கறவை நின்று போன பசுக்களை பராமரிப்பதால் பெண் குழந்தைகள் நலம் பெறுவர் !!
ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
அபய தீர்த்தம், அதிராம்பட்டினம்
பலருக்கும் திடீரென மூச்சு முட்டி இறந்துபோகும் துரதிர்ஷ்ட நிலை ஏற்படுவதுண்டு. இவ்வாறு திடீரென இறந்தவர்களுடைய குடும்பத்தினர் இந்த அபய தீர்த்தக் கரையில் தர்ப்பணம் இட்டு ஏழைகளுக்கு மப்ளர், ஸ்வெட்டர் போன்ற கம்பளி ஆடைகளை தானம் அளிப்பதால் சந்ததிகள் இவ்வாறு திடீர் மரணத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள். நுரையீரல் நோய்களுக்கும், சைனசிடிஸ், தலையில் ஏற்படும் கடுமையான தலைவலிகளுக்கும் வைதிருதி யோக நாளில் இத்தீர்த்தத்தில் தர்ப்பணம் இடுவதால் அற்புத பலன்களை பெறலாம். குணமால்யம் என்ற வகை பித்ரு மூர்த்திகள் இத்தகைய தர்ப்பணங்களை ஏற்று அருள் பாலிக்கிறார்கள்.
ஸ்ரீஅதிராம்பட்டினம் திருத்தலம்
நாய்களை வளர்ப்போர் சில சமயங்களில் சுருண்டிருக்கும் அந்நாய்களின் வால்களை அசுப சகுனமாக கருதி வெட்டி விடுவதுண்டு. இது கடுமையான பைரவ சாபங்களை ஏற்படுத்தும் என்று சித்தர்கள் எச்சரிக்கிறார்கள். அறிந்தோ அறியாமலோ இத்தகைய தவறுகள் செய்தோர்கள் தங்கள் தவறுக்காக மனம் வருந்தி இத்தல இறைவனை வேண்டுவதால் ஓரளவு பிராயசித்தம் பெறுவர். இவ்வாறு சுருண்டிருக்கும் வாலிற்கு பைரவ ரைவத சுருள் என்று பெயர். இத்தகைய சுருள் வால் நாய்களுக்கு பாலில் நனைத்த ரொட்டி தானமாக அளித்தலால் எதிர்பாராத விபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெறலாம் என்பது பலரும் அறியாத இரகசியம்.
எதிர்பாராமல் பலருக்கும் கர்ப்பம் திடீரென களைந்து விடுவதுண்டு. மருத்துவங்கள் பயன்படாத அந்நிலையில் பசு வழிபாடு அற்புத பலன்களை அளிக்கிறது. பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் வெண்கல மணிகளை சிவப்புக் கயிற்றில் கட்டி விடுவதால் இத்தகைய கரு நழுவும் குறைபாடுகள் களையப்படுகின்றன. பசுக்கள், கன்றுகள் வலம் வரும்போது ஏற்படும் கோகித நாதம் என்னும் ஒருவகை தெய்வீக நாதம் கருவில் வளரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதே இதன் காரணமாகும். இறைப் பாடல்களை வீணையில் வாசிக்கக் கேட்பதும் (Live concerts) கரு வளர்ச்சிக்கு உறுதுணை புரியும் வழிபாடாகும்.
ஸ்ரீஅதிராம்பட்டினம் திருத்தல துவாரபாலகர்கள்
நமது பெரும்பாலான உடல் மன பிரச்னைகளை தீர்க்கக் கூடிய தெய்வீக சக்தியை துவார பாலக மூர்த்திகளே பெற்றிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவதில்லை. துவார பாலக மூர்த்திகளுக்கு வாரம் ஒரு முறையாவது புதுப் பூணூல் சார்த்தி வழிபடுதலால் நேர்முகத் தேர்வுகளில் கேட்கும் கேள்விகளுக்கு தைரியமாக பதில் அளிக்கும் சாமர்த்தியத்தை துவார பாலகர்களே அளித்து விடுவார்கள். இனந் தெரியாத பயத்திற்கு நிவாரணம் அளிப்பதே துவார பாலகர்கள் வழிபாடு.
ஸ்ரீகருடாழ்வார், அல்லித்துறை பெருமாள் கோயில்
சில திருத்தல விக்ரஹங்களுடைய கை, கால், தலை போன்ற உடலுறுப்புகள் உடைந்தோ பழுதுபட்டோ இருப்பதைக் காணலாம். இவற்றை பின்னமான, சக்தியில்லாத மூர்த்திகள் என்று ஒதுக்கி விடுவதுண்டு. ஆனால், இத்தகைய மூர்த்திகளை வழிபடுவதால் எவ்வித தவறுமில்லை. பலதரப்பட்ட உடல் குறைபாடுகளுடன் வாழும் மக்களுக்கு அருள்புரிவதற்காக விக்ரஹங்கள் பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கின்றன என்பதே உண்மை. இவ்வகையில் இடது கண் குறைபாடு உள்ளவர்கள் இந்த கருட மூர்த்தியை வணங்கி நற்பலன் பெறலாம்.
பல்லாண்டுகளுக்கு முன் ஸ்ரீஅகத்தியர் அல்லித்துறை கிராமம் வழியாக வந்தபோது அக்கிராம மக்கள் பெருந்திரளாக வந்து அவரை வணங்கி தங்கள் கிராமத்தில் கடுமையான வறட்சி நிலவுவதாக தெரிவித்தார்கள். அதைக் கேட்டு ஸ்ரீஅகத்திய பிரான் வானத்தை அண்ணாந்து பார்த்தாராம். அங்கே ஸ்ரீகிருஷ்ண பராமாத்மா மேகவண்ணமாய் காட்சி அளித்தாராம். அந்த அற்புத கோலத்தை வணங்கிய அகத்தியர் மகிழ்ந்து, ”கிருஷ்ணனே உங்களுக்கு குடை பிடிக்கிறான். நீங்கள் எதற்காக கவலைப்படுகிறீர்கள்?“ என்று கேட்டாராம். அதைக் கேட்டு அருகிருந்த ஆஞ்சநேய மூர்த்தி புன்னகை பூத்ததையே இங்கே நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள்.
ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி, செட்டிக்குளம்
பொதுவாக வீடுகள் கட்டும்போது வீடு, அதில் உள்ள அறைகள் சதுரமாகவோ அல்லது 10 x 16 என்ற தங்க விகிதத்திலோ (golden ratio) இருத்தல் நலம். ஆனால், தற்போது இத்தகைய விதிமுறைகள் எங்கும் அமைவதில்லை. இத்தகைய குறைபாடான அளவுகள் உள்ள வீடுகளில் வசிப்போர் மண்டபம் இல்லாமல் இருக்கும் நந்தி மூர்த்திகளுக்கு மண்டபங்கள் அமைத்துத் தருவதாலும் அது இயலாதபோது வாஸ்து நாட்களில் இந்த நந்தி மண்டபங்களைச் சுற்றி 64 பசு நெய் தீபங்களை ஏற்றி வழிபடுதலாலும் நற்பலன் பெறலாம்.
ஸ்ரீகருடாழ்வார், அல்லித்துறை பெருமாள் ஆலயம்
வலது காலை முன் வைத்து, இடது காலை முன் வைத்து, இணையடிகளை வைத்து, பத்மாசன கோலத்தில் அமர்ந்து இவ்வாறு கருடாழ்வார் மூர்த்திகள் பலவிதமான கோலங்களில் அருள்பாலிக்கின்றனர். தங்கள் குழந்தைகள் வாகனத்தில் வேகமாக பயணம் செய்வதைக் கண்டு அஞ்சி வாழும் பெறறோர்கள் இத்தகைய இணையடி மூர்த்திகளை வணங்கி அவரைக் காய் கலந்த பிரிஞ்சி சாதம் தானமாக அளித்தலால் நற்பலன் பெறுவார்கள். நிலையான உத்தியோகத்தை அளிப்பதும் கருடாழ்வார் மூர்த்திகளின் இணையடி வழிபாடாகும்.
செட்டிக்குளம் சிவத்தலம்
ஒரு தேக்கு மரம் ராஜகோபுரத்தை விட உயரமாக இருப்பது போல் இந்த புகைப்படத்தில் தெரிகிறது அல்லவா ? இது போல் கோயில் கோபுரங்களை விட, இறைமூர்த்திகளை விட உயரமாக இருப்பதாகவோ அல்லது இறை மூர்த்திகளுடன், தேர், கோபுரம் இவற்றுடன் சேர்ந்தோ இறையடியார்கள் புகைப்படங்களை எடுப்பது பலவித தெய்வீக துன்பங்களை ஏற்படுத்தும் என்பது சித்தர்களின் தெளிவுரை. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே நம் குருமங்களகந்தர்வா எதிர்காலத்தில் தனி மனித வழிபாடு பெருகும் என்று தீர்கதரிசனமாக கூறிய வார்த்தைகளே இன்று selfie என்ற நாகரீக மோகமாக மக்களை வேதனை கடலில் தள்ளி வருகிறது. ஆன்மீக அன்பர்கள் இவ்விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ஸ்ரீகணேச மூர்த்தி, செட்டிக்குளம் சிவாலயம் பொதுவாக, ஜாதகங்களில் லக்னங்களில் ராகு, கேது மூர்த்திகள் எழுந்தருளி இருந்தால் அத்தகையோர் தங்கள் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். சதுர்த்தி, சதுர்த்தசி திதி நாட்களில் இம்மூர்த்தியை வணங்கி 108 பூரண கொழுக்கட்டைகளைப் படைத்து தானமளித்தலால் துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். இவ்வித துன்பங்கள் மக்களைச் சேரா வண்ணம் காக்க நம் குருமங்கள கந்தர்வா நீல வேணு கந்தம் என்ற அற்புத சூட்சும சக்கரத்தை இத்திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.
காமதேனு செட்டிக்குளம்
ஒரு முறை குபேர பகவானின் சங்க பதும நிதிகளே செயலற்றுப் போய்விட்டன. அப்போது ஸ்ரீஅகத்திய முனிவரின் ஆலோசனையின்படி குபேர பகவான் காமதேனுவை வணங்கி செட்டிக்குளம் ஸ்ரீஏகாம்பர ஈசனுக்கு தன் அமுதத்தை அபிஷேகிக்கும்படி பிரார்த்தனை செய்தார். அவ்வாறு காமதேனு அபிஷேகம் செய்த பாலை கோமுகம் வழியாக பெற்று குபேரன் அருந்திட
மறுகணமே சங்க பதும நிதிகள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று செல்வத்தை வர்ஷிக்க ஆரம்பித்தன. சுத்தமான பசும்பாலை இத்தல ஈசனுக்கு அபிஷேகம் செய்து கோமுகம் வழியாக பெறும் பிரசாத பாலை இறையடியார்களுக்கு அளித்து வந்தால் நிரந்தர குபேர செல்வம் கிட்டும்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தி, செட்டிக்குளம் சிவாலயம்
ஏற்றுமதி இறக்குமதி துறையில் உள்ளவர்கள் அடிக்கடி மாறும் அரசாங்க சட்டதிட்டங்களால் பலவித துன்பங்களைச் சந்திப்பது உண்டு. இத்தகையோர் ரேவதி நட்சத்திர தினங்களில் மந்தாரை மலர்களை இத்தல தட்சிணா மூர்த்திக்கு சமர்ப்பித்து மஞ்சள் நிற பட்டாடைகளை அணிவித்து வழிபட்டு வருதலால் நற்பலன் பெறுவார்கள்.
ஆச்சாள்புரம்
திருஞானசம்பமூர்த்தி நாயனாரும் அவரது மனைவி தோத்திர பூர்ணாம்பிகையும் ஆச்சாள்புரத்தில் வேள்வித் தீயில் மறைந்து திருகைலாயம் அடைந்தபோது நாயனாருக்கு வயது 16, அவரது துணைவியாரின் வயது 9. எனவே ஒன்பது வயது நிறைந்த பருவம் அடையாத சிறுமிகளுக்கு ஆச்சாள்புர திருத்தலத்தில் நவராத்திரி தினங்களில் பட்டுப் பாவாடை சட்டை, தரமான சாக்லேட் அளித்து அவர்களை ஆனந்தப்படுத்துவதால் பாதியில் நின்று போன திருமண வாழ்க்கையால் துன்பத்தில் உழல்பவர்களும், திருப்தியில்லாமல் மணவாழ்க்கையை மேற்கொள்ளும் தம்பதிகளும் நற்பலன் பெறுவார்கள்.
செட்டிக்குளம் சிவாலயம் பெரும்பான்மையான குடும்பங்களில் தந்தை மகன்கள் இடையே பலவித சொத்து தகராறுகள் போன்றவை தோன்றி மன வேற்றுமைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு மன வேற்றுமை கொண்டவர்கள் செட்டிக்குளம் முருகனுக்கு காலையில் கரும்புச்சாறு அபிஷேகம் நிறைவேற்றி அதே நாள் மாலை ஸ்ரீஏகாம்பர ஈசனுக்கு செவ்வாழைப் பழம் நைவைத்யம் செய்து வழிபடுதலால் ஆண் வாரிசுகளிடையே ஏற்படும் மன வேற்றுமைகள் மறைந்து குடும்பத்தில் அமைதி நிலவும். ஞாயிறு, செவ்வாய், வியாழக் கிழமைகளில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் நலம்.
ஐந்தருவி, குற்றாலம்
குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் நீராடிய பின்னர் அருகிலுள்ள இலஞ்சி முருகனை தரிசனம் செய்தல் அற்புத பலன்களை அளிக்கும் வழிபாடாகும். தரிசனத்திற்குப் பின் ஐந்து சுற்று கை முறுக்கு தானமாக அளித்தலால் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல், தூங்கும்போது கத்துதல் போன்ற துன்பங்கள் விலகும்.
ஸ்ரீமுருகப் பெருமான் இலஞ்சி திருத்தலம்
அபூர்வமான வாகீச வெண்மணலால் உருவான ஸ்ரீமுருகப் பெருமான் இவர் ஒருவரே.
இப்பெருமானின் தரிசனமே எவ்வளவோ நோய் நொடிகளைத் தீர்க்கும் வல்லமை பெற்றது. தினமும் ஸ்ரீதென்காசி சிவபெருமானை தரிசனம் செய்து நோய் நிவாரண சக்திகளை புனருத்தாரணம் செய்யும் அற்புத நோய் நிவாரண மூர்த்தி. தன் திருத்தல யாத்திரையின்போது சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் இத்திருத்தலத்தில் ஓய்வு எடுத்துக் கொள்ளும் பாங்கில் இத்தல நோய் நிவாரண சக்திகளை புனருத்தாரணம் செய்துள்ளார்கள் என்பது ஒரு சிலரே அறிந்த இரகசியமாகும்.
இலஞ்சி முருகன் திருத்தலத்தில் ஸ்ரீலோபாமாதா சமேத ஸ்ரீஅகத்திய தரிசனத்தைப் பெற்றவரே ஸ்ரீவெங்கடராமன் ஆவார்கள். இன்றும் ஸ்ரீஅகத்தியரின் மனித உருவ தரிசனத்தைப் பெற விரும்புவர்கள் முதலில் தினமும் அவர் வழிபடும் இலஞ்சி முருகப் பெருமானின் தரிசனத்தைப் பெற்ற பின்னரே அவர் தூல தரிசனத்தையும் கல்யாண அருவியைத் தாண்டியுள்ள ஸ்ரீஅகத்திய பெருமானுடைய ஓலைக் குடிலில் ஸ்ரீலோபாமாதாவின் தரிசனத்தையும் பெறமுடியும். இவ்வாறு ஸ்ரீஅகத்திய தம்பதிகளின் தரிசனத்தைப் பெற விழைந்த திரு உவே சாமிநாத ஐயர் அவர்கள் கல்யாண அருவியைத் தாண்டிச் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதையும் மனிதர்களில் இத்தகைய உன்னத நிலையை அடைந்தவர் அவர் ஒருவரே என்பதை உணர்ந்தால்தான் ஸ்ரீஅகத்திய தம்பதிகளின் தரிசனம் பூலோகத்தில் கிடைத்தற்கரிய வரப் பிரசாதம் என்பதை மக்கள் உணர வழிவகுப்பதே இலஞ்சி முருகப் பெருமானின் தரிசனமும் தென்காசி ஈசனின் தரிசனமுமாகும்.
ஆண்களைப் போல் பெண்களும் அவசியம் இடுப்பில் அரைஞாண் கயிறு அணிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அதிலும் முக்கியமாக வேலைக்குப் போகும் பெண்கள் கட்டாயம் கருப்பு அரைஞாண் கயிறு இடுப்பில் மூன்று சுற்றுகளாக அணிந்து கொள்தல் நலம். அத்தகைய கயிறுகளை காவல் தெய்வங்கள், எல்லை தெய்வங்களுக்கு சமர்ப்பித்தும், மேற்கூரை இல்லாமல் எழுந்தருளி இருக்கும் மூர்த்திகளுக்கு சமர்ப்பித்தும் பின்னர் பெண்கள் அணிந்து கொள்வதால் அற்புத காப்பு சக்தியைப் பெறுவார்கள்.
கடம்பர் கோவில், குளித்தலை
எத்தகைய கொடிய கர்மவினைகளையும் களையக் கூடியதே கடம்பமர தரிசனமாகும். இத்தகைய கடம்ப சக்திகள் அனைவரையும் சென்றடைவதற்காகவே 1008 யுகங்கள் கொடுவினைகளையே புரிந்து கொண்டிருந்த சூரபத்மன் கடம்ப மரமாக நின்றபோது அவனை சம்ஹாரம் செய்து சேவலாகவும் மயிலாகவும் ஏற்றுக் கொண்டு அருள்பாலிக்கிறார் முருகப் பெருமான்.
ஸ்ரீகால பைரவர், கடம்பர் கோயில் குளித்தலை
இவ்வாறு தனி சன்னதி கொண்டு பிரதட்சிணம் வரும் வகையில் எழுந்தருளியுள்ள கால பைரவ மூர்த்திகள் மிகவும் சக்தி உடையவர்கள் ஆவர். வெள்ளம், பூகம்பம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்கும் மூர்த்திகளே இவர்கள் ஆவர். இத்தகைய துன்பங்கள் தாங்களும் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அனுபவிக்கும் நிலைவரக் கூடாது என்று எண்ணும் அன்பர்கள் வழிபட வேண்டிய மூர்த்தி இவரே. முதுமையில் தனிமையை மாற்றும் மூர்த்தியும் இவரே.
நாகலிங்க மரம், கடம்பர் கோவில், குளித்தலை
பூமியை விட்டுப் புறப்படும் ராக்கெட் நேராக விண்வெளிக்குச் சென்று விடுவதில்லை. முதலில் பூமியை சற்று நேரம் சுற்றி வந்த பின்னரே பூமியின் புவி ஈர்ப்பு விசையைத் தாண்டி மேலெழும்புகிறது ராக்கெட். இத்தகைய சக்தி இயக்கங்களை அடிப்படையாக உடையவையே கடம்பமரமும், நாகலிங்க மரமும். நாக பாம்பு ஒன்றுதான் நேராகவும் வளைந்தும் செல்லக் கூடிய தன்மை உடையது. இத்தகைய இயக்கங்களின் இரகசியங்களை புரிந்து கொண்டால்தான் astral travel என்னும் ஆன்மீகப் பயணத்தில் வெற்றி பெற முடியும். அதற்கு உதவிபுரிவதே கடம்பவன வழிபாடு.
ஸ்ரீஅகோர வீரபத்திரர், கடம்பர் கோயில் குளித்தலை
அம்மை, சிக்கன் குனியா போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நோயிலிருந்து மீண்டாலும் உடல் வலி, அவயவ செயலிழப்பு போன்ற வேதனைகளை பல மாதங்கள், வருடங்கள் கூட அனுபவிக்கும்படி நேர்ந்து விடுகிறது. இத்தகைய பாதிப்புகள் உடையோர் கனிந்த பங்கனபள்ளி மாம்பழத் துண்டுகளால் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஹோரை நேரத்தில் அகோரவீரபத்திரருக்கு காப்பிட்டு குழந்தைகளுக்கு தானம் அளித்தலால் தங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியைக் காண்பார்கள். கோரமில்லா வாழ்வு அளிப்பவரே அகோர வீரபத்திரர், முறையறிந்தால்.
ஸ்ரீகசவனம்பட்டி சித்தர் ஜீவசமாதி, திண்டுக்கல் அருகே
ஏக்ஸ்ரே, ரேடியேஷன் தெரபி, அணுமின் சக்தி இத்தகைய துறைகளில் ஈடுபட்டிருப்போர் தங்களையும் அறியாமல் அணுக் கதிர்களின் தீய பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இத்தகைய கதிர்கள் மனிதர்களின் ஜீவ சக்தியை முற்றிலுமாக அழித்து விடுகிறது என்பதை விஞ்ஞானிகளாலும் புரிந்து கொள்ள முடிவதில்லை. எனவே இத்தகைய துறைகளில் விதிவசமாக பணியாற்றி வருபவர்கள் மாதம் ஒரு முறையாவது ஸ்ரீகசவனம்பட்டி சித்தரின் ஜீவாலயத்தை தரிசனம் செய்து வறுத்த முந்திரிப் புருப்பு தானமாக ளஅளித்து வருதலால் நற்பலன் பெறுவார்கள்.
ஸ்ரீமுனீஸ்வரர் தவசிமடை அருகே
தவசிமடையை தரிசனம் செய்யும் பலரும் அதன் அருகில் உள்ள சஞ்சீவி மலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமுனீஸ்வரரை தரிசனம் செய்வது கிடையாது. ஸ்ரீராமச் சந்திர மூர்த்தி பரத்வாஜ முனிவர் அளித்த விருந்தை ஏற்றுக் கொண்டபோது ஸ்ரீமுனீஸ்வரரும் சிறுமலையில் விசேஷமாக கிடைக்கும் மலைப் பழத்தை ராமச்சந்திர மூர்த்திக்கு பரிமாறினாராம். ஸ்ரீராமரும் ஆஞ்சநேயரும் உண்ட வாழை இலையை அளித்தவரே முனீஸ்வரர். எனவே யாரெல்லாம் இந்த காவல் தெய்வத்தை தரிசனம் செய்கிறார்களோ அவர்கள் சந்ததி வாழையடி வாழையாக வாழும் என்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே ஆசி அளித்தாராம்.
ஸ்ரீவிரேசக நந்தி கூத்தைப்பார் திருச்சி
பொதுவாக இறைவனுக்கும் நந்திக்கும் குறுக்கே, தம்பதிகளின் குறுக்கே செல்லக் கூடாது என்பது சாஸ்திரம். கூத்தைப்பாரில் அம்பாள் சன்னதி எதிரே வன்னி மரத்தடியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிரேசக நந்தி இந்த விதிக்கு விலக்காக திகழ்பவர். இத்தலத்தில் அம்பாளுக்கும் நந்திக்கும் குறுக்கே செல்வதே சிறப்பாகும். அவ்வாறு ஒரு இறையடியார் செல்லும்போது அவர்களின் தரிசன பலனாய் கிட்டும் தேவசக்தியால் வெளிப்படும் விரேசகம் என்னும் மூச்சுக் காற்றையே தனக்கு உரிய இறைப் பிரசாதமாகப் பெறுகிறாராம் இந்த நந்தி மூர்த்தி. பசு மாடுகளுக்கு கீரை, அருகம்புல் போன்றவற்றை அளித்து விட்டு அம்மன் தரிசனம் செய்வதால் நந்தி மூர்த்தியின் அனுகிரக சக்தி பன்மடங்காய்ப் பெருகும். மூச்சுக் குழல், நுரையீரல் சம்பந்தமான நோய்களிலிருந்து நிவாரணம் அளிப்பதே இத்தகைய வழிபாடாகும்.
ஸ்ரீமுருகப்பெருமான், கூத்தைப்பார், திருச்சி
எம்பெருமானின் பவள சபையாகத் திகழ்வதே திருச்சி கூத்தைப்பார் திருத்தலம் ஆகும். பவள மாலைகளை தானமாக அளிப்பதும், கூத்தைப்பார் இறை மூர்த்திகளுக்கு பவள மாலைகளை, ஆபரணங்களை அணிவித்து பின்னர் அவற்றை இறையடியார்கள் அணிந்து கொள்வதும் சிறப்பாகும். இதனால் பவளத்தில் உள்ள தோஷங்கள் மறைந்து உடல் ஆரோக்கியமாக விளங்கும். ரத்த சோகை, blood cancer, போன்ற இரத்தம் சம்பந்தமான அனைத்து நோய்களிலிருந்தும் நிவாரணம் அளிப்பதே கூத்தைப்பார் திருத்தல முருகப் பெருமான் வழிபாடாகும்.
ஸ்ரீஆனந்தவல்லி அம்மன், கூத்தைப்பார், திருச்சி
திருமணமான சிறிது காலம் பூஞ்சோலையாக காட்சி அளிக்கும் திருமண வாழ்க்கையானது குறுகிய காலத்திலேயே பாலைவனமாக வெறிச்சோடி போய்விடுவதும் உண்டு. பல சந்தர்ப்பங்களில் இத்தகைய துன்பத்திற்கு சரியான காரணத்தையும் கண்டுணர முடியாது. இவ்வாறு பிரிவால் வாடும் தம்பதியர் கூத்தைப்பார் திருத்தல அம்மனுக்கு வெள்ளையில் சிவப்பு பூக்கள் போட்ட ஒன்பது முழ நூல் புடவையை சார்த்தி அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுதலால் தம்பதிகளுக்கிடையே உள்ள மன வேற்றுமையைக் களைந்து குடும்பத்தில் ஆனந்த தாண்டவம் ஆட வைப்பாள் ஆனந்தவல்லி.
ஸ்ரீகணபதி மூர்த்தி, கூத்தைப்பார், திருச்சி
மருக்கொழுந்து அல்லது தவனம் எனப்படும் வாசனை இலைகளை நன்றாக காயவைத்து பொடி செய்து சாம்பிராணியுடன் கலந்து கூத்தைப்பார் திருத்தல மூர்த்திகளுக்கு சிறப்பாக கன்னி மூலை கணபதிக்கு தூபம் இட்டு வந்தால் குடி, புகை போன்ற தீய வழக்கங்களுடன் வாழும் கணவன்மார்கள் நன்னிலை பெறுவர். வாரம் ஒரு முறையாவது குறிப்பாக வியாழக் கிழமைகளில் இத்தகைய அடர்த்தியான சாம்பிராணி புகை இட்டு வந்தால் கணவன், குழந்தைகளின் தீய பழக்கங்கள் அகலும்.
மகேந்திரபள்ளி திருத்தலம், சிதம்பரம் அருகே
மகேந்திரப்பள்ளி சிவத்தலத்தில் சூரியன் அஸ்தமனம் ஆவதை தரிசனம் செய்து நட்சத்திரங்கள் தோன்றும் வரை திருத்தலத்தை அடிப்பிரதட்சிணமாக வலம் வந்து வழிபட்டால் இந்திர தனுசு என்ற ஒரு வித ஆன்மீக நற்சக்திகள் அனுகிரகமாகக் கிட்டுகின்றன. எடுத்த எந்த காரியத்தையும் நன்முறையில் நிறைவேற்றி வெற்றி அடைய வழிவகுப்பதே இந்திர தனுசு சக்தியாகும். மழை பெய்யும்போது ஏற்படும் வானவில்லுக்கு இந்திர தனுசு என்று பெயர். இயற்கையாக வரும் அனைத்து விதமான துன்பங்களையும் களைய உதவுபவையே இந்திர தனுசு சக்திகளாகும்.
சண்டிகேஸ்வர தம்பதிகள், மகேந்திரபள்ளி
தம்பதி சகிதமாக ஒரே சன்னிதியில் எழுந்தருளியிருக்கும் சண்டேஸ்வர மூர்த்திகளை வணங்கி எட்டு முழ வேட்டி முழுக்கை சட்டை, ஒன்பது கஜ புடவை ரவிக்கை இவற்றை அவர்களின் திருப்பாதங்களில் வைத்து பிரசாதமாகப் பெற்று அவற்றை 60, 70, 80 வயது நிரம்பிய தம்பதிகளுக்கு தானமாக அளித்தலால் எத்தகைய நாட்பட்ட திருமண தோஷங்களும் விலகும். வயதான காலத்தில் தோன்றும் தனிமை, அகால மரண பயங்களையும் போக்க வல்லதே இத்தகைய வழிபாடாகும்.
ஸ்ரீதிருமேனி அழகர், மயேந்திரப்பள்ளி
இந்திரபிரஸ்த அரண்மனையில் பஞ்சபாண்டவர்கள் கட்டாந்தரையில் பொய்கையையும், நீர்த்துறையை தரையின் மீது அமைத்தும் பல அற்புதங்களை நிகழ்த்தினார்கள் அல்லவா ? அந்த அற்புத கட்டிடக் கலை இரகசியங்களை எல்லாம் தேவலோக சிற்பியான மயன் பயின்ற இடமே மகேந்திரபள்ளியாகும். எனவே கட்டிடத்துறை, சிற்பக் கலை, ஓவியம் போன்றவற்றில் சாதனை புரிய நினைப்பவர்கள் இத்தலத்தில் வளர்பிறை சதுர்த்தி திதிகளில் அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட தங்கள் துறையில் பேரும் புகழும் பெறுவார்கள்.
ஸ்ரீவடிவுடை அம்மன், மகேந்திரபள்ளி
பிறந்த வீட்டில் நல்ல வசதி வாய்ப்புகளுடன் கார், பங்களா என்று வாழ்ந்த எத்தனையோ பெண்கள் திருமணத்திற்குப் பின் அதற்கு நேர்மாறாக வறுமையிலும் பற்றாக்குறையிலும் வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழ்நிலை அமைந்து விடுகிறது. இத்தகைய சூழ்நிலையை அனுபவிக்கும் பெண்கள் இத்தல அம்பிகையை வணங்கி தேய்பிறை வெள்ளிக் கிழமைகளில் தாமே தொடுத்த முல்லைப் பூக்களை அளித்து வழிபடுதலால் குடும்ப வறுமை நிலை மாறி சிறிது சிறிதாக வாழ்க்கையில் வளம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும்.