ஓங்காரத்தில் ரீங்காரமாய் ஒலிப்பதே குரு கருணை !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

ஓதிமலை ஆண்டவர் மகிமை

கோயம்புத்தூர் இரும்பறை அருகே திகழ்வதே ஓதிமலை என்னும் முருகப் பெருமான் ஆலயம். அபூர்வமாக ஐந்து தலைகளுடன் அருளும் இப்பெருமானை ஆண்டவர் என்ற ஐந்து எழுத்துக்களால் அழைத்தல் என்ன சாலப் பொருத்தம். ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதமும் திருஅண்ணாமலை தீபத்திற்கு நம் அடியார்களை புது வஸ்திரங்களை தானத்திற்கு வாங்கி வரும்படி நம் சற்குரு கூறுவதுண்டு. இவ்வாறு அடியார்கள் கொண்டு வரும் புதிய பழைய வஸ்திரங்களை எல்லாம் இந்தியாவில், அவ்வப்போது வெளிநாடுகளில் உள்ள திருத்தலங்களுக்கும் அடியார்கள் மூலம் அனுப்பி அங்கு தானம் அளிப்பதுண்டு. இம்முறையில் 1998ம் ஆண்டு முருகனுக்கு உரிய ஒன்பது எண்ணாக அமைந்ததால் சுமார் 300 இறை அடியார்கள் மூலம் நூற்றிற்கும் மேற்பட்ட முருகத் தலங்களில் நூதன வஸ்திரங்களையும் பழைய வஸ்திரங்களையும் அளித்து ஆடை அணிகலன் தானத்தை சிறப்பாக நிறைவேற்றினார் நம் சற்குரு. பெரும்பாலான ஆடைகள் புத்தாடைகளாகவே இருந்தாலும் பழைய ஆடைகளால் தீர வேண்டிய கர்ம வினை பாக்கிகளும் இருந்ததால் நல்ல நிலையில் இருந்த பழைய ஆடைகளையும் பெற்று அவைகளை ஆடை தானத்திற்கு அளித்து வந்தார் நம் சற்குரு.

நீலகிரியிலிருந்து நீலகண்டனின்
தரிசனம்

இவ்வாறு வஸ்திர தானத்திற்காக அளிக்கப்படும் கோயில்கள், திருத்தலங்களைப் பற்றி விவரித்தாலே அவை ஒரு சுவையான புராணமாக விரியும். உதாரணமாக ஒரு அடியாருக்கு, “32 இதழ்கள் உடைய தாமரை வடிவ ஆவுடை மேல் அமர்ந்த சுயம்புலிங்க மூர்த்தி அருளும் சிவன் கோயிலில் தானம்,” என்று வஸ்திர தானக் கோயிலை அளித்திருந்தார். இது ஒரு புறம் இருக்கட்டும். சுய நாம ஜபம் என்பது அடியார்கள் தங்கள் பெயரையே திரும்ப திரும்பக் கூறுதல், ஜபித்தல் என்பதாகும். சற்குரு அமையப் பெறாதவர்கள் இவ்வாறு தங்கள் பெயரை ஓதி பலன் அடையலாம் என்றாலும் சற்குரு அமைந்த பாக்கியசாலிகள் தாங்கள் கூற வேண்டிய நாமத்தை சற்குருவே அளிப்பார். பெரும்பாலும் இது அந்தக் குறிப்பிட்ட அடியாரை அவருடைய தாயோ, தந்தையோ அழைக்கும் செல்லப் பெயராக இருக்கும். மேற்கூறிய அடியாரின் பெயர் எட்டெழுத்தில் அமைந்திருந்தது. இது சனி பகவானைக் குறிப்பது. பொதுவாக மனைவிமார்கள் தங்கள் கணவனின் பெயரையே சுயநாமமாக ஜபித்தலால் இது குடும்ப ஒற்றுமையைத் தோற்றுவிக்கும். அதனால் அவர்கள் சந்ததி பெருகி சமுதாயத்தில் நன்மை ஏற்படுவதுடன் சமுதாயமும் ஒற்றுமையாகத் திகழும் என்பது உண்மையே. எட்டெழுத்தில் அமைந்த அந்த அடியாரின் பெயரை அறிந்த நம் சற்குரு “திருநா” என்ற மூன்றெழுத்தை அவர் மனைவி ஜபித்து வரும்படிக் கூறினார். குருவுக்கு உகந்த மூன்று எழுத்துக்களுடன் திகழும் இந்த நாமம் ஆங்கிலத்தில் ஆறு எழுத்துக்கள் கொண்ட குசா சக்தியாக மாறும். அவர் மனைவியின் பெயரைச் சேர்க்கும்போது அது ஐந்து எழுத்தாக மாறும். இரண்டு பெயர்களையும் ஆங்கிலத்தில் மாற்றினால் அது கணவனுடைய எண்ணாகவே விளங்கி ஒற்றுமையுடன் பிரகாசிக்கும். இப்போது அந்த அடியாருக்கு வஸ்திர தானத்திற்காக அளித்த ஊரில் உள்ள சிவலிங்கம் ஏன் (3+2=5) ஐந்தெழுத்து ஆவுடை மேல் அமர்ந்தது என்ற ரகசியம் விளங்குகின்றது அல்லவா ? நாம் சாதாரணமாக நினைக்கும் ஒரு அடியாரின் வஸ்திர தானத்தின் பின்னணியில் இத்தனை இரகசியங்கள் பொதிந்திருக்கும், மறைந்திருக்கும் என்றால் சற்குருவின் ஒவ்வொரு செயலும் எத்தகைய ஆன்மீகச் சோலையாய்ப் பிரகாசிக்கும் என்று ஊகித்துப் பாருங்கள். இதில் அதிசயமான விஷயம் என்னவென்றால் அந்த அடியாருடைய நண்பர்களும் உறவினர்களும் அவரை மூன்று எழுத்தில் அமைந்த ஒரு பெயரில் அழைத்தாலும் அதன் ஆங்கில எண் கணித அமைப்போ நான்கிற்கு உரியதாக ராகு சக்தியுடன் விளங்கியது.

சற்குருவின் அருளாசி

1998ம் ஆண்டு முருகனுக்கு உரிய சக்திகளுடன் திகழ்வதால் அந்த ஆண்டில் காசி, கயா, கேதார்நாத் யாத்திரை சென்று பல அடியார்களுடைய கர்ம வினையை, முந்தைய பாக்கிகளைக் களைய வழிவகுத்தார் நம் சற்குரு. இது சம்பந்தமாக அவர் எழுதிய கடிதத்தில் சற்குருவின் கையொப்பம் குறித்து பல புராணங்களே எழுதலாம் என்றாலும் ஒரு சில சுவையான விஷயங்களை மட்டும் இங்கு அளிக்கின்றோம். காசி யாத்திரை என்பது குருவின் அருளாளும் நம்முடைய மூதாதையர்கள் இயற்றிய பூர்வ ஜன்ம வினைகளாலும் அமைவதே என்பதை நம் சற்குரு குறிப்பிட்ட தேதி குறிக்கிறது. 5.5.1998 என்பதில் தேதி எண்ணான 5 அடியார்களின் இப்பிறவி புண்ணியத்தையும் கூட்டு எண்ணான (5+5+98=2+7) 9 என்பது அடியார்களின் மூதாதையர்கள் அளிக்கும் பூர்வ ஜன்ம புண்ணிய சக்திகளையும் குறிக்கிறது. இந்த கர்ம வினைக் கழிப்பில் உறுதுணையாய் நிற்கும் முருகப் பெருமானின் எண் சக்தியையும் இது சுட்டிக் காட்டுகிறது. பொதுவாக, வருடங்களை எழுதும்போது 97, 98 என்று எழுதாமல் 1997, 1998 என்று முழுவதுமாக எழுத வேண்டும். மேலும் தேதிகளை 6, 7 என்பதற்குப் பதிலாக 06, 07 என்று எழுதினால் அவை பூரு பூஜ்யம் என்ற விரும்பத் தகாத சக்திகளைத் தோற்றுவிக்கும் என்று முன்னரே நம் சற்குரு தெரிவித்துள்ளார் அல்லவா ? அப்படி இருக்கும்போது நம் சற்குருவே இவ்வாறு 98 என்று வருடத்தை எழுதலாமா என்ற சந்தேகத்தை வெளியே கேட்கா விட்டாலும் பலருடைய மனதில் தோன்றுவது இயற்கைதானே. விதியை விதித்தவனுக்கு அந்த விதியிலிருந்து விலக்கு உண்டு அல்லவா ? ஆனாலும் கூட இந்த விஷயத்தில் எந்த விதியையும் நம் சற்குரு மீறுபவர் அல்ல. இவ்விஷயத்தில் இரண்டு விதமான விலக்கு விதிகள் செயலாகி உள்ளன. முதலாவதாக சற்குருவின் கையெழுத்திற்கு மேல் உள்ள இரண்டு புள்ளிகள் வருடத்திற்கான 1, 9 என்ற எண்களுக்கான விலக்கை அளிப்பவை. இரண்டாவதாக தோளா முத்தச் சுடரே என்பது போல ஸ்ரீலஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அடிமை என்பதை கோர்த்து கோர்த்து இடைவெளியின்றி எழுதியிருப்பதால் இது தோளா முத்தமாக அமைந்து வருடத்திற்கான இடைவெளியை நிரப்பிக் கொள்ளும் தத்துவத்தில் திகழ்வது. மேலும் இந்தக் கடிதம் எழுதப்பட்டதும் செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஆட்சியுடன் திகழும் நேரத்தில் அமைந்ததால் அது அடியார்களின் கர்ம வினைகளைத் தீர்க்கும் பரம ஔஷதமாகத் திகழ்கின்றது என்பதும் அதன் சிறப்பாகும். எண்கள் எந்த அளவிற்கு நம் வாழ்க்கை நடவடிக்கைகளோடு பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும் எப்படி அந்த எண் சக்திகளை மற்றவர்களின் நன்மைக்காக சமுதாயத்தின் மேன்மைக்காக மாற்றி அமைக்க முடியும் என்ற இரகசியங்களையும் மேற்கண்ட சற்குருவின் உதாரணம் நமக்கு விளக்குகின்றது.

ஓதிமலையின் அடிவாரத்தில் சதுர ஆவுடைமேல் அமர்ந்திருக்கும் அண்ணலே ஸ்ரீஆவுடை விநாயகர் ஆவார். ஆவுடை மேல் லிங்க மூர்த்திகள், ஆறுமுக சுவாமி, பிள்ளையார் மூர்த்திகள் அரிதாக எழுந்தருள்வது உண்டு. இவ்வாறு ஒவ்வொரு மூர்த்தியின் தோற்றத்திற்கும் பின்னணியில் அற்புதமான சரித்திரங்கள் உண்டு. உதாரணமாக மங்களக்குடியில் எழுந்தருளி உள்ள ஸ்ரீமங்கல விநாயகர் கணவன் மனைவி இடையே மங்கல சக்திகளைத் தோற்றுவித்து இல்லறம் நல்லறமாக மலர உறுதுணையாய் நிற்பவரே. பொதுவாக சதுர ஆவுடை கற்பு, வியாபாரம், எதிரிகள், பாதுகாப்பு, நட்பு போன்ற அம்சங்களைக் குறிப்பதாக அமைவதால் சதுர ஆவுடை அமைந்துள்ள திருத்தலங்களில் நிறைவேற்றும் வழிபாடு இத்தகைய பிரச்னைகள் தீர உறுதுணையாய் அமையும். உதாரணமாக கற்பைப் பற்றிக் கூறுவதாக இருந்தால் அது கடலைவிட ஆழமானது பெரியது அல்லவா ? நமது சற்குருவின் ஜாதகத்தை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் நான்காம் இடம் பற்றிய மகிமையை உணர முடியும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் அவர்கள் கற்பையும் ஆண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் அவர்கள் இதயத்தையும் குறிக்கும். நம் சற்குரு தன் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் குருவைப் பெற்றுள்ளார். குரு பகவானை நேர் பார்வையாக பத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் பகவானும் 11ம் இடத்திற்குரிய சுக்ர பகவானும் பார்ப்பதால் குரு பகவான் மிகவும் பலமுடன் அமைந்துள்ளார். இத்தகைய ஜாதக அமைப்பைப் பற்றிக் கேள்விப் படுவதே மகா பாக்கியம் என்றால் அந்த மகாத்மாவையே குருவாகப் பெற்றவர்கள் கற்பைக் குறித்து கவலை கொள்ள வேண்டுமா என்ன ? கற்பு என்பது மிகவும் சிக்கலான ஒரு குணாதிசயமாகும். கால தேச வர்த்தமான அமைப்புகளுக்கே உட்பட்டே இதை ஆராய வேண்டும் என்று காலம் காலமாய் பெரியோர்களும் மகான்களும் வற்புறுத்துகிறார்கள். நமது சற்குருவிடம் அவ்வப்போது கேட்கப்பட்ட கேள்விகளைத் தொகுத்து அவைகளுக்கு உரிய பதிலை இங்கு சமர்ப்பிக்கிறோம். இந்த பதில்களை பல தடவை படித்து ஆத்ம விசாரம் செய்து அடியார்கள் தங்கள் ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீமங்கள விநாயகர் மங்களக்குடி

நகர் திருத்தலத்தில்
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

ஒரு முறை விவேகானந்தர் தன்னுடைய யாத்திரையின்போது ஒரு குடும்பத்தைச் சந்தித்தார். அந்த வீட்டில் ஐந்தாறு சகோதரர்கள் இருந்தாலும் அதில் மூத்தவனுக்கே திருமணம் ஆகி இருந்தது. ஆனால் மற்ற சகோதரர்களும் அந்தப் பெண்ணை தங்கள் மனைவியாகவே பாவித்தனர். இதை அறிந்த விவேகானந்தர் மிகவும் கோபமடைந்து அந்த மூத்த சகோதரனிடம் கேட்டபோது அவர் மிகவும் மரியாதையுடன், “ஐயா, எங்களுக்கு அம்மா அப்பா கிடையாது. நான்தான் எல்லா சகோதரர்களையும் என்னுடைய குழந்தையாக பாவித்து வளர்த்து வருகிறேன். அவர்களும் தங்கள் வருமானம் அனைத்தையும் என்னிடம் கொடுத்து விடுகிறார்கள். அதில் ஒருவர் கூட ஒரு நயாபைசாவையும் தங்கள் செலவுக்காக எடுத்துக் கொள்வது கிடையாது. அவர்கள் அவ்வாறு பெருந்தன்மையுடன் இருக்கும்போது நான் தந்தை என்ற முறையில் என்னுடையது அனைத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதுதானே முறை. இதில் என்ன தவறு இருக்கிறது ?” என்று பதில் கேள்வி கேட்டாராம். அந்த மூத்த சகோதரனுடைய கேள்வியில் இருந்த பதில் விவேகானந்தரின் இதயத்தைச் சுடவே அவர் ஒன்றும் கூற முடியாமல் வாய் அடைத்து நின்றாராம்.

ஒரு முறை ஒரு சகோதரி சற்குருவிடம், “குருவே, என்னுடைய கணவர் என்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார். அவருக்கு சம்பாதிக்க வழியில்லாவிட்டாலும் மற்ற ஆண்களிடம் என்னை அனுப்பி சம்பாதிக்கச் சொல்கிறார். இது என்னுடைய மனதிற்கு ஒத்து வராததால் இப்போது என்னுடைய தாயுடன் தனியாக இருக்கிறேன். மிகவும் கஷ்டமான ஜீவனம்தான். நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை,” என்று கண்களில் நீர் வழிய தன்னுடைய நிலையைத் தெரிவித்தார். சற்குரு அந்தப் பெண்மணியை தன்னுடைய தீர்கமான கண்களால் பார்த்து, “நீங்கள் சொல்வது மிகவும் கஷ்டமான, கேவலமான நிலைதான், ஒத்துக் கொள்கிறேன். கற்புடைய எந்தப் பெண்ணும் உங்கள் கணவரின் கட்டளைக்குக் கீழ்ப் படியமாட்டாள் என்பது உண்மையே. ஆனால், உங்கள் கணவரை இவ்வாறு செய்யத் தூண்டுவது எது ? அது அந்த விதியல்லவா ? கணவருடைய விதி அவரைத் தவறு செய்யத் தூண்டுகிறது என்றால் அதில் அவருடைய தர்ம பத்தினிக்கும் பங்கு உண்டா இல்லையா ? நீங்கள் அவருடைய தர்ம பத்தினி என்பது உண்மையா இல்லையா ?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார். சற்குருவின் கேள்விக் கணைகளிலிருந்து அந்தப் பெண் எந்த முடிவெடுத்தாள் என்பது நமக்குத் தேவையில்லாததாக இருந்தாலும் கற்பு என்பது என்ன என்பதைப் பற்றிய விளக்கத்தை சற்குருவின் வார்த்தைகள் மூலம் நாம் தெரிந்து கொண்டோம் அல்லவா ?

ஓதிமலை உன்னதம்

நல்லவர்களின் நெஞ்சத்தைச் சுடும் மற்றோர் உதாரணம். ஒரு தந்தை தன்னுடைய மகளுடன் சேர்ந்து இருப்பதுடன் மற்றவர்களிடம் தன்னுடைய பெண் மூலமே சம்பாதிக்கவும் செய்கிறார். இதற்கு அந்தத் தாயும் உடந்தையாக இருக்கிறாள் என்பதே நமக்குப் புரியாத ஒரு புதிர். ஆனால் தன்னுடைய தற்போதைய வாழ்க்கை எவ்வகையில் அமைந்தாலும் திருமணம் என்று ஒன்று நடந்து அதற்குப் பின் அந்தப் பெண் தன்னுடைய கணவனுடன் உண்மையான திருமண வாழ்வைப் பூண்டால் அவள் கற்புக்கரசியே என்பது சித்தர்களின் இன்றைய ஆன்மீகப் பாடம். ஒரிசா மாநிலத்தில் ஒரு ஜமீன்தார் இருக்கிறார். அவருக்கு தற்போது 80 தாண்டிய வயது, திடகாத்திரமான உடல், சுமார் 100 ஏக்கருக்கு மேல் நன்கு விளையும் நிலபுலன்கள் உண்டு. அவர் வருடம் ஒரு முறை ஒரு பெண்ணை மணந்து கொண்டு அந்தப் பெண்ணுடன் ஒரு வருடம் வாழ்ந்த பின்னர் அவருக்கு இரண்டு ஏக்கர் நிலத்தைத் தானமாக அளித்து விட்டு அந்தப் பெண்ணை மறந்தும் விடுவார். அதாவது அந்தப் பெண் அதற்குப் பின் வேறு எவரையும் மணந்து கொள்வதோ இல்லையோ அதைப் பற்றி அவர் பொருட்படுத்துவது கிடையாது. இது பற்றி நம் சற்குருவிடம் கேட்டபோது, “ஆம், அந்த ஒரு வருட காலத்தில் அந்தப் பெண் எப்படி இருந்தாலும் சரி, அவர் வேறு எந்தப் பெண்ணைப் பற்றியும் கனவிலும் நினைப்பதில்லை. எனவே எங்கள் கணக்கில் அவர் உத்தமரே,” என்றார். எனவே இதிலிருந்து என்ன தெரிகிறது ? திருமணம் என்ற பந்தத்தில் கட்டுப்பட்டு இருக்கும்போது கணவன் மனைவியைப் பற்றியும் மனைவி கணவனைப் பற்றியும் உண்மையாக நினைத்து, உண்மையான உறவு முறையுடன் வாழ்ந்தால் அதுவே கற்பு என்னும் நிலையை தெளிவுபடுத்தும் உதாரணம். எதற்கு இத்தகைய கொடுமையான உதாரணங்களை எல்லாம் தெய்வீகத்தை விளக்கும் இந்த தளத்தில் விளக்க வேண்டும் என்று பலரும் நினைக்கலாம். இங்கு நாம் குறிப்பிட்ட தவறு என்பது எங்கோ எரியும் நெருப்பு என்பது கிடையாது, அது நாளையே நம் வீட்டுக் கூரையிலும் பற்றி சேதப்படுத்தும் என்பதால் தெய்வீகத்தில் திளைக்கும் அடியார்களுக்கு உள்ள பொறுப்பை நினைவுபடுத்தவே இத்தகைய முயற்சிகள். என்னதான் கொடுமையான நெருப்பாக இருந்தாலும் அதை அணைக்க நீர் உதவுவது போல் என்ன கொடுமையான தவறாக இருந்தாலும் அதையும் களையும் வழிமுறையை அளிப்பவரே ஸ்ரீஆவுடை விநாயகர் ஆவார். ஸ்ரீஆவுடை விநாயகரை 18 முறை அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து சிதறு தேங்காய்களை உடைப்பதன் மூலம் ஆண்களும் பெண்களும் தங்களுடைய கடந்தகால வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதை மாற்றி தங்கள் எதிர்கால வாழ்வை நல்ல முறையில் மாற்றி அமைக்கும் தெய்வமே இவர்.

உருவம் விளக்கும் ஓதிமலை

சதுர ஆவுடை தரிசனம் வியாபாரிகளுக்கு ஒரு வரப் பிரசாதமே. வியாபாரிகள் இவ்வாறு சதுர ஆவுடை மேல் எழுந்தருளி இருக்கும் லிங்க மூர்த்திகளையோ, சுப்ரமண்யரையோ (உய்யக்கொண்டான்மலை, திருச்சி), பிள்ளையார் மூர்த்திகளையோ அடிக்கடி தரிசனம் செய்து வருதலால் தங்கள் வியாபாரம் செழிக்க இத்தகைய வழிபாடு அவர்களுக்கு உறுதுணையாய் அமையும். எல்லாத் துறையிலும் மறைமுக எதிரிகள், நேருக்கு நேர் நின்று தாக்கும் எதிரிகள் உண்டு என்றாலும் வியாபாரத் துறையில் இத்தகைய எதிரிகளின் தொல்லை அதிகம் என்பது உண்மையே. ஆனால் எதிரிகளைப் படைத்த இறைவன்தான் இத்தகைய எதிரிகளிலிருந்து விடுதலை அளிக்க ஆவுடை மேல் அருளும் மூர்த்திகளாகவும் எழுந்தருளி உள்ளான். வியாழக் கிழமைகளிலும், தேய்பிறை சதுர்த்தி (சங்கடஹர சதுர்த்தி) தினங்களிலும் ஓதிமலை ஸ்ரீஆவுடை விநாயகரை வணங்கி வழிபடுதலால் வியாபாரத் துறையில் சந்திக்கும் அனைத்து விதமான எதிரிகளிலிருந்தும் விடுதலை பெறுவார்கள். வியாபாரத்தில் மட்டும் அல்லாது தங்கள் உறவு, சுற்றம் இவர்களிலிருந்து விளையும் தவறான எண்ணங்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம். ஏதோ ஒரு முறை இத்தகைய விநாயக மூர்த்தியை வழிபட்டோம் என்றில்லாமல் தொடர்ந்து இத்தகைய விநாயக மூர்த்திகளின் வழிபாடு இயற்றுதல் சிறப்பு. தேங்காய் துருவலுடன் சர்க்கரை கலந்து இந்த விநாயக மூர்த்திக்குப் படைத்து அதை எல்லா படிகளிலும் தூவி மலை மேல் சென்று ஸ்ரீஆண்டவரை தரிசனம் செய்தலால் வியாபாரம், குடும்பம், உற்றம், சுற்றத்தில் உள்ள எதிரிகள் மறைவதுடன் தங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும் பெறலாம். தொடர்ந்த வழிபாடு அவசியம். ஒரு சில வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களைப் பார்த்த உடனேயே இவர் கேட்கும் பொருளை வாங்குவாரா மாட்டாரா என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வார்கள். தங்கள் துறையில் கடுமையாக உழைத்தே இத்தகைய திறமைகளை வளர்த்துக் கொள்கிறார்கள் என்றாலும் இத்தகைய திறமைகளை அவர்கள் பெற அவர்களுக்கு உதவியாய் இருப்பதே ஓதிமலை தரிசனம் ஆகும். தொடர்ந்து இம்மலைமேல் ஏறி இறைவனைத் தரிசிப்பதால் ஒருவரைப் பார்த்தவுடன் எடை போடும் திறமை, அவர் எண்ணத்தின் பாங்கை அறிந்து கொள்ளும் சாமர்த்தியம் இறைப் பிரசாதமாகக் கிட்டும். வியாபாரிகளுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும், ஆன்மீகத்தில் முன்னேறத் துடிக்கும் பக்தர்களுக்கும் இந்த அனுகிரகம் அவசியமே. உதாரணமாக ஒரு வைரக்கல் சாதாரண கல்லா அல்லது உண்மையான வைரமா என்பது அதன் ஒளியை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை. அது ஒளியை எதிரொளிக்கும் தன்மை, அதன் உஷ்ணம், எடை போன்ற பலதரப் பட்ட விஷயங்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது அல்லவா ? இத்தகைய நுணுக்கங்களை அனுகிரகமாக அளிப்பவரே ஓதிமலை ஆண்டவர் ஆவார்.

ஸ்ரீவெள்ள விநாயகர் ஓதிமலை

காந்தி மகானைப் போல் நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் பகைவர்கள் என உண்டு அல்லவா ? எனவே அனைவரும் பகைவர்களிடமிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பதிகத்தை ஓதி வருதல் வேண்டும். ஓதிமலை அடிவாரம், ஸ்ரீவெள்ள விநாயகர் எழுந்தருளிய இடம், மலை உச்சி என்ற மூன்று பகுதிகளாக ஓதிமலையைப் பிரிக்கலாம். இதனால் என்ன பயன் என்று கேட்கலாம். ஓதிமலையை தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு முக்கோண வடிவில் காட்சி அளிக்கும். செவ்வாய் பகவானுக்கு உரித்தானதே முக்கோணம், செவ்வாய் பகவானுக்கு அதிதேவதையோ ஸ்ரீமுருகப் பெருமான். இவ்வாறு இயற்கையாகவே செவ்வாய் பகவானும் அவர் அதிதேவதையும் ஒன்றாக எழுந்தருளிய இடம் எத்தனை மகத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மேலும் இந்த முக்கோண வடிவ மலை பூமியில் பிரகாசம் கொள்ளும்போது அது முக்கோண வடிவ பிரதிபலிப்பைக் கொண்டிருப்பதால் இந்த இரு முக்கோணங்கள் இணைந்து முருகப் பெருமானுக்கு உரிய சரவணபவ சக்கரமாக விளங்குகிறது என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். இதனால் மலை அடிவாரம், ஸ்ரீவெள்ள விநாயகர் ஆலயம், உச்சிப் பகுதி என்ற மூன்று இடங்களிலும் பதிகங்கள் ஓதுதல், வழிபாடுகள் இயற்றுதல், விளக்கேற்றுதல் போன்ற காரியங்கள் அற்புதமான பலன்களை வர்ஷிப்பதாக உள்ளன. மற்றோரு கண்ணோட்டத்தில் இந்த மூன்று தெய்வீகப் பகுதிகளும் நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களைக் குறிப்பதால் ஓதிமலையில் நிறைவேற்றப்படும் வழிபாடுகள் அனைத்தும் காலம் கடந்த மகாத்மியமாக அருளை வழங்குகின்றன. ஸ்ரீவெள்ள விநாயகர் என்றால் வெள்ளம்போல் அருளை வாரி வழங்குபவர் என்று ஒரு பொருள். ஐயர்மலை ஸ்ரீஉகந்தான்படி விநாயகரைப் போல் ஆயிரம் படிகளுக்கு மேல் ஏறி ஓதிமலை செல்லும்போது அந்த களைப்பு முழுவதையும் போக்கி வெள்ளம்போல் அனுகிரக சக்திகளை அளித்து பக்தர்களை ஊக்கப்படுத்துவதாலும் இவர் வெள்ள விநாயகர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். வெள்ளம் என்பது மிகுந்த நீர்தானே. தாங்க முடியாத கஷ்டங்கள், துன்பங்கள் வந்து அதனால் கண்ணீர் வெள்ளமாய் பெருகும்போதும், நீர் சம்பந்தப்பட்ட வியாதிகளால், ஊறல், படை, சொரி, சிரங்கு போன்ற தோல் வியாதிகளால் அவதியுறும்போதும், காலரா, டைபாய்டு போன்ற தொற்று வியாதிகளால் அவதியுறும்போதும் தன்னை அண்டி இருப்பவர்களைக் காப்பாற்றும் தெய்வமே ஸ்ரீஓதிமலை வெள்ள விநாயகர் ஆவார். கோதுமையாலான சப்பாத்தி, பூரி, புட்டு போன்ற உணவு வகைகளைத் தானமாக அளித்தல் சிறப்பாகும். ஒருபுறம் வெள்ளமாய் நீர் பெருகும் என்றால் மறுபுறம் நீரின்றி வறண்டு போகும் அபாயமும் உண்டு என்பதுதானே இறைவனின் விதி. இவ்வாறு நீர்ப் பஞ்சத்தால் அவதியுறுவோரும் தங்கள் நீர் நிலைகளில் அதாவது கிணறு போன்றவற்றில் நீர் குறைந்து விடுமோ என்ற பயத்தில் உள்ளவர்கள் நீர் மோர், பானகம், பழச்சாறு போன்றவற்றை ஸ்ரீவெள்ள விநாயகர் தியானத்துடன் தங்கள் பகுதியில் ஏதாவது ஒரு திருக்கோயிலில் தானமாக அளித்தலாலும் அற்புத பலன் பெறலாம். ஆனால், வருமுன் காத்தலே புத்திசாலித்தனம் என்பதை நினைவில் கொள்ளவும்.

கோலம் விளங்க கோலமிடுக

ஆன்மீகத்தில் தான் யார் என்று உணரும்போதே ஒரு ஆன்மீக சாதகன் கடவுள் தேடலில் முதல் படியைத் தொடுகிறான் என்பர் பெரியோர். இவ்வாறு தான் யார் என்று தெரிந்து கொள்ள உதவும் வழிபாடுகளில் ஒன்றே ஓதிமலையில் தங்கள் பிறந்த தேதியை ஒட்டி கோலமிடுதல் ஆகும். உதாரணமாக ஒருவரின் பிறந்த தேதி 21 என்று இருந்தால் அவர் 3, 12, 21, 30, 39 ... என்ற எண்ணிக்கையில் வரும் படிகளில் கோலமிட்டவாறே ஓதிமலையை ஏறிச் செல்லுதல் சிறப்பாகும். இறங்கி வரும்போதும் இவ்வாறு தாங்கள் ஏற்கனவே இட்ட படியில் மறுபக்கத்தில் மற்றோரு கோலத்தை வரையலாம். இவ்வாறு ஒன்பது படிகளுக்கு ஒரு முறை கோலமிட முடியாதவர்கள் 30 படிகளுக்கு ஒரு முறையாவது கோலமிடுதல் நன்று. இதனால் தாங்கள் யார் என்று அறிந்து கொள்ள முடியும் என்றாலும் இத்தகைய ஆன்மீக இரகசியங்களில் ஈடுபாடு கொள்ளாதவர்கள் தங்கள் குடும்ப அங்கத்தினர்களின் நன்மைக்காகவும், குழந்தைப் பேறு, வியாபார அபிவிருத்தி, குடும்ப ஒற்றுமை, வேலை மாற்றம், செல்வச் செழிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் இவ்வாறு படிகளில் கோலமிட்டு வழிபடலாம். மற்ற இடங்களில் இல்லாத தனிச் சிறப்பாக ஓதிமலையில் இடப்படும் கோலங்கள் அனைத்திலும் கதிரவனின் ஒளிக் கிரணங்கள் பதிவதோடு மட்டுமல்லாமல் சந்திரன், நட்சத்திரங்களின் ஒளிக் கிரணங்களும் இந்தக் கோலங்களில் படியும் என்பதே ஆகும். இவ்வாறு ஓதிமலையில் மட்டுமே படியும் சுவாதி ரேகை என்னும் நட்சத்திரக் கதிர்கள் உண்டு. இந்த நட்சத்திர கதிர்களின் மகிமை அறிந்தால் பெண்கள் சமுதாயமே ஓதிமலைக்கு படையெடுத்து விடும் என்பதால் இந்த சுவாதி ரேகை கதிர்கள் மகிமை ஸ்ரீஅருணகிரிநாதர் போன்று இந்த இரகசியம் தெரிந்த மகான்களால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

சுவாதிரேகை மூலிகைகள் ஓதிமலை

இவ்வாறு படிகளில் கோலமிட்டு சுவாதி ரேகை சக்திகளை மூலிகைகள் மூலம் ஈர்க்க முடியாவிட்டாலும் ஓதிமலை ஏறிச் செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் இந்த சுவாதி ரேகை மூலிகைகளின் சக்தி சுவாசக் கதிர்களாக அவர்கள் நாளங்களை அடைந்து நன்மை பயக்கும் என்பது உண்மை. இந்த சுவாதி கதிர்களுக்கு இளமை அளிக்கும் (rejuvenating effects) தன்மை மிகுந்திருப்பதால் ஓதிமலையை வழிபட்டுச் செல்லும் சில அன்பர்களுக்கு மூச்சு சம்பந்தமான சில வியாதிகளோ, உடல் உபாதைகளோ ஏற்படும் என்பது உண்மையே. இது பற்றி கவலைகொள்ளாது இருக்கவே இத்தகைய முன்னெச்சரிக்கை அறிவிப்புகள். பிரணவத்திற்கு பொருள் தெரியாது சாட்சாத் பரமேஸ்வர மூர்த்தி முருகப் பெருமானைப் பணிய முருகப் பெருமானோ தந்தைக்கு உபதேசம் செய்யும் தகுதி தனக்கு ஏது என்பதை மனப்பூர்வமாக உணர்ந்தாலும் அதை வெளியிடாமல், “அப்பா அப்பா அப்பா” என்று தன் ஞானகுருவை அன்புடன் அழைத்து வழிபட்டான் என்று சித்தர்கள் சுவடி அறிவிக்கிறது அல்லவா ? இந்தத் திருவிளையாடல் பரம்பொருள் ஏதோ பொழுதுபோக்கிற்காக கேட்டதாகவும் முருகப் பெருமான் ஏதோ விளையாட்டாக குறும்புடன் தன் தந்தையை அழைத்ததாகவும் மேலோட்டமாகத் தோன்றினாலும் இறைவனின் திருவிளையாடலில் ஆயிரமாயிரம் அரும்பொருள் மறைந்திருக்கும் அல்லவா ? இவ்வாறு இந்தத் திருவிளையாடலை சற்றே விளக்கினால் அது எப்படி ஆதி அம்பல திருக்கூத்தாக மலர்கிறது என்று புரியவரும். பொன்னம்பலம், வெள்ளி அம்பலம் என்பது போன்ற அம்பலங்கள் கோடி கோடியே. இதில் ஆதி அம்பலத்தில் எம்பெருமான் நடத்திய திருக்கூத்தில் தோன்றிய நடராஜ கதிர்களே சுவாதிரேகை கதிர்களாகும். குசா சக்திகளுடன் பொலிபவை இந்த சுவாதிரேகை கதிர்கள். ஐந்து முகங்களுடன் பொலிந்த எம்பெருமான் குசா சக்தியுடன் பொலிந்த தத்புருஷம் என்ற முகத்தின் மூலம் வெளியிட்ட ஆதி அம்பலக் கதிர்களே சுவாதிரேகை கதிர்களாகும். எம்பெருமானின் மூன்று கண்களில் நடுவில் உள்ள நெற்றிக் கண் குசா சக்தியுடன் பொலிவதால் அந்த குசா சக்தியின் இறைப்பிரசாதமாக தோன்றிய சிவபாலன் குசா சக்தியின் பூரணமாகத் திகழ்வதில் வியப்பில்லையே ? மேலும் மனிதர்களின் கணக்கில் புரியும்படி சொல்வதாக இருந்தால் தத்புருஷம் என்ற குசா முகம் புருஷ சக்திகளுடன் திகழ்வதே. அக்காரணத்தாலும் புருஷ சக்திகளைப் பூரணமாகப் பெற்ற தெய்வம் என்று முருகப் பெருமானை அழைப்பதுண்டு. இவ்வாறு ஐந்து முகப் பெருமானிடமிருந்து தோன்றிய காரணத்தால்தான் தானும் ஐந்து முகங்களுடன் திகழ்ந்து சுவாதிரேகை என்ற ஐந்தெழுத்து சக்திகளை கிரகித்து அதை பக்தர்களுக்கெல்லாம் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கெல்லாம் அருள் பிரசாதமாக அளிக்கும் வல்லமை பெற்றார் முருகப் பெருமான் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். ஓதிமலை முருகனை தரிசிக்க ஏன் 1800 படிகள் (1+8=9) ஏறிச் செல்ல வேண்டும் என்ற இரகசியமும் ஐந்திற்கும் ஒன்பதிற்கும் உள்ள தொடர்பும் அதை சற்குரு கையாண்ட விதமும் ஆன்மீக உள்ளம் கொண்ட அடியார்களுக்குப் புரிந்திருக்கும். அப்பா என்ற மூன்று எழுத்தை தனக்குரித்தான ஒன்பது எழுத்தாக மாற்றிக் கொண்ட பெருமை முருகப் பெருமானுக்கு மட்டுமே உரித்தானது.

பிரணவ உபதேசம் ஓதிமலை

சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரம் அகர ஈற்றுக்களை உடைய உயிர் எழுத்துக்களால் உருவானது போல சுவாதிரேகை என்ற சக்திகளும் முற்றிலும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட உயிரெழுத்து ஈற்றுக்களுடன் திகழ்வதே சுவாதிரேகை கதிர்களின் சிறப்பாகும். சரவணபவ என்னும் மந்திரத்தை ஓதியே எண்ணற்றோர் முக்தி நிலையை அடைந்தது போல் இந்த சுவாதிரேகை மந்திரத்தை ஓதி முக்தி பெற்றோர் ஏராளம். பலரும் சுவாதிரேகை மந்திரத்தை அறியாவிட்டாலும் இறையடியார்கள் பலரும் இந்த சுவாதிரேகை சக்தியால்தான் உன்னத நிலையை அடைந்தனர் என்பது உண்மையே. படிகளில் ஏறி ஓதிமலை முருகப் பெருமானை தரிசிக்கும்போது நம்முடைய பாதங்களை மாறி மாறி படிகளில் வைக்கிறோம். அப்போது ஒவ்வொரு பாதத்திலும் உள்ள ஐந்து விரல்கள் இந்த சுவாதிரேகை கிரண சக்திகளை ஈர்க்கின்றன. ஆனால் இந்த மகிமை அறியாத பலரும் காலில் செருப்பணிந்து மலையேறி வருவதையும் காண முடிகிறது. தாங்கள் மலையேறி இறைவனை தரிசித்த பின்னர் இவ்வாறு காலில் செருப்பணிந்து மலையேறி வந்தவர்களின் அறியாமையைக் களைந்து அவர்களுக்கு நன்மை செய்யும் பொருட்டு தங்களால் இயன்ற அளவு சில நூறு படிகளையாவது ஏறி அவர்களுடைய அறியாமை நீங்க துணை புரிதல் நலமே. அது மட்டுமன்றி நாம் ஓதிமலை இறைவனை இப்பிறவியில் தரிசனம் செய்கிறோம் என்றால் அதற்கு நிச்சயம் ஏதாவது பூர்வ ஜன்ம தொடர்பு இருக்கும். அத்தகைய முற்பிறவிகளில் நாமே உடல் நிலை காரணமாகவோ வேறு சில காரணங்களுக்காகவோ செருப்பணிந்து மலையேறி இருக்கலாம் அல்லவா ? அத்தகைய தவறுகளுக்கு பிராயசித்தமாகவும் இப்பிறவியில் சில படிகளையாவது மீண்டும் செருப்பின்றி ஏறிச் செல்லுதல் நலம் என பெரியோர்களால் வலியுறுத்தப்படுகிறது. இதில் இன்னும் எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை நீங்களே தொடர்ந்த வழிபாட்டின் மூலமும், சற்குருவின் வழிகாட்டுதல் மூலமும் தெரிந்து கொள்ளலாம். திருநாவுக்கரச பெருமான் கைலாயம் சென்றபோது கால்கள் தேய்ந்ததால் தன்னுடைய கைகளைத் தரையில் ஊன்றி நடந்து சென்றதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு கைகளில் அமைந்த ஐந்து விரல்கள் மூலமாக சுவாதிரேகை சக்திகளை கைலாயப் பாதையில் பிரதிஷ்டை செய்யவே இவ்வாறு குழந்தையைப் போல் அப்பர் பெருமான் தவழ்ந்து சென்றார் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய இரகசியம். இவ்வாறு குழந்தையைப் போல் தவழ்ந்து சென்று திருப்பதி மலையில் சுவாதிரேகை சக்திகளை நிர்மாணித்தவரே ஸ்ரீராமானுஜர் ஆவார். எனவே திருப்பதியில் பொலியும் ஐந்தெழுத்துகளோ அவர் நாமத்தில் நிறைந்த ஐந்தெழுத்துக்களோ அவர் சுவாதிரேகை என்ற ஐந்தெழுத்து சக்திகளை நிலைபெறச் செய்ததோ ஏதோ தற்செயலாக நடந்த காரியம் இல்லை என்பது இப்போது தெளிவாகிறது அல்லவா ? இத்தனை மகிமைகளை விளக்குவதும் RVV (2+6+6=5) என்ற மூன்றெழுத்தில் மிளிரும் ஐந்தெழுத்து சக்திகள்தானே. இப்போது திருப்பதி உச்சியில் பொலிவது மகாவிஷ்ணுவா இல்லை ஆண்டவரா என்பது தெளிவாகி இருக்கும், ஒருவேளை இந்தக் குழப்பம் பெருகுவதற்கும் காரணம் இருக்கத்தானே செய்கிறது ?!

தனிகை வேலவன் தணிக்கும் கோபம்

பலருக்கும் எடுத்ததெற்கெல்லாம் கட்டுக்கடங்காத கோபம் வருவதுண்டு. காரணம் கேட்டால் என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பார்கள். உண்மையில் கட்டுக்கடங்காத கோபம் யாருக்குமே வருவதில்லை. தங்கள் மனைவியின் மீதோ குழந்தைகளின் மீதோ கோபம் கொள்ளும் மனிதன் அதே கோபத்தை தன்னுடைய மேலதிகாரிகளிடமோ அல்லது தன்னை நிறுத்தும் காவல் அதிகாரிகளிடமோ காண்பிப்பது கிடையாது அல்லவா ? இவ்வாறு தேவையில்லாமல் கோபம் கொள்பவர்கள் ஓதிமலை முருகனை அடிக்கடி தரிசித்து வருதலால் தங்கள் கோபம் தேவையில்லாத ஒன்று என்ற உண்மையை உணர்வார்கள். செவ்வாய்க் கிழமைகளில் பெறும் முருக தரிசனம் பொதுவாக கோபத்திற்கு வடிகாலாய் அமையும். தன்னையும் அறியாமல் கோபம் வரும்போது தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொண்டு சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டுவதே இவ்வாறு ஓதிமலை ஆண்டவர் தரிசனமும் மற்ற திருத்தலங்களில் பெறும் முருகப் பெருமான் தரிசனமும். ஸ்ரீஅகத்திய பெருமான் இது பற்றிக் கூறும்போது, “அடியேன் பெருமானை (சிவனை) தனியாகப் பார்ப்பதே கிடையாது. அவர் அம்மையப்பராக இருக்கும்போதுதான் அவரை அடியேன் தரிசனம் செய்வது வழக்கம். அப்போதுதான் அவர் சாந்த மூர்த்தியாய் அருள் வழங்குவார். இல்லாவிட்டால் ஏதாவது அடியேன் ஏடாகூடமாய்க் கேட்கப் போய் அவர் கோபித்துக் கொண்டு சபித்து விட்டால் என்ன செய்வது ?” என்று ஒன்றும் அறியாதவர் போல் கேட்பார்.

ஸ்ரீஅகத்திய பெருமான் ஓதிமலை

ஓதிமலையில் ஸ்ரீஆண்டவரைத் தரிசனம் செய்யும்போது அவர் தனியாகத்தானே இருக்கிறார், அவர் எப்படி கோபத்திற்கு வடிகால் அளிப்பார் என்று கேட்கத் தோன்றும். உண்மையில் இங்கு வேலுடன் இருக்கும் வேலவன் கையில் பொலிவது சக்தி என்னும் வேல்தானே. எனவே தான் யார் என்ற உண்மையை தெளிவுபடுத்துவரே ஓதிமலை ஆண்டவர் ஆவார். தான் யார், தான் படைக்கப்பட்டதன் குறிக்கோள் என்ன என்பதை உணர்ந்து கொண்டபின் ஒருவருக்கு கோபம் ஏற்படுமா என்ன ? இதை உணர்த்துவதும் ஓதிமலை ஆண்டவர் மகிமையாகும். மேலும் கோபம் ஏற்படும்போது தங்கள் சிறுவயது குழந்தைப் படத்தைப் பார்ப்பதும் கோபத்தைக் களையும் உபாயமாக சித்தர்கள் அருள்கின்றனர். ஆனால், பலருக்கும் இத்தகைய சிறுவயது புகைப்படங்கள் கிடைப்பதில்லை அல்லவா ? அத்தகையோர் பழநி முருகன், ஓதிமலை ஆண்டவர் போன்ற தெய்வ மூர்த்திகளின் படங்களைப் பார்ப்பதும் உடனே கோபத்தைத் தணிக்கும் எளிய முறையாகும். தனிகை முருகன் கோபத்தைத் தணிக்கும் முருகன் என்பதை அனுபவத்தில் கண்டு ஆனந்தம் அடைந்தோர் எண்ணற்றோர். கோபத்தைப் பற்றி இன்னும் எளிமையாகச் சொல்வதானால் தனி கை வேல் என்ற வார்த்தைகளைத் தொடர்ந்து சிந்தித்தால் இந்த ஐந்து எழுத்துக்களே தன்னை விளக்கும் தகைசார் மந்திரமாக அமைந்து கோபத்தைக் களைந்து விடும். அது மட்டுமல்லாமல் தெய்வீகத்தில் எத்தகைய உயர்நிலையையும் எளிதில் அடைய உதவி செய்ய உதவுவதே இந்த மந்திரம் கூறும் தியானம், ஆத்ம விசார பத்ததி ஆகும். அபூர்வமாக இத்தல ஸ்ரீஆண்டவர் எட்டு கரங்களுடன் அருளாட்சி செய்கிறார். முருகப் பெருமானின் இத்தகைய அஷ்ட ஹஸ்த தரிசனத்திற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு என்றாலும் இத்தகைய தரிசனம் எட்டு திக்குகளிலிருந்து வரும் எண்ணத்தைத் தெரிவிக்கும் சக்திகளாய் அமைகின்றன. இரண்டாவதாக அவ்வாறு தோன்றும் எண்ணங்கள் தீயவையாக இருந்தால் அவற்றின் வலிமையைக் குறைப்பவையாகவும் நல்லதாக இருந்தால் அவற்றை பலப்படுத்தும் தன்மையை அளிப்பவையாகவும் உள்ளன. கேட்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும் எவை நற்சக்திகள், எவை தீய சக்திகள் என்று அறிவது மிக மிக கடினமே. இது பற்றியே நம் சற்குரு கனவுகளைப் பற்றிக் கூறும்போது, “கனவுகள் கனவுகளாகவே இருக்கட்டும்,” என்பார். காரணம் கனவுகளின் பலன்களை சரியாகப் பகுத்துணர்வது கடினமே. இதுவே எண்ணங்களுக்கும் பொருந்தும் என்பதால் எண்ணங்களை எண்ணங்களாகவே வைத்து செயல்படுவதால் நாளடைவில் பலவீனம் அடைந்த தீய எண்ணங்கள் மறைந்து விடும் என்பதே சித்தர்கள் கூறும் எண்ணங்களைப் பற்றி அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய விளக்கம். இவ்வாறு எண்ணங்களை எண்ணங்களாகவே வைத்து மனதை ஒருநிலைப் படுத்தும் பலத்தை அளிப்பதும் இத்தலத்தில் தொடர்ந்து பெறும் முருகப் பெருமானின் தரிசனமே.

ஸ்ரீஇடும்பன் சன்னதி ஓதிமலை

ஸ்ரீரமண மகரிஷியும் தியானத் தொடக்கத்திலேயே நான் யார் என்ற தத்துவக் கேள்வியில் குதித்துவிடவில்லை. அவரும் ஆரம்பத்தில் தனி கை வேல் என்ற முருகப் பெருமானின் உருவ சிந்தனையில் லயித்து, ஊறிய பின்னரே திருஅண்ணாமலையில் ஏக முக தரிசனப் பகுதியில் இறைசக்தி ஒன்றே எனத் தெளிந்து நான் யார் என்று சிந்திக்கத் தொடங்கினார். எத்தகைய ஆத்ம விசார வினாவிற்கும் திறவு கோலே ஓதிமலை ஆண்டவர் தரிசனமாகும். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளை அம்பாளாகவும் ஸ்ரீரமண மகரிஷியை பாலமுருகனாகவும் தரிசனம் செய்து பயனடைந்தோர் அநேகர். நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே மாறுவாய் என்பதுதானே ஸ்ரீகிருஷ்ண பரமாத்வாவின் உபதேசம். ஆதியில் சிவபெருமானைப் போலவே ஸ்ரீபிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. அதைக் கண்டு ஸ்ரீபிரம்ம தேவர் தானும் சிவனும் ஒன்று என்று நினைக்கவே அந்த அகங்கார எண்ணத்தைக் களைவதற்காக எம்பெருமான் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கிள்ளி விடவே அதனால் பிரம்மாவின் அகங்காரம் முற்றிலும் களைந்தது. நான் என்பது போய்விட்டால் அங்கு மிஞ்சுவது இறைவன் மட்டும்தானே, பிரம்மம் மட்டுமே எஞ்சுமல்லவா ? இந்நிலையில் ஸ்ரீபிரம்ம மூர்த்தி சதாசர்வ காலமும் நான் என்பதை இழந்து பிரணவ சாதனையிலேயே லயித்து விட்டார். அவரிடம் கேட்கப்படும் எந்த கேள்விக்கும் பதிலளிக்கும் நிலையில் அவர் இல்லை. நான் என்னும் எண்ணம் மேலோங்கி நின்றால்தானே அங்கே கேள்வி பதில் என்ற நிலை ஏற்படும். கேள்வியும் பதிலும் ஒன்றாகும்போது, அங்கே மிஞ்சுவது மௌனம்தானே. அதனால்தான் ஓம்கார மந்திரத்திற்கு மகாம்ருத்யு மந்திரம் என்ற காரணப் பெயரும் உண்டு. நான் என்பது அழிந்தால் அந்த அழிவு மகாமிருத்யு தானே. ஸ்ரீபிரம்ம மூர்த்தி ஒன்றும் கூறா நிலையில் இருந்ததையே அவர் இரும் பறை என்னும் மிக சப்தத்துடன் ஒலிக்கும் பறை ஒலியைக் கேட்டுக் கொண்டிருந்தார் அதாவது ஓங்கார சப்த ஒலியில் இலயித்து தன்னை மறந்திருந்தார் என்று அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் பெரியோர்கள் தெரிவிக்கிறார்கள். ஸ்ரீபிரம்ம மூர்த்தியை முருகப் பெருமான் சிறையில் அடைத்து விட்டார் என்று சொல்வதுண்டு. உண்மையில் இந்த பிரணவ ஒலியில் தான் விரும்பும் யுக காலங்கள் லயித்திருப்பதற்காக முருகப் பெருமான் பெருங்கருணை கொண்டு அவரை இரும்பறையில் இருக்குமாறு அனுமதித்தார். இடைப்பட்ட காலத்தில் முருகப் பெருமானே படைப்புத் தொழிலை மேற்கொண்டு அதை செவ்வனே நிறைவேற்றினார் என்பதே உண்மை. இந்த இரும் பறை வாசமே மக்கள் வழக்கில் இரும்பு அறை வாசமாக மாறியது. பிரம்ம தேவரைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதானே. எனவே மற்ற திருத்தலங்களை விட இரும்பறை, ஓதிமலையைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் ஓங்கார தியானம் எளிதில் கைகூடும். ஓங்காரத்தை வாய்விட்டு ஓதுவதாலும் நற்பலன்களே விளையும். உச்சரிப்பில் தெளிவில்லாத குழந்தைகளை ஓங்காரம் இத்தலத்தில் ஆரம்பித்து ஓதி வரச் செய்தல் நலம். (இரும்பறை என்பது ஓதிமலை அருகில் உள்ள தலம்).

குலம் வாழ புவனம் வாழுமே

தாய் தந்தையர்களின் பூஜாபலன்களைப் பொறுத்து அக்குழந்தை வாழ்நாள் முழுவதுமே நோய் நோடியின்றி ஆரோக்யத்துடன் திகழும் என்பது உண்மையே. கர்ப்பிணிப் பெண்கள் நன்முறையில் குழந்தை பெறுவதற்காகவும், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காகவும் வளைகாப்பு, சீமந்தம் போன்ற சடங்குகளை நம் பெரியோர்களை நிகழ்த்தி வந்தனர். தற்காலத்தில் இத்தகைய வழிபாடுகள் எல்லாம் அசிரத்தையாக ஏனோ தானோவென்று முறையாக நடத்தப்படாததால் தாயும் சேயும் ஆரோக்யத்துடன் திகழும் நிலை குறைந்து வருகிறது. இந்நிலையில் கருவுற்ற ஐந்தாம் மாதம் முதற்கொண்டு கீழ்க் கண்ட குழந்தை வேலன் துதியை ஓதி வருவதால் கர்ப்பிணி பெண்கள் நலமடைவர். பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியத்துடன் திகழும் என்பதில் ஐயமில்லை.

வருவான் வடிவேலன்

ஓதிமலை ஆண்டவா உருவம் தருவாய் ஆண்டவா
ஓதிமலை ஆண்டவா உயிரைக் காப்பாய் ஆண்டவா
ஓதிமலை ஆண்டவா உன்தாள் காப்பே ஆண்டவா
கர்ப்பம் தாங்கிய பெண் படிகள் ஏறி ஓதிமலை ஆண்டவரை தரிசனம் செய்ய முடியாது என்றாலும் அப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களான கணவன், தாய், தந்தையர், சகோதர சகோதரிகள் ஓதிமலை ஆண்டவரை தரிசனம் செய்து கர்ப்பம் தாங்கிய பெண் உட்பட அனைவரும் மேற்கண்ட துதியை ஓதி வருதல் நலம். நல்ல முறையில் நிகழும் குழந்தைப் பேற்றிற்குப் பின்னும் இந்த துதியை ஓதி ஓதிமலை ஆண்டவருக்கு நன்றி செலுத்துவதுடன் தொடர்ந்து இந்த துதியை ஓதி வந்தால் தங்களுடைய வாழ்வில் மற்றவர்களும் எத்தகைய துன்பங்களையும் சந்திக்காமல் நோய் நோடியின்றி திகழ்வர். வளைகாப்பு, சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இத்துதியை குறைந்தது 21 முறை ஓதி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்த்துதல், மணமான பெண்கள் வளையல்களை அணிந்து கொள்ளுதலும் நலமே. குடும்பத்தில் ஒற்றுமையை நிகழ்த்துவதும் இத்தகைய துதி பாராயணமே. ஒருவருடைய ஜாதகத்தில் 1, 5, 9ம் இடங்களை லட்சுமி ஸ்தானங்கள் என்று கூறுவதுண்டு. இந்த மூன்று லட்சுமி ஸ்தானங்களும் சிறப்பாய் பொலியும் திருத்தலமே ஓதிமலை ஆகும். இக்காரணம் பற்றியே இதை திரிகோணமலை என்று அழைப்பதும் உண்டு. மற்ற முருகத் தலங்களைவிட இத்தலத்தில் முருக அஷ்டோத்திர (108 போற்றிகள்) துதி சிறப்பு பெறுவதற்கு இதுவே முக்கிய காரணமாகும். இத்திருத்தலத்தில் மலை ஏறும்போதும் இறங்கும்போதும் மேற்கண்ட துதியையோ முருக அஷ்டோத்திர துதி நாமாவளிகளையோ ஓதுதல் மிகவும் சிறப்பாகும். அஷ்டோத்திர துதி என்பது அர்ச்சனைக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை. அஷ்டோத்திரம், சஹஸ்ர நாமம் என்ற இறைத் துதிகள் எல்லாம் தெய்வ மூர்த்திகளின் குண நலன்களை புகழ்ந்து பாடுவதால் இந்த துதிகளை எந்நேரமும் எல்லா இடத்திலும் தலத்திலும் ஓதி வரலாம். முருகத் தலத்தில் சிவ அஷ்டோத்திரத்தை ஓதுவதும் மாரியம்மன் தலத்தில் முருக அஷ்டோத்திர துதியை ஓதி வருவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே, சிறப்புடையதே. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நிலையில் லயித்திருப்பவர்கள்தானே சித்தர்கள். சற்குருவின் சீடர் ஒருவர் சிவ சஹஸ்ரநாம துதிகளை ஓதியே சற்குருவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றார் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.

ஸ்ரீதெய்வானை சக்தி ஓதிமலை

இரும்பறை கிராமத்தில் சுமார் 600 வருடங்களுக்கு முன் ஒரு விவசாய குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். பூர்வ ஜன்ம புண்யத்தால் அவர்கள் ஒரு பெண் மகவைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு லட்சுமி என்று நாமமிட்டு பெயருக்கேற்றாற்போல் அக்குழந்தையை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர். அக்குழந்தையோ நினைவு தெரிந்த நாள் முதலாக தன்னுடைய பெயரை தெய்வானை என்று கூறி தன்னை ஆண்டவரின் தெய்வானையாகவே பாவித்துக் கொண்டாள். அக்காலத்தில் காட்டு மிருகங்களின் பயம் அதிகமாக இருந்தாலும் தெய்வானையின் பக்தி பலத்தால் அவள் பெற்றோர்கள் அக்குழந்தையுடன் அடிக்கடி மலையேறி ஸ்ரீஆண்டவரைத் தரிசனம் செய்து வந்தார்கள். தெய்வானை என்பவள் இந்திரனின் மகள் அல்லவா ? அதனால் தெய்வானையின் பக்தியின் பெருமை தேவலோகத்தை அடையவே இந்திரனே மகிழ்ந்து தங்க ஆபரணங்கள், வைர வைடூரிய பதக்கங்கள், பட்டு ஆடைகளுடன் வந்து தெய்வானைக்கு சமர்ப்பிக்க தன் விருப்பத்தைத் தெரிவித்தான். சாதாரண பக்தர்களுக்கு கிட்டாத இந்திர தரிசனத்தையே நேரில் பெற்ற தெய்வானையோ இருகரம் கூப்பி, “சுவாமி, இந்த பரிசுப் பொருள் எதையும் பெறுவதற்கு அடியேனுக்கு தகுதி இல்லை. இதற்கு தகுதி உடையவர் அடியேன் மணாளன் ஒருவனே,” என்று கூறி ஓதிமலை தெய்வத்தைச் சுட்டிக் காட்டினாள். மனிதர்களுக்கு இருப்பதைப் போன்ற உரிமை தேவலோக வாசிகளுக்கு கிடையாது. தேவர்களின் தலைவராக இந்திரன் இருந்தாலும் முருகப் பெருமானின் அனுமதியின்றி மலையேற முடியாது என்பது தேவ சட்டம், இறை நியதி. ஆனால் தெய்வானை பக்தியால் இந்திரன் மலையேறும் அனுமதியைப் பெற்று ஸ்ரீஓதிமலை ஆண்டவரின் தரிசனத்தைக் கண் குளிர கண்டு தான் கொண்டு வந்த பரிசுப் பொருட்கள் அத்தனையும் எம்பெருமான் திருவடிகளில் சமர்ப்பித்தான் என்பதே சித்தச் சுவடிகள் கூறும் இரகசியம். பெற்றோர்கள் தேவ லோகம் சென்றவுடன் தெய்வானை ஒளிக் கிரணமாக மாறி இத்தலத்தில் ஸ்ரீஆண்டவருடன் இரண்டறக் கலந்தாள். ஆனால் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்றும் ஸ்ரீதெய்வானை சக்தியாய், துவார சக்தியாய் ஓதிமலை திருத்தலத்தில் பக்தர்களுக்கு அருளாட்சி புரிகின்றாள். பெண்கள் தங்கள் தகுதிக்கேற்ற தக்க மணாளனைத் தேடித் தரும் சக்தியே இந்த தெய்வானை தெய்வம். மணமான பெண்களும் குடும்ப ஒற்றுமைக்காக வழிபட வேண்டிய மூர்த்தியே இவள். லட்சுமி, தெய்வானை, பார்கவி, ஊர்வசி என்ற நான்கெழுத்து நாமம் உடையவர்கள் சிறப்பாக இத்தல ஆண்டவரை வேண்டி வழிபடுதல் சிறப்பு. நான்கெழுத்து நாமம் கொண்ட தெய்வானை ஆண்டவர் பெருமானுடன் கலந்து முருகனுக்கு உரிய ஒன்பது எழுத்து கொண்ட ஜோதியாய் மாறினாள் என்றால் லட்சுமி கேடிதானே, ஆனால் முருகக் கேடி. இத்தலத்தில் ஸ்ரீதெய்வானை சக்தி முன்பு சுத்தமான தேங்காய் எண்ணெய் தீபங்களை ஏற்றி அந்த ஜோதிகள் குளிரும் வரை தேவார திருப்பதிகங்கள், சண்முக கவசம், மயில் வேல் விருத்தங்களை குறைந்தது மூன்று மணி நேரம் ஓதி வழிபடுதல் சிறப்பாகும். தக்க மணாளன் அமையவும், பகைவர்களை வெல்லவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் இத்தகைய வழிபாடு துணை நிற்கும். ஒரு முறை வழிபாட்டிலேயே அற்புத பலன்களை நிதர்சனமாக காணத் துணை நிற்கும் திருத்தலம்.

மீண்டும் மலர்வான் ஆதவன்

இரும்பறையில் வாழ்ந்து வந்த தெய்வானையை இன்றும் எண்ணி வழிபடுவோர்க்கு எண்ணற்ற நற்பலன்கள் காத்திருக்கின்றன. உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பருவமடைந்த ஆனால் அறிவு முதிர்ச்சி அடையாத ஒரு பெண் இருந்தாள். அவள் குடும்பம் வறுமையில் இருந்ததால் ஆண்கள் அணியும் சட்டையை அணிந்து கொண்டு அருகில் உள்ள ஒரு மிட்டாய்க் கடைக்கு (ஸ்வீட் ஷாப்) சென்றாள். அந்தக் கடையில் கல்யாணம் ஆகாமல் இருந்த ஒரு இளைஞன் அந்தப் பெண்ணைத் தன்னுடைய தவறான இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதால் அவள் கர்ப்பமுற்றாள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க அவன் அந்த இளம் பெண்ணின் உயிரைப் போக்கிடவே அவன் தன்னுடைய எஞ்சிய இளமைக் காலத்தை சிறையில் கழிக்கும்படி நேர்ந்தது. அந்தப் பெண்ணும், அவள் குடும்பமும் அடைந்த வேதனையோ எழுத்தில் வடிக்க இயலாது. இது இவ்வாறிருக்க இறைவனை நம்பி தெய்வானையை வழிபட்ட ஒரு இளைஞனின் வாழ்க்கை எப்படி மாறியது என்று பார்ப்பமோ ? இதே சூழ்நிலையில் ஒரு இளம் பெண்ணை ஒரு மிட்டாய்க் கடைக்காரர் சந்திக்க நேர்ந்தபோது அந்த இளைஞனோ தெய்வானையை வழிபட்டு வந்ததால் அந்தப் பெண்ணை பார்த்தவுடன் விவரமறியாத அந்தப் பெண்ணுக்கு எப்படி உதவலாம் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது, இல்லை ஒருவேளை தெய்வானை வழிபாடு அந்த இளைஞனுக்கு அந்த உயர்ந்த எண்ணத்தை அளித்ததோ ? அந்தப் பெண்ணிற்கு உண்பதற்காக ஒரு லட்டு அளித்த இளைஞன் அந்தப் பெண் நற்கதி அடைவதற்காக அதாவது உரிய முறையில் அவள் திருமணம் முடிப்பதற்காக தெய்வானையை வேண்டி வாரம் ஒரு முறை 12 லட்டுகளை தானமாக அளித்து வந்தான். விளைவு நீங்கள் அறிந்ததே. ஒரு வருட காலத்தில் அந்த விவரமறியா பெண்ணிற்கு அற்புதமான வங்கி மாப்பிள்ளை அமைந்ததுடன் அந்த மிட்டாய்க் கடைக்காரனும் நாற்பது வயது தாண்டிய நிலையில் திருமண வாழ்வை அடைந்தான். ஆனால், அவனுக்கு அப்பிறவியில் திருமண பிராப்தியே கிடையாது என்று கூறியது அவன் ஜாதகம். எனவே விதியை மீறி இருவரின் வாழ்வை நன்முறையில் அமைத்துத் தந்ததே ஓதிமலை தெய்வானை வழிபாடு என்பதை சொல்லவும் வேண்டுமோ ?

சங்க பாலன் அருளும்
சங்கம சுகம்

விந்து இரகசியங்கள், பிந்து கோட்பாடுகள் பெரியோர்களால் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன என்றாலும் சூரிய கலையில் சுவாசம் ஆண் குழந்தையையும், சந்திர கலை சுவாசம் பெண் குழந்தையை உருவாக்கும் என்பது வரை ஓரளவு சங்கம இரகசியங்ளை தம்பதிகள் அறிந்துள்ளனர். இந்த இரகசியங்களை ஓரளவு அறிந்திருந்தாலும் அவைகளை நடைமுறைப்படுத்துவது என்பது சாதாரண மனித பிரயத்தினத்தினால் நடக்கக் கூடியது அல்ல என்பதால் இவ்விஷயத்தில் தெய்வ சகாயமே துணை நிற்கும் என உணர்ந்த நம் பெரியோர்கள் சஷ்டி விரதம் போன்ற விரதங்கள் மூலம் முருகப் பெருமானை வணங்கி அற்புத குழந்தைகளப் பெறும் வழிபாடுகளை வகுத்துத் தந்துள்ளார்கள். வளைகாப்பு, சீமந்தம் போன்ற வழிபாடுகளின் போது பிறக்க இருக்கும் குழந்தைக்கு முதல் சுவாசம் பெறப்படுகிறது. இதற்கு அதிபதி புத பகவான், ஐந்தாம் எண்ணிற்கு உடையவர். ஓதிமலை ஆண்டவர் ஐந்து தலைகளுடன் திகழ்வதால் இவ்வாறு முறையான வளைகாப்பு, சீமந்தம் போன்ற வழிபாடுகளைச் செய்ய முடியாமல் போனாலும் மேற்கண்ட ஆண்டவர் காப்புத் துதியை தொடர்ந்து ஓதி வந்தால் சிரமமில்லாத குழந்தைப் பேற்றை கர்ப்பிணிப் பெண்கள் அடைவார்கள்.

ஓதிமலை

குழந்தைப் பேற்றிற்கு முன்னோடியாகத் திகழ்வது கணவன் மனைவிக்கு இடையே நிகழும் முறையான சங்கமம்தானே. இந்த சங்கமமே முறைகேடாக நிகழும்போது அதாவது உரிய திதி, யோகம், கரணம் போன்ற அம்சங்களை கருத்தில் கொள்ளாதபோது இத்தலத்தில் நிறைவேற்றும் வழிபாடே அத்தகைய தவறுகளைக் களையும் உபாயமாகத் திகழ்ந்து தம்பதிகளுக்கு முறையான சந்தான பாக்கியத்தை அளிக்கிறது. பாஞ்சசன்யம் என்பது ஸ்ரீகிருஷ்ண பகவான் ஊதிய சங்கு என்ற உண்மையை அறிந்தோர் சிலரே. அதிலும் அரிதானவர்களே பாஞ்சசன்யம் என்பது பஞ்சபூதங்களையும் முறைப்படுத்தும் சாதனம் என்பதையோ, அது ஓதிமலை ஆண்டவரால் ஒலிக்கப்பட்டது என்ற இரகசியத்தையோ உணர்ந்தோர். எனவே கணவன் மனைவிக்கு இடையே நிகழும் சங்கமத்தில் எத்தகைய தவறுகள் நேர்ந்தாலும் அத்தவறுகளை முறைப்படுத்தி அவர்களிடையே முறையான சந்தான பாக்கியத்தை அளிப்பவரே ஓதிமலை சங்க பாலன். உண்மையில் இந்த பாஞ்சசன்ய ஒலியிலிருந்தே பஞ்ச பூதங்களின் விகிதாசார மாறுபாடுகளால் குழந்தை உருவாகின்றது என்பது உண்மை. அதனால்தான் பூமிபாரத்தை குறைப்பதை தன் அவதார நோக்கமாகக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணபகவான் பாஞ்சசன்ய சங்கை கையில் ஏந்தி அதைப் பாரத போர்க்களத்தில் ஓதி அல்லது ஒலித்து வந்தார். அதனால் பாஞ்சசன்ய சங்கு அழிவைக் கொடுப்பது என்று பொருள் கொள்ளாமல் சிருஷ்டியை முறைப்படுத்துவதே அது என்று தெளிவதே சரியான அணுகு முறையாகும். அப்போதுதான் சங்கபாலன் ஓதிமலை ஆண்டவரின் பெருமையும் புரியவரும். ஆதிசேஷன், வாசுகி போன்று நாகங்களில் சங்கபாலன் என்பதும் ஒரு வகை நாகமே. இந்த ஐந்து தலை நாகத்தை கையிலேந்தியே ஓதிமலை ஆண்டவர் அருள்புரிவதால் எத்தகைய நாக தோஷம் உடையவர்களும் இத்தல இறைவனை வேண்டி பலனடையலாம் என்பதையே இது குறிக்கிறது. சுத்தமான பசும்பால் அபிஷேகம், பால் இனிப்புகள் தானம் சங்கபாலனுக்கு ப்ரீதி ஆனவையே. ஆனால் கறந்த பால் ஆறும் முன்னர் அத்தகைய பால் அபிஷேகம் நிறைவேற்ற முடியாது என்பதால் பஞ்சகவ்ய அபிஷேகம் சித்தர்களால் சிபாரிசு செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் மனைவியுடன் கூடும் சுகத்தையே சங்கம சுகம் என்று கருதினாலும் நாளடைவில் தனிகைவேல் சங்கம சுகமே உண்மையான சுகம் என்று உணர்த்துவதும் ஓதிமலை ஆண்டவரின் தரிசனமும் வழிபாடும் ஆகும். பஞ்சபூதங்களுக்கு அதீதமான சங்கம சுகத்தைப் போன்றதே பஞ்ச பூதங்களைக் கடந்த இறை சங்கம சுகமுமாகும். ஆனால் அது தனியாக தன்னை அறிவிப்பது, எல்லை கடந்தது, வார்த்தைகளால் விளக்க முடியாதது.

ஓதிமலை

திருஅண்ணமலையில் நம் ஆஸ்ரமத்தில் தயாராகும் அன்னதானத்திற்காக பொலியும் ருத்ராக்னி பற்றி ஏற்கனவே விவரித்துள்ளோம். இந்த ருத்ராக்னியை நம் சற்குரு போன்ற சித்தர்கள் தங்கள் உடலில் ஏற்று அந்த ருத்ராக்னி சக்திகளை சிறிது சிறிதாக அன்னதானம் மூலமும் மற்ற இறை காரியங்கள் மூலமாகவும் உலகெங்கும் விநியோகிக்கும் அதிசயம் ஓரளவு நீங்கள் அறிந்ததே. இத்தகைய விநியோகத்திற்கு உறுதுணையாய் நிற்பதே நம் சற்குரு கைகளில் தவழ்ந்த பாஞ்சசன்ய சங்கு ஆகும். ருத்ராக்னியின் மகிமையைப் பற்றி அடியார்கள் ஏதோ ஓரளவு கூட புரிந்து கொள்ள முடியாது என்றாலும் அவர் ருத்ராக்னி சக்திகளை சங்கு ஒலி மூலம் கையாண்டதை ரசிக்க காண கண் கோடி வேண்டும். பிரணவம் என்ற இறை சக்தி அழிவில்லாதது, அளவில்லாதது, மாற்றம் இல்லாதது. இந்த பிரணவ சக்தியை ஈர்த்து ஒலியாக மாற்றி அதை குறிப்பிட்ட விகிதாசாரத்தில் அளிக்க துணை புரிவதே ருத்ராக்னி என்ற ஐந்தெழுத்து சக்திகளாகும். இதை உணர்ந்தால் ஓரளவிற்கு ஓதிமலை ஆண்டவர் ஏன் ஐந்து தலைகளுடன் அருள்பாலிக்கிறார் என்று புக்தர்கள் புரிந்து கொள்ளலாம். நம் சற்குரு சங்கு ஒலிக்கும்போது அவர் ருத்ராக்னியை கையாளும் விதம் புரியாவிட்டாலும் அவர் கைவிரல்கள் சங்கின் மேல் நடனமிடுவது பிரமிக்க வைக்கும் காட்சியாகும். இந்த கைவிரல் பாவனைகளே ருத்ராக்னி சக்தியை குறிப்பிட்ட விகிதாரத்தில் விநியோகிக்கும் பணியை மேற்கொள்கின்றன. பாஞ்சசன்யம் என்பது ஐந்து வித சக்திகளின் தோற்றம், உற்பத்தி என்பதும் ஒரு பொருள். இவ்வாறு அன்னதானமாக தயாரான பிரசாதத்தின் சக்தியை ஐந்து மடங்காக தோற்றுவிப்பதும், ஐந்து விதமாக மாற்றி வைப்பதும் ருத்ராக்னியின் சக்திகளில் ஒன்று. இதை நிறைவேற்றுவதும் பாஞ்சசன்ய சங்கு நாதமே. நம் ஆஸ்ரமத்தின் முகப்பில் பொலியும் ஓம்கார த்ரயம்பக சக்கரமும் இவ்வாறு பிரணவ சக்திகளை கோள்கள், நட்சத்திரங்கள், வானிலிருந்து ஈர்த்து அதை சற்குரு விநியோகிக்கும் ருத்ராக்னி சக்தியாக்கி இந்த அனுகிரகத்தை அன்னதானம் பெறும் அடியார்களும் அருணாசலத்தை கிரிவலம் வரும் அடியார்களும் பெற துணை புரிகின்றது. இது மேலோட்டமான ஒரு பலனே. உண்மையில் நக்கீரரின் அகங்காரத்தை களைந்து அவர் தூல உருவத்தை மறைத்த அதே எம்பெருமானின் மூன்றாம் கண் சக்திதான் முருகப் பெருமானை உருவாக்கி இந்த உலகம் உய்ய வழிவகுத்தது அல்லவா ? ஒரு மனிதனுக்கு விளையும் காம எண்ணங்களை குழந்தைச் செல்லம் என்ற அற்புத சக்தியாக தோற்றுவித்து இந்த ஈர்ப்பு எண்ணங்களை இறைவனுடன் ஒன்றும் சக்தியாக மாற்றி அமைப்பதும் இறையருளே. இதை குறிக்கும் ஜாதகத்தின் ஐந்தாம் ஒன்பதாம் இடங்களுக்கு உரிய மூர்த்தியாக ஐந்து முகங்களுடன் ஓதிமலை ஆண்டவராக, ஒன்பதைக் குறிக்கும் சுப்ரமண்ய சுவாமியாக அருள்வதே முருகப் பெருமானின் தனிச் சிறப்பு. பாஞ்சசன்யம் என்ற சங்கு நாதம் இந்த பூலோகத்திற்கு மட்டும் உரித்தானது அன்று. பிரணவம் என்பது பரிணாமங்களை கடந்த பரிமாணத்துடன் விளங்குவது அல்லவா ? அதனால் எத்தனையோ லோகங்களில் ஆக்கல் என்னும் உற்பத்தியை சீரமைப்பதே பாஞ்சசன்யம். இதைப் புரிந்து கொண்டால்தான் ஸ்ரீகிருஷ்ண பகவானின் மகிமையும், பாஞ்சசன்ய சங்குநாத பெருமையும், நம் சற்குருவின் கருணையும், எண் எட்டின் பொருளும் பரிய வரும். இந்த சக்திகள் எல்லாம் புரிந்தால்தான் எட்டுக் கரங்களுடன் திகழும் ஸ்ரீஆண்டவர் மகிமையைப் பற்றியும் ஓரளவேனும் புரிந்து கொள்ளலாம். எது புரிந்தாலும் புரியாவிட்டாலும் ஆண்டவர் ஆண்டவர்தான் என்பது புரிந்தால் போதுமே.

எண் சக்திகள் இறை சக்திகளே

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது கண் பார்வை சக்தியை மட்டும் குறிப்பதன்று, எண்களின் மேன்மையைப் பற்றியும் இது விளக்குகிறது. புலன்களில் மிகவும் சக்தி உள்ளது கண் பார்வை. அந்தப் பார்வையால் நாம் உணர்வதே எண் சக்திகள். எழுத்துக்கள் கண் பார்வை இல்லாதபோது மறையலாம் ஆனால் எண் சக்திகள் என்றும் நிலைத்திருப்பவை அல்லவா ? மொழி சில நூறு ஆண்டுகளில் மாறி விடும் தன்மை உடையது. ஆனால் எண் சக்திகளோ என்றும் மாறுபாடு அறியாமல் நிலைத்திருப்பவையே. இக்காரணம் பற்றியே இறை மூர்த்திகளை எண் சக்திகளின் விளக்கமாக ஆறுமுகம், எட்டு கை, 12 கண்கள் என்பதாகப் படைத்தார்கள். இதைத்தான் மனிதன் இறைவனைப் படைத்தான் என்று கூறுகிறோம். இதிலும் மிகுதியாக ஆறுமுகப் பெருமானே எண்கண், எட்டுகுடி என்றவாறு எண் சக்திகளுடன் திகழும் தலங்களில் எழுந்தருளியதோடு மட்டுமல்லாமல் ஓதிமலையில் ஒன்று முதல் ஒன்பது எண்களையும் விளக்குவதாக அமைந்திருப்பதே ஓதிமலை ஆண்டவரின் சிறப்பாகும். இக்காரணம் பற்றியே சித்தர்கள் ஒவ்வொரு அடியாரும் குறைந்தது தங்கள் வாழ்க்கையில் ஒரு எண்ணையாவது, ஒரு எண்ணின் சக்தியையாவது பெறும்படி அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்யும்படி வற்புறுத்துகிறாரகள்.

மயில் இல்லாத ஓதிமலையா ?

சிலருக்கு ஒரு எண்ணைப் பற்றி புரிந்து கொள்வதை விட ஒரு ஜோடி எண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வது என்பது பிடித்த ஒன்றாக இருக்கும். அத்தகையோருக்கு உதவி செய்வதற்கும் பல திருத்தல மூர்த்திகள் உள்ளனர். உதாரணமாக, ஆறுமுகம் (5 எழுத்துக்கள் 6 முகம்), ஆண்டவர் (5 எழுத்து, 5 முகம், 8 கரங்கள்), எண்கண் (4 தலை, 8 குசா கண்கள்). இவை அல்லாமல் எல்லா முருகத் தலங்களிலும் பொலியும் எண் ஒன்பதிற்கான சக்தி. இது பூரணத்தைக் குறிப்பது. பூரணம் என்றால் அதற்கு மேல் பெருகாதது, விரிவடையாதது என்ற பொருள் கிடையாது, அள்ள அள்ளக் குறையாத தன்மையையே பூரணம் என்ற சொல்லால் குறிக்கிறோம். இத்தகைய பூரணமான சக்தியே முருக சக்தி. திருமண வைபவங்களில் பெண்கள் மாங்கல்யத்தில் மூன்று முடிச்சு போடுகிறோம். இந்த மூன்று முடிச்சுகளை குறிக்கும் சொற்களோ மூன்று, த்ரீ, தீன் என்று மாறினாலும் இவை குறிக்கும் தத்துவம் குருவின் அருளால் ஏற்பட்ட இந்த பந்தம், உறவு என்றென்றும் மாறாது துணை நிற்கும் என்பதே. ஆண் பெண் என்ற உறவு கணவன் மனைவி என்ற உன்னதமான உறவாக மாறுவதற்கு துணை நிற்கும் சாட்சி பூதமே குருவைக் குறிக்கும் திருமாங்கல்யமாகும். மேலும் திருமாங்கல்யம் என்பது பஞ்ச பூத சக்திகள் நிறைந்தது. பஞ்ச பூதங்களே இவ்வுலகில் என்றென்றும் நிலைத்திருப்பவை. ஆனால் இந்த பஞ்சபூதங்கள் பற்றி எவருமே கவலைப்படுவது கிடையாது என்பதால் சித்த பெருமக்கள் தகுதி வாய்ந்த பெரியோர்கள் மூலம் இந்த பஞ்சபூத சக்திகளை நிலைநிறுத்த பாடுபட்டு வருகிறார்கள். நம் சற்குரு (மனித அவதாரத்தின்) இறுதி மூச்சாக மைசூர் பஜ்ஜி மகாத்மியத்தை அளித்தார். இது கோவணாண்டி, சிறுவன் என்ற இரு மாபெரும் குரு தத்துவங்களின் மகத்துவத்தை உள்ளடக்கியதே. இந்நிகழ்ச்சியில் கோவணாண்டி பெரியவர் பஜ்ஜி சுட்டு எடுத்து வரும்படி சிறுவனை அனுப்புகிறார். ஏன் பஜ்ஜிதான் வேண்டுமா வடை, பிஸ்கட் என்ற எந்த உணவுப் பொருளிலும் இந்த குரு, சீடன் தத்துவத்தைப் பொலியலாமே என்ற சந்தேகம் பலருக்கும் தோன்றுவது இயற்கையே. ஆனால் குரு சீடன் என்ற உறவு வாழையடி வாழையாக தகுதியைப் பொறுத்து (சற்குருவின் வார்த்தைகளில் கம்ப்ளீட் சரண்டர்) அமைவதே.

ஸ்ரீபோகர் விபூதி குண்டம்
ஓதிமலை

70, 80 வயதைத் தாண்டிய பலரும் நம் குரு கோவணாண்டி கூட்டிய சபையில் நிறைந்திருக்க, “இந்த திருக்கயிலாயப் பரம்பரைக்கு தலைமை தாங்க விருப்பம் உள்ளோர் தங்கள் கையை உயர்த்தலாம்,” என்று கூறினார். கிட்டத்தட்ட அனைவருமே தங்கள் கையை உயர்த்தினர். அதை எல்லாம் பார்த்த நம் கோவணாண்டி அந்தக் காட்சியை சற்று நேரம் ரசித்த பின்னர், “நமது பரம்பரைக்கு உடனடியாக அடைக்க வேண்டிய கடன் தொகை கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய் இருக்கிறது,” என்றார். அவ்வளவுதான் உயர்த்தப்பட்ட கைகள் மெதுமெதுவே தாழ்ந்து போயின, கைகளை உயர்த்தியவர்களின் முகமும் அப்படியே. கோவணாண்டியின் விழிகளைச் சந்திக்கும் தைரியம் எவருக்கும் வரவில்லை. சிறுவன் மட்டும் பேந்த பேந்த விழித்துக் கொண்டு (சற்குரு கூறிய வார்த்தைகளே இவை) குருநாதரைப் பார்த்தான். கோவணாண்டி சிரித்துக் கொண்டே, “என்னடா இட்லி, நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார். சிறுவன் புன்முறுவலுடன், “எப்போதும் போல நீ என்ன சொல்கிறாயோ அதன்படி கேட்கிறேன்,” என்று உறுதி அளித்தார். இப்படி திருக்கையிலாய தலைமை பீடாதிபதி பொறுப்பேற்றவரே நம் சற்குரு. சிறுவன் வெங்கடராமன் பஜ்ஜியை கோவணாண்டிக்குப் பெற்றுத் தருவதற்காக கடலை பருப்பைக் காய வைத்து வெயிலில் காய்ந்தும், கடலைபருப்பு, வாழைக்காய் போன்ற இதர பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு அலைந்தும், இறுதியில் அந்த பஜ்ஜியில் ஒரு துண்டைக் கூட உண்ணுவதற்குப் பெற முடியாமல் அலைந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். பஞ்ச பூதங்களில் முதலில் தோன்றியது அக்னியே. அந்த அக்னி பூதத்தை உருவாக்கவே இவ்வாறு சிறுவன் தன் சற்குருவான கோவணாண்டியுடன் அலைந்து திரிந்தான் என்ற சற்குரு விளக்கும் தாத்பர்யத்தை உணர்ந்தால்தான் பஞ்ச பூதங்களின் விநியோகத்திற்காக, பஞ்ச பூதங்களின் பூஜைக்காக மகான்கள் படும்பாடு நமக்குத் தெரியவரும். திருஅண்ணாமலையில் யோகி ராம்சூரத்குமார் சார்மினார் சிகரெட் என்னும் கர்ம வினை தீர்க்கும் கருவி மூலம் அடியார்களின் தீர்க்க முடியாத கர்மங்களை தீர்த்த வரலாறு நீங்கள் அறிந்ததே. சார்மினார் சிகரெட் என்பது அக்னிக்கு உரித்தான ஒன்பது எழுத்துக்களுடன் பொலிவது என்பது ஒரு மேலோட்டமான காரணமே. இதைச் சற்று ஆழ்ந்து நோக்கினால் சில உண்மைகள் புரிய வரும். பசித்திரு, விழித்திரு என்ற வார்த்தைகளை ஆன்மீக முன்னேற்றத்திற்காக பெரியோர்கள் பயன்படுத்துவதுண்டு. இச்செயல்களின் போது இரு வகை அக்னி சக்திகள் தோன்றுகின்றன. பசித்திருக்கும்போது உள்ளே ஒரு அக்னியும் விழித்திருக்கும்போது வெளியே ஒரு அக்னி சக்தியும் தோன்றுகிறது. எனவே உள்ளும் வெளியும், ஆத்மாவையும் பிரபஞ்சத்தையும் இணைப்பதுதானே ஆன்மீகம். சிவராத்திரி விரதம், வைகுண்ட ஏகாதசி போன்ற விரதங்கள் எல்லாம் இந்த இரண்டு லோகங்களின் இணைப்பைக் குறிக்கும் பத்ததியாகவே செயல்படுகின்றன. ஆனால் இந்த இணைப்பை குருவருளின்றி நிறைவேற்ற முடியாது என்பதே உண்மை. உதாரணமாக, 9 என்ற எண்ணை 1+8, 2+7 ... என்றவாறு எல்லாம் சேர்த்து அமைக்கலாம் என்றாலும் அப்பா என்று மும்முறை ஓதி குரு தத்துவத்தால் அக்னி தத்துவத்தை உருவாக்கும் இரகசிய வித்தையை அந்த ஓதிமலை ஆண்டவரைத் தவிர வேறு யாரால் சாதிக்க இயலும் ? திருக்கோயில்களில் அஷ்டோத்திர நாமாவளி என்ற 108 போற்றித் துதிகளை ஓதுதல் இத்தகைய அக்னி சக்திகளால் இறைவனை வணங்கவும் நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், சமுதாயத்தில் அக்னியால் களையும் கர்மங்களைத் தீர்க்கவுமே என்பது இப்போது புரிகின்றது அல்லவா ? கோவணாண்டி எதிர்காலத்தில் சிறுவன் ருத்ராக்னியை கையாளும் மேன்மையை உணர்ந்ததால் அவனை இளமையிலேயே அத்தகைய பெரும் பொறுப்பிற்கு தயார்படுத்த தினமும் 1008 முறை அங்காளி தேவியை வலம் வரச் சொன்னார். சில சமயங்களில் ஒன்றிரண்டு பிரதட்சிணங்கள் குறைவதாக கூறி அதைச் சரி செய்யும் பொருட்டு அக்னிக்கு உகந்த 18, 27 போன்ற முறைகளில் வலம் வரச் சொல்வதும் உண்டு. கோவணாண்டியின் அக்னி கணக்கு அறிந்தோர் யார் உளரோ ?!

ஸ்ரீராஜராஜேஸ்வரி ஓதிமலை

இவ்வாறு அக்னி சக்தியை உணர்ந்தவர்களே ருத்ராக்னியின் மகிமையை உணர்ந்து அதன் மூலம் குண்டலினி என்னும் சக்தியை விழித்தெழச் செய்ய முடியும். இத்தகைய இயற்கையான வழிபாடுகளுக்கு உறுதுணையாக அமைந்ததே புல்லகம் (நெற்றிச்சுட்டி), புல்லாக்கு போன்ற பெண்கள் அணியும் ஆபரணங்கள் ஆகும். இத்தகைய ஆபரணங்கள் எல்லாம் தற்போது லட்சத்தில் ஒருவர் அணிவதாகவே அறிகிறோம். பெண்களின் ஆன்மீக முன்னேற்றமும் அப்படித்தானே இருக்கும் ? இரும்பறையில் வாழ்ந்து வந்த தெய்வானை என்ற பக்தை இத்தகைய புல்லாக்குடன் வாழ்ந்து ஆண்டவருக்கு சேவை செய்து வந்தாள். எனவே திருமணமாகாத கன்னிப் பெண்களும், சுமங்கலிகளும் இத்தகைய ஆபரணங்களை அணிவதோடு அல்லாமல் பிறருக்கும் இத்தகைய ஆபரணங்களின் மகிமையை எடுத்துக் கூறி அணியச் செய்வதால், தானமாக அளித்தலால் இறையருளை எளிதாகப் பெறலாம். காரைக்கால் அம்மையார் திருஅண்ணாமலையை கால்களால் வலம் வராமல் கைகளைத் தரையில் ஊன்றி வலம் வந்ததற்கு புனித மலைப் பகுதியில் தன்னுடைய பாதங்கள் படக் கூடாது என்பது ஒரு காரணமாக இருந்தாலும் கால் ரேகைகளை விட கை ரேகைகள் எளிதில் இறை சக்திகளை ஈர்க்கவல்லவையாக இருப்பதால் கைளை ஊன்றி திருஅண்ணாமலையை வலம் வந்து அவ்வாறு பெற்ற நற்சக்திகளை எல்லாம் அடியார்களுக்கு அனுகிரக சக்தியாக அளித்தார். அம்மையார் திருகயிலைக்கு அம்மையப்பரின் தரிசனத்திற்காக சென்ற போதும் இவ்வாறு தலைகீழாகவே நடந்து சென்றார். எனவே திருத்தலங்களில் காரைக்கால் அம்மையாரை 63 நாயன்மார்களில் ஒருவராக தரிசனம் பெறும்போது இவ்வாறு அவர் கயிலையிலும் அண்ணாமலையிலும் பெற்ற அபூர்வ பஞ்ச பூத சக்திகளையே தாரை வார்த்து அளிக்கிறார் என்பது புரிகின்றதல்லவா ? பாம்பின் கால் பாம்பறியும் என்பதாக தன்னுடைய சொற்பொழிவுகள் அனைத்திலும் காரைக்கால் அம்மையாரின் தியாகத்தை நினைவு கூர்வதுடன் எந்தக் கோயிலில் நாயன்மார்களின் பிரதிஷ்டை நடைபெற்றாலும் அதில் ஸ்ரீகாரைக்கால் அம்மையாரை பிரதிஷ்டை செய்யும் செலவை ஒத்துக் கொள்வதாக நம் சற்குரு பிரதிக்ஞை கொண்டிருந்தார். திருத்தலங்களுக்கு யாத்திரை செல்கையில் மயில், கருடன், கன்றுடன் கூடிய பசு, காளை, நாய் போன்ற சுபசகுனங்களின் தரிசனம் நலமே. இவைகளுக்கு உணவிடுவதற்காக பொறை, பிஸ்கட், பழம், தானியங்கள் இவற்றை உடன் கொண்டு சென்று தானமிடுதல் தரிசனப் பலன்களை பன்மடங்கு பெருக்கும் என்பது உண்மையே. இரும்பறை திருத்தலத்தில் தெய்வானை வழிபட்ட அரசமரம் இன்றும் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் இரும்பறை ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயிலில் அமைந்துள்ளதால் இந்த அரசமரத்திற்கு தாமே அரைத்த மஞ்சள் பூசி குங்கும பொட்டிட்டு 21 முறைக்கு குறையாமல் வலம் வந்து வணங்குதலால் உத்தம மண வாழ்க்கை பெறுவர் என்பது உறுதி. உத்தம குருவை தேடித் தருவதும், கடவுள் நம்பிக்கையை வலுப்படுத்துவதும் இத்தகைய வழிபாடுகளே. குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி, மூதாதையர்களின் நினைவு தினங்களில் நிறைவேற்றப்படும் இத்தகைய வழிபாடுகள் மூதாதையர்களின் அருளாசியை துரிதமாகப் பெற்றுத் தரும். ஒரே ஒரு பித்ரு நமக்கு கைகொடுத்தால் கூட போதும் நாம் கரைசேர்ந்து விடுவோம் என்று நம் சற்குரு உறுதி அளிப்பார்.

ஓதிமலை

திருப்போரூர் பிரணவமலை, திருச்சி மலைக்கோட்டை ஓங்கார மண்டபம், திருச்செந்தூர் பிரணவ கடல் அலைகள், திருவிடைமருதூர், திருச்சி உய்யக்கொண்டான் மலையில் உள்ள ஓங்கார பிரகாரங்கள் போல இரும்பறை சிவாலயத்திலுள்ள அரசமரமும் ஓங்கார நாத சக்திகளுடன் பொலிவதே. பிரணவ சக்திகள் ஓதும் இந்த போதி மரத்தை வலம் வந்து வணங்குதலாலும் இம்மரத்தினடியில் அமர்ந்து தியானம் புரிவதாலும் ஓங்கார நாதத்தில் லயிக்கும் பேரருளைப் பெறலாம். இந்த ஓங்கார நாத வெள்ளத்தில் மூழ்கி பல நாள் உணவின்றிக் கிடந்தவளே தெய்வானை ஆவாள். இந்தத் தான் என்ற அகம்பாவம் தம்மிடம் இருப்பதே தெரியாமல் கோடிக் கணக்கான மக்களை தங்கள் சீடர்களாகப் பெறுவதும் ஆன்மீகத்தில் இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றே என்பதை உணர்த்துவதும் நாம் தினந்தோறும் சந்திக்கும் நிகழ்ச்சிகளே. ஒரு முறை ஆன்மீகத்தில் இமயச் சிகரங்களாக கருதப்பட்ட இருவரை அழைத்து அவர்கள் கடவுளைப் பற்றி பேசும்படியாக ஒரு நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்தது. ஆனால், அந்த இருவரும் சந்தித்த சில நொடிகளிலேயே ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக் கொள்ளும் நிலை உருவானது. இது பற்றி நம் சற்குருவிடம் கேட்டபோது நாம் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று வெளிப்படையாக கூறிக் கொண்டாலும் அந்த மதக் கோட்பாடுகளையாவது நாம் கைக்கொள்ள வேண்டும். சித்தர்களுக்கு எந்த மதக் கோட்பாடும் கிடையாது. அவர்கள் உருவத்திற்கே அப்பாற்பட்டவர்கள் என்றால் மதம் என்ற குறிப்பிட்ட கொள்கைக்கு உட்படுவார்களா என்ன ? இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, “அடியேன் கடவுளின் கோட்பாடுகளையோ, சித்தாந்தங்களையோ குறைகூறும் எந்த பட்டி மண்டபத்திலும் கலந்து கொள்வது கிடையாது. காரணம் பட்டி மண்டபம் என்றால் ஒருவன் கடவுள் லீலையை உண்மை என்று கூறும்போது எதிர்க் கட்சியைச் சேர்ந்தவன் அந்த புகழ் பெற்ற இறைலீலை பொய் என்று மறுத்துக் கூற வேண்டும். அதுதானே பட்டி மண்டபம் என்பது. இறைவன் புகழைப் பாடவே இறைவன் வாயைப் படைத்தான், இறைவனுக்கும் இறை அடியார்களுக்கும் சேவை செய்யத்தான் இந்த கைகளைப் படைத்தான். அவ்வாறு இருக்கும்போது அடியேன் எப்படி ஒருவர் செய்வது தவறு என்று கூற முடியும். எனவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அடியேனை அழைப்பதாக வைத்துக் கொண்டால் அடியேன் அங்கு சென்றவுடன் கடவுளின் அவதாரங்களாக கருதப்படும் அவர்கள் காலில் விழுந்து வணங்குவேன்,” என்றார். சற்குரு கூறும் இந்த கருத்துக்களை பலமுறை கவனித்துப் படித்தால்தான் ஆன்மீகம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆன்மீகத் தலைவர்களாக கருதப்பட்ட, கருதப்படும் அனைவரும் இந்த கருத்துக்களை தங்கள் வாழ்க்கை முழுவதும் கையாண்டு புகழ் பெற்றவர்களே.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆமூர்

ஒரு முறை ஒரு அடியாருடைய பெண்ணிற்கு வரன் பார்த்தார்கள். அந்தப் பெண் கண்ணாடி போட்டிருந்ததால் வரும் வரன் ஒத்துக் கொள்வாரா என்ற சந்தேகத்தில் கண்ணாடிக்குப் பதிலாக காண்டாக்ட் லென்ஸ் பொருத்தி திருமணத்தை நிகழ்த்தி விட்டார்கள். இது பற்றி சற்குருவிடம் கேட்டபோது, “இன்னாருக்கு இன்னார் என்ற தேவசட்டம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றே. இருந்தாலும் மனித முயற்சியில் முடிந்ததை சரி செய்து கொள்ள முயற்சி செய்வதில் தவறேதும் இல்லை. அடியேன் அந்த பெண்ணிற்கு சாதாரண கண்ணாடியைத்தான் போடும்படி சொன்னேன். ஆனால் அவர்கள் தங்கள் அறிவை விளம்பரப்படுத்தும் முயற்சியாக கான்டாக்ட் லென்ஸ் வேண்டாம் என்ற அடியேனுடைய கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் அந்தப் பெண்ணிற்கு திருமணத்தை முடித்து விட்டனர்,” என்றார். பல வருடங்கள் ஆகியும் அந்தப் பெண் எந்த சிரமத்தையும் அனுபவிக்கவில்லை. இந்த விஷயம் தெரிந்தவர்கள் சற்குரு கூறும் விஷயத்தை அப்படியே நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்றே மேலோட்டடாக எண்ணத் தோன்றும். இதை ஆழ்ந்து நோக்கினால்தான் இதன் பின்னணியில் அமைந்துள்ள தெய்வீக விஷயங்கள் ஓரளவு புரிய வரும். சாதாரணமாக கண்ணாடி அணியாமல் கண்டாக்ட் லென்ஸ் அணிவதால் கண்களில் காளான் வளர்ந்து அதனால் கண்ணையே எடுத்து விட வேண்டிய நிலை உருவாகலாம். வசதி உள்ளவர்கள் வேறு ஒருவரின் கண்களை மாற்றிக் கொள்வதுதான் இதற்கு ஒரே வழி. ஆனால், இந்த காரியத்தில் உள்ளடங்கிய வேதனைகள் எத்தனை எத்தனை. நோயாளிகளின் கண்களை அவர்கள் இறந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தால்தான் அதை மற்றவருக்குப் பயன்படுத்த முடியும் என்பதால் பெரும்பாலும் அத்தகைய நோயாளிகளின் உயிரை அவர்களின் விருப்பத்திற்கு மாறாகப் பறித்தே மற்றவர்களுக்குப் பொருத்தும் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகின்றது. மேலும் அவ்வாறு மாற்றப்பட்ட பழைய கண் வேறு எதற்கும் பயன்படாது என்பதால் அந்த வீணாண கண்ணை உரிய சடங்குகளின்றி குப்பைத் தொட்டி போன்ற இடங்களில் வீசி எறிந்து விடுகின்றனர். எனவே இவ்வாறு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் திரும்பவும் எத்தனை பிறவி எடுத்தாலும் அந்த வீணாண கண் உரிய நற்கதி அடையாததால் அவர்கள் மீண்டும் மீண்டும் கண் கோளாறுகளுடனே பிறவி எடுக்க நேரிடும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீபிரணவாம்பிகை சமேத ஸ்ரீகைலாசநாதர்
ஓகை குடவாசல்

சற்குருவை நம்பி வாழும் ஒருவர் இத்தகைய வேதனையை அடையக் கூடாது என்பதால் அந்த அடியார் காண்டாக்ட் லென்ஸ் பொருத்தினாலும் எத்தகைய அறுவை சிகிச்சையையும் அவர் மேற்கொள்ள தேவையில்லாதபடி சற்குரு காப்பாற்றினார் என்பதே உண்மை. அதே சமயம் அவர் சற்குருவின் வழிகாட்டுதலின்படி கண்ணாடி அணிந்திருந்தால் எத்தனையோ பிறவிகளை மாய்த்து தெய்வீகத்தில் பல படிக்கட்டுகளை கடந்திருக்க முடியும் என்பதே உண்மை. இவ்வாறு தான்தோன்றித் தனமாக செயல்படாமல் சற்குருவின் வழிகாட்டுதலை கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்றும் சக்தியை அளிப்பதே ஓதிமலை ஸ்ரீஆண்டவர் வழிபாட்டு மகிமையாகும். கண் அறுவை சிகிச்சை மட்டுமின்றி எல்லாவித அறுவை சிகிச்சைகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்பதால் அடியார்கள் இவ்விஷயத்தில் மிக மிக கவனமாகச் செயல்படும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அறிந்தோ அறியாமலோ மேற்கண்ட அறுவை சிகிச்சைகளுக்கு ஆட்பட்டோர் தக்க சற்குருவை நாடி விளக்கங்களைப் பெறும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சற்குருவின் வழிகாட்டுதலைப் பெறாதவர்கள் குடவாசல் மூர்த்திகளை உள்ளன்புடன் பிரார்த்தித்து வருதலால் தக்க வழிகாட்டுதலை நாளடைவில் பெறுவார்கள் என்பது உண்மை. நமசிவாய வாழ்க என்று மாணிக்க வாசகப் பெருமான் இறைவனைப் பாடும்போது இறைவனின் சக்திகளை பஞ்ச பூத சக்திகளாக பகுத்து அதை அட்சர வடிவில் உலகத்தவர்க்கு அளிக்கிறார் என்பதே உண்மை. இதே முறையில் ஓதிமலை ஆண்டவரின் ஐந்து முகங்கள் அருளும் இறை சக்திகளை மக்களுக்கு அளிப்பதற்காக ஸ்ரீபோகர் போன்ற சித்த பெருமக்கள் ஹோமம், வேள்விகளை நிறைவேற்றி மக்களுக்கு அவ்வப்போது அருள்புரிந்து வருகிறார்கள். இந்த சக்திகளை முறையாகப் பெற விரும்பும் அடியார்கள் ஓங்கார வடிவம் பொறிக்கப்பெற்ற திருவாசியை ஸ்ரீஆண்டவருக்கு சமர்ப்பித்தல் சிறப்புடையதாகும். பொதுவாக யாழி அமைந்த திருவாசிகள் எதிர்மறை சக்திகளைக் கூட்டுவிப்பதால் அத்தகைய யாழி உருவங்களை அகற்றி ஓங்கார வடிவங்களை அமைப்பதையே நம் சற்குரு சிபாரிசு செய்வதால் நம் ஆஸ்வரமத்திலும் வள்ளி மணாளனுக்கு இத்தகைய ஓங்கார வடிவமே யாழிக்குப் பதிலாக அமைந்துள்ளது என்பது ஒரு சிலரே அறிந்த இரகசியமாகும். ஒருமுறை பெண்கள் காயத்ரீ மந்திரத்தை ஜபிக்கக் கூடாது என்று சொல்கிறார்களே இது சரியா என்று சற்குரு அவர்களிடம் கேட்டபோது சற்குரு சிரித்துக் கொண்டே, “காயத்ரீ என்பதே ஒரு பெண்ணின் நாமம்தானே ?” என்று திருப்பிக் கேட்டார். அது போல் பெண்களும் பிரணவம் ஜபிக்கலாமா என்ற சந்தேகத்திற்கு விடையளிப்பது போல் ஈஸ்வரியே ஸ்ரீபிரணவாம்பிகையாக எழுந்தருளிய திருத்தலமே ஓகையாகும். இவ்வாறு ஓகை, சுவாமிமலை, ஓதிமலையைத் தொடர்ந்து தரிசனம் செய்து வழிபடுவதும் பிரணவ இரகசியங்களை அறிந்து கொள்ளும் ஒரு மார்கமாகும்.

பிரணவ உபதேசம் ஓதிமலை

ஒருமுறை ரிஷிகேஷ் சிவானந்தா தன்னுடைய பாரத யாத்திரையின்போது தர்மபுர ஆதீனத்தைச் சந்திக்க நேர்ந்தது. சுவாமி சிவானந்தாவிட வயது மூத்தவரான அவர் சுவாமியை எப்படி கைகூப்பி நமஸ்காரம் செய்வது என்று தயங்கி வெறும் புன்முறுவலுடன் வரவேற்றார். ஆனால் சிவானந்தாவோ கடவுளை உணர்ந்தவர் அல்லவா ? சன்னிதானத்தின் உள்ளத்தை அறிந்து கொணட அவர் மறுவிநாடி சரேலென தரையில் பாய்ந்து சன்னிதானத்தின் காலைப் பற்றினார். அவ்வளவுதான் உடனே தன்னுடைய தண்டம் காற்றில் பறக்க தர்மபுர ஆதீனம் சுவாமி சிவானந்தாவை வாரித் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டார். அப்போது எழுந்த குரல், “சிவானந்தா மகராஜ் கீ ஜெய், சிவானந்தா வாழ்க,” என்பதே. அடியார்கள் ஒருமித்துக் குரல் கொடுத்தது பணிந்தவனே பக்தன் என்ற நம் சற்குருவின் வார்த்தைகளை உறுதிப்படுத்துகிறது அல்லவா ? இதுவே சித்தர்களின் பாடம். தங்கள் செய்கையால் மற்றவர்களுக்குப் பாடம் புகட்ட அவர்கள் தயங்குவதே இல்லை. இதைத்தான் நம் சற்குரு விளக்கினார். இரு ஆனமீகச் சிகரங்கள் சந்தித்துக் கொள்ளும்போது ஒருவரையொருவர் மற்ற அனைவரும் தரிசிக்கும்படி வணங்குவதால் லட்சக் கணக்கான மக்களுக்கு, பக்தர்களுக்கு பணிவின், பக்தியின் உயர்வை விளக்கும் சந்தர்ப்பமாக அது விளங்கும், இதுவே சந்தர்ப்பங்கள் சிங்காரித்துக் கொண்டு வருவதில்லை என்பார் நம் சற்குரு. இத்தகைய அற்புத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உலகிற்கு பணிவின் சிகரத்தைக் காட்டியதே ஓதிமலை பிரணவ உபதேசம் என்பது இப்போது விளங்குகிறது அல்லவா ? இவ்வாறு ஒரு லட்சம் மக்கள் திரளாகக் கூடினால்தான் தங்கள் பணிவைக் காட்டி கடவுள் மகிமையைக் கூற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரே ஒருவரிடம் கூட தன்னுடைய பணிவைக் காட்டி கடவுள் பெருமையை உணர்த்தியர் எம்பெருமான் மட்டுமல்ல அது நம்பெருமானும்தான். ஆம், ராமாயணத்தில் கூனியின் வளைந்த இடுப்பைச் சரி செய்ய ராம பிரான் களி மண் உருண்டையை உருட்டி அவள் மேல் அம்பாக எய்தான் என்று சித்தர்கள் சுவடி உரைக்கின்றது. களி மண் உருண்டையாக உருட்டுவதற்கு வசதியாக இருப்பது மட்டுமல்ல எத்தகைய இறை சக்தியையும் கிரகிக்கக் கூடியதே களிமண் ஆகும். அதனால்தான் கல் விக்ரஹங்களை விட களிமண்ணாலான சுதை மூர்த்திகளுக்கு சக்தி அதிகம் என்பதை நாம் அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம்.

தெய்வானை வழிபட்ட அரசமரம்
இரும்பறை

இதன் பொருட்டே சுதையாலான அன்பில் ஸ்ரீரெங்கநாதரின் அருமை பெருமையை விளக்க அத்தலத்தில் அன்னதான ஏற்பாடுகளைச் செய்தார் நம் சற்குரு என்பதை அறிந்தோர் ஒரு சிலரே. உண்மையில் கூனல் என்பது உடல் சக்தியின் சுருக்கம் அல்ல மனத்தின் கூனல் சக்திகளே என்பதை குறுகிய உடல்கள் உயிர் மறைந்த பின்னர் நேராகி சரியான நிலைக்கு திரும்புவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். முந்தைய பிறவி ஒன்றில் பேரழகியாகத் திகழ்ந்தவளே ராமாயணக் கூனி ஆவாள். அழகின் நிலையாமையை உணர்ந்து பரம பதம் அடைய அவள் விரும்பியபோது பெற்ற பிறவியே கூனி ஆகும். ராமர் காட்டிற்கு ஏகுதல் ராமாயணக் கருவிற்கு மூலமான மந்தரையின் உபதேசம் என்றாலும் அதே மந்தரை தன் தவறை உணர்ந்து கடவுள் பக்தியில் மூழ்கி இறைவனடியைச் சேர துணை புரிந்ததும் ராமருடைய களி மண் பாணம் என்பதை உணர்ந்தால்தான் சற்குரு கூறும், “நாங்கள் போடும் விதை என்றைக்கு இருந்தாலும் முளைக்கும்,” என்ற வார்த்தைகளின் பொருள் புரியவரும். இவ்வாறு எத்தகைய உடல் கூனம், மனக் கூனங்களையும் சரி செய்யும் தன்மை இயற்கையாக அமையப் பெற்றதே ஓதிமலை ஆகும். பொதுவாக சினிமாத் துறையில் கர்மங்கள் நிறைந்திருப்பதால் அந்தத் துறைக்கு யாரையும் சிபாரிசு செய்வதில்லை நம் சற்குரு. அப்படியும் அத்தி பூத்தாற்போல் குபேர லோகத்தைச் சேர்ந்த ஒரு அடியார் சினிமாத் துறையில் பணிபுரிந்தும் சற்குருவின் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்ந்தார் என்பது அதிசயமே. ஒரு முறை அவருக்கு இதயத்தில் சில பிரச்னைகள் ஏற்படவே அவர் மருத்துவரைச் சென்று பார்த்தார். மருத்துவரோ அவரைப் பரிசோதித்து விட்டு, “தங்களுடைய இதயம் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால்தான் உங்களை உயிரோடு பார்க்கலாம்,” என்று கூறவே வேறு வழியின்றி தன் மகளின் திருமணத்திற்கு கூட முயற்சி செய்யாத பிராவிடெண்ட் தொகையை கடனாகப் பெற்று மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்கு தயாரானார்.

விடியற்காலையில் அவரை அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது அங்கு வந்த தலைமை மருத்துவர் அந்த அறுவை சிகிச்சை குறித்து ஏதோ சந்தேகம் தோன்றுவதாகக் கூறவே மீண்டும் அவர் இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்தார்கள். என்ன ஆச்சரியம், அவருடைய இதயம் எந்த வித பிரச்னையையும் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் மருத்துவர்கள், “சரி, இப்போதைக்கு இவருக்கு ஆபரேசன் தேவையில்லை. வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுங்கள். ஏதாவது பிரச்னை என்று தெரியவந்தால் தாமதப்படுத்தாமல் உடனே வந்து எங்களுக்குத் தெரிவியுங்கள்,” என்று வழக்கமான பாணியில் கூறி அனுப்பி விட்டனர். உடனே சற்குருவிடம் ஓடோடி வந்தார் அந்த அடியார். “வாத்யாரே, நான் ஆபரேஷனுக்காக வைத்திருந்த பணம் இப்போது தேவைப்படவில்லை. தாங்கள் நிறைவேற்றும் ஏதாவது நற்காரியத்திற்கு இந்த சிறிய தொகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று கண்களில் நீர் மல்க அந்த தொகையை சற்குருவிடம் அளிக்க சித்தமானார். சற்குருவோ, “ஏம்பா, நீ ஆயுள் முழுவதும் சம்பாதித்த தொகையை அடியேனிடம் கொடுத்து விட்டு என்ன செய்வாய். அதை வாங்கிக் கொள்ளும் அளவிற்கு அடியேனுடைய மனது கல்லாகி விடவில்லை. நீ இந்த பணத்திற்காக படும்பாடு அடியேனுக்குத் தெரியும். அதனால் நீ வாங்கிய கடனை திரும்பக் கொடுத்து விடு. அது முடியாவிட்டால் மிகவும் அத்தியாவசியமான ஒன்றை வாங்கிக் கொள்,” என்று தாயினும் சாலப் பரிந்து அந்தப் பணத்தைப் பெற மறுத்து விட்டார். சற்குருவின் அரவணைப்பு என்பது ஏதோ 15 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி கிடையாது. அது என்றும் தொடரும் இனிய வைபவமே என்பதைப் புலப்படுத்துகிறது சமீபத்தில் மருத்துவ மனையில் சேர்ந்த ஒரு அடியாரின் அனுபவம். அவருடைய நாமமும் நான்கு எழுத்து கொண்டதே. இங்கு ஒரு சிறிய மாற்றம். அந்த அடியாரின் கணவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதா வேண்டாமா என்பது பற்றி மருத்துவர்களே ஒரு குழப்பமான சூழ்நிலையைச் சந்திக்க அந்த அடியாரோ சற்குருவை நம்பி திருநீற்றுப் பதிகத்தை தொடர்ந்து பாராயணம் செய்ய ஆரம்பித்தார். விடியும்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்று முடிவு செய்தார்கள். எனவே 32 பதிகங்கள் உயிர் காக்கும் என்றால் அந்த எழுத்துகளை சக்திகளாக கொண்ட ஓதிமலை ஆண்டவரின் பெருமையை விளக்கத்தான் முடியுமா ?

ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் சிவாலயம்
காஞ்சிபுரம்

நம் சற்குரு அவர்களுடன் உழவாரத் திருப்பணி புரியும் பாக்கியம் பெற்றோர் அடைந்த பலன்களை வார்த்தைகளால் விளக்க முடியாது. உதாரணமாக திருபுவனம் ஸ்ரீசரபேஸ்வரர் ஆலயத்தில் திருப்பணி நிகழ்த்தியபோது அங்குள்ள அடியார்கள் சிலரை அவ்வாலயத்தில் அரிதாக விளங்கிய கோபுரம் தாங்கி தூண்களை சுத்தம் செய்யம்படிக் கூறினார்கள். அதே சமயத்தில் அம்மூலத்தானத்தை சுத்தம் செய்யும் பொறுப்பு வேறு சில அடியார்களுக்கு அளிக்கப்பட்டது. அந்த அடியாரில் ஒருவர் தனக்கு அயல்நாட்டுக் கம்பெனியில் பணி புரிந்தாலும் அதை விடச் சிறந்த ஒரு கம்பெனியில் பணி கிடைக்குமா என்பதைப் பற்றிய சிந்தனையிலே உழன்றவாறே அத்திருத்தல மூலத்தானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதை அறிந்த சற்குரு நெருங்கிய அடியார்களிடம், “இந்த கோபுரம் தாங்கி தூண்களை ஒருவர் தூய்மை செய்வதால் கிடைக்கும் புண்ணியமே பல தலை முறையைக் காக்கும். அந்த புண்ணியத்தை வைத்துக் கொண்டு அந்த அடியார்கள் படும்பாட்டை எப்படி வர்ணிப்பது என்று அடியேன் திகைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படியானால் இந்தத் திருக்கோயில் மூலத்தானத்தில், கருவறையில் உழவாரப் புணி புரியும் அடியாருக்கு எத்தகைய பரிசுகள் காத்திருக்கும் ? இதை அறியாத அந்த அடியாரோ அயல் நாட்டுக் கம்பனி பதவியைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறானே ? இதை விதி என்று சொல்வதா இறை லீலை என்று சொல்வதா ?” என்று ஒன்றும் அறியாத குழந்தையாய்க் கேட்டார் சற்குரு. ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருத்தலத்தில் நிலை கொண்டுள்ள இத்தகைய கோபுரம் தாங்கித் தூண்களையே இங்கு நீங்கள் தரிசனம் செய்கின்றீர்கள். திருபுவனம், திருஅண்ணாமலை ஸ்ரீகம்பஹரேஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் பொலியும் இத்தகைய கோபுரம், இறை மூர்த்திகளைத் தாங்கும் பேறுபெற்ற தூண்களை வணங்கித் துதித்து உரிய அனுமதியுடன் குங்குமப்பூ, நல்லெண்ணெய் கலந்த காப்பிட்டு மாதுளம் பழங்கள், பழ ரசங்களை தானம் அளித்தல் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். கோயில் முழுவதுமாகத் தூய்மை செய்யும் வாய்ப்பு கிட்டாவிட்டாலும் இந்தக் கோபுரம் தாங்கித் தூண்களைச் சுற்றியுள்ள குப்பை கூளங்களை அகற்றி, பச்சரிசி மாக்கோலம் இட்டு அவரவர் பிறந்த நாளுக்கு உரிய எண்ணைக் குறிக்கும் முறையில் இந்தத் தூண்களை வலம் வந்து வணங்குவதும் அனைவரும் நிறைவேற்றக் கூடிய எளிய வழிபாடே. சங்கோஜம் காரணமாக கணவன், மாமனார், மாமியாருக்கு பாத பூஜை நிறைவேற்ற முடியாதவர்கள் இத்தகைய வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள். இத்தகைய வழிபாட்டில் ஓதிமலையில் அருள்புரியும் ஸ்ரீஆண்டவரின் பங்கு என்ன என்று உங்களுக்கு கேட்கத் தோன்றுகின்றதா ? அப்படியானால் நீங்கள் இன்னும் இந்த கட்டுரையை மனதில் வாங்கி முழுவதுமாகப் படிக்கவில்லை என்பதும் ஒரு பொருள்.

ஏகமுக தரிசனம்
திருஅண்ணாமலை

நாம் இறைவனுக்கு நைவேத்யமாக பிரசாதம் படைக்கும்போது இறைவனிடமிருந்து ஒரு ஜோதி தோன்றி அது பிரசாதத்தை அடைந்து, அங்கிருந்து நம் இதயத்தை அடைந்து மீண்டும் இறைவனிடமே அந்த ஜோதி ஐக்யம் பெறும். இதை சாதாரண மனிதர்கள் உணரா விட்டாலும் நாளடைவில் இவ்வாறு உடல், மனம், உள்ளம் இத்தகைய அன்பு நிறைந்த நிவேதனத்தால் தூய்மை அடைந்து அங்கே முழுமையான ஆத்ம நிவேதனம் நிறைவேறுகிறது. இந்த ஆத்ம நிவேதனம் சுட்டும் முக்கோணத்தின் தூல வடிவமே ஸ்ரீஆண்டவர் உறையும் ஓதிமலை. திருஅண்ணாமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்திலிருந்து மேலேறிச் செல்லும் பாதை ஒன்று உண்டு. இதன் மேலுள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்குச் சென்று ரமண மகரிஷி நீராடுவது வழக்கம். ஒரு முறை அவ்வாறு செல்லும்போது வாழை இலை அளவிற்கு பெரிதாக இருந்த ஒரு ஆலமர இலை வழியில் கிடப்பதைக் கண்டார். உடனே அது எம்பெருமான் உறையும் கல்லால மரத்தின் இலையே என்பதை உணர்ந்து கொண்டார். பக்தனுக்கு இறைவனைக் காணும் ஆவல் மிகுவது இயற்கையே. வந்த வேலையை விட்டு விட்டு ஸ்ரீதட்சிணா மூர்த்தியின் தூல உடலை தரிசிக்கும் ஆவலில் அந்த ஆலமரத்தைத் தேடி அடி எடுத்து வைத்தார். அவ்வளவுதான் ... அவர் தொடை அருகில் இருந்த ஒரு தேனிப் புற்றின் மேல் அவரை அறியாமல் இடிக்க அந்தப் புற்றில் இருந்த தேனீக்கள் அனைத்தும் வெளிவந்து மகரிஷியைப் பதம் பார்க்க ஆரம்பித்து விட்டன. ரமணர் சாதாரண மனிதர் அல்லவே, மகரிஷி அல்லவா ? அதனால் அவர் அமைதியாக அந்தப் புற்றின் அருகில் அமர்ந்து கொள்ள அங்கிருந்த தேனீக்கள் எல்லாம் மகானின் உடலைச் சுவைத்தன. அனைத்துத் தேனீக்களின் ஆரவாரம் அடங்கிய பின்னர் ரமணர் சிரமப்பட்டு தன் ஆஸ்ரமத்திற்குச் சென்றார். ஆஸ்ரம அடியார்கள் அந்தத் தேனீக்களின் கொடுக்குகளை எல்லாம் எடுத்து விட்டு அவர் உடலின் மேல் தேங்காய் எண்ணெயை தடவி சிகிச்சை பார்த்தனர். என்னதான் பகவான் ரமண மகரிஷியின் எண்ணம் இறைவனை நேருக்கு நேர் தரிசனம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை உடையதாக இருந்தாலும் அவர் இறைவனை உள்ளத்தில் தரிசிக்கும் கொள்கையிலிருந்து (ஏகமுகம்) மாறுபடுகிறது அல்லவா ? இதைத்தான் பெரியோர்கள் ஆசையை அறுமின் ஆசையை அறுமின் ஈசனோடேனும் ஆசையை அறுமின் என்றார்கள். இதை விளக்கும் உதாரணமாகத் திகழ்வதே மேற்கண்ட நிகழ்ச்சி. இத்தகைய ஒருமித்த மன உறுதிப்பாட்டை அளிக்கக் கூடியதே ஓதிமலை ஆண்டவர் வழிபாடாகும்.

கண்டிகதிர்காம எரிமேனி தரிசனம்
திருஅண்ணாமலை

இறைவனை நீலகண்டன் என்று வர்ணிக்கிறோம், செந்தழல் மேனியன் என்றும் அவரை கூறுவதுண்டு. இரு வேறுபட்ட வண்ணக் கோலங்களுடன் இறைவன் திகழ்வதுபோல் தோன்றினாலும் சற்றே கூர்ந்து நோக்கினால் இரண்டும் ஒன்றே என்ற உண்மை புரிய வரும். இந்த உண்மையைப் புரிந்த சேக்கிழார் பெருமான் திருநீலகண்டனை முதலில் வைத்தும் ஆரூர் நம்பியை இறுதியில் வைத்தும் பெரிய புராணம் என்னும் தொண்டர் புராணத்தைப் பாடியுள்ளார். இதைத்தான்தான் சித்தர்கள் சூரிய நிற மாலையில் உள்ள ஏழு வண்ணங்களைக் குறிக்கும் ஒவ்வொரு வண்ணமும் ஏழு வண்ணங்களால் ஆனதே என்று வண்ண இரகசியத்தை தெரிவிக்கிறார்கள். இந்த வண்ணக் கலவையை நேரில் அடியார்கள் தரிசிக்கக் கூடிய ஒரே தலமே ஓதிமலை ஆகும். ஏழு ஏழாகப் பரிணமிக்கும்போது அங்கு 49 வண்ணக் கலவைகள் உருவாவதால் அது ஓதிமலையைக் குறிக்கும் நான்கு எழுத்தாக அமைகிறது என்பதும் ஒரு வண்ண இரகசியமாகும். ப்ளூ பிலிம் என்னும் காமத்தைக் குறிக்கும் படங்களே இறைவனை அடையவும் துணை புரியும் காமக் கதிர்களாக உடலில் வியாபிக்கின்றன என்ற உண்மையும் அந்த காமக் கதிர்களை முறையாகப் பேணும்போது அவை இறைவனை அறிவிக்கும் சுக்லாம்பரதரக் கதிர்களாக மாறுகின்றன என்ற இரகசியத்தை புலப்படுத்துவதும் ஸ்ரீஆண்டவர் வழிபாடே. இதுவே கதிர்காமம் கூறும் இரகசியம். ஆரம்பத்தில் நீல வண்ணனாக, பெருமாளாக காட்சி அளிக்கும் இறைவன் இறுதியில் செந்தழல் வண்ணனாக காட்சி அளிக்கிறான் என்று விளக்குவதோ ஆரம்பத்தில் ராமகிருஷ்ணரைப் போல் நீல ஆகாயம், நீலக் கடலை இறைவனாகத் தரிசிக்கும் பக்தன் பக்தி முதிர்ச்சியில் உள்ளே செந்தழல் சக்தியாக, எரி மேனியனாக காட்சி பெறுகிறான் என்பதும் இறை தரிசனத்தைப் பற்றிய பல்வேறு விளக்கங்களே.



ஸ்ரீஓதிமலை ஆண்டவர்

ஓதிமலை ஆண்டவரே
சத்ய ஜோதி நித்ய ஜோதி நீயே
பக்தி ஜோதி முக்தி ஜோதி நீயே
ஆத்ம ஜோதி ஐக்ய ஜோதி நீயே

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam