பிளவு படாதது பிரம்மம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருவெள்ளியான்குடி

கும்பகோணம் அருகில் உள்ள பெருமாள் தலமே திருவெள்ளியான்குடி திருத்தலம். தற்போது இது மக்களால் திருவள்ளியான்குடி என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ரீராமர் அவதாரத்திற்கு முன் அதாவது பெருமாளின் முதல் மனித அவதாரத் தோற்றமான ஸ்ரீவாமன அவதாரத்திற்கும் முந்தைய தலம் என்றால் இதன் சிறப்பை எங்ஙனம் விண்டுரைக்க முடியும் ?

சுக்ர தீர்த்தம் திருவெள்ளியான்குடி

பெருமாள் மூர்த்திகளின் சுதை வடிவமே வரலாறு கடந்த தொன்மையை உடையது. அதிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான இயற்கையான வண்ணப் பூச்சில் திகழும் ஒரு சுதை மூர்த்தியை இத்தலத்தில் நாம் தரிசிக்க முடிகிறது என்றால் இதற்காக நம் மூதாதையர்களான பித்ருக்களுக்கு நாம் எந்த அளவிற்கு நன்றிக் கடன் பட்டவர்களாகத் திகழ வேண்டும் ? ஆனால், வெறுமனே நாம் மூதாதையர்களை தினமும் நினைவு கூர்கிறோம் என்று வாயார கூறுவதை விட நம்முடைய சிறு செய்கைகளால் இதை அங்கீகரிப்பதைத்தானே அவர்கள் விரும்புகிறார்கள். இதற்கு நம் மூதாதையர்களே அளிக்கும் அரிதிலும் அரிய சந்தர்ப்பமே வரும் மாளய பட்ச தினங்களில் அதாவது 10.9.2022 சனிக் கிழமை முதல் 27.9.2022 செவ்வாய்க் கிழமை வரை திருவெள்ளியான்குடி ஸ்ரீரெங்கநாதர் திருத்தலத்தில் 18 நாட்களிலும் தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்றுதல் ஆகும்.

மாளய பட்சம் என்பது 15 நாட்களுக்கு தொடர்ந்து வியாபித்து இருப்பதுதானே ? இது என்ன, 18 நாள் வழிபாடு என்று நீங்கள் கேட்பது நியாயமே. நமது மூதாதையர்கள் பத்து, பதினைந்து தலைமுறைகளுக்கு முன் எப்படி இருந்தார்கள், அவர்கள் பெயர் என்ன என்று கூட தெரியாத நாம் என்றும் நிரந்தரமாய் இருக்கும் இறை சக்தியான பித்ரு மூர்த்திகளுக்கு எல்லாம் தலைவனான ஸ்ரீரெங்கநாத மூர்த்தியை இந்த மாளய பட்ச நாட்களில் வணங்கி வழிபடுவதானே நம்மால் இயற்றக் கூடிய இயைந்த காரியம்.

இந்த மாளய பட்ச வழிபாடுகளுக்கு நமக்கு முன்னோடியாய் வழிகாட்டும் அண்ணலே ஸ்ரீசுக்ராச்சாரியார் ஆவார். சொல் பேச்சு கேட்காத தன்னுடைய அருமை சீடனான மகாபலிச் சக்கரவர்த்தியைக் காப்பாற்ற தேனி வண்டு வடிவம் எடுத்து ஸ்ரீவாமன மூர்த்தியின் கமண்டலத்தை அடைத்தபோது ஸ்ரீவாமனர் தர்பை ஒன்றால் வண்டின் கண்களைக் குத்தி விட அப்போது பார்வை இழந்த சுக்ராச்சாரியர் தன் பார்வையைத் திரும்ப பெறுவதற்காக வழிபட்ட பல முக்கியமான தலங்களில் ஒன்றே திருவெள்ளியான்குடி திருத்தலமாகும். பல யுகங்களுக்கு முன் இவ்வாறு சுபகிருது வருடத்தில் திருவெள்ளியான்குடி சுக்ர தீர்த்தத்தில் மாளயபட்ச தர்ப்பண வழிபாடுகளை இயற்றி தர்ப்பண நிறைவில் மூன்றாம் பிறை தரிசனம் பெற்று இழந்த தன் பார்வையைத் திரும்பப் பெற்றார் என்பதே திருவெள்ளியான்குடி திருத்தலம் சுட்டிக் காட்டும் மகாத்மியம் ஆகும்.

சுக்ராச்சாரியார் இங்குள்ள சுக்ர தீர்த்தத்தில் நீராடி தன் பார்வையைத் திரும்ப பெற்றதால் இத்தல தீர்த்தம் சுக்ர தீர்த்தம் என்றும் இத்தலம் திருவெள்ளியான்குடி என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டு சிறப்புப் பெற்றது. அதற்கு முன்னர் இத்தீர்த்தம் ஆழி தீர்த்தம் என்றும் ஸ்ரீரெங்கநாதர் ஸ்ரீஆழியப்பன் என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டார் என்பதே சித்தர்கள் வர்ணிக்கும் திருத்தல மகாத்மியமாகும். ஆழியப்பன் என்னும் திருநாமம் ஆறு எழுத்துக்களுடன் சுக்ர சக்திகளை வர்ஷிப்பதை பக்தர்கள் அறிந்திருக்கலாம்.

சுசீந்திரம்

மேற்கூறிய புராண வைபவத்தில் தன் வாக்குறுதியைக் காப்பாற்றும் முகமாக பெருமாள் தினமும் பாதாள லோகத்தில் உள்ள மகாபலிச் சக்கரவர்த்திக்கு தன்னுடைய தரிசனத்தை அளித்தாலும் குரு வார்த்தையை மீறிய தன்னுடைய சீடனைப் புறக்கணித்து விட்டார் சுக்ராச்சாரியார். தாயினும் சாலப் பரிந்து தன்னைப் பேணி வளர்த்த தன் அருமை குருநாதரின் தரிசனம் கிடைக்காததால் மனம் மிக வருந்திய மகாபலி பாதாள லோகத்திற்கு வரும் உத்தம குருமார்களிடம் எல்லாம் தான் சுக்ராச்சாரியாரின் தரிசனத்தைப் பெற விரும்புவதாகக் கூறினான். அவர்களும் சுக்ராச்சாரியாரைப் பார்க்கும்போது மகாபலியின் வேண்டுகோளைத் தெரிவித்தனர். சுக்ராச்சாரியாரோ, “Who is that Mahabali? Yes, yes... He was my disciple, once upon a time. But not now ... I don't want to see him. (யார் மகாபலி? ஏதோ ஒரு காலத்தில் அவன் என்னுடைய சீடனாக இருந்தான், ஆனால் தற்போதைய நிலை மாறி விட்டதே. நான் அவனைப் பார்க்க விரும்பவில்லை)” என்று கூறி மகாபலியை நிராகரித்து விடுகிறாராம்.

அனைத்து மொழிகளிலும் வல்லவரான சுக்ராச்சாரியார் ஏன் மகாபலியைப் பற்றிக் கூறும்போது ஆங்கில மொழியில் சாடுகிறார் என்பது அடியார்களின் ஆத்மவிசாரத்திற்கு உரிய ஒரு பொருளே. தொடர்ந்து இந்த மாளயபட்சத்தில் சுக்ராச்சாரியாரின் ‘சாடுதலை’ ஆத்ம விசாரம் செய்து வந்தால் மாளயபட்ச இறுதிக்குள் அடியார்கள் உத்தம குரு வழிகாட்டுதலைப் பெறுவார்கள் என்பதும் இந்த சுக்ர மாளய பட்சத்தின் மகிமையாகும்.

ஒவ்வொரு மாளயபட்ச வழிபாடுகளுக்கும் ஒரு ஈடிணையில்லாத சிறப்பு இருப்பதுபோல் இந்த சுபகிருது வருட 2022ம் ஆண்டு மாளயபட்சத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. அதுவே தாணுமாலய பித்ருக்கள் என்ற சிறப்பு பெற்ற பித்ரு மூர்த்திகளின் பூலோக வருகையாகும். தாணு என்றால் சிவ பெருமான், மால் என்றால் பெருமாள் மூர்த்தி, அயன் என்பது பிரம்ம தேவரைக் குறிக்கும். தாணுமாலயன் என்றால் இந்த மும்மூர்த்திகளின் சக்தி வடிவம் என்ற ஒரு பொருளும் உண்டு. அது போல் இந்த மும்மூர்த்திகளின் ஒருங்கிணைந்த சக்தி வடிவம் மூலம், மும்மூர்த்திகளின் அனுகிரக சக்திகளையும் ஒருங்கே அளிக்க வல்லவர்களே தாணுமாலய பித்ரு மூர்த்திகள் ஆவர். 27.9.2022 செவ்வாய்க் கிழமை அன்று சூரிய பகவானுடன் புத மூர்த்தியும் சுக்ர பகவானும் இணைய இந்த இணைப்பு வலிமை மிகுந்த குரு பகவானின் நேர்பார்வை சிறப்பு பெறுவதே தாணுமாலய பித்ரு மூர்த்திகளின் பூலோக வருகையையும் அரிதிலும் அரிய இந்த பித்ரு மூர்த்திகளின் தாணுமாலய அனுகிரகத்தையும் பாமர மக்களும் பகிர்ந்துணர வழி வகுக்கும் ஜோதிட அம்சங்களாகும்.

கீதை நாயகனின் வேதம்

18 நாள் தர்ப்பணம் என்பது கீதை நாயகனுக்கு உவந்ததுதானே என்று நம் அடியார்களே தீர்க்க தரிசனமாக உரைக்கும் அளவிற்கு பெருமை வாய்ந்ததே இந்த 18 நாட்களும் திருவெள்ளியான்குடி (9 அட்சரங்கள்) திருத்தலத்தில் அமையும் தர்ப்பணமாகும். 18 நாள் தர்ப்பணம் என்பது கீதையின் 18 அத்யாயங்களை குறிப்பதுடன் திருவெள்ளியான்குடி திருத்தலத்தம் வர்ஷிக்கும் குசா சக்தியுடன் இணையும் என்பதும் இத்தர்ப்பணம் சுட்டும் குசா மகிமையாகும். அது மட்டுமன்றி இந்த 18 அத்யாயங்களும் குறிக்கும் 18 ரிஷிகளே நம் உடலில் துலங்கும் தீர்த்தங்களை நிர்வகிக்கும் உத்தமர்களாக அமைவதால் ஆடி 18ம் பெருக்கு அன்று இந்த 18 ரிஷிகளின் நாமங்களை ஓதி ஓடும் நீரில் பஞ்ச பூதத்தாலான இந்த உடல் மேன்மை அடையும் முகமாக பஞ்சகவ்யத்தால் தீபம் ஏற்றி வழிபடுகிறோம்.

மனித உடல் மேன்மை அடைவதற்காக உயிர் பிரியும் தருணத்தில் ஓத வேண்டிய கீதை சுலோகங்களை நம் சற்குரு அளித்துள்ளார். மனிதர்கள் உடலிலிருந்து உயிர் பிரியும் தருணத்திலோ அல்லது உயிர் பிரிந்த பின்னரோ இந்த கீதை பாராயணத்தை நிகழ்த்துதலால் அந்த உயிர் நன்னிலை அடையும் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால், எத்தனை பேருக்கு இந்த உண்மை தெரிந்திருக்கும் ? எனவே வரும் மாளயபட்ச நாட்களிலாவது இந்த கீதை சுலோகங்களை தினமும் ஓதி தர்ப்பணம் அளித்தலால் நம் மூதாதையர்கள் நன்னிலை அடைவர் என்பது உறுதி.

இந்த கீதை சுலோகங்களை அர்த்தம் தெரிந்து ஓதுவதுதான் முறை என்பதே நம் சற்குருவின் அருளுரை. அதனால் இந்த கீதை சுலோகங்களின் பொருளை ஓரளவு உரியவர்கள் மூலம் தெரிந்து ஓதுவது சிறப்பு. பலருக்கும் இத்தகைய வாய்ப்புகள் கிட்டுவதில்லை. அத்தகையோர் மட்டும் கீழே அளித்துள்ள 18 மங்கள ரிஷிகளின் பெயர்களை ஓதி திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் தர்ப்பணம் அளித்தலால் அவர்கள் முன்னோர்கள் நன்னிலை அடைவர்.

     ஓம் ஸ்ரீஅஷ்டவக்ரரே போற்றி
     ஓம் ஸ்ரீஅணிருத்ரரே போற்றி
     ஓம் ஸ்ரீஅசலாமுகீஸ்வரரே போற்றி

ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை
திருப்பராய்த்துறை

     ஓம் ஸ்ரீஅம்பலதேசிகரே போற்றி
     ஓம் ஸ்ரீஅருநந்தி கூபரே போற்றி
     ஓம் ஸ்ரீஅறவாணசித்தரே போற்றி
     ஓம் ஸ்ரீஆருநாராயணரே போற்றி
     ஓம் ஸ்ரீஅணிகல்பரே போற்றி
     ஓம் ஸ்ரீஆசிதரரே போற்றி
     ஓம் ஸ்ரீஅவுணரட்சகரே போற்றி
     ஓம் ஸ்ரீஆடிண்யரே போற்றி
     ஓம் ஸ்ரீஅர்க்யரே போற்றி
     ஓம் ஸ்ரீஅசலரே போற்றி
     ஓம் ஸ்ரீஆர்ப்பரிதரரே போற்றி
     ஓம் ஸ்ரீஆணிக்கரே போற்றி
     ஓம் ஸ்ரீஆங்கிரசரே போற்றி
     ஓம் ஸ்ரீஅடலரே போற்றி
     ஓம் ஸ்ரீஆரண்யரே போற்றி

சுக்ர பகவானுக்கு உரிய வருடமாக இது அமைவது என்பது ஒரு காரணமாக இருந்தாலும் இதற்கு மேலும் பல சித்த விளக்கங்கள் இதில் அடங்கி உள்ளதால் இவ்வருட மாளய பட்ச தர்ப்பணத்தை சுக்ர சக்திகள் மிகுந்த தேங்காய் துருவல் சாட்சியாக தர்ப்பணம் அளிப்பது சிறப்பாகும். ஒரு தேங்காயை முழுவதுமாக துருவி சுத்தமான பசுநெய் அல்லது தேங்காய் எண்ணெய் சிறிது சேர்த்து வணக்கி இந்த தேங்காய் துருவலை ஒரு கிண்ணத்தில் வைத்து இந்து துருவல் சாட்சியாக தர்ப்பணம் அளிக்க வேண்டும். தர்ப்பண நிறைவில் இந்த தேங்காய் துருவலுடன் சர்க்கரை சேர்த்து ஆலயத்தில் எறும்புகளுக்கு தீனியாக இட்டு விடலாம்.

நன்கு தெளிவாக வேதம் ஓதும் விற்பன்னர்களை வைத்து இந்த 18 நாட்களிலும் கீதை பாராயணத்தை நிகழ்த்தி அவ்வாறு கீதை வேதம் ஓதுபவர்களுக்கு உரிய சன்மானம் அளித்து கௌரவித்தலும் அளப்பரிய பலன்களை பெற்றுத் தரும். குறைந்த பட்சம் மேற்கண்ட 23 கீதை சுலோகங்களையாவது தினமும் பாராயணம் செய்தல் சிறப்பாகும். மாதா அமிர்தானந்தா, ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா போன்ற உத்தமர்கள் தினமும் கீதையின் 15வது (1+5=6) அத்தியாயமான புருஷோத்தம யோகத்தை பாராயணம் செய்யுமாறு வலியுறுத்துவதன் மகிமை இப்போது புரிகின்றது அல்லவா ?

வெள்ளி ராமர்

திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் அருளும் ஸ்ரீஇராமச்சந்திர மூர்த்தியை ஸ்ரீகோலவில்லி வெள்ளி ராமர் என்று சித்தர்கள் போற்றி மகிழ்கின்றனர். வெள்ளி என்று இங்கு ராமபிரானுக்கு அடைமொழியாகக் கூறப்படும் சுக்ர சக்தியைப் பற்றி ஒரு யுகத்திற்கு வர்ணிக்கலாம் என்பதே நம் சற்குருவின் உபதேசம். இருப்பினும் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் இந்த வெள்ளி சக்திகளை பக்தர்களுக்கும் அடியார்களுக்கும் அனுகிரகமாக அளிக்கும் வண்ணமாகவே சுபகிருது வருட தர்ப்பண பூஜைகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதை அடியார்கள் உணர்ந்து கொண்டாலே அவர்கள் அனைத்து அனுகிரகங்களையும் பெற்றவர்கள் ஆவர்.

ஸ்ரீஆண்டாள் நாச்சியார்
திருவெள்ளியான்குடி
இடைவெளியில்லாமல் சிந்திக்க
வேண்டிய பாதாரவிந்தங்கள்

நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று இறைவனை அழைக்கின்றோம். இருளிலும் நள்ளிருள் என்று உண்டா என்ன ? இதுவே நாம் திருக்கோயில் கர்ப்பகிருகங்களில் காணும் தெய்வீக ஒளியாகும். இந்த ஒளியில் இறைவனைக் ‘கண்டு’ அனுபவிப்பதற்காகவே இன்றும் பல திருத்தல கர்ப்பகிருகங்கள் செயற்கை மின்சார விளக்கின் ஒளிப் பிரகாசம் இல்லாமல் இருக்கின்றன. இறைவனின் இயற்கை ஒளியை மிஞ்சும் சக்தி உடையவையா மின்சார விளக்குகள் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். செயற்கை வெளிச்சம் இறைவன் அளிக்கும் ‘நள்ளிருளை’ பாதிக்கும் சக்தி பெற்றது இல்லை என்றாலும் மனிதனின் செயற்கை அறிவை இந்த செயற்கை ஒளி பாதிக்கக் கூடியதே என்பதே மின்சார ஒளி விளக்கும் தத்துவமாகும்.

இத்தகைய கர்ப்பகிருக நள்ளிருளே தாயின் கர்ப்பப் பையில் பிரகாசிக்கிறது. இதை ஒவ்வொரு மனிதனும் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து தம்முடைய யதார்த்த தாயான இறைவனை அடையவே ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றும், கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் நம் முன்னோர்கள் அறிவுறுத்தி வந்தனர். தற்போதைய செயற்கை முறை கருத்தரிப்பில் இத்தகைய கர்ப்பகிருக ஒளிப் பிரகாசம் கூடாததால் அது இயற்கைக்கு முரணான ஒரு சூழ்நிலையை உண்டாக்கி அதனால் பெற்றோர்களும் அத்தகைய குழந்தைகளும் பல வேதனைகளை சந்திக்க வேண்டி வருகிறது.

எதிர்காலத்தில் வரும் மக்களின் இத்தகைய குறைபாடுகளை உணர்ந்ததால்தான் சுக்ராச்சாரியார் போன்ற உத்தமர்கள் இத்தலத்தில் தவமிருந்து சாதாரண மனிதர்களைப் போல் பல அரிய வழிபாடுகளை இயற்றி இந்த ‘வெள்ளி’ சக்தியை திருவெள்ளியான்குடி போன்ற திருத்தலங்களில் புனருத்தாரணம் செய்துள்ளனர்.

இந்த வெள்ளி சக்தியை சாதாரண மனிதர்களும் பார்க்க முடியுமா? ஆம், நிச்சயமாக முடியும், என்பதே நம் சற்குரு போன்ற மகான்களின் ஆணித்தரமான பதில். யாரைப் பார்த்தால் ஒரு மனிதனுக்கு சப்த நாடிகளும் அடங்கிப் போகின்றனவோ, யார் முன்னிலையில் தான் எதற்கும் தகுதி இல்லாதவன் என்ற சிறுமை எண்ணம் பீறிட்டுப் பொங்குகின்றதோ அந்த மனித உருவம் அல்லது தெய்வீக உருவம் ‘வெள்ளி’ சக்தியால் நிறைந்துள்ளது என்பது பொருள். இன்றைய உலகில் நம் சற்குருவிடம் இத்தகைய வெள்ளி சக்தி பொங்கிப் பிரகாசித்ததை நம் சற்குருவுடன் நெருங்கிப் பழகிய பலரும் உணர்வர். மாதா அமிர்தானந்தாவிடமும் இத்தகைய ‘வெள்ளி சக்தி’ பிரகாசிப்பதை நேரில் அனுபவித்த பலரும் உணர்வரே.

புஷ்கலை ஆவர்த்தம்

திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் ஸ்ரீராமர் எழுந்தருளி உள்ள விமானம் புஷ்கலை ஆவர்த்த விமானம் என்று அழைக்கப்படுகிறது. ஆவர்த்தம் என்றால் மழையை கர்ப்பம் தரித்த மேகம் என்று பொருள். புஷ்கலை என்றால் தங்க மழை, ஸ்வர்ண பெருக்கு, சந்ததிகள் விருத்தி என்றெல்லாம் பொருள் தரும். செல்வம் பூரணமாய் பொங்கிப் பொலிந்து பல தலைமுறைகளுக்கும் நிலைத்து நிற்க அருளும் தலம் என்று பொருள். இத்தகைய அபூர்வ ஸ்வர்ணாகர்ஷண, லட்சுமி கடாட்ச சக்திகள் குறித்தே மங்கள சாசனம் பெற்ற 108 வைணவத் தலங்களையும் தரிசித்த பலன் இந்த ஒரே ஒரு பெருமாள் தலத்தை தரிசித்தாலே கிட்டும் என்று பெரியோர்கள் உறுதி அளிக்கின்றனர்.

புஷ்கலை ஆவர்த்த விமானம்
திருவெள்ளியான்குடி

ஒரு முறை பர்வதமலைக்கு நம் சற்குரு தம் அடியார்களுடன் சென்றிருந்தார். சுவாமி தரிசன நிறைவில் தாங்கள் கொண்டு வந்திருந்த பிரசாதம் அனைத்தையும் உண்பதற்கு போதுமான இலைகளைக் கொண்டு வர முடியவில்லை என்பதைக் காரணம் காட்டி நம் சற்குரு உண்ட இலையிலேயே மற்ற அடியார்களும் உண்டனர். மேலோட்டமாக நிகழ்ந்த இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சிக்குப் பின்னால் அமைந்த கனகதாரை வர்ஷிதம் என்ற சித்த இரகசியத்தை உணர்ந்தால் இது நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு சம்பவமாக அமையும்.

நம் சற்குரு உண்ட வாழை இலை இத்தலத்திலிருந்து பெருமாள் பிரசாதமாகப் பெறப்பட்ட கனகதாரை வர்ஷித வாழை இலையாகும். திருவெள்ளியான்குடி திருத்தல வாழை இலையின் திருநாமமே இது. தலவிருட்சத்தை நாம் பிரசாதமாகப் பெற்று பயன்படுத்துவது கிடையாது. ஆனால், குறித்த அமிர்த ஹோரை நேரத்தில் இத்தலத்தில் பெறப்படும் பெருமாள் பிரசாதமான வாழை இலைகள் இத்தகைய அபூர்வமான கனகதாரை சக்திகளைக் கொண்டிருக்கும்.

அன்று நம் சற்குருவுடன் சேர்ந்து பிரசாதம் ஏற்றவர்கள் மொத்தம் 21 பேர். இவ்வாறு 21 தலை முறைகளுக்குக் குறையாமல் கனக சக்திகள் என்னும் தெய்வீக தங்க தாரை சக்திகளை அனுகிரகமாக அளிக்கவல்லதே திருவெள்ளியான்குடி தலவிருட்சமான வாழை என்றால் இந்த ஒரு திருத்தலத்தை தரிசித்தாலே 108 மங்கள சாசனத் தலங்களை தரிசித்த பலன்கள் குவிவதில் வியப்பென்ன ?

திருவெள்ளியான்குடி புஷ்கலை விமானத்தில் ஸ்ரீகோலவில்லி வெள்ளி ராமர், ஸ்ரீசயனக்கோல வண்ண ரெங்கநாத மூர்த்திகளுடன் பராசரரும் மார்க்கண்டேயரும் அருளாட்சி செலுத்துகின்றனர். எனவே தங்கள் சந்ததிகள் முறையாகப் பெருகி, தான தர்ம சக்திகளை வர்ஷிக்கும் தெய்வீகப் பாங்குடன் திகழ விரும்பும் அனைவரும் தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டிய தலம் திருவெள்ளியான்குடிதான் என்பதில் இனியும் சந்தேகம் இருக்க முடியுமா ?

ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ண பகவானின் வண்ணம் கருமை என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இந்த கார்மேக வண்ணம் கண்ணைப் பறிக்கும் வைரத்தைப் போன்றது என்பதே கண்ணனை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற நம் சற்குரு போன்ற சித்தர்களின் வர்ணனை. சுக்ர தீர்த்தத்தில் மேற்கூறிய 18 நாட்களிலும் தர்ப்பண வழிபாடுகளை முறையாக நிறைவேற்றும் பக்தர்களுக்கு இந்த கண்ணைப் பறிக்கும் கார்மேக வண்ணச் சுடர் ஒரு சில விநாடிகளாவது கிட்டும் என்பதே நம் சற்குரு அளிக்கும் குரு பிரசாதம்.

ஸ்ரீரெங்கநாதர் ஸ்ரீராமர்
திருவெள்ளியான்குடி

இந்தக் கார்மேக வண்ணச் சுடர் பிரசாதத்தை அடியார்கள் பெற வழிவகுப்பதே வெள்ளி ஆடி பிறை தரிசனம் என்பதாகும். அதாவது மூன்றாம்பிறை தரிசன நாளான 27.9.2022 செவ்வாய்க் கிழமை அன்று மாலையில் மூன்றாம்பிறையை நேரே தரிசிக்காமல் இந்தப் பிறை தரிசனத்தை சுக்ர தீர்த்தத்தில் பிம்பமாகவோ அல்லது ஒரு கண்ணாடியிலோ தரிசித்து அதன் பின்னர் மூன்றாம் பிறையை நேரே தரிசித்தலே கார்மேக வண்ணச் சுடர் பிரசாதம் பெறும் சித்த முறையாகும்.

பாறாங்கல்லில் பூத்த
பசுந்தளிர் திருவெள்ளியான்குடி

பொதுவாக எந்த தீர்த்தத்திலும் காலை முதலில் வைக்கக் கூடாது என்பது நம் சற்குருவின் வழிகாட்டுதல். முதலில் பித்ரு தேவர்களையும் நம் மூதாதையர்களையும் வணங்கிய பின்னர் தீர்த்தங்களை கண்களில் தலையில் தெளித்துக் கொண்டு பின்னரே தீர்த்தங்களில் இறங்கலாம். இதற்கு திருவெள்ளியான்குடி சுக்ர தீர்த்தமும் விதிவிலக்கு அல்லவே.

சுக்ர தீர்த்தத்தின் கிழக்கு கரையில் திருவெள்ளியான்குடி திருத்தலத்தை நோக்கியவாறு நின்று கொண்டு,
புஷ்கலை தீர்த்தம் புண்ணிய தீர்த்தம்
புண்ணிய தீர்த்தம் சுக்ர தீர்த்தம்
சுக்ர தீர்த்தம் சுவைமிகு தீர்த்தமே
என்று ஓதி தலையிலும் கண்களிலும் சுக்ர தீர்த்தத்தை தெளித்து பின்னரே தீர்த்தத்தில் இறங்கி வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும். திருமணமாகி நெடுநாள் குழந்தைகள் இன்றி வாடும் தம்பதியர் திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றி தினமும் தம்பதிகள் கைகோர்த்தவாறு மேற்கண்ட சக்தி வாய்ந்த சுக்ர துதியை குறைந்தது 12 முறை ஓதி வருதலால் சக்கரவர்த்தித் திருமகனான ராமச்சந்திர மூர்த்தியையே சந்தானமாகப் பெறும் அருளைப் பெறுவர்.

பன்னிரு திருமுறைகள், பன்னிரு ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள் என்றெல்லாம் இறை சக்திகள் பெருகும் எண்ணிக்கைக்கு ஒரு தெய்வீக கணக்கு இருக்கத்தான் செய்கிறது. இம்முறையில் திருவெள்ளியான்குடி என்று ஒன்பது அட்சரங்கள் கொண்ட இத்திருத்தலத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. பன்னிரு ஆழ்வார்களும் தினமுமே சூட்சுமமாக வந்து வழிபடும் தலமாக இது உள்ளதால் இந்த ஆழ்வார்கள் பிருந்தமே 108 வைணவத் தலங்களில் தரிசித்த பலன்களை இந்த ஒரே திருத்தலம் நல்குவதாக அமைகிறது. 9 x 12 = 108 என்பது நீங்கள் அறிந்த கணக்குதானே. இந்த உண்மையை உணர்த்துவதாக பாறாங்கல்லில் பூத்த பசுந்தளிரான துளாய் செடியின் தரிசனத்தை இங்குள்ள படிக்கட்டுகளில் நீங்கள் காண்கிறீர்கள்.


முடிச்சு போடுவது வெள்ளியான்குடி,
முடிச்சை அவிழ்ப்பதும் திருவெள்ளியான்குடியே !

என்ற சித்த வாக்கியத்தின் பொருளை உணர்ந்து கொள்ள துணை புரிவதும் இத்தலத்தில் நாம் நிறைவேற்றும் வழிபாடுகளே. சுக்ராச்சாரியார் குரு வாக்கை மீறிய தன்னுடைய சீடனை நிராகரித்து விட்டதாக நாம் நினைத்தாலும் அந்த சீடனுக்காக இரவும் பகலும் இறைவனிடம் மன்றாடிப் பிரார்த்திக் கொண்டிருப்பார் என்பதே சற்குருமார்களின் தூய அன்பு நிலையாகும். சீடர்கள் தம் குருநாதரிடம் கொள்ளும் இந்த ‘அவிழ்க்க முடியாத’ இறுகிய முடிச்சே அவர்களுடைய பிறவிப் பந்தம் என்ற ‘முடிச்சை’ எளிதில் அவிழ்த்து அவர்கள் இறைவனுடன் ஒன்றி வாழ வழிவகுக்கும்.

இதன் மறை பொருள் - வெள்ளியான்குடி = 7, திருவெள்ளியான்குடி = 9.

முடிச்சு சம்பந்தமாய் கனிந்த கனியின் கனிந்த மொழி யாதோ ?
“நாம் ஒரு சாக்குப் பையை இறுக்கிக் கட்டி விட்டால் அப்போது என்ன செய்கிறோம்? அதன் பக்கத்திலேயே அதை விட இறுகிய ஒரு முடிச்சை போட்டு விட்டால் அப்போது முதலில் போட்ட முடிச்சு தளர்ந்து விடுவதால் அதை நாம் எளிதில் அவிழ்த்து விடலாம்.”
பொருள் பொதிந்த, ஆழ்ந்த அர்த்தம் நிறைந்த கனியான பொக்கிஷம் இது. நம்முடைய இறை பக்தி என்னும் முடிச்சானது, லௌகீக பந்தம் என்ற முடிச்சை விட இறுக்கமாக இருந்தால்தான் நாம் இறைவனின் அனுகிரகத்தை உணர்ந்து பயன்பெற முடியும். அதை விடுத்து, நான் கோயில் கோயிலாக ஏறி இறங்குகின்றேன், சாமி என்னைக் கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிறது, என்று உதட்டளவில் சொல்வதால் என்ன பயன்?

ஸ்வர்ண கருடப் பெருமாள்

திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் அருளும் கருட பகவானே, ஸ்வர்ண கருடப் பெருமாள் என்று சித்தர்களால் அழைக்கப்படுகிறார். கருடாழ்வார் எப்படி ஸ்வர்ண கருடப் பெருமாள் ஆனார் என்பதை அறிந்து கொள்வோமா ?

கருடாழ்வாருக்கு தான்தான் பிரபஞ்சத்திலேயே அதிவிரைவாக பறந்து செல்லக் கூடிய வாகனம், தனக்கு மிஞ்சி எவரும் இல்லை என்ற கர்வம் தலை தூக்கி நின்றது. இதை அறியாதவரா மாயக் கண்ணன். ஆனால், எந்த பாடத்தைப் புகட்டவும் நேரம் கனிய வேண்டுமல்லவா ? ஒரு முறை ஸ்ரீவிஷ்ணுமூர்த்தி வானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது தங்களைத் தாண்டி ஏதோ ஒன்று பறந்து செல்வதாகத் தோன்றியது கருட பகவானுக்கு. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த அதிசயத்தைக் கண்டு வாயடைத்து நின்றார் கருடாழ்வார்.

ஸ்ரீகருடக்கொடி சித்தர்
சித்துக்காடு

அப்போது மாயக் கண்ணன் சிரித்துக் கொண்டே, “அது வேறு யாருமில்லை, கருடா, சதா சர்வ காலமும் மக்களின் நோய்த் துன்பங்களைத் தீர்க்க பவனி வரும் கருடக் கொடி சித்தரின் ஆகாய சஞ்சாரம்தான் அது. சித்துக்காடு தலத்தில் தவமியற்றும் அவரைத் தஞ்சமடைந்து எவ்வாறு அதி விரைவில் பறப்பது என்ற வித்தையை அவரிடம் கற்றுக் கொள். ‘பரந்தாமா, அடைக்கலம்!’ என்று எங்கிருந்து எவர் அழைத்தாலும் உடனே அங்கே விரைந்து சென்று அடியார்கள் குறை தீர்க்கும் வள்ளல் என்று என்னை அனைவரும் கொண்டாடும்போது ஒரு ‘பழுதடைந்த’ வாகனத்தை வைத்திருக்கும் நான் எப்படி அவர்கள் எதிர்பார்ப்பிற்கு உரியவன் ஆவேன்?” என்ற நியாயமான கேள்வியை எழுப்பினார் பரந்தாமன்.

வெட்கித் தலை குனிந்தார் கருட மூர்த்தி.

பெருமாள் காட்டிய வழியில் சென்று சென்னை அருகில் உள்ள சித்துக்காடு பெருமாள் தலத்தில் அருள்புரியும் கருடக் கொடி சித்தரை வணங்கினார் கருடாழ்வார். கருடக் கொடி சித்தரின் அருகில் சென்றபோதுதான் ஒரு மிகப் பெரிய மூலிகை வனத்தையே தன் முதுகில் தாங்கி அவர் நகர்ந்து கொண்டிருக்கிறார் என்று அறிந்து பேராச்சரியம் அடைந்தார். அந்த மூலிகை வனத்தைத் தாங்கவே முடியாது எனும்போது அதை முதுகில் சுமந்து கொண்டு மின்னல் வேகத்தில் பறப்பதென்றால் அது எத்தகைய இறைக் கருணை. வியந்தார் கருடாழ்வார்.

கருடக் கொடி சித்தர் விவரித்த ஒரு லட்சம் பூலோக மூலிகைத் தீர்த்தங்களில் நீராடி அர்க்ய பூஜைகளை முறையாக நிறைவேற்றினார் கருடாழ்வார். இவ்வாறு புள்ளம்பாடி அருகே கருட தீர்த்தத்தில் ஆரம்பித்து திருவெள்ளியான்குடி கருட தீர்த்தத்தில் தன் வழிபாட்டை இனிதே நிறைவேற்றினார் கருடாழ்வார். எப்படி வாமன அவதாரத்தின்போது பெருமாள் தன் காலைத் தூக்கியபோது பூமியில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் தூய்மை பெற்றனவோ, அதுபோல் கருடாழ்வார் நீராடிய தீர்த்தங்கள் எல்லாம் மூலிகை சக்தியால் நிறைந்து நோய் நிவாரண சக்திகளால் பொங்கித் ததும்பின.

கருடாழ்வார் ஸ்வர்ண பெருமாள்
பட்டம் பெறும் காட்சி
திருவெள்ளியான்குடி

கருடாழ்வாரின் அற்புத சேவையால் மகிழ்ந்த பெருமாள் மூர்த்தி அவருக்கு ஸ்வர்ண கருடப் பெருமாள் என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தார். எப்படி ? தன்னுடைய சங்கு சக்கரத்தை கருடாழ்வாருக்கு அளித்து கருடனை, பெருமாள் மூர்த்தி ஆக்கினார் திருவெள்ளியான்குடி பெருமாள். அப்போது கருடப் பெருமாளுக்கு ஏற்பட்ட வானளாவிய ஆனந்தத்தால் கருடாழ்வார் மூர்த்தியின் சிறகுகள் எல்லாம் தங்கச் சிறகுகளாக, ஸ்வர்ண சக்திகளுடன் பொலிந்தனவாம். இந்த அரிய சந்தர்ப்பத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் பூமாரி பொழிந்தனர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?

கருடாழ்வார் பெருமாள் மூர்த்தியிடமிருந்து ஸ்வர்ண கருடப் பெருமாள் என்ற பட்டத்தைப் பெற்ற கோலத்தையே திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள். எப்போதும் கருட ஆசனத்தில் நிலைத்திருக்கும் கருட மூர்த்தி இங்கு நின்ற நிலையில் துலங்குவதற்கு இதுவே காரணம்.

வைகுண்டத்தில் கருடாழ்வாருக்கு பகவான் பட்டமளிப்பு விழா நிகழ்த்தி கௌரவிக்கையில்
ஓம் நாக த்வஜாய வித்மஹே சங்கு சக்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸ்வர்ண கருடப் பெருமாள் ப்ரசோதயாத்
என்று ஓங்கி உலகளந்த உத்தமனே ஓங்கி ஓதி கௌரவித்தான் என்றால் இந்த பட்டத்தின் மதிப்புதான் என்ன, இதனால் விளையும் கௌரவம்தான் என்னே என்னே ?!

இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ந்த முகூர்த்த நேரமே வரும் புரட்டாசி மாத மூன்றாம் பிறை தரிசன நேரம் என்பதே நம்மை பிரமிக்க வைப்பதாகும். கருடன், ஸ்வர்ண கருடனாக மாறிய முகூர்த்தம் தட்சிணா மூர்த்தியின் ஜடா முடியை அலங்கரிக்கும் மூன்றாம்பிறை முகூர்த்தமாக அமைந்தது என்றால் இதன் பெருமையை எப்படி விவரிக்க முடியும். அடியார்களின் நலனுக்காக இந்த முகூர்த்த நேரத்தின் கிரக சஞ்சாரக் கோலம் இங்கு அளிக்கப்பட்டுள்ளது.

பெருமாளே கருடாழ்வாருக்கு நாகக் கொடியை அளித்து கௌரவித்ததால் இந்த சுபகிருது மாளயபட்ச நாட்களில் நாகக் கொடியை வரைந்து தாங்கள் தர்ப்பணம் அளிக்கும் இடத்தில் வைத்துக் கொள்தல் சிறப்பாகும். 48 செமீ நீளம் 30 செமீ அகலமுடைய ஒரு வெள்ளைப் பருத்தித் துணியை தாமே அரைத்த மஞ்சள் பொடி கலந்த நீரில் நனைத்து காய வைத்து அதில் மணத்தக்காளிபழம் அல்லது நீல நிற மை கொண்டு படமெடுத்த ஒன்றரை சுற்று புடம் இட்ட நாகத்தின் படத்தை வரைந்து கொண்டு இந்தத் துணியை மூன்று அடி நீளமுள்ள ஒரு மூங்கில் குச்சியில் கட்டி வைத்துக் கொள்தலே நாகக் கொடியாகும். ஒன்றரை சுற்று புடம் ஆதிரங்கனின் ஆதிசேஷ புட வடிவைக் குறிக்கும். மணத்தக்காளி என்பது மனங்களை திருமண பந்தத்தில் இணைக்கும் தக்காளி, திருமண பந்தத்தை மணம் வீசும் தென்றலாக மாற்றக் கூடியது என்றெல்லாம் பொருள் தரும்.

நாகக்கொடியான் நாராயணனே
திருவெள்ளியான்குடி

கருடாழ்வார் தங்கப் பெருமாள் பட்டம் பெற்றது நம்முடைய நலனை உத்தேசித்துதானே? அப்படியானால் இந்த தங்க மனத்தின் தங்க அனுகிரகத்தை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்வது ? இந்த மாளய பட்ச 18 நாட்களிலும் 18 வகை மூலிகை தைலங்களால் அதாவது மருதாணி, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, வெட்டிவேர், சுக்கு, அரத்தை, துளசி, வில்வம், நாரத்தை இலை, எலுமிச்சை இலை, நெல்லிக்காய் வற்றல், குங்குமப்பூ போன்ற 18 வகை மூலிகை திரவியங்களை இட்டு காய்ச்சி வடிகட்டிய தைலத்தால் கருடாழ்வாருக்கு தினமும் தைலக் காப்பு நிகழ்த்த வேண்டும். தினமும் தங்க ஜரிகை பதித்த வேட்டி அங்கவஸ்திரத்தை ஸ்வர்ண பெருமாளுக்கு அணிவிக்க வேண்டும்.

மேற்கூறிய முறையில் நாகக் கொடியை தயார் செய்து அதை ஆண்கள் தங்கள் வலது தோளிலும் பெண்கள் தங்கள் இடது தோளிலும் தாங்கி திருவெள்ளியான்குடி திருத்தலத்தை, இங்குள்ள சுக்ர தீர்த்தத்தை, திருவெள்ளியான்குடி சிவாலயத்தை அல்லது தங்கள் ஊரில் உள்ள திருத்தலத்தை 12 முறைக்குக் குறையாமல் வலம் வந்து வணங்கி இந்தக் கொடியின் சாட்சியாக தர்ப்பணம் அளிக்க வேண்டும்.

இந்த மாளய பட்ச தர்ப்பணத்தை திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் 18 நாட்களும் நிறைவேற்ற முடியாதவர்கள் தங்கள் ஊரில் இத்தகைய வலத்தையும் தர்ப்பண வழிபாடுகளையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். இத்தகைய நாகக் கொடிகளை நிறைந்த அளவில் தயார் செய்து சுபகிருது வருட தர்ப்பண மகிமைகள் அறியாதவர்களுக்கும், ஆனால் தர்ப்பணம் அளிக்க மனம் உள்ளவர்களுக்கு மட்டும், இந்த நாகக் கொடியை தானம் அளித்தல் சிறப்பாகும். இதனால் கிட்டும் நோய் நிவாரண சக்திகளையோ, சந்ததிகள் பெருகும் சக்திகளையோ, லட்சுமி கடாட்ச சக்திகளையோ எழுத்தில் வடிக்க இயலாது.

குங்குமப்பூவில் சுக்ர தீர்த்தம் கலந்து அரைத்த விழுதுடன் கையால் அரைத்த சந்தனத்தை சேர்த்து ஸ்வர்ண பெருமாள் மூர்த்தியின் சங்கு சக்கரங்கள், நெற்றி, பாதங்கள், உந்தி இவற்றுக்கு காப்பிடுவது மிகவும் விசேஷமாகும். Night Queen B என்ற நறுமணத்தை மூலிகைக் காப்பில் ஓரிரு துளிகள் கலந்து கொள்ளவும். மணத்தக்காளி பழத்திற்கு கங்குல் காரிகை, இரவு ராணி என்றெல்லாம் பெயர் அமைந்திருப்பது எத்தகைய பெருமாள் கருணை.

குஜமால்ய சாமுத்ரிகம்

சாமுத்ரிகா லட்சணங்களுள் பல வகை உண்டு. முழங்கால் வரை நீண்ட கரங்கள், மதயானை நடை அழகு போன்றவை ஸ்ரீராமபிரான் பெற்றிருந்த லட்சணங்கள். மானின் மருண்ட பார்வை, பஞ்சு போல் மெல்லிய பாதம் போன்றவை சீதாப்பிராட்டியின் சாமுத்ரிகா லட்சணங்கள். ஒரு பெண்ணின் அழகை அவளுடைய கணவன் மட்டுமே இரசிக்கும் தகுதி உள்ளவன். மற்றவர்கள் அவள் அழகை இலட்சணங்களாக மட்டுமே பார்க்கலாம் என்பதே நம் மூதாதையர்கள் அறிவுரை.

தலவிருட்சம் கனகதாரை வாழை
திருவெள்ளியான்குடி

இவை எல்லாம் குலம், பிறவி அடிப்படையில் அமைபவை. இவை தவிர எத்தனையோ சாமுத்ரிகா லட்சணங்கள் உண்டு. அவற்றில் 18 வகை காலாமிர்த சாமுத்ரிகா லட்சணங்கள் பிரசித்தம். உதாரணமாக, வளர்பிறை சதுர்த்தியில் பொலிபவை சதுர்வேத சதுராட்சர சதுர்ஜோதி சாந்நித்யம் எனப்படும், பஞ்சமியில் பொலிபவை பஞ்சவேத பஞ்சாட்சர பஞ்சாமிர்த பராபரம் எனப்படும். நாம் அறிந்தது தேய்பிறை சதுர்த்தியில் தோன்றும் சங்கடஹர சதுர்த்தி சக்திகள் போன்றவையே. இத்தகைய காலாமிர்த சாமுத்ரிகா லட்சணங்களில் 27.9.2022 செவ்வாய்க் கிழமை அன்று பொலிபவையே குஜமால்ய சாமுத்ரிக சக்திகள் ஆகும்.

இத்தகைய சக்திகளால்
1. சுப மங்களத்துவம்
2. தீர்க தரிசனத்துவம்
3. அமிர்தத்வம்
4. தீர்க ஆயுர்த்வம்
5. தீர்க சுமங்கலித்வம்
போன்ற முக்கியமான ஐந்து வித சாமுத்ரிகா சக்திகள் விண்வெளியில் பரவி நிற்கின்றன. சுபகிருது வருட மாளய பட்சத்தில் மேற்கூறிய முறையில் தர்ப்பண வழிபாடுகளை திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் நிறைவேற்றுவபவர்களுக்கு இந்த 18 காலாமிர்த சாமுத்ரிகா லட்சணங்களும் தினமும் ஒரு லட்சணமாக, பெருமாளின் அனுகிரகமாக அளிக்கப்படுகிறது. இந்த 18 லட்சணங்களின் பூரணமாக, நிறைவாக அளிக்கப்படுவதே குஜமால்ய சாமுத்ரிகம் ஆகும்.

குஜமால்ய சாமுத்ரிகம்

27.9.2022 அன்று கிட்டும் மூன்றாம் பிறை தரிசனத்தால் இந்த சாமுத்ரிகா சக்திகள் பூர்ணம் பெறுவதால் இதை கருடாசனம் மூலமாக திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் பெறும் முறையை அளிக்கிறார் நம் சற்குரு. படத்தில் காட்டியதுபோல் வலது காலை முன்னே மடித்து, இடது காலை பின்னால் நேரே நீட்டி கைகள் இரண்டையும் பக்கவாட்டில் உள்ளங்கைகள் வானத்தைப் பார்த்து இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். மூன்றாம் பிறை தெரியும் நேரத்தில் மூன்றாம் பிறையையும் மற்ற நேரத்தில் முகத்திற்கு நேரே உள்ள ஒரு வெற்றிடப் புள்ளியையும் பார்த்துக் கொண்டு மேற்கண்ட கருட காயத்ரீ மந்திரத்தையோ அல்லது திருவெள்ளியான்குடி, திருவெள்ளியான்குடி என்று மனதிற்குள் ஜபித்துக் கொண்டிருப்பதோ இந்த சாமுத்ரிகா லட்சணங்களை பூர்ணமாகப் பெறும் வழிபாட்டு முறையாகும்.

27.9.2022 அன்று மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை திருவெள்ளியான்குடி திருத்தலத்திலோ அல்லது இத்தலத்திற்கு வர இயலாதவர்கள் தங்கள் அபிமான திருத்தலத்திலோ இந்த வழிபாட்டை நிறைவேற்றலாம். ஒரு மணி நேரத்திற்கு கருடாசனத்தில் இலயித்து இந்த வழிபாட்டைத் தொடர முடியாதவர்கள் தங்கள் கால்களை மாற்றிக் கொள்வதும் ஏற்புடையதே. கார்மேக வண்ணச் சுடர் பிரசாதமான கண்ணாடியில் மூன்றாம்பிறையை தரிசிக்கும் பிரசாதத்தின் பலனை பன்மடங்கு ஆக்குவதே இன்று மிளிரும் குஜமால்ய சக்திகளாகும்.

மேற்கண்ட வழிபாட்டின் போது விபூதி, மஞ்சள், குங்குமம், சந்தனம், செந்தூரம் என்ற ஐந்தையும் நெற்றியில் இட்டுக் கொள்வதும் சிறப்புடையதே. இவ்வருட புரட்டாசி மாதம் என்று அல்லாது அடுத்து வரும் மூன்றாம் பிறை தரிசன நாட்களிலும் இம்முறையில் பிறை தரிசனத்தைத் தொடர்வதால் பலன்களும் தொடரும்.

தங்க பஸ்பத்தால் உடல் ஆரோக்யம் பன்மடங்கு பெருகும் என்பது உண்மையே. எந்த தொற்று நோய்களும் அண்டாத வகையில் உடலைப் பாதுகாப்பதே தங்க பஸ்பம் ஆகும். இவ்வாறு எத்தகைய பொருளாதார நிலையில் உள்ளவர்களும் உடலில் தங்க பஸ்ப சக்திகளைப் பெற உதவுவதே திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் பொலியும் கனகதாரை வாழை என்ற அபூர்வ தலவிருட்சமாகும். கரங்களில் ஸ்வஸ்தி முத்திரையை இட்டு ஆண்கள் தலைக்கு மேல் வைத்துக் கொண்டும், பெண்கள் தங்கள் நெஞ்சிற்கு நேராக வைத்துக் கொண்டும் திருவெள்ளியான்குடி, திருவெள்ளியான்குடி என்று ஜபித்துக் கொண்டே திருத்தலத்தை வலம் வருதலால் பெருகாத நோய் நிவாரண சக்திகளே இல்லை எனலாம்.

கருடாசனம்

எப்படி மந்திரமாவது நீறு என்ற திருநீற்றுப்பதிகத்தைப் பாடியே அனைத்து நோய்களையும் அடியார்கள் விரட்டி விடுகிறார்களோ அதுபோல் திருவெள்ளியான்குடி திருவெள்ளியான்குடி என்று ஓதியே அனைத்து நோய்களையும் விரட்டும் வைணவர்கள் இன்றும் உண்டு.

ஸ்ரீமங்களாம்பிகை
மங்களம்

நோய் எதிர்ப்பு சக்திகள் என்றல்லாமல் வீட்டுக் கடன், திருமண கடன், நோய்களால் ஏற்பட்ட கடன் போன்ற எந்த நியாயமான கடன்களையும் தீர்க்கும் வல்லமை பெற்றதே இந்த கனகதாரை வழிபாடு ஆகும்.

அடியார்களுக்கு இங்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். நவராத்திரியின் இரண்டு நாட்களும் மாளய பட்ச பூஜையில் கழிந்து விடுவதால் இது நவராத்திரி பூஜையை விட்டு விடுவதாக ஆகாதா ? உண்மையில் நவராத்திரி பூஜையின்போது பெருகும் மூன்றாம் பிறை குஜமால்ய சாமுத்ரிகா லட்சண சக்திகளை ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு முறையே பெறமுடியும் ஆதலால் அரிதிலும் அரிய இந்த சக்திகளே இரண்டு நாள் நவராத்திரி பூஜா பலன்களுக்கு மேல் பலன்களை பன்மடங்கு வர்ஷித்து விடும். நவராத்திரியின் ஒன்பது நாட்கள், நவராத்திரியைத் தொடர்ந்து வரும் ஸ்ரீஆயுர்தேவி பூஜை நாட்களில் இந்த நாகக் கொடியை தானமாக அளித்தலால் கிட்டும் அளப்பரிய புண்ணிய சக்திகள் சீர்செய்யாத புண்ணியக் குறைபாடே எதுவும் இல்லை எனலாம்.

மாளய பட்ச தர்ப்பண விழாவிற்குப் பின் அடியார்கள் இந்த நாகக் கொடியை தங்கள் இல்லத்தில் வைத்து தினமும் பூஜித்து வரலாம். அடிக்கடி இந்த நாகக் கொடிக்கு சாம்பிராணி தூபம் இட்டு வருதலால் இல்லத்தில், சமுதாயத்தில் நோய் நிவாரண சக்திகளை புனருத்தாரணம் செய்ய ஏதுவாகும். தேள், பாம்பு, நட்டுவாக்கிளி, விஷ சிலந்தி, பூரான் போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இந்த பூஜைகளால் குறையும்.

ஸ்ரீமங்களேஸ்வரர்
மங்களம்

மாதவிலக்கு என்பது பற்றி மக்கள் எவரும் கவனம் செலுத்துவதில்லை என்றே கூறலாம். இத்தகைய பிரச்னைகள் தனிப்பட்ட மனிதரைப் பாதிப்பதாகவே பலரும் எண்ணினாலும் கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் இதன் வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே சித்தர்களின் கணிப்பு. தனிப்பட்ட மனிதர்களால் உருவாவதுதானே மனித சமுதாயம் என்பதை உணர்ந்து கொண்டால்தான் இதன் பக்க விளைவுகள், பாதிப்புகளைப் பற்றி மக்கள் கவனம் செலுத்துவார்கள். உதாரணமாக, வயது வந்த பெண் ஒருத்தி சுமார் ஆறு மணி நேரம் தொடர்ந்து வெயிலில் அலைந்தாலோ, மூன்று மணி நேரம் டீவி பார்த்தாலோ, கம்ப்யூட்டரில் பணி புரிந்தாலோ, ஒன்றரை மணி நேரம் செல் போனில் பேசிக் கொண்டிருந்தாலோ அந்தப் பெண்ணின் மாதவிலக்கில் மாறுதல்கள் ஏற்படும், அதனால் உடல் ஆரோக்கியம் நலிவடைந்து சந்ததி குறைபாடுகள் ஏற்படும் என்பதே சித்தர்களின் கணிப்பு.

இன்றைய சூழ்நிலையில் இது எதுவுமே தவிர்க்கப்படக் கூடியது அல்லவே என்று நம்மை நாம் சமாதானம் செய்து கொண்டாலும் இதனால் ஏற்படும் பிரச்னைகள் ஒரு நாள் பூதாகரமாக வெடிக்கும்போது அது அனைவரையும் பாதிக்கத்தானே செய்யும். வருமுன் காப்பு வழிபாடாக சுக்ர தீர்த்தம், சந்திர தீர்த்தம் அமைந்த திருத்தலங்களை இயன்றபோதெல்லாம் தரிசித்து அங்குள்ள இறை மூர்த்திகளை, திருக்குளங்களை பெண் குழந்தைகள், பெண்கள் குறைந்தது மூன்று மணி நேரம் வலம் வருவதே எதிர்காலத்தில் நாம் சந்திக்கக் கூடிய உடல், மன, உள்ளக் குறைபாடுகளைத் தீர்க்கும் மாமருந்தாகும்.

பல வருடங்களுக்கு முன் நம் சற்குருவுடன் வடஇந்திய புனித யாத்திரை சென்றிருந்தபோது இரயில் ஒரு ஸ்டேஷனில் நின்றது. அப்போது அங்கு வெளியில் ப்ளாட்பாரத்தில் நின்றிருந்த மாணவர்களை ஏற்றிக் கொள்ள இயலாதபோது அந்த மாணவர்களில் ஒருவன் தன் உள்ளங்கையில் ஒரு காமக் காட்சியை வரைந்து நம் சற்குருவிடம் காட்டி கேலி செய்தான். அப்போதுதான் நம் சற்குரு, “ஆறு மணி நேரம் வேண்டாம், சார், ஆறு விநாடிகள் இத்தகைய காமக் காட்சிகளில் மனம் இலயித்தால் போதும், ஆயுளுக்கும் அதனால் விளையும் தீய எண்ணங்கள் நம்மை விட்டு அகலாது,” என்று தீய சக்திகளின் பிரபாவத்தை விளக்கிக் கூறினார். இத்தகைய தீய சக்திகளின் பிரபாவத்தை ஓரளவு தணிக்கக் கூடியதே இவ்வாறு சந்திர தீர்த்தம், சுக்ர தீர்த்தம், அக்னி தீர்த்தம் போன்ற தீர்த்தங்களில் இயற்றும் வழிபாடுகளும் மங்களம் என்ற பெயருடைய அம்பிகைகள் அருளும் தலங்களில் இயற்றும் வழிபாடுகளும் ஆகும். எனவே, நம் சற்குருவின் வழிகாட்டுதல் நமக்கு விளக்கும் உண்மை,


இளைய
சமுதாயத்தை, மாணவ மணிகளை
வழிநடத்திச் செல்ல உதவுபவையே திருவெள்ளியான்குடி வழிபாடுகள் !

பலரும் தங்கள் இல்லத்தில், பூஜை அறையில் இறைவனுக்கு இடம் தர தயாராக இருக்கிறார்கள். ஆனால், தங்கள் இதயக் கோயிலில், மனதில், உள்ளத்தில் இறைவனுக்கு இடம் தர தயாராக இருப்பதில்லை. உதாரணமாக, கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜயந்தி போன்ற பண்டிகைகளின்போது குழந்தை கிருஷ்ணரின் பாதங்களை தங்கள் இல்ல வாசலில் தோன்றி தங்கள் பூஜை அறை வந்து நிறைவதாக கோலமிட்டு கோகுலாஷ்டமியை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். ஆனால், கோகுலாஷ்டமி பண்டிகை நிறைவில் அவல், கொழுக்கட்டை, வெண்ணெய் பிரசாதம் ஏற்றவுடன் கிருஷ்ண பகவானையும் உள்ளத்தில் இருந்து வெளியே தூக்கி எறிந்து விடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். பகவான் குடியிருக்க வேண்டிய உள்ளத்தில் காமம், கோபம், பொறாமை, பழிக்குப் பழி வாங்குதல் போன்ற தீய எண்ணங்களே மனிதனின் இதயத்தில் மீண்டும் குடியேறி விடுகின்றன.

பராசரரும் கண்ணனும்

திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பராசர மகரிஷி, குழந்தை கண்ணனின் திருவுருவங்கள் அளிக்கும் அனுகிரகமே நிரந்தர இதயக் கோயில் என்பதாகும். குறிப்பாக இந்த சுபகிருது வருட மாளய பட்சத்தில் ஒவ்வொரு நாளும் தர்ப்பண பூஜைகளின் நிறைவாக இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் பராசர மகரிஷியையும் கிருஷ்ண பகவானையும் மனமுருகி வேண்டி வந்தால் இதயத்தில் நிறையும் இறைவனின் உருவம் பரந்தாமனாக இருந்தாலும், பால முருகனாக இருந்தாலும், பராசக்தி அம்பிகையாக இருந்தாலும் அது என்றும் மறையாது அருள்சுரந்து கொண்டே இருக்கும்.

ஸ்ரீகிருஷ்ண பகவான்
திருவெள்ளியான்குடி

எங்கிருந்து வந்தோமோ அங்கு சென்று அடைவதே அத்வைதம் என்பதே அத்வைத சித்தாந்தம் பற்றி சித்தர்கள் அளிக்கும் விளக்கமாகும். மனிதனின் அடிப்படை தோற்றம் மீன் என்பது நீங்கள் அறிந்ததே. இந்த அடிப்படை பிறப்பான மீன்கள் தங்கள் கண்களை மூடாது காட்சி பெற வேண்டும் என்று விரும்பினார் பராசர மகரிஷி. இதற்கு உறுதுணையாக வந்தவளே மச்சகந்தி என்ற படகோட்டி பெண்ணாவாள். கங்கையில் அவள் படகோட்டிச் சென்று கொண்டிருந்தபோது கங்கைய கடக்க அப்படகில் ஏறிடவே, பராசர மகரிஷி மச்சகந்தியுடன் இணைந்து வியாச மகரிஷி என்ற தவப் புதல்வனை அவர்கள் குழந்தையாகப் பெற்றார்கள்.

வியாசாய விஷ்ணு ரூபாய என்பது வியாச மகரிஷியைப் பற்றி நாம் புகழ்வது. இவ்வாறு திருவெள்ளியான்குடி திருத்தல ரெங்கநாதப் பெருமாளிடம் பெற்ற ‘வெள்ளி’ அனுகிரகத்தை மீண்டும் பெருமாள் ரூபத்தில் வியாச பகவானாக திருப்பி அளித்தார் பராசரர் என்ற அத்வைத தத்துவம் நிறைவுபெறுகின்றது அல்லவா ? அதே சமயத்தில் கண்கள் மூடாது மீன்கள் காட்சி பெற வேண்டும் என்ற பராசரர் மச்சகந்தியின் எண்ணமும் கங்கையில் பெருகிய மீன்கள் மூலம் நிறைவேறியது அல்லவா ? இதுவே ‘வெள்ளி’ அனுகிரகங்களில் ஒன்று.

பராசரரும் மச்சகந்தியும் படகில் பயணம் செய்யும்போது அவர்களைச் சுற்றி ஒரு காரிருள் கூட்டத்தை தன் தவவலிமையால் உருவாக்கினார் பராசரர். இத்தகைய இருள் பார்ப்பவருக்கும் பார்க்கப்படும் பொருளுக்கும் இடையே ஒரு திரையை உருவாக்கும் என்றாலும், தன் இதயத்தில் அமர்ந்துள்ள இறைவனை இதை மறைக்காது, மறைக்க முடியாது என்பது தெளிவாகின்றது அல்லவா? இதுவே பராசரர் உருவாக்கிய இருள் தத்துவம். இந்த இருள் தத்துவத்தின் விளக்கமாக அமைவதே பகவான் கிருஷ்ணனின் பூர்ண அவதாரமும் ஆகும். இந்த ‘நள்ளிருளை’ புரிந்து கொண்டாலே அனைத்து தெய்வீக இரகசியங்களும் உள்ளங்கை நெல்லிக்கனியே என்று உணர்த்துவதே திருவெள்ளியான்குடி தர்ப்பண வழிபாடுகள் என்று விவரிக்கவும் வேண்டுமா?

நம் சற்குருவின் உபதேசங்களில் ஒன்றே இவ்வாறு தேவையில்லாமல் கண்ணை மூடிக் கொண்டு வெறுமனே பொழுதைப் போக்கக் கூடாது என்பதாகும். “நீ கண்ணை மூடினால் உள்ளே என்ன தெரிகிறது? வெறும் இருட்டுதானே. கடவுளா கண்ணுக்குத் தெரிகிறார்? அதனால் என்ன பயன்? அதற்குப் பதிலாக கண்ணைத் திறந்து வெறும் வயிற்றோடு உன்னருகில் இருக்கும் ஏழைகளைப் பார். அவர்களுக்கு உன்னால் எவ்வகையில் உதவ முடியும் என்று சிந்தித்து செயல்படு...”.

குப்த ஞானம்

குப்த என்றால் மறைந்துள்ள, இரகசியமான என்று பொருள். இவ்வாறு மறைவாக உள்ள, இரகசியமாக உள்ள ஞானங்கள் கோடி கோடியே. இந்த ஞானங்களில் ஆறு விதமான ஞானத்தை மட்டும் இங்கு ஆராய்வோம்.

1. சத்திய ஞானம்
2. சார்ந்த ஞானம்
3. நித்திய ஞானம்
4. நிமல ஞானம்
5. பார்த்த ஞானம்
6. பாவ ஞானம்
என்ற ஆறுவிதமான ஞான சக்திகள் பெருமாள் மூர்த்தியால் அளிக்கப்படுகின்றன. நாம் கருடாழ்வார் மூர்த்தியை பறவை வடிவில் வானத்தில் பார்க்கும்போது நம் இரு கன்னங்களையும் ஆறுமுறை தொட்டு நாராயணா நாராயணா என்று கூற வேண்டும். இந்த சுக்ர கருட முத்திரையில் கிட்டும் சக்திகளே மேற்கூறிய ஆறுவிதமான ஞான சக்திகள் ஆகும்.

பாவ ஞானம் என்றால் தான் ஒரு சிறு கைக்குழந்தை என்ற எண்ணம் தீவிரமாக பொங்கிப் பெருகுகையில் இறைவன் நம் கண்ணுக்குத் தெரிவார் என்பார் நம் சற்குரு. இதுவே பாவ ஞானமாகும். இந்த நிலையில் நிலையாக நின்றவர்களே பிரகலாதன் போன்ற பக்த கோடிகள்.

குப்த தீர்த்தமா
குப்த சாகரமா? ஸ்ரீவாஞ்சியம்

பார்த்த ஞானம் என்பது அர்ச்சுனன் தன்னுடைய ஆயுதங்கள் அனைத்தையும் தரையில் எறிந்து விட்டு, “கிருஷ்ணா, உன்னையே சரணடைகின்றேன். எனக்கு எது நல்லது என்பதை நீ ஒருவனே அறிந்தவன். அந்த நல்லதையே அடியேனுக்கு கருணை கொண்டு உபதேசிப்பாயாக!” என்று பூரண சரணாகதி அடைந்போது விளைந்த ஞானம் ஆகும். அந்த சரணாகதி எந்த மனிதனிடம் உண்மையாகத் தோன்றினாலும் அங்கு பகவான் கிருஷ்ணரே தோன்றி பகவத் கீதையை உபதேசிப்பார் என்று உறுதியளிக்கிறார் நம் பகவான் குருமங்கள கந்தர்வா.

சத்திய ஞானம் இறைவன் ஒருவனே நிலையானவர், மற்ற அனைத்தும் மாயையே என்று தெளிவாக, திடமாக உணர்ந்து கொள்வதாகும்.

சத்திய ஞானத்தை கொண்டுள்ள மனிதனோ மற்ற உயிர்களோ இத்தகைய தெளிந்த அறிவைப் பெற்றிருந்தாலும் நடைமுறையில் அதில் மாற்றங்களைக் கொண்டுதானே செயல்பட வேண்டியிருக்கிறது? உதாரணமாக, சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்கிறோம். உண்மையில் சூரியன் எழுவதுமில்லை, விழுவதுமில்லை. அது என்றும் எப்போதும் பிரகாசித்த வண்ணமாகவே இருக்கிறது. ஆனால், நடைமுறையில் சூரியன் கிழக்கே உதிக்கிறது என்று எடுத்துக் கொண்டால்தான் பல குழப்பங்களுக்கும் அது தீர்வு அளிப்பதாக அமையும். இதுவே சார்ந்த ஞானமாகும். இதன் அடிப்படையில் எழுந்ததே கிரகங்கள் மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கின்றன என்ற உண்மைக்குப் புறம்பாக கிழக்கிலிருந்து மேற்காக சுழல்வதாக எடுத்துக் கொள்ளும் ஜோதிடப் பாடமுமாகும்.

கருட வாகனா நாராயணா!
திருவெள்ளியான்குடி

பார்ப்பவருக்கும் பார்க்கப்படும் பொருளுக்கும் இடையே ஒரு திரை விழும்போது பார்க்கப்படும் பொருள் மறைகிறது. இதையே ஆரணம் என்றும் சொல்வதுண்டு. அறிவு, வயது, திரை போன்ற பொருட்கள், அனுபவம், முதிர்ச்சி போன்ற பல காரணங்களால் இந்த ஆரணம் செயல்படுவதுண்டு. இவ்வாறு எது நம் அறிவை மயக்குகிறது என்று அறிய முடியாத இரகசிய நிலையையே குப்த ஞானம் என்கிறோம்.

ஸ்ரீஅகத்திய பிரான்
திருக்கொண்டீச்சரம்

ஸ்ரீவாஞ்சியம் என்னும் திருத்தலத்தில் குப்த தீர்த்தம் என்ற அபூர்வ தீர்த்தம் அமைந்துள்ளது. இந்த தீர்த்தக் கரையில் பறக்க முடியாமல் கிடந்த ஒரு வெண் புறாவின் நிலையை இங்குள்ள வீடியோ உங்களுக்கு படம் பிடித்துக் காட்டுகிறது. இதுவே மனிதனின் நிலை. ஒரு நிமிடத்தில் எந்த மனிதனும் இந்த புறாவின் காலில் உள்ள கயிற்றை அறுத்து அதை விடுவித்து விடுவான். இந்த பிரகாசமான ஞானம் பெற்ற மனிதனோ காமம், குரோதம், அகம்பாவம், ஆணவன் என்ற விலங்குகளை தனக்குத்தானே மாட்டிக் கொண்டு அல்லல்படுகின்றானே ?

இதுவும் குப்த ஞானத்தின் தன்னிகரில்லா சிறப்பு. ஒருவர் தான் பந்தப்பட்டிருக்கிறோம், ஆசைகளுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம் என்ற அறிய முடியாமல் அவரை மயக்குவதே குப்த ஞானம்.

396 சுவாசப் பரல்கள் .. கழுகு
கழுகின் சுவாசம் x 396 சுவாசப் பரல்கள் .. கருடன்
கருடனின் சுவாசம் x 396 சுவாசப் பரல்கள் .. சுக்ர கருடன்
396/6 = 66
66/6 = 11

ஸ்ரீகுப்தாலய கணபதி
ஸ்ரீவாஞ்சியம்

திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் சமீபத்தில் ஏகாதசி திரிதினமாக நிகழ்ந்தபோது அங்கு காட்சியளித்த சுக்ர கருடனின் காட்சியையே இந்த வீடியோவில் நீங்கள் கண்டு மகிழ்கிறீர்கள். ஏகாதசி திரிதினத்திற்கும் சுக்ர கருடனின் தரிசன மகிமைக்கும் உள்ள இணைப்பை மேற்கண்ட சமன்பாடு விளக்கினாலும் இந்த சமன்பாடு குழப்பமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் மேற்கூறிய ஏகாதசி திரிதினமும் திருவெள்ளியான்குடியில் தோன்றும் சந்திர மூன்றாம் பிறையும் செவ்வாய்க் கிழமை என்ற நோய் நிவாரண நாளில்தான் இணைகின்றன என்பதை புரிந்து கொண்டால் போதுமே.

திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் மாளயபட்ச வழிபாடுகள் இயற்றுவதற்கு முன்போ அல்லது பின்னரோ ஒரு பட்சத்திற்குள் ஸ்ரீவாஞ்சியம் குப்த தீர்த்தத்தில் நீராடுவதால் திருவெள்ளியான்குடி சுக்ர தீர்த்தக் கரையில் அளிக்கப்படும் தர்ப்பண சக்திகள் ஞான சக்திகளாகவும் உருவெடுத்து பித்ரு காந்தம் என்ற கபாலப் பகுதியில் நிரந்தரமாக வாசம் பெறும் என்பதே தாணுமால்ய பித்ரு மூர்த்திகள் சுபகிருது ஆண்டில் அளிக்கும் நல்வரமாகும். பித்ரு காந்த சக்திகள் சீர்பெறும் பொருட்டு குப்த தீர்த்தத்தில் ஒரு நாழிகையாவது நீராட வேண்டும் என்பதை நினைவில் கொள்க. ஆண்கள், பெண்கள் சட்டை, வேட்டி, புடவை போன்ற அனைத்து ஆடைகளுடன் நீராடி, நீராடலுக்குப் பின் இந்த ஆடைகளை உலர்த்தி அதே போல் ஒரு செட் புது வஸ்திரங்களுடன் தானம் அளித்து விட வேண்டும் என்பது குப்த சாகர நீராடல் விதியாகும்.

அந்நிலையில்தான், இது குப்த தீர்த்தம் மட்டும் அல்ல, இது குப்த சாகரமும் கூட என்ற ‘குப்த’ உண்மையை மனப் பூர்வமாக, உளப் பூர்வமாக அடியார்கள் உணர முடியும்.

தக்க துணையின்றி, பாதுகாப்பின்றி, தன் ஆரோக்யத்தை, படிப்பை கவனிப்பாரின்றி வருந்தும் எத்தனையோ அடியார்கள் உண்டு. தாய் அல்லது தந்தை அல்லது இருவர் துணையின்றி வாடும் அன்பர்கள் அனைவரும் ஒவ்வொரு நாள் தர்ப்பண முடிவிலும் இவ்வாறு நாராயணா நாராயணா என்று ஆறு முறை இரண்டு கன்னங்களையும் தொட்டு திருவெள்ளியான்குடி பெருமாளை மனமாரப் பிரார்த்தித்து வந்தால் நாராயணனே தக்க துணையை அவர்களுக்கு அனுப்பி அவர்கள் குறையை நிறைவு செய்வான். வெள்ளி கருட தரிசனம் அவர்களுக்கு கிட்டினாலும் கிட்டாவிட்டாலும் அது பற்றிக் கவலையில்லாமல் மானசீகமாகவே ஸ்வர்ண கருடப் பெருமாளை பிரார்த்தித்து இந்த வழிபாட்டை நிறைவேற்றலாம்.

ஒன்றுமறியா பாப்பா...

“ஒண்ணும் அறியாத பாப்பா உள்ளே போட்டுக் கொண்டாளாம் தாழ்ப்பாள்,” என்ற பழமொழியை பலரும் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால், இந்த பழமொழி சுட்டும் உண்மையான பொருளை உணர்ந்தவர்களை தற்காலத்தில் விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வழிகோலுவதே திருக்கொண்டீச்சரம் திருத்தலத்தில் இயற்றும் வழிபாடுகளாகும். திருவாரூர் நன்னிலம் திருத்தலத்திலிருந்து 3 கிமீ தொலைவில் உள்ளதே திருக்கொண்டீச்சரம் சிவத்தலம்.

ஸ்ரீபசுபதிநாதர்
திருக்கொண்டீச்சரம்

கொண்டி என்றால் உள்பக்கம் தாழிடக் கூடிய உபாயம் என்று பொருள். இத்தலத்து இறைவன் ஸ்ரீபசுபதீஸ்வரர், இறைவி ஸ்ரீசாந்தநாயகி. ஸ்ரீஅகத்திய பெருமான் திருவானைக்காவல் திருத்தலத்தில் தம்பதி சகிதமாக ஸ்ரீலோபாமாதாவுடன் எழுந்தருளி இருக்க பெரும்பாலான திருத்தலங்களில் தனித்தே எழுந்தருளி உள்ளார். திருக்கொண்டீச்சரம் திருத்தலத்தில் மட்டுமே பெருமான் தனித்து லிங்க வடிவில் எழுந்தருளிய கோலத்தைக் காணலாம்.

இதுவே திருக்கொண்டீச்சரம் விவரிக்கும் மகாத்மியமாகும். ஸ்ரீலோபாமாதா என்ற சித்த மகரிஷினி தன் ஆருயிர் கணவரைத் தவிர வேறு எதையும் அறியாத “பாப்பா” தன் கணவனை தன் இதயத்தின் உள்ளே வைத்து கொண்டி இட்டுக் கொள்ள, இந்த ஈருடல் ஓருயிர் என்ற சிவலிங்க மூர்த்தி இணைப்பில் ஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் இறைவன் ஸ்ரீபசுபதீஸ்வரர் திருவடிகளில் ஐக்யம் கொண்டனர் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் கொண்டீச்சர தல வரலாறாகும்.

ஸ்ரீஅகத்திய பெருமான் தம்பதி சகிதமாக இறைவனுடன் ஒன்றியதால் இது குரு தலம் என்றே இன்றும் மக்களால் சிறப்பிக்கப்படுகின்றது. அகத்தியர், அடியார் என்ற பாரபட்சம் பார்ப்பவனா நம் ஈசன். இவ்வாறு ஒன்றும் அறியாத பாப்பாவாக, குழந்தையாக நாம் அனைவருமே மாற வழி வகுப்பதே திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் நிறைவேற்றும் மாளய பட்ச வழிபாடுகளாகும். எனவே எத்தனை பாப்பாக்கள் இத்தலத்தில் உருவாகின்றார்கள் என்று வேடிக்கை பார்ப்பவனே திருவெள்ளியான்குடி பெருமாள் !

கொண்டீச்சர திருத்தல இறைவனின் திருநாமம் ஸ்ரீபசுபதிநாதர் என்பதாகும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள பசுக்கள் என்ற ஜீவன்களுக்கெல்லாம் பதியாக, தலைவனாக இருப்பவனே பசுபதி ஈசன். எனவே பக்தர்கள் கணவன் மனைவி, ஆண்டான் அடிமை, ஆருயிர் நண்பன், முதலாளி வேலைக்காரன், காதலன் காதலி என்ற எந்த உறவு முறையைக் கைக்கொண்டு ஈசனை நேசித்தாலும் அவர்கள் அடையும் நன்னிலையையே கொண்டீச்சர திருத்தல வழிபாடும் திருவெள்ளியான்குடி திருத்தல மாளய பட்ச வழிபாடுகளும் குறிக்கின்றன.

திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்றும்போதோ அல்லது பல காரணங்களால் திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் மாளய பட்ச தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்ற முடியாதவர்கள் எத்தலத்தில் வழிபாடுகளை நிறைவேற்றினாலும் தர்ப்பண நிறைவில் இங்கு அளித்துள்ள திருநின்றியூர் திருத்தல தேவார பதிகமாக சுந்தர மூர்த்தி நாயனார் அருளிச் செய்த அற்றவன் என்று தொடங்கும் பதிகத்தை அல்லது இதில் வரும் கீழ்க்கண்ட நான்காவது பாடலை மட்டுமாவது 12 முறை ஓதி 12 முறை கிழக்கு நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதால் லட்சுமி கடாட்ச சக்திகள் பரிபூரணமாக பல தலைமுறைகளுக்கும் நிலைத்து நிற்கும்.

ஸ்ரீசாந்தநாயகி அம்பாள்
திருக்கொண்டீச்சரம்

ஆறுகந் தாரங்கம் நான்மறை யாரெங்கு மாகியடல்
ஏறுகந் தாரிசை ஏழுகந் தார்முடிக் கங்கைதன்னை
வேறுகந் தார்விரி நூலுகந் தார்பரி சாந்தமதா
நீறுகந் தாருறை யும்மிட மாந்திரு நின்றியூரே.

இங்கு அடியார்கள் கவனிக்க வேண்டிய ஒரு சுவையான விஷயம் என்னவென்றால் திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் மாளய பட்ச தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்றும்போது நாகக் கொடியை தங்கள் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நம் சற்குரு சிபாரிசு செய்கிறார். இத்தகைய வழிபாடுகளின்போது ஓத வேண்டிய தேவார பதிகமாக அற்றவன் என்று தொடங்கும் பதிகத்தில் ஒன்று, இரண்டு... என்றவாறு எண் கணித சக்திகள் துலங்குகின்றன. அப்பர் அருளிய விடம் தீர்க்கும் பதிகமான ஒன்று கொலாம் என்று தொடங்கும் பதிகத்திலும் இறைவனின் சக்திகள் ஒன்று, இரண்டு என்ற வரிசையில் பாராட்டப்படுகின்றன. இந்த எண் சக்திகளுக்கும் விஷத்தை முறிக்கும் தூய சக்திகளுக்கும் உள்ள தொடர்பை அடியார்கள் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொண்டால் அதன் சிறப்பே தனிதான்.

ஒரு வெள்ளி கிண்ணத்தில் பால், தயிர், நெய் என்ற பஞ்சகவ்யத்தை ஊற்றி தர்பை சட்டத்தின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். தர்ப்பண நிறைவில் இந்த பஞ்ச கவ்யத்தை சுக்ர தீர்த்தத்திலோ அல்லது ஓடும் ஆற்று நீரிலோ சேர்த்து விடுதல் சிறப்பாகும். முடிந்தால் இந்த பஞ்சகவ்யத்தை திருக்கொண்டீச்சரம் கிராமத்திலிருந்து பெறுதல் கிடைத்தற்கரிய பேறே.

ஸ்ரீஅகத்தியரின் அருமைப் புதல்வன் ஸ்ரீஸ்ரீஸ்ரீஇத்மாலகர் இம்முறையில்தான் இன்றும் தர்ப்பண வழிபாடுகளை இயற்றி வருகிறார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய பிரமிப்பூட்டும் சித்த மகாத்மியமாகும்.

பாதுகாப்பு பலகணி

ஒவ்வொரு நொடியும் உயிர், உடைமைக்கு பாதுகாப்பு வேண்டி மக்கள் மனம் படும் பாட்டை எழுத்தில் வடிக்க இயலாது. பாமரர் முதல் உயர்ந்த பதவியில் இருப்பவர் வரை, பணக்காரர் முதல் ஏழைகள் வரை இவ்வாறு உயிருக்கு அஞ்சி அஞ்சி வாழாதவர் எவருமே இல்லை எனலாம். சிலரிடம் இருக்கும் பயம் வியாதி, இயலாமை என்று வரும்போது வெளிப்படும், அவ்வளவே. இதற்கு ஒரே மருந்தாக இருப்பதே திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் இயற்றும் இந்த மாளயபட்ச வழிபாடுகளாகும்.

எட்டடிக் குச்சுக்குள்ளே முருகா எத்தனை நாள் இருப்பேன் என்ற பாடல் வரிகளும், தரையில் எட்டு என்ற வடிவத்தில் வலம் வருதலும் இந்த பாதுகாப்பு சக்திகள் எப்படி முருக பாதுகாப்பு அம்சமாக, கிருஷ்ண பரமாத்மாவின் அஷ்ட வக்ர கோலமாக அருளாட்சி செய்கின்றன என்பதை விளக்கும். இங்குள்ள வீடியோ படமும் இதற்கு உதவுவதே.

எட்டுக்குடி திருத்தலத்தில் நிலவும் சரவணப்பொய்கை, திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் நிலவும் சுக்ர தீர்த்தம் இரண்டின் இணைப்பில் இந்த பாதுகாப்பு சக்திகள் நம் மனித அறிவிற்கு புரியும் வகையில் பொலிகின்றன. இதுவரை புரியாவிட்டாலும் இந்த மாளயபட்ச தர்ப்பண நாட்களில் திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் நீராடி தர்ப்பணம் அளித்து வந்தால் நிச்சயமாக நம் மூதாதையர்கள் அளிக்கும் பாதுகாப்பு சக்திகள் எத்தனை அடுக்கிற்கு நிரவி உள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த பாதுகாப்பு சக்திகளின் ஒரு அம்சமாகவே திருவெள்ளியான்குடி திருத்தல தர்ப்பணத்திற்கு உகந்த நாகக் கொடியின் அளவுகள், கந்த வேளின் கருணை வேல் வடிவத்துடன் தொடர்புடையதாகவும், தங்க விகிதம் என்ற வகையில் அமைந்திருப்பதும் நம் சற்குருவின் கருணை கடாட்சமே.

பொதுவாக நாட்டுத் தலைவர்களுக்கு பல அடுக்குப் பாதுகாப்புகள் அளிக்கப்படுவதைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். சிவ சேனாதிபதியான முருகன் அளிக்கும் பாதுகாப்பே ஒரு மனிதன் பெறக் கூடிய உண்மையான பாதுகாப்புக் கவசமாகும். ஒவ்வொருவரும் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது
வேல் வேல் வெற்றி வேல் சுற்றி வந்து
என்னைக் காக்கும் சுப்ரமண்ய வேல்
என்ற சண்முக கவச மந்திரத்தை குறைந்தது 18 முறை ஓதி விட்டு வெளிச் செல்தலால் அடியார்களின் உடல், உயிர், உடைமைக்குப் பாதுகாப்பு கிட்டும் என்று அருள்கிறார் நம் சற்குரு அல்லவா?

இதில் அமையும் 1+8 = 9, 10+8, 8 என்ற எண் சக்திகளைப் பற்றி ஆத்ம விசாரம் செய்தாலே இந்தப் பல ‘அடுக்குகளின்’ மகாத்மியம் புரியவரும். பல அடுக்குகள் என்பது ஒரே தளத்தில் அமையும் பாதுகாப்பு சக்திகள் மட்டும் அல்ல, பல தளங்களில், உதாரணமாக, தரையிலிருந்து 18 அடி வரை தலைக்கு மேலும் உருவாகும் பாதுகாப்பு சக்திகளை இது குறிக்கும் என்றால் என்னே நம் மூதாதையர்களின் அறிவுத் திறன்.

லால்குடி போன்ற திருத்தலங்களில் அமைந்துள்ள 18 துவார பலகணி அமைப்புகள் இத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் குறிப்பதால் இந்த பலகணிகளுக்கு செவ்வாய்க் கிழமைகளில் சாம்பிராணி தூபம் குறைந்தது 18 நிமிடங்கள் எழுப்பி பூஜித்தலால் உண்மையான பாதுகாப்பு பலகணியைப் பெறுவார்கள். இந்த பலகணிகள் 3 x 6 = 18 என்று அமைந்திருப்பதும் நம் ஆத்ம விசாரத்திற்கு உரியதே.

கீதாவேதமால்மருக சாளரம்
லால்குடி

பல திருத்தலங்களிலும் இத்தகைய கீதாவேத சாளரங்கள் அமைந்திருந்தாலும், அதாவது 18 துவாரங்கள் அமைந்திருந்தாலும் லால்குடி திருத்தலத்தில் உள்ள இந்த சாளரம், கீதாவேதமால்மருக சாளரம் என்று அழைக்கப்படுகிறது. காரணம் மால்மருகனின் வாகனமான மயில் பலகணியின் இடப்புறத்தில் அமர்ந்து மயில்நோக்கு என்ற அபூர்வ திருஷ்டியால் இந்த சாளரத்தைப் பார்ப்பதுதான். தம்பதிகளுக்கிடையே உள்ள எத்தகைய மனவேற்றுமையையும் களையக் கூடியவையே இத்தகைய சாளரங்கள் ஆகும்.

இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்றோர் சுவை கருட பகவான் திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் வர்ஷிக்கும் கருட சக்திகளின் அபூர்வ நோய் நிவாரண தன்மைகளாகும். திருக்கோடிக்கா திருத்தலத்தில் ஆடி 19, 20, 21 என்ற மூன்று தினங்களிலும் நிகழும் சூரிய பூஜையால் விளையும் சாந்த சௌர்ய சக்திகளை அனுகிரகமாகப் பெறும் சுக்ர கருடன் அதை திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் நோய் நிவாரண சக்திகளாக அர்ப்பணிக்கிறார் என்பதும் நம் சற்குரு நமக்காகப் பரிந்து அளிக்கும் சித்த இரகசியங்களாகும். இதில் சுபகிருத வருட ஆடி 20 வெள்ளிக் கிழமை என்பது குசா சக்திகள் பூரிக்கும் அஷ்டமி திதியுடன் கூடி, 19, 20, 21 என்ற தேதிகளுக்கு இடையில் நடுநாயகமாக நிலவி குசா சக்திகளுடன் பொலிவதும் ஆகும்.

சுந்தர மூர்த்தி நாயனாரின் மேற்கண்ட தேவார பாடலில் துலங்கும் பரிசாந்த சக்திகள், திருக்கோடிக்கா திருத்தலத்தில் சூரிய பூஜையில் விளையும் சாந்த சௌர்ய கதிர்களின் நோய் நிவாரண சக்திகளும் ஒரே தன்மை உடையனவே.

மூன்றாம் பிறை தரிசன நாள் அன்று அமையும் குஜமால்ய சாமுத்ரிக முகூர்த்த நேரத்தைப் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளோம். இந்த முகூர்த்த நேரத்தில் அளிக்கக் கூடிய தான தர்மங்கள் குறித்த அகஸ்திய கிரந்த வடிவு இதோ.
மூன்றாறு நிலவும் நாளில்
நின்றாறும் கருடத் தலத்தில்
சென்றேறித் தொழுவாய் அவன் திருவடியே
கன்றோடு பசுவுண்ண கைகாட்டி அளிக்கும்
திலதீர்த்தம் தண்ணிலவே

இதன் எளிய விளக்கமாவது, மூன்றிற்குரிய குரு பகவான் ஆறிற்குரிய சுக்ர பகவானை நேர் பார்வையால் பார்க்கும் நாளில், கருட மூர்த்தி கருடாசனத்தில் கால்களை முன்னே வைத்து தொழாமல் கை கூப்பி அமைதியாக நின்று தொழும் திருத்தலமான திருவெள்ளியான்குடியில், தாத்தா, தாத்தாவுக்கு அப்பா என்ற வகையில் கன்றும் பசுவுமாய் அமையும் மூதாதையர்களுக்கு உள்ளங்கை வானத்தை நோக்குமாறும், வானில் பிரகாசிக்கும் சூரிய பகவான் கீழ் நோக்குமாறும் அளிக்கும் தர்ப்பணம் மூதாதையர்களுக்கு குளிர்ச்சி பொருந்திய நிலவின் ஒளியாகப் பொலியும்.

இத்தகைய குளிர்ச்சியை ஊட்டக் கூடிய நாளில் மூதாதையர்களுக்கு அளிக்கும் தர்ப்பண சக்திகளுடன் மூதாதையர்களின் வாரிசுகளான நாமும் நமது சந்ததிகளும் நன்முறையில் சுக்ர சக்திகளைப் பெருக்கி வாழ உதவுவதே சிறுவாணி தீர்த்தமாகும். பராசரர்+மச்சகந்தி+சிறுவாணி = 5+6+4 = 6 என்ற எண் கணித சூத்திரப்படி சுக்ர சக்திகளுடன் அமையும் சிறுவாணி தீர்த்தம் கலந்த இனிப்பு பிரசாத தானத்தால் சுக்ர சக்திகள் மனித கற்பனையை மிஞ்சிப் பெருகும். எனவே இந்த மாளய பட்ச 18 நாட்களிலும் சிறுவாணி தீர்த்தம் கலந்து ஆறு என்ற சுக்ர சக்திகள் கூடுமாறு தான தர்மங்கள் அளித்தல் சிறப்பாகும். உதாரணமாக, ஆறு சுற்று கை முறுக்கு, ஆறு அங்குல சப்பாத்தி, பரோட்டா, பொரி உருண்டை போன்றவை. இத்துடன் ஏதாவது ஒரு இனிப்பை, டைமண்ட் வடிவ முந்திரி கேக், தேங்காய் மிட்டாய், பணியாரம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

சிவராஜ யோகம்

ராமச்சந்திர மூர்த்தி தோன்றிய குரு சந்திர யோகம் போல் குருவும் சூரிய பகவானும் இணைந்து உச்சம் பெறுவதே கிருஷ்ண பகவான் தோன்றிய சிவராஜ யோகமாகும். உண்மையில் இந்த கிரக சஞ்சார விளைவுகளால் அவதார மூர்த்திகளின் வைபவம் சிறப்படைகிறது என்பதை விட இத்தகைய கிரக சஞ்சார அமைப்புகளில் தோன்றி இந்த கிரக தேவதைகளையும் மேலும் மேலும் புனிதமடையச் செய்வதே இத்தகைய தெய்வீக அவதாரங்களின் மகத்துவம் ஆகும்.

குரு சந்திர யோகத்திலோ சிவராஜ யோகத்திலோ என்றோ இந்த அவதாரங்கள் தோன்றினாலும் இன்றும் இத்தகைய கிரக சஞ்சாரங்களினால் அனைத்து ஜீவன்களும் எத்தகைய பேற்றைப் பெறுகின்றன. இவ்வாறு சிவரராஜ யோகம் அளிக்கும் தெய்வீக அனுகிரகங்களை பறைசாற்றுவதாக அமைவதே சுபகிருது வருட மாளய பட்ச வழிபாடுகளும் அதைத் தொடர்ந்து வரும் மூன்றாம் பிறை தரிசன மகாத்மியமும் ஆகும்.

ஸ்ரீதுர்கை நெடுங்குடி

திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் கிருஷ்ண பகவான் எழுந்தருளி இருப்பது இந்த யோகத்தின் பலனை பூர்ணம் செய்கிறது என்றே கூறலாம். இங்கு அளிக்கப்பட்டிருக்கும் கிரக சஞ்சார நிலைகளை உற்று நோக்கினால் எந்த அளவிற்கு சிவராஜ யோகம் உச்சக் கட்டத்தில் பொலிகிறது என்பதை நீங்கள் கண்டு ஆச்சரியம் அடைவீர்கள். சிவ சக்திகளை அள்ளி வழங்கும் வக்ர கதியில் ஆட்சி பெற்ற குரு பகவானும், ராஜ யோகத்தை வாரி வழங்கும் சூரிய பகவானும் ஆட்சி பெற்ற புத பகவானுடனும், நீசபங்க ராஜ யோகம் பெற்ற சுக்ர பகவானுடன் இணைவது என்பது பூலோக மக்கள் பெற்ற எத்தகைய பேறு.

சுக்ர தீர்த்தக் கரையில் சுக்ர தீர்த்தம் கொண்டு சுக்ர பகவான் ராஜ யோகம் பெறும் நிலையில் நம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளித்தலால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் விவரிக்கத்தான் இயலுமா?

அவதாரங்கள் யாவருமே கருவில் திருஉடையவர்கள் என்பது நாம் அறிந்ததே. பூமி பாரம் தீர்ப்பது என்பது கிருஷ்ண பரமாத்மாவின் நோக்கங்களுள் ஒன்று. இதை தான் பிறந்த உடனேயே நிறைவேற்றியவரே பரமாத்மா. கம்சனின் சிறையில் பிறந்த குழந்தை கிருஷ்ணனை கூடையில் வைத்து சுமந்து குசேலர் யமுனை நதியைக் கடந்தபோது வெள்ளப் பெருக்கைத் தோன்றச் செய்து அந்த வைபவத்தில் வெளியே காலைத் தொங்க விட்ட பரமாத்மாவின் திருவடிகளுக்கு முத்தமிட்டு தன் நீண்ட நாள் விருப்பத்தை யமுனா தேவி பூர்த்தி செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் யமுனையில் அதுவரை நீராடிய லட்சக் கணக்கான மக்களின் ‘பாரத்தை’ தீர்த்து வைக்கும் புனித காரியத்தையும் நிறைவேற்றினாள்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பது விளையாட்டிற்காக கூறிய வாசகம் அல்ல என்பதை நாம் உணரக் கூடிய தருணமே திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் நிறைவேற்றும் வழிபாடுகளாகும். பகவான் கிருஷ்ணருக்கு தினமும் ராஜஅலங்காரம் செய்து கண்ணார அவன் திருக்கோலத்தை கண்டு களிப்பதே வாழ்க்கையில் நாம் பெறக் கூடிய சிறந்த ‘ராஜயோகமாகும்’, சிவராஜயோகமும் ஆகும்.

கிருஷ்ண பகவானின் அவதாரம் பூர்ணமான இறை சக்திகளுடன் பொலிவது என்று உரைப்பவர்களே சித்தர்கள். இதை மனித சமுதாயமும் உணர வழி வகுப்பதே திருவெள்ளியான்குடி வழிபாடுகளாகும். 10.9.2022 முதல் 27.9.2022 வரை நாம் நிகழ்த்தும் வழிபாடுகளை நோக்கினால் 1 முதல் 9 வரை அனைத்து எண் சக்திகளும் எப்படி முறையாக இணைகின்றன என்பதைக் கண்டு நாம் மெய்சிலிர்க்கலாம். இதில் விலை மதிப்பில்லாத பூஜ்யமும் ஆதியில் விளைவது சற்குருவின் பெருங்கருணையே. 10 என்பதில் உள்ள பூஜ்யம் எண் கணித சூத்திரத்தில் மறைகிறது என்பதை விட விலைமதிப்பில்லாத இந்த பூஜ்ய சக்திகளே கிருஷ்ண பகவானின் பூர்ண அவதார சக்திகளால் எல்லையில்லா சக்திகளைப் பெறுகின்றன என்பதே உண்மை.

ஸ்ரீகைலாசநாதர் நெடுங்குடி

பஞ்ச பூத சக்திகளை தூய்மைப்படுத்தும் திருவிளையாடலாக மண்ணை உண்டதுபோல், கோகுலத்தில் பஞ்சகவ்ய வழிபாடாக ஸ்ரீகிருஷ்ணன் நிறைவேற்றியதே கோபியர்களின் வீடுகளில் உள்ள தயிர், வெண்ணையை ‘திருடித்’ தின்றதாகும். இந்த திருவிளையாடலின் நிவாரண சக்திகளை நாம் பெறும் பொருட்டும் பஞ்சகவ்ய சாட்சியாக நாம் நிறைவேற்றும் தர்ப்பணம் அமைகிறது என்பதை நினைவில் கொள்க.

ஸ்ரீராமபிரான் ராவணனை வெல்வதற்காக ஸ்ரீஅகத்திய பிரானால் ஆதித்ய ஹ்ருதய மந்திரம் உபதேசமாக அளிக்கப்பட்டது என்பதை மட்டும் நாமறிவோம். ஆனால், இந்த உபதேசம் அளிப்பதற்கு முன்னால் ஸ்ரீஅகத்திய முனி ராமபிரானுக்கு வைணவ சின்னமான நாமத்தை தன் திருக்கரங்களினாலேயே சூட்டி மகிழ்ந்தார் என்பதை உரைப்பதே இருடிகள் ராமாயணமாகும். இந்த நாமத்தில் திகழ்ந்த திருமண் நெடுங்குடி மண் மலையிலிருந்தும் வெண்மையான ஒளிக் கிரணங்கள் திருவெள்ளியான்குடி சுக்ர தீர்த்தத்திலிருந்தும் பெறப்பட்டன என்பதே சித்தர்கள் உரைக்கும் தெய்வீகமாகும். இதைக் குறிப்பதாக நெடுங்குடி திருமண்ணையும் திருவெள்ளியான்குடி சுக்ர தீர்த்தத்தையும் நெடுங்குடி விபூதி பிரசாதத்தில் குழைத்து நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டு தர்ப்பணம் அளிப்பது கிடைத்தற்கரிய பாக்கியமே.

பெண்கள் தங்கள் நெற்றி, வகிடு, திருமாங்கல்யத்தில் நெடுங்குடி திருமண்ணை சுக்ர தீர்த்தத்தில் குழைத்து சூட்டிக் கொள்தல் சிறப்பாகும். இதனால் பூரிக்கும் பாதுகாப்பு சக்திகள் அமோகம்.

மூலாதாரத்திலிருந்து ஒரு வெண்ணிற நரம்பு வழியாக குண்டலினி சக்தி ஆக்ஞா சக்கரத்தை வந்தடையும். உடலில் உள்ள மிக நீளமான சூட்சும நாடி இதுவே. மனிதக் கணக்கில் இரண்டு அடி நீளத்திற்கும் குறைவாக உள்ள இதற்கு சித்தர்கள் அளிக்கும் மறை வார்த்தையே “நெடுங்குடி” என்பதாகும். என்ன பொருத்தமான சொல்லாக்கம்.

ஆஸ்ட்ரல் பயணத்தில் இந்த நெடுங்குடி நாடிதான் பல லட்சம், கோடி மைல்களுக்கும் கூட, நெடு தூரத்திற்கும் விரிவடையக் கூடியதால் இந்த அற்புதமான பெயரை சித்தர்கள் இந்த நாடிக்கு சூட்டியுள்ளார்கள். பாம்பானது வளைந்து வளைந்து செல்லும், ஆபத்து வேளைகளிலோ சர்ரென்று தன் உடலைச் சுருக்காமலே நேராக செல்லவும் அதனால் முடியும், நாக தேவதைகளோ லட்சக் கணக்கான மைல் வேகத்தில் பறந்து செல்லக் கூடியவை. அதனால் நம்முடைய பித்ருக்கள் எத்தனை கோடி மைல் தூரத்தில் இருந்தாலும் அவர்களை நேரில் சென்று தரிசிக்க உதவுவதே அடியார்கள் கைக்கொள்ளும் நாக வடிவமும் நெடுங்குடி திருத்தல நாமமும் என்பது இப்போது புலனாகின்றது அல்லவா? இத்தகைய அரிதான, அபூர்வமான அனுகிரக சக்திகளை அளிக்கவல்லவர்களே தாணுமாலய பித்ருக்கள் ஆவர்.

பெருமாள் நின்ற கோலம், அமர்ந்த கோலம், நடந்த கோலம், சயனக்கோலம் போன்ற பல கோலங்களில் காட்சி அளிப்பதை நீங்கள் இரசித்திருப்பீர்கள். இத்தகைய கோலங்கள் வெள்ளியான்குடி திருத்தலத்தில் புதுப் பொலிவைப் பெறுகின்றன.

ஒருமுறை நம் சற்குரு ஒரு அடியாரிடம், “நீ எழுதுய்யா, உன்னுடைய வார்த்தைகளில் அடியேன் நிற்கிறேன்...”, என்றார். இது அந்த சீடனின் குரு பக்தியா, இல்லை சற்குருவின் பெருங்கருணையா? எது எப்படியிருந்தாலும் சற்குருவின் சீடர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் இந்த உயர்ந்த பக்தி நிலையை வளர்த்துக் கொள்வது அவசியம் அல்லவா? இதற்காக சற்குரு அளிக்கும் அரிய சந்தர்ப்பமே திருவெள்ளியான்குடி மாளய பட்ச தர்ப்பண வழிபாடுகளாகும். திருவெள்ளியான்குடி திருத்தலத்தில் மகாவிஷ்ணு சயனக் கோலத்தில் எழுந்தருள, பகவான் கிருஷ்ணர் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்க, கோலவில்லி ராமனோ இங்கு, பக்தர்கள் நெஞ்சில் “நிற்கிறார்”. இது ராம பகவானின் பெருங்கருணையா இல்லை வெங்கடராமனின் குரு கடாட்சமா?!

மகிமைகள் தொடரும் ...

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam