என்றும் அழியாத ஜீவ வித்து இறைவன் ஒருவனே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருத்தங்கல் நாராயணன்

மதுரை சிவகாசி அருகே அமைந்துள்ள சிவா விஷ்ணு ஆலயமே திருத்தங்கல் என்ற தொன்மையான திருத்தலம் ஆகும். மூலவர் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாளாக அருள ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஜாம்பவதி என்ற நான்கு தேவியர்கள் அருள்பாலிக்கும் விஷ்ணுபதி தலம் இதுவே. திருத்தங்கல் என்ற தல நாமமே பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகும்.

1. திருத்தங்கல் என்றால் ஸ்ரீதேவி என்ற திருமகளின் லட்சுமி கடாட்ச சக்திகள் நிரந்தரமாகத் தங்கி பெருகும் அற்புதத் தலம்.
2. திரு தண் கால், அதாவது குளிர்ச்சியான நான்காம் பாதத்தில் எழுந்தருளிய ராம பிரான் அருள் சுரக்கும் தலம். புனர் பூச நட்சத்திரம் நான்காம் பாதத்தில் தோன்றியவர் ராம பிரான் என்பது நீங்கள் அறிந்ததே. புனர்பூச நட்சத்திரத்தின் நான்காம் பாதம், நீர் ராசியான கடக ராசியில் அமையும்.
3. ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு கால்கள் உண்டு, அதாவது பாதங்கள் உண்டு. இந்த நான்கு நட்சத்திர பாதங்களைக் குறிக்கும் வண்ணமாக ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஜாம்பவதி என்ற நான்கு தேவிகள் எழுந்தருளிய தலம்.

அர்ஜுனா நதி திருத்தங்கல்

4. ஜாம்பவதியை பகவான் கிருஷ்ணர் மணந்தபோது ஜாம்பவதி ஒரு வயதே நிரம்பிய தொட்டில் குழந்தை. ஜாம்பவதி தெய்வீகத் தாயாக இருந்தாலும் பூலோக நியதிகளுக்கு உட்பட்டு அவள் உரிய திருமண வயதை அடையும் வரை காத்திருந்த, பெருமாள் தங்கிய திருத்தலமே திருத்தங்கல்.
5. கிருஷ்ண பகவானின் பேரனான அநிருத்தனுக்கும் உஷைக்கும் பகவானே முன்னின்று திருமணம் நடத்திய அற்புத தலம்.
6. சாதாரண மனிதர்களைப்போல் அவதார மூர்த்தியான கிருஷ்ண பகவானே மூன்று தலைமுறை காலத்திற்கு தங்கி தன் பேரன் அநிருத்தனுக்கு மணம் முடித்து வைத்த தலம்.

இத்தலத்தில் ஸ்ரீகருநெல்லி நாதர் என்ற திருநாமத்துடன் எம்பெருமான் எழுந்தருளி உள்ளார். தேவி ஸ்ரீமீனாட்சி அம்மன். கருநெல்லி, கருந்துளசி என்ற மூலிகைகள் யாவும் பெருமாள் அனுகிரகத்தை சிறப்பாகக் குறிப்பதால் சிவனும் விஷ்ணுவும் ஒரே மலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்வழங்குவதற்கு இந்த கருநெல்லி மரமும் இங்குள்ள தீர்த்தங்களும் இன்றளவில் சான்றாக நிற்கின்றன.

திருத்தங்கல் திருத்தலத்தில் அமைந்துள்ள அர்ச்சுன தீர்த்தம் அருண தீர்த்தமாகும். அதாவது சூரியனின் கதிர்களில் ஒன்றான அருணன் என்ற கதிர்கள் முழுமையாக வீசும் திருத்தலமே திருத்தங்கல். திருத்தங்கல் திருத்தலத்தில் மட்டுமே இத்தகைய அருணவாச கதிர்கள் ‘நிரந்தரமாகத் தங்கி வாசம்’ செய்கின்றன என்பதாலும் இத்தலம் திரு தங்கல் என்று புகழ் பெற்றுள்ளது.

மாளயபட்சத்தில் திகழும் கருநெல்லி சக்திகளைப் பெறும் வண்ணமாக சித்தர்கள் அருள்வதே மூவாற்றுப் புழா என்னும் கிரிவல முறையாகும். 22.9.2023 வெள்ளிக் கிழமை மாலை சுமார் ஐந்து மணி அளவில் தொடங்கி ஏதாவது ஒரு நாளிலோ அல்லது காலையில் ஆறுமுறை, மதியம் ஆறுமுறை, மாலை ஆறுமுறை என்றவாறு திருத்தங்கல் மலையை கிரிவலம் வந்து வணங்குவதாகும். இவ்வாறு மலையை கிரிவலம் வரும்போது இரு உள்ளங்கை நிறைய கருநெல்லிகளை தாங்கி கிரிவலம் வரவேண்டும் என்பது அவசியம். மலை வலத்தை ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் அருளும் ஆலய வாசலிலிருந்தோ அல்லது ஸ்ரீகருநெல்லி நாதர் சிவாலய வாசலில் இருந்தோ ஆரம்பிக்கலாம். இந்த மாளயபட்சம் வைதிருதி என்ற யோக நாளில் நிறைவடைகிறது அல்லவா? வைதிருதி என்றால் வை திருதி, அதாவது நம் கைகளால் நிறைவேற்றும் காரியங்கள் நலமாக, நன்மையாக, அனைவருக்கும் பயன்தரக் கூடிய முறையில் அமைய வேண்டும், அவ்வாறு அமைவதற்கு வைதிருதி யோக சக்திகள் அமையும் என்பதே வைதிருதி யோகத்தின் தன்மையாகும்.

ஸ்ரீகருநெல்லிநாதர் சிவாலயம்
திருத்தங்கல்

அன்னதானத்திற்காக திண்டு தோசை வார்க்கும்போது
          திருத்தங்கல் நாராயணா
          திருமழிசை நாராயணா
          திருவாக்நேய நாராயணா
          புண்டரீக நாராயணா
          புவியளந்த நாராயணா
          புன்னாகவாளி நாராயணா
என்ற பெருமாள் நாமங்களை ஓதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டோம் அல்லவா? புன்னாகவாளி நாராயணா என்ற நாமத்தின் மகிமையை இங்கு விளக்குகிறோம். காளிங்கன் என்ற நாகம் யமுனை நதியில் இருந்து கொண்டு அங்கு நீராட வருவோர்க்கெல்லாம் பலவித துன்பங்களை அளித்துக் கொண்டு இருந்தது. பகவான் கிருஷ்ணன் அந்த நாகத்தின் மேல் நர்த்தனம் ஆடி அதன் அகந்தையை அழித்து மக்களைக் காப்பாற்றிய கிருஷ்ண லீலையைப் பற்றி நாம் அறிவோம்.

ஆனால், நாம் அறியாதது அந்த நாகத்தின் கிருஷ்ண பக்தியாகும். பால கிருஷ்ணனின் பிஞ்சு பாதங்கள் அந்த நாகத்தின் தலையில் பதிந்ததால் அது எல்லையில்லா உவகை அடைந்தது என்றே கூற வேண்டும். இதற்கு கைமாறாக கிருஷ்ண பகவானுக்கு ஏதாவது வழங்க வேண்டும் என்று விரும்பியது? நாகத்திடம் என்ன இருக்கும் ... நாக விஷம்தானே? அதுவும் எவரையுமே தீண்டாத நாகத்திடம் உள்ள விஷம் மட்டுமே ரத்தினமாக, நாக மாணிக்கமாக மாறும் வாய்ப்பு உள்ளது.

காளிங்க நாகமோ பலரையும் தீண்டி அவர்களை இம்சைப்படுத்தி இருந்தால் இவ்வாறு ஒரு நாகரத்தினத்தைப் பெறும் தகுதியையும் அது இழந்து விட்டிருந்தது. இந்த கவலை பெருங்கவலையாக வாட்டவே பல்லாண்டுகள் ஊன் உறக்கம் இன்றியே கழிந்தது. இதை அறியாதவரா கிருஷ்ண பகவான்? பகவான் காளிங்கனை அழைத்து...
1. காளிங்கன் நாகம் எத்தனை பேரைத் தீண்டியிருந்தாலும் அதன் உடலில் உள்ள விஷ சக்திகளை நாக மாணிக்கமாக மாற்றும் வித்தையை அதற்கு உபதேசித்தார்
2. நாகங்கள் தங்கள் பல்லில் ரத்தினமாக மாறிய ரத்தினத்திலிருந்து வரும் ஒளியில்தான் வேட்டையாடும். அவ்வாறு வளரும் நாகங்கள் தங்கள் இறுதிக் காலத்தில் தங்கள் ரத்தினத்தை ஏதாவது ஒரு இறை மூர்த்தியிடம் சமர்ப்பித்து விட்டு தங்கள் உயிரை அந்த இறை மூர்த்தியின் திருவடிகளில் விட்டு விடும். இந்த விதியிலிருந்தும் விலக்கு அளித்து காளிங்கன் நாகம் உயிரோடு இருக்கும்போதே நாக ரத்தினத்தை அது கிருஷ்ண பகவானிடம் அளிக்க அதை நாக கடுக்கனாக மாற்றி அணிந்து கொண்டிருந்தார் பகவான். இந்த நாக கடுக்கனின் நாமமே புன்னாகவாளி என்பதாகும்.
3. காளிங்கன் இந்த சக்திகளைப் பெற்றதே திருத்தங்கல் திருத்தலமாகும். அப்போது காளிங்கன் பரம்பரையைச் சேர்ந்த ஐந்து தலைமுறை நாகங்கள் திருத்தங்கல் திருத்தலத்தை வலம் வந்து பெருமாளைத் தொழுதன.

ஸ்ரீகருடாழ்வார் திருத்தங்கல்

இதுவே காளிங்கன் நாகத்திலிருந்து நாம் பெறும் பாடமாகும். மாளய பட்சம் நாட்களில் தர்ப்பணம் அளிக்கும்போது காளிங்க நாகத்தின் இந்த அரிய சேவையை நினைவுகூறும் விதமாக ஏழு தீபங்களை தர்ப்பண சட்டத்திற்கு முன்னால் ஏற்றி வைத்து தர்ப்பண சட்டத்தின் மேல் பகுதியில் மூன்று கிராம் தங்கத்தாலான அல்லது 30 கிராம் எடையுள்ள சுத்த வெள்ளியால் புன்னாகவாளி நாக வடிவை, வாலில் ஒன்றரை மடங்கு ஸ்புடம் போட்ட, உருவத்தை அமைத்து வைத்து இதன் சாட்சியாக தர்ப்பணம் அளித்தல் சிறப்பாகும். நாகத்தின் வடிவை திருவெள்ளியான்குடி திருத்தல மகிமையில் அடியார்கள் பெறலாம். தீபங்களை ஏற்றிய பின்னர் தர்ப்பணத்தை முழுமையாக நிறைவேற்றுதலே சிறப்பு. இடையே தீபங்கள் காற்று அல்லது வேறு காரணங்களால் குளிர்ந்து விட்டால் அதைப் பற்றி அடியார்கள் கவலை கொள்ள வேண்டாம்.

மாளய பட்சம் நிறைவில் இந்த தங்க வடிவை அடியார்கள் தங்கள் இல்லங்களில் வைத்து பூஜித்து வரலாம். மற்றவர்களுக்கு தானமாக அளித்தலும் சிறப்புடையதே.

நம் சற்குருவின் வலது தோளில் இந்த புன்னாகவாளி நாக உருவத்தைத்தான் பச்சை குத்தியிருப்பார். இந்த பச்சை குத்தும் படலத்தை நிறைவேற்றியவளே முருகப் பெருமானின் காதலியான வள்ளி என்ற இரகசியத்தை நாம் ஏற்கனவே விவரித்துள்ளோம். இதனால் நம் சற்குரு நிறைவேற்றிய தான தர்ம கைங்கர்யங்களில் எல்லாம் இந்த புன்னாகவாளி நாக சக்திகள் பரவி, விரவி உலகில் தம்பதிகளுக்கு இடையே, முதலாளி தொழிலாளி இடையே, ஆள்பவர் ஆளப்படுபவர்களுக்கு இடையே, இவ்வாறு எல்லா நாக தோஷங்களையும் களைந்து சமுதாயத்தில் அமைதி உருவானது. நாக தோஷங்களை அகற்றி சமுதாயத்தில் அமைதி மலரச் செய்யவே வரும் மாளய பட்சத்தில் இந்த புன்னாகவாளி நாகத்தின் சாட்சியாக நாம் தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்பது நம் சற்குருவின் பேரவா.

வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு முருகப் பெருமான் எழுந்தருளி இருப்பதற்கு இந்த புன்னாகவாளி நாக சக்திகளும் ஒரு காரணமாகும். இதில் மனித கற்பனைக்கு எட்டாத பல தாம்பத்ய இரகசியங்கள் மறைந்துள்ளன. அவற்றை அடியார்கள் புரிந்து கொள்ளும் மார்க்கம் மூவாற்றுப் புழா கிரிவலம் ஒன்றே ஆகும்.

கருடனுக்கு நாகம் பகை என்பதை நாம் அறிவோம். பரமசிவன் கழுத்திலிருக்கும் நாகத்திற்கோ தனி ‘மவுசுதான்’. இதைக் குறிப்பதாக திருத்தங்கல் திருத்தலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கும் கருடாழ்வார் ஒரு கையில் நாகத்தைத் தாங்கியவாறு உள்ளார். கருட பகவானின் இந்த திருவிளையாடல் பலன்களை நம் அடியார்கள் பெறவும் நாக மாணிக்க வழிபாடு நம் சற்குருவால் அளிக்கப்பட்டு உள்ளது.

பாபநாச தீர்த்தம் திருத்தங்கல்

ஒரு முறை பஞ்சபாண்டவர்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தனர். அப்போது அவர்களுக்கு வானுயர திருஅண்ணாமலைக்கு தூப வழிபாடு நிறைவேற்ற வேண்டும் என்று ஆசை. தங்கள் ஆசையை நிறைவேற்றும் மார்க்கத்தை அவர்கள் கண்ணபிரானிடம் கேட்க கண்ணனோ, “இது என்ன பிரமாதம் பர்ப்பரிகன் தோளில் கடோத்கஜன் அமர்ந்து கொள்ளட்டும், கடோத்கஜன் தோளில் பீமன் அமர்ந்து கொண்டு கிரிவலம் வரட்டும், அவ்வாறு கிரிவலம் வரும்போது சுவாமிக்கு நறுமணமுள்ள தூப ஆராதனையை மேற்கொள்ளலாமே...”, என்று ‘ஐடியா’ கொடுத்தாராம். அதன்படியே பீமன் நறுமணப் பூகையை கிரிவலப் பாதை எங்கும் பரப்பி கிரிவலம் நிறைவேற்றினானாம். இவ்வாறு இம்மூவரும் ஒருவர் மேல் ஒருவராக நின்ற காட்சி பல பனைமரங்களின் உயரத்திற்கு இருந்ததாம். அவர்கள் தூபம் எழுப்பிய காட்சியே ஒரு பெரிய மலை உச்சியில் தீபம் எரிவதைப் போன்ற பிரகாசத்துடன் பொலிந்ததாம்.

பாஸ்கர தீர்த்தம் திருத்தங்கல்

இந்த அற்புதமான சேவை குறித்து திருஅண்ணாமலையானிடம் பகவான் கிருஷ்ணர் வினவியபோது, எம்பெருமான் சிரித்தவாறே ... “ம்... குழந்தைகள் ஏதோ தூபம் போடுகிறார்கள் ... ஆனந்தம் ...”, என்றாராம். இதுவே நம் சற்குரு விவரித்த அண்ணாமலையான் கூத்து. எந்த வானளாவ விரியும் சேவையினாலும் இறைவனை நாம் குளிர்வித்து விட முடியாது. நம்மால் ஆன ஏதோ ஒரு சிறிய சேவையை அண்ணாமலையானுக்கு அளிக்க அவன் மனது வைத்தால் அதுவே இறைவனின் பெருங்கருணைதான்...”, என்றார் பணிவோடு, பணிவின் சிகரமான நம் சற்குரு.

பஞ்ச பாண்டவர்களின் சேவையை நாம் முன் மாதிரியாகக் கொண்டு திருத்தங்கல் திருத்தலத்தில் தூப வழிபாடுகளை மேற்கொள்ளலாம். தாத்தா பாட்டி, மகன் மகள், பேரன் பேத்தி என்றவாறாக தங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து அங்கத்தினர்களுடனும் சேர்ந்து திருத்தங்கல் திருத்தலத்தை வலம் வந்து வணங்கி அங்கு அனைவரும் இவ்வாறு தூப வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் சிறு வயதினராக இருந்தால் அவர்களைத் தோளில் சுமந்து கொண்டு கிரிவலம் வருதல் சிறப்பாகும். தாத்தா பாட்டி என்போர் தங்களால் கிரிவலம் முழுவதும் நடந்து வர முடியாது என்ற அளவில் வயது முதிர்ந்து இருந்தால் அவர்கள் கிரிவலப் பாதையில் எங்காவது ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள மற்றவர்கள் அவர்கள் ஆசியுடன் தொடர்ந்து கிரிவலத்தை மேற்கொள்தலால் அனைவருமே கிரிவலம் சென்ற பலன்களை பெறுவர் என்பதே திருத்தங்கல் திருத்தல மகிமையாகும்.

ஸ்ரீசெங்கமலத் தாயார் திருத்தங்கல்

இரு உள்ளங்கை நிறைய நெல்லிக்காய்
தூபம் அல்லது ஊதுபத்தி
சங்கு நாதம்
ஜால்ரா
கஞ்சிரா
என்ற வகையில் வழிபாட்டை நிறைவேற்றி ஒவ்வொரு சந்ததியைச் சேர்ந்தவர்களும் இறைவனைக் குளிர்விக்கலாம். உதாரணமாக, கணவன் அல்லது மனைவி உள்ளங்கை நிறைய நெல்லிக்காய் ஏந்தி கிரிவலம் வர, மகன் மகன்கள் ஊதுபத்திகள் தாங்கி வர, பேரன் பேத்திகள் ஜால்ரா ஒலித்து வரலாம். இத்தகைய குடும்ப சகிதமான வழிபாடுகள் முடியாதபோது மட்டும் அடியார்கள் சத்சங்கமாக பலருடன் சேர்ந்து கிரிவலம் வரலாம். அப்போது அவர்களில் யாராவது ஒருவர் இரு உள்ளங்ககை நிறைய நெல்லிக்காய்களை ஏந்தி கிரிவலம் வர வேண்டும்.

கருநெல்லி, அருநெல்லி அல்லது அரைநெல்லி என்று நெல்லிகளில் பல வகை உண்டு. கிடைக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் இதில் பல பெயர் மாற்றங்கள் உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் முழுமையாக உருண்டையாக உள்ள எந்த நெல்லிக்காயையும் கருநெல்லியாக ஏற்று அடியார்கள் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். உண்மையில் கருநெல்லி என்பது கரு நெல்லி, அழியாத ஜீவ வித்து, பகவான் கிருஷ்ணர் கூறுவதைப் போல் ‘பீஜம் அவ்யயம்’, என்றவாறு பிரம்மத்தின் என்றும் நிலைத்த தன்மையைக் குறிப்பதாகும்.

அவரவர் சூழ்நிலை, வசதியைப் பொறுத்து ஒரு நாளைக்கு 18 முறை என்ற மூவாற்றுப் புழா முறையிலோ, ஒரு வாரத்திற்கு 18 முறையோ அல்லது மாளய பட்சம் 15 நாட்களுக்கு 18 முறையோ கிரிவலத்தை நெல்லிக்காய்களை ஏந்தி நிறைவேற்றி கிரிவலம் நிறைவில்,
1. நெல்லிக்காய்களை ஊறுகாய் செய்து தயிர் சாதத்துடன்
2. நெல்லிக்காயை அரைத்து தேன், வெண்ணெய் சர்க்கரை சேர்த்து அதை பிரெட் ரொட்டியுடன்
3. தேனில் ஊறிய நெல்லிக்காய்களாக
4. சுத்தமான பசுந் தயிருடன் நெல்லிக்காய், வெங்காயம் சேர்த்து பச்சடியாக
இவ்வாறு அவரவர் விரும்பும் முறையில் அடியார்களுக்குத் தானமாக அளித்த பயன்பெறலாம். நெல்லிக்காய் கிடைக்காத சமயத்தில் மட்டும் நெல்லிக்காய் வற்றல்களை உள்ளங்கைகளில் ஏந்தி திருத்தலத்தை வலம் வந்து மேற்கண்ட முறைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நான்கு தேவிகளுடன்
ஸ்ரீநின்றநாராயண பெருமாள் திருத்தங்கல்

நம் உடலில் நிலவும் சுவாசமானது இரவில் சிறிது சிறிதாக அமைதி பெற்று சுவாசம் வெளியேறும் தூரமும் மெதுவாகக் குறைகிறது. காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அத்தாழநல்லூர் திருத்தலத்தில் தாமிரபரணி குளிர்ந்த நீரில் நீராடி பிராணாயாமம் பயின்று வந்தால் சிறிது சிறிதாக தங்கள் சுவாசத்தின் நீளம் குறைவதைக் காணலாம். இவ்வாறு சுவாசத்தின் நீளம் ஒன்றரை அங்குலம் அமையும்போதுதான் அவர்கள் பகலிலேயே நட்சரங்களைக் காணும் வல்லமை பெறுகிறார்கள்.

சந்ததிகள் இல்லாதோர், திருமணம் ஆகாதவர்கள் அல்லது திருமணம் ஆகி தனித்து வாழ்பவர்களுக்காகவும் வழிபாட்டு முறைகளை நம் சற்குரு அளிக்கிறார். இளநீர் காய்களை அவரவரால் சுமக்க முடிந்த அளவு மாலை போல் இரு தோள்களிலும் தொங்க விட்டு சுமந்து கிரிவலம் வந்து, கிரிவலம் நிறைவில் இதை அன்னதானமாக அளித்து விடலாம். இரு கைகளில் ஏந்தும் கருநெல்லி வழிபாட்டுடன் இதையும் இணைத்துக் கொள்வது தவறு கிடையாது.

நம் சற்குருவிற்கு இணை நம் சற்குருவே என்று எத்தனை தடவை கூறினாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுப்பொலிவுடன்தானே நம் சற்குருவின் அனுகிரகம் திகழ்கின்றது. கரு நெல்லி என்பது குழந்தை பாக்கியத்திற்கு அத்தியாவசியமான கருநெல்லி சக்திகள் செறிந்தது. ஆனால், இதை முறையாகப் பயன்படுத்துவது என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியம். முறையான, சுவையான குடும்ப வாழ்விற்கும் இந்த கருநெல்லி சக்திகள் அவசியமே. குரு பார்க்கும்போது தம்பதிகளின் சங்கமம் நிகழ்ந்தால் மட்டுமே சந்தான பாக்கியம் கிட்டும் என்பது ஜோதிட விதி. நம் முன்னோர்கள் அறிந்த விதி முறையும் இதுதான்.

இதை தெளிவுபடுத்துவதாக உள்ளதே பாஸ்கர தீர்த்தத்தில் அமைந்த 21 குரு படிக்கட்டுகள். இந்த 21 படிக்கட்டுகளிலும் பச்சரிசி மாவால் நீர்க்கோலம் இட்டு செங்காவியால் அலங்கரித்து வழிபடுவதால் கிட்டும் பலன்கள் அமோகம், களையப்படும் சந்ததிக் குற்றங்கள், குறைகள் ஏராளம், அனைத்தும் குரு அருளால் மட்டுமே சாத்தியமாகும் என்பதை நினைவில் கொள்க.

29.9.2023 வெள்ளிக் கிழமை முதல் 14.10.2023 சனிக் கிழமை வரை வளரும் மாளய பட்ச வழிபாட்டிற்கு முன்னோடியாக இந்த நெல்லிக்காய் ‘வலத்தை’ நிகழ்த்துவது என்பது பக்தர்கள் உள்ளத்தில் இறைவன் என்றும் தங்கும் அனுகிரகத்தை அளிப்பதாகும். வெள்ளிக் கிழமை என்பது திருமகளின் லட்சுமி கடாட்ச சக்திகள் பெருகும் கிழமை. சனிக் கிழமை என்பது இவ்வாறு பெருகிய லட்சுமி கடாட்ச சக்திகள் நிரந்தரமாகத் தங்கி அருள்பாலித்தல் என்பதைக் குறிப்பது. இந்த இரு சக்தி பெற்ற கிழமைகள் மாளய பட்சத்தின் ஆரம்பத்திலும் நிறைவிலும் நிறைவது என்பது நம் முன்னோர்கள் செய்த அருந்தவப் பலனே. இந்த அருந்தவப் பலனை நன்முறையில் பயன்படுத்தி அருள் பெற வேண்டியது நமது கடமை அல்லவா?

இது இன்றோ நேற்றோ நிகழ்ந்த குழப்பம் கிடையாது, திருமகள் நிலைமகளாக திருமால் உள்ளத்தில் இடம் பெற வேண்டி கலைமகளும் அருளும் திருத்தலத்தில் மேற்கொண்ட வழிபாடுகள் பற்றி இந்த மாளயபட்சத்தில் நமக்கு உரைப்பவரே நம் சற்குரு ஆவார். திருத்தங்கல் திருத்தலத்தில் திகழும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஜாம்பவதி இவர்களில் எவர் திருமாலின் உள்ளத்தில் நிரந்தரமாய்த் தங்கும் தகுதி பெற்றவர் என்று அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. எந்தப் போட்டியாக இருந்தாலும் அதை பூலோகத்தில் உள்ள திருத்தலங்களில் அந்த போட்டிகளை நிகழ்த்தி முடிவு காண்பதுதானே தேவலோகத்திலேயே பிரசித்தமாக இருப்பது?

இதனால் இந்த நான்கு தேவியரும் நாரத மகரிஷியை நினைத்து பிரார்த்தனை செய்ய அங்கே பிரசன்னமானார் நாரத மகரிஷி. தேவிகள் தங்கள் வேண்டுகோளை அவரிடம் சமர்ப்பிக்க அவரோ வழக்கம் போல் அவர்களைக் ‘குழப்ப’ ஆரம்பித்தார்.
கரு நெல்லி காக்கும் திரு தங்கல்
அரு நெல்லி அருளும் தாழ நல்லூர்
திரு நெல்லி திகழும் புடை மருதூர்
பலன் அறிவார் பரமன் பதம் அடைவாரே
என்று கூறி அங்கிருந்து சட்டென மறைந்து விட்டார். தேவிகள் அனைவரும் நாரதரின் உரையை அவரவர் நோக்கில் ஏற்றுக் கொண்டு தவமியற்ற ஆரம்பித்தனர். திருமகள் ‘புடை’ என்ற வார்த்தையை பிரதானமாக ஏற்று திருப்புடைமருதூர் திருத்தலத்தில் உறையும் ஈசனை வலம் வந்து வணங்க ஆரம்பித்தாள். புடை என்றால் அருகு, நிழல், திருவடி என்றெல்லாம் பொருள் உண்டு.

அத்தாழநல்லூர்

கல்லாலின் புடை அமர்ந்த ஈசன் என்றுதானே தட்சிணாமூர்த்தியை வர்ணிக்கிறோம். இவ்வாறு தான் பெருமாளின் புடையில், நிழலில் தங்க விரும்பிய திருமகள் திருபுடைமருதூர் திருத்தலத்தை தேர்ந்தெடுத்து தவமியற்றியது எத்துணை பொருத்தமான செயல்? இவ்வாறு திருப்புடைமருதூர் திருத்தலத்தை அடைந்த திருமகள் அங்குள்ள தாமிரபரணி ஆற்றிலிருந்து தினமும் தீர்த்தம் எடுத்து வந்து இறைவனுக்கு அபிஷேகித்தாள்.

வெறும் தீர்த்தம் என்பதை எவர் வேண்டுமானாலும் கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகிக்கலாம் அல்லவா? இதில் குளிர்ச்சியும் ஞானமும் கைகூடினால் சிறப்பாக இருக்குமே என்பது திருமகளின் அவா. இதை நிறைவேற்றும் விதமாக திருப்புடைமருதூர் சிவாலயத்தில் உள்ள சகஸ்ரலிங்கத்தை தொடர்ந்து வலம் வரலானாள் தேவி.

திருப்புடைமருதூர் சிவாலயத்தில் சகஸ்ரலிங்கமானது பக்தர்கள் வலம் வரும் விதத்தில் அமைந்துள்ளது சிறப்பாகும். சகஸ்ரலிங்கத்தில் வலது பக்கம் சனீஸ்வர பகவான் இடது பக்கம் வீணையில்லா ஞான சரஸ்வதி அருள்பாலிப்பதால் இந்த அற்புதமான தேவ சங்கமத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்து வலம் வரத் தொடங்கினாள் ஸ்ரீதேவி. சனி என்றால் குளிர்ச்சி. எனவே திருமகளின் வலத்தில் குளிர்ச்சியும் ஞானமும் இயற்கையாகவே அந்த தெய்வ மூர்த்திகளின் அருளால் பெருகி பூரிக்க ஆரம்பித்தன.

சகஸ்ரலிங்க வழிபாடாக ஒரு நாள் திருமகள் அவ்வாறு வலம் வருகையில் தன் காதில் ஒரு யானையின் தீனக் குரல் கேட்டது. சற்றே அந்த குரலை கவனிக்கவே அது இந்திரனின் வாகனமான கஜேந்திரனின் குரல் என்பதையும் கஜேந்திரனின் காலைக் கவ்விய முதலையின் பிடியிலிருந்து தன்னை விடுவிக்க முடியாமல் அவ்வாறு தீனக் குரலை எழுப்பியது அந்த யானை என்பதையும் கண்டு கொண்ட தேவி பெருமாளுக்கு அந்த யானையின் இக்கட்டான நிலையை எடுத்துரைக்கவே பகவான் அந்த யானையைக் கவ்விக் கொண்டிருந்த முதலை அரக்கனை தன் சக்கராயுதத்தால் சம்ஹாரம் செய்து விடவே யானை பேரானந்தம் அடைந்தது.

இது ஒரு புறம் இருக்கட்டும்...
உங்களிடம் நூறு ரூபாய் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை வைத்து நீங்கள் திருப்தியாக உண்டு மகிழலாம். அதில் பாதியை நீங்கள் உணவு உண்ண வைத்துக் கொண்டு மற்றோர் பாதி பணத்தில் ஒரு வயிறு காய்ந்த ஏழைக்கு உணவு வாங்கி அளிக்கலாம். பல நாட்கள் கஞ்சாவே பார்க்காத ஒருவனுக்கு கஞ்சா வாங்கிக் கொடுத்தால் அவன் மனமார புகைத்து உங்களை அப்படியே கட்டித் தழுவிக் கொள்வான்.

இவ்வாறு பணத்தை எப்படி நீங்கள் பயன்படுத்துகிறீர்களோ அதைப் பொருத்துத்தான் அதன் பயனும் அமையும். அதுபோல் செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவி எப்படி பூஜைகள் நிறைவேற்றுகிறாளோ அதற்கேற்றவாறுதானே லட்சுமி கடாட்ச சக்திகளும் பல்கிப் பெருகும். திருமகள் தேர்ந்தெடுத்த வழியே எத்திசைக்கும் புகழ் பரப்பும் மார்க்கமாக நரசிம்மரின் நிழலாய்த் தொடர்ந்து சென்று அவருக்கு குளிர்ச்சி அளித்த வைபவமாகும்.

ஸ்ரீநரசிம்மர் தம்பம்
அத்தாழநல்லூர்

பக்த பிரகலாதனிடம் அவன் தந்தை இரண்யன் பெருமாள் எங்கிருக்கிறான் என்று கேட்டபோது, “அவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்...” என்று கூறினான் அல்லவா? இவ்வாறு தன் பக்தனின் உன்னத பக்தியை மெச்சும் வண்ணமாக பெருமான் இரண்யகசிபுவின் அரண்மனையில் இருந்த 18 தூண்களிலும் நிரவி இருந்தாராம்.

இரண்யகசிபுவின் வதத்திற்குப் பின்னர் இந்த நரசிம்ம சக்திகள் மக்களுக்குப் பயன்படும் விதமாக பூலோகத்தில் பல இடங்களிலும் பரவி நிரவின. இவற்றில் பிரதானமாக இருப்பதே அத்தாழநல்லூர் திருத்தலத்தில் உள்ள நரசிம்ம தம்பமாகும். மற்ற தூண்களில் இருந்த நரசிம்ம சக்திகள் எல்லாம் எகிப்து, மெக்சிகோ போன்ற உலகின் பல இடங்களிலும் நரசிம்மரால் விநியோகிக்கப்பட்டன என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியமாகும்.

திருமகள் சனீஸ்வரர், ஞான சரஸ்வதி இவர்கள் முன்னிலையில் இயற்றிய நெடிய வழிபாடு கஜேந்திரன் மோட்சம் பெற, கஜேந்திரனின் காலைப் பற்றிய முதலை நன்னிலை அடைய, நரசிம்மரின் கோபம் தணிந்து சாந்தம் பெற, உலகில் 18 இடங்களில் பொலிந்த நரசிம்ம தம்பங்களில் சூழ்ந்த அக்னி ஜ்வாலை சக்திகளை எல்லாம் குளிர்வித்து அதனால் கோடி கோடியான உயிர்களுக்கெல்லாம் நன்னிலை பெற திருமகளின் தவம் துணை புரிந்ததால் பெருமாள் தேவியை தன் நிழலில், புடையில் இருத்திக் கொண்டதோடு மட்டுமல்லாமல் எம்பெருமானின் நிழலிலும் நிரந்தரமாகத் தங்கும் அனுகிரகத்தைப் பெற்றுத் தந்தார்.

வேறு எத்திருத்தலத்திலும் காண முடியாத அதிசயமாக திருமகள் சிவபெருமானின் கோஷ்டத்தில் பெருமாளின் நிழலாக தங்கி இருக்கும் அதிசயத்தை திருப்புடைமருதூர் திருத்தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். இங்கு மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்க திருமகளும் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது என்பது பக்தர்கள் தங்கள் வாழ்வில் பெறும் மிக மிக ஒரு அரிய பேறே. இந்த ‘திருத்தங்கலைத் தவிர’ வேறு ஒரு திரு தங்கல் உலகில் வேறு எங்கும் உண்டா என்ன?!

ஸ்ரீநரசிம்ம மகாத்மியம்

ஒரு முறை சிறுவன் வெங்கடராமன் தன் சற்குரு கோவணாண்டியுடன் அத்தாழநல்லூர் திருத்தலத்தை அடைந்தான். வெகுதூரம் நடந்து வந்த சிறுவனுக்கு வயிற்றுப் பசி உடலை வாட்டியது. கோவணாண்டியோ, “இது வந்தாச்சுடா பரோட்டா கடை...”, என்று சொல்லி சொல்லியே வெகுதூரம் அவனை அழைத்து வந்து விட்டார். அத்தாழநல்லூர் தலத்திலுள்ள 16 கால் மண்டபம் அருகில் இருவரும் இளைப்பாற அமர்ந்தனர். அப்போதுதான் தான் கோவணாண்டியுடன் வந்திருப்பது தாமிரபரணி பாயும் பாபநாசத்திற்கு அருகில் உள்ள அத்தாழநல்லூர் நரசிம்மத் தலம் என்பதை அறிந்து கொண்டான்.

பதினாறுகால் மண்டபம்
அத்தாழநல்லூர்

அகத்திய பிரானுக்கு கோட் சூட் தைப்பதற்காக கோவணாண்டி பெரியவர் பொதியமலை சென்று வந்த இனிய அனுபவத்தை சிறுவனிடம் வர்ணித்த காலம் முதல் எப்படியாவது கோவணாண்டியுடன் பொதியமலைக்கு சென்று அகத்திய பிரானை தரிசிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான். அது இப்போது கைமேல் கனிந்த கனியாக காத்திருப்பதுபோல் தோன்றவே பெரியவரிடமே அது பற்றி கேட்டும் விட்டான்.

பெரியவரோ வானத்தைப் பார்த்தவாறு, “அது ஒன்றும் பிரமாதமில்லை, நைனா. இப்போ இந்த நரசிம்மர் வரலாற்றைக் கேளு...”, என்று கூறி நரசிம்ம சுவாமி இரண்யன் அரண்மனையில் தோன்றிய அந்த வரலாறு மட்டும் என்றல்லாமல் நரசிம்ம பெருமான் தோன்றி இன்று உலகம் முழுவதும் 18 நரசிம்ம தம்பங்களில் நிலை கொண்ட வரலாறு வரை அனைத்தையுமே பெரியவர் கூறிக் கொண்டே வர எல்லையில்லா பரமானந்தத்துடன் அந்த வார்த்தைகளை எல்லாம் பிரமிப்புடன் கேட்டுக் கொண்ட வந்த சிறுவன் எப்போது ‘தூங்கிப் போனான்’ என்பது அவனுக்கே தெரியவில்லை.

பிரம்ம முகூர்த்த நேரம் என்பது விடியற்காலை 3.30 முதல் 5.30 வரையிலான நேரம் என்பதை நாம் பொதுவாகக் கொண்டாலும், அத்தாழநல்லூர் தாமிரபரணி ஆற்றில் நீராடுவதற்கு உகந்த சரியான பிரம்ம முகூர்த்த நேரம் விடியற்காலை 3.35 முதல் 4.35 வரையிலான நேரமே என்பது நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியமாகும். நரசிம்ம அவதாரம் பூலோகத்தில் நிகழ்ந்த இந்த சுபமுகூர்த்த நேரத்தில் மட்டுமே இத்தகைய இரகசியத்தை வெளியிட வேண்டும் என்ற நியதி உள்ளதால் இதை இத்தருணத்தில் நம் சற்குரு அருளால் அடியார்களுக்குத் தெரிவிக்கிறோம்.

தூங்கி கண் விழித்து எழுந்தபோது விடியற்காலை மூன்று மணி இருக்கும். தன்னுடைய சோம்பேறித்தனத்தை நினைத்து நொந்து கொண்ட சிறுவன் அருகிலிருக்கும் பெரியவரை அவசரம் அவசரமாக தேடிப் பார்த்தான். அவர் எங்கே அங்கு இருந்தார்? திடுக்கிட்டான் சிறுவன். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சற்றே யோசித்தான். தான் இருக்கும் இடமோ நரசிம்மரின் திருத்தலம் என்பதை உணர்ந்து கொண்டு எல்லையில்லா பரமானந்தம் அடைந்தான். வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்து நேரத்தை உறுதி செய்து கொண்ட சிறுவன் எதிரில் உள்ள தாமிரபரணி ஆற்றில் மெதுவாக இறங்கி அந்த இதமான குளிரூட்டும் தீர்த்தத்தில் நீராடலை நிறைவேற்றிக் கொண்டான்.

அப்போது, “தம்பி விபூதி வேண்டுமா?” என்ற குரல் கேட்கவே ஒரு பழுத்த பழமான பக்தர் அன்புடன் நீட்டிய விபூதியைப் பெற்றுக் கொண்டு தாமிரபரணி தீர்த்தம் விட்டு அந்த விபூதியைக் குழைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டான். அருகிலுள்ள 16 கால் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கோவணாண்டி சொல்லிக் கொடுத்த நரசிம்ம துதிகள் அனைத்தையும் வாய் விட்டு சொல்ல ஆரம்பித்தான்.

தான் காண்பது கனவா நனவா என்று சொல்ல முடியாத நிலையில் கோவணாண்டி பெரியவர் வர்ணித்த அந்த 18 நரசிம்ம சொரூபங்களும் சிறுவனின் கண் முன் தோன்றி அவனுக்கு காட்சி அளிக்க ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று விட்டான். எத்தனை மணி நேரம் இவ்வாறு நரசிம்ம துதிகளை ஓதிக் கொண்டு, ஒளி வீசும் நரசிம்ம உருவங்களை தரிசித்துக் கொண்டு இருந்தான் என்று சிறுவனுக்கே தெரியவில்லை.

அத்தாழநல்லூர் திருத்தலத்தில் உள்ள நரசிம்ம தம்பத்திற்கு 12 படிகள் உண்டு. இந்த 12 படிகளையும் 12 ஆழ்வார்கள் தினமும் தொட்டு வணங்கும் அரிய காட்சியையும் கண்டான் சிறுவன். அப்போதுதான் சிறுவனுக்கு சுர்ரென்று உச்சி மண்டையில் ஒரு விஷயம் உரைத்தது. ஆம், சிறுவனுக்கு தாமிரபரணி ஆற்றின் கரையில் விபூதி அளித்தது நம்மாழ்வார் என்ற கனிந்த கனிதான்...

படியாய்க் கிடக்கும் பரமர்கள்
அத்தாழநல்லூர்

“இத்தகைய பரம்பொருளைக் கூட இனம் கண்டு கொள்ள முடியாத மண்டாகி விட்டேனே...”, என்று தன்னைத் தானே நொந்து கொண்டும், தேற்றிக் கொண்டும் இருந்த சிறுவனுக்கு மற்றோர் தேஜோமயமான காட்சியும் தெளிந்தது...

அந்த 12 படிகளின் நடுவே சிறுவனுக்கு நன்கு பரிச்சயமான ஒரு உருவம் படிகளில் இறங்கி வருவதைக் கண்டான். ஆம், கோவணாண்டிதான் நரசிம்ம தம்பத்திலிருந்து தேஜோமயமாய் ஆயிரம் சூரிய பிரகாசத்துடன் இறங்கி வந்து கொண்டிருந்தார். ஒரு கணம் செய்வதறியாது திகைத்த சிறுவன் ஓடிப் போய் பெரியவரை இறுகக் கட்டிக் கொண்டான்.

“சரி ... சரி ... விடுடா...”, என்று கன்றை அகற்றும் பசுவைப் போல் சிறுவனை விலக்கி விட்டு, “என்னடா, பாபநாசம் போகலாமா?” என்று கேட்டு கண்ணைச் சிமிட்டினார் பெரியவர்.

சிறுவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. சிறுவன் என்ன பதில் கூறியிருப்பான் என்று நீங்கள் சற்றே ஆத்ம விசாரம் செய்து பார்க்கலாமே?
... ...
... ...

பெரியவர் மீண்டும் தன் கேள்வியை புதுப்பித்தார். “என்னடா கண்ணு, பாபநாசம் போகலாமா, இல்லை இந்த காய்ந்த வயிற்றில் நான்கு பரோட்டாவைப் போடலாமா?” என்று கேட்டு பெரிதாக நகைத்தார். இந்த கேள்விக்கு சிறுவன் கூறிய பதிலை நாம் எளிதில் அறிந்து கொண்டு விடலாமே?

நரசிம்ம பெருமாளின் 18 யுக கால தோற்றங்களை நாம் தரிசிக்கும் அளவிற்கு பக்தியைப் பெருக்கிக் கொண்டவர்கள் இல்லை என்றாலும் நரசிம்ம பெருமாளின் அனுகிரகத்தை வாங்கித் தருவதற்கு நம் சற்குரு தயாராக இருக்கிறார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய இனிய செய்தி. அகத்திய பெருமானை தரிசிக்கும் அளவிற்கு நாம் தூய்மையானவர்கள் கிடையாது என்றாலும் அகத்திய பெருமான் தினமும் நீராடும் திருத்தங்கல் பாபநாச தீர்த்தத்தில் நீராடி அந்த தூய உடம்புடன் நாம் தாமிரபரணி ஆற்றில் நீராடலாமே?

தாமிரம் குளிர்ச்சியைத் தருவது, பரணி நட்சத்திரம் நாம் புரிந்து கொள்ள முடியாத அதீத உஷ்ணத்தை அளிப்பது. இவ்வாறு எத்தகைய உஷ்ணத்தை நாம் நம் வாழ்க்கையில் சந்தித்தாலும் அதன் தீய விளைவுகளை அகற்றி நம் மனதுக்கும் உடலுக்கும் குளிர்ச்சியை அளிப்பதே தாமிரபரணி தீர்த்தத்தின் மகிமையாகும். உதாரணமாக, பரணி நட்சரத்திரமும் ஞாயிறு கிழமையும் இணையும் காலத்தை நாம் கூடா நாள் என்கிறோம். இந்த கூடா நாளில் விளைந்த பல தீய விளைவுகளுக்கும் ஓரளவிற்கு பிராயசித்தம் நல்குவதே நரசிம்ம பெருமாளின் எதிரில் இருக்கும் தாமிரபரணி ஆற்றில் நீராடுவதாகும்.

இவ்வாறு தாமிரபரணி நீராடலின் முழுமையாக பலனைப் பெற வேண்டுமானால் முதலில் திருத்தங்கல் தலத்தில் பாபநாச தீர்த்தத்தில் நீராட வேண்டும். அதன் பின்னர் அத்தாழநல்லூர் திருத்தலத்தில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் தாமிரபரணி ஆற்றில் நீராடி அங்குள்ள 16 கால் மண்டபத்தில் 32 தேவார பதிகங்களையும் ஓத வேண்டும். இது இயலாதபோது இந்த 16 கால் மண்டபத்தில் உள்ள ஒவ்வொரு தூணையும் தொட்டு நாராயணா நாராயணா என்ற நாமம் கூறி வணங்க வேண்டும். அதன் பின்னர் நரசிம்ம தம்பத்திலிருக்கும் ஒவ்வொரு படியிலும் கொலுவிருக்கும் 12 ஆழ்வார்களின் நாமங்களை நம்மாழ்வார் முதலாக ஓதி நரசிம்ம பெருமாளின் தரிசனத்தைப் பெற வேண்டும் என்பதே சித்தர்கள் விவரிக்கும் வழிபாட்டு முறை.

ஸ்ரீநடராஜ பெருமான்
திருப்புடைமருதூர்

நரசிம்ம தம்பம் என்ற ஒரு வழிபாட்டு முறையும் உண்டு. அதாவது,
           நாராயணா
           நாராயணா
           நாராயணா
           நாராயணா
           நாராயணா
           நாராயணா
           நாராயணா
           நாராயணா
           நாராயணா
           நாராயணா
           நாராயணா
           நாராயணா
           நாராயணா
           நாராயணா
           நாராயணா
           நாராயணா

என்று ஒரு மாம்பலகை அல்லது வாழை இலையின் மீதோ அரிசி, கோதுமை போன்ற தான்ய குருணைகளால் 16 முறை நாராயண நாமம் எழுதி அதை நரசிம்ம தம்பமாக பாவித்து 32 பதிகங்கள், அபிராமி அந்தாதி, ருணஹர தோத்திரம் போன்ற துதிகளை ஓதி இந்த தான்யத்துடன் சர்க்கரை கலந்து எந்த திருத்தலத்திலும் எறும்புகளுக்குத் தீனியாக இட்டு விடலாம்.

குடும்பத்தில் கடன் சுமை, காலம் கடந்த திருமணம், எதிரிகளின் தொல்லை, குழந்தைகளின் சொல் பேச்சு கேளாமை, குடும்பத்தில் அமைதியின்மை போன்ற எந்த துன்பங்கள் எதிர் வரினும் மேற்கண்ட நரசிம்ம தம்ப வழிபாடு அவைகளை நீக்கும்.

நாறும்பூ நாதர்

திருப்புடைமருதூர் இறைவனின் திருநாமம் ஸ்ரீநாறும்பூ நாதர் என்பதாகும், இறைவி ஸ்ரீகோமதி அம்பாள். இது குறித்து இத்தல புராணம் சுட்டிக் காட்டுவது... ஒரு முறை கருவூர் சித்தர் ஒவ்வொரு திருத்தலமாக இறைவனைத் தரிசித்துக் கொண்டு வருகையில் திருப்புடைமருதூர் திருத்தலத்திற்கு வந்தபோது அங்கு வடதிசையில் பாயும் தாமிரபரணி ஆறு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடவே ஆற்றின் மறுகரையில் நின்று கொண்டு சுவாமியைத் துதி பாடினார்.

“நாறும்பூ நாதா! நாறும் உடலை உடைய இந்த மனிதனைக் காணக் கூடாது என்பதற்காக இப்படி ஒரு நாடகம் ஆடுகிறாயா?” என்று மனதிற்குள் நினைத்த மறுகணம் இறைவன் மனமிரங்கி ஆற்று வெள்ளத்தின் இடையே சித்தர் பிரான் நடந்து வருவதற்காக ஆற்று வெள்ளத்தைப் பிரித்து வழியை உண்டாக்கினான். கருவூர் சித்தர் பேருவகை கொண்டு அந்த பாதையின் வழியே நடந்து வந்து இறைவன் ஸ்ரீநாறும்பூ நாதனை தரிசித்தார். கருவூர் சித்தரின் குரலைக் கேட்பதற்காக இடப் புறம் தன் செவியைச் சாய்த்து கேட்டதால் சிவலிங்க மூர்த்தமே இடது பக்கம் சாய்வதாக ஆகிவிட்டது.

திருப்புடைமருதூர்

கருவூர் சித்தர், “சுவாமி, நாறும் உடலைக் கொண்ட இந்த மனிதனுக்காக தங்கள் திருமேனியைச் சாய்த்து அடியேன் நாறாமல் என்றும் மணக்கும் அருளைப் புரிந்தீர்கள். இந்த பேரருளை மற்ற அடியார்களுக்கும் உணர்த்தும் வண்ணம் தங்கள் செவி சாய்த்த இந்த உருவத்தை அப்படியே வைத்திருக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்...”, என்று கூறி இறைவனிடம் மனமுருகி பிரார்த்திக்க அன்று முதல் சாய்ந்த உருவத்துடன் இறைவனின் லிங்க மூர்த்தம் திகழ்கிறது.

எனவே ஸ்ரீசெவிசாய்த்த விநாயகர் என்று அன்பிலாந்துறையில் அருள்புரியும் அண்ணலைப் போல் மக்களின் குறைகளைக் கேட்டு தக்க நிவர்த்திகளை அளிப்பவரே ஸ்ரீநாறும்பூ நாதர் ஆவார்.

இது குறித்து நம் சற்குரு அளிக்கும் விளக்கமும் பேருவகை அளிப்பதே. சுவாமி வடக்கு திசை என்னும் குபேர திசை நோக்கி தன் தலையை சாய்த்து அருள்வது குபேர சக்திகள் என்ற லட்சுமி கடாட்ச சக்திகளை அருளும் பாங்கு ஆகும். அதனால் திருமகள் வடதிசையில் அருளும் சகஸ்ரலிங்க ஈசனை தினமும் வலம் வந்து வடதிசையில் தலைசாய்த்த இறைவன் அருளால் மகாவிஷ்ணுவின் பாதக் கமலங்களைப் பற்றினாள்.

மேலும் வடக்கு திசையில்தானே கைலாயம் திகழ்கிறது. திருக்கைலாயம் வரை செல்லும் ஒளிப் பாதையில் பக்தர்களைக் கொண்டு சேர்ப்பதும் இவ்வாறு இறைவனின் வடக்கு திசை நோக்கி சாய்ந்த திருஉருவமே. இது பற்றிய மேலும் விளக்கங்களை பெருங்குடி ஈசன் மகிமை குறித்து நம் சற்குரு அருளியவற்றைக் காணலாம்.

மகான்களின் விரல் அசைந்தால் ஆயிரம் காரணம் இருக்கும் என்பதற்கு கருவூர் சித்தரின் வரலாறும் ஒரு வழிகாட்டியே. மக்கள் வழக்கமாக இறைவனைத் தரிசிக்கும் பாதையான கிழக்கு திசையில் வராமல் வடக்கு திசையில் வந்து இறைவனைக் கூவி அழைத்தார் அல்லவா? அதனால்தான் சுவாமி அந்த சித்தர்பிரானுக்காக ஒரு பாதையை தாமிரபரணி ஆற்றின் நடுவே உருவாக்க வேண்டி வந்தது. கரு நெல்லி, அரு நெல்லி, திரு நெல்லி என்ற மூன்று நெல்லிகளைப் பற்றி குறிப்பிட்டோம். இதில் திரு நெல்லி சக்திகள் திகழ்வதே திருப்புடைமருதூர். இது நாம் நினைக்கும் மரம் போல் அல்லாது ஒளிப் பிழம்பாகத் திகழ்வதே. இந்த ஒளிப் பாதையை உருவாக்கியவரே திருப்புடைமருதூர் ஈசன் ஆவார்.

திருமகள் சமேத மகாவிஷ்ணு
திருப்புடைமருதூர்

இந்த ஒளிப் பாதை வழியே நடந்து வந்து அதை திருக்கைலாயத்துடன் சேரும் ஒளிப் பாதையில் இணைத்தவரே கருவூரார் என்பதே சித்தர்கள் உரைக்கும் தெய்வீக இரகசியம். கரு என்பது அனைத்திற்கும் மூலமாக இருப்பதுதானே. எனவே இந்த கருவான ஒளிப்பாதையை கருவூரார் அமைத்து பக்தர்களுக்கு வழிகாட்டியது எத்தகைய பொருத்தமான செயல்.

“இந்த ஒளிப் பாதையில் தகுதி உடைய யாரோ செல்வார்கள் போல் இருக்கிறது...” என்று அடியார்கள் ஒருக்காலும் நினைக்க வேண்டாம். பாம்பின் கால் பாம்பறியும் என்பதாக, கருவூர் சித்தரின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து நம் சற்குரு நாம் அனைவரும் இந்த ஒளிப் பாதை வழியே சென்று நன்னிலை அடையவே இந்த மாளய பட்ச தர்ப்பணத்தில் ஏழு தீபங்கள் சாட்சியாக தர்ப்பணங்கள் அளிக்கும்படி அருள்கிறார். இந்த ஏழு தீப சக்திகள் நமக்கும் நம்முடைய பித்ரு மூர்த்திகளுக்கும் வழிகாட்டியாய், கலங்கரை விளக்கமாய் அமைந்து நாம் திருக்கைலாயம் அடைய வழி வகுக்கும் என்பது உண்மை.

மருதம் என்பது மருத மரத்தை மட்டும் குறிப்பதன்று, இனிமை, ஆற்றுவழி என்ற பொருட்களும் அதற்கு உண்டு. மனிதன் இறைவனை அடைவதற்கு உரிய வழியை காட்டுவதே மருதமரம் துலங்கும் திருப்புடைமருதூர் ஆகும். திரு புடை மருதம் ஊர் என்றால் திருமகள் தன் ஆருயிர் கணவனின் திருவடியில் அமர்வதற்கு இனிமையான வழியைக் கூறிய நல்லூர் என்றும், அவ்வாறு அமர்ந்த திருமகள் இறைவனை அடையும் வழியை தன் கணவன் மூலமாக பெற்ற திருத்தலம் என்றும் பொருள். இத்தகைய ஒரு சிறந்த தலத்தை நாம் அறிவதற்கு துணையாய் நின்ற நம் சற்குருவின் பெருமையை எப்படிக் கூற முடியும்?

திருத்தங்கல் தலத்தில் நாம் பெற்ற கருநெல்லி லட்சுமி கடாட்ச சக்திகள் நிரந்தரமாகத் தங்க, அத்தாழநல்லூர் திருத்தல வழிபாடுகள், தர்ப்பணங்கள் நம் மனதில் இறை பக்தியை ஆழமாக வேரூன்ற உதவி செய்ய, இதன் மூலம் திருப்புடைமருதூர் திருத்தலத்தில் நாம் காணும் தெய்வீக ஒளிப் பாதை வழியே சென்று எல்லையில்லாப் பரம்பொருளை அடைவோம் என்பதே இத்தல வழிபாடுகள் அளிக்கும் உறுதிப்பாடு.

திருமகள் வழிகாட்டிய முறையில் நாமும் நடப்பதுதானே சிறப்பு? மண் கலயம், செப்பு, வெள்ளி செம்புகள், குடங்களில் தாமிரபரணி தீர்த்தத்தை நிரப்பி அதன் மேல் ஐந்து மாவிலைகள் தேங்காய் கூடிய கும்பம் அமைத்து திருப்புடைமருதூர் மாமரம் அடியில் அல்லது அவரவருக்கு வசதியான இடங்களில் வைத்து இந்த தீர்த்தத்தின் அருகில் அமர்ந்து கொண்டு 32 தேவாரப் பதிகங்கள் அல்லது இடர்களையும் பதிகங்கள் போன்ற துதிகளை நாள் முழுவதும் ஓதி அதை அடுத்த நாள் அன்னதான காரியத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

திருத்தல நீராடல்களின் போதும், தர்ப்பணம், அன்னதானம் போன்ற எந்த வழிபாடுகள் நிறைவேற்றினாலும் இந்த மாளய பட்சம் முழுவதிலும் கீழ்க்கண்ட ஒரே ஒரு பிரார்த்தனையை மட்டும் இறைவன் முன் வைத்து நிறைவேற்றுமாறு நம் சற்குரு பரிந்துரைக்கிறார்.

நாறும்பூ நாதா,
மலத்தின் மேல் அமரும் ஈயாய் வாழ நேரிடினும் நறுமண மலரின் மேல் அமரும் தேனீயாய் வாழ வரம் அளிப்பாய், ஈசனே!

மாயைகளில் பலவிதங்கள் உண்டு. மாயையைப் பற்றி விளக்க வேண்டுமானால் ஒரு கருப்பு பூனையை நள்ளிரவில் விளக்கே இல்லாத அறையில் தேடுவதைப் போன்றது என்பர் சித்தர் பெருமக்கள். ஆனால், இந்த கடினமான பணியையும் எளிதாக நிறைவேற்றி நாம் நலமாய் வாழ வழிவகுப்பவரே நம் சற்குரு.

ஒரு இருண்ட அறை, அது எத்தனை வருடமாக இருள் மண்டிக் கிடந்தாலும், அங்கு ஒரு தீபத்தைக் கொண்டு வந்தால் அந்த அறையில் உள்ள இருள் அகலும். இங்கு இருள் என்பது ஒரு மாயை.

அது போல் ஒளி மாயை என்று உண்டு. ஒரு முறை ராமகிருஷ்ண பரமஹம்சரிடம், “சுவாமி, உங்களுக்கு காளி தேவியை நேரில் காட்டுகிறோம்...”, என்று கூறி அவரை ஒரு விலைமாதிடம் அழைத்துச் சென்ற நிகழ்ச்சியை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு ஒரு நல்ல விஷயத்தைப் பற்றி விளக்குவதாகக் கூறி ஒரு தவறான பாதையில் இட்டுச் செல்வதே ஒளி மாயை என்பதன் சுருக்கமான விளக்கமாகும். இருள் என்ற மாயையை ஒளியால் அகற்றி விடலாம், ஆனால், ஒளி மாயையை நம் சற்குரு போன்ற உத்தமர்களால் மட்டுமே உணர்த்த முடியும்.

இங்கு நீங்கள் காணும் வீடியோவில் காணும் சூரியனின் பிம்பமே ஒளி மாயையாகும். இதை circle of confusion என்றும் கூறுவதுண்டு. இந்த ஒளி மாயையை உலக நன்மைக்காக தோற்றுவித்து அதை நிர்வகிப்பவரே ஞாயிற்றம்பல சித்தர், நம் சற்குரு போன்ற சித்தர்பிரான்கள் ஆவர்.

அருண பரிவு

அருண பரிவு என்று சித்தர்கள் அழைக்கும் இந்த ஒளி மாயை நமக்குப் புரியவில்லை என்றால் இதை விட்டு விட்டு நாம் வந்த வழி செல்லலாம் என்று மெத்தனமாக இருக்க முடியாது. காரணம், இந்த ஒளி மாயையை தாண்டினால் மட்டுமே ஸ்ரீநாறும்பூ நாதர் அமைத்த கைலாயப் பாதை வழியே சென்று இறைவனை அடைய முடியும். எல்லா உத்தமர்களும் தங்கள் இறை பாதையில் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த ஒளி மாயையைக் கடந்தே ஆக வேண்டும். இதற்கு வரும் மாளய பட்ச வழிபாடு துணை புரியும் என்பதே இதன் மகத்துவமாகும்.

ஸ்ரீநாறும்பூ நாதர்
திருப்புடைமருதூர்

திருத்தங்கல் திருத்தலத்தில் அருணன் மார்க்கண்டேயர், நான்கு தேவிகளுடன் எழுந்தருளி இருப்பது இந்த அருண பரிவு என்ற மாயையை விலக்கும் அனுகிரகத்தை அளிப்பதற்காக என்பதே நம் சற்குரு அளிக்கும் விளக்கம். அருண சக்திகள் அர்ச்சுன நதியில் பூரணமாய் நிரவி இருப்பதும் இவ்வாறு அருண பரிவு மாயை பற்றி அறியாதவர்கள் கூட இத்தீர்த்தத்தில் நீராடி நற்பலன் பெற வேண்டும் என்பதற்காகவே.

ஒரு விதத்தில் பார்க்கும்போது இந்த அருண பரிவு என்ற மாயை சமுதாயத்திற்கு பெருத்த நன்மை பயக்கும் என்பதும் உண்மையே. கடற்கரை தலங்களில் இந்த அருண பரிவு சக்திகள் அதிகம். அங்கு பொலியும் சூரிய கிரணங்கள் அருண பரிவு முறையில் இயங்காவிட்டால் அந்த சூரிய கதிர்கள் ஒரு புள்ளியில் குவிந்து அந்த புள்ளியில் உள்ள உயிர்களை, தாவரங்களை அழித்துவிடும் அல்லவா? இவ்வாறு பயிர்களைக் காத்த அருண பகவானுக்கு நன்றி கூறும் முகமாக ஞாயிற்றம்பல பகவதி ஆலயத்தில் கேரள மக்கள் இயற்றும் வழிபாட்டு முறையையும் இங்குள்ள வீடியோவில் கண்டு இரசிக்கலாம்.

ஸ்ரீகோமதி அம்மன்
திருப்புடைமருதூர்

12 வருடங்கள் தொடர்ந்து சூரிய நமஸ்காரம் நிறைவேற்றி வந்தால் அவர்களுக்கு கடவுள் தரிசனம் நிச்சயம் கிட்டும் என்று நம் சற்குரு உறுதி அளிக்கிறார். இங்கு அருண பரிவு என்ற மாயை விலகி நம்முடைய எண்ணங்கள், சிந்தனைகள் ஒரு புள்ளியில் குவிவது சாத்தியமாவதால் நாம் விரைவில் இறை தரிசனம் பெறுகிறோம் என்பதே அருண பரிவின் இரகசியமாகும். குண்டலினி யோகத்தில் நிலை கொள்ளும் ஒரு சாதகனின் உடல் வெப்பம் சுமார் 30000 டிகிரியை அடைந்து விடுவதால் அவன் உடல் எல்லையற்ற உஷ்ணத்துடன் திகழ்கிறது. அந்நிலை தொடர்ந்து இருந்தால் அந்த சாதகனின் உயிர் உடலை விட்டுப் பிரிந்து விடும். இந்நிலை சாதகனைத் தாக்காதிருக்க அந்த சாதகனின் சற்குரு இந்த அருண பரிவு சக்திகளைத் தோற்றுவித்து அந்த சாதகனின் உயிரைக் காக்கிறார் என்பதும் அருண பரிவு கூட்டும் சுவையாகும்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்... என்பது நம் முன்னோர்கள் கூற்று. இவ்வாறு அண்டத்தில் நாம் காணும் சூரிய அருண கதிர்களே மனித உடலில் அருண பரிவு சக்திகளைத் தோற்றுவிக்கின்றன. அதே போல 16 திசைகள், ஆகாயம், பூமி என்ற திசைகள் இவற்றை சேர்த்து 18 திசைகளிலும் உருவாகும் சூரியாகர்ஷண சக்திகளை நிர்வகிப்பவரும் நரசிம்ம மூர்த்தி ஆதலால் நரசிம்ம மூர்த்தி முன்னிலையில் தாமிரபரணி ஆற்றின் கரையில் நாம் இந்த மாளய பட்ச வழிபாடுகளை நிறைவேற்றும்படி நம் சற்குரு வழிகாட்டுகிறார் என்றால் இந்த அரிய செயலுக்கு நாம் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நன்றி செலுத்த முடியுமா?

ஒரு முறை நம் சற்குரு ஆஸ்ரமத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார். சில நிமிடங்கள் கடந்தன...
சற்று நேரம் கழித்து, “எங்களுக்கு casual plan என்பது, உதாரணமாக, நாளைக்கு ஒரு ஊருக்குப் போக வேண்டி வந்தால் அதற்காக இன்றே ஆடைகளை எல்லாம் எடுத்து சூட்கேஸில் வைப்பதைப் போன்று, நாங்கள் சுமார் 50 வருடங்களுக்குப் பின்னால் அடியார்களுக்கு வரும் ஆபத்தை எப்படி தவிர்ப்பது என்று இப்போதே யோசிக்க ஆரம்பிக்கிறோம்.”

“ஒரு கம்ப்யூட்டர் முன் நம் அடியார் யாராவது உட்கார்ந்திருந்தால் எங்கோ ஒரு நாட்டில் இருந்து அந்த அடியார் பார்க்கும் கம்ப்யூட்டரில் சக்தி வாய்ந்த அலைகளைப் பாய்ச்சி (powerful laser beam) அவர்களை ஒரு நொடியில் கொன்று விடும் அபாயம் உண்டு. அத்தகைய ஆபத்துகளிலிருந்து நம் அடியார்களை எப்படிக் காப்பாற்றுவது என்றுதான் தற்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்...”, என்றார் தாயினும் சாலப்பரிந்து...

இப்போது உங்களுக்குப் பளிச்சென புரிந்திருக்குமே? ஆம், அவ்வாறு ஞாயிற்றம்பல சித்தர் கைக்கொள்ளும் பாதுகாப்பு முறைகளில் ஒன்றே இந்த அருண பரிவு, circle of confusion என்பது. அலைகள் குவியும் தூரம் சற்றே மாறினால் போதும், அடியார்கள் பாதுகாப்பு பெறுவார்கள். இத்தகைய தாயின் கருணையை மிஞ்சிய சித்தர்கள் இருக்கும்போது நாம் எதற்காக, யாருக்காக கவலைப்பட வேண்டும். ஆனால், இந்த கருணையைப் பெற நாம் திருத்தங்கல் போன்ற தலங்களை நாடி வழிபாடுகள் இயற்ற வேண்டியது அவசியம் அல்லவா?

ஈசனின் ஆனந்தக் கூத்து

நடராஜப் பெருமான் இப்பூவுலகில் இயற்றும் ஒவ்வொரு அற்புத நடனத்திற்கும் ஒவ்வொரு நாமம் உண்டு அல்லவா? இம்முறையில் ஞாயிற்றம்பல திருத்தலத்தில் இயற்றும் கூத்தே அருண பரிவு கூத்து என்பதாகும். இதை பூலோக கணக்கில் விளக்குகிறோம். ஒரு பெண் மேடையில் ஆடிக் கொண்டிருக்கும்போது அவள் மேல் விதவிதமான வண்ண விளக்குகள் (color focus lights) எரியும். அதுபோல் நடராஜப் பெருமான் ஞாயிற்றம்பல திருத்தலத்தில் இயற்றும் அருண பரிவு என்ற ஆனந்தக் கூத்திலும் விதவிதமான வண்ணங்கள் தோன்றி பிரகாசிக்கும் என்பதே இந்தக் கூத்தின் சிறப்பாகும்.

வெள்ளை அங்கவஸ்திரம்
தரித்த கருப்பு காக்கை

நாம் நினைப்பது போல் சூரிய ஒளி ஏழு வண்ணத்தில் திகழ்வது அல்ல. அந்த ஒவ்வொரு ஏழு வண்ண நிறமாலையும் மேலும் ஏழு ஏழு வண்ணங்களாக தோன்றிப் பிரகாசிக்கும். இந்த அருண பரிவு நிறமாலையை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களே ஞாயிற்றம்பல சித்தர், நம் சற்குரு போன்றோர் ஆவர். இந்த அருண பரிவு நிறமாலையை நாம் புரிந்து கொள்ளும் சக்தி பெற்றவர்கள் இல்லை என்றாலும் வரும் மாளய பட்ச நாட்களில் அத்தாழநல்லூர் திருத்தலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் தர்ப்பண வழிபாடுகள் இயற்றும்போது ஏற்றப்படும் ஏழு ஜோதிகளில் இந்த நிறமாலை சக்திகள் தோன்றும் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் குரு கருணையாகும்.

அது சரி, வண்ண வண்ண ஜோதிகளை, நிறங்களை பார்ப்பதால் நமக்கு என்ன பயன் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றலாம்.

ஒரு முறை சிறுவன் வெங்கடராமன் தன்னுடைய பிறந்த நாள் கொல்லிமலை யாத்திலையில் அமையவே தம் சற்குரு கோவணாண்டிப் பெரியவருக்காக செந்நிற செம்பருத்தி மலர்களை தன்னுடைய பிறந்த நாள் பரிசாக அளித்து தம் சற்குருவின் ஆசியைப் பெறலாம் என்று நினைத்தான். ஆனால், சிறுவன் எவ்வளவு அலைந்தும் கொல்லிமலைச் சாரலில் சிவப்பு செம்பருத்தியைப் பார்க்கவே முடியவில்லை. நேரமோ கடந்து கொண்டிருந்தது.

வேறு வழியில்லாமல் அங்கிருந்த வெள்ளை செம்பருத்தி மலர்கள் பன்னிரண்டை பறித்துக் கொண்டு சென்று தன் குருநாதரின் திருக்கரங்களில் சமர்பித்து விட்டு அவர் திருப்பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்தான். உலகத்தையே ஆளும் தன் சற்குருவிற்கு தங்கம், வைரம் என்ற பரிசுகளை அளிக்க முடியாவிட்டாலும் தன்னுடைய நிலையில் அவருக்குப் பிடித்த ஒரு சிவப்பு செம்பருத்தி பூவைக் கூட அளிக்க முடியாத பாவியாகி விட்டேனே என்று நினைத்தபோது சிறுவன் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்து பெரியவரின் பாதங்களை நனைத்தது.

பெரியவரோ ஒன்றுமறியாதவர் போல், “என்னடா, பிறந்த நாள் அதுவுமாக அழுகிறாய்...” என்று கேட்டு சிறுவன் மேல் ஓரிரு மலர்களை வர்ஷித்தார். சிறுவனுக்கு அதைக் கண்டவுடன் எல்லையில்லா ஆனந்தம் மேலிட்டது. காரணம் அவன் மேல் விழுந்த செம்பருத்தி மலர்கள் யாவும் சிவப்பு செம்பருத்தி மலர்களே.

“ஆஹா, நம் பெரியவரின் சக்திதான் என்னே? வெள்ளை செம்பருத்தி எல்லாம் சிவப்பாக மாறி விட்டதே...” என்று நினைத்து எழுந்து பெரியவரைப் பார்த்தான். ஆனால் பெரியவரின் வார்த்தைகளோ அங்கே பன்னீர் மழையாய்ப் பொழிந்தது. “டேய், நீ பெரிய சித்தனாயிட்டே... பார் ... வெள்ளை செம்பருத்தி பூ எல்லாம் சிவப்பு செம்பருத்தி ஆயிடுச்சு...”, என்று கூறி தன் கரங்களில் இருந்த சிவப்பு செம்பருத்தி மலர்களைக் காட்டினார். இதை விட ஒரு சிறந்த பரிசை எவராலும் அவன் பிறந்த நாள் அன்று அளிக்க முடியுமா? அப்போதுதான் சிவப்பு செம்பருத்தி பூவில் தங்கம் இருக்கிறது என்ற இரகசியத்தையும் பெரியவர் சிறுவனுக்கு விளக்கிக் கூறினார். ஆம், சிறுவன் பெரியவருக்கு அளித்தது வெறும் பூக்கள் அல்ல, அபராஜித தங்க மலர்கள் அல்லவா அவை?

பெரியவர் தன்னுடைய கூற்றை நிரூபிப்பது போல் அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து கொண்டு தன் கையில் இருந்த செம்பருத்தி மலர்களின் இதழ்களை எல்லாம் ஒவ்வொன்றாகப் பிரித்து மெதுவாக வாயில் போட்டு நன்றாக மென்று குதப்பி குதப்பி உண்ண ஆரம்பித்தார்...

இவ்வாறு ஒரு நிறத்தை மற்றோர் நிறமாக மாற்றுவது என்பது சித்தர்களால் மட்டுமே இயற்றக் கூடிய சாதனை. இதனால் என்ன பயன் ? உதாரணமாக, உயிரைப் போக்கும் கடுமையான காய்ச்சலை உண்டாக்கும் ஒரு கிருமி மஞ்சள் நிறத்தில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இவ்வாறு அந்த கிருமியின் வண்ணத்தை மட்டும் மாற்றி விட்டால் போதும் உலகம் முழுவதுமே அந்த குறிப்பிட்ட காய்ச்சலின் பிடியிலிருந்து தப்பிக்கும் மார்க்கத்தை அளித்தவர் ஆகி விடுவோம்.

இது போன்ற வித்தைகளைத்தான் மகான்கள் அனைவருமே நிறைவேற்றி வருகிறார்கள். ஆனால், நம்மைப் போன்ற சாதாரண மக்கள் சற்குரு கூறும் முறையில் மாளய பட்சம் போன்ற வழிபாடுகளை நிறைவேற்றி வந்தால் போதும் நாமும் இவ்வாறு தேவையான நிறங்களை தேவையான சமயங்களில் நம்மையும் அறியாமல் மாற்றி சமுதாயத்தில் நோய் நிவர்த்தி திருப்பணிகளை சப்தமில்லாமல் ஆற்ற முடியும்.

தொடரும் மாளய பட்ச வழிபாடு...

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam