ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
ஸ்ரீகல்யாணராமர் திருத்தலம் மீமிசல் புதுக்கோட்டை. திருமணம் நிறைவேறிய பின் புதுப் பெண்ணிற்கு மாப்பிள்ளை அவள் விரும்பும் பரிசுப் பொருட்களை அளிப்பது உண்டு. அவ்வாறு சீதைப் பிராட்டி கோதண்டராமரிடம் வேண்டியது என்ன தெரியுமா ? உத்தம சிவனடியார் ஒருவரின் தரிசனத்தையாவது தனக்கு பெற்றுத் தந்தருளுமாறு வேண்டினாள் சீதை. அவள் வேண்டுகோளை ஏற்று ஒன்றுக்கு இரண்டு, அதாவது ஸ்ரீவியாக்ரபாதர், ஸ்ரீபதஞ்சலி முனிவர் என்ற இரு உத்தம அடியார்களின் தரிசனத்தைப் பெற்றுத் தந்து சீதை விரும்பியதன் பேரில் சம்பு நடன அஷ்டகம் என்றும் அற்புத துதி பாடும் அனுகிரகத்தையும் ஸ்ரீபதஞ்சலி முனிக்கு அளித்து கௌரவித்தார் ஸ்ரீகோதண்டராமர்.
ஸ்ரீசெந்தாமரைக் கண்ணக் திருத்தலம், திருவெள்ளறை. காலை மதியம் மாலை என்ற மூன்று வேளைகளிலும் அவசியம் சந்தியா வந்தன வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்பது கோபுர கலச தரிசனம், 32 தோப்புக் கரணம், பால் விருட்சங்களுக்கு நீர்வார்த்தல் போன்றவை எவரும் நிறைவேற்றக் கூடிய எளிய சந்தியா வந்தன வழிபாடுகளாகும்.
ஸ்ரீமுனீஸ்வர சுவாமி, பழைய குற்றாலம், தென்காசி. முனீஸ்வரர், கருப்பண்ண சுவாமி போன்ற காவல் தெய்வங்களை அவசியம் அனைவரும் வழிபட்டு வர வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு இத்தகைய காவல் தெய்வங்களின் வழிபாடு அவசியம். பழைய குற்றாலத்தில் அருள்புரியும் இந்த முனீஸ்வர சுவாமியை எல்லா நாட்களிலும் விசேஷமாக வழிபட்டிடலாம். தாமே தொடுத்த வாசனை மலர் மாலைகளை முனீஸ்வரருக்கு சாற்றி, ”ஏழு முனிகளே ஏழையைக் காத்தருள்வீர்” என்று பிரார்த்தித்து வந்தால் கணவன், சகோதரர்கள், உறவினர்கள் என ஆண் துணை இல்லாத கன்னிப் பெண்களும், இள வயது பெண்களும் தக்க பாதுகாப்பு பெறுவர்.
ஸ்ரீவனதுர்கை அம்மன், பழைய குற்றாலம். திருமணமான பல பெண்களுக்கு உடல் ரீதியான எந்தவித குறைபாடுகள் இல்லாவிடினும் குழந்தை பேறு இல்லாமல் வருந்துகிறார்கள். இதற்கு பல காரணங்களில் ஒன்று வன துர்கை வழிபாடுகளை முறையான நிறைவேற்றாததாகும். பொதுவாக, காட்டுப் பகுதிகளில் இருப்பவர்கள்தான் வனதுர்கை அம்மனை வழிபட வேண்டும் என்று பலரும் தவறான கருத்துடன் இருக்கிறார்கள். வன துர்கை என்றால் என்றும் இளமையாக இருப்பவள் என்று பொருள். எனவே இளமையை விரும்பும் அனைவரின் தெய்வமே வனதுர்கை ஆவாள்.
அஹோராத்ர தீர்த்தம், ஒப்பிலியப்பன் கோவில், கும்பகோணம். அனைத்து நாட்களிலும் திருத்தலங்களில் அமைந்துள்ள திருக்குளங்களில் நீராட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட சில தலங்களில் இரவு நேரங்களில் நீராடக் கூடாது என்ற நியதி உண்டு. ஆனால், இத்தீர்த்தத்தில் எந்நேரம் வேண்டுமானாலும் நீராடி அற்புத பலன்களைப் பெறலாம். இத்தீர்த்தத்தில் நீராடி மஞ்சள் வண்ண ஆடைகளை தானம் அளித்தல் நலம்.
ஸ்ரீஉக்ரப்ரத்யங்கிரா திருத்தலம், ஐயாவாடி, கும்பகோணம். பில்லி, சூன்யம், ஏவல் போன்ற துன்பங்களால் வாடுவோர் இத்தலத்தில் தேவியை வணங்கி சர்க்கரை பொங்கல் தானமாக அளித்தலால் நலம் பெறுவர். தங்கள் கைகளால் இறைத் துதிகளை ஓதி சமைத்தல் அவசியம். எக்காரணம் கொண்டும் வெளியிடங்களில் வாங்கி தானம் அளித்தல் கூடாது.
ஸ்ரீகன்னி மூலை கணபதி ஸ்ரீவடஜம்புநாத சுவாமி திருத்தலம், திருவெள்ளறை. பலர் அடிக்கடி பணம், கடியாரம், கைப்பை போன்று தங்கள் பொருட்களை தொலைத்துக் கொண்டே இருப்பார்கள். இத்தகையோர் இத்தல விநாயர் முன் வாரம் ஒரு முறையாவது 108 தோப்புக் கரணங்கள் இட்டு பிரார்த்தித்து வந்தால் திருடுகள் குறையும். ஞாபக மறதியால் ஏற்படும் துன்பங்கள் விலகும்.
ஸ்ரீஆதித்ய தட்சிணா மூர்த்தி திருவெள்ளறை சிவத்தலம். பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே குறிப்பாக ஆண் வாரிசுகளால் ஏற்படும் மனத்தாங்கல்களைக் களையக் கூடியவரே இத்தல தட்சிணா மூர்த்தி பெருமான் ஆவார். ஞாயிற்றுக் கிழமைகளில் சர்க்கரைப் பொங்கல் படைத்து தானமளித்து வர குடும்ப ஒற்றுமை பெருகும். பிள்ளைகள் மனம் மாறுவர். சூரிய தரை, புத்தி, அந்தரங்களால் குடும்பத்தில் அமைதி இழந்து வாடுவோர்கள் இத்தலத்தில் வழிபடுவதால் கண் கூடான பலன்களைக் காணலாம்.
ஸ்ரீவடஜம்புநாத சுவாமி, திருவெள்ளறை. அடியார்கள் துயர் தீர சற்குருமார்களும், மகான்களும் தினமும் இத்தல இறைவனின் முன் பிரார்த்திக் கொண்டே இருப்பதால் எத்தகைய மனக் குறை உள்ளவர்களும் இத்தல இறைவனிடம் வேண்டி மிகவும் துரிதமான பலன்களைப் பெறலாம். திருத்தொண்டத் தொகையை பதினெட்டு முறை ஓதி பெரிய ரவா தோசைகளை தானம் அளித்தல் சிறப்பு.
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் திருவெள்ளரை சிவத்தலம். பெண்களுக்கு வரும் எத்தகைய கடுமையான தோல் நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடிய தேவியே இத்தல சௌபாக்கியவதி என்று சித்தர்களால் புகழப்படும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி தேவி ஆவாள். கோதுமை ரவையுடன் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து செவ்வாய்க் கிழமைகளில் இத்தலத்தில் எறும்புகளுக்கு இட்டு வர தோல் வியாதிகள் நிவாரணம் பெறும். பெண் பிள்ளைகளை மட்டும் உடைய பெற்றோர்களுக்கு ஏற்படும் எதிர்காலத்தைப் பற்றிய பயத்தை நீக்க அபயக் கரம் நீட்டுபவளே இத்தல அகிலாண்டேஸ்வரி அன்னை ஆவாள்.
ஸ்ரீவிநாயக மூர்த்தி, திருத்தியமலை சிவத்தலம். பொதுவாக நாக பிரதிஷ்டையுடன் விளங்கும் கணபதி மூர்த்தியை வழிபடுவதால் நுண்ணிய அறிவு விருத்தியாகும். ஜாதகங்களில் ஐந்தாம் இடங்கள் பாவிகளின் சம்பந்தம் பெறும்போது புத்தி சரவர வேலை செய்யாது. இத்தகையோர் இக்கணபதி மூர்த்தியை வணங்கி பழங்கள், பழச்சாறுகளை தானம் அளித்தல் நலம். செயற்கை பழரசங்களைத் தவிர்க்கவும்.
எத்தகைய நாக தோஷங்களுக்கும் நிவர்த்தி அளிக்கக் கூடியதே திருத்திய மலையில் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ள விருத்திசீர மகாமேருக்களை வலம் வந்து வழிபாடு இயற்றுவதாகும். இத்திருத்தலத்தில் அருள்புரியும் நாக சக்திகள் மிகுந்த பிள்ளையார் மூர்த்தியை இரவு பகல் எந்நேரத்திலும் வணங்கி வழிபடும் விதமாக இந்த சுமைதாங்கிகள் எழுந்தருளி இருப்பதே நம் சற்குருவிற்கு நம் அடியார்கள் மேல் உள்ள ஆழ்ந்த அன்பை பறைசாற்றுவதாகும்.
ஸ்ரீவடஜம்புநாதர் சிவத்தலம் திருவெள்ளறை. எத்தகைய கடுமையான கண் நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடிய பெருமாள் சக்கராயுதம் பெற்ற ்சிவத்தலம் இதுவே. ஞாயிற்றுக் கிழமைகளில் 12 முறை ஆதித்ய ஹ்ருதயம் ஓதி வயதானவர்களுக்கு கண் கண்ணாடி அளித்து வந்தால் வெள்ளெழுத்து ரோகம் வரவே வராது.
ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி திருத்திய மலை திருச்சி. சில குழந்தைகள் பிறக்கும்போதே மேல் உதடு பிரிந்தே பிறக்கும். இதனால் பேச்சு சரிவர அவைகளுக்கு வராது. இத்தகைய குறைபாடுகள் உடையோர் இத்தல நந்தீஸ்வர மூர்த்தியை வணங்கி தேய்பிறை செவ்வாய்க் கிழமைகளில் தக்காளி பிரிஞ்சி சாதம் தானம் அளித்து வந்தால் தகுந்த வழிகாட்டுதல் கிடைக்கும்.
ரோக நிவாரண தீர்த்தம், திருத்திய மலை. பதினென் சித்தர்களும் தினமும் வழிபடும் அற்புத தீர்த்தங்களுள் இதுவும் ஒன்றாகும். சந்தனைக் கல்லைக் கொண்டு வந்து இத்தலத்திலேயே தங்கள் கையால் சந்தனம் அரைத்து இத்தல மூர்த்திகளுக்கு அளித்து வர கடுமையான தலைவலிகளுக்கு நிவாரணம் கிட்டும். தேவையில்லாமல் பகலில் தூங்குவதைத் தவிர்க்கவும்.
ஸ்ரீஏகபுஷ்ப பிரிய நாதர், திருத்தியமலை, முசிறி அருகே. திருவாசி திருத்தலத்தில் ஒரே நாளில் பூத்து மாலைக்குள் எல்லா மலர்களும் பூத்துக் குலுங்கும் அபூர்வ மரம் ஒன்று உண்டு. அந்த மரத்துப் பூக்களைப் பெற்று இத்தல ஈசனுக்கு அளித்தால் கேட்டது கிடைக்கும். நல்லதைக் கேட்டுப் பெறுங்கள்.
ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி, திருத்தியமலை, துறையூர் அருகே. சிலர் நமக்குத் தெரிந்தே பல துன்பங்களையும் வேதனைகளையும் கொடுப்பார்கள். இவர்களைச் சமாளிப்பது எளிது. ஆனால், நம்மிடம் நல்லவர்கள் போல் உறவாடி கழுத்தறுக்கும் நயவஞ்சகர்களிடம் நம்மைக் காக்கவே அச்சுறுத்தும் ஆயுதங்களுடன் எழுந்தருளி உள்ளார் திருத்தியமலை சிவபாலன். சஷ்டி திதிகளில் இவரை வேண்டி தேன் அபிஷேகம் செய்து பிரார்த்தித்தால் எத்தகைய பகைவர்களிடமிருந்து நம்மைக் காத்து இரட்சிப்பார்.
ஸ்ரீஎழுத்தறிநாதர் சிவத்தலம், இன்னம்பர், கும்பகோணம். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தாங்கள் படித்து முடித்த பின் தங்கள் படிப்புக்கு ஏற்ற வேலையில் அமர நினைத்தால் இத்தல இறைவனே இதற்கு அருள்புரிவார். வறுத்த வேர்க்கடலையை மூன்று படிகளுக்குக் குறையாமல் இத்தலத்தில் வியாழன்தோறும் தானம் அளித்து வருதல் நலம்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தி இன்னம்பர் சிவத்தலம். ஆலயமணி அடிப்பது ஓர் அற்புதமான பூஜையாகும். சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நிகழும் நேரம் முழுவதும் இத்தலத்தில் மணியை அடிக்கும் திருப்பணியை ஏற்று நிறைவேற்றுவதால் கண் நோய்கள் விலகும். மணி அடிக்கும்போது அவசியம் கோவணம் அணிந்திருக்க வேண்டும்.
ஸ்ரீநடராஜர் சிவகாமி. பொதுவாக கல் நடராஜ மூர்த்திகளுக்கு அனுகிரக சக்தி அதிகம். இத்தகைய தெற்கு பார்த்த மூர்த்திகள் குரு சக்திகளுடனும் சேர்ந்து ஆசீர்வதிப்பார்கள். வாழைத் தண்டு பொரியல் உணவுடன் சேர்த்து அளித்தலால் குடல் நோய்கள் விலகும்.
ஸ்ரீஎழுத்தறிநாதர் சிவத்தலம், இன்னம்பர். நால்வேத தட்சிணா சக்தி தலம் என்று சித்தர்கள் இன்னம்பர் சிவத்தலத்தை புகழ்ந்து பாடுகிறார்கள். தட்சிணா மூர்த்தி, நடராஜ பெருமான், இரு அம்பாள் மூர்த்திகளும் தென் திசை நோக்கி அருள்பாலிக்க இவர்கள் சக்திகளை வாரி வழங்குவதற்காக அகத்திய பெருமான் வடதிசை நோக்கி இவர்களை வணங்கியவாறு உள்ளார். என்னே இவர்தம் பெருமை.
ஸ்ரீசுகந்தகுந்தளாம்பிகை இன்னம்பர் சிவத்தலம் கும்பகோணம். திருமணம் ஆவதற்கு முன்பே சில பெண்கள் தகாத உறவுகளால் சீரழிந்து போவது உண்டு. தங்கள் குழந்தைகள் இத்தகைய வேதனைகளால் வாடக் கூடாது என்று விரும்பும் பெற்றோர்கள் பெண்கள் பூப்படையும் முன் இத்தலத்திற்கு அவர்களை அழைத்து வந்து தங்கள் கையால் தொடுத்த மலர் மாலைகளை குறைந்தது 21 முழம் அளித்து வழிபடுதலால் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமடையும்.
ஸ்ரீஅகத்திய மகரிஷி திருப்புறம்பியம் சிவத்தலம் கும்பகோணம். தட்சிணா மூர்த்தியாய் திருப்புறம்பயத்தில் அருளும் இத்தகைய கோலம் மிகவும் அபூர்வமான யோகக் கோலமாகும். 300 கிராம் குறையாத எடை அளவில் குறைந்தது 30 லட்டுகளை இத்தலத்தில் தானம் அளித்து வந்தால் சர்க்கரை நோய் விரைவில் நிவாரணம் பெறும். இடது கையினால் தானம் அளித்தல், வலது கையினால் தகாத காரியங்களைச் செய்தல், தாய் தந்தையருக்கு சேவையைப் புறக்கணித்தல் போன்ற தவறுகளுக்கு நிவாரணம் அளிக்கக் கூடியதே அகத்திய பிரானின் இத்திருக்கோலம்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தி, திருபுறம்பியம் சிவத்தலம், கும்பகோணம். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் உலகத்தில் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை எனலாம். இன்று பெரும்பாலான குடும்பங்களில் இந்த விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை என்பது தம்பதிகளிடையே அருகி வருவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இறை மூர்த்திகளே இந்த விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை மக்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக இறங்கி வருகிறார்கள் என்பதை அறிந்தால் ஆச்சரியமாக இருக்கும். ஸ்ரீதட்சிணா மூர்த்தி பெருமான் மூலவரின் கோஷ்டத்தை ஸ்ரீஅகத்திய மகரிஷிக்காக விட்டுக் கொடுத்து விட்டு திருப்புறம்பியம் திருக்கோயிலுக்கு வெளியே தனிச் சன்னதியில் எழுந்தருளிய பெருமையை விளக்க யுகங்கள் போதா.
ஸ்ரீபிரளயம்காத்த விநாயகர், திருப்புறம்பியம் சிவத்தலம், கும்பகோணம். ஒவ்வொரு யுக முடிவில்தான் பிரளயம் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. தனிப்பட்ட ஒருவருடைய சொந்த பந்தங்கள், உடமைகள் அவரை விட்டுப் பிரியும் நிலை ஏற்பட்டால் அதுவும் ஒருவகையில் பிரளயம்தானே. எனவே மனதால் உடலால் தாங்க முடியாத வேதனையை எதிர்கொள்ளும்போது இம்மூர்த்தியை வணங்கி ஏழைகளுக்கு தேனில் ஊறிய அத்திப் பழங்களை தானம் அளித்து வந்தால் எத்தகைய உடல் மன வேதனைகளையும் எதிர்கொள்ளும் மனோ திடம் வந்தமையும்.
ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி திருவரங்குளம் புதுக்கோட்டை. ஆஞ்சநேயர் இராவணனிடம் தூது சென்றபோது இராவணன் ஆஞ்சநேயரை ஏளனமாகப் பேசியதோடல்லாமல் அதன் வாலில் நெருப்பையும் ஏற்றி கொடுமைப் படுத்தினான்.அல்லவா ? ஸ்ரீராமபிரானின் அருளால் வாலில் பற்றிய நெருப்பு ஆஞ்சநேயரின் உடல், உயிருக்குத் துன்பத்தை தராவிட்டாலும் அவருடைய வால் கருகி விட்டது. ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்திற்குப் பின்னர் ஆஞ்சநேயர் பல திருத்தலங்களிலும் யாத்திரை வந்தபோது திருவரங்குளம் ஈசனை வழிபட்டபோது ஆஞ்சநேயரின் வால் முன்பு இருந்ததைப் போல் நன்றாக வளர்ந்து அவருடைய பலமும் அற்புதமாக கூடியது. இறைவனின் கருணைக்காக அவரைத் தொழும் கோலமே இங்கு நீங்கள் காண்பது. தீப்புண்களால் உடலில் ஆறாத வடுக்கள் ஏற்பட்டு வருந்துவோர்களும் உடல் உறுப்புகளை இழந்தவர்களும் இத்தல ஈசனை வணங்கி ஆஞ்சநேய மூர்த்திக்கு சனிக் கிழமைகளில் வெண்ணெய்க் காப்பிட்டு வணங்கி வருவதால் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியைப் பெறுவார்கள்.
மிகவும் அபூர்வமான அமர்ந்த நிலையில் அருளாட்சி செய்யும் ஸ்ரீவீணா தட்சிணா மூர்த்தி, திருவரங்குளம், புதுக்கோட்டை. வியாழக் கிழமைகளில் பவள மல்லிகளைக் கோர்த்து மாலையாக்கி ஸ்ரீதட்சிணா மூர்த்தி பெருமானுக்கு அணிவித்து சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட்டு வந்தால வயதாகி மணமாகாமல் வருந்தும் பெண்களும் ஆண்களும் நலம் அடைவர். பணப் பிரச்னைகளால் பாதியில் நின்று போன திருமணங்களும் எளிதில் நிறைவேறும்.
ஸ்ரீசெல்வவிநாயகர், திருவரங்குளம் சிவத்தலம், புதுக்கோட்டை. திருவரங்குள தெப்பக்குள கரையில் அமர்ந்து அருள்புரியும் அண்ணலே செல்வ விநாயகர் ஆவார். சுத்தமான பஞ்சில் மஞ்சள் தோய்த்து ஒன்பது மாலைகளை இந்த விநாயக மூர்த்திக்கு அணிவித்து வணங்கி வந்தால் எத்தகைய செவ்வாய் தோஷங்களையும் நிவர்த்தி செய்து மண வாழ்க்கையில ஏறப்டும் சச்சரவுகளை தீர்த்து வைப்பார். பல குடும்பங்களில் பெண்கள் தங்கள் கணவன்மார்களை பல ஆயுதங்களாலும் வார்த்தைகளாலும் தாக்கி துன்பங்களை ஏற்படுத்துவதுண்டு. கணவன்மார்களால் வெளியில் சொல்ல முடியாத இத்தகைய பிரச்னைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வு அளிப்பவரே இந்தக் கருணை மூர்த்தி.
சிவலிங்க மூர்த்தியுடன் அருள் புரியும் அபூர்வமான பிள்ளையார் மூர்த்தி, திருவரங்குளம் சிவத்தலம், புதுக்கோட்டை. இவ்வாறு தந்தையும் தனயனும் சேர்ந்து அருள்பாலிக்கும் சிவத்தலங்கள் ஞானத் திருத்தலங்களாக சித்தர்களால் போற்றப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் இத்தலத்தில் அடிபிரதட்சிணம் வந்து குங்குமப்பூ கலந்த பசும் பாலை தானமாக அளித்து வந்தால் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் உன்னத நிலை அடைவர். ஆளுமை திறன் பெருகும்.
ஸ்ரீஅரங்குளநாதர் திருத்தலம், திருவரங்குளம், புதுக்கோட்டை. பூர நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய அற்புத தலம். எத்தகைய காமத் தவறுகளுக்கும் பிராயசித்தம் நல்கி பக்தி நிலையில் நெறிப்படுத்தும் திருத்தலம் இதுவே. இத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி முன் குசா முறையில் தோப்புக் கரணம் இட்டு வறுத்த வேர்க்கடலை தானம் அளித்து வந்தால் பல கொடுமையான தீய பழக்கங்களிலிருந்து விடுதலை பெறலாம். சர்க்கரை நோயின் வேகம் தணிக்கும் சிறப்பான வழிபாடு இது. அடுத்த வேலை சோற்றுக்கு என்ன செய்வது என்று மன வேதனையுடன் வாழும் மக்கள் எத்தனையோ பேர் நம்மிடையே உண்டு. அத்தகையோர் இத்தலத்தில் செழித்துள்ள நாகலிங்க மரத்திற்கு நீர் வார்த்து வந்தால் பணப் பிரச்னைகள் தீரும். Demonetisation போன்ற எதிர்பாராத பணப் பிரச்னகளிலிருந்து நிவாரணம் அளிப்பது இத்தகைய வழிபாடாகும்.
ஸ்ரீஜேஷ்டாதேவி, திருவரங்குளம் சிவத்தலம், புதுக்கோட்டை. எக்காரணம் கொண்டும் இரவில் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது. ஆனால், வாகன ஓட்டுநர்கள், இரவுப் பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும் இது தவிர்க்க முடியாத கட்டாயப் பொறுப்பாக ஆகி விடுகிறதே. அத்தகையோர் தங்கள் பணிகளில் தூக்கத்தால் தவறுகள் நேராமல் இருக்க வேண்டுமானால் இந்த தேவியை சனிக் கிழமைகளில் காரட் அல்வா தானம் அளித்து வழிபட்டு வந்தால் நன்னிலை அடைவர். தங்கள் கவனமான பொறுப்பால் சமுதாயத்திற்கும் நற்பலன்கள் ஏற்படும் முறையில் சிறப்பாக பணி ஆற்ற முடியும். கடுமையான வியாதிகளால் தூக்கம் இன்றி தவிப்போரும் நலம் பெறுவர்.