்பாலிப்பதற்காக இத்தகைய மூர்த்திகள் தயார் நிலையில் இறைவனை ஏற்றிச் செல்லத் துடிப்புடன் காத்திருக்கும் ஆயத்த மூர்த்திகள். கலியுகத்தில் எதையும் உடனுக்குடன் எதிர்பார்க்கும் நிலை இருப்பதால் யுக தர்மத்திற்கு ஏற்ற முறையில் அருள்புரியும் அற்புத மூர்த்திகள் இவர்கள். இத்தகைய மூர்த்திகள் அருள்புரியும் திருத்தலங்களில் நிகழ்த்தும் வழிபாடு துரிதமான பலன்களைத் தரும்.

இதே முறையில் எமது ஆஸ்ரமத்தில் அமைக்கப்பட்டுள்ள உத்தராயண தட்சிணாயன படிகள் உத்யோகப் படிக்கட்டுகளாக அமைந்து பக்தர்களின் பிரார்த்தனைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் சக்தியுடன் விளங்குகின்றன. அதாவது மூலவரான ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் திருஅண்ணமலையை தரிசனம் செய்தவாறு படிக்கட்டுகளில் ஏறிவரும் பக்தர்களின் பிரார்த்தனைகளை உடனுக்குடன் திருச்செவிகளில் ஏற்கும் கருணாமூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். திருவெள்ளறை போன்ற மற்ற திருத்தலங்களில் பக்தர்கள் ஏறிவரும் திசைக்கு எதிர்த் திசையில்தான் மூல மூர்த்திகள் எழுந்தருளியிருப்பார்கள். 

இதனால் இயற்கையாகவே சுவாமிக்கு வலப் புறம் அமைந்துள்ள படிக்கட்டுகள் உத்தராயண சக்திகளையும், சுவாமியின் இடப்புறம் அமைந்துள்ள படிக்கட்டுகள் தட்சிணாயன சக்திகளையும் வாரி வழங்குகின்றன. பொதுவாக, வடக்கு திசை உத்தராயணத்தையும், தெற்கு திசை தட்சிணாயனத்தையும் குறிப்பது மரபு. இவ்வாறு வடக்கு, தெற்கு திசைகள் அமையாதபோது கிழக்கு திசையில் வடக்கு திசைக்கு உரித்தான காரியங்களையும், மேற்கில் தெற்கு திசைக்கு உரித்தான காரியங்களையும் செய்வதை நமது முன்னோர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இருந்தபோதிலும், இறைவனின் எழுந்தருளிய கோலமே திசைகளுக்கு அடிப்படையாக விளங்குவதாலும், அதிலும் சிறப்பாக கலியுகத்தில் வாஸ்து மூர்த்தியின் கோலத்தை வைத்தே திசைகள் நிர்ணயிக்கப்படுவதால் இங்கு ஸ்ரீரெங்கநாத மூர்த்தியின் வலது புறம் உத்தராயண சக்திகளையும் இடது புறம் தட்சிணாயன சக்திகளைப் பொலிவதாகவும் நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளியுள்ளார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம். திருஅண்ணாமலையைச் சுற்றியுள்ள 30 மைல் விஸ்தீரணத்திற்கு திருஅண்ணாமலையாரே குரு மூர்த்தியாக அருளாட்சி செய்வதால் இத்திருத்தலத்தில் திருஅண்ணாமலையாரின் குருவருளையும் தன்னுடைய திருவருளுடன் சேர்த்து வழங்கும் குரு பிரசாத மூர்த்தியாகவும் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள ரெங்கநாதப் பெருமாள் விளங்குகிறார் என்பது மற்றோர் சிறப்பம்சமாகும்.

படிக்கட்டுகளின் திவ்ய அமைப்பு

எமது ஆஸ்ரமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உத்தராயண தட்சிணாயன படிக்கட்டுகளின் இரகசியங்களைக் கூறுவதென்றால் மனிதக் கணக்கில் 2400 ஆண்டுகள் வேண்டியிருக்கும் என்று ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் போகர் உரையாடலின் மூலம் நாம் அறிகிறோம். அகஸ்திய நாடிகளில், படிக்கட்டு மகிமையைக் கூற 300 ஆண்டும் முப்பாதியே என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒன்றில் பாதி முதல் பாதி, அதில் பாதி அதாவது அரையில் பாதி கால், அது இரண்டாவது பாதி. அதில் பாதி மூன்றாவது பாதி. அது அரைக்கால். இந்த அரைக்கால் பாகம் 300 ஆண்டுகள் என்றால், மொத்தம் 2400 மனித ஆண்டுகள் என்பது குறிப்பு. இத்தனை சிறப்பு வாய்ந்த படிக்கட்டுகளின் ஒரு சில மகிமைகளைப் பற்றி இங்கு விளக்கம் அளிக்கிறோம்.

எண்ணிக்கையில் என்ன மகிமை?

எமது ஆஸ்ரமத்தில் 27 உத்தராயணப் படிக்கட்டுகளும், 27 தட்சிணாயனப் படிக்கட்டுகளும் உள்ளன. இந்த படிக்கட்டுகளை இணைத்து மேற்கூரையாக அமைக்கப்பட்டுள்ள விதானத்தில் 18 கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக திருக்கோயிலில் உள்ள ஒரு படிக்கட்டில் ஏறி நின்றால் ஒரு படிக்கட்டை தரிசனம் செய்த பலன்தானே கிட்டும். ஆனால், எமது ஆஸ்ரமத்தில் உள்ள படிகள் மிக மிக அபூர்வமான பலன்களைத் தரக் கூடிய பகுவல் வரிசை கணிப்பு (fractal sequence) முறையில் பலன்களைத் தரும் வண்ணத்தில் அமைந்துள்ளன. அதாவது இங்கு நீங்கள் முதல் படியில் நின்றால் ஒரு படியைத் தரிசனம் செய்த பலன். அடுத்து இரண்டாம் படியில் ஏறும்போது முதல் படியையும் இரண்டாம் படியையும் தரிசனம் செய்த பலன். நீங்கள் மூன்றாம் படியில் ஏறும்போது முதல் படி அதனுடன் இரண்டாம் படி, அதனுடன் மூன்றாம்படி என (1+2+3=6) ஆறு படிகளைத் தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.

இம்முறையில் கணக்கிட்டுக் கொண்டே சென்றால் நீங்கள் 27வது படியை அடையும் போது 378 படிக்கட்டுகளைத் தரிசனம் செய்த பலனைப் பெறுவீர்கள். என்ன அற்புதம் பார்த்தீர்களா? அது மட்டுமல்ல. விதானத்தில் அமைந்துள்ள 18 கலசங்கள் ஒரு மனிதன் தன்னுடைய நிலையிலிருந்து மேல் நோக்கி அடையக் கூடிய தேவர், கந்தர்வர், சித்தர் போன்ற உயர்ந்த நிலைகளைக் குறிக்கின்றன. இந்த உயர்ந்த நிலைகள் இந்த படிகளை ஆராதனை செய்பவர்களுக்கு மட்டும் அல்லாது இங்கு பிரார்த்தனை செய்யும் அடியார்களின் 21 தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதையே உறுதி செய்கின்றன. இதைத்தான் 378 (21 x 18 = 378) என்ற பகுவல் கணக்கு முறை உணர்த்துகிறது.

பகுவல் சக்திகளை பகுத்தெடுங்கள்

மானிடப் பிறவியில் பெறுதற்கரிய இந்தப் பகுவல் சக்திகளை எப்படி மனிதர்கள் பெறுவது? இதற்கு உரிய முறையாக விளங்குவதே சித்தர்கள் அருளிய நேர் நின்ற நிறை தரிசன வழிபாட்டு முறையாகும். பொதுவாக, திருக்கோயில்களில் உத்தராயண காலத்தில் உத்தராயண படிக்கட்டுகள் வழியாகவும், தட்சிணாயன காலத்தில் தட்சிணாயன படிக்கட்டுகள் வழியாகவும் சென்று இறைவனைத் தொழுவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பகுவல் சக்திகளைப் பெறுவதற்கான வழிபாட்டில் எப்போதுமே உத்தராயண படிக்கட்டுகள் வழியாக மட்டுமே இறைவனைச் சென்று வழிபட வேண்டும் என்பது முக்கியம். தட்சிணாயனப் படிக்கட்டுகள் வழியாகச் செல்லும் முறை இங்கு கடைபிடிக்கப்படுவதில்லை. மேலும், இப்படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வரும் நேரம் முழுவதும் இறைவனை நேரே நோக்கியவாறே பூஜையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு போதும் இறைவனுக்கு முதுகுப் புறத்தை பக்தர்கள் காட்டுவது கிடையாது. இதுவே நேர்நின்ற நிறை தரிசன வழிபாட்டு முறையாகும். சமீப காலத்தில் உடையவர் ராமானுஜர் இம்முறையில்தான் தனது குருநாதரை ஸ்ரீரங்கத்தில் 18 முறையும் தரிசித்து வந்தார் என்பது குறிப்பிட்த் தக்கது.

பக்தர்கள் தம்பதி சகிதமாக ஒவ்வொரு படியிலும் ஏறி நின்று ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை ஒரு சேரக் கூறிய பின்னர் அடுத்த படிக்கட்டை அடைய வேண்டும். உத்தராயண படிக்கட்டுகளைத் தாண்டிச் சென்று மூல மூர்த்தியான ஸ்ரீரெங்கநாதர், தாயார், ஆதிசேஷன், பிரம்மா இவர்களைத் தரிசனம் செய்த பின்னர் சுவாமிக்கு முதுகைக் காட்டாமல் பின்னோக்கி மெதுவாக நகர்ந்து அதே நிலையிலேயே தட்சிணாயனப் படிக்கட்டுகளில் இறங்கி வர வேண்டும். எந்நிலையிலும் இறைவனுக்கு முதுகைக் காட்டுவதில்லை.

இந்த உத்தராயண தட்சிணாயன படி பூஜைகளை 27 ஆரோஹண அவரோஹண ஆவிருத்திகளாக நிறைவேற்றலாம். வானத்திலிருந்து உத்தராயண தட்சிணாயன படிக்கட்டுகளைப் பார்த்தால் அவை ஸ்ரீரெங்கநாதரின் திருநாமம் போல் ஜொலிக்கும். நாமத்தின் நடுவே உள்ள திருமண்தான் ஆஸ்ரமத்தின் நுழை வாயிலாக அமைந்துள்ள துவாதச பித்ருப் படிக்கட்டுகளாகும். நாமத்தின் வலது பாகமாக உத்தராயணப் படிக்கட்டுகளும், நாமத்தின் இடது பாகமாக தட்சிணாயனப் படிக்கட்டுகளும் துலங்குகின்றன. உத்தராயணப் படிக்கட்டுகளின் (சுவாமிக்கு) வலது ஓர விளிம்பு வழியாக ஏறிச் சென்று (சுவாமிக்கு) இடது விளிம்பு வழியாக தட்சிணாயனப் படிக்கட்டில் இறங்கி வருவது ஒரு ஆவிருத்தி. இதே போல் வலது விளிம்பில் ஏறி இடது நடுவில் இறங்குவது இரண்டாவது ஆவிருத்தி. வலது விளிம்பில் ஏறி இடது பக்கம் வலது விளிம்பில் இறங்குவது மூன்றாவது ஆவிருத்தி. இவ்வாறு நிறைவேற்றும் ஒவ்வொரு விதமான ஆவிருத்தியால் ஒவ்வொரு விதமான பலன்கள் ஏற்படும். இதற்குக் காரணம் இந்தப் புனிதப் படிகளில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் மூன்று விதமான தெய்வீக சக்கரங்களாகும்.

ஆகர்ஷண சக்கரம், பிரகாச சக்கரம், தைவதத்த சக்கரம் என்ற சித்த வேத சக்கரங்களை இந்தப் படிகளில் நிர்மாணித்துச் சிறப்பித்துள்ளார் ஸ்ரீவெங்கடராம சுவாமி அவர்கள். ஒவ்வொரு படிக்கும் மூன்று சக்கரங்கள் என்ற எண்ணிக்கையில் 54 படிகளில் 162 சக்கரங்களின் சக்திகளைப் பதித்து அருளமுதத்தை பொழிந்துள்ளனர் சித்த பெருமக்கள். ஆகர்ஷண சக்கரங்கள் மனிதர்களிடம் இயற்கையாக உள்ள காமம், கோபம், பொறாமை போன்ற தீய சக்திகளை ஈர்த்து பஸ்மமாக்குகின்றன. பிரகாச சக்கரங்கள் மனிதனுக்குத் தேவையான பணிவு, அடக்கம், பொறுமை போன்ற நற்குணங்களை அளிக்கின்றன. தைவதத்த சக்கரங்கள் மனிதனுடைய இரு நிலைகளுக்கான அனுகிரக சக்திகளை அளிக்க வல்லவை.

உதாரணமாக, மனிதப் பிறவியை தோன்றிய நிலை, தோன்றா நிலை என இரு பிரிவுகளில் அடக்கலாம். இதுவரை தோன்றிய உயிர்களை நமது அப்பா, தாத்தா, முன்னோர்கள், பித்ருக்கள் என்ற வகையிலும் தோன்றா நிலையில் உள்ளவர்களை குழந்தைகள், பேரன், பேத்திகள் என்ற வருங்காலச் சந்ததிகளாகவும் பிரிக்கலாம் அல்லவா? இவ்வாறு இந்த இரு நிலையிலும் உள்ள 21 தலை முறை வர்க்கத்தினருக்கும் நற்கதி அளிக்க வல்லதே தைவதத்த சக்கரங்கள். ஒவ்வொரு முறை இந்த உத்தராயண தட்சிணாயனப் படிக்கட்டுகளை மிதிக்கும்போதும் பற்பல அற்புத தெய்வீக வரங்கள் நமக்குக் கிடைப்பதால்தான் இத்தகைய திருத்தலங்களைத் தரிசிக்கும் முன்னர் சுத்தமாக நீராடி உள்ளங்கால்களைத் தூய்மையான நீரால் நன்றாக அலம்பி முடிந்தால் காவிரி, கங்கை போன்ற புனித ஆற்று மணலால் கால் பாதங்களைத் தூய்மை செய்து கொண்டு தீர்த்த யாத்திரைகளை மேற்கொள்ளும்படி பக்தர்களைக் கேட்டுக் கொள்கிறோம். 

பலன்கள்

உத்தராயண தட்சிணாயனப் படிகளைத் தரிசனம் செய்வதால் கிடைக்கக் கூடிய பொதுவான பலன்கள் பல உண்டு.

  1. கணவன் மனைவி இடையே உள்ள பேதங்கள் மறைந்து குடும்ப ஒற்றுமை பெருகும். விவாகரத்து நிலையில் உள்ள தம்பதிகள் கூட திடமான நம்பிக்கையுடன் வழிபடுவதால் அற்புதமான பலன்களைப் பெறலாம்.

  2. திருக்கோயிலில் உள்ள படிகளில் ஏறி இறங்கும்போது ஆரோ‘ஹண அவரோஹண சக்திகள் உடலில் உள்ள பல சக்தி மையங்களிலும் பரவிப் பாய்கின்றன. இதனால் இசைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் மற்றவர்களுக்கு மன அமைதியும், கூரிய அறிவும் விருத்தியாகும்.

  3. மாணவர்கள் தொடர்ந்த வழிபாட்டால் கடினமான பாடங்களையும் எளிதில் கிரகிக்கும் மன ஆற்றலைப் பெறுவார்கள்.

  4. வாழ்க்கைப் பாதையில் தொடர்ந்து பல வேதனைகளையும் சோதனைகளையும் சந்தித்து மனம் நொந்தவர்கள் தக்க ஆறுதலையும் சிறந்த வழிகாட்டுதலையும் நல்லோர் மூலம் பெறுவார்கள்.

  5. திருமணம், உபநயனம் போன்ற சுப நிகழ்ச்சிகளை உத்தராயணப் புண்ணிய காலத்தில் நிறைவேற்றுவதுதான் சிறப்பு. கூடா நாட்கள், சூன்ய திதி, குரு, சுக்ர மூடம் போன்ற ஒவ்வாத நாட்களில் திருமணம் புரிந்து கொண்டோர் வாழ்க்கையில் பலவித துன்பங்களைச் சந்திக்க நேரிடும். இவர்கள் ஒவ்வொரு மாதப் பிறப்பன்றும் உத்தராயண தட்சிணாயன படிகளைத் தரிசனம் செய்து படிகளுக்கு மாக்கோலம், மஞ்சள், குங்குமம் இட்டு வணங்கி வந்தால் துன்பச் சுமை ஓரளவு தணியும்.

  6. நேரம் காலம் பார்க்காது கண்ட நேரங்களில் தூங்குதல், பெண்கள் தலை விரி கோலத்தில் திரிதல், வீட்டில் பல இடங்களிலும் குப்பை, அழுக்குத் துணிகளை சேர்த்து வைத்தல், நகங்களில் அழுக்குசேர விடுதல் போன்ற காரணங்களால் தரித்த நிலை பெருகும். இந்நிலையிலிருந்து நிவாரணம் பெற வீட்டில் உள்ள பெரியவர்களில் ஒருவரேனும் உத்தராயண தட்சிணாயனப் படி பூஜைகளை மேற்கொண்டு வந்தால் அவர் பொருட்டு வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் நல்ல பழக்க வழக்கங்கள் தழைத்தோங்கும்.

கொடியது, நாக தோஷம் கொடியது

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு வகையான நாக தோஷத்தால் பாதிக்கப்படுகின்றனர். நாகங்களை வதைப்பது, பாம்புகளைக் கொல்வது மட்டும்தான் நாக தோஷம் என்ற கணக்கு கிடையாது. உழைக்காமல் சம்பாதிப்பதும், உழைப்புக்கேற்ற கூலி கொடுக்காததும், உணவில் கலப்படம் செய்வதும், லஞ்சம் கொடுப்பதும், பெறுவதும், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்வதும் போன்ற இவை அனைத்துமே பல விதமான நாக தோஷங்களை ஏற்படுத்துகின்றன. பொதுவாக, நாக தோஷங்களின் விளைவுகளை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும். எந்த பரிகாரங்களாலும் நாக தோஷங்களைத் தீர்க்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாக தோஷங்கள் ஏற்படாதவாறு மிகவும் கவனத்துடன் செயல்படுவதுதான் இத்தகைய தோஷங்களிலிருந்து விடுபடும் மார்க்கமாகும்.

மிகவும் அபூர்வமாக எப்போதோ ஒருமுறை மகான்கள், சித்தர்களின் பெருங்கருணையால் சில வகை நாக தோஷங்களுக்கு மட்டும் பரிகாரங்கள் அளிக்கப்படுகின்றன. அத்தகைய பரிகார வழிபாட்டு முறைகளுள் ஒன்றே உத்தராயண தட்சிணாயன வழிபாட்டு முறையாகும்.

நீலவேணு நாகங்கள்

உலகில் சில இடங்களில் மட்டுமே நீலவேணு என்ற பெயர் கொண்ட நாகங்கள் வசிக்கின்றன. தமிழ்நாட்டில் வெள்ளியங்கிரி மலையில் 1000 அடிக்குமேல் ஆழத்தில் உள்ள மூங்கில் புதர்கள்தான் இந்த நாகங்களின் இருப்பிடங்கள். நாக பஞ்சமி அன்று பசு மாட்டின் பாலை கறந்த சூடு ஆறும் முன் இந்த நாக தேவதைகளுக்கு நைவேத்யம் செய்தால் கடுமையான நாக தோஷங்களுக்கும் பரிகாரம் கிட்டும். இந்த நீலவேணு நாகங்களுக்கு மட்டும்தான் எத்தகைய நாக தோஷங்களையும் களையும் அற்புத தெய்வீக சக்திகள் உண்டு. கேட்பதற்கு மிகவும் எளிமையாகத் தோன்றினாலும் உண்மையில் இந்தப் பரிகாரம் எல்லோருக்கும் சாத்தியம் ஆகுமா? ஆனால், இவ்வளவு ஆழமான, ஆபத்தான இடங்களுக்கும் சென்று வரக் கூடிய பழங்குடி மக்கள் உண்டு. அவர்களை நாடி உரிய பரிகாரங்களை நிறைவேற்ற முயற்சி செய்யலாம். இந்த நீலவேணு நாகங்கள் வாசம் செய்யும் மூங்கிலிலிருந்து பெறப்பட்டதுதான் எமது ஆஸ்ரமத்தில் கிடைக்கும் மிண்டுரங்கக் குவளைகள். எத்தகைய பித்ரு தோஷங்களையும், கடுமையான நோய்களையும் தீர்க்கும் சக்தி உடையது.

ஆதிசேஷனின் பரம்பரையில் தோன்றியவையே நீல வேணு நாகங்கள். ஒவ்வொரு நாகமும் குறைந்தது 21 அடி நீளம் உடையது. நாக தேவதைகள் இனத்தைச் சேர்ந்தவை.

நாகதேவதா பரிமாணம்

பொதுவாக, விஷமுள்ள ஒரு நாகம் 100 வருடத்திற்கு ஒருவரைத் தீண்டாமல் இருந்தால் அதன் நீளத்தில் ஒரு அங்குலம் குறையும். நாகங்கள் தாங்களாக யாரையும் தீண்டுவதில்லை. இறைவன் அவர்களை ஒரு கருவியாகவே மற்றவர்களின் உயிரைக் கவரப் பயன்படுத்துகிறான். அவ்வாறு எமனின் தூதுவனாக செயல்படாத நாகங்கள் 300 ஆண்டுகள் யாரையும் தீண்டாமல் வாழ்ந்தால் அதன் நீளம் ஒரு அடியாகக் குறைந்து விடுகிறது. இவ்வளவு காலம் யாரையும் தீண்டாமல் சேர்த்து வைத்த விஷம் மாணிக்கமாக மாறி விடுகிறது. இதையே நாக மாணிக்கம் என்று கூறுகிறோம். மாணிக்கத்தை ஆபரணமாகப் பெற்ற நாகங்கள் இரவில் இரை தேடும்போது தங்கள் வாயைத் திறந்தால் போதும், காட்டில் ஒளி வெள்ளம் பாயும். அந்த வெளிச்சத்தில் தங்களுக்குத் தேவையான உணவை தேடி விழுங்கி விடும். இவ்வாறு 600 ஆண்டுகள் பூஜையிலேயே லயித்த நாகங்கள் நாக தேவதைகளாக மாறுகின்றன. அப்போது அவைகளுக்கு ஆயிரக் கணக்கான பாம்புப் புற்றுகளை நிர்வகிக்கும் கடமை அளிக்கப்படுகிறது. நாகங்கள் நாக தேவதைகளாக மாறிய பின் அவைகள் பறக்கும் சக்தியைப் பெறுகின்றன. தனது பொறுப்பில் உள்ள அந்தப் புற்றுக்களை எல்லாம் ஒவ்வொரு நாள் மாலை சந்தி நேரத்திலும் பறந்து சென்று அங்கு யாரெல்லாம் வந்தார்கள், அவர்கள் என்ன வழிபாடுகள் செய்தார்கள், அவர்களுடைய பிரார்த்தனைகள் என்ன என்பதையெல்லாம் அறிந்து கொண்டு அவரவர் தகுதிக்கேற்ப அவர்களுடைய பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது.

துடையூர் திருத்தலத்தில் பொலியும்
நாகதேவதையின் புற்று

இவ்வாறு பல நூறு ஆண்டுகள் சேவை செய்த பின் ஏதாவது ஒரு சுயம்புலிங்கத்தின் மேல் தன்னுடைய நாக ரத்தினத்தை உமிழ்ந்து விட்டு அந்த லிங்கத்திடமே ஐக்கியமாகி விடுகிறது. இது ஒரு சாதாரண நாகத்தின் பரிணாம தேவதா வளர்ச்சி ஆகும். இதில் பல வித வேறுபாடுகளும் உண்டு. சில வகை நாக தேவதைகள் மனிதர்களைப் போல் வடிவம் எடுக்கும் சக்தி உடையவை. இவைகளை இச்சாதாரி நாகங்கள், அதாவது விரும்பிய வடிவெடுக்கும் ஆற்றல் உடைய நாகங்கள் என்று அழைக்கிறார்கள். பெரும்பாலும் இத்தகைய நாகங்கள் அபூர்வமான மரகத, நவரத்தின, சாளகிராம லிங்கங்களைப் பாதுகாக்கின்றன. திருஈங்கோய் மலை, லால்குடி அருகே சாத்தமங்கலம் போன்ற திருத்தலங்களில் இத்தகைய நாக தேவதைகளின் நடமாட்டம் அதிகம். பார்ப்பதற்கு மனிதர்களைப் போல் இக்கோயில் வளாகங்களில் உலவும். ஆனால், எவராவது தவறான எண்ணத்துடன் இங்கு நடமாடினால் தங்களுடைய சுய உருவத்தைக் காட்டி அவர்கள் அங்கிருந்து பயந்து ஓடி விடும்படிச் செய்து விடும்.

நீலவேணு நாகங்கள் ஆதிசேஷ பாரம்பரியத்தில் தோன்றியவைகள் ஆதலால் அந்நாகங்கள் கருவிலேயே திருவுடையவர்களாய் பிறப்பிலேயே தேவதா சக்திகளுடன் பூமியில் பிறப்பெடுக்கின்றன. திருச்சி ஐயர்மலையில் அருள்புரியும் கனக சுந்தாரங்கினி நாக தேவதையும் இவ்வகையைச் சார்ந்ததே.

ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் இந்த நீலவேணு நாகங்கள் திருஅண்ணமலையை வான மார்க்கமாக கிரிவலம் வருகின்றன. பெரும்பாலான நாகங்கள் தரையில் ஊர்ந்துதான் திருஅண்ணாமலையை கிரிவலம் வர வேண்டும் என்ற நியதி இருந்தாலும் நீலவேணு நாகங்கள் மட்டும் இந்த விதிக்கு விலக்காகத் திகழ்பவை. திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் காமக் காடு தரிசனப் பகுதியை அடுத்து வருவதே நீலவேணு தரிசனப் பகுதியாகும். இத்தரிசனப் பகுதியில் குறித்த சில தினங்களில் செவ்வாய் ஹோரை நேரத்தில் நிழலோட்ட நிழல் பிம்ப ஜோதி என்ற ஓர் அற்புத ஜோதி பரிணமிக்கும். இந்த ரகசியத்தை உணர்ந்தவையே நீலவேணு நாகங்கள். தாங்கள் வான மார்கமாக கிரிவலம் வரும்போது இந்த அற்புத ஜோதியின் சக்தியை தங்களுடைய நாக மாணிக்கத்தினுள் ஈர்க்கின்றன. இதனால் நீலவேணு நாகங்கள் வானில் கிரிவலமாக பறந்து வரும்போது அவைகளின் நிழல் யார் மீது படுகின்றதோ அவர்கள் அனைத்து வித நாக தோஷங்களிலிருந்தும் நிவாரணம் பெறுகின்றனர்.

இவ்வாறு தாங்கள் ஈர்த்த நிழல் பிம்ப ஜோதி சக்தியின் ஒரு பகுதியை எமது ஆஸ்ரமத்தில் அருளாட்சி செலுத்தும் ஸ்ரீஆதிசேஷ மூர்த்தியிடம் அர்ப்பணித்து தங்கள் குலகுருவிற்கு நன்றிக் கடனைச் செலுத்துகின்றன. இக்காரணம் பற்றியே எமது ஆஸ்ரமத்தில் உள்ள உத்தராயண தட்சிணயான படிக்கட்டுகளை முறைப்படி வழிபடுவதால் ஆதிசேஷ மூர்த்தி மகிழ்ந்து அவர்ளுடைய நாக தோஷங்களுக்கு உரிய பரிகார முறைகளை அருள்கின்றார்.

இந்த உண்மையை விளக்குவதே கீழ்வரும் அகத்திய நாடி பாடலாகும்.

ஆதி மூலப் பந்தலும்
நீதி நின்ற நாள் தொட்டு
தீது வந்த தொந்த வினை
மீதம் இன்றிப் போக்குமே

பெருமாளுக்கு நிலையாகக் குடை பிடிக்கும் ஆதிசேஷ மூர்த்தியே பல பிறவிகளில் தொடர்ந்து வரும் நாக தோஷத்தை முற்றிலும் களையக் கூடியவர் என்ற பொருள் தரும் இந்த அகத்திய நாடியில் உள்ள 14 வார்த்தைகள் 3, 4, 4, 3 என்று ஆரோஹண அவரோஹண நிலையிலும், நாடியில் உள்ள 41 எழுத்துக்கள் 14, 41 என்ற நிலையிலும் அமைந்துள்ளதே உத்தராயண தட்சிணாயனப் படிகள் நாக தோஷத்திற்குப் பரிகாரம் என்பதை மறைமுகமாக உணர்த்துகின்றது அல்லவா? வழிபாட்டு முறைகள்

வழிபாட்டு முறை

  1. உத்தராயண தட்சிணாயனப் படிகளை நீர் விட்டு அலம்பி பச்சரிசி மாக்கோலம் இடவும். மஞ்சள், குங்குமம், திருநீறு, காவி, சந்தனம் போன்றவற்றாலும் படிகளை அலங்கரிக்கலாம்.

  2. உத்தராயணப் படிகளில் செந்தாமரைப் பூவையும் தட்சிணாயனப் படிகளில் வெண்தாமரைப் பூக்களையும் வைத்து வழிபடவும்.

  3. உத்தராயணம், தட்சிணாயனம் என்ற இரு அரை வட்ட வடிவப் பாதைகளில் சூரிய மூர்த்தி சஞ்சரிப்பதால் இதைக் குறிக்கும் வண்ணம் அரை வட்ட வடிவில் உள்ள மந்தாரை இலைகளில் நைவேத்யம் படைப்பது சிறப்பாகும்.

  4. தேன்குழல், ஒன்பது சுற்று முறுக்கு, பெரிய வெங்காய பஜ்ஜி, திண்டு தோசை, வெங்காய கார சட்னி, ஜாங்கிரி போன்ற பதார்த்தங்களை நைவேத்யம் செய்தல் சிறப்பாகும்.
  5. ஒவ்வொரு படியிலும் பசுஞ்சாணத்தின் மேல் அகல் விளக்குகளை வைத்து பசு நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுதல் நலம்.

  6. உத்தராயண தட்சிணாயன படிகளைத் தம்பதி சகிதமாக, குடும்ப சகிதமாக, நண்பர்கள் சகிதமாக ஒன்று சேர்ந்து வழிபடுதல் மிகவும் நன்று. குடும்ப ஒற்றுமையையும் சமுதாய ஒற்றுமையையும் வளர்க்கும் வழிபாடே படி பூஜைகளாகும்.

  7. ஒவ்வொரு படியிலும் ஒரு முறையாவது

ஓம் தத் புருஷாய வித்மஹே அர்த்த நாரீஸ்வர தேவாய தீமஹி
தந்நோ அருணாசல மகாதேவ ப்ரசோதயாத்

என்ற காயத்ரீ மந்திரத்தை ஓதுவது சிறப்பாகும். எந்தக் கோயில் திருப்படிகளிலும், உத்தராயண தட்சிணாயனப் படிக்கட்டுகளிலும், கிரிவலப் பாதையிலும் இந்த காயத்ரீ மந்திரத்தை ஓதுவது சிறப்பாகும். மன வேற்றுமையை நீக்கி ஒருமைப்பாட்டை உருவாக்கும் உன்னத காயத்ரீ இதுவாகும்.

தம்பதிகள் தங்கள் இரு கைகளிலும் ஐந்து புனிதப் பொருட்களை ஏந்தி செல்லுதல் நலம். அடி அகன்று முன் குறுகிய மூங்கில் முறத்தில் ஒரு படி பச்சரிசியைப் பரப்பி அதன் மேல் ஒரு பித்தளை, வெண்கல செம்பில் தீர்த்தத்தை நிரப்பி, அதன் மேல் ஐந்து மாவிலைகளை வைத்து அதன் மேல் ஒரு தேங்காய் வைத்து கலசமாக அமைக்கவும். அத்துடன் மூன்று உருண்டை வெல்லம், இரண்டு குண்டு மஞ்சளையும் வைத்துக் கொள்ளவும். இந்தப் புனிதப் பொருட்களை கைகளில் ஏந்தியவாறு ஒவ்வொரு உத்தராயணப் படியாக மிகவும் மெதுவாக ஏறிச் செல்லவும். தம்பதிகள் ஒவ்வொரு படியிலும் நின்று கொண்டு மேற்கூறிய காயத்ரீ மந்திரத்தை ஒரு முறையாவது ஓதிய பின்னர் அடுத்த படிக்கு செல்லுதல் சிறப்பாகும். உத்தராயணப் படிகளில் ஏறிச் சென்று மூலவரான ஸ்ரீரெங்கநாத மூர்த்தியை தரிசித்து உங்கள் பூஜைப் பொருட்களை சமர்ப்பித்த பின்னர் தட்சிணாயனப் படிகள் வழியாக இறைவனுக்கு முதுகைக் காட்டாமல் ஒவ்வொரு படியிலும் காயத்ரீ மந்திரத்தைக் கூறியவாறே இறங்கி வந்து பூஜையை நிறைவு செய்யவும். 

உத்தராயண தட்சிணாயனப் படிகள் திறந்து வைக்காத காலங்களிலும், இத்தகைய பூஜைகளை நிறைவேற்றி அற்புதமான பலன்களைப் பெறலாம். திருமண தோஷங்கள், தடைபட்ட திருமணங்கள், தம்பதிகளிடையே மன வேற்றுமை, உறவுப் பிரச்னைகள், கடுமையான நோய்கள், தொழிற்சாலைகளில் ஏற்படும் வேலைநிறுத்தம் போன்ற நாகதோஷங்களால் ஏற்படும் பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம் அளிப்பதே பெருமாளுக்கு நிறைவேற்றும் இந்த பஞ்ச பூத வழிபாடாகும்.

எமது ஆஸ்ரமத்தில் உள்ள உத்தராயண படிகள் திறந்து வைக்காத காலங்களில் நிறைவேற்றப்படும் பூஜை முறைகள் சற்றே மாறுபடும்.

இம்முறையில் தம்பதிகள் மேற்கூறிய ஐந்து மங்களப் பொருட்களையும் தீர்த்தக் கலசத்தையும் கையில் தாங்கிய வண்ணம் எமது ஆஸ்ரமத்தின் எதிரே சிவசக்தி ஐக்ய தரிசனத்தில் காட்சி தரும் ஸ்ரீஉண்ணாமுலை சமேத திருஅண்ணாமலையாரை வணங்கி கிரிவலத்தைத் தொடங்கவும். இடுக்கு பிள்ளையார், பஞ்சமுக தரிசனம், பூதநாராயண பெருமாள், நீலவேணு தரிசனம், நேர் அண்ணாமலையில் உண்ணாமுலை அம்மன் தரிசனம் போன்ற வழிபாடுகளை இயற்றி கிரிவல நிறைவில் எமது ஆஸ்ரமத்தில் ஸ்ரீரெங்கநாதரை வணங்கி கிரிவல பூஜையை நிறைவு செய்யவும். கலச தீர்த்தத்தை ஒரு சுரைக் குடுவையில் அல்லது பாட்டிலில் நிரப்பி தங்கள் இல்லத்திற்கு எடுத்துச் சென்று தங்கள் இல்லம் முழுவதும் தெளித்து விடவும். எஞ்சிய தீர்த்தத்தை கோயில் திருக்குளங்கள், கிணறு, பால் விருட்சங்களில் சேர்த்து விடவும். அரிசி, வெல்லம், மஞ்சள், தேங்காய் ஆகியவற்றை முறத்தில் வைத்து ஒரு ஏழைச் சுமங்கலிக்கு தானம் செய்து விடவும். அல்லது இந்தப் பிரசாதப் பொருட்களைக் கொண்டு பொங்கல் போன்ற உணவு வகைகளை சமைத்து தானமாக அளித்தலும் சிறப்புடையது. இத்தகைய வழிபாடுகளை பௌர்ணமி, வியாழக் கிழமை, உத்திரம், பஞ்சமி தினங்களில் நிறைவேற்றி வருதலால் பல்வேறு நாகதோஷங்களையும் நீக்கும் அனுகிரக சக்திகளைப் பெறலாம். 

கல்லாய்க் கிடக்கும் கடுந்தவம் ஏன்?

ஆழ்வார்களும், நாயன்மார்களும் கோயில் படிக்கட்டுகளாகவும், உத்தராயண, தட்சிணாயன படிக்கட்டுகளாகவும் பிறப்பெடுக்க வேண்டிக் கொள்கிறார்கள் அல்லவா? அதே போல சிவலிங்கம், பெருமாள், பிள்ளையார், முருகன், அம்மன் போன்ற தெய்வ விக்ரஹங்களை பெரும்பாலும் கல், பஞ்சலோகம் போன்றவற்றில் வடிக்கின்றனர். அபூர்வமாக மரம், சுதை போன்றவற்றாலும் இறை மூர்த்திகளை அமைப்பதுண்டு. இதற்குக் காரணம் என்ன?

கல்லில் இறை மூர்த்திகளை அமைப்பதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்தாலும் சாதாரண மக்களும் புரிந்து கொள்ள வேண்டுமானால் மனிதனுடன் நேருக்கு நேர் பேசும் சக்தியைக் கற்கள் பெற்றுள்ளதும் ஒரு காரணமாகும். கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் மனிதனுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளதே நாம் ஜடப் பொருள் என்று நினைக்கும் கல்லாகும். உண்மையில் கற்களுக்கு உயிர் உண்டு. அவை பேசும் சக்தி பெற்றவை.

படியாய்க் கிடக்கும் பரந்தாமர்கள்
திருக்கோளக்குடி

மணிவாசகப் பெருமானும், கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் … என்று மனிதனுக்கு முந்தைய ஜீவ வளர்ச்சியாகக் கல்லைக் குறிப்பிடுகின்றார். இவ்வாறு மனிதனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தால்தான் மனிதன் இறை விக்ரஹங்களுடன் மனம் விட்டுப் பேசி தங்கள் பிரார்த்தனைகளை தயக்கிமின்றி வெளிப்படுத்த முடியும்.

கற்களில் ஆண், பெண், அலி என்ற பிரிவு உண்டு. ஆண் கற்களில் ஆண் தெய்வங்களையும், பெண் கற்களில் பெண் தெய்வங்களையும் வடிப்பது மரபு. ஆனால், இத்தகைய கற்களின் உயிர் சக்தி அல்லது ஜீவ சக்தியின் எல்லையை எப்படிக் கண்டு பிடிப்பது? மனிதர்கள், விலங்குகள், மாங்காய், தேங்காய் போன்ற உயிர் வகைகளில் ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்து எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆனால், ஒரு பாறையில் ஐந்து, பத்து கற்கள் ஒன்றாககச் சேர்ந்திருந்தால் அதில் உயிருள்ள கற்களை எப்படிப் பிரித்தெடுப்பது? இதில் கை தேர்ந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள். ஒரு திருக்கோயிலில் உள்ள கற்களின் உயிர்ப் பரிமாணத்தை அறியக் கூடிய வல்லமை பெற்றவர்களே சித்தர்கள். இதற்குக் காரணம் நிலை சீர் கூறு ரகசியம் என்ற கூர்ம தந்திர வித்தையை அறிந்தவர்கள்தான் கற்களின் ஜீவ சக்தியை அளக்க முடியும். ஆனால், இந்த ரகசியத்தை உணர்ந்த சித்தர்கள் இறைவனுக்காகத் தொண்டாற்ற விழையும் அடியார்களுக்கு தக்க தருணத்தில் இந்த இரகசியங்களை உபதேசிக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஓர் ஊரில் ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். அன்றாட வயல் வேலைகளை நிறைவேற்றி அதன் மூலம் கிட்டும் வருமானத்தில் எளிமையாக, நிம்மதியாக வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அதிகாலையில் இறைவனைக் காண வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழ்ந்து தோன்றியது. ஆனால், அதற்குரித்தான உபாயம் அவனுக்குத் தோன்றவில்லை. இது சம்பந்தமாக பலரிடம் விசாரித்துப் பார்த்தான். ஒரு குருநாதரை நாடி வேண்டினால் அவர் ஒரு மந்திரத்தை உபதேசம் செய்வார், அந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் ஒரு நாள் இறைவன் காட்சி தருவார் என்று பலரும் கூறினர். அவர்கள் கருத்தை ஏற்று அந்த விவசாயியும் முனிவர் போன்று தோன்றிய ஒருவரை அணுகி, ஐயா, நான் இறைவனைக் காண விரும்புகிறேன். அதற்குத் தாங்கள் ஏதாவது மந்திரம் உபதேசம் செய்ய வேண்டும், என்று பணிவுடன் வேண்டி நின்றான்.

அவன் அணுகிய முனிவர் ஒரு உத்தமர் அல்ல. பிழைப்பிற்காகக் காவி உடை அணிந்திருந்தவர். அவருக்கு அந்த விவசாயியின் பக்தி சிரத்தையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. விவசாயியின் வெளித் தோற்றத்தை மட்டும் பார்த்து விட்டு, இவன் ஏதோ ஒரு நாட்டுப் புறத்தான் இவனுக்குக் கடவுளைப் பற்றி என்ன தெரியும்? என்று மனதிற்குள் நினைத்தவாறே, நீ பாட்டுக்கு அங்கிட்டு இங்கிட்டு போய்க்கிட்டு இரு, என்று கிண்டலாகக் கூறி அவனை அங்கிருந்து அனுப்பி விட்டார்.

ஆனால், விவாசயியோ அவர் கூறிய சாதாரண வார்த்தைகளை ஒரு சக்தி வாய்ந்த மந்திரமாகவே நினைத்து விட்டான். அந்த முனிவரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு காட்டில் ஓரிடத்தில் சென்று ஒரு மரத்தடியில் அமைதியாக அமர்ந்து கொண்டான். மனிதினுள், அங்கிட்டு இங்கிட்டு போய்க்கிட்டு இரு, அங்கிட்டு இங்கிட்டு போய்க்கிட்டு இரு … என்று ஜபிக்க ஆரம்பித்தான். ஒருமுகப்பட்ட மனதுடன் தான் மந்திரம் என்று முழு நம்பிக்கையுடன் நினைத்த வார்த்தைகளை தொடர்ந்து ஜபிக்க ஜபிக்க தாகம், பசி, உறக்கம் எல்லாம் அவனுக்கு மறந்து போயின. நாட்கள், வாரங்கள், மாதங்கள் என மாறி பல வருடங்களும் உருண்டோடின. இவ்வாறு 12 வருடங்கள் தவத்திற்குப் பின் ஒரு நாள் அவன் கூறிய மந்திரம் சித்தியானது. அவன் உள் மனதுள் ஓர் மாற்றம் தோன்றியது. கண் விழித்துப் பார்த்தான். மெதுவாக சுற்றும் முற்றும் இருக்கும் பொருட்களைக் கவனித்தான்.

அவன் எதிரே ஒரு பெரிய பாறாங்கல் கிடந்தது. அதைப் பார்த்தபோது அவனையும் அறியாமல் 12 வருடம் தொடர்ந்து ஜபித்த மந்திரம் மனதினுள் ஓட ஆரம்பித்தது. அங்கிட்டு இங்கிட்டு போய்க்கிட்டு இரு, என்று மனதினுள் கூறிய மறு கணம் அந்தப் பாறாங்கல் பறந்து சென்று 300 அடி தாண்டி விழுந்தது. ஒரு கணம் திகைத்து விட்டான். மீண்டும் அந்த மந்திரத்தைக் கூறவே மறுபடியும் அந்தக் கல் இன்னும் 300 அடி தூரம் பறந்த சென்று விழுந்தது. அவனுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. தான் இந்த உயர்ந்த நிலையை அடையக் காரணம் தன்னுடைய குருநாதர்தான் என்று நினைத்து அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவரைத் தேடிச் சென்றான்.

பல இடங்களில் தேடி ஒருவாறு அவர் இருக்கும் இடம் கண்டு பிடித்து அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான். சுவாமி, தங்களுடைய உபதேசத்தால் அடியேனுக்கு அற்புதமான சக்தி கிடைத்து விட்டது என்று நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் கூறினான். ஆனால், அந்த முனிவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் சொல்வது ஏதோ கட்டுக் கதை என்று நினைத்தார். உடனே அந்த விவசாயி எதிரே இருந்த ஒரு மரத்தைப் பார்த்து தான் சித்தி பெற்ற மந்திரத்தைக் கூறினான். மறு கணம் அந்த மரம் வேருடன் பெயர்ந்து கொண்டு பறந்து வந்து அந்த முனிவரின் காலடியில் விழுவே அவர் பயந்து நடுங்கிப் போய் அந்த விவசாயின் காலில் விழுந்து விட்டார். ஐயா, நீதான் என்னுடைய குரு நான் உனக்குக் குரு என்று கூறும் தகுதி எனக்குக் கிடையாது. நீ வேறு யாராவது உத்தமரிடம் சென்று மேற்கொண்டு அடைய வேண்டிய ஆன்மீக நிலைகளைப் பற்றிக் கேட்டுக் கொள் என்று கூறி அனுப்பி விட்டார்.

அந்த விவசாயியும் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு தனக்குத் தகுந்த குருநாதரைக் காட்டும்படி பல திருத்தலங்களுக்குச் சென்று அங்குள்ள இறைவனிடம் பிரார்த்திக் கொண்டு வந்தார். ஒரு முறை அவர் நமது குருமங்கள கந்தர்வா, ஸ்ரீவெங்கடராம சுவாமிகளைச் சந்திக்கும் பாக்கியம் கிட்டியது. அவரிடம் தனது பிரார்த்தனையைத் தெரிவித்தார். சுவாமிகள் தமிழ்நாட்டில் எத்தனை சிவன் கோயில்கள் இருக்கின்றன, அவற்றில் எத்தனை கும்பாபிஷேகம் நிறைவேறி உள்ளன, எத்தனைத் தலங்களில் கும்பாபிஷேகம் நிறைவேறாமல் உள்ளது, எத்தனை கோயில்களில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்ற விவரங்களைத் திரட்டித் தருமாறு பணித்தார். விவசாயியும் சில நொடிகளில் சுவாமிகள் கேட்ட விவரங்களைத் திரட்டித் தந்து விட்டார். சுவாமியும் இவ்வாறு கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கும் திருத்தலங்களுக்குச் சென்று அத்திருப்பணிகளில் மற்றவர்கள் அறியாமல் பங்கேற்று பெரிய பெரிய கற்பாறைகளைத் தாங்கி எடுத்துச் செல்லும் திருப்பணியை நிறைவேற்றும்படிக் கூறினார். இதனால் 20, 30 பேர் சேர்ந்து தூக்கும் கற்களை இரண்டு, மூன்று ஆட்களே தூக்கிச் செல்வது போல் பிறர் அறியாமல் அத்திருப்பணிகளை தன்னுடைய மந்திர சித்தியால் எளிமையாக்கித் தந்தார் சித்தி பெற்ற அந்த விவசாயி.

இவ்வாறு திருக்கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகளில் நடைபெறும் இறை விந்தைகள் ஏராளம். இதிலிருந்து என்ன தெரிகிறது? எந்தத் தெய்வமும், தேவதையும் உயர்ந்தது, தாழ்ந்து, சக்தி உடையது, சக்தி இல்லாதது என்று கிடையாது. ,இறைவனிடம் உள்ள நம்பிக்கையின் தரத்தைப் பொறுத்தே பக்தனின் நிலையில் உயர்வு ஏற்படுகிறது என்பதே உண்மை.

ஒரு கிராமத்தில் இருந்த ஐயனார் கோயிலில் குதிரை மேல் இருந்த ஐயனார் விக்ரஹம் சிதிலமடைந்து விழுந்து விட்டது. ஆனால், அந்தக் குதிரைதான் சுவாமி என்று நினைத்து அதையே முழு நம்பிக்கையுடன் வழிபட்டு வந்த ஒரு பக்தன் முக்தி அடைந்து விட்டான். எனவே நம்பிக்கை ஒன்றே எதையும் சாதிக்கக் கூடிய ஆயுதமாகும்.

இதைத்தான் மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தில் மறைந்தது மாமத யானை என்று நம்பிக்கை ஒன்றுதான் இறைவனைக் காட்டும் என்று திருமூலர் தமது திருவாக்கின் மூலம் எடுத்துரைக்கிறார்.

இவ்வாறு உத்தராயண, தட்சிணாயன படிகள் கற்களால் அமைக்கப்படாமல் தற்காலத்தில் சில திருக்கோயில்களில் மண், சிமெண்ட், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களாலும் அமைவதுண்டு. இத்தகைய படிக்கட்டுகளில் பயன்படுத்தப்படும் சாளக் கிராமம், கிளிஞ்சல், சங்கு, சில வகை கூழாங்கற்களில் பல்வேறு இயந்திரங்களை மகான்களும், சித்தர்களும் நிரவச் செய்து அதன் பயன் வழிபடுவோரை சென்றடையும்படி அனுகிரகம் புரிகின்றனர்.

இவ்வகையில் அமைக்கப்பட்டதே எமது ஆஸ்ரமத்தில் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளால் நிர்மாணிக்கப்பட்ட ஆகர்ஷண, பிரகாச, தைவதத்த தெய்வீக சக்கரங்களாகும். எனவே, இங்கு அமைந்துள்ள ஒவ்வொரு படிக்கட்டுமே ஒரு திவ்ய தேச திருத்தல மகிமையை உடையது என்பதில் சந்தேகம் இனியும் உண்டோ?

திருக்கைலாய பொதிய முனிப்பரம்பரை சத்குரு மகாதேவா சரணம் சரணம் சரணம் !

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam