ஸ்ரீவீணாதர தட்சிணா மூர்த்தி, லால்குடி, திருச்சி
ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் சிவத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவீணா தட்சிணா மூர்த்தி கோஷ்ட மூர்த்தியாக எழுந்தருளி இருந்தாலும் சுயம்பு லிங்க தத்துவத்தின் அடிப்படையில் எழுந்தருளியுள்ள அற்புத மூர்த்தியாவார். சிலருடைய குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாகவே குழந்தைகள் மந்த புத்தியுடன் பிறக்கும் சூழ்நிலை அமைவதுண்டு. எத்தகைய மருத்துவ காரணங்களுக்கும் புலனாகாத இத்தகைய குறைபாடுகளை நீக்கக் கூடிய மூர்த்தி இவர் ஒருவரே ஆவார். குழநதைகள் தங்கள் கையால் சந்தனத்தை அரைத்து சிறு உருண்டைகளாக இந்த மூர்த்திக்கு அலங்கரிக்க அளிப்பதன் மூலம் தெளிவான மன வளர்ச்சியை கண் கூடாக காணலாம். தொடர்ந்த வழிபாடு அவசியம். சந்தனப் பொட்டுக்களின் மேல் ஜவ்வாது வைத்து அலங்கரித்தல் மேலும் சிறப்பாகும்.
ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் லால்குடி
ஆயுள் வளர்ச்சிக்காகவும் உடல் மன ஆரோக்கியத்திற்காகவும் நிறைவேற்ற வேண்டிய ஆயுஷ்ஹோமத்தை குழந்தைகளின் முதல் ஆண்டு நிறைவில் மட்டுமே நிகழ்த்துகின்றனர். உண்மையில் ஒவ்வொரு ஆண்டு நிறைவிலும் ஆயுஷ் ஹோமம் நிகழ்த்தி இறைவனை வழிபட வேண்டியது அவசியம். இவ்வாறு ஆயுஷ் ஹோமத்தை நிறைவேற்ற வசதி அற்றவர்களும், அதை சரியான முறையில் நிறைவேற்ற முடியாதவர்களும் லால்குடி ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரை தங்கள் சக்திக்கு இயன்ற வரையில் அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு வந்தால் நோய் நொடிகள் அண்டாமல் எக்காலத்தும் ஆரோக்கியத்துடன் வாழலாம். குறிப்பாக 60, 70, 80 வயது நிறைவு அடைந்தவர்கள் அவசியம் லால்குடி ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரை வழிபட வேண்டும்.
ஸ்ரீஜுரஹரேஸ்வர மூர்த்தி லால்குடி
திருச்சி மலைக்கோட்டையில் மனித உருவத்துடனும், தஞ்சை கரந்தை, திருமழபாடி போன்ற திருத்தலங்களில் லிங்க வடிவிலும் எழுந்தருளி உள்ள ஸ்ரீஜுரஹரேஸ்வர மூர்த்தி மிகவும் அபூர்வமாக லால்குடி சிவத்தலத்தில் யந்திர வடிவில் சூட்சுமமாக எழுந்தருளி உள்ளார். இதன் பயனாக உடம்பில் ஏற்படும் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் நிவாரணம் பெறுவதோடு மட்டுமல்லாமல் பேராசை, பொறாமை போன்ற மன நோய்களும் இந்த மூர்த்தியை வழிபடுவதால் தீரும் என்பது சித்தர்கள் நல்கும் அருள் மொழி. உடல் நோயால் வருந்துவோர்கள் செவ்வாய்க் கிழமைகளிலும் மன நோய்களால் வருந்துவோர்கள் திங்கள் கிழமைகளிலும் இம்மூர்த்திக்கு 12 இளநீர்களுக்குக் குறையாமல் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால் நற்பலன் பெறுவார்கள்.
ஸ்ரீபிட்சாடன மூர்த்தி, லால்குடி
தற்காலத்தில் அயல்நாடுகளில் வேலைக்குச் செல்லும் ஆண்கள் தங்கள் மனைவிமார்களின் கற்பு பற்றிய பெருத்த சந்தேகத்துடனேயே அங்கு வாழ வேண்டி உள்ளது. இத்தகைய மன வேதனைகளால் உழலும் ஆண்களும் தங்கள் கணவன்மார்கள் வெளிநாடுகளில் கற்புடன் வாழ வேண்டும் என்று என்னும் மனைவிமார்களும் வழிபட வேண்டிய தெய்வமே லால்குடி திருத்தலத்தில் உறையும் பிட்சாடன மூர்த்தி ஆவார். மிகவும் தொன்மையான இம்மூர்த்தியின் பெருமையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. லால்குடியைச் சுற்றியுள்ள சக்தி வாய்ந்த கருப்பண்ண சுவாமி மூர்த்திகள் அனைவருமே இந்த மூர்த்தியிடமிருந்துதான் தங்கள் காப்பு சக்திகளைப் பெற்று அதை மக்களுக்கு ரட்சை சக்திகளாக அளிக்கிறார்கள் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த ரகசியமாகும்.
ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், லால்குடி
12 சதுர்யுகங்கள் மாங்கல்ய மகரிஷி ஒற்றைக் காலில் நின்று திருஅண்ணாமலையில் சிவசக்தி ஐக்கிய தரிசனத்தில் தவம் இயற்றினாராம். எதற்காக ? ஒற்றைக் காலில் நிற்கும் அர்த்தநாரீஸ்வர மூர்த்தியின் எதிரே நின்று அவரை தரிசப்பதற்காக. இதுவல்லவோ தவம். இந்த அற்புத தவத்தை மெச்சி ஈசன் அவரை லால்குடி திருத்தலத்தில் எத்தகைய திருமண தோஷத்தையும் களையும் கருணா மூர்த்தியாக எழுந்தருளச் செய்தாராம். இத்தகைய அற்புத மாங்கல்ய சக்தி தலத்தை இனியாவது மக்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்வார்களா ?
ஸ்ரீநந்தீஸ்வரமூர்த்தி, அம்மன் திருமுன், லால்குடி
பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை எம்பெருமானுக்கு திரட்டி அளித்தபோது தானே சக்தி பெற்றவன் என்று சற்றே நினைத்ததால் நந்தியே சித்தப் பிரமை பிடித்து சிறிது காலம் அலைய வேண்டியதாயிற்று அல்லவா ? பின்னர் பராசக்தியின் கருணையால் எம்பெருமான் நந்தியின் சித்த கலக்கத்தை நீக்கி அருள் புரிந்தார். அதன் பின்னர் இனி எக்காலத்தும் இந்த இழி நிலை ஏற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும் என்று பராசக்தியை கேட்டபோது அன்னை மதி என்ற பெயருடைய தெய்வ சக்தி மிளிரும் தலத்தில் வழிபாடுகள் இயற்றினால் எக்காலத்தும் தான் என்ற எண்ணம் இறை அடியார்களுக்கு ஏற்படாது என்று திருவாய் மலர்ந்து அருளினாளாம். அன்று முதல் ஸ்ரீமதி அம்மன் அருளும் லால்குடி தலமே அகந்தையை நீக்கும் தலமாக புகழ் பெற்றது.
ஸ்ரீசப்தரிஷிகள் லால்குடி
சப்த ஸ்வரங்கள் மட்டும் அல்லாது அனைத்து வேத மந்திரங்களுமே ஓங்காரத்தில் லயமாகும். இதைக் குறிக்கும் முகமாகவே சப்த ரிஷிகளும் லால்குடி ஸ்ரீசப்ரிஷீஸ்வரத் திருத்தலத்தில் ஸ்ரீஓங்கார கணபதி எதிரில் எழுந்தருளி உள்ளார்கள். சக்தி வாய்ந்த கணபதி மூர்த்தி. இத்தலத்தில் எத்தகைய திருப்பணிகளை மேற்கொண்டாலும் இந்த கணபதி மூர்த்தியை தொழுதே ஆரம்பிக்க வேண்டும் என்பது இத்தல நியதி. ஒவ்வொரு நாளுக்கும் உரித்தான நவகிரக மூர்த்தியின் அஷ்டோத்திர துதிகளை ஓதி இந்த ஓங்கார கணபதியை வணங்கி வருவதால் எடுத்த காரியங்கள் தடங்கல்கள் ஏதுமின்றி நிறைவேறும்.
செட்டிக் குளம் முருகன் கோயில்
சிறுவயதிலிருந்தே கஷ்டத்திலேயே வாடுபவர்களுக்கும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று கடைசி நேர ஏமாற்றத்தால் வாடுபவர்களுக்கும் அருள்புரிம் தெய்வமே செட்டிக்குளம் முருகன் ஆவார். எப்போதும் இனிமை சுகத்தையே மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற கருணா மூர்த்தியாக விளங்குவதால் இத்தல முருகன் கரும்பைக் கையிலேந்திய அமிர்த சக்தி பாலகனாக விளங்குகிறார். எத்தகைய கடன் சுமைகளையும் தணித்து வழிகாட்டும அற்புத மூர்த்தி. கோதுமை ரவையுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து படிகளில் எறும்புளுக்கு இட்டு வழிபட்டு வருவதால் கடன் சுமை தணியும்.
ஸ்ரீராஜகணபதி செட்டிக்குளம் முருகன் கோயில்
தற்காலத்தில் பலரும் போலியான ஜாதகங்களைத் தயாரித்து திருமணங்களை நடத்தி விடுகிறார்கள். திருமணத்திற்குப் பின் இத்தகைய பிரச்னைகள் வெளியில் தெரிய வரும்போது அதனால் ஏற்படும் மனக் கொந்தளிப்புகளோ ஏராளம். இத்தகைய பிரச்னைகளை ஆரம்பித்திலேயே களைந்தெறிய வேண்டுமானால் திருமணத்திற்கு முன் செட்டிக்குளம் முருகன் கோயிலில் அருள்புரியும் ராஜகணபதியை வணங்கி பட்டாடைகளைச் சார்த்தி வழிபட்டால் திருமணங்களில் எத்தகைய ஏமாற்றங்களையும் சந்திக்காமல் நன்முறையில் திருமணம் நிறைவேற அருள்புரிவார். குடும்ப ஒற்றுமையைப் பேணும் கணபதி தெய்வம் இவர்.
செட்டிக் குளம் முருகன் கோயில்
வஞ்சிக்கள்ளி என்னும் ஒருவித சிரஞ்சீவி மூலிகை வளரும் இடமே செட்டிக்குளம் முருகன் கோயிலாகும். இள நரையைத் தடுப்பதும் முடி உதிர்வதைத் தடுப்பதும் வஞ்சிக்கள்ளியின் முக்கிய மருத்துவ குணங்களாகும். மஞ்சள் பூக்களுடன் இலுப்பை மணம் கூடிய இம்மூலிகையை வாரம் ஒருமுறை தரிசித்து முருகப்பெருமானுக்கு செம்பருத்தி தைலத்தால் அபிஷேகித்து வந்தால் இளநரை வராது. முடி சம்பந்தமான பிரச்னைகளால் திருமணத் தடங்கல்கள் ஏற்படாது. மூளைச் சோர்வை அகற்றும் அற்புத வழிபாடு இது.
வதரி மரம் ஓமாம்புலியூர்
வதரி என்னும் இலந்தை மரம் தலவிருட்சமாக திகழும் திருத்தலமே சிதம்பரம் அருகிலுள்ள ஓமாம்புலியூர் திருத்தலமாகும். அ உ ம என்ற ஓங்காரத்தின் மூன்று சக்திகளே மூன்று மூன்று இலைகளாக வதரி மரத்தில் திகழ்கின்றன. ஓங்காரத்தின் பிரயோக சக்தியே வதரி மரத்தில் நாம் காணும் முள் ஆகும். இதை எந்த பூலோக சக்தியாலும் உருவாக்க முடியாது. எந்த விஞ்ஞானி வேண்டுமானாலும் ஒரு அணுகுண்டை உருவாக்கி விட முடியும். ஆனால், ஆயிரம் விஞ்ஞானிகள் ஒன்று கூடி முயற்சி செய்தாலும் ஒரு வதரி முள்ளை உருவாக்க முடியாது என்கிறார்கள் சித்தர்கள்.
ஓமாம்புலியூர் திருத்தலம்
ஓங்காரத்தில் பொதிந்துள்ள பிரணவ சக்திகளை சிவபெருமான் ஜ்வாலா சக்திகளாக பெருக்கி மகாவிஷ்ணுவிற்கு அளிக்க அந்த சுதர்சன சக்ரத்தின் அக்னி சக்திகளே சலந்தரனை மாய்த்தன. ஆனால், பெருமாள் சிவபெருமானிடம் சக்ராயுதம் பெற்ற புராண வைபவங்கள் எண்ணற்றவை. இவ்வாறு ஒவ்வொரு புராண வைபவத்தில் மகாவிஷ்ணு ஏந்தும் சுதர்சன சக்கரத்தின் சக்தி அம்சங்களும் மாறுபடும் என்பதே சித்தர்கள் கூறும் அற்புத ஆன்மீக இரகசியமாகும். எனவே சலந்தரனை அழித்த சக்ராயுதம் வேறு, மகாபாரத யுத்தத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவான் தாங்கி நின்ற சக்ராயுதம் வேறு.
ஸ்ரீஆஞ்சநேயர் ஓமாம்புலியூர்
ஆஞ்சநேய மூர்த்தி இமயமலையிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தை ராமர் பிரதிஷ்டை செய்யாமல் தம் திருக்கரங்களால் கடற்கரை மண்ணில் பிடித்த சிவலிங்கத்தை ராமேஸ்வரத்தில் ராமச் சந்திர மூர்த்தி பிரதிஷ்டை செய்தார் அல்லவா ? அப்போது ஆஞ்சநேய மூர்த்திக்கு ஏற்பட்ட அகந்தை எண்ணங்களை களைய அவர் இத்திருத்தல அம்பிகையை பன்னெடுங்காலம் வழிபட்டு நற்பலன் பெற்றார். கூப்பிய கரங்களுடன் இத்திருத்தலத்தை அடிபிரதட்சிணம் வந்து உளுந்து வடை தானம் அளித்தலால் மனக் குழப்பங்கள், மனப் போராட்டங்கள் அகலும்.
கௌரி தீர்த்தம் ஓமாம்புலியூர்
தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பலரும் என்னதான் மாடாக உழைத்தாலும் தங்கள் முதலாளிகளிடம் நல்ல பெயர் எடுக்க முடியாமல் போய் விடுகிறது. அவ்வாறு தங்கள் பணிக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று கலங்குவோர்கள் இத்தீர்த்தக் கரையிலுள்ள அரச மரத்திற்கு தாமே அரைத்த மஞ்சளால் பொட்டிட்டு அலங்கரித்து குங்குமமிட்டு வணங்கி வழிபடுவதால் முதலாளிகள், மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவர். உறவினர்கள் இடையே ஏற்படும் மன வேறுபாடுகளும் தணியும்.
ஸ்ரீவிமலநயன சரஸ்வதி
ஒவ்வொரு யுகத்திலும் சரஸ்வதி தேவியானவள் ஒவ்வொரு வீணையை ஏந்தி அருள்பாலிக்கிறாள் என்பது பலரும் அறிந்ததே. ஆனால், ஒவ்வொரு திருத்தலத்திலும் சரஸ்வதி மீட்டும் வீணையும் வெவ்வேறு வித்யா சக்திகளுடன் பொலியும் என்பது சித்தர்கள் அறிவிக்கும் ஆன்மீக இரகசியம். இவ்வகையில் ஓமாம்புலியூர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சரஸ்வதி விமலநயனம் என்னும் வீணையை ஏந்தி மகுட துந்துபி என்ற வித்யா சக்தியை அளிக்கிறாள். இந்த வித்யா சக்தியைப் பெற்றால் எந்த வித்தையும் எக்காலத்தும் மறந்து போகாத அனுகிரகம் கிட்டும்
முப்புரி த்ரயம்பக விமானம்
மிகவும் அரிதான முப்புரி த்ரயம்பக விமானம் பொலியும் திருத்தலமே ஓமாம்புலியூர் ஆகும். இறைவன் அம்பிகைக்கு பிரணவத்தை உபசேசம் செய்தபோது அதன் பொருளை ஒரு அணு அளவு கூட கிரகிக்க முடியாமல் திகைத்தபோது எம்பெருமான் அம்பிகை தன்னுடைய மாங்கல்யத்தை இறுகப் பற்றியவாறு தியானிக்கும்படி கூறினாராம். இவ்வாறு எத்தகைய கடினமான பிரச்னைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் சுமங்கலிகள் தங்கள் மாங்கல்யத்தை இறுகப் பற்றியவாறு கணவனின் திருநாமத்தை உச்சரித்தால் உடனடி தீர்வு கிட்டும் என்பது சித்தர்களின் அறிவுரை.
துவார பாலகி, ஊட்டத்தூர்
பொதுவாக அம்பாள் சன்னதிகளில் கொலுவீற்றிருக்கும் துவார பாலகிகள் பிலவ த்வீபம் என்ற சக்திகளுடன் எழுந்தருளி இருப்பார்கள். பெண்களுக்கு வரக் கூடிய மாத விடாய் துன்பங்கள், பூப்பு பிரச்னைகள் போன்றவற்றை நிவர்த்தி செய்யக் கூடியதே பிலவ த்வீப சக்தியாகும். தற்காலத்தில் பெண் குழந்தைகள் உரிய காலத்தில் பருவம் அடையாததால் பலவிதமான வேதனைகளுடன் பெற்றோர்கள் வாழ வேண்டியுள்ளது. உரிய காலத்தில் பருவம் அடைந்தாலும் சில பெண் குழந்தைகளுக்கு அவயவங்கள் சரியான வளர்ச்சி அடையாமல் நின்று விடுகின்றன. இத்தகைய குறைபாடுகளுக்கு நிவர்த்தி அளிப்பதே துவார பாலகிகள் வழிபாடாகும். 18 வயதிற்கு குறைந்த சிறுமிகளுக்கு உள்ளாடை தானம் நற்பலன்களை அளிக்கும்.
நந்தீஸ்வர மூர்த்தி, அம்பாள் சன்னதி ஊட்டத்தூர்
சில குடும்பங்களில் கணவன்மார்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் பெரிதாக கோபித்துக் கொண்டு அதனால் வீட்டில் அமைதி இல்லாத சூழ்நிலை உருவாகி விடுகிறது. இத்தகைய மனக் குறையுடன் வாழும் பெண்கள் சிவ சன்னதியில் உள்ள நந்தி மூர்த்திக்கு 12 செந்தாமரை பூக்களால் மாலை கட்டியும் அம்பாள் சன்னதியில் உள்ள நந்தி மூர்த்திக்கு 20 வெண் தாமரை மலர்களால் மாலை கட்டியும் வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். வியாழன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் இத்தகைய வழிபாட்டை நிறைவேற்றலாம்.
பலரும் வீடு கட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென்று சிமெண்ட், கம்பி, பெயிண்ட் போன்ற பொருட்கள் விலை ஏறுவதோ அல்லது அவை கிடைக்காமல் போய் விடுவதோ உண்டு. இவ்வாறு பல தரப்பட்ட காரணங்களால் வீட்டு வேலைகள், பழுது பணிகள் பாதியில் நின்று விட்டால் திருக்கோயில்களில் உள்ள நாற்கால் மண்டபங்களில் உரிய அனுமதியுடன் ஒவ்வொரு தூணிற்கும் நல்லெண்ணெய் காப்பு இட்டு ஒவ்வொரு தூணையும் தனித் தனியாக மூன்று முறை வலம் வந்து வணங்கி வந்தால் பாதியில் நின்று போன பணிகள் நல்ல முறையில் நிறைவேறும்.
பெண்ணிற்கோ பையனுக்கோ திருமணத்திற்காக ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது ஒரு ஜோதிடர் செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று கூறுவார். மற்றோர் ஜோதிடரோ செவ்வாய் தோஷம் இல்லை என்று சொல்வார். இருவர் சொல்வதும் சரியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. காரணம் ஜோதிடம் ஒரு கடல். அது கடலிலிருந்து பார்ப்பவருக்கு ஒரு மாதிரியும் கரையிலிருந்து பார்ப்பவருக்கு வேறு விதத்திலும் காட்சி அளிக்கும். சரி, அதனால் நம் குழப்பம் தீர்ந்து விடுமா என்று நீங்கள் கேட்பதும் சரியே. இத்தகைய குழப்பமான சூழ்நிலைகளில் கோயில் நாற்கால் மண்டபங்களில் நடுவே கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் பஞ்சாட்சரம் ஜபித்தால் எடுத்த காரியத்தில் தெளிவு கிட்டும்.
சிலர் குறித்த வேலைக்கு ஒரு குறித்த கூலியை பேசிக் கொண்டு பணத்தைப் பெற்றுக் கொண்டபின் வேலையை முடிக்காமல் பாதியிலேயே சென்று விடுவார்கள். சில சமயம் வேலையை முடித்தவுடன் அதற்கு தர வேண்டிய பணத்தை தராமல் முதலாளிகள் ஏமாற்றி விடுவதும் உண்டு. இது போன்ற செயல்கள் கொடுமையான நாக தோஷங்களை உருவாக்கும். இத்தகைய துன்பங்களை அனுபவிப்போர் காலை எட்டு மணிக்கு மேல் ஒன்பது மணிக்குள் கோயில் நந்தவனங்களில் நந்தியாவட்டை மலர்களைப் பறித்து வாழைநார் கொண்டு மாலை கட்டி கன்னி மூலை கணபதி மூர்த்திகளுக்கு அணிவித்து வந்தால் நற்பலன் பெறுவார்கள்.
திருவெறும்பூர் திருத்தலம்
அழகு, நிறக் குறைவு போன்ற காரணங்களால் பல பெண்களுக்கு நெடுநாள் திருமணம் நிறைவேறாமல் இருப்பதுண்டு. இத்தகையோர் ஆவாரம்பூ இதழ்களை பித்தளை தாம்பாளங்கள் மேல் பரப்பி திருவெள்ளறை, திருவெறும்பூர் போன்ற மூலிகை சக்தி மிகுந்த பாறைகளின் மேல் வைத்து காய வைத்து அதை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து கோயில்களில் இறை மூர்த்திகளின் அபிஷேகத்திற்காக அளித்து வந்தால் விரைவில் திருமண பாக்யம் கிட்டும். திருமணமான பெண்களுக்கு ஆரோக்கியமான சந்தான பாக்கியம் கிட்டும்
திருவெள்ளறை போன்ற உத்தராயண தட்சிணாயன படிக்கட்டுகள் உள்ள திருக்கோயில்களில் இந்த படிகளில் ஒவ்வொரு படிக்கும் ஒரு முழுத் தாமரை மலரை வைத்து, “சங்கர நாராயணா தபோ நிதியே என் குறை தீர்ப்பாய் தயா நிதியே“ என்று ஓதி வணங்கினால் வயதான காலத்தில் ஏற்படும் மாலைக் கண், பார்வை மங்குதல் போன்ற கண் நோய்களுக்குத் தீர்வு கிட்டும். தொடர்ந்து இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றி வந்தால் சர்க்கரை வியாதியால் ஏற்படும் உடல் ஊனை பிரச்னைகளும் நாளடைவில் சீர்பெறும்.
ஸ்ரீகணபதி மூர்த்தி, ஆச்சாள்புரம்
காமதேனுவின் புதல்வி பட்டி, பட்டியின் புதல்வி ஆச்சா. காமதேனு, பட்டி, ஆச்சா என்ற மூன்று கோமாதா தேவிகளும் ஒருங்கே தரிசனம் செய்த தலமே சீர்காழி அருகே உள்ள ஆச்சாள்புரம் திருத்தலமாகும். இவ்வாறு மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த பசு கன்றுகளுடன் இத்திருக்கோயிலை வலம் வந்து கோபூசை நிறைவேற்றி வழிபடுவதால் தலைமுறை தலைமுறையாக வாட்டும் பித்ரு தோஷங்கள் விலகி குடும்பத்தில் செல்வமும் அமைதியும் பெருகும்.
ஸ்ரீதிருவெண்ணீற்று உமையம்மை, ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி ஆச்சாள்புரம்
பசுஞ்சாணத்தை தரையில் விழும் முன் ஒரு தாமரை இலையில் பிடித்து அதைக் கொண்டு விபூதி செய்து அந்த விபூதியை ஸ்ரீவெண்ணிற்று உமையம்மை திருச்சன்னதியில் வைத்து 1000 முறை பஞ்சாட்சரம் ஜபித்து சிவலிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகத்திற்கு அளித்து வந்தால் நெடு நாள் சந்தியா வந்தனம் செய்யாத தவறுகளுக்கு பிராயசித்தம் கிட்டும். ஒரு முறை மட்டுமே கிட்டும் பிராய சித்தம் இது என்பதை நினைவில் கொள்ளவும். தொடர்ந்து இவ்வாறு அபிஷேகத்திற்கு விபூதி அளித்து வந்தால் எத்தகைய கடுமையான வியாதிகளும் நிவாரணம் பெறும்.
திருவெள்ளறையில் உள்ள தட்சிணாயன, உத்தராயண படிக்கட்டுகள் வழியாகச் சென்று தம்பதிகள் ஸ்ரீபுண்டரீகாக்ஷ பெருமாளை தரிசிக்கும்போது தம்பதிகள் இருவரும் ஒரே படியில் நின்று கொண்டு, “செந்தாமரைக் கண்ணா செந்திருவாய் மண்ணா, வந்தாடும் வல்வினையறுத்று வாழ்வளிப்பாய் கண்ணா,” என்ற துதியை ஒவ்வொரு படியிலும் தம்பதிகள் ஓதி பெருமாளை தரிசனம் செய்வதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும், நல்ல சந்தான சௌபாக்கியமும் கிட்டும்
ஸ்ரீருணஹர மூர்த்தி, ஆச்சாள்புரம்
கர்ம வினை பாக்கியை தீர்க்கும் அற்புத மூர்த்தி இவரே. கர்ம வினை பாக்கிகளில் எவரிடம் அதிகமாக உள்ளதோ அவரே நம்முடைய அடுத்து பிறவியில் மனைவியாக வருவார். எனவே இப்பிறவியில் மனைவியை அன்புடன் நேசிப்பதே பிறவிப் பிணியை அறுக்கும் எளிமையான வழிபாடாகும். நாம் அறிந்த நாயன்மார்கள் அனைவருமே இவ்வாறு தங்கள் மனைவி, குழந்தைகளை அன்புடன் நேசித்துத்தான் பிறவிக் கடலை கடந்தார்கள். மனைவி மக்களை விட அதிகமாக அவர்கள் இறைவன் மீது பக்தி செலுத்தினார்கள் என்பதே அவர்கள் வாழ்க்கை முறை சுட்டிக் காட்டும் பாடமாகும்.
ஸ்ரீநந்தி மூர்த்தி, ஆச்சாள்புரம்
எவ்வளவுதான் செல்லமாக அன்புடன் வளர்த்தாலும் சில குழந்தைகள் தாய் தந்தையரின் சொல் பேச்சு கேட்காமல் முரட்டுத் தனமாய் நடந்து கொள்வதுண்டு. இவை அனைத்தும் நமது பூர்வ ஜன்ம வினையின் விளைவுகளே என்பதில் ஐயமில்லை. வெள்ளிக் கிழமைகளில் சுத்தமான பசு வெண்ணெயால் இந்த நந்தி மூர்த்திக்கு காப்பிட்டு வெண் பட்டு தலைப் பாகை அணிவித்து வணங்குவதால் குழந்தைகளின் முரட்டுத் தனம் படிப்படியாக குறையும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கையில் காசில்லை என்ற நிலைமையும் சீர் பெறும்.
பஞ்சாட்சர தீர்த்தம், ஆச்சாள்புரம்
மிகவும் அபூர்வமாக வேறெங்கும் காண முடியாத அரிய தீர்த்தமே பஞ்சாட்சர தீர்த்தமாகும். கணவனுடைய எத்தகைய கொடிய தீய பழக்கங்களையும் சீர்செய்து ஒற்றுமையான குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்தக் கூடியதே இத்தீர்த்தமாகும். இத்திருக்குள படிக்கட்டுகளை சுத்தமாக நீர் விட்டு அலம்பி அரிசி மாவால் கோலமிட்டு ஆராதனை செய்து வருவதால் கணவனின் தீய பழக்கங்கள் விலகும். கணவனுக்கு நீண்ட ஆயுள் அளிக்கக் கூடடியது இத்திருக்குள வழிபாடாகும். சனிக் கிழமைகளில் இத்தகைய வழிபாடுகள் சிறப்புடையது.
ஸ்ரீகணபதி மூர்த்தி, ஆச்சாள்புரம்
ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி தன் பத்தினி நற்பவி தேவியுடன் வழிபட்டு உன்னத நிலைகளை அடைந்த திருத்தலம். செவ்வாய்க் கிழமைகளில் இத்தலத்தில் நற்பவி தேவியை தியானிப்பதும் இல்லங்களில் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு “நற்பவி, நற்பவி“ என்று 108 முறைக்குக் குறையாமல் ஓதி வருதலால் எத்தகைய கொடிய நோய்களும் விலகும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். குழந்தைகள் ஒழுக்கத்துடன் திகழ்வர்.
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi